Ambrose of Milan, An Exposition of the Christian Faith, in Tamil. Book 2
புத்தகம் II
அறிமுகம்
கடவுளின் குமாரனின் பன்னிரண்டு பெயர்கள் நினைவுகூரப்பட்டு அவை மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இவை குமாரனின் பெயர்கள் மட்டுமல்ல, பிதாவின் நித்தியத்திற்கும் பல சான்றுகளாகக் காணப்படுகின்றன. அவை பிரதான குருவானவர் மார்பில் அணியும் அங்கியில் உள்ள பன்னிரண்டு கற்களுடன் ஒப்பிடப்படுவதோடு, அவற்றை ஒரு புதிய வரிசையில் வைப்பதன் மூலம் அவற்றின் ஐக்கியம் எடுத்துரைக்கப்படுகிறது. மார்பில் அணியும் அங்கியின் ஒப்பீட்டை மீண்டும் உற்று நோக்கினால், எழுத்தாளர், நெய்த துணியின் அழகையும், பளிச்சிடும் அங்கியின் விலைமதிப்பற்ற கற்களையும் பற்றி விவரிக்கிறார். மேலும் அந்த அங்கியை நெய்த வேலைப்பாடு மற்றும் விலைமதிப்பற்ற கற்களைப் பிரிப்பதில் மறைந்திருக்கும் அர்த்தத்தையும் விளக்குகிறார். இதற்குப் பிறகு, விசுவாசம் என்பது கிரியைகளுடன் இணைந்தாக நெய்யப்பட வேண்டும் என்பதைக் காட்டி, குமாரனைப் பற்றிய இந்த விசுவாசத்தின் சுருக்கமான விளக்கத்தை அவர் இங்கே தருகிறார்.
1. மாட்சிமை தங்கியவரே, முந்தைய புத்தகத்தில் கடவுளின் குமாரன் ஒரு நித்திய ஜீவன் என்றும், பிதாவிலிருந்து வேறுபட்டவர் அல்ல என்றும், பிறந்தவர், படைக்கப்பட்டவர் அல்ல என்பதைக் காட்ட போதுமான அளவு கூறப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன்: வேதவசனங்களின் பகுதிகளிலிருந்து, கடவுளின் உண்மையான குமாரனே கர்த்தர் என்பதையும், அவரது மாட்சிமையின் தெளிவான அடையாளங்களால் அவ்வாறு அறிவிக்கப்பட்டவர் என்பதையும் நாங்கள் போதுமான அளவுக்கு நிரூபித்துள்ளோம்.
2. எனவே, ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளவை நம்பிக்கையைப் பேணுவதற்கு போதுமான அளவுக்கு ஏராளமாக இருந்தாலும் – ஒரு நதியின் மகத்துவம் பெரும்பாலும் அதன் ஊற்றுகள் எங்கிருந்து எவ்வாறு எழுகின்றன, எவ்வாறு பாய்கின்றன என்பதன் மூலம் தான் தீர்மானிக்கப்படுகிறது – இருப்பினும், நமது விசுவாசம் தெளிவாக உணரப்படுவதற்கு, நமது ஊற்றின் நீர் மூன்று கால்வாய்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். முதலாவதாக, தெய்வீகத்தில் அத்தியாவசியமான உள்ளார்ந்த தன்மையை அறிவிக்கும் எளிய அடையாளங்கள்; இரண்டாவதாக, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சாயலின் பிரதிநிதித்துவங்கள்; இறுதியாக, தெய்வீக மாட்சிமையின் மறுக்க முடியாத ஒற்றுமையை உறுதிப்படுத்தும் அடையாளங்கள். முதல் வகை, கடவுள், மகன், வார்த்தை போன்ற பெயர்களை உள்ளடக்கியது; இரண்டாவது பிரகாசம், வெளிப்பாடு, கண்ணாடி போன்று பிரதிபலிக்கும் தன்மை மற்றும் உருவம்; மூன்றாவது ஞானம், சக்தி, உண்மை, வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கியடாகக் காணப்படுகிறது.
3. இங்கே கூறப்பட்ட அடையாளங்கள் குமாரனின் இயல்பை விவரிக்கின்றன. எனவே பிதா நித்தியமானவர் என்பதையும், குமாரன் அவரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதையும் நீங்கள் காணலாம். தலைமுறையின் மூலாதாரம் அவரே; நித்தியமானவரால் பிறந்தவராக இருப்பதால், அவரே கடவுளாக இருக்கிறார். அவர் பிதாவிடமிருந்து வந்தவர், அவரே குமாரன்; கடவுளிடமிருந்து வந்தவர், அவரே வார்த்தை; அவர் பிதாவின் மகிமையின் பிரகாசம், அவரது இருப்பின் வெளிப்பாடு, கடவுளின் சாயல், அவரது மகத்துவத்தின் சாயல்; நல்லவரின் நற்குணம், ஞானமுள்ளவரின் ஞானம், வல்லவரின் வல்லமை, உண்மையுள்ளவரின் உண்மை, உயிருள்ளவரின் ஜீவனாக இருக்கிறார். ஆகையால், பிதா மற்றும் குமாரனின் பண்புகள் உடன்படுகின்றன. அவர்கள் ஒரே மாட்சிமை கொண்டவர்கள் என்பதைத் தவிர, யாரும் வேறு எந்த வித்தியாசமோ அல்லது சந்தேகமோ கொள்ளக்கூடாது. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான உதாரணங்களை நாம் கொடுக்கலாம், ஆனால் நமது விவாதத்தை மீறாமல் இருக்க நாம் நமது எல்லைக்குள் மாத்திரமே இருக்க வேண்டும்.
4. இந்தப் பன்னிரண்டு கற்கள், நமது விசுவாசத்தின் தூண்கள் என்பதை எமக்கு எடுத்துரைக்கின்றன. அவை விலைமதிப்பற்ற இரத்தினங்கள்; சர்தியஸ், ஜாஸ்பர், ஸ்மாராக்ட், கிரிசோலைட் மற்றும் மீதமுள்ளவை – உண்மையான ஆசாரியரும் கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான ஆசாரியருமான பரிசுத்த ஆரோனின் அங்கியில் நெய்யப் பட்டிருந்தவை. தங்கத்தில் பதிக்கப்பட்ட கற்களில் இஸ்ரவேல் புத்திரரின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பன்னிரண்டு கற்களும் ஒன்றோடொன்று இறுக்கமாகப் பொருந்தின; அவை பிரிக்கப்பட்டிருந்தால், விசுவாசத்தின் முழு துணியும் சிதைந்து போனதாக ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருக்கும்.
5. அப்படியானால், இதுவே நமது விசுவாசத்தின் அடித்தளம் – இதன்மூலம் தேவனுடைய குமாரன் பிறந்தவர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவர் பிறக்கவில்லை என்றால் அவர் குமாரன் அல்ல. கடவுளிடமிருந்து பிறந்த ஒரே குமாரன் என்றும் நாம் அவரை ஒப்புக்கொள்ளாவிட்டால், அவரை குமாரன் என்று அழைப்பதில் அர்த்தமில்லை. அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றால் அவர் கடவுள் அல்ல; அவர் கடவுள் இல்லை என்றால், அவர் ஜீவன் அல்ல; அவர் ஜீவன் இல்லையென்றால், அவர் சத்தியம் அல்ல.
6. முதல் மூன்று சொற்கள் – “தலைமுறை,” “குமாரன்,” மற்றும் “ஒரே பேறானவர்” போன்றவை – குமாரன் இயல்பிலும் தொடக்கத்திலிருந்தே கடவுள் என்பதையும் காட்டுகின்றன.
7. தொடர்ந்து வரும் மூன்று பெயர்கள் – கடவுள், வாழ்க்கை, உண்மை – அவருடைய சக்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன. மேலும் இது அவர் உலகத்தின் அஸ்திவாரங்களை அமைத்து அதைத் தொடர்ந்து நடத்தும் சக்தி என்பதும் நிரூபணமாகிறது. பவுல் கூறியது போல், அவரில் நாம் வாழ்கிறோம், நகர்கிறோம், நம் இருப்பைக் கொண்டிருக்கிறோம் (அப்போஸ்தலர் 17:28) என்று. எனவே, முதல் மூன்று பெயர்களில் நீங்கள் குமாரனின் இயல்பான உரிமையைக் காண்கிறீர்கள், கடைசி மூன்றில் தந்தைக்கும் குமாரனுக்கும் இடையிலான செயலில் ஐக்கியத்தைக் காண்கிறீர்கள்.
8. கடவுளின் குமாரன் கடவுளின் சாயல், பிரகாசம் மற்றும் வெளிப்பாடு என்று அழைக்கப்படுகிறார். இந்த பெயர்கள் குமாரனில் வசிக்கும் பிதாவின் மகத்தான, அறிய முடியாத மாட்சிமையையும், குமாரன் பிதாவுக்கு ஒப்பான தன்மையையும் காட்டுகின்றன. எனவே மூன்று பெயர்களும் குமாரன் பிதாவுக்கு ஒப்பான தன்மையைக் கொண்டிருப்பதாகக் குறிக்கின்றன.
9. குமாரன் நித்தியமானவர் என்பதை நிரூபிக்க, வல்லமை, ஞானம் மற்றும் நீதியின் செயல்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பயன்படுத்த இன்னும் நம்மிடம் உள்ளன.
10. அப்படியானால், இதுதான் விலைமதிப்பற்ற கற்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த அங்கி; இதுதான் உண்மையான பாதிரியார் அணியும் அங்கி; இதுதான் மணமகள் அணியும் ஆடை. இந்த உடையைத் திறமையாக வடிவமைத்த ஆர்வம்மிகு நெசவாளர் இங்கே நிற்கிறார். கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசி மூலம் குறிப்பிட்டது போல, இது ஒரு சாதாரண நெய்யப்பட்ட துண்டு அல்ல: பெண்களுக்கு நெசவுத் திறமையை யார் கொடுத்தார்கள்? மேலும், இவை வெறும் கற்கள் அல்ல – நிரப்புதலுக்காகவே வடிவமைக்கப்பட்ட கற்கள் என்று குறிப்பிடப் படுகின்றன; ஏனென்றால் உண்மையான பரிபூரணம் அங்கே இருக்கிறது, அதில் எந்தக் குறையும் இல்லை. அவை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டு தங்கத்தில் பதிக்கப்பட்ட கற்கள் – அவை ஆன்மீக இயல்பைக் குறிக்கின்றன; நமது எண்ணங்கள் எவ்வாறு இணைந்து ஒரு வற்புறுத்தும் வாதத்தை உருவாக்குகின்றனவோ அந்த அளவுக்கு இந்தக் கற்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை வேதாகமம் காட்டுகிறது: சில ஒரு வகையையும் மற்றயவை குறைந்த மதிப்புள்ள மற்றொரு வகையையும் கொடுத்தன; ஆனாலும் இந்த பக்தியுள்ள இளவரசர்கள் அவற்றைக் கொண்டு வந்து, தங்கள் தோள்களை அலங்கரித்து, நியாயத்தீர்ப்பின் மார்புக்கவசத்தை உருவாக்க அவற்றைப் பயன்படுத்தினர். இது ஒரு வகையான நெய்தல். விசுவாசமும் செயலும் ஒன்றாக வரும்போது நாம் ஒரு நெய்தலின் முழுமையை அடைகிறோம்.
11. நான் முதலில் விடயங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்தேன். அதற்காக எவரும் என்னைத் தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொன்றும் நான்கு பொருட்களுடனும் பின்னர் நான்கு பகுதிகளாகவும்; ஒவ்வொன்றும் மூன்று பொருட்களுடனும் காணப்படுகின்றது. ஒரு நல்ல விஷயத்தின் அழகு வெவ்வேறு வழிகளில் காட்டப்படும்போது அதன் பெறுமானம் இன்னும் அதிகமாகும். ஏனென்றால், அவை நல்ல விஷயங்கள், அவற்றில் ஆசாரிய அங்கியின் அமைப்பு நியாயப்பிரமாணத்திற்கோ அல்லது திருச்சபைக்கோ அடையாளமாக இருந்தது, அதில் பிந்தையது – எழுதப்பட்டபடி தனது துணைக்கு இரண்டு ஆடைகளை உருவாக்கியுள்ளது போல் – ஒன்று செயல், மற்றொன்று நம்பிக்கை மற்றும் செயல்களின் நூல் இழைகளை ஒன்றாக நெய்யும் ஆற்றல். இவை விசுவாசத்தையும் செயல்களையும் ஒன்றாக நெய்த நல்ல விஷயங்கள். இவ்வாறு ஒரு இடத்தில் நாம் படிக்கும் போது, அவள் தங்கத்தால் ஒரு அடித்தளத்தை உருவாக்கி, அதன் மேல் நீலம், ஊதா, கருஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற நூலிழைகளைக் கொண்டு நெய்கிறாள். மீண்டும், வேறு ஒரு இடத்தில், அவள் முதலில் சிறிய நீலநிறப் பூக்கள் மற்றும் பிற வண்ணங்களைச் செய்து தங்கத்தை இணைத்து ஒரு ஒற்றை ஆசாரிய அங்கியை உருவாக்குகிறாள். இதனால் ஒரே பிரகாசமான வண்ணங்களால் செய்யப்பட்ட பல்வேறு கருணை மற்றும் அழகின் அலங்காரங்கள், வெவ்வேறு வழிகளில் வரிசைக் கிரமத்தோடு செய்யப்படுவதன் மூலம் புதிய மகிமையைப் பெறுகின்றன.
12. கூடுதலாக (இந்த வகைகளைப் பற்றிய நமது புரிதலை நிறைசெய்ய), சுத்திகரிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி இறைவனின் வாக்கியங்களைக் குறிக்கின்றன, அவை நம் நம்பிக்கையை நிலைநிறுத்துகின்றன என்பது தெளிவாகிறது. இறைவனின் வாக்கியங்கள் உண்மையான வாக்கியங்கள், வெள்ளி நெருப்பில் புடம்போடப்பட்டு, அசுத்தங்கள் இல்லாமல், ஏழு முறை சுத்திகரிக்கப்பட்டது. இப்போது, நீலம் நாம் சுவாசிக்கும் காற்றை ஒத்திருக்கிறது; ஊதா நீரின் தோற்றத்தைக் குறிக்கிறது; கருஞ்சிவப்பு நெருப்பைக் குறிக்கிறது; வெள்ளை துணி என்பது பூமியைக் குறிக்கிறது, ஏனெனில் அது பூமியிலிருந்து உருவாகிறது. இந்த நான்கு கூறுகளும் சேர்ந்து தான் மனித உடலை உருவாக்குகின்றன.
13. உங்கள் ஆன்மாவில் ஏற்கனவே உள்ள நம்பிக்கையுடன் நீங்கள் உடல் ரீதியான செயல்களைச் சேர்க்கிறீர்கள், அல்லது செயல்கள் முதலில் வந்து அந்த விசுவாசம் அவற்றைக் கடவுளிடம் சமர்ப்பிக்கிறது. இது மதத் தலைவர் அணியும் அங்கி, ஆசாரிய வஸ்திரம்.
14. ஆகையால், யாக்கோபு 2:14–26 கூறுவது போல், விசுவாசம் நல்ல செயல்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது நன்மை பயக்கும். நான் சுருக்கமாகக் கூறும் இந்த நம்பிக்கை, பின்வரும் கொள்கைகளில் காணப்படுகிறது, அதை யாராலும் அழிக்க முடியாது. குமாரனுக்கு எந்த மூலமும் இல்லையென்றால், அவர் குமாரன் அல்ல; அவர் ஒரு உயிரினமாக இருந்தால், அவர் படைப்பாளர் அல்ல; அவர் படைக்கப்பட்டிருந்தால், அவர் எல்லாவற்றையும் படைக்கவில்லை; அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அவருக்கு முன்னறிவு இருந்திருக்காது; அவர் ஒரு பெறுநராக இருந்தால், அவர் சரியானவராக இருந்திருக்க முடியாது; அவர் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டிருந்தால், அவர் கடவுளாக இருந்திருக்க முடியாது. அவர் பிதாவைப் போலல்லாமல் இருந்தால், அவர் பிதாவின் சாயலில் இருந்திருக்க முடியாது; அவர் கிருபையால் குமாரனாக இருந்தால், அவர் இயல்பிலேயே அப்படிப்பட்டவராக இருந்திருக்க முடியாது; அவருக்கு தெய்வீகத்தில் எந்தப் பங்கும் இல்லையென்றால், பாவம் செய்யும் சுதந்திரம் அவருக்குள் இருந்திருக்கும். ஆகவே, “என்னை நீ நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர்” என்று மாற்கு 10:18 இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் 1
மாற்கு 10:18-ல் உள்ள “கடவுள் ஒருவரே தவிர நல்லவர் வேறு யாரும் இல்லை” என்ற இயேசுவின் வார்த்தைகளை விளக்குவதன் மூலம் ஆரியர்களின் வாதம் மறுக்கப்படுகிறது
15. ஓ, மாட்சிமை தங்கியவரே! நான் இப்போது கையாளும் சவால் என்னை முற்றிலும் குழப்பத்திலும் திகைப்பிலும் ஆழ்த்துகிறது; இறைவனிடமிருந்து எண்ணற்ற மற்றும் மகத்தான ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தாலும், எல்லா நன்மைகளையும் படைத்தவரை நல்லவர் அல்ல என்று கூறக்கூடிய மனிதர்கள் அல்லது மனித வடிவில் உலாவும் ஈனப்பிறவிகள் இருக்கிறார்கள் என்று எண்ணும்போது என் ஆன்மாவும் உடலும் பலவீனமடைகிறது.
16. கடவுள் ஒருவர் தவிர வேறு நல்லவர் இல்லை என்று எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் வேதாகமத்தை ஏற்றுக்கொள்கிறேன், அதில் உள்ள தெய்வீக உரைகள் அனைத்தும் உண்மை; ஆரியர்கள் அதை தவறாகப் புரிந்துகொள்வது வெட்கக்கேடானது. எழுதப்பட்ட வார்த்தைகள் நிர்மலமானவை; பிரச்சினையை ஏற்படுத்துவது அதிலிருந்த அர்த்தத்தை விளங்கிக்கொண்ட முறைதான். இந்த வார்த்தைகளை நம் ஆண்டவரும் இரட்சகருமானவரின் வார்த்தைகளாக நான் அங்கீகரிக்கிறேன் – அவர் எப்போது, யாருக்கு, எந்த புரிதலுடன் பேசுகிறார் என்பதை நாம் நன்றாக விளங்கி மனதிற்கொள்ள வேண்டும்.
17. கடவுளின் குமாரன் நிச்சயமாக ஒரு மனிதனாகப் பேசுவதோடு, அவர் ஒரு எழுத்தாளரைப் பற்றி பேசுகிறார் – ஏனெனில், கடவுளின் குமாரனை நல்ல எஜமானர் என்று அழைத்தபோதும், அவரைக் கடவுள் என்று அங்கீகரிக்கவில்லை. கிறிஸ்து அந்த நபருக்கு அவர் நம்பாததை தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அவர் கடவுளின் குமாரனை ஒரு நல்ல எஜமானராக மட்டுமல்ல, நல்ல கடவுளாகவும் பார்க்க முடியும். ஒரே கடவுள் என்று குறிப்பிடப்படும் இடங்களில் எல்லாம், கடவுளின் குமாரன் எப்போதும் அந்த ஒற்றுமையில் சேர்க்கப்படுகிறார் என்றால், கடவுள் மட்டுமே நல்லவர் என்று கூறப்படும்போது, ஒரே பேறானவர் எவ்வாறு தெய்வீக நன்மையின் முழுமையிலிருந்து வெளியேற முடியும்? எனவே, கடவுளின் குமாரனும் கடவுள் தான் என்ற கருத்தை ஆரியர்கள் நிராகரிக்க வேண்டும், அல்லது கடவுள் நல்லவர் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
18. நமது ஆண்டவர், தெய்வீக உத்வேகம் மற்றும் புரிதலுடன், தந்தையைத் தவிர வேறு யாரும் நல்லவர் இல்லை என்று மட்டுமல்ல, கடவுள் மட்டுமே தவிர வேறு யாரும் நல்லவர் இல்லை என்றும் கூறினார். தந்தை என்பது பெற்றவருக்குக் கொடுக்கப்படும் சரியான பெயர். ஆனால் கடவுளின் ஒற்றுமை எந்த வகையிலும் மூன்று நபர்களின் தெய்வீகத்தை விலக்குவதில்லை. ஆகவே போற்றப்படுவது அவரது இயல்புதான். ஆகையால், நன்மை என்பது கடவுளின் இயல்புக்கு ஒப்பானது, மேலும் அந்த இயல்புக்குள் கடவுளின் குமாரன் வாசம் செய்கிறார். எனவே, முன்னறிவிப்பு தெரிவிக்கும் விடயம் ஒரு தனி நபரைக் குறித்து மட்டுமல்ல, [முழுமையான] ஐக்கியத்துக்கும் [கடவுளின்] பொருந்தும்.
19. கர்த்தர் தம்முடைய நன்மையை நிராகரிக்கவில்லை – அதற்கு பதிலாக, அவர் இந்த வகையான சீடரைத் திருத்துகிறார். வேதபாரகர் அவரை நல்ல குரு என்று அழைத்தபோது, கர்த்தர், “நீங்கள் என்னை ஏன் நல்லவர் என்று அழைக்கிறீர்கள்?” என்று பதிலளித்தார். அதாவது, நீங்கள் அவர் கடவுள் என்று நம்பவில்லை என்றால், அவரை நல்லவர் என்று முத்திரை குத்துவது போதாது. நான் அப்படிப்பட்ட சீடர்களைத் தேடவில்லை – என் தெய்வீகத்தை அங்கீகரித்து என்னை நல்ல கடவுள் என்று நம்புவதற்குப் பதிலாக, என் மனிதகுலத்தில் கவனம் செலுத்தி, என்னை ஒரு நல்ல குருவாகக் காணும் சீடர்கள் போன்றவர்களையே நான் தேடுகிறேன் என்றார்.
அத்தியாயம் 2
தேவனுடைய குமாரனின் நற்குணம் அவருடைய செயல்களிலிருந்து, அதாவது பழைய உடன்படிக்கையின் கீழ் இஸ்ரவேல் மக்களுக்கும், புதிய உடன்படிக்கையின் கீழ் கிறிஸ்தவர்களுக்கும் அவர் காட்டிய நன்மைகளிலிருந்து நிரூபிக்கப்படுகிறது. நமது ஆண்டவரும் நீதிபதியுமானவரின் நற்குணத்தில் நம்பிக்கை வைக்க இது உதவுகிறது. தந்தை குமாரனைப் பற்றி சாட்சியமளிக்கிறார். பல யூதர்கள் குமாரனுக்கு சாட்சியமளிக்கிறார்கள். எனவே ஆரியர்கள் யூதர்களை விட மிகவும் மோசமானவர்கள். மணமகளின் வார்த்தைகளும் கிறிஸ்துவின் அதே நற்குணத்துக்கு சான்று பகர்கின்றன.
20. இருப்பினும், மகன் தனது இயல்பின் தனிச்சிறப்புரிமையையும், அவரது மாட்சிமையின் தனித்துவமான உரிமைகளின் கூற்றுகளையும் மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவர் அந்தப் பட்டத்திற்குத் தகுதியானவர் இல்லையென்றால், அவரை நல்லவர் என்று அழைக்க வேண்டாம். நல்ல செயல்களாலும், தயவின் கிரியைகளாலும் அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், அவர் தம்முடைய இயல்பால் தனக்குள்ள உரிமையை விட்டுக்கொடுத்து, நம்மால் நியாயந்தீர்க்கப்படுவார். நம்மை நியாயந்தீர்ப்பவர் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படுவதை மறுக்கமாட்டார், இதனால் அவர் சொல்வதில் சரியானவர் என்றும், நியாயந்தீர்க்கப்படும்போது தெளிவாக இருப்பார் என்றும் காட்டப்பட்டுள்ளது.
21. அவர் நல்லவர் இல்லையென்றால், எனக்கு நல்ல வழிகளைக் காட்டியவர் யார்? அவர் நல்லவராக இல்லாவிட்டால், ஆறு லட்சம் யூதர்கள் தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பி ஓடியபோது, அற்புதமாக செங்கடலைப் பிரித்து, ஒரு திடமான நீர் சுவரை உருவாக்கி இருந்திருக்கமாட்டார் அல்லவா? அப்போது அலைகள் விசுவாசிகளைச் சுவர்களைப் போலச் சூழ்ந்தன. இருப்பினும், திரும்பி வந்து அவிசுவாசிகளை மோதி மூழ்கடித்தன.
22. உயிர் தப்பி ஓடியவர்களுக்கு கடல்களை திடமான நிலமாக மாற்றக் கட்டளையிட்டவரும், தாகமுள்ளவர்களுக்குப் பாறைகளில் தண்ணீரை ஊற்றெடுக்கச் செய்தவருமான அவர் அற்புதமானவர் அல்லவா? திரவம் திடமாக மாறியதும், பாறையில் தண்ணீர் ஊற்றெடுத்ததும் உண்மையான படைப்பாளரின் கிரியைக் காட்டுகிறது. அப்போஸ்தலன் குறிப்பிட்டது போல், இதை கிறிஸ்துவின் அற்புதக் கிரியையாக நாங்கள் அங்கீகரிக்கிறோம்: 1 கொரிந்தியர் 10:4 இல் கூறப்பட்டுள்ளபடி அந்தப் பாறை தான் கிறிஸ்து.
23. அவர் நல்லவராக இல்லாவிட்டால், வனாந்தரத்தில் அகப்பட்டுக்கொண்ட எண்ணற்ற, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வானத்திலிருந்து அப்பத்தைப் பொழிந்ததன் மூலம் உணவளித்திருப்பாரா? அதனால் அவர்கள் பசியால் வாடவில்லை, உடலை வருத்தி தொழில் ஏதும் செய்யாமல் அவர்களால் ஓய்வெடுக்க முடிந்த அந்த நிலையை ஏற்படுத்தியது யார்? நாற்பது வருடங்களாக அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்தோ நைந்தோ போகவில்லை, அவர்களின் காலணிகள் தேய்ந்து போகவில்லை. இவை யாவும் வரவிருக்கும் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது ஒரு அடையாளமாகவும் மகத்தான செயல்களின் மகிமையும், அவர் நமக்கு அணிவித்த வல்லமையின் அழகும், மனித வாழ்க்கையின் நீரோட்டமும் வீணாகப் படைக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
24. அவர் நல்லவராக இல்லாவிட்டால், பூமியை விண்ணகத்தை நோக்கி உயர்த்தியவர் யார்? வேறு எவரால் நட்சத்திரங்களின் பிரகாசமான தொகுதிகள் வானத்தில் அவருடைய மகிமையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கவும், ஒரு கண்ணாடியில் இருப்பது போலக் காட்சியளிக்கவும், அப்போஸ்தலர்கள், தியாகிகள் மற்றும் ஆசாரியர்களின் கீர்த்தனைக் குழுக்கள், அற்புதமான நட்சத்திரங்களைப் போல பிரகாசித்து உலகத்தை ஒளிரச் செய்யவும் முடியும்?
25. அப்படியானால், அவர் நல்லவர் மட்டுமல்ல, அதற்கும் மேலானவர், உன்னதர். அவர் ஒரு நல்ல மேய்ப்பன், தனக்காக மட்டுமல்ல தம் ஆடுகளுக்கும் கூட. ஏனெனில் ஒரு நல்ல மேய்ப்பன் தன் மந்தைக்காகத் தன் உயிரைக் கொடுக்கிறான். ஆம், நம்முடைய ஜீவனை உயர்த்துவதற்காக அவர் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். அவருடைய தெய்வீக இயல்பின் வல்லமையால்தான் அதைச் செய்தார், பின்னர் அதே வல்லமையின் ஊடாக அதைத் திரும்பப் பெற்றார்: ‘என் உயிரைக் கொடுக்க எனக்கு அதிகாரம் உண்டு, அதைத் திரும்பப் பெறவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை எந்த மனிதனாலும் என்னிடமிருந்து எடுக்க முடியாது; ஏனென்றால் நானே அதை மனமுவந்து கொடுக்கிறேன்.’
26. அவர் அதை தாமாகவே கொடுத்ததில் அவருடைய நன்மையை நீங்கள் காண்கிறீர்கள்; அவர் அதை மீண்டும் எடுத்துக்கொண்டதில் அவருடைய வல்லமையை நீங்கள் காண்கிறீர்கள். “நான் நல்லவன் என்றால், உன் கண் ஏன் தீயதாக இருக்கிறது” என்று நற்செய்தியில் அவர் தம்மைப் பற்றிப் பேசியிருக்கும்போது, அவருடைய நன்மையை உங்களால் மறுக்க முடியுமா? நன்றியற்ற பாவிகளே, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நல்ல கிரியைகளில் எவருக்கெல்லாம் நன்மை கிடைக்கும் என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களென்றால், அவருடைய நன்மையை அதாவது, கண்கள் காணாததையும், காதுகள் கேட்காததையும் நமக்குக் கொடுத்த அவருடைய நன்மையை உங்களால் மறுக்க முடியுமா?
27. அவர் நல்லவர் என்று விசுவாசிப்பது எனக்கு நல்லது, ஏனென்றால் கர்த்தரை விசுவாசிப்பது ஒரு சிறந்த விடயம். அவரை ஆண்டவர் என்று ஒப்புக்கொள்வது எனக்கு மிகவும் நல்லது, ஏனென்றால் அது எழுதப்பட்டுள்ளது: “கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனென்றால் அவர் நல்லவர்” என்று.
28. என் நியாயாதிபதியை நல்லவர் என்று எண்ணுவது எனக்கு நன்மையையே கொண்டுவரும். ஏனென்றால், கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நீதியுள்ள நியாயாதிபதியாக இருக்கிறார். அப்படியானால், தேவனுடைய குமாரனே நியாயாதிபதி என்றால், நியாயாதிபதியானவர் நீதியுள்ள தேவனும், தேவனுடைய குமாரனுமாக இருப்பதனால், நியாயாதிபதியும் தேவனுடைய குமாரனுமாகிய அவரே நீதியுள்ள தேவனாயிருக்கிறார்.
29. ஆனால் ஒருவேளை நீங்கள் மற்றவர்களையோ, குமாரனையோ கூட நம்பாமல் இருக்கலாம். எனவே பிதா சொல்வதைக் கேளுங்கள்: என் இதயம் அதன் ஆழத்திலிருந்து நல்ல வார்த்தையை வெளிப்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்த வார்த்தை நல்லது; அந்த வார்த்தை எழுதப்பட்ட வார்த்தை; “உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது” என்று யோவான் 1:1 கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஆகையால், வார்த்தை நல்லதாயிருந்தால், குமாரன் தேவனுடைய வார்த்தையாக இருந்திருந்தால், நிச்சயமாக, அது ஆரியர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், தேவனுடைய குமாரன் தான் தேவன். இதைக்கேட்டு அவர்கள் இப்போது வெட்கத்தால் தலைகுனியட்டும்.
30. யூதர்கள், “அவர் நல்லவர்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிலர், “அவர் நல்லவர் இல்லை” என்று சொன்னார்கள், ஆனால் மற்றவர்கள், “அவர் நல்லவர்” என்று சொன்னார்கள். அப்படியிருந்தும் நீங்கள் அனைவரும் அவருடைய நன்மையை மறுக்கிறீர்கள்.
31. ஒரு மனிதனின் பாவத்தை மன்னிப்பவர் நல்லவர்; எனவே, உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் நீக்கியவர் நல்லவர் அல்லவா? அதனால் தான், அவரைப் பற்றி, “இதோ உலகத்தின் பாவங்களைப் போக்கும் கடவுளின் செம்மறிப்பிருவை” என்று சொல்லப்பட்டது.
32. அப்படியானால் நாம் ஏன் சந்தேகம் கொள்ளவேண்டும்? திருச்சபை இந்தக் காலங்கள் முழுவதும் அவரது நன்மையை நம்பி, “அவர் தம்முடைய வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடட்டும்; ஏனெனில் உங்கள் மார்பகங்கள் மதுவை விட சிறந்தவை” என்ற வார்த்தையில் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது (உன்னதப்பாட்டு 1:1). மீண்டும், உங்கள் தொண்டை மிகச் சிறந்த மதுவைப் போன்றது” என்ற கூற்றில் தனது விசுவாசத்தை ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அவர் தம்முடைய நன்மையைப் பற்றி, நியாயப்பிரமாணம் மற்றும் கிருபையின் மார்பகங்கள் வழியாக நம்மைப் போஷிக்கிறார். பரலோக சத்தியங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் நம் துக்கங்களை ஆறுதல்படுத்துகிறார்; ஆகவே, அவர் நன்மையையே வெளிப்படுத்தி, நித்திய அருளைப் பிரதிபலிக்கும் போது, அவருடைய நன்மையை நாம் எவ்வாறு மறுக்க முடியும்? அவர் அந்த அருளின் களங்கமற்ற பிரதிபலிப்பு மற்றும் பிரதி என்று மேலே எழுதப்பட்டிருப்பதைக் காட்டியது போல, நித்திய அருளின் சாயலை அவர் (உன்னதப்பாட்டு 7:9 இல் வெளிப்படுத்துகிறாரா?
அத்தியாயம் 3
கடவுள் ஒருவரே என்பதால், கடவுளின் குமாரனும் கடவுளே; அவர் நல்லவர் மற்றும் உண்மையானவர்
33. ஆனால், கடவுள் ஒருவரே தவிர வேறு கடவுள் இல்லை என்று எழுதப்பட்டிருந்தாலும், கடவுளின் குமாரனின் நன்மையையும் உண்மையான தெய்வத்தன்மையையும் மறுப்பவர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதுகுறித்து 1 கொரிந்தியர் 8:4 இல் கூறப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். கடவுள்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இருந்தாலும், கடவுள்கள் என்று அழைக்கப் படுபவர்களில் கிறிஸ்துவையும் நீங்கள் சேர்த்துக் கொள்வீர்களா? எல்லாவற்றிற்கும் மேலாக, நித்தியம் அவரது சாரத்தின் ஒரு பகுதியாகும். அவரைத் தவிர நல்ல மற்றும் உண்மையான கடவுள் வேறு யாரும் இல்லை, ஏனெனில் கடவுள் அவரில் இருக்கிறார். இதை யோவான் 17:22-23 “நீர் எனக்குத் தந்த மகிமையை நான் தருவதால் அவர்கள் ஒன்றாக இருப்பார்கள். நானும் நீரும் ஒன்றாக இருப்பது போல, நான் அவர்களில் இருப்பேன்; நீர் என்னில் இருப்பீர். ஆக அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். பிறகு இந்த உலகம் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொள்ளும். நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோலவே நீர் அவர்களிடமும் அன்பாக இருக்கிறீர் என்பதையும் உலகம் தெரிந்து கொள்ளும்” என்று மிகவும் தெளிவாக சாட்சியம் கூறுகிறது. இதன்மூலம், பிதாவின் இயல்பிலிருந்தும், அவருக்குப் பிறகும் வேறு உண்மையான கடவுள் எவரும் இல்லை என்பது தெளிவாகிறது, ஏனென்றால் கடவுள் ஒருவரே. இதன் பொருள் சபெல்லியர்களைப் (Sabellian) போல நாம் பிதாவையும் குமாரனையும் குழப்பிக்கொள்ளக்கூடாது, அல்லது ஆரியர்களைப் போல அவர்களைப் பிரிக்கவும் கூடாது. பிதாவும் குமாரனும் தனித்துவமானவர்கள்; அவர்கள் என்றும் தங்கள் தெய்வீகத்தைப் பிரிப்பதை ஒப்புக்கொள்வதில்லை.
அத்தியாயம் 4
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் காட்டப்பட்டுள்ளதுபோல், கடவுளின் குமாரன் சர்வ வல்லமையுள்ளவராக இருக்கிறார்
34. எனவே, கடவுளின் குமாரன் உண்மையுள்ளவர் மற்றும் நல்லவர் என்று நாம் கண்டால், அவர் சர்வவல்லமையுள்ள கடவுளாக இருக்க வேண்டும், அல்லவா? இங்கே உண்மையில் சந்தேகத்திற்கு ஏதேனும் இடமுண்டா? சர்வவல்லமையுள்ள கர்த்தர் அவருடைய திருநாமம் என்று கூறும் பகுதியை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே, குமாரனான கர்த்தர், அவர் சர்வவல்லமையுள்ளவர் என்பதால், கடவுளின் குமாரன் உண்மையில் சர்வவல்லமையுள்ளவர் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
35. ஆனால் நீங்கள் சந்தேகிக்க முடியாத, நம்பக்கூடிய ஒரு பகுதியையும் கேளுங்கள்: வேதாகமம் இவ்வாறு கூறுகிறது; இதோ, அவர் மேகக் கூட்டங்களுக்கு நடுவே வருகிறார், அவரது உடலைத் துளைத்தவர்கள் உட்பட ஒவ்வொரு கண்ணும் அவரைக் காணும், பூமியின் எல்லா மக்களும் அவருக்காகப் புலம்புவர். ஆமென். வெளிப்படுத்துதல் 1:8 சொல்வது போல், “நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். நான் இருக்கிறவராகவும், இருந்தவராகவும், இனி வருகிறவருமாய் இருக்கிற சர்வவல்லமை உள்ளவராயிருக்கிறேன்” என்ற கர்த்தரின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அவர்கள் யாரைத் துளைத்தார்களோ, அவருடைய வருகையை, நாம் குமாரனுடையதைத் தவிர வேறு யாருடைய வருகையை நாம் எதிர்பார்க்கிறோம்? ஆகையால், கிறிஸ்துவே சர்வவல்லமையுள்ள கர்த்தரும் தேவனுமாக இருக்கிறார்.
36. மாட்சிமை பொருந்தியவரே, மற்றொரு பகுதியையும் கேளுங்கள்; கிறிஸ்துவின் குரலைக் கேளுங்கள்; சர்வவல்லமையுள்ள கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்: தம்முடைய மகிமைக்குப் பிறகு, உங்களைக் கொள்ளையிட்ட தேசங்களுக்கு எதிராக அவர் என்னை அனுப்பினார். ஏனென்றால் உங்களுக்குத் தீங்கு செய்பவர் அவருடைய கண்ணின் மணிக்கு தீங்கு விளைவிக்கிறார். இதோ, உங்களைக் கொள்ளை இட்டவர்கள் மீது நான் என் கையை வைக்கிறேன், நான் உங்களைக் காப்பாற்றுவேன், அவர்கள் உங்களைக் கொள்ளையிட்டவர்களுக்குக் கொள்ளையாக மாறுவார்கள், சர்வவல்லமையுள்ள கர்த்தர் என்னை அனுப்பினார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும். ஆகவே, பேசுபவரும் அனுப்புபவரும் சர்வவல்லமையுள்ள கர்த்தர் என்பது இங்கே தெளிவாகிறது. ஆகையால், பிதாவுக்கு குமாரனுக்கு சர்வ வல்லமை உண்டு, ஆனால் அவர்கள் ஒரே ஒரு கடவுள் மட்டுமே, ஒரே ஒரு மகத்துவத்தில் ஒரே ஒரு சர்வவல்லவர்.
37. மேலும், மகா மேன்மை பொருந்தியவரே, நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கிறிஸ்துவே பேசினார் என்பதை நீர் அறிவீர். அதேபோல், தீர்க்கதரிசியின் வார்த்தைகளில் அவர் ஏசாயா மூலம் கிட்டத்தட்ட நற்செய்தியை முன்னறிவிப்பது போல் பேசுகிறார்: பேசிய நானே, வந்துவிட்டேன்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நியாயப்பிரமாணத்தில் பேசிய நான், இப்போது இங்கே நற்செய்தியில் இருக்கிறேன் என்று.
38. மற்றுமொரு பகுதியில், யோவான் 16:25 இவ்வாறு கூறுகிறது: பிதாவிடம் உள்ள அனைத்தும் என்னுடையவை. ‘அனைத்தும்’ என்று அவர் எதைப்பற்றிச் சொல்கிறார்? வெளிப்படையாக சொல்வதானால், படைக்கப்பட்டவை பற்றி அல்ல, ஏனெனில் அவை அனைத்தும் குமாரனால் படைக்கப்பட்டன. இங்கே கூறப்பட்டுள்ளவை பிதாவுக்குச் சொந்தமானவை – அதாவது நித்தியம், இறையாண்மை, தெய்வீகம் போன்றவை பிதாவால் படைக்கப்பட்டவை, அதாவது அவருடையவை. எனவே, அவர் சர்வவல்லமையுள்ளவர், பிதாவிடம் உள்ள அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர் (கூறப்பட்டுள்ளபடி: பிதாவிடம் உள்ள அனைத்தும் என்னுடையது என்பதே அதன் அர்த்தம்).
அத்தியாயம் 5
கிறிஸ்துவின் சர்வ வல்லமைக்கு எதிராக வலியுறுத்தப்பட்ட வேதாகமத்திலிருந்து சில பகுதிகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது; கிறிஸ்து பெரும்பாலும் மனித உணர்வுகளுக்கு ஏற்றவாறு பேசினார் என்பதை நிரூபிக்க ஆசிரியர் உண்மையிலேயே கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்
39. அது ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் ஒரே வல்லமையுள்ள கடவுளைப் பற்றிப் பேசினாலும் (1 தீமோத்தேயு 5:15), கடவுளின் குமாரன் அவரிடமிருந்து பிரிக்கப்பட்டிருப்பதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை. வேதாகமம் கடவுளை வெறும் பிதா ஒரே வல்லமையுள்ளவர் என்று குறிப்பிடவில்லை. பிதாவே தீர்க்கதரிசி மூலம் கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கிறார். நான் வல்லமையுள்ள ஒருவருக்கு உதவியை அமைத்துள்ளேன். அப்படியானால், பிதா மட்டுமே ஒரே வல்லமையுள்ளவர் அல்ல; குமாரனாகிய தேவனும் வல்லமையுள்ளவர், ஏனென்றால் பிதாவின் துதியில் குமாரனும் புகழப்படுகிறார்.
40. கடவுளின் குமாரனால் என்ன செய்ய முடியாது என்பதை யாராவது சுட்டிக்காட்ட முடியுமா? அவர் வானங்களை உருவாக்கியபோது அவருக்கு உதவ யார் இருந்தார்கள்? உலகத்தின் அஸ்திவாரங்களை அமைக்க அவருக்கு யார் உதவினார்கள்? தேவதூதர்களையும் துரைத்தனங்களையும் நிறுவ அவருக்கு யாரும் தேவையில்லாதபோது, மனிதகுலத்தை விடுவிக்க அவருக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டதா? ஒருவராலும் தேவனைக் காண இயலாது. “இயேசு தேவனைப் போன்றவர். படைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் மேலும் இயேசுவே ஆட்சியாளர். பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப்பட்டவை. அவை கண்ணால் காணபவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள், அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை” என்று கொலோசெயர் 1:15-16 கூறுகிறது.
41. ‘என் பிதாவே, முடிந்தால் இந்தப் பாத்திரத்தை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே, அவர் சர்வவல்லமையுள்ளவராக இருந்தால், அவர் ஏன் சாத்தியத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும்? இது, நான் அவரை சர்வவல்லமையுள்ளவராகக் காட்டியதிலிருந்து, ‘சாத்தியமானது’ என்பதை அவர் சந்தேகிக்க முடியாது என்பதையும் நான் காட்டியுள்ளேன் என்பதைக் குறிக்கிறது.
42. இந்த வார்த்தைகள், கிறிஸ்துவின் வார்த்தைகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். உண்மை. ஆனால் அவர் ஏன் அவற்றைப் பேசினார், எந்த சூழ்நிலையில் பேசினார் என்பதைக் கவனியுங்கள். அவர் மனித இயல்பையும் அதனுடன் மனித உணர்வுகளையும் எடுத்துக் கொண்டார். மேலே குறிப்பிட்டுள்ளபடி, அவர் சிறிது தூரம் சென்று, முகங்குப்புற விழுந்து, “பிதாவே, முடிந்தால்” என்று ஜெபிக்கிறார். அவர் இங்கே கடவுளாக அல்ல, ஒரு மனிதனாகப் பேசுகிறார், ஏனென்றால் கடவுள் சாத்தியமான அல்லது சாத்தியமற்றதை அறியாமல் இருப்பவரா? அல்லது வேதாகமம் யோபு 22:17 இல், தேவனால் சாத்தியமாகாதது ஏதேனும் உண்டோ? என்றும் “உம்மால் முடியாதது எதுவுமில்லை” என்றும் கூறுகிறது.
43. யாரைப் பற்றி அவர் சந்தேகிக்கிறார்? தன்னைப் பற்றியா அல்லது பிதாவைப் பற்றியா? “என்னிடமிருந்து எடுத்துவிடும்” என்று சொல்பவரைப் பற்றி, ஒரு மனிதனில் ஏற்படக்கூடிய சந்தேகத்தைப் போல, தீர்க்கதரிசி உணர்ச்சிவசப்படுகிறார். அப்படியானால், தீர்க்கதரிசி சந்தேகிக்கவில்லை; குமாரன் தான் சந்தேகிக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கடவுளை ஒரு மனிதனை விட தாழ்ந்தவராக உங்களால் எடைபோட முடியுமா? கடவுள் தம்முடைய பிதாவை சந்தேகித்து மரணத்திற்கு பயப்படுகிறாரா? அப்படியானால் கிறிஸ்து பயப்படுகிறாரா? – பேதுரு எதற்கும் பயப்படுவதாகத் தெரியவில்லை. பேதுரு அவரிடம், “ஆண்டவரே, உமக்காக நான் என் உயிரைத் தரவும் தயார்” என்று யோவான் 13:37 இலும், “என் ஆன்மா கலக்கத்தில் இருக்கிறது” என்று கிறீஸ்து கூறியதாக யோவான் 12:27 இலும் கூறப்பட்டுள்ளது.
44. இரண்டு பதிவுகளுமே உண்மைதான். வலிமையானவர் இந்த உணர்வைத் தாங்க வேண்டும் என்பது போலவே, பலவீனமானவர் பயப்படக்கூடாது என்பதும் இயற்கையானதே. ஒன்றில் மரணத்தின் சக்தியை மக்கள் எவ்வளவு குறைவாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது, மற்றொன்றில், மனித உடலில் வாசம் செய்யும் கடவுள், சரீரத்தில் பலவீனத்தைக் காட்டுகிறார். இதனால் அவதாரத்தின் மர்மத்தை மறுப்பவர்களுக்கு எந்த சாக்குப்போக்கும் சொல்வதற்கு இல்லை. எனவே அவர் இந்த வழியில் பேசினார். ஆனால் மணீக்கியர்கள் நம்பவில்லை; வாலண்டினஸ் அதை மறுத்தார், மார்சியன் அவரை ஒரு பிசாசு என்று நினைத்தார்.
45. ஆயினும்கூட, அவர் ஒரு மனித நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொண்டார். உண்மையான மனித உடலை எடுத்துக்கொண்டு, “என் சித்தம் அல்ல, ஆனால் உம்முடைய சித்தத்தின் படியே ஆகட்டும்” என்று கூறி இதைக் காட்டினார் (மத்தேயு 26:39). ஆயினும்கூட, பிதா செய்வதைச் செய்ய அவருக்கு அதிகாரம் இருப்பது போலவே, பிதா விரும்புவதைச் செய்ய கிறிஸ்துவுக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது.
46. “நான் விரும்புகிறபடியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்” என்று கர்த்தர் சொன்னார் என்றும், “நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்காக நான் பரலோகத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் விரும்புவதைச் செய்வதற்கு வரவில்லை” (யோவான் 6:38) என்பது குறித்து நீங்கள் எங்களுக்கு எதிராக எழுப்பும் வழக்கமான ஆட்சேபனையை முடிவுக்குக் கொண்டுவருவோம்.
அத்தியாயம் 6
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேதாகமத்தின் பகுதிகள், இயேசு சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்று வாதிட்டு, திசைதிருப்பப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே ஆன்மாவுக்கு அத்தகைய சுதந்திரம் இருப்பதாக விவரிக்கும் பகுதிகளாலும், குமாரனுக்கு சுதந்திரத்தைக் கொடுத்த பகுதிகளாலும் காட்டப்படுகிறது
47. இப்போதைக்கு நமது ஆண்டவர் “முடிந்தால், ஒரு இடை நிறுத்தத்தை அழைப்போம்” என்று ஏன் கூறினார் என்பதை என்பதை இன்னும் சற்று ஆழமாகச் சென்று பார்ப்போம். அதே நேரத்தில் அவருக்கு விருப்ப சுதந்திரம் இருந்தது என்பதைக் காட்டுகிறோம். ஆனால் நீங்கள் அதை மறுக்கிறீர்கள் – இதுவரை நீங்கள் அக்கிரமத்தின் பாதையில் சென்றுவிட்டீர்கள் – கடவுளின் குமாரனுக்கு சுதந்திரமான விருப்பம் இருந்தது. மேலும், பரிசுத்த ஆவியிலிருந்து விலகிச் செல்வது உங்கள் வழக்கம், இருப்பினும் “ஆவியானவர் அவர் விரும்பும் இடத்தையெல்லாம் தனது சுவாசத்தால் நிரப்புகிறார்” என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் மறுக்க முடியாது. ஆவியானவருக்கு எங்கு வேண்டுமானாலும் செயல்பட முடியும். கட்டளையிடப்பட்ட இடங்களில் மட்டுமல்ல என்று வேதாகமம் கூறுகிறது. ஆவியானவரால் எங்கு வேண்டுமானாலும் செயல்படக் கூடுமென்றால், குமாரனுக்கும் அவ்வாறு ஏன் செய்ய முடியாது? அதே தேவனுடைய குமாரன்தான், தனது நற்செய்தியில் ஆவியானவர் எங்கு வேண்டுமானாலும் செயல்பட வல்லவர் என்று கூறுகிறார். ஆகையால், குமாரன் தனக்கு அனுமதிக்கப்படாததைச் செய்யவும் வல்லமை பெற்றிருப்பதால், ஆவியானவரை மகத்தானவர் என்று ஒப்புக்கொள்கிறாரா?
48. அப்போஸ்தலன் மேலும் கூறுகிறார், எல்லாம் ஒரே ஆவியின் செயல் என்று. “ஒரே ஆவியானவரே இவற்றையெல்லாம் செய்கிறார். ஒவ்வொருவனுக்கும் எதனைக் கொடுக்க வேண்டும் என்பதை ஆவியானவரே தீர்மானிக்கிறார்!” என்று 1 கொரிந்தியர் 12:11 இல் கூறப்பட்டதை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அது அவருடைய சித்தத்தின்படி, என்ற பதத்தை நன்றாகக் கவனியுங்கள் – அதாவது, கட்டாயத்திற்குக் கீழ்ப்படிவதில் அல்ல, ஒரு சுதந்திர விருப்பத்தின்படி. ஆவியானவர் அருளும் வெகுமதிகள் அற்பமானவை அல்ல; அவை கடவுள் அடிக்கடி செய்யும் செயல்களின் பிம்பங்கள் – குணப்படுத்தும் கிருபை மற்றும் சக்திவாய்ந்த செயல்கள் போன்றவைதான் அவை. எனவே ஆவியானவர் தனது விருப்பப்படி கொடுத்து அருளுகிறார். ஆனால் கடவுளின் குமாரன் அனைவரையும் விடுவிக்க முடியாது, ஆனாலும் அவர் தாம் விரும்பியபடி செயல்படும்போது அவருக்குச் செவிகொடுங்கள்: “என் கடவுளே, உமது சித்தத்தைச் செய்ய நான் விருப்பப்பட்டேன்”; மீண்டும்: “நான் உமக்கு மனமுவந்து ஒரு காணிக்கையைச் செலுத்துவேன்.”
49. இயேசு தாம் விரும்பியபடி செய்ய வல்லமை பெற்றவர் என்பதை பரிசுத்த அப்போஸ்தலன் பின்னர் அறிந்திருந்தார், எனவே, அவர் கடலின் மீது நடப்பதைக் கண்டு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நீர்மேல் நடந்து உம்மிடம் வர எனக்குக் கட்டளையிடும்” என்று மத்தேயு 14:28 கூறுகிறது. கிறிஸ்து கட்டளையிட்டால், இயற்கை நிலைமைகளை மாற்ற முடியும் என்றும், தண்ணீரின் மேற்பரப்பானது மனித கால்தடங்களைத் தாங்கும் என்றும், முரண்பாடான விஷயங்கள் இணக்கம் மற்றும் உடன்படிக்கையாகக் குறைக்கப்படும் என்றும் பேதுரு நம்பினார். பேதுரு கிறிஸ்துவிடம் கட்டளையிடச் சொல்கிறார், வேண்டுகோள் விடுக்கும்படி கேட்கவில்லை: கிறிஸ்து வேண்டுகோள் விடுக்கவில்லை, ஆனால் கட்டளையிட்டார், அது நிறைவேறியது – ஆனாலும் அரியஸ் அதை மறுக்கிறார்!
50. குமாரனிடம் இல்லாதது ஏதாவது பிதாவிடம் இருக்கிறதா, அல்லது பிதாவிடம் இல்லாதது ஏதாவது குமாரனிடம் இருக்கிறதா? யோவான் 5:21 சொல்வது போல், பிதா தாம் விரும்புவோருக்கு ஜீவனைக் கொடுக்கிறார், குமாரனும் தாம் விரும்புவோருக்கு ஜீவனைக் கொடுக்கிறார். பிதா விரும்பாதவர்களுக்கு குமாரன் ஜீவனைக் கொடுத்திருக்கிறார் என்று இப்போது சொல்லுங்கள் பார்க்கலாம்! ஆனால் குமாரன் தாம் விரும்புவோருக்கு ஜீவனைக் கொடுக்கிறார், பிதாவும் குமாரனும் ஒன்றே; குமாரன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறார், பிதாவும் குமாரனின் சித்தத்தை நிறைவேற்றுகிறார் என்பதை நீங்கள் இங்கே காணலாம். கிறிஸ்துவின் பாடுகளின் மூலம் கொண்டுவரப்பட்ட ஜீவனைத் தவிர வேறு என்ன ஜீவனைக் கொடுக்க முடியும்? கிறிஸ்துவின் பாடுகள் என்பது பிதாவின் சித்தமாகும். ஆகையால், குமாரன் ஜீவனைக் கொடுக்கும் போது, அவர் பிதாவின் சித்தத்தின்படியே தான் செய்கிறார்; ஏனென்றால் அவர்களுடைய சித்தம் அனைத்தும் ஒன்றே.
51. மீண்டும், பிதாவின் சித்தம் இயேசு உலகிற்கு வந்து நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க வேண்டும் என்பதுதான். தொழுநோயாளியின் வார்த்தைகளைக் கேளுங்கள்: “உமக்குச் சித்தமானால், நீர் என்னைச் சுத்திகரிக்க முடியும்” (மத்தேயு 8:2). அதற்கு இயேசு, “நான் சித்தமுள்ளவன்” என்று பதிலளித்தார். உடனடியாக தொழுநோயாளி குணமடைந்தார். குமாரன் தனது சொந்த சித்தத்திற்குப் பொறுப்பானவர் என்பதையும், கிறிஸ்துவின் சித்தம் பிதாவின் சித்தத்தைப் போன்றது என்பதையும் நீங்கள் காண்கிறீர்களா? உண்மையில், “பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவை” என்று யோவான் 16:15 இல் அவர் கூறுவதால், எதுவும் விலக்கப்படவில்லை – குமாரனுக்கும் பிதாவைப் போலவே அதே சித்தம் இருக்கிறது.
அத்தியாயம் 7
நாம் விவாதித்து வரும் சவாலை மீண்டும் ஒருமுறை எதிர்கொள்கிறோம். கிறிஸ்து உண்மையிலேயே ஒரு மனித விருப்பத்தையும் உணர்ச்சிகளையும் ஏற்றுக்கொண்டார். இது அவரது தெய்வீக இயல்பிலிருந்து வேறுபடலாம், ஆனால், இது அவர் ஒரே நேரத்தில் கடவுளாகவும் மனிதனாகவும் இருந்தார் என்பதைக் காட்டுகிறது
52. எனவே, செயலில் ஒற்றுமை இருக்கும்போது சித்தத்திலும் ஒற்றுமை இருக்கும்; கடவுளில், அவருடைய விருப்பம் உடனடியாக யதார்த்தமாக மாற்றமடைகிறது. இருப்பினும், கடவுளின் விருப்பம் ஒன்று, அதே நேரத்தில் மனித விருப்பம் வேறுபட்டது. மேலும், மனிதர்கள் வாழ்வைத்தான் விரும்புகிறார்கள் என்பதை விளக்குவதற்கும், நாம் மரணத்திற்கு பயப்படுவதால், கிறிஸ்துவின் துன்பம் தெய்வீக சித்தத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதை இங்கே கருத்தில் கொள்ளவேண்டும். பேதுரு கர்த்தர் துன்பப்படுவதைத் தடுக்க முயன்றபோது, அவர் பேதுருவை நோக்கி: “நீங்கள் கடவுளுக்கு உரியவைகளை அல்ல, மனிதர்களுக்குரியவைகளையே சிந்திக்கிறீர்கள்” என்று மத்தேயு 16:23 இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
53. ஆகவே, என் விருப்பத்தையும் என் பாடுகளையும் அவர் தானே ஏற்றுக்கொண்டார். நான் அதை வெளிப்படையாக பாடுகள் என்று அழைக்கிறேன். ஏனென்றால் நான் அவருடைய சிலுவையைப் பற்றி பிரசங்கிக்கிறேன். அவர் தனது சித்தம் என்று அழைத்தது என்னுடைய சித்தத்தை, ஏனென்றால் ஒரு மனிதனாக அவர் என் துக்கத்தையே சுமந்தார், அவர் மனிதனாகப் பேசினார். எனவே, அவர் ‘எனது சித்தத்தின்படி அல்ல, உமது சித்தத்தின்படியே ஆகக்கடவது’ என்று கூறினார். என் துக்கம் அவருடைய துக்கம், அதன் காரணமாக அவர் சுமந்த பாரம். ஏனென்றால் இறக்கும் தருணத்தில் எவரும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். என்னுடனும் எனக்காகவும் அவர் துன்பப்படுகிறார், எனக்காக அவர் சோகமாக இருக்கிறார், எனக்காக அவர் சுமைகளை சுமந்துகொண்டு இருக்கிறார். எனவே, எனக்குப் பதிலாக, எனக்காக, அவர் துக்கப்படுவதற்கு எந்த காரணமும் இல்லாமலேயே அவர் பாடுகளை அனுபவித்தார்.
54. கர்த்தராகிய இயேசுவே, அவை உம்முடைய காயங்கள் அல்ல, என்னுடைய காயங்கள் தான் உம்மைத் துன்புறுத்தியது; உம்முடைய மரணமல்ல, நம்முடைய பலவீனம் தான் உம்மை மரணத்துக்கு இட்டுச் சென்றது, என்று தீர்க்கதரிசியானவர், ஏசாயா 53:4 ஊடாகக் கூறுகிறார் – நீர் உமக்காக அல்ல, எமக்காகத் துன்பங்களை அனுபவித்தபோது, ஆண்டவரே, நாங்கள் தான் உம்மைத் துன்புறுத்தியதாகக் கருதினோம்.
55. அவர் ஒருவருக்காக மட்டும் எல்லோரும் துக்கப்பட்டனர். அதுபோலவே, அவர் அவர்களுக்காக அழுதவர்களது துக்கத்தை உணர்ந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? மரணத்தை எதிர்கொண்ட லாசரஸை உயிர்த்தெழுப்பப் போனபோது அவர் அழுதார் அல்லவா? அதுபோலவே அவர் மரித்த நேரத்திலும் அனைவருக்காகவும் கனத்த இதயத்துடன் இருந்திருப்பார் என்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? பிறிதொரு சமயத்தில், அவர் ஒரு அன்பான சகோதரியின் கண்ணீரால் உண்மையில் நெகிழ்ச்சியடைந்தார், ஏனென்றால் அவை அவருடைய மனித இதயத்தைத் தொட்டன – ஆகவே, மறைக்கப்பட்ட துக்கத்தின் மூலம் அவருடைய மரணமானது மரணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அத்தோடு, அவருடைய தழும்புகள் நம் வடுக்களை குணப்படுத்த வேண்டுமென்றும், அவருடைய துக்கம் நம் துக்கங்களைப் போக்க வேண்டுமென்பதற்காகவும் அவர் அதைச் செய்தார்.
56. ஒரு மனிதனாக, அவர் சந்தேகத்தை அனுபவிக்கிறார்; ஒரு மனிதனாக, அவர் ஆச்சரியப்படுகிறார். ஆச்சரியப்படுவது அவரது தெய்வீக சக்தியோ அல்லது கடவுள் என்ற தன்மையோ அல்ல, மாறாக அவரது ஆன்மா; அவர் மனித பலவீனத்தை ஏற்றுக்கொண்டதால் அவர் ஆச்சரியப்படுகிறார். எனவே, அவர் ஒரு ஆன்மாவைத் தழுவியதால், அதனுடன் வரும் உணர்ச்சிகளையும் அவர் ஏற்றுக்கொண்டார், ஏனென்றால் கடவுள் தனது தெய்வீக இயல்பின் அடிப்படையில் துன்பத்தை அனுபவித்திருக்கவோ அல்லது இறக்கவோ முடியாது. இறுதியில், அவர் முனகினார்: ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?’ என்று. அப்போது ஒரு மனிதனாக, அவர் பேசியிருந்தார், எனது பாடுகளை அவருடன் சுமந்து சென்றார். ஏனென்றால் நாம் ஆபத்தை எதிர்கொள்ளும்போது, பெரும்பாலும் கடவுளால் கைவிடப் பட்டதாக உணர்கிறோம். இவ்வாறு ஒரு மனிதனாக, அவர் தனது துயரத்தை உணர்ந்தார், ஒரு மனிதனாக அவர் கண்ணீர் சிந்தினார், ஒரு மனிதனாக, அவர் சிலுவையில் அறையப்பட்டார்.
57. கிறிஸ்துவின் உடலையே அவர்கள் சிலுவையில் அறைந்தார்கள் என்று பவுல் கூறுகிறார். கிறிஸ்து தம் சரீரத்தில் இருக்கும்போது துன்புற்றார் என்று பேதுரு (1 பேதுரு 4:1) கூறுகிறார். எனவே மனித உடல்தான் துன்பப்பட்டது, அதே நேரத்தில் தெய்வீக இயல்பு மரணத்திற்கு அப்பால் உள்ளது. இயேசுவின் உடல் மனித இயல்பின்படி துன்பத்தைத் தாங்கியது, ஏனென்றால், தெய்வீக இயல்பு இறக்க முடியாது. ஆன்மாவைக் கொல்ல முடியாவிட்டால், தெய்வீக இயல்பு எப்படி இறக்க முடியும்? நம்முடைய கர்த்தர், “மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். அவர்களால் சரீரத்தை மட்டுமே கொல்ல முடியும். அவர்களால் ஆன்மாவைக் கொல்ல முடியாது. சரீரத்தோடு ஆன்மாவையும் சேர்த்துக் கொல்லக்கூடிய ஒருவரிடம் (தேவனிடம்) மட்டுமே நீங்கள் பயம்கொள்ள வேண்டும்” என்று மத்தேயு 10:28 வாயிலாகக் கூறியுள்ளார்.
58. 1 கொரிந்தியர் 2:8-ல் மகிமையின் கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார் என்று நாம் படிக்கும்போது, அவர் தம்முடைய மகிமையின் காரணமாக சிலுவையில் அறையப்பட்டார் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால், அவர் கடவுளாக மட்டுமல்ல, மனிதனும் கூட. கடவுள் தம்முடைய தெய்வீகத்தன்மையால், மனித சரீரமாகிய கிறிஸ்து, இயேசுவை உடலாக எடுத்துக்கொண்டார். அதனால்தான் ‘மகிமையின் கர்த்தர்’ சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மனித இயல்பும் தெய்வீக இயல்பும் கொண்டவர், மேலும் அவர் தம்முடைய மனித வடிவில்தான் துன்பப்பட்டார், இதனால் துன்பப்பட்டவர் மகிமையின் ஆண்டவர் என்றும் மனுஷகுமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். யோவான் 3:13 , “பரலோகத்திற்கு ஏறிச் சென்ற ஒரே ஒருவர் தான் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர். அவர்தான் மனிதகுமாரன்” என்று கூறுகிறது.
அத்தியாயம் 8
“பிதா என்னை விடப் பெரியவர்” என்ற கிறிஸ்துவின் கூற்று, நாம் இப்போது விவாதித்த கொள்கையின் அடிப்படையில் விளக்கப்படுகிறது. இதே போன்ற கூற்றுகள் அதே வழியில் விளக்கப்பட்டுள்ளன. அவரது தெய்வீகத்தன்மையைப் பொறுத்தவரை, நம் ஆண்டவரை, பிதாவை விடக் குறைவாகக் கருத முடியாது
59. ஆகையால், அவருடைய மனித இயல்பின் காரணமாகவே நம்முடைய கர்த்தர் சந்தேகப்பட்டு மிகவும் துக்கமடைந்தார். ஆனாலும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், ஏனென்றால் மரித்தது மீண்டும் உயிர்த்தெழும். அவருடைய மனித இயல்பின் காரணமாகவே அவர் அந்த வார்த்தைகளைப் பேசினார். அந்த வார்த்தைகளை சில விரோதிகள் அவருக்கு எதிராகத் தீங்கிழைக்கும் பிரசாரமாகப் பயன்படுத்துகிறார்கள். எப்படியிருந்தாலும், யோவான் 14:28 சொல்வது போல், “பிதா என்னை விடப் பெரியவர்” என்று கர்த்தர் கூறியுள்ளார்.
60. இருப்பினும், மற்றொரு பகுதியில் நாம் படிக்கும்போது: “நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்ற கர்த்தரின் வார்த்தைகளை யோவான் 16:28 கூறுகிறது. அப்படியானால், அவர் எப்படி இந்த உலகத்தைவிட்டுப் போவார்? மரணத்தின் மூலராகவா? இல்லையென்றால், மீண்டும் உயிர்த்தெழுவதன் மூலமாகவா? அப்படியில்லாமல் எப்படி மீண்டும் வருவார்? அத்தோடு, அவர் தனது பரலோக எழுந்தருளல் பற்றிக் குறிப்பிடுகிறார் என்பதை தெளிவுபடுத்துவதற்காக இதைக் குறிப்பிட்டார்: ஆகையால், அது நிகழும் முன், அது நிகழும்போது, யோவான் 14:20 இல் கூறப்பட்டுள்ளபடி, “அந்த நாளிலே நான் பிதாவில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களிலும் நீங்கள் என்னிலும் இருப்பதையும் அறிவீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் தம்முடைய சரீரத்தின் துன்பங்களையும் உயிர்த்தெழுதலையும் பற்றிப் பேசினார். அந்த உயிர்த்தெழுதலால், முன்பு சந்தேகப்பட்டவர்கள் நம்பும்படி ஊக்குவிக்கப்பட்டனர் – ஏனெனில், உண்மையில், எல்லா இடங்களிலும் எப்போதும் இருக்கும் கடவுள், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதில்லை. ஒரு மனிதன் எவ்வாறு பயணிக்கிறானோ, அதுபோலவே தான் அவரும். அவர் மற்றொரு பத்தியில், “எழுந்திருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம் (யோவான் 14:31) என்று கூறுகிறார். எனவே, அவர் போகிறார், மீண்டும் வருவார்; இது அவருக்கும் நமக்கும் பொதுவானது.
61. அவர் பரிபூரணமானவராகவும் உண்மையான கடவுளாகவும் இருக்கும்போது, அவர் எப்படி ஒரு அற்ப கடவுளாக இருக்க முடியும்? இருப்பினும், மனிதநேயத்தின் காரணமாக, அவரது தாழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஒரு மனிதனாகப் பேசும்போது, அவர் பிதாவை தன்னை விடப் பெரியவர் என்று அழைத்தார். அதே நேரத்தில் ஒரு மனிதனாகப் பேசும்போது ஆச்சரியப்படத்தக்க விதத்தில்,அவர் தன்னை ஒரு மனிதனாக அல்ல, ஒரு புழு என்று அழைத்தார். “நான் ஒரு புழு, மனிதன் அல்ல” என்று கூறினார். மீண்டும், ஏசாயா 53:7 சொல்வது போல், கொல்லப்படுவதற்காக கொண்டு போகப்படும் ஆட்டுக்குட்டியைப் போன்று அவர் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தார்.
62. இந்த விடயத்தில் அவர் பிதாவை விடக் குறைவானவர் என்று நீங்கள் சொன்னால், அதை நான் மறுக்க முடியாது; அவர் தாழ்ந்தவராகப் பிறக்கவில்லை, ஆனால் அவர் தாழ்ந்தவராக ஆக்கப்பட்டார் என்று வேதாகமம் கூறுகிறது. எபிரெயர் 2:9 இல், தாழ்த்தப்பட்ட என்று விளக்குகிறது. அப்படி என்றால், அவர் எப்படித் தாழ்ந்தவராக ஆனார்? அவர் கடவுளின் உருவத்தில் இருந்தபோதிலும், அவர் கடவுளுக்குச் சமமாகத் தான் இருப்பதாக என்றும் நினைத்ததில்லை. அவர் தன்னைத்தானே வெறுமையாக்கிக் கொண்டார், தாம் இருக்கும் நிலையை விட்டுவிடவில்லை, ஆனால் இல்லாததை எடுத்துக்கொண்டார். பிலிப்பியர் 2:6-7 சொல்வது போல், “கிறிஸ்து தேவனுக்கு நிகரானவராக இருந்தார். ஆனால் தேவனுக்குச் சமமாக இருப்பதை கொள்ளையில் கிடைத்த அரிய பொருளாக அவர் நினைத்ததில்லை. தேவனோடு இருந்த தனது இடத்தை அவர் விட்டுக்கொடுத்து, தேவனது ஊழியர் வடிவை எடுத்தார். மனிதராகப் பிறந்து அடிமையைப் போல அவர் வாழ்ந்தார்.”
63. மேலும், ஒரு சரீரத்தை எடுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்டவர் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவும் வகையில், தாவீது ஒரு மனிதனைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்; அவர் கேட்கிறார்: “மனிதன் யார், நீர் அவனை அல்லது மனுஷகுமாரனை நினைத்து, அவனைச் சந்திக்கிறீரே?” என்று கூறியபோது, நீங்கள் அவரைத் தேவதூதர்களை விடச் சற்றுத் தாழ்ந்தவராக்கினீர்கள். இந்தப் பகுதியை விளக்கும்போது, அப்போஸ்தலன் கூறுகிறார்: ‘தேவதூதர்களை விட சற்று தாழ்ந்தவராகவும், மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டப்பட்டவராகவும் இயேசுவை நாம் காண்கிறோம், ஏனென்றால் அவர் மரணத்தை அனுபவித்ததால், தேவனால் மட்டுமல்ல, எல்லாருக்கும் மரணத்தை அனுபவிக்க முடியும் என்று எபிரெயர் 2:9- குறிப்பிடுகிறது.
64. எனவே, தேவனுடைய குமாரன் பிதாவை விட மட்டுமல்ல, தேவதூதர்களையும் விடத் தாழ்ந்தவராக்கப்பட்டார். இதை நீங்கள் அவமானகரமான ஒன்றாக மாற்ற விரும்பினால்; [நான் கேட்கிறேன்] குமாரன், அவருடைய தெய்வீகத்தன்மையின் அடிப்படையில் அவருக்கு சேவை செய்து ஊழியம் செய்யும் தேவதூதர்களை விடக் குறைவானவரா? அவருடைய மரியாதையைக் குறைத்து மதிப்பிட முயற்சிப்பதன் மூலம், தேவதூதர்களின் இயல்பை கடவுளின் குமாரனுக்கு மேலாக உயர்த்தும் இழிவான செயலை செய்ய முயற்சிக்கிறீர்கள். ஆனால் மத்தேயு 10:24 சொல்வது போல், “ஒரு மாணவன் ஆசிரியரைக் காட்டிலும் சிறப்பானவனாகவோ அல்லது சேவகன் தன் எஜமானைக் காட்டிலும் உயர்ந்தவனோ இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று. மேலும், அவர் மனிதரான பிறகும் தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தனர், இதன் மூலம் அவர் தனது உடல் வடிவத்தின் காரணமாக அவர் எந்த மகிமையையும் இழக்கவில்லை என்பதை நீங்கள் உணர முடியும். ஏனெனில் கடவுள் தம்முடைய எந்தப் பகுதியையும் இழக்க முடியாது, மேலும் அவர் கன்னியிடமிருந்து எடுத்த உடல் வடிவத்தால் அவரது தெய்வீக சக்தி கூடவோ குறையவோ இல்லை.
65. எனவே, தெய்வீகத்தன்மை மற்றும் மகிமையின் முழுமையைக் கொண்ட அவர் அவரது தெய்வீகத்தன்மையைப் பொறுத்தவரை, தாழ்ந்தவர் அல்ல. இதுகுறித்து, “தேவனுடைய முழுமை கிறிஸ்துவிடம் வாழ்கிறது” என்று கொலோசெயர் 2:9 இல் இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது. பெரியவர் மற்றும் சிறியவர் என்ற கருத்துக்கள் உடல் வடிவம் கொண்டவர்களுக்குப் பொருந்தும்; ஒருவர் பதவி, குணங்கள் அல்லது வயதின் அடிப்படையில் பெரியவராகக் கருதப்படுகிறார். தெய்வீக விஷயங்களைப் பற்றி விவாதிக்கும்போது இந்த வேறுபாடுகள் பொருத்தமற்றதாகிவிடும். பொதுவாக, இன்னொருவருக்குக் கற்பிப்பவர் மற்றும் வழிநடத்துபவர் பெரியவராகக் காணப்படுகிறார், ஆனால் இது கடவுளின் ஞானத்திற்குப் பொருந்தாது, இது மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதிலிருந்து பெறப்படவில்லை, ஏனெனில் அதுவே அனைத்து அறிவுக்கும் மூலமாகும். அப்போஸ்தலன் எவ்வளவு புத்திசாலித்தனமாக எழுதினார் என்று பாருங்கள்: ‘எனவே கடவுளைத் தவிர, அவர் அனைவருக்கும் மரணத்தை அனுபவிக்க முடியும் – அப்படியானால் அந்த உணர்வை அனுபவித்தது சரீரமல்ல, தெய்வீகம் தான் என்று நாம் கருதுவது தவறு.
66. நம் எதிரிகளால் [தந்தை] [குமாரனை விட] பெரியவர் என்பதைக் காட்ட எந்த வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவர்கள் வார்த்தைகளைத் திரித்து பொய்யான செய்திகளாக மாற்றாமல், அவற்றின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். சரி, அப்படியானால், அவர்கள் எதைக்கொண்டு தந்தையைப் பெரியவர் என்று கருதுகிறார்கள் என்று நான் அவர்களிடம் கேட்கிறேன்? அவர் தந்தை என்பதால் மட்டும் என்றால், [நான் பதிலளிக்கிறேன்] நாம் இங்கே வயது அல்லது காலத்தைப் பற்றிப் பேசவில்லை – நரை முடி காரணமாக அவரைத் தந்தை என்று கூறிவிட முடியாது. மகனையும் அவரது இளமைப்பருவம் காரணமாக இளையவர் என்று கூறிவிட முடியாது – மேலும் இந்த சொற்கள் ஒரு தந்தையின் உயர்ந்த கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் தந்தையும் மகனும் வெறும் பட்டங்கள், மற்றும் சொந்தங்கள். ஒன்று பெற்றோருக்கும் மற்றொன்று பிள்ளைக்கும் – பிரிக்கப்படுவதற்குப் பதிலாக இணைக்கும் உறவுகள்; ஏனெனில் கடமை உணர்வு தனிப்பட்ட மதிப்பை இழக்காது என்பதுபோல, உறவுமுறை மக்களைப் பிரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஒன்றிணைக்கிறது.
67. அப்படியானால், இயற்கையின் ஒழுங்கை எந்தவொரு கேள்விக்கும் ஆதரவாக அவர்களால் உருவாக்க முடியாவிட்டால், அவர்கள் இப்போது [வேதாகமத்தின்] சாட்சியத்தை எனும் நம்பட்டும். குமாரன் மகன் என்பதால் அவர் பிதாவை விடத் தாழ்ந்தவர் அல்ல என்பதை சுவிசேஷகர் உறுதிப்படுத்துகிறார்; உண்மையில், குமாரனாக இருப்பதன் அர்த்தம் அவர் சமமானவர் என்றும் யூதர்கள் அவரைக் கொல்ல விரும்பினர் என்றும் குறிப்பிடுகிறார்: அவர் ஓய்வுநாளைக் கடைபிடிக்காதது மட்டுமல்லாமல், கடவுளைத் தம்முடைய சொந்தத் தந்தை என்றும் குறிப்பிட்டார். யோவான் 5:10 கூறுவது போல், தம்மைக் கடவுளுக்குச் சமமாக்கிக் கொண்டார்.
68. யூதர்கள் சொன்னது இதுவல்ல – தன்னை கடவுளின் சொந்த மகன் என்று அழைத்துக் கொள்வதன் மூலம், அவர் தன்னை கடவுளுக்குச் சமமாக்கிக் கொண்டார் என்று சாட்சியமளிப்பவர் சுவிசேஷகர்தான், ஏனென்றால் யூதர்கள் “இதற்காகவே நாங்கள் அவரைக் கொல்ல முயன்றோம்” என்று ஒருபோதும் கூறவில்லை; சுவிசேஷகர் தனக்காகப் பேசுகையில், “இதற்காகவே யூதர்கள் அவரைக் கொல்ல முயன்றார்கள்” என்று கூறுகிறார். மேலும், அவர் காரணத்தைக் கண்டுபிடித்தார். யூதர்கள் அவரைக் கொல்ல ஆசைப்பட்டனர், ஏனென்றால் கடவுளாக அவர் ஓய்வுநாளை மீறியபோது, கடவுளைத் தனது சொந்தத் தந்தை என்று கூறியபோது, ஓய்வுநாளை மீறுவதில் தெய்வீக அதிகாரத்தின் மகத்துவத்தை மட்டுமல்ல, தனது தந்தையைப் பற்றிப் பேசுவதன் மூலம் தனது நித்திய சமத்துவத்தையும் உறுதிப்படுத்தினார் என்பதற்காகவே.
69. தன்னை குமாரனாகவும் கடவுளுக்குச் சமமாகவும் நிரூபித்ததன் மூலம், தேவனுடைய குமாரன் இந்த யூதர்களுக்குக் கொடுத்த பதில் மிகவும் பொருத்தமானது. “இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார்” என்று கர்த்தர் கூறியதை யோவான் 5:19 இன் மூலம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதன் பொருள் குமாரன் பிதாவுடன் சமமாக இருக்க உரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்கிறார் – இது ஒரு உண்மையான சமத்துவம், இது தெய்வீக வேறுபாட்டை நீக்கி, குமாரனுடன் சேர்ந்து, பிதாவையும், குமாரனையும் சமமாகக் காண்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாக, வேறுபாடு இருக்கும் இடத்தில் சமத்துவம் இருப்பதில்லை. அதே போல் ஒருவர் மட்டும் இருக்கும் இடத்தில் சமத்துவம் இருக்க முடியாது, ஏனென்றால் எவரும் எவருக்கும் சமமாக இருக்க முடியாது. கிறிஸ்து தன்னை கடவுளின் குமாரன் என்று குறிப்பிடுவது ஏன் பொருத்தமானது என்றும், அடிப்படையில் தன்னை கடவுளுக்கு சமமாக்குவது ஏன் என்பதையும் சுவிசேஷகர் விளக்கியுள்ளார்.
70. எனவே, இந்த வெளிப்பாட்டைத் தொடர்ந்து, அப்போஸ்தலன் இவ்வாறு கூறினார்: கடவுளுக்குச் சமமாக இருப்பதைப் பற்றிக் கொள்ள வேண்டிய ஒன்றாக அவர் அதைப் பார்க்கவில்லை. நீங்கள் பார்க்கிறீர்கள், ஒரு நபரிடம் இல்லாததை, அவர்கள் இரையாக எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆகையால், கடவுள் மற்றும் ஆண்டவராக அவர் கொண்டிருந்த பிதாவுடனான சமத்துவம், அவர் தவறாகக் கைப்பற்றிய கொள்ளைப் பொருள் அல்ல. அதனால்தான் அப்போஸ்தலன் மேலும் கூறும்போது: அவர் ஒரு ஊழியனின் வடிவத்தை எடுத்தார். இப்போது, ஒரு ஊழியன் என்பவன் நிச்சயமாக எஜமானுக்கு சமமானவனாக இருக்கமுடியாது. எனவே, குமாரன் கடவுளின் வடிவத்தில் பிதாவுக்கு சமமானவர். ஆனால் அவர் சரீர வடிவம் எடுத்து மனிதனாகப் பிறந்து, துன்பத்தை அனுபவித்தபோது அவர் தாழ்மையானவராகக் காணப்பட்டார். ஒரே இயல்பு என்பது எவ்வாறு தாழ்ந்ததாகவும் சமமாகவும் இருக்க முடியும்? மகன் தாழ்ந்தவராக இருக்கும் பட்சத்தில், தந்தையைப் போல, அதே செயல்களை அவர் எவ்வாறு செய்ய முடியும்? அதிகாரத்தில் வேறுபாடு இருக்கும்போது ஒரே மாதிரியான கிரியை எப்படி இருக்க முடியும்? தாழ்ந்தவர் எப்போதாவது பெரிய முடிவுகளை எடுக்க முடியுமா? அல்லது பல கோணங்கள் கொண்ட ஒரு செயற்பாட்டில் ஒற்றுமைத்தன்மை இருக்க முடியுமா?
71. ஆகையால், கிறிஸ்து தம்முடைய தெய்வீகத் தன்மையைப் பொறுத்தவரை [பிதாவை விட] தாழ்ந்தவர் என்று அழைக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். ஆதியாகமம் 22:16 இல் குறிப்பிட்டுள்ளபடி, கிறிஸ்து ஆபிரகாமிடம் பேசுகையில்; ‘என் பெயரில் ஆணையிடுகிறேன்’ என்று கூறுகிறார். தன் பெயரால் ஆணையிடுபவர் வேறு எவரையும் விட, தாழ்ந்தவராகக் கருதப்பட முடியாது என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகிறார். எபிரெயர் 6:13-14 இல், கடவுள் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்தபோது, “நான் உன்மையாகவே உன்னை ஆசீர்வதிக்கிறேன். நான் உனக்கு ஏராளமான சந்ததிகளைக் கொடுப்பேன்” என்று தன் பெயரிலேயே ஆணையிட்டுச் சொன்னார்” என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால், கிறிஸ்துவுக்கு தன்னை விட பெரியவர் இல்லை என்பதனால் தான் அவர் தன் பெயரால் ஆணையிட்டார். சிலர் தங்களை விட பெரியவர்கள் பெயரில் சத்தியம் செய்கிறார்கள் என்று அப்போஸ்தலன் சரியாகச் சொன்னார், ஏனென்றால் அவர்களுக்கு பெரியவர் என்று எவராவது இருக்கிறார்கள், ஆனால் கடவுள் அப்படிச் செய்யவில்லை, ஏனெனில் அவருக்கு மேலாக அதிகாரமுடைய எவரும் இருக்கவில்லை.
72. இந்தப் பகுதி பிதாவைக் குறிக்கிறது என்பதை எமக்கு விரோதமானவர்கள் புரிந்துகொண்ட போதிலும், மீதமுள்ள பதிவுகளில் அவர்களுக்கு உடன்பாடில்லை. ஏனென்றால், பிதாவாகிய தேவன் ஆபிரகாமுக்கு முன் தோன்றி காட்சியளிக்கவில்லை, ஆபிரகாம் பிதாவாகிய தேவனுடைய பாதங்களைக் கழுவவில்லை, ஆனால் இருக்கப்போகும் மனிதனின் சாயலைத் தாங்கியவரின் பாதங்களைக் கழுவினார் என்று வாதிடுகிறார்கள். மேலும், தேவனுடைய குமாரன், “உங்கள் தந்தையாகிய ஆபிரகாம் நான் வந்த நாளைக் காண்பேன் என்று மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்த நாளைக் கண்டு மகிழ்ச்சியும் அடைந்தார்” (யோவான் 8:56). ஆகையால், தம்மைக்கொண்டு சத்தியம் செய்தவர் அவரே, ஆபிரகாமுக்கு காட்சி கொடுத்தவரும் அவரே.
73. எனவே, “நானும் பிதாவும் ஒருவர்தான்” என்றார் இயேசு” என்று யோவான் 10:30 கூறுகின்ற போது, கடவுளில் பிதாவுடன் ஒன்றான அவர் தன்னை விட எப்படி பெரியவராக இருக்க முடியும்? ஒற்றுமை இருக்கும் இடத்தில், எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. ஆனால் பெரியவருக்கும் சிறியவருக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாடு உள்ளது. எனவே, பிதாவையும் குமாரனையும் பற்றி நாம் பார்க்கும் வேதாகம வசனம் தரும் உதாரணத்தின் போதனை என்னவென்றால், பிதாவுக்குப் பெரியவர் என்று எவருமில்லாதது போலவே, குமாரனுக்கும் அவரை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. ஏனெனில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கடவுள் அவர்களைப் பிரிப்பதில் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் ஒரு மகத்துவம் மட்டுமே அங்கு காணப்படுகிறது.
அத்தியாயம் 9
பிதாவால் அனுப்பப்பட்ட குமாரன், அந்த விஷயத்தில் தாழ்ந்தவர் என்று சிலர் கூறுகிறார்கள். பதில் என்னவென்றால், அவர் குமாரனை விட பெரியவரல்லாத ஆவியாலும் அனுப்பப்பட்டார். மேலும், ஆவியானவர் தந்தையால் குமாரனுக்கு அனுப்பப்படுகிறார். இதன்வழியாக, அவர்களின் செயலில் ஒற்றுமை காட்டப்படுகிறது. எனவே, எந்தெந்த வார்த்தைகள் கடவுளான கிறிஸ்துவுக்குச் சொந்தமானது, எந்தெந்த வார்த்தைகள் கிறீஸ்து என்னும் மனிதனுக்குச் சொந்தமானது என்பதை நாம் கவனமாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்
74. கிறிஸ்து அனுப்பப்பட்டதால் அவர் தாழ்ந்தவர் என்று கூறும் அந்த வழக்கமான வாதம் குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர் தாழ்ந்தவராக இருந்தாலும், அது உண்மையில் நிரூபிக்கப்படவில்லை; மறுபுறம், மரியாதை செலுத்துவதற்கான அவரது சம உரிமை நிச்சயமாக நிரூபணமாகி உள்ளது. “அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். ஏனென்றால், பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார்” என்கிறது யோவான் 5:23 ஆகவே, குமாரன் அனுப்பப்பட்டதால் மட்டும் தாழ்ந்தவர் அல்ல என்பது இங்கே தெளிவாகிறது.
75. ஆகையால், மனித மொழியின் குறுகிய போக்கின் மீது கவனம் செலுத்தாமல், வார்த்தைகளின் தெளிவான அர்த்தத்தின் மீது கவனம் செலுத்துங்கள், உறுதிசெய்யப்பட்ட உண்மைகளில் நம்பிக்கை வையுங்கள். ஏசாயாவில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆவியானவரால் அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டதை நினைவில் கொள்ளுங்கள். குமாரன் ஆவியானவரை விடக் குறைவானவரா? குமாரன் பிதாவாலும் அவருடைய ஆவியாலும் அனுப்பப்பட்டவர் என்று கூறுகிறார் என்று பதிவு காட்டுகிறது. “நானே தொடக்கம், நானே முடிவு” என்று ஏசாயா 48:12 இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். என் கை பூமியின் அத்திவாரங்களைப் போட்டது, என் வலது கை வானங்களை நிலைகொள்ளச் செய்தது. மேலும், அவர் கூறுககியில், ‘நான் பேசினேன், அழைத்தேன்; நான் அவனை அழைத்து, அவன் வழியை வெற்றிபெறச் செய்தேன்.’ என் அருகில் வந்து இவற்றைக் கேளுங்கள்: நான் ஆதிமுதல் இரகசியமாகப் பேசவில்லை. எல்லாம் படைக்கப்பட்ட போது, நான் அங்கே இருந்தேன்’ என்று. மேலும், ஏசாயா 48:15-16-ல் கூறப்பட்டுள்ளபடி, கர்த்தரும் அவருடைய ஆவியும் என்னை அனுப்பியுள்ளனர். இங்கே வானத்தையும் பூமியையும் படைத்தவர் கர்த்தராலும் அவருடைய ஆவியாலும் அனுப்பப்பட்டவர் என்று கூறுகிறார். மொழியின் போக்கு அவரது பணியின் மரியாதையைக் குறைக்கவில்லை என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அவர் பிதாவால் அனுப்பப்பட்டவர்; அத்தோடு, அவர் ஆவியானவராலும் அனுப்பப்பட்டவராகிறார்.
76. மகத்துவத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதைக் காட்ட, குமாரன் சொன்னது போலவே ஆவியை அனுப்புகிறார்: “நான் என் பிதாவிடமிருந்து அந்த தேற்றரவாளரை உங்களிடம் அனுப்புவேன். என் பிதாவிடமிருந்து வருகிற அவர் உண்மையின் ஆவியாக இருப்பார். அவர் வரும்போது என்னைப்பற்றிக் கூறுவார்” என்று ஏற்கனவே போதித்திருந்தது குறித்து யோவான் 15:26 கூறுகிறது. அதேநேரம், “தேற்றரவாளர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார். நான் உங்களுக்குச் சொன்னவற்றையெல்லாம் உங்களுக்கு அவர் நினைவுபடுத்துவார். அவரே பரிசுத்த ஆவியானவர். பிதா எனது நாமத்தினால் அவரை அனுப்புவார்” என்று யோவான் 14:26 இல் கூறப்பட்டுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்களின் ஒற்றுமையைப் பாருங்கள்: பிதாவாகிய தேவன் அனுப்புபவர்களை குமாரனும் அனுப்புகிறார், பிதா அனுப்புபவர்களை பரிசுத்த ஆவியும் அனுப்புகிறார். அதனால் தான் குமாரன் பிதாவின் வலது கரமாக இருக்கிறார் என்று நாம் அறிகிறோம். குமாரன் அனுப்பப்பட்டதை ஆரியர்கள் ஏற்க மறுக்கும் பட்சத்தில், அதாவது, அவர்கள் மகனைப் பற்றி மறுக்கும் விஷயங்களில், பிதாவைப் பற்றியும் அதையே ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும், இல்லையெனில் அவர்கள் வேறொரு பிதாவையோ அல்லது வேறொரு குமாரனையோ கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.
77. வார்த்தைகள் குறித்த வீண் வாக்குவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தல் நலமாக இருக்கும். ஏனென்றால் எழுதப்பட்டபடி, கடவுளின் இராச்சியம் வற்புறுத்தும் வார்த்தைகளில் அல்ல, வெளிப்படையாகக் காட்டப்படும் வல்லமையில் தான் உள்ளது. தெய்வீக இயல்புக்கும் மனித இயல்புக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் கவனிக்க வேண்டும். இயேசுவில் இரண்டு இயல்புகள் உள்ளன, இரண்டும் அவரில் உள்ளன; ஆனால் பேசுவது ஒரே நரர் என்றாலும், அவர் எப்போதும் ஒரே மாதிரியாகப் பேசுவதில்லை. கடவுளின் மகிமையையும் மனிதகுலத்தின் உணர்வுகளையும் நாம் அவரிடம் காணலாம். கடவுளாக அவர் கடவுளின் விஷயங்களைப் பேசுகிறார், ஏனென்றால் அவர் வார்த்தையானவர்; ஒரு மனிதனாக அவர் மனிதனின் விஷயங்களைப் பேசுகிறார், ஏனென்றால் அவர் என் இயல்பில், தாவது மனித இயல்பில் பேசுகிறார்.
78. ‘பரலோகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வுதரும் அப்பம் இதுவே என்று யோவான் 6:51 கூறுகிறது. அதேபோல், இந்த அப்பம் என்பது அவருடைய சரீரம், அவரே சொன்னது போல: ‘நான் கொடுக்கும் அப்பம் என்னுடைய சரீரம்’ என்று யோவான் 7:52 கூறுகிறது. பரலோகத்திலிருந்து இறங்கி வந்தவர் இவரே, பிதாவினால் பரிசுத்தப்படுத்தப்பட்டு இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர். கடவுளுக்கு அல்ல, சரீரத்திற்குத்தான் பரிசுத்தம் தேவை என்று இந்த நிருபம் நமக்குக் கற்பிக்கிறது, ஏனென்றால் கர்த்தர் தாமே, “நான் அவர்களுக்காக என்னைப் பரிசுத்தப்படுத்துகிறேன்” என்று கூறினார் (யோவான் 17:19). இதன் மூலம் அவர் நமக்காக சரீரத்தால் பரிசுத்தமாக்கப்பட்டவர். அவருடைய தெய்வீகத்தின் மூலம் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறார் என்பதை நீங்கள் உணர முடியும்.
79. ‘இவர் தான் தேவனுடைய குமாரன்; இவர் ஒரு பெண்ணினிடத்தில் பிறந்தது, விதிமுறைகளுக்கு உட்பட்டே வாழ்ந்தார்’ என்று கலாத்தியர் 4:4 ஐ மேற்கோள் காட்டி அப்போஸ்தலர் கூறுகிறார். இவர் மேலும் கூறுகையில், கர்த்தருடைய ஆவி என்மேல் இருக்கிறது; ஆகையால் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அபிஷேகம்பண்ணினார் என்று. அத்தோடு, “நான் உங்களுக்கு செய்கிற உபதேசம் எனக்குச் சொந்தமானவை அல்ல. அவை என்னை அனுப்பினவரிடமிருந்து எனக்கு வந்தவை” என்று யோவான் 7:16 வழியாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, ஒருவன் அவருடைய சித்தத்தைச் செய்யும்போது, அதற்கான உபதேசம் தேவனிடமிருந்து வருகிறதா அல்லது என்னிடமிருந்து வருகிறதா என்பதை அறிந்துகொள்வான். கடவுளின் போதனையும் மனிதனின் போதனையும் வேறுபட்டவை. எனவே, யூதர்கள், அவரை ஒரு மனிதன் மட்டுமே என்று நினைத்து, அவரது போதனையைக் குறித்து கேள்வி எழுப்பி, “இவர் ஒருபோதும் படித்திராதபடியால், எழுத்துக்களை எப்படி அறிவார்?” என்று கேட்டபோது, இயேசு, “என் போதனை என்னுடையது அல்ல, அது கடவுளிடமிருந்து வருகிறது. நான் மற்றவர்களைப் போல எழுத்துக்களைக் கொண்டு கற்றுக்கொள்ளவில்லை என்றாலும், கடவுள் கற்பித்ததுபோல் பேசுகிறேன்” என்றார்.
80. ஏனெனில், முன்னர் குறிப்பிட்டபடி, அவர் முழு ஒழுக்கப் பாதையையும் கண்டுபிடித்து உருவாக்கியுள்ளார். ஏனெனில் கடவுளின் குமாரனைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது: இவர் நமது கடவுள், முழுமையான ஒழுக்க வழியை நிறுவிய அவரை வேறு எவருடனும் ஒப்பிட முடியாது. அவர் முழுமையான ஒழுக்கத்தின் வழியை உருவாக்கியவர். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, அவர் பூமியில் வாழ்ந்து, மக்களுடன் தொடர்பில் இருந்தார். எனவே, தெய்வீகமாக இருந்த அவருக்கு எப்படி சொந்த கோட்பாடுகள் இல்லாமல் இருக்க முடியும்? பூமியில் தோன்றுவதற்கு முன்பே ஒழுக்கத்தின் வழியை உருவாக்கியவர் அவர் அல்லவா? அப்படியென்றால், அவரை எப்படி தாழ்ந்தவராகக் கருத முடியும்? இதனால்தான் எவரையும் அவருடன் ஒப்பிட முடியாது என்று கூறப்படுகிறதா? தெளிவாக, அவர் ஈடிணையற்ற வல்லமையுடையவர் என்று அழைக்கத் தகுதியானவர், வேறு எவரையும் அவருடன் ஒப்பிட முடியாது – ஆனாலும் அவரை பிதாவுக்கு சமமாகக் கருத முடியாது. ஆகவே மக்கள் தந்தையைப் பற்றிப் பேசுவதாக நினைத்தால், தந்தை மனித இயல்பை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய சபெலியஸின் நிந்தனையைப் பின்பற்றும் அபாயத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
81. அடுத்து வருவதைக் கவனிப்போம். யோவான் 7:18 , “தன்னைப் பற்றிப் பேசுபவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான்” என்று கூறுகிறது. பிதாவிலும் குமாரனிலும் உள்ள ஒற்றுமை தெளிவாக வெளிப்படுவதைப் பாருங்கள். பேசுபவரின் பிரசன்னம் இருந்தபோதிலும், அவர் பேசுவது அவரிடமிருந்து வருவதில்லை, ஏனென்றால் அவரில் உள்ள அனைத்தும் இயல்பில் பிதாவிடமிருந்தே வருகிறது.
82. தம்முடைய மகிமையைத் தேடுவது என்ற வார்த்தை கூறும் அர்த்தம் என்ன? அது பிதாவுக்குப் பங்கு இல்லாத மகிமை அல்ல – அது உண்மையில் தேவனுடைய வார்த்தை, அவருடைய மகிமை. மீண்டும், நம் ஆண்டவர் யோவான் 17:24 இல் ‘அவர்கள் என் மகிமையைக் காணட்டும்’ என்று கூறுகிறார். ஆனால் வார்த்தையின் மகிமை பிதாவின் மகிமையும் கூட. எழுதப்பட்டிருப்பது போல: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பிதாவாகிய தேவனுடைய மகிமையில் இருக்கிறார். எனவே, அவருடைய தெய்வீகத்தைப் பொறுத்தவரை தேவனுடைய குமாரனுக்கும் அவருடைய சொந்த மகிமை உண்டு. ஏனென்றால், பிதாவுக்கும் குமாரனுக்கும் மகிமை ஒன்றுதான்: ஆகையால், அவர் மகிமையில் தாழ்ந்தவர் அல்ல, தெய்வீகத்தில் தாழ்ந்தவரும் அல்ல, ஏனென்றால் தெய்வீகத்தின் முழுமை கிறிஸ்துவில் உள்ளது.
83. அப்படியானால், யோவான் 17:1 இன் கூற்றுப்படி, ‘பிதாவே, நேரம் வந்துவிட்டது; உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்’ என்று எழுதியிருக்கிறது ஏன் என்று நீங்கள் கேட்கிறீர்களா? இந்த வார்த்தைகளைச் சொல்பவர் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். பார்க்க உங்களுக்குக் கண்கள் இருந்தும் கூட, உங்கள் குமாரன் உங்களை மகிமைப்படுத்துவார் என்று கூறும் வேதாகமத்தின் மீதமுள்ள பகுதியை நீங்கள் படிக்கவில்லை போலும். ஏனென்றால், குமாரனால் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு அவசியம் பிதாவுக்கு எப்போதாவது தேவைப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்களா?
அத்தியாயம் 10
குமாரனின் கீழ்ப்படிதலை அடிப்படையாகக் கொண்ட ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டதும், திரித்துவத்தில் உள்ள சக்தி, தெய்வீகம் மற்றும் செயல்பாட்டின் ஒற்றுமை போன்றவை கிறிஸ்து தனது தாய்க்குக் காட்டிய கீழ்ப்படிதலைக் காட்டுகிறது; ஆகவே அவரை நிச்சயமாக தாழ்ந்தவர் என்று அழைக்க முடியாது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது
84. அதேபோல், குமாரனின் கீழ்ப்படிதல் என்ற கருத்தை நமது எதிரிகள் பெரும்பாலும் எதிர்க்கின்றனர். ஏனெனில் அவர் ஒரு மனிதனாகத் தோன்றி, தன்னைத் தாழ்த்தி மரிக்கும் வரை கீழ்ப்படிந்தார் என்று பிலிப்பியர் 2:7-8 கூறுகிறது. குமாரன் மரணத் தருவாய் வரை கீழ்ப்படிந்தார் என்று எழுத்தாளர் கூறுவது மட்டுமல்லாமல், அவர் ஒரு மனிதன் என்பதையும் முதலில் காட்டுகிறார். இதனால் மரணம் வரை காட்டிய இந்த கீழ்ப்படிதல் அவருடைய தெய்வீகத்திற்கு அல்ல, மாறாக அவர் மனித இயல்பையும் அதன் செயல்பாடுகளையும் பெயர்களையும் ஏற்றுக்கொண்டபோது, அவருடைய அவதாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
85. இவ்வாறு, திரித்துவத்தின் வல்லமை ஒன்று தான் என்றும், பாடுகளின் போதும் அதற்குப் பின்னரும் கற்பிக்கப்பட்டது போல் ஒன்று என்பதையும் நாம் கற்றுக்கொண்டோம்: குமாரன் அவரது சரீரத்தினால் துன்பப்பட்டார், அது அதன் அடையாளம்; பரிசுத்த ஆவியின் அருள் அப்போஸ்தலர்கள் மீது பொழியப்படுகிறது; ஆவி பிதாவின் பராமரிப்பில் ஒப்படைக்கப் படுகிறது; மேலும் கடவுள் பிதாவாக, ஒரு வலிமையான குரலில் அறிவிக்கப்படுகிறார். பிதாவும் குமாரனும் பகிர்ந்து கொள்ளும் ஒரே இயல்பு, ஒரே சாயல், ஒரே பரிசுத்தம்; ஒரே கிரியை, ஒரே மகிமை, இறுதியாக, ஒரே கடவுள் என்பதையும் நாம் கற்றுக்கொண்டோம்.
86. எனவே, “உங்கள் ஒரே கடவுளாகிய கர்த்தரை மட்டுமே நீங்கள் ஆராதித்து வணங்க வேண்டும், உபாகமம் 6:13 இல் எழுதப்பட்டுள்ளபடி, “ஒரே கடவுள் மட்டுமே இருக்கிறார், அவருக்கு மட்டுமே நீங்கள் சேவை செய்ய வேண்டும்” என்று. சபெலியஸ் தவறாகக் கூறியது போல், பிதாவும் குமாரனும் ஒரே நபர் என்ற அர்த்தத்தில் அல்ல, ஆனால் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்ற மூவரும் ஒரே பொருளாக இருப்பதால். ஆகவே ஒரே கடவுள் இருக்கும் இடத்தில், ஒரே சித்தமும் ஒரே நோக்கமும் தான் இருக்கும்.
87. மீண்டும், பிதா இருக்கிறார், குமாரன் இருக்கிறார், பிதாவின் கிரியைகள் ஒன்றே என்பதை நீங்கள் அறிய, 1 தெசலோனிக்கேயர் 3:11 இல் உள்ள “பிதாவாகிய தேவனும், கர்த்தராகிய இயேசுவும் எங்களுக்கு உங்களிடம் வருவதற்கான வழியைத் தயார் செய்யட்டும்” என்ற அப்போஸ்தலரின் கூற்றைப் பின்பற்றுங்கள். பிதாவும் குமாரனும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளனர். அங்கே அதிகாரத்தின் ஒற்றுமை காரணமாக வழிநடத்துதலின் ஒற்றுமையும் காணப்படுகிறது. அத்தோடு, மற்றொரு பத்தியில் நாம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம்: “நம்மை நேசித்தும், நமக்கு நல்ல விசுவாசத்தைக் கொடுத்தும், எக்காலத்திலும் தொடர்கிற ஆறுதலை வழங்கியும் வருகிற இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தரும், நம் பிதாவாகிய தேவனும் தொடர்ந்து உங்களை ஆறுதல் படுத்தவும், நீங்கள் சொல்கிற, மற்றும் செய்கிற ஒவ்வொரு நற்செயலிலும் உங்களை வலிமையுறச் செய்கிறார்கள்” என்று 2 தெசலோனிக்கேயர் 2:15-16 இல் கூறியுள்ளதை நோக்குமிடத்து, ஆறுதலின் ஊற்று என்பது பன்முகம் கொண்டதல்ல, அது ஒன்றுதான் என்ற அற்புதமான ஐக்கியம் குறித்து அப்போஸ்தலன் நமக்கு எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார் என்று பாருங்கள். எனவே, சந்தேகம் வலுவிழந்து போகட்டும். அது பகுத்தறிவால் வெல்லப்படாவிட்டால், நம் ஆண்டவரின் கிருபையின் கருணை அதை மென்மையாக்கட்டும்.
88. கர்த்தர் நம்மை எவ்வளவு அன்பாக நடத்தினார் என்பதை நினைவில் கொள்வோம், விசுவாசத்தை மட்டுமல்ல, நல்ல பழக்கவழக்கங்களையும் நமக்குக் கற்பித்தார். லூக்கா 2:51 கூறுவது போல், இயேசு மனித அவதாரம் எடுத்தபோது அவர் யோசேப்புக்கும் மரியாளுக்கும் கீழ்ப்படிந்தார். அவர் மற்றவர்களுக்குக் கீழ்ப்படிந்தபடியால் அவர் அவர்களை விடத் தாழ்வானவராகி விட்டாரா? கீழ்ப்படிதலும் இறையாண்மையும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள், கீழ்ப்படிதல் என்பது அவரது அதிகாரத்தைப் பறிக்காது. எனவே அவர் கடவுளின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்தார். அவரது மனித உடல் எடுத்த காரணத்தால், அவர் தனது தாய்க்குக் கீழ்ப்படிந்தார்.
அத்தியாயம் 11
அவதாரத்தின் நோக்கம் மற்றும் குணப்படுத்தும் விளைவுகள் விசுவாசம் மதிப்புமிக்கது, ஏனென்றால் கிறிஸ்து நமக்காக எல்லாப் பாடுகளையும் சுமந்தார் என்பதைக் காட்டுகிறது – கிறிஸ்துவின் தெய்வீக இயல்பு அவரது துன்பத்தின் போது வெளிப்படுத்தப்பட்டது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவெனில், கடவுளின் குமாரனின் பணி காரணமாக அவர் தாழ்ந்தவர் என்று அர்த்தமல்ல. ஆதலால், இந்த நம்பிக்கை தந்தையை அதிருப்தி அடையச் செய்யும் என்று நாம் அஞ்சத் தேவையில்லை, ஏனெனில் அவர் தனது குமாரனைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்
89. நாமும் அதேபோல் கருணையுடன் நடந்து கொள்வோம். நம் எதிரிகளுக்கு எம்மால் என்ன நன்மை கிடைக்கும் என்று காண்பிப்போம்; நம் படைப்பாளரான கர்த்தரை வணங்கித் துதிபாடுவோம். நாம் விரோதிகளை வீழ்த்தாமல், அவர்களைக் குணப்படுத்துவோம். நாம் அவர்களைப் பிடிக்க பொறி எதுவும் வைக்க மாட்டோம், ஆனால் செய்ய வேண்டியது பற்றி மறைந்திருந்தேனும் அவர்களை எச்சரிப்போம். பலவந்ததாலோ, பிடிவாதமான வாதத்தாலோ நெருங்க முடியாதவர்களை கருணை பெரும்பாலும் அரவணைக்கிறது. எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் பயணம் செய்தபோது திருடர்களால் தாக்கப்பட்ட மனிதனை நம் ஆண்டவர் எண்ணெயும் திராட்சை இரசமும் கொண்டு குணப்படுத்தினார்; அவர் நியாயப்பிரமாணத்தில் காணப்படும் கடுமையான வைத்தியங்களுக்கோ அல்லது தீர்க்கதரிசனத்தின் கடுமையான வைத்தியங்களுக்கோ அவரை உட்படுத்தவில்லை.
90. ஆகையால், முழுமையான ஆரோக்கியத்தைப் பெற விரும்பும் அனைவரும் அவரிடம் வரட்டும். அவர் தம்முடைய பிதாவிடமிருந்து கொண்டு வந்த, பரலோகத்தில் தயாரிக்கப்பட்ட, வாடாத பரலோகக் கனிகளின் சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தைப் பெறட்டும். இது இந்த உலகத்திலிருந்து வந்த ஒன்றல்ல, ஏனென்றால் இயற்கைக்கு இந்தக் கலவையோடு எவ்வித தொடர்புமில்லை. சரீரத்தின் சட்டம் மனதின் சட்டத்திற்கு உட்பட்டது என்பதைக் காட்டுவதற்காக, அவர் அற்புதமான நோக்கத்துடன் சரீர வடிவத்தை எடுத்துக்கொண்டார். மக்களின் போதகராக, அவர் ஒரு மனிதனாக வெற்றிபெறும் வகையில் அவர் அவதாரம் எடுத்தார்.
91. கடவுளாக, அவர் தனது சக்தியைக் காட்டி, தனது தெய்வீகத்தைத் தொடாமல் வைத்திருந்தால் எனக்கு என்ன நன்மை விளைந்திருக்கும்? என்னுடையதைப் போலவே, என் பலவீனங்களின் காரணமாக சோதனைகளை அனுபவிப்பதைத் தவிர, அவர் ஏன் மனித இயல்பை எடுத்திருக்க வேண்டும்? சோதனையை எவ்வாறு வெல்வது, நான் கடுமையாக அழுத்தப்படும் போது அதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதற்காக அவர் சோதனைக்கு உட்பட்டு என்னுடன் துன்பப்படுவது சரிதான். சுயகட்டுப்பாடு, செல்வத்தின் மீதான வெறுப்பு மற்றும் நம்பிக்கை மூலம் அவர் வெற்றி பெற்றார்; அவர் இலட்சியத்தை துவம்சம் செய்து, அதிகப்படியானவற்றைத் தவிர்த்தார், காம இச்சைகளில் இருந்து தூர விலகி இருந்தார்.
92. பேதுரு இந்த மருந்தைக் கண்டவுடன், தனக்கு இலாபம் கொண்டுவரும் கருவிகளையும் வாழ்வுக்குக் கிடைக்கும் பாதுகாப்பையும் தரும் தனது மீன்பிடி வலைகளைக் கைவிட்டது மட்டுமன்றி, உடைந்து நீர்புகும் நிலையில் இருக்கும் கப்பலைக் கைவிட்டு நீங்குவதுபோல தனது சரீரத்தின் இச்சைகளைத் துறந்தார். உண்மையிலேயே, இது ஒரு சக்திவாய்ந்த மருந்து, இது ஒரு பழைய காயத்தின் அடையாளத்தை அழித்தது மட்டுமல்லாமல், சரீர இச்சைகளின் வேரையும் மூலத்தையும் துண்டித்தது. நம்பிக்கை தான் அனைத்து புதையல்களையும் விட மதிப்புமிக்கது; அந்த அற்புதமான மருந்து எங்கள் காயங்களையும் பாவங்களையும் சரிசெய்கிறது!
93. சரியான நம்பிக்கை என்பது எவ்வளவு மதிப்புமிக்கது என்பதைப் பற்றி சிந்திப்போம். எனக்காக, கிறிஸ்து என் பலவீனங்களைத் தாங்கி, என் சரீரத்தின் வேதனைகளைத் தாங்கினார் என்பதை அறிவது எனக்கு எப்போதும் நன்மை பயக்கக்கூடியது; எனக்காகவும், ஒவ்வொரு மனிதனுக்காகவும் அவர் பாவமாகவும் சாபமாகவும் உருவெடுத்தார். எனக்காக – என்னைவிட – அவர் தாழ்த்தப்பட்டு அடிமையாக்கப்பட்டார். எனக்காக அவர் ஆட்டுக்குட்டியாக, திராட்சைக் கொடியாக, பாறையாக, வேலைக்காரனாக , வேலைக்காரியின் மகனாக, நியாயத்தீர்ப்பு நாள் அல்லது மணிநேரம் போன்றவற்றை அறியாதிருந்தார்.
94. நாட்களையும் காலங்களையும் உண்டாக்கியவர், அந்த நாளை அறியாமல் எப்படி இருந்திருப்பார்? வரவிருக்கும் நியாயத்தீர்ப்பு மற்றும் அதன் காரணத்தை ஏற்கனவே அறிவித்திருக்கும் அவர், எப்படி அந்த நாளைப் பற்றி அறியாமல் இருந்திருக்க முடியும்? எனவே, அவர் தம்முடைய தெய்வீக இயல்பால் அல்ல, மாறாக தம்முடைய சரீர இயல்பின் காரணமாகவே சாபத்துக்கு உள்ளானார். “மரத்தில் (சிலுவையில்) தொங்கும் எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் சரீர வடிவமாகவே சிலுவையில் தொங்கினார், அதனால்தான், நம்முடைய சாபங்களை ஏற்றுக்கொண்டு அவர் சாபத்துக்குள்ளானார். மனிதனே, நீ நீண்ட நேரம் அழ வேண்டியதில்லை என்பதற்காக அவர் அழுதார். உனக்குச் செய்யப்பட்ட அநீதிகளுக்காக நீ துன்பப்பட வேண்டியதில்லை என்பதற்காக அவர் அவமானங்களையும் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டார்.
95. கிறிஸ்துவின் ஆறுதலைப் பெறுவது என்பது எப்படிப்பட்ட ஒரு மகிமையான பரிகாரம்! அவர் நமது நன்மைக்காக நம்பமுடியாத பொறுமையுடன் இந்தச் சோதனைகளைச் சகித்தார் – ஆனால் நாம் பொதுவாக அவருடைய நாமத்தின் மகிமை நிமித்தம் அவற்றைத் தாங்கிக் கொள்வதில்லை! தாக்கப்படும்போது, குறிப்பாக கிறிஸ்து சிலுவையில் அவஸ்தையைத் தாங்கி கொண்டிருந்தபோதும் கூட அவரைத் துன்புறுத்தியவர்களுக்காக அவர் ஜெபித்தார்! அப்படி அவர் செபித்தத்தைக் கண்டும் கூட, மன்னிக்கக் கற்றுக்கொள்ள முடியாதவர் எவரேனும் இருக்கமுடியுமா? கிறிஸ்துவின் பலவீனங்கள் என்று அழைக்கப்படுபவை உங்கள் பலம் என்பதை நீங்கள் அறியவில்லையா? நமக்கான தீர்வுகளை அவர் கொடுத்தபோது நாம் ஏன் அவரை சந்தேகிக்க வேண்டும்? அவரது கண்ணீர் நம்மைச் சுத்திகரிக்கிறது, அவரது துக்கம் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது – மேலும் இந்த நிச்சயமற்ற தன்மையில் அவர் தந்த வலிமை இருக்கிறது, குறைந்த பட்சம், நீங்கள் சந்தேகிக்கத் தொடங்கினால், அது விரக்தியில் முடிவடையும். அவமானம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
96. கேலி, அவமதிப்பு போன்றவை ஏற்பட்ட நேரத்திலும் கூட, அவருடைய தெய்வீகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டார், அதனால் இயற்கையின் கூறுகள் அனைத்தும் அவரது மரணத்தையிட்டு அவருக்கு மரியாதை செலுத்தின என்று மத்தேயு 27:51 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரிய ஒளி மங்கியது, பகல் வெளிச்சம் மறைந்தது, இருள் பூமியை சூழ்ந்தது, பூமி அதிர்ந்தது; ஆனாலும் சிலுவையில் இருந்தவர் நடுங்கவில்லை. இந்த அடையாளங்கள் படைப்பாளர் மீதுள்ள பயபக்தியைத் தவிர வேறு எதைக் குறிக்கின்றன? ஆரியர்களே, நீங்கள் அவர் சிலுவையில் தொங்குவதை மட்டுமே பார்க்கிறீர்கள் – ஆனால் அவர் தேவனுடைய இராச்சியத்தை அருளுகிறார் என்பதை நீங்கள் கவனிப்பதில்லை. அவர் மரணத்தை அனுபவித்தார் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆனால் லூக்கா 23:43 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கள்வனையும் மோட்சத்துக்குள் வரவேற்றார் என்பதை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள். கல்லறையின் அருகே அழுதுபுலம்புகின்ற பெண்களை நீங்கள் கவனிக்கிறீர்கள், ஆனால் யோவான் 20:11-12 இல் காட்டப்பட்டுள்ளது போல், அதைக் காக்கும் தேவதூதர்களை நீங்கள் கவனிக்கவில்லை. நீங்கள் அவருடைய வார்த்தைகளைப் படிக்கிறீர்கள், ஆனால் அவருடைய செயல்களுக்கு நீங்கள் கவனம் செலுத்தவில்லை. கானானியப் பெண்ணிடம் கர்த்தர் சொன்னார்: ‘நான் அனுப்பப்படவில்லை, ஆனால் இஸ்ரவேல் வீட்டாரின் தொலைந்துபோன ஆடுகளுக்காக அனுப்பப்பட்டேன்’ (மத்தேயு 15:24) என்று நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் அவள் அவரிடம் விண்ணப்பித்ததை அவர் நிறைவேற்றினார் என்று நீங்கள் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்.
97. அவர் அனுப்பப்பட்டார் என்பது அவர் வேறொருவரால் கட்டாயப்படுத்தப்பட்டார் என்று அர்த்தமல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்; அதாவது அவர் தனது சொந்த தீர்ப்பின் அடிப்படையில், தனது சொந்த சித்தத்தின் பேரில் செயல்பட்டார். இல்லையெனில், நீங்கள் அடிப்படையில் அவர் தனது தந்தையான தேவனை அவமதித்தார் என்று சொல்கிறீர்கள். நீங்கள் விளக்குவது போல, கிறிஸ்து யூதர்களிடம் பிதாவின் கட்டளைகளைப் பின்பற்றவும் அவர்களுக்கு உதவவும் மட்டுமே வந்தார். ஆனால் அது செய்யப்படுவதற்கு முன்பே அவர் கானானியப் பெண்ணின் மகளைக் குணப்படுத்தினார் என்றால், அவருக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், தனது சொந்த விருப்பங்களைச் செயற்படுத்துவதிலும் சுதந்திரமாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. உங்கள் விருப்பப்படி செயல்பட உங்களுக்கு சுதந்திரம் இருந்தபோதும், உங்கள் பணியின் விதிகளை நீங்கள் நிச்சயம் மீற முடியாது.
98. குமாரனுடைய செயல்கள் பிதாவை வருத்தப்படுத்துகின்றனவோ என்று எண்ணிக் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் குமாரன் ‘எனக்குப் பிரியமானவைகளையெல்லாம் நான் எப்போதும் செய்கிறேன், நான் செய்கிற கிரியைகளையெல்லாம் அவரும் செய்கிறார்’ என்கிறார். அப்படி என்றால், குமாரன் மூலம் அவர் சாதித்தவற்றைக் கொண்டு பிதா எப்படி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரே கடவுள் தான் இருக்கிறார். ரோமர் 3:30 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விசுவாசத்தின் மூலம் விருத்தசேதனத்தையும், அதே விசுவாசத்தின் மூலம் விருத்தசேதனமின்மையையும் நியாயப்படுத்தினார்.
99. வேதாகமத்தின் அனைத்து வாக்கியங்களையும் படித்து, அவற்றிலுள்ளவற்றைக் கூர்ந்து கவனியுங்கள்; மனித வடிவில் கடவுளை நாம் அடையாளம் காணும் வகையில் கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தினார் என்பதை நீங்கள் காண்பீர்கள். தந்தை குமாரனில் மகிழ்ச்சியடைவதை நீங்கள் கேட்கும்போது, தந்தையில் குமாரன் கொண்டிருக்கும் மகிழ்ச்சியைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
அத்தியாயம் 12
கத்தோலிக்கர்கள் அல்லது ஆரியர்கள் மத்தியில், யார் தங்கள் நீதிபதியாக கிறிஸ்துவின் தயவைப் பெற அதிக வாய்ப்புள்ளது? சங்கீதம் 110:1-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு வாதம் இது: தந்தை தனது வலது பக்கத்தில் வீற்றிருக்கும்படி குமாரனை அழைத்தது எவ்விதமான கீழ்ப்படிதலையோ அல்லது உயர்வு தாழ்வையோ குறிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது, ஏனெனில் தந்தையின் வலது பக்கத்தில் குமாரனுக்கு கொடுக்கப்பட்டுள்ள சரிசமமான நிலை அதைக் குறிக்கவில்லை. திரித்துவத்தில் அடங்கியுள்ளவர்கள் கடவுளின் யதார்த்தத்தைக் குறிப்பதாக இருக்கின்றனர். அவர்களின் இயல்பின் ஒற்றுமை தேவதூதர்களின் முத்துதிக் கீர்த்தனைகளால் (Trisagion) உறுதிப்படுத்தப்படுகிறது
100. இருப்பினும், நம் எதிரிகளை தயவால் வெல்ல முடியாது போனால், அவர்களை நீதிபதியின் முன் கொண்டு போய் நிறுத்துகிறோம் அல்லவா? அப்படியானால், எந்த நீதிபதியிடம் நாம் செல்ல வேண்டும்? நிச்சயமாக நியாயந்தீர்க்கும் அதிகாரம் உள்ளவரிடம் தான் செல்லவேண்டும். அப்படியானால் பிதாவிடமா? இல்லை – பிதா மக்களை நியாயந்தீர்ப்பதில்லை, ஏனென்றால் யோவான் 5:22 சொல்வது போல், அவர் எல்லா நியாயத்தீர்ப்பையும் வழங்கும் அதிகாரத்தைக் குமாரனுக்குக் கொடுத்திருக்கிறார். அதை ஒரு வெகுமதியாக அல்ல, அவர் குமாரனுக்கு தலைமுறைகளை நியாயந்தீர்க்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். அப்படியானால், அவருடைய குமாரனை நீங்கள் அவமதிப்பது அவருடைய விருப்பத்துக்கு முற்றிலும் மாறானது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் – ஏனென்றால், அவர் தனது குமாரனை உங்களுக்கு நீதிபதியாகக் கொடுத்திருக்கிறார் என்பதால்.
101. தீர்ப்புக்கு முன், அந்தத் தீர்ப்பைப் பெற, யாருக்கு பொருத்தமான காரணம் இருக்கிறது? அது நீங்களா அல்லது நானா என்று பார்ப்போம். ஒரு வழக்கின் போது, விவேகமுள்ள தரப்பினரின் அக்கறை என்னவென்றால் முதலில் நீதிபதியின் நல்லெண்ணத்தைப் பெறுவதுதான். நீங்கள் ஒரு மனிதனை மதிக்கிறீர்கள், ஆனால் அதேபோல நீங்கள் ஏன் கடவுளை மதிப்பதில்லை? இந்த இரண்டு அம்சங்களில், எது நீதிபதியின் தயவைப் பெறுகிறது – மரியாதையா அல்லது அவமதிப்பா? நான் ஒரு தவறு செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் – இருப்பினும் நான் நிச்சயமாக அந்தத் தவறைச் செய்ய மாட்டேன்: இதனால் கிறிஸ்து தனக்குக் கொடுக்கப்படும் மரியாதை குறித்து வருத்தப்படுவாரா? இல்லையா? ஏனென்றால் நாம் அனைவரும் பாவிகள் – அப்படியானால், உண்மையில் மன்னிப்புக்கு தகுதியானவர் யார், வழிபடுபவரா? அல்லது அவமரியாதையுடன் செயல்படுபவரா?
102. பகுத்தறிவு உங்களுக்குள் செயல்படவில்லை என்றால், குறைந்தபட்சம் நியாயத்தீர்ப்பின் தெளிவான அம்சம் உங்களுக்குள் செயல்படட்டும்! நீதிபதியை நோக்கி உங்கள் பார்வையை உயர்த்துங்கள். அங்கே யார் அமர்ந்திருக்கிறார், யாருடன் அமர்ந்திருக்கிறார், எங்கே அமர்ந்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். கிறிஸ்து பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். இதை உங்கள் கண்களால் பார்க்க முடியாவிட்டால், தீர்க்கதரிசியின் வார்த்தைகளைக் கேளுங்கள்: ‘தேவன் எம் ஆண்டவரை நோக்கி, “என் வலது பக்கத்தில் வீற்றிருப்பாயாக” என்றார். ஆகையால், குமாரன் பிதாவின் வலது பக்கத்தில் இருக்கிறார். கடவுளின் காரியங்கள் உலக நியாயங்களின்படி தீர்மானிக்கப்பட வேண்டும் என்று நம்புபவர்களே – இப்போது சொல்லுங்கள், வலது பக்கத்தில் வீற்றிருப்பவர் தாழ்ந்தவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? குமாரனின் இடது பக்கத்தில் வீற்றிருப்பது பிதாவுக்கு இழுக்கை உண்டாக்குமா? பிதா குமாரனை மதிக்கிறார், ஆனால் நீங்கள் அதை ஒரு அவமானம் என்று உணர்கிறீர்கள்! பிதா இந்த அழைப்பை, அன்பையும் மரியாதையையும் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் நீங்கள் அதை ஒரு மேலானவரின் கட்டளையாகக் கருதுகிறீர்கள்! இதன் சாராம்சம், கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பிதாவாகிய தேவனின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்பதுதான்.
103. ஆனால், பிதா சொன்னதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். அப்படியானால் பிதா பேசாத ஒரு பகுதியையும், குமாரன் தீர்க்கதரிசனம் உரைப்பதையும் இப்போது கேளுங்கள்: “எதிர்காலத்தில் வல்லமையுள்ளவரான தேவனுடைய வலது பக்கத்தில் மனிதகுமாரன் அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள்” என்று மத்தேயு 26:64 வாயிலாகக் கூறப்பட்டுள்ளது. தம்முடைய சரீரத்தைத் தம்மிடமே எடுத்துக்கொள்வது குறித்து அவர் இதைச் சொன்னார். பிதா அவரிடம், “என் வலது பக்கத்தில் வீற்றிருக்கக்கடவாயாக” என்றார். யூதர்களின் அரசனா என்று பிலாத்து அவரிடம் கேட்டபோது, அவர், “நான் இதற்காகவே தான் பிறந்தேன்” என்று பதிலளித்தார். எனவே, கிறிஸ்து கட்டளையினாலோ அல்லது வேறு எந்த வரத்தினாலோ அல்ல, மாறாக கடவுளின் மிகவும் பிரியமான குமாரனாக கடவுளின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்று நம்புவது நமக்கு நல்லது என்று அப்போஸ்தலன் கூறுகிறார். இது தொடர்பாக கொலோசெயர் 3:2 “பூமியில் உள்ளவற்றைப் பற்றி, சிந்திக்காமல் பரலோகத்தில் உள்ளவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். அங்கு கிறிஸ்து தேவனின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்” என்கிறது. மேலே உள்ளவற்றில் கவனம் செலுத்துவது என்பது கிறிஸ்து தனது வீற்றிருக்கும் நிலையில் இருப்பதால் கட்டளையைப் பெறுபவராகக் கீழ்ப்படியவில்லை அவர் அன்பான குமாரனாக மதிக்கப்படுகிறார் என்று நம்புவதாகும். எனவே, கிறிஸ்துவின் சரீரத்தைப் பொறுத்தவரை, பிதாவானவர், நான் உங்கள் எதிரிகளை உங்கள் பாதபடியாக்கும் வரை என் வலது பக்கத்தில் வீற்றிருக்க வேண்டுமென்று கூறுகிறார்.
104. இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை நீங்கள் திரித்துக்கூற முயற்சித்தால், நான் இதைச் சொல்கிறேன்: நான் உங்கள் எதிரிகளை உங்கள் பாதபடியாக்குவேன். குமாரன் உயிர்ப்பிப்போரை பிதா குமாரனிடத்திற்கே கொண்டுவருகிறார். இதையிட்டு, “என்னை அனுப்பியவர் அந்தப் பிதாதான். அவரே மக்களை என்னிடம் அழைத்து வருகிறவர். நான் இறுதி நாளில் அவர்களை எழுப்புவேன். என் பிதா என்னிடம் மக்களை அழைத்து வராவிட்டால், எவரும் என்னிடம் வர முடிவதில்லை” என்று யோவான் 6:44 கூறுகிறது. நீங்கள் கடவுளின் மகன் பலவீனமானவர் அல்லது தந்தைக்குக் கீழ்ப்படிந்தவர் என்று சொல்கிறீர்கள். கடைசி நாளில் மக்களை எழுப்பி தந்தை குமாரனிடம் தான் கொண்டு வருகிறார். இது உங்கள் பார்வையில் கீழ்ப்படிதலாகத் தெரிகிறது. அப்படியானால் இராச்சியம் யாருக்குச் சொந்தமானது என்று சொல்லுங்கள்: அது பிதாவுக்காகத் தயாராக உள்ளது, பிதா அதை குமாரனிடம் கொடுக்கிறார். ஆகவே வார்த்தைகளைத் திரிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் குமாரன் பிதாவுக்கு இராச்சியத்தைக் கொடுப்பதன் காரணம், அவரை விட மகத்தானவர் யாரும் இல்லை என்பதால். ஆகவே, பிதா குமாரனுக்குக் கொடுப்பது போலவும், குமாரன் பிதாவுக்குத் திருப்பிக் கொடுப்பது போலவும் கூறப்படுவது, அங்கே அன்பு மற்றும் மரியாதைக்கு தெளிவான சான்றுகள் உள்ளன என்பதை காட்டவே. அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுக்கிறார்கள், பெறுகிறார்கள். இதனால் பெறுபவர் வேறொருவருக்குச் சொந்தமானதை எடுத்துக் கொள்ளமாட்டார், அதேநேரம், கொடுப்பவரும் எதையும் இழந்துவிடுவதும் இல்லை.
105. மேலும், வலது பக்கத்தில் வீற்றிருக்கும் காரணத்தால், நீங்கள் விருப்பத்துக்குரியவர் என்று அர்த்தமல்ல, அதேபோல, இடது பக்கத்தில் இருப்பது அவமதிப்பைக் குறிப்பதுமில்லை. கடவுள் மத்தியில் எந்தத் தரவரிசைகளும் இல்லை, ஏனெனில் அது மனிதனால் நிர்வகிக்கப்படும் இடம் அல்லது கால வரம்புகளுக்கு ஏற்புடையதல்ல. அவை நமது அற்ப மனித மனங்களின் அனுமானங்கள் மற்றும் அளவுகள் மாத்திரமே. அன்பு அனைவருக்கும் ஒன்றுதான், ஆகவே ஐக்கியத்தை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
106. ஆனால் ஏன் இவ்வளவு தூரம் அலைந்து திரிகிறீர்கள்? உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் நீங்கள் பார்த்துவிட்டீர்கள், நீதிபதியைக் கண்டிருக்கிறீர்கள், தேவதூதர்கள் அவரைக் குறித்து அறிவிப்பதையும் நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். அவர்கள் அவருடைய துதிகளைப் பாடுகிறார்கள், ஆனாலும் நீங்கள் அவரை அவமதிக்கிறீர்கள்! ஆதிக்கங்களும் சக்திகளும் அவருக்கு முன்பாக சிரந்தாழ்த்தி வணங்குகின்றன. ஆனால் நீங்கள் அவருடைய நாமத்தைப் பற்றி அவதூறாகப் பேசுகிறீர்கள்! அவருடைய எல்லாப் பரிசுத்தவான்களும் அவரை வணங்குகிறார்கள், ஆனால் தேவனுடைய குமாரனையோ பரிசுத்த ஆவியையோ வணங்குவதில்லை. வானகத்து தேவதூதர்கள் அவரை பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மகா பரிசுத்தமானவர்! என்று துதிபாடுகிறார்கள் என்று ஏசாயா 6:3 கூறுகிறது.
107. பரிசுத்தர் என்ற ஒரே பெயரை மூன்று முறை கூறுவதன் அர்த்தம் எதைக் குறிக்கிறது? மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டால், அது எவ்வாறு ஒரு துதிச் செயலாக இருக்கும்? ஒரு துதிச் செயலாக இருந்தால், ஏன் மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்? இந்த மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதற்கான ஒரே காரணம், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தத்தில் ஒன்றுபட்டுள்ளனர் என்பதைக் காட்டுவதற்கேயாகும். வானதூதர் குமாரனின் நாமம் விடுபட்டுப் போவதைத் தவிர்க்க ஒரு முறை அல்ல; பரிசுத்த ஆவியைக் கவனிக்காமல் இருக்க இரண்டு முறை அல்ல; படைப்பாளரின் துதியில் படைக்கப்பட்ட உயிரினங்களைச் சேர்ப்பதைத் தடுக்க நான்கு முறை அல்ல, மூன்று முறை பெயரைக் குறிப்பிட்டார். மேலும், திரித்துவத்தின் கடவுள் ஒருவரே என்பதை வலியுறுத்த, அவர் மூன்று மடங்கு பரிசுத்தர் என்ற பிறகு சேனைகளின் கர்த்தராகிய கடவுளை ஒருமையில் சேர்த்தார். எனவே, பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று துதிபாடினார்கள். பிதா பரிசுத்தர், குமாரன் பரிசுத்தர், பரிசுத்த ஆவியும் பரிசுத்தர், அதாவது திரித்துவம் தான் வணக்கத்துக்குரியது, ஆனால் வணங்குவதில்லை, புகழப்படுகிறது ஆனால் துதிப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை, நான் வானகத்துத் தேவதூதர்களைப் போல விசுவாசிக்கவும், பரலோகத்தின் அனைத்து அதிதிகளும் சக்திகளும் கடைபிடிக்கும் வழியில் வணங்கவும் துதிக்கவும் முடிவு செய்தேன்.
அத்தியாயம் 13
ஆரியர்கள், சபெல்லியர்கள் மற்றும் மணிக்கீயர்கள் தங்கள் நீதிபதியைப் பற்றிய மோசமான மற்றும் அவமரியாதையான விதத்தில் வெளியிடும் கருத்துக்கள் உடனடியாக மறுப்புக்கு உள்ளாகின்றன. கிறிஸ்துவின் மற்றும் பிற எதிரிகளுக்கு தனது ஆட்சேபனைகளைத் தெரிவித்த பிறகு, புனித அம்ப்ரோஸ் தனக்கென ஒரு மென்மையான தீர்ப்பை எதிர்பார்க்கிறார்.
108. சரி, உங்கள் குற்றச்சாட்டுகளை நன்கு ஆராய்ந்து, அதன் பின்னர் உங்கள் நீதிபதியின் தயவை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள் என்று பார்ப்போம். மேலே தொடருங்கள், பேசுங்கள், நான் அவரிடம் சொல்ல உங்களை வற்புறுத்துகிறேன்: ஓ கிறிஸ்துவே, உம்மை உம்முடைய பிதாவிலிருந்து வேறுபட்டவராக நான் காண்கிறேன்; அப்போது அவர் பதிலளிப்பார். அதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள், உங்களால் முடிந்தால் குறித்துக்கொள்ளுங்கள்; நான் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள்; நான் எவ்வாறு வேறுபடுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை எனக்கு விளக்குங்கள்.
109. மீண்டும் சொல்லுங்கள்: நீங்கள் ஒரு படைக்கப்பட்டவர் என்று நான் தீர்ப்பளிக்கிறேன். அதற்கு கிறிஸ்து இவ்வாறு பதிலளிப்பார்: இரண்டு மனிதர்களின் சாட்சியம் உண்மையாக இருந்தால், நீங்கள் என்னையும் என் பிதாவையும் நம்ப வேண்டாமா? என்னைத் தம்முடைய மகன் என்று அழைப்பவர் வேறு யாராக இருக்க முடியும்?
110. அந்த நேரத்தில், நீங்கள்: நான் உங்கள் [பரிபூரண] நன்மையை நிராகரிக்கிறேன் என்று சொல்வீர்கள்; அதற்கு அவர்: அது உங்கள் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடக்கட்டும்; எனவே, நான் உங்களுக்கு இரக்கம் காட்ட மாட்டேன், என்று பதிலளிப்பார்
111. நீங்கள் சர்வவல்லமையுள்ளவர் என்று நான் நம்பவில்லை என்று நீங்கள் சொல்லும்போது; அவர்: நான் உங்கள் பாவங்களிலிருந்து உங்களை விடுவிக்க முடியாது, என்று பதிலளிப்பார்.
112. அதிகாரத்தின் கீழ் உள்ள ஒரு அடிமை என்று நீங்கள் சொல்வீர்கள். அதற்கு அவர்: அப்படியானால், நீங்கள் அடிமையாகக் கருதும் அவரிடமிருந்து ஏன் விடுதலையையும் மன்னிப்பையும் தேடுகிறீர்கள்? என்று பதிலளிப்பார்.
113. உங்கள் குற்றச்சாட்டு இங்கேயே நின்றுவிடுவதை என்னால் பார்க்க முடிகிறது. ஆகவே தான் நான் உங்களை வற்புறுத்தவில்லை, ஏனென்றால் நான் என் சொந்தப் பாவங்களை அறிவேன். என்னை மன்னிக்காததையிட்டு நான் உங்களைக் குறை கூறவில்லை, ஏனென்றால் நானும் கருணையை நாடுகின்ற ஒருவன். ஆனால் நீங்கள் எதற்காக ஜெபிக்கிறீர்கள் என்பதை அறிய எனக்கு ஆர்வமாக உள்ளது. எனவே உங்கள் விருப்பங்களை நீதிபதியிடம் சமர்ப்பிக்கும்போது, நான் உங்கள் தவறுகளைக் காட்டிக்கொடுக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்; உங்கள் நம்பிக்கை மற்றும் கோரிக்கைகளை சரியான கிரமத்தில் பகிர்ந்து கொள்ளத்தான் நான் இங்கே இருக்கிறேன்.
114. பின்னர் எல்லோரும் அவர்களுக்கு வழங்க இருக்கும் ஆசைகளைப் பற்றிப் பேசுங்கள். ஆண்டவரே, என்னை கடவுளின் சாயலில் உருவாக்குங்கள் என்று கேளுங்கள். அதற்கு அவர்: எந்த உருவத்தில்? நீங்கள் நிராகரித்த அந்த உருவத்திலா? என்று பதிலாகக் கேட்பார்.
115. அழியாதவனாக மாற எனக்கு உதவும் என்று நீங்கள் ஒரு கேள்வியைத் தொடுத்தால், அவருடைய பதில் இப்படி இருக்கும் என்று நான் பந்தயம் கட்டுகிறேன்: நீ என்னை ஒரு படைக்கப்பட்ட உயிரினமாகக் குறிப்பிடும்போது, நான் எப்படி அழியாதவனாக இருக்க முடியும் என்று நீ கேட்கும் போது, நான் எப்படி உன்னை அழியாதவனாக மாற்ற முடியும்? இறந்தவர்கள் அழிவில் இருந்து விடுபட்டு உயிர்த்தெழுவார்கள் – நீ அப்படிப்பட்டவரைக் கடவுளாக அங்கீகரிக்கும்போது அவர் அழியாதவராகத் தான் இருப்பார் என்று உன்னால் நம்ப முடியாதா? என்று அவர் பதிலாகக் கேட்பார்.
116. எனக்கு நல்லவராக இருங்கள். நீங்கள் [எனக்கு] நிராகரித்ததை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ‘நான் பரிசுத்தமாக இருப்பதால் நீங்களும் பரிசுத்தமாக இருங்கள்’ என்று நான் சொன்னேன் (லேவியராகமம் 19:2). ஆகவே நான் நல்லவன் என்பதை நீங்கள் நிராகரிக்க முடிவு செய்து விட்டீர்களா? அப்படியானால், உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறீர்களா? அதுவும் இல்லை, ஏனென்றால் தேவன் ஒருவரால் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும், என்று மாற்கு 2:7 கூறுகிறது. ஆகையால், நான் உங்களுக்கு உண்மையான மற்றும் ஒரே கடவுள் அல்ல என்பதால், உங்கள் பாவங்களை எந்த வகையிலும் என்னால் மன்னிக்க முடியாது.
117. எனவே ஆரியஸ் மற்றும் ஃபோட்டினஸைப் பின்பற்றுபவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லட்டும். நான் உங்கள் தெய்வீகத்தை நிராகரிக்கிறேன் என்றும் சொல்லிப்பார்க்கட்டும். அவர்களுக்கும் கர்த்தர் பதிலளிப்பார்: ‘மூடன் ஒருவன் தன் இதயத்தில் கடவுள் இல்லை என்று சொன்னான்?’ என்றால் இது யாரைக் குறிக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? யூதரையா, புறஜாதியாரையா அல்லது பிசாசையா? ஃபோட்டினஸின் சீடரே, அவர் யாராக இருந்தாலும், அவர் அமைதியாக பொறுமை காக்க வேண்டும். ஆனால் நீங்கள் தைரியமாக அதை அறிவிக்கப் போய், உங்கள் குரலை உயர்த்தி முட்டாள்களுக்கெல்லாம் முட்டாள்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். ‘நான், ‘நீங்கள் தெய்வங்கள், நீங்கள் அனைவரும் உன்னதமானவரின் குழந்தைகள்?’ என்று சொன்னபோது, நீங்கள் என் தெய்வீகத்தை மறுதலித்தீர்கள்? உங்களைச் சுற்றி நடக்கும் அவருடைய தெய்வீக விடயங்களைக் கண்ட போதிலும், நீங்கள் அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.
118. அடுத்து சபேலியர்கள் சொல்ல வந்ததைச் சொல்லட்டும்: நீங்களே, நீங்களாக ஒரே நேரத்தில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்பதை நான் நம்புகிறேன் என்று. அதற்கு கர்த்தரோ, ‘நீங்கள் பிதாவோ குமாரனோ பேசுவதைக் கேட்க முடியாது. இதைப் பற்றி ஏதேனும் சந்தேகம் உள்ளதா? என்றும், “பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. ஆனால் அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் குமாரனிடம் ஒப்படைத்திருக்கிறார்” என்று யோவான் 5:22 இன் மூலம் சான்றளிக்கிறது. ஆகவே ‘நான் தனியாக இல்லை, நானும் என்னை அனுப்பிய பிதாவும் ஒன்றித்தே இருக்கிறோம்’ என்ற என் வார்த்தைகளுக்கு நீங்கள் செவிசாய்க்கவில்லை’
119. இப்போது மணீக்கியர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று அவதானிப்போம்: அவர்கள், பிசாசுதான் நம் சரீரத்தைப் படைத்தவன் என்று நாம் நம்புகிறோம், என்றார்கள். அதற்குக் கர்த்தர் பதிலாக; சரி, நீ பரலோகத்தில் என்ன செய்கிறாய்? போ! உன் சிருஷ்டிகரிடம் திரும்பிச் செல். ‘என் பிதா எனக்குக் கொடுத்தவர்கள் என்னோடிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.’ (யோவான் 17:24) மணீக்கியனே, நீ பிசாசின் படைப்பு என்று கருதுவதால், தண்டனை முடிவுக்கு வராமல் இருக்க, நெருப்பும் கந்தகமும் சூழ்ந்த சாத்தானுடைய இடத்திற்கு இப்போதே போ’ என்றார்.
120. நான் மற்ற மதவெறி தொடர்பான விஷயங்களை ஒதுக்கி வைக்கிறேன் – மக்களை அல்ல, ஆனால் அடையாளங்களை ஒதுக்கி வைக்கிறேன். அவர்களுக்கு என்ன வகையான தீர்ப்பு காத்திருக்கிறது, அவர்களின் தண்டனை எப்படி இருக்கும்? இவை அனைத்திற்கும், அவர் நிச்சயமாக கோபம் கொண்டு பதில் அளிப்பதைவிட, சோகத்தில் தான் பதிலளிப்பார்: ஓ என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன், நான் உங்களை என்ன விதத்தில் தொந்தரவு செய்தேன்? நான் உங்களை எகிப்திலிருந்து மீட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கு வழிநடத்தவில்லையா? என்று.
121. ஆனால் எங்களை எகிப்திலிருந்து மீட்டு விடுதலைக்கு இட்டுச் சென்றது மட்டும் போதாது, அடிமைத்தனத்திலிருந்து எங்களைக் காப்பற்றியது ஆரம்பம் மட்டுமே: எல்லாவற்றிலும் மிகப்பெரிய வரம் என்னவென்றால், நீர் எங்களுக்காக உம்மையே கொடுத்தீர். அப்படியானால், நீங்கள் கேட்கலாம்: ‘நான் உங்கள் எல்லா வலிகளையும் சுமக்கவில்லையா? (ஏசாயா 53:4) நான் உங்களுக்காக என் உடலை தியாகம் செய்யவில்லையா? என் தெய்வீகத்துடன் எந்த தொடர்பும் இல்லாத, ஆனால் உங்கள் இரட்சிப்புக்கு அவசியமான மரணத்தை நான் சந்திக்கவில்லையா? இது தான் நான் பெற வேண்டிய நன்றியுணர்வா? தீர்க்கதரிசி மூலம் நான் முன்பு குறிப்பிட்டது போல, என் இரத்தம் எனக்கு கொடுத்த வெகுமதி இதுதானா: ‘நான் சிதைந்து போய்விட்டால் நான் சிந்திய என் இரத்தத்தால் என்ன பயன்?’ நான் யாருக்காக இதையெல்லாம் அனுபவித்தேனோ, அதற்கு கைமாறாக நீ என்னை வெட்கத்துடன் நிராகரிப்பதற்கான வெகுமதி இதுதானா? என்று.
122. ஆண்டவராகிய இயேசுவே, எனக்குள் பெரும் பாவம் இருப்பதாக நான் உணர்ந்திருந்தாலும், நான் உம்மை மறுதலிக்கவில்லை; நீர் என் சரீரத்தின் பலவீனத்தை மன்னித்தருளும் என்று நான் உம்மிடம் சொல்வேன். ‘உமக்கு சித்தமானால், நீர் என்னைச் சுத்திகரியும்’ என்று தொழுநோயாளன் ஒருவன் விசுவாசத்துடன் சொன்னதாக மத்தேயு 8:2 கூறுகிறது. இதனால் தொழுநோயாளன் தான் கேட்ட குணத்தைப் பெற்றான். தயவுசெய்து, உமது அடியானை நியாயத் தீர்ப்புக்குக் கொண்டுவராதேயும். நீர் நியாயந்தீர்க்க வேண்டுமென்று நான் கேட்கவில்லை, ஆனால் என்னை நீர் மன்னிக்க வேண்டுமென்றே நான் கேட்கிறேன்.
அத்தியாயம் 14
நீதிபதியின் தீர்ப்பு இறுதி நிலையை எட்டிவிட்டது; எதிர் தரப்பினரின் மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன, மேலும் தீர்ப்பு இறுதியானது என்றும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் நிரூபிக்கப்படுகிறது
123. கிறிஸ்துவிடமிருந்து நாம் என்ன தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்? அது எனக்குத் தெரியும். ஆனாலும் அவர் என்ன தீர்ப்பை வழங்குவார் என்று என்னால் கேட்க முடியுமா? முடியாது, ஏனெனில் அவர் ஏற்கனவே தனது முடிவை அறிவித்துவிட்டார். அது நம் கைகளில் உள்ளது. பிதாவை மதிக்கிறது போல, அனைவரும் குமாரனை மதிக்கட்டும் என்று அவர் கூறுகிறார். அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். “ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவரை அனுப்பிய பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான்” என்று யோவான் 5:23 கூறுகிறது.
124. தண்டனை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பிதாவிடம் பேசி, அவர் அளித்த தீர்ப்பைத் திரும்பப் பெறச் சொல்லுங்கள். அவருக்கு அவரிலிருந்து வேறுபட்ட ஒரு குமாரன் இருக்கிறார் என்று சொல்லுங்கள். அப்போது அவர்: அப்படியானால், நான் என் குமாரனிடம், ‘நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள்’ என்று சொன்னபோது நான் பொய் சொன்னேன் என்றா நினைத்தீர்கள்?’ (ஆதியாகமம் 1:26) என்று உங்களிடம் திரும்பிக் கேட்பார்.
125. தந்தையிடம் அவர் குமாரனைப் படைத்தார் என்று சொல்லுங்கள், அவர் பதிலாக: ‘அப்படியென்றால், நீங்கள் படைக்கப்பட்டவர் என்று நம்பிய ஒருவரை ஏன் வணங்கினீர்கள்?’ என்று பதிலாகக் கேட்பார்.
126. அவர் தன்னை விடக் குறைவான ஒரு குமாரனைப் பெற்றெடுத்தார் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அதற்கு அவர்: எங்கள் இருவரையும் ஒப்பிடுங்கள், பின்னர் அதுகுறித்து பார்க்கலாம்’ என்று கூறுவார்.
127. நீங்கள் குமாரனை நம்பவில்லை என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள், அதற்கு அவர்: ‘இவர் என் அன்பான குமாரன், இவரில் நான் மிகவும் பிரியமாயிருக்கிறேன்: இவருக்குச் செவிகொடுங்கள்’ என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? (மத்தேயு 17:5) என்று பதில் அளிப்பார். அவருக்குச் செவிகொடுங்கள்’ என்ற இந்த வார்த்தைகள், ‘பிதாவினுடையது எல்லாம் எனக்குச் சொந்தமானது’ என்று அவர் சொன்னபோது, இவரைக் கேளுங்கள்’ என்ற இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? அப்போஸ்தலர்கள் கூட இதைத் தான் கேட்டார்கள். எழுதப்பட்டிருக்கிறபடி: “இயேசுவுடன் இருந்த சீடர்கள் இதைக் கேட்டு மிகவும் பயந்து போய் தரையில் வீழ்ந்தார்கள்” என்று மத்தேயு 17:6 கூறுகிறது. அவரை ஏற்றுக்கொண்டவர்கள் தரையில் விழுந்தால், அவரை நிராகரித்தவர்கள் என்ன செய்வார்கள்? ஆனால் இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களைத் தொட்டு அவர்களை எழுந்து நிற்கச் செய்தார் – நீங்கள் மறுதலித்த மகிமையைக் காணாதபடி, அவர் உங்களை ஆறுதல் படுத்துவார்.
128. அப்படியானால், குமாரன் எவரைக் கண்டனம் செய்கிறாரோ, அவரைத் தந்தையும் கண்டனம் செய்கிறார் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அப்படியானால் மட்டுமே குமாரன் மூலமாக நாம் பிதாவை அடைய முடியும் என்பதோடு, பிதாவை மதிக்கிறது போலவே குமாரனையும் மதிக்க வேண்டும் என்பதையும் நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
அத்தியாயம் 15
புனித அம்ப்ரோஸ் மக்கள் தன்னைப் புகழ்வதை விரும்பவில்லை. வேதாகமத்தின் தெளிவான அதிகாரத்தால் விசுவாசம் ஏற்கனவே நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், யூதர்களைப் போலவே பிடிவாதமாக இருக்கும் ஆரியர்கள் அதைக் கேட்கவில்லை என்றும் அவர்கள் சத்தியத்தை நேசிக்க முன்வர வேண்டும் என்று அவர் ஜெபிக்கிறார்; அதேவேளை மதவெறியர்கள் மற்றும் கிறிஸ்துவின் எதிரிகள் என்ற காரணத்தால் அவர்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்
129. மாட்சிமை தங்கியவரே, நான் இந்தக் குறிப்புகளை ஒரு துல்லியமான வரிசையில் விரிவான விளக்கத்தை வழங்குவதற்குப் பதிலாக, தோராயமான முறையில் சுருக்கமாகக் கூறியுள்ளேன். ஆரியர்கள் அவற்றை முழுமையற்ற ஒன்றாகப் பார்த்தால், அவை தொடங்கப்பட்டது கூட அரிதாகத்தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்; முன்வைக்க இன்னும் வாதங்கள் இருப்பதாக அவர்கள் நம்பினால், அநேகமாக அனைத்தும் வர இருக்கின்றன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். விசுவாசமற்றோருக்கு வாதங்கள் மிகவும் அதிகமாகத் தேவைப் படுகின்றன, அதே சமயம் விசுவாசிகளுக்கு போதுமானதை விட அதிகமாக உள்ளது. உண்மையில், பேதுருவின் ஒற்றை ஒப்புகை கிறிஸ்துவில் விசுவாசத்தை உறுதிப்படுத்தப் போதுமான சாட்சியாக இருந்தது: அதாவது, நீர் ஜீவனுள்ள தேவனுடைய ஒரே குமாரனாகிய கிறிஸ்து; இந்த வார்த்தைகள் அவருடைய தெய்வீக தலைமுறையை அறிந்துகொள்வதற்குப் போதுமானது. அங்கே எந்தப் பிரிவோ அல்லது தாழ்மை நிலையோ காணப்படவில்லை. காரணம், அது ஒரு வழித்தோன்றலோ அல்லது படைப்போ அல்ல என்பதால்.
130. இது பரிசுத்த வேதாகமத்தில் அனைவரும் படித்து அறிந்து கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில விசுவாசமற்றவர்கள் அதை சந்தேகிக்கிறார்கள். எழுதப்பட்டுள்ளது போல், இந்த மக்களின் இதயம் கடினமாகிவிட்டது, அவர்களின் காதுகள் கேட்கமுடியாமல் மந்தமாகிவிட்டன, அவர்களின் கண்கள் பார்க்க முடியாமல் இருண்டு போயுள்ளன. எனவே அவர்கள் தங்கள் கண்களால் பார்க்கவோ, காதுகளால் கேட்கவோ, அல்லது தங்கள் இதயங்களில் புரிந்துகொள்ளவோ முடியாது. யூதர்களைப் போலவே, ஆரியர்களும் பெரும்பாலும் தங்கள் காதுகளை மூடிக்கொண்டே இருக்கிறார்கள் அல்லது இரட்சிப்பின் வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் கத்திக் கூச்சலிட்டு தொந்தரவு செய்கிறார்கள்.
131. அவிசுவாசிகள் தேவனுடைய வார்த்தையையே நம்ப மறுக்கும் போது, மனிதனுடைய வார்த்தையை சந்தேகிப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? சுவிசேஷத்தில் கூறப்பட்டிருப்பதுபோல், பிதாவே, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அதையடுத்து, பரலோகத்திலிருந்து பிதாவின் குரல், “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்று வானில் இருந்து ஒலித்தது என்று யோவான் 12:28 கூறுகிறது. இந்த வார்த்தைகளை அவிசுவாசிகள் கூடக் கேட்டார்கள், ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை. குமாரன் பேசினார், பிதா பதிலளித்தார் என்று யூதர்கள் சொன்னார்கள். அப்போது ‘அங்கே ஒரு இடிமுழக்கம் ஏற்பட்டது, அதன்போது அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர். வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்று கூறியதாக யோவான் 12:29 கூறுகிறது.
132. மேலும், அப்போஸ்தலர் பணிகள் 22:9 இல் எழுதப்பட்டுள்ளபடி, பவுலை கிறிஸ்து அழைத்து அவருக்குத் தனது கிருபையை அளித்தபோது, கிறிஸ்துவின் குரலை அவர் கேட்டார். அதே நேரத்தில் அவருடன் பயணித்துக்கொண்டிருந்த சக தோழர்களும் கிறிஸ்துவின் குரலைக் கேட்டதாகக் கூறினாலும்; அவர் மட்டுமே அதைதி தெளிவாகக் கேட்டதாகக் கூறினார். ஆகையால், மாட்சிமை பொருந்தியவரே, விசுவாசிக்கிறவன் கேட்கிறான் – விசுவாசிக்கவேண்டும் என்று அவன் கேட்கிறான் – விசுவாசிக்காதவன் கேட்க மாட்டான், ஏனெனில் அவனுக்கு கேட்கவேண்டிய அவசியமில்லை, ஆகவே அவன் கேட்பதில்லை.
133. தனிப்பட்ட முறையில், அவர்கள் கேட்கவும் நம்பவும் தயாராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் – உண்மையானதைத் தேடும் மனிதர்களைப் போல, முழு சத்தியத்தையும் எதிர்க்காமல் உண்மையான அன்புடனும் சாந்தத்துடனும் கேட்க வேண்டும். முடிவில்லாத கட்டுக்கதைகளையும் குடும்ப பாரம்பரியங்கள் போன்றவற்றை நாம் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்று எழுதப்பட்டுள்ளது. அவை விசுவாசத்திலிருந்து வரும் தெய்வீக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக வாதங்களை மட்டுமே தூண்டுகின்றன. இந்தக் கட்டளையின் குறிக்கோள் தூய இதயம், தெளிவான மனசாட்சி மற்றும் உண்மையான விசுவாசத்திலிருந்து வரும் அன்பு. சிலர் இதிலிருந்து விலகி அர்த்தமற்ற வெற்றுப்பேச்சுகளுக்கு இடம் கொடுத்து நீதியின் போதகர்களாக இருக்க ஆர்வமாக உள்ளனர், ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றோ நம்பிக்கையுடன் விவாதிக்கும் விஷயங்களைப் பற்றிய புரிதல் இல்லாமலோ தான் இருக்கின்றனர். அதே அப்போஸ்தலன் 2 தீமோத்தேயு 2:23-ல் “நீங்கள் சுத்தமான இதயம் உள்ளவர்களோடும் கர்த்தரிடம் நம்பிக்கை உள்ளவர்களோடும் சேர்ந்து செயல்படுங்கள், முட்டாள் தனமான, அறிவற்ற விவாதங்களில் இருந்து விலகி நில்லுங்கள்” என்று கூறியுள்ளார்.
134. அப்போஸ்தலன், சர்ச்சைகளை விதைக்கும் அத்தகைய மனிதர்களிடமிருந்து – அதாவது மதவெறி கொண்டவர்கள் – நம்மை விலகி இருக்கச் சொல்கிறார். மற்றொரு இடத்தில், “சிலர் உண்மையான போதனையை நம்புவதை நிறுத்திவிட்டு, தீய சக்திகளுக்குத் தலைவணங்குவார்கள். அவர்கள் பிசாசுகளின் போதனைகளைப் பின்பற்றுவார்கள்” என்று 1 தீமோத்தேயு 4:1 கூறுகிறது.
135. மதவெறி கொண்டவர்கள் அந்துக்கிறீஸ்துக்கள் என்றும் இது ஆரியர்களுக்குத் தெளிவாகப் பொருந்தும் என்றும் யோவான் சுட்டிக்காட்டுகிறார். இந்த ஆரியர்கள் கடைபிடிக்கும் மதவெறியானது மற்றைய எல்லா மதவெறிக் கொள்கைகளுக்கும் பின்பே ஆரம்பிக்கப்பட்டது மட்டுமன்றி, மற்றைய அனைத்து மதவெறிக் கொள்கைகளிலும் காணப்படும் நச்சுகளைத் தன்னகத்தே ஈர்த்துக்கொண்டுள்ளது. வெளிப்படுத்தல் 13:6 இல் குறிப்பிட்டுள்ளபடி, கடவுளை நிந்திக்கவும், அவரது நாமத்தை அவமதிக்கவும், அவரது பரிசுத்தவான்களுக்கு எதிராகப் போரிடவும் அந்துக்கிறிஸ்து என்ற கொடிய மிருகம் தனது வாயைத் திறந்ததாகக் கூறப்படுவது போல, அவர்களும் கடவுளின் குமாரனை அவமதித்ததோடு, அவர்கள் அவருக்காக மரித்த வேதசாட்சிகளையும் விட்டுவைக்கவில்லை. அத்தோடு, அந்திக்கிறிஸ்து கூட செய்யத் துணியாத காரியமொன்றை அவர்கள் செய்தார்கள்; அதாவது, அவர்கள் பரிசுத்த வேதாகமத்தையே திரித்துக் கூறிவிட்டார்கள். ஆகையால், இயேசுக்கிறிஸ்து இல்லை என்று கூறுபவன் உண்மையில் அந்திக்கிறிஸ்துவாகவே இருப்பான்; உலக இரட்சகரை மறுதலிக்கிறவன் இயேசுவை மறுதலிக்கிறான்; குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையும் மறுதலிக்கிறான். ஆகவே, எழுதப்பட்டிருக்கிறபடி; ‘குமாரனை மறுதலிக்கிற ஒவ்வொருவனும் பிதாவையும் மறுதலிக்கிறவனாகவே கருதப்படுவான்’ என்று 1 யோவான் 2:23 இல் கூறப்பட்டுள்ளது.
அத்தியாயம் 16
எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களில் இது முன்னறிவிக்கப் பட்டுள்ளதை மேற்கோள் காட்டி, கிரேஷியன் வெற்றிவாகை சூடுவார் என்று புனித அம்ப்ரோஸ் உறுதியளிக்கிறார். கடந்த காலத்தில் ஏற்பட்ட பேரழிவுகள், கீழைத்தேய மதங்களுக்கு எதிரான கொள்கையின் விளைவாக பெறப்பட்ட தண்டனைகள் தான் என்று கருதப்பட்டன. இந்த நம்பிக்கை பேரரசரின் பக்தியையும் அடிப்படையாகக் கொண்டது. கடவுள் கருணைகொண்டு, இராணுவ வீரர்கள், நாடு மற்றும் விசுவாசிகளின் இறையாண்மையைக் காப்பாற்றுவார் என்ற பிரார்த்தனையுடன் புத்தகம் நிறைவுக்கு வருகிறது
136. மாட்சிமை பொருந்தியவரே, போருக்குத் தயாராகும் இந்த நேரத்தில், காட்டுமிராண்டிகளுக்கு எதிரான வெற்றியைத் தேடும் இந்த முக்கியமான வேளையில் நான் இனியும் உங்களைத் தாமதப்படுத்தக் கூடாது. விசுவாசம் என்னும் கேடயத்தை அணிந்துகொண்டு, வலிமை என்ற வாளுடன் புறப்படுங்கள்; நீண்ட காலத்திற்கு முன்பே வாக்குறுதியளிக்கப்பட்ட மற்றும் கடவுளால் முன்னறிவிக்கப்பட்ட வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
137. நீண்ட காலத்துக்கு முன்பே, எசேக்கியேல் நமது ஜனங்களின் வீழ்ச்சியையும் கோதிக் போர்களையும் முன்னறிவித்தார். அவர் மனுஷகுமாரனின் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டுகையில்; ‘ஓ கொக்கே (O Gog), என் ஜனமாகிய இஸ்ரவேல் சமாதானமாய் வாழும் அந்த நாளில், நீ எழுந்து, உன் இடத்திலிருந்து, தூர வடக்கிலிருந்து புறப்பட்டு, உன்னைப் பின்தொடரும் பல ஜாதிகளும், சகல குதிரைகளின்மேலும், பெரியதும் வல்லமையுள்ளதுமான சேனையும், அநேக வீரர்களின் போர் முழக்கமும் உன்னைப் பின்தொடரும்; நீ என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக வந்து, கடைசி நாட்களில் மேகங்களைப்போல தேசத்தை மூடுவாய், என்று கூறியதாக அறிவித்துள்ளார்.
138. அந்த கொக் (Gog) என்பவன் தான் கோத் (Goth), அவன் வருகையை நாம் ஏற்கனவே கண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் அவனுக்கு எதிரான வெற்றி வாக்குறுதி அளிக்கப்பட்டது. கர்த்தர் கூறியது போல்: அவர்கள் தங்களிடமிருந்து கொள்ளையிடப்பட்டதைத் திரும்பப் பெறுவார்கள், அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டதை மீண்டும் பறிமுதல் செய்வார்கள் என்று கர்த்தர் கூறுகிறார். அந்த நாளில், கொக்குக்கு – அதாவது கோத்களுக்கு – ஒரு புகழ்பெற்ற இடத்தையும், இஸ்ரவேலுக்கான ஒரு பிரமாண்டமான அடக்கத் தளத்தையும், கடலுக்குப் பயணம் செய்த பல மனிதர்களால் நிரப்பப்பட்ட ஒரு ஸ்தானத்தையும் நான் வழங்குவேன். அது சுற்றிலும் பரவி பள்ளத்தாக்கின் வாயை மூடும்; அங்கு [இஸ்ரவேலரின் வம்சம்] கொக்கையும் அவனுடைய எல்லாப் படைகளையும் தோற்கடிக்கும், அது கொக் கூட்டத்தின் பள்ளத்தாக்கு என்று அறியப்படும்: இஸ்ரவேல் வம்சம் அவர்களை வெல்லும், இதனால் தேசம் சுத்திகரிக்கப்படும்.
139. மேலும் மாட்சிமைக்குரியவரே, அந்நிய நம்பிக்கையின்மையுடன் போட்டியிட்ட நாங்கள் உம்மில் வலுவாக இருக்கும் கத்தோலிக்க நம்பிக்கையின் உதவியை அனுபவிப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளக்கூடாது. கடவுளின் கோபத்திற்கான காரணம் ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது. அதனால் ரோமானியப் பேரரசின் மீதான நம்பிக்கை முதலில் வீழ்ந்தது, அதன்மூலம் அங்கு கடவுள் மீதான நம்பிக்கைக்கு வழி பிறந்தது.
140. தங்கள் விசுவாசத்தை ஒப்புக்கொண்டவர்களின் இறப்புகள், சித்திரவதைகள் மற்றும் நாடுகடத்தப்பட்டவர்கள் பற்றியோ, விசுவாசிகளின் பாத்திரங்கள் துரோகிகளுக்கான வெகுமானங்களாக மாற்றப்பட்ட விதம் பற்றியோ நான் பேச விரும்பவில்லை. எல்லையோரப் பகுதி முழுவதிலும் – திரேஸிலிருந்து, நதிக்கரையோரமான டேசியா வழியாக, மீசியாவிலிருந்து, மற்றும் பனோனியன்களின் வலேரியா முழுவதிலும் – தெய்வ நிந்தனை செய்பவர்கள் பிரசங்கம் செய்வதையும் காட்டுமிராண்டிகள் படையெடுப்பதையும் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? அத்தகைய இரத்தவெறி கொண்ட அயலார்களால் நமக்கு என்ன நன்மை செய்ய முடியும்? அல்லது அவர்களைப் போன்ற பாதுகாவலர்களால் ரோமானிய அரசு எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும்?
141. ஆம், இது போதும் – எல்லாமே போதும் சர்வவல்லமையுள்ள கடவுளே. பாவமன்னிப்பு கேட்பவர்களின் மரணத்திற்கும், பாதிரியார்களின் நாடுகடத்தலுக்கும், எங்கள் சொந்த இரத்தத்தாலும், நாடுகடத்தலாலும், மிகைப்படுத்தப்பட்ட துன்மார்க்கத்தின் குற்றத்திற்கும் இப்போது நாம் பரிகாரம் செய்து விட்டோம் – தங்கள் நம்பிக்கையை காட்டிக் கொடுத்தவர்கள் பாதுகாப்பைக் காண முடியாது என்பது இங்கே தெளிவாகிறது. ஓ ஆண்டவரே, தயவுசெய்து திரும்பி வாரும். வந்து, உமது விசுவாசத்தின் பதாகைகளை உயர்த்தும்.
142. எங்கள் படையை வழிநடத்த கழுகு அடையாளம் கொண்ட இராணுவக் காலாட் படையோ, பறந்து தாக்கும் படைகளோ இல்லை. ஆனால் அவை யாவும் எம் கர்த்தராகிய இயேசுவே நீரும் உமது வழிபாடும் மாத்திரமே. இது விசுவாசிகள் அல்லாதவர்களின் தேசம் அல்ல; இது பாரம்பரியமாக பாவமன்னிப்பு வழங்குபவர்களை ஏற்றுக்கொள்ளும் தேசமான இத்தாலி; இத்தாலி, பெரும்பாலும் சோதிக்கப்பட்டது, ஆனால் ஒருபோதும் அசைந்து கொடுக்கவில்லை; மாட்சிமை பொருந்திய உமது ஆட்சியால் நீண்ட காலமாகப் பாதுகாக்கப்பட்டு, இப்போது மீண்டும் காட்டுமிராண்டிகளின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்ட நாடு தான் இத்தாலி. எங்கள் பேரரசரின் மனம் அசைக்க முடியாதது, அதிலே நம்பிக்கை உறுதியாக நிலைகொண்டுள்ளது.
143. மாட்சிமை பொருந்தியவரே, உம்முடைய தெளிவான அடையாளத்தை இப்போது வெளிப்படுத்தும். இதனால் நீர் சேனைகளின் உண்மையான காவலராகவும், பரலோக சேனைகளின் தலைவராகவும் இருப்பதாக நம்புபவர்; நீர் கடவுளின் உண்மையான வல்லமையையும் ஞானத்தையும், காலத்தாலோ அல்லது படைப்பினாலோ வரையறுக்கப் படாமல், 1 கொரிந்தியர் 1:24, வெளிப்படுத்திய, “தேவன் தேர்ந்துள்ள யூதருக்கும், கிரேக்கருக்கும் கிறிஸ்துவே தேவனின் வல்லமையும், தேவஞானமும் ஆவார்” என்பதற்கு இணங்க, கடவுளின் நித்திய வல்லமையும் தெய்வீகத்தன்மையும், உம்முடைய உன்னத வல்லமையின் ஆதரவுடன் விசுவாசத்திற்கான வெற்றிக் கிரீடத்தை அடையலாம்.
முதல் புத்தகம் (Book 1)
புத்தகம் II (Book 2)
புத்தகம் III (Book 3)
புத்தகம் IV (Book 4)
புத்தகம் V (Book 5)
