வேதசாட்சியான ஜஸ்டின் டிரைஃபோவுடனான உரையாடல் (Justin Martyr, Dialogue with Trypho 121-142)

Justin Martyr, Dialogue with Trypho in Tamil 121-142


அத்தியாயம் 121

அவர்கள் மௌனமாக இருந்தபோது, நான் தொடர்ந்தேன், ‘என் நண்பர்களே, தாவீது வழியாக வேதாகமம் கிறிஸ்துவைப் பற்றி பேசும்போது, புறஜாதிகள் “அவருடைய சந்ததியின் மூலமாக” அல்ல, மாறாக “அவரால்” ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றுதான் கூறுகிறது. இங்கே சங்கீதத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் இவற்றுக்கு சான்று பகர்கின்றன: “அரசன் என்றென்றும் புகழ்பெறட்டும். சூரியன் ஒளிவிடும் மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும். ஏனெனில், அவருடைய திருநாமம் சூரியனின் பிரகாசத்தைவிட பன்மடங்கு பிரகாசமுள்ளதாக இருக்கும். ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும். அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்” என்று எழுதப்பட்டுள்ளது. அத்தோடு கடவுள் ஒருமுறை சூரியனை வழிபட அனுமதித்தார் என்றும், ஆனால் சூரியன் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாக மரணத்தை அனுபவித்த எவரையும் நீங்கள் காண முடியாது என்றும் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிகிறது. ஆனால், இயேசுவின் திருநாமத்தையும், அவர் மீது கொண்ட விசுவாசத்தையும் உதாசீனம் செய்யாமல் முழுமையாக ஏற்றுக்கொண்டுதான் காரணமாக, சகலவிதமான வேதனைகளையும் அனுபவித்த, இன்னும் அனுபவிக்கின்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த மனிதர்களை இப்போதும் நீங்கள் காணலாம். ஏனென்றால், அவருடைய சத்தியம் மற்றும் ஞானத்தின் வார்த்தை சூரியனின் சக்தியை விட பிரகாசமாகவும் முதன்மையாகவும் இருக்கிறது. மேலும் அது நமது மனதின் ஆழத்தை நோக்கி ஊடுருவிச் செல்கிறது. வேதாகமம் இதுபற்றி என்ன கூறும் போது: “அவருடைய திருநாமம் சூரியனின் பிரகாசத்தைவிட பன்மடங்கு பிரகாசமுள்ளதாக இருக்கும்.” என்று கூறுகிறது. மற்றும் சகரியா பின்வருமாறு இதை உறுதிப்படுத்துகிறார்: “கிழக்கு என்பது அவருடைய பெயராக இருக்கும்” என்றும், “அவர்கள் கோத்திர வாரியாக புலம்பித் தீர்ப்பார்கள்.” என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் தனது முதல் வருகையின் போது மிகவும் புத்திசாலித் தனமாகவும் சக்திவாய்ந்தவராகவும் இருந்திருந்தால் (கௌரவமோ அல்லது அழகோ இல்லாமல் இருந்தபடியால் அவர் தூற்றப்பட்டார்) எல்லா தேசத்து மக்கள் மத்தியிலும் அறியப்பட்டிருப்பார். மேலும் பல்வேறு தேசங்களை சேர்ந்த மனிதர்களும் தங்கள் முந்தைய கூடாத வாழ்க்கை முறையைக் குறித்து வருந்தியுள்ளனர்; பிசாசுகள் கூட அவருடைய திருநாமத்துக்குக் கீழ்ப்படிந்தன. எல்லா சக்திகளும் இராச்சியங்களும் மரித்த அனைவருக்கும் பயப்படுவதை விட அவருடைய பெயருக்கு அஞ்சின. அவர் மகிமையோடு மீண்டும் வரும்போது, அவரது உண்மையுள்ள சீடர்களுக்கு ஓய்வு மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் அளித்த போதும், அவரை வெறுத்து, தீங்கிழைத்த அனைவரையும் முற்றிலும் அழித்துவிட மாட்டார். ஆகவே, நாம் செவிமடுப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும், கிறிஸ்துவால் இரட்சிக்கப்படுவதற்கும், பிதாவினால் வெளிப்படுத்தப் பட்ட அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்வதற்கும் விசேஷ கிருபையைப் பெற்றுள்ளோம். அதையிட்டு அவர்: “யாக்கோபின் கோத்திரங்களை மீட்பதற்கும், சிதறிப்போன இஸ்ரவேலின் மக்களைத் திரும்பக் கொண்டு வருவதற்கும், நீ எனக்கு ஊழியராக இருப்பது உனக்கு ஒரு மகத்தான விஷயம், நான் உன்னை புறஜாதிகளுக்கு ஒளியாகக் கொடுத்தேன். பூமியின் இறுதித் தறுவாய் வரைக்கும் நீயே அவர்களுக்கு இரட்சணியத்தின் தூணாக இருப்பாய்” என்று அவரிடம் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

அத்தியாயம் 122

‘மேலே குறிப்பிடப்பட்ட பத்தியானது அந்நியரையும் மதம் மாறியவரையும் குறிக்கிறது என்று நீங்கள் உண்மையில் நினைக்கிறீர்கள், ஆனால் உண்மையில், இது இயேசுவினால் ஞானம் பெற்ற கிறிஸ்தவர்களாகிய நம்மை பற்றித்தான் குறிக்கிறது. நிச்சயமாக, கிறிஸ்து அவர்களையும் பற்றிக் குறிப்பிட்டிருக்க முடியும், ஆனால், அவரே உறுதிப்படுத்தியபடி, “நீங்கள் இப்போது நரகத்தின் இரட்டை தண்டனைக்குரியவர்களாகி விட்டீர்கள்” என்று கூறுகிறார். எனவே, தீர்க்கதரிசிகளும் அவர்களைப் பற்றி பேசவில்லை, ஆனால் நம்மைப் பற்றி பரிசுத்த வேதாகமம் பின்வருமாறு சாட்சியமளிக்கிறது: “பிறகு, நான் பார்வையற்றோரை அவர்கள் அதுவரை அறியாத வழிகளில் நடத்திச் செல்வேன். நான் பார்வையற்றோரை அவர்கள் அதுவரை சென்றிராத இடங்களுக்கு அழைத்துச் செல்வேன். நான் அவர்களுக்காக இருளை வெளிச்சமாக்குவேன். நான் கரடு முரடான பாதையை அவர்களுக்காக மென்மையாக்குவேன். நான் வாக்களித்ததைச் செய்வேன்! நான் எனது ஜனங்களை கைவிட்டுவிட மாட்டேன் என்றும், நான் சாட்சியாக இருக்கிறேன் நான் தெரிந்துகொண்ட என் ஊழியனும் அவ்வாறே இருக்கக்கடவான் என்று கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார். அப்படியென்றால், கிறிஸ்துவே இதற்கு சாட்சி பகர்கிறாரா? வெளிப்படையாக, தன மேல் விசுவாசம் கொண்டவர்களுக்கே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால், மதம் மாறியவர்கள் இவற்றை நம்பவில்லை என்பது மட்டுமல்ல, உங்களை விட இருமடங்கு அவருடைய பெயரைத் தூஷிக்கிறார்கள். அத்தோடு அவரை நம்பும் எங்களைச் சித்திரவதை செய்து கொல்லவும் முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாவற்றிலும் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்ற முயற்சிக்கிறார்கள். மற்றொரு இடத்தில், அவர் பின்வருமாறு உரக்கக்கூறுகிறார் : “கர்த்தராகிய நான், சரியானதைச் செய்ய உன்னை அழைத்தேன். நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் ஜனங்களோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை பிறருக்குக் காட்டுவதற்கு வெளிப்புற அடையாளமாக நீ இருப்பாய். அனைத்து ஜனங்களுக்கும் ஒளி வீசும் விளக்காக நீ இருப்பாய். பார்வையற்றோரது கண்களை நீ திறப்பாய், அவர்களால் பார்வையைப் பெறமுடியும். சிறையில் இருக்கிறவர்களை நீ விடுவிப்பாய். பலர் இருளில் இருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருவாய்.”

எனதன்பான, கணவான்களே, இந்த வார்த்தைகள், கிறிஸ்துவைப் பற்றியும், அறிவொளி பெற்ற புறஜாதியாரைப் பற்றியும் பேசப்பட்டது. அப்படியில்லாவிட்டால், அவர் சட்டத்தையும் மதம் மாறியவர்களையும் பற்றித் தான் பேசுகிறார் என்று நீங்கள் மறுபடியும் உறுதியாகக் கூறுகிறீர்களா?’ என்று கேட்டேன். இரண்டாவது நாளில் வந்தவர்களில் சிலர் திரையரங்குகளில் இருப்பதாக எண்ணி, கூச்சலிட ஆரம்பித்தனர்: ‘ஏன் முடியாது? அவர் சட்டத்தையும் அதன் மூலம் அறிவூட்டப்பட்டவர்களையும் பற்றி கூறவில்லையா? அப்படியானால், இவர்கள் நிச்சயமாக மதம் மாறியவர்கள்” என்றனர். ‘இல்லை,’ என்று டிரிபோவை அவனது கண்களுக்கு நேராகப் பார்த்து நான் பதிலளித்தேன். ஏனெனில், புறஜாதிகளும் அவர்கள் கடைபிடிக்கும் சட்டங்களையும் பற்றி அனைவருக்கும் அறிவூட்டும் அதிகாரம் இருக்குமானால், புதிய ஏற்பாட்டிற்கான தேவை தான் என்ன? ஆனால், அவர் எங்கோ ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறபடி, கடவுள் ஒரு புதிய ஏற்பாட்டையும் நித்திய சட்டத்தையும் கட்டளையையும் அனுப்புவார் என்று முன்னறிவித்ததால், பழைய சட்டத்திற்கும் அதன் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் மேற்கோள் காட்டப்பட்ட பகுதியைப் பயன்படுத்தாமல், கிறிஸ்துவுக்கும் அவருடைய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும், அவர் அறிவூட்டிய புறஜாதிகளாகிய எங்களுக்கும் சார்பாகவே இவை கூறப்பட வேண்டும். ஆண்டவர் கூறுவது இதுவே: “எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது.  அப்போது, நான் உனது ஜெபங்களுக்குப் பதில் தருவேன். நான் உன்னைக் காப்பாற்றும்போது அது சிறப்பான நாளாக இருக்கும். அந்த நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். எனக்கு ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை இருந்தது என்பதற்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள். இப்போது நாடு அழிக்கப் படுகிறது. ஆனால் தேசத்தை அதற்கு உரியவர்களிடம் நீ திருப்பிக் கொடுப்பாய்” என்று கூறுகிறார். அப்படியானால், கிறிஸ்துவின் சந்ததி என்றால் என்ன? அவர்கள் புறஜாதிகள் இல்லையா? கடவுளின் உடன்படிக்கை என்ன? கிறிஸ்து இல்லையா? எனவே, வேதாகமத்தில் வேறொரு இடத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன். கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்! நீ எனக்கு மகன். நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன். பூமியின் மக்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

அத்தியாயம் 123

‘இப்போது, இந்தப் பத்திகள் அனைத்தும் கிறிஸ்துவையும் புறஜாதிகளையும் குறிப்பதால், அவை மற்றவர்களையும் குறிக்கின்றன என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். உங்கள் மதம் மாறியவர்களுக்கு புதிய உடன்படிக்கை தேவையில்லை, ஏனெனில் ஒரே சட்டம் விருத்தசேதனம் செய்யப்பட்ட அனைவரையும் ஒன்றிணைக்கிறது. வேதாகமம் அவர்களைப் பற்றி பின்வருமாறு உரைக்கிறது: “வருங்காலத்தில், கர்த்தர் மீண்டும் யாக்கோபிடம் தமது அன்பைக் காட்டுவார். கர்த்தர் மீண்டும் இஸ்ரவேல் ஜனங்களைத் தேர்ந்தெடுப்பார். அந்த நேரத்தில், கர்த்தர் அந்த ஜனங்களுக்கு அவர்களின் நாட்டைக் கொடுப்பார். பிறகு யூதரல்லாத ஜனங்கள் யூத ஜனங்களோடு தாங்களாகவே சேர்ந்துகொள்வார்கள். இரண்டு தேசத்தவரும் சேர்ந்து ஒரே குடும்பமாக, யாக்கோபின் குடும்பமாக ஒன்றிணைவார்கள்.” [இரண்டாவதாக, மதம் மாறியவர்களுக்கு என்று புதிய உடன்படிக்கை ஒன்று தேவையில்லை) ஏனென்றால், யூத மக்களின் இனத்துடன் தன்னை சேர்த்துக்கொள்வதற்காக விருத்தசேதனம் செய்யப்பட்ட ஒரு மதம் மாறியவர், அதன் மூலம் உங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆனால் மக்கள் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியுடையவர்கள் என்று கருதப்படும் நாம் ஒரு முறையான தேசத்தைச் சேர்ந்தவர்கள், ஏனென்றால் நாங்கள் விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள். அதுமட்டுமின்றி, உங்கள் மத்தியில் மதம் மாறியவர்களின் கண்கள் திறக்கப்படுகின்றன, ஆனால் உங்கள் கண்கள் இன்னும் திறபடவில்லை என்று நீங்கள் சொல்வது அபத்தமானது; நீங்கள் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் என்று அழைக்கப்படுவீர்கள், ஆனால் மதம் மாறியவர்களோ அறிவொளி பெற்றவர்கள் என்ற புகழை அடைகிறார்கள். மேலும், சட்டம் புறஜாதிகளுக்குக் கொடுக்கப்பட்டது என்றும், ஆனால் அந்தச் சட்டம் உங்களுக்கே தெரியாது என்றும் நீங்கள் உறுதியாகக் கூறுவது இன்னும் அபத்தமானது. ஏனென்றால், நீங்கள் கடவுளின் கோபத்திற்கு அஞ்சி அதற்கு ஆளாகியிருப்பீர்கள். சட்டத்தை மீறுபவர்களாகவும் அறிவீனர்களாகவும் இருந்திருக்க மாட்டீர்கள். ஆனால் கடவுள் திரும்பத் திரும்பக் கூறுவதைக் கேட்டு உங்கள் மனம் கலக்கம் அடைந்திருக்கும்: “நம்பிக்கையற்ற என் ஊழியர்களைத் தவிர பார்வையற்றோராக, காதுகேளாதவர்களாக இருக்கக்கூடியவர்கள் யார்? அவர்கள் தான் இவர்களை ஆட்சி செய்பவர்களா? மேலும் கடவுளின் ஊழியர்கள் பார்வையற்றவர்கள். நீங்கள் அடிக்கடி அவர்களை பார்க்கிறீர்கள், ஆனால் கவனிக்காமல் விட்டுவிடுகிறீர்கள்; உங்கள் காதுகள் திறந்திருந்தும், நீங்கள் கேட்காமல் விட்டுவிடுகிறீர்கள். “கடவுள் உங்களைப் புகழ்வது உங்களுக்குத் பொருந்துமா? கடவுளின் சாட்சி அவருடைய ஊழியர்களுக்கு எவ்வாறு பொருந்தும்? இந்த வார்த்தைகளை நீங்கள் அடிக்கடி கேட்டாலும், கடவுள் உங்களை எச்சரிக்கும் போது நீங்கள் அதையிட்டு வெட்கப்படுவதில்லை, பயப்படுவதும் இல்லை. ஆகவே நீங்கள் எல்லோரும் பிடிவாத குணமுள்ள முட்டாள்கள். ஆகையால், இதோ, கர்த்தர் சொல்வதைக் கேளுங்கள், எனவே நான் அந்த ஜனங்களை ஆச்சரியப்படுத்த சில வல்லமைமிக்க, அதிசயப் படத்தக்கச் செயல்களைச் செய்வேன். அவர்கள் மத்தியில் உள்ள விவேகிகள் தங்கள் விவேகத்தை இழப்பார்கள். அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பார்கள், அதையும் நான் நியாயத்துடனேயே தான் செய்வேன்”என்று சொல்கிறார். நீங்கள் புத்திசாலிகள் அல்ல, அதேநேரம் அறிவுக்கூர்மை உடையவர்களும் அல்ல. தந்திரம் மிக்க மற்றும் துரோகம் இழைக்கக்கூடியவர்கள்; தீய செயல்கள் புரிவதற்கு மட்டுமே புத்திசாலிகளாக செயற்படக் கூடியவர்கள், ஆனால் கடவுளின் மறைந்திருக்கும் சித்தத்தையோ அல்லது இறைவனின் நம்பகமான உடன்படிக்கையையோ அல்லது நித்திய வழிகளைக் கண்டறியவோ முற்றிலும் தகுதியற்றவர்கள். எனவே இந்த காரணத்தை விளக்குமுகமாக அவர் பின்வருமாறு கூறுகிறார்: “நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. நான் இஸ்ரவேல் மற்றும் யூதா குடும்பம் பெருக உதவுவேன். நான் அவர்களது பிள்ளைகளும், அங்கிருக்கும் விலங்குகளும் பெருக உதவுவேன். ஒரு செடியை நட்டு வளர்க்கின்றவனைப் போன்று நான் இருப்பேன்.” ஏசாயா மூலம் அவர் இஸ்ரவேலைப் பற்றி இன்னொரு விதத்தில் இவ்வாறு கூறுகிறார்: “அந்தக் காலத்தில், இஸ்ரவேல் அசீரியாவுடனும் எகிப்துடனும் சேர்ந்து மூன்றாவது தேசமாக உடன்பாடு செய்யும். இது நாட்டுக்கான ஆசீர்வாதமாக விளங்கும். சர்வ வல்லமை கொண்ட கர்த்தர் இந்த நாடுகளை ஆசீர்வதிப்பார். “எகிப்தியரே நீங்கள் என் ஜனங்கள். அசீரியாவே நான் உன்னை உருவாக்கினேன். இஸ்ரவேலே நான் உன்னைச் சொந்தமாக்கினேன். நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்!” என்று அவர் கூறியுள்ளார். கடவுள் இந்த மக்களை இஸ்ரேலர் என்று ஆசீர்வதித்து அழைக்கிறார், மேலும் இது அவருடைய வம்சம் என்று உரக்க அறிவிக்கிறார். ஆனால் நீங்களோ உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் என்று நினைத்துக் செய்து கொண்டும் உங்களையே ஏமாற்றிக் கொண்டும், கடவுள் ஆசீர்வதித்த மக்களை சபிப்பதற்கும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உண்மையில், அவர் எருசலேமுடனும் அதைச் சுற்றியுள்ள சமூகங்களுடனும் பேசியபோது, அவர் இப்படிக் கூறினார்: “நான் உங்கள் மக்களைப் பெருக்குவேன். இஸ்ரவேலிலுள்ள என் ஜனங்கள் பல்கிப் பெருகுவார்கள், நீங்கள் அவர்களின் வம்சமாக இருப்பீர்கள், என் மக்களாகிய உங்களுக்கு  அவர்களால் எவ்விதத் துன்பமும் நிகழாது.”

அப்போது, ‘நீ இஸ்ரவேல் என்றும், தேவன் உன்னைப் பற்றி இப்படியெல்லாம் சொல்கிறார் என்றும் சொல்கிறாயா?’ என்று டிரிபோ என்னிடம் கேட்டார்.

‘இந்தக் கேள்வியை நாங்கள் ஏற்கனவே எந்த ஒரு கோணத்திலும் விவாதிக்கவில்லை என்று நான் எண்ணுகிறேன்,’ என நான் பதிலளித்தேன்.

”உங்கள் கேள்வி உங்கள் அறியாமை காரணமாக எழுந்தது என நான் நினைத்தேன். ஆகவே இதை நிரூபிக்க என் வாதத்தை முன்வைக்க நான் முன்வந்தேன். அதற்கு நீங்களும் ஒப்புக்கொண்டீர்கள். உங்கள் கேள்வி எழுப்பப்பட்டது அறியாமையின் விளைவாகவோ அல்லது நீங்கள் கேள்வி கேட்கும் விருப்பத்தின் மற்றொரு ஆவல் காரணமாகவோ என்று என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் இங்கு சமூகமளித்துள்ள புதியவர்களின் நலனுக்காக எனது வாதங்களை மீண்டும் முன்வைப்பதை நான் சவாலாக ஏற்றுக் கொள்கிறேன்.

அவர் சம்மதத்துடன் தலையசைத்தபோது, நான் இவ்வாறு தொடர்ந்தேன், ‘உங்களுக்குக் கேட்க காது இருந்தால் செவிமடுங்கள். ஏசாயாவின் நிருபத்தில், கடவுள், கிறிஸ்துவைப் பற்றி உவமையில் பேசுகிறார், அவரை யாக்கோபு என்றும் இஸ்ரேல் என்றும் அழைக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “என் சேவகனாக யாக்கோபுவைப் பாருங்கள்!  அவரை நான் ஆதரிக்கிறேன். இஸ்ரேல் என்ற பெயரில் நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவரில் எனது வலிமையை நிரப்புகிறேன். அவர் நாடுகளுக்கும் பிறவினத்தாருக்கும் சமமாக நீதி வழங்குவார். அவர் பாதைகளில் உரக்க பேசமாட்டார், கூக்குரலிடவும் மாட்டார். அவர் சாந்த குணமுள்ளவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார். அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார். அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டடைவார். உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது துவம்சம் செய்யப்பட்டவராகவோ ஆவதில்லை. ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து வந்து அவரது போதனைகளால் முழுமைபெறுவார்கள்.” ஆகையால், உங்கள் மக்கள் யாக்கோபின் பெயரால் அழைக்கப்பட்டது போல, அதாவது இஸ்ரவேல் என்று குடும்பப்பெயர் பெற்ற யாக்கோபு, மற்றும் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம், கடவுளின் சித்தத்தால் நம்மைப் படைத்த கிறிஸ்துவின் மூலம், யாக்கோபு, இஸ்ரேல், யூதா, சூசை தாவீது போன்றோர் கடவுளின் உண்மையான பிள்ளைகளாவர்.’

அத்தியாயம் 124

கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்று நான் கூறியதால், எனது சபையோர் குழப்பமடைந்ததை நான் கவனித்தபோது, அவர்கள் எழுப்பிய ஆட்சேபனையைத் தடுக்குமுகமாக, இவ்வாறு கூறினேன். ‘அன்பர்களே, இந்த மக்கள் அனைவரும் உன்னதமானவரின் மக்கள் என்று பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கூறுகிறார் என்பதைக் கேளுங்கள். ஒவ்வொரு இனத்தின் மீதும் தீர்ப்பு வழங்குமுகமாக, கிறிஸ்து தாமே அவர்களுடைய சபையில் பிரசன்னமாய் இருப்பார். தாவீதின் மூலம் சொல்லப்பட்ட அவருடைய வார்த்தைகள், நீங்கள் மொழிபெயர்த்த படி இவ்வாறு கூறுகிறது: “தேவன் தேவர்களின் சபையில் பிரசன்னமாய் இருக்கிறார். தேவர்களின் கூட்டத்திற்கு அவரே நீதிபதி. ஆகவே எத்தனை காலத்துக்கு நீர் ஜனங்களைத் தகாதபடி நியாயந்தீர்ப்பீர்? தீயவர்களைத் தண்டனை இல்லாமல் எவ்வளவு காலம் தப்பிக்கச் செய்வீர்? ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு ஆறுதல் அளியுங்கள். அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள். ஏழைகளுக்கும் திக்கற்ற மக்களுக்கும் உதவுங்கள். அவர்களைத் தீயோரிடமிருந்து காப்பாற்றுங்கள். அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியாதிருக்கிறார்கள். அவர்கள் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் தாங்கள் செய்வதை என்னவென்று அறியாதிருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி இருக்கும் உலகத்தின் அத்திவாரம் நொறுங்கி கொண்டிருக்கிறது!” என்கிறார். நான் (தேவன்), நீங்கள் தேவர்கள். மிக உன்னதமான தேவனுடைய மக்கள். ஆனால் நீங்கள் எல்லா ஜனங்களும் மடிவதைப் போல மடிவீர்கள். பிற எல்லாத் தலைவர்களையும்போல நீங்களும் மடிவீர்கள்” என்று சொல்கிறேன். ஆகவே, தேவனே! எழுந்தருளும்! நீரே நீதிபதியாயிரும்! தேவனே, தேசங்களுக்கெல்லாம் நீரே தலைவராயிரும்!” என்று எழுதப் பட்டுள்ளது. வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “இதோ, நீங்கள் மனிதர்களைப் போல இறந்து, இளவரசர்களில் ஒருவரைப் போல வீழ்ச்சியடைந்து, மனிதர்களின் கீழ்ப்படியாமை காரணமாக, அதாவது ஆதாம் ஏவாள், மற்றும் இளவரசர்களில் ஒருவரின் வீழ்ச்சி, அதாவது ஏவாளை ஏமாற்றியதால் பெரும் சாபத்துக்குள்ளாகி பாம்பானது வெறுக்கப்பட்ட ஒரு விலங்கினமாகியது. ஆனால், இந்த விஷயத்தை இழுக்கடிப்பது எனது நோக்கம் அல்ல, ஆனால் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களை, வலி மற்றும் மரணம் இல்லாமல், அவர்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரால் தகுதியானவர்கள் என்று கருதப்பட்டால், பரிசுத்த ஆவியானவர் அவர்களைக் கண்டிக்கிறார் என்பதை உங்களுக்கு நிரூபிக்க வேண்டும். அவருடைய மக்கள் என்று அழைக்கப்பட்டாலும், ஆதாம் மற்றும் ஏவாளைப் போல, மரணத்தைத் தங்களுக்குத் தாங்களே வரவழைத்துக் கொண்டார்கள். இது சம்பந்தமாக, நீங்கள் விரும்பியபடி சங்கீதத்தில் கொடுக்கப்பட்டுள்ள எந்த விளக்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் தேவர்களாக ஆவதற்குத் தகுதியானவர்களாகக் கருதப்பட்டனர். மேலும் உன்னதமானவரின் மக்களாகும் திறனையும் தம்மகத்தே கொண்டுள்ளனர். அதேவேளை, ஆதாம் மற்றும் ஏவாளைப் போல ஒவ்வொருவரும் நியாயத் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை கடவுள் என்று அழைக்கிறார் என்பதை நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்துள்ளேன்.

அத்தியாயம் 125

‘மதிப்புக்குரியவர்களே, நீங்கள் இஸ்ரேல் என்ற பெயரில் உள்ள முக்கியத்துவத்தைச் சொன்னீர்களானால், நான் மிகவும் நன்றி உடையவனாய் இருப்பேன்’ என்றேன். அதற்கு யாரும் பதிலளிக்காத போது, நான் தொடர்ந்தேன், ”சரி, என் அறிவுக்கு ஏற்றது என்று நான் கருதும் விளக்கத்தை இங்கே தருகிறேன். நான் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்தால், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது சரியென்று நான் எண்ணவில்லை. இந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரிந்திருக்கும் என்று உங்களை சந்தேகித்து, பொறாமையினாலோ அல்லது தன்னார்வம் காரணமாகவோ, அறியாமையாலோ நான் உங்களை ஏமாற்றுகிறேன் என்று நீங்கள் எண்ணினால், தொடர்ந்து கேளுங்கள்; நான் எல்லாவற்றையும் எளிமையாகவும் நேர்மையாகவும் தெளிவாகவும் பேசுகிறேன். ஆகவே அனைத்தையும் தெரிந்தவன் என்ற தன்னிச்சையுடன் செயலாற்றுவது எனக்கு சரியெனத் தோன்ற வில்லை. என் இறைவன் விதைப்பவன் உவமையில் கூறியது போல்: ‘ஒரு விதைப்பவன் விதைகளை விதைக்கும் போது, சில விதைகள் வழியில் விழுந்தன; சில முட்செடிகள் மத்தியிலும் மற்றும் சில கற்பாறைமீதும், மற்றும் சில நல்ல தரையிலும் விழுந்தன’ என்றார். ஆகவே, அவருடைய வார்த்தைகள் எப்படியாவது நல்ல நிலத்தில் விழும் என்ற நம்பிக்கையுடன் ஒருவர் பேச வேண்டும். அவரது வருகையின் போது, சக்தியும் சர்வ வல்லமையும் கொண்ட இறைவன் அவர் ஒப்படைத்த சொத்துக்களை அனைவரிடமிருந்தும் கேட்பார். அதை தெரிந்து வைத்திருக்கும் அவர்களுடைய உதவியாளர்களைக் கண்டிக்கமாட்டார். ஏனென்றால் தன் இறைவன் வல்லமையுள்ளவர் என்பதை அந்த உதவியாளர் அறிந்திருக்கிறார். அவர் கையளித்த உடைமைகளைத் திரும்பப் பெறும் உரிமை அவருக்கு இருக்கிறது என்பதையும் அந்த உதைவியாளர் தெரிந்து வைத்துள்ளார். ஆகவே அவர் அதை ஒவ்வொரு வங்கியிலும் ஒப்படைத்து அவற்றைப் பெருக்கி வைத்திருந்தார். எந்த காரணத்திற்காகவும், பூமியில் குழி தோண்டி அந்த சொத்துக்களை அதில் புதைத்து வைக்கவில்லை. இந்த உவமைகளை இறைவன் வேதாகமத்தில் மிகவும் அழகாக விபரித்துள்ளார். தன் எஜமானிடமிருந்து ஒரு தொகை பணம் பெற்ற ஒருவன், அதை நிலத்தில் ஒரு குழி தோண்டி புதைத்து வைத்தான். நீண்ட காலம் கழித்து எஜமானன் மீண்டும் திரும்பி வந்தான். தன் பணத்தை என்ன செய்தார்கள் எனத் தன் மூன்று ஊழியர்களிடமும் கேட்டான். ஐந்து பேழை பணம் பெற்ற ஊழியன், மேலும் ஐந்து பேழை பணத்தைக் கொண்டு வந்து தன் எஜமானிடம் கொடுத்து, ‘எஜமானே! நீர் என்னை நம்பி ஐந்து பேழைகள் நிறைய பணம் தந்தீர். ஆகவே, நான் அதை முதலீடு செய்து மேலும் ஐந்து பேழைகள் பணம் ஈட்டியுள்ளேன்!’ என்றான். அதற்கு எஜமானன், ‘நீ செய்தது சரி. நீ ஒரு விசுவாசமுள்ள நல்ல ஊழியன். நான் கொடுத்த சிறிது பணத்தைக் கொண்டு நன்கு புத்தியுடன் செயல்பட்டாய். ஆகவே மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். அப்போது நீயும் என் மகிழ்ச்சியில் பங்குகொள்வாயாக!’ என்றான். பின்னர் இரண்டு பேழைகள் பணம் பெற்ற ஊழியன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீர் என்னிடம் இரண்டு பேழை பணம் தந்தீர். நான் அதைக்கொண்டு மேலும் இரண்டு பேழை பணத்தை ஈட்டியுள்ளேன்’ என்றான். அவனுக்கு எஜமான், ‘நீ செய்தது சரி. நீ நம்பிக்கைக்கு உரிய நல்ல ஊழியன். நான் கொடுத்த சிறிய பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய். ஆகவே, மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்வாயாக!’ என்றான். பின் ஒரு பேழை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீர் மிகவும் கடினமானவர் என்பது எனக்குத் தெரியும். விதைக்காமலேயே அறுவடை செய்கிறவர் நீர். செடி நடவாமலேயே தானியங்களை சேர்க்கிறவர் நீர். எனவே, நான் உம்மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, நீர் தந்த பணத்தை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். இதோ நீர் தந்த பணப்பேழை’ என்றான். எஜமான் அவனை நோக்கி, ‘நீ ஒரு மோசமான சோம்பேறி ஊழியன். நான் விதைக்காமலேயே அறுவடை செய்வதாகவும்; நடாமலேயே தானியங்களை சேகரிப்பதாகவும் கூறுகிறாய். எனவே நீ என் பணத்தை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நான் திரும்பி வரும்பொழுது, என் பணமும் எனக்குக் கிடைத்திருக்கும். அதற்கான வட்டியும் கிடைத்திருக்கும் என்றான்” என்கிறது அந்த உவமை. ‘இஸ்ரவேல் என்ற பெயர், அதிகாரத்தை வெல்லும் மனிதன் என்று பொருள்படும், ஏனெனில் இஸ்ரா “வெல்லக்கூடிய ஒரு மனிதன்” மற்றும் எல் என்பது “சக்தி” என்பதைக் குறிக்கிறது. கிறிஸ்து மனிதனாக மாறும்போது இதைச் செய்வார் என்றும், யாக்கோபு தன முன் தோன்றிய அவருடன் பக்தியுடன் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தது இங்கே இவ்வாறு முன்னறிவிக்கப்பட்டது. கிறிஸ்து கடவுளின் சித்தத்துக்கு அமைவாகவே இறை ஊழியம் செய்தார். இருப்பினும் அவர் தான் கடவுள், ஏனென்றால் அவர் எல்லா உயிரினங்களுக்கும் முதன்மையானவர். ஏனென்றால், அவருடைய அவதரிப்புக்குப் பிறகு, நான் ஏற்கனவே கூறியது போல, பிசாசு (பாம்பு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அந்த தீய சக்தி) அவரை அணுகி, அது அவரைச் சோதித்து, அவரை வணங்க வேண்டும் என்று கோருவதன் மூலம் அவரை வெல்ல முயன்றான். ஆனால் சாத்தானோ, கிறிஸ்துவின் அதீத சக்தியின் காரணமாக, நசுக்கப்பட்டடு, துவம்சம் செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டான். வேதாகமத்துக்கு மாறாக கடவுளாக வணங்கப்பட வேண்டும் என்று அவன் கேட்ட பொழுது, சாத்தானை கொடியவன் என்று அவர் நிரூபித்தார்; ஏனென்றால் அவன் கடவுளின் சித்தத்தை விட்டு விலகியவன் என்ற காரணத்தினால். அவருடைய பதில் இதுவாகத்தான் இருந்தது: “நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும் என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது!” என்று கூறினார். பிசாசு, தோற்கடிக்கப்பட்டு, கண்டனம் செய்யப்பட்டு, அங்கிருந்து விலகிச் சென்றான். யாக்கோபின் தொடையைத் தோட்டத்தின் மூலம், அதை மரத்துப்போகச் செய்ததன் காரணத்தால், கிறிஸ்து சிலுவையில் அறையப்படுகையில், அவரும் உணர்ச்சிகள் மரத்துப்போனவராக (அதாவது உடல் மற்றும் மன துன்பங்களில்) இருந்தார் என்பதைக் காட்டினார். ஆனால் பழங்காலத்திலிருந்தே அவருடைய பெயர்; அதாவது இஸ்ரவேல் என்பது ஆசீர்வதிக்கப்பட்ட யாக்கோபுக்கு அவர் வழங்கிய பெயர். அவர் தனது சொந்த பெயரைக் கொண்டு அவரை ஆசீர்வதித்தபோது, அவர் மூலம் பிதாவிடம் வரும் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்ட இஸ்ரவேலின் ஒரு பகுதி என்று அறிவித்தார். இருப்பினும், நீங்கள் இதைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை, புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவுமில்லை. ஆனால், நீங்கள் சரீரத்தின் வழியாக யாக்கோபின் சந்ததியினர் என்பதால் மட்டுமே இரட்சிக்கப்படுவீர்கள் என்று உறுதியுடன் எதிர்பார்த்து, நான் மீண்டும் மீண்டும் காட்டியபடி, நீங்கள் இன்னும் உங்களை ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கிறீர்கள்.

அத்தியாயம் 126

நான் தொடர்ந்தேன். “ஆனால் டிரிபோ, சில சமயங்களில் சிறந்த ஆலோசனையின் தூதுவராகவும், எசேக்கியேல் மனிதனாகவும், தானியேல் மனித குமாரனாகவும், ஏசாயா குழந்தையாகவும், தாவீது கிறிஸ்துவாகவும், கடவுளாகவும், பல தீர்க்கதரிசிகளால் கிறிஸ்து கற்பாறை என்றும் மதிக்கப்படுகிறார். சாலமன், சூசை மற்றும் யூதா ஞானம் எனவும், மோயீசனால் நட்சத்திரம் எனவும், சகரியாவால் கிழக்குத் திசை என்றும், மீண்டும் ஏசாயா கூறிய வார்த்தைகளூடாக துன்புறுத்தப்பட்டவராகவும், யாக்கோபாகவும், இஸ்ரவேலாகவும், ஒரு கோலாக, பூவாக, மூலைக் கல்லாக, கடவுளின் குமாரனாக, கடவுளாக இருப்பவர் அவர் யார் என்று உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமானால், மனிதப் பிறவி எடுத்து, இங்கு வந்து, துன்பப்பட்டு, பரலோகத்திற்கு எழுந்தருளிய அவரை நிந்திக்க மாட்டீர்கள். அவர் மீண்டும் வருவார், உங்கள் பன்னிரெண்டு கோத்திரங்களும் அழும். உண்மையில், தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் புரிந்துகொண்டிருந்தால், அவர் கடவுள், கடவுளின் ஏக சுதன், மனிதனாய் அவதரித்தவர், ஒப்பற்ற உன்னதமான கடவுள் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அதுபற்றி யாத்திராகமத்தில் ஒரு இடத்தில் மோயீசன் இவ்வாறு கூறுகிறார்: பின், தேவன் மோயீசனை நோக்கி, “நானே கர்த்தர். நான் ஆபிரகாம், ஈசாக், யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை சர்வ வல்லமையுள்ள தேவன் என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை. நான் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்தேன். கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன். அவர்கள் அத்தேசத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் அது அவர்களின் சொந்த தேசமல்ல” என்றுரைத்தார். அத்தோடு மீண்டும், “ஒரு மனிதன் யாக்கோபுடன் மல்யுத்தம் செய்தான்” என்று கூறும்போது, ​​மனிதனே கடவுள் என்று அவர் கூறுகிறார். ஏனென்றால், “நான் கடவுளை நேருக்கு நேர் பார்த்தேன், அத்தோடு இன்னும் நான் வாழ்கிறேன்” என்று யாக்கோபு கூறியதாக அவர் சொல்கிறார். மேலும் மோயீசன் யாக்கோபுவுக்கு தேவன் காட்சிகொடுத்த இடம், அவருடன் மல்யுத்தம் செய்த இடம் மற்றும் அவர் யாக்கோபுவை ஆசீர்வதித்த இடம் “கடவுளின் திருமுகம்” என்று அழைக்கப்பட்டது என்றும் சாட்சி கூறுகிறார். மதியம் ஆபிரகாம் தனது கூடாரத்தின் வாசலில் அமர்ந்திருந்தபோது, ​​மம்ரே என்ற கருவேல மரத்தின் அருகே கடவுள் தோன்றினார் என்றும் மோசே கூறுகிறார். பின்னர் அவர் தொடர்கிறார்: “கோடைகாலத்தில் கூடாரத்தின் வாசலில் அமர்ந்திருந்தபோது, ​​மம்ரே என்ற இடத்தில் உள்ள ஆலோன் மரங்களுக்கு அருகில் கர்த்தர் அவருக்குக் காட்சியளித்தார்; அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அங்கே மூன்று மனிதர்கள் அவருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள். அவர் அவர்களைக் கண்டதும், கூடாரத்தின் வாசலில் இருந்து எழுந்து அவர்களைச் சந்திக்க ஓடினார். சிறிது நேரம் கழித்து, அந்த மூன்று பேரில் ஒருவர் ஆபிரகாமுக்கு ஒரு குழந்தையைத் தருவதாக உறுதியளிக்கிறார்: “பின்னர் கர்த்தர் ஆபிரகாமிடம் இவ்வாறு கூறினார்: “கர்த்தர் ஆபிரகாமிடம், “சாராள், குழந்தை பெறமுடியாத அளவுக்கு முதியவளானதாகக் கூறிச் சிரிக்கிறாள். ஆனால், கர்த்தருக்கு கடினமான காரியம் என்று ஏதாவது இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. நான் பருவ காலத்தில் மீண்டும் வருவேன். அப்போது நான் சொன்னது நடக்கும். உனது மனைவி சாராள் ஒரு மகனை ஈன்றெடுத்திருப்பாள்” என்று கூறி, அவர்கள் ஆபிரகாமை விட்டு வெளியேறினர்.” மேலும், மீண்டும், அவர் இந்த மனிதர்களைப் பற்றி பேசுகையில்: ” பிறகு அந்த மனிதர்கள் எழுந்து சென்றனர். அவர்கள் சோதோம் இருந்த திசை நோக்கிப் போனார்கள். ஆபிரகாமும் அவர்களோடு கொஞ்சம் தூரம் சென்று அவர்களை அனுப்பி வைத்தான்.” அப்போது, அங்கு ​​ஏற்கனவே இருந்தவரும் தற்போது அவருடன் இருந்தவரும் ஆபிரகாமிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்: “கர்த்தர் தனக்குள், செய்யப்போகிற அனைத்தையும் நான் ஆபிரகாமிற்கு மறைக்கமாட்டேன்” (பின்னர் நான் முன்பு விளக்கிய வார்த்தைகளை மீண்டும் சொன்னேன், அதாவது பின் வரும் மோயீசனின் வார்த்தைகளை மீண்டும் வலியுறுத்தினேன்) நான் மேலும் சொன்னது இதுதான்: ‘ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு மற்றும் பிற முற்பிதாக்களுக்குத் தோன்றியவர், தந்தையாலும் ஆண்டவராலும் நியமிக்கப்பட்டவர், பிதாவின் விருப்பத்தின்படி சேவை செய்கிறவர், கடவுள் என்று அழைக்கப் படுகிறார் என்பது இந்தப் பகுதிகளிலிருந்து உறுதியாக வலியுறுத்தப் பட்டுள்ளது. பிறகு, நான் முன்பு சொல்லாத சில வார்த்தைகளை இங்கே சேர்த்தேன்: ‘மக்கள் மாமிசத்தை உண்ண விரும்பியபோது, ​​​​மோயீசனை தேவதூதர் என்று அழைத்தவர் மீது விசுவாசம் கொள்ளாதபோது, ​​​​அவர்கள் உண்பதற்கு மாமிசத்தைக் கொடுப்பதாக கடவுள் வாக்குறுதி அளித்தபோது, அவரே, கடவுளாலும் தந்தையாலும் அனுப்பப்பட்ட தூதராக இருப்பதால், இவை அனைத்தும் அவரைப் பற்றியே சொல்லப்பட்டிருந்தன என்றும் செய்யப்பட்டன என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். ஏனெனில் பரிசுத்த வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: “கர்த்தர் மோயீசனை நோக்கி: ஆனால் கர்த்தர் மோயீசனிடம், “கர்த்தருடைய வல்லமையைக் குறைவாக எடை போடாதே! நான் சொன்னபடி என்னால் செய்யமுடியும் என்பதை இப்போது காண்பாய்”என்றார்.” கர்த்தர் என்னிடம்: “நீ யோர்தானைக் கடந்து போகமாட்டாய். ஆனால், உன் தேவனாகிய கர்த்தர் உங்களை அந்த நாட்டிற்குள் வழிநடத்திச் செல்வார். உனக்காக கர்த்தர் இந்த ஜாதிகளை நிர்மூலம் செய்வார். நீ அவர்களது நாட்டை அவர்களிடமிருந்து ஆக்கிரமிப்பாய், என்று கர்த்தர் சொன்னார்.”

அத்தியாயம் 127

சட்டம் மற்றும் சட்ட வரைஞர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் போன்ற ஏனைய பகுதிகள் இந்தப் பத்தியில் மேலே குறிப்பிட்டது போன்று, தீர்க்கதரிசிகளால் மேற்கோள் காட்டப்பட்ட வார்த்தைகளோடு மிகவும் ஒத்திருக்கிறது. மேலும், “அப்பொழுது தேவன் ஆபிரகாமுடன் பேசி முடித்தபின் அவரை விட்டு அப்பாலே சென்றுவிட்டார்” அல்லது “கர்த்தர் மோயீசனிடம் சொன்னவைகளை” அல்லது “அப்பொழுது கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார்.” அல்லது ” கர்த்தர் நோவாவை உள்ளே கொண்டு சென்று பேழையின் வாசலை மூடினார்” என்று கடவுள் சொல்லும் போதோ அல்லது பிறக்காத கடவுள் எப்படி ஏதோ ஒரு இடத்தில் இருந்து இறங்கி வருகிறார் அல்லது எங்கு செல்கிறார் என்று நாம் நினைக்கக்கூடாது. அதை நான் போதுமான அளவுக்கு எடுத்தியம்பி இருக்கிறேன் என்று நம்புகிறேன். ஏனெனில் ஒப்பற்ற, உன்னத தந்தையாகிய இறைவன் எங்கும் வருவதில்லை, செல்வதுமில்லை, நடப்பதில்லை, உறங்குவதில்லை, எழுவதில்லை. ஆனால் அவர் எப்போதும் தனக்குரிய இடத்தில் தான் இருக்கிறார். அது எந்த இடத்தில் இருந்து என்றோ, கண்களால் காணக்கூடியதோ, அல்லது காதுகளால் கேட்கக் கூடுமானவையோ அல்ல. ஏனெனில் அவர் விபரிக்க முடியாத சக்தியுடடையவராக அவர் இருக்கிறார். ஆனால் அவர் எல்லாவற்றையும் ஆய்வு செய்வது மட்டுமன்றி, சகலவற்றையும் அறிந்திருக்கிறார். மேலும் நாம் எவரும் அவருடைய கவனத்திலிருந்து விலகி இருக்க முடியாது. இந்தப் பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பே அவர் இருந்தபடியால், அவர் முழு பிரபஞ்சத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். ஆகவே அவர் இந்த இடத்தில் தான் இருக்கிறார் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அப்படியானால், மோயீசனால் கட்டப்பட்ட கூடாரத்திற்குள் நுழைவதற்கு அவருக்கே சக்தி இல்லாமல் போன போதும், அதாவது கடவுளின் மகிமையால் அவர் பிரகாசத்துடன் இருந்தபோதும், ​​​​சினாயில் கடவுளின் தூதரின் மகிமையை மக்களால் காண முடியவில்லை என்றால்; எருசலேமில் கட்டப்பட்ட கோபுரத்தின் உள் சொலமன் உடன்படிக்கைப் பேழையைக் கொண்டுவந்தபோது, ​​ஆசாரியனால் கோபுர ஆலயத்தின் முன் நிற்க முடியவில்லை என்றால், அவர் எப்படி எவரிடமாவது பேசுவார் அல்லது எவராலும் பார்க்க முடியுமானவராக இருப்பார்? அல்லது உலகின் மிகச் சிறிய இடத்தில் கூடத் தோன்றக்கூடியவராக இருப்பார்? இதிலிருந்து அறியக்கூடியது என்னவென்றால், ஆபிரகாமோ, ஈசாக்கோ, யாக்கோபுவோ அல்லது வேறு எந்த மனிதரோ, அனைத்து உயிரினங்களின் சிருஷ்டிப்பாளரான தந்தையையும் கிறிஸ்துவையும், ஒப்பற்ற இறைவனையும் கண்டதில்லை. ஆனால் கடவுளின் விருப்பத்தின்படி தேவகுமாரனாகிய கர்த்தரையும் அவருடைய தூதரையும் [அவர்கள் பார்த்ததாகக் கூறிய] அவர்கள் கண்டார்கள். ஏனெனில் அவர் தந்தையின் விருப்பத்திற்கு அமையவே சேவை செய்தார். அவர் தந்தையின் சித்தத்துக்கு அமையவே ஒரு கன்னியின் திருவயிற்றில் பிறந்து மனிதரானார்; புதர்களுக்கிடையில் தோன்றி மோயீசனுடன் பேசியபோது அவரே தீச்சுவாலையாக மாறி அவருக்குக் காட்சியளித்தார். வேதவாக்கியங்களை நாம் இவ்வாறு விளக்க வில்லை என்றால், மோயீசன் விவரித்தது போல நடக்குமானால், ​​சகல வல்லமையுள்ள பிதாவாகிய சர்வேசுரனும், சுதனாகிய கர்த்தரும் பரலோகத்தில் இல்லை என்ற அபாயகரமான முடிவுக்கு நாம் தள்ளப்படுவோம். அதே நேரத்தில் கர்த்தர் சோதோமையும் கோமோராவை அழிக்க ஆரம்பித்தார். கர்த்தர் வானத்திலிருந்து நெருப்பையும் கந்தகத்தையும் அந்நகரின் மேல் விழுமாறு செய்தார் மேலும், மீண்டும், தாவீதின் மூலம் பின்வருபவை கூறப்பட்டன: வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்! பழைமையான கதவுகளே, திறவுங்கள்! மகிமை வாய்ந்த அரசர் உள்ளே வருகிறார். அதேபோல் மீண்டும், கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, “என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் கொண்டு வருவேன்,” என்றார்.  

அத்தியாயம் 128

கிறிஸ்து ஆண்டவர் என்றும் கடவுளின் ஏக சுதன் குமாரன் என்றும் நிரூபிப்பதில் நீண்ட நேரம் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டேன். அவர் கடந்த காலத்தில் மனிதனாகவும், தேவ தூதராகவும், புதரின் மத்தியில் காட்சி கொடுத்தபோது அக்கினியின் மகிமையிலும், சோதோமுக்கு எதிரான நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற வந்தபோதும் அவர் அதிகாரத்தின் உருவமாகத் தோன்றினார். அவருடைய வல்லமையின் மகத்துவத்தால் அவர் ‘மனிதனாகவும், தேவதூதராகவும், புதரில் இருந்து காட்சிகொடுத்தபோது தீச்சுவாலையின் மகிமையிலும், அவர் சோதோமுக்கு எதிராக நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற வந்தார். புத்தரின் மத்தியில் தரிசனம் கொடுத்தல் மற்றும் இயேசு (யோசுவா) என்ற பெயரைத் திணிப்பது குறித்து யாத்திராகமம் புத்தகத்திலிருந்து நான் ஏற்கனவே மேற்கோள் காட்டிய அனைத்தையும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். ‘மதிப்புக்குரியவர்களே, தயவு செய்து என் விளக்கங்களில் நான் அதிக வார்த்தைகளை உபயோகிப்பதாகவோ அல்லது அதையே திரும்பத் திரும்பச் சொல்வதாகவோ குற்றம் சாட்டாதீர்கள். எனது கருத்துக்கள் மிக நீண்ட விளக்கங்களைக் கொண்டவை. ஏனென்றால், உங்களில் சிலர் அவற்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நான் அறிவேன். மேலும் பிரபஞ்சத்தின் தந்தையிடமிருந்து அனுப்பப்பட்ட மோயீசன், ஆபிரகாம் அல்லது யாக்கோபு ஆகியோருக்குத் தரிசனமாக சக்தி மனிதரிடம் வந்ததால் அவர்கள் தேவதூதர்கள் என்று அழைக்கப்பட்டதாக நீங்கள் அறிவிக்கப் போகிறீர்கள். ஏனென்றால் எனக்குத் தெரியும் (அந்த சக்தியின் வழியாக, பரலோக தந்தையின் வார்த்தைகள் மனிதர்களுக்கு வழங்கப்படுவதால்) அவர் மகிமையுள்ளவர் என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் சில சமயங்களில் எதிலும் உள்ளடக்கிவிட முடியாதவாறு காட்சி தருகிறார். அவர் ஒரு மனிதன் மற்றும் மானிடன் என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் தந்தையைப் பிரியப்படுத்தும் விதத்தில் உதாரண புருஷராய்க் காட்சியளிக்கிறார். மேலும் அவர்கள் அவரை ‘இறை வார்த்தை’ என்றும் அழைக்கிறார்கள். ஏனென்றால் அவர் தந்தையின் போதனைகளை மனிதர்கள் மத்தியில் வெளிப்படுத்துகிறார். ஆனால் சிலர் இந்த சக்தி கண்ணுக்கு தெரியாதது என்றும், பூமியில் உள்ள சூரியனின் ஒளி தந்தையிடமிருந்து வரக்கூடிய அனுமாஷ்ய சக்தி என்றும், தந்தையிடம் இருந்து பிரிக்க முடியாது என்றும் போதிக்கிறார்கள். பூமியில் பரவும் சூரியனின் ஒளியையும் வானத்தில் பிரகாசிக்கும் சூரியனையும் பிரிக்க முடியாதது என்பது தான் நிதர்சனம். ஏனெனில் சூரியன் மறையும் போது அதன் ஒளி பூமியிலிருந்து மறைந்துவிடும். எனவே, தந்தை தனது விருப்பத்தின் பேரில் தனது சக்தியின் மூலம் வெளியே செல்லவும், அவர் விரும்பும் போதெல்லாம் திரும்ப வரவும் முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த வழியில்தான் கடவுள் தேவதூதர்களையும் படைத்தார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தேவதூதர்கள் எப்பொழுதும் அவர்கள் படைக்கப்பட்ட நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதும், அந்த நிலையில் இருந்து அவர்கள் எப்போதும் தாழ்நிலைக்கு செல்வதில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தீர்க்கதரிசன வார்த்தையில் கடவுள் மற்றும் தேவதூதர் என்று அழைக்கப்படும் இந்த சக்தி, அதன் பெயரால் (சூரியனின் ஒளியைப் போல) வித்தியாசமாக கருதப்படுவதில்லை என்பதை நான் நீண்ட விளக்கத்தோடு கூறியுள்ளேன். ஆனால் இது உண்மையான கணிப்புகளில் இருந்து வேறுபட்டது என்பதை நான் ஏற்கனவே சுருக்கமாக விவாதித்தேன். இந்த சக்தி பரலோக தந்தையிடமிருந்து, அவருடைய சக்தி மற்றும் சித்தத்தால் உருவாக்கப்பட்டது. மேலும் தந்தையின் திரு உடல் என்பது பிரிக்கப்பட்டதால், அது பிரிவுக்கு முன்பு இருந்ததைப் போலவே இருந்திருக்கும். ஆனால் மற்றபடி அல்ல. மற்றைய எல்லா விடயங்களை பொறுத்தவரையில், அவை பிரிக்கப்பட்டு, வேறாக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டன. சம்பிரதாயமாக, ஒரு அமைப்பு பிரிக்கப்பட்டு விட்ட பின்பு, அது தனது முதல் தோற்றத்தின் இருந்தவாறு மீண்டும் அமையும் என்பது சந்தேகமே. இதைத்தான் நானும் ஏற்கனவே தெரிவித்தேன். இதை விளக்குவதற்கு, தீயினால் மூடப்படும் தீச்சுவாலை பற்றிய உதாரணத்தை நான் மேற்கோள் காட்டினேன். எரிக்கப் பயன் படுத்தும் தீ உண்மையில் அசல் நெருப்பிலிருந்து வேறுபட்டது. இது பல்வேறு தீச்சுவாலைகளை மூட்டுவதற்கு காரணமாக இருந்தபோதிலும், அதனால் மூட்டப்பட்ட தீயானது இன்னும் அணையாத நெருப்பாகவே உள்ளது.”

அத்தியாயம் 129

‘இந்தக் கருத்தை நிரூபிக்க, நான் ஏற்கனவே மேற்கோள் காட்டிய சில வேதாகமத்திலுள்ள பகுதிகளை இப்போது மீண்டும் சொல்கிறேன். “அப்பொழுது தேவன் சோதோம் மற்றும் கொமோராவின் மீது கர்த்தரால் கந்தகத்தையும் அக்கினியையும் பொழிந்தார்” என்ற தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகள் அவர்கள் எண்ணிக்கையில் இரண்டு பேர் இருந்தார்கள் என்பதை குறிக்கிறது: பூமியில் ஒருவர், அவர் சோதோமின் குடிகளின்  கூக்குரலை கேட்டு வந்தார். மற்றும் பூமியில் ஒருவருமாய், பரலோகத்தில் இன்னும் ஒருவர், அவர் கர்த்தருடைய தந்தையாய் இருக்கிறார். எனவே அது தந்தையாகிய கடவுள் மற்றும் வல்லமையுள்ளவர், இறைவன் மற்றும் சர்வ வல்லமையுடைய கடவுள். இவைதான் அவர் எங்கும் நிறைந்திருப்பதற்கான காரணம். “இதோ, ஆதாம் நம்மில் ஒருவரைப் போல் ஆகிவிட்டார்” என்று கடவுள் ஆரம்பத்தில் கூறியதாக வேதாகமம் கூறும்போது, ​​”நம்மில் ஒருவரைப் போல ஆனார்” என்ற சொற்றொடர் எண்ணிக்கைக்கு சான்றாகும். மேலும் ஞானிகள் செய்ய முயற்சிப்பதை உவமைகளூடாக விளக்க முடியாது. அவர்களுக்கு உண்மை தெரியாது. ஏனெனில் அவர்கள் உண்மை பேசுவதில்லை. மேலும் ஞானத்தின் புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “அன்றைய ஆரம்பகால நிகழ்வுகளை நான் உங்களுக்குச் சொல்லாத தலைப்பட்டால், நான் அவற்றை ஆரம்பத்திலிருந்து கணக்கிட வேண்டும். நான் நீதி மற்றும் நீதியின் பாதைகளில் நடக்கிறேன். கர்த்தர் தம்முடைய பண்டைய படைப்புகளின் தொடக்கத்தில் என்னை சிருஷ்டித்தார். அவருடைய வழிகளின் ஆரம்பம், பூமியின் ஆரம்பம் முதல் முடிவில்லா நித்தியம் வரை நிலைநிறுத்தப் பட்டது. ஆழமான இடங்கள் இல்லாதபோது, நீர் நிறைந்த சுனைகள் இல்லாதபோது, ​​நான் மலைகளுக்கு முன்பே, மலைகளுக்கும் குன்றுகளுக்கும் முன்பே, பூமியையும் வயல் வரப்புகளையும் உருவாக்குவதற்கு முன்பே உலகின் தூசியாய் நான் பிறந்தேன். இந்த இடத்தில் நான் பின்வருமாறு சொன்னேன்: ‘மதிப்புக்குரியவர்களே, நான் சொல்வதை நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால், எல்லா உயிரினங்களுக்கும் முன் தேவ குமாரன் தந்தையிடமிருந்து பிறந்தார் என்று வேதாகமம் கூறுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மேலும் சுதன் தந்தையிடமிருந்து எண்ணிக்கையில் வேறுபட்டவர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்’ என்று வலியுறுத்தினேன்.

அத்தியாயம் 130

அவர்கள் அனைவரும் நான் எடுத்துரைத்ததை ஒப்புக்கொண்டதும், நான் தொடர்ந்தேன். ‘இப்போது, ​​நான் இதுவரை குறிப்பிட்டிராத வேதாகமத்தின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட என்னை அனுமதியுங்கள். அந்த உண்மையுள்ள ஊழியரான மோயீசனால் ஒரு உவமை வடிவில் அவை பேசப்படுகின்றன, மேலும் அவை இவ்வாறு தொடங்குகின்றன: “வானக சேனைகளே, அவருடன் மகிழ்ந்திருங்கள், கடவுளின் அனைத்து தேவதூதர்களும் அவரை வணங்கட்டும்” என்பது பற்றியும், அந்த பத்தியின் மீதியை நான் பின்வரும் முறையில் மேற்கோள் காட்டினேன்: “”புறஜாதிகளே, அவருடைய மக்களோடு மகிழ்ந்திருங்கள்; தேவனுடைய தூதர்கள் அனைவரும் அவர் மூலம் சக்தி பெற்றவர்களாக இருக்கட்டும்; ஏனென்றால் அவர் தண்டிப்பார், அவர் தம்முடைய மக்களின் இரத்தத்தின் நிமித்தம் தண்டனையைக் கொண்டு வருவார். அவர் தம்முடைய சத்துருக்களையும், வெறுப்பவர்களையும் தண்டிப்பார். அவர் அவர்களை நிச்சயமாகத் தண்டிப்பார். அதன் மூலம் கர்த்தர் தம்முடைய ஜனங்களின் தேசத்தைத் தூய்மைப்படுத்துவார்.” ஆகவே, புறஜாதியார்களான நாம் அவருடைய மக்களோடும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் தீர்க்கதரிசிகள் அத்தோடு நிச்சயமாக கடவுளைப் பிரியப்படுத்தும் ஒவ்வொரு யூதரோடும் மகிழ்ச்சியுறுகிறோம் என்பதை இந்த வார்த்தைகள் மூலம் அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த விடயத்தைப் பொறுத்தளவில், நாங்கள் ஏற்கனவே அதை ஒப்புக்கொண்டுள்ளோம். அதேநேரம், இந்த வார்த்தைகள் உங்கள் இனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொருந்தாது என்பதையும் நாங்கள் அறிவோம். ஏசாயா சுட்டிக்காட்டியிருப்பது போல, “இந்த ஜனங்கள் எனது பரிசுத்தமான நகரத்தில் இருப்பார்கள். அவர்கள் அந்நகரத்தை விட்டு வெளியே போனால் எனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களின் மரித்த உடல்களைப் பார்ப்பார்கள். அந்த உடல்களில் புழுக்கள் நெளியும். அப்புழுக்கள் என்றும் சாகாது. நெருப்பு அந்த உடல்களை எரித்துப்போடும். அந்நெருப்பு என்றும் அணையாமல் இருக்கும். ஆகவே அது அனைத்து மனிதர்களும் பார்க்கும் விதத்தில் ஒரு காட்சியாக, அழியாமல் இருக்கும். இப்போது, ​​மதிப்புக்குரியவர்களே, மோயீசனின் ஏனைய பகுதிகளுக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அதாவது, ஆதியில் கடவுள் எல்லா மக்களையும் தேசம் மற்றும் மொழியின்படி பரந்து, விரிந்து இருக்கச் செய்தார். மேலும் அந்த எல்லா தேசங்களில் இருந்தும் அவர் தனக்காக உங்கள் தேசத்தை – அதாவது மதிப்பற்ற, கீழ்ப்படியாத மற்றும் விசுவாசமற்ற தேசத்தவரைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு இனமும் கிறிஸ்துவின் மூலம் அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அவர் யாக்கோபு என்று அழைக்கப்பட வேண்டும் என்று, இஸ்ரேல் என்ற குடும்பப்பெயரை வழங்கினார். எனவே, நான் நீண்ட காலமாக நிரூபித்தபடி, அவர்கள் (கிறிஸ்தவர்கள்) யாக்கோபுவாகவும், இஸ்ரேலாகவும் தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், “புறஜாதியாரே அவருடைய மக்களுடன் மகிழ்ந்திருங்கள்” என்று அவர் அறிவிக்கும்போது, ​​அவர் அவர்களுக்குச் சமமான சுதந்தரத்தைக் கொடுத்து, அவர்களுக்குச் சமமான பெயரையும் சூட்டுகிறார்; ஆனால் அவர்களை “புறஜாதிகள்” என்று அழைப்பதன் மூலம், அவர்கள் அவருடைய மக்களுடன் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று அறிவித்த அதேவேளை, அவர் உங்கள் தேசத்தை அவமதிக்கும் செயலாகவும் அதை செய்கிறார். உங்கள் உருவ வழிபாட்டினால் நீங்கள் அவரைக் கோபப்படுத்தியது போல, அவர்கள் விக்கிரக ஆராதனை செய்பவர்களாக இருந்தாலும், அவர்களும் தேவனுடைய சித்தத்தை நன்கு அறிவார்கள். அதனால் தான் அவர்கள் பாரம்பரிய சொத்தின் ஒரு பாகமாக இருப்பதற்குத் தகுதியானவர்களாகக் கருதுகிறார்.’

அத்தியாயம் 131

“கடவுள் எல்லா தேசத்தவரையும் வேறுபடுத்தினார் என்பதைக் காட்டும் வார்த்தைகள் இங்கே பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான். உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள். உன்னதமான தேவன் பூமியில் ஜனங்களைப் பிரித்து ஒவ்வொரு ஜனத்தாருக்கும் சொந்தமான ஒரு நாட்டைக் கொடுத்தார். அந்த ஜனங்களுக்கு தேவன் எல்லைகளை ஏற்படுத்தினார். இஸ்ரவேலில் எவ்வளவு ஜனங்கள் இருக்கிறார்களோ அவ்வளவு ஜாதிகளையும் அவர் உண்டாக்கினார். கர்த்தருடைய ஜனங்களே அவரது பங்கு, யாக்கோபு (இஸ்ரவேல்) கர்த்தருக்குச் சொந்தம் என்பதால்.” வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் கிரேக்க பதிப்பில் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதையும் நான் கவனித்தேன். “தேவனுடைய தூதர்களின் எண்ணிக்கையின்படி அவர் தேசங்களின் எல்லைகளை நிர்ணயித்தார்” என்று. ஆனால், இங்கே மீண்டும், இந்த வேறுபாட்டால் எனது வாதம் பலவீனமடையவில்லை என்பதால், நான் உங்களுக்கு இந்த விளக்கத்தை அளித்துள்ளேன். இப்போது, ​​நீங்கள் உண்மையைச் சொல்பவர்களாக இருந்தால், உங்களை விட கிறிஸ்தவர்களாகிய நாங்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் உண்மையை ஒப்புக்கொள்வீர்களானால், சிலுவையின் இழிவான மற்றும் வெட்கக்கேடான இரகசியத்தின் மூலம் கடவுளால் அழைக்கப்பட்ட நாங்கள் (அதை ஒப்புக்கொண்டதற்காகவும், கீழ்ப்படிந்ததற்காகவும், எங்கள் பக்திக்காகவும், தண்டனைகள் கூட அனுபவித்தோம்) என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். பிசாசுகளாலும், பிசாசின் ஊழியர்களாலும், நீங்கள் அவர்களுக்குச் செய்த அனுசரணை மூலமாகவும், மரணத்திற்கு ஆளானோம்), நமக்காக தயார்படுத்தப்பட்ட இரட்சிப்புக்கு எங்களை அழைக்கும் கிறிஸ்துவின் வார்த்தையால் தந்தையினால், செயல்களை நிராகரிப்பதற்குப் பதிலாக, அனைத்தையும் தாங்கிக் கொள்கிறோம். ஆனால், கடல் பிரிந்து, நீங்கள் நடக்க வறண்ட பாதை அமைக்கப்பட்டபோது, ​​உங்களது எதிரிகள் பெருந்திரளாகவும், சிறந்த தேர்களுடனும் உங்களைத் துரத்தும்போது, ​​நீங்கள் கடந்து சென்றபின்பு கடல் ஒன்று சேர்ந்தபோது, ​​அவர் உங்களை விடுவித்தார். அவர் மீது ஒரு ஒளிப்பிரவாகம் நிலைகொண்டிருந்தது. உலகில் உள்ள மற்ற இனத்தவர்களைக் காட்டிலும், நீங்கள் ஒரு வித்தியாசமான ஒளியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக, ஒருபோதும் தோல்வியடையாத மற்றும் ஒருபோதும் அழியாது உங்களைக் காத்தது மட்டுமல்லாமல்; அனைவருக்காகவும் அவர் ஊட்டமான மன்னாவை மழையாகப் பொழிந்தார். உங்களுக்கு உணவை வழங்க வேண்டும் என்பதற்காக, அவர் உங்களுக்காக பரலோக தேவதூதர்களின் அப்பமாகிய மன்னாவை மழையாகப் பொழிந்தார். மாராவின் தண்ணீரை அவர் உங்களுக்கு இனிமையாக்கினார். நான் ஏற்கனவே உங்களிடம் கூறியது போல், உங்களைக் கடித்த பாம்புகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. (இவ்வாறு நீங்கள் எப்போதும் நன்றியுணர்வுடன் நடந்துகொண்ட காரணத்தால் கிருபையுள்ள கடவுளால் இந்த தேவ இரகசியங்கள் அனைத்தும் நிறைவேறும் முன் அவை உங்களுக்கு வழங்கப்பட்டன). மோயீசன் தனது கைகளை நீட்டிய விதத்தைக் கொண்டு ஓஷியாவுக்கு இயேசு (யோசுவா) என்று பெயரிடப்பட்டது; நீங்கள் அமலேக்கிற்கு எதிராகப் போரிட்டபோது: அந்தச் சம்பவத்தைப் பதிவுசெய்யும்படி தேவன் கட்டளையிட்டார். மேலும் இயேசுவின் நாமம் உங்கள் புரிதலில் நிலைநிறுத்தப்பட்டது; அமலேக்கியரின் நினைவுச் சின்னத்தை வானத்தின் கீழிருந்து அழிப்பவர் இவர் என்று சொன்னார். அதன் மூலம், நேவின் (நன்) மகனுக்குப் பிறகு அமலேக்கின் நினைவுச்சின்னம் இருந்தது என்பது இப்போது தெளிவாகிறது: ஆனால் அவர் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் மூலம் அதை வெளிப்படுத்துகிறார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூலம் பிசாசுகள் அழிக்கப்படும் (அவருக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் கூட அவரைப் பற்றிய தீர்க்கதரிசனத்தில் கூறப்பட்டன) மற்றும் சாத்தான்கள் அவருடைய பெயரைக் கேட்டு அஞ்சி நடுங்கும். மேலும் அனைத்து அரசுகளும் இராச்சியங்களும் அவருக்கு முன்பாக மண்டியிடும்; ஒவ்வொரு தேசத்திலிருந்தும் அவரை விசுவாசிப்பவர்கள் பக்தியுள்ளவர்களாகவும் அமைதியானவர்களாகவும் இருப்பார்கள் என்றும் கடவுள் விளக்குகிறார்.

மேலும் டிரிபோ, இந்த உண்மைகள் இந்த தீர்க்கதரிசனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உங்களுக்கு மாமிசம் உண்ணும் ஆசை ஏற்படும் போது, ​​எண்ணற்ற காடைகள் உங்களிடம் அனுப்பப் படுகின்றன. உங்கள் பயன்பாட்டிற்காக ஒரு பாறையிலிருந்து தண்ணீர் ஊற்றெடுத்தது. மேலும் ஒரு மேகம் உங்களை நிழலாகப் பின்தொடர்ந்து வந்தது. அது மற்றொரு புதிய பரலோக வடிவமைப்பையும் வாக்குறுதியையும் முன்னறிவித்தது. வெயிலில் ஆறுதல் தரும் நிழலாகவும், குளிரில் இதம் தரும் அரவணைப்பாகவும் இருந்தது. உங்கள் பாதணி கயிறுகள் அறுந்து போகவில்லை, உங்கள் காலணிகள் தேய்ந்தோ அல்லது ஆடைகள் இற்றுப் போய் விடவோ இல்லை. உங்கள் குழந்தைகள் வளர வளர அவர்களது ஆடைகளும் பெரியதாக மாறின.’

அத்தியாயம் 132

‘இதையெல்லாம் மீறி, நீங்கள் ஒரு தங்கக் கன்றுக்குட்டியின் உருவத்தை வார்த்தெடுத்தீர்கள். மேலும் நீங்கள் அந்நிய தேசத்து பெண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபடவும் சிலைகளை வணங்கவும் தலைப்பட்டீர்கள். மேலும், [வாக்குறுதியளிக்கப்பட்ட] நிலம் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகும், நீங்கள் அதையே தான் செய்தீர்கள். சூரியன் வானத்தில் அசையாமல் இருந்தபோதிலும் அதன் வலிமைமிக்க அற்புத சக்தியைக் காட்டியது. சூரியன் முப்பத்தாறு மணிநேரத்துக்கு அஸ்தமிக்கவில்லை. இது இயேசுவின் [யோசுவா] என்ற குடும்பப்பெயர் கொண்டவரின் கட்டளை. உங்கள் நன்மையின் நிமித்தம் உரிய நேரத்தில் நடந்த மற்ற அனைத்து புதுமைமிகு நிகழ்வுகளையும் நீங்கள் பார்த்தீர்கள். இவற்றில் ஒன்றை, நான் இப்போது குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், சிலுவையில் அறையுண்டு, மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எழுந்தருளியவரும், இதுவரை வாழ்ந்த ஒவ்வொரு மனிதனையும், ஆதாம் உட்பட, நியாயந்தீர்க்க வரப்போகும் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து ஒருவரே என்று நாங்கள் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைப் பற்றி உங்களுக்கு நன்றாகப் புரிந்துகொள்ள இது உதவும். அசோதஸ் பகுதிக்கு வந்த எதிரிகளால் சாட்சிக் கூடாரம் (உடன்படிக்கைப் பேழை) எடுத்துச் செல்லப்பட்ட போது, ​​​​அவர்களிடையே ஒரு பயங்கரமான குணப்படுத்த முடியாத கொள்ளைநோய் தீவிரமடைந்தது. அப்போது சமீபத்தில் கன்று ஒன்றை ஈன்ற மாட்டில் கட்டப்பட்ட வண்டியில் உடன்படிக்கைப் பேழையை வைக்க அவர்கள் தீர்மானித்ததை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். உடன்படிக்கைப் பேழை அவர்களிடமே இருக்க வேண்டுமென்பது கடவுளின் வல்லமையால் நடந்ததா அல்லது உடன்படிக்கைப் பேழையை தாங்கள் கொண்டு வந்த அதே இடத்தில் மீண்டும் கொண்டுபோய் வைப்பது கடவுளின் சித்தமா என்பதை தீர்மானிக்கவே அவர்கள் அவ்வாறு செய்தனர். இந்தத் திட்டத்தை நிறைவேற்றியதில், எருதுகள், எந்த மனித வழிகாட்டுதலும் இல்லாமல், பேழை கொண்டுவரப்பட்ட இடத்திற்கு வழிநடத்தப்படாத போதும், மேலே குறிப்பிட்டபடி ஓஸி (இவரது பெயர் இயேசு [ஜோசுவா] என்று மாற்றப்பட்டது) என்ற மனிதனிடம் கொண்டு செல்லும்பொருட்டு உங்கள் மக்களை வழிநடத்தியது. வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்திற்கு, அவர்கள் நிலத்தை தங்களுக்குள் பிரித்தவரின் அதே பெயரைக் கொண்ட ஒருவரின் பண்ணைக்குச் சென்றனர். இந்த பண்ணைக்குள் மாடுகள் நுழைந்ததும் அவை மேலும் நகராமல் அங்கேயே நின்றன. அதன்படி, எகிப்திலிருந்து தப்பி ஓடிய உங்கள் மக்களில் தப்பிப்பிழைத்தவர்கள் ஓஸியை இயேசுவாக [யோசுவா] மாற்றியவரால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தப் பட்டார்கள் என்று உங்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. எனவே அவர்கள் [இயேசு] என்ற வலிமைமிக்க பெயரால் வழிநடத்தப்பட்டனர்.

அத்தியாயம் 133

“இவைகளும் மற்ற புதுமைகளும் உங்களுக்காக நிகழ்த்தப்பட்டாலும், அவைகள் முடிந்தபின் அவைகளை நீங்களே உங்கள் கண்களால் கண்டபோதிலும், நீங்கள் இன்னும் உங்கள் சொந்த குழந்தைகளை பிசாசுகளுக்கு பலியிட்டீர்கள். இவை அனைத்துக்கும் மேலாக, நீங்கள் கிறிஸ்துவுக்கு எதிராக இதுபோன்ற செயல்களைச் செய்யத் துணிந்தீர்கள். (இப்போதும் அவ்வாறு செய்ய நீங்கள் தயங்குவதில்லை) ஆகவே தீர்க்கதரிசிகளால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும். ஏனென்றால், நீங்கள் செய்யும் அனைத்திற்கும் கடவுள் உங்களை மன்னிக்கிறார், மேலும் தேவனிடமிருந்தும் கிறிஸ்துவிடமிருந்தும் நீங்கள் இரக்கத்தையும் இரட்சிப்பையும் பெறுவீர்கள். இப்படிப்பட்ட பாவங்களுக்கு நீங்கள் குற்றவாளியாக இருப்பீர்கள் என்பதை முன்னறிந்து, ஏசாயா மூலம் கடவுள் உங்களுக்கு எதிராக இந்த சாபத்தை அறிவித்தார்: தாங்கள் குற்றவாளிகள் என்றும் தாங்கள் செய்வது தவறு என்றும், அவர்களின் முகங்கள் காட்டும். அவர்கள் தங்கள் பாவங்களுக்காகப் பெருமை அடைகிறார்கள். அவர்கள் சோதோம் நகர மக்களைப் போன்று தங்கள் பாவங்களை யார் கவனிக்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இது அவர்களுக்கு மிகவும் கேடு தரும். அவர்கள் தமக்கே பெரும் தொந்தரவுகளை வரவழைத்துக் கொள்கிறார்கள். நல்லவர்களுக்கு நன்மை ஏற்படும் என்று சொல்லுங்கள். அவர்கள் தாங்கள் செய்யும் நன்மைகளுக்கு வெகுமதி பெறுவார்கள். ஆனால் தீமை செய்பவர்களுக்குத் கேடு வரும். அவர்களுக்குப் பெரும் தொந்தரவுகள் ஏற்படும். அவர்கள் செய்த தீமைகளுக்குத் தண்டனை பெறுவார்கள். அந்த மக்களை சிறுபிள்ளைகள் தோற்கடிப்பார்கள். அவர்களைப் பெண்கள் ஆளுவார்கள். உங்கள் வாழிகாட்டிகள் தவறான வழியைக் காட்டிவிட்டார்கள். அவர்கள் நல்ல வழியில் இருந்து திருப்பி விட்டுவிட்டார்கள். அவரது மக்களைப்பற்றிய தேவனுடைய முடிவு

ஜனங்களை நியாயம் தீர்க்க கர்த்தர் முன்வருவார். கர்த்தர் தலைவர்களையும் மூப்பர்களையும் அவர்களின் செயல்களுக்கு ஏற்றவாறு நியாயம் தீர்ப்பார். கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் யூதாவாகிய இந்தத் திராட்சைத் தோட்டத்தை எரித்துப்போட்டீர்கள். ஏழைகளின் பொருட்களை எடுத்துக்கொண்டீர்கள். அவை உங்கள் வீடுகளில் இருக்கின்றன. என் மக்களைத் துன்புறுத்தும் உரிமையை உங்களுக்கு கொடுத்தது யார்? ஏழைகளின் முகங்களை சேற்றுக்குள் தள்ளும் உரிமையை உங்களுக்கு அளித்தது யார்?” என்று என்னிடம், எங்கள் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார். அதே தீர்க்கதரிசி வேறு வார்த்தைகளில் இதை வலியுறுத்துகிறார்: “அந்த ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் தம் குற்றங்களையும் பாவங்களையும் வண்டிகளைக் கயிறு கட்டி இழுத்துச் செல்வதுபோன்று இழுத்துத் செல்கிறார்கள். அந்த ஜனங்கள் மீது “தேவன் சீக்கிரமாய் செயல் புரிய விரும்புகிறோம். அவர் திட்டமிட்டபடி செய்து முடிக்கட்டும். பிறகு, அவை நிறைவேற வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். கர்த்தருடைய விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று விரும்புகிறோம். பின்னரே அவரது திட்டம் என்னவென்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள். அந்த ஜனங்கள், நல்லதைக் கெட்டதென்றும் கெட்டதை நல்லது என்றும் கூறுகிறார்கள். அவர்கள் இருளை வெளிச்சம் என்றும் வெளிச்சத்தை இருள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் இனிப்பைக் கசப்பு என்றும் கசப்பை இனிப்பு என்றும் எண்ணுகிறார்கள். அந்த ஜனங்கள் தங்களை ஞானிகள் என்றும் புத்திசாலிகள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் மது அருந்துவதில் புகழ் பெற்றவர்கள். அவர்கள் குடிவகைகளைக் கலப்பதில் மிகுந்த திறமைசாலிகள். நீங்கள் அவர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால், அவர்கள் குற்றவாளிகளை விடுவிப்பார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்களுக்கு நியாயமாக நீதி வழங்கமாட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் கேடு வரும். அவர்களின் சந்ததி முழுமையாக அழிக்கப்படும். அவர்கள் காய்ந்த புல் நெருப்பில் எரிவதுபோன்று அழிவார்கள். அவர்களின் சந்ததியின் வேர் வாடி, தூசியைப்போல் பறந்துபோகும். அவர்கள் நெருப்பில் எரியும் பூக்களைப்போன்று எரிந்து, காற்றில் சாம்பல் பறப்பது போன்று ஆவார்கள். சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய போதனைகளுக்கு அடிபணிய அவர்கள் மறுத்துவிட்டனர். இஸ்ரவேலரின் பரிசுத்தமான தேவனிடமிருந்து வரும் செய்தியை அவர்கள் வெறுத்தனர். எனவே இந்த ஜனங்கள் மீது கர்த்தர் மிகுந்த கோபமாயிருக்கிறார். கர்த்தர் தன் கையை உயர்த்தி அவர்களைத் தண்டிப்பார். மலைகள் கூட அவருக்குப் பயப்படும். மரித்துப்போன உடல்கள் தெருக்களில் குப்பைபோன்று குவியும். ஆனாலும் தேவன் மேலும் கோபமாக இருப்பார். அவரது கை மேலும் உயர்ந்து அவர்களைத் தண்டிக்கும்.”

உண்மையில், தீமை செய்ய உங்கள் கை இன்னும் ஓங்கியிருக்கிறது. ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவைக் கொன்றீர்கள். அப்படியும் நீங்கள் மனந்திரும்பவில்லை. மாறாக, நீங்கள் எங்களை வெறுத்து, (உங்களுக்கு அதிகாரம் இருக்கும் வரை) அவர் மூலமாக அனைவரின் தந்தையாகிய கடவுளை நம்பும் எங்களையும் நிர்மூலம் செய்யத் தயங்கமாட்டீர்கள். நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து எங்களுக்கு அறிவுறுத்தியதைப் போலவே, நாங்கள் உங்களுக்காகவும் எல்லா மனிதர்களுக்காகவும் செபித்தபோதிலும், நீங்கள் அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் சபிப்பதை நிறுத்தவில்லை. ஏனென்றால், நம்முடைய எதிரிகளுக்காக மன்றாடும்படியாகவும் நம்மை வெறுப்பவர்களை நேசிக்கும்படியாகவும், நம்மை சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கவும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.

அத்தியாயம் 134

ஆகையால், கடவுள் மற்றும் அவருடைய தீர்க்கதரிசிகளின் கட்டளைகள் உங்களைத் தொந்தரவு செய்வதாக நீங்கள் எண்ணினால், நீங்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு அல்லது ஐந்து மனைவிகளோடு வாழ அனுமதிக்கும் உங்கள் புத்தியற்ற மற்றும் அறியாத ஆசிரியர்களைக் காட்டிலும், நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், யாராவது ஒரு அழகான பெண்ணைப் பார்த்து, அவளை அடைய விரும்பினால், ​​​​அத்தகைய செயல்களில் எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபிக்க இஸ்ரேலியனாகிய யாக்கோபு மற்றும் பிற தேசபக்தர்களை உதாரணங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் எவ்வளவு பரிதாபமாகவும் அறியாமையுடனும் இருக்கிறார்கள்! நான் கூறியது போல், இதுபோன்ற ஒவ்வொரு செயலிலும் சில தெய்வீக திட்டங்கள் இரகசியமான முறையில் நிறைவேற்றப்பட்டன. யாக்கோபின் திருமணங்களில் என்னவிதமான தெய்வீக திட்டங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதை நான் விளக்குகிறேன்.

இந்த விடயத்தில் கூட, இவை ஒவ்வொன்றும் எந்த நோக்கத்திற்காக நிறைவேற்றப்பட்டது என்பதற்கு உங்கள் ஆசிரியர்கள் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் கீழ்த்தரமான இச்சை மற்றும் ஊழல் நிறைந்த விடயங்களில் அக்கறை கொண்டிருந்தனர். எனவே உங்கள் அன்பான கவனத்தை என்பக்கம் திருப்புங்கள். என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து என்ன அற்புதங்களை செய்வார் என்பதற்கு யாக்கோபின் திருமணங்கள் முன்மாதிரியாக இருந்தன. யாக்கோபு இரண்டு சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டது சட்டவிரோதமானது. அதனால் அவர் லாபானின் மகள்மாரில் ஒருவர் நிமித்தம் அவருக்கு சேவை செய்தார். இளையவன் என்பதால் ஏமாற்றப்பட்டு மேலும் ஏழு ஆண்டுகள் அவனால் அடிமைத்தளையில் கழிக்கவேண்டியிருந்தது. அத்தருணத்தில், ​​லேயா உங்கள் மக்களையும் செப ஆலயத்தையும் பிரதிநிதித்தும் செய்தாள். மேலும், ராகேல் எங்கள் சபையின் முக்கிய அங்கத்தவராக இருந்தார். கிறிஸ்து இவர்களுக்கும் அவருடைய ஊழியர்களுக்கும் இப்போதும் சேவை செய்கிறார். ஏனென்றால், நோவா தனது இரண்டு மகன்மாரில் மூன்றாமவரின் சந்ததியை/வழியை தேவனுக்கு ஊழியர்களாகக் கொடுத்தார். மேலும் கிறிஸ்து இப்போது சுதந்திரமாக வாழும் மகன்மாரையும் அவர்களது ஊழியர்களையும் மீட்க வருகிறார். அங்கே அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் சமமான ஆசீர்வாதங்களை அருளுவார். அதனால்தான் யாக்கோபுவுக்கு கட்டுப்பாடற்று வாழும் பெண்கள் மற்றும் பிணைப்புள்ள பெண்கள் ஆகிய இருவருக்கும் பிறந்தவர்கள் அவருடைய மகன்மாராகி, சமமான மரியாதையையும் அந்தஸ்தையும் பெற்றனர். மேலும் ஒவ்வொருவரின் தராதரத்திற்கேற்ப கொடுக்கப்பட்ட அறிவும் எவ்விதமாக கைகொடுத்தன என்பதை அறியக்கூடியதாக இருந்தது. புள்ளிகள் மற்றும் மச்சங்கள் உள்ள ஆடுகளைக் கொண்ட லபானுக்கு யாக்கோபு சேவை செய்தார். அவ்வாறே, கிறிஸ்து எல்லா இனத்தினர் மற்றும் நிறத்தையுடைய மனிதர்களுக்கும் ஊழியம் செய்தார். சிலுவையில் அறையுண்டு மரணம் எய்திய வரை, அவர் தம் இரத்தத்தினாலும் சிலுவையின் மகத்துவத்தாலும் அவர்களை மீட்டு அவர்களுக்கு சேவை செய்தார். லேயாளின் கண்கள் பலவீனமாயிருந்ததுபோல, உங்கள் ஆத்துமாக்களின் கண்களும் பலவீனமாயிருந்தன. ராகேல் லாபானின் தெய்வங்களைத் திருடி இன்றுவரை மறைத்து வைத்திருந்தது போல, நம் மூதாதையர் மற்றும் பொருள் போன்ற தெய்வங்கள் நமது பார்வைக்கு அம்பலப்படுத்தப் பட்டுள்ளன. யாக்கோபு எப்போதும் அவனது சகோதரனால் வெறுக்கப் பட்டான். அவ்வாறே நாங்களும் எங்கள் இறைவனும் உங்களாலும் பொதுவாக இயல்பிலேயே சகோதரர்களான மற்ற எல்லா மக்களாலும் வெறுக்கப்படுகிறோம். யாக்கோபுவுக்கு இஸ்ரேல் என்ற குடும்பப் பெயர் வழங்கப்பட்டது. அதேநேரம், இஸ்ரவேல் கிறிஸ்து என்றும், அவர் இயேசு என்று அழைக்கப்படுகிறார் என்றும் காட்டப்பட்டுள்ளது.

அத்தியாயம் 135

“இப்போது, ​​”இஸ்ரவேலின் பரிசுத்த கர்த்தராகிய நான் தான் இஸ்ரவேலுக்கு உங்கள் அரசரைக் காண்பித்த கர்த்தராகிய ஆண்டவர்” என்று கூறும்போது, ​​கிறிஸ்து நித்திய அரசராக நிச்சயம் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா? ஈசாக்கின் மகனான யாக்கோபு ஒரு அரசனாக இருந்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இவ்வாறு, யாக்கோபு மற்றும் இஸ்ரேல் என்ற பெயரின் பொருள் என்ன என்பது தெளிவாகிறது. வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்: “யாக்கோபு என்ற என் ஊழியனைப் பாருங்கள்! அவரை நான் ஆதரிக்கிறேன். நான் இஸ்ரேல் என்று தேர்ந்தெடுத்தவர் அவரே. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவரில் எனது வல்லமையை வைக்கிறேன். அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதியையும் தீர்ப்பையும் வழங்குவார். அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார். அவர் கூக்குரல் இடார். அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார். அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார். அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார். உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும் வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை. தொலைதூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மற்றும் பிறவினத்தவர்கள் கூட அவரது போதனைகளை ஏற்றுக்கொள்வர்” என்று கூறுகிறது. ஆகையால், நீங்களும் முந்தின புறஜாதியாரும் கிறிஸ்துவில் அல்ல, முற்பிதாவான யாக்கோபில் நிலைத்து இருப்பதாக நம்புகிறீர்களா? கிறிஸ்து இஸ்ரேல் என்றும் யாக்கோபு என்றும் அழைப்பது போல, கிறிஸ்துவின் பக்கத்திலிருந்த காரணத்தால் துண்டிக்கப்பட்ட நாமே உண்மையான இஸ்ரேல் மக்கள். அதுபற்றி வேதாகமம் சொல்லும் வார்த்தைகளைக் கேட்போம்: “யாக்கோபின் (இஸ்ரவேல்) ஜனங்களில் சிலரைப் பாதுகாப்பேன். யூதாவிலுள்ள சில ஜனங்கள் எனது மலையில் வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அங்கே என் ஊழியர்கள் வாழ்வார்கள். அங்கே வாழும் ஜனங்களை நான் தேர்ந்தெடுப்பேன். பிறகு, சாரோன் சமவெளி ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலமாகும். ஆகோரின் பள்ளத்தாக்கு மாடுகளுக்கான ஓய்விடமாகும். இவை அனைத்தும் எனது மக்களுக்காக, என்னைத் தேடுகிற மக்களுக்கு உரியவையாகும். ஆனால் நீங்கள் கர்த்தரைவிட்டு விலகினீர்கள். எனவே, நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் எனது பரிசுத்தமான மலையை மறந்துவிட்டீர்கள். நீங்கள் அதிர்ஷ்டத்தின் பின்செல்ல ஆரம்பித்தீர்கள். நீங்கள் விதி என்னும் பொய்த் தெய்வத்தின் முன்பு உணவு மற்றும் பான பலிகளை படைத்து, அதைச் சார்ந்து இருக்கிறீர்கள. ஆனால், உங்கள் எதிர்காலத்தை நான் தீர்மானித்துவிட்டேன். நீங்கள் வாளால் வகுந்து கொல்லப்படுவீர்கள் என்று நான் தீர்மானித்தேன். நீங்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் ஏனென்றால், நான் உங்களை அழைத்தேன். ஆனால், எனக்குப் பதில் சொல்ல மறுத்தீர்கள். நான் உங்களோடு பேசினேன். நீங்கள் செவிசாய்க்கவில்லை. நான் தீமை என்று சொன்னதை நீங்கள் செய்தீர்கள். நான் விரும்பாதவற்றை எல்லாம் நீங்கள் செய்ய முடிவு செய்தீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. உங்களுக்கென்றே சொல்லப்பட்ட வேதாகமத்தின் வார்த்தைகள் உள்ளன. நான் இங்கு குறிப்பிடும் யாக்கோபின் குடும்பம் வேறு வகையைச் சேர்ந்தது என்பதை நீங்கள் எளிதாகக் காணலாம். ஏனென்றால், அவற்றை உங்கள் மக்களைப் பற்றிய குறிப்பு என்று புரிந்து கொள்ள முடியாது. யாக்கோபின் வீட்டைச் சேர்ந்தவர்கள் யாக்கோபின் வம்சத்தில் பிறந்தவர்களுக்கு நுழைவு உரிமை கொடுக்க வேண்டும் என்று நினைப்பது அபத்தம். அல்லது தம்முடைய வாரிசுரிமைக்கு தகுதியற்றவர் என்று தம் மக்களை நிராகரித்தவர் அவர்கள் ஏற்றுக்கொண்டது போல் அவர்களுக்கு மீண்டும் வாக்குறுதி அளிக்க வேண்டும். ஆனால் தீர்க்கதரிசியோ: “யாக்கோபின் குடும்பத்தினரே, வாருங்கள், நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்திலே நடக்க வேண்டும்! நான் இவற்றை உங்களுக்குச் கூறுகிறேன். ஏனென்றால், நீங்கள் உங்களது ஜனங்களை விட்டுவிட்டீர்கள். உங்கள் ஜனங்கள் கீழை தேசத்து ஜனங்களின் தவறான எண்ணங்களைத் தமக்குள் நிரப்பிக்கொண்டனர். நீங்கள் பாலஸ்தீனர்களை போன்று எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அந்த விநோதமான நோக்கங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்,” என்று கூறுகிறார். ஆகவே, யாக்கோபுக்கு இரண்டு வீடுகள் இருந்தது போல, யூதாவில் இரண்டு சந்ததிகள், குலங்கள் மற்றும் இரண்டு தேசங்கள் இருந்தன என்று நாம் இங்கே முடிவுக்கு வரவேண்டியதாக உள்ளது. ஒன்று சரீரத்தினாலும் இரத்தத்தினாலும் பிறந்தது. மற்றொன்று விசுவாசத்தினாலும் ஆவியினாலும் பிறந்தது.

அத்தியாயம் 136

‘மேலே சொல்லப்பட்ட விடயங்களை பற்றி விளக்கிய பிறகு, இப்போது கர்த்தர் மக்களிடம் பேசுவதை நோக்குங்கள்: “ஒரு திராட்சைக் குலையில் கனிகள் காணப்படும்போது, ஜனங்கள் அவற்றிலிருந்து இரசத்தைப் பிழிந்தெடுப்பார்கள். ஆனால், அவர்கள் திராட்சை குலையை முழுமையாக அழிப்பதில்லை. அவர்கள் இதைச் செய்வது ஏனென்றால், அந்தத் திராட்சை குலைகள் மேலும் கனிகளைத் தரக்கூடியது என்பதால். நான் இதனையே என் ஊழியர்களுக்கும் செய்வேன். நான் ஒருபோதும் அவர்களை முழுமையாக அழிக்க மாட்டேன்.” அத்தோடு கர்த்தர் மீண்டும் பின்வருவனவற்றையும் சேர்த்து இவ்வாறு கூறுகிறார். “யாக்கோபின் (இஸ்ரவேல்) ஜனங்களில் சிலரைப் பாதுகாப்பேன். யூதாவிலுள்ள சில ஜனங்கள் எனது மலையின் மகிமையைப் பெறுவார்கள். அங்கே என் ஊழியர்கள் வாழ்வார்கள். அங்கே வாழும் ஜனங்களை நான் தேர்ந்தெடுப்பேன்.” ஆகவே அவர் அவர்கள் மீது கோபம் கொண்டு, அவர்களை அச்சுறுத்தினால், அவர்களில் மிகச் சிலரை மட்டுமே விட்டுவிடுவார், மேலும் அவர் தனது மலையில் வாழ வழிகாட்டுவார் என்பது இங்கு நன்கு தெளிவாகிறது. அவர் விதைத்து அதில் விளைந்ததாக அவர் சொன்ன மக்கள் தான் இவர்கள் என்பதும் இங்கு தெளிவாகிறது. ஏனென்றால், அவர் அழைக்கும் போது நீங்கள் அவரைப் புறக்கணிக்கிறீர்கள். அவர் பேசும்போது நீங்கள் செவிசாய்க்க வில்லை. ஆகவே நீங்கள் அவருக்கு எதிராக பாவம் செய்தீர்கள். இது உங்கள் அக்கிரமத்தின் உச்சம். அதாவது, உங்களைக் நிர்மூலமாக்கிய நீதிமான்களையும், அவருடைய கிருபையின் படி வாழும் பக்தியுள்ளவர்களையும், நீதியுள்ளவர்களையும், அன்பானவர்களையும் நீங்கள் வெறுக்கிறீர்கள். இதனாலே தான் ஆண்டவர் இவ்வாறு கூறினார்: “தாங்கள் குற்றவாளிகள் என்றும் தாங்கள் செய்வது தவறு என்றும், அவர்களின் முகங்கள் காட்டும். அவர்கள் தங்கள் பாவங்களுக்காகப் பெருமை அடைகிறார்கள். அவர்கள் சோதோம் நகர ஜனங்களைப் போன்று தங்கள் பாவங்களை யார் கவனிக்கிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இது அவர்களுக்கு மிகக் கேடுதரும். அவர்கள் தமக்கே பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.” ஆகவே, உங்கள் முன்னோர்கள் செய்தது போல் நீங்கள் பாலுக்குப் பலிகளைச் செலுத்தவில்லை. தோட்டங்களிலும் மலைகளிலும் பரலோக சேனைகளுக்கு அப்பங்களைப் பலியாகச் செலுத்தவில்லை. இன்னும் [இதனால் தான் நீங்கள் எச்சரிக்கப்படுகிறீர்கள்]. ஏனெனில் நீங்கள் விண்ணுலக தந்தையின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவரைப் பற்றி அறியாதவர், கடவுளின் சித்தத்தை அறியாதவர். கடவுளின் விருப்பத்தையும் அறியாதவர். மேலும் அவரை இகழ்ந்து வெறுப்பவர் அவரை அனுப்பியவரை தெளிவாக வெறுக்கிறார். மேலும் அவர் மீது விசுவாசம் இல்லாதவர், அவருடைய நற்செய்தியைப் பிரசங்கித்து, எல்லா மனிதர்கள் மத்தியிலும் அறிவித்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் விசுவாசிப்பதில்லை.’

அத்தியாயம் 137

‘என் அன்பான சகோதரர்களே, சிலுவையில் அறையப்பட்டு தனது இன்னுயிரை எமக்காக சிந்தியவருக்கு எதிராகக் கடுமையாகப் பேசாதீர்கள். நாம் குணமடைவதைப் போல அனைவரையும் குணப்படுத்த வல்லவரின் காயங்களைப் பார்த்து ஏளனம் செய்யாதீர்கள். நீங்கள் வேதவாக்கியங்களுக்குக் கீழ்ப்படிந்து, உங்கள் இதயத்தின் கடினத்தன்மையால் விருத்தசேதனம் செய்துகொள்வதென்பது, உங்கள் ஆழ்ந்த கருத்துப்படி தகுதியான விருத்தசேதனம் என்றால், அது நல்லது. ஏனென்றால், அத்தகைய விருத்தசேதனம் மனதிரும்புதலின் ஒரு அடையாளமாக கொடுக்கப்பட்டது. நீதியின் மூலம் அல்ல என்று வேதம் நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே எங்களுடன் உடன்படுங்கள். தேவனுடைய குமாரனை நிந்திக்க வேண்டாம்; உங்கள் பரிசேயர்களின் போதகர்களைப் புறக்கணித்து, இஸ்ரவேலின் அரசரை நிந்திக்காதீர்கள் (உங்கள் செப ஆலயங்களின் தலைவர்கள் செபத்திற்குப் பின்பு அவ்வாறு செய்யும்படி உங்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்). ஏனென்றால், கடவுளுக்குப் பிரியமில்லாதவர்களைத் தொடுபவர் கடவுளின் கண்களின் மணியைத் தொட்டவர் போன்றவர். அப்படியானால், தன்னால் மிகவும் நேசிக்கப்பட்டவரான தேவகுமாரனை ஸ்பரிசிப்பவருக்கு அது எவ்வளவு பெரிதாக இருக்கும்? இப்படியான உன்னதர் தான் அவர் என்பது இங்கே போதுமான அளவு நிரூபிக்கப்பட்டுள்ளது.’

அவர்களிடமிருந்து பதில் ஏதும் வராத காரணத்தால், நான் தொடர்ந்து பின்வருமாறு சொன்னேன்: ‘என் நண்பர்களே, நான் இப்போது பழைய ஏற்பாட்டின் கிரேக்க பதிப்பின் வேதாகமத்தை மேற்கோள் காட்டுகிறேன். நீங்கள் படிக்கும் போது அந்த பத்திகளை நான் மேற்கோள் காட்டும் சந்தர்ப்பத்தில், ​​உங்கள் மனநிலையை அறிய முயற்சித்தேன். அந்த பத்தியை மீண்டும் மேற்கோள் காட்டி, “அவர்களின் முகங்களின் தோற்றம் அவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்கிறது, மேலும் சோதோமைப் போல அவர்கள் தங்கள் பாவத்தை வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் அதை மறைக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஐயோ கேடு, அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆபத்தைக் ஏற்படுத்திக்கொண்டார்கள்.” என்று நான் கிரேக்க பதிப்பின் வேதாகம வார்த்தைகளை ஞாபகப்படுத்தினேன்: ஆனால், எங்கள் விவாதத்தின் ஆரம்பத்தில் நான் அதை உங்கள் பதிப்பின் பிரகாரம் மேற்கோள் காட்டினேன்: “நாங்கள் நீதிமான்களை பிணைத்து வைத்திருக்கிறோம், ஏனெனில் அவர்கள் நமக்குப் பிரியமில்லாதவர்களாக இருக்கும் காரணத்தால்.” அந்தச் சமயத்தில் நீங்கள் உங்கள் கடமைகளில் மூழ்கி இருந்தது போலவும், என் வார்த்தைகளைக் கேட்பதில் உங்களுக்கு சரியான அக்கறை இல்லாதாது போலவும் தோன்றியது. ஆனால், இப்போது சூரியன் மறையப் போகிறது; நாள் முடிவடையப் போகிறது. நான் இன்னும் ஒரு காரணியை சேர்த்து பின்னர் நிறைவு செய்கிறேன். இந்த விடயத்தை நான் முன்னரே குறிப்பிட்டிருந்தாலும், மீண்டும் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.’

அத்தியாயம் 138

நான் இவ்வாறு கூறினேன். “அப்படியானால் மதிப்புக்குரியவர்களே, தேவன் எருசலேமுக்கு ஏசாயா மூலம் ஒரு செய்தியை இவ்வாறு கூறினார்: “நோவாவின் காலத்து வெள்ளத்தில் நான் உன்னை இரட்சித்தேன், என்றும் இவ்வாறாக மீட்கப்பட்ட மனிதகுலத்தின் மர்மம் வெள்ளத்தில் மறைந்து கிடக்கிறது என்று அர்த்தம் கொள்ளும் வகையில் கடவுள் கூறுகிறார். ஜலப்பிரளயத்தின் போது, ​​நீதிமானான நோவா, தனது மனைவி மற்றும் மூன்று மகன்மார் மற்றும் அவர்களது மனைவிகளுடன், எட்டு பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி, அந்த எட்டாம் நாளுடன் தொடர்புடைய ஒரு உருவ அமைப்புடன் (எப்போதும் அதிகாரத்தில் இருக்கும் வகையில்) அவர் மரித்தோரிலிருந்து எழுந்தது போல் தோற்றமளித்தார். இப்போது, ​​கிறிஸ்து அனைத்து படைப்புகளுக்கும் முதற்பேறானவர் என்பதால், அவர் ஒரு புதிய தேசத்தை நிறுவினார், அதை அவர் தண்ணீர், விசுவாசம் மற்றும் சிலுவையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மிதக்கும் கலத்தை உருவாக்கினார். (நோவாவும் அவரது குடும்பத்தினரும் தண்ணீருக்கு மேலே மரத்தால் ஆன கலத்தின் உதவியுடன் மிதந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்). நான் முன்பு கூறியது போல், “நோவாவின் நாட்களில் நான் உங்களை இரட்சித்தேன்” என்று தீர்க்கதரிசி கூறும் போது, ​​அவர் கடவுளுக்கு உண்மையுள்ள மற்றும் அதே சாயலைக் கொண்ட மனிதர்கள் மத்தியில் உரையாற்றினார். மோயீசன் கோலைக் கையில் ஏந்தியவண்ணம், உங்களது மக்களைப் பாதுகாப்பாகக் கடல் வழியாக அழைத்துச் சென்றார். ஆனால் அவர் இந்த வார்த்தைகளை உங்கள் சொந்த மக்களிடமோ அல்லது உங்கள் சொந்த தேசத்தினர் மத்தியில் மட்டுமே பேசினார் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணம் தவறானது. ஆனால் பூமி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டது என்று புனித நூலில் சொல்லப்பட்டதற்கு அமைவாக, ​​​​நீர் உயர்ந்த மலைகளுக்கும் மேலாக, அதாவது அவற்றின் உச்சியில் இருந்து இருபத்து மூன்று அடிக்கும் மேலே காணப்பட்டது. இதன்மூலம் கடவுள் உங்கள் தேசத்தவரிடம் அல்ல, அவருக்கு உண்மையாக இருப்பவர்களிடம் தான் பேசினார் என்பது தெளிவாகிறது. அவர்களுக்காக எருசலேமில் இளைப்பாறுவதற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். ஏனென்றால், “தண்ணீரினாலும் விசுவாசத்தினாலும் மரத்தினால் ஆன கலத்தின் உதவியோடு” என்ற பதங்கள் வெளிப்படுத்துவது யாதெனில், தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, தங்கள் பாவங்களுக்காக வருந்தி மனந்திரும்புபவர்கள், கடவுளின் எதிர்கால நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

அத்தியாயம் 139

நோவாவின் நாட்களில் நடந்தேறிய காரியங்கள் பற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றொரு மர்மம் உங்களுக்குத் தெரியாது. அதுதான் அங்கே முக்கியத்துவம் பெறுகிறது. நோவா தனது இரண்டு மகன்மார் மீது பொழிந்த ஆசீர்வாதத்தின் ஊடாக, அவர் தனது மகனின் மகனை சபிக்கிறார். ஏனெனில் தீர்க்கதரிசனத்தின் வல்லமை அந்த மகனைச் சபிக்காது. ஏனென்றால், நோவாவின் மற்ற மகன்மாருடன் சேர்த்து அவர் ஏற்கனவே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஆனால் தந்தையின் நிர்வாண கோலத்தை பார்த்து சிரித்த மகனின் எல்லா தலைமுறைக்கும் அந்த பாவத்தின் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதால், மகனின் மகனுடன் சாபத்துடன், அவரது சாபத்தை தொடக்கி வைத்தார். இப்போது, ​​நோவாவின் வார்த்தைகளில் தீர்க்கதரிசனம் கூறப்பட்டுள்ளபடி, ஷேமின் சந்ததியினர் கானானின் உடைமைகளையும் குடியிருப்புகளையும் கையகப்படுத்துவார்கள். மேலும் இந்த உடைமைகள் செமிட்டியர்களிடமிருந்து ஜபேத்தின் சந்ததியினருக்கு போய்ச் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமானதாக இருக்கும். மேலும் அவர்கள் கானானிட்ஸ்களிடமிருந்து திருடியதைப் போல செமிட்டியர்களிடமிருந்தும் கொள்ளையடிப்பார்கள். இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது என்பதை நான் விளக்குகிறேன், கேளுங்கள். செமிட்கர்களாகிய நீங்கள், கடவுளின் சித்தப்படி கானானியர்களின் தேசத்தில் நுழைந்து அதைக் கைப்பற்றினீர்கள். யாப்பேத்தின் வழித்தோன்றல்கள் கடவுளின் தீர்ப்பால் உங்களிடமிருந்து உங்கள் நிலத்தைப் பறித்து இப்போது அதை அவர்களது உடைமையாக்கி கொண்டுள்ளனர் என்பதும் இங்கே தெளிவாகிறது. இதைத்தான் பரிசுத்த வேதாகமம் பின்வருமாறு முன்னறிவித்தது: திராட்சை இராசத்திலான மதுவை உட்கொண்டதனால் தூங்கிப்போன நோவா எழுந்ததும் தனது இளைய மகனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. எனவே அவன், ‘கானான் சபிக்கப்பட்டவன். அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்’ என்றான். மேலும், ‘சேமுடைய தேவனாகிய கர்த்தர் துதிக்கப்படுவாராக. கானான் சேமுடைய அடிமையாய் இருப்பான். தேவன் யாப்பேத்துக்கு மேலும் நிலங்களைக் கொடுப்பார். தேவன் சேமுடைய கூடாரத்தில் இருப்பார். இவர்களின் அடிமையாகக் கானான் இருப்பான்’ என்றான். இவ்வாறு, செமிட்கள் மற்றும் ஜபேத்தியர்கள் ஆகியோரைக் கொண்ட இரண்டு தேசங்கள் ஆசீர்வதிக்கப்பட்டன. மேலும் செமிட்டியர்களால் முதலில் வைத்திருந்த கானானிய குடியிருப்புகள் யாப்பேத்தின் சந்ததியினரால் ஆக்கிரமிக்கப் படும் என்று கூறப்பட்டிருந்தது. அதே மக்கள் (கானானியர்கள்) மற்ற இருவரால் அடிமைத்தனத்திற்குள் தள்ளப்படுவார்கள். ஆகையால், கிறிஸ்து சர்வவல்லமையுள்ள பிதாவிடமிருந்து தனது வல்லமையால் வந்து எல்லா மனிதர்களையும் ஒற்றுமையுடன், ஆசீர்வாதங்களை பெற்று, மனந்திரும்புதல் மற்றும் சமூக வாழ்க்கைக்குள் இணையும்படி அழைத்தார். அவர் வாக்குறுதியளித்தபடி அனைத்து விசுவாசிகளுக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது அனைத்து புனிதர்களின் பிரசன்னத்தில் ஒரே தேசத்தில் நடைபெறும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டு இருந்தது. ஆகவே, ஒவ்வொரு தேசத்திலும் வாழும் மக்கள், அடிமைகளாக இருந்தாலும் சரி, சுதந்திரமாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய வார்த்தைகள் மற்றும் தீர்க்கதரிசிகளின் உண்மைகளை உணர்ந்து, அவர்கள் மீது என்றென்றும் நிலைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற அவரவர்களின் தேசங்களில் ஒரு நாள் அவருடன் இணைந்துகொள்ளும் நாள் வரும் என்பதை முழுமையாக புரிந்துகொள்கிறார்கள்.’

அத்தியாயம் 140

“எனவே, யாக்கோபு கிறிஸ்துவை போன்றவர். கிறிஸ்து விடுவிக்கப்பட்டவர்களுடனும், கானானியர்களான யாப்பேத் இனத்தைச் சேர்ந்த கானானியர்களின் மகன்மாரையும் சேர்த்து இணை வாரிசுகளாக ஏற்றுக்கொள்வார் என்பதை முன்னறிவிப்பதற்காக, சுதந்திரமான தனது இரண்டு மனைவிகளின் இரண்டு சேவகிகளை  மணந்து அவர்கள் மூலம் மகன்மாரைப் பெற்றெடுத்தார். நாங்கள் கிறிஸ்துவின் பிள்ளைகள், மற்றும் கூட்டு வாரிசுகள். ஆனால் நீங்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. “எனது ஜனங்கள் இரு தீயச்செயல்களைச் செய்திருக்கின்றனர்; அவர்கள் என்னிடமிருந்து விலகினார்கள். ஏனெனில் நானே வாழ்வுதரும் நீர் ஊற்றாக இருக்கிறேன். அவர்கள் தங்களுக்குரிய தண்ணீர்க் கிணறுகளைத் தோண்டினார்கள். அதாவது, அவர்கள் அந்நிய கடவுள்களை நாடினார்கள். ஆனால், அவர்களுடைய தண்ணீர்க் கிணறுகள் உடைந்து, தூர்ந்து போயின, அக்கிணறுகளில் தண்ணீர் தங்குவதில்லை” என்று வேதாகமம் சொல்கிறது. “அவர்கள் வேதபாரகர்களுக்கு மனிதரின் கட்டளைகளைப் போதிக்கிறார்கள்.” என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவைதவிர, அந்த ஆசிரியர்கள் தாங்கள் சரீர உறவின் பிரகாரம், ஆபிரகாமின் சந்ததியினர் என்றும், தாங்கள் உண்மையற்ற பாவிகள் என்றும், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் வாழும் சந்ததியினர் என்றும், இருப்பினும் நித்திய தேவ இராச்சியத்தின்   உண்மையான பங்காளிகள் என்றும் நினைப்பார்களானால், அவர்கள்  ​​தங்களையும் உங்களையும் ஏமாற்றுகிறார்கள். வேதவசனங்கள் சுட்டிக்காட்டுவது போல், இந்த வகையான அனுமானங்களில் எந்த அடிப்படையும் இல்லை. இல்லையெனில், ஏசாயா பின்வருமாறு  கூறியிருக்க மாட்டார்: “சபோத்தின் ஆண்டவர் நமக்கு ஒரு விதையை விட்டுச் சென்றிருக்காவிட்டால், நாம் சோதோம் மற்றும் கொமோராவைப் போல இருந்திருப்போம்” என்று. எசேக்கியேல் மேலும் கூறுகையில்: “நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கு வாழ்ந்தாலும், நான் அம்மூன்று பேரை மட்டும் காப்பாற்றுவேன். ஏனென்றால் அவர்கள் நல்லவர்கள். அம்மூன்று பேராலும் தங்கள் உயிரை மட்டுமே காப்பாற்றமுடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் வாக்களிக்கிறேன், அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாகவோ, மகள்களாகவோ இருந்தாலும் காப்பாற்றமுடியாது!” என்றும், பாவம் செய்யும் ஆன்மா அழியும். தகப்பனின் பாவத்தை மகன் சுமக்கமாட்டான். அதேபோல் தகப்பன் மகனின் பாவத்தை  சுமக்கமாட்டான்; நீதிமானுடைய நீதி அவனை உயர்த்தும், துன்மார்க்கனுடைய அக்கிரமம் காரணமாக அவன் அதற்கான விலையைக் கொடுக்கவேண்டி வரும், எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்” என்று உரைக்கிறார். இதுபற்றி ஏசாயா பின்வருமாறு கூறுகிறார்: “இந்த ஜனங்கள் எனது பரிசுத்தமான நகரத்தில் இருப்பார்கள். அவர்கள் அந்நகரத்தை விட்டு வெளியே போனால் எனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களின் மரித்த உடல்களைப் பார்ப்பார்கள். அந்த உடல்களில் புழுக்கள் நெளியும். அப்புழுக்கள் என்றும் சாகாது. நெருப்பு அந்த உடல்களை எரித்துப்போடும். அந்நெருப்பு என்றும் அணையாமல் இருக்கும்.” மேலும், தம்மை அனுப்பிய பிதா மற்றும் பிரபஞ்சத்தின் இறைவனின் விருப்பத்திற்கு எதிராக நம் ஆண்டவர் எதையும் நிறுவியிருக்க மாட்டார். இதைக்குறித்து பின்வரும் வேதாகம வசனம் விளக்குகிறது: “பலர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருடன் அமர்ந்து பரலோக இராச்சியத்தில் உணவு உண்பார்கள். ஆனால் பரலோக இராச்சியத்தை அடைய வேண்டியவர்களான யூதர்களோ வெளியே இருட்டில் எறியப் படுவார்கள். அங்கு அவர்கள் பற்களைக்கடித்துக் கூக்குரலிடுவார்கள்.” என்கிறது. இவை தவிர, எதிர்காலத்தில் பாவம் செய்யக்கூடியவர்கள் என்று அனுமானிக்கப்பட்ட மனிதர்களோ அல்லது தேவதூதர்களோ கடவுளின் தவறால் அவர்கள் பாவங்களில் விழுவதில்லை என்பதை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறேன். ஆனால், அது அவரவர்கள் செய்த தவறு காரணமாக நடக்கிறது.’

அத்தியாயம் 141

‘கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவது அவசியம் என்றும், குற்றவாளிகள் உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், அதைத்தவிர வேறு எதுவும் நடைபெற முடியாது என்றும் நீங்கள் கூறும் எந்தவொரு சாக்குப்போக்கையும்  தவிர்ப்பதற்காக, இந்த உண்மைகள் மீது நான் இப்போது கவனம் செலுத்த விரும்புகிறேன். மனிதர்களும் தேவதூதர்களும் தம்முடைய சித்தத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கடவுள் விரும்பினாலும், நல்லொழுக்கத்தை கடைப்பிடிப்பதற்காக, சுதந்திரமான விருப்பத்துடன் அவர்களை படைத்தார் (அதாவது, அவர்களை இல்லாத நிலையில் இருந்து இருக்கும்  நிலைக்கு நகர்த்தியவர்) என்பதை பகுத்தறியும் திறனுடன் அவரது மகத்துவம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதே போல் அவை நியாயமான பகுத்தறிவுக்கு முரணானவை. அவர்கள் எதையாவது செய்தால், அவர்களால் அவர்கள் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையில் அவற்றை உருவாக்கியதில் அவர் மகிழ்ச்சி கொண்டிருக்க மாட்டார். எனவே, மனிதர்களாகட்டும் அல்லது தேவதூதர்களாக இருக்கட்டும், அவரவர் விரைவில் மனந்திரும்ப வில்லை என்றால், அவர்கள் செய்த பாவங்களுக்கு அவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். மேலும் அவ்வாறான மனிதர்களும் தேவதூதர்களும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்த காரணத்தால், மட்டுமல்ல, அவர்கள் திருத்த முடியாத பாவிகளாக இருப்பார்கள் என்று கடவுள் எண்ணியதால், அவர் அவர்களை அப்படிப் படைத்தார் என்று அர்த்தம் கொள்வது அபத்தம். எனவே, மனந்திரும்பும் ஒவ்வொருவரும் உள்ளத்தால் விரும்பினால், இறைவனின் கருணையைப் பெறலாம். அப்படியான மனந்திரும்புதலுக்கு ஆளானவர்கள் புனித நூல்களில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்: “பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப் பட்டவன். குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப் பட்டவன். இரகசியமாக பாவங்களை மறைக்க முயற்சி செய்யாதிருப்பவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒருவர் பாவங்களுக்காக மனந்திரும்பினால், அந்த பாவங்களுக்காக அவர் கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெறுகிறார். நீங்களும் உங்களைப் போன்றவர்களும் சொல்வது போல் அல்ல.  அவர்கள் பாவம் செய்தாலும், அவர்கள் கடவுளை அறிந்திருப்பதால், கர்த்தர் பாவத்துக்கான சுமையை அவர்கள் மீது  சுமத்துவதில்லை. உதாரணமாக, தாவீதின் பாவங்களில் ஒன்றைப் பற்றி வேதாகமம் நமக்கு எடுத்துக்கூறுவது இதுதான். அந்த பாவம் அவனுடைய சொந்த அகங்காரத்தின் நிமித்தம் கட்டிக்கொள்ளப்பட்டது. ஆனால் அவன் கண்ணீர் சிந்தி மனம் வருந்தியதன் மூலம் மன்னிக்கப் பட்டான். இனி, பாவங்களுக்கு மனம் வருந்துபவர் மன்னிக்கப் படாமல், அழுதால் மட்டுமே மன்னிக்கப்படுகிறார் என்றால், பேரரசரும், அபிஷேகம் செய்யப்பட்டவர் மற்றும் தீர்க்கதரிசிகள் செய்தது போல், பாவங்களுக்குள் விழுந்துவிட்ட துர்பாக்கியசாலிகள் தங்கள் கண்ணீர் சிந்தி புலம்பியபடி வருந்தாவிட்டால், இறைவன் எப்படி அவர்களை மன்னிக்காமலும், அவர்கள் மீது குற்றம் சாட்டாமலும் இருப்பார் என்று எப்படி ஏற்றுக்கொள்ளக் கூடும்? மதிப்புக்குரிய கனவான்களே, உண்மையாகவே, உரியாவின் மனைவியுடன் தாவீது செய்த இந்த ஒரு தவறு, அவரது முன்னோர்கள் பலரது மனைவிமாருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று பொருள்படாது. ஆனால் இதன்மூலம்  அவர்கள் செய்த சில இரகசியமான செயல்கள் வெளிப்பட்டுவிடும் என்பதைக் காட்டுகிறது. ஏனென்றால், இவரது மனைவியாக இருந்தாலும், அல்லது எத்தனையோ பேருடைய மனைவிகளாக இருந்தாலும், அவர்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதியிருந்தால் (உங்கள் நாட்டினர் உலகெங்கிலும் உள்ள பெண்களை, அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அல்லது அனுப்பப் பட்டாலும், அவர்களைத் திருமணம் செய்துகொள்வார்கள்), தாவீதும் நிச்சயமாக அதிக உரிமையுடன் பிறன் மனைவியுடன் கள்ள உறவு கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பார்.’

சரி, எனது அன்புக்கும், பெருமதிப்புக்கும் பாத்திரமான மார்கஸ் பாம்பியஸ் அவர்களே, நான் எனது சொற்பொழிவை இத்துடன் நிறைவுசெய்து கொள்கிறேன் என்று கூறி அவர்களிடம் இருந்து விடைபெற்றேன்.  

அத்தியாயம் 142

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, டிரிபோ தொடர்ந்து இவ்வாறு கூறினார்: ‘இந்த விஷயங்களை நாங்கள் தற்செயலாகத்தான் விவாதிக்க ஆரம்பித்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் எங்கள் சந்திப்பின் விளைவாக நான் மிகவும் இந்த விவாதத்துக்குள் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும், மேலும் எனது இந்த நண்பர்களும் அவ்வாறே உணருவார்கள் என்று நான் நம்புகிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக நாம் தெரிந்துகொண்டோம். நாம் அடிக்கடி சந்தித்து, வேதாகாமப் படிப்பைத் தொடர முடிந்தால், நாம் நிச்சயமாக இன்னும் அதிகமாகப் பயனடைவோம். ஆனால், நீங்கள் இந்த நகரத்தை விட்டு வெளியேறப் போகிறீர்கள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் பயணத்தை ஆரம்பித்து விடுவீர்கள்  என்று உறுதியோடு இருக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் புறப்படும்போது எங்களை உங்கள் நண்பர்களாக ஏற்று நினைவில் கொள்ள மறவாதீர்கள். அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்தேன்: “என்னைப் பொறுத்தவரை, நான் இங்கு தங்கி இருந்தால், ஒவ்வொரு நாளும் இந்த விவாதத்தைத் தொடர வேண்டும் என்று விரும்புவேன். ஆனால் உங்கள் சொந்த இரட்சிப்பின் நிமித்தம் இந்த மாபெரும் போராட்டத்தில் உங்கள் எல்லா முயற்சிகளையும் இடவும். உங்கள் ஆசிரியர்களுக்கு மேலாக, சர்வவல்லமையுள்ள தேவ தந்தையின் ஏக சுதனான கிறிஸ்துவைத் தழுவி அவரை முழுமையாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென நான் உங்களை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். கடவுளின் சித்தத்துடனும், அவரது உதவியுடனும், பயணத்தை உடனடியாகத் தொடங்க முடியும் என்று நம்புகிறேன்.

இதற்குப் பிறகு, இறுதியாக, அவர்கள் எனக்கு விடைகொடுத்து, எனது பிரயாணம் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியானதாகவும், எந்தவித இடையூறுகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தினார்கள்.

அவர்கள் இவ்வாறு விடைகொடுத்த பின்னர், நான் அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினேன்: ‘மதிப்புக்குரிய நண்பர்களே, இதைவிட பெரிய ஆசீர்வாதத்தை உங்களுக்காக பெற்றுத்தர என்னால் முடியாது. அதாவது, ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த [வாழ்க்கை வழிகள் பற்றி அறிந்துகொள்வதற்கு] ஞானம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து, எம் கர்த்தரான கடவுளின் குமாரன் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே என்று நாங்கள் உறுதியாக விசுவாசிப்பதை போல, நீங்களும் ஒரு நாள் முழுமையாக அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று முழுமனதுடன் நம்புகிறேன்’ என்று வாழ்த்தி நானும் விடைபெற்றேன்.


1-30

31-60

61-90

91-120

121-142