Justin Martyr, Dialogue with Trypho in Tamil 1-30
அத்தியாயம் 1
நான் ஒரு நாள் காலை ஒரு அகன்ற பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட மனிதர், அவருடன் இருந்த மற்றவர்களுடன், என்னைப் பார்த்து, “தத்துவவாதி அவர்களே! உங்களுக்கு எனது காலை வணக்கம்” என்று சொல்லிவிட்டு என்னோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். அவரது நண்பர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். நான் அவரைப் பார்த்து, “என்ன விடயம்?” என்று கேட்டேன். அதற்கு அவர் பதிலாக, “அர்கோஸில் உள்ள கொரிந்தசில் சாக்ரடிக் மூலம், இந்த உடையை அணிந்துகொள்பவர்களை நான் வெறுக்கவோ அல்லது அலட்சியமாக நடத்தவோ கூடாது என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது,” என்று கூறினார். அவர்களுக்கு எல்லா விதத்திலும் ஆதரவு மற்றும் இரக்கம் காட்ட வேண்டும். அப்படிப்பட்ட செய்வதால், அல்லது எனக்கு அவர்கள் மூலம் சில நன்மைகள் ஏற்படக்கூடும் என்பதால், அவர்களுடன் பழகலாம் என்றும், மேலும், ஒருவர் அல்லது மற்றவர் அதன் மூலம் பலன் அடைந்தால் இருவருக்கும் நன்மை விளையும் என்பதாலும், ஆதலால், அத்தகைய உடையில் இருப்பவரை நான் பார்க்கும் போதெல்லாம், நான் மகிழ்ச்சியுடன் அவர்களை அணுகுகிறேன். அதே காரணத்திற்காகத் தான், நான் மனமுவந்து உங்களுடன் பழகுகிறேன்; உங்களிடமிருந்து ஏதாவது அனுகூலம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இவர்களும் என்னுடன் வருகிறார்கள்.”
“ஆனால் இத்தனை சிறந்த மனிதரான நீங்கள் யார்?” என்று நான் அவரிடம் நகைச்சுவையாக கேட்டேன். பின்னர் அவர் தனது பெயரையும் அவரது குடும்பத்தையும் பற்றி வெளிப்படையாக என்னிடம் கூறினார். “திரிபோ,” என்று என்னை அழைப்பார்கள், நான் விருத்தசேதன பிரிவைச் சேர்ந்த எபிரேயனாக இருக்கிறேன். போரிலிருந்து தப்பித்து சமீபகாலமாக நான் கிரேக்கத்திலும், முக்கியமாக கொரிந்துவிலும் என் நாட்களைக் கழிக்கிறேன்,” என்றார்.
“எதை பற்றிக் கேட்கிறீர்கள், உங்கள் சட்டமியற்றுபவர் மற்றும் தீர்க்கதரிசிகள் மூலம் நீங்கள் தத்துவ ரீதியில் இலாபம் பெறுகிறீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் “ஏன் கூடாது?” என்று கேள்வி எழுப்பினார். “தத்துவவாதிகள் ஒவ்வொரு சொற்பொழிவிலும் கடவுளின் பெயரைக் கூறுவதில்லையா? அவருடைய ஒற்றுமை மற்றும் அரவணைப்பு பற்றி அவர்களுக்குத் தொடர்ந்து கேள்விகள் எழுவதில்லையா? தெய்வ கிரியை பற்றி ஆராய்வது தத்துவவியலின் ஒரு அங்கமல்லவா? அது ஒரு கடமையல்லவா?” என்று கேட்டார். நான், “ஆம் நிச்சயமாக,” என்றேன். நாமும் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்கலாம், அவர்கள் நம் ஒவ்வொருவரையும் மதிக்கிறார்களா இல்லையா என்பதை பெரும்பாலானவர்கள் கவனிக்கிறார்களோ தெரியவில்லை. இதன் காரணமாக நாம் பெற்றுக்கொள்ளும் அறிவானது நம் வாழ்வுக்கு ஏதேனும் விதத்தில் பங்களிக்கிறதா? அதுவும் இல்லை. மேலும் கடவுள் பிரபஞ்சத்தையும் அதில் வாழும் படைப்புகளையும் இனங்களையும் கவனித்துக் கொள்கிறார், ஆனால் என்னையும் உங்களையும் அல்ல. ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கவனித்துக்கொள்கிறார் என்று அவர்கள் நம்மை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் நாம் ஏன் இரவும் பகலும் அவரை நோக்கி செபிக்க வேண்டும்? ஆனால் இதன் விளைவைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினம் அல்ல; அச்சமின்மை மற்றும் பேசுவதற்கான உரிமம், இந்த கருத்துக்களைக் கடைப்பிடிப்பது, அவர்கள் விரும்பியதைச் செய்வது மற்றும் சொல்வது, தண்டனைக்கு அஞ்சாதது அல்லது கடவுளிடம் இருந்து எந்த நன்மையையும் எதிர்பார்க்காதது போன்றவை தான் அவை. அவர்களால் அது எப்படி முடியும்?அவர்கள் எப்பொழுதும் அதே விஷயங்கள் அதுபோலவே நடக்கும் என்றும், மேலும், நானும் நீங்களும் சிறந்த மனிதர்களாகவோ அல்லது கெட்டவர்களாகவோ மாறாமல் மீண்டும் அதே வழியில் வாழ்வோம் என்றும் அவர்கள் உறுதிப் படுத்துகிறார்கள், ஆனால் இன்னும் சிலர் இருக்கிறார்கள், ஆன்மா அழியாததாகவும், உருவமற்றதாகவும் இருக்கும் என்று கூறுகிறார்கள். அவர்கள் தீமை செய்திருந்தாலும், அவர்கள் தண்டனையை அனுபவிக்க மாட்டார்கள் (ஏனென்றால், உருவமற்றது உணர்வற்றது என்பது அவர்களின் வாதம்), மேலும் அதன் அழியாமையின் அடிப்படையில் பார்த்தால், கடவுள் பற்றிய வாதம் எதுவும் இங்கே தேவையில்லை,” என நான் கூறியதும், அவர் மெதுவாகச் சிரித்துக் கொண்டே, “இந்த விஷயங்களில் உங்கள் கருத்தை எங்களிடம் கூறுங்கள், கடவுளை மதிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதுபற்றி உங்கள் தத்துவம் என்ன சொல்கிறது?” என்ற கேள்வியைத் தொடுத்தார்.
அத்தியாயம் 2
“நான் அதுபற்றி உங்களுக்கு சொல்கிறேன்,” என்றேன். “எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், உண்மையில், தத்துவம் என்பது கடவுளுக்கு முன்பாக மிகப் பெரிய உடைமையாகவும், மரியாதைக்குரியதாகவும் காணப்படுகிறது. அது நம்மை வழிநடத்திச் செல்கிறது. மேலும் உண்மையான பரிசுத்தவான்கள் தத்துவத்தில் கவனம் செலுத்தியவர்கள். இருப்பினும், தத்துவம் என்றால் என்ன, அது மனிதர்கள் மத்தியில் அனுப்பப்பட்டதற்கான காரணம், பெரும்பாலானவர்களின் கவனிப்பிலிருந்து அது எவ்வாறு தப்பியது? இதன் கருப்பொருள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், பிளாட்டோனிஸ்டுகளோ, ஸ்டோயிக்ஸ்களோ, பெரிபாட்டெடிக்ஸ்களோ, கோட்பாட்டாளர்களோ, பித்தகோரியர்களோ இருந்திருக்க மாட்டார்கள். அது ஏன் பல தலைமைகளைக் கொண்டதாக மாறியது என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். முதன்முதலில் அதைக் கையாண்டவர்கள் [அதாவது, தத்துவத்தை கையாண்டவர்கள்], அதனால் புகழ்பெற்ற மனிதர்களாக மதிக்கப்பட்டவர்கள், உண்மைத் தன்மை பற்றி எந்த விசாரணையும் செய்யாதவர்களால் அவர்கள் வெற்றி பெற்றதாகக் கருதினர். ஆனால் முந்தையவரின் கோட்பாடுகளின் தன்மை, விடாமுயற்சி மற்றும் சுய ஒழுக்கத்தை மட்டுமே பாராட்டினர். மற்றும் ஒவ்வொருவரும் தனது ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொண்டது உண்மை என்று நினைத்தார்கள்: மேலும், அந்த பிந்தைய நபர்கள் தங்கள் வாரிசுகளிடமும், மற்றவர்களிடம் இதுபோன்ற விஷயங்களை ஒப்படைத்தனர். இந்த அமைப்பு கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்பட்ட அவரது பெயரால் அழைக்கப்பட்டது. இந்த மனிதர்களில் ஒருவருடன் தனிப்பட்ட முறையில் உரையாட முதலில் ஆசைப்பட்டதால், நான் ஒரு குறிப்பிட்ட ஸ்டோயிக்கிடம் – அதாவது இன்ப துன்பங்களை சரியாக எடைபோடும் சபையினரிடம் – சரணடைந்தேன்; அவருடன் கணிசமான நேரம் செலவழித்தும், நான் கடவுளைப் பற்றிய எந்த அறிவையும் பெறாதபோது (அவரும் அதுபற்றி அறிந்திராததால், அத்தகைய அறிவுறுத்தல் தேவையற்றது என்று கூறினார்), நான் அவரை விட்டு வெளியேறி, பெரிபாட்டேடிக் – நாடோடி போன்றவர் – என்று அழைக்கப்படும் மற்றொருவரிடம் சென்றேன். அவர் நான் நினைத்தபடி புத்திசாலியாக இருந்தார். இந்த நபர், முதல் சில நாட்கள் என்னை நன்கு உபசரித்த பிறகு, எங்கள் மத்தியில் நிலவிய உறவினால் நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக, கட்டணம் செலுத்தும்படி என்னிடம் கோரினார். அவரையும் இந்த காரணத்திற்காக நான் கைவிட்டேன். அவர் எவ்விதத்திலும் ஒரு தத்துவஞானியும் அல்ல என்று நம்பினேன். ஆனால் என் மனம் விசித்திரமான மற்றும் மனதுக்குப் பிடித்த தத்துவத்தைக் கேட்க ஆர்வமாக இருந்தபோது, நான் ஒரு பித்தகோரியன் – பண்டைய கிரேக்க அறிஞர் – என்ற மிகவும் புகழ் வாய்ந்த ஒரு மனிதனிடம் வந்தேன். அவர் தனது சொந்த ஞானத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கக் பின்னர், நான் அவரோடு உரையாடிய போது, அவருக்கு செவிமடுப்பவராகவும், அவருடைய சீடராகவும் மாற விருப்பம் தெரிவித்தபோது, அவர், ‘இனிமேல் என்ன? அப்படியானால், நீங்கள் இசை, வானியல் மற்றும் அட்சர கணிதம் பற்றி அறிந்தவரா? மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் விஷயங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணர விரும்புகிறீர்களா? அப்படியானால் மனதிற்குப் பொருத்தமானவற்றை அதற்கேற்றவாறு அமையத்தக்க காரணிகள் குறித்து உங்களுக்கு முதலில் தெரிவிக்க வேண்டியது இன்றியமையாததாகும். அதன் சாராம்சத்தில் எது மரியாதைக்குரியது மற்றும் எது நல்லது என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்?’ இந்தக் கற்றல் துறைகளில் பலவற்றைப் பாராட்டி, அவை அவசியம் என்று அறிந்து, என் அறியாமையை அவரிடம் ஒப்புக்கொண்ட போது, அவர் என்னை நிராகரித்தார். அதன்படி, எதிர்பார்த்தது போலவே என் மீது கொண்டிருந்த நம்பிக்கையில் நான் தோல்வியுற்றபோது, நான் பொறுமையின்றி இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால் அந்த மனிதனுக்கு ஓரளவு அறிவு இருப்பதாக நான் நினைத்தேன்; ஆனால் அந்த கற்றலின் காரணமாக நான் தாமதிக்க வேண்டிய கால இடை வெளியை மீண்டும் சிந்தித்துப் பார்க்கையில், என்னால் நீண்ட காலம் தள்ளிப் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேறு எந்த வழியும் காணப்படாத நிலையில், பிளாட்டோனிஸ்டுகளுடன் – அதாவது பிளேட்டோ என்ற பண்டைய கிரேக்க தத்துவ ஆசிரியரால் வகுக்கப்பட்ட கொள்கைகளை பின்பற்றுவோர் – ஒரு சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஏனென்றால் அவர்களின் புகழ் மிகவும் பாரியதாக இருந்தது. அதன்பிறகு, எங்கள் நகரத்தில் சமீபத்தில் குடியேறிய ஒருவருடன் – பிளாட்டோனிஸ்டுகள் மத்தியில் உயர் பதவியில் இருந்த ஒரு புத்திசாலித்தனமான மனிதருடன் – முடிந்தவரை எனது நேரத்தைச் செலவிட்டேன், மேலும் நான் அறிவுடையவனாய் மாறி தினமும் மிகப்பெரிய முன்னேற்றங்களைக் கண்டேன். உருவங்களற்ற விஷயங்களைப் பற்றிய கருத்து என்னை மிகவும் ஆட்கொண்டது. மேலும் அவை பற்றிய சிந்தனைகளால் என் மனதுக்கு சிறகுகள் முளைத்தது போன்ற ஒரு ஆனந்தம் எண்ணில் குடிகொண்டது. அதனால் சிறிது காலத்தில் நான் ஞானியாகிவிட்டேன் என்று கூட நினைத்தேன். அங்கு தான் எனது முட்டாள் தனத்தை நான் நொந்துகொள்ள வேண்டி ஏற்பட்டது. நான் உடனடியாக கடவுளைக் காண வேண்டும் என்று முட்டாள் தனமாக எதிர்பார்த்தேன். ஏனென்றால் இது தான் பிளேட்டோவின் தத்துவத்தின் முடிவில் இருந்தது.
அத்தியாயம் 3
“இவ்வாறு நான் மனச்சோர்வடைந்த நிலையில், என்னை சாந்தப்படுத்தும் முகமாகவும், மன அமைதியை நாடவும், மனிதர்களின் நடமாட்டத்தை தவிர்க்கவும் நான் கடலுக்கு வெகு தொலைவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வயல்வெளிக்குச் சென்றேன். நான் அந்த இடத்தில் இருந்தபோது. ஒரு நாள், ஒரு முதியவர், தோற்றத்தில் எந்த வகையிலும் எளிமையாகவும் சாந்தமாகவும், மரியாதைக்குரிய தோற்றத்தையுடைய மனிதர், சிறிது தூரத்தில் என்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். நானும் அவரை நன்றாகக் கூர்ந்து நோக்கினேன்.
அவர், “என்னைத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நான், “தெரியாது” என்று எதிர்மறையாக பதிலளித்தேன்.
அவர் என்னிடம், “அப்படியானால், நீங்கள் என்னை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றார்.
“எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் அதே இடத்தில் எனக்குத் துணையாக இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது; ஏனென்றால், இங்கு எந்த ஒரு மனிதனையும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை.”
மேலும் அவர் என்னிடம் இவ்வாறு கூறினார், “என் வீட்டார் சிலரைப் பற்றி நான் கவலையோடு இருக்கிறேன். அவர்கள் என்னை விட்டுப் போய்விட்டார்கள்; எனவே, அவர்கள் எங்காவது இருக்கிறார்களா என்று தனிப்பட்ட முறையில் அவர்களைத் தேடுவதற்காகத் தான் நான் வந்துள்ளேன். ஆனால் ஏன்? நீ இங்கே செய்கிறாய்?” என்று அவர் என்னிடம் கேட்டார்.
“எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று நான் சொன்னேன், “எனது கவனம் சிதறாமல் என்னுடன் உரையாடுவதில் எவ்வித தடையுமின்றி இருக்கும் அத்தகைய சந்தர்ப்பங்களில், இப்படியான இடங்கள் தத்துவம் சம்பந்தமான உரையாடல்களை நடத்துவதற்கு மிகவும் பொருத்தமானவை. ஆகவே தான் எனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினேன்,” என்றேன்.
“‘அப்படியானால், நீங்கள் ஒரு தத்துவவாதியா? என்று என்னை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார். அப்படியானால், செயல்களையும் உண்மையையும் விரும்புபவரா? நீங்கள் ஒரு சோஃபிஸ்ட்டாக இருப்பதை விட நடைமுறை மனிதராக இருக்க முயற்சிக்க வில்லையா?” என்றும் கேட்டார்.
நான் பதிலாக, “ஆனால், பகுத்தறிவு அனைத்தையும் ஆளுகிறது என்பதை நிரூபிப்பதை விட, ஒரு பெரிய செயல் என்னவாக இருக்க முடியும், மேலும் பகுத்தறிவை ஆள்பவர் மற்றும் அதன் மூலம் நிலைத்திருப்பவர் மற்றவர்களின் தவறுகளையும் செய்கைகளையும் பார்த்தால், அவர்கள் நியாயமான அதேவேளை கடவுளுக்குப் பிரியமான எதையும் செய்வதில்லை என்பதை அறிந்துகொள்வீர்கள்,” என்றேன். தத்துவம் மற்றும் நேரான சிந்தனை போன்றவை இல்லாமல் மனிதனுக்கு விவேகம் இருக்க முடியாது. எனவே, ஒவ்வொரு மனிதனும் தத்துவத்தில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். மேலும் அதை மிகப் பெரிய மற்றும் உன்னதமான நோக்கமாகக் கருத வேண்டும்; மற்ற எல்லா முயற்சிகளும் இரண்டாம் அல்லது மூன்றாம் தர மதிப்புடையவை, அவை தத்துவத்துடன் இணைக்கப்படாவிட்டால். பின்னர் அவற்றில் சில மதிப்புடையவை மற்றும் அங்கீகரிக்கப் பட்டவையாக இருத்தல் வேண்டும்; அவர்கள் தத்துவ அறிவு இல்லாதவர்களாகவும், அதனுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்களாகவும் இருந்தால், அவற்றை நடைமுறைப் படுத்துபவர்களுக்கு அவை வெறுமையான மற்றும் கடினமான நோக்கங்களாகவே தெரியும்.”
அவர் குறுக்கிட்டு, “அப்படியானால், தத்துவம் மகிழ்ச்சியை உண்டாக்குமா?” என்று கேட்டார்.
“ஆம், நிச்சயமாக, அது ஒன்று மட்டுமே” என்று நான் பதிலளித்தேன்.
“உன் பேச்சுக்கு இடையூறு இல்லை என்றால், தத்துவம் என்றால் என்ன, அது தரும் மகிழ்ச்சி என்ன என்பது பற்றி கொஞ்சம் சொல்வாயா?” என்று கேட்டார்.
“அது தான் தத்துவம்,” என நான் பதிலளித்தேன், “உள்ளதைப் பற்றிய அறிவு மற்றும் உண்மையைப் பற்றிய தெளிவான புரிதல்; மகிழ்ச்சி போன்றவை தான் அத்தகைய அறிவு மற்றும் புரிதலின் வெகுமதியாகும்,” என்றேன்.
“ஆனால் நீங்கள் கடவுளை எப்படி வரையறுப்பீர்கள்?” என்று அவர் கேட்டார்.
“கடவுள் எப்போதும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டவர். எல்லோரது வாழ்வுக்கும் காரணமாக இருப்பவர் அவர் ஒருவரே,” என்று நான் பதிலளித்தேன்.
“என் பேச்சினால் மகிழ்ச்சியடைந்த அவர், “அறிவு என்பது பொதுவாக வெவ்வேறு விஷயங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை அல்லவா? ஏனென்றால், இராணுவ வியூகம் அல்லது வழி செலுத்துதல் அல்லது மருத்துவம் போன்ற கலைகளில் ஆற்றலுடையவர், திறமையானவர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் தெய்வீக மற்றும் மானிட விஷயங்களில் இது உண்மையல்ல. மனித மற்றும் தெய்வீக விஷயங்களைப் பற்றிய புரிதலுடன் நமக்கு எடுத்துச்சொல்லும் விஞ்ஞானம் என்ற ஒன்று இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் கூட, அவற்றில் உள்ள தெய்வீகம் மற்றும் நல்லொழுக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கும் உயர் அறிவியலும் இருக்கிறதா?” என்ற அவரது கேள்விக்கு, நான், “நிச்சயமாக,” என்று பதிலளித்தேன். உடனே அவர்,
“சரி, மனிதனையும் கடவுளையும் பற்றிய அறிவும் இசை, கணிதம், வானியல் போன்றவற்றோடு ஒத்துப்போகக்கூடியதா?” என்று அவர் கேட்க, நான், “இல்லை, என பதிலளித்தேன்.
“உங்கள் பதில் தெளிவாக இல்லை,” என்று அவர் தொடர்ந்தார், “ஏனென்றால், நாங்கள் சில விஷயங்களைப் படிப்பதன் மூலமோ அல்லது பயிற்சியினாலும், மற்றவற்றைப் பார்ப்பதனால் அறிகிறோம். இப்போது, மற்ற எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்ட, பல வடிவங்கள் மற்றும் வண்ணங்களைக் கொண்ட ஒரு விலங்கு இந்தியாவில் உள்ளது என்று யாராவது உங்களிடம் சொன்னால், நீங்கள் அதைக் கண்டால் தவிர, அதைப் பற்றி உங்களுக்கு உறுதியான தெளிவு இருக்காது. ஆகவே குறைந்தது, அதைப் பார்த்த ஒருவரிடமிருந்தேனும் நீங்கள் அதைப் பற்றிக் கேள்விப்பட்டாலன்றி, அந்த விலங்கைப் பற்றிய எந்த விதமான விளக்கத்தையும் உங்களால் கொடுக்க முடியாது, அப்படித்தானே?” என்று கேட்டார்.
அதற்கு நான், “நிச்சயமாக இல்லை,” என்று ஒப்புக்கொண்டேன்.
“அப்படியானால், தத்துவஞானிகள் கடவுளைப் பற்றி அறிந்திராத போது, அவரைப் பார்த்ததாகவோ, கேள்விப்பட்டதாகவோ அல்லது அவரைப் பற்றி சரியாக ஊகிக்கவோ முடியாதபோது, அவரைப் பற்றி பேசுவது எப்படி?” என்று அவர் நியாயப்படுத்தினார்.
“ஆனால் அருட் தந்தையே,” என்று அவரை விளித்து நான் மீண்டும் உரையாடலில் இணைந்தேன், “மற்ற உயிரினங்களைப் போல் கடவுளை எமது கண்களால் பார்க்க முடியாது. அவரை எமது மனதால் மட்டுமே உணர முடியும் என்பதையிட்டு பிளேட்டோ உறுதிப் படுத்துகிறார், ஆகவே நானும் அவருடன் உடன்படுகிறேன்,” என்றேன்.
அத்தியாயம் 4
“அப்படியானால், எமது மனம், “இவ்வளவு பெரிய சக்தியைக் கொண்டிருக்கிறதா? அல்லது புலன்கள் மூலம் அவ்வாறான சக்தி இருப்பதை உணரவில்லையா? அல்லது பரிசுத்த ஆவியின் அனுக்கிரகம் இல்லையென்றால், மனித மனம் கடவுளைக் காணும் திறன் கொண்டதாக இருக்குமா?” என்று அவர் கேட்டார்.
நான், “மனக் கண்ணுக்கு இந்த விசேஷ சக்தி இருக்கிறது என்று பிளாட்டோ உண்மையாகவே கூறுகிறார்,” என்றேன். “மனதின் கண்ணுக்கு இந்த சிறப்பு சக்தி உள்ளது, அது தூய்மையாக இருக்கும்போது, மனம் உணரும் எல்லாவற்றுக்கும் அதுவே காரணமாய் இருக்கும். ஆகவே கண்ணால் காணக்கூடிய அவற்றுக்கு நிறமோ, உருவமோ, அளவோ, எதுவும் இல்லை, ஆகவே எமது அகக்கண்களைக் கொண்டு பார்க்கவே அவை நமக்குத் நமக்குத் தரப்பட்டுள்ளது, அத்தோடு விவரிக்க முடியாத எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது, என்று பிளாட்டோ உண்மையாகவே கூறுகிறார்,” என்று நான் பதிலளித்தேன்.
ஆனால் தனியாக மரியாதைக்குரியது மற்றும் சிறந்தது, நல்ல மனநிலையுடன் உள்ள ஆத்மாக்களுக்கு திடீரென்று தோன்றி அவரைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியது’ என்று ஒப்புக்கொண்டேன்.
“அப்படியானால், நமக்கும் கடவுளுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது?” என்று கேட்டேன். ஆன்மா தெய்வீகமானது மற்றும் அழியாதது என்றால், அது மனதின் ஒரு பகுதியா? அது கடவுளைப் பார்ப்பது போல், அந்த தெய்வீகத்தன்மையை நம்மால் அடையக் கூடியதாக இருக்கிறது’ என்று பதிலளித்தார். அதேபோல் நம் மனதில் தெய்வத்தை நினைத்து, அதனால் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் தானே?’ என்றும் கூறினார்.
“ஆம், நிச்சயமாக,” என்று நான் சொன்னேன்.
“அப்படியானால், அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களும் அவரைப் புரிந்து கொள்கின்றனவா?’ அல்லது மனிதர்களின் ஆன்மாக்கள் ஒரு வகையாகவும், குதிரைகள் மற்றும் கழுதைகளின் ஆன்மாக்கள் வேறு வகையாயாகவும் புரிந்துகொள்கின்றனவா?’ என்று கேட்டார்.
‘இல்லை; ஒரேவிதமான, அதாவது மனித ஆன்மாக்கள் மாத்திரமே அவ்வாறு நினைக்கும்,’ நான் பதிலளித்தேன்.
“அப்படியானால், குதிரைகளும் கழுதைகளும் கடவுளைப் பார்க்குமா? அல்லது எப்போதாவது பார்த்திருக்குமா? என்று கேட்டார்.
“இல்லை,’ என்று நான் சொன்னேன்; ‘பெரும்பான்மையான மனிதர்களால் கூட, நீதிவழுவாத, எல்லா நற்பண்புகளினாலும் நிறைந்தவர்களாலும் கூட இறைவனைக் காண முடியாது’ என்று நான் சொன்னே ன்.
அப்படியானால், ‘ஒரு மனிதன் கடவுளைப் பார்ப்பது அவனுடைய நற்பண்புகள் காரணமாக அல்ல, அவனுக்கு ஒரு மனம் இருப்பதால் மட்டும் அல்ல, அவன் நிதானமும் நேர்மையும் உள்ளவனாக இருப்பதால் மட்டுமே அவனது மனக்கண்களால் அவரைக் காணக்கூடியதாக இருக்கிறது?’ என்று சொல்கிறாயா” என்று கேட்டார்.
“ஆம், ஏனென்றால் அவர் கடவுளை உணர்ந்துகொள்கிறார்,’ என்று நான் சொன்னேன்.
“அப்படியானால், ஆடுகள் அல்லது செம்மறிகள் எவருக்கேனும் காயங்களை ஏற்படுத்துமா?” என்று அவர் கேட்க, நான், “எந்த வகையிலும் இருக்க முடியாது,” என்றேன்.
“அப்படியானால், உனது கூற்றின்படி, இந்த விலங்குகள் கடவுளைக் காணும் என்று சொல்கிறாய்,” என்று அவர் என்னிடம் கேட்டார்.
“இல்லை, அவைகள் படைக்கப்பட்டதற்கமைய, அவைகளின் உடல் மற்றும் உறுப்புக்கள் கடவுளைக் காண்பதற்குத் தடையாக இருக்கிறது,” என்று விளக்கமளித்தேன்.
அவர் மீண்டும் தொடர்ந்தார், “இந்த விலங்குகளால் பேசமுடிந்தால், அவை நம்மைக் கேலி செய்ய நிறையக் காரணம் இருக்கும் என்று உறுதியாக நினைவில் கொள்ளுங்கள். சரி இப்போது இந்த விஷயத்தை விட்டுவிடுவோம், நீங்கள் சொல்வது போல் இதை ஏற்றுக்கொள்வோம். இருப்பினும் ஒன்றை மட்டும் எனக்குத் தெளிவுபடுத்துங்கள். அதாவது, ஆன்மா உடலில் இருக்கும் வரையா அல்லது அதிலிருந்து நீக்கப்பட்ட பிறகா [கடவுளை] காண்கிறது?” என்று கேட்டார்.
“ஒரு மனிதனைப் பொறுத்த வரையில் அது சாத்தியம்” என்றேன். அதாவது, அவன் தனது மனதின் மூலம் இதை அடைய வேண்டும்; ஆனால் குறிப்பாக ஆன்மா நம் உடலிலிருந்து விடுபட்டு, தனியாக இருக்கும் போது, அது முழுவதுமாக நேசிக்க விரும்பாத ஒன்றையே அடைகிறது.
‘அது மீண்டும் மனிதனிடம் வரும்போது, [கடவுளை பற்றி] ஞாபகம் கொள்ளுமா?’ என்று அவர் கேட்டார்.
“எனக்கு அப்படித் தோன்றவில்லை,” என்றேன்.
“அப்படியானால், அவர் கண்ட இந்த உண்மையை நினைவில் கொள்ளாவிட்டால், [கடவுளை] பார்த்தவர்களால் என்ன நன்மை? அல்லது பார்க்காதவனை விட பார்த்தவர் என்ன வித்தியாசத்தைக் காண்பார்?” என்று கேட்டார்.
“இதுபற்றி என்னால் சொல்ல முடியாது,” என நான் பதிலளித்தேன்.
“இப்படியான சந்தர்ப்பங்களில், தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப் பட்டவர்கள் என்ன விதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்? என்று அவர் கேட்டார்.
“”அவர்கள் சில காட்டு மிருகங்களின் உடல்களில் சிறை வைக்கப் பட்டுள்ளனர், இதுவே அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை.”
“அப்படியானால், அவர்கள் அவ்வாறான மிருகங்களின் உருவங்களில் இருக்கிறார்கள் என்பதும், அவர்கள் ஏதோ பாவம் செய்திருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியுமா?’
“நான் அப்படி நினைக்கவில்லை.’
“அப்படியானால், அவர்கள் தண்டனையிலிருந்து எந்தப் படிப்பினையையும் பெற மாட்டார்கள் போல் தெரிகிறது: மேலும், தண்டனையைப் பற்றி அவர்கள் உணராத காரணத்தால் அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நான் கூறுகிறேன். உங்கள் கருத்தென்ன?’ என்று கேட்டார்.
“உண்மையில் அப்படியேதும் இல்லை” என்றேன்.
“எனவே, ஆன்மாக்கள் கடவுளைப் காண்பதுமில்லை மற்ற உடல்களுக்குள் குடியேறுவதுமில்லை, ஏனென்றால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் அவர்கள் மிகவும் அற்பமான பாவத்தை கூட செய்ய பயப்படுவார்கள். இருப்பினும் கடவுள் இருப்பதை அவர்களால் உணர முடியும். நீதியும் பக்தியும் கெளரவமானவை என்பது குறித்து நீங்கள் சொன்னதை நான் உங்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன்,’ என்றார்.
“நீங்கள் சொல்வது சரிதான்,” என்று பதிலளித்தேன்.
அத்தியாயம் 5
“இந்த தத்துவஞானிகளுக்கு இந்த விஷயங்களைப் பற்றி எதுவும் தெரியாது; ஆகவே ஆத்மா என்றால் என்ன என்று அவர்களால் எப்படி சொல்ல முடியும்?’ என்று கேட்டார்.
“அப்படி இருக்க நியாயமில்லை” என்று பதிலளித்தேன்.
“அது அழியாதது என்று அழைக்கப்படவும் கூடாது; ஏனெனில் அது அழியாததாக இருந்தால், அது வெளிப்படையாக அவதரித்திருக்காது.”
“பிளேட்டோனிஸ்டுகள் என்று அழைக்கப்படும் சிலரின் கூற்றுப்படி, இது அவதரித்திராதது மற்றும் அழியாதது.”
“உலகமும் உண்டாக்கப்பட்டிருக்காது என்கிறீர்களா?’
“‘சிலர் அப்படிச் சொல்கிறார்கள். ஆனாலும் நான் அவர்களுடன் உடன்படவில்லை.’
“நீங்கள் சொல்வது சரிதான்,” என்று அவர் தொடர்ந்தார். “இவ்வளவு திடமான, உறுதியான, ஐம்புலன்களையுடைய மற்றும் மாறக்கூடிய, ஒவ்வொரு நாளும் தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு உடல், சில முதன்மையான காரணங்களால் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஏன் நினைக்க கூடாது? இப்போது, பிரபஞ்சம் பிறந்திருந்தால், ஆத்மாக்களும் கூட அங்கு படைக்கப்பட்டிருத்தல் அவசியம். ஒருவேளை அவை இல்லாத காலம் இருந்திருக்கலாம், ஏனென்றால் அவை மனிதர்களாலும் பிற உயிரினங்களாலும் உண்டாக்கப்பட்டன, அவை அந்தந்த உடலுடன் அல்லாமல் முற்றிலும் வேறு வேறாகப் பிரிந்து தான் பிறந்தன என்று நீங்கள் கூறுகிறீர்கள். “இது சரி என்று தான் எண்ணத் தோன்றுகிறது.”
“அப்படியானால், அவை அழியாதவை அல்லவா?’
“இல்லை; உலகம் தோன்றிய விதத்தை பார்ப்போமானால், அது நமக்காகப் படைக்கப்பட்டது போலவே தோன்றுகிறது.”
அவர் தொடர்ந்து கூறுகையில், “இருப்பினும், எல்லா ஆத்மாக்களும் மரித்துவிடுகின்றன என்று நான் சொல்லவில்லை; ஏனெனில் அது உண்மையில் தீயவர்களுக்கு தான் அதிர்ஷ்டமாக இருந்தது.
அப்படியானால் அதன் அர்த்தம், பக்தியுள்ளவர்களின் ஆன்மாக்கள் சிறந்த இடத்தில் இருக்கும், அதே சமயம் அநியாயக்காரர்கள் மற்றும் கயவர்களின் ஆன்மாக்கள் துன்பமுற்ற நிலையில், நியாயத்தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. இவ்வாறு, கடவுளுக்குத் தகுதியானவர்களாகத் தோன்றிய சிலர் ஒருபோதும் மரிக்க மாட்டார்கள்; ஆனால் மற்றவர்கள் வாழ வேண்டும் மற்றும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானிக்கும் வரை அவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்.” “உங்கள் கூற்று பிளாட்டோ கற்பித்தவற்றுடன் உடன்படவில்லையா
உலகத்தைப் பற்றிய அவரது டிமேயஸில் என்ற தத்துவ நூலில், அதாவது, சிருஷ்டிக்கப்பட்ட எதுவும் அழிக்கப்படலாம், ஆனால் அது அழிக்கப்படவோ அல்லது அழிவுக்கு விதிக்கப்படவோ கூடாது, ஏனெனில் இது கடவுளின் சித்தம். ஆன்மாவைப் பற்றியும் சுருக்கமாகச் சொன்னால், மற்ற எல்லா உயிரினங்களையும் இதிலே உள்ளடக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” கடவுளுக்குப் பிறகு எது இருக்கிறதோ அல்லது இருக்கப்போகிறதோ, அது நாசகாரத்துக்கு உள்ளாகக்கூடியது. எனவே முழுமையாக அழிந்து விடவும் கூடியது. ஏனென்றால் கடவுள் ஒருவர் மட்டுமே உண்டாக்கப்படாதவர், அதேநேரம் என்றும் அழியாதவர். இந்த காரணத்திற்காகத் தான், அவர் கடவுள் என்று போற்றப்படுகிறார். அவருக்குப் பிறகு அனைத்தும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. ஆன்மாக்கள் இறந்தும் அவை தண்டிக்கப்படுவதற்கு இதுவே காரணம், ஏனென்றால், அவர்கள் பிறவாமல் இருந்திருந்தால், பாவம் செய்திருக்க மாட்டார்கள், அல்லது முட்டாள்களாகவும் ஆகியிருக்க மாட்டார்கள்; அவர்கள் ஒரு காலத்தில் இவ்வளவு கூச்ச சுபாவமுள்ளவர்களாகவும், இன்னொரு காலத்தில் இவ்வளவு தைரியமாகவும் இருந்திருக்க மாட்டார்கள்; பன்றிகள், பாம்புகள் மற்றும் நாய்களின் உடல்களுக்குள் அவர்கள் தங்கள் சொந்த கிரியை காரணமாக நுழைந்திருக்க மாட்டார்கள். மேலும், அவர்கள் உருவாக்கப்படாதவர்களாக இருந்தால், அவர்களை வற்புறுத்துவது சரியாக இருக்காது, ஏனென்றால் பிறக்காத ஒருவர் உருவாக்கப்பட்ட மற்றொருவருக்கு ஒத்தவர் மற்றும் சமமானவர். அதிகாரம் அல்லது மரியாதை காரணமாக மற்றவருக்கு முன்னுரிமை அழிப்பது முறையன்று. எனவே, பிறக்காத பல உயிரினங்கள், அவை இல்லை என்று நாம் முடிவு செய்ய வேண்டும், ஏனென்றால், அவற்றுக்கிடையே சில வேறுபாடுகள் இருந்திருக்குமானால், நீங்கள் எப்படித் தேடினாலும், அத்தகைய வேறுபாட்டிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது; ஆனால், உங்கள் எண்ணங்களை எப்போதும் முடிவற்ற தன்மையை நோக்கி உலாவ விட்டீர்களானால், இறுதியாக நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். ஆகவே இவை யாவற்றையும் படைக்கப்படாதவர் என்ற கர்த்தரின் முன் நிறுத்தி, அவர் தான் சகலவற்றுக்கும் ஆதியும் அந்தமும் என்று தெளிவுபடுத்த வேண்டும். நமது தத்துவத்தின் சுவராகவும் அரணாகவும் இருந்த அந்த தத்துவ ஞானிகளான பிளாட்டோ மற்றும் பைதகரஸ் ஆகியோரின் கவனத்தில் இருந்து இந்த விஷயங்கள் தப்பிவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?”
அத்தியாயம் 6
“பிளேட்டோவோ அல்லது பைதகரசோ அல்லது வேறு எந்த மனிதனும் அத்தகைய கருத்தை கொண்டிருந்தாலும் அதில் எனக்கு அக்கறை இல்லை. ஏனென்றால் உண்மை அதுதான், இதிலிருந்து நீங்கள் அதை உணருவீர்கள். ஆன்மாவுக்கு நிச்சயம் உயிர் உள்ளது அல்லது வாழ்வது. அப்படியானால், அதற்கு உயிர் இருந்தால், அது தன்னைத் தானே அல்ல, மற்றொன்றையும் உயிர்ப்புடன் வாழச் செய்யும், மேலும் தன்னைத் தவிர வேறு ஒன்றையும் வழிநடத்தவல்லது. இப்படி பார்க்கின்றபோது, ஆன்மா வாழ்கிறது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் அது வாழும்போது, வாழ்க்கையாக மட்டும் அல்ல, வாழ்க்கையின் பங்காளராகவும் திகழ்கிறது; ஆனால் அது எதில் பங்குபெறுகிறதோ, அதிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் ஆன்மா வாழ்க்கையில் பங்கு கொள்கிறது. கடவுள் நம் ஆன்மா வாழவேண்டுமென சித்தம் கொண்டுள்ளார். ஆகவே, கடவுள் சித்தம் கொள்ளாத போது அது [வாழ்க்கையில்] பங்குகொள்ளாது. ஏனென்றால், கடவுளுடைய ஆன்மா போல வாழ்வது அதன் பண்பு அல்ல; ஒரு மனிதன் எப்போதும் வாழ்வதில்லை, ஆன்மா உடலுடன் எப்போதும் இணைந்திருக்காது, ஏனெனில், இந்த இணக்கம் உடைக்கப்பட வேண்டிய நேரம் வரும்போதெல்லாம், ஆன்மா உடலை விட்டு வெளியேறுகிறது, அப்போது மனிதனின் வாழ்வு அஸ்தமிக்கிறது; அப்படியிருந்தும், எப்போதெல்லாம் ஆன்மா அழிந்துபோக நியமிக்கப்பட்டுள்ளதோ, அப்போதெல்லாம் ஜீவனின் ஆவி அதிலிருந்து வெளியேறி அங்கே ஆன்மாவின் பிரசன்னம் இனி இல்லை என்றாகி விடுகிறது. ஆகவே அது எங்கிருந்து எமக்குள் அனுப்பப்பட்டதோ, அந்த இடத்திற்கே மீண்டும் திரும்பிச் செல்கிறது.
அத்தியாயம் 7
நான் அவரிடம் இவ்வாறு கேட்டேன், இந்த தத்துவஞானிகளுக்கு உண்மை தெரியவில்லை என்றால், எந்த ஆசிரியரை நாடவேண்டும்? அல்லது எந்த முறையை பின்பற்ற வேண்டும்? என்று.
அவர் அதற்கு இவ்வாறு பதிலளித்தார், “நீண்ட காலத்திற்கு முன்பு, அதாவது, அந்த புகழ்பெற்ற தத்துவஞானிகளின் காலத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, நீதிவழுவா மற்றும் கடவுளால் நேசிக்கப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள், பரிசுத்த ஆவியின் தூண்டுதலின் வாயிலாகப் பேசியும் மற்றும் என்ன நிகழ்வுகள் எப்போது நடக்கும் மற்றும் எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் போன்ற நிகழ்வுகளை பற்றியும் முன்னறிவித்தவர்கள் அவர்கள். இந்த மனிதர்களைத் தான் நாங்கள் தீர்க்கதரிசிகள் என்று அழைக்கிறோம். அவர்கள் மட்டுமே உண்மையை அறிந்து அதை மனிதர்கள் மத்தியில் அறிவித்தார்கள். அவர்கள் எதையும் தள்ளிப்போடவோ அல்லது எதற்கும் அஞ்சவோ இல்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம்கொடாமல் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டவர்களாய், அவர்கள் தாங்கள் கேட்டதையும் பார்த்ததையும் மட்டுமே தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். அவ்வாறு எழுதப்பட்டவை இன்றும் காணப்படுகின்றன. அவற்றை சரியான நம்பிக்கையுடன் வாசிப்பவர், விஷயங்களின் தோற்றம் மற்றும் முடிவு போன்ற ஆணையத்தையும் ஒரு தத்துவஞானி தெரிந்து கொள்ள வேண்டிய பிற விஷயங்களைப் பற்றி நன்கு அறிந்து, தேர்ச்சி பெற்று பெரிதும் பயனடைவார். அவர்களின் எழுத்துக்களில் அவர்கள் தங்கள் அறிக்கைகளுக்கு அந்த நேரத்தில் எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை, சத்தியத்தின் நம்பகமான சாட்சிகளாக, அவர்கள் ஆதாரத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; ஆனால் நடந்த மற்றும் இப்போது நடக்கும் நிகழ்வுகள் அவர்களின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள எம்மை கட்டாயப்படுத்துகின்றன. அவர்கள் செய்த அற்புதங்களினிமித்தம் அவர்களும் விசுவாசத்திற்கு தகுதியானவர்கள், ஏனென்றால் அவர்கள் எல்லாவற்றையும் இறை தந்தையும் படைப்பாளருமான தேவனை உயர்த்தி, அவரால் அனுப்பப்பட்ட அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை அறியும்படி செய்தார்கள். தவறான மற்றும் அசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட போலித் தீர்க்கதரிசிகள் இதை ஒருபோதும் செய்யவில்லை இப்போதும் கூட அவர்கள் இதை செய்யவில்லை. ஆனால் அவர்கள் மனிதர்களை நம்ப வைக்க சில அதிசயங்கள் என்ற பெயரில் பல்வேறு கைங்காரியத்தில் ஈடுபட முயற்சி செய்கிறார்கள் மற்றும் அவர்கள் தவறான சக்திகள் மற்றும் சாத்தான்களை மகிமைப்படுத்துகிறார்கள். ஆகவே, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒளியின் வாயில்கள் உங்களுக்குத் திறக்கப்படும்படி செபியுங்கள்; ஏனென்றால், தந்தையாகிய தேவனாலும் அவருடைய குமாரனாகிய இயேசுக் கிறீஸ்துவினாலும் அருளப்பட்ட ஞானத்தை உடைய மனிதனால் மட்டுமே இவைகளை ஏற்றுக் கொள்ளவோ உணரவோ முடியும். மற்றையோர்களால் இவற்றை நிச்சயம் புரிந்துகொள்ள முடியாது.”
அத்தியாயம் 8
“நேர பற்றாக்குறை காரணமாக மேலதிகமாகக் குறிப்பிட வேண்டிய முக்கியமான சிலவற்றை பற்றி அவர் பேசிவிட்டு, என்னைத் தெடர்ந்து நடத்தும்படி கூறிவிட்டு அவர் வெளியேறினார்; நான் அதன் பிறகு அவரைக் காணவில்லை. எனினும் சடுதியாக என் உள்ளத்தில் ஒரு சுடர் பிரகாசித்தது. தீர்க்கதரிசிகள் மீதும், கிறிஸ்துவின் நண்பர்களான புனிதர்கள் மீதும் கொண்ட அன்பு, என்னை ஆட்கொண்டது; அவருடைய வார்த்தைகளை என் மனதில் அசைபோடும்போது, இந்தத் தத்துவம் மட்டுமே பாதுகாப்பாகவும் இலாபகரமாகவும் இருப்பதைக் கண்டேன். அதனால்தான், நான் ஒரு தத்துவஞானி என்ற நிலைக்கு உயர்ந்தேன். மேலும், என்னுடைய தீர்மானத்தைப் போன்ற ஒரு தீர்மானத்தை அனைவரும் மேற்கொண்டு, இரட்சகரின் வார்த்தைகளில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் தங்களுக்குள் ஒரு அபரிமிதமான சக்தியைக் கொண்டுள்ளனர். அச்சம் குழப்பம் காரணமாக நேர்வழியில் இருந்து வழிதவறிச் செல்பவர்களை நல்வழி நடத்துவதில் வல்லவர்கள். பயபக்தியுடன் நேர்மையுடன், மற்றும் விடாமுயற்சியுடன் பயிற்சி செய்பவர்களுக்கு நல்ல வெகுமதி வழங்கப்படுகிறது. அப்படியானால், உங்கள் மீது உங்களுக்கு ஏதேனும் அக்கறை இருந்தால், நீங்கள் இரட்சிப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பவராக இருந்தால், நீங்கள் கடவுளை விசுவாசிப்பவரானால், நீங்கள் உங்கள் விஷயத்தில் அலட்சியம் கொள்ளாதவராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் இணைந்து அவரது அருளை பெற்ற பிறகு, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழுங்கள்.”
என் அன்பான நண்பர்களே, நான் இதைச் சொன்னபோது, ட்ரிபோவுடன் இருந்தவர்கள் சிரித்தார்கள்; ஆனால் அவர் சிரித்துக்கொண்டே இவ்வாறு கூறினார், “உங்கள் மற்ற கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன், மேலும் உங்களது தெய்வீக விஷயங்களில் காட்டும் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்; ஆனால் நீங்கள் இன்னும் பிளாட்டோவின் அல்லது வேறு சிலரின் தத்துவத்தில் நிலைத்து, சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வது நல்லது, சுய-கட்டுப்பாடு, நிதானம், போலி வார்த்தைகளால் ஏமாறாமல், அகந்தை கொண்டிராத மனிதர்களின் கருத்துகளைப் பின்பற்றுங்கள். நீங்கள் அந்தத் தத்துவத்தில் திளைத்து, குற்றமற்றவராக வாழ்ந்தால், சிறந்த நம்பிக்கை என்ற பாதை உங்கள் முன் தோன்றி உங்களை வழிநடத்தும்; ஆனால் நீங்கள் கடவுளை கைவிட்டு, மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்து, உங்கள் பயணத்தித் தொடர்ந்தால், உங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? அப்படியானால், நான் சொல்வதைக் கேட்க நீங்கள் தயாராக இருந்தால், (நான் உங்களை ஒரு நண்பராகக் கருதியே இதைக் கேட்கிறேன்), முதலில் விருத்தசேதனம் செய்து கொள்ளுங்கள், வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பிறகு என்னென்ன விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாருங்கள். ஓய்வுநாள், பண்டிகைகள், இறைவழிபாட்டில் உள்ள முதற்பிறை வழிபாடு ஆகியவற்றைக் குறித்து இயற்றப்பட்ட விதிகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்; நீதி, நியாயம் போன்றவைகளில் எழுதப்பட்ட அனைத்தையும் செய்யுங்கள்; அப்போது ஒருவேளை நீங்கள் கடவுளிடமிருந்து இரக்கத்தைப் பெறுவீர்கள். ஆனால் நீங்களோ என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? கிறிஸ்து – அவர் உண்மையில் அவதரித்து எங்கும் இருக்கிறார் என்றால் – அவர் அறியப்படாதவர் மற்றும் தன்னை அறியாதவர். எலியாஸ் வந்து அவரை அபிஷேகம் செய்து அனைவருக்கும் வெளிப்படுத்தும் வரை அவருக்கு எந்த சக்தியும் இல்லை. நீங்கள், ஆதாரமற்ற அறிக்கையை ஏற்றுக்கொண்டு, உங்களுக்காக ஒரு கிறிஸ்துவைக் கண்டுபிடித்தீர்கள், அவருடைய நிமித்தம் எந்த நோக்கமும் இன்றி அழிந்து கொண்டிருக்கிறீர்கள்.”
அத்தியாயம் 9
“நண்பரே நான் உம்மை மன்னிக்கிறேன், இறைவன் உம்மை மன்னிப்பாராக,” என்றேன். “ஏனென்றால், நீர் என்ன சொல்கிறீர் என்று உமக்குத் தெரியவில்லை, ஆனால் நீர் வேதாகமம் பற்றிய அர்த்தமே புரியாத, அகங்காரம் மிக்க, அறியாத ஆசிரியர்களால் நீர் போதிக்கப்பட்டீர்; உமது மனதில் தோன்றும் அனைத்தையும் நீர் ஒரு குறி சொல்பவரைப் போல பேசுகிறீர். நாம் அவரைப் பின்பற்றும் வழியையும், தவறான போதனைகளால் நாம் எப்படி ஏமாற்றப்படவில்லை என்பதையும், அவர்மீது விசுவாசம் கொள்வதை நிறுத்தாமல் இருப்பதையும் நீர் கேட்டால் (தேவனை மறுதலிக்கும்படி மனிதர்கள் நம்மைத் துன்புறுத்தினாலும், ஒரு கொடிய கொடுங்கோலன் நம்மை வற்புறுத்த முயன்றாலும்), நாங்கள் ஆதாரமற்ற கட்டுக்கதைகளையோ அல்லது ஏதேனும் காரணத்தை அடிப்படையாகக் கொண்ட போதனைகளையோ நம்பவில்லை, ஆனால் தெய்வீக வல்லமையால் ஈர்க்கப்பட்ட, அபரிமிதமான சக்தி மற்றும் கருணையுடன் கூடிய கோட்பாடுகளில் நாங்கள் என்றும் நிலைத்திருக்கிறோம் என்பதை நான் எப்போதும் உமக்கு நிரூபிப்பேன்” என்றேன்.
டிரிப்போவின் தோழர்கள் மீண்டும் ஒருமுறை உரத்த, அட்டகாசமான சிரிப்பை உதிர்த்தனர். அதனால் நான் எழுந்து நடக்கத் தயாரானேன். ஆனால் டிரிபோ என்னை என் மேலங்கியால் பிடித்து, நான் என் வாக்குறுதியைக் காப்பாற்றும் வரை என்னை போக விடமாட்டேன் என்று கூறினான்.
“அப்படியானால், உமது நண்பர்களை இவ்வாறான கேலிகளை செய்ய அனுமதிக்கவோ அல்லது இப்படியான சலசலப்பை ஏற்படுத்தவோ அல்லது இவ்வளவு அவமானமாக நடந்து கொள்ள வேண்டாம் என்றும் கூறும்” என்று நான் வலியுறுத்தினேன். “அவர்கள் விரும்பினால், அவர்கள் அமைதியாகக் கேட்கட்டும், அல்லது அவர்களுக்கு இதைவிட இன்னும் முக்கியமான ஏதாவது அலுவல்கள் இருந்தால், அவர்கள் புறப்பட்டு போகட்டும்; பின்னர் நாம் ஆறுதலாக எங்காவது சென்று உரையாடலை முடிக்கலாம்,” என்றேன்.
டிரிபோ ஒப்புக்கொண்டான், நாங்கள் Xystus மைதானத்தின் நடுவில் ஓய்வாக இருந்து எங்கள் உரையாடலைத் தொடர ஒப்புக்கொண்டோம். அவனது நண்பர்கள் இருவர், எங்கள் திட்டத்தை கேலியும் கிண்டலும் செய்துகொண்டே அங்கிருந்து சென்றனர். இருபுறமும் கல் இருக்கைகள் கொண்ட மைதானத்தின் ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு நாங்கள் வந்தபோது, டிரிபோவின் மற்ற தோழர்கள் ஒரு பக்கத்தில் உட்கார்ந்தனர். அவர்களில் ஒருவர் யூதேயாவில் நடந்த போரைப் பற்றி கூறிய பிறகு, அதைப் பற்றி விவாதித்தார்கள்.
அத்தியாயம் 10
அவர்கள் உரையாடலை முடித்ததும், நான் அவர்களிடம் மீண்டும் ஒரு முறை இவ்வாறு சொன்னேன்: நண்பர்களே, உங்கள் முன்னோர்கள் செய்தது போல் நாங்கள் சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை, சரீரத்தின் ஓர் உறுப்பில் விருத்தசேதனத்தை மேற்கொள்ளவில்லை, அல்லது நீங்கள் செய்வது போல் ஓய்வு நாட்களைக் கடைப்பிடிக்கவில்லை போன்ற வேறு ஏதேனும் குற்றச்சாட்டை நீங்கள் எங்களுக்கு எதிராக சுமத்த முயற்சிக்கிறீர்களா? அல்லது நாங்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் கண்டிக்கிறீர்களா? நாங்கள் மனித சரீரத்தை புசிக்கிறோம் என்றும், எங்கள் விருந்துகளுக்குப் பிறகு நாங்கள் விளக்குகளை அணைத்துவிட்டு, கட்டுக்கடங்காத சிற்றின்பத்தில் ஈடுபடுவோம் என்று நீங்கள் நம்பாதிருக்க வேண்டுமென்றே தான் நான் இதை உங்களுக்கு சொல்கிறேன். அல்லது அப்படிப்பட்ட கோட்பாடுகளை நம்பி, நீங்கள் பொய்யெனக் கருதும் கருத்துக்களை மட்டும் வைத்து எங்களைக் கண்டிக்கிறீர்களா?” என்று நான் சற்று காரசாரமாய்க் கேட்டேன்.
“இந்தக் கடைசிக் குற்றச்சாட்டு தான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது” என்று டிரிஃபோ பதிலளித்தான். “உங்களுக்கு எதிராக ஒழுங்கீனம் மிக்க கும்பலைச் சேர்ந்தவர்கள் தொடுத்த மற்ற குற்றச்சாட்டுகள் நம்பத் தகுதியானவை அல்ல, ஏனென்றால் அவை மனித இயல்புக்கு மிகவும் எதிராக இருக்கின்றன. ஆனால் நற்செய்தி என்று நீங்கள் அழைப்பதில் உள்ள கட்டளைகள் மிகவும் அற்புதமானவை மற்றும் சிறந்தவை, அவற்றை யாராலும் கடைபிடிக்க முடியாது என்று நான் நினைக்க வில்லை. ஏனென்றால் நான் அவற்றைப் படிக்க சிரமப்பட்டேன். ஆனால், பக்திமான்கள் என்று கூறிக்கொண்டு, மற்றவர்களை விட வித்தியாசமானவர்கள் என்று நம்பும் நீங்கள் அவர்களிடமிருந்து உங்களைப் பிரிக்காமல், நீங்கள் புறஜாதியாரின் வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதுதான் எங்களை மிகவும் ஆச்சரியப் படுத்துகிறது. நீங்கள் விருந்துகளையோ ஓய்வு நாட்களையோ கடைப்பிடிப்பதில்லை, விருத்தசேதனம் செய்யும் சடங்குகளை கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட ஒரு மனிதனின் மீது விசுவாசம் கொள்கிறீர்கள். அவருடைய கட்டளைகளை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள், ஆனால், கடவுளிடமிருந்து உதவியை எதிர்பார்க்கிறீர்கள். எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்படாத ஒரு ஆண்மகன், தன் மக்கள் மத்தியில் இருந்து விலக்கப்படுவான் என்று நீங்கள் வாசித்து அறிய வில்லையா? இந்த கட்டளை அந்நியருக்கும் விலைகொடுத்து வாங்கப்பட்ட அடிமைக்கும் ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. ஆனால் நீங்கள், முன்னதாக இந்த உடன்படிக்கையை இகழ்ந்து, பின்னர் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிராகரிக்கிறீர்கள். கடவுளுக்குப் பயந்து வாழும் ஒவ்வொருவரும் நேர்மையாக செய்யும் காரியங்களை நீங்கள் செய்யத் தவறும்போது, நீங்கள் தான் கடவுளை அறிந்திருக்கிறீர்கள் என்ற தோரணையில் எங்களை நம்ப வைக்க முயற்சிக்கிறீர்கள். எனவே, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் திருப்திகரமான பதிலைக் கொடுத்து, நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை எங்களிடம் காட்ட முடிந்தால், நீங்கள் சட்டத்தைக் கடைப்பிடிக்க மறுத்தாலும், நாங்கள் உங்களுக்கு மிகவும் விருப்பத்துடன் செவிசாய்ப்போம், பின்னர் நாங்கள் எங்கள் மற்ற வேறுபாடுகளை அதே முறையில் ஆராய்ந்து பார்ப்போம்”.
அத்தியாயம் 11
‘டிரிஃபோ,’ நான் அவனை நோக்கி நான் சொல்ல ஆரம்பித்தேன், ‘இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி, அதிலுள்ள அத்தனை ஜீவராசிகளையும் படைத்தவரைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இருக்க முடியாது, எப்போதும் இருந்ததும் இல்லை. மேலும், எங்கள் கடவுள் உங்களிடமிருந்து வேறுபட்டவர் என்று நாங்கள் கூறவில்லை, ஏனென்றால் அவர் தனது வலிமையான கரங்களை நீட்டிய அனைவரையும் அரவணைத்து, உங்கள் முன்னோர்களை எகிப்து நாட்டிலிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்ற கடவுள் அவர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுளாகிய நீங்களும் நம்பியிருக்கும் அவர் மீது மட்டுமே நாங்கள் விசுவாசம் கொண்டுள்ளோம். (உண்மையில் நாங்கள் விசுவாசிப்பதற்கென்று வேறு யாரும் இல்லை). ஆனால், நாங்கள் கொண்டிருக்கும் விசுவாசம் மோசே மூலமாகவோ அல்லது நீதியின் மூலமாகவோ ஏற்பட்டதல்ல. அப்படியென்றால், எங்கள் பழக்கவழக்கங்கள் உங்களுடையதைப் போலவே இருந்திருக்கும். இதோ பார், டிரிபோ, இப்போது, நான் அறிந்து கொண்டேன். கடவுளின் பாரம்பரியத்தை விரும்புகிற அனைவராலும் மதிக்கப்பட வேண்டிய ஒரு உறுதியான சட்டமும் உடன்படிக்கையும் இருத்தல் வேண்டும் என்றும் நான் அறிகிறேன். அது மற்றைய எல்லாவற்றையும் விட மிகவும் உறுதியாக பிணைக்கப்பட்டு உள்ளதாக இருத்தல் வேண்டும். ஹோரேப் என்ற இடத்தில் பிரகடனப் படுத்தப்பட்ட சட்டம் ஏற்கனவே காலாவதியானதாக உள்ளது, அது யூதர்களாகிய உங்களுக்காக மட்டுமே இருந்தது. அதேசமயம் நான் குறிப்பிடும் சட்டம் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். இப்போது, பழைய சட்டத்திற்கு நிகராக வந்த பிற்காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் பழைய சட்டத்தை இரத்து செய்கிறது; எனவே, பிற்கால உடன்படிக்கை முந்தைய உடன்படிக்கையை பழைமையாக்கி முன்னே வந்து விடுகிறது. ஒரு நித்திய மற்றும் இறுதி சட்டம் – அதாவது, இயேசு கிறிஸ்துவானவர் தாமே — நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கை நம்பகமானது. அதற்குப் பின் வந்தவை சட்டமோ, கட்டளையோ அல்லது ஒழுங்குவிதியோ இல்லை. அவற்றை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஏசாயாவின் பின்வரும் இந்த வார்த்தைகளை நீங்கள் படிக்கவில்லையா: “என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள், எனக்குச் செவிகொடுங்கள்; ராஜாக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னிடமிருந்து ஒரு சட்டம் உங்களுக்கு கொடுக்கப் படும், எனது நடுத்தீர்வை வெளிச்சமாக இருக்கும். தேசங்களை நோக்கி என் நீதிமான் ஏககாலத்தில் வருவார். என் இரட்சகர் உங்களை நோக்கி புறப்படுவார், அனைத்து ஜாதியினரும் என் கரத்தில் நம்பிக்கை வைப்பார்கள்” என்று கூறுகிறது. இந்தப் புதிய உடன்படிக்கையைப் பற்றி, கடவுள் எரேமியாஸ் மூலம் இவ்வாறு கூறினார்: “கர்த்தர் சொல்லுகிறார். இதோ நாட்கள் வரும், நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடும் யூதா குடும்பத்தாரோடும் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்வேன்; நான் அவர்களுடைய பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையின்படி அல்ல, நான் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக அவர்களை என் கரங்களில் பற்றி பிடிக்கும் அந்த நாட்கள் வரும், ஆகவே, கடவுள் ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்குவார் என்று கட்டளையிட்டபடி, இது தேசங்களுக்கு வெளிச்சமாக இருக்கும். மேலும் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் பெயரால், மனிதர்கள் கடவுளிடம் மீண்டும் வந்ததைக் காண்கிறோம், அதை உறுதியாக நம்புகிறோம். உருவ வழிபாடு மற்றும் பிற பாவச் செயல்களை விட்டுவிட்டு, அவர்கள் விசுவாசத்தைக் கடைபிடித்து, மரணம் வரைக்கும் இறைபக்தியைக் கடைப்பிடித்தார்கள், இந்த செயல்களிலிருந்தும் அதனுடன் இணைந்த சக்திவாய்ந்த அற்புதங்களிலிருந்தும் அவர் தான் உண்மையில் புதிய நீதி, புதிய உடன்படிக்கை மற்றும் எதிர்பார்ப்பு அத்தனையும் என்பதை அனைவரும் தெளிவாகக் காணலாம். ஒவ்வொரு தேசத்திலிருந்தும் வந்தவர்களின் எதிர்பார்ப்பு கடவுளின் ஆசீர்வாதங்களை பெறுவது மட்டுமே என்பதை உறுதி செய்தது. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் மூலம் நாம் கடவுளிடம் வழிநடத்தப்பட்டுள்ளோம், மேலும் நாங்கள் தான் உண்மையான ஆன்மீகவாதிகள், அதாவது, இஸ்ரேல், யூதா, ஜேக்கப், ஐசக் மற்றும் ஆபிரகாம் ஆகியோரின் வழித்தோன்றல். இவருக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை என்றாலும், அவர்மீது கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக கடவுளால் அங்கீகரிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப் பட்டவர். அவர் பல தேசங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டார். விவாதத்தை நாம் மேலும் முன்னோக்கித் தொடரும்போது இவை அனைத்தும் ஒவ்வொன்றாக நிரூபணமாகும்.
அத்தியாயம் 12
ஏசாயாவின் இந்த வசனத்தையும் நான் மேற்கோள் காட்டினேன்: ‘*** உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதிற்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். அனைத்து நாடுகளுக்கும் எனது வல்லமையின் சாட்சியாக நான் தாவீதைப் படைத்தேன். பல நாடுகளுக்கு அவன் ஒரு தலைவனாகவும், தளபதியாகவும் வருவான் என்று நான் வாக்களித்தேன். உனக்குத் தெரியாத நாடுகள் பல உள்ளன. ஆனால் அந்த நாடுகளை அழைப்பாய். அந்த நாடுகள் உன்னை அறியாது. ஆனால் அவை உன்னிடம் ஓடிவரும். இது நடக்கும், ஏனென்றால், உனது தேவனாகிய கர்த்தர் இதை விரும்புகிறார். இது நடக்கும், ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன்னை மகிமைப்படுத்துவார்.’ என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் இந்த சட்டத்தையே அவமதித்து விட்டீர்கள், அவருடைய புதிய பரிசுத்த உடன்படிக்கையை உதாசீனம் செய்தீர்கள். இப்போதும் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வில்லை, உங்கள் தீய செயல்களுக்காக நீங்கள் மனந்திரும்பவில்லை. அதைத்தான் ஜெரிமியாஸ் உரத்த குரலில் பின்வருமாறு கூறினார்; “உன் காதுகள் மூடப்பட்டுவிட்டன, உன் கண்கள் குருடாகிவிட்டன, உன் இதயம் கடினப்பட்டிருக்கிறது. ஆனாலும், நீங்கள் கேட்க மாட்டீர்கள். சட்டமியற்றுபவர் வந்துவிட்டார், நீங்கள் அவரைக் கண்டுகொள்ள வில்லை. “ஏழைகளுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது, பார்வையற்றவர்கள் பார்க்கிறார்கள்,” ஆயினும் இன்னும் நீங்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் சரீரத்தைப் பற்றி பெருமை பேசினாலும், உங்களுக்கு உண்மையில் தேவைப்படுவது மற்றொரு விருத்தசேதனம். புதிய சட்டம் நீங்கள் கட்டாய ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோருகிறது. அதேசமயம் வாரத்தில் ஒரு நாளில் நீங்கள் உங்கள் கடமையைத் தவிர்த்து விட்டால் மட்டும், நீங்கள் உங்களை எப்படி பக்திமான்கள் என்று கருத முடியும்? நீங்கள் புளியாத அப்பத்தை உண்ணும்போது கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால் இதுபோன்ற செயல்கள் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு மகிழ்ச்சியைத் தராது. உங்களில் ஒரு பொய் காரனோ திருடனோ இருந்தால், அவன் தன் வழியைச் சீர்படுத்தட்டும்; விபசாரம் செய்பவர் எவரேனும் இருந்தால், அவர் தான் செய்த தவறுக்கு மீண்டும் மனம் வருந்தி மனந்திரும்பட்டும்; இந்த வழியில் பயணித்தால் மட்டுமே அவர் கடவுளின் உண்மையான மற்றும் அமைதியான ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பார். ஒருவரது கைகள் அசுத்தமாக இருக்கும் பட்சத்தில், அவர் தனது கைகளைக் கழுவித் தூய்மையாக இருக்கட்டும்.
அத்தியாயம் 13
“உண்மையில், ஏசாயா உங்களைக் குளிக்கச் சொன்னதன் காரணம் கொலை மற்றும் பிற பாவங்களைக் கழுவுவதற்கு அல்ல. இவ்வகையான பாவங்கள் சமுத்திரத்தில் உள்ள அனைத்து நீராலும் சுத்தப்படுத்த முடியாத பாவங்களாகும். ஆனால், எதிர்பார்த்தபடி, அவர் குறிப்பிட்டது இரட்சணியத்தின் ஸ்நானம் என்று பொருள்படும் ஒரு பழமையான பதம். மனந்திரும்ப ஆர்வமுடையோர், ஆடுகள் மற்றும் செம்மறிகளின் குருதியாலோ ஒரு பசுமாட்டின் சாம்பலாலோ, அல்லது மெல்லிய மாவைக் கொண்டு ஒப்புக்கொடுக்கும் காணிக்கையினாலோ தூய்மையாக்கப் படுவதில்லை, ஆனால் இந்த மகோன்னதமான நோக்கத்திற்காக மரணத்தை அனுபவித்த கிறிஸ்துவின் மாசில்லா திரு இரத்தம் மற்றும் அவரது சிலுவை மரணத்தின் மூலம் எம் மனதில் விதைக்கப்பட்ட விசுவாசத்தினால் மட்டுமே தூய்மையாக்கல் நிகழ்கிறது. எனவே ஏசாயாவே இந்த வார்த்தைகளின் மூலம் எமக்கு எடுத்துக் காட்டுகிறார்: “அனைத்து இனங்களின் பார்வையிலும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார், சகல இனங்களும் பூமியின் அனைத்து எல்லைகளும் கடவுளின் இரட்சிப்பைக் காண்பார்கள். புறப்படுங்கள், புறப்படுங்கள், கிளம்பிப் போங்கள், அங்கிருந்து வெளியேறுங்கள், அசுத்தமான எதையும் தொடாதீர்கள்; அவற்றின் நடுவிலிருந்து வெளியேறுங்கள், கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, சுத்தமாயிருங்கள்; கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் போவார், இஸ்ரவேலின் தேவன் உங்களை ஒன்று சேர்ப்பார், இதோ, என் சேவகன் உங்களை புரிந்துகொண்டு, மேன்மையடைந்து, மிகவும் மகிமைப்படுவான். எத்தனைபேர் உம்மைக் கண்டு ஆச்சரியப் படுவார்களோ, அதேபோல உமது உருவமும் அழகும் மனிதர்களால் இகழப்படும். அதனால் பல தேசங்கள் அவரைப் பார்த்து வியப்படைவார்கள், ராஜாக்கள் தங்கள் வாயை மூடிக்கொள்வார்கள். ஏனென்றால் அவரைப் பற்றி கேள்விப்படாதவர்கள் கேள்விப்படுவர், புரிந்துகொள்ளாதவர்கள் புரிந்துகொள்வார்கள். ஆண்டவரே, எங்கள் அறிக்கையை யார் நம்பினார்கள்? கர்த்தருடைய கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? அவருக்கு முன் குழந்தையாக, வறண்ட நிலத்தில் வேராக அவரை நாம் அறிவித்துள்ளோம். அவரிடம் அழகும் இல்லை, அழகும் இல்லை; நாம் அவரைப் பார்த்தோம், அவருக்கு எந்த வடிவமும் இல்லை, அழகும் இல்லை; ஆனால் அவருடைய வடிவம் அவமதிப்புக்குள்ளானது. மேலும் மனிதருடைய புத்திரர்களில் எவரையும் விட தாழ்வாக இருந்தது. அவர் பாடுகளை அனுபவித்தவர், பலவீனத்தை அறிந்தவர்; அவரது முகம் மறுதலிப்புக்குள்ளானது. அவர் வெறுக்கப் பட்டார், மதிக்கப்படவில்லை. அவர் நம்முடைய பலவீனங்களைச் சுமந்து, நம்முடைய துக்கங்களைச் சுமந்து, வலியிலும், பக்கவாதத்திலும், துன்பத்திலும் இருக்கிறார் என்று மதிப்பிட்டோம். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து, நமக்காக வருத்தப்படுகிறார்; மேலும் நாம் அவரைக் கஷ்டத்திலும், துன்பத்திலும், தீய தண்டனையிலும் இருக்க வழிநடத்தினோம். ஆனால் அவர் நம்முடைய பாவங்களின் நிமித்தம் பாடுகளுக்கு உள்ளானார். நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை பெற்றுத்தர அவர் தண்டனை ஏற்றுக்கொண்டார். செம்மறி ஆடுகளைப் போல் நாம் அனைவரும் வழிதவறிப் போனோம். ஒவ்வொருவரும் அவரவர் வழியே சென்றனர்; கர்த்தர் நம் எல்லாருடைய அக்கிரமங்களையும் தன்மேல் சுமந்தார்; மற்றும் அவர், அவரது துன்பங்கள் காரணமாக, அவரது வாயை திறக்கவில்லை. அவர் வெட்டுவதற்கு கொண்டுசெல்லப்படும் ஆடுகளைப் போலவும், மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக நிற்கும் ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியைப் போலவும், அவர் வாய் திறவாது நின்றார். அவர் அவமானப்படுத்தப்பட்டார் மற்றும் அவரது தீர்ப்பு பறிக்கப்பட்டது. ஆகவே அவருடைய தலைமுறையை யார் அறிவிப்பார்கள்? என் மக்களின் அக்கிரமத்தினிமித்தம் அவர் ஜீவனுள்ள தேசத்திலிருந்து வேறுபடுத்தப்பட்டார். அவர் மரணத்திற்கு தன்னை அர்ப்பணித்தார். கயவனுக்கு அவனது உடலை அடக்கம் செய்வதற்கும், செல்வந்தனுக்கு அவனது மரணத்தையும் கொடுப்பேன். ஏனென்றால் அவன் அக்கிரமம் செய்யவில்லை, அவன் வாயில் வஞ்சகமும் இல்லை. கர்த்தர் அவரை துன்பத்திலிருந்து தூய்மைப்படுத்த விரும்புகிறார். அவர் பாவத்திற்காகத் தம் உயிரைக் கொடுத்தால், உங்கள் ஆன்மா நீண்ட ஆயுளைக் காணும். மேலும், கர்த்தர் அவ்வாறான மனிதரின் ஆன்மாவை சிக்கலில் இருந்து காத்து, அவருக்கு ஒளியைக் காட்டவும், பலருக்கு நேர்மையாக சேவை செய்கின்ற நீதிமானை நியாயப்படுத்தவும், அவரைப் புரிந்துகொள்வதில் மேன்மை நிலையை உருவாக்கவும் விரும்புகிறார். அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்தார்; ஆதலால், அவர் பலரைச் அரவணைத்து, பலவான்களின் கொள்ளைப் பொருளைப் பங்கிட்டு அளித்தார். மேலும் அவர் தீயவர்களில் ஒருவராக கணக்கிடப்பட்டார். மேலும் அவர் பலருடைய பாவங்களைச் சுமந்து, அவர்களுடைய பாவங்களுக்காக தன்னை அர்ப்பணித்தார். மலடியே, வலியைப் பொறுக்க இயலாதவளே, வலியால் துவண்டு போகாதவளே, பாடு; மனம் உடைந்து சத்தமாக அழு; குழந்தைப் பேறு பெறாதவளே, துதி பாடு; ஏனென்றால், கணவனுள்ள பெண்ணைவிடப் பாழாய்ப்போனவளின் பிள்ளைகள் அநேகர். கர்த்தர் இவ்வாறு சொன்னார்: உங்கள் கூடாரம் அமைந்திருக்கும் இடத்தையும், திரைச்சீலைகளையும் பெரிதாக்குங்கள்; அவற்றை நன்றாக சரி செய்யவும், எதையும் விட்டுவிட வேண்டாம், கயிறுகளை இருகக் கட்டி, உங்களை பலப்படுத்துங்கள்; உங்கள் வலது மற்றும் இடதுபுறமாக அவற்றை விரிவாக்குங்கள்; உங்கள் சந்ததி புறஜாதிகளை அனுசரித்துக் கொள்ளும், நீங்கள் பாழாய்ப்போன பட்டணங்களில் குடியிருப்பீர்கள். நீங்கள் அவமானம் கொள்வதையிட்டு அஞ்ச வேண்டாம். நீங்கள் நிந்திக்கப்பட நேர்ந்தால் குழப்பமடைய வேண்டாம்; உங்களுக்கு ஏற்படும் நித்திய அவமானத்தை நீ மறந்துவிடுவாய், உன் விதவைக் கோலத்தால் ஏற்படக்கூடிய நிந்தையை நீ நினைக்க மாட்டாய். ஏனென்றால் கர்த்தர் தமக்கு ஒரு திருநாமத்தை உண்டாக்கிக்கொண்டார், உன்னை மீட்பவர் பூமியெங்கும் இஸ்ரவேலின் தேவன் என்று அழைக்கப்படுவார். இளமையில் இருந்தே வெறுக்கப்பட்ட பெண்ணாக கைவிடப்பட்ட மற்றும் சக்தியை இழந்த பெண் என்று கர்த்தர் உன்னை அழைத்தார்.”
அத்தியாயம் 14
எனவேதான், ஏசாயா சாட்சியமளிப்பது போல், கடவுளின் மக்களின் பாவங்களுக்காக அமைக்கருளப்பட்ட மனந்திரும்புதலின் ஞானஸ்நானம் மற்றும் கடவுளைப் பற்றிய அறிவின் மூலம் அவற்றை நாங்கள் விசுவாசிக்கிறோம். மேலும் ஏசாயா கூறிய அதே ஞானஸ்நானம் என்பதையும் நாங்கள் அறிவோம். அவர்கூறிய வாழ்வளிக்கும் தண்ணீரால் மட்டுமே பாவங்கள் செய்தோரை சுத்திகரிக்க முடியும். அப்படியான உங்கள் வாழ்வாதாரத்துக்காக நீங்கள் தோண்டிய கிணறுகள் உடைந்து போய் அவை பயனற்றவையாகிவிட்டன. அப்படி பார்த்தால், உடலை மட்டும் சுத்தப்படுத்தும் அந்த ஞானஸ்நானத்துக்கு என்ன மதிப்பு இருக்கப்போகிறது? உங்கள் ஆன்மாக்களை கோபம், பேராசை, பொறாமை மற்றும் வெறுப்பு ஆகியவற்றிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்; அப்போது உடல் முழுவதும் தூய்மையாக இருக்கும். இது கெட்ட புளிப்பு பற்றி கூறப்படும் அடையாளமான பழைமையான செயல்கள். இருப்பினும், நீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நடைமுறை வழியில் புரிந்துகொள்கிறீர்கள், மேலும் உங்கள் மனங்கள் வஞ்சகம், சூது பொறாமை போன்ற எல்லா வகையான பாவங்களாலும் நிரம்பியிருந்த போதிலும், நீங்கள் உங்கள் நடைமுறை வாழ்க்கை முறையைக் கொண்டு, நீங்கள் உங்களை பக்திமான்களாக நினைக்கிறீர்கள். ஆகையால், ஏழு நாட்கள் புளியாத அப்பத்தைச் உண்ட பிறகு, உங்களுக்காகப் புதிய புளியா அப்பத்தைத் தயாரிக்கும்படி, அதாவது, நற்கிரியைகளைச் செய்யவும், உங்கள் பழைய பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்குமாறு கடவுளால் கட்டளையிடப்பட்டீர்கள். புதிய சட்டமியற்றுபவர் இதைத்தான் செய்யுமாறு உங்களுக்கு உத்தரவிடுகிறார் என்பதை நிரூபிக்க, மேலே மேற்கோள் காட்டப்பட்ட பத்திகளையும், நான் தவிர்த்துவிட்ட மற்றவற்றையும் மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன். ஏசாயா சொல்வது இதுதான்: “கேளுங்கள், உங்கள் ஆன்மா பிழைக்கும், நான் தாவீதின் உன்னத இரக்கங்களை உங்களுடன் நித்திய உடன்படிக்கையாக செய்து ஏற்றுக் கொள்வேன். இதோ, நான் அவரை மக்களுக்குச் சாட்சியாகவும், புறஜாதிகளுக்குத் தலைவராகவும், எஜமானாகவும் கொடுத்தேன். ஆகவே, புறஜாதிகளே, உங்களை அறியாத தேசங்கள் உங்களை கூப்பிடுவார்கள், உங்களை அறியாத மக்கள் உங்களிடம் ஓடிவருவார்கள், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய உமது தேவன் நிமித்தம், அவர் உங்களை மகிமைப்படுத்தினார். தேவனைத் தேடுங்கள், நீங்கள் அவரைக் கண்டடையும் போது, அவர் சமீபமாயிருக்கிறார். ஆகவே அவரை நோக்கிக் கூப்பிடுங்கள், கயவனானவன் தன் துன்மார்க்க வழியையும், அநியாயக்காரன் தன் எண்ணங்களையும் கைவிட்டு, கர்த்தரிடம் மீண்டும் வரக்கடவார்களாக. அப்போது அவன் இரக்கத்தைப் பெறுவான். அவர் உன் பாவங்களை மிகுதியாக மன்னிப்பார். என் எண்ணங்கள் உங்களுடைய எண்ணங்களை ஓத்ததில்லை, அவ்வாறே, என் வழிகள் உங்களுடைய வழிகளோடு ஒத்துப்போவதுமில்லை; ஆனால் பூமியிலிருந்து வானம் எவ்வளவு தூரமாக இருக்கிறதோ, அவ்வளவு தூரம் உங்கள் வழியிலிருந்து என் வழியும், உங்கள் எண்ணங்களில் இருந்து என் எண்ணங்களிலிருந்தும் தொலைவில் இருக்கின்றன; வானத்திலிருந்து பனியோ மழையோ பெய்வது போல, அது பூமிக்குத் தண்ணீர் அளித்து, அங்கு வளரும் பயிர் பச்சைகளையெல்லாம் முளைக்கச் செய்து, துளிர்க்கச் செய்து, விதைக்க, காய்க்க, உண்பவருக்கும், பசித்தோருக்கும் அப்பத்தையும் தந்து, அத்தனை காரியங்களையும் ஆற்றிய பின்பு தான் மீண்டும் பூமியைவிட்டுப் போகும். என் வாயிலிருந்து புறப்படும் என் வார்த்தைகளும் அப்படியே தான் இருக்கும்; நான் விரும்பிய அனைத்தையும் அது நிறைவேற்றும் வரை, அது மீண்டும் என்னிடம் திரும்பாது, மேலும் என் கட்டளைகள் அனைத்தும் நன்மை பயப்பனவாக மாறும். அப்போது நீங்கள் மகிழ்ச்சியுடன் போய், மகிழ்ச்சியுடன் உங்கள் அறிவை விருத்திசெய்து கொள்வீர்கள். மலைகளும் குன்றுகளும் உங்களைத் தேடி மகிழ்ச்சியில் துள்ளும், சோலைகளில் உள்ள மரங்கள் அனைத்தும் தங்கள் கிளைகளால் உங்களைக் கைதட்டி வாழ்த்தும். முட்செடிக்கு பதிலாக வாசனை மிகுந்த ஊசியிலை மரமும், ஊசி மரங்களுக்குப் பதிலாக மிருதுவான மரமும் வளரும். கர்த்தர் ஒரு திருப்பெயராகவும், நித்திய அடையாளமாகவும் இருப்பார். அவர் தோல்வியை என்றும் தர மாட்டார்,” என்று கூறினேன். டிரிபோ, என நான் அவனை அழைத்து, நான் சொல்வதைக் கேட்கும்படி பணித்தேன். ‘இந்தப் பத்திகளில் சில மற்றும் வேறு சில தீர்க்கதரிசிகளின் இதே போன்ற பத்திகள் கிறிஸ்துவின் முதல் வருகையைக் குறிக்கின்றன. அதில் அவரது வருகை அவமானம், இருட்டடிப்பு மற்றும் மரணம் என்று விவரிக்கப்பட்டுள்ளது; மற்ற பகுதிகள் அவரது இரண்டாம் வருகையைப் பற்றிக் கூறும்போது, அவர் முகில் கூட்டங்களின் நடுவே மாட்சிமையுடன் தோன்றுவார் என்று கூறுகிறது; உங்கள் மக்கள் தாங்கள் சிலுவையில் அறையப்பட்ட அவரை இரட்சகராக அடையாளம் காண்பார்கள். பன்னிரண்டு தீர்க்கதரிசிகளில் ஒருவரான ஹோசியா மற்றும் தானியேல் முன்னறிவித்ததைப் போல, உங்கள் மக்கள் சிலுவையில் அறையப் பட்டவரைப் பார்த்து அடையாளம் காண்பார்கள்.
அத்தியாயம் 15
‘கடவுள் உங்கள் மேல் விருப்பம் கொள்ளவேண்டுமாயின், நீங்கள் அவர் கற்றுத்ததந்த உண்மையான விரதத்தைக் கடைபிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக ஏசாயா சொல்வதைக் கேளுங்கள்: “அழு, ஓயாமல், எக்காளத்தைப் போல உன் குரலை உயர்த்தி, என் ஜனங்களுக்கு அவர்கள் செய்யும் தீய செயல்களையும், யாக்கோபின் சந்நிதியினருக்கு அவர்கள் செய்த பாவங்களையும் தெரியப்படுத்துங்கள். அவர்கள் நாளுக்கு நாள் என்னைத் தேடி, தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் கைவிடாமல், நீதியைச் செய்கிற தேசமாக, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள். அவர்கள் இப்போது என்னிடம் நீதியான தீர்ப்பைக் கேட்கிறார்கள். கடவுளிடம் நெருங்கி வர விரும்புகிறார்கள், நாங்கள் ஏன் உபவாசம் இருக்கிறோம் என்று நீங்கள் நினைக்கவில்லை, எங்கள் ஆன்மாவைத் துன்புறுத்தவில்லை என்பதை நீங்கள் அறியவில்லையா? ஏனெனில் உனது உபவாச நாட்களில் நீங்கள் உங்கள் இன்பத்தை மேலாக எண்ணி, உங்களுக்கு கீழ் இருக்கும் அனைவரையும் ஒடுக்கினீர்கள். இதோ, நீங்கள் சச்சரவுகளுக்கும் விவாதங்களுக்கும் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள், தாழ்மையானவர்களை உங்கள் முஷ்டிகளால் தாக்குகிறீர்கள். இன்று போன்ற ஒரு நாளில் எனக்காக ஏன் நோன்பு நோற்கிறீர்கள்? அதனால் உங்கள் குரல் உரத்த ஒலியை எழுப்பக் கூடுமோ? இது நான் தேர்ந்தெடுத்த உபவாசம் அல்ல, ஒரு மனிதன் தன் ஆன்மாவைத் துன்புறுத்தும் நாள். நீங்கள் உங்கள் கழுத்தை ஒரு வளையம் போல வளைத்தாலும், அல்லது சாக்கால் ஆன உடை உடுத்தியோ அல்லது சாம்பலை பூசிக்கொண்டோ இருப்பதை உபவாசம் என்றும், கர்த்தருக்குப் பிரியமான நாள் என்றும் சொல்ல வேண்டாம். இது நான் தேர்ந்தெடுத்த நோன்பு அல்ல, என்கிறார் ஆண்டவர்; ஆனால் அனைத்து நியாயமற்ற பிணைப்புகளையும் தளர்த்தி விடுங்கள், தவறான உடன்படிக்கைகளின் விதிமுறைகளை கலைத்துவிடுங்கள், ஒடுக்கப் பட்டவர்கள் சுதந்திரமாக வாழட்டும், மேலும் அனைத்து தேவையற்ற ஒப்பந்தத்தையும் தவிர்க்கவும். பசித்திருப்போருக்கு உனது உணவைக் கொடுத்து, ஆதரவற்ற ஏழைகளை உனது இல்லத்தில் வைத்து உபசரி; நிர்வாணமானவனைக் கண்டால் அவனுக்கு உனது உடைகளைக் கொடுக்கத் தயங்காதே; உன் சரீரத்திற்கு தீங்கு விளைவிக்காதே. அப்பொழுது உன்னில் உள்ள ஒளியானது விடிகாலைப் பொழுதைபோல் பிரகாசிக்கும், உன் உடைகள் உன்னை மேன்மைப்படுத்திக்காட்டும்; உன் நீதி உனக்கு முன்பாகச் செல்லும், தேவனுடைய மகிமை உன்னைச் சூழ்ந்துகொள்ளும். அங்கே நீ உரத்த குரலில் கூறுவாய், அப்பொழுது கர்த்தர் உனக்குச் செவிகொடுப்பார்; நுகத்தடியையும், கையேந்துவதையும், முணுமுணுக்கும் வார்த்தையையும் உன்னிடமிருந்து அகற்றுவாயானால்; பசித்திருப்போருக்கு உனது உணவை மனதாரக் கொடுத்து, துன்பத்தில் இருக்கும் மனதைத் தேற்றுவாயானால், அப்பொழுது உன்னில் காணப்படும் வெளிச்சம் இருளில் பிரகாசத்தை உண்டுபண்ணி, நண்பகல் போல் பிரகாசிக்கும்: உன் தேவன் எப்பொழுதும் உன்னுடனே இருப்பார், உன் ஆன்மாவின் விருப்பத்தின்படி நீ திருப்தியடைவாய், உன் எலும்புகள் சக்திபெறும், நீர் பாய்ச்சப்பட்ட தோட்டமாகவும், வற்றா நீரூற்றைப் போலவும், நீர் வற்றாத நிலமாகவும் உன் வாழ்வு அமையும்.’ ஆகையால், உன் இதயத்தின் நுனித்தோலைத் தான் நீ விருத்தசேதனம் மூலம் அகற்றவேண்டும்’ என்று இந்த எல்லாப் பகுதிகளிலும் காணப்படும் இறைவார்த்தைகள் ஆணையிடுகின்றன.”
அத்தியாயம் 16
மேலும் மோசேயின் மூலம் கடவுள் தாமே இவ்வாறு அறிவித்தார்: கடினமான உங்கள் இதயத்தின் தன்மையை விருத்தசேதனம் மூலம் அகற்றுங்கள், மேலும் கழுத்தை கடினமாக வைக்காது சாதாரணமாக வைத்திருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர், பிரபுக்களின் கர்த்தாவாகவும், மகத்தான வல்லமையுள்ள, அற்புதங்களின் தேவனாகவும் இருக்கிறார். அவர் மனிதரின் அந்தஸ்தை வெறுப்பவர், வெகுமதிகளுக்கு எதிரானவர். மேலும் லேவியராகமம் இவ்வாறு கூறுகிறது: ‘அவர்கள் எனக்கு விரோதமாய்க் பாவம் செய்தபடியாலும், என்னை இகழ்ந்ததாலும், அவர்கள் எனக்கு விரோதமாய் நடந்ததாலும், நானும் அவர்களுக்கு விரோதமாய் நடந்தேன், அவர்களுடைய எதிரிகளின் தேசத்திலே அவர்களை நிர்மூலம் செய்துவிடுவேன். அப்பொழுது விருத்தசேதனம் செய்யப்படாத அவர்களுடைய இதயம் அவமானத்துக்குள்ளாகும்.” சரீர விருத்தசேதனம் ஆபிரகாமிலிருந்து உருவானது, அது ஒரு அடையாளமாக கொடுக்கப்பட்டது; அவ்வாறான அடையாளத்தின் மூலம் நீங்கள் மற்ற தேசங்களிலிருந்தும் எங்களிடமிருந்தும் வேறுபட்டவர்களாக இருப்பீர்கள்; அப்போது நீங்கள் தற்சமயம் நியாயமாக அனுபவிக்கும் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கலாம். உங்கள் தேசம் பாழாகி, உங்கள் நகரங்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; உங்கள் முன்னிலையில் அந்நியர்கள் உங்கள் கனிகளைப் புசிப்பார்கள், உங்களில் ஒருவரும் எருசலேமுக்குப் போக அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்கள் சரீர விருத்தசேதனத்தைத் தவிர வேறு எந்த அடையாளத்தினாலும் மற்றைய மனிதர்களிடையே நீங்கள் அங்கீகரிக்கப்பட மாட்டீர்கள். உங்களில் எவரும் கடவுள் எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்னறிவித்துள்ளார் என்பதை மறுக்க முயல்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. எனவே, மேலே குறிப்பிடப்பட்ட இன்னல்கள் உங்கள் மீது நியாயமாக ஏற்படுத்தப்பட்டன. ஏனென்றால் நீங்கள் நீதிமானையும், அவருடைய தீர்க்கதரிசிகளையும் அவருக்கு முன்பாகவே கொன்றுவிட்டீர்கள்; இப்போது நீங்கள் அவர் மீதும், அவரை அனுப்பியவர் மீதும் நம்பிக்கை கொண்டவர்களை நிராகரிக்கிறீர்கள்; அதாவது எல்லாம் வல்ல கடவுள், அனைத்தையும் படைத்தவர்; உங்கள் செப ஆலயங்களில் கிறிஸ்துவை விசுவாசிக்கிற அனைவரையும் உங்கள் இறையாண்மையைக் கொண்டு அவமதிப்பதோடு, அவர்களை சபிக்கிறீர்கள். இப்போது அதிகாரத்தைக் கொண்டிருக்கும் உங்களுக்கு, எங்கள் மீது கை வைக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் உங்களால் முடிந்தவரை அதை அடிக்கடி செய்தீர்கள். ஆகையால், தேவன், ஏசாயா மூலம், உங்களை அழைத்து “இதோ, நீதிமான் எப்படி அழிந்தான் என்பதை பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால், நீதிமான் அக்கிரமத்திற்கு உள்ளாகும் முன்பாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறான். அவருடைய நல்லடக்கம் அமைதியாக இருக்கும், அவர் எம் நடுவிலிருந்து அமைதியிடன் எடுத்துச் செல்லப்படுவார். அக்கிரமத்தின் கயவர்களே, விபச்சாரிகளின் சந்ததிகளே, விபச்சாரியின் பிள்ளைகளே, இங்கு வாருங்கள். நீங்கள் யாருக்கு எதிராக உங்கள் விளையாட்டை நடத்தினீர்கள், யாருக்கு எதிராக உங்கள் வாய்களைத் திறந்தீர்கள், யாருக்கு எதிராக உங்கள் நாவுகளை சுழற்றி வார்த்தைகளை உதிர்த்தீர்கள்?”
அத்தியாயம் 17
யூதர்களாகிய உங்களைப் போல், மற்றைய தேசங்கள் கிறிஸ்துவையும் அவருடைய சீஷர்களாகிய எங்களையும் அநியாயமாக நடத்தவில்லை. அவர்கள் நியாயாதிபதியானவருக்கு எதிராகவும், அவருடைய சீடர்களாகிய எங்களுக்கு எதிராகவும் தீய கருத்தைத் தூண்டுபவர்களாக இருக்கிறார்கள். எந்த பாவமும் அறியாத, அதி உத்தம நீதிமானான பரிசுத்த மனிதரை சிலுவையில் அறைந்த பிறகு (அவர் மூலம் இறை தந்தையை அணுகும் அனைவருக்கும் அனைத்து துன்பங்களும் குணமாக்கப்பட்டது), மேலும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு எழுந்தருளினார் என்பதை நீங்கள் உணர்ந்த பிறகு (தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தபோதும் கூட), உங்கள் தீய செயலுக்காக நீங்கள் வருத்தப்படத் தவறியது மட்டுமல்லாமல், சில தேர்ந்தெடுக்கப் பட்ட மனிதர்களை ஜெருசலேமிலிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பினீர்கள். அத்தோடு, கிறிஸ்தவர்களிடையே கடவுள் பக்தியற்ற மக்கள் தோன்றினர் என்றும், எங்களை அறிந்த அனைவர் மத்தியிலும் எங்களுக்கு எதிராகப் பேசாத விஷயங்களைப் பேசியதாகப் பகிரங்கப்படுத்தினர் என்று சொன்னீர்கள். அதனால் நீங்கள் இழைத்த அநீதிக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா மனிதர்களும் அநீதி இழைத்ததற்கு காரணமும் நீங்கள்தான். ஆகவே, ஏசாயா நியாயமாக உரத்த குரலில் இவ்வாறு கூறுகிறார்: “உன்னாலே என் பெயர் பிறஜாதிகளுக்குள்ளே தூஷணைக்குள்ளானது.” மேலும்: “அவர்களின் ஆன்மாவுக்கு கேடு வரும்! அவர்கள் தங்களுக்கு விரோதமாக மேற்கொள்ளப்பட்ட தீய ஆலோசனையை கையில் எடுத்துக்கொண்டு, நீதியுள்ளவரைக் கட்டிவைப்போம், ஏனென்றால் அவர் நமக்குப் பயனற்றவர். அவ்வாறாக, அவர்கள் தங்கள் செயல்களின் பலனைப் அனுபவிக்கிறார்கள். கயவர்களுக்கு கேடு வரும்: தீமை வரும். அவன் தன் கைகளால் செய்த கிரியைகளின்படி அவனுக்குத் தீமை வந்து சேரும்.” மீண்டும், வேறு வார்த்தைகளில் சொன்னால்: ‘தங்கள் அக்கிரமத்தை நீண்ட கயிற்றால் கட்டி இழுப்பது போலவும், தங்கள் பாவங்களை மாடுகளின் மேல் கிடத்தப்பட்டுள்ள கலப்பை போலவும் இட்டு இழுப்பவர்களுக்கு கேடு வரும்: அவருடைய வேகம் நெருங்கட்டும், இஸ்ரவேலின் பரிசுத்தரின் ஆலோசனை வரட்டும், அதை நாம் அறியலாம். தீமையை நல்லது என்றும், நல்லதைத் தீமை என்றும் சொல்பவர்களுக்கு ஐயோ கேடு! அது இருளுக்கு பதிலாக ஒளியையும், ஒளிக்கு பதிலாக இருளையும் வைப்பது போன்றது; அது இனிப்புக்கு பதிலாக கசப்பையும், கசப்பிற்கு பதிலாக இனிப்பையும் வைப்பது போன்றது. அதன்படி, கடவுளால் அனுப்பப்பட்ட, ஒரே குற்றமற்ற மற்றும் நேர்மையான ஒளிக்கு எதிராக கசப்பான, இருண்ட மற்றும் அநீதியான விஷயங்களை தேசம் முழுவதும் பரப்புவதில் நீங்கள் மிகுந்த வைராக்கியத்தை வெளிப்படுத்தினீர்கள். ஏனென்றால், “என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் திருடர்களுடைய குகையாக்கினீர்கள்,” என்று அவர் உரத்துக்கூறியபோது, அவர் உங்களுக்கு சிரமமாக இருப்பதாகத் தோன்றியது. பின்னர் அவர் ஆலயத்தில் பணப் பரிமாற்றம் செய்தோரின் மேசைகளையும், குதிரைகளையும் கவிழ்த்து, ““வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். உங்கள் உடமைகள் அனைத்திலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்குக் காணிக்கை ஆக்குகிறீர்கள். புதினா, வெந்தயம் மற்றும் சீரகத்திலும் கூட. ஆனால் கட்டளைகளில் மிக முக்கியமானவற்றை நீங்கள் பின்பற்றுவதில்லை. அதாவது, நியாயமாகவும் கருணையுடனும் நேர்மையாகவும் விளங்கவேண்டும் என்பதை விட்டுவிடுகிறீர்கள். இவைகளே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள். மேலும் மற்ற நற்செயல்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள், அவை வெளிப்புறமாக அழகாகத் தோன்றினாலும், உள்ளே இறந்தவர்களின் எலும்புகளால் நிறைந்துள்ளன.” மேலும் அவர் வேதபாரகரிடம், “வேதகாரர்களே, குருட்டு வழிகாட்டிகளே! திறவுகோல் உங்களிடம் உள்ளது. நீங்களும் உள்ளே நுழையமாட்டீர்கள். நுழைபவர்களைத் தடுக்கவும் செய்கிறீர்கள்,” என்று எழுதியுள்ளது.
அத்தியாயம் 18
டிரிபோ, நீங்கள் நம்முடைய இரட்சகராகிய கர்த்தருடைய போதனைகளை படித்ததாக ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதால், அவருடைய சில சிறிய சொற்களை தீர்க்கதரிசிகளின் மேற்கோள்களுடன் சேர்த்தது அவசியமற்றது என்று நான் கருதவில்லை: “உங்களை கழுவுங்கள், சுத்தமாக இருங்கள். உங்கள் மனங்களில் இருந்து தீமையை நீக்கிவிடுங்கள்.” இவ்விதமாக உங்களை இந்தக் தொட்டியில் கழுவி சுத்தம் செய்து, உண்மையான விருத்தசேதனம் உங்களண்டை இருக்கும்படி கடவுள் கட்டளையிடுகிறார். நாங்களும் உங்கள் சரீர விருத்தசேதனத்தையும், உங்கள் ஓய்வு நாட்களையும், உங்கள் எல்லா பண்டிகைகளையும் கடைபிடிப்போம். அவை ஏன் உங்கள் மீது சுமத்தப்பட்டன, அதாவது உங்கள் பாவங்கள் மற்றும் உங்கள் மனங்களின் கடினத்தன்மை ஆகியவற்றின் காரணத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை. கொடிய மனிதர்களாலும், சாத்தான்களாலும் நம்மீது சுமத்தப்படும் எல்லாத் தீமைகளையும் பொறுமையாகச் சகித்துக் கொண்டு, இன்னும், விவரிக்க முடியாத சித்திரவதைகள் மற்றும் மரண வேதனைகளுக்கு நம்மைத் உட்படுத்துபவர்களிடம் கூட கொஞ்சம் இரக்கத்தைக் காண்பியுங்கள். நமது புதிய சட்டமியற்றுபவர் ஆணையிட்டது போல், ட்ரிபோ, சரீர விருத்தசேதனம், ஓய்வுநாள் மற்றும் பண்டிகைகள் போன்ற நமது சரீரத்துக்கு தீங்கு செய்யாத சடங்குகளை நாம் ஏன் கடைப்பிடிக்கக்கூடாது?’
அத்தியாயம் 19
“இதனால்தான், நாங்கள் இழந்தவர்களாக இருக்கிறோம், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் இதுபோன்ற விஷயங்களைச் சகித்துக்கொண்டிருந்தாலும், நாங்கள் இப்போது விவாதிக்கும் மற்ற எல்லா பழக்கவழக்கங்களையும் நீங்கள் கடைப்பிடிப்பதில்லை.” “இந்த விருத்தசேதனம் எல்லா மனிதர்களுக்கும் அவசியமில்லை, ஆனால் உங்கள் போன்றவர்களைத் தவிர. நான் ஏற்கனவே கூறியது போல், நீங்கள் இப்போது வழக்கமாக அனுபவிக்கும் இந்த விஷயங்களை நீங்கள் தொடர்ந்து அனுபவிக்கலாம். மேலும் அந்த பயனற்ற தொட்டிகளில் கொடுக்கப்படும் தேவையேயற்ற ஞானஸ்நானத்தை நாங்கள் பெற மாட்டோம். ஏனென்றால், வாழ்வு தரும் ஞானஸ்நானத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதேநேரம் நீங்கள் ஜீவனுள்ள நீரூற்றாகிய அவரைக் கைவிட்டீர்கள் என்றும், தண்ணீர் நிரப்ப முடியாத, உடைந்த தொட்டிகளை நீங்களாகவே உங்களுக்கு என்று தோண்டி எடுத்துள்ளீர்கள் என்றும் அறிவித்தார். சரீர விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களே, நாங்கள் எங்களுக்காக செய்துகொண்ட உள்ளத்தாலான விருத்தசேதனம் தான் இப்போது உங்களுக்குத் தேவை. ஆகையால், நாம் பின்னைய, அதாவது, உள்ளத்தாலான விருத்தசேதனத்தத்தை நாம் கொண்டிருப்பதால், முந்தைய சரீர விருத்தசேதனம் எமக்குத் தேவை என்று நாங்கள் கோரவில்லை. இரட்சிப்புக்கு விருத்தசேதனம் அவசியம் என்று நீங்கள் கூறுவீர்களானால், கடவுள் ஆதாமை விருத்தசேதனம் செய்யாமல் படைத்திருக்க மாட்டார்; விருத்தசேதனம் செய்யப்படாத ஆபேலின் பலியை அவர் கருணையுடன் பார்த்திருக்க மாட்டார், அல்லது விருத்தசேதனம் செய்யப்படாத ஈனோக்கைப் பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டார், அவர் “அதன் பின் காணப்படவில்லை, ஏனென்றால் கடவுள் அவரை எடுத்துக் கொண்டார்”. கர்த்தரும் அவருடைய தூதர்களும் லோத்தை சோதோமிலிருந்து வெளியேற்றினார்கள். இதனால் விருத்தசேதனம் செய்யாமல் காப்பாற்றப்பட்டார். நோவா, விருத்தசேதனம் செய்யப்படாத எங்கள் இனத்தின் தந்தை, பேழையில் தனது குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருந்தார். உன்னதமானவரின் குருவாகிய மெல்கிசேதேக் விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை, ஆயினும், சரீரமய விருத்தசேதனத்தை முதலில் ஏற்றுக்கொண்ட ஆபிரகாம், அவருக்கு தசமபாகம் செலுத்தி, அவரால் ஆசீர்வதிக்கப்பட்டார்; உண்மையில், கடவுள், தாவீதின் மூலம், மெல்கிசேதேக்கின் கட்டளைப்படி, அவரை என்றென்றும் குருவாக நிலைத்திருக்குமாறு பணித்தார். ஆகவே, யூதர்களாகிய உங்களுக்கு மட்டுமே தான் விருத்தசேதனம் அவசியம் போலிருக்கிறது. பன்னிரண்டு தீர்க்கதரிசிகளில் ஒருவரான ஓசியா; “உன் மக்கள் கூட்டம் ஒரு குழுவாக இருக்கக்கூடாது, உன் தேசம் ஒரு ஒருமித்த தேசமாக இருக்கக்கூடாது,” என்று கூறுவதாக அறிகிறோம். மேலும், இந்த மனிதர்கள் அனைவரும் தேவனுடைய பார்வையில் நீதியும் பிரியமுமானவர்கள், ஆனாலும் அவர்கள் ஓய்வு நாட்களைக் கடைப்பிடிக்கவில்லை. பாலைவனத்தில் தங்கக் கன்றுக்குட்டியை சிலையாக வடிவமைத்ததன் மூலம், உங்கள் மக்கள் பொல்லாதவர்களாகவும் கடவுள் மீது நன்றியற்றவர்களாகவும் தங்களைக் காட்டிக்கொண்டனர். மோயீசனின் காலம் தொட்டு ஆபிரகாமின் காலம் வரையிலும் வாழ்ந்த அவர்களுடைய சந்ததியினரையும் பற்றி இங்கே சொல்லலாம். எனவே, கடவுள் தனது சட்டங்களை அந்த பலவீனமான மக்கள் சார்பாக மாற்றியமைத்து, உருவ வழிபாட்டிலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக அவருடைய பெயருக்கு காணிக்கைகளை செலுத்தும்படி கட்டளையிட்டார். இருப்பினும் நீங்கள் அதற்கும் கீழ்ப்படியவில்லை. ஆனாலும், உங்கள் குழந்தைகளை நீங்கள் பிசாசுகளுக்குப் பலியிடத் தயங்கவில்லை. மேலும், ஓய்வு நாட்களைக் கடைப்பிடிப்பது என்பது கடவுளால் உங்களுக்கு அருளப்பட்ட கட்டளை. இதனால் அவரைப் போலவே, நீங்கள் அவரை நினைவில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
அத்தியாயம் 20
சில மாமிச வகைகளை உண்பதற்கு உங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது, அதனால் நீங்கள் அவற்றை உண்ணும்போதும் குடிக்கும்போதும், கடவுளை உங்கள் கண்களுக்கு முன்பாக கொண்டுவருகிறீர்கள். ஏனென்றால் மோசே சாட்சியமளிப்பது போல் நீங்கள் எப்போதும் அவரை மறந்துவிடுகிறீர்கள். “மக்கள் நன்றாக உண்டு, குடித்து துள்ளி எழுந்தார்கள்.” மேலும் மற்றொரு பத்தியில்: “யாகோப் வயிறார உண்டு கொளுத்திருந்தார்; அவர் நன்றாக கொழுத்து, கொழுத்த காளையைப் போன்று உதைத்தார், (ஆமாம், நீங்கள் நன்றாகப் போஷிக்கப்பட்டீர்கள்! நீங்கள் திருப்தியாகி கொழுத்தீர்கள்.) அவர் தன்னை உண்டாக்கின தேவனை விட்டு விலகினார். தன்னை இரட்சித்த பாறையை (தேவன்) விட்டு ஓடினார்.” உண்மையில், மோசே ஆதியாகமம் புத்தகத்தில் உங்களை போன்றவர்களை நோக்கி கூறுகையில், நீதிமானான நோவா கழுத்து நெரித்து கொல்லப்பட்ட விலங்குகளின் இரத்தம் தோய்ந்த மாமிச வகைகளைத் தவிர, அனைத்து வகையான மாமிச வகைகளையும் உண்ண இறைவன் அனுமதித்தார். “பச்சை தாவர வகைகள்” என, டிரிஃபோ இடைமறித்து கூறப்போனபோது, நான் அவரைத் தடுத்து, “அந்த வார்த்தைகளை ஏன் பச்சை தாவர வகைகள் என்று நீங்கள் அழுத்தமாக விளக்குகிறீர்கள்?” என்று கேட்டேன். அதாவது கடவுள் அவற்றைப் பேசிய அர்த்தத்தில், கடவுள் மனிதனுக்கு உண்டு வாழ பச்சைத் தாவரங்களைக் கொடுத்தது போல, விலங்குகளையும் கொடுத்தாரா என்று தானே கேட்கிறீர்கள்? ஆனால் தாவரங்களுக்கும் மாமிசங்களுக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்த நோவாவுக்கு கட்டளையிடப்பட்டதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் நாங்கள் இப்போது எல்லா வகையான தாவரங்களையும் உண்பதில்லை என்பதனால். அத்தகைய முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது. என்னால் எளிதாக நிரூபிக்க முடியும், ஆனால் ஒவ்வொரு காய்கறியும் ஒரு மூலிகை, ஆதலால் அவற்றை உண்ணலாம் என்பதை இங்கே விபரித்து அமைத்து நேரத்தை செலவிட வேண்டாம். இப்போது, நாம் அவற்றுக்கிடையே வேறுபாட்டை விளக்கி, அவற்றில் சிலவற்றை உண்ண மறுப்பதற்கு காரணம் அவை பொதுவானவை மற்றும் அசுத்தமானவை என்பதற்காக அல்ல, மாறாக அவை கசப்பானவை, அல்லது விஷம் உள்ளவை அல்லது முட்களுடன் சேர்ந்து இருப்பதால் தான் அவற்றை வேறுபடுத்தி நாம் அவ்வாறு செய்கிறோம்; ஆனால், இனிப்பான, ஊட்டமளிக்கும், நல்ல தாவரங்கள் மண்ணிலிருந்து வந்தாலும், கடலிலிருந்து வந்தாலும் நாம் உண்ணவும், அனுபவிக்கவும் செய்கிறோம். பின்னர், கடவுள், மோசே மூலம், அனைத்து அசுத்தமான, தீங்கு விளைவிக்கும் மற்றும் மூர்க்கத்தனமான விலங்குகளிலிடமிருந்து விலகி இருக்குமாறு கட்டளையிட்டார். ஏனென்றால், நீங்கள் பாலைவனத்தில் வானத்தில் இருந்து பொழிந்த மன்னாவை உண்டு, உங்களுக்காக கடவுள் செய்த அனைத்து அற்புதங்களையும் பார்த்த பிறகும், நீங்கள் தங்கத்தாலான கன்றுக்குட்டியை உருவாக்கி அதை வணங்குவதற்கு நீங்கள் தயங்கவில்லை. அதன் காரணமாகத்தான் கடவுள் உங்கள் போன்றோரைப் பற்றி மீண்டும் மீண்டும் “விசுவாசம் இல்லாத முட்டாள் சனங்களே!” என்று கூறுகிறார்.
அத்தியாயம் 21
நான் முன்பு கூறியது போல், உங்கள் பாவங்கள் மற்றும் உங்கள் மூதாதையர்களின் பாவங்களின் காரணமாக, மற்றைய கட்டளைகளுக்கு நடுவில், ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதை ஒரு அடையாளமாக கடவுள் உங்களுக்கு விதித்தார். உங்களில் எவரையும் அவர் இன்று உயிருடன் நடமாட அனுமதித்தற்கான ஒரே காரணம், புறஜாதியார்கள் மத்தியில் அவருடைய திருநாமம் களங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே என்றும் அவர் கூறுகிறார். இதற்கு தெளிவான ஆதாரம் வேண்டுமெனில், எசேக்கியேல் மூலம் அவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்: நானே கர்த்தர். நானே உங்கள் தேவன். எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். எனது கட்டளைப்படி, ஓய்வு நாட்கள் எல்லாம் முக்கியமானவை என்று காட்டுங்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே அவை சிறப்பான அடையாளங்களாக இருப்பதை நினைவுகொள்ளுங்கள். ஆனால், அவர்களின் பிள்ளைகளோ எனக்கு எதிராகக் கலகம் செய்தனர். நியமங்களைக் கடைபிடிப்போர்க்கு வாழ்வளிக்கும் என் நியமங்களின் படி அவர்கள் நடக்கவில்லை. என் நீதிநெறிகளையும் கடைபிடித்து ஒழுகவில்லை. என் ஓய்வு நாள்களை அவர்கள் இழிவுபடுத்தினார்கள். எனவே, பாலைநிலத்திலேயே என் ஆத்திரத்தை அவர்கள்மேல் கொட்டி, என் சினத்தைத் தீர்த்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்.
ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நான் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்ததை மற்ற நாட்டினர் பார்த்தனர். நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை. எனவே மற்ற நாடுகளின் முன்னால் நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. மேலும் அவர்களை வேற்றினத்தாரிடையே பிரிந்துபோகச் செய்வதாகவும், நாடுகளிடையே சிதறிப்போகச் செய்வதாகவும், பாலைநிலத்தில் அவர்களுக்கெதிராக ஆணையிட்டுக் கூறினேன். ஏனெனில், என் நீதிநெறிகளின்படி அவர்கள் செய்யவில்லை; என் நியமங்களை ஒதுக்கிவிட்டார்கள்; என் ஓய்வு நாள்களை இழிவுபடுத்தினார்கள்; அவர்களின் மூதாதையரின் தெய்வச் சிலைகளை வணங்கினார்கள். ஆகவே அவர்களுக்கு நன்மை பயக்காத நியமங்களையும், ஆதாரமற்ற நீதி நெறிகளையும் அளித்தேன். கருப்பையைத் திறக்கும் அனைத்தையும் அழிக்க நான் கடந்து செல்லும்போது, அவர்களுக்கு அளிக்கப்பட சொந்த வரங்களைக் கொண்டே நான் அவர்களை அசுத்தப்படுத்துவேன்.”
அத்தியாயம் 22
‘அவருக்குப் பலியிடும்படி கடவுள் உங்களுக்குக் கட்டளையிட்டது அவருக்கு இத்தகைய பலிகள் தேவைப்பட்டதால் அல்ல, மாறாக உங்கள் மக்களின் பாவங்களுக்காக, குறிப்பாக உருவ வழிபாட்டின் மூலம் அவர்கள் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக. பன்னிரெண்டு தீர்க்கதரிசிகளில் ஒருவரான ஆமோஸ் சொன்னதை நீங்கள் கேட்டால் நீங்கள் என் கூற்றின் உண்மைத் தன்மையை ஒப்புக்கொள்வீர்கள்: “கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ கேடு! அதனால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கர்த்தருடைய நாள் ஒளியாக இன்றி இருளாக இருக்கும். சிங்கத்திற்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டிற்குள்ளே வந்து சுவரின்மேல் தன்னுடைய கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும். கர்த்தருடைய சிறப்பு நாள் ஒளியை அல்ல இருளையே கொண்டு வரும். அந்நாள் மகிழ்ச்சியை கொண்டு வராது ஆனால் துக்கத்தைக் கொண்டு வரும். அந்நாள் கொஞ்சமும் ஒளி இல்லாத இருள் சூழ்ந்த நாளாயிருக்கும். “நான் உங்கள் விடுமுறை நாட்களை வெறுக்கிறேன். நான் அவற்றை ஏற்கமாட்டேன். உங்கள் ஆன்மீகக் உறவுகளால் நான் மகிழவில்லை. நீங்கள் தகனபலியையும் தானியக் காணிக்கையையும் எனக்குக் கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீங்கள் தரும் சமாதான பலியில் பலியிடக் கொண்டுவந்த கொழுத்த மிருகங்களை நான் ஏறெடுத்தும் பார்க்கக்கூடமாட்டேன். நீங்கள் உங்கள் இரைச்சல் தரும் பாடல்களை இங்கிருந்து அகற்றுங்கள். நான் உங்கள் வீணைகள் ஒலிக்கும் இசையைக் கேட்கமாட்டேன். நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் கரை புரண்டு ஓடட்டும். இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலே இருந்த நாற்பது வருட காலங்களாக பலிகளையும், காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களா? நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்களுடைய தெய்வங்களின் நட்சத்திர ராசியாகிய உங்களுடைய ரபானின் சிலைகள் அடங்கிய பல்லக்கையும் தானே சுமந்துகொண்டு வந்தீர்கள்? எனவே நான் உங்களை தமஸ்குஸ் என்ற நகரத்துக்கு அப்பால் கொண்டு சென்று விடுவேன்,” என்று எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கிறார். சீயோனின் செல்வந்தர்களுக்கும், சமாரியா மலையில் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் ஐயோ கேடு. தலைவர்கள் எனப்பட்டவர்கள் தேசங்களின் முதல் கனிகளை அறுவடை செய்தார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் அவர்கள் மத்தியில் நுழைந்தார்கள். நீ சாலேனுக்குப் போய்ப் பார்; அங்கிருந்து பெரிய ஆமத்துக்குப் போ; பின்னர், அந்நியர்களின் நகரமான கெத்துக்குச் செல், இந்த எல்லா இராச்சியங்களிலும் சிறந்தது எதுவென்றாலும், அவர்களின் எல்லைகள் உங்கள் எல்லைகளை விட பெரியதாகவே இருக்கும். பொல்லாத நாளையொட்டி அங்கு வருகிறவர்கள், சமீபமாய் வந்து, பொய்யான ஓய்வு நாட்களைக் கடைப்பிடிப்பவர்கள்; விலையுயர்ந்த யானைத் தந்தத்திலான கட்டில்களில் ஆடம்பரமாக உறங்குவதும்; ஆடம்பரமான மேசைகளில் தயார்செய்யப்பட்ட உணவுகளை உண்டுகளிப்பதும், மந்தையிலிருந்து ஆட்டுக்குட்டிகளையும், மந்தையின் நடுவிலில் பாலை உறிஞ்சும் கன்றுகளையும் விட்டுவைக்காதவர்கள்; இசைக்கருவிகளின் ஒலியில் மகிழ்ந்து கைதட்டுபவர்கள் இவர்கள். இவை யாவும் நிரந்தரமானவை என்றும், அழிவில்லாதது என்றும் அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் பாத்திரங்களில் திராட்சரசம் குடித்து, சிறந்த தைலங்களைத் தங்களைத் தாங்களே பூசிக்கொள்கிறார்கள், அவர்கள் யோசேப்பின் துன்ப நிலையை எண்ணி வருந்தவில்லை. ஆதலால், அவர்கள் இப்போது சிறைபிடிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்; மேன்மக்களில் முதன்மையானவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள், தீயவர்களின் வீடு அகற்றப்படும், இடைவிடாது கனைக்கும் குதிரைகள் எப்பிராயீமிடம் இருந்து அகற்றப்படும். எரேமியா இதுபற்றி என்ன சொல்கிறது என்று நோக்குவோம்: “இஸ்ரயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் தகனபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அவற்றின் மாமிசத்தை நீங்களே புசியுங்கள். உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது தகனபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவுமில்லை; கட்டளையிடவும் இல்லை. மேலும் தாவீது தனது நாற்பத்தொன்பதாவது சங்கீதத்தில் இவ்வாறு கூறுகிறார்: “தேவர்களின் கடவுள், கர்த்தர். சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை பூமியை ஆதிக்கம் செலுத்தினார். சீயோனிலிருந்து அவருடைய மகிமை முழுமை பெற்றது. எங்கள் கடவுளாகிய தேவன் எல்லோரும் அறியும்வண்ணம் வெளிப்படையாக வருவார்; இரகசியமாக வர மாட்டார். அவருக்கு முன்பாக அக்கினி சுவாலைவிட்டு எரியும், பலத்த புயல் அவரைச் சுற்றி வீசும். அவர் தம் மக்களை நடுத்தீர்க்க மேலிருந்து வானத்தையும் பூமியையும் அழைப்பார். அவருடைய பரிசுத்தவான்கள் அனைவரும் தங்கள் பலிகளைச் செலுத்துவதற்கு முன் அவருடன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு அமைய அவர் முன் வரட்டும். நியாயாதிபதியாகிய தேவனுக்காக வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும். கேளுங்கள் ஓ! என் மக்களே, நானும் பேசுவேன்; இஸ்ரவேலே, நான் உனக்குச் சாட்சி கூறுவேன்: நானே தேவன், உன் தேவன்; ஆனால் உனது தகனபலி எப்பொழுதும் என் பார்வையில் இருந்து போகாது. நான் உன் வீட்டிலிருந்து கன்றுகளை எடுக்கமாட்டேன், உன் மந்தையிலிருந்து வெள்ளாடுகளை எடுக்கமாட்டேன். ஏனென்றால், காட்டு மிருகங்களும், மலையிலுள்ள கால்நடைகளும், எருதுகளும் என்னுடையவைகள். வானத்தில் சஞ்சரிக்கும் அனைத்துப் பறவைகளையும் நான் அறிவேன், இயற்கையின் அழகை நான் என்னுடன் வைத்திருக்கிறேன். நான் பசியாக இருந்தால், நான் உன்னிடம் சொல்ல மாட்டேன், ஏனென்றால் உலகமும் அதன் முழுமையும் என்னுடையது. நான் காளை மாடுகளின் மாமிசத்தைப் புசிக்கக்கூடுமோ? அல்லது ஆடுகளின் குருதியை அருந்தக் கூடுமோ? தேவனுக்கு ஸ்தோத்திரத்தை காணிக்கையாய் செலுத்தி உன்னதமானவருக்கு உமது வாக்குறுதிகளை நிறைவேற்றி, ஆபத்து வேளைகளில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், அப்போது நீ என்னை மகிமைப்படுத்துவாய். ஆனால் பாவியிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: நீங்கள் ஏன் என் சட்டங்களை அறிவிக்கிறீர்கள், உங்கள் வாயால் என் உடன்படிக்கையை உச்சரிக்கிறீர்கள்? நீங்கள் ஒழுக்கத்தை வெறுத்து என் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுத்தீர்கள்.நீங்கள் ஒரு திருடனைக் கண்டால், நீங்கள் அவனைப் பின்தொடர்ந்து ஓடியிருப்பீர்கள். விபச்சாரம் செய்பவர்களோடு நீங்களும் பங்காளிகளாய் ஆகியிருப்பீர்கள். உன் வாய் தீமையினால் நிறைந்திருக்கிறது, உன் நாக்கு வஞ்சகத்தைப் பேசுகிறது. நீ உன் சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, உன் தாயின் மகனுக்கு விரோதமாக அவதூறு செய்தாய். இவைகளை நீ செய்தபோது, நான் அமைதியாக இருந்தேன். நீ உன் அக்கிரமத்தில் தொடர்ந்து இருந்தாலும், நான் உன் வழியில் சென்று உன்னை மீண்டும் சோதித்து, உன் கண்களுக்கு முன்பாக உன் பாவங்களை கொண்டு வருவேன். கடவுளை மறந்தவர்களே, இவற்றைப் புரிந்து கொள்ளுங்கள்; அவர் உன்னை எடுத்துக்கொண்டால், உன்னைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். துதியின் காணிக்கை என்னை மகிமைப்படுத்தும், என் இரட்சிப்பை நான் அவருக்குக் காண்பிக்கும் வழி இருக்கிறது. எனவே, உங்கள் பலி, மற்றும் காணிக்கைகள் கடவுளுக்கு ஏற்கத்தக்கவை அல்ல, அல்லது கடவுளின் தேவை காரணமாக அவற்றைச் செலுத்தவேண்டுமென முதலில் உங்களுக்கு யாராலும் கட்டளையிடப்படவில்லை, ஆனால் உங்கள் பாவங்களின் காரணமாகவே நீங்கள் அதைச் செய்தீர்கள். தேவாலயத்துக்கும் இது பொருந்தும். நீங்கள் ஜெருசலேம் தேவாலயம் என்று அதைக் குறிப்பிடுகிறீர்கள். கடவுள் அதை அவரது இல்லம் அல்லது நீதிமன்றம் என்று அழைத்தார். அவருக்கு ஒரு இல்லமோ அல்லது நீதிமன்றமோ தேவை என்பதற்காக அல்ல. ஆனால் அந்த இடத்தில் உங்களை அவருடன் இணைத்துக்கொள்வதால், நீங்கள் சிலைகளை வணங்குவதைத் தவிர்க்கலாம். இதை ஏசாயாவின் வார்த்தைகளால் நிரூபணமாகிறது: “கர்த்தர் கூறுகிறார்; எனக்கு ஏன் இந்த இல்லத்தை நிர்மாணித்தாய்? பரலோகம் என் சிம்மாசனம், பூமி என் பாதத்தின் படி.”
அத்தியாயம் 23
இந்த முடிவை நாம் ஏற்கவில்லை என்றால், நாம் அபத்தமான கருத்துக்களில் விழுந்துவிடுவோம், ஏனென்றால் எங்கள் கடவுள் ஈனோக்கின் நாட்களில் இருந்த அதே கடவுள் அல்ல என்றும், மற்ற அனைவருமே சரீர விருத்தசேதனம் செய்யவில்லை என்றும், ஓய்வு நாட்களையும் மற்ற சடங்குகளையும் கடைப்பிடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டிருப்போம். ஏனெனில் மோயீசன் அவற்றை பிற்காலத்தில் விதித்தார்; அல்லது வரவிருக்கும் ஒவ்வொரு தலைமுறையும் எப்போதும் ஒரே மாதிரியான நீதியை முன்கொண்டு செல்ல வேண்டும் என்று கடவுள் விரும்பாமலிருந்திருக்கலாம். ஆகவே அனுமானம் அபத்தமானது மற்றும் சுய அறிவுக்கு அப்பாற்பட்டது. ஆகவே, கடவுள் என்றும் மாறாதவர் என்றும், பாவங்கள் செய்தோர் நிமித்தம் இவற்றையும் இதே போன்ற நல்லவற்றையும் செய்யுமாறு கட்டளையிட்டார் என்றும், அதே சமயம், எல்லா மனிதர்களிடமும் அனுதாபமுள்ளவராகவும், விவேகமுள்ளவராகவும், எதையும் எதிர்பார்க்கத்தவராகவும், நியாயமானவராகவும், நல்லவராகவும் இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். என் அன்பு நண்பர்களே, நான் தவறாக இருந்தால், இந்த விஷயத்தில் உங்கள் கருத்துக்களைக் கேட்கிறேன். எனக்கு எந்த பதிலும் வராததால், என்னைத் தொடர அனுமதியுங்கள்.’ டிரிபோ, உங்களுக்கும், மதம் மாற விரும்புபவர்களுக்கும், அந்த முதியவரிடமிருந்து நான் பெற்ற பரலோகக் கோட்பாட்டை மீண்டும் பகிர்ந்துகொள்கிறேன். உறுப்புகள் எப்போதும் செயற்றிறன் உடையதாக இருப்பதையும், அவற்றுக்கு ஓய்வு நாள் என்று எதுவும் இல்லை என்பதையும் நீங்கள் அறியவில்லையா? நீங்கள் பிறந்த போது எப்படி இருந்தீர்களோ அப்படியே இருங்கள். ஆபிரகாமின் காலத்திற்கு முன்பு விருத்தசேதனம் தேவையில்லை, மோயீசனின் காலத்துக்கு முன்பு ஓய்வுநாட்கள், பண்டிகைகள், காணிக்கைகள் அவசியமாக இருக்கவில்லை என்றால், கடவுளுடைய சித்தத்தின்படி அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இருந்த காலத்தின் போதும் அவை தேவையில்லாததாகவே இருந்திருக்குமல்லவா? ஆபிரகாமின் வழித்தோன்றலான கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்தவர் கர்த்தராகிய இயேசு. உண்மையில், ஆபிரகாம் விருத்தசேதனம் செய்யாமல் இருந்தபோதும் கூட, வேதவாக்கியங்கள் நமக்குச் சொல்வதைப் போல, அவர்மீது கொண்ட விசுவாசத்தின் காரணமாக அவர் கடவுளால் நியாயப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார். மேலும், ஆபிரகாம் ஒரு அடையாளத்திற்காக விருத்தசேதனம் செய்துகொண்டார். நியாயப் படுத்தப்பட வேண்டும் என்பதற்காக அல்ல என்பதை ஒப்புக்கொள்ளும் படி வேதங்களும், பிற சான்றுகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன. இவ்வாறு, உங்கள் மக்களைப் பற்றி நியாயமாகச் சொல்லப்பட்டது: “எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்படாத அந்த ஆன்மா அவருடைய மக்கள் மத்தியிலிருந்து அப்புறப்படுத்தப்படும்.” மேலும், பெண்கள் சரீர விருத்தசேதனத்தை செய்துகொள்ள முடியாது, இது உண்மை. ஏனெனில், விருத்தசேதனம் ஒரு அடையாளமாக மட்டுமே வழங்கப்பட்டது. நியாயப்படுத்துவதற்கான செயலாக அல்ல என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு நல்ல மற்றும் நியாயமான செயல்களைச் செய்யும் திறனையும் கடவுள் பெண்களுக்கு வழங்கியுள்ளார். ஆண் மற்றும் பெண்ணின் உடல் அமைப்பு வேறுபட்டது என்பதை நாம் காண்கிறோம், ஆனால் உடல் வடிவம் அவர்கள் இருவரையும் நல்லவர்களாகவோ அல்லது தீயவர்களாகவோ காட்டுவதில்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அவர்களின் இறையச்சம் மற்றும் நீதியின் கிரியைகளால் அவர்களின் நீதி தீர்மானிக்கப்படுகிறது.’
அத்தியாயம் 24
நான் தொடர்ந்தேன், நண்பர்களே, ‘ஏழாவது நாளைக் காட்டிலும், எட்டாவது நாளுக்கு சில மர்மமான அர்த்தம் (இந்த சடங்குகள் மூலம் கடவுள் நமக்குத் தெரிவித்தது) ஒன்று உண்டு. அது என்ன, எப்படிப்பட்டது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். ஆனால், நான் விஷயத்திற்கு அப்பால் செல்கிறேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் இப்போது என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். சரீர விருத்தசேதனம் இப்போது ஒழிக்கப்பட்டு விட்டது. இப்போது நாம் மீட்பின் இரத்தத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறோம். மற்றொரு ஏற்பாடு, ஒரு புதிய சட்டம், இப்போது சியோனிலிருந்து வெளிவந்துள்ளது. பண்டைய காலத்தில் கற்பித்தபடி, இயேசு கிறிஸ்து கல் மற்றும் கத்திகளால் விருத்தசேதனம் செய்கிறார் என்றும், அதன்மூலம், அவ்வாறான தேசத்து மக்கள் தங்களை நீதியுள்ளவர்களாக, உண்மையுள்ள, நன்றியுள்ள, ஒழுக்கமுள்ள, சமாதானத்தை விரும்பும் மக்களாக மாற்ற விரும்பினார்கள் என்றும் சொல்லப்பட்டது. தேவபயமுள்ளவர்களே, ஜெருசலேமின் நன்மையைக் காண விரும்புகிறவர்களே, நீங்கள் அனைவரும் என்னுடன் வாருங்கள். “கர்த்தருடைய வெளிச்சத்தில் நடப்போம் வாருங்கள். ஏனெனில் அவர் தம்முடைய மக்களை, யாக்கோபின் வீட்டாரை விடுவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து தேசங்களும் ஓரணியில் திரளுங்கள், நாம் எருசலேமில் ஒன்றுகூடுவோம், மக்களின் பாவங்கள் காரணமாக இனிமேலும் போரினால் பாதிக்கப்படாமல் இருப்போம். ஏசாயாவின் வாயால் ஆண்டவர் எம்மை நோக்கிக் கூறியிருப்பது போல், “என்னைத் தேடாதவர்களுக்கு முன்பாக நான் காட்சியளித்தேன்; என்னை பற்றிக் கேள்விப்படாதவர்கள் முன்னிலையில் நான் காணப்பட்டேன், இதோ, “எனக்கு எதிராகத் திரும்பிய மக்களை ஏற்றுக்கொள்ள நான் தயாராக நின்றேன். என்னிடம் வருகின்ற மக்களுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து தீமை பயக்கும் வழியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் மனதால் விரும்பிய எல்லாவற்றையும் செய்தனர். அந்த மக்கள் எப்பொழுதும் என் முகத்துக்கு முன்னால் வந்து என்னைக் கோபமூட்டுகின்றனர்.”
அத்தியாயம் 25
‘தம்மை நியாயப்படுத்த முயல்பவர்கள், தாங்கள் ஆபிரகாமின் புத்திரர்கள் என்று கூறிக்கொண்டு, தெய்வீக மரபின் ஒரு சிறிய பகுதியையாவது நம்முடன் சேர்த்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று காத்திருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் ஏசாயா அவர்களின் நாவால் பேசியபோது, அவர் சொன்னதிலிருந்து இது தெளிவாகிறது: கர்த்தாவே! வானத்திலிருந்து கீழே பாரும்! இப்பொழுது, நிகழ்ந்துகொண்டிருக்கும் அனைத்தையும் பாரும்! பரலோகத்திலுள்ள உமது பெருமையும். பரிசுத்தமும் கொண்ட வீட்டிலிருந்து என்னைப் பாரும்! என் மீதிருந்த உமது பலமான அன்பு எங்கே? எனக்கான உமது இரக்கம் எங்கே? என்னிடமிருந்து உமது கருணையை ஏன் மறைத்தீர்? பாரும். நீர் எமது தந்தை! எங்களை ஆபிரகாம் அறியமாட்டார். இஸ்ரவேல் (யாக்கோபு) எங்களை அடையாளம் காணவில்லை. ஆனால், கர்த்தாவே, எங்கள் பிதாவே, நீர் எங்களை விடுவித்தருளும். ஆரம்பத்திலிருந்தே, உமது நாமம் எங்கள் மேல் இருக்கிறது. ஆண்டவரே, ஏன் எங்களை உமது வழியிலிருந்து விலகச் செய்தீர்; நாங்கள் ஏன் உமக்குப் பயப்படாதபடிக்கு எங்கள் மனங்களைக் கடினப்படுத்தினோம்? உமது சுதந்தரத்தின் கோத்திரங்களாகிய உமது அடியார்களுக்காக மீண்டும் வாரும், உமது பரிசுத்தமெனும் மகத்துவத்தை கொஞ்சம் பெற எங்களை அனுமதியும். நீர் எங்களை ஆளாதபோதும், உமது பெயரால் நாம் உம்மை அழைக்காத காரணத்தாலும், நாங்கள் ஆதியில் இருந்ததைப் போல ஆகிவிட்டோம். நீர் வானத்தைத் திறந்தால், மலைகள் உமக்கு முன்பாக நடுங்கும்; நெருப்புக்கு முன்பாக உருகும் மெழுகு போல அவை உருகும்; அக்கினி உமது சத்துருக்களை அழித்துவிடும், உமது நாமம் உமது எதிரிகளுக்குத் தெரியப்படுத்தப்படும் உமது முன்னிலையில் தேசங்கள் அச்சத்தால் நடுங்கும். நீ மகிமையான காரியங்களைச் செய்யும்போது, மலைகள் உமக்கு முன்பாக நடுங்கும். உலகம் தோன்றியதிலிருந்து உம்மைத் தவிர வேறு ஒரு கடவுளையும், உமது செயல்களையும், மனந்திரும்பும் உம் மக்களுக்கு நீர் காட்டும் கருணையையும் தவிர நாங்கள் வேறு எதையும் கேட்டதுமில்லை, எங்கள் கண்களால் பார்த்ததுமில்லை. நீதியில் ஈடுபட்டவர்களை அவர் சந்திப்பார், அவர்களுக்கு நீங்கள் காட்டிய வழிகளை அவர்கள் நினைவில் கொள்வார்கள். இதோ, நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள், நாங்கள் பாவம் செய்தோம். ஆகையால், நாங்கள் தவறிழைத்தோம், அதனால், அனைவரும் அசுத்தமாகி விட்டோம். எங்கள் நீதி, நியாயம் எல்லாம் ஒரு மாதவிடாய் ஏற்பட்ட பெண் அணியும் துணியைப் போல அழுக்காகி ஆகிவிட்டன. எங்கள் அக்கிரமங்கள் நிமித்தம் நாங்கள் இலைகளாக உதிர்ந்து விழுந்தோம்; இதனால், காற்று நம்மை அள்ளிச்செல்லக்கூடும். அப்போது, உமது பெயரைக் கூப்பிடுகிறவர் எவருமில்லை, உம்மைப் பற்றிக்கொள்ள நினைப்பவர் எவருமில்லை; உமது முகத்தை எங்களுக்கு மறைத்து, எங்கள் பாவங்களிலிருந்து எங்களை விடுவித்தீர். இப்பொழுது எம்மிடத்தில் திரும்பி வாரும் ஆண்டவரே, நாங்கள் அனைவரும் உமது மக்கள். உமது பரிசுத்த நகரம் பாலைவனமாகிவிட்டது; சீயோன் பாலைவனம் போன்றாகி விட்டது; ஜெருசலேம் ஒரு சாபத்துக்குரிய நகரமாகி விட்டது. எங்கள் பிதாக்கள் ஆசீர்வதித்த வீடும், எங்கள் சரணாலயமும், மகிமையும் நெருப்பால் எரிக்கப்பட்டு விட்டது. மேலும் எங்கள் புகழ்பெற்ற வழக்கங்கள் அனைத்தும் சிதைந்துவிட்டன. இவைகளைத் தவிர, ஆண்டவரே, நீர் உம்மை மறைத்து, உமது அமைதியைத் தொடர்ந்தீர். நீர் எங்களை மிகவும் தாழ்மையுள்ளவர்களாக ஆக்கினீர். அப்போது, ‘நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது,’ என்று டிரிபோ இடைமறித்து; “அப்படியானால், கடவுளின் புனிதமான பர்வதத்தில் யூதர்களாகிய நாம் எந்த உரிமைக்கும் தகுதியற்றவர்கள் என்று தானே சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அத்தியாயம் 26
‘நான் அப்படிச் சொல்லவில்லை,’ ஆனால், ‘கடந்த காலத்தில் கிறிஸ்துவைத் துன்புறுத்தியவர்களும், இன்னும் மனந்திரும்பாமல் இருப்பவர்களும், அப்படியானவர்கள் இப்போதுவரை மனந்திரும்பா விட்டால், பரிசுத்த பர்வதத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று தான் நான் சொல்கிறேன். அதேசமயம், கிறிஸ்துவை விசுவாசித்து, தங்கள் பாவங்களுக்காக வருந்துகிற பிறவினத்தவர் விருத்தசேதனம் செய்யாமலும், ஓய்வுநாட்கள் மற்றும் பண்டிகைகளைக் கடைப்பிடிக்காமலும் இருந்தாலும், முற்பிதாக்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் யாக்கோபின் ஒவ்வொரு நீதிவழுவா சந்ததியினரோடும் சேர்ந்து அவர்களுக்கான உரிமைகளை பெறுவார்கள். அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கடவுளின் பரிசுத்த ஆஸ்தியில் பங்கு பெறுவார்கள், ஏனெனில், ஏசாயா மூலம் கடவுள் இவ்வாறு கூறுகிறார்: ““கர்த்தராகிய நான், சரியானதைச் செய்ய உன்னை அழைத்தேன். நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் ஜனங்களோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை பிறருக்குக் காட்டுவதற்கு வெளிப்புற அடையாளமாக நீ இருப்பாய். அனைத்து ஜனங்களுக்கும் ஒளி வீசும் விளக்காக நீ இருப்பாய் என்றும், குருடர்களின் கண்களை நீ திறப்பாய், அவர்களால் பார்வையைப் பெறமுடியும். சிறையில் இருக்கிறவர்களை நீ விடுவிப்பாய். பலர் இருளில் இருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருபாவனாய் இருப்பாய்” என்றும் கூறியுள்ளார். அதேபோன்று மற்றொரு பகுதியில்: “நீங்கள் மகளாகிய சீயோனை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் கொடுக்கும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடைசிவரைக்கும் கூறுகிறார். அத்தோடு “பரிசுத்தமான ஜனங்கள்; கர்த்தருடைய இரட்சிக்கப்பட்ட ஜனங்கள்” என்று அவரது ஜனங்கள் அழைக்கப்படுவார்கள்: “அது தேவன் விரும்பும் நகரம் , தேவனோடு இருக்கிற நகரம் என்று அழைக்கப்படும், கைவிடப்பட்ட நகரம் என்றல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது. ஏதோமிலிருந்து செந்நிற ஆடை அணிந்து போசோரிலிருந்து வருகிறவர் யார்? அவரது மேலங்கியில் அவர் இன்னும் மகிமையுடன் காட்சியளிக்கிறார். வலிமையின் மகத்துவத்தில் நடக்கிறார். நான் நீதியையும் இரட்சிப்பின் நியாயத்தையும் பேசுகிறேன். அப்படியானால், உமது ஆடைகள் சிவப்பு நிறமாகவும், உமது ஆடைகள் மிதித்த திராட்சை ரசம் போலவும் இருப்பது ஏன்? நான் தனியே திராட்சைகளை நசுக்கினேன், அப்போது ஜனங்கள் என்னுடன் இருக்கவில்லை; நான் அவர்களைக் கோபத்தில் மிதித்து, தரையில் இட்டு நசுக்கி, அவர்களுடைய இரத்தத்தை பூமியில் சிந்தப்பண்ணினேன். பழியின் காலம் அவர்கள் மீது வந்துவிட்டது, அதேவேளை மீட்பின் காலமும் வந்துவிட்டது. நான் பார்த்தேன், நான் யோசித்தேன், உதவிக்கு யாரும் இருக்கவில்லை; என் கையை விடுவித்தேன்; என் உக்கிரம் அவர்கள்மேல் படிந்தது, நான் அவர்களை கோப ஆக்கினையோடு மிதித்து, அவர்களின் இரத்தத்தை பூமியில் சிந்தப்பண்ணினேன்.”
அத்தியாயம் 27
மேலும் டிரிபோ, ஆட்சேபனை தெரிவிக்கும் தோரணையில் குறுக்கிட்டு, “தீர்க்கதரிசன எழுத்துக்களில் இருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து மேற்கோள் காட்டுகிறீர்கள், ஆனால் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கட்டளையிடுவதைக் குறிப்பிடவில்லையா? ஏசாயா இவ்வாறு சொல்கிறார்: ‘ஓய்வுநாளில் தேவனுடைய சட்டத்திற்கு எதிராகப் பாவம் செய்வதை எப்பொழுது நீ நிறுத்துகிறாயோ அப்போது இது நிகழும். அந்தச் சிறப்பு நாளில் உன்னை நீயே திருப்திபடுத்திக்கொள்ளும் செயல்கள் செய்வதை எப்பொழுது நிறுத்துவாயோ, அப்போது இது நடக்கும். ஓய்வுநாளை மகிழ்ச்சியான நாள் என்றும் நீ எண்ணவேண்டும். கர்த்தருடைய சிறப்பான நாளை நீ மகிமைப்படுத்த வேண்டும். மற்ற நாட்களில் நீ சொல்வதையும், செய்வதையும் அந்தச் சிறப்புநாளில் செய்யாமல் நீ அதனை மகிமைப்படுத்தவேண்டும், என்றான். அதற்கு நான் பதிலாக, “‘என் நண்பர்களே,’ தீர்க்கதரிசிகளின் போதனையிலிருந்து இதுபோன்ற பகுதிகளை நான் வேண்டுமென்றே தவிர்க்கவில்லை, ஏனென்றால் அவை எனது போதனையுடன் ஒத்துப்போகவில்லை. ஆனால் (நீங்கள் நன்றாக புரிந்துகொள்பவர்களாக இருப்பதனால்), மோயீசனின் வாயிலாக செய்தது போல், கடவுள் தம் தீர்க்கதரிசிகள் மூலம் உங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டளைகளைத் தான் வழங்குகிறார். இது உங்களுக்கு கொடுக்கப்பட்டதன் காரணம் , உங்கள் மனதில் காணப்பட்ட மன இறுக்கம் காரணமாகவும், கடினத்தன்மை காரணமாகவும், அவருக்கு நன்றியில்லாமல் செயற்பட்டதன் காரணமாகவும் தான். இதன் மூலம் நீங்கள் மனந்திரும்பினால், நீங்கள் அவரைப் பிரியப்படுத்தலாம், உங்கள் குழந்தைகளை சாத்தான்களுக்குப் பலிகொடுக்க வேண்டாம். கால்வருடன் கொண்டிருக்கும் சகவாசத்தை கைவிடுங்கள். வெகுமதிகள் பின்னால் சென்று அவற்றை அடைய முயற்சிக்காதீர்கள். தந்தையர்கள் அற்ற பிள்ளைகளை வீணாக எடைபோடாதீர்கள். விதவைக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் கைகளில் இரத்தக் கறை படியாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ‘கர்த்தர்: “சீயோனில் உள்ள பெண்கள் பெருமிதம் மற்றும் அகந்தை கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் காற்றில் தம் தலைகளைத் நிமிர்த்தியவண்ணம் திமிராக நடந்தனர். மற்றவர்களைவிடச் சிறந்தவர்களைப்போன்று நடித்தனர். அவர்கள் கண்ணடித்து, தம் கால் தண்டைகள் ஒலிக்க ஒய்யாரமாக நடந்து திரிந்தனர்,” என்றார். புரிந்துகொள்கிறவனும் எவனுமில்லை. உண்மையில் தேவனோடிருக்க விரும்புகிறவனும் யாரும் இல்லை. அவர்களின் வாய்கள் திறந்த புதைகுழிகள் போன்றவை; தங்கள் நாக்குகளை பொய் சொல்ல மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் பாம்புகளின் விஷத்தைப் போன்றது. அவர்கள் செல்லும் வழிகளில் நாசமும் துன்பமும் உள்ளன. அவர்கள் அமைதியின் வழியை அறிந்திருக்கவில்லை. ஆகவே, கடவுள் முதலில் அந்த கட்டளைகளை ஏன் கொடுத்தார் என்பதற்கு உங்கள் பாவம் காரணமாக இருந்தது தான் காரணம். இப்போது நீங்கள் பாவத்திற்கு அடிமையாகி விட்டதால், அல்லது அதற்குப் பதிலாக உங்கள் அதிக நாட்டம் காரணமாக, அதே கட்டளைகளின் மூலம், அவர் உங்களை நினைவுகூரவும் அறியவும் அழைக்கிறார். ஆனால் யூதர்களாகிய நீங்கள் நீங்கள் கடின உள்ளம் கொண்ட இரக்கமற்றவர்கள், கண்ணிருந்தும் குருடர்கள் மற்றும் முடவர்கள் போன்றவர்கள், விசுவாசம் என்பது அறவே அற்றவர்கள். கடவுளே சொல்வது போல்: “உங்கள் உதடுகளால் மட்டுமே அவரை மதிக்கிறீர்கள், ஆனால் உங்கள் இதயங்கள் அவரிடமிருந்து வெகு தொலைவில் உள்ளன, உங்கள் சொந்த கோட்பாடுகளை கற்பிக்கின்றீர்கள், அவருடைய கோட்பாடுகளை அல்ல. இப்போது சொல்லுங்கள், உங்கள் பிரதான குருக்கள் ஓய்வு நாட்களில் காணிக்கை செலுத்துவது பாவமான காரியம் என்று கடவுள் சொல்லியிருக்கிறாரா? அல்லது விருத்தசேதனம் போன்ற காரியங்களை ஓய்வு நாட்களில் செய்பவர்கள் பாவிகளா? ஏனெனில், பிறந்து எட்டாவது நாளில் – அது ஒரு ஓய்வு நாளாக இருந்தாலும் – விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்று அவர் தானே கட்டளையிட்டுள்ளார்? இவ்வாறான செயலை ஓய்வுநாளில் செய்வது பாவம் என்று அவருக்குத் தெரிந்திருந்தால், ஓய்வுநாளுக்கு ஒரு நாள் முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று அவரால் ஆணையிட்டிருக்க முடியாதா? மோயீசன் மற்றும் ஆபிரகாமின் காலத்திற்கு முன்பு வாழ்ந்த மனிதர்களுக்கு இதே கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்படி அவர் ஏன் அறிவுறுத்தவில்லை? அவர்களும் சரீர விருத்தசேதனம் செய்யாமல், ஓய்வுநாட்களைக் கடைபிடிக்காமல், நீதியுள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாகவும் இருந்த மனிதர்கள் தானே?’
அத்தியாயம் 28
அதற்கு ட்ரிபோ, ‘நீங்கள் இந்தக் கேள்வியை முன்வைத்தபோது நாங்கள் கவனமாகக் கேட்டோம், உண்மையைச் சொன்னால், நீங்கள் எங்கள் கவனத்திற்குத் தகுதியானவர், ஆனால் இது கடவுளுடைய விருப்பம் என்று சொல்வது எனக்கு சரியாகத் தெரியவில்லை. கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவர்களின் தந்திரமான முறையில் அளிக்கும் பதில்தான் அது என்பது புரிகிறது,” என்றான்.
பிறகு நான் பதிலாக, ‘நான் எனது வாதங்களையும் பரிந்துரைகளையும் வேதாகமம் மற்றும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு உரைப்பதால், நான் விருத்தசேதனம் செய்யாதிருந்தாலும், நீங்கள் என்னை நம்பத் தயங்க வேண்டாம். ஏனென்றால் மதமாற்றத்திற்கு இன்னும் சிறிது காலம் மட்டுமே உள்ளது. உங்கள் மனமாற்றத்திற்கு முன் கிறிஸ்து மீண்டும் வந்தால், நீங்கள் மனம் நொந்து அழுவீர்கள், உங்கள் மனஸ்தாபம் பிரயோசனமில்லாது போகும், ஏனென்றால் அவர் உங்களுக்கு செவிசாய்க்க மாட்டார். “எருசலேம் மற்றும் யூதாவின் மக்களை நோக்கி, கர்த்தர் சொல்வது இதுதான்: “உங்கள் வயல்கள் உழப்படவில்லை, அவற்றை உழுங்கள், முட்களுக்கு இடையில் விதைகளை தூவாதீர்கள். கர்த்தருடைய ஜனங்களாயிருங்கள். உங்கள் இதயங்களை விருத்தசேதனம் செய்து மாற்றுங்கள்! யூதா ஜனங்களே, எருசலேம் ஜனங்களே! நீங்கள் மாற்றாவிட்டால் பிறகு நான் மிகவும் கோபம் அடைவேன். எனது கோபம் நெருப்பைப் போன்று வேகமாகப் பரவும். எனது கோபம் உங்களை எரித்துப்போடும். எவராலும் அந்த நெருப்பை அணைக்கமுடியாது. இது ஏன் நிகழும் என்றால், நீங்கள் தீங்கான செயல்கள் செய்திருக்கிறீர்கள்.” என்று எரேமியா மக்களை நோக்கி உரத்த குரலில் கூவினார். “ஆகையால், நன்றாகக் கேளுங்கள், , தங்கள் நுனித்தோலை சரீர விருத்தசேதனம் மூலம் செய்துகொண்ட ஒவ்வொருவரையும், எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், மோவாப் போன்ற தேசங்களை சேர்ந்த புத்திரர் யாவரையும் விசாரிக்கும் நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புறஜாதிகள் எல்லாரும் சரீர விருத்தசேதனம் செய்யாதோர், அதேநேரம், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் தங்கள் இதயத்தை விருத்தசேதனம் செய்யாதவர்கள்.” இதன்மூலம் விருத்தசேதனம் என்பது அடையாளமாக கொடுக்கப்பட்ட ஒன்று என்பதனை தேவன் விரும்பவில்லை என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அப்படிப்பட்ட விருத்தசேதனத்தால் எகிப்தியர்களுக்கும், மோவாபியர்களுக்கும், ஏதோமியர்களுக்கும் எந்தப் பயனும் விளையப்போவது இல்லை. ஒரு மனிதன் சித்தியனாகவோ (கருங்கடலுக்கு வடக்கே வாழ்ந்த பழங்குடியினர்) அல்லது பாரசீகனாகவோ இருந்த போதிலும், இருக்கக்கூடிய ஒரு மனிதன், கடவுளையும் அவருடைய மகனையும் அறிந்திருக்கும் பட்சத்தில், அவருடைய நீதியின் நிலையான கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், அவர் ஒரே நல்ல மற்றும் பயனுள்ள விருத்தசேதனத்தால் முழுமை பெறுகிறார். மேலும் அவரும் அவருடைய காணிக்கைகளும் இறைவனால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. என் அன்பு நண்பர்களே, இது சம்பந்தமாக, தேவன் தம்முடைய பன்னிரண்டு தீர்க்கதரிசிகளில் ஒருவரான மலாக்கியஸ் ஊடாக தம்முடைய மக்களுக்கு சொன்ன வார்த்தைகளை மேற்கோள் காட்ட என்னை அனுமதியுங்கள்: “உங்களில் எனக்கு மகிழ்ச்சி இல்லை, உங்கள் கைகளால் ஒப்புக்கொடுக்கப்படும் காணிக்கைகளை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்றும், சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அது மறையும் திசைவரைக்கும், என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்திற்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும், ஆனால் நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தினீர்கள்” என்று கர்த்தர் கூறுகிறார். மேலும் தாவீதின் வாயால் கடவுள் பின்வருவனவற்றையும் சொன்னார்: “நான் அறியாத மக்கள் கூட எனக்குச் சேவை செய்தார்கள்; எனது திருநாமத்தை தங்கள் காதுகளால் கேட்டதும் எனக்குக் கீழ்ப்படிந்தார்கள்,” என்றார்.
அத்தியாயம் 29
‘புறஜாதிகளே, நாம் அனைவரும் ஒன்று கூடுவோம், இறைவனை மகிமைப்படுத்துவோம், ஏனென்றால் அவர் நம்மையும் தரக்குறைவாகக் கருதினார். மகிமையின் அரசரும் சேனைகளின் கர்த்தர் மூலமும் அவரை மகிமைப்படுத்துவோம். புறஜாதிகளாகிய எங்களிடம் அவர் தனது கருணையைக் காட்டியுள்ளார். மேலும் அவர் உங்களுடைய காணிக்கைகளை விட, நம்முடைய தியாகங்களை அதிக விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிறார். நான் கடவுளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் என்பது எனக்குத் தேவையே அற்றது? நான் ஏற்கனவே பரிசுத்த ஆவியின் கிருபையால் ஞானஸ்நானம் பெற்றிருப்பதால், உங்கள் ஞானஸ்நானத்தால் எனக்கு என்ன பயன் ஏற்படப்போகிறது? இந்த வார்த்தைகளால் பலவீனமான, மற்றும் அறிவுத் திறன்களைக் கொண்டவர்களையும் என்னால் ஊக்கப்படுத்த முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால் நான் பயன்படுத்தும் சொற்கள் என்னுடையது அல்ல, அல்லது அவை மனித சொல்லாட்சிகளால் அலங்கரிக்கப்பட்டவை அல்ல, அவை தாவீது பாடிய சங்கீத வார்த்தைகள், அவை ஏசாயா, சகரியா மற்றும் மோயீசன் ஆகியோர் அறிவித்தபடி நல்ல செய்தியாக இருப்பது உமக்குத் தெரிய வில்லையா டிரிபோ? நீங்கள் அவை பற்றி தெரிந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவை உங்கள் வேதாகமத்தில் அடங்கியுள்ளன. இல்லை இல்லை, உங்களுடையது அல்ல, நம்முடைய வேதாகமத்தில் அடங்கியுள்ளன என்றே கூறவேண்டும். ஏனென்றால், நாங்கள் அவற்றை விசுவாசிக்கிறோம், நம்புகிறோம், கீழ்ப்படிகிறோம். ஆனால் நீங்கள் அவற்றைப் படித்தாலும், அவற்றின் மகத்துவத்தை அறியாதிருக்கிறீர்கள். எனவே, நீங்கள் எங்கள் மீது கோபப்பட வேண்டாம், நாங்கள் சரீர விருத்தசேதனம் செய்யாத காரணத்தினால் எங்களைக் குறை கூறவும் வேண்டாம்; உண்மையில் கடவுள் நம்மை அப்படித்தான் படைத்தார். ஓய்வுநாளில் நாம் வெந்நீரைக் குடித்தால் கூட அது பயங்கரமான பாவம் என்று நீங்கள் கருதுவதை நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் அந்த நாளில் கடவுள் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதை நிறுத்த மாட்டார். ஆனால் மற்ற எல்லா நாட்களையும் போலவே இவ்வுலகத்தை அவர் இயக்குகிறார். அது தவிர, உங்கள் பிரதான குருக்கள் ஓய்வு நாட்களிலும் மற்ற நாட்களைப் போலவே காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கும்படி கடவுளால் கட்டளையிடப்பட்டார்கள். கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட எத்தனையோ நேர்மையான, நீதிமான்களான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்களின் சட்டம் சொன்னவாறு சடங்குகள் எதையும் செய்யவில்லை.’
அத்தியாயம் 30
‘அனைவருக்கும் ஒரே மாதிரியான உண்மைக் கோட்பாடுகளை எப்போதும் போதிக்கவில்லை என்று முட்டாள்கள் கடவுள் மீது பொய்க் குற்றம் சாட்டலாம். நீங்களாகேவே செய்த பாவங்களுக்காகவும் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்படலாம். உண்மையில், பலர் இத்தகைய கோட்பாடுகள் அர்த்தமற்றவை மற்றும் கடவுளைத் தகுதியற்றவர் என்று காட்டுகிறது என்று நினைக்கிறார்கள். இதே கோட்பாடுகள் தான் பாவத்தில் மூழ்கி ஆன்மீக நோயால் பாதிக்கப்பட்ட உங்கள் மக்களை மனமாற்றத்துக்கும் ஆன்மீக மனந்திரும்புதலுக்கும் இட்டு வந்தன என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய தன்மையை அவர்கள் இழந்து விட்டார்கள். மேலும் மரணத்திற்குப் பிறகு மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட அந்த தீர்க்கதரிசனத்தை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். மோயீசனின் மரணத்திற்குப் பிறகு மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட தீர்க்கதரிசனம் நித்தியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அன்பான நண்பர்களே, இது பற்றி சங்கீதத்தில் நிதர்சனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோட்பாடுகளால் ஞானம் பெற்ற நாம் அவற்றை, “தேனையும், தேனடையையும் விட இனிமையானவை” என்று கருதுகிறோம். மரண அச்சுறுத்தலின் போது கூட நாம் அவருடைய திருநாமத்தை மறுதலிக்கவில்லை என்பதிலிருந்து இது தெளிவாகிறது. மேலும், விசித்திரமான, அதாவது தீய மற்றும் வஞ்சக சக்திகளிடமிதுனது நம்மைக் காக்கும்படி விசுவாசிகளான நாம் அவரிடம் மன்றாடுகிறோம் என்பதும் (தீர்க்கதரிசனத்தின் வார்த்தையாக, அவரைப் பின்பற்றுபவர்களில் ஒருவரின் பெயரில் அவரிடம் கேட்பது, உருவக வழிபாடாக தோன்றுவது) தெளிவாக காணப்படுகிறது. கடவுளை வணங்குவதற்கு விரோதமாக செயற்படும் சாத்தான்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் படி இயேசு கிறிஸ்து வழியாக நாம் தொடர்ந்து கடவுளிடம் மன்றாடுகிறோம். நாம் கடவுளின் மூலம் அவருடைய பிள்ளைகளாக மாற்றப்பட்ட பிறகு, அறியாமை காரணமாக நாம் முன்பு யாரை வணங்கினோமோ, அதையிட்டு யாரும் எம்மைக் குற்றம் சொல்ல முடியாது. அவருடைய வல்லமைமிக்க பெயரின் முன் பிசாசுகள் கூட நடுநடுங்கி வீழும். ஆகவே தான் அவரை நாம் என் மேய்ப்பர் என்றும் மீட்பர் என்றும் அழைக்கிறோம்; யூதேயாவின் ஆளுநராகிய போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தின் கீழ் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நாம் பிசாசுகளின் சக்தியை துவம்சம் செய்து அவற்றை நிர்மூலம் செய்கிறோம். இதனால், அவரது தந்தை அவருக்கு இவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது, இதன் காரணமாக பிசாசுகள் அவரது திருநாமத்துக்கு முன்னும், அவரது பாடுகளினால் அவருக்கு அருளப்பட்ட வல்லமைக்கு முன்னும் அஞ்சி நடுங்குகின்றன.
