Ambrose of Milan, On Repentance, in Tamil. Book 2
புத்தகம் II
அத்தியாயம் 1
புனித அம்புரோஸ் மனந்திரும்புதல் தொடர்பான மேலதிக விதிகளைத் தருவது மட்டுமன்றி, அதைத் தாமதிக்கக் கூடாது என்பதையும் உரத்துக்கூறுகிறார்.
1. முந்தைய புத்தகத்தில், மனந்திரும்புதல் தொடர்பான பயிற்சியை மேம்படுத்த உதவும் பல யோசனைகளைப் பகிர்ந்துகொண்டோம். ஆயினும், இன்னும் சேர்க்க வேண்டியவை ஏராளமாக இருப்பதால் நமது போதனையை நிறைவுசெய்யாமல் விட்டுவிட்டதாகத் தோன்றாமலிருக்க நாம் தொடர்ந்து மேலதிகத் தகவல்களை வழங்க உத்தேசித்துள்ளோம்.
2. மனந்திரும்புதல் முக்கியமானது, எனவே, மனந்திரும்புதலை அது குறித்த கரிசனையோடு மட்டுமல்ல, விரைவாகவும் செய்யப்பட வேண்டும். நற்செய்தியில் தன் திராட்சைத் தோட்டத்தில் ஒரு அத்தி மரத்தை நட்ட அந்தத் தந்தையைப் போல, நாமும் அதே நிலைமையை அடையாமல் இருப்பதற்காகவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அவர் அந்த மரம் கனி கொடுத்திருக்கிறதா என்று பார்க்க வரக்கூடும்; அப்படி கொடுக்கவில்லை என்றால், அது இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது என்று கூறி தோட்டக்காரனிடம் அதை வெட்டி எறிந்துவிடுமாறு கட்டளையிடக்கூடும். இருப்பினும், தோட்டக்காரர் அம்மரத்தைக் கவனித்துக்கொள்ளும் வரை, இன்னும் ஒரு வருடம் காத்திருக்குமாறு இறைவனிடம் கேட்கலாம். அது காய்த்தால் நல்லது; காய்க்கவில்லை என்றால், அதை வெட்டிவிடுதல் நன்றாக இருக்கும்.
3. நமக்குச் சொந்தமான இந்த வயலுக்கு உரத்தை இட்டு, மக்கிய உரத்தால் நிலத்தை வளப்படுத்தி, வயல் முழுவதும் சாம்பலைத் தூவி அதன் மூலம் அதிக விளைச்சலைப் பெறப் பெருமையுடன் இருக்கும் அந்த கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம்.
4. அதை எவ்வாறு கருதுவது என்று அப்போஸ்தலர் நமக்கு அறிவுறுத்துகிறார்: “அவை மட்டுமல்ல எனது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் வேண்டத்தகாதவை என்று எண்ணிக்கொண்டிருக்கின்றேன்” என்று பிலிப்பியர் 3:8 இல் கூறப்பட்டுள்ளது. நல்ல மற்றும் தீய செய்திகள் இரண்டின் மூலமாகவும், அவர் கிறிஸ்துவைப் பிரியப்படுத்துவதில் வெற்றி பெற்றார். ஆதியாகமம் 18:27 இல், ஆபிரகாம், “கர்த்தாவே, உம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் வெறும் தூசியாகவும், சாம்பலாகவும் இருக்கிறேன்” என்று ஏற்றுக்கொண்டதன் மூலமாகவும், தனது ஆழ்ந்த தாழ்மையின் காரணமாக தேவனுடைய பார்வையிலும் கிருபை பெற்றார் என்பதை அவர் அறிந்துகொண்டார். மேலும், ‘யோபு சாம்பலில் அமர்ந்திருந்தபோது அவனது புண்களைச் சுரண்டுவதற்கு உடைந்த மண்பாண்டத்தின் ஒரு துண்டைப் பயன்படுத்தினான்’ என்று யோபு 2:8 இல் கூறப்பட்டுள்ளது. மேலும் யோபு 42:10-ல் “கர்த்தர் யோபுவுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்காக எல்லாவற்றையும் கொடுத்தார்” என்பதற்கு அமைவாக, தான் இழந்த அனைத்தையும் யோபு எவ்வாறு மீட்டெடுத்தார் என்பதையும் அவர் கண்டறிந்தார். அதுமட்டுமின்றி, தேவன் ஏழைகளைத் தூசியிலிருந்து மீட்டு, எளியவர்களைச் எருக்குவியலிலிருந்து தூக்கிவிடுகிறார் என்று தாவீதின் வார்த்தைகளிலிருந்து அவர் கேட்டறிந்து கொண்டார்.
5. நம்முடைய பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட நாம் அஞ்சவோ சஞ்சலம் கொள்ளவோ தேவையில்லை. நம்முடைய தவறுகளை வெளிப்படுத்துவது சங்கடமாக இருக்கலாம், ஆனால் இந்த சஞ்சலம் நம்முடைய குற்றங்களை நீக்கி, நாம் இழந்த ஆற்றலை மீண்டும் பெற்றுத்தந்து, நமக்குப் புத்துயிர் அளிக்க உதவும். விடாமுயற்சியுள்ள விவசாயிகளைப் போல, நீடித்த பலன்களை அடையக் கடினமாக உழைப்பவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். இதுகுறித்து மேலும் விளக்கத்தைக் கொடுக்கும் முகமாக,”எங்களுக்குத் தேவையான உணவின்பொருட்டு எங்கள் கைகளால் கடினமாக உழைக்கிறோம். மக்கள் எங்களை சபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறபோது பொறுமையுடன் சகித்துக்கொள்கிறோம். மக்கள் குறை கூறுகையில் பொறுத்துக்கொள்கிறோம். மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர்” என்று 1 கொரிந்தியர் 4:12-13 சொல்கிறது. நீங்கள் இந்த வழியில் செயல்பட்டால், நல்ல ஆன்மீக விதைகளை விதைப்பீர்கள். பாவத்தை நீக்கி நல்ல விளைவுகளை உண்டாக்க உழையுங்கள். அவர் தமக்குள்ளே இருந்த துன்புறுத்தலின் கடைசி எச்சங்களை வேரறுக்க உழுதார். ஒரு காலத்தில் துன்புறுத்துபவராக இருந்த ஒருவரை மாற்றி, பின்னர் நமது ஆசிரியராக நியமித்ததை விட, பரிபூரண பயணத்தை நோக்கி நம்மை ஊக்குவிக்க கிறிஸ்துவினால் அதற்கு மேல் வேறு என்ன செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்?
அத்தியாயம் 2
மனந்திரும்புதலுக்கு எதிராக மதவெறியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு பகுதி இரண்டு விதமாக விளக்கப்பட்டுள்ளது. ஒன்று: எபிரேயர் 6:4 ஒருவர் மீண்டும் ஞானஸ்நானம் பெற முடியாது என்றும், இரண்டாவது: மனிதர்களால் இயலாதது தேவனுக்கு இயலும் என்பதாகும்.
6. அப்போஸ்தலரின் தெளிவான முன்மாதிரியும் எழுத்துக்களும் அவர்களை மறுத்தபோதிலும், மதவெறியர்கள் தொடர்ந்து எதிர்க்கின்றனர். தங்கள் கருத்துக்கு அப்போஸ்தலிக்க அதிகாரத்தின் ஆதரவு இருப்பதாக அவர்கள் கூறி, எபிரேயருக்கு எழுதிய நிருபத்திலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டுகிறார்கள்; அதாவது, ‘உண்மையைக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றி இங்கு பேசப்படுகிறது. அவர்கள் தேவனுடைய நன்மைகளைப் பெற்றுக்கொண்டனர். பரிசுத்த ஆவியானவரில் பங்குபெற்று தேவனுடைய செய்தியையும் வர இருக்கிற காலத்தின் வல்லமையையும் அனுபவித்திருக்கிறார்கள். மேலும் அவை மிக நல்லவை என அவர்கள் தமக்குத்தாமே ஏற்றுக்கொண்டனர். ஆனால் பிறகு அவர்கள் கிறிஸ்துவின் வழியை விட்டு விலகியதன் காரணமாக, மீண்டும் அவரது வழிக்குள் வருவது கடினம். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைந்து விட்டது மட்டுமன்றி, அவர்கள் கிறிஸ்துவுக்கு மாறாத அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்’ என்று அந்த எபிரேயரின் நிருபம் கூறுகிறது.
7. பவுல் தன் சொந்தச் செயல்களுக்கு எதிராகப் போதித்திருக்கக் கூடுமா? அவர் கொரிந்துவில், மனந்திரும்புதலின் ஊடாக பாவத்தை மன்னித்திருந்தார். எனவே அவர் தனது சொந்த முடிவுக்கு எதிராகவே எப்படி முரண்பட முடியும்? அத்தோடு அவர் நிலைநாட்டியதை அவரால் மாற்ற முடியாததால், அவருடைய கூற்றுகள் அவர் முன்பு கூறியவற்றிலிருந்து வேறுபட்டவை என்ற போதிலும், அவற்றுக்கு எதிரானவை அல்ல என்று நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில், முரணானது தனக்குத்தானே எதிரானது, வேறுபாடு என்பது பொதுவாக வேறு அர்த்தத்தைக் கொண்டிருக்கும். முரண்பாடான காரியங்கள், ஒன்று மற்றொன்றை ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு, அப்போஸ்தலர் மனந்திரும்புதலின் பின்னரான மன்னிப்பைப் பற்றிக் குறிப்பிட்டதால், ஞானஸ்நானம் மீண்டும் பெறப்பட வேண்டும் என்று எண்ணியவர்களைக் குறித்து அவரால் மௌனித்திருக்க முடியவில்லை. முதலாவதாக, மன்னிப்பு குறித்த எல்லா நம்பிக்கையையும் இழந்தவர்களை மீண்டும் திருமுழுக்கு பெற வேண்டும் என்ற தவறான நம்பிக்கை காரணமாக வழிதவறிச் செல்லாமல் இருப்பதைத் தடுப்பதற்காக, திருமுழுக்கிற்குப் பிறகும் யாரேனும் பாவம் செய்தால், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படலாம் என்பதை நமக்கு அறிவுறுத்தி, நமது கவலைகளைத் தணிப்பது அவசியமாக இருந்தது. இரண்டாவதாக, திருமுழுக்கு மீண்டும் கொடுக்கப்படக்க்கூடாது என்பதற்கான ஒரு தர்க்கரீதியான வாதத்தை முன்வைப்பதும் முக்கியமானதாக இருந்தது.
8. பாவத்தில் விழுந்தவர்களை மீண்டும் மனந்திரும்புதலுக்குள் கொண்டுவருவது இயலாத காரியம் என்பதைச் சுட்டிக்காட்டும் வார்த்தைகளிலிருந்தே, எழுத்தாளர் திருமுழுக்கைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது. ஏனெனில், திருமுழுக்கின் போது தண்ணீரின் மூலம் தான் நாம் புதுப்பிக்கப்படுகிறோம்; அது நம்மை மறுபடியும் பிறக்கச் செய்கிறது. பவுல் தாமே கூறுவது போல: “நாம் ஞானஸ்நானம் பெறும்போதே கிறிஸ்துவோடு இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மரணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இந்த வழியில் இயேசுவோடு நாமும் உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழத் தொடங்குகிறோம். இதே வழியில் கிறிஸ்து, பிதாவின் மகிமையால் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்” என்று ரோமர் 6:4. இலும், மற்றொரு பகுதியில், “நீங்கள் புதிய மனிதனாக இருக்கக் வேண்டியவர்கள். அந்தப் புதிய மனிதன் தேவனைப்போன்று உண்மையான நீதியிலும், பரிசுத்தத்திலும் இருக்கிறான்” என்று எபேசியர் 4:23-ல் அவர் கூறுகிறார். மேலும், அவர் கூறும்போது, “கழுகு மரணத்திற்குப் பின் தன் சாம்பலிலிருந்து மறுபிறவி எடுப்பதுபோல, உங்கள் இளமை கழுகைப் போலப் புதுப்பிக்கப்படும் என்றும், நாமும் பாவத்தில் மரித்து, திருமுழுக்கு என்னும் அருட்சாதனத்தின் மூலம் தேவனுக்குள் மறுபிறவி எடுத்துப் புதுப்பிக்கப்படுகிறோம்” ஆகையால், அவர் ஒரே ஞானஸ்நானம் என்ற கருத்தைத் தொடர்ந்து போதிக்கிறார். எபேசியர் 4:5-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் தான் உள்ளன.”
9. ஒருவர் ஞானஸ்நானம் பெறும்போது, தேவனுடைய குமாரன் அவருக்குள் சிலுவையில் அறையப்படுகிறார் என்பது தெளிவாகிறது. அவ்வாறு இயேசு கிறிஸ்துவுக்குள் சிலுவையில் அறையப்படாவிட்டால், நமது மனித சுபாவத்தின் மூலம் பாவத்தை நீக்க முடியாது. இதுகுறித்து வேதாகமம், “நாம் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றதும் கிறிஸ்துவுக்குள் ஒன்றித்து விட்டோம். நமது ஞானஸ்நானத்தின் மூலம் அவரது மரணத்திலும் பங்குபெற்றுவிட்டோம்” என்று ரோமர் 6:3-ன் வாயிலாக எமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ரோமர் 6:5-6 கிறிஸ்து இறந்தார். அவர் இறப்பிலும் நாம் கலந்துகொண்டோம். இதனால் அவரது உயிர்த்தெழுதலிலும் நாம் பங்குபெறுகிறோம். நமது பழைய வாழ்வு இயேசுவோடேயே சிலுவையில் அறையப்பட்டு முடிவடைந்துவிட்டது என்று நாம் அறிவோம்” என்றும், “நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது உங்கள் பழைமை இறந்து கிறிஸ்துவோடு புதைக்கப்பட்டு விட்டது. அந்த ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடன் நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள்” என்று கொலோசெயர் 2:12 இல், நம்முடைய பாவங்கள் அவர் மூலமாகச் சுத்திகரிக்கப்படுவதற்காக, அவர் நம்மில் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நாம் புரிந்துகொள்ளும் முகமாக இது எழுதப்பட்டுள்ளது. ஏனென்றால், அவரால் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும். அதேபோல, கொலோசெயர் 2:14-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தேவனுடைய சட்டங்களை நாம் மீறிவிட்டதால் நாம் பாவங்களில் வீழ்ந்து கடனாளிகளானோம், ஆனால் தேவன் அந்தக் கடனை நமக்கு மன்னித்துவிட்டார். மேலும், கொலோசெயர் 2:15 இல் அவரைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “அவர் ஆதிக்கம் அதிகாரங்களையும் பகிரங்கமாகக் காட்டி, ஆணிகளால் அவற்றை சிலுவையில் அறைந்து வெற்றிகொண்டார்” என்று.
10. ஆகையால், எபிரேயருக்கு எழுதிய நிருபத்தில், ‘கிறிஸ்துவின் வழியிலிருந்து விலகிய மக்களை மீண்டும் அவ்வாழ்க்கைக்குக் கொண்டுவர முடியுமா? உண்மையைக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றி நான் பேசுகிறேன். அவர்கள் தேவனுடைய நன்மைகளைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் பிறகு அவர்கள் கிறிஸ்துவின் வழியை விட்டு விலகினார்கள். மீண்டும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் வருவது கடினம். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைந்து விட்டனர். அவர்கள் கிறிஸ்துவுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்து திருமுழுக்குடன் தொடர்புடையது, அதில் நாம் இயேசுவின் சிலுவை மரணத்தை நமக்குள்ளேயே அடையாளப்படுத்துகிறோம். திருமுழுக்கின் மூலம், உலகம் இயேசுவால் தோற்கடிக்கப்பட்டது என்பதை நாம் காட்டுகிறோம். நாம் அவருடைய மரணத்தின் சாயலை ஏற்றுக்கொள்ளும்போது, ஒரு காலத்தில் நம்மைக் கட்டுப்படுத்திய சக்திகளையும் நம்மால் வெல்ல முடியும். இருப்பினும், கிறிஸ்து ஒரே ஒரு முறை மட்டுமே சிலுவையில் அறையப்பட்டு, நமது பாவத்தின் நிமித்தம் ஒரே ஒரு முறை மட்டுமே மரித்தார். இதன் பொருள், ஒரே ஒரு ஞானஸ்நானம் மட்டுமே உண்டு, பல ஞானஸ்நானங்கள் இல்லை என்பதுதான்.
11. ஆனால், திருமுழுக்குகளைப் பற்றிப் பேசும் பகுதி குறித்து என்ன சொல்லப்படுகிறது? திருச்சட்டத்தின் கீழ், பல வகையான திருமுழுக்குகள் அல்லது கழுவுதல்கள் இருந்தன. பரிபூரணமானதைக் கைவிட்டு அடிப்படைப் போதனைகளுக்குத் திரும்புபவர்களை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். திருச்சட்டத்தின் கீழ் இருந்த ‘கழுவுதல்கள்’ அனைத்தும் இனி தேவையில்லை என்றும், திருச்சபையின் அருட்சாதனங்களில் ஒரே ஒரு திருமுழுக்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் விளக்குகிறார். அடிப்படைப் போதனைகளைக் கடந்து, பரிபூரணத்தை அடையப் பாடுபடுமாறு அவர் நம்மை ஊக்குவிக்கிறார். எபிரேயர் 6:3-ல் கூறப்பட்டுள்ளபடி, தேவனுடைய கிருபை இல்லாமல் எவராலும் பரிபூரணத்தைப் பெற்றுவிட முடியாது என்பதால், “தேவன் விரும்பினால் நாம் இதைச் செய்வோம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
12. மேலும், இந்தப் பகுதி மனந்திரும்புதலைப் பற்றிப் பேசுகிறது என்று நினைக்கும் எவரிடமும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், மனிதர்களால் சாத்தியமற்றது கடவுளுக்குச் சாத்தியமாகும்; அவர் விரும்பும்போதெல்லாம், மன்னிக்க முடியாதவை என்று நாம் நம்பும் பாவங்களைக் கூட மன்னிக்கும் வல்லமை அவருக்கு உண்டு. எனவே, அடைய முடியாததாகத் தோன்றுவதை நமக்கு அருளும் வல்லமை கடவுளுக்கு உண்டு. தண்ணீரால் பாவத்தைச் சுத்தப்படுத்த முடியாது என்று தோன்றியது, மேலும் சிரிய தேசத்தவரான நாமான் தனது தொழுநோயைத் தண்ணீரால் குணப்படுத்த முடியாது என்று நினைத்தார். ஆயினும், நமக்கு அத்தகைய மகத்தான அருளை வழங்கிய கடவுளின் மூலம், சாத்தியமற்றதாகத் தோன்றியது சாத்தியமானது. அதேபோல, மனந்திரும்புதலின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுவது சாத்தியமற்றதாகத் தோன்றியது, ஆனால் கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு இந்த வல்லமையை அளித்தார், அது குருத்துவப் பணிக்குக் தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகக் கருதப்பட்டது இப்போது சாத்தியமாகியுள்ளது. இருப்பினும், சரியான பகுத்தறிவுக்கு எட்டியவரையில், திருமுழுக்கு என்ற அருட்சாதனத்தை எவரும் மீண்டும் செய்வது அனுமதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
அத்தியாயம் 3
இந்த அத்தியாயத்தில், நாம் ஊதாரி மகனின் உவமையை ஆழமாக ஆராய்வோம். இதில் புனித அம்புரோஸ் நோவேஷியர்களின் நம்பிக்கைகளுக்குச் சவால் விடுவதற்காக அதனைப் பயன்படுத்துகிறார். உண்மையாகவே மனந்திரும்பும் பட்சத்தில், மிகப் பெரிய பாவி கூட மீண்டும் மன்னிக்கப்பட்டு வரவேற்கப்பட வேண்டும் என்பதை அவர் இங்கே உணர்த்துகிறார்.
13. தன் தந்தையிடமிருந்து எல்லா உரிமைச்சொத்துக்களையும் பெற்றுக்கொண்டு தொலைதூர தேசத்திற்குச் சென்று, அவற்றை களியாட்ட வாழ்க்கையில் வீணடித்து, பின்னர் மீதமானவற்றை வைத்து உண்ண வழியின்றி வாழ வழியின்றி திரிந்து கொண்டிருந்தபோது, தன் தந்தையின் அரவணைப்புக்காகவும் உணவுக்காகவும் ஏங்கிய ஒருவனைப் பற்றிக் கூறும் ‘மனந்திரும்பிய பாவியின் கதையின்’ மூலம் விளக்கிய கிறிஸ்துவின் தெளிவான செய்தியோடு அப்போஸ்தலர் முரண்படவில்லை. இறுதியில் அவர் தனது தந்தை வழங்கிய அங்கியையும், மோதிரத்தையும், காலணிகளையும் மற்றும் கன்றுக்குட்டியைக் கொன்று படைக்கப்பட்ட விருந்தையும் பெற்றார்; இவை ஆண்டவரின் பாடுகளைக் குறிக்கின்றன, அதன் மூலம் நமக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.
14. அந்நிய தேசத்திற்குச் செல்லும் ஒரு நபர் பரிசுத்த பலிபீடத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. இதன் பொருள், அவர்கள் பரிசுத்தவான்களின் வீடான பரலோக எருசலேமிலிருந்து பிரிக்கப்படுகிறார்கள் என்பதாகும். அதனால்தான் “யூதர் அல்லாதவர்களாகிய நீங்கள் இப்பொழுது அந்நிய தேசத்தில் பார்வையாளர்களோ அல்லது தற்காலிக குடிமக்களோ அல்ல. தேவனின் பரிசுத்தமான மக்களோடு நீங்களும் ஒரே குடிமக்களாகிவிட்டீர்கள்” என்று எபேசியர் 2:19-ல் கூறியுள்ளார்.
15. அவன் தன் செல்வத்தை எல்லாம் ஊதாரித்தனமாக செலவுசெய்தான் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையானதே, ஏனெனில் நற்கிரியைகளைச் செய்வதில் நம்பிக்கை தளர்ந்துபோகிறவன் அதை வீணாக்குகிறான். இதுகுறித்து, “நாம் நம்புகிறவற்றின் மீது கொண்டுள்ள உறுதிதான் விசுவாசம் ஆகும். நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் கூட உண்மையான ஒன்றை நம்புவது தான் விசுவாசம்” என்று எபிரேயர் 11:1 இல் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.
16. அவன் பசியால் இறந்து கொண்டிருந்தான் என்பதில் ஆச்சரியமில்லை ஏனெனில் அவனுக்கு ஆன்மீக உணவு கிடைக்கவில்லை. அவன் இந்தத் தேவையை உணர்ந்து, “நான் எழுந்து என் தந்தையிடம் சென்று, ‘தந்தையே, நான் பரலோகத்திற்கும் உமக்கும் முன்பாகப் பாவம் செய்தேன்’ என்று அவரிடம் சொல்வேன்” என்றான். இதன்மூலம் திருவருட்சாதனத்தைப் பெறுவதற்காக நாம் மன்றாட ஊக்குவிக்கப் படுகிறோம் என்பது தெளிவாகத் தெரியவில்லையா? மேலும், நாம் பாவங்களுக்கான பரிகாரத்தைச் செய்வதற்கான காரணத்தையே நீங்கள் அகற்ற விரும்புகிறீர்களா? துறைமுகத்தை அடையும் நோக்கில் பயணிக்கும் ஒரு மாலுமியின் நம்பிக்கையை நீங்கள் எடுத்துவிட்டால், எங்கு எப்படிச் செல்வது என்று தெரியாமல் அவர் கடலில் தத்தளிப்பார். ஒரு தடகள வீரரின் திறமையை நீங்கள் எடுத்துவிட்டால், அவர் முயற்சியைக் கைவிட்டு ஓடுதளத்திலேயே சரிந்துவிடுவார். ஒரு மீனவரின் மீன் பிடிக்கும் திறனை நீங்கள் எடுத்துவிட்டால், அவர் வலை வீசுவதை நிறுத்திவிடுவார். அப்படியானால், பரலோக போஷணையின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் ஆன்மீக ரீதியாகப் பசியுடன் இருக்கும்போது, கடவுளை நோக்கி எப்படி அதிக ஊக்கத்துடன் ஜெபிக்க முடியும்?
17. “நான் பரலோகத்திற்கும் உமக்கு விரோதமாகவும் பாவம் செய்தேன்” என்கிறார் அவர். பாவ சங்கீர்த்தனம் செய்கிற எவரும் மன்னிப்பைப் பெற முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்றே தான் ஒரு கொடிய பாவத்தைச் செய்ததை அவர் ஒப்புக்கொள்கிறார். பரலோகத்திற்கு விரோதமாகப் பாவம் செய்பவன், பரலோக இராச்சியத்துக்கும் தன் மனசாட்சிக்கும் விரோதமாக தீங்கு செய்திருக்கிறான் என்றால் இது ஒரு கொடிய பாவம். ஏனென்றால் அவன் தேவனுக்கு விரோதமாகவும் பாவம் செய்திருக்கிறான். இதுகுறித்து “நான் உமக்கு விரோதமாக பாவம் செய்து உம்முடைய பார்வையில் அநியாயம் செய்தவனாக இருக்கிறேன்” என்று சொல்லப்படுகிறது.
18. அவன் மிக விரைவாக மன்னிப்பைப் பெறுகிறான்; அவன் கணிசமான தூரத்தில் வந்துகொண்டிருக்கும்போதே, அவனுடைய தந்தை அவனைச் சந்திக்க விரைந்து ஓடி வந்து, கட்டியணைத்து புனிதமான சமாதானத்தைக் குறிக்கும் ஒரு முத்தத்துடன் அவனை வரவேற்கிறார்; திருமணத்தின் போது அணியும் அங்கியைக் கொண்டுவரச் சொல்லிக் கட்டளையிடுகிறார், அந்த அங்கி இல்லாதவன் திருமண விருந்திலிருந்து விலக்கப்படுவான்; விசுவாசத்தின் உறுதிமொழியும் பரிசுத்த ஆவியின் முத்திரையுமான மோதிரத்தை அவன் கையில் அணிவித்து, அவனுக்காகக் காலணிகளைக் கொண்டுவரச் சொல்லிக் கட்டளையிடுகிறார். ஏனெனில் கர்த்தருடைய பஸ்காவைக் கொண்டாடவும் ஆட்டுக்குட்டியானவரைப் புசிக்கவும் தயாராகும் எவரும், ஆவிக்குரிய காட்டு மிருகங்களின் தாக்குதல்களிலிருந்தும் சர்ப்பத்தின் கடியிலிருந்தும் தங்கள் பாதங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று யாத்திராகமம் 12:11 கூறுகிறது. கன்றுக்குட்டியை பலியிடுமாறு கட்டளையிடுகிறார். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து பலியிடப்பட்டுவிட்டார் என்று 1 கொரிந்தியர் 5:7 கூறுகிறது. ஏனெனில், நாம் கர்த்தருடைய திரு இரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும் போதெல்லாம் அவருடைய மரணத்தை அறிவிக்கிறோம் என்று 1 கொரிந்தியர் 11:26 கூறுகிறது. அப்படியானால், அவர் எல்லோருக்காகவும் எல்லாவற்றிற்காகவும் ஒரே முறை சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டது போல, பாவ மன்னிப்பு வழங்கப்படும் போதெல்லாம் அவருடைய திரு இரத்தத்தின் வழியாகப் பாவ மன்னிப்பு அருளப்படுவதால் நாம் அவருடைய திருவுடல் என்னும் அருட்சாதனத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.
19. ஆகையால், சாவான பாவங்களைச் செய்தவர்கள் தங்கள் பாவங்களை வெளிப்படையாக அறிக்கையிட்டு, அதற்கான பரிகாரத்தை ஏற்றுக்கொண்டால், அவர்களுக்குத் திவ்விய நற்கருணையின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆண்டவருடைய போதனைகள் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தப்படுகிறது.
அத்தியாயம் 4
புனித அம்புரோஸ், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தேவ நிந்தனை குறித்த ஒரு கவலையை நோவேஷியர்கள் முன் வைக்கிறார். சீமோன் மாகஸ் மீதான புனித பேதுருவின் விமர்சனத்தை ஒரு உதாரணமாகப் பயன்படுத்தி, இந்தத் தேவ நிந்தனை ஒரு தவறான நம்பிக்கையிலிருந்து வருகிறது என்பதை அவர் விளக்குகிறார். நம் ஆண்டவரின் இரக்கம் மிகவும் பெரியது, யூதாஸ் மனந்திரும்பி வந்திருந்தால் அவனும் மன்னிக்கப் பட்டிருப்பான் என்று எடுத்துரைத்து திருச்சபைக்குத் திரும்புமாறு நோவேஷியர்களை அவர் ஊக்குவிக்கிறார்.
20. ஆனால், இவ்வாறு எழுதப்பட்டிருப்பதை நீங்கள் ஒரு ஆட்சேபணையாக முன்வைக்கப் பழகியிருக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்: மனிதர்களின் எல்லாப் பாவங்களும் நிந்தனைகளும் மன்னிக்கப்படும், ஆனால் தூய ஆவியானவருக்கு எதிரான நிந்தனைகள் செய்வோர் மன்னிப்பைப் பெறமாட்டார்கள். மத்தேயு 12:31-32-ல், “மனிதர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். மேலும் மனிதர்கள் சொல்லுகின்ற எல்லாத் தீயவற்றுக்கும் மன்னிப்புண்டு. மனித குமாரனுக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. இப்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ அவன் மன்னிக்கப்படமாட்டான்.
20. ஆனால், இவ்வாறு எழுதப்பட்டிருப்பதை நீங்கள் ஒரு ஆட்சேபணையாக முன்வைக்கப் பழகியிருக்கிறீர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்: மனிதர்களின் எல்லாப் பாவங்களும் நிந்தனைகளும் மன்னிக்கப்படும், ஆனால் தூய ஆவியானவருக்கு எதிரான நிந்தனைகள் செய்வோர் மன்னிப்பைப் பெறமாட்டார்கள். மத்தேயு 12:31-32-ல், “மனிதர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். மேலும் மனிதர்கள் சொல்லுகின்ற எல்லாத் தீயவற்றுக்கும் மன்னிப்புண்டு. மனித குமாரனுக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. இப்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ அவன் மன்னிக்கப்பட மாட்டான்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மேற்கோள் உங்கள் வாதத்திற்கு முரணானது, ஏனெனில் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படலாம் என்று உங்கள் வாதம் கூறுகிறது. அப்படியென்றால் நீங்கள் ஏன் அவர்களை மன்னிப்பதில்லை? நீங்கள் ஏன் கழற்ற முடியாத சங்கிலிகளை அணிந்துகொள்கிறீர்கள்? நீங்கள் ஏன் அவிழ்க்க முடியாத முடிச்சுகளைப் போட்டுக்கொள்கிறீர்கள்? மற்றவர்களை மன்னியுங்கள்; பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பாவம் செய்ததற்காக நற்செய்தியின் அதிகாரத்தால் என்றென்றும் கட்டுண்டவர்கள் என்று நினைப்பவர்கள் மீது கவனம் செலுத்துங்கள்.
21. கர்த்தரால் பிணைக்கப்படக்கூடிய மக்களைப் பற்றி சிந்திப்போம். மேற்கோள் காட்டப்பட்ட பகுதிக்கு முந்தைய வார்த்தைகளைப் பார்ப்பது நாம் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள உதவும். பிசாசுகளின் தலைவனாகிய பீல்செபூபின் (Beelzebub) துணை கொண்டு இயேசு பிசாசுகளைத் துரத்துகிறார் என்று யூதர்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். தனக்குள்ளே பிரிவினைகளை ஏற்படுத்தும் எந்த இராச்சியமும் வீழ்ச்சியையே சந்திக்கும். பிரிந்திருக்கும் எந்த நகரமும் அல்லது வீடும் நிலைத்திருக்காது என்று இயேசு பதிலளித்தார். சாத்தான் ஏனைய பிசாசுகளைத் துரத்தும் போது, அவன் தனக்கு எதிராகவே செயல்படுகிறான். அப்படியானால் அவனுடைய இராச்சியம் எப்படி நிலைத்திருக்கும்? நான் பீல்செபூபைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துவேனானால், உங்கள் மக்கள் அவற்றை எப்படித் துரத்துவார்கள்? என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார்.
22. இங்கே, கர்த்தராகிய இயேசு பீல்செபூபின் வல்லமையால் பிசாசுகளைத் துரத்தினார் என்று உரிமை கோரியவர்களைக் குறித்து இந்த வார்த்தைகள் குறிப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. இரட்சகரை பிசாசுடன் ஒப்பிட்டு கிறிஸ்துவின் நன்மையை பொல்லாத இராச்சியத்திற்குக் காரணம் காட்டிய சாத்தானால் அவர்கள் செல்வாக்கைப் பெற்றிருந்ததால் கர்த்தர் அவர்களுக்குப் பதிலளித்தார். இந்தத் தவறான செயலைக் குறித்து அவர் மேலும் கூறும்போது “சர்ப்ப சந்ததியே, பொல்லாதவர்களாயிருக்கும் நீங்களே எப்படி நல்ல காரியங்களைப் பற்றிப் பேச முடியும்?” என்றார். இவ்வாறு பேசுபவர்களை மன்னிக்க முடியாது என்று அவர் பின்னர் சுட்டிக்காட்டினார்.
23. பின்பு, சீமோன் தனது அதீத மந்திர அனுபவத்தால் சீரழிந்து, கிறிஸ்துவின் கிருபையையும் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தையும் வழங்கும் ஆற்றலை விலைக்கு வாங்க முடியும் என்று நம்பியபோது, பேதுரு இவ்வாறு கூறினார்: உன் இதயம் தேவனுடன் இணையாததால், இந்த விசுவாசத்தில் உனக்குப் பங்கில்லை, சுதந்தரமுமில்லை. ஆகையால், இந்தப் பொல்லாப்புக்காக மனந்திரும்பி, உன் இதயத்தில் உள்ள இந்த தீய எண்ணம் மன்னிக்கப்படும் என்று விசுவாசத்துடன் கர்த்தரிடம் செபிப்பாயாக. ஏனெனில் நீ அக்கிரமத்தில் சிக்கி கசப்புணர்வால் பீடிக்கப்பட்டுள்ளாய் என்பதை நான் காண்கிறேன். பேதுரு, தனது அப்போஸ்தல அதிகாரத்தின் மூலம் மந்திரத்தின் மாயையால் பரிசுத்த ஆவியை நிந்திப்பவனைக் கண்டிக்கிறார் என்பதை நாம் காண்கிறோம்; குறிப்பாக, அவனுக்கு விசுவாசத்தைப் பற்றிய உண்மையான புரிதல் இல்லாததால் அவர் அவ்வாறு செய்தார். ஆயினும்கூட, மனந்திரும்பும்படி ஆவியானவர் அவனை வற்புறுத்தியதால் அவனுக்கு மன்னிப்புக்கான வாய்ப்பை வழங்க அவர் மறுக்கவில்லை.
24. பரிசேயர்களின் தேவே நிந்தனைக்கு ஆண்டவர் பதிலளித்தது மட்டுமன்றி, பாவ மன்னிப்பு அருளுவதில் காணப்படும் தமது வல்லமையின் கிருபையை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஏனெனில், அவருடைய தெய்வீக வல்லமை பிசாசின் உதவியைச் சார்ந்துள்ளது என்று அவர்கள் வாதிட்ட காரணத்தால். தேவனுடைய சபைக்குள் பிரிவினையை உண்டாக்குபவர்கள் சாத்தானின் துணைகொண்டு செயல்படுகிறார்கள் என்றும், இதில் வரலாறு முழுவதும் உள்ள மதத்துரோகிகளும் பிரிவினைவாதிகளும் அடங்குவர் என்றும், அவர்களுக்கு அவரது மன்னிப்பு மறுக்கப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். பிற பாவங்கள் தனிமனிதர்களைப் பாதிக்கக்கூடும் என்றாலும், இந்தக் குறிப்பிட்ட பாவம் அனைவரையும் பாதிக்கிறது. கர்த்தராகிய இயேசு எதற்காகப் பாடுபட்டாரோ, எதற்காகப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டாரோ, அந்தச் சபையின் அங்கங்களைப் பிரிப்பதன் மூலம் கிறிஸ்துவின் கிருபையைக் குலைக்க முயல்பவர்கள் இவர்களே.
25. இறுதியாக, திருச்சபையின் ஒற்றுமையைக் குலைப்பவர்களையே அவர் குறிப்பிடுகிறார் என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக, மத்தேயு 12:30-ல் “என்னுடன் இல்லாதவன் எனக்கு எதிரானவன். என்னுடன் சேர்ந்து செயல் புரியாதவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறவன்” என்று எழுதப்பட்டுள்ளது. அவர் இப்படிப்பட்டவர்களையே பற்றிப் பேசுகிறார் என்பதை மேலும் வலியுறுத்தும் விதமாக, அவர் உடனடியாக பின்வருவனவற்றையும் சேர்த்தார்: “ஆகையால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எல்லாப் பாவங்களும் தேவநிந்தனைகளும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும், ஆனால் ஆவிக்கு விரோதமான நிந்தனைகள் மனிதர்களுக்கு மன்னிக்கப்படாது” என்று. அவர் “ஆகையால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறும்போது, மற்ற வார்த்தைகளை விடப் பின்வரும் வார்த்தைகளை நாம் அதிகமாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்பது தெளிவாகத் தெரியவில்லையா? அவர் மேலும் தொடர்கையில்: “நல்ல மரம் நல்ல கனிகளைத் தரும், ஆனால் கெட்ட மரமோ கெட்ட கனிகளைத் தான் தரும்” என்று மத்தேயு 7:17-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் சீர்கெட்ட சங்காத்தம் நல்ல பலன்களைத் தராது. இவ்வாறு, மரம் சங்காத்தத்தைக் குறிக்கிறது; நல்ல மரத்தின் கனிகள் திருச்சபையின் பிள்ளைகளைக் குறிக்கின்றன.
26. ஆகையால், அநியாயமாகப் பிரிந்துபோன உங்கள் அனைவரையும் திருச்சபைக்குத் திரும்பும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். மனந்திரும்புகிற அனைவருக்கும் அவர் மன்னிப்பை அளிக்கிறார்; ‘கர்த்தருடைய நாமத்தை எவன் அழைப்பனோ அவன் இரட்சிக்கப் படுவான்’ என்று யோவேல் 2:32 இல் சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியாக, கர்த்தராகிய இயேசுவுக்குப் பிசாசின் துணை உண்டு என்றும், அவர் பெல்செபூபின் வல்லமையால் பிசாசுகளைத் துரத்துகிறார் என்றும் கூறிய யூதர்களும், கர்த்தராகிய இயேசுவின் சிலுவை மரணத்திற்குக் காரணமானவர்களும் பேதுருவின் பிரசங்கத்தின் மூலம் ஞானஸ்நானத்திற்கு அழைக்கப்படுகிறார்கள். இதனால், அத்தகைய கொடிய பாவத்தின் பெரும் குற்றவுணர்விலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.
27. அப்படியானால், உம்முடைய இரட்சிப்பை நிராகரிப்பவர்களுக்கு நீர் இரட்சிப்பை மறுத்தால் அதில் ஆச்சரியம் கொள்ள என்ன இருக்கிறது? அவர்கள் உம்மிடம் மனந்திரும்புதலைத் தேடுவதால் அவர்களுக்கு நாட்டம் ஏதும் இல்லை என்றபோதும் என்றாலும் கூட இப்படி நினைக்காத தோன்றுகிறதா? யூதாஸ் தன் மனவருத்தத்தை யூதர்களிடம் அல்ல, கிறிஸ்துவிடம் காட்டியிருந்தால், கடவுளின் அளவற்ற இரக்கத்தினால் அவன்கூட மன்னிப்பிலிருந்து விலக்கப்பட்டிருக்க மாட்டான் என்று நான் நம்புகிறேன். மத்தேயு 27:5-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “நான் பாவம் செய்தேன், ஏனெனில் நான் ஒரு மாசில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன்” என்று அவன் அறிக்கையிட்ட போது, அதற்கு யூதத் தலைவர்கள், “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள்” என்று பதிலளித்தார்கள். ஒரு சிறிய பாவத்தைச் செய்த குற்றவாளி தன் தவறை உங்களிடம் ஒப்புக்கொள்ளும்போது, ‘அது எங்களுடைய பிரச்சினை அல்ல? அதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்பதைத் தவிர நீங்கள் வேறு என்ன பதில் சொல்ல முடியும்? அந்த வார்த்தைகளைத் தொடர்ந்து தான் தூக்குக் கயிறு வந்தது. ஆனாலும் பாவம் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ, அந்த பாவத்தின் அளவிற்கு தண்டனை கடுமையாகவே இருக்கும்.
28. ஆனாலும், அவர்கள் மனந்திரும்பாதிருந்தால், களங்கமின்மை மற்றும் விசுவாசம் எனும் உன்னத சிகரத்திலிருந்து பல தவறுகளால் வீழ்ச்சியைச் சந்தித்த நீங்கள், குறைந்தபட்சம் மனந்திரும்ப முயற்சி செய்யுங்கள். நமக்கு ஒரு நல்ல ஆண்டவர் இருக்கிறார்; அனைவரையும் மன்னிப்பதே அவருடைய சித்தம். அவர் தீர்க்கதரிசியின் மூலமாக உங்களை அழைத்து, “பாவங்களைத் துடைத்தெறிகிறவர் நானே, நான் அவற்றை எப்போதும் நினைவுகூரமாட்டேன்” என்று கூறினார். ஆனால் நீங்கள் நினைவுகூருங்கள், நாம் அனைவரும் சேர்ந்து இது குறித்து இறைஞ்சுவோம்.
அத்தியாயம் 5
நோவேஷிசியர்களின் நம்பிக்கைக்குரிய சீமோன் மாகஸுக்கு புனித பேதுரு கூறிய வார்த்தைகளைப் பற்றி இது பேசுகிறது; அந்த வார்த்தைகள் சீமோனை மன்னிக்க முடியாது என்று குறிப்பிடுவதாக அவர்கள் எண்ணுகிறார்கள். இருப்பினும் புனித பேதுரு சீமோனின் தீய நோக்கங்களைப் புரிந்துகொண்டதால் சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. பழைய ஏற்பாட்டிலிருந்து வரும் உதாரணங்கள், சந்தேகம் என்பது மன்னிக்கப்படக்கூடியதல்ல என்று அர்த்தம் கொள்வதல்ல என்பதைக் காட்டுகின்றன. மனந்திரும்புதலைப் பற்றி அப்போஸ்தலர்கள் நமக்குக் கற்பித்தார்கள், அதன் விளைவுகளை தாவீதின் விஷயத்தில் நாம் காண்கிறோம். கடவுளின் கருணையையும் அருட்சாதனங்களையும் பெறுவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய மனந்திரும்புதலின் முன்மாதிரியான எப்பிராயீமியர்களைப் பற்றியும் புனித அம்புரோஸ் குறிப்பிடுகிறார்.
29. நோவேஷியர்கள் அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகளிலிருந்து ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள். மனந்திரும்புதலின் பேரில் மன்னிப்பு வழங்கப்படும் என்று தான் கூறவில்லை என அவர்கள் நினைத்தால், அவர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்: விசுவாசம் இல்லாதவனாய், அதற்குப் பதிலாக வஞ்சகச் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சீமோனைப் பற்றிதான் அவர் குறிப்பிட்டார். அதேபோல, மத்தேயு 8:19-20 இல், வேதபாரகரில் ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் போகுமிடமெல்லாம் நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்றான். அதற்கு இயேசு, “நரிகள் தாம் வாழ குழிகளைப் பெற்றுள்ளன. பறவைகள் தாம் வாழ கூடுகளைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதகுமாரனுக்குத் தலை சாய்க்க ஓரிடமும் இல்லை” என்ற கர்த்தரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறது. ஏனெனில், அந்த மனிதனின் நோக்கங்கள் முற்றிலும் உண்மையானவை அல்ல என்பதை அவர் புரிந்துகொண்டார். ஆகவே, ஞானஸ்நானம் பெறாத ஒருவரின் நேர்மையின்மையை அவர் உணர்ந்துகொண்டதால், ஆண்டவர் தம்மைப் பின்தொடர அனுமதி மறுத்தார் என்றால் ஞானஸ்நானத்திற்குப் பிறகும் வஞ்சகம் செய்யும் குற்றவாளியாக இருந்து, அக்கிரமத்தால் கட்டுண்டவன் என்று அறியப்பட்ட ஒருவனை அப்போஸ்தலன் மன்னிக்காததில் ஆச்சரியம் ஏதும் இருக்கிறதா?
30. ஆனால், அவர்களுக்கு இதுவே என் பதிலாக இருக்கட்டும். என்னைப் பொறுத்தவரை, பேதுரு சந்தேகிக்கவில்லை என்று நான் கூறுகிறேன்; அத்தோடு, ஒரே ஒரு வார்த்தைக்கான சந்தேகத்திற்குரிய விளக்கத்தால் இவ்வளவு பெரிய கேள்வியை ஒதுக்கிவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. பேதுரு சந்தேகித்தார் என்று அவர்கள் கூறினால், கடவுளும் சந்தேகித்தார் என்று கூறுவார்களா? எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தீர்க்கதரிசியான எரேமியாவிடம் பின்வருமாறு கூறினார்: “எரேமியா, கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் எழுந்து நின்று, ஆலயத்திற்கு வழிபட வரும் யூதாவின் ஜனங்கள் அனைவரிடமும் இந்த வார்த்தையைக் கூறு; நான் சொல்லச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல். எனது வார்த்தையில் எந்தப் பகுதியையும் விட்டுவிடாதே. ஒருவேளை எனது வார்த்தையை அவர்கள் கேட்டு அதற்கு அடிபணியலாம். அவர்கள் தமது தீயவாழ்வைக் கைவிடலாம். அவர்கள் கைவிட்டு மாற்றம் பெறுவார்களானால், நான் அவர்களைத் தண்டிப்பதற்காக வைத்திருக்கும் திட்டங்களையும் மாற்றுவேன்” என்று எரேமியா 26:2-3 கூறுகிறது. அப்படியானால், என்ன நடக்கும் என்பதைப் பற்றி தேவனுக்கும் எதுவும் தெரியாது என்று அவர்கள் சொல்லித் திரியட்டும்.
31. அந்த வார்த்தை தேவன் அறியாதவர் என்று பொருள்படுவதில்லை. மாறாக, விடயங்களை எளிதாகக் கூறுவதற்காக வேதாகமம் கடைபிடிக்கும் வழக்கமான முறையையே அது பின்பற்றுகிறது. உதாரணமாக, தேவன் எசேக்கியேலிடம், “மனுபுத்திரனே, எனக்கு விரோதமாகக் கலகம் செய்த இஸ்ரவேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். ஆனால் அவர்கள் மிகக் கடினமான மனதை உடையவர்கள். ஆனால் நீ அந்த ஜனங்களோடு பேசி, நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும். ஆனால் அவர்கள் நீ சொல்வதைக் கவனிக்கவோ எனக்கு எதிராகப் பாவம் செய்வதையோ நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மோசமான கலகக்காரர்கள்; எப்பொழுதும் எனக்கு எதிராக திரும்புகின்றார்கள். இருந்தபோதிலும், நீ அவற்றைச் சொல்லவேண்டும். அப்போது தான் ஒரு தீர்க்கதரிசி அவர்கள் மத்தியில் இருப்பதை அறிவார்கள்” என்று எசேக்கியேல் 2:4-5 இல் கூறப்பட்டுள்ளது. அவர்கள் செவிமடுப்பார்களா அல்லது மாறுவார்களா என்பது கடவுளுக்கு முன்பே தெரிந்திருந்தது. எனவே, இந்த வகையான வார்த்தைகள் கடவுள் சந்தேகிக்கிறார் என்பதை ஒருபோதும் உணர்த்துவதில்லை.
32. இறுதியாக, தங்கள் புகழைச் சொற்களின் மீது கட்டமைக்கும் இவ்வுலகின் ஞானிகள், சந்தேகத்தை வெளிப்படுத்த லத்தீன் வார்த்தையான “ஃபோர்டே” (forte) அல்லது அதன் கிரேக்கச் சொல்லான “டாக்கா” (τάχα) ஆகியவற்றை எப்போதும் பயன்படுத்துவதில்லை. எனவே அவர்களின் ஆரம்பகால கவிஞர் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள்.
…ἦ ῾ τάχα χήρη
…ஆமா,
அதாவது, நான் விரைவில் விதவை ஆவேன்; மற்றும் பத்தி தொடர்கிறது:
… τάχα γάρ σε κατακνέουσιν ᾿Αχαιοὶ
πάντες εφορμηθέντες.
ஆனால், அனைவரும் தாக்குதலில் இணையும்போது, ஒருவன் அனைவராலும் வீழ்த்தப்படக்கூடும் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை.
33. மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, நம்முடைய சொந்த அனுபவங்களிலிருந்து உதாரணங்களைப் பயன்படுத்துவோம். நற்செய்தியில், குமாரன் பிதாவை அழைக்கிறார். பிதா தம்முடைய ஊழியர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பி அவர்கள் கொல்லப்பட்ட பிறகு அவர்கள் தம்மை மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தம்முடைய பிரியமான குமாரனை அனுப்பத் தீர்மானித்தார். இது மத்தேயு 21:37-ல் கூறப்பட்டுள்ளது. வேறொரு பகுதியில், மக்கள் தம்மையோ தம்முடைய பிதாவையோ அறியவில்லை என்று குமாரன் கூறுகிறார். “நீங்கள் என்னைப் பற்றியும் என் பிதாவைப்பற்றியும் அறியமாட்டீர்கள். ஆனால் நீங்கள் என்னை அறிந்தால் என் பிதாவையும் அறிந்துகொள்வீர்கள்” என்று யோவான் 8:19 கூறுகிறது.
34. பேதுரு தம்முடைய புரிதலுக்கு எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல் தேவன் பயன்படுத்திய வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்றால், பேதுருவும் தம்முடைய சொந்த விசுவாசத்திற்குப் பாரபட்சமின்றி அவற்றைப் பயன்படுத்தினார் என்று நாம் ஏன் நம்பக்கூடாது? எல்லாவற்றிற்கும் மேலாக பாவங்களை மன்னிக்கும் திறனை அவருக்கு வழங்கிய கிறிஸ்துவின் வரத்தை அவரால் கேள்விக்கு உட்படுத்த முடியவில்லை; குறிப்பாக, மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கும் நோக்கம் கொண்ட மதவெறியர்களின் தந்திரத்திற்கு இடமளிக்கக் கூடாது என்ற உறுதிப்பாட்டோடு இருந்தார். அவ்வாறு செய்வதன் மூலம் நம்பிக்கையிழந்தவர்களுக்கு மீண்டும் ஞானஸ்நானத்தை கொடுப்பது குறித்த தங்கள் கருத்துக்களை அவர்கள் எளிதாக அறிமுகப்படுத்த முடியும்.
35. அப்போஸ்தலர்கள் ஞானஸ்நானத்தைப் பற்றிய கிறிஸ்துவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மக்கள் மனந்திரும்பும்படி போதித்து, அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று வாக்களித்து, அவர்களுடைய குற்றவுணர்வை நீக்கப் பாடுபட்டார்கள். இது தாவீது சொன்னதைப் போன்றது: எவருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டு, பாவங்கள் அகற்றப்பட்டனவோ அவர்கள் பாக்கியவான்கள். கர்த்தர் எவனுக்குப் பாவத்தைக் கணக்கிடாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான். திருமுழுக்கின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் மற்றும் நற்செயல்கள் செய்வதன் மூலம் பாவங்களில் இருந்து விடுதலை பெற்றோர் அனைவரையும் அவர் பாக்கியவான்கள் என்று அழைக்கிறார். மனந்திரும்புகிற ஒருவர் தன் பாவங்களைக் கண்ணீரால் கழுவித் துடைத்து விடுவதோடு மட்டுமல்லாமல், தன் கடந்தகாலத் தவறுகளைச் சிறந்த செயல்கள் மூலம் வெற்றிகொள்ள வேண்டும். அப்போதுதான் அம்மனிதன் செய்த பாவங்கள் அவருக்கு எதிராகக் கணக்கிடப்படாது.
36. ஆகையால், நமது பின்வரும் செயல்களால் நமது குறைகளை அகற்றிக்கொள்வோமாக; நாம் கண்ணீரால் நம்மைச் சுத்திகரித்துக்கொள்வோமாக, அப்பொழுது நம்முடைய தேவனாகிய கர்த்தர் எப்பிராயீமின் துக்கம் மிகுந்த வேளையில் அவனுக்குச் செவிகொடுத்ததுபோல, கதறும் எமக்கும் கர்த்தர் செவிகொடுப்பார். எரேமியா 31:18-ல் சொல்லப்பட்டுள்ளபடி, “எப்பிராயீம் அழுவதை நான் மெய்யாகவே கேட்டிருக்கிறேன்” என்று எழுதியிருக்கிறது. அதே அதிகாரத்தில் மீண்டும், எப்பிராயீமின் வார்த்தைகளையே அவர் மீண்டும் கூறுகிறார்: “நீர் என்னைத் தண்டித்தீர், நானும் பயிற்சி பெறாத கன்றுக்குட்டியைப்போல தண்டிக்கப்பட்டேன்.” ஒரு கன்றுக்குட்டி துள்ளிக்குதித்துத் தன் தொழுவத்தை விட்டு வெளியேறுவதுபோல, எப்பிராயீமும் தொழுவத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு கன்றுக்குட்டியைப்போலப் அனுபவமற்றவனாகவே இருந்தான். ஏனெனில், சீராக் 47:23 அவன் கர்த்தருடைய எழுதுகோலைக் கைவிட்டு, யெரொபெயாமைப் பின்பற்றி, கன்றுகளை வணங்கினான்” என்று கூறுகிறது. இது யாத்திராகமம் 31-இலும் காணப்படுகிறது. ஆரோன் மூலமாகத் தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கப்பட்ட ஒரு எதிர்கால நிகழ்வாகும்; இது யூத மக்கள் இந்த வழியில் வீழ்ச்சியடைவார்கள் என்பதைக் குறிக்கிறது. இவ்வாறு, தனது மனந்திரும்புதல் குறித்து எப்பிராயீம், “என்னை மனந்திருப்பும், அப்பொழுது நான் மனந்திரும்புவேன்; ஏனெனில், நீரே என் தேவனாகிய கர்த்தர். மெய்யாகவே, என் சிறையிருப்பின் முடிவில் நான் மனந்திரும்பி புத்தி தெளிந்தபின்பு என் குழப்பமான நாட்களுக்காகத் துக்கப்பட்டு, நிந்தையை எதிர்கொண்டு உம்மை வெளிப்படுத்தியதால் உமக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்” என்று கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
37. எப்படி மனந்திரும்புவது, என்ன சொல்வது, என்ன செய்வது என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம்; ஏனெனில் பாவத்தின் நாட்கள் குழப்பத்தின் நாட்களாகவும் இருக்கின்றன. கிறிஸ்து மறுதலிக்கப்படும் போது குழப்பம் உண்டாகிறது.
38. ஆகவே, நாம் நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, பாவம் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதிருப்போமாக. நாம் செய்த தவறுகளைப் பற்றி நினைக்கும்போது, அது வெட்கக்கேடானது என்றெண்ணி அவை குறித்து நாம் சங்கடப்படுவோமாக; சிலர் அடக்கமாக இருப்பதைப் பற்றியோ அல்லது சரியானதை புறக்கணிப்பதைப் பற்றியோ பேசும்போது பெருமைப்படுவது போல நடந்துகொள்ள வேண்டாம். நம்முடைய மாற்றம் உண்மையானதாக இருக்கட்டும், அப்போதுதான் தேவனை அறியாதிருந்த நாம் இப்போது மற்றவர்களிடம் அவரைப் பற்றிச் சொல்ல முடியும். அப்பொழுது, நம்முடைய மாற்றத்தைக் கண்டு கர்த்தர், “எப்பிராயீம் சிறுவயதிலிருந்தே அன்பான மகனாகவும், மகிழ்ச்சியான பிள்ளையாகவும் இருந்தான். நான் அவன்மீது அக்கறை கொண்டிருப்பதால், நிச்சயமாக அவனை நினைவுகூருவேன், அவனுக்கு உதவ நான் விரைவாக வருவேன்; நிச்சயமாக அவனுக்கு இரக்கம் காட்டுவேன்” என்று நம்மிடம் சொல்லக்கூடும்.
39. கர்த்தர் நமக்கு இரக்கத்தை வாக்களிக்கிறார். அதை அவர் தாகமுள்ள ஆத்துமாக்களையெல்லாம் நிரப்பி, பசியுள்ள ஆத்துமாக்களையெல்லாம் நிறைவு செய்தேன் என்று கூறுவதன் மூலம் காட்டுகிறார். எரேமியா 31:25-26 இல், நான் பலவீனமும் சோர்வும் அடைந்த ஜனங்களுக்கு வலிமையையும் ஓய்வையும் கொடுப்பேன்” என்று கூறியதைக் கேட்ட பிறகு, “நான் விழித்தெழுந்து பார்த்தேன், என் நித்திரை எனக்கு இனிமையாக இருந்தது” என்கிறது. பாவம் செய்பவர்களுக்கு கர்த்தர் தமது அருட்சாதனங்களை அருளுகிறார் என்பதை நாம் காண்கிறோம். ஆகையால், நாம் அனைவரும் கர்த்தரிடம் திரும்புவோமாக.
அத்தியாயம் 6
பாவம் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்க்கதரிசி எசாயாவின் போதனைகளை மேற்கொள்ள காட்டி புனித அம்புரோஸ் விளக்குகிறார். பின்னர், இசை மற்றும் நடனம் குறித்து நம் ஆண்டவர் கூறிய ஒரு கூற்றை அவர் விவாதித்து, நடனம் அனுமதிக்கப்படக் கூடாது என்று கூறுகிறார். இதைத் தொடர்ந்து, உண்மையான மனந்திரும்புதலுக்கு என்ன தேவை என்பதை எடுத்துக்காட்ட, அவர் எரேமியாவின் உதாரணத்தைப் பயன்படுத்துகிறார். இறுதியாக, தங்களுக்காகவோ அல்லது பிறருக்காகவோ மனந்திரும்புதல் என்ற முயற்சியால் பயனடைந்த பலரை அவர் பட்டியலிடுகிறார்.
40. ஆனாலும், அவர்கள் மனந்திரும்பாதிருந்தாலும் கூட, நீங்கள் உங்களுக்காக வருந்த வேண்டும். நீங்கள் பலமுறை தூய்மையிலிருந்தும் விசுவாசத்திலிருந்தும் வழிதவறிச் சென்றுள்ளீர்கள். எல்லோரையும் மன்னிக்க விரும்பும் ஒரு கனிவான தேவன் நமக்கு இருக்கிறார். அவர் தீர்க்கதரிசி மூலமாக உங்களை அழைத்து, “நான் உங்கள் பாவங்களை நீக்கி, அவற்றை நினைவில் கொள்ள மாட்டேன்” என்று கூறினார். ஆனால், நாம் அதைப் பற்றிப் பேசுவதற்காக நீங்கள் அவற்றை நினைவுகூர வேண்டும். அவர், “நான் அவற்றை நினைவில் வைத்திருக்க மாட்டேன், ஆனால் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதன் பொருள், நான் மன்னித்த பாவங்களை, அவை மறக்கப்பட்டதைப் போல மீண்டும் கிளறமாட்டேன் என்பதாகும். ஆனால் நீங்கள் அவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். என் இரக்கத்தினால் நான் அவற்றை நினைவில் இருந்து அகற்றிவிடுவேன், ஆனால் உங்கள் சொந்த நலனுக்காக நீங்கள் அவற்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள நீங்கள் அவற்றை மனதிற்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் இன்னும் குற்றமற்றவர் போல நடந்துகொள்ளாதீர்கள். அதன்மூலம் உங்கள் பாவத்தை மேலும் மோசமாக்காதீர்கள். அதேநேரம், உங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வதன் மூலம் நீங்கள் நேர்மையானவர்களாக இருப்பீர்கள். உங்கள் பாவங்களை நேர்மையாக ஒப்புக்கொள்வது பாவம் செய்வதிலிருந்து உங்களை விடுவிக்கிறது.
41. நீங்கள் பெற்ற கிருபையை நினைவுகூர்ந்தும், அதைப் பெறாதது போலப் பெருமை கொள்ளாமல் இருப்பதே தேவன் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்பதை நீங்கள் உணரவேண்டும். உங்கள் பாவங்களை அறிக்கையிட உங்களை ஊக்குவிப்பதற்காக அவர் எவ்வளவு முழுமையாக மன்னிப்பை வாக்குறுதியளிக்கிறார் என்பதை நீங்கள் உணரவேண்டும். தேவனுடைய கட்டளைகளை எதிர்ப்பதினால் யூதர்களைப் போல நீங்கள் இடறாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள். அவர்களைப் பார்த்து கர்த்தராகிய இயேசு, “நாங்கள் உங்களுக்கு இசை வாசித்தோம், நீங்கள் நடனமாடவில்லை; நாங்கள் புலம்பினோம், நீங்கள் அழவில்லை” என்று லூக்கா 7:32-ல் கூறியுள்ளார்.
42. வார்த்தைகள் மிகவும் பொதுவானவை, ஆனால் அவற்றுக்குப் பின்னால் உள்ள புனிதத்துவமோ பொதுவானதல்ல. எனவே, விழிப்புடன் இருப்பது முக்கியம், ஏனெனில், இந்தக் கூற்றின் பொதுவான விளக்கத்தால் ஏமாற்றப்பட்டு, கட்டுப்பாடற்ற நடன அசைவுகளும் மேடையின் வெறித்தனமும் பாராட்டப்படுகின்றன என்று எண்ணிவிடக் கூடாது; ஏனென்றால் உண்மையில், அவை இளமைப் பருவத்தில் சிக்கலுக்கு வழிவகுக்கும். இருப்பினும், தேவனுடைய புனித பேழைக்கு முன் தாவீது ஆடிய நடனமே பாராட்டப்படுகிறது. ஏனெனில் மத நோக்கங்களுக்காகச் செய்யப்படும் அனைத்தும் பொருத்தமானதே. அதாவது, கிறிஸ்துவின் வழிபாட்டிற்கும் மரியாதைக்கும் பங்களிக்கும் எந்தவொரு செயலைக் குறித்தும் நாம் வெட்கப்படக் கூடாது.
43. ஆகவே, இன்பங்களுக்கும் ஆடம்பரங்களுக்கும் துணையாக இருக்கும் நடனம் பற்றிப் பேசப்படுவதில்லை. ஆனால் ஆன்மீக அர்த்தத்தில் நடனம் என்பது உங்கள் ஆர்வமுள்ள உடலை உயர்த்தி, உங்கள் அவயவங்களைத் தரையில் கிடத்தி அல்லது அவற்றின் வழக்கமான இடங்களில் உணர்வற்றுப்போகவோ விடாமல் இருப்பதாகும். பிலிப்பியர் 3:13-14-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “கடந்த காலத்தில் உள்ளவற்றை நான் மறந்துவிடுகிறேன். என முன்னால் உள்ள குறிக்கோளை அடைய எவ்வளவு முயல முடியுமோ அவ்வளவு முயலுகிறேன். குறிக்கோளை அடைந்து வெகுமதியை பெறுவதற்கான முயற்சியையும் விடாமல் தொடர்ந்து நான் கைக்கொண்டு வருகிறேன். அது என்னுடையது. ஏனென்றால் அத்தகைய வாழ்வுக்குத்தான் இயேசு கிறிஸ்து மூலம் தேவன் என்னை அழைத்திருக்கிறார்” என்று கூறிய பவுல் ஒரு ஆவிக்குரிய விதத்தில் நடனமாடினார். மேலும், நீங்கள் ஞானஸ்நானம் பெறும்போது, நித்தியமான காரியங்களை நோக்கி கவனம் செலுத்தும் போது உங்கள் கைகளை உயர்த்தி உங்கள் கால்களை விரைவாகச் செயல்படச் செய்யும்படி நீங்களும் ஊக்குவிக்கப்படுகிறீர்கள். இந்த வகையான நடனம் விசுவாசத்துடன் கைகோர்த்துச் செல்வதுடன், அது கிருபையின் தோழனாகவும் மதிக்கப்படுகிறது.
44. இதோ இதுதான் அந்த இரகசியம்: நாங்கள் உங்களுக்கு இசையை இசைத்து புதிய ஏற்பாட்டின் பாடலைப் பகிர்ந்துகொண்டோம். ஆனால் நீங்கள் அதற்கேற்ப இசைந்துகொடுக்கவில்லை. கிருபையை உணர உங்கள் உள்ளங்களைத் தயார்படுத்தவில்லை. நாங்கள் புலம்பினோம், ஆனால் நீங்கள் உங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவில்லை. இதன் காரணமாக, யூத மக்கள் கைவிடப்பட்டனர்; அவர்கள் மாறாமலும் கிருபையை நிராகரித்தும் அவர்கள் போக்கில் இருக்காது தீர்மானித்து விட்டனர். மனந்திரும்புதல் யோவானால் கொண்டுவரப்பட்டது எனினும், கிருபை கிறிஸ்துவால் வழங்கப்பட்டது. கர்த்தாகிய கிறிஸ்து, ஆண்டவராக மனந்திரும்புதலை அளிக்கிறார்; யோவான், ஒரு ஊழியராக கிருபையைப் பிரகடனப்படுத்துகிறார். கிருபை என்பது கடவுளிடமிருந்து வரும் ஒரு கொடை என்பதாலும், பாவிகள் குணமடைவதற்காக மனந்திரும்புதல் என்பது செய்ய வேண்டிய ஒன்று என்பதாலும், திருச்சபையானது கிருபையைப் பெறுவதற்கும் மனந்திரும்புதலின் அவசியத்தை வலியுறுத்துவதற்கும் இவ்விரண்டையும் கடைபிடிக்கிறது.
45. ஒருவர் செய்த தவறுகளுக்காக மனம் வருந்துவது மிகவும் முக்கியம் என்பதை எரேமியா புரிந்துகொண்டார். எருசலேமைப் பற்றிய தனது புலம்பல் என்ற நூலில் அந்த நகரமே வருந்துவதாக அவர் காட்டியுள்ளார். அவர் மேலும் எழுதுகையில், “இரவில் அவள் மிகவும் அழுதாள், அவளது கண்ணீர் அவள் கன்னங்களில் வழிந்தோடுகிறது. அவளை நேசிப்பவர்கள் எவரும் அவளுக்கு ஆறுதல் சொல்ல அவளருகே இல்லை. சீயோனின் வழிகள் துக்கமானவை” என்று. புலம்பல் 1:16-இல் அவர் மேலும் கூறும்போது, “நான் இவை அனைத்தின் நிமித்தம் அழுகிறேன். எனது கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுகிறது. எனக்கருகில் ஆறுதல் கூறவோ தேற்றவோ எவருமில்லை. எனது பிள்ளைகள் பாழான நிலத்தைப் போன்றிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்கு காரணம் என்னவென்றால், பகைவர்கள் அவர்களை வென்றனர்” என்று கூறுகிறார். தனக்கு உதவி செய்து வந்த நபரின் ஆறுதலை இழந்தது தனது மிகப்பெரிய துக்கங்களில் ஒன்று என்று அவர் கருதுகிறார். அப்படியிருக்க, மனவருத்தத்தில் இருப்பவர்களுக்கு மன்னிப்பின் நம்பிக்கையை அளிக்காமல் ஆறுதலை எப்படி மறுக்க முடியும்?
46. ஆனால், மனந்திரும்புகிறவர்கள் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையிட்டு, முழுமையான வைராக்கியத்தோடும், நிறைந்த அன்போடும், தூய்மையான நோக்கங்களோடும், உள்ளத்தால் ஆழ்ந்த வருத்தத்தோடும், பரிபூரண மனமாற்றத்தோடும் கற்றுக்கொள்ளட்டும்; அவர்கள், “என்னைப் பாரும் கர்த்தாவே, நான் மிக்க துன்பத்தில் இருக்கிறேன்! எனது உள்மனம் கலங்குகிறது! எனது இதயம் தலைகீழாகத் திரும்பினதுபோல் உள்ளது! என்னுடைய கசப்பான அனுபவங்களின் காரணமாக என் இதயம் இப்படியாக துவண்டுபோய் இருக்கிறது” என்று புலம்பல் 1:20-இல் காட்டப்பட்டுள்ளது.
47. இந்தப் பகுதியில் மனதின் விசுவாசத்தையும் சரீரத்தின் நிலையையும் அடையாளம் கண்டுகொள்கிறீர்கள்: புலம்பல் 2:10-11 “சீயோனின் குமாரத்திகளின் மூப்பர்கள் தரையில் அமர்ந்து, தங்கள் தலைகளில் தூசியைப் பூசிக்கொண்டு, கந்தல் துணியை அணிந்திருந்ததாக விவரிக்கப்படுகிறார்கள். பிரபுக்கள் தங்கள் தலைகளைத் தாழ்த்திக்கொண்டனர். அதே நேரத்தில் எருசலேமின் கன்னியர் கண்ணீரால் மூழ்கினர். எனது கண்கள் கண்ணீர் சிந்திக் களைத்துப் போயின! எனது உள்மனம் கலங்குகிறது! எனது இதயம் தரையில் ஊற்றப்பட்டது போன்று உணர்கின்றது!” என்கிறது.
48. யோனா 3:5-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, துன்பத்துக்குள்ளான நினிவே மக்கள் தங்கள் நகரத்தின் அழிவிலிருந்து தப்பித்தார்கள். மனந்திரும்புதலுக்கு அத்தகைய சக்தி உண்டு. அது தேவனுடைய மனதை மாற்றுவது போல் தெரிகிறது. ஆகவே தப்பிப்பது உங்களைப் பொறுத்தது; கர்த்தர் அவரிடம் கேட்பதையும் மக்கள் அவர்மீது விசுவாசம் வைப்பதையும் விரும்புகிறார். மேலும் ஜெபங்கள் அவரை நோக்கி ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். நீங்கள், எவரேனும் ஒரு மனிதர் உங்களிடம் மன்னிப்பு கேட்கப்பட வேண்டும் என விரும்புவீர்கள். அப்படியிருக்கையில் நீங்கள் கேட்காமலேயே கடவுள் உங்களை மன்னிப்பார் என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?
49. எருசலேம் தனக்காக அழாதபடியால், கர்த்தர் அதற்காக அழுதார். அவருடைய கண்ணீரின் மூலம் அது மன்னிப்பைப் பெற வேண்டும் என்று அவர் விரும்பினார். நாம் பாதுகாப்பைக் கண்டடைய வேண்டும் என்பதற்காகவே அழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். லூக்கா 23:28-இல் காணப்படும் நற்செய்தியில் “இயேசு திரும்பி அப்பெண்களை நோக்கி, “எருசலேமின் பெண்களே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காவும் அழுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
50. இறந்துகொண்டிருந்த ஜனங்களைக் காப்பாற்றும்படி தாவீது கதறி அழுது, தேவனுடைய இரக்கத்தை இறைஞ்சினார். தனக்குக் கொடுக்கப்பட்ட மூன்று தெரிவுகளில், தேவனுடைய இரக்கத்தை மிக அதிகமாகப் பெறக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். மக்களுக்காக அழும்படி தேவன் தீர்க்கதரிசிகளுக்கே சொல்லியிருக்கும்போது, உங்கள் பாவங்களுக்காக அழ நீங்கள் ஏன் வெட்கப்படவேண்டும்?
51. இறுதியாக, எசேக்கியேல் எருசலேமுக்காக அழும்படி கட்டளையிடப்பட்டார். அவர் ஒரு புத்தகத்தை எடுத்தார். அது துக்கம், ஒரு பாடல் மற்றும் துயரம் பற்றிய வார்த்தைகளுடன் தொடங்கியது. இவைகளில் இரண்டு துக்கமானவை, ஒன்று இன்பமானது, ஏனெனில் இப்பொழுது யார் அதிகமாக அழுகிறார்களோ அவர்கள் பிற்காலத்தில் இரட்சிக்கப்படுவார்கள். “ஞானமுள்ளவன் மரணத்தைப்பற்றிச் சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவனோ எப்பொழுதும் நல்ல நேரத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான்” என்று பிரசங்கி 7:4 கூறுகிறது. அத்தோடு இயேசுவும் லூக்கா 6:21-இல், “இப்பொழுது அழுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நீங்கள் பின்னாளில் மகிழ்ச்சியுடன் புன்னகைப்பீர்கள்” என்று கூறினார்.
அத்தியாயம் 7
இந்த அத்தியாயம் கிறிஸ்துவுக்காகவும் திருச்சபைக்காகவும் மனம்வருந்தவும் பாவங்களை அறிக்கையிடுவதற்குமான ஓர் அழைப்பை விடுக்க, லாசருவின் கதையை ஓர் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துகிறது. லாசருவைக் கொல்ல எத்தனித்தவர்களைப் போன்றவர்களே நோவேஷியர்கள் என்று புனித அம்புரோஸ் சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்துவின் பாதங்களில் மரியாள் ஊற்றிய தைலத்தின் நறுமணம் எல்லாப் பாவங்களும் முழுமையாக மன்னிக்கப்படலாம் என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறுகிறார். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது, மகிழ்ச்சியற்று, பொறாமை கொண்ட யூதாஸைப் போன்றவர்கள்தான் நோவேஷிய மதவெறியர்கள் என்றும் அவர் கூறுகிறார்.
52. எமது நித்திய மகிழ்ச்சியின் நிமித்தம் கொஞ்ச காலம் துக்கப்படுவோமாக. நாம் கர்த்தருக்கு மகிமை செலுத்தி நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, எம் தவறுகளைத் திருத்திக்கொண்டு நம்மை மேம்படுத்திக்கொள்வோமாக. இல்லையெனில், ‘ஐயகோ, என் ஆன்மாவே பூமியிலிருந்து தேவபக்தியுள்ள மனிதன் அழிந்துபோனான், ஏனெனில் அவனை வழிநடத்த ஒருவரும் இல்லை’ என்று சொல்பவர்களின் கதிக்கு நாமும் ஆளாக நேரிடும்.
53. நம்முடைய நல்ல ஆண்டவரிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட ஏன் அஞ்சுகிறீர்கள்? நீங்கள் மன்னிக்கப்படுவதற்காக அவற்றை வெளிப்படுத்துங்கள் என்று அவர் கூறுகிறார். ‘இன்னும் குற்றவாளிகளாக இருப்பவர்களுக்கு மன்னிப்பிற்கான பாதை திறந்திருக்கிறது. ஏனெனில் தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள்’ என்று நீதிமொழிகள் 18:17 கூறுகிறது. நேர்மையானவர் முதலில் தன் தவறை ஒப்புக்கொள்கிறார். கர்த்தர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், ஆனாலும் அவர் உங்களைத் தண்டிப்பதற்காக அல்ல, உங்களை மன்னிக்க நீங்கள் பேசும் வரை காத்திருக்கிறார். நீங்கள் உங்கள் பாவங்களை மறைக்கும்போது பிசாசு உங்கள் மீது அதிகாரம் பெற்று உங்கள் மீது குற்றம் சாட்டுவதை அவர் விரும்பவில்லை. உங்கள் மீது குற்றம் சாட்டுபவர்களையிட்டு முன்கூட்டியே எச்சரிக்கையாயிருங்கள்: உங்கள் தவறுகளை நீங்கள் ஒப்புக்கொண்டால், உங்கள் மீது குற்றம் சாட்ட முயற்சிக்கும் எவர் குறித்தும் நீங்கள் பயப்பட மாட்டீர்கள்; அப்படி நீங்கள் முன்வரும் பட்சத்தில், நீங்கள் வழிதவறிப் போனதாக உணர்ந்தாலும் புதிய வாழ்வைக் கண்டடைவீர்கள், இறந்த பின்னும் வாழ்வீர்கள்.
54. கிறிஸ்து உங்கள் கல்லறைக்கு வருவார்; அங்கே, நற்பணியாற்றிய பெண்ணான மார்த்தாளும், தேவனுடைய வார்த்தையைக் கவனமாகக் கேட்ட மரியாளும் உங்களுக்காக அழுதுகொண்டிருப்பதைக் கண்டால், அவர் மனமிரங்கிப்போவார். உங்கள் மரணத்தின்போது, அநேகருடைய கண்ணீரைக் கண்டு, அவர், “நீங்கள் அவனை எங்கே அடக்கம் செய்தீர்கள்?” என்று கேட்பார். இதன் பொருள், அவன் குற்றத்தைப் பொறுத்தளவில், எந்த நிலையில் இருக்கிறான், எந்த அளவிலான மனந்திரும்புதலைக் கொண்டிருக்கிறான் என்பதை அவர் அறியவும், நீங்கள் துக்கிக்கும் அந்த நபரை அவர் காணவும் விரும்புகிறார், அப்போதுதான் கண்ணீரால் அவருடைய இதயத்தைத் தொட முடியும். அப்போது ஒருவரது பாவம் மன்னிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிறதா இல்லையா என்பதை அவர் சோதிப்பார்.
55. யோவான் 11:34-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவளிடம் கேட்டார். அவர்கள் அவரிடம், “கர்த்தரே, வந்து பாரும்” என்றனர். “வந்து பாரும்” என்பதன் அர்த்தம் என்ன? அதன் அர்த்தம், பாவ மன்னிப்பைக் கொண்டுவருவது, மரித்தோர் வாழ்வைக் கொண்டுவருவது, மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் கொண்டுவருவது, உமது இராச்சியத்தை இந்தப் பாவிக்கும் கொண்டுவருவது என்பதாகும்.
56. அவர் வந்து பாவியின் பாவங்களினிமித்தம் அவன் தோள்களின்மேல் சுமத்தப்பட்ட பாறாங்கல்லை அகற்றும்படி கட்டளையிடுவார். உயிரற்றவைகள்கூட கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால், அவர் ஒரு வார்த்தையாலேயே அந்தக் கல்லை எளிதாக அகற்றியிருக்க முடியும். அவர் சிலுவையில் பாடுபட்டபோது பல கல்லறைகள் திறக்கப்பட்டதைப் போலவே, அவரும் தமது அமையான வல்லமையைப் பயன்படுத்தி கல்லறையின் கல்லை நகர்த்தியிருக்க முடியும். இருப்பினும், விசுவாசிக்காதவர்கள் மரித்தோர் உயிர்த்தெழுவதைக் காணவேண்டுமென எண்ணி, அவர் மக்களைக் கொண்டே அந்தக் கல்லை நகர்த்தும்படி செய்தார். பாவிகள் மீது பெரும் பாரமாக அழுத்திக்கொண்டு இருக்கும் பாவங்களின் சுமையைக் குறைக்க நாம் எவ்வாறு உதவலாம் என்பதை நமக்குக் காட்டுவதற்கான ஒரு வழியாகவும் இது அமைந்தது. இந்தச் சுமைகளை அகற்ற உதவுவது நமது கடமை. அதே சமயம் மரித்தோரை உயிர்ப்பித்து, கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களைக் கல்லறைகளிலிருந்து வெளிக்கொணர்வது அவருடைய சித்தம்.
57. ஆகவே, பாவியின் பெரும் பாரத்தைக் கண்டு, ஆண்டவராகிய இயேசு அழுகிறார்; ஆனால் திருச்சபையை மட்டும் அழ அவர் அனுமதிப்பது கிடையாது. “இயேசு தம்முடைய பிரியமானவர் மீது இரக்கம் கொண்டு உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா” என்று அழைத்தார்” என்று யோவான் 11:43 கூறுகிறது. இதன் பொருள், உங்கள் மனசாட்சியின் இருளிலும், உங்கள் பாவங்களின் அழுக்கிலும், குற்றத்தின் கைதியைப் போலச் சிக்கிக்கொண்டிருப்பவர்களே, வெளியே வந்து உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள், அப்போது நீங்கள் நீதிமான்களாக்கப்படுவீர்கள். அதேநேரம், “நாம் இதயத்தில் விசுவாசித்தால் தேவனுக்கேற்ற நீதிமானாகிறோம். நாம் விசுவாசிப்பதை வாயால் சொன்னால் இரட்சிக்கப்படுகிறோம்” என்று ரோமர் 10:10 இல் கூறப்பட்டுள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.
58. கிறிஸ்துவின் அழைப்பின் பேரில் நீங்கள் பாவத்தை அறிக்கையிட்டிருந்தால், தடைகள் உடைக்கப்பட்டு, ஒவ்வொரு சங்கிலியும் அவிழ்க்கப்படும்; சாதாரணமாக ஒரு மனிதன் இறந்தவுடன் அவனது சரீரம் அழுகிப்போய் அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிகக் கடுமையாக இருக்கும். ஏனெனில் அவன் இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்த படியால். இருப்பினும் அவனுடைய சரீரம் கல்லறையில் ஏற்கெனவே அடைக்கப்பட்டு இருந்த போதிலும், நான்கு தனிமங்களால் ஆன சரீரம் தீமைகளிலிருந்து விடுபட்டிருந்தபடியால் சிதைந்து போகாமல் மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தது. ஒரு இறந்த சரீரத்தின் துர்நாற்றம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், பரிசுத்த தைலம் அதன் நறுமணத்தை வெளியிடத் தொடங்கியவுடன் அது மறைந்துவிடும்; பின்பு மரித்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான், அதுவரை பாவத்தால் கட்டப்பட்டிருந்த அவனுடைய கைகளை விடுவிக்குமாறு கட்டளை இடப்படுகிறது; அவன் பெற்ற கிருபையின் உண்மையை வெளிப்படுத்தும் விதமாக, அவனுடைய முகத்திலிருந்த முக்காடு விலக்கப்படுகிறது. அவன் மன்னிப்பைப் பெற்றமையால் தன் முகத்தைத் திறந்து தன் முகத்தோற்றத்தைக் காட்டுமாறு அவனுக்கு கட்டளை இடப்படுகிறது. ஏனெனில் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒருவனுக்கு வெட்கப்பட ஒன்றுமில்லை.
60. ஆனால் இயேசு தாம் கொடுத்த கொடைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை; மாறாக, அவற்றை தாராளமாக மேலும் அதிகரிக்கிறார். புத்துயிர் பெற்ற நபரிடம் அவர் ஆவலுடன் திரும்பிச் சென்று, இந்தப் புதிய வாழ்வின் கொடையைக் கொடுத்து கொண்டாடுகிறார். தமது திருச்சபை அவருக்காக ஆயத்தப்படுத்தி இருந்த விருந்தில் அவர் கலந்துகொள்கிறார்; அங்கே, மரித்திருந்தவர் இப்போது கிறிஸ்துவுடன் அமர்ந்திருக்கிறார்.
61. அப்பொழுது திருச்சபையில் உள்ள பிள்ளைகளைப் போலவே ஒவ்வொருவரும் தெளிவான மனதோடும் பொறாமையின்றியும் அவரைக் குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். நேற்றும் முன்தினமும் கல்லறையில் இருந்த அவர் இப்போது ஆண்டவராகிய இயேசுவுடன் அமர்ந்திருப்பது எப்படி என்று அறிந்து அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
62. யோவான் 12:3-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மரியாள் கர்த்தராகிய இயேசுவின் பாதங்களில் பரிமள தைலத்தைப் பூசுகிறாள். ஒருவேளை, தாழ்மையான ஒருவர் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டதாலும், சிலர் மற்றவர்களை விட மேலானவர்களாக மதிக்கப்பட்டாலும் இவ்வாறு செய்திருக்கக்கூடும். 1 கொரிந்தியர் 12:27-இல், “நீங்கள் எல்லாரும் இணைந்து கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் உறுப்பாக அமைகிறீர்கள்” என்று சொல்லப்பட்டதன் காரணமாக, அவள் அவருடைய பாதங்களில் பரிமள தைலத்தைப் பூசத் தேர்ந்து கொள்கிறாள். அவ்வாறே, 2 கொரிந்தியர் 13:3-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா?” என்று அப்போஸ்தலர் கேட்டதன் மூலம் அவர் கிறிஸ்துவுக்காகப் பேசியதோடு, எதிர்காலத்தைப் பற்றிய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்ட தீர்க்கதரிசிகளும் அவருக்காகப் பேசினார்கள். நான் அவருடைய பாதத்தைப் போல தகுதியுடையவனாக இருக்க விரும்புகிறேன், அப்போதுதான் மரியாள் தனது விலையுயர்ந்த பரிமள தைலத்தை என்மீது ஊற்றி, என் பாதங்களில் பூசி என் பாவங்களைக் கழுவ முடியும்.
63. லாசருவைக் குறித்து நாம் வாசிப்பது, மனந்திரும்பும் ஒவ்வொரு பாவிக்கும் பொருந்த வேண்டும். ஒருவன் பாவத்தில் தொலைந்து போயிருந்தாலும், விசுவாசம் எனும் விலையுயர்ந்த வரத்தால் அவன் இன்னும் சுத்திகரிக்கப்பட முடியும். விசுவாசம் அத்தகைய நன்மையைக் கொண்டுவருகிறது; முன்பு துர்நாற்றம் வீசிய ஓர் இடம், இப்பொழுது இனிய நறுமணத்தால் நிரப்பப்பட முடியும்.
64. கொரிந்துவில் இருந்த அந்த வீடு, புறஜாதியாரிடம் காணப்பட்டதை விடவும் மோசமான, கடுமையான பாலியல் ஒழுக்கக்கேடு அவர்களுக்குள் இருந்தது என்று கூறப்பட்டதால், ஒரு கெட்ட பெயரைப் பெற்றிருந்தது. ஒரு சிறிய தவறான நடத்தை முழு சமூகத்தையும் கெடுத்துவிட்டதால், இது ஒரு விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்கியது என்று 1 கொரிந்தியர் 5:1 கூறுகிறது. இருப்பினும், “நீங்கள் யாரையாவது மன்னித்தால் அவர்களை நானும் மன்னித்துவிடுகிறேன். நான் மன்னிப்பவை அனைத்தும் (மன்னிக்கப்பட ஏதேனும் இருக்கும் பட்சத்தில்) உங்கள் பொருட்டே ஆகும். ஏனெனில் கிறிஸ்து எங்களோடு இருக்கிறார்” என்று 2 கொரிந்தியர் 2:10- கூறுகிறது. மேலும் இதன் வழியாக ஒரு நேர்மறையான மாற்றம் தொடங்கியது; கிறிஸ்துவின் முன்னிலையில் அவர்களுக்காக மன்னிப்பு வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக பாவி பாவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டபோது அந்த இடம் மகிழ்ச்சியால் நிரம்பியது. மேலும் கிருபையின் நறுமணத்தால் சூழல் இனிமையாக மாறியது. மன்னிப்பின் வரத்தைப் பகிர்ந்துகொண்டதை அறிந்த அப்போஸ்தலர், 2 கொரிந்தியர் 2:15-ல் இரட்சிக்கப்படுவோர் மற்றும் கெட்டுப்போனோர் போன்றோருக்கு இடையே நாங்கள் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம். இதுவே நாங்கள் தேவனுக்குத் தரும் காணிக்கை” என்று கூறினார்.
65. இந்தத் தைலம் ஊற்றப்படும்போது, அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள்; ஆனால், யூதாஸ் ஸ்காரியோத்து (இவன் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன்தான் பின்னாளில் இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன்) மரியாள் செய்தவற்றை விரும்பவில்லை. இன்றும் கூட, பாவி அதைக் குறை கூறுகிறான், துரோகி அதைக் கண்டனம் செய்கிறான்; ஆனாலும் அவனே கிறிஸ்துவின் குறைகூறுதலுக்கும் ஆளாகிறான். ஏனெனில் அவன் கர்த்தரின் மரணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகோலாததோடு, அத்தகைய ஒரு மாபெரும் நல்லடக்கத்தில் பொதிந்திருக்கும் இரகசியத்தை அறிந்துகொள்ளத் தவறுகிறான். நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்காக கர்த்தர் பாடுகளையும் மரணத்தையும் சகித்தார். அவருடைய மரணத்தின் மகத்தான மதிப்பிலிருந்து இது தெளிவாகிறது. அது பாவியின் பாவத்தைப் போக்கி அவனை மீண்டும் கிருபைக்குள் கொண்டுவரப் போதுமானது; அதனால் அனைவரும் வந்து அவர் கிறிஸ்துவுடன் உணவுண்பதைக் கண்டு வியந்து, “என்னுடைய இந்த குமாரன் இறந்து போயிருந்தான். ஆனால் மீண்டும் உயிரோடு வந்துள்ளான். அவன் காணாமல் போயிருந்தான், இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டான்” என்று லூக்கா 15:24-ல் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், “பரிசேயர்கள் இயேசுவின் சீடர்களிடம், “ஏன் உங்கள் குருவானவர் வரி வசூலிப்பவர்களுடனும் தீய மனிதர்களுடனும் உணவு உண்கிறார்?” என்று கேட்டனர். அதைக்கேட்ட இயேசு அவர்களை நோக்கி, “ஆரோக்கியமானவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிகளுக்குத்தான் மருத்துவர் தேவை” கர்த்தரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி மத்தேயு 9:11-12 கூறுகிறது.
அத்தியாயம் 8
மனந்திரும்புதலை வலியுறுத்தும் புனித அம்புரோஸ், தனது சொந்த நிலையை நினைவு கூர்கிறார். நற்செய்தியில் வரும் பெண்ணைப் போல, நம் ஆண்டவரின் பாதங்களைக் கழுவ முடிந்தால் நன்றாக இருக்கும் என்ற தனது அவாவை அவர் வெளிப்படுத்துகிறார். இது மனந்திரும்புதலுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும். ஏனென்றால் இந்தச் செயலைச் செய்ய முடியாதவர்கள்கூட மன்னிப்பைப் பெற முடியும். தன்னை விட சிறந்தவர்கள் என்று அவர் எண்ணும் பாவிகளுக்காகப் பச்சாத்தாபப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர் ஜெபிக்கிறார். கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ அவர்கள் இழிவாகக் கருதப்படக்கூடாது என்பதே அவரது முதன்மையான நோக்கம்.
66. ஆகவே, உங்கள் காயத்தை மருத்துவரிடம் காட்டுங்கள், அவர் அதைக் குணப்படுத்துவார். நீங்கள் அதைக் காட்டாவிட்டாலும் அந்தக் காயம் பற்றி அறிந்திருக்கிறார். அதேவேளை உங்கள் குரலைக் கேட்கக் காத்திருக்கிறார். உங்கள் கண்ணீரால் உங்கள் காயத்தின் தழும்புகளைக் கழுவுங்கள். இவ்வாறுதான் நற்செய்தியில் வரும் அந்தப் பெண் செய்தாள்; தன் பாவத்தினால் எழுந்த துர்நாற்றத்தைத் துடைத்தாள்; இவ்வாறு தன் கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவியபோது, அவள் தன் குற்றத்தையும் சேர்த்து கழுவித் தீர்த்தாள்.
67. ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னுடன் நடக்கும்போது, எனது கால்களில் படிந்துள்ள கறைகளைக் கழுவி அகற்ற எனக்கு உதவுவீராக. என் செயல்களால் நான் செய்த தவறுகளை நீர் சுத்தப்படுத்த வேண்டும் என்று நான் ஏங்குகிறேன். ஆனால், உமது பாதங்களைக் கழுவ வாழ்வளிக்கும் தண்ணீரை நான் எங்கே காண்பேன்? என்னிடம் தண்ணீர் இல்லையென்றால் என்ன, என் கண்ணீர் இருக்கிறதே. அப்படியானால் என் கண்ணீரால் உமது பாதங்களைக் கழுவும்போது, என்னையும் நான் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். நான் அதிகமாக அன்பு செலுத்துவதால் என் பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று ஏன் என்னிடம் சொல்கிறீர்? நான் உமக்கு இன்னும் அதிகமாகக் கடமைப் பட்டிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். மேலும், நீதித்துறைச் சிக்கல்களும் பொதுக் கடமைகளின் மீதான அச்சமும் நிறைந்த ஒரு வாழ்க்கைக்குப் பிறகு நான் ஒரு குருவாக பணிபுரிய அழைக்கப் பட்டதால், நான் பெரிதும் மன்னிக்கப்பட்டிருக்கிறேன் என நம்புகிறேன். எனவே இந்தளவுக்கு மன்னிப்பைப் பெற்ற நான், உம்மைக் குறைவாக நேசித்தால் நன்றிகெட்டவனாகத் தோன்றிவிடுவேனோ என்று எண்ணிக் கலங்குகிறேன்.
68. ஆனாலும், கர்த்தருக்கு விருந்து கொடுத்த சீமோனை விடவும், தகுதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கும் எல்லோராலும் நிகராக முடியாது. அவள் கிறிஸ்துவின் பாதங்களை முத்தமிட்டு, தன் கண்ணீரால் அவற்றைக் கழுவி, தன் கூந்தலால் துடைத்து, தைலத்தால் பூசி, மன்னிப்பை விரும்பும் அனைவருக்கும் ஒரு பாடத்தைக் கற்பித்தாள்.
69. முத்தம் என்பது அன்பின் சின்னமாகும், அதனால்தான் ஆண்டவராகிய இயேசு, “அவள் தன் உதடுகளால் என் பாதங்களை முத்தமிடட்டும்” என்று கூறியிருந்தார். இதுகுறித்து உன்னதப் பாட்டு 1:2, “என்னை முத்தங்களால் மூடிவிடும். திராட்சைரசத்தைவிட உமது அன்பு சிறந்தது” என்று கூறுகிறது. அந்தக் கூந்தல் எதைக் குறிக்கிறது? உலகின் பகட்டான காரியங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மன்னிப்பை நாடி, இரக்கத்தைத் தூண்டுவதற்காகப் பணிவுடன் கண்ணீருடன் தரையைத் தொடவேண்டும் என்று அது நமக்குக் கற்பிக்கிறது. அத்தோடு தைலம் என்பது ஒரு நல்ல வாழ்வின் நறுமணத்தைக் குறிக்கிறது. தாவீது, ஒரு அரசனாக இருந்தபோதிலும், “ஒவ்வொரு இரவும் என் படுக்கையைக் கழுவுவேன், என் மஞ்சத்தை என் கண்ணீரால் நனைப்பேன்” என்று கூறியுள்ளார். இதன் காரணமாகதான் அவர் அத்தகைய அருளைப் பெற்றார்; அதன் விளைவுதான், நமக்காகக் கிறிஸ்துவைப் பெற்றெடுக்க அவருடைய வம்சத்திலிருந்து ஒரு கன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால்தான் இந்தப் பெண்மணி நற்செய்தியில் போற்றப்படுகிறார்.
70. அப்படிப்பட்ட பெண்ணுக்கு நிகராக நம்மால் இருக்க முடியாவிட்டாலும், பலவீனர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதை ஆண்டவராகிய இயேசு அறிந்திருக்கிறார். விருந்தை ஆயத்தப் படுத்தவோ, தைலத்தைக் கொண்டுவரவோ, அல்லது வாழ்வளிக்கும் நீரூற்றைத் தன்னுடன் சுமந்து செல்லவோ எவரும் இல்லாத போது, அவர் தானே கல்லறைக்கு வருகிறார்.
71. ஆண்டவரே இயேசுவே, நீர் என் கல்லறைக்கு வரத் திருவுளம் கொண்டீரானால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உமது கண்ணீரால் நீர் என்னைக் கழுவ முடிந்தால் எவ்வளவு நலமாயிருக்கும், ஏனெனில் என் தவறுகளைக் கழுவிச் சுத்தம் செய்யக்கூடிய கண்ணீரை என் கண்கள் சிந்த முடியாத அளவுக்கு வற்றிப்போய் விட்டன. நீர் எனக்காக அழுதால், நான் இரட்சிக்கப்படுவேன்; உமது கண்ணீருக்கு நான் தகுதியானவன் என்றால், என் பாவங்களின் அசுத்தத்தை நான் சுத்திகரிக்க முடியும். உமது கண்ணீரில் சில துளிகளுக்கு நான் தகுதியானவனானால், நீர் என்னை இந்த உடல் எனும் கல்லறையிலிருந்து என்னை வெளியே அழைத்து, “வெளியே வா!” என்று சொல்வீர். என் எண்ணங்கள் இந்த உடலின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, ஒளியில் அசைந்தாடி, கிறிஸ்துவை நோக்கி ஆர்ப்பரிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் நான் இருண்ட செயல்களில் மூழ்கி இருப்பதை நிறுத்திவிட்டு, நன்மை என்ற ஒளிக்குள் வரக் கவனம் செலுத்த முடியும். ஏனெனில் ஒருவன் பாவங்களில் நிலைத்திருக்கும்போது அவன் தன் சொந்த மனதிலேயே தன்னைக் கைதியாக வைத்துக்கொள்கிறான்.
72. ஆகையால், உம்முடைய அடியானை வெளியே அழைத்தருளும். பாவங்களின் சங்கிலியால் என் கால்கள் கட்டப்பட்டு, என் கைகள் பிணைக்கப்பட்டிருந்தாலும் நான் இப்போது மரித்தவன் என்ற எண்ணங்களிலும் கிரியைகளிலும் புதைக்கப்பட்டிருந்தாலும், உம்முடைய அழைப்பின் காரணமாக நான் விடுதலையாகிப் புறப்பட்டு வருவேன்; உம்முடைய விருந்தில் அமர்ந்திருப்பவர்களில் ஒருவனாக நானும் இருப்பேன். உம்முடைய வீடு விலையுயர்ந்த தைலத்தால் நிரப்பப்படும். நீர் ஒருவனை மீட்கத் திருவுளம் கொண்டிருந்தால், நீர் அவனை என்றும் காத்தருள்வீர். இவன் திருச்சபையின் விழுமியங்களால் வளர்க்கப்படவில்லை அல்லது சிறு வயதிலிருந்தே பயிற்றுவிக்கப்படவும் இல்லை. மாறாக நியாயத்தீர்ப்பு என்ற இருக்கையிலிருந்து அவசரமாகக் கொண்டுவரப்பட்டு, இவ்வுலகின் மாயைகளிலிருந்து விலக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பு என்ற ஸ்தானத்திற்குக் கொண்டுவரப்பட்டான் என்பது கவனிக்கத்தக்கது. இப்படியானவர்கள் உரத்த கூக்குரல்களைக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் சங்கீதக் குழுவின் பாடலைக் கேட்கக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த வல்லமையால் அல்ல, கிறிஸ்துவின் கிருபையால் ஆசாரியத்துவ பணியில் இருப்பது மட்டுமல்லாமல் அவர்கள் பரலோக பந்தியில் விருந்தினர்களுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
73. ஆண்டவரே, உமது கிரியையைக் காத்தருளும்; அதிலிருந்து விலகியவனுக்கும் நீர் அளித்த வரத்தைக் காத்தருளும். ஏனெனில், நான் இவ்வுலகிற்கு என்னை அர்ப்பணித்திருந்ததால் ஆயர் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவன் என்பதை அறிந்திருந்தேன்; ஆனால் உமது கிருபையினால் தான் நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன். உண்மையில் நான் எல்லா ஆயர்களிலும் மிகச் சிறியவனும், தகுதியில் தாழ்ந்தவனும் ஆவேன்; ஆயினும், நானும் உமது பரிசுத்த திருச்சபைக்காக சில பணிகளை மேற்கொண்டிருப்பதால் இந்தப் பலனைக் காத்தருளும்; வழிதவறியபோது குருத்துவத்திற்கு நீர் அழைத்தவன் தான் இந்த அடியேன். குருத்துவத்துக்குள் நீர் அழைத்த என்னை அழிந்துபோக விடாமல் காத்தருளும். பாவம் செய்தோருக்காக உண்மையாக மனம் வருந்த எனக்கு உதவும், ஏனெனில் இது ஒரு சிறந்த நற்பண்பு. ஒபதியா 12 இல்,“நீ உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு சிரித்தாய். நீ அதனைச் செய்திருக்கக் கூடாது. ஜனங்கள் யூதாவை அழிக்கும்போது நீ மகிழ்ந்தாய். நீ அதனைச் செய்திருக்கக்கூடாது. நீ அவர்களின் துன்பத்தில் வீண் புகழ்ச்சி கொண்டாய். நீ அதனைச் செய்திருக்கக்கூடாது” என்று சொல்லப்பட்டுள்ளது. உமக்கெதிராகப் பாவம் செய்பவர்கள் மீது இரக்கம் கொள்ள எனக்கு உதவும். ஒருவரின் தீச்செயலைக் குறித்து நான் கேள்விப்படும்போது, அவர்களைக் கடுமையாக நியாயந்தீர்க்காமல், மாறாக அவர்களுடைய துக்கத்தில் பங்கு கொள்ள உதவும். இதுகுறித்து ஆதியாகமம் 38:26-இல், “தாமார் என்னைவிட நீதியுள்ளவளாயிருந்தாள்” என்று சொல்லப்பட்டிருப்பது போல, மற்றவர்களுக்காக நான் வருந்தும்போது, என் சொந்தத் தவறுகளையும் நான் உணர்ந்துகொள்ளக்கூடும்.
74. அப்படியானால் ஒரு இளம் பெண் தவறு செய்து பாவத்திற்குக் காரணமான விடயங்களால் வழிதவறிச் சென்றிருக்கலாம். இருப்பினும், வயதானவர்களாகிய நாமும் பாவம் செய்கிறோம். நாம் நமது ஆசைகளுடன் போராடி இறுதியில் நாம் செய்ய விரும்பாததைச் செய்துவிடுகிறோம். அவள் இளம் யுவதியாக இருப்பதால் நாம் அவளை மன்னிக்கலாம், அதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை, ஏனென்றால் அவள் கற்றுக்கொள்ள வேண்டும், நாம் அவளுக்கு கற்பிக்க வேண்டும். எனவே, தாமார் என்னை விட அதிக நீதியுள்ளவளாக இருக்கிறாள்.
75. பேராசைக்காரர் என்று நாம் ஒருவரைக் குறை கூறும்போது, நாம் எப்போதாவது பேராசையுடன் செயல்பட்டிருக்கிறோமா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போமாக. அவ்வாறு நாம் செய்திருந்தால் பேராசையே எல்லாத் தீமைகளுக்கும் மூலக்காரணம் என்பதாலும், அது புல்லலுக்கு அடியில் மறைந்திருக்கும் சர்ப்பத்தைப் போல நமக்குள்ளே ஒளிந்துகொண்டு எம்மை ஆட்டிப்படைக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ளுவோமாக: இதைப்பார்க்கும்போது தாமார் என்னைவிட அதிக நீதியுள்ளவளாயிருந்தாள்.
76. ஒருவர் மீது ஏதேனும் ஒரு சிறிய விஷயத்திற்காக மிகுந்த மனக்கசப்பு ஏற்படும்போது, அங்கே ஒரு ஆயரைக் காட்டிலும் ஒரு சாதாரண மனிதன் விரைவாக எதிர்வினையாற்றக்கூடும். இதை நாமே சிந்தித்துப் பார்த்து, “விரைவில் கோபப்படுகிறவன் என்னைக் காட்டிலும் நேர்மையானவன்” என்று சொல்வோமாக. நாம் இப்படி நினைக்க வேண்டியிருப்பதன் காரணம் என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவோ அல்லது அவருடைய சீடர்களில் ஒருவரோ நம்மிடம், “உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’, என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது. மாயக்காரரான நீங்கள் முதலில் உங்கள் கண்ணிலிருந்து அம்மரத்துண்டை அகற்றுங்கள். பின்னர் போய் உங்கள் சகோதரனின் கண்ணிலிருந்து தூசியை அகற்ற முயலுங்கள்” என்று மத்தேயு 7:4-5 இல் எமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதைக் கொண்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
77. நாம் திருத்த வேண்டும் என்று நினைக்கும் ஒருவரின் தவறுகளை விட நமது தவறுகள் மோசமானவை என்பதை ஒப்புக்கொள்ள நாம் சங்கடப்படத் தேவையில்லை. தாமாரை விமர்சித்த போது யூதா இதைத்தான் செய்தான். அவன் தன் சொந்தத் தவறை உணர்ந்து, “தாமார் என்னை விட நீதியுள்ளவள்” என்று கூறினான். இந்தக் கூற்று ஒரு ஆழமான அர்த்தத்தையும் ஒரு தார்மீகப் பாடத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது. மற்றவர்கள் சுட்டிக்காட்டுவதற்கு முன்பே அவன் தன் சொந்தத் தவறை உணர்ந்துகொண்டதால், அவனுடைய தவறு அவன்மீது சுமத்தப்படவில்லை.
78. ஒருவர் பாவம் செய்யும்போது சந்தோஷப்படாதீர்கள். அதற்குப் பதிலாக, துக்கப்படுங்கள். வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்த்தால், “என் சத்துருவே, நான் விழுந்ததன் நிமித்தம் சந்தோஷப்படாதே; நான் மறுபடியும் எழுவேன். நான் இருளில் இருந்தாலும், கர்த்தர் எனக்கு ஒளியாயிருப்பார். நான் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்ததன் நிமித்தம், கர்த்தருடைய கோபத்தை நான் ஏற்றுக்கொள்வேன்; அவர் என் வழக்கை விசாரித்து, எனக்காகத் தீர்ப்பளித்து, அவருடைய நன்மையை நான் காணும்படி என்னை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வரை நான் காத்திருப்பேன். என் சத்துருவோ இதைக் கண்டு வெட்கப்படுவான். அவன், ‘உன் தேவன் எங்கே?’ என்று கேட்ட அவனை நான் பார்ப்பேன், அவன் தெருக்களில் சேற்றைப் போல மிதிக்கப்படுவான். இது முற்றிலும் உண்மையல்ல, ஏனென்றால், மற்றொருவர் விழும்போது சந்தோஷப்படுகிறவன், சாத்தானை மகிழ்விப்பவனாகவே இருப்பான். ஆகையால், அறுவடைக் காலத்தில் வைக்கோலைக்கூட இகழாத கிறிஸ்துவின் நிமித்தம், மரித்த ஒருவன் அழிந்துபோனான் என்று கேள்விப்படும்போது நாம் அதற்காகத் துக்கப்படுவோமாக.
79. ஓ, அவர் தமது அறுவடையின்போது, நான் விளைவித்த பயனற்ற தண்டுகளாகிய இந்த வைக்கோலைத் தூக்கி எறிந்துவிடாதிருப்பாராக; மாறாக, யாரோ ஒருவர் ஒருமுறை சொன்னதுபோல, அவர் அதைச் சேகரித்துக்கொள்வாராக: “ஐயோ, எனக்கு என்ன நேர்ந்தது? நான் சேகரிக்கப்பட்டிருக்கிற பழங்களைப் போன்றும், பறிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைப் போன்றும் இருக்கிறேன். உண்பதற்குத் திராட்சைகள் இல்லாமல் போகும். நான் விரும்பும் அத்திப் பழங்கள் கூட இல்லாமல் போகும்” என்கிறது மீகா 7:1 . அவர் பிற்கால அறுவடையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், என்னில் உள்ள தமது கிருபையின் முதற்பலன்களையாவது புசிப்பார்.
அத்தியாயம் 9
உண்மையான மனந்திரும்புதலுக்கு விசுவாசம் எவ்வாறு முக்கியமானது என்பதை இந்த அத்தியாயம் விளக்குகிறது. நமது தவறுகளுக்கு நாம் எவ்வாறு ஈடுசெய்ய முடியும் என்பதை இது விவாதிக்கிறது, உழைப்பு, ஜெபம், கண்ணீர் மற்றும் உபவாசம் போன்ற செயல்கள் பணத்தை விட அதிக பெறுமதி வாய்ந்தவை என்பதை இது வலியுறுத்துகிறது. அதுகுறித்து சில உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. மேலும் தாராள மனப்பான்மையுடனான உதவியானது விசுவாசத்துடன் இணைந்திருக்கும்போது மட்டுமே அதன் பெருமானத்தைக் கொண்டிருக்கும் என்று புனித அம்புரோஸ் சுட்டிக்காட்டுகிறார். மனந்திரும்புதலில் உள்ள சில சிக்கல்களையும் அவர் குறிப்பிடுகிறார்; அவை, மன்னிப்பை அவசரமாகத் தேடுவது, திருச்சடங்குகளைத் தவிர்ப்பது போதுமானது என்று நினைப்பது, இப்போது பாவம் செய்துவிட்டுப் பின்னர் மனந்திரும்பலாம் என்று நம்புவது போன்றவை அடங்கும்.
80. எனவே பாவிகள் மனந்திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் மனந்திரும்புதலின் பேரில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நாம் நினைப்பது பொருத்தமானது. இருப்பினும், மன்னிப்பை ஒரு கடனாகக் கருதாமல் விசுவாசத்தின் மூலம் வழங்கப்படும் ஒன்றாகவே நாம் எதிர்பார்க்க வேண்டும். மன்னிப்பைப் பெறுவது ஒரு விஷயம் என்றபோதிலும், ஆனால் அதை அகந்தையுடன் கோருவது முற்றிலும் வேறொரு விஷயம். விசுவாசம் ஒரு உடன்படிக்கையின் மூலம் மன்னிப்பை நாடுகிறது; ஆனால் அகந்தை என்பது ஒரு தாழ்மையான வேண்டுகோளைப் போலல்லாமல் ஒரு கட்டளையைப் போன்றது. முதலில், நீங்கள் செலுத்த வேண்டிய கடனைத் தீர்த்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு நீங்கள் எதிர்பார்த்ததைக் கேட்க முடியும். ஒரு உண்மையான கடனாளியின் மனநிலையுடன் அணுகுங்கள்; புதிய பொறுப்புகளை ஏற்காமல், உங்கள் விசுவாசத்தின் வளங்களைப் பயன்படுத்தி, ஏற்கனவே உள்ள கடனில் இருந்து செலுத்த வேண்டியதை செலுத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்.
81. மற்றொருவருக்குக் கடன்பட்டவனை விட, கடவுளுக்குக் கடன்பட்ட ஒருவன் அதைத் தீர்ப்பதற்கு அதிக உதவியைப் பெறவேண்டியிருக்கிறது. மனிதர்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்த நிதி ஆதாரங்கள் தேவைப்பட்டாலும், அவை கடனாளிக்கு எப்போதும் எளிதில் கிடைக்காமல் போகலாம். இதற்கு மாறாக, கடவுள் எமது கடன்களை பொருத்தருள்வதற்கு நம் இதயங்களிலிருந்து வரும் அன்பை நாடுகிறார், அது முற்றிலும் நம் கட்டுப்பாட்டில் உள்ளது. கடவுளுக்குக் கடன்பட்ட எவரும் உண்மையாகவே ஏழை அல்லர், அவ்வாறு இருக்க வேண்டுமே என்று நினைப்பவர்களைத் தவிர எவரையும் ஏழை என்று சொல்ல முடியாது. ஒருவரிடம் விற்பதற்குப் பொருள் உடைமைகள் இல்லாவிட்டாலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிகள் அவரிடமே இருக்கின்றன. ஜெபம், நோன்பு, கண்ணீர் ஆகியவை ஒரு உண்மையான கடனாளிக்குக் கடனைச் செலுத்தும் கருவிகளாக அமைகின்றன; உண்மையான நம்பிக்கையின்றி ஒருவர் தனது சொத்துக்களிலிருந்து பணத்தைக் கொடுப்பதை விட, இவை அவரிடம் ஏராளமாகக் கிடைக்கின்றன.
82. அனனியா ஏழையாக இருந்த போதிலும் அவர் தனது நிலத்தை விற்று அந்தப் பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார். ஆனால் அவரால் தனது கடனை அடைக்க முடியவில்லை. இது அவருடைய நிலையை மேலும் மோசமாக்கியது என்று அப்போஸ்தலர் பணிகள் 5:1-2 கூறுகிறது. கருவூலத்தில் தனது இரண்டு சிறு காசுகளைப் போட்ட அந்த விதவை செல்வந்தராக மதிக்கப்பட்டார். அவரைப் பற்றி கிறிஸ்து, “இந்த ஏழை விதவை அவர்கள் எல்லோரையும் விட அதிகமாகப் போட்டிருக்கிறாள்” என்று கூறினார் என லூக்கா 21:3 கூறுகிறது. ஏனெனில், தேவன் பணத்தை அல்ல, விசுவாசத்தையே எதிர்பார்க்கிறார்.
83. ஏழைகளுக்குத் தாராளமாகத் தானமாய்க் கொடுப்பது பாவங்களைக் குறைக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், இருந்தபோதிலும் விசுவாசத்துடன் அந்தத் தானம் கொடுக்கப்பட்டால் மாத்திரமே அது உணமையான பலன்களைத் தரும். அதேநேரம், எந்தவிதமான கருணையும் தர்மத்தைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் உங்கள் உடைமைகள் அனைத்தையும் கொடுத்தாலும் அதில் எந்த நன்மையும் விளையப்போவதில்லை.
84. ஒருசிலர் சுயநலமற்றவர்கள் போல நடித்து, மற்றவர்களைக் கவரும் எண்ணத்தோடு முற்றிலும் மமதையுடன் தான் ஒரு தாராள குணம் கொண்டவர் என்ற அங்கீகாரத்தைப் பெறவே பாடுபடுகிறார்கள்; இருப்பினும், இவ்வுலகில் வெகுமதிகளைத் தேடும் முயற்சியில் அவர்கள் மறுமை வாழ்விற்காக எதையும் சேமிப்பதில்லை. அவர்கள் ஏற்கனவே இவ்வுலகில் தங்கள் பாராட்டுகளைப் பெற்றுவிட்டதால், மறுமையில் எதையும் எதிர்பார்க்க முடியாது.
85. சிலர் உணர்ச்சிவசப்பட்டு, எவ்வித முன்யோசனையும் இன்றி தங்கள் உடைமைகளைத் திருச்சபைக்குக் கொடுத்துவிட்டு, பின்னாளில் அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புகிறார்கள். அவர்கள் முதல் அல்லது இரண்டாவது வெகுமதியைப் பெறுவதில்லை, ஏனெனில் அவர்களின் கொடை எவ்வித சிந்தனையும் இன்றி வழங்கப்பட்டது, ஆகையால் அதைத் திரும்பப் பெற முயற்சிப்பது அவமரியாதைக்குரிய செயலாகும்.
86. மேலும் சிலர் தங்கள் உடைமைகளை வசதியற்றவர்களுக்குக் கொடுத்ததற்காக வருந்துகிறார்கள். இருப்பினும், தங்கள் செயல்களுக்காகப் பரிகாரம் தேடுபவர்கள் இதைப் பற்றி மனவருத்தம் கொள்ளக்கூடாது. இல்லாதுபோனால் அவர்கள் தங்கள் சொந்தப் பரிகாரத்திற்காக வருந்த நேரிடலாம். பலர் தங்கள் தவறுகளை உணர்ந்து எதிர்கால விளைவுகளுக்கு அஞ்சி மனம் வருந்துபவர்களாக இருக்கின்றனர். மன்னிப்பைப் பெற்றவுடன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தால் அவர்கள் பின்வாங்குகிறார்கள். இப்படியானவர்கள் தங்கள் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பது போல் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் அதைத் தங்கள் நல்ல செயல்களை நியாயப்படுத்தவே பயன்படுத்துகிறார்கள்.
87. சிலர் உடனடியாக நற்கருணைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காகப் பாவப்பரிகாரத்தைத் தேடுகிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ள முயற்சிப்பதை விட, குருவானவர் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கவே அதிகம் முயற்சிக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் மனசாட்சியிலிருந்து குற்றவுணர்வை முழுமையாக உதறித் தள்ளாமல் அதை குருவானவர் மீது சுமத்துகிறார்கள். கொடுக்கப்பட்ட கட்டளை இதுதான்: “புனிதமானவற்றை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். அவை திரும்பி உங்களைத் துன்புறுத்தவே செய்யும். முத்துக்களைப் பன்றிகளின் முன் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் பன்றிகள் முத்துக்களைக் காலால் மிதித்து சேதப்படுத்தும்” என்று மத்தேயு 7:6 இல் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் அசுத்தத்தால் நிரம்பப் பெற்றவர்கள் திவ்விய நற்கருணையில் பங்குபெற அனுமதிக்கப்படக்கூடாது என்பதாகும்.
88. தங்கள் பரிசுத்தமாக்குதல் மற்றும் கிருபையின் ஆடையை மாசுபடுத்தியதால் வேதனையுடனும் வருத்தமாகவும் இருக்க வேண்டிய சிலர், வித்தியாசமான ஆடைகளை அணிந்து கொண்டு இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் காதுகளை முத்துக்களால் அலங்கரித்து, கழுத்து நிறைய நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். அவர்கள் பொன்னை விடுத்து கிறிஸ்துவிடம் திரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் பரலோகத்திலிருந்து கிடைத்த உண்மையான பொக்கிஷத்தை இழந்துவிட்டோமே என்று தங்களுக்குள் துக்கப்பட நேரிடும்.
89. மேலும் பரலோக அருட்சாதனங்களிலிருந்து விலகி இருப்பதே மனந்திரும்புதல் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் உதவி தேடுவதற்குப் பதிலாக தங்களைத் தாங்களே மிகவும் கடுமையாக எண்ணி தண்டித்துக் கொள்கிறார்கள். தங்களுக்குத் தாங்களே விதித்துக்கொண்ட இந்தத் தண்டனைக்காக அவர்கள் வருந்த வேண்டும், ஏனெனில் அது அவர்களை பரலோக அருளைப் பெறுவதிலிருந்து தடுக்கிறது.
90. மனந்திரும்புவதற்கு ஒரு வாய்ப்பு எப்போதும் இருக்கும் என்ற காரணத்தால், இப்போதும் கூட, பாவம் செய்யும் சுதந்திரம் தமக்கிருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். மனந்திரும்புதல் என்பது பாவத்திற்கான பரிகாரமே தவிர அது பாவத்தைத் தூண்டும் காரணியல்ல. காயத்திற்குதான் மருந்து தேவை, மருந்துக்காகக் காயம் அல்ல; நீங்கள் பாவம் செய்ய விரும்புவதால் அல்ல, பாவத்தின் காரணமாகவே மனந்திரும்புதலைத் தேடுகிறீர்கள். தாமதப்படுத்தப்படும் நம்பிக்கை பலவீனமானது, ஏனெனில் எதிர்காலத்தைப் பற்றி நம்மால் உறுதியாகக் கூற முடியாது, அதேபோல நம்பிக்கை என்றென்றும் நிலைத்திருப்பதில்லை.
அத்தியாயம் 9
மக்கள் மன்னிப்பைத் தேடுவதைத் தடுக்கும் வெட்கத்தை நீக்குவதற்கு உதவும் வகையில், புனித அம்புரோஸ் முழுத் திருச்சபையின் செபங்களின் நன்மைகளை எடுத்துரைக்கிறார். மேலும் இதுபோன்ற சூழ்நிலைகளில் வருத்தத்தை வெளிப்படுத்திய புனிதர்களின் எடுத்துக்காட்டுகளையும் பகிர்ந்து கொள்கிறார். மனந்திரும்புதலை அடிக்கடி செய்யலாம் என்று நினைப்பவர்களுக்குப் பதிலளித்த பிறகு, அவர் உண்மையான மனந்திரும்புதலின் அருமை பெருமைகளை எடுத்தியம்பி அதை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப்பற்றியும் விளக்குகிறார்.
91. கடவுளிடம் உதவி கேட்க சங்கடப்படும் நீங்கள், ஏன் ஒரு மனிதனிடம் கேட்க வெட்கப்படுவதில்லை என்பதை புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது. உங்களைப் பற்றிய அனைத்தையும் அறிந்த அவரிடம் கேட்க நீங்கள் ஏன் கூச்சப்பட வேண்டும்? அப்படியென்றால் உங்களை யாரென்று அறியாத ஒருவரிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிடுவதில் உங்களுக்கு வெட்கமில்லை, அப்படித்தானே? ஒரு நபரைத் திருப்திப்படுத்த நீங்கள் பலரைச் சந்தித்து உதவி கேட்கிறீர்கள். அப்படியானால் மற்றவர்கள் முன்பாக ஜெபிக்க மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்? நீங்கள் ஒருவருக்கு முன்பாக மண்டியிட்டு அவர்களுக்கு மரியாதை செய்கிறீர்கள். ஒன்றுமறியா உங்கள் அப்பாவிப் பிள்ளைகளைக்கூட அவர்களின் தந்தையின் சார்பாக மன்னிப்பு கேட்க அழைத்து வருகிறீர்கள். ஆனாலும், திருச்சபையில் கடவுளிடம் உதவி கேட்கும்போதோ அல்லது புனித சமூகத்திடம் ஆதரவு தேடும்போதோ இதைச் செய்ய நீங்கள் விரும்புவதில்லை. அங்கே நாம் அனைவரும் பாவிகள் என்பதால் பாவத்தை அறிக்கையிடாமல் இருப்பது தான் தவறு, அங்கே வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. மிகவும் தாழ்மையுள்ளவரே உயர்வாகப் போற்றத்தக்கவர்; மிகவும் தாழ்வாக உணர்பவரே உயர்வான நீதியுள்ளவர்.
92. நம் அன்னையாகிய திருச்சபை உங்களுக்காகக் கண்ணீர் சிந்தி, தன் துக்கத்தால் உங்கள் குற்றங்களில் இருந்து உங்களை விலக்கித் தூய்மைப்படுத்தட்டும்; கிறிஸ்து உங்கள் துக்கத்திற்குச் சாட்சியாக இருந்து, “துக்கப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் மகிழ்ச்சியைக் கண்டடைவார்கள்” என்று பிரகடனப்படுத்துவாராக. பலர் ஒருவருக்காகப் பரிந்து பேசுவது அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நற்செய்தியில், விதவையின் துக்கத்தால் மனம் உருகி, பலர் அவளுக்காக அழுதபோது, அவர் அவளுடைய மகனை மீண்டும் உயிர்ப்பித்தார். ஏழைகள் தோர்க்காளின் (Dorcas) மரணத்திற்காகத் துக்கித்தபோது அவர் அவளை உயிர்ப்பித்ததன் மூலம் பேதுருவுக்கு உடனடியாகப் பதிலளித்தார். பேதுருவும் ஆழ்ந்த துக்கத்துடன் அழுததால் அவர் உடனடியாக அவரை மன்னித்தார். நீங்களும் உண்மையான துக்கத்துடன் மனமுருகி அழுதால், கிறிஸ்து உங்களை நோக்குவார், அப்போது உங்கள் குற்றவுணர்வு நீங்கிவிடும். வலி தரும் அனுபவம், தீமை தரும் இன்பத்தையும் பாவம் தரும் மகிழ்ச்சியையும் நீக்குகிறது. இவ்வாறு, நாம் நமது கடந்தகால பாவங்களுக்காகப் புலம்பும்போது, புதியவற்றுக்கான கதவை மூடுகிறோம். அதன்மூலம் நமது குற்றவுணர்வு தரும் சுமையிலிருந்து குற்றமற்ற தன்மைக்கான ஒரு பாதை உதயமாகத் தொடங்குகிறது.
93. உங்கள் பாவங்களுக்காக வருந்தும் போது, உங்களை எதுவும் திசை திருப்ப அனுமதிக்காதீர்கள். இந்த உணர்வு உங்களைப் பரிசுத்தவான்களுடன் இணைக்கிறது. அவர்கள் பாவத்தின் நிமித்தம் கொண்டிருந்த அதே ஆழ்ந்த பச்சாதாபத்தை நீங்களும் உணர முடிந்தால் அது நன்றாக இருக்கும். உதாரணமாக, தாவீது மிகவும் காலக்கமடைந்திருந்தார்; அப்பத்திற்குப் பதிலாக சாம்பலை உண்டார்; தன் பானத்தை அழுகையோடு கலந்தார். இந்த ஆழ்ந்த துக்கத்தின் காரணமாக அவர் பின்னாளில் இன்னும் பெரிய மகிழ்ச்சியை அனுபவித்தார். அவர், “என் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தன,” என்று சொல்லியிருந்தார்.
94. வெளிப்படுத்தல் 5:4-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, யோவான் மிகவும் அழுதது மட்டுமன்றி, கிறிஸ்துவின் இரகசியங்களைக் கற்றுக்கொண்டார். ஆனால், வெளிப்படுத்தல் 17:4 கூறுவதுபோல், பாவத்தில் இருந்தும் அழ வேண்டிய நிலையிலும் அதற்குப் பதிலாகக் களிகூர்ந்து, ஊதா மற்றும் சிவப்பு நிற ஆடையால் தன்னை அலங்கரித்துக்கொண்ட அந்தப் பெண், இப்போது நித்திய அழுகையின் துயரத்தை அனுபவிக்கிறாள்.
95. தாங்கள் அடிக்கடி மனந்திரும்புவதாக நினைப்பவர்கள் விமர்சனத்துக்குத் தகுதியானவர்கள். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவுக்கு எதிராக அலட்சியமாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் தங்கள் மனந்திரும்புதலை உண்மையாகச் செய்திருந்தால், அதை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்க மாட்டார்கள்; ஒரே ஒரு திருமுழுக்கு இருப்பது போல, வெளிப்படையான செயல்களைப் பொறுத்தவரை மனந்திரும்புதலுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. நாம் நமது அன்றாடத் தவறுகளுக்காக மனம் வருந்த வேண்டும், ஆனால் இது சிறிய தவறுகளுக்கானது, முந்தையது கடுமையான தவறுகளுக்கானது.
96. உண்மையாக மனந்திரும்பியவர்களைக் காட்டிலும், தங்கள் களங்கமற்ற தன்மையைக் காத்துக்கொண்டவர்களைக் கண்டுபிடிப்பது எனக்கு எளிதாக இருக்கிறது. ஒருவர் அதிகமதிகமாக உலகியல் கௌரவங்களைத் தேடி, மது அருந்தி, நெருக்கமான உறவுகளில் ஈடுபட்டால் அவர் உண்மையாக மனந்திரும்பியவர் என்று எவராலும் நம்ப முடியுமா? உண்மையாக மனந்திரும்ப வேண்டுமானால் ஒருவர் உலக வாழ்விலிருந்து விலகி, இயல்பான உறக்கத்தை விடக் குறைவாக உறங்கி, பெருமூச்சுகளாலும், அழுகையினாலும், ஜெபங்களாலும் பூரணத்துவம் பெற வேண்டும். இயல்பான பழக்கவழக்கங்களிலிருந்து விலகிச் செல்லும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கதையில் வரும் ஒரு விலைமகள் மீதான காதலால் வீட்டை விட்டு வெளியேறிய இளைஞனைப் போல, ஒருவர் தன்னைத் தானே திருத்திக்கொண்டு முற்றிலும் மாறுபட்டவராக இருத்தல் வேண்டும். முன்னே நாம் குறிப்பிட்ட ந்த இளைஞன் தன் உணர்வுகளைக் கடந்த பிறகு வீட்டிற்குத் திரும்பினான். இருப்பினும் மற்றும் ஒரு நாள் அவன் அவளை மீண்டும் சந்தித்தான். ஆனால் அவளிடம் பேசவில்லை. அதனால் அவள் ஆச்சரியப்பட்டு அவன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தாள். அவர்கள் மீண்டும் சந்தித்தபோது, அவள், “அது நான்தான்” என்றாள். ஆனால் அவனோ, “நான் முன்பு இருந்த மனிதன் அல்ல” என்று உறுதியாகக் கூறிவிட்டான்.
97. “இயேசு தமது சீஷர்களிடம், “என்னைப் பின்தொடர விரும்பும் யாரும் தன் சுயவிருப்பங்களைத் துறக்க வேண்டும். தனக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்தொடர வேண்டும்” என்று கூறியதாக மத்தேயு 16:24 கூறுகிறது. கிறிஸ்துவுக்குள் மரித்து அடக்கம் செய்யப்பட்டவர்கள், இன்னும் இவ்வுலகில் இருப்பதாக எண்ணிக்கொண்டு வாழக்கூடாது. சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் காரியங்களைத் தவிர்க்கவும், அவற்றில் ஈடுபடாமல் இருக்கவும் வேண்டும், ஏனெனில் இந்த வாழ்க்கையின் பழக்கவழக்கங்கள் ஒருவரின் நேர்மையான வாழ்வுக்குத் தீங்கு விளைவிக்கும்.
அத்தியாயம் 11
மனந்திரும்புவதற்கான வாய்ப்பு இருப்பதால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முதுமை வரை காத்திருக்கக்கூடாது. ஏனெனில் இது பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமானது என்று சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும், உங்கள் ஆசைகளுக்கு நீங்கள் இன்னும் அடிபணிந்து கொண்டிருந்தால் மனந்திரும்புவதில் எந்தப் பயனும் இல்லை. ஆகவே நீங்கள் முதலில் சோதனைகளை வெல்ல முயற்சிக்க வேண்டும்.
98. மனந்திரும்புதல் நல்லது. அதற்கு இடமில்லாமல் போனால் மக்கள் ஞானஸ்நானம் பெற்று தூய்மையாக்கப்படுவதற்கு முதுமை வரை காத்திருப்பார்கள். ஆடையே இல்லாதிருப்பதை விட, தைத்து அணியக்கூடிய ஒரு சாதாரண ஆடை இருப்பது மேலானது. இருப்பினும் ஒருமுறை தைக்கப்பட்ட ஆடை ஒன்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியும், ஆனால் அதை அடிக்கடி தைத்தால் அது பாழாகிவிடும்.
99. மனந்திரும்புதலைத் தள்ளிப்போடுகிறவர்களுக்குக் கர்த்தர் போதுமான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். அவர், மத்தேயு 4:17 சொல்வதுபோல், “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராச்சியம் விரைவில் வர இருக்கிறது” என்று கர்த்தர் கூறுகிறார். திருடன் எப்போது வருவான் என்று நமக்குத் தெரியாது; இன்றிரவு நம்முடைய ஆன்மா நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமா என்றும் நமக்குத் தெரியாது. ஆதாம் தவறு செய்த உடனேயே தேவன் அவனைப் பரலோகத்திலிருந்து வெளியேற்றினார்; எந்தக் காத்திருப்பும் இல்லை. பாவத்தில் வீழ்ந்தவர்கள் மனந்திரும்ப வேண்டுமென தங்கள் எல்லா இன்பங்களிலிருந்தும் உடனடியாகத் துண்டிக்கப்பட்டனர். மேலும், கடவுள் அவர்களுக்குப் பட்டு ஆடைகளையல்ல விலங்குகளின் தோலால் ஆன ஆடைகளையே கொடுத்தார்.
100. நீங்கள் ஏன் தாமதிக்கிறீர்கள்? இன்னும் அதிகமாகப் பாவம் செய்வதற்காகவா? ரோமர் 2:4-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தேவன் நல்லவராயிருப்பதினால் நீங்கள் கெட்டவர்களாக நடந்து, தேவனுடைய மிகுந்த தயவையும் பொறுமையையும் அவமதிக்கிறீர்கள். மாறாக, தேவனுடைய நன்மை தான் உங்களைப் பாவத்திலிருந்து விலகச் செய்ய வேண்டும். ஆகையால், தாவீது அரசன் எள்ளோரையும் நோக்கி, ‘நாம் தேவனை வணங்கி, அவருக்கு முன்பாகப் பணிந்து, நம்மைப் படைத்த நம் ஆண்டவருக்கு முன்பாக மனம்வருந்துவோம். ஆனால், மனந்திரும்பாமல் மரித்த ஒரு பாவிக்கு, மீதமிருப்பது மிகுந்த துக்கமும் அழுகையும்தான். அவன், “என் மகனே அப்சலோமே! என் மகனே அப்சலோமே!” என்று கதறுவதை நீங்கள் காண்பீர்கள். ஆன்மீக ரீதியில் முற்றிலும் மரித்த ஒருவனுக்கு, துக்கப்படுவதால் ஆறுதல் கிடைக்கப்போவதில்லை.
101. மோசேயின் பரிசுத்த சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட பல நாடுகடத்தப்பட்டவர்களும் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டப் பட்டவர்களும் உலகின் தவறுகளில் சிக்கிக் கொள்கிறார்கள். இதுபற்றி அவர் சொல்வதைதான் நீங்கள் கேட்கிறீர்கள்: “பாபிலோனின் நீர்த்தேக்கங்களின் அருகே நாங்கள் சீயோனை நினைத்து அழுதுகொண்டிருந்தோம்” என்று வீழ்ந்துபோனவர்களின் துயரத்தை அவர் எடுத்துக்காட்டுகிறார். மேலும், மாறிவரும் காலங்களில் வாழும் மக்கள் தங்கள் பாவங்களுக்காகச் சிறைவாசத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி மனந்திரும்ப வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
102. ஆனால், பாவத்திற்கு அடிமையாகி கிடக்கும் ஒருவன், தேவனை அறிந்துகொள்ளும் அழகிய வழிகளில் தன் மனதைச் செலுத்துவதற்குப் பதிலாக, உலக மற்றும் பொருள் காரியங்களைத் தேட முயன்றதால் தான் எங்கிருந்து, எப்படி, எவ்வாறு பாவத்தில் வீழ்ந்தேன் என்று நினைத்துப் பார்க்கும்போது உண்டாகும் துக்கத்தைவிடப் பெரிய துக்கம் வேறெதுவும் இல்லை.
103. தேவன் அங்கே இருக்கிறார் என்பதை அறிந்திருந்தும், ஆதாம் தன்னை மறைத்துக் கொண்டிருந்தான். அவனது மனதைத் துளைத்த கேள்வியால்; அதாவது “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” என்ற தேவன் அவனை அழைத்தபோது, அவன் மறைந்திருக்கவே விரும்பினான்: என்று ஆதியாகமம் 3:9 இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதன் பொருள், “நீ ஏன் உன்னை மறைத்துக்கொள்கிறாய்? நீ ஏன் மறைந்திருக்கிறாய்? நீ ஒரு காலத்தில் காண விரும்பியவரை ஏன் தவிர்க்கிறாய்?” குற்றவுணர்வு கொண்ட மனசாட்சி மிகவும் பாரமானது; அது ஒரு நியாயாதிபதியின்றித் தன்னைத்தானே தண்டித்துக்கொள்கிறது, மறைந்திருக்கவே விரும்புகிறது, ஆனாலும் தேவனுக்கு முன்பாக அந்த மனசாட்சி நிர்வாணமாகவே இருக்கிறது.
104. ஆகவே, பாவக் கறைகளில் சிக்கியிருப்போர் எவரும் திருச்சடங்குகளுக்கு உரிமை கோரவோ அல்லது அவற்றைப் பயன்படுத்தவோ கூடாது. ஏனெனில் அது குறித்து பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: ‘நீங்கள் பாவம் செய்தீர்கள், அமைதியாக இருங்கள். நாம் சற்றுமுன் மேற்கோள் காட்டிய சங்கீதத்தில் தாவீது குறிப்பிடுவது போல, நாங்கள் எங்கள் யாழ்களை அங்கே இருந்த வாகை மரங்களில் தொங்கவிட்டோம்; அப்படியானால், அந்நிய தேசத்தில் கர்த்தருடைய பாடலை நாங்கள் எப்படிப் பாடுவோம்? சரீரம் மனதுடன் போரிட்டு ஆவியானவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றவில்லை என்றால், அது அன்பு, பொறுமை மற்றும் சமாதானம் ஆகிய கனிகளைத் தராத ஒரு அந்நிய பூமியாகும். எனவே, உங்களால் உண்மையான மனந்திரும்புதலைச் செய்ய முடியாதபோது அமைதியாக இருப்பது நல்லது, அதனால் உங்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்துக்காக நீங்கள் மனந்திரும்ப வேண்டிய நிலைக்கு ஆளாக மாட்டீர்கள். நீங்கள் தொடங்கி அதைச் சரியாகச் செய்யாவிட்டால் நீங்கள் உண்மையான மனந்திரும்புதலை அடையவும் மாட்டீர்கள். மேலும் எதிர்காலத்தில் மனந்திரும்புதலுக்கான வாய்ப்பையும் இழப்பீர்கள்.
105. சரீரம் சரியானதைச் செய்வதற்கு எதிராகப் போராடும்போது, மனம் தேவனை நோக்கியே நிலைத்திருக்க வேண்டும். நாம் பலன்களைக் காணாவிட்டாலும் நமது விசுவாசத்தை இழக்கக்கூடாது. நாம் சோதிக்கப்பட்டோ அல்லது தாக்கப்பட்டோ இருந்தாலும் தேவனுக்கு முன்பாகத் தாழ்மையுடன் இருக்க வேண்டும். நமது சரீரம் அடிபணியும்போது நாம் மிகவும் போராடுகிறோம். மேலும், சிலர் பரிதாபகரமான மனதை மிகவும் துன்புறுத்தி, அது பெறும் எல்லாப் பாதுகாப்பையும் பறிக்க முயல்கிறார்கள். அத்தகைய சூழ்நிலைக்கு இந்த வார்த்தைகள் பொருந்தும்: அதை அஸ்திவாரங்களோடு சேர்த்து இடித்துத் தள்ளுங்கள், அதை முற்றாக இடித்துத் தள்ளுங்கள் என்று.
106. தாவீது அவள்மீது பரிதாபப்பட்டு, “ஓ, பாபிலோனின் துயரமான மகளே” என்றார். அவள் இனி எருசலேமின் மகளாக இல்லாததால் மெய்யாகவே துயரப்பட்டாள். ஆனாலும், அவர் அவளுக்கு உதவ ஒருவரைக் கூப்பிட்டு, “உன் சிறுவர்களை தூக்கிப் பாறையின்மேல் அறைகின்றவன் பாக்கியவான்” என்றார். கிறிஸ்துவுக்கு எதிரான எல்லா தீய மற்றும் அசுத்தமான எண்ணங்களையும் தகர்ப்பதே இதன் பொருள். கிறிஸ்து, தமது வல்லமையினாலும் எச்சரிக்கையினாலும், பகுத்தறிவுக்கு எதிரான எந்த எண்ணங்களையும் தடுத்து நிறுத்துவார். உதாரணமாக, ஒருவர் காம இச்சையால் சோதிக்கப்பட்டால், அவர் அந்த நெருப்பை அணைத்துவிடுவார். அதனால், அவர்கள் தங்கள் பெரும் முயற்சியின் காரணமாக ஒரு விபச்சாரியின் மீது ஏற்பட்ட காதலிலிருந்து விடுபட்டு, தங்கள் சொந்த ஆசைகளைத் துறந்து கிறிஸ்துவைப் பெறுவதற்காகத் தன்னைத் தயார் செய்துகொள்ள முடியும்.
107. சுகபோக வாழ்க்கை மற்றும் பாவத்தின் விளைவுகள் மங்கத் தொடங்கும் இக்காலத்தில், நாம் நமது பாவங்களுக்காகப் பச்சாதாபப் பட வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொண்டோம். நாம் பாவத்தின் செல்வாக்கின் கீழ் இருக்கும் பட்சத்தில் தீய நடத்தைகளுக்கு அடிபணிவதற்குப் பதிலாக, அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் கடவுளுக்கு நமது பக்தி மற்றும் விசுவாசத்தைக் காட்ட வேண்டும். தேவனை நெருங்க வேண்டுமாயின் மோயீசன் தனது காலணிகளைக் கழற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டது போலவே, நாமும் நம் ஆன்மாக்களை நம் உடல்களோடு பிணைக்கப்பட்டிருப்பதிலிருந்து விடுவித்து, உலக காரியங்களிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டும்.
முதல் புத்தகம் (Book 1)
புத்தகம் II (Book 2)
