கன்னியரின் ஆடைகள் (The Dress of Virgins)

Cyprian of Carthage, The Dress of Virgins, in Tamil


இரண்டாவது புத்தகம்: கன்னியரின் ஆடைகள் (The Dress of Virgins)

அத்தியாயம் 1

ஒழுக்கம், விசுவாசத்தின் பாதுகாவலர், நம்பிக்கையின் பிணைப்பு, இரட்சணியத்தின் வழிகாட்டி, இயற்கையான கொடைகளின் ஊக்கமும் ஊட்டமும், நல்லொழுக்கத்தின் குருவான கிறிஸ்துவில் நிலைத் திருக்கவும், நாம் எப்போதும் கடவுள் காட்டிய வழியில் தொடர்ந்து வாழும் வாழ்க்கை, பரலோகத்திலிருந்து அருளப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தெய்வீக வெகுமதிகள் அடைய எமக்கு உறுதுணையாக இருக்கிறது. அதைத் தொடர்வது நன்மை பயக்கும், தவிர்ப்பதும் புறக்கணிப்பதும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது. சங்கீதத்தில் பரிசுத்த ஆவியானவர் இவ்வாறு கூறுகிறார்: “நீதியின் வழியிலிருந்து விலகி, தேவனுடைய கோபத்துக்கு ஆளாகாதீர்கள்; ஏனென்றால் அவருடைய கோபம் உங்கள் மீது வந்து உங்களை எரித்துவிடும்.” [சங். 2.12.][1] அதேபோன்று மீண்டும் கூறுகையில்: கடவுள் பாவிகளிடம் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் ஒழுக்கத்தை வெறுத்து, என் வார்த்தைகளை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள். அப்படியானால், நீங்கள் ஏன் எனது தீர்ப்பை வெளியிட்டு என் உடன்படிக்கையை உதடுகளால் மட்டும் உச்சரிக்கிறீர்கள்?’ [சங். 49: 16-17.][2] மீண்டும் அங்கே சொல்லப்பட்டுள்ளதை பார்ப்போம்: ‘ஒழுக்கத்தை நிராகரிப்பவர் மகிழ்ச்சியை இழந்தவராகிறார்.’ [ஞானாகாமம். 3.1.][3] சொலமனிடம் இருந்து ஞானம் சம்பந்தமான அறிவுரைகளை நாம் பெற்றுள்ளோம்: ‘என் மகனே, கடவுளின் உன்னைத் திருத்தும்போது, அவரை அவமதிக்காதே, அவரால் தண்டிக்கப்படும்போது நீ மயங்க வேண்டாம்; கடவுள் யாரை நேசிக்கிறாரோ அவரைத் தான் தண்டிக்கிறார். ’[நீதி. 3:11-12.][4] இப்போது கடவுள் தான் நேசிக்கிறவர்களைத் தண்டித்தால், அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளும்படி தண்டித்தால், சகோதரர்கள், மற்றும் ஆசாரியர்கள், குறிப்பாக, அவர்கள் திருந்த வேண்டுமென அவர்கள் தண்டிக்கும்போது, நீங்கள் அதை நிராகரிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக அவர்களை நேசியுங்கள். ஏனென்றால் தேவன் எரேமியா மூலம் நம் காலத்தை முன்னறிவிப்பார் என்று எதிர்வு கூறியிருந்தார். ‘நான் விரும்பியபடி ஆசாரியர்களை உங்களுக்குக் கொடுப்பேன், அவர்கள் உங்களை போஷிப்பார்கள். ஒழுக்கத்தையே உங்களுக்கு ஊட்டமாக அளிப்பார்கள்.’ [எரே. 3.15.].[5]

அத்தியாயம் 2

ஆனால் வேதாகமம் முழுவதும் ஒழுக்கத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதாலும், மதம் மற்றும் விசுவாசத்தின் முழு அடித்தளமும்   கீழ்ப்படிதல் மற்றும் கடவுளுக்குப் பயப்படுவது என்று உரைப்பதாலும், நாம் எதை மிகவும் ஆர்வத்துடன் தேட வேண்டும், நாம் எதை மிகவும் விரும்புகிறோம், எதை நாம் உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்? இந்த உலகத்தில் காற்று மற்றும் புயல்களால் நாம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், நம் வேர்கள் நம் வீட்டின் பாறையில் உறுதியாக பற்றிக்கொள்ளவும், அதாவது, நாம் ஒரு உறுதியான அஸ்திவாரத்தில் நிலைநிறுத்தப்படவும், கடவுளின் தெய்வீக கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் கடவுளின் உதவிகளையும் வெகுமதிகளையும் பெறவும், நமது ஏனைய அங்கத்தவர்களும் தேவனுடைய ஆலயத்தை அறிந்து, அதற்கு ஏற்ப வாழ்வதற்கும், சுத்திகரிப்புக்கான ஜீவ ஊற்றால் அனைத்து கடந்தகால அசுத்தங்களில் இருந்தும் சுத்திகரிக்கப்பட்டும் இருத்தல் வேண்டும். நாம் நம்முடைய சொந்த உடலை அவமதிக்கவோ, அசுத்தத்துக்கு உள்ளாக்கவோ கூடாது என்ற கடப்பாடு நமக்கு இருப்பதால், கடவுள் மீதுள்ள பயத்தையும், கீழ்ப்படிதலையும் நாம் இறுகப் பற்றிக் கொள்வது நன்றல்லவா? இந்த ஆலயத்தின் காவலாளிகள் மற்றும் பிரதான ஆசாரியர்கள் ஆகியோர் நாமே. நாம் ஏற்கனவே யாருடைய உடைமையாக இருக்க ஆரம்பித்தோமோ அவருக்கே சேவை செய்வோமாக. பவுல் தனது நிருபங்களில், தெய்வீக போதனைகள் மூலம் வாழ்க்கையின் போக்கிற்கு அவர் நம்மை உருவாக்கி உள்ளார் என்று கூறுகிறார்: ‘நீங்கள் உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல; நீங்கள் ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறீர்கள். கடவுளை மகிமைப்படுத்தி உங்கள் உடலால் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்’. [1கொரிந்தியர்: 6:19-20.][6] கடவுளுக்குள் தூய்மையான மற்றும் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்வதன் மூலமும், அவருடைய கட்டளைகளை இன்னும் முழுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலமும் நாம் அவரை ஆராதித்து கௌரவிக்கிறோம். கிறிஸ்துவின் மாட்சிமைமிகு திரு இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம், நம்முடைய இரட்சகரின் நீதிக்குத் தலைவணங்கி, அவரது சட்டத்திற்கு முழுமையாக கீழ்ப்படிந்து வாழ்வோமாக. அசுத்தமான அல்லது தீண்டத்தகாத எதையும் தேவனுடைய ஆலயத்திற்குள் எடுத்துச் செல்லக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அப்படி செய்தால், அது அவரைக் கோபத்துக்கு ஆளாக்குவதோடு, அவர் வாசம் செய்யும் வாசஸ்தலத்தை விட்டு வெளியேறிவிடுவார். அப்படி ஏற்படாவண்ணம் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எமது பாதுகாவலராகவும், எமது ஆசிரியராகவும், எமது வைத்தியராகவும் எமது ஆலோசகராகவும் இருக்கும் இறைவனுடைய வார்த்தை என்றென்றும் எங்களோடு இருக்கிறது. கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்: ‘இதோ, நீங்கள் குணமாகிவிட்டீர்கள். இனிமேல் பாவம் செய்யாதீர்கள்.’[7] எமது வாழ்க்கைக்குத் தேவையான தெய்வ பயத்தை இறைவன் எமக்குக்  கற்பித்துள்ளார். ஒருவரது ஆரோக்கியத்தை மீட்டெடுத்த பிறகு அவர் குற்றமற்றவர் என்ற நீதியை அளிக்கிறார். கர்த்தர் சுதந்திரமான மற்றும் தான்தோன்றித்தனமான வாழ்க்கையை வாழ அனுமதிப்பதில்லை. மாறாக, அவரால் நோய்களில் இருந்து குணமடைந்த மனிதனை அவர் வலுவாக எச்சரிக்கிறார். கடவுள் எமக்குக் கற்பித்த ஒழுக்கம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு முன்பே நீங்கள் பாவம் செய்திருப்பீர்களானால், அது ஒரு அற்ப பாவம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் கடவுளை அறியத் தொடங்கியபின், பாவம் செய்திருந்தீர்களானால், அந்தப் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைப்பதில்லை. ஆண்கள், பெண்கள், மகன்மார், மகள்மார், பிள்ளைகள் மற்றும் ஆண்-பெண் தம்பதியினர் போன்ற அனைவரும், அனைத்து வயதினரும் இந்த விடயத்தை நன்றாகக் கவனித்து மனதில் கொள்ள வேண்டும். கடவுளுக்கு உரித்தான மத அனுஷ்டானங்கள் மற்றும் விசுவாசத்தைக் கடைபிடிப்பதன் மூலமும், கடவுளின் தயவின் ஊடாகவும், தூய்மையான மற்றும் பரிசுத்தமான தேவனின் கிருபையினால் ஆளப்படுவோமாக.

அத்தியாயம் 3

இப்போது எமது உரையாடலை கன்னியர்கள் பக்கம் திருப்புவோம். அவர்கள் மேல் நாம் கொள்ளும் இரக்கம், கருணை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்களது மகிமையும் உயர்வடையும். அவர்கள் திருச்சபை என்று அழைக்கப்படும் மரத்தின் ரம்மியமான மலர்கள் ஆவர். அத்தோடு அவர்கள், ஆன்மீக கிருபையின் அழகும் அலங்காரமாகவும், கர்த்தருடைய பரிசுத்தத்தை பிரதிபலிக்கும் உருவமாகவும், கிறிஸ்துவின் மந்தையின் மிக முக்கியமான பகுதியாக விளங்குபவர்கள் கன்னியர்கள். அன்னை திருச்சபையின் புகழ்பெற்ற பலன் தரும் விருட்சங்களாக அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவற்றில் ஏராளமான பூக்கள் மலர்கின்றன. அதிக எண்ணிக்கையிலான கன்னித்தன்மை அதன் எண்ணிக்கையில் சேரும்போது, தாயின் மகிழ்ச்சி பன்மடங்காகிறது. நாங்கள் இவர்களிடம் பாசத்தோடு உரையாடுகிறோம். அதிகாரத் தோரணையில் அல்ல. இவர்களை நாம் ஊக்குவிக்கிறோம். கடைசியாக, ஆகக் குறைந்தது, நம்முடைய தாழ்வு மனப்பான்மையை நாம் முழுமையாக அறிந்திருந்தும், ​​நம்முடைய ஆணவத்தின் காரணமாக அதை மூடி மறைத்து சுதந்திரமாக உலாவுகின்றோம். ஆனால் நம்முடைய தனிமையை எவ்வளவு அதிகமாக கழிக்கிறோமோ, அந்த அளவுக்கு சாத்தானின் சோதனைகளுக்கு நாம் உள்ளாகிறோம்.

அத்தியாயம் 4

இது ஒரு ஏதுமற்ற முன்னெச்சரிக்கையோ, வீணான பயமோ அல்ல, இது நம்மை இரட்சிப்பிற்கு அழைத்துச் செல்கிறது. இது கர்த்தருடைய உயிரளிக்கும் கட்டளைகளைப் பாதுகாக்கிறது. ஆகவே, தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்குள் புனிதப்படுத்திக் கொண்டவர்களும், சரீரத்தின் இச்சைகளைத் துறந்து, உடலாலும், உள்ளத்தாலும் கடவுளுக்கு தங்களை அர்ப்பணித்தோரும்  பாரிய வெகுமதிக்காக தங்களை கடமையைச் செய்தவர்களும், தங்கள் இறைவனைத் தவிர வேறு யாரையும் மகிழ்விப்பதற்காக அவர்கள் தங்களை அலங்கரிப்பதில்லை. தங்கள் கன்னித்தன்மைக்கான வெகுமதிக்காக அவர்கள் அவரை உண்மையாக நோக்குகிறார்கள். கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்: ‘இந்த வார்த்தை வழங்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் இவற்றைப்  பெறாதீர்கள். ஏனென்றால், கருப்பையிலிருந்தே அலிகளாகப் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள் மனிதர்களால் கருணைக்கொலை செய்யப் படுகின்றனர். பரலோக இராச்சியத்தின் நிமித்தம், அலிகளாக மாறியவர்களும் இருக்கின்றனர்.’[8] மீண்டும், தேவதூதரின் இந்த வார்த்தைகளால் தன் இச்சைகளை அடக்கி ஆளுகை பற்றித் தெளிவுபடுத்தப்படுகிறது, கன்னித்தன்மை அங்கே ஆர்ப்பரிக்கப் படுகிறது. ‘இவர்கள் பெண்களால் மாசுபடுத்தப் பட்டிராதவர்கள். அவர்கள் கன்னித்தன்மையைக் காப்பாற்றி உள்ளனர். செம்மறியாட்டுக்குட்டி எங்கு சென்றாலும் அவரைப் பின்பற்றி செல்பவர்கள்.’[9] உண்மையில், பெண்களைப் பொருட்படுத்தாமல், ஆண்கள் மட்டுமே பிரம்மச்சரிய  வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று இறைவன் வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனால் பெண் என்பவள், ஆணின் ஒரு அங்கமாகவும், அவனால் உருவாக்கப்பட்டவளாகவும் இருப்பதால், வேதாகமத்தின் இறைவன் அவர்களை முதன்முதலில் படைத்தவர் என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒரே உடலால் ஆனவர்கள். இது பெண் மற்றும் ஆண் இருவருக்கும் பொருந்தும். 

அத்தியாயம் 5

ஆனால் பிரம்மச்சரியம் என்பது கிறிஸ்துவைப் பின்பற்றி, கன்னித் தன்மையானது தேவனுடைய இராச்சியத்திற்காக நிர்ணயிக்கப்பட்டால், உலகில் இளம் பெண்கள் ஆடைகளைப் அணிவதும், தங்களை விதவிதமாக அலங்கரிப்பதிலும் என்ன பயன்? ஏனென்றால், மனிதரை மகிழ்விக்க முயற்சிக்கும்போது, ​​அவர்கள் இறைவனைப் புண்படுத்துகிறார்கள். அவர்கள் அப்படிச் சொன்னார்களா என்பது பற்றி தெரியவில்லை. ‘மனிதர்களை மகிழ்விப்பவர்கள் குழப்பமடைந்து காணப்படுகின்றனர், ஏனென்றால் இறைவன் அவர்களை வெறுமையை நோக்கிக் கொண்டு சென்று விடுவார்’.[10] புனித பவுல் தனது புகழ்பெற்ற மற்றும் விழுமிய வழியில் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் மனிதர்களை மகிழ்வித்தால், நான் கிறிஸ்துவின் சேவகன் அல்ல’[11] ஆனால் கற்பும், பிரம்மச்சரியமும் உடல் தூய்மையுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. இதில் மதிப்பு, எளிமையான உடை மற்றும் ஒப்பனை போன்றவை அடங்கும். அப்போஸ்தலர் இதுபற்றிக் கூறுகையில்; திருமணமாகாத பெண்ணுக்கு உடலாலும், உள்ளத்தாலும் புனிதமாக இருக்க முடியும். புனித பவுல் நம்மை அறிவுறுத்துமுகமாக இவ்வாறு கூறுகிறார்: ‘திருமணமாகாத மனிதன் இறைவனுக்குச் சொந்தமான விடயங்கள் மற்றும், அவரை எப்படி மகிழ்விக்கலாம் என்பது பற்றி யோசிக்கிறான். திருமணத்தை பந்தத்தில் இணைந்தவர், தனது மனைவியை எப்படி மகிழ்விக்கலாம் என்றும் உலக விடயங்களைப் பற்றியும் சிந்திக்கிறார். திருமணமாகாத பெண்ணும், கன்னிபெண்ணும் கர்த்தருடைய காரியங்களைப் பற்றி சிந்திக்கிறார்கள். ஆகவே, அவள் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையாய் இருக்க வேண்டும்.’[12] ஒரு கன்னிப்பெண் ஒரு கன்னியாக மட்டும் இருந்துவிடக்கூடாது. அவள் அவளாக இருக்கிறாள் என்று அறியப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும். ஒரு கன்னியைப் பார்த்த யாரும் அவள் ஒரு கன்னி தானா என்று சந்தேகம் கொள்ளும்படி நடந்து கொள்ளக்கூடாது. அவளுடைய வெகுளித்தனம் எல்லா விடயங்களிலும் அவளை சமமாக வெளிப் படுத்தட்டும். அவளுடைய உடை அவளுடைய உடலின் புனிதத்தை இழக்காது இருத்தல் வேண்டும். அவள் ஏன் பகிரங்கமாக அலங்கரித்து வெளியில் செல்ல வேண்டும்? ஏன் அவளுடைய தலைமுடியை அலங்கரிக்க வேண்டும்? அவளுக்கு துணையாக ஒரு கணவன் இருக்கிறானா, அல்லது அவள் ஒரு துணையைத் தேடுகிறாளா? அவள் ஒரு கன்னியாக இருந்தால், கவர்ச்சிகரமானதாக இருக்க அவள் கொள்ளும் பயம் நியாயமானது. உயர்ந்த மற்றும் தெய்வீக விடயங்களை தன்னகத்தே கொண்டிருப்பதன் மூலம் அவளுடைய சொந்த அழிவை அவள் தேடக்கூடாது. கணவன் ஒருவன் இல்லாதவள், இருப்பது போல் பாசாங்கு செய்யக்கூடிய  வெகுளித்தனம், மனதாலும் மற்றும் உடலாலும் தன்னை தூயமையாகவும் வைத்துக்கொள்ளக் கூடியவளாய் இருத்தல் வேண்டும். உண்மையில், ஒரு கன்னிப்பெண் தன்னை அளவுக்கதிகமாக அலங்கரிப்பதும், அவளுடைய உடலையும் அதன் அழகையும் வெளிப்படுத்தும் விதத்தில் உடை அணிவதும் முறையல்ல. அத்தகைய கன்னிப்பெண்களுக்கு, சரீரத்தைக் காக்கும் போராட்டத்தை விட பெரிய போராட்டம் எதுவுமில்லை. உடல் இச்சைகளை வெல்வதும் அவற்றை அடக்குவதைத் தவிர பெரிய தொல்லைகள் அவர்களுக்கு இல்லை.

அத்தியாயம் 6

புனித பவுல் உறுதியான தொனியில் இவ்வாறு உரைக்கிறார்: ‘ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைத் தவிர வேறு எதையும் பற்றி நாம் பெருமை கொள்ளக்கூடாது. அதனால்தான் உலகம் எனக்காகவும், எனக்காக உலகமும் சிலுவையில் அறையப் பட்டது.’[13] ஆனால் திருச்சபையில் உள்ள ஒரு கன்னியானவள், தன் சரீரத்தின் தோற்றத்தையும் அவளுடைய உடலின் அழகையும் பற்றி தற்பெருமை கொள்கிறாள்! புனித பவுல் தொடர்ந்து கூறுகையில், “கிறிஸ்துவுக்கு உகந்தவர்கள் சரீரத்தின் மேல் கொண்ட இச்சைகளின் காரணமாக, அவரது சரீரத்தை சிலுவையில் அறைந்தார்கள்.”[14] ஆனால் தமது சொந்த இச்சைகளையும், சரீர வேட்கையையும் நிராகரிக்க ஒப்புக்கொண்டவர்கள், அவள் நிராகரித்ததைப் போலவே நிராகரித்ததைக் காணக்கூடியதாக இருக்கிறது! ஓ கன்னியரே! உங்கள் நடவடிக்கைகள் வெளிப்பட்டு விட்டன! உங்கள் நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் இப்படிப்பட்டவர்கள் தான் என்று தற்பெருமை பாராட்டும் போது, ​​நீங்கள் உங்களில் இருந்து வேறுபட்டவர்களாக இருக்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் அப்பாவியாகவும், தாழ்மையுடனும் வாழவேண்டும் என்று எண்ணிய போது, ​​உலக இச்சைகளின் கறைகளால் நீங்களே உங்களை களங்கப்படுத்திக் கொண்டீர்கள். கடவுள் ஏசாயாவை நோக்கி உறுதியாக இவ்வாறு சொல்கிறார்: ‘எல்லா சரீரங்களும் புற்களைப் பிரதிபலிப்பவை, அவற்றின் மகிமை அனைத்தும் பூமியில் மலரும் பூக்கள் போன்றவை. புற்கள் காய்ந்து விடும். பூக்கள் வாடிவிடும். ஆனால் கர்த்தருடைய வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.’[15] சரீரத்தைப் பற்றி பெருமை கொள்வதும், அதன் மகிமையைத் தேடுவதும் எந்த கிறிஸ்தவனுக்கும், குறிப்பாக எந்த கன்னிப்பெண்ணுக்கும் உகந்ததல்ல. மாறாக, அவள் கடவுளுடைய வார்த்தையை மட்டுமே தேட வேண்டும், ஏனெனில் அது என்றென்றும் நிலைத்திருப்பதோடு, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் உறுதுணையாக இருக்கும். ஆனால் அவள் தனது சரீரத்தைப்பற்றி பெருமை பேசுவதை விட, இயேசுவின் பெயரால் துன்பத்தை அனுபவிக்கும் போது தான் அவள் உண்மையிலேயே பெருமை கொள்ள வேண்டும். துன்புறுத்தலை உண்டுபண்ணும் ஆண்களை விட, பெண் வலிமையானவள் என்பதை உணரும்போது, ​​அவள் நெருப்பாக அல்லது சிலுவையாக, அல்லது வன விலங்குகளைக் கூட அடக்கக்கூடியவளாக அவள் முடிசூட்டப்படுவாள். இவை தான் சரீரத்தின் மிகவும் விலைமதிப்பற்ற ஆபரணங்கள். இவை தான் உடலை மிளிரச்செய்யும் மதிப்புமிக்க அலங்காரங்கள்.

அத்தியாயம் 7

ஆனால் செல்வமும் உடைமையும் காரணமாக செல்வந்தர்களாகவும், பெரும் செல்வத்தை உடையவர்களாகவும் இருக்கும் சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் செல்வச் செருக்கை வெளிப் படுத்துவதன்  மூலம், அவை தங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள் என்று வாதிடுகிறார்கள். முதலில், இறைவனுள் வாழும் வாழ்க்கை தான் என்றும் வற்றாத செல்வம் என்பதை அவர்களுக்குத் தெரியப் படுத்துங்கள். கிறிஸ்துவில் கிடைக்கும் செல்வமே ஒருவரை செல்வந்தர்களாக ஆக்குகிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். மேலும்,  நம்மை இறைவனிடம் இட்டுச் செல்லும் காரணிகளான, ஆன்மீகம், தெய்வீகம், பரலோக பந்தம், அதாவது, ஆசீர்வாதங்கள் போன்ற இவை தான் எப்போதும் இறைவனிடம் எமக்காக உள்ள செல்வங்கள் என்பதை நீங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆனால் உலக விடயங்கள், அதாவது பூவுலகில் இருந்து பெறப்பட்டவை  மற்றும் இந்த புவியில் எஞ்சியிருக்கும் காரணிகள் போன்றவற்றை இவ்வுலகம் நிராகரிக்கும் அதே வழியில், நாமும் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஒரு சிறந்த வழி ஊடாக இறைவனை அடையும் பொருட்டு, எந்தவித ஆடம்பரத்தையும் அதனால் கிடைத்த இன்பங்களையும் நாம் ஏற்கனவே கைவிட்டு விட்டோம். புனித யோவான் நம்மைத் தூண்டுவதன் மூலம் நம்மை ஊக்குவிக்கும் முகமாக, ஆன்மீக மற்றும் தெய்வீகக் குரலில் இவ்வாறு கூறுகிறார்: ‘உலகத்தையோ, உலகில் உள்ளவற்றையோ நேசிக்காதீர்கள். எந்த மனிதனும் உலகை நேசித்திருந்தால், இறை தந்தையின் இரக்கம் அவனுக்குள் இல்லை. ஏனென்றால், உலகில் உள்ள அனைத்துமே சரீரத்தின் ஒத்துழைப்பு மற்றும் கண்களின் ஒத்துழைப்புடன் இயங்குகின்றன. இவ்வுலகில் உள்ள வீண் செருக்கு தான் அது. இது பிதாவினுடையது அல்ல, உலக இச்சையினால் ஆனது. உலகமும், உலகத்தில் காணப்படும் செருக்கும் மறைந்துபோகும்; தேவன் என்றென்றும் நிலைத்திருப்பதைப் போல, தேவனுடைய சித்தத்தைச் செய்தவன் என்றும் நிலைத்திருப்பான்.’[16] ஆகையால், நித்திய மற்றும் தெய்வீக விடயங்களைத் தேடிஅடைய நாம் முயல வேண்டும். அனைத்தையும் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும். இதன்மூலம், நாம்  நம்முடைய இறைவனின் அடிச் சுவடுகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி செல்வோமாக. இதைப்பற்றி கர்த்தர் இவ்வாறு அருளியுள்ளார்: ‘நான் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற வானகத்திலிருந்து இறங்கவில்லை, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே வந்தேன்.’[17] ஆனால், சேவகன் தன் எஜமானை விட உயர்ந்தவனாகவும், விடுவிக்கப்பட்டவன் தன் விடுதலையாளருக்கு விசுவாசமாகவும் இருந்தால், கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பும் நாம் கிறிஸ்து சொன்னதைப் பின்பற்ற வேண்டும். இங்கே எழுதப்பட்டுள்ளது, வாசிக்கப் படுகிறது, அது செவிமடுக்கப்படுகிறது, இது திருச்சபையின் குரலால் எங்களைத் தெளிவூட்டுமுகமாக இவ்வாறு அறிவிக்கப் படுகிறது: ‘கிறிஸ்துவில் நிலைத்திருப்பதாகக் கூறும் ஒருவர், தானும் கிறீஸ்து  நடந்து கொண்டபடியே நடக்க வேண்டும்.’[18] நாம் அவருடன் அடியெடுத்து வைக்க வேண்டும்; அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். சத்தியத்தைக் கடைபிடிக்க நாம் பாடுபடுவது, அது அவருடைய நாமத்தின் மீதான நம்முடைய விசுவாசத்திற்கு ஒப்பானதாக இருக்கும். மேலும் விசுவாசியானவர் ஒருவர், தான் விசுவாசிப்பதைக் கடைபிடித்தால் அவர் அதற்கு ஒப்பான வெகுமதியைப் பெறுகிறார்.

அத்தியாயம் 8

நீங்கள் உங்களை செல்வந்தர், பணக்காரர் என்று சொல்கிறீர்கள். ஆனால் புனித பவுல் உங்கள் செல்வச் செருக்கை எதிர்க்கிறார். உங்கள் ஆடைகளையும் அலங்காரங்களையும் சரியான வரம்பிற்குள் வைத்திருக்க தனது சொந்தக் குரலால் அவர் வழிநடத்த இவ்வாறு கூறுகிறார்: ‘பெண்களே, அடக்கத்தோடும் நிதானத்தோடும் தங்களைத் தாங்களே நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். சீவி முடிந்த கூந்தல், தங்கம், முத்துக்கள், அல்லது விலையுயர்ந்த ஆபரணங்கள், அணிகலன்களால் அல்ல. நல்ல வார்த்தைகள் மூலம் உங்கள் கற்புடைமையை வெளிப் படுத்தும் பெண்களாக நீங்கள் பரிணமிக்கும் போது தான் நீங்கள் முழுமை அடைகிறீர்கள்.’[19] பேதுருவும் இதே கட்டளைகளை முன்மொழிந்து இவ்வாறு கூறுகிறார்: ‘ஒரு பெண் தனது வெளித் தோற்றத்தை அழகுபடுத்த ஆபரணம் அல்லது தங்கம் போன்றவற்றை அணியக்கூடாது. ஆனால் அவள் அவளது இதயத்தின் அலங்கரிக்க அவளது நற்பண்புகளையே ஆபரணங்களாக அணியக் கடவாள்.’[20] திருமணமான பெண்களும், தங்கள் அணியும் விலை உயர்ந்த ஆடைகளுக்கு அவர்களது கணவர்கள் தான் காரணம் என்று காரணம் கூறாமல், அவற்றை அணிவதைத் தவிர்த்து, நல்ல பழக்க வழக்கங்களையும் திருச்சபையின் ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் பவுல் கூறுகிறார். அப்படியானால், எந்த அலங்காரத்தையும் தான் செய்யப் போவதில்லை என்று உறுதியளிக்கும் கன்னிப்பெண்கள், இதுபோன்ற விடயங்களில் எவ்வளவு கீழ்ப்படிதலைக் கடைபிடிக்க வேண்டும்? அவள் செய்த குற்றத்தைப் பற்றி அவள் மற்றவர்களை ஏமாற்ற முடியாது. அவள் செய்த குற்றத்திற்கு அவள் மட்டும் தான் காரணம், அவளே அதற்குக் கணக்கு கொடுக்க கடவாள்.

அத்தியாயம் 9

நீங்கள் பணக்காரர், செல்வந்தர் என்று நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள். அப்படியிருந்தும், நீங்கள் இஷ்டப்பட்ட எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியாது. மேலும், அடக்க, ஒடுக்கம் அற்ற, உலக இச்சைகள் நிறைந்த உலகில், தனது ஆசைகள் ஒரு கன்னியின் கண்ணியத்திற்கும் அடக்கத்திற்கும் அப்பால் செல்லாமல் இருக்க வேண்டும். இது பற்றி வேதாகமத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ‘அனைத்தும் சட்ட பூர்வமானது என்ற போதிலும், அவை அனைத்தும் கடைபிடிக்கக் கூடியதல்ல. ஆனால், எல்லாம் சட்டபூர்வமானது. அதேநேரம், அனைத்தும் வளர்ச்சி காண்பதும் இல்லை.’[21] ஆனால் நீங்கள் இன்னும் அழகாக உடை அணிந்தால், பொது இடங்களில் செல்லுமிடத்து, இளைஞர்களின் பார்வையை ஈர்க்கிறீர்கள். இளைஞர்கள் மோகத்துடன் உங்களைப் பின் தொடர்ந்தால், அவர்கள் காம இச்சைகளைத் தூண்டும்படி நடந்துகொண்டால், இச்சைகளின் தூண்டுதலுக்கு இடம் கொடுப்பதாலும், நம்பிக்கை எனும் தீயை மூட்டுவதாலும், நீங்கள் உங்கள் சொந்த ஆன்மாவை ஒருவேளை இழக்கக் காரணமாக மாட்டீர்கள். ஆயினும்கூட, நீங்கள் மற்றவர்களை அழிக்கிறீர்கள். உங்களைப் பார்க்கிறவர்கள் மனதில் நீங்கள் ஒரு வாளாகவும், விடமாகவும் மாறுகிறீர்கள். அப்படியான சந்தர்ப்பங்களில், உங்கள் மனம் தூய்மையானது, களங்கமற்றது என்று சொல்லும் சுதந்திரம் உங்களுக்கு இருக்க மாட்டாது. நீங்கள் அணியும் கேவலமான உடை மற்றும் உங்கள் ஆடம்பரமான அணிகலன்கள் போன்றவை, நீங்கள் முரண்பாடாக நடந்து கொள்கிறீர்கள் என்பதைக் காட்டுகின்றன. நீங்கள் இனிமேல் கிறிஸ்துவில் வாழும் கன்னிப்பெண்கள் மற்றும் கன்னியர்களாக கருதப்பட முடியாது. ஆகவே, நீங்கள் ஒரு சிற்றின்ப வேட்கையுடைய பொருளாக மட்டுமே வாழ்கிறீர்கள்.

அத்தியாயம் 10

நீங்கள் செல்வந்தர், பணக்காரர் என்று சொல்கிறீர்கள். பரிசுத்த வேதாகமம் கூறுவதுபோல், ஒருத்தி அவளுடைய செல்வத்தைப் பற்றி மட்டும் பெருமை பேசுவது, அவளது பெருமை மிக்க கன்னித்தன்மைக்கு சான்றாக அமைந்துவிடாது: ‘பெருமை என்பது எமக்கு என்ன இலாபத்தை வழங்கியது? அல்லது எமது செல்வத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவதால் நமக்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது? அவை யாவும் நிழல் போல கடந்து சென்று விடும்.’[22]

அப்போஸ்தலர் மீண்டும் நமக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இவ்வாறு கூறுகிறார்: ‘வாங்குபவர்கள், இல்லாதவர்களைப் போவே இருக்கட்டும்; அவர்கள் இந்த உலகத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் அதைப் பயன் படுத்தாத போது, இந்த உலகத்தின் நாகரிகம் தன் பாட்டில் அதன் பாதையைக் கடந்து சென்று விடும்.’[23] தம்முடைய மந்தையை மேய்க்கவும், தனது திருச்சபையை கட்டியெழுப்பவும் பேதுருவுக்குக் கட்டளை இட்ட கர்த்தர், இவ்வாறு கூறுகிறார்: அவரிடம் தங்கமோ வெள்ளியோ இல்லை, ஆனால் அவர் கிறிஸ்துவின் கிருபையால் செல்வந்தராக இருக்கிறார். அவர் விசுவாசத்திலும், அதிகாரத்திலும் செல்வந்தர் என்று கூறப்படுகிறது. இதன் வாயிலாகவே, அவர் பாரிய அற்புதங்களையும், புதுமைகளையும் செய்தார். இதனால் அவர் அடைந்த மகிமைக்கு ஈடாக ஏராளமான ஆன்மீக ஆசீர்வாதங்களைப் பெற்றார். இவ்வாறு அடைந்த செல்வம் மற்றும் ஆஸ்திகள், கிறிஸ்துவின் மகிமையால் செல்வந்தராக ஆக்கப் பட்டவர்களுக்கே உரித்தானவை. உலகமய காரணிகளால் செல்வந்தராக ஆக்கப்பட்டவர்களால் இவற்றைக் கொண்டிருக்க முடியாது.

அத்தியாயம் 11

நீங்கள் செல்வந்தர், பணக்காரர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இறைவன் உங்கள் பராமரிப்பில் வைத்திருக்க விரும்பியவற்றை நீங்கள் பயன் படுத்தலாம் என்று நினைக்கிறீர்களா? அவற்றைப் பயன் படுத்துங்கள். ஆனால் அவற்றை உங்கள் இரட்சணியத்துக்காகவும், உங்கள் நற்கிரியைகளுக்காகவும் பயன்படுத்துங்கள். இறைவன் விதித்தபடி அவற்றைப் பயன்படுத்துங்கள். இறைவன் அவற்றின் மூலம் என்னவெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என சித்தம் கொண்டிருக்கிறாரோ, அவற்றை நிறைவேற்ற நீங்கள் அப்பொருட்களைப் பயன்படுத்துங்கள். ஏழை மனிதர்களுக்கு நீங்கள் செல்வந்தர்கள் என்பதை உணர்த்துங்கள். உங்கள் பொருள் தேவைப் படுபவர்களுக்காக இருப்பதை உணர்த்துங்கள். உங்கள் பரம்பரை சொத்து மற்றும் பெற்ற செல்வத்தின் மூலம் கடவுளை உங்கள் கடனாளி ஆக்குங்கள்; அதன் மூலம் கிறிஸ்துவைப் போஷியுங்கள். உங்கள் கன்னித்தன்மையின் மகிமையை இறுதிவரை காத்துக் கொள்ளும்படி, நீங்கள் இறைவனுடைய வெகுமதியைப் பெறவும், செழிக்கவும் இந்தக் காரியங்களைச் செய்யுங்கள். பலரின் செபங்களுக்கு மத்தியில், நீங்களும் சேர்ந்து செபம் செய்யுங்கள். உங்கள் செல்வத்தைத் திருடர்கள் தோண்டி எடுக்காவண்ணம் பாதுகாப்பான இடத்திலும், கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்ல முடியாத பாதுகாப்பான இடத்திலும் சேமித்து வையுங்கள். உங்களுக்காக மட்டும் புதையலை சேர்த்து வைப்பதற்கு பதிலாக, உங்கள் சொத்தை சொர்க்கத்தில் சேர்த்து வையுங்கள். அங்கே உங்கள் சொத்தானது துருப்பிடிக்கவோ, காற்றால் அடித்துச் செல்லப்படுவதோ இல்லை. அவை சூரியனின் வெப்பத்தால் பொசுங்கிப்போவதில்லை. மழை அங்கே உங்கள் விளைபொருட்களை அழிக்காது. அங்கு உங்கள் சொத்து சதாகாலமும் வைக்கப்பட்டு, ஒருபோதும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படும். அவை நித்தியமானவை, ஒருபோதும் தோல்வியடையாதவை மற்றும் பயிர்களை நாசம் செய்யும் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுகின்றன. இந்த கட்டத்தில், நீங்கள் கடவுளை புண் படுத்துகிறீர்கள். நீங்கள் நம்புவீர்களானால், இரட்சிப்பைப் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி, அதை அனுபவிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே செல்வம் அவரால் உங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. கடவுள் உண்மையில் மனிதனுக்கு குரலைக் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கையில், அவர்கள் ஆபாசப்  பாடல்களையோ, உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பாடல்களையோ பாடக்கூடாது. தேவன் அவர்களுக்கு இரும்பையும் கொடுத்து, அதைக் கொண்டு நிலத்தை உழுது, பயிரிட உபயோகப்படுத்தும்படி கட்டளையிட்டார். எனவே அந்த இரும்பை, மனிதர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தக்கூடாது. அதேநேரம், இறைவன் வாசம் தரும் தூபத்தையும், திராட்சை இரசத்தையும், தீயையும் படைத்த படியால், அவற்றை சிலைகளுக்கு பூஜை செய்ய பயன்படுத்தப்படக் கூடுமா? அல்லது உங்கள் தொழுவங்களில் ஏராளமாக ஆட்டு மந்தைகள் உள்ளன. அவற்றை நீங்கள் பலியிடும் நோக்கத்யோடு கொல்லக் கூடுமோ? இவை எதுவும் முற்றிலும் நடக்கப்போவது இல்லை. உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய பாரம்பரியப் பின்புலத்தைக் கொண்ட செல்வம் நல்ல காரணங்களுக்காக பயன்படுத்தப் படவில்லை என்றால், அதனால் ஏற்படும் சோதனை மட்டுமே எஞ்சியிருக்கும். எனவே, ஒவ்வொரு செல்வந்தனும் தன் செல்வத்தை அதிகரிக்க வழி தேடுவதை விடுத்து, தன் செல்வத்தின் மூலம் தன் பாவங்களை மன்னிக்க  வேண்டி தியாகங்களை செய்யக்கடவான்.

அத்தியாயம் 12

அழகிய வித விதமான ஆபரணங்கள், உடைகள் மற்றும் மற்றயோரைக் கவர்ந்திழுக்கவும் விதத்தில் ஆபரணங்கள் அணிவது விபச்சாரிகள் மற்றும் கேவலம் மிகுந்த பெண்களைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. பெரும்பாலும் அவர்களின் ஆடைகள் மிகவும் விலை உயர்ந்தாகவும், மற்றும் அவர்களின் நடத்தை குறைந்த தரத்திலும் இருக்கும். இதைப்பற்றித்தான் வேதாகமம் இவ்வாறு கூறுகிறது. கர்த்தர் விபச்சாரிகளைக்கொண்ட ஒரு நகரத்தைபற்றி விவரிக்கையில், அதைப் பற்றி எமக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கொடுக்க முற்படுகிறார். அங்கு விபச்சாரிகளின் நகரம் மிகச்சிறந்த அலங்கார தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ளோரின் அழகிய ஆபரணங்களைப் பார்க்கும் போது, உண்மையில் அது அழிவுக்கு விதிக்கப்பட்டுள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. அங்கே பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: ‘அப்பொழுது ஏழு தேவதூதர்களில் ஒருவன் வந்து ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து என்னிடம் இவ்வாறு சொன்னான்; வாருங்கள், பல நீர்நிலைகளில் அமர்ந்திருக்கும் பெரிய விபச்சாரியின் வீழ்ச்சியை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். புவியை ஆண்ட பல அரசர்கள் அவளுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர் தனது ஆன்மாவினாலும் என்னை வழிநடத்தினார். அங்கே நான் ஒரு பெண் ஒரு மிருகத்தின் மீது அமர்ந்திருப்பதைக் கண்டேன். அந்தப் பெண் ஊதா மற்றும் சிவப்பு நிற அங்கி அணிந்திருந்தாள். அவள் தங்கம், விலைமதிப்பற்ற இரத்தினைக் கற்கள் மற்றும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவள் கையில் ஒரு தங்கக் கிண்ணம் இருந்தது. பூமியெங்கும் பரந்து கிடக்கும் சாபங்கள், தீமை, அசுத்தம், விபச்சாரம் போன்றவை அந்தக் கிண்ணத்தில் நிறைந்திருந்தன.’[24] தூய்மையும் தாழ்மையும் கொண்ட கன்னிப் பெண்கள், மோசமான மற்றும், ஒழுக்கக்கேடான ஆடை ஆபரணங்களை அணிவதிலும், விபச்சார விடுதிகளில் விலைமாதர்கள் அணிவது போல் அலங்காரம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

அத்தியாயம் 13

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஏசாயா, தங்கம் மற்றும் ஆடம்பரமான ஆடைகளால் வசீகரிக்கப்பட்ட சீயோனின் மகள்மாரை மிகுந்த கண்டிப்புடன்  எச்சரிக்கிறார். ஏராளமான நாசகார செல்வத்தையும், இந்த யுகத்தின் இன்பங்கள் மற்றும் கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, இறைவடமிருந்து விலகிச் செல்வோரையும் அவர் எச்சரித்து, இவ்வாறு சொல்கிறார்: ‘சீயோனின் மகள்மார் இத்தனை திமிர்பிடித்தவர்களாக இருக்கிறார்கள்! கர்வமான பார்வையுடனும், பெருமையுடனும் அவர்கள் நடக்கும் நடையும், கண்களை உருட்டியும், காலில் உள்ள சலங்கை சத்தத்தினை ஒலிக்கச்செய்து, கைகளை வீசி அவர்கள் நடக்கிறார்கள். சீயோனின் மகள்மாரின் தலையில் காயங்கள் ஏற்படும்படி செய்வேன். அவர்களின் தலையில் உள்ள முடிகளை உதிரச் செய்வேன். அந்த நாளில், அவர்களின் அழகை இழக்கும்படி செய்வேன். தேவன் அவர்களின் உடையின் மகிமையையும், அவர்களின் அலங்காரம், தலைமுடியையும், சுருளான முடியையும், சிறிய பிறை போன்ற நெற்றிச் சூடிகளையும், அவர்களின் தலை முக்காடுகளையும், வளையல்கள், திராட்சை வடிவில் காணப்படும் தங்க ஆபரணங்ககள், காப்புகள், மோதிரங்கள், காதணிகள், மற்றும் தங்கம் மற்றும் வைடூரியங்களால் நெய்யப்பட்ட பட்டு ஆடைகள் போன்றவற்றை அவர்களிடமிருந்து அகற்றுவேன். அவர்களின் மூக்குத்திகள், விழா உடைகள், வெளிப்புற ஆடைகள், போர்வைகள், கைப்பைகள், கண்ணாடிகள், உள்ளாடைகள், தொப்பிகள் மற்றும் ஆடம்பரம் மிக்க ஆடைகளை அவர்களிடமிருந்து அகற்றுவேன். பரிமள தைலத்தின் வாசனைக்கு பதிலாக, ஊசிப்போன எண்ணெய் வாடையை அவர்கள் மேல் வீசும்படி செய்வேன். அவர்கள் அணியும் இடுப்புப் பட்டிக்குப் பதிலாக கயிரையும், சிகை அலங்காரங்களுக்கு பதிலாக ஒரு வழுக்கைத் தலையையும், விலைமதிப்பற்ற ஆடைகளுக்குப் பதிலாக சாக்குத்துணியினால் ஆன ஆடைகளையும், அழகுக்கு பதிலாக அவலட்சணம் ஆகியவற்றையே அவர்கள் கொண்டிருப்பர்.’[25] இவற்றையிட்டு இறைவன் குறை கூறுகிறார். இதை ஒரு நிந்தை என்றும் அவர் கூறுகிறார். அவர்கள் ஊழல் நிறைந்தவர்கள் என்றும் அவர் கூறுகிறார். காரணம் அவர்கள் அவ்வாறு செய்யும்போது, ​​உண்மையான உடையில் இருந்து விலகி, அவலட்சணமான, வெட்கக் கேடான உடையை அவர்கள் அணிந்து கொள்கின்றனர். பட்டு மற்றும் ஊதா நிற ஆடைகளை அணிந்து, அவர்களால் கிறிஸ்துவை அடைய முடியவில்லை. தங்கம், முத்து மற்றும் கழுத்தில் அணியும் மாலைகள் போன்றவற்றை அணிவதன் காரணமாக, தங்கள் இதயங்கள் மற்றும் ஆன்மாக்களை அழகுபடுத்தும் ஆபரணங்களை அவர்கள் இழந்து விட்டார்கள். இன்னொருவரின் அழிவுக்கு காரணமானதை யார் வெறுக்க மாட்டார்கள்? வேறொருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த வாளாகவும் ஆயுதமாகவும் பாவிக்கப்பட்ட எதையாவது யாரும் மீட்டெடுக்கக்கூடுமோ? கிண்ணத்திலிருந்து ஊற்றப்பட்ட திரவத்தை குடித்தவர் இறந்துவிட்டால், அவர் குடித்தது விஷம் என்பதை நீங்கள் அறிவீர்கள்; உணவை உட்கொண்ட பின் அதை உண்டவர் மாண்டு போயிருந்தால், அவர் கொல்லப்பட்டது கொடியது விஷத்தால் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு முன் உண்டு, குடித்தவர் இறந்து போயிருக்கும் பட்சத்தில், நீங்கள் அங்கு எதையும் உண்ணவோ, குடிக்கவோ மாட்டீர்கள் அல்லவா? அப்படிப் பார்க்கும் போது, ​​இது என்ன வகையான அறியாமை? அதாவது, எப்போதும் அழிவை உண்டு பண்ணுபவை, மற்றும் ஏற்கனவே அழிவுகளை உண்டு பண்ணியவை போன்றவற்றைப்பற்றி நினைக்காமல் விடுவது எவ்வளவு பெரிய அறிவீனம்? மற்றவர்களை அழித்த அதே காரியங்களால், நீங்கள் அழிவுற மாட்டீர்கள் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!

அத்தியாயம் 14

இறைவனின் செம்மறிகள் சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் உடையணிந்து காணப்படவில்லை. அதேபோல், மூலிகை சாறுகள் மற்றும் சிப்பி ஓடுகளால் செய்யப்பட்ட சாயத்தை தலைமுடிக்கு பூசவும் அவர் அவர்களுக்குக் கற்பிக்க வில்லை. மேலும், கடவுள் தான் உருவாக்கியதை மறைக்கவும், அவர் படைத்ததை மறைக்கவும், அவர் தங்கத்தாலான நகைகளையோ, அல்லது விலைமதிப்பற்ற கற்களையோ, முத்து சங்கிலிகளால் செய்யப்பட்ட கழுத்தணிகளையோ உண்டாக்கவில்லை. எனினும், சாத்தானால் உருவாக்கப் பட்டவை வெளியில் தெரியுமாறு பகிரங்கமாக அணியப்பட்டிருக்கும். காதுகளில் காயங்கள் ஏற்பட வேண்டும் என்று இறைவன் விரும்பியிருப்பாரா? இதன் மூலம் குழந்தைப்பருவம் இன்னும் அப்பாவியான தோற்றத்துடன், உலகின் வீண் செருக்கை அறியாமல் சித்திரவதைக்கு உள்ளாகி இருக்கலாமல்லவா? இதனால் பின்னர் காதுகளில் உள்ள ஓட்டைகளில் மற்றும் துளைகளில் விலைமதிப்பற்ற கற்கள் தொங்கக்கூடும். ஆனால் அது அவற்றின் எடையைப் பொறுத்தது இல்லை, அது அவற்றின் விலைகளால் நிர்ணயிக்கப் பட்டதாக இருக்கிறது. பாவங்களைக் கட்டிக்கொண்ட மற்றும் விசுவாசத் துரோக தேவதூதர்கள் வெளியேற்றப்பட்டு பூமிக்குள் நுழைந்த பின்பு தான் இவை அனைத்தும் அவற்றின் சொந்த கலையின்படி உருவாக்கப்பட்டன. அதன் காரணமாக, அவர்கள் தங்கள் மோட்சானந்த சக்தியை இழந்தனர். கருமை நிறமுடைய ஒரு பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்கு வண்ணம் தீட்டவும், கன்னங்களின் நிறத்தை பிரகாசமாக்க அதற்கேற்ற பல நிறப் பூச்சுகளை உபயோகிக்கவும், போலி நிறக் கலவைகளால் தலைமுடிக்கு சாயம் பூசவும் கற்றுக் கொடுத்தார்கள். மற்றும் அவர்களின் சூழ்ச்சி மிகுந்த செயல்களால், அனைத்து உண்மைத் தன்மைகளையும் மனிதரின் முகத்தோற்றம் மற்றும் தலையிலிருந்து அகற்றிவிட்டன.

அத்தியாயம் 15

எனது உரையின் இந்த கட்டத்தில் நான் கூறிக்கொள்வது யாதெனில், கடவுள் மீதுள்ள பயம், மற்றும் விசுவாசம் என்னுள் விருத்தி அடைவதாலும், சகோதரத்துவத்தின் மீது கொண்ட பாசத்தினாலும், கன்னியர்கள், விதவைகள் மட்டுமல்ல, திருமணமான பெண்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், இறைவனுடைய படைப்பு எனும் கொடையால் நமக்குக் கிடைக்கப் பெற்ற இயற்கையான தோற்றத்தை எந்த விதத்திலும் மஞ்சள் அல்லது கருமை நிற செயற்கை அழகுசாதனங்கள் கொண்டு பொய்யான தோற்றமாக மாற்றக்கூடாது. அத்தோடு இயற்கையான அம்சங்களை கெடுக்கும் எந்தவொரு அழகுசாதனப் பொருளையும் பயன் படுத்தக் கூடாது என்று சற்று கடுமையாகவே அறிவுறுத்த வேண்டியுள்ளது. எம் இறைவன் இவ்வாறு கூறுகிறார்: ‘நாம் மனிதனை நம் சொந்த உருவத்திலும் ஒற்றுமையிலும் உருவாக்குகிறோம்.’[26] கடவுள் படைத்ததை மாற்றவும், மறுவடிவமைக்கவும் சிலர் தைரியத்தை கையில் எடுக்கிறார்கள். கடவுள் படைத்ததை மாற்றவும், அல்லது மாற்றத்தை உண்டாக்கவோ அவர்கள் அதில் கை வைக்கிறார்கள். படைக்கப்பட்டவை அனைத்தும் கடவுளின் செயலால் ஆனவை என்பதையும், அதில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தினால், அது சாத்தானின் செயல் என்பதையும் அவர்கள் உணராமல் செய்கிறார்கள். ஒரு நிகழ்வு பற்றி இங்கே எடுத்துரைக்க வேண்டியுள்ளது; ஒரு கலைஞர் இயல்பான தோற்றத்தையும், வெளித் தோற்றத்தையும் சேர்த்து ஒரு ஓவியத்தை உருவாக்கி, ஓவியத்தை நிறைவு செய்து, வண்ணம் தீட்டிய பிறகு, வேறு யாராவது ஒருவர் அந்த ஓவியத்தை விமர்சிக்கும் பட்சத்தில்,  அந்த இரண்டாவது நபர், அந்த ஓவியரை விட மிகவும் திறமையானவராக இருத்தல் வேண்டும். ஏற்கனவே உருவாக்கப்பட்டு முடிக்கப்பட்ட ஒரு படைப்பை இன்னொருவர் மேலும் அழகுபடுத்தல் குறித்து சிந்திப்பது முதல் கலைஞரை அவமதிப்பதற்கு ஒப்பாகும். இது அந்த கலைஞருக்கு கோபத்தை ஏற்படுத்தும் காரணமாக அமையும். ஆகவே, இதுபோன்ற ஒரு தீய மற்றும் கீழ்த்தரமான செயலைச் செய்வதன் மூலம், கலைஞருக்கு, அதாவது கடவுளின் கோபத்திற்கு ஆளாகி அவரது தண்டனைக்கு உட்படமாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் உபயோகிக்கும் கவர்ச்சியான அழகுசாதனப் பொருட்களின் மூலம் நீங்கள் மனிதர்களிடம் சாமானியர்களாக, அழகற்றவர்களாக இல்லாவிட்டாலும், இறைவனின் நியதியை அவமதிப்பதிலும், விகாரத்தை ஏற்படுத்துவதிலும் நீங்கள் ஒரு கேவலமான விபச்சாரியாகக் கருதப்படுகிறீர்கள்! நீங்கள் அலங்கரிக்கப் பட்டிருக்கிறீர்கள், அழகாக உடையணிந்துள்ளீர்கள் என்ற உங்கள் எண்ணமானது, தெய்வீகச் செயல் மீது நீங்கள் காட்டும் அலட்சியப் போக்கு, அத்தோடு இது சத்தியத்தை மீறும் ஒரு செயலும் ஆகும்.

அத்தியாயம் 16

<p class="<p> <style =" font-style: default;" >

அப்போஸ்தலரின் குரலால் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது: ‘உங்கள் பழைய புளித்த அப்பத்தை வெளியேற்றி, உங்களை புளியாத புதிய மாவாக மாற்றமடையச் செய்யுங்கள்; ஏனென்றால், நம்முடைய கடந்த காலத்தில் (பஸ்கா) கிறிஸ்து பலியிடப்பட்டார். ஆகையால், பழைய புளித்த அப்பத்துடன் அல்ல, பாவம் மற்றும் சத்தியத்தினால் நிறையப்பெற்ற  புளியாத அப்பத்துடன் ஒரு விருந்தை நாம் கொண்டாடுவோம்.’[27] உண்மையான விடயங்கள் கசப்பான வண்ணங்களால் மாசடையும் போது, ​​போலியான சாயங்களால் உண்மை பொய்யாக மாற்றப்படும்போது, நேர்மையும் உண்மையும் இருக்கக்கூடுமோ? உங்கள் இறைவன் இவ்வாறு கூறுகிறார்: ‘நீங்கள் உங்கள் ஒற்றைத் தலை முடியைக்கூட வெண்மையாகவோ அல்லது கருமையாகவோ மாற்றமடையச் செய்ய முடியாது.’[28] ஆனால், நீங்கள், உங்கள் இறைவனின் வார்த்தையை வென்றெடுக்க, அவரை விட சக்தி வாய்ந்தவராக இருக்க விரும்புகிறீர்கள்; உங்கள் பொறுப்பற்ற தன்மையாலும், புனிதத்தை தடுக்கும் விதத்திலும், நீங்கள் உங்கள் தலைமுடிக்கு சாயமிடுகிறீர்கள்; எதிர்காலத்திற்கு ஒரு தேவையற்ற முன்னுதாரணத்தை வழங்குவதன் மூலம், நீங்கள் இப்போது தீச்சுடர்   நிறமுள்ள தலை முடியைப் பெறத் தொடங்குகிறீர்கள். அது நீங்கள் செய்யும் பாவம் மட்டுமல்ல, ஒரு பாவச்செயலுமாகும்! உங்கள் தலையில், உங்கள் உடலின் மிகவும் கௌரவமான பகுதியை நீங்கள் கொச்சைப்படுத்துகிறீர்கள். இங்கே இறைவனைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது: எம் தேவனான இறைவனது தலை மற்றும் தலைமுடி, வெண்கம்பளி அல்லது பனியைப் போல வெண்மையாக இருந்தது.’[29] கர்த்தரின் தலையிலுள்ள நரை முடிகளை நீங்கள் வெறுக்கிறீர்கள்; உங்களுக்கு வெள்ளைத் தலைமுடி பிடிக்காது என்பதால்.

அத்தியாயம் 17

இப்படியான ஒரு சூழ்நிலையில், ​​நடுத்தீர்வை நாள் வரும்போது, ​​உங்கள் படைப்பாளரான இறைவன் உங்களை அடையாளம் காணக்கூடுமோ என்ற பயம் உங்களுக்கு ஏற்படவில்லையா? அவருடைய வெகுமதிகளையும் வாக்குறுதிகளையும் பெற நீங்கள் வரும்போது, ​​அவர் உங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உங்களை கைவிடுவார் என்ற பயம் உங்களுக்கு ஏற்பட வில்லையா? நீங்கள் மாற்றத்தை உண்டு பண்ணுபவராகவும், நீதிபதியாகவும் செயற்படுவதை நினைத்து உங்களைக் கண்டனம் செய்யக்கூடுமல்லவா? அவர் இவ்வாறு சொல்லக்கூடும்: ‘இது என்னுடைய படைப்பு அல்ல, இது எங்கள் உருவமும் அல்ல.’ போலி அழகுசாதனப் பொருட்களால் உங்கள் சருமத்தை விகாரமாக்கினீர்கள்; உங்கள் தலைமுடியின் நிறத்தை விலைமாதுவுக்கு ஒப்பானதாக மாற்றினீர்கள். உங்கள் முகத்தை போலி ஒப்பனை ஆக்கிரமித்துள்ளது; உங்கள் தோற்றம் விகாரமடைந்துள்ளது; உங்கள் முகம் வேறொருவரின் முகத்தைப் போல் தோற்றமளிக்கிறது. கடவுளால் படைக்கப்பட்ட உங்கள் கண்கள் சாத்தானின் கிரியைகளால் பாதிப்படைந்து உள்ளதால், உங்கள் கண்களால் கடவுளைப் பார்க்க முடியாதுள்ளது. அவரே உங்களை தயார்படுத்தியுள்ளார், ஆனால் நீங்கள் உங்கள் கண்களை சர்ப்பத்தின் சிவந்த மற்றும் வர்ணம் பூசப்பட்ட கண்களைப் போல் மாற்றியுள்ளீர்கள்; உங்கள் எதிரியைப் போல நீங்களே உங்களை அலங்கரிக்கும் பட்சத்தில், நீங்கள் அவற்றுடன் சேர்த்து தீயினால் எரிக்கப்படுவீர்கள். நான் கேட்கிறேன், கடவுளின் ஊழியர்கள் இந்த விடயங்களில் அவர்களின் பிரதிபலிப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லவா? அவர்கள் எப்போதும், இரவும் பகலும், பயத்துடன் தியானம் செய்ய வேண்டாமா? திருமணமான பெண்கள் தங்களை மகிழ்விப்பதற்கான முயற்சிகளின் மூலம் கணவருக்கு அளிக்கும் ஆறுதல் குறித்து எந்த அளவிற்கு அவர்கள் தங்களை தாமே ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும். தங்களுக்கு சாதகமான ஒரு காரணத்தை முன்வைக்கும் முகமாக, அவர்கள் குற்றவியல் ஒப்பந்தத்தை சாதகமாகப் பயன் படுத்துகின்றனர். நிச்சயமாக, இது பொருந்தாத ஒன்று. ஆனால் இந்த வகையான                  ஏதுக்களால் தங்களை அலங்கரிக்கும் கன்னிப்பெண்கள் இருக்கும் பட்சத்தில், என் கருத்துப்படி, அத்தகையவர்களை கன்னிகளாக கருதுவதில் அர்த்தமில்லை. ஆகவே, களங்கமுற்ற செம்மறி ஆடுகள் மற்றும் நோயுற்ற கால்நடைகளைப் போல, கன்னிப்பெண்களின் தூய்மையான மற்றும் புனிதமான மந்தையிலிருந்து அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். அவர்கள் ஒன்றாக இருக்கும்போது அவர்கள் தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்ள இடமளியாதாது மட்டுமன்றி, மற்றவர்களையும் கெடுக்க இடமளிக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு சொல்லப்படுகிறது.

அத்தியாயம் 18

நாங்கள் இச்சைகளைக் கட்டுப்படுத்தும் பிரம்மச்சாரியத்துக்குத் தேவையான ஆசீர்வாதத்தை நாடுகிறோம் என்பதால், அதற்கு எதிரான மற்றும் விரோதமானவற்றைத் தவிர்ப்போம். அலட்சியம் மூலம் பயன்பாட்டுக்கு வரும் சில நடைமுறைகளில் நான் தலையிட மாட்டேன், அதாவது, கொள்ளை சம்பவங்களில் இருந்து தங்களை விலக்கிக்கொண்டவர்கள், தீங்கு விளைவிக்கக்கூடும் என்று அஞ்சும் மத்தியஸ்த பழக்க, வழக்கங்கள் உடையவர்களின் விடயத்தில் இருந்து நான் ஒதுங்கியே இருக்கிறேன். சிலர் திருமண வைபவங்களில் கலந்து கொள்ள வெட்கப்படுவதில்லை. அங்கே முறையற்ற மற்றும் ஆபாசமான உரையாடலில் ஈடுபடுவது, பொருத்தமற்ற விடயங்களைக் கேட்பது, பொருத்தமற்ற விடயங்களைச் சொல்வது, ஆபாசமான பேச்சு மற்றும் மது போதை தரும் களியாட்டங்கள் போன்றவற்றில் கலந்து  கொள்வதற்கும் அவர்கள் வெட்கப்படுவதில்லை. இது காமத்தின் தீயைத் தூண்டுகிறது. மணமகளை சகித்துக்கொள்ள வைக்கும் கட்டாயத்துக்கு உள்ளாக்குவதோடு, மணமகன் காம வேட்கைக்கு முகம் கொடுக்கக் கூடிய ஒரு நிலைமையையும் ஏற்படுத்துகிறது. திருமணத்தைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காத ஒருவருக்கு திருமணம் நடக்கும் இடத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் தான் என்ன? அல்லது ஆசைகள் மற்றும் ஆர்வங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், அங்கே இனிமையானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கப்போவது எது? அங்கு நீங்கள் என்ன கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? அங்கு எதைக்  காணலாம்? ஒரு கன்னி இவ்வளவு காலமாக தனது நோக்கத்தை அடையும் இலட்சியத்தையும் எந்த அளவிற்கு கைவிடக் கூடும்! மேலும் அவள் மனதில் கன்னியாக இருந்தாலும் கூட, அவள் கண்கள், காதுகள் மற்றும் நாக்கு ஆகியவற்றால் அவள் கண்டிருந்த கனவு வீணாகிப் விடக்கூடும்.

அத்தியாயம் 19

பொதுவான குளியல் அறைகளுக்குச் செல்வோர் மற்றும் மற்றவர்கள் பார்க்க விபச்சாரம் செய்பவர்கள், கற்பு மற்றும் அடக்கம் போன்றவற்றுக்குப் புனிதமாகப் போற்றக்கூடிய உடலை காம இச்சைகளுக்கு உள்ளாக்குபவர்கள் பற்றி என்ன சொல்வது? பின்னர் ஆண்கள் அவர்களைப் பார்க்கிறார்கள் என்று கொஞ்சமும் வெட்கமின்றி, அவர்களை ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறார்கள். அவ்வாறான அவர்களது நடவடிக்கைகள் ஆண்களுக்கு முன்பாக நிர்வாணமாக நிற்பதற்கு ஒப்பானது இல்லையா? தாங்கள் தாமாக அவமதிப்புக்கும் தீங்குக்கும் உள்ளாகிய நிலையில், அங்கு வருபவர்களின் காமத்தை தூண்டும் விதத்தில் அவர்கள் நடந்து கொள்ளவில்லையா? ‘வேறொருவர் இங்கு வருவது அவரது சொந்த அபிப்பிராயமாக இருக்கட்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரை, எனது கவலை எல்லாம் என் ஏழ்மைப்பட்ட உடலை ஸ்நானத்தால் சுத்தம் செய்து அதை புதுப்பிப்பதும் மட்டுமே.’ உங்கள் பாதுகாப்புக்காக இதுபோன்ற ஒன்றைச் சொன்னாலும் கூட, உங்கள் வாதத்தை நியாயப்படுத்த முடியாது. காமம் மற்றும் பாலியல் ரீதியான பாவத்தில் ஈடுபடுவதற்கு நீங்கள் சொல்லும் இந்தக் காரணம் ஒரு சாக்குப் போக்காகத்தான் தெரிகிறது. இந்த வகையான பொது இடத்தில் நீராடுதல், அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும். இது உடல் சுத்திகரிப்புக்கு வழிவகுக்காதது போல, கை கால்களையும் சுத்தப் படுத்துவதில்லை. ஆனால் அது ஆறாத வடுக்களையும், இரணங்களையும் மட்டுமே ஏற்படுத்துகிறது. நீங்கள் யாரையும் கேவலமான முறையில் பார்க்காவிட்டாலும், உங்களை ஒழுக்கக்  கேடான முறையில் பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தவறான பார்வைகளால் உங்கள் கண்களைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால் மற்றவர்களை மகிழ்விப்பதில், நீங்களே உங்களைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். உங்கள் ஸ்நானம் செய்யும் பகுதியை ஒரு பொது களியாட்ட அரங்காக மாற்றுகிறீர்கள்; நீங்கள் செல்லும் இடங்கள் திரைப்பட அரங்குகளைவிட சங்கடத்தை ஏற்படுத்தும் இடங்கள். அங்கு பாதுகாக்கப்பட வேண்டியவை யாவும்  வெளிப்படையாய் உள்ளன; உடலின் கண்ணியம், பணிவு, கௌரவம் ஆகியன அணியும் ஆடைகளால் தான் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் அவை அங்கே புறந்தள்ளப்பட்டுள்ளன. கன்னித்தன்மையைக் காண்பதும், மாசுபடுத்தலுக்கு உள்ளாவதும் அங்கே வெளிச்சமாகிறது. ஒருத்தி  ஆடை அணிந்திருக்கும் விதத்தில், அவள் ஆண்கள் மத்தியில் அடக்கமானவள் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். அவள் நிர்வாணத்தை காக்கும் தைரியம் கொண்டவளாக இருந்த படியால், தன்னடக்கம் இன்றி வளர்ந்த ஆண்களிடையே அவள் அடக்கமானவளாகப் போற்றப்படுகிறாள்.

அத்தியாயம் 20

எனவே, திருச்சபை பெரும்பாலும் அதன் கன்னியர்களைப் பற்றி கவலை  கொண்டுள்ளது. பொய் வதந்திகள் மற்றும் அவர்களைப் பற்றிய வெறுக்கத்தக்க கட்டுக்கதைகள் காரணமாக அவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே கன்னித்தன்மையின் புனிதமான மலர் சோபை இழந்து வாடிவிடுகிறது. பிரம்மச்சரியத்தின் கண்ணியமும், கற்பும் நிர்மூலமாக்கப்படுகிறது. அனைத்து மரியாதையும், கௌரவமும் இழிவுபடுத்தப்படுகின்றன. எனவே சாதித்துவிட்டதாகக் கருதும் எதிரி தனது சொந்த தந்திரோபாயங்களால் மெல்லமாக அவர்களிடையே ஊடுருவுகிறான். அதேபோல் சாத்தானும் வஞ்சகப் பொறிகளின் ஊடாக ஊடுருவுகிறான். தங்களை சிறந்த முறையில் அலங்கரிக்கவும், சுதந்திரமாக நடந்து கொள்ளவும் விரும்பும் கன்னிப்பெண்கள், மறைந்திருக்கும் அவமானத்தால் அவர்கள் களங்கம் அடைவதால், இனி அவர்களைக் கன்னிபெண்களாகக் கருதமுடியாது. இத்தகைய கன்னிப்பெண்கள், மணமகளாக இருப்பதற்கு முன், விதவைகளாகவும், தங்கள் கணவர்களுக்கு முன் விலைமகளாக இல்லாவிட்டாலும், கிறிஸ்துவுக்கு முன் விலைமகள்களாகக் காணப்படுகிறார்கள். கன்னியர்களாக, அவர்கள் அற்புதமான வெகுமதிகளைப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், கன்னித் தன்மையை இழந்த காரணத்தினால் அவர்கள் பெரும் தண்டனைகளுக்கு ஆளாவார்கள்.

அத்தியாயம் 21

அப்படியானால் கன்னியர்களே, என்னை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் வைத்து எனக்கு செவிமடுக்க வேண்டுமென உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மீது அக்கறையும் கரிசனையும் கொண்டு உங்களை எச்சரிக்கும் என் பேச்சைக் கேட்கும்படி வேண்டுகிறேன். உங்கள் நன்மைகள் மற்றும் நலன்களை உண்மையாகக் கவனித்து கருத்திற் கொள்ளும் ஒருவராக எண்ணி நான் கூறுவதைக் கேளுங்கள். உங்களை சிருஷ்டித்த கடவுளை போல் இருங்கள்; உங்களைத் தன் கைகளால் வடிவமைத்த பிதாவைப் போல இருங்கள். பிதாவின் கரங்களால் வடிவமைத்த நபருக்கு ஒப்பானவராக இருங்கள். உங்கள் முகம் அவலட்சணத்தை வெறுத்து அழகாக இருக்கட்டும். உங்கள் கழுத்தை சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் அழகை போலியாக இல்லாமல், உண்மையான அழகுடன் பராமரியுங்கள். உங்கள் காதுகளில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகள் அல்லது கழுத்தை விலையுயர்ந்த வளையல்கள் மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்க வேண்டாம். உங்கள் கால்களைத் தங்கக் கொலுசுகளால் அலங்கரிப்பதைத் தவிருங்கள். உங்கள் தலைமுடிக்கு நிறச்சாயம் பூசாதீர்கள். உங்கள் கண்கள் இறைவனைப் பார்க்கும் பெறுமதி மிக்கவை. உங்களிடையே அடக்க ஒடுக்கத்துடன் நீராடச் செல்லும் பெண்கள் செல்லும் இடங்களுக்குச் சென்று அங்கே அவர்களுடன் நீராடுங்கள். ஒழுங்கற்ற திருமண வைபவங்களில் கலந்து கொள்வதையும், அங்கே நடைபெறும் கேவலமான விருந்து மற்றும் உபசாரங்களிலும், பாதுகாப்பற்ற உறவுகளைப் பேணுவதையும் தவிர்க்கவும். நீங்கள் அணியும் ஆடைகளில், கன்னியரான உங்கள் வெற்றியை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். சரீர மற்றும் உலக இச்சைகளை வென்ற நீங்கள், தங்கத்தையும் நிராகரியுங்கள். எவரேனும், பெரிய விடயங்களில் வெற்றி கொள்வதும், சிறிய விடயங்களில் தோல்வியுறுவதும் இயல்பான விடயமல்ல. வாழ்க்கைக்கான பாதை எனப்படுவது, நேரான மற்றும் குறுகிய வழியே. மகிமைக்கான பாதை செங்குத்தானதும் கடினமானதும் ஆகும். வேதசாட்சிகள் அந்த வழியில் பயணம் செய்துள்ளனர். அதில் கன்னியரும் பயணிக்கின்றனர். எல்லா நீதிமான்களின் வழியும் அதுதான். அகலமான மற்றும் நீளமான பாதைகளில் பயணிப்பதைத் தவிர்க்கவும். அப்பாதைகளில் உங்களை வசீகரிக்கக்கூடிய கொடிய இடங்கள் மற்றும் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய கண்ணிகளும் இருக்கக்கூடும். அவற்றில் மக்களை ஏமாற்றும் சாத்தான்கள் ஊடுருவி ஒளிந்திருக்கக்கூடும். அவனுடைய தீங்கைக் கண்டு சிரிப்பதற்கும், அவனைக் கொல்லும்படி தூண்டுவதற்கும் அவை ஊடுருவியுள்ளன. இங்கே முதல் அறுவடையானது நூறு மடங்கு, அது வேதசாட்சிகளுக்கு உரித்தானது. இரண்டாவது அறுவடையான அறுபது மடங்கு உங்களுக்கு உரியது. வேதசாட்சிகளைப் போலவே, சரீரத்தைப் பற்றியோ, உலக ஆசைகளைப் பற்றியோ எந்த நாட்டமும் இல்லாததைப் போல், சிறிய மற்றும் அற்பமான தினசரி நடத்தக்கூடிய போராட்டமும் இல்லாததைப்போல், கிருபையின் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள உங்களுக்கும் சகிப்புத் தன்மையின் சக்தி விருத்தியடையக் கடவதாக. உயர்ந்த ஸ்தானத்தை அடைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மலைகளில் ஏறி, மலைகளின் உச்சியை அடையும் முயற்சியின் போது நாம் எவ்வளவு சக்தியை இழக்க வேண்டியுள்ளது! நமக்கு எவ்வளவு சோர்வு ஏற்படுகிறது! அப்படியானால், மோட்சத்துக்குப் போக வேண்டுமெனில், நாம் என்ன செய்ய வேண்டும்? வாக்குறுதி அளிக்கப்பட்ட வெகுமதியைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்களது சகிப்புத்தன்மை என்பது மிகவும் குறைவு என்றே படுகிறது. இடைவிடாமல் முயற்சி செய்பவர்களுக்கு நிரந்தர தன்மை கிடைக்கிறது; நித்திய வாழ்வு கிடைக்கிறது; கர்த்தர் தம்முடைய இராச்சியத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அத்தியாயம் 22

கன்னியரே, ஆரம்பம் முதல் நீங்கள் எதற்காகப் படைக்கப்பட்டீர்களோ, அந்த நிலையை அடைய விடாமுயற்சியுடன் பாடுபடுங்கள். நீங்கள் எப்படிப் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையிட்டும் அந்த நோக்கத்தை அடையவும் இடைவிடாது முயற்சி செய்யுங்கள். உங்களுக்காகவென்றே ஒரு பெரிய வெகுமதி காத்திருக்கிறது. அது நல்லொழுக்கத்திற்கான ஒரு சிறந்ததும், தூய்மையானதுமான வெகுமதியாகும். உங்கள் இச்சைகளை அடக்கி ஆளும் நற்பண்பு காரணமாக எந்த வகையான துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் இருந்தும் நீங்கள் விடுதலை பெறுகிறீர்கள். அதில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை அறிய விரும்புகிறீர்களா? கடவுள் பெண்ணிடம் பேசும்போது இவ்வாறு கூறுகிறார்: “நான் உங்கள் வலியையும், உங்கள் கூக்குரலையும் அதிகரிப்பேன், மேலும் உங்கள் பிள்ளைகளை வேதனையுடன் பெற்றெடுப்பீர்கள். உங்கள் விருப்பம் உங்கள் கணவருக்கே உரித்தாகும்; அவர் தான் உங்களை தனது அதிகாரத்தில் வைத்திருப்பார்.” [ஆதி 3:16.][30] ஆகவே, நீங்கள் இந்த தண்டனையிலிருந்து விடுதலை பெற்று விட்டீர்கள். பெண்களின் துயரத்தையும், அவர்களின் கூக்குரலையும் கேட்டு நீங்கள் அச்சம் கொள்ள மாட்டீர்கள். உங்கள் பிள்ளைகளின் பிறப்பையிட்டு நீங்கள் எந்த பயமும் கொள்ளத் தேவை இல்லை. உங்களை ஆள்பவர் உங்கள் கணவர் அல்ல, கிறிஸ்துவானவர் தான் உங்களது எஜமான். அங்கே உங்கள் கணவரின் வடிவத்தில் இருப்பவர் உங்கள் இறைவனும் எஜமானருமாக இருக்கிறார். உங்களது பங்கும், அந்தஸ்தும் பொதுவானது. இவற்றைப்பற்றி கர்த்தர் இவ்வாறு சொல்கிறார்; ‘இந்த உலகில் குழந்தைகள் பிறந்து, அவை குழந்தைகளைப் பிரசவிக்கின்றன. ஆனால் உலகத்திற்கு தகுதியானவர்களாகக் கருதப் படுபவர்களும், மரித்தோரிலிருந்து உயிர்ப்பிக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று கருதப்படுபவர்களும், திருமணம் செய்து கொள்ளவோ, திருமணத்திற்குக் கொடுக்கப்படுவதுமில்லை. ஏனென்றால் அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகள், அவர்கள் தேவனுடைய தூதர்களைப் போன்றவர்கள், அவர்கள் ஒருபோதும் இறக்க மாட்டார்கள். ‘[லூக்கா 20:34-36][31] எங்களுக்கு என்ன ஆனதோ, நீங்களும் ஏற்கனவே அதேபோல் ஆகத் தொடங்கிவிட்டீர்கள். ஏற்கனவே இந்த உலகில் நீங்கள் உயிர்த்தெழுதலின் மகிமையைக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் உலகத்தின் சூழ்ச்சிகளுக்கு அடிமையாகாமல், உலகை வென்று விட்டீர்கள். நீங்கள் தூய்மையான கன்னியர்களாக இருந்தபோதிலும், நீங்கள் கடவுளின் தூதர்களைப் போன்றவர்கள். உங்கள் கன்னித்தன்மை உங்களுடன் இருக்க நீங்கள் இடமளியுங்கள். காயங்களுக்குள்ளாகாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை தைரியத்துடன் ஆரம்பித்தது போலவே, இடைவிடா முயற்சியுடன் சகித்துக்கொள்ளுங்கள். உங்களை அலங்கரிப்பவை கழுத்தில் அணியும் ஆபரணங்கள் மற்றும் ஆடம்பரமான ஆடைகள் அல்ல. உங்கள் நடத்தை அப்பழுக்கற்றதா என்று உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கண்கள் சரீர காம இச்சைகளில் மற்றும் உலக விடயங்களின் மீது பார்வையை செலுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவை கடவுள் மீதும் வானகத்தின் மீதும் நிலைத்து இருக்கட்டும். அவை உலக இச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

அத்தியாயம் 23

முதல் கொடுக்கப்பட்ட அறிவிப்பு அதிகரிப்பை ஏற்படுத்தவும், பன்மடங்காகப் பெருகவும் கட்டளை இட்டது; இரண்டாவது இச்சைகளை அடக்கி ஆளுதல் பற்றி ஆலோசனை அளித்தது. இரண்டாமவர்கள், உலக இச்சைகளை அடக்கியாள கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உலகம் எவ்வித செயற்பாடுகளும் இன்றி வெறுமையாக இருந்த ஒரு காலத்தில், நம்முடைய இனப்பெருக்க  வளத்திறன் ஊடாக, அதிக அளவில் மனித வளத்தை விருத்தி செய்தோம். நம்மைபற்றி நாமே பிரச்சாரம் செய்து மனிதகுலத்தின் விரிவாக்கத்திற்காக அரும்பாடு பட்டோம். இப்போது, ​​உலகம் மனித வர்க்கத்தால் பல்லாயிரம் மடங்கு நிரம்பியும், உலகம் பரந்து விரிவடைந்தும் இருக்கும் அதேவேளை, பிரம்மச்சாரிய வாழ்க்கையைக் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் தேவனுடைய இராச்சியத்துக்காக, தாங்கள் இருபால் சேர்க்கையாளர்கள் (அலிகள்) போல வாழ்கிறார்கள். கடவுள் இதைக் கடைபிடிக்கக் கட்டளையிடவில்லை என்றாலும், அவ்வாறு செய்யலாம் என்று ஊக்குவிக்கிறார். மனிதர்கள் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க அவர்கள் ஒரு கலப்பையில் பூட்டப்பட்டுள்ளது போல் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. எனினும், கர்த்தர் தனது தந்தையின் அரண்மனையில் பல வாயில்கள் இருப்பதாகக் கூறுகிறார், ஆனால் அவர் சிறப்பாக வசிக்கும் தனது தந்தையின் வீட்டைப்பற்றிக் குறிப்பிடுகிறார். சரீரத்தின் மீதுள்ள இச்சைகளைத் துண்டிப்பதன் மூலம், இதுபோன்ற சிறந்த அரண்மனைகளை நீங்கள் காண்பீர்கள், மேலும் பரலோகத்தின் உயர்ந்த வரப்பிரசாத்த்தின் பலனை நீங்கள் பெறுவீர்கள். உண்மையில், பிதாவின் ஞானஸ்நானத்தால் பரிசுத்தமாக்கப்பட்டதால், தெய்வீகம் மற்றும் தேவ ஆதிக்கத்தின் வெகுமதியைப் பெறுபவர்கள் அனைவரும் இரட்சிப்பின் நீரினால் கழுவப்பட்டு, முன்பு அவருள் இருந்த பழைய மனிதரை விட்டு வெளியேறுகிறார்கள். பரிசுத்த ஆவியினால் புதுப்பிக்கப்பட்டு, இரண்டாவது பிறப்பால் அவை பழைய மாசடைந்த தன்மையிலிருந்து தூய்மையாக்கப்பட்டு புது மனிதராக அவர்கள் வாழ்வு புனிதமடையக்கடவதாக. ஆனால் இரண்டாவது பிறப்பின் புனிதமும், சத்தியமும், சரீர மற்றும் சரீரத்தின் மீதான இச்சைகள் இல்லாதவர்களுக்கே உரித்துடையது. உங்களில் உள்ள நல்லொழுக்கம் மற்றும் ஆன்மா சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டுமே மகிமைப்படுத்தப்பட வேண்டி எஞ்சியிருக்கும். தேவன் தம்முடைய கருவியாகப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்த, பரலோகத்தின் கட்டளைகளைக் கொடுக்க, அனுப்பப்பட்ட அப்போஸ்தலரானவர் தனது குரலில் இவ்வாறு கூறுகிறார்: ‘ஆதியில், மனிதன் பூமியின் தூசியால் உண்டாக்கப்பட்டான். அவன் பூமிக்கே உரித்தானவனானான். இரண்டாமவன், வானகத்திலிருந்து வந்தவன். பூமியில் இருப்பவை, பூமிக்கு உரித்தானதைப்போலவே இருக்கும். வானகத்திலும் அவ்வாறே இருக்கும். பூமியில் உண்டாக்கப்பட்ட உருவத்தை நாம் கொண்டிருப்பதைப் போலவே, நாம் வானகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற உருவத்தையும் ஏற்றுக்கொள்வோம்.’[32] கன்னித்தன்மையானது இந்த வடிவத்தை ஒத்திருக்கிறது. கற்பு அதன் உண்மையின் விழுமியத்தைப் பறைசாற்றுகிறது. கடவுளின் ஒழுக்கத்தை தம் வாழ்வில் கொண்டிருப்பவர்கள், நீதியை முழுமையாககக் கடைபிடிப்பவர்கள், விசுவாசத்தில் உறுதியானவர்கள், கடவுள் பயத்தில் தாழ்மையானவர்கள், எல்லா துன்பங்களையும் தாங்குவதில் தைரியமுள்ளவர்கள், காயங்கள் ஏற்படும் போது அதைத் தாங்கிக் கொண்டு சாதுவாக இருப்பவர்கள், கருணை காட்டத் தயாராக இருப்பவர்கள், ஒரே மனதுடனும் ஒரே சகோதரத்துவத்துடனும் சமாதானமாக இருப்பவர்கள் இதை முழுமனதுடன் பின்பற்றுகிறார்கள்.

அத்தியாயம் 24

ஒழுக்கமுள்ள கன்னியர்களே, தந்தையாகிய இறைவனுக்கும், கர்த்தராகிய கிறிஸ்துவுக்கும் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் முகமாக, இந்த நற்பண்புகள் யாவற்றையும் நீங்கள் உங்களகத்தே கொண்டிருக்க வேண்டும். அவற்றை நீங்கள் நேசிக்கவும் வேண்டும். அவை நிறைவேற்றப்படவும் வேண்டும். ஆகவே, ஒரு அற்புதமான மற்றும் சிறந்த அங்கமாக உங்களைப் புனிதமாக்கிய இறைவனிடம் நீங்கள் உங்களை அர்ப்பணிக்க வேண்டும். வயதில் மூத்தவர்களாக இருக்கிற நீங்கள், ​​இளையோருக்கு அறிவுரை கூறுங்கள். இளம் வயதை உடைய நீங்கள், உங்கள் வயதினரான இளையோரை ஊக்குவிக்கவும். பரஸ்பர ஊக்கமளிக்கும் நல்ல வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் ஊக்குவிக்க முயலுங்கள். நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், மகிமையைத் தேடுங்கள். எதையும் தைரியமாக, சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ஆன்மீக ரீதியில் உங்களைத் திடப்படுத்தி, உங்களது இலக்கை அடையும் பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடருங்கள். உங்களுக்குள் இருக்கும் கன்னித்தன்மை கௌரவிக்க ஆரம்பிக்கப்படும் போது மட்டும் எங்களை நினைவில் கொள்ளுங்கள்.


[1] சங்கீதம்: 2.12.

[2] சங்கீதம்; 49.16,17.

[3] ஞானாகாமம்: 3.11.

[4] நீதிமொழிகள்: 3.11,12.

[5] எரேமியா; 3.15.

[6] 1 கொரிந்தியர்: 6.19,20.

[7] யோவான்; 5.14.

[8] மத்தேயு: 19.11,12.

[9] வெளிப்படுத்துதல் 14.4.

[10] சங்கீதம்: 52.6.

[11] கலாத்தியர்: 1.10.

[12] 1 கொரிந்தியர்; 7.32-34.

[13] கலாத்தியர்: 6.14.

[14] கலாத்தியர்: 5.24

[15] ஏசாயா: 40.6.7.

[16] 1 யோவான்; 2.15-17.

[17] யோவான்; 6.38.

[18] 1 யோவான்;  2.6.

[19] திமோத்தியர்: 2.9,10.

[20] பேதுரு; 3.3,4.

[21] I கொரிந்தியர்; 10.23.

[22] பிரசங்கி 5.8,9.

[23] 1 கொரிந்தியர்: 7.30,81.

[24] வெளிப்பாடுகள்; 17. 1-5.

[25] ஏசாயா; 3.16-24.

[26] ஆதியாகமம்; I.26.

[27] 1 கொரிந்தியர்; 5.7.

[28] மத்தேயு; 5.36.

[29] வெளிப்பாடுகள்: 1.14.

[30] ஆதியாகமம்: 3.16.

[31] லூக்கா: 20.34-36

[32] 1 கொரிந்தியர்; 15.47-49.