ஒரு அடக்க ஆராதனையில் எவ்வாறு பிரசங்கிப்பது
ஸ்டீபன் கே. ப்ராய்ஸ்
Stephen K. Preus, How to Preach for a Funeral, in Tamil.
அறிமுகம்
உங்கள் பிரசங்கங்கள் அனைத்தும் தெளிவாய் இருக்க நீங்கள் தீவிர முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் சில தலைப்புகளைத் தெளிவற்றுப் பிரசங்கிக்கும்போது, உங்கள் தெளிவின்மை ஏற்படுத்தும் வெற்றிடத்தை, வேதப்பூர்வமற்ற கருத்துகளால் நிரப்பி, தெய்வீக சத்தியத்தை நீக்கும் ஒரு அழைப்பாக உங்களை கேட்பவர்களுக்கு மாறும். நீங்கள் எவ்வளவு தெளிவாகப் பேசினாலும், சிலர் நீங்கள் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள் எனினும், அது உங்களைச் சார்ந்து இருப்பதனால், உங்களால் முடிந்தவரை தெளிவாகப் பேசுங்கள்.
குறிப்பாக, அடக்க ஆராதனை போதனைகளை பிரசங்கிக்க நீங்கள் தெளிவாகப் பேசும் புனிதப் பணியில் உங்களுக்கு உதவ இந்தச் சிறு புத்தகம் உத்தேசித்துள்ளது. இந்த நோக்கத்திற்காக எனது சொந்த அனுபவத்திலிருந்தும், என் தந்தை Pr. ரோல்ஃப் ப்ராய்ஸ், Pr.டேவிட் பீடர்ஸன், Pr. ப்ரயன் உல்ப்முல்லர் மற்றும் பல போதகர்களின் பொழிவுகளை படித்ததிலிருந்தும், கேட்டதிலிருந்தும் முக்கியமானதாகக் கண்டறிந்த எட்டு தலைப்புகளை நான் கருத்தில் கொள்கிறேன். இந்த எட்டு தலைப்புகளில் போதகர்கள் பிரசங்கிக்கும்போது, துல்லியமற்ற முறையில் எளிதில் விழுந்து கிறிஸ்துவில் மற்றும் அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்து கேட்பவர்களை தம் கவனக்குறைவினால் திசைதிருப்பக்கூடும். இந்த பட்டியல் முழுமையடைவது கடினம், அதுவும், நிச்சயமாக இது ஒரு பிரசங்கத்திற்கான சுருக்கமான வருணனை அல்ல. ஆயினும், அடக்க ஆராதனைப் பிரசங்கங்களை நன்கு போதிக்க முற்படும்போது, போதகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பொருத்தமான தலைப்புகள் இதில் அடங்கும். இந்த எட்டு தலைப்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம், போதகர்கள் மக்களை ஆறுதல்படுத்தவும், சுவிசேஷவழி நடத்தவும், கத்தேகிஸ்முவழி நடத்தவும், போதகர்களைக் சிறப்பாகச் சித்தப்படுத்துவதே குறிக்கோள். ஒரு அடக்க ஆராதனையில் கலந்துகொள்பவர்கள், சராசரி பிரசங்கத்தை கேட்பவரை விட பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடியவர்கள், எனவே, அதிக கவனிப்புள்ளவர்களாகவும், ஏற்றுக்கொள்ளுகிறவர்களகவும் இருக்கிறார்கள். ஆகவே, பிரசங்கிகள் கடவுளுடைய வார்த்தையின் உண்மைகளை தெளிவாக வெளிப்படுத்துவதன் மூலம், சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கீழே உள்ள எட்டு தலைப்புகளில் விளக்கமளித்தப் பிறகு, அடக்க ஆராதனைகளில் தெளிவாய் போதிக்க நான் எடுத்த தீவிர எத்தனங்களை செயல் விளக்கமளிக்கும் விதமாக, எட்டு மாதிரி பிரசங்கங்களை இணைத்துள்ளேன். நாம் அனைவரும் நமது ஆளுமைக்கு ஏற்ப ஒவ்வொரு பிரசங்க பாணியைக் கொண்டிருக்கிறோம், நிச்சயமாக, இது போன்ற ஒரு புத்தகம் பிரசங்கங்களின் தொனியையும் நெறிமுறையையும் முழுமையாக உருவாக்க முடியாது. எவ்வாறாயினும், இந்த எட்டு தலைப்புகளை எவ்வாறு விசுவாசத்தோடு கையாளுவது என்பதற்கு இப்புத்தகத்தின் உள்ளடக்கம் ஒரு எடுத்துக்காட்டு. அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், கடவுளுக்கு நன்றி. இதில் இன்னும் தேவைகள் என நீங்கள் கண்டால், முன்னேற்றத்திற்கான இடத்தை நான் எப்போதும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். இந்த பிரசங்கங்கள் அனைத்தும் இச்சிறு புத்தகம் எழுதப்படுமுன்பே எழுதப்பட்டவை.
நீங்கள் இப்பிரசங்களை உபயோகிக்கும்போதும் விமர்சிக்கும்போதும் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். ஊழியத்தில் என் சகோதரர்களை கூர்மையுள்ள இரும்பாக்குவதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், அத்துடன், உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் வரவேற்கிறேன். நாம் ஒன்றாக சேர்ந்து, புனிதர்களுக்கு ஒருகாலத்தில் வழங்கப்பட்ட விசுவாசத்தின் உண்மையுள்ள அறிவிப்பாளர்களாக இருக்க முற்படுவோம். அமரிக்க தேசம், விஸ்கான்ஸின் மாகானம், ‘ரேசினி’ல் உள்ள தூய யோவான் லுத்தரன் தேவாலயத்தில் ஜூலை 2022 இல் நடந்த “புகன்ஹேகன் மாநாட்டில்”, “அடக்க ஆராதனைப் பிரசங்கங்களில் தெளிவின்மை மற்றும் பலனற்றவைகளைத் தவிர்த்தல்” என்கிற பயிற்சி முகாமில் நான் வழங்கிய விளக்கவுரையின் மூலமாக இந்தக் கையேடு உருவானது.
1.
மரணத்திற்கான காரணம் மற்றும் நியாயப்பிரமாணத்தைப் பிரசங்கிக்க வேண்டிய அவசியம்
மனிதர்களின்படி மரணம் என்றால் என்ன, கடவுளின்படி மரணம் என்றால் என்ன?
ஒரு அடக்க ஆராதனையில் நீங்கள் நீதியை (நியாயப்பிரமாணத்தை) பிரசங்கிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நியாயப்பிரமாணம் என்பது உங்களுக்கு முன்னால் இருக்கும் சடலம், என்று உங்கள் நடைமுறை இறையியல் பேராசிரியர் (Practical Theology Professor) சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். கடந்த காலத்தில் நல்ல நோக்கத்துடன் இதைக் கற்பித்த பிரசங்க உரையாளர்களுக்கு, உரிய மரியாதையுடன், இக்கருத்துக்கு நான் உடன்படவில்லை. தூய பிரான்சிஸ் கூறியதாக சொல்லப்படும் “எல்லா நேரங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், தேவைப்பட்டால் வார்த்தைகளைப் பயன்படுத்தவும்” என்கின்ற குறைபாடுள்ள சொற்றொடரைப் போலவே இந்த எண்ணம் ஒலிக்கிறது. நியாயப்பிரமாணம் வெறும் சடலமாக இருக்க முடியாது. ஏனென்றால் மக்கள் பொருள் படிப்பினையை வேதத்திற்கு மாறாக பல வழிகளில் விளக்குகிறார்கள்.
மக்களின் கருத்துப்படி, மரணம் என்றால் என்ன? மரணம் முற்றிலும் மருத்துவ அடிப்படையில் பலரால் புரிந்து கொள்ளப்படுகிறது. மருத்துவர்களின் உபகரணம் காட்டும் சமக்கோட்டைப்பார்த்து, இருதயம் துடிப்பது நின்றுபோவதை அறிவதே அவர்கள் கூற்றின்படி மரணம். அவர் அல்லது இவர் இறந்தது எப்படி என்று அவர்களிடம் கேட்டால், அவர்களின் பதில்கள் இதை வெளிப்படுத்தும். ராபர்ட் மாரடைப்பால் இறந்தார். ஜேக்கப் புற்றுநோயால் இறந்தார். டெலோரஸுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. என அவர்கள் சில மருத்துவ காரணங்களைக் கூறுகிறார்கள். இவை அனைத்தும் உண்மைதான், ஆனால் மரணத்திற்கான மருத்துவக் காரணம் நியாயப்பிரமாணத்தை போதிப்பது அல்ல. மேலும் மரணத்திற்கான இந்த மருத்துவக் காரணம் பெரும்பாலும் எல்லா மக்களாலும் இறந்த உடலிலிருந்து வருவித்ததாகும்.
பரிணாம வளர்ச்சியடைந்த பிற விலங்குகளைப் போலவே நமக்கும் மரணம் இயற்கையானது என்று மற்றவர்கள் கூறுவார்கள். அவர்கள் வாழ்க்கை வட்டத்தின் அடிப்படையில் மட்டுமே சிந்திக்கிறார்கள். அவர்களுக்கு, சவப்பெட்டியில் உள்ள இறந்த உடல் நாம் ஒரு உயிரியல் சுழற்சியில் பொருந்துகிறோம் என்பதைத் தவிர வேறு எதையும் கற்பிக்கவில்லை. மனிதன் தான் வந்த மண்ணுக்குத் திரும்புகிறான் (ஆதியாகமம் 3:19) என்னும் வேதாகம உண்மையை கேட்கும்போது அவர்களுக்கு இது இன்னும் சரியெனப்படும். பிதாவிடம் அழைத்து செல்கிற வாழ்க்கையைப் பற்றிய (யோவான் 14:6), சிந்தனை இல்லாமல் மக்கள் மரணத்தைப் பார்த்து, அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்கள்!
மேலும், அடக்கம் செய்வதற்குப் பதிலாக தகனம் செய்வதற்கான விருப்பம் அதிகரித்து வருவதை நாம் நன்கு அறிவோம், இந்நாட்களில் ஒரு சவப்பெட்டியில் உடலை வைத்திருப்பதற்கு கூட நாம் உத்தரவாதம் அளிக்க முடியாது. அப்படியென்றால் உடல் இல்லையென்றால் நியாயப்பிரமாணம் இல்லையா? அல்லது தகனம் செய்பவர்கள் கடவுளின் நியாயப்பிரமாணத்தை போதிக்கிறார்களா? மக்கள் தங்கள் அன்புக்குரியவரின் சதையையும் எலும்புகளையும் அரைத்து ஒரு கலசத்தில் வைக்கத் தேர்ந்தெடுக்கும்போது கடவுளின் கட்டளையைப் பற்றி சிந்திக்கிறார்களா? இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ளும் மற்ற அனைவரும் இப்படித்தான் விளக்கமளிப்பார்களா?
இல்லை என்பது வெளிப்படை. ஆகவே கடவுளின்படி மரணத்தை போதியுங்கள். பாவத்திற்கான தண்டனை மரணம் என்றுக் கூறுங்கள். தடைசெய்யப்பட்ட கனியை உண்பதற்கு முன் “அதை உண்ணும் நாளில் நீங்கள் நிச்சயமாக இறந்துவிடுவீர்கள்” என கடவுள் ஆதாமிடம் கூறினார் (ஆதியாகமம் 2:17). “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தின் மூலம் மரணமும் உலகிற்குள் நுழைந்தன” என்று புனித பவுல் உறுதிசெய்கிறார் (ரோமர் 5:12). “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று அவர் நமக்கு நினைவூட்டுகிறார் (ரோமர் 6:23). மேலும், மரணத்தை நியாயப்பிரமாணதுடன் உறுதியாக இணைக்க, “மரணத்தின் கொடுக்கு (கடி) பாவம், பாவத்தின் வல்லமை நியாயப்பிரமாணம்” (1 கொரிந்தியர் 15:56), என அவர் எழுதுகிறார். ஜெயம் (வெற்றி), கடவுளிடமிருந்து மட்டுமே “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக வருகிறது” (1 கொரிந்தியர் 15:57) என அவர் கூறுகிறார். இந்த தற்காலிக மரணம் வருவது ஏனென்றால் நாம் இயற்கையாகவே (சுபாவத்தின்படி), பாவத்தினால் ஆவியில் இறந்தவர்கள் (எபேசியர் 2:1) என்று நியாயப்பிரமாணம் போதிக்கிறது. கிறிஸ்துவில் நம்பிக்கை இல்லாமல்போனால், இந்த ஆவிக்குரிய மற்றும் தற்காலிக (இவ்வுலக, சரீர) மரணம், தண்டனை மற்றும் இரண்டாவது மரணம் அடைந்து, கடவுளின் கிருபை மற்றும் கருணை ஆகியவற்றிலிருந்து நித்திய பிரிவினைக்கு மட்டுமே வழிவகுக்கும் (வெளிப்படுத்துதல் 21:8).
பாவம் மரணத்தை உண்டாக்கும் என்பதை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள் என்பதற்கான ஒரு எச்சரிக்கை வார்த்தை: ஜென்ம (பிறப்பின்) பாவத்தையும், இதர உலக பாவங்களையும் வேறுபடுத்துவதில் கவனமாக இருங்கள். “பாவம் மரணத்தை உண்டாக்குகிறது” என்று செவிமடுக்கும்போது, பலர், இறந்த நபருக்கு கடவுள் மரண தண்டனை கொடுத்தார், ஏனென்றால் அவர் ஏதோ கடுமையான பாவம் செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதாக நினைப்பார்கள். உதாரணமாக, ஒரு திருச்சபை அங்கத்தினர், ஒரு பெண் தன்னைப் பற்றி பொய் சொன்ன பாவத்தினால், அவளுடைய அந்த ஒரே ஒரு ஏமாற்று செயலின் காரணமாக கடவுள் அவளை மரணத்தினால் தண்டித்தார் என்று கருதியது எனக்கு நினைவிருக்கிறது. அந்தப் பாவம் மட்டுமே கடவுளின் ஆக்கிணைக்குத் தகுதியானது என்றாலும், உண்மை என்னவென்றால், இந்த உலகப்பாவம் இல்லாமலும், எல்லாரையும் போலவே, பெண்ணும் பாவத்தில் கர்ப்பம் தரிக்கப்பட்டு பிறந்தாள் (சங்கீதம் 51:5). இந்த பிறப்பு (ஜென்ம) பாவத்திலிருந்து எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றின் உலக(சரீர) பாவங்கள் பொங்கிவழிகின்றன. இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
எனவே, நியாயப் பிரமாணம் (நீதி) வெறும் சடலமாக இருக்க முடியாது. உங்களால் முடிந்தவரை, கேட்பவர்கள் தவறான கருத்தை உங்கள் பிரசங்கத்தில் பொருத்த முடியாத வகையில் விஷயங்களைச் சொல்லுங்கள். இல்லையெனில், உங்கள் துல்லியமற்றத்தன்மை பிரசங்கம் கேட்பவர்களை கிறிஸ்துவிடமிருந்து திசைதிருப்பக்கூடும். ஏனென்றால் கேட்பவர்கள் தங்களுக்கு பதிலாக, ஆண்டவர் ஏற்றுக்கொண்ட, அவருடைய மரணத்திற்கான தேவையைப் பார்க்க மாட்டார்கள். அதன் மூலம் கடவுள் “நமக்கு எதிராக இருந்த கடன் பத்திரத்தை, அதன் நியாயத்தீர்ப்பு விதி தேவைகளை ரத்துசெய்து… சிலுவையில் அறைந்தார்” (கொலோசெயர் 2:14).
2.
நம்முடைய சொந்த மரணம் பற்றிய கண்டிப்புரை
மரணம் என்பது மற்றவர்களுக்கு மட்டும் நிகழும் ஒன்றா அல்லது நமக்காக நாம் தயாராகிக் கொள்ள வேண்டிய ஒன்றா?
பலருக்கு, மற்றொருவரின் மரணம் தங்களின் சொந்த இறப்பை அவர்களுக்கு நினைவூட்டுவதில்லை. இது மற்றவர்களுக்கு மாத்திரம் நடக்கும் ஒன்று என்பார்கள். அவர்கள் இறந்த உடலைப் பார்த்து, “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று சொல்லாமல் இருப்பது போல், “அது ஒரு நாள் நானாக இருக்க, என் மனைவி / குழந்தைகள் / நண்பர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்” என்று உயிரற்ற சடலத்தைப் பார்த்து உடனே அவர்கள் கூறுவதில்லை.
மாறாக, அவர்கள் என்ன சொல்கிறார்கள்? “அடக்க ஆராதனை நடத்தியவர் இறந்தவருக்கு ஒரு நல்ல காரியத்தைச் செய்தார்” அல்லது “அவள் இறந்தும்கூட மிகவும் அழகாக இருந்தாள்” போன்ற விஷயங்களை நீங்கள் கேள்விப்படுவீர்கள். நல்லதோ கெட்டதோ, இறுதிச் சடங்கு நிலையங்கள், அழுகிக்கொண்டிருப்பதை மறைப்பதற்காக சவ உடலைப் பதப்படுத்தி, ஒப்பனைப்படுத்தி மரணத்தை அழகாக்குகின்றன. அவை செயற்கை புல் விரிப்புக்களினால் கல்லறை தரையில் உள்ள அசுத்தம் மற்றும் பள்ளங்களிருந்து திசைதிருப்பப்படுகின்றன. அல்லது, தகனம் செய்கின்றபோது நிகழ்வது போல, உடலை முழுவதுமாக பொசுக்கி, உடலைச் சார்ந்த இயற்கை வடிவு நினைவுகளை நம்மை விட்டு அகற்றுகின்றன. இறந்த உடலை குறித்து இன்னும் சிலர் தாங்களே கவலைக்கொள்வதில்லை. “பார்வையில் இல்லாதது, சிந்தையில் இல்லாதது” என்ற உண்மையை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக, புத்தியுள்ள ஒரு மனிதன் மரணத்தின் அசுத்தத்தை அனுபவிப்பதில்லை; அது நோயுற்ற தன்மையாக இருக்கும். இருப்பினும், பல வழிகளில் மரணத்திலிருந்து திசைதிருப்பப்படுவதன் மூலம், பல இதயங்கள் ஒரு நாள், மரணத்தின் மூலம் நம்மை படைத்தவரை சந்திக்கப்போகிறோம் என்பதை நினையாமல், தங்கள் சொந்த மரணத்தை ஆரோக்கியமாக சிந்திக்க இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.
எனவே, உங்கள் பிரசங்கத்தை கேட்பவர்களிடம் மரணத்திற்கு தயாராகுங்கள் என்று பிரசங்கியுங்கள். “நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்பதை நினைவில் கொள்” என்று கர்த்தர் கூறுகிறார் (ஆதியாகமம் 3:19). “ஆகவே, நாங்கள் ஞானமுள்ள இருதயதமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குக் கற்பியும்” (சங்கீதம் 90:12) என மோசே கூறுகிறார். தேவாலயத்திற்குள் உடல் நுழைவதற்கு முன், “நாங்களும் அழியக்கூடிய மனிதர்கள் என்பதை எங்களுக்கு நினைவூட்டி, நாங்கள் விசுவாசத்தில் நித்திரையில் ஆழ்ந்திட எங்களை ஆயத்தப்படுத்துங்கள்….” என போதகர்கள் ஜெபிக்கிறார்கள். “நம் கிருபையுள்ள ஆண்டவர் நம்மை “துன்மரணத்திலிருந்தும், தீய மரணத்திலிருந்தும் விடுவிப்பார்” என்று பிரார்த்தனை மாலைகளில் (LITANIES) ஜெபிக்கிறோம்1[1] “தீமையிலிருந்து எங்களை விடுவியும்” என ஏழாவது மனுவில் (கர்த்தருடைய ஜெபத்தில்) நம் தந்தையிடம் நாம் மனு செய்து, “ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட முடிவை” அவரிடம் வேண்டுகிறோம். நம்முடைய லுத்தரன் பாடல்களில் “ஒரு கிறிஸ்தவ மரணத்தைத் தாரும்” என்றும் “மரணம் என்னை எப்போது முந்தும் என்று யாருக்குத் தெரியும்?” என்றும் பாடுகின்றோம். இவை அனைத்தும் நமது முடிவை நாம் சிந்திக்க வேண்டும் என்பதைக் கூறுகின்றன. ஏனெனில், நாம் மனந்திரும்பி, நாம் அநீதி இழைத்தவர்களுடன் ஒப்புரவாகி, கடவுளின் கருணையுள்ள வாக்குறுதிகளை கிறிஸ்துவில் நம்பி, நம் ஆத்துமாக்களை நம் தந்தையின் கைகளில் ஒப்படைத்து மரிக்க விரும்புகிறோம். ஒரு நல்ல மரணம் என்பது விரைவான மற்றும் வலியற்ற மரணம் என்று பலர் நினைக்கிறார்கள், மாறாக, அவர்கள் விசுவாசத்தில் தங்கள் இரட்சகரைச் சந்திக்க தயாராக இருக்கக்கூடிய மரணத்தை சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.
நம்முடைய சொந்த மரணத்தை அப்பட்டமான துயர்நீக்குவதாக மாற்றும் இந்த கடிந்துக்கொள்ளுதலை பற்றிய, ஒரு பழைய ஜெர்மானிய ஜெபம் உள்ளது. அது கூடிவந்தவர்களில் அடுத்து இறக்கப்போகும் நபரை கடவுள் நினைவுகூர்ந்து, அந்த நபர் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என கடவுளிடம் மன்றாடுகிறது. அது போலவே, நம் நாட்டில் உள்ள பழைய கல்லறைகளில் ஒரு கல்வெட்டில் கீழ்காணும் வாசகம் உள்ளது :
நண்பர்களே நீங்கள் இங்கே கடந்து செல்லும்போது நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இப்போது இருப்பதைப் போல, ஒரு காலத்தில் நான் இருந்தேன். நான் இப்போது இருப்பதைப் போல, நீங்கள் மரணத்திற்கு தயாராகி என்னைப் பின்தொடர வேண்டும்.
இது ஒரு ஆரோக்கியமற்ற யோசனை அல்ல, ஆனால் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய உண்மை. இதனால், நாமும் ஒரு ஆசீர்வாதமான மரணத்தை அடைந்து, நம் படைப்பாளரை, மீட்பரை மற்றும் புனிதப்படுத்துபவரை சந்திக்க தயாராக இருக்கலாம்.
உங்கள் பிரசங்கதை கேட்பவர்கள் இறக்கப் போவதினால், அவர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்களால் முடிந்தவரை, கேட்பவர் தம்முடைய சொந்த தவறான கருத்துக்களை உங்கள் வார்த்தைகளில் பொருத்த முடியாத வகையில் விஷயங்களைச் சொல்லுங்கள். மரணத்திலிருந்து விடுவிப்பவரை மட்டுமே பற்றிக்கொள்ள பிரசங்கத்தைக் கேட்பவரை வழிகாட்டாவிட்டால் அவர், கிறிஸ்துவிடமிருந்து திசைதிருப்பப்படலாம்.
3.
கிறிஸ்துவின் இரத்தப் பிராயச்சித்தமும் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுதலின் அவசியமும்
“வியக்க வைக்கும் கிருபையா” அல்லது “கிருபையால் நான் இரட்சிக்கப்பட்டேனா ?” நமது இறையியல் கோட்பாடு என்ன?
நான் ஒரு திருச்சபை உறுப்பினரை அவர் கணவர் இறந்தவுடன் சந்தித்தேன். அவர் பல ரோமன் கத்தோலிக்க உறவினர்களைக் கொண்டிருந்ததால், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் தூய நற்செய்தியைக் கேட்பதை உறுதிப்படுத்த விரும்பினார். அவர்கள் தங்கள் கிரியைகளால் இரட்சிக்கப்படுவதில்லை, மாறாக, கடவுளின் கிருபையால் மட்டுமே, கிறிஸ்துவின் மூலம் அவர் மீது விசுவாசம் வைப்பதனால் மாத்திரமே அவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பாக விரும்பினார். பிரசங்கப் பாடல் அவர்களுக்கு இந்த நற்செய்தியை வெளிப்படுத்தவும் அவர் விரும்பினார். எளிதாக கூறுவதென்றால், இந்த அரிய சந்தர்ப்பம் ஒரு இனிய வியப்பாக இருந்தது. நற்செய்தியின் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத “அமேசிங் கிரேஸ் (வியக்க வைக்கும் கிருபை)” என்கிற பாடலைப் பாடுவதற்கான கோரிக்கையை நீங்கள் அடிக்கடி பெறுவீர்கள்.
“அமேஸிங் கிரேஸ்” ஒரு நல்ல (அல்லது கெட்ட) பாடலாக இருந்தாலும், அது ஒருவித கருணையுள்ள கடவுளைப்போன்றவரை நம்பும் எவராலும் பாடப்படும்படியான தெளிவற்றப் பாடலாக உள்ளது. சுவிசேஷத்தின் தெளிவற்ற விளக்கம், அப்பாடலைக் கேட்கும் ஒவ்வொரு செவியும் “அருள் அல்லது கிருபை” (Grace) என்கிற பதத்திற்கு தன் சொந்த விளக்கத்தை செருகுவதால், நிறைய சமன்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. இந்தக் கிருபை சிலுவை மரணத்தின் மூலம் உலகின் பாவங்களை முழுவதுமாகப் பரிகாரம் செய்த இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் கடவுள் தகுதியற்றவர்களுக்கு ஆதரவாக அளிப்பதா? இந்த கடவுளின் கிருபை, கிறிஸ்துவின் நீதிமானாக்குதலை அளித்து, நமக்கு அவரின் முழுமையாக்கப்பட்ட வேலையினால், பரிசுத்த ஆவியானவரால், விசுவாசத்தைத் தருகின்ற கிருபையை குற்றம் சாட்டுகிறதா? அல்லது இந்தக் கிருபை நமக்குள் செலுத்தப்பட்டிருப்பதனால், நம்மை செயல்படுத்தி, நம்மை புனிதமாக்கப்பட்ட வாழ்வுக்கு வழிநடத்தி, கடவுளுக்கு முன் நாம் நீதிமான்களாக்கப்படுவதற்கு ஓரளவுக்கு அல்லது முழுமையாக பங்களிக்கிறதா? ‘அமேஸிங் கிரேஸ்’ பாடல் போதிப்பதைப்போன்று சுவிசேஷத்தை தெளிவற்றதாக்கும் பிரசங்கம், அப்பாடலைப்போன்று அல்லது வேறு தவறான கருத்தை போதிப்பதை, கடவுளின் இரட்சிக்கும் கிருபையாக எளிதில் புரிந்துக்கொள்ளும்படி செய்யும்.
தெளிவான சுவிசேஷத்தைக் கேட்க விரும்பின எனது திருச்சபை அங்கத்தினர், “கடவுளின் கிருபையால் இரட்சிக்கப்பட்டேன்” என்னும் ஞானப்பாடலை பிரசங்கப்பாடலாக தேர்ந்தெடுத்தார். இதுவே நமது இறையியல். அதன் வழியாய்ப் பாடும்போது, உங்கள் உதடுகளிலிருந்து வெளிவரும் ஒரு பாடல், நம்முடைய செயல்களாலும் நடக்கையாலும் நாம் இரட்சிக்கப்படவில்லை என்பதை தெளிவாகக் போதிக்கும். மாறாக, கடவுளின் கிருபை, நம்மை மீட்க அவருடைய குமாரனை அனுப்பிய அவருடைய அன்பே என்று கற்பிக்கிறது. கிருபை மாத்திரமே கடவுளின் குமாரனை வரவழைத்தது. பிதாவின் கிருபை என்பது, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம், பாவிகளுக்கு அகலமாய் திறந்திருக்கும் அவருடைய இதயம். அதனால் கிறிஸ்தவர்கள் தங்கள் இதயத்தின் நிலைமையை அறிந்திருந்தாலும், விசுவாசத்தின் மூலம், ‘அவருடைய கிருபையால் மட்டுமே இரட்சிக்கப்பட்டோம்’ என்கிற தங்கள் இரட்சகரின் குரலை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். இன்னும் அநேக ஞானப்பாடல்கள் (Hymns) இந்த தூய நற்செய்தியை தெளிவாகக் கற்பிக்கின்றன. உங்கள் இறுதி யாத்திரை பிரசங்கங்களும் அவ்வாறே இருக்க வேண்டும்.
குறிப்பாக, கிறிஸ்துவின் இரத்தப் பரிகாரத்தை விசுவாசிக்கும், விசுவாசத்தினால் மாத்திரமே நீதிமானாக்கப்படும் கடவுளின் கிருபையை வெளிப்படுத்துங்கள். திருமறைப் பகுதிகள் உங்களுக்குத் தெரியும். “மனுஷகுமாரன் ஊழியம் செய்ய வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று இயேசு சொல்வதை நினைத்துப் பாருங்கள் (மத்தேயு 20:28). யோவான் ஸ்நானகன், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று கூக்குரலிடுகிறார் (யோவான் 1:29). “நாம் அவர் இரத்தத்தினாலே இப்பொழுது நீதிமான்களாத் தீர்க்கப்பட்டோம்” (ரோமர் 5:9), என்றும் கடவுள் “அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே யாவையும் ஒப்புரவாக்கி சமாதானம் செய்தார்” (கொலோசெயர் 1:20) என்றும் புனிதர் பவுல் கூறுகிறார். “(கடவுளின்) கிருபையினாலேயே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு இலவசமாய் நீதிமான்களாகத் தீர்க்கப் படுகிறார்கள். கடவுள் பொறுமையுள்ளவராய் முற்காலத்து பாவங்களைச் சகித்துக்கொண்டதின் நிமித்தம் தமது நீதியை காண்பிக்க வேண்டுமென்றும், தாம் நீதியுள்ளவரும் இயேசுவினிடம் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாய்த் தீர்க்கிறவருமாய் விளங்கும்படி……கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தில், விசுவாசத்தின் மூலமாய் பலிக்கும் ‘கிருபாதாரமாக’ அவரை விளங்கப்பண்ணினார்….” (ரோமர் 3:24-26) என்று கூறுகிறார். இவையனைத்தும், “நாம் அவருக்குள் கடவுளின் நீதியாகும்படி பாவம் அறியாத அவரைப் பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:21)”, என்பதைக் கூறுகின்றன. நீங்கள் பிரசங்கிக்கும் வேதப்பகுதி நீங்கள் பயன்படுத்தும் சரியான வார்த்தைகளைத் தீர்மானிக்கும், ஆனால் “இயேசு நமது இடத்திலிருந்து செயல்பட்ட வாழ்வினால் நமக்கு பதிலாக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார்”
(கலாத்தியர் 4:4-5) என்பதை தெளிவுபடுத்த இதைப்போன்ற அல்லது வேறு வேதவாக்கியங்களை நீங்கள் பயன்படுத்தலாம். கிறிஸ்து தம்முடைய நீதியான ஜீவனைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார் என்பதைத் தெளிவுப்படுத்துங்கள். மாத்திரமல்ல, அவர் நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டு, அவருடைய பதிலீட்டு மரணத்தின் மூலம் நம்முடைய பாவத்தின் குற்றத்தையும் தண்டனையையும் சுமக்கிறார் (கலாத்தியர் 3:13; எபிரேயர் 2:14). “நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் இல்லாமல்,”விசுவாசத்தினால் மாத்திரமே” நாம் அவரில் நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறோம் (ரோமர் 3:28) என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது இதுவே கிறிஸ்துவில் உள்ள கடவுளின் கிருபையைக்கூறும் ஒரு சரியான பிரசங்கமாகும்.
கிறிஸ்துவின் இரத்தப் பரிகாரமும் விசுவாசத்தினால் நீதிப்படுத்தப்படுதல் மட்டுமே பிரசங்கத்தைச் சேர்ந்தவை. கேட்பவர்கள் உங்கள் வார்த்தைகளுக்குள் தவறான கருத்தை பொருத்த முடியாத வகையில் உங்களால் முடிந்தவரை சரியான கருத்துக்களை கூறுங்கள். இல்லையெனில், இரட்சிப்பு கடவுளின் இலவச பரிசு, நமக்கு பதிலாக, நம்முடைய இரட்சகரின் செயலினால், விசுவாசத்தின் மூலம் பெறப்படுகிறது, என்று புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அதைப் பற்றிய வேறு ஒரு ஒருங்கிணைந்த கருத்து கேட்பவருக்கு இருந்தால், அவர் கிறிஸ்துவைவிட்டு திசைதிருப்பப்படலாம்.
4.
கருணை வழிமுறைகளின் அனுகூலங்களும் அவசியமும்
பரலோகம் தானாக பெறப்படுகிறதா, அல்லது விசுவாசம், வேதவார்த்தை மற்றும் சாக்கிரமந்துகளில் நிச்சயமாய் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டுமா?
உளகளாவியவாதம் (Universalism) என்பது அனைத்து மனுக்குலமும் இறுதியில் இரட்சிக்கப்படும் என்கின்ற ஒரு நம்பிக்கையாகும். ஒரு அடக்க ஆராதனையில் மக்கள் ஒரு வெளிப்படையான உலகளாவிய வாதத்தை முன்வைப்பதை நீங்கள் கேட்க மாட்டீர்கள். ஆயினும், எல்லா மனுக்குலமும் இறுதியில் இரட்சிக்கப்படும் என்று கூறுவதற்குப் பதிலாக, அவர் எந்த நம்பிக்கையை (அல்லது நம்பிக்கையில்லாமையைப்) பற்றிக்கொண்டிருந்தார் அல்லது அவர் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதைப் பொருட்படுத்தாமல், “மரித்த அன்பானவர் இரட்சிக்கப்பட்டார்” போன்ற பொதுவான ஒன்றை நீங்கள் கேட்கக்கூடும். ஏனெனில், இறந்த நபரை அவர்கள் நேசித்ததினால், இறைவனும் தங்கள் அன்புக்குறியவரை நேசித்து அவரை பரலோகத்திற்குக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிச்சயமாக, கடவுள் அனைவரையும் கிறிஸ்துவில் நேசிக்கிறார். ஆனால் அவருடைய அன்பை மனந்திரும்புதலிலும் விசுவாசத்திலும் எல்லோருமே பெறுவதில்லை.
சிலர், கிறிஸ்துவினிடம் மனந்திரும்பாமல், நம்புகிற கிறிஸ்தவர்களாக இராமல், கடவுளின் அன்பைப் ஒருக்காலும் பெற்றுக்கொள்ளாமல் போகிறார்கள் என்று சொல்ல வருத்தமாக இருக்கிறது. சொர்க்கம் அல்ல, நரகமே அவர்களின் முடிவு. பரலோகம் தானாக கிடைப்பதில்லை. நரகம் நிஜமானது, மனம் வருந்தாதவர்கள், நம்பிக்கையற்றவர்கள் இறக்கும் போது அவர்கள் அங்கு செல்கிறார்கள். நம் அன்புக்குரியவர்கள் வழியையும், சத்தியத்தையும், ஜீவனையும் ஒருபோதும் அறிந்திராவிட்டால், அவர்கள் பரலோகத்தில் இருப்பதை நாம் ஆசிக்க முடியாது.
மற்றசிலர், ஒரு கட்டத்தில், கிறிஸ்துவில், கடவுளின் அன்பைப் பெற்று, விசுவாசிக்கும் கிறிஸ்தவர்களாக இருந்தும், அவர்கள் ஞானஸ்நானம் பெற்றவர்களின் வாழ்க்கையை, மனந்திரும்புதலின் வாழ்க்கையை வாழ்வதை, கிறிஸ்துவை விசுவாசிப்பதை நிறுத்தி, இருளான செய்கைகளுக்குள் விழுகின்றனர். “ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர், எப்போதும் இரட்சிக்கப்பட்டவர்” என்கிற தவறான போதனையை நாம் நிராகரிக்க வேண்டும். “ஓருமுறை ஞானஸ்நானம் பெற்றவர் எப்போதும் இரட்சிக்கப்பட்டவர்” என்கிற சில லுத்தரன் விளக்கங்களும் தவறானது. ஞானஸ்நானத்திற்குப் பிறகு ஒரு மனிதன் தனது நம்பிக்கையை இழக்க நேரிடும் என புனித பேதுரு பின்வருமாறு எழுதுகிறார்:
ஏனென்றால், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினால், அவர்கள் உலகத்தின் அருவெறுப்புகளிலிருந்து தப்பித்தபின், மறுபடியும் அவர்கள் அதில் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் பின்னிலைமை, முன்னிலைமையைவிட கேடுள்ளதாக, மோசமாக இருக்கிறது…..(2 பேதுரு 2:20; மத்தேயு 12:45)
“ஆதலால், தான் நிற்கிறதாக எண்ணுகிறவன் எவனும் விழுந்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்கக்கடவன்” என்று புனித பவுல் நமக்குச் சொல்கிறார் (1 கொரிந்தியர் 10:11-12). தெளிவாக விசுவாசிகள் மனந்திரும்ப மறுப்பதன் மூலமும், கர்த்தருடைய வார்த்தைக்கு செவிசாய்க்காததின் மூலமும் தங்கள் விசுவாசத்தை இழக்க நேரிடும். இந்த மக்கள் இறப்பதற்கு முன் மனந்திரும்பாவிட்டால், அவர்கள் இறுதியில் நரகத்தில் இருப்பார்கள், பரலோகத்தில் அல்ல.
மீண்டும், ஒரு உலகளாவிய மனநிலையைப் போலவே, அடக்க ஆராதனைகளில் ஏராளமான நபர்கள் தாங்கள் அன்புக்குறியவர்களுக்கு “விசுவாசம்” இருந்ததாகவும், அவர்கள் இறந்தப்பின் பரலோகத்தில் இருப்பதாகவும் கருதுவார்கள். நிச்சயமாக அவர்களுக்கு பரலோகம் என்பது அழகுமிக்க தரிசனமோ, ஆபிரகாமின் மடியோ அல்லது வேதாகமத்தைத் தழுவிய எதுவுமே அல்ல. மாறாக, தேவாலயத்திற்கு வருவதைத் தவிர்த்து, மீன்பிடித்தல், கோல்ப் விளையாடுதல் மற்றும் பலவகையில் பூமியில் மக்கள் விரும்பியதைச் செய்யும் இடமாக அவர்களுக்கு பரலோகம் உள்ளது. இப்படிச் சிந்திப்பதன் மூலம் விசுவாசத்தையும், பரலோகத்தையும், நம்முடைய இறைவனையும் மலிவாக்குகிறார்கள்.
ஆகவே, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமும், வேதாகமத்தில் வாக்களிக்கப்பட்ட பரலோகமும் கிறிஸ்துவின் கிருபையின் மூலம், கிறிஸ்துவின் வார்த்தை மற்றும் சாக்கிரமந்துகளால் (திருவருட்சாதனங்களால்) பெறப்படுகின்றன என்பதை தெளிவாகப் பிரசங்கியுங்கள். “விசுவாசம் கேள்விப்படுதலினால் வரும், கேள்விப்படுதலோ கிறிஸ்துவைப் பற்றின வார்த்தையினால் வரும்” (ரோமர் 10:17). “நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருந்தால், மெய்யாகவே நீங்கள் என் சீடர்கள்” (யோவான் 8:31) என்றும், “விசுவாசமுடையவனாய் ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” (மாற்கு 16:16) என்றும், “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 3:5) என்றும், “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பருகாவிட்டால், உங்களுக்குள் ஜீவன் இல்லை” (யோவான் 6:53) என்றும் இயேசு கூறுகின்றார். கிறிஸ்து பூரண தெளிவாக இருக்கிறார். ஞானஸ்நானத்தில் நாம் தேவனுடைய பிள்ளைகளாக உருவாக்கப்பட்டு, வேதவசனங்களினாலும் கர்த்தருடைய இராப்போஜனத்தினாலும் போஷிக்கப்பட்டு, விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோம். முதன் முதலின் இவ்வாறே நாம் இயேசுவின் விசுவாசத்துக்குள்ளாக வருகிறோம், அதை அவ்வாறே இறுதிவரைக் கெடாமல் பாதுகாக்கிறோம். மனுமக்கள் விசுவாசத்தினால் இதைப் புரிந்துக்கொள்கிறார்கள். மேலும், இந்த ஞானஸ்நானமும், விசுவாசமும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் முழுமைப் பெறுகின்றன (ரோமர் 6:5).
மேலும் இந்த ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்திட நீங்கள் கேட்பவரின் கவனத்தை ஆலயத்திரையின் மீது திருப்பி, ஆசீர்வாதமாய் மரித்தவர் ஞானஸ்நானத்தில் பெற்ற, எல்லா பாவங்களையும் மறைத்த கிறிஸ்துவின் நீதி என்னும் அங்கியை (Robe), அத்திரை எவ்வாறு அடையாளமாய் குறிப்பிடுகிறது என்றுக் கூறலாம். நீங்கள் பரிசுத்த திரித்துவத்தின் பெயரையும், மரித்தவருடைய ஞானஸ்நானத்தின் போது, அவர் மீது குறியிடப்பட்ட சிலுவையின் அடையாளத்தையும், அவருக்குப் பாராட்டு தெரிவிக்கும் போதும் அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன் இறுதியாகச் செய்யப்படும் ஒப்படைத்தலிலும் நீங்கள் பேசலாம். ஆசீர்வாத பிரிவையடந்தவர் ஞானஸ்நான வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றிலும் கொண்டிருந்த விசுவாசத்தையும், நித்திய வாழ்வுக்கு, உண்மையான விசுவாசத்தில் அவரை வைத்திருந்த கிருபையின் வழிவகைகளை அவர் எவ்வாறு பெற்றார் என்பதையும் நீங்கள் பேசலாம். கேட்பவர்களையும் அதே விசுவாசத்துடன் இருக்க நீங்கள் அழைக்கலாம்.
கேட்டுக்கொண்டிருப்பவர்கள் தேவாலயத்திற்கு வருமாறு அழைப்பதற்கான வாய்ப்பாக ஆடக்க ஆராதனைப் பிரசங்கத்தை நீங்கள் வெளிப்படையாகப் பயன்படுத்தலாம். அவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால், குறிப்பாக நீங்கள் சேவை செய்யும் தேவாலயத்திற்கு அவர்களை அழையுங்கள். அவர்களின் பகுதியில் ஒரு விசுவாசமான திருச்சபையை அவர்கள் கண்டெடுத்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். கிருபையின் வழிவகைகளிலும், கிறிஸ்தவ ஊக்குவித்தலிலும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்திலும், அவர்கள் ஆறுதல் அடைவதற்கு தைரியமாக இருங்கள் (எபிரெயர் 10:25).
கிருபையின் எத்தனங்களின் (வழிவகைகளின்) பலன்களைக் கூற வேண்டும். மனந்திரும்புதல் மற்றும் இயேசுவின் வார்த்தையை விசுவாசித்தல் முக்கியமானது. உங்களால் முடிந்தவரை, கேட்பவர் தவறான கருத்தை உங்கள் வார்த்தைகளில் பொருத்த முடியாத வகையில் விவரங்களைக் கூறுங்கள். இல்லாவிடில், பிதாவினுடைய ஒரே வழியாகிய இயேசுவை தேவையற்றவராக மாற்றி, அவர்கள் யாரிடம் பாசம் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் பரலோகத்திற்குச் செல்கிறார்கள் என்று நினைத்து, கேட்பவர்கள் கிறிஸ்துவிடமிருந்து திசைதிருப்பப்படலாம்..
5.
“அவர்களைப் பற்றின நன்மையானதைப் பேசுங்கள்” (ஆனால் அதிகமாக வேண்டாம்)
பிரசங்கம் கிறிஸ்துவைக்குறித்து மாத்திரமா அல்லது ஆசீர்வாதமாய் மரித்தவர் கிறிஸ்துவில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியதா?
மரித்தவர்களுக்கு இறுதிப்புகழஞ்சலி செலுத்தவேண்டாம். நீங்கள் அளிக்க விரும்பும் கிறிஸ்துவின் ஆறுதலுக்கு அவை முரண்படுகின்றன. நினைவஞ்சலிகளுக்கு ஒரு நேரமும் இடமும் உள்ளது, ஆனால் அடக்க ஆராதனை அவற்றில் உழல்வதற்கான இடம் அல்ல. அவ்வாறு செய்வது, நினைவுகளையும், வாழ்ந்த வாழ்க்கையையும் மாத்திரமே பின்னோக்கிப் பார்ப்பதனால், இன்னும் ஆன்மாவில் வாழ்ந்து, உயிர்த்தெழுதலில் உடலிலும் ஆன்மாவிலும் என்றென்றும் வாழும் நித்திய வாழ்வை முன்னோக்கிப் பாராமல், அடக்க ஆராதனையின் நோக்கத்தை மாற்றுவதாகும். பல “நினைவஞ்சலி விழாக்கள்” இந்த நோக்கத்தில் தவறிவிட்டன.
இருப்பினும், பிரசங்கம் அனைத்து கிறிஸ்தவர்களின் இறுதி யாத்திரைகளிலும் பிரசங்கிக்கப்படும் அளவுக்கு ஒரு பொதுவான பிரசங்கமாக இருக்க வேண்டியதில்லை. சிறிய கத்தேகெஸ்முவில், நாம் நமது அண்டை வீட்டாரைப் பற்றி “நலமானதைப் பேச வேண்டும்” என்பதை அறிவர் மார்டீன் லுத்தர் நமக்கு நினைவூட்டுகிறார். இது அடக்க ஆராதனை அருளுரைகளுக்கான திடமான ஆலோசனையாகும். நாம் புகழஞ்சலி செய்வதில்லை, ஆனாலும் புகழ்ச்சிகளுக்கு மிகையாக எதிர்வினையாற்றி, பிரிந்த ஆசீர்வதிக்கப்பட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கவும் ஒரு தூண்டுதல் உள்ளது. இது ஒரு தவறு. அடக்க ஆராதனைகள் இயேசுவைப் பற்றியது மட்டுமல்ல, இயேசுவைப்பற்றியும், பிரிந்த இந்த கடவுளின் பிள்ளையுடன் அவரது வாழ்க்கையைப்பற்றியதுமாகும்.
எனவே இந்த குறிப்பிட்ட ஒருவர் மூலம் கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுங்கள். பிரிந்து போனவர் பெற்றுக்கொள்ள, வழங்கிட, அனுமதிக்கப்பட்ட நன்மைகளுக்காக கடவுளுக்கு நன்றிசெலுத்த நினைவாயிருங்கள். மரித்த தனிநபருக்கு ஒரு பெயர் உள்ளது, அதில் கடவுள் தனது பெயரை பரிசுத்த ஞானஸ்நானத்தில் இணைத்துள்ளார். எனவே, மரித்தவரின் பெயரைப் புறக்கணிப்பது இந்த அற்புதமான உண்மையைப் புறக்கணிப்பதாகும். இந்த தனிப்பட்ட கிறிஸ்தவர், கிறிஸ்துவின் சரீரத்திற்குள் அவருடைய பிரியமான அங்கங்களில் ஒருவராகக் கொண்டுவரப்பட்டார். யோவான் ஸ்நாகன் கூறியது போல் “அவர் பெருகவேண்டும்; நானோ சிறுக வேண்டும்” (யோவான் 3:30), என்பது உண்மைதான், ஆனால் யோவான் ஸ்நாகனைப்போல பிரிந்த ஆசீர்வதிக்கப்பட்டவர் மறைந்துப்போகிறார் என்று அர்த்தமில்லை.
கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் பலனைக்குறித்து நீங்கள் பேசலாம். பேசவேண்டும். இந்தப் பலன் எவரொருவரையும் இரட்சித்தது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இருக்க கவனமாக இருந்து, தேவாலயத்தில், அவருடைய குடும்பத்தில், நண்பர்களிடையே, மற்றும் பலவற்றில் ஆசீர்வாதமாய்ப் பிரிந்தவர் வழியாய் இறைவன் எவ்வாறு செயலாற்றினார் என்பதை நீங்கள் பிரகடனப்படுத்தலாம். ஆசீர்வாதமாய்ப் மரித்தவரின் பாவ அறிக்கை, கிருபையின் வழிவகைகளை பெற்றுக்கொள்வது, விசுவாசப்பிரமாணங்களை அறிக்கையிடுவது மற்றும் கிறிஸ்துவில் கொண்டிருந்த அவரது விசுவாசத்திலிருந்து பாய்ந்த நற்செயல்கள் இவற்றைப்பற்றி நீங்கள் பேசலாம். “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள்.” ஆம் அவர்கள் தங்கள் உழைப்பினின்று இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடு கூடபோகுமென்று ஆவியானவர் கூறுகிறார்” (வெளிப்படுத்துதல் 14:13), என வேதம் இதைக்குறித்து பேசுகிறது.
சில போதகர்கள் ஒரு சபையில் தங்கள் பதவிக்காலம் முழுவதும் குறிப்பிட்ட உறுப்பினர்களைப் பற்றிய ஒரு குறிப்பேடு வைத்திருப்பார்கள். இது அவர்கள் தங்கள் உறுப்பினர்களுடன் செலவழித்த நேரத்தை மனதில் வைத்திருக்க உதவுகிறதனால், ஒரு உறுப்பினர் இறக்கும் போது, அவர் வாழ்ந்த விசுவாசமான கிறிஸ்தவ வாழ்க்கையின் குறிப்பிட்ட உதாரணங்களை கொடுக்க முடியும். நீங்கள் அவ்வளவு ஏற்பாடாக இல்லாவிட்டாலும் கூட, நோய்ப்படுக்கை அருகில் அவரை சந்தித்தது சாத்தியமானால், அல்லது பிற சமயங்களில் அவரது கிறிஸ்தவ அறிக்கைகள் வெளியானது பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.
இதற்கு சில உதாரணங்கள் உதவும். ஒரு அங்கத்தினர் தனது கடைசி நாட்களில் இருந்ததால் பேசவோ சாப்பிடவோ முடியவில்லை. ஆனால் அவர் தன் தலையையும் கைகளையும் அசைக்க முடிந்தது. நான் ஒரு தியானத்தை முடிக்கும் தருவாயில், அவர் தன் கையை வாய் நோக்கி அசைத்தார். அவருடைய மனைவி, “அவர் திருவிருந்தை வேண்டுகிறார்” என்றார்கள். பின்பு அவர் சம்மதமாகத் தலையசைத்தார். அவரது இறுதி யாத்திரைக்கான எனது பிரசங்கத்தில் இதைக் குறிப்பிட்டேன். மற்றொரு உதாரணம்: அல்சைமர்(Alzheimer’s) என்னும் ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உறுப்பினர் என்னுடன் பாடல்களையும் அராதனை முறைமைகளையும் பாடுவார்கள். அவர்களுடைய இறுதி யாத்திரை பிரசங்கத்தில் இதை நான் குறிப்பிட்டேன் (மட்டுமல்ல, அல்சைமர் நோயினால் பாதிக்கப் பட்ட அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளவர்களுக்கும் இது எதிர்காலத்தில் பொருந்தும்). மேலும் ஒரு உதாரணத்தைக் குறிப்பிவது நன்கு பொருந்தும். தற்போதைய உறுப்பினரின் மனைவி தனது கடைசி நாட்களில் இருந்ததினால், நான் அவர்களை அடிக்கடி சந்திக்கச் சென்றபோது, விசுவாச அறிக்கையின் மூன்றாம் பிரிவு (பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறேன். பொதுவான பரிசுத்த கிறிஸ்தவ சபையும், பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும், பாவமன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன் என்பது) அவரை மிகவும் கவர்ந்தது. நாம் அனைவரும் பரிசுத்தவான்களுடைய ஐக்கியத்தில் (திருவிருந்தில்) பங்குகொள்ளும்போது, அவருடைய மனைவி விசுவாசத்தில் பாவ மன்னிப்பைப் பெறுவது எவ்வாறு ஆறுதலளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஏனெனில், அது “ சரீர உயிர்த்தெழுதலுக்கும், நித்திய ஜீவனுக்கும்” வழிவகுக்கிறது. இந்த அங்கத்தினரின் இறுதி யாத்திரையில் பிரசங்கிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தால், இந்த விசுவாசமான வாக்குமூலத்தை எனது பிரசங்கத்தில் சேர்ப்பேன். இந்த வகையான தருணங்கள் கருத்துக்களை நிரூபிக்கும் ரத்தினங்கள்: இந்த அன்பான கிறிஸ்தவர்களுக்காக, அவர்களுக்காகவும், அவர்கள் மூலமாகவும் கிறிஸ்துவின் பணியை மேன்மைப்படுத்தும்போது நீங்கள் அவர்களைப் பற்றி நலமானதைப் பேசலாம். சுவிசேஷத்தைக் கேட்கவும், தங்கள் பாவமன்னிப்புக்காகவும், வாழ்வு மற்றும் இரட்சிப்புக்காகவும் இறைவனின் உடலையும் இரத்தத்தையும் பெறுவதற்கான அவர்களின் ஆர்வத்தில் அவர்களின் உண்மைத்தன்மை இறுதிவரை மிகவும் அதிகமாய் வெளிப்பட்டது.
அவர்களைப் பற்றி அனைத்தையும் கூறாமல், அவர்களைப் பற்றின நலமானதைப் பேசுங்கள். உங்களால் முடிந்தவரை, கேட்பவர் தவறான கருத்தைப் பொருத்த முடியாத வகையில் விஷயங்களைக் கூறுங்கள். நீங்கள் நிச்சயமாக கிறிஸ்துவிடமிருந்து திசைதிருப்ப விரும்பவில்லை, ஆனால் கிறிஸ்து சில பொதுவான அர்த்தத்தில் வரவில்லை. நீங்கள் யாருடைய அடக்க ஆராதனையில் பிரசங்கிக்கிறீர்களோ அவர் உட்பட ஒவ்வொரு தனிநபருக்காக அவர் வந்தார்.
6.
அவர்கள் அழட்டும், ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை கொடுங்கள்
நாம் மகிழ்ச்சியாய் மட்டுமே இருக்க வேண்டுமா அல்லது இயேசுவைப் போல மரணத்தைக் கண்டு அழுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமா?
ஒரு சபை உறுப்பினர் மரித்துவிட்டார், அவருடைய மகன் அதைக் குறித்து மகிழ்ச்சியடைவதாக என்னிடம் கூறினார். அப்பெண்மணி பரலோகத்தில் இருப்பதாக அவர் கூறியதால், அவர் ஏன் சோகமாக இருக்க வேண்டும்? அழுகை அவிசுவாசத்தின் அடையாளமாக இருந்திருக்கும் என அவர் நம்பினார் போலும். நான் மூலமுதலாய் உணர்ந்ததை விட இது மிகவும் பொதுவான ஒரு கருத்து. நான் பணியாற்றும் சபையின் ஒரு முன்னாள் உறுப்பினர், நான் எத்தனை முறை அவரைத் திருத்தினாலும், ‘அது அவர்களின் அவிசுவாசத்தின் அடையாளம்’ என இறுதிச் சடங்கில் அழுபவர்களைக் குறித்து கர்வத்துடன் தீர்ப்பளிப்பார். மரணப் படுக்கையில் இருந்த இன்னும் சிலர் தங்கள் குடும்பத்தினரிடம், “நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கப் போகிறேன், மகிழ்ச்சியாக இருங்கள்” என்று சொன்னதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலருக்கு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லும்போது நல்ல எண்ணம் இருந்தாலும், வேதம் நமக்குக் கற்பிக்கும் வழி இது அல்ல. யாருடைய இதயத்திலும் முற்றிலுமான மனக்கசப்பையளிக்க நாம் விரும்பவில்லை. எனினும், ஒருவர் விசுவாசத்தோடு அழலாம்.
இயேசுவை முதன்மையான உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். “இயேசு அழுதார்.” (யோவான் 11:35). அவர் லாசருவை நேசித்தார் என்பதை இது காட்டுகிறது. “அவர் அவரை எப்படி நேசித்தார் என்று பாருங்கள்!” என்றார்கள் (யோவான் 11:36). லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்பப் போகின்றார் என்பதை அறிந்தும் இயேசு அழுதார். மரணம்தான் நமக்கு எதிரி என்பதை எல்லோரையும் விட அதிகமாக அறிந்திருந்ததால் அவர் அழுதார். நாம் ஒருக்காலும் மரணத்தைப் பெற்றிருக்கக்கூடாது என்பதற்காக அழுதார். மரணம் ஒரு தற்காலிக (உலக வாழ்வின்) வருங்கால முடிவும் அவ்வாழ்வில் நீங்கள் நேசிப்பவர்களிடமிருந்து பிரிந்து செல்வதுமாயிருக்கிறது. துயரம் அன்பை மெய்ப்பிக்கிறது. அதனால்தான், ஒரு குறுகியக்கால வருகைக்குப்பிறகு, அவளுடைய பெற்றோர் தங்கள் வீட்டிற்குத் திரும்ப தொலைதூரம் செல்லும்போது ஒரு மனைவி அழுகைக்குள்ளாகிறாள். மேலும், விசுவாசமுள்ள கிறிஸ்தவ துக்கமடைதல் ஒரு நல்ல காரியம், ஏனென்றால் இயேசு அதை செய்தார். இயேசு “துக்கம் நிறைந்தவரும், துக்கத்தை அறிந்தவருமாய்” (ஏசாயா 53:3) இருந்து, செம்மையான காரணங்களுக்காக அவர் அழுதார்.
எனவே உங்கள் சபைஉறுப்பினர்கள் அழட்டும். ஏனென்றால் அழிக்கப்பட வேண்டிய கடைசி எதிரி மரணம் என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் (1 கொரிந்தியர் 15:26), அது அவர்களின் புனிதமாக்கப்பட்ட இதயத்திற்கு துயரத்தை இன்னுமாய் கொண்டுவருவதால், அவர்கள் அழட்டும். விசுவாசத்திலுள்ள நம்முடைய அன்பிற்குறியவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள் என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் இயேசுவைப் போல மரணத்திற்காக இன்னும் அழுவதற்கு ஆளாகிறோம்.
நம்முடைய கண்ணீரில், மகிழ்ச்சியும் கலந்திருக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையையும் கொடுங்கள்:
சகோதரர்களே, நித்திரையடைகிறவர்கள் விஷயத்தில் நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனமில்லை; நம்பிக்கையற்ற மற்றவர்களைப்போல் நீங்கள் துக்கிக்க வேண்டாம். இயேசுவானவர் மரித்து எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே, அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் கடவுள் அவரோடுக் கூட கொண்டு வருவார். (1 தெச. 4:13-14)
மரணத்தின் போது கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் அளிக்க லுத்தர் இந்த வசனங்களை மற்றவர்களை விட அதிகமாக பயன்படுத்தினார். நமக்கு துக்கம் இருக்கும்போது, அதில் இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் தரும் நம்பிக்கையுடன் கலந்திருக்கிறது என்று அவர் கற்பித்தார். துக்கப்படுபவர்களுக்கு அவர்களின் அன்புக்குரியவர் இனி கிறிஸ்துவுடன் இருக்கிறார் மற்றும் உயிர்த்தெழுந்த தங்களது இறைவனின் வாழ்க்கைப்பெற்றிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிவிக்கலாம். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, மரணம் ஒரு எதிரி மட்டுமல்ல, தோற்கடிக்கப்பட்ட எதிரியும் கூட. கிறிஸ்துவிடம் “மரணத்தின் திறவுகோல்” இருப்பதால், அது இப்போது தங்கள் சொந்த உயிர்த்தெழுதலுக்கான நம்பிக்கையின் ஆதாரமாக உள்ளது (வெளிப்படுத்துதல் 1:18). அதனால்தான் நமது பாடல்கள் இப்படிப்பட்ட அழகான உண்மைகளைப் பறைசாற்றுகின்றன:
இயேசு வாழ்கிறார்!
இப்போது மரணம், ஆனால் அது அழியா வாழ்வின் நுழைவாயில்:
நான் அதன் இருண்ட முகப்பைக் கடக்கும்போது அது என் நடுங்கும் சுவாசத்தை அமைதிப்படுத்தும்.
ஒவ்வொரு உணர்வும் செயலற்று போகும்போது, விசுவாசம்: இயேசுவே என் பற்றுறுதி என்றழும்!!
துக்கத்தில் இருப்பவர்கள் தவிர்க்க முடியாமல் வேறு வழியில் தங்கள் துக்கத்திலிருந்து விடுபட முயற்சிப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு இதைவிட மோசமாக இருக்கிறது என்று சொல்வார்கள். கண்ணீரை இன்ப நேரங்களில் மூழ்கடிக்க முயற்சிப்பார்கள். அவர்கள் பரபரப்பாக ஓய்வில்லாமல் இருப்பதன் மூலமும், கடுமையாய் உழைப்பதன் மூலமும் அதைத் தவிர்க்க முயற்சிப்பார்கள். ஆனால் இவை துயரத்தை போக்காது. கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை மாத்திரமே துக்கத்தின் உண்மையான நிவாரணம். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மாத்திரமே கொண்டுவரும் என்கிற அந்த நிச்சயமான நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுங்கள், அதனால் அவர்கள் நம்பிக்கை உறுதியாக நிலைநிற்க ஏதுவாகும்.
எனவே அவர்கள் அழட்டும், ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை கொடுங்கள். உங்களால் முடிந்தவரை, கேட்பவர் தவறான கருத்தை உங்கள் வார்த்தைகளில் பொருத்த முடியாத வகையில் விஷயங்களைச் சொல்லுங்கள். இல்லையெனில், உங்கள் பிரசங்கத்தைக் கேட்பவர்கள் கிறிஸ்துவிடமிருந்து திசைதிருப்பப்படலாம், ஏனென்றால் அவர்கள் மரணத்தை துக்கத்திற்குரிய ஒரு எதிரியாகக் காணாததினால், கிறிஸ்துவின் சொந்த உயிர்த்தெழுதலின் முதற்பலன்களிலிருந்து உருவாகும் சரீர உயிர்த்தெழுதலுக்கு அவர்கள் ஏங்குவதில்லை (1 கொரிந்தியர் 15:20).
7.
சரீர உயிர்த்தெழுதலின் இலக்கு
“பரலோகம் மாத்திரம் போதுமானதா, அல்லது நீங்கள் “இறந்தவர்களின் உயிர்த்தெழுதலையும்” எதிர்நோக்குகிறீர்களா?
பரலோகத்தை பிரசங்கியுங்கள். பிரிந்துப்போன விசுவாசியின் ஆன்மா கிறிஸ்துவுடன் இருக்கிறது. பரிசுத்த பவுல், தன் தேகத்தைவிட்டுக் குடிபெயர்ந்து (விலகி) பரலோகத்தில் ஆண்டவரிடம் குடிபுகுவதை (சேர்வதை) விரும்புவதாக” எழுதினார். (2 கொரிந்தியர் 5:8).
“எனக்கு பிழைத்திருப்பது (வாழ்வது) கிறிஸ்து, சாவது ஆதாயம்…இருபக்கங்களிலும் நான் நெருக்கப்படுகின்றேன்; தேகத்தை விட்டுப் பிரிந்து கிறிஸ்துவோடிருக்க எனக்கு ஆசையுண்டு, அது மிகவும் அதிக நலமாயிருக்கும். அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது (நிலைத்திருப்பது) உங்கள் நிமித்தம் அதிக அவசியம் (பிலிப்பியர் 1:21, 23-24), என மீண்டும் எழுதினார்.
ஐசுவரியவான் மற்றும் லாசருவின் உவமையில், தேவதூதர்கள் லாசருவை ஆபிரகாமின் மடியிலே கொண்டுபோய் விட்ட விவரத்தையும் இயேசு கூறினார் (லூக்கா 16:22). எனவே, கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு மரித்தவர்களுக்கு, பரலோகம் ஆன்மாவின் இடைப்பட்ட நிலை என்று எல்லா வழிகளிலும் பிரகடனப்படுத்துங்கள். இறுதியாத்திரையில் ரோமன் கத்தோலிக்கர்கள் கலந்துக்கொள்வார்களாகில், கடவுளின் கிருபையிலும் நட்பிலும் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறுதியாக துன்பமில்லாத பரலோகத்தை அடையும் முன் தேவையான புனிதத்தை அல்லது தூய்மைப்படுத்துதலையும் அடைய சுத்திகரிப்பு (Purgatory) என்னும் இடப்பட்ட நிலை உள்ளது, என்று அனுமானிக்கூடும். இவ்வாறு ஒத்திசைவாய் சிந்திக்கின்ற வழியை நாம் கண்டிப்பதோடு, நம் ஆண்டவர் இயேசுவை நம்பி இறந்தவர்களுக்கு உடனடியாய்க் கிடைக்கும் பரலோக சந்தோஷத்தை வலியுறுத்த வேண்டும்.
மேலும், பல மக்கள், உயிர்த்தெழுதலுக்கு முந்தைய சொர்க்கம் நம்முடைய நிரந்தர வீடு என்று தவறாக நினைக்கிறார்கள். மரணத்திற்குப் பிறகு வானத்தில் ஆவிகளாக மாறுவதை நாம் எதிர்நோக்க வேண்டும் என் அவர்கள் நினைக்கிறார்கள். நாம் இறக்கும் போது தேவதூதர்களாக மாறுகிறோம் என்கிற பிரபலமான கட்டுக்கதைக்கு இது உதவுகிறது, ஆனால் இயேசு தேவதூதர்களைப் “போல” என்று கூறியதே உண்மையே தவிர்த்து தேவதூதர்களாக மாறுவது அல்ல (மத்தேயு 22:30). பலர் சொர்க்கம் இறுதியானது எனவும் நாம் என்றென்றும் உடலற்ற ஆவியாகிவிடுகிறோம் எனவும் நினைக்கிறார்கள். ஒரு இறையியல் கல்லூரி வகுப்புத் தோழன் வகுப்பில் ஒருமுறை உடல் வெறும் கூடு என்று பிரசங்கித்தது நினைவிருக்கிறது. அத்தகைய பறைசாற்றுதலில், (கிறிஸ்தவத்திற்கு எதிரான) “ஞானவாதம்” உள்ளடங்கியிருந்ததை சுட்டிக்காட்ட மற்றொரு வகுப்புத் தோழனைத் தூண்டியது.
எப்படியாகிலும், சொர்க்கம் இறுதியானது அல்ல. மரணம் என்பது உங்கள் உடல் ரீதியான வாழ்வின் முடிவல்ல. அதன் தொடர்ச்சிதான் மறுமை. கிறிஸ்து மரித்து மீண்டும் உடலோடு உயிர்த்தெழுந்தார். தலையாகிய அவர் வரும்போது அவர் அங்கங்களாகிய அனைவரும் அவரோடுக்கூட வருகிறார்கள்: “ஆண்டவரை எழுப்பின கடவுள் தமது வல்லமையினால் நம்மையும் எழுப்புவார்” (1 கொரிந்தியர் 6:14). “ஒழிக்கப்படும் கடைசி சத்துரு மரணம்” (1 கொரிந்தியர் 15:26), என புனித பவுல் எழுதினார். “பரிசுத்தமும் உண்மையுமுள்ள ஆண்டவரே, எதுவரைக்கும் நியாயம் தீர்க்காமலும், பூமியில் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தப் பழியை வாங்காமலும் இருப்பீர்?” (வெளிப்படுத்துதல் 6:10) என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டதாக புனித யோவான் கடவுளின் வார்த்தைக்காகவும், தாங்கள் பற்றிக்கொண்டிருந்த சாட்சியத்தின் (விசுவாசத்தின்) நிமித்தமாகவும் கொல்லப்பட்டவர்களின் ஆத்துமாக்களைப் பற்றி எழுதினார். புனிதர் பவுல், கல்லறை அருகில் நீங்கள் பேசும்போது கூறும் ஒப்படைத்தலின் வசனங்களை உள்ளடக்கிய வார்த்தைகளையும் கீழ்க்காணும் விதமாக எழுதினார்:
நம்முடைய ஜனசமூக சிலாக்கியம் (குடியுரிமை) பரலோகத்தில் இருக்கிறது, அங்கேயிருந்து ஆண்டவராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்படுத்திக்கொள்ள தக்க தமது வல்லமையான செயலின்படியே, நமது தாழ்வான சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்துக்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். (பிலிப்பியர் 3:20-21)
ஆகவே, பரலோகம் நிச்சயமாகப் பேசப்பட வேண்டிய ஒன்று, ஏனெனில், நம்முடைய குடியுரிமை அங்கே இருக்கிறதானாலும், நம்முடைய ஆண்டவராகிய இயேசு, இந்த அழிவுக்கேதுவான சரீரங்களை மாற்றி, தம்முடைய பரிசுத்தவான்களுக்கு அழிவின்மையை தரிக்கும் (உடுத்தும்) நாளுக்காகவும் காத்திருக்கிறோம் (1 கொரிந்தியர் 15:53-56 ஒப்பிடுக). “நம்மை மீட்பவர் உயிரோடிருக்கிறார் என்றும், கடைசி நாளில் அவர் இத்தூளின்மேல் (பூமியின்மேல்) எழுந்தருளுவார். நம் தோல் முதலானவை அழுகிப்போனாலும், நம் மாம்சத்தில் இருந்து கடவுளைக் காண்போம்” (யோபு 19:25-27), என யோபுவைப் போலவே நாம் அறிந்திருக்கிறோம். “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்” (ஏசாயா 25:8) என்றும் அறிந்திருக்கிறோம்.
உங்கள் பிரசங்கத்தில் கிருபையின் வழிவகைகளை இணைக்கவும் இந்த சத்தியம் ஒரு சிறந்த இடமாகும். கிறிஸ்துவின் மரணதிலும் உயிர்த்தெழுதலிலும் நாம் ஞானஸ்நானம் பெற்றுள்ளோம் என்று புனித பவுல் எழுதினார். மேலும், “நாம் அவரைப் போன்ற ஒரு மரணத்தின் சாயலில் அவருடன் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் நாம் நிச்சயமாக அவருடன் இணைக்கப்பட்டிருப்போம்” (ரோமர் 6:5), என அவர் முடிக்கிறார். “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” (யோவான் 6:54) என்றும் இயேசு வாக்குக் கொடுத்தார். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னில் விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரிப்பதேயில்லை” (யோவான் 11:25-26), என வாக்களித்தார். அனைவரும் உயிர்த்தெழுப்பப்பட்டாலும், இயேசுவை நம்புகிறவர்கள் மாத்திரமே நித்திய ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை இந்த கடைசி வசனங்கள் நினைப்பூட்டுகிறது. ஆசீர்வாதமான இந்த சத்தியத்தை பிரசங்கிக்கும்போது இது மனதில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய கருத்து (காண்க. யோவான் 5:28-29).
“அமைதியில் ஓய்வெடுங்கள்” (Rest in Peace) என்று நாம் கூறுவதும், உயிர்த்தெழுதலில் திருச்சபை கொண்டுள்ள விசுவாசம். யவீருவின் மகள் “நித்திரையாயிருக்கிறாள்” (மத்தேயு 9:24), என்று அவளை எழுப்புவதற்கு முன் அவர் கூறுவது போல, “நம் சினேகிதன் லாசரு நித்திரை செய்கிறான், நான் அவனை எழுப்பும்படி போகிறேன்” (யோவான் 11:11), என இயேசு தம் சீடர்களிடம் கூறுகிறார். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் அவர்களின் ஆன்மாக்களில் உயிரோடிருந்து தங்கள் உடலில் உறங்கிக்கொண்டிருந்து உயிர்த்தெழுதலுக்கு காத்திருக்கின்றார்கள். (ஒப்பிடுக. தானியேல் 12:2). அறிக்கையிடுவதற்கு இது ஒரு ஆறுதலான சத்தியம், குறிப்பாக தகனம் (எரித்தல்) செய்யும் இந்த காலகட்டத்தில், நான் என் குழந்தைகளை படுக்கையில் படுக்க வைத்து, நல்லிரவின் தூக்கம் (Good Night’s Sleep) கூறி வாழ்த்தியப்பின் நான் அவர்களை தீயிலிடுவதில்லை! அவர்கள் உறங்க செல்கிறார்கள். அவர்கள் மீண்டும் எழுந்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்! அதே வழியில், கர்த்தர் தம்மில் “நித்திரையிலிருப்பவர்களின்” உடல்களை எழுப்புவார் (1 தெசலோனிக்கேயர்4:13), என நாம் எதிர்பார்க்கிறோம். எனவே கீழ்க்காணும் ஒரு ஞானப்பாடலில் இவ்வாறு நாம் பாடுகிறோம்:
“என் கல்லறை என் படுக்கையைவிடச் சிறியது
எனும் அச்சத்தில் நான் வாழ கற்றுக்கொடுங்கள்.
பிரமிப்பு நிறைந்த நாளில் மகிமையுடன் எழுந்தருளுவேன் என்பதனால் நான் இறக்கக் கற்றுக் கொடுங்கள்.”
பரலோகம் மற்றும் உயிர்த்தெழுதல் இரண்டையும் தெளிவாய் வெளிப்படுத்துங்கள். பிரசங்கத்தை கேட்பவர் தவறான கருத்தை உங்கள் வார்த்தைகளில் பொருத்த முடியாத வகையில் உங்களால் கூடுமானவரை சிறப்பாக விஷயங்களைக் கூறுங்கள். இல்லையெனில், நீங்கள் பிரசங்கிப்பதை கேட்போர் கிறிஸ்துவின் முழுமையான நித்திய வாழ்வின் வாக்குறுதியிலிருந்து திசைதிருப்பப்படலாம், ஏனெனில் அவர்கள் “ மரித்தவர்களின் உயிர்த்தெழுதலையும் வரப்போகும் உலக வாழ்க்கையும்” எதிர்பார்க்க மாட்டார்கள். ஒரு ஞானப்பாடலின் இறுதி சரணம் இவ்வாறு இரண்டு உண்மைகளையும் வெளிப்படுத்த உங்களுக்கு உதவுகிறது:
ஆண்டவரே, இறுதியாக உமது தூதர்கள் வரட்டும்,
ஆபிரகாமின் மார்பில் என்னைத் தாங்கி வீடு சேர,
நான் பயப்படாமல் சாக; நீர் மீண்டும் தோன்றும் வரை
குறுகிய அறையில் அமைதியான உறக்கத்தில் என் உடல் பாதுகாப்பாக இருக்கட்டும்.
மரணத்திலிருந்து என்னை எழுப்பியப்பின் இந்த என் கண்கள் மகிமையான உம் முகத்தோற்றத்தை மகிழ்ச்சியுடன் காணட்டும்.
கடவுளின் மகனே, என் இரட்சகரும், என் அருளூற்றுமானவரே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே,
என் ஜெபத்தை கவனியும், என் ஜெபத்தை கவனியும்,
நான் உம்மை முடிவில்லாமல் துதிப்பேன்.
8.
கிறிஸ்துவில் மரித்தவர்களின் இறுதி அறிக்கை
அடக்க ஆராதனை உயிரோடிருப்பவர்களுக்கு மாத்திரமா? அல்லது, இறந்தவர்களுக்கும் கூடவா?
அடக்க ஆராதனை என்பது உயிருள்ளவர்க்கு மாத்திரமே இறந்தவர்களுக்கு அல்ல என்று சொல்வதை நீங்கள் கேள்விப்படுவீர்கள். தங்கள் அன்புக்குரியவர் பரலோகத்தில் இருக்கிறார் என்று இது பக்திக்குரியதாகத் தோன்றுவதால், உயிரோடிருப்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பது சிறப்பானது என அர்த்தப்படுத்துவதாக கருதுகிறார்கள். எவ்வாறாயினும், அந்த விளக்கத்திலே மிக வஞ்சனையான ஒன்று நடந்து வருகிறது. சில சமயங்களில், இறுதி யாத்திரையில் கிறிஸ்து மீதும் ஆசீர்வாதமாய் கடந்து சென்றவர்கள் மீதும் கவனம் செலுத்தாமல் உயிரோடு இருக்கும் தங்கள் மீது மாத்திரமே இருக்கவேண்டும் என யதார்த்தமாக கூறுகிறார்கள். இறுதி யாத்திரையில் எது முக்கியமானது என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் விரும்பும் விஷயங்களுக்கு இறுதிச் சடங்கை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகிறார்கள்: அவர்களுக்கு விருப்பமான இசை, அவர்களுக்குப் பிடித்த கீர்த்தனைகள் அல்லது ஞானப்பாடல்கள் அல்லது புகழஞ்சலிகளில் அவர்கள் அநேகமாய் எப்போதும் வெளிப்படுத்தும் அற்பமான கிறிஸ்து-இல்லாத புழுதி, பெரும்பாலும் உணர்ச்சிவசப்படும் மனவெழுச்சி அல்லது எப்போதாகிலும் மிக வெளிப்படையாக தோன்றும் மத எதிர்ப்புக்கள் போன்றவைகளால், பக்தி நோக்கம் மிக அரிதாகவே உள்ளது!
அடக்க ஆராதனை என்பது உயிரோடிருப்பவர்களுக்கானது என்ற எண்ணத்தில் போதகர்களும் சிக்கிக்கொள்ளலாம். அவர்களின் தேவாலயத்துடனோ அல்லது வேறு எந்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கோ எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்காக இறுதி யாத்திரையில் பிரசங்கிப்பதை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் அடிக்கடி இதைச் செய்கிறார்கள். “இன்னும் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு,” “அதை நான் எப்படி விட்டு விடுவது?” “என்ன இருந்தாலும் அடக்க ஆராதனை உயிருடன் இருப்பவர்களுக்கானது, இறந்தவர்களுக்கல்ல” என அவர்கள் கூறலாம். எனவே அவர்கள், கிறிஸ்துவின் கிருபை வழிவகைகளைப் பெற்றுக்கொள்ளாத இறந்தவரின் வாழ்வு பற்றி பிரசங்கித்து, இருப்பவர்களுக்கு பொதுவான சுவிசேஷத்தை சாதாரணமாய் அறிவிப்பார்கள். இதற்காக அவர்கள் கெளரவ ஊதியத்தையும், மனிதரின் பாராட்டுக்களையும் திரட்டுகிறார்கள் என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். அனைத்தும் ‘அடக்க ஆராதனை இருப்பவர்களுக்கு, இறந்தவர்களுக்கல்ல’ என்பதின் பேரில் நடக்கின்றன.
அடக்க ஆராதனை என்பது உயிருள்ளவர்களுக்கு மாத்திரமல்ல. இது தாங்கள் விட்டுச் சென்றவர்களுக்கு மெய் விசுவாசத்தை அறிவிக்க கிறிஸ்துவில் மரித்தவர்களுக்கும் உரியது. இது ஆசீர்வாதமாய் கடந்து சென்றவர்கள் இந்த பூமியில் தான் ஒரு கிறிஸ்தவனாய் வாழ்ந்து உயிர்த்தெழுதல்வரை பரலோகத்திலும் கிறிஸ்தவனாய் இருக்கிறேன் என இறுதி அறிக்கையிடும் இறந்தவர்களுக்குறியது. இயேசுவின் சிலுவையையும் உயிர்த்தெழுதலையும் எப்படிப் பற்றிக்கொண்டுள்ளார் என்பதை அறிக்கையிட இவ்வடக்க ஆராதனை அவருக்குறியது. கிருபையின் எத்தனங்களில் பரிசுத்த ஆவியானவர் அவரை உருவாக்கி வளர்த்த கிறிஸ்துவின் விசுவாசம் அது. இதன் காரணமாக அவர் தற்போது சொர்க்கத்தில் இருந்து, சரீர உயிர்த்தெழுதலுக்கும், புதிய படைப்பில் நித்திய ஜீவன்பெற்றுக்கொள்ளவும் வாஞ்சிக்கிறார். தனது விசுவாசத்தை அறிக்கை செய்து, இவ்வுலக வாழ்வில் பல்வேறு வழிகளில் அவ்விசுவாசத்தில் வாழ்ந்தார். அடக்க ஆராதனை என்பது கிறிஸ்துவில் மரித்தவரின் ஆத்துமா பரலோகத்தில் தன் இரட்சகருடன் வாழ்கிறது என்கிற அவர் வாக்குமூலத்தை உயிரோடிருந்து கேட்ப்பவர்களுக்கானது. உயிரோடிருப்பவர்களுக்காக அடக்க ஆராதனை நடைபெறவில்லை. இறந்தவர்களுக்காக இது நடைபெறுகிறது. எனவே, நீங்கள் இறந்தவர் நம்பியதையும், அங்கு இருப்பவர்கள் அதை நம்ப அவர் வேண்டுவதையும் பிரசங்கிக்க வேண்டும்.
தன் பேரக்குழந்தைகள் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டி ஜெபித்துக்கொண்டிருப்பதாக தான் இறப்பதற்கு முன் என்னிடம் கூறின ஒரு பாட்டி இதற்கு ஒரு உதாரணம். இதை பிரசங்கத்தில் குறிப்பிட்டது அவர்களின் பேரப்பிள்ளைகளிடம் அந்த பாட்டிக்கு பதிலாக நான் நேரில் பேசும் ஒரு விதமாக இருந்தது. கிறிஸ்துவில் மரித்தவர் தனது உடலை எவ்வாறு பராமரிப்பாய் நடத்த விரும்பினார் எனவும், அவருடைய ஞானஸ்நானம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு தேவைப்படும் கண்ணியத்தை எவ்வாறு அளிக்க வேண்டும் என்று விரும்பினார் எனவும் குறிப்பிடுவது மற்றொரு உதாரணம். கிறிஸ்துவில் இறந்தவர்களால் அவர்களின் அடக்க ஆராதனையில் நிச்சயம் தன் விசுவாசத்தை அறிக்கை செய்துக்கொண்டிருக்க முடியும்.
எனவே, உங்களால் முடிந்தவரை, கேட்பவர் உங்கள் வார்த்தைகளில் தவறான கருத்தை பொருத்த முடியாத வகையில் விஷயங்களைக் கூறுங்கள். இறுதிச் சடங்கில் உயிரோடிருப்பவர்களின் விருப்பங்களில் கவனம் செலுத்தும் அடக்க ஆராதனையினால் கிறிஸ்துவுக்குள் மரித்தவரின் விசுவாச அறிக்கையில் இருந்து உங்கள் பிரசங்கத்தைக் கேட்பவர்கள் திசைதிருப்பப்படலாம்.
பிரசங்கம் 1.
“இயேசு ஷெர்லியை அறிவார்”
(யோவான் 10:27-30)
ஷெர்லியின் அன்பான குடும்பத்தாரே, அன்பான நண்பர்களே, கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே:
நமது பிதாவாகிய கடவுளிடமிருந்தும், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு கிருபை, இரக்கம் மற்றும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.
உங்கள் சொந்த முறையில் ஷெர்லியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆனால் இங்கே இந்த ஆராதனையில், ஷெர்லியை உங்களுக்கு எப்படித் தெரியும் என்பதில் நாம் அதிகம் கவனம் செலுத்தப் போவதில்லை. என்னைத் தவறாகப் புரிந்துக்கொள்ள வேண்டாம். அதற்கு ஒரு நேரமும் இடமும் இருக்கிறது. அவர்கள் வீட்டிலும், பண்ணையிலும் கடுமையாக உழைத்ததையும், தோட்டக்கலை ஈடுபாட்டில் மகிழ்ந்திருந்ததையும், தன் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஒவ்வொருவர் மீதும் எவ்வாறு அன்பான கவனம் செலுத்தினார்கள் என்பதை நினைவுகூற ஒரு நேரம் உள்ளது. நான் சமீபத்தில் கேட்ட சம்பவமான ஒரு ஈஸ்டர் தினத்தன்று சிறு பிள்ளைகளுக்கு தின்பண்டங்களும், தன் அன்பான மூன்று பிள்ளைகளுக்கு மூன்று சிறிய ஆட்டுக்குட்டிகளை வழங்கிய மகிழ்வான தருணங்களை குடும்பமாக, நண்பர்களாக நீங்கள் நினைவுபடுத்திக்கொண்டீர்கள், தொடர்ந்தும் செய்வீர்கள். நினைவுபடுத்திக்கொள்ளத் தருணமும் இடமுமிருக்கிறது. நல்லது. அவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவு செலுத்திய, பெற்றுக்கொண்ட அன்பிற்காக இறைவனுக்கு நன்றி. ஆனால் இப்போது, இந்த ஆராதனையில், நாம் இருப்பது நீங்கள் ஷெர்லியை அறிந்த வழிகளைப்பற்றி பேச அல்ல, இயேசு அவர்களைப்பற்றி அறிந்த அனைத்து வழிகளைப்பற்றி பேசுவதற்காக.“என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கின்றன, நான் அவைகளை அறிந்திருக்கிறேன்” என இயேசுக் கூறுகின்றார். எனவே, இயேசுவுக்கு ஷெர்லி அவர்களைத் தெரியும். ஆனால் எப்படி? ஷெர்லியை ஒரு தாயாக, பெற்றோரின் தாயாக, ஒரு தோழியாக, அல்லது, என்னைப் பொறுத்தமட்டில், ஒரு திருச்சபை அங்கத்தினராக அறிவது ஒரு விதம். ஆனால், இயேசுவானவர், அம்மையாரை அறிந்திருப்பது முற்றிலும் மாறுபட்டதும், அற்புதமானதுமான விஷயம். எனவே, ஆசீர்வதிக்கப்பட்ட அந்த உண்மைநிலை மீது நாம் கவனம் செலுத்துவோம். ஷெர்லியை நம் அனைவரையும் விட இயேசு எப்படி நன்றாக அறிந்திருக்கிறார் என்பதில் நம் கவனம் இருக்கட்டும்.
ஷெர்லி பிறப்பதற்கு முன்பாகவே, அவர்களை இயேசு அறிந்திருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். காரணம் அவர் நித்திய கடவுளின் குமாரன் மாத்திரமல்ல, ஒரு காரியம் நடக்கும் முன்பே அனைத்தையும் அறிகின்றவர். மாத்திரமல்ல, காலம் தொடங்கும் முன்பே, இயேசு தம் ஆடுகளில் ஒருவராகத் அவர்களைத் தெரிந்துக்கொண்டார். இதை நாம் நித்திய தேர்வு என அழைக்கிறோம். கடவுள் நமக்கு வேதத்தில் வெளிப்படுத்திய ஆறுதலான மர்மம் இது. இயேசு ஷெர்லியைத் தேர்ந்தெடுத்தார்; படைப்பிற்கு முன்பே அம்மையாரை அவர் அறிந்திருந்தார், எப்படியெனில், அவர் அவர்களை தன் சொந்த ஆட்டுக்குட்டியாக தேர்வு செய்தார். அவர்களை அவர் கையிலிருந்து யாரொருவரும் பறிக்க முடியாது என்பது இதன் பொருள். அவர் தந்தையின் கையிலிருந்து யாரொருவரும் அவர்களை பறிக்க முடியாது. அவரும், அவரது தந்தையும் சாராம்சத்திலும், தெய்வ சித்தத்திலும் ஒருவராக இருப்பதால், கடவுளின் சித்தம் ஷெர்லியை நித்திய வாழ்வுக்கு இரட்சிப்பதாக இருந்தது.
இது ஷெர்லியை இயேசு அறிந்த மற்றொரு வழிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஷெர்லியின் பாவங்கள் அவருக்கு தெரியும். மீண்டுமாய்க் கூறின், அவர் அனைத்தும் அறிந்த கடவுளின் நித்திய குமாரன் என்பதால் மாத்திரமல்ல. ஆம், அவர்களது பாவத்தையும் அந்த வகையில் அவர் அறிந்திருந்தார். அந்த வகையில் உலகத்தின் அனைத்து பாவங்களையும் அவர் அறிந்திருக்கிறார். முதல் பாவம் செய்த ஆதாமிடமிருந்து நாம் அனைவரும் பரம்பரையாக, பெற்ற ஆதி பாவம் நம்மை கடவுள் மீது பயம், அன்பு மற்றும் நம்பிக்கை இல்லாமல் செய்ததை அறிவார். எண்ணம், சொல், செயலினால் உண்டாகும் நடைமுறைப்பாவங்கள் எல்லாம் இயேசுவுக்கு தெரியும். நம் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதையும் அவர் அறிவார். பாவத்தின் காரணமாக ஷெர்லி இறந்தார் என்பது அவருக்குத் தெரியும். இதற்காகத்தான் நீங்களும் மரிக்கப் போகிறீர்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் ஷெர்லியின் பாவங்களை இயேசு அறிந்திருக்கிறார் என்று நான் கூறுவதன் அர்த்தம் அதுவல்ல…
மாறாக, அவர் ஷெர்லியின் பாவங்களைத் தன் சொந்த உடலில் சுமந்து, அதற்கு விலை கொடுத்ததினால்அம்மையாருடைய பாவங்களை இயேசு அறிந்திருக்கிறார். ஷெர்லியின் பாவங்கள் இயேசுவுக்கு அப்படித்தான் தெரியும்! கடவுள் ஷெர்லியின் பாவங்களை சிலுவையில் அவருக்கு எதிராக கணக்கிலிட்டார். இயேசு ஷெர்லியின் நல்ல மேய்ப்பனாக அன்பில் நிறைந்து தன் உயிரைக் கொடுத்தார். அம்மையாரின் மரணத்தை அவர்களுக்காக மரித்தார். அவர் தனது பழுதற்ற உயிரை சிலுவையில் அவர்களுக்காக கொடுத்தார். ஷெர்லி அவர்களின் ஒவ்வொரு பாவத்திற்கும் உரிய தண்டனையை அவர் அனுபவித்து, அவற்றை கல்லறையில் அடக்கம் செய்து, பாவம், மரணம் மற்றும் பிசாசு ஆகியவற்றின் மீது வெற்றியோடு உயிர்த்தெழுகிறார். இவ்வாறே ஷெர்லியின் பாவங்களை இயேசு அறிவார். இனி அவற்றை நினைவில் கொள்வதில்லை. அவற்றை மன்னிக்கிறார். அவருடைய இரத்தத்தால் அவற்றை கழுவுகின்றார்.
இது ஷெர்லி அம்மையாரை இயேசு அறிந்த மற்றொரு வழிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது: அது அவரது வார்த்தை மற்றும் அவரது சாக்கிரமந்துகள் வாயிலாக அறிந்திருந்தது. இயேசு சிலுவையில் ஷெர்லி அம்மையாரின் இரட்சிப்பையும், மரித்தோரிலிருந்து தமது உயிர்த்தெழுதலையும் சம்பாதித்தார். ஆனால், அவர் தன் வார்த்தை மற்றும் சாக்கிரமந்துகள் (திருவிருந்து, திருமுழுக்கு) மூலமாக அவர்களுக்கு இரட்சிப்பை அளித்தார்.
அவர் தண்ணீரையும் தூயஆவியையும் கொண்டு ஷெர்லி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, அவர் மீது அவர்களுக்கு விசுவாசத்தைக் கொடுத்து, அவரது பார்வையில் அவர்களை வெள்ளை ரோமம் கொண்ட சிறிய ஆட்டுக்குட்டியைப் போல தூய்மையாக்கினார்.
ஷெர்லி வளர்ந்துவரும்பொழுது, இயேசு தம் ஆறுதலான வார்த்தையை அவர்களிடம் பேசினார். ஆடுகள் மேய்ப்பனுக்குச் செவிசாய்ப்பது போல ஷெர்லி அவருக்குச் செவிகொடுத்தார். “என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன”, என்று இயேசு கூறுகிறார். அப்படித்தான் இயேசுவுக்கு ஷெர்லியையும், ஷெர்லிக்கும் அப்படித்தான் இயேசுவையும்தெரியும். ஷெர்லி இயேசுவின் குரலை அவருடைய வார்த்தையிலும், திருவருட்சாதனங்களாகிய திருமுழுக்கிலும், திருவிருந்திலும் கேட்டு அவரில் நம்பிக்கை வைத்தார்கள். அவரைப் பின்தொடர்ந்தார்கள். இது அவரை பிசாசு, இந்த உலகம் மற்றும் தன் சொந்த பாவமுள்ள மாமிசம் ஆகிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது.
ஷெர்லி தேவாலயத்திற்கு வந்தார்கள் மற்றும் இத்திருச்சபையில் ஆயுள் உறுப்பினராக இருந்து, அவர் வாழ்நாள் முழுக்க இயேசுவின் குரலைக் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். கடந்த பத்து வருடங்களாக ஷெர்லியை அறிந்த பாக்கியத்தை, நானும் பெற்றேன். அவர் ஆலய இருக்கையில் அமர்ந்து இயேசுவின் பாவ மன்னிப்பு, நித்திய வாழ்வு, மற்றும் இரட்சிப்பின் வார்த்தையைக் கேட்டதை நினைக்கின்றேன். அவர் இந்த பீடத்திற்கு வந்து உயிர்தரும் இயேசுவின் சரீரத்தையும் இரத்தத்தையும் உண்டதைக் கண்டேன். வில்லியம் மற்றும் டெபி ஆகியோரின் இல்லத்தில் அவரை சந்தித்து அவரால் தேவாலயத்திற்கு வர இயலாத நிலையில் திருச்சபையே அவரிடம் சென்று இன்னும் அவர் சபை மந்தையில் ஒரு அங்கமாக இருக்கிறார் என்பதை அறியப்பண்ணினோம். கடந்த சில வருடங்களாக லுத்தரன் முதியோர் இல்லத்தில், அவர் தமது நல்மேய்ப்பனின் குரலையும் கேட்டுள்ளார்.
உள்ளபடி கடந்த வாரத்திலேதான், அங்குள்ள அவரது அறையில், தன் பாவங்களை அவர் அறிக்கையிட்டதை நான் கேட்டேன், அதன் பின்பு “நான் உன்னை மன்னிக்கிறேன்” என்கிற இயேசுவின் குரலை இறுதியாக ஒருமுறை கேட்டார்கள். கடந்த வாரத்திலேதான், தனது நலிந்த குரலில் “பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே” என எங்களோடு இணைந்து ஜெபித்ததைக் கேட்டேன். கடந்த வாரம்தான், அவருடைய இரட்சகராகிய இயேசுவையும், இயேசு அவருக்கு ஜெயித்துத்தந்த வாழ்வைப்பற்றியும் நான் பாடினப்போது மகிழ்ச்சியில் தன் கரங்களை அசைத்ததை நான் கண்டேன். ஆம், ஷெர்லி தனது நல்மேய்ப்பனின் குரலை, அவருடைய உயிர் கொடுக்கும் வாக்குறுதிகளில் கேட்டு, நம்பிக்கை வைத்து, தேவதூதர்கள் அவர் ஆத்துமாவை பரலோகத்தில் இயேசுவிடம் கொண்டு சேர்த்த நாள் வரை, கேட்டுக்கொண்டேயிருந்தார்கள்.
எனவே, அந்தவிதத்திலும் இயேசுவுக்கு ஷெர்லியைத் தெரியும். அவர் தனது ஆடுகளைப் பற்றி கூறியது போல், “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன், அவை ஒருபோதும் அழியாது” என்பதால் இயேசுவுக்கு ஷெர்லியைத் தெரியும். அவர் வாக்குத்தத்தம் அளித்தபடியே இயேசு ஷெர்லிக்கு நித்திய வாழ்வைக் கொடுத்தார். ஆம், அம்மையாரின் உடல் இப்போது இங்கே உயிரற்றதாயிருக்கிறது. சமாதானத்தில் இளைப்பாற, கிடத்தப்படும். ஆனால் அவரது ஆத்துமாவிற்கு இயேசு வாக்களித்த நித்திய வாழ்வு உள்ளது. அவர் இப்போது அவர்களை பரலோகத்தில் அறிந்திருக்கிறார். அவர் தனது ஆட்டுக்குட்டியை மார்போடு அணைத்துக்கொண்டார், நாம் இப்போது பாடியபடியே ஷெர்லி அம்மையார் அவரது கரங்களில் இளைப்பாறுகின்றார்.
ஆனால் இந்த அருமையான உண்மைக் கூட இயேசு ஷெர்லியை எப்படி அறிந்திருக்கிறார் என்பதன் முடிவல்ல. எக்காள சத்தம் ஓங்கி ஒலிக்கும்போது, இறுதியாக இறைவன் திரும்பி வரும்போது, அவர் ஷெர்லியின் உடலை எழுப்பி அவரது ஆத்துமாவுடன் மறுபடியும் இணைக்கப்போகிறார். அம்மையாரின் அழிவுக்குறிய மரண உடலை, அழியாததாக, ஒரு நொடியில் அவர் மாற்றுவார். அம்மையாரின் அழிகின்ற உடல் அழியாததாய் மாறும். அவர்களுடைய எந்த ஒரு அங்கத்தையும் அவர் அழிய விடாமல் அவர்களுக்கு ஒரு புதிய படைப்பில் நித்திய வாழ்வுக்கான உடல் மற்றும் ஆத்துமாவைக் கொடுப்பார். அதன் பிறகு இயேசு ஷெர்லியை பரலோகத்தில் என்றென்றும் அறிந்தவராய், இந்த உலகத்தோற்றத்தின் முன் அவர்களுக்குத் திட்டமிட்டதை முற்றுப்பெறச் செய்வார்.
எனவே, இயேசு ஷெர்லி அம்மையாரை இப்படித்தான் அறிவார். மேலும், அவருடைய சத்தத்தைக் கேட்கிற அனைவரையும் இந்த விதத்தில்தான் அவர் அறிகின்றார். எல்லோருமே பரலோகத்தை அடைவதில்லை. எல்லோருமே உயிர்த்தெழுதலில் மகிழ்ச்சியடைவதில்லை.ஷெர்லி் அவர்களைப்போல் விசுவாசத்தோடு நல்மேய்ப்பரின் குரலைக் கேட்பவர்கள் மாத்திரமே அடைவார்கள். ஆகவே, அவருடைய சத்தத்தை விசுவாசத்தோடு நீங்களும்கூடக் கேளுங்கள். உங்கள் பாவங்களையும் எப்படி அவர் அறிந்திருக்கிறார் என்பதில் மகிழ்ந்திருங்கள். மறுபடியும் கூறின், அவர் அனைத்தையும் அறிந்தவரானதால் மாத்திரமல்ல, சிலுவையில் உங்கள் அனைத்துப் பாவங்களையும் அவர் ஏற்று, தம் மீது சுமந்து, தம் உயிரை உங்களுக்காகவும்கூட ஈந்தளித்தார். அவருடைய பாவ மன்னிப்பையும், ஜீவனையும் கொடுக்கும் வார்த்தை மற்றும் சாக்கிரமந்துகளில் களிகூறுங்கள். ஷெர்லி அவர்கள் செய்தது போல ஒரு விசுவாசமான தேவாலயத்திற்குச் சென்று நல்மேய்ப்பரின் ஆடுகளில் தானும் ஒருவர் என்று அவர்கள் நம்பியதைப் போல நீங்களும் நம்புங்கள். ஆண்டவர் வெகுமதியாய் அளிக்கும் நித்திய ஜீவனை இலவசமாய்ப் பெறுங்கள். இயேசு ஷெர்லியை அறிந்திருப்பது போல் உங்களை அறிந்துக்கொள்வார். மட்டுமல்ல, ஷெர்லி இயேசுவை அறிந்திருப்பது போன்று நீங்களும் இயேசுவை அறிந்துக்கொள்வீர்கள். மாத்திரமல்ல, ஷெர்லியையும் என்றென்றைக்கும் அறிந்திருப்பீர்கள். நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்த நல்ல பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்திக்கொள்வது மட்டும் அல்ல. ஆனால், ஷெர்லியோடும், இயேசுவோடும், நமக்கு முன் சென்ற மற்றும் நமக்குப் பின் வரும் அனைத்து விசுவாசிகளோடும் உயிர்த்தெழுதலின் களிப்பில் நித்திய காலமாய் நிலத்திருப்போம்.
இதனால்தான், ஷெர்லியை உங்களுக்கு எப்படித் தெரியும் என்பதைப் பற்றி பேசுவதை எவ்வளவு நாம் விரும்புகிறோமோ, அதைவிட அதிக நேரம் இயேசு அவர்களை எப்படி அறிந்திருக்கிறார் என்பதில் கவனம் செலுத்த ஒதுக்குகிறோம். ஏனெனில் ஷெர்லி அவர்கள் நீடித்திருக்கிற நினைவுகளை விட்டுச் சென்றாலும், இயேசு விட்டுச் சென்றுள்ள ஒன்றுநித்தியமானது. எனவே, நீங்கள் துக்கப்படுகிறவர்களானாலும் நல்மேய்ப்பருடைய எல்லா ஆடுகளோடும் மகிந்து களிகூறுங்கள். ஷெர்லி உட்பட எல்லா ஆடுகளையும் இயேசு அறிந்திருக்கிறார். அவை ஒருபோதும் அழியாது. அவருடைய கையிலிருந்து யாரும் அவற்றை பறிக்கவும் இயலாது.
இயேசுவின் திருப்பெயராலே. ஆமென்.
பிரசங்கம் 2.
“டேனியேலுடன் ஆகாயத்தில் இறைவனைச் சந்தித்தல்”
(1 தெசலோனிக்கேயர் 4:13-18)
அன்பான டேனியேலின் குடும்பத்தாரே, குறிப்பாக அவர் துணைவியாரே, அன்பான நண்பர்களே, கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே:
நம் பிதாவாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு கிருபை, இரக்கம் மற்றும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.
இறைவனை நாம் ஆகாயத்தில் சந்திப்போம். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிற அனைவருக்கும் வேதம் கொடுக்கின்ற வாக்குத்தத்தம் அதுவே. அந்த கடைசி நாள் வரும்போது, “கட்டளையின் ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காள முழக்கத்தோடும் ஆண்டவர்தாமே வானத்திலிருந்து இறங்கிவருவார்,” இவ்வுலக வாழ்க்கையில் இயேசுவை விசுவாசத்தில் பற்றிக்கொண்டிருக்கும் அனைவரும் “ஆண்டவரை ஆகாயத்தில் சந்திப்பார்கள்…” கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், டேனியேல் உட்பட, முதலாவது உயிர்த்தெழுவார்கள். அவருடைய ஆன்மா தற்போது பரலோகத்தில் இருந்தாலும் அவருடைய உடல் அந்த மகத்தான நாள் வரும்வரை சமாதானத்தில் இளைப்பாற இன்று அடக்கம் செய்யப்படும். பின்னர், கிறிஸ்துவில் மரித்தவர்கள் உயிர்த்தெழுந்த பிறகு, உடனடியாக, கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடு இருப்பவர்கள், “மேகங்களின்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இறைவனைச் சந்திப்பார்கள்…” கிறிஸ்துவை பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் இதுவே இறைவனின் உறுதியான வாக்குறுதி.
மேலும் இறைவனை ஆகாயத்தில் சந்திப்பது டேனியேலுக்கு மிகவும் பொருத்தமானது. டேனியேல் ஒரு கடற்படை விமானியாக ஆகாயத்தில் செலவழித்த நேரம் கொஞ்சமல்ல. வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளராக ஆகாயத்தின் உள்ளே நோக்கியதில் செலவழித்த நேரமும் கூட கொஞ்சமல்ல. தோட்ட வேலையிலும், மீன்பிடிக்கும் போதும், பறவைகளை வேட்டையாடும்போது ஆகாயத்தை அன்னாந்துப் பார்த்தபோதும், பொழுதுபோக்கு பண்ணையில் நேரம் செலவிட்டப்போது, மரங்களில் தொங்குகின்ற ஆப்பிள்களைக் காண ஆகாயத்தை நோக்கிப் பார்த்தப்போதும் டேனியேல் சுத்தமான காற்றை அனுபவித்தார். மேலும் டேனியேலின் உடலும் ஆன்மாவும் உயிர்த்தெழுப்பப்படும் நாளில் ஒன்றுப்பட்டு என்றென்றும் மகிமைப்பட நமது உடல்களை மகத்தான அறுவடை செய்யவும், டேனியேலின் ஆன்மாவை பரலோகத்திற்கு மகத்தான அறுவடை செய்யவும் ஊழியத்தின் ஆவிகளை ஆண்டவர் அனுப்பினபோது, கடந்த சனிக்கிழமை காலை டேனியேலின் ஆன்மா ஆகாயத்தின் ஊடாக தேவதூதர்களின் சிறகுகளின்மேல் பறந்தது. எனவே, டேனியேலைக்குறித்து சிந்திக்க அது என்ன ஒரு பொருத்தமான உண்மை! டேனியேல் ஆண்டவரை ஆகாயத்தில் சந்திப்பார்.
மனந்திரும்பி இயேசுவில் விசுவாசம் வைத்து வாழும் நீங்கள் அனைவரும் அவ்வாறே சந்திப்பீர்கள். எங்கே நாம் இறைவனை ஆகாயத்தில் சந்திக்கின்றோமோ அங்கேதான் மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தின் வாயிலாக ஒருவர் பரலோகத்தையும், உயிர்த்தெழுதலையும் பெற்றுக்கொள்கிறார்
.
டேனியேல் இதை நன்கு அறிந்திருந்தார். அவர் தனது வாழ்நாளின் முடிவில் பலவற்றை மறந்துவிட்டாலும், இதை நினைவில் கொள்ள டேனியேலை ஆண்டவர் அனுமதித்தார். தான் ஒரு பாவி என்பதை டேனியேல் நினைவில் கொள்ள அவர் அனுமதித்தார். எத்தனை நற்செயல்களினாலும் பரலோகத்துக்கு செல்ல முடியாத பாவி என்பதை நினைக்கச் செய்தார். தன் பாவத்தின் சம்பளமாக மரணத்திற்கும், நரகத்திற்கும் மாத்திரமே தகுதியான ஒரு பாவி என்பதை அறியச்செய்தார். அதற்குத்தான் நீங்கள் தகுதியானவர்கள், நானும் கூட அதற்குத்தான் தகுதியானவன். இயேசுவின் மீது விசுவாசமும், மனந்திரும்புதலும் இல்லாமல் போனால், நாம் ஒவ்வொருவரும் இதைத்தான் பெறுவோம். பலர் மனந்திரும்பி, நம்ப மறுப்பதால் இதைத்தான் அவர்கள் பெறுகிறார்கள். ஆனால் டேனியேல் பெற்றது இது அல்ல. இல்லை, ஏனெனில் டேனியேல் தன் பாவத்திற்காக மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவை தன் இரட்சகராக நம்பினார். மீண்டும் கூறின், கடந்த வாரம் தேவதூதர்களின் சிறகுகளின் மேல் அவரது ஆன்மா ஆகாயத்தின் ஊடாகப் பறந்து பரலோகத்திற்கு சென்றது.
டேனியேலுக்கு இறை ஊழியம் செய்யும் பாக்கியம் அவருடைய இறுதி நாட்களில் எனக்குக் கிடைத்ததால் இதை நான் அறிவேன். ஓரிரு வருடங்களுக்கு முன்பு நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது, அவர் சற்றே கூடுதலாக நினைவில் கொண்டுவந்தார். மேலும் ஒரு அறை (One Room) பள்ளிக்கூடத்தில் அவருக்கு ஆசிரியையாயிருந்தவர் எங்கள் திருச் சபையில் உறுப்பினராக இருந்ததார். டேனியேல் எங்கள் திருச்சபையில் சேர்ந்ததை அறிந்து அவரைப் பற்றிய ஒரு கதையை என்னிடம் சொன்னார். ஒரு நாள் போர் விமானம் பள்ளிக்கூடத்தின் மீது பறந்தப்போது டேனியேலும் மற்ற குழந்தைகளும் வெளியே ஓடி அவ்விமானம் தலைக்கு மேல் ஆகாயத்தில் பறந்தைப் பார்த்ததைக்கூறினார்கள். அது அவருடைய எதிர்காலத்தில் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியதில் சந்தேகமில்லை! அதை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு டேனியேலுக்கு கூறியப்போது அதை டேனியேலும் நினைவுக்கூர்ந்தார்.
ஆனால் நான் டேனியேலுக்கு இறை ஊழியம் செய்யும் பாக்கியம் கிடைத்தது அவர் கடந்த கால நினைவுகளை ஞாபகத்தில் வைத்திருந்தப்போது மட்டும் அல்ல. மதிப்புமிக்க மிகச்சிறிதளவு நினைவுகளை ஞாபகத்தில் கொண்டிருந்தப்போதும் டேனியேலுக்கு இறை ஊழியம் செய்யும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. மதிப்புமிக்க மிகக்கொஞ்ச வார்தைகளைப் பேசினார். ஆனால் அவர் நினைவில் வைத்திருந்தது மிகவும் மதிப்புமிக்கது. அவர் நினைவில் வைத்திருந்ததுதான் அவரை இரட்சித்தது, அதுதான் அவருக்கு இறை ஊழியம் செய்ய எனக்கு ஒரு பாக்கியமாயிருந்தது. அவரை நினைவு கூர்ந்த ஒருவரை டேனியேல் நினைவு கூர்ந்தார். டேனியேல் இயேசுவை நினைவு கூர்ந்தார். டேனியேல் அவரில் நம்பிக்கை வைத்தார். “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடம் இழுத்துக்கொள்வேன்” என அவர் கூறினார் (யோவான் 12:32). இயேசு டேனியேலை தன்னிடம் இழுத்துக்கொண்டார். சிலுவைமீது ஆகாயத்தில் உயர்த்தப்பட்டு, டேனியேலின் பாவங்களுக்காக மரித்தப்போது இயேசு டேனியேலைத் தம்மிடம் ஈர்த்தார். இயேசு எப்படி அவருக்காக சிலுவைமீது வானத்தில் உயர்த்தப்பட்டார் என்பதை டேனியேல் நினைவு கூர்ந்தப்போது பலமுறை அவர் இறைவனை ஆகாயத்தில் சந்தித்தார். டேனியேல் தன் பாவங்களுக்காக வருந்தியது மட்டுமல்லாமல், இன்னும் அதிகமாய்தன் குற்றங்கள் அனைத்தையும் இயேசு சிலுவையில் ஏற்றுக்கொண்டார் என்பதை அவர் உறுதியாக நம்பினார். அவருடைய எல்லா தண்டனைகளுக்கும் இயேசு விலைக் கொடுத்தார். டேனியேலின் இரட்சிப்புக்குத் தேவையான அனைத்தையும் அவருக்காகமாம்சமாக இருந்த கடவுளின் மகன் முற்றிலுமாய் நிறைவேற்றினார். “அனத்தும் முடிந்தது,” என்று இயேசு சிலுவை மீது ஆகாயத்தில் சத்தமிட்டார். பிதாவாகிய தேவன் உயிர்த்தெழுதல் (ஈஸ்டர்) திருநாள் அன்று காலை, தோட்டதின் குளிர்ந்த காற்றில் தமது குமாரனை மரித்தோரிலிருந்து எழுப்பியபோது “ஆமென்! உங்கள் இரட்சிப்பு நிறைவேற்றப்பட்டது!” என்பதையும் அதில் சேர்த்தார். டேனியேல் அதை நம்பினார். டேனியேலுக்கு அது நினைவில் இருந்தது. நீங்கள் அனைத்தையும் மறந்துவிட்டாலும் நினைவில் கொள்ள வேண்டிய மதிப்புமிக்க உண்மை ஒன்று இருந்தால், அது சிலுவையில் இறைவன் அருளிய கிருபையும் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுமேயாகும்.
நம் இறைவனை சிலுவையில் அறைந்தபோது டேனியேல் அங்கு இல்லை என்பது வெளிப்படையான விஷயம். ஆனால் எல்லா மக்களையும், டேனியேல் உட்பட, என்னுடன் ஈர்த்துக்கொள்வேன் என இயேசு கூறுவதின் அர்த்தம் என்ன என்று நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அவர் தம்முடைய சுவிசேஷத்தை அவர்களுக்கு அறிவிக்கிறார் என்று அர்த்தம், அவர் என்ன செய்திருக்கின்றார் என்கிற நற்செய்தியை அறிவிக்கிறார், அதனால் அவர்கள் அவரை நம்புகிறார்கள். சுவிசேஷத்தை டேனியேல் கேட்டார், அந்த இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அவர் கேட்டார், அவர்பேரில் டேனியேல் நம்பிக்கை வைத்தார். லுத்தரன் முதியோர் இல்லத்தில் டேனியேல் இருந்த கடந்த இரண்டு வருடங்களில் நான் கிறிஸ்துவின் சிலுவையை அவருக்குக்கூறி அறிவித்தேன். அவர் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் ஞானஸ்நானம் பெற்றவர் என்பதையும், விசுவாசத்தால் ஞானஸ்நானம் பெற்றவர்கள் யாவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதையும் நான் அவருக்கு நினைவூட்டும்போது டேனியேல் சிலுவையில் இயேசு அறையுண்ட இடத்தில் அங்கே இருந்தார். பாவிகளை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கும் பாவமன்னிப்பை நான் வழங்கியப்போது டேனியேல் அங்கே இருந்தார்.கடவுளின் சமாதானம் மற்றும் வரவிருக்கும் விருந்தின் முன்னறிவிப்பாகிய அவரது இரட்சகர், இயேசுவின் சரீரத்தையும், இரத்தத்தையும், நான் பகிர்ந்தளித்தப்போது டேனியேல் சிலுவையினடியில் அங்கே இருந்தார்.
டேனியேல் அங்கே இருந்தது மாத்திரம் அல்ல, இவற்றையெல்லாம் அவர் விசுவாசத்தில் பெற்றுக்கொண்டார், ஒரு பாவியாகிய அவர், அவருடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவில், கடவுளின் கிருபையால் மாத்திரமே முற்றிலுமாய் இரட்சிக்கப்பட்டதை நம்பினார். டேனியேல் இதை கடந்த இரண்டு வருடங்களில் என்னிடமிருந்து மட்டும் பெறவில்லை. மற்ற உண்மையுள்ள வார்த்தையின் ஊழியர்களிடம், அவரது பருவமடந்த வாழ்க்கை முழுக்க பெற்றுக்கொண்டார். டேனியேல் முறைப்படிப் பெற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை நம்பினார். இந்த விசுவாசம் மட்டுமே அவரை இரட்சித்தது. கிறிஸ்துவில் மாத்திரமே இருக்கும் இந்த விசுவாசம் ஒன்று மட்டுமே, தற்போது பரலோகத்தில் தனது ஆன்மாவில் வாழ்ந்து, உயிர்த்தெழும் நாளில் தனது மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தோடு டேனியேல் இறைவனை ஆகாயத்தில் சந்திப்பார் என்பதின் காரணம்.
மேலும் அதற்காகவே உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். மனந்திரும்புதல் மற்றும் இயேசு கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசத்தில் மாத்திரமே நீங்களும்கூட பரலோகத்துக்கும், இறைவனை ஆகாயத்தில் சந்திக்கும் அந்த மகிமையான நாளுக்கும் செல்வீர்கள். இதை டேனியேல் நன்கு அறிந்திருந்தார். அதை நீங்களும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை அறிக்கையிடுட்டு, சிலுவையில் வானத்தில் உயர்த்தப்பட்ட இயேசுவிடம் ஈர்க்கப்படும் விடுதலையை விட மேலானது வேறொன்றுமில்லை. உங்களின் ஒவ்வொரு பாவத்திற்காகவும் மரித்த அவரை கூர்ந்து நோக்க, உங்கள் மரணத்தை தன் மீது ஏற்றுக்கொண்ட அவரைப் கண்ணோக்க, அவர் நரகத்தின் வேதனையையும்கூட அனுபவித்து, கடவுளால் அவர் கைவிடப்பட்டதால், கடவுள் உங்களை ஒருபோதும் கைவிடமல் இருக்க, உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். ஒருபோதும் கடவுள் கைவிடமாட்டார். இல்லை. ஒருப்போதும் இல்லை. அவர் உங்களை மிகவும் அன்பாய் நேசிக்கிறார். தம்முடைய ஒரே குமாரனை உங்கள் பாவங்களுக்காக மரணத்திற்கு ஒப்படைத்த அவரால் எப்படி உங்களை நேசிக்காமல் இருக்க முடியும்? தாம் மரிக்கின்ற நாள் வரை இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பெற்ற டேனியேல் இதைத்தான் நம்பினார். அது அவரை இரட்சித்தது. அதே நற்செய்தியை நீங்களும் தொடர்ந்து கேட்டு, அதை நம்புங்கள். அது உங்களையும்கூட இரட்சிக்கும்.
டேனியேலின் மரணத்திற்கு நீங்கள் துக்கப்படும் இந்த வேளையிலும்கூட இது உங்களுக்கு உதவும். கிறிஸ்தவர்களாகிய நாம் நம்பிக்கை இல்லாத மற்றவர்களைப் போல் துக்கிப்பதில்லை. ஆம் நாம் துக்கப்படுகிறோம்; டேனியேலின் நினைவுகளை நாம் பகிர்ந்து கொள்ளும்போது. நாம் அழுகிறோம், அவரை இழந்ததால், அவர் இங்கே இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறோம். நாம் அழ வேண்டும்; இயேசுவும்கூட அழுதார். நாம் டேனியேலை நேசிக்கிறோம் என்பதற்கு நம் துக்கம் ஒருசான்று. ஆனால் நம்மிடம் நம்பிக்கை உள்ளது. நிச்சயமான நம்பிக்கை. ஏனெனில் இயேசு மரித்து மறுபடியும் உயிர்த்தெழுந்தது போலவே, அவரும் நித்திரையடைந்தவர்களை, டேனியேலையும் கூட, தம்முடன் கொண்டு வருவார். தாம் சொன்னது போல் இயேசு உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறார். எனவே, இயேசுவை உங்கள் முன் வானத்தில் சிலுவைமீது உயர்த்தி வையுங்கள். இயேசுவை அவரது கல்லறையிலிருந்து தூக்கி எடுத்து உங்கள் இதயங்களில் உள்ள தோட்டத்தின் சுத்தமான காற்றில் வைத்திருங்கள். கர்த்தர் உங்களுடனேகூட இருக்கிறார். நாம் அனைவரும், டேனியேலுடன் சேர்ந்து இறைவனை ஆகாயத்தில் சந்திக்கும் அந்த நாளுக்கு நம்மை வழிநடத்துவார். அதன் வழியாய் நாம் எப்பொழுதும் ஆண்டவருடன் இருப்போம்.
இயேசுவின் திருப்பெயராலே. ஆமென்.
பிரசங்கம் 3.
“கென்னத் இதை விசுவாசித்தார்”
(யோவான் 11:17-27)
அல்லேலூயா! இயேசு உயிர்த்தெழுந்தார்! மெய்யாகவே அவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா!
கென்னத்தின் அன்பான குடும்பத்தாரே, குறிப்பாக அவர் மனைவி திருமதி ரோஸ்மேரி அவர்களே, அன்பான நண்பர்களே, மற்றும் கடவுளின் வீட்டாரே:
“நீ இதை விசுவாசிக்கிறாயா?” “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்” என்று இயேசு மார்த்தாளிடம் சொல்லியப்பிறகு, “நீ இதை விசுவாசிக்கிறாயா?” என இன்றியமையாத கேள்வியை அவளிடம் கேட்டார். இக்கேள்வியின் சூழல் மிக முக்கியமானது. மார்த்தாளின் சகோதரன் லாசரு அப்போதுதான் மரித்துவிட்டான். அவன் ஒரு இளைஞன், அவனுடைய பிரதான வாழ்க்கை களவாடப்பட்டது. அவன் இயேசுவின் அன்பான நண்பராக இருந்தான். மரியாள் மற்றும் மார்த்தாள் அவனுடைய இரண்டு சகோதரிகள். மரணத்தின் மீது அவருக்கு அதிகாரம் இருப்பதாக அவள் நம்புகிறாளா என்பதாக மார்த்தாளிடம் “நீ இதை விசுவாசிக்கிறாயா?” என இன்றியமையாத கேள்வியை ஆண்டவர் கேட்டார்.
“நீ இதை விசுவாசிக்கிறாயா?” கென்னத் விசுவாசித்தார். உங்கள் இல்லத்தில் மாதாந்திர அழைப்புகளின் போது, பாவ அறிக்கையை வாசித்தப்பின்பு, இதே கேள்வியை கென்னத்தையும், திருமதி ரோஸ்மேரி, உங்களையும் நானும் கேட்டுள்ளேன். நீங்களும் கென்னத்தும் “ஆம்,” என்றுக்கூறி நீங்கள் பாவமன்னிப்பைப் பெற்றுவந்தீர்கள். இயேசு சிலுவையில் மரித்ததன் மூலம் விலைக்கு வாங்கின, அதை விசுவாசிக்கும் அனைவருக்கும் நித்திய ஜீவனுக்கு உத்தரவாதம் அளிக்கிற பாவமன்னிப்பு அது. ஆம், கென்னத் ஒரு கிறிஸ்தவராக இருந்தார், இருக்கிறார். இப்பூமியில் அவர் இருந்தபோது தான் ஒரு பாவி என்று நம்பினார் என்பது அதன் பொருள். என் பாவத்தின் ஊதியமாக மரணத்தை பெறுகின்றேன், அந்த பாவத்தை நான் அறிக்கை செய்யவேண்டும் என்பதையும் நம்பினார்.
அதை ஒப்புக்கொண்டதினால், இயேசு முழுமையாய் இலவசமாய் அளித்த பாவமன்னிப்பில் அவருக்கு மகத்தான ஆறுதல் கிடைத்தது. அது அவருக்கு நித்திய ஜீவனைக் கொடுத்தது. கென்னத்தின் சொந்த வாயின் வார்தையில் நான் இதை அதிக முறைக் கேட்டதால் அவர் இதை நம்பினார் என்பதில் நான் உடன்படுகிறேன்.
“நீ இதை விசுவாசிக்கிறாயா?” கென்னத் விசுவாசித்தார். அதுகுறித்து என் உள்ளத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. கோவிட் (COVID) பாதிப்பு நாட்கள் முழுவதுமாய், கடந்த ஓரிரு மாதங்கள் வரை, கென்னத் ஞாயிற்றுக்கிழமை காலை தேவாலயத்தில் இருந்தார். மாதந்தோரும் அவர் என்னை வரச் செய்து திருமதி ரோஸ்மேரி கென்னத் அவர்களை காணச்செய்தது மாத்திரமல்ல, தாம் இங்கே ஒவ்வொரு வாரமும் தேவாலயத்தில் இருப்பதையும் திருவாளர் கென்னத் உறுதி செய்தார். தனது விசுவாச திடப்படுத்தலின் (Confirmation) போது அப்படியாக இருப்பேன் என உறுதியளித்திருந்தார்.
மேலும் அவர் நேர்மையும், நாணயமும் கொண்டவராக இருந்தார். இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை அறிக்கையிடுவதை பொக்கிஷமாய் வைத்திருந்தார். நீங்கள் நேற்று அவரது உடலைக் காண வந்திருந்தால் அவருக்கு அருகில் அவருடைய சிறிய ஞானோபதேச (கத்தேகிஸ்மு) புத்தகம் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள். சிறிய கத்தேகிஸ்மு லுத்தரன் தேவாலயத்தில் நாம் ஒரு கையேடாகப் பயன்படுத்தும் கிறிஸ்தவத்தின் ஒரு எளிய விளக்கம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையின் பிரார்த்தனை புத்தகம். கென்னத் இதையும்கூட நம்பினார், அவரது வாழ்க்கையும் அதைப் பிரதிபலித்தது.
“நீ இதை விசுவாசிக்கிறாயா?” கென்னத் விசுவாசித்தார். நீங்கள் பார்த்திருக்கக்கூடிய மற்றொரு புத்தகம் கென்னத்தின் உடலுக்கு சற்று மேலே இருந்த லுத்தரன் பாமாலை (Lutheran Hymnal) பாடல் புத்தகம். கென்னத் சிறுவனாக இருந்து சிறிய கத்தேகெஸ்மு பாடத்தை கற்றுக்கொண்டப்போது, திடப்படுத்தலின் (Confirmation) வகுப்பில் இருந்த அவருடனும் மற்ற அனைவருடனும் சேர்ந்து அவரது போதகர் பாடுவார். கென்னத்தும் நானும் அந்த நல்ல பழைய நாட்களை எல்லா நேரத்திலும் பேசிக்கொண்டடேயிருப்போம். அவரும் நானும் பாடுவதை மிகவும் நேசித்தோம். அவருடன் சேர்ந்து இறைவனைத் துதித்துப் பாடுவதை இந்த கீழ் லோகத்தில் நான் இழந்தாலும், அவர் மேல் லோகத்தில் எல்லா பரலோகப் பிரஜைகளோடும் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவரை, நாங்கள் இங்கே பூமியில் செய்தது போல் துதித்துப் பாடிக்கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். லுத்தரன் திருச்சபை நீண்ட காலமாக “பாடுகின்ற திருச்சபையாக” அறியப்படுகிறது, ஏனெனில், நம் வழிப்பாட்டில் அவை அதிகம் உள்ளடங்கும். விசுவாசத்தைப் பாடுவதை நாம் நம்புகிறோம், பாடலில் நாம் நம்புவதை அறிக்கையிடுகிறோம். கென்னத் இதையும் விசுவாசித்தார்.
“நீ இதை விசுவாசிக்கிறாயா?” கென்னத் விசுவாசித்தார். அவர் கடவுளுடைய வார்த்தையை விசுவாசித்தார். அதன் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் நம்பினார். அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்தார் –தொடர்ந்தும் இருக்கிறார். கென்னத்தின் உடல் லாசருவின் உடலைப் போல உறங்குகிறது. ஆனால் அவரது ஆத்துமா பரலோகத்தில் வாழ்கிறது. கென்னத் தேவதூதர்களுடன் மகிழ்ந்திருக்கிறார். நீண்ட – 94½ ஆண்டுகள் -வாழ்க்கைக்குப் பிறகு திருவாளர் கென்னத்தை மென்மேலும் தம் அருகாமையில் கொண்டு வர இயேசு தம் தூதர்களை அனுப்பினார். கடந்த ஆண்டுகளில் இயேசுவை விசுவாசித்த அனைவருடனும், அவருடைய மகன் ரிக்கி உட்பட, லாசருவைப் போலவே மிக விரைவில் தனது வாழ்க்கையை இழந்தவர், லாசருவைப் போலவே இரு சகோதரிகள் இங்கு உள்ளனர், லாசருவைப் போலவே நித்திய வாழ்வு மற்றும் உயிர்த்தெழுதலுக்காக இயேசுவைச் சார்ந்திருக்கிறார்கள். இயேசுவின் இந்த வாக்குறுதியின் காரணமாக ரிக்கியை மீண்டும் காண்பேன் என்று கென்னத் நம்பினார். ஆம், கென்னத் கடவுளின் இந்த வார்த்தையை நம்பினார், இப்போது அவர் அவருடைய குமாரனைக் காண்கிறார், பரலோகத்தில் பிதாவின் நித்திய மைந்தனாகக் கண்டு மகிமையான உயிர்த்தெழுதலின் நாளுக்காக காத்திருக்கிறார். ஆம், கென்னத் அதை விசுவாசித்தார், அதனால் அவர் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்.
“நீ இதை விசுவாசிக்கிறாயா?” மார்த்தாள் விசுவாசித்தாள். “ஆம், ஆண்டவரே; நீங்கள் இந்த உலகிற்கு வரவிருக்கும் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்” என அவள் அளித்த பதில் இயேசுவுக்கு மிகவும் அருமையாயிருக்கிறது. அவளையும், உலகம் அனைத்தையும் இரட்சிக்க உலகிற்கு வந்த மாம்சமாகிய கடவுளின் குமாரன் இயேசு என்று அவள் நம்பினாள். அவர் அதைச் செய்தார். அவர் உலகத்திற்காக மரித்தார். நாம் ஒவ்வொருவரும் செய்த பாவத்திற்கான தண்டனையை அவர் செலுத்தினார். தங்கள் பாவத்தை நினைத்து மனம்திருந்தி, அவரை விசுவாசிக்கும் அனைவரும், அவர் செயலினால் பயனடைந்து, இறுதிவரை அவருடைய வார்த்தையில் நிலைத்திருக்க நாடுவார்கள். ஆனால் இயேசு மார்த்தாளிடம் அவளுடைய இந்த விசுவாசத்தைக்குறித்து மாத்திரம் கேட்கவில்லை. இன்னும் குறிப்பாக,
தனது சகோதரன் லாசருவை அவர் மரித்தோரிலிருந்து எழுப்ப முடியும் என்று அவள் நம்புகிறாளா என்று கேட்டார். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே” என்றாள். பின்னர் இயேசு அதைச் செய்தார்! அந்த வேதப் பகுதியை இப்போது நான் வாசிக்கவில்லை, ஆனால் தூய யோவான் நற்செய்தியை தொடர்ந்து வாசிக்கையில், இயேசு கல்லறைக்கு சென்று “லாசருவே, வெளியே வா!”என்று சொல்வதைக் கூறுகிறது. தொடர்ந்து, அவரது இரண்டு சகோதரிகளோடும், உலகில் அவனை நேசித்த அனைவரோடும் மீண்டும் ஒன்று சேர லாசரு கல்லறையிலிருந்து உயிருடன் வெளியே வருகிறான்.
“நீ இதை விசுவாசிக்கிறாயா?” “நன்று, அதை நான் விசுவாசிக்கிறேன், ஆனால் இயேசு அதைப்போன்று எனக்கும் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று நீங்கள் கூற விரும்பலாம். கென்னத் அவர்களும் திருமதி ரோஸ்மேரி நீங்களும் உங்கள் மகன் ரிக்கி மரித்தப்போது இந்த வாழ்க்கையில் அவரை மீண்டும் பெற அதை விரும்பினீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. கென்னத் அவர்களையும் இந்த வாழ்க்கையில் மீண்டும் பெற விரும்புகிறோம் என்பதிலும் சந்தேகமேயில்லை. தங்களோடு இருக்க எல்லாரையும்விட, அவர் எவ்வளவு உயர்ந்த மனிதராக இருந்தார் என்பதும், அவருடைய இழப்பு எந்த அளவானது என்பதும், அவருடைய குடும்பத்தாருக்குத் தெரியும். அவர் அன்பானவர். அவர் சிந்தனையாளர். அவர் வேடிக்கையானவர். அவர் நற்குணம் கொண்ட ஒரு மனிதர். அவர் ஒரு விசுவாசமான, அன்பான கணவர். ஒரு கருணையும், அக்கரையுமுள்ள தந்தை. தனக்கு ஒரு பாட்டனாராக அவர் இருக்க வேண்டும் என்று யாவரும் ஆசைப்படக்கூடியவர். எனக்கும் என் குடும்பத்தாருக்கும்,அவர் அதிக அன்பையும் அக்கரையையும் காட்டினார் என்பதால் , தனது சொந்த இரத்த உறவுகளுக்கு எவ்வளவு அதிகம் காட்டினார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். ஃபோர்ட் ( Ford) காரைத்தவிர மற்ற கார்களை நான் உபயோகப்படுத்தாமல் இருப்பதை கிண்டல் செய்தார். மீன் பிடிப்பது அல்லது சீட்டுக்கட்டு விளையாட்டு, அவரது திடப்படுத்தல் வகுப்பு அல்லது உலகப் போர்களின் போது ஜெர்மனியர்கள் நடத்தப்பட்ட விதம், அந்த கடினமான நாட்கள்வரை வில்லியம்ஸ் எப்படி முதலில் வில்ஹெல்மாக இருந்தார், என்பவைகளைப்பற்றி அவரிடம் எப்போதும் ஒவ்வொரு கதை இருந்தது. ஆம், நான் கென்னத் அவர்களை எவ்வளவு அதிகமாய் இழக்கிறேனோ, அதைவிட இன்னும் எவ்வளவு அதிகமாய் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை இழக்கிறர்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்ப்பதோடு, சில சமயங்களில் அவர் லாசருவைப் போல உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் நம்முடன் இங்கு வர வேண்டும் என நான் மிகவும் விரும்புகிறேன்.
ஆனால் இங்கே ஒரு விஷயம்: ஒரு நாளில் அவர் இருப்பார். அதுவே முழுக்கருத்தும், கிறிஸ்தவ மதத்தின் இலக்குமாம். சரீர உயிர்த்தெழுதலையும், நித்திய ஜீவனையும் நாம் விசுவாசிக்கிறோம். இயேசுவே உயிர்த்தெழுதலும், ஜீவனுமானவர் என்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் பாவிகளை இரட்சிக்க உலகிற்கு வந்த கடவுளின் குமாரன் என்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் நமக்காக கடவுளின் கட்டளையை நிறைவேற்றினார் என்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் நம்முடைய பாவத்திற்காக மரித்தார், வெற்றியுடன் உயிர்த்தெழுந்தார், அதனால் நாம் பாவம், மரணம் மற்றும் பிசாசின் மீது வெற்றி பெறுகிறோம் என்பதை விசுவாசிக்கிறோம். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் ஞானஸ்நானம் பெற்று, அவர் மீது விசுவாசம் வைக்கும் அனைவரும் கடவுளின் பார்வையில் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் என்றும், மெய்யாகவே என்றென்றைக்கும் இரட்சிக்கப்படுகிறார்கள் என நாம் விசுவாசிக்கிறோம். நான் இதை விசுவாசிக்கிறேன். கென்னத் இதை விசுவாசித்தார். “நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா?”
அதை விசுவாசியுங்கள், நீங்கள் கென்னத்தை மீண்டும் காண்பீர்கள். விசுவாசியுங்கள், அவரை ரிக்கியுடன், லாசரு, மார்த்தாள் மற்றும் அவளது சகோதரி மரியாள் ஆகியோருடன் காண்பீர்கள். விசுவாசியுங்கள், கடந்த காலங்களில் இயேசுவை நம்பிய, நிகழ்காலத்தில் அவரை நம்புகின்ற, எதிர்வருங்காலத்தில் அவரை நம்பப்போகின்ற அனைவருடனும் ஒரு நாள் நித்திய ஜீவனுக்கு உயிர்த்தெழுகின்ற அனுபவத்தைப் பெறுவீர்கள். எல்லோரும் இதைப்பெறுவதில்லை. சிலர் நித்திய அழிவுக்கு எழுப்பப்படுவார்கள். ஆனால் நீங்கள் அதைப்பெறுவதை இயேசு விரும்பவில்லை. அதனால்தான் உங்களுக்காக அவர் மரித்தார். அதனால்தான் அவர் தனது திருச்சபையில் பாவமன்னிப்பையும், நித்திய வாழ்வின் நிச்சயத்தையும் வழங்குகிறார். அதனால்தான் கென்னத் பொதுவான பரிசுத்த திருச்சபையிலும், பரிசுத்தவான்களின் ஐக்கியத்திலும் மிகுந்த ஆறுதல் பெற்றார். இயேசு இவற்றையெல்லாம் அவருக்காக செய்தார் என்று கென்னத் விசுவாசித்தார். அவர் உங்களுக்காகவும் இதைச்செய்தார். ஆகவே “நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா?” அதை விசுவாசியுங்கள், கென்னத்துடன் நீங்கள் கனிவுடன் திரும்பிப் பார்க்கும் நாட்கள் மாத்திரம் இருக்காது. அதை விசுவாசியுங்கள் அவரோடு சேர்ந்து முன்னோக்கிப்பார்க்கும் நாட்களும்கூட உங்களுக்கு இருக்கும். மார்த்தாளுடன், கென்னத்துடன், முழு கிறிஸ்தவ திருச்சபையுடன் சேர்ந்து, கிறிஸ்து உயிர்தெழுந்த ஈஸ்டர் நாள் மெய்யானது என விசுவாசியுங்கள். கிறிஸ்து உயிரோடெழுந்ததை விசுவாசியுங்கள். அவருடைய ஜீவன் (உயிர்) கென்னத்துக்கு வாழ்வளிக்கிறது, நம் அனைவருக்கும் வாழ்வளிக்கிறது. “ஆம், ஆண்டவரே, மரணத்தின் மீது உமக்கு அதிகாரம் இருப்பதை நான் விசுவாசிக்கிறேன்,” என மார்த்தாளுடன் சேர்ந்து சொல்லுங்கள், நம் உயிருள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நம்பும் அனைவருடனும், உங்கள் கண்ணீர், உயிர்த்தெழுந்த மகிமையில் கென்னத்தை மீண்டும் காண்போம் என்ற மகிழ்ச்சியில் கலந்திருக்கும்.
அல்லேலூயா! இயேசு உயிர்த்தெழுந்தார்! மெய்யாகவே அவர் உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா!
பிரசங்கம் 4.
“நாத்தானின் பலவீனத்தில் இறைவனின் வல்லமை பரிபூரணமாய் விளங்கியது.”
(2 கொரிந்தியர் 12:7-10)
நாத்தானின் குடும்பத்தாரே, அன்பான நண்பர்களே, கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே:
நம் பிதாவாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு கிருபை, இரக்கம் மற்றும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.
பரிசுத்த பவுலைப் போன்று, நாத்தான் தனது பலவீனத்தில் பெருமை பாராட்டினார். இளம் பருவத்திற்கு முன்பாகவே கண்டறியப்பட்ட லோயிஸ்-டீட்ஸ் (Loyes-Dietz) என்னும் நோய்க்குறியுடன் இருந்த நாத்தான் கர்த்தருடைய வல்லமை பலவீனத்தில் பூரணமாகிறது என்பதை அறிந்திருந்தார். நாத்தானின் வார்த்தைகளில் கூறுவதானால், “எனக்கு இருக்கும் இந்த லோயிஸ்-டீட்ஸ் நோய்க்குறி, மக்களை கிறிஸ்துவிடம் கொண்டு வருகிறதானால், இந்த வழியில் பயன்படுத்தப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். நாத்தானின் பலவீனம் மக்களை கொண்டு வந்து அவரது நோய்க்குறி பற்றி அவரிடம் பேசினப்போது, அவருக்குள் இருந்த விசுவாசத்திற்கான காரணத்தை: அதாவது, கடவுளின் கிருபையை அவருடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் பெற்றுக்கொண்டதைப் பகிர்ந்துக்கொள்ள பல வாய்ப்புக்கள் அளித்ததால், நாத்தான் தனது பலவீனத்தில் பெருமை பாராட்டினார். இப்போது நாத்தான் இந்த நோய்க்குறியின் காரணமாக இறந்துவிட்டாதாலும், மரணம் இறுதிமுடிவான பலவீனம் என்பதாலும், நாத்தான் இன்னும் பெருமை பாராட்டலாம். மரணத்தின் பலவீனத்திலும் கூட. நாத்தானின் ஆன்மா பரலோகத்தில் வாழ்ந்து அவருடைய உடல் மகிமையில் எழுப்பப்படுவதால் மாத்திரமல்ல. அவர் மரணம் உங்கள் அனைவரையும் இங்கு கொண்டு வந்துள்ளதற்காகவுமே பெருமை பாராட்டலாம். எனவே, நாத்தான் இயேசுவின் மீது கொண்டிருந்த விசுவாசத்தைப் பற்றி அவர் சார்பாக உங்கள் அனைவரிடமும் நான் பேச அது எனக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது. அதனால் நம் மீட்பர் மீது நீங்களும்கூட அதே நம்பிக்கை வைத்திருக்கலாம். நீங்களும்கூட நாத்தானுடன் சேர்ந்து கர்த்தருடைய கிருபைப் போதும் என்று விசுவாசித்து, உங்கள் பலவீனங்களில் பெருமைப்படலாம்; ஏனெனில், பலவீனத்தில் அவருடைய வல்லமை பரிபூரணமாய் விளங்குகிறது.
இயேசுவில் நாத்தானின் கொண்ட நம்பிக்கை, அவரது மையப் பலவீனத்தை அவர் அறிந்ததிலிருந்து தொடங்கியது. நாத்தான் தன்னை ஒரு பாவி என்று நம்பினானார். எல்லா மக்களும் பாவிகளாக இருக்கிறார்கள். ஆனால் நாத்தான் மெய்யாகவே அதை நம்பினார். பாவம் என்பது லோயிஸ்-டயட்ஸ் நோயைப் போன்றே நிஜமானது, அதைவிட இன்னும் அதிகக் கொடியது என்பதை அவர் அறிந்திருந்தார். பாவத்தினால்தான் இந்த உலகில் மரணம் வந்தது, இரண்டாம் நிலை காரணங்கள் எதுவாக இருந்தாலும் எல்லோரும் மரிப்பது அதனால்தான். பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோமர் 6:23). நாத்தான் இதை அதிக அதிகமாய் விசுவாசித்தார்! அவரையும், இயேசுவையும் குறித்து வேதம் சொல்வதை அவர் விசுவாசித்தார்: “அன்றியும், நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்” (ரோமர். 5:6). எனவே, இந்த பலவீனத்தில் நாத்தான் பெருமை பாராட்டினார். தன் பாவத்தில் பெருமைக் கொள்ளவில்லை. மாறாக, நாத்தான் அதற்காக மனம் வருந்தினார். அவர் தனது பாவத்தை அறிக்கையிடுவதை, அவருடைய போதகராக, என் எண்ணிக்கைக்கு அதிகமாக நான் கேட்டேன். கடந்த இரண்டு மாதங்களில் ஜூம் (ZOOM) காணொளி அழைப்பிலும் இவற்றைக் கேட்டேன். நாத்தான் தான் ஒரு பாவி என்கிற பெலனற்ற நிலையில்தான் பெருமை பாராட்டினார், ஏனெனில், இயேசு பாவிகளுக்காக உலகில் வந்தார் என்பதை அவர் விசுவாசித்தார்.
இதுதான் நாத்தானின் நம்பிக்கை மற்றும் நீங்கள் அனைவரும்கூட அதைத்தான் விசுவாசிக்க வேண்டும்என்று நாத்தான் விரும்புகிறார். இயேசு உங்களுக்காக வந்தார். ஏனென்றால், நீங்களும்கூட பலவீனமான பாவிகளானதால், உங்களுக்கு ஒரு இரட்சகர் தேவைப்படுகிறது. இயேசு கிறிஸ்து உங்கள் இரட்சகரும் கூட. அவருடைய கிருபையில், தகுதியற்ற உங்கள்மேல் காட்டும் அவருடைய அன்பில், கடவுள் உங்கள் இழந்த நிலையை, உங்கள் பாவத்தைப் பார்த்து, உங்களை இரட்சிக்கத் தெரிந்துக்கொண்டார். அவருடைய குமாரனை உலகில் ஒரு மனிதனாக மாறுவதற்கு கீழே அனுப்பினார், ஆயினும் அவர் பாவமற்றவராயிருந்தார். கடவுளின் கட்டளையின் கீழ் உங்கள் சார்பாக பரிபூரண வாழ்க்கை வாழ அனுப்பினார். மேலும், சிலுவையின் பலவீனத்தில், கடவுள் அவருடைய குமாரனாகிய இயேசுவில் உங்கள் பாவங்கள் அனைத்தையும் தண்டனைக்குள்ளாக்கினார். உங்கள் பாவ வாழ்க்கைக்கு மாற்றாக இயேசுவின் பரிபூரண வாழ்க்கையை கடவுள் ஏற்றுக்கொண்டார். உங்களை இரட்சிக்க அவர் அந்த சிலுவையில் மரித்ததால் பலவீனத்தில் அவர் வல்லமை பரிபூரணமாய் விளங்கியது.
மேலும், அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு கல்லறையை விட்டெழுந்து அந்த வல்லமையை வெளிப்படுத்தினார். பாவம், மரணம் மற்றும் நரகத்தை நாத்தானுக்காகவும், உங்களுக்காகவும், உலகின் பாவிகள் அனைவருக்காகவும் வெற்றிப்பெற்றார். இயேசு இப்போது தம்முடைய வெற்றியை, இலவசமாக பாவமன்னிப்பு மற்றும் நித்திய வாழ்வின் பரிசாக வழங்குகிறார்.
இந்த சுவிசேஷத்தை, இயேசுவின் இந்த நற்செய்தியை இன்று நீங்கள் கேட்பதை நாத்தான் விரும்புவார், ஏனெனில் அது விசுவாசிக்கிற அனைவருக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு தேவனுடைய வல்லமையாயிருக்கிறது (ரோமர் 1:16). நாத்தான் அதை விசுவாசித்தார். அவர் தன் விசுவாசத்தை அறிக்கையிட்டதை என் எண்ணிக்கையைவிட அதிகமான முறை நான் கேட்டதால் அவர் விசுவாசித்தார் என்று எனக்குத் தெரியும். கிறிஸ்துவையும், அவர் அன்பையும் அறிந்துக்கொள்ள தன் மனைவியும் பிள்ளைகளும்கூட விசுவாசமாக தேவாலயத்திற்கு அழைத்து வந்தார். மிக சமீபத்தில், பாஸ்டன் நகரில், தன் மருத்துவமனைப் படுக்கையில் இருந்து நாத்தான் கிறிஸ்துவை அறிக்கை செய்தார். அவர் மனைவி திருமதி ஆஷ்லே இதற்கு சான்று. நாங்கள் கடவுளைத் துதித்துப் பாடியப் போது இயேசுவின் மீதான தனது விசுவாசத்தை அவர் வாயசைத்துக்காட்டினார். மேலும் அவர் தனது விரல்களை வாயில் வைத்து, பல ஆண்டுகளாக அவரை பாதுகாத்து, பலப்படுத்திய, ஜீவ அப்பமாகிய ஆண்டவரின் திருவிருந்தைக் கேட்டுப்பெற்றார். ஆம், இயேசு கிறிஸ்துவின் இந்த நற்செய்தியை அவரது வாழ்நாள் முழுக்கவும், இறுதி வரையிலும் நாத்தான் விசுவாசித்தார். மேலும் நாத்தான் நீங்கள் உங்களுக்காகவும் இதை விசுவாசிக்க விருப்பம் கொள்வார். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலெயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வாரான்”, என இயேசு கூறுகிறார் (யோவான் 14:6). இதில் நம்பிக்கை கொள்ளாமல், நீங்கள் இதிலே பயனடைவதில்லை. ஆனால் விசுவாசித்தால், நீங்கள் பயனடைகின்றீர்கள்! எனவே, இயேசு உங்களுக்காகவும் உலகில் வந்தார் என்று நம்புங்கள். நாத்தானைப் போன்று அவருடைய சிலுவையை நோக்கிப் பாருங்கள், உங்கள் இதயங்கள் கலங்காமல் இருக்கும். கடவுளை நம்புங்கள்; உங்களுக்காக மரித்த உங்கள் இரட்சகராகிய இயேசுவையும் நம்புங்கள். நாத்தானைப் போல உங்கள் பலவீனத்தில் பெருமைப்பாரட்டுங்கள்.
எனவே, அவரது மரணத்தின் பலவீனத்திலும் நாத்தான் பெருமைப்படுவதற்கு அதுவே முதல் காரணம்: இன்று நீங்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்க இது வாய்ப்பளிக்கிறது. அது என்ன ஒரு அருஞ்சிந்தனை! நாத்தான் அவர் தனது சொந்த இறுதி யாத்திரையிலும்கூட இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இன்னும் அறிக்கைச் செய்துக்கொண்டிருக்கிறர்.
நாத்தான் அவர் மரணத்தின் பெலவீனத்தில் பெருமைப்படுவதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. அவருக்கு அத்தகைய நம்பிக்கையை இயேசுவின் நற்செய்தி ஏன் கொடுத்தது என்று சொல்லும் காரணம். அது ஏன் உங்களுக்கும் விசுவாசிக்கும் அனைவருக்கும்நிச்சயமான நம்பிக்கையைத் தருகிறது என்பதின் காரணம். அது இந்த சத்தியம்தான்: இயேசு தாம் வாக்களித்தபடியே நாத்தானுக்கு நித்திய ஜீவனைக் அளித்திருக்கிறார். இத்தருணமே, நாத்தானின் ஆத்துமா இயேசுவுடன் பரதீஸில் உள்ளது. மேலும் என்னவெனில், இயேசு ஜீவிப்பதனால், நமது மீட்பர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினால், நாத்தானும் அவரது உடலில் வாழ்வார். பலவீனத்தில் பூமிக்குள் அழியக்கூடியதாய் விதைக்கப்பட்ட அவருடய அந்த உடல், அழிவில்லாத உடலாய் வல்லமையில் எழுப்பப்படும் (1கொரிந்தியர்15:42-43). ஆகவே, நான் இங்கே பேசுக்கொண்டிருக்கும்போதே, நம்முடைய கர்த்தருடைய வல்லமை பரிபூரணமாய் விளங்கியதையும், அவருடைய உடல் மீண்டும் எழுந்து நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பும் உங்கள் அனைவருடனும் இருக்கும் என்பதையும் நன்கு அறிந்தவராய், நாத்தான் பரலோகத்தில் அவருடைய மரணத்தின் பலவீனத்தில் மேன்மைபாராட்டிக்கொண்டிருக்கிறார்.
நாத்தான் இங்கே பூமியில் மரணத்தை எதிர்த்துப் பழகினார். பிரசங்கத்திற்கு சற்று முன்பு நாம் பாடிய பாடல் அவருடைய நடைமுறையாக இருந்தது. இங்கே திரித்துவ ஆலயத்தில் அவர் நம்மோடும், அவர் மனைவி ஆஷ்லே, பிள்ளைகள் லில்லி மற்றும் நோவா ஆகியரோடும் பலமுறை பாடியுள்ளதை மீண்டும் கேளுங்கள். நாத்தான் புன்னகையோடே சொல்வதை கற்பனை செய்து பாருங்கள்:
மரணமே, என் மகிழ்ச்சியை உன்னால் முடிக்க முடியாது:
நான் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றவன்!
நான் இறக்கும் போது, எல்லா சோகங்களையும் விட்டு விடுகிறேன், பரலோகத்தைப் பெறுவதற்கு!
நான் தூசியிலும் சாம்பலிலும் கிடந்தாலும்
நம்பிக்கையின் உறுதி பிரகாசமாய் ஒளிர்கிறது:
ஞானஸ்நானத்திற்கு தெய்வீக பலம் உண்டு,
என் வாழ்க்கையை அழியாததாய் மாற்ற.
ஒப்பிட மதிப்பானது எதுவும் இல்லை,
இந்த ஆயுள் நீண்ட ஆறுதலின் நிச்சயத்தை!
விரிந்தக் கண்களுடன் என் கல்லறை உற்று நோக்குகிறது;
அங்கேயும் நான் பாதுகாப்பாய் உறங்குவேன்.
என் சதை அதன் எழுப்புதலுக்காய்க் காத்திருந்தப்போதிலும்,
இன்னும் என் ஆன்மா தொடர்ந்து துதிக்கிறது:
நான் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றவன்;
நான் பரலோகத்தின் குழந்தை!
ஆம், ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவராக நாத்தான் மரணத்தின் கண்களைப் பார்த்து, யோபுவுடன் சேர்ந்து சொல்லலாம்:
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும்
நான் அறிந்திருக்கிறேன்.
இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து கடவுளைக் காண்பேன்.
அவரை நானே பார்ப்பேன்; அந்நியக் கண்கள் அல்ல,
என் கண்களே அவரைக் காணும்.
இயேசு அவரது வாக்குறுதிகளில் உண்மையுள்ளவர் என்பதால் நாத்தான் தனது மரணத்தின் பலவீனத்தில் பெருமைப்பாரட்டலாம். “பலவீனத்தில் என் இறைவனின் வல்லமை பரிபூரணமாகிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் அதைக் கண்டேன். இப்போது என் மரணத்தின் பலவீனத்திலும் நான் அதைக் காண்கிறேன்” என்று மரணத்தின் பலவீனத்தைப் பற்றி நாத்தான் கூறலாம். மேலும், “கடவுளிடமிருந்து, ஆஷ்லேயிடமிருந்து, லில்லியிடமிருந்து, நோவாவிடமிருந்து, என் பெற்றோரிடமிருந்து, என் உடன்பிறந்தவர்களிடமிருந்து, என் நண்பர்களிடமிருந்து, அல்லது நம் அனைவருக்காகவும் மரணத்தை தோற்கடித்த இயேசு கிறிஸ்துவை நம்பும் எவரிடமிருந்தும் மரணத்தால் என்னை பிரிக்க முடியாது!” என்று நாத்தான் கூறலாம்.
ஆகவே, நாத்தானின் பலவீனம் உண்மையில் அவருடைய பலம் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அப்படித்தான் உங்களுடயதும். தனது குறுகிய வாழ்வில் உங்கள் மீது இவ்வளவு அன்பை செலுத்திய ஒரு கிறிஸ்தவ மனிதரை நினைத்து இன்று நீங்கள் கண்ணீர் விட்டு அழுகிறீர்கள். திருமதி ஆஷ்லே நாத்தான் அவர்களே, நீங்களும் கண்ணீர் சிந்துகின்றீர்கள் ஏனென்றால், நாத்தான் உங்களுக்கும், கிறிஸ்துவைப் போன்ற தன்னை ஈந்தளிக்கிற கணவராக இருந்தார். அவரை நீங்கள் மிகவும் இழக்க நேரிடும். லில்லி மற்றும் நோவா, உங்கள் தந்தை, உங்கள் பரலோகத் தந்தையைப்போல உங்களை நேசித்ததால் நீங்கள் கண்ணீர் விடுகிறீர்கள். நீங்களும் அவருடைய அன்பை இழப்பீர்கள். அவருடய பெற்றோர்கள் திருவாளர் கெவின் மற்றும் திருமதி டெபி, உங்கள் மகனின் வாழ்க்கையில் அவர் இறைமகனின் அன்பை எவ்வாறு வெளிப்படுத்தினார், அவ்ருக்காக தன்னைக் கொடுத்த அவ்ர் மீதான விசுவாசம் எப்படி பாய்ந்தோடியது என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததால் நீங்கள் கண்ணீர் வடிக்கிறீர்கள்.
நானும் கண்ணீர் சிந்துகிறேன், ஏனென்றால் அவர் எனக்கு அளித்த ஊக்கத்தை நான் இழக்கிறேன். கடவுள் முதலில் அவரை நேசித்ததால், நாத்தான் நேசித்த அவர் மனைவி, அவரது குழந்தைகள், அவரது பெற்றோர், அவரது உடன்பிறப்புகள், அவரது மாமியார், அவரது நண்பர்கள், அவர் நேசித்த அவரது அன்புக்குரியவர்கள் அனைவரும் சிந்தும் கண்ணீர் பலவீனமாக இருக்கலாம். ஆனால் உங்கள் இறைவன் எப்படி கண்ணீர் விட்டு அழுதார் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். ஆனாலும்,
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; மேலும் உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் ஒருக்காலும் இறக்கமாட்டான்”, என அவர் கூறினார் (யோவான் 11:25–26).
இயேசு உங்களிடமும் விசுவாசம் கொண்ட அனைவரிடமும் அனுதாபம் காட்டுவது மட்டும் இதன் பொருளல்ல, அவர் உங்கள் முகத்தின் கண்ணீரையெல்லாம் ஒரு நாள் துடைத்துவிடுவார் என்று சத்ய வாக்களிக்கிறார். அவர் உங்களையும் உங்கள் பலவீனத்திலிருந்து எழுப்புவார். எனவே, நீங்களும் நாத்தானைப் போன்று பெருமைப்பாராட்டலாம். ஏனென்றால், இயேசு நாத்தானுக்காகவும், உங்களுக்காகவும், இடத்தை ஆயத்தம் செய்த தம்முடைய பிதாவின் வீட்டிற்கு உங்களைக் கொண்டுவருவார். நீங்கள் நாத்தானை மீண்டும் பார்ப்பீர்கள். நீங்கள் அவரை மீண்டும் அரவணைப்பீர்கள். மேலும் நீங்கள் அவருடன் பரிபூரண அன்புடன் நமது இறைவனுடன் என்றென்றும் வாழ்வீர்கள்.
அந்த மகத்தான நாள் வரை, நமது இறைவனின் கிருபை உங்களுக்கு போதுமானது. நாத்தானுடய, உங்களுடைய, பலவீனங்களில் அவருடய வல்லமை பரிபூரணமாய் விளங்குகிறது. இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனும் என்கிற, விசுவாசம் கொண்ட அனைவருடைய பலவீனங்களிலும் அவருடய வல்லமை பரிபூரணமாய் விளங்குகிறது.
இயேசுவின் திருப்பெயராலே. ஆமென்.
பிரசங்கம் 5.
“வர்ஜீனியாவை சந்தியுங்கள், இயேசுவை சந்தியுங்கள்”
(1 தெசலோனிக்கேயர் 4:13-18)
திருமதி வர்ஜீனியாவின் அன்பான குடும்பமே, அன்பான நண்பர்களே, கிறிஸ்துவில் அன்பான சகோதர சகோதரிகளே:
நம் பிதாவாகிய கடவுளிடமிருந்தும், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு கிருபை, இரக்கம் மற்றும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.
தொண்ணூறு வருடங்களின் பிற்பகுதியில் “மீட் வர்ஜீனியா” என்கிற பாப் இசைப் பாடல் இருந்தது. நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், திருமதி வர்ஜீனியா அவர்களை சந்திக்க செல்லும்போதெல்லாம் எனக்கு இந்த பாடல் தலைக்குள் சிக்கிக்கொள்ளும். நான் சந்தித்த வர்ஜீனியா என்ற பெயர் கொண்ட முதல் பெண்மனி அவர்கள்தான். எனவே பாடலில் உள்ள, “நான் வர்ஜீனியாவை சந்திக்க காத்திருக்க இயலாது…” என்கிற வரி நான் அவர்களைப் பார்க்கச் சென்றபோது என் காதுகளில் அவ்வப்போது ஒலித்தது.
அது உண்மையாகவும் இருந்தது. பல ஆண்டுகளாக வர்ஜீனியா அவர்களைச் சந்திக்க ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருப்பேன். முதலில் தேவாலயத்தில், பின்னர் அவர்களுடைய வீடு, பின்னர் லுத்தரன் முதியோர் இல்லத்தில் அவர்களுடைய அறையில் காத்திருப்பேன்.
அவரது குடும்பத்தினராகிய நீங்கள், குடும்ப நிகழ்வுகளில் வர்ஜீனியா அவர்களைச் சந்திக்க காத்திருக்க நிச்சயமாக முடிந்திருக்காது. ஏனென்றால் அவர்கள் ஒரு விசுவாசமான குடும்ப அங்கத்தினராக, பக்தியுள்ள தாயாக, பாட்டியாக, சிறப்பு நிகழ்வுகள் அனைத்திலும் தான் கலந்துக்கொள்வதை எல்லா வகையிலும் உறுதி செய்பவர்களாக பல தசாப்தங்களாக இருந்தார்கள். அவர்கள் உங்கள் அனைவரையும் முற்றிலும் நேசித்தார்கள். பல ஆண்டுகளாக தன் அறை சுவர் முழுக்க பிரதானமாய் கண்ணில்படும்படி வைத்திருந்த அவர் பேரக்குழந்தைகளின் படங்கள் அதை நன்றாக நிரூபித்தது. அந்த படங்களைப் பார்த்து, உங்களைக் குறித்தும், உங்களுக்காகவும், உங்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்காகவும், அவர் உங்களை கடைசியாக எப்போது பார்த்தார் அல்லது மீண்டும் எப்போது பார்க்கப் போகிறார் என்பதைப் பற்றி பேசுவது வழக்கமாக இருந்தது.
ஆகவே, வர்ஜீனியா அவர்கள் தனது பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை, கொள்ளுப் பேரப்பிள்ளைகளை மற்றும் ஏனைய குடும்ப மக்களை சந்திப்பதை விரும்பினார் என்பது தெளிவாகிறது, மாத்திரமல்ல, நீங்களும் அவரை சந்திக்க வெகுவாய் விரும்பினீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
திரித்துவ லுத்தரன் திருச்சபையில் இருக்கும் எங்களுக்கும், அவர்களைச் சந்தித்தது களிப்பாய் இருந்தது. அவர் கனிவோடு பல ஆண்டுகள் கற்பித்த ஞாயிறு மற்றும் மத்திய வார பாடசாலைகளில் சிறு பிள்ளைகள் வர்ஜீனியா அவர்களை சந்திப்பார்கள். பாடற்குழுவிலிருந்த அவரது சக பாடகர்கள் பாடற்பயிற்சிக்காக வர்ஜினியாவை சந்திப்பார்கள்,அவர்களின் குரல்கள் மூலம் கடவுளுக்கு மகிமை செலுத்துவார்கள். சபையின் பெண்கள் பலர்
லுத்தரன் மகளிர் ஊழியக் குழு (Lutheran Women Missionary League) சார்பில் நடைபெறும் வேத ஆராய்ச்சி மற்றும் குழுமுதலுக்காக வர்ஜினியாவை சந்திப்பார்கள்.
வர்ஜினியா அவர்கள் சிறுவயதில், தன் கணவர் திரு. எல்வினுடன், பிறகு முழுக் குடும்பமாக, பின்னர் தனியாக, பின்னர் லுத்தரன் முதியோர் இல்லத்தின் வழிப்பாடுகளில், பல வருடங்களாக கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் கேட்டு வந்ததினால், விசுவாசிகள் தேவாலயத்தில் வர்ஜீனியாவை சந்திப்பார்கள்.
இந்த இறுதிப் பகுதியில், வர்ஜீனியாவைச் சந்திப்பதற்காக, நாம் நமது இறைவனின் வார்த்தையைச் சுற்றிக் கூடிவருகிறோம். அவர்களுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக இது இருக்கிறது. இது ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான பகுதியாகும். ஏனெனில், வர்ஜீனியா அவர்களும் மற்றும் அனைத்து விசுவாசிகளும் இப்படித்தான் நமது நல்மேய்ப்பரான இயேசுவை சந்திக்க வருவார்கள். மேலும் ஏன் இது மிகவும் முக்கியமானது என்றால், இயேசுவை வர்ஜீனியா சந்திக்காமல் அவரைத் தன் நல்ல மேய்ப்பனாகக் கொண்டிருக்கவில்லை என்றால், அவர் அலைந்து திரிகின்ற ஆடாகவே இருந்திருப்பார். அன்றியும், நம் அனைவருக்கும் அதுவே உண்மை. “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்” (ஏசாயா 53:6), என ஏசாயா நமக்கு நினைவூட்டுகிறார். வழிதப்பித் திரிவதுதான் பாவம். பாவம் ஆங்காங்கே சில தவறுகளை செய்வது மாத்திரம் அல்ல. மாறாக, கடவுளை விட்டுத் திரும்பி, வழி விலகி நடப்பதே பாவம். பாவம் என்பது அவருடைய வழிக்கு பதிலாக உங்கள் வழியைத் தேர்ந்தெடுப்பது.
மிகவும் மோசமானது என்னவென்றால், நம்முடைய நல்ல மேய்ப்பரான இயேசுவை சந்திக்க நாம் தவறினால் காணாமல் போன ஆட்டுக்குட்டிகளாகவும், மரணத்தை நோக்கிச் செல்லும் பாவிகளாகவும் இருப்போம். பாதுகாப்பற்ற மேய்ச்சலில் வெளிப்படும் ஆடுகளை ஒரு ஓநாய் கவ்வுவதுபோல பிசாசு நம்மை விழுங்குவான், அவனுடன் சேர்ந்து நாமும் நித்தியமாக அழிந்து போவோம். ஆம், இயேசுவை சந்திக்க வராமல் இருந்திருந்தால், வர்ஜீனியா அவர்களுக்கும் அது நடந்திருக்கும்.
எனவே, வர்ஜீனியாவின் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக இருந்தது, நம்முடைய நல்ல மேய்ப்பரான இயேசுவைச் சந்திக்க அவர் கர்த்தருடைய வார்த்தையைச் சுற்றிக் கூடிவந்தது, என்பது மறுக்க இயலாதது. அவர்களுக்கும், தம் மந்தையிலுள்ள மற்ற எல்லா ஆடுகளுக்கும் இயேசு அவரை சந்திக்கும் நோக்கத்தை குறிப்பிட்டுச் சொல்கிறார். மீண்டும், அவர் கூறுகிறார்:
என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன, நான் அவற்றை அறிவேன், அவைகள் என்னைப் பின்பற்றுகின்றன. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழியாது. என் கையிலிருந்து யாரும் அவற்றைப் பிடுங்க மாட்டார்கள். அவற்றை எனக்குக் கொடுத்த என் பிதா, எல்லாரையும் விட பெரியவர். தந்தையின் கையிலிருந்து அவர்களை யாரும் பறிக்க இயலாது.
அலைந்து திரிந்த ஆடுகளை சேர்த்து, அவைகளை அவருடைய சொந்தமாக அழைக்கும் நல்ல மேய்ப்பர் இயேசு. அவர் தனது குரலால், அதாவது அவருடைய வார்த்தையால், “என்னுடன் நெருக்கமாக இருங்கள், நான் உங்களை பாவம், மரணம் மற்றும் பிசாசு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பேன். நான் உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பேன், நீங்கள் கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் நானும், எல்லாரையும் விட வல்லமை வாய்ந்த என் பரலோகத் தந்தையும் உங்களை எங்கள் கைகளில் உறுதியான பிடியில் வைத்திருக்கிறோம்” எனக் கூவியழைக்கிறார். நல்ல மேய்ப்பனாகிய இயேசுவின் ஆடுகள் இந்த மகிமையான அவருடைய வார்த்தைக்கேட்டு அதை விசுவாசிக்கின்றன. வர்ஜீனியா இந்த வார்த்தையைக் கேட்டு அதை விசுவாசித்தார்; வாழ்நாள் முழுவதும் நல்ல மேய்ப்பனின் இந்த குரலை கேட்டுக்கொண்டிருந்து, இயேசுவைச் சந்தித்து தீமைகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை அவர் நம்பினார்.
ஆம், வர்ஜீனியா தன்னை இயேசு அறிந்திருப்பதை நம்பினார். இயேசு அவர்களை அறிந்திருந்தார், ஏனெனில், அவர் அவர்களுடைய எல்லா பாவங்களையும் அவர் மீது சுமந்துகொண்டு அவர்களுக்காக இறந்தார். அவர் அந்த பிசாசு என்கிற ஓநாயை அவரை சிலுவையில் விழுங்க அனுமதித்தார். ஆனால் அவர் பிசாசை தோற்கடிக்க இறந்தார். வர்ஜீனியாவிற்காகவும், மற்றும் முழு உலகத்திற்கும், பாவம், மரணம் மற்றும் பிசாசை வென்று, வெற்றியுடன் உயிர்த்தெழுந்தார். இது இவ்வாறு செயல்படுகிறது: பிசாசின் சக்தி உலகத்தை பாவத்திற்குள் வழிநடத்துவது. அவனுக்குப் பின் வழிதப்பின ஆடுகளைப் போல நம்மை அலையச் செய்து மரணத்திற்கும், நரகத்திற்கும் உள்ளாக்குவது. ஆனால், இயேசு அந்த சக்தியை முறியடித்தார். இப்போது, நமக்கு பதிலாக நம் மரணத்தை அவர் ஏற்றுக்கொண்டதன் வழியாய், நம் பாவங்களை மன்னிக்கிறார்.
இப்போது, அவர் நமக்கு நித்திய ஜீவனைப் பரிசாகக் கொடுக்கிறார் அவரிடமிருந்தும் அவரைப் பற்றிக் கொண்டவர்களிடமிருந்தும் பிசாசு திருட முடியாது. இப்போது அவருடைய குரலைக் கேட்டு, நம்பி, இறுதிவரை அவரைப் பின்பற்றும் அனைவரின் எதிர்காலம் பரலோகமே.
இவை அனைத்தும் வர்ஜீனியாவுக்கு நிச்சயமான உண்மை. அவர்கள் நல்ல மேய்ப்பனின் ஆடாக இருக்கிறார்கள். அவர்கள் அவருடைய குரலைக் கேட்டார்கள், ஆரம்பத்திலிருந்தே, அவர்களுடைய ஆத்துமா இப்போது பரலோகத்தில் வசிக்கும் விதமாக, அவரை நம்பினார்கள். இது எனக்குத் தெரியும் ஏனென்றால் அவருடைய இந்த உலக வாழ்க்கையின் கடைசி நாள் வரை இயேசுவின் வார்த்தையை அவர்களுக்குப் பிரசங்கிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. வர்ஜீனியா தனது பாவத்தை அறிக்கையிடுவார், மன்னிப்பு பெறுவார்,
இயேசு தனக்காக தம்முடைய உயிரைக் கொடுத்து, அதை மீண்டும் எடுத்துக்கொண்ட அவர்களுடைய நல்ல மேய்ப்பன் என்று பிரகடனம் செய்வார். புனித ஞானஸ்நானத்தின் அமைதியான தண்ணீருக்குள் அவர்களை அழைத்துச் சென்று அவர்களை தனது ஆடாக உருவாக்கிய ஆண்டவர் தன்னுடைய மேய்ப்பன் என்பதில் ஆறுதல் பெற்றார்கள். அவர்கள் பரலோகத்தின் பசும் மேய்ச்சலை அடையும் வரை அவர்கள் உடலையும் ஆன்மாவையும் போஷிக்க, அவர்கள் ஆண்டவரின் சரீரத்தையும், இரத்தத்தையும் பெற்ற இடத்தில் அவர் அவர்களுக்காக ஒரு பந்தியை ஆயத்தம் செய்ததில் பேரானந்தமடைந்தார்கள். அவருடைய வார்த்தையில் நம்பிக்கை வைத்து வர்ஜீனியா இயேசுவை சந்திக்க வருவார்கள், மேலும், இக்காரணத்தினாலேயே அவர் இறந்தபோது அவரது ஆத்துமா முகமுகமாய் இயேசுவை சந்திக்க நேர்ந்தது.
மேலும், நீங்கள் வர்ஜீனியாவை மீண்டும் சந்திக்க விரும்பினால், நீங்களும் இயேசுவை சந்தியுங்கள். அவரது குரல் ஒலிப்பது இன்று மட்டுமல்ல. அவரது குரல் பிரசங்க மேடைகளில் இருந்து இப்படி ஒரு வாரம் வாரமாய் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அலையும் ஆடுகளை மந்தையில் சேர அல்லது மீண்டும் திரும்பிவர அவர் குரல் இன்னும் அழைத்துக்கொண்டேயிருக்கிறது. கடவுளிடமிருந்து விலகி, சொந்த திட்டங்கள்படி நடப்பதை நிறுத்தி, உங்களுக்கு சிறந்ததைக் காட்டும் நல்ல மேய்ப்பனை அண்டிச்சேர அழைக்கிறார். அவரைப் பின்பற்ற அழைக்கிறார். ஏனென்றால், “நான் உங்களுக்கும் நல்ல மேய்ப்பன், உங்களுக்காகவும் என் உயிரைக் கொடுத்தேன். உங்கள் பாவங்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் முழுமையாக, இலவசமாக மன்னிக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் அவற்றை என் மீது ஏற்றுக்கொண்டு அதற்கான விலையைச் செலுத்தினேன். உங்களுக்காக நான் பிசாசை தோற்கடித்தேன். நித்திய ஜீவனை உங்களுக்குத் தருகிறேன். இது உங்களுக்கும் கூட, அதை நம்புங்கள்” என்று இயேசுவின் குரல் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. “உங்கள் ஞானஸ்நானத்தின் வாக்குறுதியைப் பற்றிப்பிடித்தப்படி என்னைப் பின்தொடருங்கள். வெள்ளை உரோமம் உடுத்திய ஆடு (white wooled sheep) என்று உங்களை அழைக்கும் நல்ல மேய்ப்பனின் ஆடுகள் நீங்கள். நல்ல மேய்ப்பனின் பேரில் கொண்ட விசுவாசத்தின் மூலம் கடவுளின் பார்வையில் நீதியும் பரிசுத்தமுமானவர்கள். எனது மந்தையில் சேருங்கள். என் தேவாலயத்தின் மேய்ச்சல் நிலத்தில் எனது வார்த்தைகளை தவறாமல் உண்பதில் பங்கு பெறுங்கள்”, என இன்று இயேசு உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறார்.
மேலும் இயேசுவின் இந்த குரலை விசுவாசத்துடன் கேட்கும் அனைவருக்கும் நித்திய ஜீவ வரம் உள்ளது. பரலோகத்தில் மீண்டும் வர்ஜீனியாவை சந்திப்பார்கள். ஆம், அவருடைய ஆன்மா இப்போது அவர் கணவர் எல்வின், அனைத்து புனிதர்கள் மற்றும் தேவதூதர்களுடன் பரலோகத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆனால் கடைசி நாளில், இப்போது இங்கே உறங்குகின்ற அவரின் இந்த உடல் விழித்துக் கொள்ளும். அவர் கிறிஸ்துவுக்குள் மரித்தார், இதன் பொருள், கிறிஸ்து திரும்பி வரும்போது, வர்ஜீனியாவின் உடல் ஒவ்வொரு தலைமுறையின் அனைத்து விசுவாசிகளுடனும் அழியாமையில் எழுப்பப்படும். மேலும், நல் மேய்ப்பரில் நம்பிக்கை கொண்டு இன்னும் உயிருடன் இருக்கும் அனைவரும் கூட ஒரு நொடியில் அழியாத உடல்களாக மாற்றப்படுவார்கள். பின்னர், நாம் அனைவரும் மேகங்கள் மேல் எடுத்துக்கொள்ளபட்டு ஆகாயத்தில் “கர்த்தரைச் சந்திப்போம்,அதனால் நாம் எப்போதும் ஆண்டவருடன் இருப்போம்” என புனித பவுல் நமக்குத் தெரிவிக்கிறார். என்ன ஒரு மகத்தான எதிர்காலம் நல்ல மேய்ப்பனின் மந்தைக்கு உள்ளது! நாம் இயேசுவை சந்திப்பது எவ்வளவு நிச்சயமோ, அதே நிச்சயத்தில் நாம் மீண்டும் வர்ஜீனியா அம்மையாரை சந்திப்போம். “எனவே இந்த வார்த்தைகளால் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்.”
இயேசுவின் திருப்பெயராலே. ஆமென்.
பிரசங்கம் 6.
” ஜார்ஜின் வாழ்வில் மிக முக்கியமான நாள் “
(ரோமர் 6:3-5)
திருவாளர் ஜார்ஜ் அவர்களின் அன்பான குடும்பத்தாரே, குறிப்பாக திருமதி பவுலின் ஜார்ஜ் அவர்களே, அன்பான நண்பர்களே,
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே:
நம் பிதாவாகிய கடவுளிடமிருந்தும், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு கிருபை, இரக்கம் மற்றும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.
திருவாளர் ஜார்ஜ் அவர்கள், தமது வாழ்க்கையில் டிசம்பர் 7, 1941 மிக முக்கியமான நாள் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் என்னிடம் கூறினார். இரண்டாம் உலகப் போரில் பேர்ல் ஹார்பர் (Pearl Harbour) துறைமுகம் மீது தாக்குதல் நடந்து, அமெரிக்காவை உலகப்போரில் ஈடுபடுத்திய தினம் என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த நாள் ஜார்ஜுக்கு இன்னொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில், நாட்டின் எதிரிகள் அமெரிக்க பசிபிக் துறைமுகத்தின் நீரில் கடற்படையை அழித்த நாளில், நமது சர்வவல்லமையுள்ள கடவுள் ஜார்ஜின் எதிரிகளாகிய பாவம், மரணம் மற்றும் பிசாசு இவற்றின் சக்தியை புனித ஞானஸ்நானத்தின் நீரில் அழித்தார்.
மேலும், அது நடைபெறத் தேவையாயிருந்தது. ஏனெனில், அது நிகழ்ந்ததால்தான் திரு. ஜார்ஜ் அவர்களை ஒரு கிறிஸ்தவ மனிதராக நாம் அறிவோம். கடந்த 53 வருடங்களுக்கு மேலாக அன்பு செலுத்தும் கணவனாக, விசுவாசமுள்ள தந்தையாக, பாட்டனாராக இருந்திருக்கிறார். வாழ்நாள் முழுதும் இத்திருச்சபையின் அங்கத்தினராக இருந்து, பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, அநேக நன்மைகள் செய்திருக்கிறார். உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் திருப்பணிகளுக்கும் ஆதரவு தந்திருக்கிறார். திருவாளர் ஜார்ஜ் அவர்களை ஒரு கிறிஸ்தவ விவசாயியாக, தன் குடும்பத்தை நேசிப்பவராக, நிலத்தை, வயலை நேசிப்பவராக, அவற்றை பல தசாப்த ஆண்டுகளாக, நல்ல நாட்களிலும், போறாத நாட்களிலும் விளையச்செய்த, பெருகச்செய்த இறைவனை நேசிப்பவராக இருந்தார். ஆனால், ஜார்ஜ் அவர்கள் நாம் அறிந்த இந்த அன்பையும், அர்ப்பணிப்பையும் செலுத்தியக் காரணம், அவர் கடவுளின் அன்பை இயேசு கிறிஸ்துவில் முதலில் அறிந்திருந்தார். கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் பெற்ற பரிசுத்த ஞானஸ்நானத்தில், கடவுள் இந்த அன்பை ஊற்றினார் என ஜார்ஜ் அறிந்திருந்தார். ஆம், தமக்கு ஞானஸ்நானம் நடைப்பெற வேண்டும் என ஜார்ஜ் அறிந்திருந்தார். அது நடைப்பெற்ற நாளை அவர் போற்றினார்.
ஏன்? ஏனென்றால், தாம் ஒரு பாவி என்றும், அதைக்குறித்து தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஜார்ஜ் நம்பினார். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதையும், அவரால் இதைக்குறித்தும் ஒன்றும் செய்ய இயலாது என்றும் ஜார்ஜ் அறிந்திருந்தார். இன்று நாம் அனைவரும் இங்கு இருப்பது அதை உறுதிப்படுத்துகிறது. தனக்கு ஒரு இரட்சகர் இல்லாவிட்டால், கடவுள் அவருடைய பயங்கரமான, தீவிரமான சூழ்நிலையில் ஏதாகிலும் செய்யாவிட்டால், மறுபுறம் சென்று கடவுளை நேருக்கு நேர் சந்திக்கும் இறுதி வேளையில் தண்டனை மட்டுமே வருங்காலத்தில் எஞ்சியிருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அது வெளியில் உள்ள அனைவருக்கும், இங்குள்ள நீங்களும், நானும் உட்பட, அனைவருக்கும் அது உண்மையானது என ஜார்ஜ் அறிந்திருந்தார்.
எனவே, ஜார்ஜ் தனது ஞானஸ்நானத்தைப் போற்றினார். ஆம், அமரிக்க நாடு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி எதிரி தாக்கிய நாளை நினைத்தப்போது, ஜார்ஜ் அவர்களால் தமது ஞானஸ்நானத்தை நினைவுக்கூர முடிந்தது. கடவுள் அவரது எதிரிகளைத் தாக்கி அவருக்காக அவர்களை வென்றார். ஏனெனில் பரிசுத்த ஞானஸ்நானத்தில் கடவுள் அதைத்தான் செய்கிறார். ஞானஸ்நானத்தின் வழியாய் கிறிஸ்துவின் மரணத்தில் ஒன்றிணைப்பதன் மூலம் அவர் அவ்வாறு செய்கிறார். கிறிஸ்து நம் அனைவருக்காகவும், நம் குற்றத்தை சுமந்து, நம் பாவத்திற்கான தண்டனையை அனுபவித்து ஒரே முறை மரித்த மரணம் அது. கிறிஸ்து தம்முடைய நீதியுள்ள வாழ்வை, நம்முடைய பாவமுள்ள வாழ்வுக்கு ஈடாக ஒப்புக்கொடுத்து, நம்முடைய ஒவ்வொரு பாவத்திற்கும் பரிகாரம் செய்த மரணம் அது. நம்முடைய மரணத்தின் இடத்தில், தான் இருந்து, நம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பிசாசின் சக்தியைப் பறித்த மரணம் அது. “கிறிஸ்துவின் நீதியினால் நான் உங்கள் பாவத்தை மூடுகிறேன். அவருடைய இரத்தத்தால் உங்கள் பாவங்களைக் கழுவுகிறேன். அவருடைய மரணத்தில் நான் உங்களை இணைத்து, அவருடைய மரணம் நிறைவேற்றின பாவ மன்னிப்பு, பிசாசுக்கு எதிரான வெற்றி மற்றும் மரணத்தின் தோல்வி அனைத்தையும் உங்களுக்குச் செயல்படுத்துகிறேன்” என பரிசுத்த ஞானஸ்நானத்தில் (திருமுழுக்கில்) கடவுள் நமக்கு கூறுகிறார், ஜார்ஜ் அவர்களிடமும் கூறினார்.
எனவே, ஜார்ஜ் தனது ஞானஸ்நானத்தைப் போற்றினார். ஏனென்றால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குள் கடவுள் நம்மை ஒன்றுசேர்ப்பதினாலும் கூட, அவர் அதை போற்றினார். பேர்ல் ஹார்பர் தாக்குதல், அமெரிக்க நாட்டை எதிரிகளுக்கெதிராய் எழுப்பியது. திருமுழுக்கு நமது ஆவிக்குரியவைகளுக்கு நம்மை எழுப்புகிறது. பாவமும் சாத்தானும் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆள முயற்சி செய்து நம்மை மரணம் மற்றும் நரகத்திற்கு அவைகளுடன் அழைத்துச் செல்கின்றன. ஆனால் ஜார்ஜ் தனது வாழ்நாள் முழுவதும் தனது ஞானஸ்நானத்தைப் போற்றினார், ஏனெனில், அதில் தமக்கு கிறிஸ்துவுக்குள் புது வாழ்வு இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு நாளும் ஜார்ஜ் அந்த புதிய வாழ்க்கைக்கு எழுந்தார். அவருடைய எதிரிகளை வென்ற கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இருந்து வலிமையைப் பெற்றார்.
ஜார்ஜ் அவர்கள் பல தசாப்த வருடங்களாக தனது பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்பு பெற திரித்துவ லுத்தரன் திருச்சபை வழிப்பாட்டிற்கு வந்து, அவரது இரட்சகரின் வாக்குறுதிகள் மூலம் தம்முடைய விசுவாசத்தை பலப்படுத்தி, ஒவ்வொரு வாரமும் அந்த புதிய வாழ்க்கைக்கு எழுந்தார். இந்த புதிய வாழ்க்கை ஜார்ஜில் அந்த அன்பை உருவாக்கியது என நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் உணர்ந்து மகிழ்ந்த அந்த அன்பு, கடவுள் நம்முடைய இரட்சகராகிய அவருடைய குமாரன் வழியாய் ஜார்ஜ்மீது கொண்ட அன்பை அவர் விசுவாசித்த விசுவாசத்தின் பலன். கடவுள் கிறிஸ்துவில் காட்டிய அன்பு ஜார்ஜ் அவர்களுக்கு நம்பிக்கையையும் உருவாக்கியது. கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த நிச்சயத்தைப் போலவே, அவர் மேல் நம்பிக்கை வைத்த ஜார்ஜும் உயிர்த்தெழுவார் என்பது உறுதி. ஜார்ஜ் தனது ஞானஸ்நானத்தை போற்றினார், ஏனெனில் அது அவரை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் ஒன்றிணைத்து, அவருக்கு நித்திய ஜீவனை உடலிலும் ஆத்துமாவிலும் பெற உறுதியளிக்கிறது.
அந்த நித்திய ஜீவனை அவர் இப்போது ஆத்துமாவில் பெற்றிருப்பதை நாம் அறிவோம். அது எனக்கு மிக நிச்சயமாகக்கூடத் தெரியும். கடைசி வரை இவ்வளவு தெளிவாக கிறிஸ்தவ நம்பிக்கையை அறிக்கையிடும் மனிதர்களைப் பார்க்கும் பாக்கியம் சில தடவைகளில் எனக்கு கிடைத்தது. ஆனால் அதை ஜார்ஜில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கடைசியாக, அவரது வாழ்நாள் முழுவதும் ‘தன் இல்லம்’ என்று அவர் அழைத்த இந்த தேவாலயத்திற்கு அவர் வர இயலாதப்போது, அவர் மனைவி திருமதி பாலினுடன் கடந்த முப்பது வருடங்கள் வாழ்ந்த இல்லம் என்றழைத்த அவர் வீட்டிற்கு வரும்படி கேட்டார். அங்கு, குடும்பத்துடன் பல உணவுகள் பகிரப்பட்டன, வரவிருக்கும் விருந்தின் முன்னறிவிப்பாக, கர்த்தருடைய இராப்போஜனத்தில் அவர் பங்கு கொண்டார். எந்தச் சிகிச்சையும், மருந்தும் அவரைக் குணப்படுத்த முடியாதபோது, அவரது இரட்சகரின் உடலிலும் இரத்தத்திலும் குணப்படுத்துகிற அழியாத மருந்தை, உலகில் அவருடைய நாட்கள் முடிந்தப் பின்பு இறைவனிடம் சமாதானமாகப் புறப்படும் நம்பிக்கையில் நோக்கிப் பார்த்தார். அவர் அப்படியே புறப்பட்டார்.
கடந்த வாரம், நான் அவரது ஆத்துமாவை நம் பரலோகத் தந்தையின் கைகளில் ஒப்புவிக்க வீட்டிற்கு வந்தபோது, நானும், கூடியிருந்த குடும்பத்தாரும், ஜார்ஜ் அவர்கள் கிறிஸ்துவில் இறைவன் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றுக்கூட்டி அவரது பலவீனமான குரலில் இதயம் நிறைந்த “ஆமென்!” சொற்களைக் கூறக் கேட்டோம். இன்று நாம் மீண்டும் பாடப்போகின்ற, “என்னோடிரும் என் நேசக் கர்த்தரே” என்றப் பாடலையும் “கடவுள் உலகை நேசித்தார், அதனால் அவர் கொடுத்தார்,” என்றப் பாடலையும் நான் பாடியப்போது ஜார்ஜ் அவர்களால் என்னோடு சேர்ந்துப் பாடாமல் இருக்க முடியவில்லை. அவருடைய கண்கள் மூடியிருந்தாலும், உடல் பலவீனமாக இருந்தாலும், அவருடைய விசுவாசம் வலிமையாயிருந்தது. அவரது இரட்சகர் அவருடைய ஞானஸ்நானத்தில் அவருக்குக் கொடுத்த அனைத்து வாக்குத்தத்தங்களுக்கும் அவரது இதயம் திறந்திருந்தது. ஜார்ஜ் அதையெல்லாம் விசுவாசித்ததால் இரட்சிக்கப்பட்டார். இறுதியாக தேவதூதர்கள் வந்து ஜார்ஜின் ஆத்துமாவை பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பே, அதைக் காணும் பாக்கியத்தை அங்கே குழுமியிருந்த நாங்கள் பெற்றோம். அவர் இப்போது அங்கே வசிக்கிறார், பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுடன் சேர்ந்து வலிமை வாய்ந்த குரலில் பாடிக்கொண்டிருக்கிறார்.
இன்று அவரது உடலை, இயேசு அதை மரித்தோரிலிருந்து எழுப்புவார் என்னும் உறுதியான மற்றும் நிச்சயமான நம்பிக்கையில், இங்கே நாம் அடக்கம் செய்கிறோம். அவர் ஜார்ஜின் ஆன்மாவை இந்த உடலில், அவர் திரும்பி வரும் நாளில் அதை மகிமைப்படுத்த, மீண்டும் இணைப்பார். ஆகவே, திரு. ஜார்ஜ் மரித்தார், ஆனால் இயேசு வாக்களித்தப்படியே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். ஞானஸ்நானத்தால் இயேசுவுக்குள் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் ஒன்றுபட்டு, உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிற அவரது இரட்சகரை நம்பினதால், ஜார்ஜ் அவர்களின் இந்த மரணம் அவரது உயிர்த்தெழுதலுக்கும் வழிவகுக்கும். அதனால் ஜார்ஜ் அவர்களைப்போன்ற விசுவாசத்தைப் பின்பற்றுபவர்கள் முடிவேயில்லாத வாழ்வில்அவரை மீண்டும் தழுவுவார்கள்.
அதைப்போன்றே, உங்கள் வாழ்க்கையின் அந்த முக்கியத்துவமான நாளை நீங்களும் தழுவுங்கள். ஜார்ஜை அவர்களைப்போல நீங்கள் ஞானஸ்நானம் பெற்ற நாளில் வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்ட ஒன்று நடந்தது என்று சொல்ல இயலாதிருக்கலாம். ஆனால் வாழ்க்கை புத்தகத்தில் அன்றைய நாளில் ஏதோ ஒன்று எழுதப்பட்டிருந்தது என்று உங்களால் சொல்ல முடியும். அது உங்கள் பெயர். அதனால்தான் திருவாளர் ஜார்ஜ் ஞானஸ்நானம் பெற்ற நாள் உண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது ஒரு தேசத்தின் நினைவில் கொள்ள வேண்டிய நாள் என்பதால் மத்திரம் அல்ல. அது நித்திய வாழ்வை நினைவில் கொள்ள வேண்டிய நாள் என்பதாலும் கூட. விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்ற உங்களுக்கும் அது பொருந்தும். “வேறேதும் உன் ஆத்துமாவை உயிர்ப்பிக்க இல்லாதப்போது / உன் ஞானஸ்நானம் உன்னை முழுமையாக்கி நிற்கும் / பின்னர் மரணத்தில் உன்னை நிறைவு செய்யும்” என்று ஒரு ஞானப் பாடல் கூறுகிறது. அதாவது, நீங்கள் தினமும், வாரந்தோறும், மரிக்கும் நாள்வரையிலும் விசுவாசத்திற்குள் திரும்பிவர ஞானஸ்நானத்தின் வாக்குறுதிகள் துணை நிற்கின்றன. ஆம், கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் உங்களுக்கும் கூட. பாவம், மரணம், பிசாசு ஆகியவை மீதான அவரது வெற்றி உங்களுடையது. எனவே, ஜார்ஜைப் போலவே, இதைப் போற்றுங்கள். உங்களுக்கெதிரான அனைத்தையும் தோற்கடித்த உங்கள் இரட்சகருடன் நீங்கள் ஒன்றுபட்டிருப்பதை மனதாரப் போற்றுங்கள்
பாவத்திற்கு மரித்து, புதிய வாழ்க்கைக்கு உயிர்த்தெழுவதன் மூலமும் உங்கள் இரட்சகரின் விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களை ஜார்ஜ் அவர்கள் செய்ததுப் போலப் போற்றுங்கள். நீங்கள் ஜார்ஜ் அவர்களைப் போன்றே மகிமைக்குள் நுழையும் நாள் வரை இந்த சுவிசேஷத்தின் சத்தியத்தை தேவாலயத்தில் தவறாமல் கேட்டு விசுவாசத்தில் பெலனடைந்து, இறுதியாக அனைத்து மாம்சத்தின் உயிர்த்தெழுதலை அடையுங்கள். அதன்பிறகு, டிசம்பர் 7, 1941 என்கிற நாள் உண்மையில் ஜார்ஜ் அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நாளாய் இருந்தது என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த நாளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் காண்பீர்கள். ஏனெனில் ஜார்ஜ் மற்றும் யோபுவைப் போன்றே, உங்கள் மீட்பர் உயிரோடிருக்கிறார், கடைசியில் அவர் பூமியின் மேல் நிற்பார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்கள் தோல் முதலானவை அழிந்தப்பின்னும், உங்கள் மாம்சத்தில் நீங்கள் கடவுளைக் காண்பீர்கள். உங்கள் கண்களாலேயே அவரைக் காண்பீர்கள். ஆம், அந்தக் கடைசி நாளில், உங்கள் துக்கமெல்லாம் நீங்கி, உங்கள் கண்ணீர் துடைக்கப்படும் போது, டிசம்பர் 7, 1941 நாளை, கடவுளின் அன்பிற்குறிய குழந்தை ஜார்ஜ் அவர்களின் வெற்றி நாளாக தெளிவாகக் காண்பீர்கள். உங்கள் ஞானஸ்நானத்தின் நாளையும் அவ்வாறே காண்பீர்கள்.
இயேசுவின் திருப்பெயராலே. ஆமென்.
பிரசங்கம் 7.
“ஆர்லீனுக்காக மரணம் விழுங்கப்பட்டது”
(1 கொரிந்தியர் 15:51-57)
அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்! மெய்யாகவே அவர் உயிர்த்தெழுந்தார்,! அல்லேலூயா!
அன்பான ஆர்லீன் அவர்களின் குடும்பத்தாரே, அன்பான நண்பர்களே, கிறிஸ்துவில் அன்பான சகோதர சகோதரிகளே:
“மரணம் ஜெயமாய் விழுங்கப்பட்டது” புனித பவுல் நமக்குத் தருகிற என்ன ஓர் புதிரான மர்மம் இது! மக்கள் உணவை ‘விழுங்குவதை’ப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எடுத்துக்காட்டாக, என் மகன், திருமதி ஆர்லீன் தயாரித்த சீமை சுரைக்காய் ரொட்டியை ‘விழுங்க’ விரும்பினான். நான் அவர்களை சந்திக்க சென்ற பிறகு அவர்கள் என் வீட்டிற்கு ஒரு ரொட்டியை அனுப்பும்போதெல்லாம் மிக உற்சாகமடைவான். பல வருடங்களாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் கடமை உணர்வோடும் விளைவித்த தோட்டத்தின் விளைச்சல்களை நம்மில் பலர் விழுங்கினோம். அல்லது கனடாவில் உள்ள நெஸ்டர் நீர்வீழ்ச்சியில் சிக்கிய மீன்களை விழுங்கினோம். மேலும் மக்கள் எதையாவது குடிப்பதையும் விழுங்குவதையும் பற்றியும் நீங்கள் அனைவரும் கேள்விப்படுகிறீர்கள். எனவே உணவு மற்றும் பானங்களிலிருந்து நாம் விழுங்குவதை புரிந்துகொள்கிறோம். ஆனால் மரணம்? “மரணம் ஜெயமாக விழுங்கப்படுகிறது?” இது நமக்கு எப்படி விளங்கிக்கொள்ள இயலாத இரகசியம் அல்லது மர்மம் என நாம் இன்று சிந்திக்க வேண்டும்!
இப்போது, இந்த மர்மத்தை விளங்கிக்கொள்ளவும், அது எப்படி திருமதி அர்லீனுக்கு பொருந்தும் என்பதை புரிந்து கொள்ளவும் நாம் ஓரிரு விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, பாவத்தினால் மரணம் நிகழ்கிறது. மரணத்தின் கூர் (கொடுக்கு) பாவம்,” என்று நாம் வாசிக்கக் கேட்டோம். “பாவத்தின் சம்பளம் மரணம்” என வேறொரு இடத்தில் நாம் வாசிக்கிறோம். இந்த இருண்ட உண்மையைப் பற்றி வேதம் பகல் போல் தெளிவாக உள்ளது. ஆதாமையும், ஏவாளையும் பிசாசு வழிநடத்தியதினால் அவர்கள் பாவத்தில் மூழ்கி மரித்தார்கள். அதனால் ஒவ்வொரு மனிதனும் இந்த மூலமுதலான பாவத்தை தன் பிறப்பினால் பெற்று அதன் மூலம் மரிக்கிறான். பாவம் இல்லையென்றால் மரணம் இல்லை. எனவே, நாம் இறப்பதற்கு காரணம் நமது பாவம்தான். அர்லீன் அவர்கள் இறந்ததன் காரணம் அவர்கள் பாவம்தான்.
நாம் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால், நாம் இப்போது வாசிக்கக் கேட்டது போல் “பாவத்தின் வல்லமை (பெலன்) நியாயப்பிரமாணம்.” “பாவத்தைப் பற்றிய அறிவு நியாயப்பிரமாணத்தின் மூலம் வருகிறது”, என வேறோரு இடத்தில் வாசிக்கிறோம். எனவே, ஒரு நபர் பாவம் அனைத்தையும் அவர்கள் வேண்டுகின்ற அளவு மறுக்கலாம், ஆனால், நம்முடைய பாவம் நமக்குத் தெரியும். ஏனெனில், கடவுள் தம்முடைய நியாயப்பிரமாண கட்டளைகளின் மூலம் இந்த அறிவை நமக்குத் தருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை நேசிப்பதும், உங்களுக்கு மேலாக உங்கள் அயலாரை நேசிப்பதும் அவருடைய நியாயப்பிரமாண கட்டளையாயிருக்கிறது. நாம் கடவுளை நேசிக்கத்தகுந்த விதமாய் நேசிப்பதில்லை என்றும், நம் அயலாரை (அண்டை வீட்டாரை) கடவுளுடைய கட்டளைக் கோறுவது போல் முழுமையாக நேசிப்பதில்லை என்றும் நம் இதயங்களையும் வாழ்க்கையையும் வெளியரங்கமாக்கும் வல்லமை கடவுளின் நியாயப்பிரமாண கட்டளைக்கு உள்ளது.
எனவே, மரணம் ஜெயமாய் விழுங்கப்பட்டதன் மர்மத்தை விளங்க்கிக்கொள்ளவும், ஆர்லீனுக்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதை புரிந்துக்கொள்ளவும் இந்த உண்மைகளை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆர்லீன் இவற்றை நன்கு அறிந்திருந்தார். “மரணத்தின் கூர் (கொடுக்கு) பாவம், பாவத்தின் வல்லமை நியாயப்பிரமாணம்….. ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு வெற்றியைத் தருகிற இறைவனுக்கு ஸ்தோத்திரம்…..” ஆர்லீன் அவர்களுக்கு இவை அனைத்தைவிட அதிகமாய் தெரிந்திருந்தது! அவருடைய் குமாரனாகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய எல்லா பாவங்களையும் தம்மீது சுமந்ததினால் கடவுள் நமக்கு வெற்றியைத் தருகிறார், என்பதை ஆர்லீன் அறிந்திருந்தார். கடவுள் நமக்கு வெற்றியைத் தருகிறார், ஏனெனில் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனிதனாகி, கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை நமக்காக நிறைவேற்றி, நமக்காக மரித்தார், நமது பாவத்திற்கு எதிரான கடவுளின் கோபாக்கினையை விழுங்கி, கசப்பான வண்டலான அழுக்கை ஏற்றுக்கொண்டார். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து எழுப்பப்பட்டதால் கடவுள் நமக்கு வெற்றியைத் தருகிறார். கடவுள் நமக்கு வெற்றியைத் தருகிறார், ஏனெனில், அவர் குமாரன் இயேசு கிறிஸ்து தாமே உயிரோடே எழுந்து மரணத்தை ஜெயமாக விழுங்கினார்.
இப்போது, இயேசு அந்த வெற்றியை-நித்திய ஜீவனை-அவருடைய குரலைக் கேட்கிற அனைவருக்கும் தருகிறார். ஆர்லீன் அவரது குரலை, தன் நல்ல மேய்ப்பனின் குரலைக் கேட்டார்கள். அவர்கள் ஏராளமாக தன் தோட்டத்தில் பயிரிட்ட உணவை விட அதிகமாக விழுங்க தொண்ணூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவர்களை அவர் வழிநடத்தினார். மற்றும், அவர் அவர்களுக்காக வென்ற வெற்றியை விழுங்கவும் அவர் அம்மையாரை வழிநடத்தினார். இயேசு கிறிஸ்து பாவம் மற்றும் மரணம் மற்றும் நரகத்தில் இருந்து அவர்களை இரட்சித்த நற்செய்தியை நம்புவதற்கும் வழிநடத்தினார். ஆர்லீன் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இந்த உண்மையை தொடர்ந்து பருகினார்கள். நான் அவர்களை அவர்கள் வீட்டில் பார்த்தப் போதெல்லாம் தன் பாவத்தை ஒப்புக்கொண்டார்கள், அவர் அவர்களுக்காக தனது உயிரைக் கொடுத்தார், அவர்களை மன்னிக்கிறார் என்கிற அவர்களுடைய நல்ல மேய்ப்பனின் குரலைக் கேட்டார்கள். அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் அவர் ஞானஸ்நானம் கொடுத்தும் தனக்கு அவர் ஒரு புதிய வாழ்க்கையைக் கொடுத்தார் என்பதையும் கேட்டார்கள். இந்த உண்மையைப் பிரசங்கிக்கும் பிரசங்கங்களை அவர்கள் உன்னிப்பாகக் கேட்டு, அதை விழுங்கினார்கள். மேலும் அவர்களுக்காக அவர் வெற்றி பெற்றார் என்று நம்பி, அவர்களுக்காக கொடுக்கப்பட்ட, சிந்தப்பட்ட கர்த்தருடைய திருவிருந்தாகிய, கிறிஸ்துவின் மாம்சத்தையும், இரத்தத்தையும் விழுங்கினார்கள். இயேசு அவர்களுக்காக அவர்களது மரணத்தை என்றென்றைக்கும் விழுங்கினார் என்று நம்பினார்கள்.
இயேசுவின் மூலம் “மரணமே வெற்றியில் விழுங்கப்பட்டது.” – ஆம், இது அர்லீன் அவர்கள் நம்பிய ஒரு பரம இரகசியம். புனித பவுல் கூறுவது போல், இதன் பொருள், அர்லீன் மரிக்கவில்லை, ஆனால் உறங்கிக்கொண்டிருக்கிறார். ஆம், அவர்களது ஆன்மா இயேசுவோடு, அவர் கணவர் திரு. விர்ஜில் மற்றும் அனைத்து புனிதர்களுடன் பரலோகத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அவர்கள் உடல் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது. இயேசு திரும்பி வரும்போது, “ஒரு கணப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், கடைசி எக்காள சத்தத்தில்…… மரித்தவர்கள் அழிவில்லாதவர்களாக எழுப்பப்படுவர்” என்று வேதம் கூறுகிறது. நல்ல மேய்ப்பனின் குரலைக் கேட்ட அனைவரின் உடல்களும், அவருடைய உடலைப் போல மாற்றப்படும். இது நிகழும்போது, அழியக்கூடிய உடல் அழியாததை அணிந்துகொள்ளும்போது, சாவுக்குறிய உடல் சாவாமையை அணிந்துக்கொள்கிறது. “அப்போது ‘மரணம் வெற்றியாக/ஜெயமாக விழுங்கப்பட்டது.’ எனும் எழுதப்பட்ட வாசகத்தை கடந்து செல்வார்கள்.” பின்னர் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்த அனைவரோடும் சேர்ந்து ஆர்லீனை மீண்டும் உயிருடன் காண்போம்.
ஆம், “மரணம் வெற்றியில் விழுங்கப்படுகிறது.” புனிதர் பவுல் நமக்குத் தருகிற பரம இரகசியம் இது! நம்முடைய ஆண்டவர், இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் அனைவருக்கும் என்ன ஒரு ஆறுதல்! குறிப்பாக அவர்கள் மிகவும் நேசித்த, மகிழ்ச்சியுடன் அவர்களைப்பற்றிப் பேசின, அவர்களுடைய குடும்பத்திற்கு எத்தகைய ஆறுதல்! அர்லீனுக்காக “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது”, இதை விசுவாசியுங்கள். மக்கள் உணவு மற்றும் பானங்களை ‘விழுங்குவதை’ நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உங்களுக்கு ஒரு புன்முறுவலையும் கொடுக்கும். ஆனால் இந்த சத்தியத்தை விழுங்குவது ஒரு கணநேர திருப்தியை விட அதிகம் தருகிறது. அது மரணத்தின் கொடுக்கை நீக்கி நித்திய வெற்றியைத் தருகிறது. அது அர்லீன் அவர்களுக்கு சொந்தமான வெற்றி. நல்ல மேய்ப்பரான இயேசுவின் குரலைக் கேட்டு, அவருடைய நாமத்தை நம்பும் உங்கள் அனைவருக்கும் சொந்தமான வெற்றி.
அல்லேலூயா! இயேசு உயிர்த்தெழுந்தார்! மெய்யாகவே அவர் உயிர்த்தெழுந்தார்!அல்லேலூயா!
பிரசங்கம் 8.
“இனி இடமாற்றமில்லை”
(யோவான் 14:1-6)
பேட்ரிஷியா அவர்களின் அன்பான குடும்பத்தாரே, அன்பான நண்பர்களே, கிறிஸ்துவில் அன்பான சகோதர சகோதரிகளே:
நம் பிதாவாகிய கடவுளிடமிருந்தும், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு கிருபை, இரக்கம் மற்றும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.
இனி இடமாற்றமில்லை. இடம் மாறுதல் அல்லது இடம் பெயர்தல் பேட்ரிஷியா அவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது இல்லையா? அமெரிக்க தேசத்திலுள்ள ஓசியன், அயோவா, போஸ்ட்வில், நோர்போக், வர்ஜீனியா, பிறகு திரும்ப மக்வோகெட்டாவில் உள்ள அயோவாவிற்கு, பின்னர் பிரஸ்டன், பின்னர் விட்டெமோர், பின்னர் லாபோர்ட் சிட்டி, பின்னர் வில்டன், பின்னர் விண்டன் என பல இடங்களில் அவர்களுடைய நீண்ட ஆயுளுக்கு நடுவே இடமாற்றம் செய்தார்கள். ஓரிரு இட நகர்வுகளை நான் தவறவிட்டிருக்கலாம். ஆனால் இப்போது, இறுதியாக, இடமாற்றம்/இடம் பெயர்தல் இல்லை. பேட்ரிஷியா அவர்கள் வீட்டிலுள்ளார்கள். அவளுடைய ஆத்துமா பரலோகத்தில் இருக்கிறது. ஆனால் பேட்ரிஷியா ஏன் வீட்டில் இருக்கிறார் எனக்கூறுகிறோம்? அவர்களே அவர்களுக்காக பரலோகத்தில் வீட்டைத் தயார் செய்தார்களா? அல்லது வேறொருவர் ஆயத்தம் செய்ததினால் அவர்கள் அதைப் பெற்றார்களா? இயேசுவின் வார்த்தைகளை மீண்டும் கேளுங்கள்:
“உங்கள் இதயங்கள் கலங்காதிருப்பதாக; கடவுளிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள், என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படி இல்லாதிருந்தால் நான் உங்களுக்கு சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை (இடத்தை) உங்களுக்காக ஆயத்தம்பண்ணப் போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.”
இயேசு தம் தந்தையின் வீட்டில் பேட்ரிஷியா அவர்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தம் செய்தார். பேட்ரிஷியா பரலோக வீட்டில் இருப்பதற்கும், மற்ற யாவரும் அங்கு செல்வதற்கும்கூட இயேசுவே காரணம்.
ஆம், ஆணிகள் மற்றும் மரம், இரத்தம், வியர்வை, மற்றும் கண்ணீர்…இவற்றைக்கொண்டு இந்த இடத்தை ஆயத்தம் செய்தார், நாம் வழக்கமாக நினைக்கும் விதத்தில் அல்ல. இயேசு பயன்படுத்திய
ஆணிகள் அவரைத் துளைத்த ஆணிகள். இயேசு பயன்படுத்திய மரம் அவர் மரித்த சிலுவை மரம். பேட்ரிஷியாவுக்காக, உங்களுக்காக, முழு உலகத்திற்காக அவர் பட்ட பாடுகளினால், அனுபவித்த துன்பங்களினால், இயேசுவிடமிருந்து இரத்தமும், வியர்வையும் கண்ணீரும் வழிந்தோடின.
இயேசு நம்முடைய பாவத்திற்காக மரித்தார் என நீங்கள் காண்கிறீர்கள். எல்லா பாவங்களுக்காகவும் மரித்தார். இயேசுவின் இந்த மரணம் இல்லாவிட்டால், தந்தையின் வீட்டில் அவரைத் தவிர வேறு யாருக்கும் இடம் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்காது. ஏனெனில் இயேசு நித்தியத்திலிருந்த கடவுளின் குமாரன். அவர் எப்பொழுதும் தம் தந்தையுடன் வாழ்ந்தவர். உலகம் தோன்றுவதற்கு முன்பே வீடு கட்டப்பட்டது. ஆனால் நம்முடைய பாவம் நீக்கப்படாதவரையில் நம் ஒருவராலும் நுழைய இயலாது. அவரது முழுநிறைவான வீட்டை பாவத்தினால் மாசுபடுத்த கடவுள் அனுமதிக்க மாட்டார். ஆனால் அவர் அன்பாகவே இருப்பதால், நாம் அங்கே இருப்பதை இன்னும் அவர் விரும்புகிறார். பேட்ரிஷியா அங்கே இருப்பதை விரும்புகிறார். எனவே, காலம் நிறைவேறினப்போது, கடவுள் தனது ஒரே பேரான குமாரனை அனுப்பி, பேட்ரிஷியா அவர்களுக்கும், நம் அனைவருக்கும் அவரது தந்தையின் இல்லத்தில் ஒரு இடத்தை ஆயத்தம் செய்தார். அவர், நிறைவான கடவுளின் மைந்தன், கன்னி மரியாளிடமிடமிருந்து நம் மாம்சத்தையையும் இரத்தத்தையும் எடுத்துக் கொண்டார். நமக்கு பதிலாக, ஒரு குறைவற்ற வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். மேலும் அவர் நம் பாவமான வாழ்க்கைக்கு பதிலாக அவருடைய குறைவற்ற அந்த வாழ்வை கடவுளுக்குக் கொடுத்தார். சிலுவையில், பாடுபட்டு மரித்து, நமக்கு தகுதியான மரணத்தின் ஒவ்வொரு பாவத்திற்கும் அவர் விலை கொடுத்தார். சிலுவையில், கடவுள் அவரை ஒரு பாவியாக கணித்து, இயேசுவின் பரிபூரணமான, நீதியான வாழ்க்கையை நமக்கு வரவில் வைத்தார். ஆம், சிலுவையில், தேவனுடைய குமாரனாகிய இயேசு, உங்களுக்காக, பேட்ரிஷியா அவர்களுக்காக, எனக்காக, வாழும், வாழ்ந்த, அல்லது வாழப்போகும் எல்லா பாவிகளுக்காக தம் தந்தையின் வீட்டில் ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தினார்.
இந்த சத்தியத்தை நீங்கள் விசுவாசத்தில் பெறும்போது இதிலிருந்து நீங்கள் பயனடைகிறீர்கள். இந்த அவர் மீதான விசுவாசம் ஒரு வெகுமதியும்கூட. அவர் சென்று உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தம் செய்த பிறகு மீண்டும் வந்து அவர் இருக்கும் இடத்தில் நீங்களும் கூட இருக்க உங்களைத் தம்மிடம் அழைத்துச் செல்வதாக இயேசுக் கூறினார். இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, பரிசுத்த ஆவியை இந்த உலகிற்கு அனுப்பினார். பரிசுத்த ஆவியானவர் நீங்கள் இப்போது கேட்கும் இந்த வார்த்தையின் மூலம் இயேசுவில் விசுவாசத்தை உருவாக்க செயல்படுகிறார். மேலும், நீங்கள் அவருடைய விலைமதிப்பற்ற வார்த்தையைப் பற்றிக்கொண்டு, இயேசுவின்பேரில் விசுவாசம்கொள்ளும் போது, இயேசு உங்களோடு இருக்கிறார். மட்டுமல்ல, அவர் உங்களை தந்தையின் வீட்டிற்கு வழி நடத்துகிறார். ஏனெனில், அவரே வழி. அவர் உங்களுக்கு இரட்சிப்பின் அறிவை அளிக்கும் சத்தியம். அவர், அவரது இரத்தத்தால் வாங்கப்பட்ட நித்திய ஜீவனை உங்களுக்கு இலவசப் பரிசாக வழங்குகிற ஜீவன். இந்த சத்தியத்தை விசுவாசத்தில் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும், விசுவாசத்தினால் இயேசுவையும் அவருடைய ஆவியால் நிரப்பப்பட்ட வார்த்தையை பற்றிக்கொள்ளும் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். மேலும், இயேசு தம்முடன் அவரது தந்தையின் வீட்டில் என்றென்றும் இருக்க வாழ்வு மற்றும் மரணத்தில் அவர்களை வழிநடத்துகிறார்.
பேட்ரீஷியா அவர்களுக்கு இந்த நிலைமைத்தான் என்று எனக்குத் தெரியும். பேட்ரீஷியா வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு இடமாற்றத்திலும் இயேசுவை நம்பினார் என்பதும், எனக்குத் தெரியும். இது எனக்கு எப்படி தெரியும் எனில், கடந்த பத்து வருடங்களாக நான் இயேசு கிறிஸ்துவின் இந்த நற்செய்தியை இந்த திருச்சபையில் பேட்ரீஷியா அவர்களுக்கு அறிவித்தேன். பின்னர் இங்கே விண்டனில் உள்ள அவரது குடியிருப்பில், பின்னர் சூறாவளி தாக்குதலுக்கு பிறகு குறுகிய காலமாக அவர் தங்கின கெவின் மற்றும் பெட்டிஸ் அவர்கள் இல்லத்தில், ரிட்ஜ்வே பிளேஸ், பிரிட்ஜ், வெஸ்டர்ன் முதியோர் இல்லம், அங்குள்ள அனைத்து அறைகள் என பல இடங்களிலும் கூட அறிவித்தேன்! அதிகமான முக்கியத்துவம் அளித்து, பேட்ரீஷியா அவர்கள் தன் பாவத்தை அறிக்கையிட்டு, இயேசு அவர்களுக்காக வென்ற மன்னிப்பை விசுவாசத்தால் பற்றிக்கொண்டிருப்பார். தன்னை சிருஷ்டித்த பரலோகத்திலுள்ள தன் தந்தையின் மீதுள்ள விசுவாசத்தை பேட்ரீஷியா அறிக்கை செய்வார். அவர்களுடைய தந்தையின் வீட்டில் தம் சிலுவை மரணத்தினால் அவர்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தம் செய்த அவரது குமாரனான கிறிஸ்து மீதுள்ள விசுவாசத்தை பேட்ரீஷியா அறிக்கை செய்வார். மேலும், ஞானஸ்நானம் மூலம் அவர்களை பரிசுத்தவான்களின் ஐக்கியத்துக்குள் கொண்டு வந்து அவர்களை கடவுளின் பிள்ளையாக மாற்றின பரிசுத்த ஆவியானவர் மீதுள்ள விசுவாசத்தை பேட்ரீஷியா அறிக்கை செய்வார். அன்றியும், பேட்ரீஷியா தனது மன்னிப்புக்காக கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் பெறுவார். அதன் பிறகு அவர்களது இதயம் கலங்காமலும், பயப்படாமலும், பதட்டம் ஒரு கணம் கரைந்து போவதை நான் பார்ப்பேன். ஆம், பேட்ரீஷியா என்னுடன் இயேசுவைப் போற்றிப் பாடுவார், இயேசுவைப் பற்றி என்னிடம் பேசுவார், இயேசுவை அவர்களுடைய இரட்சகராக அறிக்கையிடுவார். இனி பேட்ரீஷியா ஓரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு இடம் மாறத் தேவையில்லை என்று எனக்குத் தெரியும். இயேசு பரலோகத்திலுள்ள பேட்ரீஷியா அவர்களை அவர் தந்தை நாட்டின் இல்லத்திற்கு வழிநடத்தினார்.
மேலும், நீங்கள் பேட்ரீஷியா போன்று தந்தையின் வீட்டில் ஒரு இடத்தை விரும்பினால், நீங்களும் இயேசுவை நம்புங்கள். இயேசுவை முழுமையாக, தூய்மையாக பறைசாற்றுகிற திருச்சபையின் ஒரு அங்கமாக இருங்கள், ஏனெனில் அவருடைய ஆவியால் நிரப்பப்பட்ட வார்த்தை மற்றும் சாக்கிரமந்துகளில் உங்களுடன் இருக்கிறார். இந்த கிருபையின் விலைமதிப்பற்ற வழிமுறைகள் மூலம் அவர் உங்களை விசுவாசத்தில் வைத்திருக்கிறார். ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பதில் உதவி தேவைப்பட்டால் உங்கள் அருகாமையிலுள்ள ஒன்றை நான் அறிமுகம் செய்கிறேன். ஏனென்றால், நீங்கள் மீண்டும் பேட்ரீஷியாவைக் காண விரும்பினால், உங்களை விசுவாசத்தில் வைத்திருக்க இந்த இயேசுவின் வார்த்தை உங்களுக்குத் தேவை. பாவம் நிஜமானது. அதனால்தான் நாம் மரிக்கிறோம். ஆனால் நீங்கள் பாவத்தில் மரிக்க தேவையில்லை. உங்கள் பாவத்தை ஒழித்து தூரமாக்கிய கிறிஸ்துவுடன் நீங்கள் மரிக்கலாம். புதிதாக்கப்பட்ட வாழ்வுக்குள் நீங்கள் அவருடன் உயிர்த்தெழலாம். அவர் உங்களுக்காக விலைக்கொடுத்து வாங்கின மன்னிப்பை நீங்கள் இலவசமாகப் பெறலாம். நீங்கள் அவருக்குள் ஞானஸ்நானம் பெற்று, அவர் மீதுள்ள விசுவாசத்தின் மூலம், நித்திய வாழ்வின் நம்பிக்கையின்படி, நீங்கள் கடவுளின் சொந்தக் குழந்தைகளாகவும், வாரிசுகளாகவும் இருக்கிறீர்கள் என்கிற வாக்குறுதியில் அவரைப் பற்றிக் கொள்ளலாம். பேட்ரீஷியாவுக்கு எதுவோ, அது உங்களுக்கும் கூட. அது ஒரு வெகுமதி. இதை உங்கள் அனைவருக்கும் அளிப்பது கடவுளின் விருப்பம். “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல், நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்றெல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” அவர் மிகவும் கருணையுள்ளவர். மிகவும் அன்பானவர். எனவே, உங்கள் இருதயங்கள் கலங்க வேண்டாம். கடவுளை நம்புங்கள்; அவர் தந்தையின் வீட்டில் உங்களுக்காகவும் ஒரு இடத்தை தயார் செய்த இயேசுவையும் நம்புங்கள்….
அங்குதான் பேட்ரீஷியா இருக்கிறார்கள். பேட்ரீஷியாவின் வீடு அது. குறைந்தபட்சம், அவர்களுடைய ஆத்துமா அங்கே இருக்கிறது. அவர்கள் சரீரம் இங்கே உயிர்த்தெழுதலுக்கு காத்திருக்கிறது. மேலும் நாம் இவ்விஷயத்தை மூடிமறைக்க தேவையில்லை. ஏனெனில் இது ஒரு அற்புதமானதும் ஆறுதலானதுமான சத்தியமும் வாக்குறுதியுமாம். ஒரு நாள் இயேசு அவரது சரீரத்தில் திரும்ப வந்து அனைத்து சரீரங்களையும் உயர்த்துவார். மேலும், பேட்ரீஷியா உட்பட யாருடைய ஆத்துமாக்கள் அவருடன் பரலோகத்தில் இருக்கின்றனவோ, இங்கே பூமியில் யார் அவரில் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் நம் ஆண்டவரைப் போலவே அழிவில்லாத சரீரத்தில் எழுவார்கள். அந்நாளில், நம் இறைவன் மரணத்தை சதாகாலத்துக்கும் விழுங்கி, அவர் தோன்றியதில் ஆனந்தமடையும் எல்லா முகங்களிலிருந்தும், கண்ணீரைத் துடைப்பார். பேட்ரீஷியா அவர்கள் உட்பட.
பேட்ரீஷியா அவர்களின் ஆத்மா சொர்க்கத்தில் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது என்பதை தற்சமயம் நாம் கற்பனையில் மட்டுமே காண முடியும். ஆனால் அந்த உயிர்த்தெழுதலின் நாளில் நாம் பேட்ரீஷியாவின் முகத்தை கற்பனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களைப் போலவே விசுவாசத்தில் தொடர்ந்திருக்கும் நாம், அதை நேரில் காண்போம். அவர் வாயில் முத்து போன்ற வெண்மையான பற்கள் இருக்கும். அவர் தலைமுடி இளம் வாலிபப்பருவத்தில் இருந்ததுப்போல் இருக்கும். அவர்கள் முகம் கலக்கமற்றதாக இருக்கும். அவர் கரங்கள் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கரங்களைப்போன்று நிலையாக இருக்கும். அவர்கள் உடல் முழுவதும் இளமையாக இருக்கும். அவர்கள் கண்கள் தன் மீட்பரை நன்றியோடு நோக்கிப்பார்த்து, அவர் நமக்காக செய்த அனைத்திற்கும் நன்றி செலுத்தும். மேலும் அவரது கணவர் திருவாளர் ரிச்சர்ட் உட்பட, தேவதூதர்கள் மற்றும் அனைத்துக்கால புனிதர்களுடன் ஒருங்கிணைந்த பேட்ரீஷியாவின் இனிமை நிறைந்த குரலையும், நம் குரலையும் நாம் கேட்போம்,
எனவே, இந்த வாழ்க்கையில் நாம் பேட்ரீஷியாவை இழக்க நேரிடும் அதே வேளையில், நமது கண்ணீருக்கு மத்தியில் நாம் களிகூறுகிறோம். அவர்களுக்கும் நமக்கும், வழியும், சத்தியமும், ஜீவனுமாக இருக்கிற இயேசுவினால், நித்திய ஜீவன் வழங்கப்பட்டது. பேட்ரீஷியாவுக்கு இனி இடமாற்றமில்லாமல் இருக்க அதை ஆயத்தம் செய்துள்ளார். பேட்ரீஷியா அவர்கள் கர்த்தருடைய வீட்டில் என்றென்றும் ஆனந்தத்தில் மட்டுமே வாசம் பண்ணுகிறார்கள்.
இயேசுவின் திருப்பெயராலே, ஆமென்.
[1]இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபை ‘தேவாரதனை மாலை’ புத்தகம், பக்கம் 122.
