முதல் துறவியான பவுலஸின் வாழ்க்கை வரலாறு

Jerome, The Life of Paulus, the first hermit, in Tamil.

பவுலஸின் வாழ்க்கை வரலாறு, அத்தியாயம் 6-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜெரோம் சிரியாவின் பாலைவனத்தில் இருந்தபோது; அதாவது ​​கி.பி. 374 அல்லது 375-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. மேலும், ஜெரோமின் பத்தாம் நிருபம், அத்தியாயம் 3 க்கு அமைவாக, இது கொன்கோர்டியாவைச் சேர்ந்த பவுலஸுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


1. துறவற வாழ்க்கைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியை முதலில் வழங்கிய துறவி யார் என்பது பரவலான மற்றும் அடிக்கடி விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சிலர், மிகவும் பின்னோக்கிச் சென்று, எலியா மற்றும் யோவான் ஆகிய புனிதர்களிடமே அதன் தொடக்கத்தைக் கண்டதாக நினைக்கின்றனர். அவர்கள் மத்தியில் எலியா ஒரு துறவி என்பதற்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். அதேநேரம், யோவான் பிறப்பதற்கு முன்பே தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார். மிகவும் பரவலான கருத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மற்றவர்கள், இந்த வாழ்க்கை முறையின் உண்மையான முன்னோடி அந்தோனியார் தான் என்று வாதிடுகிறார்கள், ஏனெனில் அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. நான் அதை ஓரளவு உண்மை என்று சொல்வதற்குக் காரணம், அவர் முதலில் வந்தவர் என்பதற்காக மட்டுமல்ல; மாறாக, மற்ற அனைவரும் அவரிடமிருந்து உத்வேகம் பெற்றனர் என்ற காரணத்தினால். இன்றும்கூட, அந்தோனியாரின் சீடர்களான அமதாஸ் மற்றும் மக்காரியஸ் ஆகிய இருவரும் — இவர்களில் அமதாஸ்தான் தன் குருவைக் கல்லறையில் அடக்கம் செய்தார். அதேவேளை, தீப்ஸைச் சேர்ந்த பவுல் என்பவர்தான் உண்மையில் இதையெல்லாம் ஆரம்பித்தவர் என்றும் கூறுகிறார்கள்; அவர் முதலில் துறவி என்று அழைக்கப்படவில்லை என்றாலும், அவரைப் பற்றிக் கூறப்பட்ட கண்ணோட்டத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். சிலர், அவர் பாதம் வரை நீண்ட கூந்தலுடன் ஒரு நிலத்தடி குகையில் வாழ்ந்த மனிதர் என்பது போன்ற கதைகளைத் தங்கள் இஷ்டப்படி பரப்புகிறார்கள்; அத்தோடு, விபரிப்பதில் எந்தப் பயனுமற்ற பல நம்பமுடியாத கதைகளையும் உருவாக்குகிறார்கள். இங்கே வெட்கமின்றிப் பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்பவர்களின் கருத்துக்களுக்கு எதிராக வாதிடுவது மதிப்புக்குரியதாகத் தோன்றவில்லை. ஆகவே, கிரேக்க மற்றும் ரோமானிய எழுத்தாளர்கள் இருவரும் அந்தோனியாரைப் பற்றி விரிவான குறிப்புகளை வழங்கியிருப்பதால், பவுலின் இளமைக்காலம் மற்றும் பிற்கால வாழ்க்கையைப் பற்றிய ஒரு சுருக்கமான வரலாற்றை எழுத நான் முடிவு செய்துள்ளேன்; இது என் திறமையின் மீதான நம்பிக்கையினால் அல்ல, மாறாக இந்தத் தலைப்பு இதுவரை கவனிக்கப்படாமல் விடப்பட்டிருப்பதாலேயே ஆகும். மேலும் அவருடைய நடுத்தர வயது எப்படி இருந்தது என்பதையும், சாத்தான் அமைத்த பொறிகளை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பது குறித்தும் இதுவரை எவரும் முழுமையாக வெளிக்கொணரவில்லை என்றே தோன்றுகிறது.

2. டேசியஸ் மற்றும் வலேரியனின் கீழ் நடந்த கொடுங்கோல் ஆட்சியின் போது, ​​ரோமில் கொர்னேலியஸும், கார்த்தேஜில் சிப்ரியனும் வேதசாட்சிகளாக மரித்தபோது, ​​எகிப்திலும் தெபாய்டிலும் இருந்த பல திருச்சபைகள் புயலின் சீற்றத்தால் பேரழிவைச் சந்தித்தன. அக்காலத்தில், கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் தாங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் அடிக்கடி ஜெபித்தார்கள். இருப்பினும், தந்திரமான எதிரி சரீரத்தை அல்ல, ஆன்மாவையே அழிக்க நோக்கம் கொண்டிருந்தான்; இதைச் சாதிப்பதற்காக, அவன் மெதுவானதும் சித்திரவதைக்கு உள்ளாக்கும் வழிமுறைகளையும் தேடினான். அத்தகைய துன்பத்தைச் சகித்த சிப்ரியன் அவர்களே கூறியது போல: மரணத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தவர்கள் கொல்லப்பட அனுமதிக்கப்படவில்லை. எதிரியின் கொடுமையை இன்னும் தெளிவாக எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்ட, முக்கியமான இரண்டு உதாரணங்களை நாங்கள் இங்கு முன்வைக்கிறோம்.

3. தன் விசுவாசத்தில் அசைக்க முடியாத ஒரு வேதசாட்சியாகத் திகழ்ந்த அவர், சித்திரவதைகளையும் தீச்சுவாலைகளையும் எதிர்கொண்டபோது கூட, எதற்கும் அஞ்சாத ஒரு வீரனைப் போல உறுதியாக நின்றார். அவரது உடலில் தேனைத் தடவி, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் சுட்டெரிக்கும் சூரியனுக்குக் கீழே படுக்க வைக்குமாறு சித்திவதை செய்தவன் கட்டளையிட்டான்; ஏனென்றால் தீச்சட்டியின் சூட்டைத் தாங்கி அவன் வெற்றிகொள்ளும் பட்சத்தில், கொடிய தேனீக்களின் கொட்டுக்களால் தாக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கொடூரம் அரங்கேற்றப்பட்டது. தன் வாழ்வின் இளமைப் பருவத்தில் இருந்த மற்றொரு இளைஞன், சித்திவதையாளனின் கட்டளைப்படி, அழகிய பூக்களைக் கொண்ட தோட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கே, வெள்ளைநிற அல்லி மலர்களாலும் இளஞ்சிவப்பு ரோஜாக்களாலும் சூழப்பட்டு, மென்மையாக ஓடும் நீரோடைக்கு அருகில், அவன் தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக இனிமையான மாலைகளால் கட்டப்பட்டு, ஒரு மென்மையான, சொகுசான சிறகுகளால் ஆன படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தான். அனைவரும் சென்றபின், பேரழகி ஒருத்தி அவனை அணுகி, மயக்கும் அணைப்பில் அவன் கழுத்தைச் சுற்றித் தன் கைகளைப் போட்டு அவனை அணைத்தாள். இதைக் குறிப்பிடுவதே ஒரு தீய செயல்தான், ஆனாலும் அவனது காம ஆசைகளைத் தூண்டி, தனது ஒழுக்கமற்ற நோக்கங்களை நிறைவேற்றும் நம்பிக்கையில் அவள் அவனைத் தொட ஆரம்பித்தாள். கிறிஸ்துவின் கிருபையைப் பெற்ற அந்த வீரன் செய்வதறியாது திகைத்து நின்றான்; என்ன செய்வதென்றும் யாரிடம் செல்வது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. சித்திரவதைக்கு அவன் பணியாதிருந்த போதிலும், சோதனையால் அவன் மூழ்கடிக்கப்பட்டான். இறுதியாக, விண்ணுலகத்தில் இருந்து கிடைத்த ஓர் உத்வேகத்தால், அவள் முத்தமிட வந்தபோது, ​​அவன் தன் நாக்கின் நுனியைக் கடித்துத் துண்டித்து அவள் முகத்தில் துப்பினான். இவ்வாறு, காமத்தின் காரணமாக எழுந்த அடக்க முடியாத அந்த உணர்வுகள், தொடர்ந்து வந்த கடுமையான வலியால் நீர்த்துப்போயின.

4. தெபாய்டின் கீழ்ப்பகுதியில் இத்தகைய கொடூரங்கள் அரங்கேற்றப் பட்டுக்கொண்டிருந்தபோது, பவுலும் புதிதாகத் திருமணம் செய்துகொண்டிருந்த அவருடைய சகோதரியும் தங்கள் இரு பெற்றோர்களையும் இழந்தனர்; அப்போது பவுலுக்குச் சுமார் பதினாறு வயது தானிருக்கும். அவர் ஒரு பெரும் பரம்பரைச் சொத்துக்கு வாரிசாகவும், கிரேக்க மற்றும் எகிப்தியக் கல்வியில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தவராகவும், சாந்தமான சுபாவமும் கடவுள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவராகவும் காணப்பட்டார். துன்புறுத்தல்களின் போது ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியில், அவர் வெகு தொலைவில் இருந்ததும், மறைவான இடத்தில் அமைந்திருந்ததுமான ஒரு வீட்டிற்குப் போய் அங்கே தங்கியிருந்தார். ஆனால், செல்வத்தின் மீது மனிதனுக்கு ஏற்படக்கூடிய அந்த சபிக்கப்பட்ட பேரவா, மனித மனதை என்னென்ன கொடிய செயல்களைச் செய்யத் தூண்டும்? தான் பாதுகாக்க வேண்டிய அந்த இளைஞனைக் காட்டிக்கொடுக்கும் எண்ணம் அவனது மைத்துனனுக்கு இருந்தது. முடிவுகளை அடிக்கடி மாற்றக்கூடிய மனைவியின் கண்ணீரோ, குடும்பப் பிணைப்புகளோ, அல்லது எப்போதும் மேலே இருந்து கண்காணிக்கும் கடவுளின் பார்வையோ கூட அந்தத் துரோகியை அவனது தீய எண்ணத்திலிருந்து தடுக்க முடியவில்லை. அவன் பவுலை அணுகி வற்புறுத்தியதோடு, குடும்ப அன்பை ஆதரிப்பது போல் பாசாங்கு செய்துகொண்டே கொடூரமாக நடந்துகொண்டான்.

5. அந்த இளைஞன் இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் நுண்ணறிவைப் பெற்றிருந்தான்; தனது ஆசைகளைச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு, கொடுங்கோன்மை முடிவடையும் வரை காத்திருப்பதற்காகக் கூறிவிட்டு, தொலைதூர மலைகளை நோக்கித் தப்பிச் சென்றான். அவன் வனாந்தரத்திற்குள் துணிந்து பிரவேசித்த போது, ​​மெதுவான நடையுடனும், அடிக்கடி ஓய்வெடுத்தபடியும் தனது பயணத்தைத் தொடங்கினான். இறுதியில், அவன் ஒரு பாறையைக் கண்டான். அதன் அடிவாரத்தில் ஒரு கல்லால் மூடப்பட்ட ஒரு சிறிய குகை இருந்தது. ஆர்வத்தால் உந்தப்பட்டவனாய், அவன் அந்தக் கல்லை ஓரமாக நகர்த்திவிட்டு ஆவலுடன் உள்ளே தேடினான். (மறைக்கப்பட்டிருப்பதை அறிந்துகொள்ளவே மனிதர்கள் எப்போதும் ஆவலாக இருப்பார்கள்) அங்கே, கூரை என ஒன்று இல்லாதிருந்த போதிலும், ஒரு பழமையான பனை மரத்தின் பரந்த ஓலைகளால் வேயப்பட்ட ஒரு விசாலமான மண்டபத்தைக் கண்டுபிடித்தான். இருப்பினும், அந்த மரம் ஒளிபுகும் தெளிந்த நீரூற்று ஒன்றுக்கு இடையூறாக இல்லாது, அதிலிருந்து பீறிட்டு வெளிவந்த நீர் உடனேயே, அது தோன்றிய அதே நிலத்தின் ஒரு சிறிய திறப்பில் மீண்டும் உள்நோக்கி உறிஞ்சப்பட்டது. மேலும், அந்த மலை பல்வேறு குழிகளால் நிரம்பியிருந்தது, அவற்றில் பல வாழக்கூடிய இடங்களாக இருந்தன. அங்கு நாணயக் குற்றிகளை உருவாக்கப் பயன்படும் துருப்பிடித்த பட்டறைக் கற்களும் சுத்தியல்களும் காணப்பட்டன. எகிப்திய வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த இடம் அண்டனி மற்றும் கிளியோபாட்ராவின் காலத்தில் ஒரு இரகசிய நாணயங்களை உருவாக்கி களஞ்சியப்படுத்தும் களஞ்சியமாகச் செயல்பட்டது என்று சொல்லப்படுகிறது.

6. அதன்படி, தனது இருப்பிடத்தைக் கடவுள் அளித்த வெகுமதியாகக் கருதி, அவர் அதன் மீது பற்றுதல் கொண்டு, தனது வாழ்நாள் முழுவதையும் அங்கே ஜெபத்திலும் தனிமையிலும் கழித்தார். அங்கிருந்த அந்தப் பனை மரம் அவருக்கு உணவையும் உடையையும் அளித்தது. இது ஏதோ கட்டுக்கதை அல்ல என்பதை நிரூபிக்க, இயேசுவையும் அவருடைய பரிசுத்த தூதர்களையும் சாட்சிகளாகக் கொண்டு என்னால் இதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும். சிரியாவிற்கும் நாடோடிகளின் நிலத்திற்கும் இடையேயான அந்தப் பாலைவனப் பகுதியில் துறவிகளை நான் பார்த்திருக்கிறேன், இப்போதும் பார்க்கிறேன். ஒரு துறவி முப்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, வாற்கோதுமை அப்பத்தை உண்டு கலங்கிய நீரை அருந்தி உயிர் வாழ்ந்தார். மற்றொருவர், அங்கிருந்த ஒரு பழைய நீர்த்தேக்கத்தில் (சிரியாவில் உள்ளூர்வாசிகள் இதை ‘குப்பா’ என்று அழைப்பார்கள்) நீரை அருந்தியவாறு ஒரு நாளைக்கு வெறும் ஐந்து உலர்ந்த அத்திப்பழங்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார். நான் இங்கே பகிர்ந்துகொள்வது நம்ப முடியாததாகத் தோன்றலாம், ஆனால் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இவை யாவும் சாத்தியமே.

7. எப்படியிருந்தாலும், நான் திசை மாறிச் சென்ற இடத்திற்கே மீண்டும் வருவோம். ஆசீர்வதிக்கப்பட்ட பவுல் ஏற்கனவே நூற்றுப் பதின்மூன்று ஆண்டுகள் பூமியில் ஒரு தெய்வீக வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருந்தார். ஆனால் அந்தோனியாரோ தொண்ணூறு வயதில், (அவர் அடிக்கடி சொல்வது போல) மற்றொரு தனிமையான இடத்தில் வாழ்ந்தார். பாலைவனத்தில் தன்னை விட பரிபூரணமான துறவி வேறு யாரும் இல்லை என்று அவர் மனதில் தோன்றியது. ஆனால் இரவின் அமைதியில், பாலைவனத்தின் தனிமையில் தன்னை விட மிகச் சிறந்த ஒரு மனிதர் இருப்பதாகவும், அவரைச் சென்று சந்திக்க வேண்டும் என்றும் அவருக்குக் காட்டப்பட்டது. எனவே, விடியற்காலையில், அந்த ஞானம் மிக்க முதியவர், தனது மெலிந்த உடலைத் தாங்கி நடக்க ஒரு ஊன்றுகோலைப் பயன்படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இருப்பினும், எந்தத் திசையில் செல்வது என்று அவருக்குத் தெரிய வில்லை. சுட்டெரிக்கும் நண்பகல் சூரியன் அவர் மீது கடுமையாகச் சுட்டெரித்தது, ஆனால் அது தனது பயணத்துக்கு இடையூறாக இருக்க அவர் அனுமதிக்கவில்லை. அவர், “நான் என் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்: அவர் வாக்களித்த சக ஊழியரை இறுதியில் எனக்குக் காட்டுவார்” என்ற விசுவாசத்தில் ஊன்றியிருந்தார். அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. திடீரென்று, அவர் பாதி குதிரையும், பாதி மனிதனும் என்ற ஒரு விசித்திரமான உயிரினத்தைக் கண்டார்; கவிஞர்களால் அது நீர்யானை என்று அறியப்பட்டது. அதைக் கண்டதும், அவர் தனது நெற்றியில் இரட்சிப்பின் அடையாளத்தை இட்டுக்கொண்டு, “ஏய்! இங்கே கடவுளின் ஊழியர் யாராவது இருக்கிறார்களா?” என்று உரத்த குரலில் வினவினார். அந்த உயிரினம், தன் முட்கள் நிறைந்த உதடுகளால் சில விசித்திரமான ஒலிகளை எழுப்பிய பிறகு, இறுதியாக நட்புடன் உரையாடத் தொடங்கியது; சரியான திசையைக் காட்டுவதற்காகத் தன் வலது கையை நீட்டியது. பின்னர், ஒரு சடுதியான அசைவுடன் அது அந்தப் பரந்த சமவெளியைக் கடந்து பறந்து சென்று, வியப்பில் ஆழ்ந்திருந்த அண்டனியின் பார்வையிலிருந்து மறைந்து போனது. அவரைப் பயமுறுத்துவதற்காகப் பிசாசு இந்த உருவத்தை எடுத்ததா, அல்லது விசித்திரமான உயிரினங்களுக்குப் பெயர் பெற்ற அந்தப் பாலைவனமே இதுபோன்ற உயிரினங்களை உருவாக்கியதா என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது.

8. அந்தோனி திகைத்துப்போனவராய் தான் கண்டதைப்பற்றிச் சிந்தித்தவாறே தனது பாதையில் தொடர்ந்து சென்றார். அந்தச் சந்தர்ப்பத்தில், நாலாப் பக்கங்களிலும் சூழப்பட்ட ஒரு சிறிய பாறைப் பள்ளத்தாக்கில், வளைந்த மூக்கும், கொம்புகளுடைய நெற்றியும், மற்றும் ஆடுகளைப் போன்ற பாதங்களைக் கொண்டதுமான ஒரு உயிரினத்தை அவர் கண்டார். இதைக் கண்டதும், ஒரு விசுவாசமான வீரனான அந்தோனி, விசுவாசத்தின் கேடயத்தையும் நம்பிக்கையின் தலைக் கவசத்தையும் அணிந்துகொண்டார். ஆயினும்கூட, அந்த உயிரினம் அவரது பயணத்திற்கு ஆதரவாக, கிட்டத்தட்ட சமாதானத்தின் அடையாளங்களைப் போல, பனை மரப் பழங்களை அவருக்கு வழங்கத் தொடங்கியது. இதைக் கவனித்த அந்தோனி சற்று நின்று அந்த உயிரினத்தின் அடையாளத்தைப் பற்றி விசாரித்தார். அவருக்குக் கிடைத்த பதில் இவ்வாறாக இருந்தது: நான் ஒரு மரணமடையும் ஜீவன், பல்வேறு தவறான நம்பிக்கைகளால் வழிதவறிய புறச்சமயத்தினர் ஃபான்கள், சாட்டயர்கள், மற்றும் இன்குபிகள் என்ற பெயர்களில் வழிபடும் பாலைவனவாசிகளில் ஒருவன். என் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம், உங்கள் ஆண்டவரிடமும் எங்கள் ஆண்டவரிடமும் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள்; அவர் ஒரு காலத்தில் உலகைக் காப்பாற்ற வந்தார் என்றும், ‘அவருடைய ஒலி பூமி எங்கும் பரவியுள்ளது’ என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம் என்று அவனது பதில் அமைந்திருந்தது. அவன் இந்த வார்த்தைகளைப் பேசியபோது, ​​அந்த வயதான பயணியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது; அத்தருணத்தின் மகிழ்ச்சியில் அவன் வெளிப்படுத்திய ஆழ்ந்த உணர்ச்சிகளுக்கு அது ஒரு சான்றாக இருந்தது. அவன் கிறிஸ்துவின் மகிமையிலும் சாத்தானின் வீழ்ச்சியிலும் மகிழ்ந்தான்; அதே சமயம், அந்தச் சத்யனின் பேச்சைப் புரிந்துகொள்ளும் தனது திறனைக் கண்டு வியந்தார். தனது கோலால் தரையில் அடித்து, அவர் “கடவுளுக்குப் பதிலாக அரக்கர்களை வழிபடும் அலெக்சாண்டிரியாவே, உனக்கு ஐயோ கேடு! என்று கூச்சலிட்டார்: உலகத்தின் பிசாசுகள் அனைத்தும் கூடியுள்ள கெட்ட நகரமே, உனக்கு ஐயோ கேடு! இப்போது நீ என்ன சொல்கிறாய்? மிருகங்கள் கூட கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகின்றன, ஆனால் நீயோ கடவுளுக்குப் பதிலாக அரக்கர்களை வழிபடுகிறாய்.” அவர் தன் வார்த்தைகளை முடிப்பதற்குள், இறக்கைகளால் உந்தப்பட்டது போல, அந்த விசித்திர மிருகம் விரைந்து ஓடி மறைந்துபோனது. இந்த நிகழ்வை நம்புவதற்கு யாரும் தயங்க வேண்டாம்; அதன் உண்மைத் தன்மை, கொன்ஸ்டன்டைனின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த, உலகம் முழுவதாலும் காணப்பட்ட ஒரு சம்பவத்தால் உறுதிப்படுத்தப் படுகிறது. ஏனெனில், அதுபோன்ற ஒரு உயிரினம் உயிருடன் அலெக்சாண்டிரியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, மக்களுக்கு ஒரு அதிசயமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர், கோடை வெப்பத்தில் அதன் உடல் சிதைவடைவதைத் தடுப்பதற்காக, உப்பில் பதப்படுத்தப் பட்டு, பேரரசர் அதைக் காண்பதற்காக அந்தியோக்கியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

9. நான் மனதில் வைத்திருக்கும் கதையைத் தொடர்கிறேன். அந்தோணி தான் நுழைந்த பகுதியில் சுற்றித் திரிந்தார். காட்டு விலங்குகளின் தடயங்களையும் பாலைவனத்தின் பரந்த வெறுமையையும் மட்டுமே கண்டார். அடுத்து என்ன செய்வதென்றும், எங்கே போவதென்பதிலும் அவர் நிச்சயமற்று இருந்தார். மற்றொரு நாள் கடந்து போய்விட்டது. கிறிஸ்து தன்னைக் கைவிடமாட்டார் என்ற அவரது அசைக்க முடியாத விசுவாசத்தை மட்டுமே அவர் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தார். இரண்டாம் இரவை அவர் ஜெபத்தில் கழித்தார். அந்திப் பொழுது நீடித்தபோது, ​​தாகத்தால் தவித்தவாறு மலையடிவாரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பெண் ஓநாயை அவர் அருகில் கண்டு அதை உன்னிப்பாகக் கவனித்தார்; அது ஒரு குகைக்குள் சென்று மறைந்த பிறகு, உள்ளே சென்று பார்க்க எண்ணி அவர் அதை அணுகினார். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக, அவரது ஆர்வம் பலனளிக்கவில்லை; எதையும் பார்க்க முடியாதபடி அந்தக் குகைக்குள் இருள் சூழ்ந்திருந்தது. ஆனால், வேதவாக்கியம் கூறுவது போல, பரிபூரண அன்பு பயத்தை நீக்கிவிடும். எச்சரிக்கையுடன் மெதுவாக அடிமேல் அடி வைத்து, மூச்சை அடக்கிக்கொண்டு, அவர் மிக்க அவதானத்துடன் உள்ளே நுழைந்தார்; அவர் மெதுவாக உள்நோக்கி நகர்ந்து, ஏதேனும் சத்தம் கேட்கிறதா என்று கூர்ந்து கவனித்தார். இறுதியில், நள்ளிரவின் பயங்கரமான இருளில், தூரத்தில் ஒரு ஒளி மினுமினுத்தது. ஆர்வம் காரணமாக அவரது கால் ஒரு கல்லின் மீது இடறியது, அதனால் குகைக்குள் எதிரொலிகள் எழுந்தன; அந்தத் தருணத்தில், அதை கேட்டதும் ஆசீர்வதிக்கப்பட்ட பவுல் கதவை மூடி, தாழ்ப்பாள் இட்டு அதைப் பூட்டினார். பின்னர் அந்தோணி அந்தக் குகையின் வாசலில் தரையில் விழுந்து, ஆறு மணி நேரமாக அல்லது அதற்குப் பிறகும், உள்ளே நுழைய அனுமதி கேட்டு மன்றாடினார், ‘நான் யார், எங்கிருந்து வருகிறேன், ஏன் இங்கே இருக்கிறேன் என்பது உமக்குத் தெரியும். உம்மைக் காண நான் தகுதியற்றவன் என்பதை உணர்கிறேன். ஆனால் நான் உம்மைக் காணாமல் நான் இங்கிருந்து போகமாட்டேன்.’ நீர் மிருகங்களை ஏற்றுக்கொள்கிறீர்; ஒரு மனிதனை ஏன் ஏற்க மறுக்கிறீர்? நான் கேட்டேன், கண்டேன்; எனக்காக அது திறக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தட்டுகிறேன். கிடைக்காவிட்டால் உமது வாசலிலேயே நான் விழுந்து மடிந்து போவேன். அப்படி நான் இறந்து போனாலும், நிச்சயமாக நீர் என்னை நல்லடக்கம் செய்வீர் என்று நம்புகிறேன் என்றார்.

இதுவே அவரது இடைவிடாத கதறலாக இருந்தது: அவர் அசையாமல் அங்கேயே நின்றார்.

அவனுக்கு அந்த வீரன் இவ்வாறு சுருக்கமாகப் பதிலளித்தார்:

“இத்தகைய மன்றாடல்கள் மறைமுகமான அச்சுறுத்தல்கள் அல்ல; கண்ணீர் உண்மையானது. நீ இங்கே மரணத்தைச் சந்திக்க வந்திருக்கிறாய், நான் உன்னை வரவேற்காதது குறித்து உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?” என்று ஒரு புன்னகையுடன் பவுல் அவரை உள்ளே அனுமதித்தார். கதவு திறக்கப்பட்டதும், அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, பெயர்களைப் பரிமாறிக்கொண்டு, கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்.

10. அந்தப் புனித முத்தத்திற்குப் பிறகு, பவுல் அமர்ந்து அந்தோணியிடம் பேசத் தொடங்கினார். “நீர் மிகுந்த பிரயாசத்துடன் தேடிய இந்த மனிதனைப் பாரும்; வயதின் காரணமாக அவனது உடல் தளர்ந்து போயிருக்கிறது, அவனது நரைத்த முடி எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கிறது. உமக்கு முன்பாக நிற்பவன், விரைவில் தூசியாக மாறப்போகிறவன். ஆனாலும், அன்பு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறது. ஆகவே, நான் உம்மைக் கேட்கிறேன்; மனிதகுலம் எப்படி இருக்கிறது? பழைய நகரங்களில் புதிய வீடுகள் கட்டப்படுகின்றனவா? எப்படிப்பட்ட அரசாங்கம் உலகை ஆளுகிறது? பிசாசின் சூழ்ச்சிகளால் வழிதவறிச் செல்ல இன்னும் சிலர் மிஞ்சி இருக்கிறார்களா?” என்று கேட்டார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ​​மரக்கிளையில் அமர்ந்திருந்த ஒரு காகத்தைக் கவனித்தார்கள்; அது மெதுவாகக் கீழே பறந்து வந்து ஒரு முழு அப்பத்தை அவர்களுக்கு முன்பாக வைத்தது. அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள், அது சென்றபின் பவுல், ‘இதோ, மெய்யாகவே அன்பும் இரக்கமும் உள்ள ஆண்டவர், நமக்கு ஒரு வேளை உணவை அளித்திருக்கிறார். கடந்த அறுபது ஆண்டுகளாக, நான் அரைவாசி அப்பத்தை மட்டுமே உண்டு வந்தேன்: ஆனால் உமது வருகையால், கிறிஸ்து தம்முடைய போர்வீரர்களின் உணவுப் பங்கீட்டை இரட்டிப்பாக்கியிருக்கிறார்” என்றார்.

11. இருவருமாக சேர்ந்து கர்த்தருக்கு நன்றி செலுத்தியபின், அவர்கள் தெளிந்த நீரூற்றின் ஓரத்தில் அமர்ந்தார்கள். அந்த நேரத்தில், அப்பத்தை யார் பிட்க வேண்டும் என்பது குறித்து ஒரு விவாதம் மூண்டது. அதுபற்றி அவர்கள் மாலை வரை, ஏறக்குறைய நாள் முழுவதும் அதைப் பற்றி விவாதித்தார்கள். பவுல் விருந்தோம்பல் பழக்க வழக்கங்களைக் குறிப்பிட்டுத் தன் நிலைப்பாட்டை முன்வைத்தார். அதேசமயம் அந்தோணி வயது என்ற கண்ணோட்டத்தில் வாதிட்டார். இறுதியில், ஒவ்வொருவரும் தங்களுக்கு மிக அருகில் வைக்கப்பட்டுள்ள அப்பத்தை எடுத்து, அதை இருவரும் தங்கள் பக்கமாக இழுத்து, மீதமுள்ள பகுதியைத் தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள முடிவு செய்தனர். பின்னர், மண்டியிட்டு, அவர்கள் அந்த நீரூற்றிலிருந்து சிறிதளவு தண்ணீர் குடித்து, தேவனைத் துதித்தபின், இரவை விழித்திருந்து கழித்தார்கள். விடியற்காலையில் ​​புனித பவுல் அந்தோணியை நோக்கி; சகோதரரே, நீர் இந்தப் பகுதியில் தான் வசித்து வருகிறீர் என்பதை நான் நீண்ட காலமாக அறிந்திருக்கிறேன்: தேவன் உம்மை எனக்கு ஒரு உடன் ஊழியனாக நெடுங்காலத்திற்கு முன்பே வாக்களித்திருந்தார்; ஆனால் இப்போது நான் புறப்படும் நேரம் நெருங்குகிறது; நான் எப்போதும் சுதந்திரமாக இருக்கவும் கிறிஸ்துவுடன் இருக்கவும் ஏங்கினேன்; என் பயணம் நிறைவடைந்துவிட்டது, நீதியின் கிரீடம் எனக்காகக் காத்திருக்கிறது. ஆகவே, என் எளிய உடலை அடக்கம் செய்வதற்கும், ஆம், மண்ணோடு மண்ணாகப் போவதற்கும் ஆண்டவரால் நீர் அனுப்பப்பட்டிருக்கிறீர் என்று கூறினார்.

12. இதைக் கேட்ட அந்தோனி, கண்ணீராலும் பெருமூச்சுகளாலும் நிரம்பியவராய், தன்னைக் கைவிட வேண்டாம் என்றும், மாறாக அந்தப் பயணத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் மன்றாடினார். அதற்கு அவரது நண்பன், நீ உன் சொந்த ஆசைகளில் கவனம் செலுத்தாமல் பிறர் நலனில் கவனம் செலுத்த வேண்டும். நீ உன் உலகப் சுகங்களை விட்டுவிட்டு ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுவது உனக்கு நல்லது; இருப்பினும், மற்ற சகோதரர்கள் உன்னுடைய முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்வதும் முக்கியம். எனவே தயவுசெய்து ஆயரான அத்தனாசியாஸ் உனக்குக் கொடுத்த அந்த அங்கியை எடுத்து வா என்று கேட்டுக்கொண்டார். எனது இந்த ஏழை உடலை மூடுவதற்கு. ஆசீர்வதிக்கப்பட்ட பவுல் இவ்வாறு அந்த அங்கியைக் கேட்டது, தனது நலிந்துவரும் உடலுக்கு ஆடை கிடைக்குமா கிடைக்காதா என்ற கவலையினால் அல்ல, (ஏனென்றால், அவர் நீண்ட காலமாக பனை ஓலைகளை ஒன்றாகத் தைத்து செய்யப்பட்ட ஆடையையே அணிந்திருந்தார்); மாறாக, தனது மரணத்தால் தன் நண்பனுக்கு ஏற்படக்கூடிய துக்கத்தைத் தணிப்பதற்காகவே. பவுலுக்கு அத்தனாசியாஸையும் அவரது மேலங்கியையும் பற்றி எவ்வாறு தெரிந்தது என அறிந்து அந்தோனி ஆச்சரியப்பட்டார்; மேலும், அவரில் கிறிஸ்துவின் பிரதிபலிப்பைக் கண்டு, ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனமாக இறைவனை வழிபட்டார். பின்னர், கண்ணீருடன் பவுலின் கைகளையும் கண்களையும் மீண்டும் ஒருமுறை முத்தமிட்டுவிட்டு பின்னர் நாடோடி ஜனங்களால் கைப்பற்றப்படவிருந்த மடாலயத்திற்குத் திரும்பினார். அவரது நோக்கங்களை விட அவரது நடை மெதுவாக இருந்தது. ஆயினும், உபவாசத்தால் களைத்துப்போய், முதுமை அடைந்திருந்தபோதிலும், அவரது ஆன்மா அவரது வயதுக்கு மீறிய சக்தியை அவருக்கு அளித்திருந்தது.

13. இறுதியாக, களைப்படைந்து மூச்சுத்திணறலுடன் நடந்து, அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு தனது சிறிய வீட்டை அடைந்தார். அங்கே, அவரது பிற்காலத்தில் அவருக்கு உதவ முன்வந்திருந்த இரண்டு சீடர்கள் அவரை வரவேற்றனர். அவர்கள், “தந்தையே, இவ்வளவு காலம் எங்கே இருந்தீர்கள்?” என்று கேட்டனர். அவர் பதிலாக, “ஐயோ, நான் ஒரு பாவி! துறவி என்ற பட்டத்திற்கு நான் தகுதியற்றவன். நான் எலியாவைச் சந்தித்திருக்கிறேன், வனாந்தரத்தில் யோவானைச் சந்தித்திருக்கிறேன், பரலோகத்தின் பவுலை மெய்யாகவே கண்டேன்” என்று கூறினார். பின்னர் அவர் தன் உதடுகளை மூடிக்கொண்டு, தன் மார்பில் அறைந்து கொண்டு, தன் அறையிலிருந்து அந்த அங்கியை எடுத்தார். அவருடைய சீடர்கள் மேலும் விரிவான விளக்கத்தைக் கேட்டபோது, ​​அவர், “மௌனமாக இருப்பதற்கும் ஒரு காலம் உண்டு, பேசுவதற்கும் ஒரு காலம் உண்டு” என்று பிரசங்கி 3:7-ல் சொல்லப்பட்டுள்ள வசனங்களை நினைவுபடுத்தினார்.

14. அந்தோனி ஒரு வாய் உணவு கூட உண்ணாமல் வெளியேறி, வந்த வழியே திரும்பிச் சென்றார்; அவரை மட்டுமே காண வேண்டும் என்ற ஏக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு, ஒரு கணம் அவரைக் காணத் துடித்து, அவர் மீதே தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார். அவர் கவலைப்பட்டார், பின்னர் தெரியவந்தது போல, அவருடைய அச்சம் நியாயமானதாகவே இருந்தது. தான் இல்லாத நேரத்தில் தன் நண்பர் மரித்து, கிறிஸ்துவுடன் சேர்ந்துவிடுவாரோ என்று அவர் நினைத்தார். மறுநாள் விடிந்தது, பயணம் முடிய இன்னும் மூன்று மணி நேரம் மாத்திரமே இருந்த நிலையில், பிரகாசமான வெள்ளை ஆடை அணிந்த பவுல், தேவதூதர்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் கூட்டத்தினருக்கு மத்தியில் எழுந்து செல்வதை அந்தோனி கண்ணுற்றார். உடனே அவர் தரையில் விழுந்து தன் தலையில் கற்கூளங்களையும் மணலையும் தூவிக்கொண்டு, “பவுலே, நீர் ஏன் என்னை விட்டு விலகிச் சென்றீர்? விடைபெறாமல் ஏன் சென்றீர்? இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போவதற்காகவா உம்மை எனக்கு வெளிப்படுத்தினீர்?” என்று வேதனையுடன் அழுது புலம்பினார்.

15. புனித அந்தோனியார் பின்னர் கூறியது என்னவென்றால், அவர் மீதமுள்ள தூரத்தை ஒரு பறவை பறப்பது போன்ற வேகத்தில் கடந்தார். இது புரிந்துகொள்ளக்கூடியதே, ஏனெனில் அவர் குகைக்குள் நுழைந்த போது, ​​தலை நிமிர்ந்தும் கைகள் உயர்த்தப்பட்டும் மண்டியிட்ட நிலையில் இருந்த ஒரு உயிரற்ற உடலைக் கண்டார். முதலில், அந்த நபர் உயிருடன் இருக்கிறார் என்று அவர் நினைத்து, அவர் அருகில் சென்று ஜெபித்தார். ஆனால், பிரார்த்தனையின்போது வழக்கமாக எழும் பெருமூச்சுகள் எதையும் அவர் கேட்காத காரணத்தால் ​​அந்த உடலை முத்தமிட்டு அழத் தொடங்கினார். அப்போதுதான், அனைவருக்கும் வாழ்வளிக்கும் கடவுளிடம் அந்தப் புனிதரின் இறந்த உடல்கூட இன்னும் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

16. பின்னர், உடலைப் போர்த்து வெளியே கொண்டு வந்த பிறகு, கிறிஸ்தவ வழக்கப்படி துதிப்பாடல்களையும் சங்கீதங்களையும் பாடிக்கொண்டே இருந்த அந்தோனிக்குத் தரையைத் தோண்டுவதற்குத் தன்னிடம் ஒரு கருவி இருந்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றியது. எனவே, ஆழ்ந்து சிந்தித்து, பல யோசனைகளைப் பரிசீலித்து, அவருக்குள்ளே அவர், “நான் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றால், அது நான்கு நாள் பயணமாகும்; நான் இங்கேயே தங்கியிருந்தால், எந்தப் பயனும் இல்லை. அப்படியானால், கிறிஸ்துவே, அப்போது உமது போர்வீரருக்கு அருகில் தகுந்தபடி நான் மரித்து, விரைவில் என் கடைசி மூச்சை விடுவேன்” என்ற நோக்கில் அவர் இவற்றைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தபோது, பாலைவனத்தின் மறைவான பகுதிகளிலிருந்து, கழுத்தில் பிடரிமயிர் காற்றில் பறக்க, இரண்டு சிங்கங்கள் வேகமாக ஓடி வந்தன. முதலில், அவர் கண்ட காட்சியால் பயம் அவரைத் தொற்றிக்கொண்டபோதிலும், மீண்டும் இறைவனை நினைத்து, தான் கண்டவை சிங்கங்கள் அல்ல, புறாக்கள் என்பது போல பயமின்றி காத்திருந்தார். அவை நேராக அந்தப் புனிதம் மிக்க முதியவரின் இறந்த உடலின் அருகே வந்து, அங்கே சற்று நின்று, அதைத் தங்கள் முகத்தால் உரசி, அந்த இறந்த உடலின் காலடியில் படுத்துக் கொண்டன; தங்களால் இயன்ற ஒரே வழியில் துக்கம் அனுசரிப்பதைக் காட்டுவது போல உரக்கக் கர்ஜித்தன. பிறகு, அவை அருகிலிருந்த தரையைக் கிளறத் தொடங்கி, ஒரு மனிதன் தங்குவதற்குப் போதுமான ஒரு இடம் அமையும் வரை மணலைத் தோண்டுவதில் ஒன்றுக்கொன்று போட்டியிட்டன. உடனே, தங்கள் உழைப்பிற்கான வெகுமதியைக் கோருவது போல, தலைகுனிந்து காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு, அந்தோனியிடம் வந்து அவை அவருடைய கைகளையும் கால்களையும் நக்கத் தொடங்கின. இதன்மூலம் அவை தன்னிடம் ஒரு ஆசீர்வாதத்தைத் தேடுகின்றன என்பதை அவர் உணர்ந்துகொண்டார். வாய்பேசாத உயிரினங்கள் கூட கிறிஸ்துவின் தெய்வீகத்தை அறிந்துள்ளன என்பதை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவுக்கு மனப்பூர்வமான புகழாரம் சூட்டி, அவர் “ஆண்டவரே, உமது கட்டளையின்றி ஒரு மரத்திலிருந்து ஒரு இலை கூட விழாது, ஒரு சிட்டுக்குருவி கூட தரையில் விழாது. எது சிறந்தது என்று உமக்குத் தெரிந்ததை அவற்றுக்கும் அருளும்” என்று செபித்தார். பின்னர் அவர் தன் கையை அசைத்து, அம்மிருகங்களை வெளியேறுமாறு சைகை செய்தார். அவை சென்ற பிறகு அவர் அந்தப் புனிதரின் உடலின் பாரத்தைத் தாங்க முடியாமல் தன் முதிர்ந்த தோள்களைத் தாழ்த்தி அவ்வுடலைத் தூக்கி கல்லறையில் வைத்து தான் தோண்டியெடுத்த மண்ணால் மூடி அதன் மீது வழக்கம் போல் ஒரு மண்மேட்டைக் கட்டினார். இவை நடைபெற்ற மறுநாள் ஒரு புதிய பொழுது விடிந்தது. இறந்தவரின் நினைவாக, அன்பு நிறைந்த அந்த வாரிசுக்கு ஏதேனும் ஒன்று கிடைப்பதை உறுதிசெய்யும் பொருட்டு அந்தப் புனிதர் பனை ஓலைகளால் பிரம்பு போன்று செய்திருந்த அங்கியை தன்னோடு எடுத்துக்கொண்டு, மடாலயத்திற்குத் திரும்பி அனைத்தையும் தன் சீடர்களுடன் பகிர்ந்துகொண்டார். பின்னாளில் பஸ்கா மற்றும் பெந்தேகோஸ்தே பண்டிகை நாட்களின் போது, அவர் எப்போதும் பவுலின் அங்கியையே அணிந்திருந்தார்.

17. தங்களுக்கு எவ்வளவு உடைமைகள் உள்ளன என்பதை அறியாதவர்களையும், தங்கள் வீடுகளைப் பளிங்குக் கற்களால் அலங்கரிப்பவர்களையும், வீடுகளை வீடுகளோடும், வயல்களை வயல்களோடு இணைப்பவர்களையும், இந்தச் சிறிய புத்தகத்தின் முடிவில் கேட்க எனக்கு அனுமதி கிடைத்தால், நான் ஒன்றை மட்டுமே கேட்பேன்; வெறுமையில் மட்டுமே வாழ்ந்த இந்த முதியவருக்கு என்ன தேவைப்பட்டது? நீங்கள் குடிக்கும் கிண்ணங்களோ விலையுயர்ந்த கற்களால் ஆனவை; ஆனால் அவரோ தன் குழிந்த கையால் நீரைப் பிடித்து அருந்தி வாழ்ந்தார். உங்கள் ஆடைகள் நவீன வேலைப்பாடுகள் கொண்ட தங்கத்தால் ஆனவை; உங்கள் கடைநிலை ஊழியர்கள் அணியும் ஆடைகள் கூட அவரிடம் இருந்ததில்லை. ஆனால் மறுபுறம், அவர் ஏழையாக இருந்தபோதிலும் பரலோகம் அவருக்குத் தன் கதவுகளைத் திறந்தே வைத்திருந்தது; ஆனால் நீங்களோ உங்கள் தங்கம் அனைத்துடன் நரகத்திற்குத் தான் போவீர்கள். அவர் வெறுமையாக இருந்தபோதிலும் கிறிஸ்துவின் அங்கியை அணிந்திருந்தார்; பட்டுத் துணிகளால் ஆன உடைகளை அணியும் நீங்கள் கிறிஸ்துவின் உடையை இழந்துவிட்டீர்கள். பவுல் உயிரற்ற மண்ணால் மூடப்பட்டுக் கிடந்த போதிலும் மீண்டும் மகிமையுடன் எழுவார்; உங்கள் மரித்த உடல்கள் மீது விலையுயர்ந்த கல்லறைகள் எழுப்பப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், நீங்களும் உங்கள் செல்வமும் நெருப்புக்காகவே படைக்கப்பட்டவை. ஆகவே, நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; கவனமாக இருங்கள், குறைந்தபட்சம் நீங்கள் விரும்பும் செல்வத்தின் மீது அக்கறை கொள்ளுங்கள். இறந்த உங்கள் உற்றார்களின் உடல்கள் மீது நல்லடக்கத்தின்போது அணிவித்திருக்கும் கல்லறை ஆடைகள் கூட ஏன் தங்கத்தால் செய்யப்படுகின்றன? துக்கத்திற்கும் கண்ணீருக்கும் மத்தியிலும் உங்கள் அகந்தை ஏன் ஓயவில்லை? செல்வந்தர்களின் சடலங்கள் பட்டுத்துணியில் சுற்றப்பட்டால் அன்றி, வேறெதிலும் சுற்றப்பட்டிருந்தால் அழுகிப்போகாமல் இருக்குமா?

18. வாசகரே, நீங்கள் யாராக இருந்தாலும், பாவியான ஜெரோமே நினைவுகூருமாறு உங்களைத் தயவுடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறேன். தேவன் அவனுக்கு எந்த ஆடையைத் தெரிவுசெய்ய வேண்டும் என்று அனுமதிப்பாரானால், தண்டனையோடு கூடிய அரசர்களின் செந்நிற ஆடைகளை அணிவதைவிட, தன் நற்செயல்களோடு கூடிய பவுலின் அங்கியை அவர் பெரிதும் விரும்பி ஏற்றுக்கொள்வார்.