சிறைப்பட்ட துறவியான மால்கஸின் வாழ்க்கை

St. Jerome, The Life of Malchus, in Tamil.

மல்குசின் வாழ்க்கை வரலாறு கி.பி. 391-ஆம் ஆண்டில் பெத்லகேமில் எழுதப்பட்டது. அதன் தோற்றம் மற்றும் நோக்கம் ஆகியவை 1 மற்றும் 2-ஆம் அதிகாரங்களில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன.


1. கடற்சமர்களில் ஈடுபடும் கடற்படைச் சிப்பாய்கள், தங்களுக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளும் முகமாக, துறைமுகங்களிலும் அமைதியான நீர்நிலைகளிலும் சுக்கானைச் சரிசெய்தும், துடுப்புப்களைப் பரீட்சித்தும், நங்கூரங்களையும், கொக்கிகளையும் பற்றிக்கொள்ளும் இரும்பு வளையங்களையும் தயார்செய்துகொண்டும் அதற்கு ஏற்றவாறு தங்களையும் தயார்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் வீரர்களைக் கப்பலின் தளங்களில் நிறுத்தி, வழுக்கும் தரையில் உறுதியாக நிற்கப் பயிற்சி அளிக்கிறார்கள். அதனால், உண்மையான போர் வரும்போது, ​​அவர்கள் ஏற்கனவே அதை நடைமுறையில் அனுபவித்திருப்பதால் தடுமாற மாட்டார்கள். என் விஷயத்திலும் அப்படித்தான்; நான் நீண்ட காலமாக அமைதியாக இருந்தேன், ஏனென்றால் நான் யாரைப் பற்றிப் பேச விழைகிறேனோ அது அவருக்கு வேதனையைத் தரக்கூடியதாக இருக்கிறதோ, அவரே என் மௌனத்துக்குக் காரணியாக இருந்தார். ஆனால் இப்போது ​​ஒரு விரிவான வரலாற்றை எழுத நான் தயாராகும் போது, ​​இந்தச் சிறிய படைப்பின் மூலம் தேவையான பயிற்சிகளைச் செய்து, என் பேச்சுத் திறனில் படிந்திருக்கும் தூசியைத் தட்டி அகற்ற விரும்புகிறேன். (கடவுள் என்னை வாழ அனுமதித்தால், அதேநேரம் நான் இப்போது ஒரு மடாலயத்தில் தலைமறைவாக இருப்பதாலும், என் விமர்சகர்கள் இறுதியாக என்னைத் துரத்துவதை நிறுத்தினாலே தவிர) நம் இரட்சகர் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை கிறிஸ்துவின் திருச்சபையின் வரலாற்றை, அப்போஸ்தலர்கள் முதல் தற்போதைய நிலைமை வரை அனைத்தையும் உள்ளடக்கி இந்த வரலாற்றை எழுதத் திட்டமிட்டுள்ளேன். திருச்சபை எவ்வாறு பிறந்தது, துன்புறுத்தல்களின் மூலம் அது எவ்வாறு வலிமை பெற்று வேதசாட்சிய மரணங்கள்  மூலமாகக் கௌரவிக்கப்பட்டது என்றும், பின்னர் கிறிஸ்தவப் பேரரசர்களின் சகாப்தத்தை அடைந்த பிறகு, அது எவ்வாறு அதிகாரத்தையும் செல்வத்தையும் பெற்று தனது கிறிஸ்தவ விழுமியங்களை இழந்தது என்பதை விளக்குவதே என் நோக்கம். ஆனால் அதைப் பற்றிப் பிறகு விரிவாகப் பார்ப்போம். இப்போது, ​​விஷயத்திற்கு வருவோம்.

2. மரோனியா என்பது சிரியாவில் உள்ள அந்தியோகியாவிற்கு கிழக்கே சுமார் முப்பது மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். நான் சிரியாவில் ஒரு இளைஞனாக இருந்த காலத்தில், அது பலமுறை கைமாறி, இறுதியில் எனது நெருங்கிய நண்பரான ஆயர் எவாக்ரியஸின் அதிகாரத்தின் கீழ் வந்தது. எனது தகவலின் மூலத்தை முன்னிலைப் படுத்தவே அவரது பெயரைக் குறிப்பிடுகிறேன். அக்காலத்தில், மல்குஸ் என்ற பெயருடைய ஒரு முதியவர் இருந்தார். அதன் பொருள் ‘அரசன்’ என்பதாகும். அவர் பாரம்பரியத்தாலும் மொழியாலும் ஒரு உண்மையான சிரியராகவும், அந்த மண்ணின் மைந்தராகவும் இருந்தார். அவருடன் மெலிந்த தோற்றமுடைய ஒரு வயதான பெண்மணி இருந்தார்; அவர் மரணத்தின் விளிம்பில் இருப்பது போல் தோற்றமளித்தார். அவர்கள் இருவரும் மிகவும் பக்தியுள்ளவர்களாகவும், தேவாலயத்திற்குத் தவறாமல் செல்பவர்களாகவும் இருந்ததால், நற்செய்தியில் வரும் சகரியா மற்றும் எலிசபெத் என்று அவர்களைக் கருதியிருக்கலாம், ஆனால் அங்கே யோவான் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆர்வத்தின் காரணமாக, நான் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் அவர்களின் உறவைப் பற்றிக் கேட்டேன்; அதாவது அது திருமண உறவா, குடும்ப உறவா, அல்லது ஒரு ஆன்மீகத் தொடர்பா என்று. அதற்கு அந்த அயலவர்கள், அவர்கள் புனிதமானவர்கள் என்றும், கடவுளுக்குப் பிரியமானவர்கள் என்றும் ஒருமனதாக ஒப்புக்கொண்டு, அவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான கதைகளையும் பகிர்ந்துகொண்டனர். மேலும் அறிந்துகொள்ளும் ஆவலில், நான் கேள்விப்பட்டவற்றின் பின்னணியில் உள்ள உண்மையைப் பற்றி மல்கூஸிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினேன், அதன் விளைவாகப் பின்வருவனவற்றைக் கண்டறிந்தேன்.

3. “என் மகனே,” என்று என்னை அழைத்த அவர், தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனார். “நான் நிசிபிஸில் சிறிதளவு நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன், நான் என் பெற்றோருக்கு ஒரே மகன். எனவே அவர்கள் என்னை ஒரே வாரிசாகவும், தங்கள் வம்சத்தின் ஒரே எஞ்சியவனாகவும் கருதி, எனக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினர். ஆனால் நான் ஒரு துறவியாக இருக்க விரும்புவதாகக் கூறினேன். என் தந்தை என்னை மிரட்டிய விதமும், என் தாய் நான் மேற்கொண்டிருந்த இலட்சியத்தைக் கைவிடும்படி என்னை வற்புறுத்த முயன்ற விதமும், நான் வீட்டையும் என் பெற்றோர்களையும் விட்டு வெளியேற என்னைத் தூண்டியது. பாரசீகம் அருகிலிருந்ததாலும், ரோமானிய வீரர்கள் எல்லைகளைக் காத்துக்கொண்டிருந்ததாலும் என்னால் கிழக்கு நோக்கிச் செல்ல முடியவில்லை; எனவே, பட்டினியைத் தவிர்ப்பதற்குத் தேவையான சிறிதளவு உணவை மட்டும் எடுத்துக் கொண்டு, மேற்கு நோக்கிச் செல்ல முடிவு செய்தேன். சுருக்கமாகச் சொன்னால், தெற்கே இம்மே மற்றும் பெரோவாவுக்கு இடையில் அமைந்துள்ள சால்சிஸ் பாலைவனத்தை நான் ஒருவாறு சென்றடைந்ததும் அங்கே சில துறவிகளைக் கண்டேன். அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, கடின உழைப்பின் மூலம் என் வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றைத் தேடிக்கொண்டும், உறுதியான கட்டுப்பாட்டோடு என் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டும் வாழ முடிவு செய்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் என் தாய்நாட்டிற்குத் திரும்பினேன். அங்கே என் தந்தை இறந்துவிட்டார் என்பதை நான் ஏற்கெனவே அறிந்திருந்ததால், உயிருடன் இருந்த என் தாயாருக்குத் துணையாக, அவரது விதவைக் காலத்தில் ஆதரவளிக்க வேண்டும் என்ற உந்துதலை உணர்ந்தேன். பின்னர், அங்கிருந்த சிறிய சொத்தை விற்று, அதன் ஒரு பகுதியைத் தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்து, ஒரு பகுதியை மடங்களுக்கு ஒதுக்கி, (எனது நம்பிக்கையின்மையைப் ஒப்புக்கொள்ள வெட்கமாக இருக்கிறது) ஒரு பகுதியை என் சொந்தத் தேவைகளுக்காக வைத்துக்கொள்ளவும் எண்ணினேன். இவ்வாறான எனது முடிவு என்பது ஒரு சாத்தானின் சோதனை என்று என் மடாதிபதி கூச்சலிடத் தொடங்கினார்; கேட்பதற்கு இனிமையான சில காரணங்களுக்குப் பின்னால், பழைய எதிரியின் ஒரு பொறி மறைந்திருக்கக் கூடும் அவர் கூறினார். அது, ஒரு நாய் தான் எடுத்த வாந்தியை உண்ண மீண்டும் அந்த இடத்திற்கே செல்வதைப் போன்றது என்று அவர் வலியுறுத்தினார். சாத்தான் தன்னை ஒருபோதும் நேரடியாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்பதால், பல துறவிகள் இதுபோன்ற தந்திரோபாயங்களுக்கு இரையாகியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். அவர் வேதாகம நூல்களிலிருந்து பல உதாரணங்களைப் பகிர்ந்துகொண்டு, ஆதாமும் ஏவாளும் கூட கடவுள்களாக ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையால் சாத்தானால் வீழ்த்தப்பட்டார்கள் என்பதை எனக்கு நினைவூட்டினார். அவரால் என் மனதை மாற்ற முடியாதபோது, ​​அவர் மண்டியிட்டு, தன்னைக் கைவிட வேண்டாம் என்றும், கலப்பையில் கை வைத்த பிறகு திரும்பிப் பார்த்து என்னை நானே அழித்துக்கொள்ள வேண்டாம் என்றும் கெஞ்சினார். துரதிர்ஷ்டவசமாக, என் ஆலோசகருக்கு எதிரான வாதத்தில் நான் இறுதியில் வெற்றி பெற்றேன். என் இரட்சிப்பை விட அவர் தன் சொந்த சுகத்தைப் பற்றியே அதிகம் கவலைப்பட்டார் என்று நான் உணர்ந்தேன். ஆகவே, அவர் ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதைப் போல மடாலயத்திலிருந்து என்னைப் பின்தொடர்ந்து வந்து, இறுதியில் “நீ சாத்தானின் மகனின் முத்திரையைத் தாங்கியிருப்பதை நான் காண்கிறேன்” என்று வெறுப்புடன் கூறி எனக்கு விடை கொடுத்தார். எனது காரணங்களையோ நான் முன்வைத்த சாக்குப்போக்குகளையோ அவர் கேட்க விரும்பவில்லை. ஆனால், தன் மந்தையை விட்டுப் பிரியும் ஆடு ஓநாயின் தாடைகளுக்கு விரைவில் இரையாகும் ஆபத்தில் உள்ளது என்று அவர் என்னைத் தொடர்ந்து எச்சரித்தார்.

4. பெரோவாவிலிருந்து எடெஸ்ஸாவிற்குச் செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சாலைக்கு அருகிலேயே நிரந்தர வீடில்லாமல் சுற்றித் திரியும் நாடோடிகள் தங்கியிருக்கும் ஒரு பாழடைந்த பகுதி உள்ளது. அவர்களது அச்சமூட்டும் நடவடிக்கைகள் காரணமாக, அப்பகுதியில் பயணிப்போர் எப்போதுமே கூட்டமாகச் சேர்ந்தே பயணிப்பர். அவ்வாறு ஒன்றுசேர்ந்து பயணிப்பதன் மூலம் அந்த நாடோடிகளால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கலாம் என்பது அவர்களது நம்பிக்கை. எனது  குழுவில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் எழுபது பேர் இருந்தனர். திடீரென்று, இஸ்மவேலர்கள் தங்கள் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களில் எங்களை நோக்கி ஆக்ரோஷத்துடன் பாய்ந்து வந்தனர்; அவர்களின் நீண்ட முடி பட்டிகளால் பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது. உடல்கள் பெரும்பாலும் நிர்வாண மற்றும் அரை நிர்வாணக் கோலத்தில் இருந்தன. அகன்ற இராணுவக் காலணிகளை அணிந்திருந்தனர். மேலங்கிகள் அவர்களுக்குப் பின்னால் காற்றில் அசைந்தாடின. அம்புக்கூடுகள் அவர்களது தோள்களில் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் தங்கள் வில்லின் நாணைக் கழற்றி, நீண்ட ஈட்டிகளை அங்கும் இங்கும் சுழற்றிக்கொண்டிருந்தனர்; இருப்பினும் அவர்களை பார்க்கும்போது, அவர்கள் சண்டையிட வரவில்லை, திருடவே வந்திருந்தனர் என்றே தோன்றியது. ஏககாலத்தில் நாங்கள் பிடிக்கப்பட்டு, வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு திசைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டோம். ஏற்கனவே நான் மேற்கொண்ட முடிவுகள் நிமித்தம் மிகவும் தாமதமாக மனம் வருந்திய நான், எனது பரம்பரைச் சொத்தைக் கோரும் நிலைக்கு இன்னும் வராத நிலையில் இருக்கையில், என்னைப் போலவே மற்றொரு துரதிர்ஷ்டவசமான பெண் ஒருத்தியும் அதே கொள்ளையர்களின் எஜமானிடம் ஒப்படைக்கப்பட்டாள். நாங்கள் ஒரு ஒட்டகத்தின் முதுகில் தூக்கி எறியப்பட்டோம், அல்லது தூக்கி வீசப்பட்டோம் என்றே சொல்லலாம்; வழியில் ஒரு வறண்ட பாலைவனத்தைக் கடந்து சென்றது மட்டுமன்றி, தொடர்ந்து ஏற்படவிருக்கும் பேரழிவுக்குத் தயாராக இருந்தோம். நான் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருப்பதை விட  தொங்கிக்கொண்டிருப்பதைப் போலவே உணர்ந்தேன். எங்களுக்கு உணவாக அரைகுறையாக வேகவைக்கப்பட்ட இறைச்சியும், குடிப்பதற்கு ஒட்டகப் பாலும் கொடுக்கப்பட்டது.

5. இறுதியாக, ஒரு பிரம்மாண்டமான ஆற்றைக் கடந்த பிறகு நாங்கள் பாலைவனத்தின் மையப்பகுதிக்குள் நுழைந்தோம். உள்ளூர் வழக்கப்படி, நாங்கள் தலைவணங்கி எஜமானிக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் மரியாதை செலுத்தினோம். வெப்பம் கடுமையாக இருந்ததால் இடுப்பை மறைக்க ஒரு எளிய ஆடையை மட்டுமே அணிய முடிந்தது. அதனால் என் ஆடைகளை மாற்றிக்கொண்டு, ஆடையின்றி வாழப் பழகிக்கொண்ட போது, ​​அந்த இடத்தில் நான் ஒரு கைதியைப் போல உணர்ந்தேன். பராமரிக்க சில ஆடுகள் என்னிடம் கொடுக்கப்பட்டன. ஆச்சரியப்படும் விதமாக, இந்தப் பணி எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது, ஏனெனில் நான் என் எஜமானர்களையோ அல்லது சக அடிமைகளையோ அரிதாகவே சந்தித்தேன். என் நிலைமை, மறைநூல்களில் வரும் யாக்கோபின் நிலையை நினைவூட்டியது. அது, ஒரு காலத்தில் வனாந்தரத்தில் மேய்ப்பர்களாக இருந்த மோயீசனையும் நினைவுக்குக் கொண்டுவந்தது. நான் புத்தம் புதிய பாலாடைக்கட்டியையும் பாலையும் உண்டு வாழ்ந்தேன். இடைவிடாமல் ஜெபித்தேன், மேலும் மடாலயத்தில் நான் கற்றுக்கொண்ட சங்கீதங்களைப் பாடினேன். என் சிறைவாசத்தில் நான் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தேன். என் தாய்நாட்டில் நான் இழக்கவிருந்த துறவற வாழ்க்கையை இந்தப் பாலைவனத்தில் எனக்குக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

6. எந்த நிபந்தனையாலும் பிசாசை முழுமையாகத் தடுத்து நிறுத்த முடியாமற்போனது. அவனது பொறிகள் பலவிதமானவை! நான் மறைந்திருந்தபோதும், அவனது பொல்லாப்புகள் என்னைத் தேடி வந்தன. என் எஜமான் தன் கூட்டம் வளர்ந்து வருவதைக் கவனித்து, என்னிடம் எந்த எவ்வித நேர்மையற்ற செயலையும் காணாததால் (கடவுளைப் போலவே எஜமானர்களுக்கும் உண்மையுடன் சேவை செய்ய வேண்டும் என்று அப்போஸ்தலர் அறிவுறுத்தியிருந்தார் என்பதை நான் அறிந்திருந்தேன்), என் விசுவாசத்தை உறுதிப்படுத்த எனக்கு வெகுமதி அளிக்க விரும்பினார். ஒரு காலத்தில் சிறையிருப்பில் என்னுடன் பணியாற்றிய பெண்ணை அவர் எனக்கு வழங்கினார். நான் ஒரு கிறிஸ்தவன் என்றும், கணவன் உயிருடன் இருக்கும்போது ஒரு பெண்ணை அழைத்துச் செல்வது தவறு என்றும் கூறி நான் மறுத்தபோது (அவளது கணவன் எங்களுடன் பிடிக்கப்பட்ட ஒரு கைதியாக இருந்தபோதிலும், வேறொரு எஜமானால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தான்), என் எஜமான் கடுங்கோபமடைந்து, தன் வாளை உருவி, என்னைத் தாக்குவதற்காக என் மீது பாய்ந்தார். நான் விரைவாகக் கையை நீட்டி அந்தப் பெண்ணைப் பிடிக்காமல் இருந்திருந்தால், அவர் என்னை அங்கேயே கொன்றிருப்பார். அதற்குள், வழக்கத்தை விட அந்த இரவு மிகவும் இருண்ட ஒரு இரவாக காணப்பட்டது. அந்த இராப்பொழுது எனக்கு மிகவும் சீக்கிரமாக வந்துவிட்டது போல் உணர்ந்தேன். நான் எனக்கு கொடுக்கப்பட்ட மணப்பெண்ணை ஒரு பழைய குகைக்குள் அழைத்துச் சென்றேன்; துக்கம் தான் மணப்பெண்ணின் தோழியைப்போல் எங்களுக்குத் துணையாக இருந்தது; நாங்கள் ஒருவரையொருவர் அணுகத் தயங்கியபோதும் அந்த நிலைமையை எங்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அப்போது தான் நான் என் அடிமைத்தனத்தை உண்மையாகவே உணர்ந்தேன்; தரையில் விழுந்து, நான் இழந்த துறவற நிலையை எண்ணிப் புலம்பத் தொடங்கினேன். நான் கதறினேன்: “ஓ, நான் எவ்வளவு துரதிஷ்டம் மிக்க மனிதன்! இதற்காக மட்டும்தான் நான் காப்பாற்றப்பட்டேனா? என் தவறுகள்தான் என்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டதா, என் முதுமைக்காலத்தில் என் கற்பைக் கைவிட்டு கணவன் என்ற ஒரு பாத்திரத்தை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேனா? ஆண்டவருக்காக என் பெற்றோரை, என் தாய்நாட்டை, என் உடைமைகள் எல்லாவற்றையும்  துறந்து, நான் தவிர்க்க முயன்றதையே இறுதியில் செய்ய நேர்ந்தால், அதில் என்ன பயன்? ஆயினும், ஒருவேளை நான் என் இல்லம் குறித்து ஏங்குவதால்தான் இந்தச் சூழ்நிலையில் இருக்கிறேனோ? என் ஆன்மாவே, நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் கைவிட வேண்டுமா, அல்லது போராட வேண்டுமா?” ஆண்டவரின் தலையீட்டிற்காக நாம் காத்திருக்க வேண்டுமா, அல்லது நாமே காரியங்களைச் செய்து முடிக்க வேண்டுமா? உன் ஆயுதத்தை உன் மீதே திருப்பிக்கொள்; என் சரீரத்தின் மரணத்தைவிட, என் ஆன்மாவே! உன் அழிவை நினைத்தே நான் அதிகம் அஞ்சுகிறேன். மேலும் கற்பைக் காப்பது அதற்கே உரிய துன்பத்துடன் வருகிறது. கிறிஸ்துவுக்கான ஒரு சாட்சி வனாந்தரத்தில் புதைக்கப்படாமல் இருக்கட்டும்; ஆகவே நான் ஒரே நேரத்தில் துன்புறுத்துபவனாகவும், தியாகியாகவும் இருக்க முடிவு செய்தேன். நான் பேசிக்கொண்டே, இருளிலும் பிரகாசித்த என் வாளை உருவி, அதை என்னை நோக்கி நீட்டியவாறு, இவ்வாறு கூறினேன்: ‘நான் விடைபெறுகிறேன்; துரதிர்ஷ்டவசமான பெண்ணே; என்னை ஒரு கணவனாக அல்ல, ஒரு தியாகியாக ஏற்றுக்கொள் என்று அவளை நோக்கிக் கூறினேன். அவள் என் முன் மண்டியிட்டு அழுது மன்றாடினாள்: இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்; இந்தத் துயரமும் சோதனையும் மிக்க தருணத்தில் நான் உன்னை மன்றாடிக் கேட்கிறேன்; உன் உயிரை மாய்த்துக்கொண்டு அந்தக் குற்றத்தை என் மீது சுமத்தாதே, என்று கதறியழுதாள். நீ சாகதான் வேண்டும் என்று விரும்பினால், முதலில் உன் வாளை என்னை நோக்கி நீட்டு. அப்போது இந்த நிபந்தனைகளின்படி நாம் ஒன்றுசேர்வோம். ஒருவேளை என் கணவன் என்னிடம் திரும்பி வர நேரிட்டால், சிறைவாசத்தில் நான் கற்றுக்கொண்ட கற்பைக் காப்பேன்; அதை இழப்பதை விட நான் இறப்பதையே மேலாக எண்ணுவேன். நாம் ஒன்றாக இருப்பதைத் தடுக்க நீ ஏன் உயிரை விட வேண்டும்? அதுதான் முடிவு என்று நீ நினைத்தால், நான் மகிழ்ச்சியுடன் இறப்பதற்குத் தயாராக இருக்கிறேன். அப்படியானால், உன் கற்பின் துணையாக என்னை ஏற்றுக்கொள்; வெறும் உடல் ரீதியான இணைப்பில் உன்னால் முடிந்ததை விட, இந்த ஆன்ம ரீதியான இணைப்பில் என்னை அதிகமாக நேசி. நீ என் கணவன் என்று நம் எஜமான் நம்பட்டும். நீ என் சகோதரன் என்று கிறிஸ்துவுக்குத் தெரியும். நாம் இவ்வளவு அன்பாக இருப்பதை அவர்கள் காணும்போது, ​​நாம் திருமணமானவர்கள் என்பதை அவர்களுக்கு எளிதாக நம்ப வைத்துவிடுவோம். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன், இருப்பினும் மிகவும் ஆச்சரியப்பட்டேன். நான் எப்போதும் போல அந்தப் பெண்ணின் கற்பை மதித்தாலும், இப்போது அவளை ஒரு மனைவியாக இன்னும் அதிகமாக நேசித்தேன். இருப்பினும், நான் அவளது நிர்வாண உடலை ஒருபோதும் பார்க்கவில்லை; நான் மிகவும் கடினமாகப் போராடிப் பாதுகாத்த கற்பை இழந்துவிடுவேனோ என்று பயந்து, அவளது மேனியை ஒருபோதும் தொட்டதில்லை. இந்த அசாதாரணமான திருமணம் நடைபெற்று பல நாட்கள் கடந்தன. எங்கள் மத்தியில் நிலவிய அன்னியோன்னியம், எங்களை எங்கள் எஜமானர்களுக்கு மேலும் கவர்ச்சிகரமானவர்களாகக் காட்டியது. மேலும் நாங்கள் தப்பி ஓடிவிடுவோம் என்ற எந்த ஒரு சந்தேகமும் எமக்கிடையில் இருக்கவில்லை; சில சமயங்களில், வனாந்தரத்தில் அலைந்து திரியும் ஒரு விசுவாசமான இடையனைப் போல, நான் மாதம் முழுவதும் வீடு தங்காமல் இருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

7. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நாள், மேலே வானமும் கீழே பூமியையும் தவிர கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேறொன்றும் தெரியாத பாலைவனத்தில் நீண்ட காலம் தனியாகக் கழித்த ஒருநாளில் நான் தனியாக அமர்ந்திருந்தபோது, ​​என் எண்ணங்களில் கொட்டிக்கிடந்த பல விஷயங்களைக் கிளறிக்கொண்டிருந்தேன். அப்போது எனது நண்பர்களான துறவிகள் உட்பட பல்வேறு விஷயங்களைப் பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன். குறிப்பாக, எனக்குக் கற்பித்த, என்னை ஆதரித்த, இறுதியில் என்னை இழந்த என் தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது, ​​ஒரு குறுகிய பாதையில் எறும்புக் கூட்டம் ஒன்று சுறுசுறுப்பாக ஊர்ந்து செல்வதைக் கவனித்தேன். அவை சுமந்து சென்ற சுமைகள் அவற்றின் உடல்களை விட மிகப் பெரியதாக இருந்தன என்பது தெளிவாகத் தெரிந்தது. சில எறும்புகள் தங்கள் கொடுக்குகளால் மூலிகையில் இருந்து விதைகளைப் பிடுங்கிக்கொண்டிருந்தன, மற்றவை குழிகளிலிருந்து மண்ணைத் தோண்டி, தண்ணீர் உள்ளே வராமல் தடுப்பதற்காக மண்ணைக் குவித்துக்கொண்டிருந்தன. ஒரு குழுமையான குளிர்காலத்தை எதிர்பார்த்து, ஈரமான தரை காரணமாகத் தாங்கள் கொண்டு வந்திருந்த தானியங்கள் பதர்களாக மாறுவதைத் தடுப்பதற்காக, அவ்வெறும்புகள் அவற்றின் நுனிகளை வெட்டிக் கொண்டிருந்தன. மற்றொரு குழுவோ, இறந்த எறும்புகளைப் பணிவுடன் அகற்றிக் கொண்டிருந்தது. என்னை இன்னும் அதிக வியப்பில் ஆழ்த்திய விடயம் என்னவென்றால், வெளியே வந்த எறும்புகள் உள்ளே சென்றவற்றைத் தடுக்கவில்லை; உண்மையில், தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு எறும்பு கனமான சுமை காரணமாக் கீழே  விழுவதைக் கண்டவுடன் அதைத் தூக்கிவிட உதவின. அந்த நாள் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியளித்தது. நமது மந்தத்தன்மையை ஊக்குவிக்க, எறும்பின் ஞானத்தை மன்னன் சொலமன் நமக்குச் சுட்டிக்காட்டுவதை நினைவுகூர்ந்தபோது, ​​எனது தனிமை காரணமாக நான் சோர்வடையத் தொடங்கினேன். துறவியின் அறையை நினைத்து ஏங்கிய நான், அந்த எறும்புகளையும் அவற்றின் கூட்டு உழைப்பையும் பின்பற்ற வேண்டுமென்று முடிவு செய்தேன்; அங்கு கடின உழைப்பு என்பது முழு சமூகத்திற்கும் பயனளிக்கிறது. எவருக்கும் எதுவும் சொந்தமில்லை, என்றாலும் அனைத்தும் அனைவராலும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

8. நான் என் அறைக்குத் திரும்பியபோது, ​​என் மனைவி எனக்காகக் காத்திருந்தாள். என் முகபாவம், என் உள்ளத்தில் நான் உணர்ந்த துக்கத்தை வெளிப்படுத்தியது. நான் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறேன் என்பதை அவள் தெரிந்துகொள்ள விரும்பினாள். நான் என் கவலைகளை அவளிடம் பகிர்ந்துகொண்டு, இதிலிருந்து வெளியேற ஒரு வழியைக் காண உதுவுமாறு அவளை வற்புறுத்தினேன். அவள் அந்த யோசனையை நிராகரிக்கவில்லை. இதை இரகசியமாக வைத்திருக்குமாறு நான் அவளிடம் கேட்டுக்கொண்டதும் அவள் அவ்வாறே செய்வதாக உறுதியளித்தாள். நம்பிக்கையும் பயமும் கலந்த ஒரு நிலையில், நாங்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொண்டோம். எங்கள் மந்தையில் இரண்டு மிக நல்ல கொழுத்த ஆண் வெள்ளாடுகள் இருந்தன: நான் அவற்றைக் கொன்று, அவற்றின் தோல்களைப் புட்டிகளாக மாற்றி, எங்கள் பயணத்திற்காக அவற்றின் இறைச்சியைச் சமைத்தேன். பின்னர், மாலை வேளையில் நாங்கள் உறங்கிவிட்டதாக எங்கள் எஜமானர்கள் நினைத்தபோது, ​​அந்தப் புட்டிகளையும் சிறிதளவு இறைச்சியையும் எடுத்துக்கொண்டு நாங்கள் புறப்பட்டோம். சுமார் பத்து மைல்கள் பயணித்த பிறகு, நாங்கள் ஆற்றை அடைந்தோம். ஆற்றைக் கடப்பதற்கு நாங்கள் அந்த ஆட்டின் தோல்களில் காற்றை நிரப்பி அதன் மீது ஏறிக்கொண்டோம்; எங்களைத் துரத்துபவர்கள் எங்கள் தடத்தை இழந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், நாங்கள் புறப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்த எதிர்க் கரையின் ஒரு இடத்திற்கு நீரோட்டம் எங்களைக் கீழ்நோக்கி இழுத்துச் செல்ல அனுமதித்தோம். இருப்பினும், இறைச்சி நனைந்துவிட்டதால், மூன்று நாட்களுக்கு மேல் உணவுக்குப் பயன்படும் அளவுக்கு நம்பகமானதாக இருக்கவில்லை. நாங்கள் எதிர்பார்த்தது போல தாகத்தைத் தணிப்பதற்காக எங்களால் முடிந்த அளவு தண்ணீர் குடித்தோம்; பின்னர், அலைந்து திரியும் நாடோடிகளின் பதுங்குத் தாக்குதல்களையும் சுட்டெரிக்கும் சூரியனையும் தவிர்ப்பதற்காக, பகலை விட இரவில் அதிகமாக பயணித்து, அடிக்கடித் திரும்பிப் பார்த்தவாறே அவசரமாக அங்கிருந்து கிளம்பினோம்.  இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போதே எனக்கு உடல் நடுங்குகிறது; என் மனம் அமைதியாக இருந்தாலும், என் உடல் தலை முதல் கால் வரை நடுங்குகிறது.

9. மூன்று நாட்களுக்குப் பிறகு, வெகு தொலைவில் ஒட்டகங்களில் இரண்டு பேர் வேகமாக எங்களை நோக்கி வருவதைக் கண்டோம். உடனடியாக, ஒருவித அச்ச உணர்வு என்னைத் தாக்கியது. என் எஜமான் எங்களைக் கொல்லத் திட்டமிடுகிறார் என்று நான் நினைக்கத் தொடங்கினேன். அந்த நிகழ்வு சூரியன் மீண்டும் மங்குவது போல் என்னை உணர வைத்தது. எங்கள் பீதியின் நடுவில், மணலில் பதிந்திருந்த காலடித் தடங்கள் எங்களைக் காட்டிக்கொடுத்துவிட்டன என்பதை நாங்கள் உணர்ந்த அதே நேரத்தில், எங்கள் வலதுபுறத்தில் பூமிக்கு அடியில் ஆழமாகச் செல்லும் ஒரு குகையைக் கண்டோம். நாங்கள் உள்ளே செல்ல முடிவு செய்தோம். ஆனால் விரியன் பாம்புகள், தும்பிகள், தேள்கள் மற்றும் சூரியனின் வெப்பத்திலிருந்து தப்பிக்க நிழலான இடங்களில் இருக்க விரும்பும் பிற கொடிய உயிரினங்கள் போன்ற விஷமுள்ள பிராணிகளைக் கண்டு நாங்கள் பயந்தோம். ஆகவே, நாங்கள் உள்ளே காலடி எடுத்து வைக்காமல், இடதுபுறம் இருந்த ஒரு குழியில் பதுங்கிக்கொண்டோம்; மேலும் செல்லத் துணியாமல், மரணத்திலிருந்து தப்பிக்க முயன்று நேராக அதிலேயே சிக்கிவிடுவோமோ என்று கவலைப்பட்டோம். நாங்கள் மனதிற்குள் இவ்வாறு நினைத்துக்கொண்டோம்: நம்முடைய துன்ப காலத்தில் ஆண்டவர் நமக்கு உதவியதால் நாம் பாதுகாப்பைப் பெறுவோம்; நம்முடைய பாவங்களினிமித்தம் அவர் நம்மை விட்டு விலகினால், நாம் கல்லறையைக் காண்போம் என்று. நாங்கள் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? எங்கள் கால்தடங்களால் தொடர்ந்து வந்து, எங்கள் எஜமானும் சக ஊழியரும் குகைக்கு வெளியே நிற்பதைக் கண்டபோது நாங்கள் அனுபவித்த அந்த பேரச்சம்? மரணத்தை உண்மையில் எதிர்கொள்வதை விட, அதை எதிர்பார்த்திருப்பது மிகவும் மோசமானது! பயத்தினாலும் பதட்டத்தினாலும் என் நாவு தழுதழுத்தது; என் எஜமானின் குரலைக் கேட்பது போல் உணர்ந்தேன், ஒரு வார்த்தை பேசக்கூட எனக்குத் தைரியம் வரவில்லை. அவர் ஒட்டகங்களைப் பிடித்துக்கொண்டு, தன் வாளை உருவியபடி எங்களுக்காகக் காத்திருந்தார். எங்களைக் குகையிலிருந்து வெளியே இழுப்பதற்காகத் தன் வேலைக்காரனை அனுப்பினார். அந்த வேலைக்காரன் சுமார் மூன்று அல்லது நான்கு முழம் உள்ளே நுழைந்தான். நாங்கள் ஒளிந்திருந்த இடத்திலிருந்து அவனது முதுகை எங்களால் பார்க்க முடிந்தது, ஆனால் அவனால் எங்களைப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், நிழலில் இருக்கும்போது வெளிச்சத்தில் எதையும் பார்க்க முடியாது. அவனது குரல் குகையில் எதிரொலித்தது: “வெளியே வாருங்கள், குற்றவாளிகளே; வெளியே வந்து உங்கள் விதியை எதிர்கொள்ளுங்கள்; ஏன் தாமதிக்கிறீர்கள்? ஏன் இந்தத் தாமதம்? உங்கள் எஜமான் உங்களை அழைத்துக்கொண்டு வரும்வரை பொறுமையாகக் காத்திருக்கிறார்” என்று கடுந்தொனியில் கூறினான். அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, திடீரென்று நிழலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் சிங்கம் அந்த மனிதனைக் கௌவிப் பிடித்து, கழுத்தை நெரித்துக் கொன்று, இரத்தம் எங்கும் சிதறிக் கிடக்க, அவனைக் குகையின் ஆழத்திற்கு இழுத்துச் செல்வதை நாங்கள் கண்டோம். கடவுளே! எங்கள் பயம் எங்கள் மூச்சை அடைத்தது. அதேநேரம் எங்கள் மனம் மகிழ்ச்சியிலும் துள்ளியது! எங்கள் எஜமானுக்குத் தெரியாமலேயே, எங்கள் எதிரி மடிவதை நாங்கள் கண்டோம். அவன் திரும்பி வரத் தாமதமானதைக் கண்ட அவன், தப்பி ஓடியவர்களில் இருவர் ஒன்றாக இருந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, விரக்தியின் உச்சிக்கே சென்ற எஜமான், தன் வாளைப் ஏந்தியபடியே மெதுவாக குகைக்கு வந்தான். குகைக்குள் போன தன் சேவகனைத் தேடும் நோக்கில் ஒரு பைத்தியக்காரனைப் போலக் கத்திக்கொண்டே குகைக்குள் பாய்ந்தான். ஆனால், அவன் எங்களை அடைவதற்குள், அந்தக் கொடிய மிருகம் மீண்டும் அவனைத் தாக்கியது. ஒரு காட்டு மிருகம் நம் கண் முன்னாலேயே நமக்காகப் போராடும் என்றால் யார் தான் நம்புவார்கள்?

பயத்திற்கான ஒரு ஆதாரம் எம்மைவிட்டு நீங்கியது, ஆனால் நாங்களும் அவர்களுக்கு நேர்ந்த ஒரு சூழ்நிலையை சந்திக்கும் சாத்தியத்தை எதிர்கொண்டோம். மனிதனின் கோபத்தை விட சிங்கத்தின் சீற்றத்தைக் கையாள்வது எளிதாக இருந்தது. பயத்தால் எங்கள் இதயங்கள் தளர்ந்து போயின; அடுத்து என்ன நடக்குமோ என்று காத்திருந்தபோது, ​​எங்களின் கற்பு குறித்த அறிவைத் தவிர, அத்தகைய பெரும் ஆபத்துகளுக்கு எதிராக உண்மையான தற்காப்பு குறித்த எவ்வித யோசனைகளுமின்றி இருந்தபடியால், எங்களது உடலில் உள்ள ஒரு தசையைக் கூட அசைக்க  துணிவின்றி இருந்தோம். பின்னர், அதிகாலையில், ஒரு இரையை மோப்பம் பிடித்து போல் அறிந்த அந்தப் பெண் சிங்கம், தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு நாங்கள் ஒளிந்திருந்த இடத்தை விட்டுச் சென்று விட்டது. இருப்பினும், எங்கள் தன்னம்பிக்கை உடனடியாகத் திரும்பவில்லை. நாங்கள் உடனேயே வெளியில் வரவில்லை; மாறாக, நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தோம். ஒவ்வொரு முறையும் வெளியே வர நினைக்கும்போதும், அப்பெண் சிங்கத்தை எதிர்கொண்டு விடுவோமோ என்று நினைத்து அஞ்சி நடுங்கியவாறு இருந்தோம்.

10. இறுதியாக, ஒருவாறு நாங்கள் எங்கள் பயத்தை வென்றோம்; அந்த நாள் நிறைவு பெற்றதும், நாங்கள் மாலையில் வெளியே சென்றவேளை, பிரமிக்க வைக்கும் வேகத்தின் காரணமாக ‘(dromedaries) என்று அழைக்கப்படும் முதுகில் ஒற்றைத் திமில் கொண்ட ஒட்டகங்கள், அமைதியாக அசைபோட்டுக் கொண்டிருப்பதைக் கண்டோம். நாங்கள் அவற்றின் மீது ஏறி, புதிதாகக் கிடைத்த தானியங்களின் ஆற்றலுடன், பாலைவனத்தில் பத்து நாட்கள் பயணம் செய்து, ரோமானிய முகாமை அடைந்தோம். படைத்தலைவரைச் சந்தித்து எங்கள் கதையைப் பகிர்ந்துகொண்ட பிறகு, மெசபடோமியாவின் பொறுப்பாளராக இருந்த சபியானஸிடம் கொண்டுசெல்லப்பட்டோம். அங்கு எங்கள் ஒட்டகங்களை விற்றோம். என் அன்புக்குரிய பழைய மடாதிபதி இப்போது காலமானதால், நான் இந்த இடத்திற்குத் திரும்பி வந்து என் துறவற வாழ்க்கையை மீண்டும் தொடர முடிவு செய்தேன். அதே நேரத்தில் என் தோழியை கன்னியர்களின் பாதுகாப்பில் ஒப்படைத்தேன். நான் அவளை ஒரு சகோதரியைப் போல நேசித்தாலும், அவள் என் சொந்த சகோதரி என்பது போல் நான் அவளை நடத்தவில்லை.

மல்கஸ் ஒரு முதியவராகவும், நான் ஒரு இளைஞனாகவும் இருந்தபோது, ​​அவர் இந்த விஷயங்களை என்னிடம் கூறினார். இப்போது நான் வயதானவனாகி, இந்தக் கதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதால், கற்பின் புனிதத்தை மதிக்கும் நபர்களுக்கான அதன் வரலாறாக இவற்றை நான் வழங்குகிறேன். கன்னியர்களே, உங்கள் புனிதமான கற்பைப் பாதுகாக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கதையை வருங்கால சந்ததியினருக்குக் கொடுங்கள், அவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள், அப்போது அவர்கள், வாள்களையும் காட்டில் அல்லது  பாலைவனத்தில் மிருகங்களையும் எதிர்கொண்டாலும், கற்பு தளராமல் மாறாமல் நிலைத்திருக்கும் என்பதையும், கிறிஸ்துவுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒருவர் மரணத்தைச் சந்தித்தாலும், அவரை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்வார்கள்.