புனித ஹிலரியனின் வாழ்க்கை வரலாறு

Jerome, The Life of St. Hilarion, in Tamil.


1. புனித ஹிலரியனின் வாழ்க்கையைப் பற்றி எழுதத் தொடங்குவதற்கு முன், அவருக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவரை நான் வேண்டி அழைக்கிறேன். அந்தப் புனிதருக்கு அவரது நற்பண்புகளை வழங்கிய ஆவியானவர், அவற்றை வெளிப்படுத்தத் தேவையான சொல்லாற்றலை எனக்கு வழங்குவார் என்று நம்புகிறேன். அதன் மூலம் தான் என் வார்த்தைகள் வாயிலாக அவரது செயல்களுக்கு நீதி செய்ய முடியும். பெரிய பெரிய காரியங்களைச் சாதித்தவர்களின் மதிப்பு, திறமையான தனிநபர்களால் அவர்கள் எவ்வளவு சிறப்பாகப் புகழப்படுகிறார்கள் என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. தானியேலால் செம்மறியாடு, சிறுத்தை அல்லது வெள்ளாடு என்று குறிப்பிடப்பட்ட மசிடோனியாவின் மாவீரன் அலெக்சாண்டர், அகில்லஸின் கல்லறையை அடைந்ததும், ​​”இளைஞனே, நீ பாக்கியவான்! உன் தகுதியின் மாபெரும் தூதுவனாக இருக்கும் பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது!” என்று வியந்து கூறினார். அவர் குறிப்பிடுவது, நிச்சயமாக, ஹோமரைத்தான் என்பது வெளிப்படை. இதற்கு மாறாக, ஹோமர் இங்கு இருந்திருந்தால் அவர்கூட என் நாயகனைக் கண்டு பொறாமைப்படக்கூடும் அல்லது அதற்கு நீதி செய்ய இயலாதவராக உணரக்கூடும் என்ற அளவிற்குப் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கையையும் போதனைகளையும் விவரிக்கும் பணி எனக்கு உள்ளது. சைப்ரஸில் உள்ள சலாமிஸின் ஆயரும், ஹிலரியனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தவருமான புனிதர் எப்பிஃபானியு சுருக்கமான, ஆனால் பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு கடிதத்தில் அவரைப் புகழ்ந்து அதை ஏனையவரோடு பகிர்ந்துகொண்டார் என்பது உண்மைதான். இருப்பினும், இறந்தவர்களைப் பொதுவாகப் புகழ்வது ஒருபுறம், அவர்களின் தனித்துவமான நற்பண்புகளை விவரிப்பது மறுபுறம். ஆகவே, அவர் தொடங்கிய பணியைத் தொடர்வதன் மூலம், நாம் அவருடைய மரபைக் குறைப்பதற்குப் பதிலாக அவரைக் கௌரவிக்கிறோம். ஒரு காலத்தில் என் நாயகனான பவுலஸை இழிவுபடுத்தியவர்களும், இப்போது ஹிலரியனுக்கும் அவ்வாறே செய்யக்கூடியோரின் விமர்சனங்களை நாம் புறக்கணிக்கிறோம்; அவர்கள் பவுலஸை அவரது தனிமையான வாழ்க்கைக்காக விமர்சித்தனர், ஹிலரியனோ சமூகத்துடன் பழகியதற்காகக் குறைகளை எதிர்கொண்டிருக்கலாம். பவுல் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து வாழ்ந்ததால், அவர் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். அதேசமயம் ஹிலரியனோ பலருக்குத் தெரிந்தவராக இருந்ததால் அவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இது கடந்த காலத்தில் பரிசேயர்கள் செய்ததை நினைவூட்டுகிறது! மத்தேயு 11:18-ல் வனாந்தரத்தில் உபவாசம் இருந்ததற்காக யோவானையும், கூட்டத்தோடு கலந்து உண்டு குடித்ததற்காக நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவரையும் கூட அவர்கள் விமர்சித்தார்கள். இருப்பினும், ஸ்கில்லாவின் குரைக்கும் வேட்டை நாய்களின் இரைச்சலைப் புறக்கணித்து நான் தேர்ந்தெடுத்த பணியில் என்னை அர்ப்பணித்து முன்செல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

2. ஹிலரியன், பாலஸ்தீன நகரமான காசாவிற்குத் தெற்கே சுமார் ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்ள தபதா என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் சிலைகளை வணங்குபவர்களாக இருந்தனர். அதனால்தான் ஹிலரியன் பற்றிக் கூறும்போது அவரை முட்களுக்கு மத்தியில் மலர்ந்த ரோஜா என்று அழைத்தனர். அவர்கள் அவரை அலெக்சாண்டிரியாவில் இருந்த ஒரு இலக்கண ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். அங்கே அவர் விரைவாகத் தனது அபாரமான திறமைகளையும் குணத்தையும் வெளிப்படுத்தி, தன்னைச் சுற்றியிருந்த அனைவரின் உள்ளங்களையும் வென்று ஒரு சிறந்த பேச்சாளராகப் பரிணமித்தார். மிக முக்கியமாக, அவர் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றுபவராக இருந்தார். களியாட்டங்கள் தந்த குழப்பத்திலோ, அரங்கத்தின் வன்முறையிலோ, அல்லது நாடகத்தின் வரம்பு மீறிய செயல்களிலோ அவர் மகிழ்ச்சியைக் காணவில்லை; மாறாக, திருச்சபையின் கூட்டங்களில் தனது மகிழ்ச்சியைக் கண்டார்.

3. அந்தக் காலகட்டத்தில், எகிப்தில் அனைவராலும் அதிகமாகப் பேசப்பட்ட அந்தோனி என்ற புகழ்பெற்ற ஒருவரின் பெயரை அவர் கேள்விப்பட்டார். இது அந்தோனியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரு தீவிரமான ஆசையை அவருள் தூண்டியது. அதனால் அவர் பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டார். அவரைக் கண்டவுடனேயே, அவர் தனது முந்தைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு அவருடன் சுமார் இரண்டு மாதங்கள் கழித்தார். அப்போது, ​​அவருடைய வாழ்க்கை முறையையும், அவருடைய நடத்தையின் தீவிரத்தையும் அவர் கவனித்தார்: பிரார்த்தனையில் அவருடைய அர்ப்பணிப்பு, மற்றவர்களுடனான தொடர்புகளில் அவருடைய பணிவு, திருத்தவேண்டியவை பற்றிக் கூறுவதில் அவருடைய கண்டிப்பு, மற்றவர்களை ஊக்குவிப்பதில் அவருடைய உற்சாகம் போன்றவை ஹிலரியனை மிகவும் கவர்ந்தது. உடல் பலவீனம் காரணமாக அந்தத் துறவி ஒருபோதும் தனது நோன்பு விதிகளை மீறவோ அல்லது தனது எளிய உணவிலிருந்து விலகவோ மாட்டார் என்பதையும் அவர் கவனித்தார். இறுதியில், பல்வேறு பிரச்சனைகள் அல்லது பிசாசின் சோதனைகள் காரணமாகவும் அவற்றிலிருந்து விடுதலை பெறவும் அந்தப் புனிதரைத் தேடி வரும் பார்வையாளர்களின் கூட்டத்தைச் சகித்துக்கொள்ள முடியாமலும், பாலைவனத்தில் நகரங்களைப் போன்ற கூட்டத்தைச் சகித்துக்கொள்ள வேண்டியிருப்பது விசித்திரமாகத் தோன்றியதாலும், அந்தோனியைப் போலவே தனது சொந்தப் பயணத்தைத் தொடங்க இதுவே சரியான நேரம் என்று அவர் முடிவு செய்தார். அந்தோனி, தனது தைரியத்தைக் காட்டிய ஒரு உண்மையான வீரனைப் போல, தனது வெற்றிகளின் பலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார் ஆனால், நான் இன்னும் ஒரு சிப்பாயின் பாதையில் கூடப் பயணிக்கத் தொடங்கவில்லை என்று எண்ணியவராய், சில துறவிகளுடன் வீட்டிற்குத் திரும்பினார். அவருடைய பெற்றோர் இறந்துவிட்டதால், அவர் தனது உடைமைகளைப் பிரித்துக்கொண்டார். அதில் ஒரு பகுதியை தனது உடன்பிறப்புகளுக்கும், சிறிதளவு தேவையுள்ளவர்களுக்கும் கொடுத்துவிட்டு, தனக்கென எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அப்போஸ்தலர்களின் நடபடிகள் புத்தகத்தில் உள்ள கதை காரணமாக அவர் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானார்; அனனியா மற்றும் சப்பீராவுக்கு என்ன கதி நேருமோ என்று அஞ்சினார். மிக முக்கியமாக, தன்னிடம் உள்ள அனைத்தையும் விட்டுக்கொடுக்காத எவரும் அவருடைய சீடராக இருக்க முடியாது என்று லூக்கா 14:33-ல் ஆண்டவர் கூறிய வார்த்தைகளை அவர் நினைவுகூர்ந்தார். அந்த நேரத்தில், அவருக்குச் சுமார் பதினைந்து வயது ஆகியிருந்தது. இவ்வாறு, அத்தியாவசியமானவற்றைத் தவிர மற்ற அனைத்தையும் துறந்து, கிறிஸ்துவின் கவசத்தை மட்டுமே அணிந்துகொண்டு, காசாவின் துறைமுகமான மஜோமாவிலிருந்து இடது திசையில் ஏழு மைல் தொலைவில் இருந்த எகிப்தை நோக்கிய கடற்கரையோரமாக அமைந்துள்ள வனாந்தரத்திற்குள் அவர் துணிந்து நுழைந்தார். திருட்டு மற்றும் வன்முறை போன்றவற்றுக்கு பேர்போன அப்பகுதிக்கு செல்வதால் அவர் சந்திக்க நேரிடக்கூடிய ஆபத்துகள் குறித்து அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் விடுத்த எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், அதிலிருந்து தப்பிப்பதற்காக மரண அச்சுறுத்தலைக்கூட அவர் அலட்சியப்படுத்தினார்.

4. அவனது இதயம் பேரார்வத்தால் பிரகாசித்துக்கொண்டும், கண்கள் விசுவாசத்தால் ஒளிர்ந்துகொண்டும் இருந்திராவிட்டால், அவனது தைரியமும் இளமைக்கே உரிய மிடுக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும். ஆனால், அவனது கன்னங்கள் வழுவழுப்பாகவும், உடல் மெலிதாகவும் பலவீனமாகவும் இருந்தது; குளிர் அல்லது வெப்பத்தால் ஏற்படும் மிகச் சிறிய பாதிப்பைக் கூட அதனால் தாங்க முடியவில்லை. அப்படியானால் என்ன செய்வது? அவன் புறப்பட்டபோது ஆசீர்வதிக்கப்பட்ட அந்தோணியாரால் கொடுக்கப்பட்ட ஒரு சாக்குத்துணியால் ஆன சட்டை, தோல்களால் செய்யப்பட்ட ஒரு மேலங்கி, மற்றும் ஒரு முரட்டுத் துணியினாலான போர்வை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் இல்லாமல், ஒருபுறம் கடலும் மறுபுறம் சதுப்பு நிலங்களும் சூழ்ந்திருந்த அந்தப் பரந்த, அச்சுறுத்தும் வனாந்தரத்தில் அவன் மகிழ்ச்சியைக் கண்டான். சூரியன் மறைந்த பிறகு கிடைத்த பதினைந்து உலர்ந்த அத்திப்பழங்கள் மட்டுமே அவனது ஒரே உணவாக இருந்தது. மேலும், அந்தப் பகுதி கொள்ளையர்களுக்குப் பெயர்போன இடமாக இருந்ததால் ஒரே இடத்தில் அதிக நேரம் தங்குவதில்லை என்பதை அவன் ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தான். பிசாசு என்ன நோக்கத்தைக் கொண்டிருக்கிறான் என்று அறியாமலும், எங்கே போவது என்றும் அறியாமல் தவித்தான். ஒரு காலத்தில், “நான் வானத்திற்கு ஏறிப்போவேன், வானத்து நட்சத்திரங்களுக்கு மேலே என் சிம்மாசனத்தை அமைப்பேன், உன்னதமானவரைப் போல இருப்பேன்” (ஏசாயா 14:14) என்று பெருமையுடன் அறிவித்தவன், இப்போது பாவத்தை அறிய முடியாத அளவுக்கு ஒரு சிறுவனால் தோற்கடிக்கப்பட்டு மிதிக்கப்பட்டான்.

5. ஆகவே, சாத்தான் அவனது தலைக்குள் புகுந்து, புலன்களுக்குள் ஊடுருவி, வழக்கம் போல் அவனது வளர்ந்து வரும் உடலில் காமத் தீயை மூட்டினான். கிறிஸ்துவின் போதனைகளுக்குப் புதியவனான அவன் தனக்குப் புரியாத காரியங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும் தான் ஒருபோதும் பெற்றிராத அனுபவங்களைப் பற்றி ஆழமாக யோசிக்கும் நிர்பந்தத்துக்கு ஆளானான். தன் மீதே விரக்தியடைந்து, தன் எண்ணங்களைக் கையால் தட்டி விரட்டிவிடுவது போலத் தன் மார்பில் அறைந்துகொண்டு உரத்த குரலில் “ஏய்! உன் ஆசைகளுக்கு நான் ஒரு முடிவுகட்டுவேன். நான் உனக்கு வாற்கோதுமையைக் கொடுக்க மாட்டேன், அதற்குப் பதிலாக உமியைத் தருவேன். பசியாலும் தாகத்தாலும் உன்னைப் பலவீனமாக்குவேன், கனமான சுமைகளை உன்மேல் சுமத்துவேன், சூட்டுக்குள்ளும் குளிருக்குள்ளும் உன்னைத் தள்ளுவேன், அதனால் நீ காமத்தை விட உணவின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிவரும்” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினான். அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு, அவன் மூலிகைச் சாறுகளையும் சில உலர்ந்த அத்திப்பழங்களையும் உண்டு, அடிக்கடி ஜெபித்து, கீர்த்தனைகளை இசைத்து, உபவாசத்தின் துன்பம் உழைப்பின் வலியால் இரட்டிப்பாகும் வகையில் நிலத்தைக் கொத்தி, தன் மன உறுதியைக் காத்துக்கொண்டான். அதே நேரத்தில், எகிப்தியத் துறவிகளின் ஒழுக்கத்தைப் பின்பற்றி, நாணல்களிலிருந்து கூடைகளைச் செய்தான். மேலும் 2 தெசலோனிக்கேயர் 3:10-ல் உள்ள, “ஒருவன் உடலை வருத்தி வேலை செய்யாவிட்டால், அவன் உண்ணவும் கூடாது” என்ற கட்டளையையும் தனக்குள்ளேயே நடைமுறைப்படுத்திக்கொண்டான். இந்த முயற்சிகளால் அவன் மிகவும் பலவீனமடைந்து உடல் மெலிந்து அவனது எலும்புகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருப்பதுபோல் காணப்பட்டன.

ஒரு நாள் இரவு, அவன் குழந்தைகளின் அழுகுரல், ஆடுகளின் கத்தல், மாடுகளின் முனகல், பெண்களின் அழுகுரல் போன்ற சத்தம், சிங்கங்களின் கர்ஜனை, இராணுவப் படையினரின் கூச்சல், மற்றும் அவன் எதையும் பார்ப்பதற்கு முன்பே, அவனைப் பின்வாங்கச் செய்த பலவிதமான விசித்திரமான ஒலிகளைக் கேட்கத் தொடங்கினான். பிசாசுகள் தங்கள் கைங்காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றன என்பதை அவன் உணர்ந்துகொண்டான். அதனால் அவன் முழந்தாளிட்டு தன் நெற்றியில் சிலுவை அடையாளத்தை வரைந்தவனாய், அந்தத் தீய சக்திகளுடன் போரிடத் தயாரானான். தன்னை அச்சுறுத்திய அந்த ஒலிகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் காணும் ஆசையுடன், அதே சமயம் பதற்றத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீரென்று பிரகாசமான நிலவொளியில் குதிரைகள் பூட்டப்பட்ட வேகமாகச் செல்லும் ஒரு இரதம் தன்னை நோக்கி விரைந்து வருவதை அவன் கண்டான். அவன் இயேசுவை அழைத்தான். அவ்வளவுதான், அடுத்த ஒரு நொடியில் பூமி பிளந்து அந்த முழு காட்சியையும் கபளீகரம் செய்துகொண்டது. பின்பு அவன், யாத்திராகமம் 15:1 இல் சொல்லப்பட்டுள்ள, ‘நான் கர்த்தரைப் பாடுவேன்! அவர் பெருமைமிக்க செயல்களைச் செய்தார்; அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலில் தள்ளினார்’ என்ற வாசகத்தை நினைவு கூர்ந்வனாய், ‘சிலர் இரதங்களையும், சிலர் குதிரைகளையும் நம்புகிறார்கள்’ என்றும் ஆனால், நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்தினாலே நாம் வெற்றி பெறுவோம் என்றும் உரக்கக் கூவினான்.

7. இரவும் பகலும் அவனுக்கு ஏற்பட்ட சோதனைகளும், பிசாசுகளின் பொறிகளும் எண்ணற்றவை; அவற்றை விவரிக்க வேண்டுமானால் ஒரு புத்தகம் கூடப் போதாது. அவன் படுக்கும்போது கனவுபோன்ற உணர்வில் அடிக்கடி நிர்வாணக் கோலத்தில் இருக்கும் பெண்களைக் கண்டான்; அவன் பசியாக உணரும்போது, ​​ஆடம்பரமான விருந்துகளைக் கண்டான். சில சமயங்களில் அவன் ஜெபிக்கும்போது ​​ஊளையிடும் ஓநாய் ஒன்று அவனைக் கடந்து செல்வது போலவும், அல்லது உறுமும் நரி ஒன்று கனவில் தோன்றும். அவன் பாடும்போது, ​​வாளேந்தி போர் புரியும் காட்சியைக் காண்பான்; அதில், அப்பொழுதில் இறந்த ஒருவன் தன்னை அடக்கம் செய்யுமாறு கெஞ்சியபடி அவன் காலடியில் விழுவது போல அவனுக்குத் தோன்றும்.

8. ஒருமுறை அவன் தரையில் தலை சாய்த்து ஜெபம் செய்து கொண்டிருந்தான். பலரைப் போலவே, அவனும் செபத்தின் மீதிருந்த கவனம் சற்று சிதறி வேறு விஷயங்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான். திடீரென்று, ஒருவன் அவனது முதுகின் மீது குதித்து, அவனது விலா எலும்புகளில் உதைத்து, குதிரைச் சாட்டையால் அவனது கழுத்தில் அடித்தான். அந்த விசித்திர மனிதன், “வா! என்ன தூங்குகிறாய்?” என்று கத்தினான். பிறகு, உரக்கச் சிரித்துக்கொண்டே, அந்த மனிதன் இவனைப் பார்த்து, களைப்பாக இருக்கிறாயா என்றும், வாற்கோதுமை வேண்டுமா என்றும் கேட்டான்.

9. அவருக்குப் பதினாறு தொடக்கம் இருபது வயதாகும் வரை, அவர் நாணல் மற்றும் கோரைப்புல் கொண்டு செய்யப்பட்ட ஒரு சிறிய குடிசையில் வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார். பின்னர், அவர் தனக்கென ஒரு சிறிய குடிலைக் கட்டினார். அது இன்றும் அங்கே உள்ளது. அது ஐந்து அடி உயரம் கொண்டது, அதாவது அவரது உயரத்தை விடக் குறைவானதும் நீளத்தில் அதைவிடச் சற்று அதிகமாகவும் இருந்தது. அது ஒரு வீட்டை விட, ஒரு கல்லறை போலவே காட்சியளித்தது.

10. அவர் ஆண்டுக்கு ஒருமுறை வரும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தன் தலைமுடியை வெட்டிக்கொள்வார். மேலும் இறக்கும் வரை வெறும் தரையிலோ அல்லது நாணல் படுக்கையிலோ உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் ஒரு காலத்தில் அணிந்திருந்த முரட்டுத் துணியை ஒருபோதும் கழுவிச் சுத்தம் செய்ததில்லை; ஆட்டு உரோமத்திலான துணியில் தூய்மையை எதிர்பார்ப்பது முடியாத காரியம் என்றும் அவர் கூறுவார். மேலும், அவர் அணிந்திருந்த சட்டை கிட்டத்தட்ட கிழிந்துபோகும் வரை அதை மாற்றியதில்லை. அவர் புனித நூல்களை மனப்பாடம் செய்துகொண்டு, பிரார்த்தனை செய்து, கீர்த்தனைகளைப் பாடிய பிறகு, கடவுளுக்கு முன்பாகச் சொல்வது போல அவற்றை ஒப்புவிப்பார். அவருடைய ஆன்மீக வளர்ச்சியின் ஒவ்வொரு படியையும் விவரிக்க அதிக நேரம் எடுக்கும்; எனவே, அவற்றை என் வாசகருக்குச் சுருக்கமாகக் கூறி, ஒவ்வொரு படியிலும் அவருடைய வாழ்க்கை முறையைப் பற்றிச் சொல்லிவிட்டு, பின்னர் சரியான வரலாற்று வரிசைக்குத் திரும்ப எதிர்பார்த்துள்ளேன்.

11. இருபது முதல் இருபத்தேழு வயது வரை, அவர் குளிர்ந்த நீரில் ஊறவைத்த அரைக் குவளை பருப்பை உண்டு வாழ்ந்தார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, அவர் உப்பு மற்றும் தண்ணீருடன் கூடிய உலர்ந்த அப்பத்துக்கு மாறினார். இருபத்தேழு வயதைத் தாண்டி முப்பது வயது வரை, அவரது உணவில் காட்டு மூலிகைகளும் சில பச்சைத் தாவரங்களின் வேர்களும் அடங்கி இருந்தன. முப்பத்தொன்று முதல் முப்பத்தைந்து வயதுக்கு இடையில், அவர் ஆறு அவுன்ஸ் வாற்கோதுமை அப்பத்துடன், எண்ணெய் சேர்க்காமல் லேசாக சமைத்த காய்கறிகளையும் சாப்பிட்டார். இருப்பினும், அவரது பார்வை மங்கத் தொடங்கி, உடல் தளர்ந்து, சொறி மற்றும் வறண்ட சருமத்துடன் அவதிப்பட்டபோது, ​​அவர் தனது உணவில் எண்ணெயைச் சேர்க்க முடிவு செய்தார். பழங்கள், பருப்பு வகைகள் போன்ற அனைத்தையும் தவிர்த்து, அறுபத்து மூன்று வயது வரை இந்த மிதமான உணவையே உட்கொண்டு வாழ்ந்தார். தனது உடல்நிலை மோசமடைந்து வருவதையும், மரணம் நெருங்குவதையும் உணர்ந்தபோது, ​​அறுபத்து நான்கு முதல் எண்பது வயது வரை கோதுமையிலான அப்பத்தை சாப்பிடுவதைத் தவிர்த்தார். அவரது ஆன்மா மிகவும் உறுதியாக இருந்ததால், மற்றவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் சற்று தளர்வாக இருக்கப் பழகிய நேரங்களில் கூட, அவர் கர்த்தரின் சேவையில் ஒரு புதியவராக நுழைவது போல் தோன்றினார். அவர் மாவு மற்றும் மூலிகைகளைக் கொண்டு ஒருவித கஞ்சியைத் தயாரித்தார். அவரது மொத்த உணவு மற்றும் பானம் ஆறு அவுன்ஸ் எடை உள்ளதாக மட்டுமே இருந்தது. இந்த கடுமையான உணவுச் சுழற்சி முழுவதிலும், பண்டிகைகளின்போதோ அல்லது கடுமையாக நோயுற்றிருந்த போதோ கூட, அவர் சூரியன் மறைவதற்கு முன்பு தனது விரதத்தை ஒருபோதும் முறிக்கவில்லை. சரி, இப்போது ​​முக்கிய கதைக்குத் திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது.

12. அவனுக்குப் பதினெட்டு வயதாக இருந்தபோது, ​​அவன் இன்னும் அந்தக் குடிசையில்தான் வசித்து வந்தான். இரவில் கொள்ளையர்கள் அவனிடம் வந்தார்கள். திருடுவதற்கு மதிப்புள்ள ஏதேனும் பொருள் அவனிடம் இருக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம் அல்லது பயம் அறியாத அந்தத் தனிச் சிறுவனிடம் தாங்கள் பலவீனமாகக் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும் வந்திருக்கலாம். அவர்கள் மாலை முதல் விடியும் வரை கடலுக்கும் சதுப்பு நிலத்திற்கும் இடையில் எல்லா இடங்களிலும் அவனைத் தேடினார்கள். ஆனால் அவன் எங்கே ஒளிந்திருந்தான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக விடியற்காலையில் அவர்கள் அவனைக் கண்டபோது ​​கொள்ளையர்கள் வந்தால் நீ என்ன செய்வாய் என்று வேடிக்கையாகக் கேட்டார்கள். அதற்கு அவன், “ஏதுமில்லாதவன் கொள்ளையர்களுக்குப் பயப்படமாட்டான்” என்று பதிலளித்தான். அதற்கு அவர்கள், “ஆனால் நீ கொல்லப்பட்டு விட்டால் என்ன செய்வது?” என்றார்கள். அதற்கு அவன், “நிச்சயமாகக் கொலையை எதிர்கொள்ளலாம்; அதனால்தான் நான் கொள்ளையர்களுக்குப் பயப்படுவதில்லை — நான் எப்போதும் சாகத் தயாராக இருக்கிறேன்” என்றான். அவனது தைரியத்தையும் நம்பிக்கையையும் கண்டு அவர்கள் வியந்தார்கள். இரவு முழுவதும் தாங்கள் அலைந்து திரிந்ததை ஒப்புக்கொண்டார்கள். இந்த நிகழ்வுக்குப் பின்னர், அன்றிலிருந்து ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதாக அவர்கள் அவனிடம் உறுதியளித்தார்கள்.

13. அவர் இருபத்திரண்டு ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்திருந்தவராக இருந்தபோதிலும், பாலஸ்தீனத்தின் எல்லா நகரங்களிலும் நன்கு அறியப்பட்ட ஒருவராக ஆகியிருந்தார். ஆனாலும் அவர் புகழால் மட்டுமே அறியப்பட்டிருந்தார். பெரிதும் மதிக்கப்பட்ட ஹிலரியனை அணுகத் துணிந்த முதல் நபர் எலூத்தெரோபோலிஸைச் (Eleutheropolis – City of Free Men” or “Free City” in Greek) சேர்ந்த ஒரு பெண் ஆவார். பதினைந்து ஆண்டுகளாகக் குழந்தை பெற்றெடுக்காததாலும், கருத்தரிக்க இயலாத காரணத்தாலும் தன் கணவனால் நிராகரிக்கப்பட்டதாக அவள் உணர்ந்தாள். எதிர்பாராதவிதமாக, அவள் அவருடைய காலடியில் விழுந்து, “நான் துணிச்சலுடன் உங்கள் முன் வந்தமைக்காக என்னை மன்னியுங்கள்; தயவுசெய்து என் நிலைமையின் மீது இரக்கம் காட்டுங்கள். ஏன் நீங்கள் முகத்தைத் திருப்பிக் கொள்கிறீர்கள்? ஏன் என் மன்றாட்டுகளைப் புறக்கணிக்கிறீர்கள்? என்னை ஒரு பெண்ணாக மட்டும் பார்க்காமல், இரக்கம் தேவைப்படும் ஒருவராகப் பாருங்கள். என் பாலினமான பெண்மைதான் இரட்சகரைப் பிறப்பித்தது,” என்று கூறினாள். அப்போது அவர், லூக்கா 5:31-ல் “ஆரோக்கியமானவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயுற்றவர்களுக்குத் தான் மருத்துவர் தேவை” என்ற பதத்தை நினைவுகூர்ந்தவராய், நீண்ட மௌனத்திற்குப் பிறகு, அவளைப் பார்த்து, அவள் ஏன் வந்திருக்கிறாள் என்றும், ஏன் அழுதுகொண்டிருக்கிறாள் என்றும் கேட்டார். காரணத்தைப் புரிந்துகொண்டதும் அவர் வானத்தை அண்ணாந்து பார்த்து, நம்பிக்கை கொள்ளும்படி அவளை ஊக்குவித்து, அவள் புறப்பட்டுச் சென்றபோது அவளுக்காகக் கண்ணீர் சிந்தினார். ஓராண்டுக்குள், அவர் அவளை மீண்டும் கண்டபோது, அவளைத் தனியாக அல்ல, ஒரு மகனுடன் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.

14. அவருடைய முதல் அற்புதத்தைத் தொடர்ந்து, அதைவிடப் பெரியதும் குறிப்பிடத்தக்கதுமான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. பிற்காலத்தில் பிரிட்டோரியன் பிராந்தியத்தின் நிர்வாக அலுவலரான எல்பிடியஸின் மனைவியான அரிஸ்டனட், தன் மக்களிடையேயும், அதிலும் குறிப்பாகக் கிறிஸ்தவர்களிடையேயும் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு பெண்மணி ஆவார். புனித அந்தோனியாரைச் சந்தித்து விட்டுத் திரும்பும் வழியில், தங்கள் மூன்று பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டதன் காரணமாக அவரும் அவரது கணவரும் காசாவில் தங்க நேர்ந்தது. அங்கே, ஆரோக்கியமற்ற சூழலின் காரணமாகவோ அல்லது பிற்காலத்தில் தெளிவாகத் தெரிந்தபடி, கடவுளின் ஊழியரான ஹிலரியனின் விசுவாசத்தின் மகிமை காரணமாகவோ அந்த மூன்று பிள்ளைகளும் மூன்றாம் நாள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள் நம்பிக்கையை இழந்தனர். அந்தத் தாய் விரக்தி காரணமாக முதலில் யாருக்காகத் துக்கம் அனுசரிப்பது என்று தெரியாமல், கதறி அழுதுகொண்டிருந்தாள். தன் மூன்று மகன்மாரின் உடல்களுக்கு இடையே மிகுந்த மனவேதனையுடன் முன்னும் பின்னுமாக நடந்துகொண்டிருந்தார். இருப்பினும், அருகிலுள்ள வனாந்தரத்தில் ஒரு துறவி வாழ்வதை அவர் அறிந்தபோது, ​​அவர் ஒரு கணநேரம் தான் ஒரு குடும்பத் தலைவி என்ற நிலையை மறந்து (ஒரு தாயாக, தன் பங்கை மட்டும் நினைவுகூர்ந்து), தன் பணிப்பெண்கள் மற்றும் அண்ணகர்களுடன் வனாந்தரத்தை நோக்கிப் புறப்பட்டார்; ஒரு கழுதையின் மீது ஏறிச் செல்லுமாறு அவரது கணவர் அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. அந்தப் புனிதர் இருக்குமிடத்தை அடைந்ததும், அவள் அவரிடம் கெஞ்சி மன்றாடினாள், “நமது மிகவும் இரக்கமுள்ள கடவுளாகிய இயேசுவின் பெயராலும், அவருடைய சிலுவை மற்றும் இரத்தத்தின் பெயராலும், எனது மூன்று மகன்மாரையும்  என்னிடம் திரும்பக் கொண்டுவருமாறு தங்களிடம் கேட்கிறேன். அதனால், புறஜாதியாரின் நகரத்தில் நமது ஆண்டவரும் இரட்சகருமான கிறீஸ்துவின் பெயர் மகிமைப்படுத்தப்படும். அப்பொழுது, அவருடைய ஊழியர்கள் காசாவிற்குள் நுழைவார்கள், மர்னாஸ் என்னும் சிலை தரையில் விழும்” என்றார். ஆரம்பத்தில் அவர் தனது அறையை விட்டு வெளியே வந்ததே இல்லை என்றும், ஒரு நகரத்திற்குள் நுழைவது இருக்கட்டும், வீடுகளுக்குள் நுழைந்தே பழக்கமில்லை என்றும் கூறி மறுத்துவிட்டார். ஆனால் அவள் தரையில் விழுந்து, “கிறிஸ்துவின் ஊழியரான ஹிலரியோனே, என் பிள்ளைகளை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள். அந்தோணியார் அவர்களை எகிப்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார்; நீங்கள் இப்போது அவர்களை சிரியாவில் வைத்துக் காப்பாற்றுங்கள்” என்று மீண்டும் மீண்டும் விடாமல் கதறினாள். அங்கிருந்த அனைவரும் கண்ணீர் சிந்தி அழுதுகொண்டிருந்தனர். அந்தப் புனிதர் கூட அவளது கெஞ்சுதல்களை நிராகரித்தபோதும் அவரும் கண்ணீர் சிந்தினார். இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது? சூரியன் மறைந்த பிறகு காசாவுக்குச் செல்ல அவர் ஒப்புக்கொள்ளும் வரை அந்தப் பெண் அவருடன் தங்கியிருந்தாள். அவர் காசாவுக்குச் சென்றடைந்ததும், இயேசுவின் நாமத்தைத் துதித்தவாறே படுக்கையின் மீது படுத்திருந்த காய்ச்சலால் தவித்த ஒவ்வொருவரின் மீதும் அவர்களது அவயவங்களின் மீதும் சிலுவை அடையாளம் இட்டார். அது எவ்வளவு சக்திவாய்ந்த நாமம்! அப்போது ஒரே நேரத்தில் மூன்று நீரூற்றுகள் பீறிட்டு வந்தது போல இருந்தது: அந்த நொடியிலேயே, அவர்கள் எழுந்து சாப்பிட்டார்கள், துயருற்ற தங்கள் தாயை அடையாளம் கண்டுகொண்டார்கள். கடவுளுக்கு நன்றி கூறி அந்தப் புனிதரின் கைகளை அன்புடன் பிடித்து முத்தமிட்டார்கள். இந்தச் செய்தி சுற்றுவட்டாரம் எங்கும் பரவியபோது, ​​சிரியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் மக்கள் அவரைக் காண வந்தனர். இந்த அற்புதம் பலரை கிறிஸ்து மீது விசுவாசம் கொண்டவர்களாகவும், துறவிகளாகவும் மாற்றியது. அக்காலத்தில், பாலஸ்தீனத்தில் மடங்கள் எதுவும் இல்லை, புனித ஹிலரியனுக்கு முன்பு சிரியாவில் ஒரு துறவியை எவரும் பார்த்ததில்லை. அந்தப் பகுதியில் ஆண்களுக்குப் பயிற்சி அளித்து இந்த வாழ்க்கை முறையையும் பக்தியையும் தொடங்கி வைத்தவர் அவரே. எகிப்தில் ஆண்டவராகிய இயேசுவுக்கு முதியவரான அந்தோணியார் இருந்தார்; பாலஸ்தீனத்தில் அவருக்கு இளைஞரான ஹிலரியன் இருந்தார்.

15. ஃபாசிடியா என்பது எகிப்தில் உள்ள ரைனோ-கொரூரா என்ற நகரத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்தக் கிராமத்திலிருந்து பத்து ஆண்டுகளாகப் பார்வையற்றிருந்த ஒரு பெண் புனித ஹிலரியனிடம் அழைத்து வரப்பட்டாள். அவருடன் இருந்த துறவிகள் அவளை அறிமுகப்படுத்தினர். அவள் தனது பணம் முழுவதையும் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்காகச் செலவழித்துவிட்டதாகக் கூறினாள். மருத்துவர்களுக்காக வீணடித்த பணத்தை அவள் ஏழைகளுக்குக் கொடுத்திருந்தால் உண்மையான குணப்படுத்துபவரான எம் கர்த்தரான இயேசு அவளைக் குணப்படுத்தி இருப்பார் என்று அந்தப் புனிதர் பதிலளித்தார். அவள் உதவிக்காகக் கதறியபோது ​​இயேசு செய்தது போலவே அவர் அவள் கண்களில் உமிழ்ந்தார். அது உடனடியாகப் பலனளித்தது, அவள் பார்வையை மீண்டும் பெற்றாள்.

16. காசாவைச் சேர்ந்த ஒரு தேரோட்டி, தன் தேரில் இருந்தபோது ஒரு பிசாசினால் பீடிக்கப்பட்டு, அவனது உடல் முற்றிலும் விறைத்து போனது. அவனால் தன் கைகளை அசைக்கவோ, கழுத்தைத் திருப்பவோ முடியவில்லை. அவன் ஒரு பல்லக்கில் கொண்டு செல்லப்பட்டான். அவனால் தன் நாவை அசைப்பதன் மூலம் மட்டுமே தன் தேவைகளைத் தெரிவிக்க முடிந்தது. அவன் முதலில் கிறிஸ்துவை விசுவாசித்து, தனது முந்தைய தொழிலை விட்டுவிடுவதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே குணமடைவது சாத்தியம் என்று அவனிடம் தெரிவிக்கப்பட்டது. அவன் அதை ஏற்றுக்கொண்டு, வாக்குறுதி அளித்ததும் குணமடைந்தான்; தன் சரீரத்தின் சுகத்தைக் காட்டிலும் தன் ஆன்மாவின் இரட்சிப்பில் அதிக மகிழ்ச்சியைக் கண்டான்.

17. மீண்டும், எருசலேமின் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த மார்சிட்டாஸ் என்ற மிகவும் வலிமைமிக்க இளைஞன், தன் பலத்தைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டான். அவனால் பதினைந்து புசல் தானியத்தை வெகு நேரம், நீண்ட தூரங்களுக்குச் சுமந்து செல்ல முடிந்தது. கழுதைகளை விட அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் தனது உடல் வலிமையைக் குறித்து அவன் மிகுந்த பெருமை கொண்டவனாக இருந்தான். இருப்பினும் அவ்விளைஞன் ஒரு கொடிய பிசாசால் துன்புறுத்தப்பட்டான். சங்கிலியால் பிணைக்கப்படுவதையோ அல்லது விலங்கிடப் படுவதையோ அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை; அவன் கதவுகளின் வலிமையான பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் கூட இலகுவில் உடைத்துவிடுவான். அவன் பலருடைய மூக்குகளையும் காதுகளையும் கடித்துத் துண்டித்திருந்தான். மேலும் சிலரின் பாதங்களையும் கால்களையும் கூட முறித்திருக்கிறான். அவன் அனைவரிடமும் அத்தகைய பயத்தை ஏற்படுத்தியதால், அவன் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு ஒரு காட்டெருமையைப் போல கயிறுகளால் கட்டப்பட்டு மடாலயத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டான். துறவிகள் அவனைக் கண்டபோது, ​​(அவன் ஒரு மாபெரும் உருவம் கொண்டவன் என்பதால்) மிகவும் பயந்துபோய் தந்தையிடம் தகவல் தெரிவித்தனர். அங்கேயே அமர்ந்திருந்த அவர், அவனைத் தன்னிடம் அழைத்து வந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டார். அவன் விடுவிக்கப்பட்டதும் தலை குனிந்து தன்னை அணுகுமாறு அவனிடம் கூறப்பட்டது. அந்த மனிதன் நடுங்கத் தொடங்கினான்; அவன் தன் கழுத்தைத் திருப்பிக்கொண்டான். தந்தையின் கண்களை நேராகப் பார்க்க அவனால் முடியவில்லை. அதற்குப் பதிலாக, அவன் தன் மூர்க்கத்தனம் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, அமர்ந்திருந்த தந்தையின் பாதங்களை ஸ்பரிசிக்கத் தொடங்கினான். இறுதியாக, அந்தப் புனிதரின் பிரார்த்தனைகளால் அந்த இளைஞனைப் பிடித்திருந்த பிசாசு ஏழாம் நாள் அவனை விட்டு நீங்கியது.

18. செங்கடலின் அருகே அமைந்துள்ள ஐராவைச் சேர்ந்த, ஒரு முக்கிய மற்றும் செல்வந்த குடிமகனான ஓரியனைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் அவரிடம் கொண்டுவரப்பட்ட போது, ​​ஒரு பிசாசுக் கூட்டத்தால் துன்புறுத்தப்பட்டார். அவரது கைகள், கழுத்து, விலாப்பகுதிகள் மற்றும் பாதங்கள் இரும்பினால் பிணைக்கப் பட்டிருந்தன. அவரது வெறிபிடித்த கண்கள் ஒருவித பைத்தியத்தின் எழுச்சியை உணர்த்தின. அந்தப் புனிதர் தன் சகோதரர்களுடன் நடந்து சென்று, வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியை விளக்கிக்கொண்டிருந்த போது, ​​அந்த மனிதன் தன் காவலர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு வந்து அவரைப் பின்னாலிருந்து பிடித்துத் தூக்கினான். உபவாசத்தால் பலவீனமடைந்திருந்த அந்தப் புனிதரின் மெலிந்த அவயவங்களை அவன் நொறுக்கி விடுவானோ என்று அஞ்சி அனைவரும் பயத்தில் உறைந்தனர். அந்தப் புனிதர் அவர்களை நோக்கிப் புன்னகைத்து, “அமைதியாக இருங்கள், இந்த மல்யுத்தப் போட்டியில் என் எதிராளியை நான் மட்டும் தனியாக எதிர்கொள்ள விடுங்கள்” என்றார். பின்னர் அவர் தன் கையைத் தோளுக்குப் பின்னால் வளைத்து அந்த மனிதனின் தலையைத் தொட்டு, அவனது தலை முடியைப் பிடித்து அவனைத் தன்னை எதிர்கொள்ளும்படி முன்னோக்கித் திருப்பினார். இரு கைகளையும் நேராக நீட்டி, தன் கால்களால் அந்த மனிதனின் பாதங்களை மிதித்து, “உங்களை வதைக்கும் தருணம் வந்துவிட்டது! பிசாசுகளின் கூட்டமே, உங்களை வதைக்கும் தருணம் வந்துவிட்டது!” என்று மீண்டும் மீண்டும் உரக்கக் கத்தினார். பாதிக்கப்பட்ட அந்த மனிதன் கதறி அழுதபடி, தன் தலை தரையைத் தொடும் வரை குனிந்து தன் கழுத்தை தாழ்த்தினான். அதே சமயம், அந்தப் புனிதர், “ஆண்டவராகிய இயேசுவே, இந்த ஏழையை விடுவியுங்கள், இந்தக் கைதியை விடுவியுங்கள். ஒருவரை வெல்வது போல பலரை வெல்வதும் உமது வல்லமையே” என்று ஜெபித்தார். நான் இப்போது பகிரப்போவது உண்மையிலேயே வியக்கத்தக்கது: ஒரு கூட்டம் எழுப்பும் குழப்பமான கூச்சல்களைப் போல ஒரே மனிதனின் வாயிலிருந்து பல்வேறு குரல்கள் வெளிவந்தன. இறுதியில் அவன் குணமடைந்தான். அதன்பிறகு வெகு விரைவிலேயே தன் நன்றியை வெளிப்படுத்தும் விதமாகப் பல வெகுமதிகளுடன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அந்த மடாலயத்திற்கு மீண்டும் வந்திருந்தான். அப்போது அந்தப் புனிதர் அவனிடம் பேசுகையில், கேகாசிக்கும் சீமோனுக்கும் என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி நீ கேள்விப்பட வில்லையா? ஒருவன் வெகுமதியைப் பெற்றுக்கொண்டான், மற்றவன் அதைக் கொடுத்தான்; முதலாவது கருணையை விற்பது, இரண்டாவது அதை வாங்குவது. ஓரியன் கண்ணீருடன் அந்தப் பரிசுப்பொருட்களை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும்படி சொன்னபோது, ​​அவன், “நீங்கள் நகர வீதிகளில் நடமாடுவதாலும், ஏழைகளின் தேவைகளைப் புரிந்துகொள்வதாலும், உங்களுடைய கொடைகளை எவ்வாறு சிறந்த முறையில் பகிர்ந்துகொள்வது என்று உங்களுக்குத் தெரியும். என்னுடையதையே கைவிட்ட நான், பிறருக்குச் சொந்தமானதை ஏன் தேட வேண்டும்?” என்று பதிலளித்தான். பலருக்கு ‘ஏழைகள்’ என்ற சொல் அவர்களின் பேராசைக்கு ஒரு சாக்குப்போக்கு மட்டுமே; உண்மையான இரக்கம் தந்திரங்களைச் சார்ந்திருப்பதில்லை. எல்லாவற்றையும் கொடுப்பவனே உண்மையில் புத்திசாலித்தனமாகச் செலவிடுபவன். இதைக் கேட்டதும் அந்த மனிதன் மனமுடைந்து தரையில் படுத்துக்கொண்டான். “வருத்தப்படாதே, மகனே,” என்று அவர் அவனுக்கு உறுதியளித்தார்; “நான் என் நன்மைக்காகச் செய்வது உனக்கும் பயன் தரலாம். நான் இந்தக் கொடைகளை ஏற்றுக் கொண்டால், நான் கடவுளைப் புண்படுத்துவேன் என்றாகிவிடும். அதுமட்டுமல்லாமல் உன்னிடமிருந்து விலகிச் சென்ற அந்தப் படை உன்னிடமே திரும்பி வந்துவிடும்” என்று கூறி அப்பரிசுப் பொருட்களைத் தவிர்த்துக்கொண்டார்.

19. காசாவின் மஜோமாவைச் சேர்ந்த ஒருவரைப் (Majomites of Gaza) பற்றிய கதையைப் புறக்கணிக்க முடியாது. மடாலயத்திற்கு அருகில் கட்டுமானக் கற்களை வெட்டிக்கொண்டிருந்தபோது, ​​அவர் திடீரென்று மயக்கமுற்று முடங்கிப் போனார். இருப்பினும், அவருடன் பணிபுரிந்தவர் அவரைப் புனிதரிடம் கொண்டு சென்ற பிறகு எதுவும் நடக்காதது போல் அவர் முழு ஆரோக்கியத்துடன் தனது பணிக்குத் திரும்பினார். உங்கள் அறிவுக்கு இதைக் கூறுகிறேன் பாலஸ்தீனம் மற்றும் எகிப்தின் கடற்கரைகள் மென்மையான மணல் மற்றும் சரளைக்கற்களால் ஆனவை, அவை காலப்போக்கில் பாறையாகத் திடமாகின்றன. எனவே, பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், தொடும்போது அதன் உணர்வு வித்தியாசமாக இருக்கும்.

20. அதே ஊரைச் சேர்ந்த இட்டலீக்கஸ் என்ற ஒருவனைப் பற்றிய மற்றொரு கதையும் உண்டு. அவன் களியாட்டப்போட்டிகளுக்காக குதிரைகளை வளர்த்த ஒரு கிறிஸ்தவன். அவன், மார்னஸ் என்று அழைக்கப்படும் சிலைத் தெய்வத்தைப் பின்பற்றுபவனான காசாவின் டூம்விர் என்பவனுக்கு எதிராகப் போட்டியிட்டான். இந்தக் பாரம்பரியம் குறைந்தபட்சம் ரோமானிய நகரங்களில் ரோமுலஸின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. சபைன் பெண்களை வெற்றிகரமாகக் கைப்பற்றியதைக் கொண்டாடுவதற்காக இது ஸ்தாபிக்கப்பட்டது. ஆலோசனைக் கடவுளான கன்சஸைக் கௌரவிக்கும் விதமாக, தேர்கள் களியாட்டப்போட்டி நிகழும் உள்ளரங்கைச் சுற்றி ஏழு சுற்றுகள் ஓடும். எதிரணியின் குதிரைகளைச் சோர்வடையச் செய்யும் அணியே வெற்றி பெறும். இட்டலீக்கஸின் போட்டியாளர் தனது குதிரைகளை வலுப்படுத்தவும் இட்டலீக்கஸின் குதிரைகளுக்குத் தடையை ஏற்படுத்தவும் சில அசுர மந்திரங்களை உச்சாடனம் செய்யும் நோக்கில் ஒரு மந்திரவாதியை நியமித்திருந்தார். இதன்காரணமாக இட்டலீக்கஸ் ஆசீர்வதிக்கப்பட்ட ஹிலரியனிடம் உதவி கேட்டுச் சென்றார். அது தன் எதிராளிக்குத் தீங்கு விளைவிப்பதற்காக அல்ல, மாறாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே. ஞானமுள்ள அந்த முதியவருக்கு இதுபோன்ற அற்ப விஷயங்களுக்காகப் பிரார்த்தனைகளை வீணடிப்பது முட்டாள்தனமாகத் தோன்றியது. அவர் புன்னகைத்து, “குதிரைகளுக்காக நீ செலவழிக்கும் பணத்தை, உன் ஆன்ம இரட்சிப்புக்காக ஏழைகளுக்கு ஏன் கொடுக்கக் கூடாது?” என்று பரிந்துரைத்தார். இட்டலீக்கஸ், தனது பங்கு ஒரு பொதுக் கடமை என்றும் அதைச் செய்யத் தான் நிர்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் பதிலளித்தார். மேலும், எந்தவொரு கிறிஸ்தவரும் மந்திரத்தை நாடக்கூடாது என்றும், கிறிஸ்துவின் ஊழியரிடம் உதவி தேட வேண்டும் என்றும், குறிப்பாகக் கடவுளின் எதிரிகளும் தன்னை வெல்வதை விட, திருச்சபையை வெல்வதில் அதிக மகிழ்ச்சி கொள்பவர்களுமான காசா மக்களுக்கு எதிராக இது அவசியம் என்றும் கூறினார். அங்கிருந்த சகோதரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஹிலரியன் தான் வழக்கமாகப் பருகும் ஒரு மண்பாண்டக் கோப்பையில் தண்ணீர் நிரப்பி இட்டாலிக்கஸிடம் கொடுத்தார். அவன் அதை எடுத்து, தனது குதிரை லாயம், குதிரைகள், தேரோட்டிகள், தேர் மற்றும் பந்தயப் பாதையின் தடைகள் முழுவதும் தெளித்தான். எதிரிகள் நடக்கப்போவதைப் பற்றி கேலியாகப் பேசியிருந்ததாலும், இட்டலீக்கஸின் ஆதரவாளர்கள் தாங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பற்றி நம்பிக்கையுடன் இருந்ததாலும், பார்வையாளர் கூட்டம் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தது. போட்டி தொடங்கும் முன் சமிக்ஞை கொடுக்கப்பட்டது; ஒரு அணி இலக்கை நோக்கி விரைந்தது, மற்றொன்று சிக்கிக்கொண்டது. ஒரு தேரின் சக்கரங்களில் தணல் தெறித்தது. மற்றொன்று வேகமாகச் சென்ற தங்கள் எதிரிகளை ஒரு நொடி மட்டுமே கண்டது. கூட்டத்தின் ஆரவாரம் செவியைப் பிளக்கும் அளவுக்கு பேரொலியாக மாறியது. இறை நம்பிக்கையற்றவர்கள் கூட மார்னாஸ் கிறிஸ்துவால் தோற்கடிக்கப்பட்டான் என்று ஒருமித்த குரலில் ஆர்ப்பரித்தனர். இதைத் தொடர்ந்து கொதிப்படைந்த எதிரிகள் கிறிஸ்தவ மந்திரவாதி என்று முத்திரை குத்தி, ஹிலரியனுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்று கோரினர். இந்த குறிப்பிடத்தக்க வெற்றியும் அதைத் தொடர்ந்து நடந்த களியாட்ட விளையாட்டுகளில் கிடைத்த பல வெற்றிகளும், பலரை இறைநம்பிக்கையைத் தழுவ உந்துசக்தியாக அமைந்தன.

21. காசாவுக்கு அருகிலுள்ள சந்தை நகரத்தில் கடவுளின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு அருட் சகோதரி மீது தீராத காதல் கொண்ட ஒரு இளைஞன் இருந்தான். விளையாட்டுத்தனமான தொடுதல்கள், நகைச்சுவைகள், தலையசைப்புகள், கிசுகிசுப்புகள் வழியாக அவளது புனிதத்தன்மையை இழக்க வழிவகுக்கும் வழக்கமான தந்திரங்கள் அனைத்தையும் செய்த பிறகும் அவன் செய்வதறியாது தவித்தான். பின்னர் அவன் தனது சோகக் கதையைப் பகிர்ந்துகொள்ள மெம்பிஸில் உள்ள ஒரு மந்திரவாதியைச் சந்திக்க முடிவுசெய்தான். சில மந்திரங்களின் உதவியால் அந்த அருட் சகோதரியிடம் மீண்டும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று அவன் நம்பினான். ஆன்மாக்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக அழிப்பதில் பெயர்போன ஏஸ்குலாபியஸின் மந்திரவாதியிடம் ஓராண்டு பயிற்சி பெற்ற பிறகு அவன் முன்பிருந்த அதே காம இச்சையுடன் மீண்டும் அங்கே வந்தான். பின்னர் அவன் சைப்ரஸ் தேசத்தின் பித்தளையால் செய்யப்பட்ட சில மந்திர சூத்திரம் பதிக்கப்பட்ட தகடுகளையும் பயங்கரமான அருவருப்பு தரக்கூடிய சின்னங்களையும் அந்தப் பெண்ணின் வீட்டு வாசலுக்குக் கீழே புதைத்தான். சிறிது நேரத்திலேயே அந்தப் பெண் விசித்திரமாக நடந்துகொள்ளத் தொடங்கினாள். அவள் தன் தலை முக்காட்டைக் கழற்றி எறிந்து, தன் தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு பற்களை நறநறவென்று கடித்தாள். மேலும் அந்த இளைஞனின் பெயரைக் கூறி அழைத்தாள். அவளுடைய ஆழ்ந்த காதல் பைத்தியமாக மாறியிருந்தது. கவலையடைந்த அவளுடைய பெற்றோர் அவளை ஒரு மடாலயத்திற்கு அழைத்துச் சென்று ஒரு வயதான துறவியிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அவ்வாறு செய்தவுடன் அந்தப் பிசாசு அலறி ஒப்புக்கொள்ளத் தொடங்கியது. ‘நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்; என் விருப்பத்திற்கு எதிராக நான் அழைத்துச் செல்லப்பட்டேன். மெம்பிஸ் நகரத்து ஆண்களை அவர்களின் கனவுகளில் தோன்றி ஏமாற்றியபோது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்! என்ன ஒரு துன்பம், என்ன ஒரு வலியை நான் அனுபவிக்கிறேன்! நீ என்னை வெளியேறச் செய்கிறாய் என்றபோதும், நான் வாசற்படியின் கீழ் சிக்கிக்கொண்டிருக்கிறேன், என்னை இங்கே வைத்திருக்கும் அந்த இளைஞன் என்னை விடுவித்தாலன்றி என்னால் தப்பிக்க முடியாது’ என்றது அவளுக்குள் இருந்த அந்த அசுத்த ஆவி. “ஒரு சாதாரண நூலும் ஒரு தட்டும் உன்னைக் கட்டுப்படுத்துகின்றன என்றால், உன் பலம் மிகவும் வியக்கத்தக்கதாக இருக்க வேண்டும். சொல்! கடவுளுக்குச் சொந்தமான இந்தக் கன்னிக்குள் நுழைய உனக்கு எப்படித் துணிவு வந்தது? என்று கடுந்தொனியில் கேட்ட அந்த முதியவரிடம், “அவளை ஒரு கன்னியாகப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக” என்று அவன் பதிலளித்தான். அதற்கு அவர், “கற்புக்குத் துரோகம் செய்தவனே, நீயா அவளைப் பாதுகாக்கிறாய்! உன்னை அனுப்பியவனுக்குள் நீ நுழைய வேண்டியது தானே?” என்று கேட்டார். “என்னுடைய தோழனாகிய காமப் பிசாசுடன் கூட்டணி வைத்திருந்த ஒருவனுக்குள் நான் ஏன் நுழைய வேண்டும்?” என்று அவன் பதிலளித்தான். இருப்பினும், அந்தப் பெண் தூய்மைபெறும் சடங்கிற்கு உட்படுத்தப்படும் வரை, அந்த இளைஞனையோ அல்லது புதைக்கப்பட்ட தாயத்துகளையோ தேடக்கூடாது என்று அந்தப் புனிதர் வலியுறுத்தினார். ஏனெனில், அது மந்திரங்களால் விடுவிக்கப்பட்ட பிசாசு போல் தோன்றக்கூடும் அல்லது அவனே தனது வார்த்தைகளை ஆதரிப்பதாக இருந்துவிடக்கூடும் என்று அவர் கவலைப்பட்டார். பிசாசுகள் வஞ்சகமானவை என்றும், பாசாங்கு செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றவை என்றும் அவர் கூறினார். கடைசியில், அந்தப் பெண் உடல்நலம் தேறிய பிறகு தனது செயல்களால் பிசாசு அவளுக்குள் நுழைய அனுமதித்தமைக்காக அவளைக் கடுமையாகக் கண்டித்தார்.

22. அவரது புகழ் பாலஸ்தீனம் மற்றும் அருகிலுள்ள எகிப்து அல்லது சிரியா நகரங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; அது தொலைதூரப் பகுதிகளுக்கும் பரவியிருந்தது. பேரரசர் கொன்ஸ்டான்டியஸின் கீழ் பணியாற்றிய ஓர் அதிகாரி, சிறுவயதிலிருந்தே ஒரு பிசாசின் துப்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தார். அவரது பொன்னிற தலைமுடியும் வசீகரமான தோற்றமும், சாக்சன்களுக்கும் அலெமானிகளுக்கும் இடையில் அமைந்திருந்த (வரலாற்றாசிரியர்களால் ஜெர்மனி என்று அறியப்பட்ட, ஆனால் இப்போது பிரான்ஸ் என்று குறிப்பிடப்படும்) அவரது தாய்நாட்டை நினைவுபடுத்தின. அந்தப் பிசாசு அவரை இரவில் ஊளையிடவும், முனகவும், பற்களைக் கடிக்கவும் கட்டாயப்படுத்தியது. எனவே, அவர் தனது காரணங்களைத் தெளிவாக விளக்கி, பேரரசரிடம் இருந்து ஒரு பின்னேற்பு ஆணையை ரகசியமாகக் கோரினார். மேலும், பாலஸ்தீனத்தில் உள்ள தூதருக்குக் கடிதங்களையும் பெற்றுத் தந்தார். அவர் பெரும் ஆரவாரத்துடனும், பெரிய பரிவாரத்துடனும் காசாவிற்கு வந்து சேர்ந்தார். துறவி ஹிலரியன் எங்கே வசிக்கிறார் என்று அவர் உள்ளூர் சட்ட மன்றத்தாரிடம் கேட்டபோது, ​​அவர் பேரரசரால் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அஞ்சி காசா மக்கள் மிகவும் பதற்றமடைந்தனர். அத்தகைய உயர்ந்த நிலையில் உள்ள ஒருவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ஹிலரியனுக்கு எதிராகத் தாங்கள் செய்திருக்கக்கூடிய கடந்தகாலத் தவறுகளுக்குப் பரிகாரம் தேடும் நம்பிக்கையிலும் அவர்கள் அவரை மடாலயத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த நேரத்தில், அந்த முதியவர் மென்மையான மணற்றிடலில் உலாவியபடி சங்கீதங்களிலிருந்து ஒரு மெட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த பெரிய கூட்டத்தைக் கவனித்த அவர் சற்று நின்று அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து, அவர்களை ஆசீர்வதிப்பதற்காகத் தன் கையை உயர்த்தினார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர் மற்றவர்களைப் புறப்பட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்; அந்த மனிதனின் கண்களையும் நடத்தையையும் வைத்தே அவர் எதற்காக அங்கு வந்திருக்கிறார் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்ததால், தனது விருந்தினரையும் அவருடன் வந்திருந்த பணியாளர்களையும் அதிகாரிகளையும் மட்டும் அவரோடு தங்குமாறு வேண்டிக்கொண்டார். கடவுளின் ஊழியர் அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். உடனே அந்த மனிதன் தன் கால்விரல்களில் ஊன்றி எம்பி உயரக் குதித்து, தன் பாதங்கள் தரையைத் தொடாதவாறு அவனிடம் கேள்வி கேட்கப்பட்ட மொழியான சிரியாக்கில் ஒரு பயங்கரமான கர்ஜனையை எழுப்பினான். பிரெஞ்சு மற்றும் இலத்தீன் மொழிகளை மட்டுமே பேசக்கூடிய ஒரு காட்டுமிராண்டியிடமிருந்து தூய சிரியாக் மொழி வருவதைக் கேட்பது ஆச்சரியமாக இருந்தது; அவன் பாலஸ்தீனத்தின் எந்தவொரு சீழ்க்கை ஒலிகளோ, மூச்சு ஒலிகளோ அல்லது உள்ளூர் வட்டார வழக்குகளோ இல்லாமல் அவ்வாறு கர்ஜித்தான். பின்னர் அவனுக்குள் இருந்த பிசாசு தான் அம்மனிதனை எவ்வாறு ஆட்கொண்டது என்பதை வெளிப்படுத்தியது. கிரேக்கம் மற்றும் இலத்தீன் மட்டுமே தெரிந்த தனது மொழி பெயர்ப்பாளர்கள் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய, ஹிலரியன் அவனிடம் கிரேக்கத்திலும் கேட்டார். அந்தப் பிசாசோ அதே பதிலையே மீண்டும் கூறி, தான் மந்திரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டதாகவும், மாயாஜாலத்திற்கு அடிபணியும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறியது. அதற்கு அந்தப் புனிதர், “நீ எப்படி உள்ளே வந்தாய் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை, ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீ இப்போதே வெளியேறும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்று கூறினார். அந்த மனிதன் குணமடைந்தபின் அவன் அந்தப் புனிதருக்குப் பத்து எடை தங்கத்தை வெறுமனே காணிக்கையாகக் கொடுத்தான். இருப்பினும், மிகவும் எளிமையான உணவை உண்டு வாழ்பவர்கள் தங்கத்தை மதிப்பற்றதாகக் கருதுவார்கள் என்று விளக்கி, அந்தத் துறவி சிறிதளவு அப்பத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டார்.

23. மனிதர்களைப் பற்றி மட்டும் பேசுவது போதாது; மூர்க்கத்தனமான விலங்குகளும் தினமும் வெறிபிடித்த நிலையில் அவரிடம் கொண்டுவரப்பட்டன. முப்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களால் வலுவான கயிறுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்டு, பிடிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான இரு முகடுகளைக் கொண்ட ஒட்டகமும் (Bactrian camel) அதில் அடங்கும். இந்த ஒட்டகம் ஏற்கெனவே பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் கண்கள் இரத்தச் சிவப்பாக இருந்தன, வாயில் நுரை தள்ளியது, நாக்கு வீங்கியிருந்தது, அத்தோடு, மிகவும் பயங்கரமான மற்றொமொரு விஷயம் என்னெவென்றால், அதன் உரத்த, இரத்தத்தை உரையச் செய்யும் கர்ஜனை. அந்த முதியவர் அதை விடுவிக்க முடிவு செய்தார். உடனடியாக, ஒட்டகத்தைக் கொண்டு வந்த அனைவரும் அந்தப் புனிதரின் உதவியாளர்களுடன் சேர்ந்து திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டனர். அந்தப் புனிதர் தனியாக ஒட்டகத்தை அணுகி, சிரியாக் மொழியில் அமைதியாக, “பிசாசே, நீ எவ்வளவு பெரியதாக இருந்தாலும் என்னைப் பயமுறுத்த முடியாது. நீ நரியாக இருந்தாலும் சரி, ஒட்டகமாக இருந்தாலும் சரி, என்னைப்பொறுத்த வரையில் ஒன்றுதான்” என்றார். அவர் தன் கையை நீட்டியபடி அங்கேயே நின்றார். ஹிலரியனைத் தாக்கத் தயாராக இருப்பது போல் தோன்றிய அந்த ஆவேசமான மிருகம் அவரை நெருங்கியது. ஆனால் திடீரென்று சரிந்து தன் தலையைத் தரையில் சாய்த்தது. அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில், அது ஒரு சீற்றம் மிகுந்த மிருகமாக இருந்து முற்றிலும் சாதுவான மிருகமாக மாறியது. அந்த முதியவர் அவர்களிடம், சாத்தான் மனிதகுலத்தின் மீதான வன்மத்தினால், உழைக்கும் மிருகங்களைக் கூட எப்படித் துரத்துகிறான் என்பதை விளக்கினார். மனிதர்கள் மீதான அவனது வெறுப்பு மிகவும் தீவிரமானது, அதனால் அவன் அவர்களை மட்டுமல்ல, அவர்களின் உடைமைகளையும் கூட அழிக்க விரும்புகிறான். இந்தக் கருத்தை விளக்குவதற்காக பரிசுத்த யோபுவைச் சோதிக்கப் பிசாசுக்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு முன்பு, அவன் யோபுவின் செல்வங்கள் அனைத்தையும் அழித்துவிட்டான் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், கர்த்தரின் கட்டளையின்படி இரண்டாயிரம் பன்றிகள் பிசாசுகளால் கொல்லப்பட்டதில் யாருக்கும் ஆச்சரியம் இருக்கக்கூடாது. இந்த அற்புதத்தைக் கண்டவர்கள், அதே எண்ணிக்கையிலான பன்றிகளும் அழிக்கப்பட்டிருந்தாலன்றி, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பிசாசுகள் அந்த மனிதனை விட்டு நீங்கியதை நம்புவது கடினமாக இருந்திருக்கும்; ஏனெனில், இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு பெரும் பிசாசுக் கூட்டம் இருந்தது என்பது தெளிவாகிறது.

24. அவர் செய்த எல்லா அற்புதங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டுமானால், எனக்குப் போதுமான நேரம் இருக்காது. ஆண்டவர் அவரை அத்தகைய மகிமைக்கு உயர்த்தியதால், புனித அந்தோணியார் அவர்கள் கூட, அவருடைய வாழ்க்கையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவருக்குக் கடிதம் எழுதி, அவருடைய கடிதங்களை ஆவலுடன் ஏற்றுக்கொண்டார். சிரியாவிலிருந்து நோயாளிகள் அவரைச் சந்திக்க வரும்போதெல்லாம், “வீட்டில் என் மகன் ஹிலரியன் இருக்க, இவ்வளவு தூரம் ஏன் வந்தீர்கள்?” என்று அவர் கேட்பார். அவருடைய முன்மாதிரியால் உத்வேகம் பெற்று, பாலஸ்தீனம் முழுவதும் எண்ணற்ற மடங்கள் தோன்றின; அவை எல்லா இடங்களிலிருந்தும் துறவிகளை ஈர்த்தன. இதைக் கண்ட அவர், இறைவனின் அருளுக்காக நன்றி செலுத்தி, அவர்களில் ஒவ்வொருவரையும் அவரவர் நன்மைக்காக ஊக்குவித்தார். இவ்வுலக வழிகள் நிலையற்றவை என்றும், தற்போதைய துன்பங்களின் மூலம் வாழும் வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை என்றும் அவர்களுக்கு நினைவூட்டினார்.

25. துறவிகளுக்குத் தாழ்மை மற்றும் பக்திக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என விரும்பிய அவர், திராட்சைப்பழ அறுவடைக்கு முன்னர் சில குறிப்பிட்ட நாட்களில் அவர்களின் குடில்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது வருகைகளைப் பற்றி அறிந்ததும் சகோதரர்கள் அவரை வரவேற்க ஒன்று கூடுவார்கள். மேலும் தங்கள் மதிப்பிற்குரிய தலைவருடன் சேர்ந்து அவர்கள் மடாலயங்களைச் சுற்றிப் பார்த்தவாறே உணவுப்பொருட்களையும் கொண்டு செல்வார்கள். சில சமயங்களில் இரண்டாயிரம் பேர் வரை கூடுவார்கள். காலப்போக்கில், சுற்றியுள்ள அனைத்து சமூகங்களும் புனிதர்களைக் கௌரவிக்கும் விதமாக துறவிகளுக்கு மனமுவந்து உணவு வழங்கின. மேலும், எந்தவொரு சகோதரரும் அவர்களின் எளிமை அல்லது வறுமையைப் பொருட்படுத்தாமல் எவரும் புறக்கணிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்வதில் அவரது அர்ப்பணிப்பானது, தனது சீடர்களில் ஒருவரைக் காண ஒரு மூத்த துறவிகள் அடங்கிய குழுவுடன் அவர் வருடாந்திர திருவிழா நாளன்று எலுசாவை வந்தடைந்தார். இத்திருவிழா உள்ளூர் மக்களை சுக்கிரனின் கோவிலுக்கு ஈர்த்தது. நாடோடி மக்கள் வழிபடும் லூசிஃபர் காரணமாக இந்த சுக்கிரன் தேவி வணங்கப்படுகிறாள். அந்த நகரம் அதன் இருப்பிடத்தின் காரணமாக பெரும்பாலும் அரை-நாகரிகமற்றதாக இருந்தது. முன்னர் பிசாசுகளால் பீடிக்கப்பட்ட பல நாடோடிகளைக் குணப்படுத்தியிருந்த புனித ஹிலரியன் அவ்வழியே வருகிறார் என்ற செய்தி பரவியதும், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அவரைச் சந்திக்கத் திரண்டு வந்தனர். அவர்கள் அவரை வணங்கி, ‘ஆசீர்வதியுங்கள்’ என்று பொருள்படும் சிரியாக் மொழியில் ‘பாரேக்’ (Barech) என முழக்கமிட்டனர். அவர் அவர்களைத் தயவுடனும் பணிவுடனும் வரவேற்று, சிலைகளுக்குப் பதிலாகக் கடவுளை வணங்குமாறு அவர்களிடம் வேண்டினார். அவர் தனது உரத்த குரலால் வானத்தை அண்ணாந்து பார்த்து, அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் அவர்களை அடிக்கடி வந்து சந்திப்பதாக வாக்குறுதி அளித்தார். கடவுளின் அற்புத மகிமையால் அவர் ஒரு தேவாலயத்தின் வரைபடத்தை வரைந்து முடிக்கும் வரையிலும் மாலை அணிவிக்கப்பட்ட தங்கள் குருவானவர் கிறிஸ்துவின் அடையாளத்தால் குறிக்கப்படும் வரையிலும் அவரை அங்கேயே தங்குமாறு அவர்கள் வற்புறுத்தினர்.

26. மீண்டும் ஒருமுறை, அவர் மடாலயங்களுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டு, யாருடன் தங்க வேண்டும், சுருக்கமாக யாரைச் சந்திக்க வேண்டும் என்ற பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ​​தங்களில் ஒருவன் மிகவும் கஞ்சன் என்பதை அறிந்த துறவிகள் அவனது போக்கைத் திருத்திக்கொள்ளவேண்டுமென்ற ஆர்வத்துடன், அந்த மகான் அவனுடன் நேரம் செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர், “அந்தச் சகோதரனுக்காக நான் உங்களுக்குத் தீங்கும் தொல்லையும் ஏற்படுத்த வேண்டுமா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும், அந்தக் கஞ்சனான சகோதரன் தர்மசங்கடமாக உணர்ந்தான். அவனது சக துறவிகள் அனைவரின் வலுவான ஊக்கத்துடன் இறுதியில் அந்த மகானின் மடாலயத்தையும் தனது பயண நிறுத்தங்களில் சேர்த்துக்கொள்வதாக அவரிடமிருந்து தயக்கத்துடன் ஒரு வாக்குறுதியைப் பெற்றான். பத்து நாட்களுக்குப் பிறகு, அவர்கள் அவரை அணுகியபோது, ​​அவர்கள் கடந்து செல்ல வேண்டிய திராட்சைத் தோட்டத்தில் காவலர்கள் ஏற்கனவே பணியில் இருப்பதைக் கண்டனர்; அவர்கள் கற்கள், மண் கட்டிகள் மற்றும் கவண்களைக் கொண்டு எந்தவொரு பார்வையாளரையும் விரட்டியடிக்கத் தயாராக இருந்தனர். காலையில், ஒரு திராட்சையைக் கூட சுவைக்காமல் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். அதே நேரத்தில் அந்த முதியவர் புன்னகை பூத்தவராய் நிலைமையைப் பற்றி எதுவும் தெரியாதது போல் பாசாங்கு செய்தார்.

27. ஒருமுறை, சாபஸ் என்ற மற்றொரு துறவி அவர்களை உபசரித்துக்கொண்டிருந்தபோது, (அந்தக் கஞ்சனின் பெயரை நாம் குறிப்பிடப் போவதில்லை, ஆனால் இந்தத் தாராள மனமுள்ள மனிதரின் பெயரை நிச்சயமாகப் பகிர்ந்துகொள்ளலாம்) அது கர்த்தருடைய நாள் என்பதால் அவர்கள் அனைவரும் திராட்சைத் தோட்டத்திற்குள் அழைக்கப்பட்டனர். உணவு நேரம் வருவதற்கு முன்பு, தங்கள் பயணத்தின் களைப்பைப் போக்கும் விதமாக திராட்சைப் பழங்களை உணவாக உண்டு மகிழ்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புனிதர், “ஆன்மாவைப் போஷிக்கும் முன் சரீர இளைப்பாறுதலைத் தேடுபவன் சபிக்கப்பட்டவன். நாம் ஜெபிப்போம், கீர்த்தனைகளை இசைப்போம், கடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றுவோம், அதன் பிறகு திராட்சைத் தோட்டத்திற்கு செல்வோம்” என்று பிரகடனம் செய்தார். ஆராதனை முடிந்ததும், அவர் ஒரு மேடான இடத்தில் நின்று திராட்சைத் தோட்டத்தை ஆசீர்வதித்து தனது சொந்த ஆடுகளை அவற்றின் மேய்ச்சல் நிலத்திற்குச் செல்ல அனுமதித்தார். அதேவேளை, உபசரிப்பில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் குறையாமல் இருந்தது. முழு திராட்சைத் தோட்டத்தின் மதிப்பும் நூறு குடுவைகளாக இருந்தபோதிலும், முப்பது நாட்களுக்குள் அவன் அதன் மதிப்பை முந்நூறாக உயர்த்தினான். கஞ்சத்தனமான சகோதரன் வழக்கத்தை விட மிகக் குறைவாகவே வசூலித்தான்; மேலும், தன்னிடம் இருந்த திராட்சை இரசம் எல்லாம் புளிப்புக் காட்டியாக மாறிவிட்டதைக் கண்டு மனம் சோர்ந்து போனான். அந்த முதியவர் இதை முன்னரே கணித்து, அதுகுறித்து மற்றைய சகோதரர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். குறிப்பாக அவர் நம்பிக்கையின்மையால் உந்தப்பட்டு, எதிர்காலத்திற்காகப் பதுக்கி வைப்பவர்களையும், காலப்போக்கில் தேவையற்றுப்போன செலவுகள், உடைகள் அல்லது பிற உலகியல் விஷயங்களைப் பற்றி அதீத அக்கறை கொள்பவர்களையும் அவர் வெறுத்தார்.

28. இறுதியாக, சுமார் ஐந்து மைல் தொலைவில் வசித்த சகோதரர்களில் ஒருவரை அவர் ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. ஏனெனில், அந்தச் சகோதரன் தனது சிறிய துண்டு நிலத்தின் மீது மிகுந்த பாதுகாப்பு உணர்வு கொண்டவன் என்றும் அவனிடம் சிறிதளவு பணமும் இருக்கிறது என்றும் அவர் அறிந்துகொண்டார். தவறு செய்தவன் அந்த முதியவருடன் சமாதானம் செய்துகொள்ள விரும்பி சகோதரர்களை, குறிப்பாக ஹிலரியனால் பெரிதும் நேசிக்கப்பட்ட ஹெசிசியஸை அடிக்கடி சென்று சந்தித்தான். ஒரு நாள் அவன் புதிதாகப் பறித்த பச்சை பட்டாணிக்கடலை மூட்டை ஒன்றைக் கொண்டுவர, ஹெசிசியஸ் அதை அன்றைய மாலை ஆகாரத்துக்காக மேசையில் வைத்தார். ஆனால் அந்த முதியவர் அந்த வாசனையைத் தன்னால் தாங்க முடியவில்லை என்று கூச்சலிட்டு, அது எங்கிருந்து வந்தது என்று விசாரித்தார். ஒரு சகோதரன் தன் அறுவடையின் முதற்பலன்களை மற்ற சகோதரர்களுக்கு அனுப்பியதாக ஹெசிசியஸ் விளக்கினார். ‘இந்தக் கொடிய துர்நாற்றத்தை நீங்கள் கவனிக்கவில்லையா? இந்தப் பட்டாணிகளில் உள்ள பேராசையின் துர்நாற்றத்தை உங்களால் உணர முடியவில்லையா? இவற்றை மாடுகளுக்குத் தீவனமாக அனுப்புங்கள்; அவை இதை அந்த மிருகங்கள் சாப்பிடுமா என்று பார்ப்போம்,’ என்றார் அவர். உடனே அது தீவனத் தொட்டியில் வைக்கப்பட்டது. அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, கட்டுக்கடங்காத மாடுகள் உரக்கக் கத்திக்கொண்டே தங்கள் கட்டப்பட்டுள்ள கயிறுகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு நாலாத் திசைகளிலும் சிதறி ஓடின. உடல்கள், ஆடைகள் மற்றும் தொட்ட பொருட்களின் வாசனையின் மூலம் ஒவ்வொரு தனிநபரையும் துன்புறுத்தும் தீய சக்தியையும் தீய குணத்தையும் கண்டறியும் அருளை அந்த முதியவர் பெற்றிருந்தார்.

29. தனது அறுபத்து மூன்றாம் வயதில், அந்த முதியவர் ஒரு மாபெரும் மடாலயத்திற்கும் அங்கு வசிக்கும் ஏராளமான சகோதரர்களுக்கும் தலைவராக இருந்தார். பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களையும் அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டோரையும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து அழைத்து வந்ததால் அந்தப் பாலைவனத்தின் முழுப் பகுதியும் சகல விதமான மக்களால் நிறைந்திருந்தது. இதைக் கண்ணுற்ற அந்தப் புனிதர் தனது கடந்தகால வாழ்க்கை முறையை எண்ணி ஆழ்ந்த துக்கத்துடன் தினமும் கண்ணீர் சிந்தியபடி இருந்தார். அந்த மடாலயத்தில் உள்ள சகோதரர்களில் ஒருவர் அவரது துக்கத்துக்கான காரணத்தைப் பற்றிக் கேட்டபோது, ​​அவர், “நான் இவ்வுலகிற்குத் திரும்பிவிட்டேன்; இந்த வாழ்க்கையிலேயே என் வெகுமதியைப் பெற்றுவிட்டேன். பாலஸ்தீன மக்களும் அண்டை பிராந்திய மக்களும் என்னை ஒரு முக்கியமானவராகக் கருதுகின்றனர். ஆனால் சகோதரர்களின் முறையான நிர்வாகத்தை மேற்கொள்ளும் ஒரு மடாலயம் என்ற போர்வையில் ஒரு அற்பமான வாழ்க்கையின் பகட்டுகளால் நான் சூழப்பட்டிருப்பதைக் காண்கிறேன்” என்றார். இருப்பினும், சகோதரர்கள், குறிப்பாக அந்த முதியவர் மீது குறிப்பிடத்தக்க பக்தியையும் மரியாதையையும் கொண்டிருந்த ஹெசிசியஸ் போன்றோர் அவர் மீது விழிப்புடன் இருந்தனர். இரண்டு வருடங்கள் நீடித்த இத்தகைய புலம்பல்களுக்குப் பிறகு, நாம் முன்பு குறிப்பிட்ட ஒரு ஆளுநரின் மனைவியாக இருந்தும் அந்தப் பட்டத்துடன் தொடர்புடைய எந்த ஆடம்பரமும் இல்லாத பெண்மணியான அரிஸ்டனட், அந்தோனியாரையும் பார்க்கும் நோக்கத்தில் அவரைச் சந்திக்க வந்தார். அவர் அவளிடம், “நான் இந்த மடாலயத்தில் அடைபட்டிருக்காமல் என் வாழ்க்கையானது ஏதேனும் விதத்தில் பயனுள்ளதாக இருக்குமானால் நான் உங்களுடன் சேர விரும்புகிறேன். ஏனெனில் மனிதகுலம் அனைவருக்கும் உண்மையான தந்தையாக இருந்த ஒருவரை இழந்து இரண்டு நாட்கள் ஆகின்றன,” என்று கூறினார். அவள் அவரது வார்த்தைகளை மனத்தில் ஏற்றுக்கொண்டு தான் இருந்த இடத்திலேயே தங்கிவிடத் தீர்மானித்தாள்; சில நாட்களுக்குப் பிறகு அந்தோனியார் அமைதியாகக் காலமானார் என்ற செய்தி வந்தது.

30. அவர் நிகழ்த்திய அற்புதங்களையும், அவருடைய வியக்கத்தக்க உபவாசம், அறிவு மற்றும் பணிவையும் கண்டு சிலர் வியக்கக்கூடும். ஆனால், கௌரவத்தையும் புகழையும் துச்சமாக மதித்து, கடந்து செல்லும் அவருடைய ஆற்றலைப் போல வேறு எதுவும் என்னை வியப்பில் ஆழ்த்தியதில்லை. ஆயர்கள், குருக்கள், மதகுருக்கள் மற்றும் துறவிகள் கூட்டம், கிறிஸ்தவப் பெண்மணிகள் கூட (அது அவருக்கு ஒரு பெரும் சோதனையாக இருந்தது), நகரம் மற்றும் கிராமத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த பாமர மக்கள், ஏன் நீதிபதிகள் மற்றும் உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகள் கூட அவர் ஆசீர்வதித்த அப்பத்தையோ எண்ணெயையோ அவர் கரங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் ஆவலில் அவரை நாடி பெட்டிலியம் என்ற ஊருக்கு வந்தவண்ணம் இருந்தனர். ஆனால் அவர் தனிமையைத் தவிர வேறு எதையும் பற்றி நினைக்கவில்லை; அந்த அளவிற்கு சோர்வடைந்திருந்த அவர், ஒரு நாள் அங்கிருந்து சென்றுவிடத் தீர்மானித்தார். இந்தச் செய்தி காட்டுத்தீயாய்ப் பரவியது. பாலஸ்தீனத்தின் அழிவுக்காக ஒரு பொதுத் துக்கம் அறிவிக்கப்பட்டது போல, அனைத்து வயது ஆண்கள் பெண்கள் போன்ற பத்தாயிரம் பேருக்கு மேல் அவர் வெளியேறுவதைத் தடுக்கக் கூடினர். அவர்களுடைய வேண்டுகோள்களைக் கண்டு அவர் சற்றும் கலங்காமல் தனது கைத்தடியால் மணலைத் தட்டியபடியே அவர் மீண்டும் மீண்டும் இவ்வாறு அறிவித்தார்: “நான் என் ஆண்டவரை வஞ்சிக்க மாட்டேன்; தேவாலயங்கள் அழிக்கப் படுவதையும், கிறிஸ்துவின் பலிபீடங்கள் சிதைக்கப்படுவதையும், என் மகன்மாரின் இரத்தம் சிந்தப்படுவதையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது” என்று கூறினார். அங்கிருந்தவர்கள், பகிர்ந்துகொள்ள விரும்பாத ஏதோ ஒரு இரகசியத்தை அவர் அறிந்திருக்கிறார் என்பதை உணரத் தொடங்கினர். ஆயினும் அவர் புறப்பட்டுச் செல்வதைத் தடுப்பதற்காக அவர்கள் தொடர்ந்து அவரைக் காத்து வந்தனர். அதன் விளைவாக, தான் விடுவிக்கப்படும் வரை உண்ணவோ குடிக்கவோ மாட்டேன் என்று அவர் முடிவுசெய்தவராய், அனைவரையும் அதற்குச் சாட்சியாக இருக்க பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இறுதியாக ஏழு நாட்களுக்குப் பிறகே அவர் தனது உண்ணாவிரதத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். பல நண்பர்களிடம் விடைபெற்ற பிறகு ஒரு மாபெரும் கூட்டம் புடைசூழ பெட்டிலியம் நகரை வந்தடைந்தார். கூட்டத்தினரைத் திரும்பிச் செல்லுமாறு அவர் வெற்றிகரமாகச் சம்மதிக்க வைத்தார். மேலும், தனது தோழர்களாக நாற்பது துறவிகளைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் அனைவரும் பயணத்திற்கு நன்கு தயாராக இருந்தனர். குறிப்பாக சூரியன் மறைந்த பிறகு, அதாவது உபவாச நேரங்களில் பயணம் செய்யக்கூடியவர்களாகவும் இருந்தனர். பின்னர் அவர் லிக்னோஸ் என்று அழைக்கப்படும் இடத்திற்கு அருகிலுள்ள பாலைவனத்தில் வசிக்கும் சகோதரர்களைச் சந்திக்கச் சென்றார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அங்கு நாடுகடத்தப்பட்டிருந்த ஆயரும் பாவமன்னிப்பு வழங்குபவருமான டிராகோன்டியஸைச் சந்திக்க தியூபாட்டஸ் கோட்டையை அடைந்தார். அத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க நபரின் வருகையால் ஆயர் பெரிதும் ஊக்கமடைந்தார். மேலும் மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் பாபிலோனுக்குப் புறப்பட்டு, ஒரு சவாலான பயணத்திற்குப் பிறகு அதை அடைந்தார். அங்கே, ஆரியன் மதக்கொள்கையின் ஆதரவாளரான பேரரசர் கொன்ஸ்டான்டியஸால் நாடுகடத்தப்பட்டிருந்த, ஆயரும் பாவமன்னிப்பு வழங்குபவருமான ஃபிலோவை அவர் சந்தித்தார். பாபிலோனை விட்டுப் புறப்பட்ட பிறகு அவர் மூன்று நாட்கள் பயணம் செய்து அஃப்ரோடிட்டான் நகரை அடைந்தார். அஃப்ரோடிட்டனில் அவர் பைசானஸ் என்ற ஒரு திருத்தொண்டரைச் சந்தித்தார். பாலைவனத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவியதால் அந்தோனியாரைக் காண விரும்பும் பயணிகளுக்கு உதவுவதற்காக ஒட்டகங்களை வாடகைக்கு விடும் உரிமையை அவர் கொண்டிருந்தார். பின்னர் புனித அந்தோனியாரின் நினைவு நாள் நெருங்கி வருவதாகவும், அந்தப் புனிதர் இறந்த அதே இடத்தில் ஒரு இரவு முழுவதும் விழித்திருந்து பிரார்த்தனை செய்ய வேண்டியிருப்பதாகவும் சகோதரர்களிடம் தெரிவித்தார். மூன்று நாட்கள் வறண்ட மற்றும் அச்சுறுத்தல்கள் நிறைந்த பாலைவனத்தைக் கடந்த பிறகு, அவர்கள் இறுதியாக ஒரு உயர்ந்த மலையை அடைந்தனர். அங்கே ஐசக் மற்றும் பெலூசியானஸ் என்ற இரண்டு துறவிகளைக் கண்டனர்; அவர்களில் பெலூசியானஸ் அந்தோனியாரின் உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர்.

31. நாம் அந்த இடத்திலேயே இருப்பதால், இந்த குறிப்பிடத்தக்க மனிதரின் இல்லத்தைப் பற்றிப் பேசுவதற்கு இதுவே சரியான தருணம் என்று தோன்றுகிறது. சுமார் ஒரு மைல் நீளத்திற்குப் பரந்து விரிந்த ஒரு உயரமான பாறைகள் நிறைந்த மலை உள்ளது; அதன் சரிவுகளுக்கு இடையில் குமிழும் நீரூற்றுகள் அமைந்துள்ளன. அந்த நீரின் ஒரு பகுதி மணலால் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள நீர் சமவெளிக்குள் பாய்ந்து எண்ணற்ற பனை மரங்களால் சூழப்பட்ட ஒரு ஓடையை உருவாக்குகிறது, இது அந்த இயற்கைக் காட்சிக்கு ஒரு அழகான மெருகூட்டலாக அமைந்திருக்கிறது. இங்குதான் அந்த முதியவர் புனித அந்தோனியாரின் சீடர்களுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்வதைக் காண முடியும். அந்தோனியாரே இங்குதான் கீர்த்தனைகளை இசைப்பார், பிரார்த்தனை செய்வார், ஏதேனும் பணிகளைச் செய்துகொண்டிருப்பார். அதேநேரம், சோர்வாக இருக்கும்போது ஓய்வெடுப்பார் என்று சொல்கிறார்கள். அந்தக் கொடிகள் செடிகள் மற்றும் புதர்கள் அவரது சொந்தக் கைகளால் நடப்பட்டன. அந்தத் தோட்டத்தின் பாத்தியும் அவரது சொந்தப் படைப்பே. மிகுந்த கடின உழைப்புக்குப் பிறகு தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக அந்தக் குளத்தைக்கூட அவரே நிர்மாணித்தார். அவர் அந்தக் மண்வெட்டியைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தினார். ஹிலரியன் அந்தப் புனிதரின் படுக்கையில் படுத்து அது இன்னும் சூடாக இருப்பது போல எண்ணி, அதை அன்புடன் ஸ்பரிசிப்பார். அந்த அறை, உறங்கும் ஒரு மனிதனுக்கு அளவாக சதுரவடிவில் இருந்தது. மேலும், வளைந்து நெளிந்து செல்லும் ஒரு சூட்சுமம் மிக்க பாதையின் வழியாக மட்டுமே சென்றடையக்கூடிய அந்த உயரமான மலை உச்சியில், அதே அளவிலான இரண்டு அறைகள் இருந்தன; அங்கு தான் அவர் பார்வையாளர்கள் அல்லது அவரது சீடர்களின் கூட்டத்திலிருந்து சற்று விலகி இருக்கும் நோக்கில் ஒதுங்கி இளைப்பாறுவார். இவை கடினமான பாறையிலிருந்து செதுக்கப்பட்டும், கதவுகளை மட்டுமே கொண்டதாகவும் அமைந்திருந்தன. அவர்கள் தோட்டத்தை அடைந்தபோது, ​​ஐசக் என்பவன், “புதர்களும் பசுமையான செடிகளும் நிறைந்த இந்தத் தோட்டத்தை, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு காட்டுக் கழுதைக் கூட்டம் அழித்துவிட்டது. அந்த விலங்குகளின் உடலில் ஒரு தடியைக் கொண்டு அடித்து, அவை நடாததை ஏன் உண்டன என்று கேட்டபோது, ​​அவற்றின் தலைமை விலங்குகளில் ஒன்றை எங்கும் போகவிடாதபடி அந்தோனியார் மறைத்து வைத்திருந்தார். அன்றிலிருந்து, அவை குடிக்க வந்த தண்ணீரைத் தவிர, எந்தப் புதரையோ செடியையோ அவை உண்ணவில்லை” என்று விளக்கினான். அந்த முதியவர் அந்தோணியாரது அடக்கஸ்தலத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டதும் அவர்களும் அவரை அங்கு அழைத்துச் சென்றனர்; ஆனால் அவர்கள் அவருக்குக் கல்லறையைக் காட்டினார்களா இல்லையா என்பது குறித்துத் தெரியவில்லை. அந்தோனியாரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான பெர்காமியஸ் அந்தப் புனிதரின் உடலைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று அவரது நினைவாக சந்நிதி ஒன்று எழுப்பப்படுவதைத் தடுப்பது தான் இந்த இரகசியத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

32. அப்ரோடிட்டனுக்குத் திரும்பியதும், தனது சகோதரர்களில் இருவரை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்து, அவர் அருகிலுள்ள பாலைவனத்தில் குடியேறினார். அங்கே அவர் கடுமையான புலனடக்கத்தையும் மௌனத்தையும் கடைப்பிடித்ததால் முதன்முறையாக, தான் உண்மையிலேயே கிறிஸ்துவுக்கு சேவை செய்வதாக உணர்ந்தார். வானம் மேகமூட்டத்தை மறந்து, நிலம் வறண்டு போய் மூன்று ஆண்டுகள் கடந்திருந்தன; அந்தோனியாரின் மரணம் குறித்து இயற்கைகூட கவலையுடன் இருப்பதாக மக்கள் கூறிக்கொண்டிருந்தனர். ஹிலரியன் மற்ற இடங்களில் அறியப்பட்டதைப் போலவே, உள்ளூர் மக்கள் மத்தியிலும் அந்நியராக இருக்கவில்லை. பசியால் வெளிறிப்போன, மெலிந்த தோற்றமுடைய, வாடிய முகங்களைக் கொண்ட ஆண்களும் பெண்களும் ஹிலரியனை ஆசீர்வதிக்கப்பட்ட அந்தோனியாரின் வாரிசு என்று நம்பி, கிறிஸ்துவின் ஊழியரிடம் தங்களுக்கு மழையைக் கொண்டுவருமாறு மிகுந்த தாழ்மையுடன் மன்றாடினர். ஹிலரியன் அவர்களின் அவல நிலையைக் கண்டு ​​மிகுந்த இரக்கத்தால் மனம் உருகினார். அவர் வானத்தை அண்ணாந்து பார்த்து தன் இரு கைகளையும் உயர்த்தினார். உடனடியாக அவர்களின் கோரிக்கை நிறைவேறியது. இருப்பினும், விசித்திரமான மழை பெய்து ஓய்ந்தவுடன், அந்த வறண்ட மற்றும் மணல் நிறைந்த பகுதி, திடீரென்று எண்ணற்ற பாம்புகள் மற்றும் விஷ உயிரினங்களால் நிரம்பியது. அவற்றால் கடிபட்ட பலர் ஹிலரியனிடம் விரைந்து வராமல் இருந்திருந்தால் இறந்திருப்பார்கள். பின்னர் அவர் ஒரு எண்ணெயை ஆசீர்வதித்து அதை அனைத்து விவசாயிகளும் இடையர்களும் தங்கள் காயங்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தினர். அது ஒரு அற்புத மருந்தாக நிரூபிக்கப்பட்டது.

33. அங்கேயும் தனக்கு எதிர்பாராத மரியாதை அளிக்கப்பட்டதைக் கவனித்த அவர், அங்கிருந்து பாலைவனத்தில் உள்ள தொலைதூரத்து சோலைக்கு பயணிக்கத் திட்டமிட்டு, அலெக்சாண்டிரியாவுக்குச் சென்றார். துறவியான பிறகு அவர் நகரங்களில் அதிக நேரம் செலவழிக்காததால் அலெக்சாண்டிரியாவுக்கு அருகிலுள்ள புரூச்சியம் என்ற ஊரில் இருந்த சில சக துறவிகளைச் சந்திக்க முடிவு செய்தார். அவர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். ஆயினும் இரவு நேரத்தில் திடீரென்று அவருடைய சீடர்கள் பயணத்திற்காகக் கழுதையைத் தயார் செய்வதை அறிந்து அவர்கள், உடனடியாக அவர் காலடியில் விழுந்து அவரை அங்கிருந்து போக வேண்டாம் என்று கெஞ்சினார்கள்; அவரை விட்டுப் பிரிவதை விட இறப்பதே மேல் என்று வலியுறுத்தி அவர்கள் வாசலுக்கு முன்னால் படுத்துக்கொண்டார்கள். அதற்கு அவர், “நான் உடனே புறப்பட வேண்டியதற்குக் காரணம் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் இருப்பதற்காகத்தான். அதேநேரம், நான் புறப்படுவதற்கு ஒரு முறையான காரணம் இருக்கிறது என்பதை நீங்கள் காலப்போக்கில் புரிந்துகொள்வீர்கள்,” என்று பதிலளித்தார். அடுத்த நாள் காசாவின் அதிகாரிகளும் ஆளுநரின் உதவியாளர்களும் முந்தைய நாள் அவர் அங்கு வந்திருப்பதை அறிந்து மடாலயத்திற்குள் நுழைந்தனர். அங்கே அவரைக் காணாதபோது ​​அவர்கள் தங்களுக்குள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். “அப்படியென்றால் நாம் கேள்விப்பட்டது உண்மைதான். அவர் ஒரு மந்திரவாதி என்றும் அவரால் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் அவர்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.” இதிலே உண்மை என்னவென்றால், ஜூலியனின் அரியணை ஏற்றத்திற்குப் பிறகு, ஹிலரியன் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறி அவரது மடாலயம் அழிக்கப்பட்ட பின்னர், காசா நகரம் ஹிலரியன் மற்றும் ஹெசிசியஸ் இருவருக்கும் மரணதண்டனை விதிக்கக் கோரி பேரரசரிடம் ஒரு மனுவை அளித்திருந்தது. மேலும், அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென எல்லா இடங்களிலும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டிருந்தது.

34. புரூச்சியத்தை விட்டு வெளியேறிய பிறகு, அவர் பரந்த பாலைவனத்தின் வழியாகப் பயணித்து சோலைவனத்திற்குள் துணிந்து பிரவேசித்தார். அங்கு அவர் சுமார் ஒரு வருடம் தங்கியிருந்தார். இருப்பினும், அவரது புகழ் அந்த இடத்தையும் எட்டியிருந்ததால், கிழக்கில் தன்னால் மறைந்திருக்க முடியாது என்பதை அவர் உணர்ந்தார்; அங்கு பலர் அவரைப் பார்த்தும் சொல்லியும் அடையாளம் கண்டுகொண்டனர். ஒரு தொலைதூரத் தீவுக்குக் கப்பலில் செல்வதைப் பற்றி அவர் சிந்திக்கத் தொடங்கினார். நிலத்தில் தன்னை வெளிப்படுத்திய பிறகு குறைந்தபட்சம் கடலிலாவது தனக்குச் சிறிது தனிமை கிடைக்குமா என்று ஏங்கினார். ஏறக்குறைய இதே நேரத்தில் அவருடைய சீடரான ஹேட்ரியன், ஜூலியன் கொல்லப்பட்டு விட்டதாகவும் ஒரு கிறிஸ்தவப் பேரரசர் அரியணை ஏறிவிட்டதாகவும் பாலஸ்தீனத்திலிருந்து ஒரு ஆறுதலான செய்தியுடன் வந்தார்; இடிபாடுகளுக்கு உள்ளான மடாலயத்துக்கு திரும்ப வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் அவர் திரும்பிச் செல்ல உறுதியாக மறுத்துவிட்டார். அவர் ஒரு ஒட்டகத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு, வறண்ட பாலைவனத்தைக் கடந்து, லிபியாவின் கடலோர நகரமான பரேட்டோனியத்தை அடைந்தார். அங்கே, பாலஸ்தீனத்திற்குத் திரும்ப விரும்பியும், தன் குருவுடன் தொடர்புடைய புகழை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் இருந்த அந்த துரதிர்ஷ்டவசமான ஹேட்ரியன், அவரை விமர்சிக்கத் தொடங்கினார். இறுதியில், அவர் சகோதரர்களிடமிருந்து கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்கள் யாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு, ஹிலரியனுக்குத் தெரியாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார். இந்த மனிதரைப் பற்றி இதற்கு மேலும் குறிப்பிட எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதால், தங்கள் வழிகாட்டிய மேன்மக்களைப் புறக்கணிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இது இருக்கவேண்டுமென்று இதைக் கூறவேண்டியுள்ளது. சிறிது காலத்திற்குப் பிறகு ஹேட்ரியன் மன்னனின் தீய குணத்தால் ஈர்க்கப்பட்டு, ஊழலின் மொத்த உருவமாய் மாறிப்போனான் என்பதை மட்டும் பதிவு செய்கிறேன்.

35. அந்த முதியவர் கசானஸுடன் சேர்ந்து சிசிலிக்குச் செல்லும் ஒரு கப்பலில் ஏறினார். ஏட்ரியாட்டிக் கடலின் நடுப்பகுதியில் அவர் தனது இளமைக்காலத்தில் எழுதிய நற்செய்திகளின் கையெழுத்துப் பிரதியை விற்று பயணக் கட்டணத்தைச் செலுத்தத் தயாராகிக் கொண்டிருந்த போது, ​​ஒரு பிசாசு பிடித்த கப்பல் தலைமை மாலுமியின் மகன் கத்தத் தொடங்கினான்: “ஹிலரியன் அவர்களே, கடவுளின் ஊழியரே, உங்களால் கடலிலேகூட எங்களுக்கு ஏன் பாதுகாப்பு கிடைக்கவில்லை? நாங்கள் கரை சேரும் வரை தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். என்னை இங்கே ஆழத்தில் தள்ளிவிடாதீர்கள்” என்று கூச்சலிட்டான். அதற்கு அந்தப் புனிதர், “என் கடவுள் உங்களை இங்கே தங்க அனுமதித்தால், அப்படியே ஆகட்டும்; அவர் உங்களை வெளியேற்றினால், பரிதாபத்தோற்றத்துடனும் யாசகக் கோலத்திலும்  இருப்பவனுமான நான் ஏன் பழிக்கப்பட வேண்டும்?” என்றார். மாலுமிகளும் வணிகர்களும் கப்பல் கரை சேர்ந்தவுடன் தன்னைக் காட்டிக்கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தச் சிறுவன் குணமடைந்தான். அவனது தந்தையும் அங்கிருந்த மற்றவர்களும் அந்தப் புனிதரின் பெயரை யாரிடமும் வெளியிட மாட்டோம் என்று உறுதியளித்தனர்.

36. சிசிலியின் ஒரு முனையான பக்னீஸை நெருங்கியபோது, ​​அவரும் கசானஸும் பயணம் செய்ததற்காக அவர் அந்தத் தலைமை மாலுமிக்கு நற்செய்தி நூலைக் கொடுத்தார். அந்த மனிதன் அதை வாங்க மறுத்துவிட்டான்; அதிலும் குறிப்பாக, அந்த நூலையும் அவர்களின் ஆடைகளையும் தவிர அவர்களிடம் வேறு உடைமைகள் எதுவும் இல்லை என்பதை அவன் கண்டதால் அவன் இவர்களாக கொடுத்த எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தோடு அதை வாங்க மாட்டேன் என்று சபதமும் செய்தான். ஆனால் தனது வறுமை நிலையைப் பற்றி ஆர்வமும் உறுதியும் கொண்ட அந்த வயதான புனிதர், தன்னிடம் உலகியல் உடைமைகள் எதுவும் இல்லை என்பதாலும் உள்ளூர் மக்களால் ஒரு ஏழையாகக் கருதப்படுவதாலும் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

37. மீண்டும், அந்த விஷயத்தைப் பற்றி யோசித்து, கிழக்கத்திய வணிகர்கள் தன்னை அடையாளம் கண்டு காட்டிக்கொடுத்து விடுவார்களோ என்று கவலைப்பட்ட அவர், கடற்கரையிலிருந்து சுமார் இருபது மைல் தொலைவில் இருக்கக்கூடிய நாட்டின் உள்நோக்கிப் பின்வாங்க முடிவு செய்தார். அங்கே ஒரு பாழடைந்த நிலத்தில் அவர் ஒவ்வொரு நாளும் விறகுக் கட்டுகளை சேகரித்துக் கட்டி அருகிலுள்ள ஒரு பண்ணையில் விற்பதற்காகத் தன் சீடர்களின் முதுகில் ஏற்றி வைப்பார். இப்படித்தான் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி, எதிர்பாராத விருந்தினர்களுக்குச் சிறிதளவு அப்பத்தைக் கூட வாங்க முடிந்தது. ஆனால் மத்தேயு 5:14-ல் சொல்லப்பட்டிருப்பது போல, “உங்கள் வெளிச்சம் உலகம் காணப் பிரகாசிக்கிறது. மலையின் மீது கட்டப்பட்ட ஒரு நகரைப் போல உங்களது வாழ்க்கை மறைக்கப்பட முடியாததாய் இருக்கிறது” என்பது அப்படியே நிறைவேறியது. ஒருமுறை பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த கேடய வீரர்களில் ஒருவன், ரோமில் உள்ள புனித பேதுருவின் பேராலயத்தில் இருந்தபோது, ​​அவனுக்குள் இருந்த அசுத்த ஆவி, “சமீபத்தில், கிறிஸ்துவின் ஊழியரான ஹிலரியன் சிசிலிக்கு வந்திருக்கிறார்; அவர் மறைந்திருப்பதாக நினைத்து யாரும் அவரை அடையாளம் காணவில்லை. நான் போய் அவரை வெளிப்படுத்துவேன்” என்று உரக்கக் கூச்சலிட்டான். தாமதிக்காமல், அவன் துறைமுகத்தில் இருந்த ஒரு கப்பலில் ஏறி பக்னீஸுக்குப் பயணித்தான். பிசாசின் வழிகாட்டுதலுடன் அந்த முதியவரின் குடிசைக்குச் சென்றதும், அவன் தரையில் விழுந்து உடனடியாகக் குணமடைந்தான். இது தான் சிசிலியில் நிகழ்த்திய ஹிலரியனின் முதல் அற்புதமாகும். இது எண்ணற்ற நோயாளிகளை (பல மதத்தினருடன் சேர்த்து) அவரிடம் ஈர்த்தது; உண்மையில், நீர்க்கோவை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு முக்கியஸ்தர், அவர் வந்த அன்றே குணமடைந்தார். பின்னர் அவர் அந்தப் புனிதருக்கு முடிவில்லாத வெகுமதிகளை வழங்க முன்வந்தார், ஆனால் அந்தப் புனிதர், மத்தேயு 10:8-ல் கூறப்பட்டுள்ளபடி, “நோயுற்றவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள். தொழு நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். பிசாசு பிடித்தவர்களிடமிருந்து பிசாசுகளை விரட்டுங்கள். இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று இரட்சகர் தம் சீடர்களிடம் கூறிய வார்த்தைகளைக் கொண்டு பதிலளித்தார்.

38. சிசிலியில் இவையெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது ​​அவருடைய சீடரான ஹெசிசியஸ், அந்த முதியவரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் முயற்சியில் இறங்கி இருந்தார். அந்த முதியவர் நீண்ட காலம் மறைந்திருக்க முடியாது என்ற நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டு அவர் எல்லா இடங்களிலும் தேடினார். கடற்கரையை ஆராய்ந்தார், பாலைவனங்களுக்குள்ளும் துணிந்து சென்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மெத்தோனாவில் இருந்த ஒரு யூதப் பழைய துணிகள் விற்கும் வியாபாரியிடமிருந்து சிசிலிக்கு ஒரு கிறிஸ்தவத் தீர்க்கதரிசி வந்திருப்பதாகவும், அவர் பண்டைய புனிதர்களில் ஒருவரைப் போலத் தோற்றமளிக்கும் அதேவேளை அற்புதங்களையும் அடையாளங்களையும் நிகழ்த்தி வருவதாகவும் அவர் அறிந்து கொண்டார். ஹெசிசியஸ் அந்தத் தீர்க்கதரிசியின் தோற்றம், பழக்கவழக்கங்கள், குறிப்பாக அவரது வயது ஆகியவற்றைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் விசாரித்தார். ஆனால் அந்த வியாபாரியிடம் உறுதியான தகவல் எதுவும் இருக்கவில்லை; வாய்வழிச் செய்தியாகக் கேள்விப்பட்டதாக மட்டுமே கூறினார். எனவே, அவர் ஏட்ரியாட்டிக் கடலைக் கடந்து ஒரு சுமுகமான பயணத்திற்குப் பிறகு பாக்கினஸை வந்தடைந்தார். அங்கே அவர் விரிகுடாவின் அருகே ஒரு சிறிய குடிசையில் குடியேறி, அந்த முதியவரைப் பற்றி உள்ளூர் மக்களிடம் விசாரிக்கத் தொடங்கினார். அவர்களிடமிருந்து கேட்ட கதைகள் மூலம் அந்த முதியவர் எங்கே இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்துகொண்டார். அவர் நிகழ்த்திய அத்தனை அற்புதங்கள் இருந்தபோதிலும், அப்பகுதியில் உள்ள எவரிடமிருந்தும் ஒரு சிறு துண்டு அப்பத்தைத் கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தக் கதையைச் சுருக்கமாகச் சொல்வதென்றால், புனித மனிதரான ஹெசிசியஸ் அழுதுகொண்டே தன் குருவின் காலில் விழுந்தார். சில நாட்கள் அவருடன் பேசிப் பழகிய பிறகு, ஹிலரியன் இனி அந்தப் பகுதிகளில் தங்க விரும்பவில்லை என்றும் தனக்கு அறிமுகமில்லாத சில ஆதிவாசிப் பழங்குடியினரிடம் செல்லும் நோக்கில் பயணம் செய்யத் தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் கசானஸ் மூலம் அவர் அறிந்துகொண்டார்.

39. எனவே, ஹெஸியஸ் அவரை டால்மேஷியாவில் உள்ள எபிடாரஸ் என்ற ஊருக்கு அழைத்துச் சென்று அங்கு அவர் அருகிலுள்ள கிராமப்புறங்களில் சில நாட்கள் தங்கியிருந்த போதிலும், அவரால் தொடர்ச்சியாக மறைந்திருக்க முடியவில்லை. அவ்வூரில் காளை மாடுகளையே விழுங்கும் அளவுக்கு இராட்சத உருவ அமைப்பைக் கொண்டதும், உள்ளூரில் ‘போவாஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான பாம்பு, அந்தப் பகுதி முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அது கால்நடைகளை மட்டுமல்லாமல், அதற்கு அருகில் சென்ற விவசாயிகளையும் மேய்ப்பர்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவர் அதற்காக ஒரு சிதையை உருவாக்கி வைத்துக்கொண்டு, கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்து அந்த இராட்சத உயிரினத்தை வரவழைத்தார். விறகுக் குவியலின் மீது ஏறுமாறு அதற்குக் கட்டளையிட்டு, பின்னர் அதற்குத் தீ வைத்தார். அனைவர் முன்னிலையிலும், அவர் அந்தக் கொடூரமான சர்ப்பத்தைச் சாம்பலாக்கினார். இது நடந்த பின்னர் அடுத்து என்ன செய்வது, எங்கு செல்வது என்று அவர் கவலைப்படத் தொடங்கினார். மீண்டும் ஒருமுறை, அவர் தப்பி ஓடத் தயாரானார்; தன் குரலால் தன் கதையைச் சொல்ல முடியாதபோதும், தன் அற்புதங்களால் அதைச் சொல்ல முடிகிறதே என்று வருந்தியபடி, தனிமையான இடங்களில் மனதளவில் அலைந்து திரிந்தார்.

40. அந்த நேரத்தில், ஜூலியனின் மரணத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. அப்பூமியதிர்ச்சியானது கடல் அதன் கரைகளைத் தாண்டிப் பெருக்கெடுத்து ஓடச் செய்தது, கப்பல்கள் செங்குத்தான மலைச்சரிவுகளில் தூக்கியெறியப்பட்டு அபாயகரமாகத் தேங்கிக்கிடந்தன. கடவுள் மற்றொரு பெருவெள்ளத்தைப் பற்றி எச்சரிப்பது போலவோ அல்லது எல்லாம் அதன் அசல் குழப்பமான நிலைக்குத் திரும்புவது போலவோ அது உணர்த்தியது. எபிடாரஸ் மக்கள் இதைக் கண்டபோது; குறிப்பாக, பொங்கியெழும் அலைகளையும், கொந்தளிக்கும் கடல் நீரையும், கரையில் மோதும் பிரம்மாண்டமான பேரலைகளையும் கண்டபோது, தாங்கள் பிற இடங்களில் கண்ட பேரழிவு தங்கள் நகரத்தையும் தாக்கி அதன் முழுமையான அழிவுக்கு வழிவகுத்துவிடுமோ என்று அஞ்சினர். பீதியடைந்த நிலையில் அவர்கள் அந்த முதியவரை அணுகி ஒரு போருக்குத் தயாராவது போல, அவரைக் கரையில் நிறுத்தினார்கள். அவர் மணலில் மூன்று முறை சிலுவை அடையாளம் வரைந்த பிறகு, கடலை நோக்கித் திரும்பி, தன் கைகளை உயர்த்தினார். அப்போது ​​கொந்தளிக்கும் கடல் அவருக்கு முன்னால் ஒரு சுவர் போல எவ்வளவு உயரமாக எழுந்தது என்பது நம்ப முடியாததாக இருந்தது. அந்தத் தடை காரணமாகச் சீற்றமடைந்தது போல அது நீண்ட நேரம் கர்ஜித்தது. ஆனால் படிப்படியாக அது தனது இயல்பான நிலைக்குப் பின்வாங்கியது. இன்றுவரை எபிடாரஸ் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் இந்தக் கதையைச் சொல்லி வருகின்றனர். மேலும் தாய்மார்கள் அதன் நினைவை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ள வேண்டுமென்று தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். உண்மையிலேயே, அப்போஸ்தலர்களிடம் சொல்லப்பட்ட விடயம்; அதாவது, அவர்களுக்கு விசுவாசம் இருந்தால், ஒரு மலையைக் கூடத் தானாகவே கடலில் விழும்படி கட்டளையிட முடியும். விசுவாசத்துடன் கட்டளையிட்டால் அப்படியே நடக்கும் என்பது கர்த்தர் அப்போஸ்தலர்களுக்குக் கற்பித்த விசுவாசத்தை ஒருவர் தன்னிடம் கொண்டிருக்கும் வரை, அட்சரார்த்தமாக இதை நிறைவேற்றமுடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மலை கடலில் விழுந்தாலும் அல்லது பொதுவாக திரவ நிலையில் இருக்கும் மாபெரும் சமுத்திரங்கள் திடீரென்று அந்த முதியவரின் காலடியில் விழுந்ததும் பாறை போல இறுகிப் போனாலும் அங்கே ஆச்சரியப்படுவதற்கில்லை.

41. தேசம் முழுவதும் பிரமிப்பில் ஆழ்ந்தது. சலோனேவில் கூட அனைவரும் அந்த நம்பமுடியாத அற்புதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். இதை உணர்ந்ததும் அந்த முதியவர் இரவில் ஒரு சிறிய படகில் ஏறி யாருக்கும் தெரியாமல் நழுவிச் சென்றார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரை சைப்ரஸுக்கு அழைத்துச் செல்ல ஒரு வணிகக் கப்பலைக் கண்டார். மலாயாவுக்கும் சைத்தீராவுக்கும் இடையில் பாய்மரங்களுக்குப் பதிலாகத் தடிகளைப் பயன்படுத்தி உருவாக்கிய தங்கள் கப்பல்களின் ஒரு பகுதியைக் கரையில் விட்டுச் சென்றிருந்த கடற்கொள்ளையர்கள், இரண்டு பெரிய இலகுரகப் படகுகளுடன் அவர்களை நோக்கிப் பாய்ந்தனர்; அதற்கும் மேலாக, எல்லா திசைகளிலிருந்தும் வந்த அலைகளால் அவர்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டனர். படகோட்டிகள் பீதியடையந்து அலறிக்கொண்டே தங்கள் இடங்களைக் கைவிட்டு, மரச்சட்டங்களை வெளியே இழுத்து, கடற்கொள்ளையர்கள் நெருங்கி வருவதாக அந்த முதியவரை மீண்டும் மீண்டும் எச்சரித்தனர். தூரத்தில் வந்துகொண்டிருந்த கடற்கொள்ளையர்களைப் பார்த்ததும் அவர் தான் பயணம் செய்த கப்பலின் மாலுமிகளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்துவிட்டு, அவர்களை நோக்கித் திரும்பி, மத்தேயு 14:32-ல் கூறப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டியவராய், “அற்ப விசுவாசிகளே, ஏன் சந்தேகப்படுகிறீர்கள்? அவர்கள் பார்வோனின் படையைவிடப் பெரியவர்களா? ஆனாலும், அவர்கள் அனைவரும் தேவனுடைய சித்தத்தினாலே மூழ்கடிக்கப்பட்டார்கள் அல்லவா?” என்றார். அவர் இந்த வார்த்தைகளைப் பேசியபோதும் கூட, நுரை பொங்கும் தங்கள் படகுகளின் முன்பகுதிகளுடன் எதிரிகள் தொடர்ந்து நெருங்கி வந்தவண்ணமே இருந்தனர்; இப்போது அவர்கள் ஒரு கல் எறியும் தூரத்தில் தான் இருந்தனர். படகின் முன்புறத்தில் நின்று கொண்டு, தன் கையை நீட்டியபடி, அவர், “இவ்வளவுதான், இதற்கு மேல் இல்லை” என்று கூறினார். ஆச்சரியப்படும் விதமாக, கடற்கொள்ளையரின் படகுகள் உடனடியாகப் பின்வாங்கத் தொடங்கின; படகோட்டிகள் முன்னோக்கிச் செலுத்த முயன்றபோதிலும் அவர்கள் மேலும் விலகிச் செல்வதைக் கண்டனர். தாங்கள் பின்னோக்கிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடற்கொள்ளையர்கள், கப்பலை அடையத் தங்கள் முழு பலத்துடன் போராடினர், ஆனால் அவர்கள் வந்ததை விட மிக வேகமாக கரைக்கு அடித்துச் செல்லப்பட்டனர்.

42. மீதமுள்ளவற்றைத் தவிர்த்து முன்னோக்கிச் செய்வது சிறந்தது என்றெண்ணுகிறேன், ஏனென்றால் என் கதை வெறும் அற்புதங்களின் தொகுப்பைப் பகிர்வது போல் இருப்பதை நான் விரும்பவில்லை. இதை மட்டும் குறிப்பிடுகிறேன்: அவர்களது கப்பல் சைக்லேட்ஸ் தீவுகள் வழியாகச் சீராகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து அசுத்த ஆவிகளின் கூக்குரல்கள் எதிரொலிப்பதையும், அவை கூட்டமாகக் கரையை நோக்கி விரைந்து வருவதையும் அவர் காதுகளுக்கு கேட்டது. சைப்ரஸின் புகழ்பெற்ற நகரமான பாஃபோஸை வந்தடைந்த பிறகு, தொடர்ச்சியான பூகம்பங்களுக்குப் பிறகு அதன் கடந்தகாலப் பெருமையை நினைவூட்டும் ஆலயங்களின் இடிபாடுகள் மட்டுமே கண்களுக்குத் தெரிந்த அந்த நகரத்திலிருந்து, சுமார் இரண்டு மைல் தொலைவில் ஒரு அமைதியான இடத்தில் அவர் குடியேறினார். சில நாட்கள் அமைதியை அனுபவிப்பதில் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் இருபது நாட்களுக்குள் தீவு முழுவதிலும் உள்ள அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்ட மக்கள் கிறிஸ்துவின் ஊழியரான ஹிலரியன் வந்துவிட்டார் என்றும், அவரை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்றும் கூச்சலிடத் தொடங்கினர். சலாமிஸ், குரியம் மற்றும் லபேத்தா போன்ற நகரங்களும் இந்த ஆரவாரங்களில் இணைந்தன; அவர்களில் பலர் தங்களுக்கு ஹிலரியனைத் தெரியும் என்றும் அவர் கிறிஸ்துவின் ஊழியர் என்பதை அடையாளம் கண்டுகொண்டதாகவும் கூறினர். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே, முப்பது நாட்களுக்குள் ஆண்களும் பெண்களும் என சுமார் இருநூறு பேர் அவரைச் சுற்றிக் கூடினர். அவர்களைக் கண்டபோது ​​அவர்கள் தன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறது என்று அவர் வருந்தினார். ஒரு விதத்தில் தன்னையே வருத்திக்கொள்ளும் நோக்கில் அவர் மிகவும் உருக்கமாக ஜெபித்ததால், சிலர் உடனடியாகவும் மற்றவர்கள் ஓரிரு நாட்களுக்குப் பிறகும் குணமடைந்தனர். ஓரிரு வாரங்களுக்குள் அனைவரும் குணமடைந்தனர்.

43. அவர் இங்கு இரண்டு ஆண்டுகள் கழித்தார். தொடர்ந்து தப்பிச் செல்வதைப் பற்றியே கனவு கண்டார். அந்த நேரத்தில் சகோதரர்களைச் சந்திப்பதற்காகவும், தனது மடாலயத்தின் இடிபாடுகளைப் பார்வையிடுவதற்காகவும் வசந்த காலத்தில் திரும்பிச் செல்வதற்கான திட்டங்களுடன் ஹெசிசியஸை பாலஸ்தீனத்திற்கு அனுப்பினார். ஹெசிசியஸ் திரும்பி வந்தபோது, ​​ஹிலரியன் எகிப்திற்கு; குறிப்பாக புகோலியா என்ற இடத்திற்குப் பயணம் செய்ய ஆர்வமாக இருப்பதைக் கண்டார். இருப்பினும், அங்கே கிறிஸ்தவர்கள் யாரும் இல்லாததாலும் அங்கே காட்டுமிராண்டித்தனமான மற்றும் கொடூரமான மக்கள் மட்டுமே இருப்பதாலும், சைப்ரஸில் உள்ள மிகவும் ஒதுக்குப்புறமான இடத்திற்குச் செல்வது நல்லது என்று ஹெசிசியஸ் அவரைச் சம்மதிக்க வைத்தார். முழுமையாகத் தேடிய பிறகு, கடலிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில், கரடுமுரடான மலைகளுக்குள் ஆழமாக மறைந்திருக்க ஓர் இடத்தை அவர் கண்டுபிடித்தார். அங்கு ஏறுவதற்கு மிகவும் செங்குத்தாக இருந்ததால், கைகளையும் முழங்கால்களையும் மட்டுமே பயன்படுத்தி ஊர்ந்து செல்லத்தான் முடிந்தது. அவர் ஹிலரியனை அங்கு அழைத்துச் சென்றார். அந்த முதியவர் உள்ளே நுழைந்து சுற்றிலும் பார்த்தார். அது உண்மையிலேயே ஒரு பாழடைந்த மற்றும் பயங்கரமான ஒரு இடமாக இருந்தது; அதைச் சுற்றி மரங்கள், மலை உச்சியிலிருந்து நீர் வழிந்தோடும் வசதி, ஒரு அழகான சிறிய தோட்டம் மற்றும் ஏராளமான பழ மரங்கள் (அவற்றை அவர் ஒருபோதும் தொடவில்லை) இருந்த போதிலும், அது ஒரு பழங்காலக் கோவிலின் இடிபாடுகளுக்கு அருகில் அமைந்திருந்தது. அவர் அடிக்கடி சொன்னபடியும் அவருடைய சீடர்கள் உறுதிப்படுத்தியபடியும் இந்தக் கோவிலிலிருந்து எண்ணற்ற அசுரர்களின் ஓசைகள் இரவும் பகலும் எதிரொலித்தபடியே இருந்தது. இது அங்கே ஒரு பெரும் அசுரர் படையே இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தது. தன் விரோதிகள் அருகிலேயே இருப்பது மேல் என்ற எண்ணத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனால், அவர் அங்கே ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்தார்; தன் இறுதி நாட்களில் ஹெசிசியஸின் தொடர் வருகைகளால் அவர் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கடத்தினார். செங்குத்தான மற்றும் கரடுமுரடான பாதையும் பல பிசாசுகளும் (அப்படித்தான் கதை பரவியது) அவரைச் சுற்றி இருந்ததால், அவரைச் சந்திக்க யாரும் துணியவில்லை. ஒரு நாள், அவர் தன் தோட்டத்தை விட்டு வெளியேறும்போது ​​வாயிலில் முற்றிலும் முடங்கிப் போன ஒரு மனிதன் கிடப்பதைக் கண்டார். ஆர்வத்துடன், அவர் ஹெசிசியஸிடம் அந்த மனிதன் யார் என்றும், அவன் எப்படி அங்கு வந்தான் என்றும் கேட்டார். அந்தத் தோட்டம் அமைந்திருந்த நாட்டுப்புற வீட்டின் பொறுப்பாளர் தான் அம்மனிதர் என்று ஹெசிசியஸ் விளக்கினார். கண்ணீருடன் அவர் அந்த மனிதனை நோக்கி கையை நீட்டி, ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, எழுந்து நடப்பாயாக’ என்றார். அவர் பேசி முடித்தவுடனே அந்த மனிதனின் அவயவங்கள் அற்புதமாகப் பலம் பெற்று அவன் எழுந்து நின்றான். இந்த அற்புதத்தைப் பற்றிய செய்தி பரவியதும், உதவிக்கான தேவை பலரையும் அந்த அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு அவரைக் காணத் தூண்டியது. அவரால் ஓரிடத்தில் நீண்ட காலம் தங்க முடியாது என்ற வதந்திகள் பரவியதால், அருகிலிருந்த மக்கள் பெரும்பாலும் அவர் தப்பிச் செல்வதைத் தடுப்பதிலேயே அக்கறை கொண்டிருந்தனர். அவருடைய இந்த குணம் அவர் பொறுப்பற்றவர் அல்லது முதிர்ச்சியற்றவர் என்பதல்ல; மாறாக, அவர் புகழ் மற்றும் பாராட்டுகளின் தொல்லைகளைத் தவிர்க்க விரும்பியதாலும் எப்போதும் அமைதியையும் நிம்மதியான வாழ்க்கையையும் விரும்பியதாலும்தான் என்பதே உண்மை.

44. அவருக்கு எண்பதாவது வயது நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒருசமயம் ஹெசிசியஸ் வெளியூர் சென்றிருந்தார். ​​சில நாட்களுக்கு முன்புதான் தனது சேவகன் ஒருவர் இறந்து போயிருந்தபடியால் தனது உடைமைகள் அனைத்தையும் (அவற்றில் நற்செய்திகளின் ஒரு பிரதியும், அவரது சாக்குத்துணியாலான அங்கி, தலைக்கவசம் மற்றும் மேலங்கியும் அடங்கும்) ஒரு உயிலாக எழுதி வைத்தார். தான் விரைவில் ஆண்டவரிடம் செல்லவிருப்பதாகவும், தனது சரீர உடலிலிருந்து தன்னுயிர் விடைபெறவிருப்பதாகவும் அவர் கூறியதைக் கேட்ட பிறகு, பாஃபோஸிலிருந்து பல பக்தியுள்ளவர்கள் அந்த நோயுற்ற மனிதனைக் காண வந்தனர். அவர்களில் புனிதப் பெண்மணி கொன்ஸ்டன்ஷியாவும் ஒருவர்; அவருடைய மகளையும் மருமகனையும் அவர் எண்ணெயால் அபிஷேகம் செய்து மரணத்திலிருந்து காப்பாற்றியிருந்தார். தான் இறந்த பிறகு, தனது நல்லடக்கத்தை ஒரு கணம் கூடத் தாமதிக்க வேண்டாம் என்று அவர் அனைவரையும் உணர்ச்சிப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டார்; மேலும், தான் இருந்த அதே தோட்டத்தில் தனது ஆட்டு உரோமத்தாலான அங்கி, தலைக்கவசம் மற்றும் விவசாயியின் மேலங்கியுடன் சேர்த்தே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் வேண்டினார்.

45. அவருடைய உடல் ஏறக்குறைய சூட்டை இழந்துவிட்டிருந்த போதிலும், அவருடைய மனம் மட்டும் இன்னும் சுறுசுறுப்பாக இருந்தது. கண்களை அகலத் திறந்து, அவர் தொடர்ந்து, “முன்னேறிச் செல், எதற்கு அஞ்சுகிறாய்? முன்னேறிச் செல், என் ஆன்மாவே, ஏன் தயங்குகிறாய்? நீ கிறிஸ்துவுக்கு ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் ஊழியம் செய்திருக்கிறாய், ஆகவே மரணத்திற்கு ஏன் அஞ்சுகிறாய்?” என்று அரற்றிக்கொண்டிருந்தார். இவ்வாறு கூறிய பிறகு அவர் தன் கடைசி மூச்சை விட்டார். நகரம் அவருடைய மரணத்தைப் பற்றி அறிவதற்கு முன்பே அவர் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டார்.

46. புனிதர் ஹெசிசியஸ் அவரது மறைவைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, ​​அவர் சைப்ரஸுக்குச் சென்று, மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்த உள்ளூர் மக்களின் கவலைகளைத் தணிப்பதற்காக, அவர் அதே தோட்டத்தில் வாழ விரும்புவதாகப் பாசாங்கு செய்தார். சுமார் பத்து மாதங்களுக்குப் பிறகு தன் உயிருக்கு ஏற்படக்கூடிய எந்த ஒரு ஆபத்தையும் பொருட்படுத்தாமல் ஹெசிசியஸ் அந்தப் புனிதரின் உடலைக் கல்லறையில் இருந்து திருடி, அதை மஜூமாவுக்கு எடுத்துச் சென்றார். அங்கு அனைத்துத் துறவிகளும் நகர மக்களும் ஊர்வலமாகக் கூடி, பழைய மடாலயத்தில் அவரது புனிதவுடலை நல்லடக்கம் செய்தனர். அவருடைய அங்கவஸ்திரம், தலைக்கவசம் மற்றும் மேலங்கி ஆகியவை மாசுபடாமல் இருந்தன; அந்த உடல் உயிருடன் இருப்பது போலவே பழுதின்றி காட்சியளித்தது. மேலும் அது பதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணும் அளவுக்கு நறுமணம் வீசியது.

47. என் நூலை நிறைவு செய்யும் இவ்வேளையில், புனிதப் பெண்மணியான கொன்ஸ்டன்ஷியாவின் பக்தியைப்பற்றி எடுத்துரைப்பது முக்கியம் என உணர்கிறேன். பாலஸ்தீனத்தில் ஹிலரியனின் உடல் கண்டெடுக்கப்பட்டதைக் கேள்விப்பட்டதும் அவளும் உயிர் நீத்தாள். இது மரணத்திலும்கூட இறைவனின் ஊழியர் மீது அவள் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்தியது. அவள் அடிக்கடி முழு இரவுகளையும் அவரது கல்லறையில் விழித்திருந்து, அவர் அங்கேயே இருப்பது போல அவரிடம் பேசுவாள்; இது அவளது ஜெபங்களுக்கு உதவியது. இன்றும்கூட, பாலஸ்தீன மக்களுக்கும் சைப்ரஸ் மக்களுக்கும் இடையே ஒரு விசித்திரமான விவாதம் நிலவுகிறது; இரு தரப்பினரும் ஹிலரியனின் உடல் அல்லது ஆன்மா தங்களிடம் இருப்பதாக உரிமை கோருகின்றனர். இருப்பினும், இந்த இரு இடங்களிலும் ஒவ்வொரு நாளும் நம்பமுடியாத அற்புதங்கள் நிகழ்கின்றன. சைப்ரஸின் தோட்டத்தில் அவை அடிக்கடி நிகழ்வதாகத் தெரிகிறது, ஏனெனில் அந்த இடம் அவரது இதயத்தில் ஒரு சிறப்பான மாறாத இடத்தைப் பெற்றிருந்தது.