Jerome, On Illustrious Men, in Tamil.
அன்பின் டெக்ஸ்டர், திருச்சபை எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு முறையான விவரத்தை அளிப்பதில் டிரான்குல்லஸின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறும், புறஜாதியாரிடையே இருந்த புகழ்பெற்ற இலக்கியவாதிகளுக்காக அவர் செய்ததை நமது எழுத்தாளர்களுக்காகவும் செய்யுமாறும் நீங்கள் என்னை ஊக்குவித்துள்ளீர்கள். அதாவது, நமது ஆண்டவரின் பாடுகளின் காலம் முதல் பேரரசர் தியோடோசியஸின் பதினான்காம் ஆண்டு வரை, திருமறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த அனைவரையும் பற்றிய ஒரு சுருக்கமான தொகுப்பை வழங்குவதே அந்த நோக்கமாக இருந்தது. இதே போன்ற ஒரு பணியை, கிரேக்கர்களிடையே பெரிபாட்டிக் ஹெர்மிப்பஸ், ஆன்டிகோனஸ் கரிஸ்டியஸ், அறிஞரான சத்யரஸ் மற்றும் அனைவரிலும் பார்க்க மிகவும் கற்றறிந்தவரான இசைக்கலைஞர் அரிஸ்டோக்ஸெனஸ் ஆகியோரும், இலத்தீனியர்களிடையே வரோ, சாந்த்ரா, நெபோஸ், ஹைஜினஸ் ஆகியோரும், மேலும் எவருடைய முன்மாதிரியின் மூலம் நீங்கள் எங்களைத் தூண்ட விரும்புகிறீர்களோ அந்த டிரான்குல்லஸும் செய்துள்ளனர்.
இருப்பினும், என் நிலைமை அவர்களுடையதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர்களைப் பொறுத்தவரை, பழைய வரலாறுகளையும் வரலாற்றுப் பதிவுகளையும் ஆராய்வது என்பது, தங்கள் முயற்சிக்குக் குறைந்தபட்சம் ஒரு சிறிய கிரீடத்தையாவது உருவாக்கிக் கொள்வதற்காக ஒரு பரந்த புல்வெளியிலிருந்து பூக்களைப் பறிப்பதைப் போன்றது. ஆனால் என் நிலை என்ன? எனக்கு முன்னோடியாக எவரும் இருந்ததில்லை. மேலும், ஒரு முதுமொழியில் சொல்லப்பட்டது போல, எனக்கு இருக்கக்கூடியதிலேயே மிக மோசமான எஜமானன் நானேதான். ஆனாலும், யூசிபியஸ் பாம்ஃபிலஸ் போன்றோர் தனது பத்து திருச்சபை வரலாற்றுப் புத்தகங்களுடன் நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருந்திருக்கிறார் என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும், நாங்கள் எழுதத் திட்டமிட்டுள்ள பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள், அவற்றின் காலங்கள் குறித்த பல நுண்ணறிவுகளைக் கிரமமாக வழங்குகின்றன. எனவே, ரோமானியப் பேச்சாற்றலின் உச்சத்தில் இருந்த உங்கள் நம்பிக்கைக்குரிய சிசரோ தயங்காமல் செய்ததைப்போல, அதாவது உங்கள் ஊக்கத்திற்கு ஏற்ப திருச்சபை எழுத்தாளர்களின் பட்டியலைத் தொகுத்ததைப்போல் என்னாலும் செய்வதற்கு அருள் புரியவேண்டும் என்று ஆண்டவராகிய இயேசுவிடம் நான் வேண்டுகிறேன். ஆயினும், இந்தத் தொகுப்பில் தற்போதைய எழுத்தாளர்கள் யாரையாவது நான் தவறவிட்டிருந்தால், அவர்கள் என்னை அல்ல, தங்களையே குறை சொல்லிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் சொந்தப் படைப்புகளை மறைத்தவர்களைப் பற்றி என்னால் அறிய முடியாது. மேலும், மற்றவர்களுக்குப் பொதுவான அறிவாக இருக்கக்கூடியது, உலகின் இந்தத் தொலைதூரப் பகுதியில் உள்ள எனக்கு முற்றிலும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக, தங்கள் எழுத்துக்களுக்காக அங்கீகரிக்கப்பட்டவர்கள், என்னால் குறிப்பிட முடியாமல் போனதையிட்டு பெரிதாக வருத்தப்பட மாட்டார்கள் என நம்புகிறேன். கிறிஸ்துவுக்கு எப்போதும் விரோதமாக இருக்கும் செல்சஸ், போர்பிரி, மற்றும் ஜூலியன் ஆகியோரும், திருச்சபையில் தத்துவஞானிகள், பேச்சாளர்கள் அல்லது கற்றறிந்த தனிநபர்கள் இல்லை என்று நம்பும் அவர்களின் ஆதரவாளர்களும், எத்தனை பேர் மற்றும் எத்தகைய மக்கள் அதை ஸ்தாபித்து, கட்டி எழுப்பி, வளப்படுத்தியுள்ளனர் என்பதை உணர வேண்டும். அவர்கள் நாம் கொண்டிருக்கும் விசுவாசம் மிகவும் எளிமையானது என்று குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாகத் தங்கள் சொந்த அறியாமையை ஒப்புக்கொள்ள வேண்டும்.
1. சீமோன் பேதுரு
யோவானின் மகனான சீமோன் பேதுரு, கலிலேயாவிலுள்ள பெத்சாயிதாவைச் சேர்ந்தவர். அவர் அப்போஸ்தலரான அந்திரேயாவின் சகோதரர் ஆவார். இவர் அப்போஸ்தலர்களில் முதன்மையானவராகப் பணியாற்றினார். அந்தியோகியா திருச்சபையின் ஆயராகப் பணியாற்றிய பிறகு, பொன்டுஸ், கலாத்தியா, கப்பதோக்கியா, ஆசியா மற்றும் பித்தினியா போன்ற பகுதிகளில் உள்ள விசவாசிகளுக்கு விருத்தசேதனம் குறித்துப் பிரசங்கித்த அவர், கிளாடியுவின் இரண்டாம் ஆண்டில் சீமோன் மாகஸை எதிர்கொள்வதற்காக ரோமுக்குச் சென்றார். அவர் அங்கு இருபத்தைந்து ஆண்டுகள் – அதாவது நீரோவின் ஆட்சியின் பதினான்காம் ஆண்டு வரை – ஆயர் பதவியை வகித்தார். இறுதியில், தன் ஆண்டவரைப் போல மரணிக்க தான் தகுதியற்றவன் என்று கூறி, தலைகீழாகவும் கால்கள் மேலாகவும் இருக்கும்படி சிலுவையில் அறையப்பட்டு அவர் நீரோவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வேதசாட்சியாக மரித்தார். அவர் கத்தோலிக்கம் என்று அழைக்கப்படும் இரண்டு நிருபங்களை எழுதினார். இருப்பினும், இரண்டாவது கடிதத்தின் நடை அவருடையது அல்ல என்று பலரும் நம்புகின்றனர். மேலும், அவருடைய சீடராலும் மொழிபெயர்ப்பாளராலும் எழுதப்பட்ட மாற்கு நற்செய்தியும் அவருக்கே உரியதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அவருடைய அப்போஸ்தலர் பணிகள், நற்செய்தி, பிரசங்கம், வெளிப்படுத்தல் மற்றும் தீர்ப்பு போன்ற பிற எழுத்துக்கள் உண்மையானவை அல்ல என்று கருதப்படுகின்றன. அவர் ரோமில் உள்ள வத்திக்கான் நகரில் ‘வெற்றிப் பாதை’ (Triumphal way) என்ற இடத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் உலகம் முழுவதிலுமுள்ள மக்களால் போற்றப்படுகிறார்.
2. நீதிமானான யாக்கோபு
கர்த்தருடைய சகோதரர் என்று அழைக்கப்படும் யாக்கோபு, நீதிமான் என்ற பட்டப்பெயரையும் பெற்றவர்; சிலர் கருதுவது போல, யோசேப்புக்கு வேறொரு மனைவியின் மூலம் பிறந்த மகன் என்று சொல்லப்பட்ட போதிலும், எனக்குத் தோன்றுவது என்னவென்றால், இவர் நம் கர்த்தரின் தாயின் சகோதரியான மரியாவின் மகன் ஆவார். இவரைப் பற்றி யோவான் தனது நூலில் கூறியுள்ளார். நம் கர்த்தரின் பாடுகளுக்குப் பிறகு, எருசலேமின் ஆயரான அப்போஸ்தலர்களால் ஏககாலத்தில் நியமிக்கப்பட்ட இவர், ஒரே ஒரு நிருபத்தை எழுதினார். அது ஏழு கத்தோலிக்க நிருபங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருந்தபோதிலும், இது வேறொருவரால் அவரது பெயரில் வெளியிடப்பட்டு, காலப்போக்கில் படிப்படியாக அதிகாரத்தைப் பெற்றதாகவும் சிலர் கூறுகின்றனர். அப்போஸ்தலர் காலத்திற்கு சமாந்திரமாக வாழ்ந்த ஹெகேசிப்பஸ், தனது விளக்கவுரைகளின் ஐந்தாம் புத்தகத்தில், யாக்கோபைப் பற்றி எழுதும்போது, பின்வருமாறு கூறுகிறார்:
அப்போஸ்தலர்களுக்குப் பிறகு, கர்த்தருடைய சகோதரரும் நீதிமான் என்று அழைக்கப்பட்டவருமான யாக்கோபு எருசலேமில் உள்ள திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். உண்மையில், மேலும் பலர் யாக்கோபு என்று அழைக்கப்படுகிறார்கள். இவர் தன் தாயின் கருவிலிருந்தே பரிசுத்தராக இருந்தார். அவர் திராட்சைரசத்தையோ அல்லது போதை தரக்கூடிய பானங்களையோ அருந்தவில்லை, மாமிசம் உண்ணவில்லை, ஒருபோதும் முகச்சவரம் செய்யவில்லை, தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொள்ளவில்லை, குளிக்கவும் இல்லை. அவரால் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடிந்தது, ஏனென்றால் அவர் கம்பளி அணியாமல் மெல்லிய பருத்தியினால் ஆன ஆடையை அணிந்திருந்தார்; மேலும், மக்களுக்காகப் பிரார்த்தனை செய்ய அவர் தனியாகவே ஆலயத்துக்குள் சென்றார். அந்த அளவிற்கு அவருடைய முழங்கால்கள் ஒட்டகத்தின் முழங்கால்களைப் போலக் கடினமாகி இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பட்டியலிட முடியாத அளவுக்கு எண்ணற்ற பிற விஷயங்களையும் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். யோசேபஸ் என்பவர் தனது ‘பண்டைய வரலாறுகள்’ என்ற நூலின் 20-வது புத்தகத்திலும், கிளமென்ட் என்பவர் தனது ‘சுருக்கங்கள்’ என்ற நூலின் 7-வது புத்தகத்திலும், யூதேயாவை ஆண்டு கொண்டிருந்த பெஸ்து இறந்த பிறகு, அவருக்குப் பதிலாக அல்பினஸ் என்பவரை நீரோ ஆட்சியாளராக அனுப்பினார் என்று குறிப்பிடுகின்றனர். அல்பினஸ் தனது மாகாணத்திற்கு வருவதற்கு முன்பு, பிரதான ஆசாரியனும் அனானஸின் இளைய மகனுமான அனானியாஸ் இந்தக் குழப்பம் நிறைந்த சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். அவர் ஒரு ஆலோசனைக் குழுவைக் கூட்டி, கர்த்தரான கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதை மறுக்கும்படி யாக்கோபைக் கட்டாயப்படுத்த முயன்றார். அதற்கு யாக்கோபு மறுத்தபோது அவரைக் கல்லெறிந்து கொல்லும்படி அனானியாஸ் கட்டளையிட்டார். தேவாலயத்தின் உச்சியில் இருந்து கீழே தள்ளப்பட்டு, கால்கள் முறிந்து, குற்றுயிராய்க் கிடந்த யாக்கோபு, வானத்தை நோக்கித் தன் கைகளை உயர்த்தி, “ஆண்டவரே, இவர்களை மன்னியும், ஏனெனில் இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்று ஓலமிட்டார். பின்னர், துணிகளைப் பிழிவதற்காக சலவையாளர்கள் பயன்படுத்தும் தடியால் தலையில் தாக்கப்பட்டு அவர் இறந்தார். யாக்கோபு மக்களிடையே மிகவும் மதிக்கப்பட்டவராகவும் பரிசுத்தமானவராகவும் இருந்ததால், அவருடைய மரணத்தின் காரணமாகவே எருசலேம் வீழ்ந்தது என்று அவர்கள் நம்பினர் என்ற பாரம்பரியத் தோற்றப்பாட்டையும் யோசேபஸ் பதிவு செய்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில், “கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபுவைத் தவிர, அப்போஸ்தலர்களில் வேறு யாரையும் நான் காணவில்லை” என்று குறிப்பிடுவது இவரைப் பற்றியே ஆகும். இந்த நிகழ்வுக்குப் பிறகு, அப்போஸ்தலர் பணிகள் இந்த விஷயத்திற்குச் சாட்சி பகர்கின்றன. நான் சமீபத்தில் கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளில் மொழிபெயர்த்ததும், ஓரிஜென் அடிக்கடி குறிப்பிடுவதுமான எபிரேயர்களின் நற்செய்தி என்றும் அழைக்கப்படும் அந்த நற்செய்தி தான் இரட்சகரின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கர்த்தர் தனது கல்லறை ஆடைகளை ஆசாரியனின் ஊழியனிடம் கொடுத்த பின்னர், யாக்கோபுக்குத் தோன்றினார் என்று குறிப்பிடுகிறது. யாக்கோபு, கர்த்தரின் பாத்திரத்தை அருந்திய அந்தத் தருணத்திலிருந்து அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவதைக் காணும் வரை அப்பத்தைப் புசிக்க மாட்டேன் என்று உறுதிபூண்டிருந்தார். பின்னர், ‘ஒரு மேசையையும் அப்பத்தையும் கொண்டு வாருங்கள்,’ என்று கர்த்தர் கூறினார் என அது கூறுகிறது. பிறகு அவர் அப்பத்தைக் கொண்டுவந்து, அதை ஆசீர்வதித்து, பிட்டு, நீதிமானாகிய யாக்கோபுவிடம் கொடுத்து, ‘என் சகோதரனே, உன் அப்பத்தைப் புசிப்பாயாக, ஏனெனில் மானிட குமாரன் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார்’ என்று சொன்னதாக அது மேலும் சான்று பகர்கிறது. இவ்வாறு, அவர் நீரோவின் ஏழாம் ஆண்டு வரை அதாவது முப்பது ஆண்டுகள் எருசலேமின் திருச்சபையை வழிநடத்தினார். மேலும் அவர் கீழே தள்ளப்பட்டு மரணித்த ஆலயத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். டைட்டஸின் முற்றுகை மற்றும் ஹாட்ரியனின் ஆட்சியின் முடிவு வரை அவரது கல்லறைக்கல்லும் அதன் கல்வெட்டும் நன்கு அறியப்பட்டிருந்தன. எங்கள் எழுத்தாளர்களில் சிலர் அவர் ஒலிவ மலையில் அடக்கம் செய்யப்பட்டதாக நம்புகிறார்கள். இது அவர்களுடைய தவறான புரிதலாகும்.
3. மத்தேயு
லேவி என்றும் அறியப்பட்ட மத்தேயு, ஒரு காலத்தில் வரி வசூலிப்பவராக இருந்த அப்போஸ்தலர் ஆவார். அவர் கிறிஸ்துவைப் பற்றிய ஒரு நற்செய்தியை எழுதினார். இது முதலில் யூதேயாவில், விருத்தசேதனம் பெற்ற விசுவாசிகளுக்காக எபிரேய மொழியில் வெளியிடப்பட்டது. பின்னர் இந்த நற்செய்தி கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இருப்பினும் அந்த மொழிபெயர்ப்பைச் செய்தவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பம்பிலஸ் என்பவரால் கவனமாகச் சேகரிக்கப்பட்ட அசல் எபிரேயப் பதிப்பு செசரியாவில் உள்ள நூலகத்தில் இன்றும் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. சிரியாவில் உள்ள பெரேயா நகரில் வசிக்கும் நசரேயர்களிடமும் நான் பேசியுள்ளேன்; அவர்கள் இந்தப் பிரதியைத்தான் பயன்படுத்துகிறார்கள். மத்தேயு தானாகவோ அல்லது இயேசுவை மேற்கோள் காட்டியோ பழைய ஏற்பாட்டைக் குறிப்பிடும்போதெல்லாம், Septuagint எனப்படும் கிரேக்க மொழி பெயர்ப்பைச் சார்ந்திருக்காமல், எபிரேய மூல உரைகளையே பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்தேன்” மற்றும் “ஏனெனில் அவர் நசரேயன் என்று அழைக்கப்படுவார்” என இரண்டு வெவ்வேறு சொற்றொடர்கள் காணப்படுகின்றன.
4. யூதா
யாக்கோபின் சகோதரரான யூதா, ஏழு உலகளாவிய நிருபங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு சிறிய நிருபத்தை எழுதினார். அதில் அவர் மறைநூல் ஈனோக் என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டியதால், அநேகமானோர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், காலப்போக்கில் மற்றும் தொடர்ச்சியான பயன்பாட்டினால், இந்தக் கடிதம் புகழைப் பெற்று பரிசுத்த வேதாகமங்களின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
5. பவுல்
பவுல், முன்பு சவுல் என்று அழைக்கப்பட்ட இவர், பன்னிரு அப்போஸ்தலர்கள் அல்லாத ஒரு அப்போஸ்தலர். அவர் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவரும் யூதேயாவில் உள்ள கிஸ்காலிஸ் என்ற ஊரைச் சேர்ந்தவரும் ஆவார். அந்த ஊர் ரோமானியர்களால் கைப்பற்றப்பட்டபோது, அவர் தன் பெற்றோருடன் சிலிசியாவில் உள்ள தர்சுவுக்குக் குடிபெயர்ந்தார். சட்டம் பயில்வதற்காக அவர்களால் எருசலேமுக்கு அனுப்பப்பட்ட அவர், லூக்கா குறிப்பிடும் மிகவும் கற்றறிந்த அறிஞரான கமாலியேலிடம் கல்வி பயின்றார். ஆனால், இவர் வேதசாட்சியான ஸ்டீவனின் மரணத்தின்போது உடனிருந்ததாலும், கிறிஸ்துவை விசுவாசித்தவர்களைத் துன்புறுத்துவதற்காக ஆலயத்தின் பிரதான ஆசாரியரிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றதாலும், அவர் தமஸ்கசுக்குச் சென்றார். அங்கே, அப்போஸ்தலர்களின் நடபடிகளில் எழுதப்பட்டிருக்கிறபடி, ஒரு தரிசனத்தின் மூலம் விசுவாசத்திற்குக் கட்டுப்படுத்தப்பட்டு, அவர் துன்புறுத்தும் ஓருவராக இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாத்திரமாக மாற்றப்பட்டார். சைப்ரஸின் ஆளுநரான செர்ஜியஸ் பவுலஸ் அவருடைய பிரசங்கத்தை முதலில் நம்பியதால் கிறிஸ்து மீதான விசுவாசத்திற்கு அவரைக் கொண்டுவந்த காரணத்தால் பவுலிடமிருந்து அவருடைய பெயரைப் பெற்றார். பர்னபா அவருடன் சேர்ந்துகொண்ட பிறகு, அவர் பல நகரங்களைக் கடந்து எருசலேமுக்குத் திரும்பிவந்து பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரால் புறஜாதியாருக்கு அப்போஸ்தலராக நியமிக்கப்பட்டார். அவருடைய வாழ்க்கையைப் பற்றிய முழுமையான விவரம் அப்போஸ்தலர் நடபடிகளில் கொடுக்கப்பட்டுள்ள போதிலும், நான் இதை மட்டும் கூறுகிறேன்: நம் ஆண்டவரின் பாடுகளுக்குப் பிறகு இருபத்தைந்தாம் ஆண்டில், அதாவது நீரோவின் இரண்டாம் ஆண்டில், யூதேயாவின் ஆளுநரான பெஸ்ட்ஸ், பீலிக்ஸுக்குப் பிறகு பதவியேற்றபோது, அவர் கைதுக்கு உட்பட்டு ரோமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு இரண்டு ஆண்டுகள் சுதந்திரக் காவலில் இருந்தபோது கிறிஸ்துவின் வருகையைக் குறித்து யூதர்களுடன் தினமும் விவாதித்தார். முதல் விசாரணையின்போது, நீரோவின் அதிகாரம் இன்னும் உறுதிப்படுத்தப்படாததாலும், அவரைப் பற்றிய வரலாறுகள் கூறுவது போல் அவருடைய தீய குணம் வெளிப்படாததாலும், கிறிஸ்துவின் நற்செய்தி மேற்கிலும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதற்காக பவுல் நீரோவால் விடுவிக்கப்பட்டார் என்று கூறலாம். திமோத்தேயுவுக்கு எழுதிய தனது இரண்டாவது கடிதத்தில், அவர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில்தான் மரணதண்டனையை எதிர்கொண்டிருந்தபோது, அந்தக் கடிதத்தைச் சொல்லிக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அவர் நினைவு இவ்வாறு கூர்கிறார், “எனது முதல் விசாரணையின்போது யாரும் எனக்குத் துணையாக நிற்கவில்லை; அனைவரும் என்னைக் கைவிட்டனர். அது அவர்கள் கணக்கில் சுமத்தப்படாமல் இருக்கட்டும். ஆனால் கர்த்தர் எனக்குத் துணையாக நின்று என்னைப் பலப்படுத்தினார்; என் மூலமாக அந்தச் செய்தி முழுமையாகப் பிரகடனப்படுத்தப்படவும், புறஜாதியார் அனைவரும் அதைக் கேட்கவும், நான் சிங்கத்தின் வாயிலிருந்து விடுவிக்கப்பட்டேன்” — இது நீரோவின் கொடுமையின் காரணமாக அவனைச் சிங்கம் என்று கூறியதாகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அவர் தொடர்ந்து சொல்கையில், “ஆண்டவர் என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்தும் ஒவ்வொரு தீய செயலிலிருந்தும் மீட்டு, தமது பரலோக இராச்சியத்திற்காக என்னைக் காப்பாற்றினார்” என்று கூறினார். தனது வேதசாட்சிய மரணம் தன்னை நெருங்கிவிட்டது என்பதை அவர் உள்ளுக்குள் உணர்ந்தவாராய், அதே நிருபத்தில், “நான் ஏற்கனவே பலியிடப்படுகிறேன், என் மரண நேரம் நெருங்கிவிட்டது” என்று அவர் அறிவித்தார். நீரோவின் ஆட்சியின் பதினான்காம் ஆண்டில், பேதுருவுடன் அதே நாளில், கிறிஸ்துவின் நிமித்தம் அவர் ரோமில் தலை துண்டிக்கப்பட்டு மரணத்தை எதிர்கொண்டார். மேலும் நமது ஆண்டவரின் பாடுகளுக்குப் பிறகு – இருபத்தேழு ஆண்டுகள் கழித்து – ஓஸ்திய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார். அவர் ஏழு சபைகளுக்கு ஒன்பது நிருபங்களை எழுதினார்: ரோமர்களுக்கு ஒன்று, கொரிந்தியர்களுக்கு இரண்டு, கலாத்தியர்களுக்கு ஒன்று, எபேசியர்களுக்கு ஒன்று, பிலிப்பியர்களுக்கு ஒன்று, கொலோசியர்களுக்கு ஒன்று, மற்றும் தெசலோனிக்கர்களுக்கு இரண்டு என்பவையே அந்த ஒன்பது நிருபங்கள். அத்தோடு, அவர் தீமோத்தேயுவுக்கு இரண்டு கடிதங்களையும், தீத்துவுக்கு ஒன்றையும், பிலேமோனுக்கு ஒன்றையும் எழுதியுள்ளார். எபிரேயர்களுக்கு எழுதிய நிருபம் என்று அறியப்படும் நிருபம் அதன் தனித்துவமான நடை மற்றும் மொழி காரணமாக அவரால் எழுதப்பட்டது என்பது குறித்து சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. டெர்டுல்லியன் போன்ற சிலர் அது பார்னபாவால் எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள், மற்றவர்களோ அது நற்செய்தியாளரான லூக்கா அல்லது பிற்காலத்தில் ரோமின் ஆயரான கிளமென்ட் என்பவரால் எழுதப்பட்டது என்று கருதுகின்றனர். அவர் பவுலின் கருத்துக்களைத் தன் சொந்த வார்த்தைகளில் மாற்றி எழுதியிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். பவுல் எபிரேயர்களுக்கு எழுதியதாலும், அவர்களிடையே அவருக்கு நல்ல மதிப்பு இல்லாததாலும், அவர் வாழ்த்துரையில் தன் பெயரைத் தவிர்த்திருக்கலாம். ஒரு எபிரேயராக, அவர் தனது தாய்மொழியான எபிரேய மொழியில் எழுதினார். அதேசமயம், எபிரேயத்தில் சிறப்பாக எழுதப்பட்ட விஷயங்கள் இன்னும் சிறப்பாக கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இதனால்தான் இது பவுலின் மற்ற நிருபங்களிலிருந்து வேறுபடுவதாகத் தெரிகிறது. அதேநேரம் சிலர் லவோதிக்கேயருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தையும் பின்பற்றுகிறார்கள், ஆனால் அது அனைவராலும் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
6. பர்னபா
சைப்ரஸைச் சேர்ந்த பர்னபா, லேவியரான யோசேப்பு என்றும் அழைக்கப்பட்டார். இவர் பவுலுடன் சேர்ந்து புறஜாதியாருக்கு அப்போஸ்தலராக நியமிக்கப்பட்டார். இவர் திருச்சபையின் ஆக்கத்திற்கு மதிப்புமிக்க ஒரு நிருபத்தை எழுதினார். அது மறைநூல் எழுத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பின்னர், மாற்கு என்றும் அழைக்கப்பட்ட யோவான் என்ற சீடரின் காரணமாக அவர் பவுலிடமிருந்து பிரிந்தார். இருப்பினும், அவருக்கு கையளிக்கப்பட்ட நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பணியைத் தொடர்ந்து செய்தார்.
7. லூக்கா
அந்தியோகியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவரான லூக்கா, கிரேக்க மொழியில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதைத் தனது எழுத்துக்கள் மூலம் காட்டியுள்ளார். அவர் அப்போஸ்தலனாகிய பவுலின் சீடராக இருந்து அவருடன் பயணங்களிலும் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு நற்செய்தி நூலை எழுதினார், அதை பவுல், ‘நற்செய்தியில் எல்லா சபைகளிலும் புகழப்பட்ட ஒரு சகோதரனை நாங்கள் அவருடன் அனுப்புகிறோம்’ என்று குறிப்பிட்டதன் மூலம் சுட்டிக்காட்டுகிறார். பவுல் அன்புக்குரிய மருத்துவரான லூக்காவின் வாழ்த்துக்களை கொலோசியருக்கு அனுப்புகிறார். மேலும் தீமோத்தேயுவிடம் ‘லூக்கா ஒருவன் மட்டுமே என்னுடன் இருக்கிறான்’ என்று குறிப்பிடுகிறார். கூடுதலாக, லூக்கா ‘அப்போஸ்தலர் பணிகள்’ என்ற தலைப்பில் மற்றொரு குறிப்பிடத்தக்க நூலை எழுதினார், இது நீரோவின் நான்காம் ஆண்டில், பவுல் ரோமில் தங்கியிருந்த இரண்டாம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளை விவரிப்பதன் மூலம் அந்த நூல் ரோமில் எழுதப்பட்டது என்பதற்கு சான்று பகர்கிறது. இதன் விளைவாக பவுல் மற்றும் தெக்லாவின் பணிகள் என்ற நூலையும், அவரால் ஞானஸ்நானம் செய்யப்பட்ட சிங்கத்தின் கதையையும் நாம் மறைநூல் சார்ந்ததாகக் கருதுகிறோம். ஏனெனில் எப்போதும் பவுலுடன் இருந்த லூக்கா, அத்தகைய கதைகளைப் பற்றி அறியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், அக்காலத்தில் வாழ்ந்த தெர்த்துல்லியன் என்பவர் ஆசியாவில் பவுலின் சீடரான ஒரு மூப்பரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த மூப்பர்தான் அந்தப் புத்தகத்தை எழுதியதாக யோவானால் குற்றம் சாட்டப்பட்டார். அந்த மூப்பர், பவுலின் மீதான அன்பின் காரணமாகவே அதைச் செய்ததாக ஒப்புக்கொண்டு, தனது பதவியிலிருந்து விலகினார். பவுல் தனது கடிதங்களில் ‘என் நற்செய்தி’ என்று குறிப்பிடும்போது, அவர் லூக்காவின் புத்தகத்தையே குறிப்பிடுகிறார் என்று சிலர் நம்புகிறார்கள். இயேசுவை நேரில் அறியாத பவுலிடமிருந்து மட்டுமல்லாமல், மற்ற அப்போஸ்தலர்களிடமிருந்தும் லூக்கா நற்செய்தியின் வரலாற்றைக் கற்றுக்கொண்டார் என்று கருதப்படுகிறது. தனது படைப்பின் தொடக்கத்தில், லூக்கா, ‘ஆதிமுதல் நேரில் கண்ட சாட்சிகளும், வார்த்தையின் ஊழியக்காரர்களுமான அவர்கள் நமக்கு ஒப்புவித்தது போலவே’ என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு, அவர் கேட்டவற்றின் அடிப்படையில் நற்செய்தியை எழுதினார். ஆனால் அவர் நேரில் கண்டவற்றின் அடிப்படையில் அப்போஸ்தலர்களின் நடபடிகளை இயற்றினார். இறுதியில் அவர் கான்ஸ்டான்டிநோபிளில் அடக்கம் செய்யப்பட்டார். அங்கு, கான்ஸ்டான்டியுவின் இருபதாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில், அவரது எச்சங்கள் அப்போஸ்தலரான அந்திரேயாவின் எச்சங்களுடன் சேர்த்து வைத்துப் பாதுகாக்கப்பட்டன.
8. மாற்கு
பேதுருவின் சீடரும் மொழிபெயர்ப்பாளருமான மாற்கு, ரோமிலுள்ள சகோதர மக்களின் வேண்டுகோளின்படி, பேதுரு சொன்னதைக் கேட்டு, அதைக் கிரகித்து, அதன் கருத்துக்களை உள்ளடக்கி ஒரு சிறிய நற்செய்தியை எழுதினார். பேதுரு இந்த நற்செய்தியைக் கேட்டு, அங்கீகரித்து, தனது ஆசீர்வாதத்துடன் அதை வாசிப்பதற்காகத் திருச்சபைகளுடன் அதைப் பகிர்ந்துகொண்டார். இதை தனது ‘உயிரோட்டமான காட்சிவடிவ விளக்க’ நூலின் (Hypotyposes) ஆறாம் புத்தகத்தில் க்ளெமென்ஸ் என்ற தனது அதிகாரத்தின் பேரிலும், ஹியராபோலிஸின் ஆயரான பாப்பியாஸின் பதிவின்படியும் சபைகளில் வாசிக்கப்படுவதற்காக அதை வெளியிட்டார். பேதுருவும் தனது முதல் கடிதத்தில் இந்த மாற்குவைப் பற்றிக் குறிப்பிடும் போது, ரோமை “பாபிலோன்” என்று அழைத்து, “பாபிலோனில் உங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவள் உங்களை வாழ்த்துகிறாள், என் மகன் மாற்கும் அவ்வாறே செய்கிறான்” என்று கூறியுள்ளார். ஆகவே, மாற்கு தான் எழுதிய நற்செய்தியை எடுத்துக்கொண்டு எகிப்துக்குச் சென்று, அலெக்சாண்டிரியா நகரில் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பகிரத் தொடங்கினார். அவர் தனது போதனைகளிலும் சுயக்கட்டுப்பாட்டிலும் மிகவும் சிறந்தவராகவும், திருச்சபைக்கு ஒரு வலுவான சக்தியாகவும் திகழ்ந்தார். அதனால் கிறிஸ்துவின் சீடர்கள் அனைவரும் அவருடைய முன்மாதிரியால் ஈர்க்கப்பட்டனர். மிகவும் ஞானமுள்ள யூத அறிஞரான ஃபிலோ, அலெக்சாண்டிரியாவின் முதல் திருச்சபை இன்னும் ஓரளவிற்கு யூதத் தன்மையுடன் இருப்பதைக் கண்டார். அவர் அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அது தன் மக்களுக்குப் பெருமை சேர்ப்பதாகக் கூறினார். எருசலேமில் விசுவாசிகள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டதாக லூக்கா குறிப்பிடுவதைப் போலவே, ஞானத்தின் வடிவமான மாற்குவின் கீழ் அலெக்சாண்டிரியாவிலும் அவ்வாறே விசுவாசிகள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வதைக் கண்டதாக அவர் கூறினார். மாற்கு நீரோவின் எட்டாவது ஆண்டு ஆட்சியின்போது இறந்து, அலெக்சாண்டிரியாவில் அடக்கம் செய்யப்பட்டார், அவருக்குப் பதிலாக அன்னியானஸ் அவருடைய திருப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தார்.
9. அப்போஸ்தலனாகிய யோவான்
இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான அப்போஸ்தலனாகிய யோவான், செபதேயுவின் மகனும், யாக்கோபின் சகோதரரும் ஆவார். நம் ஆண்டவரின் பாடுகளுக்குப் பிறகு ஏரோதுவால் தலை துண்டிக்கப்பட்டு மரணித்த இவர், நற்செய்தியை எழுதிய கடைசி நற்செய்தியாளர் ஆவார். ஆசியாவில் இருந்த ஆயர்களின் வேண்டுகோளின் பேரில், செரின்துஸ் மற்றும் பிற மதவெறியர்களை, குறிப்பாக மரியாளுக்கு முன்பு கிறிஸ்து இருக்கவில்லை என்று கூறிய எபியோனியர்களின் வளர்ந்து வரும் நம்பிக்கையை எதிர்கொள்வதற்காக அவர் இதைச் செய்தார். இதன் காரணமாக, கிறிஸ்துவின் தெய்வீகப் பிறப்பைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று அவர் உணர்ந்தார். மேலும், மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஆகியோரின் நற்செய்திகளைப் படித்த பிறகு, அவர்களுடைய பதிவுகள் உண்மையானவை என்று அவர் கண்டறிந்தாலும், அவை யோவானின் சிறைவாசம் மற்றும் அதைத் தொடர்ந்த அவரது மரணத்திற்குப் பிறகான ஓராண்டு காலத்தை மட்டுமே உள்ளடக்கியதாக அவர் உணர்ந்ததும், அவர் எழுதுவதற்கான மற்றொரு உந்துதலாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆண்டுகள் செல்லச் செல்ல, யோவான் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை அவர் பகிர்ந்துகொண்டார். இது நான்கு நற்செய்தி நூல்களையும் வாசிக்க நேரம் ஒதுக்குபவர்களுக்குத் தெளிவாக விளங்குகிறது. இது யோவானுக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் இடையிலான எந்தக் குழப்பத்தையும் நீக்க உதவுகிறது. மேலும் அவர், “ஆதியிலிருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களால் கண்டதும், எங்கள் கைகளால் தொட்டதுமான வாழ்வுதரும் வார்த்தையைக் குறித்து” என்று தொடங்கும் ஒரு நிருபத்தையும் எழுதினார். இது திருச்சபையிலும் அல்லது கல்வி கற்பதில் ஆர்வம் கொண்ட அனைவராலும் மதிக்கப்படுகிறது. மற்ற இரண்டு நிருபங்களான ” மறைமூப்பரால் தெரிந்துகொள்ளப்பட்ட அம்மையாருக்கும் அவர் பிள்ளைகளுக்கும்” என்றும், மற்றொன்று “மூப்பர் நான் மெய்யாகவே நேசிக்கிற பிரியமான காயுவுக்கு” என்றும் முகவரியிடப்பட்டவை மூப்பரான யோவான் எழுதியதாகக் கருதப்படுகின்றன. இன்றுவரை, எபேசுவில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு கல்லறை சாட்சியாக இருக்கிறது. இருப்பினும், இதே யோவான் என்ற நற்செய்தியாளருக்காக இரண்டு நினைவிடங்கள் இருப்பதாகச் சிலர் நம்புகிறார்கள். அவருடைய சீடரான பாப்பியாஸைப் பற்றி நாம் விவாதிக்கும்போது, இந்தத் தலைப்பைப் பற்றிப் பின்னர் ஆராய்ந்து பார்ப்போம். ஆக, நீரோவுக்குப் பிறகு பதினான்காம் ஆண்டில், டொமிஷியன் இரண்டாவது துன்புறுத்தல் அலையைத் தொடங்கினார். அது அவரைப் பத்மோஸ் தீவுக்கு நாடுகடத்த வழிவகுத்தது. அங்குதான் அவர் வெளிப்படுத்தல் நூலை எழுதினார். அதன் பின், வேதசாட்சியான ஜஸ்டின் மற்றும் ஐரேனியஸ் ஆகியோர் விளக்கவுரை அளித்தனர். டொமிஷியன் கொல்லப்பட்டு, அவரது கடுமையான நடவடிக்கைகள் சட்டசபையால் இரத்து செய்யப்பட்ட பிறகு, பெர்டினக்ஸின் ஆட்சியின் போது அவர் எபேசுவுக்குத் திரும்பினார். பேரரசர் ட்ரொஜனின் காலம் வரை அவர் அங்கேயே தங்கி, ஆசியா முழுவதும் தேவாலயங்களை நிர்மாணித்தார். இறுதியாக, நீண்ட ஆயுளுக்குப் பிறகு, நம் ஆண்டவரின் பாடுகளுக்குப் பின் அறுபத்தெட்டாவது ஆண்டில் அவர் காலமானார். மேலும் அதே நகரத்திற்கு அருகில் அவரது புனிதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.
10. ஹெர்மஸ்
“ஃபிளேகோன், ஹெர்மெஸ், பத்ரோபாஸ், ஹெர்மஸ் மற்றும் அவர்களுடன் இருக்கும் சகோதரர்களுக்கு வாழ்த்துகள்” என்று ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுலால் குறிப்பிடும் ஹெர்மஸ், ‘பாஸ்டர்’ எனப்படும் புத்தகத்தின் ஆசிரியர் என்று நம்பப்படுகிறது. இந்தப் புத்தகம் கிரேக்க தேசத்தில் உள்ள சில தேவாலயங்களில் உரக்க வாசிக்கப்படுகிறது. இந்தப் புத்தகம் உண்மையில் மிகவும் பயனுள்ளது என்பதோடு, பல பழைய எழுத்தாளர்கள் இதை ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இலத்தீன் மொழி பேசும் மக்களிடையே இது பெரிதாக பேசப்படுவதில்லை என்றே சொல்லப்படுகிறது.
11. யூதரான ஃபிலோ
குருத்துவப் பின்னணியைக் கொண்ட அலெக்சாண்டிரிய யூதரான ஃபிலோ, திருச்சபை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஏனெனில், அவர் அலெக்சாண்டிரியாவில் இருந்த நற்செய்தியாளரான மாற்குவின் முதல் திருச்சபையைப் பற்றி ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் அவர் அவர்களைப் புகழ்ந்துரைக்கிறார்; அவர்கள் அங்கு இருந்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு மாகாணங்களிலும் இருந்தனர் என்றும், அவர்களின் இருப்பிடங்களை மடாலயங்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். இது, கிறிஸ்துவை விசுவாசித்த ஆரம்பகாலத் திருச்சபையானது, தற்காலத்துத் துறவிகள் பின்பற்ற விரும்பும் விதத்தில் இருந்தது என்பதைக் காட்டுகிறது; அங்கு யாரும் தனிப்பட்ட உரிமையைக் கோருவதில்லை, எவரும் செல்வந்தர்களாகவோ ஏழைகளாகவோ கருதப்படுவதில்லை. மேலும் தேவையுள்ளவர்களிடையே வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தன. லூக்கா விவரித்த எருசலேமில் இருந்த விசுவாசிகளின் சமூகத்தைப் போலவே, அவர்களுக்கும் ஜெபம், கீர்த்தனைகள், போதனை மற்றும் துறவறப் பயிற்சிகளுக்கு நேரம் இருந்தது. கயஸ் கலிகுலாவின் ஆட்சிக்காலத்தில், அவர் தன் மக்களின் பிரதிநிதியாக ரோமுக்குப் பயணம் செய்ததாகவும், கிளோடியுவின் ஆட்சி நிலவிய காலத்தில் அவர் தனது இரண்டாவது பயணத்தின்போது, அதே நகரத்தில் அப்போஸ்தலனாகிய பேதுருவுடன் உரையாடி அவருடன் நட்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காரணத்திற்காகவே அலெக்சாண்டிரியாவில் இருந்த பேதுருவின் சீடரான மாற்குவின் ஆதரவாளர்களையும் தனது புகழால் அலங்கரித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த மனிதரால் எழுதப்பட்ட புகழ்பெற்ற மற்றும் எண்ணற்ற படைப்புகள் உள்ளன: அவர் மோயீசனின் ஐந்து புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளார்; அத்தோடு மொழிக் குழப்பத்தைப் பற்றிய ஒரு புத்தகம், இயற்கை மற்றும் கண்டுபிடிப்பு பற்றிய மற்றொரு புத்தகம், மற்றும் நமது புலன்கள் எதை விரும்புகின்றன, நாம் எதை நாம் வெறுக்கிறோம் என்பதைப் பற்றிய ஒரு புத்தகம், கற்றலைப் பற்றிய ஒரு புத்தகம், தெய்வீக விஷயங்களின் வாரிசு பற்றிய ஒரு புத்தகம், சமமானவற்றையும் எதிர்நிலைகளையும் பிரிப்பது பற்றிய மற்றொரு புத்தகம், மூன்று நற்பண்புகள் பற்றிய ஒரு புத்தகம், மற்றும் வேதாகமத்தில் பல பெயர்கள் ஏன் மாற்றப்பட்டுள்ளன என்பதை விளக்கும் ஒரு புத்தகம் போன்றவற்றையும், உடன்படிக்கைகள் பற்றி இரண்டு நூல்களையும், ஒரு ஞானியின் வாழ்க்கை பற்றி ஒரு நூலையும், இராட்சதர்களைப் பற்றிய ஒரு நூலையும், கனவுகள் கடவுளால் எவ்வாறு அனுப்பப்படுகின்றன என்பதைப் பற்றி விவாதிக்கும் ஐந்து நூல்களையும், யாத்திராகமம் பற்றிய கேள்வி-பதில் அடங்கிய ஐந்து நூல்களையும், ஆசரிப்புக் கூடாரம் மற்றும் பத்துக் கட்டளைகள் பற்றி நான்கு நூல்களையும், பலிகள் மற்றும் வாக்குறுதிகள் அல்லது சாபங்கள், தெய்வீக ஏற்பாடு, யூதர்கள், வாழ்க்கை முறை, அலெக்சாண்டர், பேச முடியாத மிருகங்களுக்கு பகுத்தறிவின் தொழிற்பாடு மற்றும் ஒவ்வொரு முட்டாளும் அடிமையாக இருக்க வேண்டும் என்பது போன்ற படைப்புகளையும் எழுதியுள்ளார். அவர் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் எழுதி, அதை அப்போஸ்தலிக்க மனிதர்களின் வாழ்க்கை என்று குறிப்பிட்டார். மேலும், தெய்வீக விஷயங்களை உண்மையாகச் சிந்தித்து, கடவுளிடம் தொடர்ந்து ஜெபிப்பதால், ‘தெய்வீக வாழ்க்கையை வாழ்பவர்களைப் பற்றியது’ என்று அதற்குத் தலைப்பிட்டிருந்தார். அவர் விவசாயம் பற்றி இரண்டு நூல்களையும், குடிவெறி தரும் தீமைகள் பற்றி இரண்டு நூல்களையும் எழுதியிருந்தார். நமக்குக் கிடைக்காத, நாம் அறிந்திராத அவருடைய ஏனைய குறிப்பிடத்தக்க படைப்புகளும் உள்ளன. அவரைப் பற்றி கிரேக்கர்களிடையே ஒரு பழமொழி உண்டு: அதாவது, ஒன்று பிளேட்டோ ஃபிலோவால் ஈர்க்கப்பட்டிருக்கவேண்டும் அல்லது ஃபிலோ பிளேட்டோவால் ஈர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே அது. ஏனெனில், அவர்களின் கருத்துக்களும் மொழியும் எவ்வளவு தூரம் ஒத்திருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
12. இளைய செனெகா
இளைய செனெகா என்று அறியப்பட்ட லூசியஸ் அன்னாஸ் செனெகா, கோர்டோவாவைச் சேர்ந்தவர். அவர் ஸ்டோயிக் சோஷியனின் மாணவரும், கவிஞர் லூக்கானின் மாமாவும் ஆவார். அவர் மிகுந்த கண்ணியத்துடனும் சுயக்கட்டுப்பாடுடன் வாழ்ந்தார். அவருக்கும் பவுலுக்கும் இடையே பரிமாறப்பட்ட, பலரால் வாசிக்கப்படும் கடிதங்கள் இல்லையென்றால், நான் அவரை ஒரு புனிதராகக் கருதியிருக்க மாட்டேன். செனெகா, நீரோவின் ஆசிரியராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தபோது எழுதிய இந்தக் கடிதங்களில், கிறிஸ்தவர்களால் பவுல் மதிக்கப்பட்டதைப் போலவே, தன் நாட்டு மக்களிடையேயும் ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். பேதுருவும் பவுலும் வேதசாட்சிகளாக மரிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செனெகா நீரோவால் தூக்கிலிடப்பட்டார்.
13. யோசேபஸ்
எருசலேமைச் சேர்ந்த குருவான மத்தேயு என்பவரின் மகனான யோசேபஸ், வெஸ்பேசியன் மற்றும் அவரது மகன் டைட்டஸ் ஆகியோரால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்டார். ரோமுக்கு வந்த பிறகு அவர் தந்தை மற்றும் மகன் ஆகிய பேரரசர்களைக் குறிக்கும் வண்ணம் ‘யூதர்களின் சிறைவாசம் குறித்து’ என்ற தலைப்பில் ஏழு புத்தகங்களை எழுதினார். இந்தப் புத்தகங்கள் யாவும் பொது நூலகத்தில் வைக்கப்பட்டன. மேலும் அவரது பிரமிக்கத்தக்க அறிவாற்றலின் காரணமாக, ரோமில் அவருக்கு ஒரு சிலை வைத்து கௌரவிக்கப்பட்டது. அவர் உலகின் படைப்பு முதல் டொமிஷியன் சீசரின் பதினான்காம் ஆண்டு வரையிலான வரலாற்றை உள்ளடக்கிய தொல்பொருட்கள் குறித்த இருபது புத்தகங்களையும், அத்துடன் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த இலக்கண அறிஞரான அப்பியனுக்கு எதிரான தொல்பொருட்கள் தொடர்பான இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அப்பியன் இதற்கு முன்னர் ஃபிலோவை எதிர்ப்பதற்காக கலிகுலாவின் கீழ் ஒரு தூதராக அனுப்பப்பட்டிருந்தார். அத்தோடு யூத தேசத்தை இழிவுபடுத்தும் ஒரு புத்தகத்தையும் எழுதியிருந்தார். அவரது மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பு ‘ஆளும் ஞானம் குறித்து’ என்பதாகும். இது மக்கபேயர்களின் தியாகத்தை விபரிப்பதோடு மிகவும் மதிக்கப்படுவதாகவும் இருக்கிறது. தனது ‘பண்டைய வரலாறு’ என்ற நூலின் எட்டாவது புத்தகத்தில், கிறிஸ்து நிகழ்த்திய அற்புதங்களின் மகத்துவம் காரணமாக அவர் பரிசேயர்களால் கொல்லப்பட்டார் என்று அவர் தெளிவாகக் கூறுகிறார்; ஸ்நாபக யோவானை ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்கிறார்; மேலும், அப்போஸ்தலனாகிய யாக்கோபின் கொலை காரணமாகவே எருசலேம் அழிக்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். அவர் ஆண்டவரைப் பற்றி இவ்வாறு எழுதினார்: அக்காலத்தில் இயேசு என்பவர் இருந்தார்; அவரை ஒரு மனிதன் என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமானால், அவரை ஒரு ஞானி என்ற அழைக்கவேண்டும். அவர் நம்பமுடியாத அற்புதங்களைச் செய்து, சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்குப் போதித்தார். யூதர்கள் மற்றும் புறஜாதியார் என இரு தரப்பினரிடமும் அவருக்குப் பெரும் ஆதரவு இருந்தது. மேலும் அவர் கிறிஸ்து என்று நம்பப்பட்டார். நமது தலைவர்களின் பொறாமை காரணமாக பிலாத்து அவரைச் சிலுவையில் அறைந்த பிறகும், ஆரம்பத்தில் அவரை நேசித்தவர்கள் இறுதிவரை அவர்மீது விசுவாசமாகவே இருந்தனர், ஏனெனில் மூன்றாம் நாளில் அவர் அவர்களுக்கு முன் உயிரோடு தோன்றினார். அவரைப் பற்றிய தீர்க்கதரிசனங்களில் இன்னும் பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதோடு, அவரது நாமத்தினால் அழைக்கப்படும் கிறிஸ்தவப் பிரிவு இன்றும் நிலைத்திருக்கிறது, என்று யோசேபஸ் தனது நூலில் கூறியுள்ளார்.
14. ஜஸ்டஸ்
கலிலேயாவிலுள்ள திபேரியாவைச் சேர்ந்த இவர் யூத நிகழ்வுகளின் வரலாற்றையும், வேதாகமத்தின் மீதான சில சுருக்கமான விளக்கவுரைகளையும் எழுத முயன்றார். இருப்பினும், யோசேபஸ் அவர் நேர்மையற்றவர் என்று குற்றம் சாட்டினார். ஜஸ்டஸ், யோசேபஸ் எழுதிய அதே காலகட்டத்தில் எழுதினார் என்று சொல்லப்படுகிறது.
15. திருத்தந்தை கிளமென்ட்
அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதிய தனது கடிதத்தில் கிளமென்ட்டைப் பற்றிக் குறிப்பிடுகிறார்; அதில் அவர், ஜீவ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெயர்கள் மத்தியில் கிளமென்ட் மற்றும் பிற உடன் ஊழியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் பேதுருவுக்குப் பிறகு ரோமின் நான்காவது ஆயராக இருந்தார்; அவருக்கு முன் லீனஸ் இரண்டாவதாகவும், அனக்லெட்டஸ் மூன்றாவதாகவும் இருந்தனர். இருப்பினும், இலத்தீன் மொழி பேசுவோர், அப்போஸ்தலருக்குப் பிறகு கிளமென்ட்தான் உண்மையில் இரண்டாவதாக இருந்தார் என்று நம்புகிறார்கள். அவர் ரோமைய திருச்சபையின் சார்பாக கொரிந்திய திருச்சபைக்கு ஒரு முக்கியமான கடிதத்தை எழுதினார். அது இன்றும் சில இடங்களில் பொதுவில் வாசிக்கப்படுகிறது. இந்தக் கடிதம், பவுல் எழுதியதாகக் கூறப்படும் எபிரேயருக்கு எழுதிய நிருபத்துடன் ஒத்த நடையைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், பல கருத்துக்களிலும் வார்த்தைகளின் அமைப்பிலும் வேறுபடுவதால், அந்த ஒற்றுமை அவ்வளவு வலுவாகக் காணப்படவில்லை. மேலும், முந்தைய எழுத்தாளர்களால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டாவது நிருபம் ஒன்றும் உள்ளது; அத்துடன், இதுகுறித்து பேதுருவுக்கும் அப்பியோனுக்கும் இடையேயான ஒரு நீண்ட விவாதமும் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதை யூசிபியஸும் தனது திருச்சபை வரலாற்றின் மூன்றாம் புத்தகத்தில் நிராகரித்துள்ளார். கிளமென்ட் ட்ரொஜனின் மூன்றாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் காலமானார். இருந்தபோதிலும், ரோமில் உள்ள திருச்சபை இன்றுவரை அவரது நினைவைப் போற்றி வருகிறது.
16. அந்தியோகியாவின் ஆயரான இக்னேஷியஸ்
அப்போஸ்தலனாகிய பேதுருவுக்குப் பிறகு அந்தியோகியா திருச்சபையின் மூன்றாவது ஆயரான இக்னேஷியஸ், ட்ரொஜனின் துன்புறுத்தலின் போது காட்டு மிருகங்களுக்கு இரையாகும்படி தீர்ப்பிடப்பட்டு, சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு ரோமுக்கு அனுப்பப்பட்டார். அவருடைய பயணத்தின் போது அவர் சிமிர்னாவை அடைந்தார். அங்கு யோவானின் சீடரான பொலிகார்ப் என்பவர் ஆயராக இருந்தார். அந்தியோக்கியரான இக்னேஷியஸ் பல கடிதங்களை எழுதினார். அவர் எபேசியர்களுக்கு ஒன்றையும், மக்னேசியர்களுக்கு மற்றொன்றையும், டிராலியர்களுக்கு மூன்றாவதையும், ரோமானியர்களுக்கு நான்காவதையும் எழுதினார். அங்கிருந்து, அவர் பிலதெல்பியர்களுக்கும், சிமிர்னியர்களுக்கும், மிக முக்கியமாக, பொலிகார்புக்கும் கடிதம் எழுதி, அந்தியோக்கியா சபையின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். இந்தக் கடைசி கடிதத்தில், நான் சமீபத்தில் எளிமையான வார்த்தைகளில் விளக்கிய நற்செய்தியைப் பற்றி அவர் பேசினார். கிறிஸ்துவின் பிரசன்னம் குறித்த தனது நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்ட அவர், “கர்த்தர் உயிர்த்தெழுந்த பிறகு நான் அவரை நேரில் கண்டேன், அவர் உண்மையானவர் என்று நான் நம்புகிறேன். அவர் பேதுருவிடமும் அவருடன் இருந்த மற்றவர்களிடமும் சென்றபோது, அவர்களிடம், ‘இதோ! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நான் சரீரமற்ற ஆவியல்ல என்று அறிவீர்கள்’ என்றார். உடனே, அவர்கள் அவரைத் தொட்டு விசுவாசித்தார்கள்” என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மனிதனைப் பற்றியும் அவர் ரோமர்களுக்கு அனுப்பிய கடிதத்தைப் பற்றியும் நாம் ஏற்கனவே பேசியிருப்பதால், சில மேற்கோள்களைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும் என்றெண்ணுகிறேன்: சிரியாவிலிருந்து ரோம் வரை, நான் நிலத்திலும் கடலிலும், இரவும் பகலும் எனது பிரயாணத்தின்போது காட்டு மிருகங்களுடன் போராடுகிறேன்; பத்து சிறுத்தைகளுக்கு மத்தியில் கட்டப்பட்டிருக்கிறேன், அதாவது என்னைக் காக்கும் வீரர்கள் போன்று இருக்கும் அவை நன்றாக நடத்தப்பட்ட போதும் கூட குரூரம் மிக்கவைகளாகவே காணப்படுகின்றன. இருப்பினும், அவற்றின் தீய செயல்கள் எனக்குப் போதிக்கும் ஆசான்கள் போலுள்ளன. ஆனால் அதற்காக நான் என்னை நியாயப்படுத்துகிறேன் என்று அர்த்தமல்ல. எனக்காகப் பசியுடன் காத்திருக்கும் மிருகங்கள் மத்தியில் நான் மகிழ்ச்சியைக் காண்பேன் என்று நம்புகிறேன்; அவை எனக்காகத் தயாராக இருக்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன். பயத்தின் காரணமாக அவை விட்டுவைத்த மற்றவர்களைப் போல என்னை நடத்தாதபடி, என்னை விரைவாகத் தின்று தீர்க்க வேண்டுமென நான் அவற்றை ஊக்குவிப்பேன். அவை தயங்கினாலும் கூட, நானே என்னைத் தின்றுதீர்க்க அவற்றிடம் என்னைக் கையளிப்பேன். என் பிள்ளைகளே, என்னை மன்னியுங்கள்; எனக்கு எது சிறந்தது என்று எனக்குத் தெரியும். இயேசு கிறிஸ்துவை நான் சென்றடைய வேண்டும் என்பதற்காக, கண்ணுக்குப் புலனாகும் காரியங்கள் எதிலும் நாட்டமில்லாமல் இப்போது நான் ஒரு சீடனாக மாறத் தொடங்கியுள்ளேன். கிறிஸ்துவில் உள்ள மகிழ்ச்சியை நான் அனுபவிக்க முடியும் என்றால், நெருப்பு, சிலுவை, காட்டு மிருகங்களின் தாக்குதல்கள், எலும்பு முறிவு, அவயவங்கள் வெட்டப்படுதல், உடல் நசுக்கப்படுதல் மற்றும் சாத்தானின் சித்திரவதைகள் ஆகிய அனைத்தும் என் வழியில் வரட்டும், நான் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன் என்று அக்கடிதத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதை இங்கே தந்துள்ளேன்.
அவர் காட்டு மிருகங்களுக்கு இரையாகும்படி தீர்ப்பிடப்பட்டு, வேதசாட்சியாக மரிக்கும் வைராக்கியத்துடன் சிங்கங்களின் கர்ஜனையைக் கேட்டபோது, ”நான் கிறிஸ்துவின் தானியம். நான் உலகின் அப்பமாக மாறும்படி காட்டு மிருகங்களின் பற்களால் கிழிக்கப்பட்டு அரைக்கப்படப்போகிறேன்” என்று கூறினார். அவர் ட்ரொஜனின் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக்காலத்தின் போது கொல்லப்பட்டார். அவரது புனித உடல் அந்தியோக்கியாவில் உள்ள டஃப்னித்திய வாயிலுக்கு வெளியே உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
17. பொலிகார்ப்
அப்போஸ்தலனாகிய யோவானின் சீடரும், அவரால் சிமிர்னாவின் ஆயராக நியமிக்கப்பட்டவருமான பொலிகார்ப், ஆசியா முழுவதற்கும் ஆயர் தலைவராக இருந்தார். அங்கே, அவர் சில அப்போஸ்தலர்களையும், இயேசுவைத் தரிசித்த மக்களையும் சந்தித்து அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். பஸ்கா பண்டிகையின் தேதியைப் பற்றிய சில கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில், பேரரசர் அந்தோணினஸ் பியஸ் பொறுப்பில் இருந்தபோதும், அனிசேட்டஸ் அங்குள்ள திருச்சபையை வழிநடத்திக் கொண்டிருந்தபோதும் அவர் ரோமுக்குப் பயணம் செய்தார். ரோமில், மார்சியோன் மற்றும் வாலண்டினஸின் வாதங்களால் தவறாக வழிநடத்தப்பட்டிருந்த பல சீடர்களை அவர் மீண்டும் நம்பிக்கைக்குள் கொண்டு வந்தார். மார்சியோன் எதிர்பாராதவிதமாக அவரைச் சந்தித்து, அவர்களை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டபோது, பொலிகார்ப், “பிசாசின் முதல் பிள்ளையை எனக்குத் தெரியும்” என்று பதிலளித்தார். அதற்குப் பின்னர், மார்கஸ் அன்டோனினஸ் மற்றும் லூசியஸ் ஆரேலியஸ் கொமோடஸ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில், நீரோவுக்குப் பிந்தைய நான்காவது கடும் நெருக்கடிக் காலத்தில், ஸ்மிர்னாவில் அரசவை நடத்திக்கொண்டிருந்த ஆளுநரின் முன்னிலையில், அரங்கில் கூடியிருந்த மக்கள் அனைவரும் அவருக்கு எதிராகக் கூச்சலிட்டுக் கொண்டிருக்க, அவர் தீயிலிட்டுக் கொல்லப்பட்டார். அவர் பிலிப்பியருக்கு மிகவும் மதிப்புமிக்க ஒரு நிருபத்தை எழுதினார், அது ஆசியாவில் நடக்கும் கூட்டங்களில் இன்றுவரை வாசிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
18 பேபியஸ்
ஆசியாவிலுள்ள ஹியராபோலிஸின் ஆயரான யோவானின் சீடரான பேபியஸ், ‘நம் ஆண்டவரின் வார்த்தைகளின் விளக்கம்’ என்று தலைப்பிட்ட ஐந்து தொகுதிகளை மட்டுமே எழுதினார். தனது புத்தகங்களின் முகவுரையில் அவர் வெவ்வேறு கருத்துக்களைப் பின்பற்றவில்லை என்றும், அப்போஸ்தலர்களையே ஆதாரமாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினார். பின்னர் அவர், “அந்திரேயாவும் பேதுருவும் சொன்னதையும், பிலிப்பு, தோமா, யாக்கோபு, யோவான், மத்தேயு அல்லது நம் ஆண்டவரின் மற்றைய சீடர்கள் சொன்னதையும், நம் ஆண்டவரின் சீடர்களான அரிஸ்தியோனும் மூத்த யோவானும் சொன்னதைப் பற்றியும் நான் சிந்தித்தேன். இது நான் அவர்களுடைய புத்தகங்களைப் படிக்க நேர்ந்ததால் அல்ல, மாறாக அவர்கள் பேசிய வார்த்தைகள் இன்றும் அந்த எழுத்தாளர்களிடமே உண்மையாக ஒலிப்பதால்தான்” என்றார். இந்தப் பெயர்ப் பட்டியல், சீடர்களில் பட்டியலிடப்பட்டுள்ள யோவானும், அவர் தனது பட்டியலில் அரிஸ்தியோனுக்குப் பிறகு குறிப்பிட்ட மூத்த யோவானும் ஒருவரல்ல என்பதைக் காட்டுகிறது. யோவானின் கடைசி இரண்டு கடிதங்களை அப்போஸ்தலர் அல்ல, மறைமூப்பர்களே எழுதினார்கள் என்று பலர் கூறுவதை நாம் கவனித்த முந்தைய கருத்தின் காரணமாகவும் இதைச் சொல்கிறோம். அவர் “நம் ஆண்டவரின் இரண்டாம் வருகை” அல்லது “ஆயிரமாண்டு ஆட்சி” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டதாக நம்பப்படுகிறது. உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஆண்டவர் புனிதர்களுடன் சரீர வடிவில் ஆட்சி செய்வார் என்று கூறும் ஐரேனியஸ், அப்போலினாரிஸ் மற்றும் பிறர் இந்தக் கருத்தோடு உடன்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. டெர்டுல்லியன் தனது “விசுவாசிகளின் நம்பிக்கை குறித்து” என்ற நூலிலும், பெட்டாவ்வைச் சேர்ந்த விக்டோரினஸ் மற்றும் லாக்டான்ஷியஸ் ஆகியோரும் இந்தக் கருத்தைப் பின்பற்றுகிறார்கள்.
19. குவாட்ரேடஸ்
குவாட்ரேடஸ் அப்போஸ்தலர்களின் சீடர்களில் ஒருவராக இருந்ததோடு, ஏதென்ஸின் ஆயரான பப்ளியஸ், கிறிஸ்து மீதான தனது விசுவாசத்தின் நிமித்தம் வேதசாட்சியாக மரித்த பிறகு, குவாட்ராடஸ் அவரது பதவியை ஏற்றுக்கொண்டார். தனது வலுவான விசுவாசம் மற்றும் கடின உழைப்பின் மூலம், பயத்தின் காரணமாக சிதறடிக்கப்பட்டிருந்த திருச்சபையை அவரால் ஒன்று திரட்ட முடிந்தது. ஹேட்ரியன், எலூசீனிய மறைநிகழ்வுகளைக் காண்பதற்காகவும், கிரேக்கத்தின் பல புனித சடங்குகளில் பங்குபற்றி, தீட்சை பெறுவதற்காகவும் ஏதென்ஸில் குளிர்காலத்தைக் கழித்தபோது, கிறிஸ்தவர்களை எதிர்த்தவர்கள், பேரரசரின் எந்த உத்தரவும் இல்லாமல் விசுவாசிகளைத் தொந்தரவு செய்ய அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். இந்த நேரத்தில் குவாட்ரேடஸ், திடமான வாதங்கள் மற்றும் விசுவாசத்தால் நிரம்பியதும், அப்போஸ்தலர்களின் போதனைகளுடன் ஒத்துப்போனதுமான நமது மதத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான படைப்பை ஹேட்ரியனுக்கு வழங்கினார். இந்தப் படைப்பில், அவர் வாழ்ந்த பண்டைய காலங்களை முன்னிலைப் படுத்தியுள்ளார்; அதேநேரம், யூதேயாவில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த பலர் கர்த்தரால் குணமாக்கப் பட்டதையும், சிலர் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதையும் தான் கண்டதாக குவாட்ரேடஸ் குறிப்பிடுகிறார்.
20. அரிஸ்டைடிஸ்
அரிஸ்டைடிஸ் என்பவர் மிகவும் திறமையான ஏதெனிய சிந்தனையாளரும், ஆற்றல் மிகு சொற்பொழிவாளரும் கிறிஸ்துவின் சீடராகவும் இருந்தபோதிலும் தனது தத்துவஞானி உடையைத் தக்க வைத்துக் கொண்டார். அரிஸ்டைட்ஸ், குவாட்ரேடஸ் தனது புத்தகத்தை ஹேட்ரியனுக்கு வழங்கிய அதே நேரத்தில், அவரும் ஒரு புத்தகத்தை வழங்கினார். அந்தப் புத்தகம் நமது நம்பிக்கைகள் குறித்த தெளிவான விளக்கத்தைக் கொண்டிருந்தது; அது கிறிஸ்தவர்களுக்கான ஒரு பாதுகாப்பாக இன்றும் உள்ளதுடன், மொழி வல்லுநர்களால் அவரது திறமைக்கான சான்றாக அந்நூல் கருதப்படுகிறது.
21. அக்ரிப்பா காஸ்டர்
காஸ்டர் என்ற குடும்பப்பெயரைக் கொண்ட அக்ரிப்பா, உயர் கல்வி கற்ற ஒரு தனிநபர் ஆவார். இவர், மதவெறியரான பாசிலிடஸ், நற்செய்திக்கு எதிராக எழுதிய இருபத்து நான்கு தொகுதிகளுக்கு ஒரு சக்திவாய்ந்த மறுப்பை எழுதியதோடு, அவர் பாசிலிடஸின் அனைத்து இரகசியங்களையும் வெளிப்படுத்தினார். மேலும், கேட்பவர்களை அச்சுறுத்திய பர்கப்பாஸ் மற்றும் பர்கோப் ஆகிய தீர்க்கதரிசிகளையும் மற்றைய விசித்திரமான பெயர்களையும், அத்துடன் கிரேக்க நாட்காட்டியின் அடிப்படையில் ஆண்டைக் குறிப்பதாக நம்பப்பட்ட உச்ச கடவுளான அப்ராக்ஸாஸையும் பட்டியலிட்டார். பாசிலிடஸ், ஹாட்ரியனின் ஆட்சியின் போது அலெக்சாண்டிரியாவில் காலமானார். மேலும் அவரிடமிருந்துதான் ஞானவாதப் பிரிவுகள் தோன்றின. இந்தக் கொந்தளிப்பு மிகுந்த காலகட்டத்தில், யூதப் பிரிவின் தலைவரான கோகேபாஸ் என்பவர் கிறிஸ்தவர்களைப் பல்வேறு கொடூரமான வழிகளில் மரணதண்டனைக்கு உள்ளாக்கினார்.
22. ஹெகேசிப்பஸ்
அப்போஸ்தலர் காலத்திற்கு வெகு தொலைவில் இல்லாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த ஹெகேசிப்பஸ், நம் ஆண்டவரின் பாடுகளிலிருந்து தொடங்கி, தன் காலம் வரையிலான அனைத்து திருச்சபை நிகழ்வுகளின் வரலாற்றை எழுதி, வாசகருக்குப் பயனுள்ள பல விஷயங்களைத் திரட்டி, தான் விவரித்தவர்களின் பேச்சு நடையைப் பிரதிபலிக்கும் முயற்சியில், எளிய நடையில் ஐந்து தொகுதிகளை இயற்றினார். பேதுருவுக்குப் பிறகு பத்தாவது ஆயரான அனிசெட்டஸின் காலத்தில் தான் ரோமுக்குச் சென்றதாகவும், அனிசெட்டஸின் கீழ் முன்னர் திருத்தொண்டராக இருந்தவரும், அதே நகரத்தின் ஆயருமான எலூத்தேரியஸின் காலம் வரை அங்கேயே தங்கியிருந்ததாகவும் அவர் கூறுகிறார். மேலும், அவர் சிலைகளுக்கு எதிராக வாதிட்டு, அவற்றின் தோற்றம் மற்றும் தவறுகளைக் கண்டறிந்து அதுகுறித்து ஒரு வரலாற்றை எழுதினார். இது அவர் வாழ்ந்த காலத்தைத் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. இறந்தவர்களுக்காக நினைவுச்சின்னங்களும் கோயில்களும் கட்டப்பட்டன என்றும், பேரரசர் ஹேட்ரியனின் பணியாளரான ஆன்டினஸுக்கான நினைவுச்சின்னத்தைப் போல, இந்த வழக்கம் இன்றும் காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். அவரைக் கௌரவிக்கும் வகையில், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன, அவர் பெயரில் ஒரு நகரம் நிர்மாணிக்கப்பட்டதோடு, குருமார்களைக்கொண்ட ஒரு ஆலயமும் உருவாக்கப்பட்டது. பேரரசர் ஹேட்ரியன் ஆன்டினஸ் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
23. வேதசாட்சியான ஜஸ்டின்
ஜஸ்டின் என்ற வேதசாட்சி, பாலஸ்தீனத்தில் உள்ள நியோபோலிஸ் நகரைச் சேர்ந்த ஒரு தத்துவஞானி மற்றும் பிரிஸ்கஸ் பாக்கியஸின் மகன் ஆவார். அவர் கிறிஸ்தவ விசுவாசத்தை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்தார்; சிலுவையின் அவமானத்திலிருந்து பின்வாங்காமல், ‘தேசங்களுக்கு எதிராக’ என்ற தலைப்பில் ஒரு படைப்பை அன்டோனினஸ் பியஸ், அவரது மகன்கள் மற்றும் சட்ட சபைக்கும் வழங்கினார். அவர் அன்டோனினஸின் வாரிசுகளான மார்கஸ் அன்டோனினஸ் வெரஸ் மற்றும் லூசியஸ் ஆரேலியஸ் கொமோடஸ் ஆகியோருக்காக மற்றொரு புத்தகத்தையும் எழுதினார். அவருடைய ‘தேசங்களுக்கு எதிராக’ என்ற நூலின் மற்றொரு பதிப்பில் அவர் பிசாசுகளைப் பற்றியும் பிரஸ்தாபித்துள்ளார். மேலும் ‘மறுப்பு’ என்று அவர் தலையங்கமிட்ட நான்காவது நூலும் உள்ளது. அவர் ‘கடவுளின் இறையாண்மை பற்றி’, ‘சங்கீதங்கள்’ என்ற புத்தகம் மற்றும் ‘ஆன்மாவைப் பற்றி’ ஆகிய நூல்களையும் எழுதினார். அத்தோடு நின்றுவிடாமல், அவர் யூதத் தலைவரான ட்ரைஃபோவுடன் உரையாடியதோடு, மார்சியனுக்கு எதிராக குறிப்பிடத்தக்க படைப்புகளை உருவாக்கினார், அதை ஐரேனியஸ் தனது நான்காவது நூலான ‘மதங்களுக்கு எதிராக’ என்பதில் குறிப்பிடுகிறார். அவர் அந்தோணினஸ் பியஸுக்கு அளித்த தனது மன்னிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அனைத்து மதங்களுக்கு எதிராகவும்’ என்ற நூலையும் எழுதினார். ரோமில் கலந்துரையாடல்களை நடத்திய பிறகு, கிறிஸ்தவர்களைப் பற்றி பல நிந்தனையான கருத்துக்களைக் கூறிய சினிக் மதத்தைச் சேர்ந்த கிரெசென்ஸை அவர் அம்பலப்படுத்தினார். அவர் ஒரு மென்மையான மற்றும் கோழை என்பதையும் வெளிப்படுத்தினார். இதன்காரணமாக, கிரெசென்ஸ் அவருக்கு எதிராகச் சதி செய்தார். இதன் விளைவாக ஜஸ்டின் ஒரு கிறிஸ்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டு வேதசாட்சியான ஜஸ்டின் கிறிஸ்துவுக்காகத் தன் இரத்தத்தைச் சிந்தினார்.
24. மெலிட்டோ
சார்டிஸின் ஆயராக இருந்த ஆசியாவின் மெலிட்டோ, பேச்சாளரான ஃப்ரான்டோவின் மாணவரான பேரரசர் மார்கஸ் அன்டோனினஸ் வெரஸுக்கு, கிறிஸ்தவ விசுவாசத்தை ஆதரித்து ஒரு நூலை எழுதினார். அவர் மேலும் பல படைப்புகளையும் இயற்றியுள்ளார். அவற்றுள் சில: பாஸ்கா பண்டிகை குறித்த இரண்டு நூல்கள், தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு நூல், திருச்சபை குறித்த ஒரு நூல், கர்த்தருடைய நாள் குறித்த ஒரு நூல், விசுவாசம் குறித்த ஒரு நூல், சங்கீதங்கள் குறித்த ஒரு நூல் (?), புலன்கள் குறித்த ஒரு நூல், ஆன்மா மற்றும் சரீரம் குறித்த ஒரு நூல், ஞானஸ்நானம் குறித்த ஒரு நூல், உண்மை குறித்த ஒரு நூல், கிறிஸ்துவின் பிறப்பு குறித்த ஒரு நூல், அவருடைய தீர்க்கதரிசனம் குறித்த ஒரு நூல், விருந்தோம்பல் குறித்த ஒரு நூல், மற்றும் ‘திறவுகோல்’ என்று அறியப்படும் மற்றொரு நூல் — இவற்றுடன் சாத்தான் குறித்த ஒரு நூல், யோவானின் வெளிப்படுத்தல் குறித்த ஒரு நூல், கடவுளின் உடலமைப்பு குறித்த ஒரு நூல், மற்றும் ஆறு ஆயர் அல்லது இடையர் உரையாடற் பாடல்கள் (Eclogues) சம்பந்தமான நூல்களையும் எழுதினார். மொன்டானஸுக்கு ஆதரவாகத் திருச்சபைக்கு எதிராக எழுதிய தனது ஏழு நூல்களில், டெர்டுல்லியன், மெலிட்டோவின் அபாரமான பேச்சாற்றலைப் பற்றி குறிப்பிட்டதோடு, “நம்மில் பலரால் அவர் ஒரு தீர்க்கதரிசியாகக் கருதப்பட்டார்” என்றும் நகைச்சுவையாகக் சுட்டிக்காட்டினார்.
25. அந்தியோக்கியா நகரத்து தியோபிலஸ்
தியோபிலஸ், அந்தியோக்கியா திருச்சபையின் ஆறாவது ஆயராக இருந்தார். பேரரசர் மார்கஸ் அன்டோனினஸ் வெரஸின் காலத்தில், அவர் ‘மார்சியனுக்கு எதிராக’ என்ற ஒரு நூலை எழுதினார். அது இன்றும் உள்ளது. மேலும், ‘ஆட்டோலிக்கஸுக்கு’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளையும், ‘ஹெர்மோஜெனஸின் மதக்கொள்கைக்கு எதிராக’ என்ற தலைப்பில் ஒரு நூலையும், திருச்சபைக்குப் போதிக்கப் பயன்படும் பிற சிறிய நூல்களையும் அவர் எழுதினார். அவருக்கு உரித்தானதாகக் கூறப்படும் ‘நற்செய்தியின் மீது’ மற்றும் ‘சொலமனின் நீதிமொழிகள் மீது’ என்ற சில விளக்கவுரைகளை நான் படித்திருக்கிறேன். இருப்பினும் அவை அவருடைய மற்றைய படைப்புகளின் பாணி மற்றும் தரத்துடன் பொருந்துவதாகத் தெரியவில்லை.
26. அப்போலினரிஸ் கிளோடியஸ்
அப்போலினரிஸ், மார்கஸ் அன்டோனினஸ் வெரஸின் ஆட்சிக்காலத்தில் ஆசியாவில் உள்ள ஹைராபோலிஸின் ஆயராக இருந்தார். அவருக்காக கிறிஸ்தவ விசுவாசத்தை ஆதரிக்கும் ஒரு முக்கியமான நூலை அவர் எழுதினார். மேலும், ‘தேசங்களுக்கு எதிராக’ என்ற தலைப்பில் அவரது ஐந்து நூல்களும், ‘உண்மையைப் பற்றி’ மற்றும் ‘கேட்டாஃப்ரிஜியர்களுக்கு எதிராக’ என்ற இரண்டு நூல்களும் உள்ளன. மொன்டானஸ் பிரிஸ்கா மற்றும் மாக்சிமில்லாவுடன் தனது இயக்கத்தைத் தொடங்கிய காலத்தில் அவர் இவற்றை எழுதி இருந்தார்.
27. கொரிந்துவின் தியோனிசியஸ்
கொரிந்துவின் ஆயரான தியோனிசியஸ், அபாரமான சொற்திறமையும் கடின உழைப்பும் மிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தனது சொந்த நகரத்திற்கும் மாகாணத்திற்கும் கற்பித்தது மட்டுமல்லாமல், தனது கடிதங்கள் மூலம் எண்ணற்ற மற்றவர்களையும் சென்றடைந்தார். அவர் லசிடமோனியர்கள், ஏதெனியர்கள், நிக்கோமீடியர்கள், கிரீட்டர்கள், அமாஸ்ட்ரினாவில் உள்ள திருச்சபை மற்றும் பொந்துஸில் உள்ள பிற திருச்சபைகளுக்குக் கடிதம் எழுதினார். மேலும் அவர் க்னோசியர்களுக்கும், அந்நகரின் ஆயரான பினிடஸுக்கும், ரோமானியர்களுக்கும், குறிப்பாக அவர்களின் ஆயர் சோட்டருக்கும் மற்றும் கிரிசோபோரா என்ற புனித பெண்மணிக்கும் கடிதங்களை அனுப்பினார். அவர் மார்கஸ் அன்டோனினஸ் வெரஸ் மற்றும் லூசியஸ் ஆரேலியஸ் கொமோடஸ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் தீவிரமாகச் செயல்பட்டார்.
28. பினிடஸ்
கிரீட்டைச் சேர்ந்த பினிடஸ், க்னோஸஸ் நகரத்தின் ஆயராக இருந்த இவர், கொரிந்தியர்களின் ஆயரான தியோனிசியஸுக்கு ஒரு அழகான கடிதத்தை எழுதினார். இந்தக் கடிதத்தில், மக்கள் எப்போதும் பால் சார்ந்த உணவை உண்ணக்கூடாது என்றும், ஏனெனில் கடைசி நாள் வரும்போது அவர்கள் குழந்தைகளைப் போலவே இருந்துவிடக்கூடும் என்றும் அவர் விளக்குகிறார். அதற்குப் பதிலாக, அவர்கள் ஆன்மீக ரீதியாக வளர்ந்து முதிர்ச்சியடைய திட உணவை உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அவர் மார்கஸ் அன்டோனினஸ் வெரஸ் மற்றும் லூசியஸ் ஆரேலியஸ் கொமோடஸ் ஆகியோரின் காலத்தில் வாழ்ந்தார்.
29. டேடியன்
சொற்பொழி மற்றும் சொல்லாட்சிக் கலையில் பெரும் புகழ் பெற்ற ஒரு ஆசிரியர் டேடியன். அவர் வேதசாட்சியான ஜஸ்டின் அவர்களது சீடராக இருந்தார். மேலும் தன் குருநாதருடன் இருந்தவரை அவரோடு சேர்த்து மதிக்கப்பட்டார். இருப்பினும், பிற்காலத்தில் அவர் தனது பேச்சுத் திறமை குறித்து அதீத கர்வம் கொண்டு, (Encratite) என்றழைக்கப்பட்ட சுய கட்டுப்பாடு என்று பொருள் தரக்கூடிய ஒரு புதிய நம்பிக்கை அமைப்பைத் தொடங்கினார். இந்த நம்பிக்கை பின்னர் செவரஸால் விரிவாக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவின் பின்பற்றுபவர்கள் இன்றும் செவரனியர்கள் (Severian) என்றே அறியப்படுகிறார்கள். டேடியன் பல நூல்களை எழுதினார்; அவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான “நாடுகளுக்கு எதிராக” (Against the Nations) என்ற நூல் இன்றும் பிரபலமானது என்பதுடன், இது அவரது மிக முக்கியமான படைப்பாகவும் கருதப்படுகிறது. அவர் மார்கஸ் அன்டோனினஸ் வெரஸ் மற்றும் லூசியஸ் ஆரேலியஸ் கொமோடஸ் ஆகிய பேரரசர்களின் காலத்தில் வாழ்ந்தார்.
30. கிரீட்டின் ஆயரான பிலிப்
கிரீட்டின் ஆயரான பிலிப், கோர்டினா நகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதே நகரத் திருச்சபைக்கு டியோனிசியஸ் எழுதிய கடிதத்தில் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவர் ‘மார்சியனுக்கு எதிராக’ என்ற தலைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நூலை எழுதியுள்ளார். மேலும், மார்கஸ் அன்டோனினஸ் வெரஸ் மற்றும் லூசியஸ் ஆரேலியஸ் கொமோடஸ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இவர் தீவிரமாகச் செயல்பட்டார்.
31. மூசானஸ்
திருச்சபைக் கோட்பாடு குறித்து எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவரான மூசானஸ், மார்க்கஸ் அந்தோணினஸ் வெரஸின் ஆட்சிக்காலத்தில், என்க்ரேடைட்டுகளின் மதக்கொள்கையை ஏற்றுக்கொண்டு திருச்சபையிலிருந்து விலகிச் சென்ற சில சகோதர மக்களுக்காக ஒரு நூலை எழுதினார்.
32. மொடெஸ்டஸ்
மார்கஸ் அன்டோனினஸ் மற்றும் லூசியஸ் ஆரேலியஸ் கொமோடஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில், மொடெஸ்டஸ் ‘மார்சியனுக்கு எதிராக’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். மேலும் இந்த நூல் இன்றும் வாசகர்களின் அபிமானத்துக்கு ஏற்புடைய ஒன்றாக உள்ளது. வேறு சில படைப்புகளும் அவர் பெயரில் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், அவை உண்மையானவை அல்ல என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
33. பர்தசேனஸ்
மெசொப்பொத்தேமியாவைச் சேர்ந்த பர்தசேனஸ் புகழ்பெற்ற மனிதர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். ஆரம்பத்தில், வலண்டினஸின் ஆதரவாளராக இருந்த அவர், பின்னர் வலண்டினசுக்குப் போட்டியாளராகி மாறி ஒரு புதிய மதக்கொள்கையை ஸ்தாபித்தார். சிரியர்களிடையே அவர் ஒரு சிறந்த சிந்தனையாளராகவும் உணர்ச்சிமிக்க விவாதக்காரராகவும் அறியப்படுகிறார். அவர் தன் காலத்தில் தோன்றிய; ஏறக்குறைய அனைத்து மதக்கொள்கைகளுக்கும் எதிராக எண்ணற்ற படைப்புகளை இயற்றினார். விதியைப் பற்றி மார்கஸ் அன்டோனினஸை நோக்கி அவர் எழுதிய நூல், அவருடைய மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த படைப்புக்களில் ஒன்றாகும். இது தவிர, துன்புறுத்தல் குறித்த பல தொகுதிகளையும் அவர் எழுதியுள்ளார்; அவற்றை அவருடைய சீடர்கள் சிரியாக் மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு மொழிபெயர்த்தனர். இந்த மொழிபெயர்ப்பே இவ்வளவு தாக்கத்தையும் மேன்மையையும் கொண்டிருக்கிறதென்றால், மூலப் படைப்பு எவ்வளவு பிரமிப்பூட்டுவதாக இருந்திருக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்!
34. திருத்தந்தை விக்டர்
ரோமின் பதின்மூன்றாவது ஆயரான விக்டர், ‘பாஸ்கா சர்ச்சை குறித்து’ என்ற நூலையும் மற்றும் வேறு சில சிறு படைப்புகளையும் எழுதினார். அவர் பேரரசர் செவெரஸின் ஆட்சிக்காலத்தில் பத்து ஆண்டுகள் திருச்சபையை வழிநடத்தினார்.
35. ஐரேனியஸ்
கோல் (Gaul) பிராந்தியத்தில் உள்ள லியோன் நகரத் திருச்சபையை வழிநடத்திய ஆயரான போத்தினஸின் கீழ் ஐரேனியஸ் ஒரு குருவாக இருந்தார். திருச்சபை தொடர்பான சில விஷயங்களைப் பற்றி விவாதிப்பதற்காக, அவர் தனது பகுதியைச் சேர்ந்த வேதசாட்சிகளால் ஒரு தூதுவராக ரோமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு இருந்தபோது, தான் எழுதிய சில கடிதங்களை ஆயர் எலூத்தேரியஸிடம் கொடுத்தார்; அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. ஏறக்குறைய தொண்ணூறு வயதான ஆயர் போத்தினஸ், கிறிஸ்துவுக்காக வேதசாட்சியாக மரித்த பிறகு, ஐரேனியஸ் அவருக்குப் பதிலாக அவரது பதவியைப் பொறுப்பேற்றார். நாம் முன்னர் குறிப்பிட்ட குருவானவரும், வேதசாட்சியுமான பொலிகார்பின் சீடர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஐரேனியஸ், ‘Against Heresies’ என்ற தலைப்பில் ஐந்து புத்தகங்களையும், ‘Against the Nations’ என்ற ஒரு சிறிய நூலையும், ஒழுக்கம் குறித்த மற்றொரு நூலையும் எழுதினார். மேலும் அவர், அப்போஸ்தலிக்கப் பிரசங்கம் குறித்துத் தன் சகோதரர் மார்சியானஸுக்கு ஒரு கடிதத்தையும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பையும், பிளவு குறித்து பிளாஸ்டஸுக்கும், முடியாட்சி குறித்து ஃப்ளோரினஸுக்கும் பதிலளித்தல் படைப்புகளையும் எழுதினார்; அவற்றில் கடவுள் தீமையின் ஆதாரம் அல்ல என்று வாதிட்டதோடு, அவர் ஒக்டோவாட் மீதான ஒரு குறிப்பிடத்தக்க விளக்கவுரையை உருவாக்கினார். அதில், “இந்த நூலைப் பிரதிசெய்யும் எவருக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரிலும், அவர் உயிரோடு இருப்போரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்கும் அவருடைய மகிமையான வருகையின் பேரிலும் நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன்: நீங்கள் பிரதிசெய்த பிறகு, அதை மிகவும் நுணுக்கத்துடன் ஒப்பிட்டு, நீங்கள் பிரதிசெய்தவற்றை மூலப் பிரதியோடு ஒப்பிட்டு, அதற்கேற்றவாறு உங்கள் பிரதிகளைத் திருத்த வேண்டும். மேலும், பதிப்புரிமை குறித்த எனது ஆணையையும் உங்கள் அச்சுப்பிரதியில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அவருடைய ஏனைய படைப்புகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்று, ரோமானிய ஆயர் விக்டருக்கு அவர் எழுதிய ‘பாஸ்கா சர்ச்சை’ பற்றிய கடிதம். அதில், திருச்சபையின் ஒற்றுமையை அவசரப்பட்டு சீர்குலைத்துவிட வேண்டாமென அவர் எச்சரித்திருந்தார்; குறிப்பாக, ஆசியாவிலும் கிழக்கிலும் அமாவாசையின் பின் வரும் பதினான்காம் நாளில் பாஸ்காவைக் கொண்டாடிய பல ஆயர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று விக்டர் நினைத்திருந்தால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அவர்களுடன் உடன்படாதவர்கள் கூட விக்டரின் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. மார்கஸ் அன்டோனினஸ் வெரஸுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பேரரசர் கொமோடஸின் ஆட்சிக் காலத்தில் ஐரேனியஸ் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டதன் காரணமாக சிறந்த புகழைப் பெற்றிருந்தார்.
36. பான்டேனஸ்
ஸ்வத்துவக் கோட்பாட்டைச் (Stoic) சேர்ந்த தத்துவஞானியான பான்டேனஸ், நற்செய்தியாளர் மாற்குவின் காலத்திலிருந்து திருச்சபையினர் எப்போதும் அறிஞர்களாக இருந்த ஒரு பழைய அலெக்சாண்டிரிய வழக்கத்தின்படி, திருமறை மற்றும் உலகியல் இலக்கியம் ஆகிய இரண்டிலும் மிகுந்த விவேகமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவராக இருந்தார். இதன் காரணமாக, அலெக்சாண்டிரியாவின் ஆயரான தெமெட்ரியஸ், உள்ளூர் தூதர்களின் வேண்டுகோளின் பேரில் அவரை இந்தியாவிற்கு அனுப்பினார். அங்கு பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான பார்த்தலோமேயு, மத்தேயுவின் நற்செய்தியின் அடிப்படையில் கர்த்தராகிய இயேசுவின் வருகையைப் பற்றிப் பிரசங்கித்திருந்ததை அவர் கண்டறிந்தார். மீண்டும் அவர் அலெக்சாண்டிரியாவுக்குத் திரும்பியபோது, எபிரேய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அதைத் தன்னுடன் கொண்டு வந்தார். திருமறை மீதான அவரது பல விளக்கவுரைகள் இன்றும் புழக்கத்தில் இருந்தாலும், அவர் நேரில் அருளிய போதனைகள் திருச்சபைகளுக்கு மேலும் அதிகமாகப் பயனளித்தன. அவர் பேரரசர் செவரஸ் மற்றும் கரக்கல்லா என்றும் அழைக்கப்பட்ட அந்தோணினஸ் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் போதனைகளில் ஈடுபட்டிருந்தார்.
37. ரோடோ
ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரான ரோடோ, நாம் முன்னரே குறிப்பிட்டவாறு ரோமில் டேடியனிடம் திருமறைகளைப் பற்றிக் கற்றுக்கொண்டார். அவர் பல விஷயங்களை எழுதினார், குறிப்பாக ‘மார்சியனுக்கு எதிராக’ என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். அதில், மார்சியனின் ஆதரவாளர்கள் தங்களுக்குள்ளும் திருச்சபையுடனும் எவ்வாறு முரண்படுகிறார்கள் என்பதை விளக்கியிருந்தார். மற்றொரு மாற்றுக்கருத்தாளரான அப்பெல்லஸ் என்ற ஒரு முதியவர், ஒருமுறை அவருடன் வாதிட்டதாகவும் அவர் கூறுகிறார். தான் பிரார்த்தனை செய்யும் கடவுளைத் தனக்குத் தெரியாது என்று அப்பெல்லஸ் கூறியதால், ரோடோ அவரைக் கேலி செய்தார். காலிஸ்டியனுக்காக அவர் எழுதிய அதே புத்தகத்தில், ரோமில் டேடியனிடமிருந்து கற்றுக்கொண்டதாகக் கூறினார். அவர் ‘படைப்பின் ஆறு நாட்கள்’ பற்றிய அழகான எழுத்துக்களையும், ‘பிரிஜியர்களுக்கு எதிராக’ என்ற ஒரு முக்கியமான புத்தகத்தையும் எழுதினார். அவர் கொமோடஸ் மற்றும் செவரஸின் ஆட்சிக் காலத்தில் தீவிரமாகச் செயல்பட்டார்.
38. அலெக்சாண்டிரியாவின் கிளெமென்ட்
அலெக்சாண்டிரிய திருச்சபையின் குருவாகவும், பான்டேனஸின் மாணவராகவும் இருந்த கிளெமென்ட், தனது வழிகாட்டியின் மறைவுக்குப் பிறகு அலெக்சாண்டிரியாவில் உள்ள இறையியல் பள்ளியைப் பொறுப்பேற்றதோடு, அவர் மறைக்கல்வியாளர்களின் ஆசிரியராகவும் விளங்கினார். கிளெமென்ட், புனித வேதாகமம் மற்றும் மதச்சார்பற்ற இலக்கியம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய, சொல்லாற்றலும் அறிவும் நிறைந்த குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதினார். அவரது குறிப்பிடத்தக்க எழுத்துக்களில் எட்டுத் தொகுதிகள் கொண்ட ‘ஸ்ட்ரோமாட்டா’, எட்டுத் தொகுதிகள் கொண்ட ‘ஹைப்போடைபோசஸ்’, ‘தேசங்களுக்கு எதிராக’ என்ற ஒற்றை நூல், கற்பித்தல் குறித்த மூன்று நூல்கள், பாஸ்கா பண்டிகை குறித்த ஒரு கட்டுரை, உபவாசம் குறித்த ஒரு ஆய்வுரை மற்றும் ‘எந்த செல்வந்தன் இரட்சிக்கப்பட்டிருக்கிறான்?’ என்ற நூல் ஆகியவை அடங்கும். மேலும் அவர் ‘அவதூறு குறித்து’ என்ற நூலையும், ‘யூதர்களின் பிழையான வழிகளைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராக’ என்ற திருச்சபை விதிகள் குறித்த ஒரு நூலையும் எழுதினார். அதனை அவர் ஜெருசலேமின் ஆயரான அலெக்சாண்டருக்கு அனுப்பினார். தனது ஸ்ட்ரோமாட்டா என்ற நூலில், அவர் டேடியனின் ‘தேசங்களுக்கு எதிராக’ என்ற நூலையும், என்னால் கண்டுபிடிக்க முடியாத காசியானஸ் என்பவரின் காலவரிசை நூலையும் குறிப்பிடுகிறார். மேலும், யோசேப்பஸின் வழியைப் பின்பற்றி, மோயீசன் மற்றும் யூத மக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அரிஸ்டோபுலஸ், டெமெட்ரியஸ் மற்றும் யூபோலமஸ் உள்ளிட்ட, தேசங்களுக்கு எதிரான சில யூத எழுத்தாளர்களையும் அவர் மேற்கோள் காட்டுகிறார். அதேபோன்று, பிற்காலத்தில் பின்னர் நர்சிசஸுடன் திருச்சபையை ஆண்ட எருசலேமின் ஆயரான அலெக்சாண்டர், பாவமன்னிப்பு அருளுபவரான அஸ்க்லெபியாடஸ் என்பவரின் திருநிலைப்படுத்தல் நிகழ்வின் போது, அந்தியோக்கியர்களை வாழ்த்தி ஒரு கடிதத்தையும் எழுதினார். இந்தக் கடிதத்தில், அவர்கள் ஏற்கனவே அறிந்த, மேலும் நன்கு அறிந்து கொள்ளப்பட்டவரும், நன்கு மதிக்கப்பட்டவரும் நன்கு அங்கீகரிக்கப்பட்டவரும் ஆசீர்வதிக்கப்பட்ட மறைமூப்பருமான கிளமென்ட் மூலம் இந்த மதிப்புமிக்க நூல்களை அவர்களுக்கு அனுப்பியதாக அவர் குறிப்பிடுகிறார். கடவுளின் அருளால் இங்கு வந்த கிளமென்ட், திருச்சபையை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் உதவினார். ஓரிஜென் அவரது சீடராக அங்கீகரிக்கப்பட்டவர். அவர் செவரஸ் மற்றும் அவரது மகன் அன்டோனினஸின் ஆட்சிக் காலங்களில் மிகவும் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தார்.
39. மில்டியாடெஸ்
மொன்டானஸ், பிரிஸ்கா மற்றும் மாக்சிமில்லா ஆகியோருக்கு எதிராக ரோடோ எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவரான மில்டியாடெஸ், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக ஒரு பெரும் நூலையும், தேசங்களுக்கும் யூதர்களுக்கும் எதிராகப் பல்வேறுபட்ட நூல்களையும் எழுதினார். மேலும், அக்காலத்தில் ஆட்சியில் இருந்த பேரரசர்களுக்கு ஒரு மன்னிப்புக் கோரிக்கையையும் எழுதிய இவர், மார்கஸ் அன்டோனினஸ் மற்றும் கொமோடஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தீவிரமாகச் செயல்பட்டவராவார்.
40. எபேசுவின் அப்போலோனியஸ்
ஆற்றலும் திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற மனிதரான அப்போலோனியஸ், மொன்டானஸ், பிரிஸ்கா மற்றும் மாக்சிமில்லாவுக்கு எதிராக நன்கு பிரபலமான ஒரு நீண்ட நூலை எழுதினார். அதில், மொன்டானஸும் அவனோடு செயற்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீர்க்கதரிசிகளும் தூக்கிலிடப்பட்டு இறந்ததாக அவர் கூறுகிறார். அத்தோடு அவர் பல்வேறுபட்ட விடயங்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் பிரிஸ்கா மற்றும் மாக்சிமில்லாவைப் பற்றிய குறிப்புகளும் அடங்கும். அவர்கள் வெகுமதிகளைப் பெறவில்லை என்று கூறுவார்களானால், அவற்றைப் பெறுபவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் வெகுமதிகளைப் பெற்றார்கள் என்பதை நான் ஆயிரம் சாட்சிகளுடன் காட்டுவேன். ஏனெனில் தீர்க்கதரிசிகள் என்போர் தங்களது பிற அடையாளங்களால் உண்மையான தீர்க்கதரிசிகள் என்று நிரூபிக்கப்படுகிறார்கள். அப்படியானால் சொல்லுங்கள், ஒரு தீர்க்கதரிசி தன் தலைமுடிக்கு வண்ணச் சாயம் தீட்டுபவராக இருக்கமுடியுமா? ஒரு தீர்க்கதரிசி தன் கண் இமைகளின் மேல் அஞ்சனம் பூசிக்கொள்வாரா? ஒரு தீர்க்கதரிசி விலையுயர்ந்த ஆடைகளையும் நகைகளையும் அணிந்திருப்பாரா? ஒரு தீர்க்கதரிசி பகடை மற்றும் பலகைகளைக் கொண்டு சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவாரா? அவர் வட்டியுடன் கடன்களை வசூலிப்பாரா? இது அனுமதிக்கப்பட வேண்டிய செயலா இல்லையா என்பதற்கு அவர்கள் பதிலளிக்கட்டும். ஆனால், அவர்கள் இவ்வாறான காரியங்களைச் செய்கிறார்கள் என்பதை என்னால் காட்டமுடியும். மொன்டனிச மதக்கொள்கை தொடங்கிய நாற்பதாவது ஆண்டில் அந்தப் படைப்பை எழுதியதாக அவர் அதே புத்தகத்தில் கூறுகிறார். திருச்சபைக்கு எதிரான ஒரு பரவச நிலை தோற்றம் பெற்றது பற்றி அவர் எழுதிய ஆறு புத்தகங்களுடன் டெர்டுல்லியன் ஏழாவது புத்தகத்தைச் சேர்த்தார். இந்த ஏழாவது புத்தகம், குறிப்பாக அப்போலோனியஸுக்கு எதிரானது. அதில் அப்போலோனியஸ் மறுத்துரைத்த அனைத்தையும் பாதுகாக்க அவர் முயல்கிறார். கொமோடஸ் மற்றும் செவெரஸின் ஆட்சியின் போது அப்போலோனியஸ் தீவிரமாகச் செயல்பட்டவர் என்று அறியப்படுகிறார்.
41. அந்தியோகியாவின் செராபியன்
பேரரசர் கொமோடஸின் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் அந்தியோகியாவின் ஆயராக நியமிக்கப்பட்ட செராபியன், மொன்டானஸின் மதக்கொள்கை குறித்து காரிக்கஸ் மற்றும் பொன்டியஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், ‘புதிய தீர்க்கதரிசனம் என்று அறியப்படும் இந்தத் தவறான போதனையின் அபத்தத்தை உலகினர் அனைவரும் நிராகரிக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். தனது கூற்றுகளுக்கு வலுசேர்க்கும் வகையில், ஆசியாவில் உள்ள ஹியராபோலிஸின் மிகவும் மதிக்கப்பட்ட ஆயரான அப்போலினாரிஸிடமிருந்து வந்த கடிதங்களை அவர் உங்களுக்கு அனுப்பினார்’ என்று கூறியிருந்தார். மேலும், துன்புறுத்தல் காலத்தில் யூதர்களிடம் கட்சி மாறியிருந்த டோம்னஸுக்காக ஒரு நூலையும், பேதுரு எழுதியதாகக் கூறப்படும் நற்செய்தி குறித்த மற்றொரு படைப்பையும் அவர் எழுதினார். இந்த நூலைப் படித்து அதன்மூலம் மதக்கொள்கைக்குத் திரும்பிய சிலிசியாவிலுள்ள ரோசென்சஸ் திருச்சபைக்கும் ஒரு நூலை எழுதி இருந்தார். அத்தோடு, அவர் வாழ்ந்த துறவற வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் அவருடைய சிறு கடிதங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
42. சட்டப் பேரவை உறுப்பினர் அப்போலோனியஸ்
சட்ட சபை உறுப்பினர் அப்போலோனியஸ், பேரரசர் கொமோடஸின் காலத்தில் வாழ்ந்த ஒரு ரோமானிய சட்டசபை உறுப்பினர் ஆவார். அவர் ஒரு முறை ஒரு அடிமையால் கிறிஸ்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். இதன் காரணமாக அவர் தனது நம்பிக்கைகளை விளக்க அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு அற்புதமான நூலை எழுதி பேரவையில் வாசித்தார். இருப்பினும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை மறுக்காத வரை விடுவிக்கப்படக்கூடாது என்று கூறிய ஒரு பழைய சட்டத்தின் காரணமாக, சட்டப் பேரவை, அவரது தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படவேண்டுமென முடிவு செய்தது.
43. செசாரியாவின் தியோபிலஸ்
பேரரசர் செவெரஸின் ஆட்சிக்காலத்தில், அன்று டர்ரிஸ் ஸ்ட்ராடோனிஸ் என்று அழைக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் உள்ள செசாரியாவின் ஆயரான தியோபிலஸ், ஏனைய ஆயர்களுடன் இணைந்து, மாதத்தின் பதினான்காம் நாளில் யூதர்களுடன் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடியவர்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ள ஒரு ஆயர் பேரவைக் கடிதத்தை எழுதினார்.
44. பக்கீலஸ்
கொரிந்து நகரின் ஆயரான பக்கீலஸ், அதே பேரரசர் செவெரஸின் ஆட்சிக்காலத்தில் புகழ்பெற்றிருந்தார். அவர் அகாயாவில் இருந்த அனைத்து ஆயர்களின் பிரதிநிதியாக, ‘பாஸ்கா பண்டிகையைப் பற்றி’ என்ற ஒரு நேர்த்தியான நூலை எழுதினார்.
45. எபேசுவின் பொலிக்ரேட்ஸ்
எபேசியர்களின் ஆயரான பொலிக்ரேட்ஸ், ஆசியாவின் மற்ற ஆயர்களுடன் சேர்ந்து, சில பழங்கால வழக்கத்தின்படி மாதத்தின் பதினான்காம் நாளில் யூத சமூகத்துடன் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடும் ஒரு நீண்டகால பாரம்பரியத்தைப் பின்பற்றினார். அவர், ரோமின் ஆயரான விக்டருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், தனது நடைமுறைகள் அப்போஸ்தலன் யோவான் மற்றும் திருச்சபையின் ஆரம்பகாலத் தலைவர்களின் போதனைகளின் அடிப்படையில் அமைத்திருப்பதாக விளக்கினார். தனது கடிதத்தில், பொலிகிரேட்ஸ் தானும் தனது சக ஆயர்களும் தங்களது பழக்கவழக்கங்களை எந்த வகையிலும் மாற்றாமல் உறுதியாகப் பின்பற்றுவோம் என்பதைத் தெளிவுபடுத்தினார். ஆசியாவில் ஆண்டவரின் வருகை நாளில் மீண்டும் உயிர்த்தெழுபவர்களான, பல போற்றப்படும் புனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். பொலிகிரேட்ஸ் பல முக்கிய நபர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்: பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான பிலிப் தனது இரண்டு கன்னிப் புதல்விகளுடன் ஹியராபோலிஸில் அடக்கம் செய்யப்பட்டார்; மேலும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு எபேசுவில் மரணமடைந்த மற்றொரு மகளையும் பற்றிக் குறிப்பிட்டார். இயேசுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் என்று அறியப்பட்ட அப்போஸ்தலன் யோவானையும் அவர் குறிப்பிட மறக்கவில்லை; அவரை ஒரு வேதசாட்சி என்றும் போதகர் என்றும் விவரித்து, அவர் எபேசுவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும், மற்றொரு ஆயரும் வேதசாட்சியுமான பொலிகார்ப் மற்றும் ஸ்மிர்னாவில் அடக்கம் செய்யப்பட்ட யூமேனியாவின் திராசியாஸ் ஆகியோரையும் அவர் குறிப்பிட மறக்கவில்லை. லவோதிக்கேயாவில் அடக்கம் செய்யப்பட்ட சாகரிஸ், கடவுளுக்குப் பணிபுரிந்து சர்தீஸில் அடக்கம் செய்யப்பட்ட அண்ணகரான புனித மெலிட்டோ மற்றும் பாப்பிரஸ் போன்ற இன்னும் பல பெயர்களை அவர் குறிப்பிட்டார். இவர்கள் அனைவரும், நற்செய்தி மரபிலிருந்து சற்றும் விலகாமலும் திருச்சபை நியதியைப் பின்பற்றியும், மாதத்தின் பதினான்காம் நாளில் பஸ்கா பண்டிகையைக் கடைபிடித்தனர். உங்கள் ஊழியர்களில் மிகச் சிறியவனான நானும், பொலிகிரேட்டஸ் மற்றும் என் உறவினர்களின் போதனையின்படி, யூத மக்கள் புளித்த மாவை அகற்றும் பண்டிகையைக் கொண்டாடிய போதெல்லாம், நானும் அவர்களோடிணைந்து பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினேன். அந்தப் போதனையை நானும் பின்பற்றி வந்தேன் (ஏனெனில் என் உறவினர்களில் ஏழு பேர் ஆயர்களாக இருந்தனர், நான் எட்டாவது ஆயர்). அறுபத்தைந்து வயது நிரம்பிய இந்தக் காலகட்டத்தில், உலகெங்கிலும் உள்ள பல விசுவாசிகளுடன் இடம்பெற்ற உரையாடல்களிலிருந்து பெற்ற பல ஆண்டுகால ஞானத்துடன், அவர் வேதவாக்கியத்தின் மீதான தனது பக்தியை உறுதிப்படுத்தினார். மனிதக் கட்டளைகளைப் பின்பற்றுவதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிவதே சிறந்தது என்ற கருத்தை மேற்கோள் காட்டி, அச்சுறுத்தல்களுக்குத் தான் அடிபணியவோ அஞ்சவோ இல்லை என்று அவர் கூறினார். இந்த மேற்கோள் அவருடைய வலிமையான குணத்தையும் மன உறுதியையும் பிரதிபலித்தது. எருசலேமின் நர்சிசு திருச்சபையை வழிநடத்திய அதே காலகட்டத்தில், பேரரசர் செவெரஸின் ஆட்சிக்காலத்தில் பொலிக்ரேட்ஸ் தீவிர ஆன்மீகப் பணியாற்றி வந்தார்.
46. ஹெராக்ளிட்டஸ்
கொமோடஸ் மற்றும் செவரஸ் போன்ற பேரரசர்களின் ஆட்சிக்காலத்தில், ஹெராக்ளிட்டஸ் அப்போஸ்தலர் பணிகள் மற்றும் நிருபங்கள் மீது விளக்கவுரைகளை எழுதினார்.
47. ஜெருசலேமின் மக்சிமஸ்
அதே பேரரசர்களின் கீழ், மக்சிமஸ் ஒரு குறிப்பிட்ட நூலில், ‘தீமை எங்கே தோற்றம் பெறுகிறது?’ மற்றும் ‘பொருள் கடவுளால் உருவாக்கப்பட்டதா?’ என்ற புகழ்பெற்ற கேள்விகளை முன்வைத்தார்.
48. கேண்டிடஸ்
மேற்கூறிய பேரரசர்களின் கீழ், கேண்டிடஸ் படைப்பின் ஆறு நாட்கள் குறித்து மிகவும் போற்றத்தக்க ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.
49. அப்பியன்
பேரரசர் செவரஸின் கீழ், அப்பியனும் படைப்பின் ஆறு நாட்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.
50. செக்ஸ்டஸ்
பேரரசர் செவரஸின் ஆட்சிக்காலத்தில், செக்ஸ்டஸ் உயிர்த்தெழுதல் குறித்து ஒரு நூலை எழுதினார்.
51. அரேபியானஸ்
அதே பேரரசரின் கீழ், அரேபியானஸ் கிறிஸ்தவக் கோட்பாடு தொடர்பான சில சிறிய படைப்புகளை வெளியிட்டார்.
52. யூதாஸ்
யூதாஸ், தானியேலில் குறிப்பிடப்பட்டுள்ள எழுபது வாரங்களைப் பற்றி ஒரு விரிவான விவரத்தை எழுதி, செவெரஸின் பத்தாம் ஆண்டு வரையிலான ஒரு வரலாற்றை உருவாக்கினார். அந்துக்கிறிஸ்துவின் வருகை தனது காலத்தில் நிகழும் என்று கணித்ததன் மூலம், இந்த நூலில் அவர் ஒரு தவரைச் செய்திருந்தார். அக்காலத்தில் நிலவிய கடுமையான துன்புறுத்தல்கள் உலகின் முடிவு நெருங்கிவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாலேயே அவர் அவ்வாறு நம்பி இருக்கக்கூடும்.
53. டெர்டுல்லியன்
ஒரு மூப்பரான டெர்டுல்லியன், விக்டர் மற்றும் அப்போலோனியஸுக்குப் பிறகு இலத்தீன் எழுத்தாளர்களில் ஒரு முன்னணியில் இருந்தவராக இப்போதும் கருதப்படுகிறார். ஆப்பிரிக்காவில் உள்ள கார்தேஜைச் சேர்ந்த இவர், ஒரு பழங்காலத்தில் மாகாணங்களை ஆட்சி செய்த ஆளுநர் அல்லது நூற்றுவரின் மகனாவார். இவர் தனது கூர்மையான மற்றும் ஆற்றல்மிக்க ஆளுமைக்காக அறியப்பட்டவர். இவர் முக்கியமாக பேரரசர் செவரஸ் மற்றும் அன்டோனினஸ் காரகல்லாவின் ஆட்சிக் காலங்களில் புகழ்பெற்று விளங்கியவராவார். பெரும்பாலான மக்கள் ஏற்கனவே அறிந்த பல படைப்புகளை உருவாக்கிய பெருமை அவரையே சாரும். நான் ஒருமுறை இத்தாலியில் உள்ள கொன்கோர்டியா என்ற ஊரைச் சேர்ந்த பவுல் என்ற ஒரு வயதான மனிதரைச் சந்தித்தேன். அவர் மிகவும் இளமையாக இருந்தபோதே, ஏற்கனவே முதுமை அடைந்திருந்த ஆசீர்வதிக்கப்பட்ட சிப்ரியனுக்குச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். சிப்ரியன் எவ்வளவு ஆர்வமுள்ளவர் என்பதைத் தான் நேரில் கண்டதாகவும், அவர் ஒரு நாள் கூட டெர்டுல்லியனின் எழுத்துக்களைப் படிக்காமல் இருந்ததில்லை என்றும், மேலும் அவர் அடிக்கடி சிப்ரியனிடம், ‘ஆசிரியரைத் தாருங்கள்’ என்று கூறுவார் என்றும், இதன் மூலம் அவர் டெர்டுல்லியனையே குறிப்பிடுகிறார் என்றும் அந்த வயதான மனிதர் பவுல் கூறினார். அவர் நடுத்தர வயதை அடையும் வரை திருச்சபையில் மறைமூப்பராகப் பணியாற்றிய போதும், பின்னாளில் ரோமன் திருச்சபையின் மதகுருமார்கள் மத்தியில் காணப்பட்ட பொறாமை மற்றும் தவறான நடத்தையின் காரணமாக, அவர் மொன்டானஸின் போதனைகளை நாட நிர்பந்திக்கப்பட்டார். அதேவேளை, அவர் தனது பல படைப்புக்களில் புதிய தீர்க்கதரிசனத்தை அடிக்கடி குறிப்பிட மறக்கவில்லை.
அவர் திருச்சபைக்கு எதிராக பல நூல்களை எழுதினார், அவற்றுள் ‘அடக்க சுபாவம்’ ‘துன்புறுத்தல்’, ‘உபவாசம்,’ ‘ஒருதாரமணம்’, ‘பரவசம்’ போன்ற ஆறு நூல்களோடு, ‘அப்போலோனியஸுக்கு எதிராக’ என்ற ஏழாவது நூலும் அடங்கும். அவர் மிகவும் முதுமை வரை வாழ்ந்ததாகவும், தற்போது கிடைக்காத பல சிறிய படைப்புகளை இயற்றியதாகவும் கூறப்படுகிறது.
54. ஓரிஜென்
செவரஸ் பெர்டினாக்ஸின் பத்தாம் ஆண்டு ஆட்சியின்போது, கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோதும், அவருடைய தந்தை லியோனிடாஸ் கிறிஸ்துவுக்காக வேதசாட்சியாக மரித்தபோதும், அடமண்டியஸ் என்றும் அறியப்பட்ட ஓரிஜென் கிறிஸ்துவை நம்பியதற்காக அவர்களுடைய குடும்ப உடைமைகள் பறிக்கப்பட்டன. அவ்வேளை, சுமார் பதினேழு வயது நிரம்பிய அவர், தனது ஆறு சகோதரர்கள் மற்றும் விதவையான தாயுடன் வறுமையில் தத்தளித்தார். தனது பதினெட்டாம் வயதிலேயே அலெக்சாண்டிரியாவில் வியாபித்திருந்த தேவாலயங்களில் புதிய கிறிஸ்தவர்களுக்கு அவர் போதிக்கத் தொடங்கினார். பின்னர் இந்த நகரத்தின் ஆயரான டெமெட்ரியஸ், திருச்சபையின் மறைமூப்பரான கிளமென்ட்டின் இடத்தை நிரப்ப அவரை நியமித்தார். அதன்பின் அவர் பல ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றினார். அவருக்கு நடுத்தர வயது ஆனபோது, அகாயாவில் உள்ள தேவாலயங்களில் பல தவறான நம்பிக்கைகள் நிலவியதால், அவை பிளவுபட்டிருந்ததாலும், அவர் திருச்சபைத் தலைவர்களின் அனுமதியுடன் பாலஸ்தீனம் வழியாக கிரேக்க நாட்டின் ஏதென்ஸுக்குப் பயணம் செய்தார். செசரியா மற்றும் எருசலேமின் ஆயர்களான தியோக்டிஸ்டஸ் மற்றும் அலெக்சாண்டரால் மறைமூப்பராக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் டெமெட்ரியஸைக் கோபப்படுத்தினார். இதனால் கடும் கோபமடைந்த டெமெட்ரியஸ் அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் எல்லா இடங்களிலும் இவரைப் பற்றித் தவறாக எழுதினார். அவர் செசரியாவுக்குச் செல்வதற்கு முன்பு, ஆயர் செபிரினஸின் கீழ் ரோமில் பணியாற்றியதாக அறியப்படுகிறது. அலெக்சாண்டிரியாவுக்குத் திரும்பிய உடனேயே, அவர் ஹெராக்ளஸை குருவாக நியமித்தார்; ஹெராக்ளஸ் தொடர்ந்து தனது தத்துவஞானியின் உடையை அணிந்திருந்த போதிலும், மறைக்கல்வி மாணவர்களுக்கான பள்ளியில் தனது உதவியாளராகவும் பணியாற்றினார். பின்னர், ஹெராக்லாஸ், டெமெட்ரியஸுக்குப் பிறகு அலெக்சாண்டிரியா திருச்சபையின் ஆயரானார். செசாரியாவின் ஆயரான ஃபிர்மிலியானஸ், கப்படோசியாவின் அனைத்து ஆயர்களுடன் சேர்ந்து, ஓரிஜனைத் தேடிச் சென்று நீண்ட காலம் அவரை உபசரித்ததைத் தொடர்ந்து அவரது மகத்தான புகழ் தெளிவாகிறது. பின்னர், புனிதத் தலங்களைப் பார்வையிட அவர் பாலஸ்தீனத்திற்குப் பயணம் செய்தபோது, செசாரியாவில் தங்கி ஓரிஜனிடமிருந்து புனித நூல்கள் குறித்து விரிவான போதனைகளைப் பெற்றார். மேலும், பேரரசர் அலெக்சாண்டரின் தாயும், பக்தியுள்ள பெண்மணியுமான மம்மியாவின் வேண்டுகோளின் பேரில், அவர் அந்தியோக்கியாவிற்குச் சென்ற அவர், அங்கு அவர் மிகவும் மதிக்கப்பட்டார். ரோமானியத் தலைவர்களில் முதன்மையானவரான பேரரசர் பிலிப்பிற்கும், தனது தாயாருக்கும் அவர் எழுதிய கடிதங்கள் இன்றும் உள்ளன; கிறிஸ்தவத்தைத் தழுவுமாறு அவரை வலியுறுத்தி அவர் கடிதங்களை அனுப்பினார். அதேநேரம், அவர் புனித நூல்களைப் படிப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே; அந்த அளவிற்கு தன் காலத்துக்கும் தன் மக்களுக்கும் எதிரான மனப்பான்மையுடன் எபிரேய மொழியைக் கற்றுக்கொண்டார் என்பதையும் அறியாதோர் யார் இருக்கிறார்கள்? அவர் தனது போதனைகளை ஆதரிக்கும் முயற்சியாக, எபிரேய மொழியிலிருந்த பழைய ஏற்பாட்டை கிரேக்க மொழிக்கு மாற்றியமைக்கப்பட்ட மொழிபெயர்ப்பை (Septuagint) எடுத்துக்கொண்டு, அக்குவீலா, மதமாற்றத்தை ஏற்றுக்கொண்ட பொன்டிகஸ், எபோனியரான தியோடோஷியன் மற்றும் மத்தேயுவின் நற்செய்திக்கு விளக்கவுரைகளையும் எழுதிய சிம்மாக்கஸ் ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் உட்பட மற்ற மொழிபெயர்ப்புகளையும் ஒரே படைப்பாகத் தொகுத்த பெருமைக்குரியவர் இவர். இவை தவிர, அவருடைய நூலகத்திலிருந்து நமக்குக் கிடைத்த ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது மொழிபெயர்ப்புகளையும் அவர் மிகுந்த கவனத்துடன் கண்டுபிடித்து, ஏனைய பிரதிகளுடன் ஒப்புநோக்கிப் பார்த்தார். மேலும், நான் பவுலாவுக்கு எழுதிய கடிதத் தொகுதிகளிலும், வரோவின் படைப்புகளுக்கு எதிராக நான் எழுதிய கடிதத்திலும் அவருடைய படைப்புகளின் பட்டியலை நான் கொடுத்திருப்பதால், இப்போது அதைத் தேவையற்றதாகக் கருதுகிறேன். ஆயினும், அவருடைய நீடித்த திறமையைக் குறிப்பிடத் தவறவில்லை. அவர் அட்சரகணிதம், எண்கணிதம், இசை, இலக்கணம் மற்றும் எழுத்து, சொல்லாட்சிக் கலை ஆகியவற்றுடன் தர்க்கவியலையும் புரிந்துகொண்டிருந்தார்; மேலும், அனைத்து சிந்தனையாளர் குழுக்களுக்கும் கற்பித்தார். அந்த வகையில், மதச்சார்பற்ற இலக்கியத்திலும் அவருக்கு விடாமுயற்சியுள்ள மாணவர்கள் இருந்தனர். மேலும் அவர் அவர்களுக்கு தினமும் விரிவுரை ஆற்றினார்; அவரிடம் திரண்டு வந்த மாணவ கூட்டங்கள் வியக்கத்தக்கவையாக இருந்தன. இந்த மதச்சார்பற்ற இலக்கியத்தின் மூலம், அவர்களைக் கிறிஸ்துவின் விசுவாசத்தில் நிலைநிறுத்த முடியும் என்ற நம்பிக்கையில் அவர் இவற்றை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். தன் கைகளால் மரண தண்டனைக்குள்ளான பிலிப்பின் மதத்தின் மீது கடும் கோபம் கொண்டிருந்த தேசியஸின் ஆட்சியில் கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்ட அந்தத் துன்புறுத்தலின் கடுமையைப் பற்றி விரிவாகக் கூற வேண்டிய அவசியமில்லை என்றெண்ணுகிறேன். ரோமானியத் திருச்சபையின் ஆயரான ஃபேபியானஸின் மரணத்திற்கு வழிவகுத்த அதே துன்புறுத்தல்தான் இதுவும். அதேவேளை, ஜெருசலேம் மற்றும் அந்தியோக்கியாத் திருச்சபைகளின் தலைவர்களான அலெக்சாண்டரும் பாபிலாசும், கிறிஸ்து மீதான தங்கள் விசுவாசத்தின் நிமித்தம் உறுதியாக இருந்ததால் சிறையில் தள்ளப்பட்டனர். ஓரிஜனுக்கு என்ன ஆனது என்பதைப் பற்றி எவரேனும் அறிய விரும்பினால், அந்தத் துன்புறுத்தலுக்குப் பிறகு அவர் பல்வேறுபட்டோருக்கு அனுப்பிய அவரது சொந்தக் கடிதங்களைப் பார்வையிடுவதன் மூலமும், ஓரிஜனை ஏற்றுக்கொண்டிருக்கும் செசாரியாவைச் சேர்ந்த யூசிபியஸின் திருச்சபை வரலாற்றின் ஆறாவது புத்தகத்தையும், அவரது ஆறு தொகுதிகளையும் வாசித்தறிவதன் மூலமும் எளிதாக அறிந்துகொள்ளமுடியும்.
அவர் கால்லஸ் மற்றும் வொலுசியானஸ் போன்றோரின் ஆட்சிக் காலம் வரை, அதாவது தனது அறுபத்தொன்பதாவது வயது வரை வாழ்ந்து, டியர் என்ற இடத்தில் மரித்து, அதே நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
55. அம்மோனியஸ்
அம்மோனியஸ் ஆழ்ந்த தத்துவ அறிவும் திறமையும் கொண்ட ஒரு மனிதர். அவர் காலத்தில் அலெக்சாண்டிரியாவில் நன்கு அறியப்பட்டிருந்தவராக வலம் வந்தார். அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று தான் அவர் உருவாக்கிய ‘மோயீசன் மற்றும் இயேசுவின் இணக்கம் குறித்து’ என்ற விரிவான படைப்பும், செசாரியாவின் யூசிபியஸ் பின்னாளில் மேற்கோள் காட்டிய நற்செய்தி விதிகளும் ஆகும். போர்பிரி (Porphyry) என்பவர் அம்மோனியஸ் ஒரு கிறிஸ்தவராக இருந்து, பிறகு மீண்டும் புறச்சமயத்திற்குத் திரும்பியதாகத் தவறாகக் கூறினார். ஆனால் அவர் தன் வாழ்நாள் இறுதிவரை ஒரு கிறிஸ்தவராகவே வாழ்ந்தார் என்பது தெளிவாகிறது.
56. திருத்தொண்டர் அம்ப்ரோஸ்
முதலில் மார்சியோனைப் பின்பற்றியவரும், பின்னர் ஓரிஜனால் நெறிப்படுத்தப்பட்டவருமான அம்பிரோசியஸ், திருச்சபையில் ஒரு திருத்தொண்டராகப் பணியாற்றியதோடு, அவர் ஆண்டவரின் சாட்சியாகப் பெரிதும் மதிக்கப்பட்டார். ஓரிஜனின் ‘வேதசாட்சியம் குறித்து’ என்ற நூல், அவருக்கும் குருவான புரோட்டோக்டெட்டஸுக்கும் எழுதப்பட்டது. அவரது உதவி, பண உதவி மற்றும் விடாமுயற்சி காரணமாக ஓரிஜன் பல நூல்களை எழுதினார். அவரது நல்ல குணத்திற்கு ஏற்றவாறு, அவருக்கும் கணிசமான எழுதும் ஆற்றல் இருந்தது; இது ஓரிஜனுக்கு அவர் எழுதிய கடிதங்களில் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் அவர் ஓரிஜனுக்கு முன்பே இறந்துவிட்டார். செல்வந்தராக இருந்தும், தனது வயதான மற்றும் ஏழை நண்பருக்கு உயிலில் எதையும் விட்டுச் செல்லவில்லை என்ற காரணத்திற்காக, அவர் பலரால் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தார்.
57. ட்ரிஃபோ
ஒரிஜனின் மாணவரான ட்ரிஃபோ, அவரிடமிருந்து சில கடிதங்களைப் பெற்றார் என்பதும், அவர் திருமறையில் ஆழ்ந்த அறிவுடையவராக இருந்தார் என்பதும் அவருடைய பல படைப்புகளில் தெளிவாகத் தெரிகிறது. உபாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செம்மறியாட்டுக் கிடாரியைப் பற்றிய அவருடைய நூலிலும், ஆதியாகமத்தில் பதிவுசெய்யப்பட்டபடி ஆபிரகாம் நிறைவேற்றிய புறா, காட்டுப் புறா மற்றும் கன்றுகளின் பலிகள் பற்றி விவாதிக்கும் பகுதிகள் அவருடைய படைப்பில் காணப்படுகிறது.
58. மினுசியஸ் ஃபீலிக்ஸ்
ரோமைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரான மினுசியஸ் ஃபீலிக்ஸ், ஒரு கிறிஸ்தவருக்கும் கிறிஸ்தவரல்லாதவருக்கும் இடையிலான ‘ஓக்டேவியஸ்’ என்ற உரையாடலை எழுதினார். மேலும், ‘விதியைப் பற்றி, அல்லது கணிதவியலாளர்களுக்கு எதிராக’ என்ற மற்றொரு புத்தகமும் அவருடையது என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்தப் புத்தகம் ஒரு திறமையான எழுத்தாளரால் எழுதப்பட்டிருந்தாலும், முந்தைய புத்தகத்தைப் போல் இது இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. லாக்டான்ஷியஸும் தனது எழுத்துக்களில் இந்த மினுசியஸை பற்றிக் குறிப்பிடுகிறார்.
59. திருத்தந்தை கேயஸ்
செபிரினஸின் ஆட்சிக் காலத்திலும், செவரஸின் மகனான அன்டோணினஸின் ஆட்சியின் கீழும் ரோமின் ஆயராக இருந்த திருத்தந்தை கேயஸ், மொன்டானஸின் ஆதரவாளரான புரோக்குலஸுக்கு எதிராக ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். புதிய தீர்க்கதரிசனத்தை ஆதரிப்பதில் புரோக்குலஸ் காட்டிய பொறுப்பற்ற தன்மைக்காக அவர் அவரைக் கடுமையாக விமர்சித்தார். அதே நூலில், கேயஸ் பவுல் எழுதிய பதின்மூன்று கடிதங்களைப் பட்டியலிட்ட அதேவேளை, ‘எபிரேயருக்கு’ என்று அழைக்கப்படும் பதினான்காவது கடிதம் பவுலால் எழுதப்படவில்லை என்றும், அது அப்போஸ்தலரிடமிருந்து வந்ததாகவும், இதுவரை ரோமானியர்களால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் சாடியிருந்தார்.
60. பெரில்லஸ்
அரேபிய நாட்டின் போஸ்ட்ராவில் ஆயராகப் பணியாற்றிய பெரில்லஸ், சிறிது காலம் திருச்சபையை மிகுந்த சிறப்புடன் வழிநடத்தினார். ஆனால் இறுதியில் கிறிஸ்து அவதாரத்திற்கு முன்பு வாழ்ந்தார் என்று கூறும் மதக்கொள்கையில் வீழ்ந்தார். ஓரிஜனால் நெறிப்படுத்தப்பட்ட பிறகு அவர் பல சிறு படைப்புகளை, குறிப்பாக ஓரிஜனுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் கடிதங்களை எழுதினார். ஓரிஜன் அவருக்கு எழுதிய கடிதங்களும், அவர்கள் இருவரும் பல்வேறு மதங்களுக்கு எதிரான கொள்கைகளைப் பற்றி விவாதிக்கும் உரையாடலும் நம்மிடம் உள்ளன. அவர், மம்மியாவின் மகனான அலெக்சாண்டரின் ஆட்சியின் போதும், அவருக்குப் பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மாக்சிமினஸ் மற்றும் கோர்டியானஸ் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் குறிப்பிடத்தக்க புகழுடன் விளங்கினார்.
61. ஹிப்போலிட்டஸ்
ஏதோ ஒரு திருச்சபையின் ஆயரான ஹிப்போலிட்டஸ் (அந்த நகரத்தின் பெயரை என்னால் அறிய முடியவில்லை), ‘பாஸ்கா பெருவிழாவின் கணக்கீடு’ மற்றும் பேரரசர் அலெக்சாண்டரின் முதல் ஆண்டு வரையிலான காலவரிசை அட்டவணைகள் என்ற நூலை எழுதினார். கிரேக்கர்களது ἐ κκαιδεκαετηρίδα என அழைக்கப்படும் பதினாறு ஆண்டு சுழற்சியையும் அவர் ஆராய்ந்தார். இது யூசிபியஸை பத்தொன்பது ஆண்டு சுழற்சியை உருவாக்க தூண்டியது. மேலும், அவர் வேதாகமத்துக்கு பல விளக்கவுரைகளை எழுதினார். அவற்றுள், படைப்பின் ஆறு நாட்கள் குறித்தும், யாத்திராகமம் குறித்தும், உன்னதப் பாடல் குறித்தும், ஆதியாகமம் குறித்தும், சகரியா குறித்தும், சங்கீதங்கள் குறித்தும், ஏசாயா குறித்தும், தானியேல் குறித்தும், வெளிப்படுத்தல் குறித்தும், நீதிமொழிகள் குறித்தும், பிரசங்கி குறித்தும், சவுல் குறித்தும், பைத்தோனிஸ்ஸா குறித்தும், அந்திக்கிறிஸ்து குறித்தும், உயிர்த்தெழுதல் குறித்தும், மார்சியனுக்கு எதிராக, பஸ்கா பண்டிகை குறித்தும், எல்லா மதங்களுக்கு எதிரான கொள்கைகள் குறித்தும் போன்ற தலைப்புகளிலான நூல்களையும், இவற்றுள் பிரதானமாக, ‘நம்முடைய கர்த்தரும் இரட்சகருமானவரின் துதி பற்றிய’ என்ற தலைப்பிலான ஒரு அறிவுரையும் அடங்கும். அந்த அறிவுரையில், ஓரிஜனின் முன்னிலையில் திருச்சபையினரிடம் உரையாற்றியதைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். மார்சியன் மதங்களுக்கு எதிரான கொள்கையிலிருந்து உண்மையான விசுவாசத்திற்கு ஓரிஜனால் மனமாற்றம் பெற்றவர் என நாம் முன்பு குறிப்பிட்ட அம்ப்ரோசியஸ், ஹிப்போலிட்டஸால் தூண்டப்பட்டு வேதாகமத்தின் மீது விளக்கவுரைகளை எழுதுமாறு ஓரிஜனை ஊக்குவித்தார். அவர் அவனுக்கு ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட செயலாளர்களை நியமித்து, அவர்களின் செலவுகளை அவரே ஏற்றுக்கொண்டார். அதே எண்ணிக்கையிலான பிரதி செய்வோரையும் நியமித்திருந்தார். அத்தோடு, குறிப்பிடத்தக்க ஆர்வத்துடன் அவனிடமிருந்து தினசரி கடமைகளின் விபரங்களைக் கோரினார். இது, ஓரிஜென் தனது கடிதங்கள் ஒன்றில் அவரைத் தனது ‘பணியாசிரியர்’ என்று குறிப்பிடுவதற்கு வழிவகுத்தது.
62. கப்படோசியாவின் அலெக்சாண்டர்
கப்படோசியாவின் ஆயரான அலெக்சாண்டருக்குப் புனித ஸ்தலத்துக்குச் செல்ல வேண்டும் என்ற தீவிர அவா இருந்தபடியால் அவர் ஜெருசலேமுக்குச் சென்றார். அக்காலத்தில், அந்த நகரத்தின் வயதான ஆயரான நர்சிசஸ் திருச்சபையை வழிநடத்திக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலையில் ஒரு ஆயர் புனித அரியணையில் அமரும் பொருட்டு நகரத்திற்குள் பிரவேசிப்பார் என்று நர்சிசஸுக்கும் அவருடைய இணை மதகுருமார்களுக்கும் முன்னறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க பாலஸ்தீனத்தின் அனைத்து ஆயர்களும் கூடினர். குறிப்பாக இதுகுறித்து வற்புறுத்திய ஆயரான நர்சிசஸ், எருசலேமில் உள்ள திருச்சபையின் தலைமைப் பொறுப்பை அலெக்சாண்டர் ஏற்பதை உறுதி செய்தார். திருச்சபை சமாதானம் பற்றி அந்தியோக்கியர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களில் ஒன்றில், முன்பு ஆயர் பதவியை வகித்தவரும் இப்போது, சுமார் நூற்றுப்பதினாறு வயதில் தனது ஜெபங்களால் தனக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பவருமான நர்சிசஸைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களுக்குள் ஒற்றுமை நிலவ வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். மேலும், அலெக்சாண்டிரியாவின் மறைமூப்பரான கிளமென்ட் மூலம் அந்தியோக்கியர்களுக்கு மற்றொரு கடிதத்தையும், ஓரிஜனை மறைமூப்பராக நியமித்ததாகக் கூறிய டெமெட்ரியஸுக்கு எதிராக, அவரைப் பாதுகாக்கும் நோக்கில் ஓரிஜனுக்கு மற்றொரு கடிதத்தையும் அவர் எழுதினார். அதேவேளை, அவர் பல்வேறுபட்டோருக்கு எழுதிய வேறு பல கடிதங்களும் உள்ளன. டேசியசால் வழிநடத்தப்பட்ட ஏழாவது துன்புறுத்தலின் போது, அந்தியோக்கியாவின் பாபிலாஸ் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு முன், செசரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு அவர் கிறிஸ்துவை அறிக்கையிட்டதற்காக ஒரு வேதசாட்சியாக மரித்தார்.
63. ஆப்பிரிக்கரான ஜூலியஸ்
‘காலவரிசை என்றால் என்ன’ என்ற தலைப்பில் ஐந்து தொகுதிகளை எழுதியதற்காக அறியப்பட்ட ஜூலியஸ் ஆப்பிரிக்கனஸ், மாக்ரினஸுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மார்கஸ் ஆரேலியஸ் அன்டோனினஸின் ஆட்சிக்காலத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். எம்மாவுஸ் நகரை மீட்டெடுக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது; அந்நகரம் பின்னர் நிக்கோபோலிஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றது. சூசன்னா பற்றிய கேள்வி குறித்து அவர் ஓரிஜனுக்கு எழுதிய ஒரு கடிதம் உள்ளது. அதில், இந்தக் கதை எபிரேய மொழியில் இல்லை என்றும், ‘பிரினோஸ்’ மற்றும் ‘பிரிசாய்’, ‘ஸ்கினோஸ்’ மற்றும் ‘ஸ்கிசாய்’ ஆகிய சொற்களின் சொற்பிறப்பியல், எபிரேய சொற்பிறப்பியலுடன் ஒத்துப்போகவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதுகுறித்து ஓரிஜன் நன்கு ஆராய்ந்து ஒரு அறிவார்ந்த கடிதம் மூலம் பதிலளித்தார். அதில், மத்தேயு மற்றும் லூக்கா பதிவு செய்துள்ளபடி, நமது இரட்சகரின் வம்சாவளியில் காணப்படும் முரண்பாடுகளைப் பற்றி அவர் விரிவாக விவாதித்துள்ளார்.
64. ஜெமிமஸ்
அந்தியோகியா திருச்சபையின் குருவான ஜெமினஸ், பேரரசர் அலெக்சாண்டர் மற்றும் அந்தியோகியாவின் ஆயரான செபென்னஸ் ஆகியோரின் காலத்தில் சில குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதினார். குறிப்பாக ஹெரக்ளாஸ் அலெக்சாந்திரியா திருச்சபையின் திருத்தந்தையாக நியமிக்கப்பட்ட காலகட்டத்தில் சில மகத்தான படைப்புகளை இவர் இயற்றினார்.
65. கிரெகரி தௌமடர்கஸ்
பொந்துஸில் உள்ள நியோகேசரியாவின் ஆயரான தியோடரஸ் (பின்னர் கிரெகரி என்று அழைக்கப்பட்டவர்), மிகவும் இளம் வயதிலேயே தனது சகோதரர் அதெனோடரஸுடன் சேர்ந்து கப்படோசியாவிலிருந்து பெரிட்டஸுக்கும், அங்கிருந்து பாலஸ்தீனத்தில் உள்ள கேசரியாவுக்கும் கிரேக்க மற்றும் இலத்தீன் இலக்கியம் கற்கச் சென்றார். ஓரிஜன் அவர்களின் அசாதாரணமான மற்றும் இயல்பான திறமையை அடையாளம் கண்டு, அவர்களைத் தத்துவத்தில் ஆழமாக ஈடுபட ஊக்குவித்தார். படிப்படியாக அவர்களைக் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் போதனைகளுக்கு அறிமுகப்படுத்தினார், இது அவர்களைத் தனது சீடர்களாக மாற்றியது. ஓரிஜெனின் கீழ் ஐந்து ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் தங்கள் தாயகத்துக்குத் திரும்பினர். புறப்படுவதற்கு முன்பு, தியோடரஸ் ஓரிஜெனுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஒரு புகழுரையை எழுதினார். அதை ஓரிஜென் முன்னிலையில் ஒரு பெரிய சபையில் சமர்ப்பித்தார். இந்தப் புகழுரை இன்றும் பிரபலமாக உள்ளது.
அத்தோடு, அவர் ‘பிரசங்கி’ என்ற புத்தகத்திற்கு ஒரு சுருக்கமான, ஆனால் மதிக்கப்படக்கூடிய விளக்கவுரையை இயற்றினார். அத்துடன், குறிப்பாக அவர் ஆயராக இருந்தபோது நிகழ்த்திய அற்புதங்களை எடுத்துரைத்து, திருச்சபைகளின் நற்பெயரை பெரிதும் உச்சத்துக்கு கொண்டுசென்ற வேறு கடிதங்களையும் எழுதியதாக வதந்திகள் அடிபடுகின்றன.
66. திருத்தந்தை கொர்னேலியஸ்
ரோமின் ஆயரான கொர்னேலியசுக்கு சிப்ரியனின் எட்டு கடிதங்கள் கிடைத்தன; அவையாவன, அந்தியோகியா திருச்சபையின் ஆயரான ஃபேபியஸுக்கு ரோமானிய, இத்தாலிய மற்றும் ஆப்பிரிக்க சங்கங்கள் குறித்து ஒரு கடிதத்தையும், நோவாஷியன் மற்றும் விசுவாசத்தை இழந்தவர்கள் குறித்து மற்றொரு கடிதத்தையும், சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மூன்றாவது கடிதத்தையும், மற்றும் அதே ஃபேபியஸுக்கு மிகவும் விரிவான நான்காவது கடிதத்தையும் எழுதி இருந்தார். நான்காவது கடிதத்தில் நோவாஷியன் மதக்கொள்கையின் காரணங்களும் அதன் சாபமும் அடங்கியிருந்தன. அவர் காலஸ் மற்றும் வொலுசியானஸ் ஆகியோரின் கீழ் இரண்டு ஆண்டுகள் திருச்சபையை ஆட்சி செய்தார். அவர் கிறிஸ்து நிமித்தம் ஒரு வேதசாட்சியாக மகுடம் பெற்றார். அவருக்குப் பிறகு லூசியஸ் பதவியேற்றார்.
67. சிப்ரியன்
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சிப்ரியன் ஆரம்பத்தில் ஒரு சொல்லாட்சிக் கலை ஆசிரியராக அங்கீகாரம் பெற்றார். பின்னர், அவருக்குப் பெயரை வழங்கிய குருவான செசிலியஸ் கொடுத்த ஊக்கத்தால் அவர் கிறிஸ்தவத்தைத் தழுவி, தனது செல்வம் அனைத்தையும் ஏழைகளுக்குத் தாராளமாக நன்கொடையாக வழங்கினார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவர் குருத்துவப் பதவிக்கு நியமிக்கப்பட்டு, கார்த்தேஜின் ஆயரானார். அவருடைய படைப்புகளைப் பட்டியலிடத் தேவையில்லை, ஏனெனில் அவை சூரியனை விடப் பிரகாசமாக ஒளிர்கின்றன.
எட்டாவது துன்புறுத்தல் காலத்தின் போது, பேரரசர்கள் வலேரியன் மற்றும் காலியனஸ் ஆட்சியில் அவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இது ரோமில் கொர்னேலியசுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அதே நாளில் நிகழ்ந்தது, அதே ஆண்டில் அல்ல.
68. பொன்டியஸ்
சிப்ரியனின் திருத்தொண்டரான பொன்டியஸ், அவர் இறக்கும் வரை அவருடன் நாடுகடத்தப்பட்டிருந்தார். அவர் ‘சிப்ரியனின் வாழ்வையும் மரணத்தையும் பற்றி’ ஒரு முக்கியமான நூலை எழுதினார்.
69. அலெக்சாண்டிரியாவின் தியோனிசியஸ்
அலெக்சாண்டிரியா திருச்சபையின் தலைவரான தியோனிசியஸ், ஒரு மூத்த குருவாகவும் ஹெராக்ளாஸின் கீழ் போதனாப் பள்ளிக்குப் பொறுப்பாளராகவும் இருந்தார். மேலும் அவர் ஓரிஜனின் மிகச் சிறந்த மாணவராகவும் இருந்த அவர், தவறான நம்பிக்கைகளைக் கொண்டவர்களுக்கு மறுஞானஸ்நானம் அளிப்பது குறித்த சிப்ரியன் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடியிருந்த திருச்சபையின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, அதுகுறித்து அவர் பலருக்கும் கடிதங்களை அனுப்பினார். அவை இன்றும் காணப்படுகின்றன; அந்தியோக்கியா திருச்சபையின் தலைவரான ஃபேபியஸுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு கடிதத்தையும், ஹிப்போலிட்டஸால் கொடுக்கப்பட்ட ரோமில் உள்ள மக்களுக்கு மற்றொன்றையும், ஸ்டீவனைப் பின்தொடர்ந்த சிஸ்டஸுக்கு இரண்டு கடிதங்களையும், ரோமில் உள்ள திருச்சபையின் மூத்த குருக்களான பிலேமோன் மற்றும் தியோனிசியஸுக்கு இரண்டு கடிதங்களையும், பின்னர் ரோமில் திருச்சபையின் தலைவரான அதே தியோனிசியஸுக்கு மற்றொன்றையும் எழுதினார்; மேலும், நோவேஷியனுக்கு, ‘தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக அவர் ரோமில் உள்ள திருச்சபையின் தலைவராக ஆக்கப்பட்டார்’ என்ற தங்கள் கூற்றைப் பற்றி விவாதித்தனர். இந்தக் கடிதத்தின் தொடக்கம் பின்வருமாறு: டியோனிசியஸ் தன் சகோதரனான நோவேஷியனுக்கு எழுதுவது யாதெனில், நீ சொல்வது போல் விருப்பமின்றிக் குருப்பட்டம் பெற்றிருந்தால், நீ மனமுவந்து அப்பதவியிலிருந்து விலகும்போது அதை நிரூபிக்கக் கடவாயாக, என்று கூறியிருந்தார்.
தியோனிசியஸ் மற்றும் டிடீமஸுக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதமும், பஸ்கா பண்டிகை தொடர்பான பல விழாக் கடிதங்களும் உள்ளன; இவை அனைத்தும் சொற்பொழிவு நடையில் எழுதப்பட்டுள்ளன. அவர் நாடுகடத்தலைப் பற்றி அலெக்சாண்டிரியா திருச்சபைக்கு ஒன்றையும், எகிப்தின் ஆயரான ஹியராக்ஸுக்கு மற்றொன்றையும், மேலும் மரணம், ஓய்வுநாள் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றைப் பற்றி பல கடிதங்களையும் எழுதியிருந்தார். அவர் டெசியஸின் துன்புறுத்தலைப் பற்றி ஹெர்மாம்மன் மற்றும் பிறர் மத்தியில் உரையாற்றினார். மேலும் உருவத்தில் ஆயிரம் ஆண்டு ஆட்சி இருக்கும் என்று தனது எழுத்துக்கள் மூலம் கூறிய ஆயரான நேபோஸுக்கு எதிராக இரண்டு நூல்களையும் எழுதினார். அவர் யோவானின் வெளிப்படுத்தல் நூலை விடாமுயற்சியுடன் ஆராய்ந்து, சபெல்லியஸுக்கு எதிராக எழுதினார், அத்துடன் பெர்னீஸின் ஆயரான அம்மோன், டெலஸ்போரஸ் மற்றும் யூப்ரானோர் ஆகியோருக்கும் கடிதங்களை எழுதினார். அவர் ரோமின் ஆயரான டியோனிசியஸுக்கு நான்கு புத்தகங்களையும், மனந்திரும்புதலைப் பற்றி லவோதிக்கேயர்களுக்கும், வேதசாட்சிய மரணத்தைப் பற்றி ஓரிஜெனுக்கும், மனந்திரும்புதலைப் பற்றி ஆர்மீனியர்களுக்கும் கடிதங்களையும் எழுதிய அவர், பாவ ஒழுங்கு குறித்தும் விவாதித்தார். அவர் இயற்கையைப் பற்றி தீமோத்தேயுவுக்கும், சோதனையைப் பற்றி யூப்ரானோர்வுக்கும் மற்றும் பசிலிடஸுக்கும் பல கடிதங்களை எழுதினார், அவற்றில் ஒன்றான ‘பிரசங்கி’ என்ற புத்தகத்திற்கு விளக்கவுரைகளை எழுதத் தொடங்கியதாகவும் அவர் கூறுகிறார். அவர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, சமோசாட்டாவைச் சேர்ந்த பவுலுக்கு எதிராக எழுதிய முக்கியமான கடிதமும் அடங்கியுள்ளது. அவர் கலினேனுவின் பன்னிரண்டாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் இறந்தார்.
70. நோவேஷியானஸ்
ரோமில் ஒரு குருவாக இருந்த நோவேஷியானஸ், கொர்னேலியஸ் வகித்த தலைமைப் பதவியைக் கைப்பற்ற முயன்றார். தங்கள் நம்பிக்கையை மறுத்துத் திரும்ப விரும்பியவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் மூலம், கிரேக்க மொழியில் கெதாரி (Cathari) என்றும் அழைக்கப்படும் நோவேஷியர்களின் நம்பிக்கைகளை அவர் உருவாக்கினார். இந்தக் கருத்துக்கு ஊட்டமளித்து வளர்த்துவிட்ட நோவாட்டஸ், சிப்ரியனுடன் பணியாற்றிய ஒரு பாதிரியார் ஆவார். அவர் பாஸ்கா பண்டிகை, ஓய்வுநாள், விருத்தசேதனம், பாதிரியார் பணி, ஜெபம், யூத உணவு, வைராக்கியம், மற்றும் அட்டாலஸ் போன்ற தலைப்புகளில் பல படைப்புகளை எழுதிய அவர் ‘திரித்துவம் பற்றி’ என்ற ஒரு பெரிய நூலையும் எழுதினார். இது டெர்டுல்லியனின் படைப்பின் ஒரு வகையான சுருக்கமாகும், இதை பலர் தவறுதலாக சிப்ரியனுக்கு உரியதாகக் கருதுகின்றனர்.
71. மல்கியன்
மல்கியன் அந்தியோக்கியாவில் ஒரு திறமையான திருச்சபைத் தலைவராக இருந்தார், அவர் சொல்லாட்சிக் கலையை வெற்றிகரமாகக் கற்பிப்பதில் பெயர் பெற்றவர். அர்டெமோனின் கருத்துக்களை திருச்சபைக்குக் கொண்டு வந்த அந்தியோக்கியாவின் ஆயரான சமோசாட்டாவைச் சேர்ந்த பவுலுடன் அவர் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றார். இந்தக் கலந்துரையாடல் சுருக்கெழுத்தாளர்களால் பதிவு செய்யப்பட்டு இன்றும் வழக்கத்தில் உள்ளது. பேரவையின் சார்பாக மல்கியன், ரோம் மற்றும் அலெக்ஸாந்திரியாவின் ஆயர்களான டயோனிசியஸ் மற்றும் மாக்சிமஸ் ஆகியோருக்கு ஒரு நீண்ட கடிதத்தையும் எழுதினார். அவர் கிளோடியஸ் மற்றும் ஆரேலியானஸ் ஆகியோரின் ஆட்சி நடைபெற்ற காலங்களில் தீவிரமாகச் செயல்பட்டவராவார்.
72. அர்கெலோஸ்
அர்கெலோஸ் மெசபத்தோமியாவின் ஆயராக இருந்தார். பாரசீகத்திலிருந்து வந்த மானிக்கேயஸுடன் நடத்திய உரையாடலைப் பற்றி சிரியாக் மொழியில் ஒரு நூலை எழுதினார். இந்த நூல் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பலரிடமும் உள்ளது.
ஆரேலியானஸ் மற்றும் டாசிட்டஸுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பேரரசர் புரோபஸின் காலத்தில் அர்க்கெலஸ் வாழ்ந்தார்.
73. அனடோலியஸ்
சிரியாவிலுள்ள லவோதிக்கேயாவின் ஆயராகப் பணியாற்றியவரும், பேரரசர்கள் புரோபஸ் மற்றும் காரஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அலெக்சாண்டிரியாவில் இறைப்பணியாற்றிய அனடோலியஸ், எண்கணிதம், அட்சரகணிதம், வானியல், இலக்கணம், சொல்லாட்சி மற்றும் தர்க்கவியல் போன்ற பல்வேறு துறைகளில் அபாரமான அறிவுத்திறன் பெற்றிருந்தார். ‘பாஸ்கா பண்டிகையைப் பற்றி’ என்ற தலைப்பிலான அவரது படைப்பிலும், ‘எண்கணிதத்தின் அடிப்படைகள்’ என்ற பத்து தொகுதிகள் கொண்ட தொடரிலும் அவரது அபார அறிவுத்திறன் வெளிப்படுகிறது.
74. பெட்டவ்வின் விக்டோரினஸ்
பெட்டாவ் நகரத்து ஆயரான விக்டோரினஸ், இலத்தீன் மற்றும் கிரேக்கம் ஆகிய மொழிகளில் சமமான புலமை பெற்றிருக்கவில்லை. இதன் காரணமாக, அவருடைய எழுத்துக்கள் சிந்தனையில் உன்னதமானவையாக இருந்தாலும், நடையில் அவ்வளவு வலிமையானவையாக இல்லை. அவருடைய படைப்புகளில் ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், ஏசாயா, எசேக்கியேல், ஆபகூக், பிரசங்கி, உன்னதப் பாடல், யோவானின் வெளிப்படுத்தல், சகல மதக்கொள்கைகளுக்கு எதிரான நூல் மற்றும் பலவற்றின் விளக்கவுரைகள் அடங்கும். இறுதியில், அவர் வேசாட்சி என்ற மகுடத்தை அணிந்தவராய் உயிர்நீத்தார்.
75. பாம்ஃபிலஸ்
செசாரியாவின் ஆயரான யூசிபியஸின் ஆதரவாளரும் குருவுமான பாம்ஃபிலஸ், புனித இலக்கியத்தின் மீது ஆழ்ந்த பேரார்வம் கொண்டிருந்தார். அவர் ஓரிஜனின் பெரும்பாலான படைப்புகளைத் தனிப்பட்ட முறையில் பிரதிசெய்வதில் ஈடுபட்டிருந்தார்; அவை இன்றும் செசாரியா நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. ஓரிஜனின் விளக்கவுரைகளில் இருபத்தைந்து தொகுதிகள் என்னிடம் உள்ளன; அவை அனைத்தும் அவரது சொந்தக் கையெழுத்தில், குறிப்பாகப் பன்னிரண்டு தீர்க்கதரிசிகளைப் பற்றி எழுதப்பட்டவை. நான் அவற்றை மிகவும் போற்றிப் பாதுகாப்பதால், குரோசஸைப் போல நானும் ஒரு செல்வந்தன் என்று உணர்கிறேன். ஒரு வேதசாட்சியின் ஒரே ஒரு கடிதத்தை வைத்திருப்பதே இத்தகைய மகிழ்ச்சியைத் தருகிறது என்றால், அவரது இரத்தத்தால் எழுதப்பட்டதாகத் தோன்றும் ஆயிரக்கணக்கான வரிகளைச் சொந்தமாக வைத்திருப்பதன் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள். பாம்ஃபிலஸ், யூசிபியஸுக்கு முன்பே ஓரிஜனுக்காக ஒரு மன்னிப்புரையை எழுதினார்; மேலும் மாக்சிமினஸின் துன்புறுத்தலின் போது செசாரியாவில் வேதசாட்சியாக இறைவனடி எய்தினார்.
76. பியரியஸ்
காரஸ் மற்றும் டயோக்ளீஷியனின் ஆட்சிக்காலத்தில் தியோனாஸ் ஆயராக இருந்தபோது, பியரியஸ் அலெக்சாண்டிரியா திருச்சபையின் மறைமூப்பராக இருந்தார். அவர் மக்களுக்கு வெற்றிகரமாகக் கற்பித்தது மட்டுமன்றி, தனது நேர்த்தியான எழுத்துக்காகப் புகழ் பெற்றார். இன்றும் கிடைக்கக்கூடிய நிலையில் இருக்கும் பல்வேறு தலைப்புகளில் அவர் பல ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்கினார். அவரது சாதனைகளின் காரணமாக, அவர் ‘இளைய ஒரிஜென்’ என்று அழைக்கப்பட்ட அவர், தனது சுய ஒழுக்கத்திற்காக மிகவும் போற்றப்பட்டார். விருப்பத்துடன் வறுமையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார். மேலும் அவர் தர்க்கவியலில் திறமை பெற்றிருந்தார். துன்புறுத்தலுக்குப் பிறகு, அவர் தனது வாழ்நாளின் எஞ்சிய காலத்தை ரோமில் கழித்தார். அவர் தீர்க்கதரிசி ஓசேயாவைப் பற்றி ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரையை எழுதினார், அது பாஸ்கா பண்டிகைக்கு முந்தைய இரவில் வெளிடப்பட்டதாகத் தெரிகிறது.
77. லூசியானுஸ்
லூசியானுஸ் ஒரு திறமைசாலியாகவும், அந்தியோகியா சபையின் மறைமூப்பராகவும் இருந்தார். அவர் வேதவாக்கியங்களை விடாமுயற்சியுடன் படித்தார், அதனால் வேதவாக்கியங்களின் சில பிரதிகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘விசுவாசத்தைப் பற்றி’ மற்றும் பல்வேறு நபர்களுக்கு எழுதிய சிறு கடிதங்கள் உட்பட, அவருடைய படைப்புகள் இன்றும் வழக்கத்தில் உள்ளன. மாக்சிமினஸ் தலைமையிலான துன்புறுத்தலின் போது கிறிஸ்து மீதான தனது விசுவாசத்தை அறிக்கையிட்டதற்காக அவர் நிகோமீடியாவில் கொல்லப்பட்டு, பித்தினியாவில் உள்ள ஹெலனோபோலிஸில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
78. பிலேயஸ்
எகிப்திய நகரமான த்முயிஸில் வாழ்ந்த பிலேயஸ், உயர்குடியில் பிறந்தவரும் பெரும் செல்வந்தரும் ஆவார். ஆயரான பிறகு, வேதசாட்சிகளைப் புகழ்ந்தும், பலிகளைச் செலுத்தும்படி தன்னைக் கட்டாயப்படுத்திய நீதிபதிக்கு எதிராக வாதிட்டும் ஒரு சிறந்த நூலை எழுதினார். நிகோமீடியாவில் லூசியானுஸ் கொல்லப்பட்ட அதே துன்புறுத்தல் காலப்பகுதியில் கிறிஸ்துவுக்காக அவர் சிரச்சேதம் செய்யப்பட்டு உயிர்நீத்தார்.
79. அர்னோபியஸ்
டயோக்ளீஷியன் அரசாண்ட இருந்த காலத்தில், ஆப்பிரிக்காவின் சிக்கா பகுதியில் அர்னோபியஸ் பொதுப் பேச்சுக் கலையில் மிகச் சிறந்த ஆசிரியராக விளங்கினார். மேலும், அவர் எழுதிய ‘தேசங்களுக்கு எதிராக’ என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பல நூல்கள் எங்கும் காணப்படுகின்றன.
80. லாக்டான்ஷியஸ்
ஃபிர்மியானஸ் என்றும் அழைக்கப்படும் லாக்டான்ஷியஸ், அர்னோபியஸின் மாணவர் ஆவார். டயோக்ளீஷியனின் ஆட்சிக்காலத்தில், இன்றும் பயன்பாட்டில் உள்ள ‘மருத்துவம் பற்றி’ என்ற கவிதையை எழுதிய இலக்கணஞானியான ஃபிளேவியஸுடன் சேர்ந்து, அவர் நிகோமீடியாவிற்கு வரும்படி அழைக்கப்பட்டார். அங்கு, லாக்டான்ஷியஸ் அவருக்குச் சொல்லாட்சிக் கலையைக் கற்பித்தார். ஆனால் அந்த கிரேக்க நகரில் மாணவர் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவர் மீண்டும் எழுத்துப்பணிக்குத் திரும்பினார். அவரது படைப்புகளில், ஆப்பிரிக்காவில் ஒரு இளைஞராக இருந்தபோது அவர் எழுதிய ‘விருந்து’ என்ற கவிதையும், ஆப்பிரிக்காவிலிருந்து நிகோமீடியாவிற்கான தனது பயணத்தை அறுசீர்ச் செய்யுளடி (hexameters) வடிவத்தில் விவரிக்கும் ‘பயணக் குறிப்பு’ என்ற நூலும், ‘இலக்கணஞானி’ என்ற தலைப்பிலான ஒரு புத்தகமும் அடங்கும். மேலும், அவர் ‘கடவுளின் கோபம் பற்றி’ என்ற ஒரு அழகான படைப்பையும், ஏழு தொகுதிகளில் ‘தேசங்களுக்கு எதிரான தெய்வீகக் கட்டளைகள்’ என்ற நூலையும், அதே படைப்பின் ஒரு சுருக்கத்தை ஒரே தொகுதியில் தலைப்பின்றியும் எழுதினார். அத்தோடு, அவர் அஸ்க்லெபியாடிஸுக்கு இரண்டு நூல்களையும், ‘துன்புறுத்தல் பற்றி’ ஒரு நூலையும், புரோபஸுக்கு நான்கு கடிதங்களையும், செவெரஸுக்கு இரண்டு கடிதங்களையும், தனது மாணவர் டெமெட்ரியஸுக்கு இரண்டு கடிதங்களையும், கடவுளின் செயல் அல்லது மனிதனின் படைப்பைப் பற்றி விவரிக்கும் ஒரு நூலையும் எழுதியுள்ளார். தனது பிற்காலத்தில், கோல் நாட்டில் கான்ஸ்டன்டைனின் மகனான கிரிஸ்பஸ் சீசருக்கு அவர் ஆசிரியராகப் பணியாற்றினார்; கிரிஸ்பஸ் சீசர் பின்னர் தன் தந்தையால் தூக்கிலிடப்பட்டார்.
81. செசாரியா தேசத்து யூசிபியஸ்
பாலஸ்தீனத்தில் உள்ள செசாரியாவைச் சேர்ந்த ஆயரான யூசிபியஸ், சமய நூல்களைப் படிப்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும், தனது விசுவாசத்தின் நிமித்தம் உயிர் நீத்தவரான பாம்பிலஸுடன் சேர்ந்து, வேதாகமத்தைக் கவனமாக ஆராய்ந்தது மட்டுமன்றி, பல நூல்களையும் எழுதி வெளியிட்டார். அவற்றுள் பின்வருவன அடங்கும்: நற்செய்தியின் விளக்கங்கள் (இருபது நூல்கள்), நற்செய்திக்கான தயாரிப்புகள் (பதினைந்து நூல்கள்), இறையருள் வெளிப்பாடு (ஐந்து நூல்கள்), திருச்சபை வரலாறு (பத்து நூல்கள்), உலகளாவிய வரலாற்றின் நாளேடு மற்றும் இதன் சுருக்கம். மேலும், நற்செய்திகளுக்கு இடையேயான முரண்பாடுகள் மற்றும் ஏசாயா குறித்து (பத்து நூல்கள்), அதே காலகட்டத்தில் சிசிலியில் எழுதி வந்ததாகச் சிலர் கருதும் போர்பிரிக்கு எதிராக (இருபத்தைந்து நூல்கள்), தலைப்புகள் குறித்த ஒரு நூல், ஓரிஜனுக்கான மன்னிப்புக் கோரல் குறித்த ஆறு நூல்கள், பம்பிலஸின் வாழ்க்கை குறித்த மூன்று நூல்கள், வேதசாட்சிகள் குறித்த பிற சுருக்கமான படைப்புகள், சங்கீதங்கள் மீதான மிகவும் புலமை வாய்ந்த நூற்று ஐம்பது விளக்கவுரைகள் மற்றும் பல நூல்களையும் வெளியிட்டார். அவர் முக்கியமாக மகா கொன்ஸ்டன்டைன் மற்றும் கொன்ஸ்டன்டியஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் மிகவும் பிரபலம் பெற்று விளங்கினார். அவரது குடும்பப்பெயரான பாம்பிலஸ், வேதசாட்சியான பாம்பிலஸுடன் அவர் கொண்டிருந்த நட்பிலிருந்து உருவானது.
82. ரெட்டிசியஸ்
ஏடுய் பழங்குடியைச் சேர்ந்த ஆட்டன் பகுதியைச் சேர்ந்த ஆயரான ரெட்டிசியஸ், கொன்ஸ்டன்டைனின் ஆட்சிக்காலத்தில் கோல் பகுதியில் நன்கு அறியப்பட்டிருந்தார். நான் அவருடைய ‘உன்னதப் பாடல்கள்’ மீதான எழுத்துக்களையும், ‘நோவேஷியனுக்கு எதிரான’ மற்றொரு முக்கியமான நூலையும் படித்திருக்கிறேன். அது தவிர அவருடைய வேறு எந்தப் படைப்புகளையும் நான் கண்டதில்லை.
83. மெத்தோடியஸ்
லைசியாவில் உள்ள ஒலிம்பஸின் ஆயராகவும், பின்னர் டைரின் ஆயராகவும் இருந்த மெத்தோடியஸ், ‘போர்பிரிக்கு எதிராக’ என்றழைக்கப்படும் நூல்களை எழுதினார். அவை நன்கு எழுதப்பட்டதும் தர்க்கரீதியானவையாகவும் காணப்பட்டன. அவர் ‘பத்து கன்னியர்களின் விருந்து’ என்ற ஒரு படைப்பையும், அத்துடன் ஓரிஜனுக்கு எதிரான ‘உயிர்த்தெழுதல் பற்றி’ ஒரு நூலையும், ‘பைத்தோனிசா பற்றி’ மற்றுமொரு நூலையும், ‘சுதந்திர விருப்பம் பற்றி’ ஒரு நூலையும் பிற முக்கிய நூல்களையும் உருவாக்கினார். அவர் ஆதியாகமம் மற்றும் உன்னதப் பாடல்களுக்கு விளக்கவுரைகளையும், பரவலாக வாசிக்கப்படும் பல படைப்புகளையும் எழுதினார். சமீபத்திய துன்புறுத்தலுக்குப் பிறகு, அல்லது டெசியஸ் மற்றும் வலேரியானஸின் ஆட்சிக் காலங்களில், அவர் கிரேக்கத்தின் சால்சிஸ் நகரில் வேதசாட்சியாக மரித்தார்.
84. யுவென்கஸ்
யுவென்கஸ் ஒரு ஸ்பானிய உயர்குடியைச் சேர்ந்தவரும் குருவானவருமாவார். இவர் நான்கு நற்செய்திகளையும் ஏறக்குறைய வார்த்தைக்கு வார்த்தை அறுசீர்ச் செய்யுளடி (hexameter) முறையில் மொழிபெயர்த்து, நான்கு நூல்களை உருவாக்கினார். திருச்சடங்குகள் குறித்து அதே நடையில் வேறு சில படைப்புகளையும் அவர் எழுதினார். அவர் கொன்ஸ்டன்டைனின் ஆட்சிக்காலத்தில் தீவிரமாகச் செயல்பட்டார்.
85. யூஸ்டேதியஸ்
யூஸ்டேதியஸ் பாம்பிலியாவிலுள்ள சைட் என்ற பகுதியைச் சேர்ந்தவர். அவர் முதலில் சிரியாவிலுள்ள பெரோயா பிராந்தியத்தின் ஆயராகவும், பின்னர் அந்தியோக்கியாவின் ஆயராகவும் விளங்கினார். அவர் திருச்சபையை வழிநடத்தி, ஏரியர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராகப் பல படைப்புகளை எழுதினார். பேரரசர் கொன்ஸ்டான்டியஸின் கீழ் அவர் திரேசியாவிலுள்ள ட்ரஜனோபோலிஸுக்கு நாடுகடத்தப்பட்டார், அங்கு அவர் இந்த வரலாற்றுத் தொகுப்பு எழுதப்பட்ட காலம் வரை வசித்து வந்தார். ஆன்மா பற்றிய, குரல்வளைப் பேச்சுக்கலை பற்றிய, மற்றும் ஓரிஜன் மீதான விமர்சனம் பற்றிய படைப்புகளும், பல கடிதங்களும் அவருடைய எழுத்துக்களில் அடங்கும்.
86. மார்செல்லஸ்
மார்செல்லஸ், கொன்ஸ்டன்டினஸ் மற்றும் கொன்ஸ்டன்டியஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அன்சைரா பிரதேசத்தின் ஆயராக இருந்தார். அவர் பல்வேறு தலைப்புகளில், குறிப்பாக ஏரியர்களுக்கு எதிராக பல தொகுதிகளை எழுதினார். அஸ்டேரியஸ் மற்றும் அப்போலினாரியஸின் படைப்புகள் அவரது கருத்துக்களை விமர்சித்து, அவரை சபெல்லியனிசத்தைப் பின்பற்றுபவர் என்று குற்றம் சாட்டின. ஹிலரி தனது ‘ஏரியன்களுக்கு எதிராக’ என்ற நூலின் ஏழாவது புத்தகத்தில் அவரை ஒரு மதத்துரோகி என்றும் சாடியுள்ளார். ஆனால் ரோம் மற்றும் அலெக்ஸாந்திரியாவின் ஆயர்களான ஜூலியஸ் மற்றும் அதானசியஸ் ஆகியோர் அவருடன் தொடர்புகளை பேணியவர் என்று எடுத்தியம்பி மார்செல்லஸ் தன்னைத் தற்காத்துக் கொண்டார்.
87. அதனாசியஸ்
அலெக்சாண்டிரியாவின் ஆயரான அதனாசியஸ், ஏரியர்களின் சூழ்ச்சிகளால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார். ஆகவே அவர் கோல் நாட்டின் பேரரசரான கான்ஸ்டன்ஸிடம் தப்பி ஓடினார். சில கடிதங்களுடன் திரும்பி வந்தபோதும், பேரரசர் காலமானார் என்று கேள்விப்பட்டதும் அவர் மீண்டும் தப்பி ஓட வேண்டியிருந்தது. ஜோவியன் ஆட்சிக்கு வரும் வரை அவர் மறைந்திருந்தார்; அதன் பிறகு அவர் திருச்சபைக்குத் திரும்பி, வாலன்ஸின் ஆட்சிக்காலத்தில் இறந்து போனார். அவருடைய படைப்புகள் ஏராளமாக உள்ளன; ‘தேசங்களுக்கு எதிராக’ என்ற தலைப்பில் இரண்டு நூல்கள், ‘வாலன்ஸ் மற்றும் உர்சாசியஸுக்கு எதிராக’ என்ற ஒரு நூல், ‘கன்னிமை’, அரியர்களின் துன்புறுத்தல்கள் பற்றிய பல நூல்கள், அத்துடன் ‘சங்கீதங்களின் தலைப்புகள் குறித்து’, புனிதரான அந்தோணியாரின் வாழ்க்கை, ‘பண்டிகை மற்றும் விழாக் கடிதங்கள்’ போன்ற பட்டியலிட முடியாத அளவுக்குப் பல பிற இலக்கியப் படைப்புகளும் அவற்றில் அடங்கும்.
88. அந்தோணியஸ்
துறவியான அந்தோணியாரின் வாழ்க்கையைப் பற்றி அலெக்சாண்டிரியாவின் ஆயர் அதானசியஸ் ஒரு நீண்ட நூலை எழுதினார். கொப்டிக் மொழியில் ஏழு கடிதங்களை வெவ்வேறு மடங்களுக்கு அனுப்பினார். இந்தக் கடிதங்கள் சிந்தனையிலும் வெளிப்பாட்டிலும் உண்மையாகவே அப்போஸ்தலிக்கத் தன்மை கொண்டவையாகக் காணப்பட்டன. மேலும் அவை கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது ‘அர்செனோயிட்டுகளுக்கு’ என்ற புத்தகமாகும். அவர் கொன்ஸ்டன்டினஸ் மற்றும் அவரது மகன்களின் ஆட்சிக் காலத்தில் தீவிர ஆன்மீகச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தார்.
89. அன்சைராவைச் சேர்ந்த பசில்
அன்சைராவின் ஆயரும் மருத்துவருமான பசில், ‘மார்செல்லஸுக்கு எதிராக’ என்ற நூலையும், கன்னித்தன்மை மற்றும் பிற தலைப்புகளின் கீழ் பல படைப்புகளையும் இயற்றினார். கொன்ஸ்டான்டியஸின் ஆட்சியின் போது, அவர் செபாஸ்டேயின் யூஸ்டாதியஸுடன் இணைந்து மசிடோனியாவின் பிரதான ஆயராகப் பணியாற்றினார்.
90. தியோடரஸ்
திரேசியாவில் உள்ள ஹெராக்லியாவின் ஆயரான தியோடரஸ், பேரரசர் கொன்ஸ்டான்டியஸின் ஆட்சியின் போது, மத்தேயு மற்றும் யோவான் ஆகியோரின் நற்செய்திகள், நிருபங்கள் மற்றும் சங்கீதப் புத்தகம் ஆகியவற்றிற்கு விளக்கவுரைகளை எழுதினார். அவரது படைப்புகள், வலுவான வரலாற்றுப் பார்வையை வெளிப்படுத்தும் என்பதோடு, அவற்றின் செம்மையான மற்றும் தெளிவான நடைக்காகப் பாராட்டப்படுகின்றன.
91. எமேசாவைச் சேர்ந்த யூசிபியஸ்
எமேசாவைச் சேர்ந்த யூசிபியஸ் சிறந்த சொல்லாற்றல் மிக்க ஒருவர். மக்கள் பாராட்டைப் பெறும் வகையில் எண்ணற்ற படைப்புகளை இயற்றியுள்ளார். வரலாறு பற்றி எழுதும் போது, சொற்பொழிவாற்றுவோர் அவரை மிகவும் கவனமாகப் பின்பற்றுகின்றனர். இவர் எழுதிய நூல்கள் மத்தியில், ‘யூதர்கள், புறவினத்தவர்,’ ‘நோவேஷியர்களுக்கு எதிராக’ மற்றும் ‘நற்செய்திகள் மீதான பிரசங்கங்கள்’ ஆகியவை மிக முக்கியதத்துவம் பெறுகின்றன. இவை சுருக்கமானவை என்றபோதிலும், ஏராளமான பதிப்புகளைக் கொண்டவை.
பேரரசர் கொன்ஸ்டான்டியஸின் ஆட்சிக்காலத்தில் மிகப் பிரபலம் பெற்று வாழ்ந்த இவர், அப்பதவியில் இருந்தபோதே காலமானார். அவரது புனிதவுடல் அந்தியோக்கியாவில் அடக்கம் செய்யப்பட்டது.
92. ட்ரிபிலியஸ்
சைப்ரஸில் உள்ள லெத்ரா அல்லது லூகோதியோனின் ஆயராக ட்ரிபிலியஸ் அருட்பணியாற்றி வந்தார். அவரது காலத்தில் அவர் மிகத் திறமையான பேச்சாளராக இருந்தார். மேலும் கொன்ஸ்டான்டியஸின் ஆட்சிக்காலத்தில் தனித்து விளங்கினார். அவருடைய உன்னதப் பாடல்களுக்கான விளக்கவுரையை நான் படித்திருக்கிறேன். அவர் வேறு பல படைப்புகளையும் எழுதியதாகக் கருதப்படுகிறது, ஆனால் அவற்றில் எதுவும் நம் கைகளுக்குக் கிடைக்கவில்லை.
93. டொனேட்டஸ்
ஆப்பிரிக்காவில் பேரரசர்கள் கான்ஸ்டன்டினஸ் மற்றும் கொன்ஸ்டன்டியஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் டொனேட்டிய அமைப்பை நிறுவியவரான டொனேட்டஸ், துன்புறுத்தல்களின் போது மரபுவழித் திருச்சபையானது வேதாகம நூல்களை அவிசுவாசிகளுக்குக் கொடுத்ததாகக் கூறினார். அவர் தனது வாதத்திறமையால் ஏறக்குறைய முழு ஆப்பிரிக்காவையும், குறிப்பாக நுமிடியாவையும் ஏமாற்றினார். ஏரியன் நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் ‘பரிசுத்த ஆவியைப் பற்றி’ உட்பட, அவரது பல எழுத்துக்கள் இன்றும் கிடைக்கின்றன.
94. அஸ்டீரியஸ்
ஏரியன் பிரிவைச் சேர்ந்த தத்துவஞானியான அஸ்டீரியஸ், கொன்ஸ்டான்டியஸின் ஆட்சிக்காலத்தில், ரோமருக்கு எழுதிய நிருபம், நற்செய்திகள் மற்றும் சங்கீதங்கள் ஆகியவற்றின் மீதான விளக்கவுரைகளையும், மேலும் பல படைப்புகளையும் எழுதினார்; இவை அவரது பிரிவினரால் மிகவும் ஆர்வத்தோடு படிக்கப்படுகின்றன.
95. காக்லியாரைச் சேர்ந்த லூசிஃபர்
காக்லியாரியின் ஆயரான லூசிஃபர், ஆயர் லிபேரியஸால், ரோமன் திருச்சபையின் குருமார்களான பங்கிரேஷஸ் மற்றும் ஹிலாரியுடன், பேரரசர் கொன்ஸ்டான்டியஸிடம் விசுவாசத்தின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டார். அத்தனாசியஸ் காட்டிய நைசீய நம்பிக்கையை அவர் கண்டிக்காத காரணத்தால் மிகுந்த உறுதியுடனும் மரணத்தை எதிர்கொள்ளும் மனவுறுதியுடனும் மீண்டும் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்ட அவர், பேரரசர் கொன்ஸ்டான்டியஸுக்கு எதிராக ஒரு நூலை எழுதி, அதை அவர் படிக்க வேண்டுமென்பதற்காக அனுப்பினார். அதன்பிறகு வெகு விரைவிலேயே பேரரசர் ஜூலியனின் ஆட்சிக்காலத்தில் காக்லியாரிக்குத் திரும்பி, வாலன்டினியனின் ஆட்சிக்காலத்தில் இறைபதம் அடைந்தார்.
96. வெர்செல்லியைச் சேர்ந்த யூசெபியஸ்
சார்டினியாவில் பிறந்த யூசெபியஸ், முதலில் ரோமில் வாசகராகவும் பின்னர் வெர்செல்லியின் ஆயராகவும் பணியாற்றினார். அவர் தனது விசுவாசத்தை அறிக்கையிட்டதால், பேரரசர் கொன்ஸ்டான்டியஸ் அவரை ஸ்கைத்தோபோலிஸுக்கும் பின்னர் கப்படோசியாவுக்கும் அனுப்பினார். பேரரசர் ஜூலியனின் ஆட்சிக்காலத்தில் அவர் திருச்சபைக்குத் திரும்பி, செசாரியாவைச் சேர்ந்த யூசெபியஸ், கிரேக்கத்திலிருந்து இலத்தீனுக்கு மொழிபெயர்த்திருந்த சங்கீதங்கள் குறித்த அவரது எழுத்துக்களை வெளியிட்டார். வாலன்ஷியனும் வாலன்ஸும் ஆட்சியில் இருந்தபோது அவர் உயிர்நீத்தார்.
97. ஃபோர்சுனேஷியானஸ்
ஃபோர்சுனேஷியானஸ், கொன்ஸ்டான்டியஸின் ஆட்சிக்காலத்தில் அக்விலியா என்ற இடத்தில் திருச்சபையை வழிநடத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு ஆயர் ஆவார். இவர் நற்செய்திகள் மீது அத்தியாய வாரியாக ஒழுங்கமைக்கப்பட்ட சுருக்கமான விளக்கவுரைகளை, ஒரு எளிய நடையில் எழுதினார். ரோமின் ஆயரான லிபேரியஸ் தனது விசுவாசம் நிமித்தம் நாடுகடத்தப்பட்டபோது, மதக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ஃபோர்சுனேஷியானஸ் அவரை வற்புறுத்தியதால் பலர் இவரை வெறுக்கின்றனர்.
98. அகாசியஸ்
ஒரு கண்ணில் பார்வையற்றவராக இருந்ததால் ‘ஒற்றைக்கண் உடையவர்’ என்று புனை பெயர் பெற்றவரும், பாலஸ்தீனத்தில் உள்ள செசரியா திருச்சபையின் தலைவருமான அகாசியஸ், ‘பிரசங்கியைப் பற்றி’ என்ற தலைப்பில் பதினேழு நூல்களையும், ‘பல்வேறு கேள்விகள்’ என்ற தலைப்பில் ஆறு தொகுதிகளையும், மேலும் பல்வேறு தலைப்புகளில் பல படைப்புகளுக்கும் சொந்தக்காரர். பேரரசர் கொன்ஸ்டான்டியஸின் காலத்தில் அவர் மிகவும் சக்திவாய்ந்த ஒருவராக இருந்ததால், லிபேரியஸுக்குப் பதிலாக ஃபீலிக்ஸை ரோமின் ஆயராக நியமித்தார்.
99. த்முயிசைச் சேர்ந்த செராபியன்
த்முயிஸின் ஆயரான செராபியன் தனது கூர்மையான அறிவாற்றலுக்காக போற்றப்பட்டபடியால் ‘ஸ்கொலாஸ்டிகஸ்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அவர் துறவியான அந்தோனியின் நெருங்கிய நண்பராக இருந்தார். மேலும், ‘மணீக்கியர்களுக்கு எதிராக’ என்ற ஒரு சிறந்த நூலையும், ‘சங்கீதங்களின் தலைப்புகள் குறித்து’ என்ற தலைப்பில் மற்றொரு நூலையும், மற்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு முக்கியமான கடிதங்களையும் எழுதியுள்ளார். பேரரசர் கொன்ஸ்டான்டியஸின் ஆட்சிக்காலத்தில் அவர் தனது விசுவாசத்திற்காக நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.
100. பொய்ட்டியர்சைச் சேர்ந்த ஹிலாரி
அக்விட்டானியாவில் உள்ள பொய்ட்டியர்ஸின் ஆயரான ஹிலாரி, ஆர்ல்ஸின் ஆயரான சாட்டர்னினஸின் குழுவில் உறுப்பினராக இருந்தார். பெசியர்ஸ் சங்கத்தால் ஃபிரிஜியாவிற்கு நாடுகடத்தப்பட்ட பிறகு, அவர் ‘அரியர்களுக்கு எதிராக’ என்ற தலைப்பில் பன்னிரண்டு நூல்களையும், காலிக்கன் ஆயர்களை இலக்காகக் கொண்ட ‘சபைகள் பற்றி’ என்ற மற்றொரு படைப்பையும் எழுதினார். மேலும், அவர் முதல் மற்றும் இரண்டாம் சங்கீதங்களையும், அத்துடன் ஐம்பத்தொன்று முதல் அறுபத்திரண்டு வரையிலான சங்கீதங்களையும், நூற்றுப் பதினெட்டாவது சங்கீதம் முதல் புத்தகத்தின் இறுதி வரை உள்ளடக்கிய ‘சங்கீதங்கள் மீதான விளக்கவுரைகளையும்’ எழுதியிருந்தார். இந்த விளக்கவுரைகளை எழுத அவர் ஓரிஜனிடமிருந்து உத்வேகம் பெற்றிருந்தாலும், தனது சொந்தக் கருத்துக்களையும் சேர்த்திருந்தார். அவர் கொன்ஸ்டான்டிநோபிளில் வசித்தபோது பேரரசருக்கு வழங்கிய ‘கொன்ஸ்டான்டியஸுக்கு’ என்ற தலைப்பில் ஒரு சிறிய புத்தகத்தையும், அவர் இறந்த பிறகு எழுதிய ‘கொன்ஸ்டான்டியஸ் பற்றி’ என்ற மற்றொரு படைப்பையும் இயற்றினார். அத்தோடு நின்றுவிடாமல், அரிமினியன் மற்றும் செலூசியன் சபைகளின் வரலாற்றை விவரிக்கும் ‘வாலன்ஸ் மற்றும் உர்சாசியஸுக்கு எதிராக’ என்ற புத்தகத்தையும், ஆளுநர் சல்லஸ்ட்டை நோக்கிய ‘டியோஸ்குரஸுக்கு எதிராக’ என்ற ஒரு படைப்பையும் எழுதினார். மேலும் கீர்த்தனைகள் மற்றும் மறைக்குறிப்புகளின் தொகுப்பு, மத்தேயு மீதான விளக்கவுரை, மற்றும் யோபு மீதான ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதினார்; இவற்றை அவர் ஓரிஜனின் கிரேக்க மூல நூல்களிலிருந்து தன்னிச்சையாக மொழிபெயர்த்தார். ஓக்ஸென்டியஸுக்கு எதிரான ஒரு முறையான சிறு படைப்பும், வெவ்வேறு நபர்களுக்கு எழுதிய பல்வேறு கடிதங்களும் இவற்றில் அடங்கும். அவர் உன்னதப் பாடல்கள் குறித்தும் விளக்கங்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது, ஆனால் அந்தப் படைப்பு நமக்குக் கிடைக்கவில்லை. அவர் வாலன்டினியானஸ் மற்றும் வாலன்ஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் போய்ட்டியர்ஸ் என்ற ஊரில் காலமானார்.
101. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விக்டோரினஸ்
பிறப்பால் ஆப்பிரிக்கரான விக்டோரினஸ், பேரரசர் கொன்ஸ்டான்டியஸின் கீழ் ரோமில் சொல்லாட்சிக் கலையைக் கற்பித்தார். தனது முதுமைப் பருவத்தில், கிறிஸ்து மீதான விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, ஏரியஸுக்கு எதிராக நூல்களை எழுதினார். அவை தர்க்கப் பாணியிலும் மிகவும் தெளிவற்ற மொழியிலும் எழுதப்பட்டிருந்தன; அவை கற்றறிந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய நூல்களாகக் காணப்பட்டன. அத்தோடு, அவர் நிருபங்களுக்கான விளக்கவுரைகளையும் எழுதினார்.
102. பொஸ்ட்ராவின் டைட்டஸ்
பொஸ்ட்ராவின் ஆயரான டைட்டஸ், ஜூலியன் மற்றும் ஜோவினியன் போன்ற பேரரசர்களின் ஆட்சிக்காலத்தில், மணீக்கியர் மற்றும் சேயர்களுக்கு எதிராகவும் மற்றும் பிற விஷயங்களைப் பற்றியும் வலிமையான படைப்புகளை எழுதினார். அவர் வாலன்ஸின் ஆட்சிக்காலத்தில் இறைவனடி சேர்ந்தார்.
103. திருத்தந்தை டமாசஸ்
ரோமின் ஆயரான டமாசஸ், கவிதை எழுதுவதில் ஆற்றலுடையவராகக் காணப்பட்டார். அத்தோடு மரபு சார்ந்த நடையில் பல சிறு படைப்புகளை எழுதி வெளியிட்டார். அவர் பேரரசர் தியோடோசியஸின் ஆட்சிக்காலத்தில், ஏறக்குறைய தனது எண்பதாம் வயதில் காலமானார்.
104. லவோதீசியாவின் ஆயரான அப்போலினாரியஸ்
சிரியாவிலுள்ள லவோதீசியாவின் ஆயரும், ஒரு குருவானவரின் மகனுமான அப்போலினாரியஸ், தனது இளமைக் காலத்தில் இலக்கணத்தைக் கற்பதில் கவனம் செலுத்தினார். பின்னர், அவர் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றி பல நூல்களை எழுதி, பேரரசர் தியோடோசியஸின் ஆட்சிக்காலத்தில் காலமானார். போர்பிரிக்கு எதிராக (Against Porphyry) என்ற தலைப்பில் அவர் எழுதிய முப்பது நூல்களுக்காக அவர் பிரபலம் பெற்று விளங்குகிறார்; அவை அவரது சிறந்த படைப்புகளில் சிலவாகப் பரவலாகக் கருதப்படுகின்றன.
105. கிரெகரி பேட்டிகஸ்
கிரெகரி பேட்டிகஸ், பேட்டிக்காவில் உள்ள எல்விராவின் ஆயராக இருந்தார். தனது முதுமைக் காலத்திலும், ‘நம்பிக்கையைப் பற்றி’ என்ற நன்கு எழுதப்பட்ட படைப்பு உட்பட, பல படைப்புகளை எளிய மொழியில் எழுதினார். அவர் இந்தப் பதிவு எழுதப்பட்ட காலப்பகுதி வரை உயிருடன் இருந்தார் என்று மக்கள் கூறியதாக அறியப்படுகிறது.
106. பசியானஸ்
பசியானஸ், பிரனீஸ் மலைகளில் அமைந்துள்ள பார்சிலோனாவின் ஆயராக இருந்தார். அவர் தனது தூய்மையான மற்றும் நேர்த்தியான பேச்சுக்காக மிகவும் நேசிக்கப்பட்டது மட்டுமன்றி, தனது வார்த்தை மற்றும் நற்பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் “மான்கள்” மற்றும் “நோவேஷியர்களுக்கு எதிராக” உள்ளிட்ட பல சிறு படைப்புகளை எழுதினார். பேரரசர் தியோடோசியஸின் ஆட்சிக்காலத்தில் அவர் தனது முதுமைப் பருவத்தில் காலமானார்.
107. ஃபோட்டினஸ்
கல்லோரேசியாவைச் சேர்ந்த ஃபோட்டினஸ், மார்செல்லஸின் மாணவராக இருந்து சிர்மியத்தின் ஆயரான அவர், எபியோனைட் மதக்கொள்கையைக் கொண்டுவர முயன்றார். ஆனால் பின்னர் பேரரசர் வாலன்டினியனஸால் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட பிறகு, பல படைப்புகளை இயற்றினார். அவற்றுள், ‘தேசங்களுக்கு எதிராக’ மற்றும் ‘வாலன்டினியனஸுக்கு’ ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும்.
108. ஃபோபேடியஸ்
கோல் பகுதியிலுள்ள ஏஜென் நகரின் ஆயரான ஃபோபேடியஸ், ‘அரியர்களுக்கு எதிராக’ என்ற நூலை எழுதினார். அவர் வேறு சில படைப்புகளையும் எழுதியதாகக் கூறப்பட்ட போதிலும், நான் அவற்றைப் படிக்கவில்லை. அவர் (இந்தப் பதிவு எழுதப்பட்ட காலப்பகுதி வரை) அவர் உயிருடன் இருந்தார் என்றும், முதுமையின் காரணமாக உடல் தளர்ந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
109. பார்வையற்றவரான டிடீமஸ்
அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த டிடீமஸ் இளம் வயதிலேயே தனது பார்வையை இழந்ததன் காரணமாக அவர் அடிப்படைக் கல்வியைக் கூட கற்க முடியவில்லை. அப்படியிருந்தும், அவர் தனது வியக்கத்தக்க அறிவுத்திறனை வெளிப்படுத்தினார்; பொதுவாகப் பார்வையோடு சம்பந்தப்பட்டிருக்கும் துறைகளான தர்க்கவியல் மற்றும் வடிவியல் ஆகியவற்றில் கூட அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். அனைத்து சங்கீதங்கள் மீதான விளக்கவுரைகள், மத்தேயு மற்றும் யோவான் நற்செய்திகள் மீதான விளக்கவுரைகள் மற்றும் பல்வேறு கோட்பாடுகள் குறித்த எழுத்துக்கள் உட்பட, எண்ணற்ற அற்புதமான படைப்புகளை அவர் எழுதியுள்ளார். மேலும், அவர் ‘அரியர்களுக்கு எதிராக’ என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்களையும், ‘பரிசுத்த ஆவியைப் பற்றி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார், அவற்றை நான் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தேன். அவருடைய விரிவான பங்களிப்புகளில், ‘ஏசாயாவைப் பற்றி’ என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பதினெட்டுத் தொகுதிகள், எனக்கு அனுப்பப்பட்ட ‘ஓசியாவைப் பற்றி’ என்ற மூன்று விளக்கவுரைகள், மற்றும் எனது வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்ட ‘சகரியாவைப் பற்றி’ என்ற தலைப்பில் ஐந்து புத்தகங்கள் ஆகியவை அடங்கும். அத்தோடு, ‘யோபுவைப் பற்றி’ என்ற விளக்கவுரைகளையும் மற்றும் பல படைப்புகளையும் எழுதியுள்ளார். அவற்றின் முழுப் பட்டியலையும் விவரிக்கச் சிறிது காலம் ஆகும். அவர் இந்தப் பதிவு எழுதப்பட்ட காலப்பகுதியில் உயிருடன் இருந்திருக்கிறார் என்பதோடு தனது எண்பத்து மூன்றாவது பிறந்தநாளையும் கொண்டாடிவிட்டார் என்று கூறப்படுகிறது.
110. ஓப்டேட்டஸ்
பேரரசர்கள் வாலன்டினியானஸ் மற்றும் வாலன்ஸ் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில், மிலேவிஸின் ஆயராக இருந்த ஆப்பிரிக்கரான ஓப்டேட்டஸ், டோனட்டிஸ்ட் குழுவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கத்தோலிக்கத் திருச்சபையைப் பாதுகாக்கும் நோக்கில் ஆறு நூல்களை எழுதினார். இந்த நூல்களில், டோனட்டிஸ்டுகள் தங்கள் தவறுகளை மறைக்கும்பொருட்டு கத்தோலிக்கத் திருச்சபையின் மீது பொய்யாகப் பழி சுமத்துகிறார்கள் என்று அவர் வாதிடுகிறார்.
111. அசிலியஸ் செவெரஸ்
லக்டான்ஷியஸ் தனது இரண்டு நிருபப் புத்தகங்களில் குறிப்பிட்ட செவெரஸின் குடும்பத்தைச் சேர்ந்த அசிலியஸ் செவெரஸ் ஒரு ஸ்பானிய தேசத்தவர். தனது முழு வாழ்க்கைக்கும் ஒரு வழிகாட்டிப் புத்தகம் போன்ற கவிதையும் உரைநடையும் கலந்த ஒரு நூலை இயற்றினார். அதற்கு அவர் ‘பேரழிவு’ அல்லது ‘சோதனை’ என்று தலைப்பிட்டிருந்தார். அவர் வாலண்டினியானஸின் ஆட்சிக்காலத்தில் இறையடி சேர்ந்தார்.
112. எருசலேமைச் சேர்ந்த சிரில்
எருசலேமின் ஆயரான சிரில், திருச்சபையிலிருந்து அடிக்கடி வெளியேற்றப்பட்டாலும், இறுதியில் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவர் தியோடோசியஸின் ஆட்சிக்காலத்தில் எட்டு ஆண்டுகள் ஆயராகப் பணியாற்றினார். அவர் இளைஞராக இருந்தபோது எழுதிய சில மறைக்கல்வி விரிவுரைகள் இன்றும் காணப்படுகின்றன.
113. யூசோயஸ்
இளைஞராக இருந்தபோது, யூசோயஸ், நாசியான்சஸின் ஆயரான கிரெகரியுடன் சேர்ந்து, செசாரியாவில் சொல்லாற்றல் வல்லுநரான தெஸ்பேசியஸிடம் கல்வி பயின்றார். பின்னர், செசாரியாவின் ஆயராக, ஓரிஜென் மற்றும் பாம்பிலஸ் ஆகியோரால் நிர்மாணிக்கப்பட்டிருந்ததும் சேதமடைந்திருந்ததுமான நூலகத்தைச் சீரமைக்கக் கடுமையாக உழைத்தார். இறுதியில், பேரரசர் தியோடோசியஸின் ஆட்சிக்காலத்தில் அவர் திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டார். அவருடைய பல எழுத்துக்கள் பரவலாகக் காணப்படுகின்றன; ஆகவே அவற்றைக் கண்டுபிடித்துப் படிப்பது எளிது.
114. எபிஃபானியஸ்
சைப்ரஸில் உள்ள சலாமினாவின் ஆயரான எபிஃபானியஸ், ‘அனைத்து மதக்கொள்கைகளுக்கு எதிராக’ (Against All Heresies) என்ற நூலையும் மற்றும் பல படைப்புகளையும் எழுதினார். இந்நூல்கள், அவற்றின் தலைப்புகள் மற்றும் தெளிவான மொழிநடையின் காரணமாக அறிஞர்கள் மற்றும் சாதாரண வாசகர்கள் இருபாலாரிடமும் பிரபலம் பெற்று விளங்குகின்றன. அவர் இந்தப் பதிவு எழுதப்பட்ட காலப்பகுதியில் உயிருடன் இருந்திருக்கிறார் என்றும் தனது தள்ளாத வயதிலும் பல்வேறு சிறு படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
115. எப்ராயீம்
எதெஸ்ஸா சபையின் உதவியாளரான எப்ராயீம், சிரியாக் மொழியில் பல நூல்களை எழுதினார். அவர் மிகவும் புகழ்பெற்றவரானதால், சில சபைகளில் வேதாகம வாசிப்பிற்குப் பிறகு அவருடைய எழுத்துக்கள் உரக்க வாசிக்கப்படுகின்றன.
ஒருமுறை, எவரோ ஒருவரால் சிரியாக் மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த ‘பரிசுத்த ஆவியைப் பற்றிய’ என்ற தலைப்பிலான எப்ராயீமுடைய ஒரு நூலை நான் வாசித்தேன். அந்த பிரதிசெய்யப்பட்ட பதிப்பிலேயேகூட, அந்த மாபெரும் திறமையாளரின் ஆழ்ந்த அறிவை என்னால் உணர முடிந்தது. வாலன்ஸ் பேரரசராக இருந்தபோது அவர் காலமானார்.
116. பசில் என்ற மகான்
ஒரு காலத்தில் மசாக்கா என்று அழைக்கப்பட்ட கப்படோசியாவில் உள்ள சீசரியாவின் ஆயராக பசில் என்ற மகான் ஒருவர் இருந்தார். அவர் யூனோமியஸுக்கு எதிரான ஒரு நூல், பரிசுத்த ஆவியைப் பற்றிய ஒரு நூல், படைப்பின் ஆறு நாட்களைப் பற்றிய ஒன்பது பிரசங்கங்கள் உட்பட நேர்த்தியாக உருவாக்கப்பட்ட பல நூல்களை எழுதினார். அவர் ‘துறவறம்’ மற்றும் பல்வேறு பிற தலைப்புகளின் கீழும் எழுதியுள்ளார். அவர் பேரரசர் கிராட்டியானஸின் ஆட்சிக்காலத்தில் இறையடி சேர்ந்தார்.
117. நசியான்செனின் கிரெகரி
நசியான்செனின் ஆயரும், மிகச் சிறந்த ஆற்றல்மிகு சொற்பொழிவாளரும், திருமறைகளில் எனது ஆசிரியருமான கிரெகரி, ஏறத்தாழ முப்பதாயிரம் வரிகள் கொண்ட படைப்புகளை இயற்றியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை; ‘அவரது சகோதரர் செசாரியஸின் மரணம் குறித்து’, என்ற நூலும், ‘அன்பு குறித்து’ என்ற நூலும், ‘மக்கபேயர்களைப் போற்றுதல்’ என்ற நூலும், ‘சிப்ரியனைப் போற்றுதல்’ என்ற நூலும், ‘அத்தனாசியஸைப் போற்றுதல்’ என்ற நூலும் மற்றும் நாடுகடத்தலிலிருந்து திரும்பிய பிறகு ‘தத்துவஞானி மாக்சிமஸைப் போற்றுதல்’ என்ற நூலும் அவரது படைப்புகளில் அடங்கும். இருப்பினும், இங்கே கடைசியாகக் கூறப்பட்டுள்ள படைப்பு சில சமயங்களில் ‘ஹெரோனா’ என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் கிரெகரி மாக்சிமஸை விமர்சித்தும் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இது, சூழ்நிலையைப் பொறுத்து ஒருவர் ஒரே நபரைப் போற்றவும் விமர்சிக்கவும் முடியும் என்பதை உணர்த்துகிறது. அவரது மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகளில், கன்னித்தன்மைக்கும் திருமணத்திற்கும் உள்ள வேறுபாடுகளை விவாதிக்கும் ஒரு அறுசீர்ச் செய்யுளடி பாணியில் அமைந்துள்ள நூலும், யூனோமியஸுக்கு எதிராக எழுதப்பட்ட இரண்டு நூல்கள், பரிசுத்த ஆவியைப் பற்றிய ஒரு நூல், மற்றும் பேரரசர் ஜூலியனுக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு நூல் ஆகியவை அடங்கும். அவர் பொலேமனின் பேச்சு பாணியைப் பின்பற்றினார். உயிருடன் இருக்கும்போதே தனது வாரிசை நியமித்த அவர், கிராமப்புறத்திற்குச் செல்ல முடிவு செய்தார். அங்கு அவர் ஒரு துறவியாக வாழ்ந்து, தியோடோசியஸின் ஆட்சியின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
118. லூசியஸ்
அத்தனாசியஸுக்குப் பிறகு ஏரியன் பிரிவின் ஆயராக இருந்தவர் லூசியஸ். பேரரசர் தியோடோசியஸால் பதவி நீக்கம் செய்யப்படும் வரை அவர் அலெக்சாண்டிரியா திருச்சபையின் ஆயராகப் பணியாற்றினார். பாஸ்கா பண்டிகை குறித்த அவருடைய சில விழாக் கடிதங்களும், பல்வேறு தலைப்புகள் குறித்த சில சிறு எழுத்துக்களும் இன்றும் காணப்படுகின்றன.
119. தியோடோரஸ்
தார்சஸின் ஆயரான தியோடோரஸ், அந்தியோக்கியாவின் மறைமூப்பராக இருந்த காலத்தில் பெரும் புகழைப் பெற்றிருந்தார். அவருடைய ‘நிருபங்கள் மீதான’ விளக்கவுரைகளும், எமேசாவைச் சேர்ந்த மகா யூசிபியஸின் பாணியிலான பல படைப்புகளும் இன்றும் கிடைக்கின்றன. அவர் யூசிபியஸின் கருத்துக்களைப் பின்பற்ற முயன்றபோதிலும், மதச்சார்பற்ற இலக்கியம் குறித்த அறிவு இல்லாததால் யூசிபியஸின் சொல்லாற்றலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
120. யூனோமியஸ்
சைசிக்கஸின் ஆயரும், ஏரியன் குழுவின் உறுப்பினருமான யூனோமியஸ், தனது மதக்கொள்கையில் மற்றவர்கள் மறைத்ததை வெளிப்படையாக அறிவிக்கும் அளவுக்குப் பெரும் பாவநிந்தனையில் ஈடுபட்டார். அவர் இன்னும் கப்படோசியாவில் வசித்து (அதாவது இந்தப் பதிவு எழுதப்பட்ட காலப்பகுதியில் உயிருடன் இருந்திருக்கிறார்) வருவதாகவும், திருச்சபைக்கு எதிராகப் பலவற்றை எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. பின்லினாரியஸ், டிடீமஸ், செசாரியாவின் பசில், கிரெகரி நசியான்சென் மற்றும் நிஸ்ஸாவைச் சேர்ந்த கிரெகரி ஆகியோர் அவரது ஆக்கங்களுக்குப் பதிலளித்துள்ளனர்.
121. பிரிசில்லியானஸ்
அபீலாவின் ஆயரான பிரிசில்லியானஸ், ஹைடேஷியஸ் மற்றும் இத்தாசியஸ் தலைமையிலான குழுவில் ஒருவராக இருந்தார். அவர் கொடுங்கோலன் மாக்சிமஸால் ட்ரேவ்ஸ் என்ற இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். பிரிசில்லியானஸ் பல சிறு நூல்களை எழுதியுள்ளார்; அவற்றில் சில நம் கைகளுக்கும் கிட்டியுள்ளன. ஐரேனியஸ் எழுதிய பாசிலைட்ஸ் அல்லது மார்க்கின் மதக்கொள்கையான ஞானவாதத்தை ஏற்றுக்கொண்டிருந்ததால் அவர் களங்கத்துக்கு முகம் கொடுத்திருந்தார் என்று சிலர் இன்றும் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், அவர் இந்தக் கொள்கைகள் மீது சற்றும் நம்பிக்கை கொண்டிருக்க வில்லை என்று அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
122. லட்ரோனியானஸ்
ஸ்பானிய தேசத்தவரான லட்ரோனியானஸ் ஒரு தலைசிறந்த கல்விமானாவார். இவர் கவிதை எழுதுவதில் திறமை வாய்ந்தவராகவும், பண்டைய காலக் கவிஞர்களுடன் ஒப்பிடத்தக்கவராகவும் இருந்தார். திருச்சபையில் பிளவை உருவாக்க அவருக்கு உதவிய பிரிசில்லியனஸ், ஃபெலிசிசிமஸ், ஜூலியானஸ் மற்றும் யூக்ரோஷியா ஆகியோருடன் சேர்த்து ட்ரேவ்ஸில் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. வெவ்வேறு விடயங்களை பற்றி அவர் வடித்த சில கவிதைகள் இன்றும் வாசகர்கள் மத்தியில் பிரபலம் பெற்றவையாகக் காணப்படுகின்றன.
123. திபேரியானஸ்
பேட்டிக்காவைச் சேர்ந்த திபேரியானஸ், பிரிசில்லியனின் மதக்கொள்கையை நம்புவதாகக் கூறப்பட்ட ஒரு கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, ஒரு நீண்ட மற்றும் சிக்கலான மன்னிப்புக் கடிதத்தை எழுதினார். இருப்பினும், தனது நண்பர்கள் இறந்த பிறகு, நாடுகடத்தப்பட்டதில் சோர்வடைந்த அவர், தன் மனதை மாற்றிக் கொண்டார். வேதாகமம் கூறுவது போல தனது பழைய வழிகளுக்கே திரும்பி கிறிஸ்துவுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு கன்னிப்பெண்ணை மணந்தார்.
124. மிலான் நகரத்தவரான அம்ப்ரோஸ்
மிலான் நகரத்து ஆயரான அம்ப்ரோஸ், இந்தப் பதிவு எழுதப்பட்ட காலப்பகுதி வரை அவர் உயிருடன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அதுவரை அவர் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருந்தார். இதன் காரணமாக, அவரைப் பற்றிய எனது கருத்தை நான் சற்று தள்ளி வைத்திருக்கிறேன்; ஏனெனில் நான் அவரைப் புகழ்ந்தால், நான் முகஸ்துதி செய்வதாகக் குற்றம் சாட்டப்படலாம் என்றும் நான் அவரை விமர்சித்தால் நான் உண்மைகளை மட்டுமே கூறுவதாகவும் ஒரு எண்ணப்பாடு தோற்றம் பெறக்கூடும் என்றும் கவலைப்படுகிறேன்.
125. இவாக்ரியஸ்
அந்தியோக்கியாவின் ஆயரான இவாக்ரியஸ், மிகவும் புத்திக்கூர்மையுடைய மனிதராக இருந்தார். அவர் குருவானவராக இருந்தபோதே, தான் அதுவரை வெளியிடாத பல்வேறு தலைப்புகளில் பல ஆக்கங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், அவர் புனித அந்தோனியாரின் வாழ்க்கை வரலாற்றை அத்தனாசியஸின் கிரேக்க மொழியிலிருந்து நமது மொழிக்கு மொழிபெயர்த்தார்.
126. அலெக்சாண்டிரியா நகரத்தவரான அம்ப்ரோஸ்
டிடீமஸின் மாணவரான அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த அம்ப்ரோஸ், ‘அப்பொலினாரிஸுக்கு எதிரான கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட நூலையும், சமீபத்தில் ஒருவர் எனக்குத் தெரிவித்தபடி, ‘யோபு மீதான விளக்கவுரைகள்’ என்ற நூலையும் எழுதினார். இந்தப் பதிவு எழுதப்பட்ட காலப்பகுதி வரை அவர் உயிருடன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
127. கொன்ஸ்டான்டிநோபிள் நகரத்தவரான மாக்சிமஸ்
தத்துவஞானி மாக்சிமஸ் அலெக்சாண்டிரியாவில் பிறந்தார். அவர் கொன்ஸ்டான்டிநோபிள் நகரத்து ஆயராகப் பதவி வகித்த போதும், பின்னர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் ‘ஆரியர்களுக்கு எதிரான நம்பிக்கை’ என்ற ஒரு முக்கியமான நூலை எழுதி, மிலானின் பேரரசர் கிராட்டியானசிடம் கையளித்தார்.
128. நிஸ்ஸா நகரத்தவரான கிரெகரி
செசாரியாவின் பசிலின் சகோதரரும், நிஸ்ஸாவின் ஆயருமான கிரெகரி, சில ஆண்டுகளுக்கு முன்பு கிரெகரி நசியான்சானுக்கும் எனக்கும், யூனோமியஸுக்கு எதிரான ஒரு ஆக்கத்தை வாசித்துக் காட்டினார். அவர் வேறு பல படைப்புகளையும் எழுதியுள்ளதாகவும், தொடர்ந்து (அவர் வாழ்ந்த காலம் வரை) எழுதி வந்ததாகவும் கூறப்படுகிறது.
129. அந்தியோக்கியா நகரத்தவரான யோவான்
அந்தியோக்கியாவைச் சேர்ந்த ஒரு குருவானவரும், எமேசாவின் யூசிபியஸ் மற்றும் தியோடோரஸின் மாணவருமான யோவான், பல நூல்களை எழுதியதாக நம்பப்படுகிறது. இருப்பினும், நான் அவருடைய ‘குருத்துவம் பற்றி’ என்ற நூலை மட்டுமே வாசித்திருக்கிறேன்.
130. கெலாசியஸ்
யூசோயஸுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள செசாரியாவின் ஆயராக இருந்த கெலாசியஸ், தூய்மையான நடையில் எழுதுவதில் புகழ்பெற்றவராக அறியப்படுகிறார். இருப்பினும் அவர் தனது படைப்புகளை வெளியிடவில்லை.
131. தியோதிமஸ்
சித்தியாவில் உள்ள டோமியின் ஆயரான தியோதிமஸ், உரையாடல் வடிவிலும் பழங்கால நடையிலும் சுருக்கமான மற்றும் அறிவார்ந்த ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். அவர் வாழ்ந்துகொண்டிருந்த காலம் வரை, மேலும் பல ஆக்கங்களை எழுதி வந்ததாகக் கேள்வியுற்றேன்.
132. பிரட்டோரிய அதிகாரியான டெக்ஸ்டர்
நான் முன்பு குறிப்பிட்ட பசியானஸின் மகனான டெக்ஸ்டர், தன் காலத்தில் நன்கு அறியப்பட்டவராகவும் கிறிஸ்தவ விசுவாசத்தில் பக்தி கொண்டவராகவும் இருந்தார். அவர் ஒரு உலகளாவிய வரலாற்றை எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டேன், ஆனால் அதை நான் இன்னும் வாசிக்கவில்லை.
133. அம்பிலோகியஸ்
இக்கோனியத்தின் ஆயரான அம்பிலோகியஸ், சமீபத்தில் எனக்கு ‘பரிசுத்த ஆவியைப் பற்றி’ என்ற ஒரு புத்தகத்தை வாசித்துக் காட்டினார். இந்தப் புத்தகத்தில், பரிசுத்த ஆவியானவரும் கடவுள் என்றும், அவர் ஆராதிக்கப்பட வேண்டும் என்றும், அவர் சர்வ வல்லமையுள்ளவர் என்றும் என்னிடம் வாதிட்டார்.
134. சோஃப்ரோனியஸ்
சோஃப்ரோனியசும் ஒரு சிறந்த கண்ணியம் மிக்க கல்விமான். அவரது இளமைப்பருவத்திலேயே பெத்லகேமைப் புகழ்ந்து ஒரு நூலையும், செராபிஸின் தோல்வியைப் பற்றி மற்றொரு முக்கியமான நூலையும் எழுதினார். அவர் யூஸ்டாக்கியஸுக்கு கன்னித்தன்மையைப் பற்றியும், துறவி ஹிலாரியனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் எழுதினார். அவர் என்னுடைய சிறு படைப்புகளை மிகவும் திறமையாக கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தார்; அத்துடன், நான் எபிரேய மொழியில் இருந்து இலத்தீனுக்கு மொழிபெயர்த்த சங்கீதப் புத்தகத்தையும் தீர்க்கதரிசிகளின் நூலையும் அவ்வாறே மொழிபெயர்த்தார்.
135. ஜெரோம்
இதை எழுதும் நான் ஜெரோம்; யூசிபியஸின் மகன். கோத்துகள் கைப்பற்றிய தல்மேஷியா மற்றும் பன்னோனியாவின் எல்லையில் அமைந்துள்ள ஸ்ட்ரிடோ என்ற நகரத்தைச் சேர்ந்தவன். இந்த ஆண்டு, அதாவது பேரரசர் தியோடோசியஸின் பதினான்காம் ஆண்டில், நான் பல படைப்புகளைத் தொகுத்துள்ளேன்: துறவி பவுலின் வாழ்க்கை வரலாறு, பல்வேறு நபர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு, ஹெலியோடோரஸுக்கான ஒரு அறிவுரை, லூசிஃபெரியானஸுக்கும் ஆர்த்தடாக்ஸஸுக்கும் இடையில் நிலவிய ஒரு சர்ச்சை, உலகளாவிய வரலாற்றின் ஒரு காலவரிசை, மற்றும் எரேமியா மற்றும் எசேக்கியேல் மீது ஓரிஜன் எழுதிய 28 பிரசங்கங்களை நான் கிரேக்கத்திலிருந்து இலத்தீனுக்கு மொழிபெயர்த்தேன். நான் தேவதூதர்களைப் பற்றியும், ஒசன்னாவைப் பற்றியும், விவேகமுள்ள மற்றும் ஊதாரி மகன்களைப் பற்றியும் எழுதியுள்ளேன், மேலும் பண்டைய சட்டத்திலிருந்து மூன்று கேள்விகளையும் கையாண்டுள்ளேன். உன்னதப் பாடலைப் பற்றிய இரண்டு பிரசங்கங்கள், மரியாளின் ஒப்பற்ற கன்னித்தன்மையைப் பற்றி விவாதிக்கும் ஹெல்விடியஸுக்கு எதிரான ஒரு கட்டுரை, கன்னியர் எவ்வாறு கற்பைக் காப்பது பற்றி யூஸ்தோக்கியஸுக்கு ஒரு கடிதம், மார்செல்லாவுக்கு எழுதிய நிருபங்களின் ஒரு புத்தகம், மற்றும் தன் மகளை இழந்த பவுலாவுக்கு ஆறுதல் கூறும் ஒரு கடிதம் ஆகியவை உள்ளன. பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தைப் பற்றிய மூன்று விளக்கவுரைப் புத்தகங்களும், எபேசியருக்கு எழுதிய நிருபத்தைப் பற்றிய மேலும் மூன்று புத்தகங்களும், தீத்துவுக்கு எழுதிய நிருபத்தைப் பற்றிய ஒரு புத்தகமும், பிலேமோனைப் பற்றிய ஒரு புத்தகமும் என்னிடம் உள்ளன. நான் பிரசங்கிக்கு ஒரு விளக்கவுரை, ஆதியாகமத்தைப் பற்றிய எபிரேயக் கேள்விகளின் ஒரு புத்தகம், யூதேயாவில் உள்ள இடங்களைப் பற்றிய ஒரு புத்தகம், மற்றும் எபிரேயப் பெயர்களைப் பற்றிய ஒரு புத்தகம் ஆகியவற்றையும் எழுதியுள்ளேன். நான் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்த, டிடீமசின் பரிசுத்த ஆவியைப் பற்றிய நூல் எனது மற்றொரு படைப்பாகும். மேலும், லூக்காவைப் பற்றி முப்பத்தொன்பது பிரசங்கங்களும், சங்கீதம் 10 முதல் 16 வரை குறித்த ஏழு பிரசங்கங்களும், சிறைப்பட்ட துறவியைப் பற்றிய பிரசங்கமும், ஆசீர்வதிக்கப்பட்ட ஹிலாரியனின் வாழ்க்கை வரலாறும் என்னிடம் உள்ளன. நான் புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியிலிருந்தும், பழைய ஏற்பாட்டை எபிரேய மொழியிலிருந்தும் மொழிபெயர்த்தேன். உண்மையைச் சொல்லப் போனால், நான் தினமும் எழுதுவதால், பவுலாவுக்கும் யூஸ்தோக்கியமுக்கும் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன் என்ற எண்ணிக்கையையே மறந்துவிட்டேன். மேலும், மீகாவைப் பற்றி இரண்டு விளக்க நூல்களையும், நாகூமைப் பற்றி ஒன்றையும், ஆபக்கூக்கைப் பற்றி இரண்டையும், செப்பனியாவைப் பற்றி ஒன்றையும், ஆகாயைப் பற்றி ஒன்றையும் எழுதியுள்ளேன். தீர்க்கதரிசிகளைப் பற்றி இன்னும் பல நூல்கள் எழுதப்பட்டு வருகின்றன.
