யூசிபியஸ் தேவாலயம் வரலாற்றையும் எழுதினார்(Eusebius, Church History 9)

யூசிபியஸ், தமிழில் தேவாலய வரலாறு, புத்தகம் 9

Eusebius, The Church History in Tamil, book 9. Translated with permission from Paul L. Meier, The Church History: A New Translation with Commentary, 1999. Tamil translation is Public Domain.


ஒன்பதாவது புத்தகம்: விடுதலையும் விமோசனமும்

மக்சிமின், மக்சென்டியஸ் மற்றும் கொன்ஸ்டன்டைன்

வெளிப்படையான நிவாரணம்

1.மேலே குறிப்பிட்டுள்ள ஏகாதிபத்திய அதிகாரம் இரத்துச் செய்யப்பட்டமை குறித்த அறிவிப்பு ஆசியா முழுவதும் அதன் அண்டை பிராந்தியங்களிலும் வெளியிடப்பட்டது. இது நிறைவேற்றப்பட்டு முடிந்ததும், கிழக்கின் கொடுங்கோலன் மாக்சிமின் [டாய்யா], உலகத்தை  சிருஷ்டித்த கடவுளின் மீது கொண்டுள்ள பக்திக்கு மிகவும் தீவிரமான எதிரியாகவும், முற்றிலும் மனிதாபிமானமற்ற ஒரு பிறவியாகவும் இருந்த அவன், ஏகாதிபத்திய அதிகாரம் இரத்துச் செய்யப்பட்டமை குறித்த அறிவிப்பில் மகிழ்ச்சிகொள்ளவில்லை. அந்த அறிவிப்பு தாங்கிய கடிதத்தை எல்லோர் மத்தியிலும் அனுப்பி எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துமாறு தனக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தினான். மேலதிகாரிகளின் தீர்ப்பை எந்த வகையிலும் எதிர்க்க முடியாததால், மேலே உள்ள ஆணையை ஒரு மூலையில் வீசியெறிந்து, அவன் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் அந்த ஆணை பற்றி எந்த விதத்திலும் எவருக்கும் தெரியக்கூடாது என்று உறுதிபூண்டு,  அதற்கு பதிலாக வாய்வழி அறிவுறுத்தல்களை மாத்திரமே வழங்கினான். அவனுடைய  துணை அதிகாரிகள் அந்த வாய்வழி அறிவுறுத்தல்களை தனித்தனியாக  எழுத்துப்பூர்வமாக எழுதினர். உதாரணமாக, மிகச் சிறந்த அரசியற் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட சபினஸ் என்ற அறிஞர், பேரரசரின் இந்த கடிதத்தை இலத்தீன் மொழியிலிருந்து மொழிபெயர்த்து  அரசின் ஆணையை மாகாண ஆளுநர்களுக்கு பின்வரும் கடிதத்தில் தெரிவித்தார்:

நமது தெய்வீக எஜமானர்களின் தெய்வீக வழிகாட்டுதலுடனும், மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஆட்சிசெய்த பேரரசர்கள், நீண்ட காலமாக அனைத்து மக்களின் சிந்தனைகளையும் புனிதமான மற்றும் சரியான வாழ்க்கை முறையில் வழிநடத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் உரோமையர்களுக்கு சற்றேனும் பொருந்தாத பழக்கவழக்கங்களைப் பின்பற்றியவர்கள் மத்தியிலும் நிலையான கடவுள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை உண்மையான கடவுளை வழிபட ஒரு புரிதலை ஏற்படுத்தினர். இருப்பினும், சிலரின் தொடர்ச்சியான மற்றும் தீவிர எதிர்ப்பு மிகவும் வலுவாக இருந்தது. ஆணையில் குறிப்பிட்டிருந்த தெளிவான தர்க்கம் கூட அவர்கள் முன் பயனற்றதாகவே காணப்பட்டது. மேலும் தண்டனை குறித்த எச்சரிக்கைக்கு கூட அவர்கள் அசைந்ததாகத் தெரியவில்லை. அப்போதிருந்து, பலர் இதுபோன்ற நடத்தையில் ஈடுபடுவதன் மூலம் ஆபத்தில் சிக்கினர். பலமுள்ள பேரரசர்களான நமது எஜமானர்கள், அத்தகைய காரணத்திற்காக இந்த மனிதர்களை ஆபத்தில் மூழ்கடிப்பது தங்கள் தெய்வீக நோக்கத்திற்கு முரணானது என்று கருதினார்கள். எனவே, மிகுந்த அர்ப்பணிப்புடன் உங்கள் புத்திசாதூர்யம் மிக்க இணக்கம் குறித்து எழுதிய ஒரு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவெனில், கிறிஸ்தவர்கள் தங்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதைக் கண்டறிந்தால், நீங்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கவோ அல்லது எல்லாவிதத் துன்புறுத்தல்களில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், இவற்றைக் குற்றங்கள் என்று நினைத்து அவர்களைத்  தண்டிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஏனெனில் அவர்களின் பிடிவாதமான கொள்கையைக் கைவிடும்படி அவர்களை எந்த வகையிலும் வற்புறுத்த முடியாது என்பதை நீண்ட காலமாக அவர்கள் நிரூபித்தே வந்துள்ளனர். ஒவ்வொரு நகர்ப்புற மற்றும் மாவட்டத்தின் வரவு-செலவுக் கட்டுப்பாட்டாளர்கள், நீதிபதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டவை குறித்த மேலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமில்லை என்று அறிவிப்பது உங்கள் கடமை என்பது பற்றி தாங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

மாகாண ஆளுநர்கள், தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் உண்மையானது என்று கருதி, கட்டுப்பாட்டாளர்கள், நீதிபதிகள் மற்றும் கிராமப்புற அதிகாரிகளுக்கு ஏகாதிபத்திய முடிவை எச்சரிக்கும் கடிதங்களை அனுப்பினார்கள். அவர்கள் அதை எழுத்தில் மட்டுமல்ல, செயலிலும் நடைமுறைப்படுத்தினர். கடவுளை ஏற்றுக்கொண்டதற்காக சிறையில் வைக்கப்பட்டிருந்த அனைவரையும் விடுவித்தனர். மேலும் கண்டனம் செய்யப்பட்டவர்களை பாதாள சிறைகளில் இருந்து  விடுதலை செய்தனர். ஏனெனில் இது தான் பேரரசரின் நோக்கமாக இருந்திருக்கும்  என்று அவர்கள் கருதினர்.

இவ்வாறான அறிவிப்பை செய்து முடித்ததும், இருள் சூழ்ந்த ஒரு சூழலில் இருந்து திடீரென ஒரு பேரொளி தெரிந்தது போல் இருந்தது. எல்லா  நகரங்களிலும் உள்ள தேவாலயங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது  ஆலயங்களில் சபையினரால் நிரம்பி வழிந்தன. சடங்குகள் முறையாக நடந்தேறின. அவிசுவாசிகளான புறஜாதிகள் அனைவரும் இவ்வளவு பெரிய மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்றும், இந்த அதிசயத்தைக் கண்டும்  வியந்தனர். கிறிஸ்தவர்களின் கடவுள் மட்டுமே உன்னதர் மற்றும் உண்மையானவர் என்று வெகுவாகப் புகழ்ந்தனர். நம் சொந்த மக்களிடையே வாழ்ந்தது, துன்புறுத்தல் வேளையில் துணிச்சலுடன் போராடியவர்கள் மீண்டும் கௌரவமான முறையில் சுதந்திரத்தை அனுபவித்தனர். அதேநேரம் தமது விசுவாசம் சோர்வடைந்து மன விரக்தியில் இருந்தவர்கள் அவர்களின் ஆன்மாக்கள் குணமடையச் செய்ய ஆவலுடன் முயன்றனர். தங்களைக் காப்பாற்றும்படி வலிமையானவர்களிடம் அவர்களது வலது கரத்தை நீட்டுமாறு இறைஞ்சினர். மேலும் தங்கள் மீது இரக்கம் கொள்ளவேண்டுமென கடவுளிடம் மன்றாடினர்.

பின்னர், தெய்வபக்தியின் நிமித்தம் போராடிய உன்னதப் வீரர்கள் பாதாள சிறைகளில் தாங்கள் அனுபவித்த ஆக்கினைகளில் இருந்து விடுபட்டு தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பினர். அவர்கள் ஒவ்வொரு நகரத்தையும் கடந்து செல்லும்போது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியும், பிரகாசமும், விவரிக்க முடியாத தன்னபிக்கையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே சென்றனர். அவ்வாறு கூடிய திரளான மக்கள் வீதிகள் மற்றும் பொது சதுக்கங்களின் நடுவே செல்லும்போது துதிப்பாடல்களாலும் சங்கீதங்களாலும் கடவுளைத் துதித்துக்கொண்டு சென்றனர். சற்று முன் சிறைக் கைதிகளாக, கொடூரமாகத் தண்டிக்கப் பட்டு, தம் தாயகத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள் இப்போது மகிழ்ச்சி ததும்பும் புன்னகையுடன் தங்கள் சொந்த இதயங்களால் மகிழ்ந்தனர். இதனால் எங்கள் இரத்தத்தை அருந்த தாகம் கொண்டு வெறியுடன் அலைந்த கயவர்கள் கூட இந்த எதிர்பாராத அதிசயத்தைக் கண்டு எங்களோடிணைந்தது எங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

மாக்சிமினின் புதுப்பிக்கப்பட்ட அடக்குமுறை

2. கிழக்குக் கொடுங்கோலரின் கீழ் மக்கள் அனுபவித்த துன்புறுத்தலை விட இது அதிகமாக இருந்தது. அவர் நன்மையையும் நல்ல மனிதர்களையும் அடியோடு வெறுத்தார். அத்தோடு, அவர் ஏறக்குறைய ஆறு மாதங்கள் இந்த சூழ்நிலையை பொறுத்துக்கொண்டிருந்தார். அமைதியைக் குலைக்க அவர் பல வழிகளில் முயன்றார். முதலில் கல்லறைகளில் நாங்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க ஒரு சதித்திட்டத்தை  உருவாக்கினார். பின்னர், அந்தியோக்கியா மக்களைத் தூண்டிவிட்டு, எந்த ஒரு கிறிஸ்தவனும் தங்கள் பிராந்தியத்தில் வசிப்பதைத் தடுப்பது  தங்களுக்குப் பெரும் உதவியாக இருக்குமென்றும், மற்றவர்களும் அதே விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கேட்டு, எங்களை எதிர்க்க அவர் துஷ்டர்களின் பிரதிநிதிகளை அனுப்பினார். இவை அனைத்துக்கும் காரணகர்த்தாவாக இருந்தவர் தியோடெக்னஸ் என்ற அந்தியோசீனியர். அவர் தனது பெயருக்கு ஏற்ப வாழ்ந்த ஒரு தந்திரமான மற்றும் வஞ்சகமான ஏமாற்றுக்காரர். அவர் தான் நகரத்தின் வரவு-செலவுக் கட்டுப்பாட்டாளராக இருந்ததாகத் தெரிகிறது.

3. இந்த மனிதர் [Theotecnus] மீண்டும் மீண்டும் நமக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு, திருடர்கள் மற்றும் கொடிய வில்லன்களைப் போல மறைந்திருந்து எம்மை வேட்டையாட எல்லா வழிகளையும் முயற்சித்து, தனக்குத் தெரிந்த அத்தனை சூழ்ச்சிகளையும் பயன்படுத்தி, நம்மை அவதூறாகப் பேசவும், பொய்க் குற்றம் சாட்டவும், எண்ணற்றோரின் மரணத்திற்கும் காரணமாக விளங்கினார். இறுதியாக, மந்திரம், மாயை மற்றும் சூனியங்களாலும், நட்பின் கடவுள் என்று அவர் நம்பும் சீயஸின் சிலையை நிர்மாணித்தார். அதற்கு சாத்தானிய சடங்குகள், தீட்சைகள் மற்றும் வெறுப்பூட்டும் விதத்தில் நடத்தப்பட்ட  அபிஷேகங்களுக்குப் பிறகு, அவர் தனக்கே உரித்தான வார்த்தைகளின் மூலம் பேரரசரின் முன்னிலையில் அவரைப் பிரியப்படுத்தும் வகையில்  தனது மந்திரத்தை மூணுமுணுத்தார். அவன் வழிபடும் கடவுள் கிறிஸ்தவர்களை எதிரிகளாக கருத்தியபடியால், அவர்களை நகரத்திலிருந்தும் அதன் சுற்றுப்புறத்திலிருந்தும் வெளியேற்ற தனக்கு உத்தரவிட்டதாக இந்த நபர் கூறினார்.

4. இந்த நபர் முதலில் இவ்வாறான செயலை நடைமுறைப்படுத்த பிரதான மூளையாக செயல்பட்டார. அதேநேரம் அந்த ஆட்சியின் ஆளுமைக்கு உட்பட்ட  நகரங்களில் உள்ள பிற அதிகாரிகள் அனைவரும் உடனே இதைப் பின்பற்றினர். மாகாண ஆளுநர்கள் இந்த நடவடிக்கைகள்  பேரரசருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதைக் கண்டு, தங்கள் குடிமக்களும் அவ்வாறே செய்ய வேண்டுமென முன்மொழிந்தனர். கொடுங்கோலன் அவர்களின் திருத்தப்பட்ட மனுக்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து எங்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் தலைதூக்கின.

மாக்சிமின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை தானே நேரடியாக குருக்களாகவும், ஒவ்வொரு நகரத்திலும் பொது சேவையில் மிகவும் பிரபலமானவர்களை சிலைகளின் பிரதான பூசகர்களாகவும் நியமித்தார். மேலும் அவர்கள் ஆர்வத்துடன் சேவை செய்து அவர்கள் வழிபடும் கடவுள்களை வணங்கினர். ஆட்சியாளரின் பகுத்தறிவற்ற மூடநம்பிக்கை ஆளுநர்களையும் ஆட்சியாளர்களையும் தவறாக வழிநடத்தி தனது சொந்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக, எங்கள் மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தியது தெளிவாகிறது. ஆட்சியாளரிடமிருந்து அவர்கள் எதிர்பார்த்த நன்மைகளுக்கு ஈடாக அவர்கள் அவருக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய வெகுமானம் தான், நமது இரத்தத்தின் மீது கொண்டிருந்த வேட்கையும், தங்கள் விரோதத்தை வெளிப்படுத்த புதிய வழிமுறைகளை உருவாக்குவதும் ஆகும்.

5. உண்மையில், அவர்கள் பிலாத்து மற்றும் நமது இரட்சகர் குறித்த போலி நினைவுக் குறிப்புகளை உருவாக்கினர். அவை கிறிஸ்துவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளால் நிறைந்திருந்தன. அவர்களின் மேலதிகாரியின் சம்மதத்துடன் அவர்கள் இந்த நினைவுக் குறிப்புகளை அவரது ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்கள் முழுவதும் விநியோகித்தனர். அவற்றை சுவரொட்டிகளாக எல்லா இடங்களிலும் – நகரம் மற்றும் நாடு முழுவதும் ஓட்டும்படி செய்தனர் – மேலும் பாடசாலை மாணவர்களை பாடங்களுக்குப் பதிலாக அவற்றைப் படிக்கவும் மனப்பாடம் செய்யும்படி பணிக்கவும்  ஆசிரியர்களுக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், டமாஸ்கஸில், உரோமையர்களால் டக்ஸ் என்று அழைக்கப்படும் இராணுவத் தளபதி ஒருவன், நகர சதுக்கத்தில் இருந்து சில வழிதவறிய பெண்களைக் கடத்தி, அவர்கள் சித்திரவதைகளுக்கு  உள்ளாக்கப்படுவர் என்ற அச்சுறுத்தலின் கீழ், விசுவாசத்தை  இழிவுபடுத்தும் வகையில் அந்தப் பெண்கள் சொல்ல விரும்பிய அனைத்தையும் எழுதும்படி கட்டாயப்படுத்தினார். அதாவது, அவர்கள் ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள் என்றும், அவர்களின் குற்றச் செயல்களைப் பற்றி அறிந்திருந்தனர் என்றும், கிறிஸ்தவர்கள் தங்கள் தேவாலயங்களில் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருந்தனர் போன்றவற்றை விலாவரியாக எழுத்தில் வடிக்கும்படி அவர்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. ஆட்சியாளருக்கு அளித்த அறிக்கையில் ஆதரவற்ற பெண்கள் எழுதிய விடயங்கள் எல்லாவற்றிலிருந்தும் நகல் பிரதிகளை எடுத்து இணைத்தார்.  அவற்றைப் பார்த்த ஆட்சியாளர், ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரத்திலும் அந்த அறிக்கையை ஆவணமாய் வெளியிட உத்தரவிட்டார். 6. ஆனால் வெகு காலம் செல்வதற்கு முன்னமே, அந்த இராணுவத் தளபதி தனது மரணத்தைத் தன் கையாலேயே நிறைவேற்றிக்கொண்டு தனது ஒழுக்கக்கேடான வாழ்வுக்கு தகுந்த விலையை செலுத்தினான்.

புதிய வேதசாட்சியங்கள்

எவ்வாறாயினும், எங்களைப் பொறுத்தவரை நாடுகடத்தல், கடுமையான துன்புறுத்தல் மற்றும் சித்திரவைகள் போன்றவை அனைத்து மாகாண ஆளுநர்களாலும் மீண்டும் தொடங்கப்பட்டன. மேலும் தெய்வீக வார்த்தைக்கு மிக முக்கியத்துவம்  சிலருக்கு ஈவிரக்கமின்றி மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஃபீனீசியாவின் எமேசா நகரத்தில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று பறைசாற்றிக்கொண்ட மூவர் காட்டு மிருகங்களுக்கு இரையாக எறியப்பட்டனர். அவர்களில் சில்வானஸ் என்பவரும் இருந்தார். அவர் ஒரு மூத்த ஆயராவார். நாற்பது ஆண்டுகள் பதவியில் இருந்து இறை பணியாற்றிய மிகவும் வயதான ஆயர். அலெக்சாந்திரியாவில் உள்ள திருச்சபைக்குத் தலைமை தாங்கிய பேதுரு என்பவர், தனது வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடித்து வாழ்ந்தது மட்டுமன்றி, அவரது வேதாகமம் குறித்த நிபுணத்துவத்தில் அனைத்து ஆயர்களுக்கும் புனிதமான முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.  மாக்சிமின் கட்டளைப்படி அவர் திடீரென்று எந்தக் காரணமுமின்றி கைது செய்யப்பட்டு, ஏனைய  எகிப்தியர்களைப் போலவே சிரச்சேதம் செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்.

சிறந்த மற்றும் தயாள குணம்கொண்டவரும், இறையியலில் தேர்ச்சி பெற்றவரும், அந்தியோக்கியாவில் இறைபணியாற்றியவருமான மறைமூப்பரான லூஷியன் என்ற அறிஞர், பேரரசர் தங்கியிருந்த நிகோமீடியாவிற்கு அழைத்து வரப்பட்டார். ஆட்சியாளரின் முன்னிலையில் தனது விசுவாசத்தைப் பறைசாற்றிய பின்பு, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எல்லாவித நன்மைகளுக்கும் எதிராக செயல்படும் துஷ்டனான மாக்சிமின், தாக்குதல்களைத் தொடுப்பதிலும், தண்டனைகளை நிறைவேற்றுவதிலும் மிக விரைவாகவும் கொடூரமாகவும் செயலாற்றினான். இவனால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் முன்னெப்போதோதையும் விட, மிகவும் மோசமானதாகவும் கொடூரம் நிறைந்ததாகவும் இருந்ததாக எமக்குத் தோன்றியது.

7. இதுவரை கண்டிராதவாறு, முதல் முறையாக, நகர்ப்புற மையங்களிலும், நகரங்களில் இருந்தும் எங்களுக்கு எதிராக பெறப்பட்ட மனுக்கள் மற்றும் ஏகாதிபத்திய உத்தரவுகள் பற்றிய பதிவேடுகள் வெண்கலப் பலகைகளில் பொறிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பாடசாலை செல்லும் பிள்ளைகளின் உதடுகளில் இயேசு மற்றும் பிலாத்துவின் பெயர்கள் குறித்த  அநாகரிகமான போலியான நினைவுக் குறிப்புகள் உச்சரிக்கப்பட்டபடி இருந்தன. இவ்வாறான வெண்கலப் பலகைகளில் பொறிக்கப்பட்ட மாக்சிமின்  அறிவிப்புகள் எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அப்போதுதான், கடவுளை வெறுத்து நிந்திக்கும் இந்த கொடூர அரக்கனின் சுயரூபம் அனைவரது கண்களுக்கும் தெளிவாகப் புலப்படும். அதேவேளை தெய்வீக நீதியானது எப்போதும் ஓயாமல் இவ்வாறான தீமைகள் மற்றும் கொடுமைகளின் பின்னால் நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. (இதன் விளைவாக அவர் எங்களுக்கு எதிராகக் கொண்டிருந்த தனது கொள்கைகளை விரைவாக மாற்றி, அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட  மாற்றங்களை சட்டவரைமுறைக்குள் உள்வாங்கினார்).

எங்களைத் தாக்கும் மனுக்களை நியாயப்படுத்தும் வகையில், டயர் பிரதேசத்தில் காணப்படும் வெண்கல பெயர்ப்பலகையில் இருந்து பெறப்பட்ட மேக்சிமின் இட்ட பதிவின் மொழிபெயர்ப்பின் நகல் இங்கே தரப்பட்டுள்ளது

இறுதியில், மனித மனத்தின் பலவீனமான அனுமானம், இதுவரை அறியாமை என்ற கொடிய இருளில் சிக்கி மனிதர்களின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகச் சூழ்ந்திருந்த, இன்னும் அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்த பிழையான வழிகளில் படர்ந்திருந்த அடர்ந்த பனிமூட்டத்தை விளக்கி சிதறடிப்பதில் வெற்றி பெற்றது. எனினும், காலப்போக்கில் அது எப்போதும் நிலைத்திருக்கும் கடவுளின் தீங்கற்ற அருட்கொடையால் நீடித்து நிர்வகிக்கப்படுகிறது என்பதை இப்போது அது ஒப்புக்கொள்கிறது. உங்களின் தெய்வீக குணத்தின் மிக அற்புதமான சான்றுக்காக நான் எவ்வளவு நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. இதற்கு முன்பே, அழியாத தெய்வங்களுக்கு நீங்கள் அளித்த கெளரவம், கொண்டிருந்த  பயபக்தி பற்றி அனைவரும் அறிந்திருக்கிறார்கள். இவை வெறும் வெற்று வார்த்தைகளால் கூறப்பட்டவை அல்ல, அதன் செயல்கள் மற்றும்  தொடர்ச்சியான, அற்புதமான விசுவாசத்துடன் முன்னெடுக்கப்பட்டவை தான் இவை. நீங்கள் வாழும் நகரம் என்றும் அழியாத கடவுளர்கள் வாசம் செய்யும் ஆலயத்தின் இருப்பிடம் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானது. மேலும் அழியாத கடவுளர்கள் அங்கு வாசம் செய்வதால் அந்த நகரம் செழித்து வளர்கிறது என்பதற்கான பல அறிகுறிகள் அங்கே  காணப்படுகின்றன.

எனவே, உங்கள் நகரம் அதன் தனிப்பட்ட நலன்களை முற்றிலுமாகப் புறக்கணித்து, அதன் சொந்த விவகாரங்களைக் குறிப்பிடாமலும் அதன் முந்தைய கோரிக்கைகளை வலியுறுத்தாமலும் இருந்தவேளை, அந்த மோசமான முட்டாள்தனத்தைப் பின்பற்றுபவர்கள் மீண்டும் பரவத் தொடங்குவதைக் கண்டதும், கனன்று கொண்டிருக்கும் வெப்ப உலை தீயை உமிழ்வது போல மீண்டும் பரவத் தொடங்குவதைக் கண்டபோது, அது மேலும் கொழுந்துவிட்டெரியும் சுவாலை போல் உருவெடுப்பதைக் கண்டதும், அனைத்து மத வழிபாடுகளும் நடைபெறும் தாய் நகரமான எங்கள் நகரத்தை நோக்கி சிகிச்சை மற்றும் உதவிகள் கேட்டு நீங்கள் உடனடி வேண்டுகோள் ஒன்றை விடுத்தீர்கள். தெய்வங்கள் மீதான உங்கள் நம்பிக்கையும் மரியாதையும், தெய்வங்கள் உங்கள் மனதில் ஒரு இரட்சிப்பு பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தி இருப்பதை இது வெளிப்படுத்துகிறது. எனவே, மிகவும் உயர்ந்த மற்றும் வலிமை மிக்கவராக சீயஸ், உங்கள் மிகவும் புகழ்பெற்ற நகரத்தின் பாதுகாவலர், உங்கள் மூதாதையர் கடவுள்கள், உங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாவலர், உங்கள் நிலம் மற்றும் வீடுகள், அனைத்து அழிவு மற்றும் சிதைவுகளிலிருந்தும், உங்களை ஊக்கப்படுத்தினார். இவரது இந்த ஆரோக்கியமான தீர்மானம், அழியாத கடவுள்களின் வழிபாடு மற்றும் புனிதமான சடங்குகளை உரிய பயபக்தியுடன் அணுகுவது எவ்வளவு அற்புதமானது, புகழ்பெற்றது மற்றும் நன்மதிப்புக்குரியது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

நிலம் தன்னை நம்பி விதைத்து, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட விதைகளை ஏற்று அவற்றைப் பெருக்குவதற்கும், விவசாயியின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏமாற்றாமல் இருப்பது போன்றவைக்கு கடவுள்களின் கருணைச் செயல்களே காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியாத,  பொது அறிவு கூட இல்லாத முட்டாள் யாரேனும் இருக்கக்கூடுமோ? அல்லது அசுத்தமான போர் பூமியில் நிலைகொண்டு, அதனால் அழிவுற்ற அழுகிய உடல்களை மரணத்திற்குள் இழுத்துச் சென்று அதன்மூலம் மோட்சத்தின் ஆரோக்கியமான காற்றை மாசுபடுத்தவில்லையா? அல்லது கடுமையான காற்று வீசுவதால் கடல் கொந்தளித்து புயல் ஏற்படுவதில்லையா? அல்லது முன்னறிவிப்பு இல்லாமல் புயல்கள் தாக்கி பேரழிவை ஏற்படுத்துவதில்லையா? அல்லது ஒரு தாயாய், தாதியாய் இருக்கும் பூமி, பயங்கரமான நிலநடுக்கத்தால் அதன் ஆழமான பள்ளங்களில் மூழ்கிவிடுவதில்லையா? இவை அனைத்தும், இன்னும் பயங்கரமானவை யாவும், கடந்த காலங்களில் நாம் அனைவரும் அறிந்தபடி, மீண்டும் மீண்டும் நிகழ்ந்தன அல்லவா? அந்த ஒழுக்கக்கேடான மக்களின் தவறு மற்றும் முட்டாள்தனத்தால் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன. அது அவர்களின் மனதை அடிமைப்படுத்தி, அவர்களின் வெட்கக்கேடான செயல்களால் உலகம் முழுவதையும் அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றது.

அவர்கள் பரந்த சமவெளிகளில் தங்கள் பார்வையை செலுத்தட்டும், அங்கு ஏற்கனவே பயிர்கள் முற்றிய சோளக் கருதுகளுடன் பசுமையாகக் காட்சியளிக்கின்றன. மற்றும் புல்வெளிகள், காலம் தவறாது பெய்த  மழையின் காரணமாக பூக்கும் தாவரங்களால் பிரகாசமாககே காட்சியளிக்கின்றன. அதேநேரம் வானிலை மிதமானதாகவும் பயிர்கள் செழித்து வளர உகந்ததாகவும் இருப்பது மேலும் அனுகூலத்தைத் தருகிறது. நமது இறையச்சம், தியாகம், வழிபாடு ஆகியவற்றின் மூலம் வலிமையான மற்றும் மனித சக்தியால் கட்டுப்படுத்தமுடியாத காற்றின் சக்தி தணிந்ததில் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும். எனவே அவர்கள் மிகவும் அமைதியானதும், பாதுகாப்பானதும் மிக்க ஒரு சூழலை அனுபவிக்கும் நிலை காணப்படுகிறது. அந்த அறிவீனத்திலும்  முட்டாள்தனத்திலிருந்தும் இருந்து விடுபட்டு, நல்ல மனநிலைக்குத் திரும்பிய அனைவரும், எதிர்பாராத புயல் அல்லது கடுமையான நோயிலிருந்து விடுபட்டதைப் போல, மேலும் மேலும் மகிழ்ந்து, எதிர்கால வாழ்க்கை தரும் பலனை அனுபவிக்கட்டும். இருப்பினும், அவர்கள் தங்கள் மோசமான முட்டாள்தனத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்களானால், இந்த விஷயத்தில் உங்கள் பாராட்டத்தக்க கட்டளையின்படி, அவர்கள் உங்கள் நகரத்திலிருந்தும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள். இதனால் உங்கள் நகரம் அனைத்து அசுத்தம் மற்றும் மாசுகளிலிருந்து தூய்மையடைந்து, அழியாத கடவுள்களை வணங்கும் அதன் இயல்பான போக்கைப் பின்பற்ற முடியும்.

உங்கள் நல்ல நோக்கங்களுக்கு ஈடாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த வெகுமதியையும் பெற உங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் உளமார அனுமதிக்கிறோம். இதன் மூலம் உங்கள் கோரிக்கையை நாங்கள் எவ்வளவு மதிக்கிறோம் என்பதையும், கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள் இல்லாவிட்டாலும், நாங்கள் எவ்வளவு தாராளமாக இதை அணுகுகிறோம் என்பதையும் நீங்கள் உணரலாம். இதை நிறைவேற்ற இப்போதே முடிவு நீங்கள் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் வெகுமதியை நீங்கள் உடனே பெறலாம். அதை உங்கள் நகரத்திற்குக் கொடுப்பதன் மூலம், நீங்கள் என்றும் நிலைத்திருக்கும் கடவுள்களின் மீது பக்தி கொண்டவர் என்பதையும், உங்கள் நற்செயல்களுக்கு எங்கள் தயவால் பொருத்தமான வெகுமதி கிடைத்தது என்பதையும் எதிர்கால சந்ததியினருக்கு நிரூபிக்கும்.

இது ஒவ்வொரு மாகாணத்திலும் காணப்படும் வெண்கலப் பெயர்ப் பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. மனித நேயத்தைப் பொறுத்தவரையில் இது எல்லாவித நம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது. மற்றும் தீர்க்கதரிசன அறிக்கை சொல்வது போல், கள்ளக் கிறிஸ்தவர்களும், கள்ளத் தீர்க்கத்தரிசிகளும் தோன்றி மகத்தான செயல்களையும் அதிசயங்களையும் செய்வார்கள். அவற்றை அவர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடத்திலும் செய்து காட்டுவார்கள். முடிந்தால் தேவனுடைய மக்களையே ஏமாற்ற அவர்கள் முயற்சிப்பார்கள். [மத்தேயு 24:24]. உண்மையில், திடீரென்று ஆணையை வழங்குபவர்கள் மற்றும் எங்களைத் தாக்குபவர்கள் வழியில் வந்துகொண்டிருந்தபோது, பெரும்பாலான மக்களிடையே நம்பிக்கை மங்கிக்கொண்டிருந்தது. இன்னும் சில மாவட்டங்களுக்கு அவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. தனது சொந்த திருச்சபையின் காவலராக தேவன், கொடுங்கோலரின் அகங்கார தற்பெருமையைத் துவம்சம் செய்து, எமது பரலோகத்தின் பங்காளராக தம்மை வெளிப்படுத்தினார்.

பஞ்சம், கொள்ளைநோய் மற்றும் யுத்தம்

8. வழக்கமாக மாரிகாலத்தில் பெய்யும் மழைகூட பூமியில் பஞ்சம் ஏற்பட்டபோது அதன் இயல்பான மழையைப் பொழிய மறுத்தது. அதே போல் கொள்ளைநோய் மற்றும் மற்றொரு வகையான தொற்றுநோயும் பரவியது. அந்த நோயால் பீடிக்கப்பட்டவர்கள் தங்கள் தோல் கடும் சிவப்பு நிறமாகக் காணப்படும். அதன் காரணமாக அந்தத் தொற்றுநோய் கார்பன்கிள் [Carbuncle – பல்வாய்ப்பிளவு] என்று அழைக்கப்பட்டது. இது மிகவும் ஆபத்தான முறையில் உடல் முழுவதும் பரவியது. குறிப்பாக கண்களைத் தாக்கியது. இதன் காரணமாக ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் பார்வையை இழந்தனர்.

இது தவிர, ஆரம்ப காலத்திலிருந்தே உரோமையர்களின் நண்பர்களாகவும் பங்காளிகளாகவும் இருந்த ஆர்மேனியர்களுக்கு எதிரான போரின் போது கொடுங்கோலன் சிக்கலை எதிர்கொண்டான். இருப்பினும், அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததாலும், கடவுளின் மீது மிகுந்த பயபக்தியுடன் இருந்ததாலும், இந்த கடவுள்-விரோதி சிலைகள் மற்றும் சாத்தானுக்கு  பலிகளை செலுத்துமாறு அவர்களை ஊக்குவிக்க முயன்றான். இந்த ஈனச் செயல் நண்பர்களாயிருந்த அவர்களை எதிரிகளாகவும் பங்காளிகள் என்ற நிலையில் இருந்து விரோதிகளாகவும் மாற்றியது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடந்ததால், கொடுங்கோலனின் எதேச்சாதிகாரம் மிக்க தற்பெருமை தெய்வத்திற்கு எதிராக முற்றிலும் செல்லுபடியற்றதாகி விட்டது. விக்கிரகங்கள் மீதான அவனது கண்மூடித்தனமான நம்பிக்கை காரணமாக, அவன் எம்மைத் தாக்கியதும், அந்த நாளில் இடம்பெற்ற யுத்தம், பட்டினி மற்றும் கொள்ளைநோய் போன்றவற்றைத் தடுத்ததும் விக்கிரங்களின் சக்தியாலேயே என்று அவன் துணிந்து கூறினான். இவையனைத்தும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட விளைவுகள் அவனை வீழ்த்துவதற்கான களத்தை தயார்செய்தது. அவனும் அவனது இராணுவமும் ஆர்மேனியப் போரினால் சோர்வடைந்து காணப்பட்டனர். அதே நேரத்தில் அவனது ஆட்சியின் கீழ் உள்ள நகரங்களில் மக்கள் பஞ்சம் மற்றும் கொள்ளை நோய் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஒரே அளவு நிறுவை கொண்ட கோதுமையை வாங்குவதற்கு 2,500 அட்டிக் டிராக்மாக்கள் [அந்த நாட்டில் புழக்கத்தில் இருந்த நாணயம்] தேவைப்பட்டன. நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் எண்ணற்ற மக்கள் மடிந்தனர். ஒரு காலத்தில் பெயர்களால் நிரம்பிய கிராமப் பதிவேடுகள் அனைத்தும் இப்போது வெறுமையாகக் காணப்பட்டன, ஏனெனில் உணவு பற்றாக்குறை மற்றும் கொள்ளைநோய் கிட்டத்தட்ட அங்கு வாழ்ந்த அனைத்து மக்களையும் ஒரே நேரத்தில் அழித்தது. சிலர் தங்களுடைய விலைமதிப்பற்ற உடைமைகளை அற்ப  தொகைக்கு  உணவுக்காக பண்டமாற்று செய்தனர். மற்றவர்கள் தங்கள் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்று விரக்தியின் விளிம்புக்கே தள்ளப்பட்டனர். இன்னும் சிலர் வைக்கோலை உட்கொண்டதாலும், விஷ மூலிகைகளை உண்டதாலும் தங்கள் ஆரோக்கியம் கெட்டு மடிந்தனர். பெண்களைப் பொறுத்த வரையில், சில நகரப் பிரபுத்துவத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் சந்தைகளில் வெட்கமின்றி யாசகம் பெறும் நிலைக்குத்  தள்ளப்பட்டனர். ஆயினும், அவர்களின் சங்கடப்படும் தன்மையும் அணிந்திருந்த ஆடைகளும் அவர்களது கண்ணியமான வளர்ப்பை பிரதிபலித்தன. சிலர், இறந்தவர்களின் ஆவிகளைப்போல் போல சுருங்கி, கீழே விழும் வரை தள்ளாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் நடுத்தெருவில் படுத்துக் கொண்டு ஒரு சிறிய ரொட்டித் துண்டுக்காக அவ்வழியே போகும் மக்களை நோக்கிக் கெஞ்சுவார்கள். அவர்கள் தங்கள் இறுதி மூச்சை விட்டுவிடுவதுபோல் பசியுடன் இருப்பதாக அவலக்குரல் எழுப்பினார்கள்; இந்த வேதனையையும் அழுகையையும் தவிர அவர்களால் வேறு எதையும் வெளிப்படுத்த முடியாதிருந்தது. உதவி பெறும் யாசகர்களின் எண்ணிக்கையைக் கண்டு வியந்த செல்வந்தர்கள், தங்களுக்குள் கடுமையான மற்றும் இரக்கமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தனர். ஏனெனில் யாசகம் பெறுவோர்  எப்போதும் அவர்களின் அந்த இழிநிலையில் இருந்து மீண்டுவர   மாட்டார்கள் என்று நம்பினர். நகர மத்தியில் உள்ள சதுக்கங்கள் மற்றும் குறுகிய பாதைகளுக்கு நடுவில், நிர்வாண உடல்கள் பல நாட்களாக புதைக்கப்படாமல் சிதறிக் கிடந்தன- இது மிகவும் பரிதாபகரமான, மனதை இரணமாக்கும் காட்சியாக இருந்தது. சில நாய்களால் உண்ணப்பட்டன. அதனால் உயிரோடு இருந்தவர்கள் நாய்களைக் கொல்லத் தொடங்கினர். ஏனெனில் அவைகளுக்கு விசர் பிடித்து மக்களை கடித்துக் குதறத் தொடங்கிவிடும் என்ற அச்சம் காரணமாகவே அவற்றைக் கொல்லத் துணிந்தனர். ஒவ்வொரு வீட்டையும் தொற்றிய கொள்ளைநோய், குறிப்பாக பஞ்சத்தில் இருந்து தப்பியவர்கள் தங்களுக்கான உணவை  சேமித்து வைத்திருந்ததால், அவர்களை அந்த நோயானது குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியிருந்தது. செல்வந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், ஆட்சியாளர்கள், ஆளுநர்கள் மற்றும் பல அதிகாரிகள் போன்றோரை பஞ்சம் வேண்டுமென்றே கைவிட்டு, அவர்கள் கொள்ளை நோயால் இறக்க வேண்டுமென விதி இருந்ததோ என்னவோ தெரியவில்லை, அப்படிப்பட்ட உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் திடீர், திடீரென கொடுமையான மரணத்தை சந்தித்தனர். எல்லா இடங்களிலும் மரணங்கள் நிகழ்ந்தமையால், முனகல் மற்றும் அழுகை சத்தம் கேட்டபடியே இருந்தது. ஒவ்வொரு பாதையிலும், சதுக்கத்திலும், தெருவிலும், வழக்கமான புல்லாங்குழல் இசையோடு  தங்கள் உறவினர்களை இழந்த சொந்தங்கள் தங்கள் மார்புகளில் அடித்துக் கொண்டு இறுதி ஊர்வலங்களில் கலந்துகொண்டனர். மரணம், கொள்ளைநோய் மற்றும் பஞ்சம் என்ற இரண்டு ஆயுதங்கள் சகிதம்  போரிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரை விழுங்கியது. ஒரு இறுதி ஊர்வலத்தில் இரண்டு அல்லது மூன்று பேரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லும் பரிதாபகரமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

இது மாக்சிமினின் அடங்காத தற்பெருமைக்கும், நகரங்கள் எங்களுக்கு எதிராக அளித்த முறைப்பாடுகளுக்கும் கொடுக்கப்பட்ட விலையாகும். இருப்பினும் கிறிஸ்தவர்களின் உற்சாகமும் பக்தியும் அனைத்து புறமத மக்களுக்கும் கூடத் தெளிவாகத் தெரிந்தன. இந்த மோசமான கொடுமைகளின் போது, அவர்கள் மட்டுமே அனுதாபத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் நடைமுறை ஆதாரத்தை அளித்தனர்.  ஒரு நாள் முழுவதும், இறந்தவர்கள் மற்றும் அவர்களை அடக்கம் செய்ய சிலர் முன்வந்தனர். அதேநேரம் துன்பத்தில் உழன்ற ஏராளமான மக்கள் அவர்களைக் கவனிக்க யாரும் இல்லாமல் தவித்தனர். மற்றவர்கள் பஞ்சத்தால் வாடிப்போயிருந்த திரளான மக்களை நகரத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அழைத்துவந்து ஒன்றுகூட்டி அவர்கள் அனைவருக்கும் அப்பங்களை விநியோகித்தனர். இதனால் அவர்களின் இந்த நற்கிரியைகள் குறித்து அனைவரின் வாய்களும் அவர்களை வாழ்த்தின. அவர்கள் கிறிஸ்தவர்களின் கடவுளை மகிமைப்படுத்தினர். இத்தகைய நல்ல செயல்களை செய்யும் அவர்கள் மட்டுமே அன்புகொண்டவர்கள் மற்றும் கடவுள் மீது உண்மையான பயபக்தியுள்ளவர்கள் என்று அவர்களை நம்ப வைத்தது. இத்தனையும் நடந்த பிறகு, கிறிஸ்தவர்களின் மகத்தான, பரலோகத் தகப்பனாகிய கடவுள், நம்மீது அவர்கள் நடத்திய கொடூரமான தாக்குதல்கள் காரணமாக சம்பந்தப்பட்ட மனிதர்கள் மீதும் தனது அதிருப்தியைக் காட்டிய பிறகு, கடவுள் தனது பாதுகாப்பை எங்களுக்கு அருளி எம்மை மீட்டெடுத்தார். காரிருளில் இருந்து, சமாதானத்தின்  ஒளியை நம்மீது பிரகாசிக்க செய்தார். பரலோகத் தந்தை நம்மைக் கண்காணித்து வருகிறார் என்பதையும், சகல விவகாரங்களிலும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருக்கிறார் என்பது குறித்தும் எம் அனைவருக்கும் விளக்கியுள்ளார். அவர் மிகவும் அரிதாகவே தம்  மக்களைத் தண்டித்தார். இறுதியில் அவர்களைத் திருத்தும் முகமாக சோதனைகளை அனுப்பினார். ஆனால் போதிய தண்டனைக்குப் பிறகு அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களிடம் கருணையும் அன்பும் காட்டினார்.

கொடுங்கோலர்களின் மரணம்

9. ஆகவே, கொன்ஸ்டன்டைன், தான் ஒரு பேரரசராக, பேரரசரின் மகனாக, பயபக்தியும், ஆழமான விசுவாசமும், விவேகமும் கொண்டவரான தந்தைக்கு மகனாகவும் இருக்கும் இவரோடு, லிசினியஸ், இவர் அவரது அடுத்த தரவாரிசு. இவர்கள் இருவரும் தங்கள் ஞானம் மற்றும் பக்திக்காக கௌரவிக்கப்பட்டனர். தேவனுக்குப்  பிரியமான இந்த இரண்டு உத்தம மனிதர்களும், அரசர்களின் அரசரும், சர்வ வல்லமையுள்ள தேவனும், பிரபஞ்சத்தின் இரட்சகருமான கடவுள், கடும் மதவிரோதிகளான கொடுங்கோலர்களுக்கு எதிராக போரை பிரகடனப்படுத்த வேண்டும். கடவுள் பேரரசர்களின் பங்காளர் என்று மிகவும் அற்புதமான முறையில் நிரூபித்தார்: உரோமில், ஆளுனனான மாக்சென்டியஸ் கொன்ஸ்டன்டைனின் படைகளிடம் தோற்றான். அதேநேரம் கிழக்கின் ஆளுனனான மாக்சிமினால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தன்னிலை இழந்துவிடாமல் ஒரே குறிக்கோளுடன் இருந்த லிசினியசிடம் அவமானமான முறையில் தோற்றான். இருப்பினும், மாக்சென்டியஸ், தனது தேசத்து குடிமக்களின் நல்லெண்ணத்தை விட மந்திர தந்திரங்கள் வாயிலாக வகுத்த திட்டங்களை நம்பியிருந்தான். எனினும், அவன் நகரத்து  எல்லைகளுக்கு அப்பால் போகத் துணியவில்லை.  அதற்குப் பதிலாக, அவர் உரோமைச் சுற்றியுள்ள ஒவ்வொரு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் கட்டுப்பாட்டை தனது கைகளுக்குள் கொண்டுவந்தார். அதே போல் இத்தாலியின் மற்றைய பகுதிகளையும் அவர் தனது முழு ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தார். இதற்காக அவர் ஏராளமான கனரக இராணுவத் துருப்புக்கள் மற்றும் படைவீரர்களைக் கொண்ட அணிகளைப் பயன்படுத்தினார். பேரரசர் கடவுளின் உதவியுடன், கொடுங்கோலரின் முதலாம், இரண்டாம்  மற்றும் மூன்றாம் படையணிகளைத் தாக்கி, அவர்களை எளிதில் தோற்கடித்தார். பின்னர் அவர் உரோம் நகரை அண்மிக்கும் வரை  இத்தாலியின் பெரும்பகுதியைக் கடந்து அதன் கட்டுப்பாட்டைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்தார். பின்னர், கொடுங்கோலனைத் தோற்கடிக்க அவர் உரோமையர்களுடன் சண்டையிட வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்பதால், கடவுள் தாமே  கொடுங்கோலனை சங்கிலிகளால் பிணைத்து நகர எல்லைகளுக்கு வெளியே இழுத்துச் சென்றார். தீய வார்த்தைகளைப் பற்றி நீண்ட காலத்திற்கு முன்பு பரிசுத்த வேதாகமம் கூறி இருந்தது  – இது மிகவும் அற்புதமானதும் சாத்தியமற்றதும் என்று பெரும்பாலான மக்கள் எண்ணினர். ஆனால் விசுவாசிகளைப் பொறுத்தவரையில், அந்த இறைவார்த்தைகள் உண்மை என நிரூபணமானது. அதன் காரணமாக, அவர்கள் பெற்ற தெளிவு விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகளிடையே இறைவார்த்தைகள் பற்றிய விசுவாசம் முளையிடத் துவங்கியது.  இது மோசேயின் காலத்திலும் பண்டைய எபிரேயர்களின் தெய்வ நம்பிக்கை கொண்ட இனத்திலும் காணப்பட்டது:  

பார்வோனின் இரதங்களையும், வீரர்களையும் அவர் கடலில் தள்ளினார். பார்வோனின் சிறந்த வீரர்கள் செங்கடலில் அமிழ்ந்தனர். ஆழியின் தண்ணீர் அவர்களை மூடிக்கொண்டது. அவர்கள் கடலடியில் பாறைகளைப்போல் மூழ்கிப்போயினர். [யாத்திராகமம் 15 :4 -5 ]

அதே போலத்தான், மக்சென்டியஸ் மற்றும் அவரது ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் ஈட்டியெறியும் துருப்பினர் “ஒரு கல் போல ஆழத்தில் மூழ்கினர்” [யாத்திராகமம் 15:5) அவர் கொன்ஸ்டன்டைனின் தெய்வீக அதிகாரத்தை உபயோகித்து, படகுகளை ஒன்றாகக் கட்டி வெற்றிகரமாக டைபர் ஆற்றைக் கடந்து பயணம் செய்து, தனது சொந்த அழிவுக்கான களத்தை தானாகவே அமைத்துக் கொண்டான். அதுபற்றி பின்வருமாறு கூறலாம்:

அவர்கள் பிறரை குழியில் விழுத்தித் துன்புறுத்த முயல்வார்கள். ஆனால் அவர்கள் தோண்டிய குழியில் தாங்களே விழுந்து துன்புறுவார்கள். அவர்களுடைய அக்கிரமம் அவர்களது கிரீடத்தை பறித்துவிடும். [சங்கீதம் 7:15-16]

அதேபோல், படகுகளின் இணைப்புகள் உடைந்து, ஆற்றின் குறுக்கே விழுந்தபோது, படகுகள், மனிதர்கள் மற்றும் அனைவரும் ஒரே நேரத்தில் ஆழத்தில் மூழ்கினர். முதலில் அந்த மோசமான பாவம் தன்னையும் பின்னர் அவரைச் சுற்றியுள்ள கேடயம் தாங்குபவர்களையும் தாக்கியது. புனித நூலில் முன்னறிவிக்கப்பட்டபடி, “நீர் அவர்கள் மேல் ஊதி, கடல் நீரால் அவர்களை மூடினீர். ஆழ்கடலில் அவர்கள் ஈயத்தைப் போல மூழ்கினார்கள்” (யாத்திராகமம் 15:10) என்று கூறுகிறது. குறைந்த பட்சம் வார்த்தைகளில் இல்லாவிட்டாலும் செயலிலாவது, மூத்த  ஊழியரான மோயீசன் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களைப் போல, கடவுளின் உதவியால் வெற்றி பெற்றவர்கள், பழங்கால கொடிய கொடுங்கோலரைப் பற்றி பாடிய அதே வார்த்தைகளை இவ்விதமாகக் கூறலாம்:

கர்த்தரைப் போற்றிப் பாடுவோம், ஏனென்றால் அவர் மாட்சிமையுடன்  மகிமைப்படுத்தப்பட்டார்:

குதிரையையும் அதன் மீது சவாரி செய்பவரையும் கடலில் தள்ளினார்.

என் உதவியாளரும் பாதுகாவலருமான ஆண்டவர் என் இரட்சிப்பு ஆனார்.

ஏனெனில்,

ஓ இறைவா, கடவுளர்கள் மத்தியில் உம்மைப் போன்றவர் எவருளர்? உம்மைப்போல யார் இருக்கிறார்கள்?

புனிதர்களை மத்தியில் மகிமையையும், புகழ்ச்சியில் அற்புதத்தையும், அதிசயங்களைச் செய்பவருமாக நீர் ஒருவர் தானே இருக்கிறீர்?

இவை மற்றும் இதே போன்ற பல விடயங்களைக்குறித்து, சகல வல்லவரும், ஆட்சியாளரும் அவரது வெற்றியின் ஆசிரியருமான கடவுளை நோக்கி  கொன்ஸ்டன்டைன் பாடினார். பின்னர் அவர் வெற்றிக் கோஷங்களுடன் உரோமுக்குள் நுழைந்தார். மேலும் அனைத்து சட்ட சபையினர், உயர் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் உரோம் நகரத்து மக்கள் அனைவரும் மட்டில்லா மகிழ்ச்சியுடன் முக்கால் மலர்ந்து காணப்பட்டனர். விடுவிப்பவர், மீட்பர் மற்றும் நன்மைகளுக்கு உரியவர்  என்று அவரை நோக்கிப் புகழ்ந்து பாராட்டினர். ஆனால், கடவுள்மீது உள்ளார்ந்த பயபக்தி கொண்ட அவர், அவருடைய வெற்றி கடவுளிடமிருந்து வந்தது என்பதை அறிந்தவராய், அவர்களின் கூச்சல்களால் எவ்வித சலனமோ அல்லது அவர்களின் பாராட்டுக்களால் மகிழ்ச்சியோ அடையவில்லை.  அவர் உடனடியாக தனது சொந்த சிலையின் கையில் வைக்க இரட்சகரின் பிரியமுள்ள உருவக் கல்வெட்டு ஒன்றை உருவாக்கும்படி கட்டளையிட்டார்.  மேலும் அந்த சிலை உரோம் நகரின் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் வைக்கப்பட்டு, அதன் வலது கரத்தில் இரட்சகரின் அடையாளத்தைக் கொண்ட கல்வெட்டில் இலத்தீன் மொழியில் பின்வருமாறு பொறிக்கும்படி கட்டளையிட்டார்:

இந்தக் காப்பாற்றும் கல்வெட்டு அடையாளத்தின் மூலம், வீரத்தின் உண்மையான சான்றாக, நான் உங்கள் நகரத்தை கொடுங்கோலரின் கொடிய பிடியில் இருந்து காப்பாற்றி அதை விடுவித்தேன். நான் சட்டசபை மற்றும் உரோம் மக்களை விடுவித்து, அவர்களின் பண்டைய புகழையும் சிறப்பையும் மீட்டெடுத்தேன்.

இதற்குப் பிறகு, கொன்ஸ்டன்டைன் மற்றும் பேரரசர் லிசினியஸ், அவர்களின் மனம் இன்னும் தீமையால் சிதைவுறவில்லை, எனினும் பின்னர் அது அவரை ஆட்கொண்டது. தங்கள் எல்லா வெற்றிகளுக்கும் கடவுளை ஆசிரியராக ஏற்றுக்கொண்டு, கிறிஸ்தவர்கள் சார்பாக சரியான பதங்களைக் கொண்டு சிறந்த கட்டளையை உருவாக்கினர். பின்னர் அவர்கள் அப்போதைய சூழ்நிலையிலும் கிழக்கு பகுதிகளை ஆட்சிசெய்து கொண்டிருக்கும் மாக்சிமினிடம், தங்கள் நட்புறவுடன் இருப்பதாகக் கூறிக்கொண்டனர். கடவுள் அவர்களுக்குச் செய்த அற்புதமான காரியங்கள், கொடுங்கோலருக்கு எதிரான அவர்களின் வெற்றி மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை அவனுக்குத் தெரிவித்தனர். என்னதான் அவன் ஒரு கொடுங்கோலனாக இருந்தாலும், அவன் அறிந்துகொண்டதையிட்டு மிகவும் கவலையடைந்தவனாகக் காணப்பட்டான். அவன் அழுத்தத்திற்கு அடிபணிவது போல் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதேநேரம், இந்தக் கட்டளையை இட்ட  நபர்களுக்கு பயந்து அவனால் அடங்கி கிடக்கவும் முடியவில்லை. அதன்படி, அவன் தனது சொந்த முயற்சியால் அனைத்தையும் நிறைவேற்றியதாக பொய்கூறி தனது ஆளுநர்களுக்கு கிறிஸ்தவர்களின் சார்பாக இந்த முதல் கடிதத்தை எழுதினான். அதில் தான் செய்யாத விடயங்களைச் செய்ததாகவும் அவன் குறிப்பிட்டுள்ளான்.

கொடுங்கோலன் எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் நகல்

ஜோவியஸ் மாக்சிமினஸ் அகஸ்டஸ் ஆகிய நான், சபினஸ் அவர்களுக்கு இத்தால் அறியத்தருவது என்னவென்றால், ஏறக்குறைய அனைவரும் கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டு கிறிஸ்தவ பழங்குடியினருடன் இணைந்திருப்பதைக் கண்டபோது, ​​எங்கள் எஜமானர்களான டியோக்லீஷியனும் மாக்சிமினும் சரியானதைச் செய்ய உத்தரவிட்டனர் என்பதை உங்கள் உயரிய கவனத்துக்கு கொண்டுவரும் அதேவேளை, மற்றவர்களும் இதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்: நித்திய கடவுள்களின் வழிபாட்டைக் கைவிட்டவர்களுக்கு பொது திருத்தம் மற்றும் தண்டனை மூலம் அவர்களை சீர்செய்து, மீண்டும் வழக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் இருவரும் கட்டளையிட்டனர். ஆனால் முதன்முறையாக கிழக்கிற்கு நான் எனது மங்கள விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது, சில இடங்களில் பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடிய பலர் இதன் காரணமாக நீதித்துறை அதிகாரிகளால் அந்தந்த தேசங்களை விட்டு வெளியேற்றப்பட்டதாக அறிந்தேன். மாகாண ஆட்சி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் இனிமேல் எக்காரணம் கொண்டும் எவரையும் கடுமையாகக் கையாளக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக அவர்களை தெய்வ வழிபாட்டிற்கு திரும்ப அழைக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவருக்கும் நான் உத்தரவிட்டேன். நீதிபதிகள் மற்றும் பிற அதிகாரிகள் எனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றினர். கிழக்கில் அதன்பின் எவரும்  நாடுகடத்தப்படவோ, அல்லது அவமதிக்கப் படவோ இல்லை, மாறாக வெளியேற்றப்பட்ட மக்களை கடவுள் வழிபாட்டிற்கு திரும்ப அழைத்தனர். அதன் பின்னர், அவர்களைக் கடுமையான முறையில் நடத்தவும் இல்லை.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு, நான் நிகோமீடியாவுக்கு ஒரு மங்கள விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது, அங்குள்ள குடிமக்கள் தெய்வங்களின் உருவங்களுடன் என்னை அணுகினர். மேலும் அத்தகைய சிலை வழிபாட்டாளர்களை எந்த சூழ்நிலையிலும் தங்கள் நகரத்தில் வாழ அனுமதிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மதத்தைப் பின்பற்றும் பலர் அந்த மாவட்டத்தில் வாழ்கிறார்கள் என்பதை அறிந்ததும், பதிலுக்கு நான் மகிழ்ச்சியடைந்து, அவர்களின் கோரிக்கைக்கு நன்றி தெரிவித்தேன். ஆனால் அது ஏகமனதாக மேற்கொள்ளக்கூடிய ஒரு தீர்மானமாக இருக்கமாட்டாது என்று குறிப்பிட்டேன். எனவே, சிலர் இந்த மூடநம்பிக்கையில் நிலைத்திருந்தால், ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி செய்யட்டும், அவர்கள் விரும்பினால் தெய்வ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளட்டும் என்று கூறினேன். ஆயினும்கூட, நிகோமீடியன்கள் பிற நகரங்கள் தங்கள் நகரங்களில் கிறிஸ்தவர்கள் யாரும் வசிக்கவில்லை என்று மிகவும் உருக்கத்துடன் கூறினர். அவர்களுக்கு நான் ஒரு நட்புரீதியான பதிலைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் பண்டைய பேரரசர்கள் இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்ததால், அவர்கள் கடவுள்களை மகிழ்ச்சியடையச் செய்தனர். இவர்களால் தான் மக்களும் மாநில ஆட்சியையும் செழித்தது. ஆகவே அவர்களின் தெய்வ வழிபாடு சார்பாக நான் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில், இதுபோன்ற வழக்கத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கும் மாகாணங்களை கடுமையாக நடத்தாமல் பொறுமையுடனும் நிதானத்துடனும் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததை உங்கள் அதிஉயர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இருப்பினும், அவர்கள் இதற்கு காரணமாக இருப்பவர்கள் அல்லது வேறு யாராலுமோ அவமானங்கள் அல்லது அச்சுறுத்தல்களை சந்திக்க நேரும் என்ற காரணத்துக்காகவும், அதற்குப் பதிலாக அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கவும், எங்கள் மாகாணங்களுக்கு உத்தரவிட வேண்டி தங்களது சுமுகமான முறையிலோ அல்லது வற்புறுத்தலூடாகவோ எச்சரிக்க விடுக்கவேண்டுமென தங்களை வேண்டி இந்த கடிதத்தை அனுப்புகிறேன். எனவே, தங்கள் தெய்வங்களை வழிபட வேண்டும் என்று யாராவது தீர்மானித்தால், அத்தகையவர்களை வரவேற்கவும்; அதேநேரம், சிலர் தங்கள் சொந்த வழிபாட்டைப் பின்பற்ற விரும்பினால், நீங்கள் அதைத் தடுக்காமல் அவர்களிடமே அவர்களது விருப்பத்தை விட்டுவிட வேண்டும். அதிமேன்மையுடைய தாங்கள் இந்த வேண்டுகோள்களுக்கு கவனமாக செவிசாய்க்க வேண்டும் என்றும், எங்கள் மாகாணங்களில் வாழும் மக்களை அவமானங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ

அல்லது துன்புறுத்துதல்களுக்கோ உட்படுத்த எவருக்கும் அதிகாரம் அளிக்கவேண்டாமென்றும் அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே கூறியது போல், அவர்களை தெய்வ வழிபாட்டிற்கு மீண்டும் திரும்ப வற்புறுத்துவது மிகவும் சிறந்தது. எங்கள் இந்த வேண்டுகோள்கள்  பற்றி எங்கள் மாகாண மக்கள் அறிந்து கொள்வதற்காக, இவற்றை  உங்கள் சொந்த அரசாணை வாயிலாக வெளியிட வேண்டும் என்றும் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அவர் இந்த உத்தரவுகளை தனது சொந்த விருப்பத்தின் பேரில் அல்ல, கட்டாயத்தின் பேரில் பிறப்பித்த காரணத்தால் அவர் உண்மையுள்ளவர் அல்லது நம்பகமானவர் அல்ல என்பது இப்போது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. முன்னொரு சந்தர்ப்பத்திலும் இதேபோன்ற ஒரு உறுதியை வழங்கி அவர் ஒரு கடும்போக்குடைய கபடத்தனம் கொண்ட ஒருவர் என்று நிரூபிக்கப்பட்டார். எனவே, எங்கள் மக்கள் ஒரு கூட்டத்தை கூட்டவோ அல்லது பொதுவெளியில் தோன்றவோ தயங்கவில்லை, ஏனெனில் வெளியிடப்பட்ட ஆணை இவை எதையும் அனுமதிக்கவில்லை. பதிலாக, கடுமையாக நடத்தப்படுவதில் இருந்து நாங்கள் பாதுகாக்கப் படுவோம் என்ற நிபந்தனையை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் கூட்டங்கள், தேவாலயங்களை நிர்மாணித்தல் மற்றும் எங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவதற்கு எதிரான எந்த ஒரு உத்தரவும் அந்த ஆணை கொண்டிருக்கவில்லை. மேலும், சமாதானம் மற்றும் விசுவாசத்தின் பாதுகாவலர்கள் [கொன்ஸ்டான்டைன் மற்றும் லிசினியஸ்] இந்த விடயங்களை அனுமதிக்கும்படி அவருக்கு கடிதம் எழுதி, ஆணைகள் மற்றும் சட்டங்கள் மூலம் தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் அவற்றைத் தெரியப்படுத்தினர். உண்மையில், இந்தப் பொறுப்பற்ற கேடுகெட்டவன் இந்தப் பிரச்சினைக்கு அடிபணியக் கூடாது என்று தீர்மானித்திருந்தான் – தெய்வீக நீதி அவனது விருப்பத்திற்கு எதிராக அவ்வாறு செய்யும்படி அவனை வற்புறுத்தியதன் காரணமாகவே அவனது வைராக்கியம் கரைந்து அவனால் இறங்கிவர முடியுமாக இருந்தது.

மக்சிமின் தலைவிதி

10. இவ்வாறான சூழ்நிலைகள் தான் அவரைச் சூழ்ந்திருந்தன. தகுதியற்ற தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பரந்த அரசாங்கத்தை அவரால் நிர்வகிக்க முடியவில்லை. விவேகமான, ஆளுமையற்ற தன்மை இல்லாததால் தன்னிடம் கொடுக்கப்பட்ட விவகாரங்களை முட்டாள்தனமாக நிர்வகிக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, பிறப்பிலும், வளர்ப்பிலும், கல்வியிலும், குணத்திலும், புத்திசாலித்தனத்திலும், – மிக முக்கியமாக, சுயக்கட்டுப்பாடு மற்றும் உண்மையான கடவுளின் மீதான பயபக்தி ஆகியவற்றால் நிறைந்த  ஆட்சியில் இருந்த சக ஊழியர்களையும் உத்தியோகத்தர்களையும் ஒப்பிடும்போது, இவன் ஒரு முட்டாள்தனமான, தற்பெருமை, மற்றும் ஆணவம் மிக்கவனாக அவன் காணப்பட்டான். அவன் தன்னை ஒரு  அடாவடித்தனமாவனாக காட்டிக் கொள்ளத் தொடங்கினான். அதுமட்டுமல்ல, தன்னை தானே முதல் தரத்தில் இருப்பவன் என்று பகிரங்கமாக அறிவித்தான். அடுத்து, தனது இறுமாப்பின் உச்சத்துக்கே சென்ற அவன், லிசினியஸுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு, முழு வீச்சுடனான  போரைத் தொடுத்தான். விரைவில் அவன் உலக அரங்கில் ஒரு குழப்பமான  சூள்நிலையைத் தோற்றுவித்து ஒவ்வொரு நகரத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தினான். அவனது இந்த நோக்கத்தை அடைய ஒரு பாரிய இராணுவத்தை உருவாக்கி [லிசினியஸ் உடன்] யுத்தம் செய்ய அணிவகுத்துச் சென்றான். சாத்தான் மீதும் (அவன் அவைகளைக் கடவுளாகக் கருதினான்!) அவனது பாரிய துருப்புக்கள் மீது மட்டுமே  நம்பிக்கை கொண்டிருந்தான்.

படைகள் யுத்தகளத்தில் உக்கிரமாக மோதியபோது, அவன் கடவுளின் பார்வையில் இருந்து தான் விலகியதைக் கண்டான். மேலும் அனைவரையும் ஆட்சிசெய்யும் ஒரே கடவுளின் வழிகாட்டுதலால், போரின் வெற்றி லிசினியஸுக்குச் சென்றது. அவன் முழுமையாக நம்பியிருந்த அவனது இராணுவத் துருப்புக்கள் முதலில் அழிவடைந்தது. மேலும் அவனது மெய்க்காப்பாளர் அவனை விட்டுவிட்டு வெற்றியாளர் பக்கம் சென்றபோது, ​​அந்த கேடுகெட்ட மனிதன் தான் அணிந்திருந்த கெளரவம் மிக்க ஏகாதிபத்திய அடையாளத்தை விட்டுவிட்டு, கோழைத்தனமான, கீழ்த்தரமான, ஒரு வீரம் நிறைந்த  ஆண்மகனைப் போல் இல்லாமல் கூட்டத்திற்குள் நழுவி தப்பித்து மறைந்து விட்டான். பின்னர் அவன் வயல்களிலும் கிராமங்களிலும் ஒளிந்து திரிந்து அந்த வழியே ஓடிப்போய் விட்டான். கீழே காணப்படும் தெய்வீக வார்த்தைகளில் கூறப் பட்டிருக்கும் உண்மைகளை போல, அவனது  நடவடிக்கைகளும் அமைந்திருந்தன. அவன் தனது பாதுகாப்பிற்காக எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டு, தனது எதிரிகளிடமிருந்து ஒரேயடியாகத் தப்பி ஓடிவிட்டான்:

அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை.

ஒரு வீரன் தனது உடல் பலத்தால் காப்பாற்றப்படுவதில்லை.

போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை.

அவற்றின் ஆற்றல் நம்மை தப்பவைக்க வகை செய்வதேயில்லை.

கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார்.

அவரது பேரன்பு அவரை நோக்கி செபிப்போரைக் காக்கும்.

தேவன் அந்த மக்களை மரணத்தினின்று காக்கிறார்.

அவர்கள் பசித்திருக்கையில் அவர் அவர்களுக்கு சக்தியைக் கொடுக்கிறார். [சங்கீதம் 33:16-19]

இதன்பிறகு, இந்தக் கொடுங்கோலன் வெட்கத்தால் கூனிக்குறுகி தனது சொந்த எல்லைக்குத் திரும்பினான். முதலாவதாக, அவரது அடக்க முடியாத ஆத்திரம் காரணமாக, அவனால் ஒரு காலத்தில் போற்றப்பட்ட பல துறவிகள், பாதிரிமார் மற்றும் கடவுளை வெளிப்படுத்திய தீர்க்கதரிசிகளை தூக்கிலிட்டான். இவர்களுடைய உள்ளார்ந்த ஊக்கம் தான் அவனைப் போரை அறிவிக்கத் தூண்டின என்றும், அவர்கள் அதிகப்பிரசங்கிகள் என்றும் வஞ்சகர்கள் என்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது பாதுகாப்பைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்றும் கூறி வஞ்சம் தீர்த்தான். இவ்வளவும் நடந்த பிறகு, அவன் கிறிஸ்தவர்களின் கடவுளுக்கு மகிமை அளித்து அவர்களுக்கு முழுமையான மற்றும் பூரண  சுதந்திரத்தை வழங்கும் ஆணையை வரைந்தான். சிறிது காலத்துக்குப் பிறகு, எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் இருந்த அவனது இறுதி வாழ்க்கை வேதனையுடன் கூடிய மரணத்தில் நிறைவுற்றது.

அவன் இயற்றிய சட்டம் பின்வருமாறு:

இலத்தீன் மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட கிறிஸ்தவர்கள் சார்பாக கொடுங்கோலன் இயற்றிய ஆணையின் நகல்

பேரரசர் சீசர் கயஸ் வலேரியஸ் மாக்சிமினஸ், மற்றும் ஜெர்மானிக்கஸ், சர்மாட்டிகஸ், பயஸ் பீலிக்ஸ் இன்விக்டஸ் அகஸ்டஸ் ஆகியோர் கவனத்துக்கு, எமது மாகாணங்களின் மக்களின் நல்வாழ்வுக்காக நாம் எல்லா வகையிலும் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம் என்ற உண்மை அனைவரும் அறிந்ததே. மேலும் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் அவர்களுக்கு எதையாவது மீளவும் வழங்க விரும்புகிறோம். நமது தெய்வீக வழிகாட்டிகளான டியோக்லீஷியன் மற்றும் மாக்சிமியன் ஆகியோர் கிறிஸ்தவ ஒன்றுகூடல்களை நிறுத்த உத்தரவிட்டனர் என்ற சாக்குப்போக்கைக் காரணம் காட்டி, அரச அதிகாரிகள் பலர், மக்களை  மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொள்ளையிடுதல் போன்ற நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளனர். காலம் செல்லச் செல்ல, அது நமது மாகாண அதிகாரிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வரை அதிகரித்தது என்பது தான் எங்கள் வலுவான கவலையாக இருந்தது. இந்த அடக்ககாரிகன் தான் குற்றவாளிகளின் தனிப்பட்ட உடைமைகளை அழிக்க உதவும் சக்தியாக செயல்படுபவர்கள்.  இதையிட்டு, கடந்த ஆண்டு ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள ஆளுநர்களுக்கு கடிதங்களை அனுப்பினோம். அத்தகைய வழக்கத்தை அல்லது வழிபாட்டு முறையை யாராவது பின்பற்ற விரும்பினால், அவர்கள் அதை தடையின்றி செய்யலாம் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் பயமோ சந்தேகமோ இல்லாமல் மகிழ்ச்சியாக வாழும் சுதந்திரம் பேணப்படவேண்டும் என்றும் ஆணையிட்டோம். ஆயினும்கூட, சில நீதித்துறை அதிகாரிகள் எங்கள் உத்தரவுகளை மதிக்காமல், நாங்கள் பிறப்பித்த உத்தரவுகளை நம் மக்கள் சந்தேகிக்கச் செய்த காரணத்தால், அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் மத சடங்குகளில் பங்கேற்க அவர்கள் பயந்திருந்தார்கள்.

எதிர்காலத்தில் அச்சம் அல்லது பயம் காரணமாக ஏற்படும் சந்தேகங்கள் அனைத்துக்கும் அப்பால், இம்மதப்பிரிவை பின்பற்றி வழிபட விரும்புபவர்கள் அவரவர் விருப்பப்படியும், இஷ்டப்படியும் செய்யலாம் என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்தும் வகையில், இந்த அரசாணையை பிறப்பிக்க ஆணையிட்டுள்ளோம். எங்களிடமிருந்து வரும் இந்த உத்தரவுக்கு இணங்கவும், ஒருவர் தனக்கு வழக்கமான மற்றும் தான் பங்கேற்க விரும்பும் மத சடங்குகளில் கலந்துகொள்ளும் சுதந்திரத்தை அளிக்கிறது. அவர்களுக்கு “தேவன் வாழும் இல்லங்களை” நிர்மாணிக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாம் வழங்கும் வரம் இன்னும் அதிகமாக இருக்க, நாங்கள் இந்த ஆணையையும் வெளியிடுகிறோம்: ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமான வீடுகள் அல்லது நிலங்கள் எங்கள் முன்னோடிகளின் கட்டளை காரணமாக, பொதுத் திறைசேரியில் சேர்க்கப்பட்டிருந்தால் அல்லது எந்த ஒரு நகராட்சி அதிகாரம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால், அல்லது எவருக்கும் விற்கப்பட்டிருந்தால் அல்லது வெகுமதியாய் வழங்கப் பட்டிருந்தால் – இவை அனைத்தும் எங்கள் கட்டளையின் வாயிலாக மீண்டும் அதன் முன்னாள் உரிமையாளர்களான கிறிஸ்தவர்களுக்கு சட்டரீதியாக மீண்டும் கையளிக்கப்படும். இந்த விஷயத்தில் நம் அக்கறையையும் விசுவாசத்தையும் அனைவரும் தாங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும்.

கொடுங்கோலன் தனது கிறிஸ்தவ விரோத ஆணைகளை வெண்கலப்  பலகைகளில் பதிவிட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்துக்குள், அதாவது சில மாதங்கள் இருக்கையில், எங்களை தேசத்திலோ, பாலைவனத்திலோ, நகரத்திலோ வாழத் தகுதியற்றவர்கள் என்றும், சிறிதும் மனிதாபிமானமில்லாமல் கிறிஸ்தவர்களை பக்தியில்லாத அற்பத்தனமானவர்கள் என்றும் கருதிய இந்த மனிதன், இப்போது அதே கிறீஸ்தவர்கள் சார்பாக சட்டங்களையும் ஆணைகளையும் உருவாக்குவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது! மேலும் சிறிது காலத்திற்கு முன்பு அவர்கள் தெய்வபக்தியற்றவர்கள் மற்றும் தீயவர்கள் என்று குற்றம் சாட்டி, தீயினாலும், வாள்கள், கத்திகள் போன்றவற்றால் காட்டுமிராண்டித்தனமாகத் தண்டிக்கப்பட்டு, காட்டு மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு – அவன் கண்முன்னே – உணவாக எறியப்பட்ட அதே மனிதர்கள், எல்லாவிதமான தண்டனைகளையும், சித்திரவதைகளையும், கொடிய மரணத்தையும் அனுபவித்தவர்களை, இப்போது மட்டும் அவர்கள் விரும்பியபடி வழிபடவும், தேவன் வாழும் இல்லங்களை நிர்மாணிக்கவும் எப்படி அனுமதிக்கிறான்? இதன்மூலம் கொடுங்கோலன் அவனால் தீங்கிழைக்கப்பட்ட மனிதர்களுக்கும்  சில சட்டப்பூர்வ உரிமைகள் இருப்பதாக ஒப்புக்கொள்கிறான் அல்லவா!

இவையனைத்தையும் அவன் ஒப்புக்கொண்டபோது, அவன் அதற்கான வெகுமதியைப் பெற்றான். அதாவது, அவன் திடீரென்று கடவுளின் முள் சாட்டையால் தாக்குண்டதுபோல், இரண்டாம் கட்ட யுத்தத்தின்போது மோதலில் இறந்தான். இதன்மூலம் அவன் அனுபவிக்க விதிக்கப்பட்ட துன்பத்தைவிட குறைவான துன்பத்தையே அனுபவித்திருந்தான். ஆகவே இதுதான் அவனுக்கு கிடைத்த வெகுமதி என்று கூறலாம். ஆயினும்கூட, அவனது மரணம் இராணுவ தளபதிகள் சந்தித்தது போன்ற   மரணம் அல்ல. ஏனெனில் அவர்கள் நல்லொழுக்கத்திற்காகவும் நண்பர்களுக்காகவும் துணிச்சலுடன் போரில் புகழ்பெற்ற முடிவைச் சந்தித்திருப்பார்கள். ஆனால், அவனுடைய இராணுவம் இன்னும் களத்தில் இருந்தபோதே, அவன் வீட்டில் ஒளிந்திருந்து கடவுளின் துரோகியாய், எதிரியாய் அழிந்தான்.

எதிரிகள் சந்தித்த முடிவு

11. சர்வவல்லமையுள்ள கடவுளின் கிருபையால், இறைபக்தியின் கடைசியும் மிக மோசமான எதிரியுமான மாக்சிமின் ஒழிந்த பிறகு, தேவாலயங்கள் அவற்றின் அஸ்திவாரத்தில் இருந்து புதுப்பிக்கப்பட்டன. கிறிஸ்துவின் இறைவார்த்தை முன்பை விட அதிக சுதந்திரத்துடன் பிரகடனப்படுத்தப்பட்டது. அதே சமயம் இறைபக்திக்கு எதிராக செயலாற்றிய கேவலமான எதிரிகள் வெறுக்கத்தக்க வெட்கத்திலும் அவமானத்திலும் கூனிக்குறுகிப்போயிருந்தனர். பொது ஆணைகளில் வெளியிடப்பட்டபடி, ஆட்சியாளர்களால் அனைவருக்கும் பொதுவான எதிரியாகவும், மிகவும் இழிவான, கேவலமான  மற்றும் கடவுளை வெறுக்கும் கொடுங்கோலனாக முதலில் அறிவிக்கப்பட்டவன் தான் இந்த மக்சிமின். அவனையும் அவனது குழந்தைகளையும் கௌரவிக்கும் பொருட்டு ஒவ்வொரு நகரத்திலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த உருவப்படங்களில் சில தரையில் வீசப்பட்டு துண்டு துண்டாக உடைந்து காட்சியளித்தன. மிகுதியாக இருந்த உருவப்படங்கள் கருமை நிற வண்ணப்பூச்சுகளால்  முகங்கள் கருமையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. அவனது நினைவாக நிறுவப்பட்ட அனைத்து சிலைகளும் இதேபோல் பெயர்த்து வீசப்பட்டு நொறுக்கப்பட்டன. அவர்களை அவமதிக்கவும் பழிவாங்கவும் விரும்பியோருக்கு இவை நல்ல கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் அமைந்திருந்தன.

அடுத்ததாக, இறைபக்திக்கு எதிராக செயலாற்றிய ஏனைய எதிரிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து மரியாதை மற்றும் கௌரவங்களும் பறிக்கப்பட்டன. அத்தோடு மாக்சிமினோடு இணைந்து அக்கிரமங்கள் புரிந்த அனைத்து தரப்பினரும் தூக்கிலிடப்பட்டனர். அதிலும் குறிப்பாக உயர் அரசாங்க அதிகாரிகளாக இருந்தவர்கள். அவர்களுள் முக்கியமானவனாகக் கருதப்பட்டவன் பியூசிடியஸ் என்பவன். இவன்  மக்சிமினை மகிழ்விக்க எங்கள் உரிமைகளை கொடூரமாக நசுக்கி ஒடுக்கிய ஒரு மிலேச்சன் ஆவான். இவனை மக்சிமின் மற்றைய அனைவரையும் விட மிகவும் மரியாதையுடனும் கௌரவத்துடனும் நடத்தினான். அவனது நண்பர்களில் உண்மையானவன் இவன் தான் என்பதால், இவனை மூன்று முறை தூதரக அதிகாரியாகவும், தலைமை நிதியமைச்சராகவும் நியமித்திருந்தான். மற்றொருவன் குல்சியனஸ். இவன் அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை  வகித்தவன். எகிப்தில் கணக்குவழக்கில்லாமல் கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்ததில் உவகை கொண்ட ஒரு மகா கயவன். இவனைப் போன்று மக்சிமினின் கொடுங்கோன்மையை வலுப்படுத்துவதிலும் நீடிப்பதிலும், ஆதரிப்பதிலும் பெரும்பங்கு வகித்த உதவியாளர்கள் பலர் இருந்தனர்.

நீதித்துறை தியோடெக்னசுக்கு அழைப்பாணை ஒன்றைப் பிறப்பித்திருந்தது. கிறிஸ்தவர்களை அவர் நடத்திய விதம் என்றும் மறக்க முடியாதது என்று கருதியவர் அவர். தியோடெக்னஸ் அந்தியோகியாவில் ஒரு சிலையை நிறுவியதால், அவர் பெரும் வெற்றியைப் பெற்றதாகப் போற்றப்பட்டது. உண்மையில், இந்த ஒரு செயலுக்காக, மக்சிமின் அவருக்கு ஆளுநர் பதவி வழங்கி கௌரவித்தான். அதேவேளை, லிசினியஸ் அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, ​​அவர் வஞ்சகர்களைத் தீவிரமாகத் தேடியது மட்டுமன்றி, புதிய சிலையின் தீர்க்கதரிசிகள் மற்றும் பூசகர்கள் மோசடிகளை மேற்கொள்ள எவ்வாறு சூழ்ச்சி செய்தார்கள் என்பதைக் கண்டறிய அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளித்தார். சித்திரவதையைத் தாங்கமுடியாமல், அவர்கள், அங்கு நிலவிய அத்தனை துர்ச்செயல்களும் தியோடெக்னஸ் இட்டுக்கட்டிய ஏமாற்றுத்தனம் என்பதை வெளிப்படுத்தியபோது, அவர் [லிசினியஸ்] அவர்களுக்கு கடுமையான, தொடர் சித்திரவதைகளை அளித்து, முதலில் தியோடெக்னஸ் என்பவனுக்கும் பிறகு மோசடிகளில் ஈடுபட்ட அவனது பங்காளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றினார்.

இவற்றில் மாக்சிமினின் மகன்மாறும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஏனெனில், அவர்களுடன் அவன் ஏற்கனவே ஏகாதிபத்திய கௌரவத்தைப்  பகிர்ந்து கொண்டது மட்டுமன்றி, அவர்களின் பெருமைகளை பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்ட அவனது உருவப்படங்களில் காட்டினான். முன்பு கொடுங்கோலருடன் தொடர்புடையவர்கள் என்று தங்களைப் பற்றிப் பெருமையாகக் கூறி, மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயன்றவர்கள் அதே துன்பங்களையும் அவமானங்களையும் அனுபவித்தனர். அவர்கள் திருத்தத்தை ஏற்கவில்லை அல்லது புனித நூல்களில் கூறப்பட்டுள்ள கட்டளையை புரிந்து கொள்ளவுமில்லை.

உதவிக்காக உங்கள் பிரபுக்களை சார்ந்திராதீர்கள்.

மக்களையும் நம்பாதீர்கள்.

ஏனெனில் அவர்களால் உங்களைக் காப்பாற்றமுடியாது.

மக்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள்.

அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் அவர்களோடு மறைந்துபோகும். [சங்கீதம் 146:3-4]

இவ்வாறாக அக்கிரமக்காரர்கள் துடைத்தெறியப்பட்ட பின்பு, கொன்ஸ்டன்டைன் மற்றும் லிசினியஸ் போன்றவர்களால் மட்டுமே தங்களுக்குக் கையளிக்கப்பட்ட அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியுமாக இருந்தது. கடவுள் மீதான அனைத்துவிதமான  வெறுப்பிலிருந்தும் இந்த உலகை விடுவிப்பதே அவர்கள் தங்கள் தலையாய பணியாகக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்கு அருளப்பட்ட ஆசீர்வாதங்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, நல்லொழுக்கம் மற்றும் கடவுள் மீதுள்ள அன்பையும், அவர் மீதான பக்தியையும் நன்றியையும், கிறிஸ்தவர்களின் சார்பாக தங்கள் பிறப்பித்த ஆணையின் மூலம் உலகரியச் செய்தனர்.

முடிவுக்கு வரும் கொடுமைகள்?

பெரும் துன்புறுத்தலுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் அனுபவித்த சுதந்திரத்தைப் பற்றி யூசிபியஸ் துல்லியமாக விவரித்ததைப் போலவே, நீரோவின் காலத்திற்கு முன்பிருந்தே காணப்பட்ட துன்புறுத்தல் பற்றிய  நீண்ட வரலாறு ஒரு தர்க்கரீதியான விதத்தில் அல்லது முறையான வழியில் நிறைவை எய்தவில்லை; வேறுவிதமாகக் கூறினால், ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதம் எவ்வித முன்மொழிவுகளோ அல்லது முறையான வழியிலோ நடைபெறவில்லை. கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுக்கும் எத்தனையோ ஏகாதிபத்திய ஆணைகள் முன்வைக்கப்பட்டன. அப்படியிருந்தும், அந்த ஆணைகளின் ஒரு சில பக்கங்களுக்குப் பிறகுதான் புதிய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டனவா? மாக்சிமின் டாயா கிழக்கில் கொடுமைகளுக்கு உயிர்கொடுக்க முடிவு செய்தபோது, ​​உரோமுக்கு வடக்கே உள்ள மில்வியன் பாலத்தில் கொன்ஸ்டன்டைன் அடைந்த அற்புதமான வெற்றியும், 313 ம் ஆண்டில்  ஏற்படுத்தப்பட்ட  சகிப்புத்தன்மை குறித்த கட்டளை போன்றவை, கொடுமைகளை  முடிவுக்கு கொண்டுவருமளவுக்கு பொதுவான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை.

புத்தகம் 9 இன் கணிசமான பகுதியை யூசேபியஸ் மாக்சிமினுக்கு அர்ப்பணித்துள்ளார் – கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துள்ளார் – அவரது கைவசமுள்ள தகவல்களின் அளவைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இப்படியான முக்கியத்துவம் முதல் கிறிஸ்தவப் பேரரசராக இருந்த கொன்ஸ்டன்டைனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. எவ்வாறாயினும், யூசேபியஸ் தனது [Life of Constantine] கான்ஸ்டன்டைனின் வாழ்க்கை வரலாறு என்ற நூலில், கணிசமான தரவுகளை வழங்குகிறார். மேலும் மக்சிமின் மீதான அக்கறை அவரது கண்ணோட்டத்தை வெறுமனே பிரதிபலிக்கிறது – இது கிறிஸ்தவ கிழக்கு பகுதி மீண்டும் துன்புறுத்தலுக்கு உள்ளானவேளை, கிறிஸ்தவ மேற்கத்திய பிரிவு விடுவிக்கப்பட்டிருந்தது. கீழைத்தேயப் பகுதிகளின் திருச்சபை அமைப்புகள் விடுவிப்பைத் தொடர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டன. ஆயினும் அவை மிகவும் தாற்காலிகமானதாகவே அமைந்திருந்தன. அங்கே மீண்டும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை நேரில் கண்ட சாட்சியான யூசேபியஸ் “கொடுங்கோலரால்” ஏற்படுத்தப்பட்ட கலகத்தைப் பற்றி விவரிக்கிறார் – கொடுங்கோலனான ஆட்சியாளன், மக்சிமின் டாயாவுக்கு பிடித்தமான பதவியை மீண்டும் வழங்கினான். ஏனெனில் அவன் திருச்சபையின் மிகவும் கொடூரமான விரோதி என்ற காரணத்தாலும் அவனது துன்புறுத்தல்களுக்கு அவன் துணையாய் இருப்பான் என்ற நோக்கத்திலேயே இதை செய்திருக்கக்கூடும். மக்சிமினுக்கு சம்பவித்த கொடூரமான மரணம் கூட – என்னதான் கடுமையான நோய் ஏற்பட்டாலும் கூட, கண் விழிகள் பிதுங்கி வெளியே வருமா என்ற எண்ணம் ஒருவருக்கு தோன்றலாம் – யூசேபியஸுக்கு மக்சிமின் பற்றிக் கூறுகையில், குடலிறக்கம் போன்ற நோயே போதும் என்று கூறுவது போதுமானதாக இல்லை போலிருக்கிறது. ஒரு சமகால வரலாற்றாசிரியரான லாக்டான்டியஸ், மக்சிமின் தானாக தன்னுடலில் செலுத்திக்கொண்ட விஷத்தால் அவன் மிகவும் பாடுபட்டு மரணத்தைத் தழுவினான் என்று கூறுகிறார். இருப்பினும் அவரது புத்தகம், de Mortibus Persecutorum (“கொடுங்கோலர்கள் சந்தித்த மரணம்”), திருச்சபையையும் அதன் விழுமியங்களையும் ஆக்கினைகளுக்கு உட்படுத்தும் அனைவரும் தேவ கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கூறுகிறது. 

எவ்வாறாயினும், யூசேபியஸ் தனது புத்தகம் 10 இல், லிசினியஸுக்காக, தனது தணிக்கை செய்யப்பட்டுள்ள சொற்களஞ்சியத்தை கடைசியாக மீண்டும் ஒருமுறை திறக்க வேண்டும். கொன்ஸ்டன்டைனின் முன்னாள் பங்காளியான கிழக்குப் பகுதிக்கு பொறுப்பானவராயிருந்த அகஸ்டஸ், தனது ஆட்சியை மிகவும் சாதகமாகத் தொடங்கியவர். இருப்பினும், காலப்போக்கில் யூசேபியசினுக்கு எதிராக வன்மத்துடன் செயலாற்றிய கடைசி நபராக தனது வாழ்வை நீத்தார்.

உரோமைய அரசியல் உலகின் சிக்கலான கடைசி அத்தியாயம் உரோமைய ஆட்சியாளர்களின் பின்வரும் உள்ளமைவுடன் நிறைவுற்றது:

மேற்கு பகுதி

கொன்ஸ்டன்டைன்: கவுல் [தற்போதைய பிரான்ஸ்], ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா

மக்சென்டியஸ்: இத்தாலி மற்றும் ஆப்பிரிக்கா

கிழக்கு பகுதி

லிசினியஸ்: பால்கன் தீபகற்பம்

மாக்சிமின் டாயா: ஆசியாவின் கிழக்குப்பகுதி மற்றும் எகிப்து.

பல எதிரணிக் குழுக்கள் முதலிடத்திற்கு போட்டியிடக் களமிறங்கியுள்ளதால், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் இரண்டிலும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் சாத்தியம் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே காணப்படுகிறது. கொன்ஸ்டன்டைன் மற்றும் லிசினியஸ் ஆகியோர் மக்சென்டியஸ் மற்றும் மக்சிமினுக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கினர். இரண்டு மோசமான எதிரிகளான மக்சென்டியஸ் மற்றும் மக்சிமின் ஆகியோரை ஒரே பக்கத்தில் நிறுத்தியதால்  இது திருச்சபையின் கண்ணோட்டத்தில் பெருமைக்குரியதாக இருந்தது.  இதனால், கிறிஸ்தவர்கள் கொன்ஸ்டன்டைன் மற்றும் லிசினியஸை தடையின்றி ஆதரிக்க முடியும். அவரது பங்கிற்கு, கொன்ஸ்டன்டைன்  தனது தந்தையிடமிருந்து கிறிஸ்தவர்கள் சார்பான ஒரு மிதமான கொள்கையைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது: அத்தோடு அவர் 311 இல் கெலேரியஸின் சகிப்புத்தன்மை குறித்த ஆணையில் இணைந்தார்.

312 ஆம் ஆண்டு கோடை பருவ காலத்தில், மக்சென்டியஸ் கொண்டிருந்த இராணுவப் படையணியை விடக் குறைவான இராணுவ பலத்துடன், ஆனால் சிறந்த பயிற்சியுடன் கொன்ஸ்டன்டைன் இத்தாலியை ஆக்கிரமித்தார். உரோமைய வரலாற்றிலேயே, அநேகமாக, மிக முக்கியமான ஒரு யுத்தத்தின் முடிவில், கொன்ஸ்டன்டைன் தன்னையும் தனது படைகளையும் கிறிஸ்தவக் கடவுளின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்தார். யூசேபியஸின் கூற்றுப்படி, ஒரு நாள் பகல்பொழுதில், இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பின் போது, அவரும் அவரது இராணுவத் துருப்பினரும் கண்ட ஒரு ஒளிரும் சிலுவை அடையாளம் குறித்து அவர் கூறினார். அதைத் தொடர்ந்து ஒரு கனவில் கிறிஸ்து அவருக்குத் தோன்றினார். அதன் பின்னர், டியூரின் மற்றும் வெரோனா போன்ற நகரங்களில் முன்னேறிய  மக்சென்டியஸின் இராணுவத்தை தோற்கடித்து, அவர் தென்கிழக்கில் உரோமுக்கு வடக்கே டைபர் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மில்வியன் பாலத்தை அடையும் வரை முன்னேறிச் சென்றார். எனினும், எதிராளியான மக்சென்டியஸ் மில்வியன் பாலத்தை ஒரு தற்காப்பு தந்திரமாக தகர்த்து, நன்கு பாதுகாக்கப்பட்ட உரோமுக்குள் இருந்தான். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், கொன்ஸ்டன்டைனுக்கு அவனை வீழ்த்துவது கடினமாக இருக்கும் என்ற நோக்கிலேயே அவன் அதைச் செய்தான். இருப்பினும், நகர மக்கள் அவனுக்கு எதிராக கலகம் செய்தபோது, ​​மக்சென்டியஸ் வேற்றுமதத்தில் காணப்படும் குறிசொல்லுதல் போன்றவைகளை நம்பினான். அதன்படி, பின்வரும் எதிர்வுகூறல்கள் “உரோமையர்களின் எதிரி அழிந்துவிடுவான்” என்று  அமைந்திருந்தன. அத்தோடு கொன்ஸ்டன்டைனை நேருக்கு நேர் சந்திக்க நகரத்திற்கு வெளியே தனது படைகளை அணிவகுத்து நடத்திச் சென்று, படகுகளின் உதவியுடன் டைபரைக் கடந்து சென்றான். அக்டோபர் 28, 312 அன்று, அவர்கள் மில்வியன் பாலத்தின் அருகாமையில் உக்கிரமான போரில் ஈடுபட்டனர். இது திருச்சபை அல்லது மதச்சார்பற்ற சபைகளின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.

லக்டான்டியஸின் கூற்றுப்படி, கொன்ஸ்டன்டைன் போருக்கு முந்தைய நாள் இரவு ஒரு கனவு கண்டார். அதில் அவர் கிரேக்க மொழியில் கிறிஸ்துவின் முதல் இரண்டு எழுத்துக்களைக் கண்டார் – கிறிஸ்துவின் chi-and the rho of Christ – மேலெழுதப்பட்டு, in hoc signo vinces இந்த அடையாளத்தின் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று பொருள்படும். அடுத்த நாள் காலை, அவர் தனது சிப்பாய்களை அவர்களின் கேடயங்கள் மற்றும் தலைக்கவசங்கள் மீது இந்த சின்னத்தை வரையும்படி செய்தார். இது பின்னர் ஏகாதிபத்திய தரத்தில் இணைக்கப்பட்டது. போரில் ஈடுபட்டபோது, கொன்ஸ்டன்டைனின் படைகள் டைபருக்கு இணையாக காணப்பட்ட ஒரு தாழ்வான மலையிலிருந்து போரைத் தொடுத்தன. இருந்தபோதும், மக்சென்டியஸ் தனது அறிவீனம் காரணமாக அந்த பிரதேசத்தை ஆக்கிரமிக்கத் தவறிவிட்டான். அப்போது, மக்சென்டியஸின் துருப்புக்கள் தகர்க்கப்பட்டு, அதனோடிணைந்த பாதைகள் துண்டிக்கப்பட்டிருந்த மில்வியன் பாலத்தை நோக்கி நிலைகுலைந்து புறமுதுகிட்டு ஓடினர். அவர்களில் பலர் தெப்பங்கள் மீது திரண்டனர். சுமையைத் தாங்காமல் அது இடிந்து விழுந்த காரணத்தால்  ஆயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கினர், மக்சென்டியஸ் அடங்கலாக. வெற்றி பெற்றவர் ஒருவேளை போருக்கு முன்பே கிறிஸ்தவத்திற்கு மாறியவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு, உரோமையப் பேரரசை கிறிஸ்தவ விசுவாசத்துக்குள் இட்டுச் செல்ல கடவுள் தேர்ந்தெடுத்த ஊழியராக தன்னைக் கருதினார். மில்வியன் பாலத்தில் கொன்ஸ்டன்டைன் அடைந்த வெற்றியைப் பார்க்கிலும், கிறிஸ்தவம் வெற்றி பெற்றிருக்கலாம். அப்படியே வெற்றி பெற்றிருந்தாலும், நிச்சயமாக அந்த வெற்றியை அடைவதில் கணிசமான தாமதம் ஏற்பட்டிருக்கும். அதேநேரம், கொன்ஸ்டன்டைனுக்குப் பதிலாக மக்சென்டியஸ் வெற்றி பெற்றிருந்தால், உரோமையப் பேரரசின் – அதாவது கிறிஸ்தவத்தின் – பின்வந்த வரலாறு நிச்சயமாக இருண்டதாகவே இருந்திருக்கும்.  மாக்சிமின் டாயா கிழக்கில் லிசினியஸின் இராணுவத்தையும், அதேபோல்,  மேற்கில் கொன்ஸ்டன்டைனின் இராணுவத்தை அதே சரிசமமான  விதத்தில் தோற்கடித்திருந்தால், நிலைமை தலைகீழாக மாறி மோசமாக இருந்திருக்கும்.

கொன்ஸ்டன்டைனின் அடுத்தடுத்த அரசியல் மற்றும் மதம் சம்பந்தமான  கொள்கைகள், பல ஆய்வுகளுக்கான கருப்பொருளாக இருந்தன. சில நூல் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன. மில்வியன் பாலத்தின் போரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த நான்கு பேரரசர்கள் கொண்ட ஒரு சர்வாதிகாரம் எப்படி மீண்டும் மூவரைக் கொண்ட ஒரு முடியாட்சியாய்  மாற்றம் பெற்றது என்பதை விளக்குவதற்குத் தேவையான அனைத்தும் இங்கே உள்ளன.

313  ம் ஆண்டு வசந்த காலத்தில், லிசினியஸ் கொன்ஸ்டன்டைனை மிலானில் சந்தித்தார். அங்கு அவர் கொன்ஸ்டன்டைனின் சகோதரி கொன்ஸ்டான்டியாவுடன் திருமண பந்தத்தில் இணைந்தார். இதன்மூலம் அவர்களின் கூட்டணியை வலுப்படுத்தினார். இங்கே இரண்டு அகஸ்தி அந்தஸ்து உடையவர்களும் பேரரசில் வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் அஞ்ஞானிகள் போன்ற இருபாலாருக்கும் சகிப்புத்தன்மை கொள்கையை அளிக்க ஒப்புக்கொண்டனர் – பெரும்பாலும் இது மிலான் ஆணை என்று தவறாக அழைக்கப்படுகிறது – இது ஜூன் 313 ஆண்டில் நிகோமீடியாவில்   [தற்கால துருக்கி] பிரகடனப்படுத்தப்பட்டது. இது முழுமையான மத சகிப்புத்தன்மைக்கு உத்தரவாதம் அளித்தது மட்டுமல்லாமல், கிறிஸ்தவர்களுக்கு சாதகமான திருத்தத்தையும் மேற்கொண்டது. கொன்ஸ்டன்டைன் இந்த இழப்பீட்டை மேற்கில் உள்ள திருச்சபை மற்றும்  கிறீஸ்தவ மதகுருமார்களுக்கு பாரிய வெகுமதிகள் வாயிலாக மிக  ஆடம்பரமாக வழங்கி கௌரவித்தார்.

இது இவ்வாறிருக்க, பல மாதங்களுக்கு முன்பு, மக்சிமின் டாயா புறமதத்தை உயிர்ப்பிக்க முயன்றான். அத்தோடு கிழக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடூரமான ஆக்கினைகளை மீண்டும் ஆரம்பித்தான். அதை கொன்ஸ்டன்டைன் கடுமையாக எதிர்த்தார், மற்றும் அதை கிள்ளியெறிவதில் வெற்றியும் பெற்றார். அவர் கொன்ஸ்டன்டைனுடன் மிலானில் ஒரு சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது மக்சிமின் லிசினியஸின் ஆட்சியின் கீழிருந்த ஐரோப்பிய பிரதேசங்களை ஆக்கிரமித்தான். ஆனால் லிசினியஸ் உடன் விரைந்து வந்து அட்ரியானோபில் அருகே மக்சிமினின் படைகளைத் தாக்கி பின்வாங்கச்  செய்தார். மக்சிமின் தானே ஆசியாவின் கிழக்குப் பகுதிக்கு தப்பி ஓடினான். பின் அங்கு அவன் டார்சஸில் ஒரு பயங்கரமான நோயால் பீடிக்கப்பட்டு இறந்து போனான்.

இப்போது ஒரு அரசாட்சி மட்டுமே மிஞ்சியிருந்தது: மேற்கில் கொன்ஸ்டன்டைன் உச்சத்தில் இருந்த அதேவேளை, கிழக்கில் லிசினியஸ் உயர் நிலையில் இருந்தார். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு அங்கு போர்நிறுத்தம் நீடித்தது. எவ்வாறாயினும், லிசினியஸ் சொல் இன்விக்டஸ் எனப்படும் உரோமைய சூரியக் கடவுளை வழிபடும் முறைக்கு தன்னை மாற்றிக்கொண்டு, கிறிஸ்தவர்களை மீண்டும் துன்புறுத்தத் தொடங்கியதால் கொன்ஸ்டன்டைன் உடனான உறவுகள் மோசமடைந்தன. அவன்மீது கொண்டிருந்த விசுவாசத்தில் அவர்கள் உறுதியாக இல்லை என்று காரணம் கூறினான். கொன்ஸ்டன்டைன் அவரை ஜூலை, 324 இல் அட்ரியானோபிளிலும், மீண்டும் செப்டம்பரில் பைசான்டியத்திலிருந்து பாஸ்போரஸின் குறுக்கே சென்று கிறிசோபோலிஸிலும் முழுமூச்சுடன் தாக்கினார். அவரது சகோதரியின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, கொன்ஸ்டன்டைன் லிசினியஸின் உயிரைக் காப்பாற்றி அவரை தெசலோனிக்காவுக்கு நாடுகடத்தினார். இருப்பினும், அடுத்த ஆண்டில் அவர் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.  இறுதியாக, கொன்ஸ்டன்டைன் 337 ஆண்டில் அவர் இறக்கும் வரை, மீண்டும் ஒன்றிணைக்கப்பட்ட உரோமையப் பேரரசின் ஒரே அகஸ்டஸாக ஆட்சி செய்தார். இருப்பினும், உரோமைய அரசியல் பின்னணியின் இந்த பொழிப்பு, 324-ஆண்டுக்கு அப்பால் நம்மை அழைத்துச் செல்கிறது. அதே வருடத்தில்தான், யூசேபியஸ் தனது திருச்சபை பற்றிய வரலாற்றை புத்தகம் 10 உடன் நிறைவு செய்தார்.