யூசிபியஸ் தேவாலயம் வரலாற்றையும் எழுதினார்(Eusebius, Church History 8)

யூசிபியஸ், தமிழில் தேவாலய வரலாறு, புத்தகம் 8

Eusebius, The Church History in Tamil, book 8. Translated with permission from Paul L. Meier, The Church History: A New Translation with Commentary, 1999. Tamil translation is Public Domain.


எட்டு புத்தகம்: கொடுங்கோண்மையும் ஆக்கினைகளும்

டியோக்ளீஷியன் முதல் கலேரியஸ் வரை

இதுவரை ஏழு புத்தகங்களில் அப்போஸ்தலர்கள் வழிவந்த வாரிசுகளைப் பற்றி நாம் ஆராய்ந்து அதுபற்றிய விபரங்களை அறிந்துகொண்டதன் பின், நான் வாழ்ந்த காலத்தின் நிகழ்வுகளை எட்டாவது புத்தகத்தில் முழுமையாக விளக்குவது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

கிறிஸ்தவத்தின் வளர்ச்சி

1. நான் வாழ்ந்த காலத்தில் இடம்பெற்ற துன்ப ஆக்கினைகளுக்கு முன், கடவுளிடமிருந்து கிறிஸ்து மூலம் உலகிற்கு வழங்கப்பட்ட கௌரவத்துக்குரிய செய்தியானது, கிரேக்கர்கள் மற்றும் கிரேக்கர்கள் அல்லாதவர்கள் போன்ற அனைத்து மக்களாலும் கௌரவத்துடனும் தாராள மனப்பான்மையுடனும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆட்சியாளர்கள் எம் மக்களுக்கு உதவிகளை வழங்கினர் மற்றும் மாகாணங்களை ஆளவும் அனுமதித்தனர். அதே நேரம், அவர்களை [அஞ்ஞானமெனும்] தியாகம் போன்ற வேதனையான பிரச்சினையிலிருந்து விடுவித்தனர். ஏகாதிபத்திய அரண்மனைகளில், பேரரசர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை, அதாவது தம் மனைவிமார், குழந்தைகள் மற்றும் சேவகர்களை வெளிப்படையாக விசுவாசத்தை கடைப்பிடிக்க அனுமதித்தனர். விசுவாசியான டோரோதியஸ் மற்றும் புகழ்பெற்ற கோர்கோனியஸ் போன்றவர்களின் கூற்றுப்படி, தங்கள் சக ஊழியர்கள் அல்லது அதிகாரிகளை விட உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றனர். சகல ஆளுநர்களும் திருச்சபைத் தலைவர்களை கௌரவித்தார்கள். ஒவ்வொரு நகரத்திலும் மக்கள் கூட்டங்கள் கூடி, பழைய வழிபாட்டு ஸ்தலங்களை மாற்றி, புதிய மற்றும் விசாலமான கேட்போர் கூடங்களை அமைத்து வழிபாடுகளை நடத்த உதவினர். இவை அனைத்தும் நாளுக்கு நாள் முன்னேறிய வண்ணம் இருந்தன. தெய்வீகக் கரம் அதன் மக்களை பொறாமை, சதி போன்றவற்றிலிருந்து பாதுகாத்து அவர்களைத் தகுதியுள்ளவர்களாக இருப்பதற்கு வழிவகுத்தது.

ஆனால் கொடுக்கப்பட்ட அதிக சுதந்திரம், அவர்களிடையே ஆணவத்தையும் சோம்பலையும் கொண்டு வந்தது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படவும் பரஸ்பரம் தாக்குதல்களிலும் ஈடுபட்டோம். வார்த்தைகள் எனும் ஆயுதங்களால் எங்கள் மீது நாமே போர் தொடுத்துக் கொண்டோம். திருச்சபைத் தலைவர்கள் தேவாலய ஊழியர்களையும் மற்றைய மதத் தலைவர்களையும் தாக்கியதோடு, சாதாரண மக்களுக்கு எதிராகப் பிரிவுகளை உருவாக்கினர். அதே நேரத்தில் அவர்களின் அளவுக்கதிகமான பாசாங்குத்தனமும் போலி நடிப்பும் வரம்பை மீறியது. இறுதியாக, மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கையில் பரலோகத் தீர்ப்பு அதன் வழக்கமான பாணியில் தனது தலையீட்டைத் தொடங்கியது. அத்தோடு, இராணுவத்தில் கடமையாற்றும் எங்கள் சகோதரர்கள் துன்புறுத்தலுக்கு முகம்கொடுக்கத் தொடங்கினர். எவ்வாறாயினும், அறியாமையின் காரணமாக, நாங்கள் கடவுளை திருப்திப்படுத்த எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆகவே நாத்திகர்களைப் போல, எங்கள் விவகாரங்களும் எவராலும் கவனிக்கப் படாமல் போய்விட்டன என்று கருதி, நாங்கள் ஒரு தீமையிலிருந்து மற்றொரு தீமைக்குள் சென்றோம். போதகர்களாக இருக்க வேண்டியவர்கள், கடவுள் பயமின்றி, கட்டுக்கடங்காதவர்களாய் ஒருவரோடு ஒருவர் கடுமையாக மோதிக்கொண்டு, உட்பூசல், அச்சுறுத்தல், பொறாமை, வெறுப்பு போன்றவற்றை மட்டும் கையிலெடுத்துக்கொண்டு தாங்கள் விரும்பிய கொடுங்கோல் அதிகாரத்தை வெறித்தனமாக பின்பற்றினர்.

எரேமியாவின் வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளபடி, அப்போது கர்த்தர் கோபமடைந்து சீயோன் மகளை அவமானத்துக்குள்ளாகச் செய்து, இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமிக்கு எறிந்திருக்கிறார் [புலம்பல் 2:1-2]. மேலும், சங்கீதங்களில் முன்னறிவிக்கப்பட்டபடி, அவர் தனது சேவகனுடனான உடன்படிக்கையைத் துறந்து அவனது சரணாலயத்தைத் தரைமட்டமாக்கினார். தேவாலயங்களை அழித்ததன் மூலம், போரில் அவருக்கு உதவாத சேவகனின் எதிரிகளின் வலது கையை வலுப்படுத்தி அவனை அவமானத்துக்கு உள்ளாகச் செய்தார்.

திருச்சபையும் தேவாலயங்களும் சந்தித்த அழிவுகள்

2. வழிபாட்டு இல்லங்கள் இடித்தழிக்கப்பட்டு அவைகளின் அஸ்திவாரங்கள் வரை தோண்டி நிர்மூலமாக்கப்பட்டதையும், பொதுச் சதுக்கங்களுக்கு நடுவே தீயிலிடப்பட்டு எரியூட்டப்பட்ட புனித நூல்களையும், தேவாலய போதகர்கள் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு ஒவ்வொரு இடங்களிலும் ஒளிந்திருப்பதையும், அத்தோடு அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் எதிரிகளால் பரிகாசம் செய்யப்படுவதையும் என் கண்களால் பார்த்தபோது நான் வாழும் காலத்திலா இவை எல்லாம் நடக்கிறது என்று என்னை ஆச்சரியம் கொள்ளச் செய்தது. இருப்பினும், தெய்வீக தீர்ப்பை ஆதரிக்க போதுமான தகவல்களை மட்டும் நான் இணைத்துள்ளேன் – பரிதாபத்துக்குரிய அவர்களது துயரங்கள் பற்றியோ அல்லது துன்புறுத்தலுக்கு முன் ஒருவருக்கொருவர் மத்தியில் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற வாதங்கள் மற்றும் செயல்களையோ பற்றி அல்ல. இன்னல்களை எதிர்கொண்டு, இரட்சிப்பின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து, தங்கள் சொந்த விருப்பத்தால் தாங்களாகவே கடலில் விழுந்தோரைப் பற்றி நான் பேசமாட்டேன். மாறாக, எனது ஆக்கங்களில் தற்காலத்திலும் எதிர்காலத்திலும் நமக்கு நன்மை பயக்கும் விஷயங்களைப் பற்றி மட்டுமே நான் எழுதுவேன். அடுத்து, தெய்வீக வார்த்தையின் தியாகிகள் அனுபவித்த பரிசுத்த சோதனைகளின் சுருக்கமான பதிவை வழங்குவோம். துன்புறுத்தலில் தங்கள் இரட்சிப்பை முற்றிலும் கப்பலில் மூழ்கடித்து, தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தங்களைக் கடலின் ஆழத்தில் தூக்கி எறிந்தவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதற்குப் பதிலாக, முதலில் நாமும், பின் தலைமுறையும் பயன்பெறக்கூடிய விஷயங்களை மட்டுமே எனது வரலாற்றில் சேர்த்துக் கொள்கிறேன். ஆகவே, இறைவார்த்தையின் நிமித்தம் வேதசாட்சிகள் முகம்கொடுக்க நேரிட்ட கண்ணியமான சோதனைகளை சுருக்கமாக விவரிக்கும் முகமாக, தொடர்ந்து எழுதியவற்றைப் பார்ப்போம்.

இரட்சகரின் மகத்தான கொண்டாட்டமான பாஸ்கா திருவிழா, டியோக்லீஷியனின் பத்தொன்பதாவது ஆண்டு ஆட்சிகாலத்தின் மார்ச் மாதத்தில் நெருங்கி வந்தபோது, வேதாகமத்தை தீயிலிட்டு அழிக்கவும், தேவாலய கட்டிடங்களை இடிக்கவும் கட்டளையிடும் ஏகாதிபத்திய ஆணை உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. உயர் பதவிகளை வகிக்கும் எவரும் [கிறிஸ்தவர்கள்] அவற்றை இழக்க நேரிடும் என்றும், அதே சமயம் குடும்பங்களில் உள்ளவர்கள் தொடர்ந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கட்டளையிடும் ஆணை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு, எங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட முதல் ஆணை இதுதான். இருப்பினும், பல ஆணைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தன. அனைத்து திருச்சபை அமைப்புகளின் தலைவர்களையும் சிறையில் அடைத்து, பின்னர் பல்வேறுபட்ட முறைகளைப் பயன்படுத்தி வேதசாட்சியத்தை ஏற்றுக் கொள்ளச்செய்யும்படி ஒரு கட்டாய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

வேதசாட்சிகளும் அவர்கள் அனுபவித்த சோதனைகளும்

3. பின்னர், பல திருச்சபைத் தலைவர்கள் அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான வேதனைகளை திடமான மனதோடு அனுபவித்தார்கள். அதே நேரத்தில் எண்ணற்ற மற்றவர்கள் முதல் தாக்குதலைக்கூடத் தாக்குப்பிடிக்கமுடியாமல் அடிபணிந்தனர். கோழைத்தனம் அவர்களது ஆன்மாக்களை மரத்துப்போகச் செய்தது. ஏனையோரைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்: ஒருவர் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்டார். மற்றொருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு பின்பு கொல்லப்பட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான துன்பங்களை அனுபவித்தனர்: ஒரு இளைஞன் அருவருப்பான, புனிதமற்ற பலிகளை நோக்கி தள்ளப்படுவான், உண்மையில் எதுவும் அறியாத அவன், ஒரு வேதசாட்சியைப் போல் நடத்தப்படுவான்; மற்றொருவன், அத்தகைய கொடுமைக்கு அருகில் கூட சென்று அறியாதவன். ஆனால் ஒரு தியாகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவன். அவன் மீது சுமத்தப்பட்ட போலிக் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியாக அங்கிருந்து அகன்று போகிறான். மற்றும் ஒரு இளைஞன் தானாக மனமுவந்து வேதசாட்சியத்தை ஏற்றுக்கொண்டபின், அவனை அவனது கால்களைப் பிடித்து வெகுதூரம் பாதையில் இழுத்துச் சென்றனர். உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் மற்றுமொருவன், இறந்த உடல்களோடு மற்றொரு உடலாய் அப்புறப்படுத்துவதையும் காணக்கூடியதாயிருந்தது. மற்றொரு ஒரு மனிதன், அவன் தான் ஒருபோதும் வேதசாட்சியத்துக்கு தன்னை உட்படுத்தவில்லை என்றும், ஒருபோதும் வேதசசாட்சியாய் மாற மாட்டேன் என்று சத்தமாகக் கூக்குரல் இடும் அதேவேளை, மற்றொருவர் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று அழுத்தமாக அறிவித்து இரட்சகரின் பெயரை மகிமைப் படுத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு பெரிய படையணியாக அங்கு வந்த இராணுவ வீரர்கள், அம்மக்களை அவர்களது வாய்களிலும், முகங்களிலும் தாக்கி அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இறை விசுவாசத்தின் எதிரிகளின் குறிக்கோள் என்னவென்றால், அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமேயாகும். இருப்பினும், இவர்களது இத்தகைய சூழ்ச்சிகள் புனித வேதசாட்சிகளுக்கு முன்னே தோல்வியடைந்தன. அவற்றை நான் இதைவிட எவ்வாறு சரியாக விபரிக்க முடியும்?

4. அவர்கள் மத்தியில் இருந்த எண்ணற்ற மக்களது எண்ணிக்கையானது பிரபஞ்சத்தின் சிருஷ்டியான கடவுளை வணங்குவதில் ஒரு அற்புதமான உற்சாகத்தைக் கொடுப்பதாக இருந்தது. இது எங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட துன்புறுத்தலின் போது மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கு முன்பே, அதாவது நாங்கள் சமாதானமாக இருந்தபோதே இது ஒரு அற்புதமான உற்சாகத்தைக் கொடுப்பதாக இருந்தது. [பேரரசர்களான] டெசியஸ் மற்றும் வலேரியனுக்குப் பிறகு, அதிகாரத்தைப் பெற்ற அவர், திருச்சபைக்கு எதிராக இரகசிய சூழ்ச்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரைப் பொருத்தவரையில், இப்போது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்தது போல் அவரது நடவடிக்கை யாவும் அமைந்திருந்தது. முதலில் அவர் முகாம்களில் இருந்தவர்களைத் தாக்கினார். அந்தத் தாக்குதல்களில் அவர் வெற்றி பெற்றால், எஞ்சியுள்ளவர்களை எளிதில் தோற்கடித்து விடலாம் என்று நினைத்தார். அதன்பின் ஏராளமான இராணுவ வீரர்கள் படையைவிட்டு விலகி சமுதாயத்தோடு தங்களை இணைத்துக்கொண்டதில் மகிழ்ச்சியடைந்தனர். அதனால் படைப்பாளரை நோக்கிய தங்கள் பக்தி, விசுவாசத்தைக் கைவிடக்கூடாது என்று உறுதியாயிருந்தனர். படைத் தளபதியோ அல்லது அவருக்கு நிகரான எவராக இருந்தாலும், அவர் முதலில் கடைநிலை இராணுவ வீரர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார். அவர்களை வரிசைப்படுத்தி, அவர்களின் பதவியை ஏற்றுக்கொண்டு அதைத் தக்கவைக்கவும், அல்லது கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் பட்சத்தில், அவர்களது பதவிகளைத் துறக்க நேரிடும் என்றும் அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஏராளமான வீரர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி கிறிஸ்துவின் இராச்சியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அவர்களுக்கு இராணுவத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் பதவிகளால் கிடைக்கும் பெருமையைப் பற்றிக் கொள்வதற்குப் பதிலாக இரட்சகரை ஒப்புக்கொள்வதையே தெரிவு செய்தனர். இவர்களில், ஒருசிலர் ஏற்கனவே தங்கள் விசுவாசம் மற்றும் ஆழமான பக்தி காரணமாக தங்களது மரியாதையை மட்டுமல்ல, மரணத்தையும் கூட சந்தித்தனர். எனினும், சதித்திட்டத்தைத் தூண்டுபவர் இரத்தம் சிந்தும் அபாயத்தை அரிதாகவே கொண்டிருந்திருக்கக்கூடும். விசுவாசிகளின் வியக்கத்தக்க எண்ணிக்கையைப் பார்த்து பயந்து அவர்கள், அனைவருக்கும் எதிராக ஒரே நேரத்தில் போர் செய்யத் தயங்கினார். ஆனால் அவர் தன்னைத் தயார்படுத்திக் கொண்டதன் பின், ஒவ்வொரு நகரத்திலும் பிராந்தியத்திலும் உள்ள மக்களுக்கு சாட்சியாக இருந்த கடவுளின் வேதசாட்சிகளின் எண்ணிக்கையை விபரிக்க வார்த்தைகள் போதுமானதாக இல்லை.

ஆசியாவின் வளைகுடாவில் தோன்றிய முதல் வேதசாட்சிகள்

5. திருச்சபை அமைப்புகளுக்கு எதிரான அரசாணை நிகோமீடியாவில் [தற்போதைய துருக்கி] அச்சேற்றப்பட்டு ஒரு பொது இடத்தில் வெளியிடப்பட்டபோது, ​​ஒரு புகழ்பெற்ற மனிதர் தனது உயிரோட்டம் மிகுந்த விசுவாசம் காரணமாக மிகவும் ஈர்க்கப்பட்டவராகக் காணப்பட்டார். அவர் அந்த அரசாணையைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், [டியோக்லெஷியன் மற்றும் கெலேரியஸ்] ஆகிய இரண்டு பேரரசர்களின் ஒரே நகரத்தில் இருந்ததையும் கணக்கில் கொள்ளாமல், அந்த அரசாணையைக் கிழித்து எறிந்தார். அதன் காரணமாக, அவர் மத்தியில் இருந்தோரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொண்டவர்களில் முதன்மையானவர் அவர் மட்டுமே. அத்தகைய துணிச்சலான செயல்கள் குறித்த பசுமையான நிகழ்வுகளை மீட்டிப்பார்த்து தனது கடைசி மூச்சு வரை மகிழ்ச்சியுடன் தன் வாழ்க்கையை அனுபவித்தார்.

6. கிரேக்கர்கள் மற்றும் கிரேக்கர்கள் போல் அல்லாதவர்களிடையே நல்லொழுக்கம் மற்றும் துணிச்சல் காரணமாகப் பாராட்டப்பட்ட அனைவர் மத்தியிலும், டோரோதியஸ் மற்றும் அவரைப் போன்ற ஏகாதிபத்திய ஊழியர்களை விட சிறந்தவர்கள் எவரும் இருக்க வில்லை. இக்குழுவினர் அவர்களது எஜமானர்களால் மிகவும் உயர்வாக கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் சொந்த குழந்தைகள் மீது காட்டிய பாசத்துக்கு எவ்விதத்திலும் குறையாத பாசத்துடன் அவர்களை நடத்தினார்கள். ஆனால் உலக வாழ்வில் கிடைக்கக்கூடிய புகழ் மற்றும் ஆடம்பரத்தை விட, எல்லா விதத்திலும் துன்பமும் மரணமும் கிடைத்தற்கரிய செல்வங்கள் என்று கருதினர். மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஒரு உதாரணம் மூலம் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

மேற்கூறிய ஆட்சியாளர்களின் ஆட்சியின் கீழ், ஒரு குறிப்பிட்ட மனிதன் ஒரு பொது இடத்திற்கு கொண்டு வரப்பட்டு அவனைப் பலி கொடுக்க உத்தரவிடப்பட்டது. அதை அவன் மறுத்த காரணத்தால், அவனைத் துகிலுரிந்து நிர்வாணமாக்கி, அவன் அவர்களது உத்தரவுக்கு இசைந்து கொடுக்கும் வரை சாட்டையால் அடிக்கப்பட்டார். அப்போதும் அவன் விட்டுக்கொடுக்காததால், அவர்கள் புளித்த காடியுடன் உப்பைக் கலந்து, அடிபட்ட காயங்கள் நிமித்தம் வெளியே துருத்திக் கொண்டிருந்த எலும்புகள் மீதும் அவனது உடலின் சிதைவுகளின் மீதும் ஊற்றினர். இந்த வேதனைகளையும் அவன் துச்சமாக மதித்தபோது, தீயிலிட்டு எடுக்கப்பட்ட ஒரு உள்ளங்கி அவனுக்கு அணிவிக்கப்பட்டது. மேலும் அவனது உடலின் எஞ்சிய பகுதிகள் உணவுக்காகப் பதப்படுத்திய மாமிசத்தைப் போல தீயில் பொசுக்கப்பட்டது – அவனை உடனடியாகக் கொல்லவேண்டும் என்ற நேரத்தில் இல்லாமல், சிறிது சிறிதாக சித்திரவதை செய்து கொல்லவேண்டும் என்ற எண்ணமே அவர்கள் மனதில் ஓங்கியிருந்தது. ஆயினும் அம்மனிதன் தனது இலட்சியத்தில் அணுவளவேனும் அசையாமல் இருந்து, இழைக்கப்பட்ட கொடுமையான சித்திரவதைகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு அந்த ஆக்கினைகளுக்கு நடுவே ஒரு வெற்றியாளனாய் இறையடி எய்தினார். இப்படிப்பட்டவர் தனது பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஏகாதிபத்திய ஊழியர்களில் ஒருவரானவர் தான் இந்த வேதசாட்சி: அவர் தான் பேதுரு என்ற வேதசாட்சி.

இருப்பினும், மற்றவர்களின் வேதசாட்சியங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல. ஆனால் இந்த புத்தகத்தில் காணப்படும் இட வரம்புகள், டோரோதியஸ் மற்றும் கோர்கோனியஸ், ஏகாதிபத்திய குடும்பத்தில் உள்ள பலருடன் இணைந்து, தொடர்ச்சியான சோதனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உட்பட்டு, இறுதியில் கழுத்துகள் நெரிக்கப்பட்டு இவ்வுலக வாழ்வை நீத்தமை பற்றி மட்டுமே பதிவு செய்ய அனுமதித்தது.

அந்த காலகட்டத்தில், நிகோமீடியாவில் [துருக்கி] உள்ள திருச்சபைக்குத் தலைமை தாங்கிய அந்தீமஸ், கிறிஸ்துவுக்கு சாட்சியம் அளித்தமையால் சிரச்சேதம் செய்யப்பட்டார். ஏராளமான வேதசாட்சிகள் அவரது வழியைப் பின்தொடர்ந்தனர். ஏனென்றால் நிகோமீடியாவில் உள்ள அரண்மனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது – அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை – ஆயினும் அந்த தீ விபத்துக்கு எங்கள் மக்கள்தான் காரணம் என்று ஒரு தவறான வதந்தி பரவியது. அதன் காரணமாக அனைத்து குடும்பங்களும் அவர்களை சார்ந்தவர்களும் ஏகாதிபத்திய கட்டளை நிமித்தம் வாளால் வெட்டப்பட்டும், தீயிலிடப்பட்டும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆண்களும் பெண்களும் தெய்வீக மூடப்பட்டிருந்த தீச்சுவாலையில் உற்சாகத்துடன் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். மரணதண்டனை நிறைவேற்றுபவர்கள் பலரைக் கயிற்றால் கட்டி, படகுகளில் கொண்டுசென்று அவர்களைக் கடலில் எறிந்தனர். ஏற்கனவே உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்ட ஏகாதிபத்திய ஊழியர்களின் உடல்கள் மீண்டும் தோண்டப்பட்டு அவை கடலில் வீசப்பட்டன. இல்லையெனில் அவர்களின் கல்லறைகளில் அவர்கள் கடவுளாக வணங்கப்படுவார்கள் என்ற அபத்தமான எண்ணம் காரணமாகவே அந்தக் கொடியவர்கள் இந்தக் கொடுஞ்செயலைச் செய்தனர்.

துன்புறுத்தலின் தொடக்கத்தில் நிகோமீடியாவில் இதுபோன்ற நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. அதேநேரம், மெலிட்டீன் மற்றும் சிரியா தேசங்களில் ஆட்சியிலிருந்த பேரரசைக் கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு ஏகாதிபத்திய ஆணை, அனைத்து இடங்களிலும் உள்ள திருச்சபைத் தலைவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டது. இதன் விளைவாக வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவுக்கு ஒரு நிகழ்வு நடந்தேறியது. எல்லா இடங்களிலும் வாழ்ந்த எண்ணற்ற மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைகாரர்கள் மற்றும் கல்லறைக் கொள்ளையர்களுக்காக உருவாக்கப்பட்ட சிறைக்கூடங்கள் இப்போது ஆயர்கள், மறைமூப்பர்கள், திருப்பணியாளர்கள், வாசகர்கள் மற்றும் பேயோட்டுபவர்களால் நிரம்பி வழிந்தன. இதனால் குற்றவாளிகளுக்கு சிறையில் இடமிருக்கவில்லை.

முதல் ஆணையைத் தொடர்ந்து பல ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதன்படி, சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டால் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் மறுக்கும் பட்சத்தில் தொடர்ச்சியான சித்திரவதைகளால் அவர்களை ஆக்கினைகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று ஆணை கூறியது. ஆகவே மீண்டும், ஒவ்வொரு பிராந்தியங்களிலும், குறிப்பாக ஆபிரிக்கா, மொரிடானியா, தேபனின் ஒரு பகுதி, மற்றும் எகிப்தில் உள்ள வேதசாட்சிகளின் எண்ணிக்கையை ஒருவர் எவ்வாறு கணக்கிட முடியும்? இந்த நேரத்தில் எகிப்திலிருந்து சிலர் மற்ற நகரங்கள் மற்றும் மாகாணங்களுக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு அவர்கள் வேதசாட்சியத்தில் தங்களை வேறுபடுத்திக் காட்டினர்.

ஃபீனீசியாவின் வேதசாட்சிகள்

7. பாலஸ்தீனத்தில் பிரகாசம் மிக்கவர்களாக இருந்தவர்களையும், ஃபீனீசியாவிலுள்ள டயர் பிராந்தியத்தில் இருந்தவர்களையும் பற்றி நாம் அறிவோம். யார், அவர்களைப் பார்த்தாலும், இந்த அற்புதமான தெய்வீகப் போராளிகள் பெற்றுக்கொண்ட எண்ணற்ற கசையடிகளையும் அவர்கள் காட்டிய விடாமுயற்சியையும் கண்டு திகைக்கவில்லை; ஏனென்றால் கசையடிகளைத் தொடர்ந்து கொடிய காட்டு விலங்குகளுடனான போட்டிகளில், சிறுத்தைகள், கரடிகள், காட்டுப்பன்றிகள் மற்றும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் துளையிடப்பட்ட காளைகளால் தாக்கப்பட்டபோது; அவ்வாறான ஒவ்வொரு மிருகத்தையும் எதிர்கொள்வதில் இந்த உன்னத மக்கள் காட்டிய இந்த நம்பமுடியாத தைரியத்தைப் பற்றி எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை.

இது நடக்கும் போது நானே அங்கே தான் இருந்தேன். நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீக வல்லமையை நான் கண்கூடாகப் பார்த்தேன் – அவர்களின் சாட்சியின் அர்த்தம் தெளிவாக இருந்தது மற்றும் வேதசாட்சிகளுக்கு தன்னை வெளிப்படுத்தியது: மனித மாமிசத்தை உண்ணும் கொடிய விலங்குகள் கூட சில நேரம் கடவுளுக்குப் பிரியமான வேதசாட்சிகளைத் தொடவோ அல்லது அணுகவோ தயங்கின. ஆனால் வெளியில் இருந்து அவைகளைத் தாக்கித் துன்புறுத்திய மற்றவர்களைத் தாக்கின. அந்தப் பரிசுத்தவான்கள் அவர்களுக்கு கட்டளையிட்டபடி, நிர்வாணமாக நின்றுகொண்டு, விலங்குகளைத் தம்மை நோக்கி ஈர்க்க தங்கள் கைகளை அசைத்த போதிலும், அவை அவர்களைத் தீண்டவில்லை. அப்படி அந்த மிருகங்கள் அவர்களை நெருங்கியபோதும், ஒரு தெய்வீக சக்தியால் அவை தடுத்து நிறுத்தப்பட்டு பின்வாங்கின. நீண்ட காலமாக, இது ஒரு புதிராகவும், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுமாக இருந்தது. முதலில் ஏவப்பட்ட மிருகம் ஒன்றும் செய்யாது இருந்தபோது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மிருகம் ஒரே வேதசாட்சியை நோக்கி ஏவப்பட்டும், அவை எந்தவித ஆபத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தாமல் பின்வாங்கின.

இந்த பயங்கரமான சோதனைகளை எதிர்கொள்ள இந்த புனிதர்கள் வெளிப்படுத்திய அபரிமிதமான தைரியமும், இளம் உடல்களில் காணப்பட்ட ஆற்றலும் அவர்களது மன உறுதியும் பிரமிக்க வைக்கிறது. இன்னும் இருபது வயது கூட ஆகாத இளைஞன் ஒருவன் சங்கிலியில் பிணைக்கப்படாமல் நிற்பதையும், அவன் தனது கைகளை சிலுவை வடிவில் விரித்து, மனதை ஒருநிலைப்படுத்தி, சாந்தத்துடனும், அமைதியுடனும் இறைவனை நோக்கி பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். கொடிய விலங்குகளான கரடிகள் மற்றும் சிறுத்தைகள் கோபத்துடனும் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் அவரை நெருங்கிய போதும், அவர் ஒரு அங்குலம் கூடப் பின்வாங்கவில்லை. மீண்டும் ஒரு தெய்வீக மற்றும் புனித சக்தியால் அந்த விலங்குகளின் முகவாய்கள் கட்டப்பட்டு அவை மீண்டும் பின்வாங்கின. கோபத்தில் சீறிப்பாய்ந்த காளைக்கு முன் மற்றவர்கள் – ஐந்து பேர் கொண்ட வேதசாட்சியக் குழுவினர் – வீசப்பட்டதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சுற்றுப்புறத்திலிருந்து மற்றவர்கள் அந்தக் காளையை நெருங்கியபோது, அது கோபம் கொண்டு அதை நெருங்கியவர்களை தனது கொம்புகளால் குத்தி மேலே தூக்கி எறிந்து துவம்சம் செய்தது. அவ்வாறு வீசப்பட்டவர்கள் குற்றுயிராய் மீட்கப்பட்டனர். ஆனால் கோபம் கொண்ட காளை நிராயுதபாணிகளாய் நின்ற வேதசாட்சிகள் மீது ஆவேசமாகப் பாய எத்தனித்தது. அது தனது குளம்புகளால் நிலத்தைக்கீறி, தனது கொம்புகளை அங்கும் இங்கும் அசைத்துக் கொண்டு சீறிப்பாய முயற்சித்தாலும், அம்மிருகத்தால் அவர்களை நெருங்க கூட முடியவில்லை. அந்த மூர்க்கத்தனம் மிக்க விலங்கின் கோபத்தை அதிகரிக்க அதன் மூக்குத் துவாரங்களுக்கூடாக பழுக்கக்காய்ச்சிய இரும்புக் கம்பிகள் செல்லப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. அப்படியிருந்ததும் தெய்வீக ஏற்பாட்டால் அந்தக் காளை பின்னோக்கி இழுக்கப்பட்டது. அதன் பின், மனிதனை வேட்டையாடாத காளைக்கு பதிலாக மற்ற மிருகங்களை அவிழ்த்து விட வேண்டியிருந்தது. கடைசியாக, இந்த விலங்குகள் மூலமாக நிகழ்த்தப் பட்ட பயங்கரமான தாக்குதல்களுக்குப் பிறகு, அனைத்து வேதசாட்சிகளும் வாளால் வெட்டப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டது. அவ்வாறு இறந்தவர்களை மண்ணில் புதைப்பதற்கு பதிலாக, அவர்களது உயிரற்ற உடல்கள் கடலில் வீசப்பட்டன.

எகிப்தின் வேதசாட்சிகள்

8. டியரில் இறை விசுவாசத்தைப் பாதுகாக்க மிகவும் துணிச்சலுடன் போராடிய எகிப்தியர்களுக்கு நேர்ந்த சோதனை இதுவே. ஆனால் அவர்களில் பல ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் நம் இரட்சகரின் போதனையை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அங்கு நடந்த பல துன்பகரமான மரணங்களைச் சகித்துக்கொண்டு, கடந்துபோன வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு, தங்கள் சொந்த மண்ணில் வேதசாட்சிகளாய் மரித்தவர்களும் மிகவும் போற்றத்தக்கவர்கள். அவர்களில் சிலர் கொடூரமான முறையில் கசையால் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதோடு, மற்றும் சிலர் கொடுமையான உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளாயினர். வேறும் சிலர் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வளவு அக்கிரமங்களுக்குப் பிறகும், அவர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டோ அல்லது தீப்பிழம்புகளுக்கு இரையாகவோ கொடுக்கப்பட்டனர். சிலர் மரணதண்டனை நிறைவேற்றுபவர்களை நோக்கி தைரியமாக தங்கள் கழுத்தை நீட்டினர். சிலர் சித்திரவதை அல்லது பட்டினி காரணமாக இறந்தனர். சிலர் மீண்டும் குற்றவாளிகளாக தீர்ப்பிடப்பட்டு சிலுவையில் அறையப்பட்டனர். எஞ்சியவர்கள் இன்னும் கொடூரமான முறையில் தலைகீழாகத் தொங்கும் வண்ணம் சிலுவைகளில் அறையப்பட்டு, பசியால் மடிந்து போயினர்.

9. தேபன் பிராந்தியத்தில் வேதசாட்சிகள் அனுபவித்த மிலேச்சத்தனமான ஆக்கினார்கள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை. அவர்கள் மரணிக்கும் வரை அவர்களின் உடல் முழுவதும் நகங்கள் போன்ற கடற்சிப்பிகளால் ஆன ஓடுகளால் கீறப்பட்டு, கிழிக்கப்பட்டன. பெண்களின் ஒரு கால் மட்டும் கயிற்றால் கட்டப்பட்டு, இயந்திரங்களின் உதவியுடன் உயரமான ஒரு இடத்திலிருந்து தலைகீழாகத் தொங்கவிடப்பட்டனர். அவர்களின் உடல்கள் ஆடையின்றி முற்றிலும் நிர்வாணமாகத் தொங்கியபடி இருந்தன. இந்தக் கொடூரமான, மனிதாபிமானமற்ற காட்சிகள் பார்ப்பவர்களை வெட்கத்திலும் அவமானத்திலும் தலைகுனியச் செய்தன. மற்றவர்கள் மரங்களில் கட்டப்பட்டு அதிலேயே இறந்து போயினர். மேலும், இயந்திரங்கள் மூலம் வலிமையான மரக் கிளைகளை கீழ்நோக்கி வளைத்து, ஒவ்வொரு வேதசாட்சியின் கால்களையும் வெவ்வேறாக அந்த வளைக்கப்பட்ட மரக்கிளைகளோடு சேர்த்துக் கட்டினர். பின்னர் வளைக்கப்பட்ட மரக் கிளைகளை சடுதியாக விடுவித்ததும் அவை மிகுந்த விசையோடு மேல்நோக்கி செல்லும். அப்போது கிளையோடு சேர்த்துக் கட்டப் பட்டிருப்பவரின் இரு கால்களும் உடலிலிருந்து சரிபாதியாய் கிழிந்து உடல் அவயவங்கள் யாவும் வெளிப்பட்டு மிகவும் குரூரமாகக் காட்சியளித்தன. இந்த குரூரமான செயல்கள் சில நாட்கள் அல்ல, சில வருடங்கள் தொடர்ந்தன. சில நேரங்களில் பத்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், சில சமயங்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள், அல்லது முப்பது அல்லது கிட்டத்தட்ட அறுபது பேர் வரை இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டனர்; சில நேரங்களில், ஒரே நாளில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் பலவிதமான சித்திரவதைகள் மற்றும் தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டு குரூரமாகக் கொல்லப்பட்டனர்.

சிரச்சேதம் செய்யப்பட்டு அல்லது அக்கினி மூலம் நிறைவேற்றப்பட்ட  இந்த மோசமான, பாரிய அளவிலான மரணதண்டனைகளில் சிலவற்றை நான் என் கண்களாலேயே பார்த்தேன். கொலைக்குப் பயன்படுத்திய கோடரி மழுங்கி, தேய்ந்து, துண்டு துண்டாக உடையும் வரை குரூரம் மிகுந்த கொலைகள் செய்யப்பட்டன. அதே நேரத்தில் மரணதண்டனை நிறைவேற்றுபவர்கள் சுழற்சி முறையில் வேலை செய்தனர். ஆனால் கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டவர்களிடத்தில் ஒரு வியக்கத்தக்க ஆவலையும் தெய்வீக சக்தியையும் உற்சாகத்தையும் நான் கவனித்தேன்: முதல் நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன், மற்றவர்கள் நீதிமன்றத்துக்குள் தாமாகப் பிரவேசித்து நீதிபதியின் முன் தங்களை கிறிஸ்தவர்கள் என்று ஒப்புக்கொண்டனர். கொடூரமான முறையில் நிகழ்த்தப்படும் சித்திரவதைகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல், பிரபஞ்சத்தின் சிருஷ்டியான கடவுள் மீது தங்களுக்கு இருக்கும் பக்தியை தைரியமாக அறிவித்து, அவர்கள் கடைசி மூச்சு அடங்கும் வரை கடவுளுக்கு நன்றி செலுத்தும் துதிப்பாடல்களைப் பாடி, மகிழ்ச்சியுடனும், புன்னகையுடனும் முழுமனதுடனும் மரண தண்டனைக்கு தங்களை அர்பணித்தனர்.

இந்த மக்கள் எவ்வளவு அற்புதமானவர்கள்! தங்கள் செல்வம், புகழ், பிறப்பு, கல்வி மற்றும் தத்துவம் ஆகியவற்றிற்காக அவர்கள் நன்கு அறியப்பட்டிருந்தாலும், எல்லாவற்றையும் விட நேர்மையான பக்தி மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசம் போன்றவற்றை முதன்மைப்படுத்திய இவர்கள் உண்மையில் போற்றத்தக்க மனிதர்களாக இருந்தனர்.

அலெக்சாந்திரிய ஏகாதிபத்திய நிர்வாகத்தில் முக்கியமான அதிகாரியாக இருந்த ஃபிலோரோமஸ் அப்படிப்பட்டவர்களில் ஒருவர். அவர் தினசரி நீதிமன்ற விசாரணைகளை நடத்தினார். மற்றும் அவர் உரோமைய பதவிக்கு தகுந்தவர் என்பதால், அவருக்கு ஒரு இராணுவ மெய்க்காப்பாளர் இருந்தார். மற்றொருவர் த்முயிஸின் ஆயரான ஃபிலியாஸ். அவரது தனது தேசாபிமானம், அவரது சரளமான தத்துவ ஞானம், பொதுமக்கள் சேவை போன்றவற்றுக்காக மிகவும் புகழ்பெற்றவராகக் காணப்பட்டார். உயர்மட்ட அதிகாரிகளைப் போலவே பல உறவினர்களும் நண்பர்களும் அவரிடம் தங்கள் மிகுந்த தாழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீதிபதிகள் கூட தங்களுக்கு கருணை காட்டும்படியும் தங்கள் மனைவிமாரையும் குழந்தைகளையும் காப்பாற்றும்படியும் அவரை வலியுறுத்தினர். இருப்பினும், தன்னை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க வேண்டும் என்ற நமது இரட்சகரின் அறிவுரை இருந்த போதிலும், இந்த அழுத்தங்கள் அனைத்தையும் மீறி, அவர்களால் வாழ்க்கையின் மீதுகொண்ட பற்றை இனம் காண முடியவில்லை. எனவே ஒரு துணிச்சல் மிக்க, தத்துவார்த்தமான மன உறுதியுடன் – அல்லது ஒரு பயபக்தி மற்றும் கடவுளை நேசிக்கும் ஒரே குறிக்கோளுடன் – அவர்கள் நீதிபதியின் அனைத்து அச்சுறுத்தல்கள் மற்றும் அவமதிப்புகளுக்கு எதிராக உறுதியாக நின்றார்கள். இறுதியில் அவர்கள் இருவருக்கும் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அலெக்சாந்திரியாவின் வேதசாட்சிகள் குறித்து ஃபிலியாஸ் கூறியவை

10. ஃபிலியாஸ் தனது மதச்சார்பற்ற, சிறந்த கல்வியறிவு காரணமாக நன்கு அறியப்பட்டவர் என்று நான் சொன்னபடியால், அலெக்சாந்திரியாவில் நடந்த வேதசாட்சியங்கள் பற்றி என்னால் விளக்க முடிந்ததை விட துல்லியமாக விபரிக்கவும், அவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தவும், அவரே தனது சொந்த சாட்சியாக தோன்றட்டும்.

      ஃபிலியாஸ் த்மெய்ட்சுக்கு எழுதியவை

ஆசீர்வதிக்கப்பட்ட வேதசாட்சிகள் அவர்களுக்கு முன் வைக்கப்பட்ட புனித வேதாகமத்திலிருந்து உதாரணங்களை மேற்கோள் காட்டுவதில் எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை; மாறாக, தங்கள் ஆன்மாக்களால் கடவுளை நோக்கி, தங்கள் விசுவாசத்திற்காக இறக்கும் மன உறுதியுடனும், அவர்கள் தங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை உறுதியாகப் பற்றிக் கொண்டனர். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக மனிதராக அவதரித்து, நம் பாவத்தை போக்கி, நித்திய வாழ்வுக்குள் நுழைய முடியும் என்று கூறினார் என்பதைப் புரிந்துகொண்டனர். தேவனோடு இருந்த தனது இடத்தை அவர் விட்டுக்கொடுத்து, தேவனின் சேவகர் என்ற வடிவை எடுத்தார். மனிதராகப் பிறந்து அடிமையைப் போல அவர் வாழ்ந்தார். மனிதனாக அவர் வாழும்போது தேவனுக்கு முன்பு கீழ்ப்படிந்தவராக இருந்தார்.

மரணம் வரை அவர் பணிவுள்ளவராகவே இருந்தார். முடிவில் சிலுவையிலே அறையுண்டு மரித்தார் [பிலிப்பியர் 2:6-11). எனவே, அதிக வெகுமதிகளை ஆவலுடன் எதிர்பார்த்து, கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொண்ட வேதசாட்சிகள், சில சந்தர்ப்பங்களில் ஒருமுறை, இரு முறை அல்ல, பலமுறை துன்பங்களையும் சித்திரவதைகளையும் அனுபவித்தனர். அவர்களின் காவலர்கள் அவர்களுக்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்களை செயலிலும் வார்த்தையிலும் காட்டுவதற்கு போட்டியிட்டாலும், அவர்கள் ஒருபோதும் மனம் தளரவில்லை. ஏனென்றால் தேவனின் அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே அச்சம் இருக்காது. ஏனென்றால், தேவன் மீது கொண்டிருக்கும் உண்மையான, முழுமையான அன்பு அச்சத்தை அகற்றுகிறது      (1 யோவான் 4:18).

எல்லோருக்கும் அவர்களை இகழும் சுதந்திரம் கொடுக்கப் பட்டபோது, சிலர் அவர்களைத் தடிகளாலும், சிலர் பொல்லுகளாலும், மற்றவர்கள் கசையாலும், முட்கம்பிகளாலும், இன்னும் சிலர் சாட்டையாலும் அடித்தனர். தொடர்ந்து இழைக்கப்பட்ட இந்தக் கொடுமைகளின் போது, சிலர் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், உயரத்தில் தொங்க விடப்பட்டு அவர்களின் அனைத்து உடல் உறுப்புகளும் இயந்திரங்களின் துணைகொண்டு ஒவ்வொன்றாக அறுத்தெறியப்பட்டன. பின்னர், அவர்கள் குற்றுயிராய்க் கிடந்தபோது, அவர்களைத் துன்புறுத்தும் அந்தக் கொலைகார பாதகர்கள் அவர்களின் உடலின் அனைத்து பக்கங்களிலும் சித்திரவதைக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கும், அவர்களின் வயிறு, கால்கள் மற்றும் கன்னங்களிலும் அந்தக் கருவிகளைக் கொண்டு வதைக்கவும் உத்தரவிடப்பட்டது. மற்றவர்கள் ஒரு கையால் தொங்கியபடி மூட்டுகள் மற்றும் கைகால்களில் கடுமையான வலியுடன் குற்றுயிராய் இருந்த அவர்களை சித்திரவதை செய்யும் அந்தக் கயவர்கள், வெளியே தொங்கிக்கொண்டிருந்த அவர்களது பெருங்குடலைப் பிடித்து வீதிவழியே இழுத்துச் சென்று மேலும் சொல்லொணா வேதனையை ஏற்படுத்தினர். மற்றவர்கள் தூண்களில் கட்டப்பட்டு சாட்டைகளால் அடிக்கப்பட்டனர். அவர்களது கால்கள் கட்டப்பட்டு, தலைகீழாகக் கயிற்றால் கட்டித் தொங்கவிடப்பட்டு, அந்தக் கயிறுகளை மேலும் கீழுமாக இறுகும் வரை இழுத்தனர். ஆளுநர் தனது ஓய்வு நேரத்தில் அவர்களுடன் பேசும்போது மட்டுமல்ல, அநேகமான நேரங்களில் இந்த கொடும் நிந்தனைகளை அவர்கள் சகித்துக் கொண்டனர். அவர் மற்றைய மனிதர்களைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம், முதலில் தனது முகவர்களை அங்கே அனுப்பி சித்திரவதைகளுக்கு உட்படக்கூடியவர்கள், மற்றும் சரணடையக் கூடியவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்று பார்க்கச் சொல்வது வழக்கம். அப்படிக் கட்டிவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டவர்கள் அவர்களது கடைசி மூச்சுத் திணறலின் போது தான் கீழே இறக்கி விடப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர். எம்மீது சிறிதும் அக்கறை காட்டாமல், நாங்கள் பூமியில் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள் போல் எண்ணி எங்களை மிக மோசமாக நடத்தினார்கள். அப்படி நொந்து போயிருந்த எங்களுக்கு மேலுமொரு சித்திரவதையும் சேர்க்கப்பட்டது. இத்தகைய வேதனைகளுக்குப் பிறகும், சிலர் மரப்பணிச் சட்டங்களில் போடப்பட்டு, இரண்டு கால்களையும் நான்காவது துளை வரை இழுத்து நீட்டினர். காயங்கள் காரணமாக அவர்களால் [நிமிர்ந்து உட்கார] முடியாமல் படுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மற்றவர்கள் தரையில் எறியப்பட்டு அங்கேயே கிடந்தனர். குரூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உடலின் சதைப்பாகங்கள் கிழிந்து வெளியே தொங்கி கொண்டிருந்த அந்த மயிர்கூச்செரியும் பயங்கரமான காட்சிகள், அதை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த மனிதர்கள் அனுபவித்த தண்டனையை விட பயங்கரமானதாகவே தெரிந்தது.

சிலர் சித்திரவதை காரணமாகப் பலியாயினர். அவர்களின் சகிப்புத்தன்மை எதிரியை அவமானத்தில் கூனிக்குறுகச் செய்தது. மற்றவர்கள் குற்றுயிராய்க் கிடந்த நிலையிலும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடைய மரணவேதனை காரணமாக விரைவில் இவ்வுலக வாழ்வை நீத்தனர். மீதமுள்ளவர்கள் காலப்போக்கில் குணமடைந்து தங்கள் சிறை வாழ்வில் இருந்து மீண்டனர். இருப்பினும், அருவருப்பு மிகுந்த நரபலியை ஏற்றுக்கொள்வது மற்றும் சபிக்கப்பட்ட சுதந்திரம் அல்லது வேதசாட்சியத்தின் மூலம் நிகழும் மரணம் போன்றவற்றுக்கு இடையே ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர்கள் முழு விருப்பத்துடன் தங்கள் மரணத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். வேதாகமம் நமக்கு என்ன கூறியுள்ளது என்பது குறித்து அவர்கள் அறிந்திருந்தனர்: “போலித் தேவர்களுக்கு ஒருவன் பலி செலுத்தினால் அவன் கொல்லப்பட வேண்டும்” [யாத்திராகமம் 22:20], என்றும் “என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உங்களுக்கு இருக்க முடியாது” [யாத்திராகமம் 20:3] என்று கூறப்பட்டிருப்பதையும் அவர்கள் நன்கறிந்தே இருந்தனர்.  

மேலே கூறப்பட்டிருப்பவைதான் ஞானம் மற்றும் கடவுள் இரண்டையும் உண்மையாக நேசிப்பவரான வேதசாட்சி ஒருவர் உதிர்த்திருக்கக்கூடிய  வார்த்தைகள். இறுதித் தண்டனைக்கு முன்பு அவர் சிறையில் இருந்த போது அவரது சொந்த சூழ்நிலைகளை விவரித்து, இந்த வார்த்தைகளைத் தனது மறைமாவட்டத்தில் உள்ள சக சகோதரத் திருப்பணியாளர்களுக்கு அனுப்பினார். அவருடைய உடனடி மறைவு மிக அருகில் இருந்தபோது கூட, விசுவாசத்தில் உறுதியாக இருக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.

துருக்கியின் ஆசியப்பகுதி [Asia Minor] சிரியா மற்றும் பிற இடங்களில் வாழ்ந்த வேதசாட்சிகள்

ஆனால் உலகெங்கிலும் வாழ்ந்த புனித வேதசாட்சிகள், குறிப்பாக அவர்கள் பொதுச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாமல், யுத்தங்களில் எதிரிகளாகப் பிடிபட்டவர்கள் போல் கருதப்பட்டு தண்டிக்கப்பட்டனர்கள் என்ற உதாரணத்தை நான் ஏன் மீண்டும் மீண்டும் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது?

11. உதாரணமாக, ஃபிரிஜியாவில் உள்ள ஒரு சிறிய நகரம். அதில் வசித்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவ சமூகத்தினராக இருந்தனர். ஆயுதமேந்திய இராணுவப் படையினர் அந்த நகரத்தைச் சுற்றி வளைத்தனர். சர்வவல்லமையுள்ள கடவுளை தங்கள் தேவனாய் ஏற்றுக்கொண்டபோது, அங்கே இருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் போன்ற எல்லோரையும் தீயிலிட்டு எரித்தனர். காரணம் என்னவென்றால், அனைத்து நகரவாசிகளும், ஆளுநர் முதல் நீதிபதிகள் மற்றும் அங்கு வாழ்ந்த அனைத்து மக்களும் தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை ஒப்புக்கொண்டனர், அதோடு உருவ வழிபாடு செய்யவும் மறுத்துவிட்டனர்.

ஒரு பிரபல இத்தாலிய குடும்பத்தில் இருந்து வந்த அடாக்டஸ் என்ற உயர் உரோமைய அதிகாரியும் அங்கு இருந்தார். அவர் பேரரசர்களின் கீழ் பல்வேறு கெளரவம் மிக்க பதவிகளை வகித்து சிறந்த ஒரு அதிகாரியாய் விளங்கினார். அவர் நீதி மற்றும் சட்டத்துறை அத்தோடு நிதி அமைச்சு என்று அழைக்கப்படும் பொது நிர்வாகத்தில் அளப்பரிய சேவையை ஆற்றினார். இது தவிர, அவர் தனது தெய்வீக நடத்தை மற்றும் கிறிஸ்துவை முழுமனதுடனும் ஏற்றுக்கொண்டவர் என்று மதிக்கப் பட்டதால், அவர் சோதனையை எதிர்கொண்டார். அவர் நிதியமைச்சராக பணியாற்றியபோது வேதசாட்சியம் என்ற புனிதமான கிரீடத்தை சூட்டிக்கொண்டவராய் மரித்து இறைவனடி சேர்ந்தார்.

12. எஞ்சிய வேதசாட்சிகளின் பெயர்கள் அல்லது எண்ணிக்கைகள் அல்லது அவர்களது வேதசாட்சியத்தின் தன்மைகள் போன்றவற்றையும் நான் குறிப்பிட வேண்டுமென்று எண்ணுகிறீர்களா? சில சமயங்களில் அவர்கள் அரேபியாவில் நடைமுறையில் உள்ளது போன்று கோடரியால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது கப்படோசியாவில் இருந்ததைப் போல அவர்களின் கால்கள் உடைக்கப்பட்டன. சில சமயங்களில் நேரங்களில் மெசபடோமியாவில் இருந்தது போல அவர்கள் தலைகீழாக தொங்கவிடப்பட்டு, அடியில் விறகுகளைக் கொண்டு மிதமான தீ மூட்டப்பட்டு அதிலிருந்து கிளம்பும் புகையால் அவர்கள் மூச்சுத்திணறி இறந்த வலராறும் உண்டு. அல்லது அலெக்சாந்திரியாவில் நடந்ததைப் போல, மூக்கு, காதுகள் மற்றும் கைகள் சிதைக்கப்பட்டு உடலின் மற்ற பாகங்கள் வெட்டியெறியப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

அந்தியோக்கியாவில் அவர்கள் நீண்ட சித்திரவதைக்குள்ளாக்கும் பொருட்டு இறைச்சி வகைகளை தீயில் சுடுவதற்குப் பயன்படுத்தப்படும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிச் சட்டங்களின் மேல் இடப்பட்டு மிலேச்சத்தனமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். அப்படியும் அந்த விசுவாசிகள் மரணத்திற்கு அஞ்சவில்லை. சபிக்கப்பட்ட நரபலியைத் தொடுவதற்குப் பதிலாக, சிலர் தங்கள் கைகளை நேரடியாக நெருப்பில் வைத்தனர். மற்றவர்கள், இத்தகைய ஆக்கினைகளில் இருந்து தப்பிக்க, தாம் பிடிபடுவதற்கு முன் உயரமான வீடுகளின் கூரைகளின் மீதேறி அங்கிருந்து கீழே விழுந்து மாண்டனர். கொலைப் பாதகர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பரிசு தான் மரணம் என்று கருதியதால் தான் இவ்வாறாகத் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டனர்.

ஒரு குறிப்பிட்ட புனிதமான நபர், அவரது துணைவி தனது உடலில் போற்றத்தக்க ஆன்மாவைக் கொண்டிருந்தாள். அவரது செல்வம், பிறப்பு மற்றும் நல்ல தீர்ப்பு போன்றவற்றால் அந்தியோகியாவில் அவர்கள் பரவலாக புகழ்பெற்றிருந்தார்கள். அவள் கன்னிகளான தனது இரண்டு மகள்மாரை பக்தி எனும் பண்புகளை ஊட்டி வளர்த்தாள். அவர்கள் இருவரும் இளமை பூத்துக்குலுங்கும் அழகுப் பதுமைகளாக வலம் வந்தனர். இப்படிப்பட்டவர்கள் மறைந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க சிலருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அவர்கள் வெளிநாட்டில் வாழ்வது தெரிந்ததும், அந்தியோக்கியாவுக்கு அவர்கள் வேண்டுமென்றே திரும்ப அழைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் படைவீரர்களின் தயவில் வாழ நேரிட்டது.

தானும் தன் மகள்மாரும் பெரும் ஆபத்தில் சிக்கி இருப்பதை உணர்ந்த அந்தப் பெண், அவர்களின் பாதுகாப்பு குறித்த ஆபத்தான நிலைமை பற்றி அவர்களை எச்சரித்தார். எல்லாவற்றிலும் மிகக் கொடூரமான கற்பழிப்பு, விபச்சாரம் போன்றவற்றுக்கு ஆளாக நேரும் போன்ற அச்சுறுத்தல் குறித்து அவர் அந்தப் பெண்பிள்ளைகளை எச்சரித்தார். அவள் தன் பிள்ளைகளையும் தன்னையும் அத்தகைய ஒரு விடயம் சம்பந்தமாக எழக்கூடிய அற்ப பேச்சுகளுக்கு செவிகொடாமல் இருக்கும்படியும், சாத்தானின் அடிமைத்தனத்திற்கு தங்கள் ஆன்மாக்களை கையளிப்பதை விட, மரணம் மேன்மையானது என்று கூறினார். அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி இறைவனிடம் ஓடுவதுதான். இதை ஒப்புக்கொண்டு, அவர்கள் தங்கள் ஆடைகளைத் தயார் செய்து  தங்கள் பயணத்தின் நடுப்பகுதிக்கு வந்ததும், அவர்கள் காவலர்களிடம் ஒரு கணம் தங்களை மன்னிக்குமாறு பணிவுடன் கேட்டு, அருகில் இருந்த ஆற்றில் குதித்தனர்.

மற்றுமொரு சமயத்தில், அந்தியோகியாவில் மற்றுமொரு இரட்டைப் பிறவிகளான அழகிய சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். சிறந்த குடும்பப் பின்னணி, போற்றத்தக்க வாழ்வு, இளமை வசீகரம், ஒழுக்கம், நடத்தை போன்ற அற்புதமான நற்குணங்களுடனும் பக்தியுடன் வாழ்ந்த உண்மையான தெய்வீக சகோதரிகள் அவர்கள். அத்தகைய பரிபூரணத்தை பூமியால் தாங்க முடியாதிருந்ததோ என்னவோ, சாத்தானின் வழிபாட்டாளர்கள் அவர்களை கடலில் வீசும்படி உத்தரவிட்டனர்.

பொன்டஸில், வாழ்ந்தவர்கள் அங்கே நடனக்கும் அட்டூழியங்களைக் கேட்பதற்கே அச்சத்தை ஏற்படுத்தும் விடயங்களால் அதிர்ச்சியுற்றுக் காணப்பட்டனர்: அங்கே கைவிரல் நகக்கண்களினூடாகக் கூர்மையான ஆணிகள் நகவேர் வரை செலுத்தப்பட்டன. அத்தோடு உருகிய ஈயத் திரவத்தை அவர்களின் முதுகில் ஊற்றி, அவர்களின் உடலின் முக்கிய அவயவங்களை பொசுக்கினர். மற்றவர்கள் கேட்கவே கூச்சப்படும் அளவுக்கு, பரிதாபகரமான, வாயால் சொல்லமுடியாத சித்திரவதைகளை அனுபவித்தனர். அவர்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளிலும், குடலிலும் ஏற்படுத்தப்பட்ட கொடூரமான நிந்தனைகளை சகித்துக்கொண்டனர். இந்த மிலேச்சத்தமான கொரூரங்களை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை, கெளரவம் மிக்க, சட்டத்தை மதிக்கும் நீதிபதிகள் தான் ஆர்வத்துடன் உருவாக்கினர். வெகுமதிக்காகப் போட்டியிடுவது போல புதிய புதிய சித்திரவதைகளை உருவாக்குவதில் ஒருவரையொருவர் விஞ்சுவதில் குறியாயிருந்தனர்.

அவர்களுடைய குரூரம் நிறைந்த அக்கிரமம் அவர்களுக்கே வெறுப்பைத் தந்தபோது இந்த ஆக்கினைகள் முடிவுக்கு வந்தன. கொலை செய்வதில் சோர்வடைந்து, இரத்தக் கறைகளால் தோய்ந்து, அவர்கள் தாங்கள் இதுவரை செய்தது முறையற்ற செயல்கள் என்று கருதி, கருணை மற்றும் மனிதாபிமானம் தான் மேல் என்றெண்ணி, இனி நமக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று அவர்கள் நினைத்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமது சொந்தக் குடிமக்களின் இரத்தத்தால் நகரத்தை மாசுபடுத்துவது நல்ல செயலாக இல்லை என அவர்கள் உணர்ந்தார்கள். இவ்வகையான மிலேச்சத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு என்று அவர்கள் நம்பினர், அல்லது சுமத்தினர். மென்மையான, அனைவருக்கும் இணக்கமான ஒரு அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென அவர்கள் விரும்பினர். மாறாக, மனிதாபிமானத்தோடு கூடிய ஏகாதிபத்திய அதிகாரத்தின் கருணை அனைவருக்கும் பெற வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், முக்கியமாக, மரண தண்டனை இனி விதிக்கப்படக்கூடாது என்ற ஆலோசனையும் முன்மொழியப்பட்டது. ஆட்சியாளர்களின் கடும்போக்கு சிந்தனையால் இந்த முன்மொழிவு நிறுத்தப்பட்டது.

இந்த இடைநிறுத்தத்தின் விளைவாக, அவர்களின் கண்கள் பிடுங்கப் பட்டு, கால்களில் ஒன்று ஊனப்படுத்தப்பட வேண்டும் என்று இப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது – அவர்களின் கருத்துப்படி, “மனிதாபிமானம்” மற்றும் “தண்டனைகளில் இலேசானது” இவைதான் என்று எண்ணியிருக்கக்கூடும். இறையச்சமில்லாத மனிதர்களின் இத்தகைய பரோபகாரத்தின் விளைவாக, முதன்முதலில் தங்கள் வலது கண்ணை வாளால் தோண்டியெடுத்து, நெருப்பால் சுடப்பட்டும், இடது கால் மூட்டுகளில் முத்திரை குத்தப்பட்ட இரும்புக் கம்பிகளை செலுத்தி, அதன் மூலம் அவயவங்களை இழந்து பயனற்றவர்களாக மாறிய ஏராளமான மக்களைப் பற்றி இப்போது தெரிவிப்பது மிகக் கடினம். இதற்குப் பிறகு அவர்கள் மாகாணத்தில் உள்ள செப்புச் சுரங்கங்களுக்கு கூலிகளாய் வேலை செய்யும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். முதன்மையாக அவர்கள் அங்கு அனுபவித்த கஷ்டங்கள் மற்றும் துன்பங்கள் எண்ணிலடங்காதவை. அப்படியும் அவர்களின் துணிச்சலான செயல்கள் கணக்கிட முடியாதவை.

இந்த சோதனைகள் அனைத்திலும், கிறிஸ்துவின் மகிமைவாய்ந்த வேதசாட்சிகள் உலகம் முழுவதும் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் துணிச்சலை நேரில் கண்ட சாட்சிகள் ஆச்சரியப்பட்டனர். நமது இரட்சகரின் சக்தி எவ்வளவு தெய்வீகமானது மற்றும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதது என்பதற்கான தெளிவான ஆதாரத்தை அவர்கள் வழங்கினர். ஒவ்வொன்றின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்வது நீண்டதாக இருப்பதால், அது முடியாத காரியமாக இருக்கும்.

இரத்தசாட்சியத்தின் மூலம் தங்கள் விசுவாசத்தை நிரூபித்த திருச்சபையினர்

13. நன்கு அறியப்பட்ட நகரங்களில் வேதசாட்சிகளான திருச்சபைத் தலைவர்களுள், கிறிஸ்துவின் இராச்சியத்தின் வேதசாட்சியான புனிதர்களின் நினைவுச்சின்னங்களில் நாம் முதலில் இடம்பெற வேண்டியவர் நிகோமீடியாவின் ஆயரான ஆண்டிமஸ். அவர் சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதேபோன்று, அந்தியோக்கியாவில் வாழ்ந்த வேதசாட்சிகளில், தனது வாழ்நாள் முழுவதும் உன்னதமானவர் எண்டு போற்றப்பட்ட லூசியன். இவர் ஒரு மறைமூப்பர். பேரரசர் நிகோமீடியாவில் இருந்தபோது, ​​லூசியன் கிறிஸ்துவின் அரசாட்சியை முதலில் வாய்வழியாகவும், பின்னர் தன் நடவடிக்கைகள் மூலமாகவும் அறிவித்தார். மேலும், ஃபீனீசியாவில் உள்ள வேதசாட்சிகள் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால், கிறிஸ்துவின் மந்தைகளின் அன்பான போதகர்கள் என்று மிகவும் பிரபலமானவர்கள்: டியரில் ஆயராக இருந்த டைரனியன்; சிடோனில் மறைமூப்பராக திருப்பணியாற்றிய ஜெனோபியஸ்; மற்றும் எமேசா மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் ஆயரான சில்வானஸ். எமேசாவில் இருந்த மற்றவர்களைப் போலவே கடைசியாக இங்கே குறிப்பிடப்பட்ட வேதசாட்சியானவர், காட்டு விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டார். மேலும் அவர் வேதசாட்சிகள் என்ற மகிமையான கூட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டார். மற்றைய இருவரும் அந்தியோக்கியாவில் கடவுளின் வார்த்தையை இறுதிவரை நிலைநிறுத்தி மகிமைப்படுத்தினர். அதன் காரணமாக, அந்த ஆயரானவர் ஆழ்கடலில் வீசப்பட்டார். அதே நேரம் சிறந்த மருத்துவர்களில் ஒருவரான ஜெனோபியஸ் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமையான சித்திரவதைகள் காரணமாக, வீரமரணம் எய்தி இறைவனடி சேர்ந்தார்.

பாலஸ்தீனத்தில் வாழ்ந்த வேதசாட்சிகளின் மத்தியில், காசாவின் ஆயர் சில்வானஸ், முப்பத்தொன்பது பேருடன், ஃபெனோ என்ற இடத்தில் அமைந்துள்ள செப்புச் சுரங்கத்தில் வைத்து சிரச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அங்கு எகிப்திய ஆயர்களான பீலியஸ், நிலுஸ் மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து தீச்சுவாலையால் தண்டனை நிறைவேற்றப் பட்டு மறித்தனர். சிசேரியாவில் உள்ள சமூகத்தின் மகத்தான மகிமையைப் பற்றியும் இங்கே நாம் குறிப்பிட வேண்டும். நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மிகவும் துணிச்சல்காரரான மனிதர் தான் பாம்பிலஸ் என்ற மறைமூப்பர். அவரது துணிச்சல்மிகு சாதனைகளை சரியான நேரத்தில் நான் கூறுவேன்.

அலெக்சாந்திரியாவிலும், தேபன் பகுதியிலும், எகிப்தின் ஏனைய பகுதிகளிலும் மகிமையுடன் திருநிலை அடைந்தவர்களின், முதலில் குறிப்பிடப்பட வேண்டியவர் அலெக்சாந்திரியாவின் ஆயரான பேதுரு. கிறிஸ்துவில் வாழ்ந்த தெய்வீக போதகர்களுக்கு ஒரு பக்திமயமான உதாரணம் தான் இவரும் இவருடன் சேர்ந்து பணியாற்றிய மறைமூப்பர்களான ஃபாஸ்டஸ், டியஸ் மற்றும் அம்மோனியஸ். இவர்கள் கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து, வேதசாட்சிகளாய் இறைவனடி சேர்ந்தனர். இவர்களைப்போலவே தான் பிலியாஸ், ஹெசிசியஸ், பாச்சிமியஸ் மற்றும் தியோடர். இவர்கள் எகிப்தில் உள்ள திருச்சபையின் ஆயர்கள். தங்கள் சொந்த ஊர்களில் வாழ்ந்த ஏராளமான பலர் வேதசாட்சிகளாகக் கொண்டாடப்பட்டு, உள்ளூர் வாசிகளால் நினைவுகூரப்பட்டனர்.

விரிவாக இவை பற்றிக் கூற வேண்டுமானால், கடவுள் மீது கொண்டுள்ள மட்டில்லா அன்பின் நிமித்தம், உலகம் முழுவதும் போராடியவர்கள் அனுபவித்த சித்திரவதைகள், என்னை விட, அதை நேரில் பார்த்தவர்களுக்கு ஒரு மறக்கமுடியாத, மயிர்க்கூச்செரியும் அனுபவமாக இருக்கும். ஆனால் நான் கண்டவற்றை எதிர்கால சந்ததியினருக்காக வேறொரு ஆக்கத்தில் குறிப்பிடுவேன். எவ்வாறாயினும், என்னுடைய அந்தப் புத்தகத்தில் எனது வாசகர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை வழங்கவுள்ளேன் – அதாவது, எங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஆணைகள், அவை திரும்பப் பெறப்பட்ட விதம், துன்புறுத்தல் தொடங்கிய பின்னர் நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை அதில் தர உத்தேசித்துள்ளேன்.

டியோக்லெஷியன், கொன்ஸ்டான்டியஸ் குளோரஸ் மற்றும் கொன்ஸ்டன்டைன்

உரோமைய அரசாங்கம் நமக்கு எதிராகப் போர் தொடுக்கும் முன், பேரரசர்கள் எப்பொழுதெல்லாம் நட்பாகவும் அமைதியாகவும் நடந்துகொண்டார்களோ அப்போதெல்லாம் உரோமைய அரசாங்கம் நன்மைகளின் அளவிட முடியாத அபரிமிதமான சாதக விளைவுகளை அனுபவித்தது. உலகெங்கிலும் ஆட்சிபுரிந்த ஆட்சியாளர்கள் தங்கள் பத்தாவது அல்லது இருபதாவது ஆண்டை நிறைவுசெய்து, பண்டிகைகள், பொது விளையாட்டுகள், விருந்துகள், களியாட்டங்கள் போன்ற விழாக்களை ஏற்பாடு செய்து முழுமையான, அமைதியான பாதுகாப்பான சூழலில் தங்கள் நாட்களை இன்பமாகக் கழித்தனர். ஆனால் அவர்களின் அதிகாரம் நாளுக்கு நாள் எந்தவித சோதனையோ தடையோ இல்லாமல் முன்னேறிச் சென்றதால், அவர்கள் திடீரென்று எங்களுடனான சமாதான அணுகுமுறையை ரத்து செய்து, நிரந்தரப் போரைத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகளுக்குள், முழு அரசாங்கத்தையும் கவிழ்க்கக்கூடிய ஒரு புரட்சி நடந்தது. முன்னர் குறிப்பிடப்பட்ட முன்னணிப் பேரரசர்களில் ஒருவரை [Diocletian] ஒருவித கொள்ளை நோய் தாக்கியது. இது அவரது மன உறுதியைச் சிதறடித்தது. அதன் பின்னர் அவர் சாதாரண தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பினார். அவருக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருந்தவருடைய [மாக்சிமியன்]. முழு சாம்ராச்சியமும் இரண்டாகப் பிளவுபட்டபோது வரைக்கும் இது நடக்கவில்லை. அதேநேரம், இவ்வாறான நிகழ்வுகள் முன்னெப்போதும் நடக்கவும் இல்லை.

சிறிது காலத்திற்குப் பிறகு, பேரரசர் கொன்ஸ்டன்டியஸ் (குளோரஸ்), தனது குடிமக்களிடம் எப்போதும் அன்பாகவும், நட்பாகவும் இறைவார்த்தை மீது பக்தியுடனும் இருந்தார். அவரது சட்டப்பூர்வ மகன் கொன்ஸ்டன்டைனை பேரரசராகவும், ஓகஸ்டஸை அவருக்கு அடுத்தவராகவும் ஆட்சிபீடத்தில் அமர விட்டுவிட்டார். அவர் (கொன்ஸ்டன்டியஸ் குளோரஸ்) கடவுள் போன்ற ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட முதலாமவராக [உரோமைய நாற்பெரு மாகாணங்களின் ஆட்சியர்] இருந்தார். ஒரு பேரரசருக்கு வழங்கப் படக்கூடிய ஒவ்வொரு மரணத்திற்குப் பிந்தைய மரியாதைக்கும் தகுதியானவராகவும், கனிவான உள்ளம் கொண்டவராகவும், மென்மையான இயல்பை உடையவராகவும் போற்றப்பட்டார். எனது காலத்தில், அவர் ஒருவரே, தனது ஆட்சிக்காலம் முழுவதையும் தனது உயர்ந்த பதவிக்கு தகுதியான நடத்தையுடன் கழித்தவர். அனைவருக்கும் தயவு மற்றும் கருணை காட்டினார். அவர் எங்களுக்கு எதிரான போரில் பங்கேற்கவில்லை – உண்மையில், அவர் தனது குடிமக்களிடையே உள்ள அப்பாவிகளைக் காயங்களிலிருந்தும் துஷ்பிரயோகத்திலிருந்தும் காப்பாற்றினார் – மேலும் அவர் தேவாலய கட்டிடங்களை இடிக்கவில்லை அல்லது எங்களுக்கு வேறு எந்த விதமான தீங்கும் செய்யவில்லை. எனவே, அவர் மகிழ்ச்சியான மற்றும் மும்முறை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை இறுதிவரை வாழ்ந்தார். இப்படி சொல்வதற்குள் காரணம் என்னவென்றால், அவர் மட்டுமே பேரரசராக இருந்தபோது உயிர்நீத்தார். அவருக்குப் பின் ஒரு ஆட்சிபீடம் ஏறிய அவரது சட்டப்பூர்வ மகன், ஞானம் மற்றும் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு ஆட்சியாளனாய் விளங்கினான்.

படையணிகள் உடனடியாக அவரது மகன் கொன்ஸ்டன்டைனை ஒரு உயர்ந்த பேரரசராகவும், ஓகஸ்டஸை அவருக்கு அடுத்தவராகவும் கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்று கூறி அறிவித்தனர். கடவுள் தான் நீண்ட காலத்திற்கு முன்பே எல்லோருக்கும் அரசராக இருந்தார். மேலும் அவர் [கொன்ஸ்டன்டைன்] தனது தந்தை வழியே நடந்து, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு அவற்றையே பின்பற்றவும் முடிவு செய்தார்.

பின்னர், ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட பொதுவான வாக்கெடுப்பின் மூலம், லிசினியஸ் பேரரசராகவும், அவருக்கு அடுத்தவராக ஒகஸ்டசும் அறிவிக்கப்பட்டனர் – இது மாக்சிமினுக்கு [டாயா] பலத்த அடியாக விழுந்தது. ஏனென்றால் அவரை அனைவரும் சீசராக மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்தனர். எனவே, தன்னை உண்மையான ஒரு கொடுங்கோலனாய் மாற்றிக்கொண்டு, பெருமையுடன் அந்தப் பட்டத்தை எடுத்து தன்னைத் தானே ஓகஸ்டஸ் என்று அறிவித்தார். அதே நேரம், மாக்சிமின், ஏற்கனவே இராஜினாமா செய்து, பின்னர் மீண்டும் பதவிக்கு வந்தவர். அவர் கொன்ஸ்டன்டைனை படுகொலை செய்ய திட்டம் தீட்டினார். ஆனால் அதற்கு முன் அவர் பிடிபட்டு, மிகவும் கேவலமான முறையில் தனது முடிவை சந்தித்தார். அவரைப் புகழ்ந்துரைக்கும் கல்வெட்டுகள் மற்றும் சிலை வடிவங்கள், ஒரு சீரழிந்த மற்றும் தெய்வபக்தியற்ற தனிநபரை அடிக்கடி நினைவூட்டுவதாகக் காணப்பட்டதால், அவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

மாக்சென்டியஸ்

14. உரோமில் கொடுங்கோலனாகத் தன்னை சித்தரித்துக்கொண்ட அவனது மகன் மாக்சென்டியஸ், முதலில் உரோமைய மக்களின் மனதை வெல்லும்பொருட்டு தம்மை ஒரு விசுவாசியாகக் காட்டிக்கொண்டான். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்குக் கட்டளையிட்டான். அவன் தனது முன்னோடிகளை விட தான் நட்பாகவும் மிதமாகவும் இருப்பதாகக் காட்டிக்கொண்டு பக்திமானைப்போல் நாடகமாடினான். ஆனால், அவனது செயற்பாடுகள் யாவும் மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கியது. அவன் அனைத்து விதமான துர்ச்செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். மேலும் பெண்களுக்கெதிரான விபச்சாரம், கற்பழிப்பு உட்பட, அனைத்து வகையான அருவருப்பான, மோசமான செயல்களையும் அவன் விட்டுவைக்கவில்லை. சட்டப்படி திருமணமான பெண்களை கணவன் மாரிடமிருந்து பலவந்தமாகப் பிரித்து, அவர்களை அவமானப்படுத்தி, மானபங்கப்படுத்தி, பின்னர் அவர்களை அவர்களது கணவன் மாரிடம் திருப்பி அனுப்பினான். அவனது இலக்குகள் சீரற்றவையாகவோ அல்லது தெளிவற்றவைவோ இருக்கவில்லை; மாறாக, அவர்கள் சட்டசபையின் உயர்ந்த ஸ்தானத்திலும் புகழின் உச்சியிலும் இருந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லோரும் அவனது பயங்கரமான சர்வாதிகாரத்தின் முன் சக்தியிழந்தவர்களாகக் சோர்ந்துபோய், அடங்கிப்போனவர்களாவே காணப்பட்டனர். அவர்கள் அமைதியாகவும் அடிபணிந்தவர்களாகவும் இருந்தபோதிலும், கொடுங்கோலனின் வெறிகொண்ட கொடுமைகளில் இருந்து தப்ப முடியாமல் தவித்தனர். ஒருமுறை, எந்த ஒரு ஆதாரமோ காரணமோ இன்றி, அவன் தனது மெய்க்காப்பாளர்களுக்கு மக்களை படுகொலை செய்ய உத்தரவிட்டான். ஆயிரக்கணக்கான உரோமைய குடிமக்கள் நகரின் மத்தியில் வைத்து, கொடுவாள்களோ, ஈட்டிகளோ, ஆயுதங்களோ கொண்டு அல்ல, தம் சக உரோமையர்களாலேயே அவர்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டனர். எத்தனையோ கணக்கில் அடங்காத செல்வந்த, புகழ்பெற்ற சட்டசபையினர் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல் பல்வேறு போலி காரணங்களுக்காக எண்ணற்ற புத்திஜீவிகள் போன்றோர் கொன்றொழிக்கப்பட்டனர். ஆனால் அவன் செய்த அனைத்து குற்றங்களின் உச்சத் தன்மையை நோக்கினால், அவை மாந்திரீக சக்தியால் மேற்கொண்டவை போலவே இருந்தன: மாயாஜாலத்தில் மூழ்கி, அவன் கர்ப்பிணிப் பெண்களின் வயிறுகளைக் கிழித்து, கருவறையில் இருக்கும் சிசுக்களின் குடல்களைப் பிடுங்கியும், சிங்கங்களைக் கொன்றும், பிசாசுகளை வரவழைத்தும் அதன் மூலம் போரைத் தடுக்கும் கொடூரமான தந்திரோபாயங்களையும் கண்டறிந்து, அதன் மூலம் யுத்தம் ஏற்படுவதைத் தடுத்து, அப்படி யுத்தம் மூளும் பட்சத்தில், இவ்வாறான ஈனச் செயல்கள் மூலம் வெற்றியை அடைய முடியும் என்ற ஒரு குரூரத்தனமான மூட நம்பிக்கை கொண்டிருந்தான்.

இந்த கொடுங்கோலன் தனது குடிமக்களை அடிமைப்படுத்த உரோமில் என்னவெல்லாம் செய்தான் என்று எவராலும் வாய்திறந்து கூறமுடியாது. எனது சமகாலத்தவர்களின் கூற்றுப்படி, உரோமில் அல்லது வேறு எங்கும் இதுவரை அறியப்படாத, தீவிர அத்தியாவசியத் தேவையான உணவு போன்றவற்றைத் தேடிக்கொள்ளக்கூட முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு அங்கிருந்த மக்கள் தள்ளப்பட்டிருந்தனர்.

மாக்சிமின் டாயா  

கிழக்கின் கொடுங்கோலன் மாக்சிமின், உரோமின் கொடுங்கோலருடன் ஒரு இரகசிய கூட்டணியை உருவாக்கினான் – அதாவது ஈனச்செயலின் ஒரு சகோதரனாக – அது பற்றி நீண்ட காலம் நினைத்தும், அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. (உண்மையில், அவன் அதைக் கண்டபோது நியாயமான அபராதம் செலுத்த நேரிட்டது) உரோமைய சர்வாதிகாரியுடன் கொடுங்கோண்மையின் பங்குதாரரான அவன்,  உண்மையில் அவனையும் விஞ்சி ஊழல் விடயத்தில் முதல் இடத்தில் இருந்தான். முன்னணி மோசடியாளர்கள் மற்றும் மந்திரவாதிகள் அவனது உயர்ந்த மதிப்பைப் பெற்றனர். அவரது மூடநம்பிக்கை ஒவ்வொரு ஒலிக்கும் பயந்தது. மேலும் அவன் சிலைகள் மற்றும் பிசாசுகளுக்கெதிராக தவறு செய்ய பயந்தான். ஜோதிட நம்பிக்கை மற்றும் அசரீரிகளின் உதவி அல்லது ஆலோசனை இல்லாமல் ஒரு அங்குலம் கூட அசையத் துணியமாட்டான். இதன் காரணமாக, அவன் தனது முன்னோர்களை விட மிகவும் கடுமையாகவும் இடைவிடாமலும் எம்மைத் துன்புறுத்தினான். ஒவ்வொரு நகரத்திலும் [அஞ்ஞான] கோயில்களைக் கட்டவும், பண்டைய காலத்தின் பாழடைந்த புனித மடாலயங்களையுயம் கவனமாக மீள்நிர்மானிக்கும்படியும் உத்தரவிட்டான். அவன் ஒவ்வொரு நகரத்திலும் மாவட்டத்திலும் சிலைகளுக்கு பூஜை செய்ய பூசகர்களை நியமித்தான். மேலும் ஒவ்வொரு மாகாணத்திலும் அவர்களுக்கு தலைமை பூசகர்களாக சேவைசெய்யும் பொருட்டு, இராணுவ மெய்க்காப்பாளருடன் பொது சேவையின் ஒவ்வொரு பகுதியிலுமிருந்து மிகவும் பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்தான். கொஞ்சமேனும் பொறுப்பற்ற முறையில் ஆளுநர் பதவிகளையும் உயர்ந்த சலுகைகளையும் அவனது இஷ்டம் போல் வஞ்சகர்களுக்கும் அவர்களின் தெய்வங்களுக்கு பணிவிடை செய்பவர்களுக்கும் வழங்கினான்.

இந்த கட்டத்தில் இருந்து, அவன் தங்கம், வெள்ளி மற்றும் பிற பொருட்களுக்கு கடுமையான விலைகளை விதித்து, மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அதற்கு மேல், பாரிய அபராதங்களை விதிப்பதன் மூலம், ஒரு நகரம் அல்லது தேசம் என்ற வரைமுறை இல்லாமல் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட ஒவ்வொரு மாகாணத்தையும் தனது அதிகார வெறியால் ஆட்டுவித்தான். வசதி படைத்தவர்கள் தங்கள் மூதாதையரிடம் இருந்து பெற்ற சொத்துக்களை பறிமுதல் செய்து, தனக்கு வேண்டியவர்களுக்கு அந்த சொத்துக்களில் இருந்து ஏராளமான பணத்தைக் கொடுத்தான். அவன் அளவுக்கதிகமாய் மது அருந்தி, அடிக்கடி தனது சுயநினைவை இழந்து காணப்பட்டான். அடுத்த நாள் போதை தெளிந்து நிதானமாக இருக்கும்போது தனது செயல்களுக்கு வருந்தினான். துஷ்பிரயோகம் மற்றும் அடாவடித் தனத்திலும் அவனை மிஞ்ச எவரும் இருக்கவில்லை. தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் குடிமக்களுக்கும் தீயவற்றைப் போதிப்பவனாக மட்டுமே தன்னை உருவகித்துக் கொண்டான். சகல விதமான அத்துமீறல் நடவடிக்கைகள் மூலம், இராணுவத் தளபதிகளுக்கும் ஆளுநர்கள் மற்றும் அரச அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும், தங்கள் சொந்த நாட்டு மக்களையே மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொள்ளையிடுதல் போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட அனுமதி வழங்கினான். அவனது மூர்க்கத்தனமான காம வெறியாட்டம் பற்றி ஒருவர் நினைவில் கொள்ள வேண்டுமா அல்லது அவனது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டுமா? பெண்களைக் கேவலப் படுத்தாமல் அல்லது கன்னிப் பெண்களை பலாத்காரம் செய்து அவனது இச்சையைத் தீர்த்துக் கொள்ளாமல், கன்னிப்பெண்களின் கற்பைக் கொள்ளையடிக்காமல் அந்தக் கயவன் அந்த நகரத்தைக் கடந்து சென்றதே இல்லை.

அவன் ஒரே ஒரு விடயத்தைத் தவிர, மற்றைய அனைத்திலும் அவன் நினைத்ததை சாதித்தான்: அதாவது, கிறிஸ்துவர்கள். இவர்கள் மரணத்திற்கு ஒருபோதும் அஞ்சவில்லை அத்தோடு அவரது மோசமான கொடுங்கோன்மையை துச்சமாக எண்ணி ஏளனம் செய்தனர். அவர்கள் தீ, வாள், ஆணிகளால் அறையப்படுத்தல், காட்டு மிருகங்களுக்கு இரையாக்குதல், கடலில் மூழ்கடித்தல், உடல் தசைகள் மீது தீயால் சுடுதல், கைகால்கள் மற்றும் உடல் அவயவங்களை வெட்டுதல்; கத்திகளால் குத்துதல், கண்களைத் தோண்டுதல், உடல் முழுவதையும் சிதைத்தல், அத்தோடு, பட்டினி போட்டு வதைத்தல், சங்கிலிகளால் பிணைத்தல் மற்றும் இருள் நிறைத்த நிலவறையில் தடுத்துவைத்துத் தண்டித்தல் போன்ற சொல்லொணா கொடுமைகளைச் சகித்தனர். கடவுளுக்குரிய கௌரவத்தை சிலைகளுக்கு கொடுப்பதை விட விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு துன்பத்தை அனுபவிப்பதே மேலானது என்று அவர்கள் விரும்பினர். பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தெய்வீக வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, ஆண்களைப் போலவே தங்கள் தைரியத்தை வெளிப்படுத்தினர். சிலர் ஆண்கள் அனுபவித்த அதே சோதனைகளுக்கு முகம்கொடுத்தனர். அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சல் காரணமாக, ஆண்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே தண்டனைகளைப் போல் அவர்களும் தண்டனையை அனுபவித்தார்கள். மற்றைய பெண்கள், தங்களை மானபங்கம் செய்யப்படுவதற்காக இழுத்துச் செல்லப்பட்டபோது, தங்கள் உடல்களை மிலேச்சத்தனத்துக்குக் கையளிப்பதை விட மரணமே மேலானது என்ற உறுதியோடு வீரமரணம் எய்தினர்.

அந்தக் கொடுங்கோலனின் வெறித்தனத்தை துணிச்சலுடன் எதிர்த்து நின்ற ஒரே ஒருவர்தான் அலெக்சாந்திரியாவின் மிகவும் மரியாதைக்குரிய ஒரு கிறிஸ்தவ பெண். அவள் தனது பிறப்பு, செல்வம் மற்றும் கல்விக்காகப் போற்றப்பட்ட அதேவேளை, அவள் தனது தன்னடக்கத்துக்கும், கற்புக்கும் முன்னுரிமை கொடுத்தாள். அந்தக் கொடுங்கோல் ஆட்சியாளன் அவளைத் திரும்பத் திரும்ப தூக்கிலிட முன்மொழிந்த போதிலும் அவனால் அந்தத் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை; இருப்பினும், அவள் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தாள். ஆகவே அவனது நோக்கம் வேறு வழியில் செல்ல ஆரம்பித்தது. தலைக்கேறிய அவனுடைய காம வேட்கை அவனது ஆத்திரத்தை மேலோங்கச் செய்தது. அவன் அவளை நாடுகடத்திவிட்டு அவளது உடைமைகளை சூறையாடுவதன் மூலம் அவளைத் தண்டித்தான். எண்ணற்ற மாற்றிய பெண்கள், மாகாண ஆளுநர்களின் விபச்சாரம் மற்றும் கற்பை சூறையாடுவதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு செவிசாய்க்க மறுத்த காரணத்தால், பல்வேறுபட்ட சித்திரவதைகளையும், அவமானங்களையும், மரண தண்டனைகளையும் அனுபவித்தனர்.

இவை யாவும் அற்புதமான நிகழ்வுகளாக இருந்தபோதிலும், இவை அனைத்திற்கும் மேலான, மிகவும் அற்புதமான நிகழ்வு என்னவென்றால், உரோமில் வாழ்ந்த ஒரு பெண்ணைப் பற்றியது. அவள் எல்லா வகையிலும் உன்னதமானவளாய், கற்புக்கரசியாய் வாழ்ந்தாள். அவள் மாக்சிமின் போன்ற கொடுங்கோலனான மாக்சென்டியஸின் இலக்காக இருந்தாள். அவளும் ஒரு கிறீஸ்தவப் பெண். மேலும் கொடுங்கோலனின் சேவகர்கள் தன் வீட்டினுள் வந்து இருப்பதையும், அவளது கணவர், அவன் ஒரு உரோமைய அதிகாரியாக இருந்தபோதிலும், ஆட்சியாளர்கள் மேல் கொண்டிருந்த பயம் காரணமாக, அவளை அந்த சேவகர்களுடன் செல்ல அனுமதி அளித்ததை அறிந்ததும், அவள் தன்னை அழகுபடுத்திக்கொள்ள ஒரு கணம் தன்னைப் பொறுத்தருள வேண்டும் என்றும் வேண்டினாள். அப்போது அவள் தன் அறைக்குள் சென்று வாள் ஒன்றை எடுத்து தன்னைத் தானே வெட்டிக்கொண்டு உடனேயே இறந்துபோனாள். அவளுடைய சடலத்தை அவளை அழைத்துச்செல்ல வந்திருந்த கொடுங்கோலனின் சேவர்களிடம் விட்டுச் சென்றாள். கற்புக்கரசியான அவளது அந்த உன்னதமான முடிவின் மூலம், இவ்வுலகில் என்றும் அழியாத உடைமை என்பது ஒரு கிறிஸ்தவரின் நற்பண்பு தான் என்று அனைவருக்கும் நிரூபித்தாள். அதை உலகறியச் செய்ய வார்த்தைகளை விட அவளுடைய கற்புடைமை தான் மிகவும் உன்னதமானதென்று போற்றப்பட்டது. கிழக்கையும் மேற்கையும் தங்களுக்குள்ளே பிரித்துக்கொண்ட இந்த இரண்டு சர்வாதிகாரிகளும் தீமையின் சேற்றினுள் புதையுண்டவர் போலாயினர். இந்தக் கொடுஞ்செயலுக்கான காரணத்தைத் தேடும் எவரும் நமக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட சித்திரவதைகள் மற்றும் வன்முறைகளில் அதைக் கண்டிருப்பார்கள். குறிப்பாக கிறிஸ்தவர்கள் தங்கள் சுதந்திரத்தை அடையும் வரை இந்த கொடுமைகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்தவண்ணமே இருக்கும்.

உள்நாட்டுப் போர்

15. துன்புறுத்தல் இடம்பெற்ற தசாப்தம் முழுவதும், அவர்களின் சதியும், ஒருவரையொருவர் முந்திக்கொண்டு செய்த போர் முயற்சி போன்றன தடையின்றி தொடர்ந்தன. கடல் பயணங்கள் தடுக்கப்பட்டன, எங்கு பயணித்தாலும், அவர்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த பிணிகளில் இருந்து மீள முடியாதிருந்தது: கொடுமைகள் காரணமாக, உடற்பாகங்கள் கிழிந்து, எதிரியின் முகவர்களாக கருதப்பட்டு சித்திரவதையின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, இறுதியாக ஆணிகளால் அறையப்பட்டு அல்லது தீயிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றுதல் போன்றவை அரங்கேறின. கேடயங்கள், கவசங்கள், ஈட்டிகள், அம்புகள், மற்றும் பிற போர் தளபாடங்கள் உற்பத்திகள் செழித்தன. அதேபோல் மூவரிசைப் போர்க்கப்பல்கள், கடற்படைக்கான யுத்த ஆயுதங்களை உருவாக்குதல் போன்ற அனைத்தும் எதிரியின் தாக்குதலை எதிர்பார்த்தே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இது இவ்வாறிருக்க, பஞ்சமும் கொள்ளைநோயும் அவர்களைப் படாத பாடுபடுத்தியது. அதை நான் சரியான நேரம் வரும்போது விபரமாகக் கூறுகிறேன்.

முடிவுக்கு வந்த கொடுமைகள்

16. கடவுளின் கிருபையால், துன்புறுத்தல் மற்றும் கொடுமைகள் அதன் பத்தாம் ஆண்டில் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. அது எட்டாவது வருடம் நடக்கும் நேரம் நலிவடைந்து மெல்ல மெல்ல அதன் வீரியத்தை இழக்கத் தொடங்கியது. ஏனென்றால், தெய்வீக அருள் எம்மையும், எமது ஆட்சியாளர்களையும் கண்காணித்து வந்ததோடு, அவர்கள் மனதை மாற்றி, மிகவும் ஆச்சரியப்படத்தக்க முறையில் – நமக்கு எதிராக நீண்டகாலமாக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட மனிதர்கள் – மனிதாபிமான கட்டளைகள் மற்றும் சட்டங்கள் மூலம் கொடுமைகள் என்ற எரியும் தீயை அணைத்தனர். இருப்பினும், இது மனித நேயத்தின் முயற்சி காரணமாகவோ அல்லது ஆட்சியாளர்களின் இரக்கம் காரணமாகவோ அல்லது மனிதாபிமானம் காரணமாகவோ அல்ல. ஆனால் அதற்கு நேர்மாறாக, ஆரம்பத்திலிருந்தே அவர்கள் தினமும் எங்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு, பலவிதமான திட்டங்களின் மூலம் புதிய தாக்குதல்களை நடத்தினார்கள். இது தெய்வீக ஏற்பாட்டின் விளைவாகும். இது மக்களுடன் சமாதானத்தை ஏற்படுத்திய அதேவேளை, அவர்களைத் தாக்கவும் செய்தது, குற்றவாளி [கேலேரியஸ்] என்பவன் மேற்கொண்ட துன்புறுத்தலுக்கு முதன்மையான தூண்டுதலாக இருந்தமைக்காக, கடவுள் அவன் மீது கோபமடைந்தார். அது தெய்வீகத் தீர்ப்பு காரணமாக நடந்திருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தாலும், “எவரால் குற்றம் இழைக்கப்படுமோ, அவனுக்கு ஐயோ கேடு” என்கிறது வேதாகமம்.

பரலோகத்தின் தண்டனை அவனை [Galerius] ஆட்கொண்டது. அது அவனது சதையில் தொடங்கி அவரது ஆன்மா வரை சென்றது. அவனது பிறப்புறுப்புகளின் நடுவே விரைகளின் இடையே ஒரு சீழ் கட்டி திடீரென்று தோன்றியது. பின்னர் அது ஒரு ஆழமான குடல் அழட்சியாக மாறியது. அது அவனது உள் குடலில் குணப்படுத்த முடியாத ஒரு நிலையைத் தோற்றுவித்தது. அவற்றிலிருந்து பெருந்தொகையான புழுக்கள் தென்படத் தொடங்கியது மட்டுமன்றி, கொடிய துர்நாற்றம் வீசியது. ஏனெனில் நோய் வருவதற்கு முன்பே, அவன் உட்கொண்ட அளவுக்கதிகமான உணவு அவனது முழு உடலையும், மந்தமான கொழுப்பு நிறைந்த ஒரு பெரிய பிண்டமாக மாறி சிதையத் தொடங்கியது. அவனது அந்த நிலை ஒரு பயங்கரமான, அழுகிய ரணகளமாகக் காட்சியளித்தது. சில மருத்துவர்கள் தாங்கமுடியாத, அசாதாரண துர்நாற்றம் காரணமாக சிகிச்சையளிக்க மறுப்புத் தெரிவித்த காரணத்தால் தூக்கிலிடப்பட்டனர். மீண்டு வருவதற்கான எந்த நம்பிக்கைக்கும் அப்பால் அவனது நோயின் தீவிரம் சென்று விட்டதால், மற்றவர்கள் அவனை மீட்க உதவ முடியவில்லை என்ற காரணத்தால் அவர்களும் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

ஏகாதிபத்தியத்தின் மறுசீரமைப்பு

17. இந்த பயங்கரமான நோயுடன் போராட்டம் நடத்தி, இறை மகிமைக்கு எதிராக தான் இழைத்த கொடுமைகளுக்காக மனசாட்சி தந்த வேதனையை அவன் உணர்ந்தான். தனது நிலைமை சற்றே சீராகி தணிந்த பிறகு, அவன் முதன் முதலில் அகிலத்தின் சிருஷ்டியான கடவுளிடம் பகிரங்கமாக தனது தவறை ஒப்புக்கொண்டான். பின்னர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளை உடனடியாக நிறுத்துமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டான். ஏகாதிபத்திய சட்டம் மற்றும் ஆணையின்படி, அவர்கள் இப்போது தங்கள் தேவாலயக் கட்டிடங்களை மீள நிர்மாணித்து, தங்கள் வழக்கமான சடங்குகளைச் செய்து, பேரரசர் சார்பாக பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு நகரத்திலும் பின்வரும் மறுசீரமைப்புடன் கூடிய ஏகாதிபத்திய கட்டளைகள் அறிவிக்கப்பட்டன.

[தெளிவாகத் வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு பேரரசரின் பெயர்களும் அடையாளம் காணக்கூடிய வகையில் தடித்த எழுத்து வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது]

பேரரசர் சீசர் கெலேரியஸ் வலேரியஸ் மாக்சிமியனஸ் இன்விக்டஸ் அகஸ்டஸ், பொன்டிஃபெக்ஸ் மாக்சிமஸ், ஜெர்மானிக்கஸ் மாக்சிமஸ், ஈஜிப்டியாகஸ் மாக்சிமஸ், தெபைகஸ் மாக்சிமஸ், சர்மாடிகஸ் மாக்சிமஸ் ஐந்து முறை, பெர்சிகஸ் மாக்சிமஸ் இரண்டு முறை, கார்பிகஸ் மாக்சிமஸ் ஆறு முறை, அர்னெனியாகஸ் மெக்ஸிமஸ், மெடிகஸ் மாக்சிமஸ், அடியாபெனிகஸ் மெக்ஸிமஸ் இருபது முறை உரோமைய சட்டவாக்க சபையின் தலைமைப்பொறுப்பிலும், பத்தொன்பது முறை ஏகாதிபத்தியத்தின் தளபதியாகவும், ஆலோசனை சபையின் தலைமைப்பொறுப்பில் எட்டாவது முறையாகவும், அத்தோடு, தேசபிதாவாகவும், மாகாணங்களுக்கான ஆளுநராகவும் பணிபுரிந்த அனைவருக்கும்.

மற்றும் பேரரசர் சீசர் ஃபிளேவியஸ் வலேரியஸ் கான்ஸ்டன்டைன் பயஸ் பீலிக்ஸ் இன்விக்டஸ் அகஸ்டஸ், பொன்டிஃபெக்ஸ் மாக்சிமஸ், ஐந்தாவது முறையாக உரோமைய சட்டவாக்க சபையின் தலைமைப்பொறுப்பில் இருந்தவரும், ஏகாதிபத்தியத்தின் தளபதியாகவும், தேச பிதாவாகவும், மாகாணங்களுக்கான ஆளுநராகவும் பணிபுரிந்தவரும், மற்றும் பேரரசர் சீசர் வலேரியஸ் லிசினியஸ் லிசினியஸ் பயஸ் பீலிக்ஸ் இன்விக்டஸ் அகஸ்டஸ், பொன்டிஃபெக்ஸ் மாக்சிமஸ், நான்காவது முறையாக உரோமைய சட்டவாக்க சபையின் அதிகாரத்தை வைத்திருந்தவரும், மூன்றாவது முறையாக ஏகாதிபத்தியத்தின் தளபதியாகவும், ஆலோசனை சபையின் தலைமைப் பொறுப்பை வகித்தவரும், தேசபிதாவானவருக்கும், ஆளுநருக்கும், உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட மாகாணங்களில் வாழும் மக்களுக்கும், எமது வாழ்த்துக்கள்.

அரசின் நன்மை கருதியும், மற்றும் தேசத்தின் நலனுக்காக நாங்கள் எடுக்கும் மற்ற நடவடிக்கைகளில், உரோமையர்களின் பண்டைய சட்டங்கள் மற்றும் பொது ஒழுங்கிற்கு இணங்காத எதையும் சரிசெய்ய நாங்கள் ஏற்கனவே விரும்பினோம். எனவே தங்கள் முன்னோர்களின் விசுவாசத்தைக் கைவிட்ட கிறிஸ்தவர்களும் தங்கள் சரியான நிலைமைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒரு ஏற்பாடு செய்திருந்தோம். சில விசித்திரமான காரணங்களால், இத்தகைய அகங்காரம் மற்றும் முட்டாள்தனம் அவர்களை ஆட்கொண்டது. அவர்கள் தங்கள் மூதாதையர் வகுத்த பண்டைய கொள்கைகளைப் பின்பற்றாமல், அவர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப சட்டங்களை உருவாக்கி, ஒவ்வொருவரும் அதைக் கடைபிடித்து, பல்வேறு இடங்களில் கூட்டமாக கூடினர்.

எனவே, அவர்கள் பழங்காலத்தின் பழக்கவழக்கங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று நாங்கள் ஒரு ஆணையை பிறப்பித்தபோது, அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டனர். மேலும் பலர் துன்புறுத்தப்பட்டனர் மற்றும் எல்லா வகையான மரண வேதனைகளையும் அவர்கள் சகித்துக்கொள்ள நேரிட்டது. அவர்களில் பெரும்பாலோர் அதே முட்டாள்தனத்தை செய்தார்கள், கிறிஸ்தவ கடவுளை வணங்கவோ அல்லது பரலோகத்தில் உள்ள கடவுளுக்குத் தகுந்த மரியாதையை கொடுக்கவோ தவறிவிட்டனர். எனவே, எங்கள் கருணை மற்றும் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கும் வழக்கமான நடைமுறையைக் கருத்தில் கொண்டு, இந்த குறிப்பிட்ட விடயத்திலும் எங்கள் சலுகையை நீடிப்பது பொருத்தமானது என்று நாங்கள் உணர்ந்தோம். பொது ஒழுங்கிற்கு எதிராக எவ்வித கலகங்களிலும் ஈடுபடாமல் இருக்கும் வரை, கிறிஸ்தவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து அவர்கள் ஒருகாலத்தில் வாழ்ந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க மகிழ்ச்சியுடன் அனுமதி வழங்குவது சரியானது என்று நாங்கள் நினைத்தோம். நீதிபதிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பிரத்தியேகமான ஒரு கடிதத்தில் கோடிட்டுக் காட்டுவோம். அதன்படி, எங்களால் வழங்கப்படும் இந்த சலுகையைக் கருத்தில் கொண்டு, [கிறிஸ்தவர்கள்] எங்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும், தங்களின் நலனுக்காகவும் தங்கள் சொந்த கடவுளிடம் மன்றாட கடமைப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தின் நலன் எல்லா வகையிலும் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களும் அதற்கேற்ப தங்கள் வாழ்வை தங்கள் சொந்த வீடுகளில் சுமையற்றவர்களாக வாழலாம்.

அதனால், என்னால் முடிந்தவரை நான் கிரேக்க மொழியில் இருந்து [அசல்] இலத்தீன் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஆணையைப் படியுங்கள். பின்னர் என்ன நடந்தது என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் இது.

புத்தகம் 816 இன் இணைப்பு

இவற்றை வெளியிட்டதன் பின், இந்த ஆணையைப் பிறப்பித்தவர் தனது மனதில் உறுத்திக்கொண்டிருந்த மகா பெரிய பாவத்தில் இருந்து விடுதலை பெற்றார். ஆயினும், சிறிது காலம் கழித்து அவர் இறந்து போனார். அவர் பேரழிவு தரும் கொடுஞ்செயல்களின் காரணகர்த்தாவாகவும், முதன்மையானவராகவும் இருந்தார்: ஏனைய பேரரசர்கள் செய்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர் தனது சொந்த குடும்ப சூழலில் இருந்த உறுப்பினர்களில் தொடங்கி, இராணுவத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் அனைவரையும் இல்லாதொழிக்க தனது பலத்தைப் பயன்படுத்தினார். சிலரை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து கீழ்நிலைக்கு கொண்டுசென்றார். மற்றவர்களை அவமானப்படுத்தி அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். இறுதியாக, அவர் தனது சக பேரரசர்கள் அனைவரையும் பொதுவான துன்புறுத்தலை மேற்கொள்ளுமாறு தூண்டினார்.

அவர்களின் மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது குறித்து நாம் அமைதியாக இருப்பது பொருத்தமற்றது. உச்ச அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்ட நால்வரில், வயது மற்றும் மரியாதையில் மிகவும் உயர்ந்த இருவர் [டியோக்ளேஷியன் மற்றும் மக்ஸிமியன்] நான் ஏற்கனவே கூறியது போல், துன்புறுத்தல் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் ஆட்சியிலிருந்து ஓய்வு பெற்று, மீதமுள்ள நாட்களைக் கவுரவமான குடிமக்களாகக் கழித்தனர். அவர்கள் பின்வரும் நோக்கங்களைக் கொண்டவர்களாக இருந்தனர். கௌரவத்திலும் வயதிலும் முதல் ஸ்தானத்தில் இருந்த [டியோக்ளேஷியன்], ஒரு நீண்ட மற்றும் வேதனை தரும் கொடிய நோய்க்கு ஆளானார். அதே நேரத்தில் அவருக்கு அடுத்தபடியாக இருந்த [மக்ஸிமியன்], தனது சொந்த பல குற்றங்களுக்காக தானே தன் கழுத்தை நெரித்துக் கொண்டு தற்கொலை செய்ததன் மூலம், ஒரு சாத்தானிய கட்டளையை நிறைவேற்றினார். மீதமுள்ளவர்களில், கடைசி இடத்தில் இருந்த [கெலேரியஸ்] – இந்த துன்புறுத்தலின் காரணகர்த்தா – மேலே குறிப்பிட்டது போன்ற ஒரு விதிப்பயனை அனுபவித்தார். ஆனால் அவரது உடனடி உயர் அதிகாரியான கொன்ஸ்டான்டியஸ் [குளோரஸ்], தனது முழு ஆட்சிக்காலத்தையும் தனக்கு வழங்கப்பட்ட உயர் பதவிக்கு ஏற்ற முறையில், மிகவும் கருணையுடனும், அனைவருக்கும் சாதகமான விதத்திலும் கழித்தார். அவர் எங்களுக்கு எதிரான போரிலிருந்து விலகினார். தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிலிருந்து தனது புனித குடிமக்களைக் காப்பாற்றினார். மேலும் அவர் எந்த தேவாலய கட்டிடங்களையும் அழிக்கவில்லை அல்லது எந்த வகையிலும் எங்களை தொந்தரவு செய்யவும் இல்லை. எனவே, அவர் உண்மையிலேயே மகிழ்ச்சியான மற்றும் மூன்று முறை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து இறையடி சேர்ந்தார். ஏனெனில் அவர் மட்டும் தான் பேரரசராக இருந்தபோதே மகிமையுடன் இறந்தார். எல்லா வகையிலும் விவேகமும் தெய்வீக சிந்தனையும் கொண்ட ஒரு சட்டப்பூர்வ புதல்வர் அவருக்குப் பின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அவர் [கான்ஸ்டன்டைன்] உடனடியாகவே தனது கடமைகளை சரிவர நிறைவேற்றி, நீதியுடன் ஆட்சிசெய்யும் பேரரசராகவும், அகஸ்டஸாகவும் இராணுவத்தால் அறிவிக்கப்பட்டார்.மேலும் அவர் தனது தந்தையைப் போலவே எங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக ஆட்சியை கொண்டு நடத்த முடிவு செய்தார்.

மேலே குறிப்பிட்ட நால்வரின் கதியும் அப்படித்தான் அமைந்திருந்தது. கடைசியாக உயிர் பிழைத்தவர் [Galerius], அவரைப் பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அதனுடன், மேலே குறிப்பிடப்பட்ட ஆவணத்தையும் அவர் வெளியிட்டார்.

நான்கு பேரரசர்கள்

மற்றவற்றுடன் ஒப்பிடுகையில், இந்த புத்தகத்தில் காணப்படும் எழுத்து நடையில் உள்ள மாறுபாடு வெளிப்படையானது. அவரது கடந்தகால வரலாற்றின் ஆதாரங்களுடன் இது தொகுக்கப்படவில்லை. யூசிபியஸ் இந்த புத்தகங்களில் தெரிவித்துள்ள பல நிகழ்வுகளுக்கு நேரில் கண்ட சாட்சியாக விளங்கினார். இது அவரது முந்தைய புத்தகங்களில் சில சமயம் காணாமல் போன உயிரோட்டத்தை மீண்டும் இங்கே வெளிக்கொணர்கிறது . இங்கே அவர் ஒரு சமகால வரலாற்றாசிரியர். எகிப்தில் இடம்பெற்ற துன்புறுத்தலின் பதிவுகளைப் போலவே, தனது சொந்த அவதானிப்புகளை அல்லது மற்றவர்களின் அறிக்கைகளில் பெற்றுக்கொண்டவற்றை பயன்படுத்துகிறார். இந்த நூற்றாண்டுகளில் இதற்கு முன் பயங்கரமான துன்புறுத்தல்கள் நிகழ்ந்தன என்பது எந்த வாசகருக்கும் தெளிவாகத் தெரியும். இருப்பினும், புத்தகம் 8 இன் அதிகரித்த வண்ணமயமான, தெளிவான படங்கள், மற்றும் பயங்கரமான சித்திரவதைகளின் உருவமைப்பு குறித்த வடிவங்கள் ஆகியவை நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகள் மற்றும் கொடிய ஆட்சியாளர்களின் கொண்டிருந்த அவநம்பிக்கைக்கு சான்றளிக்கின்றன.

நடைபெற்ற கொடூர நிகழ்வுகள் அனைத்தையும் நோக்கும் போது, அக்காலகட்டங்களில் ஆட்சிசெய்த பேரரசர்களை யூசிபியஸ் அவர்கள் அடியோடு வெறுத்திருக்கக்கூடும் என்று ஒருவர் கருதலாம். கேலேரியஸின் அகோர மரணம் சம்பந்தமான மருத்துவ விபரங்களை அறிக்கையிடுவதில் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் (மாக்சிமின் டாயாவைப் பற்றியும் அவர் இதுபோலவே விளக்கக்கூடும்); மாமன்னன் ஏரோதை இறுதியாகப் பிடித்திருந்த நோயைப் பற்றிய ஜோசஃபஸின் விளக்கங்களிலிருந்து அவர் கற்றுக்கொண்டது போல் இதையும் செய்தார். அத்தோடு, பேரரசர்களின் மிருகத்தனத்திற்கு அப்பால் காணப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க – திடுக்கிடும் – காரணத்தையும் அவர் கண்டுபிடித்தார்: திருச்சபையின் பாசாங்குத்தனம், பொறாமை, மெத்தனப்போக்கு மற்றும் உள் மோதல்கள் போன்ற இழிசெயல்கள் துன்புறுத்தலை அதன் மீது கொண்டுவர தெய்வீக நீதியைத் தூண்டியது. இது ஒரு எழுத்தாளர் பற்றிய அற்புதமான மற்றும் சுவாரஸ்யமான விமர்சனமாகும். தான் சிறந்தவர் என்ற அவரது மிகுந்த உற்சாகமான நம்பிக்கை காரணமாக சில நேரங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகவும் நேரிடுகிறது.

யூசிபியஸ் தனது காலத்தில் நிகழ்ந்த அரசியல் வரலாற்றை விளக்க விரும்பவில்லை. ஆனால் உரோமைப் பொறுத்தவரையில், ஏகாதிபத்திய கொள்கைகள் திருச்சபையின் மீது ஆதிக்கம் செலுத்தியது பற்றி மாத்திரமே பதிவு செய்கிறார். அவை மேற்கத்திய நாகரிகத்தின் போக்கை மாற்றும் வகையில் இருந்தாலும், அந்த நேரத்தில் அந்த மாற்றம் ஏகாதிபத்திய அரசியலில் முக்கியமானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் சிக்கலானதாகவும் இருந்தது. யூசிபியஸின் சமகாலத்தவர்கள் இந்த மற்றும் அடுத்த இரண்டு புத்தகங்களில் உள்ள அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்வதில் சிரமம் எதையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்ற போதிலும், நவீன காலத்தவர்களுக்கு அது ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பின்வருபவை உதவக்கூடும்.

சாம்ராச்சியத்தின் ஐம்பதாண்டுகால உள்நாட்டுப் போர், டால்மேஷியா என்ற உரோமைய மாகாணத்தின் மண்ணின் மைந்தரான குதிரைப்படையின் தளபதி டியோக்லெஷியன் (284-305) தலைமையில் முடிவுக்கு வந்தது. அவர் உரோமின் அரசாங்கத்தில் மாறுதல்களை அறிமுகப்படுத்தினார். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொண்டுவந்தார். துரோகிகளை அடியோடு வேரறுத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் முந்தைய தசாப்தங்களில் இடம்பெற்ற சீர்குலைவைத் தடுக்கும் நோக்கில், ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் ஏகாதிபத்தியத்தில் நிலவிய வாரிசுரிமை பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றார். அடுத்த பேரரசர்கள் யார் என்பதை உரோமையர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அறிந்திருக்க வேண்டும். இதனால் போட்டியிடும் போட்டியாளர்களை நிராகரிப்பதன் மூலம் அமைதியான வாரிசுரிமைக்கு அடிகோலக்கூடியதாயிருக்கும். ஒரு தனி அரசனால் நிர்வகிக்க முடியாத அளவுக்கு பேரரசு மிகப் பெரியது என்ற காரணத்தால், டியோக்லெஷியன் அதன் ஆட்சியை கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பகுதிகளாக பிரித்தார். அட்ரியாடிக் கடல் தான் அந்த இரு பகுதிகளுக்கும் எல்லையாக அமைந்தது. இத்தாலி, கவுல் [தற்காலத்திய பிரான்ஸ்], பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய தேசங்கள், அவரது சகாவான மாக்சிமியனின் கீழ் மிலானில் இருந்து ஆட்சி செய்யப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் கிரேக்கம் மற்றும் அனைத்து கிழக்கு மாகாணங்களும் டியோக்லெஷியன் தனது புதிய தலைநகரான நிகோமீடியாவில் (நவீன துருக்கி [இஸ்மிட்]. அதன் அமைவிடம் துருக்கியின் கிழக்குக் கோடியில் உள்ள மர்மோரா கடல் வரையுள்ள பகுதி) இருந்து ஆட்சி செய்யப்படவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்விரு பேரரசர்கள்; ஒவ்வொருவரும் அகஸ்டஸ் என்றே அழைக்கப்பட்டனர். இவர்களுக்குக் கீழ் பணியாற்ற தலா ஒரு துணை அதிகாரியைத் தேர்ந்தெடுத்தனர். அவர் சீசர் என்று அழைக்கப்பட்டார். அவர்கள் இருவரும் இரு பகுதிளாகப் பிரிக்கப்பட்ட [மேற்கூறப்பட்ட] தேசங்களை நேரடியாக நிர்வகிப்பர். அகஸ்டஸ்மார் ஓய்வு பெற்று அல்லது இறந்துபோகும் பட்சத்தில், இரண்டு சீசர்களும் புதிய அகஸ்டஸ்களாக பதவி உயர்வு பெறுவார்கள்; அவர்கள் புதிய சீசர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்படியாக அந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். டையோக்லெஷியன் கெலேரியஸை தனது சீசராகத் தேர்ந்தெடுத்தார். மேலும் மாக்சிமியன் கொன்ஸ்டன்டைனின் தந்தை கொன்ஸ்டான்டியஸ் குளோரஸை சீசராகத் தேர்ந்தெடுத்தார். எனவே, அவர்களின் தெரிவு முறை பின்வரும் முறையில் தொடங்கியது:

மேற்குப்பிரிவு

அகஸ்டி: மாக்சிமியன்

சீசர்: கான்ஸ்டான்டியஸ் குளோரஸ்

(ஆட்சிக்குட்பட்ட தேசங்கள்: கவுல் [நவீன பிரான்ஸ்] மற்றும் பிரித்தானியா)

கிழக்குப்பிரிவு

அகஸ்டி: டையோக்லெஷியன்

சீசர்: கெலேரியஸ்

(ஆட்சிக்குட்பட்ட தேசங்கள்: சிரியா, பாலஸ்தீனம் மற்றும் எகிப்து)

இந்த நான்கு அரசர்களிடையே பேரரசு பிரிக்கப்பட்டது. ஏனென்றால் ஒவ்வொரு சீசரும் ஒரு நாள் பேரரசராக முடிசூடுவார் என்ற நம்பிக்கையில் அகஸ்டஸ்களின் மகள்மாரை அவர்கள் மணந்தனர்.

கொன்ஸ்டன்டியஸ் என்பவன் வியக்கத்தகு, கவர்ச்சிகரமான குணங்களைக் கொண்டிருந்தார்ன். அவன் மிதவாதக் கொள்கையுடைய மனிதனாகவும், கிறிஸ்தவத்தின் மீது அனுதாபம் கொண்டவனாகவும், தனது ஆட்சிக்குட்டப்பட்ட பிரதேசங்களில் நிலவிய துன்புறுத்தலின் தீவிரத்தை குறைக்கவும் பாடுபட்டான். யூசிபியஸ் இதைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் துன்புறுத்தல் குறித்த ஆணைக்கு இணங்க அவன் ஒரு சில குறிப்பிட்ட தேவாலயங்களை அழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானான். ஆயினும், அவனது பொறுப்பில் இருந்த பிராந்தியங்களில் மரணதண்டனையைத் தடை செய்தான். இதற்கு நேர்மாறாக, கலேரியஸ் ஒரு பெரிய உருவமும், அரக்க குணமும், இலட்சிய வேட்கை கொண்டவனாகவும் இருந்தான். அவன் ஒரு இராட்சசனைப் போலத் தோற்றமளித்தான். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்குமாறு டியோக்லெஷியனை தூண்டியவன் அவன்தான். இந்தத் தூண்டுதல் தான் இறுதியில் கிறீஸ்தவர்கள் மீது மிகப்பெரிய அளவில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கு வழிகோலியது. அதன் முடிவுகள் மிகுந்த வேதனை தரும் வகையில் விபரமாக யூசிபியஸால் பதிவு செய்யப்பட்டன.

305 ம் ஆண்டு, மே மாதம் 1ம் திகதி அன்று, அதாவது துன்புறுத்தல் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கலேரியஸின் கடும் அழுத்தத்தின் கீழ் நோய்வாய்ப்பட்டிருந்த டியோக்லெஷியன், கண்ணீர் மல்க, தனது அலுவலகத்தை விட்டு வெளியேறி ஓய்வுபெறுமுகமாக டால்மேஷியா மாகாணத்துக்கு சென்றுவிட்டார். முன்னதாக, கேலேரியஸ் மாக்சிமியனையும் ஓய்வு பெற வற்புறுத்தினார். புதிய அகஸ்டிஸ்களாக பதவியைப் பெற கெலேரியஸ் மற்றும் கொன்ஸ்டான்டியஸ் குளோரஸ் ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். ஆனால் பின்னர் அவர்களது திட்டங்களெல்லாம் தவறாகிப் போயின. அதன்பிறகு கெலேரியஸ் இரண்டு புதிய சீசர்களையும் தேர்ந்தெடுத்தார்: கிழக்கிற்கு அவரது மருமகன் மாக்சிமின் டாயாவையும், மேற்கிற்கு அவனது நண்பர் செவெரஸ் என்பவனையும் தேர்ந்தெடுத்தான். இவனுக்குப் பதிலாக, மேற்கிற்கு கொன்ஸ்டன்டியஸின் மகன் கொன்ஸ்டன்டைன் அல்லது மாக்சிமியனின் மகன் மாக்சென்டியஸ் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்திருக்கலாம்.

கொன்ஸ்டன்டைன் நிகோமீடியாவில் உள்ள டியோக்லெஷியனின் ஆட்சி அலுவலகத்தோடு இணைக்கப்பட்டார். அவர் ஓய்வு பெற்றபோது, கொன்ஸ்டன்டைன் மேற்கு நிர்வாகத்தில் உள்ள தனது தந்தையுடன் சேர அனுமதி கேட்டார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. கொன்ஸ்டன்டைன் கோபம் கொண்டவனாய் தனது குதிரையில் ஏறி தப்பித்து கௌலில் பணியாற்றிய தனது தந்தையுடன்[பிரான்ஸ்] இணைந்தான். அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்த பின்னர், கொன்ஸ்டான்டியஸ் யோர்க் என்ற பிராந்தியத்தில் இறந்துபோனார். அவரது இறப்புக்குப் பின், அவரது துருப்புக்கள் உடனடியாக 306ம் வருடம் ஜூலை மாதம் கொன்ஸ்டன்டைனை அகஸ்டஸ் என்று அறிவித்தனர். இதையிட்டு கலேரியஸ் கோபமடைந்தார். அதே கோபத்துடன் அவருக்கு சீசர் என்ற பட்டத்தை வழங்கினார். அதற்கு பதிலாக, அவரது நண்பர் செவெரஸை இணை-அகஸ்டஸ் பதவிக்கு உயர்த்தினார்.

இதற்கிடையில், அக்டோபர் மாதம் உரோமில், மாக்சிமியனின் படைவீரர்கள் அவரது மகன் மாக்சென்டியஸின் கீழ் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர் தனது தந்தையை மீண்டும் அரியணைக்குத் திரும்புமாறு அழைத்தார். இதன் விளைவாக, செவெரஸ் அவர்களைத் தாக்கினார். ஆனால் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார். மாக்சிமியன் உடனேயே கொன்ஸ்டன்டைனுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, அவருக்கு அகஸ்டஸ் என்ற பட்டத்தை வழங்கினார். அத்தோடு மார்ச் 31, 307 ம் வருடம், அவருக்கு தனது மகள் ஃபாஸ்டாவை திருமணம் செய்து வைத்தார். தனது சொந்த மகனுடன் சண்டையிட்ட பிறகு, மாக்சிமியன் கொன்ஸ்டன்டைனிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் பின்னர் கொன்ஸ்டன்டைன் இல்லாத சமயம் பார்த்து, அவரது இராணுவத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார். இறுதியில் அவர் 310 ம் ஆண்டில் மரணத்தைத் தழுவினார். அவரது மரணம் ஒருவேளை தற்கொலையாக இருந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

இதற்கிடையில், தான் ஓரம்கட்டப்பட்டதால் கோபமடைந்த மாக்சிமின் டாயா, அகஸ்டஸ் பட்டத்தை தானே சூடிக்கொண்டான். அதேநேரம், கிழக்கில், இறந்த செவெரசின் வெற்றிடத்துக்கு லிசினியஸ் என்பவனை கலேரியஸ் நியமித்தார். 311 இல் கலேரியஸ் நோய்வாய்ப்பட்டு மரணித்த பிறகு, ஒரே நேரத்தில் ஆட்சியாளர்களின் எண்ணிக்கை நான்காகக் குறைந்தது. இதன் வழியாக, உரோமையப் பேரரசின் அதிகாரம் பின்வருமாறு பிரிக்கப்பட்டது:

மேற்கு

கொன்ஸ்டன்டைன்: கோல் [பிரான்ஸ்] , ஸ்பெயின், பிரித்தானியா

மாக்சென்டியஸ்: இத்தாலி மற்றும் ஆப்பிரிக்கா சிரியா, எகிப்து

கிழக்கு

லிசினியஸ்: பால்கன் தீபகற்பம்

மாக்சிமின் டாயா: ஆசியா மைனர் [நவீன கால துருக்கி]

உரோமையப் பேரரசர்களின் வழக்கமான அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தோமானால், இந்த ஏற்பாடு நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்ற கருத்து நியாயமானது போலத்தான் தோன்றுகிறது.