யூசிபியஸ், தமிழில் தேவாலய வரலாறு, புத்தகம் 6
Eusebius, The Church History in Tamil, book 6. Translated with permission from Paul L. Meier, Eusebius, The Church History: A New Translation with Commentary, 1999. Tamil translation is Public Domain.
ஆறாவது புத்தகம்: ஒரிஜனும் அலெக்சாந்திரியாவில் நடந்த அநீதியும் அக்கிரமங்களும்
செப்டிமிஸ் செவேரஸ் முதல் டெஸிஸ் வரை
1. [செப்டிமியஸ்] செவெரஸ் திருச்சபை அமைப்புகளுக்கு எதிராக அட்டூழியங்களைத் தூண்டிவிட்டபோது, பக்தி வல்லுநர்கள் எல்லா இடங்களிலும், குறிப்பாக அலெக்சாந்திரியாவில் புகழ்பெற்ற வேதசாட்சியங்களில் நிலைத்திருந்தனர். கடவுளின் இறையியலாளர்கள் எகிப்து மற்றும் தெபைட் மாகாணங்கள் முழுவதிலும் இருந்து அங்கு ஒரு பெரிய மைதானம் போன்ற ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே எல்லா விதமான சித்திரவதைகளையும் கொடூரமான மரணத்தையும் தாங்கிக் கொண்டு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கிரீடங்களாகவும் மாலைகளாகவும் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் ஓரிஜனின் தந்தை என்று அழைக்கப்படும் லியோனைட்ஸ், தலை துண்டிக்கப்பட்டு, சிறுவயதிலிருந்தே தெய்வீக வார்த்தைகளில் மிகவும் ஒன்றித்துப்போயிருந்த தனது இளம் மகனை விட்டு இறையடி சேர்ந்தார்.
2. அவரது வாழ்க்கை வரலாறு ஒரு முழு புத்தகத்தையும் உள்ளடக்கும் வடிவில் இருப்பினும், அவரது கடிதங்கள் மற்றும் உயிர் பிழைத்த அவரது நண்பர்களின் போன்றோரது நினைவுகள் மற்றும் நினைவுக்குறிப்பேடு போன்றவைகளில் இருந்து பெறப்பட்ட உண்மைகளை உங்கள் முன் சமர்ப்பிக்க, என்னால் முடிந்தவரை அவற்றை இங்கே சுருக்கமாகச் சொல்கிறேன்.
ஓரிஜன் என்ற இளைஞன்
ஓரிஜனின் கதை அவரது ஆரம்பப் பருவம் தொடக்கத்தில் இருந்தே சொல்லப்பட வேண்டும். செவெரஸின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில், லீடஸ் எகிப்தின் ஆளுநராக இருந்தகாலகட்டத்தில், ஜூலியனுக்குப் பிறகு டெமெட்ரியஸ் அங்கு ஆயர் பதவியை ஏற்றுக்கொண்டபோது, சிறியளவில் இருந்த அட்டூழியங்கள் பாரிய தீப்பிழம்புகளாக உருவெடுத்தன. மற்றும் எண்ணற்ற மக்கள் வேதசாட்சியத்தின் கிரீடங்களை அணிந்தனர். வேதசாட்சியத்தின் மீதான இத்தகைய ஆர்வம், சிறுவனாக இருந்தாலும், ஓரிஜனை ஆட்கொண்டது, அவர் ஆபத்தை எதிர்கொள்ளவும் மோதலுக்கு முகம் கொடுக்கவும் விரும்பினார். உண்மையில், அவர் தனது நாட்களின் இறுதிப் படிகளில் நின்றுகொண்டிருந்தார். ஏனென்றால் மனித குலத்தின் நலன் சம்பந்தமான தெய்வீக வழிகாட்டி அவரது தாயிடம் இருந்து வரவில்லை. அவள் முதலில் அவனுடன் பேச முயன்றாள், ஒரு தாயின் கவலைகளைப் புரிந்து கொள்ளும்படி அவனிடம் கெஞ்சினாள். அவன் தனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை அறிந்ததும் கூட, தான் வேதசாட்சியாக வேண்டும் என்று ஆசைப்பட்டான். வீட்டிலேயே இருப்பதில் முன்னெப்போதையும் விட அவன் உறுதியாக இருப்பதை உணர்ந்து அவனுடைய ஆடைகள் அனைத்தையும் மறைத்து வைத்தாள். அவன் தனது தந்தைக்கு தனது வேதசாட்சியம் பற்றிய தனது முடிவு குறித்து ஒரு கடிதம் எழுதினான். மேலும் “எங்களுக்காக உங்கள் குறிக்கோளை மாற்ற வேண்டாம்!” என்றும் கேட்டுக்கொண்டான். வருடக்கணக்காக அவனுள் கனன்றுகொண்டிருந்த ஒருவித வேட்கையை அவனால் அடக்க முடியவில்லை.
ஓரிஜனின் பால்யவயது புத்திசாலித்தனம் மற்றும் கடவுள் மீது அவன் கொண்டிருந்த பக்தி போன்றவற்றுக்கான இந்த முதல் உதாரணம் காட்டப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே பரிசுத்த வேதாகம வார்த்தைகளை படிப்பதன் காரணமாக விசுவாசத்தில் அவன் கொண்டிருந்த உறுதியான அடித்தளத்தை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு நாளும் மனப்பாடம் செய்து திரும்பத் திரும்பப் படித்து, வேதாகம வார்த்தைகளில் தேர்ச்சி பெறும் வரை வழக்கமான பாடத்திட்டம் சம்பந்தமான விடயங்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டாம் என்று அவரது தந்தை வலியுறுத்தினார். சிறிதும் தனது ஆர்வத்தைக் கைவிடாமல், சிறுவன் மிகவும் ஊன்றிப் படித்தான். புனிதமான வார்த்தைகளை எளிய மற்றும் நேரடி அர்த்தத்தில் படிப்பதில் திருப்தி அடையாமல், இன்னும் ஆழமாகச் சென்று எதையாவது தேடினான். அந்த வயதிலும் வேதாகமத்தின் ஆழ்ந்த விளக்கங்களைத் தேடினான். அவனது தீராத ஆர்வத்தின் காரணமாக, வேதாகமத்தில் பொதிந்திருக்கும் உள் அர்த்தம் பற்றிய கேள்விகளால் தந்தையை மேலும் கலக்கமுறச் செய்தான். அவனது தந்தை அவனைத் திட்டுவது போல் பாசாங்கு செய்வார். அவர் அவனிடம், தனது வயதைத் தாண்டி அல்லது வெளிப்படையானதைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் அவற்றின் உள்ளே நுழைந்து தேட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதேவேளை, தனிப்பட்ட முறையில் அவர் உள்ளூர மகிழ்ச்சியடைந்தார். அத்தகைய மகனுக்கு தந்தையாக இருப்பது ஒரு பாக்கியம் என்று கடவுளுக்கு நன்றி கூறினார். அடிக்கடி அவர் உறங்கிக்கொண்டிருக்கும் சிறுவனின் அருகில் சென்று பயபக்தியுடன் அவனது மார்பில் முத்தமிடுவார். ஒரு தெய்வீக சக்தியை உள்ளடக்கிய, விசுவாசம் கொண்ட தனது வாரிசால் தன்னை ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவராக எண்ணி மகிழ்ந்தார்.
ஒரிஜன் பதினேழு வயதைக் கூட அடையவில்லை, அப்போது அவரது தகப்பனார் வேதசாட்சியாய் இறைபதம் அடைந்தார். அதன் காரணமாக அவரது தாயார் மற்றும் ஆறு இளைய சகோதரர்களுடன் ஆதரவற்றவராக நிலைக்குள் விழுந்தார். அவரது தந்தையின் சொத்துக்கள் யாவும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன. குடும்பத்தின் வாழ்க்கைத் தேவைகளை சமாளிக்க முடியாது பெரிதும் திண்டாட்டத்துக்கு உள்ளாயினர். ஆனால் தெய்வீக உதவியின் மூலம், அவர் மிகவும் செல்வந்தரான மற்றும் புகழ்பெற்ற, அதேநேரம் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த ஒரு பிரபல மதவெறியர்களில் ஒருவராக அந்தப் பெண்மணி காணப்பட்டார். இருப்பினும், ஒரிஜின் பிறப்பால் அந்தியோசீனியராக இருந்தபடியால் விசேடமாக அவரை கவனித்து தனது வீட்டில் வாழ அனுமதித்தார். இளைஞரான ஓரிஜனால் அவருடன் ஒத்துப்போக முடியாவிட்டாலும், தனது சொந்த மரபுவழி விசுவாசத்தில் தனக்கு இருந்த தெளிவான ஈடுபாட்டை அவரிடம் விளக்கினார். மதவிரோதிகளின் கூட்டம் – அவர்களுள் எங்கள் சொந்த மக்களும் அடங்குவர் – பவுலின் [அது அவரது பெயர்], அவரது சொல்லாற்றலால் ஈர்க்கப்பட்டு அவரது உரையைக் கேட்கக் கூடினர். ஆனால் ஓரிஜனை அவருடன் பிரார்த்தனையில் சேர ஒருபோதும் வற்புறுத்தவில்லை. சிறுவயதில் இருந்தே திருச்சபையின் சட்டதிட்டங்களை கடுமையாகப் பின்பற்றியதால், மதவிரோத கொள்கைகளின் மீதும், அனைத்து மதவெறி போதனைகள் மீது வெறுப்படைந்தவராய் [ஓரிஜென் கூறிய சொந்த வார்த்தை] அவரது வாழ்க்கை தொடர்ந்தது. அவரது தந்தை மதச்சார்பற்ற கல்வி மற்றும் அறிவைப் புகட்ட வேண்டுமெனவும் அதில் அவர் முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு அவரை வளர்த்தார். மேலும் அவரது [தந்தையின்] மரணத்திற்குப் பிறகு அவர் மனிதநேயத்தை ஆர்வத்துடன் முன்கொண்டுசென்றார். வெகு விரைவில் அவர் தனது இளமைப் பருவத்தின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்தார்.
3. அலெக்சாந்திரியாவில் மறைக்கல்வி பயிற்றுனர்கள் இல்லாததால், அவர் மறைக்கல்வி கற்பிப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டபோது – அவர்கள் அனைவரும் அம்மாகாணத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட துன்புறுத்தல் போன்ற அச்சுறுத்தலின் காரணமாக, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனாலும், சில மதவிரோதிகள் கடவுளின் வார்த்தையைக் கேட்க ஒரிஜனை அணுகினர். இவர்களில் முதன்மையானவர் புளூடார்ச். அவரது உன்னத வாழ்க்கை வேதசாட்சியமெனும் கிரீடத்தால் சிறப்புற்றது. இரண்டாமவர் ஹெராக்ளஸ், புளூட்டார்சின் சகோதரர். இவர் ஒழுக்கமான, தத்துவ வாழ்க்கைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். அவர் டெமெட்ரியஸுக்குப் பிறகு அலெக்சாந்திரியாவின் ஆயரானார். ஓரிஜென் தனது பதினெட்டாவது வயதில், அவர் மறைக்கல்வி போதிக்கும் பள்ளியின் அதிபராக ஆனார். மேலும் ஓரிஜென், அலெக்சாந்திரியாவின் ஆளுநரான அகிலாவின் கீழ் இடம்பெற்ற வன்முறைகளின் போது, தான் அறிந்த மற்றும் அறியாத அனைத்து புனித வேதசாட்சிகளுக்கும் ஆர்வத்துடன் உதவியதற்காக மிகவும் பிரபலமடைந்தார். ஏனென்றால், அவர் சிறையில் அல்லது நீதிமன்றத்தில் மட்டுமல்ல, இறுதித் தண்டனை நிறைவேற்றப்படும் வரை அவர்களுடன் இருந்தார். அவர்கள் மரணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் தைரியமாக அவர்களை அணுகி விசுவாசத்துடன் மரண தண்டனைக் கைதிகளைத் தழுவி முத்தமிட்டார். பெரும்பாலும் சுற்றியுள்ள மதவிரோதக் கும்பல் அவர் மீது கல்லெறிவதற்கு முன்னேறி வந்தது. ஆனால் தெய்வீக, நீதியின் கரம் ஒன்று மிகவும் அதிசயத்தக்க விதத்தில் அவரை அங்கிருந்து தப்பிக்க துணை புரிந்தது.
இதே பரலோக கிருபை பல சந்தர்ப்பங்களில் அவரைத் தொடர்ந்து பாதுகாத்தது. கிறிஸ்துவின் வார்த்தை மீது அவர் கொண்டிருந்த திடம் மற்றும் அச்சமற்ற தன்மை போன்ற காரணங்களால் சதிகாரர்களின் கூட்டம் அவரைத் தொடர்ந்து குறிவைத்தபடியே இருந்தது. அவருக்கு எதிரான அவிசுவாசிகளின் கலகம் மிகவும் தீவிரமாக இருந்தது. அவர் புனிதமான விசுவாசம் பற்றி பயிற்றுவித்த மக்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததன் காரணமாக, அவரது வீட்டைச் சுற்றி பாதுகாவலுக்காக போர்வீரர்கள் நிறுத்தப்பட்டனர். நாளுக்கு நாள் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலகங்கள் விளைவாக அவருக்கு நகரத்தில் ஏற்கனவே இருந்த வரவேற்பு குறைந்துபோனது. அவரது செயல்கள் அவரது மிகவும் நேர்மையான தத்துவரீதியான விசுவாசத்தை வலுவாக நிரூபித்ததால், அதை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அவர் வீடு வீடாகச் சென்றார். அதே நேரத்தில் அவரால் மதம் மாறிய பலரைப் பழிவாங்கும் வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. “அவரது வார்த்தைகள் அவருடைய செயல்களைப் போலவே சிறப்பாக இருந்தன, அவருடைய செயல்களும் நல்லவையாகவே இருந்தன” என்ற பழமொழி, கடவுளின் வழிகாட்டுதலால் அவர் எவ்வாறு இவ்வளவு பாரிய ஆதரவாளர்களைக் கொண்ட மக்கள் கூட்டத்தை தனது ஞானத்தால் முழுமையடையச் செய்தார் என்பதை விளக்குகிறது.
தேவாலயத்தின் குறவரான டிமெட்ரியஸ், மறைக்கல்வி போதிக்கும் கல்வி நிலையத்தை அவரிடமே ஒப்படைத்தார். மென்மேலும் அதிகமான மாணவர்கள் அவரிடம் வந்தபோது, அவர் [ஓரிஜன்] இலக்கியம் கற்பிப்பது புனிதமான கற்றல் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யக்கூடும் என்பதாலும், இறையியல் ஆய்வுகளுக்கு உதவாது என்று முடிவு செய்து இலக்கியம் குறித்த விரிவுரையை நிறுத்தினார். பின்னர், அவர் மற்றவர்களின் உதவியைச் சார்ந்து இருக்கக்கூடாது என்பதற்காக, அவர் மிகவும் விரும்பி தன்வசம் வைத்திருந்த பண்டைய இலக்கியங்களின் அனைத்து தொகுதிகளையும் அப்புறப்படுத்தினார். அவற்றை வாங்குபவர் ஒரு நாளைக்கு நான்கு ஓபோலுக்கு சமமானஒரு தொகையைச் செலுத்தினால் அதுவே போதும் என்று திருப்தி அடைந்தார்.
பல ஆண்டுகளாக அவர் தனது தத்துவ வாழ்க்கையைத் தொடர்ந்தார். இளமை இச்சைகளைத் தூண்டும் சகல காரணிகளையும் புறக்கணித்து, பகலில் கடினமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதேநேரம், பரிசுத்த வேதாகமம் மற்றும் புனித நூல்களைப் படிப்பதில் இரவின் பெரும்பகுதியைக் செலவிட்டார். சில நேரங்களில் அவர் உபவாசம் அனுஷ்டித்தார். மற்றைய நேரங்களில் அவர் தான் உறங்கும் நேரத்தை மட்டுப்படுத்தினார். உறங்குவதற்கு அவர் தரையைத் தேர்ந்தெடுத்தார். கட்டிலை நிராகரித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, இரண்டு அங்கிகளை வைத்திருக்கவோ, காலணிகள் அணியவோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவோ வேண்டாம் என்ற இரட்சகரின் கூற்றுகளை அவர் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் உறுதியுடன் இருந்தார். குளிரையும், நிர்வாணத்தையும், கடுமையான வறுமையையும் தாங்கிக்கொண்டவராய் வாழ்ந்த அவர், தங்கள் உடைமைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அக்கறையுடன் வற்புறுத்திய சீடர்களை தனது தாழ்மையால் மெய்சிலிர்க்க வைத்தார். அவர் தனது கொள்கைகளில் இருந்து எப்போதும் பின்வாங்கவில்லை: பல ஆண்டுகளாக அவர் காலணி இல்லாமலேயே நடந்தார். தனக்கு மிகவும் தேவையான உணவைத் தவிர, மது மற்றும் அனைத்துத் தேவையற்ற உணவு மற்றும் வசதிகளைத் தவிர்த்தார். அதனால் அவர் உண்மையில் தனது உடல்நலத்தை பணயம் வைத்தே வாழ்ந்துவந்தார்.
தத்துவநெறியால் முழுமைபெற்ற அவரது வாழ்க்கை மூலம் தனது மாணவர்களை இதேபோன்ற முன்மாதிரிக்கு வழிகாட்டியாய் இருந்தார். அதன் காரணமாக, சில அவிசுவாசிகள், அறிஞர்கள் மற்றும் இறை வார்த்தையை ஏற்றுக்கொண்ட தத்துவவாதிகளின் இதயங்களையும் வென்றார். இவ்வாறானவர்கள் துன்புறுத்தல், சித்திரவதைகள் போன்றவற்றைத் தாங்கி, கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டு, இறுதியில் வேதசாட்சிகளாய் மரணித்தவர்களும் உண்டு.
மாணவ வேதசாட்சிகள்
4. இவர்களில் முதன்மையானவர் நான் முன்பு குறிப்பிட்ட புளூடார்க். அவர் [புளூடார்க்] அவரது மரணத்திற்கு இட்டுச் செல்லப்பட்டபோது, ஓரிஜன் அவரது மரணத்திற்குப் பொறுப்பாளியாக, அவருக்குத் துணையாகச் சென்றார். ஆனால் மீண்டும் கடவுளின் கிருபையால் அவர் காப்பாற்றப்பட்டார். ஓரிஜனின் மாணவர்களில் இரண்டாவது வேதசாட்சி செரீனஸ் ஆவார். அவர் தனது விசுவாசத்தை தீப்பிழம்புகளின் நடுவே நிரூபித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த ஹெராக்லைட்ஸ் மூன்றாவது வேதசாட்சியாவார். ஹீரோ நான்காமவர். இறுதியாக நாம் குறிப்பிட்ட ஹீரோ என்பவர் அப்போதும் கூட ஒரு மறைக்கல்வி ஆசிரியராக இருந்தது மட்டுமன்றி, சமீபத்தில் ஞானஸ்நானம் பெற்றார். இருவரும் தலை துண்டிக்கப்பட்டு வேதசாட்சியத்தில் இணைந்தனர். அவர்களைத் தவிர, ஐந்தாமவர், அதே பள்ளியில் பக்தியின் நாயகனாக இருந்தார்: மற்றொருவர் செரீனஸ், பெரும் சித்திரவதைகளை அனுபவித்து, தலை துண்டிக்கப்பட்டு வேதசாட்சிய மரணத்தைத் தழுவினார். பெண்களில், ஹெராய்ஸ் என்பவள், இன்னும் ஞானஸ்நானம் பெறுவதற்கான தயார்படுத்தலில் இருந்தாள். ஓரிஜென் கூறியது போல், ஞானஸ்நானம் பெறுவதற்கு பதிலாக “அக்கினியின் மூலம் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டாள்.” அவ்வாறாக அவள் தனது வேதசாட்சிய வாழ்க்கையை நிறைவுசெய்தாள்.
5. ஏழாவதாக வருபவர் பாசிலைட்ஸ். அவர் புகழ்பெற்ற பொட்டாமியானாவை தூக்கிலிட வழிவகுத்தார். இந்த பெண்ணின் புகழ் இன்று வரை அவளது மக்களிடையே ஓங்கி ஒலிக்கிறது. மனதிலும் உடலிலும் அவளது அழகு ஒரு மலரைப் போல இருந்ததால், எல்லாவற்றுக்கும் மேலாகக் கருதப்பட்ட தன் கற்பையும் கன்னித் தன்மையையும் காக்க காதலர்களுடன் அவள் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. விவரிக்க முடியாத அளவுக்கு கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்த பிறகு, அவளும் அவளுடைய தாயார் மார்செல்லாவும் தீயிலிடப்பட்டு வேதசாட்சியத்துக்குள் சங்கமமாயினர். நீதிபதி அகீலா, அவளது முழு உடலிலும் கொடூரமான சித்திரவதைகளை ஏற்படுத்தியதாகவும், இறுதியாக அவளை உரோமைய வாட்போர் வீரர்களின் Gladiators காம வேட்கைக்கு இரையாக்கப்போவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அவளுடைய முடிவு என்ன என்று அவளிடம் கேட்டதற்கு, அவள் யோசித்து அவர்களின் மதத்தைப் புண்படுத்தும் சுருக்கமான பதிலைச் சொன்னாள். உடனடியாக அவளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பசிலிட்ஸ் என்ற சிப்பாய் அவளை மரணதண்டனைக்கு அழைத்துச் சென்றான். ஆனால் கூட்டத்தினர் அவளை ஆபாச வார்த்தைகளால் திட்டி, வசைபாடி அவமானப்படுத்த முயன்றதால், சிப்பாய் அவர்களை எச்சரித்து அங்கிருந்து விரட்டிவிட்டு, அவளிடம் மிகுந்த இரக்கத்தையும் கருணையையும் காட்டினான். அவள் அவனது அனுதாபத்தை ஏற்றுக் கொண்டு அவனை ஊக்கப்படுத்தினாள். அவள் இறையடி சேர்ந்த பிறகு அவனுக்காக இறைவனிடம் இறைஞ்சுவதாகவும், நீண்ட காலமாக அவன் தன் சார்பாகச் செய்த அனைத்திற்கும் அவனுக்குத் வெகுமதி பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தாள். இப்படிச் சொல்லியவுடன், கொதித்த தார் மெதுவாகத் துளியாகத் துளியாகத் தன் உடலின் பல்வேறு பாகங்களுக்கும் – தலை முதல் கால் வரை ஊற்றப்பட்டபோது அவள் தன் முடிவில் உறுதியுடன் இருந்தாள். அத்தகைய ஒரு கொடுமையான முடிவில் இந்த அற்புதமான கன்னியவள் வெற்றிபெற்றாள்.
சிறிது காலத்திற்குப் பிறகு, அவரது சக வீரர்களில் ஒருவர், சில காரணங்களுக்காக, சத்தியப்பிரமாணம் செய்யும்படி பசிலிடீஸிடம் கேட்டார். ஆனால் அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்ததன் காரணமாக, சத்தியம் செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது. அதை அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். முதலில், அவர் கேலி செய்கிறார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர் அதை தொடர்ந்து உறுதிப்படுத்தியபோது, அவர்கள் அவரை நீதிபதி முன் கொண்டு வந்து நிறுத்தினர். அவர் தனது விசுவாசத்தை உறுதிசெய்த போது, அவரை சிறைக்கு அனுப்பினர். கடவுளின் கிருபையில் திளைத்த அவரது சகோதரர்கள் அவரைச் சந்தித்து, இந்த நம்பமுடியாத, திடீர் விருப்பத்திற்கான காரணத்தை அறிய ஆவலோடிருந்தனர். மேலும் அவர் வேதசாட்சியத்தை அடைந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, பொட்டாமியானா இரவில் அவர் முன் தோன்றி, அவரது தலையில் ஒரு கிரீடத்தை அணிவித்து, அவனுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டாள் என்றும், அவள் அவனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாகவும், அவளுடைய கோரிக்கையைப் பெற்றதாகவும், விரைவில் அவனைத் தன்னிடம் அழைத்துச் செல்வதாகவும் கூறினாள் என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்த தருணத்தில், சகோதர விசுவாசிகள் அவருக்கு இறைவனின் முத்திரையை [ஞானஸ்நானத்தில்] வழங்கினர். அடுத்த நாள் அவர் இறைவனுக்காக ஒரு உன்னதமான சாட்சியம் அளித்து தலை துண்டிக்கப்பட்டு வேதசாட்சிய மரணத்தில் இணைந்தார். இந்த நேரத்தில் அலெக்சாந்திரியாவில் பலர் திடீரென்று கிறிஸ்துவின் பாதத்தண்டை வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் பொட்டாமியானா அவர்களுக்கு கனவில் தோன்றி அவர்களை அழைத்தார் என்றும் கூறப்படுகிறது.
அலெக்சாந்திரியாவின் கிளமென்ட் மற்றும் யூதா
6. பான்டேனஸுக்குப் பிறகு கிளமென்ட் பதவியேற்றார். அவர் ஓரிஜன் ஒரு மாணவராக தன்னுடன் இருக்கும் வரை அலெக்சாந்திரியாவில் உள்ள பள்ளியை இயக்கினார். அவர் தனது இதர விளக்கங்கள் குறித்து எழுதும் போது, அத்தியாயம் 1ல் ஒரு காலவரிசை அட்டவணையைத் தயாரித்தார். கொமோடஸின் இறப்புக்கான அவரது திகதிகளை அதன் தளமாகக் குறிப்பிட்டார். அப்படியானால், அவர் தற்போது விவரிக்கப்பட்டுள்ள காலகட்டத்தை [செப்டிமியஸ்] செவெரஸின் ஆட்சியின் கீழ் தான் எழுதினார் என்பது தெளிவாகிறது.
7. இந்த நேரத்திலும், யூதா என்ற மற்றொரு எழுத்தாளர், தானியேல் புத்தகத்தில் ‘எழுபது வாரங்கள்’ பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார். செவேரஸின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் தனது ஆக்கத்தை நிறைவு செய்தார். அதிகம் விவாதிக்கப்பட்ட அந்துக்கிறிஸ்துவின் வருகை நெருங்கிவிட்டது என்றும் அவர் நம்பினார் – அந்தக் காலத்தின் இடம்பெற்ற கொடுமைகள் பலரது மனதை ஒருநிலைக்குள் வைத்திருக்க வில்லை.
ஓரிஜனுக்கு விரைநீக்கம் செய்யப்படல்
ஓரிஜன் அலெக்சாந்திரியாவில் கற்பித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய விசுவாசம் மற்றும் சுயக்கட்டுப்பாடு மட்டுமல்ல, அவருடைய முதிர்ச்சியற்ற தன்மையையும் இளமைத் துடிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு விடயத்தைச் செய்தார். “பரலோக இராச்சியத்தின் நிமித்தம் தாங்கள் திருமணம் செய்வதை கைவிட்டவர்களாக ஆக்கிக்கொண்டவர்கள் இருக்கிறார்கள்” [மத்தேயு 19:12] என்ற சொற்றொடரை அவர் பயன்படுத்தினார். அவர் இரட்சகரின் வார்த்தைகளை மிகைப்படுத்தி நேரடியான மற்றும் நகைச்சுவையான அர்த்தத்தில் நிறைவேற்ற ஆர்வமாக இருந்தார். அதே போல் அவிசுவாசிகளிடமிருந்து வரக்கூடிய எந்த அவதூறுகளையும் தடுக்க வேண்டும் [அவரது இளமைப் பருவத்தில் இருந்தபோதிலும், அவர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முன்பாக மத விஷயங்கள் பற்றிப் பேசினார்]. எனவே, இரட்சகரின் வார்த்தைகளை அவர் விரைவாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்தினார். அதை அவருடைய மாணவர்களில் சிலர் கவனித்திருப்பார்கள் என்று நம்பினார். ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும், அப்படிப்பட்ட குற்றத்தை அவரால் மறைக்க முடியவில்லை. டிமெட்ரியஸ் அங்குள்ள சமூகத்திற்குத் தலைமை தாங்கியதால், இதைப் பற்றி பின்னர் அறிந்து கொண்டார். அவர் ஓரிஜனின் இந்த மோசமான செயலைக் கண்டு வியப்படைந்தார். எனினும், அவரது விசுவாசத்தில் அவர் காட்டிய உண்மையான தீவிரத் தன்மையை டிமெட்ரியஸ் அங்கீகரித்தார். ஆதலால், அவருடைய போதனைகளில் இன்னும் தீவிரமாக ஈடுபடுமாறும், கற்பித்தல் கடமைகளில் முன்பை விட அதிக ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.
அவருடைய அப்போதைய மனோபாவம் அப்படித்தான் இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு எப்படியோ அவர் ஓரிஜனை முழுமையான மனிதராகவும், உயர்ந்தவராகவும், அனைவராலும் மதிக்கப்படும் ஒருவராகவும் கண்டபோது, பாலஸ்தீனத்தில் உள்ள சிசேரியா மற்றும் ஜெருசலேமில் உள்ள மிகவும் புகழ்பெற்ற ஆயர்கள் அவரை மிக உயர்ந்த மரியாதைக்கு தகுதியானவர் என்று நினைத்து அவரை மறைமூப்பராக நியமித்தபோது, அவர் மனித பலவீனத்துக்குள் விழுந்து, உலகெங்கிலும் உள்ள ஆயர்களுக்கு அவரது நியமனம் ஒரு அபத்தமான செயல் என்று காட்ட முயன்றார். இந்த உலகளாவிய புகழுக்கு எதிராக இளைஞனான அவரது இந்தச் செயல் காரணமாக, டெமெட்ரியஸ் அவரை கடுமையாகக் கண்டனத்துக்கு உள்ளாக்கினார். அப்படி செய்வதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றாலும், அவரை தலைமையாசிரியராக உயர்த்தியவர்களை கடுமையாகக் குறைகூறும் அதிகாரத்தையும் அவர் கொண்டிருந்தார்.
சிறிது காலம் கழித்தே இது நடந்தது. கண்காணிப்புக்கு உட்பட்டிருந்த நேரத்தில், அலெக்சாந்திரியாவில் இரவில் அல்லது பகலில் தன்னிடம் வரும் அனைவருக்கும் புனிதமான போதனைகளைப் போதிப்பதில் ஓரிஜன் மும்முரமாக இருந்தார். தனது மாணவர்களுக்கு புனித விடயங்களைக் கற்பிப்பதில் தனது முழு நேரத்தையும் அயராமல் செலவிட்டார்.
ஆயர்களான நர்சிசஸ் மற்றும் அலெக்சாண்டர்
செவெரஸ் தனது பதினெட்டு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தபின்பு, அவரது மகன் அன்டோனினஸ் [காரகல்லா] ஆட்சிக்கு வந்தார். இந்த காலகட்டத்தில் தான், அலெக்சாண்டர் அவருக்கு எதிராக இழைக்கப்பட்ட சித்திரவதைகளின் போது, தனது விசுவாசத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர்களில் ஒருவர். ஆகவே கடவுளின் கிருபையால் காப்பாற்றப்பட்டார் – ஏற்கனவே கூறியது போல் இவர் ஜெருசலேம் ஆயர் பதவிக்கு தகுதியானவர் என்று கருதப்பட்டார். அதேநேரம் அவரது முன்னோடி நர்சிசஸ் அந்நேரத்தில் உயிருடன் இருந்தார்.
9. பதிவுகளில் காணப்படும் நர்சிஸஸ் நிகழ்த்திய அற்புதங்களில், சமூகத்தில் வாழும் சகோதர மக்களால் அடுத்தடுத்து கூறப்பட்டவை பின்வருமாறு: ஒருமுறை, பாஸ்கா பண்டிகையின் முதல் நாள் இரவு முழுவதும் நடைபெறும் திருவிழிப்பின் போது, திருத்தொண்டர்களிடம் இருந்த எண்ணெய் தீர்ந்து போனதால் சபையினர் மிகவும் கலக்கமடைந்தனர். அப்போது, நர்சிஸஸ் விளக்குகளைப் பராமரிப்பவர்களிடம் தண்ணீர் கொஞ்சம் கொண்டு வரும்படி கூறினார். கொண்டு வந்ததன் பிறகு, அவர் தண்ணீரின் மேல் கைகளை வைத்து பிரார்த்தனை செய்து, இறைவன் மீது முழுமையான விசுவாசத்துடன் அதை விளக்குகளில் ஊற்றினார். அவர்கள் இதைச் செய்தபோது, அனைத்துக்கும் மாறாக, தெய்வீக சக்தி ஒன்றின் மூலம் மட்டுமே தண்ணீர் அதன் தன்மையில் இருந்து விடுபட்டு எண்ணெயாக மாறியது. அன்றிலிருந்து இன்றுவரை அங்குள்ள பல சகோதரர்கள் அந்த அதிசயத்திற்குச் சான்றாக, சிறியதாய் இருந்தாலும் அதைப் பாதுகாத்து வருகின்றனர்.
அவரைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான கதை இங்கே கூறப்பட்டுள்ளது. அவருடைய ஆற்றல் மற்றும் கடமையுணர்ச்சியின் மீது பொறாமை கொண்ட சில இழிவான அயோக்கியர்கள், தங்கள் தீய செயல்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பயந்து, சதி செய்து ஒரிஜனுக்கு எதிராக மோசமான அவதூறுகளைப் பரப்புவதன் மூலம் அவர்களது கைதுகளைத் தடுக்க முயன்றனர். பின்னர், அவர்கள் கேட்டவர்களை நம்ப வைக்கும் முகமாக, அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை சத்தியப்பிரமாணங்களுடன் சமர்ப்பித்தனர். ஒருவர் இவ்வாறு சத்தியம் செய்தார்: “[இது உண்மையல்ல என்றால்], தீ என்னை அழிக்கட்டும்!” என்றும், மற்றொருவர்: “என் உடல் ஒரு பயங்கரமான நோயால் சிதைந்து போகட்டும்!” என்றும், மூன்றாமவர்: “நான் குருடனாக போனாலும் பரவாயில்லை!” என்றும் பொய் சத்தியம் செய்தனர். ஆனால், அவர்கள் அவ்வாறு சத்தியம் செய்தாலும், விசுவாசிகள் யாரும் அவர்கள் சத்தியத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. ஏனெனில் நர்சிஸஸின் நேர்மை மற்றும் நல்லொழுக்கமான வாழ்க்கை முறை பற்றி அனைவரும் அறிவர். இருப்பினும், அவர்கள் அடுக்கிய மோசமான குற்றச்சாட்டுகளை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மேலும் அவர் நீண்ட காலமாக மெய்யான தத்துவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து வந்த காரணத்தால், அவர் திருச்சபை சமூகத்தை விட்டு வெளியேறி பல வருடங்கள் பாலைவனங்களிலும் தொலைதூர பாழடைந்த இடங்களிலும் மறைந்திருந்தார். எவ்வாறாயினும், நீதியின் கூர்மையான கண் இந்த நிகழ்வுகளில் செயலற்றதாக இருக்கவில்லை. தங்களுக்கே சொந்தமான சாபங்களால் நிறைந்திருந்த அந்த பக்திவிசுவாசமற்ற அயோக்கியர்கள் அந்த சாபத்தின் குழிக்குள்ளேயே விழுந்தனர். ஒரு சிறிய தீப்பொறி தான் அவர் தங்கியிருந்த வீட்டைக் கொளுத்தியது. முதலில் அந்தத் தீயில் கருகி இறந்தது அவரது குடும்பத்தினர் தானே தவிர வேறெவருமில்லை. இரண்டாவது பொய் சத்தியம் செய்தவனின் உடல் அவனே தண்டனையாக கேட்டு வரவழைத்துக்கொண்ட நோயால் தலை முதல் கால் வரை பரவி அவதியுற்றான். மூன்றாமவன், மற்ற இருவரின் தலைவிதியைப் பார்த்து கடவுளின் தீர்ப்புக்கு பயந்து, சதித்திட்டத்தில் தனது பங்கை பகிரங்கமாக ஒப்புக்கொண்டான். இருப்பினும், அவனது வருத்தம் காரணமாக முடிவில்லாமல் கண்ணீரை சிந்தியபடியே இருந்தான். அவனுடைய இரண்டு கண்களும் குருடாகின. இந்த மனிதர்கள் தங்கள் பொய்களுக்கு செலுத்திய தண்டனை இதுதான்.
10. நர்சிஸஸ் சென்றபின்பு, அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாததால், அயல் திருச்சபை அமைப்புக்களின் தலைவர்கள் மற்றொரு ஆயரை நியமித்தனர். அவர் பெயர் டியஸ். சிறிது காலத்திற்குப் பிறகு, ஜெர்மானியனும் அவகாருக்குப் பின்னர் கோர்டியஸும் பதவி வகித்தனர். அவரது காலத்தில், நர்சிஸஸ் எங்கோ இருந்து வந்து திடீரென பொதுவெளியில் தோன்றினார். மீண்டும் உயிர் பெற்றவர் போல அவர் தோன்றியதால், சகோதர மக்களால் மீண்டும் தலைமைப் பொறுப்பை வகிக்க அழைக்கப்பட்டார், ஏனென்றால் அவருடைய தத்துவ வாழ்க்கைக்காகவும், குறிப்பாக கடவுளின் தண்டனைத் தீர்ப்பை அவர் ஏற்றுக்கொண்டமைக்காகவும் அனைவரும் அவரைப் பாராட்டினர்.
11. அவரால் இனி ஊழியம் செய்ய முடியாத அளவுக்கு முதுமை நிலையை அடைந்தபோது, முன்னர் நாம் குறிப்பிடப்பட்ட அலெக்சாண்டர் மற்றொரு சமூகத்தின் ஆயராக இருந்த சந்தர்ப்பத்தில், கடவுளின் அருட்கொடையால் நர்சிஸஸுடன் ஒரு இரவுநேரக் கூட்டு ஊழியத்திற்கு அழைக்கப்பட்டார். ஒரு அசரீரிக்கு பதிலளிப்பது போல பதிலளித்து, அவர் கப்படோசியாவில் உள்ள தனது ஆயரகத்திலிருந்து புறப்பட்டு ஜெருசலேமுக்கு சென்று அங்கு வழிபடுவதற்கும் [புனித] தலங்களைப் பார்வையிடுவதற்கும் சென்றார். அங்குள்ள மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். அவரைத் திரும்பிப்போக அனுமதிக்கவில்லை. ஏனெனில் அங்கிருந்த விசுவாசிகள் இரவில் அவர்களுடன் சம்பாஷித்த ஒரு வெளிப்பாட்டை செவிமடுத்தனர். அதன்படி, அவர்கள் வாயில்களுக்கு வெளியே சென்று கடவுள் ஏற்கனவே தங்கள் ஆயராகத் தேர்ந்தெடுத்த மனிதரை வரவேற்க வேண்டும் என்பதே அந்த வெளிப்பாடு. இதைச் செய்தபின், அயல் மாகாணங்களைச் சேர்ந்த ஆயர்களின் பொதுவான சம்மதத்துடன் அவரை அங்கே தங்கும்படி கட்டாயப்படுத்தினர். அலெக்சாண்டர் தாமே தம் கைப்பட அன்டினோயிட்டுகளுக்கு எழுதிய கடிதத்தில், நர்சிசஸ் அவருடன் ஆயர் பதவியைப் பகிர்ந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அவரது கடிதத்தின் முடிவில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
அந்தியோக்கியாவின் செரபியன்
செராபியன் நித்திய இளைப்பாறுதலுக்குள் நுழைந்தபோது, தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் போதும் [அவரது இறைவனை] துணிச்சலுடன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த அஸ்க்லெபியாட்ஸால் அந்தியோக்கியாவின் ஆயர் ஆனார். அலெக்சாண்டர் தனது நியமனத்தை அந்தியோசீனிஸுக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதம் பின்வருமாறு அமைந்துள்ளது: அலெக்சாண்டர் என்ற பெயருடைய, இயேசுக் கிறிஸ்துவின் ஊழியரும் அவரது சேவகனும் ஆகிய நான், அந்தியோக்கியாவின் ஆசீர்வதிக்கப்பட்ட திருச்சபைக்கு, கர்த்தருடைய திருநாமத்தில் உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். எனது சிறைவாசத்தின் போது நான் அறிந்துகொண்டது என்னவென்றால், அஸ்க்லெபியேட்ஸ் அவர்களது வலுவான விசுவாசம் அவரை மிகவும் தகுதியுடையவராக ஆக்கியது. அந்தியோக்கியாவில் உள்ள உங்கள் புனித திருச்சபையின் ஆயர் பதவி, தெய்வீக சித்தத்தால் அவருக்கு அருளப்பட்டது என்பதை அறிந்ததும், அவர் என் சங்கிலிகளை இலகுவாகவும் தாங்கக்கூடியதாகவும் ஆக்கினார்.
இந்த கடிதம் [அலெக்சாந்திரியாவின்] கிளெமென்ட் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது என்பது, அந்தக் கடிதத்தின் முடிவில் கூறப்பட்டுள்ளது:
அன்பான சகோதரர்களே, இந்த கடிதத்தை ஆசீர்வதிக்கப்பட்ட மறைமூப்பரான கிளெமென்ட் அவர்களின் கையால் நான் உங்களுக்கு அனுப்புவதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஏற்கனவே நன்கு பரிச்சயமானவர். இப்போது அவரை நேரில் கண்டு அறிந்து கொள்ளலாம். தேவனின் அருட்கொடையின் மூலம், அவர் இங்கு பிரசன்னமாகியிருந்த காலத்தில் எங்கள் திருச்சபையை பலமடங்காகப் பெருக்கினார்.
12. செராபியனின் மற்றைய ஆக்கங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் போது விசுவாசத்தை விட்டு விலகி ஓடிய டோம்னஸ் மற்றும் திருச்சபையாளர்களான பொன்டியஸ் மற்றும் கேரிகஸ் ஆகியோருக்கு எழுதப்பட்ட கடிதங்கள், மற்றும் ஏனைய மக்களை விளித்து பேதுருவால் எழுதப்பட்ட நற்செய்தி என்று அழைக்கப்படும் ஒரு நிருபம் மட்டுமே என்னிடம் உள்ளன. அதில் உள்ள பொய்களை மறுப்பதற்காகவே அவர் இதை எழுதினார். இது ரோசஸ்ஸில் உள்ள சமூகத்தினர் சிலரை புறக்கோட்பாடான போதனைகளுக்குள் இட்டுச் சென்றது. இந்த ஆக்கத்தின் ஒரு பகுதியானது, புத்தகம் குறித்த அவரது அணுகுமுறையை விளக்குகிறது.
அன்பான சகோதரர்களே, பேதுருவையும் இதர அப்போஸ்தலர்களையும் கிறிஸ்துவின் சாயலாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவர்கள் மீது பொய்யாகப் புனையப்பட்ட கதைகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அவை நமக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நான் உங்களைச் சந்தித்தபோது நீங்கள் அனைவரும் உண்மையான விசுவாசத்தைக் கடைப்பிடிப்பீர்கள் என்று ஊகித்தேன். “இது மட்டும் தான் உங்களுக்குள் குழப்பமான எண்ணங்களை ஏற்படுத்துவதாகத் தோன்றினால், பேதுரு எழுதியதாக அவர்கள் கூறிய “சுவிசேஷத்தை” நன்றாகப் படியுங்கள்.” ஆனால் அவர்கள் இப்போது ஒருவித மதவெறியின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்த பிறகும், மீண்டும் உங்களைப் பார்க்க வர முயற்சி செய்கிறேன், எனவே எனக்காகக் காத்திருங்கள் சகோதரர்களே. தான் என்ன சொல்கிறேன் என்று புரியாமல் முரண்பட்டாலும், மக்ரியனின் மதவிரோதக் கொள்கை எனக்கு தெளிவாகத் தெரிந்தது. நாங்கள் மாதவிரோதிகள் என்று குறிப்பிடும் ஆசிரியர்களின் வாரிசுகள் தான் இந்த “நற்செய்தியை” ஆய்வு செய்துள்ளனர். ஏனெனில் அவர்களின் கருத்துக்கள் அவர்களின் போதனையை பிரதிபலிக்கின்றன. புத்தகத்தைப் படித்த பிறகு, அதன் போதனைகளில் பெரும்பாலானவை இரட்சகரின் உண்மையான போதனைகளுடன் ஒத்துப்போகின்றன என்ற முடிவுக்கு வந்தேன், இருப்பினும் சில தவறான [ஏற்றுக்கொள்ளமுடியாத, விசனத்தை ஏற்படுத்தக்கூடிய] சேர்க்கைகள் இணைக்கப்பட்டுள்ளதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன்.
அலெக்சாந்திரியாவின் கிளமென்ட்
13. கிளெமெண்டின் படைப்புக்களில், Titus Flavius Clement’s Miscellanies on the Knowledge of the True Philosophy குறித்து பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய எட்டு புத்தகங்களும் என்னிடம் உள்ளன. அவரது ‘அவுட்லைன்’ என்ற தொடரின் மற்றொரு எட்டு தொகுதிகள் உள்ளன. அதில் அவர் பன்டேனஸை தனது ஆசிரியராகக் குறிப்பிடுவதோடு, வேதாகமம் மற்றும் பாரம்பரியம் பற்றிய அவரது விளக்கங்களை தொகுத்துள்ளார். அவர் Exhortation to the Greeks, Paedagogus, The rich man who finds the salvation என்ற மூன்று புத்தகங்கள், பாஸ்கா பண்டிகை பற்றிய The Paschal Festival என்ற ஒரு கட்டுரை, On Fasting and On Slander பற்றிய விளக்கவுரைகள், Exhortation to Endurance or For the Newly Baptized சொற்பொழிவுகள் மற்றும் Ecclesiastical Canon or Against the Judaizers, ஆகிய புத்தகங்களை எழுதினார். அவர் முன்பு குறிப்பிட்ட ஆயர் அலெக்சாண்டருக்கு அவரது படைப்புகளை அர்ப்பணித்தார்.
Miscellanies என்ற ஆக்கத்தில், அவர் பரிசுத்த வேதாகமத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாராம்சங்களின் தொகுப்பு மற்றும் கிரேக்க ஆக்கங்களில் இருந்து அவர் பயனுள்ளதாக கருதிய அனைத்தையும் தயாரித்துள்ளார். அவர் கிரேக்கர்கள் மற்றும் கிரேக்கர் அல்லாதவர்களின் கருத்துக்களை ஒரே மாதிரியாகத் தொகுத்துக் குறிப்பிடுகிறார். ஒரு பெரிய வரலாற்று சூழலை உள்ளடக்கிய அதே சமயம், துரோகிகளின் தவறான கருத்துக்களையும் சரிசெய்து, எங்களுக்கு சிறந்த புலமைப் படைப்பைக் கொடுத்துள்ளார். படைப்பின் தலைப்பான Miscellanies இல் உள்ளவற்றை நியாயப்படுத்துவதை விட, தத்துவஞானிகளின் கட்டளைகளையும் இந்தக் கலவையில் இணைத்துள்ளார். சொலமனின் ஞானம், சிராக்கின் குமாரனாகிய இயேசுவின் ஞானம், எபிரேயருக்கு எழுதிய நிருபம் மற்றும் பர்னபாஸ், கிளெமென்ட் மற்றும் யூதா ஆகியோரின் நிருபங்கள் போன்றவற்றில் காணப்படும் சர்ச்சைக்குரிய விடயங்களில் இருந்தும் அவர் ஆதாரங்களை உள்ளடக்கியுள்ளார். அவர் காலவரிசை குறித்து எழுதிய டேஷியனின் ‘கிரேக்கர்கள் மற்றும் காசியனுக்கு எதிராக’ என்ற தலையங்கத்தில் கீழ் எழுதப்பட்ட நூல் பற்றி அவர் குறிப்பிடுகிறார். அதேபோல் ஃபிலோ, அரிஸ்டோபுலஸ், ஜோசஃபஸ், டெமிட்ரியஸ் மற்றும் யூபோலேமஸ் போன்ற யூத எழுத்தாளர்களின் படைப்புகள், கிரேக்கர்களை விட மோயீசன் மற்றும் யூத இனம் மிகவும் பழமையான” தோற்றம் கொண்டவை என்பதைக் காட்டுகின்றன. இந்த புத்தகம் 1 இல் அவர் கிட்டத்தட்ட தான் ஒரு அப்போஸ்தலர்களின் வாரிசு என்று கூறுகிறார். அதில் அவர் ஆதியாகமத்திற்கு விளக்கம் எழுதுவதாகவும் உறுதியளிக்கிறார்.
அவர் தனது பாஸ்கா பண்டிகை என்ற புத்தகத்தில், பண்டைய முற்பிதாக்களிடமிருந்து தான் கேட்ட மரபுகளை பிற்கால தலைமுறையினரின் நலனுக்காக எழுதுமாறு நண்பர்கள் தன்னை வலியுறுத்துவதாகக் கூறுகிறார். அவர் மெலிட்டோ, ஐரேனியஸ் மற்றும் போன்றோரைக் குறிப்பிட்டு அவர்களது அறிக்கைகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
14. Outlines என்ற புத்தகத் தொடரில், யூதாவின் நிருபம் மற்றும் பிற கத்தோலிக்க நிருபங்கள், பர்னபாஸின் நிருபம் மற்றும் பேதுருவின் வெளிப்பாடு என்று அழைக்கப்படுபவை சர்ச்சைக்குரிய சில படைப்புகள் மட்டுமே என்று கூறுகிறார். அவர் மற்றைய அனைத்து நியமன நூல்களில் இருந்து பெறப்பட்ட சாராம்சங்களையும் சுருக்கமாக விளக்கியுள்ளார். எபிரேயர்களுக்கு எழுதிய கடிதம் பற்றிக் கூறுகையில், அவர் பவுலுக்கே அந்த கெளரவம் உரித்தாகவேண்டும் எனக் கூறுகிறார். இது உண்மையில் எபிரேயரின் நன்மை கருதி எபிரேய மொழியில் எழுதப்பட்டதாகவும், பின்னர் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அதை லூக்கா கிரேக்க மொழியில் மொழிபெயர்த்ததாகவும் அவர் கூறுகிறார். இதன் விளைவாக, மொழிபெயர்ப்பு அப்போஸ்தலர் பணிகளின் வடிவமைப்பு மற்றும் வண்ணத்தை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. கிளெமென்ட் “[முன்கூட்டியே] கூறியது போல்: “பவுல், ஒரு அப்போஸ்தலன்” என்ற பதம் வெளிப்படையாக தவிர்க்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாயிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
எபிரேயருக்கு எழுதிய நிருபத்தில், அது அவருக்கு எதிராக எழுந்த பிழையான அபிப்பிராயமாகவும், அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதுமாக இருந்தது. ஆகவே ஆரம்பத்தில் அவர் புத்திசாலித்தனமாக தனது பெயரைச் சேர்த்து அதன் மூலம் அவர்களை புண்படுத்த வில்லை…. ஆசீர்வதிக்கப்பட்ட மறைமூப்பர் சொல்வது போல், சர்வவல்லமையுள்ள தேவனின் அப்போஸ்தலனாகிய கர்த்தர், எபிரேயரின் விமோசனத்துக்காக அனுப்பப்பட்டதால், புறஜாதிகள் சார்பாக அனுப்பப்பட்ட பவுல், எபிரேயருக்கு தன்னை அப்போஸ்தலனாகக் காட்டிக் கொள்வதை அடக்கத்துடனும், தாழ்மையுடனும் தவிர்க்கிறார். கர்த்தருக்கு செலுத்தும் மரியாதை நிமித்தமாகவும், புறஜாதிகளுக்கு ஒரு அப்போஸ்தலராகவும், அவர் எபிரேயர்களைப் பற்றி எழுதும்போது, தனது வரம்புக்கு வெளியே நின்றே எழுதினார்.
முற்பிதாக்கள் நற்செய்திகளின் வரிசையில் ஒரு பாரம்பரியத்தைக் கடைபிடித்து வந்தனர். அதன்படி மரபுவழிகள் முதலில் எழுதப்பட்டன. மாற்குவின் தோற்றம் அதைத் தொடர்ந்து வந்தது. கிளெமென்ட் இந்த பாரம்பரியத்தை அதே புத்தகங்களில் இணைத்துள்ளார். பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் உரோமில் பேதுரு நற்செய்தியை பகிரங்கமாக அறிவிப்பதைக் கேட்ட ஏராளமான மக்கள், பல ஆண்டுகளாக அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். சொல்லப்பட்டதை நன்றாக நினைவில் வைத்திருக்கக்கூடிய மாற்குவிடம் அவர்கள் செவிமடுத்த எல்லாவற்றையும் பதிவு செய்யும்படி வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தனர். அவர் அதை நிறைவேற்றி, வேண்டுகோள் விடுத்த அனைவருக்கும் பிரதிகளை வழங்கினார். பேதுரு அதைப் பற்றி அறிந்த பிறகும் அவரது செயலை எதிர்க்கவோ வாதிடவோ இல்லை. இறுதியாக, ஆனால், முடிவாக அல்ல, யோவான் அவரைப் பின்பற்றுபவர்களால் தூண்டப்பட்டார் மற்றும் ஆன்மீக சுவிசேஷத்தை உருவாக்க ஆவியானவரால் தெய்வீகமாக உந்தப்பட்டார். வெளிப்புற விபரங்கள் ஏற்கனவே சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை யோவான் அறிந்திருந்தார்.
நான் முன்பு குறிப்பிட்ட அலெக்சாண்டர் ஓரிஜனுக்கு எழுதிய கடிதத்தில், கிளெமென்ட் மற்றும் பான்டேனஸைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
நம் முன்னோர்களிடமிருந்து நமக்குக் கிடைத்த நட்பு பழுதுபடாமல், சிதைவுறாமல், உறுதியாக, நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ஏனென்றால், எங்களுக்கு முன் வந்த எமது முற்பிதாக்களைப் பற்றி நாம் அறிந்திருக்கும் அதேவேளை, விரைவில் பான்டேனஸைப் போலவே நாமும் பின்பற்றப் போகிறோம். அவர் என் உண்மையான அற்புதமான தலைவர். புனித கிளமென்ட் என் எஜமானர் என் உதவியாளர். அவர்கள் மூலம் நான் உம்மை அறிந்தேன், நீர் தான் எல்லாவற்றிலும் சிறந்தவர், என் சிறந்த எஜமானர் மற்றும் நல்ல சகோதரர்.
ஒரிஜனின் வேதாகமத்துக்கான புலமைப்பரிசில்
செபிரினஸ் உரோமைய திருச்சபையின் தலைவராக இருந்தபோது, அடமான்டியஸ் [இது ஓரிஜனின் புனைபெயர்] “உரோமையர்களின் மிகப் பழமையான தேவாலயத்தைப் பார்க்க” உரோம் நகருக்குச் சென்றதாகக் கூறுகிறார். அங்கு சிறிது காலம் கழித்தபின், அவர் மீண்டும் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பி ஆர்வத்துடன் தனது போதனையைத் தொடர்ந்தார். ஆயர் டியோனீசியஸ் இந்த பணியில் தம் சகோதர மக்களுக்கு தொடர்ந்து உதவுமாறு அவரிடம் வேண்டிக்கொண்டார்.
15. ஆனால் அவருக்கு இறையியலை ஆழமாகப் படிக்கவோ அல்லது புனித நூல்களை ஆய்வு செய்து மொழிபெயர்ப்பதற்கோ வாய்ப்புகள் இருக்கவில்லை. மாணவர்கள் குழுக்களாக காலை முதல் இரவு வரை அவரது விரிவுரை மண்டபத்தில் திரண்டதால் அவருக்கு மூச்சுவிடக் கூட நேரம் இருக்கவில்லை. எனவே, அவர் அவர்களைக் குழுக்களாகப் பிரித்து, மதச்சார்பற்ற தத்துவத்திலும் திறமையான இறையியலில் ஆர்வமுள்ளவரான ஹெராக்லஸைத் தனது மாணவர்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுத்து, அவருடன் கற்பிக்கும் பணியைப் பகிர்ந்து கொண்டார். ஆரம்பநிலை மாணவர்களுக்கான அறிமுகப் பாடங்கள் ஹெராக்லசுக்கு ஒதுக்கப்பட்டன. அதே சமயம் கடைநிலை மாணவர்கள் ஒரிஜன் மூலமாகக் கல்வியைத் தொடர முடிவெடுக்கப்பட்டது.
16. புனித நூல்களைப் பற்றிய ஓரிஜனின் பகுப்பாய்வு மிகவும் கடினமாக இருந்தது. அவர் எபிரேய மொழியில் தேர்ச்சி பெற்றவராய் யூதர்களிடையே அந்நேரத்தில் புழக்கத்தில் இருந்த அசல் எபிரேய மொழியில் எழுதப்பட்ட ஒரு உரையைப் பெற்றார். வேதாகம பழைய ஏற்பாட்டின் கிரேக்க வடிவம் தவிர, புனித எழுத்துக்களின் பிற மொழிபெயர்ப்புகளையும் அவர் தேடினார். மேலும் பொதுவான பதிப்புகளுக்கு கூடுதலாக, அதாவது – அகீலா, சிம்மாக்கஸ் மற்றும் தியோடோஷன் போன்ற – நீண்ட காலமாக தொலைந்து போன மற்றைய பதிப்புக்களையும் கண்டுபிடித்து அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அவற்றை எழுதியவர் யார் என்று அவருக்குத் தெரியாததால், ஒன்றை ஆக்டியம் என்ற இடத்துக்கு அருகே உள்ள நிக்கோபோலிஸிலும் மற்றொன்றை இதே இடத்திலும் கண்டுபிடித்ததாக அவர் கூறினார். அவரது Hexapla of the Psalms [பண்டைய பழைய ஏற்பாட்டின் ஆறு சுருக்க பதிப்புக்கள்] நான்கு பரிச்சயமான பதிப்புகளுக்குப் பிறகு ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது மொழிபெயர்ப்பை அவைகளுக்கு அடுத்ததாக வைத்தார். செவெரஸின் மகனான அன்டோனினசின் [காரகல்லா] ஆட்சியின் போது ஜெரிகோவில் ஒரு ஜாடியினுள் இவற்றில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இவை அனைத்தையும் அவர் ஒரு தொகுதியில் இணைத்து, எபிரேய உரைக்கு அடுத்துள்ள இணையான நெடுவரிசைகளில் வைத்து, Hexapla என்று அழைக்கப்படும் பதத்தை உருவாக்கினார். Tetrapla என்ற தனிப் படைப்பில் பண்டைய பழைய ஏற்பாட்டின் சுருக்க பதிப்புக்களுடன் சேர்த்து, அகீலா, சிம்மாக்கஸ் மற்றும் தியோடோஷன் ஆகியவற்றின் பதிப்புகளை அவர் வைத்தார்.
17. இந்த மொழிபெயர்ப்பாளர்களில், சிம்மாக்கஸ் ஒரு யூத கிறீஸ்தவ மதப்பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். இந்த மதப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் கிறிஸ்து, சூசை மற்றும் மரியாளின் மகன் என்றும், அவரை ஒரு மனிதன் என்று மட்டுமே தாம் கருதுவதாக கூறுகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டது போல, யூத முறையில் சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மத்தேயுவின் நற்செய்தியை எதிர்ப்பதன் மூலம் அவர் இந்த மதவிரோதத் தன்மையைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறும் சிம்மாக்கஸின் வர்ணனைகள் இன்னும் காணப்படுகின்றன. ஜூலியானா என்பவரிடமிருந்து சிம்மாக்கஸால் எழுதப்பட்ட மேற்கண்ட மற்றும் பிற வேதாகம விளக்கங்களை அவர் பெற்றதாக ஓரிஜன் கூறுகிறார். ஜூலியானா என்பவருக்கு புத்தகங்கள் சிம்மாச்சஸால் தான் வழங்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
ஓரிஜன் மற்றும் மதவெறியர்கள்
இந்த காலகட்டத்தில் ஓரிஜன் வெளிப்படுத்திய நேர்மைத்தன்மை, வலண்டினஸ் பற்றிய அம்ப்ரோஸின் மதங்களுக்கு எதிரான கொள்கையை தவிடுபொடியாக்கியது. இதனால் அறிவொளி பெற்ற அவர், திருச்சபையின் மரபுவழிப் போதனைகளை ஏற்றுக்கொண்டார். ஓரிஜனின் புனித இலக்கியம் பற்றிய அறிவை சோதிக்க பல அறிவாளிகள் வந்தனர். ஏனெனில் அவர் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டவர். அவர் பல மதவெறியர்களாலும் மிகவும் பிரபலமான சில சிந்தனையாளர்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டார். அவர்கள் அவரிடமிருந்து இறையியலை மட்டுமல்ல, பிரகாசமான மாணவர்களின் விஷயத்தில், மதச்சார்பற்ற தத்துவத்தையும் கற்றுக்கொண்டனர். அவர் அவர்களுக்கு அட்சரகணிதம், கேந்திர கணிதம், எண்கணிதம் போன்ற பிற அறிமுகப் பாடங்களைக் கற்பித்தார். பின்னர் அவர்களை வெவ்வேறு தத்துவ அமைப்புகளுக்கு அழைத்துச் சென்றார். ஒவ்வொன்றையும் பற்றி விவாதித்தது மட்டுமன்றி, அவைகள் யாவைப்பற்றியும் நேர்மையாக விமர்சித்தார். இதன் பயனாக கிரேக்கர்கள் கூட அவரை ஒரு சிறந்த தத்துவஞானியாகக் கருதினர். திறமை குறைந்தவர்களை வேதாகம வசனங்களைப் படிப்பதற்கான பயனுள்ள கருவிகளாக அடிப்படைப் பாடங்களைத் தொடருமாறு வலியுறுத்தினார். அதே காரணத்திற்காக, அவர் மதச்சார்பற்ற கல்வி மற்றும் தத்துவ ஆய்வுகளை மேற்கொள்வது முதன்மையானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கண்டறிந்தார்.
ஓரிஜன் குறித்த அபிப்பிராயங்கள்
19. அந்தக் காலத்தில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானிகள் தங்கள் ஆக்கங்களில் தொடர்ச்சியாக அவரை, அவரது சாதனைக்கு ஒரு ஜீவ ஆதாரமாகக் குறிப்பிட்டனர். அவர்கள் எப்போதாவது தாங்கள் ஆக்கங்களை அவருக்கு அர்ப்பணித்தனர் அல்லது தங்கள் படைப்புகளை மதிப்பாய்வுக்காக அவரிடம் அனுப்பினர். பிறகு, சிசிலியில் வாழ்ந்த போர்பிரி என்பவரும் என்னைக் குறைகூறுவதன் மூலம் பரிசுத்த வேதாகமத்தையும் அதன் மொழிபெயர்ப்பாளர்களையும் இழிவுபடுத்த முயன்றார். ஓரிஜன் குறித்த அபிப்பிராயங்கள்
அந்தக் காலத்தில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானிகள் தங்கள் ஆக்கங்களில் தொடர்ச்சியாக அவரை, அவரது சாதனைக்கு ஒரு ஜீவ ஆதாரமாகக் குறிப்பிட்டனர். அவர்கள் எப்போதாவது தாங்கள் ஆக்கங்களை அவருக்கு அர்ப்பணித்தனர் அல்லது தங்கள் படைப்புகளை மதிப்பாய்வுக்காக அவரிடம் அனுப்பினர். பிறகு, சிசிலியில் வாழ்ந்த போர்பிரி என்பவரும் என்னைக் குறைகூறுவதன் மூலம் பரிசுத்த வேதாகமத்தையும் அதன் மொழிபெயர்ப்பாளர்களையும் இழிவுபடுத்த முயன்றார். நமது கோட்பாட்டிற்கு எதிராக அவர் எந்தவிதமான குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாததால், அதற்கான சான்றுகள் எதுவும் இல்லாத காரணத்தால், மொழிபெயர்ப்பாளரான ஓரிஜனை கேலி செய்து அவதூறாகப் பேசினார். அவர் இளைஞராக இருக்கும்போதே அவரை அறிந்ததாகவும், அவரைக் கேவலப்படுத்த முயன்றதாகவும், ஆனால் தெரியாமல் அவரைப் பாராட்ட நேர்ந்ததாகவும் கூறுகிறார். தேவைப்படும்போது உண்மையைச் சொல்கிறான். சிலநேரம் அதிலிருந்து விடுபட எண்ணும்போது பொய் சொல்கிறான். சில சமயங்களில் அவர் ஒரு கிறிஸ்தவர் என்று குற்றம் சாட்டுகிறார். மற்றவர்களுக்கு அவர் தத்துவ ஆய்வுகளில் தனது அர்ப்பணிப்பை விவரிக்கிறார். அவருடைய உண்மையான வார்த்தைகளைக் கேளுங்கள்:
யூத வேதாகமத்தின் அபத்தங்களை விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக, அவற்றுக்கான விளக்கத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிலர் இறங்கி அவற்றுடன் ஒத்திசைக்க முடியாத விளக்கங்களை நாடிச் சென்றனர். அசலின் பாதுகாப்பை விட, மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிக ஆடம்பரமான பாராட்டுகளை வழங்குதல் போன்றவை தான் அவை. மோயீசனின் தெளிவான கூற்றுகள் “விசித்திரமானவை என்றும் புரியாத புதிர்கள் என்றும்” என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறார்கள். அவற்றை மறைந்திருக்கும் மர்மங்கள் நிறைந்த அசரீரிகளாகவும், மந்திர மாய சக்திகளாகவும் காண்பித்து, அவர்களது விமர்சனத் திறனை வெளிப்படுத்த முயல்கின்றனர். இந்த அபத்தமான வழிமுறைக்கு நான் இன்னும் இளமையாக இருந்தபோது சந்தித்த ஒரு மனிதன் காரணமாக இருந்திருக்க வேண்டும், ஏனெனில் தான் விட்டுச் சென்ற ஆக்கங்களால் பெரும் நற்பெயரை அவர் பெற்றிருந்தார். அதாவது, இந்த வகையான கற்றலில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பிரபலமானவர் தான் ஓரிஜன். அவர் நம் காலத்தின் மிகவும் பிரபலமான தத்துவஞானியான அம்மோனியஸின் மாணவராவார். அவர் பெற்றுக்கொண்ட பரந்த அளவிலான அறிவைப் பொறுத்தவரை, தனது எஜமானருக்கு அவர் மிகவும் கடன்பட்டிருந்தார். ஆனால் சரியான முறையில் வாழ, அவர் எதிர்மறையான போக்கைக் கடைபிடித்தார். அம்மோனியஸ் தனது பெற்றோரால் ஒரு கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். ஆனால் அவர் தத்துவ ஞானத்தைப் படிக்கத் தொடங்கியபோது, அவர் சட்டத்தை மதிக்கும் வாழ்க்கை முறைக்கு விரைவாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இருப்பினும், கிரேக்க சிந்தனையில் கல்வி கற்ற கிரேக்கரான ஓரிஜன், வெளியுலக மோகத்தில் மூழ்கினார். அதில் அவர் தன்னையும் தனது கல்வித் திறமையையும் ஆழத்துக்கு கொண்டுசென்றார். அவரது வாழ்க்கை முறை கிறிஸ்தவம் மற்றும் சட்டத்திற்கு எதிரானதாக மாறியது. ஆனால் வெளியுலக விவகாரங்கள் மற்றும் இறைவழி பற்றிய அவரது பார்வையில், அவர் எப்போதும் கிரேக்கராகவே வாழ்ந்தார். மற்றைய கலாச்சாரங்களில் இருந்து வரும் புராணங்களுக்கு கிரேக்க திருப்பத்தை அளித்தார். அவர் எப்போதும் பிளாட்டோவுடன் தொடர்பு கொண்டிருந்தார். அத்தோடு நியூமேனியஸ், க்ரோனியஸ், அப்பல்லோபேன்ஸ், லாங்கினஸ், மாடரேடஸ், நிகோமாச்சஸ் மற்றும் முக்கியமாக, பைதகோரியன்களின் படைப்புகளை நன்கு அறிந்திருந்தார். Books of Chaeremon the Stoic and Cornutus, போன்ற புத்தகங்களைப் பயன்படுத்தினார். அங்கு அவர் கிரேக்க புனித மர்மங்களில் பயன்படுத்தப்படும் உருவக [முறை] விளக்கத்தைக் கற்றுக்கொண்டார், மேலும் அதை யூத வேதாகம நூல்களிலும் பயன்படுத்தினார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான தனது கட்டுரையின் மூன்றாவது புத்தகத்தில் போர்பிரியின் அறிக்கைகள் தான் இவை. அவர் ஓரிஜனின் போதனைத் திறன் மற்றும் புலமை பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டதும், அவர் வெளிப்படையாகப் பொய் சொல்கிறார் – கிறிஸ்தவத்திற்கு விரோதமாக செயற்படுபவர் எதையும் செய்வார் – அவர் கிரேக்கர்களிடமிருந்து வந்ததாகவும், அம்மோனியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்துவதிலிருந்து புறமதத்திற்கு மாறினார் என்றும் அவர் கூறுகிறார். ஓரிஜனைப் பொறுத்தவரை, அவரது பெற்றோர் அவருக்குக் கற்பித்த கிறிஸ்தவத்தில் உறுதியாக இருந்தார். முன்பு குறிப்பிட்டது போல, அம்மோனியஸிடமிருந்து பெற்றுக்கொண்ட பெறுமதி வாய்ந்த தத்துவம் அவரது வாழ்க்கையின் இறுதி வரை தூய்மையாகவும் மாறாமல் இருந்தது. இதற்கு அவரது புகழ்பெற்ற ஆக்கங்கள் இன்றும் சான்றுபகர்கின்றன. உதாரணமாக, மோசஸ் மற்றும் இயேசுவுக்கு இடையில் நிலவிய நல்லிணக்கம் [The Harmony of Moses and Jesus] மற்றும் அறிவியலாளர்களின் வசம் உள்ள மற்ற அனைத்து படைப்புகளையும் ஆதாரங்களாகக் குறிப்பிடலாம்.
இது ஒரிஜனை அவதூறு செய்தவரின் தவறையும், கிரேக்கக் கற்றலில் அவரது சொந்த தேர்ச்சியையும் நிரூபிக்கட்டும். அதைப் பற்றி அவர் தனது வைராக்கியத்தை தவறு செய்தவர்களுக்கு எதிராகப் பின்வருமாறு எழுதுகிறார்:
நான் இறைவார்த்தையில் முழுமையாக ஈடுபட்டிருந்தபோது, என் திறமைகளைப் பற்றிய கதைகள் வேகமாகப் பரவின. மாதவிரோத சக்திகளையும், கிரேக்கத்தைக் கற்பதில் ஈடுபட்டிருந்தோரையும் குறிப்பாக தத்துவத்தைக் கற்றோரையும் நன்கு அறிந்தோரையும் வெகுவாக ஈர்த்தது.
ஆகவே, மதவிரோத சக்திகளின் கருத்துக்களையும், மெய்யியலாளர்களின் உண்மை பேசக்கூடிய கூற்றுகளையும் ஆய்வு செய்ய நினைத்தேன். இது சம்பந்தமாக, எனக்கு முன் இந்தமாதிரியான விஷயங்களில் பலருக்கு உதவிய நிபுணரான பன்தேநுஸ், மற்றும் நான் அவரது விரிவுரைகளில் கலந்துகொள்ளத் தொடங்குவதற்கு முன் ஐந்து ஆண்டுகள் தத்துவ ஆசிரியருடன் இருந்தவரும், தற்போது அலெக்சாந்திரியாவில் இப்போது மறைமூப்பராக இருக்கும் ஹெராக்லஸ் என்பவரின் உதாரணத்தைப் பின்பற்றினேன். முன்னையவருக்காக அவர் ஒரு தத்துவஞானியின் ஆடையிலிருந்து, ஒரு சாதாரண ஆடையை அணிந்துகொண்டார். அதை அவர் இன்றுவரை பராமரித்ததோடு, அதே நேரத்தில் அவர் கிரேக்க இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்தார்.
இங்கே குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்தபோது, அரேபியாவின் ஆட்சியாளரிடமிருந்து ஆயர் டெமெட்ரியஸுக்கும் எகிப்தின் ஆளுநருக்கும் இராணுவத்தினர் கடிதங்களை அனுப்பினர். அக்கடிதத்தில், ஓரிஜனை அவருடன் கலந்துரையாட விரைவில் அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். அவர் உண்மையில் அரேபியாவுக்குச் சென்று தனது பணியை நிறைவு செய்து அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார். சிறிது காலம் கழித்து, நகரத்தில் வன்முறை மூண்டது. அதனால் அவர் அலெக்சாந்திரியாவை விட்டு இரகசியமாக பாலஸ்தீனத்திற்குச் சென்று, சிசேரியாவில் குடியேறினார். அவர் இன்னும் மறைமூப்பராக நியமிக்கப்படாவிட்டாலும், பரிசுத்த வேதாகமத்தைப் பற்றி தேவாலயங்களில் பொது விரிவுரைகளை வழங்குமாறு அங்குள்ள ஆயர்கள் அவரைக் கேட்டுக்கொண்டனர். ஜெருசலேமின் ஆயர்களான அலெக்சாண்டர் மற்றும் சிசேரியாவின் ஆயரான தியோக்டிஸ்டஸ் ஆகியோர் தங்கள் சொந்த நலனுக்காகவே டிமெட்ரியஸைப் பற்றி எழுதியது இங்கே தெளிவாகிறது.
ஆயர்கள் முன்னிலையில் பாமரர்கள் பிரசங்கிப்பது முன்னெப்போதும் நடவாதது அல்லது கேள்விப்படாதது என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் – தெளிவாக இதில் உண்மை எதுவும் இல்லை. சகோதரருக்கு [மதகுருமார்களுக்கு] உதவுவதற்கு தகுதியுள்ள மக்கள் எங்கிருந்தாலும் ஆயர்களால் பிரசங்கம் செய்ய அழைக்கப்படுகிறார்கள். உதாரணமாக, நியோன் என்பவர் லாராண்டாவிலும், யூல்பிஸ் செல்சஸ் பாலினஸ் போன்றோர் இகோனியத்திலும் மற்றும் தியோடர் என்பவர் அட்டிகஸின் சினாடாவிலும் நிகழ்த்திய பிரசங்கங்கள் பற்றிக் குறிப்பிடலாம் – இவர்கள் நமது ஆசீர்வதிக்கப்பட்ட சகோதர ஆயர்கள். இது வெவ்வேறு இடங்களில் நமக்குத் தெரியாமல் நடந்திருக்கலாம்.
ஒரிஜனின் வாலிபப் பருவத்தின்போது, அவருடைய சொந்த நாட்டினரால் மட்டுமல்ல, வெளிநாட்டில் உள்ள ஆயர்களாலும் கூட அவருக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை இதுதான். ஆனால் டெமெட்ரியஸ் அவரை நினைவு கூர்ந்து ஒரு கடிதம் அனுப்பிய போது, தேவாலயத்தின் உதவிக் குறவர்கள் அவரை விரைவாக திரும்பும்படி வற்புறுத்தினார்கள். அதற்கிணங்க, அவர் திரும்பி வந்து வழக்கமான உற்சாகத்துடன் தனது கடமையைத் தொடர்ந்தார்.
எழுத்தாளர்கள், ஆயர்கள் மற்றும் பேரரசர்கள்
20. இந்த காலகட்டத்தில் பல கற்றறிந்த திருச்சபை அறிஞர்கள் செழிப்புற வளர்ந்தனர். அவர்களுடைய கடிதப் பரிமாற்றம் இன்றும் காணப்படுகிறது. மற்றும் அங்குள்ள தேவாலயத்தின் பொறுப்பாளராக இருந்த அலெக்சாண்டரால் நிர்மாணிக்கப்பட்ட ஏலியாவில் உள்ள நூலகத்தை எவராலும் எளிதாக அணுக முடியும். இந்த புத்தகத்திற்கான ஆதாரங்களை இங்குதான் என்னால் சேகரிக்க முடிந்தது.
இந்தத் திருச்சபை அறிஞர்களுள், போஸ்ட்ராவில் உள்ள அரேபியர்களின் ஆயர் பெரில்லஸ் என்பவர், பல இடங்களில் பல தேவாலயங்களை நிர்வகித்த ஹிப்போலிட்டஸைப் போலவே, எங்களுக்கு கடிதங்களையும் போற்றத்தக்க கீர்த்தனைகளையும் விட்டுச்சென்றுள்ளார். ஃபிரிஜியன் மதங்களுக்கு எதிரான கொள்கையின் காரணகர்த்தாவான ப்ரோக்லஸுக்கு பதிலளிக்கும் விதமாக, செஃபிரினஸின் காலத்தில் உரோமில் கேயுஸ் என்பவர் வெளியிட்ட ஒரு உரையாடல் என்னிடம் உள்ளது. இதில் புதிய வேதாகமங்களை வகுப்பதில் தம்முடைய எதிர்ப்பாளர்களின் அநாகரிக செயலைக் கட்டுப்படுத்தும் அதேவேளை, புனித அப்போஸ்தலரின் [பவுல்] பதின்மூன்று நிருபங்களை பற்றி மட்டுமே குறிப்பிடுகிறார். எபிரேயர்களை அதனுடன் சேர்க்கவில்லை, ஏனென்றால் உரோமில் உள்ள சிலர் இன்றுவரை அதை அப்போஸ்தலருடையதாக ஏற்றுக்கொள்ளவில்லை.
21. அன்டோனினஸ் [காரகல்லா] ஏழு ஆண்டுகள், ஆறு மாதங்கள் ஆட்சி செய்தபோது, அவருக்குப் பின் மேக்ரினஸ் ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு வருடம் ஆட்சி செய்த பிறகு, மற்றொரு அன்டோனினஸ் [எலகபாலஸ்] உரோம் அரசாங்கத்தைக் கையேற்றார். உரோமின் ஆயர் செஃபிரினஸ் தனது முதல் ஆண்டில், தனது பதினெட்டு வருட தேவ ஊழியத்திற்குப் பிறகு இவ்வுலக வாழ்க்கையை நீத்தார். கலிஸ்டஸ் ஐந்து ஆண்டுகள் அவரைப் பின்தொடர்ந்து பதவி வகித்தார். பின்னர் அவரது பதவியை அர்பன் கையேற்று முன்னடத்திச் சென்றார்..
இதற்குப் பிறகு, அலெக்சாண்டர் [செவேரெஸ்] பேரரசராக அரியணை ஏறினார். அன்டோனினஸ் நான்கு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்தார். இப்போது, பிலேட்டஸ் அந்தியோக்கியா திருச்சபை நிர்வாகத்தை அஸ்கெல்பியாட்ஸுக்குப் பிறகு பொறுப்பேற்றார்.
பேரரசரின் தாய், [ஜூலியா] மமேயா என்பவர் மத நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாடுடைய ஒரு பெண்மணி. ஓரிஜனின் புகழ் அவரது காதுகளுக்கு எட்டியபோது, அவருடன் ஒரு நேர்காணலைப் பெறவும், உலகளவில் மதிக்கப்படும் அவரது இறையியல் திறமையைப் பற்றி அறியவும் அவள் உறுதியாக இருந்தாள். அந்த நேரத்தில் அவள் அந்தியோகியாவில் தங்கியிருந்தாள். ஒரிஜனை தன்னிடம் கொண்டு வர இராணுவ துணைப் படையை அனுப்பினாள். அவர் அந்தப் பெண்மணியைக் காண ஒரு துரித விஜயத்தை மேற்கொண்டிருந்தார். தேவனின் மகிமையையும் தெய்வீக போதனையின் நற்பண்புகளையும் வெளிப்படுத்தும் பல விடயங்களை பற்றி அவளுடன் கலந்துரையாடிய பின்னர், அவர் தனது வழக்கமான பணிகளுக்கு விரைந்தார்.
22. இதே காலகட்டத்தில் ஹிப்போலிடஸ், தனது பல படைப்புகளுக்கு மேலதிகமாக, The Pascal Festival என்ற நூலை எழுதினார். இது பேரரசர் அலெக்சாண்டரின் [செவெரஸ்] முதல் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, பாஸ்கா [ஈஸ்டர்] திகதிகள் பதினாறு வருட காலச்சுழற்சியை எடுத்தியம்பும் காலவரிசை சம்பந்தமானதாக இருந்தது. அவரது மற்றைய படைப்புக்களில் பின்வருபவை என் கைகளுக்குக் கிட்டியது: The Hexameron, What Followed the Hexameron, Against Marcion, The Song, Ezekiel in Parts, The Paschal Festival, and Against All Heresies. போன்ற நூல்களின் வரிசையோடு இன்னும் பலவற்றை பல்வேறு இடங்களில் காணலாம்.
அலெக்சாந்திரியாவில் ஒரிஜனல் முன்னெடுக்கப்பட்ட வர்ணனைகள்
23. இக்காலப்பகுதியில், அம்ப்ரோஸ் அவர்களால் தூண்டப்பட்டு, ஓரிஜன் தனது பரிசுத்த வேதாகமம் குறித்த வர்ணனைகளில் ஈடுபடத் தொடங்கினார். அம்ப்ரோஸ் அவரை வற்புறுத்தியது மட்டுமல்லாமல், அவரது பணிக்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களையும் தாராளமாக வழங்கினார். அவர் தனது வர்ணனைகளை மேற்கொண்ட போது, ஏழுக்கும் மேற்பட்ட சுருக்கெழுத்தாளர்கள் ஒவ்வொரு இடைவெளியில் அவரது வர்ணனைகளை உச்சரிக்கக் கூடியவர்களாகவும், பல நகல் பிரதிகளை உடனுக்குடன் எழுதும் ஆற்றலுடையவர்களாவும் அங்கே பிரசன்னமாயிருந்தனர். அதே போல் எழுத்தாற்றலில் தேர்ச்சி பெற்ற பெண்கள் அநேகர் அவருக்கு உதவியாய் அம்ப்ரோஸ் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தனர். இறையியல் மீதான அவரது உற்சாகம், மற்றும் உத்வேகம் போன்றன, ஓரிஜனின் வர்ணனைகளை எழுத்துருவாய் மாற்றுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த தூண்டுகோலாக இருந்தது.
இதற்கிடையில், அர்பனுக்குப் பிறகு பொண்டியன் எட்டு ஆண்டுகள் உரோமின் ஆயராக சேவையாற்றினார். மேலும் அந்தியோக்கியாவின் ஆயராக ஜெபெனஸ் பிலேட்டஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்களின் காலத்தில், திருச்சபை நிர்வாக விவகாரங்களில் ஏற்பட்ட ஒரு அவசர பிணக்கு காரணமாக, பாலஸ்தீனம் வழியாக கிரேக்க நாட்டுக்கு ஓரிஜென் பயணம் செய்தார். அதேவேளை, செசரியாவில் உள்ள ஆயர்களால் அவர் அங்கு ஒரு மறைமூப்பராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் அவரை ஒருவித சர்ச்சைக்குள் தள்ளியது. இந்த விடயத்தில் திருச்சபை நிர்வாகத்தினரின் முடிவுகளும், அவர் தனது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது அவரது மற்ற இறையியல் சாதனைகளும், அவரை கெளரவம் மிக்க ஒரு நிலைக்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருந்தன. இது குறித்து நான் எனது விளக்கத்தை Defence of Origen புத்தகம் 2 இல் வழங்கியுள்ளேன்.
24. அவர் அலெக்சாந்திரியாவில் இருந்தபோது, யோவான் பற்றிய அவரது வர்ணனையின் 6வது புத்தகத்தில் முதல் ஐந்தையும் இயற்றியதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் முழு படைப்பிலும் 22 புத்தகங்கள் மட்டுமே என் கவனத்திற்கு வந்துள்ளன. ஆதியாகமம் பற்றிய அவரது வர்ணனையில் உள்ள பன்னிரண்டு புத்தகங்களில் ஒன்பதாவது புத்தகத்தில், அவர் அலெக்சாந்திரியாவில் முதல் எட்டு மட்டுமல்ல, Commentary on Psalms 1-25 [சங்கீதம் 1-25] பற்றிய வர்ணனையையும், புலம்பல் [Lamentation] பற்றிய விளக்கத்தையும் எழுதியதாகக் குறிப்பிடுகிறார். அதில் ஐந்து புத்தகங்கள் என்னிடம் உள்ளன. இவற்றில் அவர் தனது On the Resurrection பற்றிய தனது படைப்பான இரண்டு புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். மேலும், அவர் அலெக்சாந்திரியாவை விட்டு வெளியேறுவதற்கு முன், தனது முதல் கோட்பாடுகளை [First Principles] எழுதினார் மற்றும் அலெக்ஸாண்டரின் ஆட்சியின் போது அதே நகரத்தில் Miscellaneous என்ற தலைப்பில் பத்து புத்தகங்கள் கொண்ட தொடரையும் எழுதினார், அவர் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
25. சங்கீதம் 1 பற்றிக் கருத்து தெரிவிக்கையில், அவர் பழைய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களின் பட்டியலை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
எபிரேய பாரம்பரியத்தின் படி, 22 மார்க்க நியதிகளை வெளிப்படுத்தும் புத்தகங்கள் காணப்படுகின்றன. அவை அவர்களின் அரிச்சுவடியில் காணப்படும் எழுத்துக்களின் எண்ணிக்கைக்கு சமமாக உள்ளன. அவை பின்வருமாறு:
ஆதியாகமம் [என நாம் அழைக்கிறோம், ஆனால் எபிரேயர்களால் Bresith, “Inthebeginning” என்பதன் தொடக்க வார்த்தையிலிருந்து]
எக்ஸோடஸ் [OueT,e smoth, அதாவது, “These are the Names”]
லெவிடிகஸ் [Ouikkra, “And he called”]
எண்கள் [Ammes phekodeim ]
உபாகமம் [Elle addebareim, “These are the Words”]
இயேசு, நேவின் மகன் [Joshua ben nun]
நீதிபதிகள் – ரூத் [Sophetim, எபிரேயர்களிடையே உள்ள ஒரு புத்தகம்]
இராஜாக்கள் 1 மற்றும் 2 [சாமுவேல், “”The called of God,” அவர்களுடன் ஒரு புத்தகம்]
இராஜாக்கள் 3 மற்றும் 4 [Quammelch David, “The kingdom of David,” ஒரு புத்தகம்]
நாளாகமம் 1 மற்றும் 2 [Dabre iamin, “Words of days,” one book]
எஸ்ட்ராஸ் 1 மற்றும் 2 [Ezra, “Helper,” ஒரு புத்தகம்]
சங்கீத புத்தகம் [Sphar thellim]
சொலமனின் பழமொழிகள் [Meloth]
பிரசங்கி [Koelth]
பாடல்களின் பாடல் [சிலர் நினைப்பது போல் “பாடல்களின் பாடல்கள்” – “Songs of songs,” – அல்ல, பாடல்களின் பாடல்: Sirassirim]
ஏசாயா [Jessia]
ஜெரேமியா, புலம்பல்கள் [Lamentations] மற்றும் கடிதம் [The Letter] எரேமியா, ஒரு புத்தகம்]
தானியேல் [Daniel] Ezekiel [Ezekiel], Job [Job]
எஸ்தர் [Esther]
இவை தவிர, பட்டியலில் இணைக்கப்படாத Maccabees [Sar beth sabanai el]
மத்தேயு பற்றிய அவரது வர்ணனையின் ஆரம்பத்தில், திருச்சபையின் மார்க்க நியதியைப் பாதுகாப்பதில் அவர் நான்கு நற்செய்திகளை மட்டுமே அறிந்திருப்பதாக கூறுகிறார்:
தேவனின் திருச்சபையில் இந்த நான்கு சுவிசேஷங்கள் மட்டுமே சந்தேகத்திற்கு இடமில்லாதவை என்பதை நான் முற்றுமுழுதாகவும் மனப்பூர்வமாகவும் அறிந்துகொண்டேன். அவற்றில் முதலில் எழுதப்பட்டது மத்தேயு. அவர் ஒரு காலத்தில் வரி வசூலிப்பவராக இருந்தார். ஆனால் பின்னர் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராக மாறினார். அவர் யூத விசுவாசிகளுக்காக எபிரேய மொழியில் அதை வெளியிட்டார். இரண்டாவதாக, பேதுருவின் கட்டளைகளைப் பின்பற்றி எழுதிய மாற்கு, பேதுருவும் தனது நிருபத்தில் மாற்குவை அவருடைய மகனாக ஏற்றுக்கொண்டிருந்தார்: “பாபிலோனில் உள்ள திருச்சபை உங்களை வாழ்த்துகிறது…. என் மகன் மாற்கும் சேர்ந்தே உங்களை வாழ்த்துகிறார்” [1 பேதுரு 5:13]. மூன்றாவது புறஜாதி விசுவாசிகளின் நலனுக்காக பவுலால் பாராட்டப்பட்ட நற்செய்தியை எழுதிய லூக்காவால் எழுதப்பட்டது. அவர்களுக்குப் பிறகு அனைத்தும் யோவானின் நற்செய்தி வழியாகவே வந்தது.
யோவான் பற்றிய புத்தகம் 5 இல் அவரது வர்ணனையில், ஓரிஜன் அப்போஸ்தலர்களின் நிருபங்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
நற்செய்தியைப் பிரசங்கிக்க எருசலேமிலிருந்து இல்லிரிகம் வரை பயணித்த புதிய உடன்படிக்கையின் ஊழியரான பவுல், தான் போதித்த எல்லா சபைகளுக்கும் எழுதவில்லை. ஆனாலும் அவ்வாறு எழுதியபோதுகூட, அவர் தனது குறிப்பை சுருக்கமான கடித வடிவில் அனுப்பினார். கிறிஸ்துவின் திருச்சபையின் அத்திவாரமாக பேதுரு, ஒரு உண்மையான நிருபத்தையும் ஒருவேளை இரண்டாவது நிருபத்தையும் விட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் இது சர்ச்சைக்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது. இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த யோவானைப் பற்றி நான் ஏதேனும் சொல்ல வேண்டுமா? அப்படியானால், அவர் ஒரே ஒரு நற்செய்தியை மட்டுமே விட்டுச் சென்றார், இருப்பினும் அவர் பலவற்றை எழுத முடியும் என்று [யோவான் 21:25] கூறினாலும், அவை அனைத்தையும் வைத்துப் பாதுகாக்க உலகத்தில் இடம் இல்லாது போகும். அவர் வெளிப்படுத்துதலை எழுதியிருந்தாலும், ஏழு இடிமுழக்கங்கள் குறித்த வார்த்தைகளைப் பதிவு செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்டார். (வெளிப்பாடுகள் 10:3-4). அவர் ஒரு மிக சுருக்கமான நிருபத்தையும் இடையில் விட்டுவிட்டார். ஒருவேளை இரண்டு அல்லது மூன்று வரிகளை என்றுகூட சொல்லலாம். எனினும் இது விவாதத்திற்குரியது. விடுபட்ட இவை இரண்டும் சேர்ந்தால், அவற்றில் நூறு வரிகளுக்கு மேல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
அவரது Homilies on the Epistle to the Hebrews என்ற எபிரேயர்களுக்காக எழுதப்பட்ட கடிதத்தில் அவர் தனது கருத்தை பின்வருமாறு தெரிவிக்கிறார்:
எபிரேயரின் கிரேக்க தொடரியல் நுணுக்கமானது, மேலும் அதன் சொற்களஞ்சியத்தில் அப்போஸ்தலரே ஒப்புக்கொண்ட கடுமையான அம்சங்கள் எதுவும் இல்லை [2 கொரி. 11:6]. இருப்பினும், நிருபத்தின் உள்ளடக்கம் சிறப்பானது மற்றும் அப்போஸ்தலரின் உண்மையான படைப்புகளுக்கு இணையாக உள்ளது. எனது தனிப்பட்ட கண்ணோட்டத்தை நான் வெளிப்படுத்த வேண்டுமானால், அங்கே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் இறைதூதரின் கருத்துகளாக இருந்தாலும், எழுத்தின் அமைப்பும் நடையும், அப்போஸ்தலரின் போதனைகளை ஆசிரியர் நினைவில் வைத்து விளக்கியிருப்பதைக் காட்டுவதாகவே கூறுவேன். இந்தக் கடிதம் பவுலினது என திருச்சபை நம்புமானால், அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில், அது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதொன்று. ஏனென்றால் முற்பிதாக்கள் அவற்றை பவுலுடையது என்று கூறுவதற்கு உறுதியான காரணங்களைக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த நிருபத்தை எழுதியவர் யார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். ஆனால் சில வரலாற்றுப் பதிவுகள், உரோமைய ஆயர் கிளெமென்ட் அல்லது லூக்கா ஆகோயோர் தான் நற்செய்தி மற்றும் அப்போஸ்தலர் பணிகள் போன்றவற்றை எழுதியவர்கள் என்று கூறுகின்றன.
26. அலெக்சாண்டரின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில், ஓரிஜன் அலெக்சாந்திரியாவிலிருந்து சிசேரியாவுக்கு குடிபெயர்ந்தார். ஹெராக்ளாஸுக்கு மறைக்கல்வி கற்பிக்கும் பள்ளியை விட்டுச் சென்றார். சிறிது காலத்திற்குப் பிறகு, அலெக்சாந்திரியாவின் ஆயர் டிமெட்ரியஸ், நாற்பத்து மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு இறையடி சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து ஹெராக்ளாஸ் அந்தப் பதவியில் அமர்ந்தார்.
27. இந்த காலகட்டத்தில், கப்படோசியாவில் உள்ள சிசேரியாவின் ஆயர் ஃபிர்மிலியன், ஓரிஜனை மிகவும் மதிப்புடன் நடத்தினார். அவர் தனது பிராந்தியத்தில் உள்ள திருச்சபை அமைப்புகளுக்கு உதவ அல்லது யூதேயாவுக்குச் சென்று தனது சொந்த இறையியல் கோட்பாடுகளை மேம்படுத்துவதற்காக அவருடன் சிறிது நேரம் செலவிட அவரை அழைத்தார். இதேபோல், ஜெருசலேம் திருச்சபையின் தலைவரான அலெக்சாண்டர் மற்றும் சிசேரியாவின் தியோக்டிஸ்டஸ் ஆகியோர் அவரைத் தங்கள் ஒரே ஆசிரியராகக் கருதி, பரிசுத்த வேதாகமம் மற்றும் திருச்சபை நிர்வாகத்தின் அறிவுறுத்தல் கஜாரணமாக, பிற அம்சங்களை விளக்கும் பணியையும் அவரிடம் ஒப்படைத்தனர்.
மாக்சிமினஸ் திரேசியனின் கீழ் இடம்பெற்ற கொடூர நிகழ்வுகள்
28. பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, உரோமையப் பேரரசர் அலெக்சாண்டர் [செவெரஸ்] இயற்கை எய்தினார். அவருக்குப் பிறகு மாக்சிமினஸ் [திரேசியன்] ஆட்சிபீடம் ஏறினார். அலெக்சாண்டரின் ஆட்சிக்காலம் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமையாலும், அது பெருவாரியாக விசுவாசிகளைக் கொண்டிருந்த காரணத்தாலும், அவர் விசுவாசம் கொண்ட மக்கள் மீது துன்புறுத்தலை கட்டவிழ்த்து விட்டார். அத்தோடு, நற்செய்தி போதனைக்கு பொறுப்பான திருச்சபை அமைப்புகளின் தலைவர்களை மட்டுமே கொல்லும்படி உத்தரவிட்டார். அப்போதுதான் ஓரிஜன் வேதசாட்சியம் பற்றி எழுதினார். சிசேரியாவின் மறைமூப்பராக இருந்த அம்ப்ரோஸ் மற்றும் ப்ரோடோக்டெட்டஸுக்கு அவரது இந்த கட்டுரையை அர்ப்பணித்தார். அவர்கள் இருவரும் கொடுமைகளின் உச்சத்தை அனுபவித்தனர். அப்படியிருந்தும், மாக்சிமினஸின் மூன்று ஆண்டுகால ஆட்சி முழுவதிலும் தமது விசுவாசத்தை உன்னதமாக ஒப்புக்கொண்டே வந்தனர். ஓரிஜன் இந்த காலப்பகுதியின் நிகழ்வுகளை யோவான் குறித்த தனது வர்ணனையின் பிரிவு 22 இல் விளக்கியுள்ளார்.
ஃபேபியன் மற்றும் புறா
29. மாக்சிமினஸுக்குப் பிறகு கோர்டியன் உரோமையப் பேரரசராக பதவியேற்றார். ஆறு ஆண்டுகள் உரோமைய ஆயராகப் பதவிவகித்த போன்டியனைத் தொடர்ந்து அன்டெரோஸ் மற்றும் அவரது பதவிக்காலத்தின் ஒரு மாதத்திற்குப் பிறகு ஃபேபியன் பதவியேற்றார். ஃபேபியன் உரோம் நகருக்குச் செல்வதற்காக தனது நாட்டிலிருந்து மற்றவர்களுடன் வந்ததாகவும், இறை கிருபையின் அற்புதத்தின் மூலம் பதவிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. அன்டெரோஸின் வாரிசைத் தேர்ந்தெடுக்க சகோதர மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது, பல புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய எண்ணம் பெரும்பாலானோரின் மனதில் இருந்தது. ஆனால் யாருடைய மனதிலும் ஃபேபியன் பற்றிய எண்ணம் இருக்கவில்லை. ஆனாலும் அவர் அங்கு பிரசன்னமாக இருந்தார். அப்போது எங்கிருந்தோ ஒரு புறா மேலிருந்து கீழே பறந்து வந்து அவரது தலையில் அமர்ந்தது. புறாவின் வடிவத்தில் பரிசுத்த ஆவியானவர் இரட்சகர் மீது இறங்கியது போல அந்த நிகழ்வு இருந்தது. இதைக் கண்டதும் ஒருவித தெய்வீக உத்வேகத்தால் முழு சபையும் ஒருமித்த உற்சாகத்துடன், “அவர் தகுதியானவர்!” என்று கோஷமிட்டு, மேலும் காலம் தாழ்த்தாமல் அவரை அழைத்துச்சென்று ஆயரின் அரியணையில் அமர்த்தினார்கள்.
இந்த நேரத்தில் அந்தியோக்கியாவின் ஆயர் செபெனஸ் இந்த வாழ்க்கையைத் துறந்து இறையடி எய்தினார். பாபிலாஸ் அவரது வெற்றிடத்துக்கு நியமனமானார். அதேநேரம் அலெக்சாந்திரியாவில் ஹெராக்லாஸ் டிமெட்ரியஸ் உடன் சென்றுவிட்ட காரணத்தால், ஓரிஜனின் மாணவர்களில் ஒருவரான டியோனிசஸ் அடுத்த மறைக்கல்வி கற்பிக்கும் பள்ளியை இயக்கினார்.
ஓரிஜனின் மற்றைய மாணாக்கர்கள்
30. ஓரிஜன் சிசேரியாவில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர் மற்றும் ஏனைய வெளிமாகாணங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் அவரிடம் கல்விகற்கும் நோக்கில் பள்ளியில் சேர்ந்தனர். இவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் தான் தியோடோர் – அவர் வேறு யாருமல்ல, எனது காலத்தில் மிகவும் பாராட்டப்பட்ட ஆயர் கிரிகோரி மற்றும் அவரது சகோதரர் அதெனோடோர். இருவரும் கிரேக்க மற்றும் உரோமைய ஆய்வு மற்றும் கற்றல் நடவடிக்கைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகவே ஓரிஜன் அவர்களுக்கு தத்துவ ஞானத்தின் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினார். மற்றும் இறையியல் கல்வியை முழுமையாகத் தொடர, அவர்களின் மனதில் ஏற்கனவே இருந்த ஏனைய கல்வி நடவடிகைகள் மீதுள்ள ஆர்வத்தை இறையியல் கல்வியின்பால் செலுத்த அவர்களுக்கு உற்சாகமூட்டினார். அவர்கள் அவருடன் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து கற்றல் நடவடிக்கைகளில் இணைத்திருந்தனர். மற்றும் இறையியலில் அதிகளவு முன்னேற்றம் அடைந்தனர். இருவரும் அப்போது இளவயதினராக இருந்தபோதும் கூட, போன்டஸில் உள்ள திருச்சபை நிர்வாகத்துக்குள் இயங்கிய தேவாலயங்களுக்கு ஆயர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜூலியஸ் அப்ரிக்கானுஸ்
31. இந்த காலப்பகுதியில்தான் [ஜூலியஸ்] அப்ரிக்கானுஸ், Cesti, என்ற புத்தகத் தொடரை எழுதியவர். இவர் மற்றுமொரு சிறந்த எழுத்தாளர் ஆவார். தானியேலின் புத்தகத்தில் உள்ள சூசன்னாவின் கதை போலியானது என்று அவர் ஓரிஜனுக்கு எழுதிய கடிதம் கூறுகிறது. ஓரிஜன் அவருக்கு ஒரு முழுமையான பதிலை அனுப்பினார். அவரது ஐந்து தொகுதி காலவரையறை பற்றிய நூல்களும் கைவசம் உள்ளது. இது மிகவும் துல்லியமான ஒரு ஆக்கம். நான் முன்பு கூறியது போல், தத்துவம் மற்றும் மதச்சார்பற்ற கல்வியில் சிறந்த புலமைதத்துவத்தை எய்திய ஆயரான ஹெராக்லஸின் பெரும் புகழால் ஈர்க்கப்பட்டு அவர் அலெக்சாந்திரியாவுக்கு பயணம் செய்ததாக அதில் அவர் கூறுகிறார். அரிஸ்டைட்ஸுக்கு அனுப்பப்பட்ட எஞ்சியிருக்கும் அவரது மற்றொரு கடிதம், கிறிஸ்துவின் வம்சாவளி குறித்து மத்தேயு மற்றும் லூக்கா இடையே காணப்படும் முரண்பாடு பற்றி விவாதிக்கிறது. அதில் அவர் சுவிசேஷ எழுத்தாளர்களின் நல்லிணக்கத்தை தெளிவாகக் காட்டுகிறார். அதை நான் தற்போதைய ஆக்கமான புத்தகம் 1 இல் இணைத்துள்ளேன்.
சிசேரியாவில் ஓரிஜனின் வர்ணனைகள்
32. இதற்கிடையில் ஓரிஜன் ஏசாயாவைப் பற்றியும் எசேக்கியேலைப் பற்றியும் தனது வர்ணனையை எழுதினார். முந்தையவற்றில், ஏசாயாவின் மூன்றாவது பிரிவில் உள்ள முப்பது பெருநூல்கள் முதற்கொண்டு பாலைவனத்தில் உள்ள மிருகங்கள் பற்றிய உரைகள் வரை கைக்கு வந்துள்ளன [ஏசாயா 30:6); அவற்றுள் எசேக்கியேலின் இருபத்தைந்து அத்தியாயங்கள் மட்டுமே அவர் எழுதியது. எதென்ஸுக்கு விஜயம் செய்தபோது, அவர் எசேக்கியேல் பற்றிய வர்ணனையையும், பாடல்களின் ஐந்து புத்தகங்களையும் எழுதி முடித்தார். பின்னர், செசரியாவுக்குத் திரும்பிய அவர், அந்தப் பணியை பத்து தொகுதிகளாக வகுத்து அவற்றையும் எழுதி முடித்தார். இது அவரது அனைத்து படைப்புகளையும் பட்டியலிடுவதற்கான இடம் அல்ல. இது அவரது படைப்புகள் பற்றி குறிப்பிடும் ஒரு வழியாக இருக்கலாம். எனது காலத்தின் புனித வேதசாட்சியான பாம்பிலஸின் வாழ்க்கை சம்பந்தமான இதுபோன்ற ஒரு பட்டியலை நான் ஏற்கனவே இணைத்துள்ளேன். அதில் ஓரிஜனின் படைப்புகள் மற்றும் அவரது நூலகத்தில் உள்ள மற்ற திருச்சபை எழுத்தாளர்களின் பட்டியலை மேற்கோள் காட்டியுள்ளேன்.
பெரிலஸ் விட்ட பிழை
33. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட போஸ்ட்ரா அரேபியாவின் ஆயர் பெரில்லஸ், விசுவாசத்திற்குப் புறம்பான கருத்துக்களை அறிமுகப் படுத்தி, திருச்சபைக்கு கோட்பாட்டைத் திரிபுபடுத்தி, நம் இரட்சகரும் ஆண்டவரும் மனிதர்கள் அவதரிக்கும் முன் வாழ்ந்திருக்க வில்லை என்றும் தந்தையைத் தவிர தனக்கென்று ஒரு தெய்வீக நிலை அவருக்கு இருந்ததில்லை என்றும் கூறத் துணிந்தார். ஓரிஜன் மற்றும் பலர் விவாதத்திற்கு அழைக்கப்படும் வரை ஏராளமான ஆயர்கள் இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர் அத்தோடு விவாதத்திலும் ஈடுபட்டனர். அவருடைய கருத்துக்களை அறிய அவருடன் உரையாடிய பிறகு, ஓரிஜன் வழக்கத்திற்கு மாறான அவரது கருத்துக்களைச் சீர்செய்து, போதிய மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கங்கள் மூலம் அவரது முந்தைய உறுதியான விசுவாசத்துக்குள் அவரை மீண்டும் கொண்டுவந்தார். பெரிலஸ் மற்றும் அவர் சந்தித்த சினோட் பற்றிய பதிவுகள் இன்னும் எம்மத்தியில் காணப்படுகின்றன. அதில் ஓரிஜனின் கேள்விகள், போஸ்ட்ராவில் நடந்த விவாதங்கள் மற்றும் நடந்த அனைத்தும் உள்ளன. ஓரிஜனைப் பற்றி வேறு பல மரபுவழி ஆதாரங்களும் உள்ளன. ஆனால் புனித வேதசாட்சியான பம்பிலஸும் நானும் விமர்சகர்களின் தவறுகளைக் கண்டறிவதற்காக கூட்டாக எழுதிய Defence of Origen என்ற நூலிலிருந்து மிக முக்கியமான தகவல்களை பெறக்கூடியதாயிருக்கும்.
பிலிப்: ஒரு கிறிஸ்தவ பேரரசரா?
34. ஆறு ஆண்டுகள் உரோமைய பேரரசராக இருந்த பிறகு கோர்டியன் உயிர் நீத்தார். அவருக்குப் பிறகு பிலிப் [அரேபிய தேசத்தவர்] பதவியேற்றார். அவர் ஒரு கிறிஸ்தவர் என்றும், கடைசி பாஸ்கா திருவிழிப்பு நாளில் தேவாலயத்தின் இடம்பெற்ற பிரார்த்தனைகளில் விசுவாசிகளுடன் சேர விரும்பினார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவர் பகிரங்கமாக தன் தவறுகளை ஒப்புக்கொண்டு, தவறிழைத்தவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுடனும் மற்றும் அவர்களோடு மனந்திரும்புதலை எதிர்பார்த்து [தேவாலயத்தில்] அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுடன் சமாதானமாய் ஒன்றிக்கும் வரை, அந்தத் தேவாலயத்தின் தலைமைக் குறவர் அவரை உள்ளே நுழைய அனுமதில்லவில்லை. அவ்வாறு அவர் செய்திருக்கவில்லை என்றால், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுகளால் அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க மாட்டார். ஆகவே அவர் தேவாலய நிர்வாகிகளின் முடிவுக்கு உடனடியாகக் கீழ்ப்படிந்ததாகக் கூறப்படுகிறது. கடவுளுக்குப் பயப்படுவதற்கு அவர் எவ்வளவு உண்மையாகவும் பக்தியுடனும் இருந்தார் என்பதைத் தனது செயல்களால் காட்டினார். இல்லையெனில், அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால், அவர் மீது பல குற்றச் சாட்டுகளால் அவர் ஒருபோதும் பெறப்பட்டிருக்க மாட்டார். அவர் உடனடியாகக் கீழ்ப்படிந்ததாகக் கூறப்படுகிறது. கடவுள் மீது பயபக்தியுடன் வாழ அவர் எவ்வாறு உண்மையாகவும் பக்தியுடனும் செயல்பட்டார் என்பதைத் தனது செய்கைகள் ஊடாகக் காட்டினார்.
35. பிலிப்பின் ஆட்சியின் மூன்றாம் வருடத்தில், அலெக்சாந்திரியாவில் உள்ள திருச்சபை நிர்வாகத்துக்கு பதினாறு ஆண்டுகள் தலைமை தாங்கிய பிறகு ஹெராக்ளாஸ் இவ்வுலக வாழ்க்கையை நீத்தார். டியோனீசியஸ் அவருக்குப் பதிலாக பதவி ஏற்றார்.
ஓரிஜனின் பண்பட்ட எழுத்தாக்கங்கள்
36. விசுவாசம் மேலோங்கி வளர்ந்தது மற்றும் எங்கள் கோட்பாடு பரவலாகவும் தைரியமாகவும் பேசப்பட்டது. இப்போது அறுபது வயதைக் கடந்த ஓரிஜன், இறுதியாக தனது விரிவுரைகளை சுருக்கெழுத்தாளர்களைக் கொண்டு பதிவு செய்ய அனுமதித்தார் என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில், அவர் செல்சஸ் என்ற கிரேக்க அறிஞரின் வழித்தோன்றல்களான எபிகூரியனால் தொடுக்கப்பட்ட தாக்குதலை மறுக்கும் வகையில், எட்டு கட்டுரைகளை எழுதினார். அது The True Word என்ற தலைப்பில் அமைந்திருந்தது. அத்துடன் மத்தேயு பற்றிய அவரது வர்ணனையின் இருபத்தைந்து பெருநூல்கள், பன்னிரண்டு [சிறுநூல்கள்] மற்றும் தீர்க்கதரிசிகள் பற்றிய அவரது கருத்து போன்றவற்றை அடக்கிய தொகுப்பில், என்னிடம் இருபத்தைந்து தொகுப்புகள் மட்டுமே உள்ளன. அவற்றுள் பேரரசர் பிலிப்புக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றும் உள்ளது. மற்றொன்று அவரது [பிலிப்பின்] மனைவி செவேரா எழுதியவை மற்றும் பல்வேறு கடிதங்கள். மேலோட்ட ஆதாரங்களில் இருந்து முடிந்தவரை பலவற்றை சேகரித்து, நூற்றுக்கும் மேற்பட்டவற்றை தனித்தனி உருளை வடிவ சேமிப்பறைகளில் பாதுகாப்பாக வைத்துள்ளேன். அவரது மரபுவழி குறித்து அவர் உரோமைய ஆயரான ஃபேபியனுக்கும் மற்றும் பல திருச்சபை நிர்வாகத் தலைவர்களுக்கும் எழுதியுள்ளார். இவை அனைத்தும் எனது Defence of Origen புத்தகம் 6 இல் விளக்கப்பட்டுள்ளன.
அரேபியா விட்ட தவறும் ஹெல்கேசைட் மதவிரோதமும்
37. மீண்டும் அரேபியா குறித்து எம் பார்வையை செலுத்துவோமானால், அங்கு மனித ஆன்மா இறக்கும் போது நம் உடலுடன் சேர்ந்து அழுகும் என்றும், ஆனால் உயிர்த்தெழுதலின் போது அவர்களுடன் மீண்டும் உயிர்பெறும் என்ற சத்தியத்தின் பரந்த கோட்பாடு அறிமுகமானது. ஒரு ஆயர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய மன்றம் கூட்டப்பட்டபோது, ஓரிஜன் மீண்டும் அழைக்கப்பட்டார். அவர் இந்த விடயம் பற்றிய ஒரு பொது விவாதத்தைத் தொடங்கினார். அதில் அவர் மிகவும் வலுவான ஒரு முக்கிய விடயத்தை முன்வைத்தார். முன்பு தவறாக வழிநடத்தப்பட்டவர்களின் கருத்துக்களை அவர் மாற்றி சரிசெய்தார்.
38. அந்த நேரத்தில், மற்றொரு ஊழல் கொண்ட கருத்து ஹெல்கேசைட் [பண்டைய யூத இனத்தவரைக் கொண்ட ஒரு பகுதியினர்] பிரிவினர் மத்தியில் ஒரு மதவிரோதக் கொள்கை உருவானது. அது தொடங்கிய வேகத்திலேயே கிள்ளியெறியப்பட்டது. சங்கீதம் 82 பற்றிய பொது உரையில் ஓரிஜன் அதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
சமீபத்தில், திருச்சபை அமைப்புகளுடன் மோதிய ஹெல்கேசைட் பிரிவினர் என்று அழைக்கப்படுபவர்கள் கடைபிடிக்கும் கடவுளற்ற மற்றும் இழிவான கருத்தை ஒருவர் பெருமையுடன் ஆதரித்துள்ளார். நான் அவர்களின் தவறை உங்கள் நன்மைக்காக முன்வைக்கிறேன். அதனால் அது உங்களை தீய வழியில் இட்டுச் செல்லாது. பழைய ஏற்பாடு மற்றும் சுவிசேஷங்களின் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்தி, வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு நிருபத்தின் பகுதியையும் அது நிராகரிக்கிறது. அத்தோடு அப்போஸ்தளரான பவுலை முழுவதுமாக நிராகரிக்கிறது. [உண்மையை] மறுப்பது ஒரு பொருட்டல்ல என்றும், வற்புறுத்தலின் கீழ் ஒரு விவேகமுள்ள நபர் தனது வாயால் அதை மறுத்துரைக்கக்கூடும் என்றும், ஆனால் அவரது இதயம் அவ்வாறு செய்யாது என்றும் அது கூறுகிறது. அவர்கள் விண்ணகத்திலிருந்து விழுந்ததாகக் கூறும் ஒரு புத்தகத்தையும் முன்வைத்தார்கள். அதை கேட்டு, அதை வாசித்து அதை நம்புகிற எவரும் பாவ மன்னிப்பைப் பெறுவார்கள் – அது எப்படியும் கிறிஸ்து இயேசுவிடம் நாம் பெற்ற மன்னிப்பைப் போன்றதாக அமையப்போவதில்லை.
டெசியஸின் ஆட்சியின் கீழ் இடம்பெற்ற கொடுமைகள்
39. பிலிப்பினுடைய ஏழு வருட ஆட்சிக்குப் பின் டெசியஸ் பதவியேற்றார். பிலிப் மீதான அவரது விரோதத்தின் காரணமாக, அவர் திருச்சபைக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டார். அதில் ஃபேபியன் உரோமில் வேதசாட்சியத்தின் மூலம் இறைபதம் எய்தியபின், கொர்னேலியஸ் ஆயராக நியமிக்கப்பட்டார்.
பாலஸ்தீனத்தில், ஜெருசலேம் நகரத்து ஆயர் அலெக்சாண்டர் மீண்டும் செசரியாவில் உள்ள ஆளுநரின் தீர்ப்பாயத்தில் ஆஜராகி, இரண்டாவது முறையாக தனது விசுவாசத்தை தைரியமாக ஒப்புக்கொண்டார். அதன் காரணமாக உடனேயே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் முதுமை காரணமாக நரைத்த முடியுடன் காணப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது புகழ்பெற்ற சாட்சிக்குப் பிறகு, அவர் சிறையில் உறங்கினார். மேலும் ஜெருசலேமின் ஆயரகத்தில் இருந்த மசாபனேஸ் (Mazabanes) அவருக்குப் பதில் வாரிசாக நியமிக்கப்பட்டார். அலெக்சாண்டரைப் போலவே அந்தியோக்கியாவில் பாபிலாஸ் சிறையில் இருந்து வெளியேறிய போது, ஃபேபியஸ் அங்குள்ள திருச்சபை நிர்வாகத்துக்குத் தலைவரானார்.
இவ்வாறு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளின் போது, அசுத்த ஆவியான சாத்தான், குறிப்பாக ஓரிஜனைக் குறிவைத்து, அவனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள அனைத்து ஆயுதங்களையும் கொண்டு தாக்கினான். அவர் பாதாள சிறையில் இரும்புக் கூட்டுக்குள் அடைபட்டு கிடந்தபோது கிறிஸ்துவின் இறைவார்த்தையை அவர் விடாப்பிடியாக விசுவாசித்ததை காரணமாக் கொண்டு, சங்கிலிகளையும், கைகால் விலங்குகளையும் சித்திரவதைகளையும் அனுபவிக்கும்படி செய்தான்.
நாளுக்கு நாள் விலங்கிடப்பட்ட அவரது கால்கள் நான்கு காலடி தூரம் விரிந்தன. ஆயினும், அவர் தீச்சுவாலைகளின் வெப்பத்தையும், அச்சுறுத்தல்களையும் அவரது எதிரிகளால் நிகழ்த்தப்பட்ட மற்ற எல்லா சித்திரவதைகளையும் தைரியமாக தாங்கினார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதைத் தவிர்க்க நீதிபதி துணிச்சலுடன் முயன்றபோது, அந்த முயற்சி முடிவுற்ற விதம் மற்றும் இறுதியாக அவர் சொன்ன செய்திகள், ஆறுதல் தேவைப்படுபவர்களுக்கான உதவிகள் போன்றன உண்மையாகவும் விரிவாகவும் எண்ணற்ற அவரது சொந்த கடிதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எகிப்தில் ஆயர் டியோனீசியஸின் அதிகாரபூர்வ விடுவிப்பு
40. டியோனீசியஸுக்கு என்ன நடந்தது என்பது ஜெர்மானஸுக்கு எதிரான அவரது கடிதத்தில் விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவர் தன்னைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
நான் கடவுளுக்கு முன் உண்மையாகப் பேசுகிறேன். நான் பொய் சொன்னால் அதை அவர் அறிவார். நான் என் சொந்த முயற்சியிலோ அல்லது கடவுளை விட்டு விலகியோ தப்பிக்க விரும்பவில்லை. அதற்கு முன்பே, டெசியஸின் கீழ் சித்திரவதைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டபோது, சபினஸ் உடனடியாக என்னை வேட்டையாட ஒரு ஃப்ருமென்டேரியஸை [உரோமைய இராணுவப் பிரிவு] அனுப்பினார். நான்கு நாட்கள் நான் அவருக்காக என் வீட்டில் காத்திருந்தேன். நான் மறைந்திருக்கிறேன் என்று அவர் நினைத்த இடமெல்லாம் தேடிச் சென்றாலும் – சாலைகள், ஆறுகள், வயல்வெளிகள் போன்ற எல்லா இடங்களிலும் தேடியும் – அவர் பார்வையிலிருந்து நான் மறைந்திருந்த காரணத்தால், நான் மறைந்திருந்த வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய இலக்கான நான், என் வீட்டிலேயே இருப்பேன் என்று அவர் நினைக்கவே இல்லை! நான்கு நாட்களுக்குப் பிறகு, கடவுள் என்னை வெளியேறும்படி கட்டளையிட்டபோது, அற்புதமான முறையில் இது சாத்தியமானாலும், சகோதர மக்கள், சிறுவர்கள் அவர்களோடு நானும் ஒன்றாகப் புறப்பட்டோம். இது தெய்வீக விசுவாசத்தின் மிகுதியால் நடந்தது என்பதை நாங்கள் சிலருக்கு உதவியாய் இருக்கிறோம் என்று நிரூபித்தபோது, பின்னர் நிகழ்ந்தவை இந்த அத்தியாயத்தை வேறு திசையில் கொண்டு சென்றது.
மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்த பிறகு, அந்த பயணத்தின் போது அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்:
சூரிய அஸ்தமனத்தின் போது நாங்கள் இராணுவ சிப்பாய்களால் பிடிக்கப்பட்டு தபோசிரிஸுக்குக் கொண்டு வரப்பட்டோம். ஆனால் திமோதி நல்லவேளையாக அங்கு இல்லாததால் அவர் பிடிபட வில்லை. பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீடு காலியாக இருப்பதைக் கண்டார். வீட்டைக் காவல் காக்கும் வேலையாட்கள் மூலம் நாங்கள் சிறைபிடிக்கப்பட்டோம் என்பதை அறிந்து கொண்டார். இப்போது கடவுளின் அற்புதமான கருணை வெளிப் பட்டது. திமோதி தப்பித்து ஓடியபோது, கிராமவாசிகளில் ஒருவர் அவரைச் சந்தித்து அவரது அவசரத்திற்கான காரணத்தைக் கேட்டார். அம்மனிதர் அந்த பகுதியில் இரவு முழுவதும் நடந்து கொண்டிருந்த ஒரு திருமண விருந்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார். அவர் உண்மையை அறிந்ததும், மேஜையில் சாய்ந்திருந்த விருந்தினர்களிடம் இதுபற்றித் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் கூட்டமாக எழுந்து, தங்களால் இயன்ற வேகத்தில் ஓடி வந்து, எங்களுக்குள் புகுந்து, எங்களைக் காத்துக் கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கிருந்தது உடனடியாக அகன்றுபோகும் அளவுக்கு பெரும் கூச்சலிட்டு ஒருவித கிலியை ஏற்படுத்தினர். வெறும் மெத்தையில் சாய்ந்திருந்த அவர்கள் எங்களை நோக்கி ஓடிவந்தபோது, கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களோ என்று முதலில் சந்தேகித்து, எனது படுக்கையில் இருந்தேன். என் கைத்தறி மேலாடையைத் தவிர நான் நிர்வாணமாகக் கிடந்தேன். அருகில் கிடந்த என் உடைகளை அவர்களுக்குக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை எழுந்து ஓடச் சொன்னார்கள். அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை அப்போது உணர்ந்தேன். எங்களைத் தனியாக விட்டு விடுங்கள் அல்லது எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால், என்னைக் கைப்பற்றியவர்கள் வருவதற்குள் என் தலையை வெட்டிக் கொன்றுவிடும்படி அவர்களிடம் கெஞ்சினேன். இதை நான் சொல்லிக் கூச்சலிடும் போது, அவர்கள் என்னை வலுக் கட்டாயமாக மேலே இழுத்தார்கள். இது என் தோழர்களுக்குத் தெரியும், ஆனால் நான் போராடி மீண்டும் தரையில் விழுந்தேன். பின்னர் அவர்கள் என் கைகளையும் கால்களையும் பிடித்து வெளியே இழுத்துச் சென்றார்கள். இதையெல்லாம் பார்த்தவர்கள் பின்தொடர்ந்தனர்: கேயுஸ், ஃபாஸ்டஸ், பேதுரு மற்றும் பவுல் ஆகியோர் என்னைக் கூட்டிக்கொண்டு கிராமத்திற்கு வெளியே சென்று கழுதையின் மீது ஏற்றி அந்த இடத்தைவிட்டு என்னைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.
டியோனீசியஸ் தன்னைப் பற்றிக் கூறிய விடயங்கள் அனைத்தும் மேற்கண்டவாறுதான் அமைந்திருந்தன.
அலெக்சாந்திரியாவின் வேதசாட்சிகள்
41. அந்தியோக்கியாவின் ஆயர் ஃபேபியஸுக்கு எழுதிய கடிதத்தில், டெசியஸின் கீழ் அலெக்சாந்திரியாவில் வேதசாட்சியத்தின் மூலம் இறையடி சேர்ந்தவர்களைப் பற்றி அவர் பின்வரும் விபரத்தை அளிக்கிறார்.
எங்களுக்கு எதிரான கொடுமைகள் ஏகாதிபத்திய ஆணையுடன் தொடங்கவில்லை. ஆனால் ஒரு வருடம் முழுவதும், அதற்கு முன்னதாகவும் இருந்தது. இந்த நகரத்தில் வசிக்கும் தீர்க்கதரிசி அல்லது படைப்பாளி அல்லது எவரோ ஒருவர், நகரவாசிகளின் மூடநம்பிக்கை என்ற தீச்சுவாலைகளை எரியவிட்டு நமக்கு எதிராக பிறமதவாதிகளை தூண்டிவிட்டு, நம்மீது கொண்டுள்ள இரத்தவெறி மட்டுமே உண்மையான மதம் என்று நம்ப வைத்தனர்.
முதலில், அவர்கள் மெட்ரஸ் என்ற முதியவரைப் பிடித்து, அவரைக் கடவுளை நிந்திக்கும்படி கட்டளையிட்டனர். அவர் மறுத்ததால், அவரைக் கட்டைகளால் அடித்து, முகத்திலும், கண்களிலும் கூரிய ஆயுதங்களால் குத்தி, புறநகர்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று அந்த மனிதனை கல்லெறிந்து கொன்றனர். பின்னர் அவர்கள் குயின்டா என்ற விசுவாசியை சிலைகள் வைக்கப்பட்டுள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபடும்படி கட்டாயப்படுத்தினர். அவள் வெறுப்புடன் மறுத்தபோது, அவள் கால்களைக் கட்டி, கரடுமுரடான பாதை வழியாக நகர் முழுவதும் இழுத்துச் சென்று, ஏற்கனவே இழுத்துச் சென்றதால் ஏற்பட்ட காயங்களுக்கு மேலாக, அவளை அடித்து, அதே இடத்தில் வைத்து கல்லெறிந்து கொன்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒரு குழுவாக விசுவாசிகளின் வீடுகளுக்கு விரைந்து சென்று, தங்கள் சொந்த அயலவரையே தாக்கி, கொள்ளையடித்து, சூறையாடினர். விலையுயர்ந்த பொருட்களைத் திருடி, விலையுயர்ந்த மர வேலைப்பாடுகளாலான பொருட்களை தெருக்களில் போட்டு தீயிட்டுக் கொளுத்தி பல்வேறு அட்டூழியங்களைப் புரிந்து, அந்த நகரம் எதிரிகளால் கைப்பற்றப்பட்ட ஒரு நகரத்தைப் போல் மாற்றியிருந்தனர். சகோதர நகரவாசிகள், படிப்படியாக அடிபணிந்து, தங்கள் உடைமைகளைக் கொள்ளை இடுவதை பொறுமையுடன் சகித்தார்கள். இந்த ஒரே ஒரு விதிவிலக்கு தவிர, இறைவனை மறுதலித்த எவரையும் பற்றி எனக்குத் தெரியாது.
அவர்கள் அந்த கண்ணியமனான வயது முதிர்ந்த கன்னியான அப்பல்லோனியாவைப் பிடித்துச் சென்று, அவளுடைய பற்கள் அனைத்தையும் உடைத்து, நகர மத்தியில் ஒரு சூளையை உண்டாக்கி, தேவனை நிந்தனை செய்ய மறுக்கும் பட்சத்தில், அவளை உயிருடன் எரித்துவிடுவதாக மிரட்டினர். அப்போது அவள் சிறிது அவகாசம் கேட்டாள். அவர்கள் அவகாசம் கொடுத்து அவளை விடுவித்ததும், அவள் ஆர்வத்துடன் நெருப்பில் குதித்து எரியுண்டு மரணித்தாள். அடுத்ததாக, அந்தக் கயவர்கள் செராபியனை அவரது சொந்த வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரைக் கடுமையான சித்திரவதையின் மூலம் அவரது அனைத்து உறுப்புகளையும் சிதைத்து, மேல் தளத்தில் இருந்து அவரைத் தூக்கி தலைகீழாக கீழே நிலத்தில் எறிந்தனர்.
சாலையையோ, நெடுஞ்சாலையையோ, குறுக்கு சந்தோ எதையுமே எம்மால் இரவிலோ, பகலிலோ பயன்படுத்த முடியாதிருந்தது: ஏனெனில் எங்கு பார்த்தாலும் வன்முறையாளர்கள் சுற்றித் திரிந்தனர். அவர்களின் கட்டளைப்படி தேவ நிந்தனையில் இணைந்துகொள்ளாதவர்களை இழுத்துச் சென்று எரித்துக் கொன்றுவிடுவோம் என்று எல்லா இடங்களிலும் அவர்கள் கூச்சல் இட்டுக்கொண்டே உலாவினர். இந்த நிலை [மிலேச்சத்தனமான நிகழ்வுகள்] நீண்ட காலமாக தீவிரத்துடன் தொடர்ந்தது. இருப்பினும், இந்த பரிதாபத்துக்குரிய மக்கள் கொந்தளிப்பு மற்றும் உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்பட்டனர். அவர்கள் எங்களுக்கு எதிராக வெளிப்படுத்திய கோபத்தை தங்களுக்கு எதிராகத் திருப்பினர். எங்கள் மீது கோபத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு நேரம் இருக்க வில்லை. அதனால் ஒரு கணம் நாங்கள் மீண்டும் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடியதாக இருந்தது. இருப்பினும், எங்களுக்கு சாதகமாக இருந்த ஆட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டது பற்றிய செய்தி விரைவில் பரவியது. தண்டனை குறித்த பயம் எங்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியது. உண்மையில், அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏறக்குறைய நமது இறைவன் தனது எச்சரிக்கும் வார்த்தைகளில் முன்னறிவித்ததைப் போலவே: “முடிந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களையும் வழிதவறச் செய்வார்கள்” (மத்தேயு 24:24). அந்த ஆணையைக் கேட்டு அங்கே இருந்த அனைவரும் பயத்தில் அஞ்சி நடுங்கினர்.
நன்கு பரிச்சயமானவர்களில் சிலர் பயம் காரணமாக தாமாகவே முன் வந்தனர். மற்றவர்கள் அரச பதவிகள், தொழில்சார் காரணங்களுக்காக பிரசன்னமாயினர். இன்னும் சிலர் அங்கு இருந்த கும்பல்களால் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அசுத்தமான, புனிதமற்ற பாதிக்கப்பட்ட மக்களை அணுகி அவர்களைப் பெயர் சொல்லி அழைத்தனர். அவர்களில் சிலர் தானாக முன்வந்து வேதசாட்சியாய் மரிக்கப் போவதில்லை என்பதால், சிலைகளுக்கு முன் பலி உயிர்களாய் பலிகொடுக்கப் படப் போகிறார்கள் என்று கூட்டத்தில் உள்ளவர்கள் கேலி செய்வதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். அப்போதுதான் அவர்கள் வேதசாட்சிகளாக மரணிப்பதற்கு அஞ்சும் கோழைகள் என்பது தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும், மற்றவர்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக உற்சாகமாக பலிபீடங்களுக்கு விரைந்தனர். இப்படியானவர்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே இரட்சிப்பை நாடுவார்கள் என்று கர்த்தர் மிகவும் துல்லியமாக எதிர்வுகூறி இருந்தார்.
எஞ்சியுள்ளவர்களில் சிலர் இந்த குழுக்களில் ஏதேனும் ஒன்றைப் பின்தொடர்ந்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு, நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே தங்கள் விசுவாசத்தைத் துறந்தனர். மற்றவர்கள் அவ்வண்ணமே தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கும் முன், சிறிது காலம் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தார்கள்.
இறைவனின் உறுதியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட தூண்கள் என்று கருதப்பட்ட மக்கள், அவரால் பலப்படுத்தப்பட்டு, தங்கள் தீவிர விசுவாசத்தின் காரணமாக சக்தியையும் சகிப்புத் தன்மையையும் பெற்று, அவரது இராச்சியத்திற்கு அற்புதமான வேதசாட்சிகளாக மிளிர்ந்தார்கள்.
இவர்களில் முதன்மையானவர் ஜூலியன், பாரிசவாதம் காரணமாக அவரால் நிற்கவோ நடக்கவோ முடியாது. அவர் மற்றும் இருவரால் கைத்தாங்கலாக நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவர்களில் ஒருவர் உடனடியாக [விசுவாசத்தை] மறுதலித்தார். மற்றையவர் பெயர் க்ரோனியன். ஆனால் யூனஸ் என்ற குடும்பப்பெயரைக் கொண்டவர். யூனஸ் முதியவர் ஜூலியனைப் போலவே இறைவனை ஏற்றுக் கொண்டார். அவர்கள் ஒட்டகத்தின் மீது ஏற்றி நகரம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். இது அங்கே சர்வ சாதாரணமாய் நடப்பது உங்களுக்குத் தெரியும். இறுதியாக மக்கள் முன்னிலையில் சுண்ணக்கல் சூளையில் இட்டு உயிருடன் எரியூட்டிக் கொல்லப்பட்டார்கள். அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது அருகில் நின்ற ஒரு இராணுவ சிப்பாய் வன்முறைக் கும்பல் ஆத்திரத்துடன் செய்த அவமதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தான். கடவுளின் துணிச்சலைக் கொண்ட போர்வீரன் பெசாஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பெரும் விசுவாசப் போராட்டத்தின் பின், தலை துண்டிக்கப்பட்டு கொல்லப் பட்டான். மற்றொருவர் மக்கர், அவர் லிபிய இனத்தவர், அவருடைய பெயருக்கு ஏற்றவாறு “ஆசீர்வதிக்கப்பட்டவராய்” சத்தியத்தை கடைபிடித்து வாழ்ந்துவந்தார். அவரை [விசுவாசத்தை] மறுதலிக்கச் செய்ய நீதிபதி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் எதிர்த்த படியால், அவர் உயிருடன் எரியூட்டிக் கொல்லப்பட்டார். இவர்கள் தவிர, எபிமாச்சஸ் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் நீண்ட சிறைவாசம் மற்றும் முட்கபிகளால் பிணைக்கப்பட்டு, சாட்டைகளால் அடியுண்டு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த பின்பு, சுண்ணக்கல் சூளையில் இட்டு கொல்லப்பட்டார்கள்.
அவர்களுடன் நான்கு பெண்களும் இருந்தனர். அம்மோனாரியன் என்பவர் ஒரு புனிதத் தன்மை வாய்ந்த கன்னி, நீதிபதியால் நீண்ட காலமாகவும் கொடூரமாகவும் சித்திரவதை செய்யப்பட்டாலும், அவர் தேவ நிந்தனை செய்யும்படி இட்ட கட்டளைகளை துச்சமாக மதிக்கிறவள் என்பதை முன்பே தெளிவுபடுத்தும் முகமாக, தன் வாக்குறுதிக்கு உண்மையாக இருந்தாள். அதன் காரணமாக அவள் தண்டனை மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். மற்றவர்கள் மெர்குரியா, ஒரு நேர்த்தியான வயதான பெண்மணி. மற்றையவள் பல குழந்தைகளின் தாயான டியோனிசியா. அவள் முற்று முழுதாக இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவள். அவர்கள் மீது சித்திரவதைகளைக் கட்டவிழ்த்து விட்டு, அப்போதும் அவர்களிடமிருந்து எவ்வித முடிவும் கிடைக்காமல் போனதாலும், அதன் காரணமாக அந்த குரூரதன்மை நிறைந்த ஆளுநர், இந்தப் பெண்களால் தோற்கடிக்கப்பட்டதில் ஏற்பட்ட அவமானம் காரணமாக, அவர்கள் மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்காமல், வாளால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமான அம்மோனாரியன் என்ற கண்ணியம் மிக்க பெண்மணி, ஒரு வேதசாட்சியாகத், தன்னைத்தானே மரணத்துக்கு அர்ப்பணித்தாள்.
எகிப்தியர்களான ஹீரோ, அட்டர் மற்றும் இசிடோர் போன்றோருடன் சுமார் பதினைந்து வயது மதிக்கத்தக்க டியோஸ்கோரஸ் என்ற சிறுவனுக்கு எதிராகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. [நீதிபதி] அவன் சிறுவயதினனாக இருந்தபடியால், அவனை எளிதாக பயமுறுத்தி பணியச் செய்து விடலாமென்ற குறுகிய நோக்கத்தோடு, முதலில் வாய்வார்த்தைகள் மூலம் அவனைத் தூண்டி, பின்னர் சித்திரவதைகள் பற்றிக் கூறி வற்புறுத்த முயன்றார். ஆனால் சிறுவனான டியோஸ்கோரஸ் கீழ்ப்படியவோ விட்டுக் கொடுக்கவோ இல்லை. அவனோடிருந்த மற்றவர்களை அந்த மிலேச்சத்தனமான நீதிபதியின் கட்டளைக்கிணங்க, காட்டுமிராண்டித்தனமாக துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அப்போதும் அவர்கள் உயிர் பிரியாதிருந்தபோது தீச்சுவாலைக்குள் இட்டுக் கொல்லப்பட்டனர். எவ்வாறாயினும், டியோஸ்கோரஸ் பொதுவில் மிகவும் துணிச்சலாகப் போராடினார். மேலும் தனிப்பட்ட முறையில் கேள்விகளுக்கு ஞானமான பதில்களை அளித்தார். ஆகவே அவர் விடுவிக்கப்பட்டார். அவர் தனது இளவயது காரணமாக விடுவிக்கப்பட்டு, மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள ஒரு கால இடைவேளையை அனுமதித்தார் என்று கூறினார்.
கொள்ளையர்களுடன் தொடர்பு கொண்டதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு எகிப்தியர் தான் நெமிஷன் என்பவர். நூற்றுவர் தலைவருக்கு முன்பாக அந்த அபத்தமான குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு தான் சுற்றவாளி என்று நிரூபணமான பிறகு, அவர் ஒரு கிறிஸ்தவர் என்று அறிந்தமையால், கண்டிக்கப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஆளுநரின் முன் ஆஜர் செய்யப் பட்டார். அப்பட்டமான அநீதியான தீர்ப்பு காரணமாக அவர் கொள்ளையர்களை விட இரண்டு மடங்கு சித்திரவதைகள் மற்றும் கசையடிகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் காரணமாக அவரை எரியூட்டி, அவர் கிறிஸ்துவைப் போல மரணித்தார் என்று போலியாக அவரைக் கௌரவித்தார்.
இராணுவ வீரர்களான அம்மோன், ஜெனோ, டோலமி, இன்ஜெனுஸ் போன்றவர்களோடு ஒரு முதியவரான தியோபிலஸ் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவினர் நீதிமன்றத்தின் முன் நின்று கொண்டிருந்தனர். அப்போது விசாரணையை எதிர்நோக்கி இருந்த ஒரு கிறிஸ்தவர், [கிறிஸ்துவை] மறுதலிக்கும் கட்டத்தில் இருந்தபோது, அவர்கள் தங்கள் பற்களை நறநறவென்று கடித்து, கண்ணை உருட்டி, அவரை நோக்கி கோபமாக சைகை செய்தார்கள். அனைவரும் அவர்களை நோக்கித் திரும்பிய போதும், எவரும் வந்து அவர்களைப் பிடிக்கும் முன், அவர்கள் கைதிகளின் கூண்டிற்குள் ஏறி, தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொன்னார்கள். அப்போது ஆளுநரும் அவரது மதிப்பீட்டாளர்களும் அவர்களைக் கண்டு பயந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர்காலத்தில் தாங்கள் முகம் கொடுக்கப் போகும் நிந்தனைகளை தைரியமாக எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர். தங்கள் சாட்சியை குறித்து பெருமிதம் கொண்ட அவர்கள், நீதிமன்றத்தை விட்டு பெருமையுடன் வெளியேறி வெற்றிப் பேரணி நடத்தினர்.
42. நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள பலர் மதவிரோத கும்பல்களால் துவம்சம் செய்யப்பட்டனர். அவர்களது வன்கொடுமைகளுக்கு பின்வரும் இந்த ஒரு உதாரணம் போதும். இஸ்கிரியன் அவரை பலியிட உத்தரவிட்ட ஆட்சியாளர்களில் ஒருவரின் முகவராக இருந்தார். அவர் மறுத்தபோது, அவர் அவரை அவமானப்படுத்தினார். அதற்கும் அசையாது அவர் உறுதியாய் நின்றபோது, அவர் மீது அவர் துஷ்பிரயோகம் மேற்கொண்டார். அவர் இன்னும் விடாப்பிடியாக இருந்தபோது, அவர் ஒரு பெரிய கூரிய தடியை எடுத்து, அதை அவரது முக்கிய உடல் உறுப்புகளின் வழியாக செலுத்தி, அவரைக் கொன்றார்.
பாலைவனங்களிலும், மலைகளிலும் அலைந்து திரிந்து, பசி, தாகம், குளிர், நோய் ஆகியவற்றால் செத்து மடிந்து, கொள்ளையர்களால் சூறையாடப் பட்டு, காட்டு மிருகங்களால் தாக்கப்பட்ட மக்களைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா? இதிலே உயிர்பிழைத்தவர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டு மதிக்கப்படுகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம், நீலோபோலிஸின் மிகவும் வயதான ஆயரான ஷரேமொன், தனது மனைவியுடன் அரேபியாவின் மலைப்பாங்கான பிரதேசத்தை நோக்கித் தப்பி ஓடினார். அவர் திரும்பி வரவில்லை. ஒரு முழுமையான தேடலுக்குப் பிறகும், சகோதர நகரவாசிகள் அவர்களையோ அல்லது அவர்களின் எச்சங்களையோ கண்டுபிடிக்கவில்லை. பலர் அந்த பகுதியில் வாழ்ந்த காட்டுமிராண்டித்தனமான நாடோடிகளால் அடிமைப்படுத்தப் பட்டனர். அவர்களில் சிலர் பெரும் தொகை பணம் செலுத்தி மீண்டு வந்தனர். மற்றவர்கள் பற்றி இன்றுவரை எந்த விதத் தகவல்களும் இல்லை.
நம்மிடையே உள்ள வேதசாட்சிகள் கூட, குற்றம் சாட்டப்பட்ட தங்கள் சகோதர விசுவாசிகள் தியாகத்துக்கான காரணிகளைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, இப்போது கிறிஸ்துவின் சேவகர்களாகவும் அவருடைய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் மனமாற்றம் மற்றும் அவர்கள் தீர்ப்பளித்த மனந்திரும்புதல், அவரது மனந்திரும்புதலை விட ஒரு பாவியின் மரணத்தைக் கேட்பதில் மகிழ்ச்சியுறாத எவருக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆகவே, அவர்கள் செபங்களிலும் விருந்துகளிலும் நட்புறவு கொள்வதற்கு ஏற்ப, “பார்வையாளர்களாக” அவர்களை வரவேற்று மீண்டும் சபையில் சேர்த்தனர். அப்படியானால், சகோதரர்களே, இந்த விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் என்ன? நாம் என்ன செய்ய வேண்டும்? அவர்களின் கருத்தைப் பகிர்ந்துகொண்டு அவர்கள் பரிதாபப்பட்டவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வோமா? அல்லது அவர்களின் முடிவை நியாயமற்றதாகக் கருதி அந்த நடைமுறையை முறியடிப்போமா?
நோவாடிய பிரிவினரின் மதவிரோதக் கொள்கை
43. கொடுமைகள் இழைக்கப்பட்டவேளையில், பலவீனமாகவர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களின் பிரச்சினையை டயோனிசியஸ் எழுப்பியது மிகவும் பொருத்தமானது. ஏனெனில் உரோமையத் திருச்சபையின் மறைமூப்பரான நோவாடஸ் [நோவாடியன்] திருச்சபை நிர்வாகத்தினரின் மீது அவமதிப்பு கொண்டிருந்தார்: உண்மையான பாவசங்கீர்த்தனம் மற்றும் மனந்திரும்புதலில் அவர்கள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்தாலும், இரட்சிப்பின் மீது அவர்களுக்கு இனி நம்பிக்கை இல்லை. ஆகவே அவர் ஒரு புதிய பிரிவை ஏற்படுத்தி அதற்குத் தலைவராக ஆனார். அதன் உறுப்பினர்கள் தங்களை “தூய்மையானவர்கள்” என்று பெருமையுடன் அழைத்தனர். அதற்கு பதிலடியாக, உரோமில் அறுபது ஆயர்கள் கொண்ட ஒரு பெரிய ஆயர் கூட்டம் மற்றும் அதிக எண்ணிக்கையிலான மறைமூப்பர்கள், மற்றும் குறவர்கள் கூட்டப்பட்டது. அதிலே கலந்துகொண்ட சபை நிர்வாகிகள் மாகாணங்களில் உள்ள மதகுருமார்கள் என்ன செய்ய வேண்டும் என்று தனித்தனியாக அவர்களுக்கு அறிவுறுத்தினர். அதே கூட்டத்தில், நோவாடஸ் மற்றும் அவரது திமிர்பிடித்த தோழர்கள் மற்றும் சகோதர மக்கள் மீதான அவரது வெறுப்பையும் மனிதாபிமானமற்ற தன்மையையும் ஆதரித்த அனைவரையும் திருச்சபையை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் என்று கருத வேண்டும் என்ற ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தனர். ஆனால் இவர்களின் சூழ்ச்சிக்குள் விழுந்த சகோதரர் மக்களுக்கு மனந்திரும்புதல் என்ற மருந்தைக் கொடுத்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று ஏகமனதாக ஆணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
உரோமைய ஆயர் கொர்னேலியஸிடமிருந்து அந்தியோக்கியாவின் ஆயர் ஃபேபியஸுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் என்னிடம் உள்ளது. நான் உரோமைய ஆயர் பேரவை மற்றும் இத்தாலி, ஆபிரிக்கா மற்றும் அதை ஒட்டிய பிராந்தியங்களில் உள்ள மற்றவர்கள் எடுத்த முடிவுகள் குறித்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்தேன்; மற்றும் மற்றொரு லத்தீன் மொழியில் எழுதப்பட்ட அறிக்கையில், சிப்ரியன் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள அவரது சிநேகிதர்கள், விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையும், மதவெறியின் தலைவர் மற்றும் அவருடன் தவறு செய்த அனைவரையும் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து, வெளியேற்றுவது பொருத்தமானது என்பதையும் தெளிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆயர் சபையின் தீர்மானங்கள் பற்றிய கொர்னேலியஸின் மற்றொரு கடிதமும், நோவாடஸின் நடத்தை பற்றிய மூன்று கடிதங்களில் ஒரு கடிதமும் இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து என்னால் மேற்கோள் காட்ட முடியும். ஃபேபியஸுக்கு நோவாடஸின் குணாதிசயங்களை எடுத்துக் காட்டும் நோக்கோடு, கொர்னேலியஸ் பின்வருமாறு எழுதுகிறார்:
இந்த அற்புதமான தோழர் நீண்ட காலமாக ஆயர் பதவியை நாடி இருந்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், ஆரம்பத்தில் மனந்திரும்புதலுக்கு உள்ளானவர்கள் அவரை ஆதரித்தார்கள் என்ற கூற்றுடன் தனது முட்டாள்தனத்தை மறைத்துவிட்டார். எங்கள் மறைமூப்பர்களில் ஒருவரான மாக்சிமஸ் மற்றும் அர்பன் – இருவரும் இரண்டு முறை விசுவாசத்தை ஒப்புக்கொள்வதில் உயர்ந்த புகழைப் பெற்றனர் – அதே போல் சிடோனியஸ் மற்றும் செலரினஸ், அவரது விசுவாசம் அனைத்து சித்திரவதைகளையும் தாங்க அவரது உடல் சக்திமயமானது. மேலும் எதிரிகளை வெற்றி கொண்டார். இவர்கள் அவரை நன்றாகக் கணித்து அவரது போலித்தனம், பொய்ச் சாட்சியம், பொய்கள், சமூகவிரோதத் தன்மை மற்றும் ஓநாய்குணம் போன்றவற்றைக் கண்டறிந்து அவர்கள் புனித திருச்சபைக்கு மீண்டனர். அவர் மறைத்து வைத்திருந்த அனைத்து அழுக்கு தந்திரங்களையும், சில ஆயர்கள், மறைமூப்பர்கள் மற்றும் சாதாரண மனிதர்கள் முன்னிலையில் அம்பலப்படுத்தினர். இந்த துரோகியான தீங்கிழைக்கும் மனித மிருகத்தின் செல்வாக்கை நம்பி உண்மையான திருச்சபையை விட்டு வெளியேறியதற்காக மனம் வருந்தினர்.
என் அன்பான சகோதரர்களே! ஒரு குறுகிய காலத்தில் எப்படிப்பட்ட ஒரு அசாதாரண மாற்றம் அவருக்குள் வந்தது என்பது வியப்பாக இருக்கிறது! ஆயர் பதவியை ஒருபோதும் நாடமாட்டேன் என்று ஆணித்தரமாக சத்தியம் செய்த இந்த அதிசய நபர், திடீரென்று அதிசயிக்கத்தக்க வகையில் முன்னாள் ஆயராகத் தோன்றினார். திருச்சபைக் கோட்பாட்டின் படி இந்த போலி செயல்வீரர், மேலிருந்து அவருக்கு வழங்கப்படாத ஆயர் பதவியைப் பலவந்தமாகப் பறிக்க முயற்சிக்கையில், தங்கள் சொந்த இரட்சிப்பைக் கைவிட்ட இரண்டு சிநேகிதர்களைத் தேர்ந்தெடுத்து, இத்தாலியின் தொலைதூர பகுதிக்கு அனுப்பி, அங்கே இருந்த மூன்று கல்வி அறிவற்ற தாழ்மையான எண்ணம் கொண்ட ஆயர்களை வஞ்சித்தார். அவர்களை உரோம் நகருக்கு விரைவாக வருமாறும் அங்கே உருவாகிய கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியஸ்தம் செய்வதில் மற்ற ஆயர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களை வற்புறுத்தி அழைத்தார். அவர்கள் உரோமுக்கு வந்ததும், அயோக்கியர்களின் தந்திரங்களைச் சமாளிக்க முடியாத அளவுக்கு ஏமாந்து போனார்கள். அத்தோடு வந்தவர்களை மதுவருந்தச் செய்து, அவர்களைப் போலவே இடையூறு விளைவித்தவர்களால் தடுத்து வைக்கப்பட்டனர்.
இவை நடந்த பத்தாவது மணி நேரத்தில், அவர்கள் விளைவுகளால் நோய்வாய்ப்பட்டபோது, ஒரு போலியான, தவறான அணுகுமுறை மூலம் அவரை ஆயராக நியமிக்க அவர்களை கட்டாயப்படுத்தினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆயர்களில் ஒருவர் தனது தவறை கண்ணீருடன் ஒப்புக்கொண்டு திருச்சபை வரம்புக்கு மீண்டும் திரும்பினார். அங்கிருந்த அனைத்து பாமர மக்களும் அவர் சார்பாக பரிந்து பேசியதால், அவரை ஒரு சாதாரண மனிதராக மீண்டும் இணைத்துக்கொண்டோம். மற்ற இருவரைப் பொறுத்தவரை, நாங்கள் அவர்களை இவர்களுக்குப் பின் வரக்கூடிய வாரிசுகளாக மாற்றினோம்.
இந்த “நற்செய்தியின் வீரனுக்கு”, ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் ஒரே ஒரு ஆயர் மட்டுமே இருக்க முடியும் என்பது பற்றிக் கூடத் தெரியவில்லை. அதிலும் அவர் தான் எல்லாம் அறிந்தவன் என்று காட்டிக்கொள்வதற்காக, நாற்பத்தாறு மறைமூப்பர்கள், ஏழு திருத்தொண்டர்கள், ஏழு துணை திருத்தொண்டர்கள், நாற்பத்தி இரண்டு உதவியாளர்கள், ஐம்பத்திரண்டு பேயோட்டுபவர்கள், வாசகர்கள், மற்றும் வாயிற்க்காவலர்கள், மற்றும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட விதவைகள் மற்றும் கஷ்டப்படும் மக்கள் – அனைவரும் சர்வ வல்லவரின் அருளாலும் அன்பாலும் ஆதரிக்கப் பட்டனர். ஆயினும்கூட, கடவுளின் அருட்கொடையால் வளர்ந்து வரும் இந்த பெரிய மற்றும் அவசியமான எண்ணிக்கையால் அல்லது எண்ணற்ற பாமர மக்களால் கூட அவரை அத்தகைய விசர்க்குணத்தில் இருந்து திருச்சபை வரம்புகளுக்குள் திரும்ப அழைக்க முடியவில்லை.
அவர் ஏன் ஆயர் பதவிக்கு ஆசைப்பட்டார்? அவர் திருச்சபை வட்டாரத்தில் வளர்க்கப்பட்ட காரணத்தாலா? அல்லது திருச்சபை சார்பாக ஆபத்தான மோதல்களைக் கையாண்டதாலா? இல்லவே இல்லை. அவர் உள்ளே நுழைந்து கணிசமான காலம் கடந்துவிட்ட பின்னர் சாத்தான் அவரை ஆட்கொண்டு ஆயர் ஆகவேண்டும் என்ற பேராசைக்குள் தள்ளினான். அதன் பின், பேயோட்டுபவர்கள் அவரைக் குணப்படுத்த முயன்றபோது, அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். மேலும் அவர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகக் கருதப்பட்டதால், அவர் படுக்கையில் படுத்திருந்தபோது அவர் மனமுடைந்து ஞானஸ்நானம் பெற்றார் – உண்மையில் அப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஞானஸ்நானம் பெற்றார் என்ற திகைப்பு ஏற்படத்தான் செய்கிறது. அவர் குணமடைந்த பிறகு, அவர் திருச்சபையின் மற்ற ஊழியங்களுக்குள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அல்லது ஆயர் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இவ்வாறான தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தவறினால் அவர் எப்படி பரிசுத்த ஆவியை பெற முடியும்?
கொடுமைகள் அரங்கேற்றப்பட்ட காலத்தில், கோழைத்தனம் மற்றும் உலக வாழ்க்கையின் மீதுள்ள இச்சையின் காரணமாக, அவர் தான் ஒரு மறைமூப்பர் என்பதை மறுத்துரைத்தார். ஆபத்தில் இருக்கும் தனது சகோதர விசுவாசிகளுக்கு உதவுவதற்காக, ஒரு மறைமூப்பராக இருந்து சேவையாற்ற வேண்டும் என்பதற்காக, தன்னை அடைத்து வைத்திருந்த அறையை விட்டு வெளியே வரும்படி இறை ஊழியர்கள் அவரை வற்புறுத்தியபோது, அவர் கோபமுற்று இனிமேலும் தான் ஒரு மறைமூப்பராக இருக்க விரும்பவில்லை என்று அறிவித்தார். அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம், அவர் ஒரு வேறு ஒரு தத்துவத்தை நேசித்து ஏற்றுக்கொண்டதாலேயே.
அதன் பின், ஆயரின் தயவில் மறைமூப்பராக விளங்கிய இந்த வினோதமான நபர் கடவுளின் திருச்சபையைக் கைவிட்டு வெளியேறினார். உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கையில் ஞானஸ்நானம் பெற்ற ஒருவரை ஆணைக்கு நியமிக்க முடியாது என்று அனைத்து மதகுருமார்களும் பல பாமர மக்களும் ஆட்சேபித்தனர். எனவே தான் ஆயர் இந்த நபரை நியமிக்க மீண்டும் அனுமதி கேட்டார்.
பின்னர் அவர் மற்றொரு விடயத்தை இணைத்துள்ளார். மனிதனின் பாவங்களில் மிக மோசமான பாவம் எதுவென்பது பற்றியது தான் அது:
அவர் பலிபீடத்தில் திவ்விய பூசைப்பள்ளியை நிறைவேற்றி, ஒவ்வொருவருக்கும் [நற்கருணை] வழங்கும்போது, அவர் அதை [அவர்களின் கைகளில்] வைத்து, அந்த கைகளை அவரது கைகளில் மூடி, துரதிஷ்டமாக அவரிடம் நற்கருணை பெற வந்தவர்களை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக பின்வரும் ஆணையை உரைக்கும் வரை அவர் பிடித்துக்கொண்டிருக்கும் கைகளை விடமாட்டார்: அது என்னவென்றால், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மீதும் சரீரத்தின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன். உங்களுக்காக நான் ஒருபோதும் கொர்னேலியஸ் பக்கம் போக மாட்டேன்” என்று கூறுவார். துரதிஷ்டம் மிக்க அந்த மனிதன் முதலில் தன்னைத்தானே நொந்துகொள்ளும் வரை அப்பத்தை வாயில் இடமாட்டான். மேலும் அவன் அப்பத்தைப் பெறும்போது “ஆமென்” என்று கூறுவதற்குப் பதிலாக, “நான் கொர்னேலியஸிடம் திரும்பிச் செல்லமாட்டேன்….” என்று பதிலளிக்க நிர்ப்பந்திக்கப்படுவான்.
இருப்பினும், சகோதர விசுவாசிகள் நாளுக்கு நாள் அவரை விட்டு வெளியேறி உண்மையான திருச்சபை வரம்புகளுக்குள் திரும்புவதால், இப்போது அவர் முற்றாகக் கைவிடப்பட்டு பாழடைந்த ஒரு கட்டிடத்தைப் போலானார். சமீபத்தில் நம்மிடையே ஒரு அற்புதமான சாட்சியத்தை வழங்கிய ஆசீர்வதிக்கப்பட்ட வேதசாட்சியான மோயீசன் உயிருடன் இருந்தபோது, இவரது பைத்தியக்காரத்தனத்தை கண்டு, அவருடன் இருந்த அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டார். மேலும் அவருக்கு நன்கு பரிச்சயமான ஐந்து மறைமூப்பர்களும் திருச்சபை வட்டாரங்களில் இருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டார்.
கடிதத்தின் முடிவில், நோவாடஸின் முட்டாள்தனத்தைக் கண்டித்து, உரோமில் நடந்த ஆயர்களின் கூட்டத்தில் அவர் பட்டியல் ஒன்றை சமர்ப்பித்தார். அதில் நோவாடஸின் மிலேச்சத்தனத்தைக் கண்டனம் செய்தோரின் பெயர்களையும் இருப்பிடங்களையும் குறிப்பிட்டிருந்தார். உரோமில் இல்லாதவர்கள், ஆனால் இப்போது குறிப்பிடப்பட்டவர்களின் முடிவை எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டவர்கள் அனைவரும் பெயரிடப்பட்டனர். அதே போல் அவர்கள் எங்கிருந்து எழுதினார்களோ அந்த நகரங்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. அந்தியோகியாவின் ஆயர் ஃபேபியஸுக்குத் தெரியப்படுத்த கொர்னேலியஸ் அவர்களால் எழுதப்பட்டவை தான் இவை.
மனந்திரும்புதல் குறித்து டியோனீசியஸ் கூறியவை
44. இதே ஃபேபியஸ் [நோவாடிய பிரிவைச் சேர்ந்தவர்] பிளவை நோக்கிச் சாய்ந்தபோது, அலெக்சாந்திரியாவின் டியோனீசியஸ், ஃபேபியசிடம் மனந்திரும்புதல் மற்றும் அங்கே சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பகாரமான நிகழ்வுகள் பற்றி விரிவாகப் பேசினார். அவர் பின்வரும் ஆச்சரியம் கொள்ளத்தக்க விளக்கங்களை இணைத்துள்ளார்.
செராபியன் என்பவர் ஒரு வயதான விசுவாசி. அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை குற்றமற்றவராகவும், நிரபராதியுமாக வாழ்ந்தார். ஆனால் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது காலமானார். அவர் மன்னிப்புக்காக பலமுறை இறைஞ்சினார். ஆனால் எவரும் அவருக்கு செவிசாய்க்க வில்லை: அவர் இறுதியாக ஒரு தியாகத்தை செய்ய எண்ணினார். அவர் நோய்வாய்ப்பட்டு மூன்று நாட்கள் படுக்கையிலேயே இருந்தார். நான்காம் நாள் எழுந்ததும் தனது பேரனை தனது கட்டிலுக்கு அருகே வரும்படி அழைத்தார்.
“மகனே, எவ்வளவு காலம் என்னை உயிருடன் வைத்திருப்பதாக உத்தேசம்?” என்று அவர் கேட்டார். “என்னை சீக்கிரம் போக விடுங்கள். போய் மறைமூப்பர் ஒருவரை அழைத்து வா” என்று வேண்டினார். இதையடுத்து அவர் மீண்டும் மௌனித்துப் போனார். அந்த சிறுவன் மறைமூப்பரை அழைத்துவர ஓடினான். ஆனால் இரவு நேரமாகிவிட்டதாலும் அந்த மறைமூப்பர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாலும் அவரால் வரமுடியவில்லை. இருப்பினும், இறக்கும் தறுவாயில் உள்ள எவரும் பாவமன்னிப்பு பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் பட்சத்தில் – குறிப்பாக அவர்கள் முன்னொரு சந்தர்ப்பத்தில் இதைத் தேடி இருந்தாலும் கூட – அவர்கள் நோய்வாய்ப் பட்டவர்களை பாவத்தில் இருந்து விடுவிக்கும் நம்பிக்கையுடன் செல்ல வேண்டும் என்று நான் கட்டளை இட்டிருந்தேன். அப்போது அவர்கள் மனநிறைவுடன் இறைவனடி சேர்வார்கள் என்றும் கூறியிருந்தேன். அப்போது அவர் சிறுவனிடம் நற்கருணையின் ஒரு பகுதியைக் கொடுத்து, ஊறவைக்கச் சொன்னார். அது முதியவரின் வாயில் துளித்துளியாக விழுபடி இருக்கவேண்டும் என்று கூறி அனுப்பினார். சிறுவன் அதைக்கொண்டு வந்தவுடன், செராபியன் மீண்டும் எழுந்து, “நீ இங்கிருந்து போன குழந்தை அல்லவா? என்று ஆவலுடன் கேட்டார். அதற்கு அந்த சிறுவன், மறைமூப்பரால் வரமுடிய வில்லை, ஆனால் அவர் சொன்னபடி நீங்கள் சீக்கிரம் செய்தபின் என்னைப் போக விடுங்கள்” என்றார். சிறுவன் [நற்கருணையை] ஊறவைத்து, அதை அவரது வாயில் சொட்டு சொட்டாய் கொடுத்தான். அவர் நற்கருணையை விழுங்கியதும் இறந்து விட்டார். அவர் விடுதலை பெறும் வரை அவர் தெளிவாக உயிருடன் இருக்கவில்லையா? மேலும், அவரது பாவம் கழுவப்பட்டு அவரது அனைத்து நற்செயல்களுக்காகவும் அவர் அங்கீகரிக்கப்பட வில்லையா?
டியோனீசியஸ் எழுதிய ஏனைய கடிதங்கள்
45. உரோமைய ஒற்றுமையை சீர்குலைக்க அவர் நடவடிக்கை எடுத்த போது நோவாடஸுக்கு டியோனீசியஸ் எழுதிய கடிதத்தின் மாதிரிகளை பார்ப்போம். நோவாடஸ் சில சகோதரர்களின் வற்புறுத்தல் காரணமாக அவரது மனமாற்றம் மற்றும் பிளவு குறித்து குற்றம் சாட்டப்பட்டார்:
சகோதரர் நோவாடியனுக்கு டியோனீசியஸ் எழுதுவது, எனது வாழ்த்துகள் உரித்தாககக்கடவதாக. நீங்கள் கூறுவது போல் உங்கள் விருப்பத்துக்கு மாறாக நீங்கள் வழிநடத்தப்பட்டிருந்தால், நீங்கள் விருப்பத்துடன் பின்வாங்குவதன் மூலம் அதை நிரூபிக்க முடியும். தேவேனின் திருச்சபையில் உட்பிரிவினையையும் வேதசாட்சியத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அங்கே எழக்கூடிய எத்தனை பெரிய பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை நாம் தாங்கிக்கொள்வதே சாலவும் சிறந்தது. உருவ வழிபாட்டைத் தவிர்ப்பது அதைவிட மகத்துவம் நிறைந்தது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், உருவ வழிபாட்டு விடயத்தில், ஒருவர் தனது சொந்த நலன் கருதி மட்டுமே வேதசாட்சியத்தை ஏற்றுக்கொள்கிறார். அதேநேரம், தேவேனின் திருச்சபையில் உட்பிரிவினையையும் வேதசாட்சியத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அங்கே எழக்கூடிய எத்தனை பெரிய பிரச்சினைகளையும் முழுமனதோடு சகித்துக்கொள்பவர், முழுத் திருச்சபையின் நலனுக்காகவும், அதன் மகிமைக்காகவும் தானே முன்வந்து வேதசாட்சியத்தைத் தழுவிக் கொள்கிறார். நீங்கள் இப்போது கூட சகோதர மக்களை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடிந்தால், உங்கள் வீழ்ச்சியை விட உங்கள் மீட்பே அதிகமாக இருக்கும். இது முந்தையவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாராட்டுக்க்களை பின்தள்ளி அதை மாற்றியமைத்து விடும். ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்றால், நீங்கள் அவர்களை வற்புறுத்தவோ அவர்களது மனங்களை மாற்றவோ சக்தியற்றவராக இருந்தால், எந்த வகையிலும் உங்கள் சொந்த ஆன்மாவைக் காப்பாற்றும் நிலையில் இருந்து கொஞ்சமும் விலகாதிருங்கள். நீங்கள் நலமாக இருக்கவும், இறைவனின் சாந்தியைப் பெற்றுக்கொள்ளவும் நான் பிரார்த்திக்கிறேன்.
46. அவர் எகிப்தியர்களுக்கு மனந்திரும்புதல் குறித்து ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் பாவத்தின் அளவுகளை மேற்கோள் காட்டி, மகிமையை இழந்தவர்கள் பற்றிய தனது கருத்துக்களை கூறியுள்ளார். அவர் ஹெர்மோபோலிஸின் ஆயரான கொலனுக்கும், அலெக்சாந்திரியாவில் உள்ள தனது சொந்த மக்களுக்கும், விசுவாசிகளுக்கும் அறிவுரை கூறி எழுதப்பட்ட ஒரு தனிப்பட்ட கடிதம், இன்னும் காணப்படுகிறது. ஏனைய எஞ்சியிருக்கும் கடிதங்களில் வேதசாட்சியம் குறித்து ஓரிஜனுக்கு எழுதப்பட்ட கடிதமும் அடங்கும். அவர் மனந்திரும்புதலைப் பற்றிக் கடிதங்களை லாவோடிசியாவின் கிறிஸ்தவர்களுக்கும் அங்கு பதவியில் இருந்த ஆயர் தெலிமிட்ரஸ், ஆர்மேனியாவின் ஆயர் மெருசேன்ஸ் ஆகியோருக்கும் எழுதி இருந்தார். இவை அனைத்திற்கும் மேலாக, நோவாடஸுக்கு எதிரான கடிதம் அவர் கரங்களுக்குக் கிட்டிய பிறகு, அவர் உரோமின் கொர்னேலியஸுக்கு அதுபற்றி எழுதினார். இதில், சிலிசியாவில் உள்ள டார்சஸின் ஆயர் ஹெலினஸ், அவருடன் கப்படோசியாவில் இருந்த ஃபிர்மிலியன் மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்த தியோக்டிஸ்டஸ் ஆகியோரால், நோவாடஸின் பிளவை வலுப்படுத்த முயற்சித்த சிலர் அந்தியோக்கியாவில் உள்ள ஆயர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும், அவர் இறந்த பிறகு, ஃபேபியஸின் இடத்தில் அந்தியோக்கியாவின் ஆயராக டெமெட்ரியன் நியமிக்கப்பட்டதை அறிந்ததாக அவர் கூறினார். அவர் ஜெருசலேம் ஆயரையும் பற்றி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “அலெக்சாண்டர் என்ற அந்த அற்புதமான மனிதர் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் அவர் இப்போது ஆசீர்வதிக்கப்பட்ட நித்திய இளைப்பாற்றிக்குள் சங்கமித்துவிட்டார்.”
இதற்கு அடுத்ததாக, ஹிப்போலிட்டஸ் என்பவர் மூலமாக உரோமையர்களுக்கு டியோனிசியஸ் எழுதிய கடிதம். அதற்கு மேலதிகமாக, அவர் சமாதானம் குறித்து மற்றொரு கடிதத்தையும் அவர்களுக்கு எழுதினார். அவரது மூன்றாவது கடிதத்தில், மனந்திரும்புதல் குறித்தும், மற்றொரு கடிதத்தில், குற்றங்களை ஒப்புக்கொள்ளும், ஆனால் அதேவேளை, நோவாடஸின் கருத்துக்களை இன்னும் ஆதரிப்பவர்களுக்கு எழுதினார். அவர்கள் திருச்சபைக்குள் மீண்டும் வந்த பிறகு, அவர்கள் மேலும் இரண்டு கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இவைபோல் அவர் இன்னும் பலவற்றையும் பற்றி எழுதினார். இன்றுவரை அவரது ஆக்கங்களைப் படிப்பவர்களுக்கு மிகவும் அறிவுபூர்வமான ஒரு களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
யூசெபியஸின் தொலைநோக்குப் பார்வை
கிறிஸ்துவ வரலாற்றின் முதல் மூன்று நூற்றாண்டுகளில், அவர் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவருக்கு மிகுந்த கௌரவத்தை அளித்ததுடன், அவரும் அவரது அன்பான போதகர் பொம்பிலஸும் தங்கள் ஆசான் கோட்பாடு சம்பந்தமான விமர்சனத்திற்கு உள்ளாவதைக் கண்டு சகிக்க முடியாதிருந்தனர். எனவே தான் அவர்கள் ஓரிஜனுக்கு ஆதரவாக எழுதினார்கள். அது திருச்சபை வரலாற்றையும் உள்ளடக்கியுள்ளது. அதேவேளை, சிசேரியாவின் ஆயரான யூசிபியஸ் ஓரிஜனின் பூகோள வாரிசாக பணியாற்றினார். அதன் காரணமாக ஓரிஜன் தனது பிந்தைய வாழ்க்கையின் பெரும் பகுதியை சிசேரியாவில் கழித்தார். மேலும் அவர் குறிப்பிட்டுள்ள படி, நூலகத்தை ஓரளவு பெரிதாக விரிவுபடுத்தினார். அதில் இருந்து யூசிபியஸ் தனக்கு தேவையான பல விஷயங்களைக் கற்றறிந்து கொண்டார்.
யூசிபியஸ் தனது வரலாற்றில், மேற்கு மத்திய தரைக்கடல் பிராந்தியத்தை விட கீழைத்தேய நாடுகளின்பால் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இலத்தீன் கிறிஸ்தவமண்டலத்தை விட கிரேக்க கிறிஸ்தவமண்டலம் என்பது வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருந்தது. முந்தைய புத்தகங்களில் அவர் டெர்டுல்லியனை மேற்கோள் காட்டியிருந்தாலும், அவரைப் பற்றியோ அல்லது மற்ற இலத்தீன் திருச்சபையைச் சேர்ந்த திருத்தந்தையர்கள் பற்றியோ மிகக் குறைவாகவே குறிப்பிடுகிறார். 203 இல் கார்தேஜில் உள்ள அரைவட்டப் பொது மைதான அரங்கில் பெர்பெச்சுவா, ஃபெலிசிடாஸ் மற்றும் அவர்களது தோழர்களின் வேதசாட்சிய மரணங்கள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. நிச்சயமாக, அவர் அப்போஸ்தலிக்க வேதசாட்சிகள் மற்றும் உரோமைய ஆயர்களின் வாரிசுகளை மேற்கோள் காட்டுகிறார். மேலும் லியோன்ஸில் மற்றும் கவுல் போன்ற இடங்களில் அரங்கேறிய கொடூரங்கள், அத்தோடு இத்தாலியில் நோவாடியனின் மதவிரோத கொள்கை காரணமாக ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை குறித்து அதிக கவனம் செலுத்துகிறார். அவரது வரலாறு உரோமைய பேரரசர்களின் ஆட்சியை சுற்றியே வலம் வருகிறது. ஆனால் இந்தப் பக்கங்களில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளான எகிப்து, பாலஸ்தீனம், சிரியா மற்றும் ஆசியாவின் ஒரு சிறு பகுதி ஆகியன யூசிபியஸுக்கு மிகவும் பரிச்சயமான பகுதிகள் என்று கூறப்படுகிறது. கீழைத்தேயப் பேரரசு முழுவதும் மிக மோசமான துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்தது. இவற்றுள் எகிப்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, கீழைத்தேயங்கள் தான் ஆரம்பகால வரலாற்றில் காணப்பட்ட மிகப் பெரிய சிந்தனையாளர்கள் மற்றும் இறையியலாளர்கள் கடைபிடித்த “தத்துவார்த்த கொள்கையின்” தாயகமாக இருந்தது. இருப்பினும் டெர்டுல்லியன், பிற்காலத்தில் வாழ்ந்த ஓகஸ்டின் மற்றும் மேற்கின் “நடைமுறை” தத்துவத்தைப் பின்பற்றும் மற்றவர்கள் நிச்சயமாக திருச்சபைக் கோட்பாடு மற்றும் அதன் சிந்தனைக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
புத்தகம் 6 இன் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, செப்டிமியஸ் செவெரஸ் (193-211) தனது பிற்கால ஆட்சியின் போது இடையிடையே அரங்கேற்றப்பட்ட கொடுமைகளுக்கும் மற்றும் சித்திரவதைகளுக்கும் அவரைக் காரணகர்த்தாவாக சித்தரிக்க முடியுமா? யூசிபியஸ் ஆரம்பத்தில் எழுதியிருப்பதைப் பார்க்கும் போதும், “செவெரஸ் திருச்சபை மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள்” என்று அவர் தனது குறிப்புகளில் மேற்கோள் காட்டும்போதும், அவர் மேற்கண்டவாறு தான் நினைத்திருக்கக்கூடும் என்று தெளிவாகத் தெரிகிறது: இருப்பினும், விசித்திரமாக, பல வரலாற்றாசிரியர்களுக்கு இது குறித்து சந்தேகம் எழுந்தது. அவருடைய தலைமைத்துவத்தைப் பற்றி அவர்கள் விவாதிக்கும்போது, அவர் கிறிஸ்தவர்களை நடத்திய விதத்தை அடிக்கடி குறிப்பிடத் தவறிவிடுகிறார்கள். அதேநேரம், மற்றொரு பழங்கால எழுத்தாளரான ஏலியஸ் ஸ்பார்டியனஸ் என்பவர் தனது அகஸ்டன் பற்றிய வரலாற்றுப் பதிவுகளில், செவெரஸ் “கடுமையான தண்டனைகளை அறிவித்து, யூத மதத்திற்கு மாறுவதைத் தடைசெய்தார் மற்றும் கிறிஸ்தவர்கள் விஷயத்திலும் இதேபோன்ற தண்டனையை முன்மொழிந்தார்” என்று கூறுகிறார் (செவெரஸ் 17.1). இந்த காலப்பகுதியில், வன்முறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர்கள் உள்ளூர் வன்முறைக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் தான் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ட்ரொஜன் அல்லது மார்கஸ் அவுரேலியஸை விட வலுவான தொனியில் இதுபோன்ற கலவரங்கள் மற்றும் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றிய அறிக்கைகளுக்கு செவெரஸ் பதிலளித்திருக்கலாம். ஸ்கொட்லாந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்குப் பிறகு, அவர் 211 இல் பிரிட்டனில் உள்ள யோர்க்கில் தனது இறுதி மூச்சை விட்டார்.
தனது சகோதரர் கெட்டாவுடனான நீண்டநாள் நிலவி வந்த வன்மத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், செவெரஸின் மகனும் வாரிசுமான கராகல்லா (211-217), கெட்டா அவர்கள் தாயின் கைகளில் இருந்தபோது அவனைக் கத்தியால் குத்திக் கொன்றான். அவரது எஞ்சியிருந்த விதிமுறைகள் அரசியல் அதிகாரத்தை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டவையாகும். பேரரசில் குடியுரிமை இன்றி வாழ்ந்த குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் உரோமைய குடியுரிமை வழங்கப்பட்டது. மேலும் அவர் கீழைத்தேயத்தில் தனது நீண்டகால எதிரியான பார்த்தியாவுடன் சமாதானம் செய்ய முயற்சித்தார். இன்றும், உரோமில் அப்பியன் சாலை முனையத்திற்கு அருகில் அவர் நிர்மாணித்த மகத்தான குளியல் தடாக இடிபாடுகள் உள்ள ஸ்தானங்களில், இன்றும் கூட இயலிசை நாடகக் கச்சேரிகள் [Opera] நடத்தப்படுகின்றன. கீழைத்தேயத்தில் நடந்த ஒரு பிரச்சாரத்தின் போது உரோமையப் பேரரசின் மெய்க்காவலரான மேக்ரினஸால் கராகல்லா படுகொலை செய்யப்பட்டார்.
முன்னே குறிப்பிட்ட மெக்ரினஸ் (217-218) என்ற உரோமைய இராச்சியத்தின் மெய்க்காவலன், பார்த்திய இனத்தவர்களை இராணுவ ரீதியில் வெற்றி கொண்டுவிட்டால் அதன் மூலம் தனது சதியை நியாயப்படுத்தலாம் என்று தப்புக்கணக்கு போட்டார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக, அவர்கள் அவரை தோற்கடித்தனர். அத்தோடு அவர் புதிதாக உருவாக்கப்பட்ட செவரன் வம்சத்திற்கு விசுவாசமான துருப்புக்களால் சிறைபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
ஹெலியோகபாலஸ் (218-222) என்ற காரகல்லாவின் இயல்பான மகன் (உண்மையில், அவரது தூரத்து உறவினன்), சிரியர்கள் வழிபடும் சூரியக் கடவுளான எலகபாலின் பிரதான பாதிரியார் என்று வதந்தி பரவியது. மேலும் அந்த இளைஞன் இப்போது பட்டாடை அணிந்து, விலையுயர்ந்த முத்துக்களால் ஆன கழுத்தணி அணிந்து, முரட்டுத்தனமான கன்னங்களுடன், உரோம் நகரத்தை வந்தடைந்தான். ஏறக்குறைய கலிகியூலாவின் வண்ணமயமான தோற்றத்தையுடையவனாகக் காணப்பட்டான். அவன் எலகபாலை உரோமில் ஏகபோகமாக மாற்ற முயன்றான். ஆனால் அவனது முட்டாள்தனமான, ஒழுக்கக்கேடான நடத்தை அவனை சீரழிவுக்குள் தள்ளியது. இறுதியாக அவன் ஒரு கழிப்பறையில் மறைந்திருந்த போது, அவனது பாட்டி மற்றும் அத்தை அவனைக் கொலை செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.
அவரது உறவினர் மற்றும் வாரிசான அலெக்சாண்டர் செவெரஸ் (222-235), உரோமைய அரசாங்கத்திற்குள் மீண்டும் நிதானத்தை கொண்டு வந்தார். அவர் சட்டசபையைக் கலந்தாலோசித்து வரிகளைக் குறைத்து, பொதுப் பணிகளை அதிகரித்தார். பேரரசு முழுவதும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த ஆரம்ப பள்ளி அமைப்பை நிறுவினார். மேலும், செப்டிமியஸ் செவெரஸுக்குப் பிறகு, கிறிஸ்தவ உலகில் சமாதான காலம் தோன்றியதாகத் தெரிகிறது. அகஸ்டன் வரலாற்றில் தனது பங்களிப்பை செலுத்துகையில், அலெக்சாண்டர் செவெரஸின் கீழ் “கிறிஸ்தவர்கள் வாழ அனுமதிக்கப்பட்டனர்” (செவெரஸ் அலெக்சாண்டர் 22.4) என்று லாம்ப்ரிடியஸ் கூறுகிறார். மதத்தில் அதீத ஈடுபாடுடைய யூசிபியசின் தாய் ஜூலியா மமேயா, ஓரிஜனை ஒரு நேர்காணலின் நிமித்தம் (6.21) அந்தியோக்கியாவுக்கு அழைத்ததாகவும், அங்கே பேரரசரின் மாளிகை “பெரும்பாலான விசுவாசிகளைக் கொண்டிருந்தது” (6.28) என்றும் எழுதுதியுள்ளார். இது நிச்சயமாக அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், அவர் ஜேர்மனிய நாட்டு எல்லையில் இருந்தபோது, அலெக்சாண்டரின் படைகள் அவரையும் அவரது தாயையும் சூழ்ச்சி செய்து கொலை செய்தவுடன், 235 இல் செவரெனின் வம்ச ஆளுகை முடிவுக்கு வந்தது.
இது உரோமையப் பேரரசுக்கு ஒரு பயங்கரமான காலகட்டத்தின் ஆரம்பத்தைக் குறித்தது. அதேநேரம் இந்த உரோமையப் பேரரரசானது அரை நூற்றாண்டு கால உள்நாட்டு மோதல்களால் துவம்சம் செய்யப்பட்டிருந்தது. 235 மற்றும் 284 க்கு இடையில் இருபது பேரரசர்கள் ஆட்சிபுரிந்தனர். (டையோக்லீஷியன் ஆட்சி உட்பட), அவர்களில் பலர் படுகொலை செய்யப்படுவதற்கு முன் சொற்ப காலமே ஆட்சியில் நிலைத்திருந்தனர். அதுகுறித்த பட்டியல் பின்வருமாறு:
மாக்சிமினஸ் திரேசியன் 235-238
காலஸ் 251-253
டாசிடஸ் 275-276
கோர்டியன் I மற்றும் II 238
எமிலியானஸ் 253
புளோரியானஸ் 276
பால்பினஸ் மற்றும் புபினஸ் 238
வலேரியன் 253-260
ப்ரோபஸ் 276-282
கோர்டியன் III 238-244
கேலியனஸ் 253-268
காரஸ் 282-283
அரேபியரான பிலிப் 244-249
குளோடியஸ் II 268-270
காரினஸ் 283-285
டெசியஸ் 249-251
அவுரேலியன் 270-275
நியூமேரியன் 283-284
ஆயினும்கூட, இந்த பட்டியல் தவறான தகவல்களையே கொடுக்கிறது. ஏனெனில் இது உரோமைய சட்டசபையால் அங்கீகரிக்கப்பட்ட இருபது பேரரசர்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் போட்டியாளர்களைக் கொண்டிருந்தாலும் வலுவான படைகளால் பாதுகாக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் பேரரசின் செழுமை மிகுந்த பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மொத்தத்தில், ஐம்பது அல்லது அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் இந்தக் காலத்தில் பேரரசர் என்று தங்களைக் கூறிக்கொண்டனர். வெளிப்படையாக, இந்த விசித்திரமான பட்டியலில் உள்ளவர்கள் குறித்து குறுஞ்சுயசரிதைகளை வழங்குவதால் இனி எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஆனால் பலர் தேர்ந்தெடுக்கப்படலாம், அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கிறிஸ்தவ உலகில் முக்கியமான முன்னேற்றங்கள் நடக்கக்கூடும். இந்த இரண்டு முக்கிய காரணிகளையும் உள்ளடக்கிய யூசிபியஸின் புத்தகம் 6 இத்துடன் முடிவடைகிறது.
அரேபிய தேசத்தவரான பிலிப் (244-249) ஜோர்டானைச் சேர்ந்த ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஷேக் எனப்படுபவர் ஆவார். அவர் உரோமைய மெய்க்காவலராக நியமிக்கப்பட்டார். அவர் தான் கோர்டியன் III க்கு எதிராக வெற்றிகரமான கலகத்தை வழிநடத்தியவர். அவர் கிறிஸ்தவப் பெண்மணியான ஒட்டாசிலியா செவெராவை மணந்தார் என்பது மட்டுமல்லாமல், அது எப்போதும் நினைவுகூரப்படும். அதையிட்டு யூசிபியஸ் குறிப்பிடத்தக்க கூற்றை வெளியிட்டார்: “அவர் ஒரு கிறிஸ்தவர்; தேவாலயத்தின் பிரார்த்தனைகளில் விசுவாசிகளுடன் சேர்ந்து கலந்துகொள்ள விரும்பினார்” (6.34). இது உண்மையாக இருந்தால், பிலிப், இலத்தீன் பாரம்பரியத்தைக் கொண்டவர் அல்ல, முதல் கிறிஸ்தவ பேரரசராக இருந்திருப்பார். ஆனால் பிலிப் மதம் மாறியது என்பது சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. யூசிபியஸின் சொற்றொடரான “Word has it” அல்லது “There is reason to believe” என்ற குறிப்பு இதற்கு வலு சேர்க்கிறது. மேலும் உரோம் தனது ஆயிரமாவது ஆண்டு நிறைவை அவரது நிர்வாகத்தின் கீழ் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, பேரரசர் தான் ஒரு கிறிஸ்தவர் என்பதைப் பகிரங்கப்படுத்தியிருந்தால், நிச்சயம் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். இஸ்லாமிய மதம் ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் நிலைத்திருந்த போதிலும், அன்றைய அரேபியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். மேலும் அடுத்த பேரரசர் திருச்சபையை “பிலிப்பின் மீதுகொண்ட வெறுப்பின் காரணமாகத்” துன்புறுத்திய படியால், யூசிபியஸின் கூற்றுப்படி, பிலிப்பின் தரப்பில் கிறிஸ்தவ உலகம் மீதான அணுகுமுறையை நோக்குவோமானால், குறைந்தபட்சம் நாம் ஒரு தீங்கற்ற நிலைமை அங்கு நிலவியிருக்கக்கூடும் என்று ஒரு கணிப்புக்குள் வரமுடியும். டெசியஸ் தலைமையிலான கிளர்ச்சியை அடக்க முயன்ற அவர், 249 இல் வெரோனாவுக்கு அருகில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
டெசியஸ் (249-251) என்ற ஆட்சியாளர், உரோமையக் கொள்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடுமையான மாற்றங்களை அறிமுகப் படுத்தினார். திருச்சபை வட்டாரங்களில் முன்பு அவ்வப்போது தொகுதிவாரியாக நடந்த வன்முறைகள், தற்போது ஒரு முறையான, அரச அங்கீகாரத்தோடு பாரிய அளவில் நடைபெறும் கலவர வடிவத்தை எடுத்தன. இதில் ஏகாதிபத்திய அங்கீகாரத்துடன் நகரத்திற்கு நகரம், கிராமத்துக்கு கிராமம், தொகுதிக்கு தொகுதி, மற்றும் வீட்டிற்கு வீடு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு, கிறிஸ்தவர்களை வலையில் சிக்கவைப்பது போல் சுற்றி வளைக்க டெசியஸ் முயன்றார். பேரரசில் இடம்பெறும் கொந்தளிப்புக்கு கிறிஸ்தவர்களே காரணம் என்ற கருத்தை மற்றைய அஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொண்ட அவர், பாரம்பரிய கடவுள் நம்பிக்கைகள் மற்றும் பேரரசர்களை வழிபடும் கலாச்சார முறைகளுக்குத் திரும்புவதன் மூலம் மட்டுமே உரோமைப் புத்துயிர் பெறச் செய்ய முடியும் என்று அவர் உணர்ந்தார். அவர் அனைத்து குடிமக்களும் ஆணையாளர்களின் முன்னிலையில் வழிபாடு செய்யுமாறு கட்டளையிட்டார் – பெரும்பாலும் பேரரசரின் மார்பளவுக்கு முன்னால் எரியும் ஒரு அகல் விளக்கை நோக்கி ஒரு சிட்டிகை தூபத்தை எறிந்தால் போதும் – அதற்குப் பிறகு அவர்கள் தியாகிகள் ஒரு சான்றிதழை (லிபெல்லஸ்) பெறுவார்கள். மறுப்பவர்களுக்கு சிறைத் தண்டனையும், சித்திரவதையும் மரணமும் காத்திருந்தன.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட சட்டங்களுக்கு, கிறிஸ்தவர்கள் நான்கு வழிகளில் பதிலளித்தனர். சிலர் தப்பியோடினர் அல்லது நிலவறைகளிலும் வேறு இடங்களிலும் ஒளிந்து கொண்டனர். மற்றவர்கள், அழுத்தத்தின் கீழ் சிதைந்துபோய் “தியாகம்” செய்தவர்கள், அல்லது லப்சி எனப்படும் “வீழ்ந்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர். இன்னும் அரசாங்கத்தில் நண்பர்களைக் கொண்ட சிலர், அவர்கள் என்றுமே தியாகம் செய்யாத போதிலும் அவர்களுக்காக சான்றிதழ்களை தயார் செய்து வைத்திருந்தவர்கள், லிபெல்லாட்டிசி; அதாவது “சான்றிதழ் உடையோர்கள்” என்று அழைக்கப்பட்டனர். ‘தியாகம்’ செய்ய மறுத்த நம்பமுடியாத துணிச்சலான விசுவாசிகள் சிறையில் இருந்தபோது “ஒப்புதல்காரர்கள்” என்று அழைக்கப்பட்டனர், ஆனால் அவர்களின் சித்திரவதைகள் மற்றும் இறப்புகளுக்குப் பிறகு வேதசாட்சிகள் என்று பெருமிதத்துடன் அழைக்கப்பட்டார்கள்.
யூசிபியஸ் அவர்கள் விளக்கிய அலெக்சாந்திரியாவிலும் சிசேரியாவிலும் நடந்த பயங்கரக் கொடுமைகளின் அரசியல் பின்னணி இதுதான். டெசியஸின் சுருக்கமான ஆட்சி மற்றும் போர்க்களத்தில் ஏற்பட்ட தற்செயலான மரணம் மட்டுமே அவரது கடுமையான, குரூரமான திட்டத்தை அவர் எதிர்பார்த்த அளவிற்கு நிறைவேற்றுவதைத் தடுத்தது.
