யூசிபியஸ் தேவாலயம் வரலாற்றையும் எழுதினார்(Eusebius, Church History 4)

யூசிபியஸ், தமிழில் தேவாலய வரலாறு, புத்தகம் 4

Eusebius, Eusebius, The Church History in Tamil, book 4. Translated with permission from Paul L. Meier, The Church History: A New Translation with Commentary, 1999. Tamil translation is Public Domain.


நான்காவது புத்தகம்: ஆயர்கள், எழுத்தாக்கங்கள் மற்றும் வேதசாட்சிகள்

ட்ரொஜன் முதல் மார்கஸ் ஆரேலியஸ் வரை

1. ட்ரொஜனின் ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டு காலப்பகுதியில், அலெக்சாந்திரியாவின் ஆயர் [செர்டோ) தனது வாழ்வை நீத்தார். அவருக்குப் பிறகு ப்ரிமஸ் அப்போஸ்தலர் மத்தியில் இருந்து நான்காவது ஆயராக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் உரோமில், எவரெஸ்டஸ் ஆயராக தனது எட்டாவது ஆண்டை நிறைவுசெய்தபோது, பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் ஐந்தாவது வாரிசான அலெக்சாண்டர் ஆயராக நியமனம் பெற்றார்.

யூதக் கிளர்ச்சிகள்

2. நமது இரட்சகரின் போதனையும் திருச்சபையும் நாளுக்கு நாள் செழித்து வளர்ந்து கொண்டிருந்த வேளையில், யூதர்களின் துயரம் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பேரரசரின் பதினெட்டாம் ஆண்டில், மற்றொரு யூதக் கிளர்ச்சி வெடித்தது. அதன் மூலம் அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் அழிந்தனர். அலெக்சாந்திரியா மற்றும் எகிப்தின் ஏனைய பகுதிகளிலும், குறிப்பாக சிரேனில் என்ற பகுதியில், அவர்கள் சக கிரேக்க குடிமக்களுக்கு எதிராக கலவரத்தில் இறங்கினர். மேலும் அடுத்த ஆண்டில் அவர்கள் கிளர்ச்சியை வலுவடையச் செய்து, லூபஸ் என்பவர் எகிப்து முழுவதற்கும் ஆளுநராக இருந்தபோது அவர்கள் முழு அளவிலான போரைத் தொடங்கினர். முதல் கலவரத்தில் அவர்கள் கிரேக்கர்களை தோற்கடித்ததும் அவர்கள் அலெக்சாந்திரியாவுக்கு தப்பி ஓடினர். அங்கு அந்த நகரத்தில் வாழ்ந்த யூதர்களைக் கைப்பற்றியது மட்டுமன்றி அவர்களைக் கொன்றொழித்தனர். சிரேன் நகரத்து யூதர்கள் அவர்களுக்கு கிடைத்த உதவிகளை இழந்தாலும், தங்கள் தலைவரான லூகுவாஸின் கீழ் எகிப்தின் பல மாவட்டங்களை தொடர்ந்து சூறையாடினர்.

உடனேயே பேரரசர், கலகக்காரரர்களுக்கு எதிராக போரிடும் முகமாக, தனது குதிரைப்படை உட்பட கடல் மற்றும் தரைப்படைகளுடன் தளபதி மார்சியஸ் டர்போவை அனுப்பினார். அவர் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போரை நடத்தினார். அவ்வாறு நடந்த போர்களில் ஏராளமான யூதர்களைக் கொன்றார். சிரேனில் இருந்தவர்கள் மட்டுமல்ல, எகிப்திலிருந்து வந்தவர்களும் தங்கள் தலைவரான லுகுவாஸின் பின்னால் அணிதிரண்டனர். மெசொபொடேமியாவில் உள்ள யூதர்கள் அங்குள்ள மக்களையும் தாக்கக்கூடும் என்று சந்தேகித்த பேரரசர், அவர்களை மாகாணத்திற்கு வெளியே விரட்டியடிக்கும்படி லூசியஸ் குயூட்டஸுக்கு உத்தரவிட்டார். அவர் தனது படைகளை ஒழுங்கமைத்து அங்கு பெரும் எண்ணிக்கையிலான மக்களை அழித்தார். அதன் காரணமாக, பேரரசர் அவரை யூதேயாவின் ஆளுநராக நியமித்தார். அதே காலகட்டத்தின் வரலாறுகளை எழுதிய கிரேக்க எழுத்தாளர்கள் இதேபோன்ற நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர்.

ஹட்ரியன், குவாட்ராடஸ் மற்றும் அரிஸ்டைட்ஸ்

3. ட்ரொஜன் பத்தொன்பதரை ஆண்டுகள் ஆட்சியை நிறைவுசெய்த போது, ஏலியஸ் ஹாட்ரியன் அரியணை ஏறினார். சில பொல்லாத மனிதர்கள் தம் மக்களை சிக்கலில் மாட்டிவிட முயல்வதால், குவாட்ரடஸ் எங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தார். என்னிடம் உள்ளது போலவே பல சகோதரர்கள் இன்னும் இந்த படைப்பின் பிரதிகளை வைத்திருக்கிறார்கள். இவை ஆசிரியரின் அறிவுத்திறன் மற்றும் அப்போஸ்தலிக்க மரபுவழிக்கு ஒரு தெளிவான சான்று. பின்வருபவை அவரது ஆரம்ப காலத்தை வெளிப்படுத்துகின்றன:

நமது இரட்சகரின் செயல்கள் எப்பொழுதும் பசுமையாகவே காணப்பட்டன, ஏனென்றால் அவை உண்மையாக இருந்த காரணத்தால். குணமடைந்தவர்கள் அல்லது மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தவர்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல, எம் இரட்சகர் பரலோகத்துக்கு எழுந்தருளி போன சில காலம் கடந்தும் அவரது புதுமைமிகு செயல்கள் தொடர்ந்தவண்ணமே இருந்தன. உண்மையாக சொல்லப்போனால், அவர்களில் சிலர் இன்னும், நாம் வாழும் காலம் வரையிலும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

அரிஸ்டைட்ஸ், குவாட்ரடஸைப் போலவே, விசுவாசமும் நமது மத நம்பிக்கையயில் அர்ப்பணிப்பும் கொண்டவர். ஹட்ரியனிடம் எடுத்துரைக்கப்பட்ட நம்பிக்கையின் உறுதித் தன்மையை எங்களுக்கென்று விட்டுச்சென்றுள்ளார். அவரது படைப்புகளின் நகல்களை பலர் இன்றும் கூட பாதுகாத்து வருகின்றனர்.

உரோமைய, அலெக்சாந்திரிய மற்றும் ஜெருசலேமின் ஆயர்கள்

4. அதே ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், உரோமைய ஆயர் அலெக்சாண்டர் தனது பத்தாம் ஆண்டு ஊழியத்தை நிறைவுசெய்த பிறகு இறைபதம் எய்தினார்; அவரது வாரிசாக ஸிஸ்டஸ் (Xystus) என்பவர் நியமனம் பெற்றார். அதே நேரத்தில், அலெக்சாந்திரியாவின் மறைமாவட்டத்தில், ஜஸ்டஸ் என்பவர் ப்ரிமஸுக்குப் பிறகு ஆயராக நியமனம் பெற்றார். அவரது தனது ஆட்சியின் பன்னிரண்டாவது வருடம் நடைபெற்ற பொழுதில் மரணித்தார்.

5. ஜெருசலேம் பாரம்பரியத்தில் உள்ள ஆயர்களின் நியமனத் திகதிகள் பற்றிய எழுத்துப்பூர்வ பதிவேடு எதையும் என்னால் கண்டுபிடிக்கத் முடியாமற் போய்விட்டது. அவர்கள் மிகக் குறுகிய காலம் வாழ்ந்தவர்கள் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் ஹட்ரியன் யூதர்களை முற்றுகையிட்ட காலப்பகுதி வரை பதினைந்து ஆயர்கள் இருந்தனர் என்பதற்கான ஆவண ஆதாரம் என்னிடம் உள்ளது.

அனைவரும் பூர்வீகமாக எபிரேயர்கள் என்று கூறப்பட்டது. அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிய அறிவை தம்மகத்தே ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காரணத்தால் ஆயர் பதவிக்கு தகுதியானவர்கள் என்று கருதப்பட்டனர். இரண்டாம் யூதக் கிளர்ச்சியைத் தொடர்ந்து அப்போஸ்தலர்கள் தொடக்கம் உரோமைய முற்றுகை வரை முழுக்க முழுக்க எபிரேய கிறிஸ்தவர்களையே திருச்சபை கொண்டிருந்தது. விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள் மட்டுமே ஆயர்களாக நியமிக்கப்பட தகுதி வாய்ந்தவர்கள் என்ற கொள்கை பின்னர் கைவிடப்பட்டதால், ஆரம்பம் முதல் வாழ்ந்த அவர்களின் பெயர்களை வழங்குவதற்கான சரியான நேரம் இதுவாகும். முதலாவது யாக்கோபு, இவர் கர்த்தருடைய சகோதரன் என்று அழைக்கப்பட்டார். அவருக்குப் பிறகு இரண்டாவதாக சிமியோன். மூன்றாவதாக ஜஸ்டஸ், நான்காவது சாக்கியஸ், ஐந்தாவது டோபியாஸ், ஆறாவது பெஞ்சமின், ஏழாவது யோவான், எட்டாவது மத்தியாஸ், ஒன்பதாவது பிலிப், பத்தாவது செனிகா, பதினொராவது ஜஸ்டஸ், பன்னிரண்டாவது லெவி, பதின்மூன்றாவது எப்ரெஸ், பதினான்காவது ஜோசப், பதினைந்தாவதும் கடைசியுமானவர் யூதாஸ். இவர்கள்தான் அந்த காலத்தில் ஜெருசலேமின் ஆயர்கள். இவர்களெல்லோரும் விருத்தசேதனம் செய்தவர்கள்.

ஹட்ரியனின் பன்னிரண்டாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில், பத்து ஆண்டுகள் உரோமைய ஆயராக இருந்த Xystus என்பவரிடமிடமிருந்து அப்போஸ்தலரின் எண்ணிக்கை அடிப்படையில், ஏழாவது ஸ்தானத்தில் இருந்த டெலிஸ்போரஸ் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். ஒரு வருடம் மற்றும் சில மாதங்களுக்குப் பிறகு, அலெக்சாந்திரியாவின் மறைமாவட்டத்தில் டெலிஸ்போரஸ் என்பவற்றின் மறைவுக்குப் பிறகு, பதினொரு வருடங்கள் யூமென்ஸ் என்பவர் அந்தப் பதவிக்கு நியமனம் பெற்று சேவையாற்றினார்.

பார்-கோக்பா [Bar-Kokhba] கிளர்ச்சி

6. யூதக் கிளர்ச்சி மீண்டும் வலிமைமிக்கதாக வளர்ந்தபோது, யூதேயாவின் ஆளுநரான ரூஃபஸ் என்பவர், பேரரசரிடமிருந்து இராணுவ உதவியைப் பெற்று, அவர்களின் பேராசைத்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராக இரக்கமின்றி வன்முறைகளைக் கட்டவிழ்த்து அவர்களது கிளர்ச்சியை நசுக்கினார். அவரது நடவடிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பரிதாபமாய் உயிர்நீத்தனர். மேலும் யுத்தகால சட்டங்களின் கீழ் அவர்களின் நிலங்களையும் அவர் அபகரித்தார். அந்த சமயத்தில், யூதர்கள் ஒரு குறிப்பிட்ட பார்-கோக்பா என்ற கயவனால் வழிநடத்தப்பட்டனர். அது “நட்சத்திரம்” அல்லது ஒரு கொலைகாரன் அல்லது கொள்ளைக்காரன் என்று பொருள்படும். அவன் தனது பெயரில் பொதிந்திருக்கும் வலிமையின் மீது வீண் பெருமை கொண்டவனாய், அடிமைகளாக மற்றும் துயரத்தில் இருப்பவர்களுக்கு ஒளி தரும் பொருட்டு தான் வானத்திலிருந்து இறங்கி வந்தவன் என்று கூறினான்.

ஹட்ரியனின் ஆட்சிக்காலத்தின் பதினெட்டாம் ஆண்டில், ஜெருசலேமிலிருந்து வெகு தொலைவில் உள்ள பெத்தேரா என்ற ஊரில்; அதாவது பலமான அரண் என்று போற்றப்பட்ட அந்த சிறிய நகரத்தில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. ஒரு நீண்ட முற்றுகைக்குப் பிறகு, பசி மற்றும் தாகம் கிளர்ச்சியாளர்களை அழிவுக்குள் தள்ளியது, மேலும் அவர்களின் பேராசையைத் தூண்டியவர் அதற்கு ஏற்றாற்போல் தகுதியான தண்டனையை செலுத்தினார். ஹட்ரியன் பின்னர் முழு [யூத] தேசமும் ஜெருசலேமுக்கு அருகில் எந்த ஒரு இடத்திலும் காலடி எடுத்து வைப்பதைத் தடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். எனவே அதை தூரத்திலிருந்து கூட பார்க்க முடியாது. பெல்லா என்ற ஊரின் அரிஸ்டோ தான் இந்தக் கதையைச் சொன்னார். பின்னர், நகரத்தில் உள்ள யூத இனத்தவர்கள் இல்லாதொழிக்கப்பட்டு அதன் குடிமக்கள் அழிக்கப்பட்டு யூதர்கள் அற்ற நகரமாக மாற்றமடைந்தது. அத்தோடு அது பிற தேசத்தவரால் காலனித்துவப்படுத்தப்பட்டு அதன் பின்னர் உரோமைய நகரம் என்று புதிதாகப் பெயரிடப்பட்டு, ஏலியஸ் ஹட்ரியனின் நினைவாக மாற்றப்பட்டது. அங்குள்ள திருச்சபை இப்போது புறஜாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காரணத்தால், விருத்தசேதனம் செய்யப்பட்ட சந்ததிக்குப் பிறகு முதல் ஆயராக மார்க் என்பவர் பதவியேற்றுக்கொண்டார்.

ஞானமார்க்கம் [Gnostics]

7. பிரகாசம் மிகுந்த விளக்குகளைப் போல, திருச்சபைகள் இப்போது உலகத்தை ஒளிரச் செய்கின்றன. மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம் சகல இடங்களிலும் தழைத்தோங்கிக்கொண்டிருக்கிறது. இப்படியான சந்தர்ப்பங்களில், நன்மை, உண்மை மற்றும் இரட்சிப்பு போன்றவற்றை வெறுக்கும் சாத்தான் தனது எல்லா ஆயுதங்களையும் திருச்சபைக்கு எதிராகத் திருப்பினான். சாத்தான் முன்பு துன்புறுத்தல்கள் மூலம் வெளியில் இருந்து தனது தாக்குதத்தலைத் தொடுத்திருந்தான். ஆனால் இப்போது அவன் வாறு செய்வதில் இருந்து தடுக்கப்பட்டதன் காரணமாக, சூழ்ச்சியாளர்களையும் வஞ்சகர்களையும் அழிவின் ஊழல் முகவர்களாகப் பயன்படுத்தி திருச்சபையினுள் நுழைந்து அவனது தந்திரோபாயங்களைக் கையாள்வதில் ஈடுபட்டிருந்தான். நம் மதத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒவ்வொரு விசுவாசியையும் அழித்து அவர்களை அவனது வலையில் சிக்கவைத்து, விசுவாசம் குன்றியவர்களை இரட்சிப்புக்கு இட்டுச் செல்லும் பாதையிலிருந்து திசை திருப்பும் சூழ்ச்சிமிகு கைங்கரியத்தை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.

சைமனின் [மாகஸ்] வாரிசாக முன்னர் குறிப்பிடப்பட்ட மெனாண்டரிடமிருந்து, இரண்டு வாய்கள் மற்றும் இரட்டைத் தலைகள் கொண்ட ஒரு சர்ப்பத்தின் உருவிலான சக்தியை வெளியிட்டார். இது இரண்டு மதங்களுக்கு எதிரான தலைவர்களை நிறுவியது: சாட்டர்னினஸ் என்ற பிறப்பால் அந்தியோசீன் மற்றும் அவனோடு இணைந்து அலெக்சாந்திரியாவின் பசிலிட்ஸ் என்பவன் மதங்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பிரச்சார அணிகளை சிரியாவிலும், எகிப்திலும் நிறுவியவனாவான். சட்டர்னினஸ் பெரும்பாலும் மெனாண்டரின் அதே தவறான கோட்பாடுகளையே போதித்தார் என்று எல்ரீனியஸ் தெளிவுபடுத்துகிறார். அதேவேளை பசிலைட்ஸ் இரகசிய மர்மங்கள் என்ற போலிக்காரணத்தின் கீழ் பயங்கரமான கட்டுக்கதைகளை உருவாக்குவதில் கற்பனையின் எல்லைக்கே சென்றுவிட்டார் என்றே கூறவேண்டும். சத்தியத்திற்காகவும் அப்போஸ்தலிக்க விசுவாசத்தை மேன்மைப்படுத்தவேண்டும் என்று போராடும் பல திருச்சபை ஊழியர்கள் சிலர் தங்கள் வாரிசுகளின் நன்மைகளைக் கருத்திற் கொண்டு இவ்வாறான மதங்களுக்கு எதிரான தற்காப்பு முறைகளை எழுத்தில் வடித்து வைத்தனர்.

இவற்றில், அந்தக் காலத்தின் பிரபல எழுத்தாளரான அக்ரிப்பா காஸ்டரின் கருத்தின் அடிப்படையில் பசிலைட்ஸை நான் அடியோடு நிராகரிக்கிறேன். அவரது ஏமாற்றத்தை அம்பலப்படுத்திய அவர், பசிலைட்ஸ் நற்செய்தியில் இருபத்தி நான்கு புத்தகங்களைத் தொகுத்ததாகவும், அவர் தனது சொந்த தீர்க்கதரிசிகளான பார்-கபாஸ் மற்றும் பார்-கோஃப் போன்றவர்களை கற்பனை வடிவங்களாகப் பெயரிட்டதாகவும், ஏமாறுபவர்களை ஈர்க்கும் பொருட்டு அவர்களுக்கு அயல்நாட்டு பெயர்களைக் உபயோகித்ததாகவும் கூறுகிறார். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பொருட்களை உண்பதோ அல்லது துன்புறுத்தலுக்கு உள்ளாகும் காலங்களில் விசுவாசத்தை மறுதலிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை என்று போதித்தார். பைதகரஸைப் போலவே, தன்னிடம் வருபவர்களை ஐந்தாண்டுகள் அமைதியாக இருக்கச் சொன்னார். கஸ்டர் அவரது மதவெறியை பிரமாதமான முறையில் மூடி மறைத்தும் மறுதலித்தும், பசிலைட்ஸ் பற்றி ஒரே மாதிரியான விஷயங்களை எழுதுகிறார்.

கார்போகிரேட்டஸ் இவர்களின் சமகாலத்தவர் என்றும், ஞானமார்க்கம் என்று அழைக்கப்படும் மற்றொரு மதவெறியின் தந்தை என்றும் ஐரேனியஸ் எழுதுகிறார். சைமனின் மாயாஜாலத்தை இரகசியமாக முன்னெடுத்துச் செல்வதாகக் கூறிக்கொண்ட பசிலிட்ஸைப் போலல்லாமல், அவர்கள் வெளிப்படையாகச் செய்தார்கள். தங்கள் மந்திரம், சூனியம், கனவுகள் மற்றும் இறந்த ஆவிகளோடு உரையாடுதல் போன்றவற்றை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்கள் மர்மங்களில் (மாறாக, ஆபாசமாக) இணைந்துகொள்ள விரும்புபவர்கள் அனைத்து மோசமான காரியங்களிலும் ஈடுபடத் தயாராக இருக்கவேண்டும் என்று கற்பிக்கிறார்கள். இதன் மூலம் அவர்களை கூற விழைவது என்னவெனில், வேறு எந்த வழியிலும் அவர்கள் “அண்டவெளி ஆட்சியாளர்களின்” ஆட்சிக்கு ஒப்பான ஒரு சூழ்நிலையை தவிர்க்க முடியாது என்பதாகும். அத்தகைய ஊழியர்களைப் பயன்படுத்துவதன் மூலம், சாத்தானானவன் வருந்தற்குரிய போலி அடிமைகளை உருவாக்கினான். மற்றும் விசுவாசம் குன்றியவர்கள் தெய்வீக வார்த்தையின் மீது கொண்டுள்ள கௌரவத்துக்கு அவமதிப்பை உண்டுபண்ணினான். ஏனெனில் ஊழல் என்ற கறை முழு கிறிஸ்தவ சமூகத்தையும் மாசுபடுத்தியது. அன்றைய புறஜாதியினரிடையே எங்களைப் பற்றிய ஒரு தகாத மற்றும் அவதூறான சந்தேகம் பரவியதற்கு இது முதன்மையான காரணமாக இருந்தது. ஏனெனில் அவர்கள் மத்தியில், நாங்கள் அன்னையர் மற்றும் சகோதரிகளுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தோம் என்றும் சபிக்கப்பட்ட உணவை உட்கொண்டோம் என்ற தவறான கருத்தும் வலுவாகப் பரப்பப்பட்டிருந்தது.

ஆனால் இந்த வெற்றி நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை, ஏனென்றால் உண்மை மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், காலப்போக்கில் பிரகாசமாக ஒளிர்ந்தது. ஒன்றன்பின் ஒன்றாக புதிய புதிய மதவெறி கொள்கைகள் உலா வந்த போதிலும், முந்தைய மிலேச்சத்தனமாகப் பரப்பப்பட்ட கருத்துக்கள் படிப்படியாக மறைந்துவிட்டன. ஆனால் உலகளாவிய மற்றும் ஒரே உண்மையான திருச்சபை எப்போதும் ஒரே மாதிரியாக இருந்து. அதன் மகத்துவத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, கிரேக்கர்கள் மற்றும் கிரேக்கர்கள் அல்லாதவர்கள் மீதும், பொது நடத்தை மற்றும் சிந்தனைக்கான தெய்வீக போதனையின் சுதந்திரமான, நிதானமான மற்றும் காத்திரமான தூய ஒளியை எங்கும் பரவச் செய்வதில் வெற்றி கண்டது. காலப்போக்கில், திருச்சபையானது நமது போதனைக்கு எதிரான அவதூறுகளைத் தனித்து, நீர்த்துப்போகச் செய்துவிட்டது. அதனால் அது தனித்துவமாகவும், வெற்றியின் சின்னமாகவும், உன்னதமாகவும் கம்பீரமாகவும் நிமிர்ந்து நிற்கிறது. எனவே, நமது விசுவாசத்துக்கு எதிராக, கடந்த காலத்தைப் போல எதிரிகள் மேற்கொண்ட கேவலமான அவதூறுகளை மீண்டும் முன்னெடுக்க இன்று எவரும் துணிவதில்லை.

காலக்கிரமத்தில் தோன்றிய திருச்சபை எழுத்தாளர்கள்

இருப்பினும், அந்த நேரத்தில் சத்தியம் மீண்டும் தனக்கென அதிக வெற்றியாளர்களை உருவாக்கியது. அவர்கள் வாய்மொழி மற்றும் எழுத்து வடிவில் கடவுளை ஏற்றுக்கொள்ளாத மத நம்பிக்கைகளுக்கு எதிராக போராடினர்.

8. இவர்களில், ஹெகெசிப்பஸ் புகழ்பெற்றவர். இவர் சம்பந்தப்பட்ட அப்போஸ்தலிக்க யுகத்தைப் பற்றி நான் அடிக்கடி மேற்கோள் காட்டியுள்ளேன். எளிமையான நடையில் எழுதப்பட்ட ஐந்து புத்தகங்களில், அப்போஸ்தலிக்க பிரசங்கத்தின் உண்மையான பாரம்பரியத்தை அவர் தொகுத்து வழங்கினார். சிலைகளை உருவாக்கியவர்களைப் பற்றி எழுதுகையில், அவர் எவ்வாறு செழித்தோங்கினார் என்பதைக் குறிப்பிடுகிறார்.

அவர்களுக்கு கல்லறைகள் மற்றும் கோவில்களை உருவாக்கினார். இந்தக் காரியத்தை இன்னும் செய்கின்றனர். அவர்களில் ஆண்டினோஸ் என்பவர் ஹட்ரியன் சீசரின் அடிமை, அவரது நினைவாகவே ஆண்டினோயன் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவர் என் சமகாலத்தவர். ஹட்ரியன் தனது பெயரில் ஒரு நகரத்தை உருவாக்கி, [அவரது வழிபாட்டிற்காக] அங்கே தீர்க்கதரிசிகளை நியமித்தார்.

அதே நேரத்தில், உண்மையான தத்துவத்தின் அபிமானியான ஜஸ்டின் இன்னும் கிரேக்கக் கற்றலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரும் இந்த காலகட்டத்தை அன்டோனினஸுக்கு [பியஸ்] சாதகமான காலம் என்று தனது வார்த்தைகளில் குறிப்பிடுகிறார்.

இந்த கட்டத்தில், நம் காலத்தில் வாழ்ந்த ஆன்டினஸைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். அவர் யார், எங்கிருந்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அனைவரும் அவரை கடவுளாக வணங்கும்படி மிரட்டப்பட்டனர்.

யூதர்களுக்கு எதிரான போரைப் பற்றி ஜஸ்டின் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

சமீபத்திய காலகட்டத்தில், யூதப் போரில், யூதக் கிளர்ச்சியின் தலைவரான பார்-கோக்பா, இயேசுவை மெசியா என்று மறுதலித்து அவரை நிந்திக்காவிட்டால், கிறிஸ்தவர்கள் யாவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்.

அதே புத்தகத்தில் அவர் கிரேக்க தத்துவத்திலிருந்து உண்மையான மதத்திற்கு மாறியது பகுத்தறிவற்ற முறையில் நடைபெறவில்லை என்றும், மாறாக மிகவும் இதமான சூழ்நிலையில் இடம்பெற்ற அமைதியான விவாதத்தைத் தொடர்ந்து தான் நடந்தது என்று குறிப்பிடுகிறார்.

பிளாட்டோவின் போதனைகளில் களித்திருந்தபோது, கிறிஸ்தவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை நானே கேள்விப்பட்டேன். ஆனால் அவர்கள் மரணம் அல்லது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எதற்கும் அஞ்சவில்லை என்பதைக் கண்டபோது, ​​அவர்கள் சுதந்திரமாக வாழ்பவர்கள், அவர்களால் தீய மார்க்கத்தில் வாழ முடியாது என்று எனக்குத் தோன்றியது. மனித மாமிசத்தை புசித்து மகிழ்ந்த ஒரு சுய இன்பத்தை நாடுபவர் அல்லது ஒரு சிற்றின்ப இச்சை கொண்டவர் தனது இச்சைகளைப் பறிக்கும் மரணத்தை எவ்வாறு வாழ்த்தி ஏற்றுக்கொள்ள முடியும்? அதற்குப் பதிலாக, அவர் தனது தற்போதைய வாழ்க்கையை எல்லா வகையிலும் நீடிக்க முயற்சிக்க மாட்டார் என்பதும், மரணத்திற்கு தன்னை விட்டுக்கொடுப்பதை விட அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பது மேல் என்றும் எண்ண மாட்டாரா?

பிரபல ஆளுநரான செரினியஸ் கிரானியனஸிடமிருந்து கிறிஸ்தவர்கள் சார்பாக ஹட்ரியன் எவ்வாறு முறையீடு செய்தார் என்பதையும் ஜஸ்டின் கூறுகிறார். அவர் மக்கள் கூச்சலில் இருந்து விடுபட, அவர்களை விசாரணையின்றி மரணதண்டனை செய்வது முறையற்றது என்று எழுதினார். மேலும் அவர் ஆசியாவின் துணை முதல்வரான மினுசியஸ் ஃபண்டானஸுக்கு ஒரு பதிலை அனுப்பினார். அவர் மீது நியாயமான முறையில் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டாலன்றி, எவரையும் விசாரிக்க வேண்டாம் என்று ஆசியாவின் துணை முதல்வர் உத்தரவிட்டார். பின்வருவனவற்றை முன்னுரையாக ஜஸ்டின் தனது கடிதத்தின் நகல் வடிவத்தை அசல் லத்தீன் மொழியில் இணைத்துள்ளார். [இது அன்டோனினஸ் பயஸுக்கு எழுதப்பட்டது].

உன்னுடைய தந்தையான புகழ்பெற்ற ஹட்ரியன் சீசர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணையை நடத்த உத்தரவிடுமாறு நான் கேட்டுக் கொண்டாலும், ஹட்ரியனின் கட்டளையை விட நீதியை நாடுவதையே நான் விரும்புகிறேன். ஆனால் இந்த விஷயத்தில் நான் உண்மைதான் பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காக, ஹட்ரியனின் கடிதத்தின் நகலையும் இத்தோடு இணைக்கிறேன். உங்கள் கவனத்துக்காக அந்தக் கடிதத்தின் நகல் இதோ இங்கே உள்ளது.

எழுத்தாளர் இலத்தீன் மொழியில் அவரது ஆக்கத்தை இணைத்துள்ளார். ஆகவே என்னால் இயன்றவரை அதை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்துள்ளேன்:

9. மினுசியஸ் ஃபண்டானஸ் அவர்களுக்கு, உங்கள் முன்னோடி, புகழ்பெற்ற செரினியஸ் கிரானியஸ் எனக்கு எழுதிய கடிதத்தைப் பெற்றுக்கொண்டேன். மக்கள் துன்புறுத்தப்படாமலும், அவர்களின் குறும்புத்தன்மை காரணமாக தகவல் கொடுப்பவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்க இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்படியானால், ஒரு சட்ட நீதிமன்றத்தின் முன் வாதிடுவதற்கு கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு வழக்கை மாகாணங்களால் தெளிவாக தொடுக்க முடிந்தால், அவர்கள் இந்த நடைமுறையை மட்டுமே பயன்படுத்தட்டும். வெறும் மனுக்கள் அல்லது வாதங்களால் அவை முன்கொண்டு செல்லப்படக்கூடாது. யாராவது வழக்குத் தொடர விரும்பினால், நீங்கள் வழக்கிற்கான காரணத்தை முடிவு செய்வது மிகவும் பொருத்தமானது. அப்படியானால், யாரேனும் அவர்கள் மீது குற்றம் சாட்டி, அவர்கள் சட்டவிரோதமாகச் செயல்பட்டதை நிரூபித்தால், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து நீங்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் தீர்ப்பையிட்டு தீர்மானிக்க வேண்டும். ஆனால், ஹெர்குலிஸால், தவறான தகவல் தருபவர் [பணம் பெறும் நோக்கத்துக்காக] யாரேனும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடங்கினால், முழுமையாக விசாரித்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதைப் பற்றி நீங்கள் பரிசீலித்துப் பாருங்கள்.

ஹட்ரியனின் பதிவின் விதிமுறைகள் மேற்கண்டவாறுதான் அமைந்திருந்தன.

ஆயர்கள் மற்றும் மதவெறியர்கள்

10. இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹட்ரியன் இயற்கை எய்தினார். அதன் காரணமாக அன்டோனினஸ் பயஸ் உரோமைய இறையாண்மைக்குத் தகுதி பெற்றார். அவரது முதல் ஆண்டு நடைபெறுகையில், டெலிஸ்போரஸ் என்பவர் தனது ஊழியத்தின் பதினொன்றாவது ஆண்டில் இந்த உலக வாழ்க்கையை நீத்தார். மேலும் ஹைஜினஸ் உரோமின் ஆயரானார். டெலிஸ்போரஸ் வேதசாட்சியத்தில் பிரபுவாக இறந்ததாக ஐரேனியஸ் தெரிவிக்கிறார். ஹைஜினஸ் ஆயராக இருந்தபோது, வாலண்டினஸ், தனக்கென ஒரு மதவெறிக்கொள்கையை நிறுவியவர் என்றும் அவர் கூறுகிறார். மற்றும் மார்சியோனைட்டின் தவறை சுட்டிக்காட்டிய செர்டோ இருவரும் உரோமில் முக்கியமான புள்ளிகள். அதுகுறித்து அவர் இவ்வாறு எழுதுகிறார்:

11. ஹைஜினஸ் ஆட்சிக் காலத்தில் வாலண்டினஸ் உரோமுக்கு வந்தார். பயஸின் ஆளுகைக்குள் கீழ் உரோம் செழித்தோங்கிக் காணப்பட்டது. இச்செழுமை அனிசெட்டஸ் வரை நீடித்தது. ஒன்பதாவது ஆயர் செர்டோவின் நாட்களில்; அதாவது மார்சியனின் காலத்திற்கு முன்பு, ஹைஜினஸ் உரோமைய திருச்சபையில் சேர்ந்து தனது விசுவாசத்தை உறுதிசெய்து கொண்டார். ஆனால் பின்னர் அவர் தனது சொந்த வழியிலேயே சென்றார். சில சமயங்களில் அவர் இரகசியமாகவும், சில சமயங்களில் பகிரங்கமாகவும் கற்பித்தார். ஒருமுறை முறை அவர் தவறாக போதனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கிறிஸ்தவ சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இது மதவெறியர்களுக்கு எதிரான புத்தகம் 3ல் இருந்து எடுக்கப் பட்டுள்ளது. புத்தகம் 1 இல் அவர் செர்டோவைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

செர்டா என்ற ஒரு குறிப்பிட்ட மனிதர், சைமனைப் பின்பற்றுபவர்களால் ஈர்க்கப்பட்டு, அப்போஸ்தலர் வரிசையில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்த ஹைஜினஸின் காலத்தில் உரோமில் குடியேறினார். சட்டம் மற்றும் தீர்க்கதரிசிகள் போன்றவர்களால் அறிவிக்கப்பட்ட கடவுள், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தை அல்ல என்று அவர் வாதிட்டார். ஏனென்றால் பிந்தையவர் அறியப்பட்டவர், முன்னையவர் அறியப்படாதவர்; முன்னவர் நீதியுள்ளவர், மற்றவர் கருணையுள்ளவர் என்று தர்க்கித்தார். பொன்டஸ் நகரத்து மார்சியன் அவருக்குப் பிறகு பதவியேற்றார் மற்றும் அவரது போதனையை சிறிதும் வெட்கமோ கூச்ச உணர்வோ இன்றி தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.

வாலண்டினஸின் நடைமுறை அமைப்பில் உள்ள பிழையின் ஆழத்தையும், அரவத்தைப் போல அவர் பதுங்கியிருந்து புரிந்த அக்கிரமங்கள் யாவற்றையும் ஐரேனியஸ் திறமையாக வெளிப் படுத்தினார். அவர் மார்கஸ் அவர்களின் சமகாலத்தவர், மந்திரக் கலைகளில் தலைசிறந்தவர், மற்றும் அவரது மதியற்ற ஆரம்பம் மற்றும் அருவருப்பான மர்மங்களைப் பற்றியும் பேசுகிறார்:

அவர்களில் சிலர் மணமக்கள் அறையை ஏற்பாடு செய்து, தாங்கள் செய்வது மேலே உள்ளவர்களின் ஆன்மீகத் திருமணம் என்று கூறி, ஏற்கனவே ஏற்பாடு செய்த அழைப்புகளுடன் ஒரு மர்மத்தைக் கொண்டாடினர். மற்றவர்கள் அவர்களை தண்ணீருக்கு அழைத்துச் சென்று, “பிரபஞ்சத்தின் அறியப்படாத தந்தையின் பெயரில், உண்மை மற்றும் எல்லாவற்றிற்கும் அன்னையான இயேசுவுக்குள் சங்கமித்தவருக்கு” என்று கூறுவதன் மூலம் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். மற்றவர்கள் இன்னும் வியக்க வைக்கும் வகையில் எபிரேய வார்த்தைகளை உச்சாடனம் செய்கிறார்கள்.

உரோமைய ஆயராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஹைஜினஸ் இறைபதம் எய்தினார். அவருடைய இடத்துக்கு பயஸ் நியமிக்கப்பட்டார். அதேவேளை, அலெக்சாந்திரியாவில், யூமினெஸ் அவர்களின் சேவை பதின்மூன்று ஆண்டுகள் நடந்து நிறைவடைந்த பின்னர் மார்க் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஒரு தசாப்தத்திற்குப் பிறகு மார்க் ஊழியத்திலிருந்து ஓய்வு பெற்றதும், செலடியன் ஆயராக நியமிக்கப்பட்டார். உரோமில், பயஸ் தனது ஊழியத்தின் பதினைந்தாவது ஆண்டு நிறைவுசெய்தபோது இறைபதம் எய்தினார். அவரது வெற்றிடத்துக்கு அனிசெட்டஸ் நியனமானார். அவரது காலத்தில் ஹெகெசிப்பஸ் என்பவர் உரோமில் குடியேறினார் என்றும் எலியுதெரஸ் ஆயராக பதவி வகித்தவரை அங்கேயே இருந்தார் என்றும் கூறுகிறார்.

அவர்களின் காலத்தில், ஜஸ்டின் தனது தொழில்சார் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார். ஒரு தத்துவஞானியின் உடையில், அவர் தெய்வீக வார்த்தையின் தூதராக பணியாற்றினார். அத்துடன் அவரது எழுத்து வடிவங்கள் வாயிலாக விசுவாசத்திற்காக போராடினார். அவர் மார்சியனுக்கு எதிராக ஒரு கட்டுரையை எழுதினார், மேலும் அவர் எழுதும் நேரத்தில் அந்த மதவெறியர் உயிருடன் இருந்தார் என்றும் மிக இழிவானவர் என்றும் கூறுகிறார்:

பொன்டஸ் நகரின் மார்சியன் என்பவர், படைப்பாளரைக் காட்டிலும் பெரிய கடவுள் இருப்பதாகக் கூறுகிறார். சாத்தானின் துணையுடன், உலகம் முழுவதும் சென்று, பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கிறிஸ்துவின் தந்தை என்பதை பொய்யென்று உரைத்து, அவரை விட பெரிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று அறிவிப்பதன் மூலம் பல நிந்திக்கத்தக்க செயல்களை செய்துள்ளார். அப்படியிருந்தும் இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். நான் முன்பு கூறியது போல், கோட்பாடுகள் வேறுபட்டாலும் கூட, தத்துவ ஞானிகள் என்போர் அனைவருக்கும் பொதுவானவர்கள். தோன்றிய அனைத்து மதவெறியாளர்களுக்கும் விடையளிக்கும் வகையில் நான் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளேன், அதைப் படிக்க விரும்புவோருக்கு அதைத் தருவதற்கு விருப்பமுடையவனாக இருக்கிறேன்.

வேதசாட்சியான ஜஸ்டின் மற்றும் அன்டோனினஸ் பயஸ்

நான் மேலே குறிப்பிட்ட அதே வேதசாட்சியான ஜஸ்டின், கிரேக்கர்களுக்கு எதிராக அதிக வெற்றியைப் பெற்ற பிறகு, பேரரசர் அன்டோனினஸ் பயஸ் மற்றும் அவர் வாழ்ந்த உரோம் புனித சபையினரிடம் தனது விசுவாசத்தை மீள உறுதிசெய்து கொண்டார். அதில் அவர் யார், எங்கிருந்து வந்தார் என்பதையும் விளக்குகிறார்:

12. மாண்புமிகு பேரரசர் டைட்டஸ் ஏலியஸ் ஹட்ரியன் அன்டோனினஸ் பயஸ் அவர்களுக்கும், சீசர் அகஸ்டஸ் மற்றும் அவரது மகன் தத்துவஞானி வெரிசிமஸ் மற்றும் தத்துவஞானி-சக்கரவர்த்தியின் இயற்கையின் மகனான லூசியஸ் ஆகியோருக்கும், அறிவையும் புனிதத்தையும் விரும்புபவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயஸ், புனிதசபை மற்றும் உரோம் மக்கள் அனைவருக்கும், ஒவ்வொரு இனத்திலும் அநியாயமாக வெறுக்கப்பட்ட மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அனைவரின் சார்பாக, சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள ஃபிளாவியா பிரதேசத்தின் நியோபோலிஸைச் சேர்ந்த பிரிஸ்கஸின் மகனும் பாக்கியஸின் பேரனுமான ஜஸ்டின் என்ற அடியேன், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவனாக, இந்த முகவரியிட்ட மனுவை எழுதி சமர்ப்பிக்கிறேன்.

அதே பேரரசர் உள்ளூர் மக்களிடமிருந்து அனைத்து வகையான துஷ்பிரயோகங்களுக்கு ஆளான ஆசியாவில் உள்ள மற்ற கிறிஸ்தவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவைக் கையேற்று ஆசிய ஆலோசகர் சபைக்கு பின்வரும் ஆணையை அனுப்பினார்.

13. பேரரசர் சீசர் மார்கஸ் ஆரேலியஸ் அன்டோனினஸ் அகஸ்டஸ், ஆர்மேனியஸ், பொன்டிஃபெக்ஸ் மாக்சிமஸ், பதினைந்தாவது முறையாகவும் தீர்ப்பாய சபையின் அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்தவரும், மூன்றாவது முறையாக தூதரக அதிகாரியாக கடமையாற்றியவரும், ஆசியா ஆலோசனை சபை அதிபராகவும் இருக்கும் உமக்கு எனது நல்வாழ்த்துக்கள். உம்மைவிட இவர்களை வழிபடாதவர்களை அவர்கள் தண்டிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், இப்படிப்பட்ட மனிதர்கள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்பதில் தேவர்களும் கூட அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் அவர்களை வணங்காதவர்களை அவர்கள் உங்களை விட அதிகமாக தண்டிப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களை நாத்திகர் என்று குற்றம் சாட்டுவதன் மூலம் அவர்களை சிக்கலில் மாட்டிவிட முனைகிறீர்கள். அப்படியானால், அவர்கள் உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை விட தங்களுடைய கடவுளுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்வது மேன்மையானதாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். நிலநடுக்கங்கள் ஏற்படும் போது – மற்றும் நிகழும் போது – அல்லது அவை ஏற்படும் போதெல்லாம் உங்கள் மனத்தைரியத்தை இழக்கிறீர்கள். இவ்வாறான தருணங்களில், அவர்களின் குணாதிசயங்களுக்கும் உங்களிடையே காணப்படும் தன்மைக்கும் இடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளை கனத்த இதயத்துடன் சீர்தூக்கிப் பார்க்கிறீர்கள். அப்போது நீங்கள் அறிகிறீர்கள் அவர்கள் தங்கள் கடவுள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்று. அதேசமயம் நீங்கள் உங்களுடைய விசுவாசத்தையும் இடைவிடாத வழிபாட்டையும் புறக்கணிக்கிறீர்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் அவரை வணங்கும்போது, நீங்கள் அவர்களைத் துன்புறுத்தி கொலை செய்து விடுகிறீர்கள். அத்தகையவர்கள் சார்பாக, முன்னாள் மாகாண ஆளுநர்கள் பலர் எங்கள் தெய்வீகத் தந்தைக்கு கடிதம் எழுதினர். மேலும் அவர்கள் உரோமைய அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்வதாகக் காணப்பட்டாலேயன்றி, அவர்கள் பெரிதாக எதையும் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று பதிலளித்தார். பலர் என்னைப் பற்றியும் முறைப்பாடு அளித்துள்ளனர். அவர்களுக்கு என் தந்தையின் வழிகாட்டுதலுக்கு இணங்க நான் பதிலளித்தேன். ஆனால் இவர்களில் எவருக்கேனும் எதிராக [கிறிஸ்தவர் என்ற முறையில்] யாராவது நடவடிக்கை எடுக்கத் துணிந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரும் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், அவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவார். இந்த முடிவானது எபேசஸில் நடந்த ஆசிய ஆலோசனை சபை கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

அதே நேரம, சர்திஸ் என்ற பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆயர் மெலிட்டோ, இந்த விஷயங்களை உறுதிப்படுத்துகிறார். அவர் பேரரசர் வெரஸுக்கு அனுப்பிய எங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தில் அவர் கூறியதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

ஸ்மிர்னாவைச் சேர்ந்த பொலிகார்ப்

14. அனிசெட்டஸ் உரோமைய திருச்சபையின் தலைவராக இருந்தபோது, இரேனியஸ் காலமானார். பொலிகார்ப் இன்னும் உயிருடன் இருந்தார், மேலும் உயிர்த்தெழுந்த நாள் [அதாவது, பாஸ்கா] தொடர்பான சில பிரச்சனைகளை அனிசெட்டஸுடன் விவாதிக்க அவர் உரோமுக்கு வந்தார். அதே எழுத்தாளர் பொலிகார்ப் பற்றிய மற்றொரு விடயத்தையும் பற்றி சொல்கிறார், அது இங்கே சேர்க்கப்படல் வேண்டும் என்று எண்ணுகிறேன்:

ஐரேனியஸ் எழுதிய துரோகிகளுக்கு எதிரான புத்தகம் 3 இல் இருந்து எடுக்கப்பட்டவை

பொலிகார்ப் அப்போஸ்தலர்களால் அறிவுறுத்தப்பட்டதும் இறைவனைக் கண்ட பலருடன் உரையாடியது மட்டுமல்லாமல், ஆசியாவில் உள்ள அப்போஸ்தலர்களால் ஸ்மிர்னாவின் ஆயராகவும் நியமிக்கப்பட்டார்.

நான் அவரை என் குழந்தை பருவத்தில் கண்டிருக்கிறேன். அவர் நீண்ட காலம் வாழ்ந்து, முதுமைப்பருவத்தில் புகழ்பெற்ற வேதசாட்சியாய் இறைவனடி சேர்ந்தார். அப்போஸ்தலரிடமிருந்து தான் கற்றுக்கொண்ட விஷயங்களையும், திருச்சபையின் உண்மையான பாரம்பரியங்களையும் அவர் தொடர்ந்து போதித்தார். இந்த உண்மைகள் ஆசியாவின் அனைத்து திருச்சபை மற்றும் ஏனைய சபைகளாலும் இன்றுவரை பொலிகார்ப்பின் வாரிசுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவர் வாலண்டினஸ், மார்சியன் மற்றும் பிற மாற்று வழிகளைப் போதித்த நபர்களை விட சத்தியத்திற்கு மிகவும் நம்பகமான சாட்சியாக விளங்கினார். அனிசெட்டஸின் காலத்தில், அவர் உரோமுக்குச் சென்று, மதவெறியர்களில் பலரை கடவுளின் திருச்சபைக்குள்ளே கொண்டுவந்தார். அப்போஸ்தலரிடமிருந்து தான் பெற்ற ஒரே ஒரு சத்தியம் திருச்சபைக்குள் எடுத்துவரப்பட்டது என்று கூறினார். கர்த்தருடைய சீடரான யோவான் எபேசஸில் குளிக்கச் சென்றபோது என்ன நடந்தது என்று பொலிகார்ப் அவர்கள் கூறியதைக் கேட்டவர்களும் இருக்கிறார்கள். அது என்னவென்றால், செரிந்தஸை குளியல் அறைக்கு உள்ளே கண்டதும், அவர் குளிக்காமல், அலறியடித்துக்கொண்டு குளியல் அறையை விட்டு விரைவாக வெளியேறினார், என்று கூறியுள்ளார். “இந்த இடம் இடிந்து விழுந்து விடுமுன் நாம் இங்கிருந்து வெளியேறுவோம்: சத்தியத்தின் எதிரியான செரிந்தஸ் உள்ளே இருக்கிறான்!” பொலிகார்ப் மற்றும் மார்சியன் ஒருமுறை செரிந்தஸை சந்தித்ததும், செரிந்தஸ் அவர்களை நோக்கி, “என்னை அடையாளம் தெரிகிறதா?” என்று கேட்டதற்கு, அவர் பதிலாக, “நான் உண்மையாக உம்மை டையாளம் கண்டுகொண்டேன், ஏனெனில் சாத்தானின் முதற்பேறான ஒருவரை நான் எப்படி அடையாளம் காணாமல் இருக்கமுடியும்!” என்று கூறினார். அப்போஸ்தலரும் அவர்களுடைய சீஷர்களும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாது அதற்கு விரோமாக செயல்படுபவர்களை அணுகாமல் எச்சரிக்கையாக இருந்தார்கள், பவுல் சொன்னது போல், “எவனாவது பிரிவினைகளை உருவாக்கினால் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் அத்தையிட்டு வாக்குவாதம் செய்தால் மீண்டும் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் அதையே செய்ய ஆரம்பித்தால் அவனுடன் நீ கொண்டிருக்கும் தொடர்பை விட்டுவிடு. ஏனென்றால் இப்படிப்பட்ட ஒருவன் நிலை தவறி, பாவம் செய்கிறவனாக இருக்கிறான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். இவனது பாவங்களே இவன் தவறானவன் என்பதை நிரூபிக்கிறது.” [தீத்து 3:10-11]. பொலிகார்ப் பிலிப்பியர்களுக்கு எழுதிய மிக சக்திவாய்ந்த கடிதமும் உள்ளது, அதில் இருந்து அவர்களின் இரட்சிப்பை விரும்புவோர் மற்றும் அக்கறை கொண்டவர்கள் அவருடைய விசுவாசம் மற்றும் பிரசங்கத்தின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு தான் இரேனியஸ் கூறியுள்ளார். பொலிகார்ப், பிலிப்பியர்களுக்கு எழுதிய கடிதத்தில், மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு மேல் இன்னும் உள்ளது, பேதுருவின் முதல் நிருபத்திலிருந்து சில மேற்கோள்களை அவர் இங்கே சேர்த்துள்ளார்.

அன்டோனினஸ் பயஸ், இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்து ஓய்வுபெற்ற பிறகு, அவரது மகன் மார்கஸ் ஆரேலியஸ் வெரஸ் (அன்டோனினஸ் என்றும் அழைக்கப்படுகிறார்), அத்தோடு அவரது சகோதரர் லூசியஸ் [வெரஸ்) உடன் இணைந்து ஆட்சிப்பொறுப்பை கையேற்றார். 15. இந்த நேரத்தில் ஆசியா மீண்டும் பெரும் சீரழிவு காரணமாக சீர்குலைந்தது. அதேநேரம், பொலிகார்ப் வேதசாட்சியத்தின் நிறைவை அடைந்தார். அவரது முடிவைப் பற்றிய விபரம் இன்னும் உள்ளது. அது இந்தப் பக்கங்களில் இணைக்கப்பட வேண்டும். ஏனென்றால், பிற சமூகங்களுக்கு அவர் தலைமை தாங்கிய திருச்சபையின் ஒரு முக்கிய ஆவணமாக இது திகழ்கிறது.

ஸ்மிர்னாவில் உள்ள கடவுளின் திருச்சபை முதல் பிலோமிலியத்தில் உள்ள தேவனின் திருச்சபை மற்றும் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ள புனித கத்தோலிக்க திருச்சபையின் அனைத்து சபைகளுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய சர்வேசுரனிடமிருந்து இரக்கமும், சமாதானமும், அன்பும் பெருமளவில் உங்கள் மீது இறங்கக்கடவதாக. ஆகவே, அன்பான சகோதரர்களே, துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்த வேதசாட்சிகள் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட பொலிகார்ப் பற்றி உரையாட நாங்கள் உங்களோடு தொடர்பு கொண்டுள்ளோம்.

மற்றைய வேதசாட்சிகளுக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் முதலில் விவரிக்கிறார்கள். சித்திரவதை செய்யப்பட்டபோது அவர்கள் காட்டிய தைரியத்தை புகழ்ந்துரைக்கிறார்கள். சித்திரவதை செய்யப்பட்டபோது அதைக் கண்ணுற்ற பார்வையாளர்கள் ஆச்சரியத்துக்குள்ளாயினர். சில நேரங்களில் கசைகளால் தண்டிக்கப்பட்ட போது, அவர்களின் உடம்பின் உட்புற நரம்புகள் மற்றும் தசைநார்கள், சதைகள் கிழிந்து, அவற்றின் வழியாக குடல் மற்றும் உள் உறுப்புகளை வெளியே வந்திருந்தன. மற்றைய சமயங்களில் அவை கூரான கடல் சிப்பி ஓடுகள் மற்றும் கூர்மையான கூர்முனைகள் கொண்ட ஆயுதங்களால் நார் நாராகக் கிழிக்கப்பட்டு, இறுதியாக காட்டு விலங்குகளுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டன.

உத்தமரான ஜெர்மானிக்கஸ் கடவுளின் அருளால் இயற்கையாக மனிதருக்கு ஏற்படக்கூடிய மரண பயத்தை வென்றார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இளமைப் பருவத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு மன்றாடி ஏனையோர் அவரைத் தடுக்க முயன்றபோதும், அவரை நோக்கி ஏவிவிடப்பட்ட மிருகத்தை தன்னிடம் வருவதைத் தடுக்க அவர் முயற்சிக்கவில்லை. ஏறக்குறைய வலுக்கட்டாயமாக அதைத் தூண்டிவிட்டு, விரைவில் தன்னை சூழ்ந்திருக்கும் அநீதியிலிருந்தும் பொல்லாத வாழ்க்கையிலிருந்தும் உடனடியாக விடுபடுவது தான் அவரது குறிக்கோளாக இருந்தது. அவரது புகழ்பெற்ற மரணத்தில், கடவுள் மீது மட்டில்லா பிரியத்துடன் வாழ்ந்த வேதசாட்சியின் துணிச்சலைக் கண்டு அங்கு கூடியிருந்த மொத்தக் கூட்டமும் மிகவும் வியப்படைந்தது. பொதுவாக கிறிஸ்தவர்களின் தைரியத்தைக் கண்டு, “நாத்திகர்களைக் கொல்லுங்கள்! பொலிகார்ப்பை விடாதீர்கள்!” என்ற கூக்குரலோடு அங்கே ஒரு பெரிய சலசலப்பு நிலவியது. ​​பிரிஜியாவிலிருந்து புதிதாக வந்த குயின்டஸ் என்ற ஒரு குறிப்பிட்ட நபர், விலங்குகளையும் வரவிருக்கும் சித்திரவதைகளையும் பார்த்து, மனம் நொந்து தீர்ப்பிடப் பட்டவர்களைக் காப்பாற்ற முன்வந்தார். அவரும் மற்றவர்களும் மிக அவசரமாக தீர்ப்பாயத்திற்கு விரைந்தனர். இருப்பினும் குற்றவாளி என ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டமை, அவர்களின் மதநம்பிக்கையற்ற முட்டாள்தனத்திற்கு ஒரு சான்றாகும்.

எவ்வாறாயினும், அற்புதமான மனிதரான பொலிகார்ப், இந்தச் செய்தியைக் கண்டு கலங்காமல், [ஸ்மிர்னா] நகரத்தில் தங்கியிருக்க வேண்டுமென்ற உறுதியையும் திடத்தையும் கொண்டிருந்தார். ஆனால், அவரது நண்பர்கள் அவரது தப்பித்து ஓடிவிடும்படி கெஞ்சினார்கள். நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்குச் செல்லும்படி அவரை வற்புறுத்தினார்கள். ஆகவே அங்கே அவர் சென்று மேலும் சிலருடன் தங்கி, உலகம் முழுவதிலும் உள்ள திருச்சபைகளுக்கு அமைதி, சமாதானம் கிடைக்க வேண்டும் என்று இரவும் பகலும் இறைவனிடம் வேண்டிக்கொண்டார். இதுவே அவரது குறிக்கோளாய் இருந்தது. அவர் கைது செய்யப்படுவதற்கு மூன்று இரவுகளுக்கு முன்பு, அவர் தியானத்தில் மூழ்கி இருந்தபோது, அவருள் ஏற்பட்ட ஒரு தரிசனத்தின் மூலம், அவர் படுத்துறங்கிய தலையணை திடீரென தீப்பிடித்து எரிவது போல் கண்டார். இது கிறிஸ்துவின் நிமித்தம் அவர் தனது உயிரை நெருப்பினால் எரித்து பலி கொடுப்பதன் ஒரு முன் அடையாளம் தான் என்று தனது நண்பர்களுக்கு விளக்கினார். அவரை வேட்டையாடுபவர்கள் இடைவிடாமல் அவரை தேடியபடியால், அவரோடு தங்கியிருந்த சக நண்பர்களின் அன்பு அவரை வேறொரு பண்ணைக்குச் செல்ல கட்டாயப்படுத்தியது. அப்போது அவரைத் தேடிய வேட்டையில் ஈடுபட்டிருந்தவர்கள், அங்கே வந்து அங்கிருந்த இரண்டு ஊழியர்களைக் கைது செய்தனர். அவர்களில் ஒருவர், அவருக்கு அளிக்கப்பட சித்திரவதையின் காரணமாக பொலிகார்ப்பின் குடியிருப்பைக் காட்டினார். அது இரவு நேரமாதலால், அவர் மேல் மாடி படுக்கையறையில் படுத்திருப்பதைக் கண்டார்கள். அவர் வேறு வீட்டிற்கு தப்பித்து ஓடியிருக்கலாம், ஆனால் அவர் “கடவுளின் சித்தம் எதுவோ, அது நிறைவேறட்டும்” என்று மறுத்துவிட்டார். அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட அவர், கீழே இறங்கி வந்து அவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், மிகுந்த அடக்கத்துடனும் பேசினார். அவர்கள் அவருடைய முதுமையையும் தன்னம்பிக்கையான இயல்பையும் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அத்தகைய குணம் கொண்ட ஒரு முதியவரைக் கைது செய்யவா இவ்வளவு தூரம் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டோம் என்று ஆச்சரியப்பட்டனர். அவர்களுக்கென்று ஒரு மேசை மற்றும் கதிரையை ஏற்பாடு செய்யும்படி அங்குள்ளோருக்குக் கட்டளையிட்டார். மேலும் ஒரு மணிநேரம் மட்டும் தொந்தரவின்றி தன்னை செபிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். அனுமதி வழங்கப்பட்டது. அவர் எழுந்து நின்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். இறைவனின் அருளால் அவர் பரிபூரணமானதை உணர்ந்தார். அதைக்கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியப் பட்டார்கள். இப்படியான ஒரு தேவ பற்றுதல் மிக்க ஒரு மகானைப் பிடிக்க வந்ததைப்பற்றி அவர்களுள் சிலர் மனம் வருந்தினர்.

[பொலிகார்ப்பின் வேதசாட்சியம்] நிருபம் மேலும் தொடர்கிறது:

சிறிய-பெரிய, புகழ்பெற்ற-தெளிவற்ற, மற்றும் அனைத்து வேளைகளிலும் அவருடன் தொடர்பு கொண்ட அனைத்திற்கும், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபையையும் நினைவில் நிறுத்தி அவர் செபித்து முடித்த பின், தனது நேரம் நெருங்கி விட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். சிறைப்பிடிப்பாளர்கள் அவரை ஒரு கழுதையின் மீது ஏற்றி நகருக்குள் கொண்டு வந்தனர். அந்த நாள் பெரிய ஓய்வு நாளாக இருந்தது. சமாதான நீதவா னாகிய (Herod) ஏரோதுவும், அவனது தந்தையான (Nicetes) நைசிடெஸ் என்பவனும் தேரில் வந்து, அவரை சந்தித்து, அவரை தமது தேரில் ஏற்றி, அவர் அருகில் உட்கார்ந்து, அவரை வற்புறுத்துவதற்கு முயற்சித்து, ‘சீசரை ஆண்டவரே என்று சொல்வதிலும், தியாகம் செய்வதிலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கடைபிடிக்கப்படும் அனுஷ்டானங்களிலும் என்ன தவறு இருக்கிறது? என்றும், அதன் மூலம் உயிரைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாமே? என்றும் கூறினர். ஆனால், அவர் முதலில் அவர்களுக்கு எவ்வித பதிலையும் அளிக்க வில்லை. ஆயினும், அவர்கள் அவரைத் தொடர்ந்தும், வற்புறுத்தியபடியே இருந்தார்கள். அப்போது அவர் பதில் அளிக்கையில், ‘உங்கள் கட்டளைப்படி நான் நடக்க மாட்டேன் என்றார்.

ஆகவே, அவர்கள் அவரைச் சம்மதிக்க வைப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று நினைத்த அவர்கள், அவரைக் கெட்ட வார்த்தைகளால் பேசி அவரைத் தேரில் இருந்து பலவந்தமாக வெளியே தள்ளிவிட்டனர். அதன் காரணமாக, அவரது கால் எலும்பு ஒன்று விலகியது. ஆயினும், அவர் எவ்வித சலங்களோ, தடுமாற்றங்களோ இன்றி, வேதனை தனக்கு நன்கு பழக்கப்பட்டது தானே என்ற உறுதியோடு, அரங்கத்துக்கு அவரைக் கூட்டிச் சென்ற போது, விரைவாகவும், ஆர்வத்துடனும் நடந்து சென்றார். அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் பேரிரைச்சல் காரணமாக, அவர் கூறுவதை கேட்க முடியாதிருந்தது.

பொலிகார்ப் அரங்கத்திற்குள் நுழையும் போது, பரலோகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அது ‘ஓ! பொலிகார்ப்பே, நீ பலமாக இரு, உன்னை ஒரு உண்மையான மனிதனாகக் காட்டு’ என்று ஒலித்தது. அவரோடு பேசியது யார் என்பதை ஒருவரும் காணவோ, கேட்கவோ இல்லை. ஆயினும், அங்கே பிரசன்னமாய் இருந்த எமது சகோதரர்கள் அந்தக் குரலைக் கேட்டனர். அவர் அரங்கத்துக்கு முன்பாகக் கொண்டு வரப்பட்ட வேளை, கூடியிருந்த மக்களின் பேரிரைச்சல் மேலும் அதிகமானது. அவரை ஆளுநர் இடம் கொண்டு வந்த போது, நீர் தான் பொலிகார்ப்பா? என்று கேட்டான். அதற்கு அவர், ஆம், நான் தான் என்றார். உடனே ஆளுநர், (கிறிஸ்துவை) மறுதலிக்க அவரை வற்புறுத்த முயன்றார். ‘உமது முதுமையையும், மற்றைய விடயங்களையும் மதிக்கிறேன். எங்கள் வழக்கப்படி, சீசரின் அதிர்ஷ்டத்தால் உறுதி பூணும். அதன் பின் மனம் நொந்து, நாஸ்திகர்கள் ஒழியட்டும் என்று கூறும் என்று கட்டளை இட்டான். ஆனால் பொலிகார்ப், அரங்கத்தில் இருந்த அனைத்து அஞ்ஞானிகளையும் கோபத்துடன் பார்த்து, அவர்களை நோக்கி கையை அசைத்து, ஒரு பெருமூச்சுடன் அவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, ‘நாஸ்திகர்கள் ஒழியட்டும்’ என்று சத்தமிட்டார். உடனே ஆளுநர், அவரை நோக்கி, ‘உறுதியாக சொல்கிறேன், நீர் கிறீஸ்துவை தூற்றினால் போதும், உம்மை நான் விடுவிப்பேன்’ என்றான். ஆயினும், பொலிகார்ப் தீர்க்கமாக ‘எண்பத்து ஆறு ஆண்டுகள் நான் அவருக்கு சேவை செய்தேன், அவர் என்னை ஒருபோதும் காயப்படுத்தியதில்லை. அப்படி இருக்கையில், நான் எப்படி எனது அரசரையும், என் இரட்சகரையும் நிந்திக்க முடியும்?’ என்று கேட்டார்.

ஆளுநர் மீண்டும் அவரை வற்புறுத்தி, ‘சீசரின் அதிர்ஷ்டத்தின் (Fortune of Caesar) மேல் சத்தியம் செய்யும்’ என்று சொன்னபோது, அவர், ‘நீர் வீணாக என்னை வற்புறுத்துகிறீர். சீசரின் அதிர்ஷ்டத்தின் மேல் நான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நீர் சொல்கிறீர். நான் யார் என்பதையும், எவர் என்பதையும் நீர் அறியாதது போல் பாசாங்கு செய்கிறீர். ஆனாலும், நான் ஒன்றை உறுதியாகவும், திடமாகவும் சொல்கிறேன்; நான் ஒரு கிறீஸ்தவன். கிறீஸ்தவத்தின் சத்தியம் மற்றும் கோட்பாடுகள் பற்றி நீர் தெரிந்து கொள்ள வேண்டுமானால், எனக்கு அவற்றைப் பற்றி விளக்கமளிக்க ஒரு நாளை ஒதுக்கித் தாரும். அப்போது நான் கூறுவதை நீர் கேட்கலாம்’ என்றார். அதற்கு ஆளுநர் பதிலுரையாக, ‘அப்படியானால், மக்களை அதற்கு இணங்கச் செய்யும்’ என்றான். ஆனால் பொலிகார்ப், “எனது விசுவாசத்தைப்பற்றி உமக்குப் பொறுப்புக் கூறுவது முறையே என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், கடவுளால் நியமிக்கப்பட்ட அதிகாரங்களுக்கும், அதிகாரிகளுக்கும் உரிய மரியாதையை கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கற்பிக்கப்படுகிறது. ஆனால் இந்த மக்களைப் பொறுத்த வகையில், எனது பொறுப்புக் கூறலைக் கேட்க அவர்கள் எந்த விதத்திலும் தகுதியானவர்கள் அல்ல’ என்றார்.

அப்போது ஆளுநர் அவரை நோக்கி, ‘என்னிடம் கொடிய காட்டு மிருகங்கள் உள்ளன. நீர் மனம் திரும்பி நான் சொன்ன படி செய்யாவிட்டால், உம்மை இந்த மிருகங்களுக்கு இரையாக்குவேன்.’ என்றான். அதற்கு அவர், அப்படியானால், அவற்றை இங்கே கொண்டு வாரும். தீமையை ஏற்றுக்கொள்வதற்காக நன்மையை விட்டுக்கொடுத்து அதன் மூலம் நன்மை அடைய நாம் பழக்கப்பட்டவர்கள் அல்ல. தீமையிலிருந்தும் எனக்கு நீதி கிடைக்குமானால், அது எனக்கு நன்மையே.’ என்றார். ஆயினும், மீண்டும், மீண்டும், ஆளுநர் அவரை நோக்கி: ‘கொடிய மிருகங்களை நீர் துச்சமாக நினைப்பீரானால், அப்போதும் நீர் மனம் திருந்தாவிட்டால், உம்மை தீயில் இட்டு எரிக்க நான் உத்தராவிட நேரிடும்’ என்றான். பொலிகார்ப் பதிலுரையாக, ‘நீர் குறிப்பிடும் தீ, ஒரு மணி நேரம் எரிந்து பின்னர் அணைந்து விடும். ஆனால், தேவனின் மேல் பற்றில்லாத உம்மைப் போன்றவர்களுக்கு தண்டனையாக எரியும் தீயானது, என்றும் நிரந்தரமாய் எரிந்துகொண்டே இருக்கும் என்பதை நீர் அறியாதிருக்கிறீர். ஆகவே, ஏன் தாமதிக்கிறீர்? உமக்கு எது விருப்பமோ, அதைக் கொண்டு வாரும்’ என்று துணிச்சலாகக் கூறினார்.

இவை பற்றியும் மேலும் பலவற்றையும் பற்றி அவர் பேசிக்கொடு இருக்கையில், அவர் மிகவும் உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். அவரது முகம் கிருபையால் நிறைந்து காணப்பட்டது. விவாதிக்கப்பட்ட காரணிகளையிட்டு அவர் எவ்வித மனக்குழப்பமும் அடையவில்லை. ஆனால், ஆளுநரோ, வியப்புற்றவனாகக் காணப்பட்டான். அதே வேளை, பறை சாற்றும் தூதரை அரங்கத்துக்குள் வரச் செய்து, ‘பொலிகார்ப் மூன்று முறை அவரைக் கிறீஸ்தவன் என்று பறைசாற்றினார்’ என்று கூறினான். அதை அந்த பறை சாற்றும் தூதன் பிரகடனம் செய்தான். அப்போது, சிமிர்னாவில் வாழும் யூதர்களும், பிற இனத்தவர்களும் மிகுந்த கோப வெறியோடு, இவன் ஆசியாவின் போதகன் என்றும், கிறீஸ்தவர்களின் தந்தை என்றும், இவர்கள் போன்றவர்கள் எமது தேவர்களை உதாசீனம் செய்பவர்கள் என்றும், பலரிடம், பலி கொடுப்பது பாவமென்றும், தேவர்களை வழிபடக் கூடாது என்றும் போதித்து வந்தான் என்றும் உரத்த குரலில் கோஷமிட்டனர். இதன் பின்னர், ஆசியாவின் ஆளுனரான (Asiarch) ஆசியார்க் பிலிப் என்பவனை நோக்கி, சிங்கங்களை அவர் மீது ஏவி விடும்படி பணித்தான். ஆனால் பிலிப், கொடிய மிருகங்களை உபயோகிக்கும் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதால், சட்டப்படி அதைச் செய்ய முடியாது என்று கூறினான். அதேவேளை மக்களும், பொலிகார்ப் உயிருடன் எரிக்கப்படுவதே முறையாகும் என்று உரத்த குரலில் கோஷம் எழுப்பினர். இந்த நிகழ்வு, அவர் முன்பு ஒரு நாள் செபித்துக்கொண்டு இருந்த வேளை தனது தலையணை தீப்பிடிப்பது போன்று ஒரு தரிசனம் மூலம் வெளிப்படுத்தியவை நிறைவேறவே நடந்து கொண்டிருந்தன. அதைப்பற்றி அவர் அவருடன் இருந்தவர்களிடமும் தாம் உயிருடன் எரிக்கப்படக்கூடும் என்று தீர்க்கதரிசனமாய்க் கூறியிருந்தார்.

முன்னர் பேசப்பட்டதை விட, காரியங்கள் விரைவாகவே நடைபெற்றன. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உடனடியாகவே போய் விறகு விற்போரிடம் நிறைய விறகுகளை வாங்கி வந்து அங்கே அடுக்கினார். அதிலும், யூதர்கள், அவர்களது வழக்கப்படி இவை நடத்தப்படுவதால் மிகவும் உற்சாகத்துடன் ஒத்தாசை செய்தனர். ஈமக்கிரியைகளுக்கான மேடை தயாரானதும், பொலிகார்ப் தனது மேல் ஆடைகளைக் களைந்து, தனது இடைக் கச்சையைத் தளர்த்தி, தனது காலணிகளையும் கழற்றி விட்டார். ஆயினும், அப்படிச் செய்வது பொதுவாக வழக்கத்தில் இருக்கவில்லை. ஆனால், விசுவாசிகளோ, அவரின் சரீரத்தை யார் முதலில் தொடுவது என்பதில் மிக ஆவலாய் இருந்தனர். ஏனென்றால், அவருடைய புனிதமான வாழ்க்கையின் நிமித்தம், அவர் வேதசாட்சியாய் அனைத்து விதமான நன்மைகளாலும் நிறைத்தவராய்க் காணப்பட்டார். உடனே அவர்கள் அவரைச் சுற்றி எரியூட்டும் பொருட்களை அடுக்கினர். எரியூட்டும் முன், அவரை ஆணிகளால் அறைந்து எரியூட்ட அவர்கள் முயன்ற போது, அவர், அவர்களைத் தடுத்து, என்னை இப்படியே விட்டு விடுங்கள். ஏனெனில் எரியும் தீயை தாங்கி சகித்துக்கொள்வதற்கு எனக்கு சக்தியையும், பெலனையும் தருகிறவர் என் தேவன். நீங்கள் ஆணிகள் அறைந்து என்னை நிலையாக வைத்து எரியூட்டத் தேவையில்லை. எரியும் தீயை தாங்கும் திடத்தை அவரே எனக்குத் தந்துள்ளார், என்று கூறினார். அவர்கள் அவரை ஆணிகளால் அறைய வில்லை, மாறாக, அவரது கைகள் பின் புறமாக வைக்கப்பட்டு அவரைக் கட்டிப்போட்டனர். மந்தையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடொன்று பலியிடப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டு, தேவனுக்குப் பிரியமான தகனப் பலியில் ஒப்புக்கொடுப்பது போல் அவரை அவர் தயார் செய்து கொண்டு வந்தனர். அப்போது அவர் வானத்தை அண்ணார்ந்து நோக்கி:

இயேசுக்கிறீஸ்துவின் தந்தையான சர்வத்துக்கும் வல்லவரான பிதாவே, கர்த்தர் மூலமாகவே நாம் உம்மைப் பற்றி அறிந்து கொண்டோம். தேவே தூதர்களினதும், சகல வல்லமைகளினதும் மற்றும் சகல படைப்புகளினதும் தேவனே, உமக்கு முன்பாக நீதியுடன் வாழும் அனைத்து மானிட இனத்தினதும் தேவனே, இந்த நாளுக்கும், இந்தக் கணப்பொழுதுக்கு உரியவனாக இருப்பதற்கு நீர் என்னைத் தகுதியுள்ளவனாக தேர்ந்து எடுத்தமைக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். எண்ணற்ற வேதசாட்சிகளோடு என்னையும் அதன் ஒரு அங்கமாய் நீர் மாற்றியமைக்காகவும், உமது கிறிஸ்துவின் பாத்திரத்தில், ஆன்மா மற்றும் சரீரத்துடனான நித்திய வாழ்வின் உயிர்த்தெழுதலுக்கு, பரிசுத்த ஆவியின் மூலம் (அருள் பெற்றவராய்) அழிவில்லா நித்திய வாழ்வுக்கு வழி சமைத்தீர். அவர்கள் மத்தியில், நானும் இன்று உமக்கு ஏற்ற முழுமையான பலியாக ஏற்றுக்கொள்ளப்படுவேனாக. நித்திய உண்மையும், இரக்கமும் உள்ள தேவனாகிய நீர், அடியேனுக்கு முன்பு கூறியிருந்ததை போலவே, அதை இப்போது நிறைவேற்றுகிறீர். ஆகவே, அனைத்துக் காரியங்களுக்காகவும் நாம் உம்மைத் துதிக்கிறேன். உமது திருநாமத்தை அர்ச்சிக்கிறேன். உம்மை மகிமைப் படுத்துகிறேன். சகல வல்லவரும், நித்திய இரக்கமுள்ளவருமான இயேசுக்கிறீஸ்துவுக்கும் அவ்வாறே செய்கிறேன். அன்றும், இன்றும் இனி என்றென்றும் உமக்கும், உம்மோடு கூட பரிசுத்த ஆவியானவருக்கும் என்றும் அழியாத மகிமை உண்டாகக் கடவதாக’, ‘ஆமென்’ என்று தனது உருக்கமான மன்றாட்டுடன் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

உடனேயே தீயைப் பற்ற வைக்க நியமிக்கப்பட்டவர்கள், தீயை மூட்டினார்கள். தீ சுவாலையாக பற்றி எரிந்தது. அப்போது, அங்கே நடந்தவற்றுக்கு சாட்சி பகரும் பாக்கியத்தைப் பெற்றவர்களாகிய நாம், அந்த இடத்தில் ஒரு புதுமையைக் கண்டோம். அங்கே என்ன நடந்தது என்பதனை உலகுக்கு எடுத்துக்கூற நாம் அதைப் பாதுகாத்து வைத்தோம். என்ன புதுமை! அந்தத் தீ, அவரைச் சுற்றி ஒரு அலங்கார வலயம் போல் காட்சி அளித்தது. காற்றால் நிறைந்த பாய்மரப் படகின் பாய் போல அந்த நெருப்பு வளையம் காட்சியளித்தது. அந்த வேதசாட்சியின் உடலைச் சூழ்ந்து அந்த வளையம் எரிந்து கொண்டிருந்தது. அந்த வளையத்திற்குள் அவர் எரிந்து கருகிய உடலை உடையவராய் அல்லாமல், மாறாக, தீயில் இடைப்பட்ட வெண்மையான அப்பத்தைப் போல் காணப்பட்டார். வேறு விதத்தில் சொல்லப்போனால், அவர் ஒரு புடம் போடப்பட்ட தங்கத்தைப் போலவும், வெள்ளியைப் போலவும் பிரகாசித்தார். அத்தோடு, அந்த நேரம் நாம் அனுபவித்த வாசனை (தீயிலிருந்து வந்த) அவ்வளவு சுகந்தமாக இருந்தது. அங்கே எதோ ஒரு வாசனைத் திரவியம் அல்லது வாசனை நிறைந்த பொருளொன்று தீயில் எரிவது போன்றதொரு மென்மையான சுகந்தம் அந்த இடத்தை நிறைத்திருந்தது. நேரம் செல்லச் செல்ல, அந்தக் கொடூர கயவர்கள் தீ அவரைச் சுட்டெரிக்கவில்லை எனத் தெரிந்துகொண்டு, அவர் அருகில் சென்று அவரைக் கூரிய வாளால் குத்திக் கொலை செய்து தண்டனையை நிறைவேற்றும் படி கொலைப் பாதகர்களுக்குக் கட்டளை இட்டனர். வாளால் அவர் வெட்டப்பட்டவுடன், அந்த நெருப்பையே அணைக்கும் அளவுக்கு அங்கே இரத்தம் பீறிப் பாய்ந்தது. விசுவாசிகளுக்கும், பாவிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றி அறிந்து மக்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர். விசுவாசிகளின் மத்தியில் மிகவும் போற்றத்தக்கவராய் பொலிகார்ப் காணப்பட்டார். எமது காலத்தில், அப்போஸ்தலிக்க மற்றும் தீர்க்கதரிசனப் போதகராகவும், ஆசிரியராகவும் சேவை செய்த அவர், சிமிர்னாவில் அமைந்திருந்த கத்தோலிக்க சபையின் மிகவும் உன்னதம் மிக்க ஆயராகவும் சேவையாற்றினார். அவரது வாயில் இருந்து வந்த வார்த்தைகள் யாவும் நிறைவேறியிருந்தன. இதுவரை ஒருசில நிறைவேறாவிட்டாலும், அவை இனி வரும் காலங்களில் நிறைவேறும்.

ஆனால் நீதிமான்களின் விரோதியாகவும், பொறாமைக்குணம் படைத்தவர்களுமாகிய அந்த கொடியவர்கள், அவரது வேதசாட்சியத்தின் வியக்கத்தகு பெறுமதி மிக்க தன்மையை உணர்ந்தபோதும், ஆரம்பம் முதல் அவர் வாழ்ந்த புனிதமான, அப்பழுக்கற்ற வாழ்க்கையை அறிந்தவர்களாய், அவர் எவ்வாறு இப்போது என்றும் அழியாத கிரீடத்தை சூட்டிக்கொண்டார் என்பதையும், எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி அவர் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற வெகுமதியையும் பெற்றார் என்று எவரும் எண்ணி, அவருடைய உடலையோ, அல்லது எண்ணங்களையோ ஒரு குறைந்தபட்ச நினைவுச்சின்னமாகக் கூட எவரும் வைத்துக் கொள்ளக் கூடாதென்ற சிந்தனையில் அவர் உறுதியாக இருந்தபடியால், அதைத் தடுக்க அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருந்தார். ஆதலால், அவர் ஏற்கனவே ஏரோதின் தந்தையும், அஸிடஸ் (Acetes) என்பவனின் சகோதரனுமான, (Nicetes) நைய்சிடஸ் என்பவனிடம் இதை ஒரு வேண்டுகோளாக வைத்திருந்தார். ஆளுநரிடம் அவரது உடல் புதைக்கப்படக் கொடுக்கக் கூடாது என்று அவர் உறுதிப்படக் கூறியிருந்தார். காரணம், சிலுவையிலே அறையப்பட்ட கர்த்தரை விடுத்து, மக்கள் அவரது உடலை வணங்கத் தலைப்படுவதை தடுக்கும் முகமாகவே அவர் இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். இதனை அவர் யூதர்களின் ஆலோசனைப்படியும், வலியுறுத்துதலின் பேரிலுமே சொல்லி இருந்தார். நாம் அவரை தீயிலிருந்து வெளியே எடுக்க முயன்றபோது, கிறீஸ்துவை நாம் கைவிடுவது என்பது எங்களை பொறுத்தமட்டில் எவ்விதத்திலும் சாத்தியமில்லை என்பதை அறிந்தவர்களாய், அந்த கொடியவர்கள் எங்களைக் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். ஆனால் எம் தேவனோ, மக்கள் வேறு எதனையும் வணங்குவதைத் தடுக்கும் முகமாக, உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தார். ஏனெனில், அவர் ஒருவரே தேவனின் மைந்தன், அவரையே நாம் என்றும் போற்றித் துதிக்கிறோம். ஆனால், வேதசாட்சிகள் கர்த்தரின் சீடர்கள், மற்றும் விசுவாசிகள் என்ற ரீதியில், அவர்களது அரசரும் எஜமானுமாகிய கர்த்தர் மீது அவர்கள் கொண்டுள்ள எல்லையற்ற பாசத்தின் காரணமாக, வேதசாட்சிகளை நாம் மதிப்புடன் நேசிக்கிறோம். அதன் மூலமாகவே எம்மையும் நாம் அவரோடு தோழமையுள்ளவர்களாகவும், சீடர்களாகவும் ஆக்கிக்கொடுள்ளோம். எனவே, பண்டைய நூறு பேர் கொண்ட உரோமைய படைக்குத் தளபதியான ஒருவன் (Centurion) யூதர்கள் கொண்டிருந்த சீற்றத்தின் காரணமாக, பொலிகார்ப்பின் உடலை தீயின் நடுவே கிடத்தி, அதை முற்றிலும் எரித்து சாம்பலாக்கினான். அதன் பின் நாம் அவரது எலும்புகளை சேகரித்தோம். அவை நன்றாக வடிவமைக்கப்பட்ட தங்கத்தை விடவும், விலை உயர்ந்த ஆபரணங்ககளை விடவும், மிக மிகத் தூய்மையான பொக்கிஷங்களாகக் கருதி அவற்றை முறையான இடத்தில் பாதுகாப்பாக வைத்தோம். சந்தர்ப்பம் வாய்த்த போதெல்லாம், நாம் அவற்றை ஒன்று சேர்த்தோம். மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் நாம் அவரது வேதசாட்சியத்தை நினைவுகூற, கர்த்தரது அருளை வேண்டி நின்றோம். அவரை மட்டுமல்ல, ஏற்கனவே தமது பாடுகளை நிறைவு செய்த அனைத்து வேதசாட்சிகளின் நினைவாகவும், இன்னும் அவரது காலடியைப் பின்பற்றி நடக்க இருப்பவர்களை ஆயத்தப் படுத்தவும், அவர்களுக்குத் தகுந்த பயிற்சியை பெற்றுக்கொள்ளும் முகமாகவுமே நாம் அவ்வாறு அவரது பொக்கிஷங்களைப் பாதுகாத்தோம். இது தான் ஆசீர்வதிக்கப்பட்ட பொலிகார்பின் வரலாறு. இவர் ஸ்மிர்னாவில் வேதசாட்சியாக இருந்தவர்களில், பன்னிரண்டாவது இடத்தில் இருந்தவர். (பிலடெல்பியாவில் இருந்தவர்களையும் உள்ளடக்கியதாக), இருப்பினும், அவர் அனைத்து மக்கள் மனங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டார். அஞ்ஞானிகள் கூட அவரைப் பற்றி எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள்.

ஸ்மிர்னாவில் உள்ள கிறிஸ்தவர்களின் நூல்களில் குறிப்பிட்டு உள்ளபடி, அற்புதமான மற்றும் அப்போஸ்தலிக்க புனிதருமான பொலிகார்ப்பின் வாழ்க்கை இவ்வாறுதான் நிறைவடைந்தது. அதே நேரத்தில் ஸ்மிர்னாவில் நடந்த பிற வேதசாட்சியங்களையும் அந்த ஆவணம் பதிவு செய்கிறது. அவர்களில், மெட்ரோடோரஸ், இவர் மார்சியோனைட் கூற்றை வெளிப்படையாக எதிர்த்த ஒரு பெரியவர் தீயில் இடப்பட்டு கொல்லப்பட்டார். மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்பாக விசுவாசத்தை துணிச்சலான பறைசாற்றிய ஒரு புகழ்பெற்ற வேதசாட்சியான பியோனியஸ் துன்புறுத்தல் காரணமாக வலுவிழந்து போனோர்க்கு வலுவையும், ஆறுதலையும் அளித்தார். அதன் காரணமாக அவர் சித்திரவதை செய்யப்பட்டு, ஆணிகள் அறையப்பட்டு, மரணிக்கும் வரை எரியூட்டப்படுவதற்கு முன், சிறையில் அவரைச் சந்தித்தவர்களுக்கு ஊக்கம் அளித்தார். இவை தான் எனது ஆரம்பகால வேதசாட்சியம் மற்றும் வேதசாட்சிகள் பற்றிய தொகுப்பில் உள்ள விபரங்கள். ஆசியா கார்பஸில் உள்ள பெர்கமம் நகரில் வேதசாட்சியத்துக்குட்பட்ட மற்றவர்களின் பதிவுகளும் என்னிடம் உள்ளன. மேலும், பாபிலாஸ் மற்றும் வேதசாட்சியாக மரித்த பெண்மணியான அகத்தோனிஸ் போன்றோர் பல உன்னதமான விசுவாச அறிக்கைகளுக்குப் பிறகு புகழ்பெற்ற நிறைவைக் அவர்களின் வாழ்வின் இறுதியில் கண்டிருந்தனர்.

ஜஸ்டின் என்ற வேதசாட்சி

16. அவர்களின் காலத்தில், நான் முன்பு குறிப்பிட்ட ஜஸ்டின் என்ற வேதசாட்சி, நமது கோட்பாடுகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அவரது இரண்டாவது புத்தகத்தை [அன்டோனினஸ் பியஸ் மற்றும் அவரது மகன்கள்] என்ற ஆட்சியாளர்களிடம் கையளித்த பிறகு, வேதசாட்சியம் என்ற தெய்வீக திருவருளால் அலங்கரிக்கப்பட்டார். தத்துவஞானியான கிரெசென்ஸ், அவரது வாழ்க்கையையும் நடத்தையையும் ஒரு இழிந்தவர் என்று நியாயப்படுத்துவதற்கு அரும்பாடு பட்டார். அவருக்கு எதிராக சதித்திட்டத்தை தூண்டினார். ஏனென்றால் ஜஸ்டின் பார்வையாளர்கள் முன்பாக விவாதத்தில் பலமுறை அவரை தோற்கடித்தார். இந்த தியாகத்தினூடாக தலைசிறந்த தத்துவஞானியான இவர், தற்காப்பு குறித்து தனது வார்த்தைகளில் தெளிவாக விளக்கியிருந்தார்:

நான் பெயரிட்டவர்களில் ஒருவரால் அல்லது ஒருவேளை கிரெசென்ஸால் திட்டமிடப்பட்டு ஒரு வரைவுக்குள் அடைக்கப்படுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர் ஞானத்தை அல்ல, தற்பெருமையை விரும்புபவர். அவர் தத்துவஞானி என்ற பெயரைப் பெறத் தகுதியற்றவர். அவர் தனக்குப் புரியாததைப் பகிரங்கமாக மறுத்து, ஏமாற்றப்பட்ட பலரின் தயவையும் ஆதரவையும் பெறுமுகமாக கிறிஸ்தவர்கள் மோசமான நாத்திகர்கள் என்று கூறுகிறார். ஏனென்றால், கிறிஸ்துவின் போதனைகளைப் படிக்காமல் அவர் நம்மீது அவதூறு கூறுவாரானால், அவர் முற்றிலும் சீரழிந்தவராகவும், எளிமையானவர்களைக் காட்டிலும் கீழ்த்தரமானவராகவும் இருக்கிறார். பொதுவாக தனக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கிறார். அவர் அவற்றைப் படித்து, அவற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தவறினால், அல்லது அவர் புரிந்து கொள்ளாமல், சந்தேகத்திற்கு இடமின்றி கீழ்த்தரமாக நடந்து கொள்வாரானால், அவர் அறியாமை மற்றும் பயத்திற்கு அடிபணிவதில் மிகவும் மோசமானவரும் இழிவானவருமாவார். நான் உங்களிடம் துணிந்து சொல்வதென்ன வென்றால், அவரிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டதால் தான், நான் அவரைப்பற்றி கற்றுக்கொண்டேன் – நிரூபித்ததுக் காட்டினேன் கூட – அதாவது, அவருக்கு உண்மையில் எதுவும் தெரியாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதைக் கூறுகிறேன். நான் உண்மையைப் பேசுகிறேன் என்பதைக் காட்டவும், எங்கள் கருத்துப் பரிமாற்றங்களை நீங்கள் இதுவரை அறிந்துகொள்ள வில்லை என்றால், உங்கள் முன்னிலையில் கேள்விகளை மீண்டும் தொடுத்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். ஏனெனில், இது ஒரு பெரிய பேரரசனுக்கு ஒப்பான பணியாகும். ஆனால் எனது கேள்விகள் மற்றும் அவரது பதில்களை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தால், நாங்கள் நம்புவதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். அல்லது, அவருக்குத் தெரிந்தால், பார்வையாளர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதன் காரணமாக அவர் அவ்வாறு சொல்லத் துணியமாட்டார். நான் முன்பு கூறியது போல், அவர் ஞானத்தை அல்ல, நற்பெயரைக் காதலிப்பவராக இருப்பதை நிரூபிக்கிறார். அவர் சோக்ரடீஸின் மதிப்பிற்குரிய கட்டளையை கூட மதிக்கவில்லை.

மேற்கண்டவாறு ஜஸ்டின் கூறுகிறார். அவர் உண்மையில் கிரெசென்சின் சூழ்ச்சியில் சிக்கியதாகவும், ஆனால் அவருடைய சொந்த தீர்க்கதரிசனத்தின்படி அவரது நிறைவைக் கண்டதாகவும், கிரேக்க பாடநெறியில் சிறந்து விளங்கியவரும், ‘கிரேக்கர்களுக்கு எதிரான’ என்ற தனது இலக்கிய நூலில் அவர் எழுதியதற்காக மறக்கமுடியாத ஒரு நபரான டாடியான் என்பவர் இவ்வாறு கூறினார்: “அற்புதமான மனிதரான ஜஸ்டின் அதை சரியாக அறிவித்தார். இந்த மக்கள் சட்டவிரோதமானவர்கள் என்று கருதப்படுபவர்கள்.” என்றார். அவர் பின்னர் தொடர்ந்து கூறுகையில்;

பிரதான நகரத்தில் தனது மறைவிடத்தை ஏற்படுத்திக்கொண்ட கிரெசென்ஸ், காமக் களியாட்டங்களிலும், பணம் சம்பாதிக்கும் ஆசையிலும் அனைவரையும் மிஞ்சினார். அவர் மற்றவர்களுக்கு மரணத்தை பொருட்டாக எண்ணவேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஆனால் அவர் மரணத்தையிட்டு மிகவும் பயந்தார். அவர் அதை ஜஸ்டின் மீது திணிக்க சதி செய்தார், ஏனெனில் ஜஸ்டின் உண்மையை அறிவிப்பதன் மூலம் பேராசைக்காரர்கள் மற்றும் பாசாங்குத்தனம் செய்யும் தத்துவவாதிகளை தண்டித்தார்.

ஜஸ்டினின் வேதசாட்சிய மரணத்துக்கு இதுவே காரணம்.

வேதசாட்சிகள் என்று ஜஸ்டின் அவர்களால் பெயரிடப்பட்டவர்கள்

17. தனது சொந்த சோதனைக்கு முன், ஜஸ்டின் தனது முதல் ஆவணத்தில் தனக்கு முன் வீரமரணம் அடைந்த மற்றவர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்:

ஒரு பெண் கொடும் காமுகனான தனது கணவனுடன் வாழ்ந்து வந்தாள். அவளும் ஒருமுறை விபச்சாரம் செய்து அவளது கற்பையும் தூய்மையையும் இழந்தாள். கிறிஸ்துவின் கட்டளைகளைக் கற்றுக்கொண்ட பிறகு, அவள் ஒரு தன்னடக்கமான பெண்ணாக மாறினாள். அவள் தன்னுடைய கணவனிடமும் அதே மாற்றத்தை ஏற்படுத்த முயன்றாள். அங்கு அவள் கிறிஸ்தவ போதனைகளை தனது கணவனுக்கு எடுத்துரைத்தாள். தூய்மை கற்புநெறி, நேர்மை இல்லாமல் வாழ்பவர்களுக்கு நித்தியா அக்கினியின் மூலம் கிடைக்கும் தண்டனை குறித்து அவனை எச்சரித்தாள். ஆனால் அவனோ, அயோக்கியத்தனமான வெட்கக்கேடான நடத்தைகளில் மீளமுடியாமல் மனைவியின் அன்பை இழந்தான். அவன் இயற்கைக்கு எதிராக சகல விதிகளையும் மீறி, எல்லா வகையிலும் சிற்றின்ப மற்றும் விபச்சாரத்தில் கிடைக்கும் கேவலமான இச்சைகளைத் தேடும் கணவனுடன் தொடர்ந்து வாழ்வது பாவம் என்று கருதியதால், அவனை விவாகரத்து செய்ய விரும்பினாள். இருப்பினும், எதிர்காலத்தில் அவன் தன் வழியை மாற்றிக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அவனுடன் சேர்ந்து இருப்பது பரவாயில்லை என்று அவளது தோழிகள் அவளை நம்பவைத்ததால், அவள் அவனுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். அவள் தன் கணவன் அலெக்சாந்திரியாவுக்குச் சென்ற பிறகு, அவனது நடத்தை முன்னெப்போதையும் விட மிகவும் மோசமாக இருப்பதைக் கண்டு, அவனுடைய மேசையையும் படுக்கையையும் பகிர்ந்துகொண்டு, அவனுடன் தொடர்ந்து வாழவிரும்பாது, அவனுடைய பாவம் மற்றும் மோசமான விபச்சார செயல்களில் பங்கு கொண்டு மேலும் பாவத்தைக் காட்டிக்கொள்ளாமல், அவனுக்கு விவாகரத்து கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டு அவனுடனான வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்றாள். ஆனால் அந்தத் துணிச்சல் மிக்க கண்ணியமான அவளது கணவன் அந்த நாட்களில் அவனது மனைவி சேவகர்களுடனும் ஊழியர்களுடனும் குடித்து கும்மாளம் அடித்து விபச்சாரத்தில் மகிழ்ச்சியடைந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்துவிட்டு, இப்போது அதிலிருந்து விலகியிருந்தாலும், தனது கணவனை திருந்தி வாழும்படி சொல்வதை விட்டுவிட்டு, தன்னிச்சையாக அவனை விட்டுப் பிரிந்து போக அவள் விருப்பப்படி முடிவு செய்தாள். அவள் தன்னிச்சையாக அவனை விட்டுப் பிரிந்தபோது, அவள் ஒரு கிறிஸ்தவப் பெண் என்று அவன் குற்றம் சாட்டினான். மேலும், ஓ பேரரசரே, அவள் உங்களிடம் ஒரு மனு செய்திருக்கிறாள். முதலில், அவளது வீட்டு விவகாரங்களை ஒழுங்கு படுத்த அனுமதிக்குமாறு பணிவான கோரிக்கை ஒன்று முன்வைக்கப் பட்டது. அதன் பிறகு அவள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவள் பதிலளிப்பாள் என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு அதற்கு உங்கள் அனுமதியை நீங்கள் அளித்தீர்கள். அவளுடைய முன்னாள் கணவனால் அவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் போனபோது, கிறிஸ்தவக் கோட்பாட்டில் அவளுக்கு அறிவுரை கூறிய தொலெமியஸ் என்ற அறிஞனை நோக்கி கீழ்க்கண்ட விதத்தில் வசைபாடினான். அவர் தனது தனிப்பட்ட நண்பரான நூற்றுவர் தலைவரை விளித்து, தொலமியஸை அழைத்து ஒரே ஒரு கேள்வியைக் கேட்கும்படி வற்புறுத்தினார்: அவர் ஒரு கிறிஸ்தவரா? என்பதுதான் அந்தக் கேள்வி. தொலமியசோ, உண்மையுள்ளவர், வஞ்சகமோ காட்டுமிராண்டித்தனமோ இல்லாதவர், தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று கூறுவதில் பெருமை கொண்டார். அதனால் அவர் நூற்றுவர் தலைவரால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். நீண்ட காலத்துக்குக்குப்பின், அவர் தீர்ப்புக்காக அர்பிகஸ் முன் ஆஜரானபோது, அவரிடம் மீண்டும் அதே கேள்வி கேட்கப்பட்டது: அவர் ஒரு கிறிஸ்தவரா? என்று. கிறிஸ்துவின் போதனையின் மூலம் அவர் பெற்ற நன்மைகளை அவர் அறிந்திருந்த படியால், அவர் தன்னை தெய்வீக பண்புகளைக் கடைபிடிக்கும் ஒரு உததமராய்த் தன்னை அறிவித்தார். ஏனென்றால், எதையும் மறுப்பவன், எதோ ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இகழ்வதால் தான் அவ்வாறு செய்கிறான், அல்லது தன்னை அதற்கு தகுதியற்றவனாகவும் அந்நியனாகவும் கருதி அதை ஒப்புக்கொள்ளாமல் இருப்பான். இவை இரண்டும் உண்மையான கிறிஸ்தவனுக்குப் பொருந்தாது. அர்பிகஸ் அவரைக் கொல்ல உத்தரவிட்டபோது, ஒரு குறிப்பிட்ட லூசியஸ் என்ற பெயருடையவன், அவனும் ஒரு கிறிஸ்தவன், தண்டனை எவ்வளவு நியாயமற்றது என்பதை உணர்ந்து, அர்பிகஸிடம் இவ்வாறு கூறினார்: “இந்த தண்டனைக்கான காரணம் என்ன? விபச்சாரியோ, விபச்சாரத்தில் ஈடுபடுபவனோ, கொலைகாரனோ, திருடனோ, கொள்ளைக்காரனோ அல்ல, எந்தக் குற்றத்திலும் ஈடுபடாத இவரைக் கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொண்ட ஒரே காரணத்துக்காக ஏன் தண்டித்தீர்கள்? அர்பிகஸ், உங்கள் தீர்ப்பு பேரரசர் பியஸ், அல்லது தத்துவவாதி, அல்லது சீசரின் மகன் அல்லது புனிதமான சட்டசபையின் தீர்ப்பு அல்ல. அதைக்கேட்டு லூசியஸுக்கு அவர் அளித்த ஒரே பதில் இதுதான்: ‘நீங்களும் [இதே வகுப்பைச் சேர்ந்த] ஒருவராகத் தெரிகிறது.” அதற்கு லூசியஸ், “நிச்சயமாக நானும் அவர்களில் ஒருவன் தான்,” என்று பதிலளித்தபோது, அவரும் தூக்கிலிட உத்தரவிடப்பட்டார். அத்தகைய தீய ஆட்சியாளர்களிடமிருந்து விரைவில் விடுதலை அடைந்து, தேவதந்தை மற்றும் பரலோக அரசரிடம் சொல்லப் போகிறார் என்பதை அறிந்தவராய், லூசியஸ் தனது நன்றியைத் தெரிவித்தார். மூன்றாவது கிறிஸ்தவரும் முன் வந்து இதேபோல் தண்டனை நியமம் பெற்றார்.

இதையிட்டு நான் முன்பு மேற்கோள் காட்டிய வார்த்தைகளை ஜஸ்டின் பொருத்தமாகச் சேர்த்தார். “நான் பெயரிடப்பட்டவர்களில் ஒருவரால் சதி செய்யப்படுவதாக உணர்கிறேன்” என்றார்.

ஜஸ்டினின் எழுத்தாக்கப் படைப்புகள்

18. ஜஸ்டின், இறையியலில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பண்பட்ட அறிவுத்திறனுடன் கூடிய பல பயனுள்ள கட்டுரைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார். அவற்றில் பின்வருவனவற்றை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நான் இங்கே பரிந்துரைக்கிறேன்:

அன்டோனினஸ் பயஸ், அவரது மகன்கள் மற்றும் உரோமைய சட்டசபை ஆகியோருக்கு விலாசமிடப்பட்ட A Defence of our Faith என்ற நூல் பற்றியும்;

 A second Defence of our Faith என்ற நூலை அவரது வாரிசான அன்டோனினஸ் வெரஸுக்கு [மார்கஸ் ஆரேலியஸ்], அவருக்கும் கொடுத்தது பற்றியும், அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் பற்றி நான் இங்கு விவாதிக்க இருக்கிறேன்.

‘Against the Greeks ‘, என்ற நூல் வாயிலாக கிறிஸ்தவ மற்றும் கிரேக்க தத்துவஞானிகளால் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் பற்றிய நீண்ட விவாதம், அத்துடன் சாத்தான்கள் பற்றிய ஒரு உரையாடல், ‘A Refutation’, என்ற நூலின் வடிவில் கிரேக்கர்களுக்கு அளிக்கப்பட மற்றொரு பதில்:

கடவுளின் இறையாண்மை, வேதாகமங்கள் மற்றும் கிரேக்க படைப்புகள் இரண்டிலிருந்தும் புனையப்பட்ட கீர்த்தனைகள் கொண்ட Harp on the Soul என்ற நூலின் வாயிலாக அவரது கருத்துக்களையும் கிரேக்க தத்துவஞானிகளின் கருத்துக்களையும் பிரதிபலித்துள்ளார்.

எபேசஸில் நடைபெற்ற யூதர்களுக்கு எதிரான ஒரு உரையாடலையும் புனைந்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற எபிரேயர்களில் ஒருவரான டிரிபோவுக்கு எதிரான உரையாடல் – Dialogue Against Trypho போன்ற தத்துவ ஆய்வுகள் மற்றும் சத்தியத்தின் மீதான ஆர்வமுள்ள தேடல்களின் பிரதிபலனாக கடவுளின் கிருபை அவரை எவ்வாறு நம்பிக்கைக்கு வழிநடத்தியது என்பதை அவர் இதில் கூறுகிறார். கிறிஸ்துவின் போதனைக்கு எதிராக யூதர்கள் எவ்வாறு சதி செய்தார்கள் என்பதை விவரிக்கும் அவர், டிரிபோவிடமுள்ள குறைகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

நீங்கள் உங்கள் தீய செயல்களைவிட்டு மீளவில்லை என்பது மட்டுமல்லாமல், அந்த நேரத்தில் நீங்கள் சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, ஜெருசலேமிலிருந்து உலகின் எல்லா நாடுகளுக்கும் அனுப்பியுள்ளீர்கள், எங்களைப் பற்றி அறியாத அனைவர் மத்தியில் கிறிஸ்தவர்களில் கடவுளற்ற பிரிவினர் நாம் என்று குற்றம் சாட்டினீர்கள். இதன் விளைவாக, நீங்கள் உங்களுக்கு மட்டுமல்ல, மனிதகுலம் முழுவதற்கும் அநீதி இழைக்கிறீர்கள்.

திருச்சபையானது இதுவரை காலம் தீர்க்கதரிசன திறமைகளால் எவ்வாறு உயிர்வாழ்ந்தது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. மேலும் அவர் யோவானின் வெளிப்படுத்துதலை மேற்கோள் காட்டுகிறார். இது அப்போஸ்தலரின் படைப்பு என்று கூறுகிறார். மேலும், யூதர்கள் வேதாகமத்திலிருந்து தீர்க்கதரிசிகளைப் புறக்கணித்து விட்டார்கள் என்ற டிரிபோவின் கூற்றுகளை மறுக்க அவர் தீர்க்கதரிசிகளின் ஆதாரங்களைப் பயன்படுத்தியுள்ளார். அவரது இலக்கியப் படைப்புகள் இன்னும் காணப்படுகின்றன. முந்தைய ஆசிரியர்களால் அவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐரேனியஸ் மதவிரோதிகளுக்கெதிரான Against Heresies 4 என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

தான் படைப்பாளரைத் தவிர, வேறொரு கடவுளைப் பற்றிப் பிரசங்கித்திருந்தால், இறைவன் மீது விசுவாசம் கொண்டிருந்திருக்க மாட்டார் என்று ஜஸ்டின் மார்சியனுக்கு எதிரான தனது கட்டுரையில் அழகாகக் கூறியுள்ளார்.

அதே கருத்து குறித்து அவர் 5வது புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

ஜஸ்டின் அதை ஆணித்தரமாகக் கூறியுள்ளார்: கர்த்தர் வருவதற்கு முன்பு, சாத்தான் கடவுளை நிந்திக்கத் துணியவில்லை, ஏனென்றால் அவருடைய கண்டனத்தை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

இங்கே கூறப்பட்ட விடயங்களை அதாவது, அவரது எழுத்தாக்கப் படைப்புக்களை மாணவர்களை கவனமாக படித்திட ஊக்குவிக்க வேண்டும், ஏனெனில், அவரைப் பற்றிய உண்மையாகக் கூறப்பட்டவைகள் தான் இவை.

ஆயர்களும் ஹெகெசிப்பசும்

19. இந்த ஆட்சி [மார்கஸ் ஆரேலியஸின்] அதன் எட்டாவது ஆண்டில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பதினோரு ஆண்டுகள் பதவியில் இருந்த அனிசெட்டஸுக்குப் பிறகு சோடர் உரோமைய ஆயராகப் பதவியேற்றார். அத்தோடு செலாடியன் பதினான்கு ஆண்டுகள் அலெக்சாந்திரியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார்.

19. இந்த ஆட்சி [மார்கஸ் ஆரேலியஸின்] எட்டாவது ஆண்டில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பதினோரு ஆண்டுகள் பதவியில் இருந்த அனிசெட்டஸுக்குப் பிறகு சோடர் உரோமைய ஆயராகப் பதவியேற்றார். அத்தோடு செலாடியன் பதினான்கு ஆண்டுகள் அலெக்சாந்திரியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்திய பின், 20. அக்ரிப்பினஸ் அவருக்குப் பின் அந்தப் பதவியில் அமர்ந்தார். அந்தியோக்கியா திருச்சபை வரலாற்றில், புகழ்பெற்ற தியோபிலஸ் அப்போஸ்தலர்களில் வரிசையில் ஆறாவது ஸ்தானத்தில் இருந்தார். நான்காவதாக இருந்தவர் ஹீரோ. அவருக்குப் பிறகு கொர்னேலியஸ் மற்றும் ஐந்தாவது ஈரோஸ் போன்றோர் நியமிக்கப்பட்டனர்.

21. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், திருச்சபையில் செழித்தோங்கியவர்களில் நாம் முன்பு குறிப்பிட்ட ஹெகெசிப்பஸ், கொரிந்துவின் ஆயர் டியோனீசியஸ், கிரீட்டின் ஆயர் பினைடஸ், பிலிப், அப்பொலினாரியஸ், மெலிட்டோ, மூசானஸ், மொடெஸ்டஸ் மற்றும் இவர்கள் அனைவருக்கும் மேலாக, ஐரேனியஸ் போன்றோர் அடங்குவர். அவர்கள் காட்டிய மரபுவழி மற்றும் அப்போஸ்தலிக்க பாரம்பரியத்தின் மீதான தீவிரம் எழுத்து வடிவில் நம்மை வந்தடைந்துள்ளது.

22. ஹெகெசிப்பஸ் தான் எழுதிய ஐந்து புத்தகங்களில் தனது நம்பிக்கைகள் பற்றிய முழுப் பதிவையும் நமக்காக விட்டுச் சென்றுள்ளார். அவற்றில் அவர் உரோம் நகருக்குச் சென்று அங்குள்ள அனைத்து ஆயர்களிடமும் இதே கோட்பாட்டைக் கண்டறிவதாகக் கூறுகிறார். கிளெமென்ட், கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதம் பற்றிய அவரது சில கருத்துகளுக்குப் பிறகு, இவ்வாறு எழுதுகிறார்:

ப்ரைமஸ் ஆயராகப் பதவி ஏற்கும் வரை கொரிந்திய திருச்சபை தனது உண்மையான கோட்பாட்டில் சிறந்து விளங்கியது. எனது உரோமைய பயணத்தின் போது கொரிந்தியர்களுடன் உரையாடினேன். உண்மையான கோட்பாட்டால் நாங்கள் புத்துணர்ச்சியடைந்தோம். உரோமுக்கு வந்த பிறகு, நான் அனிசெட்டஸ் வரையிலான வாரிசை வரிசைக்கிரமமாகத் தொகுத்தேன். அவருடைய மறைபோதகர் எலூதெரஸ் என்பவராவார். அனிசெட்டஸுக்குப் பிறகு சோடரும், அவருக்குப் பின் எலூதெரஸும் பதவியேற்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகரத்திலும், சட்டம், தீர்க்கதரிசிகள் மற்றும் இறைவன் பற்றிய பிரசங்கங்கள் அவரவர் வரிசைக்கிரம அடிப்படையில் நிகழ்த்தப்பட்டது.

அதே எழுத்தாளர் தான் வாழ்ந்த காலகட்டத்தில் மதவிரோத கொள்கைகளின் தோற்றத்தையும் பற்றி விவரிக்கிறார்:

நியாயவாதியான யாக்கோபு, இறைவனைப் போலவே, அதே காரணத்திற்காக, வேதசாட்சியத்தை அனுபவித்த பிறகு, அவரது [யாக்கோபுவின்] மாமனாரான க்ளோபாஸின் மகன் சிமியோன் ஆயராக நியமிக்கப்பட்டார். இறைவனின் உறவினர் என்று அனைவராலும் பரிந்துரைக்கப்பட்டார். திருச்சபையைக் கன்னித் தன்மையுள்ளதென்று என்று வர்ணித்தார்கள். ஏனென்றால் அது இன்னும் அவதூறுகளால் தூஷிக்கப்படவில்லை. ஆனால் தெபோதிஸ் என்பவர் ஆயராக நியமிக்கப்படாமையால், அவர் சார்ந்த ஏழுவிதமான மதவிரோதக் கொள்கைகள் மூலம் திருச்சபையை மாசுபடுத்தத் தொடங்கினார். இவர்களில் சைமன், அவரது சிமோனிய வர்க்கத்தினர், கிளியோபியஸ், அவரது கிளியோபிய வர்க்கத்தினர், டொசிதியஸ் மற்றும் டோசிதிய வர்க்கத்தினர், கோர்தேயஸ் மற்றும் கோர்தேசிய வர்க்கத்தினர் மற்றும் மாஸ்போதிய வர்க்கத்தினர் போன்றோர் அடங்குவர். இவர்கள் மத்தியில் இருந்தே மெனண்ட்ரியனிஸ்டுகள், மார்சியோனைட்டுகள், கார்போக்ரேஷியன்கள், வாலண்டினியன்கள், பசிலிடியன்கள் மற்றும் சாட்டர்னிலியன்கள் தோன்றினர். ஒவ்வொருவரும் அவரவர் தனித்துவமான வழியில் தங்கள் சொந்த கருத்துக்களைப் புகுத்தினர். இவர்களிடமிருந்தே அந்துக் கிறிஸ்துக்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள் மற்றும் போலி அப்போஸ்தலர்கள் உருவெடுத்தனர். அவர்கள் கடவுளுக்கும் அவருடைய ஏக சுதனான கிறிஸ்துவுக்கும் எதிரான நச்சுத்தன்மைவாய்ந்த போதனைகளால் திருச்சபையின் ஒற்றுமையை சீர்குலைத்தனர்.

மேலும், ஹெகெசிப்பஸ் ஒரு காலத்தில் யூதர்களிடையே காணப்பட்ட பிரிவுகளையும் பற்றி பின்வருமாறு விவரிக்கிறார்:

யூதா மற்றும் மெசியாவின் பழங்குடியினருக்கு எதிராக, விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள் பற்றிய பல்வேறு கருத்துக்கள் காணப்பட்டன: இவர்களுள் எஸ்சீனியர்கள், கலிலியர்கள், ஹெமரோபாப்டிஸ்டுகள், மஸ்போதியர்கள், சமாரியர்கள், சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்கள் போன்றோரும் அடங்குவர்.

அவர் இன்னும் நிறைய எழுதியுள்ளார். அவற்றில் சிலவற்றை நான் ஏற்கனவே மேற்கோள் காட்டியுள்ளேன். மேலும் எபிரேயர்களின் நற்செய்தி, சிரியாவின் நற்செய்தி, மற்றும் குறிப்பாக எபிரேய மொழி மற்றும் வாய்வழி பாரம்பரியத்தின் படைப்புகளைப் பற்றியும் மேற்கோள் காட்டியிருந்தார். இது அவர் ஒரு எபிரேய மதத்துக்கு மாறியவர் என்பதைக் காட்டுகிறது. அவர் மட்டுமல்ல, ஐரேனியஸ் மற்றும் அனைத்து ஆரம்பகால எழுத்தாளர்களும் சொலமனின் நீதிமொழிகளை “முழுமையான நல்லொழுக்கம் மிக்க ஞானம்” (“the All-Virtuous Wisdom.”) என்று அழைத்தனர். அபோக்ரிபா என்று அழைக்கப்படுபவற்றில் சில அவரது காலத்தில் சில மதவெறிக் கொள்கைகளைப் பின்பற்றியவர்களால் புனையப்பட்டவை என்றும் அவர் கூறுகிறார். ஆனால் இப்போது நான் வேறொரு எழுத்தாளரின் படைப்புகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

கொரிந்துவின் ஆயர் டியோனீசியஸ்

23. கொரிந்துவின் ஆயராக டியோனீசியஸ் தனக்குக் கீழ் இருந்தவர்களுக்கு மட்டுமல்ல, தொலைதூரத்தில் இருந்தவர்களுக்கும், குறிப்பாக திருச்சபை அமைப்புகளுக்கு அவர் எழுதிய பொது நிருபங்கள் மூலம் ஊக்கமளிக்கும் சேவையை வழங்கினார். இவற்றில், ஸ்பார்டான்களுக்கு எழுதப்பட்ட கடிதம் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பாரம்பரிய அறிவுறுத்தலாகும். அதே சமயம் ஏதெனியர்களுக்கு நற்செய்தியின் ஊடாக விசுவாசம் மற்றும் வாழ்க்கைக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அதை அவர் தேவ வார்த்தைகளின்படி விசுவாசதுரோகிகள் என்று கண்டனம் செய்கிறார். அவர்களின் ஆயரான பப்லியஸ், அக்காலத்தில் இடம்பெற்ற துன்புறுத்தல் மற்றும் சித்திரவதை காரணமாக வீரமரணம் அடைந்தார். இந்த வேதசாட்சிய மரணத்துக்குப் பின்பு, குவாட்ரடஸ் அவர்களின் ஆயராக நியமிக்கப்பட்டார் என்றும், அவரது இடைவிடா முயற்சி மற்றும் பேரார்வத்தின் மூலம் அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்ததாகவும், அவர்களின் விசுவாசம் புத்துயிர் பெற்றதாகவும் கூறுகிறார். அப்போஸ்தலர் பணிகள் [17:34) இல் தெரிவிக்கப்பட்டுள்ள படி, அப்போஸ்தலர் பவுலால் மதமாற்றம் செய்யப்பட்டவரும், பண்டைய கிரேக்க வழக்காடுமன்றத்தின் உறுப்பினரான (Areopagite) டியோனீசியஸ் என்பவர், ஏதென்ஸின் ஆயராக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்றும் அவர் கூறுகிறார். நிகோமீடிய வர்க்கத்தினருக்கு அவர் எழுதிய மற்றொரு நிருபம், சத்தியத்தைப் பாதுகாப்பதில் மார்சியனின் மதங்களுக்கு எதிரான கொள்கையை எதிர்த்து நிற்கிறது. அவர் கோர்டினாவில் உள்ள திருச்சபை அமைப்புக்கும், கிரீட் மற்றும் பிற இடங்களிலும் உள்ள திருச்சபை அமைப்புகளுக்கும் கடிதம் எழுதினார். அங்குள்ள திருச்சபை அமைப்புகள் தைரியத்துடன் செயலாற்றியமைக்காக பிலிப்பை வாழ்த்தினார். அதேநேரம், மதவெறியர்களுக்கு எதிராக அவரை எச்சரித்தார்.

அமாஸ்ட்ரிஸ் மற்றும் பொன்டஸில் உள்ள திருச்சபை அமைப்புகளில் உள்ளவர்களுக்கும் எழுதிய கடிதத்தில், பாக்கிலைட்ஸும் எல்பிஸ்டஸும் தன்னை அவ்வாறு எழுதும்படி வற்புறுத்தியதாகக் கூறுகிறார். பின்னர் அவர் பரிசுத்த வேதாமத்தைப் பற்றி விளக்கி, அவர்களின் ஆயர் பால்மாசை மேற்கோள் காட்டி அவரது பெயரைக் குறிப்பிடுகிறார். அவர் திருமணம் மற்றும் பிரம்மச்சரியம் பற்றி நீண்ட நேரம் விவாதித்து, தார்மீக அல்லது மதத்துக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் மீண்டும் திரும்பி வரும்போது அவர்களை வரவேற்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

பட்டியலில் காணப்படும் மற்றொன்று தான், க்நொசியன்ஸ் (Cnossians ) என்பவருக்கு எழுதிய நிருபமாகும். அதில் அவர் ஆயர் பினிட்டஸை நோக்கி, சகோதரர்கள் மத்தியில் பிரம்மச்சரியத்தை கட்டாயமாக்க வேண்டாம். அதேநேரம், அநேகரின் பலவீனத்தை நினைவில் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். இதற்கு பினிடஸ் பின்வருமாறு பதிலளித்தார். அவர் டியோனீசியஸைப் பாராட்டுவதாகவும், ஆனால் மிகவும் மேம்பட்ட கடிதத்தில் காத்திரமான வார்த்தைகளை போசணையாக வழங்குமாறு அவரை வலியுறுத்தினார். இதனால் அவர்கள் பால் போன்ற மென்மையான வார்த்தைகளால் ஊட்டமளிக்கப்படாமல் வயதான காலத்திலும் கூட அவர்கள் குழந்தைகளாவே இருப்பார்களென்றும் கூறினார். இந்த கடிதத்தில் பினிடஸின் பாரம்பரிய, இரக்கம் மிகுந்த, கற்றலுடன் கூடிய இறையியல் கருத்து போன்றவை நன்கு பிரதிபலிக்கின்றன.

டியோனீசியஸ், ஆயர் சோடர் மற்றும் உரோமையர்களுக்கு எழுதிய கடிதமும் காணப்படுகிறது. அதில் அவர் உரோமையர்களின் பழக்கவழக்கத்தை பாராட்டும் அதேவேளை, நமது காலத்திலும் அவ்வகையான துன்புறுத்தல் தொடர்வது பற்றியும் குறிப்பிடுகிறார்.

எல்லா கிறிஸ்தவர்களிடமும் கருணை காட்டுவதும், ஒவ்வொரு நகரத்திலும் உள்ள திருச்சபை அமைப்புகளுக்கு நன்கொடைகளை அனுப்புவதும், சில இடங்களில் அல்லது பணி காரணமாக சுரங்கங்களில் இருப்போர் போன்ற தேவைப்படுபவர்களின் துயரத்தைப் போக்குவதும் உங்கள் வழக்கமாக உள்ளதை நானறிவேன். இது உங்கள் மூதாதையரான உரோமையரின் வழக்கத்தை, ஆயர் சோடர் பேணுவது மட்டுமல்லாமல், புனிதர்களிடையே தாராளமாக அருட்கொடைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், உத்வேகம் பெற்ற, தந்தைவழி வார்த்தைகளால் உரோமுக்கு வரும் சகோதரர்களை ஊக்குவிப்பதன் மூலமும் அதிகரித்துள்ளது.

அதே கடிதத்தில், கொரிந்தியர்களுக்கு கிளெமென்ட் எழுதிய கடிதத்தைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். இது தொன்றுதொட்டு தேவாலயங்களில் வாசிப்பது வழக்கமாக இருந்ததைக் காட்டுகிறது:

இறைவனின் தினம் என்பதால், இன்று நாங்கள் உங்கள் கடிதத்தை வாசித்தோம். உங்கள் சார்பாக கிளமென்ட் எழுதிய முந்தைய கடிதத்தைப் போலவே எங்கள் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் அதை அடிக்கடி வாசிப்போம் என்றும் கூறிக்கொள்கிறோம்.

அதே எழுத்தாளர் தனது சொந்த கடிதங்கள் திரிபுபடுத்தப்பட்டமை குறித்தும் பின்வருமாறு கூறுகிறார்:

சகோதரர்கள் என்னிடம் கடிதங்கள் எழுதுமாறு கேட்டுக்கொண்டபோது, நான் அவற்றை மனதார எழுதினேன். ஆனால் சாத்தானின் ஊழியர்களான சிலர் அவற்றிலே எழுதப்பட்ட நல்ல கருத்துக்கள் பலவற்றை நீக்கிவிட்டு, தீய கருத்துக்களை அவற்றில் நிரப்பினார்கள். ஆனால் அவர்களுக்கு பின்விளைவு காத்திருக்கிறது. எதற்காக இதை நான் சொல்கிறேன் என்றால், சிலர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை எழுதத் திட்டமிட்டு, கர்த்தருடைய வார்த்தையையே கூட திரித்துவிடுகிறார்கள்.

இவை தவிர, மிகவும் விசுவாசம் கொண்ட விசுவாசியான கிரிசோபோராவுக்கு டியோனியஸ் எழுதிய கடிதமும் இருக்கிறது. அதில் அவர் அவளுக்கு காத்திரமான ஆன்மீக போசனத்தை வழங்குகிறார். டியோனீசியஸ் பற்றிய உண்மைகள் தான் இவை.

அந்தியோகியாவின் ஆயரான தியோபிலஸ்

24. தியோபிலசிடமிருந்து ஓட்டோலிகஸுக்கு விலாசமிடப்பட்ட மூன்று அடிப்படைக் கட்டுரைகள் இங்கே காணப்படுகின்றன. அவையாவன, ஏற்கனவே குறிப்பிடப்பட்ட அந்தியோக்கியாவின் ஆயர், மற்றொன்று ஹெர்மோஜெனிஸின் மதவிரோத கோட்பாடுகளுக்கு எதிரானது போன்ற தலைப்பில் காணப்படுகின்றன. யோவானின் வெளிப்படுத்துதலை அவர் மேற்கோள் காட்டுகிறார். அப்போஸ்தலிக்க போதனையின் தூய வித்துக்களை பல களைகளாக மாற்றி சிதைப்பதில் அக்கால மதவிரோதிகள் எப்போதும் தீவிரமாக இருந்தனர். மேலும் எல்லா இடங்களிலும் உள்ள திருச்சபை அமைப்புக்களின் போதகர்கள், சகோதர போதகர்களை எச்சரித்து, மதவெறியர்களின் தீய செயல்களை அம்பலப்படுத்தி கிறிஸ்துவின் மந்தையில் இருந்த ஆடுகளை பயமுறுத்தி காட்டு மிருகங்கள் விரட்டுவது போல் விரட்டி விடக்கூடும் என்று எச்சரித்திருந்தனர். இப்படிப்பட்டவர்களுக்கும் மார்சியனுக்கும் எதிரான பிரச்சாரத்தில் தியோபிலஸ் இணைந்துகொண்டார் என்பது அவரது போற்றத்தக்க பணியிலிருந்து தெளிவாகிறது அந்தியோக்கியாவின் ஆயராக இருந்த அவருக்குப் பின் வந்தவர் மாக்சிமின் என்பவர் அப்போஸ்தலர்களின் வாரிசுக்கிரம அடிப்படையில் ஏழாவது ஸ்தானத்தில் இருந்தார்.

பிலிப், மொடஸ்டஸ் மற்றும் சர்திஸ் நகரின் மெலிட்டோ

25. டியோனீசியஸின் கடிதத்திலிருந்து கோர்டினாவின் ஆயர் என்று நாம் அறிந்த பிலிப், மனிதருடைய தவறுகளை வெளிக்கொணர்வதில் சிறந்து விளங்கிய ஐரேனியஸ் மற்றும் மொடெஸ்டஸ் ஆகியோரைப் போலவே, மார்சியனுக்கு எதிராக ஒரு போற்றத்தக்க கட்டுரையை எழுதினார்.

26. அவர்களுடன் சமகாலத்தவர்களாக இருந்த, சர்திஸ் நகரின் ஆயரான மெலிட்டோ மற்றும் ஹைராபோலிஸின் ஆயராக பதவிவகித்த அப்போலினாரியஸ் ஆகியோர் தங்கள் புகழின் உச்சத்தில் இருந்தனர். மேலும் ஒவ்வொருவரும் அக்கால உரோமைய பேரரசரிடம் [மார்கஸ் ஆரேலியஸ்] அவரது விசுவாசத்துக்குப் பாத்திரமானவர்களாக இருந்தனர். எங்கள் அறிவுக்கு எட்டியவரை, அவர்களின் படைப்புகளில், பின்வருபவை காணப்படுகின்றன.

மெலிட்டோவின் படைப்புக்கள் பின்வருமாறு:

ஈஸ்டர் [பாஸ்கா] குறித்து… – புத்தகங்கள் 1 மற்றும் 2

கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் தீர்க்கதரிசிகள்

திருச்சபை

கடவுளின் நாள்

உடலும் ஆன்மாவும்

ஞானஸ்நானம், சத்தியம் மற்றும் விசுவாசம்

கிறிஸ்துவின் பிறப்பு

தீர்க்கதரிசனம் பற்றிய புத்தகம்

உபசரணை

திறவுகோல்

மனிதனின் விசுவாசம்

படைப்பு

விசுவாசமும் கீழ்ப்படிதலும்

உணர்வுகள்

சாத்தான்

யோவானின் வெளிப்பாடுகள்

இறை அவதாரம்

அன்டோனினஸுக்கு எழுதியது

‘பாஸ்கா குறித்து…’ என்ற புத்தகத்தின் ஆரம்பத்தில், அவர் அதன் தொகுப்பு பற்றிய காலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்:

இது செர்வில்லியஸ் பவுலஸ் ஆசியாவின் அதிபராக இருந்தபோதும், சாகரிஸ் வேதசாட்சியாக மரித்த காலகட்டத்தில் எழுதப்பட்டது. மேலும் லஓதிசியாவில் இடம்பெற்ற பாஸ்கா பண்டிகையின்போது பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அலெக்சாந்திரியாவின் கிளெமென்ட் இந்த நிகழ்வை தான் கண்ட நிகழ்வாக மேற்கோள் காட்டுகிறார். அவர் மெலிட்டோவுக்கு ஏற்பட்ட விளைவு குறித்து எழுதியதாக கூறுகிறார். பேரரசருக்கு அவர் அனுப்பிய மனுவில், மெலிட்டோ அவர் காலத்தில் நாங்கள் நடத்தப்பட்ட விதத்தை பின்வருமாறு விளக்குகிறார்:

ஆசியா முழுவதிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த புதிய ஆணைகளால் மத ஆர்வலர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தினர் துன்புறுத்தலுக்கு ஆளானது போல் முன்பு ஒருபோதும் நடந்ததில்லை. மற்றவர்களின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவற்றை அடையும் நோக்கில் சுற்றித்திரியும் வெட்கங்கெட்ட சிலர், இரவு பகலாக அப்பாவிகளின் உடைமைகளை கொள்ளையடிப்பதற்காக இவ்வாறு பிறப்பிக்கப் பட்டிருந்த ஆணைகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். உங்கள் கட்டளைப்படி இது நடந்தால் அது நன்றாக இருக்கும்: ஒரு நீதியுள்ள அரசன் ஒருபோதும் அநீதியான கொள்கையை கொண்டிருக்க மாட்டான். அத்தகைய அரசனின் கைகளால் ஏற்படக்கூடிய மரணத்தை நாங்கள் மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் நாங்கள் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம்: முதலில் இதுபோன்ற முரண்பாட்டின் காரணகர்த்தாக்களைப் பற்றிய உண்மையை அறிந்து, பின்னர் அவர்கள் தண்டனைக்கோ அல்லது மரண தண்டனைக்கோ தகுதியானவர்களா அல்லது குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை பெறத் தகுதியானவர்களா என்பதை தீர்மானிக்கவும். ஆனால், இந்த புதிய ஆணை என்பது – அந்நிய நாட்டிலிருந்து எம்மை நோக்கிப் படையெடுக்கக்கூடிய எதிரிகளுக்கு எதிராக கூட பொருத்தமாக இருக்காது. இந்த ஆணை உங்களால் இயற்றப்பட்டதல்ல என்றால், எதோ ஒரு திருடர் மற்றும் கயவர் கூட்டத்தினால் நாம் துன்பங்களுக்கு ஆளாவதை அனுமதிக்க வேண்டாம் என்று நாங்கள் உங்களிடம் மேலும் விநயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

அவர் தொடர்ந்து கூறுகையில்…

எங்கள் தத்துவம் முதன் முதலில் வெளிநாடு ஒன்றில் தான் உருவானது. ஆனால் அது உங்கள் மூதாதையரான ஓகஸ்டஸின் மாபெரும் ஆட்சியில் மக்களிடையே முழுமை அடைந்தது மட்டுமல்லாமல், உங்கள் பேரரசுக்கு நல்ல ஒரு அடையாள சின்னமாக மாறியது. அன்றுமுதல் உரோமைய பேரரசின் சக்தி சிறப்பாக வளர்ந்தது. ஓகஸ்டஸில் தொடங்கி பேரரசுடன் வளர்ந்த தத்துவத்தை நீங்கள் பாதுகாப்பீர்களானால், நீங்கள் இப்போது அவருடைய பதிலாளாகவும் உங்கள் மகனுடனும் (கொமோடஸ்) வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆகவே அந்த வாய்ப்பை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். உங்கள் முன்னோர்கள் மற்ற வழிபாட்டு முறைகளுடன் அதையும் மதித்தார்கள். அந்த காலகட்டத்தில் எங்கள் நம்பிக்கை நன்மையை நோக்கியே இருந்தது என்பதற்கான மிகப்பெரிய ஆதாரம் தான் இது. பேரரசு ஆரம்பிக்கப்பட்டபோது மிகவும் உன்னதமாக இருந்தது. அதே நேரத்தில் பேரரசு மிகவும் உன்னதமாகவே அதன் பயணத்தை தொடங்கியது, இதுதான் உண்மை: எல்லா சக்கரவர்த்திகளிலும், எங்கள் போதனைகளை அவதூறு செய்ய தீய ஆலோசகர்களால் வற்புறுத்தப்பட்டவர்கள். ஓகஸ்டஸின் ஆட்சி தொடக்கம், பேரரசை எந்த பேரழிவாலும் அசைக்க முடியவில்லை. மாறாக எல்லாமே அற்புதமாகவும் புகழ்பெற்றதாகவும் இருந்தன. மேலும் ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் பதில் இருந்தது. அனைத்து பேரரசர்கள் மத்தியிலும், தீய ஆலோசகர்கள் மூலம் எங்கள் போதனைகளை அவதூறு செய்ய வற்புறுத்தியவர்கள் நீரோ மற்றும் டொமிஷியன் ஆகியோர் மட்டுமே. மேலும் அவர்களிடமிருந்து தான் கிறிஸ்தவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தும் நியாயமற்ற நடைமுறை உருவானது. ஆனால் அவர்களின் அறியாமையை உங்கள் பக்தி நிறைந்த முற்பிதாக்கள் சரி செய்தனர். எங்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்கத் துணிந்த அனைவரையும் எழுத்துப்பூர்வமாகக் கண்டித்தவர் இவர். உதாரணமாக, உங்கள் பாட்டனான ஹட்ரியன் பலருக்குக் கடிதங்கள் எழுதினார். குறிப்பாக ஆசியாவின் ஆளுநர் ஃபண்டானஸுக்கும் அவர் எழுதியிருந்தார். நீங்கள் முழு உலகுக்குமான ஆட்சி அதிகாரத்தில் உங்கள் தந்தையுடன் [Antoninus Pius] இணைந்திருந்தபோது, ​​எங்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படக்கூடாது என்று நகர ஆளுநர்களுக்கு அவர் கட்டளை பிறப்பித்திருந்தார். இவற்றில் லாரிசா, தெசலோனிக்கா, ஏதென்ஸ் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் வாழ்ந்த கிரேக்கர்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் அவர்கள் கூறிய அதே கருத்தை நீங்களும் கொண்டிருப்பதால், அதிக மனித நேயத்துடனும், தத்துவ ஞானத்துடனும் இருக்கும் காரணத்தால், நாங்கள் உங்களிடம் கேட்கும் அனைத்தையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

இந்த பகுதி மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. அவர் அளித்துள்ள சாராம்சத்தில், அதே ஆசிரியர் தனது முன்னுரையில் பழைய ஏற்பாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக்களின் பட்டியலுடன் தொடங்குகிறார். அதை இங்கே மேற்கோள் காட்டுவது சிறந்தது என்று கருதுகிறேன்.

மெலிட்டோ மற்றும் அவரது சகோதரர் ஒனேசிமஸ், உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வார்த்தையின் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தின் காரணமாக, நீங்கள் அடிக்கடி சட்டத்தில் இருந்து பெறப்படும் சாராம்சங்களை விரும்பினீர்கள். குறிப்பாக எண்ணிக்கை மற்றும் வரிசை பிரகாரம், இரட்சகரைப் பற்றியும், தீர்க்கதரிசிகள் மற்றும் நமது விசுவாசம் பற்றி எழுதப்பட்ட நூல்களில் இருந்தும், பண்டைய புத்தகங்களைப் பற்றிய துல்லியமான உண்மைகள் போன்றவற்றில் காணப்படும் விசுவாசம், இறைவார்த்தை மற்றும் நித்திய இரட்சிப்பின் மீதான உங்கள் ஆர்வத்தை அறிந்து, உங்களுக்காக இதைச் செய்ய நான் மிக ஆர்வமாக இருந்தேன். எனவே, நான் கிழக்குத் திசை நோக்கிச் சென்று இவை அனைத்தும் உரிமைகோரப்பட்டு பாதுகாக்கப்படும் இடத்தை அடைந்தபோது, நான் உங்களுக்கு இத்தோடு அனுப்பியுள்ள பழைய ஏற்பாடு சம்பந்தமான புத்தகங்களைப் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தது.

மோயீசனின் ஐந்து புத்தகங்கள்: ஆதியாகமம், யாத்திராகமம், எண்ணாகமம், லேவியராகமம், உபாகமம்

யோசுவா (நூனின் மகன்), நீதிபதிகள் மற்றும் ரூத்

இராஜாக்கள் (நான்கு புத்தகங்கள்), நாளாகமம் (இரண்டு புத்தகங்கள்). தாவீதின் சங்கீதம்

சொலொமனின் நீதிமொழிகள் (ஞானம்), பிரசங்கி,

பாடல்களின் பாடல், யோபு

தீர்க்கதரிசிகள்: ஏசாயா, எரேமியா, ஒரே புத்தகத்தில் பன்னிரண்டு அத்தியாயங்கள் அடங்கலாக, டேனியல், எசேக்கியேல் மற்றும் எஸ்ரா.

மேற்குறிப்பிட்ட புத்தகங்களில் இருந்து பெற்றுக்கொண்ட சாராம்சத்தை ஆறு நூல்களாகத் தொகுத்துள்ளேன்.

அபோலினேரியஸ், முசேனஸ், டாடியன்

27. இதுவரை மெலிட்டோ. அபோலினேரியஸின் பல நூல் வடிவங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவற்றில் பின்வருபவை எங்களுக்கு கிடைத்துள்ளன.

மேலே பெயரிடப்பட்ட [மார்கஸ் ஆரேலியஸ்] பேரரசருக்கு மாற்றப்பட்ட ஒரு உரை; கிரேக்கர்களுக்கு எதிராக (ஐந்து புத்தகங்கள்); சத்தியம் (இரண்டு புத்தகங்கள்); யூதர்களுக்கு எதிராக (இரண்டு புத்தகங்கள்); மற்றும் ஃபிரிஜியன் மதங்களுக்கு எதிரான அவரது கருத்துக்கள் ஏற்கனவே பிழையான வழியில் நடக்கத் தொடங்கிய மொன்டானஸ் மற்றும் அவரது தவறான தீர்க்கதரிசிகள் மனதில் முளைவிடத் தொடங்கின.

28. ஏற்கனவே இங்கு குறிப்பிடப்பட்ட முசேனஸ், என்க்ராடைட்ஸ் [சரீர இச்சைகளை ஒதுக்கி வாழும் ஒரு அமைப்பினர்] என்பவர்களின் வழிநடத்தலால் மத விரோத கோட்பாடுகளுக்கு அடிமையாகிய சில கிறிஸ்தவர்களுக்கு மிகவும் போற்றத்தக்க ஒரு கட்டுரையை எழுதினார். அது தற்காலத்திலும் வழக்கத்தின் இருக்கிறது. எனினும் அது பின்னர் வளர்ந்து அதன் வக்கிரமான மற்றும் சர்ச்சைகள் நிறைந்த, தவறான கோட்பாட்டிற்கு உயிர் கொடுக்கத் தொடங்கியது.

29. இந்த பிழைக்குக் காரணம் அந்த நூலின் ஆசிரியர் டாடியன் என்று கூறப்படுகிறது. அற்புதமான மனிதரான ஜஸ்டினையும் அவருக்கு சீடராக இருந்த முன்னவர் பற்றியும் நான் ஏற்கனவே மேற்கோள் காட்டியுள்ளேன். ஐரேனியஸ் இதை தனது மத விரோத சக்திகளுக்கு எதிரான புத்தகம் 1 இல் விபரித்துக் கூறுகிறார்:

சாட்டர்னினஸ் மற்றும் மார்சியனில் இருந்து தோற்றம் பெற்ற என்க்ராடைட்டுகள் என்று அழைக்கப்படுபவர்கள் பிரம்மச்சரியத்தைப் பிரசங்கித்தனர். கடவுளின் அசல் படைப்பை இரத்து செய்து, மனிதகுலத்தின் தலைமுறை விருத்திக்கு ஆணையும், பெண்ணையும் படைத்தவரை மறைமுகமாகக் கண்டனம் செய்தனர். அவர்கள் “உயிருள்ள” விஷயங்கள் என்று அழைக்கப்படுவதைத் தவிர்த்து, எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்கு நன்றியற்றவர்களாகவும், முதலில் உருவாக்கப்பட்ட மனிதனின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளாது மறுதலிப்பவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் சமீபத்தில் செய்த இந்த கண்டுபிடிப்பு தான் டாடியன் முதலில் இந்த நிந்தனையை அறிமுகப்படுத்தியது என்று கருதப்படுகிறது. அவர் ஜஸ்டினின் சிஷ்யனாக இருந்தார். அவர் அவருடன் இருந்த வரை இதுபோன்ற எதையும் கூறியிருக்கவில்லை. ஆனால், ஜஸ்டினின் வேதசாட்சிய மரணத்துக்குப் பிறகு, அவர் திருச்சபையை விட்டு வெளியேறி, ஒரு ஆசிரியராகவும் மற்றவர்களை விடவும் உயர்ந்தவராகவும் வர வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்தார். ஆதலால் அவர் தனது சொந்தக் கோட்பாட்டைக் கற்பித்தார். அவர் கண்ணுக்குத் தெரியாத யுகங்கள் பற்றிய கற்பனைக் கதைகளை அவிழ்த்துவிட்டார். மேலும் வாலண்டினஸைப் பின்பற்றுபவர்கள் வழிவந்த மார்சியன் மற்றும் சாட்டர்னினஸைப் போலவே திருமண பந்தத்தை சீரழிவு என்றும் விபச்சாரம் என்று கண்டனம் செய்தனர். ஆதாமுக்கு இரட்சிப்பு மறுக்கப்பட்டது குறித்து அவர் தனது சொந்த வாதப்பிரதிவாதங்களை முன்வைத்தார்.

மேலே காட்டப்படுவது ஐரேனியஸ் அந்த நேரத்தில் எழுதியது. ஆனால் சிறிது காலம் கழித்து செவெரஸ் என்ற நபர் இந்த மதங்களுக்கு எதிரான கொள்கைக்கு வலுவூட்டினார். அதனால்தான் அதன் உறுப்பினர்கள் அவருக்குப் பிறகு செவேரியன்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் சட்டம், தீர்க்கதரிசிகள் மற்றும் சுவிசேஷங்களைப் பயன் படுத்துகிறார்கள் – இருப்பினும் அவற்றைத் தங்கள் சொந்த நடையிலேயே விளக்குகிறார்கள் – ஆனால் அவர்கள் அப்போஸ்தலர் பவுலை நிந்திக்கிறார்கள். அவருடைய நிருபங்களையும் அப்போஸ்தலர்களின் செயல்களையும் கூட நிராகரிக்கிறார்கள். அவர்களின் முன்னாள் தலைவர் டாடியன் எப்படியோ சுவிசேஷங்களின் ஒரு கலவையை உருவாக்கி அதை டயட்டேசரோன் – [Diatessaron] அதாவது புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு பிரிவுகளிலும் காணக்கூடிய ஒத்திசைவு] என்று அழைத்தார். இது இன்னும் சில இடங்களில் காணப்படுகிறது. அப்போஸ்தலரின் சில வார்த்தைகளையும் அவற்றின் பாணியையும் சரிசெய்வது போல் மாற்றத் துணிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். அவர் ஏராளமான நூல்களை விட்டுச் சென்றுள்ளார். அவற்றில் மிகவும் பிரபலமானது கிரேக்கர்களுக்கு எதிரான [Against the Greeks] என்ற நூல். அதில் அவர் பண்டைய கால வரலாற்றைப் பற்றி விவாதிக்கிறார். அத்தோடு, மோயீசன் மற்றும் எபிரேய தீர்க்கதரிசிகள் கிரேக்கர்கள் அனைவரையும் விடப் பழமையானவர்கள் என்பதைக் காட்டுகிறார். இது அவரது நூல்கள் மத்தியில் மிகவும் சிறந்ததாகவும் பிரபலமானதாகவும் வழிகாட்டியாகவும் இருப்பதாகத் தெரிகிறது.

சிரிய தேசத்தவரான பர்தேசனேஸ்

30. அதே ஆட்சியில் மெசபடோமியாவில் மத விரோத கொள்கைகள் செழித்து வளர்ந்தன, மேலும் சிரியாக் மொழியியலாளர் பர்டேசனஸ், மார்சியோனிட்டுகள் மற்றும் பல்வேறு கோட்பாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களது படைப்புகளுக்கு எதிராக உரையாடல்களை எழுதினார். இறை வார்த்தையின் சக்திவாய்ந்த பாதுகாவலராக அவரை அறிந்தவர்கள், அவரது உரையாடல்களை சிரியாக் மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிபெயர்த்தனர். அவற்றுள் அன்டோனினஸ் உடனான அவரது விதியைப் பற்றிய மிகவும் பயனுள்ள சம்பாஷணை, மற்றும் அந்தக் காலத்தில் இடம்பெற்ற துன்புறுத்தல் பற்றி அவர் எழுதிய பல படைப்புகள் அவற்றில் அடங்கும். முதலில், அவர் ஒரு வாலண்டினியராக இருந்தார். ஆனால் பின்னர் அவர் இந்த கொள்கையை நிராகரித்து மரபுவழிக்கு திரும்பிவிட்டார் என்று அவிழ்த்துவிடப்பட்ட கட்டுக்கதைகளை மறுத்தார். இருப்பினும், உண்மையில், அவர் தனது பழைய மத விரோத அழுக்கை முழுவதுமாக துடைத்திருக்கவில்லை.

இந்தக் காலப்பகுதியில்தான், உரோமைய ஆயர் சோடர் இறையடி எய்தினார்.

விசுவாசத்தின் பாதுகாவலர்களும் அவதூறு செய்பவர்களும்

திருச்சபை வரலாறு பற்றிக் கூறும் இந்த புத்தகம், இரண்டாம் தலைமுறை பிதாக்கள் தேவாலய-அரசு உறவுகளை வெளிப்புறமாக சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடக் காரணமாயிருந்த இருமுனைப் பிரச்சாரம் குறித்த குறிப்பிடத்தக்க ஆதாரங்களை உடையதாக இருக்கிறது. அதே நேரத்தில் உள்ளார்ந்த அடிப்படையில் பலவிதத்திலும் மதங்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்க்கிறது.

உத்வேகம் பெற்ற ஒரு சில நபர்கள், உரோமைய பேரரசர்களுக்கு சற்றேனும் குறையாத வண்ணம் கிறிஸ்தவத்தை பாதுகாத்து, இருமுனை போரில் தைரியமாக ஈடுபட்டனர். ஆரம்பகாலத்தில் இவர்களை எதிர்த்து வாதாடிய மன்னிப்பாளர்களான (கிரேக்க மொழியில் மன்னிப்பு அல்லது “பாதுகாப்பு”), குவாட்ரடஸ், அரிஸ்டைட்ஸ், ஜஸ்டின் மற்றும் மெலிட்டோ போன்ற அறிவுஜீவிகள் – தனிப்பட்ட ஆபத்துக்களையும் துச்சமாக மதித்து அவர்களின் முன்னோர்கள் கிறிஸ்தவர்களை வேட்டையாடும் முந்தைய அரசாங்கத்தின் கொள்கையை எவ்வாறு மாற்றியமைத்தனர் என்பதை பேரரசர்களுக்கு நினைவூட்டினர். கிறீஸ்தவர்கள் அனுபவித்த துன்புறுத்தல்கள் ஒரு நீண்ட, அனைத்தையும் உள்ளடக்கிய, பேரரசு முழுவதிலும் வியாபித்திருந்த திகில் நிறைந்த கதை அல்ல, ஆனால் குறிப்பிட்ட அளவில் அங்கு நடந்தேறிய சித்திரவதை மற்றும் கொடுமைகளை அவை நமக்கு நினைவூட்டுகின்றன.

இக்காலகட்டத்தில் கிறிஸ்தவத் தலைமைதான் அதிகம் பாதிக்கப்பட்டது. ஒருவேளை அது மற்றவர்களுக்கு புலப்படும் அடையாளங்களாகக் கூட இருந்திருக்கலாம்; குறிப்பாக, அந்தியோக்கியாவின் இக்னேஷியஸ், ஸ்மிர்னாவின் பொலிகார்ப், ஜஸ்டின் என்ற வேதசாட்சி போன்றவர்களை இங்கே சுட்டிக்காட்டலாம். இக்னேஷியஸின் எதற்கும் அஞ்சாத மனஉறுதியும், பயங்கரமான மரணத்தை எதிர்கொண்ட பொலிகார்ப்பின் அமைதியான சாந்தம் நிறைந்த இயல்பும், இந்த அப்போஸ்தலிக்க பிதாக்களை எப்பொழுதும் வெளிச்சம் போட்டுக் காட்டியே வந்துள்ளனர் மேலும் யூசிபியஸ் தாமே இவர்களைப் பற்றிய ஆதாரங்களை நேரடியாக மேற்கோள் காட்டினார்.

கிறிஸ்தவர்களை குற்றம் சாட்டியவர்கள் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசர்கள் அல்ல. ஆனால் ஒரு உள்ளூர் வாசியான தனிநபரோ அல்லது குழுவோ அல்லது ஒரு மாகாண ஆளுநரோ அல்லது நாம் அறிந்தது போல், கிறீஸ்தவர்களுக்கு எதிராக, நல்லவர்கள் போல நடித்துக்கொண்டிருந்த குருத்துவ ஊழியர்களாகவோ கூட இருந்திருக்கலாம். இந்த வகையில் யூசிபியஸ் தனது ஆதாரங்களை மிகவும் நேர்த்தியாகப் புனைந்துள்ளார். ஏகாதிபத்திய ஆணைகளின் ipsissima verba [இடித்துரைக்கப்பட்ட சொற்பதம்] மற்றும் ஏராளமான மன்னிப்பாளர்களின் கருத்துக்கள் இவற்றையே பிரதிபலிக்கின்றன.

அதேவேளை, திருச்சபை அமைப்புகளுக்குள் [அல்லது அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்குள்], மதங்களுக்கு எதிரான கொள்கை துளிர்விட்டு எழுந்து, பிரிவுகளாகவும், பிரிவுகளுக்குள் பிரிவுகளாகவும், உருவாகி பலவகையிலும் தனது தற்பெருமையை பறைசாற்றியது. உரோமையப் பேரரசின் ஒத்திசைவான சூழலில் செழித்தோங்கிய அமானுஷ்ய கோட்பாடுகளின் ஒட்டுவேலை வெறும் ஞானவாதமே ஆகும். இத்தகைய தவறான போதனைகள் இக்கால திருச்சபை எழுத்தாளர்களின் அல்லது அவர்களுக்குப் பிறகு வந்த யூசிபியசின் கோபத்தை சற்றும் குறைக்கவில்லை. மேலும் அவர்களின் நிலையான பதில், ஐரேனியஸின் தர்க்கவாதத்தின் வெவ்வேறு பதிப்புகளைப் பயன்படுத்துவதாகும். திருச்சபைகளில் அப்போஸ்தலிக்க பாரம்பரியத்தில் பகிரங்கமாக விளக்கப்பட்ட போதனைகள், ஞானவாதத்தின் மறைக்கப்பட்ட கருத்துக்கள் அல்லது மொண்டனிசம் எனப்படும் தீர்க்கதரிசனத்துக்கு ஊட்டமளித்த மதவிரோத அமைப்புக்கள் ஆடம்பரமான கூற்றுகளை விட பாரம்பரிய முறைகளுக்கு உத்தரவாதம் அளித்தன.

மதங்களுக்கு எதிரான அடித்தளங்கள் நிறுவப்படுவதற்கு முன்பு பல தலைமுறைகளாக பாரிய முறையில் ஒழுங்கற்ற தவறுகளை சகித்திருப்பதாக தெரிகிறது. எவ்வாறாயினும், யூசிபியஸ், அத்தகைய மதவெறி சவால்களிலிருந்து திருச்சபைக்கு ஒரு முக்கியமான நன்மை தரும் தகவலைக் குறிப்பிடத் தவறிவிட்டார்: இது கிறிஸ்தவ சிந்தனையாளர்களை வேதாகமத்தின் நியதி மற்றும் அதன் விளக்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட பாரம்பரியத்துடன் ஒத்துப்போகும்படி நிர்ப்பந்தித்தது. அத்தோடு திருச்சபைக்கு கோட்பாடுகளை அதிக தெளிவு மற்றும் ஆழமான இறையியலுடன் கலந்து கற்பிக்கவும் வெளிப்படுத்தவும் அவர்களை நிர்ப்பந்தித்தது.

திருச்சபை வரலாறு பற்றிய புத்தகம் 4-ல் உள்ளடக்கப்பட்ட காலகட்டத்தில், ஐந்து நல்லொழுக்கமுள்ள பேரரசர்களில் நான்கு பேர் ஆட்சி செய்தனர். எகிப்து, சிரேன் மற்றும் மெசபடோமியாவில் மூண்ட இரண்டாம் யூதப் போரின் போது (115-117), சிலிசியாவில் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மரணிப்பதற்கு சற்று முன், எதிரிகளை அடிபணியச் செய்தார், இது அனைத்தும் டிராஜனின் பிற்கால ஆட்சியில் தான் தொடங்கியது (98-117).

ஹட்ரியன் (117-138) என்ற அவரது வளர்ப்பு மகன் மற்றும் வாரிசு, ஒரு உயரமான, பண்பட்ட, கவர்ச்சியான உருவம் கொண்டவர். அவர் தாடி வளர்க்க முடிவு செய்தார். அதன் மூலம் பல அடுத்தடுத்த பேரரசர்களுக்கு ஒரு புதிய பாணியை பின்பற்ற வழி வகுத்தார். அவர் மூன்றாம் யூதப் போரை (பார்-கோக்பா கிளர்ச்சி, 132-135) வீழ்த்தி வெற்றி கண்டார். இது ஜெருசலேமிலிருந்து யூதர்களை விலக்கி, ஏலியா கேபிடோலினா என்ற ஒரு புறஜாதியினர் வாழும் நகரமாக மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. ஆசியாவின் ஆளுநரான ஃபண்டனஸுக்கு ஹாட்ரியன் எழுதிய கடிதத்தில் (c. 125), கிறிஸ்தவர்கள் தொடர்பான ட்ராஜனின் மிதமான கொள்கையைத் தொடரப் போவதாக அறிவித்தார். அவர்களின் மதம் சட்டவிரோதமானது என்றாலும், சட்டவிரோதமான விதத்தில் அவர்கள் வேட்டையாடப்படக் கூடாது என்று கூறியிருந்தார்: அவரிடம் குவாட்ரடஸ் ஆரம்பகாலத்தின் கிறிஸ்தவ மன்னிப்பு குறித்துக் கோரியிருந்தார். வெற்றிக்கு பதிலாக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி, டிராஜன் கைப்பற்றிய சில எல்லைகளில் இருந்து ஹட்ரியன் பின்வாங்கினார். ஆனால் சுவர்கள் மற்றும் கோட்டைகள் அமைத்து பேரரசின் வலுவான பாதுகாப்பை முன்னெடுத்துச் சென்றார். அவர் நிறைய பிரயாணங்களை மேற்கொண்டார். தேவையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். தன்னை ஹட்ரியனஸ் அகஸ்டஸ் என்று அழைத்ததைப் பின்பற்ற முயன்றார். 138 இல் கொடிய சரீர உபாதை காரணமாக அவர் உயிர் நீத்தார்.

ஹட்ரியனின் வளர்ப்பு மகனும் வாரிசுமான அன்டோனினஸ் பயஸ் (138-161), பொதுப்பணி மற்றும் சமூக நலன் மூலம் சமாதானம், செழிப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றால் நிறைந்த ஆட்சியைத் தொடர்ந்தார். அரிஸ்டைட்ஸ் இந்த பேரரசரிடம் தனது மன்னிப்பை முன்வைத்தார். அன்டோனினஸ் நற்குணம் மிகுந்த நல்ல பல இயல்புகளைக் கொண்டிருந்தவராகவும், ஒரு கவர்ச்சியான ஆளுமை மிகுந்த ஒருவராக இருந்தவராகவும், நல்லொழுக்கத்தைக் கொண்டிருந்தவராகவும் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இது அவரை  இலத்தீன் அடைமொழிகொண்டு பயஸ் அவர்களால் கூறப்பட்டது. அதாவது “கடமை உணர்ச்சியுள்ள, நேர்மையான, நல்லொழுக்கமுள்ள” என்று அவை பொருள்படும். அவரது நிர்வாகத்தின் போது, அவரது தூண்டுதலின் பேரில் இல்லாவிட்டாலும், வயதான ஸ்மிர்னாவின் ஆயரான பொலிகார்ப் அவர்கள், ஸ்மிர்னாவில் உள்ள மைதானத்தில் (அடுத்த பேரரசரின் கீழ் இருந்த யூசிபியஸுக்கு எதிராக) வேதசாட்சியத்தின் மூலம் வீரமரணம் எய்தினார்.

அன்டோனினஸின் வளர்ப்பு மகனும் வாரிசுமான மார்கஸ் ஆரேலியஸ் (161-180), 169 இல் இறக்கும் வரை லூசியஸ் வெரஸுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டார். குணத்தில் உன்னதமானவரும், தயாளம் நிறைந்தவருமான இவர் தான் புகழ்பெற்ற ‘தியானங்கள்’ என்ற நூலின் படைப்பாளி. அத்தோடு இவர் மிகவும் விவேகம் மிக்க தத்துவஞானியும் ஆவார். மார்கஸ் ஆரேலியஸ் தனது நிர்வாகத்தின் பெரும்பகுதியை அவர் விரும்புவதைச் செய்வதில் செலவிட்டார்: டான்நியூப் எல்லையில் நிலைகொண்டிருந்த தனது படைகளுக்கு கட்டளை பிறப்பித்தார். ஏனெனில் ஜேர்மனியர்கள் அவரது ஆட்சியின் கீழ் இருந்த பேரரசின் எல்லைகளில் கலகம் விளைவிப்பவர்களாகக் காணப்பட்டபடியால் அவரது பிரசன்னத்தை அங்கே ஏற்படுத்தி இருந்தார். அவரிடம் விவேகமான தன்மை மிதமிஞ்சி இருந்த போதிலும், அவர் கிறிஸ்தவத்தை சட்டப்பூர்வமாக்கவில்லை, அத்தோடு கிறீஸ்தவத்தின் மீது மென்மையான கொள்கைகளைக் கொண்டிருக்கவுமில்லை. இந்தக் கொள்கைகளின் ஒரு எதிரொலி தான் பொறுமை மற்றும் மன்னித்தலின் சின்னமாக இருந்த ஜஸ்டின், மார்கஸ் ஆரேலியசின் ஆட்சியின் கீழ் இருந்த உரோம் நகரில் வைத்தே வேதசாட்சியாக வீர மரணம் எய்தினார். (c. 165), அதே சமயம், சார்திஸ் நகரின் மெலிட்டோ என்பவர் கிழக்கில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் மனு ஒன்றையும் கையளித்திருந்தார்.