யூசிபியஸ் தேவாலயம் வரலாற்றையும் எழுதினார்(Eusebius, Church History 3)

யூசிபியஸ், தமிழில் தேவாலய வரலாறு, புத்தகம் 3

Eusebius, The Church History in Tamil, book 3. Translated with permission from Paul L. Meier, Eusebius, The Church History: A New Translation with Commentary, 1999. Tamil translation is Public Domain.


மூன்றாவது புத்தகம்: திருப்பணிகளும் அட்டூழியங்களும்

கல்பா முதல் ட்ரொஜன் வரை

அப்போஸ்தலிக்க பயணங்கள் மற்றும் எழுத்தாக்கங்கள்

1. யூதர்களின் நிலை இப்படித்தான் இருந்தது. இதற்கிடையில், நமது இரட்சகருக்கு விசுவாசமான தூதர்கள் உலகம் முழுவதும் சிதறிக்கிடந்தனர். பாரம்பரியத்தின் படி, தோமஸ், பார்தியா, அண்ட்ரூ சிதியா மற்றும் யோவான் ஆசியா ஆகியோரது சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டார். அவர் மரணிக்கும் வரை எபேசஸில் தான் தங்கினார். பேதுரு சிதறிக்கிடந்த போன்டுஸ், கலாத்தியா, பித்தினியா, கப்படோசியா மற்றும் ஆசியா ஆகிய இடங்களில் உள்ள யூதர்களுக்குப் பிரசங்கித்ததாகத் தெரிகிறது.’ இறுதியாக அவர் உரோமுக்கு வந்து அங்கே சிலுவையில் அறையப்பட்டார். அவருடைய சொந்த வேண்டுகோளின்படி சிலுவையில் தலைகீழாகத் தொங்கவிடப் பட்டிருந்தார். எருசலேமிலிருந்து இல்லிரிகம் வரை நற்செய்தியை அறிவித்த பவுலைப் பற்றி என்ன சொல்ல வேண்டும்? இதை அரிஜென் தனது ஆதியாகமம் பற்றிய வர்ணனையின் தொகுதி 3 இல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

2. பவுல் மற்றும் பேதுருவின் வேதசாட்சிய மரணங்களுக்குப் பிறகு, உரோமின் பேராயராக முதலில் நியமிக்கப்பட்டவர் லினஸ். உரோமிலிருந்து தீமோத்தேயுவுக்கு எழுதும் போது, நிருபத்தின் முடிவில் அவரைக் கௌரவிக்கும் நோக்கில், பவுல் ஆயர் லீனஸைப் பற்றி 2 தீமோத்தேயு 4:21 நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

3. பேதுருவின் ஒரு நிருபம், அவருடைய முதலாவது என்று பெயரிடப்பட்டதும் ஏற்றுக்கொள்ளப் பட்டதுமான இந்த நிருபத்தை, ஆரம்பகாலத்தில் வாழ்ந்த முற்பிதாக்கள் தங்கள் சொந்த எழுத்துக்களில் எவ்வித மறுப்புக்கும் இடமின்றி பயன்படுத்தினர். ஆனால் [பேதுருவின்] இரண்டாம் நிருபம் என்று அழைக்கப்படுவதை நாம் நியதியாகக் கருதவில்லை இருப்பினும், பலர் அதைப் பயனுள்ளதாகக் கருதி, மற்ற வேதாகம நூல்களோடு சேர்த்து படித்திருக்கிறார்கள். எவ்வாறாயினும், அவரது பெயரோடு சம்பந்தப்பட்ட அப்போஸ்தலர் பணிகள் மற்றும் ஏனைய நற்செய்தி வாசகங்கள் , அத்துடன் அவரது எழுத்துக்கள் என்று அழைக்கப்படும் வெளிப்பாடுகள் மற்றும் ஏனைய பிரசங்கங்கள் போன்றவை, பாரம்பரிய கத்தோலிக்க எழுத்தாக்கங்களில் காணப்படுகின்றனவா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. ஏனென்றால் ஆரம்ப காலத்திலோ அல்லது நாம் வாழும் காலத்திலோ எந்தத் திருச்சபை எழுத்தாளரும் தாங்கள் எழுதியதற்கான சாட்சியைப் பயன்படுத்தவோ பகிர்ந்திருக்கவோ இல்லை. எனது கதையின் போக்கில், ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த திருச்சபை எழுத்தாளர்கள் சர்ச்சைக்குரிய புத்தகங்களைப் பயன்படுத்தினார்கள், நியமன மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேதாகமங்களைப் பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள் மற்றும் இல்லாதவற்றைப் பற்றிய அவர்கள் என்னென்ன கருத்துக்களை முன்வைத்திருந்தனர் என்பது குறித்து கவனமாகக் குறிப்பிடுவேன். அப்படியானால், இவை பேதுரு பற்றிக் கூறப்பட்ட புத்தகங்கள். அவற்றில் ஒரே ஒரு நிருபம் மட்டுமே உண்மையானது மற்றும் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த முற்பிதாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பவுல் தான் அநேகமான பதினான்கு நிருபர்களை எழுதியவராக, மிக வெளிப்படையாகக் காணப்படுகிறார். ஆனால் சிலர், எபிரேயர்களுக்கு எழுதிய நிருபத்தை உரோமைய திருச்சபை அதன் நிலையில் இருந்து ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அது பவுலின் வேலையாகத்தான் இருக்கும் என்று எண்ணி அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். மேலும் நமது முன்னோர்கள் அதைப் பற்றி என்ன சொன்னார்கள் என்பதை நான் நேரம் வரும்போது கூறுவேன். உண்மையாக, அவரது அப்போஸ்தலர் பணிகள் என்று அழைக்கப்படுபவை புத்தக வடிவில் இல்லை. ஆனால் அதே அப்போஸ்தலர், உரோமைய நிருபத்தின் இறுதியில், ஹெர்ம்ஸை The Shepherd என்ற நூலின் புகழ்பெற்ற எழுத்தாளர் என்று குறிப்பிடுவதால், அந்த புத்தகமும் சிலரால் நிராகரிக்கப்பட்டது, எனவே ஏற்றுக்கொள்ளப் பட்ட புத்தகங்களில் அது சேர்க்கப்படவில்லை. இருப்பினும், ஏனையோர், குறிப்பாக தொடக்கக் கல்விக்கு இது இன்றியமையாதது என்று கருதுகின்றனர். ஆகவே, இது பொது வழிபாட்டில் பயன்படுத்தப்பட்டது, மேலும் ஆரம்பகால எழுத்தாளர்கள் சிலரால் இந்த நூலைப்பற்றி மேற்கோள் காட்டப்பட்டதையும் நான் கண்டேன்.

4. பவுல் புறஜாதிகளுக்கும், பேதுரு விருத்தசேதனம் செய்யப்பட்ட மக்களுக்கும் நாம் ஏற்கனவே குறிப்பிபட்ட நகரங்களிலும் மாகாணங்களிலும் பிரசங்கித்தார். ஆனால், அவர்கள் நிறுவிய திருச்சபை வட்டாரங்களில் எத்தனை பேர் ஆர்வமுள்ளவர்களாகவும் போதகர்களாகும் அளவுக்கு திறமையுள்ளவர்களாகவும் இருந்தார்கள் என்பதைத் தீர்மானிப்பது எளிதல்ல. எடுத்துக்காட்டாக, கிரீட் [Crete] என்று அழைக்கப்படும் திருச்சபை வட்டாரங்களுக்கு தீத்து ஆயராக நியமிக்கப்பட்டது போலவே, எபேசஸில் உள்ள திருச்சபைக்கு நியமிக்கப்பட்ட முதல் ஆயர் திமோதி என்று கூறப்படுகிறது.

லூக்கா பிறப்பால் அந்தியோசீனியரும், தொழில் ரீதியில் மருத்துவரும், நீண்ட காலமாக பவுலின் தோழராகவும் இருந்தவர். மேலும் ஏனைய அப்போஸ்தலர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தெய்வீக வழிகாட்டுதலால் ஈர்க்கப்பட்ட அவர், இரண்டு புத்தகங்களில், சுவிசேஷம் மற்றும் அப்போஸ்தலர் பணிகள் மற்றும் அவர்களிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட ஆன்மாவை குணப்படுத்துவதற்கான உதாரணங்களை நமக்கு விட்டுச்சென்றுள்ளார். முதன்முதலில் இறைவார்த்தையின் சாட்சிகளாகவும் ஊழியக்காரர்களாகவும் இருந்தவர்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே தான் எழுதியதாக அவர் கூறுகிறார். பிந்தையது அவரது கேள்வி ஞானத்தின் அடிப்படையிலோ அதன் ஆதாரத்தின் துணை கொண்டு அமைந்தவை அல்ல. ஆனால் அவரது கண்களால் கண்டு, அதன் மூலம் பெற்றுக் கொண்ட ஞானத்தால் இயற்றப்பட்டது. “எனது நற்செய்தியின்படி” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தும் போதெல்லாம் பவுல் உண்மையில் லூக்காவின் நற்செய்தியைக் குறிப்பிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பவுலின் மற்ற சீடர்களில், கிரெசென்ஸ் என்பவர் கவுலுக்கு அனுப்பப்பட்டார் [2 தீமோத்தேயு 4:10], மேலும் உரோமில் பவுல் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததாக 2 தீமோத்தேயுவில் குறிப்பிடப் பட்டுள்ள ஆயரான லினஸ், முன்பு குறிப்பிட்டது போல, பேதுருவுக்குப் பிறகு உரோம் நகரத்து ஆயராக நியமிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். உரோமின் மூன்றாவது ஆயரான கிளெமென்ட்டும், பவுலின் சக ஊழியராகவும் இணை-போராளியாகவும் இருந்தார் என்று அப்போஸ்தலர் தானே சாட்சியமளிக்கிறார் [பிலிப்பியர் 4:3]. இவை தவிர, ஏதென்ஸ் நகரில் உள்ள கிரேக்க நீதித்துறை [அரேயோபாகஸ்] அங்கத்தவர்கள் மத்தியில் பவுல் உரையாற்றிய பிறகு, மதம் மாறிய கிரேக்க நீதித்துறை அங்கத்தவரான டியோனீசியஸ், [அப்போஸ்தலர் பணிகள் 17:34], ஏதென்ஸின் முதல் ஆயர் ஆனார் என்று மற்றொரு கொரிந்துவில் உள்ள திருச்சபை போதகரான டியோனீசியஸ் கூறுகிறார். அப்போஸ்தலர்களின் வாரிசுகளின், அவர்கள் வாழ்ந்த காலம் போன்ற காலவரிசை பற்றிய விபரங்களை நேரம் வரும்போது தெரியப்படுத்துவோம்.

ஜெருசலேம் உரோம இராச்சியத்தால் முற்றுகைக்கு உள்ளாதல்

5. நீரோவின் பதின்மூன்று ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, கல்பா மற்றும் ஓதோவின் ஆக்கிரமிப்பு ஆட்சி ஒன்றரை ஆண்டுகள் நீடித்தது. பின்னர் யூதர்களுக்கு எதிரான பிரச்சாரங்களில் தன்னைத்தானே தனித்துவமானவர் என்று காட்டிக்கொண்ட வெஸ்பாசியன், யூதேயாவில் இருக்கும்போதே பேரரசராக அறிவிக்கப்பட்டான். அங்குள்ள இராணுவப் படைகளால் சாம்ராச்சியத்தின் தளபதி என்றும் போற்றப்பட்டான். யூதர்களுக்கு எதிரான போரைத் தன் மகன் தீத்துவின் [Titus] கைகளில் ஒப்படைத்துவிட்டு அவன் உடனடியாக உரோம் நகரை நோக்கிப் புறப்பட்டான்.

அதன் பின், நமது இரட்சகரின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, யூதர்கள் அவருக்கு எதிராக குற்றங்களை சுமத்தி, அனைத்து அப்போஸ்தலர்களுக்கும் எதிராக ஏராளமான சதித்திட்டங்களை மேற்கொண்டிருந்தனர். முதலில் ஸ்டீவனைக் கல்லெறிந்து கொன்றனர். அடுத்து செபதேயுவின் மகனும் யோவானின் சகோதரனுமான யாக்கோபுவின் தலையைத் துண்டித்து அவரைக் கொலை செய்தனர். இறுதியாக, ஜெருசலேமின் ஆயராக நியமிக்கப்பட்ட முதலாவது யாக்கோபு, மேலே விவரிக்கப்பட்ட வழியில் மரணித்தார். ஏனைய அப்போஸ்தலர்கள் யூதேயாவிலிருந்து பல கொடிய சதிகள் மற்றும் சூழ்ச்சிகள் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் அவர்கள் எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்து, கிறிஸ்துவின் வல்லமையால் தங்களுடைய செய்தியைப் போதித்தார்கள். அவர் அவர்களுக்கு பின்வருமாறு சொல்லியிருந்தார்: “சகல இனத்தவரையும் எனது நாமத்தினாலே சீடர்களாக மாற்றமடையச் செய்யுங்கள்” [மத்தேயு 28:19]. இதற்கிடையில், போர் தொடங்கும் முன், ஜெருசலேம் தேவாலயத்தின் உறுப்பினர்கள், அந்த நகரத்தை விட்டு வெளியேறி, பெல்லா என்றும் அல்லது பெரியா என்று அழைக்கப்படும் நகரத்தில் குடியேறுவதற்கு தகுதியானவர்களுக்கு, வெளிப்படுத்தல் வழியாக வழங்கப்பட்ட அசரீரி மூலம் கட்டளையிடப்பட்டது. அவர்கள் ஜெருசலேமிலிருந்து குடிபெயர்ந்து பெல்லா அல்லது பெரியா என்ற நகரத்தில் குடியேறினார்கள். அந்தப் பரிசுத்தவான்கள் யூதர்களின் அரச தலைநகரையும் யூதேயா முழுவதையும் விட்டு முழுமையாக வெளியேறியவுடன், கிறிஸ்துவுக்கும் அப்போஸ்தலர்களுக்கும் எதிரான குற்றங்களுக்காக கடவுளின் தீர்ப்பு அவர்கள் மீது விழுந்து, அவர்களது கொடிய தலைமுறையை கூண்டோடு அழித்தது.

முழு தேசத்தையும் துவசம் செய்த பேரழிவுகளை, குறிப்பாக யூதேயாவில் வசிப்பவர்கள் எவ்வாறு துன்பத்தின் எல்லைக்கு தள்ளப்பட்டனர் என்பதை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் ஜோசஃபஸின் வரலாற்றிலிருந்து துல்லியமாக இதைக் காணலாம். எத்தனை ஆயிரம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொலைஞர்களின் வாளுக்கு இறையாகியும், பஞ்சத்தாலும், எண்ணற்ற இதர இடர்பாடுகளாலும் ஏற்பட்ட மரணங்களால் அழிந்துபோயினர்; எத்தனையோ பிரபலமான யூத நகரங்கள் உரோமைய முற்றுகையின் கீழ் பயங்கர விளைவுகளுக்கு முகம்கொடுத்தன; குறிப்பாக பயம் காரணமாக ஜெருசலேம் என்ற “அசைக்க முடியாத கோட்டைக்குள்” தஞ்சம் புகுந்தவர்களின் நிலைமையும் இவ்வாறுதான் இருந்தது. இதைபற்றி வாசித்து அறிந்துகொள்ள விருப்பமுடையோர், முற்றுகையின் போது இடம்பெற்ற போரின் அனைத்து விளைவுகளையும் அதன் விபரங்களையும் படித்து அறியலாம். மற்றும் பழங்காலத்தில் தீர்க்கதரிசிகளால் மிகவும் கீழ்த்தரமாக சிதைக்கப்படும் என்றும், அது தீயால் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் கூறப்பட்ட கடவுளின் ஆலயம் எவ்வாறு மீள அமைக்கப்பட்டது என்பதுபற்றியும் அறிந்துகொள்ளலாம். எவ்வாறாயினும், யூதேயா முழுவதிலுமிருந்து பஸ்காவின் போது ஜெருசலேமிற்கு வந்து அங்கே சிறைச்சாலையில் இருப்பதைப் போல அலையைத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஏறக்குறைய முப்பது இலட்சம் பேர் இருந்தார்கள் என்று ஜோசஃபஸ் எவ்வாறு மதிப்பிட்டார் என்பதை நான் இங்கே கூறவேண்டும். இரட்சகரின் பேரார்வத்தை அவர்கள் பின்பற்றிய நாட்களிலேயே, அவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமைக்காக, தெய்வீக நீதியால் அவர்களுக்கு ஏற்படும் அழிவைப் பெற அவர்கள் உண்மையில் பொருத்தமானவர்கள். போர்வாள் மற்றும் பிற வழிகளில் அவர்களின் பேரழிவுகளைத் தவிர்த்து, பட்டினியால் அவர்கள் அனுபவித்த துன்பங்களை மட்டுமே நான் இங்கே கூறுகிறேன். “அழிக்க முடியாத கோட்டை” என்ற ஜெருசலேமுக்குள் தஞ்சம் புகுந்தவர்களை வதைத்த கயவர்களை, கடவுளின் தண்டனை எவ்வளவு விரைவாகப் பின்தொடர்ந்தது என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளட்டும். வாசகர்கள் முழுப் போரின் அனைத்து விவரங்களையும் படிக்க முடியும். அத்தோடு தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்ட மிக மோசமாக அழிவுறும் என்று கூறப்பட்ட, காலங்காலமாக கொண்டாடப் பட்ட ஆலயம் தீயால் முற்றிலும் அழிக்கப்பட்ட போது அது எவ்வாறு கடவுளின் ஆலயமாக மீள நிர்மாணிக்கப்பட்டது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

6. ஜோசஃபஸின் யூதப் போர் 5 என்ற புத்தகத்தை மீண்டும் புரட்டிப்பார்த்து, அங்கு நடந்த துயர்மிகு நிகழ்வுகள் என்ன என்பது குறித்து எமது கவனத்தை செலுத்துவோம்:

செல்வந்தர்கள் அங்கே [ஜெருசலேமில்] குடியிருப்பது ஆபத்தை கொண்டுவருவதற்கு சமமாகவே இருந்தது. ஏனெனில், பணத்திற்காக பலர் கொல்லப்பட்டனர். பஞ்சத்தால் கிளர்ச்சியாளர்களின் வெறித்தனம் அதிகரித்தது. அதன் காரணமாக இருபாலர் மத்தியிலும் பயமும் அச்சமும் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே வந்தது. உண்பதற்கு எங்கும் தானியம் கிடைக்காதபடியால், கிளர்ச்சியாளர்கள் வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களை சூறையாடினர். ஏதேனும் கிடைத்தாலும் கூட, அவர்களிடம் ஒன்றும் இல்லை எனக் கூறி குடியிருப்பவர்களைத் துன்புறுத்தினார்கள்; இல்லை என்றால், அவர்கள் தானியங்கள் மற்றும் உணவுப்பொருட்களை மறைத்து வைத்தமைக்காக குடியிருப்பாளர்களை சித்திரவதை செய்தார்கள். மிகவும் பரிதாபத்துக்குரிய அந்த மக்களின் புறத்தோற்றம் அவர்களிடம் உண்ண உணவு கூட இருக்கிறதா இல்லையா என்பதற்கு போதுமான சான்றாக இருந்தது: அவர்களது புறத்தோற்றம் நன்றாகவும் புஷ்டியாகவும் இருந்தால், அவர்களிடம் நிறைய உணவு இருப்பதாகக் கருதப்பட்டது. ஏற்கனவே மெலிந்த, வறுமைத் தோற்றம் கொண்டவர்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டனர், ஏனெனில் அவர்களது வறுமை நிலை சீக்கிரமே அவர்கள் உயிரைப் பறித்துவிடும் என்று எண்ணியபடியால். ஆகவே பசி, பட்டினியில் இறக்கும் தறுவாயில் இருப்பவர்களைக் கொல்வது நியாயமற்றது என ஒருவேளை கிளர்ச்சியாளர்கள் கருதியிருக்கலாம். சில செல்வந்தர்கள் தங்களது சொத்துக்கள் மற்றும் உடமைகளை கோதுமை அல்லது பிற தானியங்களை பெற்றுக்கொள்ள பண்டமாற்று முறையைக் கையாண்டனர். ஏழைகளாக இருந்தவர்கள் தங்களிடம் இருந்த சொற்ப உடமைகளை பார்லி போன்ற மலிவான தானியங்களுக்காக இரகசியமாக பண்டமாற்று செய்தனர். பின்னர், தங்கள் வீடுகளை உட்புறமாகத் தாழிட்டுக்கொண்டு, சிலர் கடும் பசி காரணமாக தானியங்களை பச்சையாகவே உண்டனர். மற்றவர்கள் தேவை அல்லது பயத்தின் காரணமாக தானியங்களை அப்பமாக சமைத்து உண்டனர். எந்த மேசையோ அல்லது தயார் படுத்தலோ அங்கு காணப்படவில்லை. அடுப்பில் பாதி சமைக்கப் பட்டிருந்த உணவை சடுதியாக எடுத்து, துண்டுகளாகக் பிய்த்து உட்கொண்டனர்.

பலம் மிக்கவர்கள் கொள்ளையடித்தும், பலவீனர்கள் வேதனையில் துடிப்பது போன்ற பரிதாபகரமான காட்சிகள் கண்ணீரை வரவழைக்கக்கூடியதாக இருந்தன. பஞ்சம் என்பது உண்மையிலேயே துன்பத்தின் மிக கோரமான வடிவம் மற்றும் கண்ணியம் என்பது அதில் பலியாகும் மிகப்பெரிய துயரமாகும். பெண்கள் தங்கள் கணவர்களின் வாயிலிருந்தும், குழந்தைகள் தங்கள் தந்தையிடமிருந்தும், மற்றும் — அனைத்தையும் விட கொடுமையானது என்னவென்றால் — தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் வாயிலிருந்து உணவைப் பிடுங்கி உண்ணும் துர்பாக்கிய நிலை காரணமாக, அங்கு நிலவிய சகல கட்டுப்பாடுகள், நீதி, நியாயம் போன்ற உணர்வுகள் தகர்ந்தன; அவர்களுக்கு மிகவும் பிரியமானவர்கள் தங்கள் கைகளில் மரணத்தின் தறுவாயில், மரணத்தோடு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் கூட, அவர்களை உயிருடன் வைத்திருக்கக் கூடிய கடைசித் துண்டு அப்பத்தையோ அல்லது உணவையோ பறித்து உண்பதில் அவர்கள் எவ்விதமான தயவையோ தயக்கத்தையோ வெளிப்படுத்தவில்லை. சகல இடங்களிலும் வெறித்தனமாக நடமாடிய கிளர்ச்சியாளர்கள் எல்லோரது சேமிப்புகளை கொள்ளையடித்தனர். ஏனென்றால் அவர்கள் பூட்டிய கதவுகளை பார்க்கும் போதெல்லாம் உள்ளே இருப்பவர்கள் உணவருந்துகிறார்கள் என்று அவர்கள் கருதினர். ஆகவே அவர்கள் கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்து அங்குள்ளோரின் வாய் மற்றும் தொண்டையை நெரித்து அதிலே இருந்த உணவைக் கூட பிடுங்கி உண்டனர். வளர்ந்த ஆண்கள் தங்கள் உணவை விடாமல் பற்றிக் கொண்டமைக்காக தாக்கப்பட்டனர். பெண்கள் தங்கள் கைகளில் உணவை வைத்து மறைத்தமைக்காக அவர்களுடைய தலைமயிரைப் பிடித்திழுத்து தாக்கப்பட்டனர். நரைமுடியுடன் காணப்பட்ட வயோதிபர்கள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் வயது வித்தியாசமின்றி, இரக்கம் இன்றி தாக்குதலுக்கு உள்ளானர். பெற்றோர் தங்கள் மார்பில் அரவணைத்துக்கொண்டிருந்த இருந்த குழந்தைகளை பிடுங்கி அவர்களை தூக்கி தரையில் அறைந்தனர் அந்தக் கல்நெஞ்சம் கொண்ட கயவர்கள். அந்தக் கயவர்களின் கையில் அகப்படும் முன் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அவசர அவசரமாக உணவை விழுங்கியவர்களைக் கூட அவர்கள் விட்டுவைக்க வில்லை. அந்தக் காட்டுமிராண்டிகளுக்கு உணவு கொடுக்காமல் அந்த மனிதர்கள் உண்டார்கள் என்று குற்றம் சுமத்தி, அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாதவர்களாக அந்த அப்பாவிகளை அவர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கினர்.

எப்படியாவது உணவுப்பண்டங்களைத் தேடிக்கொள்ளும் நோக்கில் அவர்கள் கொடூரமான சித்திரவதை வியூகங்களைக் கையாண்டனர். பாதிக்கப்பட்டவர்களின் பிறப்புறுப்புப் பாதையில் கசப்பான ஒருவகை முறுக்கேறிய செடியின் தண்டுகளைத் திணித்தும், அவர்களின் ஆசனவாயிலில் கூர்மையான முட் செடியின் தண்டுகளையும் உட்செலுத்தினர். மக்கள் மறைத்து வைத்த அப்பங்களுக்காகவும் அல்லது ஏனைய பார்லி போன்ற எளிய உணவுப்பண்டங்களை பறிப்பதற்காகவும் அப்பாவி மனிதர்களை இப்படியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவது கேட்பதற்கே மிகுந்த பயங்கரமானதாகவும் வேதனை தருவதாகவும் உள்ளது. சித்திரவதை செய்பவர்கள் பசியுடன் இருந்தார்கள் என்பதல்ல. உண்மையில், அவர்களது தேவைகளை பெற்றுக்கொள்வதற்கு தான் இவ்வகையான கொடூர செயல்களை அரங்கேற்றினார்கள் என்று சொல்லமுடியாது — ஆனால் அவர்கள் தங்கள் மிலேச்சத்த தனத்துக்கு ஊட்டமளிக்க இவ்வகையான ஒத்திகைகளை அரங்கேற்றி, எதிர்காலத்துக்குத் தேவையான பொருட்களை சேமித்து வைக்கவே இவ்வாறான கொடிய செயல்களில் ஈடுபட்டனர். எதிரிகளின் கண்களில் படாமல் மிகுந்த சிரமத்தின் மத்தியில் சிலர் இரவில் காட்டு மூலிகைகளையும் புற்களையும் சேகரிக்க உரோம [முற்றுகை எல்லை] வேலிகளுக்கு இடையே இரகசியமாக ஊர்ந்து சென்றபோது, ​​அடக்கு முறையாளர்கள் அவர்களைத் தடுத்து அவர்கள் எடுத்துச் சென்றதையும் பிடுங்கி கொண்டனர். இவ்வளவு ஆபத்திற்கு மத்தியில் அவர்கள் சேகரித்ததைப் பகிர்ந்து கொள்ளுமாறு கடவுளின் நாமத்தை உச்சரித்து அவர்கள் கெஞ்சினாலும், முறையிட்டாலும், அவர்கள் அவர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. அதேநேரம் கொள்ளையர்கள் கைகளில் அகப்பட்டும் உயிர் தப்பி இருப்பது அதிர்ஷ்டம் என்று கருதி அவர்கள் மெளனமாக இருந்து விட்டனர்.

மேலும் சில விபரங்களை வெளியிட்ட பிறகு, ஜோசபஸ் பின்வருமாறு தொடர்கிறார்:

இப்போது நகரத்தை விட்டு வெளியேற முடியாமல், யூதர்கள் உயிர்வாழ்வதற்கான அனைத்து நம்பிக்கையையும் இழந்தனர். மேலும் பஞ்சம் இன்னும் மோசமாகி, வறுமையின் கோரத் தாண்டவம் வீட்டிற்கு வீடு, குடும்பம் குடும்பமாக துவம்சம் செய்தது. வீடுகள் பெண்கள் மற்றும் குழந்தைகளால் நிரம்பியிருந்தன. இதனால் அழிக்கப்பட்டன. சந்துகள் மற்றும் குறுகலான பாதைகள் முதியவர்கள் மற்றும் வளர்ந்த ஆண்களின் சடலங்களுடன் நிறைந்து காணப்பட்டன. இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள், பசியால் துடித்து, சந்தை போன்ற இடங்களில் விலங்குகள் போல் அலைந்து திரிந்து, இறுதியில் பாதைகளில் விழுந்து மடிந்தனர். நோய்வாய்ப்பட்டவர்கள் தங்கள் உறவினர்களை அடக்கம் செய்ய முடியாது தவித்தனர். அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்தமையாலும், அவர்களின் சொந்த நிச்சயமற்ற விதியின் காரணமாக தகுதியானவர்கள் கூட இறந்தோரை அடக்கம் செய்யும் பணியைத் தவிர்த்தனர். மாற்றியாய் இறந்தோரை அடக்கம் செய்யும் போது கூட பலர் இறந்து போயினர். மேலும் பலர் தங்களால் இயன்றவரை தங்கள் சொந்த கல்லறைகளை நோக்கிப் புறப்பட்டனர். பசி அவர்களது உணர்ச்சியை வென்றதால், அழுகையோ கண்ணீரோ அவர்களிடம் காணப்பட வில்லை. ஏற்கனவே மரணத் தறுவாயில் இருந்தவர்களை, தங்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு இருந்த ஏனையோர் வறண்ட கண்களால் பார்த்தார்கள். ஆழ்ந்த மௌனமும் கொடிய இருளும் நகரத்தை சூழ்ந்திருந்தது.

மேலே கூறியவற்றையெல்லாம் விட மிகவும் கேவலமான செயல்கள் என்று கருத்தப்பட்டவை தான் இந்தக் கொடியவர்கள் வீடுகளுக்குள் புகுந்து, இறந்தவர்களின் உடல்களில் இருந்து ஆடைகளைக் களைந்து, ஆணவமாக சிரித்தபடி வெளியேறியனர். அவர்கள் சடலங்களை தங்கள் வாள் முனைகளால் தீண்டி அவர்கள் இறந்துவிட்டார்களா அல்லது இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்று சோதித்தனர். அத்தோடு உயிருடன் இருந்த சிலரின் மீதும் அவர்களது வாள்களை ஊடுருவி குரூரமாக சோதனை செய்தனர். இருந்தும் மரணத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள கெஞ்சி மன்றாடியவர்களை இகழ்ந்து, பஞ்சத்தில் அடிபட்டு தன்னாலேயே இறந்து போக விட்டுவிட்டார்கள். இவ்வாறு விடப்பட்டவர்களில் ஒவ்வொருவரும் தம்மை உயிருடன் விட்டுச் செல்லும் அந்த கொடிய மனிதர்களைவிட, ஆலயத்தை நன்றியுடன் நோக்கிய கண்களுடன் இறந்தனர். அதேவேளை, இறந்த அழுகிப்போன உடல்களில் இருந்து வெளிப்பட்ட சகிக்க முடியாத துர்நாற்றம் காரணமாக பொது செலவில் இறந்தவர்களை அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் பின்னர் இது சாத்தியமற்றது என அறிந்தபோது, அவர்கள் இறந்தோரின் உடல்கள் கிடத்தப்பட்ட இடங்களில் இருந்து அவற்றைத் தூக்கி பள்ளத்தாக்குகளுக்குள் வீசினர். தீத்து அங்கே அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த போது, ​​அந்த இடங்கள் இறந்த, அழுகிப்போன உடல்களால் நிரம்பியிருப்பதையும், அழுகிய உடல்களிலிருந்து அழுகிய ஊண் நீர் வெளியேறுவதையும் கண்ணுற்று பெருமூச்சு விட்டார். கைகளை உயர்த்தி, கடவுளை அழைத்து பெருமூச்செறிந்து, இது அவருடைய செயல் இல்லை என்று முறையிட்டார்.

மேலும் சில கருத்துக்களை வெளியிட்ட அவர், மீண்டும் தொடர்ந்தார்:

என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை என்னால் தவிர்க்க முடியாது: உரோமையர்கள் இந்த மிலேச்ச அயோக்கியர்கள் மீதான தாக்குதலைத் தாமதப்படுத்தியிருந்தால், பூமி பிளந்து இந்த நகரத்தையே விழுங்கியிருக்கும், அல்லது ஒரு வெள்ளம் அதை மூழ்கடித்திருக்கும் அல்லது மின்னல் தாக்கம் ஏற்பட்டு சோதோமைப் போல அழித்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அங்கு துன்பப்பட்டவர்களை விட, கடவுள் நம்பிக்கையற்ற ஒரு தலைமுறையை இந்த பொல்லாத நிந்தனை உருவாக்கியது. அவர்களின் வெறித்தனத்தால் மக்கள் அனைவரும் அழிந்தனர்.

புத்தகம் 6 இல் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

சிறந்த நண்பர்கள் கூட உண்ண உணவு என்று வந்தபோது, ஒருவருக்கொருவர் சரமாரியாக மோதிக்கொண்டனர். மற்றவர்கள், வெறிநாய்களைப் போல பசியால் வாய்களை பிளந்தபடி, தள்ளாடித் தள்ளாடி, குடிகாரர்களைப் போல் பலமுறை தட்டிய வீட்டுக் கதவுகளையே மீண்டும் மீண்டும் தட்டி, அந்த வீடுகளுக்குள் புகுந்து உணவு தேடும் துரதிர்ஷ்டவசமான நிலையில் இருந்தனர். அவர்கள் கையில் அகப்பட்ட எல்லாவற்றையும் வாயில் போட்டுக் கடித்து, அசுத்தமான விலங்குகள் கூட தொடாத பண்டங்களை பசி காரணமாக உண்ணும் மிகவும் துர்ப்பாக்கிய நிலையை அடைந்தனர். இறுதியாக, அவர்கள் இடைக்கச்சைகள் மற்றும் காலணிகளை கூட மென்று உணவாக உட்கொண்டனர். அல்லது யுத்தங்களில் பயன்படுத்தும் கேடயங்களிலிருந்து கழற்றிய தோலையும் மென்று விழுங்கினர். சிலர் பழைய வைக்கோலை உண்டனர். ஏனென்றால் வைக்கோலை சிறு சிறு கொத்துகளாக சேகரித்து நான்கு [Attic drachmas] நாணயங்களுக்கு விற்றவர்கள் கூட அவர்கள் மத்தியில் இருந்தனர். ஆனால் பசியின் கொடுமை அவர்களை உண்ணத் தூண்டியது போன்ற உயிரற்ற விஷயங்களைப் பற்றி ஏன் பேச வேண்டும்? கிரேக்கம் அல்லது வேறு எந்த நாட்டிலும் நிகழாத ஒரு நிகரற்ற செயல் குறித்து நான் இப்போது கூறுவேன். இது சொல்வதற்கே பயங்கரமான மற்றும் கேட்கும் போது நம்பமுடியாத விடயமாகும். இந்த வேதனை தரும் நிகழ்வை நான் இட்டுக்கட்டியதாக எமது சந்ததியினர் சந்தேகிக்காதபடி நான் மகிழ்ச்சியுடன் தவிர்த்திருப்பேன். ஆனால் எனது சொந்த தலைமுறையில் உள்ள எண்ணற்ற புத்திசாலிகள் என் வாதத்தை ஆதரிக்கிறார்கள். எலேசரின் மகளான மேரி என்ற யுவதி ஒருத்தி இருந்தாள். அவள் ஜோர்டானுக்கு அப்பால் பாத்தேசோர் கிராமத்தில் [“ஹவுஸ் ஆஃப் ஹிசோப்”] வசித்து வந்தாள். அவள் குடும்பம் வசதி மற்றும் செல்வத்திற்காக நன்கு பிரபலமானது. அவள் அங்கிருந்த மற்றைய மக்களுடன் ஜெருசலேமுக்கு தப்பி ஓடிவிட்டாள். ஆனால் அங்கு முற்றுகையில் சிக்கிக்கொண்டாள். பெரியாவிலிருந்து [House of Hyssop] அவள் கொண்டு வந்த பெரும்பாலான உடைமைகளை முற்றுகை மேற்கொண்ட தலைவர்கள் கைப்பற்றினர். மேலும் அவர்களின் மெய்க்காவலர்கள் தினசரி மேற்கொண்ட சோதனைகள் மூலம் அவள் வசமிருந்த எஞ்சிய சொத்துகளையும் உணவையும் சூறையாடினர். கோபத்தின் மிகுதியால், அவள் கொள்ளைக் காரர்களை சபித்தாள். ஆனால் அவர்கள் யாரும் கோபத்தின் காரணமாகவோ அன்றி பரிதாபத்தின் காரணமாகவோ அவளைக் கொல்ல விரும்பவில்லை. அதனால் அவள் ஆத்திரத்திற்கும் பசிக்கும் உள்ளானாள். இயற்கையை மீறி, அவள் பாலூட்டும் தன் ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு, “ஏழைப் புழுவே, போரிலும், பஞ்சத்திலும், கிளர்ச்சியின் கொடுமைகள் மத்தியிலும் உன்னை நான் ஏன் வாழ வைக்க வேண்டும்? நாம் வாழ்ந்தால் உரோமையர்களின் அடிமைகளாவே வாழவேண்டும், ஆனால் பசி தீரும். அடிமைத்தனம் காரணமாக பட்டினியில் இருந்து தப்பிவிடலாம். அப்படிப்பார்த்தால், எம்மை முற்றுகைக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த அதிகார வெறியர்கள் இந்த இரண்டையும் விட மோசமானவர்கள்! வா, எனக்கு உணவாக மாறிவிடு. கிளர்ச்சியாளர்களின் பழிவாங்கும் சீற்றம் மற்றும் யூதர்களின் துன்பத்தின் கதையான இந்த சோகக் கதையை உலகம் நன்றாகக் கேட்கட்டும்” என்று ஆக்கிரோஷத்துடன் விரக்தி கொண்டு பேசிய இந்த வார்த்தைகளுக்குப் பின் அவள் தன் மகனைக் கொன்றாள், பின்னர் அவனை சமைத்து பாதியை உண்டுவிட்டு மீதியை மறைத்து வைத்தாள்.

அந்த நேரத்தில் முற்றுகையாளர்கள் அங்கு வந்து, அங்கே இருந்து வந்த ஒரு வித்தியாசமான மணத்தை உணர்ந்தவர்களாய், அவள் தயார் செய்த உணவைக் கொடுக்காவிட்டால், உடனடியாக கொன்று விடுவோம் என்று அவளை அச்சுறுத்தினர். அவர்களுக்காக ஒரு நல்ல வழியைத் தான் தயார் செய்து இருப்பதாக அவள் பதிலளித்தாள். உடனேயே அவளது குழந்தையின் சமைக்கப்பட்ட எச்சத்தின் மிகுதியைக் கொண்டு வந்து அவர்கள் முன்னே நீட்டினாள். அவர்கள் பார்வையில் திகில் குடிகொள்ள, அந்தக் கயவர்கள் கூட திகைத்துப் போனார்கள். ஆனால் அவள் தொடர்ந்தாள். “இந்தக் குழந்தை எனக்குச் சொந்தமானது. இந்த ஈனச் செயலும் என்னால் நிகழ்த்தப்பட்டது. ஆகவே இதை உண்ணுங்கள், ஏனென்றால் நானும் இதை உண்டேன் என்று கூறினாள். ஒரு பெண்ணை விட கசப்புணர்வு கொண்டவர்களாகவோ அல்லது ஒரு தாயை விட மென்மையான இதயம் கொண்டவர்களாகவோ இருக்க வேண்டாம். ஆகவே என் தியாகத்தை நீங்கள் ஏற்க விருப்பமில்லையென்றால், மீதியை என்னிடம் விட்டுவிடவும், ஏனென்றால் நான் ஏற்கனவே பாதியை உண்டுவிட்டேன்,” என்று கடுந்தொனியில் கூறினாள். அவர்கள் முன் வைத்த இந்த உணவைத் தொட முடியாதவர்களாய், அந்தக் கயவர்கள் முதல் முறையாக கோழைகளாக, பயந்து நடுங்கிப் போனார்கள். இதனால் உண்டான திகில் ஏககாலத்தில் முழு நகரத்திற்கும் பரவியது. ஒவ்வொருவரும் தங்கள் கண்களுக்கு முன்பாக இந்த சோகத்தைப் பார்த்து, அவரவர்கள் தாங்களே குற்றம் செய்தது போல் நடுங்கினார்கள். பட்டினியால் வாடுபவர்கள் மரணத்தைத் தேடிக்கொள்ளும் முன், இந்த மூர்க்கத்தனமான அட்டூழியங்களைக் காணாமலும் கேட்காமலும் உயிர் நீத்தவர்களை நினைத்து பொறாமைப்பட்டனர்.

இயேசுவின் கணிப்புகள்

7. கடவுளின் குமாரனாகிய கிறிஸ்துவுக்கு எதிராக யூதர்கள் இழைத்த கொடுமைகள் மற்றும் துரோகத்திற்கான வெகுமதி இதுவாகும். இந்தத் தீர்க்கதரிசனத்தில் இந்தக் காரியங்களைப் பற்றிய நமது இரட்சகரின் என்றும் தவறாத, துல்லியமான கணிப்பை இதனுடன் இணைப்பது மதிப்புக்குரியது:

“கர்ப்பிணிகளுக்கும் கைக்குழந்தையுடைய பெண்களுக்கும் மோசமான காலம் அது. இச்செயல்கள் நடந்து நீங்கள் தப்பிச்செல்லும் நாள் ஓய்வு நாளாகவோ குளிர் காலமாகவோ இருக்காதிருக்க வேண்டுமெனப் பிரார்த்தியுங்கள். ஏனென்றால், அக்காலத்தில் துன்பங்கள் அதிகரிக்கும். உலகம் தோன்றிய நாள் முதல், என்றும் இல்லாத அளவிற்கு அப்பொழுது துன்பங்கள் ஏற்படும். அதைவிட மோசமான துன்பம் பிற்காலத்தில் ஏற்படாது.”

இழக்கப்பட்ட மொத்த உயிர்களின் எண்ணிக்கையை மதிப்பிடும் போது, வரலாற்றாசிரியர் [ஜோசஃபஸ்] பின்வரும் கணிப்பை வெளியிடுகிறார். பஞ்சம் மற்றும் கொலை ஆயுதங்களால் 11 இலட்சம் பேர் வரை இறந்தனர் என்றும், நகரைக் கைப்பற்றிய பின்னர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றி கிளர்ச்சியாளர்களும் பயங்கரவாதிகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் எதிராகத் தெரிவித்த புள்ளிவிவரங்கள் மூலமே இவை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. மேலும் உயரமான, வாட்டசாட்டமான, கம்பீரமான இளைஞர்கள் வெற்றி அணிவகுப்புகளில் ஈடுபடுத்தும் பொருட்டு காப்பாற்றப்பட்டனர். மீதமுள்ளவர்களில், பதினேழு வயதுக்கு மேற்பட்டவர்கள் எகிப்தில் கடின உழைப்பில் ஈடுபடுத்தப்படுவதற்காக கைதிகளாக அனுப்பப்பட்டனர். மேலும் அதிகமானவர்கள் பொது அரங்குகளில் வாள் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப் படுவதற்காகவும் அல்லது காட்டு மிருகங்களோடு மோதவிட்டு அதே பொது அரங்குகளில் மிகவும் குரூரமாக, கொல்லப்படுவதற்காக மாகாணங்களுக்கு இடையில் பிரிக்கப்பட்டனர். பதினேழு வயதிற்கு உட்பட்டவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் தொண்ணூறாயிரமாகக் காணப்பட்டது.

கிறிஸ்துவின் தீர்க்கதரிசனங்களுக்கு இணங்க, இவை அனைத்தும் வெஸ்பாசியனின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் ஆண்டில் நடந்தது. அவரது தெய்வீக சக்தியால் ஏற்கனவே இருந்ததைப் போல, அவர்களைப் பார்த்து அழுவதை போலவும் இருந்தார். பரிசுத்த சுவிசேஷகர் அவரது [கிறிஸ்துவின்] உண்மையான வார்த்தைகளை ஜெருசலத்தோடு இணைக்கிறார்:

“உனக்கு சமாதானத்தை எது வரவழைக்கும் என்று இன்றைக்கு நீ தெரிந்துகொண்டிருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் உனக்கு அது மறைக்கப்பட்டிருப்பதால் உன்னால் அதை அறிந்துகொள்ள முடியாது. உன் பகைவர்கள் உன்னைச் சுற்றிலும் ஒரு மதிலை எழுப்பும் காலம் வந்து கொண்டிருக்கிறது. உன் பகைவர்கள் உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வளைத்துக் கொள்வார்கள். அவர்கள் உன்னையும் உன்னிலுள்ள எல்லா மக்களையும், குழந்தைகளையும் அழித்து விடுவார்கள்.” [லூக்கா 19:42-44].

மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர் இவாறு கூறுகிறார்:

“ஏனெனில், பூமியில் பெரும் துன்பமும் இந்த மக்களுக்கு எதிராக கடும் சினமும் உண்டாகும்; அவர்கள் தீட்டிய வாளின் கூர்மையில் வீழ்த்தப்படுவார்கள். சகல நாடுகளுக்கும் சிறைபிடிக்கப் பட்டவர்களாகக் கொண்டு செல்லப்படுவார்கள், புறஜாதிகளின் காலம் நிறைவடையும்வரை எருசலேம் புறஜாதிகளால் ஒடுக்கப்படும்” [லூக்கா 21:23-24].

மீண்டும் தொடர்கையில்,

“எருசலேமைச் சுற்றிலும் போர்ப்படைகள் சூழ்ந்திருக்கக் காண்பீர்கள். எருசலேமின் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்.” [லூக்கா 21:20]

போரைப் பற்றிய பதிவோடு ஒப்பிட்டுப் பார்க்கும் எவரும், நமது இரட்சகரின் வார்த்தைகளை மற்ற வரலாற்றாசிரியர்களின் முன்னறிவிப்பை விட நமது இரட்சகரின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்து ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

இரட்சகரின் கருணை மற்றும் கொலைச் சதிகாரர்கள் கொள்ளையர் மற்றும் கொலையாளிகளை விடுவிக்க இறைஞ்சுவதையும், வாழ்க்கையின் மூலகர்த்தாவை அகற்றவும், அதற்குப் பிறகு முழு தேசத்திற்கும் என்ன நடந்தது போன்றவற்றை பதிவுகளில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் யூதர்கள் கிறிஸ்துவுக்கு எதிரான குற்றத்திற்குப் பிறகு நாற்பது ஆண்டுகளாக அவர்களை அழிப்பதைத் தாமதப்படுத்துவதில் கருணையுள்ள தேவனின் இரக்கத்தைக் காட்டும் உண்மைகளை இங்கே இணைப்பது சரியாக இருக்கும். அந்தகாலத்தில், முதல் ஆயரான யாக்கோபு உட்பட பெரும்பாலான அப்போஸ்தலர்கள் கர்த்தருடைய சகோதரர் என்று அழைக்கப்பட்டவர்கள் அப்போதும் உயிருடன் இருந்தனர். மேலும் அவர்கள் நகரத்தில் தங்கியிருப்பது அதன் சுற்று வட்டாரத்துக்கு சக்திவாய்ந்த பாதுகாப்பை வழங்கியது. கடவுள் இன்னும் பொறுமையாக இருந்தார். அவர்கள் இறுதியாக தங்கள் தவறான செயல்களுக்காக மனந்திரும்பி மன்னிப்பு கேட்டு, மற்றும் இரட்சிப்பைக் கண்டடைவார்கள் என்று நம்புகிறார். அதேநேரம் அவர்கள் மனந்திரும்பத் தவறினால் என்ன நடக்கும் என்ற எச்சரிக்கைகளையும் அனுப்பினார்.

8. யூதப் போர் பற்றிய ஆறாவது புத்தகத்தில் ஜோசபஸ் இதுபற்றிக் குறிப்பிடுகிறார்:

வஞ்சகர்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் ஏற்கனவே நொந்துபோயிருந்த, பரிதாபத்திற்குரிய மக்களை ஏமாற்றினர். அவர்கள் தான்தோன்றித்தனமாய், குருடர்கள் மற்றும் புத்தியில்லாதவர்கள் போல், கடவுளின் தெளிவான அடையாளங்கள் மற்றும் நெருங்கி வரும் அழிவு போன்ற எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்தவில்லை. வாள் நட்சத்திரம் போன்ற ஒரு தோற்றம் நகரத்தின் வான்பரப்பில் தோன்றியது. அது ஒரு வருடம் நீடித்தது. பின்னர், போருக்கு முன்பு, புளியா அப்பம் குறித்த விருந்துக்கு மக்கள் கூடியிருந்தபோது, சந்தகஸ், [மசிடோனிய நாட்குறிப்பில் வருடத்தின் ஆறாவது மாதம்] அதாவது ஆறாவது மாதத்தின் எட்டாம் தேதி அதிகாலை 3:00 மணியளவில், ஆலய மற்றும் பலிபீடத்தின் மீது ஒரு ஒளி பிரகாசித்தது. அது நண்பகல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இது சுமார் அரை மணி நேரம் நீடித்தது. அனுபவமற்ற மக்களுக்கு இது ஒரு நல்ல சகுனமாகத் தோன்றியது. ஆனால் புனித எழுத்தாளர்கள் உண்மையான விளக்கத்தை அளித்தனர். அதே விருந்தின் போது, பிரதான ஆசாரியனால் பலியிடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு பசு, ஆலய முன்றலில் ஒரு கன்றுக்குட்டியைப் ஈன்றது. இரும்புக் கம்பிகளால் உருவாக்கப் பட்டிருந்த கருவறையின் கிழக்கு வாசல் வாயிற்கதவு — அது நீளமான பாரிய திருகாணிகளால் புனையப் பட்டு பாதுகாக்கப் பட்ட அந்த வெண்கல வாயில் கதவு நள்ளிரவில் தானாகத் திறந்துகொண்டது. அந்த வாயிற்கதவு எவ்வளவு பெரியதென்று கூறவேண்டுமானால், ஒவ்வொரு மாலையும் அதை இழுத்து மூடுவதற்கு இருபது ஆண்களின் பங்களிப்பு தேவைப்படும் அளவுக்கு மிகப்பெரிய திருகாணிகளைக் கொண்டதாகவும், இரும்பு மற்றும் உருக்குச் சட்டங்களால் புனையப்பட்டதாகவும் அது காணப்பட்டது.

புளியா அப்பத்தின் விருந்துக்கு பிறகு சில நாட்கள் கழித்து, ஆர்ட்டெமிசியஸ் பருவ காலத்தின் இருபத்தி ஓராம் திகதி, நம்பமுடியாத அளவிலான சாத்தானைப் போன்ற ஒரு தோற்றம் காணப்பட்டது. நேரில் கண்ட சாட்சிகளால் சான்றளிக்கப் படாமலும், சகுனங்களுக்கு ஏற்ப பேரழிவுகள் நிகழாமலும் இருந்திருந்தால், இது ஒரு விசித்திரக் கதையாக மட்டுமே தோன்றியிருக்கும். சூரிய அஸ்தமனத்திற்கு முன், பூமியின் எல்லைகள் மீதும், வானத்திலும் ஆயுதப் படைகள் மேகங்கள் வழியாக வேகமாகச் சென்று நகரங்களைச் சூழ்ந்தன. பெந்தெகொஸ்தே பண்டிகையின் போது பாதிரியார்கள் தங்கள் வழக்கமான சடங்குகளுக்காக இரவில் ஆலயத்துக்குள் நுழைந்தபோது, ​​அவர்கள் ஒரு பெரிய இடியோசை போன்ற சத்தத்தையும், அதனோடு சேர்ந்து “இந்த இடத்தை விட்டு உடனே வெளியேறுங்கள்!” என்று ஒலித்த ஒரு பாரிய சத்தத்தையும் கேட்டனர்.

போருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அமைதியும் செழிப்பும் நிலவிய காலத்தில் இதைவிட ஆபத்தான ஒரு நிகழ்வு நடந்தேறியது. அனனியாவின் மகனான இயேசு என்ற பெயருடைய ஒரு சாதாரண விவசாயி, கூடார விழாவிற்கு வந்து, ஆலய வளாகத்தில் நின்றுகொண்டு, திடீரென்று, “கிழக்கிலிருந்து ஒரு குரல், மேற்கில் இருந்து ஒரு குரல், நான்கு திசைகளில் இருந்து வீசும் காற்றிலிருந்து ஒரு குரல், ஜெருசலேமுக்கும் அதன் தேவாலயத்துக்கும் எதிரான ஒரு குரல், மணமகன் மற்றும் மணமகளுக்கு எதிரான ஒரு குரல், அனைத்து மக்களுக்கும் எதிரான ஒரு குரல்!” என்று கூச்சலிட்டான்: இரவும் பகலும் இதையே புலம்பிக்கொண்டு குறுகிய தெருக்களின் ஒவ்வொரு முலைகளுக்கும் ஓடினான். நகரத்தில் வாழும் சில முக்கியமான மக்கள் இந்த அச்சுறுத்தும் வார்த்தைகளால் கோபமடைந்து, அந்த நபரைப் பிடித்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். இருப்பினும், அவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய வகையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவன் முன்பு சொல்ல அதே வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உரக்கக் கூறிக்கொண்டே இருந்தான். அந்த மனிதனின் நடத்தை ஏதோ இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று கருதிய அதிகாரிகள், அவனை உரோமைய ஆளுநரிடம் [அல்பினஸ்] கொண்டு வந்தனர். அங்கு, அவன் எலும்புகள் நொறுங்க அடிபட்டாலும், அவன் கருணையை எதிர்பார்த்து மன்றாடவில்லை, கண்ணீர் சிந்தவில்லை. ஆனால் அவன் தனது குரலை உச்சபட்சமாக எழுப்பி, “ஐயோ! ஜெருசலேமுக்கு கேடு!” என்று புலம்பியவாறு இருந்தான்.

அதே எழுத்தாளர் இன்னும் குறிப்பிடத்தக்க ஒரு கதையைச் சொல்கிறார். அதில் அவர்களின் புனித எழுத்துக்களில் ஒரு அசரீரி வடிவிலான அருள்வாக்கு காணப்பட்டதாகக் கூறுகிறார். அந்த நேரத்தில் அவர்களின் நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதன் உலகம் முழுவதையும் ஆள்வான் என்றும் கணித்துள்ளார். மேலும் இது வெஸ்பாசியனின் ஆட்சிக்காலத்தில் நிறைவேறியதாக வரலாற்றாசிரியர் அனுமானிக்கிறார். ஆனால் அவர் உலகம் முழுவதையும் ஆளவில்லை, உரோமையரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மட்டுமே ஆண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது மிகவும் நியாயமான முறையில் கிறிஸ்துவுக்கும் பொருந்தும். ஏனெனில் அவரிடம் இறை தந்தை பின்வருமாறு கூறினார், “நீ என்னிடம் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன். பூமியின் மக்களெல்லோரும் உன்னுடையவர்களாவர்! [சங்கீதம் 2:8]. அந்தச் சமயத்தில் அவருடைய புனித அப்போஸ்தலர்களால் தான், “அவர்களுடைய சத்தம் புவியெங்கும் பரவியது மட்டுமன்றி, அவர்களுடைய வார்த்தைகள் உலகத்தின் எல்லை வரையும் பரவின,” [சங்கீதம் 19:4].

ஜொசேஃபசும் அவரது எழுத்தாக்கங்களும்

9. ஜொசேஃபஸ் இந்த வரலாற்றிற்கு இவ்வளவு ஆதாரங்களை வழங்கியதால், அவரது தோற்றம் மற்றும் வம்சாவளி பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த தகவலை அவரே வழங்குகிறார்:

நான், மத்தியாஸின் மகனாகிய ஜொசேஃபஸ், ஜெருசலேமின் மதகுருவானவர், நான் ஆரம்ப காலங்களில் [போரின்] உரோமையர்களுக்கு எதிராகப் போரிட்டபோதும், அதுகுறித்த பிற்கால நிகழ்வுகளுக்கு விருப்பமில்லாத சாட்சியாக இருந்தேன்.

அவர் தனது சக நாட்டினரிடையே மட்டுமல்ல, அவரது காலத்தில் உரோமையர்களிடையேயும் மிகவும் பிரபலமான யூதராக இருந்தார். அதன் காரணமாக உரோம் நகரில் அவரது ஞாபகார்த்தமாக ஒரு சிலை நிறுவப்பட்டு அதன் நூலகத்தில் அவரது படைப்புகளைச் சேர்த்துக் கௌரவிக்கப்பட்டது. அவர் யூதர்களின் முழு வரலாற்றையும் [பண்டைய யூதர் பற்றிய] இருபது புத்தகங்களிலும், தான் வாழ்ந்த காலத்தில் உரோமையர்களுடன் நடந்த போரின் விபரங்கள் குறித்தும் ஏழாவது அத்தியாயத்தில் எழுதினார். பிந்தையதை அவர் கிரேக்க மொழியில் மட்டுமல்ல, அவரது சொந்த மொழியிலும் வெளியிட்டார். அவரது சாட்சியங்களுக்கிணங்க, மேலும் பிற காரணங்களையும் சேர்த்துப்பார்க்கும்போது, அவர் நம்பகத்தன்மைக்கு தகுதியானவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. யூதர்கள் மீதான தாக்குதலை வெளியிட்ட இலக்கண அறிஞர் ஏபியோனுக்கும், யூத மக்களின் மூதாதையரின் பழக்கவழக்கங்களை இழிவுபடுத்த முயற்சித்த மற்றவர்களுக்கும் அவர் பதிலளித்துள்ளார். இவற்றில் முதலாவதாக, பழங்கால பாரம்பரியத்தில் வேரூன்றியவை என்பதும், எபிரேயர்களிடையே மறுக்க முடியாதவை என்பதைக் காட்டுவதுமான, பழைய ஏற்பாட்டை உருவாக்கும் நியமன வேதாகமத்தை அவர் பட்டியலிடுகிறார்:

10. எங்களிடம் ஏராளமான முரண்பாடான மற்றும் விரோதங்களைத் தோற்றுவிக்கும் புத்தகங்கள் இல்லை. ஆக இருபத்தி இரண்டு புத்தகங்கள் மாத்திரமே உள்ளன. எல்லா காலத்தின் பதிவுகளும் புனிதமானவையாகக் கருதப்படும்.. இவற்றில் ஐந்து மோயீசனின் புத்தகங்கள். அவை சட்டம், நீதி மற்றும் அவரது மரணம் வரையிலான மனித வரலாற்றின் பாரம்பரியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. இந்தக் காலப்பகுதி ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகள். மோயீசனின் மரணம் முதல் பாரசீகத்தின் அரசராகப் பதவியேற்ற ஆர்டாக்செர்க்சஸ் வரை, மோயீசனுக்குப் பிறகு வாழ்ந்த தீர்க்கதரிசிகள் பதின்மூன்று புத்தகங்களில் தங்கள் காலத்தின் நிகழ்வுகளைப் பதிவுசெய்தனர்.” மீதமுள்ள நான்கில் கடவுளுக்கான கீர்த்தனைப் பாடல்கள் மற்றும் மனித நடத்தைக்கான கட்டளைகள் அடங்கி உள்ளன. ஆர்டாக்செர்க்சஸ் காலத்திலிருந்து நமது கால வரலாறு வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில், சமமான நம்பகத் தன்மைக்கு தகுதியற்றது போலத் தெரிகிறது. ஏனென்றால் தீர்க்கதரிசிகளின் வழிவந்த வாரிசுகள் என்போர் இல்லை. நம்முடைய செயல்கள் வேதாகம வசனங்கள் மீதான நமது அணுகுமுறையைப் பிரதிபலிக்கின்றன. ஏனென்றால் பல்லாண்டுகாலம் கடந்துவிட்டாலும், அவற்றில் எதையும் கூட்டவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ எவரும் துணியவில்லை. ஆனால் யூதர்கள் தங்கள் பிறப்பிலிருந்தே அவற்றை கடவுளின் நியமங்களாகக் கருதுவதும், அவற்றில் ஈடுபாடுகொண்டு வாழ்வதும், தேவைப் பட்டால், அவற்றுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பதும் அவர்களின் பிறவியிலேயே காணப்படுகிறது. அவர்கள் அதை மகிழ்ச்சியுடனேயே ஏற்றுக்கொள்கிறார்கள்.

‘பகுத்தறிவின் மேலாதிக்கம்’ The Supremacy of Reason என்ற தலைப்பில் அவர் இன்னுமொரு சிறப்பான இலக்கியப் படைப்பை உருவாக்கினார். இதை சிலர் தி மக்காபைகான் [The Maccabaikon] என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இது கடவுளின் வழிபாட்டிற்காக மிகவும் துணிச்சலாகப் போராடிய மக்காபீஸ் என்று அழைக்கப்படும் [யூதேயாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய யூத கிளர்ச்சிப் போர்வீரர்களின் குழுவைக் குறிக்கிறது]. புத்தகங்கள் எபிரேயர்களின் மோதல்களைப் பற்றியது. இருபதாவது பண்டைய வரலாற்றுப் புத்தகத்தின் இறுதி அத்தியாயங்களில், கடவுளின் தன்மை மற்றும் சட்டம் ஏன் சிலவற்றை அனுமதிக்கிறது மற்றும் சிலவற்றை தடைசெய்கிறது என்பது குறித்த யூத நம்பிக்கைகள் பற்றிய நான்கு புத்தகங்களை எழுத திட்டமிட்டுள்ளதாக ஜோசபஸ் அறிவிக்கிறார். அவர் தனது இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடப்பட்ட பிற படைப்புகளையும் உருவாக்கினார்.

இறுதியாக, நான் அவரிடமிருந்து இரவலாகப் பெற்றுக்கொண்ட பத்திகளில் உள்ள சான்றுகளை கோடிட்டுக் காட்ட அவர் பண்டைய வரலாறு என்ற நூலின் முடிவில் இணைத்திருக்கும் வார்த்தைகளை மேற்கோள் காட்டுவது சரியானது என்று நினைக்கிறேன். திபேரியாவின் ஜஸ்டஸ் என்பவரை பொய்யான அறிக்கைகள் வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி — அதே சம காலகட்டத்தில் எழுதிய வரலாற்றை மீண்டும் எழுத முயற்சித்தார் என்று குற்றம் சுமத்தியது மட்டுமல்லாமல் — அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை சுமத்தி, பின்வருவனவற்றைச் சேர்க்கிறார்:

இந்த எழுத்தாக்கங்களைப் பற்றிய உங்கள் பயத்தை நான் பகிர்ந்து கொள்ளவில்லை. நான் எனது புத்தகங்களை பேரரசர்களிடம் நேரடியாகவே சமர்ப்பித்தேன். நிகழ்வுகள் இன்னும் பசுமையாக இருந்தபோதும், என் எழுத்தில் உண்மைக்கு முதன்மைத் தன்மை கொடுக்கப்பட்டு இருந்ததால், எனது துல்லியமான கருத்துக்கள் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது எனக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கவில்லை. மேலும் பலருக்கு எனது வரலாறு சம்பந்தமான நூலைக் கொடுத்தேன். அரசனான அக்ரிப்பா [II] மற்றும் அவரது பல உறவினர்கள் போன்றோர் உண்மையில் போரில் பங்கேற்றுள்ளனர். உண்மையில், தீத்து என்ற பேரரசர் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். எனது புத்தகங்களிலிருந்து மட்டுமே பொதுமக்கள் இந்த நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைப் பெற வேண்டும் என்றும், அவற்றை வெளியிடுவதற்கு அவர் தனது சொந்தக் கையால் ஒரு ஆணையையும் அளித்திருந்தார். மேலும் அரசனான அகிரிப்பா எனது வரலாற்று நூலின் சிறப்பம்சத்தையும், நம்பகத்தன்மையையும் குறிப்பிட்டு அறுபத்திரண்டு கடிதங்களை எழுதியிருந்தார்.

இந்த இரண்டு கடிதங்களிலிருந்தும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் ஜோசபஸைப் பற்றி கூறியது இத்துடன் போதுமானதாக இருக்கட்டும், எனவே நாம் மேலும் தொடரலாம்.

ஆயர்களின் வாரிசுரிமை

11. யாக்கோபுவின் வேதசாட்சியம் மற்றும் ஜெருசலேம் வெற்றிக்குப் பிறகும் உயிருடன் இருந்த கர்த்தருடைய அப்போஸ்தலர்கள் மற்றும் சீடர்கள், மனித நேய அடிப்படையில், இறைவனின் உறவினர்களுடன் எல்லா இடங்களிலும் கூடினர் என்கிறது பாரம்பரியம். ஏனென்றால் அவர்களில் பலர் அந்தக்காலகட்டம் வரை உயிருடன் இருந்தனர். யாக்கோபுவுக்கு அடுத்தபடியாக யார் ஆயராக வர வேண்டும் என்று அவர்கள் அனைவரும் ஒன்றாக விவாதித்தனர். மேலும் நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள க்ளோபாஸின் மகன் சிமியோன் [ஜெருசலேமில்] ஆயரின் சிம்மாசனத்திற்கு தகுதியானவர் என்று அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தனர். ஒரு ஆயர் என்பவர் இரட்சகரின் முதல் உறவினர் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் க்ளோபாஸ் ஜோசப்பின் சகோதரர் என்று ஹெகெசிப்பஸ் கூறுகிறார்.

12. ஜெருசலேமைக் கைப்பற்றிய பிறகு, அரச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் யூதர்கள் மத்தியில் எஞ்சியிருக்கக் கூடாது என்பதற்காக, தாவீதின் அனைத்து சந்ததியினரையும் தேடும்படி வெஸ்பாசியன் உத்தரவிட்டார் என்றும் ஹெகெசிப்பஸ் தெரிவிக்கிறார், இது யூதர்களுக்கு மற்றொரு பெரிய துன்புறுத்தலுக்கு வழிவகுத்தது.

[கி. பி. 79]

13. வெஸ்பாசியனின் பத்து ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்தபோது, அவனது மகன் தீத்து அவருக்குப் பிறகு பேரரசன் ஆனான். தீத்துவின் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், உரோமைய ஆயரான லினஸ், [கி. பி. 81] பன்னிரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின், அனென்கிளீட்டஸுக்கு தனது பதவியை வழங்கினார். இரண்டு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்த பிறகு தீத்துவின் சகோதரன் டொமிஷியன் பதவியேற்றான்.

14. டொமிஷியனின் ஆட்சியின் நான்காம் ஆண்டில், அலெக்ஸாந்திரிய திருச்சபையின் முதல்வரான அன்னியனஸ், இருபத்தி-இரண்டு ஆண்டுகள் பதவி வகித்து முடிந்தபின் மரணித்தார். அவருக்குப் பிறகு அபிலியஸ் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார்.

[ஆயர்களின் வாரிசு உரிமைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ள இதுபோன்ற பல பத்திகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஜெருசலேம், அந்தியோக்கியா, அலெக்ஸாந்திரியா மற்றும் உரோம் ஆகிய நகரங்களில் உள்ள ஆயர்களின் முழுமையான பட்டியல் பின் இணைப்பு 2-ல் கொடுக்கப்பட்டுள்ளதால், வாசகர்கள் இவற்றை காலம் தாழ்த்தாது படித்தறிந்து கொள்வது நல்லது.]

15. அதே ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், அனென்கிளீட்டசின் பன்னிரண்டு ஆண்டுகால பதவிக்குப் பிறகு, கிளெமென்ட் உரோம் ஆயராகப் பதவியேற்றார். பிலிப்பியர்களில் [4:3], அப்போஸ்தலர் அவரை “கிளமென்ட் மற்றும் எனது மற்ற சக பணியாளர்களுடன், வாழ்க்கை எனும் புத்தகத்தில் பெயர்களைக் கொண்டவர்களுடன்” என்று ஒரு சக ஊழியராக விவரிக்கிறார்.

16. உரோம் நகரின் உள்ள திருச்சபையின் சார்பாக, கிளெமென்ட் ஒரு அங்கீகரிக்கப்பட்ட, நீண்ட மற்றும் அற்புதமான நிருபத்தை இயற்றி, கருத்து வேறுபாடு நிலவிய கொரிந்தியர்களின் சபைக்கு அனுப்பினார். இந்தக் கடிதம் பழைய காலத்திலும், தற்காலத்திலும் பல திருச்சபைத் தேவாலயங்களில் பகிரங்கமாக வாசிக்கப்பட்டது. கிளெமெண்டின் காலத்தில் கொரிந்துவில் கருத்து வேறுபாடு நிலவியமை ஹெகெசிப்பஸின் சாட்சியத்திலிருந்து தெளிவாகிறது.

டொமிஷியனின் துன்புறுத்தல் மற்றும் இயேசுவின் உறவினர்கள்

17. டொமிஷியன் பயங்கரமாக கொடுமை செய்யப்பட்டு, எவ்வித விசாரணைகளும் இன்றி கொல்லப்பட்டார். உரோமில் குடும்பம் மற்றும் தொழில் போன்ற ஆதாரங்களைக்கொண்டு வேறுபடுத்தப்பட்ட ஏராளமான ஆண்கள், மற்றும் பல முக்கியஸ்தர்களை துரத்தியடித்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தனர். இறுதியாக, அவர் கடவுளுக்கு விரோதமாகவும் நீரோவின் வாரிசாகவும் தன்னைக் காட்டிக்கொண்டார். அவரது தந்தை வெஸ்பாசியனுக்கு அத்தகைய தீய எண்ணம் கொண்ட திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை என்றாலும், எங்களுக்கு எதிராக ஒரு துன்புறுத்தலை கட்டவிழ்த்துவிட்ட இரண்டாவது மனிதர் அவராவார்.

18. அப்போஸ்தலரும் சுவிசேஷகருமான யோவான் அச்சமயத்தில் உயிருடன் இருந்தார். மேலும் அவர் இறைவார்த்தைக்கு சாட்சியம் அளித்ததற்காக கண்டனம் செய்யப்பட்டு பட்மோஸ் தீவில் வாழும்படி பணிக்கப்பட்டார் என்று வரலாறு கூறுகிறது. வெளிப்படுத்தல் புத்தகத்தில் [666 ல் 13:18] அந்துக்கிறீஸ்து என்று கொடுக்கப்பட்ட பெயரின் எண்ணிக்கையைப் பற்றி எழுதுகையில், ஐரேனியஸ் யோவானைப் பற்றி ‘மதவாத சக்திகளுக்கு எதிரான கொள்கைகள் பற்றிய புத்தகம் 5 ‘ இல் இவ்வாறு கூறுகிறார்:

தற்சமயம் அவரது பெயரைத் தெளிவாக அறிவிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்குமானால், வெளிப்பாடு புத்தகத்தைப் பார்த்து அறிந்தவர் கூறியிருப்பார். ஏனென்றால், இது வெகு காலத்திற்கு முன்பு அல்ல, கிட்டத்தட்ட நம் காலத்தில், டொமிஷியனின் ஆட்சியின் இறுதிக்கட்டங்களில் காணப்பட்டது.

உண்மையில், எங்கள் விசுவாசம் குறித்த போதனைகள் அக்காலத்தில் மிகவும் பிரகாசமாக இருந்தன. எங்கள் வுஸுவாசத்துக்கு முரணாக எழுதிய எழுத்தாளர்கள் கூட அவர்களின் வரலாறுகளில் துன்புறுத்துதல் மற்றும் வேதசாட்சியம் போன்றவற்றை மேற்கோள் காட்டியுள்ளனர். டொமிஷியனின் ஆட்சிக்காலத்தின் பதினைந்தாவது ஆண்டில், உரோமைய தூதரக அதிகாரிகளில் ஒருவரான ஃபிளேவியஸ் க்ளெமென்ஸின் மருமகளான ஃபிளேவியா டொமிட்டிலா, கிறிஸ்துவை அறிவித்ததற்காக போண்டியா என்ற தீவுக்கு பலருடன் நாடுகடத்தப்பட்ட அந்த துல்லியமான கணிப்பையும், அதாவது இந்நிகழ்வு இடம்பெற்ற காலகட்டத்தை பற்றிய எதிர்வுகூறலையும் வெளியிட்டிருந்தனர்.

19. அதே டொமிஷியன் தாவீதின் பரம்பரையில் இருந்து வந்த அனைவரையும் தூக்கிலிட உத்தரவிட்டான். மேலும் சில மதவெறியர்கள் இரட்சகரின் சகோதரரான – யூதா மற்றும் அவரது வழித்தோன்றல்கள் மீது குற்றம் சாட்டினார்கள் – மனித வழித்தோன்றல்கள் என்ற விதத்தில் தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிறிஸ்துவுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறுகின்றனர். ஹெகெசிப்பஸ் இதை பின்வருமாறு விளக்குகிறார்:

20. கர்த்தருடைய உறவினர்கள் என்ற அடிப்படையில் இன்னும் ஏங்கியிருப்பவர்கள் யூதாவின் பேரன்கள், இரத்த உறவுமுறையின்படி அவருடைய சகோதரன் என்று கூறப்பட்டது. மேலும் அவர்கள் தாவீதின் சந்ததியினர் என்றும் அறிவிக்கப் பட்டனர். எவோகேடஸ் [பண்டைய காலத்து உரோமைய போர்வீரர்கள்] அவர்களை டொமிஷியன் சீசரின் முன் கொண்டு வந்தனர். அவரும் ஏரோதைப் போலவே கிறிஸ்துவின் வருகையைப் பற்றி பயந்தார். அவர்கள் தாவீதின் வம்சாவளியா என்று டொமிஷியன் அவர்களிடம் கேட்டார். அவர்கள் ஆம் என்று ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடம் எவ்வளவு சொத்து மற்றும் செல்வம் உள்ளது என்று கேட்டார். அவர்கள் தங்களுக்கு இடையில் ஒன்பதாயிரம் டெனாரிகள் மட்டுமே உள்ளன என்று பதிலளித்தனர். அதி இருவருக்கும் சரிசமமான பங்கு உண்டென்று பதிலளித்தனர். மேலும் அது பணமாக அல்ல, முப்பத்தொன்பது plethra வின் [அதாவது கிரேக்க நில அளவீடுகளின் அடிப்படையில் ஒரு plethra என்பது 97 முதல் 100 சதுர அடிகள் கொண்ட நிலப்பரப்பு] உத்தேச மதிப்பு மட்டுமே என்று அவர்கள் கூறினர். அந்த நிலத்துக்கு அவர்கள் வரி செலுத்தி தங்கள் சொந்த, கடின உழைப்பின் மூலம் தங்களுக்கென்று சேர்த்த சொத்து என்று கூறினர்.

பின்னர் [ஹெகெசிப்பஸ் தொடர்கிறார்], அவர்களின் உழைப்புக்கு சான்றாக, அவர்கள் தங்கள் கைகளில் உள்ள காழ்ப்புக்காய்ச்சிய அடையாளங்களையும், இடைவிடாத உழைப்பால் ஏற்பட்ட உடல் கடினத்தன்மையையும் அவருக்குக் காட்டினார்கள். அவர்களிடம் கிறிஸ்து மற்றும் அவரது இராச்சியம், அதன் தன்மை, தோற்றம் மற்றும் தோன்றிய நேரம் பற்றி கேட்கப்பட்டது. அது இவ்வுலகத்திற்கோ அல்லது புவிவாழ்வுக்குரியதோ அல்ல; தேவதூதர் மற்றும் பரலோகத்திற்கு உரியது என்று பதிலளித்தார்கள். மேலும் அவர் மகிமையுடன் மீண்டும் வரும்போது, ​​உயிரோடிருப்பவர்களையும் மரித்தோரையும் தீர்ப்புக்குட்படுத்தி ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப வெகுமதி அளிப்பது இவ்வுலகத்தின் முடிவினால் நிகழும். இவ்வாறு கூறியவர்களை அப்போது டொமிஷியன் கண்டிக்க வில்லை. ஆனால் அவர்களை விடுவித்து பாமரர்கள் என்று வெறுத்தொதுக்கி திருச்சபைக்கு எதிரான அவர்களது நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டார். அவர்கள் விடுதலையான பிறகு, அவர்கள் தங்கள் சாட்சியத்திற்காகவும், அவர்கள் இறைவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்ததால், அவர்கள் திருச்சபையின் தலைவர்களாக ஆனார்கள். அதன் மூலம் ஏற்படுத்திக்கொண்ட சமாதானத்தின் காரணமாக ட்ரோஜனின் காலத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். அது ஹெகெசிப்பஸ் காலம் வரை தொடர்ந்தது. டெர்டுல்லியன் டொமிஷியனைப் பற்றி இதே போன்ற அறிக்கையை வெளியிடுகிறார்:

நீரோவைப் போல ஒரு கொடுங்கோலனாய் திகழவேண்டுமென்று, டொமிஷியன் ஒருமுறை அவரைப் போலவே நடக்க முயன்றார். ஆனால் அவர் விரைவில் அந்த எண்ணத்தைக் கைவிடவேண்டி ஏற்பட்டது. அவருக்கு ஓரளவு புத்திசாலித்தனம் இருந்ததால் தான் என்று நான் நினைக்கிறேன் – மேலும் அவர் வெளியேற்றப் பட்டவர்களை திரும்பி வரும்படி அழைத்தார்.

டொமிஷியன் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு, நெர்வா ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். உரோமைய சட்ட சபையினுடைய ஆணையின்படி, டொமிஷியனின் கெளரவம் மற்றும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் நியாயமற்ற முறையில் நாடுகடத்தப்பட்டவர்கள் திரும்பி வந்து அவர்களின் உரிமையை மீட்டெடுத்தனர். அந்த நேரத்திலும், ஒரு தீவுக்கு நாடுகடத்தப்பட்ட பிறகு அப்போஸ்தலரான யோவான், மீண்டும் திரும்பி வந்து எபேசஸில் வசிக்கத் தொடங்கினார் என்று ஆரம்பகால கிறிஸ்தவ வரலாறுகள் கூறுகிறன.

ஆயர்கள்

21. நெர்வா ஓராண்டுக்கு மேல் ஆட்சி செய்த பிறகு, அவருக்குப் பின் ட்ரொஜன் ஆட்சிக்கு வந்தார். அவரது முதல் ஆண்டில், அபிலியஸ் என்பவர், பதின்மூன்று ஆண்டுகள் அலெக்ஸாந்திரியாவில் திருச்சபையை வழிநடத்திய பிறகு, செர்டோ என்பவர் பொறுப்பேற்றார். அன்னியனஸுக்குப் பிறகு மூன்றாவது பொறுப்பாளராக பதவியேற்றவராகக் காணப்பட்டார். இந்தக் காலப்பகுதியில் தான், கிளெமென்ட் உரோமைய திருத்ச்சபையின் தலைவராக இருந்தார், அதே போல் உரோமில் உள்ள ஆயர்களின் பட்டியலில் பவுல் மற்றும் பேதுருவுக்குப் பின் லீனஸ் மூன்றாவதாகவும் அனென்கிளெட்டஸ் அதன் பிறகும் பதவி வகித்தனர்.

22. அந்தியோக்கியில் எவோடியஸ் முதல் ஆயராக இருந்தவேளை, இக்னேஷியஸ் இரண்டாவது ஆயராக நியமனம் பெற்று பிரபலமானார். இதேபோல், எருசலேமில் உள்ள திருச்சபையின் பொறுப்பாளராக நமது இரட்சகரின் சகோதரருக்குப் பிறகு சிமியோன் இரண்டாவது ஸ்தானத்தில் இருந்தார்.

யோவானைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்

23. இந்த காலப்பகுதியில், இயேசு அதிகம் நேசித்த சீடர் – யோவான், இவர் ஒரு அப்போஸ்தலர் மற்றும் சுவிசேஷகர் – அஞ்ஞாதவாசத்தில் இருந்து மீண்டு வந்த அவர் தொடர்ந்து ஆசியாவில் [இளைய] தங்கியிருந்து அங்குள்ள திருச்சபைகளை வழிநடத்தினார். ஐரேனியஸ் மற்றும் அலெக்சாந்திரியாவின் கிளெமென்ட் ஆகியோரால் அவர் இவ்வளவு காலம் எப்படி உயிர் வாழ்ந்தார் என்பது குறித்து இரண்டு நம்பகமான மற்றும் மரபுவழி சாட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: அவரது Against Heresies 2 என்ற புத்தகத்தில் ஐரேனியஸ் எழுதுகிறார்:

ஆண்டவரின் சீடரான யோவானுடன் தொடர்புடைய ஆசியாவில் உள்ள அனைத்து மூப்பர்களும், யோவான் அவர்களுக்கு உண்மையைக் கற்பித்தார் என்று சாட்சியமளிக்கிறார்கள், ஏனென்றால் அவர் ட்ரொஜன் காலம் வரை அவர்களுடன் இருந்தார்.

அவர் புத்தகம் 3 இலும் அதையே கூறுகிறார்:

இப்போது எபேசஸில் உள்ள திருச்சபை பவுலால் நிறுவப்பட்டது, ஆனால் ட்ரொஜனின் காலம் வரை தொடர்ந்து யோவான் அங்கேயே இருந்தார். அது அப்போஸ்தலிக்க வரலாறு பகரும் உண்மையான சாட்சி.

‘இரட்சிக்கப்பட்ட செல்வந்தர்’, என்ற தனது ஆய்வுக் கட்டுரையில், க்ளெமென்ட் இந்த அறிவை மேம்படுத்தும் கதையை இணைத்துள்ளார்:

இந்தக் கதையைக் கேளுங்கள். இது வெறும் கதையல்ல, அப்போஸ்தலன் தனது நினைவாகப் பாதுகாத்த யோவானின் உண்மைக் கதை. கொடுங்கோலனின் மரணத்திற்குப் பிறகு, அவர் பட்மோஸ் தீவிலிருந்து எபேசஸுக்குத் திரும்பினார். தன்னிடம் கேட்கப்பட்டபோது, ​​ஆயர்களை நியமிக்கவும், திருச்சபை விவகாரங்களை சமரசம் செய்யவும் அல்லது இறை சித்தத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை நியமிக்கவும், அண்டையிலுள்ள புறஜாதியினர் வாழும் மாவட்டங்களுக்குச் சென்றார். [ஸ்மிர்னா என்ற] அருகிலுள்ள ஒரு நகரத்திற்கு வந்த அவர், சகோதரர்களிடையே காணப்பட்ட தகராறுகளைத் தீர்த்தார். பின்னர், கட்டுடல் கொண்ட, வாட்டசாட்டமான அழகான தோற்றம் கொண்ட ஒரு உற்சாகம் மிகுந்த இளைஞனைக் கண்டு, அங்கே நியமிக்கப்பட்ட ஆயரிடம் அந்த இளைஞனைப் பாராட்டி: “இந்த இளைஞனை உங்கள் பாதுகாப்பில் விட்டுவிடுகிறேன். கிறிஸ்துவே என் சாட்சி” என்று கூறினார்.

யோவான் எபேசஸுக்குத் திரும்பியபோது, திருச்சபையினர் தன்னிடம் ஒப்படைத்த இளைஞரை வீட்டிற்கு அழைத்து சென்று, வளர்த்து, ஆளாக்கி, கடைசியாக அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இதற்குப் பிறகு, அவர் அவன் மீது கொண்டிருந்த கண்காணிப்பைத் தளர்த்தி, முறையான பாதுகாவலன் என்ற இறைவனின் முத்திரையை அவனுக்கு இட்டார். ஆனால் சில பொறுப்பற்ற ஒழுங்கீனர்களான சில இளைஞர்கள் அவனை ஆடம்பரம், கேளிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடச் செய்து அவனைக் கெடுத்தனர். பின்னர் அவர்கள் இரவில் கொள்ளை அடித்தல் அல்லது வேறு மோசமான குற்றங்களைச் செய்ய வெளியே செல்லும்போது அந்த இளைஞனைத் தங்களுடன் அழைத்துச் சென்றனர். விரைவில் அவன் அவர்களுடன் சேர்ந்து, ஒரு கடிவாளத்தை இழந்த குதிரை போல, அவர் நேரான பாதையில் இருந்து வெளியேறி தீமை என்ற குழியில் விழுந்தான். கடவுளின் இரட்சிப்பை மறந்து அவன் சிறிய குற்றங்களிலிருந்து பெரிய குற்றங்கள் செய்யத் தொடங்கினான். மேலும் இளம் துரோகிகளை இணைத்துக்கொண்டு அதற்குத் தலைமை தாங்கி கொள்ளைக் காரர்களின் குழுவை உருவாக்கினான். வன்முறை மற்றும் இரத்தக்களரி போன்ற கொடுஞ்செயல்களால் அனைவரையும் மிஞ்சினான்.

காலங்கள் உருண்டோடின; யோவான் மற்றுமொரு விஜயத்தை மேற்கொண்டு அங்கே வருகை தந்தார். அவர் தனது பணியை முடித்ததும், இவ்வாறு கூறினார், “ஆயர் அவர்களே, இப்போது என்னுடன் வாருங்கள், கிறிஸ்துவும் நானும் உங்கள் தேவாலயத்தில் சாட்சியாக விட்டுச்சென்ற வைப்புத்தொகையைத் திருப்பித் தாருங்கள்” என்று கேட்டார். ஆயரோ, தான் என்றுமே பெற்றிராத பணத்தைப்பற்றி எவராலோ தான் ஏமாற்றப்படுவதாக நினைத்து முதலில் திகைத்தார். ஆனால் யோவான், “நான் உங்களிடம் கையளித்த அந்த இளைஞனையும் அவனது ஆன்மாவையும் தான் கேட்கிறேன்” என பதிலிறுத்தார்.

“அவன் இறந்துவிட்டான்,” என்று அந்த முதியவரான ஆயர் தழுதழுத்த குரலில் கூறி அழுதார்.

“அவன் எப்படி இறந்தான்?” என்று யோவான் கேட்டார்.

“கடவுளைப் பொறுத்தளவில், அவன் இறந்து விட்டான். ஏனெனில் அவன் கேவலமானவனாகவும், ஒழுக்கக்கேடானவனாகவும் மாறினான். இப்போது அவன் மலைகள் மற்றும் காடுகளில் தன்னைப் போன்ற ஒரு ஆயுதமேந்திய கொள்ளைக்கூட்டத்துடன் தான் வாழ்கிறான், தேவாலயத்தில் அல்ல” என்றார்.

அப்போஸ்தலர் தன் ஆடையைக் கிழித்துக்கொண்டும், தலையில் அடித்துக்கொண்டும், “நம் சகோதரனின் ஆன்மாவை நான் ஒரு நல்ல காவலரை நம்பி விட்டுச் சென்றேன்! இப்போது எனக்கு ஒரு குதிரையையும் வழி காட்ட எவரேனும் ஒருவரை என்னுடன் அனுப்புங்கள்” என்று புலம்பினார். அவர் தான் இருந்த அந்த நிலையிலேயே தேவாலயத்திலிருந்து குதிரையின் மீதேறி புறப்பட்டுச் சென்றார். அவர் காடுகள் சூழ்ந்த இடத்துக்கு வந்ததும், சட்டவிரோத காவலர்களால் பிடிபட்டபோது, அவர், “உங்கள் தலைவனைக் காணவே நான் வந்துள்ளேன்: என்னை அவனிடம் அழைத்துச் செல்லுங்கள்!” என்று உரத்த குரலில் கூறினார். யோவான் அவனை நெருங்கி வந்ததும் அந்த இளம் தலைவன் அவரை அடையாளம் கண்டுகொண்டான். அவர் முகத்தை பார்க்க திராணியில்லாத அந்த இளைஞன், வெட்கம் மிகுதியால் திரும்பி ஓடிவிட்டான். ஆனால், யோவானோ தான் வயதில் மூத்தவர் என்பதையும் மறந்து, தன்னால் இயன்றவரை அவனைப் பின்தொடர்ந்து ஓடி, “மகனே, நிராயுதபாணியாகவும் வயதானவனுமான உன் தந்தையிடமிருந்து ஏன் ஓடி ஒளிகிறாய்? என் மீது இரக்கம் கொள், மகனே பயம் வேண்டாம்! உனக்காக நான் கிறிஸ்துவுக்கு கணக்குக் கொடுப்பேன். தேவைப்பட்டால், உனக்காக மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவி, கர்த்தர் நமக்காக மரணத்தை ஏற்றுக்கொண்டது போல், உனக்காக என் வாழ்வை அர்ப்பணிப்பேன். தயவு செய்து நில்! என்னை நம்பு! கிறிஸ்து தான் என்னை உன்னிடம் அனுப்பினார்” என்று மிகவும் பணிவான குரலில் அவனிடம் கூறினார்.

அந்த இளைஞன் நின்று, தரையை உற்றுப் பார்த்து, தன் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கதறி அழுதான். முதியவரான யோவானை நோக்கி கைகளை அகல் விரித்து மன்னிப்புக் கோரினான். இரண்டாவது முறையாகவும் கண்ணீருடன் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டான். ஆனால் தனது வலது கையை பின்னால் மறைத்துக்கொண்டான். ஆனால் யோவானோ, இரட்சகரிடமிருந்து அந்த இளைஞனுக்கு மன்னிப்பு கிடைத்ததாக அவனிடம் உறுதியளித்தார். அவர் மண்டியிட்டு பிரார்த்தனை செய்து, மனந்திரும்புதலின் அடையாளமாக அவனது வலது கையை முத்தமிட்டார். பின்னர் அவர் அவனைத் திரும்ப அழைத்துச் சென்றார். பிரார்த்தனை, உபவாசம் மற்றும் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் மூலம் – அவர் அந்த இளைஞனை மீண்டும் தேவாலயத்திற்கு மீட்டுக் கொண்டு செல்லும் வரை அவர் ஓயவில்லை: உண்மையான மனந்திரும்புதலுக்கும் மறுபிறப்புக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு மற்றும் கண்டுணரக்கூடிய உயிர்த்தெழுதலின் மகிமை.

க்ளெமெண்டின் இந்தச் சான்றை அதன் வரலாற்று சிறப்பு மற்றும் படிப்பினை போன்றவற்றை எல்லோரும் பெற்று நன்மையடைய வேண்டும் என்ற நோக்கில் நான் மேற்கோள் காட்டுகிறேன்.

யோவானின் எழுத்தாக்கங்கள்

24. இப்போது இந்த அப்போஸ்தலரின் ஈடிணையில்லாத எழுத்தாக்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். வானத்தின் கீழ் உள்ள அனைத்து தேவாலயங்களாலும் வாசிக்கப்பட்ட, வாசிக்கப் படுகின்ற அவருடைய நற்செய்தி, முதலில் அங்கீகரிக்கப் பட வேண்டும். எம் ஆரம்பகால திருத்தந்தையர் மற்ற மூன்று இடங்களுக்குப் பிறகு இதை நான்காவது இடத்திற்கு ஒதுக்கியது என் என்று புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளது. கிறிஸ்துவின் வழிநடத்தலால் அப்போஸ்தலர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக புனிதப்படுத்தி, அனைத்து நல்லொழுக்கத்தையும் வளர்த்துக் கொண்டனர். ஆனால் பேச்சில் எளிமையான போக்கையே கடைபிடித்தார்கள். இரட்சகரின் வல்லமையுடன் தைரியமாக, அவர்கள் தங்கள் எஜமானரின் போதனைகளை சொல்லாட்சி திறன்களுடன் முன்வைக்கும் திறனோ விருப்பமோ அவர்களிடத்தில் காணப்படடவில்லை. ஆனால் அவர்களுக்குள்ளே செயல்படும் கடவுளின் கிருபை மற்றும் வல்லமையை மட்டுமே நம்பியிருந்தனர். இவ்வாறு, அவர்கள் பரலோக இராச்சியத்தைப் பற்றிய செய்தியை உலகம் முழுவதும் அறிவித்தனர் மற்றும் புத்தகங்களை எழுதுவதில் சிறிதாக ஒரு ஆர்வமும் அவர்களிடத்தில் இருந்தது. உதாரணமாக, வாதத்திலும் அறிவுத்திறனிலும் மற்றவர்களை விஞ்சிய பவுல், மிக சுருக்கமான நிருபங்களை மட்டுமே எழுதினார். இன்னும் சொல்ல முடியாத எண்ணற்ற விஷயங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தார். அவர் விண்ணுலகைப் பற்றிய சிந்தனையில் இருந்ததாலும், அவரால் பிரஸ்தாபிக்க முடியாத வார்த்தைகளைக் கேட்டதாலும் அதிலே மூழ்கிப் போயிருந்தார். [2 கொரிந்தியர் 12:2].

நமது இரட்சகரின் மற்ற மாணாக்கர்களுக்கும் இதே போன்ற அனுபவங்கள் இருந்தன — பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், எழுபது சீடர்கள், மேலும் எண்ணற்ற அடியார். இருப்பினும், இறைவனுடன் இருந்த அனைவரிலும் பார்க்க, மத்தேயு மற்றும் யோவான் ஆகிய இருவர் மட்டுமே அவர்களது நினைவுகளை எங்களிடம் விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் தேவைக்காகவே அவ்வாறு செய்தார்கள் என்கிறது வரலாறு. மத்தேயு முதலில் எபிரேயர்களுக்குப் பிரசங்கித்தார், மேலும் அவர் மற்றவர்களிடமும் போகத் திட்டமிட்டபோது, அவர் அங்கிருந்து வெளியேறியவர்களுக்காக தனது சொந்த மொழியில் தனது நற்செய்தியை எழுதினார். அவருடைய எழுத்து அவர் வெளியேறினாலும் அவரது இடைவெளியை நிரப்பியது. மாற்குவும் லூக்காவும் ஏற்கனவே தங்கள் சுவிசேஷங்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் யோவான், பின்வரும் காரணத்திற்காக இறுதியாக எழுதிய வரை பேச்சு வழக்கில் மட்டுமே அவரது நடையைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பொதுவாக புழக்கத்தில் இருந்த மூன்று எழுதப்பட்ட சுவிசேஷங்களும் யோவானின் கைகளுக்கு வந்தன. அவர் அவற்றை வரவேற்றார். மேலும் அவர்களிடமிருந்த துல்லியமான கருத்தை உறுதிப்படுத்தினார். ஆனால் கிறிஸ்து தனது பணியின் தொடக்கத்தில் என்ன செய்தார் என்ற விபரம் மட்டுமே கதையில் காணப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும் இது உண்மைதான். மூன்று சுவிசேஷகர்களும் ஸ்நாபக யோவான் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரே ஒரு வருடத்திற்கு இரட்சகர் என்னென்ன செய்தார் என்பதை பதிவிட்டிருந்தனர். மேலும் அவர்கள் இதை தங்கள் கதைகளின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டி இருந்தனர். நாற்பது நாள் உண்ணாவிரதம், அதைத் தொடர்ந்து வந்த சோதனைக்குப் பிறகு, மத்தேயு, “யோவான் கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட போது, ​​அவர் கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்” [மத்தேயு 4:12]. இதேபோல், மாற்கு கூறுகிறார், “யோவான் கைது செய்யப்பட்ட பிறகு, இயேசு கலிலேயாவுக்கு வந்தார்” [மாற்கு 1:14]. லூக்காவும், இயேசுவின் செயல்களை மறுபரிசீலனை செய்வதற்கு முன், “யோவானை சிறையில் அடைத்ததன் மூலம்” ஏரோது தனது பதிவில் மேலும் ஒரு குற்றத்தைச் சேர்த்ததாகக் கூறுகிறார் [லூக்கா 3:19-20].

எனவே, இந்த காரணத்திற்காக யோவான் தனது சொந்த நற்செய்தியில் இரட்சகரின் செயல்களை முந்தைய சுவிசேஷகர்களால் மௌனமாக இருந்த காலத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது அவருடைய வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது, “இயேசு இதை செய்தார், அது அவருடைய அடையாளங்களில் முதன்மையானது” [2:11], பின்னர், இயேசுவின் செயல்களைப் பற்றிய அவரது அறிக்கையில், ஸ்நாபக யோவான் இன்னும் சாலிம் என்ற ஊருக்கு அருகிலுள்ள ஏனனில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். அவர் மேலும் “யோவான், நிச்சயமாக, இற்றைவரைக்கும் சிறையில் தள்ளப்பட வில்லை” [3:24] என்று தெளிவுபடுத்துகிறார்.

இவ்வாறு, ஸ்நாபக யோவான் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு கிறிஸ்து என்ன செய்தார் என்பதை யோவான் பதிவு செய்கிறார். மற்ற மூவரும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களைப் பற்றி கூறுகிறார்கள். இதைப் புரிந்துகொண்டால், சுவிசேஷங்கள் இனி ஒத்துப்போவது பற்றி சந்தேகம் கொள்வதற்கில்லை. ஏனென்றால் யோவான் கிறிஸ்துவின் ஆரம்பகால செயல்களையும் மற்றவை அவருடைய பிற்காலச் செயல்களையும் உள்ளடக்கியுள்ளது. யோவான் நம் இரட்சகரின் வம்சாவளியை ஒருவராக இல்லாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் இது ஏற்கனவே மத்தேயு மற்றும் லூக்காவால் எழுதப்பட்டது. இதில் அவருடைய தெய்வீகத்தைப் பிரகடனம் செய்தார். ஏனென்றால் தெய்வீக ஆவியானவர் இதை அவர்களுக்கு மேலானதாக இருக்கவேண்டும் என்று கருதியபடியால்.

யோவானின் நற்செய்தியின் தொகுப்பு மற்றும் மாற்குவின் ஆதாரம் போன்ற ஏற்கனவே விளக்கப்பட்டு விட்டன, ஆகவே இது போதுமானதாக இருக்கும் என்றெண்ணுகிறேன். லூக்கா தனது முன்னுரையில், அவரது படைப்பின் தாத்பரியங்களை விளக்குகிறார்: பலர் தனக்கு முழுமையாகத் தெரிந்த விஷயங்களைப் பற்றி சற்றே அவசரமாக ஒரு விளக்கத்தை எழுத முயற்சித்ததால், அல்லது துல்லியமான தகவல்களை வழங்குவதன் மூலம் மற்றவர்களின் சந்தேகத்திற்குரிய பார்வையிலிருந்து எங்களை விடுவிக்க தான் கடமைப்பட்டுள்ளதாக உணர்ந்தார். இது பவுலுடனான தொடர்பு மற்றும் ஏனைய அப்போஸ்தலர்களுடனான உரையாடலின் அடிப்படையில் அமைந்ததாகும்.

யோவானின் எழுத்தாக்கங்களைப் பொறுத்தவரையில் — நற்செய்தியைத் தவிர — அவருடைய முதல் நிருபங்கள் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் மற்ற இரண்டும் சர்ச்சைக்குரியவை. வெளிப்பாட்டைப் பொறுத்தவரை, கருத்துக்கள் சமமாக பிரிக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக அனைத்து பிரசுரங்களிலும் ஆரம்பகால எழுத்தாளர்கள் காலத்துக்கு காலம் மேற்கோள் காட்டப்பட்டே வந்துள்ளார்கள்.

நியதிக்கு உட்பட்ட அல்லது நியதிக்கு புறம்பான படைப்புக்கள்

25. இந்த இடத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட புதிய ஏற்பாட்டு நூல் வடிவங்களை பட்டியலிடுவது பொருத்தமாக இருக்கும். நற்செய்திகளின் புனிதம் மிக்க நான்கு நூல்களில் முதலாவதாக, அப்போஸ்தலர் பணிகள், அடுத்ததாக பவுலின் நிருபங்கள், 1 யோவான் மற்றும் 1 பேதுரு. யோவானின் வெளிப்பாடும் இத்தோடு சேர்க்கப்படலாம். அதற்கான வாதங்களை நான் பொருத்தமான நேரத்தில் முன்வைப்பேன். இவை அங்கீகரிக்கப் பட்ட புத்தகங்கள். யாக்கோபு, யூதா, 2 பேதுரு என்று அழைக்கப்படும் நிருபங்கள் மற்றும் 2 மற்றும் 3 யோவான் என்று அழைக்கப்படும் நிருபங்கள், சுவிசேஷகரின் அல்லது அதே பெயரில் உள்ள வேறு எவரோ ஒருவரின் படைப்புகளாகும்.

போலியான புத்தகங்களில், பவுலின் பணிகள், மேய்ப்பர் [ஹெர்ம்ஸ் பற்றிய], பேதுருவின் வெளிப்பாடு, சர்ச்சைக்குரிய பர்னபாஸின் நிருபம், அப்போஸ்தலர்களின் போதனைகள் [டிடாச்சே பற்றிய] போன்றவை குறிப்பிடக்கூடியவையாகும். அவற்றில் யோவானின் வெளிப்பாடு போன்றவையும் அடங்கும் என்று இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். ஆனால் ஏற்கனவே கூறியது போல, சிலர் அதை ஏற்றுக்கொள்கிறார்கள், சிலர் அதை நிராகரிக்கிறார்கள். மேலும் சிலர் எபிரேயர்களின் நற்செய்தியை பட்டியலில் சேர்த்துள்ளனர். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அந்த எபிரேயர்களுக்கு ஒரு தனியான விருப்பம் உள்ளது. இவை அனைத்தும் சர்ச்சைக்குரிய புத்தகங்களுடன் வகைப்படுத்தப் படும். அவை நியதி அல்லாத இன்னும் பெரும்பாலான திருச்சபை எழுத்தாளர்களுக்கு நன்கு பரிச்சயமானவை. அவை உண்மையான, நிதர்சனமான மற்றும் திருச்சபையின் வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிருபங்களில் இருந்து வேறுபடுத்துவதற்காக நான் தனித்தனியாக பட்டியலிட்டுள்ளேன்.

பேதுரு, தோமஸ், மத்தியாஸ் மற்றும் பிறரின் சுவிசேஷங்கள் அல்லது ஆண்ட்ரூ, யோவான் மற்றும் பிற அப்போஸ்தலர்களின் பணிகள் போன்ற நிறுத்துங்கள், அப்போஸ்தலர்களின் பெயர்களில் மதவெறியர்களால் வெளியிடப்பட்ட பிரசுரங்கள் போன்றன, திருச்சபையில் தோன்றிய எழுத்தாளர்களின் வாரிசுகளில் எவராலும் மேற்கோள் காட்டப்படவில்லை. ஆனால், அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்நடை, வசன நடை போன்றன அப்போஸ்தலிக்க பாணியுடன் ஒப்பிடும்போது, முரணானதாகக் காணப்படுகிறன. மேலும் அவற்றில் காணப்படும் உள்ளடக்கங்களின், கருத்துக்கள் மற்றும் உந்துதல்கள் போன்றன உண்மையான மரபுவழியிலிருந்து மிகவும் மாறுபட்டவையாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆகவே அந்த எழுத்தாக்கங்கள் மதவெறியர்களின் போலி செயற்பாடுகள் என்பது புலனாகிறது. அதன்படி, அவை போலியான புத்தகங்கள் மத்தியில் கூட வைத்து ஏற்றுக்கொள்ளப்படத் தகுதியற்றவையாகக் காணப்படுகின்றன. அவற்றை அபத்தமானவை மற்றும் அற்பத்தனமானவை என்று கருதி நிராகரிக்கப்பட வேண்டும்.

மெனாண்டர் என்ற வேதாந்தி

26. இனி வரலாறு என்ன சொல்கிறதென்று பார்ப்போம். மெனாண்டர் என்பவர், சைமன் மாகஸுக்குப் பிறகு, சாத்தானின் இரண்டாவது கருவியான அவரது முன்னோடியைப் போலவே தீயவராக இருந்தார். அவரும் ஒரு சமாரிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தனது எஜமானரின் மாந்திரீக மற்றும் சூனியம் போன்றவற்றுக்கு சற்றேனும் சளைத்தவரல்லாதவராய் அதே உயரத்திற்கு உயர்ந்து, இன்னும் அற்புதமான கைங்காரியங்களை செய்வதில் கைதேர்ந்தவராக இருந்தார். கண்களால் கண்டுணர முடியாத, மனிதர்களின் இரட்சிப்பிற்காக வானகத்தில் இருந்து அனுப்பப்பட்ட மீட்பர் என்று அவர் தன்னைப்பற்றிக் கூறிக் கொண்டார். மேலும் அவரது மாந்திரீகத் திறன்கள் மற்றும் ஞானஸ்நானம் மூலம் யாரும் மீட்கப்படாவிட்டால், உலகத்தை உருவாக்க உடந்தையாயிருந்த தேவதூதர்கள் கூட வாழ முடியாது என்று கூறினார். அத்தோடு, அத்தகையவர்கள் இந்த நிகழ்கால வாழ்வில் நித்திய அழியாத தன்மையைப் பெறுவார்கள் என்றும், இனி மரணமடைவதில்லை என்றும், ஆனால் என்றென்றும் வயது எய்தாமல் இருக்க விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய கூற்றை, ஐரேனியஸ் தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில் ஜஸ்டினும் சைமன் பற்றிய தனது விளக்கத்தில் பின்வருவனவற்றை இணைத்துள்ளார்:

கபாரட்டியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமாரியன், அதாவது ஒரு மெனாண்டர், சைமனின் சீடரானார். அதே போல் சாத்தான்கள் மூலமும் வழிநடத்தப்பட்டார். அவர் அந்தியோக்கியாவில் தோன்றி பலரை மந்திர வித்தைகள் மற்றும் மாயாஜாலக் கலைகளால் ஏமாற்றினார். அவர் தன்னைப் பின்பற்றுபவர்கள் என்றும் இறக்க மாட்டார்கள் என்று நம்பச் செய்தார். இன்னும் சில பக்தர்கள் இதை நம்புகிறார்கள்.

இது நிச்சயமாக, சாத்தானின் தூண்டுதலின் மூலம் அத்தகைய ஏமாற்றுக்காரர்கள் கிறிஸ்தவர்களின் நற்பெயரை மந்திரத்தின் மூலம் இழிவுபடுத்துவதற்கும், ஆன்மாவின் அழியாத தன்மை மற்றும் மரித்தோர் உயிர்த்தெழுதல் போன்ற திருச்சபையின் போதனைகளை அழிக்கவும் அபகரிக்கவும் செய்தனர். ஆனால் இந்த மனிதர்களை “இரட்சகர்கள்” என்று அழைத்தவர்கள் தங்களது உண்மையான விசுவாசத்தை தொலைத்தனர்.

எபியோனைட்ஸ், செரிந்துஸ் மற்றும் நிக்கொலாஸ்

27. தீய சாத்தான், கடவுளான தேவன் கிறிஸ்துவுக்கு என்று வகுத்திருந்த திட்டத்தில் அசைக்க முடியாத விசுவாசம் கொண்ட மற்றவர்களை அவன் வேறு ஒரு நயவஞ்சக பொறி மூலம் தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்தினான். எபியோனைட்டுகள் என்று பெயரிடப்பட்ட முதல் கிறிஸ்தவர்கள் இவர்களே – ஏனெனில், கிறிஸ்துவைப் பற்றிய அவர்களின் மோசமான மற்றும் கேவலமாக கருத்துக்களே அதற்குக் காரணமாக இருந்தது. அவர்கள் அவரை [கிறிஸ்து] ஒரு எளிய, சாதாரண மனிதராகக் கருதினர். ஒரு சாதாரண மனிதனுக்கும் மரியாளுக்கும் இடையிலான நிகழ்ந்த உடலுறவில் அவர் பிறந்தார் என்றும், அவர் தனது குணவியல்பினால் அடைந்த வளர்ச்சியின் மூலமே நீதிமான என்ற அந்தஸ்த்தைப் பெற்றார் என்றும் வாதிட்ட அவர்கள், நீதி மற்றும் சட்டம் போன்ற ஒவ்வொரு விவரத்தையும் உற்று நோக்கினர். மேலும் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தினால் அதையொட்டிய இறை வாழ்க்கை போன்றவற்றாலும் தாங்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைக்கத் தவறிவிட்டனர்.

இருப்பினும், அதே பெயரைக் கொண்டிருந்த ஏனையோர், மேற்கூறிய அபத்தமான, முட்டாள்தனமான கோட்பாடுகளை ஏற்காமல் தப்பினர். கர்த்தர் ஒரு கன்னிதாய் மற்றும் பரிசுத்த ஆவியால் பிறந்தார் என்பதை அவர்கள் மறுக்கவில்லை. ஆயினும்கூட, கடவுள் என்பவர் இறை வார்த்தையாகவும் ஞானமாகவும் தொன்றுதொட்டு வாழ்ந்தார் என்று ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டார்கள். எனவே, இவர்களும் முன்னையவர்கள் போல் சமமான துரோகிகளே. அவர்களும் சட்டத்தை உண்மையாகக் கடைப்பிடிப்பதில் வைராக்கியமாக இருந்தனர். மேலும் அப்போஸ்தலரது [பவுல்] நிருபங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். அவரை நீதி விரோதி என்றும், சமய கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவர் என்றும் விசுவாசத் துரோகி என்றும் அழைத்தனர். அவர்கள் எபிரேயர்களின் சுவிசேஷம் என்று அழைக்கப் படும் புத்தகத்தை மட்டுமே பயன்படுத்தினார்கள். மற்றைய புத்தகங்களுக்கு சிறிது மரியாதை கொடுத்தார்கள். முந்தையவர்களைப் போலவே, அவர்கள் ஓய்வுநாளையும் யூதர்களின் முழுமையான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அனுசரித்தனர். ஆனால் கர்த்தர் நியமித்த நாட்களில் இரட்சகரின் உயிர்த்தெழுதலின் நினைவாக நாம் கொண்டாடுவதைப் போன்ற சடங்குகளையே அவர்களும் அனுஷ்டித்தனர். இந்த நடைமுறைகள் காரணமாக, அவர்கள் எபியோனைட்டுகள் என்று அழைக்கப்பட்டனர். இது அவர்களின் அடிமட்ட தன்மையைக் குறிக்கிறது. ஏனெனில் இந்த வார்த்தையின் அர்த்தம் எபிரேய மொழியில் “ஏழை” என்பதாகும்.

28. இந்த நேரத்தில் செரிந்துஸ் மற்றுமொரு மதவெறிக் கலாச்சாரத்துக்கு அடிகோலினார என்று வரலாறு கூறுகிறது. நான் முன்பு மேற்கோள் காட்டிய கேயுஸ், என்பவர் முன்னையவரைப் பற்றி அவருக்குக் கூறப்பட்ட உரையாடலில் இவ்வாறு எழுதுகிறார்:

மேலும் செரிந்துஸ், ஒரு புகழ்பூத்த அப்போஸ்தலரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் வெளிப்பாடுகள் என்ற நிருபத்தின் மூலம் தேவதூதர்கள் அவருக்குக் காட்டப்பட்டதாகக் கூறப்படும் புதுமைகளைப் பற்றிய போலியான தரவுகளை இவர் இங்கே வழங்குகிறார். உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கிறிஸ்துவின் இராச்சியம் பூமியில் நிலவும் என்றும், ஜெருசலேமில் வாழும் மனிதகுலம் மீண்டும் இச்சைகளுக்கும், சர்ச்சைகளுக்கும், இன்பத்திற்கும் அடிமையாகிவிடும் என்றும் அவர் கூறுகிறார். அவர் கடவுளின் வேதாகமத்தின் நேர்விரோதி. மேலும் ஏமாற்றும் நோக்கில், திருமண விழாக்கள் ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறுகிறார்.

எனது காலத்தில் அலெக்சாந்திரியாவின் ஆயராக இருந்த டியோனீசியஸ், யோவானின் வெளிப்பாடுகள் 2 என்ற புத்தகத்தில் வாக்குறுதிகள் பற்றிய பண்டைய வரலாறு பற்றி கருத்துரைக்கையில், பின்வரும் வார்த்தைகளில் செரிந்துஸை பற்றிக் குறிப்பிடுகிறார்:

செரிந்துஸ் தனது படைப்புக்கு ஒரு அதிகாரப்பூர்வ அடையாளத்தை சேர்க்க விரும்பியதால், அவரால் பெயரிடப்பட்ட மதங்களுக்கு எதிரான செரிந்திய கொள்கையின் நிறுவனர் ஆனார். அவர் கிறிஸ்துவின் இராச்சியம் பூமியில் தான் இருக்கும் என்று வாதிட்டார். மேலும், தனது சொந்த உடல் தேடும் வேட்கைகளுக்கு தீனியிட்டு, முழுமையான சிற்றின்பத்துடன் வாழ்ந்த அவர், உண்ணுதல், குடித்தல் மற்றும் திருமணம் செய்வதில் முடிவில்லாத போசனப்பிரியம் அல்லது ஆடம்பர கேளிக்கைகள், பலியிடல் மற்றும் பாதிக்கப் பட்டவர்களை தீமூட்டி எரித்தல் போன்ற கனவுலக வாழ்வில் மிதந்திருந்தார்.

இதுவரை டியோனீசியஸ் கூறியதை பார்த்தோம். மதவெறியர்களுக்கு எதிரான அவரது புத்தகம் 1 இல், இரேனியஸ் தனது சில வருந்தத்தக்க பிழைகளை மேற்கோள் காட்டினார். மற்றும் புத்தகம் 3 இல் ஒரு மறக்கமுடியாத சம்பவத்தையும் பதிவு செய்தார். பொலிகார்ப்பின் கூற்றுப்படி, அப்போஸ்தலர் யோவான் ஒரு நாள் குளிப்பதற்காக ஒரு குளியல் அறைக்குள் சென்றார். ஆனால் உள்ளே செரிந்துஸைக் கண்டதும், அவர் அந்த இடத்தை விட்டு குதித்து எழுந்து கதவைத் தேடி ஓடினார். ஏனெனில் செறிந்துசுடன் ஒரே கூரையின் கீழ் இருப்பதை அவரால் தாங்க முடியவில்லை. அவர் தனது தோழர்களையும் அவ்வாறே செய்யும்படி அறிவுறுத்தினார். “இங்கே இருந்து உடனே வெளியேறி விடுவோம், இல்லாவிட்டால் இந்த இடம் இடிந்து விழுந்துவிடும். ஏனெனில் சத்தியத்தின் எதிரி செரிந்துஸ் உள்ளே தான் இருக்கிறார், என்று கூறி அவசர அவசரமாக அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

29. இக்காலப்பகுதியில் தான், நிக்கோலாய்டன்களின் மதங்களுக்கு எதிரான கொள்கை சிறிது காலம் நிலவியது. இது யோவானின் வெளிப்படுத்தல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது [2:15]. ஸ்டீவனின் உதவியாளர்களில் ஒருவரான நிக்கோலஸ், ஏழைகளை பராமரிப்பதற்காக அப்போஸ்தலர்களால் நியமிக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர். [அப்போஸ்தலர் பணிகள் 6:5]. அலெக்சாந்திரியாவின் ஆயர் கிளெமென்ட், அவரது Miscellanies புத்தகம் 6 இல், அவரைப் பற்றிய இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்த மனிதருக்கு ஒரு அழகான இளம் மனைவி இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இரட்சகரின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அப்போஸ்தலர்கள் இவரை பொறாமை கொண்டவன் என்று குற்றம் சாட்டியபோது, ​​அவர் அவளது இளம் மனைவியை அவர்கள் முன் கொண்டுவந்து, அவளை விரும்பும் எவரும் அவளை ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறினார். அவரது இந்த சைகை முறை, “சரீரத்தை கேவலமாக நடத்துதலுக்கு” ஒப்பானது என்பதோடு, இதையிட்டு கொடுக்கப் பட்டுள்ள கட்டளைக்கு விரோதமாகும் என்று அவர்கள் கூறினர். வக்கிரமாக இல்லாமல், எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் எளிமையாகச் செய்தவை மற்றும் சொல்லப்பட்டவை இந்த மதவெறியாளர்களின் பார்வையில் ஒழுக்கமின்மையாகத் தோன்றியது. ஆனால் நிக்கோலஸ் தனது மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் தவறான உறவு வைத்திருக்க வில்லை என்றும், அவருடைய மகள்மார் கன்னிகளாகவே முதுமை எய்தினார்கள் என்றும், அவருடைய மகன் கற்பு நெறியுடன் வாழ்ந்தான் என்றும் அறிந்தேன். அதன்படி, அவர் உயிருக்குயிராய் நேசித்த தனது மனைவியை அப்போஸ்தலர்களின் நடுவில் கொண்டு வந்து நிறுத்தியது அவரது உணர்வுகளையும், ஆர்வத்தையும் விட்டுக்கொடுக்கும் ஒரு செயலாகும். மேலும் தனது விருப்பம் போல இன்பங்களைக் கட்டுப்படுத்துவதுதான் “சரீரத்தை கேவலமாக நடத்துதல்” என்ற விதிக்கு வித்திட்டது. இரட்சகரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த அவர், இச்சை மற்றும் இறைவன் என்ற இரண்டு எஜமானர்களுக்கு சேவை செய்ய விரும்பவில்லை. சரீர இச்சைகளுக்கு எதிராகப் போராடுங்கள்; இன்பத்திற்கு ஒருபோதும் அடிபணியாது, விசுவாசம் மற்றும் அறிவின் மூலம் ஆன்மாவை ஊட்டம் பெறச் செய்தல் வேண்டும் என்று மத்தியாஸ் கற்பித்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

அப்படியென்றால், இந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றி எடுத்துச் சொல்வதற்கு எடுத்த நேரத்தை விட குறைந்த நேரத்தில் முழுமையாக அனைத்தும் விளக்கப்பட்டுவிட்டன.

திருமணமான அப்போஸ்தலர்கள்

30. திருமணத்தை நிராகரித்தவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், திருமணம் செய்த அப்போஸ்தலர்கள் குறித்து பின்வருமாறு பட்டியலிடுகிறார் கிளெமென்ட்:

அப்படியில்லாவிட்டால், அவர்கள் அப்போஸ்தலர்களைக் கூட நிராகரிப்பார்களா? பேதுருவுக்கும் பிலிப்புக்கும் குழந்தைகள் இருந்ததால், பிலிப் தனது மகள்மாருக்கு திருமணம் செய்து வைத்தார். அதே நேரத்தில் பவுல் தனது கடிதங்களில் ஒன்றில் ‘தனது மனைவி’ என்று குறிப்பிடத் தயங்கவில்லை, “அவர் தனது ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தால் அவரது பாரியாரை வெளியில் எங்கும் அழைத்துச் செல்லவில்லை.

இந்தக் கருப்பொருளில் கிளெமெண்டின் Miscellanies 7 என்ற புத்தகத்தில் இருந்து மற்றொரு சுவாரஸ்யமான கதையை இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

புனித பேதுரு தனது மனைவி மரணத்திற்கு இட்டுச் செல்லப்படுவதைக் கண்ணுற்ற போது, ​​அவளுக்கு தேவ அழைப்பு வந்ததாகவும், அவள் தனது சொந்த வீட்டிற்குத் திரும்பி போகப்போவதாகவும் எண்ணி அவர் மகிழ்ச்சியடைந்தார் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஊக்கப்படுத்தும் வகையிலும் ஆறுதல் அளிக்கும் விதத்திலும் அவளைப் பெயர் சொல்லி அழைத்தார், “ஆண்டவரை நினைவு கூருவாயாக! ஆசீர்வதிக்கப்பட்டோரின் திருமணம் மற்றும் அவர்களின் பரிபூரண பாசம் என்பது இதுதான்” என்றார்.

யோவான் மற்றும் பிலிப்பின் இறப்பு

31. பேதுருவும் பவுலும் எப்போது, எப்படி இறந்தார்கள், அவர்களுடைய உடல்கள் எங்கே வைக்கப்பட்டன என்பதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். யோவான் இறந்த நேரம் பற்றியும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் எபேசசின் ஆயரான பொலிகிரேட்ஸ் உரோமைய நகரத்து ஆயர் விக்டருக்கு எழுதிய கடிதத்தில், அவரது மனித எச்சங்கள் இருந்த இடம் காட்டப்பட்டுள்ளது. அதில் அவர் யோவான், அப்போஸ்தலரான பிலிப் மற்றும் பிலிப்பின் மகள்மாரை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

ஆசியாவில் நித்திய உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பெரிய பிரபுக்கள் மற்றும் புள்ளிகள், இறுதி நாளில் இறைவனின் வருகையின் போது மீண்டும் எழுவார்கள். அவர் வானத்திலிருந்து மகிமையுடன் வந்து தனது புனிதர்கள் அனைவரையும் திரும்ப அழைப்பார் – பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான பிலிப், ஹைராபோலிஸில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இருவருடன் அவரது வயதான, கன்னிகளாய் வாழ்ந்து மரித்த மகள்மாரில், மூன்றாவது மகள் பரிசுத்த ஆவியில் வாழ்ந்து எபேசஸில் மீளாத் துயில் கொள்கிறார். ஆயர்கள் அணியும் தொப்பியை அணிந்து, துறவறத்தில் ஈடுபட்டு, வேதசாட்சியாக, ஆசிரியராக இறைவனின் மார்பில் சாய்ந்து நித்திய இளைப்பாறுதலை அனுபவிக்கும் யோவானும் இதிலே அடங்கியுள்ளார்; அவரும் எபேசஸில் உள்ள கல்லறையில் மீளாத்துயில் கொள்கிறார்.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட கேயுஸின் உரையாடலில், அவர் ப்ரோக்லஸ் என்பவரோடு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. பிலிப் மற்றும் அவரது மகள்மாரின் இறப்புகளைப் பற்றி இதேபோல் பேசுகிறார்:

அவருக்குப் பிறகு, தீர்க்கதரிசிகளாக இருந்த பிலிப்பின் நான்கு மகள்மார், ஆசியாவிலுள்ள ஹைராபோலிஸில் தான் வாழ்ந்தனர். அவர்களுடைய கல்லறை இன்னும் அங்கே இருக்கிறது. அதேவேளை, அவர்களுடைய தந்தையின் கல்லறையும் அங்கு தான் இருக்கிறது.

அப்போஸ்தலர் பணிகளில், பிலிப்பின் மகள்மார் யூதேயாவில் உள்ள செசரியாவில் தங்கள் தந்தையுடன் வாழ்ந்ததாகவும், தீர்க்கதரிசன வெகுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் லூக்கா குறிப்பிடுகிறார்.

நாங்கள் புறப்பட்டு செசரியாவை அடைந்தோம்; ஏழு பேரில் ஒருவரான பிலிப்பு என்ற நற்செய்தியாளரின் வீட்டிற்குச் சென்று அவருடன் தங்கினோம். அவருக்கு தீர்க்கதரிசன வரம் பெற்ற திருமணமாகாத நான்கு மகள்மார் இருந்தனர்.

அப்போஸ்தலர்கள் மற்றும் அவர்கள் வாழ்ந்த காலங்களைப் பற்றிய உண்மைகள் தான் இவை! அவற்றையும், அவர்களின் புனித எழுத்துக்கள், பல தேவாலயங்களில் பயன்படுத்தப்பட்டாலும் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் முற்றிலும் கற்பனை வடிவில் உதித்தவை. இப்போது கதையை மீண்டும் தொடர்வோம்.

சிமியோனின் வேதசாட்சியம் மற்றும் ஜெருசலேமின் ஆயர்

32. நீரோ மற்றும் டொமிஷியனுக்குப் பிறகு, பேரரசரின் [ட்ரொஜன்] காலத்தை நான் இப்போது உங்களுக்கு விவரிக்கிறேன். ஆங்காங்கே இடம்பெற்ற கலவரங்களின் விளைவாக சில நகரங்களில் எங்களுக்கு எதிராக சில இடங்களில் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அதன் போக்கில், முன்பு கூறியது போல், ஜெருசலேமின் இரண்டாவது ஆயரான க்ளோபாஸின் மகன் சிமியோன் வேதசாட்சியத்தின் ஊடாக தனது வாழ்க்கையை நிறைவு செய்தார். இது சில மதவெறியர்களைப் பற்றி எழுதிய ஹெகெசிப்பஸின் அதிகாரத்தின் பேரில், அவர்கள் சிமியோனை எப்படிக் குற்றம் சாட்டினார்கள் என்பதையும், கிறிஸ்தவராக இருந்த காரணத்திற்க்காக பல நாட்கள் பலவிதமான சித்திரவதைகளை அனுபவிக்க நேரிட்டது என்பதை – நீதவானையும் அவரது மதிப்பீட்டாளர்களையும் எவ்வாறு வியப்பில் ஆழ்த்தியது என்பதையும் பற்றி விவரிக்கிறார். அவர் நம் ஆண்டவரின் முடிவைப் போன்ற ஒரு முடிவையே அனுபவித்தார். இருப்பினும், வரலாற்றாசிரியர் இதுபற்றி என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது:

இந்த மதவெறியர்களில் சிலர், க்ளோபாஸின் மகனான சிமியோன், தாவீது மற்றும் கிறிஸ்தவ வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டினார்கள். அதனால் அவர் 120 வயதில் வேதசாட்சியாக வாழ்ந்து விடைபெற்றார். அந்த சமயம், ட்ரொஜன் பேரரசராகவும், அட்டிகஸ் தூதரக ஆளுநராகவும் இருந்தனர்.

குற்றவாளிகளைக் கைது செய்யும் வேட்டை முடுக்கிவிடப்பட்டபோது, யூத அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக அவர் மீது குற்றம் சுமத்தியவர்களும் கைது செய்யப்பட்டதாக அதே எழுத்தாளர் கூறுகிறார். முன்பு குறிப்பிட்டது போல, அவருடைய நீடிய ஆயுட்காலம் மற்றும் அவரது மகனான க்ளோபாஸின் மனைவி மரியாவைப் பற்றிய சுவிசேஷங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நோக்குமிடத்து, சிமியோன் கடவுளைக் கண்டார் மற்றும் கடவுள் கூறுவதைக் கேட்டார் என்று எவரேனும் ஒரு நியாயமாக முடிவுக்கு வரலாம்.

ஏற்கனவே கூறப்பட்ட பதிவுகளின் படி, அதே எழுத்தாளர் இரட்சகரின் சகோதரர்களில் ஒருவரான யூதா என்பவரின் சந்ததியினர், டொமிஷியனுக்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் தங்கள் விசுவாசத்தை உறுதிசெய்த பிறகு அதே ஆட்சியின் கீழ் தொடர்ந்து வாழ்ந்ததாகக் கூறுகிறார். அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம்:

ஆகையால், அவர்கள் ஒவ்வொரு தேவ சபையிலும் பிரசன்னமாகி சாட்சிகளாகவும், கர்த்தருடைய குடும்ப உறுப்பினர்களாகவும் வந்து தலைமை தாங்கினர். மேலும் ஒவ்வொரு தேவ சபையிலும் முழு அமைதி நிலவியதால், கர்த்தருடைய மாமாவின் மகன், அதாவது மேலே நான் குறிப்பிட்ட சிமியோனின் மகன், ட்ரொஜனின் ஆட்சி வரை அவர்கள் தப்பிப்பிழைத்தனர். அதேநேரம், மதவெறிப் பிரிவினரால் க்ளோபாஸ் என்பவர் மாகாண ஆளுநரான அட்டிகஸ் முன் இதே குற்றச்சாட்டு காரணமாக முன்னிறுத்தப்பட்டார்.

அதுவரை திருச்சபை ஒரு கன்னிப் பெண்ணாகவும், தூய்மையாகவும், சீர்கேடுகள் இன்றியும் காணப்பட்டது என்றும், அதை அசுத்தப்படுத்த முயன்ற எவரும் தெளிவற்ற இருளில் மூழ்கியிருந்ததாகவும் ஹெகெசிப்பஸ் கூறுகிறார்.

ஆனால் புனித அப்போஸ்தலர்களின் குழாமும், தெய்வீக ஞானத்தை தங்கள் காதுகளால் கேட்டவர்களின் தலைமுறையும் கடந்து சென்றபோது, ​​அப்போஸ்தலர்கள் எல்லோரும் மறைந்துவிட்ட காரணத்தால், இப்போது சத்தியத்தை எதிர்க்க முயன்ற போலி ஆசிரியர்களின் வஞ்சகத்தால் கடவுளற்ற வாழ்வு என்ற போலி வாழ்க்கை பற்றிய பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டது. இதுகூட இவர்களின் போலியான [Gnosis] அறிவாற்றல் ஊடாகவே பிரகடனம் செய்தனர்.

ட்ரொஜன் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்படுவதை நிறுத்தினார்

c. 112

33. பல இடங்களில் எங்களுக்கு எதிரான துன்புறுத்தல் மிகவும் அதிகமாக இருந்தது, மிகவும் புகழ்பெற்ற ஆளுநர்களில் ஒருவரும், இளையவருமான ப்ளைனி, வேதசாட்சிகளின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதைப்பற்றி அவர் பேரரசரிடம் தெரிவித்தார். அதே கடிதத்தில், அவர்கள் தீய அல்லது சட்டவிரோதமான காரியங்கள் எதையும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்: அவர்கள் விடியற்காலையில் எழுந்து கிறிஸ்துவை கடவுளாகப் புகழ்ந்து பாடினர். மேலும் அவர்கள் விபச்சாரம், கொலை மற்றும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடாது, எல்லா வகையிலும் சட்டத்திற்கு இணங்கி வாழ்ந்துவந்தனர். இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, ட்ரோஜன் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்படக் கூடாது என்றும், ஆனால் அவர்கள் அடையாளம் காணப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று ஒரு ஆணையை வெளியிட்டார். இதன் காரணமாக, அடிக்கடி ஏற்படும் துன்புறுத்தலின் அச்சுறுத்தல் ஓரளவு தணிந்ததாக இது அர்த்தப் படுத்துகிறது என்றாலும், எங்களை பழிதீர்க்க விரும்பியோருக்கு அநேக வாய்ப்புகள் இருந்தன. சில நேரங்களில் சாமானியர்கள், சில சமயங்களில் அதிகாரிகள், எங்களுக்கு எதிராக சதித்திட்டங்களை வகுத்தனர். அதனால் வெளிப்படையான விதத்தில் துன்புறுத்தல் இல்லாமல் இருந்தாலும் கூட, சில மாகாணங்களில் அவ்வப்போது பரவலாகத் தாக்குதல்கள் நடந்துகொண்டுதான் இருந்தன. மேலும் விசுவாசிகள் பலர் பல்வேறு வடிவங்களில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களைத் தாங்கிக்கொண்டு வேதசாட்சிகளாக வாழ்ந்தனர். இந்தத் தகவல், முன்னர் மேற்கோள் காட்டப்பட்ட லத்தீன் மொழியிலான Defence of Tertullian என்பதிலிருந்து பெறப்பட்டது, இது பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:

எங்களைத் தேடி வேட்டையாடுவதும் தடைசெய்யப்பட்டது. ஏனெனில், சில கிறிஸ்தவர்களைக் கண்டித்து, அவர்களின் தரத்தை மட்டுப்படுத்திய பின், மாகாணத்தின் ஆளுநரான இளையவர் ப்லினி அப்படிப்பட்டோரின் எண்ணிக்கையைக் குறைத்ததும், எஞ்சியிருந்த எண்ணிக்கையைக் கண்டு பீதியடைந்தார். எதிர்காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், அவர் சக்கரவர்த்தி ட்ரொஜனுக்கு எழுதினார். சிலைகளை வணங்க அவர்கள் விரும்பாததைத் தவிர, அவர்களின் நடத்தையில் எவ்விதமான தீய நோக்கத்தையும் தான் காணவில்லை என்று விளக்கினார். கிறிஸ்தவர்கள் விடியற்காலையில் எழுந்து, கிறிஸ்துவின் புகழைப் பாடி, கடவுளாக அவரை வழிபட்டனர். கொலை, கொள்ளை, விபச்சாரம், மோசடி போன்றவற்றில் ஈடுபடாமல், அவர்களின் போதனைகளில் நிலைத்திருந்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். பதிலுக்கு ட்ரொஜன், கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்படக் கூடாது, ஆனால், கண்டுபிடிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று ஒரு பதிலை அனுப்பினார்.”

ஆயர்களின் வாரிசுக்கிரமம்

34. ட்ரொஜனின் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், கிளெமென்ட் உரோமைய நகரத்து ஆயர்களின் ஊழியத்தை எவரெஸ்டுஸ் வசம் ஒப்படைத்து, ஒன்பது ஆண்டுகள் தெய்வீக வார்த்தையின் போதனையை மட்டுமே மேற்பார்வையிட்ட பிறகு, இவ்வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார்.

35. சிமியோன் ஏற்கனவே கூறப்பட்ட விதத்தில் தன் வாழ்வின் [வேதசாட்சியாக] நிறைவைக் கண்ட அந்தக் காலப்பகுதியில், கிறிஸ்துவை விசுவாசித்து விருத்தசேதனம் செய்தவர்களில் ஒருவரான ஜஸ்டஸ் என்ற ஒரு யூதர், ஜெருசலேமின் ஆயராக சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

அந்தியோக்கியாவின் இக்னேஷியஸ்

36. அந்த காலத்தில் ஆசியாவில் மிகவும் கொண்டாடப்பட்ட பொலிகார்ப் அப்போஸ்தலர்களின் நல்ல தோழர். இறைவனின் சாட்சிகளும் தேவ ஊழியர்களும் சேர்ந்து அவரை சிமிர்னாவின் ஆயராக நியமித்தார்கள். அவரது சமகாலத்தவர்களில் புகழ்பெற்றவர்கள் பாபியாஸ், ஹைராபோலிஸின் ஆயர் இக்னேஷியஸ், இன்னும் அந்தியோக்கியா ஆயராக இருந்த பேதுருவுக்குப் பிறகு, இரண்டாவது பிரபலமான இவர், மிகவும் பெயர் பெற்றவராக விளங்கினார். அவர் [இக்னேஷியஸ்] சிரியாவிலிருந்து உரோமுக்கு அனுப்பப்பட்டார் மற்றும் கிறிஸ்துவின் வேதசாட்சியத்தின் காரணமாக காட்டு விலங்குகளுக்கு உணவாக அளிக்கப்பட்டார் என்கிறது வரலாறு. அவர் ஆசியாக் கண்டத்தின் வழியாக கடுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டார். அவர் தங்கியிருந்த ஒவ்வொரு நகரத்திலும் தனது பேச்சாற்றல் மற்றும் ஊக்குவிப்பு மூலம் கிறிஸ்தவ சமூகத்தை பலப்படுத்தினார். அவர் அவர்களை குறிப்பாக முதலில் தோன்றிய மதவெறிகளுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார். பாதுகாப்பிற்காக எழுத வேண்டும் என்று அவர் நினைத்த அப்போஸ்தலிக்க வரலாற்றை உறுதியாகப் பற்றிக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். இவ்வாறு, அவர் பொலிகார்ப் ஆயராக இருந்த ஸ்மிர்னாவில் தங்கி இருந்தபோது, போதகர் ஒனேசிமஸைக் குறிப்பிட்டு எபேசஸில் உள்ள திருச்சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். மற்றொரு கடிதத்தை மெக்னீசியாவில் உள்ள குறிக்கோளற்று தன்வழியே சென்ற சபை பற்றி குறிப்பிட்டு, அதில் அவர் ஆயர் டமாஸைப் பற்றிக் குறிப்பிடுகிறார்; மற்றொன்று டிரால்ஸில் உள்ள சபைக்கு அனுப்பப்பட்டது. அது பின்னர் பொலிபியஸின் ஆட்சியின் கீழ் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அவர் உரோமில் உள்ள திருச்சபைக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் வேதசாட்சியத்தில் இருந்து எக்காரணம் கொண்டும் தான் விடுவிக்கப்படக் கூடாது என்ற அவரது அதீத நம்பிக்கையை சிதைத்துவிட வேண்டாம் என்று அதில் கோரினார். இந்தக் கடிதங்களில் இருந்து சிறிய பகுதிகளை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:

சிரியாவிலிருந்து உரோம் வரை, நான் இரவும் பகலும் நிலத்திலும் கடலிலும் காட்டு விலங்குகளுடனும் சண்டையிட்டேன். பத்து சிறுத்தைகளுடன் சேர்த்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு – ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் மத்தியில் – இரக்கம் என்பதற்கு அங்கு இடமேயில்லை. அவர்களின் வெட்கக்கேடான செயல்கள் என் துறவறத்தை மோசமாக்கின. ஆனால் இவ்வாறான சூழ்நிலை குறித்து நான் என்னை நியாயப்படுத்திக்கொள்ள எத்தனிக்கவில்லை. எனக்காகவே தயாராக வைக்கப்பட்டிருக்கும் அந்த கொடிய காட்டு மிருகங்கள் என்னால் பயனடையட்டும். அதுவும் உடனடியாக நிறைவேற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அவற்றைத் தொடுவதற்கே பயந்த சிலரைப் போல அல்ல நான். விரைவில் அவை என்னை நாறாகக் கிழித்து உணவாக்கிக்கொள்ள நான் அவைகளைத் தூண்டுவேன். அவை விருப்பமில்லாமல் இருந்தாலும் கூட, நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி அவைகளைக் கட்டாயப்படுத்துவேன். என்னை மன்னியுங்கள், ஏனெனில் எனக்கு எது சிறந்தது என்று எனக்குத் தெரியும்: இப்போது நான் ஒரு சீடனாகத் தொடங்குகிறேன். இயேசு கிறிஸ்துவைப் பெறுவதில் நான் காணாத எதையும் காண்பதில் மிக்க ஆர்வமுடையவனாயிருக்கிறேன். நான் இயேசுக் கிறிஸ்துவை அடைய முடியுமானால், நெருப்பும், சிலுவைகளும், வன விலங்குகளோடு நடத்தும் போராட்டமும், எலும்புகள் நொறுக்கப் படுவதும், கைகால்கள் பிடுங்கப்பட்டு, என் உடல் முழுவதைதும் நார் நாராய்க் கிழிக்கப்படுவதையும், சாத்தானின் சித்திரவதைகள் என்மீது வருவதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.

இதை அவர் ஸ்மிர்னாவிலிருந்து எழுதினார். பின்னர் தனது பயணத்தில், அவர் ட்ரோவாஸிலிருந்து பிலடெல்பியாவில் வரைக்கும் உள்ள கிறிஸ்தவர்களுக்கும், ஸ்மிர்னாவில் உள்ள திருச்சபைக்கும், குறிப்பாக திருச்சபையின் தலைவரான பொலிகார்ப்பிற்கு எழுதினார். பொலிகார்ப் ஒரு அப்போஸ்தலிக்கர் என்பதை அறிந்த அவர், அந்தியோகியாவிலுள்ள மந்தையை ஒரு உண்மையான மேய்ப்பனிடம் கையளிப்பதைப் போலக் கையளித்தார். ஸ்மிர்னாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கிறிஸ்துவைப் பற்றி அறியப்படாத ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டினார்:

உயிர்த்தெழுதலுக்குப் பிறகும் அவர் சரீர வடிவமாகவே இருந்தார் என்பதை நான் அறிவேன், அதை நான் விசுவசிக்கிறேன். அவர் பேதுருவிடமும் அவருடைய தோழர்களிடமும் வந்தபோது அவர்களிடம், “என்னைப் பிடி, என்னைத் தொட்டு, நான் சரீரமற்ற ஆவி அல்ல என்று உணருங்கள்” என்றார். உடனே அவர்கள் அவரைத் தொட்டு விசுவாசித்தார்கள்.

ஐரேனியஸ் தனது வேதசாட்சியத்தைப் பற்றி அறிந்திருந்தார். இதை அவரது கடிதங்களிலிருந்து அவர் மேற்கோள் காட்டினார்:

எங்களில் ஒருவர் வேதசாட்சி என்று அறிவிக்கப்பட்டு, கொடிய மிருகங்களுக்கு உணவாகக் கொடுக்கப்படக் கண்டனம் செய்யப்பட்டபோது கூறியது போல்: “நான் கடவுளின் கோதுமைத் தானியம், நான் சுத்தமான அப்பமாக மிருகங்களின் பற்களால் அரைக்கப்பட்டு அவைகளுக்கு உணவாவேன்.” பொலிகார்ப் பிலிப்பியர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்த விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளார்:

புனிதர்களான இக்னேஷியஸ், ரூஃபஸ், சோசிமுஸ் ஆகியோரிடம் மட்டுமல்ல, உங்கள் மத்தியில் உள்ள மற்றவர்களிடமும், பவுல் அவர்களிடமும் ஏனைய அப்போஸ்தலர்களிடமும் நீங்கள் அறிந்த கீழ்ப்படிதலையும் சகிப்புத்தன்மையையும் கடைபிடிக்குமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இறைவனின் அருகில், தகுதியான இடத்தில் இருப்பவர்கள் அனைவருடைய துன்பத்தையும் பகிர்ந்து கொண்டவர்கள். ஏனென்றால், அவர்கள் இந்த உலகத்தை நேசிக்கவில்லை, நமக்காக மரித்து, நமக்காக கடவுளால் மீண்டும் உயிர்த்தெழுப்பப்பட்ட கர்த்தரையே நேசிக்கிறார்கள். . . நீங்கள் மற்றும் இக்னேஷியஸ் இருவரும் எனக்கு எழுதியிருந்தீர்கள், அதாவது யாரேனும் ஒருவர் சிரியாவுக்குச் செல்வதாக இருந்தால், அவர் உங்கள் கடிதங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று. தனிப்பட்ட முறையில் நானோ அல்லது எங்கள் சார்பாக ஒரு பிரதிநிதியை அனுப்புவதன் மூலம் நான் உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவேன். இக்கடிதத்துடன், இக்னேஷியஸ் எங்களுக்கு அனுப்பிய கடிதங்களையும், என்னிடம் உள்ள மற்றவற்றையும் இணைத்துள்ளேன். அவற்றை படிப்பதன் மூலம் நீங்கள் பெரிதும் பயனடைவீர்கள், ஏனென்றால் அவர்கள் விசுவாசம், பொறுமை மற்றும் அறிவாற்றலை அவற்றின் மூலம் அளித்துள்ளார்கள்.

இக்னேஷியஸ் பற்றிய பொருளடக்கம் இதுவாகும். ஹீரோ அவருக்குப் பிறகு அந்தியோக்கியாவின் ஆயராக நியமிக்கப்பட்டார்.

சுவிசேஷ மறைபரப்பு ஊழியர்கள்

37. வரலாறு கூறுவது போல், அந்தக் காலத்தின் புகழ்பெற்றவர்களில் ஒருவரான குவாட்ராடஸ், பிலிப்பின் மகள்மாரைப் போன்ற ஒரு தீர்க்கதரிசன வெகுமதியைப் பெற்றிருந்தார். அவர்களைத் தவிர இன்னும் பலர் அப்போஸ்தலிக்க வாரிசுகளில் முதல் தரவரிசையில் இருந்த பிரபலமானவர்கள், மேன்மக்கள் மீது ஆர்வமுள்ள சீடர்கள், அவர்கள் அப்போஸ்தலர்களால் அமைக்கப்பட்ட திருச்சபை அஸ்திவாரங்களில் எல்லா இடங்களிலும் நிறைந்து, [அறியப்பட்ட] உலகம் முழுவதும் இரட்சிப்பின் விதையை விதைத்தனர். அவர்களில் பலர், தெய்வீக வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, முதலில் தங்கள் சொத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இரட்சகரின் கட்டளையை நிறைவேற்றினர். பின்னர், அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சுவிசேஷ ஊழியத்தை செய்தனர். விசுவாசத்தின் செய்தியை அறியாதோர் மத்தியில் பிரசங்கிக்கவும், அவர்களுக்கு எழுதப்பட்ட நற்செய்திகளை பகிர்ந்தளிக்கவும் ஆர்வமாக இருந்தனர். அவர்கள் சில அந்நிய தேசத்தில் விசுவாசத்தின் அடித்தளத்தை அமைத்தவுடன், புதிதாகக் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களைக் கவனித்துக் கொள்ள மற்றவர்களை போதகர்களாக நியமித்தனர். பின்னர் மீண்டும் மற்ற நாடுகளுக்கும் அங்கே வசிக்கும் மக்களுக்கும் சேவையாற்றப் புறப்பட்டனர். கடவுளின் கிருபையும் ஒத்துழைப்பும் அவர்களுக்கு உதவியது. ஏனென்றால் அந்தக் குறிப்பிட்ட நாளில் கூட தெய்வீக வல்லமையின் வாயிலாக நிகழ்த்தப்பட்ட பல அற்புதமான புதுமைகள் அவர்கள் மூலம் ஆற்றப்பட்டன. இதனால் முழு கூட்டமும் முதல் முதலாகக் கேள்விப் பட்டவுடனேயே உலகளாவிய படைப்பாளரின் வழிபாட்டை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டது.

உலகெங்கிலும் உள்ள திருச்சபைகளில் முதலில் அப்போஸ்தலர்களுக்குப் பிறகு, போதகர்கள் அல்லது சுவிசேஷகர்களாக சேவையாற்றிய அனைவரின் பெயர்களையும் அவர்கள் பற்றிய விபரங்களையும் வழங்குவது சாத்தியமில்லை. எனவே, அப்போஸ்தலிக்கப் போதனை பற்றிய வரலாறு இன்னும் நம் காலம் வரையில் தழைத்தோங்கி நிற்கும் அவர்களின் எழுத்துக்களில் அவர்களின் பெயரை மட்டுமே நான் பதிவு செய்துள்ளேன்.

கிளெமென்ட் அவர்களின் எழுத்தாக்கங்கள்

38. அத்தகைய எழுத்தாக்கங்களில், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட இக்னேஷியஸின் கடிதங்களும், அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட கிளெமென்ட்டின் நிருபமும் அடங்கும். அவர் கொரிந்தியர்களுக்கு உரோமில் உள்ள திருச்சபையின் பெயரில் எழுதினார். இதில் அவர் எபிரேயருக்கு எழுதிய நிருபத்திலிருந்து பல்வேறு எண்ணங்களை பிரதிபலிக்கிறார் மற்றும் உண்மையில் அதிலிருந்து வாய்மொழியாகக் கூறப்பட்ட மேற்கோள்களை இணைத்துள்ளார் – ஆகவே இது சமீபத்திய தோற்றம் அல்ல என்பதை தெளிவாக நிரூபிக்கிறது – மேலும் இந்த காரணத்திற்காகவும் அப்போஸ்தலரின் மற்றைய நிரூபங்களில் அதைச் சேர்ப்பது அர்த்தமுள்ளதாகத் தோன்றியது. பவுல் எபிரேயர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் எழுதியிருந்தார். சிலர் சுவிசேஷகர் லூக்கா தான் எழுதியிருக்கிறார் என்று கூறுகிறார்கள். மற்றும் சிலர் கிளெமென்ட் அந்த எழுத்தாக்கங்களைத் தானே மொழிபெயர்த்தார் என்றும் கூறுகிறார்கள். பிந்தியவையில் உண்மை இருப்பதாகத் தோன்றுகிறது ஏனென்றால், கிளெமென்ட் அவர்களுடைய எழுத்து நடையும் எபிரேயரின் எழுத்துக்களில் காணப்படும் சொற்றொடர்களில் ஒருவித ஒற்றுமை இருப்பதைக் காட்டுகிறது. அத்தோடு இந்த இரண்டு படைப்புகளில் காணப்படும் சிந்தனையில் அத்தனை பெரிய வித்தியாசமும் காணப்படவில்லை.

இரண்டாவது நிருபமும் கிளெமெண்ட் பற்றியே கூறப்பட்டுள்ளது. ஆனால் இது முதல் கடிதத்தைப்போல நன்கு பிரசித்தமானதொன்றல்ல. மேலும் முற்பிதாக்கள் இவற்றைப் பயன்படுத்தினார்களா என்பது எனக்கு சரியாகத் தெரியாது. சமீபத்தில், பேதுரு மற்றும் ஏபியன் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற உரையாடல்களுடன் கூடிய, நீண்ட விளக்கங்கள் நிறைந்த கட்டுரைகள் கிளெமென்ட் உடையது என்று கூறப்படுகிறது. ஆனால் ஆரம்பகால எழுத்தாளர்களால் அவற்றைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதோடு, அவை அப்போஸ்தலிக்க மரபுவழியின் தூய்மைத் தன்மையைப் போற்றிப் பாதுகாக்கவுமில்லை.

பேபியஸ் அவர்களின் எழுத்தாக்கங்கள்

39. கிளமென்ட், இக்னேஷியஸ் மற்றும் பாலிகார்ப் ஆகியோரின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக்களைப் பற்றி அதிகம் பேசிவிட்டோம். அத்தோடு பேபியஸின் ஐந்து புத்தகங்கள் உள்ளன. கர்த்தரின் கூற்றுகள் அவற்றில் விளக்கப்பட்டுள்ளன. இவை பேபியஸின் ஒருமுறை மட்டுமே எழுதப்பட்ட எழுத்தாக்கங்கள் என்று ஐரேனியஸால் குறிப்பிடப்பட்டுள்ளன:

இவ்விடயங்கள் குறித்து மேலும் கூறப்படுவது என்னெவென்றால், பழங்காலத்து எழுத்தாளரும், யோவானுக்கு செவிமடுத்தவரும், பொலிகார்ப்பின் தோழருமான பேபியஸ், அவர் எழுதிய ஐந்து புத்தகங்களில், நான்காவது புத்தகத்தில் அவர் ஒரு குறிப்பிடத்தக்க சாட்சியமாக விளங்குகிறார்.

மேற்கண்டவாறு இரேனியஸ் கூறுகிறார். ஆனால் பேபியஸ் தானே முன்வந்து அவருடைய முன்னுரையில், அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும், புனித அப்போஸ்தலர்களின் போதனைகளுக்கு செவிமடுத்ததோ, அவர்களை நேரில் பார்த்ததோ கிடையாது என்று கூறியுள்ளார். ஆனால் அவர்களை அறிந்தவர்களிடமிருந்து தான் விசுவாசத்தின் அடிப்படைகளை கற்றுக்கொண்டதாகவே கூறுகிறார்:

மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களோடு, பெரியவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மற்றும் கவனமாக நினைவில் வைத்திருக்கும் அனைத்தையும் சேர்க்க நான் தயங்க மாட்டேன், ஏனெனில் அதன் உண்மைத்தன்மை மீது நான் அதீத நம்பிக்கை கொண்டுள்ளேன். பெரும்பாலானவர்களைப் போலல்லாமல், நான் அதிகம் பேசுபவர்களையிட்டு மகிழ்ச்சி அடைந்ததில்லை. ஆனால் சத்தியத்தைப் போதிப்பவர்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். மற்றவர்களின் கட்டளைகளை ஒப்பிக்கும் நபர்களையல்ல; இறைவன் கொடுத்த கட்டளைகளை மீண்டும் மீண்டும் கூறுபவர்களில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். சான்றோரைப் பின்பற்றுபவர்கள் எவரேனும் வரும்போது, நான் அவர்களின் வார்த்தைகளுக்கு செவிமடுத்துள்ளேன்: அண்ட்ரூ அல்லது பேதுரு சொன்னவைகள், அல்லது பிலிப், தோமஸ், யாக்கோபு, யோவான், மத்தேயு அல்லது கர்த்தருடைய சீடர்களில் வேறு யாரேனும் சொன்னவை, அரிஸ்டின் என்ற கௌரவம் மிக்க மூப்பர் மற்றும் மறைமூப்பரான யோவான், கர்த்தருடைய சீடர்கள் போன்றோர் சொன்னவைகளை நான் இன்னும் செவிமடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும், புத்தகங்களிலிருந்து பெறக்கூடிய தகவல்கள், உயிருள்ள அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் குரலில் வெளிப்படும் வார்த்தையைப் போல எனக்கு உதவும் என்று நான் நினைக்கவில்லை.

யோவானின் பெயரை பேபியாஸ் இரண்டு முறை உள்ளடக்கி இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் பேதுரு, யாக்கோபு, மத்தேயு மற்றும் பிற அப்போஸ்தலர்களுடன் அவரது பெயர் பட்டியலிடப்பட்டது; அப்போஸ்தலிக்கரல்லாத மற்றொரு குழுவில், அரிஸ்டின் என்பவரின் பெயரை முதலாவதாகவும், இரண்டாவதாக யோவானை மீண்டும் குறிப்பிட்டு, அவரை ஒரு மறைமூப்பர் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆசியாவில் இரண்டு ஆண்மக்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தனர். அதுமட்டுமில்லாமல், எபேசஸில் இரண்டு கல்லறைகள் உள்ளன. இரண்டும் யோவானுடையது தான் என்று அழைக்கப்படுகின்றன என்ற கதையின் உண்மையை இது உறுதிப்படுத்துகிறது. இது முக்கியமானது, ஏனென்றால், யாரேனும் ஒருவர் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள யோவான் பற்றி மட்டும் அறிய விரும்பினாலே தவிர, வெளிப்படுத்தலைப் பார்க்கும் எவரும் இரண்டாவது நபரும் யோவான் என்ற பெயரைக் கொண்டவராக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வரக்கூடும். அப்போஸ்தலர்களின் வார்த்தைகளை அவர்களைப் பின்பற்றியவர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாக பேபியாஸ் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அரிஸ்டியன் மற்றும் மறை மூப்பரான யோவான் போன்றோரையும் அவர்களது உரைகளையும் தனிப்பட்ட முறையில் செவிமடுத்ததாகக் கூறுகிறார். அவர் அடிக்கடி அவர்களின் பெயரை மேற்கோள் காட்டுவது மட்டுமன்றி, அவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தனது எழுத்துக்களில் சேர்த்துள்ளார்.

பேபியாஸ் சில அதிசய நிகழ்வுகள் மற்றும் வெளிப்படையாக அவரை அடைந்த பிற விஷயங்களைப் பற்றியும் பேசுகிறார். அப்போஸ்தலரான பிலிப் தனது மகள்மாருடன் ஹைராபோலிஸில் வாழ்ந்தார் என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை அறிந்த பேபியாஸ், பிலிப்பின் மகள் மாரிடமிருந்து ஒரு அதிசயிக்கத்தக்க கதையை எவ்வாறு கேட்டார் என்பதை இப்போது சொல்ல வேண்டும். அவர் தனது சொந்த வாழ்க்கையில் கண்டா அனுபவம் பற்றிப் பிரஸ்தாபிக்கையில், இறந்த ஒரு உடல் மீண்டும் உயிர்த்தெழுந்ததைப் பற்றியும், பர்னபாஸ் என்று மற்றுமொரு பெயரால் அழைக்கப்படும் சம்பந்தப்பட்ட மற்றொரு புதுமை நிகழ்வையும் பற்றிக் கூறுகிறார். ஜஸ்டஸ் நஞ்சை அருந்தினார், ஆனால் இறைவனின் கிருபையால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. எம் மீட்பர் வானகத்துக்கு எழுந்தருளி போனபின்பு, அவரைக் காட்டிக்கொடுத்த துரோகியான யூதாஸுக்குப் பதிலாக, புனித அப்போஸ்தலர்கள் மத்தியாஸுடன் சேர்ந்து சீட்டு குலுக்கி தேர்ந்தெடுத்து, பரிந்துரைத்த ஜஸ்டஸ் என்பவர் தான் இவர். அப்போஸ்தலர் பணிகள் புத்தகம் பின்கண்டவாறு கூறுகிறது [1:23], “எனவே அவர்கள் இருவரை முன்மொழிந்தனர், ஜோசப், ஜஸ்டஸ் என்றும் அழைக்கப்பட்ட பர்னபாஸ் என்பவரை முன்மொழிந்தார். மற்றவர் மத்தியாஸ்.”

சில விசித்திரமான உவமைகள் மற்றும் இரட்சகரின் அறியப்படாத போதனைகள் மற்றும் ஏனைய பழம்பெரும் கதைகள், வாய் வார்த்தையால் அவரை அடைந்த தகவல்கள் மற்றும் பிற கதைகளையும் பேபியாஸ் பகிர்ந்துள்ளார். அவற்றில், இறந்தவர்களின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கிறிஸ்துவின் இராச்சியம் இந்த பூமியில் பொருள் வடிவத்தில் ஸ்தாபிக்கப்படும் என்றும், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்றும் அவர் கூறுகிறார். அப்போஸ்தலிக்க தகவல்கள் மற்றும் மறைமுகக் குறியீட்டு மொழியைப் பயன் படுத்தியதை உணராமல் தவறாகப் புரிந்துகொண்டதன் காரணமாகவே அவர் இந்தக் கருத்துக்களைப் பெற்றார் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவர் மிகக் குறைந்த புத்திசாலித்தனம் கொண்டவர் என்பது அவருடைய புத்தகங்களிலிருந்து நன்கு தெளிவாகிறது. இருப்பினும், அவருக்குப் பிறகு, பல திருச்சபை எழுத்தாளர்கள் அவருடைய ஆரம்ப கால கருத்தை நம்பி, அதே கருத்தைத் தாங்களும் கொண்டிருந்தனர்: உதாரணமாக, ஐரேனியஸ், அவரோடு மற்றும் அதே கருத்துக்களை ஏற்றுக்கொண்ட ஏனையோர் பற்றியும் கூறலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட அரிஸ்டியன் அல்லது மறைமூப்பரான யோவான் அருளிய இறைவனின் கூற்றுகள் பற்றிய பிற விளக்கங்களையும் பேபியாஸ் மேற்கோள் காட்டுகிறார். நற்செய்தியை எழுதிய மாற்கு பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்:

மறைமூப்பர் இப்படி சொல்கிறார்: “மாற்கு பேதுருவின் மொழி பெயர்ப்பாளராகி, மிகவும் துல்லியமாக எழுதினார். அதேநேரம் கர்த்தர் சொன்னதையும் செய்ததையும் அவர் நினைவில் வைத்திருந்தார். ஏனென்றால் அவர் கர்த்தருடைய போதனைகளை நேரடியாகக் கேட்டவராகவோ அல்லது அவரைப் பின்பற்றுபவர்களில் ஒருவராக இருக்கவில்லை. ஆனால் பின்னர், நான் கூறியதுபோல, பேதுருவின் சீடர் சொன்னது போல், கர்த்தருடைய வார்த்தைகளை முறையாக வகைப்படுத்தாமல், சந்தர்ப்பத்தின் தேவைக்கேற்ப பேதுரு அவற்றில் இருந்து காரணிகளை எடுத்து அவற்றை விளக்கி, கற்றுக் கொடுத்தார். சில விஷயங்களை மாற்கு தனது நினைவுக் களஞ்சியத்தில் இருந்து மீட்டெடுத்து எழுதியமைக்காக, அவர் மீது குறை சொல்வதற்கில்லை. ஆனால் அவருக்கு ஒரு முக்கியமான நோக்கம் இருந்தது: அவர் கேள்விப்பட்ட எதையும் விட்டுவிடாத திறமையுடன் அவரது எழுத்துகள் காணப்பட்டன. அதேநேரம், அவர் எழுதியவற்றில் தவறான அறிக்கைகள் எதுவும் காணப்படவில்லை.”

மேற்கண்டவாறுதான் மாற்கு பற்றிய பேபியாஸின் குறிப்பு அமைந்திருந்தது. மத்தேயுவைப் பற்றி அவர் பின்வருமாறு கூறினார்:

மத்தேயு எபிரேய மொழியில் வாசகங்களை [கிறிஸ்துவின் லோகியா – [கிரேக்க மொழியில் வார்த்தைகள்] தொகுத்தார்,” ஒவ்வொருவரும் அவரால் முடிந்தவரை அவற்றை விளக்கினர்.

பேபியாஸ், 1 யோவான் மற்றும் 1 பேதுருவிடமிருந்து பெறப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தினார். அத்தோடு எபிரேயர்களின் நற்செய்தியில் காணப்படும் பலதரப்பட்ட பாவங்களின் காரணமாக இறைவன் முன் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய மற்றொரு கதையை பகிர்ந்துள்ளார். தற்போதைக்கு இது போதும் என்று எண்ணுகிறேன்.

யுசேபியஸ் பற்றிய ஆதாரங்கள்

யுசேபியஸ் ஆதாரத்திற்குப் பின் ஆதாரத்தை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார், எனினும் இப்போது காப்புரிமை பெற்றுள்ளார். மேலும் சில அறிஞர்கள் அவரது சொந்த வரலாற்றின் மிகக் குறைவான மேற்கோள்களை நீண்ட மேற்கோள்களாக இணைத்தமைக்காக அவரைக் குற்றம் சாட்டியுள்ளனர். அவர் ஒரு நவீன வரலாற்றாசிரியராக இருந்திருந்தால், இந்த விமர்சனம் நியாயப் படுத்தப்பட்டிருக்கும்; குறிப்பாக தற்போதைய அத்தியாயமான புத்தகம் 3-ல். ஆனால் அவர் சார்பாக பல விஷயங்களைச் சொல்ல முடியும். பின்னர், யுசேபியஸ் தான் வாழ்ந்த காலத்திற்கு நெருக்கமாக நடந்த நிகழ்வுகளை பதிவு செய்யும் போது, அவர் இதை குறைவாகவே செய்திருக்கிறார். அதேவேளை, 303 க்குப் பிறகு பெரும் துன்புறுத்தல் போன்ற சமகால விடயங்களை அவர் கையாளும் போது, அவர் நேரில் கண்ட சாட்சியாக தனது அறிக்கையை தயார் செய்துள்ளார், ஏனெனில், அவற்றை புனைவதற்கு குறைவான முன் ஆதாரங்களே தேவைப்பட்டன.

எவ்வாறாயினும், யுசேபியஸ் தனது ஆதாரங்களை விரிவாக மேற்கோள் காட்டியது மிகவும் போற்றுதற்குரியது. ஏனெனில் அவற்றில் பல தொலைந்துவிட்டன. மேலும் யுசேபியஸ் அவற்றை தனது வரலாற்றில் இணைக்கவில்லை என்றால், சிறு சிறு பகுதிகள் அவை எம்மத்தியில் இல்லாமற்போயிருக்கக்கூடும். ஏனெனில், இவை ஜோசஃபஸுக்கோ, அல்லது இரண்டு கிளெமென்ட்கள், இக்னேஷியஸ், பொலிகார்ப், ஜஸ்டின், ஐரேனியஸ் அல்லது டெர்டுல்லியன் ஆகியோரின் சில படைப்புகளுக்கோ பொருந்தக்கூடியன அல்ல. ஆனால் பேபியஸ், குவாட்ரடஸ், மெலிட்டோ, ஹெகெசிப்பஸ், ரோடோ, அபோலினாரியஸ் மற்றும் பிற ஆரம்பகால எழுத்தாளர்களின் முக்கியமான சாட்சியங்கள், முக்கியமான ஆணைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவற்றோடு இவையும் தொலைந்துபோயிருக்கும் என்பது உண்மைதான்.

யூதர்களின் “கிறிஸ்துவிற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றத்திற்காக” ஜெருசலேமை அழிப்பதன் மூலம் கடவுள் அவர்களை தண்டிக்கிறார் என்று யுசேபியஸின் தொடர்ச்சியான குறிப்புகள் சமகால வாசகர்களுக்கு சற்றே பின்னடைவான கருத்தானது தோன்றலாம். துரதிர்ஷ்டவசமாக, இந்த கருத்து திருச்சபைக்கும், செப ஆலயத்திற்கும் இடையிலான போராட்டத்தின் ஆரம்பகால கிறிஸ்தவ விவாதத்திற்கு மிகவும் பொதுவானது. மேலும் யுசேபியஸ் அவரது காலத்தில் வாழ்ந்த வேறு சில எழுத்தாளர்களை விட மிகவும் இந்த விஷயத்தில் கட்டுப்பாடுகளை எதிர்நோக்கியவர். இதனிடையே, ஆரம்பகால கிறிஸ்தவ எழுத்தாளர்களில் பலர் யூதத்திற்கு எதிரானவர்களாக இருந்தால், அதேபோல அக்காலத்தில் தோன்றிய யூத எழுத்தாளர்கள் சிலர் கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்கள் என்பதும், சில இடங்களில் யூதர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக துன்புறுத்தலுக்கு வித்திட உதவியதும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விடயமே. இது நிச்சயமாக இரு தரப்பிலும் உள்ள அதிகப்படியான மற்றும் சகிப்பின்மையைப் பாதுகாப்பதற்காக அல்ல.

அப்போஸ்தலர்கள் மற்றும் ஆரம்பகால திருச்சபை முற்பிதாக்கள் போன்றோரின் தலைவிதியைப் பற்றிய தகவல்களை வெளியிடுவது தான் யுசேபியஸின் பிரதான நோக்கமாக இருந்தது. அதைச் செய்வதில் அவருக்கிருந்த ஆர்வத்தை தற்கால படைப்புக்கள் நன்றாகப் பிரதிபலிக்கிறன. மேலும் அவர் தனது தீர்ப்புகள் நிமித்தம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. உதாரணமாக, ஆரம்பகால அப்போஸ்தலிக்க வரலாற்றோடு பேபியஸ் இசைந்து செல்வதை அவர் பாராட்டும் அதேவேளை, பாபியாஸின் கர்த்தருடைய ‘ஆயிரம் கால ஆட்சி’ குறித்த கருத்துக்கள் காரணமாக அவருக்கு ஏற்பட்ட அவதூறை அவர் மறைக்கவில்லை. நியதிகளுக்கு அமைவான புத்தகங்களுக்கு எதிராக வாதிடுவது பற்றிய தனது சந்தேகங்களை அவர் வெளிப் படுத்துகிறார். அதே சமயம் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடியவை என்று கருதுபவர்களுக்கு அவை நியாயமாக இருக்க வேண்டுமென்றும் அவர் வாதிடத் தயங்கவில்லை.

இயேசுவின் ஊழியத்தின் நீண்ட வடிவத்தை யோவான் சுருக்கமான நற்செய்திகளிலிருந்து ஏன் வேறுபடுத்துகிறார் என்பதை விளக்க அவர் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார் — அதாவது, ஸ்நாபக யோவான் சிறையில் தான் கழித்த காலத்தை விட, இயேசுவின் பொது ஊழியத்துக்கே முதலிடம் கொடுத்துள்ளார். அதேசமயம் அதன் பிறகு என்ன நடந்தது என்பதில் சுருக்கவுரை கவனம் செலுத்துகிறது. இது பகுதியளவில் மட்டுமே உண்மை. ஆகவே முழுமையான விளக்கமாக ஏற்றுக் கொள்ள முடியாது. யுஸேபியஸ் தனது விவிலிய விளக்கத்துக்கு அவரே கேடயமாக இருந்து பாதுகாக்கின்ற சூழ்நிலையில், இது அவருக்கு ஏற்பட்ட ஒரு அரிதான பின்னடைவாகும்.

யூசேபியஸ் தனது வரலாற்றின் ஆரம்பத்தில் பயன்படுத்திய சொற்பதங்கள் [உ+ம்: “உரோமைய ஆயர்” அல்லது “அந்தியோக்கியாவின் ஆயர்”, “ஜெருசலேமின் ஆயரகம்,” “அலெக்சாந்திரியாவின் மறைமாவட்டம்”] பெரும்பாலும் காலாவதியானவை மற்றும் யூசேபியஸ் வாழ்ந்த காலத்தில் திருச்சபை படிநிலையின் வளர்ச்சியில் பிந்தைய கட்டங்களை பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, உரோம் நகரத்து கிளெமென்ட் ஒரு அரிதான விதத்தில் ஆயராக நியமிக்கப்பட்டிருந்தார். அதேநேரம், கொரிந்துவில் உள்ள விசுவாசிகளுக்கு உரோமைய பிரிவின் கரிசனைகளைத் தெரிவிக்கும் விடயத்தில் ஒரு மறைமூப்பராகவும் செயலாற்றினார்.

குறிப்பாக, யூசேபியஸின் திருச்சபை வரலாறு பற்றிய பதிவுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் புதிய ஏற்பாட்டு நியதியின் உருவாக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கு மதிப்புமிக்க ஒரு வழிகாட்டியாகக் காணப்படுகிறது. இதன் பக்கங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது போல், ஆரம்பகால எக்குமெனிகல் கவுன்சில் எனப்படும் சகல திருச்சபை வட்டாரங்களையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான சபையால் மேற்கொள்ளப்பட்ட எந்த முடிவுகளாலும் சபை நியதி எட்டப்படவில்லை. மாறாக, ஆரம்பகால கிறிஸ்தவ மண்டலத்தின் பல்வேறு மையங்களில் பல்வேறு புதிய ஏற்பாட்டு எழுத்துக்களின் பயன்பாடு தான் இறுதியில் நியதியை தீர்மானித்தது.

அதன் வளர்ச்சியைப் பற்றி யூசேபியஸ் இன்னும் நிறைய விளக்கமளித்தல் அவசியம்.

உரோமைய வரலாற்றில் கூறப்பட்டதற்கிணங்க, இந்த காலகட்டத்தில் தான் ஸ்பானியாவின் உரோமைய ஆளுநர் கல்பா [68-69] நீரோவை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து ஓதோ [69], விடேலியஸ் [69] மற்றும் வெஸ்பாசியன் [69-79] ஆகியோர் “நான்கு பேரரசர்களின் ஆண்டு” என்ற சொற்பதத்தை உருவாக்கினர். அவர் ஊதா நிறம் கொண்ட ஸ்தானத்துக்குள் அவர் வரும்வரை, யூதப் போரின் உரோமைய தளபதியாக வெஸ்பாசியன் கடமையாற்றினார். மேலும் அவர் தான் ஃபிளேவியன் வம்சத்தின் நிறுவனரும் ஆவார், மேலும் அவர் உரோமைய அரசாங்கத்தில் ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கொண்டு வந்தார். எவருக்கும் இடையூறு ஏற்படுத்தாத நற்குணமும், நல்ல நகைச்சுவை உணர்வையும் கொண்ட வெஸ்பாசியன், அறுபது வயதுடன், வழுக்கைத் தலையை உடையவராக இருந்தார். பல உரோமைய எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் கறாரான, நேர்த்தியுடன், தனது சேவையில் மிகவும் கண்டிப்பானவராகவும் இராணுவத்தால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார். கணிதத்தில் விற்பன்னராக இருந்த அவர், புத்தகங்களை சமநிலைப்படுத்தவும், கட்டணக் கழிப்பறை [உரோமில் வெஸ்பாசியானி என்று இன்று வரை அழைக்கப்படுகிறது] விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தினார். இது போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அதிக வருவாயை ஈட்டவும் முடிந்தது. பொதுப் பணிகளில் அவரது ஈடுபாட்டுக்கு சான்றுபகரும் சின்னங்களான, உரோமில் உள்ள பெரிய ஃபிளேவியன் திறந்தவெளியரங்கம் [கொலோசியம்] கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அவர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துன்புறுத்தலை விரும்பவில்லை. ஏனெனில் நீரோவின் அடக்குமுறை கொள்கையை அவரோ அல்லது அவரது மகனான தீத்துவோ [Titus] மீண்டும் முன்னெடுத்துச் செல்லவில்லை.

யூதப் போரை பொறுப்பாக முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை வெஸ்பாசியன் தீத்துவிடம் விட்டுச் சென்றார். அவர் [79-81], 70 இல் ஜெருசலேமைக் கைப்பற்றினார். அவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமான பேரரசர் ஆனார். தீத்து, இரண்டாம் அக்ரிப்பாவின் சகோதரியான பெர்னிஸ் என்ற யூத இளவரசியுடன் காதல் கொண்டிருந்தார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவளை விட்டு வெளியேறினார். அவரது நிர்வாகத்தின் ஆரம்பத்தில் வெசுவியஸ் என்ற எரிமலை வெடித்து தீப்பிழம்பைக் கக்கியது. ஹெர்குலேனியம் மற்றும் பொம்பேயி ஆகிய நகரங்களை நிர்மூலம் செய்தது. மேலும் அவரது குறுகிய கால ஆட்சி, 81 இல் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காய்ச்சலால் சடுதியாக முடிவுக்கு வந்தது.

தீத்துவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது சகோதரர் டொமிஷியன் [81-96], ஒரு கீழ்த்தரமான, மிலேச்சத்தனம் மிகுந்த சர்வாதிகாரியாக இருந்தான். அவன் தான் இரண்டாவது முறையாக உரோமையர்களை கிறிஸ்தவர்களுக்கு எதிராக துன்புறுத்தலை மேற்கொள்ளத் தூண்டிவிட்டதாகத் தெரிகிறது. இது டொமிஷியனின் உறவினர்களான உரோமைய பிரபுக்கள், கிளெமென்ட்ஸ் மற்றும் டொமிட்டிலா ஆகியோரையும் வெகுவாகப் பாதித்தது – மேலும் இது கிழக்கையும் உள்ளடக்கியிருக்க வேண்டும், ஏனெனில் அப்போஸ்தலரான யோவான் கிழக்குத் திசையில் உள்ள பாட்மோஸுக்கு நாடுகடத்தப்பட்டதைப் பற்றி யூசிபியஸ் கூறுகிறார். கிளெமெண்டின் முதல் கடிதம் [c. 95] இந்த துன்புறுத்தலை நன்கு பிரதிபலிக்கக்கூடும். இறுதியாக, 96 இல் டொமிஷியனின் படுகொலை மற்றும் ஃபிளேவியன் வம்சத்தின் முடிவு போன்றவை இந்த அராஜக நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி இட்டன.

96 முதல் 180 வரையிலான காலப்பகுதி, ஐந்து நல்ல பேரரசர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் ஆட்சி நீடித்தது. அவர்களில் நான்கு பேர், தமது மகன்மாரை அல்ல [ஏனெனில் அவர்களுக்கு மகன்மார் எவரும் இருக்கவில்லை], அவர்கள் தகுதியான துணை ஆளுநர்களைத் தேர்ந்தெடுத்தனர். நெர்வா [96-98] ஒரு புத்திசாலித்தனமான அனுபவம் மிக்க நீதிபதியாக இருந்தவர். அவர் சட்டசபைக்கு பொறுப்பானவராகவும் உரோமை ஆளத் தகுதியுடையவராகவும் இருந்தார். அவர் தனது மகனாகவும் வாரிசாகவும் ட்ரொஜன் என்பவரைத் தத்தெடுத்தார் [98-117], டாசியா மற்றும் மெசொபொடோமியாவில் அவர் அடைந்த வெற்றிகள் உரோமையப் பேரரசின் எல்லைகளை மிகப்பெரிய அளவிற்கு விரிவுபடுத்தியது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான ட்ரொஜனின் மிதவாதக் கொள்கையானது, பித்தினியாவின் ஆளுநரான ப்ளினியுடன் [c. 112] அவர் கொண்டிருந்த கடிதப் பரிமாற்றத்தில் வெளிப்பட்டது. இதில், சரியான முறையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விஷயத்தில் சட்டம் தன் போக்கை கடைபிடிக்க வேண்டியிருந்த போதிலும், கிறிஸ்தவர்களைத் தேடி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பேரரசர் அறிவுறுத்தினார். இருப்பினும், அந்தியோக்கியாவின் ஆயரான இக்னேஷியஸ் உரோமில் வைத்து ட்ரொஜனின் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேதசாட்சியாக உயிர் நீத்தார். [அநேகமாக இது C.110 காலப்பகுதியில் நிறைவேறியதாக அறியப்படுகிறது].