யூசிபியஸ் தேவாலயம் வரலாற்றையும் எழுதினார்(Eusebius, Church History 10)

யூசிபியஸ், தமிழில் தேவாலய வரலாறு, புத்தகம் 10

Eusebius, The Church History in Tamil, book 10. Translated with permission from Paul L. Meier, The Church History: A New Translation with Commentary, 1999. Tamil translation is Public Domain.


பத்தாவது புத்தகம்: கொன்ஸ்டன்டைனும் சமாதானமும்

கொன்ஸ்டன்டைனும் சமாதானமும்

1. சகல படைப்புகளுக்கும் அதிபதியாகவும், சர்வவல்லமையுள்ளவரும் நித்தியருமான நம் தேவனுக்கும், நம் ஆன்மாக்களின் இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவுக்கும் நன்றி. அவர் மூலம் வெளியேயும் உள்ளேயும் தோன்றக்கூடிய பிரச்சனைகளிலிருந்து அமைதியையும் மீட்பையும் நாம் பிரார்த்தனை செய்கிறோம். மேலும் நம்மை அதேபோல் பிரச்சினைகளுமின்றி பாதுகாத்திடவும் வேண்டிக்கொள்வோமாக.

எனது பிரார்த்தனைகளுடன் சேர்த்து நான் இப்போது 10 ஆம் புத்தகத்தை திருச்சபை வரலாற்றுக்குள் இணைத்து, அதை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். எனது மிகவும் மதிப்புக்குரிய பொலினஸ், உங்களை நான் இந்த இடையறாத பணியின் பிம்பமாய் அறிவிப்பதில் மகிழ்வுறுகிறேன். திருச்சபையின் மறுசீரமைப்பைக் கொண்டாடும் வகையில், நம்மைத் தூண்டும் தெய்வீக சக்திக்குக் கீழ்ப்படிந்து ஒரு முழுமையான தெளிவூட்டலை நான் இங்கே வழங்குவது பொருத்தமானதாக இருக்குமென்றெண்ணுகிறேன்:

புதிய வியக்கத்தக்க அற்புதங்களைச் செய்ததால்

கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்.

அவரது பரிசுத்த வலது கரமும், வலது புஜமும்

அவருக்கு மீண்டும் வெற்றியைத் தரும்.

கர்த்தர் தமது மீட்பின் வல்லமையை தேசங்களுக்குக் காட்டினார்.

அவர் புறஜாதியினருக்கு ஊடாகவும் தமது நன்மையைக் காட்டினார் [சங்கீதம் 98:1-2]

அதற்கிணங்க, நான் இப்போது ஒரு புதிய பாடலைப் பாடுகிறேன். ஏனென்றால், நடந்தேறிய அந்த கொடூரமான, பயங்கரமான காட்சிகள் மற்றும் கதைகளுக்குப் பிறகு, எனக்கு முன்பிருந்த பல நீதிமான்களும், கடவுளின் வேதசாட்சிகளும் பார்க்கவும் கேட்கவும் ஆவலாக இருந்ததைக் கண்டு அதைக் கொண்டாடும் பாக்கியம் எனக்கு இப்போது கிடைத்தது. ஆனால் அவர்களால் அதைக் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை. இருப்பினும் அவர்கள் பரலோகத்தில் சிறந்த காரியங்களைச் செய்ய விரைந்தனர். அங்கே மோட்சத்தின் தெய்வீகப் பேரின்பத்தை தொடர்ந்து அனுபவிக்கின்றனர். தற்போதைய சூழ்நிலைகள் எனது தகுதிக்கு அப்பால் மேலானவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அவருக்கு அருளப்பட்ட கருணையின் மகத்துவத்தைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். மேலும் அறிவிக்கும் தீர்க்கதரிசனங்களின் உண்மையை உறுதிப்படுத்தும் வகையில் அவருக்கு எனது உளமார்ந்த மரியாதையையும் கௌரவத்தையும் அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.

அவர் பூமியின்மேல் செய்துள்ள ஆச்சரியம் தரக்கூடிய காரியங்களைப் பாருங்கள்.

பூமியில் எங்கு போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.

வீரர்களின் வில்களை அவர் முறித்து அவர்களின் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.

கேடயங்களை நெருப்பினால் அழிப்பதில் தேவன் வல்லவர்.

இவையனைத்தும் தெளிவாக நிறைவேறியதில் மகிழ்ச்சியடைகிறேன். என் கதையை தொடருகிறேன்.

கடவுளின் எதிரிகளின் இனம் கூண்டோடு அழிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே கூறியது போல், அவர்கள் ஒரு கணத்தில் மறைந்து போயினர். இது மற்றொரு தெய்வீக வாசகத்தை நிறைவேற்றுவதாக அமைகிறது:

லெபனோனின் கேதுருமரங்களைப் போல உயர்ந்து நிற்கும் தீயோரை நான் கண்டேன்.

அவ்வழியே நான் கடந்து போகையில், அதாவது அவனை நான் தேடியபோது நான் அவனைக் காணேன். [சங்கீதம் 37:35-36]

இனிவரும் நாட்களில், மேகமூட்டமற்ற தெளிவான வானத்தில், பரலோக ஒளியின் கதிர்களால் உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவின் திருச்சபைகள் பிரகாசித்தன. அதன் காரணமாக, நமது சமுதாயத்திற்கு வெளியே உள்ளவர்களுடனும் சமமான முறையில் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயங்காதிருப்போமாக.

புத்துயிர் பெற்ற ஆலயங்கள்

2. அனைத்து மக்களும், கொடுங்கோலர்களின் அடக்குமுறையிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு, முன்னாளில் அவர்கள் முகம்கொடுத்த கடும் துயரங்களிலிருந்து மீட்கப்பட்டதும், தெய்வீகத்தின் மகத்தான காவலர் உண்மையான கடவுள் மட்டுமே என்று அவர்கள் பல்வேறு வழிகளில் ஒப்புக்கொண்டனர். ஆனால் குறிப்பாக கிறிஸ்துவின் மீது ஆழ்ந்த விசுவாசம் கொண்டிருந்த எங்களுக்கு இது விவரிக்க முடியாத மகிழ்ச்சியாக இருந்தது. அத்தோடு ஒரு தெய்வீக மகிழ்ச்சி எங்கள் இதயங்களில் துளிர்விட்டது. சிறிது காலத்திற்கு முன்பு, கொடுங்கோலர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் காரணமாக பாழடைந்த இடங்கள் இப்போது நீண்ட மற்றும் கொடிய காயத்தில் இருந்து புத்துயிர் பெற்றதைப்போல் அவற்றின் தோற்றம் அமைந்ததைக்கண்டு மிகவும் மகிழ்ந்தோம். சிதைவுற்ற பேராலயங்கள் மீண்டும் தங்கள் அஸ்திவாரங்களிலிருந்து செப்பனிடப்பட்டு கம்பீரமாய் உயர்ந்து, அவை இடிக்கப்படுவதற்கு முன்பு இருந்ததைவிட மேலான மகத்துவத்தோடு காட்சியளித்தன.

மேலும் பேரரசர்களும் மிக உயர்ந்தவர்களாகவே காணப்பட்டனர். அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, அடுத்தடுத்து பிறப்பித்த ஆணைகள் மூலம் கடவுளின் ஆசீர்வாதங்களை மேலும் உறுதிப்படுத்தினர். ஆயர்கள் பேரரசரிடமிருந்து பல தனிப்பட்ட கடிதங்கள், கௌரவிப்புகள் மற்றும் பணப் பரிசுகளைப் பெற்றனர். இந்த ஆவணங்களை இலத்தீன் மொழியிலிருந்து கிரேக்க மொழியில் மொழிபெயர்த்து இந்த புத்தகத்தில் பொருத்தமான இடத்தில் உள்ளிணைப்பேன். இதனால் அவை நமக்குப் பின் வரும் அனைவருக்கும் பயன்படுவதோடு, அவை எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி பாதுகாக்கப்படும்.

ஆலயங்களில் பரவலாக இடம்பெற்ற திருநாள் வைபவங்கள்

3. அடுத்ததாக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்து ஏங்கிய நாள் உதயமானது: நகரங்களில் அர்ப்பணிப்புத் திருவிழாக்கள் மற்றும் புதிய வழிபாட்டு இல்லங்களின் பிரதிஷ்டைகள், ஆயர்களின் மாநாடுகள், தொலைதூர நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டங்கள், பாமர மக்களிடையே நட்பு, கிறிஸ்துவின் திருச்சரீரம் மீதான விசுவாசத்தில் ஒன்றிணைந்த உறுப்பினர்களின் ஒற்றுமை போன்றவை மனதுக்கு மிகவும் இனிதாக இருந்தது. வரவிருப்பதை மறைமுகமாக கணித்த தீர்க்கதரிசனத்தின்படி எலும்பு எலும்புடனும், மூட்டு மூட்டுடனும் இணையும் என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் பரிசுத்த வாக்கியங்களில் தீர்க்கதரிசனம் கூறப்பட்டது. தெய்வீக ஆவியானவரின் வல்லமை என ஒன்று இருந்தது. அதன் காரணமாக அனைவரின் உதடுகளிலும் துதிப்பாடல் பாடப்பட்டபடியே இருந்தது. அது அனைத்து உறுப்பினர்களையும் ஒரே ஆன்மாவாக ஒன்றிணைத்து, விசுவாசத்திற்கான உற்சாகத்தை வெளிப்படுத்தியது. உண்மையில், எங்கள் தலைவர்கள் இந்தக் குறைவுமில்லாமல் விழாக்களை நடத்தினார்கள். அதே சமயம் நியமிக்கப்பட்ட பாதிரியார்கள் தேவாலயத்தின் புனிதமான, கம்பீரமான சடங்குகளை நடத்துவதில் முன்னின்று பாடுபட்டனர். அவர்கள் சங்கீத ஆகமத்தில் உள்ள துதிகளை இசைத்து, பிரார்த்தனைகளில் ஆழ்ந்தது, தெய்வீக வழிபாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இவை அனைத்தும் இரட்சகரின் கிருபையின் அடையாளங்கள். ஆன் பெண் என்ற பேதமின்றி சகல வயதினரும் சேர்ந்து தங்கள் மகிழ்ச்சியின் ஆசிரியரான தேவனை தங்கள் முழு இதயத்தோடு மகிமைப்படுத்தினர்.

[இங்கே யூசிபியஸ் பொதுவான கிறிஸ்தவ வழிபாட்டு விழாவில் இருந்து டயரில் நடைபெற்ற உள்ள ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நோக்கித் திடீரென தாவுகிறார். பின்வருபவை வரலாறு அல்ல, ஆனால் ஒருவகையில் புகழாரம் சூட்டும் ஒரு விடயம் என்று எடுத்துக்கொள்ளலாம். இது பண்டைய உலகில் பிரபலமாக இருந்த போதிலும், தற்காலங்களில் பயன்படுத்தப்படாத ஒரு இலக்கிய வடிவமாகும். பல வாசகர்கள் அதை மிக நீளமானதாகவோ, கேவலமாகவோ அல்லது நவீன ரசனைகளுக்கு அப்பால் சலிப்பை ஏற்படுத்துவதாகவோ உணரலாம். அவர்கள் பிரிவு 5க்கு செல்லுமாறு வேண்டப்படுகிறார்கள்].

அங்கு வந்திருந்த திருச்சபைப் பிரமுகர்கள் ஒவ்வொருவரும், அவரால் இயன்ற வரையில் பேரவையை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்கள் பங்குக்கு பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.

4. ஓரளவுக்கு தனது ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஒருவர், தான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த சொற்பொழிவுக்கான குறிப்புகளுடன் அங்கே சமூகமளித்திருந்தார். அங்கு வந்திருந்த பல போதகர்கள் ஒரு ஆலயத்தில் குழுமியிருக்கும் சபையினரைப் போல அமைதியாகவும், அடக்கத்துடனும் அவரது உரைக்கு செவிமடுத்தனர். ஒரு தனி ஆயராகவும், கடவுளுக்குப் பிரியமான ஒரு சிறந்த மனிதராகவும் இருந்த அவர், அவருடைய அதீத ஈடுபாட்டால், டயர் பிராந்தியத்தின் ஃபெனிசியாவில் மிக அற்புதமான தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டது. அவர் பின்வரும் தனது சொற்பொழிவில் மேலும் கூறியதாவது;

தேவாலயங்களை மீள நிர்மாணிப்பதில் பெரும் பங்காற்றியவரான புகழுக்குரிய டயர் பிராந்திய ஆயர் பவுலினஸ் அவர்களுக்கு,

கடவுளின் பரிசுத்த திருச்சபையின் என்றும் இளமைப் பெருமிதமான முத்திரைக்கு சொந்தக்காரர்களான, என்றும் மாறாத நற்பண்புகளுக்குப் பெயர் பெற்றவர்களான, அதேநேரம், கடவுளிடமிருந்து கிடைத்த முதிர்ந்த ஞானத்தால் கௌரவிக்கப்பட்டவர்களான, கடவுளின் நண்பர்களான, புனித அங்கியை அணிந்து, மகிமையின் பரலோக கிரீடத்தையும், பரிசுத்த ஆவியின் தெய்வீக செயல்பாட்டையும் பெற்றவர்களும், எல்லாவற்றையும் புரிந்து கொண்ட உங்களுக்கு, பூமியில் தனது புனித ஆலயத்தை நிர்மாணிப்பதற்காகவும், கிறிஸ்துவுக்காகவும், அவருடைய ஒரே பேறான மற்றும் முதற்பேறான இறைவார்த்தைக்காகவும், கிறிஸ்துவின் பரிசுத்த மணமகளான திருச்சபையை மீட்டெடுக்கும் தனித்துவமான வரப்பிரசாதமும் உங்கள் கைகளில் கொடுக்கப் பட்டுள்ளது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் உங்களை ஒரு புதிய பெசாலெல் என்ற ஒரு தலைசிறந்த கைவினைஞரும் தெய்வீக பேழையின் சிற்பியுமான [யாத்திராகமம் 35:30] அல்லது சாலமனுக்கு நிகரான, புதிய மற்றும் சிறந்த ஜெருசலேமின் அரசர் அல்லது புதிய செருபாபேல் [இவர் முதலில் ஒரு பாபிலோனிய யூதராக இருந்தவர் என்று கருதப்பட்டது. அவர் நாடுகடத்தப்பட்ட யூத மக்கள் குழுவின் தலைவராக ஜெருசலேமுக்குத் திரும்பினார், பின்னர் பெர்சியர்களின் கீழ் யூதேயாவின் ஆளுநரானார்] என்று அழைக்கலாமா? ஏனெனில், இந்த செருபாபேல் தேவனுடைய ஆலயத்திற்குப் முன்னைவிட மிகப் பெரிய மகிமையைக் கொண்டுவந்தவர் ஆவார். மேலும், கிறிஸ்துவின் புனித மந்தையின் பாலர்களே, நீங்கள் நல்ல செயல்களுக்கும், தன்னடக்கத்திற்கும், தெய்வபக்திக்கும் என்றும் பெயர் பெற்றவர்களாக இருக்கிறீர்கள்.

நீண்ட காலத்திற்கு முன்பு, கடவுளின் அற்புத அடையாளங்களையும், கர்த்தர் நிகழ்த்திய புதுமைகளையும் எடுத்துரைக்கும் பரிசுத்த வேதாகமத்தின் பகுதிகளை வாசிக்கும்போது, நமக்குக் கற்பிக்கப்பட்ட வார்த்தைகளின் மூலம் நாம் கடவுளுக்குத் துதிப் பாடல்களைப் பாடுவோமாக:

தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.

கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள் [சங்கீதம் 44:1].

ஆனால் இப்போது நாம் நம் கடவுளின் வலது கரம் பற்றிக் கேட்பதற்காக அல்ல, ஆனால் அவர் செய்தவை என்னவென்பது பற்றிக் கற்றுக்கொள்கிறோம். பண்டைய மரபுகள் நம்பகமானவை மற்றும் உண்மையானவை என்பதை நம் கண்கூடாகவே கண்டுள்ளோம். எனவே மகிமையின் இரண்டாவது துதிப் பாடலை அதன் வார்த்தைகளிலேயே பாடுவோமாக:

ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.

ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம்.

தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார் [சங்கீதம் 48:8].

கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட புதிய நகரம் இது இல்லையென்றால், அது எந்த நகரமாக இருக்கமுடியும்? அவருடைய திருச்சபை, சத்தியத்தின் தூண் மற்றும் தளம் இது அல்லாவிடில் வேறு எதுவாக இருக்கமுடியும்? இது பற்றி வேதாகமம் இவ்வாறு கூறுகிறது:

ஓ, தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியப்படத்தக்க காரியங்களைக் கூறுகிறார்கள் [சங்கீதம் 87:3]

இரக்கமுள்ள கடவுள் தம்முடைய ஒரே பேறானவரின் கிருபையால் இந்த நகரத்தில் நம்மை ஒன்றுகூட்டியுள்ளார். ஆகவே ஒவ்வொரு விருந்தினர்களும் அவருடைய புகழை இசைக்கட்டும், இல்லை, இல்லை உரத்த குரலில் பாடட்டும்:

“ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது நான் மிகவும் மகிழ்ந்தேன்” [சங்கீதம் 122:1]

மேலும்,

“கர்த்தாவே, உமது ஆலயத்தையும் அதன் அழகையும் நேசிக்கிறேன்.

மகிமை பொருந்திய உமது கூடாரத்தை மிகவும் நேசிக்கிறேன்” [சங்கீதம் 26:8].

தனித்தனியாக மட்டுமல்ல, நாம் அனைவரும் ஒரே மனதுடன் மகிமையையும் துதியையும் செலுத்துவோமாக;

கர்த்தர் மேன்மையானவர். பரிசுத்தமான நம் தேவனுடைய நகரத்திலே அவர் துதிக்கப்படத்தக்கவருமானவர்” [சங்கீதம் 48:1]

அவர் உண்மையிலேயே உன்னதர், அவருடைய ஆலயம் மிகப் பெரியது, மிக உயர்ந்தது, பரந்து, விரிந்து அழகாகக் காட்சியளிக்கிறது. எண்ணிலடங்கா மகிமையும் வியக்கத்தக்கதுதுமான காரியங்களைச் செய்பவரும், காலங்களிலும் பருவங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துபவரும், அரசர்களை நீக்கி, தகுதியானவர்களை பதவியில் அமர்த்துபவரும், ஏழைகளை நிலத்திலிருந்து எழுப்பி, இளவரசர்களை அரியணையில் இருந்து இறக்கி, பசித்தோருக்கு உணவளித்து, பெருமையுடையோரின் கரங்களை முறிப்பவர் தான் மகிமைக்குரிய நமது கர்த்தர். பழங்கால நடப்புகளை விசுவாசிகளுக்கு மட்டுமல்ல, விசுவாசமற்றவர்களுக்கும் உண்மை என்று நிரூபித்துள்ளார். புதுமைகளை நிகழ்த்துபவர், பிரபஞ்சத்தின் உன்னதரான இறைவன், அவர் உலகத்தைப் படைத்தவர், சர்வத்துக்கும் வல்லவர், கருணையின் வடிவானவர். ஆகவே இத்தனை மாட்சிமைக்கும் உரிய ஒரே கடவுளை நோக்கி புதிய பாடலைப் பாடுவோமாக:

மகத்தான அதிசயங்களைச் செய்பவருக்கு,

அவருடைய இரக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும்,

பேரரசர்களை வீழ்த்தியவர் அவர்,

ஆகவே அவருடைய இரக்கம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

ஏனென்றால், அவர் நம்மை தாழ்ந்த நிலையில் நினைவு கூர்ந்தார்.

மேலும் எங்களை எதிரிகளிடமிருந்து விடுவித்தார்.

உலகத்தை சிருஷ்டித்த பரம தந்தைக்கு இவ்வளவு உரத்த குரலில் துதி பாடுவதை நாம் ஒருபோதும் நிறுத்தக்கூடாது. நாம் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களின் இரண்டாவது ஆதாரமாக, கடவுளைப் பற்றிய அறிவைக் கற்பிப்பவராக, கயவர்களையும், தீயவர்களை அழிப்பவராக, கொடுங்கோலர்களை நிர்மூலம் செய்பவராக, மனிதகுலத்தின் சீர்திருத்தவாதியாக, விரக்தியிலிருந்து மீட்பளிக்க வல்லவராகிய அவர் – நம் இயேசு, அவருடைய பெயரை நம் உதடுகளில் என்றும் போற்றக்கடவோம். ஏனென்றால், பிதாவின் விருப்பப்படி, அவரது ஒரே குமாரனாகிய அவர் மட்டுமே, நம் மீதுள்ள அன்பினால் நாம் கெட்டுப்போனவர்களாக இருந்தபோதிலும், நம்மை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டார். நோயுற்றவர்களைக் குணப்படுத்தும் சிறந்த மருத்துவர் ஒருவர், “கடுமையான நோய்களைக் கண்டபோதும், அசுத்தமான இடங்களைத் தொடும்போதும், பிறருடைய நோய்கள் தனக்குத் துன்பத்தை ஏற்படுத்திவிடுமோ” என்று எண்ணக்கூடும். அதனால் அவர் வெறுமனே நோயுற்ற அதேவேளை கடுமையான நோய் எதுவுமில்லாத நம்மைக் காப்பாற்றக்கூடும். ஆனால், எம் தேவன் அவ்வாறானவர் அல்ல. அவர் நம்மைக் கடுமையான நோய்களில் இருந்தும், பயங்கரமான காயங்கள் மற்றும் திறந்த சீழ்பிடித்த காயங்களால் அவதிப்படுவதிலிருந்தும் மட்டுமல்லாமல், மரித்தோர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றினார். ஏனென்றால் பரலோகத்தில் வேறு யாரும் இவ்வளவு மக்களைக் காப்பாற்றும் பணியை ஏற்று நிறைவேற்ற முடியாது. மனிதகுலத்தின் மீது அவர் கொண்டிருந்த தீவிர அன்பின் காரணமாக, கிறிஸ்து ஒருவரே நம்முடைய துக்கங்களைச் சுமந்து, நாம் வாழ்ந்து கொண்டிருந்தபோதும், கல்லறைகளில் சிதைந்து கொண்டிருக்கும் போதும் நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து நம்மை இரட்சித்தார். அவர் கடந்த காலத்தில் செய்தது போல், தந்தையின் ஆசீர்வாதங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். கிறிஸ்து கடவுளின் அரசர், சர்வ வல்லமை பொருந்திய ஆண்டவர், உயிர் கொடுப்பவர், அறிவொளி தருபவர். முழு மனித இனமும் சாத்தானின் தீய சக்தியால் ஈர்க்கப்பட்டு இருளில் மூழ்கியிருப்பதைக் கண்டபோது, ​​அவர் தோன்றி வெயிலில் உருகும் மெழுகைப் போல பாவச் சங்கிலிகளைத் தகர்த்தெறிந்தார்.

ஆனால் தீமையை விரும்பும் சாத்தான் இந்த மாபெரும் கருணையால் சினமடைந்து, தனது கொடிய சக்திகளை நமக்கு எதிராகத் திருப்பிய போது, தன் மீது வீசப்பட்ட கற்களைக் கடிக்கும் ஒரு பைத்தியக்கார நாயைப் போல, அவன் முதலில் உயிரற்ற ஈட்டிகளால் தன்னைத் துரத்த முயற்சிப்பவர்கள் மீது எறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினான்: அவன் நினைத்தபடியே தேவாலயங்களை நாசம் செய்து, செப இல்லங்களின் சுவர்களின் மீது தாக்குதல் தொடுத்து தனது மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்தினான். கடவுளை நிந்திக்கும் கொடுங்கோலர்களின் அச்சுறுத்தல்கள் வாயிலாகவும், துரோக ஆட்சியாளர்களின் நிந்தனை ஆணைகள் வழியாகவும் அவன் ஒரு பாம்பைப் போல சீறி, அனைத்து வகையான காட்டுமிராண்டித் தனங்களையும், அரக்கத்தனங்களையும் மனித உருவில் நமக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டான். மரணத்தை கக்கி, ஆன்மாக்களுக்குள் ஊடுருவி அவற்றை அழிக்கும் விஷங்களால், மரணத்தைத் தூண்டி அவர்களைக் கிட்டத்தட்ட கொன்று இறந்தவர்களின் சிலைகளுக்கு பலியிட்டான்.

எவ்வாறாயினும், மீண்டும் ஒருமுறை, கடவுளின் படையின் உயர்ந்த கட்டளைத் தளபதி திடீரென்று தோன்றினார். அவருடைய பயிற்சிபெற்ற வீரர்கள் உண்மையான சகிப்புத்தன்மையோடு தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி நிரூபித்ததோடு, அனைத்து விரோதங்களையும் மீண்டும் நினைவுக்கு கொண்டுவரமுடியாதவாறு மறைந்து போகச் செய்தனர். ஆனால் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் வானத்திலும் பூமியிலும் உள்ள அனைவரின் பார்வையிலும், அவர் தனக்கு நெருக்கமானவர்களான அனைவர் மத்தியிலும் அனைத்து மகிமையையும் பெற்றவராக விளங்கினார். பின்னர், அவரிடமிருந்து பெற்ற கௌரவத்தை அறிந்த மிக உயர்ந்த பேரரசர்கள், இறந்த சிலைகளின் முகங்களில் காரி உமிழ்ந்தனர். சாத்தானின் கேவலமான சடங்குகளை மிதித்து, தங்கள் தந்தை மாரிடமிருந்து அவர்கள் பெற்ற பழைய பொய்களைப் பற்றி எண்ணி, எள்ளி நகையாடுவார்கள் – இது இதுவரை எப்போதும் நடந்திராத ஒன்று. ஆனால் அவர்கள் தேவனை ஒரே கடவுளாகவும், அனைவருக்கும் நன்மை செய்பவராகவும், கிறிஸ்துவை கடவுளின் ஏக சுதனாகவும், பிரபஞ்சத்தின் இறையாண்மையுள்ள அரசராகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவரை நினைவுச்சின்னங்களில் “இரட்சகர்” என்று பெயரிட்டு, நகரத்தின் மத்தியில் இருக்கும் ஏகாதிபத்திய இலச்சினை மீது எழுத்துக்களில் பொறித்தனர். அது உலக நகரம் ஒன்று தீயவர்களுக்கு எதிராகப் பெற்ற வெற்றிகளின் அழியாத பதிவாகக் காணப்படுகிறது. எனவே, நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே வரலாற்றில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே கர்த்தர் – அவர் பூமியின் மிக உயர்ந்தவர்களால் – ஒரு சாதாரண மனித அரசராக மட்டும் அல்ல, பிரபஞ்சத்தின் கடவுளின் உண்மையான குமாரனாகவும், தன்னை கடவுளாக வணங்குவதற்கான சகல மகிமைக்கும் பாத்திரமானவராக விளங்குகிறார்.

ஒரு சிறு புதுமை பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். எந்த அரசன் தனது ஆட்சியிலுள்ள மனிதர்கள் அனைவரின் காதுகளும் வாய்களும் குளிரும் வண்ணம் தன் கௌரவத்தை உயர்த்திக்கொள்ளும் அளவுக்கு மகத்துவமான நிலையை அடைந்தான்? எந்த அரசன் உலகம் முழுவதும் பிரகடனப்படுத்தும் அளவுக்கு புத்திசாலித்தனமான சட்டங்களை இயற்றினான்? நாகரிகமற்ற தேசங்களில் நிலவும் கடுமையான பழக்கவழக்கங்களை தனது நாகரிகம் மற்றும் மனிதாபிமானம் மிக்க சட்டங்கள் மூலம் இரத்து செய்தது யார்? பல ஆண்டுகளாக, பலராலும் தாக்குதலுக்கும் கண்டனங்களும் உள்ளானவர் இன்னும் அவரது இளமைப் பருவத்தில் இருக்கிறார் அல்லவா? காலத்தின் தொடக்கத்திற்கு முன்பு, எவரும் கேள்விப்பட்டிராத, சூரிய ஒளி பிரகாசிக்கும் இடங்களிலெல்லாம் இனங்களை உருவாக்கியவர் யார்? எதிரிகளுடனான யுத்தங்களின் போது, வெற்றிபெறவேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதை விட, அவர்களின் ஆன்மாக்கள் வலிமையானதாக இருப்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு விசுவாசம் என்னும் ஆயுதங்களை அவரது வீரர்களுக்கு வழங்கியவர் யார்? எந்த அரசன் மிகவும் சக்திவாய்ந்தவனாக இருந்திருப்பான்? அதாவது அவன் இறந்த பிறகும் தனது படைக்குக் கட்டளையிட்டு; வீழ்ந்த எதிரிகளின் மீது நினைவுச்சின்னங்களை எழுப்பி; ஒவ்வொரு கிரேக்க மற்றும் பிறநாட்டு நகரங்களையும், பிராந்தியங்களையும், அரச மாளிகைகள் மற்றும் இந்த பேராலயம் போன்ற புனித கட்டிடங்கள் போன்ற அனைத்து இடங்களையும் நேர்த்தியான அலங்காரங்கள் மற்றும் பாராட்டு உரைகளால் மகிமை என்ற வெகுமதிகளால் அலங்கரிப்பவனாக இருந்திருக்கிறான்? இந்த விஷயங்கள் அற்புதமானவை மற்றும் ஆச்சரியமானவை. மேலும் அவை நம் இரட்சகர் இறையாண்மை உள்ளவர் என்பதற்குத் தெளிவான சான்றுகளைப் பகிர்வனவாக இருக்கின்றன. இப்போதும்:

“ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது. அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும்.” [சங்கீதம் 33:9 ] கர்த்தருடைய நாமத்தைத் துதி. ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமனைவரும் படைக்கப்பட்டோம்! [சங்கீதம் 148:5]

என்று சங்கீதத்தில் தேவனது மகிமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. எந்தவொரு சக்தியும் கடவுள் அருளிய இறைவார்த்தைக்கு எதிராக இருக்க முடியுமா? அதற்கு ஒரு தனியான ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும். இங்கே ஜீவனுள்ள ஆலயத்தை கடவுள் எவ்வாறு பார்க்கிறார் என்பது மிகவும் முக்கியமானது. ஆகவே, “விசுவாசிகளான நீங்கள் அவருக்குச் சொந்தமான கட்டிடத்தை போன்றவர்கள். அக்கட்டிடத்தில் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அஸ்திவாரக்கல் போன்றவர்கள். கிறிஸ்து ஒருவர்தான் இக்கட்டிடத்தின் மிக முக்கியமான மற்றும் பிரதான மூலைக்கல் ஆவார்” [எபேசியர் 2:20] என்று கூறப்பட்டுள்ளது. இது தான் மிகவும் புனிதமான சரணாலயம். அதன் உட்கருவறைகள் மனித குலத்தின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ள உண்மையான புனிதத் தலமாகும். பிரபஞ்சத்தின் மிகப் பெரிய பிரதான ஆசாரியருக்கு மட்டுமே அணுகக்கூடியது. ஏனெனில் அவர் ஒவ்வொரு விவேகமான ஆன்மாவின் இரகசியங்களையும் ஆராய்கிறவராக இருக்கிறார்.

இந்தப் படையின் தளபதியான பவுலினஸ், இங்கு ஊழியத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற முதல் மற்றும் பெரிய பிரதான பாதிரியார் என்ற ஸ்தானத்தில் இருக்கிறார். அவர் உங்கள் ஆன்மீக மந்தையின் போதகர், கடவுளால் ஸ்தாபிக்கப்பட்ட புதிய ஆரோன் அல்லது மெல்கிசேதேக் போன்றோர்களாகவும் இருக்கலாம். உங்கள் பிரார்த்தனையின் காரணமாக, அவருக்குப் பிறகு இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட ஒரே ஒருவராக இவர் இருக்கலாம். ஆகவே, முதல் மற்றும் மிகப் பெரிய பிரதான ஆசாரியருக்குப் பிறகு, உங்கள் ஆன்மாவின் ஆழத்தை ஆராய அவரை நீங்கள் அனுமதியுங்கள். ஏனெனில் அவரது விரிவான பின்னணி, ஊக்கமுடைய தன்மை, மென்மையான போக்கு மற்றும் ஆழமான மத போதனைகள் அவரை தகுதியுடையவராக ஆக்குகின்றன.

“உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார்” என்று யோவான் 5:19 இல் கூறுகிறார். இதையொட்டி அவர் முதல்வரை ஆசிரியராகப் பார்க்கிறார். மேலும் அவர் எதைச் செய்வதைப் பார்த்தாலும், ஒரு கலைஞரைப் போலவே, அவர் தனது திறனுக்கு ஏற்றவாறு, கூடுமானவரை, மிகப் பொருத்தமான உருவங்களை வடிவமைத்துள்ளார். பின்னர் அவர் பெசலேலை விடத் தாழ்ந்தவர் அல்ல. ஏனெனில், கடவுள் தாமே அவரை ஞானம், புரிதல், வினைத்திறன் மற்றும் அறிவியல் போன்றவற்றால் நிரப்பினார். மோட்சானந்த ஆலயத்தின் அடையாளமாக, வாசஸ்தலத்தின் சிற்பியாக அவரை அங்கீகரித்தார். அவ்வாறே, இந்த மாமனிதனும் கிறிஸ்துவின் உருவத்தை தன் உள்ளத்தில் இருத்தி, அந்த சிறந்த, கண்ணுக்கு புலப்படாத வடிவத்தை ஒத்த, மகத்தான கடவுளுக்காக இந்த அற்புதமான கட்டிடத்தை நிர்மாணித்தார். அவருடைய பெருந்தன்மையையும் உறுதியையும் அல்லது அவரைப் பொருத்தவரை இந்த விஷயத்தில் அவருக்கென்று மிகவும் தாராளமாகப் பங்களிப்பதில் நீங்கள் காட்டிய உற்சாகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இந்த இடத்தை அசுத்தமான குப்பைகளால் மூடி மறைக்க எம் எதிரிகள் முயற்சித்த போதிலும், அவர் அவர்களின் விரோதத்திற்கு அடிபணியாமல் இங்கேயே தங்கி இருக்க விரும்பினார் என்பது கவனிக்கத்தக்கது. அவர் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்த விரும்பி இருந்தால், நகரத்தில் உள்ள ஏராளமான மாற்று தளங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம். மாறாக, அவர் தனது என்றும் மாறாத உற்சாகத்துடன் மக்களைத் தூண்டி அவர்களை ஒருங்கிணைத்தார். ஏனென்றால் எதிரிகளால் சிதைவுற்ற தேவாலயமும் நம்மைப் போலவே துன்புறுத்தலுக்கு உள்ளானதை அவர் உணர்ந்தார் – ஏற்கனவே நாம் குறிப்பிட்டதுபோல, குழந்தைகளை இழந்த தாயைப் போல – சர்வ வல்லமையும் கருணையும் உள்ள இறைவனின் ஆசீர்வாதத்தில் பங்கு கொள்ள வேண்டும். ஆகவே எம் உன்னதரான மேய்ப்பன், காட்டு மிருகங்களையும் ஓநாய்களையும் விரட்டியடித்து, சிங்கங்களின் பற்களை தகர்த்து, மந்தையின் பாதுகாப்பை உறுதிசெய்து, எதிரியை அவமானப்படுத்தி, அவனது குற்றங்களைக் கண்டனம் செய்தமை மிகவும் பொருத்தமானது.

கடவுளை வெறுப்பவர்கள் இப்போது இல்லை, தங்களையும், தங்கள் நண்பர்களையும், தங்கள் குடும்பத்தினரையும் அழித்து, நீதிவழியாகத் தண்டனையைப்பெற்று, நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய புனிதமான கணிப்புகளை உண்மை என்று நிரூபித்ததை பின்வரும் தெய்வீக வார்த்தை கூறுகிறது:

“எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும், நேர்மையான வழியில் நடப்போரைக் கொல்வதற்கும் பொல்லாதோர் வாளை உருவுகின்றனர்; அவர்களுக்கெதிராக வில்லை நாணில் செருகிறார்கள்” [சங்கீதம் 37:14]

மீண்டும் கூறுவதைப் பார்ப்போம்: “அவர்களின் நினைவாற்றல் செயலிழந்துவிட்டது” மற்றும் “அவர்களின் பெயரை நீர் சதாகாலத்துக்கும் அழித்துவிட்டீர்” [சங்கீதம் 9:6, 5, LXX]. உண்மையில், அவர்கள் பிரச்சினைகளில் அகப்பட்டு இருந்தபோது:

“அவர்களைக் காப்பவர் எவருமில்லை.

கர்த்தரை நோக்கி முறையிட்டனர்,

அவர் பதிலளிக்கவில்லை” [சங்கீதம் 18:41]

மேலும் மற்றொரு சங்கீதத்தில்…

“அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.

ஆனால் நாங்கள் வென்றோம்!

நாங்கள் வெற்றிபெற்றவர்களானோம்” [சங்கீதம் 20:8]

மேலும்,

“கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள்.

எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்” [சங்கீதம் 73:20]

என்ற வார்த்தைகள் அனைவருக்கும் முன்பாக உண்மை என்று காட்டப்பட்டுள்ளன.

இராட்சதர்களைப் போல கடவுளுக்கு எதிராகப் போராடி, தங்கள் வாழ்க்கையை பரிதாபகரமான முடிவுக்குக் கொண்டு வந்தனர். மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட திருச்சபை நாம் பார்த்தபடி சகித்துக் கொண்டே வந்திருக்கிறது. அதைப்பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசனம் பின்வருமாறு கூறுகிறது:

“வறண்ட பாலைவனம் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறும். வனாந்திரம் மகிழ்ச்சி மிகுதியால் பூவைப்போல செழிக்கும்.”

“பலவீனமான கைகளை மீண்டும் பலப்படுத்துங்கள். பலவீனமான முழங்கால்களை பலப்படுத்துங்கள். அஞ்சி குழம்பிய அந்த ஜனங்களிடம் கூறுங்கள், “பலமாக இருங்கள் அஞ்சவேண்டாம்!” விசுவாசத்தோடு இருங்கள், உங்கள் தேவன் வருவார். உங்கள் பகைவர்களைத் தண்டிப்பார். அவர் வருவார். வந்து உங்களுக்கு விருதினைத் தருவார். கர்த்தர் உங்களை என்றும் காப்பாற்றுவார். வனாந்தரத்தில் நீரூற்று கிளம்பிப் பாயும்போது இது நிகழும். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் பாயும். இப்பொழுது ஜனங்கள் கானல் தண்ணீரைப் பார்க்கின்றனர். இது தண்ணீரைப்போல தோன்றும். ஆனால் அந்த நேரத்தில் அங்கே உண்மையான தண்ணீர் குளங்களும் இருக்கும். வறண்ட நிலத்தில் கிணறுகள் இருக்கும். தண்ணீரானது பூமியிலிருந்து பாயும்” [ஏசாயா 35:1-7].

இது இப்போது நாங்கள் கேள்விப்பட்ட செய்தியாக இல்லாமல் நீண்ட காலத்திற்கு முன்பே முன்னறிவிக்கப்பட்ட உண்மையாகவே வந்துள்ளது. இந்த பாலைவனத்தின் வாயில்களை, இந்த பாதுகாப்பற்ற விதவை போன்ற வறண்ட நிலத்தை அவர்கள் கோடரிகளால் வெட்டி, அதை அரிவாள்கள் மற்றும் சுத்தியலால் தகர்த்து, அதன் இருப்பை துவம்சம் செய்து, கடவுளின் சரணாலயத்திற்கு தீ வைத்து, அவரது வசிப்பிட நிலத்தை அசுத்தப்படுத்தினர். அவ்வழியே சென்ற அனைவரும் அதன் வேலிகளை உடைத்து அதன் பழங்களைப் பறித்தனர்; காட்டுப்பன்றிகள் அதை அழித்தன, காட்டு மிருகங்கள் அதை கபளீகரம் செய்தன. ஆனால் இப்போது, கிறிஸ்துவின் அற்புத சக்தியால், அவர் விரும்பியபடி, அது தூய அல்லிப்பூ போல் அந்த பூமி மாற்றமடைந்தது.

அக்கறையுள்ள ஒரு தந்தை அவரது மகனை ஒழுக்கநெறியுடன் வளர்ப்பதுபோல், அந்த இடம் அழகுபடுத்தப்பட்டது. “ஏனென்றால் கர்த்தர் தான் நேசிக்கிற ஜனங்களைச் செம்மைப் படுத்துகிறார். ஆம் தேவன் ஒரு தந்தையைப் போன்று தாம் நேசிக்கும் மகனைத் தண்டிக்கிறார்” [நீதிமொழிகள் 3:12].

சரியான முறையில் திருத்தப்பட்டு, பாலைவனமாக இருந்த அந்த நிலப்பகுதி இப்போது மீண்டும் மகிழ்ச்சியை நோக்கி அழைக்கப் படுகிறது. அது இப்போது அல்லியைப் போல மலர்ந்து, அனைத்து மனிதகுலத்தின் மீதும் தன் நறுமணத்தை வீசுகிறது. ஏனென்றால் ஞானஸ்நானத்தின் மூலம் தெய்வீக மறுபிறப்பின் நீரோடையாக பாலைவனத்திலிருந்து தண்ணீர் உண்மையில் ஊற்றெடுத்து வெளிப்பட்டது. இந்த அற்புதமான கட்டமைப்பிற்கு சாட்சிபகரும் விதமாக, பலவீனமான கைகள் பலப்படுத்தப்படுகின்றன, பலவீனமான முழங்கால்கள் கடவுளை அறியும் பாதையில் அணிவகுத்து நிற்கின்றன. கொடுங்கோலர்களின் அச்சுறுத்தல்கள் சில ஆன்மாக்களை மழுங்கடித்திருக்கலாம், எனினும் இரட்சியத்தின் வார்த்தை இவர்களைக் கைவிடாது, தெய்வீக ஊக்கத்துடன் அவர்களைக் குணப்படுத்துகிறது: “தைரியமாக இருங்கள், மனதால் உற்சாகமாகவும் பயமின்றியும் இருங்கள்.”

பாலைவனமாக இருந்த அந்நிலப்பகுதி, கசப்பான கைப்பற்றுதலுக்குப் பிறகு எப்படி ஆசீர்வதிக்கப்பட்ட பூமியாக மாறியது என்று முன்னறிவித்த வார்த்தைகளை எங்கள் புதிய மற்றும் சிறந்த செருபாபேல் புரிந்துகொண்டார். அவர் அந்தப் பிரதேசத்தை இறந்த உடலாக எண்ணிக் கடந்து செல்லவில்லை. ஆனால், உங்கள் அனைவரின் சம்மதத்துடன் அவர் தந்தையிடம் பரிந்துரைத்தார். இறந்தவர்களை உயிர்த்தெழுப்பும் ஒரே மாட்சிமையுடையவரை தனது துணையாகக் கொண்டு, அவர் அந்த நிலப்பகுதியைச் சுத்தம் செய்து செப்பனிட்ட பிறகு அதை மீண்டெழச் செய்தார். அதனுடைய பழைய தோற்றத்தை மாற்றி, புதிய தோற்றத்தை அளித்து, அதற்கு தெய்வீக வழிமுறைகளைப் பின்பற்றும்படி செய்தார்: “புதிய வீட்டின் மகிமை முந்தையதை விட அதிகமாக இருக்கும்” [ஆகாய் 2:9].

அதன்படி, அது சூழ்ந்திருந்த பகுதி மிகப் பெரியதாக இருந்தது. அவர் அதைச்சுற்றி பாதுகாப்புக்காக ஒரு மதில் சுவரை எழுப்பினார். பின்னர், அவர் உதய சூரியனின் கதிர்கள் விழும் வகையில் அகலமான மற்றும் உயரமான ஒரு முகமண்டபத்தை அமைத்தார். அந்த புனிதமான வளாகத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கும் உட்புறம் நன்றாகத் தெரியும்படி அதன் அமைப்பை மாற்றியமைத்திருந்தார். அத்தோடு, விசுவாசத்திற்கு அப்பாற்பட்டவர்களையும் கவரக்கூடிய வகையில் அவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். அவர்கள் வெறும் இடிபாடுகளாக மட்டுமே இருந்தவற்றின் அற்புதமான மாற்றம் பலரை ஆச்சரியம் அடையும்படி செய்தது. நுழைவாயில்கள் வழியாக உள்ளே செல்பவர்கள், உள்ளே உள்ள புனித ஸ்தலங்களுக்குள் அசுத்தமான மற்றும் கழுவப்படாத பாதங்களுடன் உடனடியாக செல்வது தடைசெய்யப் பட்டிருந்தது: அவர் நுழைவாயில்களுக்கும் தேவாலயத்திற்கும் இடையில் மிகவும் பரந்த இடத்தை நான்கு தூண்களால் அதன் சுற்றளவை அலங்கரித்து, நெடுவரிசைகளில் நாற்சதுர தூண்களையும் நிர்மாணித்திருந்தார். இவற்றுக்கு இடையே அணிச்சட்டக வேலைப்பாடு கொண்ட மரத் திரைகளும், நடுவில் சூரிய ஒளிக்கு திறந்திருக்கும் பகுதி காணப்படுகிறது. பேராலயத்துக்குள் நேரடியாக நுழைபவர்கள் தங்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக புதிய நீர் பாயும் நீரூற்றுகளை நிறுவியிருந்தார். உள்ளே வருபவர்களுக்கு இதுவே முதலில் கண்களில் படும் இடமாகும். இது இந்தக் கட்டிடத்தின் சிறப்பை அதிகரிப்பது மட்டுமன்றி, தேவைப் படுபவர்களுக்கு முதல் அறிவுறுத்தலாகவும் அமைகிறது.

பேராலயத்திற்கு உள்ளே செல்லும் முகவாயிலில், அவர் மூன்று வாயில்களை ஒரு பக்கத்தில் வைத்தார். மையமானது வெளிப்புற வாயில்களைவிட உட்புற வாயில் மிகவும் உயரமாகவும் அகலமாகவும் இருந்தது. அவர் அதை வெண்கலம் மற்றும் இரும்பினால் ஆன கலவைகளால் மூடி, இருபுறமும் இரண்டு மெய்க்காப்பாளர்களுடன் அமர்ந்திருக்கும் ஒரு அரசியின் தோற்றத்தை அந்த முகவாயிலுக்குக் கொடுத்தார். கட்டிடத்தின் இருபுறமும் உள்ள செவ்வக வடிவமான தூண்களுக்கிடையே இதேபோன்ற நுழைவாயில்களைக் காணலாம், மேலும் அழகான மர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட சாளரங்கள் அதிகமான சூரிய வெளிச்சத்தைக் கொடுத்தன.

இந்த பெருமை மிக்க பேராலயத்தை அவர் அதிக விலையுயர்ந்த பொருட்களால் உறுதியாக இருக்கும்படி நிர்மாணித்தார். இங்கே நான் கட்டிடத்தின் பரிமாணங்களைப் பற்றி விபரிக்கவோ, அல்லது அதன் வியக்கத்தக்க அழகைப் பற்றியோ அல்லது விவரிக்க முடியாத பரந்த தன்மை, அற்புதமான வேலைப்பாடு, விண்ணைத் தொடும் அதன் உயரம் அல்லது விலையுயர்ந்த லெபனான் தேசத்து உறுதியான தேவதாரு மரங்களாலான கூரை போன்றவற்றையே பற்றி விரிவாக்கம் கொடுக்க முயற்சிக்கவில்லை. ஏனெனில் அவைகளை பற்றியும் கூட பரிசுத்த வார்த்தை நமக்கு பின்வருமாறு சொல்கிறது: “லெபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை. கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார்” [சங்கீதம் 104:16].

இப்போது நான் அதன் வடிவமைப்பின் முழுமை மற்றும் ஒவ்வொரு பகுதியின் அசாதாரண அழகு பற்றியும் விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை.ஏனெனில் கண்ணால் கண்ட சான்றுகள் வார்த்தைகளை விட அதிகமாக உரத்துப் பேசுகின்றன. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், பீடாதிபதிகளை கௌரவிக்க சுற்றிலும் இருக்கைகளையும் கம்பீரமான சிம்மாசனங்களையும் அமைத்தார் அவர் பலிபீடத்தை மையத்தில் ஸ்தாபித்து, சபையோரை இந்தப் பகுதிக்கு உள்ளே வராத படிக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மரவேலைப்பாடுகளால் ஆன சட்டங்களை வேலிபோல் அமைத்தார்.

பேராலயத்தில் தரைப்பகுதி கூட அவரது கவனத்தில் இருந்து தப்பவில்லை. வித விதமான பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்ட தரை பிரகாசமாக ஜொலித்தது. கட்டிடத்திற்கு வெளியே, பேராலயத்தின் பக்கவாட்டுகளின் இருபுறமும் பிரமாண்டமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு அறைகளையும் பிரதான கட்டிடத்தோடு இணைத்து, பேராலயத்திற்குள் வரும் சூரிய ஒளியானது பக்கவாட்டு அறைகளிலும் விழும்படி செய்தார். சமாதானத்தால் நிரம்பப் பெற்ற எங்கள் சொலமன், தண்ணீரால் மற்றும் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட வேண்டியவர்களுக்காக இவற்றை உருவாக்கினார். இதனால் முன்னர் மேற்கோள் காட்டப்பட்ட தீர்க்கதரிசனம் இனி வெறும் வார்த்தை மட்டும் அல்ல, அது நிதர்சனம். ஏனெனில் இந்த தேவ இல்லத்தின் மகிமை முன்பிருந்ததைவிட உண்மையில் பெரியது.

இரட்சகரின் பாடுகளில் இருந்து [திருச்சபை] பயன் பெறுவது பொருத்தமாக இருந்தது. ஏனென்றால் அதனுடைய தேவனான இறைவன் திருச்சபை சார்பாக மரித்து, அவரது அற்புதமான உடலை, அவருடைய மாமிசத்தை ஊழலில் இருந்து அழியாத நிலைக்கு இட்டுச் சென்றார். இவைகளைவிடப் பெரிய விடயங்களில் அவருடைய வாக்குத்தத்தத்தைப் பெற்று, அவருடைய சபையின் மாபெரும் அருளாளரும் இரட்சகருமான இயேசுக் கிறிஸ்துவோடு, தேவனுடைய இராச்சியத்தில் தேவதூதர்கள் புடைசூழ, உயிர்த்தெழுதலின் போது அழியாத உடலோடு புதிய பிறப்பைப் பெற உறுதிபூண்டுள்ளது.

நீண்ட காலமாக விதவைபோன்ற தோற்றத்தோடும், கைம்பெண் போலவும் இருந்த அந்தத் தேவாலய பூமி, இன்று கடவுள் அருளால் அழகிய அல்லி மலர்கள் பூத்துக்குலுங்கும் ஒரு அற்புதமான தடாகமாக, ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் வழிநடத்தப்பட்டவளாய், மீண்டும் ஒரு முறை அலங்கரிக்கப்பட்டு, வாசனை மிகு அழகிய மலர் மாலையுடன் நடனமாடும் மணமகளாய் வலம்வரும் அழகிய நங்கை என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. ஆகவே அதுகுறித்து, சகலத்துக்கும் வல்ல அரசராகிய தேவனைப் புகழ்ந்துரைத்து ஏசாயா பின்வருமாறு தனது துதியை செலுத்துகிறார்:

“கர்த்தர் என்னை மிக மிக மகிழ்ச்சியுடையவராகச் செய்கிறார்.

என் தேவனுக்குள் என் ஆத்துமா மகிழ்ச்சியடைகிறது.

கர்த்தர் இரட்சிப்பாகிய ஆடையை என் மேல் அணிவிக்கிறார்.

அந்த ஆடைகள் திருமணத்தில் ஒருவன் அணிகிற மென்மையான ஆடையைப்போன்றது.

கர்த்தர் என்மீது நீதியின் சால்வையை அணிவிக்கிறார்.

அச்சால்வை மணமகளும், மணமகனும் திருமணத்தில் அணியும் அழகிய ஆடையைப்போன்றது.

தாவரங்கள் வளர பூமி காரணமாக இருந்தது.

ஜனங்கள் தோட்டத்தில் விதைகளைத் தூவினார்கள்.

தோட்டம் அந்த விதைகளை வளர வைத்தது. அதே வழியில் கர்த்தர் நீதியை வளரச் செய்வார். அனைத்து நாடுகளிலும் கர்த்தர் துதியை வளரச் செய்வார்.” [ஏசாயா 61:10-11].

இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த அழகிய நங்கை நடனமாடுகிறாள். மணமகனாகிய இயேசு கிறிஸ்து தாமே அவளுக்கு எப்படிப் பதிலளிக்கிறார்? கர்த்தர் சொல்வதைக் கேளுங்கள்:

நீ அவமானத்துக்கோ அல்லது நிந்தைக்கு ஆளாகிவிட்டாய் என அஞ்ச வேண்டாம்.

உனது விதவைக்கோலத்தினால் ஏற்பட்ட அவமானத்தையும் நிந்தையையும் நீ மறந்துவிடுவாய்.

கர்த்தர் உன்னை அழைத்தார், கைவிடப்பட்ட மற்றும் வெறுக்கப்பட்ட மனைவியாக அல்ல, என உன் கடவுள் கூறுகிறார்.

சிறிது காலம் நான் உன்னைக் கைவிட்டேன், ஆனாலும் மிகுந்த இரக்கத்தால் நான் உன்னைத் தேற்றினேன்.

உன்மீது கொஞ்சம் கோபம் கொண்டு, என் முகத்தை உன்னிடமிருந்து மறைத்தேன், ஆனால் என் இரக்கம் என்றென்றும் இருக்கும், என்கிறார் உன்னை விடுவித்த ஆண்டவர்.

விழித்தெழு, விழித்தெழு!

நீ பெற்ற எல்லா குழந்தைகள் மத்தியிலும், உன்னை ஆறுதல்படுத்தவோ அல்லது உனக்கு கைகொடுக்கவோ எவரும் இல்லை.

இதோ பார், நான் உன் நடுங்கும் கையிலிருந்து கிண்ணத்தையும், என் கோபத்தின் கிண்ணத்தையும் எடுத்துவிட்டேன், நீ அதில் இனிமேல் குடிக்க மாட்டாய்.

அநீதி இழைத்தவர்களின் கைகளில் நான் உன்னை ஒப்படைப்பேன்.

விழித்தெழு, விழித்தெழு, உன் வலிமையையும் மகிமையையும் அணிந்துகொள்; உன் மேல் படிந்திருக்கும் தூசியை தட்டி, கழுத்திலிருக்கும் பட்டையை அவிழ்த்து விட்டு, உன் கண்களை உயர்த்தி, உன் குழந்தைகள் ஒன்றாகக் கூடி இருப்பதைப் பார்.

என் ஜீவ வார்த்தைகளின்படி, நீங்கள் அவர்கள் அனைவரையும் மணமகள் ஆபரணத்தைப் போல அணிந்துகொள்வீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏனென்றால், உங்கள் பாழடைந்த இடிபாடுகள் உங்கள் குடிமக்களுக்கு மிகவும் குறுகியதாக இருக்கும், உங்களை விழுங்குபவர்கள் உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.

நீங்கள் இழந்த மகன்மார் உங்களிடம் வந்து, “இந்த இடம் எனக்கு மிகவும் குறுகியதாக இருக்கிறபடியால், எனக்கு வாழ இடம் கொடுங்கள்” என்று கூறுவார்கள். அப்போது, “குழந்தை இல்லாத விதவை, எனக்காக இவர்களைக் கொடுத்தது யார்? அப்படியானால் இவர்களை வளர்த்தது யார்?” என்று உங்கள் மனதுக்குள்ளேயே நீங்கள் சொல்லிக்கொள்வீர்கள்”

ஏசாயா இவை யாவற்றையும் தனது தீர்க்கதரிசனத்தின் மூலம் கூறியிருந்தார். எனினும், என்றோ ஒரு நாள் அவர்களின் இந்த உண்மைகள் குறித்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நமக்கு அவசியமாக இருக்கிறது. மற்றும் மணமகன் – அதாவது இறைவார்த்தை – தனது மணமகள் – பரிசுத்த திருச்சபையுடன் இவ்வாறு பேசும் இந்த திருமண உதவியாளர் தனது கைகளை உயர்த்தி மன்றாடி, கடவுளின் விருப்பத்தாலும், இயேசு கிறிஸ்துவின் சக்தியாலும், மரித்தோரிலிருந்து அவள் விழித்தெழுந்தது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. ஏனெனில், அவள் பாழாய்ப்போய் மரித்தவளாகக் காணப்பட்டாள். ஆனால் அவர் அவளை உயிர்ப்பித்து, புனித திருச்சபைகளின் கட்டளைகளின்படி அவளை மீட்டெடுத்தார்.

குறிப்பாக வெளிப்புற அழகில் மற்றும் வெளிப்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்துபவர்களுக்கு இது [இந்தப் பேராலயம்], ஒரு வலிமையான, அற்புதமான அதிசயமான ஒரு பொக்கிஷம். ஆனால் உபயோகிக்கப்பட்ட பொருட்களை பார்க்கும் போது, தொன்ம வேலைப்பாடுகள் அல்லது அப்பழுக்கற்ற வடிவங்கள் மிகவும் அற்புதமானவை; அதாவது, அவை எம் மனங்களில் புத்துணர்ச்சியைக் கொண்டுவருகின்றன. இந்த கட்டிடம் கடவுளின் சுதன் தனது சொந்த உருவம் மற்றும் தெய்வீக சாயலின் வடிவமாக உருவாக்கப்பட்டது: அழியாத இயல்பு கொண்டதும், உலக வாழ்வுடன் கலக்காது, ஆன்மீக சாராம்சம் மற்றும் மதிநுட்பத்துடன் அவர் அதை நிர்மாணித்து, அதை அதை தனக்கும் தந்தைக்கும் புனிதத்தன்மை வாய்ந்த மணமகளாகவும் பரிசுத்த திருச்சபையாகவும் ஸ்தாபித்தார். இதை அவர் தனது அறிக்கையில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்: ““நான் அவர்களோடு வாழ்வேன்; அவர்களோடேயே நடப்பேன்; நான் அவர்களது தேவனாக என்றும் இருப்பேன். அவர்களே என் மக்களாக இருப்பார்கள்”

[2 கொரிந்தியர் 6:16]. இறைவார்த்தையின் சாயலைத் தன்னகத்தே கொண்டிருக்கும் முகமாக, ஆரம்பத்திலிருந்து உருவாக்கப்பட்ட பரிபூரண மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஆன்மா தான் அத்தகையது.

ஆனால் தீமையை விரும்பும் தீய அரக்கனின் பொறாமை காரணமாக, அவள் தன்னிச்சையாக, அவள் மனம் போனபடி, சிற்றின்பத்தையும் தீயே இச்சைகளையும் விரும்புகிறவளாக மாறிய போது, அவளைக் காக்கும் கடவுள் அவளை விட்டு வெளியேறினார். மேலும் அவள் பொறாமை கொண்டவர்கள் விரித்த கண்ணிகளுக்கு இரையாகிவிட்டாள். அவள் நிலத்தில் மோதி சரிந்து விழுந்தாள். அவளுடைய நல்லொழுக்கத்தின் அடையாளம் என்ற ஒரு கல் கூட மற்றொரு கல்லின் மீது வைப்பதற்கு எஞ்சியிருக்கவில்லை. அவள் உயிரற்றவளாகவும், கடவுளைப் பற்றிய இயல்பான விசுவாசம் எதுவும் அற்றவளாக அனாதையாகக் கிடந்தாள். அவள் அடிபட்டு சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கையில், ஆன்மீகம் என்ற போர்வையில் தோன்றிய மிருகங்களால் அவள் துவம்சம் செய்யப்பட்டாள். அவை கடவுளின் தெய்வீக சரணாலயத்தைத் தீக்கிரையாக்கி, அவருடைய திருநாமத்தின் வாசஸ்தலத்தை முற்றிலுமாக அசுத்தப்படுத்தி, அக்கிரமம் என்ற தீயைக் கக்கும் அம்புகள் ஏற்படுத்திய வேதனையால் அவள் சிறிது சிறிதாக சிதைந்துகொண்டிருந்தாள். எந்த இரட்சிப்போ அல்லது விசுவாசமோ அவளுக்கு கைகொடுக்காத நிலையில், இறுதியில் அவள் ஒரு பெரிய மண் மேட்டின் கீழ் புதைக்கப்பட்டாள்.

ஆனால் அவளுடைய பாவங்களுக்கான தண்டனையை அவள் செலுத்தியபோது, இரட்சிப்புக்கான பாதுகாவலர் – அதாவது இறைவார்த்தையானவர், தனது தந்தையின் கிருபையின் மூலம் அவளை மீண்டும் ஒருமுறை மீட்டெடுத்தார். முதலாவதாக, அவர் தனக்கு மிகவும் பிரியமான, உயர்ந்த பேரரசர்களின் ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் மூலம் உலகம் முழுவதையும், அனைத்து பொல்லாத மற்றும் தீங்கு விளைவிக்கும் மிலேச்சத்தனமான, கடவுளை வெறுத்து நிந்திக்கும் கொடுங்கோலர்களிடமிருந்தும் தூய்மைப்படுத்தினார். பின்னர் அவர் தனது வாழ்நாள் முழுவதும் தனக்காக தம்மை அர்ப்பணித்த தனது சீடர்களை வெளியில் அழைத்துவந்தார். அவர் அவர்கள் மீது கொண்ட அக்கறையினால் துன்பங்களின் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாத்தார். மேலும் தம் தந்தையின் அருளால் அவர்களுக்கு நியாயமான வெகுமதியை வழங்கினார். அவர்களைக் கொண்டு அனைத்து வகையான குப்பைகளாலும், இழிவான ஆணைகளின் சேறுகளாலும் கறைபடிந்து காணப்பட்ட ஆன்மாக்களை, குந்தாலி மற்றும் மண்வெட்டிகள்போன்ற உபகாரணங்களைப் பயன்படுத்தி – அதாவது முன்கூறப்பட்ட வற்றை அவரது ஊடுருவும் போதனைகளாகப் பயன்படுத்தி அனைவரையும் தூய்மைப்படுத்தினார். அவர் இந்த இடத்தை பிரகாசமாகவும் தெளிவாகவும் மாற்றியபின், அவர் அதை இந்த ஞானமுள்ள மற்றும் கடவுளுக்குப் பிரியமான ஒரு தலைவரிடம் ஒப்படைத்தார். அவர் மிகவும் பகுத்தறியும் விவேகமும் உள்ளவராக இருந்தார். அவர் தனது பொறுப்பில் விடப்பட்ட ஆன்மாக்களை மிகவும் கரிசனையுடனும் அர்ப்பணிப்புடனும் கவனித்துக் கொண்டார். ஆரம்பத்திலிருந்தே அவர் பிரகாசிக்கும் தங்கம், தூய வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற இரத்தினக் கற்கள் போன்றவற்றை உபயோகித்து, கட்டிட நிர்மாணத்தை தொடர்ந்து மேற்கொண்டு, அவற்றை உங்கள் மத்தியில் ஸ்தாபித்து, புனிதமான தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்:

“நான் உன்னை மீண்டும் கட்டுவேன்.

நான் ஒரு அழகான கல்லை உனது சுவர்களுக்கு வைப்பேன்.

நான் நீல இரத்தினக் கற்களைப் பயன்படுத்தி அத்திவாரம் அமைப்பேன்.

சுவர்களின் உச்சியில் இரத்தினங்களால் செய்த கற்களை வைப்பேன்.

நான் வாசல்களுக்கு மாணிக்கக் கற்களைப் பயன்படுத்துவேன்.

உன்னைச் சுற்றி சுவர்கள் கட்ட விலையுயர்ந்த கற்களைப் பயன்படுத்துவேன்.

உனது பிள்ளைகள் தேவனைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கு அவர் கற்பிப்பார்.

உனது பிள்ளைகள் உண்மையான சமாதானத்தை அடைவார்கள்.

நீ நன்மையால் கட்டப்படுவாய்” [ஏசாயா 54:1-4].

உண்மையாகவே நீதியைக் கட்டியெழுப்பிய அவர், மக்களை அவர்களின் திறமைக்கேற்ப குழுக்களாகப் பிரித்தார். சிலரை பெரும்பான்மையான மக்களுடன் இணைத்து அசைக்க முடியாத விசுவாசம் என்ற சுவருக்குள் வைத்து, வெளிப்புறத்தில் மட்டும் வேலியை அமைத்தார். மற்றவர்களுக்கு தேவாலயத்தின் உள்ளே நுழைவாயில்களின் பொறுப்புகளை ஒப்படைத்தார். அவர்கள் தேவாலயத்தின் உள்ளே நுழைபவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஏனையோருக்கு, நான்கு சுவிசேஷங்களில் ஒவ்வொன்றின் முதல் எழுத்தையும் அறிமுகப்படுத்தி, செவ்வக வடிவ முற்றத்தை சுற்றியிருக்கும் ஆரம்ப நெடுவரிசைகளை கவனிக்குமாறு அறிவுறுத்தினார். இன்னும் சிலரை அவர் பேராலயத்தில் இருபுறமும் இணைத்தார். அவர்கள் அறிவுறுத்தலின் கீழ் செயற்பட்டனர், எனினும் விசுவாசிகளின் உள்ளார்ந்த தெய்வீக தரிசனத்திலிருந்து வெகு தொலைவில் அவர்கள் இருக்கவில்லை. தெய்வீக முழுக்கினால் தங்கம் போல் புடம் போடப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட தூய ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்து, வேதாகமத்தின் உள்ளார்ந்த தூய போதனைகளைப் பயன்படுத்தி வெளிப்புறத்தை விட உள்ளே இருக்கும் பாரிய நெடுவரிசைகளை அவர்கள் பொறுப்பேற்கும்படி செய்தார். மற்றவர்களை அவர் சாளரங்களில் இருந்து வரும் ஒளி அவர்கள் மீது படும்படி ஓரிடத்தில் இருக்க உத்தரவிட்டார். முழுப் பேராலயத்தையும் அவர் ஒரு வலிமையான நுழைவாயிலால் அலங்கரித்திருந்தார்: கிறிஸ்துவின் கதிர்களாலும் பரிசுத்த ஆவியானவராலும் நமது ஒரே கடவுள் மற்றும் இறை அரசரின் புகழும் மாட்சியும் தந்தையின் சக்தியால் அங்கே பிரகாசித்தன. ஏனையவற்றைப் பொறுத்தவரை, மனித ஆன்மாக்கள் என்ற உயிருள்ள மற்றும் பாதுகாப்பான கற்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் ஒவ்வொருவரிடமும் இருக்கும் உண்மையை, அதன் தன்மையை, அவர் இந்த நிர்மாணத்தின் மூலம் தெளிவாகக் காட்டுகிறார். இவ்வாறு, அவர்கள் அனைவரும் காணும்படி, உள்ளேயும் வெளியேயும் பிரகாசிக்கும் ஒரு பிரமாண்டமான தேவ மாளிகையை அவர் நிர்மாணித்தார். அது அவர்களின் உடல், ஆன்மா மற்றும் மனம் போன்றவற்றுக்கு அப்பால் சென்று, நிதானம் மற்றும் கற்பு ஆகியவற்றின் எண்ணற்ற அலங்காரங்களால் பிரகாசித்தது.

இந்த புனிதமான சன்னதியில், சிம்மாசனங்களும் எண்ணற்ற இருக்கைகளும் உள்ளன. அவை பரிசுத்த ஆவியின் கொடைகள் வீற்றிருக்கும் ஆன்மாக்கள் போன்றும், புனித அப்போஸ்தலர்கள் மற்றும் அவர்களது அடியார்கள் மீது நீண்ட காலத்திற்கு முன்பு எழுந்தருளிய பரிசுத்த ஆவியின் அக்கினி நாக்குகள் போன்று காட்சியளித்தன. அவர்கள் அனைவரின் ஆட்சித் தலைவரான பவுலினஸின் மீதும், பரிசுத்த ஆவியானவர் மற்றும் கிறிஸ்துவின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும் தகுதியுடையோர் மற்றும் அவர்களது அடியார்களிடமும் கர்த்தராகிய கிறீஸ்து எழுந்தருளி வாழ்கிறார். சிலரின் ஆன்மாக்கள் தேவதூதர்களின் இருக்கைகளாகவும் கூட இருக்கலாம், ஏனெனில், ஒவ்வொரு நபரும் பெற்றுக்கொண்ட போதனைகள், மற்றும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டதன் காரணமாக அவை அவர்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கலாம். உயர்வான மற்றும் தனித்துவமான பலிப்பீடத்தைப் பொறுத்தவரை, இது அனைவருக்கும் பொதுவான என் ஆசிரியரான கிறிஸ்துவின் களங்கமற்ற பரிசுத்த ஸ்தலத்தைத் தவிர வேறெதுவாக இருக்கமுடியும்? பலிப்பீடத்தின் வலப்பக்க பக்கவாட்டில் நின்று, பிரபஞ்சத்தின் பெரிய பிரதான ஆசாரியரான, கடவுளின் ஒரே பேறான இயேசு, அனைவரின் இனிமையான வாசனை தூபத்தையும் பிரார்த்தனைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்று, பரலோகத் தந்தை மற்றும் பிரபஞ்சத்தின் சிருஷ்டியான தேவனை நோக்கி ஒப்புக்கொடுக்கிறார். இறை தந்தையை ஆராதித்து, அவர் ஒருவருக்கே உரிய புகழையும், ஆராதனையையும் வழங்கி, எப்போதும் நம் வாழ்வோடு ஒன்றித்து தொடரும்படி மன்றாடுகிறார். வையகத்தின் மகத்தான சிருஷ்டியான வார்த்தையானவர், தம்முடைய இறைதந்தை ஆராதிக்கப்படுவதற்கும் வழிபடுவதற்கும் உலகம் முழுவதும் பாரிய திருச்சபையை கட்டியெழுப்பியுள்ளார். அதேநேரம் விண்ணக சாம்ராச்சியத்தைப் பொறுத்தவரை – அது விண்ணகத்து ஜெருசலேம் என்றும் பரலோகத்து சீயோன் மலை என்றும் தேவன் வாழும் வானகத்து நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு தேவதூதர்களின் சேனைகள் மற்றும் பரலோகத்தில் வாழ ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் தங்கள் படைப்பாளரை நோக்கி விவரிக்க முடியாத புகழையும், ஆராதனையையும் வழங்குகிறார்கள்.

“தேவன் தன்னை நேசிக்கும் மக்களுக்காகச் செய்த ஏற்பாட்டை எந்த கண்ணும் பார்க்கவில்லை. எந்தக் காதும் கேட்கவில்லை, எந்த மனிதனும் எண்ணிப் பார்த்ததில்லை” [1 கொரிந்தியர் 2:9] என்று எழுதப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு ஓரளவு தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டு, ஆண், பெண், குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஒரே மனதுடன், நமக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள், அருட்கொடைகள் போன்ற அனைத்திற்கும், எல்லாம் வல்ல இறை தந்தைக்கு முடிவில்லா நன்றிகளையும் புகழையும் அவர் பாதங்களுக்கு அர்ப்பணிப்போம். அவர் நம் பாவங்களைப் பொறுத்து, நம்மீது இரக்கம் காட்டுகிறார். நம் நோய்களைக் குணப்படுத்துகிறார். நம் வாழ்க்கையை அழிவிலிருந்து மீட்டு, இரக்கத்தால் நம்மை வலிமையூட்டியுள்ளார். நன்மைகளால் நம் விருப்பங்களை நிறைவேற்றி நம்மைத் திருப்திப்படுத்துகிறார். அவர் நம்முடைய பாவங்களின்படி நம்மை நடத்தவில்லை. மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவர் நம்முடைய அக்கிரமங்களையும் வேறுபாடுகளையும் நம்மிடமிருந்து நீக்கிவிட்டார். தகப்பன் தன் மகன்மார் மீது இரங்குவது போல, கர்த்தர் தமக்குப் பணிந்தவர்கள் மீது இரங்குகிறார்.

இப்போதும், நம் வாழ்வின் எல்லா தருணங்களிலும், இவை பற்றிய நினைவுகளை மீண்டும் மலர்ச்சி செய்துகொண்டே இருப்போம். என்றென்றும் எமது பேரவையை வழிநடத்தும் ஆசிரியரும் மற்றும் இந்த மகிழ்ச்சியான, மகிமை மிகுந்த நாளின் ஆசிரியருமான அந்த ஒரே இறைவன் மட்டுமே – இரவும் பகலும் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு சுவாசத்திலும் எப்போதும் நம் மனதில் இருக்கக்கடவாராக. நம் ஆன்மாவின் முழு சக்தியுடனும் அவரைப் போற்றுவோம், அவரை ஆராதிப்போம். இப்போது நாம் எழுந்து, அவருடைய திருவடியில் நம்மை வைத்து இறுதிவரை அடைக்கலம் அருளவும், எம்மைக் காத்து இரட்சிக்கவும், நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் அவருடைய நித்தியமான, நிரந்தர சமாதானத்தை நமக்கு அருளும்படி உரத்த குரலில் மன்றாடுவோம். அவர் வழியாக எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுக்கு என்றென்றும் மகிமை உண்டாகக்கடவதாக. ஆமென்.

ஏகாதிபத்திய ஆணைகள்

5. கொன்ஸ்டன்டைன் மற்றும் லிசினியஸின் ஏகாதிபத்திய கட்டளைகள் இலத்தீன் மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு மேற்கோள் காட்டப்பட்டிருப்பதை இங்கே காணலாம்.

இலத்தீன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஏகாதிபத்திய கட்டளை சட்டங்களின் நகல் பிரதி

வழிபாட்டு சுதந்திரம் மறுக்கப்படக்கூடாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தை அவரவர் விருப்பப்படி வழிபட உரிமை இருக்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். அதன்படி, கிறிஸ்தவர்களும் [மற்ற அனைவரும்] தங்களுக்கு இஷ்டமான மதப் பிரிவுகள் மீது கொண்டுள்ள விசுவாசத்தை முன்கொண்டு செல்லவும் வழிபாட்டைக் கடைபிடிக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கட்டளையிட்டுள்ளோம். ஆனால் அதே நபர்களுக்கு அத்தகைய உரிமைகள் வழங்கப்பட்ட அந்த பதிவில் அனைத்து வகையான நிபந்தனைகளும் வெளிப்படையாக சேர்க்கப்பட்டுள்ளதால், அவர்களில் சிலர் சிறிது காலத்திற்குப் பிறகு அத்தகைய வழக்கங்களில் ஈடுபடுவது தடுக்கப்பட்டிருக்கலாம்.

மகிழ்ச்சியான சுமுகமான ஒரு சூழ்நிலையில், நாம்; கொன்ஸ்டன்டைன் அகஸ்டஸ் மற்றும் லிசினியஸ் அகஸ்டஸ் ஆகியோர் மிலானுக்கு வந்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொது நலன் சார்ந்த பல விடயங்கள் மற்றும் பொது நலன் சம்பந்தமான ஏனைய விஷயங்களைப் பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தோம். அதன் பலனாக, தெய்வ நம்பிக்கை மதிக்கப்படுவதையும், போற்றப்படுவதையும் உறுதி செய்வதற்காக, கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் தாங்கள் விரும்பும் எந்த விதமான வழிபாட்டையும் கடைப்பிடிக்க அனுமதிக்கும் சட்டங்களை உருவாக்க முடிவு செய்தோம். இதன்மூலம் அனைத்து தெய்வீக மற்றும் பரலோக சக்திகளும் நமக்கும் நமது அதிகாரத்தின் கீழ் வாழும் அனைவருக்கும் சாதகமாக செயல்படவேண்டும் என்று உறுதியாக நம்பினோம். எனவே, நாம் சரியான விவேகமான மற்றும் பகுத்தறிவின் துணையோடு எட்டிய முடிவுகளை இங்கே தருகிறோம்: கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளையோ அல்லது அவ்வாறான வழிபாட்டை கடைபிடிப்பதையோ பின்பற்றுவதையோ அல்லது தேர்ந்தெடுக்கும் உரிமை எவருக்கும் மறுக்கப்படக்கூடாது. மேலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தமக்குத் தகுந்ததாக நினைக்கும் அந்த வழிபாட்டுமுறையில் மனதை ஒருமுகப்படுத்தும் உரிமை வழங்கப்பட வேண்டும். இதனால் வழிபடும் சக்தியானது தனது வழக்கமான அக்கறையையும் தாராள மனப்பான்மையையும் சகல வழிகளிலும் நமக்குக் காட்டட்டும். கிறிஸ்தவர்களைப் பற்றி உங்கள் கவனத்துக்கு அனுப்பிய முந்தைய கடிதத்தில் அனைத்து நிபந்தனைகளும் இரத்துசெய்யப்பட்ட நிலையில், எங்கள் பிழைபொறுக்கும் கருணைக்கு முன், நியாயமற்றதாகவும் அந்நியமாகவும் தோன்றிய அனைத்து உட்கூறுகளும் அகற்றப்பட்டு, இப்போது அதைக் கடைப்பிடிக்க விரும்பும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருத்தம் செய்து, அனைவரும் எந்தத் தடையுமின்றி அதைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதே கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் சொந்த வழிபாட்டு முறையை கடைப்பிடிக்க சுதந்திரமான மற்றும் வரம்புகளற்ற அனுமதியை நாங்கள் வழங்கியுள்ளோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் முகமாக, இதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வந்து, ஒரு முழுமையாக விளக்கத்தை அளிக்க முடிவு செய்துள்ளோம். நாங்கள் அவர்களுக்கு எவ்விதத் தடையுமின்றி இந்த அனுமதியை வழங்கியுள்ளோம் என்பதை நீங்கள் சற்றே கூர்ந்து நோக்கினீர்களானால், நம் காலத்தின் அமைதிக்கு ஏற்ப ஏதாவது ஒன்றைத் தெளிவாகக் கடைப்பிடிக்க விரும்பும் மற்றவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை உங்கள் மேலான இதயம் புரிந்து கொள்ளும் என நம்புகிறோம். இதன் வழியாக ஒவ்வொருவரும் அவரவர் விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துவதற்கும் வழிபடுவதற்குமான சுதந்திரத்தைப் பெறுகிறார்கள். எந்த விதமான வழிபாட்டு முறைகளையோ அல்லது வழிபாட்டுத் தன்மைகளையோ நாம் சிறுமைப்படுத்தியதாக தோன்றக்கூடாது என்பதற்காகவே இதைச் செய்துள்ளோம்.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, உங்கள் மேலான கவனத்துக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட முந்தைய கடிதத்தில், அவர்கள் கூடும் இடங்கள் குறித்து திட்டவட்டமான அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டிருந்தன. எங்கள் திறைசேரி நிதியில் இருந்தோ அல்லது வேறு எந்த நிதி மூலத்திலிருந்தோ இந்த இடங்களை யாராவது கொள்வனவு செய்திருப்பதாகத் தோன்றினால், அவர்கள் அதை பணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தவோ அல்லது இழப்பீடோ கோராமல், இனிமேலும் அதையிட்டு எவ்வித அலட்சியமோ அல்லது தயக்கமோ இன்றி அதை மீண்டும் கிறீஸ்தவர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென இத்தால் சிபாரிசு செய்கிறோம். அதேநேரம் யாரேனும் அந்தச் சொத்துக்களை அன்பளிப்பாகப் பெற்றிருந்தால், அந்த இடங்களை வாங்கியவர்களோ அல்லது காணிக்கையாகப் பெற்றவர்களோ எமது கவனத்துக்கு கொண்டுவரும் பட்சத்தில், அவ்வாறான சொத்துக்களை தாமதமின்றி அதே கிறிஸ்தவர்களுக்கு மீண்டும் கையளிக்க வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம், அதனால் அவர்களும் நமது தயவால் பயனடையலாம். ஆகவே, உங்கள் உடனடியான மற்றும் தகுந்த நடவடிக்கை ஊடாக, தாமதமின்றி இந்த சொத்துக்கள் அனைத்தும் கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்கிறோம்.

மேலும், நாம் இங்கே குறிப்பிட்டுள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் கூடும் இடங்களை தங்களுக்கு சொந்தமாக கொண்டிந்தது மட்டுமல்லாமல், தனிநபர்களுக்கு சொந்தமானதும், கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களையும் தம்வசம் வைத்திருந்ததாகவும் அறியப்படுகிறது. மேற்கண்ட சட்டத்தின் விதிகளுக்குக் கீழ் உள்ள அனைத்து சொத்துக்களும், அதே கிறிஸ்தவர்களுக்கு உரித்தாகும் படியாக; கிறீஸ்தவ நிறுவனங்களுக்கும் சங்கங்களுக்கும் எந்த கேள்விக்கும் இடமில்லாமல் அவற்றை மீட்டுக்கொடுக்க உத்தரவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முன்பு கூறியது போல், இழப்பீடு எதுவும் பெறாமல் அவற்றை மீட்டெடுப்பவர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எமது தயவை நாட முயற்சிக்கலாம்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த எல்லா விஷயங்களிலும், மேற்கூறிய கிறிஸ்தவர்களின் ஸ்தாபனங்கள் சார்பாக நீங்கள் எல்லா முயற்சிகளையும் துரிதப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இதனால் எங்கள் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்தப்பட முடியும். இதன்மூலம் இங்கும் எங்கள் தயாளம் பொது அமைதியை மேம்படுத்தும். இவ்வாறாக, முன்பு நாம் குறிப்பிட்டது போல், பல சந்தர்ப்பங்களில் நாம் அறிந்த தெய்வீகக் கரிசனை என்பது நம்மிடம் நிரந்தரமாகத் தங்கி இருக்கும். மேலும் எங்களின் பெருந்தன்மையும் சட்டமும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவும், நாங்கள் உங்களுக்குத் பரிந்துரை செய்தவை அனைத்தும் உங்கள் உத்தரவின் மூலம் அறிவிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு, அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், நம் தயாளத்தை நாம் வெளிப்படுத்தும் செயலை யாரும் அறியாமல் இருக்க மாட்டார்கள்.

மற்றொரு ஏகாதிபத்திய சட்டத்தின் நகல்; கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமே கருணை காட்டப்பட்டது என்பதைக் காட்டுகிறது

எங்கள் மரியாதைக்குரிய அனுலினஸ் அவர்கட்கு எமது வணக்கங்களும் வாழ்த்துக்களும் உரித்தாகக்கடவதாக. எங்கள் நற்பண்புமிக்க அணுகுமுறைக்கேற்ப, வழிவந்த உரிமையால் மற்றவருக்குச் சொந்தமான எந்தச் சொத்துக்களுக்கும் எவ்விதத்திலும் அநீதி இழைக்கப்படாதிருக்கவேண்டும். அதேநேரம், அவை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடன், எந்த ஒரு நகரத்திலோ அல்லது ஸ்தானத்திலோ கிறிஸ்தவர்களின் கத்தோலிக்க திருச்சபை அமைப்புகளுக்குச் சொந்தமான சொத்துக்களில் ஏதேனும் ஒன்று இப்போது சாதாரண மக்கள் அல்லது வேறு எவரிடமாவது இருக்குமானால், அவற்றை மீட்டு, மீண்டும் அவ்வந்த அமைப்புகளுக்கு கையளித்துவிட ஆவண செய்வீர்கள் என்பது எங்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கிடையில், இதே திருச்சபை அமைப்புகளுக்குச் சொந்தமானவை அனைத்தும் அவ்வந்த சபை நிர்வாகங்களுக்கு முறையாக மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம். எனவே, எங்கள் இந்த கட்டளையின் நோக்கம் முற்றிலும் தெளிவாக உள்ளது என்பதை தங்கள் மேன்மையான மனம்  ஏற்றுக்கொள்ளும் என்று தாழ்மையுடன் நம்புகிறோம். எனவே, தோட்டங்கள், கட்டிடங்கள் அல்லது இந்த திருச்சபை அமைப்புகளுக்கு சொந்தமானவை அனைத்தும் விரைவில் அவ்வந்த அமைப்புகளுக்கு மீண்டும் கையளிக்கப்படுவதை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான் எங்களது இந்த வேண்டுகோள்களுக்கும் பரிந்துரைகளுக்கும் நீங்கள் முழுமனதோடு இணங்குவதை நாங்கள் அறிந்து கொள்ளலாம். மிகவும் போற்றுதலுக்கும் மதிப்பிற்கும் உரிய அனுலினஸ் அவர்களே, இத்துடன் எங்களது இந்த கடிதத்தை வணக்கங்களும் வாழ்த்துகளும் கூறி நிறைவு செய்கிறோம்.

திருச்சபையின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக உரோமில் ஆயர்களின் ஆயர் பேரவையை நடத்த ஆணையிடும் ஏகாதிபத்திய கடிதத்தின் நகல்

கொன்ஸ்டன்டைன் அகஸ்டஸ் ஆகிய நான், உரோமைய ஆயரான மில்டியாட்ஸ் மற்றும் மார்க் ஆகியோருக்கு எழுதிக்கொள்வது, ஆபிரிக்காவின் புகழ்பெற்ற மாகாண ஆளுநர் அனுலினஸ் எனக்கு அனுப்பிய ஏராளமான ஆவணங்கள் என்ன கூறுகின்றன என்று பார்த்தோமானால், கார்தேஜின் ஆயர் சிசிலியன் ஆபிரிக்காவில் உள்ள அவரது சகாக்கள் சிலரால் பல விடயங்கள் குறித்து குற்றம் சாட்டப் பட்டதாகத் தெரிகிறது, இது மிகவும் தீவிரமான விடயமாக நான் கருதுகிறேன். எந்தெந்த மாகாணங்களில் தெய்வீக ஆளுமை என் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதோ, எந்தெந்த மாகாணங்களில் அதிக மக்கள் தொகை உள்ளதோ, அந்த மாகாணங்களில் மக்கள் கூட்டமும், ஆயர்களும் பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்வதில் தவறான போக்கைக் கடைபிடிப்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாக நான் கருதுகிறேன். கேசிலியன் தன்மீது குற்றம் சுமத்திய பத்து ஆயர்களுடன், மேலும் தன் வழக்கிற்குத் தேவையெனக் கருதும் மேலும் பத்து ஆயர்களுடன், நீங்களும் உங்கள் சகாக்களான ரெட்டிசியஸ், மேட்டர்னஸ் மற்றும் மரினஸ் ஆகியோர் சகிதம் உரோம் நகருக்குப் பயணம் செய்வது நன்று என்று எனக்குத் தோன்றியது. இந்த நோக்கத்திற்காக உரோம் நகருக்கு விரைந்து செல்லுமாறு நான் பணித்தேன். அதனால் அவர் மிகவும் புனிதமான சட்டத்தின்படி பொருத்தமானதாகக் கருதும் செயல்முறையின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தக்கூடும். இந்த அனைத்து விடயங்களையும் பற்றி நீங்கள் முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக, அனுலினஸ் எனக்கு அனுப்பிய அறிக்கைகளின் நகல்களை எனது கடிதத்துடன் இணைத்து, உங்களோடு பணியாற்றும் உங்கள் சக ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளேன். நீங்கள் அவற்றைப் படித்தவுடன், மேற்கூறிய வழக்கை மிகக் கவனமாக விசாரித்து எவ்வாறு நியாயமான தீர்ப்பைப் பெறலாம் என்பதை பெருமதிப்பிற்குரிய நீங்கள் தீர்மானிக்கலாம். ஏனெனில், சட்டபூர்வமான கத்தோலிக்க திருச்சபையை நான் எவ்வளவு நேசிக்கிறேன் மற்றும் பாராட்டுகிறேன் என்பதை மேன்மை தங்கிய தாங்கள் நன்றாக அறிந்திருப்பதால், எந்த இடத்திலும் பிளவு, பிரிவினை மற்றும் வேற்றுமை போன்றவற்றை நான் முற்றாக எதிர்க்கிறேன். இவ்வறிக்கையை நிறைவுசெய்யும் முன், மேதகு ஐயன்மீர், கடவுளின் தெய்வீகக் கிருபை உங்களை பல்லாண்டுகள் பாதுகாப்பாக வைத்திருக்க வாழ்த்துகிறேன்.

ஆயர்மாருக்கு இடையே நிலவும் அனைத்து பிரிவுகளையும் நிவிர்த்தி செய்யும் பொருட்டு, இரண்டாவது ஆயர் பேரவைக் கூட்டத்தைக் கூட்ட  ஆணையிடும் பேரரசரின் கடிதத்தின் நகல்

கொன்ஸ்டன்டைன் அகஸ்டஸ்,  சிராகியூஸ் ஆயரான கிரெஸ்டஸ் அவர்களுக்கு எழுதிக்கொள்வது, முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் அடிப்படை மற்றும் வக்கிரமான நோக்கங்கள் கொண்ட சிலர், புனிதமான பரலோக சக்தி மற்றும் கத்தோலிக்க மதத்தின் வழிபாடு தொடர்பாக பிளவுகளை உருவாக்க முயன்றபோது, ​​அவர்களிடையே நிலவிய இதுபோன்ற கருத்து வேறுபாடுகளை குறைக்க நான் விரும்பினேன். சில ஆயர்களை கவுலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நான் கட்டளை பிறப்பித்தேன். இந்தத் தீர்மானத்துக்குத் தடையாய் பிடிவாதத்துடன் இருக்கும் எதிர் அணியினர் சிலரை ஆபிரிக்காவில் இருந்து வரவழைக்க வேண்டும் என்றும், உரோமைய ஆயரும் அங்கே பிரசன்னமாய் இருக்க வேண்டும் என்றும் நான் பணித்திருந்தேன். சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் கவனமாக விசாரிப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு  நியாயமான தீர்வைப் பெறக்கூடியதாயிருக்கும். இருப்பினும், சிலர் தங்கள் சொந்த மீட்பு மற்றும் தங்களது புனிதமான மத நம்பிக்கைக்கு  கொடுக்கவேண்டிய மரியாதை இரண்டையும் மறந்துவிட்டார்கள். இப்போது கூட தங்கள் தனிப்பட்ட விரோதத்தை வளர்ப்பதை அவர்கள் நிறுத்தவில்லை. ஏற்கனவே வந்துள்ள தீர்ப்பை ஏற்க மறுத்து, ஒரு சிலர் மட்டுமே தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  கூறியுள்ளனர். முதலில் சம்பந்தப்பட்ட விடயங்களை முழுமையாக விசாரிக்காமல் தீர்ப்பு வழங்குவதில் மட்டும் பெரும் அவசரத்தில் உள்ளனர். இதன் விளைவாக, சகோதர ஒற்றுமையில் அந்நியோன்னியமாய் இருக்க வேண்டிய மக்கள், ஒருவரையொருவர் இழிவான முறையில், இல்லை, மிகவும் அருவருப்பான முறையில் ஒருவருக்கொருவர் பிரிந்து, இந்த புனிதமான மத விழுமியங்களுக்கு தங்களை அந்நியர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். இது கேலி செய்ய மேற்கொள்ளப்படும் ஒரு சாக்குப்போக்காக இருப்பதாகத்  தோன்றுகிறது. எனவே, தீர்ப்பு ஏற்கனவே வழங்கப்பட்ட பிறகு, அதுவும் தன்னார்வ ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்திருக்க வேண்டியதை, முடிந்தவரை பல நபர்கள் முன்னிலையில் இதை ஒருமுறை தீர்த்து வைக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

ஓகஸ்ட் மாதத்தின் கலெண்ட்ஸ் [முதல்] நாளில், ஆர்லஸ் என்ற இடத்தில்  ஒன்றுகூடுமாறு பல இடங்களில் இருந்து ஏராளமான ஆயர்களை அங்கு வருகை தருமாறு நாங்கள் கேட்டுக்கொண்டதால், உங்களுக்கும் அதுகுறித்து எழுதுவது நல்லது என்று நினைத்தோம். சிசிலியின் திறனாய்வாளரான புகழ்பெற்ற லட்ரோனியனிடம் இருந்து நீங்கள் ஒரு பிரயாண வண்டியைப் பெற்று, உங்கள் விருப்பப்படி இரண்டாவது தரவரிசை உறுப்பினர்கள் [மறைமூப்பர்கள்] இருவரை உங்களுடன்  சேர்த்துக்கொள்ள வேண்டும். பயணத்தின் போது உங்களைக் கவனித்துக் கொள்ளக்கூடிய மூன்று பணியாளர்களை அழைத்துச் செல்லுங்கள். மேலும் மேலே பெயரிடப்பட்ட இடம் மற்றும் தேதியில் அங்கு சமூகமளிப்பதை உறுதிசெய்து கொள்ளவும். மரியாதைக்குரிய   தங்களின் பிரசன்னத்தாலும் கூடியிருந்த மற்றவர்களின் ஒன்றுபட்ட ஞானத்தாலும், மிகவும் இழிவாகவும், வெறுக்கத்தக்க விதத்திலும் நீடித்த இந்தச் சண்டை, அனைத்தையும் விசாரித்து அறிந்தவுடன், உண்மையான மதம், விசுவாசம் மற்றும் சகோதர ஒற்றுமை ஆகியவற்றால் தாமதமாக என்றாலும் ஒரு நல்ல முடிவை எட்டக்கூடும்.  மேலும், ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது. நிறைவாக, எல்லாம் வல்ல இறைவன் பல்லாண்டு காலம் உங்களை ஆரோக்கியமாக ஆசீர்வதித்து காப்பாற்றுவாராக.

பேரரசர் அவர்களால் தேவாலயங்களுக்கு உதவித்தொகை வழங்க ஆணையிடும் கடிதத்தின் நகல்

எனது நோக்கங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தால், உங்களுக்குத் தேவைப்படும் எதற்கும் எங்கள் வழக்கறிஞரான ஹெராக்லைட்ஸை அணுக தயங்க வேண்டாம். அவர் இங்கே இருக்கும் போது உங்கள் கான்ஸ்டன்சிக்கு பணம் கேட்டால், விசாரிக்காமல் கொடுக்குமாறு கட்டளையிட்டேன்.

ஆகவே, இதுபோன்ற விஷமத்தனமான காரியங்களில் ஈடுபடும் விஷமிகளை நீங்கள் காண நேர்ந்தால், தயங்காமல் மேலே கூறப்பட்ட நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரும்படி கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் இங்கு வந்திருந்தபோது நான் அவர்களுக்கு அறிவுறுத்தியபடி, அவர்கள் இந்த மக்களை தவறான வழிகளில் செல்வதில் இருந்து மீட்டு சரியான பாதையில் பயணிக்க உதவ முடியும். தேவனின் தெய்வீக கிருபை உங்களை பல்லாண்டு காலம் ஆசீர்வதித்து காப்பாற்றக் கடவதாக.

பேரரசரால் திருச்சபைத் தலைவர்கள் சகல பொதுக் கடமைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று ஆணையிடும் கடிதத்தின் நகல்

7. எங்கள் மிகவும் மரியாதைக்குரிய அனுலினஸ் அவர்கட்கு, எமது பணிவான வணக்கங்களும், வாழ்த்துக்களும் உரித்தாகக்கடவன. மிகவும் புனிதமான, பரலோகத்திற்கு [அதிகாரம்] மிகுந்த கௌரவத்தை பெற்றுக்கொடுக்கும் மத வழிபாடு, பொது விவகாரங்களை எவ்வாறு கடுமையாக பாதித்துள்ளது என்பதை பல உண்மைகள் நிரூபிக்கின்றன. இதற்கிடையில், மத வழிபாட்டின் சட்டப்பூர்வ மறுசீரமைப்பு மற்றும் பாதுகாத்தல் போன்றவை மனிதகுலத்திற்கு மிகப்பெரிய மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அசாதாரண செழிப்பையும் தந்துள்ளது. இவை இரண்டும் தெய்வீக கிருபையின் வழியாகக் கிடைத்த ஆசீர்வாதங்களும், வெகுமதிகளும் ஆகும்.

ஆகவே, மிகவும் மரியாதைக்குரிய அனுலினஸ் அவர்களே, இந்தச் சட்டத்தை உரிய புனிதத்துடன் கடைபிடிக்கும் அதேவேளை, தெய்வீக வழிபாட்டை நடத்துவதற்குத் தங்கள் சேவைகளை வழங்குபவர்கள் தங்கள் சொந்த உழைப்புக்கான வெகுமதியைப் பெறுவது பொருத்தமானது என்று தோன்றியது. எனவே, உங்கள் மாகாணத்தில் கேசிலியன் தலைமைதத்துவத்தின் கீழ் உள்ள கத்தோலிக்க திருச்சபை அங்கத்தவர்கள், இந்த புனித வழிபாட்டிற்கு தங்கள் சேவைகளை அர்ப்பணிப்பவர்கள் – இவர்கள் வழக்கமாக தங்களை மதகுருமார்கள் என்று கூறிக்கொள்வார்கள் – அடியோடு அனைத்து விதமான பொதுக் கடமைகளிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பின்னர் அவர்கள் தெய்வீக வழிபாட்டுக்கு தங்களை முழுமையாக அர்ப்பணிப்பதில் இருந்தும், துறவற வாழ்க்கையில் ஈடுபடுவதில் இருந்தும் ஒருபோதும் தவற மாட்டார்கள். மாறாக அவர்களின் சொந்தக் கடமையை எவ்வித புறக்கட்டுப்பாடுகளுக்கும் அடிபணியாது செவ்வனே நிறைவேற்றுவார்கள். சர்வவல்லமையுள்ள  தேவனுக்கு முழுமையான சேவையை வழங்குவதன் மூலம், அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அரசின் விவகாரங்களில் பெரும் நன்மைகளுடன் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எங்கள் மிகவும் மதிப்புக்குரிய அனுலினஸ் அவர்களே, இத்துடன் இந்த அறிக்கையை நிறைவுசெய்து உங்களிடமிருந்து விடைபெறுகிறோம்.

லிசினியஸின் முட்டாள்தனமும் தலைவிதியும்

8. எனவே, நமது இரட்சகரின் வருகையானது தெய்வீக மற்றும் பரலோக வெகுமதியையும் சமாதானத்தையும் எங்களுக்கு அளித்தது மட்டுமன்றி, அனைத்து மக்களுக்கும் அபரிமிதமான நன்மைகளையும் கொண்டு வந்தது. இதன் விளைவாக, எங்கள் மகிழ்ச்சி சந்தோஷம் தரும் விழாக்களுடன் கொண்டாடப்பட்டது. இருப்பினும், மேலே பட்டியலிடப்பட்ட கொடுங்கோலர்களான மாக்சிமின் மற்றும் மாக்சென்டியஸ் ஆகியோரது   மதிநுற்பம் லிசினியஸின் தவறான செயல்களைக் கண்டுபிடிக்க போதுமானதாக இருக்கவில்லை. ஏனென்றால் நல்லதை வெறுக்கும் பொறாமை மற்றும் தீமையை விரும்பும் சாத்தான் போன்றவைகளால்  அத்தகைய நற்செயல்களைப் பார்க்க சகிக்கவில்லை. அவர் செழிப்பான காலப்பகுதியில், புகழ்பூத்த மனிதரான கொன்ஸ்டன்டைனுக்கு அடுத்தபடியாக பேரரசர் பதவியைப் பெற்றிருந்தார். இந்த மிக உயர்ந்த மனிதருடன் திருமணம் வழியாக ஏற்பட்ட தொடர்பு காரணமாக கொன்ஸ்டன்டைனுக்கு உறவினரானார். இருப்பினும், அவர் நல்ல மனிதர்களின் முன்மாதிரியைக் கைக்கொள்ளாது, மிலேச்சத்தனமான கொடுங்கோலர்களின் கொடிய முட்டாள்தனத்தைப் பின்பற்றினார். அவர் தனது உயர் மட்டத்தில் உள்ளவர்களுடன் நட்போடும், மரியாதையையும், கௌரவத்தையும்  பகிர்ந்து கொண்டு இருப்பதற்குப் பதிலாக, எவருடைய தோல்விமிகுந்த முடிவுகளைத் தன கண்களால் கண்டாரோ, அவர்களது வழியையே  பின்பற்ற உறுதிபூண்டிருந்தார். பொதுவான பயனாளியின் மீது பொறாமை கொண்ட அவர், அனைத்து இயற்கை விதிகள், வாக்குறுதிகள், குடும்ப உறவுகள் மற்றும் ஒழுக்கவிதிகளைப் புறக்கணித்து, அவர் மீது ஒரு கறைபடிந்த, முழுமையான யுத்தத்தைப் பிரகடனம் செய்தார். கொன்ஸ்டன்டைனைப் பொறுத்தவரை, அவர் மிகவும் கருணையுள்ள ஒரு பேரரசர். லிசினியசுக்கு நல்லெண்ணத்தின் உண்மையான அடையாளங்களைக் கொடுத்தார். தனது சகோதரியுடன் கொண்டிருந்த புனிதமான உறவு காரணமாக, அவளது சகோதரனான லிஸினியசுனுடன் எவ்வித வைராக்கியமும் கொள்ளாதிருந்தார். மாறாக, தனது மூதாதையர்களின் பிரபுத்துவத்திலும், அவர் பெற்றிருந்த ஏகாதிபத்திய பாரம்பரியத்திலும் பங்கு கொள்ளத் தகுதியானவர் என்று லிஸினியசை தவறாக எடைபோட்டுவிட்டார். அவரது மைத்துனர் மற்றும் கூட்டுப் பேரரசராக இருந்ததால், அவருக்கு இறையாண்மை அதிகாரத்தில் பங்கு வகிக்கவும் உரோமைய இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலங்களில் சமமாக ஆட்சி செய்யும் அதிகாரங்களையும் வழங்கினார். எவ்வாறாயினும், லிசினியஸ் அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டார்: நாளுக்கு நாள் 317-3: அவர் தனது மேலாளருக்கு எதிராக திட்டங்களை வகுத்தார், தீமையின் மூலம் தன்னை ஆதரிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்க திட்டமிட்டார். முதலில், அவர் தனது சதிகளை மறைக்க முயன்றார் மற்றும் துரோகம் மற்றும் வஞ்சகத்தின் மூலம் தனது இலக்கை அடைய நம்பிக்கையுடைய ஒரு நண்பராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். இருப்பினும், கடவுள் கொன்ஸ்டன்டைனின் நண்பராகவும், பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் மாறினார். அவருக்கெதிராக பின்னப்பட்ட சதிகளை வெளிப்படுத்தினார். அவரது வலிமையான தெய்வீக ஆயுதத்தால் அந்த சதிகளையும் சூழ்ச்சிகளையும் முறியடித்தார். இது அவருக்கு எதிராக செயல்பட்ட எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்கவும், தனது சொந்த ஆட்சியைப் பாதுகாக்கவும் துணையாக இருந்தது. கடவுளால் பாதுகாக்கப்பட்ட, எங்கள் மிகவும் பிரியமான பேரரசர் இந்த மோசமான சூழ்ச்சியாளரின் சதித்திட்டங்களைத் தவிர்த்துவிட்டார். கொன்ஸ்டன்டைனுக்கு எதிராகத் தீட்டப்பட்ட தனது இரகசியச் சதித்திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை என்பதை உணர்ந்த லிசீனியஸ்,  வெளிப்படையாகப் போரை அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான். இதன் காரணமாக, தனது பிரியத்துக்குரிய பேரரசரிடம், கடவுள் அவரது எதிரியின் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தினார்.  கொன்ஸ்டன்டைனை எதிர்த்துப் போரிடத் தீர்மானித்ததில், அவர் ஏற்கனவே [அவனது எதிரியாகக் கருதிய கொன்ஸ்டன்டைன் வணங்கும் பிரபஞ்சத்தின் கடவுளுடன் போரைப் பிரகடனம் செய்தான். இருப்பினும் அவர் தனக்கு கையளிக்கப்பட்ட ஆட்சிக்கு ஒருபோதும் தனது விசுவாசமின்மையைக் காட்டாமல், தனது புனிதமான குடிமக்களுக்கு எதிராக முதலில் இரகசியமாகவும், விவேகமாகவும் ஒரு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டான்.  அவர் இந்த நடவடிக்கையை எடுப்பதற்குக் காரணம் ஏனென்றால் அவர் பிறவியிலே ஒரு ஊழல்வாதியாகப் பிறந்தார் என்பதனால். அத்தோடு அவர் பயங்கரத் திமிரும், ஆணவ வெறியும் உடையவராக இருந்தார். இது முன்னாளில்  கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியவர்களின் பெயர்களையோ அல்லது அவர்களின் தீய குற்றங்களுக்காக தனிப்பட்ட முறையில் கொல்லப் பட்டவர்களின் பெயரையோ நினைவில் கொள்வதற்குத் தடையாக இருந்தது. விவேகம் மற்றும் பகுத்தறிவின் பாதையிலிருந்து விலகிச் சென்ற அவர், முற்றிலும் வெறிகொண்டவராய் இவரை ஒருகாலத்தில் பாதுகாத்த, கொன்ஸ்டன்டைனின் பாதுகாவலராக இருந்த கடவுளின் மீதே போர் தொடுக்கத் தீர்மானித்தார்.

முதலாவதாக, அவர் அனைத்து கிறிஸ்தவர்களையும் தனது குடும்பத்திலிருந்து வெளியேற்றினார், இதன் மூலம் கடவுளுக்கு அவர் சார்பாக மன்றாட அவர்களின் முன்னோர்கள் கட்டளையிட்ட ஜெபங்களை – அடிமுட்டாளான அவன் – இழந்து விட்டான். பின்னர், நகரத்திற்கு நகரம் சென்று சாத்தானுக்கு பலி கொடுக்க மறுப்புத் தெரிவித்தால், அவ்வாறான இராணுவ வீரர்களைத் தேடி, தனிமைப்படுத்தி, அவர்களின் பதவியை பறிக்கும்படி கட்டளையிட்டார்.

ஆனால் கடுமையான நடவடிக்கைகளுடன் ஒப்பிடும் போது இவை அற்பமானவை. இந்த கடவுளை வெறுப்பவரின் செயல்களை ஒவ்வொன்றாக குறிப்பிடுவது அல்லது இந்த தீய சட்டவிரோதிகளால்   சட்டவிரோத சட்டங்கள் எவ்வாறு வகுக்கப்பட்டன என்பன குறித்து விரிவாக அலசி ஆராயத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. . சிறையில் துன்பப்படுபவர்களுக்கு உணவு கொடுத்து மனிதாபிமானத்துடன் நடத்துவதும், சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பட்டினியால் மடிந்து கொண்டிருக்கும் கைதிகள் மீது கருணை காட்டக்கூடாது என்றெல்லாம் அவர் உண்மையில் ஆணையிட்டார். அயலவரிடம் அனுதாபம் காட்டுவதற்கு இயற்கையான விருப்பத்தால் தூண்டப்பட்டாலும், யாரும் எவ்வித இரக்கத்தையும் காட்டவில்லை. அவருடைய சட்டங்களில் ஒன்று மிகவும் கொடூரமானது மற்றும் வெட்கக்கேடானது, ஏனெனில் அது அனைத்து அறநெறிகளையும் நாகரீகக் கோட்பாடுகளையும் தகர்த்தது. எவர் மீதாவது பரிதாபம் காட்டுபவர்கள், அந்த பரிதாபத்துக்குரியவர்கள் அனுபவிக்கும் அதே தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், மனிதாபிமான உதவியை வழங்குபவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட வேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. அவ்வாறான தண்டனைகள் விதிக்கப் பட்டவர்களோடு சேர்ந்து மனிதாபிமான உதவியை வழங்குபவர்கள் தண்டனையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன போன்றவை தான் லிசினியஸின் கொடூரமான கட்டளைகளாகக் காணப்பட்டன.

திருமணம் தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள் அல்லது இந்த வாழ்க்கையைப் பிரிந்தவர்களைப் பற்றிய அவரது தீவிர மாற்றங்களை நான் கணக்கில் எடுக்க வேண்டுமா? நன்கு நிறுவப்பட்ட மற்றும் பழமையான உரோமைய விதிகளை இரத்துச் செய்து, நாகரீகமற்ற, காட்டுமிராண்டித்தனமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான விதிமுறைகளைக் கொண்டு அவற்றை மாற்றும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அவர் தனது குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணற்ற மதிப்பீடுகளை மேற்கொண்டார். பாரிய அளவிலான தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை ஒப்படைக்குமாறு கோரியது மட்டுமன்றி, காணிகளை மீள்மதிப்பீடு செய்தார். மேலும் வாழ்ந்து கொண்டிருந்தவர்களிடம் மட்டுமல்ல, நீண்டகாலத்துக்கு முன் இந்த உலகை விட்டுப்பிரிந்த கிராமப்புற வாசிகளிடம் கூட அபராதம் வசூலித்து அதன் மூலம் பணம் சம்பாதித்தார். மனித குலத்தின் மீது வெறுப்பை உமிழும் இந்த வெறுப்புணர்வு மிக்க ஈவிரக்கமற்ற அரக்கனை விரட்டியடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட  அப்பாவி மக்கள் பலர் இருந்தனர். உயர்ந்து நிலையில் உள்ள சில மரியாதைக்குரிய மற்றும் கணவான்களுடைய சட்டபூர்வ மனைவிமாரைப் பலவந்தமாக அவர்களிடமிருந்து பிரித்து, அந்த அப்பாவிப் பெண்களை  இவனுடைய கீழ்த்தரமான உறவினர்களான சில காமுகர்களிடம் ஒப்படைத்து, அந்தப் பெண்களை அவமானத்துக்கும் மானபங்கத்துக்கும் ஆளாக்கிய இந்த ஈனப்பிறவி தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்த மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அதேநேரம், பல திருமணமான பெண்களிடமும் மற்றும் திருமணமாகாத கன்னியர்களிடம் இந்த குடிகார காமுகன் தனது கட்டுக்கடங்காத காம இச்சையை தீர்த்துக்கொண்ட அந்த மிலேச்சத்தனத்தை நோக்குகையில், அவனால் முன்பு அரங்கேற்றப்பட்ட ஈனச் செயல்களுடன் தற்போதைய அவனது இழிவான செயல்களை ஒத்துநோக்கும் போது, முன்னயவை அற்பமானவை என்றும் தற்போதையவை கொடூரமானவை என்றும் அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை என்றும் தோன்றும்போது நான் ஏன் இந்த விஷயங்களை விரிவுபடுத்த வேண்டும்?

அவரது பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டத்துக்கு சென்று, ஆயர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அவர் தனது செயல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் ஆயர்கள் சர்வவல்லமையுள்ள கடவுளின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். அவர்களுக்கு எதிராக சதி செய்யத் தொடங்கினார். முதலில் தனது மேலதிகாரிக்கு பயந்து இரகசியமாக செய்தவர், பின்னர், கண்டுபிடிக்க முடியாத  தந்திரத்துடன் அவரது கைங்கரியத்தை நிறைவேற்றி வந்தார்: ஆளுநர்களுடன் கூட்டு சேர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டு, மிகவும் மதிப்புமிக் ஆயர்களைக் கொன்று குவித்தார். அவர்கள் கொல்லப்பட்ட விதம் மிகவும் குரூரமானதாகவும், இதற்கு முன் கேள்விப்படாததாகவும் இருந்தது. மேலும் அமாசியா மற்றும் பொன்டஸின் ஏனைய நகரங்களில் நடைபெற்றவை கொடுமையின் ஒவ்வொரு உச்சத்தையும் தொட்டதாக அமைந்திருந்தது. அங்குள்ள சில தேவாலயங்கள் மீண்டும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. மற்றவை வழிபாட்டாளர்கள் ஒன்றுகூடி கடவுளுக்குச் செலுத்த வேண்டிய சேவையைத் தடுக்கும் வண்ணம் பூட்டப்பட்டிருந்தன. அம்மக்களுடைய  பிரார்த்தனைகள் தாம் சார்பாகச் செய்யப்பட்டதாக அவர் நினைக்கவில்லை – இது ஒரு குற்றமுள்ள மனசாட்சியின் நியாயவாதம் – ஆனால் அவர் மிகவும் நேசித்த பேரரசருக்காக நாங்கள் செய்த அனைத்து பிரார்த்தனைகளையும் கடவுள் ஏற்றுக்கொண்டார். இதனால்தான் இந்த கொடுங்கோலன் எங்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த படுபாதகன் விரும்பியதைச் செய்கிறோம் என்று உறுதியாக நம்பிய அவனது அடிவருடிகளாகவும் கைக்கூலிகளாகவும் அவனை அண்டிப்பிழைக்கும் ஆளுநர்களில் சிலர், முழுக்க முழுக்க அப்பாவியான  ஆயர்களை குற்றவாளிகள் போல் கைது செய்து, கொலைகாரர்களைப் போல நடத்தி எவ்வித காரணங்களும் இல்லாமல் தூக்கிலிட்டனர். சிலர் இன்னும் கொடூரமான மரணத்தை அனுபவித்தனர்: அவர்களின் உடல்கள் வாளால் பல துண்டுகளாக வெட்டப்பட்டன. இந்த கொடூரமான, பயங்கரமான பாதகத்தை நிகழ்த்திய பிறகு, அவர்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாக ஆழ்கடலுக்குள் வீசப்பட்டனர். இந்த மிலேச்சத்தனமான கொடூரம் கடவுளுக்கு சேவை செய்யும் அவரது ஊழியர்களை மீண்டும் தப்பித்து ஓடச் செய்தது. வயல்களும் பாலைவனங்களும் பள்ளத்தாக்குகளும் மலைகளும் கிறிஸ்துவின் ஊழியர்களுக்கு அடைக்கலமாக அமைந்தன.

இவ்வாறான முதற்கட்ட நடவடிக்கைகளில் இந்த பாதகன் வெற்றி பெற்ற பிறகு, அனைவருக்கும் எதிராக ஒரு பொதுவான துன்புறுத்தலைப் புதுப்பிக்க திட்டமிட்டார். இதைச் செய்வதற்கான சக்தியும் வளமும்  அவரிடம் இருந்தது. ஆகவே அவர் அதைச் செயல்படுத்துவதை எதுவும் தடுக்கமுடியாமலிருந்து. ஏனினும் ஆன்மாக்களின் காவலரான கடவுள் வரவிருக்கும் ஆபத்தை விரைவாக முன்கூட்டியே கணிக்காமல் இருந்திருந்தால், அங்கு நடக்கவிருந்த பேரழிவை எவராலும் தடுத்து நிறுத்தியிருக்க முடியாமற் போயிருக்கும். அந்த சமயத்தில் தான், ஒரு  இருண்ட மற்றும் நீண்ட இரவில், தேவன் ஒரு பாரிய ஒளி மற்றும் மீட்பராக அவர்கள் அனைவருக்கும் பிரகாசிக்கச் செய்தார். அவரது உயர்த்தப்பட்ட கை அவரது ஊழியனாக கொன்ஸ்டன்டைனை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது. அவருக்கு, அவருடைய பக்திக்கான தகுதியான பலனாக, கடவுள் தீமை செய்யும் பாதகர்களுக்கு எதிரான வெற்றியின் கேடயங்களை விண்ணகத்தில் இருந்து அருளினார். அதன்மூலம் அவர் சகல குற்றவாளியையும், அவனது அனைத்து ஆலோசகர்கள், சகாக்கள்  மற்றும் நண்பர்களுடன் சேர்த்து, கொன்ஸ்டன்டைனின் காலடியில் விழவைத்தார்.

வெற்றிவாகை சூடிய கொன்ஸ்டன்டைன்

லிசினியஸ் தனது கொலைவெறிக் கலாச்சாரத்தை வரம்பிற்கு அப்பால் கொண்டு சென்றபோது, கடவுளின் நண்பரான கொன்ஸ்டன்டைன் இதைத் தாங்கிக்கொள்ள முடியாதவராயிருந்தார். நியாயமான காரணத்துடனும், மனிதாபிமானத்துடன் நீதிக்கான கோரிக்கைகளை முன்வைத்தும், கொடுங்கோலரால் அங்கிருந்து துரத்தப்பட்டவர்களைக் காப்பாற்றத் தீர்மானித்தார். மேலும் அவர் சில நாசக்காரர்களை முடக்கி, பெரும்பாலானோரை, அதாவது விரட்டியடிக்கப்பட்ட அப்பாவி மக்களைக் காப்பாற்ற விரைந்தார். முன்னதாக, பேரரசர் கொன்ஸ்டன்டைன் லிசினியஸ் மீது தனது மனிதாபிமானத்தையும் கருணையையும் காட்டியபோதும், ​​அவன் திருந்தவுமில்லை அவனது கீழ்த்தரமான நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவும் இல்லை: அப்படியிருந்ததும் அவன் தனது மிலேச்சத்தனத்தை கைவிட வில்லை. அதன் விளைவாகவே தனது குடிமக்கள் மீது தனது கொலை வெறித்தனமான கோபத்தை வெளிப்படுத்தியவண்ணமே இருந்தான். எனவே, நன்மையின் மீது அன்பும், தீமையின் மீது வெறுப்பும் கொண்டு, நன்மையின் காவலன், மிகவும் மனிதாபிமானமுள்ள தனது இளவரசனான அவனது மகன் கிறிஸ்பஸுடன் அழிந்து கொண்டிருந்த அனைவரையும் மீட்கும் நோக்கில் உதவிக்கரம் நீட்டுவதற்காக புறப்பட்டான்.

பின்னர் எல்லாம் வல்ல தேவனும், உன்னத இறை அரசரும், அனைவரின் இரட்சகருமான கடவுளின் குமாரனாகிய இயேசுவையும், தங்கள் வழிகாட்டியாகவும், பங்காளர்களாகவும் கொண்டு, தந்தையும் மகனும் கடவுளை வெறுப்பவர்களுக்கு எதிராக தங்கள் படைகளை பிரித்து எல்லா பக்கங்களுக்கும் அனுப்பி, நிலைகொள்ளச் செய்து, வெற்றியை எளிதாக அடைந்தனர். கடவுள் தனது நோக்கத்திற்கு இணைவாக செயலாற்றிய அனைவருக்கும் உதவினார். நேற்று வரை அச்சுறுத்தல்கள் மற்றும் மரணத்தை சுவாசித்தவர்கள், இப்போது அந்த இழி நிலையில் இல்லை: அவர்களின் பெயர்கள் கூட அவர்களுக்கு மறந்துவிட்டன. அதே நேரத்தில் கொடுங்கோலர்கள் உருவப்படங்களும் மரியாதை சின்னங்களும் தகர்தெறியப்பட்டன. லிசினியஸ் தனக்கு முன் இருந்த தீய ஆட்சியாளர்களுக்கு நேர்ந்ததைத் தன் கண்களால் கண்டும், தன் முன்னோடிகளான கொடுங்கோலர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களைப் பார்த்தும் தன்னைத் திருத்திக் கொள்ளவோ அல்லது எவ்விதமான தெளிவையும் பெற்றுக் கொள்ளவோ இல்லை. ஏனெனில், அவர்களைப்போலவே இவனும் அதே பொல்லாத பாதையைத் தேர்ந்தெடுத்ததால் அவன் தோண்டிய பள்ளத்தில் அவனே விழ நேரிட்டது. அவரது [லிசினியஸ்] எதிரியான, வலிமைமிக்க வெற்றியாளர் கொன்ஸ்டன்டைன், தெய்வீகதனத்தின் சகல நற்பண்புகளிலும் மிகச் சிறந்தவராக விளங்கினார்.  அத்தோடு அவரது மகன் கிறிஸ்பஸ், கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவனாகவும், தனது தந்தையைப் போன்றே ஒரு சிறந்த ஆட்சியாளர். தங்கள் சொந்த கிழக்கு மாகாணங்களை மீண்டும் கைப்பற்றி கடந்த காலத்தைப் போலவே உரோமைய சாம்ராச்சியத்தை ஒருங்கிணைந்த ஒரு அலகுக்குள், ஒரே பேரரசுக்குக் கீழ் கொண்டுவந்தனர். முன்னைய காலத்தைப் போலவே, சூரிய உதயத்திலிருந்து வெகு தொலைவில் நிகழும் சூரிய அஸ்தமனம் வரை, வடக்கிலிருந்து தெற்காக ஒரு பரந்த வளைவில் அனைத்தையும் அவர்களின் அமைதியான ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். மக்கள் இப்போது தங்கள் முன்னாள் அடக்குமுறையாளர்களைப் பற்றிய அனைத்து பயத்திலிருந்தும் விடுபட்டு அற்புதமான பண்டிகைகளைக் கொண்டாடினர் மற்றும் மகிழ்ச்சியின் ஒளி எங்கும் காணப்பட்டது. ஒருகாலத்தில் ஒருமுறை மனச்சோர்வடைந்த மக்கள் சிரித்த முகத்துடனும், பிரகாசிக்கும் கண்களுடனும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ந்தனர். நகரங்கள், கிராமங்கள் மற்றும் நாட்டின் எல்லாப்பாகங்களும் நடனம் மற்றும் பாடல்களால் களைகட்டியது. அவர்களுக்கு அறிவுறுத்தியபடி முதலில் உன்னதமான இறை தந்தைக்கும், கர்த்தருக்கும் பின்னர் கடவுளுக்குப் பிரியமான பேரரசருக்கும் அவருடைய மகன்மாருக்கும் மரியாதையையும் கௌரவத்தையும் அளித்தனர். பழைய தொல்லைகள் மறைந்தன. எல்லா துரோகங்களும், குரோதங்களும் காணாமற்போயிருந்தன; நல்ல விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டன. இன்னும் முன்னால் வரவிருக்கும் பல நன்மைகளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். வெற்றிபெற்ற பேரரசர் எல்லா இடங்களிலும் உண்மையான பக்தி மற்றும் தாராளமயத்தை உள்ளடக்கி இயற்றப்பட்ட மனிதாபிமான சட்டங்களையும் கட்டளைகளையும் அறிவித்தார். இவ்வாறு, அனைத்து சர்வாதிகாரமும் அழிக்கப்பட்டது, மேலும் அவர்களது இராச்சியம் கொன்ஸ்டன்டைன் மற்றும் அவரது மகன்மாரின்  பாதுகாப்பான கைகளில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. முதன் முதலில் அவர்கள் கடவுளுக்கு எதிராக பகைமை பாராட்டிய உலகத்தை விடுவித்து, தேவன் தங்களுக்கு வழங்கிய அனைத்து நன்மைகளையும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, நல்லொழுக்கம் மற்றும் கடவுள் மீதுள்ள அன்பையும், சர்வவல்லமையுள்ள தேவனின் மீதும் கொண்டுள்ள பக்தியையும் நன்றியையும் தங்கள் நற்கிரியைகள் மூலம் அனைவரும் பார்க்கும்படி வெளிப்படுத்தினார்கள்.

யூசேபியசும் கொன்ஸ்டன்டைனும்

யூசிபியஸ் தனது வெற்றிக்காகவும், கொன்ஸ்டன்டைனைப் புகழ்ந்தமைக்காகவும் தொடர்ந்து விவாதத்துக்குளாகி வருகிறார். அனைத்து விவாதங்களுக்கும் அப்பால், “கடவுளுக்குப் பிரியமான பேரரசர்” போன்ற கவர்ச்சிமிக்க அடைமொழிகள் தற்கால வாசகரைக் கவர்கின்றன. 337 இல் பேரரசரின் மரணத்தைத் தொடர்ந்து யுசேபியஸ் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட கொன்ஸ்டன்டைன் அவர்களுக்கு புகழாரம் சூட்டும் வரலாறு அதே பாணியில் தொடரும். விமர்சனம் செய்வதை அதிகரிப்பதற்குப் பதிலாக, யூசிபியஸின் நிலைமையில்  இருந்து ஒருவர் இவற்றைக் காண்பது நன்றாக இருக்கும். அவர் அந்த சந்தர்ப்பத்தில் நடந்தேறிய துன்புறுத்தல்களைப் பற்றி எழுதிய ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல், அவரது ‘திருச்சபை வரலாறு’ என்ற நூலின் கடைசி தொகுதிகளில் சிறையில் இருந்தபோது அவர் தானே அனுபவித்த துன்பங்களையும் கொடுமைகளையும் விவரிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் ஓரிஜென் அல்லது கொன்ஸ்டன்டைனுக்கும் மேலாக அவர் குறிப்பிட்ட மற்றைய ஒரு மனிதரும் அடங்குவார்: அவர் தான் சிசேரியாவில் அவரது அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவராயிருந்த ஆசிரியர் பொம்பிலஸ். தொடர்ச்சியான நிலவி  வந்த சகிப்புத்தன்மைக்குப் பிறகு மூர்க்கத்தனமான துன்புறுத்தல்கள் கிழக்கில் மீண்டும் ஆங்காங்கே நடந்து கொண்டே இருந்தன. எனினும், இவ்வகையான கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எவரோ ஒருவர் இறுதியாக முற்றுப்புள்ளி வைத்தபோது, அது  ஒருவேளை கொன்ஸ்டன்டைனாகத்தான் இருக்குமோ என்ற உள்ளார்த்தத்தில் யூசேபியஸ் கொன்ஸ்டன்டைனை பிரமிப்புடன் நினைவுகூர முனைவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

முழுமையான சான்றளிக்கப்பட்ட முதல் கிறிஸ்தவ பேரரசரான கொன்ஸ்டன்டைன், யூசிபியஸால் மேற்கோள் காட்டப்பட்டிராத சில எதிர்மறையான பண்புகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான ஆளுமையை உடையவராயிருந்தார். உரோமைய பன்மத வழிபாட்டை மீட்டெடுப்பதில்  தோல்வியுற்ற, 361 முதல் 363 வரையில் ஆட்சியிலிருந்த அரசனும் நம்பிக்கைத் துரோகியான அவரது மருமகன் ஜூலியன் முதற்கொண்டு, பிற்கால விமர்சகர்கள் மற்றும் பிற்கால தலைமுறையினர் இதை பெருப்பித்துக் காட்டக்கூடும். எட்வர்ட் கிப்பனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, உரோமையப் பேரரசின் வீழ்ச்சிக்கு கொன்ஸ்டன்டைனைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று, சார்திஸின் யூனாபியஸ் தனது மாமனிடம் கிண்டலான கருத்துக்களை தெரிவித்திருந்தான். 500 ஆம் ஆண்டில், உரோமைய தலைநகராயிருந்த பைசண்டிய நகரவாசியான வரலாற்றாசிரியர் சோசிமஸ், இந்த வகையில் கொன்ஸ்டன்டைனின் கௌரவத் தோற்றத்தை மேலும் சிதைக்க யூனாபியஸைப் பயன்படுத்தினார். மேலும் அவரது கேலிச்சித்திரம் மறுமலர்ச்சியின் போது சில பிரிவினது ஆதரவைப் பெற்றது என்பதையும் மறுக்க முடியாது.

மிக சமீபத்தில், அதாவது, கடந்த நூற்றாண்டில் ஜேக்கப் பர்கார்ட் போன்ற சில வரலாற்றாசிரியர்கள், கொன்ஸ்டன்டைனின் மதமாற்றம் பற்றிய கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்தவம் சார்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மனசாட்சியின் அடிப்படையில் அல்லாமல், திரைமறைவில் அரசியல் அடிப்படையில் செய்யப்பட்டதாகக் கூறினர். இது அவரது தனிப்பட்ட இலட்சியங்களை அடைவதற்காக திருச்சபையை பயன்படுத்தியதாகவும் ஒரு அனுமானம் முன்வைக்கப் பட்டிருந்தது. கொன்ஸ்டன்டைன் உரோமையப் பன்மத வழிபாட்டுக்கு கொள்கையின் பொன்டிஃபெக்ஸ் மாக்சிமஸ் [ஆயர்கள், பேராயர்கள் போன்றோருக்கெல்லாம் பெரியவரான, பாப்பரசரின் பதவிக்கு ஒப்பான ஒரு மதப்பிரிவின் தலைவர்] என்பதால் அவரது சின்னத்தில் சோல் இன்விக்டஸ் (“வெற்றிகொள்ளமுடியாத சூரியனைப் போன்றவர்”) என்றும், அவர் உரோமில் பழங்கால புறமத வழிபாட்டு முறைகளை பகிரங்கமாக ஆதரித்தார் என்றும், அவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களையே தூக்கிலிட்டார் என்றும், தனது மரணப் படுக்கை வரை ஞானஸ்நானம் பெறுவதை ஒத்திவைத்தார் என்றும் மேற்கூறப்பட்ட வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், அநேகமான வரலாற்றாசிரியர்கள், கொன்ஸ்டன்டைனின் மதமாற்றம் உண்மையானது என்று கூறுகிறார்கள். மேற்கோள் காட்டப்பட்ட எதிர்மறை ஆதாரங்களைப் பார்க்கும்போது, பன்மதக் கொள்கைகளை ஆதரிக்கும் பெரும்பான்மையானவர்கள் உட்பட அனைத்து உரோமையக் குடிமக்களுக்கும் தான் பேரரசராக இருக்க வேண்டும் என்று கொன்ஸ்டன்டைன் உணர்ந்த அதேவேளை, அவர் பிரதான குருவானவர் என்ற பாத்திரத்தில் எந்த பங்கும் வகிக்கவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நாணய சின்னத்தில் இருந்த பன்மத  சின்னங்கள் அகற்றப்பட்டன. அவரது மகன் கிறிஸ்பஸின் மரணம் மற்றும் அவரது மனைவி ஃபாஸ்டாவின் (ஒருவேளை உதவியிருக்கலாம்) தற்கொலை போன்றவற்றின் மர்மமான சர்ச்சைகள் இன்னும்  தீர்க்கப்படாமலேயே உள்ளன. இருப்பினும் முன்னையவர் பற்றிய  பிந்தையவரின் தவறான குற்றச்சாட்டு இங்கே முக்கிய பங்கு வகித்ததாகத் தெரிகிறது. கொன்ஸ்டன்டைனின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை எப்போதும் கிறிஸ்தவ கொள்கைகளை பிரதிபலிக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை. எனினும், இது புறமதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறுவதில் ஈடுபட்டிருந்த ஒரு ஆட்சியாளரிடமிருந்து சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடியது தான். மேலும், இறையியல் ரீதியாக தவறாக இருந்தாலும், முந்தைய பாவங்கள் அனைத்தையும் சுத்திகரிப்பதற்காக வாழ்க்கையின் இறுதி வரை ஞானஸ்நானம் பெறக் காத்திருப்பது அக்காலத்தில் நிலவிய ஒரு பொதுவான சம்பிரதாயமாக இருந்தது.

கொன்ஸ்டன்டைன் ஒரு உண்மையான கிறிஸ்தவர் என்பதற்கான சான்றுகள் மிகப் பெரியவை. பண்டைய உலகில், நடைமுறையில் அனைவரும் ஏதோவொரு மதத்தை பின்பற்றினர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்: இன்று காணப்படுவதுபோல, மதத்திற்கு மதச்சார்பின்மை மாற்று எதுவும் அக்காலத்தில் இருந்ததில்லை. புறமத, பலதெய்வ வழிபாடு உரோமைய அரசை தோல்வியடையச் செய்திருந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி, உள்நாட்டு எழுச்சிகளையும் பேரரசின் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும். ஆகவே, கொன்ஸ்டன்டைனுக்கு மட்டுமல்ல, நான்காம் நூற்றாண்டில் பல உரோமையர்களுக்கு கிறிஸ்தவ ஏகத்துவம் ஒரு சிறந்த மத மாறுதலுக்கான தூணாக மாறியது.

ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த பிறகு, கொன்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தின் நலனுக்காக பல பங்களிப்புகளைச் செய்தார். அவற்றில் பல யூசிபியஸின் பதிவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் அனைத்தையும் இங்கு சேர்க்க முடியாத அளவுக்கு அவை மிகவும் அதிகமானவை. ஆயர்கள்  அடிக்கடி கொன்ஸ்டன்டைனுடன் ஒரே மேசையில் அமர்ந்து, உணவுண்டு அவரது பரிவாரங்களுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மேலும் கிறிஸ்தவ மதகுருமார்களுக்கு உரோமைய அரசில் குறிப்பிடத்தக்க சட்டரீதியான நன்மைகள், சலுகைகள் மற்றும் சில விதிவிலக்குகள் வழங்கப்பட்டிருந்தன.

அவரது தாயார் ஹெலனாவால் ஊக்குவிக்கப்பட்ட அவர், மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள ஒலிவ் மலை மற்றும் பெத்லஹேமில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களை புதுப்பித்தும் புனரமைத்தும் வந்தார். அதேநேரம், தேவாலயங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொக்கிஷங்களை மீட்டு அவற்றை மீண்டும் தேவாலய உடமைகளோடு சேர்த்தார். குறிப்பாக ஜெருசலேமில் உள்ள புனித கல்லறைத் தேவாலயம் பற்றி இங்கே விசேடமாகக் கூறவேண்டும். அவர் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களை ஆதரித்ததோடு, ஞாயிற்றுக்கிழமையை ஒரு புனித நாளாகப் பிரகடனம் செய்தார். உரோமைய பாரம்பரிய வாட்போர், சிலுவையில் அறைதல் பன்மத வழிபாட்டாளர்களால் பின்பற்றப்படும் ஜோசியம், குறிசொல்தல் ஆகியவற்றை எதிர்த்த அதேவேளை, திருமண பாரம்பரியத்தைப் பாதுகாத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு ஆழமான ஈடுபாடுகொண்ட கிறிஸ்தவராக வாழ்ந்தார் என்பதை அவரது உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள் சான்றளிக்கின்றன.

அவர் 314 இல் டொனாட்டிஸ்ட் [4 முதல் 7 ஆம் நூற்றாண்டுகளில் வட ஆபிரிக்காவில் காணப்பட்ட ஒரு பிளவுபட்ட கிறிஸ்தவ மதப்பிரில் ஏற்பட்ட குழப்பநிலை] சர்ச்சையைத் தீர்ப்பதற்காக ஆர்லஸ் சபையைக் கூட்டினார். மேலும் 325 இல் கொண்டாடப்பட்ட நைசியா சபைக்குத் தலைமை தாங்கினார், இது ஆரியன் மதங்களுக்கு எதிரான கொள்கையை ஏற்று நைசீன் அமைப்பை உருவாக்கியது.

அவர் தனது சக பேரரசர்களுக்கு கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த வேண்டாம் என்று ஒரு எச்சரிக்கையை அனுப்பினார். மேலும் இந்த பேரரசர்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் வெறும் விதண்டாவாதமான ஒரு பேச்சாக இருக்கப்போவதில்லை என்றும் எச்சரித்திருந்தார். எனினும், அவர் திருச்சபையின் உரிமைக்காக போராடுவதாகவும் கூறினார். அவர் தனது புதிய நகரமான நோவா ரோமாவை (புதிய உரோம், பின்னர் கொன்ஸ்டான்டினோபிள் என்று பெயரிடப்பட்டது) “வேதசாட்சிகளின்  கடவுளுக்கு” அர்ப்பணித்தார். மேலும் அங்கு பிரமிக்கத்தக்க  தேவாலயங்களை நிர்மாணித்தார். பேரரசின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் அவரது வெளியுறவுக் கொள்கையும் கூட கிறிஸ்தவ கொள்கைகளையே பிரதிபலித்தது. மேலும் நைசியா சபை அமர்வுகளுக்குப் பிறகு இரவு விருந்தில் ஆயர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, தன்னையும் ஒரு ஆயராக எண்ணிக்கொண்டு தன்னை ஒரு “தேவாலயத்திற்கு வெளியே உள்ளவர்களின்” ஆயர் என்று கேலியாகக் கூறினார்.

தனது தலைசிறந்த ஆய்வின் முடிவில், திமோதி டி. பார்ன்ஸ் அவர்கள் கொன்ஸ்டன்டைனின் வாழ்க்கையை சுருக்கமாகப் பின்வருமாறு கூறுகிறார்:

312 க்குப் பிறகு, கொன்ஸ்டன்டைன் தனது குடிமக்களுக்கு நல்லொழுக்கத்தைப் புகட்டுவதையும், கடவுளை வணங்கும்படி அவர்களை வற்புறுத்துவதையும் பேரரசரான தனது முக்கிய கடமையாகக் கருதினார்.  அவருடைய எல்லா தவறுகளுடனும், அதிகாரத்திற்கான அவரது இலட்சியம் தீவிரமாக அவரது மனதில் இருந்தபோதிலும், உரோமையப் பேரரசை கிறிஸ்தவத்தின் பேரரசாக மாற்றுவதற்கு கடவுள் தனக்கு ஒரு சிறப்பு பணியை வழங்கியுள்ளார் என்று அவர் உண்மையாக நம்பி அதை ஒரு கட்டளையாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

கொன்ஸ்டன்டைன் குறித்த சீரான, விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு உண்மைத்தண்மையைப் பற்றி பிரஸ்தாபிக்க யூசிபியஸ் ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. அன்றைய சபை அமர்வில் அவர் அதற்கு பதிலாக ஒரு புகழாரத்தை மட்டுமே முன்வைத்தார். எனவே, பர்கார்ட்டின் சந்தேகம் ஒரு பயனுள்ள எதிர்விளைவாக இருந்திருக்கலாம். இருப்பினும், கொன்ஸ்டன்டைன் என்ற கிறீஸ்தவர் பற்றிய யூசேபியஸின் கணிப்பு பர்கார்ட்டை விட மிகவும் துல்லியமானது. மேலும் இது எதிர்காலத்தை சிறப்பாக சித்தரிக்கும் ஒன்றாகும். அப்போதிருந்து, கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் தங்கள் சாதனைகளை கொன்ஸ்டன்டைனின் சாதனைகளுடன் ஒப்பிடுவதன் மூலம் மதிப்பிட்டுக்கொள்வார்கள்.  

இவ்வாறு, யூசிபியஸின் திருச்சபை வரலாறு ‘மகிழ்ச்சியான முடிவு’ என்ற பழமொழியுடன் வெற்றிகரமாக நிறைவுக்கு வருகிறது. எவ்வாறாயினும், ஆனால் ஆரம்பகால திருச்சபை வரலாற்றாசிரியரை ஒரு வெற்றியாளர் என்று ஒரு சதுரத்துக்குள் அடக்கி விடுவது, துன்புறுத்தலின் விளைவாக ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட துன்பங்களுக்கும் அவர்கள் அனுபவித்த சகிப்புத்தன்மைக்கும் ஒரு நன்றியற்ற தன்மையைக் காட்டுவதாகும். கொடுமைகளில் இருந்தும், ஆக்கினைகளில் இருந்தும் கொன்ஸ்டன்டைனின் பிரவேசம் காரணமாக உயிர் பிழைத்தவர்கள் அந்த பேரரசரிடம் போதுமான கருணை காட்டாததற்காக யூசேபியஸை விமர்சித்திருக்கலாம். எப்படியிருந்தாலும், யூசேபியஸ், எவ்வாறாயினும், இவை அனைத்திலும் தெய்வீகக் கிருபையின் சாயலைக் கண்டார். கிறிஸ்து முதல் கொன்ஸ்டன்டைன் வரையிலான இந்தக் கதை மற்றும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வந்த வாசகர்கள் அவரது கருத்துக்களைப் பகிர்ந்து அவற்றை முன்கொண்டு சென்றனர். இல்லையென்றால்,  ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் மூலம், அதாவது அச்சிடுதல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு எழுதப்பட்ட திருச்சபை வரலாறு, மற்றும் அதில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் இற்றைவரை தப்பிப் பிழைத்திருக்க முடியாது.