Cyprian of Carthage, Morality, in Tamil
ஏழாவது புத்தகம்: இறப்பு (Morality)
அத்தியாயம் 1
அன்பான சகோதரர்களே, உங்களில் பலரில், (Mortalities) என்ற சொல் பற்றி அறிந்திருக்கக்கூடும். இது பாரம்பரிய இலத்தீன் மொழியில் காணப்படுகிறது.[1] அங்கே ஒரு உறுதியான மனம், ஆழ்ந்த விசுவாசம் மற்றும் ஒரு பக்திமிக்க இயல்பு, ஒரு ஆன்மாவின் பிரசன்னத்தை அறியமுடியும். உலகின் கலவரங்கள் மற்றும் இந்த யுகத்தின் வன்முறை அலைகளை அது தகர்த்து விடும். அது ஒருபோதும் வலுவான மற்றும் அமைதியற்ற பாறையைப் போல உடைந்து போகாது. இது பல சோதனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டாலும், தோல்வியை சந்திப்பதில்லை. ஆனால் மக்களில் சிலர், தங்கள் மன பலவீனம் என்ற காரணத்தினாலோ, அல்லது நம்பிக்கையின்மை காரணமாகவோ, அல்லது உலக வாழ்க்கையின் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவோ, பாலுணர்வில் காணப்படும் பலவீனம் காரணமாகவோ, அல்லது, விசேடமாக, சத்தியத்திலிருந்து விலகிச் செல்வதன் மூலம், அவர்களின் தெய்வீக பலம் மற்றும் வெல்வதற்கரிய இதய வலிமையை வெளிப் படுத்துவதில்லை என்பதை நான் உணர்வுபூர்வமாக அறிந்திருந்தேன். இந்த உண்மையை புறக்கணிக்கக்கூடாது என்ற அதேவேளை, அதையிட்டு மௌனம் சாதிக்கவும் கூடாது. ஆனால் நம்முடைய பலவீனமான சக்தி போதுமானதாக இருக்கும் வரை, எமது மனதில் எழும் முழு வீச்சோடும், கர்த்தருடைய வார்த்தையில் மேற்கோள் காட்டப்பட்ட போதனைகள் வாயிலாகவும் நாம் எமது மனதில் கொண்டுள்ள வீண் ஆடம்பரம் மற்றும் கோழைத்தனத்தைபற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அத்தோடு, கடவுள் மற்றும் கிறிஸ்துவின் மனிதராக வாழத் தொடங்கிய ஒரு நபர், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் தகுதியானவராக அவரை நாம் கருத வேண்டும்.
அத்தியாயம் 2
ஏனென்றால், அன்புள்ள சகோதரர்களே, தேவனின் வீரர்களாக சேவை செய்பவர்களும், பரலோக முகாமில் இருப்பவர்களும், இப்போதும் தெய்வீக விடயங்களை எதிர்பார்த்திருப்பவர்களும், தங்களை அடையாளம் காண வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக, உலகில் வீசும் புயல்கள் மற்றும் சூறாவளிகளினால் ஏற்படும் பயத்தை எம்மால் தவிர்க்க முடியும். அவருடைய தீர்க்கதரிசனமான குரல் மூலம் எமக்கு எச்சரிக்கை விடுத்து, எம்மைக் கற்பித்து, எம்மைத் தயார் செய்து, எம்மைப் பலப்படுத்துகிறது என்பதால், திருச்சபையின் மக்கள் எதிர்காலத்தில் வரவிருக்கும் அனைத்து விளைவுகளையும் எவ்வித அச்சமும் இன்றி சகித்துக்கொள்ள முடியும். பல்வேறு இடங்களில் போர்கள், பஞ்சம், பூகம்பங்கள் மற்றும் கொள்ளை நோய்கள் ஏற்படும் என்றும், இதனால் எதிர்பாராத மற்றும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளால் ஏற்படும் பயம் போன்ற காரணிகள் எம்மை அசைக்க முடியாது என்பது பற்றியும் கர்த்தர் முன்னறிவித்தார். இறுதி நாட்களில் கஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் நெருக்கடிகள் அதிகரிக்கும் என்றும் அவர் எதிர்வு கூறியிருந்தார். நன்றாகக் கவனியுங்கள், ஏற்கனவே குறிப்பிட்ட விடயங்கள் படிப்படியாக நடந்தேறி வருகின்றன. அவ்வாறு முன்னறிவிக்கப்பட்ட விடயங்கள் நடந்தேறுவது போலவே, கர்த்தரால் வாக்குறுதியளிக்கப்பட்ட அனைத்தும் அவ்விதமே நிறைவேறும். கர்த்தர் தனது வாக்குறுதியின் ஊடே இவ்வாறு கூறுகிறார்: “இவை யாவும் நடப்பதை நீங்கள் காணும்போது, தேவனுடைய இராச்சியம் நெருங்கி விட்டது என்பதை அறிந்து கொள்வீர்கள்.”[2] அன்பான சகோதரர்களே, தேவனுடைய இராச்சியம் எம்மை நெருங்க ஆரம்பித்துவிட்டது. ஒரு காலத்தில் இழந்த வாழ்க்கையின் விளைவுகள், நித்திய இரட்சணியம், முடிவில்லா ஆனந்தம் மற்றும் மோட்சானந்தம் தற்போதைய உலகின் முடிவில் வரும்.[3] இப்போது உலக விடயங்களினால் வானகத்தின் மகிமைகள் மேலோங்கி காணப்படுகின்றன. அதாவது, சிறிய காரணிகளினால் பெரிய விஷயங்களையும், இடைநிலை காரணிகளால் சதாகால விடயங்களும் வெற்றிகொள்ளப் படுகின்றன. இங்கே மனக்கவலை மற்றும் சஞ்சலத்துக்கான தேவை இங்கே என்ன இருக்கிறது? நம்பிக்கையும் விசுவாசமும் இல்லாதவனைத் தவிர, இந்த பயம் மற்றும் துயரங்களுக்கு முகம் கொடுக்கக் கூடியோர் யார் இருக்கிறார்கள்? மரணத்திற்கு அஞ்சுபவர் கிறிஸ்துவிடம் செல்ல விரும்பாதவர் மட்டுமே. தாம் கிறிஸ்துவோடு தமது வாழவைத் தொடங்குகிறோம் என்று நம்பாத எவரும் கிறிஸ்துவிடம் செல்ல விரும்பாதவராகவே இருக்கிறார்கள்.
அத்தியாயம் 3
“நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்கிறார்கள்”[4] என்று எழுதப் பட்டுள்ளது. நீங்கள் ஒரு நீதியுள்ள மனிதராக இருந்து, விசுவாசத்தினாலே வாழ்ந்து, கிறிஸ்துவோடு ஒன்றித்து இருக்க வேண்டும் என்ற வாக்குறுதியால் இரட்சிக்கப்பட்ட நீங்கள் (இறைவனை) உண்மையாக நம்பி, கிறிஸ்துவால் அழைக்கப்படுவதில் மகிழ்ச்சி உடையவரான நீங்கள், சாத்தானின் பிடியில் இருந்து விடுதலை பெற்று இருப்பதில் ஏன் மகிழ்ச்சி கொள்ளக் கூடாது? உண்மையிலேயே சிமியோன் என்ற நீதியுள்ள மனிதர் கடவுளின் கட்டளைகளை முழு விசுவாசத்தோடு ஏற்று அவற்றுக்கு கீழ்ப்படிந்தார். கிறிஸ்துவைக் காண்பதற்கு முன் அவர் இறக்கமாட்டார் என்று வானகத்தில் இருந்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், கிறிஸ்து தன் தாயுடன் ஒரு குழந்தையாக தேவாலயத்திற்கு வந்தபோது, முன்பே அறிவிக்கப்பட்டது போல, கிறிஸ்து இப்போது பிறந்திருக்கிறார் என்றும், அவரைப் பார்த்ததும் விரைவில் இறந்துவிடுவார் என்றும் சிமியோனுக்கு முன்னறிவிக்கப்பட்டது என்பதையும் அவர் அறிந்து கொண்டார். ஆகவே, மிக விரைவில் நிகழக்கூடிய அவரது மரணத்தையிட்டு அவர் பெரும் மகிழ்ச்சி கொண்டார். அதேபோல், அவர் தான் இறக்கப்போவதை அறிந்து எவ்வித கலக்கமும் அடையவில்லை. அவர் தனது குழந்தையை தன்னோடு அழைத்துக்கொண்டு, இறைவனை நோக்கி உரத்த குரலில் இவ்வாறு கூறினார்: “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை நிம்மதியாக செல்ல அனுமதியும். ஏனென்றால், மீட்பின் ஒளியை பிற சாதியினர் மத்தியில் நீர் வெளிப்படுத்தப்படுவதையும், உமது சனமான இஸ்ரவேலர் இரட்சிக்கப் பட்டதையும் நான் கண்டேன்.[5] இந்த உலகத்தின் பிரளயங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, நம்முடைய அமைதியின் துறைமுகத்தை அடைந்த பின், அதாவது, சதாகால பாதுகாப்பை அடைந்த பின், மரணம் நிகழுமானால், நாம் அழிந்து போகாத நிலைக்கு திரும்பி உள்ளோம் என்பதை அறிந்ததும், கடவுளின் ஊழியர்களுக்கு சமாதானம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நிரந்தர சமாதானம் உள்ளது என்பதை அவர் நிரூபித்தது மட்டுமன்றி, அதையிட்டு சாட்சியமும் அளித்தார். ஏனென்றால் அது எமக்கு கிடைத்த சமாதானம், எமக்கு கிடைத்த ஸ்திரத்தன்மை மற்றும் தெளிவு. அது உறுதியானதும், நமக்கு கிடைத்த வலுவான மற்றும் நீடித்த பாதுகாப்பைத் தரக்கூடியதும் ஆகும்.
அத்தியாயம் 4
மற்றவர்கள், உலகில் ஒவ்வொரு நாளும் சாத்தானுக்கு எதிரான போராட்டத்தைக் கையிலெடுப்பதைத் தவிர வேறு என்ன செய்கிறார்கள்? அப்படியென்றால், எதிரியின் தந்திரோபாயங்களுக்கும் அவர்களால் உபயோகப்படுத்தும் ஆயுதங்களுக்கும் எதிரான தொடர்ச்சியான தற்காப்புப் போர் மற்றும் திருப்பித் தாக்குதல்களை நாம் தொடுத்துக் கொண்டு இருக்கிறோமா? நாம் ஆபாசத்துக்கு எதிரான, காமாந்திர வேட்கைகளுக்கு எதிரான, கோபத்துக்கு எதிரான, ஆசைகளுக்கு எதிரான போரை நடத்த வேண்டி உள்ளது. சரீரத்தின் தீமைகளுடன், உலகின் சோதனைகளுடனும், நாம் நிரந்தரமாகவும் மற்றும் உக்கிரமாகவும் போராட வேண்டி உள்ளது. சாத்தானின் சோதனைகளால் மனிதனின் மனம் எல்லா பக்கங்களிலும் சூழப்பட்டும் சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டும் வருகிறது. ஆகவே இந்த எதிரிகளைத் திருப்பித் தாக்குவதும், நிராகரிப்பதும், வெறுத்து ஒதுக்குவதும் கடினமான காரியமாகப் படுகிறது. நெறிதவரும் போது காம வேட்கை உச்சம் பெறுகிறது. காம இச்சை குறையும் போது, ஆசை அந்த இடத்தை நிரப்புகிறது. ஆசை வெறுக்கத்தக்க நிலையை அடையும் போது, கோபம் தூண்டப்படுகிறது. திமிர் மற்றும் தற்பெருமை மேலோங்குகிறது. குடிப் பழக்கத்துக்கு தூண்டப் படுகிறது. பொறாமையால் ஒற்றுமை நிர்மூலமாக்கப்படுகிறது. பொறாமை என்ற கூடாத குணம் நட்பை அழிக்கிறது. தெய்வீகக் கட்டளையால் தடை செய்யப்பட்ட நீங்கள் சபிக்க நிர்பந்திக்கப் படுகிறீர்கள்; தடைசெய்யப்பட்ட சத்தியத்தை செய்ய நீங்கள் நிர்பந்திக்கப் படுகிறீர்கள்.
அத்தியாயம் 5
எனவே, எமது மனம் ஒவ்வொரு நாளும் அதிக நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கிறது. மேலும், நமது இதயம் பல ஆபத்துக்களால் சூழப் பட்டுள்ளது. சாத்தானின் நாசகாரக் கணைகளுக்கு மத்தியில் நாம் நீண்ட காலம் இங்கு அவதியுறுவதைவிட, சீக்கிர மரணத்தின் வழியாக நாம், கிறிஸ்துவிடம் விரைவாக திரும்பிச் செல்ல ஏங்குவது எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அல்லவா? இறைவன் எம்மை இவ்வாறு எச்சரித்து அறிவுறுத்துகிறார்: “ஆமென், ஆமென், நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகம் இன்பமுற்றிருக்கும். நீங்கள் கவலையுடன் இருப்பீர்கள், ஆனால் உங்கள் கவலை மகிழ்ச்சியாக மாறும்.”[6] துக்கத்தில் இருந்து விடுபட இஷ்டம் இல்லாதோர் யாருளர்? விரைவில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாதோர் யார்? தற்போதைய நமது துக்கம் மகிழ்ச்சியாக மாறுவது பற்றி, நம்முடைய கர்த்தர் மீண்டும் நமக்கு இவ்வாறு சொல்கிறார்: “நான் உங்களை மீண்டும் காண்கிறேன், உங்கள் இதயம் மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் மகிழ்ச்சியை மனிதர்களால் உங்களிடம் இருந்து பறிக்க முடியாது.”[7] அந்தக் கணத்தில் இருந்து, கிறிஸ்துவை காண்பது எமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கிறிஸ்துவைக் காணாமல் நம்மில் எவரும் மகிழ்ச்சி அடைய முடியாது என்பதால், ஒருபோதும் நம்மிடமிருந்து ஒருக்காலும் பறிக்க முடியாத மகிழ்ச்சியை விரைந்து பெறுவதை விட, உலகின் ஆசைகள், தண்டனைகள் மற்றும் கண்ணீரை நேசிப்பது எத்தனை குருட்டுத் தனமான ஒரு செயல்? அது எப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனம் என்று தோன்றவில்லையா?
அத்தியாயம் 6
எனவே, அன்பான சகோதரர்களே,விசுவாசம் இல்லாததால் தான் இவை யாவும் நடக்கின்றன. இறைவன் வாக்குறுதி அளித்தவை உண்மை என்று எவரும் நம்பவில்லை. அவருடைய வார்த்தைகள் சதாகாலமும் உயிருள்ளவை, சத்தியத்தை விசுவாசிப்பவர்களிடம் அவை உறுதியாக இருக்கின்றன. ஒரு சக்திவாய்ந்த மற்றும் புகழ்பெற்ற ஒரு மனிதர் உங்களுக்கு ஏதாவது வாக்குறுதி அளித்தால், அவருடைய வாக்குறுதியில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, அவருடைய வார்த்தைகளையும் செயல்களையும் அனுசரித்துப் போகும் நீங்கள், அவர் உங்களுக்குத் தெரிந்தவர் என்பதால், உங்களை ஏமாற்றுவார் அல்லது உங்களை வஞ்சிப்பார் என்று நீங்கள் சந்தேகம் கொள்ள மாட்டீர்கள். கடவுள் உங்களிடம் பேசுகிறார். நீங்கள் நம்பிக்கையற்ற மனதுடன் இருப்பவராக இருந்தால், அப்போதும் கூட நீங்கள் உங்கள் மனதில் விசுவாசம் இழந்தவர்களாக இருக்கக்கூடுமோ? நீங்கள் இந்த உலகத்தை விட்டு வெளியேறிய பின், அழியாத தன்மையையும், நித்திய வாழ்வையும் கடவுள் உங்களுக்கு அளிக்க உறுதியளித்துள்ளார். நீங்கள் அதை நம்பமாட்டீர்களா? இது இறைவனைப்பற்றி உங்களுக்குள் இருக்கும் அறியாமை. இது போன்ற அவநம்பிக்கை, விசுவாசத்தின் குருவான கிறிஸ்துவை அவமதித்து, அவரைப் புண்படுத்திய பாவத்துக்கு ஆளாக நேரிடும். இது, ஒருவர் திருச்சபையைச் சார்ந்திருந்தாலும், அந்தத் தேவ சபையின் மீது அவர் விசுவாசம் கொள்ளாது இருப்பதற்கு சமம்.
அத்தியாயம் 7
மீட்பு மற்றும் நல்வாழ்வின் குருவான கிறிஸ்துவே தன்னை வெளிப் படுத்திக்கொள்ளும் போது உலகை விட்டு வெளியேறி நாம் அவருடன் சங்கமிப்பது எவ்வளவு நன்மை பயக்கும்? அவர் தான் போகப்போவதாக சொன்னபோது, அவருடைய சீடர்கள் கவலை கொண்டனர். அதற்கு அவர் அவர்களை பார்த்து: “நீங்கள் என்னை நேசிப்பதாயிருந்தால், நான் பிதாவிடம் செல்கிறேன் என்பதையிட்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.”[8] என்று கூறினார். எனவே, நம்முடைய அன்புக்குரியவர்கள் இந்த உலகத்திலிருந்து பிரிந்திருக்கும் போது, சோகத்திற்குப் பதிலாக நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தனது கற்பித்தலினூடாக அவர் காட்டினார். இதைக் காரணத்தைக் கருத்தில் கொண்டு, புனித அப்போஸ்தலர் இவ்வாறு எழுதுகிறார்: “எனது வாழ்வுக்கு ஆதாரம் கிறிஸ்துவே; ஆகவே மரணம் எனக்கு நன்மை அளிக்கிறது.”[9] நாம் இந்த உலகத்தின் வலையில் விழக்கூடாது, இனி சரீரத்தால் செய்யக்கூடிய எந்த பாவத்திற்கும் குற்றத்திற்கும் ஆளாகாமல், அதற்கு பதிலாக துன்ப வேதனையிலிருந்து விடுபட்டு, சாத்தானின் சூழ்ச்சிமிக்க கொடிய வலையில் அகப்படாது, நித்திய இரட்சணியத்தை அளிக்கும் கிறீஸ்துவின் வருகையிலும், கிறிஸ்துவுடன் பயணிப்பதற்கான உயர்ந்த பாக்கியத்தில் நாம் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.
அத்தியாயம் 8
எனினும் இந்தவித பலவீனத்தின் காரணமாக ஏற்படக்கூடிய சில வியாதி வருத்தங்கள், பிற இன மக்கள் மத்தியிலும், மற்ற நாடுகளைப் போலவே காணப்படுகின்றன. ஒரு கிறிஸ்தவர் தான் தீமைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, இந்த உலக இன்பங்களையும், வாழ்க்கையையும் அனுபவிக்கிறார் என்று நம்பும் பட்சத்தில், அவர் இங்குள்ள எல்லா துன்பங்களையும் சகித்துக் கொள்ள மாட்டார், ஆனால் எதிர்காலத்திற்காக தனது சுகபோகங்களை ஆர்வத்துடன் காத்திடுவார். இந்த நிலையான தன்மை நமக்கு பொதுவானது என்றபோதிலும், மற்றவர்களுக்கு இது ஒரு தொல்லையாகவே காணப்படுகிறது. நம்முடைய முதல் பிறப்பின் கட்டளைப்படி, இந்த சரீரம் ஒருவருக்கொருவர் பொதுவானது என்பது போல, அது எம் அனைவருக்கும் பொதுவானதாகவே காணப்படுகிறது. நாம் இந்த உலகில் வாழும் வரை, நாம் ஒன்றாகவும், சரீர அடிப்படையில் மனிதகுலத்திற்கு சமமாகவும், மனதளவில் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களாகவும் இருக்கிறோம். ஆகவே, இந்த அழிந்து போகக்கூடிய கூறுகள் அழிக்கமுடியாதவையாக மாறும்வரை, இந்த மரணத்தின் கூறுகள் அழியாத நிலையை அடையும் வரை, ஆவியானவர் நம்மை பிதாவாகிய கடவுளிடம் இட்டுச் செல்கிறார். சரீரத்தினால் ஏற்படக்கூடிய தீமைகள், அவை எதுவாக இருந்தாலும், மனித இனத்துடனான எமது வாழ்க்கைக்கு அது பொதுவானதாகவே காணப்படுகிறது. இவ்வாறு, பூமி வறட்சி நிலையை எய்தி, அதன் பசுமைத் தன்மையை இழக்கும்போது, பஞ்சத்திலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. அதேபோல, ஒரு நகரம் எதிரிகளால் கைப்பற்றப்பட்டால், அதனால் ஏற்படும் அடிமைத்தனம் அதன் குடிமக்கள் அனைவரையும் அழிவுறச் செய்கிறது.; மேகங்களற்ற வானம் மழையைத் தராத போது, எல்லோரும் ஒரே விதமான வறட்சியை எதிர்கொள்ள நேரிடும். அதேபோல், கற்பாறையில் மோதிய கப்பல் விபத்துக்குள்ளாகும் போது, அது அந்தக் கப்பலில் பயணிக்கும் அனைவரையும் பாதிக்கிறது. இந்த பொதுவான சரீரமானது, உலகில் பயணிக்கும் வரை, கண்களுக்கு ஏற்படும் உபாதைகள், காய்ச்சல் மற்றும் எம்மைப்போல் ஏனைய மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு நோய் நொடியும் எம்மையும் பொதுவாக பாதிக்கும்.
அத்தியாயம் 9
இல்லை, இல்லை; மாறாக, கிறிஸ்தவர் ஒருவர் தான் எந்த விதமான உடன்படிக்கையோடு, அல்லது என்னவிதமான சட்டதிட்டத்துக்கு அமைவாக நடந்து, தனது நிலையை உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ளும் பட்சத்தில், சாத்தானின் கொடிய சூழ்ச்சிகளை எதிர்க்க மற்றவர்களை விட கடினமாக போராட வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிவார். பரிசுத்த வேதாகமம் நமக்கு இதுபற்றி கற்பிப்பது மட்டுமன்றி, இவ்வாறு எச்சரிக்கையும் விடுக்கிறது: “மகனே, நீ இறைவனுக்கு சேவை செய்யும் பொழுது, நீதிக்கு சார்பாக உறுதியாய் இரு. பய பக்தியுடனும், மரியாதையுடனும் இரு. சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராக இரு.”[10] மீண்டும் வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது: “உங்கள் கவலைகளை சகித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படக்கூடிய அவமானத்தில் இருந்து பொறுமையாக இருங்கள். தங்கமும் வெள்ளியும் நெருப்பினால் தான் புடம் போடப்படுகின்றன.”[11]
அத்தியாயம் 10
இவ்வாறு தான் யோபு, தன்னுடைய உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்த பின்னும், தன் குழந்தைகள் இறந்த பின்னும், கடுமையான, மற்றும் ஆறாத காயங்களால் அவரது உடலில் புழுக்கள் உண்டான போதும், கடுமையான சோதனைக்குள்ளான போதும், தோல்வியைக் கண்டு அவர் துவண்டு போகவில்லை. அவர் தனது துன்பங்களுக்கும் நிந்தனைகளுக்கும் மத்தியில் தனது பக்தியுள்ள மனதில் பொறுமையை பறை சாற்றியே வந்தார். ‘நான் என் தாயின் வயிற்றில் இருந்து நிர்வாணமாகத் தான் வெளியே வந்தேன். அதேபோல் நான் நிர்வாணமாகவே பூமிக்கு அடியில் செல்வேன்; கர்த்தர் தாமே கொடுத்தார், கர்த்தர் தாமே எடுத்துக்கொண்டார்; இது கர்த்தருக்கு மிகச் சிறந்ததாகத் தோன்றி இருக்க வேண்டும்: கர்த்தருடைய நாமம் என்றும் போற்றப்படுவதாக.”[12] அவரது உடல் உபாதை தீவிரம் அடைந்த போதிலும், அவரது மனைவி பொறுமையின்றி கடவுளுக்கு எதிராக ஏதாவது சொல்லும்படி அவரை வற்புறுத்தியபோதும், அவர் இவ்வாறு பதிலளித்தார்: “நீ ஒரு அஞ்ஞானப் பெண்ணைப் போல பேசுகிறாய் . நாம் கடவுளிடமிருந்து வரும் நன்மையை ஏற்றுக்கொள்வது போல் தீமையையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? இவ்வாறான துன்பம் மிக்க சூழ்நிலைகளிலும் கூட, யோபு கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவம் செய்யவில்லை.[13] ஆகையால் கர்த்தர் அவரைப் பற்றி சாட்சியம் அளிகையில் இவ்வாறு கூறினார்: “என் சேவகனாகிய யோபுவை நீங்கள் பார்த்தீர்களா? அவரைப் போல எந்தவிதமான களங்கங்களும் அற்ற, உண்மையுள்ள, கடவுளுக்கு சேவை செய்த எவரும் பூமியில் இல்லை.”[14] அதேபோல, டோபியாஸ், தனது அழகிய படைப்புகளை உருவாக்கி நிறைவு செய்தபின், அவருடைய கருணைக்காக பலர் மத்தியில் நிறைந்த புகழைப் பெற்றார். கடவுளை பயபக்தியுடன் துதித்தார். அவருடைய பார்வையிழந்த நிலைமையில் கூட, துன்புறுத்தலுக்கு ஆளான நிலையிலும் கூட, அவர் இறைவனை நெஞ்சாரத் துதித்தார். அவரது உடலில் எவ்வளவு வலி இருந்ததோ, அதைவிட அவர் இறைவனை அதிகமாகப் புகழ்ந்தார். அவரது மனைவியும் அவரது மனதைத் திசைதிருப்பும் நோக்கில், இவ்வாறு கூறினார்: “உங்கள் கருணையின் பலன் எங்கே? நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பாருங்கள்!”[15] ஆனால், விசுவாசத்தின் மிகுதியால் துன்பங்களைத் தாங்கிக் கொண்டும் கடவுள் மீது விசுவாசத்துடனும் பயபக்தியுடனும் அவர் உறுதியாக இருந்தார். பலவீனம் மிக்க தனது மனைவியின் சோதனையால் அவர் மனம் தளரவில்லை. ஆகவே, அவரது மிகுந்த பொறுமையின் மூலம் அவர் கடவுளிடமிருந்து அதிக கௌரவம் மிக்க விடயங்களைப் பெற தகுதியான மனிதராக தோற்றம் பெற்றார். பின்னர் ரபாஃயல் என்னும் தேவதூதன் அவரைப் புகழ்ந்து இவ்வாறு கூறுகிறார்: “தேவனின் படைப்புகளை வெளிப்படுத்துவதும் அறிவிப்பதும் ஒரு கௌரவமான செயல். சாராவும் நானும் சேர்ந்து செபித்த போது, உமது செபத்தை கடவுளின் மகிமைக்கு முன்பாக ஒப்புக் கொடுத்தேன். மேலும், நீர் மரித்தோரை அடக்கம் செய்ததாலும், அதே வழியில் எழுந்து உமது இரவு உணவை தவிர்த்துவிட்டு மரித்தோரை அடக்கம் செய்வதற்கும் நீர் சற்றும் தயங்காததால், உம்மை உற்சாகப்படுத்த நான் அனுப்பப்பட்டேன். உம்மையும் உமது மருமகள் சாராவையும் குணமாக்க கடவுள் என்னை மீண்டும் அனுப்பினார். கடவுளின் மகிமைக்கு முன்பாக நின்று சேவை செய்யும் ஏழு புனித தேவதூதர்களில் ஒருவரான ராபஃயல் ஆகிய நானே அந்தத் தேவதூதன்.”[16]
அத்தியாயம் 11
இந்த சகிப்புத்தன்மை தொடர்ந்தும் நீடித்தது; கர்த்தருடைய நீதிக்கு இணங்க, அப்போஸ்தலர்கள் இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார்கள். அதாவது, பேரழிவுகள் குறித்து குறை கூறுவதற்குப் பதிலாக, உலகில் நடந்த அனைத்தையும் அவர்கள் தைரியமாகவும் பொறுமையுடனும் ஏற்றுக் கொண்டார்கள். யூத மக்கள் இதைப் பற்றி எப்போதும் மனத்தாங்கலுடன் இருந்தார்கள், அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள் என்று எண்ணாகமத்தில் கர்த்தராகிய ஆண்டவர் இவ்வாறு சாட்சியம் அளிக்கிறார்: “அவர்கள் மரணிக்காதவாறு அவர்களின் முணுமுணுப்பு என்னிடமிருந்து விலகக் கடவதாக.”[17] அன்புள்ள சகோதரரே, நாம் துன்பத்தின் போது குறைகூறி எமது முணுமுணுப்பதைத் தவிர்க்க வேண்டும். என்ன நடந்தாலும், நீங்கள் பொறுமையாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும். அதையிட்டு இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “உடைந்தோ, நொருங்கியோ போன இதயத்தை கடவுள் எப்போதும் இகழ்வதில்லை.”[18] உபாகமத்தில், பரிசுத்த ஆவியானவர் மோசே மூலமாக நம்மை இவ்வாறு எச்சரிக்கிறார்: “கர்த்தராகிய ஆண்டவர் உங்கள் மத்தியில் பஞ்சத்தையும் துன்பத்தையும் அனுப்புவார், மேலும் உறுதியான மனம் உள்ளோரையும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் யார் என்றும் அறிவதற்கே அவர் அவ்வாறு செய்கிறார்.”[19] இது பற்றி இங்கே மீண்டும் கூறப்பட்டுள்ளது: “உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் முழு இதயத்தோடு நேசிக்கிறீர்களா என்பதை அவர் பரீட்சிப்பார்.”[20]
அத்தியாயம் 12
அதேபோல் ஆபிரகாம் கடவுளைப் பிரியப்படுத்தினார். கடவுளைப் பிரியப் படுத்துவதற்காக தனது மகனை இழக்க நேரிடும் என்று அவர் கொஞ்சமும் பயப்படவில்லை. அதேவேளை, தன் மகனை பலி கொடுக்கவும் மறுக்க வில்லை. உங்கள் மகனை சட்டம் அல்லது ஒழுங்கு போன்றவற்றால் இழக்கச் செய்ய முடியாது. ஆனால், உங்கள் மகனை உங்கள் கைகளால் கொல்லும்படி கட்டளை இடப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இறைவன் மீதுள்ள பயபக்தி மற்றும் விசுவாசத்தின் காரணமாக நீங்கள் எல்லாவற்றிற்கும் தயாராக வேண்டும். இது தனிப்பட்ட சொத்துக்களின் இழப்பாகவோ, உங்கள் கை,கால்கள் மற்றும் உங்கள் அவையவங்களுக்கு நிரந்தர அல்லது சண்டை சச்ச்சரவுகளால் ஏற்பட்ட சிதைவு அல்லது இழப்பாகவோ இருக்கலாம். அத்தோடு உங்கள் மனைவி, குழந்தைகள் அல்லது அன்புக்குரியவர்களிடமிருந்து துன்பகரமான அல்லது வேதனைமிகுந்த சூழ்நிலையில் பிரியவோ நேரிடலாம். இதுபோன்ற விடயங்கள் உங்களுக்கு மிகுந்த மனப்போராட்டத்தைத் தரக்கூடும், ஆனால் இவற்றால் உங்களுக்கு எவ்விதத்திலேனும் இடையூறு ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற விடயங்கள் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை பலவீனப்படுத்தவோ அல்லது குறைத்து மதிப்பிடுதல் போன்றவற்றுக்கு முகம் கொடுக்கவோ அனுமதிக்காதீர்கள். மாறாக, ஒருவர் தனது தற்காப்புப் போராட்டத்தில் தான் விடாமுயற்சியுடன் இருப்பதை வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால், தற்காலத்தில் நிகழக்கூடிய கேடுகளால் ஏற்படும் ஒவ்வொரு தீங்கும் வரவிருக்கும் ஆசீர்வாதங்களின் மீதான விசுவாசத்தின் காரணமாக எளிதாகி மறைந்து விடும். போரை எதிர் கொள்ளா விட்டால், வெற்றியை அடைய முடியாது. ஒரு போரில் வெற்றி கிட்டும் போது, வெற்றி பெற்றோருக்குக் கிரீடம் அணிவிக்கப் படுகிறது. வானில் காற்றால் ஏற்படும் கொந்தளிப்பான சூழ்நிலையின் போது தான் விமானி எவ்வாறு தனது விமானத்தைக் கையாள்கிறார் என்று ஆய்வு செய்யப்படுகிறது. போரின் போதுதான் போர்க்களத்தின் நிலைமை சீர்தூக்கிப் பார்க்கப்படுகிறது. ஆபத்துக்கள் ஏதும் இல்லாத போது, ஆணவம் பிடித்த கதைகளைச் கட்டி விடுவதும், சொல்வதும் எளிதே. பேரழிவு மிகுந்த சூழ்நிலையில் தான் மோதலின் உண்மையான தாத்பரியம் வெளிப்படுகிறது. தரையில் உறுதியாகவும் ஆழமாகவும் வேரூன்றிய ஒரு மரத்தை பலத்த காற்றால் கூட அசைக்க முடியாது. மேலும், வலுவான உலோகங்களால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கப்பல், அலைகளால் தாக்கப்பட்டாலும், உடைந்து அழிந்து போகாது. அறுவடை செய்யப்படும் போது, வலுவான கதிர்களைக் கொண்ட தானியங்கள் காற்றால் அள்ளிச் சொல்லப்படுவதில்லை, ஆனால் வைக்கோல் காற்றால் அள்ளிச் செல்லப்படுகிறது.
அத்தியாயம் 13
இவ்வாறு, அப்போஸ்தலரான புனித பவுல் கூறுகையில், கப்பலின் விபத்துக்குப் பின், பயங்கரக் கொள்ளை நோய்க்குப் பின், சரீரத்துக்கும் தனது அவையவங்களுக்கும் இழைக்கப்பட்ட கடுமையான சித்திர வதைகளுக்குப் பிறகு, அவர் அவர்களால் துன்புறுத்தப்படவில்லை என்றும், அதேவேளை, அத்தகைய ஆக்கினைகளுக்குப் பிறகும், அவர் தான் திருந்தியதாகவே உணர்ந்தார். அவர் எவ்வளவு கடுமையான அவஸ்தைகளை அனுபவித்தாரோ, அந்த அளவுக்கு அவர் நேர்மையுடன் செயல்படுபவரா என்று சோதிக்கப்பட்டார். அவர் இவ்வாறு சொல்கிறார்: என்னை உயர்த்துவதற்கும், என்னைத் தாக்குவதற்கும் சாத்தானின் தூதன் ஒருவன் என்னுடைய சரீரத்தில் ஒரு தண்டை செருகியிருந்தான். எனவே அதை என்னிடமிருந்து அகற்றும்படி மூன்று முறை நான் இறைவனிடம் கெஞ்சினேன். அப்போது அவர் என்னிடம்; “எனது கனிவான கருணை உனக்குப் போதுமானது. என் அன்பின் இரக்கம் உனது பலவீனத்தின் போது பரிபூரணம் அடைந்துள்ளது.”[21] என்று கூறினார். ஆகையால், ஏதோ ஒரு அழிவு, துன்பம் அல்லது தனிமைப் படுத்தல் போன்றவற்றால் நாம் அவதிக்குள்ளாகும் போது, நாம் உறுதியுடன் இருக்குமிடத்து, நம்முடைய விசுவாசம் அளவில்லா கீர்த்தி பெறும். எமக்கு ஏற்படும் சோதனைகளின் போது, நமது விசுவாசம் உறுதியாக இருந்தால், இங்கே எழுதப்பட்டிருப்பதுபோல் நடக்கும்: “குயவனின் உலையானது, அவன் உருவாக்கும் பண்ட பாத்திரங்களை நேர்த்திசெய்யும். அதுபோல், நீதிமான்கள் கஷ்டத்தின் போது தான் சோதனைகளுக்கு முகம் கொடுப்பர்.”[22] இங்கே, நமக்கும் கடவுளை அறியாதவர்களுக்கும் உள்ள வித்தியாசம் வெள்ளிடை மலையாய் உணர்த்தப்படுகிறது. இடர்கள் ஏற்படும்போது அவர்கள் முறையீடு செய்கிறார்கள், அத்தோடு குறை கூறித் திரிகிறார்கள். ஆனால் இடர்கள் போன்றவை சத்தியத்தின் நற்பண்பு மற்றும் விசுவாசத்திலிருந்து நம்மைத் திசை திருப்பக்கூடியவை அல்ல. ஆகவே துன்ப வேளைகளில், நல்லொழுக்கமும் விசுவாசமும் மிக உறுதியான நிலையை அடைகின்றன.
அத்தியாயம் 14
குடலின் இயக்கம் தளர்ந்து, திரவ நிலையை அடைந்து உடலின் சக்தி வெளியேறி, எலும்பு மச்சையில் குடிகொண்டுள்ள காய்ச்சல், தொண்டையில் புண்ணாக மாறி, தொடர்ச்சியான வாந்தியால் குடல் பலவீனம் அடைந்து, கண்கள் இரத்தத்தைப் போல் சிவந்து எரிச்சலைத் தந்து, மற்றும் கால்களின் சில பகுதிகள் முழுமையாக அல்லது நோய்வாய்ப்பட்ட காரணத்தால், துண்டிக்கப் பட்டு, இதனால், ஏற்பட்ட காயங்கள் மற்றும் குறைபாடுகளால் உடல் பலவீனம் அடைந்து, நடப்பதற்குக் கூட முடியாமல் சக்தியை இழந்துவிடுகிறது. அத்தோடு, காது கேளாமை அல்லது கண்பார்வை இழத்தல் போன்ற இவை அனைத்தும் விசுவாசத்தைப் பறைசாற்ற இன்றியமையாது பங்களிக்கின்றன.”[23] பல்வேறு விதமான தாக்குதல்கள், அழிவுகள் மற்றும் மரணங்களுக்கு எதிராக அசைக்க முடியாத சக்தியுடன் போராடும் மனமானது, மனிதகுலத்தின் இன்னல்களுக்கு நேரடியாக முகம் கொடுத்து, கடவுள் மீதான நம்பிக்கை இன்றி வாழும் மனிதர்கள் மத்தியில், அவர்களைப் போல வாழாது, எமது சொந்த வழிகாட்டுதல் மற்றும் விசுவாசத்தில் வாழும் எமது ஆன்மா எத்தனை உயர்ந்ததாக இருக்கிறது? கடவுளுக்குள் வாழும் வாழ்க்கையை எண்ணி சந்தோஷப் படுவதற்கும், அந்த தருணத்தின் வெகுமதியை அடைவதற்கும், அதாவது, துன்பங்களையும், வேதனைகளையும் தாங்கி கிறிஸ்து காட்டிய குறுகலான பாதையில் நடப்பதற்கும், அதன் வழியாக, கிறிஸ்துவை அணுகுவதற்கும், நம்முடைய விசுவாசத்தை உறுதியாக வெளிப்படுத்துவதற்கும், அவர் காட்டிய வழியில் நடப்பதற்கும் விசுவாசத்தினாலே கிடைக்கும் வெகுமதியைப் பெறுவதற்கும் நாம் தகுதியானவர்கள் ஆகிறோம். என்றென்றும் அவரே எமது நீதவானாக இருக்கக் கடவாராக. நீரினாலும், பரிசுத்த ஆவியின் அருட் கொடைகள் போன்றவற்றால் நிரப்பப்பட்டு மீண்டும் பிறவாத ஒருவன், தான் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப் பட முடியாத காரணத்தால், அவன் மரணத்திற்கு உண்மையிலேயே அஞ்சக்கடவான். கிறிஸ்துவின் சிலுவை மரணத்திலும், அவருடைய பாடுகளின் பட்டியலில் இல்லாத மனிதன், மரணத்தை எதிர்நோக்க அஞ்சுவான். இந்த மரணத்திற்குப் பிறகு, தமது இரண்டாவது மரணத்தை நோக்கி செல்வோர் மரணத்துக்கு அஞ்சக்கடவர். உலகத்தை விட்டு பிரிந்துசெல்லும் போது, நித்திய நரக நெருப்பையும், வேதனையையும் அனுபவிக்க நேரிடுபவர், மரணத்திற்கு அஞ்சக்கூடும். இதற்கிடையில், தான் அனுபவிக்க இருக்கும் சித்திரவதை மற்றும் புலம்பலை ஒத்திப்போட்டுக் கொண்டு, நீண்ட காலமாக இங்கு வாழ்ந்துகொண்டிருப்பவர் இறப்பதற்கு அச்சம் கொள்ள வேண்டும்.
அத்தியாயம் 15
நம்மில் பலர் இந்த அழியாமையைப் பெற்று இறந்து போகிறோம். அப்படியானால், நம்மில் பலர் உலக வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறோம். இந்த அழியாமை யூதர்களையும் பிற இந மற்றும் மதத்தினரையும் கிறிஸ்துவின் எதிரிகளையும் பாதிப்பில் ஆழ்த்தியது. ஆனாலும், அது கடவுளின் ஊழியர்களுக்கு ஒரு வரவேற்புக்கான அழைப்பாகவே காணப்படுகிறது. மனிதகுலத்தின் மத்தியில் இருந்து எந்த வேறுபாடும் இன்றி, நீதிமான்கள் அநீதி இழைத்தவர்களுடன் இறந்து போகின்றனர். அழிவு என்பது, தீமைக்கும் நன்மைக்கும் இடைப்பட்ட ஒரு பொதுவான காரணி என்று நீங்கள் நினைக்கக்கூடாது. நீதிமான்கள் புது மலர்ச்சி வாய்ந்த சூழலுக்குள் அழைக்கப்படுகிறார்கள், அநீதி இழைத்தவர்கள், சித்திரவதைக்கு உட்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு செல்லப்படுவார்கள். விசுவாசிகள் விரைவில் பாதுகாவலைப் பெறுவார்கள். அதேபோல், அவிசுவாசிகள் தண்டிக்கப் படுவார்கள். அன்பான சகோதரர்களே, நாங்கள் மேம்பட்டவர்கள். ஆகவே தெய்வீகக் கிருபையை அறியாதவர்களாக இருக்காதீர்கள். ஏனெனில் எமக்கு வழங்கப்படுவதை நாங்கள் அங்கீகரிக்கத் தவறிவிடுகிறோம். இதோ பாருங்கள், கன்னிப்பெண்கள் சமாதானத்துடன் புறப்பட்டுச் செல்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாகவும் மகிமையுடனும் வெளியேறி போகிறார்கள். அவர்கள் போலிக் கிறீஸ்துவாக வலம்வரும் வேடதாரிகள் மற்றும் அவர்களது அச்சுறுத்தல்கள், ஊழல்கள் நடைமுறைகள் மற்றும் விபச்சார விடுதிகளையிட்டு அச்சம் கொள்ள வில்லை. ஆண்பிள்ளைகள் அவர்கள் சரியான பருவத்தை எட்டாத காரணத்தால் ஆபத்தில் இருந்து தப்பினர். அவர்கள் பிரம்மச்சரியம் மற்றும் அப்பாவித் தனத்தின் வெகுமதிகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றனர். இனிமேல், பலவீனமான ஆட்சியாளர் சித்திரவதைகளை மேற்கொள்ள மாட்டார். மரணம் வேகமாக நெருங்கி வருவதால், துன்பம் மற்றும் மனிதனின் சித்திரவதைகள் இருந்து அவர்களைக் காப்பாற்ற முடிந்தது. அவர்களின் மனதில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் பீதி அவர்களைக் கவ்விக் கொள்ளும் போது, அவற்றை அலட்சியம் செய்பவர்கள் முரண்பாடான சிந்தையுடன் காணப் படுகிறார்கள். சோம்பலாக இருப்பவர்கள் உற்சாகம் ஊட்டப்படுகிறார்கள். தப்பியோடியவர்கள் மீண்டும் திரும்பி வரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். பிறமதத்தவர்கள் விசுவாசிக்கக் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், விசுவாசிகளின் முன்னைய உறுப்பினர்கள் ஓய்வு பெற அழைக்கப் படுகிறார்கள். ஏனெனில் புதிய மற்றும் வலுவான சக்திமயப்பட்ட போர்ப்படை போருக்கு தயார் படுத்தப்படுவதன் காரணமாக. அவர்கள் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப் படுகிறார்கள். அவர்கள் மரணத்தைப் பற்றிய பயம் எதுவும் இன்றி போராடக் கூடியவர்கள்.
அத்தியாயம் 16
அன்புள்ள சகோதரர்களே, இவையெல்லாம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை! இந்த கொடிய பெருந்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் அழிவின் போது மனிதகுலத்தின் மனோநிலையை ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமானதும் அவசியமானதும் அல்லவா? அதாவது, நோயாளிகளை நன்கு கவனித்துக் கொள்பவர்களாக இருக்கட்டும், அவர்கள் தங்கள் உறவினர்களை நன்றாக நேசிப்பவர்களாக இருக்கட்டும், அல்லது எஜமானர்கள் அவர்களுக்குக்கீழ் சேவையாற்றும் அடிமைகளை தயவுடன் நடத்துபவர்களாக இருக்கட்டும், பாதிக்கப் பட்டவர்கள் உதவிக்கு அழைக்கும் போது, மருத்துவர்கள் நோயாளிகளை புறக்கணிப்பவர்களாக இருக்கட்டும், அவர்கள் கொடுஞ்செயல் புரிபவர்கள் தங்களது செயல்களில் இருந்து விலகி இருப்பவர்களாக இருக்கட்டும், பேராசை கொண்டவர்களாக இருந்தாலும், மரணத்திற்கு அஞ்சுபவர்களாகவும் அல்லது அவர்களது தீயைப்போல் பொங்கி எழும் கோப ஆக்கினையை விட்டு விடுபவர்களாகவும் இருக்கட்டும், ஆணவம் கொண்டு பின்னர் பணிந்து போகிறவர்களாக இருக்கட்டும், வெட்கமில்லாத, மற்றையோரைத் துன்புறுத்துபவர்கள், தங்கள் செயல்களை விடுபவர்களாக இருக்கட்டும், அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், தங்கள் அன்புக்குரியவர்கள் அழிந்து போகும் போது, தங்கள் சுயநலத்தின் காரணமாக அந்த அன்புக்குரியவர்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்று எண்ணுபவர்களாக இருக்கட்டும்; இவர்கள் சார்பில் சிறந்தது எதையேனும் கொடுப்பது தான் முறையாகப் படுகிறது! இப்படிப் பட்டோரின் இறப்பு எந்தவொரு பங்களிப்பையும் வழங்கவில்லை என்றாலும், கிறிஸ்தவர்கள்; குறிப்பாக, கடவுளின் சேவகர்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. ஆகவே வேதசாட்சியத்தை மகிழ்ச்சியுடன் தேடத் தொடங்கினோம். அதே நேரத்தில் மரணத்திற்கு அஞ்சக்கூடாது என்றும் நாங்கள் நன்றாக அறிந்து கொண்டிருக்கிறோம். இவை அதற்கான பயிற்சிகளை நமக்கு அளிக்கின்றன, மரணத்தைத் தழுவிக் கொள்ளும் நோக்கில் அல்ல. அவை மனதிற்கு வலிமையின் மகிமையைக் கொடுக்கின்றன; மரணத்தினால் ஏற்படும் கொடூரமான ஆக்கினையின் ஊடாக, அவர்கள் மோட்சானந்த கிரீடத்திற்குத் தங்களைத் தயார் படுத்திக் கொள்கின்றனர்.[24]
அத்தியாயம் 17
ஆனால் சில நேரங்களில், யாரேனும், இதற்கு ஆட்செபம் தெரிவித்து இவ்வாறு கூறலாம்: ‘தற்போதைய அழியாத நிலையை இட்டு, இது எனக்கு துக்கத்தை அளிக்கிறது. அப்படியானால், நான் கிறிஸ்துவைப் பறைசாற்றவும், பாவ சங்கீர்த்தனத்துக்கும் தயாராக இருக்கிறேன். வரக்கூடிய துன்பத்தையும், வேதனையையும் முழு மனதோடும், முழு தைரியத்தோடும் சகித்துக்கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன். ஆயினும் எனக்கு வேதசாட்சியத்தின் நிலையை அடைய முடிய வில்லை.[25] முதலில், வேதசாட்சியம் என்பது உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. அது கடவுளின் அழைத்தலிலேயே தங்கி உள்ளது, ஆனால், நீங்கள் அவ்விதமான வேதசாட்சியத்துக்குத் தகுதியானவரா என்று நீங்கள் அறிந்துகொள்ளும் நிலைமையை இழந்துவிட்டீர்கள் என்று சொல்லவும் முடியாது. இரண்டாவதாக, கடவுள் எமது விருப்பத்தையும் இதயத்தில் நாம் கொண்டுள்ள எண்ணங்களையும் தேடுபவராக இருக்கிறார். இறைவன் எமது இதயத்தில் மறைந்திருக்கும் அனைத்தையும் கண்டறிந்து அவற்றுக்கு ஏற்றவாறு தனது தீர்ப்பை அளிக்கிறார். அவர் உங்களை காண்பது மட்டுமன்றி, உங்களைப் புகழ்ந்து வரவேற்கிறார். நீங்கள் நல்லொழுக்கத்தைப் பேணி, அதன்படி ஒழுகத் தயாராக இருக்கிறீர்களா என்பதை உணர்ந்து, அவர் உங்கள் நல்லொழுக்கத்திற்கு வெகுமதி அளிப்பவர். காயீன், தான் கடவுளுக்கு ஒரு காணிக்கையை செலுத்த தீர்மானிக்கும் முன்பே, தன் சகோதரனைக் கொன்று விடுவான் என்று கடவுள் தனது தொலை நோக்கு ஞானத்தால், அவனது மனதில் இருந்த கொலை பாதகத்தை முன்கூட்டியே கண்டித்திருந்தார். அந்த விடயத்தில் அவர் நடந்து கொண்டது போல, ஞானமுள்ள தேவன், தீய எண்ணங்களையும் தீய செயல்களையும் முன்கூட்டியே காண்கிறார். அதேபோல், கடவுள் தனது ஊழியர்களின் விடயத்தில் கூட, கிறிஸ்துவில் நம்பிக்கையும் பாவசங்கீர்த்தனமும் மனதில் ஊட்டம்பெறும் போது, அந்த நோக்கத்தை நன்கு கட்டியெழுப்பியவர்கள் உன்னத நிலையை அடையக் கூடியவர்கள். ஏனெனில் இறைவனே அங்கு நீதிபதியாக வீற்றிருப்பார். வேதசாட்சியத்தின் நோக்கத்தை இழந்துவிடுவது ஒரு பக்கம்; வேதசாட்சிகள் தங்கள் பங்களிப்பில் ஊக்கம் செலுத்தாமை மற்றொரு காரணியாகும். கர்த்தர் உங்களை அழைக்கும்போது, நீங்கள் அதே போன்ற நிலையில் தான் உங்களைக் காண்கிறீர்கள். அதேவேளை, தேவனும், அந்த அடிப்படையிலேயே உங்களுக்குத் தீர்ப்பிடுவார். ஏனென்றால், அவரே தனது சாட்சியத்தில் இவ்வாறு கூறுகிறார்: “ஏனென்றால், நான் நீதியைச் செய்கிறவன், இதயத்தில் இருப்பவற்றை அறிந்து விசாரிப்பவன் என்று அனைத்து தேவ சபைகளும் நன்கு அறிந்திருக்கின்றன.”[26] இறைவன் நம்முடைய இரத்தத்தைக் கேட்பதில்லை, மாறாக, நம்முடைய விசுவாசத்தையே அவர் எதிர்பார்க்கிறார். ஆபிரகாமையோ, ஐசக்கையோ அல்லது யாக்கோபையோ கொல்ல அவர் உடன்படவில்லை. இருப்பினும், அவர்கள் தங்கள் கொண்டிருந்த மாறாத விசுவாசத்துக்காகவும் நேர்மைக்காகவும், பாராட்டையும் கௌரவத்தையும் பெற்றுக் கொண்டனர். அவர்கள் தங்கள் தேசத்திற்கும், குலத்துக்கும் முதல்வர்களாக இருக்கும் தகுதியையும் பெற்றனர். எவரேனும் உண்மை உள்ளவர்களாகவும், நேர்மையுள்ளவர்களாகவும், புகழுக்கு தகுதி உடையவர்களாகவும் இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஆறு விதமான விருந்துகளையும் இரசிப்பதற்கும், புசிப்பதற்கும் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
அத்தியாயம் 18
தினமும் செபிக்கும்படி கர்த்தர் நமக்குக் கட்டளையிட்ட செபத்தை நமது விருப்பப்படி அல்ல, கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்ற செய்யும் செபம் அது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இறைவனுடைய சித்தம் நிறைவேற வேண்டுமென நாம் கேட்பதோடு, அவர் நம்மை ஒன்று படுத்தி, இந்த உலகத்திலிருந்து விடுபட்டு வரும்படி அழைக்கும் போது, இறைவனுடைய சித்தத்திற்கு நாம் கீழ்ப்படியாமல் இருப்பது எவ்வளவு அபத்தமானது, அத்தோடு எவ்வளவு இறுமாப்பு மிக்க செயல்! நாம் அதை எதிர்ப்பதில் ஒருவரை ஒருவர் விஞ்சியவர்களாய் எமது எதிர்ப்பை வெளியிட்டு, பிடிவாதம் மிக்க அடிமைகளைப்போல் நிராகரிக்கிறோம். இவ்வாறு நாம் எமது துக்கத்தையும் வேதனையையும் கடவுள் முன் கொண்டு வருகிறோம். நம்முடைய விருப்பத்திற்கு உடன் படாமல், நமது அத்தியாவசியத் தேவைகளுக்கு கட்டுப்படும் நோக்கில், நாம் இங்கிருந்து கிளம்பிச் செல்ல வேண்டும். ஆயினும், நாம் விருப்பமின்றி அங்கு வந்து, அவரிடமிருந்து விண்ணக வெகுமதிகளைப் பெற ஆவலாய் உள்ளோம். எனினும், மண்ணுலக வாழ்க்கையின் அடிமைத்தனம் நம்மை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுமானால், விண்ணக இராச்சியம் வரவேண்டுமென நாம் செபிப்பதால் என்ன பயன் ஏற்படப் போகிறது? கிறிஸ்துவின் மகத்தான ஆசிர்வாதத்தைப் பெற்று, அதனூடாக ஆட்சி செய்வதை விட, உலகில் சாத்தானுக்கு சேவை செய்ய அதிக ஆசைகளும், பெரிய அளவில் ஆவலும் இருக்குமானால், அவருடைய இராச்சியம் வரவேண்டும் என்று நாம் ஏன் மீண்டும் மீண்டும் பிரார்த்திக்க வேண்டும்?
அத்தியாயம் 19
இறுதியாக, எதிர்காலத்தைபற்றி தீர்க்கதரிசனம் உரைக்கும் இறைவன், தெய்வீக ஞானத்தின் அறிகுறிகளை இன்னும் தெளிவாகக் காணும்படி தம்முடைய சொந்த மக்களின் உண்மையான மீட்பைக் காண்கிறார். எங்கள் சக ஊழியர்களில் ஒருவரும், உதவிக் குருவானவரும் உடல் நிலை மோசமடைந்து, மரணத்தின் தருவாயில் இருந்தபோது, தங்களுக்குத் தாமே ஓய்வு வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தனர். அவர் பிரார்த்தனை செய்த வண்ணமே மரணத்தை நெருங்கி கொண்டிருந்த போது, கம்பீரமான, ஆஜானுபாகுவான, உயரமும், கவர்ச்சியும், திடகாத்திரமும் நிறைந்த ஒரு இளைஞன் அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்தான். அவனை மனிதனின் கண்களாலோ அல்லது சரீரத்தாலான உருவங்களாலோ பார்க்க முடியாமல் இருந்தது. அந்த இளைஞனை உலகத்தை விட்டுப் பிரியும் தருணத்தில் இருப்பவர் அல்லது அப்படியான நிலைமைக்குத் தயாரானவர் என்று கருதப்பட்ட ஒரு நபரால் மட்டுமே பார்க்கக் கூடியதாய் இருந்தது. அவன் தனது மனதிலோ அல்லது தனது குரலிலோ எந்தவிதமான ஆதங்கத்தையும் வெளிப்படுத்தாவிட்டாலும், சற்றே கோபமாக இவ்வாறு பேசினான்: “நீர் துன்பத்தை அனுபவிக்கப் பயப்படுகிறீர். நீர் இந்த உலக வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்ல விரும்பவில்லை. நான் உமக்காக என்ன செய்ய வேண்டும்? ” – அவனது அதட்டல் மற்றும் எச்சரிக்கை செய்யும் குரல் ஒலித்தது. அவர் தனது துன்பத்தை எண்ணி எண்ணி மரணப் படுக்கையில் இருக்கும் போதும், அதைப் பற்றி கவலைப்படாமல், தனது சமகாலீன ஆசைகளை பற்றி நினைக்காது எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். மரணத்தின் விளிம்பில் இருந்த எங்கள் சகோதரரும் சகாவும், அவர்களைப் பற்றி அங்கிருந்தவர்கள் மற்றவர்களிடம் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தனர். ஏனென்றால், மரணத்தின் தருவாயில் இருப்பவர்கள் இதைக் கேட்க வேண்டும் என்பதற்காக, அவர்கள், அந்த இருவரைப்பற்றி சொல்ல வேண்டியவைகள் யாவற்றையும் கடைசி வரை சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் அதை செவிமடுத்தது தனக்காக அல்ல, நமக்காகவே. அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் பிரியப் போகும் தருணத்தில் இருப்பதால், அவர்களால் தற்போது என்னதான் கற்றுக் கொள்ள முடியும்? ஆனால் இந்த உலகத்தில் சீவிக்கும் எங்களுக்காக அவர்கள் அதைக் கேட்டு அறிந்து கொண்டனர். நிரந்தர ஓய்வுக்காக செபிக்கிற குருவானவர் கண்டிக்கப்பட்டதன் வழியாக, அனைவருக்கும் நன்மை பயக்கும் விடயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றே இது பற்றி இங்கே சிலாகிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் 20
மிகக் குறைந்ததும், கடைசி நபர்களாகியவர்களுமான எமக்கு அதுபற்றி எத்தனை முறை வெளிப்படுத்தப்பட்டது? இது பற்றி எனக்கு பல தடவைகளாக, அதுவும் தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் கட்டளை இடப்பட்டதா? இறைவனுடைய உறுதிப்பாட்டின் படி, நான் நிதமும் சாட்சி பகர வேண்டுமென்றும், இறைவனின் சித்தத்தின்படியும், அவரது அழைத்தலின் படியும், இந்த உலகத்திலிருந்து பிரிந்துசென்ற நம் சகோதரர்களுக்காக நான் ஒருபோதும் கவலை கொள்ளக்கூடாது என்று நான் பகிரங்கமாக பிரசங்கிக்க வேண்டும். உண்மையில் நாம் கவலை கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு முன் அழைத்துக் கொள்ளப்பட்டவர்களே அன்றி, எம் மத்தியில் இருந்து இழக்கப் பட்டவர்கள் அல்ல. உல்லாசப் பிரயாணிகள் மற்றும் மாலுமிகள் போன்று அவர்கள் அங்கு சென்று எங்களுக்கு வழிகாட்டுவார்கள் என்பதை அறிந்து, நாமும் அங்கு செல்ல மிகவும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். அதையிட்டு நாம் அழுது புலம்புதல் கூடாது. கறுப்பு நிறத்திலான ஆடைகளை நாம் இவ்வாறான தருணங்களில் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு ஏற்கனவே அங்கு வெள்ளை நிற ஆடைகள் அணிவித்தாயிற்று என்ற படியால். நம்மைத் தாழ்த்துவதற்கு எந்தவொரு பொருத்தமான அல்லது நியாயமான சந்தர்ப்பத்தையும் நாம் பிறமத வழிபாட்டாளர்களுக்கு வழங்கக்கூடாது. கடவுளோடு வாழ்வதாகக் கூறப்படுபவர்களை, முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவர்களை இழந்ததைப் போல எண்ணி நாம் துக்கப்படுகிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் எமது வாயின் வார்த்தையிலும் செயலிலும் மட்டுமே வெளிப்படுத்தும் விசுவாசத்தை, இதயத்தின் சாட்சியத்துடனோ, அல்லது இதயபூர்வமான முறையிலோ நாம் வெளிப் படுத்துவதில்லை என்பது புலனாகிறது! நாம் சொல்வதெல்லாம் ஒரு மாயை, நடிப்பு, போலி என்று தோன்றினால், நாம் நம்முடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பற்றி சொல்வதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தையாகவே தெரியும். வாய்ச்சொற்களில் ஓழுக்கத்தைக் காண்பிப்பதிலும், செயல்களில் உண்மையை நிர்மூலம் செய்வதிலும் எந்தவித அர்த்தமும் இல்லை.
அத்தியாயம் 21
இறுதியாக, அப்போஸ்தலரான புனித பவுல், தனது அன்புக்குரிய மக்களின் மரணத்தையிட்டு கவலை கொள்வதைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகிறார். அவர் அவ்வாறான செயலைக் கண்டித்தும், அதை ஒரு தவறான செயல் என்று சித்தரித்தும், பிழையான கருத்து எனும் தொனியில் இவ்வாறு சொல்கிறார்: “சகோதரர்களே, நம்பிக்கையற்ற ஏனையவர்கள் போல் நீங்கள் சோகத்தில் மூழ்கி இருக்கக்கூடாது. இளைப்பாறுதலுக்குச் சென்றவர்களையிட்டு நீங்கள் கவலை கொள்ளாதிருக்க வேண்டும். விசுவாசமற்றவர்கள் போல் நீங்கள் நடந்துகொள்ளக்கூடாது. ஏனென்றால், இயேசு இறந்து, பின் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நாம் விசுவாசிப்போம் என்றால், நித்திய இளைப்பாறுதலுக்குச் சென்றோரை, இயேசுக் கிறீஸ்துவானவர் மூலமாக இறைவன் தன்னோடு இணைத்துக் கொள்வார்.”[27] விசுவாசம் இல்லாதவர்கள் தான், தங்கள் அன்புக்குரிய மக்களின் இழப்பையிட்டு கவலை கொள்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆயினும், விசுவாசத்தில் வாழ்பவர்கள், கடவுளை விசுவாசிப்பவர்கள், கிறிஸ்து நமக்காக சொல்லொணா பாடுகளை அனுபவித்து, மரித்து, பின் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிப்பவர்கள், கிறிஸ்துவில் நிலைத்து இருப்பவர்கள், அவருடன் மீண்டும் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுவோம் என்று விசுவாசம் கொள்வோர், இந்த உலகத்தைப் பிரிந்து செல்ல விரும்பாத நம்முடைய அன்புக்குரிய சொந்தங்களைத் தாம் பிரிந்திருக்க நேரிடும் போது, அந்த இழப்பை நினைத்து ஏன் அழவேண்டும்? நம்முடைய ஆண்டவராகிய சர்வேசுரனும், எம் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவும் நம்மை இவ்வாறு அறிவுறுத்துகிறார்கள்: “நானே உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனுமாக இருக்கிறேன்: என்னை விசுவாசிக்கிறவன் இறந்தாலும் வாழ்வான். என்னை விசுவாசிக்கும் எல்லா உயிரினங்களும் ஒருபோதும் இறக்க மாட்டாது.”[28] நாம் கிறிஸ்துவை விசுவாசிப்போமானால், அவருடைய வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் விசுவாசிக்கக்கடவோம். ஆகவே, நாம் என்றென்றும் மரிக்காது, கிறிஸ்துவில் நித்திய ஜீவனைப் பெறுவோமாக. அவரோடு வாழும் வாழ்வில் நாம் என்றென்றும் வெற்றி பெறுவோமாக, அவரது ஆட்சியில் திளைத்திருப்போமாக.
அத்தியாயம் 22
அதே சமயம், நாம் இறந்து போகிறோம் என்பதன் அர்த்தம் யாதெனில், மரணத்திற்குப் பிறகு நாம் என்றும் அழியாத வாழ்க்கைக்குள் பிரவேசிக்கிறோம் என்பதேயாகும். நாம் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்லாவிட்டால், நித்திய ஜீவனை அனுபவிக்க முடியாது போகும். இது ஒரு முடிவு அல்ல, நம்மில் ஒரு பகுதி மட்டுமே. காலங்கள் கடந்து செல்லும் போது, அது நித்திய வாழ்வுக்கான ஒரு பயணமாகவே காணப்படுகிறது. எமக்கு சிறந்த, மிகுந்த நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றை பெறுவதற்கு நாம் எம்மை விரைவு படுத்த வேண்டும் அல்லவா? மோட்சானந்த அனுகூலங்களைப் பெறும் நோக்கில், விரைவான மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு போன்றவற்றை அடைய, யார் தான் செபிக்காமல் இருக்கக்கூடும்? அப்போஸ்தலரான புனித பவுல் இவ்வாறு கூறுகிறார்: “எங்கள் சம்பாஷணை விண்ணகத்திலே இருக்கிறது; அங்கிருந்து நாம் எமது இரட்சகரான கர்த்தர் இயேசுக் கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்திருப்போம். அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள சக்தியாக, அவர் நம்முடைய எளிமை நிறைந்த சரீரங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவார். இதன் மூலம் அவை கர்த்தருடைய மகிமையான சரீரத்தைப் போல் மாற்றம் பெற்று விடும்.”[29] நாம் அவ்வித மாற்றத்துக்கு உட்படுவோம் என்று கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து எமக்கு உறுதி அளித்துள்ளார். நாம் என்றென்றும் அவரில் ஒன்றித்து வாழ்வதற்கும், அவருடைய நித்திய மோட்சானந்த பாக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அவரோடு அனுபவிப்பதற்கும், அவர் நமக்காக தம் பிதாவாகிய சர்வேசுரனிடம் இடைவிடாது செபிக்கிறார். “பிதாவே, உம்மால் எனக்கு தரப்பட்டவர்களை நான் போகும் இடத்திற்கு இட்டுச் செல்லவும், இந்த உலகம் தொடங்குவதற்கு முன்பு, நீர் எனக்குக் கொடுத்த மகிமையைக் காணவும் நான் விரும்புகிறேன். கிறிஸ்துவின் வாசஸ்தலத்திற்கு, அதாவது பரலோக இராச்சியத்தின் மகிமைக்குள் நுழைய நியமிக்கப்பட்டவன், துக்கத்தையும், வேதனையையும் அனுபவிப்பதற்காக அங்கு செல்லமாட்டான். அவன் இவ்வுலக வாழ்வில் இருந்து பிரிவதிலும், அவன் கொண்டுள்ள விசுவாசத்தின் காரணமாக, கர்த்தர் அளித்த வாக்குறுதியிலும், அவன் மட்டில்லா மகிழ்ச்சி அடைவான்.”
அத்தியாயம் 23
ஆகவே, இறுதியாக ஆதியாகமத்தின் நற்செய்தியில் சொல்லப் பட்டிருப்பது போல, இறைவனை மகிழ்ச்சியுறும்படி செய்த ஈனோக் விண்ணகம் நோக்கி எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று பரிசுத்த வேதாகமம் சாட்சி பகர்கிறது. “ஈனோக் கடவுளைப் புகழ்ந்துரைத்தார். அதன் பின் அவர் காணப்படவில்லை. கடவுள் அவரை விண்ணகத்துக்கு எடுத்துக்கொண்டார்”[30] கடவுளுக்கு முன்பாக நீதியுடன் வாழ்ந்த காரணத்தால்தான் இது நடந்தேறியது. எனவே, சூழ்ச்சிகளும் ஊழல்களும் நிறைந்த இவ்வுலகில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவது மகிழ்ச்சியான விடயமாகவே இருத்தல் வேண்டும். எனினும், கடவுளை மகிமைப்படுத்துவோர், முதலில் இந்த இடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர்கள் விரைவில் விடுதலை பெறுவார்கள் என்றும் பரிசுத்த ஆவியானவர் சொலமன் ஊடாக எமக்குக் கூறியருளினார். இதற்குக் காரணம், அவர்கள் இந்த உலகில் நீண்ட காலம் வாழ்ந்து, உலக வாழ்க்கையுடன் அவர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் பந்தத்தால் அவர்கள் அழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். ‘”ஏனென்றால், அவருடைய ஆன்மா தேவனுக்குப் பிரியமாயிருந்தது, தீமை அவருடைய புரிந்துகொள்ளும் தன்மையைத் தடுக்காமல் இருக்கவேண்டுமென, அவர் எடுத்துக் கொள்ளப் பட்டார். அநீதிக்கு மத்தியில் இருந்து அவரை விடுவிக்க அவர் அவசரம் காட்டினார்.[31] இவ்வாறு, சங்கீத ஆகமத்தில் காணப்படுவது போல, ஆன்மீக நம்பிக்கை, மற்றும் கடவுளுக்கு அர்ப்பணித்த ஆன்மாவானது, விரைந்து இறைவனை அடைய ஏக்கம் கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. அதில் பின்வருமாறு உரைக்கப்பட்டுள்ளது: “சேனைகளின் தேவனே, உம்முடைய வாசஸ்தலம் எவ்வளவு அழகாக இருக்கின்றது! என் ஆன்மா கடவுளின் கூடாரங்களை அடைய ஏங்குகிறது.”[32]
அத்தியாயம் 24
உலகை நேசிப்பவர் உலக இன்பங்களின் மாயைகளால் வஞ்சிக்கப்பட்டு அதனால் ஏற்படும் ஈர்ப்பின் காரணமாக, நீண்ட காலம் உலகில் வாழ விரும்புகிறார். மேலும், இவ்வுலகம் கிறிஸ்தவரை வெறுக்கிறது என்பதால், உங்களை நேசித்த, உங்கள் மீட்பராகிய கிறிஸ்துவை நேசிப்பதற்குப் பதிலாக, உங்களை வெறுக்கும் காரணிகளை நீங்கள் ஏன் நேசிக்க வேண்டும்? நாம் உலகை நேசிக்கக்கூடாது என்பதற்காக நம் உலக ஆசைகளை பின்தொடர்வதை நிறுத்த வேண்டும் என்று யோவான் தனது நிருபத்தில் எச்சரிக்கிறார். நாம் உலகை நேசிப்பதில் இருந்து தூர விலகி இருக்க வேண்டும் என்றும், அதனால், நாம் நமது உலக ஆசைகளின் பின் செல்வதை நிறுத்த வேண்டும் என்று யோவான் தனது நிருபத்தில் இவ்வாறு அறிவுறுத்துகிறார்; அதாவது, நாம் அதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்: “உலகத்தையோ அல்லது இந்த உலகில் உள்ள விடயங்களையோ நேசிக்காதீர்கள். எந்த மனிதனாவது உலகை நேசிக்கிறான் என்றால், பிதாவின் அன்பு அவனுக்குள் இல்லை என்றே கூறவேண்டும். உலகில் உள்ள எல்லாவற்றிற்கும், சரீரம் ஏங்கும் காம இச்சைகள், கண்களால் காணக்கூடிய காம இச்சையைத் தூண்டும் விடயங்கள் போன்ற இவை யாவும், உலக வாழ்க்கையின் பயனாக ஏற்பட்ட ஈர்ப்புகளே ஒழிய, அவை பிதாவாகிய சர்வேசுரனின் கிரியைகளால் ஆனவை அல்ல. அவை முழுக்க முழுக்க உலக வாழ்வில் எம்மை ஆட்டிப்படைக்கும் இச்சைகளே ஆகும். உலகமும் அதில் உள்ள அனைத்தும் ஒருநாள் இல்லாமற்போய் விடும். ஆனால் கடவுள் என்றென்றும் நிலைத்திருப்பதைப் போல, தேவனுடைய சித்தத்தைச் செய்கிறவரும் என்றென்றும் நிலைத்திருப்பார்.”[33] அன்புள்ள சகோதர சகோதரிகளே, கடவுளுடைய சித்தத்தை நல்ல மனதுடனும், உறுதியான விசுவாசத்தோடும், அசைக்க முடியாத உறுதியோடும் வெளிப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். மரணத்தின் கொடூரங்களிலிருந்து விடுபட்டு, நமக்கு வரவிருக்கும் அழியாமையை நினைவில் கொள்வோமாக. நம்முடைய சொந்தபந்தங்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் பிரிவை எண்ணி, அவர்களையிட்டு கவலை கொள்ளாமல், எம்முடைய அழைத்தலின் நாள் வரும்போது, கர்த்தருடைய அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதன் மூலமும் இதை நாங்கள் விசுவாசிக்கிறோம் என்பதை அறுதியிட்டுக் கூறக் கடவோமாக.
அத்தியாயம் 25
கடவுளின் ஊழியர்கள் எப்போதுமே இதைச் செய்ய வேண்டிக் கடமைப் பட்டிருப்பதோடு, அவர்கள் அதை விரைவாகவும் செய்ய வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த உலகம் தீமைகளால் சூழப்பட்டு, தீமைகள் என்னும் புயலால் துவம்சம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த கவலை தரக்கூடிய விடயங்கள் ஏற்கனவே நடக்கத் தொடங்கி விட்டன என்பதை நாங்கள் உணரும் அதேவேளை, துன்பகரமான விடயங்கள் அரங்கேறும் போது, இந்த இடத்தை விட்டு மிக விரைவாக அகன்றுவிட வேண்டும் என்பதை அறிந்து கொள்வோமானால், அது மிகவும் பயனுள்ள மற்றும் அனுகூலம் மிக்க செயலாக நாம் கருத வேண்டும். நீங்கள் குடியிருக்கும் வீட்டின் சுவர்கள் சிதைந்து போயிருந்தால், வீட்டுக்கு மேலே உள்ள கூரை இடிந்து விழும் நிலையில் இருந்தால், உங்கள் வீடு பாழடைந்து, அழிவுறும் தன்மையை அடைந்தால், அதைவிட, காலப்போக்கில் முழுக் கட்டிடமுமே இடிந்து விழும் அபாயத்தில் இருக்குமானால், நீங்கள் அதை விட்டு விட்டு மிகத் துரிதமாக அகன்று போய்விடுவீர்கள் அல்லவா? நீங்கள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு பலத்த புயலும், பலத்த காற்றும் வீசி, அதனால் கப்பல் மூழ்க ஆரம்பித்தால், நீங்கள் துரிதமாக, துறைமுகத்தை அடைய முயற்சி செய்ய வேண்டுமல்லவா? நன்றாகக் கவனியுங்கள், உலகம் மோசமடைந்து, வீழ்ச்சியுற்று போவது ஒன்றே அதன் உடனடி அழிவுக்கு கட்டியம் கூறுகிறது. இது காலம் கடந்து போனதால் ஏற்பட்டதல்ல, இங்கு காணப்படும் விடயங்களின் யாவும் முடிவுக்கு வருகின்றன என்பதைக் காட்டுவதற்காகவே இவை நடை பெறுகின்றன.[34] ஆயினும்கூட, நீங்கள் அழிந்து போவதைத் தவிர்த்து, கப்பல் உடைந்தும் மூழ்கிப் போவதில் இருந்து காப்பாற்றப்பட்டு, அழிவு என்னும் பயமுறுத்தல்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஏற்படப் போகும் அழிவில் இருந்து உங்களை முன்கூட்டியே எச்சரித்து, உங்களை வெளியேற்றி உங்களைக் காப்பாற்றும் இறைவனுக்கு நீங்கள் நன்றி உடையவர்களாக இருக்க மாட்டீர்கள். அத்தோடு, இவ்வகையான தீமைகள், கேடுகளில் இருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டமைக்கு, நீங்கள் உங்களுக்கே நன்றி உடையவர்களாக இருக்கவும் மாட்டீர்கள்.
அத்தியாயம் 26
மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே, நாங்கள் உலக ஆசைகளைத் துறந்துவிட்டோம் என்றும், அந்நியர்கள் மற்றும் வேற்று நாட்டவர்கள் போல இந்த உலகில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே வாழ்வோம் என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, அதைத் தொடர்ச்சியாக நாம் எமது செய்கைகள் மூலம் பிரதிபலிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் பகல் வேளைகளில் நமக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்ட தங்குமிடங்களில் அடைக்கலம் பெறுவோம். இது உலகின் மாய வலைகளில் இருந்து எம்மை பாதுகாக்கிறது. இவ்வாறு நாம் தேவனின் இராச்சியத்தில் மோட்சானந்த பாக்கியத்தை அடைய மீட்டெடுக்கப் பட்டுள்ளோம். வெளிநாடொன்றில் வாழும் எவராவது ஒரு மனிதர், தனது தாய்நாட்டிற்குத் திரும்பி வர அவசரமும், ஆர்வமும் கொள்வது இயற்கை தானே? தங்கள் குடும்ப அங்கத்துவர்களைப் பார்ப்பதற்காக, விரைந்து பயணம் செல்லும்போது, தங்கள் அன்புக்குரியவர்களை விரைவாகச் சென்று அன்புடன் ஆரத் தழுவிக்கொள்ளும் ஆர்வத்துடன் பயணம் செய்யும் போது, அந்த சூழ்நிலைக்கு ஏற்ற சாதகமான மெல்லிய தென்றலை அனுபவிப்பதில் ஆர்வம் கொள்ளாதோர் யார் உளர்? நமது தேசத்தையே நாம் சொர்க்கமாகக் கருதுகிறோம். ஆகவே நாம் நமது முன்னோர்களை எமது பெற்றோராக நடத்த விழைந்தோம். நாம் நமது பெற்றோரை வாழ்த்துவதற்கும், நம் நாட்டைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதற்கும், நாம் உடனடியாக அங்கே பயணிக்க வேண்டுமல்லவா? அங்குள்ள எங்கள் அன்புக்குரியவர்களில் ஏராளமானோர், அதாவது பெற்றோர், உடன்பிறப்புகள், குழந்தைகள் எல்லோரும் எமது வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர்களின் பாதுகாப்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், நம்முடைய மீட்பை இட்டு இன்னமும் அதிகமாக் கவலையும் அக்கறையும் உடைய ஏராளமானோர் எங்களுக்காக, நாம் வரும் வரை நீண்ட காலமாகக் காத்திருக்கிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்கும் அவர்களை அன்புடன் ஆரத் தழுவிக்கொள்வதற்கு, அவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! மரண பயம் இல்லாத பரலோக இராச்சியத்தில் எவ்வளவு இன்பம்! அத்தோடு நித்திய வாழ்வில் மிக உயர்ந்த மற்றும் எல்லையில்லா ஆனந்தம் அங்கே நிலவுகிறது. அங்கே புனிதமான அப்போஸ்தலர்களின் புகழ்பெற்ற கீர்த்தனைக் குழாம், மகிழ்ச்சியான தீர்க்கதரிசிகளின் சங்கமம், ஏராளமான வேதசாட்சிகள் தங்கள் தியாகம், ஆர்வத்தின் மகிமை மற்றும் வெற்றியின் சின்னமான கிரீடங்களை அணிந்து கொண்டும், சரீரத்திலும் தங்கள் அவையவங்களிலும் கட்டுக்கோப்பைக் கடைபிடித்ததன் மூலம் தங்கள் பிரம்மச்சரியத்தின் சக்தியை தன்னகத்தே கொண்டிருக்கும் கன்னியர்களும், ஏழைகளுக்கு உணவு மற்றும் தானதர்மம் கொடுத்து நீதியின்படி நடந்த இரக்கமுள்ளவர்கள் போன்ற அனைவரும், அவர்களுக்கு கிடைத்த வெகுமதியை அனுபவிக்கிறார்கள். கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, தங்கள் பூமிக்குரிய தந்தையை பரலோகத்தின் கருவூலத்திற்கு மாற்றியவர்கள் அங்கே இருக்கிறார்கள். அன்புள்ள சகோதரர்களே, இப்படிப்பட்ட மோட்சானந்த பாக்கியத்தை அனுபவிப்போரோடு விரைவில் இணைந்து கொள்ள நாம் மிகவும் ஆவலோடும், அக்கறையோடும் எதிர்பார்த்திருக்கிறோம். நாம் கூடிய விரைவில் அவர்களோடு விண்ணகத்தில் ஒன்றித்து இருக்கவும், கிறிஸ்துவின் கிருபையோடு இணைந்து கொள்வதற்காகவும், நாம் இடைவிடாது பிரார்த்திக்கக்கடவோம். கடவுள் இதைத்தான் எங்கள் நோக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எம் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து இந்த நோக்கத்தை நம் மனதிலும் விசுவாசத்திலும் காண்பாராக. அவருடைய அன்பை வெளிப்படுத்த விரும்புவோருக்கு அவர் உயர்ந்த வெகுமதி அளித்து, அவர்களைப் பெரிதும் உயர்த்தக் கடவாராக.
[1] அது தற்போது பாவனையில் உள்ள ‘மரணம்’ அல்லது ‘இல்லாது போதல்’ போன்ற சொற்களோடு நேரடித் தொடர்பின்றி காணப்படுகிறது. ஆகவே சுருக்கமாக இதன் அர்த்தம் மரணம் என்றே கொள்ளலாம். (சிசரோ, டி நேச்சுரா டியோரம் 1.10.26). இந்த ஆய்வுக் கட்டுரையில், சிப்ரியன் அவர்கள் ஒரு புதிய பொருளைப் பயன்படுத்துகிறார், அதாவது பிளேக் (மோர்ட் 8.15 17). இருப்பினும், இங்கே காலவரையறை பற்றிய கண்காணிப்பு காணப்படுகிறது.
[2] லூக்கா 21.31.
[3] எருசலேம் வீழ்ந்த காலத்திலிருந்து, ஆரம்பகால கிறிஸ்தவ எழுத்தாளர்கள் உலகின் முடிவு வந்துவிட்டதாக நினைத்தார்கள். சிப்ரியன் இந்த கருத்தை வெளிப்படுத்தினார் மற்றும் அதை தனது எழுத்துக்களில் அடிக்கடி கூறிவந்தார். (cf. Demetr. 5.23; Fort.. I; எபிஸ்ட். 58.1
[4] ரோமர் 1.17
[5] லூக்கா 2.29
[6] யோவான்; 16.20.
[7] யோவான்; 16.22.
[8] யோவான்;14.28.
[9] பிலிப்பியர்; 1.21.
[10] பிரசங்கி; 2.1.
[11] பிரசங்கி; 2.4,5.
[12] குறிப்பு: யோபு; 1.21.
[13] யோபு; 2.10.
[14] யோபு; 1.8. இந்த குறிப்புகள் புனித அகஸ்டினிலும் நடைபெற்றது என்று சபடியர் குறிப்பிடுகிறார்
[15] தோபித்; 2.14 (16) சிப்ரியன் அவர்கள் இந்த பகுதியில் மேற்கோள் காட்டியிருப்பவை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டவைக்கு ஒத்தவையாக இருக்கின்றன.
[16] தோபித்; 12.11-15.
[17] எண்ணாகமம்; 17.25 (10
[18] சங்கீதம்; 50.19
[19] உபாகமம்; 8:2
[20] உபாகமம் 13.3.
[21] 2 கொரிந்தியர். 12.7 – 9
[22] பிரசங்கி; 27.5 (6).
[23] கொள்ளை நோய்களின் விளைவுகள் பற்றிய இந்த தெளிவான விளக்கத்தின் மத்தியில், நவீன காலங்களில் அடையாளம் காணப்பட்ட எந்தவொரு பெரிய தொற்று நோய்கள் மத்தியிலும், கொள்ளை னாய் போன்றவற்றை துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை.
[24] கொடிய கொள்ளை நோய் மற்றும் பெருந்தொற்றின் போது கார்தேஜில் உள்ள நிலைமைகளை இந்த படம் டிமேட்டர் எனும் இடத்திலுள்ள சிப்னனால் மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டது. இது புனித பொன்டியஸால் மீண்டும் அறியத்தரப்பட்டது. வீடா 9.
[25] குறிப்பு. நிறுத்துங்கள் 10.5 மற்றும் 12.1. வேதசாட்சியத்தை மறுத்தவர்கள் சம்பந்தமாக இதேபோன்ற ஆறுதல் கூறும் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
[26] வெளிப்பாடுகள்; 2.2.
[27] 1 தெசலோனிக்கர்; 4.13.
[28] யோவான்; 11.25.
[29] பிலிப்பியர்; 3.20,21.
[30] ஆதியாகமம்; 5.24.
[31] ஞானாகமம்; 4.11.
[32] யோவான்; 2.15.
[33] குறிப்பு: மோர்ட். 2.
[34] குறிப்பு: மோர்ட். 2.
