கர்த்தர் கற்பித்த செபம் (The Lord’s Prayer)

Cyprian of Carthage, The Lord’s Prayer, in Tamil


ஐந்தாவது புத்தகம்: கர்த்தர் கற்பித்த செபம் (The Lord’s Prayer)

அத்தியாயம் 1

மிகவும் பிரியமான சகோதரர்களே, நற்செய்தியின் முன்னுரைகள் என்பன தெய்வீக போதனைகள். அவை நம்பிக்கையை வளர்ப்பதற்கான அடித்தளங்கள், நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான போஷனை, இதயத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்து, எங்கள் போக்கை இயக்கும் சுக்கான், இரட்சணியத்தைப் பெற உதவும் வழிகாட்டி, அவை பூமியிலுள்ள சாந்தமானவர்களின் மனதை சக்திமயப்படுத்தும் மூலங்கள்.இவை யாவும், விசுவாசிகள் அனைவரையும் பரலோக இராச்சியத்தை நோக்கி வழிநடத்தும் தடங்கள். தம்முடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் மூலமாகவும் சொல்லப்பட, மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை தேவன் சொல்ல விரும்பினார்; தேவ குமாரனால் பேசப்பட்ட வார்த்தைகள், அவை தேவனுடைய வார்த்தைகள், அவை எவ்வளவு மகத்தானவை? தீர்க்கதரிசிகளின் மூலமாக அவர் தனது சொந்தக் குரலால் பேசியதாக இவை சாட்சியமளிக்கின்றன. அவரின் வருகையை முன்னிட்டு நாம் தயார் படுத்த வேண்டுமென அவர் கட்டளை இடவில்லை. அவரே வந்து எமக்கு வழியைத் திறந்து காட்டுகிறார். இத்தனை நாள் நாம் தெளிவற்ற மற்றும் பார்வையிழந்தவர்கள் போல மரணத்தின் நிழல்களில் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். கிருபையின் ஒளியால் ஓளியேற்றப் பட்டு, கர்த்தரையே நம்முடைய தலைவராகவும் மற்றும் வழிகாட்டியாகவும் இருக்கும்படி நமது வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்வோமாக

அத்தியாயம் 2

இறைவன் அவருடைய மக்களை இரட்சணியத்தின் வழியில் இட்டுச் செல்லும் முகமாக, பிரார்த்தனைக்கான ஒரு கட்டமைப்பை எமக்கு வழங்கினார். அவருடைய அறிவுரைகள், பிற பயனுள்ள முன்னெச்சரிக்கைகள் மற்றும் தெய்வீக அறிவுரைகள் பற்றி அதிலே தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எதற்காக நாம் செபிக்க வேண்டும் என்று அவர் தமது அறிவுறுத்தலினூடாக, நமக்கு போதித்துள்ளார். எமக்கு வாழ்வளித்த அதே இறைவன், அவருக்கே உரிய தயவுடனும் இரக்கத்துடனும் மற்ற விடயங்களைக் கற்றுத்தர எம்மத்தியில் இறங்கி வந்து, எமக்கு செபம் செய்யவும் கற்றுக் கொடுத்தார். நம்முடைய தேவ குமாரன் நமக்குக் கற்பித்த அதே செபத்தினூடாகவும் வேண்டுதலின் ஊடாகவும் நாம் பிதாவிடம் பேசும்போது நம்முடைய மன்றாட்டுக்கள் எளிதாக செவிமடுக்கும்படி இதைச் செய்கிறோம். நேரம் நெருங்கும் வேளை பற்றி அவர் முன்னறிவித்திருந்தார். “பிதாவை நோக்கி மன்றாடுபவர்கள், சத்தியத்திலும் ஆன்மாவாலும் செபிக்கும் நேரம் நெருங்கி வருகிறது”[1] என்று அவர் கூறுகிறார். அவர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார். அவருடைய பரிசுத்தமாக்கலின் மூலம் ஆன்மாவையும் சத்தியத்தையும் அடைந்த நாம், அவருடைய போதனைகளின் வாயிலாக அவரை சத்தியத்திலும் முழு ஆன்மாவுடனும் துதிப்போம். கிறிஸ்து நமக்குக் அருளிய செபத்தை விட சக்திவாய்ந்ததாக ஏதாவது  இருக்கக்கூடுமோ? அவர் பரிசுத்த ஆவியானவரை எம்மிடம் அனுப்பினார். தேவனுடைய குமாரனிடம் இருந்து நமக்கு அனுப்பப்பட்ட செபத்தை விட, நாம் பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கக்கூடிய உண்மையான மன்றாட்டு வேறு எதுவும் இருக்க முடியாது என்பது தானே உண்மை? ஆகவே, அவர் நமக்குக் கற்பித்த செபத்தைப் பார்க்கிலும், வேறு வித்தியாசமான முறையில் செபிப்பது நமது அறியாமை மட்டுமல்ல,  பாவமும் கூட. கர்த்தர் அதனை உறுதிப்படுத்தும் வகையில், இவ்வாறு சொல்கிறார்: “உங்கள் சொந்த வழக்கங்களை நிலைநிறுத்தும் பொருட்டு, நீங்கள்  கடவுளின் கட்டளையை நிராகரிக்கிறீர்கள்.”[2]

அத்தியாயம் 3

ஆகவே, மிகவும் பிரியமான சகோதரர்களே, தேவனும், ஆசானுமாக இருக்கிற அவர் நமக்குக் கற்பித்தபடியே செபிப்போமாக. “கிறிஸ்துவின் செபத்தை அவருடைய காதுகளுக்கு கேட்கும்படி உயர்த்துவதற்காக” கிறிஸ்துவை அவருடைய சொந்த வார்த்தைகளின் ஊடாகத் தேடுவது, நட்பையும், அவருடனான நெருக்கத்தையும் அதிகரிக்கும். நாம் செபிக்கும்போது, ​​பிதா தனது குமாரனின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார். நம்முடைய இதயங்களில் குடியிருப்பவர் என்றும் நம்முடைய குரலாகவும் நம்மிடையே இருப்பார். நம்முடைய பாவங்களுக்கான பரிகாரத்தின் நிமித்தம், பிதாவின் முன்னிலையில் அவர் மத்தியஸ்தராக இருப்பதால், நம்முடைய மத்தியஸ்தராக இருப்பவரின் வார்த்தைகளை நாம் ஒப்புவிக்கக்கடவோம். ஆகவே கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்: “நாம் கர்த்தருடைய பெயரால் பிதாவிடம் எதையாவது கேட்போமானால், அவர் அதை நமக்குத் தந்தருளுவார்.”[3] ஆதலினால், நாம் கிறிஸ்துவின் பெயரில் தேடும்போது, ​​அவருடைய பெயரால் அவர் கற்றுத்தந்த செபத்தினூடாக எதையேனும் கேட்கும் போது, ​​அங்கே நாம் எவ்வளவு அதிகமான பலனைப் பெறுகிறோம்?[4]

அத்தியாயம் 4

ஆனால் செபம் செய்பவர்கள், தங்கள் வார்த்தைகளையும் வேண்டுதல்களையும் நிதானத்துடனும் பணிவுடனும் ஒப்புக்கொடுக்கக் கடவர்களாக. நாம் கடவுளின் கண்களுக்கு முன் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய சரீர  நடத்தையிலும், நம்முடைய குரலின் நிலை போன்ற இரண்டு செய்கைகளிலும், நாம் கடவுளின் கண்களுக்கு முன் தூய்மையாய்  இருத்தல் வேண்டும். ஏனெனில் குரலை உயர்த்தி கூச்சலிடுவது அறிவீனமான ஒரு பண்பு. ஆகையால், மறுபுறம், தாழ்மையானவர்கள் எளிமையான முறையில் செபிப்பது அதிக நன்மை பயக்கும். இறுதியாக, இறைவன் அவருடைய போதனைகளில்,எம்மை பிரத்தியேகமாக, மூடிய கதவுகளின் பின் மற்றும் ஒதுக்கமான இடங்களிலிருந்தும் அல்லது, நம்முடைய சொந்த படுக்கை அறைகளிலிருந்து அவரை நோக்கி செபிக்கும்படி சொல்கிறார். நம்முடைய விசுவாசத்தைப் பொறுத்தவரை, கடவுள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் அவர் செவிமடுக்கிறார். அவருடைய மகிமையானது மறைக்கப்பட்ட மற்றும் இரகசிய இடங்களில் கூட செயல்படக் கூடியது என்பதையும் நாம் புரிந்து கொள்வது நல்லது. அங்கே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “நான் அருகில் இருக்கும் கடவுளேயன்றி தொலைவில் உள்ள கடவுள் அல்ல. ஒரு மனிதன் என்னிடமிருந்து விலகி வெகு தொலைவில் உள்ள இரகசிய இடங்களில் மறைந்திருக்க எவராலும் முடியுமா? வானமும் வையமும் என்னால் நிரம்பி இருக்கவில்லையா?[5] அதேபோல் மீண்டும்: “தேவனுடைய கண்கள் எல்லா இடங்களுக்கும் சென்று, அங்கே நடக்கும் நன்மை மற்றும் தீமைகளைக் காண்கின்றன.”[6] நாம் நமது சகோதரர்களுடன் ஒரே இடத்தில் கூடி, கடவுளுக்கு சேவையாற்றும் குருவுடன் சேர்ந்து தெய்வீக திருப்பலியை ஒப்புக்கொடுக்கும் போது, ​​நாம் இதயசுத்தியையும், ஒழுக்கத்தையும் கடைபிடிப்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆகவே, நாம் நம்முடைய மன்றாட்டுக்களை தான்தோன்றித் தனமாக மேற்கொள்ளவோ, அல்லது எங்கள் வேண்டுதல்களை வேண்டா வெறுப்பாக சொல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எமது வேண்டுதல்களை, தாழ்மையுடனும், இறைவனைப் புகழ்ந்தும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், வேண்டுதல்கள் எமது குரலால் ஒலிப்பதைக் கேட்க வேண்டும் என்றல்ல, அவை இதயத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காக. அவர் நம் மனதில் உள்ள எண்ணங்களை நன்கு அறிந்துள்ளார். எனவே நாம் எமது வேண்டுதல்களை உரத்த குரலில் வெளிப்படுத்தத் தேவை இல்லை. இதை இறைவன் இவ்வாறு கூறுவதன் மூலம் உறுதிப் படுத்துகிறார்: “உங்கள் இதயத்தில் வீணான எண்ணங்களை ஏன் கொண்டிருக்கிறீர்கள்?”[7] பிறிதொரு இடத்தில் இப்படிக்கூறப்பட்டுள்ளது: “நான் இதயத்தைத் தேடும் இறைவன் என்பதை எல்லா திருச்சபைகளும் அறிந்து கொள்ளட்டும்”[8] .

அத்தியாயம் 5

முதல் ராஜாக்களின் புத்தகத்தில், ஹன்னா ஒரு தேவ சபையை   முன்மாதிரியாகக் காட்டி, எவ்வாறு தியானிப்பது மற்றும் எவ்வாறு அதைக் கடைபிடிப்பது போன்றவற்றையும், இறைவனின் மக்கள் எவ்வாறு செபித்தார்கள் என்பது பற்றியும் விளக்குகிறார். உரத்த சத்தத்துடன் வேண்டுதல்களை செய்யாது, அமைதியாகவும், நேர்மையாகவும், தாழ்மையுடன் அவள் செபித்தாள். அவள் அமைதியாக தனது இதயத்தால் தனது வேண்டுதல்களை ஒப்புக் கொடுத்தாள். அவள் மௌனமாகவும், அமைதியான முறையிலும் தனது செபத்தின் ஊடாக பேசினாள். அதன் மூலம் தனது விசுவாசத்தை பறைசாற்றினாள். அவள் சத்தமாக கூக்குரலிட்டு வேண்டவில்லை. தனது இதயத்திலிருந்து வந்த வார்த்தைகளின் ஊடாகவே பேசினாள். ஏனெனில், இறைவன் அவளது மன்றாட்டைக் கேட்கிறார் என்று அவள் அறிந்திருந்தாள். அதேபோல், அவள் தேடுவதை நிதர்சனமாகக் கண்டடைந்தாள். அதற்குக் காரணம், முழுமனதுடன் விசுவாசித்துக் கேட்பதால் தான். பரிசுத்த வேதாகமம் இதுபற்றி இவ்வாறு விளக்குகிறது: “ஏனென்றால் ஹன்னா தனது இதயத்தால் பேசினாள். அவள் உதடுகள் மட்டுமே அசைந்தன. அவளுடைய குரல் ஒலிக்கவில்லை. கர்த்தரும் அவளது மன்றாட்டைக் கேட்டார்.”[9] அதேபோல், சங்கீதப் புத்தகத்திலும் நாம் இதுபற்றி வாசிக்கிறோம்: “துயரத்தில் இருப்பவர்களே, உங்கள் படுக்கையறையில் இருந்து, உங்கள் இதயத்திலிருந்து வருபவற்றைப் பேசுங்கள்.”[10] பரிசுத்த ஆவியானவர் எரேமியா மூலமாக அதையே நமக்கு அறிவுறுத்தும் வகையில் இவ்வாறு கற்பிக்கிறார்: “ஆண்டவரே, எங்கள் இதயங்களின் எழுந்தருளி இருக்கும் நீர், என்றென்றும் புகழுக்கும் மாட்சிமைக்கும் தகுதியானவர்.”[11]

அத்தியாயம் 6

மேலும் மிகப் பிரியமான சகோதரர்களே, வரி வசூலிப்பவர் ஆலயத்தில்  எவ்வாறு பிரார்த்தனை செய்தார் என்பதை மரியாதைக்குரியவர்கள்  மறந்துவிடக் கூடாது. ஒருவர் தனது கண்களை வணக்கத்தை நோக்கி செருக்குடன் திறப்பதையும், ஆணவத்துடன் கைகளை மேல்நோக்கி உயர்த்துவதையும் தவிர்த்து, தனது மனதிலுள்ள உள்ளார்ந்த பாவங்களை அறிக்கையிட்டு, தாழ்மையுடன் தெய்வீகக் கிருபையைப் பெற நமது இதயக்கதவுகளைத் திறக்க வேண்டும். மேலும், பரிசேயர் தன்னைப் பற்றி தற்புகழ்ச்சி கொண்டாலும், அந்த மனிதன் தான் தூய்மையாய் இருக்கவே விரும்பினான். எனவே அவர் இவ்வாறு கேட்டார்: யாரும் நிரபராதிகள் அல்ல என்பதால், அவர் தனது இரட்சணியத்தின் மீதான விசுவாசத்தைத் தனது அப்பாவித்தனத்தின் மீது கொள்ளவில்லை. எனவே, அவர் தனது பாவங்களை அறிக்கை இட்டு, தாழ்மையுடன் செபித்தார். தாழ்மை உள்ளவர்களை மன்னிக்கும் இறைவன், அவர்கள் செபிக்கும்போது அவர்களது குரலுக்கு செவி மடுத்தார். கர்த்தர் தனது நற்செய்தியில் இவ்வாறு கூறுகிறார்: “இரண்டு பேர் செபம் செய்ய ஆலயத்துக்குள் சென்றார்கள். ஒருவர் பரிசேயர், மற்றையவர் வரி வசூலிப்பவர். பரிசேயன் எழுந்து நின்று தன் இதயத்தினால் செபிக்க ஆரம்பித்தான், “இறைவா, நான் மற்ற மனிதர்களைப் போல இல்லை, நான் ஒரு கொள்ளைக்காரன், விபச்சாரம் செய்பவன், வரி வசூலிப்பவன் அல்ல. அதனால் நான் உமக்கு நன்றி கூறுகிறேன். நான் வாரத்திற்கு இரண்டு முறை உண்ணாவிரதம் இருக்கிறேன். என்னிடம் உள்ள அனைத்திலும் தசமபாகத்தைத் தருகிறேன் என்றான். அதேநேரம், வரி வசூலிப்பவன், தூரத்தில் நின்று, தனது கண்களை வானகத்தை நோக்கி ஏறெடுத்தும் பார்க்கத் திராணி அற்றவனாய் தனது இதயத்தின் வெளிப்பாடுகளை இவ்வாறு ஒப்புவித்தான்: “ஆண்டவரே, நான் ஒரு பாவி, எனக்கு இரக்கம் காட்டும்’ என்றான். நான் உங்களுக்குத் சொல்கிறேன். சொல்கிறேன். பரிசேயர் அல்ல, இந்த மனிதன் நியாயத்தைப் பெற்று, தன் வீட்டிற்குள் சென்றான். தங்களை உயர்த்திக் கொள்ளும் அனைவரும் தாழ்த்தப்படுவார்கள். தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் அனைவரும் உயர்தப்படுவார்கள்.”[12]

அத்தியாயம் 7

அன்பான சகோதரரே, பரிசுத்த வேதாகமத்தைப் படிப்பதன் மூலம், செபிக்கக் கற்றுக்கொண்ட பிறகு, நம்முடைய கர்த்தராகிய ஆண்டவரையே எமது ஆசிரியராக ஏற்றுக்கொண்டு, நாம் அவரிடமிருந்தும் இவை யாவற்றையும் கற்றுக்கொள்வோம். அதாவது, நாம் எதற்காக செபிக்க வேண்டும் என்பதைப்பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார். “நீங்கள் செபிக்கும்போது, ​​இவ்வாறு செபியுங்கள்: ‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுமாப்போல், பூமியிலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்பவர்களை நாம் பொறுப்பது போல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும், தீமையிலிருந்து எம்மை இரட்சித்தருளும்.”[13]

அத்தியாயம் 8

எல்லாவற்றுக்கும் முதலாவதாக, சமாதானத்தின் சர்வேசுரனும், ஒற்றுமையின் இறைவனுமாகிய நமது ஆண்டவர், நாம் தனிப்பட்ட முறையில் செபிப்பதையோ, தனக்காக மட்டும் தனியாக செபிப்பதையோ எதிர்பார்க்கவில்லை. நாம் ‘பரலோகத்தில் இருக்கிற என் பிதாவே’ என்றோ, அல்லது ‘இன்று எனது  அப்பத்தை எனக்குத் தாரும்’ என்றோ கூறாமல் இருப்போம். அத்தோடு, ‘என் பாவங்களை மன்னியுங்கள்’ என்றோ அல்லது ‘என்னை சோதனையில் விழவிடாமல், தீமையிலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்றோ நாம் செபிப்பதில் பயனில்லை. நாம் ஒப்புக்கொடுக்கும் பிரார்த்தனை பொதுவானதாகவும், எல்லோர் சார்பாகவும் ஒப்புக்கொடுக்கும் பிரார்த்தனையாக இருத்தல் வேண்டும். மேலும், நாம் செபிக்கும்போது, ​​ஒரு நபரை நோக்கியதாக அல்லாமல் எல்லா மக்களுக்காகவும் செபிக்க வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும், அதாவது எல்லா மக்களையும் ஒரேவிதமாகக் கருதவேண்டும். பிரார்த்தனைகளின் வழிகாட்டியானவரும், எம் அனைவரையும் அன்போடு அரவணைப்பவரும், எமக்கு ஒற்றுமையின் அர்த்தத்தைக் கற்றுத்தந்தவருமான எம் இறைவனாகிய ஆண்டவர், ஒற்றுமையாலும், சகிப்புத்தன்மையோடும் எம் எல்லோரையும் அரவணைத்து வழிநடத்துவது போல, எல்லோருக்காகவும் மன்றாட வேண்டுமென எதிர்பார்க்கிறார். இந்த செபத்தை, சட்டத்தின் கட்டளையால்  எரியும் உலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று குழந்தைகளும் செய்தனர். அவர்கள் செபத்திலும், ஆன்மாவாலும் இணைந்து ஒன்றுபட்டிருந்தார்கள். எனவே, பரிசுத்த வேதாகம் விசுவாசம் என்றால் என்ன என்பது பற்றி  பின்வருமாறு வெளிப் படுத்துகிறது: மேலும், அத்தகையவர்கள் தாங்கள் எவ்வாறு செபித்தார்கள் என்பதையும், நம்முடைய செபங்களில் நாம் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதற்கு அவர்களது விசுவாசம் ஒரு எடுத்துக் காட்டாக அமைய வேண்டுமென்றே  அவர்கள் அவ்வாறு செய்தார்கள். அங்கே இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “பின்னர் அவர்கள் மூவரும் தங்கள் வாய்களால் துதிப்பாடல்களைப் பாடி, கடவுளைப் புகழ்ந்தவண்ணம் இருந்தார்கள்.”[14] அவர்கள் ஒரே வாயால் பேசுவதைப்போன்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படியிருந்தும், கிறிஸ்து அவர்களுக்கு அதுவரை செபிக்கக் கற்பித்திருக்கவில்லை. எனவே, அவர்கள் செபிக்கும்போது, ​​அவர்களின் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகவும், பயனுள்ளவையாகவும் இருந்தன. ஏனென்றால், அமைதியான, நேர்மையான, ஆன்மீக ரீதியான செபம் என்பது இறைவனிடமிருந்து நல்லவற்றைப் பெறும் தகுதியை எமக்குத் தருகிறது. கர்த்தருடைய விண்ணேற்றத்திற்குப் பின், அப்போஸ்தலர்களும் அவர்களுடைய சீடர்களும் எவ்வாறு செபித்தார்கள் என்பதையும் நாம் பார்ப்போம். அதையிட்டு வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: “அங்கிருந்த பெண்களும், இயேசுவின் தாயாரான மரியாளுடனும் அவருடைய சகோதரர்களுடனும் ஒற்றுமையாகவும், தொடர்ந்து செபித்துக் கொண்டும் இருந்தார்கள்.”[15] அவர்கள் அனைவரும் ஒரே மனதுடன் இடைவிடாமல் செபம் செய்தனர். தொடர்ந்து ஒரே விதமான பிரார்த்தையிலும், செபத்திலும் அவர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். எனவே, மனிதர்களில் ஒரே மனதை உருவாக்கும் கடவுள், அவர்கள் ஒரே மனதுடன் செபிக்காவிட்டால், இறைவன் அவர்கள் வீட்டில் குடியிருக்கவோ அன்றி, இறைவனின் தெய்வீக மற்றும் நித்திய வாசத்தலத்தில் அடியெடுத்து வைக்கும் பாக்கியத்தை அவர்கள் இழந்து விடுகிறார்கள்.[16]

அத்தியாயம் 9

மிகவும் அன்பான சகோதரர்களே, மேலும், கர்த்தருடைய செபமானது திவ்விய நற்கருணை சடங்குகளில் எவ்வாறு பங்கேற்கிறது என்பது பற்றி நாம் கருத்தில் கொள்வோமானால், ​​அது வார்த்தைகளில் மிகவும் சுருக்கமாக கூறப்பட்டு இருந்தாலும், அதில் எண்ணற்ற ஆன்மீக விழுமியங்கள் உள்ளன என்பது தெளிவாகின்றது. அவற்றில் எத்தனை பலன்கள் உள்ளன, அவை எவ்வளவு பெரியவை? நம்முடைய செபங்களிலும் வேண்டுதல்களிலும் சேர்க்கப்பட வேண்டிய எதுவும் அங்கே விடுபடவில்லை. பரலோகத்தில் இருந்து கற்றுத் தரப்பட்ட நியாய, தர்ம வழிகாட்டுதல்கள்  போன்ற எதுவும் அதிலிருந்து அகற்றப் படவில்லை! வேதாகமம் இவ்வாறு உரைக்கிறது: “ஆகவே நீங்கள் இவ்வாறு செபியுங்கள். பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா கூறுகிறார், “ஒரு புதிய மனிதன், கடவுளிடமிருந்து மறுபடியும் பிறந்து, கடவுளால் மறுசீரமைக்கப் பட்டு, முதலில், அவருடைய கிருபையால் ‘பிதாவே’ என்று கூறுகிறார். ஏனென்றால் அவன் இப்போது தன்னை ஒரு மகன் என்று எண்ண ஆரம்பித்துவிட்டான். பரிசுத்த வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: “அவர் சுயமாகவே வந்தார். ஆயினும் அவரது சொந்த மக்கள் அவரை ஏற்க வில்லை. “ஆயினும்கூட, அவரை விசுவாசிக்கிற     மக்களுக்கும், ஏற்றுக் கொண்ட அனைவருக்கும், அவருடைய பரிசுத்த நாமத்தை விசுவாசிக்கும் மக்களுக்கும் கடவுளின் பிள்ளைகளாக மாற்றம் பெற அவர் அதிகாரம் அளித்தார்.”[17] ஆகையால், தேவரீருடைய நாமத்தினால் அவரது பிள்ளைகளாக மாறியவர்கள், பின்னர் நன்றி சொல்ல வேண்டும் என்பதோடு, தன்னை கடவுளின் பிள்ளை என்று அறிவிக்கத் தொடங்கவும் வேண்டும். அப்படிப்பட்டவர்,  தம்முடைய தந்தையாக, பரலோகத்தின் சர்வேசுரனை அறிவித்து, தனது புதிய பிறப்பையிட்டு, தனது வார்த்தைகளினால் முதலில் சாட்சியம் அளிப்பாரானால், தனது உலகக வாழ்க்கையின் சரீரத்தாலான தகப்பனை மதிக்கிறார் என்றால், பரலோகத்தில் இருந்து ஆட்சி செய்யும் இறைவன் தான், அவருடைய பிதா என்பதை அவர் அறிந்து கொள்ளத் தொடங்குவார். அப்பொழுது முதல், இறைவனே அவரது தந்தையாக அவரை அரவணைத்துக்கொள்வார். அதுபற்றி அங்கே இவ்வாறு எழுதப் பட்டுள்ளது: “தாம் தங்கள் தந்தையையும் தாயையும் காணவில்லை” என்று சொன்னவர்களும், தங்கள் சகோதரர்கள் அறியாத தங்கள் சொந்தக் குழந்தைகளும், தங்கள் சொந்த வார்த்தைகளின் பலனைப் பெறும் அதேநேரம், அவர்கள் உங்கள் வார்த்தையைக் கடைபிடித்தார்கள், உங்கள் உடன்படிக்கையும் கடைபிடிக்கப்படுகிறது.”[18] அதேபோல், நம்முடைய பூமிக்குரிய தகப்பனை நாம் தந்தை என்று அழைக்கக் கூடாது என்று இறைவன் தம்முடைய வேதாகமத்தில் நம்மை வற்புறுத்தவில்லை. ஆயினும், அங்கே சொல்லப்பட்டுள்ளது யாதெனில், நம் அனைவருடைய பிதாவானவர் என்பவர், எமது வானகத் தந்தை ஒருவர் மட்டுமே என்பதே அதன் அர்த்தம்.[19] இறந்த தனது தந்தையைப் பற்றிப் பிரஸ்தாபித்த தனது சீடரிடம், கர்த்தர் இவ்வாறு கூறினார்: “இறந்தவர்களை இறந்துபோகக் கூடியவர்கள் அடக்கம் செய்கிறார்கள்.”[20] ஏனெனில், அவர்கள் தனது தந்தையை இறந்துவிட்டார் என்று சொன்னாலும், விசுவாசிகளின் தந்தை என்றும் உயிருடன் இருக்கிறார்.

அத்தியாயம் 10

மேலும், மிகவும் பிரியமான சகோதரர்களே, நாம் அவரை பரலோகத்தின் பிதா என்று அழைப்பதை மட்டும் உன்னித்து புரிந்து கொள்வதை விடுத்து,  நாம் எல்லோருமாக ஒன்றிணைந்து ‘எங்கள் பிதா’ என்று சொல்வோமாக. அதாவது, விசுவாசிகள், அவர் மூலமாக பரிசுத்தமாக்கப் பட்டவர்கள் மற்றும் ஆன்மீக கிருபையின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட கடவுளின் பிள்ளைகளாகப்  பரிணமிக்கத் தொடங்கியுள்ளனர். அத்தோடு, எங்கள் பிதா என்று நாம் சொல்லும்போது, விசுவாசிகளான அனைவருடனும் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம். கடவுளால் களங்கங்கள் அகற்றப்பட்டு, பிறப்பால் மற்றும் ஆன்மீக கிருபையால் புதுப்பொலிவு பெற்று, கடவுளின் மக்களாக மாறத் தொடங்குவோருடன் நாம் இணைந்துள்ளோம். எனவே இந்தக் குரலானது யூதர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களைக் கண்டிக்கிறது. தீர்க்கதரிசிகளால் எதிர்வுகூறப்பட்டு, முதலில் அவர்களுக்காக  அனுப்பப்பட்ட கிறிஸ்துவை அவர்கள் விசுவாசிக்கவில்லை, அவர்கள் அவரைக் கொடூரமாகக் கொன்றனர். ஆகையால், அவர்கள் இனி பிதாவாகிய ஆண்டவரை தந்தை என்று அழைக்க முடியாது. கர்த்தர் அவர்களைக் குழப்பமடையச் செய்து, அவர்களுடைய செயல்களைக் கண்டித்து இவ்வாறு கூறுகிறார்: ‘நீங்கள் உங்கள் பிறப்பால் சாத்தானையே தந்தையாகக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே தான், உங்கள் தந்தையின் விருப்பங்களை நிறைவேற்ற விரும்புகிறீர்கள். ஏனெனில், தொடக்கத்திலிருந்தே, அவன் ஒரு கொலைகாரன். அவனிடமிருந்து இதுவரை சத்தியம் உரைக்கப்படவில்லை. ஏனென்றால் அவனிடம் உண்மை இல்லை.[21] மேலும், ஏசாயா என்ற தீர்க்கதரிசி மூலம், கடவுள் தனது கோபத்தை இவ்வாறு வெளிப் படுத்துகிறார்: “நான் குழந்தைகளை நன்கு போஷித்து வளர்த்தேன், ஆனால் அவர்கள் எனக்கு எதிராகக் கலகம் செய்திருக்கிறார்கள். எருது அதன் உரிமையாளரை அறிந்திருக்கிறது. கழுதை தன் எஜமானரின் லாயத்தை நன்கு அறியும். ஆனால், இஸ்ரேல் என்னை அறியவுமில்லை, என் மக்களைப் புரிந்து கொள்ளவுமில்லை. ஐயகோ! பாவப்பட்ட இனமே, அக்கிரம சுமையால் நசுங்குண்ட மக்களே, தீமை செய்யும் தேசமே, ஊழல்வாதிகளாக செயல்படும் பிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைக் கைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தவானை இகழ்ந்து, விலகி, மீண்டும் பின்னோக்கிப் போய் விட்டீர்களே”[22] கிறிஸ்தவர்களாகிய நாம் அவர்களின் செய்கைகளை நிராகரிக்கும் வண்ணம், செபிக்கும்போது ‘எங்கள் பிதாவே’ என்று கூறுவோமாக. ஏனென்றால், அவர் இப்போது நம்முடைய பிதாவாக இருக்கத் தொடங்கியபடியால், யூதர்களின் பிதாவாக இருப்பதை விட்டு விட்டார். அவர்கள் அவரை நிராகரித்தார்கள். மேலும் பாவம் செய்பவர்களின் மகனாக இருக்க முடியாது. ஆயினும்கூட, தங்கள் பாவத்தை விட்டு ஒழித்து மீண்டவர்களுக்கு, புதல்வர்கள் என்ற பெயர் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நித்திய வாழ்வுக்கான வாக்குறுதி அளிக்கப் படுகிறது, அதையிட்டு, கர்த்தர் மேலும் சொல்கையில்: “பாவத்தைக் காட்டிக் கொள்கின்ற அனைவருமே பாவத்தின் அடிமைகளாவர். எனவே அடிமை ஒருபோதும் வீட்டில் தங்குவதில்லை. ஆயினும் புதல்வர் என்றென்றும் வீட்டிலே தங்கியிருப்பார்.”[23]

அத்தியாயம் 11

மேலும், கர்த்தர் எமது பாவங்களை மன்னிப்பதில் எவ்வளவு உயர்ந்தவராக இருக்கிறார். அவர் நம்மீது காட்டும் அக்கறையும், கரிசனையும் மற்றும் எமக்கு செய்யும் நன்மைகளும் ஏராளமானவை, அவை எவ்வளவு உயர்ந்தவையாக இருக்கின்றன? அதனால்தான் நாம் கடவுளின் திருக் கண்களினால் எம்மை நோக்கும் வண்ணம் செபிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதேபோல், தேவன் அவருடைய குமாரனான கிறிஸ்துவைப் போலவே, நாமும் நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனை அழைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆகவே, நாமும் நம்மை தேவனுடைய குமாரர்களாக அறிவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த வழியில் செபிக்க அவரே நம்மை அனுமதித்திருப்பதால், பிதாவே, என்று செபிக்க நாம் பயம் கொள்ளத் தேவையில்லை. ஆகையால், அன்புள்ள சகோதரர்களே, நாம் கடவுளிடம் உரையாடும் போது, ​​நாம் கடவுளின் பிள்ளைகளாகவே செயல்பட வேண்டும். ஆகவே, நாம் நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனைப் புகழ்ந்தேற்றுவதைப் போலவே, நாமும் அவருடைய கண்களுக்கு முன்பாக மகிழ்ச்சியுடனும், தூய்மையுடனும் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கர்த்தர் நம்மில் வாழ்கிறார் என்பதை அடையாளப்படுத்தும் முகமாக, நாம் கடவுளின் ஆலயமாக வாழக் கடமைப் பட்டுள்ளோம். அத்தோடு, நம்முடைய செயல்கள் பரிசுத்த ஆவியின் கிருபையில் இருந்து பிரியாது இருக்கக் கடவதாக. நாம் ஆன்மீக ரீதியாகவும், பரலோக வாழ்வுக்குத் தகுதியானவர்களாகவும்  மாறத் தொடங்குகையில், ஆன்மீகம் மற்றும் வாங்க மகிமையைத் தவிர வேறு எதையும் பற்றித் தியானிப்பதைத் தவிர்க்க வேண்டும். எம் ஆண்டவராகிய கர்த்தர் இவ்வாறு கூறியுள்ளார்: என்னை மகிமைப் படுத்துபவனை நானும் மகிமைப்படுத்துவேன். என்னை திகழ்பவன் எவனும் நிராகரிக்கப்படுவான்.”[24] ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலரும் இதை தனது கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நீங்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. நீங்கள் ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள். உங்கள் உடலில் கர்த்தரை ஏற்று, அவரை மகிமைப் படுத்துங்கள்.”[25]

அத்தியாயம் 12

பின்னர், “உங்கள் திருநாமத்துக்கு மகிமை உண்டாவதாக” என்று நாங்கள் கூறுகிறோம். அப்படிச் சொல்வதன் மூலம், நம்முடைய செபங்களில் கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும் என்று மட்டும் பொருள்படாது. இருப்பினும், இறைவனின் திருநாமம் எமது செபத்தினால் மகிமைப் படும்படி, அவரின் கிருபையைத் தேடி அடைய நாம் செபிக்க வேண்டும். மேலும், கடவுள் மகிமைப்படுகிறார், அவர் தன்னை கௌரவிப்பவர்களினால் தான் மகிமைப்படுத்தப்படுகிறார் அல்லவா? அதையிட்டு அவரே இவ்வாறு கூறுகிறார்: “நான் பரிசுத்தமாக இருப்பதைப் போலவே நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.”[26] ஞானஸ்நானத்தால் சுத்திகரிக்கப்பட்ட நாங்கள், எங்களிடமிருந்து தொடங்கிய புனிதத்தன்மையை தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம். நாமும் அவ்வாறே இருக்க வேண்டுமென தாழ்மையுடன் இறைஞ்சுவோமாக. புனிதத்தன்மை என்பது எமக்கு அன்றாடம் தேவைப்படுவதால், இது தொடர்பாக தினமும் நாம் செபிப்போமாக. அனுதினமும் பாவம் செய்யும் நாம், தொடர்ச்சியான மீட்பைப் பெற நம்மை தயார்படுத்துவதன் நிமித்தம் இதைச் செய்வோமாக. மேலும், புனிதமாக்கல் பற்றி கடவுள் நம்மீது பொழிந்த அருளையிட்டு அப்போஸ்தலர் இவ்வாறு அறிவிக்கிறார்: “அநீதியை ஆதரிப்பவர்கள், தேவனுடைய இராச்சியத்தை அடைய மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாற வேண்டாம். விபச்சாரம் செய்பவர்கள், விக்கிரக ஆராதனை செய்பவர்கள், காம இச்சை கொண்டு தவறிழைப்பவர்கள், பெண்களைப் போல நடந்துகொள்பவர்கள், ஆண்களோடு சமபாலினப் புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள், திருடர்கள், கஞ்சத்தனம் உடையவர்கள், குடிகாரர்கள், மற்றையோரைக் கொடுமைப் படுத்துபவர்கள், ஈனர்கள் மற்றும் மற்றையோரின் சொத்துக்களை அபகரிப்பவர்கள் போன்றோர் தேவனுடைய இராச்சியத்தை அடையத் தகுதியற்றவர்கள். உங்களில் சிலர் அப்படி இருந்தார்கள். ஆனால் நீங்கள் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் பெயராலும், எமது தேவனுடைய தூய ஆவியினாலும் கழுவப்பட்டு, புனிதமாக்கப்பட்டு, நியாயவாதிகளாய் மாற்றம் பெற்றுள்ளீர்கள்.”[27] இந்த புனிதமாக்கும் கிரியை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயாராலும், நம் தேவனுடைய தூய ஆவியின் பெயராலும் செய்யப்பட்டது என்று அவர் கூறுகிறார். இந்த புனிதத் தன்மை நமக்குள் என்றும் இருக்கும்படி பிரார்த்திப்போமாக. ஏனென்றால், சுகம் பெற்று விரைந்த ஒரு மனிதனுக்கு, மீண்டும் பெரிய தீமை ஏதும் நெருங்காமல் இருக்கும் முகமாகவும், மேலும் பாவங்களைக் கட்டிக்கொள்ளாதிருக்கவும், நம் கர்த்தரும், நமது பொதுவான நியாயாதியானவரும் அவனை எச்சரித்திருக்கிறார். இந்த வேண்டுகோளை நாம் தொடர்ந்து எமது செபத்தோடு உள்ளடக்கி ஒப்புக்கொடுப்போமாக. இதை நாம் இரவும் பகலும் இடைவிடாது கேட்போமாக. கடவுளின் கிருபையால் எமக்கு அருளப்பட்ட புனிதத் தன்மை மற்றும் அதன் துரிதப்படுத்தும் கிருபை போன்றவை என்றும், தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டுமென நாம் இறைவனை இடையறாது பிரார்த்திப்போமாக.

அத்தியாயம் 13

அந்த மன்றாட்டில் மேலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “உம்முடைய இராச்சியம் வருக.” அதன் அர்த்தம், அவருடைய நாமம் நம்மில் புனிதப்படுத்தப்பட வேண்டும் என்று நாம் கேட்பது போல, தேவனுடைய இராச்சியம் நமக்கு வெளிப்படும் என்று நாங்கள் தேடுவோமாக. ஏனென்றால், தேவனின் ஆட்சியின் போது, ​​அல்லது அது அவரிடத்தில் இருந்து அவரது ஆட்சி தொடங்கிய போது, ​​இந்த இரண்டு காரணிகளும் இருந்தன அல்லவா? தேவன் நமக்கு உறுதியளித்தவாறு, அவருடைய இராச்சியத்தின் வருகையை நாங்கள் வேண்டுகிறோம். அது கிறிஸ்துவின் இரத்தத்தினாலும் பாடுகளாலும் பெறப்பட்ட ஒன்றாகும். ஆகவே, முன்னர் உலகில் சேவை செய்த நாம், பின்னர் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்று ஆட்சி செய்திருக்கிறோம். இதையிட்டு அவரே இவ்வாறு உறுதியளிக்கிறார்: “என் பிதாவினால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களே வாருங்கள், உலகத்தைப் படைக்க அஸ்திவாரம் இடும் முன்பே தேவனுடைய இராச்சியத்தில் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.”[28] உண்மையில், அன்புள்ள சகோதரர்களே, நாம் அனுதினமும் வர வேண்டும் என்று ஆவலோடு காத்திருக்கும்  தேவனுடைய இராச்சியம் என்பது  இயேசுக்கிறிஸ்துவே. அவர் மிக விரைவில் வருவார் என்று விசுவாசிக்கிறோம். அவரே உயிர்த்தெழுதலாய் இருக்கிறார். நாம் அவரால் மீண்டும் உயிர்த்தெழுப்பப்படுவதால், தேவனுடைய இராச்சியம் தான் கிறிஸ்து என்பதை புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் அவரால் நாம் ஆட்சி செய்யப் படப் போகிறோம். மேலும், நாம் தேவனுடைய இராச்சியமான, பரலோக இராச்சியத்தை நாடுகிறோம். ஏனென்றால், பூமியில் ஒரு இராச்சியம் இருப்பதே இதற்குக் காரணம். ஆகவே, இந்த உலகத்தை ஏற்கனவே வெறுக்கும் ஒருவர், இந்த இராச்சியத்தையும் அதன் மகிமையையும் விட உயர்ந்தவர். இவ்வாறு, இறைவனுக்கும், கர்த்தராகிய கிறிஸ்துவுக்கும் தன்னை அர்ப்பணிக்கும் எவனும், உலக விடயங்களைபற்றி அல்ல, வானக விடயங்களையே ஏற்றுக்கொள்ள விரும்புகிறான். மேலும், நாம் பரலோக இராச்சியத்தில் இருந்து விலகிவிடக்கூடாது என்பதற்காக, நிதமும் நாம் செபத்திலும், வேண்டுதல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். யூதர்கள் முதலில் வாக்குறுதியளித்தபடி அவர்கள் பின்வாங்காமல் இருந்தது போல, நாமும் பரலோக இராச்சியத்தில் இருந்து விலகிவிடக்கூடாது. கர்த்தர் இதை தெளிவாக உறுதிப்படுத்தும் வகையில், இவ்வாறு கூறுகிறார்: “பலர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்து, ஆபிரகாம், ஈசாக், மற்றும் யாக்கோபுடன் பரலோக இராச்சியத்தில் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இராச்சியத்தின் புத்திரரோ வெளியில், இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அவர்கள் தங்கள் பற்களைக் கடிப்பதும், அழுதுகொண்டும் இருப்பர்.”[29] முன்னாளில், தேவனுடைய இராச்சியத்தின் பிள்ளைகள் யூதர்கள் என்பதையும், அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகப் பாதுகாக்கப் பட்டதையும் அவர் எமக்கு அறியத்தருகிறார். ஆனால் பின்னர், பிதாவின் பிள்ளைகள் என்ற அவருடைய பெயரை அவர்கள் இழந்தபோது, ​​அவர்கள் தேவனுடைய இராச்சியத்தையும் இழந்தார்கள். அதேபோல், கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய மன்றாட்டுக்களில் இறைவனைத் “தந்தை” என்று அழைக்கத் தொடங்கிய நாம், தேவனுடைய இராச்சியம் நம்மிடம் வரும்படி செபிக்கிறோம்.

அத்தியாயம் 14

இதுபோலவே நாம் இதை மேலும் சேர்த்துக்கொள்கிறோம். “உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூமியிலும் செய்யப் படுவதாக.” அங்கே, கடவுள் நாம் வேண்டுவதைச் செய்ய வேண்டுமென்று நாம் செபிக்காது, கடவுள் என்ன செய்ய சித்தம் கொண்டுள்ளாரோ, அதையே  செய்யும்படி செபிக்கிறோம். ஏனென்றால், கடவுள் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு எதிராக யார் இருக்கிறார்கள்? ஆயினும்கூட, சாத்தான் நம் மனதுக்கும் எமது செயல்களுக்கும் எதிராக செயல்படுவதால், எமது எல்லாவிதமான செயல்களிலும் கடவுளுடைய சித்தம் என்றும் நம்மில் இருக்கும்படி நாம் கடவுளுக்கு கீழ்ப்படிந்து அவரையே துதிப்போமாக. அது நம்மில் நிறைவேற வேண்டுமென்றால், கடவுளுடைய சித்தம் நம்மில் நிறைவேற வேண்டும். அதாவது, அவருடைய உதவியையும் பாதுகாப்பையும் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம். இறுதியாக, ஒரு பலவீனப்பட்ட மனிதனை இறைவன் சுமக்கிறார் என்பதையிட்டு அவர் இவ்வாறு கூறுகிறார்: “பிதாவே, உமக்கு சித்தமாயிருந்தால், இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கடவது.” அங்கே அவர் தம்முடைய சீடர்களுக்கு கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவது பற்றி ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறார். அதாவது, எல்லாவற்றிலும் தாமது சித்தம் அன்றி, கடவுளின் சித்தமே நிறைவேறக்கடவதாக, என்று கூறுகிறார். அதையிட்டு அவர் இவ்வாறு உரைக்கிறார்:  “எனினும், எனது விருப்பப்படி அல்ல; அனைத்தும் உமது சித்தத்தின் படியே நிறைவேறக் கடவதாக.”[30] பிறிதொரு இடத்தில் கர்த்தர் இவ்வாறு உரைக்கிறார்: “ஏனென்றால், நான் வந்தது என் சொந்த சித்தத்தைச் செய்ய அல்ல, என்னை அனுப்பிய பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவே வந்தேன்.”[31] சுதனானவர் தன் பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படியக் கூடுமானால், சேவகன் தன் கர்த்தருடைய சித்தத்திற்குக் எவ்வளவு கீழ்ப்படிந்திருக்க வேண்டும்? இதுபற்றி, யோவான் தனது நிருபத்தில், கடவுளுடைய சித்தத்தைச் செய்யும்படி நம்மை வலியுறுத்தும் வகையில் இவ்வாறு கூறுகிறார்: “உலக வாழ்க்கைக்கோ அல்லது உலகில் உள்ள விடயங்களுக்கோ அதிக ஆசை கொள்ளாதீர்கள். எவராவது உலகை நேசிப்பாரானால், அவர் பிதாவின் அன்பை இழந்து விடுகிறார். உலகில் உள்ள எல்லாவற்றிற்கும், சரீரத்தின் மேல் ஏற்படும் காம இச்சையும், கண்களால் காணும் காட்சிகளால் ஏற்படும் காம இச்சையும், உலக வாழ்க்கையைப்பற்றிய இறுமாப்பும் பிதாவுக்கு உகந்ததல்ல. அது  இந்த உலகத்தின் மீது எமக்கு ஏற்படும் அதீத வேட்கையாகும். இந்த உலகமும் அதன் மீது கொண்டிடுக்கும் வேட்கையும் மறைந்துவிடும். ஆனால், கடவுள் என்றென்றும் நிலைத்திருப்பதைப் போலவே, என் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுபவரும் என்றென்றும் நிலைத்திருப்பார்.”[32] கடவுளில் என்றென்றும் நிலைத்திருக்க விரும்பும் நாம், கடவுளின் சித்தத்தை, அதாவது சதாகாலமும் நிலைத்திருக்கக்கூடிய அவரது சித்தத்தையே நாம் நிறைவேற்ற வேண்டும்.

அத்தியாயம் 15

மேலும், தேவனுடைய சித்தம் என்பது, கிறிஸ்து கற்பித்ததும் அவர் நிறைவேற்றியதும் ஆகும். வாய் சொற்களில் பணிவு, விசுவாசத்தில் விடாமுயற்சி, வார்த்தைகளில் நேர்மை, செயல்களில் நீதி, செயல்களில் இரக்கம், ஒழுக்கத்தில் கண்ணியம், உரையாடலில் பணிவு, விசுவாசத்தில் நிலைத்தன்மை, வார்த்தைகளில் அடக்கம், செயற் பாடுகளில் நீதி, செயல்களில் கருணை, ஒழுக்கத்தில் கண்ணியம், ஒரு காயத்தை எப்படி ஏற்படுத்துவது என்ற அறியாமை, அதேவேளை ஏற்பட்ட காயத்தை தாங்கிக் கொள்ள முடியாமை, சகோதரர்களுடன் சமாதானம் கொள்ளல், முழு மனதோடு இறைவனை நேசித்தல், அவர் எமது பிதாவாக இருப்பதால் அவரை முழுமனதோடு நேசித்தல், அவர் கடவுள் என்று அவரை ஏற்று அவருக்குப் பயந்து நடத்தல், கிறிஸ்துவுக்கு முன்பாக எதையும் காணிக்கையை வையாதிருத்தல், ஏனென்றால் அவர் நம் முன் இந்தக் காணிக்கைகளையும் வைக்க வில்லை. அவருடைய அன்போடு என்றும் பிரியாது இணைந்திருக்கவும், அவரது சிலுவையின் முன் தைரியமாக நிற்கவும், அவருடைய பெயர் மற்றும் கெளரவம் குறித்து நெருக்கடியான சூழ்நிலை உருவாகும்போது, ​​நாம் என்ன சொல்லவேண்டும் என்பதை நம் பேச்சின் மூலம் தொடர்ந்து நிரூபிக்க வேண்டும். நாங்கள் விசாரிக்கப்படும்போது, எம்மைத் தற்காக்க உறுதியுடன் போராட வேண்டும். மேலும் நாம் முடிசூடிக்கொண்டு இருந்தாலும், மரண வேளையில் நிதானமாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், கிறிஸ்துவுடன் கூட்டு வாரிசுகளாக இருக்கும் பாக்கியத்தை எதிர்பார்க்க வேண்டும்; அவ்வாறு செய்வது கடவுளின் கட்டளைகளைக் கடைபிடிப்பதாகும்; அத்தோடு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகும்.

அத்தியாயம் 16

மேலும், இறைவனின் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக என்று இறைஞ்சி மன்றாடுவோம். இவை அனைத்தும் நமது சொந்த பாதுகாப்பு மற்றும் மீட்புடன் சம்பந்தப்பட்டவை. ஏனென்றால், எமக்கு பூமியில் ஒரு சரீரமும், விண்ணகத்தில் ஒரு ஆன்மாவும் இருக்கிறன. நாம் பூமியிலும் வானகத்திலும் இருக்கிறோம். நாம் அவை இரண்டையுமே கொண்டிருப்போம். அதன்படி, கடவுளுடைய சித்தம் எமது உடலிலும் ஆன்மாவிலும்  நிறைவேற்றப்பட வேண்டும் என்று பிரார்த்திப்போம். ஏனெனில் ஆன்மாவுக்கும், சரீரத்துக்கும் இடையே போராட்டம் ஒன்று நிகழ்கிறது. அவைகள் இரண்டும் தங்களைத் திருப்திப் படுத்திக் கொள்வதற்காக அவை  இடையே தினசரி மோதல் நடைபெறுகிறது. அதன் காரணமாக, நாம் மிகவும் விரும்பும் செயல்களை செய்யாதிருப்போம். ஏனெனில், ஆன்மா பரலோக மற்றும் தெய்வீக விடயங்களை நாடும் அதேவேளை, சரீரம் உலக விடயங்களையும் உலக இச்சைகளிலும் நாட்டம் செலுத்துகிறது. ஆகவே, கடவுளின் அனுசரணை மற்றும் உதவியுடன், சரீரம் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு உடன்பாட்டைக் கோருவோம். கடவுளின் சித்தம் நம் ஆன்மாவையும், சரீரத்தையும் ஆட்கொள்கிறது. நம்முடைய ஆன்மா; அதாவது அவரால் மீளுருவாக்கம் செய்யப்படும் நம்முடைய ஆன்மா பாதுகாக்கப்படுகின்றது. அப்போஸ்தலரான புனித பவுல் இதை வெளிப்படையாகவும் வெள்ளிடை மலையாகவும் தனது வார்த்தைகளில் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: “சரீரமானது தூய ஆவிக்கு விரோதமாகவும், தூய ஆவியானவர் சரீரத்துக்கு விரோதமாகவும் ஆவல் கொள்கின்றார். அவர்கள் ஒருவருக்கொருவர் நேரெதிராக, ஒருவருக்கொருவர் செய்ய விரும்பாதவற்றை செய்ய மற்றொருவரை அனுமதிக்க வில்லை. ஆனால் நீங்கள் தூய ஆவியினால் வழிநடத்தப்பட்டால், நீங்கள் சட்டத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருக்க மாட்டீர்கள். எனவே சரீரத்தின் இச்சை அங்கே தெளிவாகிறது; அதாவது, விபச்சாரம், அசுத்தம், பாலியல் ஒழுக்கக்கேடு, உருவ வழிபாடு, மாந்திரீகம், பகை, சண்டை, பொறாமை, கோபம், குரோதம், பிளவுகள், குறுங்குழுவாதம், வெறுப்பு, குடிப்பழக்கம், கேளிக்கை போன்றவற்றில் சரீரம் அதிக நாட்டம் கொள்கிறது. நான் உங்களுக்குச் முதலில் சொன்னது போல, இதுபோன்ற செயல்களைச் செய்கிறவன் தேவனுடைய இராச்சியத்துக்குத் தகுதியற்றவன். ஆனால் தூய ஆவியின் கொடைகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, இரக்கம், நன்மை, விசுவாசம், மென்மை, சுய கட்டுப்பாடு போன்றவற்றை கடைபிடிப்பவன் தேவனுடைய இராச்சியத்துக்கு தகுதியானவன்.”[33] எனவே, தொடர்ச்சியான மன்றாட்டுக்களோடு தினமும் செபிப்போமாக. அதாவது, வானகத்திலும், வையகத்திலும் நமக்காக கடவுளுடைய சித்தம் செய்யப்பட வேண்டும் என்று செபிப்போமாக. பூமியில் உள்ள ஆன்மீக மற்றும் தெய்வீக விடயங்கள் வானகத்தில் உள்ள விடயங்களாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்பதே கடவுளுடைய சித்தமாகும்.

அத்தியாயம் 17

மிகவும் அன்பான சகோதரரே, இந்த விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஏனென்றால், கர்த்தர் நம்மை அன்பு காட்டும்படி  கட்டளையிடுகிறார். ஆகவே நாம் நம்முடைய எதிரிகளை நேசிக்கவும், நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக செபிக்கும்படியும் சொல்கிறார், பூமியில் இன்னும் இருப்பவர்களுக்கும், இன்னும் பரலோக வாழ்வை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும், கிறிஸ்துவால் நிறைவேற்றப்பட்ட கடவுளுடைய சித்தமானது, மனிதகுலத்தின் பாதுகாப்பிற்கும் புதுப்பித்தலிலும் கடவுளுடைய சித்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், கடவுளுடைய சித்தம் போன்றவர்களுக்காக நிறைவேற்றப் பட வேண்டுமெனவும் பிரார்த்திப்போமாக. அவர் தம்முடைய சீடர்களை “பூவுலகைச் சேர்ந்தவர்கள்” என்று அழைக்கவில்லை, ஆனால் “பூவுலகின் உப்பு” என்று அழைத்தார். முதல் மனிதன் பூமியின் தூசியிலிருந்தும், இரண்டாவது மனிதன் விண்ணகத்தில் படைக்கப் பட்டதாகவும் அப்போஸ்தலர் நமக்கு அறிவிக்கிறார். நாம் பிதாவாகிய சர்வேசுரனைப்போல் இருக்க வேண்டும். அவர் தனது சூரியனை நன்மை செய்பவர்கள் மீதும், தீமை செய்பவர்களின் மீதும் பிரகாசிக்கச் செய்கிறார். நீதிமான்கள் மற்றும் அநீதியாளர்கள் மீது மழையைப் பொழிய வைக்கிறார். கிறிஸ்து நமக்கு அறிவுறுத்தியபடி, அவரை நோக்கி செபித்தது, அதனூடாக அவரைத் தேடுவது நல்லது. அதன்படி, அனைவரின் மீட்புக்காக நாங்கள் பிரார்த்தனை செய்வோமாக. கடவுளுடைய சித்தத்தின் படியே  நியாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக செபிக்கக் கடவோம். எனவே, நம்முடைய விசுவாசத்தின் மூலம், நாம் பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிறோம் என்று நம்பத் தயாராக இல்லாதவர்கள், தண்ணீரிலும் ஆன்மாவினாலும் உண்டாக்கப்பட்டவர்கள், கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றும் முகமாக, அவர்களின் முதல் பிறப்பின் மூலம் இந்த உலகில் இன்னும் இருக்கிறபடியால், பரலோகத்துக்கு உரியவர்களாக இருக்கத் தலைப்படுபவர்களுக்காக பிரார்த்திக்கடவோம்.

அத்தியாயம் 18

அந்த செபத்தை நாம் தொடரும்போது, ​​’எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்’ என்று செபிக்கிறோம். இதை நாம் ஆன்மீக ரீதியாகவும், மிக எளிமையாகவும் புரிந்து கொள்ளக்கூடியதாய் இருக்கிறது. மீட்பின் தெய்வீக செயல்திறனில் இந்த இரண்டு பரஸ்பர காரணிகளும் இன்று நமக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், கிறிஸ்து வாழ்வு தரும் அப்பமாக இருக்கிறபடியால், அந்த அப்பம் நம் அனைவருக்கும் இங்கே கொடுக்கப் படுகிறது. அது நமக்காகக் கொடுக்கப் பட்டது. ஏனென்றால், அதைப் புரிந்துகொண்டு விசுவாசிப்பவர்களின் தந்தையாக இருக்கும் அவரை, ‘எங்கள் பிதாவே’  என்றும், ​​’எங்கள் அப்பம்’ என்றும் குறிப்பிடுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை தம்முடைய சரீரத்துடன் இணைத்துக் கொண்டவர்களின் அப்பமாக இது விளங்குவதால். அந்த அப்பத்தை தினமும் எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் மேலும் கேட்டுக்கொள்கிறோம். ஆகவே, கிறிஸ்துவின், மீட்பின் அப்பமான இந்த திவ்விய நற்கருணையை நாம் தினமும் பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கவும், சாவான பாவங்களின் காரணமாக, நாம் வெளியேற்றப்பட்டு வானக அப்பத்துடன் நாம் தொடர்பை இழந்த போதும், கிறிஸ்துவின் உடலிலிருந்து பிரியாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். அவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் வானகத்திலிருந்து இறங்கிய வாழ்வு தரும் அப்பம் நானே. என் அப்பத்தை எவர் உண்கிறாரோ, அவர் என்றென்றும் வாழ்வார். மேலும், இந்த உலக வாழ்க்கைக்காக நான் கொடுக்கும் அப்பம், எனது சரீரமாகும்.”[34] “யாராவது அவருடைய அப்பத்தை உண்டால், அவர் என்றென்றும் வாழ்வார்”என்று அவர் சொன்னது போல, அவருடைய சரீரத்தில் ஒன்றிணைந்து புனித ஒற்றுமையின் பெயரால் கிடைக்கும் உரிமையால் திவ்விய நற்கருணையில் பங்கேற்பவர் சீவியரின் மத்தியில் இருக்கிறார் என்று அர்த்தம். மறுபுறம், கிறிஸ்துவின் சரீரத்தில் இருந்து விலகி, துண்டிக்கப்பட்டு, மீட்புக்கு வெளியே வாழ்ந்து வருபவர்களுக்காக நாம் பயபக்தியுடன் செபிக்க வேண்டும். கர்த்தர் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் மனிதகுமாரனின் சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தை பருகாவிட்டால், உங்களுக்குள் உங்கள் சீவன் இல்லை.”[35] அதனால், கிறிஸ்துவானவர் தான் நம் உணவை, அதாவது ஒவ்வொரு நாளும் அவர் அதை நமக்குக் கொடுக்கும்படி அவரிடம் இறைஞ்சுவோமாக. இவ்வாறு கிறிஸ்துவுடன் இணைந்து அவரோடு வாழ்கின்ற நாம், அவருடைய புனிதமாக்கலில் இருந்தும், அவருடைய சரீரத்தில் இருந்தும் வேறுபடக்கூடாது என்று வேண்டுவோமாக.

அத்தியாயம் 19

இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம். ஆன்மீக கிருபையின் மீது கொண்டுள்ள விசுவாசத்தால், இந்த உலகத்தை நிராகரித்து, இந்த உலகத்தின் செல்வத்தையும் கௌரவத்தையும் ஒதுக்கி வைத்துள்ள நாம், நமக்கு வேண்டிய ஆகாரம், மற்றும் இருப்பை மட்டுமே நாடி நிற்கிறோம். கர்த்தர் நம்மை அறிவுறுத்தும் முகமாக, இவ்வாறு கூறுகிறார்: “எவரும் இந்த உலகில் தன்னிடம் உள்ள அனைத்தையும் கைவிடாமல் இருக்கக் கூடுமானால், அவர் என் சீடராக இருக்கத் தகுதியற்றவர்.”[36] மேலும், கிறிஸ்துவின் சீடராகத் தொடங்கிய ஒருவர், தனது எஜமானின் வார்த்தையின்படி எல்லாவற்றையும் நிராகரித்தவர், அனுதின உணவைக் கேட்பதோடு, அவர்களுடைய வேண்டுதல்களில்  அவர்கள் ஆசைப்பட்டதெல்லாம் கேட்காதிருக்க வேண்டும். இங்கே கர்த்தர் தமது வார்த்தைகளினூடாக, இதையிட்டு மேலும் இவ்வாறு விவரிக்கிறார்: “எனவே நாளைய நாளைப்பற்றி கவலை கொள்ளாதிருங்கள். ஏனென்றால் நாளைய நாளின் கவலைகளை நாளைய நாளிடம் விட்டுவிடுங்கள். இன்றைய நாளின் கவலைகள் இன்றோடு போகட்டும்.”[37] கிறிஸ்துவின் சீடராக ஒருவர், அவருடைய சீவியத்துக்கு, அந்த நாளுக்கு எது பொருத்தமானதோ, அதை மாத்திரம் கேட்பது நல்லது. ஏனெனில் நாளைய நாளைப்பற்றி சிந்திக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், அவருடைய வருகையும், தேவனுடைய இராச்சியத்தின் வருகையும் விரைவில் வரும் என்று விசுவாசிக்கும் நாம், இந்த உலகில் நீண்ட காலம் வாழ்வோம் என்ற எண்ணம் அவரை நோகச்செய்கிறது. இது கர்த்தருடைய எண்ணத்திற்கு முரணானது. புனித அப்போஸ்தலர் கூட இதுபற்றி எம்மை எச்சரிக்கிறார். அவர் நம்முடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கோடிட்டுக் காட்டுகிறார். அந்த நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தொடர்ந்து கட்டிக்காக்கும்படி அவர் நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “நாம் இந்த உலகத்திற்கு எதையும் கொண்டு வரவில்லை, அதேபோல், எம்மால் எதையும் கொண்டு செல்லவும் முடியாது. நம்மிடம் உணவு மற்றும் உடை இருந்தால் அதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் செல்வத்தை விரும்புவோர் சோதனையிலும், மாய வலையிலும் விழுந்து, பல முட்டாள்தனமான மற்றும் விபரீத ஆசைககளுக்கும் முகம் கொடுத்து சீரழிந்து போகிறார்கள். அவை மனிதர்களை அழிவுக்குள் தள்ளும். ஏனென்றால் பொருள் பணத்தாசை மற்றும் பொருளாசை போன்றனவே  எல்லா தீமைகளுக்கும் ஆணிவேராகும். சிலர் அவற்றை அளவுக்கதிகமாக நேசித்து, விசுவாசத்தில் இருந்து வழிதவறி, பல துன்பங்களில் சிக்கி சீரழிந்து போனார்கள்.”[38]

அத்தியாயம் 20 

பொருள்சேர்க்கை வெறுக்கத்தக்க ஒன்று மட்டுமல்ல, ஆபத்தானது என்றும் அவர் கற்பிக்கிறார். ஆணவத்தின் ஆணிவேர் அங்கே தான் ஊன்றி இருக்கிறது. அங்கே மறைந்திருக்கும் வஞ்சகத்தன்மை மனித மனதின் பார்வையை மறைக்கிறது. ஆகையால், செல்வம் சேர்ப்பதிலும், தனது அதீத அறுவடை காரணமாக திமிர் கொண்டிருக்கும் முட்டாள்தனமான செல்வந்தனை கடவுள் கண்டிக்கும் விதத்தில் இவ்வாறு கூறுகிறார்: “முட்டாளே, இன்றிரவு உன் ஆன்மா உன்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படும். அப்படியானால், உனது புதையலை யார் அனுபவிக்கக் கூடும்?”[39] அந்த இரவில் முட்டாள் எனப்படுபவன் இறக்க நேரிடுகிறபோது, ​​அவன் தன் உடைமைகளையும், தான் சேமித்து வைத்ததையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறான். அதேநேரம், அவனது மனம் அவன் சேமித்த ஏராளமான பொருளின் மீது அவாக்கொண்டுள்ளது. இருப்பினும், மறுபுறம், அவன் பரிபூரணராகவும் முழுமையாகவும் மாற்றம் பெற வேண்டுமென்றால், அவர் தனது உடைமைகளையும் சொத்துகளையும் விற்று ஏழைகளின் நலனுக்காக அவற்றை விநியோகிக்க வேண்டும். ஆகவே, அவனுடைய உடைமைகளை வானகத்தில் சேமித்து வைக்க வேண்டும் என்று கர்த்தர் கற்பிக்கிறார். அதே போன்று, அந்த மனிதன் அவரைப் பின்தொடரவும், அவரைப் பின்பற்றவும், கர்த்தருடைய துன்பத்தின் மகிமையில் பங்குகொள்ளவும் முடியும் என்றும் அவர் கூறுகிறார். அந்த மனிதன் தனது இடைக்கச்சையை இறுக அணிந்து கொண்டு அவரைப் பின்தொடரவும், இறைவனின் இரக்கத்தையும் மகிமையையும் பின்பற்றவும் முடியும் என்று அவர் கூறுகிறார். அவனுடைய கணக்கில் அடங்காத சொத்துக்களில் இருந்து அவன் அவனை விடுவித்துக் கொள்ள வேண்டும். அதனா கிடைத்த நன்மைகளின் ஊடாக அவன் வானகத்தில் சேர்த்த சொத்துக்களோடு இறைவன் முன் செல்ல வேண்டும் எனக் கூறுகிறார். எனவே நாம் ஒவ்வொருவரும் அவருக்காக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி, செபத்தின் விழுமியங்களை நன்கு அறிந்து பிரார்த்தனை செய்ய கற்றுக்கொள்பவர், எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வார்.

அத்தியாயம் 21 

நீதிவழுவா மனிதனுக்கு, அவனது அன்றாட போசனத்தில் குறை இருக்காது. “கர்த்தர் நீதிமான்களை பசியால் துன்புறுத்த மாட்டார்”[40] என்று அதைப்பற்றி இங்கே இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: (Footnote #40 நீதிமொழிகள் 10.3] மீண்டும், சங்கீதத்தில்; “நான் இளமையாக இருந்தேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. நீதியுள்ளவர் கைவிடப் பட்டதையோ, அவரது வம்சம் உணவுக்குக் கையேந்துவதையோ நான் காணவில்லை.”[41] அதேவாறு, கர்த்தர் உறுதிபடச் சொல்வது என்ன வென்றால்; “நாம் என்ன உண்கிறோம், என்ன குடிக்கிறோம் அல்லது என்ன விதமான உடைகளை அணிகிறோம் என்பது குறித்து கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், இவை யாவும் அந்நிய தேசங்களில் இருந்து பெறப்பட்டவை. அதேநேரம், உங்களுக்கு இவை அனைத்தும் தேவை என்பதை உங்கள் பரலோகத் தந்தை நன்கு அறிவார். ஆதலால், முதலில் தேவனுடைய இராச்சியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். மற்ற எல்லாத் தேவைகளும் தன்னால் உங்களை வந்தடையும்.”[42] தேவனுடைய இராச்சியத்தையும் தேவனுடைய நீதியையும் தேடுபவர்களுக்கு அனைத்தையும் அருளுவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.[43] அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை, கடவுளைத் தன்னுள்ளே கொண்டவனுக்கு, கடவுள் குறைவின்றி அனைத்தையும் அளிப்பார். ஆகவே அவனுக்கு குறைவு என்று எதுவுமே இருக்காது. மேலும், அரசனின் கட்டளைப்படி, தானியேல் சிங்கங்களின் குகையில் சிறைவைக்கப் பட்டிருந்த போது, அவருக்காக தெய்வீகமாக ஒரு உணவு தயாரிக்கப் பட்டிருந்தது. தேவனுடைய மனிதன் காட்டு மிருகங்கள் அவனை சூழ்ந்திருக்கையில் கூட, உணவளிக்கப்பட்டான். அவை கோபமடைந்து காணப்பட்டாலும், அந்த மனிதனைத் தவிர்த்து விட்டன. அதேவாறு, எலியாவும் தனது பயணத்தின் போது காகங்கள் அவருக்கு உதவி செய்தன என்பதையிட்டு திருப்தி அடைந்தார். அதேபோல், அவரது துன்ப வேளைகளில், பறவைகள் கூட அவருக்கு உணவைக் கொண்டு வந்து கொடுத்தன. மனிதர்களால் நேர்ந்த கொடுமைகளில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டார், மிருகங்களிடமிருந்து மீட்கப்பட்டார், பறவைகளால் உணவளிக்கப்பட்டார். எனவே அவர்களுக்கு எதிராக சதி செய்த, மற்றும் கொடுமைக்கு ஆளாக்கிய மனிதர்கள் கடும் மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளனர்!

அத்தியாயம் 22

பின்னர் நாம் நம்முடைய பாவங்களைப் பற்றி செபிக்கிறோம்: “எங்களுக்கு தீமை செய்தவர்களை நாம் பொறுப்பது போல, எம் பாவங்களைப் பொறுத்தருளும்.” எங்கள் அனுதின உணவில் நாம் திருப்தி அடைந்தபின் பாவ மன்னிப்பு கேட்கிறோம். அப்படி கேட்பதற்குக் காரணம், நாம் கடவுளால் போஷிக்கப்படுபவர்கள், நாம் கடவுளில் வாழ இதுவே காரணம். ஆகவே, தற்போதைய மற்றும் நிரந்தரமற்ற உலகில் ஒரு மனிதனுக்கு தேவையானவை அவனுக்கு வழங்கப்படுவது மட்டுமல்லாமல், நித்திய வாழ்வில் அவனுக்குத் தேவையான வற்றையும் பெறமுடியும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டால் மட்டுமே நாம் அதற்குத் தகுதியுள்ளவர்களாகிறோம். இறைவன் அதை கடன் என்று அழைக்கிறார். அவர் தனது நற்செய்தியில் கூறுகிறார்: “நீங்கள் என்னை நோக்கி செபித்தால் உங்களுடைய எல்லா பாவங்களையும் நான் மன்னிப்பேன்.”[44] மேலும், நாம் பாவிகள் என்பதை நாம் ஏற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியமானதும், எவ்வளவு அவசியமானதும், எவ்வளவு பயனுள்ளதுமாக இருக்கிறது? எங்கள் பாவங்களுக்காக மன்றாட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு நாம் கடவுளிடமிருந்து பாவமன்னிப்பு கோரும்போது, ​​நமது மனங்கள் மனசாட்சியின் குற்ற உணர்ச்சியிலிருந்து மீளும். எல்லோரும் தங்களையிட்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஒரு அப்பாவி தன்னை ஒரு மனிதனாக எவ்வளவு உயர்த்திக் கொள்கிறானோ, அந்த அவ்வளவுக்கு அவன் அதிக அழிவைச் சந்திக்கிறான். அதன்மூலம், அவன் தினமும் பாவத்தைக் கட்டிக்கொள்கிறான் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு கற்பிக்கப்பட்டது. ஆகவே, அந்த மனிதன் செய்த பாவங்களுக்காக தினமும் செபிக்கும்படி அவனுக்குக் கட்டளை இடப்படுகிறது. அதைப்பற்றி, கடைசியாக யோவான் தனது நிருபத்தில் இவ்வாறு  எச்சரிக்கிறார்: “நாம் எந்தப் பாவமும் செய்யவில்லை என்று சொன்னால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மை எம்மிடம் இல்லை. ஆனால் நாம் நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், உண்மையுள்ள கர்த்தர், நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கும், எல்லா அநீதியிலிருந்து நம்மைத் தூய்மைப் படுத்துவதற்கும் தயாராக இருக்கிறார்.”[45] அவர் தனது நிருபத்தில் இவை இரண்டையும் இணைத்துள்ளார். அதாவது, நம்முடைய பாவங்களின் நிமித்தம் நாம் செபிக்க வேண்டும், நம்முடைய பாவங்களை நாம் ஏற்றுக் கொள்வதன் மூலம் கர்த்தர் எம்மை மன்னித்தருள்வார். அதனால்தான், கர்த்தர் வாக்குறுதி அளித்ததுபோல, நம்முடைய பாவங்களை அவர் உண்மையாக மன்னிக்க வல்லவர். எமது கடன்களுக்காகவும்,எமது பாவங்களுக்காகவும் செபிக்கக் கற்றுக் கொடுத்த இரக்கம் மிக்க ஆண்டவர், நாம் அவ்வாறு செய்வதன் மூலம் கிருபையும் மன்னிப்பும் பெறுவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

அத்தியாயம் 23

அவர் நிபந்தனை மற்றும் உடன்படிக்கையால் தெளிவாக நம்மை ஒன்றுபடுத்தி, கட்டளையின் பிரகாரம் நம்மை இணைத்துக்கொண்டார். எனவே, அங்கு கூறப்பட்டது போல, எங்கள் கடனாளிகளை நாங்கள் மன்னிப்து போல், எங்கள் கடன்களை மன்னித்தருளும் என்று காட்டப் பட்டுள்ளது. ஏனென்றால்,நமது கடனாளர்களை அதே வழியில் நாம் மன்னிக்கா விட்டால், நம்முடைய பாவங்களுக்காக நாம் கேட்கும் மன்னிப்பைப் பெற முடியாது என்பதை நாம் அறிவோம். இதைப்பற்றி பிறிதொரு இடத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் எதைக் கொண்டு அழைக்கிறீர்களோ, அவ்வாறே உங்களுக்கு அளக்கப்படும்.”[46] ஒரு சேவகன் தன்னுடைய எஜமானால் தான் பட்ட கடன்கள் யாவும் மன்னிக்கப்பட்ட பின்பும், அந்த சேவகன் தனக்கு கீழ் பணிபுரியும் மற்றொரு வேலையாளின் கடன்களுக்கு மன்னிப்பு கொடுக்க மறுத்து, அவனை சிறையில் தள்ளிவிட்டான். அவன் தனக்குக் கீழ் தொழில் செய்யும் தனது ஊழியரை மன்னிக்க விரும்பாததால், அவன் கர்த்தரால் கொடுக்கப்பட்ட மன்னிப்பை இழந்தான். கிறிஸ்து இவற்றை வேதாகமத்தில் மிகவும் உறுதியான முறையிலும் கண்டிப்புடனும் இவ்வாறு கூறியுள்ளார்: “நீங்கள் செபம் செய்ய எழுந்து நிற்கும்போது, ​​பரலோகத்திலுள்ள உங்கள் பிதா உங்களது பாவங்களை மன்னிக்கும் படியும், உங்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டுகிறவரை மன்னிக்கும் படியும் வேண்டிக்கொள்ளுங்கள். ஆனால் அவ்வாறு நீங்கள் மன்னிக்கா விட்டால், பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டார்.”[47] இப்படியான விடயங்களையிட்டு, நடுத்தீர்ப்பு நாளில் உங்களுக்கு எந்தவிதமான சாக்குப்போக்கு சொல்ல வேண்டி இருக்காது. நீங்கள் செய்த பாவங்களுக்கு அமைவாகவே, உங்கள் தண்டனை அமையும். இதனால், தீர்ப்பிடப்படும்போது, நீங்கள் கவலை அடைய நேரிடும். ஏனெனில், அவருடைய இல்லத்தில் சமாதானம் செய்பவர்களாகவும், ஒரே மனதோடும், ஒரே எண்ணத்தோடும் இருக்கும்படி தேவன் நமக்குக் கட்டளையிட்டார்.[48] மேலும், அவர் நம்மைப் படைத்துள்ளதன் பலனை அடையும் வகையிலும், அவரை நாம் ஏற்றுக்கொண்டதன் காரணமாகவும், நாம் மறுபிறவி அடைந்தவர்களாய் மீண்டும் அவதரிக்கிறோம். ஆகவே, தேவனுடைய பிள்ளைகளான நாம் சர்வேசுரனுடைய சமாதானத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். மேலும், நாம் ஒரே ஆன்மாவாக, ஒரே இதயமாகப் படைக்கப்பட்டுள்ள படியால், நாம் ஒரே மனதோடு இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அதன்படி, பிரிவினை, மற்றும் பகையை ஏற்படுத்திக் கொண்டுள்ளோர் ஒப்புக்கொடுக்கும் காணிக்கையை கடவுள் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் ஆலய பலிபீடத்திலிருந்து திரும்பி வந்ததும், முதலில் தன் சகோதரனுடன் சமரசம் செய்யும்படி கட்டளையிடுகிறார். அவ்வாறு செய்வதன் மூலமும், சமாதானத்துடன் செபிப்பதன் மூலமும் நாம் கடவுளுடைய சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். இறைவனுக்கு நாம் ஒப்புக் கொடுக்கக்கூடிய மிகப்பெரும் காணிக்கை என்னவென்றால், நாம் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும், ஒரே மனதுடனும் பிதா, சுதன், பரிசுத்த ஆவியானவரின் பேரால் ஒன்றுபட்டு வாழும் வாழ்க்கையின் மூலமாக அவருக்கு செலுத்தும் காணிக்கையே ஆகும்.

அத்தியாயம் 24

ஏனென்றால், ஆபேலும் காயீனும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த முதல் காணிக்கையில் கூட, கடவுள் அவர்களுடைய காணிக்கைகளை அன்றி,  அவர்களுடைய இதயங்களையே நோக்கினார். அதன்படி, கடவுளை ஒரே மனதுடன் போற்றியவரை மட்டுமே அவர் தந்த காணிக்கையினூடாக கடவுளை மகிழ்வித்தார். சமாதானம் மற்றும் நேர்மையியுடன் நடந்துகொண்ட ஆபேல், கடவுளுக்கு தனது நிர்மலமான மனதுடன் ஒப்புக்கொடுத்த காணிக்கைகள் மூலமாக மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். அவர்கள் பலிபீடத்தின் மீது ஒரு காணிக்கையை ஒப்புக்கொடுத்த போது, ​​கடவுளுக்குப் பயந்து, நேர்மையான மனதோடும், நீதிக்கும் தேவ கட்டளைக்கும் பணிந்து, சமாதானம் என்னும் பிணைபோடு அதை நிறைவேற்ற ஆபேல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஏனென்றால் கடவுளுக்கு காணிக்கை ஒப்புக் கொடுப்பது ஒரு கௌரவமான வழியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், மதிப்புக்குரியதுமாக இருந்த காரணத்தால், அவர் தாமே பின்னர் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட பலிப்பொருளாய் மாறினார். அந்த வகையில், அவர் முதலாவது வேதசாட்சியாய் மாறி, தனது இரத்தத்தின் மூலம் இறைவனின் பாடுகளை உலகறியச் செய்தார். கர்த்தருடைய நீதியும் சமாதானமும் அவரிடம் காணப்பட்டது. இறுதியாக, அத்தகையவர்கள் இறைவனால் முடிசூட்டப் படுகிறார்கள். அத்தோடு அவர்கள் நடுத்தீர்வை நாளில் இறைவனின் முன்னிலையில் பிரகாசிப்பார்கள். ஆயினும்கூட, பிளவுகளை ஏற்படுத்துபவர்களும், பேதத்தை உண்டுபண்ணுபவர்களும், தங்கள் சகோதரருடன் சமாதானம் செய்யாதவர்களைப் பற்றி, புனித அப்போஸ்தலரும் பரிசுத்த வேதாகமமும் இவ்வாறு சாட்சியமளிப்பதைக் காணலாம். அவரது பெயரால் ஒருவர் கொல்லப்பட்டாலும், அவர் தனது பேதமையை ஏற்படுத்தும் பாவங்களிலிருந்து தப்ப முடியாது. அதுபற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “தன் சகோதரனை வெறுக்கிறவன் ஒரு கொலை காரனுக்குச் சமமாவான்.”[49] ஆகவே, ஒரு கொலைகாரனால் பரலோகத்தில் தேவனுடைய இராச்சியத்துக்குள் பிரவேசிக்க முடியாது. அப்படிப்பட்டவனால் கடவுளுடன் அவருடைய சந்நிதானத்தில் வாழ முடியாது. அவர் கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக அல்லாமல், யூதாஸைப் பின்பற்றுபவனாக ஆனதால், அவனால் கிறிஸ்துவுடன் இருக்க முடியாது. இது இரத்தத்தாலோ, ஞானஸ்நானத்தினாலோ கழுவ முடியாத சாவான பாவமாகும். இது ஒரு வேதசாட்சியாக மாறினும், விட்டுப்போகாத பாவமாகும்.

அத்தியாயம் 25

கர்த்தர் அடிப்படையில் இந்த உபதேசத்தை நமக்குத் அருளுகிறார். அதாவது, ‘எம்மை சோதனையில் விழவிடாதேயும்’ என்று நம்முடைய செபத்தில் சொல்ல வேண்டும். கடவுள் அதை முன்கூட்டியே அனுமதித்திருக்காவிட்டால், விரோதிக்கு  நம்மீது அதிகாரம் இல்லை என்பதை இந்த பத்தியில் காட்டப்பட்டுள்ளது. நம்முடைய எல்லா பயமும் பக்தியும் பணிவும் இறைவனை நோக்கியே இருத்தல் வேண்டும். அவரிடமிருந்து அதிகாரத்தைப் பெறாதிருக்கும் பட்சத்தில், சோதனை வேளையில் எந்தத் தீங்கும் எங்களை நெருங்குவதில்லை. பரிசுத்த வேதாகமம் அதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறு தெளிவுபடுத்துகிறது: “பாபிலோனியாவின் மன்னன் நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு எதிராக வந்து அந்த நகரத்தைத் தாக்கினான். கர்த்தர் அதை அவனது கையில் ஒப்படைத்தார்.”[50] மேலும், நாம் செய்யும் பாவங்களின் காரணமாகவே நமக்குத் தீமை செய்வதற்கான தூண்டுதல் ஏற்படுகிறது. இது பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “இஸ்ரவேலை அழிக்கவும், யாக்கோபை அழிக்கவும் அனுமதித்தவர் யார்? அவற்றைக் கொடுத்தது இறைவன் அல்லவா? அவர் தனக்கு விரோதமாக பாவம் செய்ததாலும், அவருடைய வழிகளில் நடக்க மறுத்ததாலும், அவருடைய நீதிக்குக் கீழ்ப்படியாததாலும் அவர் தனது கோபத்தினால் அவர்கள் மீது ஆற்றாமையைப் பொழியவில்லையா”[51]  மீண்டும் ஒரு முறை, சொலமன் பாவம் செய்தபோது, ​​தேவனாகிய கடவுளின் ஒழுக்கத்திலிருந்தும் அவருடைய வழிகளிலிருந்தும் விலகிச் சென்ற போது, ​​”தேவன் சாத்தானை சொலமனுக்கு எதிராகத் தூண்டினார்” என்று எழுதப்பட்டுள்ளது.[52]

அத்தியாயம் 26

உண்மையில், எமக்கு எதிராக இரண்டு வழிகளினூடாக அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. இவை இரண்டும் யாதெனில், நாம் பாவம் செய்யும்போது நம்மைத் தண்டிக்கும் சக்தியும், நாம் நல்லவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் போது நம்மை அரவணைக்கும் சக்தியும் ஆகும். யோபு இவ்வாறான ஒரு நிலைமைக்கு முகம் கொடுத்ததை நாம் இங்கு காண்கிறோம். கர்த்தர் தமது வார்த்தைகளின் ஊடாக இதுபற்றி வெளிப் படுத்துகிறார்: “அவரிடம் உள்ள அனைத்தும் உங்கள் கைகளில் தான் உள்ளன. அவரிடம் உள்ள அனைத்தும் உங்கள் கைகளில் தான் உள்ளன. ஆகவே, அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காதீர்கள்.”[53] கர்த்தர் தம்முடைய நற்செய்தியில் அவரது பாடுகளின் காலத்தில் நடந்தவை பற்றி இவ்வாறு கூறுகிறார்: “வானகத்தில் இருந்து வரும் அதிகாரத்தைத் தவிர உங்களுக்கு என் மீது எவ்வித அதிகாரமும் இல்லை.”[54] மேலும், சோதனையில் விழவிடாமல் எம்மைக் காப்பாற்றும்படி நாம் மன்றாடும் போது, ​​நம்முடைய சொந்த பலவீனங்களையும் குறைபாடுகளையும் நினைவில் கொள்வோம். ஒருவர் ஆணவத்துடன் தன்னை உயர்த்திக் கொள்ளக்கூடாது. பாவத்தை ஒப்புக்கொள்வதற்காக ஒருவர் தனது கௌரவத்தையோ அன்றி துன்பத்தில் ஏற்படக்கூடிய மரியாதையையோ எதிர்பார்க்கக்கூடாது. கர்த்தர் தாழ்மையைப் பற்றி கற்பிக்கும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நீங்கள் சோதனையில் விழுந்துவிடாதிருக்க எப்போதும் விழிப்புடன் இருங்கள், தொடர்ந்து செபம் செய்யுங்கள். ஆன்மா விருப்பம் கொண்டிருந்தாலும், சரீரம் பலவீனமாக இருக்கிறது.”[55] அதன்படி, தாழ்மை மற்றும் பணிவு போன்றவற்றினூடாகவும், இறைவனுக்கு எல்லா மகிமையையும், இறைவன் மீது பயபக்தியையும், அதே பயபக்தியுடன் அவரைத் தேடுவதன் மூலமும், நாம் எதை வேண்டிக் கேட்கிறோமோ, அது அவருடைய கிருபையினாலும் கருணையினாலும் நமக்கு வழங்கப்படும்.

அத்தியாயம் 27

இவை யாவற்றுக்கும் அப்பால், செபத்தின் சுருக்கத்தை எமக்கு எடுத்து உரைக்கும் மற்றொரு பத்தியும் உள்ளது. இது எங்கள் கோரிக்கைகள் மற்றும் பிரார்த்தனைகள் போன்ற யாவற்றையும் இரத்தினச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டுகிறது. இறுதியில் நாங்கள் இந்த வழியில் அறிக்கை இடுவோமாக. அதாவது, இந்த உலகில் நமக்கு எதிராக செயல்படும் பகையாளிகளின் தீமையான செயல்கள் யாவற்றையும் நாம் உணர்ந்து, “தீயவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றும்” என்று வேண்டுகிறோம். கடவுள் நம்மைப் பாதுகாப்பதால், எங்களுக்கு வலுவான மற்றும் நம்பகமான பாதுகாப்பு கிடைக்கிறது. நாம் அவரிடம் இறைஞ்சிக் கேட்கும் போது அவர் நமக்கு உதவிக்கரம்  நீட்டுகிறார். மேலும், “தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்” என்று நாம் கூறும்போது, ​​கடவுளிடம் பாதுகாப்பைக் கேட்பதைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை. தீமைக்கு எதிராக நாம் கடவுளிடமிருந்து பாதுகாப்பை நாடி, அதைப் பெற்றவுடன், சாத்தானின் தீய கிரியை மற்றும் இந்த உலகில் உள்ள அனைத்துத் தீமைகளுக்கும் எதிராக, நாம் பாதுகாப்பையும் அதற்கான உறுதிப்பாட்டையும் பெறுகிறோம். இந்த உலகில் இறைவன் தான் தனது பாதுகாப்புக்கு இருக்கும் ஒரே வழி என்று வாழ்ந்துவரும் ஒருவருக்கு, இந்த உலகத்தையும், அதன் நிகழ்வுகளைப்  பற்றி அச்சம் கொள்வதற்கு வேறு எந்த காரணமும் இருக்கக்கூடுமோ?

அத்தியாயம் 28

மிகவும் அன்பான சகோதரர்களே, கர்த்தர் இந்த சக்தியுள்ள செபத்தை நமக்குக் கற்பித்திருப்பதால், அவருடைய வார்த்தையாலும், நம்முடைய எல்லா செபங்களைக்கொண்டும், நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்பது எவ்வளவு உன்னதமானது? இதை, தீர்க்கதரிசியான ஏசாயா முன்கூட்டியே எதிர்வு கூறியிருந்தார். பரிசுத்த ஆவியானவரால் முழுமைபெற்ற கடவுளின் மகத்துவம் மற்றும் கருணை குறித்து விபரமாக தீர்க்கதரிசியாகிய ஏசாயா  இவ்வாறு எடுத்துரைக்கிறார்: “ஏனென்றால், கடவுள் தம்முடைய வார்த்தையை உலகெங்கும் நிதானமாகவும், நீதியின் அடிப்படையிலும் நிறைவேற்றி அதை முழுமை அடையச்செய்கிறார்.”[56] கடவுளுடைய வார்த்தையானது, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து அனைவர் மத்தியிலும் வந்து, கற்றவர்களையும், கல்லாதவர்களையும் ஒன்றிணைத்து, சிறியோர், பெரியோர், ஆண், பெண் பேதமின்றி அனைத்து வயதினரிடமும் வந்து இரட்சிணியத்தின் கட்டளைகளை அருளியது. அவ்வாறு செய்வதன் மூலம், பரலோக ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்டவர்களின் மனதில் தங்கியுள்ள எண்ணங்கள், அவர்களுக்கு ஒரு சுமையாக அமையாது. இதனால் அவர்கள் நேர்மையான விசுவாசத்திற்குத் தேவையான விடயங்களை விரைவாகக் கற்றுக் கொள்வர். அதன்படி, நித்திய வாழ்வு என்றால் என்ன என்பதை அவர் நமக்குக் கற்பித்ததன் ஊடாக, ​​எம் வாழ்க்கையில் திவ்விய நற்கருணை எத்தனை புனிதமானதும் தெய்வீகமானதும் என்பது பற்றி இவ்வாறு கூறுகிறார்: “நித்திய வாழ்வு என்பதன் பொருள் இதுவே. தேவன் அனுப்பிய ஒரே உண்மையான கடவுளான இயேசு கிறிஸ்துவையும் நீங்கள் அறிந்துகொள்ளும்படி செய்வதே இதன் நோக்கம்.”[57] அதேபோல், அவர் நீதிக்கோவை மற்றும் தீர்க்கதரிசிகளை ஒன்றிணைத்து முதல் மற்றும் மிகப் பெரிய கட்டளையைப் பற்றிப் பேசியபோது, ​​அவர் இவ்வாறு கூறினார்: “இஸ்ரவேலரே, நன்றாகக் கேளுங்கள்: உங்கள் தேவனாகிய கர்த்தர் தான் உங்கள் ஒரே கடவுள்.”[58] அதேபோல், “நீங்கள் உங்கள் இறைவனாகிய கடவுளை உங்கள் முழு இதயத்தோடும் முழு மனதோடும் நேசிக்க வேண்டும். இது முதல் கட்டளை. இது போன்ற இரண்டாவது கட்டளை உள்ளது. உன்னை போல உன் அயலவனையும் நேசி. இந்த இரண்டு கட்டளைகளிலும் முழு சட்டத்தையும் தீர்க்கதரிசனத்தையும் உள்ளடக்கியுள்ளதைக் கவனியுங்கள்.”[59] மீண்டும் ஒருமுறை இதுபற்றிக் கூறப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்: யாராவது உங்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கும் அவ்வாறே செய்யுங்கள். இவற்றைத்தான் சட்டமும் தீர்க்கதரிசனமும் யாவருக்கும் எடுத்துரைக்கின்றன.”[60]

அத்தியாயம் 29

வார்த்தைகளால் மட்டுமல்ல, நமது செயல்களினூடாகவும் இறைவன் நமக்கு செபிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பிரார்த்தனைகளின் வழியாகவும், இறைஞ்சுதலினூடாகவும் அவருடைய சொந்த சாட்சியத்தையும் முன்மாதிரியையும் பின்பற்றி, நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை உறுதிப்படுத்த அவர் தொடர்ந்து நமக்குக் கற்பிக்கிறார். அங்கு இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “அவரே கூட மிகவும் தனிமையான ஒரு இடத்திற்குச் சென்று செபம் செய்தார்.” அங்கே மேலும் கூறும் போது: “அவர் செபிப்பதற்காக ஒரு மலைமேல் ஏறிச் சென்றார். அவர் இரவு முழுவதும் இறைவனை நோக்கி செபம் செய்தார்.”[61] ஆனால் பாவமே செய்யாத கர்த்தரான இயேசு அவ்வாறு செபிக்கும் போது, பாவிகளானோர் இன்னும் எவ்வளவு அதிகமாக செபிக்க வேண்டும்? அவர் இரவு முழுவதும் விழித்திருந்து, தொடர்ந்து, இடைவிடாமல் செபித்தாரானால், நாம் இன்னும் எத்தனை, எத்தனை இரவுகள் விழித்திருந்து தொடர்ந்து செபிக்க வேண்டும்?

அத்தியாயம் 30

மேலும், எம் கர்த்தரான இயேசு செபித்தார், அதுவும் தனக்காக அல்ல (ஒரு பாவமும் அறியாதவர் தனக்காக எதைக் கேட்கக்கூடும்?) நம்முடைய பாவங்களுக்காகவும், அவை மன்னிக்கப்படவேண்டும் என்பதற்காகவும் கர்த்தர் தொடர்ந்து செபித்தார். தன்னைப் பொறுத்த வரையிலும், அவர் அறிவித்த வகையிலும், அவரே பேதுருவிடம் இவ்வாறு கூறினார்: “இதோ, உங்களை கோதுமையைப் போலப் புடைக்க வேண்டும் என்று சாத்தான் காத்திருந்தான். ஆனால் உங்கள் விசுவாசம் அற்றுப்போகாதபடிக்கு, நான் உங்களுக்காக செபித்தேன்.”[62] பின்னர் அவர், அனைவரின் சார்பாகவும் பிதாவாகிய சர்வேசுரனிடம் இரந்து இவ்வாறு மன்றாடுகிறார்: “எனவே பிதாவே, இவர்களுக்காக மட்டுமல்லாமல், என்னோடு, என்னுள் இருக்கும் அனைவருக்காகவும், என் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கும் அனைத்து மக்களுக்காகவும், என்னை விசுவாசிக்கிற அனைவருக்கும் பிரார்த்தனை செய்கிறேன். நான் உம்மில் இருப்பதைப் போலவே அவர்கள் எம்மில் நிலைத்திருக்க நான் செபிக்கிறேன்.”[63] நம்முடைய இரட்சிணியத்துக்கு, இறைவனின் கடவுளின் கருணையும் கிருபையும், சமமாகவும், உயர்ந்தவையாகவும் இருத்தல் வேண்டும். ஆகையால், அவருடைய திரு இரத்தத்தின் மூலமாக நம்மை இரட்சிப்பதில் திருப்தி கொள்ளாது, அவர் நமக்காக மென்மேலும் தனது மன்றாட்டை ஒப்புக்கொடுத்த வண்ணமே இருந்தார். அதுமட்டுமல்ல, செபம் செய்த கர்த்தரின் எதிர்பார்ப்பை சற்று நோக்குங்கள். பிதாவும் சுதனும் என்றும் ஒன்றாக இருப்பது போல, நாமும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய பேரவா. இப்படிப்பட்ட கர்த்தரான இயேசு, தம்முடைய மக்கள் நன்றாக வாழ வேண்டுமென்று செபித்தார். அதேநேரம், பிரிவுகள், வேற்றுமைகள் போன்றவற்றுக்கு காரணமானவர், சமாதானத்தை சீர்குலைப்பவர் போன்றோர் எவ்வளவு தூரம் பாவங்களைக் கட்டிக்கொள்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒத்துழையாமை, ஒற்றுமையின்மை போன்ற குணங்களையுடையோர் என்றும் தேவனுடைய இராச்சியத்துக்குத் தகுதியற்றவர்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

அத்தியாயம் 31

மிகவும் அன்பான சகோதரர்களே, மேலும், நாம் செபம் செய்ய எழுந்து நிற்கும்போது, ​​நமது அனைத்து வேண்டுதல்களையும் முழு மனதோடும் முழு இதயத்தோடும் ஒப்புக்கொடுக்க வேண்டும். உடல் சம்பந்தமானவற்றைப் பற்றியோ, உலக நினைப்புகள் போன்ற  எதுவுமே மனதில் இருக்கக்கூடாது. பிரார்த்தனை செய்வதைத் தவிர அந்த நேரத்தில் வேறு எந்த சிந்தனையும் இருத்தல் ஆகாது. ஆகையால், குருவானவர் மன்றாட்டுக்களைத் தொடங்கும் முன், சகோதரர்களின் உள்ளங்களைத் தயார் செய்ய இவ்வாறு கூறுகிறார்: “உங்கள் இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.” பின்னர் மன்றாட்டுகளில் கலந்துகொள்வோர் அனைவரும் பதிலுரையாக, “நாம் எம் இதயங்களை ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.” இதில் விளக்கப்படுவது என்னவெனில், இறைவனைத் தவிர வேறு எதைப்பற்றியும் தியானிக்க வேண்டாம் என்பதே. நம்முடைய மனங்கள் விரோதிகளின் நிமித்தம் மூடப்பட்டு, கடவுளுக்கு மட்டுமே திறக்கப்பட்டிருக்க வேண்டும். நாம் செபிக்கும் போது கடவுளுக்கு விரோதமானவர்கள் எவரையும் நம்மை அணுக அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், அப்படிப்பட்ட கயவர்கள் எப்போதும் ஒளிந்திருந்து, நம்முடைய செபங்கள் இறைவனை அடையாதபடி மிகவும் தந்திரமாக நம்மை ஏமாற்றக்கூடியவர்கள். அப்படிப்பட்ட நேரங்களில்,  எம் மனம் ஒரு இடத்திலும், வாய் வேறு எதையேனும் சொல்வது போலவும் இருக்கும். நாம் நமது வாயினால் ஏற்படுத்தும் சத்தத்தைக் கொண்டு அல்ல, நம் மனதையும் எண்ணங்களையும் ஒருநிலைப்படுத்தி நாம் இறைவனிடம் ஒரு நேர்மையான, வெளிப்படையான மனதோடு செபிக்க வேண்டும். ஆனால் நீங்கள் இறைவனை நோக்கி செபிக்கும்போது, ​​நீங்கள் கடவுளிடம் பேசுவதை விடுத்து, வேறு எதைப்பற்றியாவது சிந்திப்பதற்கு நீங்கள் தூண்டப்படுவதும், முட்டாள்தனமான மற்றும் அசுத்தமான எண்ணங்களால் பீடிக்கப்படுவது போன்றவைகளும் எப்படிப்பட்ட தான்தோன்றித்தனம் உங்களை ஆட்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. உங்கள் சொந்த மனதின் கட்டளைகளுக்கு நீங்கள் செவிசாய்க்காத போது, ​​இறைவன் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? நீங்கள் செபிக்கும் போது, ​​உங்களைப் பற்றிய சிந்தனை மற்றும் உணர்வு உங்களுக்கு இல்லாத போது, ​​கர்த்தர் உங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று எப்படி உங்களால் எதிர்பார்க்க முடியும்? இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் இறைவனை நோக்கி செபிக்கும்போது, ​​மன்றாட்டின் மீது இருக்கும் உங்கள் கவனம் சிதறிவிடாமல் இருக்க வேண்டும், உன்னதமான தேவனின் மகிமையை புண்படுத்தாதபடியும், அவரது திருநாமத்துக்குக் களங்கம் ஏற்படுத்தாத வண்ணமும், உங்களுக்கு தீங்கு செய்பவர்களிடம் இருந்து உங்கள் மனதை நீங்கள் முழுமையாகக் காத்திடவும் வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், ஒரு கிறிஸ்தவர் உறங்கும் போது, அவரது இதயம் உறங்கினாலும், அவரது மனக்கண்கள் விழித்திருக்க வேண்டும் என்பதே. திருச்சபையில் உள்ள ஒரு நபர், மிக பரிசுத்தமான ஸ்தலத்தைப் பற்றி எழுதியுள்ள வார்த்தைகளுக்கு இணங்க, ஒரு கிறிஸ்தவர் உறங்கும்போது கூட, அவரது மனம் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. “நான் உறங்கும் போது கூட, என் இதயம் விழித்திருக்கும்.”[64] எனவே, அப்போஸ்தலர் மிகுந்த கவனத்துடனும் அவதானத்துடனும் இவ்வாறு எச்சரிக்கிறார்: “நன்றி செலுத்தும் போது விழித்திருந்து செலுத்துங்கள். அதேவேளை, அதைத் தொடர்ந்து செபிப்பதின் மூலம் செலுத்துங்கள்.”[65] அதாவது, செபத்தில் விழிப்புடன் இருப்பவர்களுக்கும், அதனூடாக கடவுளை காண்பவர்களுக்கும், கடவுளிடம் நீங்கள் இறைஞ்சிக் கேட்பதைப் பெற முடியும் என்பதை இது கற்பிப்பது மட்டுமன்றி எமக்கு கோடிட்டுக் காட்டுகிறது.

அத்தியாயம் 32

அதுமட்டுமன்றி, செபிப்பவர்கள் வீணான மற்றும் திக்கற்ற செபங்களில் கலந்துகொள்ள அவர்களைக் கடவுளிடம் வர அனுமதிக்காதீர்கள். நாம் கடவுளிடம் பலனற்ற விதத்தில் எமது செபத்தை ஒப்புக்கொடுக்கும் போது, ​​அந்த வேண்டுதல் பயனற்றதாகிவிடுகிறது. அதற்கு இவ்வாறு உதாரணம் கொடுக்கப் பட்டுள்ளது: “கனி கொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு அக்கினியில் போடப்படும்.”[66] ஆகையால், எந்தவித பலனுமற்ற வார்த்தைககளினூடாக, கடவுளின் தயவைப் பெற முடியாது. ஏனெனில் அவை எந்த விதத்திலும் பயனுள்ளதாக இருக்கப் போவது இல்லை. இதை பரிசுத்த வேதாகமம் நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறது: “விரதம் இருந்து, தான தர்மங்கள் செய்து அதனூடாக எமது மன்றாட்டுக்களை ஒப்புக்கொடுப்பது மிகுந்த பலனைத் தரக்கூடியது.”[67] நடுத்தீர்வை நாளில் தனது செயல்களுக்கும், தான் செய்த தான தர்மங்களும் பொருத்தமான வெகுமதி அளிக்கத் தயாராக இருப்பவர், இன்றும் கூட கடமைகளின் ஊடாக ஒப்புக்கொடுக்கப்படும் செபங்களை கர்த்தர் தயவுடன் செவிமடுக்கிறார். கடைசியாக, பண்டைய உரோம் நகரத்தின் நூறு போர் வீர்ர்களின் தலைவனான கொர்னேலியஸ் என்பவன் செபித்தபோது, ​​அவருடைய செபங்கள் செவிமடுக்கப்பட அவன் தகுதி உடையவன் ஆனான். அவன் மக்களிடையே பல தான தர்மங்களை செய்தது மட்டுமன்றி, எப்போதும் இறைவனை நோக்கி செபம் செய்து வந்தான். அவன் தனது ஒன்பதாம் மணி நேரத்தில் செபித்துக்கொண்டிருந்த போது, ஒரு தேவதூதர் அவன் முன் தோன்றி, இங்கே கூறப்பட்டிருக்கும் வார்த்தைகளால் அவனுடைய நற்கிரியைகளுக்கு சாட்சி பகன்றார்: “கொர்னேலியஸ், உனது செபங்களும் நீ செய்த தான தர்மங்களும் கடவுளுக்கு முன்பாக நினைவு கூருவதற்காக முக்கியத்துவம் பெறுகின்றன.”[68]

அத்தியாயம் 33

நம்முடைய கடமைகளின் மகத்துவத்தை கௌரவிக்கும் முகமாக நாம் ஒப்புக்கொடுக்கும் அந்த செபங்கள் விரைவில் கடவுளின் திருப்பாதத்தைச் சென்றடையும். டோபியாஸ் என்பவர் எப்பொழுதும் செபித்துக் கொண்டே இருந்தார். அதேநேரம் அவர் தனது கடமையிலும் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார், அப்போது, ரஃபாயல் என்ற தேவதூதர் அவர் முன் தோன்றி இவ்வாறு கூறினார்: “கடவுளின் படைப்புகளை வெளிப்படுத்துவதும் அறிவிப்பதும் ஒரு கௌரவத்துக்குரிய செயலாகும். நீர் சாராவுடன் சேர்ந்து செபித்தபோது, ​​கடவுளின் மகிமைக்கு முன்பாக உமது செபம் நினைவு கூறப்பட்டு முன் வைக்கப்பட்டது. நீர் மரித்தோரை நேரடியாக அடக்கம் செய்தபோது, நீர் எழுந்து இரவு உணவைத் தவிர்த்து, தாமதிக்காது வெளியே சென்று இறந்தவர்களை மறைத்து வைத்ததால் ​​உம்மை சோதிக்க நான் அனுப்பப்பட்டேன். உன்னையும் உன் மகனின் மனைவியான சாராவையும் குணமாக்க தேவன் என்னை அனுப்பினார். ஏனெனில் நான் தான் ரஃபாயல். தேவனுடைய மகிமையின் முன்னும், அதற்கு உள்ளேயும், வெளியேயும் செல்லும் ஏழு நீதிவழுவா தேவதூதர்களில் நானும் ஒருவன்.”[69] ஏசாயா ஊடாகவும் கர்த்தர் இதே போன்ற விடயங்கள் பற்றி எச்சரித்து நமக்கு அறியத்தருவதோடு, இவ்வாறு சாட்சியமளிக்கிறார்: “தீமைகளின் பிணைப்புகளில் இருந்து உங்களை விடுவிக்கவும், உங்களுக்கு இம்சையை ஏற்படுத்தும் விலங்குகளில் இருந்து உங்களை விடுவிக்கவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்கவும், எல்லா இன்னல்களையும் உங்களுக்கு ஏற்படுத்தும் விலங்குகளை நிர்மூலம் செய்வதற்கும் நான் விரதம் மேற்கொண்டிருந்தேன் அல்லவா? உங்களது உணவை பசித்தவர்களுக்குக் கொடுப்பதும், வீடற்றவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதும், நிர்வாணமாய் இருப்பவர்களைக் காணுமிடத்து, அவர்களுக்கு உங்கள் உடைகளைக் கொடுப்பதும், உங்கள் உறவினர்களிடம் இருந்து விலகாது இருப்பதும் உங்களுக்கு செய்யப்பட்ட நன்மைகள் அல்லவா? அப்போது உங்கள் ஒளியானது விடியலின் ஒளியைப்போல் பிரகாசிக்கும், குணப்படுத்துதல் உங்களை விரைவில் வந்தடையும், நீதி உங்களுக்கு முன் கம்பீரமாகச் செல்லும். கர்த்தருடைய மகிமை உங்களைப் பின்தொடரும்: அப்போது நீ செபிக்கக் கடவாய், அதற்குக் கர்த்தர் பதிலளிப்பார்; நீ கூப்பிடும் போது, ​​’இதோ நான் இருக்கிறேன்’ என்று இறைவன் கூறுவார்.”[70] அவர் அங்கு இருப்பார் என்றும், வேண்டுதல்களைக் கேட்பார் என்றும் உறுதியளிக்கிறார். அதே சமயம், அநீதியின் பிடியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களையும், அவருடைய கட்டளைகளின்படி கடவுளுடைய மக்களுக்கு தான தர்மம் வழங்குபவர்களையும் கடவுள் பாதுகாப்பார் என்று அவர் வாக்குறுதி அளிக்கிறார். கடவுள் அவர்களுக்குக் கட்டளையிடுவதை அவர்கள் கேட்கக்கூடியதாய் இருப்பதால், அவர்களின் குரல்கள் கடவுளால் செவிமடுக்கப்படும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். அப்போஸ்தலரான புனித பவுல், சகோதரர்களால் வேதனைகளை அடைய நேரிடும் சந்தர்ப்பங்களைப் பற்றிப் பேசும்போது, ​​அங்கே கடவுளைப் போற்றக்கூடிய வார்த்தைகளும் உள்ளன என்று கூறினார். அவர் அதையிட்டு இவ்வாறு கூறுகிறார்: “நான் எல்லா வற்றையும் பெற்று, பரிபூரணத்தை அடைந்துள்ளேன். எபாப்ரோடிடஸ் இடமிருந்து நீங்கள் அனுப்பியவற்றை நான் முழுமையாகப் பெறுகிறேன். அவை கடவுளுக்கு இனிமையான நறுமணத்தையும், மிகவும் பிரியமானதும், மகிழ்ச்சியை அளிக்கும் காணிக்கைகளாகும்.”[71] ஏழைகள் மீது இரக்கம் கொள்பவர் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறவர் ஆகிறார். மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு கொடுப்பவர் கடவுளுக்குக் கொடுக்கிறவர் ஆகிறார். ஆன்மீக ரீதியில், அவர் கடவுளுக்கு ஒரு சுகந்தமான, வாசனை மிகுந்த காணிக்கையை ஒப்புக்கொடுக்கிறார்.

அத்தியாயம் 34

பிரார்த்தனை கொண்டாட்டத்தின் போது, விசுவாசமுள்ள, வலிமையான, அடிமைத்தளையில் இருந்து மீண்ட மூன்று இளைஞர்கள், மூன்றாம், ஆறாம் மற்றும் ஒன்பதாம் மணித்தியாலத்தில் தானியேலுடன் சேர்ந்து செபித்ததைக் காண்கிறோம். அதாவது, இது நீவீன யுகத்தின் விஞ்ஞான கோட்பாடுகளுடன் ஒத்துப்போகும் பரிசுத்த திருத்துவத்தின் மகிமையை எமக்கு அறிவிக்கிறது. முதல் மணித்தியாலம், மூன்றாவது இடத்திற்குச் செல்லும் திரித்துவத்தின் எண்ணிக்கையைக் காட்டுகிறது. நான்காவது மற்றும் ஆறாவது மணித்தியாலம் இரண்டாவது திரித்துவத்தை நிறைவு செய்கின்றது, மற்றும் ஒன்பதாவது மணித்தியாலம் நிறைவடையும் போது, ஏழாவது மணித்தியாலம் நிறைவு பெறுகிறது. அவ்வாறே ஒவ்வொரு மூன்று மணித் தியாலத்துக்கு ஒருமுறை திருத்துவம் கணக்கிடப்படுகிறது. இந்த மணித்தியாலங்கள் ஆன்மீக அர்த்தத்துடன் நீண்ட காலத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு, கடவுளைத் தியானித்தவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு, செபத்திற்காகவே நியமிக்கப் பட்ட நியாயமான நேரங்களாக அறிவித்திருந்தனர். ஏனெனில், நீதியைக் கடைபிடித்தோர் அத்தகைய செபங்களை ஒப்புக்கொடுத்தபடியால், அவ்வாறான திருவிருந்து சடங்குகள் ஆரம்பம் தொட்டே இருந்தன என்பது பின்னர் தெளிவாகியது. மூன்றாவது மணித்தியாலத்தில், பரிசுத்த ஆவியானவர் செபித்துக் கொண்டிருந்த சீடர்கள் மீது இறங்கினார். இதன் மூலம், கர்த்தருடைய கிருபையின் வாக்குறுதி நிறைவேறிற்று. அதேபோல், ஆறாவது மணித் தியாலத்தில் பிரார்த்தனை செய்ய பேதுரு வீட்டின் கூரைமேல் ஏறியதும், ஒரு அடையாளத்தினாலும் கடவுளின் குரலினாலும் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர் பிறஜாதியைச் சேர்ந்தோரை ஞானஸ்நானம் செய்ய தயங்கினாலும், அனைவரையும் மீட்பின் பாக்கியமாக ஏற்றுக்கொள்ளும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆறாம் மணி தொடக்கம், ஒன்பதாம் மணி வரையிலான காலத்தில் கர்த்தர் சிலுவையில் அறையப் பட்டார். அவருடைய பாடுகளின் மூலம், நம்முடைய பாவங்களை தனது புனிதமான இரத்தத்தால் கழுவி, நம்மை மீட்பதற்கான அவருடைய வெற்றியை நிறைவு செய்தார்.

அத்தியாயம் 35

மிகவும் அன்பான சகோதரர்களே, ஆனால் பழைய ஏற்பாட்டில் நாம் கடை பிடித்த வழிபாட்டு நேரங்களுக்கு அப்பால், திவ்விய நற்கருணை சடங்குகள் மற்றும் அவை நடைபெறும் காலங்கள் போன்ற இரண்டும் அதிகரித்துள்ளன. ஏனென்றால், கர்த்தருடைய உயிர்த்தெழுதலை நினைகூறும் முகமாக, நாம் காலையில் செபிக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் சங்கீதத்தில் இதையிட்டு பரிசுத்த ஆவியானவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “என் அரசரே, என் தேவனே, நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். கர்த்தாவே, காலையில் நீர் எனது குரலைக் கேட்கக்கடவீர். காலையில் உம் முன் நின்று உம்மைக் காண்பேன்.”[72] மீண்டும் கர்த்தர் தீர்க்கதரிசி மூலம் இவ்வாறு கூறுகிறார்: “‘நாங்கள் போய் எங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்கு திரும்புவோம் என்று கூறி, அவர்கள் அதிகாலையில் எனக்காகக் காத்திருந்தார்கள்.”[73] அதேபோன்று, சூரிய அஸ்தமன நேரத்திலும், நாளின் முடிவிலும் மீண்டும் நாம் செபிக்க வேண்டும். ஏனென்றால், கிறிஸ்துவே உண்மையான ஆதவனாகவும், உண்மையான நாளாகவும், உலகில் சூரியன் மறைந்தவுடன் நாள் கடந்து சென்றாலும், ​​கிறிஸ்து என்னும் தெய்வீக ஒளி எம்மை நோக்கி வரும்படி செபிக்கிறோம். அந்த ஒளியே கிறீஸ்துவாக நம்மிடம் திரும்பி வந்து எமக்கு நித்திய வாழ்வைத் தரவேண்டுமென மன்றாடுவோமாக. மேலும், சங்கீத ஆகமத்தில் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை நாள் என்று அழைப்பதாக அறிவிக்கிறார். அதையிட்டு அவர் இவ்வாறு கூறுகிறார்: “வீட்டைக் கட்டுபவனால் நிராகரிக்கப்பட்ட கல்லே, பிரதான மூலக்கல் ஆனது. இது கர்த்தருடைய செயல்; கர்த்தர் நம் கண்களில் அற்புதத்தை படைத்த நாள்; ஆகவே அந்த நாளில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், பெரும் புளகாங்கிதம் அடைகிறோம்”[74] இதேபோல், மலாக்கி என்ற தீர்க்கதரிசி, அவர் சூரியன் என்று அழைக்கப்படுகிறார் என்று இவ்விதமாக சாட்சியமளிக்கிறார்: “என் நாமத்திற்கு அஞ்சுகிற உங்களுக்கு, நீதியின் சூரியன் உதித்து எழும், அதேநேரம் குணப்படுத்துதல் என்பது அவருடைய சிறகுகளில் இருக்கும்.”[75] ஆனால் வேதாகமத்தின்படி, கிறிஸ்து உண்மையான சூரியனும் உண்மையான நாளும் என்றால், கிறிஸ்தவர்களுக்கு என்று எந்த விதமான நேரமும் ஒதுக்கப்படவில்லை என்று கூறுகிறது. கிறிஸ்தவர்கள் எப்போதும், என்றென்றும் இறைவனை துதித்து அவரை வழிபட வேண்டும். உண்மையான சூரியனின் ஒளிப்பிரவாகத்திலும், உண்மையான நாள் என்று போற்றப்படும் கிறிஸ்துவின் நாளிலும் இருக்கும் நாம், நாள் முழுவதும் நம்முடைய செப வழிபாடுகளில் விழிப்புடனும் ஆர்வத்துடனும் இருக்க வேண்டும். மேலும், உலக நியதிகளின் படி, பூமியின் சுழற்சி மூலம், இரவும் பகலும் அதன் மாறுபாடுகளுடன் மீண்டும் மீண்டும் நிகழும்போதும், ​​இராக் காலங்களில் பிரார்த்தனை செய்பவர்கள் சூரியனின் நிழலாம் இரவின் இருளில் எந்தவித பாதிப்புக்களுக்கும் முகம் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில், ஒளியின் புத்திரர்களுக்கு, இரவு கூட பகலாய் அமைகிறது. தன் இதயத்தில் வெளிச்சம் உள்ளவன், ஒளியை விட வேறு எதைத் தேடக் கூடும்? கிறிஸ்துவானவர், ஒருவருடைய சூரியனும் பகலுமாக இருக்கும் போது, ​​அவருக்கு சூரியனும் பகலும் எப்படி இல்லாமல் போகும்?

அத்தியாயம் 36

அத்தோடு, எப்போதும் வெளிச்சத்தில் இருக்கும் நாம், அதாவது கிறிஸ்துவில் வாழும் நாம், இரவில் கூட செபிப்பதை நிறுத்தக்கூடாது. இதனால், அனா என்ற விதவைப் பெண் தொடர்ந்து தனது வேண்டுதல்களின் ஊடாக கடவுளின் நன்மையை எதிர்பார்த்தபடி இருந்தாள். இதன் வழியாக அவள் கடவுளின் நன்மையைப் பெறத் தகுதியானவளாகக் காணப்பட்டாள். நற்செய்தி அவளைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: “அவள் தேவாலயத்துக்கு வெளியே செல்லாமல், அங்கேயே தங்கி, விரதம் இருந்து, இரவும் பகலும் செபித்தாள்.”[76] இதை இன்னும் வெளிச்சத்தை அடையாத பிற சாதியினரோ அல்லது ஒளியை நிராகரித்து இருளில் மூழ்கியிருந்த யூதர்களோ இதைக் கண்டிருக்க வேண்டும். மிகவும் அன்பான சகோதரர்களே, எப்பொழுதும் கர்த்தருடைய ஒளியில் இருக்கும் நாம், இரவும் பகல் போன்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கிருபையைப் பெற்றபின் எம் மனங்களில் ஊற்றெடுக்கும் நன்மைகளை நினைவில் கொள்ள வேண்டும்.[77] நாம் எப்போதும் ஒளியின் பிரவாகத்தில் பயணிக்கிறோம் என்ற விசுவாசத்துடன் இருக்கக்கடவோம். இருளில் இருந்து எமக்கு கிடைத்த மீட்புக்கு நாம் எப்போதும் ஒரு தடையாக இருத்தலாகாது. இரவில் செபம் செய்யாமல், அல்லது வேண்டாவெறுப்பாக அல்லது கவனக்குறைவாக செபிப்பதன் மூலம், செபிப்பதற்காக எமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நாம் வீணடிக்கிறோம். இறைவனின்  அருளால், ஆன்மீக ரீதியில் மீளுருவாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் அவதரித்த நாம், என்ன நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோமோ, அதை நன்றாக எம் மனங்களில் உள்வாங்கி, அதற்கேற்றவாறு, அந்த நோக்கங்களைப் பின்பற்றி வாழக் கற்றுக் கொள்வோமாக. தேவனுடைய இராச்சியத்தில் இருக்கிற எமக்கு இருள் என்பது இல்லை. பகல் மட்டுமே. ஆகவே இரவிலும் பகலிலும் நாம் விழித்திருக்கக் கடவோம். இறைவனை எப்போதும் செபித்து, அவருக்கு நன்றி செலுத்துவதற்காக படைக்கப்பட்ட நாம், எப்போதும் செபிப்பதையோ அல்லது அவருக்கு நன்றி செலுத்துவதையோ நிறுத்தாது, என்றும் அவரில் ஒன்றித்திருக்கக் கடவோம்.


[1] குறிப்பு: யோவான்; 4.23

[2] குறிப்பு: மத்தேயு:15.6; மற்றும் மாற்கு; 7.8.

[3] குறிப்பு: யோவான்; 16.23.

[4] குறிப்பு: யோவான்; 14.6.

[5] குறிப்பு: எரேமியா; 23.23.

[6] குறிப்பு: நீதிமொழிகள்: 15.3.

[7] குறிப்பு: மாற்கு; 9.4

[8] குறிப்பு: வெளிப்படுத்துதல் 2.23

[9] குறிப்பு:: 1 சாமுவேல் 1.13.

[10] குறிப்பு. சங்கீதம்; 4.5.

[11] எரேமியா; 6.5.

[12] லூக்கா 18.10-14.

[13] மத்தேயு: 6.9-3. et ne nos என்றால் தூண்டுகிறது அல்லது எங்களை அனுமதிக்காதீர்கள் என்றும், அதற்கு பதிலாக சிப்ரியன் மற்றும் ne patiarisnosinduci கூறியது போல் எங்களை வர அனுமதிக்க வேண்டாம் என்று பொருள்படுகிறது.

[14] குறிப்பு: தானியேல்; 3.51.

[15] குறிப்பு: அப்போஸ்தலர் நடவடிக்கைகள்; 1.14

[16] குறிப்பு: சங்கீதம்; 68.6.

[17] யோவான்; 1.11,12.

[18] குறிப்பு: உபாகமம்; 33.9.

[19] குறிப்பு: மத்தேயு; 23.9.

[20] குறிப்பு: மத்தேயு; 8.22

[21] குறிப்பு: யோவான்; 8.44.

[22] ஏசாயா; 1.2-4.

[23] யோவான்; 8.34,35.

[24] குறிப்பு: இராஜாகாமம்; 2.30.

[25] 1 கொரிந்தியர்; 6.19,20.

[26] குறிப்பு: லேவியராகமம்; 20.7.

[27] 1 கொரிந்தியர்; 6.9-11.

[28] மத்தேயு 25.34

[29] மத்தேயு; 8.11,12.

[30] மத்தேயு; 26.39.

[31] யோவான்; 6.38.

[32] குறிப்பு: யோவான்; 2.15-17.

[33] கலாத்தியர்; 5.17-22.

[34] குறிப்பு: யோவான்; 6.51 2.58.

[35] யோவான்; 6.54.

[36] குறிப்பு: லூக்கா; 14.23.

[37] மத்தேயு; 6.34.

[38] l தீமோத்தேயு; 6.7-10.

[39] லூக்கா 12.20

[40] நீதிமொழிகள்; 10.3

[41] சங்கீதம்; 56.25)

[42] மத்தேயு; 6.31-33

[43] [இந்த வேண்டுகோளுக்கிணங்க, நம்முடைய ஆன்மாவுக்கான  உணவையும் (யோவான் 6.27) நம்முடைய உடல் ஊட்டச்சத்துக்கான உணவையும் இந்த வாக்குறுதி (மத் 6.8) உள்ளடக்கியுள்ளது.)

[44] மத்தேயு; 18.32.

[45] 1 யோவான்; 1.8,9.

[46] மத்தேயு; 7.2.

[47] மாற்கு; 11.25.

[48] குறிப்பு: சங்கீதம்; 67.6.

[49] 1 யோவான்; 3.15.

[50] குறிப்பு: 4 இராஜாக்கள்; 24; தானியேல்; 1.1.

[51] ஏசாயா; 42. 24, 25.

[52] குறிப்பு: 3 இராஜாக்கள்;  11.14.

[53] யோபு; 1.12.

[54] யோவான்; 19.11.

[55] மத்தேயு; 26.41

[56] ஏசாயா; 10.22.23.

[57] யோவான் 17.3

[58] 58 மாற்கு 12.29

[59] மத்தேயு; 22.37-40.

[60] குறிப்பு: மாற்கு; 7.12.

[61] லூக்கா; 5.16; 6.12.

[62] லூக்கா; 22.31.

[63] குறிப்பு: யோவான்; 17.20,21.

[64] சாலமன் பாடல்கள்; 5.2.

[65] கொலோசியர்; .4.2.

[66] மத்தேயு; 7.19. 

[67] தோபித் 12.8.

[68] குறிப்பு: அப்போஸ்தலர் பணிகள்; 10.4.

[69] குறிப்பு: தோபித்; 12.7.12-15.

[70] குறிப்பு: ஏசாயா; 58.6-9.

[71] பிலிப்பியர்;  4.18.

[72] குறிப்பு:  சங்கீதம்; 5.3,4.

[73] குறிப்பு: ஒஸ்ஸீ: 6.1.

[74] சங்கீதம்: 118.22-24.

[75] மலாக்கி 4.2.

[76] லூக்கா; 2.37.

[77] குறிப்பு: 1 யோவான்; 1.7.