வேதசாட்சியத்துக்காக ஊக்கமூட்டுதல்மதிப்புக்குரிய ஃபோர்ச்சுநேடஸ்அவர்களுக்கு (Exhortation to Martyrdom, To Fortunatus)

Cyprian of Carthage, exhortation to martyrdom to fortunatus, in Tamil


மூன்றாவது புத்தகம்:வேதசாட்சியத்துக்காக ஊக்கமூட்டுதல்மதிப்புக்குரிய ஃபோர்ச்சுநேடஸ்அவர்களுக்கு

அத்தியாயம் 1

என் அன்புக்குரிய ஃபோர்ச்சுநேடஸ்[1] துன்பங்களினதும், தொல்லைகளினதும் சுமைகள் நம்மீது ஏற்றப்பட்டிருக்கும் இவ்வேளை,  உலகத்தின் முடிவிலும், அதன் இறுதியிலும் அந்துக் கிறிஸ்துவின் எதிர்விளைவுகள் எம்மை அண்மிக்கும்  இந்த காலகட்டத்தில், சகோதரர்களின் மனதை ஊக்குவிக்கவும் பலப்படுத்தவும் வேதாகமத்தில் இருந்து பெற்றுக்கொண்ட அறிவுரைகளை நான் உங்களிடம் கொண்டு வருவதை நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு செய்வதன் மூலம், ஆன்மீக மற்றும் விண்ணகம் சார்பான  போராட்டத்திற்காக கிறிஸ்துவின் வீரர்களை நான் உயிரூட்டுவதாக அமையலாம். வலுவான விருப்பத்திற்குக் கீழ்ப்படிய நான் கடமைப் பட்டுள்ளேன் என்று நினைக்கிறேன். இயன்றவரை நமது நடுநிலைமையில், தெய்வீக உத்வேகத்தின் உதவியுடன், போராடத் தயாராக இருக்கும் சகோதரர்களுக்காக, இறைவனின் கட்டளைகளிலிருந்து சில ஆயுதங்களையும் கேடயங்களையும் நான் வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், விசுவாசிகளின் நம்பிக்கையும், இறைவனுக்குத் தங்களை அர்ப்பணிப்பதற்கான தைரியமும், தெய்வீக விசுவாசத்தைப் படிப்பதன் மூலம் உறுதிப்படுத்தப்படாவிட்டால், நாம் எழுப்பும் எமது குரலின் ஊடாக  தேவனுடைய மக்களை எழுப்புவது மிகச் சிறிய பயனையே கொடுக்கும்.

அத்தியாயம் 2

சாத்தானின் ஆயுதங்கள் மற்றும் வஞ்சக தந்திரங்களுக்கு எதிராக தொடர்ந்து எம்மை எச்சரிக்கவும், ஊக்குவிக்கவும், தெய்வீகத்துக்குத் தங்களை அர்ப்பணிக்க விழையும் மக்களையும், விண்ணகத்தில் நிலைகொண்டுள்ள சேனைகளையும் தயார் செய்வதைத் தவிர, மற்றைய எந்த விதத்திலும் நமது சரியான மற்றும் முழுமையான கவனம் வேறு எதன் மேலாவது இருக்கக்கூடுமோ? ஏனென்றால், முன்னர் போர்களில் முறையான பயிற்சி பெறாத ஒருவர், போருக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் ஒரு வலுவான சிப்பாயாக இருக்க முடியாது. மேலும், ஒரு போட்டியாளராக, வெற்றிப் பதக்கத்தை வெல்ல முயற்சிக்கும் ஒருவர், தான் பெற்றுக்கொண்ட பயிற்சிகள் மற்றும் திறன்களின் ஆற்றலைப் பற்றி சிந்திக்காவிட்டால் விளையாட்டு அரங்கில் அவருக்குப் பதக்கம் அணிவிக்கப்பட்ட மாட்டாது.  நாம் ஏற்கனவே ஒரு பழைய எதிரியுடன் போரிடுகிறோம், அவன் ஒரு பழைய விரோதி. சாத்தான் மனிதனை முதன்முதலில் தாக்கி ஏறக்குறைய 6,000 ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிரியானவன் எம்மீது அனைத்து வகையான சதிகளையும் சோதனைகளையும் மேற்கொள்ள, நீண்ட காலமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான். அவன் கிறிஸ்துவின் போர்வீரன் ஒருவனைப் பார்க்கும் திராணி இல்லாத அந்தப் போர்வீரன் முறையாகப் பயிற்சி பெறாதவனாக இருக்கும் பட்சத்தில்,  எதிரி அவனது பலவீனத்தை அறிந்து கொள்வானாகில், எதிரியானவன் போர் வீரனைத் தாக்கி அழித்து விடுவான். எதிரியானவன் கவனயீனமாக இருப்போரை ஏமாற்றியும், அனுபவமற்றவர்களை தூண்டி விடவும் செய்வான். ஆனால், எவராவது கர்த்தருடைய கட்டளைகளைக் கடைபிடித்து, தைரியமாக கிறிஸ்துவுக்கு ஆதரவாக அவரோடு இணைந்து, சாத்தானை எதிர்ப்பாராயின், அவர் நிச்சயமாக எதிரியைத் தோற்கடிப்பார். ஏனென்றால் நாம் பிரசங்கிக்கும் கிறிஸ்துவானவர், என்றும் தோல்வி காணாதவரும், தோல்வியற்றவரும் ஆவார்.

அத்தியாயம் 3

அன்புள்ள சகோதரரே, எனது உரையாடலை மேலும் நீடிக்காமலும், இதை செமடுப்பவர் மற்றும் வாசகர் இந்த நீண்ட கதையின் காரணமாக சோர்வடையாமல் இருக்க வேண்டுமென, நான் இங்கே ஒரு சாராம்சத்தைத் தயாரித்துள்ளேன். அதிலே, ஒவ்வொருவரும் எதை அறிந்து கொள்ள வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றிய முதல் தலைப்புக்குப் பிறகு தான், நான் இறைவனைப் பற்றிய விவரங்களை அதில் சேர்க்க முடியும். அதன்பிறகு, நான் கூறியதை தெய்வீக வார்த்தைகளில் காட்டப்பட்ட அதிகாரத்துடன் என்னால் விவரிக்க முடியும் என நம்புகிறேன். எனது ஆய்வுக் கட்டுரையில் இருந்து மேலதிக தகவல்களை அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்பதை அறிந்து, அந்த ஆய்வுக் கட்டுரையைத் தயாரிப்பவர்களுக்கு என்றே நான் மற்றொரு ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்தேன். இந்தப் பயிற்சியானது, பயிற்சி பெறுவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், ஏற்கெனவே தைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு ஆடை எனக்குக் கொடுக்கப்பட்டால், அது ஏற்கனவே மற்றவர்களால் பயன்படுத்தப்படும் என் ஆடையாகத்தான் இருக்கும். மேலும், ஒருவரின் உடல் அளவீடுகளுக்கு ஏற்றவாறு தைக்கப்பட்ட ஆடை மற்றொருவருக்கு பொருந்தாது. ஆனால் இப்போது எங்களை மீட்டு புனிதப் படுத்தியவர் மூலமாக, ஆட்டு உரோமங்களையும் ஊதா நிறத்தையும் அனுப்பினேன். நீங்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டதும், ​​உங்கள் விருப்பம் போல, உங்களுக்கு ஏற்ற மாதிரியான ஆடைகளை தைத்துக்கொள்ளலாம். அப்போது, அது உங்களுக்கு சொந்தமான, உங்களுக்கே உரித்தான ஆடை என்பதால், நீங்கள் அதை விட மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அத்தோடு, நாம் உங்களுக்கு என்று அனுப்பியவற்றை நீங்கள் மற்றவர்களுக்கும் காட்டி மகிழ முடியும்.  அவ்வாறான சூழ்நிலையில், ​​அவர்களும் தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றவாறு ஆடைகளை தைத்துக்கொள்ள முடியும்.  இவ்வாறு, அந்த முன்னைய நிர்வாணத்தை மறைக்க, அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் வஸ்திரத்தை அணிந்து கொள்வார்கள். அத்தோடு, விண்ணகக் கிருபையின் புனிதத்தன்மையையே உடைகளாக அணிந்துள்ளார்.

அத்தியாயம் 4

மேலும், மிகவும் அன்பான சகோதரரே, தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்பவர்களுக்கு தைரியம் அளிப்பதில், அந்தத் திட்டம் பயனுள்ளதாகவும் மிகவும் பிரயோசனம் உள்ளதாகவும் இருப்பதை நான் கண்ணுற்றேன். எங்கள் செயல் மற்றும் வார்த்தைகளில் உள்ள தாமதங்கள் போன்றவை அகற்றப்பட்டு, அவை நிராகரிக்கப்பட வேண்டும். மானிட தர்மம் என்ற கதையில் உள்ள முரண்பாடுகளையும் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். ஆகவே, இறைவன் அருளிய அந்த வார்த்தைகள், கிறிஸ்து தம் ஊழியர்கள் மத்தியில் வேதசாட்சியத்தை ஊக்குவிக்க கூறிய வார்த்தைகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும். ஆயுதங்களாக போராடுபவர்களுக்கு தெய்வீக ஒழுக்கம் வழங்கப்பட வேண்டும். போராடுபவர்களுக்கு ஆயுதங்களாக தெய்வீக ஒழுக்கம் பற்றிய கட்டளைகளே வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படும் முழக்கம் போர்வீரர்களை ஊக்குவிக்கட்டும். போராடுபவர்களின் தெளிவான அழைப்பு, அதைப்பற்றியதாகவே இருக்கட்டும். அது காதுகளில் நேரடியாக வந்து விழட்டும். அதை ஏற்றுக்கொள்ள, அவர்களின் மனத்தைத் தயாராக வைத்து இருக்கட்டும். இவற்றின் மூலம் எல்லாத் துன்பங்களையும் சகித்துக்கொள்ள மனம் மற்றும் உடல் சக்திமயப்படுத்தக்கடவதாக. கர்த்தருடைய அனுமதியுடன், நாங்கள் முதலில் விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்த நாம், ஒருவருக்கொருவர் மென்மேலும் ஞானஸ்நானம் கொடுப்பதற்குத் தயாராவோம். ஆகவே, இந்த ஞானஸ்நானத்தின் கிருபை மிகவும் உன்னதமானதும், அதிக சக்தி கொண்டதும், கௌரவத்தில் மிகவும் உயர்ந்ததும், தேவதூதர்கள் கூட இதன் மூலமாக ஞானஸ்நானம் பெற்று, ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்றும், இறைவனையும் அவருடைய கிறிஸ்துவையும் உயர்த்தியது ஞானஸ்நானம் என்றும், இந்த ஞானஸ்நானத்திற்குப் பின் எவரும் மீண்டும் பாவம் செய்யத் தூண்டப்பட மாட்டார்கள் என்றும், ஞானஸ்நானம் தான் நம்முடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்கு முழுமையைத் தருகிறது என்றும், உலகத்தை விட்டுப் பிரிந்து கடவுளோடு நம்மை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக இருப்பது இந்த ஞானஸ்நானம் தான் என்றும் நாம் ஆர்வத்துடன், உறுதிப்படக் கற்பிக்கிறோம். தண்ணீரால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அங்கே நல்லொழுக்கத்திற்கான வெகுமதி பரிசுத்த இரத்தத்தால் கிடைக்கிறது. இதைச் செய்ய நாம் ஆர்வமாக இருக்க வேண்டும் என்பதோடு, அதைத் தழுவியே வாழ வேண்டும். நாம் செபிக்கும் அனைத்துத் தருணங்களிலும் அதை முழுமனதோடு கேட்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், கடவுளின் ஊழியர்களாக இருக்கும்  நாம் அவருடைய தோழர்களாக மாறிவிட முடியும்.

அத்தியாயம் 5

இவ்வாறு, நம்முடைய சகோதரர்களுக்கு அறிவுரை கூறுவதும், அவர்களை ஊக்குவிப்பதும், தயார்படுத்துவதும், அதேபோல் கர்த்தருடைய காரியங்களை அறிவிப்பதும், துன்புறுத்தல் மற்றும் துன்பங்கள் என்ற யுத்தத்தில், அவர்களை நல்லொழுக்கம் மற்றும் விசுவாசத்தின் பலத்துடன் ஆயுதபாணிகளாக மாற்ற வேண்டுமானால், அதைப்பற்றித்தான் முதலில் எடுத்துச் சொல்ல வேண்டும்:

I. மனிதனால் உருவாக்கப்பட்ட சிலைகள் தெய்வங்கள் அல்ல. ஏனென்றால், அவர்களை சிருஷ்டித்தவரை விட உன்னதமானவற்றை அவர்களால் உருவாக்க முடியாது. அந்த சிலைகளால் எவரையும் பாதுகாக்கவோ, காப்பாற்றவோ முடியாது. அந்த சிலைகள் மனிதனால் பாதுகாக்கப் படாவிட்டால், அவை தெய்வங்கள் என்று போற்றி வைக்கப்பட்டிருக்கும் கோவில்களிலேயே அவை அழிக்கப்பட்டு விடும். அவ்வாறான சிலைகளை அல்லது வேறு எந்த ஒரு விக்கிரகங்களையோ  வணங்குவதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை தேவனுடைய அறிவுத்தலுக்கும், கட்டளைகளுக்கும் ஏற்ப, மனிதனுக்கு சேவை செய்யக் கட்டளை இடப்பட்டவையாகும்.

II. அதாவது, சிலைகள் அழிக்கப்பட்ட பின்னர், அவற்றை உருவாக்கியவர்கள் பற்றிய உண்மை வெளியிடப்பட்டபோது, ​​அது வெளிப்படுத்தும் நிதர்சனமான உண்மை என்னவெனில், நாம் கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது.

III. விக்கிரகங்களுக்கு பலியிடுவோர், கடவுளால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

IV. அதே சமயம், சிலைகளை வணங்குபவர்களை இறைவன் எளிதில் மன்னிக்க மாட்டார் என்றும் கற்பிக்கப்பட வேண்டும்.

V. விக்கிரக ஆராதனையால் கடவுள் எவ்வளவு கோபமாக இருக்கிறார் என்பதைக் காட்ட வேண்டுமானால், சிலைகளுக்கு பலியிடுபவர்களையும் வழிபடுபவர்களையும், சேவை செய்பவர்களையும், அவ்வாறான காரியங்களை வழிநடத்துபவர்களை கொன்று விட வேண்டும் என்று கட்டளையிட்டதை நாம் மிக சரியான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

VI. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்ட நாம்,  கிறிஸ்துவின் சந்நிதியில் எதையும் வைத்து வணங்கக் கூடாது என்பதை இந்த கட்டத்தில் நாம் பின்னர் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர் வேறு எதையும் நமக்கு முன் வைக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை.  அவர் நமக்கு நன்மை, தீமை, நல்லது, கெட்டது போன்று, வறுமை, செல்வம், அடிமைத்தனம், ஆதிக்கம், ஆகியவற்றைப்போல், மரணத்தையும் அழியாத ஒன்றாகக் கருத விரும்பினார். அதேபோலத்தான் நாமும், நம்முடைய துன்பத்திலும், உலகத்தின் ஏழ்மைத்தனத்திலும், சொர்க்கத்தின் செல்வம் மற்றும் மகிழ்ச்சி, அடிமைத்தனத்தைக் கட்டுப்படுத்துவதில் கடைபிடிக்கும் நித்திய இறையாண்மை, மரணத்தின் அழியாமை, சாத்தான் மற்றும் அந்துக்கிறீஸ்து போன்ற நிலையற்ற மாயைகளுக்குப் பதிலாக, நாம் இறைவனையும், எம் கர்த்தராகிய கிறிஸ்துவையும் நேசிப்போமாக.

VII. சாத்தானின் சூழ்ச்சி வலையில் இருந்து விடுபட்டு, உலகின் சிக்கல்களில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்பும் அவர்கள் மீண்டும் கடினமான சூழ்நிலைகளிலும் தொல்லைகள் மத்தியில் வாழத் தொடங்கினால், அவர்கள் புதிய உலகத்திற்கு மீண்டும் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில் மீட்பினால் அவர்கள் பயனடைய மாட்டார்கள் என்பதையும் இங்கே வலியுறுத்த வேண்டும்.

VIII. அவர்கள் பரலோக வெகுமதியையும் கிரீடத்தையும் அடைய வேண்டுமானால், விசுவாசத்திலும் நல்லொழுக்கத்திலும் விடாமுயற்சியோடு இருப்பதோடு, பரலோக பரிபூரணத்தையும் ஆன்மீக சலுகையையும் தேட அவர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

IX. அவ்வாறான கஷ்டங்களும் துன்பங்களும் எமக்கு ஏற்படுவது, நம்மை சக்திமயமானவர்கள் என்று நிரூபிக்கவே.

X. துன்பங்களால் ஏற்படக்கூடிய காயங்கள் மற்றும் தண்டனைகளுக்கு அஞ்சாதிருங்கள். ஏனென்றால் சாத்தானின் சூழ்ச்சிமிகு தாக்குதலை விட இறைவனிடமிருந்து எமக்கு கிடைக்கும் பாதுகாப்பு மிகவும் பெரியது.

XI. இந்த உலகில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் மற்றும் துன்பங்களையிட்டு யாரும் பயப்படவோ கவலை கொள்ளவோ வேண்டியதில்லை. ஏனென்றால், உலகம் நம்மை வெறுப்புடன் நோக்கும் என்றும், துன்பங்களுக்கு ஆளாக்கும் என்பது பற்றியும் எதிர்வு கூறப்பட்ட விடயங்கள் நடந்தேற வேண்டும் . இவற்றின் மூலம் தெய்வீக வாக்குறுதியின் மீதான விசுவாசமும், தொடர்ந்து வரும் வெகுமதிகளிலும் அவற்றின் மீதான பலாபலன்களிலும் அவை  வெளிப்படுகின்றன. எனவே இவ்வாறானவை எதுவும் கிறிஸ்தவர்களுக்குப் புதிதல்ல. உலகின் ஆரம்பத்திலிருந்தே, நல்லவர்கள் மிகவும் பாடுபட்டு  உழைத்தார்கள்; நீதிமான்கள் அநீதியால் துன்பங்களுக்கு ஆளாயினர்; துஷ்டர்களால் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

XII. இங்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் துன்பங்களுக்குப் பிறகு நீதிமான்கள் மற்றும் வேதசாட்சிகளின் விசுவாசம் மற்றும் அவர்கள் அடைந்த நன்மைகள் பற்றி, இதன் கடைசிப்பகுதியில் குறிப்பிடுதல் அவசியம்.

XIV. அதுமட்டுமல்லாமல், இவ்வுலகில் நமக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை நாம் சகித்துக்கொள்வதைப் பார்க்கிலும், அவற்றுக்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதையே மேன்மையாகக் கருதவேண்டும்.

I. சிலைகள் வடிவில் இருப்பவை எவையும் தெய்வங்கள் அல்ல. அப்படியான கருவிகளையும் கூறுகளையும் கடவுளாக எண்ணி வணங்கக்கூடாது[2] என்பது பற்றி சங்கீதம் 134 இவ்வாறு கூறுகிறது: “தேசங்களால் போற்றப்படும் சிலைகள் மற்றும் உருவங்கள், வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றால் வடிக்கப்பட்டவை. மனிதனின் கைவண்ணத்தால் ஆனவை. அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனால் பேச முடியாது; அவைகளுக்கு கண்கள் உண்டு, ஆனால் பார்க்க முடியாது;  அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் கேட்காது; அவைகளுக்கு வாய்கள் இருந்தும் சுவாசம் இருக்காது. ஆகவே அவைகளைப் போலவே அவைகளை உருவாக்கியவர்களும் இருப்பர்.”[3]  இதேபோல், சொலொமோனின் ஞானத்தில் இவ்வாறு கூறப்படுகிறது: “ஏனென்றால், பிறவினத்தவர்களின் சிலைகள் அனைத்தையும்  தெய்வங்களாகவே கருதினர். அவைகளுக்கு கண்கள் இருந்தும், அவைகளால் பார்க்க இயலாது. மூக்குகள் இருந்தும் சுவாசிக்க முடியாது, காதுகள் இருந்தும் கேட்க முடியாது, விரல்களால் எதையும் செய்ய இயலாது. அவைகளுக்கு கால்கள் இருந்தும், அவைகளால் நடக்க முடியாது. ஏனென்றால் அவைகளை உண்டாக்கியோர் மனிதர்களே. தனது சொந்த சுவாசத்தையே இரவலாகப் பெற்றுக்கொண்டோரே, அவற்றை வடித்தனர். ஏனென்றால் தன்னைப் போன்ற உருவத்தையொத்த கடவுளை எவராலும் உருவாக்க முடியாது. ஏனெனில், அவர்கள் சாதாரண மனிதர்கள் என்பதால், தமது தனது தீய கைகளால் உயிரற்ற ஒன்றையே உருவாக்குகின்றனர். ஏனென்றால், அவற்றை வணங்குபவர்களை விட அவற்றை வடித்தவர் மேன்மையானவர். காரணம், அவர் உண்மையிலேயே உயிருடன் இருக்கிறார். அவரால் வடிக்கப்பட்ட சிலைகளில் எந்த விதமான உயிரும் இல்லை.[4]  யாத்திராகம புத்தகம் இதற்கு இணையானதொன்றை இவ்வாறு கூறுகிறது: “நீங்கள் ஒரு செதுக்கிய உருவம் ஆகாயத்தில் உள்ளதைப் போலவோ, பூமியில் உள்ளது போலவோ, பூமிக்கு அடியில் உள்ள எதையும் போலவோ இருப்பது கூடாது.”[5] இதேபோல், சொலொமோனின் ஞானத்தில் (மூலக்கூறுகள் குறித்து) இவ்வாறு கூறப் பட்டுள்ளது: “தமது தொழிலில் பங்கேற்பதன் மூலம், படைப்பாளர் யார் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் அவர்கள் தீ, காற்று, புயல், விண்மீன் கூட்டங்கள், ஆழிப்பேரலை, சூரியன் அல்லது சந்திரன் போன்றவற்றை தெய்வங்கள் என்று கருதினர். அவற்றில் உள்ள கவர்ச்சியே இதற்குக் காரணம் என்று அவர்கள் நினைப்பார்களானால், அவைகள் மத்தியில் கர்த்தர் எவ்வளவு அழகாகவும் சிறப்பானவராகவும் இருக்கிறார் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்படியில்லாவிடில், அவர்கள் தங்கள் சக்தியையும் அவற்றின் பெறுபேறுகளையும் பாராட்டுபவர்களானால், அவர்களுக்கு அந்த அதிகாரத்தையும், திறமைகளையும் அளித்தவர் அவர்களை விட அவ்வளவு சக்திவாய்ந்தவர் என்பதை அவர்கள் உணர வேண்டும்.”[6]

II. எம் ஆண்டவராகிய இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்[7] என எழுதப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஒன்றை யாத்திராகமமும் இவ்வாறு கூறுகிறது: “என்னைத் தவிர வேறு கடவுள்கள் இல்லாதிருக்கக்கடவதாக.”[8] உபாகமத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “அப்படியானால், நான் மட்டுமே தேவன், என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதையும் நன்றாகக் கவனியுங்கள்: நானே வாழ்வை கொடுப்பவரும் எடுப்பவருமாக இருக்கிறேன்; நானே காயங்களை உண்டாக்குபவரும், குணத்தைக் கொடுப்பவருமாக இருக்கிறேன். என் கைகளில் இருந்து விடுபடக் கூடியோர் எவருமில்லை.”[9] இதேபோன்று வெளிப்பாடுகள் என்ற புத்தகத்திலும் இதற்கமைவான ஒன்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “நித்திய நற்செய்தியை ஏந்தியபடி, பூமியிலுள்ள மக்களுக்கும், எல்லா தேசங்களுக்கும், கோத்திரங்களுக்கும், எல்லா மொழி பேசுபவர்களுக்கும், மக்களுக்கும் அறிவிக்கும்படி; மற்றுமொரு தேவதூதர் வானத்தின் நடுவே பறந்து செல்வதைக் கண்டேன்.” அவர் உரத்த குரலில் இவ்வாறு கூறினார்: “கடவுளுக்கு அஞ்சி அவரை கௌரவியுங்கள்; அவருடைய தீர்ப்பின் நேரம் நெருங்கி விட்டது. வானத்தையும், பூமியையும், கடலையும், நீரூற்றுகளையும் படைத்த ஒரே சர்வேசுரனை மட்டுமே துதியுங்கள்.”[10] முதலாம் மற்றும் இரண்டாம் கட்டளைகளைப் பற்றி விபரிக்கையில், இறைவன் சுவிசேஷங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இயேசு அவர்களுக்குப் பதிலாக: முக்கியமாக, இஸ்ரவேலரே  கேளுங்கள்; எங்கள் ஆண்டவராகிய இறைவன் அவரே. அவர் ஒருவர் மட்டுமே (இறைவன்).”[11] இதுபற்றி மீண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: கர்த்தர் அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இதயத்தோடும், உன் முழு ஆன்மாவோடும், உன் முழு மனதோடும் நேசிக்க வேண்டும். இது முதலாவதும், பிரதான கட்டளையும் ஆகும். இது போன்ற இன்னும் ஒரு கட்டளையில்; அதாவது உன்னைப் போலவே உன் அயலாரையும் நேசி என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்டளைகளிலும் முழுத் திருச்சபையின் யாப்பும் தீர்க்கதரிசனமும் அடங்கி உள்ளன.”[12] மீண்டும் ஒரு இடத்தில்; “இதுவே நித்திய வாழ்வு, அவர்கள் உம்மை ஒரே உண்மையான கடவுளையும், சர்வேசுரனால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவையும் பற்றி அறிந்து கொள்வார்களாக.”[13]

III. சிலைகளுக்கு வந்தனம் செலுத்துவோருக்கு கடவுளால் விடுக்கப்படும் எச்சரிக்கை என்ன?

யாத்திராகம புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “இறைவனைத் தவிர வேறு எந்த கடவுளையும் துதிப்பவன் துண்டிக்கப்படுவான்.”[14]  உபாகமம் இதுபற்றிக் கூறுகையில்: “அவர்கள் கடவுளுக்கு அல்ல, சாத்தானுக்கே பலிகளை செலுத்துகிறார்கள்.”[15] ஏசாயாவின் நிருபம் மீண்டும் இவ்வாறு கூறுகிறது: “அவர்களுடைய தேசம் சிலைகளால் நிறைந்துள்ளது; அவர்கள் தங்கள் கைவண்ணத்தால் உருவாக்கப் பட்டவற்றை அவர்களே வணங்குகிறார்கள். இவ்வாறு தாழ்ந்த மனிதன் அடக்கி ஒடுக்கப்பட்டும், உயர்ந்தவன் தாழ்த்தப் பட்டும் வருகிறான். எனவே அவர்களை மன்னியாதிருக்கவும். நான் அவர்களை மன்னிக்கவும் மாட்டேன்.”[16] மீண்டும் இவ்வாறு சொல்லப் பட்டுள்ளது:  அங்கே கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; “உனது பங்கு பள்ளத்தாக்கின் நேர்த்தியான கற்களில் ஒன்று; அவை தான் உனது பங்காகும். நீ அவற்றின் மீது பான பிரசாதத்தையும், உணவுப் பிரசாதத்தையும் ஊற்றினாய்.  இப்படிப் பட்டவற்றை என்னால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்?[17] இதேவேளை, எரேமியா புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “”பிற தெய்வங்களை  துதிப்பதற்கும், அவற்றை வணங்குவதற்கும் அவைகளின் பின்னால் செல்ல வேண்டாம். நீங்களாகவே உருவாக்கிய உங்கள் கைவண்ணங்களால் என்னை கோபத்துக்கு ஆளாக்க வேண்டாம்; அப்படி செய்யாதிருந்தால், நான் உங்களுக்கு தீங்கு செய்ய மாட்டேன்.”[18]  வெளிப்பாடு புத்தகம் இவ்வாறு உரைக்கிறது: “எவனாவது மிருகத்தையும் அதன் உருவத்தையும் வணங்கி, நெற்றியில் மற்றும் கையில் அதன் அடையாளத்தைப் பெற்றால், அவன் கடவுளின் கோபாக்கினை என்னும்  பானத்தைக் குடிப்பான். அதிலே அவரது கோபக்கனல் படர்ந்திருக்கும். பரிசுத்த தேவதூதர்களின் முன்னிலையிலும், மற்றும் செம்மறிப்பிருவையின் முன்னிலையிலும் அவன் தீயினாலும், கந்தக அமிலத்தாலும் சுடப்பட்டு  வேதனைக்கு ஆளாவான். அந்த தண்டனைகள் நிமித்தம் எழும் புகையானது என்றென்றும் உயரே உயரே செல்லும். மிருகங்களையும் அவற்றின் உருவங்களையும் வணங்குபவர்களுக்கு இரவும் பகலும் ஓய்வு என்பது இருக்கப்போவதில்லை என்று உரத்த குரலில் சொல்லப்பட்டுள்ளது.”[19]

IV. விக்கிரக ஆராதனை செய்வோரை கடவுள் அவ்வளவு எளிதில் மன்னிக்க மாட்டார்.

யாத்திராகமத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மோயீசன் மக்களுக்காக செபித்தாராயினும், அவருடைய செபத்திற்கு பதில் கிடைக்கவில்லை. “மோயீசன் கர்த்தரிடம் திரும்பிச் சென்று, ஐயோ தேவனே, இந்த மக்கள் ஒரு மகா பாவத்தைச் செய்து, தங்களுக்கு என்று ஒரு கடவுளை தங்கத்தினால் உருவாக்கியுள்ளனர். எனினும், இப்போது நீர் அவர்களின் பாவத்தை மன்னிக்க தயாராக இருப்பீரானால் (அது பெரும் நன்மையாக இருக்கும்); அப்படி இல்லாது போனால், நீர் உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை நீக்கிவிடும் என்று கூறினார். அப்பொழுது கர்த்தர்: “எவர் எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தாரோ, அவர் என் புத்தகத்திலிருந்து அழைக்கப்படுவார்”[20] என்றார். அதேபோல், எரேமியா மக்கள் சார்பாக முன்வந்து, அவர்களுக்காகப் பரிந்து பேசிய போது, ​​கர்த்தர் அவரை நோக்கி இவ்வாறு கூறினார்; ” நீ இந்த மக்களுக்காக செபிக்க வேண்டாம், அவர்களுக்காக துக்கப்படவும் வேண்டாம் அவர்களுக்காக மன்றாடவும் வேண்டாம்.”[21] கடவுளுக்கு எதிராக பாவம் செய்பவர்கள் மீது, கடவுள் கொண்டிருக்கும் அவரது கோபாக்கினையை எசேக்கியேல் கண்டிக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது: “மானிடனே, ஒரு தேசம் எனக்கு எதிராகப் பாவம் செய்யும் போது, அல்லது குற்றங்களில் ஈடுபடும் போது,  நான் என் கையை அதன்மேல் நீட்டி, அதற்கு உணவளிக்கும் மார்க்கத்தைத் தடுப்பேன்; நான் அதன் மீது பஞ்சத்தை அனுப்பி, மனிதர்களையும் மிருகங்களையும் அதிலிருந்து அழித்து விடுவேன். அப்போது நோவா, தானியேல், யோபு ஆகிய இந்த மூவரும் அங்கே இருக்கக்கூடுமானால், அவர்கள் தங்கள் நீதிவழுவாத தன்மையின் ஊடாக, தங்களின் ஆத்துமாக்களை மட்டுமே அழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்.”[22] இதேபோல், முதலாம் இராஜாக்கள் புத்தகம் பின்வருமாறு விளக்குகிறது: மனிதனுக்கு எதிராக இன்னொரு மனிதன் பாவம் செய்வானாகில், அவனது பாவத்துக்காக, மற்றையோர் கடவுளை இறைஞ்சுவர். ஆயினும், கடவுளுக்கு எதிராக ஒருவன் பாவம் செய்வானாகில், அவன் சார்பாக, அவனது பாவங்களை மன்னிக்கும்படி பரிந்துபேச யார் உளர் என்று கேட்டார். காரணம் என்னவென்றால், கடவுள் அப்படிப்பட்டவர்களை அழிக்க நினைத்திருந்தார்.[23]

V. உருவ வழிபாட்டின் மீது கடவுள் மிகவும் கோபப்படுகிறார் என்பதைப் பறைசாற்ற இங்கு சிறந்த உதாரணமாக இருப்பதை அவதானிப்போமானால், கடவுள் மற்றவர்களுக்குப் பலியிடுவோரையும், சிலைகளுக்கு அடிபணிவதற்கும் காரணமானவர்களையும் கொன்றொழிக்கும்படி கட்டளையிட்டார்.

உபாகமப் புத்தகத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது: “உங்கள் சகோதரர், அல்லது உங்கள் மகன், அல்லது உங்கள் மகள், அல்லது உங்கள் அரவணைப்பில் இருக்கும் உங்கள் மனைவி, அல்லது உங்கள் சொந்த உறவினன் போல இருக்கும் உங்கள் நண்பர், அல்லது எவரோ ஒருவர், உங்களிடம் வந்து இரகசியமாக இவ்வாறு கூறினால்; “வாருங்கள் நாம்  சென்று முன்பு அறிந்திராத தெய்வங்களை, அவை, புறஜாதியினரின் தெய்வங்கள், என்று கூறுவாராகில், “நீ அவனது வேண்டுகோளுக்கு சம்மதியாது இருக்கக்கடவாய், அவனுக்குச் செவிகூடாது இருக்கக்கடவாய், உனது கண்களின் பார்வையில் இருந்து அவன் தப்பிவிடக்கூடாது, அவனை ஒழித்து வைத்திருத்தல் ஆகாது. அதற்குப் பதிலாக, அவனைப் பற்றி நீ பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அவனைக் கொல்ல முதலில் உனது கரம் அவன்மேல் படட்டும், அதன்பிறகு அனைத்து மக்களின் கரங்களும் அவன் மீது விழக்கடவதாக, உன்னுடைய தேவனாகிய கர்த்தரிடமிருந்து உன்னைத் திசை திருப்ப முயன்றதால் அவர்கள் அவனை சாகும்வரை கல்லெறிந்து கொல்வார்கள்.”[24] கர்த்தர் மீண்டும் இவ்வாறு கூறுகிறார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு குடியிருக்க அனுமதித்திருக்கும் நகரங்கள் ஒன்றில், எவராவது உங்களிடம் வந்து சிலர்; “வாருங்கள், நாம் சென்று நீங்கள் முன்பு அறிந்திராத  விசித்திரமான கடவுள்களைத் துதிப்போம்” என்று சொல்வதை நீங்கள் கேட்டால், அந்த நகரத்தில் உள்ளவர்களை உங்கள் கூர்மையான வாளைக் கொண்டு துவம்சம் செய்து விடுங்கள். அந்த நகரத்தை தீயினால் சுட்டெரித்து வீசுங்கள். அது என்றென்றும் மக்கள் வசிப்பதற்கு அறுகதையற்ற இடமாக இருக்கட்டும். அது மீளக் கட்டியெழுப்ப முடியாத நகரமாக இருக்கட்டும். கர்த்தர் தனது கடும் சின்னத்தில் இருந்து கீழிறங்கி, தனது இரக்கத்தைக் காட்டுவார். அவர்மீது பரிதாபப்படுவார், உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவருடைய கட்டளைகளைக் கடைபிடித்தால், உங்களைப் பன்மடங்காகப் பெருக்குவார்.[25] இந்தக் கட்டளை மற்றும் அதன் வலிமையையும் நினைவில் கொண்டவராக, மத்தியாஸ் என்பவர், பலியிட பலிபீடத்தின் அருகே வந்த ஒருவரை கொன்று விட்டார்.[26] கடவுளை வணங்குவது மற்றும் சிலைகளை புறக்கணிப்பது பற்றிய இந்த கட்டளைகள் கிறிஸ்துவின் வருகைக்கு முன்னர் கடைபிடிக்கப்பட்டவை என்றால், கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகு அவற்றுக்கு இன்னும் எவ்வளவு தூரம் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்? அவர் தனது வார்த்தைகளால் மட்டும் அல்ல, அவரது செயல்களாலும், பாடுகளாலும், அவர் பட்ட எல்லாக் காயங்களுக்கும் அவமானங்களுக்கும் பின், சிலுவையில் அறையப்பட்டதும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி, துன்பப்படுவதற்கும் மரிப்பதற்கும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவருக்காக மரிக்க மனிதனுக்கு எந்தவிதமான காரணமும் இருக்கக்கூடாது என்பது பற்றியும் நமக்கு அறிவுறுத்தினார். அவர் நமக்காக பாடுகளை அனுபவித்ததாலும், மற்றவர்களின் பாவங்களுக்காக அவர் துன்பப்பட்டதாலும், ஒவ்வொருவரும் தனது சொந்த பாவங்களுக்காக நாம் துன்பங்களை அனுபவித்திட வேண்டும். அதையிட்டு, அவர் சுவிசேஷத்தில் கூறுகையில், இவ்வாறு எச்சரிக்கிறார்; “ஆகையால், எவனும் மனிதர்கள் முன்பாக என்னை ஏற்றுக்கொள்கிறானோ, அவனை பரலோக பிதாவாகிய சர்வேசுரனின் முன்னால் நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், எவனும் மனிதர்கள் முன் அன்னை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றானோ, அவனை எனது பரலோக பிதாவாகிய சர்வேசுரனின் முன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.”[27] இதேபோல், அப்போஸ்தலரான புனித பவுல் இவ்வாறு கூறுகிறார்: “இது உண்மையுள்ள ஒரு வாக்கியம். நாம் அவரோடு மரித்திருந்தால், அவருடன் வாழ்வோம்; நாம் பொறுமையாக இருந்தால், அவருடன் ஆட்சி செய்வோம். எங்களுக்கு அவரைத் தெரியாது என்று நாங்கள் சொன்னால், உங்களை எனக்குத் தெரியாது’ என்று அவர் கூறுவார்.[28]  புனித யோவான் இவ்வாறு கூறுகிறார்: “சுதனாகிய சர்வேசுரனை பெற்றுக்கொள்வோருக்கு, பிதாவாகிய சர்வேசுரனையும் பெற்றுக்கொள்ள முடியும்.”[29] இதன்வழியாக, மரணத்தை நிராகரிக்க கர்த்தர் எம்மை மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறார். அவர் இவ்வாறாக கூறியதன் மூலம், எம்மை சக்திமயப்படுத்துகிறார்: சரீரத்தைக் கொல்லக்கூடியவரை விட, ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களையிட்டு அஞ்ச வேண்டாம். ஆனால் ஆன்மாவையும் சரீரத்தையும் நரகத்தில் இட்டு அழிக்கக்கூடியவருக்கு அஞ்சுங்கள்.”[30] மீண்டும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “தன் வாழ்க்கையைத் நேசிப்பவர் அதை இழந்து விடுவார்; இந்த உலகில் தனது வாழ்க்கையை வெறுப்பவர் அதை நித்திய வாழ்வை அடையும் பொருட்டு பாதுகாப்பார்.”[31]

VI. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, தேவ கிருபையால் புனிதப்படுத்தப்பட்ட நாம், கிறிஸ்துவுக்கு முன்பாக வேறு எதையும் வைக்காத்திருக்கக்கடவோம்

கர்த்தர் சுவிசேஷத்தின் ஊடாக பேசும்போது, இவ்வாறு கூறுகிறார்: “என்னை விட தனது தந்தையையும் தாயையும் நேசிப்பவன் எனக்கு தகுதியானவன் அல்ல; என்னை விட தனது மகனையோ மகளையோ நேசிப்பவன் எனக்கு தகுதியற்றவன். தனது சிலுவையைச் சுமந்து என்னைப் பின்தொடர்பவன் எனக்கு தகுதியானவன் அல்ல.”[32] உபாகமப் புத்தகத்தில் இவ்வாறு கூறப் பட்டுள்ளது: ‘தங்கள் தந்தையிடமும், தாயிடமும்: “நான் உங்களை அறியேன்” என்று கூறி, தங்கள் சொந்த மக்களையும் சகோதரர்களையும், அறியாதவர்கள், உமது கட்டளைகளைக் காத்து, உடன்படிக்கையை கடைபிடிக்கிறார்கள்.”[33]  அதேபோன்று, அப்போஸ்தலரான புனித பவுல் இவ்வாறு கூறுகிறார்: “கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பது யார்? பேரழிவோ, மன உளைச்சலோ, கடுந்துன்பங்களோ, பஞ்சமோ, நிர்வாணத் தோற்றமோ, பேரழிவோ அல்லது கொடிய வாளோ நம்மை அவரிடமிருந்து வேறுபடுத்தக் கூடுமோ? ஆகையால், உன்னால் நாள் முழுவதும் நாங்கள் மரணத்தை அனுபவிக்கிறோம்; வெட்டிப் பலிகொடுக்க கொண்டு செல்லப்படும் செம்மறிகளாக நாம் கணக்கிடப்பட்டோம் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் எங்களை நேசித்தவரால், இவை யாவற்றில் இருந்தும் நாம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுக் கொண்ட  மக்களாகக் கருதப்படுவோம்.”[34] மீண்டும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “உங்களது சரீரம் பரிசுத்த ஆவியின் வாசஸ்தலம் என்பதை நீங்கள் அறியவில்லையா? நீங்கள் உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல; நீங்கள் வாங்கப்பட்டவர்கள். ஆகவே, உங்கள் சரீரத்தின் மூலம் இறைவனை மகிமைப்படுத்துங்கள்.”[35] இதுகுறித்து மீண்டும் என்ன எழுதப்பட்டுள்ளது என்று பார்ப்போம்: ‘கிறிஸ்து அனைவருக்காகவும் மரித்தார், ஆகவே உயிருடன் இருப்பவர்கள் தமக்காக இனிமேல் வாழாது,  அவர்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தவருக்காக வாழக்கடவார்களாக.”[36]

VII. அந்த விடுதலையின் நன்மையையும் வெகுமதியையும் இழந்துவிடாது, பிசாசின் வலையில் இருந்து விடுபட்டு, உலகின் மாயைகளில் இருந்து விடுவிக்கப் பட்டவர்கள் மீண்டும் உலக வாழ்வுக்குத் திரும்பக்கூடாது

யாத்திராகமம் புத்தகத்தில், யூத மக்கள் நம் நிழலிலும் உருவத்திலும் முன்னோடிகளாக இருந்தனர், கடவுள் அவர்களுடைய பாதுகாவலராகவும் வீழ்த்துபவராகவும் இருந்து, பார்வோனிடமிருந்தும் எகிப்தின் கொடூரமான சிறையிலிருந்தும் தப்பினார். அதாவது, சாத்தான் மற்றும் உலகத்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை கிடைத்தது என்பதே அதன் பொருள். கடவுளை நம்பாதவர்களும், அவிசுவாசிகளும் வனாந்தரத்தின் கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வெறுத்தவர்களாய் மோயீசனுக்கு எதிராக அவதூறு பேசத் தொடங்கினர். மேலும், தெய்வீக விடுதலை மற்றும் இரட்சிப்பின் நன்மைகளை உணராமல், அவர்கள் மீண்டும் எகிப்தின் அடிமைத்தனத்திற்கு திரும்பிச்செல்ல முயன்றனர், அதாவது, அவர்கள் விடுவிக்கப்பட்ட உலகின் அடிமைத் தனத்திற்கு மீண்டும் செல்ல விழைந்தனர். மாறாக, அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில், தம் மக்களை சாத்தானின் பிடியில் இருந்து விடுவிப்பவராகவும், உலகம் விடுவிக்கப் பட்டவுடன் அவர்களைப் பாதுகாப்பவருமாக அவர் இருந்தபடியால். “அவர்கள் மோயீசனை நோக்கி, ‘எகிப்தில் கல்லறைகள் இல்லாததால், எங்களை வனாந்தரத்தில் மடியும்படி இங்கே கொண்டு வந்தீரா? எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்து ஏன் எங்களை இவ்வாறு நடத்துகிறீர்? அவ்வாறு செய்ய எகிப்தியர்களை விட்டு வெளியேற வேண்டும் என்று எகிப்தில் இருக்கும் போது ஏன் சொல்ல வில்லை? வனாந்தரத்தில் இறப்பதை விட, அங்கே சென்று எகிப்தியர்களுக்கு சேவை செய்வது நல்லது என்று அவர்கள் மோயீசனிடம் சொன்னார்கள். அதற்கு மோயீசன்: பயப்பட வேண்டாம். அமைதியாக இருந்து, கர்த்தர் இன்று உங்கள் அனைவருக்கும் கொண்டு வரும் மீட்பைக் காணத் தயாராகுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று காணும் எகிப்தியர்களை மீண்டும் ஒருக்காலும் காண மாட்டீர்கள். கர்த்தர் உங்கள் அனைவருக்காகவும் போராடுவார், நீங்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.[37] சாத்தானிடமும், நாம் விட்டுச் சென்ற இந்த உலகத்துக்கும் மீண்டும் திரும்பி வரக்கூடாது என்பதற்காகவே கர்த்தர் இவ்வாறு அவருடைய நற்செய்தியின் மூலம் எச்சரிக்கிறார்: “எந்த ஒரு மனிதனும், கலப்பையின் மீது கை வைத்த பின்பு, திரும்பிப் பார்ப்பானானால், அவன் தேவனுடைய இராச்சியத்துக்கு பொருந்துபவனாக இருக்கமாட்டான்.”[38] மீண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “அந்த நாளில் வீட்டின் மேல் இருப்பவன் தன் பொருட்களை எடுத்துச் செல்ல மீண்டும் கீழே இறங்கக்கூடாது. அவ்வாறே களத்தில் இருப்பவன் மீண்டும் திரும்பி வரக்கூடாது. லோத்தின் மனைவியை நினைவில் கொள்ளுங்கள்.”[39] எவராவது, செல்வத்தின் மேல் கொண்ட ஆசை காரணமாகவோ அல்லது தனது சொந்த இச்சைகளால் கிறிஸ்துவின் மகிமைத்தனத்தில் இருந்து விலகிச் செல்பவனாகக் கருத்தப்பட்டாலோ, அவர்கள் பற்றி அவர் இவ்வாறு கூறினார்: “தன்னிடம் உள்ள அனைத்தையும் விட்டு விட்டு என்னைப் பின்தொடராதவன், என் சீடனாக இருக்க முடியாது.”[40]

VIII. விசுவாசத்திலும் நல்லொழுக்கங்களிலும் நாம் தொடர்ந்து உறுதியுடன் இருக்க வேண்டும்.  இதன் மூலம் தான் நாம் நம்முடைய வெகுமதியையும் அதற்கான கௌரவத்தையும் பெறுவோம்.

தெய்வீக மற்றும் ஆன்மீக காரியங்களில் எம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வது மிகவும் நன்று. துணை முடக்கு அதாவது, பரலிபொமினோன் என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “நீங்கள் அவருடன் இருக்கும் வரை கர்த்தர் உங்களுடன் என்றும் இருப்பார். ஆனால் நீங்கள் அவரைக் கைவிட்டால், அவரும் உங்களைக் கைவிட்டு விடுவார்.”[41] எசேக்கியேல் புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “நீதிமான்கள் தவறு செய்யும் போது, நீதியின் படி அவர் இரட்சிக்கப்பட மாட்டார்…. அதேவேளை நீதிமான் பாவம் செய்யும் போது, நீதிற்கு கட்டுப்பட்டு அவரால் வாழ இயலாது.”[42] மீண்டும் நற்செய்திகளின் வாயிலாக இறைவன் பேசும் போது இவ்வாறு கூறுகிறார்: “என் பெயரின் நிமித்தம் நீங்கள் அனைவராலும் வெறுப்புக்கு உள்ளாகிறீர்கள். ஆனால் கடைசிவரை எல்லாவற்றையும் உறுதியுடன் சகித்துக்கொள்பவன் இரட்சிக்கப்படுவான்.”[43] மீண்டும் இங்கே இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “நீங்கள் என் வார்த்தைகளில் நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையில் என் சீடர்கள். நீங்கள் உண்மையை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுவிக்கும்.”[44]  நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும், போருக்கு போகும் போது நாம் நல்ல ஆயுதபாணிகளாய் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இந்தக் காரணத்தையும் இணைத்துக்கொள்கிறார்: “உங்கள் இடைக்கச்சையை நன்றாகக் கட்டிக் கொண்டு,  விளக்குகளை ஏற்றி வைக்கவும். திருமண விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய எஜமானர் வந்து அவரது கதவைத் தட்டும் போது, திறக்கக் காத்திருப்பவர்களைப் போல இருங்கள். எஜமானர் வரும் வரை அவரது சேவகர்கள் விழித்திருப்பதை அவர் பார்த்தால், அவர்கள் பாக்கியவான்கள்.”[45]  அதேபோல், விசுவாசத்தில் செழித்திருக்கவும், அதை முடிந்தவரை முன் எடுத்துச் செல்லவும், புனித பவுல் நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “பந்தயத் திடலில் எல்லோரும் ஓடுகிறார்கள். ஆனால் பரிசு ஒருவரால் மட்டுமே வெல்லப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதேபோல நீங்களும் வெகுமதியைப் பெற ஓடுங்கள். வெற்றி பெற முயற்சிக்கும் அனைவருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரியும். மக்கிப் போகும்    கிரீடத்தைப் பெறுவதற்காக அவர்கள் இதைச் செய்கிறார்கள்; அதனால் என்றும் அழியாத ஒன்றை நாம் பெறுவோம்.”[46] மீண்டும் அவர் கூறுகையில்; “கடவுளின் சிப்பாயாக பணியாற்றும் எவரும் உலக விவகாரங்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள், அவரை ஏற்றுக்கொண்டவரை அவர் மகிழ்விப்பார். மீண்டும் ஒரு போட்டியில் நுழையும் ஒருவர் சட்டதிட்டங்களுக்கு அமைவாக போட்டியிடா விட்டால், அவருக்கு முடிசூட்டப்படுவதில்லை.”[47] “ஆகவே, சகோதரர்களே, கடவுளின் கருணையால், உங்கள் உடல்களை ஒரு புனிதமான பலிபீடமாகவும், உயிரோட்டத்துடனும், பரிசுத்தமாகவும், கடவுளுக்குப் பிரியமாகவும் முன்வைக்கும்படி நான் கடவுளின் இரக்கத்தால் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். அது நீங்கள் செய்யும் தெய்வீகக் கடமையாகும். நீங்கள் இந்த உலக வாழ்வுக்கு சமமாக இல்லாமல், இறைவனுக்கு ஏற்ற விதத்தில், இறைவனின் கட்டளைக்கமைய, நன்மைகளை உள்வாங்கி அவற்றின் பரிபூரணத்துவத்தை அறிந்து, கடவுளின் நல்ல,  ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் முழுமையான விருப்பம் என்ன என்பதை நீங்கள் உணரலாம்.”[48] மீண்டும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “நாம் தேவனுடைய மக்கள் என்று பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஆன்மாவினூடாக சாட்சியமளிக்கிறார். அத்தோடு, குழந்தைகள் என்போர் வாரிசுகள்; கடவுளின் வாரிசுகள், கிறிஸ்துவின் கூட்டு வாரிசுகள். அவரோடு, அவரின் மகிமையைப் பெரும் பொருட்டு நாம் கஷ்டங்களை அனுபவித்தால், அதற்கான வெகுமதி இவ்வாறே அமையும்.”[49] வெளிப்படுத்தல் புத்தகத்தில், தெய்வீகத்தைப் பிரசங்கிப்பதற்கான அறிவுரைகள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன: “உன்னுடைய  கிரீடத்தை யாரும் எடுத்துவிடாமல் இருக்க, அதை இறுகப் பற்றிக்கொள்.”[50]  விடாமுயற்சி பற்றியும் மன உறுதி பற்றிய இந்த எடுத்துக்காட்டு யாத்திராகமத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கு மோயீசன் சாத்தானின் உருவத்தைத் தாங்கிய அமலேக்கை அடக்கும் முகமாக, சிலுவையின் அடையாளத்தையும் நற்கருணையின் அடையாளத்தையும் குறிக்கும் வண்ணம் தனது கைகளை அகல விரித்து உயர்த்தினார். அவரால் உயர்த்தப்பட்ட கைகளைத் தவிர வேறு எதையும் கொண்டு எதிரியை வெல்ல முடியவில்லை. அவர் தொடர்ந்து உயர்த்தப்பட்ட கைகளால் காட்டப்பட்ட அடையாளத்தில் உறுதியுடன் விடா முயற்சியுடன் இருந்தபடியால், அவனைத் தோற்கடிக்க முடிந்தது. விடாமுயற்சி பற்றியும் மன உறுதி பற்றிய இந்த எடுத்துக்காட்டு யாத்திராகமத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அங்கு மோயீசன் சாத்தானின் உருவத்தைத் தாங்கிய அமலேக்கை அடக்கும் முகமாக, சிலுவையின் அடையாளத்தையும் நற்கருணையின் அடையாளத்தையும் குறிக்கும் வண்ணம் தனது கைகளை அகல விரித்து உயர்த்தினார். அவரால் உயர்த்தப் பட்ட கைகளைத் தவிர வேறு எதையும் கொண்டு எதிரியை வெல்ல முடியவில்லை. அவர் தொடர்ந்து உயர்த்தப்பட்ட கைகளால் காட்டப்பட்ட அடையாளத்தில் உறுதியுடன் விடாமுயற்சியுடன் இருந்தபோதும், இறுதியில் அவனை வெற்றிகொள்ள முடியவில்லை. “மோயீசன் தனது கைகளை உயர்த்தியபோது, ​​இஸ்ரவேலர் வெற்றி பெற்றார்கள். அவர் கையைத் தாழ்த்தியபோது, ​​அமலேக்கியர்கள் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக, மோயீசனின் கைகள் கனத்தன; அதனால், அவர் ஒரு கல்லை எடுத்து கைகளுக்குக் கீழே வைத்து, அவர் அதன்மேலேயே உறங்கினார்; ஆரோனும் ஹூரும் இருபுறமும் நின்று அவரின் கைகளைத் தாங்கிப் பிடித்திருந்தனர். அதன் காரணமாக, அவரது கைகள் சூரியன் மறையும் வரை  உறுதியுடன் இருந்தன. இவ்வாறு தான் யோஷுவா, அமலேக்கையும் அவனுடைய சேனையையும் வாளின் கூர்மையால் தாக்கி வெற்றிகொண்டான். கர்த்தர் மோயீசனை நோக்கி: இதை ஒரு புத்தகத்தில் நினைவுச்சின்னமாக இருக்கும்படி எழுதி, அதை யோஷுவின் கவனத்துக்கு கொண்டுசெல். ஏனென்றால் சூரியனின் ஒளிக்கதிர்களுக்குக் கீழே காணப்படும் அமலேக் பற்றிய நினைவுகள் யாவற்றையும் முற்றிலுமாக அழித்து விடப் போகிறேன்.”[51] என்றார்.

IX. நாம் யார் என்பதை நிரூபிக்கும் மற்றும் நிலைநிறுத்தும் நோக்கத்தை அடைவதற்காகவே இது போன்ற தொல்லைகளும் துன்பங்களும் ஏற்படுகின்றன.

உபாகம புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், உங்கள் முழு பலத்தோடும் நேசிக்கிறீர்களா என்பதை அவர் அறிந்துகொள்ள, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை பரீட்சித்துப் பார்ப்பார்.”[52] மீண்டும் சொலமனின் ஞானம் என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “குயவனின் பாத்திரங்களை தணலில் இட்டு பரீட்சித்து போல, நீதிமான்கள் துன்ப காலத்தில் சோதனைக்குள்ளாகிறார்கள்.”[53] இதற்கு சமமான ஒரு பதத்தை புனித பவுலும் இங்கே கூறுகிறார்: “நம்மிடம் உள்ள கிருபையின் வழியாக, எமது விசுவாசத்தினாலே அவரை அணுகுவோம்; தேவனுடைய மகிமையின் மேன்மையால் நாம் மகிழ்ச்சி அடைவோம். அதுமட்டுமல்ல, துன்பம் ஏற்படும்போது பொறுமை காத்தல், பொறுமையினால் மன உறுதியும், அந்த உறுதியானது விசுவாசத்தினால் தான் தோற்றம் பெறுகிறது என்பதை அறிந்து, நமக்கு ஏற்படும்  சோதனைகள் குறித்து நாம் உறுதியுடன் இருப்போம். விசுவாசம் அவமானத்தைத் தருவதில்லை; ஏனென்றால், அது நமக்கு பரிசுத்த ஆவியால் கொடுக்கப்பட்ட வெகுமதி. அது இறைவனுடைய அன்பாக நமது இதயங்களில் பொழியப்பட்டது.”[54] புனித பேதுருவானவர் தனது நிருபத்தில் இவ்வாறு கூறுகிறார்: “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்க உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று நினைக்காமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் போது நீங்கள் களிகூர்ந்து அகமகிழ்ந்து, அவருடைய பாடுகளின் பங்காளிகள் என்ற காரணத்தால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம் நிந்திக்கப் படுவீர்களானால் நீங்கள்  பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் உங்கள்மேல் இறங்கியிருக்கிறார்; அவர் உங்களால் மகிமைப்படுத்தப்படுகிறார்.”[55]

X. துன்பங்களால் ஏற்படக்கூடிய காயங்கள் பற்றியோ அல்லது தண்டனைகள் குறித்து அச்சம் கொள்ளவோ வேண்டாம்

ஏனென்றால் சாத்தானின் தாக்குதலை விட, எம் ஆண்டவராகிய இறைவனின் பாதுகாவல் அளப்பரியது. புனித யோவான் இந்த விடயத்தைப்பற்றி தனது கடிதத்தில் இவ்வாறு  நிரூபிக்கிறார்: “என் அன்புக்குரிய பிள்ளைகளே, நீங்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். உலகில் உள்ளவர்களை விடவும், கர்த்தர் உன்னதமானவர். ஆகவே உலகிலுள்ளோரை வெல்லுங்கள், ஏனென்றால் உங்களுக்குள் இருப்பவர் உலகில் இருப்பவரை விட உன்னதமானவர்.”[56] அதேவேளை சங்கீதம் 118 இல் கூறப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்: “கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றும் உள்ளது. கர்த்தர் என் பக்கம் இருக்கிறார், நான் பயப்பட மாட்டேன்; மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”[57] மீண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “சிலர் வாகனங்கள் மீதும், சிலர் குதிரைகள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறிப்பிடுவோம். அவை வளைந்து, முறிந்து கிடக்கின்றன. ஆனால் நாங்கள் எழுந்து, நிமிர்ந்து, நேராக நிற்கிறோம்.”[58] மேலும், பரிசுத்த ஆவியானவர் எம்மிடம், சாத்தானின் சேனைகளுக்கு அஞ்ச வேண்டாம் என்றும், எதிரி நம்மீது போர் தொடுத்தால், நம்முடைய கவனம் எப்போதும் அந்த போரில் இருக்க வேண்டும் என்றும், நீதிமான்களால் மேற்கொள்ளப் படும் இந்த யுத்தம், இறைவனின் வாசஸ்தலத்துக்கும் நித்திய இரட்சிப்பிற்கும் வழி வகுக்கும் என்று சங்கீதம் 27 கூறுகிறது: ஒரு இராணுவ சேனை எனக்கு எதிராக முகாமிட்டாலும், என்மனம் அதையிட்டு பயம் கொள்ளாது. எனக்கு எதிராக எந்த ஒரு போர் வெடித்தாலும், நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பேன். நான் இறைவனிடம் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன், நான் அதையேதான் தேடுவேன்; அதாவது, என் வாழ்க்கையின் சகல நாட்களிலும் கர்த்தருடைய ஆலயத்தில் வாழ்வதும், கர்த்தருடைய வசீகரத்தைக் காண்பதும், அவருடைய ஆலயத்தில் தியானிப்பதும் ஆகும்.”[59] இதேபோல், நாம் வளர்ந்து பல்கிப் பெருகிவிட்டோம் என்று யாத்திராகமப் புத்தகம் கூறுகிறது. “ஆனால் அவர்கள் மேலும் மேலும் துன்பத்துக்கு ஆளாகும் போது, அவர்கள் மென்மேலும் பல்கிப் பெருகி, வியாபித்து காணப்படுகிறார்கள்.”[60] நம்முடைய துன்பத்தில் நமக்கு கிடைக்கும் தெய்வீக பாதுகாப்பை இட்டு வெளிப்படுத்துதல் புத்தகம் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “நீங்கள் அனுபவிக்க இருக்கும் விடயங்களையிட்டு அஞ்சாதீர்கள்.”[61] மேலும், ஏசாயா என்ற தீர்க்கதரிசி மூலமாக, வேறு எந்த வாக்குறுதியையும் விட, அவர் நம்முடைய பாதுகாப்பையும் கரிசனையையும் பற்றி அதிகமாகப் பேசுகிறார்: இப்போதும் யாக்கோபே, உன்னைப் படைத்தவரும்  இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்வதாவது: பயப்படாதே; உன்னை நான் மீட்பேன்; உன்னைப் பேர்சொல்லி அழைப்பேன்; நீ என்னுடையவன். நீ நீர்  நிலைகளைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவை உன்மேல் புரண்டோடுவதில்லை; நீ தீயின் மீது  நடந்த போது அது உன்னை சுடாது; தீச்சுவாலை உன்மேல் பற்றி எரியாது. நான் இஸ்ரவேலின் இரட்சகரும், உனது மீட்பராயிருக்கிற உன் தேவனாகிய கார்த்தருமாயிருக்கிறன்.”[62] நற்செய்தியில், துன்பங்களுக்கு முகம் கொடுக்கும் கடவுளின் ஊழியர்கள், தெய்வீக உதவியைத் தொடர்ந்து பெறுவார்கள் என்று அவர் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: அவர்கள் உங்களை காட்டிக் கொடுக்கும் போது: எப்படிப் பேசுவோம் என்றும், எதைப்பற்றிப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது என்ன, எப்படி என்பது பற்றி அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். அப்போது பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவாகிய சர்வேசுரனின் ஆவியானவரே உங்களினுள் இருந்து பேசுவார்.”[63] மீண்டும் இவ்வாறு காட்டப்பட்டுள்ளது: ஆகையால் என்ன பதில் சொல்லுவோமென்று கவலைப்படாமல் உங்கள் அதையிட்டு உங்கள் மனதிலே நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் உங்களை எதிர்த்துப் பேசவும் எதிர்த்து நிற்கவும் முடியாத சக்தியையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.[64] யாத்திராகமம் புத்தகத்தில், மோயீசன் மக்களிடம் செல்லத் தயங்கி, தாமதித்து, பயந்திருந்த போது, கடவுள் அவரிடம் இவ்வாறு பேசினார்: எனவே எப்படி பதில் சொல்வது என்று முன்கூட்டியே சிந்திக்க வேண்டாம். நீங்களே உங்கள் மனதில் முடிவு செய்யுங்கள். உங்களுடைய விரோதிகள் யாவரும் உங்களை எதிர்க்கவோ, உங்களுக்கெதிராகப் பொய் சொல்லவோ முடியாத ஒரு வாயையும் அதற்கான ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். ”யாத்திராகமம் புத்தகத்தில், மோயீசன் மக்களிடம் செல்ல பயந்தபோதும், தாமதித்த போதும், கடவுள் அவரிடம் இவ்வாறு பேசினார்: “மனிதனின் வாயை உண்டாக்கியது யார்? அல்லது பேசமுடியாத அல்லது காது கேளாத ஒரு மனிதனை உருவாக்கி, ஒருவரை பார்க்க முடியாத பார்வையற்றவனாக ஆக்குகிறவர் யார்? நான் தான் உங்கள் இறைவன் அன்றோ? எனவே இப்போதே அனுப்புங்கள், உங்கள் வாயால் என்ன சொல்ல வேண்டும் என்று நான் உங்களுக்குக் கற்பிப்பேன்.”[65] கடவுளுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மனிதனின் வாயைத் திறப்பது கடினம் அல்ல. அவர் தன்னை அர்ப்பணித்ததையும், அவர் அறிவிப்பதையும் தனக்குத்தானே அறிவிப்பதில் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் அவரால் ஊக்குவிக்க முடியும். எண்ணாகமத்தில், ஒரு கழுதையை பிலேயாம் என்ற தீர்க்கதரிசிக்கு எதிராக பேச அனுமதித்தார். ஆகையால், சோதனைகளின் போது சாத்தான் எம்மீது திணிக்கும் ஆபத்துக்களை புறக்கணிப்போம். அதற்கு பதிலாக, கடவுள் நமக்கு அளிக்கும் உதவியை என்றும் நினைவில் கொள்வோம். மேலும், மனிதனால் ஏற்படக்கூடிய தடைகளை எண்ணி உங்கள் மனதைக் குழப்பிக்கொள்ளவோ மன உளைச்சலுக்கோ ஆளாக வேண்டாம். மாறாக, தெய்வீக பாதுகாப்பைக் கொண்டு விசுவாசம் சக்திமயப்படட்டும். ஒவ்வொருவருக்கும், கர்த்தருடைய வாக்குறுதிகள் மற்றும் அவருடைய சொந்த விசுவாசத்தின் பண்புகளின்படி, கடவுள் நிச்சயம் தந்தருள்வார் என்று உறுதியாக விசுவாசிக்கும் ஒருவர், கடவுளிடமிருந்து அதீத அளவு உபகாரங்களைப் பெற்றுக்கொள்கிறார். பெற்றுக்கொள்வோராது பலவீனமான விசுவாசத்தில் குறைபாடு இருந்தாலே தவிர, சர்வவல்லமையுள்ள சர்வேசுரனால் வழங்க முடியாது என்று எதுவும் இல்லை.

XI. உலகம் நம்மை வெறுப்பில் ஆழ்த்துகிறது என்றும், அது நமக்கு எதிராக துன்பங்களையும், வெறுப்பையும் தூண்டிவிடும் என்றும், கிறிஸ்தவர்களுக்கு புதிதாக எதுவும் நடந்துவிடாது என்றும் முன்னர் கணிக்கப்பட்டிருந்தது.

ஏனெனில் உலகின் தொடக்கத்தில் இருந்தே நல்லவர்கள் அடிமைப் படுத்தப்பட்டு, அடக்கி, ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். நீதிமான்கள் அநீதியாளர்களினால் அழிவுக்கு உட்பட்டனர். நற்செய்தியில் இறைவன் தீர்க்கதரிசனம் கூறி, எம்மை எச்சரித்து, இவ்வாறு கூறுகிறார்: “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைத்துக் கொள்வதற்கு முன் என்னைப் பகைத்துவிட்டதென்று அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் உலகத்தின் மேல் ஈடுபாடு கொண்டவராக இருந்தால், உலகம் அதன் மீது அன்பு கொண்டவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.  நீங்கள் உலகத்தின் மீது அன்பு கொண்டவர்களாக இராத பட்சத்தில், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியால், உலகம் உங்களைப் வெறுக்கிறது. சேவகன் தன் எஜமானைவிடப் பெரியவன் அல்ல என்பதை நான் உங்களுக்குச் சொன்ன எனது வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தி இருந்தால், உங்களையும் துன்பத்துக்கு ஆளாக்கி இருப்பார்கள். அவர்கள் என் வசனத்தை செவிமடுத்து இருந்தால், உங்கள் வார்த்தையையும் ஏற்றுக்கொள்வார்கள்.[66] கர்த்தர் மீண்டும் இவ்வாறு கூறுகிறார்: “அவர்கள் உங்களை நீங்கள் செபிக்கும் ஆலயங்களில் இருந்து வெளியேற்றுவார்கள்; மேலும் உங்களைக் கொலை செய்கிறவன் கூட, தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று என்று  நினைக்கும் காலம் வரும். அவர்கள் பிதாவாகிய சர்வேசுரனையும்  என்னையும் அறியாதபடியால், இவைகளை உங்களுக்கு எதிராகச்  செய்வார்கள். அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைவில் கொள்ள வேண்டுமெனன் நான் இவற்றை உங்களுக்குச் சொல்கிறேன்; நான் உங்களுடனேயே  இருந்தபடியால், ஆரம்பத்தில் இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை.”[67] மீண்டும் கர்த்தர் கூறுகையில்; ““நான் உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகம் மகிழ்ச்சியடையும். நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் துக்கம் மகிழ்ச்சியாக மாறுதலடையும்.”[68] கர்த்தர் மீண்டும் இவ்வாறு கூறுகிறார்: “என்னிடத்தில் நீங்கள் சமாதானம் அடைய வேண்டுமென நான் இதை உங்களுக்குச் சொள்கிறேன். உங்களுக்கு உலகில் தொந்தரவுகள் உள்ளன. ஆனால் தைரியமாக இருங்கள்; ஏனெனில் நான் உலகை வென்றேன்.”[69] ஆனால், அவருடைய சீடர்களோ அவனுடைய வருகை மற்றும் உலகத்தின்  முடிவு குறித்து ஏதேனும் ஒரு அடையாளத்தைக் கேட்டபோது, ​​அவர் இவ்வாறு பதிலளித்தார்; ஒருவனும் உங்களை ஏமாற்றாதவாறு எச்சரிக்கையாக இருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் கூறிக்கொண்டு: நானே கிறிஸ்து என்று கூறி அநேகரை ஏமாற்றுவார்கள். யுத்தங்களையும் யுத்தங்கள் பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காமல் எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் நிகழ வேண்டியவையாகும்; ஆனாலும் முடிவு உடனே வராது. மக்களுக்கு எதிராக மக்களும், தேசங்களுக்கு எதிராக தேசங்களும் கிளர்ந்து எழும்; பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் அழிவுகளின் ஆரம்பம். அப்பொழுது, உங்களை சித்திரவதைகளுக்கு உட்படுத்தி, உங்களைக் கொலையும் செய்வார்கள். என் நாமத்தின் நிமித்தம் நீங்கள் சகல மக்களாலும் வெறுக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் துன்பங்களை அனுபவித்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைத்துக் கொள்வார்கள். அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றி  அநேகரை ஏமாற்றுவார்கள். அக்கிரமம் மிகுதியாவதால், அநேகருடைய அன்பு குறைந்துவிடும். முடிவு வரை நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான். இராச்சியத்தின் இந்தச் சுவிசேஷம் பூவுலகமெங்கும் உள்ள சகல இனத்தவர்களுக்கும்  சாட்சியாகப் பிரசங்கிக்கப் படும். அப்போது தான் முடிவு வரும். மேலும், சரணாலயத்தில் மிகுந்த அருவருப்பைபற்றி தானியேல் என்ற தீர்க்கதரிசி சொல்லியிருப்பதைக் கேள்விப்படுவீர்கள். நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கும் போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே உள்ள எதைஎனும் எடுப்பதற்கு கீழே இறங்கி வராது இருக்கக்கடவான். வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் மீண்டும் திரும்பி வாராதிருக்கக் கடவான். அந்நாட்களிலே கர்ப்பிணிப் பெண்களும்  பால்கொடுக்கிற தாய்மாருக்கும் ஐயோ கேடு. நீங்கள் தப்பி ஓடுவது மாரிகாலத்திலோ அல்லது ஓய்வுநாளிலோ நடக்காமல் இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகம் படைக்கப்பட்டது முதல் இதுவரைக்கும் நடந்திராததும் இனிமேலும் நடக்காததுமான மிகுந்த தொல்லைகள் அப்பொழுது உண்டாகும். அந்நாட்கள் குறைக்கப்படாது என்பதால், ஒருவனும் தப்பித்துப் போக முடிவதில்லை; தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கோ  அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவரேனும் சொன்னால் நம்பாதீர்கள். ஏனெனில், அந்துக்கிறிஸ்தவர்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் தோன்றி, இயலுமானால், தெரிந்துகொள்ளப் பட்டவர்களையும் ஏமாற்றுவதற்காக பெரிய அடையாளங்களைக் காட்டியும் அற்புதங்களையும் நிகழ்த்துவார்கள். இதோ, முன்னதாகவே  உங்களுக்கு அறிவிக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் அங்கே புறப்பட்டுப் போக வேண்டாம்; இதோ, வீட்டிற்குள், அறையினுள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்ப வேண்டாம். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குத் திசை வரை பிரகாசிப்பது போல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும். பிணம் எங்கே கிடக்கிறதோ அங்கே கழுகுகள் வந்து கூடும். அந்நாட்களின் உபத்திரவங்கள் முடிந்தவுடனே, சூரியன் மறைந்து இருள் தோன்றும். நிலவு ஒளிராதிருக்கும். நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானத்தின் சட்டங்கள் அசைவுறும். அப்பொழுது, மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் தோன்றும். அப்பொழுது,மனிதகுமாரன் சர்வ வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும், மாட்சிமையோடும் வானத்தின் மேகங்களின் நடுவே வருவதை பூமியிலுள்ள சகல இனத்தவரும் கண்டு ஆர்ப்பரிப்பார்கள். சத்தமாய் முழங்கும் குழலின் ஒலியோடு அவர் தனது தூதர்களை முதலில் அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப் பட்ட மக்களை வானத்தின் ஒரு முனையில் இருந்து, மறுமுனைவரை, நான்கு  திசைகளிலுமிருந்தும் ஒன்றுசேர்ப்பார்கள்.[70] கிறிஸ்தவர்களுக்கு அப்பத்து நடக்கும் இந்த விடயங்கள் புதியவையோ அல்லது சடுதியாக நடப்பவை அல்ல. குற்றம் அற்றவர்கள், சட்டத்தினாலும், உண்மையான மதத்தின் மீது கொண்ட பயத்தினாலும் எப்போதும் கடவுளுக்கு தம்மை அர்ப்பணிக்கும் நல்லவர்கள் நீதியுள்ளவர்கள் என்பதால், எப்போதும் துன்பங்கள், அதனால் ஏற்படும் காயங்கள், மற்றும் தாக்குதல் தாரிகளின் கடுமையான மற்றும் பன்மடங்கான தாக்குதல் ஆகியவற்றிற்கு முகம் கொடுத்து, ஒரு குறுகிய பாதையில் நடந்து செல்கிறார்கள். இவ்வாறு, உலகத்தின் ஆரம்பத்தில், தன் சகோதரனால் கொல்லப்பட்ட நீதியாளன் தான் ஆபேல். யாக்கோப் நாடுகடத்தப்பட்டார், யோசேப்பு விற்கப்பட்டார், சவுல் என்ற அரசன் இரக்கமுள்ள தாவீதைத் துன்புறுத்தினான், ஆகாப் என்ற அரசன் எலியாவைத் துன்பத்துக்கு ஆளாக்க முயன்றான். அப்படியெல்லாம் இருந்தும், அவர் தொடர்ந்து கடவுளின் மகிமையை அறிவித்தபடியே இருந்தார். ஆலயத்துக்கும், ஆலய பலிபீடத்திற்கும் இடையில் சகரியா கொல்லப்பட்டார். அங்கே கடவுளுக்கு பலி ஒப்புக்கொடுப்பதில் மிகவும் பழக்கப்பட்டவராக இருந்த அவரே, அங்கு பலிப்பொருளாகி விட்டார். முடிவில் நேர்மையான வேதசாட்சிகள் பெரும்பாலும் மக்களால் கொண்டாடப் படுகின்றனர். விசுவாசம் மற்றும் நல்லொழுக்கம் பற்றிய பல எடுத்துக்காட்டுகள் பிற்கால தலைமுறைகளுக்கு கையளிக்கப்படுகின்றன. அன்பினால் பிணைக்கப்பட்ட, விசுவாசத்தில் உறுதியாக இருந்த, தங்களது நற்பண்புகளில் மேலோங்கியிருந்த, விடா முயற்சியுள்ள, ஒரே வயதையொத்த மூன்று இளைஞர்கள் அனனியாஸ், அஸரியா, மிஷாயேல். அவர்களைத் துன்பங்களுக்கு ஆளாக்கிய தீப்பிழம்புகள் மற்றும் அளிக்கப்பட தண்டனைகளைப்பார்க்கிலும் அந்த இளைஞர்கள் வலிமையானவர்களாக இருந்தனர். அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வோம் என்றும், கடவுள் மட்டுமே அறிந்திருக்கிறோம் என்றும், அவரை மாத்திரமே வணங்குவோம் என்ற தொனியில் இவ்வாறு சொன்னார்கள்: அவர்கள் நேபுகாத்நேச்சர் என்ற மன்னனை நோக்கி: “நேபுகாத்நேச்சரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் இறைவன் எங்களைக் காப்பாற்ற வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற தீச்சுவாலையில் இருந்தும் அரசனாகிய உமது கைகளில் இருந்தும் எம்மை விடுவிப்பார். அப்படியே விடுவிக்காமல் போனாலும், நாங்கள் உம்முடைய தெய்வ சிலைகளுக்கு ஆராதனை செய்யப் போவதில்லை. நீர் காட்டும் பொற்சிலைகளை வணங்கப்போவதுமில்லை என்று அரசனாகிய நீர் விளங்கிக் கொள்ளும் என்றார்கள்.”[71] கடவுளால் புனிதப்படுத்தப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட தானியேல், “வானத்தையும் பூமியையும் படைத்த என் தேவனாகிய கர்த்தரைத் தவிர, வேறு எவரையும் நான் வணங்குவதில்லை”[72] என்றார். தோபியஸ், அரசகுடும்ப மற்றும் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டு இருந்தபோதும், சுதந்திரமான மனதோடும் முழு ஆன்மாவோடும், கடவுளுக்குத் தன்னை வெளிப்படுத்தினார். இறைவனுடைய தெய்வீக சக்தியையும் மகிமையையும் அவர் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: “நான் சிறைபிற்படுத்தப்பட்ட தேசத்தில் இருந்தும் கூட அவரைப் புகழ்வேன். பாவங்கள் நிறைந்த ஒரு தேசத்திலும் அவருடைய சக்தியை நான் நிரூபிப்பேன்.”[73] மக்கபீயர்களின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ஏழு சகோதரர்களும், பிறப்பாலும், குணத்தாலும், நல்லொழுக்கத்திலும் சமமாக இருந்தவர்கள். ஒரு முழுமையான திருவிருந்து சடங்கின் நிறைவில், அவர்களின் நினைவாக ஏழு எண்களைக் கொண்டது என்று பொருள்படுமா? இவ்வாறு, ஏழு சகோதரர்களும் தங்கள் தேர்ந்தெடுத்த வேதசாட்சியங்களில் ஒன்றிணைந்து காணப்பட்டனர். தெய்வீகத் திட்டத்தின் முதல் ஏழு நாட்களில் ஏழாயிரம் ஆண்டுகள் அடங்கியதைப் போலவே, ஏழு ஆவிகள் மற்றும் ஏழு தேவ தூதர்கள் கடவுளுக்கு முன்பாக அடிக்கடி வெளிப்பட்டு, சாட்சிக் கூடாரத்தில் ஏற்றப்பட்ட ஏழு கிளைகளைக் கொண்ட விளக்குத் தண்டு, புனித அருள் வெளிப்பாட்டில் உள்ள ஏழு தங்க மெழுகுவர்த்திகள் மற்றும் சொலோமனில் உள்ள ஏழு நெடுவரிசைத் தூண்கள், இவற்றின் மீது தான் ஞானம் தனது அத்திவாரத்தை இட்டுள்ளது. ஆகவே இங்கு ஏழு சகோதரர்களின் எண்ணிக்கையானது, ஏழு தேவாலயங்களின் எண்ணிக்கையைத் தழுவுகிறது, இராஜாக்களின் முதல் புத்தகத்தில் வாசித்தபடி, மலட்டுப் பெண் ஏழு பிள்ளைகளை பெற்றாள். ஏசாயா புத்தகத்தில், ஏழு பெண்கள் ஒரு மனிதனைப் பிடித்து, அவருடைய பெயரைக் தமக்குக் கொடுக்கும்படி கேட்டார்கள். இந்த அரசியலமைப்பு மற்றும் திட்டவட்டமான எண்ணிக்கையில் அக்கறை கொண்டு, ஏழு சபைகளுக்கும் அப்போஸ்தலரான புனித பவுல் எழுதியுள்ளார். வெளிப்படுத்துதல் புத்தகத்தில், கர்த்தர் தனது தெய்வீக கட்டளைகளையும் பரலோக கட்டளைகளையும் ஏழு தேவாலயங்களுக்கும் அவற்றின் தேவதூதர்களுக்கும் அனுப்பியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண் இப்போது சகோதரர்களிடம் காணப்படுகிறது, இது ஒரு சட்டபூர்வமான ஒழுங்குடன் நிறைவு நிறைவேற்றப்பட வேண்டும். ஏழு குழந்தைகளும் தாயுடன்[74] தெளிவாக இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தோற்றம் மற்றும் மூலம், பின்னர் ஏழு தேவாலயங்களுக்கும் தலைமை தங்கியது. ஒரு பாறையின் மீது இறைவனின் குரலால் நிறுவப்பட்ட முதலாவதும், தனித்துவமானதுமாக இந்தச் சபை விளங்குகிறது. சோதனைகள் வரும்போது மட்டும் தான் தாய் தனது குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. வேதசாட்சிகள் தங்கள் துன்பங்களின் போது, தங்களை கடவுளின் மக்கள் என்று சாட்சியமளிக்கிறார்கள். அதாவது அவர்கள் கடவுளைத் தவிர வேறு யாரையும் தமது தந்தையாக கருதுவதில்லை. நற்செய்தியில் கர்த்தர் எம்மைத் தெளிவூட்டும் வகையில் இவ்வாறு சிலாகிக்கிறார்: “பூவுலகில் உள்ள ஒருவரையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்கு என்றும் பிதாவாயிருக்கிறார்.”[75] அவர்கள் என்ன விதமான ஒப்புதல்களை பிரகடனங்களாக முன்வைத்துள்ளனர்! விசுவாசத்தின் எவ்வளவு புகழ்பெற்ற மற்றும் எவ்வளவு பெரிய சான்றுகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்! கொடுங்கோல் மன்னன் அந்தியோகஸ், அதாவது, அந்துக்கிறீஸ்து என்று கருதப்பட்டவன், அந்தியோகஸ் என்ற தேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியவன், வேதசாட்சிகளின் வாய்களை மாசுபடுத்த முயன்றான். புகழ்பெற்ற மற்றும் வெல்லமுடியாத மனதை, பன்றியின் மாமிசத்தைக் கொண்டு சிதைக்க முயன்றான். அவன் அவர்களை தடிகளாலும், பொல்லுகளாலும் கடுமையாக தாக்கிய பிறகும், அவர்களை எந்த வகையிலும் மாற்ற முடியாததால், அவர்களுக்குத் தண்டனை அளிக்கும் முகமாக, இரும்பை வெண்தணலில் இட்டு சூடேற்ற  உத்தரவிட்டான். பழுக்கக் காய்ச்சிய இரும்பை ​​எடுக்கப் பண்ணி, முதலில் பேசிய, அதாவது, தனது நற்பண்பு மற்றும் விசுவாசத்தின் உறுதியால் அரசனின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டவனை முதலில் சுட்டு எரிக்கப்படும்படி கட்டளையிட்டான். கடவுள் பற்றிப் பேசிய நாக்கை வெளியே இழுத்து அறுத்த பின்பு தான் அடுத்த தண்டனையை நிறைவேற்றும்படி கட்டளை இடப்பட்டது. இவ்வாறான சித்திரவதைகள், மிகவும் புகழ்பெற்ற முறையில் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த வேதசாட்சிகளுக்கு நேர்ந்தது. ஏனென்றால், முதலில் கடவுளிடம் செல்ல வேண்டும் எண்டு கூறியதும், அதன் மூலம்  கடவுளின் பெயரை உச்சரித்த அந்த நாக்குதான் என்பதாலேயே அதை அறுத்தெறிய உத்தரவிடப்பட்டது. இரண்டாம் கட்டமாக, இன்னும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. அதிலே, மற்றவர்களை சித்திரவதை செய்வதற்கு முன்பு, அவர்களது தலையில் உள்ள முடிகளோடு சேர்த்து, தலையின் மேலுள்ள தோலும் உரித்தெடுக்கப்பட்டது. மனதில் கொண்டுள்ள கொடிய வன்மத்தோடும், இந்தக் கொடூரங்களை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற ஆற்றாமையுடனேயே இவை நடந்தேறின. ஏனென்றால் மனிதரின் தலை கிறிஸ்துவாகவும், கிறிஸ்துவானவரின் தலை சர்வ வல்லமையுள்ள சர்வேசுரனாகவும் இருக்கிறது. வேதசாட்சியின் தலையைத் துண்டிப்பவர், கடவுளினதும், கிறிஸ்துவினதும் தலைகளை துண்டிப்பவர்க்கு சமமாகிறார். ஆனால், வேத சாட்சியத்தில் நம்பிக்கை கொண்டு, கடவுள் உறுதியளித்த உயிர்த்தெழுதலின் பலனை பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்: “தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், “நீ ஒரு முட்டாள். நீ எங்களை இவ்வுலக  வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக இரட்சகரான இறை அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; எனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே,” என்று கூறினார்.[76] மூன்றாமவர், கொண்டு வரும்படி கட்டளையிடப்பட்டபோது, ​​அவர் உடனடியாக தனது நாக்கை வெளியே நீட்டினார். ஏனெனில், அந்தப் பொழுதில் அவர் தனது நாக்கை வெட்டுவதற்கான தண்டனையை எவ்வாறு கண்டனம் செய்வது என்று தனது சகோதரரிடமிருந்து கற்றுக்கொண்டார். கர்த்தருடைய துன்பத்தைப் பின்பற்றுவதே அவருடைய கடமையாக இருந்ததால், இந்த வகையான தண்டனையைப் பெறுவதில் அவர் மகிழ்ச்சியடைந்தார். துண்டிக்க முனைந்தபோது, அவர் தாமாகவே தனது கைகளை நீட்டினார். நான்காமவர், இதேபோன்ற குணாதிசயங்களுடன் கூடியவர், சித்திரவதையை கண்டித்து, அரசனை எதிர்கொள்ள, தெய்வீகக் குரலில் இவ்வாறு பதிலளித்தார்: “மனிதர்களின் கைகளில் இறப்பது எங்களுக்கு நல்லது தான். ஆனால் நாம் உயிர்த்தெழுப்பப்படுவோம் என்ற கடவுளின் வாக்குறுதியை நம்புகிறோம். ஆனால் உங்களுக்கு உயிர்த்தெழுதல் என்று எதுவும் இல்லை. புதிய வாழ்க்கை என்ற ஒன்றும் இல்லை.”[77] ஐந்தாமவர், தனது விசுவாசத்தின் சக்தியால் துவம்சம் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், கடுமையான மற்றும் மாறுபட்ட துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுக்க கட்டளை பிறப்பிக்கப்பட்ட போது, ​​கடவுளின் கோபமும், அவரது பழிவாங்கும் நடவடிக்கைகளும் விரைவாக உம்மேல் வரும் என்று அரசனை நோக்கி தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர் இவ்வாறு கூறினார்: அவர் மன்னனைப் பார்த்து, “நீ அழிந்து போகக்கூடியவன். இருந்தும், மனிதர்மேல் உனக்கு அதிகாரம் இருப்பதால் நீ விரும்பியதைச் செய்கிறாய். ஆனால் கடவுள் எங்கள் இனத்தைக் கைவிட்டுவிட்டார் என்று மட்டும் எண்ணாதே. அவரின் மாபெரும் ஆற்றல் உன்னையும் உன்  வழிமரபினரையும் எவ்வாறு வதைக்கப்போகிறது என்பதை நீ விரைவில் காண்பாய்”[78] என்றார். வேதசாட்சிகளுக்கு இதனால் என்ன ஒரு நிம்மதி! அவர் துன்பப்படுவதைப் பொருட்படுத்தாமல், அவரைத் துன்புறுத்துபவர்களின் தண்டனையை முன்னறிவிப்பது எவ்வளவு ஆறுதலளிக்கிறது! ஆனால் ஆறாமாவர் கொண்டு வரப்பட்டபோது, ​​நல்லொழுக்கம் மட்டுமல்ல, அவரது தாழ்மையும் வெளிப்படுத்தப்பட வேண்டியிருந்தது. வேதசாட்சியான அவர், தன்னைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர்களின் திமிர்பிடித்த வார்த்தைகளுக்குப் பதிலாக, தனது மரியாதை இழக்க அவர் விரும்பவில்லை. மாறாக, தனது சொந்த பாவங்களால் தான் அரசன் தன்னைத் துன்புறுத்தியதாக அவர் குற்றம் சுமத்தினார். ஆனால் பின்னர், அவர் பழிவாங்கப்பட்டமைக்காக கடவுளைக் குற்றம் கூறினார். வேதசாட்சிகள் தாழ்மையானவர்கள் என்றும், தங்களைத் தாங்களே தண்டனைக்கு உட்படுத்துவதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாகவும், அவர்கள் தங்கள் சொந்த உடைமைகளைப் பற்றி தற்பெருமை கொள்ளாதவர்களாகவும் இருப்பர் என்றும் அவர் கற்பித்தார். அதையிட்டு அவர் இவ்வாறு கூறுகிறார்: அவருக்குப்பின் ஆறாமவரைக் கூட்டிவந்தார்கள். அவரும் உயிர்பிரியும் வேளையில், “வீணாக நீ ஏமாந்து போகாதே; ஏனெனில் எங்கள் பொருட்டும், எங்கள் கடவுளுக்கு நாங்கள் செய்துள்ள பாவங்களின் பொருட்டும் இவ்வாறு துன்பப்படுகிறோம். ஆகவேதான் இத்தகைய வியத்தகு செயல்கள் எங்களுக்கு நிகழ்ந்துள்ளன. ஆனால் கடவுளுக்கு எதிராகப் போராடத் துணிந்த நீ தண்டனைக்குத் தப்பலாம் என்று மட்டும் எண்ணாதே”[79] என்று கூறினார். அவர்களுடைய தாயும் போற்றத்தக்கவள், அவளது பாலுணர்வால் அவள் எவ்விதத்திலும் பலவீனமடையவில்லை, கணவனின் மரணத்திற்குப் பிறகு வயதான அவள் சளைக்கவில்லை. இறக்கும் குழந்தைகளை அவள் மகிழ்ச்சியுடன் பார்த்தாள், குழந்தைகள் தண்டிக்கப்படுவதைப் பார்க்காமல், பதிலாக, அவர்களின் மகிமையை மட்டுமே பார்த்தாள். அவளுடைய மகன்மார் தமது உடல் அவயவங்களில் ஏற்பட்ட  வேதனையையும் துன்பத்தையும் சகித்தபோது, ​​அவள் கண்களால் கடவுளுக்கு ஒரு மகத்தான வேதசாட்சியத்தை ஒப்புவித்தாள். ஆறு பேர் தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், சகோதரர்களில் ஒருவர் உயிர் பிழைத்தார், அவருக்கு செல்வம் அதிகாரம் போன்ற பலவற்றையும் அவர் உறுதியளித்தார். குறைந்தது ஒருவரையாவது அடக்கியாளுதல் மூலம் அவரது கொடுமை மற்றும் கடுமையான தன்மை சாதகமாக இருக்கக்கூடும் என்று எண்ணினார். தாய் தனது மகனிடம் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கெஞ்சும்படி கேட்கிறாள். சட்டத்தையும் கடவுளையும் நினைவூட்டுவதாக அவள் அவ்வாறு செய்தாள். மேலும், தனது குழந்தைகளை கொஞ்சமாக அல்ல, மிகவும் நேசித்த தாயாக அவள் அதைச் செய்தாள். கடவுளை அறிவிக்கும்படி அவள் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். புகழ் மற்றும் மகிமை போன்ற காரணங்களால் சகோதரர் ஏனைய சகோதரர்களிடமிருந்து பிரிக்கப்படக் கூடாது என்று அவள் மன்றாடினாள். தன்னை ஏழு மகன்மாரின் தாயாக எண்ணி, ஏழு மகன்மாரையும் கடவுளுக்காகவே அன்றி, உலகத்திற்காக அல்ல என்று கூறினாள். ஆகவே, சக்திமயப்படுத்தி, தனது மக்கள் மீண்டும் தன வயிற்றில் பிறக்க வேண்டும் என்று அவள் பெருமை கொண்டவளாக இவ்வாறு கூறினாள்: அந்தக் கொடுங்கோலனை ஏளனம் செய்தவளாக, அவள் தம் மகன் பக்கம் திரும்பி, குனிந்தவாறு தன் தாய்மொழியில், “மகனே, என்மீது இரக்கங்கொள். ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்; மூன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயது வரை உன்னைப் பேணிக் காத்துவந்துள்ளேன். குழந்தாய், உன்னை நான் வேண்டுவது என்னவென்றால்; விண்ணையும் மண்ணையும் ஏறெடுத்துப் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்துகொள்வாயாக. இக் கொலைகாரனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும் படி இப்போது மரணத்தை ஏற்றுக்கொள்”[80] என்று சொல்லி ஊக்கமூட்டினாள். ஒழுக்கநெறிகளைப் பொறுத்தவரை அந்தத் தாய் மிக உயர்ந்த புகழைப் பெற்றார். ஆனால் அதற்கும் மேலாக, அவள் இறைவன் மீது காட்டிய பயமும் விசுவாசமும் உண்மையை விட அதிகமாக இருந்தது. ஏனென்றால், ஆறு பேரின் தியாகம் மற்றும் வேதசாட்சியங்களுக்கு கௌரவத்தை பிரதி உபகாரமாக அவள் தன்னிடமிருந்தோ அல்லது மகனிடமிருந்தோ எதையும் கேட்கவில்லை. சகோதரர்களின் செபங்களை நிராகரிக்கும் ஒருவரின் மீட்பு நிறைவேறக் கூடியதல்ல என்றும் அவள் நம்பினாள். அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் துன்பங்களில் ஒரு பங்காளியாக இருக்கும்படி அவர்களை ஊக்குவித்தாள். அவ்வாறு செய்வதன் மூலம், அவன் நடுத்தீர்வை நாளில் தனது சகோதரர்களுடன் காணப்படுவான். அதற்குப்பின், தாயும் தன் மக்களுடன்  இறந்து போனாள்; ஏனென்றால், அவள் பெற்றெடுத்த பிள்ளைகளோடு வேதசாட்சியத்தில் ஒன்றிணைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. அவ்வாறு செய்வதனூடாக, ​​தனக்கு முன்பாக கடவுளிடம் சென்றவர்களை அவள் பின்தொடர வேண்டும் என்பதற்காக. மேலும், ஒருவரை ஏமாற்றுவதற்காக எதோ ஒரு உத்தரவாதமோ அல்லது ஏதேனும் அத்தாட்சி முன்வைக்கப் படும்போது, ​​அவர் ஏமாற்றுபவர்களின் தீய நோக்கத்தை கண்டு ஏமாந்துவிடக்கூடாது, அந்த வகையில் எலியாசர் என்பவரை மறவாது நினைவுகூர வேண்டும். இந்த மனிதன், அரசனின் ஊழியர்களால் ஊண் உண்ண வாய்ப்பு வழங்கப்பட்ட போது, ​​அவனுக்கு அதை உண்ணத் தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால், அரசரைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தபோது, ​​அவனுக்குக் கொடுக்கப்பட்ட உணவு பிரசாதங்கள் என்றும், மற்றும் தடைசெய்யப்பட்ட உணவு என்றும்  பொய்யாகக் கூறி, அவர் இந்த மோசடிக்கு உடன்பட மறுத்துவிட்டார். அவர் தான் அளித்த வாக்குமூலம் சித்திரவதை மூலம் பெறப்பட்டது என்றும், அவரது ஒப்புதல் வாக்குமூலம் சித்திரவதை மூலம் பெறப்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார். தொண்ணூறு வயதாக இருந்த எலியாசார் கடவுளுடைய சட்டத்தை கைவிட்டு, அதைக் காட்டிக் கொடுத்தபின் அந்நியர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றத் தொடங்கினார் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆகவே,கடவுளை புண்படுத்துதல், மற்றும் நித்திய தண்டனை போன்றவற்றுக்காக இந்த வாழ்க்கையின் மிகச் சிறிய, தற்காலிகமான வேதனைகளைப் பகிர்ந்து கொள்வதில் எவ்வித பலனுமில்லை. ஆகவே, நீண்ட கால சித்திரவதைகளுக்குப் பிறகு, அவர் இப்போது தனது வாழ்க்கையின் முடிவை நெருங்குகிறார். சித்திரவதை மற்றும் கொடூரத் தண்டனைகளால் இறக்கும் போது, ​​அவர் பெருமூச்சுவிட்டு இவ்வாறு கூறுகிறார்: அடிபட்டதால் இறக்கும் தறுவாயில் இருந்தபோது அவர் அழுது புலம்பி, “நான் சாவினின்று விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், தண்டனையால் என் உடலில் ஏற்பட்ட கொடிய துன்பங்களைத் தாங்கிக் கொள்கிறேன்; ஆண்டவருக்கு நான் அஞ்சுவதால் என் உள்ளத்தில் மகிழ்ச்சியோடு இவற்றை ஏற்றுக்கொள்கிறேன்; ஆண்டவர் தம் தூய ஞானத்தால் இவற்றையெல்லாம் அறிகிறார்”[81] என்றார். உண்மையில், அது ஒரு நேர்மையான, வலிமையான, அமைதியான, பரிசுத்தமான விசுவாசம் தானே ஒழிய, அந்தியோக்கியா அரசனைப் பற்றியது அல்ல. ஆனால்  நம்முடைய மனசாட்சியின் நீதிபதியாகிய கடவுளைக் கேலி செய்தல் ஆகாது. அவரைப் போற்றுதல் ஒரு நல்ல மற்றும் தூய்மையான நல்லொழுக்கமாகும். இரட்சிக்கப்படுவதற்காக மக்களை ஏமாற்றுவதன் மூலம் எவரும் பயனடைய முடியாது என்பதை உணர்ந்து கொள்வது உண்மையான நம்பிக்கை மற்றும் நல்லொழுக்கத்தின் மகத்துவமாகும். ஆகவே, நாமும் அதே போன்ற பாதையை பின்பற்றினால், தெய்வபக்தியுடனும் தூய்மையாகவும் வாழலாம். அதாவது, பண்டைய மற்றும் புனிதமான, நீதியுள்ள, இதேபோல் நிரூபிக்கப்பட்ட தண்டனைகளின் ஊடாகவே நாம் பயணிக்கிறோம். அதே வகையான துன்பத்தின் சான்றுகளினூடாக பயணிப்போம். இதன் மூலம் நம் காலத்தின் மகிமை பெரிதாக இருப்பதைக் கருத்தில் கொள்வோம். உங்கள் எடுத்துக்காட்டுகள் கணக்கிடப் படுகின்றன. ஏனெனில் பிற்காலத்தின் அதன் தரமும் விசுவாசமும் நிறைவாக உள்ளபடியால், இது பற்றி வெளிப் படுத்துதலில் இவ்வாறு சாட்சியம் கூறப்பட்டுள்ளது: இவைகளுக்குப் பின், நான் பார்த்தபோது, இதோ, சகல இனங்களிலும் கோத்திரங்களிலும், மக்கள் மத்தியிலும், பாஷை பேசுவோரிடமிருந்தும் ஒருவனும் எண்ண முடியாத அளவுக்கு திரளான கூட்டமான மக்கள்,  வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளை  ஏந்தி, சிம்மாசனத்திற்கு முன்பாகவும் செம்மறிப்பிருவையானவருக்கு  முன்பாகவும் நிற்பதைக் கண்டேன். அவர்கள் உரத்த குரலில்: இரட்சிப்பின் சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் செம்மறிப்பிருவையானவருக்கும் மகிமை உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். அப்போது, வயதானவர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த கஷ்டங்களில் இருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை செம்மறிப் பிருவையானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிம்மாசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைத்  துதிக்கிறார்கள்; சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே ஒன்றித்திருப்பார்.[82] ஆனால், கிறிஸ்தவ வேதசாட்சிகளின் கூட்டமானது, மிகச் சிறந்ததாகவும், மிகப்பெரியதாகவும் காணப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால், வேதசாட்சிகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது என்பதை அவர் அறிந்துகொள்ளும் போது, வேதசாட்சியாக மாறுவது கடினம் என்றோ கஷ்டங்கள் நிறைந்தது என்றோ ஒருவரும் நினைத்தலாகாது.

XII. இக்காலத்தில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் துன்பங்களுக்குப் பின்  நீதிமான்கள் மற்றும் வேதசாட்சிகளின் விசுவாசமும் அதற்கான வெகுமதியும் எவ்வாறாக அமையப்போகின்றன?

பரிசுத்த ஆவியானவர் சொலமன் மூலம் இதை எடுத்துரைத்து அதை இவ்வாறு: முன்னறிவிக்கிறார்: “அவர்கள் மனிதர்களுக்கு முன்பாக துன்புறுத்தப்பட்டாலும், அவர்களின் விசுவாசம் அழிவதில்லை. நடைபெற்ற பல நிகழ்வுகளில் சிலவற்றில் மட்டுமே அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் நிமித்தம், அவர்களுக்கு அதீத வெகுமதிகள் கிடைக்கும். ஏனென்றால், கடவுள் அவர்களைச் சோதித்தார். அவர்களும் அவருக்குத்  தகுதியானவர்கள் என்பதை அறிந்து கொண்டார்கள். உலையில் இடப்பட்டு தங்கம் புடம் போடப்படுவதைப் போல அவர் உறுதிசெய்து நிரூபித்துள்ளார். அவர் ஒரு படுகொலைக்கு பலியான அவர், அவற்றைக்க கர்த்தரிடமிருந்தே பெற்றார். ஏனெனில் காலப்போக்கில், அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அவர்கள் தேசங்களைத் தீர்ப்புக்குள்ளாக்குவார்கள். மக்களை ஆட்சி செய்வார்கள். அவர்களுடைய இறைவன் என்றென்றும் ஆட்சி செய்பவராக இருக்கிறார்.”[83] அதே புத்தகம் நமது குற்றமற்ற இயல்புகளைப்பற்றி விவரிக்கிறது. நம்மைத் துன்புறுத்தி, சித்திரவதை செய்தோர் மனந்திரும்புதல் பற்றியும் நமக்குக் கூறப்படுகிறது. அவர் இவ்வாறு சொல்கிறார்: அப்பொழுது நீதிமான்கள் தங்களைத் துன்புறுத்தியோர் முன்னேயும், தங்கள் பாடுகளை பொருட் படுத்தாதோர் முன்னேயும் துணிவோடு எழுந்து நிற்பார்கள். இறை பற்றில்லாதவர்கள் அவர்களைக் கண்டு மிகவும் அச்சம் கொண்டு நடுங்குவார்கள்: எதிர்பாராத வகையில் அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றி அதிர்ச்சி அடைவார்கள். அவர்கள் மனம் வருந்தி, ஒருவரோடு ஒருவர் உரையாடுவார்கள்: மிகுந்த மன வேதனையுடன் பெருமூச்சு விட்டுப் பின்வருமாறு சொல்வார்கள்: ‘இவர்களைத்தானே நாம் முன்பு மிகுந்த கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக்கினோம்: வசைபாதித்த திரிந்தோம். நாம் அறிவிலிகள், அவர்களது வாழ்க்கை முதிர்ச்சியற்றது என்று எண்ணினோம்: அவர்களது முடிவு இழிவானது என்று கருதினோம். கடவுளின் மக்களாக அவர்கள் எவ்வாறு கணக்கிடப்பட்டார்கள்? தூயவர்கள் மத்தியில் அவர்களுக்கு எவ்வாறு அவர்களின் பங்கு கிடைத்தது? ஆகவே, நாம் தான் உண்மையின் வழியிலிருந்து தவறிவிட்டோம். நீதியின் ஒளி நம்மீது படரவில்லை: கதிரவனின் பிரகாசம் நம்மீது விழவில்லை. நெறியற்ற, அழிவு நிறைந்த பாதையில்  நாம் மனமுவந்து பயணித்தோம்: ஆண்டவரின் வழியை  அறிந்திராதவர்களாய் பாதைகள் இல்லாத பாலைவனங்களில் பயணித்தோம்: இறுமாப்பால் நமக்குக் கிடைத்த பயன் தான் என்ன? செல்வச் செருக்கால் நமக்கு விளைந்த நன்மைகள் தான் என்ன? இவை அனைத்தும் நிழல்போலக் கடந்துபோயின: புயலைப் போல விரைந்து கடந்து சென்று மறைந்தன.[84] துன்பத்தின் விலை மற்றும் அதன் விளைவுகள் பற்றி சங்கீதம் 116 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பின்வருமாறு: “கர்த்தருடைய மற்றும் பரிசுத்தவான்களின் மரணம் பிதாவாகிய சர்வேசுரனின் பார்வையில் விலைமதிப்பற்றதாகப் கருதப்படுகிறது.”[85] அதேபோல், 125-ஆம் சங்கீதம், மோதலில் சோகத்தையும், அவற்றின்  விளைவுகளின் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தப் படுகின்றது. அவை  பின்வருமாறு: அவர்கள் விதைகளை நடுவதற்கு வெளிய சென்ற போது, அழுதார்கள். ஆனால், இப்போது கொண்டாடுகிறார்கள், ஏனெனில் அவர்கள் பயிர்களை அறுவடை செய்து கொண்டு வருகிறார்கள்.[86] மீண்டும் சங்கீதம் 119 இல்: கர்த்தருடைய கட்டளைப்படி நடக்கும் உத்தம வழிபாட்டாளர்கள் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் சிரமேற்கொண்டு, அவரை முழு மனதோடும் தேடுபவர்கள் பாக்கியவான்கள்.[87] அதேபோல், அவர் நம் துன்பங்களைக் கொடுத்து எம்மைத் தண்டிக்கிறார். அதேநேரம், நம்முடைய துன்பங்களில் எமக்கு பிரதிபலனையும் அருளுகிறார். நற்செய்திகளின் இறைவன் இவ்வாறு கூறுகிறார்: “நீதியின் நிமித்தம் துன்பத்தை அனுபவிப்பவர்கள் பாக்கியவான்கள்; பரலோக இராச்சியம் அவர்களுடையது.”[88] மீண்டும் இவ்வாறு காட்டப்பட்டுள்ளது: “மனித குமாரனின் நிமித்தம் மக்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் ஒதுக்கிவைத்து, உங்களை நிந்தித்து, உங்கள் நற்பெயரைக் கொச்சைப்படுத்தும் போது, நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். அந்நாளிலே நீங்கள் மிக்க மகிழ்ச்சியோடு இருங்கள்; விண்ணுலகத்தில் உங்களுக்கான பலன் அளப்பரியதாக இருக்கும்.”[89] மீண்டும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “தனது வாழ்வை காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்து விடுவான்; எனக்காகத் தன் வாழ்வை இழக்கிறவன் அதை காப்பாற்றிக்கொள்வான்.”[90] தெய்வீக உடன்படிக்கையின் காரணமாக ஏற்படும் விளைவுகள் துன்பப்பட்டவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் மட்டுமே உரியதல்ல. ஆனால், துன்பங்களை எதிர்கொள்வதில் உண்மையுள்ளவர்களாக இருக்க விரும்புவோரின் மத்தியிலும், துன்பங்களை எதிர்கொள்வதில் விசுவாசம் கொண்டு, நல்லவர்களாகவும், தோற்கடிக்கப்படாமலும் இருப்பவர்களையிட்டு கிறிஸ்து பெரிதும் உவகை கொள்வார். அதேபோல் அவருடைய எல்லா உடைமைகளையும் கைவிட்டு, எப்போதும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் குறித்து அவரே உறுதியளித்து இவ்வாறு கூறுகிறார்: “தேவனுடைய இராச்சியத்தை அடையும் முகமாக, ஒருவன் தனது  வீட்டையோ, பெற்றாரையோ, சகோதரரையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ விட்டுவிட்டு என்னைப் பின்தொடர்வானாகில்,  பூவுலக வாழ்வில், அதிகமானவற்றையும், விண்ணுலகத்தில் நித்திய வாழ்வையும்  அடைவது திண்ணம் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்,”[91] இதே காரணத்தைப்பற்றி, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் கடவுள் இவ்வாறு கூறுகிறார்: “நான் சிம்மாசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் அவர்கள் அமர்ந்தார்கள்; தீர்ப்பு இடும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சி கொடுத்தமைக்காகவும், தேவனுடைய வசனத்தின் காரணமாகவும் சிரச்சேதம் செய்யப் ப்பட்டவர்களுடைய ஆன்மாக்களையும், மிருகத்தையோ அல்லது அதன் உருவத்தையோ வணங்காமலும், தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அவற்றின் முத்திரையைத் இட்டுக் கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடன் ஆயிரம் வருடகாலம் ஆட்சி செய்தனர்.”[92] கொல்லப் பட்டவர்கள் மட்டுமல்ல, அவர் மேல் கொண்ட விசுவாசத்தில் உறுதியும், கடவுளுக்கு அஞ்சும் எவரும், மிருகத்தின் உருவங்கள் போன்றவற்றை வணங்காதவர்களும், அவைகளின் கொடிய பலியிடும் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாதவர்களும், கிறிஸ்துவோடு வாழ்ந்து அவருடன் சதாகாலத்துக்கும் ஆட்சி செய்வார்கள் என்று அவர் கூறுகிறார்.

XIII. இந்த உலகில், நாம் சகித்துக்கொள்ள வேண்டிய துன்பங்களுக்கெல்லாம் பிரதியுபகாரமாக, நாம் மிகப் பாரிய வெகுமதிகளைப் பெறுவோம்.

அப்போஸ்தலரான புனித பவுல் இதை உறுதிப்படுத்துகிறார். அவர் தெய்வீக சித்தத்திற்கு அமைய, மூன்றாவது மோட்சத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டபோது கூட, ​​அவர் தனது சொந்த வாயிலிருந்து சொல்ல முடியாத வார்த்தைகளை எல்லாம் செவிமடுத்ததாக சாட்சியம் அளித்தார். கண்களால் பார்த்து அந்த விசுவாசத்தின் ஊடாக அவர் இயேசுக் கிறிஸ்துவைக் கண்டதாக அறிவிக்கிறார். அவர் உன்னதமான மனதோடு உண்மையை நன்றாகக் கற்றுக் கொண்டு தான் அந்தக் காட்சியைக் கண்டார். அவர் அதையிட்டு இவ்வாறு கூறுகிறார்: “இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள், எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்.”[93] அப்படியானால், கடவுளின் நண்பராக இருப்பதற்கும், கிறிஸ்துவுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் மகிழ்ந்து, களிகூர்வதற்கும், பூவுலகத்தில் அனுபவித்த பாடுகள் மற்றும் தண்டனைக்குப் பிறகு, மோட்சானந்த வெகுமதியைப் பெறுவதற்கும், அவ்வாறு மகிமையை பெறுவதற்கும் யார் தான் அயராது  பாடுபடாமல் இருப்பார்கள்? இந்த உலகத்தில் உள்ள படைவீரர்கள் தங்கள் எதிரிகளைத் தோற்கடித்த பின்னர் வெற்றிக்களிப்போடு தங்கள் தாய்நாட்டிற்கு திரும்புவது மகிமை வாய்ந்ததாக இருக்குமானால், சாத்தானைத் தோற்கடித்து, முன்னர் நம்மை வஞ்சித்த எதிரிகளை மண்டியிடச் செய்து, பாவியான ஆதாமிடமிருந்து பெறப்பட்ட வெற்றிக் கிண்ணத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். வெற்றிகரமாக மோட்சானந்தத்தைப் பெறுவதிலிருந்தும், மீண்டும் திரும்புவதிலிருந்தும் கிடைக்கும் மகிமை எவ்வளவு பெரியது, எத்தனை மகிமை வாய்ந்தது? மாசற்ற விசுவாசத்தோடும், அசைக்க முடியாத, உறுதியான பக்தியுடனும், கெளரவம் நிறைந்த புகழாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வெகுமதிகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய இறைவனைச் சந்திப்பது எவ்வளவு மகிமை வாய்ந்தது! அவர் தனது எதிரிகளைத் தண்டிக்கத் தொடங்கும் போது, ​​அவருடன் வருவதற்கும், தீர்ப்புக்காக அமர்ந்திருக்கும் போது அவருடைய பக்கத்திலேயே நிற்பதற்கும், கிறிஸ்துவுடன் ஒரு ஒன்றிணைந்த வாரிசாக இருக்கவும், தேவதூதர்களைப் போல, பிதாக்களுடன், அப்போஸ்தலர்களுடன் இருக்கவும் வேண்டும். தீர்க்கதரிசிகளுடன் மோட்ச இராச்சியத்தின் பேரானந்தத்தில் களிகூர்வது எவ்வளவு பெரியது, எத்தனை மகத்துவம் மிக்கது! இவ்வாறான எண்ணங்களில் ஏற்படக்கூடிய சோதனைகள் யாவை? அவற்றிலிருந்து மீள நாம் கையாளக்கூடிய வழிமுறைகள் யாவை? தெய்வீகத் தியானத்தை அடிப்படையாகக் கொண்ட, துணிச்சலான மற்றும் உறுதியான மனம் எல்லாவற்றையும் தாங்கி அவற்றை நிர்மூலமாக்கி விடுகிறது. மேலும் சாத்தானின் அனைத்து கொடிய சூழ்ச்சிகளும், உலகில் காணப்படும் அச்சுறுத்தல்களுக்கும் எதிராக ஆன்மா சளைக்காமல் நின்று துணிச்சலுடன் முகம்கொடுக்கிறது. அதே நேரத்தில், அது எதிர்காலத்தில் நம் விசுவாசத்தை பலப்படுத்தும். கஷ்டங்கள் போது தேசங்கள் தங்கள் எல்லைகளை மூடிவிடுகின்றன. ஆனால் விண்ணகத்தின் வாசலானது என்றுமே திறந்திருக்கும். அந்துக்கிறீஸ்துவாகத் தோன்றுவோர் அச்சுறுத்துத்தல் விடுப்பர். ஆனால் எம் உண்மையான கர்த்தரான இயேசுக்கிறிஸ்து எம்மைப் பாதுகாக்கிறார்; மரணம் என்பது நிச்சயம் வரும், ஆனால் அதற்குப் பின்னர் அழியாத வாழ்வு என ஒன்று நிச்சயம் இருக்கிறது; மரணிப்போரிடமிருந்து, உலக வாழ்க்கை பறிக்கப்படுகிறது, ஆனால் மீட்புக்கு உள்ளானோருக்கு விண்ணகம் காட்சியளிக்கிறது. நிலையற்ற வாழ்வு நிறுத்தப்பட்டு, முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் நித்திய வாழ்வு மலர்கிறது. ஆகவே தான், கஷ்டம், துன்பம் மற்றும் பலதரப்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில், மனோவலிமையுடன் முன்னோக்கிச் செல்லுதல் என்ன ஒரு கெளரவம், மற்றும் எவ்வளவு மேலான மகிழ்ச்சியை அது தருகிறது! மனிதர்களையும் உலகத்தையும் கண்ட அந்த கண்களை மூடிய மறு கணத்தில், கண்களைத் திறக்கும்போது எமது சர்வேசுரனையும், கர்த்தராகிய கிறிஸ்துவையும் காண்பது எவ்வளவு பெரிய மகிமை வாய்ந்தது! எவ்வளவு மேலான மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது? அத்தகைய ஓர்  விடைபெறுதலில் கிடைக்கும் மகிழ்ச்சி எவ்வளவு அற்புதமானது! நீங்கள் பரலோக இராச்சியத்துக்குள் இணைத்துக்கொள்ளும் முகமாக, சடுதியாக இந்தப் பூமியிலிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளப்படுவீர்கள். இவற்றை நீங்கள், உங்கள் மனதிலும், மற்றும் சிந்தனையிலும் நிலைநிறுத்திக்கொள்வது சாலவும் சிறந்தது. இந்த விஷயங்களை நீங்கள் அல்லும் பகலும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒரு கடவுளின் சேவகன் இத்தகைய இன்னல்களை எதிர்கொள்வானாகில், அவன் போருக்குத் தயாராக இருப்பதற்குரிய குணாதிசயங்களை வெளிப்படுத்தினாலும், அவனால் போரில் வெல்ல முடியாது. அல்லது முன்கூட்டியே வேதசாட்சியத்துக்கான அழைப்பு வந்து விடுமானால், அந்த வேதசாட்சியத்துக்கு என்று தயார் செய்யப்பட்ட விசுவாசத்தில் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யலாகாது. ஒரு நீதிமானாக, கடவுளின் நேரத்தை வீணாக்காது இருப்பதற்காக, உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்; துன்பங்கள் நிறைந்த காலங்களில் விசுவாசமான இராணுவ பணியானது, அமைதி நிலவும் காலங்களில் தூய்மையுடன் மனசாட்சியுடன் அதற்கேற்ற விருதுகளைப் பெறவும், கிரீடங்களை சூடிக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.


[1] ஃபோர்ச்சுநேடஸ் என்பவர் டக்காவின் ஆயராகப் பணியாற்றினார் என்று கார்தேஜ் சபையில் (256) குறிப்பிடப்பட்டுள்ளது.

[2] வானியல் உருவங்கள் மனிதனால் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது (குறிப்பு: யோபு ;31.27). ஆனால் ஆன்மா விரைவில் தன்னை குறைந்த வடிவங்களுக்கு தாழ்த்திக்கொண்டது. (குறிப்பு: உரோமையர்  1.21,23).

[3] சங்கீதம்: 134 (5) .15-18.

[4] சொலொமோனின் ஞானத்திலிருந்து; 15. 15-17.

[5] யாத்திராகமம்: 20.4.

[6] குறிப்பு: சொலமனின் ஞானத்திலிருந்து; 13. 14.

[7] உபாகமம்; 6.13.

[8] யாத்திராகமம்; 20.3.

[9] உபாகமம்; 32.39.

[10] வெளிப்படுத்தல்: 14.6,7.

[11] மாற்கு; 12.29.

[12] குறிப்பு: மாற்கு; 12.29; மத்தேயு; 22.37-40.

[13] யோவான்; 17.3

[14] யாத்திராகமம்; 22.20.

[15] உபாகமம்; 32. 17.

[16] ஏசாயா; 2.8,9

[17] ஏசாயா; 57.6.

[18] எரேமியா; 25.6.

[19] வெளிப்படுத்தல்: 14. 9-11.

[20] யாத்திராகமம்; 32.31 – 33.

[21] எரேமியா; 11.14.

[22] எசக்கியேல்; 14.12-14.

[23] 1 சாமுவேல்; 2.25.

[24] குறிப்பு: உபாகமம்; 13. 6-10.

[25] குறிப்பு: உபாகமம்; 13.12-18.

[26] குறிப்பு: 1 மக்கபீ. 2.24.

[27] மத்தேயு; 10.32-33

[28] 2 தீமோத்தேயு; 2.11.

[29] 1 யோவான்; 2.23.

[30] மத்தேயு; 10.28.

[31] யோவான்; 12. 25

[32] மத்தேயு; 10.37,38

[33] குறிப்பு: உபாகமம்; 33.9.

[34] உரோமையர்; 8.35-37.

[35] 1 கொரிந்தியர்; 6.19,20

[36] 2 கொரிந்தியர்; 5.15.

[37] யாத்திராகமம்; 14.11-14.

[38] லூக்கா; 9.62.

[39] லூக்கா; 17.31,32.

[40] லூக்கா; 14.33.

[41] குறிப்பு: பரலிபொமினன்: 15.2.

[42] எசேக்கியேல்; 33.12.

[43] மத்தேயு; 10.22.

[44] யோவான்; 8.31,32.

[45] லூக்கா;12.35, 37.

[46] 1 கொரிந்தியர்; 9.24,25

[47] குறிப்பு: தோமோத்தேயு; 2.4,5

[48] உரோமையர்; 12.1,2.

[49] உரோமையர்; 8.16,17.

[50] வெளிப்படுத்தல்: 3.11.

[51] குறிப்பு: யாத்திராகமம்; 17.11-14.

[52] உபாகமம்; 13.3.

[53] பிரசங்கி 27.6

[54] உரோமையர்; 5.2-5

[55] குறிப்பு: 1பேதுரு;4.12-14

[56] 1 யோவான்; 4.4.

[57] சங்கீதம்; 118.6,7

[58] சங்கீதம்; 20.8,9

[59] சங்கீதம்; 27.3,4.

[60] யாத்திராகமம்; 1.12.

[61] வெளிப்படுத்தல்; 2.10.

[62] ஏசாயா; 43.1-3.

[63] மத்தேயு; 10.19,20

[64] லூக்கா; 21.14,15.

[65] யாத்திராகமம்; 4.11,12.

[66] யோவான்; 15.18-20.

[67] யோவான்; 16.2-4.

[68] யோவான்;16. 20

[69] யோவான்; 16.33.

[70] மத்தேயு; 24.4-31.

[71] தானியேல்; 3.16-18

[72] குறிப்பு: தானியேல்:14.4.

[73] குறிப்பு: தோபியாஸ்; 13.7.

[74] இங்கே தாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கத்தோலிக்க திருச்சபை ஆகும். (Ecclesia Catholica)

[75] மத்தேயு; 23.9.

[76] 2 மக்கபேயர்; 7.9.

[77] 2 மக்கபேயர்; 7.14

[78] 2 மக்கபேயர்; 7.16,17.

[79] 2 மக்கபேயர்; 7.18,19.

[80] 2 மக்கபேயர்; 7. 27 – 29.

[81] 2 மக்கபேயர்; 6.30.

[82] வெளிப்படுத்தல்; 7 ;9,10,13-15.

[83] நீதிமொழிகள்: 3.4-6,8.

[84] நீதிமொழிகள்: 5.1-9.

[85] சங்கீதம்; 116.15.

[86] குறிப்பு: சங்கீதம்; 125.5,6

[87] சங்கீதம்; 119.1,2.

[88] மத்தேயு; 5.10.

[89] லூக்கா; 6:22,23.

[90] லூக்கா: 9.24.

[91] லூக்கா:18:29,30.

[92] குறிப்பு: வெளிப்படுத்தல்கள்; 20.4.

[93] உரோமையர்; 8-18