முதல் நீசியா பேரவை (கி.பி. 325) (The First Council of Nicea, A.D. 325)

The Council of Nicea, AD 325: Creed, Canons, Letter, in Tamil.


நீஸில் உள்ள ஆயர் பேரவை இந்த விசுவாசப்பிரமாணத்தை வகுத்தது; இது மூன்றாம் பேரவையின் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது

நீஸில் உள்ள ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை

‘ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், இயேசுக்கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங் கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரது அரசுக்கு முடிவிராது. பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகிறார்.’ கடவுளின் குமாரன் இல்லாத ஒரு காலம் இருந்தது என்றோ, அவர் பிறப்பதற்கு முன்பு அவர் இல்லை என்றோ, அல்லது அவர் வெறுமையில் இருந்தே படைக்கப்பட்டவர் என்றோ, அல்லது அவர் பிதாவிடமிருந்து வேறுபட்டவர் என்றோ, அல்லது அவர் ஒரு படைக்கப்பட்ட உயிரினம் என்றோ, அல்லது அவர் மாறுதலுக்கு உள்ளாகக் கூடியவர் என்றோ எவரும் கூறுவாராயின் – கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தலிக்க திருச்சபை அப்படிப்பட்ட நம்பிக்கைகளை நிராகரிக்கிறது.


இறை நியதிகள்

நியதி 1

நோய்வாய்ப்பட்ட எவருக்கேனும் மருத்துவர்களால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அல்லது சில குரூரத்தனம் மிக்கவர்களால் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர் மதகுருமார்களிடையே இருக்கத் தகுதியானவர்களே; ஆனால், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவர் தனக்குத் தானே ஆண்மை நீக்கம் செய்து கொண்டிருந்தால் அத்தகைய ஒருவர் ஏற்கனவே குருத்துவப் பணியில் இணைந்திருந்தால், அவர் [அவரது ஊழியத்திலிருந்து] விலக வேண்டும். அத்தகைய நபர் எக்காலத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் உயர் பதவிக்கு பரிந்துரை செய்யப்படக்கூடாது. ஆகையால், வேண்டுமென்றே அவ்வாறான சத்திர சிகிச்சைகள் மூலம்  ஆண்மை நீக்கம் செய்யக் கருதுபவர்களைப் பற்றியே இங்கு கூறப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே குரூரத்தனம் மிக்க, மனிதநேயம் அற்ற அல்லது அவர்களின் எஜமானர்களால் அல்லது அடிவருடிகளால் அண்ணகர்களாக ஆக்கப்பட்டிருந்தால், அல்லது வேறு ஏதேனும் விதத்தில் குருத்துவப் பணிக்குத் தகுதியானவர்களாகக் காணப்பட்டால், அத்தகையவர்களை மதகுருமார்கள் என்று இறை நியதி ஒப்புக்கொள்கிறது.

நியதி 2

தனிநபர்களின் தேவை அல்லது அழுத்தம் காரணமாக திருச்சபை விதிகளுக்கு எதிரான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ஒரு சிறிய போதனை குறித்த தெளிவை  மட்டுமே பெற்ற புதிய விசுவாசிகள் ஏககாலத்தில் ஞானஸ்நானம் பெற்று, அதன் பின்னர் ஆயர் பாதிரியார் அல்லது மறைப்பணியாளர்கள் போன்ற முக்கியமான திருச்சபை பதவிகளுக்கு உயர்த்தப்படுகிறார்கள். இனிமேல், இவ்வாறான விடயங்கள் நடக்கக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.  விசுவாசத்திற்குப் புதியவரான ஒருவருக்கு ஞானஸ்நானத்திற்குப் பிறகு நேரமும் நீண்ட கால அவகாசமும் பொது உளச் சோதனையும் அவசியம் தேவை. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில்   அவசரம் கூடாது என்று வேதாகமம் எச்சரிக்கிறது, ஏனெனில் அவர்கள் ஆணவம் மற்றும் பெருமை கொண்டு பிசாசின் வலையில் விழக்கூடும். காலப்போக்கில், இப்படிப்பட்டவர் சிற்றின்ப ஈடுபாடு போன்ற கடுமையான பாவத்தைச் செய்துள்ளார் என்பது கண்டறியப்பட்டு, இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தங்கள் மறைப்பணி பதவியில் இருந்து விலக வேண்டும். இந்த விதிகளை மீறும் எவரும் தங்கள் திருச்சபையில் சேவை செய்யும் தகுதியை இழக்க நேரிடும், ஏனெனில் அது திருச்சபைத் தலைவர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிரானது.

நியதி 3

தாய், சகோதரி, அத்தை போன்ற நெருங்கிய பெண் உறவினர்கள் அல்லது முற்றிலும் நம்பகமான உறவினர் தவிர, எந்தவொரு ஆயர், பாதிரியார், மறைப்பணியாளர் அல்லது மதகுருமார்களின் எந்தவொரு உறுப்பினரும் தங்களுடன் ஒரு பெண் வசிப்பதை ஆயர் பேரவை கடுமையாகத் தடை செய்துள்ளது.

நியதி 4

பொதுவாக ஒரு ஆயரை அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ஆயர்களும் இணைந்தே தேர்ந்தெடுக்க வேண்டும். இருப்பினும், அவசரத் தேவை அல்லது தூரம் காரணமாக இதைச் செய்வது கடினமாக இருந்தால், குறைந்தது மூன்று ஆயர்கள் கூடி அவ்வாறான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான தருணங்களில், அங்கே பிரசன்னமாக இல்லாத ஆயர்களின் வாக்குகளையும் பரிசீலிக்கலாம், ஆனால் அவை எழுத்துப்பூர்வமாக அனுப்பப்படல் வேண்டும். அதன் பின்னர் நியமனம் நடைபெறலாம். இருப்பினும், இவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும்  செயல்முறையின் இறுதி ஒப்புதல் அந்தப் பகுதிகளுக்குப் பொறுப்பான அல்லது நியமனங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை உடைய உயர்மட்டத்துக்கு அறிவிக்கப்படல் வேண்டும்.

நியதி 5

மதகுருமார்களாக இருந்தாலும் சரி, பொது நிலையினராக இருந்தாலும் சரி, வெளியேற்றப்பட்டவர்களைப் பொறுத்தவரை, ஒரு ஆயரால் யாராவது தடை செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்டால், மற்றொரு ஆயர் அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற விதியை ஆயர்கள் பின்பற்ற வேண்டும். இருப்பினும், நியாயமற்ற காரணங்களுக்காகவோ அல்லது ஆயரின் கடினமான அணுகுமுறை காரணமாகவோ அவர்கள் வெளியேற்றப்பட்டார்களா என்பதைச் சரியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தப் பிரச்சினையை முறையாகக் கவனிக்க, ஒவ்வொரு மாகாணத்திலும் ஆயர் கூட்டங்கள் எனப்படும் ஆயர்களின் பேரவை வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டுமென ஒரு வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்தக் கூட்டங்களின் போது, அனைத்து ஆயர்களும் இவ்வாறான குறைநிறைகளைப் பற்றி விவாதிக்க ஒன்று கூடுவார்கள். இதனால் தங்கள் ஆயருக்கெதிராக உண்மையிலேயே அநீதி இழைத்தவர்கள் நியாயமாக வெளியேற்றப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள். இதனால் ஆயர்களைக் கொண்ட ஒரு பெரிய குழாம் அவர்களின் தண்டனையைக் குறைக்க முடிவு செய்யும் வரை தவறிழைத்தவர்கள் வெளியேற்றப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள். கடவுளுக்கு நன்றியறிதல் ஒப்புக்கொடுக்கும் முன்பு நிலவிய அனைத்துக் கசப்பும் தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய, தவக்காலத்திற்கு முன் ஒரு ஆயர் கூட்டம் நடத்தப்படும், அது பருவ காலத்தின் இரண்டாவது இலையுதிர்காலத்தில் நடைபெறும்.

நியதி 6

எகிப்து, லிபியா மற்றும் ஐம்பெரு நகரங்களை உள்ளடக்கிய ஒரு கேந்திரத்தில் நிலவும் பண்டைய பழக்கவழக்கங்கள் மேலோங்கட்டும். உரோமைய ஆயரைப்போலவே அலெக்ஸாண்ட்ரியாவின்  ஆயரும் இந்தப் பகுதிகளின் மீது அதிகாரம் கொண்டிருக்க அனுமதிக்க வேண்டும். இதேபோல், அந்தியோக்கியா மற்றும் பிற பிராந்தியங்களில், திருச்சபை அமைப்புக்கள் உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும். திருச்சபையின் அதியுச்ச அதிகாரத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒருவர் ஆயராக மாறினால், அவர் ஒரு ஆயராக இருத்தலாகாது என்று பேராயர் அவை கூறியது தெளிவாக இருக்க வேண்டும். இருப்பினும், இரண்டு அல்லது மூன்று ஆயர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த நல்ல காரணமும் இல்லாமல் பெரும்பான்மையினருடன் உடன்படவில்லை என்றால், பெரும்பான்மையினரின் தெரிவு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

நியதி 7

ஏலியாவின் [அதாவது, ஜெருசலேமின்] ஆயர் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற வழக்கமும் பண்டைய பாரம்பரியமும் நிலவுவதால், திருச்சபையின் அதியுச்ச அதிகாரத்துக்கு உரிய கண்ணியத்தைக் காப்பாற்றி, அவருக்கு அடுத்ததான மரியாதைக்குரிய பதவி கிடைக்கச் செய்யவேண்டும்.

நியதி 8

தங்களைக் கதாரி என்று அழைத்துக் கொள்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தலிக்க திருச்சபையில் இணைந்து ஏற்கனவே மதகுருமார்களாக இருப்பவர்கள் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றுபெரிய மற்றும் புனிதமான ஆயர் பேரவை அறிவிக்கிறது. இருந்தபோதிலும், முக்கியமாக அவர்கள் கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தலிக்க திருச்சபையின் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து பின்பற்றுவோம் என்று எழுத்து பூர்வமாக அறிவிக்க வேண்டும். குறிப்பாக, இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர்களுடனும், துன்புறுத்தலின் போது பாவம் செய்தவர்களுடனும், ஆனால் மனந்திரும்புதல் மற்றும் புனர்வாழ்வு காலத்தை நிறைவு செய்தவர்களுடனும் தொடர்பு கொள்ள ஒப்புக் கொள்வதும் இதில் அடங்கும். கத்தோலிக்க திருச்சபையின் அனைத்து போதனைகளையும் பின்பற்ற அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் போன்றவை முக்கியமான விதிகளாக இருக்கின்றன. அவர்கள் எங்கிருந்தாலும்; கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ, அனைத்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் தங்கள் வகிக்கும் தற்போதைய பதவிகளில் தொடர வேண்டும். அவர்கள் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் அல்லது பாதிரியாருடன் ஏதேனும் ஒரு இடத்திற்கு வர நேரிட்டால்  ஆயர் தனது அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும். கதாரி குழுவால் ஆயர் என்று அழைக்கப்படும் ஒருவரை, பேராயர் ஒருவர் அவருக்கு ஒரு உயர்ந்த பதவியை வழங்க முடிவு செய்யாத பட்சத்தில், அவரை ஒரு பாதிரியார் என்றேனும் கருதப்பட வேண்டும். அது ஏற்றுக்கொள்ளப்படா விட்டால், அவர் மதகுருமார்களின் ஒரு பகுதியாக இருப்பதைத் தெளிவுபடுத்தவும், ஒரே நகரத்தில் இரண்டு ஆயர்கள்  இருப்பதைத் தவிர்க்கவும், பேராயர் அவருக்கு ஒரு பின்தங்கிய கிராமத்தில் திருப்பணியாற்றும் ஆயராகவோ (Chorepiscopus) அல்லது பாதிரியார் பதவியைவோ ஒதுக்கலாம்.

நியதி 9

எந்தவொரு திருப்பணியாளரோ அல்லது மறைமூப்பரோ விசாரணையின்றி முன்மொழியப்பட்டிருந்தால் அல்லது விசாரணையின் போது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தால், நியதியை மீறும் நபர்கள் அவர்களோடு சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் அதுகுறித்து ஒப்புதல் அளித்திருந்தாலும், அத்தகைய நியதி அதை ஒப்புக்கொள்வதில்லை; ஏனெனில் கத்தோலிக்க திருச்சபை குற்றமற்ற தன்மையை மட்டுமே கோருகிறது.

நியதி 10

அறியாமையினாலோ அல்லது நியமிக்கப்பட்டவரின் முந்தைய அறிவினாலோ கூட, திருச்சபையின் நியதியை இழந்தவர்கள் யாரேனும் இருந்தால், அது திருச்சபையின் நியதிக்கு பாதகமாக இருக்காது; ஏனெனில் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்கள் தங்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

நியதி 11

லிசினியஸ் என்ற கொடுங்கோல் ஆட்சியாளனின் ஆட்சிக்காலத்தில் நடந்தது போது கட்டாயத்துக்கு உட்படுத்தப்படாமல், சொத்துக்களை இழக்காமல் அல்லது ஆபத்தை எதிர்கொள்ளாமல் தங்கள் நம்பிக்கையிலிருந்து விலகிச் சென்றவர்கள், தகுதியற்றவர்களாக இருந்தாலும் கூட கருணையுடன் நடத்தப்படுவார்கள் என்று ஆயர் பேரவை கூறுகிறது. அவர்கள் திருச்சபை நடவடிக்கைகளில்  பங்கேற்று உண்மையிலேயே மனந்திரும்புதலுக்கு உள்ளாகும் பட்சத்தில், அவர்கள் மூன்று ஆண்டுகள் செவிகொடுப்பவர்களாகவும், ஏழு ஆண்டுகள் பணிவு காட்டுபவர்களாகவும், இரண்டு ஆண்டுகள் அவர்கள் சமூகத்துடன் இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்க முடியும். ஆனால் திருப்பலி மற்றும் காணிக்கைகளை ஒப்புக்கொடுக்க அவர்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறப்படுகிறது.

நியதி 12

சிலர் கிருபையால் அழைக்கப்பட்டு, முதலில் மிகுந்த உற்சாகத்தைக் காட்டினர். ஆனால் நாய்கள் தங்கள் கக்கிய சொந்த வாந்தியை மீண்டும் உண்ணத் திரும்பி வருவது போல, தங்கள் பழைய வழிகளுக்கே திரும்பினர். (இதனால் அறிவது என்னெவென்றால், சிலர் பணத்தைச் செலவழித்து, பரிசுகளை அள்ளி இறைத்து அதன் மூலம் தங்கள் இழந்த இராணுவ நிலைகளை மீண்டும் பெற்றது போல). மூன்று ஆண்டுகள் செவிகொடுப்பவர்களாக இருந்த பிறகு, அவர்கள் பத்து ஆண்டுகளை மனத்தாழ்மையுடன் செலவிட வேண்டும். இருப்பினும், அவர்களின் நோக்கங்களும் அவர்களின் மனந்திரும்புதலும் எவ்வளவு உண்மையானதாகத் தெரிகிறது என்பதையும் அவர்கள் கவனமாகக் கருத்தில் கொள்வது முக்கியம். செயல்கள், உணர்வுகள் மற்றும் கடின உழைப்பு மூலம் தங்கள் உண்மையான மனமாற்றத்தைக் காட்டும் மக்கள் சிறிது காலம் செவிகொடுப்பவர்களாக இருந்த பிறகு ஒன்றாக செபிக்கலாம். அதன் பின்னர், ஆயர் அவர்களுக்கு இன்னும் ஆதரவாக இருக்க முடிவு செய்யலாம். இருப்பினும், கவனக்குறைவாக இருப்பவர்கள் மற்றும் திருச்சபையில் சேராமல் இருப்பது அவர்களின் மனமாற்றத்திற்கு போதுமானது என்று நம்புபவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுக் காலப்பகுதியையும் நிறைவுசெய்ய வேண்டும்.

நியதி 13

ஒருவர் இறக்கும் தருவாயில் இருக்கும் போது, கடைசியாக முக்கியமான நற்கருணையை மறுக்கக்கூடாது என்று பண்டைய திருச்சபை விதிகள் கூறுகின்றன. மரணம் தன்னை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்று உணரும் ஒருவர் நற்கருணையைப் பெற்ற பிறகு குணமடைந்தால், அவர்கள் பிரார்த்தனைகளில் மட்டுமே இணைந்துகொள்ள வேண்டும். இருப்பினும், இறக்கும் தருவாயில் எந்தவொரு மனிதரும் நற்கருணையைப் பெற விரும்பினால், ஆயர் அவர்களின் நிலைமையைச் சரிபார்த்து அவர்களுக்கு அந்த அவஸ்தைக்கான இறுதி நற்கருணையைக் கொடுக்க வேண்டும்.

நியதி 14

தங்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட காலப்பகுதி நிறைவுபெற்ற திருமறைக்கல்வி போதகர்களைப் பொறுத்தவரை, புனிதமான ஆயர் பேரவை, அவர்கள் மூன்று ஆண்டுகள் செவிமடுப்பவர்களாக  மட்டுமே இருந்த பிறகு, அவர்கள் திருமறைக்கல்வி போதகர்களுடன் இணைந்து செபிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

நியதி 15

நடக்கும் கடுமையான பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, திருச்சபை விதிகளுக்கு முரணான சில பழக்கவழக்கங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் எந்த ஒரு ஆயரோ, பாதிரியாரோ அல்லது திருப்பணியாளரோ  ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. புனித ஆயர் பேரவையின் இந்த முடிவிற்குப் பிறகு யாராவது இதைச் செய்ய முயற்சித்தால், அல்லது தொடர்ந்து செய்தால், அவர்களின் நடவடிக்கைகள் செல்லுபடியற்றவையாகக் கருதப்படுவதோடு, அவர்கள் ஆரம்பத்தில் ஆயராக அல்லது பாதிரியாராக நியமிக்கப்பட்ட தேவாலயப் பங்கிற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

நியதி 16

கடவுளையோ அல்லது திருச்சபை விதிகளையோ மதிக்காத மற்றும் தங்கள் சொந்த சபையை விட்டு வெளியேறும் மறைமூப்பர்கள் மற்றும் திருப்பணியாளர்கள் உட்பட மதகுருமார்கள் போன்றோரை உறுப்பினர்களாக மற்றொரு சபையானது அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவர்கள் தங்கள் சொந்த சபைக்கே திரும்பிச் செல்ல ஊக்குவிக்கப்பட வேண்டும். மறுக்கும் பட்சத்தில் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். வேறொரு திருச்சபையின் உறுப்பினரை அவரது மேல்நிலையில் உள்ள ஆயரின் அனுமதியின்றி இரகசியமாக அழைத்துச் சென்று யாராவது அவருக்கு திருச்சபை வழங்கக்கூடிய குருத்துவ நியமனத்தை வழங்க முயன்றால், அப்படியான நியமனம்  செல்லுபடியாகாது.

நியதி 17

பேராசை மற்றும் பண ஆசையால் உந்தப்பட்ட மதகுருமார்கள் மத்தியில் காணப்படும் பல உறுப்பினர்கள், அதிக வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று கூறும் வேதாகமத்தின்  போதனைகளைப் புறக்கணிக்கின்றனர். இந்த விதியை யாராவது இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ, அதிக வட்டி வசூலிப்பதன் மூலமாகவோ அல்லது பணம் சம்பாதிக்க வேறு ஏதேனும் தந்திரத்தைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மதகுருமார் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் பெயர் பாதிரியார்களைக் கொண்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் ஆயர்கள் மற்றும் பேராயர்கள் வலியுறுத்துகிறார்கள்.

நியதி 18

சில மாவட்டங்கள் மற்றும் நகரங்களில், திருப்பணியாளர்கள் தேவாலயத்தைச் சேர்ந்த  மதகுருமாருக்கு திவ்விய நற்கருணையை வழங்குகிறார்கள் என்பதை புனித ஆயர் பேரவை அறிந்துள்ளது. இது நியதிகள் அல்லது பாரம்பரியத்தால் அனுமதிக்கப்படவில்லை. சில திருப்பணியாளர்கள்  ஆயர்களுக்கு முன்பாக நற்கருணையைக் கையாள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயல்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, திருப்பணியாளர்கள் ஆயருக்கு  உதவியாளர்களாகவும், தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார்களை விடத் தாங்கள் கீழ் நிலையில் பணிபுரிபவர்கள் என்றும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்தானத்தை  அறிந்து அதற்கேற்றவாறு நடக்க வேண்டும். அவர்கள் தேவாலயத்தின் மதகுருக்களுக்குப் பிறகே நற்கருணையைப் பெற வேண்டும் என்பதோடு, ஆயர் அல்லது தேவாலயத்தின் மதகுரு மட்டுமே அதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தேவாலயத்தின் குருமாருடன் சரிநிகர் சமமாக  உட்காரக் கூடாது, ஏனெனில் இது விதிகளுக்கு முரணானது. இந்த முடிவை யாராவது பின்பற்றவில்லை என்றால், அவர்கள் திருச்சபைப் பதவியில் நிலைத்திருக்கும் தகுதியை இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.

நியதி 19

கத்தோலிக்க திருச்சபைக்கு அடைக்கலம் தேடி வந்த பவுலிய மதகுருமார்களைப் பொறுத்தவரை, அவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது; அப்படியானவர்கள் மத்தியில் முன்னாள் மதகுருமார்கள் எவராவது நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் காணப்பட்டால், அவர்களுக்கு மீண்டும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் ஒருவரால் மதகுருமார்களாக திருநிலைப் படுத்தப்படலாம். அதேநேரம், அவர்கள் தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்டால், அவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதே விதிகள் அவர்கள் மத்தியில் உள்ள திருப்பணியாளர்களுக்கும் மதகுருமார்களின் ஒரு பகுதியாக இருந்த மற்றவர்களுக்கும் பொருந்தும். பெண் திருப்பணியாளர்கள் என்பவர்கள் சில பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட, ஆனால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படாதவர்கள் என்ற காரணத்தால், அவர்கள் சாதாரண சமூகத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறார்கள்.

நியதி 20

சிலர் கர்த்தருக்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் மற்றும் பெந்தெகொஸ்தே நாட்களிலும் மாத்திரமே முழந்தாளிட்டு செபிக்கின்றனர். எனவே ஒவ்வொரு தேவாலயத்திலும் அனைவரும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் முகமாக, நின்றுகொண்டு கடவுளை நோக்கி செபிக்கவும் தியானங்கள் மேற்கொள்வதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று புனித ஆயர் பேரவை நம்புகிறது.


ஆயர் பேரவையின் கடிதம்

கடவுளின் அருளால், பரிசுத்தமும் மகத்துவமும் கொண்ட அலெக்ஸாந்திரிய திருச்சபைக்கும்; எங்கள் அன்பான சகோதர சகோதரிகளுக்கும், எகிப்து, மற்றும் ஐம்பெரு நகரங்கள் கொண்ட கூட்டணிக்கும், லிபியா மற்றும் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள விசுவாசமான, பாரம்பரியக் கிறீஸ்தவ மதகுருமார்கள் மற்றும் மக்களுக்கும், நைசியாவில் கூடியிருந்த புனித மற்றும் ஆயர் பேரவைக்கும் கர்த்தரின் திருநாமத்தால் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்துகிறோம்.

இரட்சகரான கிறிஸ்துவுக்கும் நமது அர்ப்பணிப்புள்ள தலைவர் கொன்ஸ்டன்டைனுக்கும் நன்றி, நைசியாவில் நடைபெற்ற முக்கியமான கூட்டமானது திருச்சபையின் நம்பிக்கை தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஒன்று திரட்டி, விவாதிக்கப்பட்ட, ஆராயப்பட்ட மற்றும் முடிவு செய்யப்பட்டவை போன்ற விபரங்கள் என்னென்ன  என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்.

முதலாவதாக, நமது மிகவும் மதப்பற்றுள்ள பேரரசர் கொன்ஸ்டன்டைனின் முன்னிலையில் அரியஸ் மற்றும் அவரது சீடர்களின் தவறான நம்பிக்கைகள் மற்றும் செயல்களை நாங்கள் ஆராய்ந்தோம். அரியஸ் மற்றும் அவரது தவறான கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். கடவுளின் குமாரனை அவமதித்த அவமரியாதை வார்த்தைகள் மற்றும் எண்ணங்களுடன், அவரும் அவரது தவறான கருத்துகளும் கண்டிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். அதாவது தேவ குமாரன்  வெறுமையில் இருந்து படைக்கப்பட்டார் என்றும், அவர் இல்லாத ஒரு காலம் இருந்தது என்றும், கடவுளின் குமாரன் கெட்டதையோ அல்லது நல்லதையோ செய்ய முடிவெடுக்கும் சுதந்திரத்தைக் கொண்டவர் என்றும், அவர் ஒரு படைக்கப்பட்ட உயிரினம் என்றும் அரியஸ் கூறினார்.

புனித ஆயர் பேரவை இவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டதோடு, அவரது தவறான நம்பிக்கைகள் மற்றும் அவமரியாதையுடைய வார்த்தைகளைக் கேட்கவும் விரும்பவில்லை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றின் விளைவுகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கக் கூடும் அல்லது இனிமேல் கேள்விப்படுவீர்கள். எனவே ஒருவரை அவரது செயல்களின் விளைவுகள் காரணமாக நாங்கள் நியாயமற்ற முறையில் தண்டிப்பதாகத் தெரியவில்லை. அவரது அவமரியாதை மிகவும் தூரம் சென்றுவிட்டதால், அவர் மார்மோரிக்காவின் தியோனாஸ் மற்றும் தொலமேயஸ் என்ற இடத்தைச் சேர்ந்த செகுண்டஸைக் (Theonas of Marmorica and Secundes of Ptolemais) கூட அவர் மிஞ்சியுளார், ஏனெனில் அவர்களும் மற்ற அனைவரையும் போலவே அதே தண்டனையைப் பெற்றிருந்தனர்.

ஆனால் கடவுளின் கிருபை எகிப்தை அந்த மதங்களுக்கு எதிரான கொள்கையிலிருந்தும், தெய்வ நிந்தனையிலிருந்தும், முன்பு சமாதானமாக இருந்த மக்களிடையே குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தத் துணிந்தவர்களிடமிருந்து விடுவித்தபோதும், மெலேஷியஸ் மற்றும் அவரது சீடர்களின் ஆணவத்தை நாங்கள் இன்னும் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆகவே எம் அன்பான நண்பர்களே, இந்தப் பிரச்சினை குறித்து ஆயர் பேரவை எடுத்த முடிவுகளை நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். மெலிஷியஸ் உண்மையில் அதற்கு தகுதியற்றவராக இருந்தாலும், அவருடன் மென்மையாக இருக்க ஆயர் முடிவு செய்தார். அவர் தனது நகரத்திலேயே தங்கலாம் என்றபோதிலும், ஆனால் எந்த முடிவுகளையும் எடுக்கவோ, யாரையும் நியமிக்கவோ அல்லது சபை நடவடிக்கைகளில் தலையிடவோ பங்கேற்கவோ முடியாது என்று அவர்கள் தீர்ப்பளித்தனர். இதே நோக்கங்களுக்காக அவர் மற்ற நகரங்களுக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அவர் தனது பதவியின் பட்டத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள அவருக்கு அனுமதி அளிக்கப் பட்டிருந்தது. அவரால் நியமிக்கப்பட்டவர்கள் மீண்டும் திருச்சபை நீரோட்டத்துக்குள் இணைந்துகொள்ள முடியும், ஆனால் உயர் அதிகாரம் உள்ள ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இது சாத்தியமாகும். அவர்களுக்கு அவர்களின் பட்டங்களும் சேவை செய்யும் திறனும் இருந்தபோதிலும், அவர்கள் எங்கள் மரியாதைக்குரிய சக ஊழியர் அலெக்சாண்டர் அவர்களால் நியமிக்கப்பட்டவர்களை விட தரத்தில் குறைவாகவே கருதப்படுவார்கள். இவர்கள் நமது புனித சகாவான அலெக்சாண்டரின் கீழ் திருப்பணியாற்றும் கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தலிக்க திருச்சபையின் ஆயர்களின் ஒப்புதல் இல்லாமல் எவரையும் நியமனங்களுக்குத் தேர்ந்தெடுக்கவோ பரிந்துரைக்கவோ முடியாது. இருப்பினும், கடவுளின் கிருபையாலும், உங்கள் செபங்களாலும், எந்தப் பிரிவிலும் பங்கேற்காத, கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தலிக்க திருச்சபைக்கு தூய்மையான, தகுதிவாய்ந்த மதகுருமார்களை நியமனம் செய்யவும், பரிந்துரை செய்யவும், திருச்சபையின் சட்டங்கள் மற்றும் விதிகளின்படி அனைத்து செயல்களையும் செய்யவும் அதிகாரம் பெற்றிருப்பார்கள். ஆனால், தற்போது திருச்சபையில் இருக்கும் மதகுருமார்களில் யாராவது இறந்துவிட்டால், சமீபத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் இறந்தவரின் பதவிக்குத் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் தகுதியானவர்களாகத் தோன்றும் பட்சத்தில் மாத்திரமே மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அத்தோடு அலெக்சாந்திரியாவின் ஆயர் இந்தத் தெரிவுக்கு உடன்பட்டு அதை அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த விதி மற்ற அனைவருக்கும் பொருந்தும். ஆனால் மெலிஷியஸின் கடந்தகால மோசமான நடத்தை மற்றும் அவசர செயல்கள் காரணமாக அவருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை. அவர் தான் செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடும் என்பதால் அவருக்கு எந்த அதிகாரமோ அல்லது சிறப்பு உரிமைகளோ கொடுக்கப்படவில்லை. இந்த விவரங்கள் எகிப்துக்கும் அலெக்சாந்திரிய திருச்சபைக்கும் முக்கியமானவை. இருப்பினும், எம் மரியாதைக்குரிய அதிபர் அலெக்சாண்டர் அவர்கள், விதிகள் அல்லது உத்தரவுகள் மூலம் வேறு ஏதேனும் முடிவுகளை எடுத்திருந்தால், அவரே அதை உங்களுக்கு விரிவாகத் தெரிவிப்பார், ஏனெனில் அவர் தான் இயற்றிய விதிகள் மற்றும் ஆணைகள் போன்றவற்றின் வழிகாட்டியாகவும் சக ஊழியராகவும் இருந்தார்.

உயிர்த்தெழுதல் தொடர்பான உடன்படிக்கை பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மெத்த மகிழ்ச்சியடைகிறோம். இது உங்கள் பிரார்த்தனைகள் மூலம் சரியாக தீர்க்கப்பட்டுள்ளது. இப்போது, யூத பழக்கவழக்கங்களைப் பின்பற்றி வந்த கீழைத்தேயத்தில் உள்ள அனைத்து சகோதரர்களும், உரோமையர்கள் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே உயிர்த்தெழுதல் பண்டிகையைக்  கொண்டாடிய அனைவரையும் போலவே அந்தப் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

எங்களால் எட்டமுடிந்த நல்ல முடிவுகள், எங்களால் பகிரப்பட்ட அமைதி மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றின் வழியாக, தவறான நம்பிக்கைகளை முடிவுற்கு கொண்டுவந்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் சக ஆயர் அலெக்சாண்டர் அவர்களை அதிக மரியாதையுடனும் மேலான அன்புடனும் ஏற்றுக்கொள்கிறோம், அவர் தனது பிரசன்னத்தால் எங்களை மகிழ்வித்தார். அவர் நம் அனைவருக்கும் அமைதியைக் கொண்டுவர உதவுவதற்காக தனது முதிர்ந்த வயதிலும் கடுமையாக உழைத்தார். எங்களால் மேற்கொள்ளப் பட்ட முடிவுகள் நிலைத்திருக்க, தயவுசெய்து செபியுங்கள், ஏனெனில் அவை கடவுளுக்கும், அவருடைய குமாரனும் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவிக்கும் பிரியமானவை என்று நாங்கள் நம்புகிறோம். என்றென்றும் மகிமையும் மாட்சிமையும் அவருக்கே உண்டாகக்கடவதாக.

ஆமென்.