புனித அகஸ்டின் அவர்களின் போற்றுதலும்  விசுவாசத்தை அறிக்கையிடலும் (Augustine, Confessions 9)

Saint Augustine, Confessions, Book 9, in Tamil


அத்தியாயம் 1 – தனது சொந்தக் கொடுஞ்செயல்களை ஒப்புக்கொள்ளும் அதேவேளை, பாதுகாப்பின் வடிவமான கடவுளையும் மீட்பராகிய இயேசுக் கிறிஸ்துவையும் அவர் போற்றுகிறார்

1. ஆண்டவரே, உண்மையாகவே நான் உமது ஊழியன்; நான் உமது சேவகன், நீர் தேர்ந்தெடுத்துக்கொண்ட, உமக்குப் பணிவிடை செய்யும் ஒரு அடியாளின் மகன். என்னைப் பிணைத்திருந்த பிணைப்புகளை நீர் அவிழ்த்துவிட்டீர். எனும் காணிக்கையை நான் உமக்குச் செலுத்துவேன். என் உள்ளமும் என் நாவும் உம்மைத் துதிக்கட்டும், என் எலும்பின் மச்சைகள் கூட உம்மைப் புகழ்ந்தேற்றி, என் தேவனே, உமக்கு ஒப்பானவர் யாருளர் என்று கேட்கக்கடவதாக. அவை அப்படியே சொல்லட்டும். நீர் எனக்குப் பதில் தாரும் என் தேவனே. நானே உன் இரட்சகர் என்று என் ஆன்மாவுக்கு எடுத்துரைத்தருளும். நான் யார்? நான் எப்படிப்பட்டவன்? என் செயல்கள் எவ்வளவு தீயவை? என் செயல்கள், என் வார்த்தைகள், என் மனதில் உதிக்கும் எண்ணங்கள், என் விருப்பங்கள், தெரிவுகள் போன்ற இவற்றில் எதில் தீமை இல்லாதிருக்கிறது? அனைத்தும் தீமைகளால் சூழப்பட்டே இருக்கிறது. ஆனால், என் தேவனே, நீர் நல்லவர், இரக்கமுள்ளவர், உமது வலது கரம் என் மரணத்தின் ஆழத்தை ஊடுருவி நோக்கியது. என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து அந்த ஊழல் என்ற சாக்கடையை நீர் வெளியேற்றினீர். இதன் விளைவு யாதெனில், நான் விரும்பியதைச் செய்யாமல் இருக்க விரும்பினேன், நீர் விரும்பியதையே செய்ய விரும்பினேன். ஆனால், இத்தனை வருடங்கள் இரகசியமாய் இல்லத்தில் மறைந்திருந்த சுதந்திரம் மீண்டும் சடுதியாக எப்படி, எங்கிருந்து வந்தது? அவரை ஏற்றுக்கொண்டவர்களைப் பற்றி, மத்தேயு 11 : 30 இல், “நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் கடமை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது” என்று இயேசு கூறினார்” என்று கூறுகிறது. ஓ கிறிஸ்து இயேசுவே, நீரே என் வலிமை, நீரே என்றும் என் மீட்பராக இருக்கிறீர். அற்ப விடயங்கள் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லாமல் இருப்பது எவ்வளவு இனிமையாக இருக்கிறது? ஒரு காலத்தில் நான் இழந்துவிடுவேனோ என்று பயந்ததை, இப்போது ஒதுக்கி வைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீர் அவர்களை என்னிடமிருந்து விலக்கிவிட்டீர், நீர் உண்மையானவர் மற்றும் உமது இனிமை என்றும் மகத்துவமானது. நீர் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக என் உள்ளத்தில் நுழைந்தீர் – சரீரத்தின் ஸ்பரிசத்தில் மூலம் அனுபவிக்கக்கூடியதல்ல, ஏனெனில், அது எல்லா இன்பங்களையும் விட இனிமையானது; அனைத்து ஒளியை விட பிரகாசமானது, அனைத்து மர்மங்களை விட, எல்லா மரியாதையையும் விட உயர்ந்தது தான் தேவ கிருபை. ஆனால் அவர்களின் சொந்த எண்ணங்களால் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று கருதுபவர்களுக்கு அது எவ்விதத்திலும் பொருந்தக் கூடியதல்ல. இப்போது என் ஆன்மா செல்வத்தை அடையும் வழிவகைகளைத் தேடல் மற்றும் பெறுதல், காம இச்சையின் காரணமாக ஏற்படக்கூடிய தூண்டுதல், உற்சாகப்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டது. என் பிரகாசமானவரும், செல்வத்துக்கெல்லாம் மேலான செல்வமானவரும், என் ஆரோக்கியத்தின் தேவனுமாகிய கர்த்தாவே, உம்மை நோக்கியே என் மனம் இறைஞ்சுகிறது.

அத்தியாயம் 2 – அவரது நுரையீரலில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார்

2. மேலும், உமது திருமுன் நான் ஒரு முடிவை எடுக்கத் தீர்மானித்தேன். கற்பித்தல் மற்றும் போதித்தல் போன்ற கடமைகளில் இருந்து என்னை முற்றாக விலக்கிக்கொள்வதல்ல அந்தத் தீர்மானம். ஆனால், பேச்சுத் திறமையை வர்த்தக நோக்கில் பயன்படுத்தும் அந்த சூழ்நிலையில் இருந்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொள்வது நல்லது என்று எனக்குத் தோன்றியது; என்னிடம் கல்வி பயிலும் மாணவர்களான அந்த இளைஞர்கள், நீர் வகுத்த சட்டம், நீர் கொடுத்த அமைதியின் மகத்துவம் பற்றி சிந்திக்காமல், அபத்தமான முட்டாள்தனங்கள் மற்றும் தேவையற்ற பிரச்சினைகள் பற்றி சிந்திக்கிறார்கள். தங்களது வீரதீர செயல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் என் நாவில் இருந்து வெளிப்படும் கருத்துகள் அவர்களது தீவிரமான போக்குக்கு உரமூட்டி விடக்கூடாது என்பதே எனது நோக்கமாக இருந்தது. வழக்கமான விடுமுறைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருந்தன. அதுவரை அவர்களையிட்டு பொறுமை காப்பது என்று முடிவு செய்தேன். உமது மகிமையால் மீட்கப்பட்ட நான், எனது திறமை, புலமை மற்றும் ஆற்றலை சந்தைப்படுத்துவதில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தேன். ஒருசில நெருங்கிய நண்பர்களைத் தவிர, இப்படியான எனது தீர்மானத்தை அறிந்தவர் நீர் மட்டுமே. அது யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடிய கண்ணீர் வெள்ளத்தில் இருந்து மீண்டு, உமது புகழைப் பாடிக்கொண்டு வந்த எம்மை, கூர்மையான அம்புகள், சுட்டெரிக்கும் தீச்சுவாலைகள் போன்ற வஞ்சக நாக்குகளுக்கு எதிராக வீறுகொண்டெழும் வரப்பிரசாதங்களை நீர் எங்களுக்குக் கொடுத்திருந்தாலும், அறிவுரைகளைத் தருவது போன்று பாசாங்கு செய்யும் நாக்குகள் பகையுணர்வைத் தூண்டக்கூடிய விரோதிகளைப் போல் எமக்கெதிராகத் திரும்பக்கூடும். அது அன்பு செலுத்தவது போன்ற உணர்வை ஏற்படுத்தி, மனிதர்கள் உணவை விழுங்குவதுபோன்று எம்மைக் கபளீகரம் செய்யவும் தயங்காது.

3. உமது கருணை என்ற அம்பின் மூலம் எங்கள் இதயங்களை ஊடுறுவினீர். அந்த அம்பு துளைத்தில் ஏற்பட்ட காயத்தின் வடுக்களைச் சுமந்தவண்ணம் எங்கள் பயணத்தைக் தொடர்ந்தோம். கருமையில் இருந்து வெண்மைக்கும், இறப்பிலிருந்து உயிர்ப்புக்கும் மாறுதலை ஏற்படுத்தியதால் வாயிலாக உமது அடியார்கள் அனுபவித்தவற்றை என் மனம் அசைபோட்டவண்ணம் இருந்தது. அவை எனது சோம்பேறித் தனத்தையும், கையாலாகாத தனத்தையும் துவம்சம் செய்துவிட்டன. மேலும், தாழ்மையான எண்ணங்கள், அதனோடு ஒட்டிப்பிறந்த இயல்புகள் என்னை மீண்டும் சகதிக்குழிக்குள் இழுத்துச் சென்றுவிடாமல் என்னைத் தாங்கிப் பிடித்தவண்ணம் இருந்தன. எனது ஆற்றலை அதிகரிக்கும் வண்ணம் என்னை நன்றாகக் புடம்போட்டன. வஞ்சக உணர்வுகளைத் தூண்டும் நாக்கு என்னை நனைப்பதற்குப் பதிலாக, என் மனத்தீயை மேலும் கொழுந்து விட்டெரியச் செய்தது. ஆயினும், பூமி அனைத்தையும் பரிசுத்தப்படுத்திய உமது நாமத்தினிமித்தம், எனது வாக்குறுதி மற்றும் சமர்ப்பித்த அறிக்கைகள் பலரது பாராட்டுக்கும் பாத்திரமாயிருந்தன. வழக்கமான விடுமுறை கொடுக்கப்படும் வரை காத்திராமல், எனது கடமைகளை நான் சடுதியாக இடைநிறுத்தி இருந்தால், அது என்னை ஒரு திமிர் பிடித்தவனாகவோ, அல்லது பகட்டை வெளிப்படுத்துபவனாகவோ காட்டியிருக்கும்.

ஏனெனில், அது அனைவருடைய நோக்கிலும் உயர்ந்ததாகவும், புனிதமானதாகவும் ஒரு தூய்மையான கடமையாகவும் கருதப்படுகின்ற ஒரு விடயம் என்பதால். அப்படிமட்டும் செய்திருப்பேனானால், வெவ்வேறு விதமான மக்கள் வெவ்வேறு விதமான புனைகதைகளை சோடித்து, என்னைக் குறைகூறி, எல்லோர் மத்தியிலும் எனது முக்கியத்துவத்தைப் பறைசாற்றவே இதை நான் செய்தேன் என்ற கதைகளைப் பரப்பியிருப்பார்கள். அப்படியானவர்கள் என்னைப்பற்றி எப்படிப் பேசினால் என்ன? எனது மனோநிலை மற்றும் எனது முடிவு பற்றி என்னவிதத்தில் சிலாகித்தால் என்ன? எனக்கு நான் செய்வது நன்றெனப் படும் எதுவும், அவர்கள் பார்வையில் தீயதெனப் பட்டால், அதனால் எனக்கு என்ன பயன் விளையப் போகிறது? உரோமையர் 14:16 இல் கூறப்பட்டிருப்பதுபோல, “நல்லவை என நீங்கள் நம்பும் விஷயங்கள் தீமை என மற்றவர்களால் பழிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்பதை இங்கே மேற்கோள் காட்டுவது சிறந்தது.

4. மேலும், இந்த கோடை காலப் பருவத்தில், மிக அதிகமான கற்பித்தல் நடவடிக்கை காரணமாக, எனது நுரையீரல் பலவீனமடைந்து, சுவாசம் கடினமாகி, சுவாசிப்பதற்குக் கடினமாக இருந்தது. அதனால் என் மார்பில் வலி அதிகரித்துக் காணப்பட்டது. அதன் காரணமாக என்னால் அதிக சத்தமாக பேசமுடியாமலும், நீண்ட நேரம் தொடர்ந்து பேசமுடியாமலும் அவதியுற நேரிட்டது. இது ஆரம்பத்தில் எனக்கு ஒரு சோதனையாகவும் கவலையை அளிப்பதாகவும் இருந்தது இதனால், கற்பித்தல் பணியை விட்டுவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்த நான், மீண்டும் குணமடைந்து எனது பழைய நிலைமைக்குத் திரும்ப முடிந்தால், அதை சிறிது காலத்துக்குத் தொடரலாம் என்ற எண்ணமும் என் மனதில் தோன்றியது. ஆனால், நீரே என் இறைவன், உமது சித்தம் என்னவென்பதை நான் காண வேண்டும் என்ற ஒரு தீர்க்கமான முடிவும் அவாவும் என்னுள் எழுந்தது. ஆகவே என் தேவனே, ஓட்டுமொத்த எதிர்மறையான உணர்வுகளின் வெளிப்பாடுகளை எதிர்கொள்ள எனக்கு ஒரு வலிமையான காரணம் கிடைத்துவிட்டதையெண்ணி நான் மகிழ்ச்சியடைய ஆரம்பித்தேன். அது போலியான ஒன்று அல்ல என்று உமக்குத் தெரியும் – சுதந்திரமாய் அவதரித்த தங்கள் மகன்மார்களுக்காக, எனக்கு ஒருபோதும் அந்த சுதந்திரம் கிடைக்கக்கூடாது என்று விரும்பியவர்கள் செய்த குற்றத்தை இது ஒருவேளை மட்டுப்படுத்தலாம். அதனால் ஏற்பட்ட மிகுந்த மகிழ்ச்சியுடன், அந்த இடைப்பட்ட காலம் கடந்து செல்லும் வரை – சுமார் இருபது நாட்கள் – பொறுமையுடன் சகித்துக்கொண்டிருந்தேன். இருப்பினும், அந்தப் பொறுமையைக் கடைபிடிக்கவும் ஒருவித அசட்டுத் துணிச்சல் எனக்குத் தேவையாய் இருந்தது. ஏனெனில் காசு பணம் மீது எனக்கு எவ்வித பிடிப்பும் இல்லாதிருந்தது. இதே நான், முன்பு பணத்தைத் தேடும் எனது பிராயச்சித்தத்தில் அயராது பாடுபட்டுள்ளேன். எவ்வளவோ பாரச் சுமைகளையும் ஏற்றிருக்கிறேன். ஒருவேளை எனது அந்தக் கடமையை நான் தொடர்ந்து செய்து வந்திருந்தால், வேதனத்தை பெருக்கிக் கொள்ளவேண்டும் என்ற வட்டத்துக்குள் வந்திராவிட்டால், நான் மிகவும் மனமுடைந்து போயிருப்பேன். உமது அடியார்களில் சிலர், அவர்கள் என் சகோதரர்களாகக் கூட இருக்கலாம், இதில் நான் பிழை செய்துவிட்டேன் என்று என்மீது குறை கூறலாம். ஏனெனில், உமது சேனையில் ஒரு போர்வீரனாய் இருக்கவேண்டிய நான், இந்தப் பொய் எனும் இருக்கையில் ஒரு மணிநேரம் கூட அமர்வதற்குத் தகுதியற்றவன் என்று கூடக் கூறலாம். ஆனால் இரக்கமுள்ள ஆண்டவரே, இதுகுறித்து நான் மேலும் தர்க்கம் செய்ய விரும்பவில்லை. இந்த பாவத்தை மன்னித்து, புனிதமான ஞானஸ்நானம் என்ற புனித நீரின் மூலம் என் மற்றைய கொடுமையான பாவங்களையும் சாவான பாவங்களையும் நீர் மன்னிக்கவில்லையா?

அத்தியாயம் 3 – அவர் தனது நண்பரான, இன்னும் கிறீஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளாத வெரெகுண்டஸின் வாசஸ்தலத்துக்குச் சென்று தன்னுடையதும் நெப்ரிடியஸுடையதும் மன மாற்றம் மற்றும் மரணம் பற்றிக் குறிப்பிடுகிறார்

5. வெரெகுண்டஸ் எங்கள் மகிழ்ச்சியைக் கண்டு எரிச்சல் மற்றும் பொறாமையால் உழன்றான். ஏனென்றால், அவன் தனது கட்டுகளால் மிகவும் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருந்ததால், எங்களிடமிருந்து விலகியிருப்பதாக உணர்ந்தான். அத்தோடு அவனது நிலை எங்கள் உறவைப் பாதிக்கும் என்றும் அஞ்சினான். ஏனென்றால் அவன் இன்னும் கிறீஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனால் அவனது துணைவியார் ஞானஸ்நானம் பெற்று கிறீஸ்தவத்தைத் தழுவியவர். இறுக்கமான கட்டுகளால் பிணைக்கப்பட்டிருந்த அவளது கணவனை விட்டுவிட்டு, அவளால் எங்கள் பயணத்தில் இணைந்துகொள்ள முடியவில்லை. முடியாதபட்சத்தில் தான் வேறு ஒரு முறையைக் கையாள்வானே தவிர, எந்த வழிகளிலும் தான் ஒரு கிறிஸ்தவராக மாறப்போவதில்லை என்று அவன் கூறினான். இருப்பினும், நாங்கள் அங்கு தங்கியிருக்கும் காலம் வரை அவரது பண்ணை வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள அவர் மிகவும் மரியாதையுடன் எங்களை வேண்டிக்கொண்டார். லூக்கா 14:14 இல், “அந்த ஏழைகள் உனக்கு மீண்டும் எதுவும் அளிக்க முடியாததால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நல்லோர் மரணத்திலிருந்து எழுகையில் உனக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்” என்று கூறப்பட்டிருப்பதுபோல, நீதிமான்கள் வெகுமதியைப் பெறும் நாளில், நீர் அவனை நினைவுகூர்ந்து அந்த வெகுமதியை அவனுக்கு அளித்தருள்வீராக. அப்படிப்பார்த்தால், நீர் அந்த அந்த வெகுமதியை அவனுக்கு அளித்ததை நாங்கள் கேள்வியுற்றோம். நாங்கள் உரோமிலிருந்து கொஞ்சம் தூரத்திலிருந்தபோது, அவன் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, தான் ஒரு விசுவாசியாக இவ்வுலகை நீத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னை ஒரு கிறிஸ்தவனாக மாற்றிக்கொண்டான். இதன்மூலம் அவன்மீது மட்டுமல்லாமல், எங்கள் எல்லோர் மீதும் உமது கருணையைப் பொழிந்தீர். இதற்கான ஒரு எடுத்துக்காட்டு, பிலிப்பியர் 2:27 இல் “அவன் நோயால் மரணத் தறுவாயில் இருந்தான். தேவன் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட உதவினார். ஆகவே எனக்கு துக்கத்தின் மேல் துக்கம் உண்டாகவில்லை” என்ற கூறப்பட்டிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. எங்கள் நண்பனான வெரெகுண்டஸ் எங்களிடம் காட்டிய அளப்பரிய கருணையை நினைத்து, உமது மந்தையில் எங்களால் அவனை இணைக்க முடியாமல் தேவனே, உமக்கு நன்றி, நாங்கள் உம்முடையவர்கள். உம்முடைய அறிவுரைகள், ஆறுதல் வார்த்தைகள் மற்றும் விசுவாசமான வாக்குறுதிகள் போன்றவற்றுக்கிணங்க, இவ்வுலகத்தின் அக்கினியில் இருந்து நாங்கள் உம்மில் இளைப்பாறுமுகமாக, வெரெகுண்டஸுக்கு கஸ்ஸியாகுமில் அமைந்துள்ள இந்த பண்ணை வீட்டை ஒரு நிறைவான பரம பொக்கிஷமாக அருளியிருந்தீர். அவன் வையகத்தில் வாழ்ந்தபோது செய்த பாவங்களை கருணையோடு மன்னித்தருள வேண்டுமென்றும், பாலும் தேனும் வழிந்தோடும் மலைக்கு, அதாவது உமது மலைக்கு, அதீத பலன்தரும் உமது தெய்வீக மலையை நோக்கி அழைத்துச் செல்வீராக.

6. அந்நேரத்தில் அவர் துக்கத்திலும் கலக்கத்துடனும் இருந்தார். ஆனால் நெப்ரிடியஸோ அவர் இன்னும் ஒரு கிறிஸ்தவராக இல்லாவிட்டாலும், மகிழ்ச்சியாக இருந்தார். உமது தேவ குமாரனை ஒரு மாயத்தோற்றம் என்று நம்பும் அந்த மிக மோசமான பிழையின் குழியில் விழுந்து கிடந்தார். அதிலிருந்து வெளியே வந்த பிறகும், நாங்கள் கொண்டிருந்த அதே நம்பிக்கையை அவரும் கொண்டிருந்தார். உமது திருச்சபையின் எந்த சடங்குகளிலும் அவன் பங்குபற்றவோ எவ்விதமான அடையாளங்களையும் பெற்றுக்கொள்ள வில்லையெனன்றாலும், உண்மை குறித்த அவனது ஆர்வம் மேலோங்கியே காணப்பட்டது. உமது ஞானஸ்நானத்தால் எங்களின் மனமாற்றம் மற்றும் மறுபிறப்புக்குப் பிறகு, அவர் கத்தோலிக்க திருச்சபையின் உண்மையுள்ள உறுப்பினராகத் தன்னை மாற்றிக்கொண்டு, ஆப்பிரிக்காவில் உள்ள தனது சொந்த மக்களிடையே பரிபூரணமான ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், தன்னடக்கத்துடனும் உமக்கு சேவை செய்தார். அவரது மனமாற்றம் காரணமாக, அவரது குடும்பத்தினர் அனைவரும் கிறிஸ்தவத்தைத் தழுவினர். நீர் அவனை சரீர இச்சைகளில் இருந்து விடுவித்தீர்; இப்போது அவர் ஆபிரகாமின் மடியில் தன்னை சங்கமித்துக் கொண்டுள்ளார். அது எதுவாக இருந்தாலும், அந்த ‘மடி’ என்று குறிக்கப்படும் அந்த இடத்தில் என் இனிய நண்பர், என் அன்புக்குரிய நெப்ரிடியஸ் வாழ்கிறார். என் ஆண்டவரே, அடிமைத்தனத்தில் இருந்து உம்மால் விடுதலை பெற்று, உமது பிள்ளையாக, உமக்கே உரித்தானவனாய் அந்த அன்புள்ளம் கொண்ட மனிதனாய் அவர் அங்கு வாழ்கிறார். அத்தகைய ஆத்மாவுக்கு அந்த உயர்ந்த ஸ்தானத்தைவிட வேறு எப்படிப்பட்ட ஸ்தானம் கிடைக்க முடியும்? அது தான் அவர் அங்கு வாழ அவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். அதைப் பற்றி அவர் என்னிடம் அடிக்கடி விசாரிப்பார். ஆனால் நான் ஒரு அனுபவமற்ற, பலவீனமான மனிதன் என்பதால் என்னால் எந்தவித கருத்தையும் கூற முடியாதிருந்தது. இப்போது அவர் நான் பேசுவதைக் கேட்க தனது காதுகளை என்பக்கம் திருப்புவதில்லை, ஆனால் அவரது ஆன்மாவின் வாயை உமது நீரூற்றை நோக்கித் திருப்பி, தனக்கு வேண்டியவரைக்கும் ஞானத்தை மட்டுமே அள்ளிப்பருகுகிறார். அதில் அவர் மட்டில்லா மகிழ்ச்சியை அனுபவிக்கிறார். இருப்பினும், என்னை மறந்து விடுமளவுக்கு அவர் ஞானத்தை அள்ளிப்பருகி அதில் கிரங்கிப் போயிருக்கமாட்டார் என்று என் மனம் கூறுகிறது. ஆனாலும், அவன் பருகுவது உம்மை, உமது கிருபையை. ஆகவே நீர் எம்மை என்றும் நினைவுகூருகிறீர். அப்படியானால், எங்கள் மனமாற்றம் குறித்தும், எம்மிடையில் நிலவிய அந்த தூய்மையான சிநேகம் (எங்கள் நட்பு மாசற்றதாக இருந்தது) சிதைந்துபோய் விடுமோ என்று கலங்கிய வெரெகுண்டஸை ஆறுதல்படுத்தி, அவருடைய நிலைமைக்கு ஏற்ப, அதாவது, அவரது திருமணமான வாழ்வுக்கு ஏற்ப ஒரு நம்பிக்கையை அவருக்குப் போதித்தோம். எங்கள் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஏற்று, அதைப் பின்பற்றும் நேரம் வரும்வரை நான் காத்திருந்தேன். ஏறக்குறைய அவரது முடிவெடுக்கும் அந்த நேரம் நெருங்கி வந்துகொண்டிருந்த வேளை, என் பணியும் நிறைவடையும் நாளும் வந்துவிட்டது. சுதந்திரத்துக்காகவும், ஓய்வுக்காகவும் நான் காத்திருந்தபடியால், அவை என்னைப் பொருத்தளவில், வெகு நீண்ட, எண்ணிலடங்கா நாட்கள் போலத் தோன்றின. அந்த ஓய்வில், உமது மகிமையைப் புகழ்ந்து, ‘நான் உமது திருமுகத்தைத் தேடினேன்; கர்த்தாவே, என்றும், எப்போதும் நான் உமது திருமுகத்தைத் தேடியபடியே இருப்பேன்’ என்று எனது எலும்பின் மச்சைகள் கூட உம்மை நோக்கிப் பாட என்னைத் தூண்டின.

அத்தியாயம் 4 – தான் வாழும் நாட்டில் அவர் இலக்கியத்தில் கவனம் செலுத்துகிறார் மற்றும் அலிபியஸின் மகிழ்ச்சியான மனமாற்றம் தொடர்பாக சங்கீதம் 4 ஐப் பற்றி விளக்குகிறார், அதேநேரம் அவர் பல்வலியால் அவதிப்படுகிறார்

7. நான் எனது பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெரும் நாள் உண்மையாகவே வந்துவிட்டது. ஆனாலும், மனதளவில் நான் எப்போதோ விடுதலையாகி விட்டேன். ஆனால் இப்போது அது யதார்த்தபூர்வமாய் நிறைவேறியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது நீர் என் நாக்கைக் விடுவித்தீர், ஆனால் நீர் ஏற்கனவே என் இதயத்தை விடுவித்துவிட்டீர். அதற்காக நான் முழு மனதோடும் மகிழ்ச்சியுடனும் உமக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ஓய்வு பெற்றதும், எனது சொந்த ஊரில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்குச் சென்று குடியேறினேன். எனது சேவைக்காலத்தின் போது நான் எழுதியவை, சாதித்தவை எல்லாவற்றையும், இப்போது நீர் சித்தம் கொண்டவாறு எழுதுகிறேன். இந்த காலகட்டத்தில், அவை பெருமையை பறை சாற்றி நின்றாலும், என் படைப்புகள் அவற்றுக்கு சாட்சி பகர்கின்றன. அதில் நான் என் நண்பர்களுடனும் என்னுடன் இருந்தவர்களுடனும் உமக்கு முன்பும் விவாதித்திருந்தேன். என்னருகில் தனது பிரசன்னத்தைக் கொண்டிராத நெபிரிடியஸுடன் விவாதித்தவை எல்லாவற்றையும் என் கடிதங்கள் சாட்சியங்களாக முன்வைக்கின்றன. என்னால் நிறைவேற்றவேண்டிய சிலபல கடமைகளுக்குள் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்த அந்த சூழ்நிலையில், நீர் எங்களுக்கு செய்த எண்ணிலடங்கா நன்மைகள், நலன்கள் போன்றவற்றை நினைவுகூர எப்போதுதான் நேரம் காலம் அமையப்போகிறது? நிகழ்காலத்தில் என் மனதில் பொதிந்துள்ள அந்த நினைவுகள், கடந்தகாலத்தை நோக்கி என்னை அழைத்துச் செல்வதை என்னால் தடுக்க முடியாதிருந்தது. ஏனெனில், அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. கர்த்தாவே, என்ன உள்ளுணர்வால் நீர் என்னை உமது வரையறைக்குள் கொண்டுவந்து, என்னை எவ்வாறு தாழ்ச்சியுடையவனாக ஆக்கினீர் என்பதை நான் உம்மிடம் தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறேன். இதற்கு அமைவாக லூக்கா 3 : 5 இல், “பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். ஒவ்வொரு மலையும் குன்றும் மட்டமாக்கப்படும். திருப்பம் மிக்க பாதைகள் நேராக்கப்படும். கரடுமுரடான பாதைகள் மென்மையாகும்” என்று கூறப்பட்டுள்ளதை இங்கே மேற்கோள் காட்டுவது சாலச் சிறந்ததாகும். எதன் மூலம் எனது மிகவும் அன்புக்குரிய சகோதரர் அலிபியஸ் என்பவரை உமது ஒரே பேறானவரும் எங்கள் ஆண்டவரும், இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் திருமுன் அடிபணியச் செய்தீர் என்பதை நினைத்துப் பார்க்கையில் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. ஆயினும், அவர் இயேசுக் கிறிஸ்துவின் திருநாமம் உச்சரிக்கப்படும் எந்தவொரு சொல்லும் எங்கள் எழுத்துக்களில் இணைத்துக்கொள்வதற்கு உடன்படாமலேயே இருந்தார். கொடிய சர்ப்பத்தின் விஷத்தை நீக்கக்கூடிய திருச்சபையின் அருமருந்தாக இருக்கவேண்டிய எனது எழுத்தாக்கங்களை விட, தேவன் தாமே நிர்மூலம் செய்த கேதுரு மரங்களை சுவைப்பது மேலென்று அவன் எண்ணியிருந்தான்.

8. என் தேவனே, விசுவாசத்தின் துதிகீதங்களான தாவீதின் சங்கீத புத்தகத்தை வாசித்தபோது, எண்ணில் எழுந்த அந்த தெய்வீக உணர்வுகளை உம்மை நோக்கி வெளிப்படுத்தினேன். விசுவாசத்தைத் தூண்டும் அந்த புனிதமான சங்கீதங்களில், வெறுப்புக்கோ, ஆணவம் அகந்தை போன்றவற்றுக்கோ அறவே இடமில்லை. உம்மில் நிலையான அன்பை ஏற்படுத்திக் கொள்வதில் நான் இன்னும் ஒரு புதிதாய்ப் பிறந்த பிறவி போலவே இருந்தேன். கிராமத்தில் இருந்த பண்ணை வீட்டினில் அலிபியஸ் என்ற மற்றொரு புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தை வடிவமான ஒருவனோடு நானும் ஒரு குழந்தையாக இருந்தேன். தாய்மைக்குரிய பரிவோடு என் தாயார் எங்களைத் தன்னோடு அரவணைத்திருந்தார். அவரது இடையறாத விசுவாசம், அனுபவ முதிர்ச்சி, தாய்க்குரிய அன்பு மற்றும் பரிவு, கிறீஸ்தவத்தின் மீது கொண்டிருந்த ஆழமான பக்தி போன்றவற்றையே அவர் தனது அணிகலன்களாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார். அந்த சங்கீத ஆகமத்தில் உள்ள துதி கீதங்களால் நான் எவ்வாறு மனமுருகி உமது இரக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டேன் மற்றும், உமது அன்பைப் பறைசாற்றும் அந்தத் தூய்மையான கீதங்கள் அன்பின் வேட்கையை என் மனதில் கிளர்ந்தெழச் செய்தன. ஆகவே அவற்றைத் தொடர்ந்து வாசிக்குமாறு என்னுள் ஒரு ஆர்வத்தீ கொழுந்து விட்டெரிந்தது. என்னால் இயலுமானால், அவற்றை நான் இம்முழு வையகமும் அறிந்துகொள்ளும் முகமாக, மானிடம் கொண்டிருக்கும் ஆணவத்தைக் கிள்ளியெறியும் வகையில் உரத்த குரலில் வாசித்து அவர்கள் முன் சமர்ப்பித்திருப்பேன். எனினும், அவை உலகளாவிய ரீதியில் அன்றாடம் வாசிக்கப்படுகின்றன ஏனென்றால் உம்மில் இருந்து வரும் தனலின் உக்கிரத்தில் இருந்து எவராலும் தப்ப முடியாது. மணீக்கியர்கள் மீது நான் கடும் ஆவேசத்துடனும் அதேவேளை அவர்களது அறியாமையிட்டு துக்கத்துடனும் கோபத்துடனும் இருந்தேன். இருப்பினும், சடங்குகள், திருவருட் சாதனங்கள் போன்ற உமது திருவருளின் மகிமை குறித்த அந்த அற்புத மருந்துகளைப் பற்றி அறியாதவர்களாகவும், அதேநேரம், அவர்களுக்கு நல்லறிவு புகட்டக் கூடிய மாற்று மருந்தின் மீது வெறித்தனமாகவும் இருந்ததற்காக நான் மீண்டும் அவர்கள்மீது பரிதாபப்பட்டேன்! என் ஓய்வு நேரத்தில் நான் நான்காவது சங்கீதத்தைப் படித்தபோது, அவர்கள் எனக்குத் தெரியாமலே என் அருகில் எங்காவது ஒரு இடத்தில் இருந்திருக்கக்கூடும் என்று என் மனம் கூறியது. அவர்கள் இருப்பதை அறியாமல், நான் சங்கீதத்தைப் பாடுவதை அவர்கள் கேட்டிருக்கும் பட்சத்தில், என் முகத்தைப் பார்த்து, நான் வசிக்கும் வார்த்தைகளைக் கேட்டு என் கண்கள் கண்ணீரைச் சொரிந்திருப்பதையும் அவர்கள் கண்டிருப்பார்கள். ஏனெனில், சங்கீதத்துக்கு அப்படிப்பட்ட ஒரு மனதை உருக்கும் மகத்துவம் இருந்தது. என் நீதியின் தேவனே, நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் எனக்குச் செவிகொடுத்தீர்; நான் துன்பத்தில் இருந்தபோது நீர் எனக்கு ஆறுதல் அளித்தீர்; என் தேவனே என்மீது இரங்கும், என் மன்றாட்டைத் தயவுடன் கேட்டருளும். எனக்கே தெரியாமல் நான் உரக்கக் கூறிய இந்த சங்கீத வார்த்தைகளை அவர்கள் கேட்டிருப்பார்களோ இல்லையோ நானறியேன். ஆனாலும், நான் அவர்களுக்காகத்தான் இதைச் சொன்னேன் என்று அவர்கள் நினைக்கக்கூடாது என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். உண்மையில் நான் சொல்வதை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தாள் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் அவற்றைப் பற்றி பேசியிருக்க மாட்டேன். அப்படியே நான் சொல்லியிருந்தாலும், என் ஆன்மாவின் அந்தரங்க உணர்வுகளில் இருந்து நான் விளங்கிக் கொள்வதென்னவெனில், உமக்கும் அடியேனுக்கும் இடையிலான இந்த அந்தரங்கமான, உணர்வுபூர்வமான உரையாடல்கள் அவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

9. பரம தந்தையே, நான் அச்சம் கொண்டு நடுங்கினேன் என்றாலும், நம்பிக்கையினால் ஆறுதல் பெற்று, உமது கருணையில் மகிழ்ந்தேன். உமது விசுவாசத்தின் மகத்துவம் என் மீது இறங்கியபோது, அது என் கண்களிலும், குரலிலும் பெருக்கெடுத்து வழிந்தோடியது. மனிதப்பிறவிகளே, நீங்கள் எத்தனை காலத்துக்கு என் மாட்சிமை மீது மெத்தனப்போக்கைக் கொண்டிருப்பீர்கள்? எத்தனை காலத்துக்கு வீண் பிம்பம் வெறுமை மற்றும் பொய்யின் பின்னால் அலைந்து திரிவீர்கள்? நானும் வீண் பிம்பத்தையும், வெறுமையையும் நாடிச் சென்றவன் தான். ஆனால், என் பிதாவே, நீர் ஏற்கனவே உமது ஏக பரிசுத்த சுதனானவரை மகிமைப்படுத்தி, அவரை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்து, உமது வலது பாரிசத்தில் அமரச் செய்தீர். இதை எபேசியர் 1:20 “தேவன் இயேசு கிறிஸ்துவைத் தனது வலது பக்கத்தில் வீற்றிருக்கச் செய்தார்” என்று சான்றளிக்கிறது. மேலும் இத்தோடு தொடர்புடைய மேலும் வேதாகம வாசகங்களை நோக்குவோமானால், “கவனியுங்கள், என் பிதா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை உங்களுக்கு அனுப்புவேன். விண்ணில் இருந்து அந்த வல்லமையை நீங்கள் பெறும்வரைக்கும் எருசலேமில் தங்கி இருக்கவேண்டும்” என்று லூக்கா 24 :49 இலும், சத்தியத்தின் ஆவியானவரான பரிசுத்த ஆவியானவர் குறித்து “அந்த உதவியாளர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார். உண்மையின் ஆவியே அந்த உதவியாளர். இந்த உலகம் அவரை ஏற்றுக் கொள்ளாது. ஏனென்றால் உலகம் அவரைக் காணாமலும் தெரிந்துகொள்ளாமலும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அவரை அறிவீர்கள். அவர் உங்களோடு வாழ்கிறார். அவர் உங்களிலும் வாழ்வார்” என்றும் அவரை ஏற்கனவே அனுப்பியிருந்தார் என்று யோவான் 14 : 16 -17 இலும், “அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். தீப்பிழம்புகள் போல வானிலிருந்து கீழ்நோக்கி வந்த பரிசுத்த ஆவியானவர் அங்கிருந்த எல்லோர் மீதும் இறங்கினார். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்திருந்தார்” என்று அப்போஸ்தலர் பணிகள் 2:1-4 இலும், மேலும், அதே வாசங்கங்களின் மற்றொரு பகுதியில், “ஆனால் நான் அதைப் பற்றி அறியவில்லை; அவர் அவரை அனுப்பினார், ஏனென்றால் அவர் இப்போது மகிமைப்படுத்தப்பட்டார், மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு எழுந்தருளினார்” என்றும் உரைக்கிறது. அதேவேளை, “அதுவரை பரிசுத்த ஆவியானவர் இன்னும் அருளப்படவில்லை, ஏனென்றால் இயேசுக் கிறீஸ்துவானவர் இன்னும் மகிமைப்படுத்தப்படவில்லை” என்று யோவான் 7:39 இல் கூறப்பட்டுள்ளது. மேலும் தீர்க்கதரிசி பின்வருமாறு உரைக்கிறார்: நீங்கள் எத்தனை காலத்துக்கு என் மாட்சிமை மீது மெத்தனப்போக்கைக் கொண்டிருப்பீர்கள்? எத்தனை காலத்துக்கு வீண் பிம்பம் வெறுமை மற்றும் பொய்யின் பின்னால் அலைந்து திரிவீர்கள்? நானும் வெகுகாலமாக வீண் பிம்பத்தையும், வெறுமையையும் நாடிச் சென்றவன் தான். ஆதலால் தேவன் ஏற்கனவே அவரது ஏக சுதனான கர்த்தரை மகிமைப்படுத்தியுள்ளார் என்பதை நன்றாக அறிந்துகொள்ளுங்கள். திருப்பாடல்களில் கூறப்பட்டிருப்பவைகள் யாவும் என்னை நோக்கியே கூறப் பட்டிருப்பதாக உணர்ந்தேன். உண்மை என்று நாம் நம்பி அவற்றின் பின்னால் சென்ற யாவும் வெறும் கற்பனைகள், வீண் பிம்பங்கள் என்று அறிந்துகொண்டேன். அவற்றை என் நினைவுகளில் மீட்டிப்பார்க்கும் போதெல்லாம் நான் மனமுடைந்து கண்ணீர் சிந்தி அழுதேன். வெறுமை, வீண் பிரமை மற்றும் பொய்யான தோற்றம் போன்றவற்றை விரும்புபவர்கள் நான் பேசுவதை கேட்டால் நன்றாக இருக்கும் என்று மனதால் எண்ணினேன். ஒருவேளை அவர்கள் கலக்கத்துக்குளாகி அவர்கள் நன்மையெனக் கருதி அறிந்து கொண்டவைகள் யாவற்றையும் மீதும் வெளியில் கக்கி, உம்மைநோக்கிக் கூவியழைத்தது உமது செவிகளில் விழுந்திருக்கும். இதை உரோமையர் 8:3 4 “தேவனுடைய மக்கள் தவறுடையவர்கள் என்று யாரால் குற்றம்சாட்ட முடியும்? எவராலும் முடியாது. கிறிஸ்து இயேசு நமக்காக இறந்தார். அதோடு முடியவில்லை. அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இப்போது அவர் தேவனுடைய வலதுபுறத்தில் வீற்றிருந்து, நமக்காக பிதாவானவரிடம் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்” என்று ஆணித்தரமாக உரைக்கிறது.

10. நான் மேலும் வாசிக்கும் போது கண்டவை இவை: கோபப்படலாம் ஆனால் பாவம் செய்யாதே: இதை எபேசியர் 4:26 “உங்கள் கோபம் உங்களைப் பாவம் செய்யக் கொண்டுசெல்லும் அளவுக்கு அனுமதிக்காதீர்கள்” என்று கூறுகிறது. இதை பார்த்த நான் மீண்டும் என் குறைகளை எண்ணித் துவண்டு போனேன். நான் எனது கடந்தகால நிகழ்வுகளுக்காக மிகவும் மனமுருகிய அதேவேளை, என் மேலேயே எனக்கு எரிச்சலும் வெறுப்பும் உண்டானது. ஆகவே என் தேவனே, எதிர்காலத்தில் பாவத்தில் வீழ்ந்துவிடாமல் நான் என்மீது கரிசனையோடிருக்கவேண்டும் என்றும் நான் உம்மிடம் இறைஞ்சினேன். இருப்பினும், சில சமயங்களில் வரும் நியாயமான கோபம் எனக்கு சரியானதாகவே பட்டது. என்னுள் வாழும் இன்னொரு இயல்பு என்னைப் பாவம் செய்யத் தூண்டுவதில்லை. ஆதலால், அவர்கள் தங்கள் மீது தாங்களே கோபம் கொள்வதில்லை. இதை, “நீ கடினமாகவும் உறுதியாகவும் இருக்கிறாய். நீ மாற மறுக்கிறாய். உன் தண்டனையை மிகுதிப்படுத்துகிறாய். தேவனுடைய கோபம் வெளிப்படும் நாளில் நீ தண்டனையைப் பெறுவாய்” என்று உரோமையர் 2:5 விளக்குகிறது. ஆனால் நான் தேடியலைந்து நன்மைகள் எதையும் நான் வெளியுலகத்தில் காணவில்லை. அவற்றை என் சரீரக் கண்களாலோ, ஆதவனின் கதிர்களால் பெறும் ஒளியைக்கொண்டோ நான் தேட முயற்சிக்கவில்லை. வெளித்தோற்றத்தின் மூலம் மகிழ்ச்சியைத் தேடுபவர்கள் வெறுமையையே காணமுடிகிறது. ஏனென்றால், அவற்றைத் தேடும் முயற்சிகள் காரணமாக ஒருவரது காலமும், ஆற்றலும் விரயமாகின்றன. ஏனென்றால் சரீரக் கண்களால் காண்பவை எல்லாம் நிலையற்றவையாக இருக்கின்றன. பசியினாலும், உபவாசத்தாலும் துவண்டு போயிருக்கும் அறிவுசார் இயல்புகளால் காணும் உருவத்தை மாத்திரமே கிரகிக்க முடியும். என் தேவனே, அப்படியான சூழ்நிலையில், நன்மை என்ற வழியை யார் எமக்கு காட்டுவார்கள்? என்று கேட்டால், அதற்கு நாம் பதில் கூறுவோம். யோவானின் 1:9 வாசகங்கள் இங்கே கவனிக்கத்தக்கது. “அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது.” அதேபோல, “கடந்த காலத்தில் நீங்கள் இருளில் இருந்தீர்கள். இப்பொழுது தேவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். எனவே நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளைப் போன்று நடக்கவேண்டும்” என்ற எபேசியர் எழுதிய 5:8 வாசகங்களும் இதை ஒத்த கருத்துக்களையே இங்கே முன்வைக்கிறது. நிலையானவற்றைக் காணும்போது அவற்றினுள் இருப்பவற்றை நோக்கி ஊடுருவிப் பார்த்தால் எவ்வளவு நன்மை பயக்கக்கூடியதாயிருக்கும்? ஆனால் நான் உள்ளார்த்தமாய் அதை சுவைத்து அனுபவித்திருக்கிறேன். ஆனால் நான் பெற்ற இந்த நன்மையை அவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்றெண்ணும்போது என்னுள் கோபம் பீறிடுகிறது. ஒருவேளை, அவர்கள் தங்கள் உள்ளத்தை என்னைநோக்கித் திருப்பி, கண்களை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு நன்மையை யார் எமக்குத் தருவார்கள் என்று கேட்டிருப்பார்களானால், அதற்கான பதிலை நான் அவர்களுக்கு காட்டியிருப்பேன். கோபம் கொண்டிருந்த என் மனதில், துயரத்தின் வலியும் குடிகொண்டிருந்தது. அத்தருணத்தில் தான், நான் எனது கடந்தகால வாழ்வில் நிகழ்ந்த யாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுத்து, உம்மீது தீவிர விசுவாசத்தை ஏற்படுத்திக் கொண்டேன். – அங்கே தான் நீர் என் மனதில் எனக்கு இனிமையை வளர்த்தீர், என் இதயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினீர். வெளித்தோற்றத்தில் இதை நான் உரத்த குரலில் படித்துக் கொண்டிருக்கும்போது, உள்ளூர அதில் உண்டான அமைதியை உணர்ந்தேன். நான் உலக விழுமியங்கள் மீதான ஆசையை ஒதுக்கினேன். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் இருப்பதில் கரிசனை கொண்டேன். இதற்கிடையில், நான் உமது நித்திய எளிமையின் தானியங்கள், திராட்சை இரசம் மற்றும் எண்ணெயாய் என்னைக் கண்டேன்.

11. தொடர்ந்து நான் அந்த புனித வாக்கியங்கள் மேலும் என் கண்களில் இருந்து கண்ணீரைச் சிந்தச் செய்தது. அந்தக்கண்ணீரோடு எனது மனப்பாரமும் தணிந்தது. இனிமேல் என்ன, நான் நிம்மதியாக உறங்குவேன். நான் தனித்திருந்தபோதிலும், உமது பாதுகாவல் எண்ணில் நிறைந்திருக்கிறது. மரணம் வெற்றிகொள்ளப்பட்டு விட்டது. இதை 1 கொரிந்தியர் 15:54 ம் வாசகங்களின் இறுதியில் “மரணம் வெற்றிக்குள் விழுங்கப்பட்டது” என்று கூறுகின்றன. நீரே மிக உன்னதராக இருக்கிறீர், அதே போல் உம்மை என்றும், எவராலும் மாற்ற முடியாது; கடினமாக உழைத்து சோர்ந்துபோய் இருப்பவர்கள் உம்மில் இளைப்பாறுதல் பெறுகிறார்கள். உம்மைத் தவிர மகத்துவம் நிறைந்தது வேறொன்றுமில்லை. நீர் இல்லாத எந்தவொரு விஷயங்களையும் நாம் தேடுவதில் பயனில்லை. நீரே கர்த்தர் என்று என்னில் ஊன்றி நம்பிக்கையோடு நான் வாழும்படி செய்தீர். மேலும் இவற்றை நான் தொடர்ந்து வாசித்தபோது, அந்த வாக்கியங்கள் என்னைத் தீயால் சுடுவது போலிருந்தது. ஆனால் காதுகேளாத மற்றும் இறந்தவர்களைக் கையாள என்னிடம் எந்த தீர்வும் இல்லை. அவர்களைப் பொறுத்த வரையில், நானும் எனது கடந்தகாலத்தில் ஒரு கொள்ளைநோய்க் காவியாகவே தான் இருந்தேன். விண்ணகத்தில் இருந்து வழியும் தேனாக, உமது தெய்வீக ஒளியினால் பிரகாசிக்கும் வேதாகம நூல்களை கசப்புடன் நோக்கி அதை கடுமையாக விமர்சிக்கும் பார்வையிருந்தும் குருடனாய், மோசமான அறிவீனனாய் இருந்தேன். இந்த வேதாகமத்தின் எதிரிகளால் நான் அழிவுக்குள்ளானேன்.

12. அந்த சொற்ப விடுமுறை காலத்தில் நடந்தேறிய யாவற்றையும் என்னால் எப்படி நினைவில் வைத்திருக்க முடியும் என்ற சஞ்சலம் என் மனதில் தோன்றியது. இருப்பினும் அந்த நிகழ்வுகள் எவற்றையும் நான் அத்தனை இலகுவில் மறந்துவிடவில்லை. உமது தண்டனையின் தீவிரம் மற்றும் உமது கருணையின் அற்புதமான நகர்வையும் பற்றி பேசாமல் என்னால் மௌனம் காத்துவிட முடியாது. அந்த நேரத்தில் நீர் என்னை பல்வலியால் அவதியுறச் செய்து, வலியின் தீவிரம் காரணமாக என்னால் பேசமுடியாமல் போனபோது, சகலவித ஆரோக்கியத்துக்கும் நன்மைகளுக்கும் காரணமாக இருந்த தேவனான உம்மை நோக்கி எனக்காக மன்றாடும்படி அங்கிருந்த என் நண்பர்கள் அனைவருக்கும் அவசர வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. என் மனதில் தோன்றிய அந்த வேண்டுகோளை எழுதி அவர்களுக்கு படிக்க கொடுத்தேன். அதேசமயம், முழுமனதுடனுமான விசுவாசத்தோடு, நாங்கள் முழந்தாளிட்டு செபித்தபடன் அந்த வலி மறைந்தது. அந்த வலி எங்கே போனது? அல்லது எப்படி போனது? என் ஆண்டவரே, என் தேவனே, எனது ஆரம்ப காலத்திலிருந்தே நான் அத்தகைய வலியை அனுபவித்ததில்லை என்பதை உணர்ந்து நான் மிகவும் பயம் கொண்டதை உம்மிடம் ஒப்புக்கொள்கிறேன். உமது நோக்கங்கள் என் மீது ஆழமாக பதிந்து விட்டமையால், விசுவாசத்தில் மகிழ்ந்து உமது நாமத்தைப் போற்றினேன். உமது ஞானஸ்நானத்தால் இன்னும் மன்னிக்கப்படாத எனது கடந்தகால பாவங்களினால் ஏற்பட்ட குற்ற உணர்வுகள் என்னைத் துன்புறுத்தியது.

அத்தியாயம் 5 – ஆயர் ஆம்ப்ரோஸ் அவர்கள் பரிந்துரைத்தபடி, அவர் ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களைப் படித்தார், ஆனால் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை

அந்தப் பருவகால விடுமுறை நிறைவுக்கு வந்ததும், நானும் ஓய்வு பெறும் காலம் வந்தது. உடனே நான் மிலான் நகர மக்களை நோக்கி, அவர்களது பிள்ளைகளான மாணவர்களுக்குக் கல்வியைப் போதிக்க புதியதொரு விரிவுரையாளரைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு ஒரு அறிவித்தலை வழங்கினேன். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று உமக்கு சேவை செய்ய நான் பரிபூரணமாக என்னைக் கையளித்துவிட்டேன். இரண்டாவது; எனது சுவாசப்பையில் ஏற்பட்டுள்ள வருத்தம் காரணமாக என்னால் மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொண்டேன். அத்தோடு, நெஞ்சில் ஏற்பட்ட வலி எனது விரிவுரையாளர் பணியில் என்னைத் தொடரவிடாமல் தடுத்தது. உமது அருளாளர் அருட்தந்தை அம்புரோஸிடம் எனது முந்தைய தவறுகள் மற்றும் தற்போதைய தீர்மானங்கள் குறித்து கடிதம் மூலம் தெரிவித்தேன். தேவனுடைய மகத்தான அருட்கிருபையை நான் அடையும் நோக்கில் என்னைத் தகுதியுடையவனாக ஆக்குவதற்கும், தயார்படுத்திக் கொள்ளவும் நான் என்ன செய்யக்கூடும் என்று அவரின் அறிவுரைகளை வேண்டி நின்றேன். அதற்கு ஆயர் அம்ப்ரோஸ் அவர்கள், தீர்க்கதரிசியான ஏசாயாவின் நிரூபங்களைப் பரிந்துரைத்தார். ஏனென்றால் அவர் மற்றைய இறைவாக்கினரை விட, சுவிசேஷத்தை முறையாக முன்னுரைக்கவும், நற்செய்தியை புறஜாதியினரும் அறிந்துகொள்ளும் முகமாக நேர்மையான அழைப்பையும் விடுப்பவராக இருந்தார். ஆனால் நானோ, புத்தகத்தின் முதல் பகுதியைப் பார்த்தும் அதைப் புரிந்து கொள்ளாமல், புத்தகம் முழுவதும் இப்படித்தான் தெளிவற்றிருக்குமோ என்று நினைத்து, அதை ஒதுக்கி வைத்தேன். நம் இறைவனின் வார்த்தைகளில் சிறப்பாகப் பயிற்சி செய்த பின்னர், அதை எடுத்து வாசித்துக்கொள்ளலாம் என்று எண்ணினேன்.

அத்தியாயம் 6 – அவர் அலிபியஸ் மற்றும் அவரது மகன் அடியோடாடஸ் ஆகியோருடன் மிலானில் ஞானஸ்நானம் பெற்றார் THE BOOK DE MAGISTRO

14. எனது பெயரைப் பதிவுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலும் அதற்கான நேரம் நெருங்கி வந்ததாலும், அங்கிருந்து, நான் என் நாட்டை விட்டு வெளியேறி மிலானை அடைந்தோம். உம்மோடு ஞானஸ்நானத்தின் வாயிலாக புதிய பிறவியாய்ப் பரிணமிக்க அலிபியஸும் என்னோடு எனது பயணத்தில் இணைந்துகொண்டான். உமது திருவருட்சாதனங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தாழ்ச்சி என்ற அணிகலனை அவன் அணிந்துகொண்டு, சுய ஒழுக்கம், தன்னடக்கம், துணிச்சல் போன்ற ஆடைகளை அணிந்தவனாய், இத்தாலி தேசத்தின் பனிபடர்ந்த பூமியில் வெறும் கால்களோடு நடந்துவந்தான். என் பாவத்தால் எனக்குப் பிறந்த அடியோடேடஸ் [கடவுளால் அருளப்பட்டது என்பது அதன் பொருள்] என்ற சிறுவனையும் நாம் எம்மோடு அழைத்துச் சென்றோம். நீர் அவனை முழுமையான மனிதனாய் உருவாக்கிய படியால், அவனையும் ஞானஸ்நானத்தின் மூலம் இணைத்துக்கொள்ள எம்மோடு பயணிக்கச் செய்தோம். அந்தச் சிறுவனுக்கு வெறும் பதினைந்து வயதுதான் ஆகியிருந்தது. புத்திசாலித்தனத்திலும் அறிவுக்கூர்மையிலும் பல பெரிய மற்றும் கற்றறிந்த மனிதர்களைக் கூட மிஞ்சியவனாகக் காணப்பட்டான். என் தேவனே, எல்லா உயிரினங்களையும் படைத்தவரே, உமது வெகுமதிகளுக்காக நான் நன்றியுடன் தலைவணங்குகிறேன். சகல படைப்புக்களுக்கும் காரணமான என் தேவனே, என்னைப் பற்றிய குறைபாடுகளைச் சீர்திருத்தும் சக்தியை எனக்கு கொடுத்திருந்த போதும், எனது மகனான அந்த சிறுவனுக்கு நான் கொடுத்ததெல்லாம் பாவத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, நாங்கள் அவனை நீர் கற்றுக் கொடுத்த ஒழுக்கத்தில் வளர்த்தோம், நீர் ஒருவர் மட்டுமே எங்களுக்கு ஊக்கமளித்தீர், வேறு யாரும் இல்லை – உமது வெகுமதிகளுக்காக நான் மீண்டும் உம்மிடம் சிரம் தாழ்த்தி நன்றி நவில்கிறேன். எங்களது புத்தகங்களில் ஒன்று, ‘குரு’ என்ற தலைப்பைக் கொண்டிருந்தது. அப்புத்தகத்தில் அடியோடேடஸ் என்ற அந்த இளவயதினனுக்கும் எனக்கும் நிகழ்ந்த உரையாடல் காணப்படுகிறது. என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவனின் வாயில் இருந்தவை அனைத்தும் அவனது பதினாறாவது வயதில் அவனது மனதில் கொண்டிருந்த எண்ணங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்னும் பல அற்புதமான திறமைகளை நான் அவரிடம் கண்டேன். அந்தத் திறமை என்னைப் பிரமிக்க வைத்தது. உம்மைத் தவிர அத்தகைய அற்புதங்களைச் செய்பவர் வேறு யார் இருக்க முடியும்? நீர் அவனை சீக்கிரமே இந்தப் புவி வாழ்விலிருந்து உம்மிடம் அழைத்துக் கொண்டீர். அவனைப் பற்றிய நினைவுகள் என் மனதில் எவ்வித கலக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அத்தோடு அவனது சிறு பராயம், பதின்ம வயதுப் பருவம் மற்றும் இளமைப்பருவம் குறித்து நான் எவ்வித கவலையும் கொள்ளவில்லை. உமது கிருபையால் அவனை, வயது வித்தியாசம் இருந்தபோதும் எங்களுடன் இணைத்துக்கொண்டு உமது ஒழுக்கத்தில் கல்வி புகட்டி ஞானஸ்நானமும் பெற்றோம். ஆகவே, எங்களின் கடந்தகால வாழ்க்கையைப் பற்றிய தேவையற்ற சஞ்சலங்கள் எங்களை விட்டு நீங்கியது. அக்காலத்தில் மானிடரின் இரட்சணியத்துக்காக நீர் வகுத்த அற்புதமான வியூகங்களையிட்டு நான் திருப்தி கொள்ளாதவனாக இருந்தேன். உமது கீர்த்தனைகளையும் பாடலையும் வாசித்து நான் நிறையக் கண்ணீர் சிந்தி அழுதேன்! இனிமையாகப் பேசும் உமது திருச்சபையின் குரல் என்னைச் சாந்தப்படுத்தியதோடு, அதன் மூலம் நான் மிகவும் வசீகரிக்கப் பட்டேன். அந்தக் குரல்கள் என் காதுகளுக்குள் தேனாய்ப் பாய்ந்தன, உண்மை என் இதயத்தை நிறைத்தது. என் பக்தி உணர்வு மேலிட இதுவே வழிவகுத்தது. என் கண்ணீர் கரைபுரண்டோடியது. அதன் மூலம் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்.

அத்தியாயம் 7 – மிலானின் திருச்சபை கீதங்கள், அம்ப்ரோசின் துன்புறுத்தல் குறித்து ஜஸ்டினா கூறியவை மற்றும் இரண்டு வேதசாட்சிகளின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை

15. சிறிது காலத்திற்கு முன்பிலிருந்து தான், மிலானில் உள்ள தேவாலயத்தில் மக்கள் சகோதரத்துவத்துடன் இன்றிணைந்து பாடுவதும், தங்களின் இதயங்களையும் குரல்களையும் ஒன்றாக சேர்த்து உற்சாகத்துடன் துதிகீதங்களை இசைப்பதும், ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி, ஆறுதல் வார்த்தைகளால் மற்றவரை உற்சாகப்படுத்துவதும் நடைபெற்று வந்தது. இளம்பராய அரசனான வாலண்டினியனின் தாயான ஜஸ்டினா, மதவெறிப் பின்னணியைக் கொண்ட ஆரியர்களால் கவர்ந்திழுக்கப்பட்டு, உமது ஊழியரான ஆம்ப்ரோஸை வதைத்து, தண்டித்து சுமார் ஒரு வருடம் நிறைவடைந்திருந்தது. பக்தியுள்ள மக்கள் தேவாலயத்தைக் காவல் காத்து, தங்கள் ஆயரான உமது அடியார் அம்ப்ரோஸ் அவர்களுக்காகத் தங்கள் உயிரையும் விடத் தயாராக இருந்தனர். அங்கே உமது மற்றுமொரு அடியாளான என் தாய், சக மக்களோடு இணைந்து அவர்களது தியாக நோக்கங்களின் பெரும் பகுதிக்குத் தலைமை வகித்து பிரார்த்தனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். உமது வல்லமை எனும் தணல் எம்மை உருக்கிவிடாமல், குளிர்ச்சியாக வைத்திருந்த போதும், நகரத்தில் இடம்பெற்ற குழப்பகரமான மற்றும் பதட்டமான சூழ்நிலை எங்கள் மனதில் சற்று சஞ்சலத்தை ஏற்படுத்தியிருந்தது. இக்காலப்பகுதியில் தான், கிழக்கத்திய திருச்சபையின் பாரம்பரியங்களுக்கு அமைவாக, பாடல்களும் சங்கீதங்களும் பாடப்பட வேண்டும் என்ற ஒரு வழக்கம் நடைமுறையில் இருந்தது. அதன் மூலம் மக்களை சோகத்திலும், சோர்விலும் மூழ்கி விடாமல் வைத்திருப்பது தான் அதன் நோக்கம். அந்த நடைமுறை மிலானிலும் பின்பற்றப்பட்டது. அவ்வாறு கடைபிடிக்கப்பட்ட அந்த வழக்கம், அன்றிலிருந்து இன்று வரை பலராலும் பின்பற்றப்படுகிறது. ஆம், உலகம் முழுவதிலும் உள்ள உமது எல்லா சபைகளாலும் இந்த வழக்கம் பின்பற்றுவதை இன்றளவும் காணக்கூடியதாக இருக்கிறது.

16. இந்தக் காலகட்டத்தில்தான், புனித வேதசாட்சிகளான கெர்வாசியுஸ் மற்றும் புரோட்டாசியஸ் ஆகியோரின் உடல்கள் (இத்தனை ஆண்டுகளாக உம்மால் பாதுகாக்கப்பட்ட இரகசியக் களஞ்சியத்தில் அழியாமல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த) உடல்கள் கிடத்தப்பட்ட இடத்தை நீர் ஒரு தரிசனத்தின் மூலம் உமது புகழ்பெற்ற ஆயருக்கு நீர் வெளிப்படுத்தினீர். அரச பரம்பரையில் உதித்த அந்தப் பெண்ணின் கோபத்தணலை தணியச் செய்யும் முகமாக, சரியான நேரத்தில் அழிவுறாத அந்த புனித வேதசாட்சிகளின் உடலங்களை அடையாளம் காட்டினீர். அந்த உடலங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, அவற்றுக்குரிய மரியாதை செலுத்தப்பட்டு, ஆயர் அம்ப்ரோஸ் அவர்களின் பேராலயத்தில் வைக்கப்பட்டன. அசுத்த ஆவிகளால் பீடிக்கப் பட்டவர்கள் (பிசாசுகள் என்று தாங்களாகவே ஒப்புக் கொள்கிறார்கள்) குணமடைந்தது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த ஒரு குறிப்பிட்ட மனிதன், அவன் அந்த நகரத்தின் ஒரு பிரபலமான குடிமகன், அந்நகரத்து மக்களின் ஆரவாரத்துக்கான காரணத்தை வினவி, தனது வழிகாட்டியை விரைந்து வருமாறு பணித்து, அந்த இடத்துக்கு அவனை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டான். அந்த இடத்தை அடைந்த பிறகு, பார்வையற்ற மனிதன் தனது கைக்குட்டையால் உமது புனிதர்களின் உடலங்கள் கிடத்தி வைக்கப்பட்டிருந்த பாடைகளைத் தொட அனுமதி கேட்டான். ஏனென்றால், உம்மீது அன்புகொண்டவர்களின் இறப்பு என்பது உமது பார்வையில் மிகவும் மதிப்புக்குரியதாய் இருக்கிறது என்பதால். அந்த புனிதர்களின் உடலங்கள் அடங்கியுள்ள பாடையைத் தனது கைக்குட்டையால் தொட்டு அந்த கைக்குட்டையைத் தனது கண்களில் ஒற்றிக்கொண்டான். அவ்வாறு செய்த உடனேயே, அத்தனை காலமும் பார்வையிழந்திருந்த அவனது கண்கள் திறந்துகொண்டன. உடனேயே இதுபற்றிய செய்தி எங்கும் காட்டுத்தீ போலப் பரவியது. உமது புகழ் எங்கும் பிரகாசிக்கத் தொடங்கியது. பகையுணர்வால் கனன்று கொண்டிருந்தவள் உம்மீது நம்பிக்கை வைக்காவிடினும், அவளது ஆத்திரம் தணிந்திருந்தது. என் தேவனே, உமக்கு நன்றி. நான் இவற்றை மறந்திருந்தபோதிலும், உம்மிடம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நீர் சித்தம் கொண்டு, எங்கோ இருந்து என் நினைவை மீட்டெடுத்து என்னை வழிநடத்தினீர். நீர் மிகவும் பெரியவர், உன்னதர். அப்படியிருந்தும், உமது தைலங்களின் நறுமணம் மிகவும் இரம்மியமாக இருந்தபோது, நாங்கள் உங்கள் பின்னால் ஓடவில்லையா? என்று சொலொமனின் உன்னதப்பாடல் 1:3-4 இல் கூறுவது இங்கே குறிப்பிடத்தக்கது. அதனால் நான் உமது கீர்த்தனைகளைப் பாடும்போது மிகவும் ஏங்கி அழுதேன். எனது மூச்சு இரைத்தது. இருப்பினும், நான் இறுதியில் உமதன்பில் சுவாசித்தேன். இந்த புல்லினால் வேயப்பட்ட வீட்டில் காற்று இதமாய் வீசும் வரை உம்மில் நான் சுவாசிக்கும் இந்த நிலை தொடரும்.

அத்தியாயம் 8. எவோடியஸின் மனமாற்றத்தையும், ஆப்பிரிக்காவுக்குத் திரும்பும்போது நிகழ்ந்த அவரது தாயின் மரணத்தையும் தான் பெற்ற கல்வியையும் அவர் எக்கத்துடன் மீட்டிப்பார்க்கிறார்

17. மனிதர்களை ஒரே வீட்டில், ஒரே சிந்தனையில் குடியிருக்கச் செய்த நீர், பொதுப்பணித் துறையில் ஒரு முகவராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த எங்கள் நகரத்தைச் சேர்ந்த இளைஞரான எவோடியஸை எங்களுடன் இணையச் செய்தீர். அவன் உமது சேவைக்காகத் தன்னைத் தயார் படுத்துவதற்காக அவன் பொதுப்பணித் துறையில் அவன் ஆற்றிய பணியைத் துறந்தான். நாங்கள் ஒன்றாக இருந்து, ஒன்றாக இணைந்து, ஒரு புனித நோக்கத்துடன் வாழ முடிவுசெய்தோம். உமது சேவையில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள மிகவும் வசதியாக இருக்கும் சில இடங்களைத் தேடி மீண்டும் ஆப்பிரிக்காவுக்குப் பயணிக்க முடிவு செய்தோம். இப்படியான எங்கள் பயணத்தில், நாங்கள் திபெரின் ஒஸ்டியாவை அடைந்தோம். அங்கே நாம் இருந்தபோது, ​​என் தாய் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார். அத்தோடு நான் மிக அவசரமாக எழுதவேண்டியிருப்பதனால், நிறைய நிகழ்வுகளை வேகமாகக் கடந்து செல்லவேண்டி இருப்பதால், ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாகக் குறிப்பிட முடியாதுள்ளது. என் தேவனே, முழுமையாகக் கூறமுடியாத விடயங்களையிட்டு அடியேனைத் தயவுடன் பொறுத்தருளும். இருந்தபோதிலும், என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கி, தனது இதயத்தினால் நிரந்தர ஒளிக்குள் என்னை அரவணைத்து வழிநடத்தியவள் அவளே. ஆகவே உமது அடியாளான என் தாயைப் பற்றி என் மனம் ஒப்புவிக்கக்கூடிய அனைத்தையும் நான் எக்காரணம் கொண்டும் கடந்துபோகவிட மாட்டேன். அதேநேரம், அவளால் எனக்கு கிடைத்த கொடைகள் பற்றி அல்லாமல், உமது கிருபையால் அவளுக்கு கிடைத்த கொடைகளைப்பற்றியே நான் சிலாகிக்கிறேன். அவள் தன்னைத் தானாக உருவாக்கவோ கல்வியறிவைப் பெற்றுக் கொள்ளவோ, தன்னை வளர்த்துக்கொள்ளவோ இல்லை. ஏனெனில், நீரே அவளைத் தெரிந்துகொண்டு அவளை உருவாக்கினீர். அவள் எப்படிப் பட்டவள் என்றோ, அவளது குணவியல்புகள் என்னென்ன என்பது பற்றியோ அவளது தந்தையோ தாயோ அறிந்ததில்லை. உம்மீது கொண்டிருந்த தேவபயத்தால் அவள் நெறிப்படுத்தப்பட்டு, உமது ஏக சுதனான கிறீஸ்துவானவரின் ஒழுக்கம் என்ற செங்கோலால் வழிநடத்தப்பட்டு அவள் தன்னை உருவாக்கிக்கொண்டாள். மேலும், அவள் திருச்சபையின் ஒழுக்கசீலம் மிக்க, விசுவாசப் பின்னணியைக் கொண்ட ஒரு உறுப்பினரின் இல்லத்தில், ஒழுக்கம் மிகுந்த ஒரு மங்கையை அவள் வாழ்ந்தாள். மேலும், அவளது இந்த நல்ல ஒழுக்கத்துக்குக் காரணம் அவளது தாய் தான் என்று அதிகம் சொன்னதில்லை. மாறாக ஒரு வயதான உதவியாளரான ஒரு முதிய பெண்மணியைப் பற்றியே அதிகம் பேசினாள். குழந்தையாக இருந்தபோது அந்த வயோதிபப் பெண்மணி தனது தந்தையை கூடத் தன் தோள்களில் சுமந்ததாக சொல்லிக்கொண்டிருந்தாள். ஏனெனில் சிறியவர்கள் எப்போதுமே வளர்ந்தோரின் முதுகில் ஏறி விளையாடுவதில் விருப்பமுடையவர்களாக இருப்பர். ஆகவே அந்த வயோதிபப் பெண்ணைப் பற்றி என் தாய் கரிசனையோடு பேசிக்கொண்டிருப்பாள். அவளது பல்வேறுபட்ட நற்கிரியைகளுக்காகவும், அவளது வயது, அனுபவ முதிர்ச்சி மற்றும் நல்ல குணவியல்புகள் காரணமாகவும், அந்த கிறிஸ்தவ இல்லத்தின் அதிகாரிகளால் அவள் மிகவும் போற்றப்பட்டாள். அவளது எஜமானரின் மகள்மாரைக் கவனிக்கும் ஒரு உயரிய பொறுப்பும் அவளது கைகளில் ஒப்படைக்கப்பட்டது. அதை அவள் கரிசனையுடனும், அக்கறையோடும் செய்தாள். தேவையான நேரங்களில் கண்டிப்புடனும் இருப்பதிலும், நிதானமான சாதுர்யத்துடன் அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்துவதிலும் அவள் மிகவும் ஆர்வமாகவும் விவேகத்துடனும் செயல்பட்டாள். உணவு மேசையில் அந்தப் பிள்ளைகள் அவர்களது பெற்றோருடன் அமர்ந்து உணவுண்ணும் நேரங்களைத் தவிர, தாகத்தின் அவர்களது தொண்டைகள் வறண்டு போனாலும், அவர்களைத் தண்ணீர் குடிக்கக்கூட அவள் அனுமதிக்க மாட்டாள். அப்படி அனுமதித்தால், அது பின்னாட்களில் அவர்களைத் தவறான பழக்கங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதனாலேயே அவள் இவ்வாறு கண்டிப்புடன் நடந்துகொண்டாள். அத்தோடு அவள் மிகவும் விவேகத்தோடு அந்தப் பிள்ளைகளை நோக்கி, ‘திராட்சை இரசம் போன்ற மது இன்று உங்களுக்கு கிடைக்காத காரணத்தால், நீங்கள் தண்ணீரைத் தேடி அலைந்து அதை பருகுகிறீர்கள். ஆனால், வருங்காலத்தில் நீங்கள் திருமணம் செய்தபின், திராட்சை இரசம் போன்ற மது வகையறாக்கள் சேமித்துவைக்கும் அறையின் திறப்பு உங்கள் கைகளுக்குள் வரும்போது, நீங்கள் தண்ணீரை ஒரு பொருட்டாகக் கருதாமல், மதுவை நாடி அந்தப் பழக்கத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிக்க நேரிடும்’ என்பது போன்ற நல்வழி காட்டக்கூடிய சிறந்த அறிவுரைகளை அவர்கள் மனதில் விதைத்தும், தண்ணீர்த் தாகத்தைக் கட்டுப்படுத்தி, வேண்டாத நேரங்களில் அவற்றை நாடிச் செல்லாமல் சகிப்புத் தன்மையைக் கடைபிடிக்குமாறு அவர்களுக்கு எடுத்துக்கூறி, அந்தப் பிள்ளைகள் வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய பேராசைகளுக்கு இடம்கொடுத்து விடாமல் கண்ணியத்துடன் வாழ அவர்களைப் பயிற்றுவித்தாள்.

18. இருந்தபோதிலும், உமது அடியாள் தன் மகனிடம் கூறியது போல, திராட்சை இராசத்தின் மீது கொண்ட மோகம் அவளைத் தீவிரமாக ஆட்கொள்ளத் தொடங்கியது. இது அவளைத் தொற்றிக் கொள்ளக் காரணம் என்னவென்றால், அவள் சிறு வயதினளாக இருந்தபோது, அவளது பெற்றோர் திராட்சை [மது] இரசம் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறையில் உள்ள பீப்பாய்களில் இருந்து மது இரசத்தை மொண்டு எடுத்து வருமாறு அவளிடம் கூறுவது வழக்கம். பீப்பாய்களின் மேலுள்ள மூடியைத் திறந்து உள்ளே இருக்கும் இரசத்தைக் குவளைகளால் அள்ளித்தான் எடுக்கவேண்டும். அப்படி மொண்டு எடுத்த மது இரசத்தை போத்தல்களில் ஊற்றி அவளது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில், போத்தல்களில் ஊற்றுவதற்கு முன், அவள் அந்தக் குவளைகளில் எஞ்சியுள்ள சிறிதளவு மதுவைச் சுவைத்துப் பார்ப்பாள். அப்படியிருந்தும், அவள் அதன் மீது அதீத ஆவல் கொண்டிருக்க வில்லை, ஏனெனில் அந்த மதுவின் சுவை அவளுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவளை இப்படிக்கூட சுவைக்கத் தூண்டியது அவள் அந்த மதுவின் மீது கொண்ட மோகத்தால் அல்ல, இளவயதுக் குறும்புத்தனத்தால் ஏற்பட்ட ஒரு சிறு தூண்டுதல் மட்டுமே. அத்தோடு, இப்படியான விளையாட்டுத்தனத்தால் ஏற்படக்கூடிய ஒருசில பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாதிருக்கும் முகமாக, வீட்டிலுள்ள பெரியவர்கள் அவர்களைக் கொஞ்சம் அடக்கி வைப்பார்கள். ஆயினும், இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால், தனது துடுக்குத்தனம் காரணமாக அவள் துளித்துளியாய்ச் சுவைத்துப் பழகிய அந்த திராட்சை இரசத்தை, குவளை குவளையாகக் குடிக்கத் தொடங்கினாள். ‘சிறிய விடயங்களை அலட்சியம் செய்பவன் தன்னையறியாமல் பெரிய விடயங்களில் விழுந்து அதில் மாட்டிக் கொள்வான்’ என்ற உதாரணம் இதற்கு மேலும் சான்றுபகர்கிறது. அப்படியானால், தன்னடக்கத்தையும், ஒழுக்கத்தையும் போதித்த சாதுரியம் மிக்க அந்த மூதாட்டி எங்கே போனாள்? அவளால் விதிக்கப்பட்ட தடைகள் என்னவானது? தேவனே, நலம்தரும் உமது மதுந்தான் உமது கண்கள் எங்களைக் கண்காணிக்கவில்லை என்றால், இனம்புரியாத நோய்களுக்கு எதிராக எங்களால் வெற்றிபெற முடியுமா? தந்தையோ, தாயோ அல்லது எம்மைக் கவனித்துக்கொள்வார் எவருமற்ற நிலையில் கூட, நீர் எம்மோடு இருக்கிறீர். நீரே எங்களை சிருஷ்டித்தீர், நீரே எங்களை அழைத்தீர், எங்கள் ஆன்மாவின் இரட்சிப்புக்காக அனுப்பப்பட்டவர்கள் மீது நன்மைகளைப் பொழிந்தீர். என் தேவனே, அவளை எப்படிக் குணப்படுத்தினீர்? அவளை எப்படி முழுமையானவளாக மாற்றினீர்? அவளைக் கண்டிக்கவும் அவளது பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மற்றுமொரு இனிய மனம் கொண்டவளை நியமித்தீர். ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கத்தியைக்கொண்டு, ஒரே தரத்தில் நறுக்கென்று வெட்டி உடலின் அழுகிய பாகத்தை அகற்றுவதுபோல, அவளது தீய பழக்கங்களையும் நீர் அகற்றினீர். வீட்டில் தனித்திருந்தபோது, ஒருநாள் அவ்வீட்டின் பணிப்பெண் தனது சிறிய எஜமானியான இந்த சிறு பெண்ணுடன் மது சேமித்து வைத்திருக்கும் களஞ்சிய அறைக்குச் சென்றாள். அப்போது அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு குறும்புத்தனமான சிறுபிள்ளை சண்டை மூண்டது. அந்த சண்டை கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வாக்குவாதமாய் மாற, அந்தப் பணிப்பெண் இவளைப் பார்த்து, ‘நீ ஒரு குடிகாரி’ என்று சொல்லிவிட்டாள். இந்த வார்த்தை அவளது மனதில் மிகுந்த வலியை ஏற்படுத்தியது. இதனால் அவள், தன்னைப் பிடித்திருந்த இந்தக் கேவலமான மதுப் பிரியத்தை எண்ணி எண்ணி வருந்தினாள். வெட்கித் தலைகுனிந்தாள். உடனடியாகவே தனது மதுப்பழக்கத்தை விட்டுவிட முடிவுசெய்தாள். முகதாட்சணைக்காக நம்மைப் புகழ்ந்து பேசும் நண்பர்கள் எம்மைக் கெடுத்துவிடுவது போலவே, சில சமயங்களில், எம்மீது விரோதத்தைக் காட்டக் கூடியவர்கள்; அவர்கள் எதிரிகளாய் சண்டையிட்டு அதன்மூலம் எம்மைத் திருத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு ஏற்றவாறு நீர் அனைத்தையும் பகிர்ந்து அளிக்கிறீர். மேலே சொல்லப்பட்ட அந்தப் பணிப்பெண், தனது சிறிய எஜமானியைக் காயப்படுத்த விழைந்தாளேயன்றி, அவளைத் திருத்துவதற்கு முயலவில்லை. அதனால் தான் அவர்களை இருவரும் தனித்திருந்தவேளை அப்படியான மனவேதனையை ஏற்படுத்தக்கூடிய அந்த வார்த்தையைக் கூறினாள். இதிலே இரண்டு அம்சங்களைக் கவனிக்கக் கூடியதாயிருக்கிறது. ஒன்று, அவ்வேளை, அந்த இடத்தில் எவரும் இல்லாதபடியால், அவள் தனிமையை எண்ணி அச்சம் கொண்டிருக்கலாம். அல்லது, இரண்டாவதாக, அந்தச் சிறுமி பயம் காரணமாக இத்தனை காலம் இதை யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், வானத்தையும் வையத்தையும் ஆட்சிசெய்யும் என் தேவனான நீர், ஆழமான நீரோடைகளின் வழித் தடத்தை மாற்றி கொந்தளிப்பான நீரோட்டம் என்ற வாழ்க்கையை அமைதியான வழியில் திருப்புகிறீர். ஒரு ஆன்மாவின் அசௌகரியத்தில் இருந்து மற்றொரு ஆன்மா சௌகரியம் பெற வழிவகுக்க உம்மால் முடியும். அதாவது, தவறு செய்யும் ஒருவரை மற்றொருவர் நிறுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியாகத் திருந்தியவர் வெளிப் படுத்தும் மாற்றம், அவரைத் திருத்தியவரின் திறமை காரணமாகத்தான் என்று பெருமை கொள்ளாதவாறு நீர் இதைச் செய்தீர்.

அத்தியாயம் 9 – அவர் தனது தாயின் அருமை பெருமைகளையும், அவளுடைய கணவன் மற்றும் அவளுடைய மகன்மாரிடம் அவள் காட்டிய கருணையையும் பற்றி விவரிக்கிறார்

19. இவ்வாறாக அச்சம், மடம், நாணம், நிதானம் போன்ற அணிகலன்களால் அணிவிக்கப்பட்டு கற்புடையவளாய் வளர்ந்த அவளை, அவளது பெற்றோர் உமக்கு கீழ்ப்படிபவளாய் வளர்த்ததைவிட, நீர் அவளை அவளது பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவளாய் வளரச் செய்தீர். காலப்போக்கில், திருமண வயதை எட்டிய அவள் ஒருவனுக்கு மணம் முடித்துக்கொடுக்கப்பட்டாள். அவள் அவனைத் தன் கணவனாக மட்டுமன்றி, தனது தலைவனாய் ஏற்றுக்கொண்டு நல்ல மனைவியாய் அவனுக்கு பணிவிடை செய்து வாழ்ந்தாள். அவள் தனது கணவனை உமக்கு உகந்தவனான ஆக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். தனது நடத்தை வாயிலாக அவனிடம் உம்மைப் புகழ்ந்தேற்றினாள். அதன் மூலம் அவனது கணவனின் பார்வையில், நீர் அவளை நியாயமானவளாகவும், பயபக்தியுடன் அன்பாகவும், போற்றத்தக்கவளாகவும் ஆக்கினீர். தன் கணவனுடன் ஒருபோதும் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடாது என்பதற்காக அவனது விசுவாசமின்மையைப் பொறுத்துக்கொண்டாள்.என்றோ ஒருநாள் உமது இரக்கத்தின் உதவியால் அவன் மனம்திரும்புவான் என்றும், கற்புடையவனாய் இருப்பான் என்றும் அவள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தாள். அவன் கருணை இரக்கம் உடையவனாக இருந்தபோதிலும், சடுதியாகக் கோபம் கொள்பவனாகவும் இருந்தான். அவ்வாறு கோபம் கொள்கின்ற மனிதனான அவனை, தனது சொற்கள் மற்றும் செயல்களால் சீண்டக்கூடாது என்றும் அவள் கவனமாக இருந்தாள். அவனது கோபம் தணிந்து, அமைதி, சாந்தம் நிலவும்போது, சரியான சந்தர்ப்பம் பார்த்து, அவள் தான் செய்த செயல்கள் குறித்து அவனிடம் பக்குவமாக எடுத்துச் சொல்வாள். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால், அமைதியும் சாந்தமும் கொண்ட கணவன்மாருக்கு வாழ்க்கைப்பட்ட பல பெண்கள், அவர்களது கணவன்மாரால் துன்புறுத்தப்பட்டு தங்கள் முகத்திலும் உடம்பிலும் காயங்களுடனும், அக்காயங்களால் ஏற்பட்ட வடுக்களையும் சுமந்தவண்ணம் வாழ்ந்துகொண்டிருப்பது கண்கூடு. பெண்கள் தங்களுக்கிடையே இடம்பெறும் பிரத்தியேக உரையாடல்களின் போது, தங்கள் கணவன்மாரின் செயல்கள் அதனால் பட்ட வேதனைகள் போன்றவற்றை இவளிடம் சொல்லிப் புலம்புவார்கள். அவளும் அவர்களோடு சேர்ந்து நகைச்சுவையாகப் பேசி அவர்களது மனக்காயங்களை ஆற்ற முயற்சிப்பாள். அவர்களது வாயாடித்தனம் தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்று நாசூக்காகச் சொல்வாள். திருமணத்துக்கான வாக்குறுதி ஆவணம் வாசிக்கப்படும் போது, அது தங்களுக்கான அடிமைச் சாசன ஆவணம் என்ற நோக்கத்தோடுதான் அதைக் கருதவேண்டும் என்றும் அவள் மற்றைய பெண்களிடம் சொல்வாள். ஏனென்றால், அந்த நிமிடம் முதல், பெருவாரியான மனைவிமார் தங்கள் கணவன்மாருக்கு அடிமைகளாக ஆகிவிடுகின்றனர் என்றும் அவள் கூற மறப்பதில்லை. எனவே, தங்கள் நிலைமையை எப்போதும் கவனத்தில் கொண்டு, அதற்கேற்றாற்போல் வாழவேண்டும் எனவும், தங்கள் எஜமானர்களான கணவன்மாருக்கு எதிராக செயல்படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவள் கூறுவாள். முரட்டுத் தானம் கொண்ட தனது கணவனை சகித்துக் கொண்டு வாழும் இவளது வாழ்க்கையைக் கேள்வியுற்று, மற்றைய பெண்கள் திகைத்துப்போயினர். ஆனாலும் அவளது கணவனான பெட்ரிகஸ், ஒருநாளும் அவளுடன் சண்டையிடவோ, முகத்தில் காயங்களை அல்லது வடுக்களை ஏற்படுத்தவோ, அவளோடு முரண்படவோ, துன்புறுத்தவோ இல்லை. அதற்கான காரணம் என்னவென்று மற்றைய பெண்கள் அவளிடம் வினவியபோது, அவள் மேலே குறிப்பிட்டவாறு, தான் கடைபிடிக்கும் முறைமையை அவர்களிடம் விளக்கிக் கூறினாள். இதைக்கேட்ட அவளது சக நண்பியர், அவள் கூறிய அறிவுரையின்படியே நடந்து அவர்கள் வாழ்வில் நன்மைகளை அடைந்தனர். அதேநேரம், அவளது அறிவுரைகளைக் கேளாதவர்கள், அவர்களது கணவன்மாரிடம் தொடர்ந்து முரண்பட்டு, துன்பத்தை அனுபவித்தனர்.

20. கணவனின் தாயாரான அவளுடைய மாமியார், கெட்ட எண்ணம் பணியாளர்களின் கோள் மூட்டும் காரணத்தால் முதலில் அவளுக்கு எதிராக பாரபட்சம் காட்டினார். எனினும், அவள் தனது சமயோசித புத்தி, நடத்தை, பொறுமை மற்றும் விடாமுயற்சி காரணமாக அவளது மாமியாரின் மனதில் இடம்பிடித்தாள். அதன் விளைவாக அவளது மாமியாரே தானாக முன்வந்து வீணாகக் கதையளக்கும் தனது பணிப்பெண்களைப்பற்றி தனது மகனிடம் முறையிட்டு, அந்தக் குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் சீர்கெடுவதற்குக் காரணமான அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்குமாறும் கேட்டுக்கொண்டாள். அவளது மகனும் அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்தான். தனது குடும்பத்தின் சந்தோஷமும் சமாதானமும் முக்கியமென்று கருதிய அவன், அந்தப் பணிப்பெண்களுக்குத் தண்டனையாக சவுக்கடி கொடுக்குமாறு பணித்தான். அப்போது, தனது மருமகளை எவரேனும் அவதூறாகப் பேசினால், அவர்களும் இப்படியான தண்டனைக்குள்ளாக நேரிடும் என்று எச்சரித்தாள். அன்றுமுதல் அங்கிருந்த எவரும் மற்றவருக்கு எதிராக எதையும் பேசத் துணியவில்லை. மாறாக ஒருவருக்கொருவர் மற்றையோரின் நன்மைகளைப் பற்றி கரிசனை கொள்வதில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தனர்.

21. கருணையின் வடிவான என் தேவேனே, உம்மீது பக்தியும் விசுவாசமும் கொண்டு வாழ்ந்த உமது அடியாள் மற்றுமொரு கொடையால் நிரம்பச் செய்தீர். என்னை அவளது வயிற்றில் உண்டாகச் செய்த நீர், அவளுக்கு கொடுத்த அந்தக் கொடை என்னவென்றால், தன்னால் எப்போதெல்லாம் இயலுமோ அப்போதெல்லாம் தன்னை ஒரு சமாதானத் தூதுவராகவே அவள் கருதினாள். கருத்து வேறுபாடு காரணமாக முரண்பட்டு, சண்டையிடும் மனிதர்களுக்கிடையில் சென்று, தலையீடு செய்து, அவர்கள் மத்தியில் சமரசத்தை ஏற்படுத்துவதில் மிகவும் துடிப்புடன் செயலாற்றினாள். அத்தோடு, முரண்படும் இரு தரப்பினருக்கும் இடையில் நிலைகொண்டுள்ள கசப்பான விஷயங்களைப் பற்றி அவள் கேட்கும்போது – அது சீரணிக்க முடியாத, அருவருப்பு மிக்கதாக, ஏற்றுக்கொள்ள முடியாத வன்மம் மற்றும் அவதூறாயிருந்தாலும் கூட, ​​அவற்றைத் தன்னகத்தே வைத்துக் கொள்வாள். எக்காரணம் கொண்டும் இருசாராரிடம் கேட்டதை அவர்கள் சம்பந்தப்பட்ட எவரிடமும் வெளியிடமாட்டாள். அதேநேரம், அவர்கள் மத்தியில் சமாதானம் ஏற்படுவதற்கு அந்த விடயங்கள் சாதகமாக அமையும் என்று கருதினால் மட்டுமே அவற்றைப் பகிர்ந்துகொள்வாள். என் வாழ்வில் ஏதேனும் கசப்பான நிகழ்வுகளுக்கு நான் முகம்கொடுக்காதவரை, என் தாயாருக்குக்குக் கிடைத்த இந்த வரப்பிரசாதம் பற்றி பெரிதாக நான் ஏதும் அறியாதிருந்தேன். காரணம், நான் என் வாழ்வில் சந்திக்க நேரிட்ட பலர் பாவங்களை சுமந்தவர்களாகவும், அவர்கள் ஆத்திரம் காரணமாக வெளியிடும் வார்த்தைகளை சம்பந்தப்பட்டோர் முகத்துக்கு நேராகக் கூறுபவர்களாகவும், அங்கு பேசப்படும் கசப்பான வார்த்தைகளோடு தாங்களும் தங்கள் பங்குக்கு வார்த்தைகளை சேர்த்து, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல், பகையை மேலும் உக்கிர நிலைக்கு கொண்டு செல்வர். ஆனால், இங்கு பகைமையை வளர்ப்பதற்குப் பதிலாக, இருசாராரும் கோபம் காரணமாகப் பேசிய சில வார்த்தைகளை பெருந்தன்மையோடு மன்னித்து, மென்மையான வார்த்தைகளால் அவற்றை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அதன் மூலம் முரண்படும் இருசாரார் மத்தியிலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே மனிதாபிமானம் மிக்க செயலாகும். இப்படியான தயாளமும், கனிவும், இரக்கசிந்தையும், பெருந்தன்மையும் கொண்ட பெண்மணியாகவே எனது தாய் திகழ்ந்தாள். அதற்கு காரணம், அவள் உம்மில் வாழ்ந்து, உம்மால் பயிற்றுவிக்கப்பட்டு, உம்மால் வழிநடத்தப்பட்டாள். மனம் என்ற பாடசாலையில் அவளுக்கு இப்படியான நற்குணங்களைக் கற்றுக்கொடுத்த அந்த சிறந்த ஆசான் நீரே!

22. இறுதியாக, அவளுடைய சொந்தக் கணவன், இப்போது அவனுடைய உலக வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், அவன் உம்மை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் தான் மேற்கொண்ட முயற்சியில் வெற்றிகண்டாள். விசுவாசிகளில் ஒருவனாக அவன் மாறிய பின்பு அவனுடைய கடந்தகால அல்லது நிகழ்காலம் குறித்த எதைப்பற்றியும் அவள் முறைப்பாடு செய்யவில்லை, அவன் தற்போதைய நிலையை அடைவதற்கு முன்பு, அவனை எவ்வாறு சகித்துக்கொண்டாளோ, அதேபோல் இப்போதும் அவனை சகித்திருந்தாள். உமது அடியார்கள் மத்தியில் மிகவும் விசுவாசமான ஒரு ஊழியையாக அவள் இருந்தாள். அவளை அறிந்தவர்கள் அவளை மிகவும் பெரிதாகப் போற்றினர். அதேவேளை, உம்மை நேசித்து, உம்மைக் கௌரவித்து உம்மில் அன்பு செய்பவர்களாக இருந்தனர். ஏனெனில், ஒரு புனிதமான உரையாடலின் பலன்களின் சாட்சியத்தின் மூலம் என் தாயின் இதயத்தில் உமது பிரசன்னம் இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள். அவள் கற்புடையவளாய், ஒருவனுக்கு மட்டுமே வாழ்க்கைப்பட்டு, ஒரு நல்ல மனைவியாக வாழ்ந்தாள். அவளுடைய பெற்றோருக்கு உகந்தவளாகவும், தான் வாழ்ந்த இல்லத்தை பக்தியில் வழியில் நடத்திச் சென்றாள். அவளது நற்கிரியைகளுக்காக வெகுவாகப் செயல்களுக்காகப் பாராட்டப் பட்டாள், குழந்தைகளை சிறந்த முறையில் வளர்த்தாள், ஏனென்றால் பல குழந்தைகள் உம்மை விட்டு விலகி, தான்தோன்றித் தனமாகத் திரிவதை அவள் தன் கண்களால் கொண்டிருக்கிறாள். [கலாத்தியர் 4:19 இல் இதற்கு சான்றுபகரும் வார்த்தைகள் காணப்படுகின்றன]. இறுதியாக, எம் அனைவருக்கும் அதிபதியாய் இருக்கும் என் தேவனே, (உம்முடைய தயவால் உமது அடியார்களைப் பேசும்படி செய்தீர்), [1 தெசலோனிக்கேயர் 4:14 இல் இதற்கு சான்றளிக்கும் வார்த்தைகள் காணப்படுகின்றன] ஞானஸ்நானத்தில் வாயிலாக உமது அருளைப் பெற்று வாழும் நாங்கள், என் தாய் தனது இறுதி மூச்சை உமது பாதத்தில் வைக்கும் முன், உம்மில் ஒன்றாக இணையைப் பெற்றதில் மிகவும் மகிழ்வுறுகிறோம். அவள் நாம் அனைவருக்கும் தாயாக இருந்திருந்தால் எவ்வளவு அக்கறை காட்டியிருப்பாளோ, அதைவிட எம்மீது அளவில்லா அன்பு செலுத்தினாள். தாயைப்போலல்லாமல், அவள் எங்கள் அனைவருக்கும் ஒரு மகளைப்போல் இருந்து எங்களுக்குப் பணிவிடை செய்தாள்.

அத்தியாயம் 10 – பரலோக இராச்சியத்தைப் பற்றி அவர் தனது தாயுடன் உரையாடுகிறார்

23. அவள் இவ்வுலக வாழ்க்கையை விட்டுப் பிரியும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது (அந்த நாள் எது, எப்போது என்று அறிந்தவர் நீர் ஒருவர் மட்டுமே. எங்களுக்கு அது தெரியாது). இது உமது இரகசிய ஏற்பாடுகள் தான் இவற்றைத் தீர்மானிக்கின்றன என்று நான் அறிவேன். ஒரு நாள்,நானும் ஏன் தாயும் தனியாக இருந்தபோது, இருவரும் ஒரு ஜன்னலில் சாய்ந்து நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த ஜன்னலின் வழியே ஒஸ்டியாவில் நாங்கள் குடியிருந்த வீட்டின் தோட்டம் தெரிந்தது; கூட்டத்திலிருந்து எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நாங்கள், நீண்ட பயணக் களைப்புக்குப் பிறகும், தொடரும் பயணத்திற்காகவும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் தனிமையில் இருந்தபடியால், மிகவும் இனிமையாகவும், மகிழ்ச்சியுடனும் உரையாடிக் கொண்டிருந்தோம். கடந்த கால நிகழ்வுகள் யாவற்றையும் மறந்துவிட்டு, நமக்கு முன்னால் இருக்கும் விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசினோம். இது குறித்து பிலிப்பியர் 3:13 ம் வாசகத்தின் ஒரு பகுதியில் “கடந்த காலத்தில் உள்ளவற்றை நான் மறந்துவிடுகிறேன். என் முன்னால் உள்ள குறிக்கோளை அடைய எவ்வளவு முயல முடியுமோ அவ்வளவு முயலுகிறேன்” என்று கூறியிருப்பதைக் கவனிக்கவும். உம் திருமுன் நின்று, நாமிருவரும், சத்தியத்தின் வடிவமான உம்மைத் தேடிக்கொண்டிருந்தோம். புனிதர்கள் வாழ்ந்த நித்திய வாழ்வு எப்படியானதாக இருந்திருக்கும் என்றும் அலசி ஆராய்ந்தோம். ஏனென்றால், அந்த வாழ்வானது கண்களுக்குப் புலப்படாத, செவிகளுக்கெட்டாத, மனித மனத்தால் அறிந்துகொள்ள முடியாததாக இருந்தது. இருப்பினும், எங்கள் இதயத்தின் வாசலை அகலத்திறந்து, பரலோகத்தின் நீரூற்றிலிருந்து வழிந்தோடும் வாழ்வு தரும் நீரைப் பருகினோம். எங்களது அறிவின் பரிமாணம் இந்த நீரூற்று தரும் நீரின் ஒரு துளியளவே என்றாலும், எங்கள் மனங்கள் இந்த மகத்துவம் பற்றிய சிந்தனையில் மூழ்கின.

24. எங்கள் உரையாடல் முடிவுக்கு வந்தபோது, நாங்கள் ஒரு முடிவை எட்டினோம். அதாவது, உடலில் உள்ள அவையவங்களால் கண்டுணர்ந்து, தொட்டுணர்ந்து அதன் மூலம் கிடைக்கும் உணர்வு எமக்கு இன்பத்தைத் தந்தாலும், நித்திய வாழ்வோடு ஒப்பிடுகையில், முன்னையது பின்னையதின் நிழலுக்குக்கூட ஒப்பிடமுடியாததாக இருக்கிறது. நிரந்தரமான பிரசன்னத்தை நோக்கி எங்கள் மனங்கள் ஆர்ப்பரிக்கின்றன. படிப்படியாக நகர்ந்து, உருவங்களால் ஆன விடயங்கள் யாவற்றையும் கடந்து, வானகத்தையும், ஏன், சூரியன், சந்திரன் மற்றும் பூமியை ஒளிர்விக்கும் நட்சத்திரங்கள் போன்ற அனைத்தையும் கடந்து சென்றோம். ஆம், உள்ளார்த்தமாய்ச் சிந்தித்து, விவாதித்து, உமது படைப்புகளைப் போற்றியவண்ணம் நாங்கள் இன்னும் உயர உயரச் சென்றோம். இப்போது எங்கள் சிந்தனையையும் தாண்டி அதனுள் பிரவேசித்தோம். அப்படியான நாங்கள் போகையில், இஸ்ராயேலுக்கு சத்தியத்தையே உணவாய் அளித்த அந்த வற்றாத பாத்திரத்தை, அவை அனைத்தையும் தந்த அந்த ஞானத்தை நோக்கி எங்கள் தேடுதல் தொடர்ந்தது. ஏனென்றால் ஞானம் தான் வாழ்க்கை என்பது. அதாவது, இருந்தது, இருப்பது, இனிமேல் வரவிருப்பது போன்ற அனைத்திற்கும் மூலமாக இருப்பது ஞானம் மட்டுமே. ஆகவே, ஞானம் தான் அனைத்திலும் உயர்ந்தது என்பதையும் அதன் மூலம் தான் அனைத்தும் தங்கள் பிரசன்னத்தை நிலைநிறுத்திக்கொண்டன. அத்தோடு, ஞானம் உண்டாக்கப்படுவதில்லை, அது இருந்தபடியே இருக்கிறது, எப்போதும் இருக்கும்; ஆம், இருப்பது, இனியும் இருப்பது என்பது இதில் இல்லை, ஆனால் அது நிரந்தமாய் இருக்கும். கடந்தகாலம், வருங்காலம் போன்றவை நிரந்தரத்தின் பண்புகள் அல்ல. நாங்கள் அதுபற்றி பேசிக்கொண்டும், அதை அடைவது எப்படி என்று ஏங்கிக்கொண்டும் முன்னேறிச் சென்றபோது, ஒருமுகப்படுத்தப்பட்ட எங்கள் இதயம், அந்த ஒரு நொடியில், நிரந்தரத்தை இலேசாகத் தொட்டோம். இதற்காகவே ஏங்கிக்கொண்டிருந்த எங்கள் மனம், ஒரு ஆழமான பெருமூச்சை வெளிவிட்டது. உரோமையர் 8:2-3 இல் குறிப்பிட்டுள்ளவாறு, அந்த மேலான உலகின் ஆவிக்குரிய முதற்கனிகளை பின்தள்ளி வைத்துவிட்டு, சத்தம் சந்தடி மிக்க மனித உரையாடலுக்குள் நுழைந்தோம். அங்கு பேசப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஆரம்பம் மற்றும் முடிவு இரண்டையும் கொண்டதாக இருந்தது. எங்கள் வாழ்வுக்கு ஆதாரமாயிருக்கும் என் தேவனே, உமது வார்த்தைகளோடு ஒப்பிடுகையில் இவை யாவும் அற்பமே. பழமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், உமது திருவார்த்தைகள் என்றும் நீடித்து, நிலைத்திருந்து, அனைத்தையும் எப்போதும் புதியதாகவே வைத்திருந்தது. [ஞானம் 7:27].

25. இதைப்பற்றியும் நாம் சொல்லிக்கொண்டிருந்தோம்; அதாவது, ஒருவன் தனது உடலசைவுகள் அடங்கிவிட்டன என்று உணர்ந்தால், பூமி, நீர், காற்று, வானம் ஆகியன குறித்த மாயைகள் மறைந்துவிட்டால், இந்தப் பூமியின் இரு துருவங்களும் அவற்றின் செயற்பாடுகளை மறந்து அமைதியாகிவிட்டால், அவனது ஆன்மா தானாவே அமைதியடைந்து தன்னிலை மறந்து, தன்னையே கடந்து சென்றால், மௌனமாக்கப்பட்ட கற்பனைகள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள் போன்றவை மறைந்துபோனால், அத்தோடு சேர்ந்து சகல மொழிகள், சைகைகள், சமிக்ஞைகள் மற்றும் அடையாளங்கள் போன்ற எல்லாம் செயலாற்றுப் போனால், தற்காலிகமான அனைத்தும் அமைதியாகிவிட்டால் – யாரேனும் அதற்கு செவிசாய்க்க முடிந்தால், இவை அனைத்தும் ஒன்றை பற்றியே கூறும்: அது என்னவெனில், நாம் நாமாக நம்மை உருவாக்க வில்லை, என்றென்றும் நிலைத்திருப்பவரால் மட்டுமே நாம் படைக்கப்பட்டோம் என்று. அதைக் கேட்டும் அமைதி காக்கும் எவரும், தனது காதுகளை அவர் பக்கம் திருப்பி அவர் கூறுவதை செவிமடுத்தால், அவர் கேட்கக்கூடியதெல்லாம் இதுவே; அவரே அனைத்தையும் படைத்தார், அதைப்பற்றி அவரே பேசுவார், மற்றையோரின் குரல் வழியாக அல்ல, தானே தன் குரலால் பேசுவார். எம்மால் அவரது வார்த்தைகளைக் கேட்கக் கூடியதாயிருக்கும். ஏனெனில், அவர் பேசுவது மனித நாவின் வழியாக அல்ல, தேவதூதர்களுன் குரல் வழியாக அல்ல, இடியோசை வாயிலாக அல்ல, ஒரு உருவகத்தின் இருண்ட புதிர் மூலமாக அல்ல, மாறாக மேலே கூறிய எந்த ஒன்றாலும் இல்லாமல், நாமே அவர் கூறுவதைக் கேட்போம். ஏனெனில், நாம் நேசிப்பவர் அவர் ஒருவராக மட்டுமே இருக்கிறார். சிந்தனை ஓட்டத்துடன் சங்கமித்து எல்லாவற்றிலும் நிலைத்திருக்கும் அந்த நித்திய ஞானத்தைத் தொட்டோம். ஒருவேளை அது நீடித்திருக்கும் என்ற நிலை தோன்றியிருக்குமானால், நாம் கண்ட மற்றைய அனைத்தையும் மறந்திருக்கலாம். அப்போது காட்சியைக் கண்டவருக்கு பேரானந்தத்தை ஏற்படுத்தி, அவரை முழுமைப்படுத்தி, உள்ளார்ந்த மகிழ்ச்சியால் பரிபூரணமாக்கிவிடும். இது நாம் தேடும் அறிவின் ஒரு கணம் போல அந்த நபரின் வாழ்க்கை என்றென்றும் இருக்கும், இது உங்கள் எஜமானின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வது போலல்லவா? [மத்தேயு 25:21 இல் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளதை காணலாம்]. ஆயினும் அது எப்போது நடக்கும்? நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம்.

26. நான் இப்படித் தான் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் இதேபோன்ற வார்த்தைப் பிரயோகங்களால் அல்ல. ஆனால், அனைத்திற்கும் அதிபதியாய் இருப்பவரே, அன்று நாங்கள் மனம் திறந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, இந்த உலகம் மற்றும் அதன் அனைத்து இன்பங்களும் எமக்கு வேண்டாதவையாகவும், பயனற்றதாகவும் தோன்றின. அதற்குக் கரணங்கள் இருக்கின்றன. என் தாய் என்னை நோக்கி, மகனே, இனி எனக்கு இந்த வாழ்க்கையில் எவ்வித பிடிப்போ, எதிலும் இன்பம் காணும் சூழ்நிலையோ இல்லை. நான் இன்னும் இங்கே இருக்கவேண்டிய காரணம் என்ன என்றோ, ஏன் இங்கே இருக்கிறேன் என்றோ எனக்குத் தெரியாது. இந்த உலகில் நான் நிறைவேறக்கூடியது என்று நான் எதிபார்த்த அநேகமானவை எனக்குத் திருப்தியைக் கொடுத்தன. இன்னும் சிறிதுகாலம் நான் வாழவேண்டும் என்று நான் நினைப்பதற்கு ஒரே ஒரு காரணம் எஞ்சி இருக்கிறது. நான் மரணம் எய்துவதற்கு முன் உன்னை ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவனாகப் பார்க்க வேண்டும் என்பதே எனது தலையாய விருப்பம். அதேநேரம், நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக என் இறைவன் எனக்கு எல்லாவற்றையும் தந்தருளியுள்ளார். நீ இவ்வுலக ஆசைகள் அனைத்தையும் வெறுத்து, உன்னைக் கடவுளின் ஊழியராக உன்னை மாற்றிக்கொண்டதை நான் கண்டது நான் செய்த பாக்கியம் அல்லவா? அதைத் தவிர எனக்கு வேறு என்ன வேண்டும்?

27. இவ்வாறான என் தாயின் வேண்டுகோளுக்கு நான் என்ன பதில் சொன்னேன் என்பது பற்றி எனக்கு நன்றாக நினைவில் இல்லை. இருப்பினும், ஐந்து நாட்களுக்குப் பிறகு, அவள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். ஒரு நாள் அவள் உடல்நிலை மோசமடைந்தபோது, ​​தன் சுயநினைவை இழந்தவளாய், சிறிது நேரம் அவளைச் சுற்றி இருந்த எதைப்பற்றிய நினைவும் இல்லாதிருந்தாள். நாங்கள் அவள் அருகில் இருக்கும் பொருட்டு அவளை நோக்கி ஓடிச்சென்றோம். ஆனால் அவளுக்கு மீண்டும் சுயநினைவு வந்தது. அவளருகில் நின்ற என்னையும் என் சகோதரனையும் நன்றாகப் பார்த்தபடி, ‘நான் எங்கே இருந்தேன்?’ என்று வியப்புடன் கேட்டாள். துக்கத்தில் திகைத்த எங்களைப் பார்த்து, இதோ பார், உன் தாயை இங்கேயே அடக்கம் செய்வாயா? என்று கேட்டாள். வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறிய நான், என் கண்களில் இருந்து கண்ணீரை மட்டுமே சொரிய முடிந்தது. ஆனால் என் சகோதரனோ, அவளை மகிழ்விக்கும் நோக்கில், உங்களை நாம் அந்நிய நாட்டு மண்ணில் அல்ல, உங்கள் சொந்த நாட்டு மண்ணிலேயே நல்லடக்கம் செய்வோம் என்று கூறினான். அதை கேட்டவுடன், அவளது முகம் கவலையால் வாட்டமுற்றது. அவள் அதைக் கேட்டதும், கவலை தோய்ந்த முகத்துடன் தன் கண்களால் என் சகோதரனைக் கூர்ந்து நோக்கிவிட்டு, பின்னர் என்னைப் பார்த்து, இதோ, அவன் சொல்வதைக் கேட்டாயா? என்றாள். உடனே அவள் எங்கள் இருவரிடமும், இந்த உடலை எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய்யுங்கள், அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும், அடக்கம் செய்வது பற்றிய கவலை உங்களைத் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டாள். நான் உங்களிடம் கேட்பதெல்லாம், நீங்கள் எங்கு சென்றாலும் கர்த்தருடைய பீடத்தில் என்னை நினைவுகூர வேண்டும் என்பதே. தன்னால் இயன்ற வரை, தன் மனதில் உள்ள யாவற்றையும் என் தாய் கூறிய பின், நோயின் தீவிரத்தால் ஏற்பட்ட வேதனை காரணமாக அவள் அமைதியாகக் காணப்பட்டாள்.

28. கண்களுக்குப் புலப்படாமலும் நீக்கமற நிறைந்திருப்பவருமான என் தேவனே, உம்மீது விசுவாசம் கொண்டோரின் மனங்களுக்குள் நீர் அனுப்பும் வெகுமதிகளையிட்டு வியக்கிறேன். அவைதான் வியக்கத்தக்க வகையில் அற்புதமான கணிகளைக் கொடுக்கின்றன என்பதால், என் முழுமனதோடும், மகிச்சியோடும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் தாய் அவளைத் தன் கணவனின் கல்லறைக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்திட வேண்டும் என்ற நோக்கத்தில், முன்கூட்டியே ஆயத்தம் செய்து வைத்திருந்த கல்லறை பற்றிய நினைவு அவளை மிகவும் வாட்டியெடுத்தது என்று நான் அறிந்தேன். ஏனெனில், அவர்கள் இருவரும் மனமொத்த தம்பதிகளாக, மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர் என்பதற்கு இதுவே சான்று. அதனால், அவளும் தன் விருப்பதைப் பற்றிக் கூறியிருந்தாள். (மனித மனதுக்கு தெய்வீக விஷயங்களைக் கிரகிக்கும் திறன் மிகக் குறைவு) தனது கணவனின் கல்லறைக்கு அருகிலேயே தானும் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது தனக்கு மகிழ்ச்சியைத் தரவல்லது என்றும், அப்போதுதான், வருங்கால சந்ததியினர் அவர்கள் இருவரையும் ஒன்றாக நினைவுகூரமுடியும் என்றும் அவள் விரும்பினாள். மேலும் கடல் கடந்த பயணங்களில் எங்கோ, எப்போது சந்தித்து, எல்லா சவால்களையும் தாண்டி திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்த இருவரும், மீண்டும் இந்த மண்ணுக்கடியில், ஒருவருக்கொருவரின் அரவணைப்பில் மீண்டும் துயில் கொள்ளவேண்டும் என்ற அவா அந்த தாயின் மனதில் இருந்ததைக் காணக்கூடியதாயிருந்தது. ஆனால் என் தேவனே, உமது அருளால், இந்த வீணான எண்ணம் அவளது இதயத்தில் இருந்து எப்போது விலகத் தொடங்கியது என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவள் இதை என்னிடம் வெளிப்படுத்தியதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைந்தேன். அந்த ஜன்னல் அருகே நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது, அவள் சொன்னது எனது நினைவில் இருந்தது, அதாவது நான் இனி இங்கே இருந்து என்ன செய்யப் போகிறேன்? இதன் மூலம், அவள் தன் சொந்த நாட்டில் இறக்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. நாங்கள் ஓஸ்டியாவில் இருந்த போது ஒரு நாள், நான் அருகில் இல்லாத நேரத்தில், தனது தாய்மைக்குரிய இயல்புடன் ​​எனது சில நண்பர்களுடன் தனது இந்த வாழ்க்கையைப் பற்றியும், மரணத்தின் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதத்தைப் பற்றியும் பேசியதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டதையும் பின்னர் அறிந்துகொண்டேன். இதற்கு நீர் அவளுக்குக் கொடுத்த தைரியம் தான் காரணம். அப்போது ஒரு பெண், என் தாயிடம் தனது சொந்த நகரத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது தனது உடலை விட்டு அவளது உயிர் பிரிவது குறித்து பயப்படவில்லையா என்று கேட்டாள். அவள் பதிலாக, கடவுளுக்கு எதுவும் தொலைவில் இல்லை. அல்லது அவர் என்னை மரித்தோரிடமிருந்து மீண்டும் உயிர்ப்பிக்கும் போது, இந்த உலகத்தின் எந்த இடத்தில் அது நிகழவேண்டும் என்று அவர் அறிவார். ஆகவே நான் அதுகுறித்துப் பயப்படத் தேவையில்லை என்று கூறினாள். அவள் நோய்வாய்ப்பட்டு ஒன்பது நாட்கள் கடந்திருந்த வேளையில், அவளுடைய ஐம்பத்தி ஆறாவது வயதில், அப்போது எனக்கு முப்பத்து மூன்றாவது வயது நடந்துகொண்டிருந்தது. அன்றுதான், அந்த மதப்பற்றும், தெய்வபக்தியும் நிறைந்த அந்த அன்புத் தாயின் ஆன்மா அவளது உடலில் இருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டது.

அத்தியாயம் 12 – அவர் தனது தாயின் மரணத்தையிட்டு துயரத்தில் வாடினார்

29. நான் அவள் கண்களை மூடினேன். அப்போது என் இதயத்தில் ஒரு பெரிய சோகம் ஊடுருவிப் பாய்ந்தது நான் உணர்ந்து, கண்ணீர் சிந்தி அழுதேன். அதே நேரத்தில் என் மனதில் எழுந்த சோகத்தைப் பலவந்தமாகக் கட்டுப்படுத்த நான் முயன்ற காரணத்தால், ததும்பி வந்த கண்ணீர் மீண்டும் தங்களுக்குள்ளேயே சங்கமமானது. இப்படியாக சோகம் என் மனதைப் பிழிந்தது. ஆனால் உள் மனதில் எழுந்த போராட்டம் என் மனதுக்குத் தாங்கமுடியாத வேதனையைத் தந்தது. என் தாய் தனது இறுதி மூச்சை விட்டவுடன், சிறுவன் அடியோடாடஸ் கதறி அழுதான். ஆனாலும், நாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவனை ஆறுதல் படுத்தியதால் அவன் அமைதியானான். அந்தநேரத்தில் கூட, என்னையும் மீறி கட்டுக்கடங்காமல் என் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர், எனது குழந்தைப்பருவத்தை நினைவூட்டியது. இருப்பினும், என் மனம் எனது தற்போதைய நிலையை உள்ளார்த்தமாய் உணர்த்தியதும், எனது அழுகை ஓரளவுக்குக் கட்டுப்பட்டது. அந்த இறுதிச் சடங்கை கண்ணீர் மல்க மற்றும் முனகல்களுடன் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்று நாங்கள் நினைத்தோம். மகிழ்ச்சியின்றி அல்லது வாழ விருப்பமின்றி இறந்து போனவர்கள் மற்றும் அவர்களது வருந்தத்தக்க நிலையைக் காட்டுமுகமாகவே பொதுவாக அழுது புலம்பி துக்கம் அனுசரிக்கப் படுகிறது. ஆனால் என் தாய் துக்கத்தோடும் வேதனையோடும் இறக்கவில்லை அதேநேரம், அவள் வாழப்பிடிக்காமல் ஒரேயடியாக அழிந்துபோய்விடவும் இல்லை. அவள் கொண்டிருந்த கள்ளங்கபடமற்ற விசுவாசம், அவளது பேச்சு, நடவடிக்கை மற்றும் எள்ளோரையும் அரவணைக்கும் தன்மை போன்றன அந்தத் தாய்க்கு என்றும் அழியாத வாழ்வைப் பெற்றுத் தரும் என நாம் உறுதியுடனிருந்தோம். விசுவாசம் குறித்து 1 தீமோத்தேயு 1:5 இல் கூறப்பட்டுள்ளவை இந்தத் தாயின் விசுவாச வாழ்வுக்கு சாலவும் பொருந்தும்.

30. அப்படியானால், அந்தத் துக்கம் என் மனதுக்குள் வலியை ஏற்படுத்தியதற்குக் என்ன காரணம்? தாயாய் மகனாய் இணைபிரியாது வாழ்ந்த எங்கள் ஆத்மார்த்தமான, புனிதமான உறவு சடுதியாக முறிந்துபோய் காணாமல் போய்விட்டதால் ஏற்பட்ட காயத்தில் வலிதான் அது என்று என் மனம் சொன்னது. நோய்ப்படுக்கையில் அவள் இருந்த அவளது கடைசி நாட்களில், என்னை மிகவும் கனிவோடு ‘என் அன்பான மகனே’ என்று தன்னருகே அழைத்து பற்றி நான் மிகவும் சந்தோஷப் பட்டேன். மேலும் கூறுகையில், தன் மீது கொண்டிருந்த அபரிமிதமான அன்பின் காரணமாக, நான் அவளது மனம் புண்படும்படி எந்த ஒரு கடுமையான, கசப்பான வார்த்தைகளையும் சொல்லியதில்லை என்று நினைகூர்ந்து பெருமைப்பட்டாள். ஆயினும், எம் எல்லோரையும் படைத்த தேவனே, நான் என்ன விதத்தில் அவளை நடத்தியிருந்தாலும், அது அனைத்தும் அவள் என் மீது காட்டிய பரிவுக்கும், என்மீது செலுத்திய அன்புக்கும் தன்னையே உருக்கி எனக்காக செய்த தியாகத்துக்கும் ஈடாகுமா? ஆனால், இப்போது, எனக்குத் துணையாய் நின்ற என் அன்னை இப்போது என்னுடன் இல்லை. அவளில் நான் கண்ட மிகவும் பெரிய ஆறுதலை இழந்துவிட்டேன். என் மனம் நொந்து அழுதது. இரண்டறக் கலந்திருந்த அவளும் என்னுடையதும் வாழ்வு இப்போது ஒரு உயிரைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கிறது.

31. சிறுவனான இவோடியஸ் அழுவதை நிறுத்திவிட்டு, சங்கீத வாசகம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதிலுள்ள சங்கீதம் ஒன்றைப் பாடத் தொடங்கினான் – முழு வீடும் அவன் வாசித்த “நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன். கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன்” என்ற சங்கீத வாசகங்களுக்குப் பதிலுரை பாடியது. இங்கு நாங்கள் செய்வதையெல்லாம் கேள்விப்பட்ட பல சகோதரர்களும் பெண் ஊழியர்களும் கூடி, அங்கு நிலவிய வழக்கப்படி அது அவர்களுடைய கடமையாக இருந்த காரணத்தால், அவர்கள் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்தனர். என்னைத் தனியாக விட்டுவிடுதல் அவர்களுக்குச் சரியாகப் படாததால், என்னையும் அவர்களோடு அழைத்துச் சென்றனர். நீர் மட்டுமே அறிந்த, பிறர் அறிந்திராத என் மனதில் வலியை இது தான் உண்மை என்று நிதர்சனத்தைக் கொண்டு குறைக்க முயன்றேன். அந்த உத்வேகத்தோடு நான் பேசியதை கேட்ட அவர்கள், என் மனதிலுள்ள துக்கம் குறைந்து விட்டது என்று எண்ணத் தொடங்கினர். ஆனால் தேவனே, உமது காதுகளில் நான் என் உணர்வுகளின் மென்மையைக் கடிந்து கொண்டேன். அதை அங்கு இருந்த எவரும் கேட்கவில்லை. என் துயரத்தின் கடினத்தன்மையை என்னால் ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்தபோதிலும், அதையும் மீறி துக்கமும், வேதனையும் மீண்டும் என்னைப் புரட்டிப் போட்டன. அப்படியிருந்தபோதிலும், என் கண்கள் கண்ணீரைச் சொரியவோ அல்லது என் முகத்தில் எவ்விதமான வாட்டமோ தென்படவில்லை. ஆனாலும், இவை என் மனதில் ஏற்படுத்திய காயங்கள் மிகவும் பெரிதாக இருந்தது. இம்மானிட விழுமியங்கள் மனிதனின் மீது செலுத்தும் தாக்கங்களை எண்ணி என் மனம் சற்றே வருத்தத்தில் மூழ்கியது. எம்மீது நீர் விதித்திருக்கும் ஒழுங்கின் பிரகாரமும், உமது திருவுளத்தின் நியதியின்படியும், இவ்வாறான அனுபவங்கள் எங்கள் வாழ்வுக்குள் வந்து எங்களை ஆட்கொள்வதைத் தடுக்க இயலாது. இதனால் நான் ஏற்கனவே அனுபவித்த துக்கத்துக்கு மேலாக, மேலும் இரு மடங்கு சோகத்தால் அவதிப்பட்டேன்.

32. என் தாயின் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, நாங்கள் இருவரும் கண்ணீர் வடிக்காமல் மரண ஊர்வலத்தில் சென்று திரும்பினோம். திருவுடல் மற்றும் திரு இரத்ததின் அடையாளத்துடன் எங்கள் மீட்பின் பலி என் அன்னையின் சார்பில் உமக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டபோதும், மன்றாட்டுக்கள் வாசிக்கப்பட்டு தியானிக்கப்பட்டபோதும், நல்லடக்கத்துக்கு முன், அவளது உடல் புதைகுழியின் விளிம்பில் வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நிறைவேற்ற சொல்லப்படும் மன்றாட்டுக்களின் போதும் கூட நான் அழாமல்தான் இருந்தேன். அந்த நாள் முழுவதும் சோகம், வேதனை அழுகை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து என்னைப் புரட்டிப் போட்டிருந்தாலும், நான் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருந்தேன். என் மனதில் சுமையாய் அழுத்திக்கொண்டிருந்த வலியைப் போக்குமாறு உம் திருமுன் நின்று இறைஞ்சினேன். ஆனால் நீர் என் வலியைப் போக்க வரவில்லை. இந்த ஒரு பாடம் என் நினைவில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். இதற்குப் பின், ஒவ்வொரு உறவு, பழக்கம் போன்றவற்றால் ஒரு இறுக்கமான பிணைப்பு தோன்றுகிறது என்ற நிதர்சனத்தை நான் உணரும்படி செய்தீர். இப்படியான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போது, எனக்கும் போய் குளிப்பது நல்லது என்று தோன்றியது. குளியல் [பால்னியம்] அதன் பெயரை கிரேக்க βαλανεῖον இலிருந்து பெறப்பட்டது என்று கேள்விப்பட்டேன். ஏனெனில் அது மனதில் இருந்து பிரச்சனையை அகற்றுகிறது என்பதால் அந்தப் பெயரைப் பெற்றது. இதோ, இதையும் உமது கருணைக்கு முன் ஒப்புக்கொள்கிறேன், தந்தையற்றவர்களின் தந்தையாய் இருக்கிறவரே, நான் குளித்தேன், ஆனாலும், நான் முன்பு இருந்ததைப் போலவே தான் இன்னும் உணர்கிறேன். என் துயரம் தந்த கசப்புணர்வு இன்னும் என் மனதிலிருந்து வெளியேறவில்லை. அதன் பிறகு நான் படுத்து உறங்கினேன். மறுநாள் விழித்தபோதும் என் துக்கம் கொஞ்சம் கூட தணியாது இருப்பதைக் கண்டேன். நான் தனியாக என் படுக்கையில் சாய்ந்திருக்கையில், உமது விசுவாசம் மிக்க ஊழியரான அம்ப்ரோஸ் அவர்களின் உண்மையான வசனங்கள் என் மனதில் தோன்றின.

Deus creator omnium,

Polique rector, vestiens

Diem decora lumine,

Noctem sopora gratia;

Artus solutos ut quies

Reddat laboris usui,

Mentesque fessas allevet,

Luctusque solvat anxios.

33. பிறகு சிறிது சிறிதாக உமது விசுவாசம் மிக்க அடியாள் பற்றிய என் பழைய எண்ணங்களையும், உமக்கு அவள் ஒப்புக்கொடுத்த பக்திமிக்க வேண்டுதல்களையும், அவள் எம்மீது காட்டிய புனிதமான, மென்மையான, அக்கறை போன்றவை யாவும் திடீரென்று எம்மிடமிருந்து பறிக்கப்பட்டது போலிருந்தது. அவளுக்காகவும் எனக்காகவும் உம் திருமுன்னிலையில் அழுவது என் மனதுக்கு சாந்தியைத் தருவதாக இருந்தது. அவ்வளுநேரம் அடக்கி வைத்திருந்த என் கண்ணீர் வெள்ளமென வழிந்தோடியது. அதனால் என் இதயத்தின் பாரம் குறைந்து மனம் இலேசானது போல் ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. ஏனென்றால் என் அழுகுரலுக்கு செவிசாய்த்தவர் நீரேயன்றி, என் அழுகுரலை ஏளனம் செய்து அதற்கு ஒரு கேவலமான விளக்கம் கொடுத்த மனிதர்கள் அல்ல. என் தேவனே, நான் இப்போது என் மனதில் இருப்பவை யாவற்றையும் எழுத்து உருவத்தில் வடித்து உம் திருமுன் வைத்து ஒப்புக்கொடுக்கிறேன். இதைப் படிக்கும் எவரும், இதைப் புரிந்து கொள்ளும் விதத்தில் புரிந்து கொள்ளட்டும். ஒருசில மணிநேரம் நான் என் அன்பின் அன்னைக்காக, என் கண் முன்னே தனது இன்னுயிரை விட்ட என் தாய்க்காக கண்ணீர் சிந்தியதை பிழையான கண்ணோட்டத்தோடு நோக்கி, கேலியும் கிண்டலும் செய்தோர், அவள் தன் வாழ்நாள் முழுவதும் எனக்காக, என் நலனுக்காக, என்னை மனிதாக்குவதற்காக எத்தனை குடம் குடமாகக் கண்ணீர் சிந்தியிருப்பாள் என்பதை சிறிதேனும் உணர்ந்தார்களெனில், அவர்கள் நான் உமக்கெதிராகக் கட்டிக்கொண்ட பாவங்களுக்காக அழவேண்டும். ஏனென்றால், கிறீஸ்துவால் உண்டாக்கப்பட்ட சகோதரர்களான எம் எல்லோருக்கும் தந்தையானவர் நீர் ஒருவரே!

அத்தியாயம் 13 – அவளது பாவங்களுக்காக அவன் கடவுளிடம் மன்றாடும் அதேவேளை, அவளை பக்தியுடன் நினைவுகூரும்படி வாசகர்களிடம் வேண்டுகிறான்

34. ஆனால் என் இதயம் இப்போது அந்த காயத்திலிருந்து படிப்படியாகக் குணமாகி வருகிறது. மனிதரில் கொண்ட உடல் ரீதியான பாசப் பிணைப்பின் தீவிரம் காரணமாக எண்ணில் [உரோமையர் 8:7 இல் உடல் ரீதியான பிணைப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது] சில குறைபாடுகள் காணப்படலாம். ஆனால் இப்போது, உமது விசுவாசம் மிக்க ஊழியையாக வாழ்ந்த உமது அடியாளுக்காக வித்தியாசமானதொரு விதத்தில் என் கண்ணீரை உமது பாதங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். ஆதாமில் இறக்கும் ஒவ்வொரு ஆன்மாவின் அச்சுறுத்தலுக்குக் காரணமாயிருக்கும் அழிவை எண்ணி நொந்து போயிருக்கும் உள்ளத்திலிருந்தே அந்தக் கண்ணீர் வழிந்தோடுகிறது. என் அன்னையின் உயிர் அவளது உடலை விட்டுப் பிரியும் முன்பே அவள் கிறீஸ்துவுக்குள் உயிர்பெற்றுவிட்டாள். அவள் விசுவாசத்தாலும் வேண்டுதல் மற்றும் தனது விண்ணப்பங்களாலும் உமது பெயரைப் போற்றி வாழ்ந்தபடியால், ஞானஸ்நானத்தின் மூலம் நீர் அவளைப் புதுப்பித்த அந்த நாள் முதல், உமது கட்டளைகளுக்கு எதிராக அவள் வாயிலிருந்து எந்த ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை என்று நான் சொல்லும் தைரியம் எனக்கில்லை. இதுகுறித்து, மத்தேயு 12:36 “மனிதர்கள் தாங்கள் பேசுகிற கவனமற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும், இது நடுத்தீர்வை நாளில் நடக்கும்” என்று கூறுகிறது. ” அனைவரும் உங்கள் சகோதரர்கள், ஆகவே மற்றொருவரை முட்டாள் என்று நீங்கள் அழைத்தால், நரகத் தீயின் ஆபத்துக்குள்ளாவீர்கள்” என்று உமது ஏக சுதனானவர் கூறியிருப்பதை மத்தேயு தனது 5 ம் அதிகாரத்தின் 22 ம் வசனங்களில் மேற்கோள் காட்டியுள்ளார். உமது கருணையைத் துச்சமாக மதித்து, மனித வாழ்வுக்கு ஒருவன் மதிப்பளிப்பானேயானால், அவனுக்குக் கேடு வருவது திண்ணம். ஆகவே, அதையிட்டு ஆராய்ந்தறிவது நன்று. ஆனால் நீர் எம் பாவங்களைப் பற்றித் துல்லியமாக விசாரிக்காத காரணத்தால், உம்மோடு இணைந்து மகிழ்வதற்கான ஒரு ஸ்தானத்தை நாம் அடைவோம் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், எவரேனும் தனது உண்மையான தகுதிகளையும் நற்குணங்களையும் உம்மிடம் அறிக்கையிட்டால், அது நீர் அவருக்குத் தந்த வெகுமதிகளேயன்றி, வேறு என்ன? மனிதர்கள் தங்களை உண்மையான மனிதர்கள் என்று தெரிந்து கொண்டால், 2 கொரிந்தியர் 10:17 கூறுவதுபோல், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” ஆகவே, மகிமைப்படுகிறவன் கர்த்தருக்குள் மகிமைப்படுவான் என்று உணர்ந்து செயற்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

35. ஓ, என் புகழும், என் உயிரும், என் இதயத்தில் வீற்றிருப்பவருமான என் தேவனே, என் அன்னை செய்த நற்கிரியைகளை நான் சற்று நேரம் ஒரு பக்கம் வைத்துவிடுகிறேன். எனினும், அந்த நற்கிரியைகள் நிமித்தம் நான் முழுமனதோடு உமக்கு நன்றி செலுத்தும் அதேவேளை, இப்போது நான் என் தாயின் பாவங்களுக்காக உம்மிடம் இறைஞ்சுகிறேன். எங்கள் காயங்களுக்கு மருந்தாய் சிலுவையிலே அறையுண்டவரும், உமது வலது புறத்தில் அமர்ந்து எமக்காகக் பரிந்து பேசுபவருமான [உரோமையர் 8:34 ] கர்த்தரின் பெயரால் உம்மை மன்றாடிக் கேட்கிறேன்; அவள் இரக்கத்துடன் நடந்துகொண்டாள் என்பதை நான் அறிவேன், மேலும் அவள் தன் கடனாளிகளின் கடன்களை முழுமனதோடு மன்னித்தாள் [மத்தேயு 18:35 ] என்பதையும் நான் அறிவேன். வாழ்வுதரும் தண்ணீரைப் பெற்ற நாள் முதல், அதைத் தொடர்ந்து வந்த பல ஆண்டுகளில் அவள் உம்மிடம் பட்ட கடன்கள் யாவற்றையும் நீர் தயைகூர்ந்து மன்னித்தருள வேண்டுகிறேன். ஆண்டவரே, அவளை மன்னித்தருளும், அவளுக்கு மன்னிப்பை அருள வேண்டுமென உம்மை இரந்து மன்றாடுகிறேன். தண்டனைத் தீர்ப்புக்குள் அவளை இட்டுச் செல்லாதிருக்கக்கடவீராக. உமது இரக்கம் உமது நீதிக்கு மேலானதாகவும், உயர்ந்ததாகவும் இருக்கக் காட்டுவதாக. [யாக்கோபு 2:13 ]. ஏனெனில், உமது வார்த்தைகள் உண்மையானவை, இரக்கமுள்ளவர்களுக்கு இரக்கத்தை வாக்களித்துள்ளீர். இதை மத்தேயு 5:7 இல், “மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். ஏனெனில், அவர்களுக்குக் கருணை காட்டப்படும்” என்றும், உரோமையர் 9:15 இல் “நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்” என்றும் கர்த்தர் கூறியுள்ளார் என்பதை இங்கே மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

36. நான் உம்மிடம் கேட்டதை நீர் ஏற்கனவே செய்துவிட்டீர் என்று நான் நம்புகிறேன்; ஏனெனில், என் தேவனே, நான் முழுமனதோடு, என் வாய்நிறைய உம்மைப் புகழ்ந்தேற்றுவதை நீர் கருணையோடு ஏற்றுக்கொள்கிறீர். அவளைப் பொறுத்தவரை, அவள் இறக்கும் நாள் நெருங்கிக்கொண்டிருந்த போது, ​​அவளுடைய உடலை விலையுயர்ந்த துணிகளால் மூடுவதா, அல்லது வாசனை திரவியங்களால் நறுமணமூட்டி பாதுகாப்பதா, அல்லது ஒரு சிறந்த நினைவுச் சின்னத்தை எழுப்புவதா அல்லது அவளுடைய தந்தை வழி வந்தோர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நல்லடக்கம் செய்வதா என்று எதுவும் என் மனதில் தோன்றவில்லை. இந்த விடயங்கள் குறித்த எந்தவொரு பொறுப்பையும் அவள் எங்களிடம் ஒப்படைக்கவில்லை. ஆனால் ஒரு நாள் கூட விடாமல் அவள் சேவை செய்த உமது பலிபீடத்தில் அவளுடைய பெயர் நினைவு கூரப்படவேண்டும் என்று என் அன்னை தீராத அவாவுடன் இருந்தாள். திருப்பலி கொடுக்கப்பட்டதை அவள் அறிந்திருந்தாள். அதன் மூலம் எங்களுக்கு எதிராகக் காணப்பட்ட கடன் பத்திரத்தைத் தான் சிலுவையில் அறையப்பட்ட அந்தக்கணமே அழித்து இல்லாமல் செய்துவிட்டார். [கொலோசெயர் 2:14 இல் இதுபற்றிக் கூறப்பட்டிருப்பதை காணலாம்]. இதன் மூலம் எம் எதிரி தோற்கடிக்கப்பட்டான். ஏனென்றால் எதிரி நமது பாவங்களைப் பட்டியலிட்டு, எம்மீது குற்றம் சுமத்த ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்று தேடிக்கொண்டிருந்தான். ஆனால் யோவான் 14:30 இல் சொல்லப்பட்டிருப்பதுபோல, “நம்மை வெல்வதற்கான அதிகாரம் எதுவும் அவனுக்கு கொடுக்கப்படவில்லை.” அப்படியானால், அவரில் நாம் எல்லோரும் வெற்றியாளர்களே. அவர் சிந்திய மாசில்லாத, விலைமதிப்பற்ற திரு இரத்தத்தை யாரால் திருப்பிக் கொடுக்க முடியும்? எதிரியின் பிடியிலிருந்து எம்மை மீட்க அவர் கொடுத்த விலையை எவரால் மீண்டும் பெற்றுத்தரக்கூடும்? மீட்பிற்கான அடையாளத்தோடு உமக்கு விசுவாசியான வாழ்ந்த உமது அடியாளான என் தாய், தன் ஆன்மாவை விசுவாசம் என்ற சங்கிலியால் பிணைத்திருந்தாள். உமது பாதுகாப்பிலிருந்து அவளை யாரும் பிரிக்காமல் இருக்கட்டும். சிங்கங்களும் கொடிய சர்ப்பங்களும் தங்கள் துஷ்ட சக்தியாலும், வஞ்சகத்தாலும் அவளை அணுகாமல் இருக்கட்டும். தான் பாவம் செய்யவில்லை என்று அவள் சொல்லப்போவதில்லை, அப்படிச் சொல்லும் பட்சத்தில், அவள் எதிரியின் வலைகளுக்குள் வீழ்ந்துவிடுவாள். ஆகவே, தனது பாவங்கள் யாவும் அவராலே மன்னிக்கப்பட்டு விட்டன என்றும், தான் பட்ட கடன்கள் யாவற்றையும் – அவற்றை யாராலும் திரும்பிச் செலுத்தமுடியாது என்பது உறுதி என்றும் – அவள் சார்பாக அவரே செலுத்திவிட்டார் [மத்தேயு 9:2 ] என்றும் அவள் பதிலளிப்பாள்.

37. ஆதலால் அவள் தன் கணவனுடன் நிம்மதியாக இளைப்பாற்றலில் இணைந்துகொள்வாளாக. அவளது கணவனைத் திருமணம் செய்யும் முன்னும் அவன் இறந்ததன் பின்னும் அவள் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை; அவள் பொறுமையோடு அவனுக்குக் கீழ்ப்படிந்தவளாய் வாழ்ந்தாள். [லூக்கா 8:15 இல் நல்ல விதைகள், நல்ல நிலம், கீழ்ப்படிதல், பொறுமை பற்றிக் கூறப்பட்டிருப்பவை இதற்குச் சான்றாய் இருப்பதைக் காணலாம்] ஆகவே, அவளின் இந்த நற்குணங்கள் காரணமாக நல்ல கணிகளைத் தருபவளாக வாழ்ந்தாள். என் தேவனே, என் இறைவனே, நான் எனது குரல், என் இதயம், மற்றும் எழுத்துக்களால் சேவை செய்யும் ஆசிரியர்கள் உமது பலிபீடத்தில் இந்த ஒப்புகைகளைப் படிக்கட்டும், அவர்களில் பலர் மொனிகா என்ற பக்தியுடனும், விசுவாசத்துடனும் உமது அடியாளாய் வாழ்ந்த என் அன்னையையும் அவளது காலஞ்சென்ற கணவர் பெட்ரிகஸ் – இவர் மூலமாகத்தான் நீர் என்னை இந்த உலகிற்கு அனுப்பினீர் ஆனால் என் அறிவுக்கெட்டாத வகையில் எப்படி என்று தான் எனக்குத் தெரியவில்லை – இப்படியான அனைவரையும் என் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் போன்ற அனைவரும் மிக்க அன்புடன் நினைகூருவார்களாக. என் பரம தந்தையே, இவர்கள் யாவரும் எமது தாய்த் திருச்சபையான கத்தோலிக்க திருச்சபையின் பிள்ளைகளே. இவர்கள் நித்திய ஜெருசலேமின் சொந்தக் குடிகள். எங்கு சென்றாலும் உமது அடியார்களாகிய நாம் ஏங்குவது மீண்டும் இந்த நகரத்துக்கு மீண்டும் வரவேண்டுமென்றே. ஏனென்றால் இங்கிருந்து சென்ற நாங்கள், மீண்டும் இங்கே வரவேண்டும். இறுதியாக, எனது ஒப்புகைகள், வேண்டுதல்கள், மன்றாட்டுக்கள் போன்றவற்றால் மட்டுமல்ல, பல்வேறுபட்ட இதயங்களில் இருந்து எழும் மன்றாட்டுக்கள் வழியாக என் அன்பு அன்னையின் வேண்டுகோள் நிறைவேறும் என்று உறுதியாக நம்புவோமாக.