புனித அகஸ்டின் அவர்களின் போற்றுதலும்  விசுவாசத்தை அறிக்கையிடலும் (Augustine, Confessions 8)

Augustine, Confessions, in Tamil. Book 8


புத்தகம் VIII

அத்தியாயம் 1 – தெய்வீக விஷயங்களுக்குத் தன்னை அர்ப்பணித்தபோதும், அன்பின் இச்சைகளால் பீடிக்கப்பட்ட அவரது மனதை ஒருநிலைப்படுத்த சிம்ப்ளிசியனஸைக் கலந்தாலோசிக்கிறார்

1. என் தேவனே, என்மீது நீர் பொழிந்த உமது கருணையை நான் நன்றியுடன் நினைவுகூர்ந்து அவற்றுடன் சேர்த்து அடியேனையும் உமது திருக்கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். என் எலும்புகள் உமது அன்பில் திளைக்கக் காட்டுவதாக. ஆண்டவரே, உமக்கு ஒப்பானவர் யார்? நீர் என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர், நன்றி எனும் காணிக்கையை நான் உமக்கு செலுத்துவேன். நீ அந்தக் கட்டுகளை எவ்வாறு தளர்த்தினீர் என்பதை நான் உலகுக்கு எடுத்துரைப்பேன். உம்மை வழிபடுகிறவர்கள் இவைகளைக் கேட்கும்போது: வானம் பூமி மற்றும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, அவருடைய திருநாமம் என்றென்றைக்கும் போற்றப்படக்கடவதாக என்று சொல்வார்கள். நீர் எப்போதும் அவனையும், அவனது குடும்பத்தையும், அவனுக்கிருக்கும் எல்லாவற்றையும் வேலியடைத்துப் பாதுகாக்கிறீர். அவன் செய்கின்ற எல்லாவற்றிலும் அவனை வெற்றி காணச்செய்தீர். ஆம் நீர் அவனை ஆசீர்வதித்திருக்கிறீர். உமது வார்த்தைகள் என் இதயத்தில் உறுதியாக பதிந்துவிட்டன, மேலும் என்னைச் சுற்றி எல்லா பக்கங்களிலும் வேலியாக இருந்து நீர் என்னைப் பாதுகாக்கிறீர். இதை யோபு 1:10 விளக்கும்போது, “நீர் எப்போதும் அவனையும், அவனது குடும்பத்தையும், அவனுக்கிருக்கும் எல்லாவற்றையும் வேலியடைத்துப் பாதுகாக்கிறீர். அவன் செய்கின்ற எல்லாவற்றிலும் அவனை வெற்றி காணச்செய்து நீர் அவனை ஆசீர்வதிக்கிறீர்” என்று கூறுகிறது. நீர் தரும் நித்திய வாழ்வை நான் மங்கலான கண்ணாடி வழியாகப் பார்த்திருந்தாலும், நான் உறுதியாக இருக்கிறேன். 1 கொரிந்தியர் 13:12 இதுபற்றி இவ்வாறு கூறுகிறது: “அதுவே நம் அனைவருக்கும் பொருந்தும். தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதியே எனக்குத் தெரியும். தேவன் என்னை அறிந்துகொண்டதுபோல அப்போது நான் முழுக்க அவரைப்பற்றி அறிவேன்.” ஆயினும், மற்ற எல்லாப் பொருட்களிலிருந்தும் ஒரு நிரந்தரமான பொருள் பெறப்படுவதாக நான் கொண்டிருந்த சந்தேகம் இனி என்னுள் ஏற்படப்போவதில்லை. என் மனதில் உள்ள பேரவா என்னவென்றால், உம்மைப் பற்றி உறுதியாக இருக்க வேண்டுமென்பது மட்டுமல்ல, உம்மில் மேலும் உறுதியாக இருக்க வேண்டுமென்பதே. என் தற்காலிக வாழ்க்கையைப் போலவே, எல்லா விஷயங்களும் நிச்சயமற்றவையாக இருந்தன. மேலும் என் இதயம் பழைய கறைகளில் இருந்து மீண்டு, சுத்திகரிக்கப்பட வேண்டியிருந்தது. 1 கொரிந்தியர் 5:7 தனது வாசகத்தில், “புளித்த பழைய மாவை உங்கள் மனதிலிருந்து அகற்றுங்கள். அப்போதுதான் நீங்கள் புதிய மாவாக ஆகமுடியும். நீங்கள் புளிக்காத அப்பமாக ஏற்கெனவே இருக்கிறீர்கள்” என்று கூறுகிறது. யோவான் 14:6 கூறுவதுபோல், “நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு. என் மூலமாகத்தான் என் பிதாவிடம் போக முடியும்” என்று மீட்பின் வழியாகிய இரட்சகர் தாமே எனக்கு இனிமையாக இருந்தார். ஆனால் அந்த நேர்வழியைக் கடக்க நான் தயங்கினேன். உம்மில் உண்மையான, பிரமாணிக்கமான ஊழியனாக எனக்குத் தோன்றிய சிம்ப்ளிசியானஸ் என்பவரிடம் செல்ல நீர் என்னைத் தூண்டினீர். உனது கருணை அவர் மீது பிரகாசித்தது. அவருடைய இளமைப் பருவத்திலிருந்தே, அவர் உமக்குள் மிகவும் அர்ப்பணிப்புடன் வாழ்ந்தார் என்று கேள்விப்பட்டேன். இப்போது அவரது அனுபவ முதிர்ச்சி மற்றும் முதிர்ந்த வயது வரை உமது வழிகளை மிகவும் ஆர்வத்துடன் பின்பற்றி வந்ததால், அவர் உம்மில் உண்மையாக வாழ்ந்த அனுபவத்தைப் பெற்றவராக எனக்குத் தோன்றினார். அவருடைய பழுத்த அனுபவத்தின் மூலம், (எனது துயரங்களை அவர் முன் வைத்து) என்னைப்போல் போல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உமது வழியைப் பின்பற்றுவதற்கு மிகவும் பொருத்தமான பாதை எது என்று அவர் என்னிடம் கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

2. திருச்சபை நிரம்பியிருப்பதைக் கண்டேன். ஒருவர் ஒரு வழியிலும் மற்றொருவர் வேறு வழியிலும் சென்றனர். ஆனால் மதச்சார்பற்ற வாழ்க்கையை நடத்துவது எனக்கு வெறுப்பாக இருந்தது; ஆம், இப்போது என் உணர்வுகள் என்னை கௌரவம், புகழ் மற்றும் செல்வத்தின் பின்னால் செல்லத் தூண்டுவதை நிறுத்திவிட்டன. அது என்னை ஒரு பாரிய அடிமைத்தனத்திற்குள் இட்டுச்செல்வதாக உணர்ந்தேன். உமது இனிமையுடனும், நான் நேசித்த உமது தேவ மாளிகையின் அழகுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, முன்பு நான் குறிப்பிட்ட அந்த விஷயங்கள் இனி என்னை எப்போதும் மகிழ்விக்க வில்லை, மகிழ்விக்கப் போவதுமில்லை. இருந்தாலும், நான் பெண்கள் மீது கொண்ட அன்பில் மிகவும் உறுதியாக இருந்தேன். குறிப்பாக எல்லா ஆண்களும் அவர் போலவே வாழ வேண்டும் என்று கூறியிருந்தபோதும், திருமணம் செய்வதை அப்போஸ்தலர் பவுல் தடை செய்யவில்லை. அவர் என்னை சிறப்பான வாழ்வு வாழ வேண்டுமென்று அறிவுறுத்தினார். இதற்கு 1 கொரிந்தியர் 7 இல், பின்வருமாறு சாட்சி பகிர்கிறார். “எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வரத்தை தேவனிடம் இருந்து பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு ஒருவகை வரமும், இன்னொருவனுக்கு வேறு வகை வரமும் அளிக்கப்படுள்ளன.” இருப்பினும், நான், பலவீனமாக இருந்ததால், மிகவும் இணக்கமான முடிவைத் தேர்ந்தெடுத்தேன். இதனாலே எல்லாப் பக்கங்களிலும் துவம்சம் செய்யப்பட்டு மயக்கமுற்றவனாய், வாடிப்போய் கவலையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் ஏனைய விடயங்களை நான் விரும்பாவிட்டாலும், திருமண வாழ்க்கைக்கு சம்மதிக்க வற்புறுத்தப் பட்டேன். அதன் காரணமாக, நான் ஏனைய விடயங்களை விட்டுக் கொடுத்து திருமண வாழ்க்கையில் ஈடுபட சம்மதித்தேன். பரலோக இராச்சியத்தினிமித்தம் தங்களை திருநபர்களாகவும், திருநங்கைகளாகவும் ஆக்கிக்கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்று சத்தியத்தியத்தால் உரைக்கக் கேள்விப்பட்டேன். ஆனால், அதைப் பெறக்கூடியவர் அதைப் பெறட்டும் என்கிறார் மத்தேயு. அவரது 19:12 ம் வாசகங்களில் அவர்,”சிலர் ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் குழந்தைகளை பெறச் செய்ய இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் அவ்வாறு மற்றவர்களால் ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராஜ்யத்திற்காக திருமணத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் திருமண வாழ்வைக் குறித்த இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார். கடவுளைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் மற்றும் காணக்கூடிய நற்கிரியைகளில் நல்லவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத மனிதர்கள் அனைவரும் வெறும் வேற்றுவெட்டான அறிவிலிகள். இதை “இயல்பிலேயே முட்டாள்கள் அனைவரும் கடவுளைப் பற்றி அறியாமையில் இருந்தவர்கள் மற்றும் பார்த்த நல்ல விஷயங்களால் இருப்பவரை அறிந்துகொள்வதில் வெற்றிபெறாதவர்கள் மற்றும் படைப்புகளைப் படிப்பதன் மூலம் படைப்பாளியைப் பகுத்தறியவில்லை” என்று 13:1 இல் சொலொமனின் ஞானம் கூறுகிறது. ஆனால் நான் அந்த மாயையில் சிக்கிக்கொள்ளவில்லை. ஏனென்றால் நான் அதை வென்றேன். மற்றும் உமது சகல படைப்பின் ஒருங்கிணைந்த சாட்சியத்தால் உம்மை, எங்கள் படைப்பாளரும் உமது வார்த்தையானவரோடும், உம்மோடும், பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளாக நீர் எழுந்தருளி இருப்பதைக் கண்டேன். இவர் வழியாகவே நீர் யாவற்றையும் படைத்தீர். இன்னொரு வகையான துரோகிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் கடவுளை அறிந்தபோது, ​​அவரை கடவுளாக மகிமைப்படுத்தவில்லை, நன்றி சொல்வதுமில்லை என்று உரோமர் 1:21 இல், “தேவனைப் பற்றி மக்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதில்லை; அவருக்கு நன்றி சொல்வதும் இல்லை. மக்கள் எண்ணங்களில் பயனற்றுப் போயினர். அவர்களின் அறிவீனமான நினைவுகளில் இருள் நிறைந்திருக்கிறது” அதன் வாசகங்களில் கூறுவதைக் காணலாம். நானும் இந்த அறிவீனத்தில் தான் விழுந்துகிடந்தேன். ஆனால் உமது வலக்கரத்தால் என்னைத் தாங்கி, அந்த சேற்றில் இருந்து என்னைத் தூக்கிவிட்டீர். மீட்பைத் பெறக்கூடிய இடத்துக்கு என்னை இட்டுச் சென்றீர். “கர்த்தருக்கு பயப்படுங்கள், அவரை மதியுங்கள். அதுவே ஞானம் மிகுந்த செயலாகும்” என்று யோபு 28:28 இல் கூறியிருப்பதையும், நீதிமொழிகள் 26:5 இல் “உங்களை நீங்களே அறிவாளிகள் என்று எண்ணாதீர்கள்” என்றும், உரோமர் 1:22. இல் “தங்களை ஞானிகள் என்று செருக்குடன் கூறிக்கொண்டிருப்பவர்கள் முட்டாள்களாகவே கணக்கிடப்படுவர்” என்று கூறியிருப்பதையும் காணலாம். அத்தோடு, மத்தேயு 13:46 இல், “ஒரு நாள் ஒரு வியாபாரி மிகச் சிறந்த முத்து ஒன்றைக் கண்டான். அம்முத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த அனைத்தையும் அந்த வியாபாரி விற்றான்,” என்று கூறுவதன் அர்த்தம் என்னவென்றால், என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து நல்ல முத்து என்ற தேவ கிருபையை நான் வாங்கியிருக்க வேண்டும்; ஆனால் அதை செய்யாமல் விட்டுவிட்டேன்.

அத்தியாயம் 2 – பக்தியுள்ள முதியவர் தான் பிளேட்டோ மற்றும் புனித நூல்களைப் படித்ததில் மகிழ்ச்சி அடைகிறார், மேலும் சொல்லாட்சி விற்பன்னரான விக்டோரினஸ் புனித நூல்களைப் படித்ததன் மூலம் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார் என்று கூறுகிறார்

3. தேவ கிருபையால் நிரம்பப்பெற்றவரானவரும், ஆயரான அம்ப்ரோஸ் [அக்காலகட்டத்தில் அங்கே ஆயராக திருப்பணியாற்றியவர்] அவர்களின் தந்தையுமான சிம்ப்ளியானுஸை சந்திப்பதற்காக நான் சென்றேன். ஒரு தந்தை மீது எவ்வாறு அன்பு செலுத்தவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணபுருஷராய் அப்ரோஸ் அவர்கள் விளங்கினார். அத அளவுக்கு அவர் தனது தந்தையை நேசித்தார். உமது அருளைப் பெற்றவரான அவரிடம், தவறுகளால் சூழப்பட்டு எவ்விதக் குறிக்கோளுமின்றி சுற்றித்திரிந்துகொண்டிருந்த எனது கதையை சொன்னேன். மேலும் அவரிடம், உரோமில் சில காலத்துக்குமுன் சொல்லாட்சிக் கலையில் விற்பன்னராக விளங்கிய பேராசிரியரான விக்டோரினஸ் என்பவரால் [அவர் இறக்கும்போது கிறிஸ்தவனாக இறந்தார் என்று எனக்குக் கூறப்பட்டது] அந்த புத்தகம் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டதாக சொன்னேன். உடனே அவர், அப்படிப்பட்ட புத்தகங்களை நான் படித்திருந்தபோதிலும், பொய்களும் வஞ்சகமும் நிறைந்த மற்ற தத்துவஞானிகளின் எழுத்துக்களுக்கு நான் இரையாகி விடவில்லை என்ற காரணத்தால் என்னை வெகுவாகப் பாராட்டினார். கொலோசெயர் 2:8 இன் வாசகங்களில் பின்வருமாறு கூறப்பட்டிருப்பது இதை எமக்கு நினைவூட்டுகிறது: “பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வருவதில்லை, மனிதரிடமிருந்தே வருகின்றன” என்கிறது. அதேசமயம் பல வழிகளில் அவர்கள் கடவுள் குறித்தும், அவருடைய வார்த்தையின் மீதும் நம்பிக்கை கொள்ள வழிவகுத்தனர். ஞானிகளிடமிருந்து மறைக்கப்பட்ட கிறிஸ்துவின் மனத்தாழ்மைக்கு என்னை இட்டுச் சென்றதாக என்னால் உணர முடிந்தது. இதை மத்தேயு 11:25 இல் கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்: “பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவராகிய பிதாவே! உமக்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால், இவற்றை நீர் ஞானிகளிடம் இருந்து மறைத்தவற்றைக் குழந்தைகளைப் போன்ற மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்” இந்த வாசகங்களில் காட்டப்பட்டவற்றுக்கு இணங்க, அவர் விக்டோரினஸைப் பற்றி பேசினார். அவர் உரோமில் இருந்தபோது ​​அவரிடம் நெருக்கமான உறவைப் பேணிவந்தார் என்றும் அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்றை அவன் என்னோடு பகிர்ந்துகொள்ள விரும்பினார். மேலும் அவர் விக்டோரினஸைப் பற்றிப் பேசிய விடயத்தை நான் கேட்டுவிட்டு மெளனமாக இருக்கக்கூடாது என்று என் மனதில் நினைத்துக்கொண்டேன். ஏனெனில், அது உமது அருளையும் புகழையும் பறைசாற்றும் ஒரு நிகழ்வாக அது இருந்தபடியால். கல்வியறிவில் விற்பன்னரான அந்த முதியவர், அனைத்து தாராளவாத அறிவியலிலும் மிகவும் திறமையானவர். தத்துவஞானிகளின் பல படைப்புகளைப் படித்தும், அவற்றை விமர்சித்தும், விளக்கியும் வந்தவர். அவர் பல உன்னத சட்டசபை உறுப்பினர்களுக்கு ஆசிரியராகவும் இருந்தார் என்பதை நான் உம்மிடம் ஒப்புக் கொள்ள வேண்டும். அதேநேரம், அவர் தனது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றியதற்கு அடையாளமாகவும், அவரது தகுதியைப் போற்றும் முகமாகவும், (இந்த உலக மனிதர்கள் கௌரவத்தை எப்போதும் மதிக்கிறார்கள்) உரோமைய மன்றத்தில் அவரது ஞான சின்னமாக ஒரு சிலை நிறுவப்பட்டது. இத்தனை கௌரவத்துக்கும், புகழுக்கும் பாத்திரமான அவர், அந்த அனுபவ முதிர்ச்சி எய்திய முதுமையான வயதிலும், சிலைகளை வணங்குபவராகவும், தெய்வீக சம்பிரதாயங்களுக்கு எதிரான விடயங்களில் ஈடுபடுபவராகவும், பங்கேற்பவருமாக இருந்தார். அக்காலப்பகுதியில், உரோமைய ஆட்சியாளர்கள் இவ்வாறான கிரகங்கள், அவற்றின் நிலை, சக்தி மற்றும் அவற்றின் ஆட்சி போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர். இதற்கு ஒரு உதாரணம் தாம் பின்வரும் கவிதை வரிகள்:

‘நாய் வடிவ அனுபிஸ், மற்றும் ஆயுதம் ஏந்தி நிற்கும் அசுர கடவுள்களையும் கொண்ட ஒரு அணி,

நெப்டியூனுக்கும், சுக்கிரனுக்கும், கலை ஞானம் போன்றவற்றின் காவலனாக கிரேக்கர்கள் வழிபடும் மினெர்வா

மற்றும் உருக்குக் கவசம் அணிந்த செவ்வாய்க்கும்

எதிராக போர்க்கொடி தூக்கி நின்றார்கள்’

இவ்வாறு அவர்களால் போற்றப்பட்ட உரோம் நகரத்தை ஒரு காலத்தில் வெற்றி கொண்டவனாக செவ்வாய்க் கிரகம் திகழ்ந்தான் என்பது இவர்களது ஐதீகம். இந்த மூட நம்பிக்கை நிறைந்த வழிபாடு மற்றும் அதனோடு இணைந்த சடங்குகள் போன்ற அனைத்துக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்தார் விக்டோரினுஸ். அத்தோடு நின்றுவிடாமல், இந்த வழிபாட்டுக்கு விரோதமானவர்களை பயங்கரமாக விமர்சித்து அவர்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார் அவர். இருந்தபோதிலும், கிறீஸ்துவின் ஊழியராக மாற்றம் பெற்றதையிட்டு அவர் வெட்கம் கொள்ளவில்லை. ஞானஸ்நானத் தொட்டியில் அன்று அவதரித்த புதிய ஒரு சிசுவாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அவர், தாழ்மை என்ற சுமையை ஏற்றுக்கொள்ள, தனது சிரத்தைத் தாழ்த்தியபடி நின்றார். சிலுவை அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும் முகமாக தனது நெற்றியை முற்றிலுமாக அர்ப்பணித்தார்.

4. ஆண்டவரே, வானத்தை வணங்கப்பண்ணிய என் தேவனே, பூமியின் மீது இறங்கி வாரும், புகையைக் கக்கும் மலைகளை உமது திருக்கரங்களால் தொடும். நீர் எவ்வழியில் உமது இதயத்தை எமக்காகத் திறந்தீர்? விக்டோரினஸ் பரிசுத்த வேதாகமத்தை மிகவும் கவனமாகவும் கரிசனையுடனும் படித்ததும் அல்லாமல், எல்லா கிறிஸ்தவ நூல்களையும் ஆராய்ந்தார். அவர் தனது நெருங்கிய நண்பரான சிம்ப்ளிசியனஸிடம் வெளிப்படையாக இல்லாமல், ரகசியமாகத் தான் ஒரு கிறிஸ்தவர் என்று கூறினார். அதற்கு பதிலளிக்கும் அவர் அதைத் தான் நம்பப் போவதில்லை என்றும், கிறிஸ்துவின் தேவ சபையில் அவரைப் பார்க்காமல் அவரைக் கிறிஸ்தவர்களிடையே தரவரிசைப்படுத்தப் போவதில்லை என்றும் கூறிவிட்டார். அதைக் கேட்ட விக்டோரியானுஸ் ஏளனமாக பதிலளித்தார். அப்படியானால் கிறிஸ்தவர்களை உருவாக்குவது வெறும் மதில்களும் சுவர்களும் மட்டும்தானா? என்று கேட்டார். தான் ஏற்கனவே ஒரு கிறீஸ்தவராய் மாற்றமடைந்துவிட்டதாக விக்டோரியானுஸ் சொன்னபோதெலாம், சிம்ப்ளியானுஸ் இதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கு சிரித்தபடியே விக்டோரியானுஸ் சுவர்கள் பற்றி அவரிடம் விளக்கினார். கர்த்தரால் இன்னும் நிர்மூலமாக்கப்படாத லெபனானின் கேதுரு மரங்களைப் போலவும், பாபிலோனிய கோபுரத்தின் உச்சியிலிருந்தும் சாத்தான்களை பெருமையுடன் வழிபடும் தனது நண்பர்களை புண்படுத்த அவர் தயங்கியவராய், அதனால் பகை என்னும் புயல் தம்மைத் தாக்கும் என அவர் எண்ணினார். ஆனால் அதற்குப் பிறகு, நூல்கள் பலவற்றை வாசித்து, ஆராய்ந்து பெற்ற தெளிவின் காரணமாக, அவர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டார். பரிசுத்த தேவதூதர்களுக்கு முன்பாக கிறிஸ்துவால் தான் நிராகரித்து விடப்படுவாரோ என்று பயந்தார். லூக்கா 9:26-ல் கூறப்பட்டுள்ளபடி, “ஒருவன் என்னைக் குறித்தோ, அல்லது என் போதனையைக் குறித்தோ வெட்கப்பட்டால், நான் எனது மகிமையோடும், பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களின் மகிமையோடும் வருகைதரும் போது அவனைக் குறித்து வெட்கப் படுவேன்” என்று கூறப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார். உமது வார்த்தையின் தாழ்ச்சி எனும் சடங்குகளை எண்ணி வெட்கப்பட்டு, சாத்தான்களின் பெருமைகளைப் பற்றி வெட்கப்படாமல், அவைகளின் சடங்குகளை ஏற்றுக்கொண்டதன் காரணமாகத் தான் ஒரு பெரிய தவறு செய்து விட்டதாக அவருக்குத் தோன்றியது. ஏனெனில் தான் வழிபட்ட சாத்தான்களைப் போன்றே மிகுந்த ஆணவத்தோடும், அகந்தையோடும் அவர் வலம்வந்தார். இருப்பினும், அந்த வழிபாடுகளால் எதுவுமற்ற வெறுமையையே கண்ட அவர், சத்தியத்தின்மீது கரிசனைகொள்ளத் தொடங்கினார். அப்போதுதான் ஒருநாள், திடீரென அவர், யாரும் எதிர்பாராத நேரத்தில், விக்டோரியானுஸ், சிம்ப்ளியானுசிடம் வந்து ‘நான் தேவாலயத்துக்குப் போகவேண்டும், நான் கிறீஸ்தவனாய் மாற முடிவு செய்துவிட்டேன்’ என்றார். இதைக்கேட்ட சிம்ப்ளியானுஸ் பிரமித்துப் போனவராக, அவருடன் தேவாலயத்தை நோக்கி நடந்தார். போதனைகள் போன்ற ஆரம்ப சடங்குகளைப் பெற்ற சிறிது நேரத்துக்குப் பிறகு, பாவங்களை விடுத்து மீண்டும் புதியவனாகப் பிறக்கும் முகமாக அவர் ஞானஸ்நானம் பெறுவதற்கு தனது சம்மதத்தை அறிவித்தார். இதன் விளைவாக உரோம் நகரம் கொண்டாட்டத்தில் களைகட்டியது, திருச்சபையும் இந்தப் பேரானந்தத்தைக் கொண்டாடியது. இதற்கிடையில், ஆணவம் கொண்ட பிரிவினர் இதைக் கண்டு ஆத்திரமடைந்தனர். தங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு தங்கள் வெறுப்பை உமிழ்ந்தனர். அதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய முடியவில்லை! ஆனால் கர்த்தராகிய ஆண்டவர் உமது அடியேனின் நம்பிக்கையின் விடிவெள்ளியாக இருந்தார். அவர் மாயைகளையும் பொய்களையும், பித்தலாட்டங்களையும் அடியோடு புறக்கணித்தார்.

5. இறுதியாக, அவர் தனது விசுவாசத்தை அறிக்கையிட வேண்டிய நேரம் வந்தது. (உரோம் நகரத்து வழக்கப்படி, உமது திருவருளை நாடி நிற்போர், ஒரு குறிப்பிட்ட வார்த்தைப் பிரமாணத்தை மனனம் செய்து, அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு உயரமான ஒரு இடத்தில் நின்றுகொண்டு, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்கள் நிறைந்த சபையின் முன் உரத்த குரலால் சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்தது). தனிப்பட்ட முறையில் மறைமூப்பர்கள் மற்றும் அருட்பணியாளர்கள் விக்டோரினசுக்கு உதவ முன்வந்தபோதிலும், தனது விசுவாச அறிக்கையை அவர் பரிசுத்த சபையின் முன் சமர்ப்பிக்கவே விரும்பினார். முன்னையது தான் அங்கு நிலவிய வழக்கமாக இருந்தபோதிலும், பயந்த, வெட்க சுபாவம் கொண்டவர்களுக்கு பிரத்தியேகமாக இவ்வாறு தங்கள் விசுவாச அறிக்கையை சமர்ப்பிக்கும் ஒரு சலுகை வழங்கப்பட்டிருந்தது. ஆதலினால், அவர் பரிசுத்த சபையின் முன்னிலையில் தனது இரட்சிப்பு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க முடிவுசெய்தார். சொல்லாட்சியில் கற்பிக்கப்பட்ட இரட்சிப்பு அது அல்ல என்ற போதிலும், அதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். வெறித்தனமான கூட்டத்திற்கு முன் அஞ்சாமல் எத்தனையோ உரைகளைத் தைரியமாக ஆற்றிய அவர், சாந்தகுணம் கொண்ட உமது அவையினர் முன்பு எப்படியும் உமது திருவார்த்தைகளைப் பற்றிப் பேசப் பயப்பட மாட்டார் என்பது உறுதி. எனவே அவர் தனது அறிக்கையை ஒப்புவிக்கும் முகமாக மேடைப் படிகளில் ஏறியபோது, ​​அவரை அடையாளம் கண்டுகொண்ட பலர் வாழ்த்தும் குரலில் அவரது பெயரைச் சொல்லி ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொண்டனர். அந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில் அவரை அறியாதவர் யார் இருக்கமுடியும்? மகிழ்ச்சியில் திளைத்த கூட்டத்தினர் அனைவரின் வாயிலும் ஒரு மெல்லிய முணுமுணுப்பு வெளியேறியது! விக்டோரினஸ், விக்டோரினஸ் என்று அங்கிருந்த அனைவரும் மெல்லிய ஆரவாரத்துடன் அவரை வாழ்த்தினர். அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சி பொங்கிய கூட்டத்தினர், அவரது உரையைக் கேட்கும் நோக்கத்துடன் அமைதியாகக் காத்திருந்தனர். அவர் சத்தியத்தின் மகத்துவம் பற்றி சிறந்த தைரியத்துடன் உரையாற்றினார். மேலும் அங்கு குழுமியிருந்த அனைவரும் அவரை இதயபூர்வமாக ஏற்றுக்கொள்ள ஆவலாயிருந்தனர். ஆம், அவர்களின் அன்பு மற்றும் மகிழ்ச்சியால் அவர்கள் அவரை தங்கள் இதயத்துக்குள் அமரச் செய்தனர். பாசமும், நேசமும் பொங்க, தங்கள் கைகளால் அவரைத் தழுவி அரவணைத்துக்கொண்டனர்.

அத்தியாயம் 3 – தேவனும், தேவதூதர்களும் பல நீதிமான்களை விட ஒரு பாவி மனம் திரும்பி வருவதில் அதிக மகிழ்ச்சி அடைகிறார்கள்

6. நன்மையின் வடிவான தேவனே, விரக்தியடைந்து, ஆபத்திலும், இக்கட்டிலும் இருந்து விடுபட்ட ஒரு ஆன்மா தான் அடைந்த பாரிய மகிழ்ச்சியைப் பார்க்கிலும், பொல்லாப்புகள் அற்ற சூழ்நிலையில் இருந்து வெளியேறிய ஒரு ஆன்மா குறைவான மகிழ்ச்சியையே பெறுகிறது. எனவே, இரக்கமுள்ள தந்தையாகிய நீர், மனந்திரும்புதல் அவசியமற்ற தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் காட்டிலும், மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறீர். மேலும், காணாமல் போன செம்மறியாட்டை மேய்ப்பன் தனது தோளில் சுமந்து கொண்டு வருவதை நாங்கள் கேட்கும் போதெல்லாம், தேவதூதர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் தேடியது உங்கள் மந்தைக்கு மீண்டும் வருகிறது, அயலவர் அதைக் கண்டுபிடித்த பெண்ணுடன் மகிழ்கிறார்கள்; இதை லூக்கா 15:4-10. வாசகங்களில் தெளிவாகவும், உவமைகளோடும் விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இறந்துபோய் மீண்டும் உயிர்பெற்றெழுந்த, காணாமற்போய் மீண்டும் உம்மிடம் திரும்பிவந்த உமது இளைய மகன் பற்றிய கதையைக் கேட்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், அது உமது இல்லத்தில் எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று எண்ணும்போது, எங்கள் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன. இதை லூக்கா 15:32 தன் வாசகங்கள் வாயிலாக இவ்வாறு விளக்குகிறது: “நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்” என்று. உமது புனிதமான அன்பில் வாழும் எங்களிடமும் உமது தேவதூதர்களிடமும் நீர் என்றும் மகிழ்ச்சி கொள்கிறீர். நீர் என்றும் மாறாதவராக, எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்; ஏனென்றால், மாறுகின்ற அனைத்தையும் நிலையானதாய் மாற்றி அவற்றை வழிநடத்துபவர் நீர் ஒருவர் மட்டுமே.

7. தான் விரும்பிய ஒன்றை ஏற்கனவே அடைந்ததில் ஏற்படும் மகிழ்ச்சியைக் காட்டிலும், தான் மிகவும் நேசித்த ஏதேனும் ஒன்று காணாமற்போய் அல்லது தன்னை விட்டு விலகிப்போய் மீண்டும் தன்னிடம் வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சியினால் ஆன்மா இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவது ஏன்? ஆம், மற்றவைகள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன, எல்லாமே ஆம் உண்மைதான் என்று கூக்குரலிடும் சாட்சிகளால் நிறைந்திருக்கிறது. வெற்றி பெற்ற தளபதி களிப்பில் இருக்கிறார். அவர் கடுமையாகப் போராடாமல் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்க மாட்டார். மேலும் போரின் கடுமை அதிகமாக இருந்தால், வெற்றியின் மகிழ்ச்சியும் அதிகமாக இருக்கும். கடலில் பயணிக்கும் பயணிகள் புயலால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் எண்ணி அச்சம் கொள்கிறார்கள். கப்பல் மூழ்கி விடுமோ அல்லது இரண்டாக உடைந்து விடுமோ என்ற பயம் அவர்களை பீடித்துக்கொள்கிறது. பயத்தால் முகமெல்லாம் வெளிறிப்போய் மரணத்தின் வாயிலுக்கே சென்று விடுகிறார்கள். பின்னர் புயல் தணிந்து காற்றின் வேகம் குறைந்து கடல் அமைதியானவுடன் அவர்களது மனங்களும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கின்றன. அதேபோல், அன்புக்குரிய ஒருவர் நோய்வாய்ப்பட்டு அவரது நாடித் துடிப்பு குறைந்துகொண்டே போகும்போது அவர் ஆபத்தில் இருப்பதைக் குறிக்கிறது. அவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவரும் தங்கள் மனதால் கவலைப்படுகிறார்கள். ஆனால் பின்னர் அவர் குணமடைகிறார். அவர் தனது முந்தைய வலிமையுடன் இன்னும் நடக்க முடியவில்லை என்றபோதும், அவரது பழைய நிலைமையில் அவர் இருந்ததைக் காட்டிலும், அவரது தற்போதைய தேறி வரும் நிலை எல்லோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆம், எதிர்பாராத விதமாகவும், நம் விருப்பத்திற்கு எதிராகவும் நடக்கும் நிகழ்வுகள் நமக்குத் தரும் மகிழ்ச்சியைவிட, நாமே முன்னேற்பாடு செய்து திட்டமிட்டு செய்யும் காரியங்கள் — அவை துன்பத்தைக் கொண்டுவந்த போதும் – அவை கொண்டுவரும் இன்பத்தையே மனித மனங்கள் பெரிதாய்ப் போற்றுகின்றன. வயிற்றைக் கிள்ளும் பசியோ, தொண்டையை வாட்டும் தாகமோ இல்லாத நேரங்களில் உண்பதும் குடிப்பதும் எவ்வாறு இன்பத்தையும் நிறைவையும் கொண்டுவரும்? மதுப்பிரியர்கள் உப்பிட்ட இறைச்சி போன்றவற்றை உண்ணும்போது உடலில் ஏற்படும் ஒருவித வெப்பம் தங்களுக்கு மேலும் மகிழ்ச்சியைத் தருவதாக உணர்கிறார்கள். அத்தோடு அவர்கள் அருந்தும் மது இந்த வேட்கையை மேலும் அதிகரிக்கச் செய்து அதில் அவர்கள் இன்பம் காண்கிறார்கள். திருமணத்துக்காக நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண், உடனேயே அவளது கணவனாக வரப்போகிறவனிடம் ஒப்படைக்கப் படுவதில்லை. அப்படி ஒப்படைக்கப்பட்டால் அவளது மதிப்பை அவன் உணர்வதில்லை. எப்போது அவளைத் தன்னிடம் கையளிப்பார்கள் என்ற ஏக்கம் அவனை வாட்டும்போது தான் அவள் மீது கொண்டிருக்கும் மதிப்பும், கௌரவமும், விருப்பமும் அவன் மனதில் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

8. குறைத்து மதிப்பிடக்கூடிய, விரும்பத்தகாத அதேநேரம், ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பான உறவுகளில், ‘இறந்து மீண்டும் உயிர் பெறல்’ அல்லது ‘காணாமற்போய் மீண்டும் கண்டடைதல்’ போன்றவற்றையே சாயலாகக் கொண்டு அமைந்திருக்கின்றன. இது லூக்கா 15 :32 இல் காணாமற்போன செம்மறியாடு கண்டுபிடிக்கப் பட்டமை, மற்றும் இறந்துபோன இளைய மகன் உயிர் பெற்று வந்தமை போன்ற உவமானங்களால் விளக்கப் பட்டுள்ளதைக் கவனிக்கவும். அதிக மகிழ்ச்சி ஏற்படும் போதெல்லாம், அதற்கு சமமான அல்லது அதிகமான துன்பத்தை நாம் முன்பு அனுபவித்திருப்போம். அப்படியானால், என் மீட்பராகிய தேவனே, இதன் பொருள் என்ன? நீரே என்றும் அழிவில்லாதவராய், எமது மகிழ்ச்சியின் ஊற்றாய் இருக்கிறீர். உம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் உம்மால் மகிழ்ச்சி கொள்கின்றன. ஆனால், உமது படைப்பின் ஒரு பகுதி மட்டும் பின்னடைவைச் சந்திப்பதும், புண்படுத்திக்கொள்வதும் பின்னர் சமரசம் செய்துகொள்வதும் ஏன்? ஒருவேளை இது நீர் அவர்களுக்கு கொடுத்த வரமா? அதேசமயம் மிக உயர்ந்த வானத்திலிருந்து தாழ்வான பூமி வரை, உலகின் ஆரம்பம் முதல் அதன் முடிவு வரை, பரிசுத்த தேவதூதர் முதல் சாதாரண அற்பப் புழு வரை, ஆதியில் இருந்த இயக்கம் முதல் கடைசியாக இருக்கும் இயக்கம் வரை, ஒவ்வொன்றையும் அதனதன் பொருத்தமான இடங்களில் வைத்து, ஒவ்வொன்றுக்கும் அதன் சரியான பருவங்களையும் அளித்துள்ளீர். இவை யாவற்றையும் நீர் செய்தது, உமது மகிமை நிறைந்த நன்மை காரணமாக, படைப்பின் ஓரணியில் இவை பயணிக்க வேண்டும் என்ற காரணத்தாலா? ஐயகோ! நான் ஒரு அற்பனாக இருக்கிறேன். நீரோ மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவரைவிட உயர்ந்தவர், ஆழம் என்று பார்த்தால் எவ்வளவு ஆழமானவர்! நீர் என்றும் எம்மைவிட்டுப் பிரிவதில்லை, ஆனால் நாங்கள் உம்மிடம் திரும்புவது தான் அரிதாக இருக்கிறது.

அத்தியாயம் 4 – விக்டோரினஸை உதாரணமாகக் கொண்டு அறிஞர்களின் மனமாற்றம் அதிக மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை அவர் நிரூபிக்கிறார்

9. என் தேவனே, விரைந்து வாரும். எங்களைத் தூண்டிவிட்டு மீண்டும் எம்மை உம்மை நோக்கி அழைக்கவும். எங்களைத் தூண்டி, எங்களை உம்மிடம் நெருங்கச் செய்யும். எம்மைத் தூண்டுவதன் மூலம் எமக்குள் இனிமையைக் கொண்டுவாரும். இப்போது உம்மை நாம் நேசிக்கிறோம், உம்மை நோக்கி ஓடிவரும்படி செய்தருளும்: உன்னதப்பாட்டு 1 4 இல் இதற்கான உதாரணம் தரப்பட்டுள்ளது. விக்டோரினஸை விட, நரகத்தையொத்த அறிவீனத்தின் ஆழத்திலிருந்து பலர் உம்மிடம் மீண்டும் வந்து உம்மை அணுகி அறிவொளி பெற்றவர்களாகவும், அந்த ஒளியால் ஒளிர்பவர்களாகவும் இருக்கிறார்கள். உம்மிடமிருந்து அந்த ஒளியெனும் சக்தியைப் பெற்று உமது பிள்ளைகளாக அவர்கள் மாறவில்லையா? இதை யோவான் 1:12. இல் வரும் வாசகங்கள், “சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார்” என்று இயம்புகின்றன. ஆனால் அவர்கள் மக்களிடையே குறைவான அறிமுகத்தைக் கொண்டிருந்தால், அவர்களை அறிந்தவர்கள் மத்தியில் கூட அவர்களது மகிழ்ச்சி மட்டுப்பட்டதாகவே இருக்கும். அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் கூட இவர்களையிட்டு மகிழ்வுறுவதில்லை. அதேவேளை, பலர் ஒன்றுகூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது, அங்கே நிலவும் மகிழ்ச்சியான சூழ்நிலை பன்மடங்காகிறது. அவரவர் மனங்களில் ஊற்றெடுக்கும் உற்சாகமும், ஆர்ப்பரிப்பும் எல்லோரையும் ஒன்றிணைத்து மகிழவைக்கிறது. அங்கே பலருக்குத் தெரிந்தவர்கள், தங்கள் செல்வாக்கைக் கொண்டு பலரை இரட்சிப்பை நோக்கிச் செல்ல அவர்களுக்கு வழிகாட்டியாய் இருந்து அவர்களைப் பின்பற்ற தூண்டுகோலாய் அமைந்துவிடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு வழிகாட்டியாய் இருந்தவர்கள் அவர்களைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவர்களைப் பற்றி மட்டும் மகிழ்ச்சியடையவில்லை. உமது கூடாரத்தில், ஏழைகளுக்கு முன்பாக பணக்காரர்கள் அல்லது இழிவானவர்கள் முன்பாக பிரபுக்கள் போன்றோர் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்கக்கூடும். அதற்கு எதிர்மாறாக, இவ்வுலகில் வலியதை எதிகொள்ள மெலியதை நீர் தெரிந்துகொண்டுள்ளீர். இதை 1 கொரிந்தியர் 27-28 வாசகங்களில், “ஞானிகளுக்கு வெட்கத்தைத் தரும்படியாக தேவன் உலகத்தின் முட்டாள்தனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். பலவான்களான மனிதர்களை அவமதிக்க உலகத்தின் பலவீனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். உலகம் முக்கியமற்றதென்று நினைப்பதை தேவன் தேர்ந்துகொண்டார். உலகம் வெறுப்பதையும், பயனற்றதெனக் கருதுவதையும் அவர் தேர்ந்தெடுத்தார். முக்கியமென உலகம் பார்க்கிறவற்றை அழிப்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார்” என்று மிக அழகாக எடுத்துரைக்கிறது. “மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள். நான் தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தியவன். எனவே அப்போஸ்தலன் என்று அழைக்கப் படுவதற்கும் நான் தகுதியுடையவன் அல்ல” என்று 1 கொரிந்தியர் 15 : 9 இலும், “ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான்” என்று அப்போஸ்தலர் பணிகள் 13:12 இலும் கூறப்பட்டிருப்பது இங்கே நினைவுகூரத்தக்கது. அத்தோடு, அப்போஸ்தலனின் சாமர்த்தியத்தால் அவனது பெருமை வெல்லப்பட்டது – அதாவது, கிறீஸ்துவின் கருணைக்கு முன், தனது நுகத்தைத் தாழ்த்தி பேரரசரின் கீழ் பணிபுரியும்பொருட்டு அவரை ஆளுநராக மாற்றினார். [மத்தேயு 11:30 இல் “நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் கடமை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது” என்று இயேசு கூறினார் என்று கூறப்பட்டிருப்பதைக் காண்க]. – அவரும், சவுல் என்ற தனது முன்னாள் பெயரை மாற்றி, இவ்வளவு பெரிய வெற்றியின் சாட்சியாக, பவுல் என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார். எதிரியானவன் தன்னைவிட ஆற்றலில் குறைந்தவன் என்று எவனை எடைபோடுகிறானோ, அவனாலே அவன் வீழ்த்தப்படும்போது, அவன் அடையும் தோல்வி அவனுக்கு மிகவும் கசப்பானதாக இருக்கிறது. ஏனென்றால், எதிரி அவனது படைபலத்தால் பலரை அடக்கியாள்கிறான். அவனது ஆட்சி அவனுக்குத் தருகின்ற பலம் மற்றும் பெருக்கின் மிகுதியால், அவன் பிரபுக்கள் மீதும் தனது அதிகார வெறியைத் திணிக்கிறான். அப்படியானால், சாத்தானானவன், விக்டோரினுசுடைய மனதில் தகர்க்க முடியாத கோட்டையைக் கட்டிவைத்திருந்தாலும், அவரது நா வன்மையை ஒரு கூரிய வாளாகப் பயன்படுத்தி, எத்தனையோ பேரை நிர்மூலம் செய்திருந்தாலும், விக்டோரினஸின் மனமாற்றம் அவருக்கு எந்தளவு வரவேற்பைப் பெற்றுத்தந்ததோ, அந்த அளவுக்கு அது சாத்தானுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத படுதோல்வியாக அமைந்திருந்தது. மத்தேயு 12:29 இல், “ஒருவன் வலிமையான மனிதனின் வீட்டுக்குள் புகுந்து திருட நினைத்தால், முதலில் அவ்வலிமையான மனிதனைக் கட்டிப்போட வேண்டும். பின்னரே, அவன் அவ்வலிமையான மனிதனின் வீட்டிலிருந்து பொருட்களைத் திருட முடியும்” என்று வாசகஹ்த்துக்கு இணங்க, நீர் வலிமையான ஒருவனைக் கட்டிப்போட்டுவிட்டீர். அதன் காரணமாக உமது மக்களாகிய நாம் பெருமகிழ்ச்சி கொண்டோம். இத்தோடு நாம் 2 தீமோத்தேயுவில் கூறப்பட்டிருப்பதையும் சற்று கவனிப்போம். “எவனொருவன் தீய காரியங்களில் ஈடுபடாமல் விலகி தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ அவன் சிறப்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்குப் பயன்படுபவனாக இருப்பான்.” இதன் அர்த்தம், உமது மக்களது பாத்திரங்கள் அவரிடமிருந்து எடுக்கப்பட்டு, சுத்திகரிக்க ப்படுவதையும், அவை உமது மகிமைக்காகச் செய்யப்பட்டதையும், எல்லா நற்கிரியை வாயிலாகவும் கர்த்தருக்குப் பணிவிடை செய்வதற்காகத் தாங்கள் தூண்டப்படுவதையும் கண்டனர்.

அத்தியாயம் 5 – கடவுளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தும் காரணிகள்

10. உமக்குப் பணிசெய்வதில் தன்னை இணைத்துக்கொண்ட விக்டோரினஸைப் பற்றி சிம்ப்ளிசியனஸ் என்னிடம் கூறியபோது, நான் அவரைப் பின்பற்றத் தீர்மானித்தேன். என் மனமாற்றத்தை நோக்கமாகக் கொண்டே அவர் அதைச் சொன்னார்: ஜூலியன் என்ற ஆட்சியாளரின் காலத்தில், கிறிஸ்தவர்கள் இலக்கணம் மற்றும் சொல்லாட்சிக்கலை போன்ற பாடங்களைக் கற்பிக்க தடை விதிக்கும் ஒரு சட்டம் இருந்தது. ஆனால், சொல்லாட்சிக்கலையைக் கற்பிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த அவர், இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து, கற்பித்தலைக் கைவிட்டு, தேவனுடைய வார்த்தையை மேலானதாகவும் புனிதமானதென்றும் போற்றி ஏற்றுக்கொண்டார். ஏனென்றால் தேவனுடைய திருவார்த்தைகள் சாலொமோனின் ஞானம் 10:21 இல் கூறப்பட்டிருப்பதுபோல, “நல்லவனின் வார்த்தைகள் பலருக்கு உதவியாக இருக்கும். ஆனால் முட்டாள்களோ அறிவீனத்தால் அழிந்துபோவார்கள்” என்ற வாசகத்துக்கிணங்க, தனது காலம் நேரம் மட்டுமல்ல, தன் வாழ்நாள் முழுவதையும் உமது சேவைக்காகவே அர்ப்பணிக்க அவர் உறுதி பூண்டிருந்தார். இது அவர் மனதில் இருந்த தைரியத்தைக் காட்டுவது மட்டுமல்ல, இதை அவ ஒரு அதிர்ஷ்டமாகவே கருதினார் என்று என்னால் கூறமுடியும். ஆனால், இப்படிப்பட்ட ஒரு அசாத்தியத் துணிச்சலை என்னில் வரவழைக்க முடியாதவாயிருந்தேன். இது அந்த வாழ்வில் ஒரு பாரிய பின்னடைவாக இருந்தது. நான் கட்டப்பட்டிருப்பது இன்னொருவர் என்னைப் பிணைத்த சங்கிலிகளால் அல்ல, எனது அறிவீனத்தாலும், பிழையான தெரிவுகளாலும், என் சொந்த சங்கிலிகளைக் கொண்டு என்னை நானே பிணைத்துக்கொண்டேன். எனது பலவீனம் எதிரிக்கு சாதகமாக அமைந்துவிட, இம்முறை, அவன் ஒரு சங்கிலியை உண்டாக்கி என்னை இறுகப் பிணைத்து, கைதியாக்கி விட்டான். ஒரு விபரீதமான ஆசை காரணமாக, காமம் தலைக்கேறி காமத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது, வழக்கம் கட்டுப்படுத்தப்படாததால், அது கட்டாயம் என்றே தோன்றியது. இந்த இணைப்புகள் யாவும் ஒன்றாக இணைக்கப் பட்டன (அதனால் நான் அதை ஒரு சங்கிலி என்று அழைக்கிறேன்), அதனால் எனக்குள் நானே வரழைத்துக்கொண்ட இந்த அடிமைத்தனம் என்னை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்தது. ஆயினும், இவை யாவற்றுக்கும் மேலாக, உம்மை முழுமையாக ஏற்றுக்கொண்டு, உமக்கு மட்டும் பணிபுரிந்து, உம்மில் மட்டுமே மகிழ்ச்சியைக் காணவேண்டும் என்பதே எனது தீராத அவா. என் தேவனே, உண்மையான ஆனந்தத்தின் பிறப்பிடமே, நான் எனது முன்னைய நிலையை அடையும் அளவுக்கு வலிமையுடையவனாய் இல்லை, நீண்ட கால விரக்தியால் வலுப்பெற்ற எனது முந்தைய ஆசையை இன்னும் என்னால் வெல்ல முடியவில்லை. இவ்வாறே தான் எனது இரண்டு விருப்பங்களும், ஒன்று பழையது மற்றொன்று புதியது, ஒன்று உடல்சார்ந்தது, மற்றொன்று ஆன்மீகம் சார்ந்தது. இவை எனக்கு மனக் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆயினும், அவற்றில் எழுந்த முரண்பாடுகள் காரணமாக, அவை என் ஆன்மாவை விடுவித்தன.

11. “ஆன்மாவுக்கு எதிராக சரீர இச்சையும், சரீர இச்சைக்கு எதிராக ஆன்மாவும் செயல்பட விரும்புகிறது. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. ஆகையால் நீங்கள் உண்மையில் விரும்புவதை உங்களால் செய்ய முடியாது” என்ற கலாத்தியரின் 5:17 ம் வாசகங்களில் காண்பதற்கு இணங்க, சரீரம் ஆன்மாவுக்கு எதிராகவும், ஆன்மா எவ்வாறு சரீரத்துக்கு எதிராகவும் தனது இச்சையை வெளிப்படுத்துகிறது என்பதை நான் படித்தவற்றின் மூலமும், எனது சொந்த அனுபவத்திலிருந்தும் புரிந்து கொண்டேன். நான் உண்மையில் இரண்டு வழி இச்சைகளுக்கும் இடம் கொடுத்தேன். இவற்றில் என்னில் நான் ஏற்றுக்கொள்ளாததை விட, எனக்குள் நான் ஒப்புக் கொண்டவற்றில் தான் என்னை அதிகமாக இழந்தேன். உரோமையர் 7:20 இல் கூறியிருப்பதுபோல, “எனக்கு விருப்பம் இல்லாததை நான் செய்தால், அது என்னால் அல்ல; எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது” என்ற வாசகத்தை இங்கே நினைவுகூரத்தக்கது. ஏனென்றால் நான் என் விருப்பத்துடன் செய்ததை விட, என் விருப்பத்திற்கு எதிராக செய்தவற்றாலேயே நான் அதிகம் துன்பப் பட்டேன். என் சொந்த விருப்பத்தாலும், தூண்டுதலாலுமே நான் எனக்குப் பிடிக்காத ஒரு இடத்தை அடைந்தேன். பாவம் செய்தவனுக்கு நியாயமான தண்டனை வரும்போது அதற்கு எதிராக யாரால் எந்த நீதியைக் கொண்டு பேச முடியும்? இந்த உலக வாழ்க்கையை துச்சமாக எண்ணி, உமக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் அடிக்கடிக் கூறிக்கொண்டிருக்கும் பொய்யான சாட்டுகள், அதாவது உண்மை பற்றிய எனது கருத்து நிச்சயமற்றதாக இருந்தபோது. ஆனால் இப்போது அப்படியல்ல, ஏனென்றால் இப்போது அது எனக்கு உறுதியாகவும் தெளிவாகவும் தெரிகிறது. ஆனால் நான் இன்னும் நிலத்தோடு பிணைக்கப்பட்டு, உமக்கு சேவை செய்யும் ஒரு சிப்பாயாக இருக்க மறுத்து, என்னால் முடிந்தவரைக்கும் எனது விலங்குகளை நானே சுமக்கவேண்டும் என்று என்னை அவற்றோடு பிணைத்துக் கொண்டேன். அந்த சுமைகளில் இருந்து மீண்டு, அவற்றிலிருந்து வெளியேறப் பயந்தேன்.

12. இவ்வாறாக, உலகத்தின் சுமைகளை சுமந்து நான் உறக்கத்தில் இருந்ததைப் போல, அந்தச் சுமை ஒரு இனிமையாகச் சுமையாக இருந்ததுபோல உணர்ந்தேன். நான் உம்மைத் தியானித்த வேளைகளில் என் மனதில் எழுந்த எண்ணங்கள், கடுமையான தூக்கத்தில் மூழ்கியிருந்த ஒருவன் விழித்தெழுந்து, மீண்டும் ஆழமான நித்திரைக்குள் செல்ல முயற்சிப்பதைப் போல இருந்தன. எப்பொழுதும் தூங்குவதை யாரும் விரும்பாதது போலவும், விழித்திருப்பது சாலவும் சிறந்தது என்பது அறிவுடையோர் யாவரினதும் திடமான எண்ணமாக இருக்கிறது. இருந்தபோதிலும், ஆழ்ந்த நித்திரை காரணமாக ஒருவனது உடல் அவயவங்கள் கடுமையான அசதியை உணரும் என்பதில் சந்தேகமில்லை. இதன் காரணமாக அவன் மீது அவனுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டாலும், நித்திரை விட்டெழும் நேரம் நெருங்கி வந்தபோதிலும், அவன் இன்னும் கொஞ்ச நேரம் நித்திரை செய்வதையே விரும்புகிறான். இதுபோலத்தான், நான் எனது சொந்த தீய இச்சைகளுக்கு என்னை விட்டுக்கொடுப்பதைவிட, உமது அன்பில் என்னை இணைத்துக்கொள்வது மேல் என்பதை நான் மனப்பூர்வமாக உணர்ந்தேன். இருப்பினும், முந்தைய வழி என்னை திருப்திப்படுத்தியது வெற்றியையும் தந்தது. பிந்தையது என்னை மகிழ்வித்தது மட்டுமன்றி என்னைப் பிணைத்தது. அப்போது எபேசியர் எழுதிய 5:14 ம் வாசகங்கள் என் நினைவுக்கு வந்தன. “தூங்குகிறவர்களே எழும்புங்கள், மரணத்திலிருந்து எழும்புங்கள். கிறிஸ்து உங்கள் மீது தன் ஒளியைப் பிரகாசிக்கச் செய்வார்” என்ற வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்தபோது, என்னிடம் அதற்கான பதில் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தேன். நீர் என் செவிகளுக்குள் ஒலிக்கச் செய்தது உண்மைதான் என்று பலமுறை எனக்குக் காட்டியபோதும், அதில் நான் உறுதியாக இருந்தாலும், தூக்கத்தில் உளறுவது போன்ற வார்த்தைகள்; அதாவது, இதோ, இப்போதே, இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளவும், போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் தவிர, வேறு எந்த வார்த்தைகளையும் பதிலாய் நான் அளிக்கவில்லை. ஆனால் உடனேயே, இப்பொழுதே போன்ற வார்த்தைப் பாதங்களை உச்சரிக்கக்கூடிய திடமான நிலை எனக்கிருக்கவில்லை. இன்னும் கொஞ்சநேரம், தயவு செய்து போன்ற பதங்கள் தான் காலத்துக்கும் தொடர்ந்தன. என் உடல் உறுப்புகளுக்குள் இருக்கும் பிறிதொரு சட்டம், என் மனதின் சட்டத்திற்கு எதிராகப் போரிட்டு, என் அவயவங்களிலுள்ள பாவச் சட்டத்திற்குள் என்னைச் சிறைப்படுத்துகிறது. பாவத்தின் சட்டம் என்பது எமது பழக்க வழக்கங்களால் தூண்டப்பெறும் வன்முறையாகும். இதன் மூலம் மனம் அதன் விருப்பத்திற்கு எதிராக அலைக்கழிக்கப்பட்டு அடிமையாகி விடுகிறது. அது மிகவும் சரியானதுதான். ஏனெனில், நான் இஷ்டப்பட்டே அதனுள் விழுந்தேன். பரிதாபத்துக்குரிய, கேவலமான மனிதனான நான், என்றோ ஓர் நாள் மரணத்தால் கபளீகரம் செய்யப்படும் இந்த உடலில் இருந்து என்னை விடுவிப்பது யார்? அப்படியானவர் ஒருவர் மட்டுமே, அவர்தான் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. உமது கிருபையன்றி எவர் என்னை இந்த இழிநிலையில் இருந்து விடுவிக்கக்கூடும்?

அத்தியாயம் 6 – முடியாட்சியை நிறுவிய ஆண்டனி மற்றும் அவரைப் பின்பற்றிய சிலரைப் பற்றிய பொன்டிஷியனஸின் கருத்து

13. மேலும், என் வலிமையும் என் மீட்பருமான ஆண்டவரே, நான் மிகவும் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருந்த பாலியல் இச்சையின் பிணைப்புகளிலிருந்தும், உலக விவகாரங்களின் கட்டுகளில் இருந்தும் எவ்வாறு என்னை விடுவித்தீர். ஆகவே இப்போது நான் உமது திருநாமத்தை போற்றிப் புகழ்வதில் பெருமிதம் கொள்கிறேன். அதிகரித்து வரும் மனஉளைச்சல்களுக்கு மத்தியில், நான் எனது வழக்கமான விடயங்களோடு போராடிக்கொண்டிருந்தேன். தினமும் உமது திருப்பாதத்தை நோக்கி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன். நான் என் கடமையாக உமது தேவாலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். என்னை அழுத்திக்கொண்டிருந்த சுமையில் இருந்து எனக்கு சுதந்திரம் தேவையென்று விரும்பினேன். அலிபியஸ் என்னுடன் இருந்தார். அவரது மூன்றாவது பரீட்சை அமர்விற்குப் பிறகு அவரது சட்டப்பூர்வ தொழிலில் இருந்து விலகி, தனது அவரது ஆலோசனைத் திறன்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பிற்காகக் காத்திருந்தார். ஒருவகையில் என்னைப்போலத்தான். ஏனென்றால், நானும் சொல்லாட்சியைக் கற்பித்ததன் காரணமாக, அந்த ஆற்றலையும் சந்தைப்படுத்த வழிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அதேநேரம், நெப்ரிடியஸ் என்ற எமது நண்பர், எங்கள் மீது கொண்டிருந்த நட்பின் காரணமாக, மிலானின் குடிமகனும் இலக்கண வல்லுநரும், நம் அனைவரின் மிக நெருங்கிய நண்பருமான வெரெகுண்டஸின் கீழ் கற்பிக்க ஒப்புக்கொண்டார். அவர் நண்பர்களான எம்மிடமிருந்து விசுவாசமான உதவியை முழு மனதுடன் நாடினார். ஆயினும், நெப்ரிடியஸ் தனக்கு கிடைக்கும் அதிக இலாபத்தை நோக்காகக் கொண்டு மட்டும் அவருக்குத் தரப்பட்ட தொழிலை ஏற்றுக்கொள்ளவில்லை. (அப்படி அவர் விரும்பியிருந்தால், அவர் தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு இன்னும் அதிகமாகச் சம்பாதித்திருக்கலாம்). மிகவும் கனிவான, அமைதியான குணாதிசயங்களைக் கொண்டவரான நெப்ரிடியஸ், நண்பர்களான எங்கள் கோரிக்கைக்கு இணங்கி, அவனுக்கு கொடுக்கப்பட்ட தொழிலைத் தெரிவு செய்துகொண்டார். தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை மிகவும் நேர்த்தியாகவும், கரிசனயுடனும், புத்திசாலித்தனத்துடனும் ஆற்றினார். இந்த உலகம் பெரிதாக மதிக்கும் சில நபர்களின் கண்களில் படாமல் தன்னைப் பார்த்துக் கொண்டார். இதனால் தனது கவனம் சிதறிப்போய்விடாமல் இருப்பதில் மிகவும் கவனமாய் இருந்தார். தனது ஓய்வு நேரத்தில், தன்னால் முடிந்தவரை தனது மனதை சுதந்திரமாகவும் ஞானத்தைக் குறித்த தேடல்களில் ஈடுபடவும், அதுபற்றி ஆராய்வதிலும், உரையாடல் போன்றவற்றில் தனது கவனத்தைச் செலுத்துவதிலும், சிந்தனையைத் தூண்டும் விடயங்களை செவிமடுப்பதிலும் தனது நேரத்தை பிரயோசனமான வழிகளில் செலவிட்டார்.

14. ஒரு நாள், நெப்ரிடியஸ் வீட்டில் இல்லாதபோது (அவர் ஏன் இல்லை என்று எனக்கு நினைவில் இல்லை) எங்கள் சக நாட்டவரான பொன்டிஷியனஸ் என்பவர் அலிபியஸ் மற்றும் என்னையும் சந்திக்க நாம் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். அவர் பேரரசரின் நீதிமன்றத்தில் உயர் பதவியில் இருந்த ஒரு ஆப்பிரிக்கர். அவரது வருகையின் நோக்கம் என்ன அல்லது அவர் எங்களிடமிருந்து என்ன விரும்புகிறார் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் நாங்கள் உட்கார்ந்து உரையாடத் தொடங்கினோம். நாங்கள் விளையாட உபயோகிக்கும் ஒரு மேசை எம்முன் இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகம் அவரது கண்ணில் பட்டது. அதை அவர் எடுத்து, திறந்து பார்த்தார். அது ஆசீர்வதிக்கப்பட்ட பவுலானவரின் எழுத்துக்களைக் கொண்டிருந்ததை அவதானித்து, அவர் வியப்பில் ஆழ்ந்தார். நான் கற்பித்தலில் என்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். அவர் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, எதிர்பாராதவிதமாக இந்தப் புத்தகத்தையும், என்னையும் அவர் கண்முன்னே கண்டதில் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினார். அவர் ஒரு ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவராக இருந்தார், மேலும் தினசரி தேவாலயத்திற்கு வந்து எம் தேவனாகிய உமக்கு முன்பாக தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபடுபவராக இருந்தார். இந்த எழுத்துக்களை நான் மிகுந்த ஊன்றுதலோடு கற்று வருகிறேன் என்று அவரிடம் நான் சொன்னபோது, அந்தோனி ஒரு எகிப்திய துறவியைப் பற்றிய பேச்சு எண்டால் உரையாடலில் குறுக்கிட்டது. அவருடைய பெயர் உமது ஊழியர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது, ஆனால் நாங்கள் கேள்விப்படும் வரை எங்களுக்கு அது பரிச்சயமாக இருக்க வில்லை. அவர் கூறிய எகிப்தியத் துறவியான அந்தோனியைப்பற்றிக் கேள்விப்பட்டிராத எங்கள் அறிவீனத்தை எண்ணி வியந்த அவர், அந்தத் துறவியின் மகத்துவத்தைப் பற்றி எங்களுக்கு விலாவரியாக எடுத்துரைத்தார். அப்போது, கத்தோலிக்க திருச்சபையின் மூலமாக நீர் நிகத்திய அற்புதமான செயல்களைக் கேட்டு நாங்கள் வியப்படைந்தோம். அது சமீப காலங்களில் கூட உண்மையான விசுவாசம் மற்றும் நம்முடைய சொந்த செயல்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது. இத்தனை பிரமாணிக்கமாய் தேவனுக்குள் வாழ்ந்த இந்த உயர்வான துறவிகள் மற்றும் மேன்மக்கள் போன்றோரைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்பதைக் கேட்டு நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.

15. இவ்வாறு தொடங்கிய எங்கள் உரையாடல், மடாலயங்கள், அவற்றில் கூடிய மக்கள் பற்றியும், உமக்கு உகந்த விதத்தில் அமைந்திருந்த அவர்களது வாழ்க்கைமுறை, வனாந்திரத்தில் நடுவே அமைந்திருந்த பாலைவனம் என எல்லா விடயங்களையும் தொட்டுச் சென்றது. ஆனால் இதில் அநேகமானவற்றைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதேபோல, மிலான் நகரிலும் நல்ல சகோதரர்களைக் கொண்ட ஒரு மடாலயம் இருந்தது. நகரத்தின் சுவர்களில் இருந்து ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் அமைந்திருந்த அந்த மடாலயம், ஆயர் அம்ப்ரோஸின் தீவிர பராமரிப்பில் இருந்தது, ஆனால் நாங்கள் அதைபற்றிக் கூற அறியாதவர்களாக இருந்தோம். நாங்கள் அவர் கூறிய கதையை எம்மை மறந்து கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவர் பின்வரும் இந்தக் கதையையும் எங்களிடம் சொல்லத்தொடங்கினார். ட்ரையர்ஸ் என்ற இடத்தில் நடைபெற்ற சர்சென்சியன் என்ற பன்முனைப் போட்டிகளைப் பார்க்க ஒரு குறிப்பிட்ட மதியவேளையில் பேரரசர் விரும்பியபோது, அவரது மூன்று தோழர்களும் நகர மத்தியில் அமைந்துள்ள சுவர்களுக்கு அருகாமையில் உள்ள பூங்காவுக்குச் சென்றனர். இவ்விரண்டு பேராக அவர்கள் நடந்துசென்றுகொண்டிருந்தனர். அப்போது பொன்திஷியானுஸும் மற்றொருவரும் அவர்களிடமிருந்து விலகி, தனியாக நடக்க ஆரம்பித்தனர். அப்படியாக அவர்கள் கால்போன போக்கின் போய்க்கொண்டிருந்தபோது, உமது அடியார்களில் சிலர் வசித்த ஒரு குறிப்பிட்ட குடிசையைக் கண்டனர். ஆவியில் ஏழை, அவர்களுடையது பரலோகராஜ்யம், அங்கு அவர்கள் ஆண்டனியின் வாழ்க்கை எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைக் கண்டார்கள். அந்த அடியார்கள், மனதால் ஏழைகளாக இருந்தாலும், பரலோக பரலோக இராச்சியத்தைப் பொறுத்தவராயி, செல்வந்தர்களாக இருந்தனர். அந்தக் குடிசைக்குள் நுழைந்த அவர்கள், அங்கு ஆண்டனியின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைக் கண்டார்கள். அதைக் கையிலெடுத்த ஒருவர் அப்புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினார். மிகுந்த கரிசனையுடன் அவர் அதை வாசித்துக்கொண்டிருக்கும்போதே வியப்பு மேலிட்டவராய், அந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட விடயங்களுக்குள் முழுதாக சங்கமித்துவிட்டார். இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் ஒருவ வாழவேண்டும் என்ற வேட்கை மேலிட, அவர் தான் வகித்த உயர்ந்த அரச பணியை உதறித் தள்ளிவிட்டு, உமது சேவைக்குத் தன்னை அர்ப்பணிக்க முடிவும் செய்துவிட்டார். பின்னர், திடீரென்று ஒரு புனிதமான அன்பால் கவரப்பட்டவராக, தன்னையே நொந்து கொண்டவராய் தனது நண்பரைப் பார்த்து, ‘உண்மையைச் சொல், நான் உனது அபிப்பிராயத்தைக் கேட்கிறேன், எந்த நோக்கத்தை அடைவதற்காக நாம் இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறோம்? நமது குறிக்கோள் தான் என்ன? இந்த நகரத்திற்கு சேவை செய்வதில் நாம் என்ன எதிர்பாக்கிறோம்? நீதித்துறையில் பதவிஉயர்வு பெற்று மிஞ்சி மிஞ்சிப் போனால், அரசவையில் ஒரு அமைச்சராகப் பதவி வகிக்க முடியும். அதைவிட மேலான பதவிக்கு எம்மால் போக முடியுமென நினைக்கிறாயா?’ என்று தனது நண்பரிடம் வினவினார். அப்படியே அடைந்தாலும், நிரந்தரமில்லா அந்தப் பதவிகளிலும் பலதரப்பட்ட ஆபத்துக்கள், பிரச்சினைகள் இருக்கக் கூடுமல்லவா? இப்படிப்பட்ட ஆபத்துக்கள் இருக்கின்றனவென்று தெரிந்துகொண்டும், ஏன் நாம் அதை விலைகொடுத்து வாங்க வேண்டும்? அனைத்தையும் விட, அந்தப் பதவிகளுக்காக நாம் எத்தை காலம் காத்திருக்க வேண்டும்? இது எவ்விதத்திலும் புத்திசாதூர்யமான தீர்வல்ல. அதேநேரம், கடவுளுக்கு சேவைசெய்ய எம்மை அர்ப்பணித்துக்கொண்டால், அதற்காக ஒரு நிமிடமும் நாம் தாமதிக்க வேண்டியதில்லை. இதோ, இப்போதே அவரது அடியாராக எம்மை இணைத்துக்கொள்ளமுடியும். இப்படியாகக் கூறிய அவர், புதிய வாழ்வில் இணையப்போகும் கனவுகளோடு, மீண்டும் தனது கவனத்தை புத்தகத்தின் மேல் செலுத்தினார். அப்போது தன்னுள் ஒரு மனமாற்றம் ஏற்படுவதை உளரீதியாக உணர்ந்தார். அவருடைய மனம் உலக வாழ்விலிருந்து விலகிச் சென்றதையும், ஆன்மீக வாழ்வின் தத்துவங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டதையும் நீர் மட்டுமே அறிந்துள்ளீர். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி வாசிக்க வாசிக்க கனமான அவரது இதயம் இலேசானது, ஆனால், சற்று குழப்பமடைந்து காணப்பட்டது. ஒருசில கணங்கள் அவருக்கு அவர் மீதே வெறுப்பு தோன்றியது. அப்படியும் தான் மேற்கொண்ட தீர்மானத்தில் உறுதியாய் இருக்க வேண்டுமென எண்ணினார். இறைவழியில், ஒளிமிக்க பாதையில் பயணிக்க அவர் திடம் கொண்டிருந்தார். எந்நேரம் அவர் மனதில் இவ்வகையான எண்ணங்கள் தோன்றினவோ, அந்தக் கணம் முதல் தேவனான உம்மோடு தன்னை இணைத்துக் கொண்டவராய், அவரது நண்பரைப் பார்த்து, ‘என்னைப் பொறுத்த வரையில், எனது பழைய இலட்சியங்கள் யாவற்றிலிருந்தும் நான் விடைபெறப்போகிறேன்; புதிய மனிதனாய், கர்த்தருக்கு சேவையாற்ற என்னை இணைத்துக் கொள்ளத் தீர்மானித்துவிட்டேன். இப்போதே, இந்த இடத்திலேயே, இக்கணமே நான் அந்த புனிதமான சேவையில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போகிறேன். எனது இந்த புதிய இலட்சியத்தில் என்னைப் பின்பற்ற உங்களுக்கெல்லாம் கடினமாக இருக்குமென்றால், என்னைத் தயவுடன் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். ஆனால், அவரது நண்பரோ, தானும் அவரோடு இணைந்து தேவ ஊழியத்தில் பங்கெடுக்கப்போவதாகவும், உன்னதமான அந்த வெகுமதியைப் பெற்றுக்கொள்ள ஆவலாயிருப்பதாகவும் கூறினார். இவரது தீர்மானம் லூக்கா 14:26-35 இல் வரும் வாசகங்களில் கூறப்பட்டவைக்கு அமைவாக உள்ளன: “என்னிடம் வருகிற ஒருவன் அவனது தந்தையையோ, தாயையோ, சகோதரரையோ, சகோதரிகளையோ, என்னைக் காட்டிலும் அதிகமாக நேசித்தால் அம்மனிதன் எனக்குச் சீஷனாக ஆக முடியாது. ஒருவன் தன்னை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசிக்க வேண்டும் என்றும், ஒரு கோட்டையைக் கட்டும் முன்பு, முதலில் அமர்ந்து அதைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். வேலையை முடிப்பதற்குத் தேவையான பணம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதைச் செய்யாவிட்டால் வேலையைத் தொடங்கினாலும் அதை முடிக்க உங்களால் முடியாது” என்று அந்த வாசகங்கள் கூறுகின்றன. இதுபோலத்தான் இந்த இருவரும் செயல்பட்டனர். தங்களிடம் இருந்த அத்தனை சொத்துக்கள், பட்டம், பதவி போன்ற எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு, உமக்காக தங்கள் விசுவாச ஊழியம் என்ற கோபுரத்தை நிர்மாணித்தனர். அதேநேரம், பொன்திஸியானுஸ் மற்றும் அவருடன் தனித்து சென்ற மற்றொருவரும் இவர்கள் இருவரையும் தேடிக் கொண்டு அவர்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கு வந்த அவ்விருவரும், பொழுது சாயும் முன் வீடு திரும்ப வேண்டும் என்று இவர்களிடம் கூறினர். ஆனால் இவர்களோ, அவ்விருவரிடம் தங்கள் பெற்றுக்கொண்ட வியப்பான அனுபவம் குறித்தும், அவர்கள் மேற்கொண்ட தீர்மானம் குறித்தும், அன்றுமுதல் அவர்களது பயணம் குறித்தும், இந்த புதிய அத்தியாயத்துக்கு வழிகோலியது எதுவென்றும், அதுவே அவர்களது இறுதித் தீர்மானமாக அமைந்தது பற்றியும் விளக்கினர். அதேநேரம், இவர்களது தீர்மானத்துக்கு உடன்படா விட்டாலும், இந்த மறைப்பணிப் பயணத்துக்குத் தடைக்கல்லாக இருக்க வேண்டாமேன வேண்டிக் கொண்டனர். இருப்பினும், பொன்திஸியானுஸ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் தங்கள் வாழ்வின் பாதையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. இருந்தாலும், அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஏனையோரும், அவரவர் சொந்த முடிவுகளில் இருந்து சிறிதும் மாறவில்லை. அத்தோடு, (அவர் சொன்னது போல்) தங்களைப் பற்றி கவலைகொள்ளவும் இல்லை. ஆனால், தங்கள் நண்பர்களை மனமார வாழ்த்தியதோடு, அவர்களது புதிய பயணத்துக்காகப் பிரார்த்திப்பதாகவும் கூறி, அவர்களிடமிருந்து விடைபெற்று தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். ஆனால் மற்ற இருவரும், இறைபணிகளுக்குத் தங்கள் இதயங்களை அர்ப்பணித்தவர்களாய், அந்தக் குடில்களிலேயே தங்கிவிட்டனர். அவர்கள் இருவருக்கும் திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்ட மணமக்கள் இருவர் இருந்தனர். அவர்களது அந்த வருங்கால வாழ்க்கைத் துணைவியார் இருவரும், தங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமக்கள் இருவரது புதிய, தெவீகப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதைக் கேள்வியுற்று அவர்களும், தங்கள் கன்னித்தன்மையைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க முழுமனதுடன் முன்வந்தனர்.

அத்தியாயம் 7 – அவர் பிறந்து 32 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், உண்மையைக் கண்டறிய முடியாத அவலத்தை எண்ணி வருந்துகிறார்

16. பொன்டிஷியனஸின் கதையும் அப்படித்தான் இருந்தது. ஆனால், ஆண்டவரே, அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே நீர் என் கவனத்தை என் பக்கமே திருப்பி, என் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த என்னை உம் பக்கம் அழைத்துச் சென்றீர். ஏனென்றால் நான் அத்தனை அசுத்தமானவன். கயவனாகவும், இழிவானவனாகவும், கறை படிந்தவனாகவும், புண்கள் நிறைந்தவனாகவும் இருப்பதை நான் பார்க்கும்படி, அலாக்காக என்னைத் தூக்கி, என் முகத்துக்கு நேரே கொண்டுவந்தீர். அதன் காரணமாக என்னைக் கண்டு நானே வியப்பில் ஆழ்ந்தேன். அந்த சூழ்நிலையில் என்னை என்னிடமிருந்தே தப்பிக்க வைக்க வழிதேடினேன். என் பார்வையில் இருந்து என்னையே விடுவிக்க முயன்ற போதிலும், தொடர்ந்துகொண்டே சென்ற அவரது கதை என்னை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது. மீண்டும் நீர் என்னை என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினீர். என் பிழைகளை நான் கண்டுணர்ந்து, அவற்றிலிருந்து நான் விடுதலை பெரும் வரை நீர் இதைத் தொடர்ந்து செய்தீர். நான் விட்ட தவறுகளை நான் நன்கு அறிந்திருந்த போதும்கூட, அறியாதது போல் நடித்தேன். அவற்றை ஏற்றுக்கொள்ள என் மனம் மறுத்தது. இறுதியில், இப்படியான நினைவுகளை என் மனதிலிருந்து அகற்றி விடுவதென்று முடிவு செய்தேன்.

17. அந்த மேன்மக்களைப் பற்றிப் பேசுவதை நான் செவிமடுத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் மீது எனக்கிருந்த அன்பும், மதிப்பும், மரியாதையும் இன்னும் மேலிட்டது. அவர்களது ஆன்மாவின் மேம்பாட்டுக்காகத் தங்களையே உம்மிடம் ஒப்புக்கொடுக்க முன்வந்த அவர்கள் எங்கே, உம்மைவிட்டு விலகி ஓடிக்கொண்டிருக்கும் பாவியான நான் எங்கே? அப்படி ஒப்பீடு செய்யும் போது என் மீதே எனக்கு ஒரு வெறுப்பு உண்டாயிற்று. எனக்கு பத்தொன்பது வயது நடந்துகொண்டிருந்த போது, சிசரோவின் ஹார்டென்சியஸ் என்ற புத்தகத்தைப் படித்து அதன்மூலம் நான் ஞானத்தின் மீது ஆசை கொண்டேன். இது நடந்து பல வருடங்களாகி விட்டன; ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள். இவ்வுலகம் சம்பந்தப்பட்ட சவால்கள் யாவற்றையும் நான் தைரியத்துடன் எதிர்கொண்டபோதும், ஞானத்தைத் தேடும் என் இயலுமைக்கு நானே சவாலாக இருந்தேன். ஞானம் ஒழுக்கம் போன்றவையே முதன்மையானதாக தேடி இருந்திருக்க வேண்டும். சகல விதமான செல்வம், ஆட்சி அதிகாரம், உலக இன்பங்களை ஒரு விரல் சொடுக்கில் பெற்றுக்கொள்ளக்கூடிய அத்தனை வசதிகளும், வாய்ப்புக்களும் என்னிடம் கொட்டிக் கிடந்தாலும், ஞானம், ஒழுக்கம் போன்ற மேன்மையானவற்றையே நான் நாடிச் சென்றிருக்கவேண்டும். ஆனால் நானோ, ஒரு பரிதாபத்துக்குரியவனாகவும், என் இளமைப் பருவத்தில் மிகவும் மோசமான நிலையை அனுபவித்தவனுமாக இருந்தேன். உம்மை நோக்கி, கற்பையும் உடல் இச்சைகளையும் அடக்கியாளும் தன்மையைத் தரும்படியும், ஆனால் அதை உடனேயே தந்துவிட வேண்டாமெனவும் என்றும் இறைஞ்சினேன். ஏனெனில், நீர் என் மன்றாட்டுக்களைச் செவிமடுத்து, பாலியல் இச்சைகளால் மனதை பறிகொடுத்து இன்பத்தில் திளைத்த என்னை உடனேயே அதிலிருந்து விடுவித்து விடுவீரோ என்ற பயம் என் மனதில் குடிகொண்டது. என் மனதில் கொழுந்து விட்டெறிந்த காமாந்தகார இச்சைகளை அடக்கியாள்வதை விட, அவற்றுக்குத் தீன் இட்டு திருப்திப் படுத்துவதிலேயே கண்ணாயிருந்தேன். அவமதிப்பைக் கொண்டுவரும் மூட மூடநம்பிக்கை போன்றவற்றை சுமந்துகொண்டு நடமாடித் திரிந்தேன். ஆனால் நான் உண்மையை உளரீதியாய்த் தேடவில்லை. தேடல் மனப்பான்மை மற்றும் உள்ளார்ந்த கரிசனை போன்றவற்றோடு அதைத் தேடாமல், வெறுப்பு நிறைந்த மனதோடு அதற்கெதிராக செயற்பட்டேன்.

18. மேலும், உலக வாழ்வின் இன்பங்கள் யாவற்றையும் நிராகரித்து, உம்மை மட்டும் தேடி அடைவதற்கு நான் ஒவ்வொரு நாளும் தாமதித்தே வந்துள்ளேன் என்று நினைத்தேன். இப்போது நான் என் மனசாட்சி என்னை உறுத்தி, எனக்கெதிராகவே முறையிட்டது. எனது நாவே, நீ எங்கே இருக்கிறாய்? நிச்சயமற்ற உண்மைக்காக நீ வீணான சுமைகளைச் சுமந்து பின்னர் அதைத் தூக்கி எறிய மறுத்தாய். ஆனால் இப்போது உண்மை தலைநிமிர்ந்து நிற்பதை நீ காணவில்லையா? ஆனால், சுமையானது இன்னும் உன்மீது பாரமாய் அழுத்திக் கொண்டிருப்பதைப் பார்! எந்தவித முயற்சியிலும் ஈடுபடாமல், பத்து ஆண்டுகளுக்கு மேலாக உன்னைப்போல் எவ்விதத் தியானங்களிலும் ஈடுபடாமல் இருப்பவர்களும், அவர்களது தோள்களில் சுமையாய் அழுத்திக்கொண்டிருக்கும் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு, சிறகுகளை பெற்று சுதந்திரமாய்ப் பறந்து திரிகிறார்களே? ஆனால் நீ மாத்திரம் ஏன் உன்னை அழுத்திக்கொண்டிருக்கும் சுமையின் பாரம் காரணமாக நொந்து நூலாய்ப்போய் சிக்கித் தவிக்கிறாயே?’ என்று எனது உள்மனம் என்னை அரித்துண்ணத் தொடங்கியது. பொன்திசியானுஸ் இந்தக் கதையை விவரித்துக்கொண்டிருந்த போது, ஒருவிதமான பயம் கலந்த வெட்கம் என்னைக் கூனிக்குறுகச் செய்துகொண்டிருந்தது. ஒருவகையாக அவர் தனது கதை மற்றும் உரையாடலை நிறைவு செய்துவிட்டு, அவர் அங்கு வந்திருந்த நோக்கத்தையும் நிறைவேற்றியவராய், அங்கிருந்து விடைபெற்று அவரது வீட்டை நோக்கிச் சென்றார். நானோ, தனிமையில் விடப்பட்டேன். எனக்கு எதிராக நானே சுமத்தாத குற்றச்சாட்டுகள் எத்தனை, எத்தனை? உம்மைத் தொடரும் எனது பயணத்தில், எனது ஆன்மாவும் இணைத்துக்கொள்ளவேண்டுமென்பதே எனது அவா. அதற்காக நான் அதை வார்த்தைகள் என்ற சாட்டையால் எத்தனை முறை தண்டித்திருப்பேன்? அப்படியிருந்தும், அது என்னுடன் பயணத்தில் இணைய மறுத்து தூர நின்றுகொண்டது. அதற்காக எவ்வித காரணங்களையும் கூறவில்லை. ஏனென்றால் அனைத்து விதமான வாதங்களும் முன்வைக்கப்பட்டு விட்டு, அவை யாவும் முறியடிக்கப் பட்டும் விட்டாயிற்று. இப்போதெல்லாம், அதற்குள் ஒரு அமைதி கலந்த அச்சம் மட்டுமே காணப்பட்டது. பழக்கம் என்ற பாதையில் இருந்து விலகிப் போய் விடுவது மரணத்தை வரவழைக்கும் என்ற அச்சம் அதனுள் குடிகொண்டது. இந்தப்பழக்கம் தான் மரணம் வரை அந்த ஆன்மாவை நோயில் தள்ளியது. இது யோவானின் வேதாகம வசனங்களில், “நோயின் முடிவு மரணம் அன்று. இந்த நோய் தேவனை மகிமைப்படுத்துவதற்காக ஏற்பட்டது” என்று கர்த்தர் கூறியதை எமக்குத் தெரிவிக்கிறது.

அத்தியாயம் 8 – அலிபியஸுடனான உரையாடல் முடிந்தபின், அவர் மீண்டும் பூங்காவுக்குள் செல்கிறார், அவருடைய நண்பர் அவரைப் பின்தொடர்கிறார்

19. என் மன ஆழத்தில் நடைபெற்று முடிந்த அந்த பாரிய போராட்டத்தின் மத்தியில்; இது எனது ஆழ்மனது என்னைத் தூண்டிவிட்டு நடத்திய போராட்டம் என்று கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். உள்ளத்தாலும், உடலாலும் துன்பத்தை அனுபவித்த நான், அலிபியஸிடம் என் மனதின் உட்கிடங்கில் என்னை வருத்திக்கொண்டிருந்த யாவற்றையும் கொட்டிதீர்த்தேன். “நமக்கு என்ன ஆனது? நம்மிடம் உள்ள குறைகளை தான் என்ன? நான் கேட்பது உனக்கு விளங்குகிறதா? வெறும் சாமான்யர்கள் எல்லோரும் தங்களைத் தயார் செய்துகொண்டு விண்ணக இராச்சியத்துக்குத் தங்களைத் உரிமையாக்கிக்கொள்வதை ஏற்றுக்கொள்ளமுடியுமா? அதாவது மத்தேயு தனது 11ம் அதிகாரத்தின் 12ம் வசனத்தில் கூறுவதுபோல, “யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராச்சியம் வலுவடைந்து வருகிறது. மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் பரலோக இராச்சியத்தை அடைய முயன்று வந்திருக்கிறார்கள்” என்கிறது. ஆனால் அறிவாற்றலில் முன்னிலையில் இருக்கும் நாம், எமது இதயம் உயர்ந்த நிலையை அடையாவிட்டாலும், இன்னும் இரத்தமும், சதையும் கொண்ட ஒரு குழிக்குள் விழுந்து சிக்கித்தவிக்கிறோம். சாமான்யர்கள் எல்லோரும் நம்மை முந்திச் செல்கிறார்களே, அவர்களைப் பின்பற்ற நமது மமதை  இடம்கொடுக்க மறுக்கிறதா? குறைந்தது ஒரு அடியையேனும் எம்மால் எடுத்துவைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையை எண்ணி வெட்கப் படாமல் இருக்கிறோமா? நான் உன்னிடம் கூறியதன் சாராம்சம் இதுதான், என்றேன்.  இதை நான் சொன்னவுடன், அவன் அமைதியாகவும் ஆனால், திகைப்புடனும் என்னைப் பார்த்தபோது என் கவனத்தை அவனிடமிருந்து திருப்பினேன். ஏனென்றால் நான் உதிர்த்த வார்த்தைகள் அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனது முகபாவம், நெற்றியில் துளிர்விட்ட வியர்வைத் துளிகள், சிவந்த கண்கள், துடிக்கும் கன்னங்கள், பேச்சில் காணப்பட்ட கடும் தொனி போன்றவை என் உள்ளக்கிடங்கில் இருந்தவற்றை அப்பட்டமாக வெளியே கொண்டுவந்தது அவனை மேலும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியிருக்கலாம். நாங்கள் தங்கியிருந்த இடத்துக்குச் சொந்தமான ஒரு சிறிய புற்றரை முன்றலில் இருந்தது. அதையும் அந்தக் குடிமனையொட்டிய சேர்த்துப் பயன்படுத்த எமக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஏனெனில், அக்குடிமனையின் உரிமையாளர்கள் அங்கு வாசித்திராத காரணத்தால் நாங்கள் அதைப் பயன்படுத்தினோம். என் மனதில் வீசிய புயலானது. அதை அறிந்தவர் அல்லது தெரிந்தவர் அல்லது அதில் பங்குகொள்பவர் என்று அங்கு எவரும் இருக்க வில்லை. தீர்வு ஒன்று கிடைக்கும்வரை எனது அப்போராட்டம் தொடர்வது போலத்தானிருந்தது. நான் அறியாவிட்டாலும், ஆனால் அதற்கான தீர்வை, அதன் இறுதி பலனை  நீர் அறிவீர். மனநலம் குன்றியவனாகக் காணப்பட்ட நான், அதிலிருந்து படிப்படியாக மீண்டேன். ஆனால் நான் முழுமையடைய வேண்டும் என்ற வெறி என் மனதில் கனன்று கொண்டிருந்தது. நான் மீண்டும் பிறந்தவனாக ஆக வேண்டும். நான் எப்படிப்பட்ட ஒரு ஈனப்பிறவி என்பதை அறிந்து வெட்கினேன். எவ்வளவு விரைவில் என்னால் நல்லவனாக மாறமுடியும் என்று நானறியேன். அதன் பிறகு, நான் தோட்டத்துக்குள் சென்று சற்று ஓய்வடுக்க எண்ணினேன். அலிபியஸும் என்னைப் பின்தொடர்ந்து அங்கே வந்தான். அவன் என்னோடு அங்கே இருந்தபோதிலும், தனிமையில் இருந்த எனக்கு எவ்விதத்திலும் இடையூறாக இருக்கவில்லை. அந்த துயர்மிகு சூழ்நிலையில் என்னைத் தனியாக விடுவது உசிதமில்லை என்று ஒருவேளை அவன் எண்ணியிருக்கக்கூடும். நாங்கள் முடிந்தவரை அந்த வீட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அமர்ந்தோம். உமது சித்தத்திலும் உடன்படிக்கையிலும் நான் பிரவேசிக்கவில்லை என்று என் மனம் என்னை வாதித்தது. என் மனசாட்சி என்னிடமே மிகவும் பொறுமையிழந்தது போல உணர்ந்தேன். ஓ என் தேவனே, என் எலும்பிலுள்ள மச்சைகள் கூட வானகத்தில் வீற்றிருக்கும் உம்மை நோக்கி உரத்த குரலில் உம்மைப் புகழ்தேற்றுமாறு கூக்குரலிட்டன. கப்பல்கள் அல்லது இரதங்கள் அல்லது கால்களால் நடந்தேனும் எம்மால் அங்கு போக முடியாது, நிச்சயம் முடியாது! அதேவேளை, அது அமைந்திருந்தது நாங்கள் அமர்ந்திருந்த தோட்டத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும் தூரத்தில் கூட இல்லை. அந்த இராச்சியத்துக்குள் நுழைவதற்கு எமக்கிருக்கக்கூடிய தகுதி என்னவென்றால், அதற்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் அல்லது இலட்சியம் அல்லது விருப்பம் மாத்திரமே. அதேநேரம், அந்த இலட்சியம், அந்த வேட்கை எவ்விதமான நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாக இருக்கலாகாது. இரண்டு மனதுடனோ அல்லது நிச்சயமற்ற தன்மை கொண்டதாகவோ அடிக்கடி தட்டுத் தடுமாறும் இயல்புகளைக் கொண்டதாகவோ அந்த விருப்பம் இருக்கக் கூடாது. அப்படி இருக்குமானால், காயமடைந்த ஒரு பகுதி தேறி எழும்பும் போது, மறுபாதி விழுந்துவிடுவதைப்போலவே இருக்கும் அந்த போலி இலட்சியம்.

20. இறுதியாக என் தயக்கத்தையும், இயலாமையையும் அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்தினேன். எந்தவொரு மனிதனும் தன்னால் வெளிப்படுத்த முடியாதவற்றை சைகளிகள் மூலம் வெளிப்படுத்துவதை காணலாம். அதுபோலத்தான் இதுவும். ஆனால் என்னால் அது முடியவில்லை. அவர்களுக்கு கைகால்கள் இல்லை என்றால், அல்லது அவர்களின் உறுப்புகள் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்தால், நோயினால் வலுவிழந்திருந்தால் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால், அவர்களால் அவர்களது தேவைகளை சொல்லமுடியாது போகும் பட்சத்தில், கைகால்களால் காட்டப்படும் அசைவுகள் பொதுவானவை. அதேநேரம், நானே எனது தலைமயிரைப் பிய்த்துக்கொண்டாலோ, தலையில் அடித்துக்கொண்டாலோ, அல்லது என்னிரு கைகளையும் கோர்த்து எனது முழங்கால்களைப் பற்றிக்கொண்டாலோ, அவை முற்றுமுழுதாக எனது சுய அறிவுடன் செய்யும் செயல்களாகும். அதேவேளை, நான் விரும்பும் பட்சத்தில் கூட, என் உடலில் உள்ள அவயவங்கள் என்னோடு ஒத்துழைக்காமல் இருக்குமானால், இவ்வாறான செயல்களை என்னால் செய்ய முடியாமற் போயிருக்கும். ஆக, எனது விருப்பங்களும், சக்தியும் ஒன்றோடொன்று இணைந்து ஒத்துழைக்காத பல செயல்களைச் செய்தேன். அப்படியும் இஷ்டப்பட்டதை செய்யாமல் விட்டுவிட்டேன். அப்படி ஒரு சூழ்நிலை அமைந்திருக்குமானால், நான் விருப்பப்பட்டதை அந்தக்கணமே செய்து முடித்திருப்பேன். இப்படி நான் சொல்வதற்குக் காரணம், அப்போது எனது விருப்பங்கள் செயலோடு இணைந்து செயலாற்றியிருக்கும். இங்கே எனது விருப்பமும் அதை நடைமுறைப்படுத்தக்கூடிய ஆற்றலும் ஒன்றாகக் கைகோர்த்துச் சென்றிருக்கும். விருப்பம் தான் இயக்கத்தைத் தூண்டும் தூண்டுகோலாய் இருக்கிறது. என்றாலும் இவ்வாறு எதுவும் நடக்கவில்லை. எமது மனதானது தனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அதன் வழியே சென்று அதன் நோக்கத்தை அடைவதைவிட, உடலானது மனம் இடும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அதன் நோக்கத்தை அறிந்து, அந்த நோக்கத்தை அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்துவது இலகுவானதாகத் தெரிகிறது. 

அத்தியாயம் 9 – மனம் மனதுக்கு கட்டளையிடுகிறது, ஆயினும் முழுவதுமாக அல்ல

21. இந்தக் கொடூரமான நிகழ்வுக்குக் காரணம் என்ன? ஏன் இப்படியான ஒன்று ஏற்படவேண்டும்? ஆதாமின் வழிவந்த வாரிசுகளான எமக்கு வரும் இவ்வாறான துன்பங்கள் மற்றும் மறைமுகமான தண்டனைகள் தான் இவற்றுக்கு காரணமா என்று தெரியவில்லை. ஆனால், உமது இரக்கத்தின் உதவி கொண்டு எனது அகக்கண்களைத் திறந்து இதைத் தெளிவு படுத்துவீராக. மீண்டும் இந்தக் கொடூரமான நிகழ்வுக்குக் காரணம் என்ன? ஏன் இப்படியான ஒன்று ஏற்படவேண்டும்? என்று கேட்கத் தோன்றுகிறது. மூளை இடும் கட்டளைகளுக்கு உடல் ஒத்துழைத்து செயலாற்றுகிறது. ஆனால் மூளையே மூளைக்குக் கட்டளை பிறப்பிக்கும்போது, அது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மூளை கையை அசைக்கக் கட்டளையிடுகிறது, உடனேயே கை அசைகிறது. இவ்வகையான கட்டளைகளைச் செயல்படுத்த அவயவங்களும் தயார்நிலை இருக்கின்றன. மூளை என்பது மனம் சம்பந்தமானதாக இருக்கும் அதேவேளை, கை போன்ற அவயவங்கள் உடல் இயக்கம் சார்ந்தவை. ஆனால் மூளையே மூளைக்குப் பிறப்பிக்கும் கட்டளையை அது எவ்விதத்திலும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதில்லை. இந்த அசாத்திய நிலைக்கு காரணம் தான் என்ன? ஒருவிடயத்தை செய்யுமாறு மனம் கட்டளை பிறப்பிப்பதற்குக் காரணம், அது அக்கட்டளையை முழுமையாக அறிந்தே இருக்கிறது. தனது இஷடத்துக்கு மாறாக அதானல் செயல்பட முடியாது. ஏனெனில், அதனுடைய இஷ்டம் ஏகமனதாக இல்லாதபட்சத்தில், கட்டளையும் முழுமையானதாக இருப்பதில்லை. கட்டளையின் கனம் விருப்பத்தின் மீதும் தனது தாக்கத்தைச் செலுத்துகிறது. விருப்பத்தை முழுமனதுடன் ஏற்று, அதனால் பிறப்பிக்கப்படும் கட்டளையானது நிறைவானதாக இருக்கிறது. அது எக்காரணத்தைக்கொண்டும் விருப்பமில்லாத ஒன்றை நோக்கி பிறப்பிக்கும் கட்டளையாக இருக்கமாட்டாது. விழுப்பம் முழுமையானதாக இருக்கும்பட்சத்தில், அங்கே விசேடமான எந்தக் கட்டளைக்கும் இடமில்லை, ஏனெனில், விருப்பமும், அதை நிறைவேற்றும் நோக்கமும் ஒருங்கிணைந்து பயணிக்கின்றன என்பதால். ஆகவே விருப்பு-வெறுப்பு போன்றவற்றுக்கு இடையே இங்கு பிளவு எதுவும் காணப்படவில்லை. ஆகவே, நோயுற்ற மனித மனமானது, உண்மை என்ற கோலால் முறையாக அளவிடப்படாத நிலையில், அதன் இயல்பால் மீதும் தான் முன்பிருந்த நிலைக்குத் தள்ளப்படுகிறது. மேற்கூறப்பட்ட காரணிகளின் போக்கை அவதானிக்கும் போதும், அவற்றின் சாராம்சங்கள் என்னவென்று நோக்கும்போதும், அங்கே இரண்டு வகையான விருப்பங்கள் காணப்படுகின்றன. ஆயினும், இவை இரண்டுமே முழுமையானதாக இல்லை, ஒன்றில் காணப்படுவது, மற்றொன்றில் காணப்படுவதில்லை.

அத்தியாயம் 10 – நல்லது தீயது என்ற இரண்டு வகையான மனங்கள் பற்றிய மணீக்கியர்களின்  கருத்துக்களை அவர் நிராகரிக்கிறார்

22. தீத்து தனது 1:10 ம் வாசகங்களில், “பலர் பணிய மறுக்கிறார்கள். அவர்கள் வீணான வார்த்தைகளைப் பேசி மக்களைத் தவறான வழியில் நடத்திச்செல்கிறார்கள்” என்று கூறியிருப்பதற்கிணங்க, கட்டளை பிறப்பிப்பதில் இரண்டு வகையான தெரிவுகள் இருந்ததை அவதானிப்பவர்கள், தமக்குள் இரண்டு விதமான மனங்கள் இருப்பதையும் நிரூபிக்கிறார்கள். ஒன்று நன்மை செய்யும் இயல்பை கிடையாது என்றும், மற்றையது தீமையின் இயல்புகளைக் கொண்டிருக்கிறது என்றும் வரையறுக்கிறார்கள். அதாவது, தீமையான கோட்பாடுகளைக் கடைபிடிப்பவர்கள் தீயவர்கள் என்றும், சத்தியத்தின் கோட்பாடுகளுக்கு அமைவாக நடப்பவர்களும், சத்தியத்துக்கு சான்று பகரக்கூடியவர்களும் நன்மை என்ற வட்டத்துக்குள் அடங்குகிறார்கள். எபேசியர் 5:8 இல், உமது அப்போஸ்தலர் கூறுவது போல், “நீங்கள் சில நேரங்களில் இருளில் இருந்தீர்கள், ஆனால் இப்போது நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள்” என்ற பதம் இவர்களுக்குச் சரியாகப் பொருந்தக்கூடியது. ஆனால், அவர்கள் ஒளியில் இருக்க விரும்புகிறார்கள், இறைவனில் அல்ல, தாங்கள் விரும்பியபடியே இருக்க விரும்புகின்றனர். ஆன்மாவின் தன்மையும் தேவன் கொண்டிருக்கும் தன்மையும் ஒன்றுதான்  என்று வாதம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட இவர்களின் சிந்தனை இவர்களை மேலும் மேலும் இருளிலே தள்ளுகிறது. யோவான் தனது 1:9 இல், “அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது” என்ற வாசகத்துக்கிணங்க, அனைத்து படைப்புக்களுக்கும் ஒளிகொடுக்கும் உண்மையான ஒளியில் இருந்து இவர்கள் தூர விலகிப் போகிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நன்றாகக் கவனியுங்கள், தடுமாற்றம் குறித்து வெட்கப்படுங்கள். அவரிடம் நெருங்கி அவரிடம் இருந்து வரும் ஒளியைப் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகங்கள் வெட்கித் தலைகுனியாது. நான் என் கடவுளாகிய தேவனை ஏற்றுக்கொள்வதைப் பற்றி இப்போது யோசிக்கும்போது, என் நீண்ட காலப் போராட்டத்தின் விளைவாக நான் கண்டது என்னவென்றால், நான் முழுமையாக விரும்பியவனும்  இல்லை விரும்பாதவானும் இல்லை என்பதுதான். அதனால் நான் என்னுடன் போரிட்டு என்னை நானே அழித்துக்கொண்டேன். இந்த அழிவு என் விருப்பத்திற்கு எதிராக என்னை முந்திச் சென்றது. அதேவேளை, மற்றொரு மனம் இதுபற்றி எதுவும் கூறவில்லை. ஆகவே அது நானே எனக்கு கொடுத்த தண்டனை. ஏனென்றால் எனக்குள் ஒளிந்திருக்கும் பாவமே என்னை இந்த நிலைக்கு இட்டுச் சென்றது. இன்னும் கட்டுப்படுத்தப்படாத பாவத்திற்காகக் கிடைத்த தண்டனை தான் இது. ஏனெனில், நான் ஆதாமின் வழிவந்த வாரிசாக இருப்பதனால். இதையிட்டு உரோமர்

7:17 இல் கூறப்பட்டிருப்பவற்றை உதாரணம் காட்டலாம். அது கூறுவது இதுதான்: “உண்மையில் நான் கெட்டவற்றை செய்பவனில்லை. ஆனால் என்னுள் இருக்கிற பாவம் அவ்வாறு செய்யத் தூண்டுகிறது” என்று. இந்த வாசகம் மேலே கூறப்பட்டவற்றுக்கு பொருத்தமான ஒரு சாராம்சமாக அமைகிறது.   

23. முரண்பாடான விருப்பங்களைப் போல பல முரண்பாடான இயல்புகளும் இருக்குமானால், அதை  இரண்டு இயல்புகள் என்று கூறமுடியாது. அங்கே அதுபோல் பல இயல்புகள் காணப்படலாம். யாரேனும் ஒருவர் தங்கள் திருச்சபை மாநாட்டுக்குப் போகலாமா அல்லது திரைப்பட அரங்குக்குள்  போகலாமா என்று யோசித்தால், அவர்கள் உடனே, இதோ, இங்கே இரண்டு இயல்புகள் உள்ளன – ஒன்று நல்லது, நம்மை இந்த வழியில் அழைத்துச் செல்வது, மற்றொன்று கெட்டது, அந்த வழியில் எம்மைக் கொண்டுசெல்வது என்றும், இவ்வாறான முரண்பாடுகளுடன் கூடிய  தெரிவுகளுக்கு  இடையில் இந்த தீர்மானம் வேறு எங்கிருந்து வருகிறது? என்று உரத்தக்குரலில் கேட்கிறார்கள். ஆனால் அவை இரண்டும்; அதாவது, மாநாட்டிற்கு செல்வது மற்றும் திரைப்பட அரங்குக்கு செல்வது   தீமையானவை என்று நான் பதிலளித்தேன். அதேநேரம், அவரவர்களுக்கு விருப்பமான தெரிவை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள். அதுதான் அவர்கள் மனதுக்கு நல்லதாகப் படும் என்பதே அவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் நியாயம். முரண்பட்ட இயல்புகளைக் கொண்ட இருவரில் ஒருவர்,  தேவாலயத்துக்குச் செல்வதா அல்லது திரையரங்குக்குச் செல்வதா என்று மற்றவரைப் பார்த்து வினவினால், அந்த இரண்டாவது நபரும் இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் அளிப்பதில் சிரமமாயிருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஒன்று, அவர்கள் அதை செய்யத் தயாராக இல்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது தேவாலயத்திற்குச் செல்லும் தெரிவை நல்ல முடிவென்று இருவரும் ஆதரிக்க வேண்டும். இப்படிப் பார்க்கும்போது, முன்னையது தீயது என்றும், பிந்தியது நல்லது என்றும், இந்த இரண்டு குணவியல்புகளும் ஒரே மனதில் தான் வாசம் செய்கின்றன என்ற முடிவுக்கு வரவேண்டும். ஏனென்றால், மேலே கண்ட முடிவுகளில் ஒன்று நன்மை பயக்கும் என்றும், மற்றொன்று தீமை பயக்கும் என்று கருதும் அவர்களது வாதம் பொய்யான வாதமாய் மாறித் தோற்றுப்போய்விடும். இதற்கான வேறு வழிகளை ஆராய்ந்து பார்த்தோமானால், அவர்கள் உண்மையான வழிக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொள்ளக்கூடிய மனம், இரு வேறு தெரிவுகளுக்குள் சிக்கி  இறுதியில் எந்த முடிகளையும் எட்டமுடியாமல் தவிக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதுதான்.

24. ஒரே மனிதனில் இரண்டு தெரிவுகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும்போது அவர்கள் எதையும் சொல்லமுடியாதவர்களாக இருப்பார்கள். இது நல்லது எது, கெட்டது எது என்று நிர்ணயிக்கும் இரண்டு வெவ்வேறான கொள்கைகளில் இருந்து வந்த இரண்டு வெவ்வேறான பொருள்களின் இயல்புகளைக் கொண்ட இரண்டு வெவ்வேறு மனங்களுக்கு இடையே நிலவும் போட்டி. உண்மையின் தேவனாய் இருக்கும் எம் ஆண்டவரே, நீர் அவர்களில் காணப்படும் இந்த கருத்தை  நிராகரித்து, தண்டனையால் சரிசெய்து அவர்களை திருந்தச் செய்வீராக. ஏதேனும் இருவரை எடுத்துக்கொண்டால், ஒருவன் மற்றொருவனை நஞ்சூட்டிக் கொல்வதா அல்லது கத்தியால் குத்திக் கொலை செய்வதா என்று அங்கு மேற்கொள்ளப்படும் இரண்டு தெரிவுகளுமே மிக நீச்சத்தனமான  செயல்களாகும். அதேபோல், ஒருவனிடம் இருக்கும் சொத்தைக் கொள்ளையிடுவதா அல்லது அவன் வசமிருக்கும் எல்லா சொத்துக்களையும் சூறையாடுவதா என்பதும், பாலியல் இச்சைகளால் இன்பத்தை அனுபவிப்பதா அல்லது பேராசையால் இன்பத்தை அடைவதா என்பதும், போட்டிகள் நடக்கும் அரங்கத்துக்குள் செல்வதா என்பதும், இன்னொருவருக்குச் சொந்தமான செல்வத்தை தனது உடைமையாக்கிக் கொள்வது என்பதும், விபச்சார விடுதிக்குள் சென்று விபச்சாரிகளுடன் கும்மாளம் போடுவதா என்பது போன்ற இந்த அனைத்துத் தெரிவுகளும் ஒரே சமயத்தில் ஒருவரது மனதில் எழும்போது, இவை அனைத்திலும் ஒரே நேரத்தில் அந்த மனிதனால் ஈடுபட முடியுமா? எப்படியும் சாத்தியப்படக்கூடியதல்ல. இத்தனை தெரிவுகளும் சேர்ந்து மனிதனை இல்லாத திசைகளை நோக்கி இழுக்கும் போது, மனம் ஒரு நிலையில் இல்லாமல், ஏதேனும் ஒரு முடிவை மேற்கொள்ள முடியாமல் அங்கலாய்க்கிறது. இருப்பினும், இவற்றின் தன்மைகள், வரையறைகள், அளவுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டது என்பதை மனித மனம் ஏற்றுக்கொள்வதில்லை.  அதேவேளை, அப்போஸ்தலர்களது நிருபர்களைப் படிப்பதில் மகிழ்ச்சி அடைவது நல்லதா, அல்லது நிதானமான சங்கீத ஆகமங்களை படிப்பதில் மகிழ்ச்சியடைவது நல்லதா, அல்லது நற்செய்தியைப் பற்றி உரையாடுவது நல்லதா? என்ற கேள்வியை அவர்களிடம் நான் தொடுத்தால், இவை ஒவ்வொன்றுக்கும் நல்லது என்று தான் அவர்கள் பதிலளிப்பார்கள். ஆகவே,  இவை அனைத்தும் நம்மை ஒரே நேரத்தில் மகிழ்வித்தாலும், அவற்றுள் இதைத் தெரிவு செய்வது என்று மனித மனம் அங்கலாய்ப்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. ஏனென்றால், இங்கு குறிப்பிட்ட அனைத்தும் நல்ல விடயங்களே. இருப்பினும், தெரிவு என்று ஒன்று அங்கே வரும்போதுதான், இப்படியான குழப்பங்களை எல்லாம் மனித மனம் எதிர்கொள்ள நேரிடுகிறது. இறுதியில், இவற்றுள் சிறந்தது, பொருத்தமானது என்ற ஒன்றை மனா தேர்ந்தெடுக்கும்போது, அங்கே நிலவிய குழப்பநிலை நிறைவுக்கு வந்துவிடுகிறது. விண்ணகத்தின் நித்தியம் நம்மை மகிழ்விக்கும் போதும், தற்காலிக நன்மை என்ற உலக நியமங்கள் நம்மை கீழே இழுக்கும்போதும் கடுமையான குழப்பங்களால் பிளவுபடுவதும் அதே ஆன்மாதான். ஆன்மா பரிதாபத்துக்குரிய நிலையில் துவம்சம் அல்லோலகல்லோலப்படுகிறது. உண்மை என்ற நிரந்தமான தன்மையை ஏற்றுக்கொள்ளும் ஆன்மாவானது, வழக்கத்தால் வரும் தன்மையை புறக்கணித்து விடுகிறது. அதுவரை ஆன்மாவின் போராட்டமானது தொடர்ந்துகொண்டே இருக்கும்.

அத்தியாயம் 11 – மாயையின் பிடியிலிருந்து விடுபட ஆன்மா சரீரத்துடன் போராடுகிறது

25. வழக்கத்துக்கு மாறாக என்மீது நானே கடுமையான குற்றங்களை சுமத்தியபோது, நான் அனுபவித்த நோயும் துன்பமும் இவ்வாறுதான் இருந்தது. என்னைப் பிணைத்திருந்த சங்கிலிகளில் இருந்து நான் விடுதலை பெறும்வரை, அதைத் திருகி உடைப்பதில் ஓரளவு வெற்றியும் கண்டேன்.  இப்போதெல்லாம் அதன் பிடி என்னைத் தளர்த்தியிருந்தாலும், நான் அதிலிருந்து முற்றாக விடுபடவில்லை. மீண்டும் நான் அந்தக் கொடுமையான விலங்குகளால் பிணைக்கப்பட்டு விடக்கூடாது என்கிற நோக்கிலும், உடைத்தெறியப்பட்ட அந்த சங்கிலி மீண்டும் உறுதிபெற்று என்னைக் கட்டிவைத்து விடக்கூடாது என்ற காரணத்தாலும், பயம் மற்றும் அவமானத்தின் கசைகளை இரட்டிப்பாக்கி, கருணையுடன் என் உள்ளத்தின் ஆழத்தில் வைத்து அழுத்தினீர். ஆகவே அது இப்பொழுதே ஆகட்டும், இப்பொழுதே ஆகட்டும் என்று மனதுக்குள் நான் சொல்லியபடி இருந்தேன். அப்படி நான் சொல்லிக்கொண்டிருந்தபோது, அனைத்தும் ஒரு முடிவுக்கு வருவது  போன்ற ஒரு உணர்வு என் மனதில் எழுந்ததை உணர்ந்தேன். ஏறக்குறைய நன் முடிவெடுக்கக்கூடியதும் முடிவெடுக்க முடியாததுமான ஒரு இரண்டும்கெட்டான் நிலையில் இருந்தேன். எப்படியேனும், என்னால் இன்னும் எனது பழைய நிலைக்குத் திரும்ப முடியவில்லை. ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொள்ளும் அந்த முக்கியமான தருணத்தில், சற்று நிறுத்தி நிதானமாய் மூச்சை இழுத்து வெளியே விட்டேன். அந்த உத்வேகத்தோடு நான் மீண்டும் நான் அடையவேண்டிய இலக்குக்கு மிகவும் சமீபமாக வந்துவிட்டேன். ஆனால், அந்த இலக்கை அடைவது குறித்தோ, இலக்கை வெல்வது குறித்தோ எனக்குள் எந்தவிதமான எண்ணங்களும் எழவில்லை. எனக்குப் பரிச்சயமற்ற நன்மைகளைப் பார்க்கிலும், பரிச்சயமான தீமை என்னைத் தனது கட்டுக்குள் வைத்திருந்தது. நான் என்னை வேறொருவனாக மாற்ற வேண்டிய தருணம், அது என்னை நெருங்கிக்கொண்டிருந்தது. அதனால் பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. ஆனால் அது என்னைப் பின்னோக்கித் தள்ளிவிடவோ அல்லது வேறு எந்தத்  திசையிலும் என்னைத் திருப்பி விடவோ இல்லை. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையில் என்னை வைத்திருந்தது.

26. நான் மிகவும் விரும்பிய பொம்மைகள், பெருமைமிகு வாழ்க்கை மற்றும் என் பழைய நண்பியர்  இன்னும் என்னைக் கவர்ந்திழுத்தனர்; அவர்கள் என்னை மெதுவாக ஸ்பரிசித்து, தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்: நீ எங்களைப் பிரிந்து போகப்போகிறாயா? அப்படியானால், இந்த நிமிடம் முதல், நாங்கள் ஒருக்காலும் இனிமேல் உன்னுடன் இருக்கமாட்டோமா? அந்த தருணத்திலிருந்து, ‘இது’ அல்லது ‘அது’ சட்டப்படி உனக்குச் சொந்தமாக இருக்காதா? ‘இது’ அல்லது ‘அது’ என்று அவர்கள் கூறிய வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? அவை எதைக் குறிக்கின்றன? என் தேவனே, உமது இரக்கத்தின் உதவியால் உமது அடியேனின் மனதிலிருந்து அந்த புரியாத வார்த்தைகள் விலகிவிடக் கடவதாக. என்ன ஒரு அசுத்தமான வார்த்தைப் பிரயோகங்கள் அவை? அப்படிப்பட்ட வார்த்தைகளை அவர்கள் பிரயோகித்ததன் காரணம் தான் என்ன? என்ன ஒரு வெட்கக்கேடு? அதிலும் ஒரு பாதிதான் என் காதுகளுக்குள் விழுந்தது. என் மீது வெறுப்பை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் இருந்தேன். முன்புபோல், என் முன்னிலையில் என்னிடம் எந்த முரண்பாடுகளும் கொள்ளவில்லை, ஆனால், என் முதுகுக்குப் பின்னால் முணுமுணுப்பது எனக்கு கேட்டது.  நான் அவர்களை விட்டு விலகிப்போகும் போது, என்னைத் தடுத்து, என்னை மீண்டும் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கின்றனர். எப்படியேனும் என்னை தங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. இப்படியான செய்கைகள் என்னைத் தாமதிக்கச் செய்தன. பலவந்தமாக என்னை  அவர்களிடமிருந்து கழற்றிக்கொண்டு நான் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்து செல்ல தயக்கம் என்னைத் தடுத்தது. என்னைத் தன்பக்கம் எப்போதும் இழுத்துக்கொள்ளும் ஒரு கூடாத பழக்கம் என்னை நோக்கி, ‘இவைகள் இல்லாமல் உன்னால் வாழமுடியும் என்று எண்ணுகிறாயா’ என்ற கேள்வியைத் தொடுத்தது.

27. ஆனால் இப்போது அது மிகவும் மெல்லிய தொனியில் என்னைப்பார்த்துச் சொன்னது; நான் எந்தப் பக்கம் என் முகத்தை வைத்திருந்தேனோ, அந்தப் பக்கத்தை விட்டு, புதிய ஒரு பக்கம் என் பார்வையைச் செலுத்த தயங்கித் தயங்கி நின்றபோது, இச்சையடக்கம் என்ற கண்ணியம் மிக்க கற்புக்கரசி என்முன் தோன்றினாள். எவ்வித சந்தேகங்களும் கொள்ளாமல், மகிழ்ச்சியாகவும், நேர்மையாகவும் என்னை தன்னிடம் வரும்படி அழைக்கும் நோக்கில், அவளுடைய புனிதமான கைகளை என்னை நோக்கி நீட்டினாள். நான் பின்பற்றக் கூடிய நல்ல பல எடுத்துக்காட்டுகள் அவளது கைகளில் இருந்ததைக் கண்டேன். அங்கே எத்தனையோ இளவயது ஆண்களும் பெண்களும் இருந்தனர். அவர்களோடு, ஒவ்வொரு வயதிலும் ஏராளமான இளைஞர்கள், யுவதிகள், முதிர்ந்த விதவைகள் மற்றும் வயதான கன்னியர் போன்றோரும் இருந்தனர். சகல வழிகளிலும் தன்னைக் கட்டுப்படுத்தி, பிள்ளைபெற முடியாத மலடியாக இல்லாமல், மகிழ்ச்சி எனும் கணவனுக்குப் பிறந்த குழந்தைகளின் அன்புத் தாயாக அந்த  இச்சையடக்கம் என்ற கண்ணியம் மிக்க கற்புக்கரசி திகழ்ந்தாள். இவை யாவும் எம் தேவனே, உமது அருளால் மட்டுமே ஆனது. அவள் என்னைப் பார்த்து ஊக்கமளிக்கும் விதத்தில் ஆனால், கேலியுடன் சிரித்தாள். இந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளால் செய்யக்கூடியதை உன்னால் செய்ய முடியாதா? அல்லது யாரேனும் ஒருவர் அல்லது எல்லோரும், தங்கள் தேவனாகிய கர்த்தருடைய கிருபையின்றி, தங்கள் சொந்த முயற்சியின் காரணமாக அதைச் செய்தார்கள் என்று நினைத்தாயா? உனது சொந்த சக்தியைக் கொண்டு உன்னால் நிற்க முடியாதா? அப்படியானால் ஏன் முடியாது? உன்னை அவரை நோக்கித் தூக்கி வீசு! பயப்படாமல் இதைச் செய்! விழுந்துவிடுவோம் என்று அஞ்சாதே! நீ நிலத்தில் விழாதவாறு தேவன் உன்னைத் தாங்கிப் பிடிப்பார். விலகிப் போக மாட்டார். அவர் உனது கரங்களை பற்றி உன்னை எல்லா விடயங்களிலிருந்தும் குணமளிப்பார்’ என்று என்னை நோக்கி சொல்வதுபோல் இருந்தது அந்தக் கண்ணியமான கற்புக்கரசியின் பார்வை. அந்த பொம்மைப் மாதுகளின் முணுமுணுப்பு இன்னும் என்னால் கேட்கக்கூடியதாக இருந்ததால், என்னில் எழுந்த வெட்க சுபாவத்தை என்னால் அடக்கமுடியாதிருந்தது. இன்னும் அந்த இரண்டும்கெட்டான் நிலையில் தான் நான் இருப்பதை உணர்ந்தேன். அப்போது அந்த கற்புக்கரசி மீண்டும் என்னை நோக்கி, பூமியிலுள்ள உன்னுடைய அசுத்தமான அவயவங்களுக்கு விரோதமாக உன் காதுகளை அடைத்துக்கொள் என்ற கொலோசேயரின் 3:5 ல் காணப்படும், “தீமை, பாலியல் குற்றம், பாவ காரியங்களின் ஆளுகைக்கு உள்ளாகுதல், மோகம், தீய ஆசைகள் போன்ற உங்கள் பாவங்களை உங்கள் வாழ்விலிருந்து விலக்குங்கள். போலியான கடவுளுக்குச் சேவை செய்வது போன்றதுதான் இவ்விருப்பங்களின் உண்மை அர்த்தம்” என்று அந்த வாசகத்தில் உள்ள சித்தாந்தங்களை எனக்கு விளக்கிக் கூறினாள். அத்தோடு, அவர்கள் உங்களுக்கு இன்பங்களைப் பற்றிச் சொல்கிறார்கள், ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் வகுத்த சட்டத்தின்படி அல்ல. என் இதயத்தில் கனன்று கொண்டிருந்த இந்த சர்ச்சை நானே எனக்கெதிராக ஏற்படுத்திக் கொண்டதே  தவிர வேறொன்றுமில்லை. இவ்வளவுநேரம் என் அருகிலேயே அமர்ந்திருந்து இவை யாவற்றையும் கண்டு, கேட்டுக் கொண்டிருந்த அலிபியஸ், எதிர்பாராவிதத்தில் கிளர்ந்த என் உணர்ச்சிப் பிரவாகத்துக்கான காரணத்தை அறிந்துகொள்ளக் காத்திருந்தார்.

அத்தியாயம் 12 – அவர் கண்ணீர் சிந்தி கடவுளிடம் பிரார்த்தனை செய்த போது, ஒரு குரல் உரோமர் 8 13 இல் உள்ள வார்த்தைகளைப் படிக்குமாறு அறிவுறுத்தியது; அவரும் படித்தார். இதன் மூலம் அவரது முழு உள்ளத்திலும் மாற்றம் ஏற்பட்டது. அவர் தனது தாயாருக்கும் நண்பருக்கும் அந்த தெய்வீகத் தயவு குறித்து விளக்கினார்

28. என் ஆன்மாவின் இரகசிய ஆழத்திலிருந்து ஒரு ஆழமான பிரதிபலிப்பு  என் துயரங்களை எல்லாவற்றையும் ஒன்று கூட்டி, என் இதயத்தின் முன் நிறுத்தியபோது, ஒரு வலிமை மிக்க சூறாவளியாய் உருவெடுத்து என் கண்ணிலிருந்து கண்ணீரை ஆறாய் உகுத்தது. நான் என் கண்களில் இருந்து அருவியாய்க் கொட்டிய கண்ணீரை முழுமையான உணர்வுகளோடு சிந்தித் தீர்த்துவிட வேண்டும் என்றெண்ணி, நான் அலிபியஸ் அருகில் இருந்து எழுந்து வெளியே சென்றுவிட்டேன். அழுகைக்கு தனிமை தான் மிகவும் பொருத்தமானது என்று நான் நினைத்தேன். ஏனெனில், அவன் அருகில் இருந்தது என் அழுகைக்கு இடையூறாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் நான் அவ்வாறு எழுந்து சென்றேன். எனது நிலையை அவன் ஏனாதி செய்கையினூடாக நன்றாகப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். கண்களில் ததும்பிய கண்ணீரோடு, தழுதழுத்த குரலில் நான் அவனிடம் என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எழுந்து போவதை அவன் ஆச்சரியத்தில் உறைந்துபோன கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தான். நான் நிலத்தில் விழுந்தேன். எப்படி எனக்குத் தெரியவில்லை. ஒரு அத்தி மரத்தின் கீழ் உட்கார்ந்து கண்களில் கண்ணீர் ஆராய்ப் பெருக்கெடுத்து ஓடும்வரை, என் கண்ணீரைக் கொட்டித் தீர்த்தேன். இதையொத்த ஒரு வாசகம் 1 பேதுரு 2:5  இல்  “நீங்கள் இயேசு கிறிஸ்து வழியாக தேவன் ஏற்கத்தக்க ஆவிக்குரிய பலிகளைக் கொடுக்கும் பரிசுத்த ஆசாரியராக வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் அப்பலிகளைக் கொடுங்கள்” என்று கூறுகிறது.  உண்மையில் இந்த வார்த்தைகளில் இல்லை, ஆனால் இது சம்பந்தமாக நான் உம்மிடம் அதிகம் பேசினேன் – ஆனால் ஆண்டவரே, நீர் எவ்வளவு காலத்துக்கு? இன்னும் எத்தனை காலத்துக்கு இது தொடரப்போகிறது? நீர் எப்போதும் கோபமாகவே இருப்பீரா? நான் அந்தத் தவறுகளால் கவரப்பட்டது உண்மைதான், ஆனாலும் எனது முந்தைய அக்கிரமங்களுக்காக என்னைத் தண்டிக்காதிருக்க உம்மை வேண்டுகிறேன். நான் மீண்டும் இந்த சோகமான கூக்குரலை வானகத்தை நோக்கி எழுப்பினேன் – எவ்வளவு காலத்துக்கு? இன்னும் எவ்வளவு காலம் செல்லும்? நாளைக்கு? நாளை மறுதினம்? அல்லது இப்பொழுது? ஏன் இப்பொழுதே அது நடக்கக் கூடாது? என் இழிவான, அசுத்தம் நிறைந்த வாழ்வை ஏன் இந்த நிமிடமே முடித்துக்கொள்ளக்கூடாது?

29. இவற்றைச் சொல்லிக் கொண்டு மனக்கசப்புடன் அழுதுகொண்டே இருந்தபோது, ஒரு சிறுவன் அல்லது ஒரு சிறுமியின் குரல் அருகில் இருந்த வீட்டிலிருந்து வந்தது. ஆனால், எங்கிருந்து, யாரிடமிருந்து அது வந்தது என்று என்னால் சரியாக மட்டுக்கட்ட முடியவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அந்தக் குரல், எடுத்துப் படி; எடுத்துப் படி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தது. உடனே என் முகபாவம் மாறியது, குழந்தைகள் தங்கள் விளையாட்டின் போது இதுபோன்ற வார்த்தைகளை சொல்லி விளையாடுவது வழக்கமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். இருந்தாலும், நான் அப்படியான வார்த்தைகளை குழந்தைகள் பேசியதைக் கேட்டதாக நினைவில் இல்லை. எனவே, அழுகையை நிறுத்திவிட்டு, புத்தகத்தைத் திறக்கவும், நான் கவனிக்க வேண்டிய முதல் அத்தியாயத்தைப் படிக்கவும் வானகத்தில் இருந்து எனக்கு இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கும் என்று எண்ணுவதைத் தவிர வேறு வழியின்றி நான் எழுந்தேன். சுவிசேஷம் வாசிக்கும் போது தற்செயலாக அதை செவிமடுக்க நேர்ந்த அந்தோணி அவர்களைப் பற்றிய எனது நினைவுகளை சற்று மீட்டிப்பார்த்தேன். அவரும் இதேபோல் தான் வாசித்த அத்தியாயத்தில், உன்னிடம் இருப்பதைப் போய் விற்று ஏழைகளுக்குக் கொடு, சொர்க்கத்தில் உனக்குப் பொக்கிஷம் கிடைக்கும் என்பது போன்ற அறிவுரையைப் பெற்றார். இதை மத்தேயு 19:21 இல் இயேசு அவனிடம், “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்ற கர்த்தரின் திருவாசகத்தை நினைவூட்டியது. இது அவருக்காகவே சொல்லப்  பட்டதாக எண்ணி அவர் உம்மை முழுமையாக அவரது வாழ்வுக்குள் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்று நான் கேள்வியுற்றேன். உடனே நான் அலிபியஸ் அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பினேன். அங்கு சென்றவுடன், திருத்தூதரின் புத்தகம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, தாவிச் சென்று அதைக் கைப்பற்றினேன். அந்தப் புத்தகத்தைத் திறந்து, என் கண்களால் கண்ட அந்த முதல் வாசகத்தை பெரிய சத்தம் எதுவுமின்றி வாசிக்கத் தொடங்கினேன். “பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்து கொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்” என்ற உரோமையர் எழுதிய 13 ம் வாசகத்தின் 13 முதல் 14 ம் வசனங்கள் என் கண்களில் பட்டன. என்னால் அதற்குமேல் வாசிக்க முடியவில்லை, அதற்கான தேவையும் இருக்கவில்லை. வாக்கியம் முடிவடைந்த உடனேயே – என் இதயத்திற்குள்  ஊடுருவிச் சென்ற ஒரு ஒளிப்பிரவாகத்தால் என் மனதில் அந்த நிமிடம் வரை குடிகொண்டிருந்த எல்லா சந்தேகம் என்று இருள் சடுதியாய் மறைந்து போயிற்று.

30. வாசித்த அந்த அந்த வாசகத்தை நினைவில் வைத்துக்கொள்ளும் முகமாக, ஏடுகளுக்கு இடையில் என் விரலை அல்லது வேறு குறிப்பானை வைத்த பிறகு, புத்தகத்தை மூடிவைத்தேன். நான் இப்போது அமைதியான முகபாவத்துடன் அதை அலிபியஸுக்குத் தெரியப் படுத்தினேன். அதைக்கேட்ட அவன் மனதில் என்ன நினைத்தானோ நானறியேன். ஆனால் அவன் அவனது மனதில் பட்டதை இவ்வாறு என்னிடம் கூறினான். நான் வாசித்த அந்தப் புத்தகத்தின் பகுதியை அவனிடம் காட்டுமாறு என்னிடம் கேட்டான். உடனே நான் அதை  வாசித்துக்காட்டியதும், அவன் நான் விட்ட இடத்தில் இருந்து அதன் தொடர்ச்சியை அவன் கண்டான். அதில் என்ன இருந்தது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் தொடர்ச்சி இவ்வாறு அமைந்திருந்தது.  அதாவது “விசுவாசத்தில் பலவீனமான ஒருவனை உங்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்க வேண்டாம். அவனது மாறுபட்ட சிந்தனைகளைப் பற்றி அவனோடு விவாதிக்க வேண்டாம்” என்று உரோமர் 14:1 இல் கூறியிருந்ததை நான் கண்ணுற்றேன். அலிபியஸ் இந்த வாசகங்கள் தன்னோடு பொருந்துகிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்தான். அதைப்பற்றி என்னிடமும் சொன்னான். இதில் கூறப்பட்டிருந்த அந்தப் புனிதமான வாக்கியங்கள் அவனை ஊக்கம் பெறச் செய்தது. உடனேயே  ஒரு நல்ல தீர்மானம் மற்றும் நோக்கத்துடன், அவனது குணாதிசயத்திற்கு மிகவும் இணங்கிப் போன காரணத்தால் (அதில், அவன் எப்போதும், எல்லா விடயங்களிலும் என்னைவிட மிகவும் வித்தியாசமானவனாக இருந்தான்), எந்த விதமான தாமதமோ தயக்கமுமோ இல்லாமல், அவன் என்னுடன் இணைந்து கொண்டான். அதன் பிறகு நாங்கள் என் தாயிடம் சென்று எங்களுக்கு என்ன எப்படி, எதுவெல்லாம் நடந்தது என்பதைப்பற்றி விரிவாக விளக்கிக் கூறினோம். அதைக் கேட்டு அவள் பேரானந்தம் கொண்டாள். இதை எங்கள் வாழ்வில் நாங்கள் பெற்றுக்கொண்ட வெற்றியை அவள் கண்டாள். மிகவும் அகமகிழ்ந்து எங்களை மனதார வாழ்த்தினாள். “இவ்வாறு தேவனின் சகல முழுமையிலும் நீங்கள் நிறைக்கப்படுவீர்கள். நாம் கேட்பதை விடவும், நினைப்பதைவிடவும் தேவன் நமக்கு மிகுதியாகச் செய்யத் தக்கவர். தேவனின் வல்லமை நமக்குள் உள்ளது” என்ற எபேசியரின் 3:20 ம் வாசகத்தில் கூறப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி, எல்லாம் வல்ல தேவனைப் போற்றி புகழ்ந்து பாடினாள். தான் கொண்டிருந்த மனக்கவலை, வேதனை, கண்ணீருடன் அவள் உம்மைநோக்கி உருக்கத்துடன் ஒப்புக்கொடுத்த மன்றாட்டுக்களுக்கும் அதிகமாக நீர் அவளுக்கு கொடுத்துவிட்டீர் என்று அவள் பேருவகை கொண்டாள். நீர் தான் என் மனதின் மாற்றத்துக்குக் காரணமாக இருந்து, உம்மிடம் என்னை வரும்படி செய்தீர். அதன் விளைவாக, நான் எனக்கென்று ஒரு வாழ்க்கைத் துணையையோ அன்றி, உலக வாழ்வில் எனக்கு கிடைக்கவிருந்த எந்த விதமான ஒரு இன்பத்தையோ நாடவில்லை. விசுவாசத்தில் நான் மிகவும் மன உறுதியோடு இருந்தேன். இதைத்தான் என் தாயாருக்கு நீர் ஏற்கனவே முன்னறிவித்து இருந்தீர். நீர் அவளது துன்பங்களை இன்பங்களாக மாற்றினீர். அவள் உம்மிடம் எதிர்பார்த்த மகிழ்ச்சியைவிட, நீர் அவளுக்கு பேரானந்தத்தை வாரி வாரி வழங்கினீர். எனது தாம்பத்திய வாழ்வில் என் மூலமாகப் பேரக்குழந்தைகளைப் பெறவேண்டும், பார்க்கவேண்டும் என்ற ஒரு தாயின் எதிரிபார்ப்பைவிட, நீர் அவளுக்கு எல்லையில்லாததும் புனிதமானதும், விலைமதிப்பற்றதானதுமான பேருவகையை அள்ளித் தந்துள்ளீர்.