Saint Augustine, Confessions, Book 6, in Tamil
அத்தியாயம் 1- அவரைத் தொடர்ந்து மிலானுக்குச் சென்ற அவரது தாய், தான் இறக்கும் முன் தனது மகன் கத்தோலிக்க நம்பிக்கையை ஏற்றுக்கொள்வார் என்று நம்பிக்கை வெளியிட்டார்
1. என் இளமைக்காலம் தொட்டு என் நம்பிக்கையின் ஒளியாய் இருந்தவரே, நீர் என்னைவிட்டு எங்கே போனீர்? உண்மையில், நீர் என்னைப் படைத்து, எனக்கும் மிருகங்களுக்கும் ஆகாயத்துப் பறவைகளுக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியவர் நீரன்றோ? அவர்களை விட நீர் என்னை ஞானியாக ஆக்கினீர். ஆனால் நான் தான் இன்னும் இருளிலும் வழுக்கும் பாறைகள் போன்ற இடங்களிலும் அலைந்து திரிந்தேன். என் இயலுமைக்கு அப்பால் கூடச் சென்று உம்மைத் தேடினேன். ஆனால் என் இதயத்தின் தேவனைக் காணவில்லை. நான் கடலின் ஆழத்திற்குச் சென்று அதில் மூழ்கியவன் போல் நம்பிக்கையை இழந்துவிட்டேன், உண்மையைக் கண்டறிவதில் விரக்தியடைந்தேன். இந்த நேரத்தில், என் தாய் கடல் மற்றும் நிலம் வழியாக, உம்மீது தான் கொண்டிருந்த விசுவாசத்தை மட்டுமே ஒரே நோக்காகக் கொண்டு, தைரியத்துடன் பயணத்தின் போது ஏற்படக்கூடிய அனைத்து ஆபத்துக்களையும் வென்று பாதுகாப்பாக வந்து சேர்ந்தாள். பயணத்தின் போது சந்தித்த ஆபத்து வேளைகளில் அவள் மாலுமிகளை ஆறுதல்படுத்தினாள் – அனுபவமில்லாத பயணிகள் பயப்படும்போது இவ்வாறு ஆறுதல் சொல்வது வழக்கம். மேலும் அவளுக்கு கிடைத்த ஒரு தரிசனத்தின் மூலம் அவளது பாதுகாப்பான பயணம் உமது அருளால் உறுதியளிக்கப்பட்டதால், பாதுகாப்பான பயணத்தையும் பாதுகாப்பாக கரைசேர்வதையும் அவர்களுக்கு உறுதியளித்தாள். எப்போதாவது உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற விரக்தியில் வாழ்ந்த என்னை கடுமையான ஆபத்தில் சிக்கியிருப்பதாக அவள் கண்டாள். ஆனால் நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவராக இல்லாவிட்டாலும், நான் இப்போது மனிச்சியன் இல்லை என்பதை அவளிடம் தெரிவித்த போது, அவள் எதிர்பாராத மகிழ்ச்சியில் குதிக்கவில்லை; என் துயரத்தின் ஒரு பகுதியைப் பற்றி அவள் இப்போது விளங்கிக் கொண்டிருந்தபோதிலும், இறந்து போன ஒருவருக்குத் துக்க அஞ்சலி செலுத்துவதைப் போலவே அவள் நடந்துகொண்டாள். ஒருவேளை, என்றோ ஒரு நாள், நான் இந்த பரிதாபத்துக்குரிய நிலையில் இருந்து விடுபட்டு மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை அந்த தாயின் மனதில் இருந்திருக்கக்கூடும் என்று நான் எண்ணினேன். எனது தாயும் இதைப்போல் லூக்காவின் சுவிசேஷத்தில் 7:12-15 இல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்தவளாய் நான் இறையருளால் திருந்தி மீன்றும் கர்த்தரை ஏற்றுக்கொள்வேன் என்ற உறுதியான விசுவாசத்தோடு இருந்தாள். இது தான் அந்த சுவிசேஷ வார்த்தை: “விதவையான ஒரு தாய் தனது ஒரே மகனை இழந்திருந்தாள். அவனது உடலைச் சுமந்து சென்றபோது தாயுடன் அந்நகர மக்கள் பலரும் கூட இருந்தனர். கர்த்தர் (இயேசு) அவளைப் பார்த்தபோது, அவளுக்காக மனமுருகி, அவளிடம் சென்று, “அழாதே” என்றார். அப்போது பாடையின் அருகே வந்து இயேசு அந்த இறந்த உடலைத் தொட்டார். அந்தப் பாடையைச் சுமந்து வந்த மனிதர்கள் ஆச்சரியத்தில் உறைந்துபோய் நின்றனர். இயேசு இறந்த இளைஞனை நோக்கி, “இளைஞனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்கிறேன், என்றார். இறந்துபோன மகன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். அவனை அவன் தாயிடம், கர்த்தரான இயேசு ஒப்படைத்தார்”. ஆகையால், அவள் தினமும் உம்மை நோக்கி உருக்கத்துடன் வேண்டிக்கொண்டவற்றில் பெரும்பகுதி ஏற்கனவே நிறைவேறியுள்ளது என்று அறிந்தபோது அவளுடைய இதயம் எந்தக் கலக்கமுமின்றி அமைதியாகவே இருந்தது – நான் இன்னும் உண்மையைப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், பொய்யிலிருந்து மீட்கப்பட்டேன் என்ற காரணத்தால் அவள் மனம் மகிழ்ச்சி கொண்டிருந்தாலும், அதற்கெல்லாம் மேலாக, வாக்குறுதியளித்த படியே நீர் அவளுக்கு இளைப்பாறுதலைக் கொடுப்பீர் என்று அவள் முழு நம்பிக்கையுடன் இருந்தாள். இதனால் அவள் தான் இறப்பதற்கு முன்பு என்னை ஒரு உண்மையுள்ள கத்தோலிக்கனாகப் பார்ப்பேன் என்று கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டுள்ளதாக என்னிடம் கூறினாள். மேலும் அவள் என்னிடம் இதற்கு மேல் எதுவும் எதிர்பார்ப்பதற்கு இல்லை என்றும் கூறினாள். ஆனால் கருணையின் நீரூற்றாய் இருப்பவரே, அடிக்கடி உமக்கு ஒப்புக்கொடுக்கும் அவளது செபத்தின் மூலம் தனது கண்ணீரைக் காணிக்கையாய் உகுத்து உமது பாதத்தை நனைத்தாள். நீர் உமது கிருபையால் அவளுக்கு செய்யும் உதவியை விரைவாக செய்தருளவேண்டுமென்றும், இருள் சூழ்ந்த மனதுக்கு ஒளியைக் கொடுத்தருள வேண்டுமென்றும், அவள் இன்னும் விசுவாசத்துடனும், ஆர்வத்துடனும் தேவாலயத்திற்குச் சென்று, அம்ப்ரோஸ் அவர்களின் போதனைகளுக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பிரார்த்தனை செய்தாள். நித்திய வாழ்வெனும் நீரூற்றாய் அவரது பிரார்த்தனைகளை அவள் கண்டாள். “நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிப்பவர்களுக்கோ மறுபடியும் தாகம் எடுப்பதில்லை. என்னால் கொடுக்கப்படுகிற தண்ணீர், அதைக் குடிப்பவனுக்குள் நீரூற்றாகப் பெருக்கெடுக்கும். அது அவனுக்கு எக்காலத்துக்கும் உரிய வாழ்க்கையைத் தரும்” என்று யோவான் 4:14 இல் கர்த்தரான இயேசு கூறியதை என் தாய் நினைவில் கொண்டவளாய், ஆயர் அம்ப்ரோசை வாழ்வு தரும் நீரூற்றுக்கு வழிகாட்டும் தேவனின் ஒரு தூதராகவே கண்டாள். தயக்கத்துடன் தறிகெட்டுத் திரிந்த நான், தேவ இரக்கத்தை நோக்கி அடியெடுத்து வைக்கக் காரணம் ஆயர் அம்ப்ரோஸ் தான் என்று அவள் எண்ணினாள். எனக்கு ஏற்பட்டுள்ள நோயிலிருந்து ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பும் முன், எனது மனோநிலையில் இருந்து நான் விடுபடவேண்டும் என்று அவள் முழுமையாக நம்பிக்கையோடு காத்திருந்தாள். காய்ச்சலானது உடலில் இருந்து வெளியேறும் முன் அதன் தீவிரத்தன்மையை வெளிப்படுத்திய பிறகுதான் முற்றாக நீங்கும் என்பதைத்தான், மருத்துவர்கள் “குணப்படுத்தலின் ஆரம்பம்” என்று அழைக்கிறார்கள். எனது நிலைமையும் இவ்வாறான ஒரு தோற்றப்பாட்டுக்குள் தான் அடங்கியிருக்கிறது.
அத்தியாயம் 2 – ஆயர் அம்ப்ரோஸ் விதித்த தடை காரணமாக, என் தாய் வேதசாட்சிகளை நினைவுகூறுவதில் இருந்து ஒதுங்கியிருந்தாள்
2. ஒருமுறை என் தாய், – ஆப்பிரிக்காவில் அவள் கடைபிடித்த வழக்கத்தின் படி – புனிதர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு சில இனிப்புப்பண்டங்கள், அப்பங்களை மற்றும் திராட்சை இரசம் போன்றவற்றைக் கொண்டு போனபோது, வாயிற்காப்பாளரால் அவற்றைக் கொண்டுசெல்ல அனுமதிக்கப் படவில்லை. ஆயர் தான் அந்தத் தடையை ஏற்படுத்தினார் என்பதை அவள் அறிந்தவுடன், அவள் மிகவும் பக்தியுடனும் கீழ்ப்படிதலுடனும் அவர்களது முடிவை ஏற்றுக்கொண்டாள். அவர்கள் விதித்த தடையை கேள்விக்குட்படுத்துவதற்குப் பதிலாக அவள் தன்னுடைய வழக்கத்தைக் கடைபிடித்தது தான் செய்த தவறு என்று மிகப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டதை எண்ணி நான் பிரமித்துப்போனேன். மதுமயக்கம் அவளது ஆன்மாவை ஆட்கொள்ள முடியவில்லை. அத்தோடு, பலர் மத்தியில் நிலவும் வழக்கத்தைப் போல், சத்தியத்தை எதிர்க்க போதைப்பிரியம் அவளைத் தூண்டவில்லை. நாம் பார்க்கும் சில ஆண்கள் மற்றும் பெண்கள், குடிபோதை தெளிந்து நிதானமாக இருப்பார்கள். ஆனால், பாடல்களைக் கேட்கும்போது மட்டும் குமட்டுவது ஏற்றுக் கொள்ளமுடியாதிருக்கிறது. அவள் பண்டிகை இனிப்புகளுடன் கூடிய கூடையைக் கொண்டு வரும்போது, முதலில் அவற்றை தானே ருசி பார்த்துவிட்டு அதற்குப் பிறகுதான் மற்றவர்களுக்குக் கொடுப்பாள். அவளுடைய சொந்த விருப்பத்தின்படி ஒரு சிறிய கோப்பைக்கு மேல் மதுவை அருந்த மாட்டாள். அதுவும் மரியாதை நிமித்தமாக மட்டுமே அவள் அதைச் சுவைத்தாள். மேலும், மறைந்த வேதசாட்சிகளுக்கான வழிபாட்டு நிகழ்வுகள் பல அதே வழியில் கௌரவிக்கப்பட்ட வேண்டிய சூழ்நிலையில், எங்கு போனாலும் அவள் உபயோகிக்கும் அதே சிறிய கிண்ணத்தைத் தன்னுடன் எடுத்துச் செல்வாள். அவள் கொண்டு சென்றது தனித் திராட்சை இரசமல்ல, அது அளவுக்கு மேல் நீர் கலந்து நீர்த்துப் போகச் செய்யப்பட்ட பானமாகவே இருந்தது. அவள் சுற்றி இருப்பவர்களுக்குப் பரிமாறியது சிறு சிறு துளிகள் மட்டுமே; ஏனென்றால் அவள் அவர்களின் பக்தியை மட்டுமே தேடினாள், இன்பத்தை அல்ல. வெகுவிரைவில் இந்தப் பழக்கத்தை அந்த புகழ்பெற்ற போதகரும், மிகவும் பக்திமானான மதகுருவானவருமான அந்த தெய்வீக மனிதர் தடை செய்யப்போவதாக அறிந்தாள். ஏனென்றால் அதை மிதமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டபோது, இறந்த புனிதர்களை நினைவுகூரும் நாட்களில், போதைக்குப் பழக்கப்பட்டவர்கள் நன்றாகக் குடித்துவிட்டு கும்மாளமடித்தார்கள். ஏனென்றால் இறந்தவர்களைக் கொண்டாடும் பண்டிகைகள் என்பது கூறுவது புறஜாதிகளின் மூடநம்பிக்கையைப் போன்றது. இதைக் கேள்விப்பட்டவுடன், அவள் பேருவகையுடன் தனது வழக்கத்தை நிறுத்திக்கொண்டாள். மேலும், மண்ணில் விளையும் கனிகளால் நிரப்பப்பட்ட கூடைக்குப் பதிலாக, புனிதர்களின் நினைவுச் சின்னங்களுக்கு வரும்போதெல்லாம், இதயம் நிறைந்த, தூய்மையான மன்றாட்டுக்களையே சுமந்துகொண்டு வந்தாள். இறைவனின் திருச் சரீரம் கற்பித்த ஒற்றுமையை மனதிற்கொண்டு, தன்னால் இயன்ற அனைத்தையும் ஏழைகளுக்கும் தேவை உள்ளோருக்கும் வழங்க அவள் உறுதிபூண்டாள். புனிதர்களின் நினைவுச்சின்னங்கள் அமைந்திருந்த இடங்களில் புனித நற்கருணை வழிபாடு நடைபெற்றது. ஆண்டவரின் திருப்பாடுகளுக்கு தங்களையே வேதசாட்சிகளாய் அர்ப்பணித்த இந்தப் புனிதர்கள், மகுடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். ஆனாலும், என் தேவனே, உமது பார்வையில் என் இதயம் இப்படித்தான் கருதுகிறது – அதாவது ஆயர் அம்ப்ரோஸ் அவர்களைத் தவிர இந்த வழக்கத்தை வேறொருவர் தடை செய்திருந்தால், காலங்காலமாய் இந்த வழக்கத்தைப் பின்பற்றி வந்த என் தாய் அதை அவ்வளவு எளிதாக நிராகரிக்கவோ சீரணித்திருக்கவோ மாட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது. என் இரட்சிப்பின் மீதிருந்த அவளுடைய அக்கறையால், அவள் ஆயரை மிகவும் நேசித்தாள்; அவளுடைய விசுவாசம் மிகுந்த இறை வாழ்க்கை நிமித்தம் ஆயரும் என் அன்னையை நேசித்து கௌரவத்துடன் நடத்தினார். தனது நற்கிரியை காரணமாக, இறை மகிமையால் முழுமை பெற்று, அதில் கிடைத்த ஆர்வத்தால் வழிநடத்தப்பட்ட என் அன்னை தேவாலயத்திற்கு அடிக்கடி சென்றுவந்தாள். ஆயர் அவர்கள் என்னைக் காணும்போதெல்லாம், அடிக்கடி என் தாயைப் புகழ்ந்து பேசுவார். இவ்வளவு அன்பும், அக்கறையும் உள்ள தாய் உனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம் என்று என்னை வாழ்த்தினார் – அதேநேரம், அவளுக்கு என்னைப்போன்ற, இப்படியான குணங்கள் கொண்ட மகன் ஒருவன் இருக்கிறான் என்று அவர் அறியாதிருந்தார். ஏனெனில், இந்த இறை வழிகள் மற்றும் தெய்வீக ஈடுபாடுகளில் இன்னும் சந்தேகம் கொண்டவனாய், வாழ்வின் வழியைக் கண்டுகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்பவனுமாக நான் இருந்தேன்.
அத்தியாயம் 3 – ஆயர் அம்ப்ரோஸ் கடமை மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்ததால், வேதாகமத்தைப் பற்றி அகஸ்டினால் எப்போதாவது தான் அவரிடம் உரையாட முடிந்தது
நீர் என் குரலுக்கு செவிசாய்க்க வேண்டுமென்று இதுவரை நான் உம்மை நோக்கி இறைஞ்சவில்லை. என் மனம் முழுக்க முழுக்க அறிவுசார் விடயங்களில் ஆர்வம் கொண்டிருந்தது போல், சர்ச்சை, விவாதம் போன்றவற்றில் சிக்கி அமைதியிழந்து காணப்பட்டது. உலகெங்கும் வாழும் செல்வச் செழிப்பும், பெருமதிப்பும் கொண்ட மேன்மக்கள் எல்லோராலும் புகழப்படும் ஆயர் அம்ப்ரோஸ் அவர்கள், என் கண்ணுக்கும் ஒரு மாமனிதராகவும், மகிழ்ச்சி ததும்பும் ஒருவராகவும் தெரிந்தார். இருப்பினும், அவருடைய துறவறம் தான் எனக்கு வேதனையான விடயமாகவும் சுமையாகவும் தோன்றியது. ஆனால் அவரது விசுவாசம் எப்படிப்பட்டது, அவரது உயர் பதவிக்கு எதிராக எழுந்த சோதனைகளுக்கு அவர் எவ்வாறு முகம் கொடுத்தார், எவ்வாறு எதிர்த்துப் போராடினார், துன்ப வேளையில் அவர் எவ்வாறு ஆறுதல் பெற்றார், உமது திருச்சரீரமாகக் கொண்டாடப்படும் அப்பத்தை உண்ணும் போது அவரது இதயத்தில் ஏற்பட்ட இனிமையான மகிழ்ச்சி எவ்வாறிருந்தது போன்றவற்றை ஊகிக்கவோ அனுபவபூர்வமாக உணரவோ என்னால் முடிய வில்லை. அதேநேரம், நான் அனுபவித்த இடையறா மனப் போராட்டமும், அதனால் ஏற்பட்ட பயமும் என்னைத் தூக்கி ஒரு ஆபத்து நிறைந்த குழியில் எறிந்ததையும் அவர் எவ்வாறு அறிவார்? நான் விரும்பியதை அவரிடம் கேட்க முடியாத்திருந்தது, ஏனென்றால் எப்போதும் பரபரப்பு மிகுந்த கூட்டத்தினரால் அவர் சூழப்பட்டிருந்த காரணத்தால், அவரிடம் கேட்கவும் பேசவும் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த மக்களுடைய குறைபாடுகளை நிவிர்த்தி செய்யும் முகமாக அவர் தன்னை அர்ப்பணித்திருந்தார். அவர் அவர்களைத் தேடிவந்த மக்களின் குறைகளைத் தீர்த்து, கொஞ்சம் ஓய்வாக இருக்கும்போது – அவ்வாறு இருப்பது மிகவும் அபூர்வமே – அவர் தனது உடலுக்கு தேவையான உணவை உட்கொள்வதிலும் வாசித்தலில் ஈடுபடுவதிலும் தனது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியூட்டினார். அவர் புத்தகங்களைப் படிக்கும்போது, அவரது கண்கள் புத்தகங்களின் பக்கங்களைப் பார்க்கும், அவரது இதயம் வாசிக்கும் விடயங்கள் குறித்த உணர்வைத் தேடும். ஆனால் அவரது குரலும் நாவும் அமைதியாக இருக்கும். அடிக்கடி நாங்கள் அவருடைய அறைக்கு வரும்போதெல்லாம், உள்ளே நுழையத் தடை விதிக்கப்படவில்லை. எவரும் எந்நேரமும் உள்ளே வரலாம் என்ற கொள்கை அவரிடம் இருந்தது. அதேநேரம், அவரை பார்க்க வருபவர்களின் வருகையை அவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதும் அவருடைய வழக்கத்தில் இல்லாமல் இருந்தது. எப்போது உள்ளே சென்றாலும், அவர் புத்தகங்களை அமைதியாக வாசித்துக் கொண்டிருப்பதை காணக்கூடியதாயிருக்கும். நாங்கள் நீண்ட நேரம் மௌனமாக அமர்ந்திருந்த பிறகும், அவருடைய அந்தப் பிரத்தியேக வாழ்க்கையில் குறுக்கிட யார் துணிவார்கள்? பிற மனிதர்களின் வருகையால் ஏற்படும் பரபரப்பில் இருந்து சற்றே விடுபட்டு, மனதை புத்துணர்ச்சியடைய அவருக்கு கிடைக்கும் அந்த சிறிய ஓய்வு நேரத்தில் அவர் கவனத்தை சிதறடிக்கக் கூடாது என்பதை உணர்ந்து நாங்கள் அங்கிருந்து கிளம்பி விடுவோம். மேலும், தான் படிக்கும் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் எதையும் தெளிவில்லாமல் வெளிப்படுத்தி இருப்பார்களோ என்று சந்தேகமும் தவறான ஆர்வமும் கொண்ட சிலர் அதைப்பற்றி விளங்கும்படி கூறலாம் அல்லது சில அபத்தமான கேள்விகளைப் பற்றி விவாதிக்கவோ அவரிடம் கேட்கலாம் என்று அவர் பயந்தார். அதன் காரணமாகத்தான் அவர் வாசிக்கும் போதெல்லாம் தனியாகவும், அமைதியாகவும் வாசித்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அத்தோடு, இப்படியான வீண் விவாதங்களுக்கு தனது பொன்னான நேரத்தை ஒதுக்கினால், பெருமளவிலான புத்தகங்களைப் படித்து அவற்றில் இருக்கும் விலைமதிப்பற்ற அறிவையும் தெளிவையும் அவரால் பெறமுடியாது போகும். போதனை, மறையுரை நிகழ்த்துதல் போன்ற இறைப்பணிகளுக்காக அவர் தனது குரலை அதிகம் பயன் படுத்துவதன் காரணமாகவும், அதனால் அதற்கு சற்று ஓய்வு கொடுக்கவேண்டும் என்ற நோக்கிலும் அவர் புத்தகங்களை அமைதியாக வாசித்திருக்கக்கூடும். என்ன நோக்கத்தோடு அவர் அதைச் செய்தாரோ, அந்த நோக்கம் நிச்சயமாகப் புனிதமான, நல்ல நோக்கமாகவே இருந்திருக்கும் என்பதை எவ்வித சந்தேகமும் இல்லை.
4. ஒருசில சிறிய நேர்காணல்கள் மற்றும் உரையாடல்களைத் தவிர, என் மனதில் எழுந்துள்ள கேள்விகளையோ என் உணர்வுகளையோ அவர் முன் வைப்பதற்கு எனக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை. எவ்வாறாயினும், அந்தக் கேள்விகளுக்கு என் மனம் பதிலைத் தேடிய வண்ணமே இருந்தது. அதற்காக அவரது முழுமையான ஓய்வு நேரத்தை எனக்காக ஒதுக்கும் ஒரு சமயம் அமையுமா எனக் காத்திருந்தேன். ஆயினும், என் மனதில் உள்ள ஆதங்கத்தைக் கொட்டுவதற்கான நேரம் எனக்கு அமையவே இல்லை. தேவன் படைத்த ஒவ்வொரு நாளிலும் ஆயர் அம்ப்ரோஸ் அவர்கள் சத்தியத்தின் வார்த்தைகளைப் போதித்ததை என்னால் காணவும் கேட்கவும் கூடியதாயிருந்தது. இதை 2 தீமோத்தேயு 2: 12 இல் “தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறவகையில் அவரிடம் உங்களை ஒப்படைக்க உங்களால் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். தன் கடமையைப்பற்றி வெட்கப்படாத சேவகனாக இருங்கள். கிறிஸ்துவின் உண்மையான போதனைகளைச் சரியான வழியில் போதியுங்கள்” என்று சொல்லப்பட்டதற்கிணங்க அவரது போதனைகள் அமைந்திருந்தன. ஏமாற்றுப் பேர்வழிகளான மணீக்கியர்கள் வேதாகமத்துக்கு விரோதமாக எனுக்குள் கட்டியெழுப்பிய கோட்டையை என்னால் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்த்தெறிய முடியும் என்ற ஒரு நம்பிக்கை என்னுள் துளிர்விடத் தொடங்கியது. மனிதன் தன்னைப் படைத்தவரின் சாயலில் தான் படைக்கப்பட்டான் என்ற கருத்து எனக்கு ஏககாலத்தில் விளக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபை எனும் அன்னைத் திருச்சபையின் அருளால் புத்துயிர் பெற்ற உமது ஆன்மீக மக்கள் இந்த அறிக்கையைப் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றியது. ஆன்மீக விழுமியம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், நீர் ஒரு மனித வடிவத்துக்குள் மட்டுப் படுத்தப்பட்டதாக அவர்கள் நினைத்தார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால், நான் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதேநேரம், வெட்கத்துடனும் இருக்கிறேன். காரணம் என்னவென்றால், நான் இவ்வளவு காலமாக உடல் சம்பந்தப்பட்ட கற்பனைகள் மற்றும் கட்டுக்கதைகள் போன்றவற்றையே விமர்சித்து வருகிறேன் – கத்தோலிக்க மத நம்பிக்கையை அல்ல. எனது அவசரப்புத்தியாலும், பக்தியீனம் காரணமாகவும் குற்றம் சுமத்தியதற்குப் பதிலாக நான் எது சரி எது பிழை என்று நன்றாக அலசி ஆராய்ந்திருக்கவேண்டும். நீர் சகலவற்றுக்கும் மேலானவராகவும், அனைத்துக்குள்ளும், அனைத்து விதத்திலும், அனைவருக்கும் வெளிப்பாடாக இருக்கிறீர். சிறியது, பெரியது என்ற எந்தவொரு உடல் உறுப்புகளுக்குள்ளும் உம்மை அடக்கிவிட முடியாது. சகவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் உம்மை எந்தவிதமான சக்தியும் தன்னகத்தே அடக்கிக்கொள்ள முடியாது. ஏனெனில், நீர் உடல் வடிவங்களால் வடிவமைக்கப்படவில்லை. உமது திருவுருவில் சாயலாக மனுக்குலத்தைப் படைத்தீர். அவ்வாறு படைக்கப் பட்டவன் தனது தலைமுதல் கால்வரை உமது சாயலாகவே நீர் காட்டிய வழியில் பயணிக்கும் கடப்பாட்டை உடையவனாகிறான்.
அத்தியாயம் 4 – அவர் தான் கடைபிடித்த நம்பிக்கைகளின் தவறுகளை உணர்ந்து அம்ப்ரோஸ் அவர்கள் கற்பித்ததை மேற்கோள் காட்டி நினைவுகூருகிறார்
5. உமது உருவம் எதில் அடங்கியிருக்கிறது என்பதை என்னால் அப்போது விளங்கிக்கொள்ள முடியாததால், அதை நம்புவதற்கான வழிமுறைகளை நான் உமது கதவைத் தட்டி அறிந்துகொண்டிருக்க வேண்டும். அவ்வாறில்லையெனில், உண்மையில் நம்புவது போல் நடித்து, அதை அவமதிக்கும் வகையில் செயற்படாமல் இருந்திருக்க வேண்டும். நிச்சயத்தின் வாக்குறுதியால் இவ்வளவு காலம் ஏமாற்றப்பட்டு அலைக்கழிக்கப்பட்டதற்காக நான் எவ்வளவு அவமானத்தை உணர்ந்தேனோ, அதைவிட அதை உறுதியாகக் கடைப்பிடிப்பது குறித்து அதிக கவலையை உணர்ந்தேன். பல சந்தேகங்களை உண்மையெனக் கருதி, நான் சிறுபிள்ளைத்தனமாக அந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்ததால் வெட்கத்தை உணர்ந்தபின்புதான், அது பொய் என்று தெரிந்துகொண்டேன். அவை உறுதியற்ற கூற்றுக்கள் என்று நன்றாக அறிந்திருந்தும், அவற்றில் என் மனதை செலுத்தி உமது கத்தோலிக்க திருச்சபைக்கு விரோதமாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே சென்றேன். அப்படியான திருச்சபை சாத்தியத்தையே போதித்தது என்பதையிட்டு அறியாத ஒரு மூடனாயிருந்தேன். இருப்பினும், குற்றம் கண்டுபிடித்து அதன் மகத்துவத்துக்கு எதிராக நான் கொண்டிருந்த நிலைப்பட்டைக் குறித்து கத்தோலிக்க திருச்சபை எப்போதும் போதித்ததில்லை. ஆகவே நான் வெட்கத்திலும், அவமானத்திலும் கூனிக்குருகிப் போனேன். நான் துவம்சம் செய்யப்பட்டதாக உணர்ந்தேன். அதேநேரம் நான் குழப்பமடைந்து, அதிலிருந்து விடுபட்டு மனமாற்றம் அடைந்தேன். என் தேவனே, உமது ஒரே திருச்சபையானது உமது ஒரே தேவகுமாரனின் திருவுடல். (நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு கிறீஸ்தவப் பெயர் சூட்டப்பட்டது) அது குழந்தைத்தனமான, அற்பத்தனமான போலிகளை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. சர்வத்தையும் படைத்த நீர் மிகவும் பாரிய ஒரு இடத்தைக் கொண்டிருக்கிறீர் என்றும், இது எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும், இன்னும் எல்லாப் பக்கங்களிலும் கட்டுப்படுத்தப்படும் – மனித உடலின் வடிவம் போன்றது.
6. சட்டம், பழைய வேதாகம நூல்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் சிந்தனைகள் போன்றவற்றை நான் அறிந்துகொள்ள நேரிட்டபோது, நான் அவர்டைத் தாழ்மையாக எண்ணவில்லை. ஆனால் முன்னாளில் அவற்றை நான் ஒரு தவறான கண்ணோட்டத்தோடு தான் நோக்கினேன். அவை யாவும் வெறும் மாயைகள் என்று கூறியது மட்டுமன்றி, உமது புனித அடியார்கள் சிந்திக்கும் திறனற்ற சாமானியர்கள் என்றும் தரக்குறைவாகப் பேசி இருக்கிறேன். ஒருமுறை ஆயர் அம்ப்ரோஸ் அவர்கள் மறையுரை ஆற்றுகையில், “எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது” என்று 2 கொரிந்தியர் 3 :6 வசனத்தை மேற்கோள் காட்டி கூறினார். இதை அவர் மிகவும் அழகாகவும், ஆழமாகவும் மக்களை நோக்கிச் சொன்னபோது நான் அதை மிகவும் ரசித்தேன். அதே சமயம், மறைமுக திரையை விலக்கி, கடிதத்தின்படி ஏற்றுக் கொள்ளப்பட்டவை வக்கிரமான கோட்பாடுகளை கற்பிப்பது போல் தோன்றியதை, அவர் ஆன்மீக ரீதியில் மிக அற்புதமாக விளக்கினார் – இதில் என்னை புண்படுத்தும் எதையும் அவர் கூறவில்லை. ஆனால் அவை உண்மையா இல்லையா என்று கூட நான் அறிந்திராத விஷயங்கள் பலவற்றை அவர் கற்பித்தார். ஆயினும், அவர் அந்நேரத்தில் கூறிய உண்மையான கருத்துக்கள் குறித்து நான் ஒழுங்காகப் புரிந்துகொள்ளவில்லை.நான் தலைக்குப்புற குழிக்குள் விழுந்துவிடுவேனோ என்ற பயம் என்னை ஆட்கொண்டதால், எதற்கும் சம்மதிக்கூடாது என்ற நோக்கத்தில், என் மன உணர்வுகளை அடக்கிக் கொண்டேன்; ஆனால் அதனால் ஏற்பட்ட சந்தேகம் என்னைக் கொல்லாமல் கொன்றது. ஏழு என்ற எண்ணையும், மூன்று என்ற எண்ணையும் கூட்டினால் பத்து என்ற எண் தான் வரும் விடை என்பதுபோல், அனைத்தும் உறுதியான நேரான வழியில் பயணிக்க வேண்டுமென நம்பினேன். ஆனாலும், சில விடயங்கள் எம் அறிவுக்கு அப்பாற்பட்டவை என்பது பற்றியும் நான் அறியாமலில்லை. அதேநேரம், எனது புலன்கள் கண்டு, உணரக்கூடிய இயற்பியல் சார்ந்த விஷயங்கள் அல்லது ஆன்மீகம் போன்ற மற்ற விஷயங்கள் போன்ற தெளிவான விஷயங்களைப் பற்றிய தெளிவைப் பெற நான் விரும்பினேன். அவை இந்த சாத்தியத்தைப் போல உறுதியாக இருக்கவேண்டும் என்றும் எண்ணினேன். அதை நம்பியிருந்தால் ஒருவேளை நான் குணமடைந்திருப்பேன். அப்போது தூசு நீங்கி ஒளிபெற்ற எண் கண்கள் என்றும் நீடித்து நிலைக்கும் உமது சத்தியத்தை நோக்கிப் பார்த்திருக்கும். ஒருவன் தவறான வைத்தியரின் தயவை நாடி அவனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக, அவன் நல்ல வைத்தியரையும் சந்தேகிப்பது போலத்தான் இருந்தது எனது ஆன்மாவின் நிலைமையும். விசுவாசத்தால் அதை நலம்பெறச் செய்வது தான் ஒரே வழி என்றபோதும், தவறான வழியில் சென்று, கூடாத விடயங்களை நம்பி மீண்டும் சீரழிவுக்குள் சென்று விடுவோமோ என்ற பயம் மனதை கவ்வியிருந்தது. நலம்பெறச் செய்யும் உமது திருக்கரங்களை எண் மனம் உதாசீனம் செய்தது. எங்களுக்காக நம்பிக்கையின் மருந்துகளைத் தயாரித்து, முழு உலகத்தின் நோய்களுக்கும் அவற்றைப் பயன்படுத்திய உமது திருக்கரங்களை எதிர்த்து உதாசீனம் செய்துவிட்டது.
அத்தியாயம் 5 – விசுவாசம் தான் மனித வாழ்வின் அடிப்படை; பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்திய அந்த உண்மையை மனிதனால் கண்டுபிடிக்க முடியவில்லை
7. அந்த நேரத்திலிருந்து நான் கத்தோலிக்கக் கோட்பாட்டை விரும்ப ஆரம்பித்தேன். நிரூபிக்கப்படாத விஷயங்களை நம்பும்படி கட்டளையிட்டது நிதானத்துடனும் நேர்மையுடனும் தான் என்று நான் உணர்ந்தேன். கத்தோலிக்க விசுவாசமென்பது மென்மையானதும், மனதுக்கு மிகவும் ஆசுவாசத்தைத் தருவதாகவும் அமைந்திருந்தது. விசுவாசத்தை விட, பகுத்தறிவும், அறிவும் தான் மேன்மையானது என்று ஆரம்பத்தில் கூறிவிட்டு, அதற்குப்பிறகு பல்வேறுவிதமான மாயா ஜாலங்களையும், கட்டுக்கதைகளையும், கற்பனைக்கு அப்பாற்பட்ட விடயங்களையும் பிரஸ்தாபித்து, அவற்றை உண்மையென நம்ப வேண்டும் என்று மனிதர்களை வற்புறுத்தி வந்த மணீக்கியர்கள் போலல்லாது, இந்தத் திருச்சபையானது யாரையும், எந்தக் காரணத்தைக் கொண்டும் திசைதிருப்பாவோ, தவறான வழியில் இட்டுச்செல்லவோ அல்லது பிறரது விசுவாசத்தைக் கொச்சைப்படுத்தவோ இல்லை. அதற்குப் பிறகு, ஆண்டவரே, கொஞ்சம் கொஞ்சமாக, உமது மென்மையும் கருணையும் மிக்க திருக்கரங்கள் என்னை அன்போடு அரவணைத்து என் இதயத்தை அமைதிப்படுத்தியது. நான் கண்டிராத, அறிந்திராத பலவற்றை நம்பி, அவற்றை விசுவசிப்பதாக உணர்ந்தேன். நான் சென்றிராத இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகள், பல்வேறுபட்ட தேசங்களின் சரித்திரத்தில் இடம்பெற்ற சரித்திரபூர்வமான நிகழ்வுகள், பலதரப்பட்ட நாடுகள், நகரங்கள் பற்றி எமது நண்பர்கள், மருத்துவ நிபுணர்கள், மற்றும் எமது உறவுகள் போன்றோரிடமிருந்து பெற்றுக் கொண்ட, கேள்விப்பட்ட விளக்கங்கள் ஊடாக எமக்குத் தெளிவூட்டப் பட்டாலே ஒழிய, இவ்வாழ்வில் நாம் எதையும் நாமாக செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம். இறுதியாக, எண்ணெய் பெற்றெடுத்த தாயும் தகப்பனும் இவர்கள்தான் என நான் நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன். இதையும் நான் அவர்கள் மூலம் கேள்விப்பட்டதால் தான் நம்புகிறேன். இல்லாவிட்டால் என்னால் எப்படி இதையிட்டு உறுதியாக சொல்லமுடியும்? இவை அனைத்தையும் ஒன்றுசேர்த்துப் பார்க்கும்போது, அநேகமாக உலகத்தில் உள்ள அனைத்து தேசங்களிலும் மிகவும் அதிகாரமுடையது என்று போற்றப்பட்ட உமது மறைநூல்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களை மேல் அல்ல, அவற்றை விசுவசியாதவர்கள் மேல் தான் பிழை இருக்கிறது என்று எனக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தினீர். மேலும், ‘அந்த வேதாகம நூல்கள் ஒரே உண்மையான மற்றும் சத்தியத்தின் வடிவமான கடவுளின் மகத்துவத்தால் மனித குலத்திற்குக் கொடுக்கப்பட்டது என்பது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று யாரேனும் என்னிடம் கேட்டால், அவ்வாறு கேட்பவரை உதாசீனம் செய்வது தான் மேல். இந்த இடத்தில் தான் விசுவாசம் முதன்மை ஸ்தானத்தைப் பெறுகிறது. இவ்வாறான குழப்பங்களை உண்டுபண்ணும் கேள்விகள் வாயிலாக முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் தத்துவஞானிகள் போன்றவர்களால், நீர் எம் மத்தியில் இருக்கிறீர் என்ற எனது நம்பிக்கையை யாராலும் மறுக்கவோ அசைக்கவோ முடியாது. அத்தோடு, நீர் எப்படி இருக்கிறீர் அல்லது என்னவாக இருக்கிறீர் என்பது பற்றியெல்லாம் நான் அறியேன். ஆனால், மானிட விவகாரங்களின் ஆளுகை யாவும் உமக்கே சொந்தமானது. இவ்வாறான என் மனதில் நான் கொண்டிருக்கும் விசுவாசத்தை இந்த தத்துவஞானிகளால் தகர்த்துவிட முடியாது.
8. இவ்விடயங்களில் எனது விசுவாசமானது சில சமயங்களில் உறுதியானதாகவும், சில சமயங்களில் பலவீனமானதாகவும் இருந்தது. உமது பிரசன்னம் குறித்து நான் அறிவீனத்துடன் நடந்து கொண்டாலும், என் வாழ்வின் ஒளியாய் இருந்து நீர் என்னை எவ்வாறு வழிநடத்திச் செல்கிறீர் என்பது பற்றிய புரிதல் என்னிடம் காணப்படாவிட்டாலும், எம்மை எப்படி மீண்டும் உம்மை நோக்கி அழைக்கிறீர் என்று அறியா விட்டாலும், நீர் எம்மத்தியில் இருக்கிறீர் என்றும் எம்மீது கரிசனை கொண்டுள்ளீர் என்றும் நான் எப்போதும் நம்பினேன். வெறுமனே பகுத்தறியும் திறனைக்கொண்டு உம்மைப் பற்றிய புரிதலை மேம்படுத்த நாம் வலுவில்லாது இருந்த காரணத்தால், வேதாகம மற்றும் இறை நூல்களின் அதிகாரம் இங்கே இன்றியமையாத ஒன்றாகக் காணப்பட்டது. ஏனெனில், இவை விசுவாசத்தின் பாதையாக இருந்து, உம்மைப் பற்றி அறிந்து கொள்ளும் வழிமுறையாகவும் இருந்திட வேண்டுமென நீர் சித்தம் கொள்ளாமல் இருந்திராவிட்டால், அந்த வேதாகம நூல்களுக்கு அத்தகைய உன்னதமான அதிகாரத்தை நீர் வழங்கியிருக்க மாட்டீர் என்று நான் இப்போது விசுவாசிக்கத் தொடங்கினேன். வேதாகமத்தில் எனக்குப் பொருத்தமற்றது மற்றும் புண்படுத்தக் கூடியது என்று எனக்குத் தோன்றிய அந்தப் பகுதிகளின் பலவற்றைப் பற்றி நியாயமான முறையில் விளக்கப்பட்டதை நான் செவிமடுத்தபோது, ஆன்மீக விளக்கத்தின் மூலம் அவற்றின் மகத்துவத்தை என்னால் காண முடிந்தது. வேதாகமத்தின் அதிகாரம் எனக்கு மிகவும் மரியாதைக்குரியதாகவும், வணங்கத்தக்கதாகவும், இறை நம்பிக்கைக்கு தகுதியானதாகவும் தோன்றியது. அது அனைவராலும் வாசித்து அறிந்துகொள்ளக்கூடியது என்றாலும், அது கொண்டிருந்த ஆன்மீக ஆழமானது அதன் விளக்கவுரை வாயிலாக மாத்திரமே புரிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது. அதன் அபாரமான மொழிநடை, தெளிவு மற்றும் எளிமையான சொல்லாண்மை உச்சரிப்பு போன்ற காரணங்களால் அது எல்லோர் மத்தியிலும் மிக எளிமையாக சென்றடையக்கூடியதாக இருக்கிறது. அதேநேரம், வேதாகமமானது மிகவும் ஒடுங்கிய வாயில்கள் வழியாக சிலரை உமது அரவணைப்புக்குள் கொண்டு வருகிறது என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. அவ்வாறு உமது அரவணைப்புக்குள் வருபவர்கள் ஒரு அற்பத் தொகையினர் தான் என்றபோதிலும், இறைநூலானது தனது மகத்துவத்தால் உயர்ந்து, விசுவாசத்தினால் ஆட்கொள்ளப்பட்டவர்களை கருணையோடு ஏற்று மார்போடு அரவணைத்துக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் காணாமற் போயிருக்கக்கூடும். இந்த விஷயங்களைப் பற்றி நான் தொடர்ந்து சிந்தித்தேன், உம்மிடம் கெஞ்சினேன், உம்மை நோக்கிப் புலம்பினேன், அப்போது நீர் எனக்கு செவிமடுத்தீர். நான் பெருமூச்சு விட்டேன், நீர் என்னை ஆறுதல் படுத்தினீர். நான் தடுமாறினேன், நீர் என்னைத் தாங்கி வழிநடத்தினீர். நான் பரந்த உலகின் பல மூலைகளிலும் சுற்றித் திரிந்தேன், நீர் எனக்கு வழிகாட்டியாய் இருந்தது மட்டுமன்றி, என்னை ஒருபோதும் நீர் கைவிடவில்லை. இதை மத்தேயு 7:13 மிகவும் படிப்பினை தரும் விதத்தில் பின்வருமாறு கூறுகிறது: “பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் நுழைகிறார்கள்.”
அத்தியாயம் 6 – உண்மையான மகிழ்ச்சியின் ஆதாரம், காரணம் மற்றும் மகிழ்ச்சியான யாசகன் இணைத்துக்கொள்ளப்பட்ட உதாரணம்
9. பட்டம், பதவி, கெளரவம், திருமண பந்தம் போன்றவற்றுக்காக என் மனம் ஏங்கியது. ஆனால் நீர் என்னைக் கேலி செய்தீர். ஆயினும், இந்த இலட்சியங்களை அடையும்பொருட்டு நான் சொல்லொணா கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்தேன். நீர் எவ்வளவு தாராள மனதுடன் இருந்தீரோ, அந்த அளவுக்கு நான் குறைவான மகிழ்ச்சியைக் அனுபவிக்குமாறு செய்தீர். அது என்னைப் பிரியப்படுத்த வில்லை. என் தேவனே, என் இதயத்தை நோக்கி உமது திருக்கண்களைத் திருப்பியருளும். இதையெல்லாம் நான் நினைவுகூர்ந்து உம்மிடம் அறிக்கையிட விரும்புகிறேன். என் ஆன்மா உம்மோடு என்றைக்கும் இணைத்திருக்கக்கடவதாக. இறப்பின் பக்கம் சாய்ந்திருந்த என் ஆன்மாவை நீர் பிரித்தெடுத்து வேறுபடுத்தினீர். அது எவ்வளவு பரிதாபத்துக்குள்ளானது? நீர் புரையோடிப்போயிருந்த அந்தக் காயத்தை மேலும் இரணமாகச் செய்தீர். அதனால் அந்த ஆன்மா மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு, உம்மிடம் வரவேண்டுமெனவும், சகலவற்றுக்கும் அதிபதியாய் இருக்கும் உம்மையே இறுகப் பற்றிக் கொள்ள வேண்டுமெனவும், நீர் இன்றி எதுவும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு அந்த மனமாறுதலால் நான் குணமடைய வேண்டும் என்று நீர் அவ்வாறு செய்தீர். நான் எவ்வளவு சுகவீனனாய் இருந்தேன்,? அப்போது என் துன்பங்கள் பற்றிய தெளிவை நீர் எனக்குத் தந்தீர். பேரரசருக்கு அன்று ஓர் புகழுரை ஆற்ற நான் தயாராகிக்கொண்டிருந்த அன்றைய சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. அதில் நான் பல பொய்களைத் தொகுத்து வழங்க இருந்தேன், நான் பொய் சொல்கிறேன் என்று தெரிந்தும் கூட, அந்தப் பொய்யை பாராட்டி ஆர்ப்பரித்து கைதட்டுபவர்களும் அங்கே பிரசன்னமாயிருப்பதையும் நான் அறிந்து கொண்டேன். இதனால் எனக்கு நற்பெயர் கிடைத்தபோதும், குற்ற உணர்வால் என் மனம் கொந்தளித்து. என் கவலையின் காரணமாக என் மனம் வேதனையில் உழன்றது. மிலானின் தெருக்களில் ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஒரு யாசகனை நான் பார்த்தேன். அவன் குடிபோதையில் மிதந்தவனாய், பெருத்த வயிற்றுடன் நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. நான் என்னுள்ளிருந்தது வந்த பெருமூச்சை அடக்கிக் கொண்டு, என்னைச் சுற்றியுள்ள நண்பர்களிடம் எம் அறிவீனத்தால் ஏற்படக்கூடிய இவ்வாறான துயர் மிக்க சூழ்நிலைக்கு என்னவெல்லாம் காரணிகளாக இருக்கக்கூடும் என்று என் மனதில் இருந்து வெளிப்பட்ட பல எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டே நடந்தேன். மேலே சொல்லப் பட்ட காரணிகள் எனக்குக் கலக்கத்தை உண்டுபண்ணினாலும், எனது அவா மற்றும் ஆவல் என்ற முட்கவசங்கள் என்னைத் தொடர்ச்சியாக அழுத்தி, மகிழ்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைக்கு எம்மை இட்டுச் சென்றது. இருப்பினும், கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற எண்ணமே எங்கள் மனதில் மேலோங்கி இருந்தது. நாங்கள் உணர்ந்த இந்த நிலையை அந்த யாசகன் என்றோ உணர்ந்து விட்டான் போலும் என்று எங்களுக்குத் தோன்றியது. அதேவேளை, எங்களுக்கு அந்த நிலையை அடைய முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. அந்த யாசகன் யாசகத்தின் மூலம் பெற்ற அந்த சில நாணயக் குற்றிகள் அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது போல, நானும் அதுபோன்ற, அதற்கு ஒத்த மகிழ்ச்சியைக் கரடு முரடான பாதைகளில் பயணித்துப் பெற முயன்றேன். அவன் சிரித்து மழுப்பிய போதும் அவனிடம் உண்மையான மகிச்சி இல்லை. ஆனால், எனது தேவைகள், இலட்சியங்களை அடைய நான் பயணிக்கும் பாதை அவன் அனுபவிக்கும் இன்பத்தை விடப் போலியானதாகவே எனக்குத் தோன்றியது. அதேநேரம், அவன் மகிழ்ச்சியாகவும், நான் மன உளைச்சல்களில் சிக்கி அலைக்கழிப்புக்கு உள்ளானேன் என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை. சுதந்திரமாகத் திரிந்த அவனுக்கு கவலைகள் என்று எதுவும் இல்லை. ஆனால் நான் அப்படியல்ல, என்னுள் பரபரப்பு குடிகொண்டிருந்தது. எவராகிலும் என்னிடம் வந்து, நீ துன்புற்றிருக்கவா அல்லது இன்புற்றிருக்கவா விரும்புகிறாய் என்று வினவினால், நான் இன்புற்றிருப்பது தான் என்று கூறியிருப்பேன். அதேநேரம், வேறொருவர் என்னை நோக்கி, அந்த யாசகனைப் போல் இருக்கவேண்டுமா அல்லது தற்சமயம் நான் இருக்கும் நிலையில் இருக்கவேண்டுமா என்று கேட்டிருந்தால், பீதியுடனும் கலக்கத்துடனும் நான் இப்போது இருக்கும் இந்த நிலையே மேல் என்று ஒருமனதாகக் கூறியிருப்பேன். என்ன ஒரு அபத்தமான பதிலாய் அது இருந்திருக்கும்? அது ஒரு நல்ல தெரிவாக இருக்க வழியில்லை. ஏனெனில், நான் அந்த யாசகனைவிட, கல்வியிலும் அறிவிலும் உயர்ந்தவன் என்ற வகையில் மகிழ்ந்திருக்கிறேன். அதற்காக நான் அவனை விட சகல விதத்திலும் மேலானவன் என்று கருதிவிட முடியாது. நான் பெற்ற கல்வியறிவு மற்றும் தகைமைகள் மனிதரைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகவே அமைந்தது, அவர்களைத் தெளிவூட்டும் நோக்கத்தோடு அமையவில்லை. பிறிதொரு முறையில் சொல்லப்போனால், வெறும் இன்பத்தை அள்ளிக்கொடுக்கும் செயலாகவே இது பார்க்கப்பட்டது. ஆதலால், உமது திருத்தல் பிரம்பால் என் எலும்புகளை முறித்தீர் என்பதைத் தான், “சிறுவர்கள் முட்டாள் தனமான செயல்களைச் செய்கிறார்கள். நீ அவர்களைத் தண்டித்தால் அவற்றைச் செய்யாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறார்கள்” என்று நீதிமொழிகள் 22:15 விளக்குகிறது.
10. ஒரு மனிதனின் மகிழ்ச்சி எங்கிருந்து வந்ததோ, எதிலிருந்து வந்ததோ, அது வித்தியாசமானது என்று சொல்பவர்களுக்கு என் மனதில் இடமில்லை. அந்த யாசகன் குடிபோதையில் மகிழ்ந்தான்; நீ மகிமையில் மகிழ்ச்சியடைய விரும்பினாய். உம்மிலே இல்லாத மகிமை வேறு எவரிடம் இருக்கிறது என் தேவேனே? யாசகனுடைய மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சியாக இல்லாதது போல, என்னுடைய மகிமையும் உண்மையான மகிமையல்ல; அது என் ஆன்மாவை மேலும் உருக்குலையைச் செய்தது. அந்த இரவில் அந்த யாசகன் நித்திரைக்குப் போய் மீண்டும் மறுநாள் காலை விழித்தெழும்போது அவனது முன்னைய தினத்தில் அவனது தலைக்கேறிய குடிபோதை தெளிந்துபோயிருக்கும். ஆனால் நானும் தூங்கி எழுந்தேன், எனது மமதையும் என்னோடேயே மீண்டும் எழுந்தது. இவ்வாறாகத்தான் நான் பலநாள், பலமுறை தூங்கியெழுந்தேன். ஒரு மனிதனின் மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறதோ எதிலிருந்து வருகிறதோ அது உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. அது அப்படித்தான் என்றும், உண்மையான நம்பிக்கை தரும் மகிழ்ச்சி அத்தகைய மாயைக்கு அப்பாற்பட்டது என்றும் எனக்குத் தெரியும். இருப்பினும், அவன் என்னைவிட அதிகம் மகிழ்ந்திருந்தான். அந்த யாசகனுக்கும் எனக்குமிடையில் பாரியதொரு வேறுபாடு இருந்தது. அதற்காக அவன் சந்தோஷமாக இருந்தான் என்றும், நான் கவலையால் துண்டாடப்பட்டேன் என்று அர்த்தமல்ல. அவன் மனிதர்களைப் போலியாகப் புகழ்ந்து பாடி, மதுவைப் பெற்றுக்கொள்ள சில்லறைக் காசுகளை சேர்த்தான். ஆனால், நானோ, பொய்களை சொல்லி பெருமைகளின் பின் சென்றேன். இதன் விளைவுகளை பற்றி நான் எனது உற்ற நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அந்தத் தாற்காலிகப் பெருமையும், புகழும் என்னுள் எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பதைப் பற்றியும் நான் அவர்களிடம் கூறினேன். இது எனது நிலைமையை இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச்சென்றது மட்டுமன்றி, இதுபோன்ற ஒரு பயனற்ற சூழ்நிலையை அது மேலும் இரட்டிப்பாக்கியது. வெற்றியும், செழிப்பும் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தபோதும், அவை தரும் வாய்ப்பைப் பயன்படுத்துவது எவ்வித பிரயோசனத்தையும் எனக்கு ஏற்படுத்தப் போவதில்லை என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரிந்தது. ஏனென்றால், நான் அதை பற்றிக்கொள்ளும் முன், அது என்னைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டது போல் நான் உணர்ந்தேன்.
அத்தியாயம் 7 – அவர் சிர்சென்சியன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்த தனது நண்பர் அலிபியஸை சீர்திருத்த உதவுகிறார்
11. நண்பகளாக ஒன்றாக வாழ்ந்த நாங்கள் கூட்டாக வருத்தப்பட்ட இந்த விஷயங்களை நான் அலிபியஸ் மற்றும் நெப்ரிடியஸ் ஆகியோருடன் விவாதித்தேன். அவர்களில் அலிபியஸ் என்னைப் போலவே அதே ஊரில் பிறந்து வளர்ந்தவன். அவருடைய பெற்றோர்கள் அங்கு உயர்ந்த பதவியில் இருந்தனர். அதேநேரம் அலிபியஸ் என்னை விட வயதில் இளையவனாக இருந்தான். ஏனென்றால், நான் ஆரம்பத்தில் எங்கள் சொந்த ஊரிலும், பிறகு கார்தேஜிலும் கற்பித்துக்கொண்டிருந்தபோது அவன் என்னிடம் கல்விகற்ற மாணவனாயிருந்தான். அதன் காரணமாக அவன் என்மீது அதிக மதிப்பு வைத்திருந்தான். ஒருவேளை அவனது பார்வையில் நான் நல்லவனாகவும், கல்வியறிவில் தேர்ந்தவனாகவும் இருந்திருக்கக்கூடும். அவனது அன்பான இயல்பு மற்றும் பண்பட்ட நல்லொழுக்கத்தின் காரணமாக அவனை நான் அன்புடன் நடத்தினேன். இவ்வாறான அறிய பண்புகள் அவன் வயதையொத்த இளைஞர் மத்தியில் காண்பது அபூர்வமாகவே இருந்தது. இப்படியான அறிய நற்குணங்கள் யாவும் ஒருங்கே அமையப்பெற்ற அவன், துரதிஷ்டவசமாக தவறான பழக்கங்களுக்குள் இட்டுச்செல்லக்கூடிய சூதாட்ட விளையாட்டுக்களுக்கு அடிமையாகி விட்டான். விசேடமாக, உரோமை மையமாகக் கொண்ட பன்முனை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதிலும், பாராட்டுகளைப் பெறுவதிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தான். இவ்வாறாக தவறான வழியில் அவன் போய்க் கொண்டிருந்தபோது, நான் அங்கு சொல்லாட்சி பாடத்தைக் கற்பித்துக்கொண்டிருந்தேன். அத்தோடு, நான் அங்கே ஒரு பொதுப் பாடசாலையையும் நடத்திக் கொண்டிருந்தேன். எனக்கும் அவனது தந்தைக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவன் என்னிடம் கல்வி பயில்வதை இடைநிறுத்திவிட்டான். அவர் அந்தப் போட்டிகளில் மீது எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்பதை நான் அறிந்து கொண்டேன். இப்படியானதொரு நிலைமை தொடருமானால், எதிர்காலம் பற்றிய அவன் கண்ட கனவெல்லாம் பாழாய்ப்போய் விடுமே என்ற ஒரு எண்ணம் என் மனதை அரிக்கத்தொடங்கியது. அதேநேரம் ஒரு நண்பனாய் இருந்து அவனை அரவணைத்துத் திருத்தவோ அல்லது ஒரு ஆசிரியனாய் அவனை எச்சரித்து அவனது கூடாத பழக்கவழக்கங்களை நிறுத்தக்கூடிய நிலைமையிலோ நான் இருக்கவில்லை. ஏனென்றால் அவன் மனதில் என்னைப் பற்றிய உணர்வுகள் அவனது தந்தையின் உணர்வுகள் போலவே இருப்பதாக நான் எண்ணினேன். ஆனால் அப்படி இல்லை. அந்த விஷயத்தில் அவனது தந்தையின் விருப்பத்தைப் புறக்கணித்து, என்னிடம் பணிவன்புடன் நடக்கத் தொடங்கினான். அத்தோடு நில்லாமல், எனது விரிவுரை மண்டபத்துக்கு வந்து, அங்கு நடைபெற்ற விரிவுரைகளைக் கேட்டுவிட்டுப் போனான்.
12. இருப்பினும், அலிபியஸ் தனது அறிவு மற்றும் ஆற்றல் போன்றவற்றை விட்டுவிட்டு, வட்டாரங்க விளையாட்டுக்கள் நடைபெறும் திடலில் கிடைக்கும் பெருமை, ஆரவாரம் மற்றும் கைத்தட்டலுக்கு ஆசைப்பட்டவனாய், தனது வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என அவனை எச்சரிப்பதை சற்று விட்டுப்பிடித்தேன். ஆனால் என் தேவனே, நீர் அவனை மறக்கவோ, கைவிடவோ இல்லை. நீர் படைத்த அனைவரின் மீதும் உமது திருக்கரங்கள் படிந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான், அவன் பிற்காலத்தில் உமது மந்தையில் ஒரு அங்கத்தவனாகவும் உமது மகிமையின் அடையாளத்தைப் பெற்ற இறை பணியாளனாகவும் தன்னை மாற்றமடையச் செய்தான். இந்த மாற்றத்துக்குப் பின்னால் இருந்து அவனை வழிநடத்தியவர் நீரே. அதுவும், அந்த மாற்றத்தை என் மூலம் நிகழ்த்தினீர். நான் இதற்காக என்ன செய்தேன் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றுதான் கூறவேண்டும். ஒரு நாள், நான் வழக்கமாக அமரும் ஒரு இடத்தில் என் சக அறிஞர்களுடன் அமர்ந்திருந்தபோது, அவன் உள்ளே வந்து, எனக்கு மரியாதை செலுத்தி, என் முன்னே அமர்ந்து, நான் கற்பித்துக் கொண்டிருந்த பாடத்தின் மீது தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கினான். அப்போது, நான் நடத்திக்கொண்டிருந்த பாடத்தோடு, வட்டாரங்க விளையாட்டுக்கள் சம்பந்தமான சில விடயங்களையும் இணைத்துக்கொண்டு அதை அவனது மூளைக்குள் செலுத்த முயன்றேன். அவனோடு சேர்த்து, இவ்விதமான இழுக்கை ஏற்படுத்தும் விளையாட்டுப் போட்டிகளால் வாழ்க்கைக்கு ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் பற்றியும் ஒரு தெளிவை ஏற்படுத்தலாம் வேண்டும் எண்ணியிருந்தேன். என் தேவனே, அலிபியஸை அந்த கொடும் மன நோயிலிருந்து குணப்படுத்துவது பற்றி எனக்கு அப்போது எந்த எண்ணமும் இருக்கவில்லை என்பதை நீர் அறிவீர். ஆனால், அவன் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டான். அவன் அதையிட்டு எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. அவனது ஸ்தானத்தில் வேறொருவன் இருந்திருப்பானால், அவன் என் மீது கோபமுற்று என்னை நொந்து கொண்டிருப்பான். ஆனால், நேர்மையானவனான அலிபியஸ் அவ்வாறு நடந்துகொள்ளாமல் சாந்தமாக இருந்தான். மாறாக, அவன் தனது செயல்களுக்காகத் தன்னையே நொந்துகொண்டு, என் மீது அதிகமாக அன்பு காட்டினான். இதைப்பற்றி மேலும் விளக்கமாக, “ஒருவன் மற்றவர்களைவிட தான் மேலானவன் என எண்ணிக்கொண்டிருந்தால், அவன் வழிகள் தவறானவை என்று அவனிடம் சொல்லவேண்டாம். இதற்காக அவன் உன்னை வெறுப்பான். ஆனால் நீ ஒரு புத்திசாலிக்கு உதவி செய்தால் அவன் உன்னை மதித்துப் போற்றுவான்” என்று நீர் வெகு காலத்திற்கு முன்பே நீதிமொழிகள் 9:8 வாயிலாக உரைத்து, உமது புத்தகத்தில் எழுதியுள்ளீர். ஆனால் நான் அவனை ஏசவோ, திட்டவோ குறைகூறவோ இல்லை. ஆனால் நீர் சகலரையும் நெறிப்படுத்தி, உமக்கே உரிய வழியில் அவர்களை வழிநடத்தினீர். நீர் என் இதயத்தையும் நாவையும் தகிக்கும் கனலாய் ஆக்கி, அதன் மூலம் நீர் விசுவாசத்துடன் இருக்கும் அவனது மனதைக் குணப்படுத்தினீர். உமது இரக்கத்தைப் புரிந்து கொள்ளும் எவரேனும் உம்மை இகழக்கூடுமோ? எனது அறிவுரைகளைக் கேட்டபின், மாயைகளால் பீடிக்கப்பட்டிருந்த அலிபியஸ், தான் விழுந்திருந்த குழியில் இருந்து கிரமம், கிரமமாக மீண்டான். தனது மனதைத் திடப்படுத்திக் கொண்டு, தெளிவான முடிவுகளை மேற்கொள்ளத் தொடங்கினான். தன்மீது படிந்திருந்த வட்டாரங்க விளையாட்டுக்கள் என்ற அழுக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அதன்பின் அவன் அந்த போட்டிகள் பற்றிய எண்ணங்களைக் கூட அவனது மனதிலிருந்து வெளியேற்றினான். நான் கற்பித்த வகுப்பறைகளுக்கு சமூகமளித்து பாடங்களைக் கற்க அவனது தந்தையிடமிருந்து அனுமதியையும் பெற்றுக்கொண்டான். முதலில் அவர் இதற்கு சம்மதிக்கவில்லை என்றபோதும், பின்னர் சம்மதிக்க ஒப்புக் கொண்டார். அன்று தொடக்கம், அலிபியஸ் எனது மாணவனாக என்னோடு எனது வகுப்பறையில் இணைந்து கொண்டான். அத்தோடு, என்னோடு மீண்டும் சுமுகமாகப் பழகத் தொடங்கினான். என்னிடம் காணப்பட்ட ஒருசில மூட நம்பிக்கைகளிலும் அவன் பங்கு கொண்டான். அதாவது, சுய ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாடு போன்றவை குறித்து மணீக்கியர்கள் போதித்ததை நான் நம்பிய காரணத்தால், அவனும் அதை உண்மையென்று நம்பினான். எவ்வாறாயினும், இது ஒரு அர்த்தமற்ற மற்றும் மாயையான தோற்றப்பாடாகவே இருந்தது. அதனால், இன்னும் நல்லொழுக்கத்தின் உச்சத்தை அடைய முடியாமல், வெறும் மேலோட்டமான ஒரு தோற்றத்தையே ஏற்படுத்தியது. சற்று ஆழமாகச் சென்று ஊடுருவிப் பார்த்தால், இது ஒரு நிழல் அல்லது போலியான நல்லொழுக்கம் தான் என்று தெரிகிறது.
அத்தியாயம் 8 – அதேபோல் உரோமிலும் மற்றவர்களால் உள்ளரங்கத்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு நடத்தப்பட்ட குரூரமான [கிளாடியேட்டர்] விளையாட்டுகளில் மகிழ்ச்சியடைந்தார்
13. அலிபியசின் பெற்றோர் உலக வாழ்வில் அவன் கொண்டிருந்த அவாவை முன்னெடுத்துச் செல்ல அவனை சகல வழிகளிலும் உற்சாகமூட்டி உறுதுணையாக இருந்தனர். இதனால் அவனையும் பலவிதமான அனுகூலங்கள் இருப்பதாக அவர்கள் கூறினர். அதன் காரணமாக அவன், எனக்கு முன்னரே உரோம் நகருக்குச் சென்று சட்டம் பற்றிய கல்வியைத் தொடரச் சென்றிருந்தான். அங்கே அவன் காண நேர்ந்த குரூரம் நிறைந்த அரங்கப்போட்டிகள் [Gadiatoral] ஏற்படுத்திய தாக்கங்களால் ஈர்க்கப்பட்டான். அதேநேரம், ஒருகாலத்தில், இந்த குரூரம் நிறைந்த போட்டிகளை அவன் மனதால் வெறுத்ததோடு, அவை மிகவும் பாரதூரமானவை என்றும் சொல்லிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அலிபியஸின் நண்பர்கள் மற்றும் சக மாணவர்கள் சிலர் இரவு உணவு முடித்து திரும்பிக்கொண்டிருந்த போது அவனைத் தற்செயலாக சந்தித்தனர். அவனுடைய பலத்த எதிப்பையும் மறுப்பையும் மீறி, இந்தக் கொடூரமான மற்றும் கொடிய நிகழ்ச்சிகள் நடைபெற்ற ஒரு நாளில் அவனை அந்நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்குள் அழைத்துச் செல்ல அவனை வேண்டினர். உங்களால் என் உடலைதான் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல முடியுமே ஒழிய, எனது உடல் அங்கிருந்தாலும், எனது மனம் இங்கே நடக்கும் இந்தக் குரூரங்களில் ஒருக்காலும் லைத்துவிடாது. ஆகவே, உங்களால் என்னை இந்த நிகழ்வுகளுக்குள் பலவந்தமாக இட்டுச் செல்ல முடியுமென்று நினைக்கிறீர்களா? இப்படி நீங்கள் நினைக்கும் பட்சத்தில், உங்களையும் இந்த விபரீத விளையாட்டுக்களையும் நான் வெற்றிகொள்வேன், என்று சவால் விடும் தொனியில் அவனது நண்பர்களைப் பார்த்தது கூறினான் அலிபியஸ். இவ்வாறு அவன் விடுத்த சவால்கள் காரணமாகவே அவனது நண்பர்களும், சகாக்களும் அவனை நிகழ்ச்சி அரங்கிற்குள் அழைத்துச் செல்வதில் உறுதியாய் இருந்தனர். அரங்கிற்குள்ளே பிரவேசித்த அவர்கள் அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். அந்த நேரத்திலும் கூட ஏற்கனவே அந்த அரங்கம் மயிர்கூச்செரியும் அந்த கொடிய, குரூரத்தனமான நிகழ்வுகளைக் கண்டு இன்புறும் பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் எழுப்பிய கரவொலிகளும், கூச்சல்களும் விண்ணப் பிளந்தன. இவ்வகையான கொடூர நிகழ்வுகளைக் காண்பதே பாவம் என்றெண்ணிய அலிபியஸ், தனது கண் இமைகளை இறுக மூடிக்கொண்டு மனதின் கவனத்தை வேறெங்காவது திசைதிருப்ப முனைந்து, தனது காதுகளையும் மூடிக்கொண்டான். ;போட்டியின் போது ஒருவர் வீழ்ந்தவுடன், முழு பார்வையாளர்களிடமிருந்தும் வெளிப்பட்ட ஒரு வலிமையான கூச்சலும் கரவொலியும் அவனை வலுவாகப் பாதித்தது. ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட போதும், தான் கொண்டிருக்கும் மனக்கட்டுப்பாடு அங்கு நடக்கும் எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் என்ற மன உறுதியோடு மெதுவாகத் தன் கண்களைத் திறந்து பார்த்தான். அப்போது அங்கே காயப்பட்டு தரையில் விழுந்து துடித்த ஒருவனைக் கண்டபோது, அந்த மனிதன் அனுபவித்த துன்பங்களைக் காட்டிலும், தன்னுடைய மனதில் ஏற்பட்ட இரணங்கள் பாரதூரமான இருப்பதை உணர்ந்தான். அங்கு பார்வையாளர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்ட ஒலி அவனது காதுகள் வழியாக நுழைந்து, அவனது கண்களைத் திறக்கச் செய்தது மட்டுமன்றி அவனது ஆன்மாவுக்குள்ளும் ஊடுருவிச் சென்றது. அந்தக் கணம் வரை தைரியத்துடனும், மனவலிமையோடும் இருந்த அலிபியஸ், தனது ஆன்மாவின் வலுவற்ற தன்மையைக் கண்டு நொந்தான். தனது ஆன்மா பேரருள் வாய்ந்தவரான உம்மீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, தனது சொந்த சக்தியின் மீது நம்பிக்கை கொண்டதன் விளைவே இது என்று எண்ணித் தன்னையே குறைபட்டுக்கொண்டான். இரத்தத்தை நேரடியாகப் பார்த்த பிறகு, அவர் ஒரு வகையான குரூர போதையால் ஈர்க்கப்பட்டான். அத்தோடு, அரங்கத்தை விட்டு வெளியேறாமல், தன்னை அறியாமலேயே அங்கு நிகழ்ந்த கொடூரமான நிகழ்வுகளின் மீது அவனது கண்கள் நிலைகுத்தி நிற்பதை அவனால் தடுக்க முடியவில்லை. மேலும் இரணகளத்தை கண்முன் கொண்டுவரும் அந்த கொடூரமான போட்டியைக் கண்டுகளிப்பதில் அவனுக்குள்ளும் ஒருவித குரூர மகிழ்ச்சி உண்டானது. அவன் அந்த அரங்கத்துக்குள் நுழையும் போது அவனுக்குள்ளிருந்த அந்த மனோநிலைக்கு முற்றிலும் எதிராகவே அவன் இப்போது காணப்பட்டான். தன்னை அழைத்து வந்தவர்களோடு தன்னையும் இணைத்துக்கொண்டு அவர்களுள் ஒருவனாகவே மாறினான். இவ்வளவு நடந்தபின்னும் அவனைப் பற்றி வேறென்ன சொல்ல வேண்டியிருக்கிறது? இரத்தத்தையும், சதையையும், இரணத்தையும் கண்முக்கே கொண்டுவரும் அந்தக் குரூரப் போட்டிகளைப் பார்த்து ரசித்தான், கைதட்டி ஆரவாரம் செய்தான், கத்திக் கூச்சலிட்டான். எதை அவன் தன் மனதால் எதை வெறுத்தானோ அதிலேயே ஊன்றிப்போனான். தன்னைக் குத்தும் ஈட்டியென வெறுத்த இவற்றையே தான் வலிந்து செருகிக்கொண்டான். எந்த நிலையில் இருந்தபோதிலும், அவனது உடல், பொருள் ஆவி அனைத்தும் அந்த அரங்கத்தையே சுற்றிச்சுற்றி வந்தது. இப்போதெல்லாம் அவனை முன்பு பலவந்தமாக அழைத்து வந்தவர்களுக்காகக் காத்திராமல், தானாகவே கிளம்பிச் சென்று விடுபவனாக இருந்தான். அநேகமான சமயங்களில் அவன் சென்று அவர்களைப் பலவந்தமாக அழைத்துச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். இருந்த போதிலும், தேவரீருடைய திருக்கரங்களின் மகிமையானது அவனை இந்தக் குரூர எண்ணங்களிலிருந்தும் உந்துதல்களில் இருந்தும் இரட்சித்தது. தன்மீது நம்பிக்கை கொள்ளாது, தேவனான உம்மீது நம்பிக்கையும் விசுவாசமும் கொள்ளும்படிக்கு நீர் பின்னாளில் அவனுக்கு உணர்த்தி உமது அரவணைப்புக்குள் ஏற்றுக்கொண்டீர்.
அத்தியாயம் 9 – அப்பாவியான அலிபியஸ் திருடன் என்று கருதி பிடிபட்டு பின்னர் ஒரு கட்டிடக் கலைஞரின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டான்
14. அலிபியஸின் வருங்கால நலன்களை மேம்படுத்தும் நோக்கில், அவன் பெற்ற இந்தக் கசப்பான அனுபவங்கள் யாவும் அவனது மனதில் ஒரு மருந்தாக சேமிக்கப்பட்டிருந்தது. கார்தேஜில் அவன் என்னிடம் கல்வி பயிலும் மாணவனாக இருந்த காலகட்டத்தில் மற்றுமொரு மறக்கமுடியாத நிகழ்வு நடந்தது. அலிபியஸ் ஒருநாள் நண்பகலில் சந்தை வெளியில் தியானம் செய்வது பற்றிய பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். (அறிஞர்களுக்கு இவ்வாறு தியானப் பயிற்சி அளிப்பது வழக்கத்திலிருந்து) அப்போது நீர் அவனை அங்கே ஒரு திருடன் என்று சந்தேகப்பட்டு காவலர்களால் கைது செய்யும்படி செய்தீர். என் தேவனே, ஏதோ ஒரு காரணத்தின் நிமித்தமே நீர் அதைச் செய்தீர் என்பதை நான் புரிந்துகொண்டேன். தான் ஒரு உயர்ந்தவனாகவோ, ஒரு மகானாகவோ வளர்ச்சியடைந்து பிறரைத் தீர்ப்பிடும் முன், மனிதன் பொறுப்பற்றவகையிலும் நம்பகத்தன்மை அற்ற விதத்திலும் நடந்து கொள்ளக்கூடாது என்பதை இப்போது கற்றுக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அதாவது கண்களால் காண்பவர்கள் ஏவரையும் தீர்ப்பிடுவது தவறானது என்று உணர்த்துவதற்காகவே நீர் இவ்வாறு அவனது கைது நடவடிக்கையை அனுமதித்தீர். இது தான் நடந்தது; தீர்ப்பாயத்தின் ஆசனத்தின் முன்பு அலிபியஸ் தன் கையில் பேனையுடனும், குறிப்பேட்டுடனும் மேலும் கீழுமாய் நடந்துகொண்டிருந்தபோது, உண்மையான திருடன் ஒருவன் அவ்வழியே ஓடிவந்தான். அவன் தனது ஆடைக்குள் கோடரி போன்ற ஒன்றை மறைத்து வைத்தபடி ஓடிவந்தான். அப்படி ஓடிவந்தவன், அங்கிருந்த வெள்ளி ஆபரணங்கள் செய்யும் கொல்லன் ஒருவனின் கடையில் போடப்பட்டிருந்த உலோகக் கதவுகளை அவன் கொண்டுவந்த கோடரியால் அடித்து உடைக்கத் தொடங்கினான். அந்த சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த காவலர்கள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் அவனைப் பிடிக்கும் நோக்கில் சத்தமிட்டபடியே ஓடிவந்தனர். ஆனாலும், இதைக்கண்ட அந்தத் திருடனோ கோடரியை அங்கேயே விட்டுவிட்டு ஓடினான். அலிபியஸ், அந்தத் திருடன் கதவை உடைப்பதைக் காணாவிட்டாலும், அவன் தப்பித்து ஓடுவதை நன்றாகக் கண்டான். என்ன நடந்தது என்று கண்டறியும் முகமாக, அவன் அதன் கதவருகில் சென்று அங்கே கீழே விழுந்துகிடந்த கோடரியைக் கையில் எடுத்து, அது எப்படி அங்கே வந்தது என்று ஆச்சரியமாகப் பார்த்தபடி இருந்தான். துரதிஷ்டவசமாக, அங்கே வந்த வழிப்போக்கர்கள் மற்றும் காவலர்கள் அலிபியஸைத் திருடன் என்று எண்ணி, பிடித்துக் கொண்டனர். தாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து திருடனைப் பிடித்து விட்டதாகக் கூக்குரலிட்டபடியே, அவனை அங்கிருந்த கடைக்காரரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு என்ன, அவனைக் கைதுசெய்து நீதவான் முன் நிறுத்த அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
15. இதுவும் அவன் பெற்றுக்கொண்ட படிப்பினைகளில் ஒன்றாக இருந்தது. இருப்பினும், ஓ தேவனே, நீர் அவனுடைய அப்பாவித் தனத்தை நிரூபிக்க ஓடோடி வந்தீர். அதற்கு நீர் ஒருவர் மட்டுமே சாட்சியாக இருந்தீர். அவன் சிறைக்கூடத்துக்கும், வதை முகாமுக்கும் அழைத்துச் சொல்லப்படும்போது அங்கே கட்டிடக் கலை நிபுணர் ஒருவர் வந்தார். அவர் அரசாங்கக் கட்டிடங்களை வடிவமைப்பதில் ஒரு விற்பன்னராய்க் கடமையாற்றுபவர். பொது இடங்களில் இடம்பெறும் திருட்டுகளுக்கு இவன் தான் காரணம் என்று அலிபியசை அவருடன் காட்டினார். ஆனால், அலிபியஸ் ஏற்கனவே அவருக்குப் பரிச்சயமுள்ளவனாக இருந்தபடியால், தனியாக அவனை ஒரு இடத்துக்கு கூட்டிச் சென்று, நடந்தவற்றைக் கேட்டறிந்தார். அனைத்தையும் கேட்டறிந்த அந்த கட்டிடக்கலை நிபுணர், அங்கிருந்த மக்கள் யாவரையும் தன்னருகே அழைத்து, உண்மையில் அங்கு நடந்தது என்னவென்று விளக்கிக்கூறினார். இவற்றைக் கேட்ட மக்கள் அவருடைய விளக்கத்தில் திருப்தி அடைந்தவர்களாய், உண்மையில் இந்தத் திருட்டில் ஈடுபட்டவனைத் தேடும் நோக்கில் கலைந்து சென்றனர். அப்படிப் போகும்போது, அங்கே ஒரு வாசல் கதவருகில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞனைப் பார்த்து, இந்தக் கோடரி உன்னுடையதா என்று வினவினார். அதற்கு அவனும், ஆம் என்றான். அதன் பிறகு அவனைக் கடுமையாக விசாரித்தபோது, அவன் செய்த யாவையும் கக்கினான். அப்போது உடனேயே அலிபியசை அவர்கள் பிடியில் இருந்து விடுவித்தனர். இவை யாவும் நடந்து முடிந்த பிறகு, உமது இறைவார்த்தையைப் பரப்பும் ஒரு தேவ ஊழியராகவும், திருச்சபையில் நிலவிய பல்வேறு பிரச்சினை மற்றும் பிணிகளைத் தீர்த்துவைக்கும் ஒரு புனித ஆசானாகவும் மாற்றமடைந்த அலிபியஸ், அன்று தனது நேர்மையின் காரணமாக, தான் அனுபவித்த அனைத்து சோதனைகளில் இருந்தும் பெற்றுக்கொண்ட வெற்றிகளும் அனுபவங்களும் அவருக்கு கைகொடுத்தன என்றால் மிகையாகாது.
அத்தியாயம் 10 – தீர்ப்பில் காணப்பட்ட அலிபியஸின் அப்பழுக்கற்ற நேர்மை; ஓகஸ்டினுடனான நெப்ரிடியஸின் நீடித்த நட்பு
16. நான் அவனை உரோமில் கண்டேன். கண்டதும் அவன் என்னுடன் ஒரு வலுவான உறவை ஏற்படுத்திக்கொண்டான். அத்தோடு அவன் என்னுடன் மிலானுக்குப் பயணமானான். என்னை விட்டுப் பிரிந்து விடக்கூடாது என்பதற்காகவும், சட்டக் கல்வியில் அவன் கொண்டிருந்த தகைமை காரணமாக, மேலதிக சட்டம் சம்பந்தமான பயிற்சிகளைப் பெறுவதற்காகவும் அவர் உரோமுக்கு வந்தான். இதற்கு மூல காரணமாக அமைந்திருந்தது என்னவென்றால், தன்னை விட அவனது பெற்றோரை மகிழ்விப்பதே அவரது நோக்கமாக இருந்தது. அவர் ஏற்கனவே மூன்று முறை மதிப்பீட்டாளர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். பலர் மத்தியில் தனது நேர்மையையும், நாணயமான கொள்கையையும் முன்மாதிரியாகக் கொண்டு இயங்கினார். இருப்பினும் நேர்மையை விட தங்கத்தை விரும்பக்கூடியவர்களைப் பற்றி அவர் ஆச்சரியப் பட்டார். அவரது நேர்மையான இயல்புக்கும், நாணயமான நடத்தைக்கும் எதிராக பல சோதனைகள் மற்றும் சவால்கள் கிளர்ந்தெழுந்தன. இத்தாலியின் தலைநகரமான உரோமைய நகரத்து திறைசேரியின் பிரதானி ஒருவரின் கீழ் அவர் மதிப்பீட்டாளராக பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே காலப்பகுதியில், புகழ்பூத்த ஒரு பிரமுகர் அந்நாட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். சட்டத்துக்கு விரோதமாகச் சென்று தனக்கு வேண்டியதொரு விடயத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தார். ஆனால் அலிபியஸ் அதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். அதன் காரணமாக, அலிபியசுக்கு அவர் இலஞ்சம் கொடுக்க முயன்றார். ஆனால் நேர்மையாளனான அவர் அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டார். ஊழலுக்குத் துணை போகவில்லை என்ற காரணத்தால், அந்த மேலதிகாரி அலிபியசை எச்சரித்தான். ஆனால் அவரோ அதைத் துச்சமாக மதித்து, தன் கடமையில் கண்ணாயிருந்தார். அவனது மனத்துணிச்சல் மற்றும் நேர்மையான, தீமையைக் கண்டு அஞ்சாத குணத்தைக் கண்ணுற்று அவனது சகாக்கள் மற்றும் ஊழியர்கள் வியந்தார்கள். ஏனென்றால் அவனை நட்பு பாராட்டுவதன் மூலமோ, அல்லது, வெறுப்புக்கொள்வதன் மூலமோ அல்லது பணத்தைக் காண்பிப்பதன் மூலமோ வெல்லமுடியாது என்று புரிந்துகொண்டனர். நீதிபதி கூட அலிபியஸின் மேலதிகாரிக்கு எதிரானவர் என்று தன்னைக் காட்டிக்கொண்டாலும், அவர் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. அலிபியஸ் தான் இவ்வாறான முறையற்ற காரியங்களுக்கு எதிராகச் செயல் படுவதாகக் கூறி, அவர் ஒன்றும் அறியாதவர் போல ஒதுங்கிக்கொண்டார். இதில் உண்மை என்னவென்றால், இவ்விடயங்கள் குறித்து நீதிபதி ஒப்புக் கொண்டிருந்தாலும், அலிபியஸ் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியிருப்பார். ஏதாவதொரு விடயத்தைக் கற்க வேண்டும் என்ற வேட்கை அவரில் மேலோங்கி இருந்தது. ஆதலால், தன்னால் இயன்ற வரையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். புத்தகங்களை வாங்கி அவற்றை குறைவான விலைகொடுத்து பிரதிபண்ணக்கூடிய சந்தர்ப்பங்களை அமைந்தபோதிலும், அது நேர்மைக்கு விரோதம் அன்று கருதி, அவர் அதைச் செய்யவில்லை. என்றாலும் தனது புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்தி அவர் அதை மிக இலகுவாகச் செய்திருக்கலாம். ஆனால் நேர்மையே மேலானது என்று அவர் கருதினார். இது ஒரு அற்ப விடயமாகப் பட்டபோதும், ஒழுக்கம், நேர்மை உயர்வானது என்று எண்ணினார். இதை லூக்கா 16:10 இல் பின்வருமாறு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது: “சிறிய விடயங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய விடயங்களிலும் நம்பிக்கைக்கு உகந்தவனாயிருப்பான். சிறிய விடயங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய விடயங்களிலும் அவ்வாறே இருப்பான்.” ஏனெனில், சத்தியம் எனும் உமது வாயிலிருந்து வெளிவரும் எதுவும் வெறுமையாக இருக்க முடியாது. மீண்டும், இதற்கு சமமான ஒன்றை லூக்கா 16:11-12 இல், “உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மை இல்லாதவர்களாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்ற மனிதர்களாகவே இருப்பீர்கள். யாராவது ஒருவருக்குரிய பொருளை உங்களிடம் ஒப்படைக்கும்போது உங்களை நம்பமுடியாத நிலை ஏற்படுமானால், உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த நற்செய்திப் போதனைகளுக்கு அமைவாகவே அலிபியஸ் வாழ்ந்தார். எனது உற்ற நண்பனான அவர், அந்த நேரத்தில் என்னுடன் மிகவும் அந்நியோன்யமாகப் பழகினார். என்னைப் போலவே, எப்படிப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இருந்தார்.
17. இதேபோல் அடுத்ததாக நான் குறிப்பிடுவது நெப்ரிடியஸ் என்பவரைப் பற்றி. கார்தேஜ் அருகே அமைந்திருந்த, தான் வாழ்ந்த தனது சொந்த ஊரை விட்டு வெளியேறினார். அவரது தந்தைவழிவந்த பெரும் சொத்து, அவரது வீடு மற்றும் அவரைப் பின்தொடர விரும்பாத அவரது தாயார் ஆகியோரை விட்டுவிட்டு மிலானுக்கு வந்தார். அவர் அங்கு வந்தது வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல, என்னுடன் இணைந்து உண்மை மற்றும் ஞானத்தின் மீது அவருக்கு இருந்த தீவிரமான தேடலை விருத்திசெய்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே. 17. இதேபோல் அடுத்ததாக நான் குறிப்பிடுவது நெப்ரிடியஸ் என்பவரைப் பற்றி. கார்தேஜ் அருகே அமைந்திருந்த, தான் வாழ்ந்த தனது சொந்த ஊரை விட்டு வெளியேறினார். அவரது தந்தைவழிவந்த பெரும் சொத்து, அவரது வீடு மற்றும் அவரைப் பின்தொடர விரும்பாத அவரது தாயார் ஆகியோரை விட்டுவிட்டு மிலானுக்கு வந்தார். அவர் அங்கு வந்தது வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல, என்னுடன் இணைந்து உண்மை மற்றும் ஞானத்தின் மீது அவருக்கு இருந்த தீவிரமான தேடலை விருத்திசெய்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே. என்னோடு தங்கியிருந்து நன்மை தீமைகள் யாவற்றையும் பகிர்ந்துகொண்டான். என்னிடம் இருந்த மன உளைச்சல் அவனிடமும் இருந்தது. மகிழ்ச்சி தரும் வாழ்வைத் தேடி அவனது மனம் அயராது பாடுபட்டது. கடினமான கேள்விகளை மிக நுணுக்கமான முறையில் ஆராய்ந்தார். மூன்று பசியால் கெஞ்சும் வாய்கள் பெருமூச்சோடு ஒன்றுடன் ஒன்று தங்கள் தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் காத்திருக்கின்றன. சரியான நேரத்தில் அவற்றுக்கு வேண்டிய உணவை நீர் அளிப்பீர் என்று ஏங்கி கிடக்கின்றன. இந்த உலகத்தின் தேடல்கள் குறித்த எமது முயற்சிகள் யாவும் ஒருவித கசப்பான சூழ்நிலைகளையே தோற்றுவித்தன. இருள் எங்களைத் தொடர்ச்சியாகச் சூழ்ந்திருந்தது. எத்தனை காலத்துக்குத்தான் இவ்வாறு துன்பத்தை அனுபவித்திட வேண்டும் என்ற ஏக்கம் எம் மனதை சூழ்ந்தது. ஸ்திரமான ஒரு ஸ்தலம் அமையும் வரை, ஸ்திரமற்ற ஒன்றைச் சுற்றி நாம் வலம் வந்துகொண்டிருக்கிறோம். ஏனென்றால், மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்கும்போது, அவர்களுக்குப் பதிலாக நாம் புரிந்து கொள்ளக்கூடிய எதையும் இன்னும் நாங்கள் காணவில்லை.
அத்தியாயம் 11 – தனது மோசமான தவறுகளால் கலக்கமுற்று புதிய வாழ்க்கையில் நுழையத் தன்னைத் தயார் செய்கிறார்
18. எனது கடந்துபோன வாழ்க்கையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன். இப்போது தான் பத்தொன்பது வயதைக் கடந்தது போலிருக்கிறது. அந்த பத்தொன்பது வயதுப் பருவத்தில் தான் ஞானத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். உண்மையான ஞானத்தைத் தேடிக் கண்டடைந்தவுடன் என் மனதில் நான் கொண்டிருந்த போலியான நம்பிக்கை, எதிர்பார்ப்பு, ஆவல் போன்ற யாவற்றையும் உதறித்தள்ளி விடலாம் என்ற எண்ணம் மனதில் ஓங்கியிருந்தது. என்றாலும், தற்போது வரை, அதாவது எனது முப்பது வயதைக் கடந்துவிட்ட இந்தக்காலம் வரை, வெறுத்து ஒதுக்கி விடவேண்டும் என்று எண்ணியிருந்தவற்றோடு தான் என் வாழ்வைக் கொண்டு செல்லவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி இருந்தேன். அந்த சேற்றில் தான் நான் இன்னும் புதைந்து கிடக்கிறேன். கணவாய், கானல் நீராய் மறைந்துசெல்லும் பொருட்கள்மீது அதிகமான அவாவோடு இருந்தேன். என்றோ ஒருநாள் என் வாழ்வில் உதிக்கும், அந்த நாளில் எல்லாம் சுமுகமாக மாறி சமநிலையை அடைந்துவிடும் என்று நம்பியிருந்தேன். காத்திரு, ஃபாஸ்டஸ் வருவார், அவர் வந்து எல்லாவற்றையும் விளக்குவார்! என்று என் மனம் என்னை சமாதானப்படுத்தியது. ஓ பெரியோர்களே, கல்விமான்களே, வாழ்க்கையில் உறுதியானது என்று எதுவும் இல்லை என்பது உண்மைதான். வாழ்க்கை இந்தத் திசையில் பயணிக்கும் என்று ஒருவரால் உறுதியாகச் சொல்ல முடியாது. சொல்லவே முடியாது. அல்லது அதை அடைய வேறு வழிமுறைகளும் இல்லை! இருப்பினும் விடாமுயற்சியுடன் தேடுவோம், விரக்தியடைய வேண்டாம். பார், திருச்சபையின் இறை நூல்களில் காணப்படும் விஷயங்கள் முன்பு நமக்கு அபத்தமாகத் தோன்றியபோதும், இப்போது அப்படியல்ல. அவை நேர்மையாக விளக்கப்பட்டுள்ளன என்பதை இப்போது நாம் உணர்கிறோம். ஏனென்றால் அவற்றை நாம் இப்போது பார்ப்பது சரியான கோணத்தில் இருந்து என்ற காரணத்தால். சாத்தியத்தைக் கண்டறியும் வரை, நான் குழந்தையாக இருந்தபோது எனது பெற்றோர் என்னை எங்கே இருத்தினார்களோ, அதிலிருந்து ஒரு அடிகூட விலகாமல் நான் இருக்க வேண்டும். அந்நாள், அதை, அந்த சத்தியத்தை நான் எங்கே, எப்போது, எப்படித் தேடுவேன்? ஆயர் அம்ப்ரோஸ் அவர்களுக்கும் ஓய்வுநேரம் கிடைப்பதில்லை. புத்தகங்களை வாசித்து, எனக்கு வேண்டிய தேடல்களைப் பெற்றுக்கொள்ள எனக்கும் நேரம் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும், அந்தப் புத்தகங்களை நான் எங்கே தேடுவேன்? எவரேனும் அவற்றை எனக்குத் தரக்கூடுமானால், அப்படிப் பட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எனக்கு அவற்றை இரவலாகத் தரக்கூடியவர்கள் என்றாலும், அவர்களை நான் எங்கே போய்த் தேடுவேன்? என் ஆன்மாவின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் நான் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கக் கடமைப்பட்டுள்ளேன். பெரிய நம்பிக்கை எனும் ஒளிக்கீற்று எம்முள் எழுந்துள்ளது, கத்தோலிக்க விசுவாசம் நாம் எம் மனதில் கொண்டிருந்ததைக் கற்பிக்கவில்லை, மாறாக, வீண் குற்றத்தையே சுமத்தியது. கடவுள் மனித உடலின் வடிவத்துக்குள் அடங்கக் கூடியவர் என்று நம்புவது கேவலமான ஒரு செயல் என்று கத்தோலிக்க சபையின் கற்ற அறிஞர்கள் கூடக் கருதுகின்றனர். நம்பிக்கை என்ற கதவைத் தட்டுவதற்கு நாம் ஏன் தயங்கவேண்டும்? இதை மத்தேயு 7:7 பின்வருமாறு அழகாக விளக்குகிறது. “தொடர்ந்து கேளுங்கள், தேவன் அருளுவார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும்” என்று. ஆகவே கதவைத் தட்டியிருந்தால் என் மனதில் இருந்த எல்லா வினாக்களுக்கும் விடை கிடைத்திருக்குமல்லவா? பொதுவாகக் காலைப்பொழுது விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களோடு கழிந்து விடுகிறது. எஞ்சிய பொழுதை எவ்வாறு கழிப்பது? அப்போது அதை பிரயோசனமான வழியில் செலவிடலாமே? ஆனால், எனக்கு உதவி பெறுவதற்கு நான் தேடித் செல்லக்கூடிய செல்வாக்குமிக்க நண்பர்களை நான் எப்போது சந்திக்க வேண்டும்? கற்பித்தல் வாயிலாக எனக்கு ஊதியத்தைத் தரக்கூடிய விரிவுரைகளை வகுப்பின் சார்பாக நான் எப்போது தயார் செய்ய வேண்டும்? நான் எப்பொழுது பொழுதுபோக்கையும், வேலையின் அழுத்தத்திலிருந்து என் மனதை விடுவிக்கக்கூடிய ஒரு மென்மையான, ஓய்வுத்தரக்கூடிய சூழ்நிலையை எப்படி, எவ்வாறு உருவாக்கப் போகிறேன்?
19. இப்படியான எண்ணங்களைச் சுமந்து தெரியவேண்டிய கட்டாயத்துக்கு நான் உள்ளாக்கவில்லை. வெறுமை மற்றும் பிரயோசனம் எதுவுமற்ற சகலத்தையும் விட்டொழித்துவிட நான் என்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். சத்தியத்தின் தேடலில் என்னை நான் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும். வாழ்க்கை என்பது நிலையற்றது, மரணம் நிச்சயமாக எப்போது வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாதது. அப்படியே, அது திடீரென்று நமக்கு ஏற்பட்டால், நாம் இவ்வுலகை நீத்து எப்படிப்பட்ட நிலையில் செல்வோம்? இங்கே நாம் அறிந்துகொள்ள வேண்டியவற்றை புறக்கணித்தோம். ஆனால் அவற்றை இனிமேல் எங்கே கற்றுக்கொள்வது? அவ்வாறு புறக்கணித்ததன் காரணமாக, தண்டனை என்மீது வராமல் இருக்கக்கூடுமா? அப்படியானால் மரணம் என்பது இவை கவலை, வேதனை, மனதில் எழக்கூடிய உணர்வுகள் போன்ற சகல நிகழ்வுகளுக்கும் ஒரு இறுதித் தீர்வாக அமைந்துவிடக்கூடுமா? இதுகுறித்தும் நான் தேடிப்பார்க்க வேண்டும். இவை உண்மையாக இருக்காது என்று அசமந்தப்போக்குடன் இருந்துவிட முடியுமா? இல்லை, முடியாது. ஆனால் அது அவ்வாறு இருக்கக்கூடாது என்று கடவுள் தடுக்கிறார். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. எந்த வித அர்த்தமும் இல்லாமலா கிறீஸ்தவ விசுவாசமும் அதன் விழுமியங்களும் இவ்வுலகம் முழுவதிலும் பரவி, வியாபித்திருக்கிறது? எம் சரீரத்தின் இறப்புக்குப் பிறகு எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ளலாமா? இதற்காகத் தான் தேவன் இத்தனை மகத்தானவற்றை எமக்காகச் செய்தருளினாரா? ஆகவே, இவ்வுலகம் பற்றிய நமது எண்ணங்களை விட்டுவிட்டு, கடவுளையும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையையும் தேடுவதற்கு என்னை முழுவதுமாக அர்ப்பணிக்க நான் ஏன் இன்னும் தாமதிக்கிறேன்? ஆனால் பொறுத்திரு! அந்த விஷயங்கள் கூட சுவாரஸ்யமாகவே உள்ளன. அவைகளில் சில சிறிய விதத்திலேயாவது சற்று இனிமையானவையாக இருக்கின்றன. ஆகவே நாம் அவற்றை அத்தனை இலகுவாக விட்டுவிட முடியாது. மீண்டும் அவற்றை நோக்கிச் செல்வது வெட்கக்கேடு. இப்போது கூட ஏதாவது ஒரு கௌரவமான பதவியைப் பெறுவது என்பது ஒரு பெரிய காரியமா? அதைவிட வேறு என்னதான் தேவையாய் இருக்கிறது? எங்களிடம் செல்வாக்கு மிக்க நண்பர்கள் கூட்டம் உள்ளது. அவர்களின் துணை கொண்டு எனது தேவைகள் யாவற்றையும் நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கலாம். கொஞ்சம் சமயோசிதமாக செயல்பட்டிருந்தால், எங்களுக்கு நாட்டின் அதிபர் பதவி கூடக் கிடைத்திருக்கும். சொத்து சுகம் நிறைந்த, செல்வந்தப் பின்னணி கொண்ட ஒரு பெண்ணை நான் மணந்திருக்கலாம். அப்போது அவளின் தேவைகளுக்கு என்னைச் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் அவளுக்கு ஏற்பட்டிருக்காது. அப்படியான சூழ்நிலையில் எனக்கு எவ்விதமான கவலை மற்றும் பிரச்சினைகள் இருந்திராது. இதுதான் எனது ஆசையின் உச்சமாக இருந்திருக்கும். மிகவும் பண்புள்ளவர்களாகவும், பின்பற்றத் தகுதியுடையவர்களாகவும் இருந்த பல ஆண்கள், திருமணமான சூழ்நிலையிலும் கூட ஞானம் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அவர்களை நான் ஏன் ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளக்கூடாது?
20. நான் இவற்றைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டும், சிந்தனை செய்துகொண்டிருந்தபோது, இவற்றில் இருந்து வெளிப்பட்ட காற்றைப் போன்ற வேகமானது, என் இதயத்தை அங்கும் இங்கும் அலைக்கழிக்கச் செய்தது. அதேநேரம் காலம் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தது. நான் கர்த்தரை மீண்டும் நாடிச் செல்ல நான் தாமதித்தேன். ஒவ்வொரு நாளும் அடுத்துவரும் நாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டவாறே என் காலத்தைக் கழித்தேன். அப்படித் தள்ளிப்போட்ட ஒவ்வொரு நாளிலும் மரணம் என்ன அரவணைப்பது போலவே உணர்ந்தேன். மகிழ்ச்சியான வாழ்க்கையை எதிர்பார்த்து, அதைக் கண்டடைய வேண்டும் என்ற வேட்கை என் மனதில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. ஆனால் அது இருக்குமிடத்திற்குச் சென்று அதைத் தேடுவதில் நான் கொஞ்சம் பயந்தேன். அதனால் நான் அதைத் தேடுவதற்குப் பதிலாக, அதனிடமிருந்து விலகி ஓடிக்கொண்டிருந்தேன். ஒரு பெண்ணின் அரவணைப்பை இழப்பது எனக்கு தாங்கொணாத் துயரத்தைத் தரும் என்று தப்புக்கணக்குப் போட்டேன். ஆயினும், அந்த மனக் குறைபாட்டைக் குணப்படுத்த உமது கருணை வழங்கிய மருந்தைப் பற்றி நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஏனென்றால் அப்படிச் செய்வதற்கு நான் ஒருபோதும் முயற்சித்ததில்லை. ஒழுக்கம், கற்பு என்று வரும்போது, அது ஒருவரின் சொந்த சக்திக்கு உட்பட்டது என்று நான் நினைத்தேன் [ஆனால் அறிவீனனான எனக்குள் அத்தகைய சக்தி இல்லை என்றாலும்] “உம்மால் அது கொடுக்கப்படாவிட்டால், எதுவும் கற்புடைமையாக இருக்க முடியாது” என்று எழுதப்பட்டதை நான் அறிந்திருக்கவில்லை. நான் எனது மனக்குமுறல்களுடன் உமக்கு செவிகொடுத்து உம்மை நோக்கி உருக்கத்துடன் மன்றாடி இருந்தால், உறுதியான நம்பிக்கையுடன் என் கவலைகள், கரிசனைகள் யாவற்றையும் உமது பாதத்தில் கிடத்தியிருந்தால் , நிச்சயமாக நீர் அந்த சக்தியை எனக்குக் கொடுத்திருப்பீர்.
அத்தியாயம் 12 – பிரம்மச்சரிய வாழ்க்கை பற்றி அலிபியஸுடன் நடந்த கலந்துரையாடல்
21. உண்மையில், அலிபியஸ் தான் என்னை திருமணம் செய்வதிலிருந்து தடுத்தார். இதனால் நாங்கள் நீண்ட காலமாக விரும்பித் தேர்ந்தெடுத்த ஞானத்திற்கான தேடலை முன்னெடுத்துச் செல்லாமல் விட்டுவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்றும், திருமணம் காரணமாக, எம்மத்தியில் நிலவும் அந்நியோன்யமான அன்பில் விரிசல் ஏற்பட்டுவிடும் என்றும் அஞ்சினார். ஏனென்றால், அவர் இந்த விஷயத்தில் மிகவும் ஒழுக்கசீலராக வாழ்ந்தார். அது அவரது அற்புதமான இயல்பை வெளிப்படுத்தி நின்றது. என்றாலும், அவர் தனது இளமை பருவத்தில் அவரது ஒழுக்கத்தில் கொஞ்சம் சரிவைச் சந்தித்தபோதும், அதன்பின் சென்று அதைப் பற்றிக் கொள்ளவில்லை. மாறாக அதன் மீது அருவருப்பும் வெறுப்பும் கொண்டு, அக்காலம் முதல் இன்றுவரை மிகுந்த ஒழுக்கசீலராகவே வாழ்ந்தார். ஒழுக்கத்தைப் பேணி வாழமுடியும் என்று அவர் சொன்னபோதெல்லாம், மணமுடித்தவர்களாக இருந்தபோதிலும், ஞானத்தின் தேடலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள், இறைபணியில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள், தமது நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருடன் நேர்மையாகவும், களங்கம் இல்லாது எல்லோரோடும் நல்லுறவைப் பேணுபவர்கள் அநேகர் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று நான் அவருடன் அடிக்கடி தர்க்கிப்பதுண்டு. ஆன்ம வலிமையைப் பொறுத்தவரையில், நான் அவர்களை விட மிகக் கீழான மட்டத்திலேயே இருந்தேன். மேலும், என் சரீரத்தில் ஏற்பட்ட நோயினாலும், அது எனக்குத் தேடித்தந்த கொடிய இன்பத்தினாலும், நான் அதன் கைதியானேன். அந்த சங்கிலிகளால் நான் பிணைக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டேன். அதிலிருந்து விடுபடவேண்டுமென்ற ஆவல் மற்றும் உந்துதல் என்னிடம் இருக்கவில்லை. அந்த கொடிய சங்கிலிகளைத் தகர்த்து என்னை விடுவிக்க முயன்ற அலிபியசை நான் உதாசீனம் செய்தேன். மேலும், சர்ப்பமானது என் மூலமாகவே அலிபியஸிடம் பேசியது. என் நாவினால் சீரான முறையில் பயணித்த அலிபியசை அடக்கினேன். அவரது நேர்மையான மற்றும் சுதந்திரமான பாதையில் கண்ணிகளை விரித்தேன்.
22. என்னை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து என்மீது பெருமதிப்பு கொண்டிருந்த அலிபியஸ், இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், என்னால் பிரம்மச்சாரிய வாழ்க்கை வாழ முடியாத அளவுக்கு இச்சைகளுக்குள் இவ்வளவு மோசமாக சிக்கித் தவிப்பவன் என்று அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டார். ஏனென்றால் அவருடன் உரையாடும்போது நான் ‘என்னால் தனியாக வாழ்வது கடினம்’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறேன். அவன் இதைக் கேட்டு வியப்புற்ற போதெல்லாம், அவனது திருட்டுத்தனம், வழிப்பறி போன்றவற்றால் மறைந்து ஒளிந்து வாழும் வாழ்க்கைக்கும், என்னுடைய வாழ்க்கைக்கும் பாரிய வேறுபாடுகள் இருப்பதை அவதானித்து என்னை நானே தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஏற்கனவே திருமணம் செய்துகொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்தது பற்றி அவரிடம் கூறியிருந்த படியால், அது அவருக்கு பெரிதாக வியப்பொன்றையும் ஏற்படுத்தி இருக்காது. இதைக்கேட்டதும் அலிபியசுக்கும் திருமணத்தில் ஒருவித நாட்டம் ஏற்பட்டது. அது ஏற்படக் காரணம், திருமணம் எனும் பந்தம் அவருக்கு கொண்டு வரவிருக்கும் இன்பத்தைக் குறித்து அல்ல. ஆனால் திருமண வாழ்க்கையில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆர்வ மிகுதியால் அவ்வாறு எண்ணியிருக்கக்கூடும். பிரம்மச்சாரிய வாழ்க்கை மகிழ்ச்சி தரக்கூடியது என்பது அவரது அபிப்பிராயம். அதற்கு எதிர்மாறாக, திருமணம் என்ற ஒன்று இல்லாத வாழ்க்கை கொடுமையானதும், பிரயோசனமற்றதும் என்பது என் வாதம். அலிபியஸ் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்தார். இது எனக்கு வியப்பையூட்டியது. ஏனென்றால் அவன் திருமணத்தில் கிடைக்கும் அனுபவத்தை மாத்திரமே எண்ணியிருந்திருப்பார். அப்போது நான் அகப்பட்டுக்கொண்ட கண்ணியில் அவரும் சிக்கியிருப்பார். அவர் மரணத்துடன் உடன்படிக்கையில் நுழையத் தயாராக இருப்பதைக் கண்டேன். ஏசாயா 28:15 இல் இதுபற்றி, “நாங்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எங்களுக்கு மரணத்தின் ஸ்தானமாகிய பாதாளத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே நாங்கள் தண்டிக்கப்படமாட்டோம். தண்டனை எங்களைக் கடந்துபோகும்” என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே அது எங்களைப் பாதிக்காது. அதேபோல், ஆபத்தை விரும்புகிறவன் அதில் விழுவான் என்று சீராக் 3:27: “அடங்கா மனத்தை உடையோர் தொல்லைகளால் பாதிப்புறுவர்; பாவிகள் பாவத்தைப் பெருக்குவர்” என்று கூறுகிறது. திருமண வாழ்க்கையிலும் குழந்தைகளைப் பேணுவதிலும் காணப்படும் தாம்பத்திய ஒழுங்கு எப்படிப் பட்டதாக இருந்தாலும், அது நம்மைக் கொஞ்சமாகப் பாதிப்பதை உணரக் கூடியதாயிருந்தாலும், எனது கட்டுக்கடங்காத காம இச்சைக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் காரணமாகத்தான் நான் திருமணம் என்ற சொல்லுக்கு அடிமையாகி இருந்தேன். அலிபியசும் என்னோடு சேர்ந்து மெல்ல மெல்ல திருமணம் என்ற சதுரத்துக்குள் அடியெடுத்து வைத்தத்தைக் காணக் கூடியதாயிருந்தது. எங்களின் தாழ்வு மனப்பான்மை காரணமாக எங்களை ஒருபோதும் கைவிடாத உன்னதமானவரான என் தேவனே, எங்கள் துயரம் கண்டு எம்மீது இரக்கப்பட்டு, அற்புதமான மற்றும் ரகசியமான வழிகளில் எங்களைக் காப்பாற்றும் வரை, எங்கள் நிலைமையும் இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இருந்தது.
அத்தியாயம் 13 – மனைவி ஒருவரின் முக்கியத்துவம் பற்றி அவருடைய தாய் வற்புறுத்தியதால் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் தேடினார்
23. எனக்குத் திருமணம் செய்துகொள்ள ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடும் படலம் மும்முரமாய்த் தொடங்கியது. அந்தத் தேடலின் போது, நான் ஒரு பெண்ணை விரும்பித் தெரிவு செய்தேன். ஆவலுடன் நிச்சயதார்த்தமும் நடந்தது. என் தாயார் இந்த விஷயத்தில் மிகுந்த சிரத்தை மேற்கொண்டார். அவருடைய நம்பிக்கை என்னவென்றால், நான் திருமணம் செய்துகொண்டதன் பின்பு, ஆரோக்கியம் தரும் ஞானஸ்நானத்தின் மூலம் நான் சுத்திகரிக்கப்படுவேன் என்பதேயாகும். ஆகவே, நான் அதற்காகத் தினமும் என்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தேன். அவளது மன்றாட்டுக்கள் இறைவனின் திருவருளால் நிறைவேறியதைக் குறித்து அவள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். என் நம்பிக்கையின் பிரதிபலனாக, வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. ஆயினும்கூட, என் வேண்டுகோளின் பேரிலும், அவளது சொந்த தூண்டுதலின் பேரிலும், அவள் உம்மிடம் தினமும் தனது வலுவான, இதயப்பூர்வமான உள்ளக் குமுறலோடு அழைத்தபோது, எனது எதிர்கால திருமணத்தைப் பற்றிய ஒரு எதிர்வுகூறலை அவளிடம் வெளிப்படுத்துவீர் என்று அவள் எதிபார்த்தபோதும், அது அவ்வாறு நடக்கவில்லை. எதோ ஒரு தெளிவற்ற, மங்கலான தரிசனத்தைக் கண்டதாக அவள் என்னிடம் சொன்னாள். ஆயினும், முற்காலத்தில் அவள் கண்ட தரிசனகளைப்போல் தற்போதைய தரிசனங்கள் அவ்வளவு தெரிவானவையாக இல்லை என்பதையும் அவள் கூறுவதை நான் கேட்டேன். தற்போது அவளுக்குக் கிடைக்கும் தரிசனங்களுக்கும், உம்மிடமிருந்து வரும் தரிசனங்களுக்கும் பாரிய வித்தியாசங்கள் நிலவுவதாக அவள் உணர்ந்தாள். ஆயினும், எதோ ஒரு இனம்புரியாத குரல் மற்றும் ஒரு சுகமான சுகந்தம் உம்மிடமிருந்து வரும் தரிசனங்களில் உணர்ந்ததாக அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். இவையெல்லாவற்றுக்கும் மத்தியில், எனது திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. எதிர்கால வாழ்க்கைத்துணையின் சம்மதமும் பெறப்பட்டது. திருமண வயதைவிட அவள் இரண்டு வயது குறைவானவளாக இருந்தாள். ஆகவே, அவள் திருமண வயதை அடையும்வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தேன்.
அத்தியாயம் 14 – நண்பர்களுடன் அவர்களது குடியிருப்புக்குச் செல்லும் அவரது திட்டம் தடையைச் சந்தித்தது
24. எம்மத்தியில் இருக்கும் சில நண்பர்கள், நான் உட்பட, மனித வாழ்வில் நிலவும் மிகுந்த கொந்தளிப்பான, தொல்லை தரும் நிலைமைகள் பற்றி நன்றாக ஆராய்ந்து, அதனை வெறுத்து, அதுபற்றி நன்றாக சிந்தித்து, அப்படியான கொந்தளிப்பான சூழ்நிலைகளில் இருந்து ஒதுங்கி, அமைதியான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தோம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் முகமாக, எங்கள் பொது வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் உபகாரணங்களைத் தேடுவதில் மிகவும் சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தோம். நாங்கள் ஒவ்வுருவரும் தேடி வாங்கிய, சேர்த்த பொருட்கள் மற்றும் உபகரணங்கள் யாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அவற்றை நாம் எல்லோரும் உபயோகிக்கும் வண்ணம் பொதுவான சொத்தாக மாற்றினோம். எம் மத்தியில் நிலவிய புனிதமான விட்டுக்கொடுக்கும் நட்பின் காரணமாக, சேர்க்கப்பட்ட அந்த பொருட்களின் மீது எவரும் தனியுரிமை பாராட்டுவதில்லை என்று உறுதியாக இருந்தோம். ஒருவருக்குச் சொந்தமானது, எல்லோருக்கும் சொந்தமானது என்ற கொள்கையுடன் இருந்தோம். நாங்கள் எல்லோருமாக சேர்த்து பத்துப் பேர் வரை இருந்தோம். அவர்களில் சிலர் பெரும் பசெல்வந்தப் பின்னணியைக் கொண்டவர்கள்; குறிப்பாக ருமேனியஸ் என்பவன். அவன் எனது சக நகரவாசி, சிறுவயதில் இருந்தே எனது நெருங்கிய நண்பன். அவனது வியாபார விஷயங்களின் காரணமாக, மிலானில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தான். மேலும் எங்களது திட்டம் குறித்து அவனது மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தான். மேலும் அவனது சொத்து, தோட்டந்துரவு போன்றவற்றின் காரணமாக, அவனது கம்பீரமான குரல் மற்றவர்களை விட அதிகமாக எடுபட்டது. மேலும், ஒவ்வொரு வருடமும், எங்களுக்குள் இருக்கும் இருவர் எமது குடியிருப்பை முகாமைத்துவம் செய்ய வேண்டுமெனவும், எங்கள் குடியிருப்புக்குத் தேவையான சகலவற்றையும் விநியோகிப்பதில் கவனம் செலுத்தவேண்டும் எனவும், எல்லோருக்கும் பொதுவான உடைமைகளுக்குப் பாதுகாவர்களாய் இருக்க வேண்டுமெனவும், எஞ்சியிருப்போர் எந்தவிதமான கடமைகளோ பொறுப்புகளோ இன்றி அமைதியாக வாழ அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. எப்படியிருந்தாலும், எங்களில் சில நண்பர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டிருந்தது. மற்றும் சிலர் நான் உட்பட, திருமணம் செய்துகொள்ளும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இப்படியான ஒரு சூழ்நிலையில், இதை அவரவர்களது துணைவியர்கள் அனுமதிப்பார்களா என்று சிந்திக்கத் தொடங்கியபோது, அழகாக வடிவமைக்கப்பட்ட முழுத் திட்டமும், எங்கள் கைகளில் இருந்து முற்றிலும் சிதைந்து, காற்றில் கலந்து மறைந்துபோயிற்று. இது நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது என்ற எண்ணம் காரணமாக் கைவிடப்பட்டது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றம், மனவிரக்தி காரணமாக, நாங்கள் மீண்டும் எங்களை சோர்வு மிகுந்த பயணத்தைத் அகலமான பாதையில் தொடர்ந்தோம். இதை மத்தேயு 7:13 இல், “பரலோகத்திற்குச் செல்லும் குறுகிய வாசலுக்குள் நுழையுங்கள். நரகத்திற்குச் செல்லும் பாதையோ எளிமையானது. ஏனெனில் நரகத்தின் வாசல் அகன்றது. பலர் அதில் இலகுவாக நுழைந்து விடுகிறார்கள்” என்று கூறுகிறது. ஆகவே, பல எண்ணங்கள் எங்கள் மனதில் தோன்றியபோதும், உமது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை என்றென்றும் நிலைத்திருக்கிறது. உமது அறிவுரையில் எங்களைப் பரிகாசம் செய்து, உமது சொந்தத் திட்டத்தைத் தயார் செய்து ஆண்களை வழிநடத்தினீர். ஏனென்றால் “பொருத்தமான காலத்தில் எங்களுக்கு உணவு அளிப்பதும், உமது திருக்கரங்களைத் திறந்து எங்கள் ஆன்மாக்களை ஆசீர்வாதத்தால் நிரப்புவதும் தான் உமது நோக்கமாக இருந்தது.
அத்தியாயம் 15 – அவர் ஒரு பெண்ணை நிராகரித்து, மற்றொருவரைத் தேர்ந்தெடுக்கிறார்
25. எனது பாவங்கள் பெருகிக்கொண்டே சென்றன. என்னுடன் தனது உடல், பொருள், ஆவி அத்தனையையும் என்னுடன் பகிர்ந்துகொண்ட அந்தப் பெண், என் திருமணத்துக்கு முட்டுக்கட்டையாய் இருப்பாள் என்றெண்ணி, அவள் என்னிடமிருந்து பலவந்தமாக பிரிக்கப்பட்டாள். அவளுக்காகவே வாழ்ந்த என் இதயம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. என் மனம் குருதியால் நனைந்தது. இனிமேல் எவருடனும் தனது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதில்லை என்று என்னிடம் உறுதியளித்த அவள், வேதனையுடன் ஆபிரிக்காவை நோக்கிச் சென்றாள். அவள் விடைபெற்றுச் சென்றபோது, என் மூலமாக அவள் பெற்றெடுத்த மகனை என்னிடம் விட்டுச் சென்றாள். இரக்கமுள்ளவனாகவும், மனித நேயத்துடனும் வாழ்ந்த நான், அந்தப் பெண்ணிடம் இருந்த முன்மாதிரியைக் கூடப் பின்பற்ற முடியாதவனாய் இருந்ததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன். அவள் எனக்காக நிச்சயிக்கப்பட்ட, எனது வாழ்க்கைத் துணையாக வரவிருந்தவள். அவளைக் கரம்பிடிக்க இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய அந்த நிலையைக் கூட என்னால் பொறுத்துக்கொள்ள முடியாதவனாய் இருந்தேன். திருமணத்தை விட, நான் உடல் ரீதியான காம இச்சைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தமையால், மற்றொமொரு பெண்ணை எனக்குத் துணையாகத் தேர்ந்தெடுத்தேன். ஆவலுடன் மணவாழ்க்கையில் ஈடுபடும் நோக்கத்திவிட, எனது பாலியல் வேட்கைகளைத் தீர்த்துக் கொள்வதிலேயே நான் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். என் ஆன்மாவின் தீய நோக்கங்களை நிறைவேற்றுவதில் நான் மும்முரமாய் இருந்தேன், ஊட்டமளித்துப் பாதுகாத்தேன். விட்டுவிடவே முடியாத அளவுக்கு என்னை இந்த இச்சைகளுக்கு அடிமையாகும் பழக்கத்துக்குள் மூழ்கடித்துக் கொண்டேன். என்றோ ஒருநாள், என் வாழ்வில் திருமணம் நடக்கும், அதுவரையில் தற்போது என்னுடன் இருக்கும் பெண்ணை என்னருகில் வைத்துக் கொண்டு எனது காமப் பசியைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். எனினும், ஏற்கனவே எனக்கு நிச்சயிக்கப்பட்ட, என்னைவிட்டுப் போய்விட்ட அந்தப் பெண்ணின் பிரிவால் ஏற்பட்ட துயரம் என் மனதில் இன்னும் இரணமாய் இருந்தது. தீராத வேதனையில் நான் உழன்றேன். அணையாத, கொழுந்து விட்டெரியும் தீயாய் என்னைச் சுட்டு வதைத்தது. வெந்த புண்ணில் வேலாய்த் தைத்து என்னை வாட்டியது.
அத்தியாயம் 16 – மரணம் மற்றும் நடுத்தீர்வை பற்றிய பயம் அவரை ஆட்கொண்டது, ஆன்மாவின் அழியாத தன்மையை நம்பி, தீமைகளில் இருந்து மீண்டு, எபிகுரஸின் முன்னாள் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்
26. அனைத்து புகழுக்கும் மாட்சிமைக்கும் உரியவர் நீர் ஒருவரே. இரக்கத்தின் ஊற்றானவரே, உமக்கே என்றும் மகிமை உண்டாகக் கடவதாக. நான் மிகவும் பரிதாபத்துக்குரிய ஒருவனாகி விட்டேன். அப்போது நீர் என்னருகில் வந்தீர். உமது வலது கரம் என்னைச் சேற்றிலிருந்து மீட்டெடுத்து, சுத்தப்படுத்தத் தயாராக இருந்தது. ஆனால் நான் அதை அறிந்திருக்கவில்லை. உடல் ரீதியான இன்பம், பாலியல் வேட்கை போன்றவற்றில் இருந்து என்னை விடுவிக்க முடியாதவனாயிருந்தேன். ஆனால், மரணத்தைப் பற்றிய பயம் மற்றும் உமது தீர்ப்பின் மெல்லாம் நான் பெறவிருக்கும் தண்டனை போன்றவை என் மனதுக்கு தீராத பயத்தை ஏற்படுத்தியபோதும், உடலின்பத்தை விட்டுவிட மனமில்லாமல் இருந்தேன். நன்மை மற்றும் தீமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து நான் அடிக்கடி நெப்ரிடியசுடனும் அலிபியசுடனும் வாதாடுவேன். மரணத்துக்குப் பின்னான வாழ்வைப் பற்றி அக்கறையோ, நம்பிக்கையோ எனக்கில்லை. ஒருவேளை, எனது நோக்கில், எபிகியுரசின் கூற்றுக்கமைய, நாம் சாகாவரம் பெற்றவர்களாய், உடலின் காம இச்சைகளுக்கு எம்மால் இசைந்து கொடுக்கமுடியும் என்றால், அதுவே ஒரு மனிதனுக்கு கிடைக்கும் உச்ச இன்பம், அதைத்தவிர வேறென்ன இருக்கமுடியும் என்று வாதிட்டேன். இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் என் துன்பத்துக்கு வித்திட்டது என்பதை உணரமுடியாதவனாக இருந்தேன். அகத்தில் உள்ள வசீகரமும், நன்மதிப்பும் வெளியில் இருக்கும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அவை ஆன்மாவுக்கே புலப்படும் என்பதைக் கூட அறியாத ஒருவனாக இருந்தேன். இப்படிப்பட்ட அறிவீனமான விவாதங்களை என் சகாக்கோளோடும், நண்பர்களோடும் மேற்கொள்ள நான் காரணிகளை எந்த குப்பைக்குள் இருந்து பெற்றேனோ நானறியேன். சரீர இச்சைகள் என் வாழ்வில் எத்தனை தாக்கங்களை ஏற்படுத்திய போதும், நண்பர்கள் இல்லாத வாழ்வு எந்த இனிமையையும் தராது என்று நான் எண்ணினேன். இருப்பினும், உண்மையில், நான் என் நண்பர்களை அவர்களின் சொந்த நலனுக்காக நேசித்தேன், மேலும் அவர்களும் எனது சொந்த நலன்களைக் கருதி என்னை நேசிப்பதாக உணர்ந்தேன். உம்மைவிட்டுப்பிரிந்து, உமது அருளை உதாசீனம் செய்து, நான் நினைத்த எல்லாவற்றையும் அடையலாம் என்றெண்ணிய எனது தான்தோன்றித்தனமான மனம், எத்தனை பெரிய தவறைச் செய்துவிட்டது என்றெண்ணி வருந்தினேன். மேலும் கீழுமாக என்னைக் குலுக்கி, இடமும் வலமுமாக அசைந்து, என்ன நிலைமை எனக்கு ஏற்பட்டபோதிலும், எனது அந்த ஆன்மாவுக்கு ஆறுதல் அளிப்பவர் நீர் ஒருவரே. எங்கள் அருகிலே இருந்து, எங்களைத் தீமைகள் யாவற்றிலிருந்தும் மீட்டு, நாம் பயணிக்கும் வழிகளைச் செம்மைப் படுத்தி, நீர் காட்டும் வழிகளில் பயணிக்க எங்களை வழிநடத்துகிறீர். அத்தோடு, “ஓடு, நான் உன்னை சுமந்துசெல்வேன்; உண்மையில், நான் உன்னை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வேன், உன்னை நான் சகல கட்டுகளில் இருந்தும் விடுவிப்பேன்” என்று எமது தேவனான நீர் திருவாய் மலர்ந்தருளியதை நான் நன்றியுடன் நினைகூருகிறேன்.
