Saint Augustine, Confessions, Book 12, in Tamil
புத்தகம் 12
அத்தியாயம் 1 – உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம், ஆனால் தேடுபவர் கண்டடைவார் என்று கடவுள் வாக்குறுதி அளித்துள்ளார்
1. என் தேவனே, வறியவனான என் வாழ்வில் உமது புனிதமான வேதாகமத்தின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, என் இதயம் பரிபூரணத்தைக் கண்டுள்ளது. எனவே, மனிதன் கொண்டுள்ள அறிவு அவன் கற்றதை மொழி வாயிலாக சொல்வதற்கான தேவை அதிகமாகக் காணப்படுகிறது. ஏனென்றால், எந்த ஒரு விடயம் குறித்தும் அதற்கான தீர்வைத் தேடுவதில் காட்டப்படும் ஆர்வத்தைக் காட்டிலும், அந்த விடயம் குறித்த தேடுதலின் போது தான் மொழிப் பரிவர்த்தனையில் அதிக நேரம் தேவைப்படுகிறது. பெற்றுக் கொள்வதைவிட, கேட்கும்போது தான் அதிக நேரம் விரயமாகிறது. பெறும் கையை விட தட்டுகிற கை சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம்; அதை யாராலும் உடைக்க முடியாது. கடவுள் நமக்கு ஆதரவாக இருந்தால், நமக்கு எதிராக எவராலும் செயல்பட முடியாது என்பதை ரோமர் 8:31 பின்வருமாறு விளக்குகிறது. “தேவனால் படைக்கப்பட்டவை எல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும்” என்ற நம்பிக்கையுண்டு. தேவன் படைத்த எல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும் என்ற நம்பிக்கையும் உண்டு” என்று கூறுகிறது. மற்றுமொரு திருமறை வாசகத்தில் மத்தேயு 7:7-8 பின்வருமாறு கூறுகிறது: “கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். எனவே, கேட்கும் அனைவரும் பெறுகிறார்கள்; தேடும் அனைவரும் கண்டடைகிறார்கள்; தட்டுகிற அனைவருக்கும் அது திறக்கப்படும்.” இவை நீர் அருளிய உமது சொந்த வாக்குறுதிகள்; உண்மை உறுதியளிக்கும். ஆகவே, ஏமாற்றப்படுவதைப் பற்றி யாரும் அஞ்சத் தேவையில்லை.
அத்தியாயம் 2 – இரண்டு வகையான மோட்சம்: ஒன்று காணக்கூடியது மற்றையது விண்ணகத்து மோட்சம்
2. விண்ணுலகையும், மண்ணுலகையும் சிருஷ்டித்தவர் நீர் ஒருவரே என்று எனது தாழ்மையான நாவினால் சகல வல்லவரான உமது மேன்மைக்கு முன் நான் அறிக்கையிடுகிறேன். என் தலையை உயர்த்தி நான் பார்க்கும் ஆகாயத்தையும், நான் நடக்கும் இந்தப் பூமியையும் [என்னைச் சுமந்து செல்வது இந்தப் பூமிதான்] சிருஷ்டித்தவர் நீரே. ஆனால் என் தேவனே, மோட்சாதி மோட்சம் என்பது எங்கே இருக்கிறது? அதுகுறித்து நாம் சங்கீத புத்தகங்களில் வாசித்திருக்கிறோம். அப்படியானால், மோட்சாதி மோட்சமென்பது கர்த்தர் ஒருவருக்கே சொந்தமானது என்றால், நாம் வாழும் இந்தப் பூமியை அவர் மானிடரான தன் பிள்ளைகளான எமக்குக் கொடுத்துள்ளாரா? அப்போது, நாம் கண்டிராத விண்ணகம் என்பது எங்கே இருக்கிறது? அப்படியானால், நாம் காண்பது அனைத்தும் இந்தப் பூமியில் இருப்பதைப் பற்றி மட்டும் தானா? அனைத்து விதத்திலும் முழுமையாக இல்லாவிட்டாலும், புவியின் இந்தப் பகுதிகள் அழகான உருவத்தைப் பெற்றுள்ளன. அவ்வாறான அடித்தளத்தைக் கொண்டது தான் நாம் வாழும் இந்தப் பூமி. ஆனால் மேலே சொல்லப்பட்ட மோட்சாதி மோட்சத்துடன் ஒப்பிடுகையில், நாம் வாழும் இந்தப் பூமியும், அது மண்ணுலகாக இருந்தபோதிலும், ஒரு மோட்சமே. ஆனால், மோட்சத்தோடு ஒப்பிடும்போது, அது எப்படியிருக்கும் என்பது குறித்து நானறியேன். இதன் சாராம்சம் என்னவென்றால், மோட்சாதி மோட்சம் என்பது கர்த்தருடையது, மானிடருக்கோ அல்லது அவர்களது பிள்ளைகளுக்கோ சொந்தமானதல்ல.
அத்தியாயம் 3 – ஆழத்தின் இருள் மற்றும் கண்ணுக்கு தெரியாத உருவமற்ற பூமி
3. உண்மையிலேயே இந்த பூமி கண்ணுக்குப் புலப்படாததாகவும் உருவமற்றதாகவும், வெறுமையாகவும் இருந்தது. ஒளி ஊடுருவ முடியாத ஆழத்தின் தன்மை எப்படிப்பட்டதென்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அதற்கு வடிவம் இல்லை. ஆதலால் ஆழத்தின் மேல் இருள் பிடித்திருந்தது என்று எழுதும்படி நீர் கட்டளையிட்டீர். ஆகவே, வெளிச்சம் இருக்கவில்லை என்பதைத் தவிர, இங்கு வேறு என்ன சொல்லப்பட்டிருக்கிறது? “பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்” என்று மறைநூல் வாசகம் ஒன்று இதற்கு சாட்சி பகர்கிறது. ஒளி என்ற ஒன்று இருந்திருக்குமானால், அது மேலே தான் இருந்திருக்க வேண்டும். மேலே இருந்தபடிதான் தனது ஒளிக்கதிர்களை வீசிக்கொண்டிருந்திருக்கும். ஆகவே, மேலே வெளிச்சம் இல்லாததால், இருள் சூழ்ந்து இருந்தது. அதேபோல், சத்தம் இல்லாத இடத்தில் நிசப்தம் நிலவுகிறது. எங்கே நிசப்தம் நிலவுகிறதோ அங்கே ஒலியின் பிரசன்னம் இருப்பதில்லை. என் தேவனே, இந்த ஆன்மா உம்மிடம் அறிக்கையிடக் கற்றுக் கொடுத்ததும் நீர் அல்லவோ? ஆண்டவரே, இந்த உருவமற்ற பொருளைப் படைத்து அதிலிருந்து நீர் அனைத்தையும் வெவ்வேறாகப் பிரிக்கும்வரை, அங்கே நிறமோ, உருவமோ, உடலோ, ஆன்மாவோ மற்றும் எதுவும் இருக்கவில்லை என்பதை நீர் எனக்குக் கற்பித்தீர் அல்லவா? அப்படியும் அங்கே முற்றிலும் ஒன்றுமில்லை என்று கூற முடியாது; எந்த வடிவமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட உருவமற்ற தன்மை அங்கே இருந்திருக்கிறது.
அத்தியாயம் 4 – எதுவுமில்லாத ஒன்றிலிருந்து அழகான உலகம் தோற்றம் பெற்றது
4. அப்படியானால், இதுபற்றி விளக்கிக்கூற வேண்டுமானால், சில மந்தமான மனநிலையில் உள்ளவர்கள் கூட, அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்வதற்கு வழக்கில், பாவனையில் உள்ள வார்த்தைகள் தவிர வேறு வார்த்தைகள் இல்லை. முழுமையான உருவமற்ற தன்மைக்கு உதாரணமாக பூமியையும் அதன் ஆழத்தையும் ஒப்பிடுவதைத் தவிர வேறு என்ன இருக்கக்கூடும்? அவற்றின் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பவை, உயரமான நிலையில் இருப்பவைகளை விட அழகிலும் வசீகரத்திலும் குறைவாக இருக்கின்றன. அவை அனைத்தும் வெளியில் தெரிபவை என்றபடியால் அவை நன்றாகப் பிரகாசிக்கின்றன. எவ்வித உருவ அமைப்புமற்ற ஒரு தன்மையிலிருந்து, உமது படைப்பின் மகத்துவத்தால் நீர் இந்த அழகான உலகத்தை சிருஷ்டித்தீர். ஆகவே, கண்ணுக்குத் தெரியாத, உருவமற்ற ஒன்றிலிருந்து உருவாகிய இந்தப் பூமி மனிதர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நான் ஏன் கருதக்கூடாது?
அத்தியாயம் 5 – படைக்கப்பட்ட பொருள் என்ன வடிவம் கொண்டதாக இருந்திருக்கும்?
5. புலன்களால் உணர்ந்தவற்றை எண்ணங்களும் உணர்வுகளும் உணர எத்தனித்த போது, அவை தமக்குள் இவ்வாறு சொல்லிக் கொள்கின்றன: ‘இவை உடல்கள் சம்பந்தப்பட்ட விடயங்களோ, வாழ்க்கை அல்லது நீதி போன்ற புரிந்துகொள்ளக் கூடிய விடயங்களோ அல்ல. புலன்களால் இவற்றை உணரமுடியாது. ஏனென்றால் இவை கண்ணுக்குத் தெரியாத மற்றும் ஒழுங்கமைக்கப்படாத நிலையைக் கொண்டிருக்கின்றன. காணக்கூடிய மற்றும் உணரக்கூடிய எதுவும் அங்கே இல்லை – மனித சிந்தனை தான் இவற்றைக் குறித்து தனக்குத்தானே பின்வருமாறு சொல்லிக் கொள்கிறது: அறிவுக்கு அப்பாற்பட்டவை இருக்கின்றன என்பது பற்றி மனித உணர்வுகள் எடுத்துரைக்கும் அறிவு, அல்லது அறிவுடைமையை நோக்காகக் கொண்ட அறியாமை.
அத்தியாயம் 6 – ஒரு காலத்தில் படைப்பைப் பற்றி தவறாக நினைத்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார்
6. என் தேவனே, என் வாயாலும், என் பேனாவாலும், அந்த விஷயத்தைப் பற்றி நீர் எனக்குக் கற்றுக் கொடுத்த அனைத்தையும் உம்மிடம் ஒப்புக்கொள்ள மனமுவந்து காத்திருந்தேன். நான் முன்பு கேள்விப் பட்டவற்றைப் புரிந்து கொள்ள முடியாதவனாயிருந்தேன் (புரிந்து கொள்ள முடியாதவர்கள் அது குறித்து என்னிடம் கேட்டார்கள்) ஆனால், பின்பு நான் அதைப் புரிந்துகொண்டேன். எண்ணற்ற மற்றும் பல்வேறு வடிவங்களைக் கொண்டது. அது எண்ணற்ற மற்றும் பல்வேறுபட்ட வடிவங்களைக் கொண்டிருந்தது என்பது குறித்து நான் அறிந்திருந்த போதிலும், உருவ அமைப்பு கொண்ட எவ்வித பொருள் பற்றியும் நான் எனது சிந்தனையில் கொண்டிருக்கவில்லை. என் மனம் குழப்பம், ஒழுங்கின்மை மற்றும் கொடூரமான வடிவங்களின் மத்தியில் சுழன்றது. ‘உருவங்களற்ற’ என்ற சொல்லை, ‘உருவங்கள் இல்லாத’ என்ற அர்த்தத்தில் கொள்ளாமல், அப்படிப்பட்ட உருவமானது என் கண்முன் தோன்றும் பட்சத்தில், என் மனம் வெறுப்பைக் கக்கி, எனக்கு மட்டுமன்றி, எல்லோர் மத்தியிலும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உருவ அமைப்பையே கற்பனை செய்து பார்த்தது. என் சிந்தனையில் தோன்றியது ஒரு ‘உருவமற்ற’ நிலை அல்ல. அழகிய உருவங்களுடன் ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்ட ஒரு உருவமற்ற நிலை தான் அது. உருவமற்ற ஒன்றை நான் ஒரு மூலமாக உருவாக்க வேண்டுமெனின், எந்த வடிவத்தின் எச்சங்களை அதிலிருந்து முழுவதுமாக அகற்றிவிட வேண்டும் என்று என் மனம் என்னைத் தூண்டியது. ஆனால் அவ்வாறு செய்ய என்னால் இயலவில்லை. உருவமற்ற ஒன்று எவ்வாறு இருக்க முடியும் என்று நான் எண்ணினேனே அன்றி, உருவத்துக்கும் வெறுமைக்கும் இடையே ஏதாவது ஒன்று இருக்கவேண்டும் என்பது பற்றியோ அல்லது வெறுமைக்குள் இருக்கும் உருவ நிலை பற்றியோ அல்லது எதுவுமற்ற வெறுமை எவ்வாறு உருவமாகப் பரிணமிக்க முடியும் என்பதை என் மனம் சிந்திக்கத் தவறி விட்டது. இந்தத் தருணம் முதற்கொண்டு, என் மனம் என்னிடம் கேள்வி கேட்பதை நிறுத்திக்கொண்டது. ஏனெனில் அது தன்னிச்சையாக, மாறக்கூடிய பல்வேறு உருவ அமைப்புகள் கொண்ட வடிவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆகவே நான் அவற்றின் மீது எனது கவனத்தை ஆழமாகப் பதிக்கத் தொடங்கினேன். அவற்றின் மாறுதலடையும் தன்மையைக் கூர்ந்து நோக்கினேன். இருப்பென்ற ஒரு நிலையில் இருந்து இல்லாமை என்ற ஒரு நிலைக்குள் அவை எவ்வாறு பயணிக்கின்றன என்பது குறித்தும் ஆராயத் தலைப்பட்டேன். ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்குள் பிரவேசிக்கும் இந்த நிலைமாற்றம் ஏதோ ஒரு உருவமற்ற நிலையின் வழியாகவே நடைபெறுவதை நான் கண்டுணர்ந்தேன். ஆனாலும் அது ஒன்றுமற்ற ஒரு நிலையல்ல. நான் யூகிக்க விரும்பவில்லை ஆனால், அறிந்துகொள்ளவே விரும்பினேன். இப்படியான வினாக்களுக்கு விடைகாண நான் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் இதுகுறித்து நீர் அவிழ்த்துவிட்ட முடிச்சுகள் யாவற்றையும் பற்றி எனது எழுதுகோலும் எனது குரலும் அறிக்கையிடுமானால், அவ்வறிக்கை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஏற்றுக்கொள்ள எந்தவொரு வாசகரும் விருப்பம் கொள்ளப்போவதில்லை. இருப்பினும், இதுகுறித்து எழுதும், உரைக்கும் பலவீனனான நான், உம்மைப் போற்றித் துதிக்காமல் எவ்வாறு இருக்கக்கூடும்? மாறக்கூடிய விஷயங்களில் காணப்படும் மாறுதல், மாறக்கூடிய அனைத்து வடிவங்களையும் மாற்றும் திறன் கொண்டது. அப்படியானால், இந்த மாறுதல் எனப்படுவது என்ன? ஆன்மாவா? அல்லது அது உருவமைப்பா? அல்லது அது ஆன்மாவின் அல்லது உடலின் வெளிப்புறத் தோற்றமா? அல்லது இவை ஏதும் அற்ற ஒன்றா? அல்லது இல்லாத ஒன்றிலிருந்து தோன்றி இல்லாமற் போன ஒன்றா? அப்படியும் இல்லாவிட்டால், ஒன்றுமில்லாத ஒன்றில் இருந்து தோன்றிய ஒரு பருப்பொருளின் சேர்க்கையா என்று கேட்டால், அது எதுவும் இல்லை என்று தான் நான் கூறுவேன்; இன்னும் ஏதோ ஒரு வகையில் பார்த்தால், அது ஏற்கனவே இருந்ததாகவும் கூறலாம், அதன் மூலம் தான் இந்த புலப்படும் மற்றும் கூட்டு வடிவங்களை அது பெற்றிருக்கும்.
அத்தியாயம் 7. கடவுள் வெறுமையிலிருந்தே விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் சிருஷ்டித்தார்
7. இவை அனைத்தும் உம்மில் இருந்தே அன்றி, வேறு எங்கிருந்து வந்திருக்கக்கூடும்? இருத்தல் அனைத்தும் இருப்பது உம்மிடமே. உம்மை விட்டு விலகி தொலைவுக்கு செல்லும் எதுவும் – அது இடம் சம்பந்தப்பட்ட தூரம் அல்ல – அது உமக்கு உகந்ததாக இருப்பதில்லை. ஆகையால், ஆண்டவரே, நீர் ஒரு இடத்தில் ஒரு பொருளாகவும், மற்றொரு இடத்தில் மற்றொரு பொருளாகவும் இருப்பதில்லை, மாறாக, நீர் எப்போதும் ஒருவராகவும், ஒரே ஒருவராகவும், ஈடிணையில்லாதவராகவும் இருக்கிறீர். ஆகையால், நாங்கள் உம்மை நோக்கி இவ்வாறு சொல்கிறோம்; பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், நீரே சர்வவல்லமையுள்ள கர்த்தர். ஆதியில் உம்மிடமிருந்து, உம் வழியாக, உமது தன்மையிலிருந்து பிறந்த ஞானம் மற்றும் விமரிசையால் வெறுமையில் இருந்து அனைத்தையும் படைத்தீர். நீரே வானத்தையும் பூமியையும் படைத்தீர். அதுவும் உம்மில் இருந்து அல்ல. அப்படி உண்டாக்கியிருந்தீர் என்றால், அது உமது ஒரே குமாரனுக்கும் உமக்கும் சரிசமமாகவும் ஒத்ததாகவும் இருந்திருக்கும். ஆகவே உம்மால் இல்லாத எதுவும் உமக்கு சமமாக இருப்பது எந்த வகையிலும் சரியாக அமையாது. மூவர் ஒருவராகவும், ஒருவர் மூவராகவும் திரித்துவ ஐக்கியத்துடன் இருக்கும் எம் தேவனே, உம்மைத் தவிர வேறு எவரும், எங்கிருந்தும் உருவாக்கவில்லை. ஆகையால், நீர் வெறுமையிலிருந்து, பூஜ்ஜியத்தில் இருந்து வானம் பூமி மற்றும் பெரியவை, சிறியவை யாவையும் சிருஷ்டித்தீர். ஏனென்றால், எல்லையில்லா ஆகாயத்தையும் சிறியதான பூமியையும் கூட படைத்தீர். எல்லா நல்ல விஷயங்களையும் படைத்த நீர் சகலத்துக்கும் வல்லவர் மற்றும் நல்லவர். வானத்தையும் பூமியையும் படைத்த நீர் வேறு எதையும் கொண்டு அவற்றை சிருஷ்டிக்கவில்லை. பூஜ்ஜியத்திலிருந்தே நீர் அவற்றைப் படைத்தீர். இந்த இரண்டு படைப்புக்களில் ஒன்று உமக்கு அருகிலும், மற்றையது எதுவுமே இல்லாத வெறுமைக்கு அருகிலும் இருக்கின்றன. ஒன்றுக்கு நீர் மேன்மையானவராகவும், வெறுமையான மற்றொன்று உமக்குத் தாழ்ந்ததாகவும் இருக்கிறது.
அத்தியாயம் 8. ஆதியில் வானமும் பூமியும் படைக்கப்பட்டன; பின்னர் ஆறு நாட்களில் வெறுமையில் இருந்து உலகம் சிருஷ்டிக்கப்பட்டது
8. ஆனால் என் தேவனே, மோட்சாதி மோட்சம் என்பது உமக்காக இருந்தது; ஆனால், மானிடப் புத்திரருக்குக் காணவும் தொட்டுணரவும் நீர் கொடுத்த பூமி, இப்போது நாம் பார்ப்பது மற்றும் தொடுவது போன்று அன்று இருந்ததில்லை. அது கண்ணுக்குத் தெரியாததும் எந்த வடிவமும் இல்லாமல் இருந்தது. இதற்கு சாட்சி பகரும் விதமாக, பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது என்று ஆதியாகமம் 1:2 கூறுகிறது. ஆதியில் பூமியின் மீது ஒளி இருக்கவில்லை. ஆழமான ஒரு இருள் அதை சூழ்ந்திருந்தது. ஆழமான பகுதியில் காணப்பட்ட இருளைப் பார்க்கிலும், ஆழத்தின் மேற்பகுதியில் இருள் கவிந்திருந்தது. இப்போது காணக்கூடிய இந்த ஆழமான கடல் நீர், அதன் ஆழத்தில் கூட இயற்கைக்கு ஏற்ற ஒளியைக் கொண்டுள்ளது. அதன் அடிப்பகுதியில் உள்ள மீன்கள் மற்றும் பிற ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கு மட்டுமே அந்த ஒளியைக் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே இந்தப் பூமி முழுவதும் எந்தவொரு உருவ அமைப்பையும் இல்லாத வெறுமையாகவே இருந்தது. இருப்பினும், தனக்குள் எதையும் உருவாக்கக்கூடிய நிலையில் அப்போது இருந்தது. ஆண்டவரே, நீர் இந்த உலகத்தை உருவமற்ற ஒரு பொருளாகவே படைத்திருந்தீர். வெறுமையிலிருந்து காணக்கூடிய வடிவமாக இதைப் படைத்தீர். அப்படிப் படைத்த இந்த உலகத்தை, மானிடப் புத்திரர்களாகிய நாங்கள் கண்டு, தொட்டுணர்ந்து வியக்கும் அளவுக்கு மகத்தான விடயங்களை நீர் உருவாக்கினீர். இதில் மிகவும் சிறப்புடையது என்னவென்றால், அது விண்ணகமே. இங்கே நீர் இரண்டாம் நாளில் வானத்தைப் படைத்தீர். அதேநேரம், வானத்துக்கு கீழேயுள்ள நீரையும், மேலேயுள்ள நீரையும் இரண்டாக வகுத்திருந்தீர். ஒளி உண்டாக்கப்பட்ட அடுத்த தினத்தில் வானம் தோன்றட்டும் என்று சொன்ன போது, வானம் தோன்றியது. அந்த வானத்துக்கு விண்ணகம் என்ற பெயரைச் சூட்டினீர். இதை ஆதியாகமம் 1:6-8 இவ்வாறு கூறுகிறது: “பிறகு தேவன், இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது! என்றார். தேவன் காற்றின் விரிவை உருவாக்கி, தண்ணீரைத் தனியாகப் பிரித்தார். தண்ணீரில் ஒரு பகுதி காற்றிற்கு மேலேயும், மறுபகுதி காற்றிற்குக் கீழேயும் ஆனது. தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இவை இரண்டாம் நாளில் சிருஷ்டிக்கப்பட்டவை ஆகும்” என்கிறது. அப்படிப்பட்ட வானத்தை நீர் விண்ணகம் என்று அழைத்தீர், அதுவே இந்த பூமி மற்றும் கடலின் சொர்க்கம் எனப்படுகிறது. அதுவே மற்றைய எல்லா நாட்களுக்கு முன்பு நீர் உருவாக்கிய உருவமற்ற பொருளுக்கு ஒரு புலப்படும் வடிவத்தை அளித்தீர். மூன்றாம் நாளில் நீர் இவற்றை உருவாக்கினீர். நீர் இவை யாவட்ருக்கும் முன்பே மோட்சத்தை உருவாக்கினீர், அது தான் மோட்சாதி மோட்சம் என்று அழைக்கப் படுகிறது. என் தேவனே, ஆரம்பத்தில் நீர் மண்ணுலகையும் விண்ணுலகையும் வெறுமையில் இருந்தே படைத்தீர். ஏனெனில் நீர் படைக்கும் முன் அது வெறுமையாகவும் எந்த ஒரு வடிவத்தையும் தன்னகத்தே கொண்டிராமல் இருந்தது. கண்ணுக்குப் புலப்படாமலும், அதன் உள்ளும் புறமும் இருளின் ஆழத்தில் மூழ்கி இருக்கக் காணப் பட்டது. ஏனென்றால், அந்த உருவமற்ற பூமி, அதன் உருவமற்ற தன்மை, இதில் கிட்டத்தட்ட எதுவும் இல்லை என்ற கூறவேண்டும். ஆனால் மாறக்கூடிய இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே. அவை அனைத்தும் முன்னோக்கி நகர்ந்து செல்லும் நிலையில் இருந்தன. நேரமும் காலமும் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உணரவும் அளவிடவும் முடியும் என்பதையும் இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை எமக்கு உணர்த்துகிறது. படைக்கப்பட்டுள்ள உருவங்களின் தன்மைகள் பலமடங்காக மாற்றமடைந்து அவை கால நேர மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதே சமயம் மேலே சொன்ன கண்ணுக்குத் தெரியாத பூமியின் பொருளின் வடிவங்கள், அதாவது மறைந்திருக்கும் மண்ணுலகு பற்றியே இங்கு ஆராயப்பட்டுள்ளது.
அத்தியாயம் 9. விண்ணகம் என்பது ஒரு அறிவார்ந்த படைப்பு, ஆனால் இந்தப் பூமியோ படைக்கப்பட்ட நாட்களுக்கு முன்பு கண்ணுக்கு தெரியாததாகவும் உருவமற்றதாகவும் இருந்தது.
9. இதன் விளைவாக, உமது அடியாரின் ஆசானான ஆவியானவர், தொடக்கத்தில் நீர் எவ்வாறு வானத்தையும் பூமியையும் படைத்தீர் என்பதைக் குறித்து விவரித்த போது, நாட்களையும் நேரத்தையும் பற்றி எதுவும் கூறாமல் மௌனம் காத்தார். ஆரம்பத்தில் நீர் விண்ணகமான மோட்சத்தை படைத்தபடியால், அது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு மிகவும் அறிவார்ந்த படைப்பாகும். அது உம்மோடு இணைந்திரா விட்டாலும், திரித்துவம் என்பது உமது நித்தியத்தில் ஒரு பங்காளியாக விளங்குகிறது. உம்மைப் பற்றிய அந்த மகிழ்ச்சியான சிந்தனையின் இனிமையில் மூழ்கி இருப்பதன் காரணமாக, அது என்றும் மாற்றம் கொள்ளாமல் இருக்கிறது. மேலும், படைக்கப்பட்ட அந்தத் தருணத்திலிருந்து, உம்முடன் ஒன்றித்திருக்கிறபடியால், காலத்தின் அனைத்து மாற்றங்களையும் மிஞ்சி விண்ணகமானது தனிப் பெருமையுடன் திகழ்கிறது. ஆனால் இந்த உருவமின்மை – அதாவது இந்தப் பூமி கண்ணுக்குத் தெரியாததாகவும் எந்தவொரு வடிவமும் அற்றதாக இருந்தது – அது நாட்களைக் கொண்டு கணக்கிடப்படவில்லை. ஏனெனில், எங்கு உருவமோ ஒழுங்கோ இல்லையென்றால், அங்கு எதுவும் வருவதும் இல்லை அதைக்கடந்து போவதுமில்லை. அப்படியான ஒன்று இல்லாத இடத்தில், நிச்சயமாக நாட்களோ அல்லது நேரங்களின் இடைவெளிகளோ இருப்பதில்லை.
அத்தியாயம் 10. அவர் உண்மையான ஒளியில் வாழவும், புனித நூல்களில் கூறப்பட்டுள்ள தேவ இரகசியங்களைப் பற்றி அறிவுறுத்தப்பட வேண்டுமெனவும் கடவுளிடம் இறைஞ்சுகிறார்
10. ஓ! நான் கேட்பதெல்லாம், சத்தியம், என் இதயத்தின் ஒளி மட்டுமே என்னுடன் பேசட்டும்! என் மனதின் இருள் அல்ல. நான் இருளுக்குள் அகப்பட்டுக்கிடக்கிறேன். ஆனாலும், நான் உம்மை அதிகமாக நேசிக்கிறேன். நான் வழிதவறிய செம்மறியைப் போல இருந்தாலும், உமது திருவடியை நோக்கி வருகிறேன். என்னைத் திரும்பி வரச் சொல்லும் உமது குரலை நான் செவிமடுத்தேன். அமைதியற்றவர்களின் ஆரவாரங்கள் காரணமாக, உமது குரலை நான் தெளிவாகக் கேட்கவில்லை. ஆனால், இப்போது இதோ உமது நீரூற்றை நோக்கி நான் மூச்சிரைக்க ஓடிவருகிறேன். யாரும் என் பாதையைத் தடை செய்ய வேண்டாம்; அந்த தெய்வீக நீரூற்றில் நீரருந்தி வாழ எனக்கு பாக்கியம் கிட்டும். நான் வாழும் இந்த வாழ்வு எனக்குரிய வாழ்வாக இருக்க வேண்டாம். ஏனெனில், நான் வாழ்ந்த வாழ்வு மிகவும் மோசமான ஒரு வாழ்வு. எனது மரணத்தை நானே தருவித்துக்கொள்பவனாக இருந்தேன். ஆனால், உம்மில் நான் உயிர் பெறுகிறேன். என்னிடம் பேசும்; என்னை அறிவுள்ளவனாக ஆக்கியருளும். உமது புனித நூல்களில் நான் நம்பிக்கை கொண்டேன். அவைகளில் காணப்பட்ட வார்த்தைகள் இறை வார்த்தைகளாகவும் எனக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியவனவாகவும் ஆழமானவையாகவும் இருந்தன.
அத்தியாயம் 11 – கடவுள் அவருக்காக எவற்றையெல்லாம் வெளிப்படுத்தக் கூடும்?
11. ஆண்டவரே, நீர் நித்தியமானவர், என்றும் அழியாத் தன்மையை மட்டுமே கொண்டவர் என்று ஏற்கனவே என் அகச் செவியில் உரத்த குரலில் என்னிடம் கூறியுள்ளீர். இதுகுறித்து, 1திமொத்தேயு 6:1-6 இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “அவர் ஒருவரே என்றும் வாழ்பவர். அவர் யாராலும் அருகில் நெருங்கி வரமுடியாத ஒளியில் வாழ்கிறார். எந்த மனிதனும் அவரை ஒரு போதும் பார்த்ததில்லை. யாராலும் அவரைப் பார்க்கவும் முடியாது.” எந்த வடிவத்தினாலோ அல்லது இயக்கத்தாலோ உம்மை ஒருபோதும் மாற்ற முடியாது. அதேநேரம், உமது சித்தம் காலத்துக்காலம் மாறுவதோ அல்லது மாற்றமடைவதோ கிடையாது. உமது பார்வையில் எனக்கு அனைத்தும் தெளிவாகி விட்டது. அதை மேலும் தெளிவு படுத்தியருள வேண்டுமென்று உம்மை நான் தாழ்மையுடன் இறைஞ்சுகிறேன். அந்த வெளிப்பாட்டில் நான் தெளிவுபெற்று உமது கருணைமிகு சிறகுகளுக்குள் நான் அடைக்கலம் காண்பேனாக. ஆண்டவரே, நீராக இல்லாமல், அனைத்து விதமான இயற்கையையும் அது கொண்டுள்ள அனைத்து பொருட்களையும் நீரே படைத்துள்ளீர் என்று என் அகச்செவிகளில் வலுவான குரலில் என்னிடம் உரைத்திருக்கிறீர். இருத்தலின் இல்லாத எதுவும் உம்மிடமிருந்தே வருகின்றன. உம்மைவிட்டு விலகிச் செல்லும் எந்தவொரு விருப்பம் மற்றும் குணம் போன்றவை தாழ்வான ஒரு நிலையை நோக்கியே செல்கிறது. அத்தகைய ஒரு செயல் குற்றத்துக்குள்ளும் பாவத்துக்குள்ளும் எம்மை இட்டுச் செல்லும். எவருடைய பாவமும் உம்மைக் காயப்படுத்தவோ அல்லது உமது ஆட்சியின் ஒழுங்கை – அது முதலாவதாக இருந்தாலும், கடைசியாக இருந்தாலும் – உம்மைத் தொந்தரவு செய்யவோ போவதில்லை. உமது பார்வையில் இது எனக்கு தெளிவாக உள்ளது. மேலும் மேலும் என்னைத் தெளிவுபடுத்த வேண்டுமென நான் உம்மை இரந்து மன்றாடுகிறேன். அந்த வெளிப்பாட்டில் நான் மேலும் தெளிவுபெற்று உமது கருணைமிகு சிறகுகளுக்குள் அடைக்கலம் காண்பேனாக.
12. நீர் ஒருவராக மட்டும் இன்றி, உருவாக்கம் அதன்பால் கொண்டிருக்கும் இயல்புகளையும் தன்மைகளையும் நீர் தான் படைத்தீர் என்று மீண்டும் என் அகச் செவிகளில் நீர் மீண்டும் உரத்துக் கூறினீர். அதேபோல, அந்தப் படைப்புகள் நிரந்தரமானவை அல்ல என்றும், உம்மிடமிருந்து வலிமையைப் பெறுகிற உயிரினம் மட்டுமே மகிழ்ச்சிகொள்கிறது என்றும் மொழிந்தீர். ஏனென்றால், உமது பிரசன்னம் அதனுடன் எப்போதும் இருக்கும் என்பதால், மாற்றத்துக்குள் அது உட்படுவதில்லை. அது தனது அனைத்து அன்பையும் பாசத்தையும் உம்மீது வைத்திருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த நேரத்திலும் நீட்டிக்கவோ அல்லது கடந்த காலத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தவற்றை நினைவில் வைத்திருப்பதையோ மாற்றத்துக்குள் தன்னை உட்படுத்திக் கொள்வதோ இல்லை. அப்படிப்பட்டவர்கள் இருந்தால், உமது ஆசீர்வாதத்தை பற்றிக் கொண்ட அவர்கள் பாக்கியவான்கள்; அங்கே என்றென்றும் வாழ்ந்து, அதை அறிவூட்டுகிறவர்களும் பாக்கியவான்கள்! உம்முடைய வாசஸ்தலத்தைவிட உன்னதமான எதையும் நான் நினைத்துப் பார்க்க முடியாது. அதுதான் இது பரலோகம் எனும் மோட்சம், அது காணக்கூடிய பரலோக ஸ்தலங்களுக்கு மேலே அது உமது மக்கள் வசிக்கும் இறைவனின் வீடு. அதில் இருந்து விலகிச் செல்லாமல் உங்கள் மகிழ்ச்சியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இது ஒரு தூய்மையான மற்றும் அமைதியான வாசஸ்தலம். பரலோகத்தில் உள்ள உங்கள் நகரத்தின் குடிமக்களான பரிசுத்த புனிதர்களின் நிரந்தர அமைதியால் பராமரிக்கப்படுகிறது. அங்கே தூய்மைப் படுத்தப்பட்ட இதயமானது புனிதரோடு இணைந்து தேவனுடைய புகழைப் பாடி ஆர்ப்பரிக்கும்.
13. உம்மைவிட்டுத் தூர விலகிச் சென்ற ஆன்மாவானது, உம்மீது மட்டுமே தாகம் கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளட்டும். ஏனெனில், அது வடிக்கும் கண்ணீரே அதைப் போஷிக்கும் ஆகாரமாகி விட்டது. ஏனெனில், அனுதினமும், எவரோ ஒருவர் அந்த ஆன்மாவை நோக்கி ‘உன் கடவும் எங்கே’ என்ற கேள்வியைத் தொடுத்தவண்ணம் இருப்பதைக் காணக்கூடியதாயிருக்கின்றது. ஆனால், அந்த ஆன்மா இப்போது உம்மிடம் ஒன்றே ஒன்றைத் தான் தேடுகிறது; அது என்னவென்றால், தன் வாழ்நாள் முழுவதும் உமது வாசஸ்தலத்தில் உம்மோடு குடியிருக்க வேண்டும் என்று விரும்புகிறது. உம்மையன்றி அதற்கு வேறு கதி இல்லை. நீர் என்றும் மாறாதவராய், ஒரே மாதிரியாக இருப்பதால் நாட்களோ, காலங்களோ, வருடங்களோ எதுவும் உம்மைப்பொறுத்தவரையில் நிரந்தமானதல்ல. ஆகவே, தோல்வி காணாத உமது நித்தியம் எத்தனை உயர்வானது என்பது இங்கு நிரூபணமாகிறது. இதனால் வெறுமனாய் அலைந்து திரியாது, நேரம் மற்றும் கால வரையறைகளுக்கு அப்பாற்பட்ட எனது ஆன்மா, உமது வாசஸ்தலத்தில் தஞ்சம் அடைவதாக. உமது பார்வையில் இது எனக்கு தெளிவாக உள்ளது. மேலும் மேலும் என்னைத் தெளிவுபடுத்த வேண்டுமென நான் உம்மை இரந்து மன்றாடுகிறேன். அந்த வெளிப்பாட்டில் நான் மேலும் தெளிவுபெற்று உமது கருணைமிகு சிறகுகளுக்குள் அடைக்கலம் காண்பேனாக.
14. மாற்றத்துக்கு தம்மை உட்படுத்தக்கூடிய சிறிய, எளிமையான படைப்புகளுக்குள் எண்ணிலடங்கா உருவமற்ற தன்மை ஒளிந்து கிடக்கின்றது. அப்படி ஒருவர் இல்லாவிட்டால், எல்லா உருவங்களும் அறுகிப்போய், அழிந்து, உருவமற்ற தன்மை மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு காலகட்டத்தில், ஒரு பொருள் ஒரு உருவத்திலிருந்து இன்னொரு உருவமாக மாற்றம் பெறும் என்று, வேறு யார்தான் சொல்லியிருக்கக் கூடும்? இது சந்தேகத்திற்கு இடமின்றி சாத்தியமற்றது, ஏனென்றால் இயக்கம் இல்லாமல் நேரம் இருக்க முடியாது. அத்தோடு உருவம் இல்லாதபோது அங்கே மாற்றம் நிகழும் என்று எப்படிக் கூற முடியும்?
அத்தியாயம் 12. உருவமற்ற பூமியிலிருந்து, கடவுள் மற்றொரு வானத்தையும், புலப்படக்கூடிய பூமியையும் படைத்தார்
15. இவ்விதமான சிந்தனைகளின் பின்னணியில் செயல்படும் நீர், எனக்குத் தந்த அறிவாற்றல் மூலம் எண்ணில் உத்வேகத்தை உண்டுபண்ணி என்னைத் தட்டச் செய்தீர், நான் தட்டுவதைக் கேட்டு எனக்காகத் திறந்தீர்; இதை மத்தேயு 7:7 “தொடர்ந்து கேளுங்கள், தேவன் கொடுப்பார். தொடர்ந்து தேடுங்கள், கிடைக்கும். தொடர்ந்து தட்டுங்கள், திறக்கப்படும்” என்று அழகாக எடுத்துரைக்கின்றது. இருப்பினும், நீர் செய்த இரண்டு விஷயங்களை நான் காண்கிறேன். அது காலத்தின் ஓட்டத்தைப் பற்றி அல்ல, ஏனெனில் இவை எதுவும் உம்முடன் நித்தியத்தைப் பகிர்ந்து கொள்பவை அல்ல. முதலாவது, உருவ அமைப்பைக் கொண்டிருந்தாலும், மாற்றத்துக்கு உட்படக் கூடியதாயிருந்தாலும், உம்மில் உள்ள நித்தியத்தையும், மாறாத தன்மையையும் எப்போதும் அனுபவிக்கிறது. இரண்டாவது, உருவமற்றது, இயக்கத்தின் போதும், ஓய்ந்திருக்கும்போதும் அது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றக்கூடியது அல்ல. அது காலத்தின் வரைமுறைகளுக்கு உட்பட்டது. அப்படியிருந்தும், நீர் அதை உருவமற்ற நிலையில் அதை அப்படியே விட்டுவிடவில்லை. ஆதியில் நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர் – நான் பேசிய இந்த இரண்டு விஷயங்கள் குறித்த சாராம்சம் இவைதான். “பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது” என்று ஆதியாகமம் 1:2 இல் இதற்கு சான்று பகர்கிறது. வடிவங்களற்ற அல்லது வெறுமையான ஒரு நிலைக்கு உருவம் கொடுக்க முடியாத ஒரு சாராருக்கு இவற்றின் தன்மைகளை அறிந்துகொள்ள மேற்கூறப்பட்ட வார்த்தைகள் பெரிதும் உதவுகின்றன. இதிலிருந்துதான், மற்றுமொரு ஆகாயம், பூரணத்துவம் நிறைந்த மற்றும் கண்டுணரக்கூடிய பூமி, அதனுள்ளே வழிந்தோடும் அழகான நீர்நிலைகள், மற்றும் படைப்பு குறித்த அனைத்து விதமான உரையாடல்கள் போன்றவற்றில் கூறப்பட்ட யாவும் படைக்கப்பட்டன. நாட்கள் உருவாகின. இவை இயக்கத்திலும் வடிவத்திலும் மாற்றத்துக்கு தம்மை உட்படுத்தக் கூடியவை. ஆகவே, நேரத்தின் ஆளுமைக்கு உட்பட்டவை.
அத்தியாயம் 13. அறிவார்ந்த விண்ணகம் மற்றும் உருவமற்ற பூமி படைக்கப்பட்டபின் மற்றொரு நாளில் ஆகாயம் படைக்கப்பட்டது
16. இதற்கிடையில் என் கர்த்தரே, இதை நன்றாகப் புரிந்துகொண்டும் உமது பரிசுத்த வேதாகமம் சொல்வதைக் கேட்கும்போதும், ஆரம்பத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்; ஆனால் பூமி கண்ணுக்குத் தெரியாததாகவும் எந்த வடிவமும் இல்லாமல் இருளில் மூழ்கியும் இருந்தது. இருப்பினும் நீர் எந்த நாளில் மற்றும் எந்த நேரத்தில் இவற்றைப் படைத்தீர் என்று எதிலும் சொல்லப்பட்டிருக்கவில்லை. நான் விளங்கிக் கொண்டதெல்லாம் விண்ணகம் என்று கூறப்படுவது, விண்ணகத்தில் இருக்கும் மோட்சம். வடிவங்களற்ற வானகம். இதை அறிவுசார் கண்ணோட்டத்துடன் நான் புரிந்துகொண்டேன், பகுதி பகுதியாகவோ அல்லது இருளிலோ அல்லது தெளிவற்ற கண்ணாடியூடாகவோ அல்ல. இதற்கு ஆதாரமாய், 1 கொரிந்தியர் 13:12 இல், “தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதியே எனக்குத் தெரியும். தேவன் என்னை அறிந்து கொண்டது போல அப்போது நான் முழுக்க அறிவேன்” என்று கூறுகிறது. முதலில் ஒன்றும், பின்னர் மற்றொன்றும் என நடந்தேறும் நேரத்தின் பரிமாணங்கள் அங்கே இல்லை. அங்கே உருவங்கள் இல்லை, அது, இது என்ற வித்தியாசம் இல்லை. நான் விளங்கி கொண்டதும் இதுதான். ஆதியில் தேவன் விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் சிருஷ்டித்தபோது, நாட்கள் மற்றும் நேரங்கள் செய்யக்கூடிய மாற்றங்கள் என்று அங்கு எதுவுமில்லை. ஆகவே, இது இருவகையான காரணிகளை சுட்டிக்காட்டுகிறது. ஒன்று, தொடக்கம் முதலே உருவ அமைப்பைக் கொண்டிருக்கிறது; மற்றையது, எந்த ஒரு உருவ அமைப்பையும் கொண்டிராததாக இருக்கிறது. ஒன்று, விண்ணகத்து மோட்சம் என்னும் விண்ணகம், மற்றையது பூமி, அது கண்ணுக்குப் புலப்படாததும், வடிவமற்ற தன்மை கொண்டதாகவும் இருந்தது. பரிசுத்த வேதாகமமும் அந்தப் பூமி பற்றியேதான் தொடர்ச்சியாகப் பேசுகிறது. இரண்டாவது நாளில், ஆகாயமானது உருவாக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு அதற்கு விண்ணகம் என்று பெயரிடப்பட்டது. நாட்களைப் பற்றி குறிப்பிடாமல் எந்த வானத்தைப் பற்றி அவர் முன்பு பேசினார் என்பதை இது நமக்கு எடுத்துரைக்கிறது.
அத்தியாயம் 14. மறை நூல்களின் மகத்துவமும் அதன் விரோதிகளும்
17. உமது வார்த்தைகளில் பொதிந்திருக்கும் கருத்தாழம் எத்தனை அற்புதமானது! அது மேலோட்டமாகத் தரும் பொருள் சிறியோருக்கும், ஆரம்பநிலை வாசகர்கர்களுக்கும் எத்தனை இன்பத்தை வாரி வழங்குகிறது! என் தேவனே, அதனால் தான் கூறுகிறேன், அதன் ஆழம் என்பது மிகவும் அற்புதமானது என்று! அதைப் பார்ப்பதும் கௌரவிப்பதும் பிரமிப்பை ஊட்டுவதாகவும் வியப்பை ஏற்படுத்துவதாகவும், அன்பைப் பொழிவதாகவும் இருக்கிறது. அதன் எதிரிகளை நான் கடுமையாக வெறுக்கிறேன். உமது இரு முனைகள் கொண்ட வாளால் அவர்களை வெட்டி வீழ்த்திவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து மறைநூலுக்கு எதிராகத் திரும்ப மாட்டார்கள். அவர்கள் உமக்காக வாழவேண்டும் என்ற காரணத்தால், அவர்கள் தாங்களாகவே இறந்துபோக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதியாகமம் பற்றி தடுமாற்றம் கொள்ளாதவர்களும், அதை வியந்து பாராட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். தேவனுடைய ஆவியானவர் தம்முடைய ஊழியனாகிய மோயீசனின் மூலமாக இவைகளை எழுதினார். அதேநேரம் இந்த வார்த்தைகள் இவ்வாறாகத்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை விரும்பவில்லை. நீங்கள் சொல்வது போல் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பவில்லை, ஆனால் நாங்கள் சொல்வது போல் புரிந்து கொள்ள வேண்டும் என்றே விரும்பினார். எங்கள் அனைவரின் தந்தையாகிய தேவனே, உம்மை நடுவராகக் கொண்டு இருப்பவனுக்கு நான் மேற்கண்டவாறே பதிலளிக்கிறேன்.
அத்தியாயம் 15. விண்ணக மோட்சம் பற்றித் தரக்குறைவாய்ப் பேசுபவர்களுக்கு எதிராக அவர் வாதிடுகிறார்
18. படைத்தவரின் உண்மையான நிரந்தரத் தன்மையைப் பற்றி – அதாவது, இயல்பும், பொருளும், விருப்பமும் என்றும், எப்போதும் மாற்றமடையாது உறுதியுடனிருக்கும். இந்த உண்மை என் காதுகளில் ஒலிப்பதை பொய் என்று சொல்லலாகுமா? ஆதலால், அவர் இப்போது ஒன்றையும் வேறொரு சமயத்தில் வேறொன்றையும் விரும்புவதில்லை. அவர் விரும்புகிற அனைத்தையும் ஒரேயடியாக, ஒரேவிதமாக விரும்புபவர். மீண்டும் மீண்டும் சொல்வதோ, அல்லது இப்போது ஒன்றும் அப்போது ஒன்றுமாக அவர் எதையும் சொல்வதில்லை. தான் முன்பு விரும்பாததை பின்னொரு சந்தர்ப்பத்தில் விரும்புபவராகவும், ஏற்கனவே விரும்பியதை பின்னர் விரும்பாமல் இருப்பவரும் அல்லர். அப்படி இருக்கும் நிலை மாறக்கூடியது, அது நிரந்தரமானதல்ல. ஆனால், எம் தேவன் என்றும் நித்தியமானவர், அவர் என்று மாறுபவரல்ல. அதுபோலவே, வருங்காலம் குறித்த விஷயங்கள் பற்றிய எதிர்பார்ப்பு நிகழ்கால நிகழ்வாக மாறுகிறது என்றும், கடந்து போனதும் இதே நிகழ்வு நினைவாக மாறுகிறது என்றும் என் அகச் செவிகளில் உரைத்திருக்கிறார். ஆகவே, இவ்வாறு மாறுபடும் எல்லா எண்ணங்களும் மாறக்கூடியவையே, மாறக்கூடியது எதுவுமே நிரந்தரமானதல்ல. ஆனால் நம் கடவுள் என்றும் நிரந்தரமானவர். அவர் அழிவில்லாதவர். இந்த விஷயங்களை நான் சுருக்கி ஒன்றாக இணைக்கிறேன். என் தேவன் ஒரு நித்தியரான கடவுள் என்று நான் காண்கிறேன். அவர் எந்த ஒரு படைப்பையும் தனது புதிய விருப்பத்தால் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அவரது அறிவு என்பது தாற்காலிகமானதல்ல, நிரந்தரமானது.
19. “ஆட்சேபனையாளர்களே, இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? நீங்கள் அனைவரும் இன்னும் இந்த விஷயங்களை பொய் என்று சொல்கிறீர்களா?” அதற்கு அவர்கள் பதிலாக “இல்லை” என்று சொல்கிறார்கள். “அப்படியென்றால், பிறகென்ன? ஏற்கனவே உருவான ஒவ்வொரு பொருளும், அவற்றின் வடிவத்தைப் பெற்றுக்கொண்ட அனைத்துப் பொருட்களும் ஒரு உயர்ந்த, மிகவும் நல்லவரான, மாட்சிமை மிக்க ஒருவரிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். அப்படியானால், அப்படிப்பட்டவரிடமிருந்து வந்தவை என்பது பொய்யாகுமா?” ‘நாங்களும் இதை மறுக்கவில்லை’ என்று தான் அவர்களும் கூறுகிறார்கள். அப்படியென்றால், உண்மையுள்ளவரும் நிரந்தரமானவருமான தேவனோடு நிலையாக ஒன்றித்திராமல், அவரை விட்டு அகன்றுபோய் விடாமல், மாற்றங்களுக்கும் காலம் நேரம் போன்றவற்றோடு அவற்றை பற்றிக்கொண்டு ஓடாமல், அவரைப் பற்றிய சிந்தனையில் எப்போதும் ஈடுபடும் ஒரு உன்னத நிலை இல்லையென்று மறுதலிக்கக்கூடுமா? கடவுளே, நீர் பிறப்பிக்கும் கட்டளையை மனதார ஏற்றுக்கொள்ள முன்வரும் எவருக்கும் உமது அன்பை வெளிப்படுத்தும். அதுவே அவருக்குப் போதும். அவர் என்றும் உம்மை விட்டு விலகிச் செல்வதில்லை. இது “இறைவன் குடியிருக்கும் வாசஸ்தலம்.” இது ஒரு பூமிக்குரிய பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடு அல்ல. ஆனால் அது ஒரு ஆவிக்குரிய வாசஸ்தலம். அது எப்போதும் பழுதற்றதாக இருப்பதால் உமது நித்தியத்தில் பங்கு கொள்கிறது. நீர் அதில் என்றென்றும் நிலைத்திருக்கிறீர்; என்றும் மாறாத ஒரு சட்டத்தை நீர் அதற்குக் கொடுத்திருக்கிறீர். ஆயினும், அது உம்முடன் நித்தியமானது அல்ல, ஆகவே அதற்கு ஆரம்பம் என்ற ஒன்று இருந்தது – ஏனென்றால் அது உருவாக்கப்பட்டது.
அதற்கு முன் நாம் நேரத்தைக் காணவில்லை என்றாலும், எல்லாவற்றிற்கும் முன்பாக ஞானம் தான் உருவாக்கப்பட்டது. “எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது; கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது” என்று சிராக் 1 4 இல் சான்று கொடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஞானம் வெளிப்படையானதும், இணை நித்தியமானதும் மற்றும் உமக்குச் சமமானதும் உம்மை ஒத்ததாகவும் இருக்கிறது. எம் தந்தையாகிய இறைவன் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. அவதான் ஆரம்பம். அந்த ஆரம்ப காலத்திலேயே நீர் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் படைத்தீர். இந்தப் பகுதியில், ஞானம் என்பது சிருஷ்டிக்கப்பட்ட ஒன்று. அது அறிவுசார் தன்மையை உடையது. ஒளியைப் பற்றிய எண்ணத்தில் உதித்த ஒளிதான் இது. படைக்கப்பட்டிருந்தபோதிலும், அது ஞானம் என்ற பெயராலேயே அறியப்படுகிறது. ஒளிகொடுக்கும் ஒளிக்கும், ஒளியைப்பெற்று ஒளிரும் ஒளிக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவதுபோல, படைக்கும் ஞானம் – படைக்கப்பட்ட ஞானம் போன்ற இரண்டுக்குமிடையில் வித்தியாசம் காணப்படுகிறது. இதேபோல் நியாயப்படுத்தும் நீதிக்கும், நியாயப்படுத்தப்பட்ட நீதிக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. நாங்கள் உமது நீதி என்றும் அழைக்கப் படுகிறோம். ஏனென்றால், உமது ஊழியரான கொரிந்தியர் இவ்வாறு கூறுகிறார்: “நாம் அவரில் கடவுளின் நீதியாக ஆக்கப்பட வேண்டும் என்று. “கிறிஸ்துவிடம் பாவம் இல்லை. ஆனால் தேவன் நமக்காக அவரைப் பாவம் ஆக்கினார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார்” [2 கொரிந்தியர் 5:21 ]. ஆகவே, அனைத்து படைப்புகளுக்கு முன்னமே ஞானம் என்ற ஒன்று இருந்தது. அந்த ஞானம் என்பது படைக்கப்பட்ட ஒன்று. இதுதான் உமது கற்பு என்ற மூலத்தின் பகுத்தறியக்கூடிய, அறிவுத்திறனுடைய மனம் என்பது. கலாத்தியர் 4:26 இல் கூறப்பட்டிருப்பதுபோல், “மேலிருக்கிற பரலோக எருசலேம் சுதந்தரமான பெண்ணைப் போன்றது. இதுவே நமது தாய்” என்கிறது. அதேபோல, “பூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது” என்று 2 கொரிந்தியர் 5:1 இல் கூறியிருப்பதையும் காணக் கூடியதாயிருக்கிறது. (அந்த விண்ணகத்தில் உம்மைத் துதிப்பவர்கள் அனேகர்; அதாவது விண்ணக மோட்சத்தில் உம்மைத் துதிப்பவர்கள் அனேகர். ஏனென்றால் இதுவும் கர்த்தருடைய வாசஸ்தலமாகிய விண்ணக மோட்சம்). நாம் அதற்கு முன் நேரத்தைக் காணவில்லை என்றாலும், அது அனைத்தும் படைக்கப்படுவதற்கு முன்பே படைக்கப்பட்டது. இருப்பினும், அதற்கு முன் படைத்தவரின் நிரந்தரம் தான் இருத்தலைக் கொண்டிருந்தது. அவரால் படைக்கப்பட்டதன் காரணமாகவே அது படைப்பின் தொடக்கப் புள்ளியாய் இருந்தது. நேரத்தினால் அல்ல. ஏனெனில் நேரம் என்பது அப்போது படைக்கப்பட்டிருக்கவில்லை. ஆயினும், நேரம் என்பது அதற்கேற்றவாறு அதன் சிறப்புத் தன்மையைக் கொண்டிருந்தது.
21. ஆதலால், நேரம் என்பது எம் தேவனாகிய உம்மிலிருந்து வந்தபோதும், அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏனென்றால், அது நீர் ஒருவராக இருக்கமுடியாது. ஏனென்றால், நேரம் என்பது அதற்கு முன்பு மட்டுமல்ல, அப்பொழுதும் கூட இல்லை. (அனைத்து நேரங்களிலும் உமது திருமுகத்தைப் பார்ப்பது சரியானது, அது ஒருபோதும் தவிர்க்கப்படவே கூடாது. எனவே நேர மாற்றம் ஏற்படுவதன் காரணமாக அது மாறுவதில்லை). இருப்பினும், அது குளிர்ச்சியாகவும் இருளாகவும் மாறக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது. அது ஒரு நிலையான அன்பில் உம்மிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் போது, அது முடிவில்லாத நண்பகலில் ஒளிகொடுக்கும் கதிரவனைப் போல உம்மிடமிருந்து ஒளியைப் பெற்று அதைப் பிரகாசிக்கச் செய்கிறது. இதை தேவ வாக்கியம் ஒன்று, ” உனது வெளிச்சம் இருளில் பிரகாசிக்கும். உனக்கும் துக்கம் இருக்காது. நீ நண்பகலில் உள்ள சூரியனைப் போன்று பிரகாசமாக இருப்பாய்” என்று கூறுகிறது. ஒளியும் மகிமையும் நிறைந்த இறை வாசஸ்தலமே! உன் அழகையும், உன்னை நிர்மாணித்தவரும் உரிமையாளருமான என் ஆண்டவரின் மகிமையின் இருப்பிடத்தை நான் என்றும் விரும்பினேன். நான் கால்போன போக்கில் அலைந்து திரிந்தாலும் எனது கவனமெல்லாம் உம்மீதே இருக்கக்கடவதாக. என்னையும் உமது அடைக்கலத்துக்குள் ஏற்றுக்கொள்ளும்படி உம்மை உருவாக்கிய அவரிடம் இறைஞ்சுவேன். ஏனென்றால், என்னைப் படைத்தவரும் அவரே. தொலைந்துபோன செம்மறியாட்டைப்போல நான் கால்போன போக்கில் வழிதவறி, திசைமாறி அலைந்து திரிந்தேன். ஆனால், தொலைத்துவிட்ட ஆட்டைத் தேடிக் கண்டுபிடித்ததும், இடையன் அதைத் தனது தோளில் சுமந்து பேருவகை கொள்வான். இதை லூக்கா 15:5 இல் அழகாக விவரிக்கின்றது: “இடையன் அந்த ஆட்டை அவன் கண்டுபிடித்தபோது மிகவும் சந்தோஷம் அடைகிறான். அவன் அந்த ஆட்டைத் தன் தோள்களில் சுமந்துகொண்டு தன் வீட்டை அடைவான்” என்று கூறுகிறது. ஆகவே, தேவ வாசஸ்தலத்தை நிர்மாணித்தவரே, என்னையும் உமதண்டை வரச் செய்து அடைக்கலம் தருவீர் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
22. ஆட்சேபனை தெரிவிப்பவர்களே, நீங்கள் என்ன தான் சொல்ல விழைகிறீர்கள்? மோயீசன் கடவுளின் பரிசுத்த ஊழியர் என்றும், அவர் வடித்த புத்தகங்கள் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் என நீங்கள் நம்புகின்ற போதும், நான் கொடுத்த விளக்கத்தையிட்டு நீங்கள் ஏன் முரண்படவேண்டும்? இறை வாசஸ்தலம் தேவனோடு நிரந்தரமாக இருப்பதில்லை என்றபோதிலும், விண்ணுலகைப் பொறுத்தளவில் அது நித்தியமானதொன்றல்லவா? இது 2 கொரிந்தியர் 5:1 இல் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: “பூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது” என்று மேற்கூறப் பட்டவைக்கு சான்று பகர்வதாய் அமைகிறது. காலத்தின் மாற்றங்களை நீங்கள் வீணாகப் போய் எங்கு தேடுகிறீர்கள்? ஏனென்றால் நீங்கள் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. காரணம் என்னவென்றால், அது எதிர்காலத்துக்கும், கடந்தகாலத்துக்கும் இடையில் உள்ள ஒரு தற்காலிக இடைவெளியையும் கடந்து போய்க்கொண்டே இருக்கிறது. ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடவுளுக்கு அர்ப்பணிப்புடன் வாழ்வது எப்போதும் நன்மை பயக்கும். அவர்கள் சொல்வதும் இதைத்தான். அப்படியானால், என் மனம் அதன் உள்ளுக்குள்ளே அவரது புகழ் மற்றும் மாட்சிமையைப் பற்றி ஒலித்த குரலைக் கேட்டபோது, என் மனம் எதை நோக்கி ஆர்ப்பரித்தது? அப்படியென்றால், அதுவும் பொய் என்கிறீர்களா? அல்லது படைப்புகள் உருவமற்றவையாகவும் அவை வடிவம் இல்லாதவையாகவும் இருந்தபடியால், அவை ஒழுங்கில்லாமல் இருந்தனவா? ஒழுங்கு என்ற ஒன்று இல்லாதவிடத்து, அங்கே கால, நேர மாற்றம் என்பது எப்படி சாத்தியப்படும்? இந்த வெறுமைத் தன்மை அல்லது ஒன்றுமில்லாத்தன்மைக்கு அடுத்த நிலை என்பது, வெறுமைத் தன்மை அல்ல. ஏனென்றால், அந்த ஒன்றுமில்லாத் தன்மையில் இருந்தே அனைத்தும் வந்தன. அதுவே சகலவற்றினதும் ஊற்றாக இருந்தது. ஆனால், ஆட்சேபனை தெரிவிப்பவர்களோ, இதையும் நாங்கள் மறுக்கவில்லை என்றே கூறுகிறார்கள்.
அத்தியாயம் 16. தெய்வீக சத்தியத்தை மறுப்பவர்களுடன் அவர் உடன்பட விரும்பவில்லை
23. ஓ என் தேவனே, உமது சத்தியத்தின் வழியாக என் மனதிற்கு உணர்த்தும் இவை அனைத்தும் உண்மையாக இருப்பதைக் கொண்டு, நான் உம் முன் எனது உரையாடலை சமர்ப்பிக்க விரும்புகிறேன். இவற்றை மறுப்பவர்கள் தங்களுக்கு இஷ்டம் போல் கத்திக் கூச்சலிட்டு தங்கள் குரலைத் தங்கள் கூச்சலில் ஆழ்த்திக்கொள்ளட்டும். நான் அவர்களை அமைதியாக இருக்கும்படி வற்புறுத்தவும், உமது வார்த்தை அவர்களைச் சென்றடையச் செய்யவும் முயற்சிப்பேன். ஆனால் என் தேவனே, அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் என்னை நிராகரித்தால், நான் உம்மை நோக்கி மன்றாடுவேன். அப்போது நீர் என்னிடம் மெளனமாக இராதிருப்பீராக. உண்மையை என் இதயத்துக்குள் உரைத்தருளும். உம் ஒருவரால் மட்டுமே அவ்வாறு பேச முடியும். எனது விரோதிகள் மூச்சுத் திணறி மண்ணைக் கவ்வும் படியாகவும், அவர்கள் கண்களில் அவர்களே தூசுகளை வாரி இறைத்துக் கொள்ளும்படியும் செய்வேன். எனது அறைக்குள் சென்று அங்கே உம்மை நோக்கி அன்பின் பாடல்களைப் பாடுவேன். “நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது உங்கள் அறைக்குச் சென்று கதவை மூடிவிட வேண்டும். பின்னர், உங்கள் கண்களுக்குப் புலப்படாத உங்கள் பிதாவிடம் பிரார்த்தியுங்கள். இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர் உங்கள் தந்தை. அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்” என்று மத்தேயு 6:6 இலும், “முனகலோடும் புலம்பலோடும் துதிகீதங்களை இசைப்பேன்” என்று உரோமர் 8:26 இலும் கூறப்பட்டுள்ளன. எனது யாத்திரையின்போது, ஜெருசலேமை நினைத்து அதனை நோக்கி என் இதயத்தை உயர்த்தி, ஜெருசலேமே என் தாயகம் என்றும், ஜெருசலேமே எனது அன்னையானவள் என்றும், அதற்கும் மேலே சென்று உம்மை நான் நினைவுகூருவேன். ஏனென்றால், நீரே அதன் அரசராய், அதன் ஒளியாய், தந்தையாய், ஆசானாய், கணவராய், தூய்மையான மற்றும் வல்லமை மிக்க பேருவகையாய், உவகை தரும் ஆனந்தமாய் மற்றும் சகல நன்மைகளுக்கும் பாத்திரமாய் இருக்கிறீர். நீரே மேன்மையும், மகத்துவமும் உடைய நன்மையின் வடிவமாய் இருக்கிறீர். இரக்கத்தின் வடிவமான தேவனே, அன்புகொண்ட அந்த அன்னையின் சமாதானத்தில் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். அங்கேதான் என் ஆவியின் முதல் கனிகள் இருக்கின்றன. நான் கண்ட உண்மையின் ஊற்றாக இருப்பதுவும் அவைகள் தாம். என்னை ஆட்கொண்டு, முழுமைப்படுத்தி, என்னைப் புதியதோர் பரிமாணத்துக்குள் இட்டுச்செல்லும் வரை, நான் உம்மைவிட்டு விலக மாட்டேன். உண்மையாக இருப்பவற்றை பொய்யென்று வாதம் செய்யாதவர்களையும், உமது புனித ஊழியரான மோயீசன் எழுதிய மறைநூல் வாசகங்களுக்கு மதிப்பளித்து, போற்றுபவர்களையும், அதில் உள்ளவற்றை ஏற்றுக்கொள்வோரையும் நான் எதுவும் செய்யப்போவதில்லை. ஆனால், இதை எதோ ஒன்றுடன் எந்த வகையிலாவது யாரேனும் முரண்படுவார்களாயின், அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இது ஒன்றே; என் தேவனே, நீரே என்றும் எனது விசுவாசப் பிரகடனங்களுக்கும் அவற்றுக்கெதிராக ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கும் இடையே நடுவராக இருந்து உமது தீர்ப்பை வழங்கி அருளக்கடவீராக.
அத்தியாயம் 17. ஆதியாகமம் 1:1ல் உள்ள வாசகங்கள் குறித்து அவர் ஐந்து விளக்கங்கள் தருகிறார்
24. அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: இவை உண்மையாக இருந்தாலும், மோயீசன் அந்த இரண்டு விஷயங்களையும் கவனிக்கவில்லை, தெய்வீக வெளிப்பாட்டின் மூலம், ஆதியாகமம் 1:1 கூறுவது போல், “ஆதியில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று கூறினார். பரலோகம் என்ற பெயரில் அவர் எப்போதும் கடவுளின் முகத்தைப் பார்க்கும் ஆன்மீக அல்லது அறிவுசார் படைப்பைப் பற்றியோ அல்லது மண்ணுலகம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது ஒரு வடிவமற்ற பொருளாக இருந்தது என்பது பற்றியோ அவர் குறிப்பிடவில்லை. அப்படியானால் அவர்கள் இதைப்பற்றித் தான் சொல்கிறார்கள் போலும்: மோயீசனின் உள்ளத்தில் இருந்தது இதுதான். விண்ணுலகம் மற்றும் மண்ணுலகம் போன்ற பதங்களின் வாயிலாக அவர் சொல்ல விழைந்தது கண்டுணரக்கூடிய பூமியின் பொது வடிவத்தைப் பற்றியே. ஏனெனில், பூமியைப் படைத்தபின் அதற்கடுத்து வந்த நாட்களில் கடவுள் மற்றைய யாவற்றையும் படைத்தார். பரிசுத்த ஆவியானவர் அருளிய உந்துதல் காரணமாகவே இவ்வாறான படைப்புகள் யாவும் வரிசைக்கிரமமாகப் படைக்கப்பட்டன. அவர் யார் யாரை நோக்கி இதை எழுதினாரோ அவர்கள் உடல் வலுவாலும் குணத்தில் கொடியவர்களாகவும் இருந்தனர். எனவேதான் அவர்கள் கடவுளால் படைக்கப்பட்ட கண்களுக்குப் புலப்படக்கூடிய விடயங்கள் குறித்து மட்டுமே இவ்வாறான மனிதர்களுக்குத் தெரிவித்தார்கள். இருப்பினும், பூமி கண்ணுக்குத் தெரியாதது மற்றும் உருவமற்றது என்றும் ஆழமான இருளில் மூழ்கியிருந்தது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் (அனைவருக்கும் தெரிந்த இந்த காணக்கூடிய விஷயங்கள் அனைத்தும் அந்த நாட்களில் உருவாக்கப்பட்டு ஒழுங்கமைக்கப் பட்டவை என்று பின்னர் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது) ஒருவேளை, அவர்கள் இந்த உருவமற்ற பொருள் குறித்த அர்த்தத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
25. அப்படிப்பார்க்கும்போது, இப்போது இன்னொருவர் வந்து விண்ணுலகம் மற்றும் மண்ணுலகம் போன்ற பதங்கள் இந்த உருவமற்ற தன்மையையே குறிப்பதாக இருக்கிறது என்று சொல்லக்கூடும். அப்படியானால், அந்த உருவமற்ற ஒன்றிலிருந்து தான் இந்தக் கண்ணுக்குத் தெரியும் உலகம் மற்றும் அதில் உள்ள மாறாத அனைத்து இயல்புகளும் படைக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட வானம் பூமி என்ற பெயரால் அழைக்கப்படுவதா? ஆனால் அந்த கண்ணுக்குத் தெரியாத மற்றும் காணக்கூடிய இயற்கையானது வானமும் பூமியும் என்று அழைக்கப்படுவதில்லை என்றும், அதன் விளைவாக கடவுள் தனது ஞானத்தால் உருவாக்கிய பிரபஞ்சப் படைப்பு – அதாவது ‘ஆரம்பத்தில்’ – இந்த இரண்டு வார்த்தைகளின் கீழ் புரிந்து கொள்ளப்பட்டது என்று மற்றுமொருவர் வந்து சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? ஆகவே, கடவுள் ஆரம்பத்தில், தனது ஞானத்தின் வழியாகப் படைத்த யாவற்றையும் ‘விண்ணுலகம் – மண்ணுலகம்’ என்ற பதம் ஒருசேரக் குறிக்கிறது. இருந்தபோதிலும், சகலமும் தேவனின் இயல்பிலிருந்து தோற்றம் பெற்றவை அல்ல. அவை யாவும் வெறுமையில் இருந்து, அதாவது பூஜ்ஜியத்திலிருந்தே தோற்றம் பெற்றன. ஏனென்றால், அவை கடவுள் எப்படி இருக்கிறாரோ அதே போல் இருக்கவில்லை. ஏனென்றால், அவற்றில் ஒரு குறிப்பிட்ட மாறுதல் இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அவை கடவுளின் நித்திய வீடாக நிலைத்திருக்கிறதா அல்லது மனிதனின் ஆன்மா மற்றும் உடலைப் போலவே மாறிக்கொண்டே இருக்கிறதா?) எனவே, கண்ணுக்குத் தெரியாத மற்றும் காணக்கூடிய விஷயங்கள் – ஆனால் வடிவமற்றவை, ஆனால் வடிவம் பெறும் திறன் கொண்டவை – அவற்றில் இருந்து வானமும் பூமியும் உருவாக்கப்பட்டன (அதாவது, கண்ணுக்குத் தெரியாத மற்றும் காணக்கூடிய உயிரினங்கள் போன்றவை ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டன). பூமி கண்ணுக்குத் தெரியாததும், உருவமற்றதும், இருளின் ஆழத்தில் மூழ்கியிருந்தது என்ற பதங்களைக் கொண்டு அழைக்கப்பட்டது. இருப்பினும், இந்த வேறுபாட்டுடன், பூமியானது எந்த ஒரு வடிவத்தையும் பெறுவதற்கு முன்பு, கண்ணுக்குத் தெரியாதது மற்றும் உருவமற்றது என்பது ஒரு பௌதிகம் சம்பந்தமான பொருள் என்பதையும், அதேநேரம், இருள் என்ற ஆழத்தில் மூழ்கியிருந்தமை என்பது ஞானம்சார்ந்த ஒரு நிலையையும் இங்கே எடுத்துரைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
26. வேறொரு சாரார் வேறு விதமான விளக்கமொன்றைக் கூறவும் முயற்சிக்கலாம். அவர்களைப் பொறுத்தளவில், ‘ஆதியில் தேவன் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் படைத்தார்’ என்று கூறும்போது, விண்ணுலகு மற்றும் மண்ணுலகு போன்ற பதங்கள் குறிப்பது என்னவென்றால், ஏற்கனவே முழுமையாக்கப்பட்ட, வடிவத்தை உடைய, காணக்கூடிய அல்லது கண்களுக்குப் புலப்படாத எதையும் பற்றிக் குறிப்பிடுவனவல்ல. மாறாக, படைப்பதற்கும், படைப்பதற்கான தயார் நிலை குறித்தே அவை குறிப்பிடுகின்றன. ஆதியில் யாவும் ஒருவித குழப்ப நிலையிலேயே இருந்தன. அவற்றின் குணங்கள் மற்றும் வடிவங்களால் அவை இன்னும் வேறுபடுத்தப்படாமலேயே இருந்தன. காலப்போக்கில் அவை ஒழுங்கமைக்கப்பட்டு ‘விண்ணுலகு – மண்ணுலகு என்ற அறியப்பட்டன. விண்ணுலகம் என்பது ஞானம்-சார்ந்த படைப்பாகவும், மண்ணுலகம் என்பது பொருள்-சார்ந்த படைப்பாகவும் அறியப்பட்டன.
அத்தியாயம் 18. பரிசுத்த வேதாகமத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத பிழை என்பது எது?
27. இவற்றையெல்லாம் கேட்டு, ஆராய்ந்து, பரிசீலித்தபின் நான் வார்த்தைகளைப் பற்றி விவாதம் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் கேட்பவர்களைத் திசைதிருப்புவதைத் தவிர அதில் வேறு இந்தப் பயனுமில்லை. இதுகுறித்து 2 தீமோத்தேயு 2:14 இல் கூறப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்: “மக்களிடம் இவற்றைத் தொடர்ந்து சொல்லுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதபடி தேவனுக்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அது எவருக்கும் உதவாது. அதைக் கவனிப்பவர்களையும் அழித்து விடும்” என்கிறது. அதேநேரம், “ஒருவன் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அச்சட்டம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்” என்று 1 தீமோத்தேயு 1:8 இலும் கூறப்பட்டுள்ளது. அது தூய இதயம், நல்ல மனசாட்சியும், கபடமற்ற நம்பிக்கை போன்ற நல்ல பண்புகளில் இருந்து அன்பைக் கிளர்ந்தெழச் செய்வதையே நோக்கமாகக் கொண்டு இயங்குகிறது. மேலும், எவ்வாறான கட்டளைகளில் அவர் அனைத்து நியாயப் பிரமாணங்களையும் தீர்க்கதரிசிகளையும் உள்ளடக்கியிருக்கிறார் என்பது நமது ஆசானுக்கு நன்றாகவே தெரியும். மேலும், என் தேவனே, என்னைத் தடுப்பது என்ன? என் மங்கிய கண்களின் ஒளி நீரே. எனது விசுவாசப் பிரகடனங்களில் நான் இவற்றை வலியுறுத்தியிருக்கிறேன். ஆரம்பகாலத்தில் வடிக்கப்பட்ட இவ்வார்த்தைகளுக்கு பலதரப்பட்ட விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், அவை உண்மையாக இருந்தனவென்றால், அதனால் எனக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படப் போவதில்லை. இந்த வார்த்தைகளை நான் ஒருவிதமாகவும், எழுத்தாளர் வேறு விதமாகவும், மற்றொருவர் இன்னொரு விதமாகவும் புரிந்து கொள்ளும் பட்சத்தில், அது எனக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. உண்மையில், இறைவார்த்தைகளை வாசிக்கும் நாம் அனைவரும், யாரைப்பற்றி வாசிக்கிறோமோ, அவர் என்ன சொல்ல விழைகிறார் என்பதைக் கண்டறிந்து அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால் அவர் உண்மையைத் தான் சொல்கிறார் என்று நாம் நம்பும் போது, அவர் கூறியது ஏற்கனவே நாம் அறிந்ததுதான் என்றோ அல்லது அவர் சொல்வதில் தவறு இருக்கிறது என்று சொல்லவோ துணிவதில்லை. விளக்கம் தரும் ஒவ்வொருவரும் மறுரூல் வார்த்தைகளை நன்கு ஆராய்ந்து, அவற்றை எழுதியவர் சொல்ல விழைந்த பொருளைக் கண்டறிய முற்படும்போது, அதை நீர் உண்மை என்று வெளிப்படுத்தினால் அதில் என்ன தவறு இருக்கிறது? அப்படிப்பட்ட அர்த்தம் தரக்கூடிய பொருள் பற்றி அதை எழுதிய ஆசிரியரே குறிப்பிடாதிருக்கும்போது, அவ்வார்த்தைகளை விளக்கும் விளக்கவுரையாளர் அல்லது படிப்பவர் அதை உண்மையென்று புரிந்துகொள்ளும் பட்சத்தில், அதை அவர் உண்மையென்றே கருதிவிடுகிறார்.
அத்தியாயம் 19. அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயங்களை அவர் கணக்கிடுகிறார்
28. ஆண்டவரே, வானத்தையும் பூமியையும் நீரே படைத்தீர் என்பது உண்மை; ஆரம்பம் என்பது உமது ஞானத்தை வெளிப்படுத்துகிறது. அதைக்கொண்டே நீர் அனைத்தையும் உருவாக்கினீர் என்பதும் உண்மை. புலன்களால் கண்டுணரக்கூடிய உலகம் என்பது விண்ணுலகம் மற்றும் மண்ணுலகம் போன்ற இரண்டையும் சார்ந்தே உள்ளது என்பதும் உண்மைதான். மாறும் தன்மையைக் கொண்ட யாவும் ஒரு உருவமற்ற இயல்பைக் கொண்டிருக்கிறன என்பதும் இவற்றுள் வழியாகவே உருவத்தைக் கொண்ட எந்தவொரு பொருளும் அதற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தில் கொள்கின்றன என்பதும் வெளிப்படையே. நடைமுறையில் ஒன்றுமே இல்லாத, உருவமற்ற தன்மை, காலத்தின் மாற்றங்களைக் கொண்டிருக்க முடியாது என்பது உண்மைதான்; இது மாறாத வடிவத்திற்கு எந்த நேரத்திலும் பொருந்தாது, இணக்கமாக இருந்தபோதிலும், அது மாறுவதில்லை. ஒரு குறிப்பிட்ட பேச்சு வழக்கினூடாக உருவாக்கப் பட்ட எதையும், அதிலிருந்து உருவாக்கப்பட்ட பொருளின் பெயரைக்கொண்டு அழைக்கலாம் என்பது உண்மைதான். எனவே, ஒன்றுமற்ற தன்மையிலிருந்து உருவான விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் அவற்றின் இயற்பெயர்களைக் கொண்டே அழைக்கலாம். எல்லாப் பொருட்களும் அதன் சொந்த வடிவத்தைக் கொண்டவையாக இருந்தபோதிலும், உருவமற்ற பூமிக்கும் ஆழத்துக்கும் அருகில் இவற்றை ஒப்பிடமுடியாது என்பது உண்மைதான். “நமக்கோ ஒரே ஒரு தேவன் உள்ளார். அவர் நமது பிதாவே. எல்லாம் அவரிலிருந்தே வந்தன. நாம் அவருக்காக வாழ்கிறோம். ஒரே ஒரு கர்த்தரே இருக்கிறார். அவர் இயேசு கிறிஸ்து ஒருவரே ஆவார். எல்லாப் பொருள்களும் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டன. நாம் அவர் மூலமாகவே உயிரைப் பெறுகிறோம்” என்ற 1 கொரிந்தியர் 8:6 இல் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்ப, படைக்கப்பட்ட மற்றும் உருவான ஒவ்வொரு பொருளும் மட்டுமல்ல, உருவாக்கம் மற்றும் வடிவத்தின் திறன் கொண்ட அனைத்தையும் நீரே படைத்தீர் என்பதும் முற்றிலும் உண்மையே. ஆகவே, உருவமற்ற ஒன்றிலிருந்து உருவாகும் அனைத்தும் உருவாவதற்கு முன் உருவமற்றவையாகவே இருந்துள்ளன என்பதும் உண்மையே.
அத்தியாயம் 20. ஆரம்பத்தில் இறைவார்த்தைகள் பல்வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்பட்டன
29. இந்த எல்லா உண்மைகளிலிருந்தும், யாருடைய அகக் கண்ணை நீர் அத்தகையவற்றைக் காண அனுமதித்தீர் என்பதையும், உமது ஊழியரான மோயீசனின் வார்த்தைகளை தெய்வீகத்த தன்மையும் உண்மையும் உடையவை என விசுவாசிப்பவர்களும் மேலே கூறப்பட்டுள்ள உண்மனையான கூற்றுகளை சந்தகமின்றி ஏற்றுக்கொள்வர். இவ்வாறான, ஏற்றுக்கொள்ளப்பட்ட சத்திய நிகழ்வுகளின் அடிப்படையில், பின்வரும் ஒரு நிலையை உருவாக்கலாம்; அதாவது, ‘ஆதியில் தேவன் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார்’ என்ற சொற்தொடர், ‘தன் வார்த்தையின் வழியாக, தன்னுடன் இணை நித்தியமாக, புரிந்துகொள்ளக்கூடிய, உணர்திறன் கொண்ட, ஆன்மீக மற்றும் உடல்சார் படைப்புகளை உருவாக்கினார். “ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்” என்று மற்றொருவர் சொல்வதை இங்கே மேற்கோள் காட்டினால், கடவுள் இந்த பௌதிக உலகின் உலகளாவிய பெரும்பகுதியையும் அதன் அனைத்து அறியப்பட்ட மற்றும் வெளிப்படையான இயல்புகளுடன் அவரது வார்த்தையின் வழியாக உருவாக்கினார். ஆகவே இது அவருடன் நித்தியமானது. மற்றொருவர் கூறுகிறார்: ‘ஆதியில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார். அதாவது, தம்முடைய வார்த்தையின் வழியாக, தம்முடன் நித்தியமாக, கடவுள் ஆவிக்குரிய மற்றும் பௌதிக படைப்பின் மூலமாக உருவமற்ற பொருளை உருவாக்கினார். மேலும் ஓருவர் இப்படிக் கூறுகிறார், ‘தொடக்கத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார், அதாவது, கடவுள் தம்முடைய வார்த்தையின் வழியாக, தம்முடன் இணை நித்தியமாக, உருவமற்ற பொருளை உருவாக்கினார். அதில் விண்ணுலகமும் மண்ணுலகமும் குழப்ப நிலையில் இருந்தன. ஆனால் இப்போது நாம் அவற்றை தனித்தனியாக வேறுபடுத்திப் பார்க்கிறோம்’ என்ற அர்த்தத்திலும் கூறலாம் என்கிறார். மற்றும் ஒருவர் இப்படிக் கூறுகிறார், ‘ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார், அங்கே விண்ணுலகமும் மண்ணுலகமும் ஒருவித குழப்பமான நிலையிலேயே காணப்பட்டன. ஆயினும், இப்போது அவற்றுக்கு உருவங்கள் கொடுக்கப்பட்டு விட்டன. அவற்றுள் அடங்கியிருக்கும் அனைத்தும் எம் கண்களுக்குப் புலப்படுவைகளாக அமைந்துள்ளன’ என்று.
அத்தியாயம் 21. வார்த்தைகள் பற்றிய விளக்கத்தில் பூமி கண்ணுக்கு தெரியாதது என்று கூறப்பட்டுள்ளது
30. பின்வரும் பத்தி தரும் விளக்கத்தின்படி, அந்த எல்லா உண்மைகளிலிருந்தும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்; அது என்னெவெனில், பூமி கண்ணுக்குத் தெரியாததாகவும், உருவமில்லாமலும் இருந்தது மற்றும் கடவுள் உருவாக்கிய அந்த பௌதிகப் பொருளின் மீது ஆழமான இருள் படர்ந்திருந்தது. ஒழுங்கற்றதாகவும், ஒளி இல்லாத, எவ்வித வடிவமுற்ற ஒரு பொருளாக அது இருந்தது என்று சொல்ல முடியும். மற்றொரு விளக்கம் இவ்வாறு கூறுகிறது; பூமி கண்ணுக்குத் தெரியாததும் உருவம் இல்லாமலும் இருளின் ஆழத்தில் மூழ்கி இருந்தது. அதாவது வானம் மற்றும் பூமி என்று அழைக்கப்படும் இந்த முழுமையும் அப்போதும் கூட உருவமற்ற மற்றும் இருண்ட பொருளாகவே இருந்தது. அதில் இருந்து தான் உண்மையான விண்ணகமும் மண்ணுலகமும் எமது புலன்களால் கண்டுணரக் கூடிய யாவும் தோன்றின. மற்றுமொரு விளக்கம் இப்படிக் கூறுகிறது: பூமி கண்ணுக்குத் தெரியாதது மற்றும் அது ஆழமான இருளில் மூழ்கியிருந்தது. அதாவது வானமும் பூமியும் என்று அழைக்கப்படும் இந்த முழுமையும் அதுவரை உருவமற்ற மற்றும் இருண்ட பொருளாகவே இருந்தது. அதிலிருந்தே விண்ணகமும், விண்ணகத்து மோட்சம் மற்றும் பூமி போன்ற யாவும் படைக்கப் பட்டன. இந்தப் பூமியில் தான் நாம் காணும் அனைத்தும் உருவாகின. மற்றுமொரு விளக்கத்தின்படி, உருவமற்ற ஒன்றை விண்ணுலகம் என்றோ மண்ணுலகம் என்றோ அழைத்திருக்க முடியாது. காரணம் என்னவென்றால், உருவமற்ற நிலை ஒன்று அப்போதும் காணப்பட்டது. ஆயினும், அந்த உருவமற்ற தன்மையை வானமும் பூமியும் என்று வேதாகமம் குறிப்பிடவில்லை. ஆகவே, ஆன்மீகத்தின் படைப்பாகவும், இயற்பியலின் பொருளாகவும் விண்ணகம் மற்றும் மண்ணகத்தின் தோற்றம் ஏற்கனவே நடந்தேறி விட்டது. மீன்றும் ஒரு விளக்கம் என்ன சொல்கிறதென்று பார்க்கலாம்: பூமி கண்ணுக்குத் தெரியாததும் உருவமற்றதும் இருள் அதன் மீது ஆழமாகப் பரவியிருந்தது என்றும், ஏற்கனவே ஒரு ஓழுங்கமைக்கப்படாத பொருளாக பூமி இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று வேதாகமம் ஏற்கனவே கூறியிருந்தது. அதாவது உலகத்தின் முழுப் பௌதிகத் தொகுதியையும் இரண்டு பெரிய பிரிவுகளாக வகுத்துப் பார்த்தால், அங்கே காணப்படும் அனைத்தும் மேலானவையாகவும் தாழ்வானவைகளாகவும் அவை மேலும் கீழுமாக மாறி மாறி அனைத்து படைப்புகளும் தோன்றக் காரணமாயிருந்தன.
அத்தியாயம் 22. படைப்பு என்பது நித்தியத்திலிருந்து வந்ததா அல்லது கடவுளால் உருவாக்கப்பட்டதா என்பது பற்றி அவர் விவாதிக்கிறார்
31. கடைசியாகக் கூறப்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு எதிராக யாரேனும் வாதிட முற்பட்டால், பின்வரும் விளக்கத்தை சற்று உற்று நோக்கலாம். அதாவது, ஒழுங்கமைக்கப்பட்டிராத பொருள் என்ற விண்ணுலகம் மற்றும் மண்ணுலகம் போன்ற இரண்டும் நிராகரிப்புக்குள்ளானால், தேவனால் இவை இரண்டில் ஏதாவது ஒன்றைப் படைக்கும் முன், ஏதேனும் ஒன்று இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அதைக் கொண்டே விண்ணுலகமும் மண்ணுலகமும் படைக்கப்பட்டிருக்க வேண்டும். ‘ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்’ என்று கூறும்போது, அதை வானமும் பூமியும் அல்லது பூமி என்ற வார்த்தை பற்றி நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இந்தப் படைப்பைக் கடவுளே மேற்கொண்டார் என்று வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை. ஆனால் பூமி கண்ணுக்குத் தெரியாததாகவும் உருவமற்றதாகவும் இருந்தது, உருவமற்ற பொருள் என்று அழைப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று ஏற்கனவே எழுதப்பட்ட உரையில் கடவுள் உருவாக்கியதைத் தவிர வேறு எதையும் பற்றி நாம் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். நாம் கடைசியாக இட்ட இந்த இரண்டு கருத்துக்களில் ஏதாவது ஒன்றை அல்லது மற்றொன்றைப் பேணுபவர்கள், இவற்றைக் கேட்டவுடன், இந்த உருவமற்ற பொருள் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை நாங்கள் மறுக்கவில்லை என்று கூறுவார்கள். படைக்கப்பட்டு முழுமையாக்கப்பட்டவற்றில் காணப்படும் நன்மைகள் எவ்வாறு அதிகமாக இருக்கும். அதேவேளை, படைக்கப்பட்டபின் அதுவாக முழுமை பெறுபவைகளில் காணப்படும் நன்மைகள் குறைவானதாகவே இருக்கும். இருந்தபோதிலும், அங்கு நன்மை தான் காணப்படுகிறது. பல்வேறு விஷயங்களை அறிவித்த போதிலும், கடவுள் இந்த உருவமற்ற தன்மையை உண்டாக்கினார் என்று வேதாகமம் அறிவிக்கவில்லை. உதாரணத்துக்கு, தேவதூதர்கள், தேவ தூதர்களைக் கொண்ட சேனைகள், அப்போஸ்தலர் குறிப்பிடும், ‘சிம்மாசனங்கள்,’ ‘ஆட்சிகள்,’ ‘அதிகாரங்கள்’ போன்ற அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது. இதை கொலோசியர் தனது 1:16 இல், “பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருட்களும் இயேசுவின் வல்லமையால் படைக்கப் பட்டவை. அவை கண்ணால் காணப்படுகிறவை, காணப்படாதவை, ஆன்மீக சக்திகள், அதிகாரங்கள், பிரபுக்கள், ஆள்வோர்கள் என அனைத்துமே அவருக்காகவும், அவர் மூலமாகவும் படைக்கப்பட்டவை” என்று தெளிவாக சான்று பகர்கிறது. தேவன் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார் என்ற வாக்கியம், அவர் படைத்த சகலவற்றையும் உள்ளடக்கி இருக்கிறது என்றால், ‘தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்’ என்ற வாக்கியம் என்னவிதமான கருத்தை எம் மனதுக்குள் கொண்டுவருகிறது? அப்படிப்பட்ட கடல்நீர் மண்ணுலகம் என்ற பதத்துக்குள் அடங்கியிருக்கிறது எனும்போது, பூமியானது எப்படி ஒழுங்கமைக்கப் படாத உருவமற்ற ஒரு பொருளாக இருந்திருக்கும்? பூமி என்ற சொல்லோடு அது இணைக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்ளப் பட்டாலும், சமுத்திரங்கள் மிகவும் அழகாக இருப்பதைப் பார்க்கும்போது, பூமி என்ற சொல்லில் ‘உருவமற்றது’ என்ற பொருள் எப்படி வந்திருக்க முடியும்? அல்லது அப்படியே வைத்துக்கொண்டாலும், அதே உருவமற்ற தன்மையைக் கொண்டே வானம் உருவாக்கப்பட்டு விண்ணகம் என்று ஏன் எழுதப்பட்டுள்ள போதிலும், நீர் உருவாக்கப்பட்டதாக ஏன் எழுதப் படவில்லை? மிக அழகான முறையில் வழிந்தோடும் நீரோட்டமானது வடிவமற்றதாகவும் கண்ணுக்கு தெரியாததாகவும் இருப்பதில்லையே? அது எம் கண்களுக்கு நாகு புலப்படுகிறதல்லவா? “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று தேவன் கூறியதாக ஆதியாகமம் 1:9 ல் இது குறித்துக் கூறப்பட்டுள்ளதே? இவ்வாறாகக் கடவுள் சொன்னபோது அழகு வெளிப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், வானத்துக்கு மேலே இருந்த நீரைப் பற்றி என்ன சொல்வது? அப்படி அந்த நீர் உருவமற்று இருந்திருக்குமானால், கெளரவம் மிக்க அந்தப் பெயரைப் பெற்றிருக்கக் கூடுமா? அவ்வாறு ஒரு உருவத்தைப் பெற்றதைப் பற்றி எங்கும் பதிவு செய்யப் பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருக்கவில்லை. ஆதியாகமம் கூடக் கடவுள் உருவாக்கிய எதையும் பற்றிக் கூறாது மௌனமாக இருக்கக்கூடும். ஆனால், நம்பிக்கை மற்றும் எமக்கு இருக்கும் பகுத்தறியும் தன்மை, இறைவனே இதைப் படைத்தார் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி ஏற்றுக்கொள்கிறது. ஏனென்றால் அவை ஆதியாகமம் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடியால், எந்த நிதானமான போதனையும் இந்த நீர் கடவுளுடன் நித்தியமானதாக இருந்தது என்று சொல்லத் துணிவதில்லை. அதேநேரம், அந்த நேரத்தில் அவற்றின் உருவாக்கம் பற்றி எந்த குறிப்பும் இருந்ததும் இல்லை. எனினும், வேதாகமத்தின் படி, பூமி என்று அழைக்கப்படும் உருவமற்ற பொருள் கண்ணுக்குத் தெரியாதது என்றும், இருளின் ஆழத்தில் மூழ்கியிருந்தது என்றும், ஒன்றுமில்லாத வெறுமையில் இருந்தே அது உருவாக்கப்பட்டது என்றும், எனவே அவை அனைத்தும் அவரோடு நிரந்தரத்தைப் பகிர்ந்து கொள்வதில்லை என்றும் கூறியபோதும், அவை யாவும் எப்போது உருவாக்கப்பட்டன என்பதைப் பற்றிய எவ்விதத் தகவல்களையும் கூறத் தவறி விட்டனவோ என்று எண்ணத்தோன்றுகிறது.
அத்தியாயம் 23. புத்தகங்களில் காணப்படும் இருவகையான கருத்து வேறுபாடுகள் குறித்த விளக்கம்
32. என் தேவனே, எனது பலவீனமான அறிவைக்கொண்டும், மேற்கண்ட கருத்துக்களைக் கேட்டு, ஆராய்ந்த பின்னரே நான் உம்மிடம் அறிக்கையிடுகிறேன். நீர் அனைத்தையும் அறிந்தவர். அடையாளங்கள் போன்றவற்றைக்கொண்டும் மற்றும் உண்மையான நிருபர்களாலும் கூட இரண்டு வகையான வேறுபாடுகள் பற்றி எழுவதை நான் காண்கிறேன் – ஒன்று விஷயங்கள் குறித்த உண்மைத் தன்மை, மற்றொன்று அவற்றைத் தொகுத்து எழுத்தில் வடிப்பவரின் நோக்கம். உயிரினங்கள் மற்றும் இதர படைப்புகளின் தோற்றத்தைப் பற்றிய உண்மையான தேடல் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் தான் எழுதியதைப் படிப்பவரும் கேட்பவரும் இந்த விடயங்களை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து உமது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஊழியர் மோயீசன் விரும்பினார் என்பது பற்றி ஆராய்வது என்பது. முதலாவது காரணியைப் பொறுத்தவரை, தாங்கள் அறிந்தது எல்லாம் தவறானவை என்ற போதிலும், அதைப்பற்றி தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நிலையில் இருக்கும் அனைவரும் என்னை விட்டு விலகிச் செல்லட்டும். இரண்டாவது காரணியை எடுத்துக்கொண்டால், மோயீசன் சொன்னவற்றில் உண்மை இல்லாமல் இருக்கக்கூடும் என்று எண்ணுபவர்களோடு என்னை நான் சம்பந்தப்படுத்திக் கொள்ளமாட்டேன். என் ஆண்டவரே, நான் உம்மில் ஐக்கியமாயிருப்பேன், அவர்களோடும், உமது சத்தியத்திலும் அன்பின் விசாலத்திலும் களித்திருப்பவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ந்திருப்பேன். அப்படிப்பட்டவர்களோடு இணைந்து உமது வார்த்தைகளை அணுகி, மோயீசனின் எழுத்துக்கள் ஊடாக நீர் வெளிப்படுத்திய உமது திருவுளத்தைக் காண விழைவேன். ஏனெனில் அவர் வாயிலாகவே நீர் உமது மேலான திருவுளத்தை எமக்கு வெளிப்படுத்தினீர்.
அத்தியாயம் 24. பல உண்மைகளுக்கு மத்தியில், மோயீசன் எதை எவ்வாறு புரிந்துகொண்டார் என்பது குறித்து உறுதியாகக் கூறப்படவில்லை
33. மேற்காணும் வார்த்தைகளுக்கு, பலரும் பல்வேறு வழிகளில் விளக்கங்களைக் காண முற்பட்டபோதிலும், மோயீசன் இதைத்தான் நினைத்தார் என்றும், இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினார் என்றும் நம்பிக்கையுடன் கூறக்கூடிய ஒரு விளக்கத்தை நம்மில் யாரால் அடையாளம் காண முடியும்? அந்த வார்த்தைகளில் அவர் இதை நினைத்தாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவை யாவும் உண்மை என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். என் தேவனே, அடியேனாகிய என்னைப் பாரும். இந்தப் புத்தகத்தில் நான் உம்மிடம் உறுதிபூண்டுள்ளேன். உமது கருணையால் நான் என் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவேன் என்று மன்றாடிக் கேட்கிறேன். எனவே உமது என்றும் மாறாத வார்த்தையின் வழியாக நீர் கண்ணுக்குத் தெரியாத மற்றும் காணக்கூடிய அனைத்தையும் படைத்தீர் என என்னால் உறுதியாகக் கூற முடியும். மேலும் மோயீசன், ஆரம்பத்தில் கடவுள் வானம் பூமி உட்பட அனைத்தையும் படைத்தார் என்று அவர் எழுதியதைத் தவிர வேறு எதையும் பற்றி அவர் அர்த்தம் கொண்டிருக்க மாட்டார் என்றும் அவர் இவற்றை எழுதும் போது இது அவருடைய மனதில் இருந்தது என்பது பற்றியோ எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது உமது உண்மையில் உறுதியாக இருப்பதை நான் காண்கிறேன். ஏனென்றால், படைப்பின் தொடக்கத்திலேயே, ‘ஆரம்பத்தில்’ என்று அவர் சொன்னபோது, அவரது எண்ணங்கள் அதை நோக்கியதாகவே அமைந்திருக்கலாம். மேலும் இந்த இடத்தில், வானமும் பூமியும் உருவாகி இருக்கவில்லை என்றும் இயற்கையும் பூரணப் படுத்தப்பட்டதாக இருக்கவில்லை என்பதையும் அவர் புரிந்து கொள்ள எத்தனித்திருக்கலாம். ஆன்மீகமாக இருந்தாலும் சரி, உடல்சார் விடயமாக இருந்தாலும் சரி, புதிதாகத் தொடங்கியவை அனைத்தும் உருவமற்றவையாகவே இருந்தன என்றும் கருதியிருக்கலாம். எப்படியாயினும், இவற்றைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருந்தாலும், அது உண்மையாகவே சொல்லப் பட்டிருக்கலாம் என்பதை நான் காண்கிறேன். ஆனால் இந்த வார்த்தைகளில் அவர் எதைப்பற்றி நினைத்திருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், இவைகளில் ஒன்றா அல்லது நான் சொல்லாத வேறு ஏதேனும் அவரது மனதில் இருந்ததா என்பதைப் பற்றி நான் இங்கே விவாதிக்கவோ பட்டியலிடவோ தயாரில்லை. இருப்பினும், இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது இந்த மகா மனிதர் தனது மனதில் கண்டது உண்மையென்றும், பார்த்தவற்றை பொருத்தமாக வெளிப்படுத்தினார் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அத்தியாயம் 25. மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் கருத்துகளில் வேறுபாட்டைக் காணுமிடத்து, அவர்கள் சத்தியத்தின் மூலமான கடவுளையும் அறநெறியையும் கருத்தில் கொள்ள வேண்டும்
34. மோயீசன் நீங்கள் சொல்வது போல் நினைக்கவில்லை, நான் சொல்வது போலவே தான் நினைத்தார் என்று சொல்லி யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். அத்தோடு, மோசே இதைத் தான் நினைத்தார் என்று உனக்கு எப்படித் தெரியும் என்று எவரேனும் என்னிடம் கேட்டால், ஒரு நீண்ட விளக்கத்தோடு எனது பதில் அமைந்திருக்கும். அதற்கும் மேல், ‘நீ சொன்னது போலல்ல, நான் சொன்னது போலவே அவர் தனது மனதில் எண்ணியிருப்பார்’ என்றோ அல்லது நான் சொன்னதும் நீ சொன்னதும் உண்மையாகவும் இருக்கலாம் அல்லது இருவரது வாதங்களுமே ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம் என்றோ மீண்டும் விவாதித்திருந்தால், அதற்கும் நான் இவ்வாறுதான் பதிலளித்திருப்பேன்; என் தேவனே, ஏழைகளின் அடைக்கலமே, உம்முடைய அரவணைப்பில் எந்த முரண்பாடும் இல்லை, என் இதயத்தில் உமது சாந்தத்தை பொழிந்தருளும். விரோதமாகப் பேசுபவர்களை நான் பொறுமையோடு சகித்து ஏற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென இறைஞ்சுகிறேன். அவர்கள் என்னைவிட மேன்மையானவர்கள் என்பதற்காகவோ அல்லது மோயீசன் கூறியவற்றை இவர்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்காகவோ அல்ல. மாறாக, இவர்களிடம் குடிகொண்டுள்ள அகந்தை மற்றும் ஆணவம் காரணமாகவே இவர்கள் இப்படிப் பேசுகிறார்களோ என்ற எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் மோயீசனின் கருத்தை அறியாமல், தங்கள் சொந்தக் கருத்தையே நேசிக்கிறார்கள். அது உண்மை என்பதால் அல்ல, அது அவர்களின் சொந்த கருத்து என்ற காரணத்தால். அப்படி இல்லையென்றால், வேறு எவரேனும் அளிக்கும் விளக்கத்தை உண்மையென்றெண்ணி அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடும். எனினும், நான் அவர்களது கருத்துக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், அது அவர்களது கருத்து என்ற காரணத்தால் அல்ல. அவர்களுடைய கண்ணோட்டத்திலும் உண்மை இருக்கிறது என்று காரணத்தினால். ஏதாவது ஒரு கருத்தோ அல்லது விடயமோ உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது எவருடையதாக இருந்தாலும், அது அவர்களது தனியுடைமையாகி விடமுடியாது. அது உண்மையாக இருந்து, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அது ஒரே சமயத்தில் அவர்களுடையதும் என்னுடையதுமாக ஆகிவிடுகிறது. ஏனெனில், நாம் அனைவரும் உண்மையை நேசிப்பவர்கள். அதேநேரத்தில், மோயீசனின் வார்த்தைகள் பற்றி நான் சொன்னவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பதல்ல. அதேவேளை, அவர்கள் தாங்கள் சொல்வதைத்தான் மோயீசன் அவரது மனதில் எண்ணினார் எனும் கூற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அப்படி அவர்கள் கூறும் கருத்து சரியென்றே அவர்கள் வாதிட்டாலும், அது அவர்களது அறிவாற்றலால் வந்த துணிவு இல்லை, மாறாக, அவர்களது தான்தோன்றித்தனமான போக்கினால் ஏற்பட்ட துணிச்சல் என்ற கூறவேண்டும். அது அவர்களது அறிவுக்கூர்மையால் அல்ல, ஆணவத்தின் மிகுதியால் வந்தது. ஆகவே ஆண்டவரே, உமது நியாயத்தீர்ப்புகள் அஞ்சத்தக்கவை, ஏனென்றால் உமது உண்மை என்னுடையதோ, பிறருடையதோ அல்லது வேறொருவருடையதோ அல்ல, மாறாக அது நம் அனைவருக்கும் சொந்தமானது. இதைப் பொதுவில் வெளிப்படுத்த நீர் எங்களைப் பகிரங்கமாக அழைக்கிறீர். நாங்கள் அதை இழந்துவிடாதபடி இருக்கவும், அதை நமக்கு மட்டுமே என்று பேராசையுடன் வைத்திருக்க வேண்டாம் என்றும் எம்மைக் கடுமையாக எச்சரிக்கிறீர். ஏனென்றால், நீர் அனைவருக்கும் அனுபவிக்கக் கொடுத்ததைத் தனக்கு மட்டுமே சொந்தம் என்று கூறிக்கொள்ளும் எவனும் அதை இழந்துவிடுவான். அனைவருக்கும் சொந்தமானது தனக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவன், அனைவருக்கும் பொதுவானவற்றிலிருந்து – அதாவது உண்மையிலிருந்து பொய்க்குள் தள்ளப்படுகிறான். ஏனென்றால், பொய் பேசுகிறவன் அதை பற்றி நன்றாக அறிந்தே, அவனுக்குள்ளிருந்தே பேசுகிறான். இதுகுறித்து யோவான் 8:44 “தொடக்கம் முதலே பிசாசானவன் கொலைகாரனாக இருக்கிறான். அவன் உண்மைக்கு எதிரானவன். அவனிடம் உண்மை இல்லை. அவன் அவனால் சொல்லப்படுகிற பொய்யைப் போன்றவன். அவன் ஒரு பொய்யன். அவன் பொய்களின் பிதா.” என்று சான்று பகர்ந்துள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
35. என் தேவனே, கேட்டருளும், நீரே சிறந்த நீதிபதி! நீரே மகத்தான சத்தியம், இறைவார்த்தைகளை மதியாது மறுதலிப்பவர்களை நோக்கி நான் சொல்வதைக் கேட்டருளும். நான் உமக்கு முன்பாக சொல்வதையும், உமது சட்டத்தை தர்மத்தின் ஊன்றுகோலாக இறுதிவரை சட்டத்தை மதித்து அதற்கு பணிந்து நடக்கும் என் சகோதரர்களுக்கு முன்பாகவும் நான் சொல்வதைக் கேட்டருளும். இதையே 1 தீமோத்தேயு 1:8 “ஒருவன் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அச்சட்டம் நல்லதென்று அறிந்திருக்கிறோம்” என்று கூறுகிறது. உமக்குப் பிரியமாயிருந்தால், நான் அவனுக்குச் சொல்வதைக் கேட்டருளும். இந்த சகோதரதத்துவம் மிக்க மற்றும் அமைதியான வார்த்தைக்காக, நான் அவரிடம் திரும்பிச் செல்கிறேன். நாம் இருவரும் நீ சொல்வது உண்மை என்றும் நான் சொல்வது உண்மையென்றும் நாம் இருவருமே சொல்வது உண்மைதான் என்று பார்த்தால், நாங்கள் அதை எங்கே, எப்படிப் பார்க்கிறோம் என்று நான் கேட்கிறேன்? நிச்சயமாக நான் உன்னில் பார்க்கவோ நீ என்னில் பார்க்கவோ இல்லை. ஆனால் இவை இரண்டுமே நம் மனதிற்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ள மாறாத உண்மை. நம் கடவுளாகிய ஆண்டவரின் ஒளியைப் பற்றி நாம் வாதிடாமல், நம் அயலவரின் எண்ணங்களைப் பற்றி வாதிடுவதில் என்ன பயன்? ஒருவேளை, மோயீசனே நேரில் வந்து ‘நான் கூறியதன் போதும் இதுதான்’ என்று கூறுவாரானால், நாம் அவரைப் பார்க்காமலேயே அதை நம்பிவிடுவோம். “வேத வாக்கியங்களில் எழுதி இருப்பதைப் பின்பற்றி நடவுங்கள்.” அப்போது நீங்கள் ஒருவனைக் குறித்துப் பெருமை பாராட்டி, இன்னொருவனை வெறுக்கமாட்டீர்கள்” என்று 1 கொரிந்தியர் 4:6 ம் இதுபற்றிக் கூறுகிறது. அதற்கும் மேல்; மாற்கு 12:30-31 “நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்புகூருவோமாக, நம்மைப்போல நம் அயலவரையும் நேசிப்போமாக” என்று கூறுகிறது. மோயீசன் அந்தப் புத்தகங்களில் கூற விழைந்த அனைத்தினதும் சாராம்சம் என்னவென்று பார்த்தோமானால், அவை இந்த இரண்டு கட்டளைகள் மாத்திரமே. இதை நாம் நம்பாது போனால், நாம் இறைவனையே பொய்யானவராக ஆக்குகிறோம். ஏனென்றால், நம் வாழ்வின் ஆதாரமாய் இருக்கும் எம் அரசர் கூறியதைப் புறக்கணித்துவிட்டு, ஒரு ஊழியர் பேசியதைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருக்கிறோம். இத்தனை விளக்கங்கள் அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கின்ற போது, அவற்றில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்து, அது தான் மோயீசனின் கருத்து என்றும், அது ஒன்றே சிறந்தது என்று வாதாடுவதும் தர்மத்துக்கு முரணானது என்பது தெளிவாகிறது. அத்தோடு, மிக மூக்கையமானது எனக் கருதப்படுவது என்னவென்றால், மறை நூல்களில் கூறப்பட்டிருக்கும் அனைத்துக்கும் அத்திவாரமாகவும், அடித்தளமாகவும் இருப்பது அன்பு தானேயொழிய வேறில்லை.
அத்தியாயம் 26. ஆதியாகமம் புத்தகத்தை எழுதும்படி கேட்கப்பட்டிருந்தால், மோயீசன் கடவுளிடம் என்ன கேட்டிருப்பார்?
36. என் தேவனே, என் பணிவையும், தாழ்மையையும் உயரச் செய்து என் பணியில் இருந்து எனக்கு ஓய்வு கொடுத்துள்ளீர். எனது தாழ்மையான விசுவாசப் பிரகடனங்களுக்கு கருணையுடன் செவிசாய்த்து என் பாவங்களை மன்னித்துள்ளீர். என்னைப்போல் என் அயலார் மீதும் அன்பு செலுத்த எனக்கு கட்டளையிட்டிருக்கிறீர். உமது நம்பிக்கைக்குப் பாத்திரமான உமது ஊழியர் மோயீசனுக்கும் இதே மாதிரியான கட்டளைகளையே அளித்துள்ளீர். நானும் அவர் வாழ்ந்த காலத்தில் அவதரித்து அவருக்கு நீர் இட்டிருந்த கட்டளைகளை எனக்கு இட்டிருந்தால், நானும் அவர் கேட்டதையே உம்மிடம் கேட்டிருப்பேன். என் இதயம் மற்றும் நாவால் நான் அறிக்கையிட்ட யாவும் நூல்களாய் அச்சேற்றப்பட்டு, பதிப்பிக்கப்பட்டு, அவை இவ்வுலகின் எல்லாப் பாகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு, மக்கள் அவற்றை வாசித்தறிய வேண்டுமென்றும், அவை கொண்டுள்ள உச்ச அதிகாரம் அனைத்துத் தவறான மற்றும் ஆணவத்தோடும், அகந்தையோடும் மேற்கொள்ளப்படும் போதனைகள் யாவற்றையும் தோற்கடித்து நிர்மூலம் செய்யவேண்டும் என்பதே எனது மேலான விருப்பம். நான் உண்மையில் மோயீசனைப்போல் இருந்திருக்க வேண்டும் என்ற அவாவோடு வாழ்ந்திருக்க வேண்டும். [ஏனெனில் நாமெல்லோரும் ஒரே கொத்தில் பூத்திருக்கும் மலர்களைப் போன்றவர்கள். நீர் மனிதர்களை நினைவில் கொள்ளவேண்டும் ஒரு பொருட்டாக எண்ணவேண்டும் என்று நினைக்கும் தகுதி கூட அவர்களுக்கு நிச்சயம் இல்லை]. நானும் அக்காலத்தில் வாழ்ந்த மோயீசனைப்போல் வாழ்ந்திருந்தால், ஆதியாகம் என்ற புத்தகத்தை எழுதும்படி பணிக்கப்பட்டிருந்தால், தேவன் எப்படி, எவ்வாறு அனைத்தையும் படைத்தார் என்பதை விளங்கிக்கொள்ள முடியாமல், அவர்களின் சக்திகளை மிஞ்சும் வார்த்தைகளை நிராகரிக்காதபடி செய்ய, இலக்கண மற்றும் இலக்கியத்தின் துணைகொண்டு, அதி உச்ச செயலாற்றலோடு எழுதக்கூடிய வலிமையை நான் பெற்றிருக்க வேண்டுமென எண்ணி இருப்பேன். ஏற்கனவே இதைச் செய்ய முடிந்தவர்கள், தாங்கள் சிந்தனையில் கொண்டிருந்த எந்த உண்மைக் கருத்தையும் உமது ஊழியராகிய மோயீசனின் வார்த்தைகள் மீறிச்செல்லவில்லை என்பதைக் காண்பார்கள். அதேநேரம், உண்மையின் ஒளியைக் கொண்டு மற்றும் ஒரு விளக்கவுரையாளர் மற்றும் ஒரு விளக்கத்தைக் கண்டு பிடித்திருந்தால், அதற்கான பொருள் விளக்கமும் அங்கே இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை.
அத்தியாயம் 27. ஆதியாகமம் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கும் பாணி எளிமையானதும் தெளிவானதுமாக இருக்கிறது
37. ஒரு குறுகலான இடத்தில் இருந்து வழிந்தோடும் நீரூற்று அதிக ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது. அதேநேரம், பரவலான ஒரு இடத்தில் இருந்து ஊற்றெடுத்து பல கிளைகளைக் கொண்டு வழியும் நீரோடை சக்தியில் குறைந்ததாகவே இருக்கிறது. ஆகவே முன்னையது பின்னையதைவிட அதிகளவு சக்தியுடன் பாய்வதால், பரந்த வயல்கள் மற்றும் வாய்க்கால்களுக்கு நீரைத் தாராளமாகப் பாய்ச்சும் ஆற்றல் உடையதாக இருக்கிறது. உமது விசுவாசம் மிக்க ஊழியரின் கடமையும் அவ்வாறேதான் இருக்கிறது. அவர் பயன்படுத்திய மிகச் சொற்பமான வார்த்தைகளுக்கு எழுதப்பட்ட விளக்கங்களைப் பார்க்கும்போது, அவை மிகவும் பரந்துபட்டதாகக் காணப்படுகின்றன. அவர் உபயோகித்த சிறியளவிலான வார்த்தைகள் மிகப்பெரிய உண்மைகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன. இதிலிருந்து, இதில் பயன் பெறக்கூடிய விரிவுரையாளர்கள் யாவரும், அவரவருக்கே உரிய திறமைகளின் அடிப்படையில் இந்த வார்த்தைகளை கூடுதலாக விவரித்தோ, சுருக்கியோ இவற்றைப் பயன்படுத்தி பிறர் அந்தப் பயனை அடையச் செய்யலாம். சிலருக்கு, இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது அல்லது கேட்கும்போது, கடவுளை ஒரு மனிதனாகவோ அல்லது ஒரு பாரிய சக்தியின் பிரதிபலிப்பாகவும் எண்ணி, சடுதியான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டு, ஏதோ ஒரு தொலை தூரத்தில் இருந்துகொண்டு விண்ணுலகம் மண்ணுலகம் என்ற இரண்டு உருவ அமைப்புகளைப் படைத்தார் என்றும், அவற்றுள் ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்றும், இந்த இரண்டிற்குள்ளே தான் சகலமும் அடங்கியுள்ளது என்ற எண்ணத்தோடு வாழ்ந்திருந்தார்கள். கடவுளால் அருளப்பட்ட ‘அப்படியே ஆகக்கடவதாக’ என்ற வார்த்தைகளுக்கிணங்க, ‘அப்படியே ஆயிற்று’ என்ற வார்த்தையைச் செவிமடுக்கும்போது, அது தொடக்கத்தையும் முடிவையும் பிரதிபலிக்கும் வார்த்தைகளாகவும், காலத்தோடு ஒலித்து ஓயும் ஒரு விதியாகவும் கருதுகிறார்கள். வார்த்தைகள் நிறைவுற்றவுடன், என்னவெல்லாம் கூறப்பட்டதோ அவையெல்லாம் நடைமுறைக்கு வந்துவிட்டன போன்ற கருத்துக்களை அவர்கள் தங்களைக் மனதிலே கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான எண்ணங்கள் அவர்கள் மனதிலே தோன்றக் காரணம், அவர்கள் தங்கள் உடலால் இவ்வுலகத்தோடும் அதன் ஆசாபாசங்களோடும் கெட்டியாக இணைந்திருப்பதே. தாயின் மடியில் கிடத்தி பாலூட்டப்படும் சிசுக்களைப் போல, கடினமற்ற மென்மையான வார்த்தைகளால் வழிநடத்தப்படும் இத்தகைய மக்களிடத்தில் நம்பிக்கை தோற்றம் பெறுகிறது. அவர்கள் தங்கள் ஐந்து புலன்களால் கண்டும் உணரவும் கூடிய அற்புதமான இயற்கையின் அனைத்து வகைகளையும் கடவுள் படைத்தார் என்று உறுதியாக நம்புவதற்கு அது அவர்களை வழிநடத்துகிறது. அதாவது, யாரேனும் அவற்றைப் புறக்கணித்து, அவை அற்பமானவை என்று இகழ்ந்து, தமது திமிர்பிடித்த பலவீனத்தைக் காட்டினால், அவர்கள் தன்னை சீராட்டி வளர்த்த தொட்டிலில் இருந்து பரிதாபமாக விழுந்து தோல்வியைத் தழுவிக்கொள்வார்கள். இரக்கமுள்ள தேவனே, அவர்கள் மீது இரங்கும். சிறகில்லா குருவிக் குஞ்சுகள் வழிப்போக்கர்கள் கால்களில் மிதியுறாவண்ணம் அவற்றைக் காத்தருளும். உமது தேவதையை அந்தப் பரிதாபத்துக்குரிய குருவிக் குஞ்சிடம் அனுப்பியருளும். அவர் அதை அதன் கூட்டிற்கு அழைத்துச் சென்று, அதன் சிறகுகள் முளைத்து அது பறக்கும் வரை அதற்குத் துணையாக இருக்கச் செய்தருளும்.
அத்தியாயம் 28. வார்த்தைகள், தொடக்கம், வானம் பூமி போன்ற பதங்கள் புரிதலில் வித்தியாசத்தைக் கொண்டுள்ளன
38. ஆனால் இன்னும் சிலருக்கு இந்த வார்த்தைகள் ஒரு அழகான கூடு போலத் தெரிவதில்லை. பழங்கள் மறைந்திருக்கும் அடர்ந்த புதர்போலவும் பிண்ணிக்கிடக்கும் கொடிகள் போலவும் இருக்கும். அவற்றுக்குள் மறைந்திருக்கும் கனிகளைக் கண்டதும் அவற்றைப் பறித்துண்ண ஆவலோடும் மகிழ்ச்சியோடும் பறந்து செல்கிறார்கள். என்றும் நிலையானவராயிருக்கிற எம் தேவனே, உமது நிலையான நிரந்தரத்தில் நீர் இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்தையும் கடந்து செல்கிறீர் என்றும், கால மற்றும் நேர வரைமுறைகளுக்கு உட்பட்ட எதுவும் நீர் படைத்தவற்றில் அடங்குவதில்லை என்றும் அவர்கள் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். உமது மகத்துவத்தோடு ஒன்றாய்க் கலந்திருக்கும் உமது திருவுளமே இத்தனை படைப்புகளுக்கும் காரணமாய் இருந்தது. உமது தெரிவில் எவ்வித மாற்றமோ புதியவற்றின் உருவாக்கமோ அங்கு இல்லை. படைப்பையும், படைக்கப்பட்டவற்றின் உருவ அமைப்பையும் உம்மிலிருந்தோ அல்லது உமது உருவிலிருந்தோ சிருஷ்டிக்கவில்லை. அதற்கு மாறாக, ஒன்றுமே இல்லாத, வெறுமையில் இருந்து நீர் அனைத்தையும் படைத்தீர். உமது உருவத்தின் வழியாக நீர் அவற்றுக்கு உருவத்தைக் கொடுத்தீர். ஒவ்வொரு பொருளுக்கும் அவற்றின் தகுதிக்கேற்ப அவற்றின் நிலைகள் நிலைநிறுத்தப் பட்டதன் பின், அவை உம்மையே மீண்டும் நாடிச் செல்கின்றன. படைப்பின் ஆரம்ப நிலையில் காலத்தாலும், இடத்தாலும் உம்மிலிருந்து தொலைவில் இருந்தபோதிலும், அவை காலப்போக்கில் உமக்கு நெருக்கமானவையாகவும், அழகான மாறுபாடுகளை உருவாக்குபவையாகவும் அல்லது அவ்வாறான மாற்றத்துக்கு உட்பட்டவையாகவும் மகிழ்ச்சி தரக்கூடியனவாகவும் இருக்கின்றன. இப்படியானவர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட அளவுக்கு உமது சத்தியத்தின் ஒளியை இவ்வுலக வாழ்வில் உணர்ந்து கொண்டவர்களாய் படைப்பின் மகத்துவத்தைக் கண்டு களிகூருகிறார்கள்.
39. மீண்டும், மற்றொரு நபர் ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்பதில் தனது கவனத்தை செலுத்துகிறார். அங்கே ஞானத்தைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார் – ஆரம்பம், ஏனெனில் அதுவும் நம்மிடம் யோவான் 8:23 வாயிலாகப் பேசுகிறது: “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். ஆனால் நான் மேலே இருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்துக்கு உரியவர்கள். ஆனால் நான் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்” என்று கர்த்தர் யூதரை நோக்கிக் கூறியதாக எடுத்துரைக்கிறது. மற்றொருவர், ஆரம்பம் என்பது படைப்பின் ஆரம்பப் புள்ளி என்றும், ‘தொடக்கத்தில் அவர் படைத்தார்’ என்ற பதத்தை, ‘முதலில் அவர் படைத்தார்’ என்றும் தனது புரிதலை வெளிப்படுத்துகிறார். மேலும் ஒருவர்; அவர் ‘ஆரம்பத்தில்’ என்பதை ‘ஞானத்தினூடாகவே நீர் விண்ணகத்தையும் மண்ணுலகத்தையும் படைத்தீர்’ என்ற புரிதலோடு வாழ்பவர். மற்றுமொருவர், ‘விண்ணகம் மற்றும் மண்ணுலகம்’ என்பதை உருவத்துடன் கூடிய திண்மப்பொருள் என்று கூறும் அதேவேளை, மற்றும் ஒரு நபர், விண்ணகம் என்பது தெய்வீகத்தோடு சம்பந்தப்பட்டது என்றும், உருவைக் கொண்டிருந்தது என்றும், மண்ணுலகம் என்பது ஒரு ஒழுங்கற்ற உருவத்தைக் கொண்டிருந்தது என்றும் சொல்கிறார். ஆனால், விண்ணுலகம், மண்ணுலகம் ஆகிய இரண்டையும் உருவ அமைப்புகள் எதுவுமற்ற ஒரு திண்மப்பொருள் என்று நினைப்பவர்கள் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். ஆகவே, ஒருபக்கம் பார்த்தால், அறிவுசார், உணர்வுசார் படைப்பு என்பது முடிவில்லா ஊற்றாக இருக்கும் அதேவேளை, மறுபக்கம், இதிலிருந்தே உருவமைப்பு கொண்ட இந்த உலகம் நாம் காண்கின்ற சகல படைப்புக்களையும் தன்னகத்தே கொண்டதாக இருக்கிறது. மேலும் சொல்லப்போனால், விண்ணுலகம் மற்றும் மண்ணுலகம் என்ற சொற்பதம் ஏற்கனவே படைக்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு திண்மப்பொருள் பற்றியே கூறுகிறது என்று கூறுபவர்கள், மேற்கூறிய விளக்கத்தைத் தருவார்களா என்பது சந்தேகமே. ஒன்று, புலப்படக்கூடிய மற்றும் புலப்படாதவைகளை உள்ளடக்கியிருக்கிறது. மற்றையது, கண்களால் காணக்கூடிய படைப்புகளை மட்டுமே குறித்து நிற்கின்றது. இங்கு நாம் ஒளிதரும் வானத்தையும் இருண்ட பூமியையும், அதிலுள்ள பொருட்களையும் கண்டு ரசித்து அனுபவிக்கிறோம்.
அத்தியாயம் 29. ‘முதலில் அவர் படைத்தார்‘ என்பதை விளக்குபவர்களின் கருத்து
40. இங்கே சொல்லவேண்டியதென்னவென்றால், ‘ஆரம்பத்தில் அவர் படைத்தார்’ என்ற சொற்பதத்தை, ‘முதலில் அவர் படைத்தார்’ என்ற புரிதலைக் கொண்டிருப்பவர்களுக்கு இதைத்தவிர வேறு வழியில்லை. அப்படிப்பட்டவர்கள், விண்ணுலகம், மண்ணுலகம் என்பதை, விண்ணுலகம் மற்றும் மண்ணுலகம் என்ற திண்மப்பொருள், ஞானத்தைக்கொண்டு படைக்கப்பட்ட ஒரு உருவமைப்பு என்றே தான் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. விண்ணுலகம் மற்றும் மண்ணுலகம் என்பது, ஏற்கனவே படைக்கப்பட்ட சகல படைப்புகளையும் உள்ளடக்கியது என்றே குறிக்கிறது என்று ஒருவர் சொல்லும் பட்சத்தில், அவரை நோக்கிய எனது கேள்வி இவ்வாறு தானிருக்கும்; முதலில் கடவும் இதை சிருஷ்டித்தார் என்றால், அடுத்தடுத்து வந்த நாட்களில், அதாவது தொடர்ச்சியாக அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதுதான். முழு பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்த தேவன் வேறு என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும் என்று இவர் எதிர்பார்க்கிறார்? மீண்டும் அவரிடம் கேட்கிறேன், கடவுள் தொடர்ந்து எதையும் செய்யவில்லை என்று அவர் சொல்வாரானால், அவர் முதலில் படைத்தவற்றையிட்டு இவர் என்ன சொல்லப்போகிறார்? அப்படி ஒரு கேள்வி எழும்பட்சத்தில், அவர் அதை விரும்பமாட்டார். ஆனால் எவராவது ஒருவர், கடவுள் ஆதியில் உருவ அமைப்பற்ற படைப்பையே உண்டாக்கினார் என்றும், அதன் பின்னர் தான் உருவத்தோடு கூடிய படைப்பை உண்டாக்கினார் என்று கூறுவாரானால், அவரது வாதம் அறிவீனமானதல்ல. ஏனென்றால் நிரந்தரம், நேர காலம் மற்றும் தோற்றம் போன்றவற்றை வேறுபடுத்திப்பார்ப்பதில் அவர் கைதேர்ந்தவராக இருக்கிறார். நிரந்தரத்தில் முதன்மை என்பதற்கு உதாரணம் தான் சகல படைப்புகளுக்கும் அதிபதியான தேவனுக்கு முதன்மை ஸ்தானம் வழங்குதல். நேர காலத்துக்கு கொடுக்கும் முதன்மை என்பது, பூக்களில் இருந்து கனி தோன்றுதல். விருப்பத்தில் முதன்மை என்பதற்கு எடுத்துக்காட்டு, கனியில் இருந்து பூக்கள் தோன்றுதல். தோற்றத்தில் முதன்மை எனப்படுவது, ஒலியிலிருந்து பிறக்கும் இசை. இந்த நான்கில், நான் குறிப்பிட்ட முதலாவது மற்றும் கடைசியாக இருப்பது புரிந்துகொள்வது மிகவும் கடினமானதாக இருக்கும்; நடுவில் உள்ள இரண்டும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியவை. என் தேவனே, உமது நிரந்தரம் என்பது என்றும் மாறாத நிலையில் இருந்தும் மாறும் தன்மை கொண்ட உலகை உண்டாக்குவது எத்தனை ஒரு அரிதான புதுமை! ஒரு இசை என்பது ஏற்கனவே உண்டானது ஆகவே அதை மீண்டும் உருவாக்க முடியாது, அப்படி இருந்தபோதிலும், இசைக்கு முன் ஓசை எப்போது வருகிறது என்பதை ஒருவர் எவ்வாறு துல்லியமாக தீர்மானிக்க முடியும்? ஆகவே, உருவமற்ற ஏதேனும் ஒன்று இருக்கலாம், ஆனால், இல்லாத ஒன்றுக்கு எவ்வாறு உருக்கொடுக்க முடியும்? அந்த வகையில், திண்மப்பொருள், உருப்பொருளைவிட முதன்மை ஸ்தானத்தைப் பெறுகிறது. உருவானது என்ற நிலையைத் தாண்டி, உருவாக்கப்பட்டது என்ற நிலையை அடைந்தமையால் தான் அது அவ்வாறான ஸ்தானத்தைப் பெற்றது. நேரம் மற்றும் கால இடைவெளிகளைப் பொறுத்தவரையில், அங்கும் முதன்மை என்பது இல்லை. ஏனென்றால் உருவமற்ற ஒரு ஓசையை முதலில் எழுப்பி, பின்னர் அதைப் பாடலாக வடிவமைப்பதோ இல்லை. இது வெள்ளி அல்லது மரப்பலகைகளைக் கொண்டு செய்யப்படும் ஒரு பெட்டகமோ ஒரு குவளையோ போன்றது. இந்த இரண்டு பொருட்களைப் பொறுத்த வரையில், அவற்றைத் தயாரிக்கும் முன், அவை இரண்டும் வெறும் திண்ம அடையாளங்களை மட்டுமே கொண்டிருந்தன. ஆனால், பாடல் ஒன்றைப் பொறுத்த வரையில், நிலைமை வேறு. ஒரு பாடல் இசைக்கப் படும்போது அது இசைக்கப்படும் ஒலியும் அதனோடேயே சேர்ந்து தான் ஒலிக்கிறது. இல்லாத ஒரு ஒலி எங்கிருந்தோ இருந்து முதலில் வந்து, பின் உருப்பெற்ற பாடலாக அது மாறுவதில்லை. எழுப்பப்படும் எல்லா ஒலிகளும் கரைந்து பின்னர் மறைந்து போய்விடுகின்றன. அவற்றில் சுவடுகள் எங்கும் காணப்படுவதில்லை. எப்படியான கலைத்திறன் கொண்டவராலும் சுவடுகள் ஏதுமற்ற அந்த ஒலியை மீட்டெடுக்கவோ, வரிசைப்படுத்தி மீண்டும் அதற்கு உயிர் கொடுக்கவோ முடியாது. ஆகவே ஒரு பாடலுக்குக் கிடைக்கும் புகழ் மற்றும் ஜனரஞ்சகம் அதில் ஒன்றரைக் கலந்துள்ள இசையிலேயே தங்கியுள்ளது. இசை தான் அதன் மூலாதாரம். பாடலொன்றை புனைவதில் எவ்விதமான முதன்மைத் தன்மையும் இல்லை. அதேநேரம், ஒலி மட்டுமே பாடலை உருவாக்கி விடுவதில்லை. ஆனால் அந்தப் பாடலின் உருவாக்கம் ஒலியோடு இணைந்தே வருகிறது. பாடகரின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்டு அவரது குரல் தான் பாடலுக்கு மெருகேற்றி உயிர் கொடுக்கிறது. இங்கே நேரம் எவ்வித முதன்மை ஸ்தானத்தையும் பெறுவதில்லை. பாடல் பாடப்படுகின்ற அதே நேரத்தில் ஒலியும் அதனோடு சங்கமித்தே அந்தப் பாடலை முழுமை பெறச் செய்கின்றது. அதேநேரம், விருப்பத்துக்கும் இங்கே முதன்மை ஸ்தானம் கிடைக்கவில்லை. ஏனெனில், ஒரு பாடலை எடுத்துக் கொண்டால், அது வெறும் இசையால் மட்டுமே ஆனதல்ல. அழகான இசை என்பதால் இசையை மட்டுமே தெரிவுசெய்ய முடியாது. இறுதியாக, தோற்றம் என்பது இங்கே முதன்மை பெறுகிறது. ஏனென்றால், பாடலை இசையாக மட்டுமே மாற்றக்கூடிய தன்மை அதற்கு இல்லை. ஆனால், இசைக்கு உயிர்கொடுத்து அந்த இசையையே பாடலாக மாற்றக்கூடிய ஆற்றல் இதற்கு இருக்கிறது. இந்த ஒரு உதாரணமானது, படைப்பின் மூலங்களான விண்ணுலகம் மற்றும் மண்ணுலகம் என்பன முதலில் படைக்கப்பட்டு, அவற்றிலிருந்துதான் விண்ணுலகமும் மண்ணுலகமும் உண்டாயின என்பதைப் புரிந்துகொள்ளும் எவருக்கும் உதவியாக இருக்கும். நேர வரைமுறைகளுக்கமைய திண்மப்பொருட்கள் தான் முதலில் உண்டாக்கப்பட்டவை என்று கூற முடியாது. ஏனெனில், பொருட்களின் அமைப்பே நேரம் உருவாகக் காரணமாயின. இந்தத் திண்மப் பொருட்கள் ஒழுங்கற்ற உருவமைப்பைக் கொண்டனவாக இருந்தன. ஆனால், ஆனால் இப்போது, காலப்போக்கில், அது அதன் வடிவத்துடன் ஒன்றாக உணரப்படுகிறது. அந்த விடயத்தை வேறு எதனுடனும் தொடர்புபடுத்திக் கூற முடியாது. பெறுமதியில் இது தாழ்வானதாக இருக்கலாம் (ஏனென்றால், உருவ அமைப்பைக் கொண்டவை உருவமற்றவைகளை விட நிச்சயம் உயர்ந்தவைகளாகவே இருக்கும்). ஆனால் கடவுளின் நிரந்தரம் என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, அனைத்தையும் படைக்க மூலமாகப் பயன்படுத்தப் பட்ட யாவும் வெறுமையில் இருந்தே வந்தன என்ற தீர்மானத்துக்கு வர முடியும்.
அத்தியாயம் 30. கருத்துகளில் காணப்படும் பன்முகத்தன்மையைப் பார்க்கும்போது தர்மம் மற்றும் தெய்வீக சத்தியத்தின் ஒன்றிணைப்பு முதன்மை பெறுகிறது
41. இந்த உண்மையான கருத்து வேறுபாடுகளில், உண்மையே ஒற்றுமையைக் கொண்டுவரட்டும், தூய அன்பு என்ற கட்டளையின் இறுதிவரை நாம் சட்டத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கு நம் கடவுள் நம் அனைவருக்கும் கருணை காட்டட்டும். [ஒருவன் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அச்சட்டம் நல்லதென்று அறிந்திருக்கிறோம் என்று 1 தீமோத்தேயு 1:8 இல் சொல்லப் பட்டிருப்பதைக் கவனிப்போம்.] இவ்வாறு, உமது விசுவாசம் மிக்க ஊழியரான மோயீசனின் கருத்து எது என்று யாராவது என்னிடம் கேட்டால், இது எனது வாக்குமூலங்கள் அல்ல அன்றோ அல்லது எனக்குத் தெரியாது என்று நான் உங்களிடம் ஒப்புக்கொள்ள வில்லை. ஆயினும் அந்த கருத்துக்கள் உண்மை என்று நான் அறிவேன் – உடல் ரீதியான கருத்துக்கள் தவிர – நான் சரியானது என்று நினைத்ததைச் சொன்னேன். ஆயினும், விசுவாசத்தில் முதிர்ச்சி காணாதவர்கள், உமது புத்தகத்தின் இந்த வார்த்தைகளைக் கண்டு பயப்படுவதில்லை. எளிமையான நடை, ஆழமான பொருள், எள்ளோராலும் இலகுவாக வாசித்தறிந்துகொள்ளும் விதம் போன்ற அற்புதமான அம்சங்களைக் கொண்டது தான் உமது மறைநூல். அதேவேளை, இந்த வார்த்தைகளில் பல உண்மைகள் இருப்பதைக் கண்டறியவும், உறுதிகொள்ளவும், ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தியத்தின் ஊற்றான எம் தேவனே, உம்மை அதிகமதிகமாக நேசிப்போமாக. நாங்கள் மாயையின் மீது அல்ல, சத்தியத்தின் மீதே மிகவும் பற்றுதல் கொண்டிருக்கிறோம். உண்மையில், இந்த மறைநூலை வழங்கியவரும், உமது வல்லமையால் நிரப்பப்பட்டவரும், உமது விசுவாசமுள்ள ஊழியருமான மோயீசனைக் கௌரவிப்போமாக. ஏனென்றால் நீர் அவருக்கு உம்மை வெளிப்படுத்தினீர். உமது கட்டளைப்படியே அவர் இவற்றை எழுதினார். அவர் அவர்கள் மூலம் முக்கியமாக என்ன செய்ய விரும்புகிறார் என்பதை நாங்கள் நம்புவோம். சத்தியத்தின் ஒளிக்காகவும், நமது பலன்களின் அதிகரிப்புக்காகவும் ஊழியம் செய்யுங்கள். உமது சத்தியத்தை வெளிப்படுத்துமுகமாகவும், வாசிப்போரின் ஆன்மீக நலனை விருத்தி செய்யுமுகமாகவும் அனைத்துக்கும் நன்மைபயக்கும் விதமாகவும், நற்பலன்களை பெறுமுகமாகவும் இவற்றை எழுதினார் என்று நம்புவோமாக.
அத்தியாயம் 31. மோயீசன் தனது வார்த்தைகளில் உண்மையைக் கண்டறியக்கூடிய அனைத்தையும் உணர்ந்திருக்க வேண்டும்
42. தற்செயலாக ஒருவர் என்னிடம் வந்து, “மோயீசன் என்ன சொன்னாரோ அதைத்தான் நானும் சொல்கிறேன்” என்று கூற, அதைக்கேட்ட மற்றொருவர், “இல்லை, நான் சொன்னதைத்தான் அவர் சொன்னார்” என்று கூற, “நீங்கள் இரண்டுபேரும் கூறுவது சரியானால், மோயீசன் இதையும் பற்றி எண்ணியிருக்கலாமே?’ என்று அவர்கள் இருவரையும் பார்த்துக் கூறியிருப்பேன். மேலும் ஒருவர், இருவர், மூவர் அல்லது நால்வர் என்முன் தோன்றி, தங்கள் அந்த வார்த்தைகளில் முற்றிலும் மாறுபட்ட உண்மையை கண்டதாக சொல்வார்களானால், மோயீசன் இந்த உண்மைகளையெல்லாம் பார்த்து, அனுபவித்து, உணர்ந்து தான் அவர் தெள்ளிய அறிவைப் பெற்றார் என்று ஏன் இவர்களால் நம்பமுடியாதிருக்கிறது? ஏனென்றால் அவர் மூலம் தான் நம் ஒரே கடவுள் பல அம்சங்களைக்கொண்ட இந்தப் பரிசுத்த வேதாகமத்தை பலவிதமான மனிதர்களுக்குப் புரியும்படி செய்தார். இவ்வாறாகப், பலரும் சத்தியத்தின் மகத்துவத்தை கண்டுணர வேண்டுமென அவர் பிரியம் கொண்டிருந்தார். இதை நான் வெளிப்படையாக எவ்வித தயக்கமோ, பயமோ இன்றி என் மனதில் பட்டத்தை சொல்கிறேன். அத்தகைய ஒரு உயர்ந்த அதிகாரம் கொண்ட ஒரு புத்தகத்தை என்னை எழுதும்படி பணித்திருந்தால், எல்லோருக்கும் உண்மையைப் புரிய வைக்கும் வகையில் அதை எழுதவே விரும்புவேன். அதைவிடுத்து, உண்மையான கருத்தொன்றை மாத்திரம் தெரிவுசெய்து, யாரையும் புண்படுத்தும் எந்தப் போலி விளக்கமும் அவற்றில் இல்லையென்றும், மற்றையோரின் கருத்துக்களைத் தவறென்று ஒதுக்காமல் – அங்கே, எந்தவொரு தவறான கோட்பாடும் நுழைந்துவிடக்கூடாது என்ற ஒரு நிபந்தனையோடு – அவற்றுக்கும் மதிப்பளித்து நான் எழுதியிருப்பேன். ஆகையால், என் தேவனே இந்த மனிதர் [மோயீசன்] உம்மிடமிருந்தே இந்த விலைமதிப்பற்ற கொடையைப் பெற்றுக்கொண்டார் என்பதை நம்பாத அளவுக்குத் தலைகுனிவாக இருக்க நான் விரும்பவில்லை. நிச்சயமாக அவர் இந்த வார்த்தைகளை எழுதியபோது, நாங்கள் கண்டு, கேட்டறிந்த உண்மைகள் யாவற்றையும் முழுமையாக அறிந்திருந்ததோடு, இன்னும் முன்னால் காணவேண்டிய எத்தனையோ உண்மைகளை, இதுவரை கண்டிராத உண்மைகள் போன்ற அனைத்தையும் நன்கு அறிந்திருந்தார். ஆயினும் அவற்றை எங்களால் தான் இதுவரை அறிந்துகொள்ளவோ கண்டுகொள்ளவோ முடியாதிருக்கிறது.
அத்தியாயம் 32 – முதலில் எழுத்தாளரின் உணர்வு கண்டறியப்பட வேண்டும்; பின்னர் உத்தேச தெய்வீக உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்
43. இறுதியாக, என் தேவனே, நீர் வெறும் இரத்தமும் சதையாலும் ஆனவரல்ல – எந்த மனிதாவது எதையாவது குறைவாகக் கண்டால், “வல்லமையும், மகத்துவமும் கொண்ட உம்மிடமிருந்து எதையேனும் மறைக்க முடியுமா? அவரே என்னை “நேர்மையான தேசத்திற்கு” அழைத்துச் செல்லும் சத்தியாயிருக்கிறார். அந்த வார்த்தைகளின் மூலம், நீர் எதிர்கால வாசகர்களுக்கு வெளிப்படுத்தவிருந்தீர். சிலவேளை, பல்வேறுபட்ட விளக்கங்களின் மத்தியில் ஒன்று மாத்திரமே அவர் உள்ளத்தில் இருந்திருந்தாலும், அதில் பிழையில்லை என்றே கூறவேண்டும். அப்படியானால், அவர் கண்ட பொருள் மற்றவற்றை விட உயர்ந்தது மற்றும் சிறந்தது என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். ஆனால், ஆண்டவரே, உமக்கு விருப்பமான அதே அர்த்தத்தைக் கொண்ட பொருளையோ அல்லது வேறு ஏதேனும் உண்மையான பொருளையோ நீர் எங்களுக்குக் காட்டியருளும். அதேபோல், நீர் உமது நம்பிக்கைக்குப் பாத்திரமான அந்த மனிதருக்குத் [மோயீசனுக்கு] தெரியப்படுத்தியதை எங்களுக்கும் தெரியப்படுத்தும். அல்லது அதே வார்த்தைகளின் மூலம் வேறு ஏதாவது அர்த்தத்தை எங்களுக்கு அறியத்தந்தாலும், உமது கிருபையால் போஷிக்கப்படும் எம்மைப் பிழையான வழியைத் தேர்ந்தெடுத்துவிடாமல் உமது வழியில் வாழ எம்மை வழிநடத்தும். இதோ ஆண்டவரே, என் தேவனே, இந்தச் சில வார்த்தைகளின் அர்த்தம் குறித்து நாம் எவ்வளவு விளக்கங்களை எழுதியிருக்கிறோம் என்பதைக் கருணையோடு நோக்கியருளும். உமது புத்தகங்கள் அனைத்தும் இந்த பாணியில் விளக்குவதற்கு எவ்வளவு மன வலிமை ஆற்றல் மற்றும் எவ்வளவு நேரம் வேண்டும்? எனவே, இந்த முடிவான வார்த்தைகளில், உம்மிடம் இன்னும் சுருக்கமாக ஒப்புக்கொள்ளவும், உண்மையான, உறுதியான மற்றும் நல்ல அறிவும் ஊக்கமும் கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு அனுமதி அருளும். உமது தூண்டுதலின் வாயிலாக ஒரு உண்மையை உறுதியானதும், நன்மை பயக்கக் கூடியதென்றும் என்று தேர்ந்துகொள்ளச் செய்தருளும். எனது உறுதியான பிரகடனங்களின் ஊடாக, உம்மில் விசுவாசம் கொண்ட உமது அடியாராகிய மோயீசனின் எண்ணத்தில் உதித்தவற்றையே சரியான முறையிலும், சிறந்த விதத்திலும் இங்கே சமர்ப்பித்துள்ளேன் என்பதை மிகவும் தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன். அதுவே உண்மையும் சிறந்ததுமான முயற்சி எனக் கருதுகிறேன். அதில் இன்னும் நான் வெற்றிபெறவில்லை என்றால், மோயீசனின் வார்த்தைகள் வாயிலாக நீர் விரும்பியதைச் சொன்னது போல், உமது சத்தியம் அதன் வார்த்தைகள் மூலம் அவரிடம் பேசியது என்பதையும் இங்கே கூற விரும்புகிறேன்.
