புனித அகஸ்டின் அவர்களின் போற்றுதலும்  விசுவாசத்தை அறிக்கையிடலும் (Augustine, Confessions 10)

Saint Augustine, Confessions, Book 10, in Tamil

அத்தியாயம் 1. மனிதனின் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கடவுளில் மட்டுமே உள்ளது

1. என்னை முழுமையாக அறிந்தவரே, நான் உம்மை அறிந்து கொள்வேனாக; என் தேவனால் நான் அறியப்பட்டதைப் போல, உம்மை உன்னை எனக்குத் தெரியப்படுத்தும் [1 கொரிந்தியர் 13:12]. ஓ, என் ஆன்மாவின் வலிமையாய் இருக்கிறவரே, நீர் அந்த ஆன்மாவுக்குள் நுழைந்து உமக்கேற்றவாறு அதைத் தயார்படுத்திக் கொள்ளும், அதனால் நீர் அதை எவ்வித மாசோ கறையோ இல்லாமல் வைத்திருப்பீராக. [எபேசியர் 5:27 அதன் வாசகத்தில் இதுபற்றி விரிவாக விளக்குகிறது]. இது தான் என் நம்பிக்கை, அதற்காகத்தான் நான் பேசினேன், இந்த நம்பிக்கையில் தான் நான் நிதானமாக மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையின் மற்றைய தருணங்களில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியை இழக்கும் வேளைகளில் ஏற்படக்கூடிய துக்கமும் வேதனையும் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்துக்கூடியனவாக இருக்கின்றன. குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளையிட்டு நாம் கொஞ்சமாகத் துக்கத்தை அனுபவிக்கும் அதேநேரம், அதிகமான துக்கத்தைத் தரக்கூடிய நிகழ்வுகளின் பிரதிபலனாக, நாம் அதிகமாகவே அழுது தீர்க்க வேண்டியுள்ளது. யோவான் 3:20 இல் சொல்லப் பட்டிருப்பவற்றை சற்று கவனித்தால், இதில் உள்ள உண்மைத் தன்மையை நன்றாக விளங்கிக்கொள்ளலாம். இதுதான் அந்த வார்த்தை “தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டிவிடும்.” என் தேவனே, உம் திருமுன் இவைகளை என் மனதால் ஒப்புக்கொள்ளவும், பலரும் அறிந்துகொள்ளும் வகையில் எனது எழுத்தாக்கங்கள் வழியாகவும் அறிக்கையிட மிகவும் ஆவலுடனிருக்கிறேன்.

அத்தியாயம் 2. அனைத்தும் கடவுளுக்குத் தெளிவாகத் தெரியும். அவரை நோக்கி அறிக்கையிடுதல் சரீரத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளால் அன்றி, ஆன்மாவிலிருந்து எழும் சிந்தனையின் வெளிப்பாடுகளாக இருத்தல் வேண்டும்

2. தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை. அனைத்தையும் அவரால் தெளிவாகக் காணமுடியும். அவருக்கு முன் எல்லாமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழ்ந்த முறையை அவரிடம் விவரிக்க வேண்டும் [எபிரேயர் 413 ] ஆகவே, உம்மிடம் நான் எதையேனும் ஒப்புக்கொள்ளாது இருந்தபோதிலும், அதை உம்மிடம் மறைப்பது எவ்விதத்திலும் சாத்தியப்படக்கூடியதன்று. அதேபோல், நான் உம்மிடமிருந்து என்னை மறைக்கலாம், ஆனால், உமது பார்வையில் இருந்து என்னை எந்த விதத்திலும் மறைத்துக்கொள்ள முடியாது. ஆனால் இப்போது, நான் என் மீது அதிருப்தி அடைகிறேன் என்பதற்கு என் புலம்பல்களே சாட்சி. என் மீது பிரகாசத்தைப் பாய்ச்சுபவராக இருக்கும் நீர், எனக்குள் திருப்தியை ஏற்படுத்துகிறீர். என்னைப்பற்றி மட்டும் எண்ணி, அதற்காக வெட்கப்பட்டு, வெறுப்புடன் என்னைத் துறந்து நான் உம்மைத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு வேண்டியதெல்லாம் உம்மிடமிருந்து வராத பட்சத்தில், எதையிட்டும் நான் என்னையோ உம்மையோ திருப்திகொள்ளச்செய்ய முடியாது. அப்படியானால் ஆண்டவரே, நான் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் உம் முன்னிலையில் நான் வெளிப்படுகிறேன், நான் பேசிய வார்த்தைகள், சமர்ப்பித்த அறிக்கைகளின் பிரதிபலனாக என்னை நோக்கி எது வந்தாலும் அதை நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஏனென்றால், நான் என் வாய் வார்த்தைகள் வாயிலாகவோ அல்லது, மிகைப்படுத்திய எனது சொல்லாற்றல் மூலமாகவோ இவற்றை நான் அறிக்கையிடவில்லை. அதற்கு மாறாக, தேவனான உமது காதுகள் மட்டுமே கேட்கக்கூடிய என் ஆன்மாவின் ஆழத்திலிருந்து வரும் வார்த்தைகள், வெளிப்படும் எண்ணங்கள், என் அழுகுரல் வாயிலாக மாத்திரமே ஒப்புக்கொடுத்தேன். நான் துஷ்டனாய் இருந்துகொண்டு உம்மிடம் எனது ஒப்புகைகளை அறிக்கையிடுவது என்மீது நானே அதிருப்தி கொள்வதற்கு சமமாகும். ஆனால் நான் உண்மையானவனாய், பக்தியுள்ளவனாய் இருக்கும்போது, எனது நற்கிரியைகளால் நான் உம்மை மகிமைப்படுத்துகிறேன். ஏனென்றால் ஆண்டவரே, நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்க வல்லவர். ஏனெனில், தேவ பற்றில்லாத எவரையும் நீர், உமக்கு ஏற்புடையவராய் வாழப்பண்ணுகிறீர். இதுகுறித்து, “ஒருவன் முதலில் தேவன் மீது விசுவாசம் வைக்க வேண்டும். பின்னரே தேவன் அவனை நீதிமானாக ஏற்பார். தேவன் ஒருவரால்தான் பாவியை நீதிமானாக மாற்ற முடியும்” என்று உரோமையர் 4:5 இல் விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆகவே, நான் உம் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கும் அறிக்கையானது உமது பார்வையில் மௌனமாகவும், வார்த்தைகளாகவும் இருக்கிறது. வார்த்தைகளைப் பொறுத்தளவில் அவை மெளனமாக இருந்தபோதிலும், அன்பின் வெளிப்பாடு என்பதைப் பொறுத்தளவில் அது உரத்த குரலில் கூறப்படுவதாகவும் இருக்கிறது. ஏனென்றால், நீர் இதுவரை என்னிடமிருந்து கேட்காத எவ்விதமான நன்மையையும் பற்றி நான் மற்றையோர் முன் கூறுவதில்லை. அதேநேரம், நீர் என்னிடம் சொல்லியிராத எதையும் பற்றி நான் உம்மிடம் சொல்லிவிடவும் முடியாது.

அத்தியாயம் 3. கடவுளிடம் தனது ஒப்புகைகளை சரியாக அறிக்கையிடுபவன் தன்னை நன்கு அறிந்தவனாயிருக்கிறான்

3. என் ஒப்புகைகளைக் கேட்கும் மக்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் எனது எல்லா நோய்களையும் குணப்படுத்தப் போகிறார்களா? மக்கள் மற்றவர்களின் வாழ்க்கையை அறிய ஆர்வமாக உள்ளனர், ஆனால் தங்கள் சொந்த வாழ்க்கையைத் திருத்துவதில் மிகவும் அசமந்தமாகவே உள்ளனர். நான் யார், எப்படிப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ள அவர்கள் ஏன் இத்தனை அக்கறை கொண்டுள்ளார்கள்? அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்று உம்மிடம் கேட்டு அறிந்துகொள்ளாதவர்கள் மற்றும் உமக்கு செவிகொடாதவர்களால் என்ன பயன்? நானே என்னைப்பற்றி சுயவிளக்கம் கூறும் பட்சத்தில், நான் யாரென்று எவரால் அறிந்துகொள்ளக் கூடும்? அத்தோடு நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்று எப்படி அவர்களால் அறிய முடியும்? இந்த வையகத்தில் யார் மனதில் என்ன இருக்கிறதென்பதை யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், அவரவர் உள்ளங்களில் குடியிருக்கும் தேவ ஆவியானவரால் மட்டுமே அதை அறிந்துகொள்ளமுடியும். இதைக் கொரிந்தியர் 2 : 11 இவ்வாறு விளக்குகிறது: “ஒருவர் அடுத்தவருடைய எண்ணங்களை அறிய முடியாது. ஒருவனுக்குள்ளிருக்கிற ஆவியானவரால் தான் அறியமுடியும். அதுவே தேவனுக்கும் பொருந்தும். தேவனுடைய ஆவியானவர்தான் அந்த எண்ணங்களை அறிவார்” என்று கூறுகிறது. அப்படியானவர்கள் தங்களைப் பற்றி உம்மிடம் ஏதேனும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் போது, தேவன் அவர்களைப் பற்றிப் பொய் உரைக்கிறார் என்று அவர்களால் எக்காரணம் கொண்டும் சொல்ல முடியாது. ஆகவே, தங்களைப் பற்றி உம்மிடம் கேட்டுது தெரிந்து கொள்வது தான் அவர்கள் காட்டும் புத்திசாலித்தனம். அப்படிப்பட்ட பூத்து சாதூர்யத்தைப் பெற்றுக் கொண்டவர் இதைத் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்? அப்படித் தவறு என்று ஒருவர் சொல்லும்பட்சத்தில், அவர் பொய்யுரைக்கிறார் என்று தானே எண்ணவேண்டியுள்ளது? பிறர்நலம் நோக்கும் அன்பு என்பது, எல்லாவற்றையும் அரவணைத்துச் செல்லக்கூடியது. இதுகுறித்து 1 கொரிந்தியர் 13:7 இல் அருமையாக விளக்கப்பட்டுள்ளது. “அன்பு எல்லாவற்றையும் பொறுமையாய் ஏற்கும். அன்பு எப்போதும் நம்பும். அன்பு என்றும் கைவிடுவதில்லை, எப்போதும் உறுதியுடன் தொடரும்” என்று கூறுகிறது. [ஏனென்றால் அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழுமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது] என் ஆண்டவரே, நான் உண்மையை ஏற்றுக்கொள்கிறேன் என்பதை உமது செவிகள் கேட்கும் வண்ணம் உம்மிடம் ஒப்புக்கொள்கிறேன். ஆயினும் நான் ஒப்புக்கொள்வது உண்மைதான் என்று மற்றவர்களிடம் போய் நிரூபிக்கவேண்டிய கட்டாயம் எனக்கில்லை. ஆகவே, அன்பு செய்யக்கூடிய, அதைக் கேட்கக்கூடிய செவிகள் என்றும் எனக்காகத் திறந்திருக்கும் என்று நம்புகிறேன்.

4. என் ஆன்மீக மருத்துவரே, இதைச் மூலம் நான் என்ன பலனை அடைய முடியும் என்பதை எனக்குத் தெளிவுபடுத்தும். நான் உம்மில் ஒன்றித்திருக்க வேண்டுமென்பதால் கடந்தகாலத்தில் நான் கட்டிக்கொண்ட பாவங்களை மன்னித்து என்னை மீண்டும் அப்பாவங்களிலிருந்து மறைத்துவிட்டீர். அத்தோடு, எனது ஆன்மாவை விசுவாசத்தினாலும் திருமறை சடங்குகளாலும் புதுப்பித்தீர். அந்தத் திருமறை சடங்குகள் பற்றி வாசிக்கும்போதும், செவிமடுக்கும்போதும் ‘முடியாது‘ என்று முரண்டுபிடிக்கும் என் மனதை அதன் விரக்தி மனப்பான்மையில் இருந்து தட்டி எழுப்பும். இவ்வாறு விழித்துக்கொண்ட என் மனம், உமது இரக்கத்துக்காகக் காத்திருக்கும். உமது இரக்கத்தின் அன்பிலும், உமது கிருபையின் இனிமையிலும் பலவீனமானவர் வலிமையானவர் ஆகிறார். அதன் வாயிலாக அவர்களது வலுவிழந்த தன்மையை அவர்களுக்கு அடையாளம் காட்டக்கடவீராக. இதை 2 கொரிந்தியர் 12:10 இல் அழகாக விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நல்லவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொண்டு, இப்போது அவற்றிலிருந்து விடுதலை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவை தீமைகள் என்பதற்காக அல்ல, அந்தத் தீமைகள் தற்போது அவர்களோடு இல்லையென்ற காரணத்தினால்தான் அந்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிக்கின்றனர். இருப்பினும், என் ஆண்டவராகிய தேவனே, என் மனம் தினசரி அதன் கதவுகளைத் திறந்து உமது திருப்பாதத்தில் அதனிடம் இருக்கும் அனைத்தையும் ஒப்புக்கொடுக்கிறது. அப்படியிருந்தும் எனது ஒப்புக்கொடுத்தல்களால் என்ன பலன் விளையப் போகிறது? நான் நேரடியாகவே உம்மிடம் அறிக்கையிடுகிறேன், அதேவேளை, எம் மத்தியில் வாழும் மனிதர்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்பதற்காக அந்த அறிக்கைகளை எழுத்துருவில் வடித்துள்ளேன். நான் யாராக இருந்தேன் என்றோ, எப்படி இருந்தேன் என்றோ நான் எழுத முயற்சிக்கவில்லை. ஆனால் நான் யாராக இருந்தேன், எப்படி இருந்தேன் என்பது குறித்த எனது அறிக்கைகள் தந்த பயனை நன்றாக அறிந்த ஒருவனாக நான் அதை பகிர்ந்தும், எழுதியும் இருக்கிறேன். இருப்பினும் எனது இந்த அறிக்கையிடல் பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போது கூட, நான் எப்படி, என்னவாக இருக்கிறேன் என்பதை அறிய பலர் இன்னும் ஆவலாக இருக்கின்றனர். இவர்களுள், நான் அறிந்தவர்கள், அறியாதவர்களும், என்னைப்பற்றிக் கேள்வியுற்றவர்கள் போன்றோரும் உள்ளடங்குகின்றனர். நான் எங்கு இருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், எப்படி இருந்தாலும், அவர்களது செவிகள் என் மனதுக்கு சமீபமாக இருக்கவில்லை. எனது ஒப்புதல் அறிக்கைகளை நம்ப ஆவலாக உள்ளவர்கள், அவர்களின் கண்களாலோ, காதுகளாலோ, எண்ணங்களினாலோ எனது உள்மனதை சென்றடைய முடியாதபோது நான் யார் என்பதை அறிய விரும்புகிறார்கள். அப்படியே அவர்கள் விருப்பம் கொண்டிருந்தாலும், என்மீது நம்பிக்கை கொள்ளத் தயாராக இருந்தாலும், அதற்கான திடமான அறிவை அவர்கள் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகமே. நன்மைகளால் ஈர்க்கப்படும் அவர்களது மனங்கள், என்னைப் பொய்யுரைப்பவன் என்பதை மறுக்கின்றன. ஏனென்றால், அவர்களுக்குள் இருக்கும் ஒருவித அன்பு என் மீது ஒரு பற்றுதலை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

அத்தியாயம் 4 – தனது ஒப்புதல் அறிக்கைகளில் அவர் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணுவதோடு மற்றவர்கள் மீது அக்கறை காட்டுகிறார்

5. இதிலிருந்து அவர்கள் என்னவிதமான எடுத்துக்காட்டை பின்பற்றவேண்டுமென விரும்புகிறார்கள்? நான் என் தேவனான உமது கிருபையால் எவ்வாறு உம்மை நெருங்கி வந்தேன் என்று கேள்வியுறும்போது, அதற்காக என்னோடு சேர்ந்து உமக்கு நன்றி செலுத்துவார்களா? எனது சுமைகள் காரணமாக நான் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது, அதைக் கேள்வியுற்று அவர்கள் எனக்காக உம்மிடம் இறைஞ்சுக்கூடுமோ? இப்படிப்பட்டவர்கள் இருப்பார்களேயானால், அப்படியான தயாள சிந்தையுள்ளவர்களுக்கே என் இதய வாசல் எப்போதும் திறந்திருக்கும். என் கடவுளாகிய ஆண்டவரே, எங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துவதும், பலர் எங்களுக்காக வேண்டிக்கொள்வதும் இலகுவான காரியமல்ல. இதை 2 கொரிந்தியர் 1:11 “நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்” என்று உரைப்பதைக் காணலாம். நேசித்தல் பற்றி நீர் கற்பித்த ஒன்றை என்னோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் சகோதர ஆன்மாவும் அறிந்து அதுவும் தன் பங்குக்கு அன்பு செய்யக் கற்றுக் கொள்ளட்டும். அப்போது வருந்தத்தக்கது என்பதை அறிந்து அதற்கேற்றவாறு அந்த சகோதர ஆன்மாவானது வருந்தவும் செய்யும். இதுவே உண்மையை ஏற்கும் சகோதர உள்ளம். ஆனால் வேற்றினத்தாரின் உள்ளமோ செயற்படுவது வித்தியாசமானதாக உள்ளது. அவர்களது வலது கரம் வஞ்சகம் மிகுந்த வலக்கரம். என்னோடு சகோதர அன்பில் திளைப்பவர் என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு என்னோடு அவரது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார். அதேவேளை, நிராகரிக்கப்படும்போது, எனக்காகத் துயருறுகிறார். எப்படி இருந்தேபோதிலும், அவர் என்னை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் என்மீது கொண்டுள்ள அவரது அன்பில் மாற்றம் ஏற்படுவதில்லை. இப்படியான இனிய குணமுடையோருக்கு நான் என்றும் எனது இதயத்தைத் திறந்தே வைப்பேன். எனது நல்ல பண்புகள், குணவியல்புகளால் ஊட்டம் பெறும் அவர்கள், வழிதவறி விடும் எனது செயல்களுக்காக வருந்துகிறார்கள். என்னுள் இருக்கும் நற்பண்புகள், பழக்கவழக்கங்கள் யாவும் உமது கிருபையால் கிடைத்த வரப்பிரசாதங்கள். அதேவேளை, எனது தவறான போக்குகள் யாவும் நானே தெரிவுசெய்தவற்றால் ஏற்பட்ட விளைவுகள். நல்லொழுக்கங்களால் அவர்களது மனங்களில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்பவர்கள், தங்கள் தவறான செயல்களின் நிமித்தம் மனம் வருந்த வேண்டும். எம் சகோதரர்களின் புகழ்ச்சி மற்றும் கண்ணீர் ஒருமித்து உமது பாதத்தண்டை வந்து சேரட்டும். வெளிப்பாடுகள் 8 :3 கூறப்பட்டுள்ளதுபோல், தூபத்திலிருந்து மேலெழும் புகையின் நறுமணத்தை நுகரும் நீர், உமது தூய மாட்சிமையைக் கொண்டு என்மீது கருணை காட்டுவீராக. நீர் எனக்காகத் தொடங்கியுள்ளவற்றிலிருந்து பின்வாங்கவோ, இடைநடுவில் விட்டுவிடவோ மாட்டீர் என்பது திண்ணம். ஆகவே, என்னில் நிலவும் குறைகளைத் தீர்த்து என்னை ஏற்றுக்கொள்வீராக.

6. இந்த என் வாக்குமூல அறிக்கைகளின் பலன் நான் என்னவாக இருந்தேன் என்பதல்ல. இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்பதை பற்றி அறிக்கையிடுவது தான் முக்கியம். அதில் தான் நன்மை அடங்கியிருக்கிறது. இந்த ஒப்புதல் அறிக்கையை நான் உமக்கு முன்பாக பயபக்தியுடனும் மறைவான துக்கத்துடனும் நம்பிக்கையுடனும் என் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும் விசுவாசிகளின் காதுகளிலும் கேட்கும்படி இதை ஒப்புக்கொள்வேன். அவர்கள் என் உடன்பிறப்புகளைப் போன்றவர்கள், திருமறைப் பயணத்தில் என்னோடு பயணித்தவர்கள். அவர்களில் சிலர் எனக்கு முன்னே சென்றுவிட்டனர். ஏனையோர் என்னைப் பின்தொடர்ந்து வருவார்கள். அதேநேரம், சிலர் என்னோடு இப்போதும் பயணிக்கிறார்கள். அவர்களை யாவரும் உமது அடியார்கள், என் சகோதர மக்கள். தேவனுடைய அருட்கிருபையின் வழிவந்த உமது மக்கள், எனது எஜமானர்கள். நான் உமக்காக வாழவேண்டுமானால், அவர்களுக்குச் சேவை செய்யும்படி நீர் என்னைப் பணித்தீர். உமது ஏக சுதனால் இது நிறைவேறியிருக்காவிட்டால், இது வெறும் வீண் பேச்சாகவும், போலியான கட்டளையாகவே இருந்திருக்கும். தேவனின் சிறகுகளின் கீழ் இளைப்பாறும் நான், என் சொற்களாலும் செயல்களாலும் நீர் இட்ட கட்டளையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். அதேபோல எனது ஆன்மாவானது தன்னைத் தாழ்த்திக்கொள்ளாவிடில், இது சாத்தியப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் எனது பலவீனத்தை நீர் நன்கு அறிந்துள்ளீர். ஏனென்றால் நான் சிறியவன், ஆனால் என் தந்தை மகத்தானவர், அவர் என்றென்றும் வாழ்கிறார், என் பாதுகாவலராக இருக்கும் அவரது கிருபை ஒன்றே எனக்குப் போதும். 2 கொரிந்தியர் இதற்கு இவ்வாறு சான்று பகர்கிறது: “என் கிருபை உனக்குப் போதும். நீ பலவீனப்படும்போது என் பெலன் உன்னை முழுமையாகும்” என்றார். எனவே நான் என் பலவீனத்தைப் பற்றி மேன்மைப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கியிருக்கிறது” என்று கூறுகிறது. என்னை படைத்து, என்னை ஆட்சி செய்து என்னைப் பராமரித்து என்னைப் பாதுகாப்பவர் அவர் ஒருவர் மட்டுமே. நீரே எனக்கு அனைத்தும், நீரே நல்லவர், சகல நன்மைகளுக்கும் உரித்தானவர். நான் உம்மோடு இருந்ததற்கு முன்பிருந்தே நீர் என்னோடு வாசம் செய்கிறீர். ஆகவே, எனது அருட் பணி யார் யாருக்கெல்லாம் தேவையாக இருக்கிறதோ, அவர்கள் மத்தியில் விரிவுபடுத்த வேண்டுமென்று நீர் சித்தம் கொண்டுள்ளீரோ, அவர்களுக்கிடையே சென்று நான் என் கடந்த காலத்தில் எப்படி இருந்தேன் என்பதைப் பற்றி மட்டுமல்ல, நிகழ் காலத்தில் எப்படி இருக்கிறேன் என்பது பற்றியும், எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறேன் என்பது குறித்தும் வெளிப்படுத்தாத தயாராக இருக்கிறேன். ஆனால் என்னை நானே சுய தீர்ப்புக்கு உள்ளாக்க மாட்டேன். 1 கொரிந்தியர் 4:3 இதை ஆமோதிக்கும் வகையில், “எந்த உலகத்து நீதிமன்றமும் எனக்கு நியாயம் தீர்ப்பதைக் கூடப் பொருட்டாகக் கொள்ளமாட்டேன். நானே எனக்கு நீதி வழங்கமாட்டேன்” என்று கூறுவதை இங்கே எடுத்துக்காட்டுவது நலம். ஆகவே இவ்வாறு நான் என்னையே வெளிப்படுத்துவதால் எனது நிலையும் கேள்விக்குறியாகவே இருக்கும்.

அத்தியாயம் 5 – அந்த மனிதன் தன்னை முழுமையாக அறிந்துகொள்ளவில்லை

7. என் தேவனே, என்னை ஆள்பவரே, நீர் ஒருவரே என்னைத் தீர்ப்பிட வல்லவராக இருக்கிறீர் என்று 1 கொரிந்தியர் 4: 4 விளக்கும் அதேநேரம், “ஒருவர் அடுத்தவருடைய எண்ணங்களை அறிய முடியாது. அவனுக்குள்ளிருக்கிற அவனுடைய மனம் மட்டுமே அதை அறியும். அதுவே தேவனுக்கும் பொருந்தும். தேவனுடைய ஆவியானவர்தான் அந்த எண்ணங்களை அறிவார்” என்று 1 கொரிந்தியர் 2 : 11 கூறுவதையும் இங்கே குறிப்பிடுதல் வேண்டும். ஆனால் ஒருவனைப் படைத்த ஆண்டவரே, நீர் அவனைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறீர். நான் உமது முன்னிலையில் என்னை இகழ்ந்து, மண்ணாகவும் சாம்பலாகவும் எண்ணிக் கொண்டாலும், என்னைப் பற்றி எனக்குத் தெரியாத ஒன்றை உம்மிலிருந்து நான் அறிந்துகொண்டேன். ஆதியாகமம் 18 : 27 இல் ஆபிரகாம் கர்த்தரை நோக்கிக் கூறிய வார்த்தைகளான, “கர்த்தாவே, உம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் வெறும் தூசியாகவும், சாம்பலாகவும் இருக்கிறேன்” என்பதை இங்கே நினைவுகூரத்தக்கது. நிச்சயமாக இப்போது நாம் ஒரு இருண்ட, கறுப்புக் கண்ணாடி வழியாகவே பார்க்கிறோம், இதுவரை நேருக்கு நேர் பார்க்கவில்லை, என்று 1 கொரிந்தியர் 13:12 இல் இதுகுறித்த விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. ஆகையால், நீண்ட காலமாக நான் உம்மிடம் நெருங்கி இராமல், விலகி இருந்தேன். உம்முடன் இருந்ததை விட நானாக, நான் என்னுடனேயே தான் இருந்தேன். இதை மேற்கோள் காட்டும் விதத்தில், “நாம் இந்த சரீரத்தில் இருக்கும் வரை கர்த்தரை விட்டு விலகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று 2 கொரிந்தியர் 5:6 ம் வசனங்கள் விளக்கமளிக்கின்றன. உமது புனிதத்தன்மைக்குக் களங்கம் விளைவிக்க முடியாதென்பதை நான் அறிவேன். அதேநேரம், என்னென்ன சோதனைகளை என்னால் வெல்ல முடியும் அல்லது வெல்ல முடியாது என்பது குறித்து நான் அறியாதவனாக இருக்கிறேன். ஆனால் நம்பிக்கை இருக்கிறது, ஏனென்றால் நீர் சத்தியத்தின் வடிவமாக இருப்பதால், எங்களால் தாங்கிக்கொள்ள முடிந்ததை விட அதிகமாக துன்பப்படவோ அல்லது சோதனைகளுக்கு உள்ளாகவோ நீர் அனுமதிக்க மாட்டீர். ஆனால் சோதனையில் இருந்து விடுபடவும் தேவன் வழிகாட்டுவார், அப்போது அந்த சோதனைகளை எம்மால் தாங்கிக்கொள்ள முடியும், என்று 1 கொரிந்தியர் 10:13 ம் வசனங்களில் விளக்குகிறது. எனவே நான் என்னைப் பற்றி எனக்குத் தெரிந்ததையும், தெரியாததையும் நான் ஒப்புதலை அறிக்கையிடத் தயாராக இருக்கிறேன். மேலும் என்னைப் பற்றி நான் அறிந்துகொள்ளும் முகமாக நீர் மேல் உமது ஒளியைப் பிரகாசிக்கச் செய்கிறீர். அந்த ஒளியானது உமது திருமுகத்திலிருந்து பிரகாசிக்கும் ஒளி என் வாழ்வில் கவிந்திருக்கும் இருளை நீக்கும் என்று அறியாதவனாயிருந்தேன். ஏசாயா 58:10 ம் வாசகத்தின் ஒரு பகுதியில், “உனது வெளிச்சம் இருளில் பிரகாசிக்கும். உனக்கும் துக்கம் இருக்காது. நீ நண்பகலில் உள்ள சூரியனைப்போன்று பிரகாசமாக இருப்பாய்” என்று கூறுகிறது.

அத்தியாயம் 6 – புலன்களைப் புரிந்துகொள்வதும் பகுத்தறிவின் பயன்பாடும் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் கடவுள் இயல்பிலேயே மிகவும் அன்பானவர் என்பதை உணர வழிவகுக்கிறது

8. என் தேவனே, நிச்சயமற்ற நிலையில் இல்லாமல், உறுதியான உணர்வுடன் நான் உம்மை நேசிக்கிறேன். உமது வார்த்தையால் என் உள்மனதைத் தொடும்படி செய்தீர். நான் உம்மை என் முழு மனதோடு நேசித்தேன். மேலும், வானமும், பூமியும், அதனோடிணைந்த அனைத்தும், இதோ, நான் உம்மில் அன்பு செலுத்தவேண்டும் என்று ஒவ்வொரு திசையிலிருந்து என்னை நோக்கிச் சொல்வதைக் கேட்கிறேன். இவைகள் என்னிடம் மட்டுமல்ல, எல்லாரிடமும் இதைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆதலால் அவைகளால் போலியான காரணங்கள் எதையும் சொல்லமுடியவில்லை. நிறுத்தவும் மாட்டார்கள், அதனால் அவர்கள் மன்னிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். உரோமர் 1:20 ம் வாசகங்களில் ஒரு பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளதை அவதானிக்கவும். “உலகம் உண்டான நாள் முதல் மக்களால் அவரை, அவரது படைப்புகள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலேயே இருக்கிறார். அதனால் மக்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள இயலாது” என்கிறது. நீர் எவருக்கு கருணை காட்டவேண்டும் என்று நினைக்கிறீரோ அவருக்குக் கருணை காட்டுகிறீர். அதேநேரம், யார் யாருக்கு உமது பரிவைப் பொழியவேண்டும் என்று எண்ணுகிறீரோ, அவர்கள் மேல் உமது பரிவைப் பொழிகிறீர். இதை உரோமர் 9:15 “நான் யாரிடம் இரக்கம் காட்ட வேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.” என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருப்பதை மேற்கோள் காட்டுகிறது. இல்லையெனில் வானமும் பூமியும் உமது புகழை செவிடரின் காதுகளுக்குள் மட்டுமே உரைக்கும். ஆனால் நான் உம்மை நேசிக்கும் பொழுது, எதை நேசிக்கிறேன்? சரீரத்தின் அழகையோ, காலத்தினால் மெருகுபெற்ற இவ்வுலகின் பேரழகையோ, நம் கண்களுக்கு இதமான ஒளியின் பிரகாசத்தையோ, எல்லா வகையான பாடல்கள் தரும் இனிமையான இதமான மெல்லிசைகளோ, பூக்களோ, தைலமோ, வாசனை திரவியங்களோ மன்னாவோ தேனின் இனிமையோ, தழுவி சுகம்காணும் மனித உடலின் கதகதப்போ அல்ல. நான் என் கடவுளை நேசிக்கும்போது இவற்றை நான் விரும்புவதில்லை, எதோ ஒருவித ஒளியை, ஒரு நறுமணத்தை, ஒரு சுவைதரும் உணவை, ஒரு இதமான அரவணைப்பை என் கடவுளை நேசிப்பதில் நான் மகிழ்ச்சி தருவதாய் உணர்கிறேன். என் உள்ளத்தில் – எங்கும் அடைத்துவைக்க முடியாத அந்த ஒளி, என் ஆன்மாவின் மீது பிரகாசிக்கும் அந்த ஒளி, காலத்தால் எடுத்துச் செல்லமுடியாத அந்த ஒலி, காற்றால் அல்லிச் செல்லமுடியாத அந்த நறுமணம் இருக்கும் இடத்தில், உண்ண உண்ணக் குறையாத அறுசுவை உணவு, மனநிறைவை ஏற்படுத்தும் அந்த இதமான அரவணைப்பு போன்றன இங்கே தாராளமாய் இருக்கின்றன. ஆகவே, நான் என் கடவுளை நேசிக்கும்போது அதற்கு முன்னுரிமை கொடுத்த பிறகுதான், இவை யாவற்றையும் நான் விரும்பவேண்டும்.

9. நான் இந்தப் புவியிடம், ‘எதை அல்லது யாரை நான் அன்புசெய்ய வேண்டும்‘ என்று கேட்டேன். அதற்கு புவியோ ‘என்னை அல்ல‘ என்று பதிலளித்தது. அதுமட்டுமல்ல, நான் கேட்ட அனைவருமே ஒரே விதமான பதிலையே அளித்தனர். நான் ஆழ்கடலையும், பூமியில் வாழும் ஊர்வனவற்றையும் கேட்டேன், அவைகளும் அதே பதிலையே அளித்தன. ‘நாங்கள் உங்கள் கடவுள் அல்ல, எங்களை விட உயர்ந்தவர்களைத் தேடுங்கள்‘ என்றன. வீசும் தென்றல் காற்றையும், வளிமண்டலத்தை நிரப்பும் எல்லாவகையான காற்றையும் கேட்டேன். அவையும் தாம் கடவுள் அல்ல என்றும், அனக்ஸிமெனஸின் கோட்பாட்டில் தவறு இருப்பதாகவும் கூறின. [தத்துவஞானியான சோக்ரடீஸுக்கு முன்பு வாழ்ந்த மற்றுமோர் தத்துவஞானியான அனக்ஸிமெனஸ் என்பவர், இவ்வுலகில் வாழும் படைப்புகளுக்கு எல்லாம் மூலகாரணமாயிருப்பது காற்று தான் என்றும் காற்றே கடவுள் என்றும் கூறியிருந்தார்] நான் வானத்தையும், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் கேட்டேன்: நீங்கள் தேடும் கடவுள் நாங்கள் அல்ல என்று கூறின. என்னோடு இணைந்து வாழும் என் உடலின் புலன்களிடமும் ‘என் தேவனைப் பற்றி நீங்களாவது எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். ‘நீங்கள் அவர் அல்ல, ஆனால் அவரைப்பற்றி நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவற்றை என்னிடம் சொல்லவேண்டும்‘ என்று கேட்டேன். அதற்கு அவை யாவும் ஏகோபித்த குரலில், எம்மைப் படைத்தவர் அவரே‘ என்று முழங்கின. மேற்கூறிய அனைத்திலும் பதில் கிடைக்காமல் போன நான், என்னிடமே திரும்பி, ‘நீர் யார்?’ என்று என்னிடமே கேட்டேன். அதற்கு ‘நான் ஒரு மனிதன்‘ என்ற பதிலே கிடைத்தது. ‘எனது கட்டுப்பாட்டுக்குள் கீழ் தான் எனது உடலும், ஆன்மாவும் இருக்கின்றன. அதில் உடல் என்பது புறத்திலும், ஆன்மா என்பது அகத்திலும் இருக்கின்றன. இவற்றில் எதைக்கொண்டு உம்மை நான் தேடியடைவேன்? கண்களாலும் இதர அவையவங்களாலும் நான் கண்ட,காணுகிற அனைத்தின் வழியாகவும், வையகத்திலிருந்து வானகம் வரை நான் தேடாத இடமே இல்லை என்று கூறலாம். ஆனால் அதைத் தேடுவதற்கு என்னுள் வாழும் என் ஆன்மாவே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன். ஏனெனில், உடலில் உள்ள எல்லாப் புலன்கள் மற்றும் அவயவங்கள் தாம் பெற்றுக்கொள்ளும் அனைத்து கட்டளைகள், தகவல்கள் போன்றவற்றை என்னுள் வாழும் ஆன்மாவுக்குள்ளே அனுப்பி அங்கேயே அனைத்தும் ஆராயப்படுகின்றன. அது நாட்டில் தலைவராகவோ அல்லது உயர் நீதிபதியாகவோ இருக்கட்டும், அவர்களும் கூட இதையே தான் செய்திருப்பார்கள். எனது உடலளவிலான தூதர்கள் வானத்திலும் பூமியிலும் உள்ள எல்லோரிடமும் இதற்கான கேள்விகளைத் தொடுத்தபோதிலும், அவை யாவும் ‘நாங்கள் கடவுள் அல்ல, ஆனால் அவர் தான் நம் எல்லோரையும் படைத்தார்‘ என்றே பதிலிறுத்தன. புறத்தில் நான் ‘வெளியில் தெரியும் மனிதனாக‘ ஈடுபட்டிருக்கும் கிரியைகளின் ஊடாக என் உள்ளம் இவற்றைப் பற்றி அறிந்திருந்ததோடு, ‘என்னுள்ளிருக்கும் மனிதன்‘ என்ற எனது உள்ளம் இதை உணர்ந்தது. என் உடலின் புலன்கள் மற்றும் உள்ளத்தின் வாயிலாக எனது கடவுளைப் பற்றி இந்தப் பிரபஞ்சத்தின் பெரும்பகுதியை நான் வினவியபோது, அது, “நான் அவர் அல்ல, ஆனால் அவர் எம்மைப் படைத்தார்” என்று ஒட்டுமொத்தமாகக் கூறிவிட்டன.

10. பாதிப்புக்குள்ளான புலன்களைக் கொண்டோரைத் தவிர, இந்த அழகு என்பது அனைவராலும் பார்க்கக்கூடியதாய் இருக்கிறதல்லவா? அப்படியானால், அவர்கள் ஏன் இதுபற்றி மற்றையோரிடம் பேசுவதில்லை? மிருகங்கள், அவை சிரியனவாக இருந்தாலும், பெரியனவாக இருந்தாலும், அவைகளால் ஏன் அதுபற்றிக் கேள்வி கேட்க இயலாமலிருக்கிறது? ஏனென்றால் அவைகளுக்குப் பகுத்தறியும் ஆற்றல் கிடையாது. ஆனால் மனிதர்கள் இதைக் கேள்விக்குட்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் தேவனுக்கே உரியதான, கண்ணுக்குப் புலப்படாத பல விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. அவற்றை அவரது படைப்பின் வழியாகவே பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதை உரோமர் 1:20 ம் வாசகத்தில், “தேவனைப் பற்றிய பல உண்மைகள் மனிதர்களால் காண முடியாததாக உள்ளது. அவர் முடிவில்லாத வல்லமையும், தெய்வத்துவமும் கொண்டவர். ஆனால் உலகம் உண்டான நாள் முதல் மக்களால் அவரை அவரது படைப்புகள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலேயே இருக்கிறார்” என்று கூறுகிறது. ஆனால் மனிதர்களோ, படைப்பை மட்டுமே நேசித்து, அதன் மீது அன்பைச் செலுத்தி அவற்றுக்கே கீழ்ப்படிகிறார்கள். பகுத்தறிவுத் தீர்ப்புகளைச் செய்ய முடியுமே தவிர, இந்த உருவாக்கப்பட்ட விஷயங்கள் எதுவும் கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலளிப்பதில்லை. உயிரினங்கள் தங்கள் குரலை மாற்றுவதில்லை – அதாவது, அவர்களுக்கே உரித்தான தங்கள் இயல்பை என்றும் மாற்றாது. ஒரு மனிதன் வெறுமனே ஒன்றைப் பார்க்கிறான், இன்னொருவன் இன்னொன்றைப் பார்க்கிறான். இருவரும் பார்க்கிறார்கள், இருவரும் கேள்விகளை எழுப்புகிறார்கள், ஒரு மனிதனுக்கு ஒரு விதமாகவும் மற்றொரு மனிதனுக்கு இன்னொரு விதமாகவும் உலகம் தோன்றுகிறது. ஒருவனுடன் பேசும் இவ்வுலகம், மற்றவனோடு மௌனத்தைக் கடைபிடிக்கிறது. ஆனால் உண்மையாகவே, அது அனைவரிடமும் பேசுகிறது. வெளியில் இருந்து கேட்கும் அந்தக் குரலை உள்ளிருக்கும் உண்மையுடன் ஒப்பிடுபவர்களுக்கு மட்டுமே அது புரியும். உண்மை என்னிடம் இவ்வாறு சொல்கிறது, “வானமோ, பூமியோ அன்றி வேறு எவரும் உங்கள் கடவுளாக இருக்க முடியாது” என்று. அவைகளின் சொந்த இயல்பே அவற்றைப் பார்ப்பவர்களிடம் இதைச் சொல்கிறது. இயற்கை என்பது ஒரு குவிவு நிலை, மொத்த குவிவு நிலையைவிட, ஒரு பகுதியின் பகுதியாக இருக்கிறது. ஆனால், ஓ என் ஆன்மாவே, நீ தான் என் சிறந்த பகுதி, உன்னிடம் நான் பேச முடியும். ஏனென்றால், உடலின் முழு நிறைக்கும் உயிரைக் கொடுப்பதன் மூலம் நீ அதற்கு வாழ்வளிக்கிறாய். ஏனெனில், எந்த உடலும் மற்றொரு உடலுக்கு உயிரையோ வாழ்வையோ வழங்குவதில்லை. அப்படியானால், உங்கள் கடவுள் ஒருவர் தான் உங்கள் வாழ்க்கையின் உயிராக இருக்கிறார்.

அத்தியாயம் 7 – உடலின் அல்லது ஆன்மாவின் சக்தியை மட்டுமே கொண்டு கடவுளைக் கண்டடைய முடியாது

11. நான் என் தேவனிடத்தில் அன்புகூரும்போது, அவரில் நான் எதை விரும்புகிறேன்? என் ஆன்மாவை விட உயர்ந்தவர் அவரன்றோ? என் ஆன்மாவின் சக்தியின் வாயிலாகவே நான் அவரிடத்தில் எழுந்து செல்வேன். எனது உடலைப் பற்றிக்கொள்ளும் என்னுடைய சக்திக்கு அப்பால் உயர்ந்து நான் அவரை நோக்கிச் செல்வேன். என் உடலில் காணப்படும் அந்த சக்தியால் மட்டும் நான் என் கடவுளைக் கண்டடைய இயலாது; அப்படியானால், ஒரு குதிரையோ கோவேறு கழுதையோ இலகுவில் கடவுளைக் காணும் அல்லவா? ஏனென்றால் அதே சக்திதான் அந்த மிருகங்கள் உயிர்வாழ உதவுகிறது. அதேநேரம் மற்றொரு திறனையும் பற்றிக் குறிப்பிடவேண்டியுள்ளது. அது என் சரீரத்துக்கு இயக்கத்தையும் அவயவங்களின் செயற்பாட்டுக்கு ஊட்டத்தையும் அளிக்கிறது. கண்கள் தானாகவோ பார்ப்பதில்லை; செவிகள் தானாகக் கேட்பதுமில்லை; அவயவங்கள் தானாக செயற்படுவதுமில்லை. இவை அனைத்தும் படைப்பாளரான தேவனின் கட்டளைப்படியே அவற்றின் கடமைகளை செவ்வனே ஆற்றிவருகின்றன. ஆனால் நான் பார்ப்பதும் கேட்பதும் மற்றும் இயங்குவதும் அவற்றின் நிலைகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும். ஏனென்றால் நான், ஒருவனாக அதும் தனியாக, இத்தனை புலன்களையும் கட்டுப்படுத்தி ஆளவேண்டியவனாய் இருக்கிறேன். எனது உடலைப் பற்றிக்கொள்ளும் என்னுடைய சக்திக்கு அப்பால் உயர்ந்து நான் அவரை நோக்கிச் செல்வேன். குதிரையும் கோவேறு கழுதையும் கூட அதே சக்தியைக் கொண்டுதான் இயங்குகின்றன. அவைகளும் தங்கள் உடலால் அனைத்தையும் உணர்கின்றன.

அத்தியாயம் 8 – நினைவாற்றலின் தன்மையும் அதன் வியக்கத்தக்க சக்தியும்

12. என் இயல்பின் சக்திக்கு அப்பால் நான் உயர்ந்து சென்று, என்னைப் படைத்தவரிடம் முன்னேறிச் செல்வேன். மேலும் பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் என் புலன்களுக்குள் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற உருவங்களின் பொக்கிஷங்களால் நிரப்பப்பட்ட விசாலமான அரண்மனைக்குள் நான் பிரவேசிப்பேன். அங்கு கணக்கு வழக்கில்லாமல் கொட்டிக்கிடக்கும் உருவங்கள் கண்கொள்ளாக் காட்சியாக என் கண்முன் விரியும். எம் புலன்களால் கிரகிக்கக்கூடிய யாவும் அங்கே தாராளமாகக் காணப்படுகின்றன. பெருப்பித்தோ, சிறியதாக்கியோ அல்லது என்ன விதத்தில் வேண்டுமோ, அதாவது எமது புலனறிவுக்கு எட்டாத யாவும் அங்கே நிதர்சனமாய்த் தெரிகின்றன. நான் இந்தக் களஞ்சியத்துக்குள் இருக்கும்போது, ​​நான் விரும்புவதைப் பெறவும், சில விஷயங்கள் உடனடியாகவே தோன்றக்கூடியதாய் இருக்கின்றன. சிலவற்றைத் தேடுவதற்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. சில எண்ணங்கள் மூளைக்குள் அபரிமிதமாக் கொட்டிக்கிடக்கும் காரணத்தால், ஒருவர் ஒரு பொருளைத் தேடிக்கொண்டு அதேநேரம், மற்றொன்றைப் பற்றிக் கேட்கும்போது, ‘எங்களைத்தான் தேடுகிறாயா’ என்று மற்றொரு கேள்வி மூளையின் மறுபக்கத்தில் இருந்து ஒலிக்கும். அப்போது, இவற்றை நான் என் நினைவில் இருந்து அப்பாலே தள்ளிவிட்டு, நான் விரும்புவதை, அந்த இரகசிய கொள்கலனிலிருந்து வெளியே கொண்டு வரப்படும் வரை தேடுதலைத் தொடர்ந்தவண்ணமே இருப்பேன். மற்றையவை அனைத்தும் எந்த முயற்சியும் மேற்கொள்ளப் படாமல், தங்குதடையின்றி கூப்பிட்டவுடன் ஓடோடி வருவதைப்போல தொடர்ச்சியான ஒழுங்கில் என்முன் வந்தன. பழையவை ஒதுங்கி, புதியவற்றுக்கு முன்னே வர வழிவிட்டன. அவ்வாறு புதியவை முன்னே வரவர பின்னால் இருப்பவை யாவும் நினைவகத்தில் தயாராக இருப்பதுபோல ஒருவித ஒழுங்குடன் சேமித்து வைக்கப் படுகின்றன. எப்போது எது வேண்டுமோ, அப்போதெல்லாம் நான் அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி எனக்கிருக்கிறது. நினைவகத்தில் சேமிக்கப்பட்ட ஒன்றை நான் மீட்டுப்பார்க்கும் பொது இவை அனைத்தும் நிகழ்கின்றன.

13. மூளையினால் கிரகிக்கப்படும் ஒவ்வொரு தகவலும் தனித்துவமான மற்றும் பொதுவான வகைகள் என்று தரம் பிரிக்கப்பட்டு, அவ்வந்த வகையறாக்களுக்குக் கீழ் தனித்தனியாகச் சேமிக்கப் படுகின்றன. ஒளி, நிறங்கள், உருவங்கள் போன்ற கட்புலன் வழியாக மனதுக்குள் பிரவேசிக்கின்றன. செவிகள் ஒலியையும், மணம், வாசனை போன்றவை மூக்கினால் நுகரப்பட்டு தரம்பிரிக்கப் பட்டு மூளைக்குள் செல்கின்றன. அதேபோல், அறுசுவைகளும் அத்தோடிணைந்த பல்வேறுபட்ட சுவைகளும் நாவின் வழியாக உள்ளே செல்கின்றன. அத்தோடு, முழு உடலும் அதிலுள்ள உணர்வாற்றல் மற்றும் தொட்டுணர்வு வழியாக உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள பல்வேறு உணர்திறன்களைப் பகுத்தறிகின்றன. அங்கே மென்மையானவை-கடினமானவை, சூடானவை-குளிர்ச்சியானவை, மிருதுவானவை-கரடுமுரடானவை, பாரமானவை-இலேசானவை போன்ற எல்லாவற்றையும் கிரகித்து அவை குறித்த அனைத்துத் தகவல்களையும் உடலின் உணர்வுத்திறன் ஊடாக மூளைக்குள் அனுப்புகிறது. இவை அனைத்தும் அதன் பல விவரிக்கக் கூடிய, விவரிக்கமுடியாத பல்வேறு உணர்வுகளை அவ்வந்த உள்ளகக் களஞ்சியங்களுக்குள் உள்வாங்கப்படுகின்றன. பொருட்களோ அல்லது அதன் உருவ அமைப்புகளோ உள்நுழைவதில்லை, ஆனால் அவை குறித்த புகைப்படத்தைப் போன்ற கற்பனை உருவங்கள் உட்சென்று அங்கே சேமிக்கப்படுகின்றன. ஆகவே ஏதோ ஒரு பொருளை பற்றிய நினைவுகளை மீட்டும் போது, அங்கே அதைப்பற்றிய பிம்பங்கள் தான் நம் கற்பனையில் உதிக்கின்றதே தவிர, இந்த உருவங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை யாராலும் கூறமுடியாது. இருப்பினும் அவை ஒவ்வொன்றும் எந்தப் புலன்களின் வழியாகப் பெறப்பட்டு அவை எமது மூளை என்ற கருவூலத்துக்குள் சேமித்து வைக்கப் பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. நான் இருளில் அமைதியாக இருக்கும்போது, நான் எனது நினைவகத்தில் பதிந்திருக்கும் வண்ணங்களை எனது இஷ்டம் போல வெளிக்கொணர முடியும். கறுப்பு, வெள்ளை அல்லது வேறு என்ன நிறங்களை நான் விரும்புகிறேனோ அதை என்னால் வேறுபடுத்தி என் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தமுடியும். மேலும், என் கண்களால் உள்வாங்கப்பட்டதையும், அவை எங்கே இருக்கின்றன என்பதையும், எங்கே மறைந்திருக்கின்றன என்பதையும் அவை எவ்வாறு தனித்தனியாகப் பிரித்துவைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் என்னால் என் நினைவுக்கு கொண்டு வரமுடியும். ஒலிகள் என்னுள் ஊடறுத்துச் சென்று என் கண்களால் வரையப்பட்டதை தொந்தரவு செய்யாது. அந்த ஒளி என்பது மிதப்பில் இருக்கும். நான் அனுமதித்தாலே தவிர, அவை பலவந்தமாக உள்ளே வருவதில்லை. எனது நாக்கை அசைக்காமலேயே, எனது தொண்டையில் இருந்து எவ்வித சத்தமும் வராமலேயே, உணர்வால் நான் விரும்பிய இசையை என்னால் பாடி மகிழ முடியும். அப்போது நான் பார்த்த அல்லது எனது உள்ளுணர்வில் பதிவிட்டுள்ள நிறங்கள் அல்லது உருவங்கள் எனக்கு இடையூறாக அமைவதில்லை. நான் எனது இஷ்டத்துக்கு அவற்றைப் பற்றி நினைத்து என் நினைவுகளுக்குள் வராவிட்டால் மாத்திரமே அவை என் முன் நிழலாடும். இவ்வாறாக நான் விரும்பும்போது அல்லது எனக்குத் தேவையேற்படும்போது அல்லது வேண்டும் என்று மனம் சொல்லும் போது, அவை குறித்த தகவல்கள் மற்றும் விவரங்களை என்னால் பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருக்கிறது. மூக்கினால் முகர்ந்து பார்க்காமலேயே உணர்வுத்திறனால் என்னால் அல்லிப்பூவின் நறுமணத்தையும் ஊதா நிறப்பூவின் நறுமணத்தையும் பிரித்தறிய முடியும். தேனுக்கும் திராட்சை இரசத்துக்கும் உள்ள வேறுபாடு மற்றும், மிருதுவான தன்மை மற்றும் கரடுமுரடான தன்மை போன்றவற்றுக்கு இடையில் காணப்படும் வேறுபாடு, மற்றும் எந்த ஒரு தீன்பண்டத்தை கையால் தொடாமல், சுவைக்காமல் அதன் சுவை என்னவென்று எனது உணர்த்திறனால் அறிந்து சொல்லிவிடமுடியும். இவற்றுக்கெல்லாம் காரணம், இவை யாவும் கண்டு, தொட்டு, அனுபவித்து, முகர்ந்து அவற்றின் இயல்புகளை மூளைக்குள் சேமித்து வைத்ததுதான்.

14. நினைவுகளின் பெட்டகமான அந்த பாரிய சேமிப்பகத்தினில் தான் இவை யாவும் நடக்கின்றன. வானம், பூமி, கடல்கள் போன்ற அனைத்தின் பிம்பங்களும் அந்த நினைவகங்களில் பசுமையாக இருக்கின்றன. எனது நினைவுக்கு எட்டாதவை அனைத்தையும் தவிர, நான் நினைக்கும் அனைத்தின் உருவங்களையும் அவற்றின் பிம்பங்களையும் எனக்கு எப்போது வேண்டுமோ அப்போதெல்லாம் மீட்டிப்பார்த்து என்னால் அனுபவிக்க முடியும். அங்கே நான் என்னையும் சந்தித்து என்னைப் பற்றிய நினைவுகளையும் மீட்டுப்பார்த்தேன் – நான் எதை, எப்போது ​​எங்கே எப்படிச் செய்தேன் என்றும் அவற்றைச் செய்யும்போது எனக்கு ஏற்பட்ட விளைவுகள் போன்ற பலவற்றையும் மீட்டிப்பார்த்தேன். இவை அனைத்தையும் நான் எனது தனிப்பட்ட அனுபவத்தினாலோ அல்லது மற்றவர்கள் உதிர்த்த வார்த்தைகள் போன்றவற்றை மீட்டெடுப்பதன் வாயிலாகவோ என் நினைவில் பதிந்தவை. இந்த நினைவகத்தில் உள்ள உள்ளவற்றைக் கொண்டு நான் கிரகித்த உருவங்களின் பிம்பங்களையும் கடந்துபோன நினைவுகளையும் ஒன்றிணைத்துப் பார்க்கிறேன். இவற்றின் உதவியைக் கொண்டு, எதிர்காலத்தில் நிகழவிருப்பதையும், எதிர்பார்ப்புகளை எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றுவது போன்றவற்றையும், இவை தரும் வழிகாட்டுதல்களால், தற்காலத்தில் நிகழக்கூடியவற்றை இணைத்துப்பார்க்கவும் என்னால் முடிகிறது. இது அது என்றல்ல, எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியுமென்ற திடத்தை எனக்கு கொடுப்பது இந்த நினைவுகளின் அடிப்படையே. உருவங்களின் பிம்பங்களை நினைவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். ‘ஒருவேளை இது அப்படி நடந்திருந்தால் அல்லது அது இப்படி நடந்திருந்தால்’ என்று நாம் எதிர்மறையாய் எண்ணும் எண்ணங்களைக் கடவுள் தடைசெய்வாராக. இதுபோன்றவற்றை நான் எனக்குள்ளே பேசும்போது, நான் கிரகித்த அனைத்து உருவங்களின் பிம்பங்களும் எனது நினைவகத்தில் இருந்து வெளிப்பட்டு, என் கண்முன் நிழலாடுகின்றன. ஆகையால், பிம்பங்கள் என் கண்முன்னே வராமலிருந்தால், என்னால் எதையும் நினைவுகூரவோ பேசவோ முடியாதிருக்கும்.

15. என் தேவனே, நினைவு ஒரு பெரிய பள்ளத்தாக்கைப் போன்றது, மிகப்பெரியது, மகோன்னதமானது. பரந்து, விரிந்து எல்லைகளற்ற ஆழத்தைக் கொண்டிருக்கிறது. அதன் ஆழத்துக்குச் சென்றவர் யாருமிலர். இந்த நினைவு எனும் ஆற்றலானது, என் மூளைக்குள்ளே பொதிந்திருக்கிறது. அது இயற்கை எனக்கு அருளிய ஒரு வரப்பிரசாதம், ஒரு அருட்கொடை. அப்படியெல்லாம் இருந்தபோதும் கூட, எனது மூளையின் பரிமாணத்தை என்னாலேயே அளவிடவோ, முழுமையாக அறிந்துகொள்ளவோ முடியாதிருக்கிறது. இதை எனக்கு எடுத்துரைப்பதும் எனது மூளையே தான். இந்த எண்ணம் மட்டுமல்ல, சகலவிதமான எண்ணங்களும் மூளைக்குள்ளே தான் இருக்கின்றன, வெளியே எங்குமில்லை. அப்படியானால், ஏன் மூளையே மூளையைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறது?இந்தக் கேள்வி என்னை வியப்புக்குள் ஆழ்த்துகிறது. மலைகளின் உயரம், கடலில் தோன்றும் இராட்சத அலைகள், ஆறுகளின் செறிவான நீரோட்டம், கடலின் பரிமாணம் மற்றும் நட்சத்திரங்களின் பயணம் குறித்து ஆச்சரியப்படும் மக்கள், தங்களைப் பற்றி ஆச்சரியப்படத் தவறுகிறார்கள். இதையெல்லாம் பற்றி நான் பேசியதைக் கேட்டும் அவர்கள் எந்தவிதமான சலனங்களும் இன்றியே இருக்கிறார்கள். நான் பார்த்த மலைகள், கடல் அலைகள், ஆறுகள் மற்றும் நட்சத்திரங்கள் மற்றும் நான் நம்பும் அந்த கடல் ஆகியவற்றை நான் பார்த்து அல்லது பிறர் சொல்லக் கேட்டு என் நினைவகத்துக்குள் உள்ளீர்த்துக் கொண்டேனே தவிர, நான் அவற்றின் உள்ளே சென்று பார்க்கவில்லை. ஏனெனில், என் உடலின் இந்தப் புலன் வழியாக என்னென்ன என் மூளைக்குள் சென்று என் நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன என்பதையும் என் மூளையே எனக்கு எடுத்துரைக்கிறது.

அத்தியாயம் 9 – விடயங்கள் மட்டுமல்ல, இலக்கியம் படங்கள் போன்றவையும் நினைவகத்தில் இருந்து எடுக்கப்பட்டு நினைவூட்டலின் மூலம் வெளிவருகின்றன

16. இன்னும் எல்லையற்ற என் நினைவாற்றலின் கருவூலத்துக்குள் தக்கவைக்கக்கூடியவை இவை மட்டுமல்ல. தாராளவாத விஞ்ஞானம் சம்பந்தமாகப் பெற்றுக்கொண்ட அறிவு – அவை நம் நினைவில் இருந்து அழிந்துபோகாதவரை – எம் நினைவில் பொதிந்திருக்கின்றது. அவை நினைவகத்தில் பின்னாலுள்ள சேமிப்பறைக்குக் கொண்டுசெல்லப் படுகின்றன. அப்படியானால், உருவங்களை மட்டுமல்ல, அவற்றின் ஆற்றலையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது, இலக்கியம் என்றால் என்ன, சர்ச்சைகளைக் கையாளும் திறமை போன்ற பல வகையான விடயங்களில் எனக்குத் தெரிந்த அனைத்தும் – அவற்றை நான் உருவங்களாக உள்ளீர்க்கவில்லை என்றபோதும் அவற்றின் பிம்பங்கள் நினைவில் பதிந்துவிடுகிறது. மாறாக, இது காதில் நுழையும் ஒரு ஒலியைப் போல சற்று நேரம் இருந்துவிட்டு கடந்து செல்வது போன்றதோ, அல்லது ஒரு நறுமணம் அல்லது ஏதேனும் ஒரு மணம் காற்றில் கலந்து வந்து மூக்குத்துவாரங்கள் வழியாக உள்நுழைந்து சற்றுநேரத்தில் மறைந்து போவது போலவோ,அல்லது வயிற்றில் இருக்கும் உணவுக்கு இப்போது அதற்கு எவ்விதமான ருசி இல்லா விட்டாலும், அதை முதலில் உண்ணும்போது எம் நாக்கு அதனை சுவைத்து உண்டது இன்னும் நினைவகத்தில் பசுமையாக இருப்பது போலவோ, அல்லது உடலால் உணரப்படும் தொடுதல் அந்த உணர்வு நீங்கியதும் அதை மீண்டும் கற்பனை வாயிலாக மட்டுமே உணர்வது போலவோ அல்ல. இவை யாவும் தானாகவே நினைவில் பதியப் படுவதில்லை. ஆனால் அவற்றின் உருவங்கள் மட்டுமே ஒரு வியக்கத்தக்க வேகத்துடன் பிரதிசெய்யப்பட்டு, மிக நேர்த்தியாக அவை வைக்கப்பட வேண்டிய இடங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டு விடுகின்றன. அவை பற்றிய நினைவுகளை நாம் மீட்டிப்பார்க்கும்போது, அவை அற்புதமாக வெளிவருகின்றன.

அத்தியாயம் 10 – இலக்கியம் போன்றவை புலன்கள் மூலம் நினைவகத்திற்கு அறிமுகப்படுத்தப்படுவதில்லை; அவை அவற்றின் இரகசிய சேமிப்பறைகளில் இருந்து வெளிவருகின்றன

17. ஆனால் உண்மையாகவே நான் அதைக் கேட்கும்போது, ​​மூன்று விதமான கேள்விகள் எழுகின்றன; அது ஒரு பொருளா? அப்படியானால் அது என்ன? அது என்ன வகையைச் சேர்ந்தது? போன்ற இவை தான் அந்தக் கேள்விகள். இதைக்குறித்து நான் என்னுள் கேள்வி எழுப்பும்போது, அங்கே ஒரு ஒலி எழுகிறது. அந்த ஒலி தரும் வடிவங்கள் என் மனதில் பதிந்துவிடுகிறது. ஆனால் இந்த ஒலிகள் எடுத்துரைக்கும் விஷயங்களை என் மனதால் உணர்ந்தபோதும், உடலின் எந்த ஒரு அவையவத்தினூடாகவும் நான் உணரவில்லை. என் மூளையில் உள்ள நினைவகத்தில் அவற்றின் உருவங்களை நான் சேமித்து வைக்கவில்லை, ஆனால் அவை எப்படி எனக்குள் நுழைந்தன என்று அவைகளால் முடியுமானால் சொல்லட்டும். என் உடலுக்குள் நுழையக்கூடிய அனைத்து வாயில்களையும் நான் தேடிப்பார்த்தேன். ஆனால் அவை எந்த வழியாக உள்ளே நுழைந்தன என்பதை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆகவே கண்கள், அவை ஏதேனும் ஒரு நிறத்தை உடையதாக இருந்திருந்தால் நாங்கள் அவற்றைக் காட்டியிருப்போம் என்றும், காதுகளோ அவை ஒரு ஒலியை ஏற்படுத்தியிருந்தால் நாம் அவற்றைக் கவனித்திருப்போம் என்றும் கூறின. மூக்கு துவாரங்கள், அவை ஏதேனும் ஒரு மணத்தைக் கொண்டிருந்தால், அவை எங்களைக் கடந்து தான் சென்றிருக்க வேண்டும் என்றன. இரசனை உணர்வு இப்படி சொல்கிறது; அவற்றுக்கு சுவை ஏதும் இல்லை என்றால், என்னிடம் கேட்பதில் பயனில்லை என்று. உடல் என்ற ஒன்று இருந்திருந்தால், நான் அதைக் கையாண்டிருப்பேன். நான் அதை ஒருபோதும் கையாளாததால் நான் அதை கவனிக்கவில்லை என்று உடலின் உணர்வு சொன்னது. இப்படி எதுவும் இல்லையென்றால், பிறகு இந்த விஷயங்கள் எவ்வாறு என் நினைவில் நுழைந்தன? அது எப்படி என்று தான் எனக்குத் தெரியவில்லை. அவர்களைப் பற்றி நானாகவே அறிந்தவுடன், இது குறித்துப் பேசிய மற்றவர்களை ஒருபோதும் நம்பவில்லை. ஆனால் அவற்றை முழுமனதுடன் உணர்ந்து, உண்மையென்று ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி, அதை முழுமையாக ஒப்புக்கொண்டேன். அவற்றை அப்படியே என் நினைவகத்தில் இருத்தி எனக்கு எப்போது வேண்டுமோ அப்போதெல்லாம் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற தெளிவையும் பெற்றேன். நான் அவற்றைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பே அவை அங்கே இருந்தன. ஆனால் என் நினைவில் இல்லை. ஆயினும், அவை என் நினைவுக்குள் பொதிந்து அங்கே சஞ்சரிக்கும் போது, ‘ஆம், இது உண்மைதான்’ என்று என்னால் எவ்வாறு எனக்குள் ஒப்பிக்க முடிந்தது? அப்படியானால், அவை என் நினைவகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன, ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்; அவை சற்றே உட்புறமாய், மறைவாக இருந்தன. எவராவது ஒருவர் அதைத் தேடி, கரிசனையடன் கூப்பிட்டாலன்றி, அவை சாமான்யமாக வெளியே வருவதில்லை. ஆகவே இவை அறிவு மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விடயமாகக் கருதப்படுகிறது. ஒருவேளை நான் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம்.

அத்தியாயம் 11 – கற்கவும் சிந்திக்கவும் வேண்டியவை

18. நாம் பௌதீக உருவங்களாக என் கண்களால் பார்த்து அவற்றைக் கிரகிக்க முடியாதபோது, ஆனால் அவற்றை உள்ளூர உருவங்களாக இல்லாமல் அவை நிஜத்தில் இருப்பது போன்று எம் கற்பனையில் நாம் உணர்வுபூர்வமாக காண்கின்றபோது, அங்கே அதுபற்றிய தெளிவு பிறக்கிறது. சிந்தனை செய்வதன் வழியாக எம் நினைவகத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் அனைத்தையும் ஒன்றுசேர வகைப்படுத்தி, வரிசைக்கிரமமாக மீண்டும் எம் நினைவகத்திலேயே சேமிக்கிறோம். அத்தோடு, மறைந்து, சிதறி, நினைவை விட்டு அகலும் முன், அவற்றை மீண்டும் மறுசீரமைத்து நன்கு பழக்கப்பட்ட மனதின் பார்வைக்கு மிகவும் எளிதாகக் கொண்டு வருகின்றன. இவ்வாறு நான் அறிந்து கொண்டவை மிக அதிகம். எனினும், அவற்றை நான் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு என் நினைவில் மீட்டெடுக்காமல் இருக்கும் பட்சத்தில், நினைவகத்தில் மேற்பரப்பில் சஞ்சரிக்கும் கற்றவை தந்த அந்த நினைவின் மெல்லிய துகள்கள், உட்பரப்புக்குள் சென்று மூழ்கி மீண்டும் அடைய முடியாத ஆழத்துக்குச் சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை. அவற்றை மீண்டும் நினைவகத்தில் மேற்பரப்புக்கு கொண்டுவரவேண்டுமானால், மீண்டும், ஆரம்பத்திலிருந்து அவற்றைப் புதிதாகப் படித்தறியும் போதுதான் அவை மறைந்துவிட்ட இடங்களிலிருந்து மீண்டும் தோன்றுகின்றன. [ஏனெனில் அவை போவதற்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை] அதாவது, அவை சிதறலில் இருந்து [Colligenda] திரட்டப்பட வேண்டும். இதை cogitare என்ற வார்த்தைப் பயன்பாட்டின் மூலம் அறிந்துகொண்டுள்ளோம். அத்தோடு, Cogo [சேகரித்தால்] மற்றும் Cogito [நினைவில் இருந்து மீட்டல்] போன்றவற்றையும் குறிப்பிடலாம். மேலும், Ago, Agito, Facio, Facitito போன்ற வார்த்தைப்பிரயோகங்களும் இதேபோன்று ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. ஆனால் மனம் இந்தச் சொல்லை [Cogitation] தனக்குத் தானே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, எங்கும் சேகரிக்கப்பட்டவை மட்டுமல்ல, என்னென்ன சேகரிக்கப்பட்டதோ, அது மனதால் மட்டுமே இயக்கப்படுகிறது. அது தான் [Cogitation] என்ற வார்த்தைப் பிரயோகத்தால் அழைக்கப்படுகிறது.

அத்தியாயம் 12 – கணிதவியல் சம்பந்தமான விடயங்களை நினைவுக்குக் கொண்டுவருதல்

19. மேலும் எம் நினைவகம் எண்கள், பரிமாணங்கள் குறித்த கணக்கிலடங்கா விதிகள், தேற்றங்கள், உருப்பரிமாணங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றில் எதுவுமே உடலைப் பற்றிய எந்த உணர்வையும் சார்ந்ததாக இருப்பதை காணோம். அவற்றுக்கு நிறமோ, ஒலியோ, சுவையோ, வாசனையோ, தொடுதல் உணர்வோ என்று எதுவும் இல்லை. அவற்றைச் சுவைத்துப் பார்க்கவோ, தொட்டுணரவோ முடியாது. இந்த விடயங்கள் குறித்துப் பேசும்போது அவை குறித்த சொற்களின் ஓசையை மட்டுமே நான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஓசைகளும் விதிமுறைகளும் வெவ்வேறான அர்த்தங்களைக் கொடுக்கக்கூடியவை. இலத்தீன் மொழியும் கிரேக்க மொழியும் அவற்றின் பதங்களைப் பொறுத்து உச்சரிப்பு, பேச்சுவழக்கு போன்றவை வித்தியாசமானவையாக இருக்கலாம். ஆனால் எண்கள் சம்பந்தமான விடயங்களை நோக்குமிடத்து, அவை மொழிவேறுபாடின்றி ஒரே விதமாகவே இருக்கும். அதற்கு கிரேக்கம், இலத்தீன் அல்லது வேறு எந்த மொழி வேறுபாடுகளும் அதற்கு இல்லை. கட்டிடக் கலைஞர்களின் வரிகளை நான் பார்த்திருக்கிறேன், மிகச் சிறந்தவை மற்றும் சிலந்தி வலை போன்ற தோற்றம். ஆனால் இவை வேறு வகையானவை, அவை என் உடலின் கண் எனக்குக் காட்டிய உருவங்கள் அல்ல; உடலைப் பற்றிய எந்த யோசனையும் இல்லாமல், அவர்களைத் தனக்குள்ளேயே உணர்ந்து கொள்பவர்களை அவர் அறிவார். கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் வரைபடங்களை நான் பார்த்திருக்கிறேன். அவை மிகவும் மெல்லியதாகவும், சிலந்தி வலை போன்ற தோற்றம் கொண்டதாகவும் இருக்கும். ஆனால் இவை முற்றிலும் வேறு வகையானவை, அவை கட்டிடக் கலைஞர் வரைந்து என் கண் முன் காட்டிய உருவங்கள் அல்ல; ஏனென்றால் அவற்றுக்கு உருவங்கள் கிடையாது. கோடுகளால் வரையப்பட்ட உருவம் குறித்த எந்தவித தெளிவுமற்ற ஒருவருக்கு, கோடுகள் என்றால் என்னவென்பதைப் பற்றி புரிந்துகொள்ள வெகு நேரம் செல்லாது. அவர் அதைத் தன் மனக் கணக்கினூடாகக் கூட அனுமானித்துக்கொள்ள முடியும். நமது அவையவங்களால் அறிந்து, உணர்ந்து அவற்றை எண்ணுவதற்கு நாம் உபயோகிக்கும் எண்களும் கணிதவியல் எண்களும் வேறு வேறானவை. அவை இவற்றைப் பிரநிதித்துவப் படுத்துவதும் இல்லை. ஆகவே எண்கள் என்பவை அவற்றின் மாறாத இயல்போடு என்றும் அப்படியே இருக்கின்றன. இதைக் கூறியதற்காக சிலர் என்னைப் பார்த்து எள்ளி நகையாடலாம். அவ்வாறு கேலி செய்பவர்களையிட்டு நான் பரிதாபப் படுகிறேன்.

அத்தியாயம் 13 – நினைவகம் அனைத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது

20. இவற்றையெல்லாம் நான் எப்படிக் கற்றுக்கொண்டேன் என்பதை என் நினைவில் வைத்திருக்கிறேன். மேலும் பொய்யானவை என்று கேள்விப்பட்ட பல விஷயங்களுக்கு எதிராக நான் முன்வைத்த ஆட்சேபனைகளையும் நான் நினைவில் பதித்து வைத்திருக்கிறேன். அவை பொய்யாக இருக்கலாம், ஆனால் நான் அவற்றை நினைவில் வைத்திருப்பது பொய்யல்ல. அந்த உண்மைகளையும் அவற்றுக்கு எதிராகப் பேசப்பட்ட பொய்களையும் நான் வேறுபடுத்திப் பார்த்தேன் என்பதையும் நான் இப்போது எனது மனக்கண்ணால் காண்கிறேன். ஏதேனும் ஒரு விடயத்தை சரியென்றோ, பிழையென்றோ என் நினைவாற்றலைக் கொண்டு ஆராயவோ முடிவுக்கு வரவோ முடியும். அதை எத்தனை முறை செய்தேன் என்றும் இந்த விஷயங்களை நான் பலமுறை புரிந்துகொண்டேன் என்பதையும், இப்போது நான் அவற்றை வேறுபடுத்தி புரிந்துகொள்வதையும் என் நினைவில் சேமித்து வைத்திருக்கிறேன். அதேவேளை, எதிர்காலத்தில் என்னால் என் நினைவில் வைத்திருக்க முடியும் என்றால், எனது நினைவாற்றல் வழியாக இவற்றை என் நினைவகத்திலிருந்து மீட்டெடுக்கவும் என்னால் இயலும்.

அத்தியாயம் 14. மகிழ்ச்சியும் சோகமும் மனதிற்கும் நினைவிற்கும் திரும்பக் கொண்டுவரப்படும் விதம்

21. என் மூளையானது அதன் தன்மையையும் பாச உணர்வுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நினைவாற்றல் நினைவுகளைக் கொண்டிருப்பதுபோல், அது ஒரு வித்தியாசமான முறையில் தொழிற்படுகிறது. மகிழ்ச்சியாக இல்லாதபோதும் கூட, முன்னொரு பொழுதில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை மீட்டிப்பார்க்கவும், சோகமாக இல்லாமல் இருக்கும்போதும் கூட, முன்னொருபொழுதில் நிகழ்ந்த சோக நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஆற்றல் மனதுக்கு உண்டு. இப்போது பயம் எதுவும் இல்லாமல் இருந்தபோதும் கூட, முன்னொரு பொழுதில் பயந்த தருணங்களை மீட்டிப்பார்க்கவும், ஆவல் கொள்ளாமல் இருக்கும்போதும் கூட, முன்னொரு பொழுதில் ஏதேனும் ஒன்றின் மீது ஆவல்கொண்ட தருணங்களை எண்ணிப்பார்க்கும் வல்லமை மூளைக்கு உண்டு. அதேபோல் அதற்கு நேர்மாறாக, சில சமயங்களில் என் மகிழ்ச்சி என் சோகத்தைக் கடந்து போனதையும், சோகம் என் மகிழ்ச்சியான தருணங்களைக் கடந்து சென்றதும் எனக்கு நினைவிருக்கிறது. உடலைப் பற்றி ஆச்சரியம் கொள்ள வேண்டியதில்லை; மனமும் உடலும் வெவ்வேறு விதமான தொழிற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது, கடந்தகாலத்தில் நான் அனுபவித்த சரீர உபாதைகளை நினைவு கூர்ந்தால், அது அவ்வளவு பெரிய விடயமாகக் கருதப்படவேண்டியதில்லை. இங்கே உடலும் உள்ளமும் ஒரே பாதையில் பயணிக்கின்றன. (நினைவில் எதையாவது வைத்துக் கொள்ளுமாறு கட்டளையிடும் போது, ​​இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறோம்; அதேநேரம் எதையாவது மறந்துவிட்டால், அது மனதில் நுழையவில்லை, மனதில் இருந்து நழுவி விட்டது என்கிறோம்; அதாவது, நினைவையே மனம் என்று சொல்கிறோம்) மகிழ்ச்சியாக இருக்கும் போது எனது கடந்தகால துக்கத்தை நான் நினைவுகூர்கிறேன். அப்படியானால், என் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறதா? மகிழ்ச்சியால் மனம் நிறைந்து காணப்பட்டாலும், துயரத்தினால் மனம் எப்படியும் மகிழ்ச்சி கொள்வதில்லை. அப்படியென்றால், மனம் என்பது உடலோடு ஒன்றித்து பயணிக்கவில்லை என்று சொல்லக்கூடுமா? நினைவு என்பது மனதின் வயிற்றுக்கு ஒப்பானது என்றும், இனிப்பான மற்றும் கசப்பான உணவுகள் தான் இன்பமும் துன்பமும். இதை எவ்வித சந்தேகங்களுக்கும் இடமின்றி நாம் கூறலாம். அவை நினைவகத்தில் ஒப்படைக்கப்படும் போது, ​​​​அதை அப்படியே, வயிற்றுக்குள் செலுத்தப்பட்டு, அவை மீண்டும் அங்கே சேமிக்கப்படும். ஆனால் இவை நடந்துமுடிந்தவை என்பதால் இவற்றை சுவைக்க முடியாது. இவை ஒரே மாதிரியாக இருப்பதாக நினைப்பது நகைப்புக்குரியது என்றபோதிலும், அவை முற்றிலும் வேறுபட்டவை என்று சொல்ல முடியாது.

22. ஆனால், இதோ ஆசை, மகிழ்ச்சி, பயம், துக்கம் என நான்கு மன வகையான உணர்வுகளை எம் மனம் கொண்டிருக்கிறது. இவையும் எம் நினைவகத்திலிருந்தே வெளிவருகிறது. இவை குறித்து நான் விவாதித்து, உறுதிசெய்து, ​​பொதுவான காரணிகளை முன்னெடுக்கும் போது, அவை ஒவ்வொன்றையும் தனித்தனிப் பிரிவுகளாக வகுத்து அதை வரையறுப்பதன் மூலம், நான் என்ன சொல்லவேண்டும், எதைச் செய்யவேண்டும், எவ்வாறு செயல்படவேண்டும் போன்ற எல்லாக் கட்டளைகளும் நினைவகத்தில் இருந்துதான் பிறக்கின்றன. இப்படியான வலிமையான விடயங்களை நான் நினைகூறுவதன் மூலம், இனிமையான உணர்வுகளை அனுபவிக்கிறேன் எனது அர்த்தம் கொள்ளலாகாது. நான் அவற்றை நினைவு கூர்ந்து ஆராய்வதற்கு முன்பே அவை அங்கே பிரசன்னமாய் இருந்தன. அதன் காரணமாகத்தான் அவற்றை என்னால் இலகுவாக என் மனக்கண் முன் கொண்டுவர முடிகிறது. ஒருவேளை வயிற்றில் இருக்கும் சமிபாடடைந்த உணவை மீண்டும் வாய்க்குள் கொண்டுவந்து அதை மீண்டும் அசை போடும் ஒரு நிகழ்வாகக் கூட இதைக் குறிப்பிடலாம். அப்படியே ஒருவர் தான் நினைவுகூரும் போது, இனிமைதரும் மகிழ்ச்சியையும், கசப்புணர்வைத் தரும் துக்கத்தையும் நினைவுகள் என்ற வாய் சுவையைத் தாராமலிருப்பது ஏன்? இந்தக் காரணிகள் எந்த வகையிலும் ஒத்துவராததால், இந்த ஒப்பீடு வேறுவிதமான அர்த்தத்தைக் கொடுக்கிறதா? ஒவ்வொரு முறையும் நாம் பயப்படவோ அல்லது துக்கப்படவோ வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளானால், இந்த விடயங்களை பற்றி யார் தான் விருப்பத்துடன் பேசுவார்கள்? இருந்தபோதிலும், அக்காரணிகள் கூறும் உருவங்களோ அல்லது ஓசைகளோ எம் நினைவில் பதியவில்லை என்றால், நான் அவற்றைப் பற்றிப் பேசுவது ஆகாது. ஏனென்றால், இவற்றை நாம் எமது உடலில் உள்ள அவையவங்களினூடாகப் பெறவில்லை. மூளை என்று நாம் கூறும் மனமே, அதன் சொந்த உணர்வுகளின் அனுபவத்தால் எல்லாவற்றையும் கிரகித்து, நினைவகத்தில் பதிவு செய்தது. ஆகவே நினைவகம் தன்னிடம் ஒப்படைத்த அனைத்துவிதமான எண்ணங்கள் மற்றும் உருவங்களை தன்னகத்தே எப்போதும் தக்க வைத்துக் கொள்ளும்.

அத்தியாயம் 15 – நமது நினைவகத்தில் இல்லாத பொருட்களின் உருவங்கள் மற்றும் பிம்பங்கள் காணப்படுகின்றன

23. அவை உருவங்கள் வழியாக நடைபெற்றதா அல்லது இல்லையா என்று எவரால் உறுதிபடக் கூறமுடியும்? உதாரணமாக, நான் ஒரு கல்லையோ, சூரியனையோ பெயரிடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம், அவை என் புலன்களுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், அவற்றின் உருவங்கள் என் நினைவகத்திற்கு சமீபத்திலேயே தான் உள்ளன. என் உடலில் ஏற்பட்ட சில உபாதைகளைப் பற்றி நான் பேசுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் உபாதை இல்லாதபோது அது பற்றிய நினைவும் இருக்காது, பேசுவதற்கும் ஏதும் இராது. அப்படியும் அதன் உருவம் என் நினைவில் இல்லை என்றால், அதைப் பற்றி என்ன சொல்வது என்று என்னால் ஊகிக்க முடியாது. அதேநேரம், உடல் ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை உடல் ஆரோக்கியத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கேட்குமிடத்து, அவருக்கு அதுகுறித்த பதிலை அளிப்பதற்குக் கடினமாயிருக்கும். கணக்கிடும்போது நான் எண்களுக்கு பெயரிடுகிறேன், அவற்றின் உருவங்களைக் கொண்டல்ல. ஆனால் அந்த எண்கள் மாத்திரமே என் நினைவில் உள்ளன. நான் சூரியன் என்ற கோளுக்குப் பெயரிடுகிறேன், ஏனென்றால் இது என் நினைவில் பதிந்துள்ளது. அந்த உருவத்தின் தன்மை எப்படிப் பட்டதென்று எனக்கு நினைவில் இல்லை, ஆனால் அந்த உருவம் எனக்கு நினைவேகத்தில் இருக்கும் வரை என் நினைவு அதைச் சுற்றியே வட்டமிடுகிறது. இதைத்தான் நான் நினைவகம் என்று பெயரிடுகிறேன். நான் என்ன பெயரிடுகிறேன் என்பது எனக்குத் தெரியும். இந்தத் தெளிவு என் நினைவகத்தின் எப்பகுதியில் இருக்கிறதென்று எனக்கு எப்படித் தெரியும்? ஆகவே, நினைவு என்பது தனக்குத் தானே விதித்த கட்டளைகளுக்கமைய செயலாற்றுகிறதே யொழிய, உருவ அமைப்புகளைக் கொண்டு அல்ல.

அத்தியாயம் 16 – மறதி என்பது நினைவாற்றலை இழப்பதற்குச் சமமாகும்

24. மறதி என்று நான் கூறும்போது, நான் என்ன சொல்கிறேன் என்று தெரிந்திருந்தும் எனக்கு அது நினைவில் இல்லை என்றால் மறதியை நான் எங்கிருந்து எப்படித் தெரிந்து கொள்ளக்கூடும்? நான் அந்தப் பெயர் உச்சரிக்கப்படும் ஓசை பற்றிச் சொல்லவில்லை. அது எதைப்பற்றிச் சொல்கிறதோ அதைப்பற்றியே தான் சொல்கிறேன். இதன் விளைவாக, நான் நினைவகத்தைப்பற்றி நினைக்கும் போது, ​​நினைவகம் தன்னுடைய பிரசன்னத்தை எந்நேரமும் ஏற்படுத்தத் தயாராக இருக்கிறது. ஆனால் நான் மறதியை நினைவில் மீட்கும்போது, ​​நினைவாற்றல் மற்றும் மறதி இரண்டும் அங்கே தமது பிரசன்னத்தை ஏற்படுத்துகின்றன – அதாவது, நினைவை நினைவுகூரல் வழியாகவும், மறதியை நினைவுகூராமை காரணமாக என்றும் அர்த்தப்படுகின்றன. அப்படியானால் மறதி என்பது நினைவை இழத்தல் என்று பொருள் படாதா? அதைப்பற்றி எனது நினைவில் மீட்டாமல் இருக்கும்போது, அது என்முன் வருவதென்பது எவ்வாறு சாத்தியமாகும்? ஏனென்றால் நினைவுகூரும் போதுதான் எம் ஞாபகத்தை நாம் மீட்டுக்கொள்கிறோம். அதேநேரம், மறதியைப்பற்றி நினைக்காமல் விட்டால், அந்த வார்த்தையையோ அது குறிக்கும் அர்த்தத்தையோ நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? ஆக ஞாபகசக்திதான் மறதியையும் தன்னகத்தே வைத்திருக்கிறது.எனவே, நாம் மறக்காதவரை மறதி என்பது வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதைப்பற்றிய நினைவை மனதில் மீட்டும்வரை, அது மறதி என்ற பொருளாகவே இருக்கிறது என்றும் மறதியின் உருவம் தான் நினைவலைகளில் சஞ்சரிக்கிறது என்று சொன்னால் அது சரியாகுமா? அத்தோடு, மறதி மனதில் இருக்கும்வரை அது நினைவுகூரச் செய்வதாக இல்லாமல் மறந்துபோகச் செய்யவே அதிக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இவற்றை இனி யார் தான் ஆராயக்கூடும்? அது எப்படி என்பதை யார் தான் புரிந்துகொள்ளக்கூடும்?

25. என் தேவனே, உண்மையாகவே நான் மிகவும் பிரயாசப்படுகிறேன், அது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. நான் கஷ்டப்பட்டு உழவேண்டிய தொந்தரவு மிக்க நிலமாகிவிட்டேன். நாம் இப்போது வானகத்துக்குச் செல்லும் வழிகளைத் தேடவோ, நட்சத்திரங்களின் தூரத்தை அளவிடவோ, பூமியின் எடை மற்றும் பரிமாணத்தைப் பற்றிக் கரிசனைகொள்ளவோ இல்லை. நான் நானாகவே இருக்கிறேன், என் மனம்தான் என்னை நினைவுக்குக்  கொண்டு வருகிறது. நான் நானாக, என்னிடமிருந்து வெகு தொலைவில் இல்லை என்றால், அங்கு வியப்பேதுமில்லை. ஆனால் என்னை விட எனக்கு நெருக்கமானது எதுவாக இருக்கும்? அப்படியானால், என் சொந்த நினைவாற்றலின் சக்தியை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் அது இல்லாமல் என்னால் என்னைப் பற்றிப் பேசவோ சிந்திக்கவோ முடியாது. ஞாபக மறதி குறித்து நான் நினைக்கும்போது என்னால் என்ன சொல்லக்கூடும்? நினைவில் வைத்திருப்பது என் ஞாபகத்தில் இல்லை என்று கூறமுடியுமா? அல்லது மறதி என் நினைவில் இருக்கிற காரணத்தால் நான் மறப்பதில்லை என்று சொல்வதா? இவை இரண்டுமே மிகவும் அபத்தமானவையாகவே தென்படுகின்றன. அப்படியானால், மூன்றாவது காரணம் என்ற ஒன்று இருக்குமல்லவா? மறதியின் உருவம் என் நினைவகத்தில் தக்கவைக்கப்படுகிறது. ஆகவே, அதை நான் மறதி அல்ல என்று எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? எஏதாவது ஒரு உருவம் நினைவகத்தில் பதியுமானால், அந்த உருவம் பதிவதற்கு அவசியமான ஏதாவது ஒரு அடிப்படைக் காரணம் அங்கே உருவாகியிருக்க வேண்டும், அப்படியில்லாது போனால், அது எவ்வாறு சாத்தியமாகும்? இதனால் நான் கார்தேஜில் இருந்த நாட்களை நினைவுக்குக் கொண்டு வருகிறேன். கார்தேஜ் மாத்திரமல்ல நான் சென்ற எல்லா இடங்களிலும், ஊர்களிலும், நான் பார்த்த மனிதர்களின் முகங்கள் மற்றும் ஏனைய அவையவங்களால் பெறப்பட்ட உணர்வுகள் போன்ற எல்லாவற்றையும் இவ்வாறாகத்தான் என் நினைவில் மீட்டிப்பார்க்கிறேன். இவ்வாறாகவே, என் உடலின் ஆரோக்கியம் மற்றும் உபாதைகள் போன்றவற்றையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. எனது அவையவங்களால் நான் உணர்ந்த போதெல்லாம் அந்த உருவங்களின் பிம்பங்கள் என் நினைவகம் என் ஞாபகத்தில் பதிந்தது. அவை உடனடியாக என் ஞாபகத்தில் வந்தாலும், வாராவிட்டாலும் எனக்குத் தேவை ஏற்படும் போது அந்த பிம்பங்களை என் மனதில் மீட்டு நினைவுகூர முடியும். எனவே, மறதி என்பது கூட அதன் உருவத்தின் மூலம் தான் நினைவகத்தில் பதிகிறது. மறதி என்ற சொல்லால் அல்ல. அப்படியானால், எப்படி அதனை நினைவில் இருத்த முடியும்? ஏனென்றால் மறதி என்ற வார்த்தையின் அர்த்தமே ஞாபகத்தில் இல்லை என்பதல்லவா? ஆகவே, எந்த வகையிலும் அது புரிந்துகொள்ள முடியாத மற்றும் விவரிக்க முடியாத ஒன்றாக இருந்தாலும், மறதியைப் பற்றி நான் நினைவில் வைத்திருப்பது மிகவும் உறுதியாக இருக்கிறது. இருப்பினும், ஞாபகமறதி என்பது என் ஞாபகத்தில் உள்ளவை இல்லாமல் போகிறது என்பதையே குறிக்கிறது.

அத்தியாயம் 17 – மிருகங்கள் மற்றும் பறவைகள் கொண்டிருக்கும் ஞாபக சக்தியூடாகக் கடவுளை அடைய முடியாது

26. ஓ என் கடவுளே, நினைவாற்றல் மிகப் பெரியது, அது மிகவும் அற்புதமானதும் ஆழமானதும் எல்லையற்ற பன்முகத்தன்மை கொண்டதுமாகக் காணப்படுகிறது; இதுவே மனம் என்று அறியப் படுகிறது, அது தான் நான். கடவுளே? அப்படியானால் நான் யார்? எனது இயல்பு தான் என்ன? பலவிதமான வாழ்க்கை வடிவங்களால் உருவான பன்முகத்தன்மைகொண்ட மிகப் பெரிய வாழ்க்கை தான் அது. எனது நினைவகம் என்ற பாரிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ள குகைகள் மற்றும் சமவெளிகளைப் பாரும்! அவை கணக்கிலடங்காதவை. அவை அவயவங்கள் மூலமாகவோ அல்லது அவைசார்ந்த உருவங்களிலிருந்து பெறப்பட்டவையாகவோ, கலைகளாகவோ அல்லது சில கருத்துக்கள் அல்லது அவதானிப்புகள் வாயிலாகவோ அல்லது மனதின் உணர்வுகளாகளின் காரணமாகவோ கூட இருக்கலாம். ஆகவே மனம் எந்த நிலையில் இருந்தாலும், அது நினைவாற்றலைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆற்றலுடையது. இவற்றின் மத்தியில் தான் அலைந்து பறந்து திரிகிறேன். என்னால் முடிந்தவரை அவற்றை ஊடுருவிச் செல்கிறேன். அதன் முடிவை என்னால் இன்னும் நெருங்க இயலவில்லை. ஆகவே நினைவு என்பது அளவில்லாதது. அதன் ஆற்றல் அளவிட முடியாதது. என்று ஒருநாள் அழிந்துபோகக்கூடிய மனிதனிடத்தில் இருக்கும் வாழ்வின் ஆற்றல் பெரியது. என் உண்மை வாழ்வாக இருப்பவரான என் தேவனே, நான் என்ன செய்ய வேண்டும்? நினைவாற்றல் என்று அழைக்கப்படும் என்னுடைய இந்த சக்திக்கு அப்பால் கூட என்னால் கடந்து செல்லமுடியும், ஆகையால் அதையும் கடந்து செல்வேன், ஓ இனிமையான ஒளியாக இருப்பவரே, நான் உம்மிடம் வருவேன். ஏதன் வழியாக உம்மை அடைய முடியுமோ, அதன் வழியாக உம்மை அடைய வேண்டும் எனவும், உம்மை எங்கு எனது உள்ளத்தால் பற்றிக்கொள்வது சாத்தியமோ அங்கே உம்மை நான் பற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறேன். மிருகங்கள் மற்றும் பறவைகள் கூட நினைவாற்றல் கொண்டவை தான், இல்லையெனில் அவை எவ்வாறு மீண்டும் தங்கள் கூடுகளையும் குகைகளையும் வாழ்விடங்களையும் அவற்றுக்கு உரியனவற்றையும் கண்டுபிடிக்க முடியும்? அவை அவற்றின் நினைவாற்றல் மற்றும் உள்ளுணர்வால் தான் நிகழ்கின்றன. ஆகவே விலங்குகள் மற்றும் ஆகாயப் பட்சிகள் போன்றவற்றிலிருந்து என்னை வேறுபடுத்தி, அவைகளைவிட எனக்கு அறிவையும் ஞானத்தையும் அருளி, என்னை ஆள்பவரை நான் அடைவதற்காக, நான் என் நினைவுகளைக் கடந்து அதற்கு அப்பால் கூடச் செல்வேன். ஆனால் உண்மையும், இனிமையும் உறுதியுமாய் இருப்பவரே, நான் உம்மை எங்கே, எப்படிக் காண்பேன்? உம்மைப் பற்றிய எண்ணம் என் மனதில் இல்லாது இருந்திருந்தால் நான் உம்மை எப்படிக் கண்டடைவேன்?

அத்தியாயம் 18. ஞாபகத்தில் இல்லாத ஒரு பொருள் தொலைந்துவிட்டால், அதைக் கண்டுபிடிப்பது இயலாத காரியமாகிவிடும்

27. “ஒரு பெண்ணிடம் இருந்த பத்து வெள்ளிக் காசுகளில் ஒன்று தொலைந்து போனவுடன், அவள் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்து, அந்தக் காசு கிடைக்கும் மட்டும் அவள் அதைக் கவனமாகத் தேடுவாள்” என்று லூக்கா 15:8 இல் கூறப்பட்டிருப்பதை கவனிக்கவும். இதை அவள் தனது நினைவில் கொள்ளாமல் இருந்திருந்தால், அவளால் அந்த தொலைந்த நாணயக்குற்றியை மீண்டும் கண்டுபிடித்திருக்க முடியாது. அது கிடைத்ததும், அவள் தொலைத்த அதே நாணயமா என்பதை அவள் நினைவில் கொண்டிருக்காவிட்டால் எப்படித் தெரிந்து கொண்டிருக்கக்கூடும்? எனக்கு நினைவு தெரிந்தவரை, நான் பல பொருட்களை இழந்து பின்னர் அவற்றைக் கண்டுபிடித்திருக்கிறேன். இதன் மூலம் நான் அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேடி அதைக் கண்டபோது, எவரேனும் ஒருவர் நான் தொலைத்தது அதுதானா என்று கேட்டபோது, இல்லை என்று பதிலளித்திருப்பேன். ஏனென்றால் நான் தொலைத்தது என் கைக்குக் கிடைக்கும்வரை அதுவே தான் என் பதிலாயிருந்திருக்கும். எதுவாக இருப்பினும், நான் தொலைத்த அந்தப் பொருள் எனது ஞாபகத்தில் இல்லாதவரை, யார் எதைக் கொண்டுவந்து என்னிடம் காட்டினாலும், என்னால் அதை அடையாளம் காண முடியாது போயிருக்கும். எனவே நாம் தொலைத்துவிட்ட எதையும் தேடும்போதும் கண்டுபிடிக்கும்போதும் இதுதான் நடக்கும். இருப்பினும். தற்செயலாக எம் பார்வையில் இருந்து காணாமல் போயிருந்தாலும், எம் நினைவகத்திலிருந்து இல்லாமல் போகாமல் இருந்தால் – காணக்கூடிய எந்தவொரு பொருளாக இருந்தாலும் – அதன் உருவத்தின் பிம்பம் நினைவகத்தினுள்ளே வைக்கப்பட்டு, மீண்டும் பார்வைக்கு எட்டும் வரை அயராது தேடப்படுகிறது. அது கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே அது தான் தொலைத்த பொருள் என்ற அடையாளம் நினைவகத்தினுள்ளே இருக்கும் பிம்பத்தின் ஆதாரத்துடன் எம்முன் கொண்டுவரப்படுகிறது. தொலைத்த பொருளை நாம் சரியாக அடையாளம் காணாத வரை, நாம் இழந்ததைக் கண்டுபிடித்து விட்டோம் என்று ஒருபோதும் கூறமுடியாது. நினைவில் இல்லாதவரை அதை எம்மால் அடையாளம் காண முடியாது. கண்ணின் பார்வைக்கு அது தொலைந்துபோனதாக இருந்தபோதிலும், நினைவில் நிலைத்திருந்தது.

அத்தியாயம் 10 – நினைவில் கொள்ளவேண்டியவை எவை?

28. ஆனால் நினைவே எதையும் இழக்கும்போது என்ன செய்வது? நாம் எதையாவது மறந்துவிட்டு அதை நினைவுபடுத்த முயலும் போது எம்மால் என்ன செய்ய முடியும் ? இறுதியாக நாம் எங்கு தேடுவது, ஆனால் நினைவகத்தில் தானே? அங்கே, ஒன்று மற்றொன்றிற்காக கொடுக்கப்பட்டால், நாம் தேடுவதைச் சந்திக்கும் வரை, அதை மறுப்போம்; நாம் செய்யும் போது, ​​நாங்கள் கூச்சலிடுகிறோம், இதுதான்! நாம் அதை மீண்டும் அறியாத வரை செய்யக்கூடாது, அல்லது நாம் அதை நினைவில் வைத்திருக்கும் வரை அதை அடையாளம் காணக்கூடாது. இருப்பினும் நாம் என்ன செய்தாலும், எதை செய்தாலும், எம் நினைவகத்தில் இருந்தல்லவா அதைத் தேட வேண்டும்? அங்கே, தேடுவதற்கு மாற்றீடாக வேறொன்று கொடுக்கப்பட்டால், நாம் தேடுவதை அடையும் வரை, அதைத் தொடர்ந்து இல்லையென்றே நிராகரித்திருப்போம். பின்னர் நாம் தேடியதைக் காணும்போது, மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து, ஆம்! இதுதான் நாம் தேடியது என்று கூறியிருப்போம். நாம் தேடியதை எம் உள்ளுணர்வால் உறுதிப்படுத்தினாலன்றி, நாம் அதையிட்டு திருப்தியடைந்திருக்க மாட்டோம். மேலும், நாம் அதை நினைவில் வைத்திருக்கும் வரை அடையாளம் கண்டிருக்கவும் மாட்டோம். ஒருவேளை, நாம் தேடும் பொருளின் அல்லது விடயத்தின் ஒரு பகுதி நினைவிலிருந்து மறைந்துபோனாலும், அதனோடு தொடர்புடைய மற்றைய பகுதியை வைத்து, முன்னைய பகுதியைத் தேடும் முயற்சி தொடர்கிறது. இங்கே நினைவு என்பது தன்னகத்தே கொண்டுள்ள இயல்பால் செயலாற்றுகிறது. முழுமையின் ஒரு பகுதி மறைந்துபோன போதிலும், மூளையின் ஆற்றல் மறைந்த பகுதியின் மற்றைய பகுதியைத் தேடி பயணிக்கிறது. உதாரணமாக, நமக்கு அறிமுகமான ஒருவரைக் கண்டோ அல்லது அவரைப் பற்றி நினைக்கும்போதோ, முதலாவதாக நாம் செய்வது என்னவென்றால், அவரது பெயரை எம் நினைவில் இருந்து மீட்பதுதான். அப்படியான எம் முயற்சியின் போது, வேறு எந்தவொரு பெயரும் அவரைப் பற்றிய நினைவோடு பொருந்த மாட்டாது. மேலும் அது அவரோடு தொடர்பு பட்டதாக இல்லாமலிருப்பதால் அதை மனம் நிராகரிக்கிறது. அதேநேரம், எம் ஞாபகசக்தி அந்த மனிதரின் எண்ணத்தோடு தொடர்புகொண்டு, அது சரியாக அமைந்துவிடும்போது, மனம் உடனேயே அதை உறுதிப் படுத்துகிறது. ஆகவே, நினைவகத்தினுள் இல்லாமல் வேறெங்கு இவையெல்லாம் நடக்கிறது? ஏனென்றால், எவரோ ஒருவர் அதை நம் கவனத்திற்குக் கொண்டு வந்ததாக நாம் அடையாளம் கண்டு கொண்டாலும், அதுவும் அங்கிருந்துதான் உருவாகிறது. அதேநேரம், நாம் அதை நினைவுகூரும்போது, அது ​​சரியானது என்று ஒப்புக்கொள்கிறோம். அதை புதிய தகவலாக எடுத்துக் கொள்வதில்லை. இருப்பினும், அது நம் நினைவகத்திலிருந்து முற்றிலும் அழிக்கப் பட்டாலும், நாம் அதை மீண்டும் மீட்க முடியாது என்று சொல்லமுடியாது. ஏனென்றால், பிறர் நமக்கு உதவினாலும், இல்லாவிட்டாலும், நாம் மறந்துவிட்டதாக நினைக்கும் சில விஷயங்கள் இன்னும் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அதேநேரம், நாம் முற்றிலும் மறந்துவிட்ட அல்லது ஒரு தொலைந்துபோன எண்ணத்தை எப்படியும் தேடியடைய முடியாது.

அத்தியாயம் 20. நமது அறியாமையினூடாகக் கடவுளையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தேடக்கூடாது

29. அப்படியானால் ஆண்டவரே நான் எப்படி உம்மைத் தேடுவேன்? என் தேவனே, நான் உம்மைக் கண்டடைவேனானால், அதுதான் எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சியான வாழ்வு. என் ஆன்மா நலம்பெற்று வாழ, நான் உம்மை என்றும் தேடுவேன் [காண்க: ஆமோஸ் 5:4 என் உடல் என் ஆன்மாவால் வாழ்கிறது, என் ஆன்மா உம்மில் வாழ்கிறது. ஆகவே நான் எவ்வாறு மகிழ்ச்சியான வாழ்வைத் தேடுவேன்? அது போதும், அது இங்கேதானிருக்கிறது என்று சொல்லாதவரைக்கும், அது என்னுடையதல்லவே? எனது தேடல் எவ்வாறு தொடர்கிறது என்பதை நான் விளக்கவேண்டும். ஏதேனும் ஒன்றை நான் மறந்து, அந்த நினைவுகளை மீட்க முயன்று, பின்னர் நினைவுகூருவது போன்றதல்லவே எனது தேடல் என்பது? அல்லது இதுவரை அறியாத, நான் அறிந்திராத, அல்லது மறந்துவிட்ட, நினைவில் கொள்ள முடியாத அளவுக்கு மறந்துவிட்ட ஒன்றைக் கற்றுக்கொள்ளத் தூண்டுவதா இந்தத் தேடல்? நாம் அனைவரும் விரும்புவது மகிழ்ச்சியான வாழ்க்கையை அல்லவா, மகிழ்ச்சியான வாழ்க்கையை விரும்பாதவர்கள் யாராவது உண்டா? அப்படியானால் அந்த மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற அவர்கள் கொண்டிருக்கும் அறிவை எங்கிருந்து பெற்றார்கள்? அவர்கள் அதை மிகவும் விரும்புவதை எவ்வாறு கண்டார்கள்? உண்மையில் எங்களிடம் உள்ளது, ஆனால் எப்படி எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. மற்றொரு வழியிலும் இதை நாம் பார்க்கலாம். ஆம், ஒருவருக்கு அந்த அறிவு இருக்கும் போது அவர் மகிழ்ச்சியாகவும், அதேநேரம், மற்றும் சிலர் வருங்காலத்தில் அது தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பிந்தையவர்களின் மகிழ்ச்சி முந்தையவர்களைக் காட்டிலும் சற்று குறைவாகவே இருக்கிறது. உண்மையில் இப்போதும், வருங்கால நம்பிக்கையில் மகிழ்ச்சியாக இல்லாதவர்களை விட அவர்கள் சிறந்தவர்கள். மேலும் மகிழ்ச்சி குறித்த நினைப்பு இல்லாமல் இருந்திருந்தால், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைகொண்டிருக்க முடியாது. அவர்கள் அதை எப்படி அறிந்து கொள்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாதுள்ளது. ஆனால் எதோ ஒரு வழியில் அவர்கள் அதைப் பெற்றிருக்கக்கூடும், அது எப்படி, எவ்வாறு என்று எனக்குத் தெரியாது. அது அவர்களின் நினைவில் தான் இருந்து வருகிறதா என்று நான் சந்தேகிக்கிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில், அந்த மகிழ்ச்சியை நாம் என்றோ ஒருநாள் அனுபவித்திருக்கிறோம் என்று கூறமுடியும் அல்லவா? அதேவேளை, நாம் தனி நபர்களாகவோ அல்லது குழுக்களாகச் சேர்ந்து, பாவத்தில் வீழ்ந்து, முதல் மனிதனான ஆதாம் ஆதியில் கட்டிக்கொண்ட பாவம் காரணமாக எல்லோரும் இறக்க நேரிட்ட அந்த நிகழ்வைக் குறித்து மகிழ்ச்சியாக இருந்தோமா? அந்த ஆதி மனிதனின் பாவங்கள் காரணமாக நாம் எல்லோரும் துன்பங்களை அனுபவிக்கப் பிறந்தோம். அப்படியானால், மகிழ்ச்சியான வாழ்வென்பது எம் நினைவில் இருக்கிறதா என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. அது என்னவென்று தெரியாத வரைக்கும், அதை எம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. மகிழ்ச்சி என்ற சொல்லை நாம் கேட்கிறோம், நாம் அனைவரும் அதை விரும்புகிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம், ஆனால் அந்த சொல் தரும் ஓசையால் மட்டும் மகிழ்ச்சி ஏற்படுவதில்லை. கிரேக்கர் ஒருவர் இருக்குமிடத்தில் இலத்தீன் மொழி பேசப்படுவதைக் கேட்டால், அவரால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. ஆகையால் அவர் மகிழ்ச்சியடைய மாட்டார். ஆனால் அதேநேரம், கிரேக்க மொழி பேசப்பட்டிருந்தால், அவர் மகிழ்ச்சி கொண்டிருப்பார். ஏனெனில் மகிழ்ச்சி என்பது கிரேக்கமோ இலத்தீன் மொழியோ தருவது அல்ல, கிரேக்கர்கள், இலத்தீன்கள் மற்றும் அனைத்து மொழி பேசும் மனிதர்களும் மகிழ்ச்சியை மிகவும் ஆர்வத்துடன் பெறவே விரும்புகின்றனர். இது அனைவருக்கும் தெரியும். யாரைப்பார்த்தும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா என்று கேட்டால், அவர்கள் யாவரும் நிச்சயமாக ஒரே குரலில் மகிழ்ச்சியாய் இருக்க விரும்புவதாகவே சொல்வார்கள். ஆகவே, மகிழ்ச்சி என்ற சொல் அவர்கள் ஞாபகத்தில் நிலைத்திருந்தாலேயன்றி, அவர்களால் அவ்வாறு கூறியிருக்க முடியாதல்லவா?

அத்தியாயம் 21 – மகிழ்ச்சியான வாழ்க்கையை நினைவில் வைத்திருப்பதற்கு என்ன வழி?

30. அப்படியானால், கார்தேஜில் என்னைப் பார்த்தவருக்கு என்னை நினைவிருக்குமா? இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கை கண்ணுக்குத் தெரியவில்லை, ஏனென்றால் அது ஒரு ஜடப்பொருள் அல்ல. அப்படியானால், நாம் இலக்கங்களை நினைவில் வைத்திருப்பது போலாகுமா? இல்லை. ஏனெனில் இந்த இலக்கங்கள் குறித்த அறிவைப் பெற்ற ஒருவர், மேலும் மேலும் உள்ளே சென்று அதனை ஆராய்வதில்லை. ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கை நம் அறிவில் தங்கி உள்ளது. எனவே நாம் அதை நேசிக்கிறோம். ஆகவே நாம் மகிழ்ச்சியாக வாழ அதை அடைய விரும்புகிறோம். இல்லையேல், நாம் செவிமடுத்த பேச்சாற்றல் கலை போன்றவற்றை நினைவில் வைத்திருப்பது போல் இதைக் கருதலாமா? அதற்கும் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. ஏனென்றால், இந்த சொல்லைக் கேட்டதும், அதில் பொதிந்துள்ள காரணியை நினைவுக்குக் கொண்டு வரும் சிலர் – அவர்கள் பேச்சாற்றல் பற்றி எந்த அறிவும் அற்றவர்களாக இருந்தபோதிலும் – பேச்சாற்றல் பெற்றவர்களாக இருக்கவே விரும்புகிறார்கள். அப்படியானால் அந்தக் கலை பற்றிய அறிவு அவர்களின் உணர்வில் இருக்கிறது என்று தானே அர்த்தம்? தங்கள் உணர்வுகளால் பேச்சாற்றல் கலையில் சிறந்து விளங்கும் மற்றையோரைப் பார்த்து, அவர்களின் நாவன்மையை ரசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு அவர்களும் அதைப்போல் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஆவல் கொள்கிறார்கள். எப்படியிருந்த போதிலும், அவர்களது உள்ளுணர்வில் அந்த ஆற்றலைக் கொண்டிராவிட்டால், அவர்கள் ஆசைப்பட்டும் அந்த நிலையை அடையமுடியாது. ஆகவே, மகிழ்ச்சியான வாழ்க்கையை மற்றவர்களிடம் இடமிருந்து பெறும் அனுபவத்தைக் கொண்டு அதன் மூலம் தெளிவைப் பெறுவது எம் உடல் உணர்வுகள் அல்ல, அது முற்றிலும் மூளை, அறிவு மற்றும் உள்ளுணர்வு சம்பந்தப்பட்ட விடயமாகும். அல்லது நாம் மகிழ்ச்சியை நினைவில் வைத்திருப்பது போல் இருக்கக் கூடுமா? ஒருவேளை அப்படியும் இருக்கலாம். மகிழ்ச்சியாக இருக்கும்போதும் நான் சோகமாக இருந்த தருணங்களை நினைவில் கொள்கிறேன். நான் துன்பத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் தருணங்களில், என் அவையவங்களினூடாக நான் ஒருபோதும் மகிழ்ச்சியை அனுபவித்தோ, பார்த்தோ, கேட்டோ, நுகர்ந்தோ, சுவைத்தோ அல்லது தொட்டோ பார்த்ததில்லை. மகிழ்ச்சியாக இருக்கும் வேளைகளில் இவற்றை நான் என் மனதால் மட்டுமே உணர்ந்தேன். அவை பற்றிய சிந்தனை என் மனதோடு சங்கமித்துவிட்டது. ஆதலால் நான் அந்த உணர்வுகளை சில சமயங்களில் அலட்சியத்துடனும், சில சமயங்களில் ஆவலுடனும் நினைவில் மீட்க முடியும். அவற்றின் வித்தியாசங்களை உணர்ந்து அவற்றுக்கேற்றவாறு வேறுபடுத்தி என் மகிழ்ச்சியான தருணங்களை மீட்டுப்பார்க்கிறேன். அசுத்தமான விஷயங்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு மகிழ்ச்சியுடன் நான் என்னை சுத்திகரித்துக் கொண்டேன். அதை நான் இப்போதும் நினைகூருகிறேன். சில சமயங்களில், எனது அவா மற்றும் எதிர்பார்ப்புகள் சிறந்த, உயர்வான விடயங்களில் மாத்திரமே தங்கியிருந்தது. அவை இப்போது என் வாழ்வில் இல்லையென்ற போதிலும், சோகத்தோடும், ஏக்க உணர்வோடும் அவற்றை என் மனக்கண் முன்னே கொண்டுவர முயல்கிறேன். இப்படியாக நான் எனது கடந்தகாலத்தில் அனுபவித்த மகிழ்ச்சியை எண்ணி மனதுக்குள் மனதுக்குள் உண்டாகும் ஏக்கத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை.

31. என் மகிழ்ச்சியான வாழ்க்கையை நான் எங்கே, எப்போது அனுபவித்தேன்? மகிழ்ச்சியாக இருக்க விரும்புவது நானோ அல்லது சிலர் மட்டுமோ அல்ல, உண்மையாக சொல்லப்போனால் அனைவரும் மகிழ்ச்சியை அனுபவித்திட வேண்டும். இது, எமக்குள் இருக்கும் அறிவை உபயோகித்து முடிவுசெய்ய வேண்டுமேயொழிய, சந்தர்ப்பம் அதை முடிவு செய்யாது. இது எப்படி இருக்கிறது என்றால், யாரேனும் இருவரைப் பார்த்தது நீங்கள் இராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறீர்களா என்று கேட்டால், ஒருவர் சரி என்பார், மற்றையவர் முடியாது என்று கூறுவார். அதேநேரம், அவர்களிடம், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா என்று கேட்டால் இருவரும் தயக்கமின்றி ஆம் என்றே சொல்வார்கள். இங்கே நாம் காண்பதென்னவென்றால், ஒருவர் இராணுவத்தில் பணிபுரியவும், மற்றையவர் அதை மறுத்துரைப்பதற்கும் காரணம் அங்கே பொதுக்காரணியாகக் காணப்படும் மகிழ்ச்சி ஒன்று மட்டுமே. ஒருவர் ஒரு வழியில் சென்றும், மற்றவர் பிறிதொரு வழியில் சென்றும் மகிழ்ச்சியை அடையவே அவர்களது நோக்கமாக இருக்கிறது. இங்கே ஒருவர் சேவை செய்ய விரும்புவார், மற்றவர் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார். ஆகவே, ஒருவர் மகிழ்ச்சியாகவும் மற்றவர் அதில் மகிழ்ச்சியடைவது போலவும், எல்லா மனிதர்களும் ஒரே மனதோடு மகிழ்ச்சியாய் வாழவேண்டுமென்பதை ஏற்றுக் கொள்கிறார்களா? அப்படியானால், அவர்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சி கேட்டுப் பெறப்பட்டதா? இந்த மகிழ்ச்சியைத் தான் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை என்று அழைக்கிறார்களா? ஒருவர் இந்த வழியில் மகிழ்ச்சியைத் தேடுவதும், மற்றொருவர் வேறு வழியில் தேடுவதும் சாதாரணமாகக் காணக் கூடியதுதான். ஆனால் அனைவருக்கும் ஒரு பொதுவான குறிக்கோள் உள்ளது; அதை அடைய அவர்கள் முயற்சி செய்கிறார்கள், அதாவது மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்று அயராது பாடுபடுகிறார்கள். இந்த வாழ்க்கையைத் தான் அனுபவிக்கவில்லை என்று யாரும் சொல்ல முடியாது என்பதால், மகிழ்ச்சியான வாழ்வு என்பது எம் நினைவில் ஆழப்பதிந்துவிட்ட ஒரு விடயமாகவே கருதப்படுகிறது. அத்தோடு, மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற வார்த்தையின் அர்த்தத்தை எமது மனம் நன்கு உணர்வதை யாராலும் மறுக்க முடியாது.

அத்தியாயம் 22 – மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது கடவுளுக்காக கடவுளுக்குள் மகிழ்வதாகும்.

32. ஆண்டவரே, உம்மிடம் அறிக்கையிடும் உமது அடியேனுடைய இதயத்திலிருந்து அது வெகு தொலைவில் இருக்கட்டும்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற எனது நினைப்பு எனக்கு வெகு தொலைவில் இருக்கட்டும். அனைத்து வகையான மகிழ்ச்சித்தரும் எதுக்களால் நானும் என் வாழ்வில் மகிழ்ச்சியில் திளைக்கலாம் என்ற எண்ணத்தை என் மனதில் இருந்து அகற்றிவிடும். “கெட்ட ஜனங்களுக்கு சமாதானம் இல்லை!” என்று ஏசாயா 48 ம் அதிகாரம் 22 ம் வசனத்தில் கர்த்தர் கூறியிருப்பதை இங்கே கோடிட்டுக் காட்டுவது சாலச் சிறந்தது. ஆகவே, உம்மை நன்றியறிதலுடன் வணங்குவோருக்கு நீரே மகிழ்ச்சியைக் கொடுப்பவராக இருக்கிறீர். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது உம்மோடு, உம்மில், உமக்காக மகிழ்வதாகும்; இதுவே உண்மை, அதைத் வேறு எதுவும் இல்லை. மகிழ்ச்சியான வாழ்வு வேறு வழியில் தேடக்கூடியது என்று நினைப்பவர்கள், அதை உண்மையான வழியில் தேடாமல், குறுக்கு வழியில் தேட எத்தனிப்பார்கள். இருப்பினும், அவர்களின் மகிழ்ச்சியைத் தேடும் முயற்சி நிழலாய் அவர்களைத் தொரடர்ந்து கொண்டே இருக்கும்.

அத்தியாயம் 23 – சத்தியத்தில் மகிழ்ச்சியடையவே எல்லோரும் விரும்புகிறார்கள்

33. மகிழ்ச்சியாக வாழ எத்தனிப்பவர்கள் யாவரும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள் என்று உறுதிபடச் சொல்லமுடியாது. காரணம் என்னவென்றால், அவர்கள் மகிழ்ச்சியின் ஊற்றாகிய உம்மில் களிப்பை உணராதவர்களாக இருப்பதனால். இதுகுறித்து “சரீர இச்சை என்பது தூய ஆவிக்கு விரோதமானது. அதேபோல், தூய ஆவியின் மகிமை சரீர இச்சைக்கு அப்பாற்பட்டது. இவை ஒன்றுக்கொன்று முரணானவை. ஆகையால் அவர்கள் விரும்புவதை அவர்களால் செய்ய முடியாது” என்று கலாத்தியர் 5:17 இல் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இந்த வாக்கியத்தின் மூலம் காட்டப்படும் எடுத்துக்காட்டு என்னவென்றால், தாங்கள் பலவீனம் காரணமாக அவ்வாறான பாவங்களில் மீண்டும் மீண்டும் விழுகிறார்கள். எதிர்ப்புகள் ஏதும் அற்ற நிலையில், தாங்கள் செய்வதுதான் சரியென்று நினைத்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால், அவர்களது மனம் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டப் போதுமான வலிமையைக் கொண்டிராமல் இருப்பதனால். நான் யாரேனும் ஒரு மனிதனிடம், அவன் உண்மையிலா அல்லது பொய்யிலா மகிழ்ச்சி அடைகிறான் என்று கேட்டால், அவன் இந்தத் தயக்கமுமின்றி உண்மையில் தான் என்று கூறுவான். அதேமனிதன், மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன் என்றும் சொல்லத் தயங்குவதில்லை. ஏனென்றால் மகிழ்ச்சியான வாழ்வு என்பது, உண்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு உயரிய நிலை. அதனால் தான் யோவான் 14:6 இல் கர்த்தர் அருளிய, “நானே வழி, நானே உண்மை, நானே வாழ்வு. என் மூலமாகத்தான் என் பிதாவிடம் போக முடியும்” என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார். அத்தோடு, இந்த மகிழ்ச்சி உம்மில் தான் ஆழ ஊடுருவியிருக்கிறது. ஆகவே என் தேவனே, நீரே உண்மை, நீரே என் ஒளி, நீரே என் முகத்தின் பிரகாசம், நீரே என் நம்பிக்கை, நீரே என் ஆண்டவர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியான வாழ்க்கையையே அனைவரும் விரும்புகிறார்கள்; எல்லோரும் விரும்பும் வாழ்க்கையும் இதுதான், ஏனென்றால் அது மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறது; அனைவரும் விரும்பும் மகிழ்ச்சிதான் உண்மையின் மகிழ்ச்சி. பிறரை ஏமாற்றுபவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் ஒருவரும் தான் ஏமாற்றப்படுவதை விரும்பவில்லை. உண்மை என்னவென்று அறியாதவர்கள் எப்படி மகிழ்ச்சியான வாழ்வு பற்றி அறிந்திருப்பார்கள்? உண்மையை விரும்புபவர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவதை விரும்புவதுமில்லை. அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நேசிக்கும் போது, ​​அது உண்மையின் மகிழ்ச்சியைத் தவிர அதற்கீடாக வேறொன்றையும் கூற முடியாது. நிச்சயமாக அவர்கள் உண்மையையும் விரும்புகிறார்கள். அவர்களின் நினைவகத்தில் இதுபற்றிய அறிவு மற்றும் புரிதல் இல்லாது போனால், அவர்கள் எப்படி இவ்வாறான காரணிகளால் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூற முடியும்? இருந்தும் அவர்கள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை? ஏனென்றால், அவர்கள் பெரும்பாலும் உண்மை போதிக்கும் விடயங்களை விட, பொல்லாங்குகளை ஏற்படுத்தும் தீமைகளைப் பற்றியே அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதுகுறித்து யோவான், “இன்னும் சிறிது காலம் உங்களோடு ஒளி இருக்கும். எனவே, ஒளி இருக்கும்போதே நடந்துவிடுங்கள். அப்போதுதான் பாவம் என்ற இருள் உங்களை வெற்றிக்கொள்ளாது. இருளிலே பயணிப்பவர்களுக்கு தாம் எங்கே போகிறோம் என்பது தெரியாது” என்று தனது சுவிசேஷத்தின் 12:35 இல் கோடிட்டுக் காட்டுகிறார்.

34. அப்படியானால் சத்தியம் ஏன் வெறுப்பை உண்டாக்குகிறது? [காண்க: யோவான் 8:40] அப்படியானால் சத்தியத்தைப் பிரசங்கிப்பவர் அவர்களுக்கு ஏன் எதிரியாகத் தெரிகிறார்? அதேசமயம் மகிழ்ச்சியான வாழ்க்கை எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இது சத்தியத்தின் மகிழ்ச்சியைத் தவிர வேறில்லை. அப்படியானவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தாங்கள் விரும்பும் ஏதோ ஒன்றுக்காக உண்மையைக் கைவிடுபவர்களாக இருக்கிறார்கள். உண்மை தரும் ஒளியைப் பெற மட்டுமே அவர்கள் உண்மையைப் போற்றுகிறார்கள். ஆனால் உண்மை அவர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும்போது அவர்களை அதை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியான மனிதர்கள், பிறரை ஏமாற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தபோதிலும், மற்றவர்களால் அவர்கள் வஞ்சிக்கப்படுவதை விரும்புவதில்லை. உண்மை தன்னை யார் என்று வெளிப்படுத்தும் போது அவர்கள் உண்மையை விரும்புகிறார்கள், அதேநேரம், உண்மை அவர்களை யார் என்று வெளிப்படுத்தும் போது அதை வெறுக்க முனைகிறார்கள். இதனால் உண்மை என்பது அவர்களுக்குத் தகுதியானவற்றை நிச்சயம் கொடுக்கும். அவர்கள் விரும்பாத எல்லாவற்றையும் குறித்து அவர்களைத் தெளிவுபடுத்தும். அதேநேரம், உண்மை ஒருக்காலும் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை. மனித மனங்களின் குணவியல்புகள் இவைதான். உண்மையில் மனித மனம் என்பது குருடாகவும், நோயுற்றதாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும், அநாகரீகமாகவும், தன்னை மறைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால் அதனிடமிருந்து எதையும் மறைப்பதை அது ஒருபோதும் விரும்புவதில்லை. மனித மனம் செய்யும் செயல் மீண்டும் அதை நோக்கியே திரும்புகிறது. ஏனெனில், மனம் உண்மையை ஏற்றுக்கொள்ளத் தன் கதவுகளைத் திறந்து வைத்திருந்தபோதிலும், உண்மை அதிலிருந்து மறைக்கப் படுகிறது என்பது தான் நிஜம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும்கூட, மனித மனம் என்பது பொய்யானவற்றில் அன்றி, உண்மையானவற்றில் தான் உவகை கொள்கிறது. எந்த விதமான பிரச்சனையும் குறுக்கே வராதபோது அது மகிழ்ச்சியாக இருக்கும். அதேவேளை, அதைச்சுற்றி இருக்கும் அனைத்தும் உண்மையாக இருக்கும் போது அது சத்தியத்தில் அது மகிழ்ச்சியைக் காணவே விழைகிறது.

அத்தியாயம் 24 – உண்மையைக் கண்டறிபவன் கடவுளைக் கண்டடைகிறான்

35. இதோ, ஆண்டவரே, உம்மைத் தேடும் பொருட்டு என் நினைவகத்தை எவ்வளவு பெரிதாக்கிக் கொண்டிருக்கிறேன். கால்போன போக்கெல்லாம் சென்று, தேடியலைந்தேன், இருப்பினும் நான் உம்மைக் காணவில்லை. உம்மைப் பற்றி நான் அறிந்து கொண்ட அந்தத் தருணம் முதல், எனது நினைவகத்தில் நான் கொண்டிருந்த எதுவும் என்னை விட்டு நீங்கவில்லை. ஏனென்றால் நான் உம்மை ஒருபோதும் மறக்கவில்லை. அதற்கு காரணம், நான் எங்கு உண்மையைக் கண்டேனோ, அங்கேயே தான் நான் என் தேவனாகிய உம்மைக் கண்டேன். அவர் தான் சத்தியத்தின் வடிவம். அதை அறிந்துகொண்ட காலம் முதல் நான் மறக்கவில்லை. இதனால் உம்மை அறிந்த நாள் முதல் நீர் என் நினைவில் நிலைத்திருக்கிறீர். நான் உம்மை நினைவுகூர அழைக்கும் போதெல்லாம் அங்கே உம்மை மானசீகமாய்க் கண்டு களிப்புறுகிறேன். உம்மில் நான் மகிழ்கிறேன். இவைகள் யாவும் என் ஏழ்மை நிலையைக் கண்டு இரங்கி, உமது கருணையால் நீர் எனக்கு அருளிய புனிதமான அருட்கொடைகள்.

அத்தியாயம் 25. கடவுளைத் தன் நினைவில் கொண்டிருப்பதையிட்டு அவர் மகிழ்வுறுகிறார்

36. ஆகவே என் ஆண்டவரே, என் நினைவில் நீர் எங்கே வாசம் செய்கிறீர்? உமது வாசஸ்தலத்தை எங்கே அமைத்திருக்கிறீர்? நீர் துயில் கொள்ளும் ஸ்தானத்தை எங்கே அமைத்திருக்கிறீர்? உமது சரணாலயத்தை எங்கே உருவாக்கியுள்ளீர்? இந்த கௌரவத்தை எனக்குள் ஸ்தாபித்து அங்கேதான் நீர் குடியிருக்கிறீர். நான் கேட்பதெல்லாம் என் நினைவகத்தின் எப்பகுதியில் நீர் குடியிருக்கிறீர் என்பதுதான். ஏனென்றால், உம்மை நினைவுகூர்வதில், மிருகங்கள் கொண்டிருக்கும் அறிவுக்கு அப்பால் சென்று நான் உயர்ந்தவனாயிருப்பதாக என்னைக் காண்கின்றேன். ஏனென்றால் உடல் அவையவங்கள் மற்றும் உருவங்களுக்கு இடையில் நான் உம்மைக் காணவில்லை. நான் என் மனதின் உணர்வுகள் இருக்கும் பகுதிகளுக்குள் பிரவேசித்தேன். அங்கேயும் நான் உம்மைக் காணவில்லை. நான் என் மனதின் இருக்கைக்குள் நுழைந்து அங்கேயும் தேடினேன். உம்மை நான் அங்கும் காணவில்லை. ஏனென்றால், நீர் ஒரு உடல் உருவமாகவோ, அல்லது ஒரு உயிரினத்தின் உணர்வாகவோ அல்லது நாங்கள் மகிழ்ச்சியடைவது, இரங்குவது, ஆசைகொள்வது, பயம் கொள்வது, நினைவில் நிறுத்துவது, மறப்பது அல்லது ஏதாவது ஒன்றைப் போன்றதோ அல்ல. அதேபோல் நீர் எம் மனதைப்போலவும் இல்லை. ஏனென்றால் நீர் மனதின் தேவனாயிருக்கிறீர். இவை அனைத்தும் மாறக்கூடியது. ஆனால் நீரோ என்றென்றும் மாறாமல் அனைத்திற்கும் மேலானவராக இருக்கிறீர். ஆனால் நான் உம்மைப் பற்றி அறிந்துகொண்ட அந்த நாள் முதல், என் நினைவில் என்றும் வாழ்ந்து வருகிறீர். என் நினைவகம் என்ற சேமிப்புப் பெட்டகத்தில் பல அறைகள் இருந்தபோதிலும், நீர் அதன் எந்தப் பகுதியில் வாசம் செய்கிறீர் என்று ஏன் இப்போது மட்டும் தேடிக் கொண்டிருக்கிறேன்? என் நினைவுதான் நீர் வாசம் செய்யும் வாசஸ்தலம். உம்மை அறிந்துகொண்ட காலம் தொட்டு நான் உம்மை என் நினைவில் வைத்திருப்பதால், நான் உம்மை நினைவுகூரும் போதெல்லாம் நீர் என் நினைவில் நிலைத்திருக்கிறீர்.

அத்தியாயம் 26. கடவுள் எங்கும் தம்மிடம் ஆலோசனை கேட்பவர்களுக்கு பதிலளிக்கிறார்

37. அப்படியானால், உம்மைப்பற்றி அறிந்துகொள்ளும் முகமாக நான் உம்மை எங்கே கண்டேன்? ஏனென்றால் நான் உம்மைப்பற்றி அறிந்துகொள்வதற்கு முன்பு நீர் என் நினைவில் இருக்கவில்லை. அப்படியானால், நான் உம்மை எங்குதான் கண்டிருப்பேன்? உம்மை எவ்வாறு நான் முழுமையாக அறிந்திருப்பேன்? உமது மகிமை என்ற உயரிய ஸ்தானத்தைவிட மேலானது என்று எனக்கு எதுவுமில்லை. முன்னே சென்றாலும், பின்னோக்கி சென்றாலும், நீர் இருக்கும் இடம் எனக்குள் பெரும் கேளிவிக்குறியாகவே இருக்கிறது. இதைக்குறித்து, யோபு 23:8 “நான் கிழக்கே சென்றேன், அங்கே தேவன் இல்லை. நான் மேற்கே சென்றேன், அங்கும் நான் தேவனைக் காணேன்” என்று கூறுகிறது. ஓ, உண்மையின் தேவனே, உம்மிடம் அறிவுரை கேட்கும் அனைவரையும் நீர் ஆள்பவராய் இருந்து வழிநடாத்துகிறீர். அவர்கள் பல்வேறு விஷயங்களில் உன்னிடம் கலந்தாலோசித்தாலும், பலரும் பலதரப்பட்ட கேள்விகளை ஒரே நேரத்தில் உம்மை நோக்கித் தொடுத்தாலும், அவற்றுக்கு நீர் ஒரே நேரத்தில் பதிலளிக்கிறீர். அனைவரும் உமது பதிலைத் தெளிவாகக் கேட்கவில்லை என்ற போதும், நீர் அவர்களுக்குத் தெளிவாகவே பதிலளிக்கிறீர். தாங்கள் விரும்புவதை அவர்கள் கேட்காவிடினும் தாங்கள் விரும்புவதைப் பற்றி உம்மிடம் ஆலோசனை கேட்கிறார்கள். உமக்கு சிறந்த முறையில் ஊழியம் செய்யும் உமது ஊழியனானவன், தான் எதை விரும்புகிறான் என்பது குறித்து அக்கறை கொள்ளாமல், நீர் விரும்புவதை உம்மிடம் கேட்டுப் பெறுபவனாயிருக்கிறான்.

அத்தியாயம் 27. கடவுளைத் தேடாமல் அவர் நீண்ட காலம் வாழ்ந்தது குறித்து வருந்துகிறார்

38. தாமதமாகவே நான் உம்மை அன்பு செய்யத் தொடங்கினேன். ஓ வசீகரமே, பழமையிலும் புதியதாக மிளிரும் அற்புத வசீகரமே, நான் உம்மை அன்பு செய்வதற்கு மிகவும் தாமதித்து விட்டேன். இதோ, நீர் எனக்குள் இருந்தீர், நானோ உன்னை விட்டு விலகி வெளியே இருந்தேன். இருப்பினும் அங்கேயும் உம்மைத் தேடினேன். கண்களுக்குத் தெரிந்த இரம்மியமான உமது படைப்புகளில் நாட்டம் கொள்ளாது, நான் அவசர புத்தியுடன் அன்பில்லாதவனாய், அலட்சியமானவனாய் இருந்தேன். நீர் என்னுடன் இருக்கும் போதெல்லாம் நான் உம்மருகில் இல்லாது தொலைவில் இருந்தேன். படைக்கப்பட்டவை யாவும் உம்மிடமிருந்து என்னைத் தூர விலக்கி வைத்துவிட்டன. அப்படியிருந்தும், அவற்றில் உமது பிரசன்னம் நிலைத்திருந்தது. ஏனென்றால், நீர் இன்றி ஏதும் இல்லை. நீர் என்னை நோக்கிக் கூவியழைத்தீர். அதன் மூலம் கேளாத என் காதுகளைக் கேட்கப்பண்ணினீர். உம்மிலிருந்து வந்த அந்த மின்னலெனும் பிரகாசம் பார்வையற்றவனாக இருந்த என் கண்களைத் திறந்தது. உம்மிலிருந்து வந்த அந்த சுகந்தமான வாசனையால் என் உணர்வுகளைத் தூண்டினீர். அந்த நறுமணத்தை நான் சுவாசமாய் உள்ளீர்த்து உம்மைப் பின்தொடர்ந்தேன். இப்போதெல்லாம் உம்மை அடையவேண்டுமென்ற பசியும் தாகமும் என்னுள் நிலை கொண்டிருக்கிறது. அதற்காகவே நான் பசியுடன் காத்திருக்கிறேன். நீர் என்னைத் தொட்டீர், அதன்மூலம் உம்மிலிருந்து வரும் அமைதிக்காக நான் ஏங்கினேன்.

அத்தியாயம் 28 – மனித வாழ்வில் ஏற்படக்கூடிய துயரங்கள்

39. நான் எனது முழு உணர்வோடும் உம்மைப் பற்றிக்கொள்கின்ற போது ​​எனக்கு எந்தவித வலியோ பிரயாசையோ இருக்காது. என் வாழ்க்கை நிஜமான வாழ்க்கையாக, முழுவதும் உம்மால் நிறைவுற்றதாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் இருக்கும். நீர் யாரை உமது கிருபையால் நிரப்புகிறீரோ, அவர் உம்மால் உயர்த்தப்படுவார். ஆனால் நானோ, உமது கிருபையால் நிரப்பப்படாமல் இருக்கும் காரணத்தால், நான் என்னையே ஒரு சுமையாகக் கருதுகிறேன். நான் எந்த மகிழ்ச்சியைப் பெறுவதற்காகத் துடிக்கிறேனோ, அந்த மகிழ்ச்சி துன்பத்துடன் போராட்டம் நடத்துகிறது. இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என நானறியேன். ஆ! என் தேவனே என் மீது இரங்கும். தீமை தரும் துன்பங்கள் என் மகிழ்ச்சியுடன் போராடுகின்றன. மீண்டும், யார் இதில் வெல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆ! என் தேவனே, என் மீது இரங்கும்; என்னை ஏறெடுத்துப் பாரும்; என் காயங்களை நான் உம்மிடமிருந்து மறைக்கவில்லை;நீரே என் நல்ல மருத்துவர்; நானோ நோயாளியாக இருக்கிறேன். நீரோ இரக்கமுள்ளவர், நானோ துன்பத்தில் உழலும் பரிதாபத்திற்குரியவன். பூமியில் மனிதனின் வாழ்க்கை ஒரு சோதனை மிகுந்த வாழ்க்கை அல்லவா? துன்பங்களையும் சிரமங்களையும் விரும்புபவர் யார்? எனினும், அவற்றை விரும்பி ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவற்றை சகிப்புத்தன்மையுடன் கையாள வேண்டுமென்பது உமது சித்தமாயிருக்கிறது. எவரும் தான் துன்பங்களைத் தாங்குவதை சகித்துக்கொண்ட போதிலும், அவற்றை விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை. துன்பத்தில் இருக்கும் போது நான் செல்வச் செழிப்பை விரும்புகிறேன்; அதேநேரம், செல்வச்செழிப்பில் இருக்கும்போது நான் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறேன். இந்த இரண்டுக்கும் நடுவில் சிக்கித் திணறுவது மனித வாழ்வு சந்திக்கும் போராட்டம் அல்லவா? இவ்வுலகின் செல்வங்களெல்லாம் கேடுகளை உண்டுபண்ணக் கூடியவை. அவை ஒரு முறையல்ல, பலமுறை கண்டனம் செய்யப்படவேண்டியவை. ஏனென்றால் அவை வறுமை மற்றும் துன்பங்களால் ஏற்படக்கூடிய அச்சத்தையும் ஸ்திரமின்மையையும் ஏற்படுத்துகின்றன. அவற்றால் கிடைக்கும் வெற்றி நிரந்தரமானதல்ல. இவ்வுலகின் வறுமையும் கண்டனம் செய்யத்தக்கது, ஒருமுறையல்ல, பலமுறை அது கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில் அது ஒருவர் கொண்டிருக்கும் சகிப்புத்தன்மையைச் சிதைக்கக் கூடியது. இவற்றையெல்லாம் நன்றாக அலசி ஆராய்ந்து பார்க்கும்போது, மனித வாழ்வு ஒரு போராட்டம் என்பது நன்றாகத் தெரிகிறது. அது தொடர்ந்துகொண்டே இருக்கும், அதற்கு ஓய்வென்பதே இல்லை.

அத்தியாயம் 29 – அனைத்து நம்பிக்கையும் கடவுளின் கருணையில் தான் தங்கியுள்ளது

40. மேலும் எனது முழு நம்பிக்கையும் உமது மகத்தான கருணையில் மட்டுமே தங்கி உள்ளது. நீர் கட்டளையிடுவதைக் கொடுப்பவராகவும், விரும்புவதைக் கட்டளையிடுவபருமாக இருக்கிறீர். நீர் எங்களுக்குக் கற்பு என்ற உயர் குணத்தைப் போதித்திருக்கிறீர். இருப்பினும், நான் அதை உணர்ந்தபோது, “கடவுள் எனக்கு ஞானத்தை அளிக்காத வரையில் எனக்கு ஞானம் கிடைக்க வழியே இல்லை என்பதை நான் அறிந்தேன் (அதையும் எமக்கு அறிவுறுத்துவது புத்திசாலித்தனத்தின் அடையாளம் தான்!). இது ஞானம் 8:21 இல் கூறப்பட்டுள்ளது. எனவே நான் ஆண்டவர் முன் வந்து அவரிடம் மன்றாடினேன். நான் முழு மனதுடன் சொன்னேன்: பல்வேறு பகுதிகளாகப் பிளவுண்டு, சிதறுண்டு போயிருக்கும் நாங்கள் கற்பின் வாயிலாகவே மீண்டும் ஒன்றாக இணைக்கப் பட்டிருக்கிறோம். ஒருவர் உம்மையும், உம்மோடு சேர்ந்த, உமது பிரசன்னத்தைக் கொண்டிராத வேறு எதையாவது நேசிப்பாரானால், அவர் உம்மீது காட்டும் அன்பில் குறை இருப்பதாகவே தெரிகிறது. ஓ, அன்புகொண்ட எம் தேவனே, நீர் என்றென்றும் உயிரோட்டத்துடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறீர். உமது பிரகாசம் என்றும் அணைந்து போவது கிடையாது. இனிமையான அன்புகொண்டவரே, என்னுள் பிரகாசமின்றி எரியும் திரியைத் தூண்டி பிரகாசமாய் ஒளிரச் செய்தருளும். கற்புடன் வாழ எமக்குக் கட்டளையிடும். அத்தோடு நீர் எதைச் செய்யச் சித்தம் கொண்டிருக்கிறீரோ, அந்த சித்தத்தையே எமக்கு கட்டளையாய்க் கொடும்.

அத்தியாயம் 30. கனவில் தோன்றும் தவறான பிம்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்

41. நான் சரீர இச்சை, கண்களின் இச்சை மற்றும் உலக வாழ்வு தரும் அகந்தை, ஆணவம் ஆகியவற்றிலிருந்து நான் விலகி கற்புடையவனாக இருக்க வேண்டும் என்று நீர் துல்லியமாகக் கட்டளையிட்டுள்ளீர். காமக்கிழத்தியுடனான தொடர்பு மற்றும் இல்லக்கிழத்தியாயினும் அவளுடன் செய்துகொண்ட திருமணம் போன்றவற்றையும் தவிர்க்கும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளீர். மேலும் நீர் அனுமதித்ததை விட சிறந்ததை நான் தழுவிக் கொள்ளவேண்டுமென எனக்கு அறிவுறுத்தியுள்ளீர். நீர் எனக்குத் தந்த வலிமை காரணமாக உமது புனிதமான திவ்விய நற்கருணையின் பங்காளனாக நான் மாறும் முன் இது நடந்தேறியது. அது இன்னும் என் நினைவில் இருக்கிறது – இதுகுறித்து நான் நிறைய பேசியிருக்கிறேன் – எனது சரீர இச்சை சம்பந்தமான நிகழ்வுகள், அனுபவங்கள் போன்றவற்றின் நினைவுச் சிதறல்கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றன. காலத்துக்குக்காலம் அவை என்னில் தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. நான் விழித்திருக்கும்போது அவை என்னைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் நான் நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது, அவை நிகழ்வுகளின் கோர்வையாக என் கனவில் தோன்றி என்னில் உறங்கிக்கொண்டிருக்கும் இச்சைகளை உயிர்ப்பிக்கின்றன. அவை எனக்கு மகிழ்ச்சியை மட்டும் தரவில்லை, எனது சம்மதத்தைப் பெறுவது போல் ஒரு பிரமையை உண்டாக்குகின்றன. நித்திரையில் இவை நடந்தபோதிலும், அது கிட்டத்தட்ட யதார்த்தத்தை ஒத்திருக்கிறது. ஆம், அந்தளவுக்கு என் உள்ளத்திலும், உடலிலும் உருவத்தின் மாயை மேலோங்கி நிற்கிறது. என் ஆன்மாவில் பதிந்துள்ள அந்த மாயைமிகு பிம்பம் தனது ஆற்றலை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்றால், நான் உறக்கத்தில் இருக்கும்போது அவை என் கனவுகளில் தோன்றி அதன் தாக்கத்தை நான் உணரும்படி செய்கின்றன. ஏனென்றால், நான் விழித்திருக்கும்போது அவற்றால் அவற்றின் ஆற்றலை என்மீது திணிக்கமுடியாது என்பதால். என் கடவுளாகிய ஆண்டவரே அந்த நேரத்தில் நான் நானாக இருக்கிறேனா? ஆனால் நான் விழித்திருக்கும்போது இருக்கும் நிலைக்கும், உறக்கத்தில் இருக்கும்போது இருக்கும் நிலைக்கும் பாரிய வித்தியாசங்கள் உள்ளனவே. அப்படியானால், என்னுள்ளிருக்கும் அறிவுத்திறனுக்கு என்ன நடந்தது? நான் விழித்திருக்கும்போது எனக்கு அறிவுரை புகட்டும் அது நான் நித்திரை செய்யும்போது வாளாவிருப்பதேன்? உறக்கத்தில் கண்கள் மூடிக்கொள்வது இயற்கைதான். ஆனாலும், அறிவுக்கண்கள் மூடுவதில்லையே! உடலின் ஏனைய அவயவங்கள் ஓய்வில் திளைக்கும் போதும் அகக்கண்கள் உறங்குவதில்லை. அப்படியே அவை உறங்கிவிட்டால், எமது உறக்கத்தின் போது இதே போன்ற சோதனைகளை நாம் எதிர்ப்பது எப்படி சாத்தியமாகும்? நாம் நமது கற்பு என்ற குறிக்கோளை மனதில் வைத்து, முழுவதும் தூய்மையாக இருக்கிறோம், எனவே நாம் ஏன் அந்த மாயைகளுக்கும், கனவில் வரும் அந்தப் பாலியல் இச்சை சம்பந்தமான உந்துதல்களுக்கும் அடிபணிய வேண்டும்? எம் விருப்பத்துக்கு மாறாக ஏதேனும் நடந்தால், நாம் உறக்கத்திலிருந்து விழித்தவுடன் அதையிட்டு அமைதிகாக்கும் எம் மனம் பெரியதோர் வித்தியாசத்தை உணர்கிறது. இதில் சொல்லவேண்டியது என்னவென்றால், எமது விருப்பத்துக்கும், நிஜ வாழ்வில் நடந்தேறும் நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட ஒரு வெளியிலிருந்து நாம் அதைச் செய்யவில்லை என்பதைக் கண்டுணர்கிறோம்.

42. சர்வவல்லமையுள்ள தேவனே, உமது கரத்தால் என் ஆன்மாவின் அனைத்து நோய்களைக் குணப்படுத்தவும், உமது கிருபையினால் என் தூக்கத்தின் போது எழும் சிற்றின்ப உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் முடியாமற்போனதா? ஆண்டவரே, என்னை நோக்கிய உமது வெகுமதிகளை மேலும் மேலும் அதிகமாக்கும். அது என் ஆன்மா உம்மைப் பின்தொடரவும் சிற்றின்ப இச்சை என்ற பிடியில் இருந்து என்னை விடுவிக்கவும் வழிவகுக்கும். அதனால் அது தனக்கு எதிராகக் கலகம் செய்யாமல், கனவில் தோன்றும் உருவங்கள் கூட உடலில் சிற்றின்ப வேட்கையைத் தூண்டி சரீரத்தை மாசுபடுத்தும் அந்த இழிவான செயல்களைச் செய்யாமல் தடுக்கும். அவ்வாறான செயல்களை ஒருபோதும் ஊக்குவிப்பதுமில்லை. நாம் கேட்பதைவிடவும், நினைப்பதைவிடவும் தேவன் நமக்கு மிகுதியாகச் செய்யத்தக்கவர் என்று பொருள்பட எபேசியர் 3 : 20 எமக்கு எடுத்துரைக்கிறது. ஆகவே இவ்வாறான சிற்றின்ப வேட்கை மற்றும் சோதனைகளில் இருந்து எம்மைக் காப்பது சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு இயலாத காரியமே அல்ல. அதை நீர் என் வாழ்க்கை நீரோட்டத்தில் மட்டுமல்ல, இப்போதே கூட செய்துவிட முடியும். கற்பு மற்றும் கண்ணியத்தைக் காப்பவன், அவன் உறங்கும்போதுகூட இவ்வாறான சோதனைகளில் சிக்கிவிடாமல் உம்மால் தடுக்க முடியும். எனது தற்போதைய இக்கட்டான நிலையை உம்முன் அறிக்கையிடுகிறேன். எனது நிலை கண்டு நான் நடுக்கத்துடன் வருந்தியபோதிலும், நீர் எனக்கு அருளிய அற்புதமான கொடைகளை எண்ணி வியக்கின்றேன். அப்படியும், நான் இன்னும் முழுமையற்றவனாக இருப்பதை எண்ணி உள்ளத்தால் புலம்புகிறேன். அப்பழுக்கற்ற ஒழுக்கம் மற்றும் மன அமைதியை நான் பெற்றுக்கொள்ள, நீர் உமது கருணையால் என்னை நிறைவுறச் செய்வீர் என்று நம்புகிறேன். அந்தக் களங்கமற்ற அமைதியை அகத்திலும், புறத்திலும் உம்மில் நான் காண்பேன். ‘மரணம் வெற்றியால் விழுங்கப்படும்’ ​​என்ற 1 கொரிந்தியர் 15:54 எமக்கு இதன் அர்த்தத்தை எடுத்துரைக்கிறது.

அத்தியாயம் 31 – சோதனை மற்றும் சரீர இச்சை பற்றி பேசும் முன், உண்ணல், குடித்தலில் உள்ள பேராசை பற்றி அவர் குமுறுகிறார்

43. “நாளையைப் பற்றி கவலைகொள்ளாதீர்கள். ஒவ்வொரு நாளும் தொல்லை உண்டு. நாளைய கவலையை நாளைக்கு விட்டுவிடலாம்” [காண்க: மத்தேயு 6 :34 ] உணவு மற்றும் வயிறு இரண்டையும் நீர் அழிந்துபோகச்செய்யும் வரை, ஆகாரங்களை உட்கொள்வதன் மூலமும், நீராகாரங்களைப் பருகுவதன் மூலமும் நாம் நமது உடலை அழிந்து போகாமல் புதுப்பித்துக் கொள்கிறோம். அந்த நாள் வரும்வரையிலும் இது தொடர்ந்தவண்ணமே இருக்கும் “அழியக்கூடிய இந்த சரீரம் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக் கொள்ளும். மரணத்திற்குள்ளாகும் இச்சரீரம் மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும்” [காண்க:1 கொரிந்தியர் 15 : 54 ]. அப்போது நீர், ஆச்சரியப்படத்தக்க நிறைவு மூலம் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்து அழியாமை என்ற போர்வையால் எங்களை அலங்கரிப்பீர். தற்போது உணவு மற்றும் பானத்தின் தேவை எங்களுக்கு அத்தியாவசியமானதாக இருந்தபோதும், உபவாசத்தின் மூலம் அதை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்வேன். இதுபற்றி 1 கொரிந்தியர் 9 :27 இல் கூறப்பட்டுள்ளதைக்  கவனிப்போம். “எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன்” என்கிறது அந்த வாசகம். என் உபாதைகள் மகிழ்ச்சியால் போக்கடிக்கப் படுகின்றன. பசியும் தாகமும் கூட ஒருவிதத்தில் உபாதைகளே. உணவு பானம் என்ற மருந்து அந்த சரீர உபாதையைத் தணிக்கக் கொடுக்கப்படும்வரை, காய்ச்சல் போன்று அவை எம்மை வதைக்கின்றன. உமது அருட்கொடைகளின் மூலம் நாங்கள் பெறும் ஆறுதலால், நிலமும், நீரும், காற்றும் நோயிலிருந்து எங்களைக் குணப்படுத்த உதவுவதால், நாங்கள் அனுபவிக்கும் இடர்கள் கூட இன்பத்தையே தருவதாக உணர்கிறோம்.

44. உணவையும் மருந்தாகவே எடுத்துக்கொள்ள நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீர் எனக்கு அறிவுறுத்தியிருக்கிறீர். ஆனால் தேவை என்ற அசௌகரியத்தில் இருந்து மனநிறைவு என்ற அமைதியை நோக்கி செல்லும் போது, அந்தப் பாதையில் கூட அந்த கட்டுக்கடங்கா காம இச்சை நயவஞ்சகமாக கண்ணியை விரித்து நான் வருவரை காத்திருக்கிறது. அந்தக் கண்ணியைக் கடந்து செல்வதும் இன்பத்தைத் தருவதாக இருக்கிறது. கட்டாயத்தின் காரணமாக, வேறு வழியின்றி அதைக் கடந்தது செல்ல வேண்டியுள்ளது. நாம் உண்பதும் குடிப்பதும் எமது உடலின் ஆரோக்கியத்தின் நிமித்தமே என்றபோதிலும், இடர்கள் நிறைந்த இன்பம் ஒரு சகுனியைப் போல எம்மோடு ஒட்டிக்கொள்கிறது. அநேகமான சமயங்களில் அது, அது முதன்மை ஸ்தானத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. அப்படியான சந்தர்ப்பங்களில், எனது உடல் நலத்தில் கரிசனை கொண்டு நான் செய்வது யாவும் இன்பத்தின் தேவையாக மாற்றம் பெற்றுவிடுகிறது. இவை இரண்டிற்கும் வரம்புகள் இல்லை. ஏனெனில் அவை வித்தியாசமான அளவுகோல்களைக் கொண்டவை. ஆரோக்கியத்திற்கு போதுமானது மகிழ்ச்சிக்குப் போதுமானதாக இல்லை. சில சமயங்களில், உணவு உட்கொள்வதன் நோக்கம் உடல்நலம் சார்ந்ததா அல்லது எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு துன்பம் சார்ந்ததா என்ற குழப்பம் மனதை ஆட்கொள்கிறது. இந்தக் குழப்பமான சூழ்நிலையில், மகிழ்ச்சியிழந்த மனம், இன்பத்தை நாடிச் சென்று அங்கே தனக்கென ஒரு வேலியை அமைத்துக்கொண்டு சூழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் சுபாவத்தையும் உருவாக்கிக்கொள்கிறது. ஆரோக்கியத்திற்கு எது போதுமானது என்று தெரியாத சூழ்நிலையில், எல்லாமே உடல் ஆரோக்கியம் சார்ந்ததுதான் என்ற போர்வையில், இன்பமானது தனது வேட்கையைத் தீர்த்துக் கொள்கிறது. ஒவ்வொருநாளும் நான் இவ்வகையான சோதனைகளோடு போராடிவருகிறேன். இதிலிருந்து மீள, நான் உமது வலக்கரத்தை உதவிக்கு அழைத்து, எனது உணர்ச்சிப் பெருக்கை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தமட்டில், இந்த விஷயத்தில் நான் இன்னும் எந்தத் தீர்வையும் இதுவரை காணவில்லை.

 45. “எச்சரிக்கையாக இருங்கள். குடித்துக்கொண்டும், குடியில் மூழ்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்காதீர்கள். அல்லது உலகத்துக் காரியங்களில் அதிகப்படியாக ஈடுபடாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்களால் சரியானதைச் சிந்திக்க முடியாது” என்ற லூக்காவின் 21 ம் அதிகாரம் 34 வசனங்களில் கூறியிருப்பதை நான் நினைவுகூருகிறேன். குடிபோதை என்பது எனக்கு தூரமாயிருக்கிறது, அது என்னை நெருங்காதபடி நீர் கருணை காட்டுவீராக. ஆனால் மிகையான போசனப்பிரியம் உமது அடியானை சில சமயங்களில் மிஞ்சிவிடுகிறது. அதிலிருந்து விடுபடவும் நீர் என்மீது கருணை காட்டுவீராக. அது என்னிடமிருந்து வெகு தொலைவிலேயே இருக்கட்டும். நீர் கொடுத்தாலன்றி, எந்த மனிதனும் கற்புள்ளவனாக இருக்க முடியாது [காண்க: ஞானம் 8:21 ]. நாங்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொண்ட பலவற்றை நீர் எங்களுக்குத் தத்துள்ளீர். நாங்கள் உம்மை நோக்கி செபிப்பதற்கு முன்னமே நாங்கள் எத்தனை நன்மைகளைப் பெற்றோமோ, அதையும் நாங்கள் உம்மிடமிருந்தே பெற்றுக்கொண்டோம் என்பதையும், அதை உணரக்கூடிய அருளையும் நீரே எங்களுக்குத் தந்தீர் என்பதையும் நாம் அறிய வேண்டும். நான் ஒருபோதும் ஒரு குடிகாரனாய், குடிபோதையில் சீரழிந்தவன் அல்ல. ஆயினும் குடிகாரர்களை நிதானமான மனிதர்களாக மாற்றுவது உமது செயலே என நான் அறிவேன். அப்படியென்றால், இதுவரை குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இல்லாதவர்கள் அதில் வீழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே நீர் அவ்வாறு செய்கிறீர். “உனது காம உணர்வு உன்னைக் கட்டுப்படுத்த அனுமதியாதே; உனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திரு.” என்று சிராக் 18:30 கூறுவதை உம்முடைய மற்றொரு குரல் வாயிலாகக் கேட்டேன். “புலாலுண்ணல் தேவனுக்கு நெருக்கமாக நம்மை இட்டுச் செல்லாது. அதேநேரம், புலால் உண்ணாமை தேவனுக்குக் குறைவான மகிழ்ச்சியைத் தருபவர்களாக நம்மை ஆக்காது” என்று 1 கொரிந்தியர் 8 : 8 கூறுகிறது. இதையொத்த வார்த்தைகளை உமது தயவால் நான் கேட்டேன். அதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனநிறைவோடு வாழ என்னை நான் தயார்செய்து கொண்டுள்ளேன். வறுமையும் செழுமையிலும் வாழ அதற்கேற்றவாறு என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். நான் எப்படி தாழ்த்தப்பட வேண்டும் என்பதையும், உயர்த்தப்படுவது எப்படி என்பதையும் நான் அறிவேன். என்னைப் பலப்படுத்தும் கிறிஸ்துவின் மூலம் எல்லாவற்றையும் செய்ய முடியும். பிலிப்பியர் 4:11-14 இல் இதுபற்றிக் கூறப்பட்டிருக்கும் சிலவற்றைப் பார்ப்போம். “ஏழ்மையில் இருக்கும்போதும் செல்வச் செழிப்பில் இருக்கும்போதும் எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன் என்றும், எனக்கு உண்ணுவதற்கு இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்றும், கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்” என்றும் சொல்லப்பட்டிருக்கும் சில வசனங்கள் இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்தான் புனித பவுல். அவர் வானகத்து சேனைகளின் வீரர், எம்மைப் போல அற்பத் தூசு அல்ல. ஆனால் ஆண்டவரே, நாங்கள் தூசி என்பதை உம்மிடம் ஒப்புக்கொள்கிறோம். நீர் மண்ணில் இருந்து மனிதனைப் படைத்தீர்கள்; [காண்க: ஆதியாகமம் 3:19 ] மற்றும் அவர் காணாமல் போனவர் கண்டுபிடிக்கப்பட்டார் [காண்க: லூக்கா 15:32 ] எம்மைப்போல் மிகவும் சாதாரண மனிதனாக, மண்ணிலிருந்து கிளம்பும் தூசியாக இருந்த அவர், மேலே காணும் வார்த்தைகளை உதிர்க்கக் காரணமாக இருந்தது நீர் அவருக்கு அருளிய உத்வேகமே. இதன் காரணமாகவே அவரை நான் மிகவும் நேசித்தேன். இதை பிலிப்பியர் 4:13 இவ்வாறு சொல்கிறது: “கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்யும் வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவரே எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்” என்று. ஆகையால் என்னால் இயன்றதெல்லாம் செய்வதற்கு என்னைத் திடப்படுத்தும். நீர் சித்தம் கொண்டதை எனக்கு கட்டளையாய் இடும். அவர் தான் அந்த கொடைகளைப் பெற்றவர் என ஒப்புக்கொள்கிறார். மேலும் அவர் பெருமைப்படும்போது, தேவனான உம்மிலேயே பெருமை கொள்கிறார். “ஒருவர் பெருமைப்படுவதாக இருந்தால், தேவனில் மட்டுமே பெருமைப்பட வேண்டும்” என்று 1 கொரிந்தியர் 1:31 வசனத்தினூடாகப் பறைசாற்றுகிறது. உம்முடைய தயவை நாடிநிற்கும் மற்றொருவரும் சிராக் 23:6 இல் கூறப்பட்டுள்ளபடி, பின்வருமாறு இறைஞ்சுகிறார்: “அதீத போசனப்பிரியம், சிற்றின்ப வேட்கை போன்றவை என்னை ஆட்கொள்ளாமல் காத்தருளும்.” ஆகையால், என் பரிசுத்த தேவனே, நீர் செய்யும்படி கட்டளையிடும்போது மட்டுமே அந்தக்கட்டளைகளை எம்மால் கடைபிடிக்க முடியும் என்பது புலனாகிறது.

46. “தூய்மையானவர்களுக்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும். பாவம் நிறைந்தவர்களுக்கும், நம்பிக்கை அற்றவர்களுக்கும் எதுவும் தூய்மையாக இராது” [காண்க: தீத்து 1 : 15 ] என்று நீர் எனக்கு கற்பித்தீர். அதேநேரம், “நாம் உண்ணும் உணவு மற்றவர்கள் பாவத்தில் விழுவதற்கு ஏதுவாக இருந்தால் அது பாவமாகும்” [காண்க உரோமர் 14 :20 ] அத்தோடு, “தேவனால் படைக்கப்பட்ட அனைத்துமே நல்லதுதான். நன்றிக் கடனாகப் பெறுகிறவரையில் தேவனால் உருவாக்கப்பட்ட எதையும் மறுக்கக்கூடாது” என்கிறது 1 தீமோத்தேயு 4:4 அதேநேரம், “புலாலுண்ணல் தேவனுக்கு நெருக்கமாக நம்மை இட்டுச் செல்லாது” என்று 1 கொரிந்தியர் 8 : 8 கூறுகிறது. “உண்பதைக் கொண்டும், குடிப்பதைக்கொண்டும் ஒருவர் மற்றொருவரை நியாயந்தீர்க்கலாகாது” என்று கொலோசெயர் 2:16 கூறுகிறது. “எல்லா உணவு வகைகளையும் உண்பவர், ஒருசில உணவுகளை மட்டுமே உண்பவர்களைப் பார்த்து இழிவாக எண்ணலாகாது” என்று உரோமர் 14 : 3 இல் கூறுகிறது. எனது ஆசானாகிய தேவனே, உமது மார்க்கமாகவே இவற்றையெல்லாம் நான் அறிந்துகொண்டேன். உமக்கே எல்லாப் புகழும் மாட்சியும் உண்டாகக்கடவது. உமது வார்த்தைகள் என் செவிவழியாகப் புகுந்து, என் இதயத்தை ஒளிரச் செய்வதாக, அதன் மூலம் எல்லா சோதனைகளிலிருந்தும் என்னை விடுவிப்பீராக. நான் அஞ்சுவது நான் புசிக்கும் மாமிசத்திலுள்ள அசுத்தத்தை அல்ல, காம இச்சையின் அசுத்தத்தைக் கண்டே நான் அஞ்சுகிறேன். ‘நுகர்வதற்கு ஏற்ற அனைத்து வகையான மாமிச வகைகளையும் ஆகாரத்துக்காக எடுத்துக்கொள்ளுமாறு நோவாவுக்குப் பணிக்கப்பட்டது’ என்பதை நான் அறிவேன். [காண்க: ஆதியாகமம் 9:3 ]. எலியாசுக்குக் கூட மாமிசம் உணவாகக் கொடுக்கப்பட்டது. “ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் காகங்கள் இறைச்சியும் அப்பமும் கொண்டுவந்து எலியாசுக்குக் கொடுத்தன” என்று 1 இராஜாக்கள் 17:6 சான்றளிக்கிறது. மத்தேயு 3:4 இல், “வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் யோவானுக்கு உணவாயிருந்தன” என்று கூறுகிறது. அவர் கடுமையான நோன்பை நோற்றிருந்தார். அவ்வாறு வெட்டுக்கிளிகளை உண்டதால் அவரோ அவர் கடைபிடித்த நோன்போ மாசுபடவில்லை. ஏசா பயற்றங்கூழுக்காக ஏங்கி ஏமாற்றப்பட்டதையும் நான் அறிவேன். “யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். ஏசா அவற்றை உண்டு, விலகிப் போனான்” என்று ஆதியாகமம் 25:34 கூறுகிறது. “தாகத்தால் தண்ணீர் குடிக்க ஆசைப்பட்டதற்காக தாவீது வருந்தினான். [காண்க : 2 சாமுவேல் 23:15-17 ]. இறுதியாக, எம் அரசராகிய கர்த்தர் கூட, மாமிசத்தால் அன்றி, அப்பத்தினால் சோதிக்கப்பட்டார். கர்த்தரை சோதிக்கப் பிசாசு வந்து, அவரிடம்,, “நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இந்தக் கற்களை அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான், என்று மத்தேயு 4:3 இல் விளக்குகிறது. மேலே சொல்லப்பட்டவற்றின் சாராம்சம் என்னவென்றால், வனாந்தரத்தில் வாழ்ந்த மக்கள் மாமிசத்தை விரும்பியதற்காக அல்ல, உணவின் மீதுள்ள வேட்கையால் அவர்கள் கடவுளுக்கு எதிராக அவதூறு பேசியமைக்காகவே தண்டனைக்கு உள்ளானார்கள்.

47. அப்படியானால், இந்த சோதனைகளுக்கு மத்தியில், நான் உணவு மற்றும் பானத்தின் மீதான ஏக்கத்துக்கு எதிராகத் தினமும் பாடுபடுகிறேன். காம லீலைகளில் ஈடுபடுவதை நான் ஒரேயடியாக நிறுத்தி மீண்டும் அதில் ஈடுபடப்போவதில்லை என்று உறுதியான நெஞ்சுரத்தோடு இருந்ததுபோல், உண்பதையும் குடிப்பதையும் உடனடியாகக் கைவிடவோ அன்றி மீண்டும் அதன் பக்கம் திரும்புவதில்லை என்றோ என்னால் நினைக்கக்கூட முடியவில்லை. வறுமைக்கும் செழுமைக்கும் இடையே காணப்படும் இடைவெளியை சீர்செய்து, எனது உணவுக்குழாய் வாயிலில் ஒரு கடிவாளம் இடப்பட வேண்டும். தேவனே, தேவையின் எல்லையைத் தாண்டி, அதை மீறிச் செல்லாதோர் யாருளர்? அப்படிப்பட்டவர் யாராக இருந்தாலும், அவர் ஒரு மகா மனிதர், அவர் உமது பெயரை மகிமைப்படுத்தட்டும். ஆனால் நான் அப்படிப்பட்டவன் அல்ல, ஏனென்றால் நான் ஒரு பாவமுள்ள மனிதன். [காண்க: லூக்கா 5:8 ] ஆயினும் உமது பெயரை மகிமைப்படுத்துகிறேன்; என்றால் நீரே உலகத்தை வென்றவர். [காண்க: யோவான் 16:33 ] “அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இப்போது அவர் தேவனுடைய வலதுபுறத்தில் வீற்றிருந்துகொண்டு நமக்காக பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார்” என்று உரோமர் 8:34 கூறுவதையும் இங்கு கவனிக்கத்தக்கது. தனது உடலில் வலுவில்லாதிருக்கும் ஒரு அவையவமாக அவர் என்னைக் கருதுகிறார். இதைக்குறித்து 1 கொரிந்தியர் 12:22 “பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை” என்று கூறுகிறது. ஏனென்றால், அவரைப் பற்றிய குறைகளை மட்டுமே உங்கள் கண்கள் கண்டன. இவைகுறித்த அனைத்தும் உங்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும்.

அத்தியாயம் 32 – வாசனை திரவியங்களின் இரம்மியமான சுகந்தம் வெகு சீக்கிரம் கரைந்துபோகிறது

48. நறுமணம் கமழும் வாசனைத்திரவியங்களின் ஈர்ப்பு குறித்து நான் அதிகம் கவலைப்படவில்லை. அவை இல்லாதபோது நான் அவற்றைத் தேடுவதுமில்லை; இருக்கும் போது நான் அவற்றை உபயோகிப்பதை வெறுப்பதுமில்லை. அவை இல்லாமல் வாழ நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறுதான் நான் என்னைக் காண்கிறேன். ஒருவேளை நான் ஏமாற்றப்பட்டிருக்கலாம். ஏனென்றால், அதுவும் ஒரு வருந்தத்தக்க மாயை. அங்கு என் திறன் மறைந்து இருக்கிறது. என் வலிமையைப் பற்றிக் கரிசனைகொள்ளும் என் மனம், அதை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், அனுபவபூர்வமாக உணர்ந்து அதை வெளிப்படுத்தினாலேயொழிய, மறைந்திருப்பதை மறைந்தே தானிருக்கும். மேலும் எந்த ஒரு மனிதனும் தான் இந்த வாழ்க்கையில் பாதுகாப்பாக இருப்பதாக உணர முடியாது. அவனது முழு வாழ்க்கையுமே ஒரு சோதனை என்றுதான் அழைக்கப் படுகிறது. மோசமான நிலையிலிருந்து நல்ல நிலைக்கு வரக்கூடிய எவரும், நல்ல நிலையில் இருந்து மோசமான நிலைக்குள் சென்றுவிடக் கூடும். எனவே, உமது கருணையே எங்கள் ஒரே நம்பிக்கை, எங்களின் ஒரே விசுவாசம், எங்களின் ஒரே உறுதியான வாக்குறுதி.

அத்தியாயம் 33 – அவர் செவிவழி இசை இன்பத்தைப் பருகியதோடு, தேவாலயத்தில் பாடப்படும் பாடலில் எப்போதும் மகிழ்ந்தார் ஆனால் அது பாடப்படும் விதத்தில் அல்ல.

49. செவிவழி இன்பங்கள் மிகவும் சக்திவாய்ந்த முறையில் என்னுள் ஊடுருவி என்னை ஆட்கொண்டிருந்தன. ஆனால் நீர் என்னை அந்தப் பிணைப்புகளிலிருந்து விடுவித்தீர். இப்போது, ​​இனிமையான குரலில் பாடும்போது உமது வார்த்தைகள் நான் சுவாசிக்கும் காற்றாய் ஆன்மாவைத் தாலாட்டும்போது, நான் என்னை சற்று ஆசுவாசப் படுத்திக்கொள்கிறேன். இது அவர்களுடன் சேர்ந்து அதைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கவேண்டுமென்ற நோக்கத்தில் அல்ல. நான் விரும்பும் போது எந்நேரமும் அங்கிருந்து வெளியேறவும் முடியும். சில சமயங்களில் என் செவிகள் செவிமடுக்கும் சில விடயங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. ஆனால் அவர்களின் வார்த்தைகளால் எனக்குள் நுழைய முயற்சி செய்யலாம், என் இதயத்தில் ஏதாவது ஒரு கௌரவமான இடத்தைப் பெற முயற்சி செய்யலாம். நான் அவர்களுக்கு அங்கு ஒரு பொருத்தமான இடத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். சில சமயங்களில் நான் அவர்களின் தகுதிக்கும் பார்க்க அதிக மரியாதை கொடுப்பதாகத் தோன்றுகிறது. அதேநேரம், அங்கே உச்சரிக்கப்படும் புனிதமான வார்த்தைகள் எம் ஆன்மாக்களை இதமாக வருடிக்கொடுக்கின்றன. ஆனால், பாடலாய்ப் பாடப்படும்போது அவ்வாறான பரவசத்தை அவை ஏற்படுத்தியதில்லை. பன்முகத்தன்மை கொண்ட எமது ஆன்மாவின் உள்ளுணர்வுகள், அவற்றுக்கே உரித்தான இனிமை கலந்த குரல் வளத்தையும் உச்சரிப்பையும் கொண்டுள்ளன. அவை இரண்டுக்கும் அப்படி என்ன ஒரு இறுக்கமான பிணைப்பு இருந்ததென்று நான் வியந்தேன். ஆயினும் என்னுள் இருந்த உடல்சார் இச்சை என்னை ஏமாற்றிக்கொண்டே இருந்தது. அதன் வழிசென்று நான் என் மனதை கூடாத இச்சைகளுக்கு அடிமையாக்குதல் தவிர்க்கப்பட வேண்டும். இருந்தாலும், உடலில் உள்ள சில உணர்ச்சிகள் தவிர்க்க முடியாதவாறு என்னைக் கபளீகரம் செய்துவிடுகின்றன. அவை என் மனதை ஆளுகை செய்து வழிநடத்த முற்படுகின்றன. இவ்வாறே நான் என்னை அறியாமல் பாவத்தில் விழுந்து விடுகிறேன். ஆனால் பின்னர் நான் அதை உணர்ந்து வருந்துகிறேன்.

50. சில சமயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில், அளவுக்கதிகமாக சிரத்தை எடுத்து என்னை நான் வருத்திக்கொள்கிறேன். அது எவ்வளவு தூரத்துக்குச் சென்றுள்ளது என்றால், தாவீதின் சங்கீதங்களும், அவற்றுக்கு மெருகூட்டும் இசையும் என் செவிகளில் இருந்து மட்டுமல்ல, அவை இசைக்கப்படும் ஆலயங்களில் இருந்தும் அகற்றப்படவேண்டும் என்று என் மனம் என்னை வாட்டியெடுத்தது. இது சம்பந்தமாக, அலெக்சாந்திரியாவின் ஆயரான அத்தனாசியஸ் பரிந்துரைத்த ஒரு பாதுகாப்பான வழி என் ஞாபகத்துக்கு வந்தது. அது என்னவென்றால், தாவீதின் சங்கீதத்தைப் படிப்பவர்கள் பாடுவதை விட பேசுவதைப் போன்ற ஒரு பாணியைப் பயன்படுத்தினால், அது பாடுவது போலல்லாமல் அழகான உரைநடையைப் போலிருக்கும் என்று பரிந்துரைத்திருந்தார். இருப்பினும், நான் என் விசுவாசத்துக்குள் மீளவும் பிரவேசித்ததன் தொடக்கத்தில், உமது ஆலயத்தில் பாடப்பட்ட பாடல்களில் நான் மனமுருகி கண்ணீர் சிந்திய தருணங்களை நான் நினைத்துப்பார்க்கும்போது, ​​இப்போதும் கூட அவை பாடப்பட்டதால் அன்றி, அவை தெளிவான குரல்வளத்துடன் ஒருவித நெறியோடு அவை பாடப்பட்டதும், அவை இசைக்கப்படும் போது கடைபிடிக்கப்பட்ட உரைநடையின் சிறந்த பயன்பாட்டில் தான் என் உணர்வுகள் தூண்டபட்டன என்பதை மறுக்க முடியவில்லை. இவ்வாறு நான் ஆபத்தான இன்பத்திற்கும், முயற்சிக்கும் இடையே மிகவும் அலைக்கழிக்கப்படுகிறேன். ஏனென்றால், செவிவழி நுழையும் இன்பம் பலவீனமான மனத்தைக் கூட சக்திமயமாக்கும் என்ற காரணத்தால் தேவாலயங்களில் பாடல்கள் இசைப்பதை (இந்த விஷயத்தில் உறுதியான தீர்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும்) ஆதரிப்பதில் நான் அதிகம் சாய்ந்திருக்கிறேன். இருப்பினும், இசைக்கப்படும் வார்த்தைகளை விட, பாடப்படும் இசையானது என்னை அதிகம் கவர்வதைக் கண்டால், நான் ஒரு பெரிய பாவத்தை செய்துவிட்டதாக உணர்வேன். அப்படியான தருணங்களில், அந்தப் பாடலைக் கேட்காமல் இருப்பதையே நான் விரும்பியிருப்பேன். என் இக்கட்டான நிலையைப் பாருங்கள்! என்னுடன் அழுங்கள், எனக்காக அழுங்கள், அப்போது அதன் மூலம் வரக்கூடிய நல்ல முடிவுகள் உங்கள் உள் உணர்வுகளுக்கு ஒரு தெளிவை உண்டாக்கும். சில சமயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில், அளவுக்கதிகமாக சிரத்தை எடுத்து என்னை நான் வருத்திக் கொள்கிறேன். அது எவ்வளவு தூரத்துக்குச் சென்றுள்ளது என்றால், தாவீதின் சங்கீதங்களும், அவற்றுக்கு மெருகூட்டும் இசையும் என் செவிகளில் இருந்து மட்டுமல்ல, அவை இசைக்கப்படும் ஆலயங்களில் இருந்தும் அகற்றப்படவேண்டும் என்று என் மனம் என்னை வாட்டியெடுத்தது. அதேவேளை, அப்படிச் செயல்படாத உங்களைப் பொறுத்தவரை, இந்த விஷயங்கள் குறித்து நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. ஆனால் என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் எனக்குச் செவிமடுத்தருளும், என்னை ஏறெடுத்துப் பார்த்து பார்த்து, என்மீது கருணை காட்டி, என்னைக் குணப்படுத்தியருளும். அவருடைய பார்வையில் எனக்கு நானே புதிராக மாறிவிட்டேன். இது என் பலவீனமோ என்னவோ நானறியேன்.

அத்தியாயம் 34 – கண்கள் காணும் ஆபத்தான மாயைகள், உருவங்களின் அழகு போன்றவற்றுக்கு படைப்பாளரான கடவுள் போற்றப்பட வேண்டும்

உமது ஆலயத்தின் செவிகளான எம் கிறீஸ்தவ சகோதரர்களின் செவிகளுக்கு என் அறிக்கை சென்றடையும் வகையில், என் உடலின் இந்தக் கண்களால் காணக்கூடிய இன்பங்கள் பற்றி என் அறிக்கையை சமர்ப்பிக்கிறேன். இவற்றோடு, உடல்சார் இச்சைகள் அவற்றால் எழும் பாவச் சோதனைகள் சம்பந்தமான எமது இந்த பகிர்வு, விவாதம் மற்றும் சொல்லாடல்களை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம். இதுகுறித்து 1 யோவான் 2 : 16 இல் கூறப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டுவது சிறப்பென்று நம்புகிறேன். இதுவே அது: “இவை உலகின் தீய காரியங்களாகும். பாவமிக்க சுயத்தை திருப்திப்படுத்தும் பொருள்களை விரும்புதல், நாம் பார்க்கிற பாவமிக்க பொருள்களை விரும்புதல், நம்மிடம் உள்ள பொருள்களால் மிகவும் கர்வமாக உணர்தல், இவற்றில் ஒன்றேனும் பிதாவினிடமிருந்து வருவதில்லை. இவை அனைத்தும் உலகிலிருந்து வருவன” என்கிறது. இந்தச் சோதனைகளால் நான் நிதமும் மிகுந்த மனவேதனைக்குள்ளாகிறேன். நான் இடைவிடாது அழுது புலம்பினாலும், அவை என்னை இன்னும் வாட்டி வதைக்கின்றன. இதற்கு 2 கொரிந்தியர் 5:2 மேலும் இவ்வாறு ஒரு சாட்சியத்தைச் சேர்க்கிறது. “நாம் இப்பொழுது இந்த சரீரத்தால் சோர்வுற்றிருக்கிறோம். பரலோக வீட்டை தேவன் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்” என்று. கண்கள் தாம் காணும் நியாயமான மற்றும் மாறுபட்ட வடிவங்கள் பிரகாசமான, மகிழ்ச்சியான வண்ணங்களில் மகிழ்ச்சியடைகின்றன. என்றாலும், அவை என் ஆன்மாவை ஆட்கொள்ளாதிருக்கட்டும்; தேவனே அதன் உடமையைக் கொண்டவராக இருக்கட்டும். “தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார்” [காண்க: ஆதியாகமம் 1:31]. எனினும் அவரே என் நல்லவர், இவை அல்ல. என் கண்கள் விழித்திருக்கும்போது அவை என்னை ஸ்பரிசிக்கின்றன. அவை என்னை இளைப்பாற அனுமதிப்பதில்லை. மெல்லிசையின் குரல்களில் இனிமை இருப்பது போல், சில சமயங்களில் அவை அனைத்துவிதமான சலங்களில் இருந்தும் அமைதியாக இருக்கும். நாம் பார்க்கும் எல்லாவற்றையும் ஒளியால் பரவச் செய்யும் நிறங்களின் அரசி. பகலில் நான் எங்கிருந்தாலும், அது பல்வேறு வடிவங்களில் என்னைக் கடந்து செல்கிறது, நான் மற்ற விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் போதுகூட, அதைக் கவனிக்காமல் என்னை சாந்தப்படுத்துகிறது. ஒளியின் மகத்துவம் எந்த அளவுக்கு எம்மீது தனது தாக்கத்தைச் செலுத்துகிறது என்றால், ஒளியானது மங்கியவுடன், நாம் அதை மிகவும் கரிசனையுடன் தேடுகிறோம். மிக அதிக நேரம் ஒளி இல்லாமல் போகும்போது, அது மனதுக்கு ஒரு சோர்வையும், உற்சாகமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.

52. ஓ, ஒளியாய் இருப்பவரே, தோபியாஸ் தனது கண்களை மூடிக்கொண்டு ஒளியைக் கண்டார், அதைக்கொண்டு அவர் தனது மகனுக்கு வாழ்க்கையின் விழுமியங்களைக் கற்பித்தார்; தானும் அறத்தின் வழிநடந்தார், ஒருபோதும் வழிதவறவில்லை. அத்தோடு, ஈசாக்கு வயோதிபன் ஆனான். அவனது கண்கள் பலவீனமாகி அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை [காண்க: ஆதியாகமம் 27:1.] அவரது மகன்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்ற போதும், அவர்களை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும், தனது அகக்கண்களால் அவர்களைக் கண்டு அவர்களை ஆசீர்வதிப்பதில் வெற்றிபெற்றான். அதேபோல, யாக்கோபு கண்ட ஒளியைப் பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். பழுத்த வயதினனான யாக்கோபு தனது கண்பார்வையை இழந்திருந்தான். ஆனால் அறிவொளி ததும்பிய தன் இதயத்தின் கண்கள் மூலம் தனது சொந்த மகன்மாரைக் கண்டு, அவர்களின் மீதும் அவர்களது சந்ததி மீதும் அவனது ஆசீர்வாதத்தைப் பொழிந்தான். அத்தோடு, அவனது மகனான யோசேப்பின் வழிவந்த தனது பேரக்குழந்தைகள் மீதும் அவனது கைகளை வைத்து ஆசீர்வதித்தான். ஆனால் யோசேப்போ தனது பார்வையிழந்த தந்தை, தவறாகக் கைகளை வைத்துவிட்டதைப் பார்த்து, “உமது வலது கையைத் தவறாக வைத்திருக்கிறீர், மனாசே தான் மூத்தவன்” என்று கூறி, நிலைமையைச் சரிசெய்ய முயன்றான். அதை கேட்ட யாக்கோபு, “எனக்குத் தெரியும் மகனே! மனாசேதான் மூத்தவன். அவன் ஏராளமான ஜனங்களின் தந்தையாவான். ஆனால் இளையவனே மூத்தவனைவிட பெரியவனாவான். அவனது சந்ததி மிகப் பெரியதாக இருக்கும்” என்று கூறினான் [காண்க: ஆதியாகமம் 48:13-19 ]. இதுவே ஒளி, இது ஒன்றே ஒளி, அதைக் கண்டு நேசிப்பவர்கள் அனைவரும் ஒன்றே. கண்களுக்குப் புலப்படும் ஒளியானது, இவ்வுலக வாழவைக் கண்மூடித்தனமாக அன்பு செய்வோரின் வாழ்வை தனது மயக்கம் தரும் மாயைகளால் மாற்றமடையச் செய்கிறது. ஆனால் என் தேவனே, உலகின் சிறந்த சிருஷ்டியான உம்மை ஒளிக்காகத் துதிக்கத் தெரிந்தவர்கள், அதை உமது பாடலில் மட்டுமே செய்கிறார்கள். அவர்கள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது அல்ல. அவ்வாறிருக்கவே நான் ஆவல் கொண்டிருக்கிறேன். உமது வழியில், உம்மை நோக்கி முன்னேறும் என் கால்கள் தடுக்கி விடாதபடி, கண்கள் காட்டும் மாயத்தோற்றங்களில் இருந்து என்னைக் காத்துக்கொள்கிறேன். நான் என் கண்ணுக்குத் தெரியாத எனது அகக்கண்களை உம்மை நோக்கி உயர்த்துகிறேன். அப்போது நீர் என் கால்களைக் கண்ணிகளில் இருந்து விடுவிப்பதில் மகிழ்ச்சி கொள்வீர். அக்கால்கள் சிக்குண்ட கண்ணிகளில் இருந்து நீர் எப்போதும் என்னைத் தொடர்ந்தும் விடுவித்துக்கொண்டே இருப்பீர் என்ற விசுவாசம் என்னுள் இருக்கிறது. ஏனென்றால் நான், என்னைச் சுற்றி அமைக்கப்பட்ட கண்ணிகளில் தொடர்ந்தும் சிக்கிக் கொள்கிறேன். என்றும் விழித்திருந்து என்னைக் காக்கிறீர். ஏனென்றால், இஸ்ரவேலைக் காக்கிற நீர் சளைப்பதுமில்லை உறங்குவதுமில்லை.

53. கண்களைக் கவர்வதற்கும், அவற்றின் கவனத்தை ஈர்ப்பதற்கும் கலையம்சம் மிக்கதும் கைவேலைப்பாடுகள் நிறைந்ததுமான பல்வேறு அம்சங்களை மனிதர்கள் வடித்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, ஆடை அணிகலன்கள், காலணிகள், பாத்திரங்கள், ஓவியங்கள், சித்திரங்கள் போன்ற இவற்றின் அவசியமான அல்லது மிதமான பயன்பாடு நிதானம் பக்தியுடைமை போன்றவற்றைப் பின்தள்ளி, அவர்கள் உருவாக்கிய மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை மேன்மையாகக் கருதுகிறார்கள். அவர்கள் உள்ளார்ந்த ரீதியாகத் தங்களை சிருஷ்டித்த இறைவனை மறந்து, தாங்கள் என்ன நோக்கத்துக்காக சிருஷ்டிக்கப்பட்டார்களோ அந்த நோக்கத்தை மறந்து, புறந்தள்ளி நிர்மூலம் செய்து விடுகிறார்கள். ஆனால் என் தேவனே, என் பேரானந்தத்தின் காரணமாயிருக்கிறவரே, இதன் காரணமாகவே நான் உம்மை நோக்கி துதி கீதங்களை இசைக்கவும், எனக்காகத் தன் இன்னுயிரை ஈந்தவருக்கு மகிழ்ச்சி கீதங்களை இசைக்கவும் நன்றிப்பலியைச் செலுத்தவும் விழைகிறேன். கைவினைஞர்களின் உள்ளத்தில் இருந்து பிறக்கும் அந்த அழகிய வடிவங்கள் அவர்களின் கலைநயமிக்க கைகளுக்கு அனுப்பப்பட்டு, அதிலிருந்து தோன்றும் இரம்மியம் நம் ஆன்மாக்களைக் கொள்ளை கொள்கிறது. அந்த இரம்மியத்தின் பின்னால் என் மனம் ஓய்வொழிச்சலின்றி போய்க்கொண்டிருக்கிறது. அழகு என்றால் என்ன, அதை அளவீடு செய்வது எப்படி, அதற்கு உயிரோட்டம் தருவது எவ்வாறு போன்றவற்றுக்கு ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தும் முகமாக, கலைஞர்கள், கைவினைஞர்கள் போன்ற நிபுணர்கள் மேற்குறிப்பிட்ட வற்றிலேயே சார்ந்திருக்கின்றனர். அதேநேரம், அழகிய பொருட்கள் மற்றும் சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது, பயன்பெறுவது போன்றவற்றுக்கான ஒரு அளவீட்டுக் கருவியாய் அதை வைக்காத தவறுகிறார்கள். ஆனாலும், விதிமுறை என்ற ஒன்று ஏற்கனவே வகுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, எதற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பது தான் அது. அவர்கள் அவரைக் காணாவிட்டாலும், அவர் அங்கே தான் இருக்கிறார். எனவே அவர்கள் வழிதவறிச் செல்லாமல், தங்களுக்குக் கிடைத்த கொடைக்காக உம்மீதே நன்றியுடன் இருக்க வேண்டும், கவர்ச்சியான, வண்ணமையமான அதேநேரம், மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் மீது பேராசை கொண்டு அந்தக் கொடையை வீணடித்துவிடாமல் இருக்கவேண்டும். ஆனால், இவற்றுக்கிடையில் காணப்படும் விதித்தியாசங்கள் போன்றவற்றை அறிந்திருந்தும், இதைப்பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் நானே, ஒருசில சமயங்களில் என்னை அறியாமலேயே என் கால்களை அந்தக் கண்ணிகளுக்குள் சிக்கவைத்து விடுகிறேன். ஆனால் ஆண்டவரே, நீர் என்னைக் காப்பாற்றுகிறீர், உமது கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. ஏனெனில் நான் பரிதாபகரமாக அகப்பட்டுக்கொண்டேன். நீர் என்னை இரக்கத்துடன் மீட்டீர்; சில சமயம் என்னையறியாமலும், சில வேளைகளில் தயக்கத்துடனும், வலியுடனும் நெருங்கி வந்தேன். அப்படியும் நான் அவைகளிடம் வசமாக அகப்பட்டுக் கொண்டேன்.

அத்தியாயம் 35. இன்னொரு வகையான சோதனை தான் கண்களின் இச்சையால் ஏற்படும் ஆர்வக்கோளாறு

54. இங்கே பன்மடங்கு ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய இன்னொரு வகையான சோதனை பற்றியும் குறிப்பிட வேண்டும். எமது புலன்கள் ஊடாகப் பெறும் இச்சையானது மற்றைய அவையவங்களோடு சேர்ந்து இன்பங்களுக்கு மனிதரை அடிமையாக்குவது மட்டுமல்லாமல், அவர்கள் உம்மிடமிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிடும் நிலையையும் ஏற்படுத்துகிறது. ஆனால், மனதில் இருக்கும் பேராசையானது, உடல்சார் இச்சைகளோடு ஒன்றித்துப் பயணிக்காவிட்டாலும், உடல்வழி வந்த வந்த அந்த உணர்வுகளில் அமர்ந்துகொள்கிறது. இது அறிவு அன்றோ விஞ்ஞானம் என்றோ சொல்லப்பட்டபோதிலும், இவற்றின் பெயரால் போலியாகப் போர்த்தப்பட்ட ஒரு வீண் ஆர்வமே. எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற வேட்கை காரணமாக இது எம் மனதில் நிலைபெற்றிருக்கிறது. எமது உடலில் உள்ள அனைத்து புலன்களை எடுத்துக்கொண்டாலும், நமக்கு அறிவையும், புரிதலையும் எடுத்துரைப்பதில் கண்களே பிரதான பங்கை வகிக்கின்றன. இறை பதங்களில் இதை ‘கண்களின் இச்சை’ என்று அழைக்கிறார்கள். 1 யோவான் 2:16 இல் கண்களின் பங்கு குறித்து விளக்கப் பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அனைத்தையும் சரியாகப் பார்ப்பதும் எம்மைக் காணச்செய்வதும் கண்களுக்கே உரிய பண்பாக இருக்கிறது. எனினும், இந்த வார்த்தையை நாம் மற்றைய அவயவங்கள் பற்றிக் குறிப்பிடும்போதும் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, அது எப்படி ஒளிர்கிறது என்று கேள் என்றோ அல்லது எப்படிப் பளபளக்கிறது என்பதை முகர்ந்து பார் என்றோ அல்லது எப்படி மின்னுகிறது என்பதைச் சுவைத்துப்பார் என்றோ அல்லது எப்படி ஒளிர்கிறது என்பதை உணர் என்றோ நாம் சொல்வதில்லை. ஏனென்றால் இவை யாவும் கண்களால் பார்க்கக் கூடியவை என்பதால். ஆனால், எதோ ஒரு பொருளை எடுத்துக்கொண்டால், அது எப்படிப் பிரகாசிக்கிறது என்பதை நாம் கண்களூடாகவே பார்க்கிறோம். ஏனெனில், தனது கடமையை எவ்வாறு செய்வதென்று கண்கள் மட்டும்தான் அறியும். ஆனால் ஒரு பொதுவான கண்ணோட்டத்தோடு நோக்கும் போது, நாம் பிற உணர்வுகளையும், செயல்களையும் கண்களின் தன்மைகளைக் கொண்டே குறிப்பிடுகிறோம். பின்வரும் எடுத்துக்காட்டுகள் சிலவற்றைப் பார்ப்போம். அதாவது, எப்படி ஒலிக்கிறது என்று பார் என்றும், அது எப்படி வாசனை வீசுகிறது பார் என்றும், எப்படி சுவையாக இருக்கிறது பார் என்றும், எவ்வளவு கடினமாக இருக்கிறது பார் என்றும் பலவிதங்களில் கண்களை ஆதாரம் காட்டிப் பேசுவது வழக்கமாகி விட்டது. அப்படியானால், புலன்களின் பொது இயல்பு என்பது முன்பு கூறியது போல், கண்களின் இச்சை வழியாகவே எம் மனதிற்குள் நுழைகின்றன. அதைக் கண்வழி இச்சை என்றுகூட அழைக்கலாம். ஏனென்றால் கண்கள் எதைத் தேடுகிறதோ அப்போதெல்லாம் அவற்றைப் பார்ப்பதன் மூலம் கண்கள் முதன்மையான ஊடகமாகவும், ஏனைய புலன்கள் உருவகத்தின் மூலம் அவற்றைப் பெறுவனவாகவும் இருக்கின்றன.

55. இந்த மையப்புள்ளியிலிருந்து இன்பம்சார் மற்றும் அறிவுசார் புலன் செயற்பாடுகள் போன்றவற்றை நாம் எளிதாக வகுத்தறிய முடியும். இன்பம் என்பது அழகிய, கலைநயம் மிக்க, இரம்மியமான பொருட்கள் மற்றும் சாதனங்களைப் பின்தொடர்கிறது. பார்ப்பதற்கும், கேட்பதற்கும், முகர்வதற்கும், சுவைப்பதற்கும், ஸ்பரிசிப்பதற்கும் உகந்தவற்றை நாடுகிறது. அதேநேரம், ஆர்வம் என்பது, மேற்கூறிய ஆசைகளுக்கு எதிர்மாறாக அவற்றை அனுபவித்தால் எப்படியிருக்கும் என்ற நோக்கத்தோடு பின்தொடர்கிறது. சங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் நோக்கில் அல்ல, அவற்றை நன்கு ஆராய்ந்து தெரிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாகவே இவ்வாறு பின்தொடர்கிறது. உங்கள் உடலை சிலிர்க்க வைக்கக்கூடிய ஒரு சிதிலமடைந்த சடலத்தைப் பார்ப்பதில் என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது? அதைப் பார்க்கும்போது நம் மனத்தில் ஒரு வெறுப்பு எழாதா? இருந்தபோதிலும், ஒரு மனிதன் இறந்துகிடக்கும் போது இறந்த அந்த உடலைச் சுற்றி மக்கள் கவலைதோய்ந்த முகத்தோடு இருப்பதைக் காணமுடிகிறது. இப்படியான காட்சி அவர்களது கனவிலும் தோன்றக் கூடும். யாரேனும் அவர்களை அங்குபோய்ப் பார்க்கும்படி தூண்டியது போலவும், அதில் எதோ ஒரு விடயம் ஒளிந்திருக்கிறது என்று சொல்லக் கேள்வியுற்றது போலவும் அவர்களுக்குத் தோன்றுகிறது. ஆர்வம் என்ற இந்த தீராத நோய்க்கு மருந்தாக, பல திரையரங்குகளில் வன்முறை கலந்த காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. புரிதலின் சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையின் செயற்பாடுகளைக் கற்போர் மத்தியிலும் இந்த நிலைதான் நிலவுகிறது. எனவே, இயற்கையின் இரகசிய சக்திகளை நாம் தேடுகிறோம் (இது நமக்குப் பக்கத்தில் உள்ளது என்பதை அறியாமல்). ஆனால், அதில் எந்தப் பயனும் இல்லை என்ற போதும், தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மனிதர்கள் இதைத் தேடுகிறார்கள். வக்கிரமான அறிவின் அதே முடிவில் நாம் மந்திரக் கலைகள் இருப்பதையும் பார்க்கிறோம். மதத்தில் கூட அது வெளிப்படுகிறது என்பது மிகவும் வேதனையான விடயம். எனவே, மக்கள் தன்னிடம் இருந்து அடையாளங்களையும் அற்புதங்களையும் ஆர்வத்துடன் கேட்டபோது கடவுள் சோதிக்கப்பட்டார் என்று மதம் கூடக் கூறுகிறது; இவை கடவுளைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்பட வில்லை, சோதிப்பதற்காகவே செய்யப்பட்டன.

56. கண்ணிகளும் ஆபத்துகளும் நிறைந்த இந்தப் பரந்த வனாந்தரத்தில், என் இரட்சிப்பின் கடவுளே, இதோ நீர் எனக்குக் காட்டும் அருளால், அவ்வாறான பல சோதனைகளை நான் வேரோடு அறுத்தெறிந்து என் இதயத்திலிருந்து வெளியேற்றி விட்டேன். இருப்பினும், இப்படிப்பட்டவை எங்கள் தினசரி வாழ்க்கையை சூழ்ந்துநின்றுகொண்டு தொந்தரவு செய்வதன் மூலம் எங்கள் கவனத்தை சிதறிப்போகச் செய்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில், இவை எதுவும் என் கவனத்தைக் கவராவண்ணம் அல்லது தேவையற்ற மற்றும் வீணான பிரச்சினைகளில் அகப்பட்டுக் கொள்ளாது தைரியமாகவும் உறுதியுடனும் இருக்கமுடியும் என்று எப்படிச் சொல்ல முடியும்? திரையரங்குகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் இப்போதெல்லாம் என்னில் எந்த வித குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை, அதேபோல், நட்சத்திரங்களின் போக்கை அறிந்து கொள்வதில் எனக்கு அக்கறையும் இல்லை என்பது உண்மைதான். அசுத்த ஆவிகளைக் கலந்தாலோசிப்பது மற்றும் அவற்றின் பதிலுக்காகக் காத்திருப்பதோ என் மனத்துக்குப் பிடிக்காத ஒன்றாக நான் கருதுகிறேன். அவமதிப்பைத் தரக்கூடிய சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்ற யாவற்றையும் நான் அடியோடு வெறுக்கிறேன். என் தேவனே, நான் உமக்கு மட்டும் பணிபவனாக, முற்றிலும் ஒரே மனதுடன் உமக்கு ஊழியம் செய்யக் கடமைப் பட்டிருக்கிறேன். உம்மிடமிருந்து ஒரு அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள, எனது எதிரியானவன் எத்தனை வழிகளில் என்னைத் துன்புறுத்தி நிந்தித்தான் என்பதை நீர் அறிவீர். ஆனால் எங்கள் அரசரின் பெயராலும், எங்கள் பரிசுத்த பூமியான எருசலேமின் பெயராலும், நான் கூறுவது என்னவென்றால், அப்படியான விடயங்கள் சம்பந்தமான எல்லாவிதமான ஆலோசனைகளும் என்னிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதால், அது எப்போதும் தொலைவில் இருக்கச் செய்ய வேண்டுமென நான் உம்மை இரந்து மன்றாடுகிறேன். ஒருவரின் மீட்புக்காகவும், இரட்சணியத்துக்காகவும் நான் உம்மை நோக்கி இறைஞ்சும் போது, எனது குறிக்கோள் வேறு விதமாக இருக்கிறது. நீர் விரும்பியதைச் செய்பவர், உம்மைப் பின்பற்றும் எனக்கு மனமுவந்து அருளுவீராக. இதை  உறுதிப்படுத்தும் முகமாக, யோவான் 21:22 இல், “நான் வருமளவும் இவன் இருக்க எனக்கு விருப்பம் உண்டு. அது உனக்கு அவ்வளவு முக்கியமில்லை. நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்று கர்த்தர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.

57. இருந்தபோதிலும், எமது அன்றாட வாழ்க்கையில் எத்தனை மணிநேரங்கள், எத்தனை நிமிடங்கள், எத்தனை வினாடிகள் நாம் எம் மனதில் எழும் ஆர்வக்கோளாறுகளுக்கு அடிமையாகிறோம்? எத்தனைமுறை தவறுகளுக்குள் விழுகிறோம்? எதை எவராலும் கணக்கிட முடியுமா? பல சமயங்களில் எம் அண்டையிலுள்ள மக்கள் பயனற்ற வீண் கதைகளைக் கூறும்போது, நாம் அவற்றை ஆவலுடன் கேட்க முனைகிறோம்? இப்படி நாம் கேட்பதற்கு பிரதான காரணம், அவ்வாறு பேசுபவர்களின் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதனால். இவ்வாறு நாம் கேட்டுக் கேட்டு அது எமக்கு பழக்கத்துக்கு வந்துவிட்டபின்னர், அவ்வாறான வீண்பச்சுகளைக் கேட்டு இன்புற்றிருக்காமல் இருக்க முடியாத ஒரு சூழ்நிலைக்குள் நாம் எம்மையும் அறியாமல் தள்ளப்பட்டு விடுவோம். இப்போதெல்லாம் நான் சாகச விளையாட்டுகள் நடைபெறும் அரங்குகளுக்குச் செல்வதுமில்லை, அங்கே நாயொன்று முயலொன்றைத் துரத்திச் செல்வதைக் காண்பதுமில்லை. அதேநேரம், கிராமத்து வயல் வெளியில் நான் ஏதேனும் ஒரு முக்கியமான விடயத்தைப்பற்றித் தீவிரமான யோசனையோடு செல்லும்போது, அங்கே இதேபோல ஒரு செயலை, அதாவது, நாயொன்று எதையாவது துரத்திச் செல்வதைக் காண நேரிட்டால், எனது கவனம் கொஞ்சம் சிதறுவதை நான் உணர்வேன். அப்போது நான் அமர்ந்து பயணிக்கும் முகம் அந்த நிகழ்வால் குழப்பமடையா விட்டாலும், என் மனத்தைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இவ்வாறான எனது பலவீனத்தை நீர் சுட்டிக்காட்டி, என்னை நல்வழிப்படுத்தாமல் விட்டிருப்பீரானால், நான் போகும் வழியில் நடப்பவை யாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு வீண் பிறவியாகவும், ஒரு அறிவீனனாகவுமே இருந்திருப்பேன். சில சமயங்களில் நான் வீட்டில் தனியாக உட்கார்ந்திருக்கும் போது, ​​ஈக்களை பிடிக்கும் பல்லியைக் கண்டாலோ அல்லது சிலந்தி தன் வலையில் சிக்கிக்கொண்ட இரையைப் பிடித்துண்ண விரைந்து வருவதைக் கண்டாலோ என் மனம் என்னை வதைப்பதை உணர்கிறேன். இவையெல்லாம் சிறு உயிரினங்கள் என்பதால் பிரச்சினைகளும் சிறிதாயிருக்கும் என்று அர்த்தமல்ல அல்லவா? இவ்வகையாக நான் காணும் இந்தக் காட்சிகள், ஆச்சிரியப்படத்தக்க வகையில் இவ்வுலகத்தில் வாழும் எல்லாப் படைப்புகளையும் படைத்து, அனைத்தையும் காத்து இரட்சித்து ஆண்டு நடத்தி வரும் தேவனான உம்மைப் புகழும்படி என்னைத் தூண்டுகிறது. ஆனால் இக்காட்சிகள் ஆர்வத்தின் காரணமாகவே தொடங்கியது. நான் கற்றுக்கொண்ட மிகச் சிறந்த விடயங்களில் ஒன்று என்னவென்றால், கீழே விழா நேரிட்டால் விரைவாக எழுந்திருத்தல் நன்று. அதேநேரம், மீண்டும் ஒருமுறை விழாமல் கவனமாயிருப்பது மிகவும் சிறந்தது. இதுபோன்ற விடயங்கள் கற்றுத் தந்த பாடங்களால் என் வாழ்க்கை முழுமையடைந்தது. உனது மகத்தான கருணையில் மட்டுமே நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். நம் இதயம் இதுபோன்ற விஷயங்களுக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளும் ஒரு பாத்திரமாகவும், அனாவசியமான விடயங்களின் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் ஒரு பாரிய குவளையாகவும் மாற்றம் பெறுமானால், நாம் ஒப்புக்கொடுக்கும் பிரார்த்தனைகள் அடிக்கடி குறுக்கீடுகளுக்கும் தொந்தரவுகளுக்கும் ஆளாகின்றன. அதனால் என் கவனம் சிதறுகிறது. உமது பிரசன்னத்தில், எமது குரலை உமது காதுகளை நோக்கி நாம் அனுப்பும்போது, ஒருசில அற்பமான விடயங்கள் அவற்றுக்கு குறுக்கே வந்து எனது முக்கியமான நோக்கங்களை சிதறடித்து விடுகின்றன.

அத்தியாயம் 36. மூன்றாவது வகை தான் பெருமை, இது மனிதனுக்கு மகிழ்ச்சி அளிக்கும், கடவுளுக்கு அல்ல

58. அப்படியானால், இதையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாகக் கருத முடியுமா? எங்களில் மாற்றத்தை ஏற்படுத்திய அந்த நாள் தொடக்கம், உமது கருணையைத் தவிர எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது வேறு எதுவுமில்லை. நீர் ஏற்கனவே என்னில் எந்த அளவிற்கு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளீர் என்பதை நீர் அறிவீர். நான் செய்வது தான் சரியென்றும், நான் நினைத்தது தான் நியாயம் என்றும் எண்ணி வாழ்ந்த என்னை, முதலில் குணமாக்கியவர் நீரே. அதன்மூலம் என்னில் எஞ்சியிருக்கும் எல்லா அக்கிரமங்களையும் மன்னித்து, எனது நோய்கள் எல்லாவற்றையும் குணமாக்கி, என் வாழ்க்கையைத் தீமையில் இருந்து மீட்டு, அன்பான இரக்கத்தினாலும் கனிவான தயாளத்தினாலும் என்னை உயர்த்தி எனது ஏக்கங்களை நன்மைகளால் நிறைவு காணச் செய்துள்ளீர். உம்மீது கொண்ட பயபக்தி காரணமாக, என் பெருமையை அடக்கி, என் கழுத்தை உமது நுகத்தடிக்கு அணிந்துகொள்ள ஏற்றவாறு செய்தீர். இந்த இடத்தில், “நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வேலை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது” என்று மத்தேயு 11:30 இல் கர்த்தரான இயேசு கூறியது பற்றி மேற்கோள் காட்டப்பட்டு இருப்பதைக் கவனிக்கவும். ஆகவே இப்போது நான் அந்த நுகத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று சுமக்கிறேன். ஏனெனில் நீர் வாக்களித்தது போலவே, அது எனக்கு எவ்வித பளுவையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், என் தேவனே, பெருமையும் ஆணவமும் அற்ற ஆட்சியாளர் நீர் ஒருவர் மட்டுமே, ஏனென்றால் நீரே உண்மையான தேவன், உமக்கு மேலாகவோ, அல்லது உமக்கு ஈடிணையாகவோ வேறு எந்தக் கடவுளும் இல்லை – ஆகவே, இந்த மூன்றாவது வகையான சோதனை என்னை விட்டுப் போய்விட்டதா அல்லது இந்த வாழ்க்கை நிறைவுறும் வரை என்னை வருத்தியபடியே இருக்குமா?

59. மகிழ்ச்சி இல்லாத ஒரு மகிழ்ச்சியை நான் அனுபவிப்பதைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லாமல், மனிதர்கள் என்னைக்கண்டு பயப்படுவதற்கும் அல்லது நேசிக்கப்படுவதற்கும் ஆசைப்படுவது ஒரு துன்பகரமான வாழ்க்கை, மற்றும் ஒரு முறையற்ற ஆடம்பரம். ஏனென்றால் அவை அதிகாரத்தினால் ஒருவனுக்கு கிடைக்கும் பெருமைகள். ஆகவே இந்தப் பெருமை அருவறுக்கத்தக்கது. இதன் காரணமாகத்தான், பயபக்தியுடன் உம்மை ஏற்றுக்கொண்டு உம்மீது அன்பு செலுத்த என்னால் முடியாமற் போனது. ஆதலால் நீர் பெருமையுள்ளவர்களை எதிர்த்து நிற்கிறீர், தாழ்மையானவர்களுக்கு கிருபை அளிக்கிறீர். இதை யாக்கோபு 4:6 வாயிலாக எமக்கு எடுத்துரைத்திருக்கிறார். அத்தோடு, நீர் இவ்வுலகின் மீது பேருவகை கொண்டும், ஆடம்பரத்தோடும் வாழ்வோர் மீது பேரிடியாய் இறங்குவது மட்டுமல்லாமல், குன்றுகளின் அடிவாரங்களை அதிரச் செய்கிறீர். இப்போது மனித சமுதாயத்தில் இருக்கும் சில உயர் பிரிவுகள், மனிதர்கள் தங்களைக்கண்டு நேசிக்க வேண்டும் என்றும் பயம் கொள்ளவேண்டும் எனவும் அது மிக்க அவசியம் என்றும் கருதுகிறார்கள். ஒரு பொதுவான கருத்தாகும். இந்த நேரத்தில், எமது உண்மையான ஆசீர்வாதத்தின் எதிரியானவன் எம்மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகித்து, எல்லா இடங்களிலும் தனது கண்ணிகளை விரித்து, ‘நன்றாக செய்தாய், இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்று கூறி அதன்மூலம் ஒரு குரூர இன்பத்தைப் பெறுகிறார். இத்தகைய போலி அங்கீகாரத்தில் மயங்கி அதனால் பெருமை கொள்ளும்போது, நாங்கள் எம்மையறியாமலேயே அந்தக் கண்ணிகளுக்குள் அகப்பட்டு விடுகிறோம். உமது சத்தியத்திலிருந்து எங்கள் மகிழ்ச்சியைத் துண்டித்து, அதை மனிதர்களின் வஞ்சகங்களுக்குள் செருகி விடுகிறோம். உமக்காக அல்லாமல், உமக்குப் பதிலாக நேசிக்கப்படுவதையும் பயப்படுவதையும் விரும்புகிறோம். இதன் மூலம், எதிரி நம்மை அவனைப் போல் மாற்றி, அவனுக்கேற்றவாறு எம்மை ஆட்டிப் படைக்கிறான். அவனுடைய தண்டனையில் எம்மையும் பங்காளர்களாக ஆகிவிடுகிறான். தன்னை வடக்குத்திசையின் சிம்மாசனத்தில் அமர்த்திக் கொள்ளும் அவன் [காண்க: ஏசாயா 14:13-14 ] இருளிலும் குளிரிலும் அவனுக்கு சேவைசெய்ய வேண்டுமென விரும்புகிறான். அவன் தான் ஒரு விபரீதமான நிலையில் இருந்துகொண்டு, உம்மைப்போல் இருக்க வேண்டுமென எண்ணுகிறான். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, லூக்கா 12:32 இல் “சிறு குழுவினரே, பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தந்தை (தேவன்) உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுக்க விரும்புகிறார்” என்று கூறுகிறது. நீர் எங்களை ஆட்கொண்டு, உமது சிறகுகளை எங்கள் மேல் விரித்து, நாங்கள் அவற்றின் கீழ் அடைக்கலம் புகும்படி செய்தருளும். நீரே எங்கள் மகிமையாக இருப்பீராக; உமது நிமித்தம் நாங்கள் நேசிக்கப்படுவோம், உமது வார்த்தை எங்களில் பயபக்தியை ஏற்படுத்தட்டும். நீர் குறைகூறும்போது மனிதர்களால் பாராட்டைப் பெற விரும்புபவர்கள், உமது தீர்ப்பின் போது மனிதர்களால் பாதுகாக்கப்பட முடியாதவர்களாக இருப்பர். நீர் அவர்களைக் கண்டிக்கும்போது அவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட மாட்டாது. பாவம் செய்தவன் தனது தீய நாட்டங்களால் பெருமை கொள்கின்றான். அதேநேரம், நீர் ஒருவனுக்கு கொடுத்த கொடைகளின் நிமித்தம் மக்கள் அவனைப் புகழ்வது நியாயமானது. அப்படியில்லாமல், அவன் பெற்றுக்கொண்ட கொடைக்காக அவன் மீது புகழும் கௌரவமும் திணிக்கப்பட்டால், அதுவே அவனுடைய வீழ்ச்சிக்கு வித்தாகி விடுகிறது. முந்தையது தேவன் அளித்த கொடையை நடுநிலையாகக் கொண்டும், பின்னையது கொடைகளை பெற்றுக்கொண்ட மனிதனை நடுநிலையாகக் கொண்டும் நடக்கிறது.

அத்தியாயம் 37. புகழ்ச்சி மீதுள்ள பற்றுதலால் அவர் தூண்டப்படுகிறார்

60. ஆண்டவரே, இந்த சோதனைகளால் நாம் தினமும் சூழப்பட்டிருக்கிறோம், ஆம், இடைவிடாமல் சோதிக்கப்படுகிறோம். அவற்றுக்கு காரணம் தீச்சுவாலையாய்ச் சீரும் மனிதனின் நாக்குகள். இந்த சூழ்நிலையிலும் நீர் எங்களுக்குக் கற்புடைமையைக் கட்டளையிட்டுள்ளீர். நீர் விரும்பிக் கட்டளை இட்டதையே எமக்கு அருளும். இதன் காரணமாக, என் இதயத்தின் முணுமுணுப்புகளையும், என் கண்களில் இருந்து ஆறாய்ப் பெருக்கெடுத்தோடும் கண்ணீரையும் நீர் அறிந்திருக்கிறீர். [காண்க: புலம்பல் 3:48 . இதில் “எனது கண்களில் இருந்து கண்ணீர் ஓடை பாய்கின்றது!” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளை நோயிலிருந்து நான் எந்தளவுக்கு விடுதலை பெற்றிருக்கிறேன் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய இரகசிய பாவங்களையிட்டு நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன். அப்பாவங்கள் என் கண்களுக்கு அல்ல, உமது கண்களுக்கே வெளிச்சம். மற்ற வகையான சோதனைகளின் போது, நானே என் மனதை சோதித்தறியக்கூடிய ஒருவித வலிமை எனக்குள் இருந்தது. ஆனால் இதில் என்னால் அவ்வாறு எதையும் செய்ய முடியவில்லை. உடல்சார் இன்பங்கள் மற்றும் செயலற்ற ஆர்வத்தைப் பொறுத்தவரை, நான் எந்த அளவுக்கு என் மனதை உடல்சார் இச்சைகளிலிருந்து தள்ளி வைத்திருக்கிறேன் என்பதையும், ஒரு சாமானியனாய் அறிவைக் குறித்த தேடலில் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறேன் என்பதை காண்பது மிகவும் இலகுவான விடயம். எனினும், எனது சுய விருப்பம் அல்லது அவை என் கைகளுக்கு எட்டுவதில்லை என்ற கட்டாயம் காரணமாகவோ நான் அவற்றில் என்னை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. அவ்வாறான இன்பங்கள் இல்லாதிருப்பதால் நான் சோர்வாகவோ, கோபத்துடன் அல்லது வெறுப்புடன் இருக்கின்றேனா என்று நான் என்னிடமே கேட்கவேண்டும் போலிருக்கிறது. இந்த மூன்று இச்சைகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையோ அல்லது முழுவதையோ பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே பணபலம் உண்மையிலேயே அவசியமாகிறது. மனம் என்பது செல்வச் செழிப்பை எந்த அளவுக்கு எடைபோடுகிறது என்பதனை அது எவ்வளவு தூரம் எமக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதனை வைத்து அனுமானித்துவிட முடியும். புகழ்ச்சியைப் புறந்தள்ளி எப்படி நாம் எம் வாழ்க்கையைக் கொண்டு செல்வது? நம்மை அறிந்தவர்கள் அனைவரும் நம்மை வெறுக்கும் அளவுக்கு, நாம் நோயுற்றவர்களாகவும், மிகவும் கொடியவர்களாகவும் வாழ வேண்டுமா? இதைக்காட்டிலும் மடத்தனமான விதத்தில் பரிந்துரைக்கவோ அதுபற்றி நினைக்கவோ முடியாது. புகழ்ச்சி ஒன்றே நம் நல்வாழ்வு மற்றும் நற்கிரியைகளின் சகா என்றால், அந்தப் புகழ்ச்சியையோ நல்வாழ்வையோ விட்டொதுங்கி விடவேண்டும் என்ற அவசியமில்லை. இதேநேரம், புகழ்ச்சி இல்லாத வாழ்வை வாழ்வதில் நான் திருப்தி அடைவேனா அல்லது சிரமத்துக்கு உள்ளாவேனா என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை.

61. என் தேவனே, அப்படியானால், இப்படிப்பட்ட சோதனைகள் குறித்து நான் உம்மிடம் எவ்வாறு முறையிடுவேன்? நான் புகழ்ச்சிக்கு அடிமையானவன் அல்ல என்று போலியாக வாதம் செய்ய விரும்புவதில்லை. ஆனால் ஏதேனும் ஒன்றைப்பற்றி புகழாரம் சூட்டுவதைவிட, ஒன்றைப் பற்றிய உண்மையை ஒப்புதல் செய்வதையே மேன்மையாக எண்ணுகிறேன். எல்லா விஷயங்களிலும் நான் மூடனாகவும், அறிவீனனாகவும் இருப்பதால் இந்த உலகம் என்னை புகழவேண்டும் என்று நான் நினைக்க முடியுமா? அதேநேரம் நான் எல்லா விடயங்களிலும், விசேடமாக உண்மையில் உறுதியாக இருக்கும்போது, இந்த உலகம் என்னை இகழ்ச்சியுடன் நோக்குவதை என்னால் அனுமதிக்க முடியுமா? ஆகவே நான் இதில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். என்னில் இருக்கும் நற்கிரியைகள் காரணமாக எனக்கு கிடைக்கும் நன்மைகளுக்கு மற்றையோர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. இப்படி நான் சொல்லும் அதேநேரம், புகழ்ச்சி எனது மகிழ்ச்சியை அதிகரிக்கும் அதேவேளை, விமர்சனங்கள் அதைக் குறைக்கிறது என்பதை சந்தேகமின்றி ஏற்றுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையின் அறிகுறிகள் என் மனதுக்குள் துன்பத்தை ஏற்படுத்தும்போது, எனது சுய மதிப்பீட்டை எதோ ஒரு நிச்சயமற்ற தன்மை சூழ்ந்துகொள்கிறது. அதை நீர் நன்கு அறிவீர். என் தேவனே, அந்த நிலை எனது மனஉறுதியை சிதைத்துவிடும் போலிருக்கிறது. நீர் கற்புடைமையை பற்றி மட்டும் எங்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை. சில முக்கியமான தருணங்களில் – அன்பை அல்லது எம் விருப்பத் தெரிவுகளை சற்று விலக்கிவைத்துவிட்டு – நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளீர். எங்கள் அன்பு என்பது நீதியை நோக்கியதாகவே இருத்தல் வேண்டும். அதாவது, நாங்கள் உம்மை மட்டுமல்ல, எமது அயலவரையும் நேசிப்பதையே நீர் விரும்புகிறீர். புத்திசாலித்தனம் கொண்ட ஒருவர் என்னைப் புகழ்ந்து பேசும் போது, நான் அடையும் மகிழ்ச்சி அவரது வார்த்தைகளில் இருந்து வருகிறது. அதேநேரம், அவர் என்னிடம் புரிந்து கொள்ளாததையோ அல்லது நல்லதையோ பற்றி அவர் இழிவுபடுத்துவதை நான் கேட்கும்போது அவருக்குள் இருக்கும் தவறான நோக்கங்களையிட்டு மனம் வருந்துகிறேன். நான் சில சமயங்களில் என்னுள் இருக்கும் தற்புகழ்ச்சி குறித்து நான் வருத்தப்படுகிறேன். அப்படியில்லாவிட்டால், என்னில் நான் விரும்பாத விஷயங்கள் குறித்து தெரிந்திருந்தும் என்னைப் பாராட்டும்போது அல்லது, என்னில் இல்லாத நற்குணம் பற்றி மிகைப்படுத்தி வீண் புகழ்ச்சிக்கு என்னை ஆளாக்கும் போது, அது என்னுள் ஒரு வெறுப்பை ஏற்படுத்துகிறது. என் மீது புகழ்ச்சியை அடுக்கிக்கொண்டு போகிற ஒருவர், நான் கொண்டிருப்பதைவிட மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பாரானால், அதிலும் எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால், அவருக்கு இவ்வாறு புகழ்வதால் என்ன பயன் விளையப்போகிறது என்பது பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அப்போது, எனக்குப் பிடித்தமான நற்குணம், மற்றையோருக்கும் பிடிக்கும் என்றால், அது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. என்னைப் பற்றிய எனது சொந்த அபிப்பிராயம் பிறரால் ஏற்றுக்கொள்ளப்படாதவிடத்து, அல்லது எனக்குப் பிடிக்காத எனது சொந்த இயல்பு பிறரால் புகழப்படும்போது, அல்லது கொஞ்சமேனும் என்னில் பிடிப்பை ஏற்படுத்துகின்ற ஒன்று மிகைப்படுத்தப்பட்டு பாராட்டப்படும்போது, அங்கே நாம் காண்பது புகழ்ச்சி அல்ல. ஆகவே, இந்த விடயங்களை பொறுத்தவரையில், நான் ஒரு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன்.

62. உண்மையின் ஒளியாக இருப்பவரே, என்னை எவரேனும் புகழ்வாரெனில், அது எனக்காக என்று இல்லாமல், பிறரின் நலனுக்காக என்றே இருத்தல் வேண்டும். இதுதான் எனது உண்மையான நிலையா என்பதை நானறியேன். இதிலே நான் உம்மைபற்றி அறிந்துகொண்டதைவிட, என்னைப்பற்றிக் குறைவாகவே அறிந்துகொண்டுள்ளேன். என் தேவனே, என்னில் நான் பலவீனமாக இருப்பதை, எனக்காக செபிக்க வேண்டிய என் சகோதரர்களிடம் நான் ஒப்புக்கொள்ளும்படி, என்னை எனக்கு வெளிப்படுத்தும்படி இப்போது உம்மை இரந்து மன்றாடுகிறேன். மீண்டும் ஒருமுறை நான் எனது மனசாட்சியை கவனமாகப் பரிசீலிக்கிறேன். ஒருவர் என்னைப் புகழும்போது, எனக்கு இனிப்பாக இருக்கின்ற ஒன்று, எனது அயலவரைக் காயப்படுத்துகிறது என்றால், என் அயலவர் ஒருவர் காரணமின்றிக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பாரேயானால், அது ஏன் எனக்கு எவ்வித நிந்தைகளையும் ஏற்படுத்துவதில்லை? எனக்கு எதிராக ஒருவர் குற்றம் சாட்டும்போது மட்டும் – அது நீதியாகவோ அல்லது அநீதியாகவோ இருக்கலாம் – ஏன் என்னை நிந்திக்கிறது? அல்லது இதைப்பற்றி நான் அறியாதவனாக இருக்கிறேனா? அல்லது, “முக்கியத்துவம் இல்லாத ஒருவன் தன்னைப் பெரிதும் முக்கியத்துவம் கொண்டவனாக நினைத்துக்கொள்வானேயானால், அது தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்ளும் காரியமாகும்” என்ற கலாத்தியர் 6:3 கற்பிக்கும் வாசகங்களுக்கிணங்க, நான் என்னையே ஏமாற்றிக்கொண்டு உம்மையும் ஏமாற்றுகிறேனா? 1 யோவான் 1:8 வாசகங்களில் சொல்லப்பட்டிருப்பதுபோல, “நமக்குப் பாவமில்லையென்று நாம் கூறினால் நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்வதோடு, நம்மில் உண்மையும் இருக்காது” என்பதற்கு விரோதமாக நான் என் மனதாலும், நாவாலும் உண்மையைச் சொல்லாதிருக்கிறேனா? என் தேவனே, இந்த அறியாமையிலிருந்து என்னைத் தூர விலகியிருக்கச் செய்யும். இல்லாவிட்டால், எனது வார்த்தைகள் தீயோரின் தலையில் பூசப்பட்ட எண்ணெயாய் மாறி, எனக்குத் தலை வீக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அத்தியாயம் 38 – வீண்-புகழ் மேலான ஆபத்தைக் கொண்டுவரும்

63. நான் எளியவனாகவும் வறியவனாகவும் இருக்கிறேன், ஆயினும், எனது தவறுகள் திருத்தப்பட்டு எனது மனம் மீண்டும் சமாதானத்தைப் பெறும் வரையிலும், என்னை நொந்தபடி, உமது இரக்கத்தை இறைஞ்சுவதில் களிகூருகிறேன். ஆனவக் கண்களோடு பார்க்கும் எவருக்கும் இந்த சமாதானம் புலப்படுவதில்லை. இருப்பினும், வாயில் இருந்து வெளிவரும் வார்த்தையும், மனிதர்களுக்குத் தெரியவரும் எனது செயல்களும், புகழ்ச்சியை விரும்புவதால், அது ஆபத்தான சோதனைக்கு வழி சமைக்கிறது. இது தனக்குத் தானே ஒரு உன்னதமான உணர்வை ஏற்படுத்துகின்ற நிலையைத் தோற்றுவிக்கிறது. இதை நான் வெறுக்கும் காரணத்தால், அது எனக்கு சோதனையைத் தருவதாகவே அமைகிறது. பல சமயங்களில், அளவுக்கதிகமாக வீண் புகழ்ச்சியை வெறுக்கும்போது, அதுவே வீண் புகழ்ச்சிக்கான அடித்தளமாக மாறிவிடுகிறது. ஒருவர் தன்மீது கொண்டிருக்கும் இகழ்ச்சியை பெருமையான விடயமாகக் கருதுவாராகில், அவருக்கு அதன் மேல் எப்படித்தான் வெறுப்பு ஏற்படும்?

அத்தியாயம் 39 – தங்களை மகிழ்விக்கும் தீமைகள், கடவுளை மகிழ்விப்பதில்லை

64. இந்த வகையான சோதனைகளுக்குள் மற்றுமொரு தீமை இருப்பதைக் காணக்கூடியதாயிருக்கிறது. அதுவும் அந்த சோதனைகளிலிருந்து தான் உதயமாகிறது. இதன் மூலம் தங்களைத் தாங்களே மகிழ்விப்பவர்கள் வெறுமையாகிறார்கள், இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியடையவோ அதிருப்தி அடையவோ இல்லை அல்லது மற்றவர்களை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்டவர்களும் இல்லை. ஆனால் அவர்களது இயல்புகளால் பிறரைக் கோபப்படுத்துவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதேநேரம், தங்களைத் தாங்களே மகிழ்ச்சிகொள்ள வைப்பதன் மூலம், அவர்கள் உம்மை மிகவும் அதிருப்திக்கு உள்ளாக்குகிறார்கள். ஏனெனில், தீமை நிறைந்தவற்றையும் நன்மை தரக்கூடியது என்று எண்ணுகிறார்கள். இல்லாவிடில், தங்களுக்கு கிடைக்கும் நன்மைகளுக்குத் தாங்களே காரணமாக இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு கிடைத்த நன்மைகள் யாவும் உமது திருவருளால் கிடைத்த வரப்பிரசாதங்கள் தான் என்று எண்ணத் தவறி விடுவதோடு, அந்த வரப்பிரசாதங்கள் தங்களது நற்கிரியைகள் நிமித்தம் கிடைத்தவை என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு நினைத்தபடியால், அவர்களுக்கு கிடைத்த கொடையைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளாமல், வன்மத்துடன் நடந்துகொள்கிறார்கள். இப்படியான சோதனைகள், ஆபத்துக்கள், பொல்லாப்புக்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில், என் மனம் அச்சத்துடன் காத்திருக்கிறது. நான் அனுபவித்துக்கொண்டிருக்கும் வலிகளுக்கு நிவாரணமே இல்லை, அப்படியிருந்தும், மேலும் என் காயங்கள் என்னால் ஏற்படாததை விட உமது கிருபையால் குணப்படுத்தப்படுவதை நான் உணர்கிறேன்.

அத்தியாயம் 40 – கடவுளுக்குள் இருப்பதுதான் ஆன்ம இளைப்பாற்றிக்கு பாதுகாப்பு

65. சத்தியத்தின் இறைவா, நான் எனது இக்கட்டான நிலையில் உமது திருப்பாதம் பணிந்து உமது ஆலோசனை மற்றும் வழிநடத்தலைக் கேட்டு இறைஞ்சியபோது, ​​எதைத் தவிர்க்க வேண்டும், எதை விரும்ப வேண்டும் என்று எனக்குக் கற்பித்தீர் அல்லவா? எனது உடலின் வெளிப்புற புலன்களால் என்னால் முடிந்தவரை உலகத்தைப் பார்த்தேன், என் உடல் என்னிடமிருந்தும் என் புலன்களிலிருந்தும் பெற்ற வாழ்க்கையைப் பார்த்தேன். அங்கிருந்து நான் என் நினைவின் விளிம்புகள் வழியாக உள்நோக்கி அடியெடுத்து முன்னே சென்றேன். அங்கே பன்மடங்கு செல்வத்தால் ஆச்சரியப்படத்தக்க வகையில் நிறைந்திருக்கும் பலநூறு அறைகளை நான் கண்டேன். அவற்றைப் பார்த்தவுடன் அச்சம் என்னைத் தொற்றிக் கொண்டதையும் அறிந்தேன். உம்மோடு பயணித்தால் அன்றி, இவற்றுள் எதையும் என்னால் தெரிவுசெய்திருக்க இயலாது. ஆனால் அவைகள் மத்தியில் நீர் இல்லை என்பதுதான் உண்மை. இந்த விடயங்களைக் கண்டுபிடித்தவன் நான் என்ற பெருமையும் எனக்குரியதல்ல. நான் அவை அனைத்தையும் கடந்து சென்று, எல்லாவற்றையும் அவற்றின் தராதரத்துக்கேற்ப வேறுபடுத்தி மதிப்பீடு செய்ய முயற்சித்தேன். அத்தோடு, என் புலன்கள் வழியாக நான் அறிந்தவற்றையும் கொண்டு ஆராய்ந்ததில் மேலும் சிலவற்றைக் கண்டேன். சில என் நினைவுகளில் இருந்தவையோடு ஒத்திருந்தன. பின்பு, என் நினைவின் பரந்த சேமிப்புக் களஞ்சியத்தில் காணப்பட்ட சில விஷயங்களை மறைத்தும், சிலவற்றை வெளியே எடுத்து வந்தும் ஆராய்ந்தேன். நான் இதைச் செய்தபோது நானாகவும் இருக்கவில்லை (அதாவது, நான் அதைச் செய்வதற்கு எனக்குக் கிடைத்த ஆற்றல்), அதேநேரம், அது நீரும் இல்லை. ஏனென்றால் நீர் ஒருவர் மட்டுமே நீடித்து நிலைத்திருக்கும் தெய்வீக ஒளி. அந்த ஒளியின் துணைகொண்டே நான் இவை யாவற்றையும் தேடி எடுத்து, அலசி ஆராய்ந்து பார்த்து, இவை எல்லாம் இருக்கின்றனவா, அப்படியானால், அவற்றின் நிலை என்ன, அவற்றின் பெறுமதி என்ன போன்ற யாவற்றையும் கண்டறிந்தேன். நீர் எனக்குக் கற்பித்ததையும் கட்டளையிடுவதையும் நான் செவிமடுத்தேன். இதை நான் அடிக்கடி செய்கிறேன், இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கடமைகளில் இருந்து ஓய்வு பெறும் வரை, இந்த மனநிறைவை நான் மிகவும் உயர்வாகக் கருதுகிறேன். எனது எதிர்கால ஆராய்ச்சிகளில் உம்மைக் கலந்தாலோசிக்கும் போது, என் ஆன்மாவுக்கு பாதுகாப்பான இடம் ஒன்று இருப்பதைக் காண்கிறேன். அதை நான் வேறெங்கும் காணேன். சிதறுண்ட எனது நோக்கங்கள் உம்மில் ஒன்று கூடக்கூடும். எனக்குள் இருக்கும் எதுவும் உம்மை விட்டு விலகாது. சிலவேளைகளில், விவரிக்க முடியாத உணர்வின் ஆழத்துக்குள் எம்மை இட்டுச் செல்கிறீர். அங்கே வித்தியாசம் நிறைந்த, விவரிக்கும் நிலைக்கு அப்பால் இருக்கக்கூடிய ஒரு உணர்வை நான் உணர்கிறேன். அது என்னில் பூரணமாக இருக்க வேண்டும் என்றால், இந்த உலகில் நான் அனுபவிக்கக் கூடிய அனைத்தையும் கடந்ததாக அது இருக்கும். ஆனாலும் என்னுடைய இந்த மோசமான பாவச் சுமைகள் காரணமாக நான் மீண்டும் மீண்டும் இந்த குழிக்குள் விழுந்து விடுகிறேன். [காண்க எபிரேயர் 12 : 1] இல் “நம்மைத் தடுத்து நிறுத்துகிற எதையும் நமது வாழ்விலிருந்து தூக்கி எறிய வேண்டும். நம்மைப் பற்றுகிற பாவங்களையும் விலக்கிவிட வேண்டும்” என்று அறிவுறுத்தப் பட்டதை நினைவுகூர வேண்டும். அப்படியும் நான் எனது சொந்த பழக்கவழக்கங்களில் ஊறிப்போயிருந்த படியால், அவற்றால் நான் பிணைக்கப்படுகிறேன். அவற்றின் பிடியில் சிக்கித் தவிக்கிறேன். என்னதான் அழுது அரற்றினாலும் என்னால் அந்தப் பிடியில் இருந்து மீள முடியவில்லை. அந்த அளவுக்கு பழக்கத்தின் சுமை நம்மை அழுத்துகிறது. இதை வெல்லக்கூடிய திறன் என்னில் இருக்கின்ற போதிலும், அதைச் செய்வதற்கான அவா என்னில் இல்லை. எனவே, இந்த இரண்டு வழிகளில் பார்த்தாலும், நான் பரிதாபத்துக்குரிய ஒருவனாகவே இருக்கிறேன்.

அத்தியாயம் 41 – தனது மும்முனை ஆசையை வென்றதால், அவர் இரட்சணியத்தை அடைகிறார்

66. அந்த மும்முனை இச்சை காரணமாக நான் செய்த பாவங்களின் தன்மையை எண்ணி உமது வலது கரத்தை என் உதவிக்கு அழைத்து என்னைக் காப்பாற்றும்படி இறைஞ்சினேன். காயப்பட்ட என் இதயத்தின் வாயிலாக உம்மில் இருந்து வந்த பிரகாசத்தைக் கண்டேன். பின்பு, வெளியேற்றப்பட்ட நான், இனிமேல் அதை எப்படி அடைய முடியும் என்று எண்ணி வருந்தினேன். சத்தியத்தின் உறைவிடமாகிய நீரே அனைத்துக்கும் வல்லவர். ஆனால் நான், பேராசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும், அதேநேரம், உம்மையும் இழக்க விரும்பவில்லை. ஒரு கையில் பொய்யையும் மறு கையில் உம்மையும் பிடித்துக் கொண்டிருக்க முனைந்தேன். இதன் விளைவாக நான் உம்மை இழந்தேன், ஏனென்றால் நீர் பொய்யில் மகிழ்ச்சியடைவதில்லை என்பதால்.

அத்தியாயம் 42 – பலர் மத்தியஸ்தரை நாடிய விதம் இதுதான்

67. உம்முடன் என்னை சமரசம் செய்து வைப்பதற்கு நான் இவரது உதவியை நாட வேண்டும்? நான் தேவதூதர்கள் உதவியைப்பெற முடியுமா? அல்லது எந்த வகையான பிரார்த்தனை மூலம் இதை நான் தேடுவேன்? என்ன வகையான திருவிருந்து சடங்குகள் மூலம் நான் இதைக் கண்டடையலாம்? பலர் உம்மிடம் திரும்பிவர முயற்சி செய்தார்கள் என்றும், ஆனால் அவர்களால் அது கைகூடவில்லை என்றும் நான் அறிந்தேன். அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் வெறும் ஆர்வத்தையே ஏற்படுத்திய கற்பனைகள். அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. ஏனெனில், அவர்கள் தாங்கள் கற்றோர் என்ற பெருமையோடு உம்மைத் தேடுகிறோம் என்று பெரிதாக மார்தட்டிக்கொண்டு தங்களைத் தாங்களே முன்னோக்கி நகர்த்துகிறார்கள். தங்கள் இதயத்தின் எழுச்சி காரணமாக, ஆகாயத்தின் ஆட்சித் தலைவனையும் அவனது சிநேகிதர்கள், சதிகாரர்கள் போன்ற பலரையும் தங்களோடு பெருமையுடன் இணைத்துக் கொண்டார்கள். [காண்க: பூமியில் தீய சக்திகளின் ஆள்வோர்களைப் பின்பற்றினீர்கள் எபேசியர் 2:2 ]. ஆனால் அவனோ, தனது மந்திர தந்திர வித்தைகளால் அவர்களை வஞ்சித்தான். பின்னர் தங்களைத் தூய்மைப் படுத்தக்கூடிய ஒரு நடுநிலையாளரைத் தேடினர். ஆனால் அவரும் உண்மைக்குப் புறம்பாகவே செயற்படுவதை அறிந்தனர். ஏனெனில், “தேவனுடைய தூதுவன் போல சாத்தான் மக்களை ஏமாற்றி தன்னை தேவனிடமிருந்து வந்ததாக எண்ணச் செய்தான்” [காண்க: 2 கொரிந்தியர் 11:14 ]. சாத்தானுக்கு சரீரத்தினாலான உருவம் இல்லாதபடியால், சரீரத்தைக் கவர்ந்திழுக்கும் வல்லமையைக் கொண்டிருந்தான். ஏனெனில் அவர்கள் மரணத்திற்கும் பாவத்துக்கும் உட்படக்கூடியவர்களாகவும் இருந்தனர். ஆனால் ஆண்டவரே, அவர்கள் உம்முடன் மட்டுமே சமரசம் செய்துகொள்வதில் பிடிவாதமாக இருந்தனர். ஏனென்றால் நீர் அழியாதவர், பாவங்களுக்கு அப்பாற்பட்டவர். ஏனென்றால் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள ஒரு மத்தியஸ்தருக்கு கடவுள் போன்ற சில குணங்களும் மனிதனைப் போன்ற குணங்களும் இருக்க வேண்டும். அப்படியில்லாமல், இணைப்பாளர் என்பவர் மனிதனுக்குரிய குணாதிசயங்களை மட்டுமே கொண்டிருப்பாரானால், அவர் கடவுளிடமிருந்து அந்நியமாகி விடுவார். அதேநேரம், அவர் இந்த இரண்டு விதத்திலும் கடவுளைப் பிரதிபலிப்பவராக இருப்பாரானால், மனிதரிடமிருந்து அந்நியமாகி விடுவார். அப்படியானால், இவரால் இணைப்பாளராக மத்தியஸ்தம் வகிக்க முடியாது. எம்மாற்றக்கூடிய ஒரு இணைப்பாளர் ஒரு எதிரியாவான். அவன் கடவுளைப் பிரிதிநிதித்துவம் செய்வது போலத் தோற்றமளிக்கிறான். அவனுக்கு மனிதனைப்போல் உருவம் இல்லாதபடியால், தானும் இறப்பில்லாதவன் என்று பெருமை கொள்கிறான். ஆனால் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால், [காண்க: உரோமர் 6:23 ] மனிதர்களோடு பொதுவில் உலாவும் அவன் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டும்.

அத்தியாயம் 43 – இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் கடவுளாகவும் மனிதராகவும் இருக்கிறார், ஆகவே உண்மையான, மிகவும் திறமையான மத்தியஸ்தர் அவரே

68. உண்மையான மத்தியஸ்தரை உமது இரக்கத்தின் உதவியால் நீர் மனித குலத்துக்கு வெளிப்படுத்தினீர். அவரது முன்மாதிரியைக்கொண்டு மானிடராகிய யாவரும் தாழ்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்று நீர் விரும்பினீர். அவர் தான் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் மத்தியஸ்தர். அவரே இயேசுக் கிறீஸ்து [காண்க: “மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது” 1 தீமோத்தேயு 2 :5 ] மரணத்துக்கு ஆளாகக்கூடிய பாவிகளின் மத்தியில், என்றும் இறவாத் தன்மை கொண்ட உன்னதராய்த் தோன்றினார். ஒரு மனிதராய் மரணத்தில் இயல்பையும், ஒரு கடவுளாய், கடவுளுக்குரிய உன்னதத் தன்மையையும் கொண்டிருந்தார். நேர்மை தரும் வெகுமதியானது, நிலையான வாழ்வையும் சமாதானத்தையும் தரும் என்பதற்கிணங்க, தேவனோடு இணைந்து தனது நேர்மையால் நியாயப்படுத்தப்பட்ட பாவிகளின் மரணத்தை நிர்மூலமாக்கினார். அப்படியான ஒரு மரணத்தில் அவரும் பங்கேற்றார். அவர் எதிர்காலத்தில் அனுபவிக்கவேண்டிய பாடுகளை அறிந்தவராய், முக்காலத்தில் வாழ்ந்த புனிதர்களுக்கும் அவர் தன்னை வெளிப்படுத்தினார். இதன் மூலம் நாம் அறிந்துகொள்வது என்னவென்றால், அவர் கடந்தகாலத்தில் அனுபவித்த பாடுகளால் இன்று நாங்கள் மீட்பை அடைந்துள்ளோம். ஆகவே ஒரு மனிதனாக அவர் மத்தியஸ்தம் வகிக்கிறார். ஆனால் வார்த்தையாக அவர் நடுவில் இல்லை. ஏனென்றால் கடவுளுக்கு சமமானவர், கடவுளுடன் கடவுளாக இருப்பவர், பரிசுத்த ஆவியுடன் ஒரே பொருளாக இருக்கிறார்.

69. உமது ஒரே குமாரன் என்றும் பாராமல், அவரைப் பாவிகளாகிய எங்கள் பாவங்களின் நிமித்தம் அர்ப்பணித்ததன் மூலம் எங்கள் மீது உமது அன்பை வெளிப்படுத்தினீர். [காண்க: “தேவன் நமக்காகத் தனது சொந்தக் குமாரனையும் துன்பத்துக்குட்படுத்தினார். நமக்காகவே தன் குமாரனை தேவன் அர்ப்பணித்தார்” உரோமர் 8:32 ]. காண்க: “அவர் தேவனுக்கு நிகரானவராயிருந்தார். ஆனால் தேவனுக்குச் சமமாக இருப்பதை கொள்ளையில் கிடைத்த அரிய பொருளாக அவர் நினைத்ததில்லை” பிலிப்பியர் 2:6 . மற்றும் “மனிதனாக அவர் வாழும்போது தேவனுக்கு முன்பு கீழ்ப்படிந்தவராக இருந்தார். மரணம் வரைக்கும் அவர் பணிவுள்ளவராக இருந்தார். முடிவில் சிலுவையிலே மரித்தார்” பிலிப்பியர் 2:8 . இப்படிப்பட்டவரே கர்த்தர். அவர் வழியாகவே நீர் உமது அன்பை எமக்கு வெளிப்படுத்தினீர். அவர் ஒருவர் மட்டுமே மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தவர், அவர் மரணத்தை வென்றவர். அந்த மரணத்தை மனமுவந்து குடுக்கும் அதிகாரமும் அவருக்கு இருந்தது. [காண்க: “நானே என் ஜீவனைத் தாராளமாகக் கொடுக்கிறேன். அதற்கான உரிமை எனக்குண்டு. அதுபோல் அதனைத் திரும்பப் பெறுகிற உரிமையும் எனக்குண்டு” என்று யோவான் 10:18 இல் கர்த்தர் கூறியுள்ளார்] எமக்காக உம்முன் பலியுயிராய் இருந்த அவர், சிலுவை மரணத்தின் மூலம் வெற்றியின் மைந்தனாய் மாறினார். எங்களுக்காக அவர் உம் திருமுன் பலிப்பொருளாகவும், பலியை ஒப்புக்கொடுப்பவருமாக விளங்கினார். பணியாளராக இருந்து அவர் பணியாளர்களாக இறந்த எம்மை உமது படைப்பில் உருவான குழந்தைகளாய் பரிணமிக்கச் செய்தார். உமது வலது புறத்தில் அமர்ந்து எங்களுக்காகப் பரிந்துபேசுகிறவராலேயே என் நோய்களையெல்லாம் குணமாகும் என்ற நம்பிக்கையை அவர்மேல் உறுதியாக வைத்திருக்கிறேன். [காண்க: “கிறிஸ்து இயேசு நமக்காக இறந்தார். அதோடு முடியவில்லை. அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இப்போது அவர் தேவனுடைய வலதுபுறத்தில் இருந்துகொண்டு நமக்காக வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார்” உரோமர் 8 : 34 ] அவரது கிருபை இல்லாதுபோயிருந்தால் நான் விரக்தி அடைந்தவனாய் இருந்திருப்பேன். எனது பலவீனங்களும் பாவங்களும் பெரியவை, அவை எண்ணிலடங்காதவை. ஆனால் நீர் கொடுக்கும் மருந்தோ அதைவிட மகத்தானது. ஒருவேளை, உமது வார்த்தை மனிதனுடனான ஐக்கியத்திலிருந்து நீக்கப்பட்டது என்று நாம் நினைக்கலாம், அவர் மாம்சமாகி நம்மிடையே வாசம் செய்யாதிருந்திருந்தால், நாம் எல்லோரும் நிலைகுலைந்து போயிருப்போம். யோவான் 1 : 14 இதுகுறித்து சாட்சியமளிக்கையில், “வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே மகனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று” என்று கர்த்தரின் மகிமையைப் பறைசாற்றுகிறது.

70. என் பாவங்கள், அக்கிரமங்கள் அதனால் ஏற்பட்ட மனத்துயரம் போன்றவையின் சுமையால் அழுத்தப்பட்ட நான், அச்சத்தில் மூழ்கி, தனிமையை நாடி வனாந்திரத்துக்குள் ஓடிவிடலாமா என்று என் மனதைக் கசக்கிப்பிழிந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தேன். ஆனால் நீர் என்னைத் தடுத்து நிறுத்தி எனக்கு ஆறுதல் அளித்தீர். இதை “கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும்” என்ற 2 கொரிந்தியர் 5:15 வாயிலாக எடுத்துரைத்திருக்கிறீர். இதோ, என் கர்த்தாவே, நான் உயிரோடிருக்கவும், உமது நியாயப்பிரமாணத்திலுள்ள அதிசயங்களைப் பார்க்கவும், என் கரிசனையை உம்மேல் வைத்தேன். என் திறமையின்மையையும் என் பலவீனங்களையும் நீர் அறிவீர். எனக்குக் கற்றுக்கொடுத்து என்னைக் குணமாக்கும். ஞானம் அறிவு மற்றும் அனைத்து பொக்கிஷங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் உமது ஒரே குமாரன் – தம் திரு இரத்தத்தால் என்னை மீட்டு இரட்சித்தார். ஆணவமும் செருக்கும் கொண்டவர்கள் என்னைப் பற்றித் தீமை பேசாதிருக்கட்டும். ஏனென்றால் என் ஏழ்மையில் மக்களோடு சேர்ந்து அதை உண்டு அதன் மூலம் நிறைவைக் காண விரும்புகிறேன். தேவனைத் தேடும் அனைவரும் தேவனைப் போற்றிப் புகழ்வார்களாக.