Saint Athanasius of Alexandria, Against the Heathen, in Tamil.
1. நமது மத நம்பிக்கை மற்றும் உண்மை பற்றிய நமது புரிதல் தானாகவும் தெளிவாகவும் இருப்பது. அதுபற்றிய வழிகாட்டுதல்களை வழங்க ஆசிரியர்களை நம்பியிருக்க வேண்டியதில்லை. அனுதினமும் உண்மைகள் மூலம் தன்னை வெளிப்படுத்துவதோடு, கிறிஸ்துவின் போதனைகள் மூலம் சூரியனை விட அதிகமாகப் பிரகாசிக்கிறது. 2. மகாரியோஸ், நீங்கள் அதைப் பற்றி பரிசுத்த வேதாகமத்திலிருந்து கற்றுக்கொள்ள முடிந்தாலும், நீங்கள் அதைப் பற்றி எங்களிடம் கேட்க விரும்புவதால், கிறிஸ்துவின் விசுவாசத்தைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம். 3. பரிசுத்த வேதாகமம் உண்மையைதி தெளிவாக எடுத்துரைக்கப் போதுமானது என்றபோதும், அவற்றை விளக்க உதவும் எங்கள் மரியாதைக்குரிய ஆசிரியர்களின் பிற ஆக்கங்கள் இருந்தபோதும் தற்போது அவை எங்களிடம் இல்லை. எனவே, இரட்சகராகிய கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த விசுவாசம் பற்றி அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நம்மிடம் உள்ள போதனைகளை யாரும் குறைத்து மதிப்பிடவோ அல்லது கிறிஸ்துவின் மீது கொண்டிருக்கும் விசுவாசம் நியாயமற்றது என்று நினைக்கவோ கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். புறஜாதியினர் இதைத்தான் கேலியும் ஏளனமும் செய்கிறார்கள், நம்மைப் பார்த்து எல்லி நகையாடுகின்றனர். ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவின் சிலுவை மீது மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள் என்றபோதிலும், அதன் உண்மையான சக்தியைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள். அதன் மகத்துவம்தான் உலகம் முழுவதும் பரவி அனைவருக்கும் கடவுளைப் பற்றிய அறிவை வெளிப்படுத்துகிறது என்பதை அவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள். 4. ஏனென்றால், புறஜாதியினரும் அவருடைய தெய்வீக இயல்பை உண்மையாகக் கவனிப்பவர்களாக இருந்திருந்தால், அத்தகைய உண்மையை அவர்கள் கேலி செய்திருக்க மாட்டார்கள். மாறாக, இந்த மனிதனை உலகத்தின் இரட்சகராக அங்கீகரித்திருப்பார்கள். மேலும் சிலுவை ஒரு தோல்வியைத் தரவல்ல ஒன்றல்ல, அது படைப்பு மற்றும் குணப்படுத்துதலுக்கான பாதை என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். 5. சிலுவைக்குப் பிறகு எல்லா விக்கிரகாராதனையும் தூக்கியெறியப்பட்டு, இந்த சிலுவை அடையாளத்தால் தீய ஆவிகளின் அனைத்து வஞ்சக தந்திர சூழ்ச்சிகளும் விரட்டப்பட்டு, கிறிஸ்து மட்டுமே வணக்கத்துக்குரியவராகிறார். அவர் மூலம் பிதாவாகிய தேவனை நாம் அறிகிறோம். அதே நேரத்தில் அவரை எதிர்ப்பவர்கள் வெட்கப்படுகிறார்கள். அவர் ஒவ்வொரு நாளும் அவர்களின் இதயங்களை அமைதியான வழியில் வெற்றிகொள்கிறார் – சிலுவையில் மரித்தவர் கடவுளின் வார்த்தையானவர் மற்றும் உலக இரட்சகர் என்று ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக இதை ஒரு மனிதனின் சாதாரண கிரியை என்று நாம் எப்படி நினைக்க முடியும்? மேகங்களால் மறைந்திருக்கும் சூரியனை விமர்சித்தும், பின்னர் அதன் ஒளியைக் கண்டு வியந்தும், சுற்றியுள்ள அனைத்தும் அந்த சூரியனின் ஒளி பிரகாசமாக்குகின்றது என்பதைப் பார்ப்பது போலதான் இந்த மக்களும் முட்டாள்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. 6. ஒளி உன்னதமானது, நமக்கு ஒளியைத் தரும் சூரியன் அதைவிட உன்னதமானது. உலகம் அறிவால் நிரப்பப்படுவது ஒரு அற்புதமான விஷயம் என்பதைப் போலவே, கடவுளும் கடவுளின் வார்த்தையும் இதற்கு முக்கிய காரணங்கள் என்பது தெளிவாகிறது. 7. நாம் அறிந்ததை அடிப்படையாகக் கொண்டு தான் நாம் பேசுகிறோம். முதலில் நம்பாதவர்களின் தவறான புரிதல்களை சரிசெய்கிறோம். பொய் தவறானது என்பதைக் காண்பிப்பதன் மூலம் உண்மை தெளிவாகிவிடும். மேலும் கிறிஸ்து மீதான உங்கள் நம்பிக்கை உண்மையானது, அது தவறு அல்ல என்பதை நீங்கள் உறுதியாக உணரலாம். கிறிஸ்துவை நேசிக்கும் ஒருவராக, அவரைப் பற்றி உங்களுடன் பேசுவது பொருத்தமானது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் நீங்கள் அவரை விசுவாசிப்பதையும் பெற்றுக்கொண்ட புரிதலையும் மற்றைய அனைத்தையும் விட அதிகமாக மதிப்பிடுகிறீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
2. தீமை என்பது பொருட்களின் அடிப்படை இயல்பின் ஒரு பகுதியல்ல. மனிதனின் அசல் படைப்பு மற்றும் அமைப்பு, கடவுளின் அருளிலும் அறிவிலும் இருந்தே வெளிப்பட்டது
ஆரம்பத்தில் காழ்ப்புணர்ச்சி இருந்ததில்லை, அதைவிட அது புனிதர்களிடம் இருந்ததே இல்லை. அது அவர்களின் இயல்பின் ஒரு பகுதியாகவும் கூட இருக்கவில்லை. இருப்பினும் காலப்போக்கில் மக்கள் தான் காழ்ப்புணர்ச்சியை உருவாக்கத் தொடங்கி, அதனைத் தங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் விரிவுபடுத்தத் தொடங்கினர். அவர்கள் உருவங்கள் மற்றும் சிலைகளைக் கண்டு பிடித்தது மட்டுமன்றி, உண்மையற்ற விடயங்களை உண்மையானவை போல் காட்டிக்கொண்டனர். 2. அனைத்தையும் படைத்தவரும், அனைத்திற்கும் அதிபதியுமான கடவுள் எல்லாப் பொருள்களுக்கும் மனித கண்டுபிடிப்புகளுக்கும் அப்பாற்பட்டவர், ஏனெனில் அவர் நல்லவர், வல்லவர் மற்றும் மிகவும் உன்னதமானவர். தனது ஒரே குமாரனான இயேசுக் கிறிஸ்து மூலம் மனிதர்களை தனது சாயலாகப் படைத்தார். இதன் மூலம் நாம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவும் அவரது நித்திய இயல்பைப் பற்றி அறியவும் முடியும். இந்த வழியில், மக்கள் கடவுளைப் பற்றிய தங்கள் புரிதலுக்கு அமைவாக உண்மையாக இருக்கவும், புனிதர்களுக்கு இணையாகவும் இருக்க முடியும். கடவுளின் கிருபையுடனும் சக்தியுடனும் அவர்கள் அவருடன் நெருங்கிய உறவை அனுபவிக்கவும், ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் நித்திய வாழ்க்கையை வாழவும் முடியும். கடவுளை அறிந்துகொள்வதில் இருந்து எதுவும் அவர்களைத் தடுக்காததால் அவர்கள் படைக்கப்பட்டதைப் போலவே வார்த்தையாகிய கடவுளான தேவனின் உண்மையான உருவத்தையும் காண முடியும். பிரபஞ்சத்தின் மீதான கடவுளின் அக்கறை குறித்து அவர்கள் வியப்புக்கு ஆளாவதோடு, உடல் அமைப்புகளை விட ஆன்மீக விடயங்களில் கவனம் செலுத்தி தெய்வீகத்துடன் தங்களை இணைத்துக்கொள்ள மனதின் வழிகாட்டுதலைத் தொடர்கின்றனர். 3. மக்களின் மனம் உடல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தாமல் அல்லது அவற்றின் ஆசைகளால் பாதிக்கப்படாமல், முற்றிலும் தனித்துவமாகவும், அவர்களின் சொந்த இயல்புக்கு உண்மையாகவும் இருக்கும்போது, அவர்கள், உடல் இன்பம், உலக இச்சை மற்றும் மனித இயல்புக்கு அப்பால் சென்று உயர்ந்தவர்களாகப் போற்றப்படுகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் இறை வார்த்தையைப் புரிந்துகொண்டு, இறை வார்த்தையின் தந்தையைக் காண முடியும். இந்த புரிதலில் மகிழ்ச்சி கொண்டு, அவர் மீதான ஈடுபாட்டால் மனித மனம் புதுப்பித்தலைப் பெறுகிறது. 4. ஆதியில், எபிரேய மொழியில் ஆதாம் என்று பெயரிடப்பட்ட முதல் மனிதன், எந்த வெட்கமோ கூச்ச உணர்வோ இல்லாமல் கடவுளை மட்டுமே மையமாகக் கொண்ட தெளிவான மற்றும் திறந்த மனதைக் கொண்டிருந்ததாக பரிசுத்த வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மோயீசனால் ஒரு சிங்காரத் தோட்டம் என்று கூறப்பட்ட ஒரு சிறப்பான இடத்தில் ஆதாம், மனதினால் உணரப்பட்ட விஷயங்களைப் பற்றிய சிந்தனையில் பரிசுத்தவான்களுடன் இணைந்ததாகவும் பரிசுத்த வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இது ஒரு தூய ஆன்மா எனவும் கடவுளை உண்மையிலேயே பிரதிபலிக்க முடியும் என்பதையும் காட்டுகிறது. கர்த்தர் சொன்னது போல், “இதயத்தில் தூய்மையானவர்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்று.
3. பொருள்சார் விடயங்களில் அதிகமாக கவனம் செலுத்துவதால் மனிதகுலம் சிறந்த நிலையிலிருந்து வீழ்ச்சியை நோக்கி சரிகிறது
எனவே, நாம் ஏற்கனவே கூறியது போல், படைப்பாளர் மனித இனத்தை உருவாக்கி, அது நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணினார். இருப்பினும், மக்கள் சிறந்த விஷயங்களைப் புறக்கணிக்கத் தொடங்கியது மட்டுமன்றி, அதற்கு பதிலாக தங்களுக்கு இஷ்டமானவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கினர். 2. மக்கள் தங்கள் சொந்த உடல்கள் மற்றும் புலன்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானதைப் பற்றி சிந்திப்பதை விட தங்களைப் பற்றியே வெறித்தனமாகச் சிந்தித்து, தங்கள் சொந்த ஆசைகளுக்கு முன்னுரிமை கொடுத்தனர். இந்த விஷயங்களில் காணப்படும் சௌகரியத்தை உணர்ந்து மட்டுமல்ல, தங்களுக்கு மிக நெருக்கமானதை விட்டுவிடவும் விரும்பாமல், தங்கள் ஆன்மாக்களை உடல் இச்சைகளில் பிணைத்து, எல்லா வகையான ஆசைகளிலும் சிக்குண்டு தொந்தரவுக்குள்ளாகி குழப்பத்தில் ஆழ்ந்த அதே நேரத்தில் கடவுளிடமிருந்து அவர்கள் பெற்ற சக்தியை மறந்துவிட்டார்கள்.
3. பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, முதல் மனிதனின் கதையில் இதைப் பற்றிய உண்மையைக் காணலாம். ஆதாம் கடவுள் மற்றும் ஆன்மீக விஷயங்களில் மாத்திரமே கவனம் செலுத்தினார். இது அவருக்கு உடல் இச்சைகளை விட்டொழிக்கவும் அவற்றைப் புறக்கணிக்கவும் உதவியது. இருப்பினும், அவர் பாம்பின் சூழ்ச்சிக்குள் சிக்கி, கடவுளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தியபோது, அவர் தன்னைப் பற்றியும் தனது நிர்வாண உடலைப் பற்றியும் சடுதியாக உணர்ந்தார். இந்த நிர்வாண உடல் அவமான உணர்வுகளுக்கு வழிவகுத்தது. அவர்கள் தங்களுக்கு உடுதுணிகள் இல்லாதது மட்டுமல்லாமல், தெய்வீக விஷயங்களில் தங்கள் கவனத்தை இழந்து, உலக ஆசைகளில் தங்கள் கவனம் திரும்பியிருப்பதை உணர்ந்தனர். கடவுளிடமிருந்து விலகி, மற்றைய விடயங்களின் பின் சென்றதன் மூலம் அவர்கள் பல்வேறு உடல் இன்பம் தரும் விடயங்களில் மூழ்கினர். 4. காலம் செல்லச் செல்ல, மக்கள் பல விஷயங்களில் தங்கள் ஈடுபாட்டைக் காட்டத் தொடங்கினர். உலக ஆசைகளுக்கு அடிமையாகினர். அந்த ஆசை அவர்களை அவற்றை விடாமல் துரத்தியது. இது அவர்களின் ஆன்மாக்கள் கோழைத் தனமாகவும் பதட்டமாகவும் இருப்பதை உறுதிசெய்தது. மேலும் அவர்கள் உலக இன்பங்களில் நாட்டம் கொண்ட அதேவேளை, இறந்து விடுவோமோ என்ற பயமும் அவர்களைத் தொற்றிக்கொண்டது. அவர்கள் தங்கள் ஆசைகளை விட்டுவிட விரும்பாததால், அவர்கள் மரணத்திற்கு பயந்து, தங்கள் உடலிலிருந்து உயிர் பிரிந்துவிடுமோ என்று அஞ்சினர். இருப்பினும், அவர்கள் எதையாவது ஒன்றை விரும்பி அதைப் பெற முடியாதபோது, கொலை செய்து என்றாலும் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வது போன்ற குரூர காரியங்களைச் செய்யக் கற்றுக்கொண்டார்கள். இது எப்படி நடக்கிறது என்பதை இப்போது விளக்குவோம்.
4. தெரிவுசெய்யும் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆன்மா சத்தியத்திலிருந்து பொய்மைக்கு மெதுவாகச் சரிகிறது
ஆழமாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மனம் தன் உடல் செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தியது. அது இந்த செயல்களை அனுபவித்து, இன்பம் தான் அதற்கு சிறந்தது என்று நம்பியது. இதன் காரணமாக, ஆன்மா குழப்பமடைந்து நல்லது என்ற கருத்தை தவறாகப் பயன்படுத்தியது மட்டுமன்றி, இன்பம் தான் நன்மையின் உண்மையான அர்த்தம் என்று நினைத்தது. இது எப்படியென்றால், தெளிவாக சிந்திக்காத ஒரு மனிதர் தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் காயப்படுத்த ஒரு வாளைக் கேட்பது போன்றது. ஏனென்றால் அதுதான் விவேகமான செயல் என்று அந்த மனிதர் நினைத்திருக்கக்கூடும். 2. உடல் இன்பத்தில் கவனம் செலுத்தியபோது, அது அதை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தத் தொடங்கியது. அது நல்லவற்றிலிருந்து விலகிச் சென்றாலும், இன்னும் இயக்க நிலையில் தான் உள்ளது. ஆனால் இப்போது, நல்லொழுக்கத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக அல்லது கடவுளைத் தேடுவதற்குப் பதிலாக, தவறான கருத்துக்களை உருவாக்கி, தான் கற்பனை செய்த இன்பங்களின் பின் செல்ல அதன் திறன்களை தவறாகப் பயன்படுத்துகிறது, ஏனெனில் உடல் தன்னைக் கட்டுப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளதன் காரணமாக. 3. ஏனென்றால், மனம் ஒருபுறம் நல்லதை நோக்கிச் சாய்ந்தபோதும், மறுபுறம் அதை நிராகரிக்கவும் முடியும்; நல்லதை நிராகரிக்கும்போது, அது இயல்பாகவே கெட்டதைப் பற்றி சிந்திக்கிறது. ஏனென்றால் அது எப்போதும் சுறுசுறுப்பாக, இயக்க நிலையிலேயே இருக்கும். அதனால் மேலும் நகர்வதை நிறுத்த முடியாது. நான் முன்பு கூறியது போல், அது இயற்கையால் நகரும் தன்மை கொண்டது. மனம் தன்னை விட அதன் சொந்த சக்தியை அறிந்திருப்பதால், அது குடிகொண்டிருக்கும் உடலின் உறுப்புகளை இரு திசைகளிலும், உள்ளதை நோக்கி மட்டுமல்ல, இல்லாததை நோக்கியும் நகர்த்த முடியும் என்பதை நன்றாக அறிந்திருக்கிறது. 4. நன்மை என்பது தீமை ஆகிவிடமுடியாது. ஏனென்றால், நன்மை என்பது எல்லா நன்மைகளுக்கும் மூலமான கடவுளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அது நிரந்தரமாய் வாழ்கிறது. மறுபுறம், தீமை என்பது மக்களின் மனதில் உள்ள தவறான கருத்துக்களிலிருந்து தோன்றுகிறது. படைப்பின் அழகைக் காணவும் கடவுளை அங்கீகரிக்கவும் நம் உடலுக்கு கண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவருடைய போதனைகளைக் கேட்க காதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேவையான வேலைகளைச் செய்யவும் செபிக்கவும் கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆன்மா நல்லவற்றில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, அதன் சரியான இடத்தில் நிலைத்திருக்காமல் விலகிச் சென்று நன்மைக்கு எதிரானதை நோக்கி பயணிக்கிறது. 5. பிறகு, நான் முன்பு கூறியது போல், ஆன்மா தன் உடலை பல்வேறு வழிகளில் கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்திருக்கிறது. வாழ்க்கையில் நல்ல விடயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அது தன் ஆசைகளின் மீது கவனத்தைத் திருப்புகிறது. தன்னால் நகர முடியும் என்பதற்காக, அது கண்ணியத்துடன் செயல்படுகிறது. தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறது. இருப்பினும், மனம் தான் இஷ்டம்போல் சஞ்சரிக்காமல், சரியான வழியில் நகர வேண்டும் என்பதை அது புரிந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அப்போஸ்தலரின் ஒரு கூற்று, “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆம், ஆனால் எல்லாப் பொருள்களும் நல்லதல்ல. எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டவை எனினும், சில பொருள்கள் பக்தியில் வளருவதற்குப் பிறருக்கு உதவுவதில்லை” (1 கொரிந்தியர் 10:23) என்று சான்றளிக்கிறது.
5. தீமை என்பது அடிப்படையில் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக மோசமான ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாகும்
எது சரியானது, எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதைப் புறக்கணித்து, மனிதர்கள் தீங்கு விளைவிக்கும் வழிகளில் செயல்படத் தொடங்கினர். இது அவர்களை பிறரைக் கொலை செய்யவும், விதிகளை மீறவும், சட்டப்பூர்வமான உறவுகளை வைத்திருப்பதற்குப் பதிலாக சட்டத்துக்கு அப்பாற்பட்ட விவகாரங்களில் ஈடுபடவும் வழிவகுத்தது. அவர்கள் தங்கள் வாயால் கூறும் வார்த்தைகளை அவதூறு செய்யவும், அவமதிக்கவும், பொய் சொல்லவும் பயன்படுத்தினர். அவர்களின் கைகள் திருடவும், பிறரைக் காயப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன. அவர்கள் துர்நாற்றம் தரும் விடயங்களையே தேடினர். அவர்களின் கால்கள் வன்முறைகளை நோக்கி விரைந்தன. அவர்களின் தீராத வேட்கை அவர்களை அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் போசனப்பிரியம் போன்ற தீய செயல்களுக்கு இட்டுச் சென்றது. 2. இவை அனைத்தும் ஆன்மாவுக்குத் தீமையைக் கொண்டுவரக்கூடியவை. மேலும் மக்கள் சிறந்த விடயங்களைப் புறக்கணிப்பதால் அவை நிகழ்கின்றன. இது ஒரு தேரோட்டி, தடகளத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தனது குதிரையை எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஓட்டிச் செல்வது போன்றதும், பெரும்பாலும் மற்றவர்கள் மீது மோதுவது அல்லது கீழ்நோக்கிச் செல்வது போன்றதும், தான் இன்னும் சரியான தடகளத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்வது போன்றதும் தான் இது. அதேபோலத்தான், ஆன்மாவும். அது கடவுளிடமிருந்து விலகி, அதன் உடல் அதைத் தவறான திசையில் வழிநடத்த அனுமதிக்கும்போது, அது சத்தியத்திலிருந்து விலகிச் சென்றதை உணராமல், பாவத்தில் வீழ்ந்து தனக்குத்தானே பிரச்சனையை ஏற்படுத்திக் கொள்கிறது. கிறிஸ்துவைப் பின்பற்றிய ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலன் பவுல், “குறிக்கோளை அடைந்து வெகுமதியைப் பெறுவதற்கான முயற்சியை விடாமல் தொடர்ந்து நான் கைக்கொண்டு வருகிறேன். அது என்னுடையது. ஏனென்றால் அத்தகைய வாழ்வுக்குத்தான் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் என்னை அழைத்திருக்கிறார்” (பிலிப்பியர் 3:14) என்று கூறினார். இது ஒரு நல்ல நபர் எப்போதும் சரியானதைச் செய்ய பாடுபடுகிறார், தீமை செய்வதைத் தவிர்க்கிறார் என்பதைக் காட்டுகிறது.
6. தீமை உண்மையில் என்ன என்பது பற்றிய தவறான கருத்துக்கள்: எடுத்துக்காட்டாக, தீமை உலகின் ஒரு பகுதி மற்றும் அது தானாகவே உள்ளது. (அ) பண்டைய தத்துவஞானிகள்: (தீமை உடல் விஷயத்தில் காணப்படுகிறது என நம்புகிறார்கள்). அது ஏன் தவறு என்பதற்கான காரணம் இங்கே. (ஆ) தவறான ஆசிரியர்கள்: (அவர்கள் இரண்டு எதிரெதிர் சக்திகளை நம்புகிறார்கள்). அதற்கு எதிரான வேதாகமத்தின் நிலைப்பாடு
கிறிஸ்துவை அறியாத சில கிரேக்கர்கள் சரியான பாதையிலிருந்து விலகிச் சென்று தீமை என்பது இயற்கையாகவே காணப்படுவதாக நம்புகிறார்கள். இதில் அவர்கள் இரண்டு தவறுகளைச் செய்கிறார்கள்: முதலாவது, தீமை சுயாதீனமாக இருப்பதாக அவர்கள் நினைப்பதால் படைப்பாளர் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை மறுக்கிறார்கள்; இரண்டாவதாக, படைப்பாளர் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அவர் தீமையையும் படைத்தவர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களின் கூற்றுப்படி, தீமை இருப்பின் ஒரு பகுதி என்று அவர்கள் நம்புகிறார்கள். 2. இது குழப்பமானதாகவும் சாத்தியமற்றதாகவும் தோன்றலாம். ஏனென்றால் தீமை நன்மையிலிருந்து வருவதில்லை, அது நன்மையின் ஊடாகவோ அல்லது அதன் விளைவாகவோ வருவதில்லை. அது உண்மையாக இருந்தால், நன்மை என்பது நல்லதைக் கொண்டுவருவதாக இருக்காது, ஏனென்றால் அது தீமையுடன் கலந்திருக்கும் என்பதால். 3. 1 தீமோத்தேயு 1:19 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சிலர் திருச்சபையின் போதனைகளிலிருந்து விலகி தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். தீமை என்பது உண்மையான விஷயமாக இருப்பதாக அவர்கள் தவறாக நம்புகிறார்கள். அவர்கள் உண்மையான கடவுளான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைத் தவிர வேறொரு கடவுளை தன்னிச்சையாக கற்பனை செய்கிறார்கள். அவர் தீமையைப் படைத்தவர் என்றும், எல்லாத் தீமைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறார் என்றும், படைப்பின் கைவினைஞராகவும் இருக்கிறார் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், வேதாகமத்தை மேற்கோள் காட்டாமல், பொது அறிவு மூலமாக அவர்களைத் தவறு செய்பவர்கள் என்று நிரூபிப்பது எளிது. இது அவர்களின் கருத்துக்கள் எவ்வளவு குறைபாடுள்ளவை என்பதைக் காட்டுகிறது. 4. முதலாவதாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த சுவிசேஷங்களில் மோசேயின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி இவ்வாறு குறிப்பிடுகிறார்: கர்த்தராகிய தேவன் ஒருவரே; மாற்கு 12:29 மற்றும் மத்தேயு 11:25 இல் கூறப்பட்டுள்ளபடி, பரலோகத்திற்கும் பூபூலோகத்துக்கும் ஆண்டவரே, பிதாவே, உமக்கு நன்றி கூறுகிறேன். கடவுள் ஒருவராகவும், வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராகவும் இருப்பதால் அவரைத் தவிர வேறு கடவுள் எப்படி இருக்க முடியும்? அப்படியானால், ஒரே உண்மையான கடவுள் ஏற்கனவே வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் நிரப்பியிருப்பதால், சிலர் நினைக்கிறவாறு கடவுளுக்கு எங்கே இடம் இருக்கும்? மேலும், இரட்சகரின் வார்த்தைகளின்படி, கிறிஸ்துவின் கடவுளும் பிதாவாகிய தேவனும் ஏற்கனவே ஆண்டவராக இருக்கும் போது எவ்வாறு மற்றொரு படைப்பாளர் இருக்க முடியும்? 5. சிலர், நல்ல மற்றும் தீய கடவுள்கள் இருவரும் சக்தியில் சமமானவர்கள் என்று வாதிடலாம். இந்த வாதம் எவ்வளவு அவமரியாதைக்குரியது என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்! இரண்டும் சமமான வலிமை கொண்டவை என்றால், எது சிறந்தது என்று சொல்வது கடினம். ஒன்று இருக்கும் பட்சத்தில், மற்றொன்று நடப்பவைகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது; ஏனென்றால் அவை இரண்டுமே பலவீனமானவை. தீயவர் சுற்றி இருந்தாலும் கடவுள் நல்லவராக மட்டுமே இருக்கிறார். அதேநேரம், தீய கடவுள் நல்ல கடவுளின் அனுசரணை காரணமாகத்தான் தனது இருப்பைக் கொண்டிருக்கிறார்.
7. இரட்டைவாதக் கொள்கைக்கு எதிரான வாதம் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது. இரண்டு கடவுள்கள் இருப்பது சாத்தியமற்றது. குழப்பமான ஆன்மாவால் மேற்கொள்ளப்படும் தவறான தெரிவுகளிலிருந்து தீமை தோற்றம் பெறுகிறது என்று திருச்சபை உரைக்கிறது
அவர்கள் குறிப்பாக பின்வரும் கேள்வியை எதிர்கொள்கின்றனர்: நாம் காணும் அனைத்தும் ஒரு தீய கடவுளால் செய்யப்பட்டது என்றால், நல்ல கடவுள் எதை உருவாக்கினார்? படைப்பாளரின் செயல்களை மட்டுமே நாம் காண முடியும். மேலும், தீய கடவுளின் செயல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லையென்றால், நல்ல கடவுள் இருக்கிறார் என்பதை எவ்வாறு நிரூபிக்க முடியும்? படைப்பின் மூலமாகவே ஒரு படைப்பாளரை நாம் அடையாளம் காண்கிறோம். 2. அப்படியானால், இரண்டு கொள்கைகள் எப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்க முடியும்? ஒன்றையொன்று இல்லாமல் செய்தால் அவை ஒன்றித்து இருக்க முடியாது. அவை முற்றிலும் வேறுபட்டவை என்பதால் அவை ஒரு கூறின் ஒரு பகுதியாகவும் இருக்க முடியாது. எனவே, வேறு ஏதோ ஒன்று அவற்றைப் பிரிக்க வேண்டும். அதன்படி, அவற்றைப் பிரிப்பது கடவுளாகவும் கூட இருக்கும். அப்படியானால் இந்த மூன்றாவது கூறு எந்த இயல்புடையதாக இருக்க முடியும்? அது நல்லதா அல்லது கெட்டதா என்று தீர்மானிக்க இயலாது, ஏனென்றால் அது இரண்டின் இயல்பையும் கொண்டதாக இருக்க முடியாது. 3. அவர்களின் நம்பிக்கை தெளிவாகக் குறைபாடுடையதாகத் தெரிகிறது, எனவே திருச்சபையின் போதனைகள் பற்றிய உண்மை தெளிவாக உள்ளது: தீமை கடவுளிடமிருந்து வரவில்லை, அதற்கு எந்தவொரு அடிப்படையான இருப்பும் கிடையாது. அதன் காரணமாக, நன்மையைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாத மக்கள், தங்கள் சொந்த இஷ்டத்தின் அடிப்படையில் உண்மையற்ற விடயங்களை உருவாக்கவும் கற்பனை செய்யவும் தொடங்கினர். 4. சூரியன் பிரகாசிக்கும்போது, அதன் ஒளி உலகம் முழுவதிலும் பரவி வெளிச்சத்தைக் கொடுக்கும்போது, ஒரு மனிதன் மட்டும் தன் கண்களை மூடிக்கொண்டு இருள் இல்லாத இடத்தில் இருள் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, தட்டுத் தடுமாறி, அடிக்கடி இடறி விழுந்து கிடக்கிறான். அவன் எதையோ பார்க்கிறான் என்று நினைக்கிறான், ஆனால் அவன் உண்மையில் எதையும் பார்க்கவில்லை. அதேபோலத்தான், ஒரு மனிதனின் ஆன்மா கடவுளை நோக்கிப் பாராமல் தன் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது, அது தனக்குள்ளே கூடாத விடயங்களை கற்பனை செய்கிறது. அது எதையோ செய்வதாக நினைத்தாலும், அதனால் உண்மையில் எதையும் செய்ய முடியவில்லை. அது உண்மையற்ற மற்றும் அதன் அசல் இயல்புக்கு மாறாக, இல்லாத விஷயங்களை கற்பனை செய்கிறது; ஏனென்றால் அது அதன் சொந்த குழப்பத்தின் காரணமாக ஏற்பட்ட விளைவாகும். 5. மக்கள் கடவுளைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் படைக்கப்பட்டனர், ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் கெட்ட விஷயங்களையும் இருளையும் பின்பற்றத் தேர்ந்தெடுத்தனர். இதுகுறித்து, பிரசங்கி 7:29 இல் “தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார். ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக் கண்டுபிடித்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே, மக்கள் தங்களுக்காக தீமையைப் பற்றி யோசித்து அதை உருவாக்கவே பாடுபட்டனர். இப்போது, சிலை வழிபாடு என்ற முட்டாள்தனத்தில் அவர்கள் எப்படி விழுந்தார்கள் என்பதை நாம் விவாதிக்க வேண்டும். சிலைகளின் உருவாக்கம் நன்மையிலிருந்து அல்ல, தீமையிலிருந்து தான் வருகிறது என்பதைக் காட்டுகிறது. தீமையிலிருந்து தொடங்கும் எதையும் ஒருபோதும் எந்த வகையிலும் நல்லதாகக் கருத முடியாது, ஏனெனில் அது முற்றிலும் தீமையானது.
8. மக்கள் கடவுளை மறந்து, உலக மற்றும் பொருள் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி, அவற்றைப் பொய்யான கடவுள்களாக மாற்றும்போது சிலை வழிபாடு உண்டாகிறது. இது மனிதகுலத்தை ஆழமான குழப்பம் நிறைந்த மூடநம்பிக்கைக்கு இட்டுச் செல்கிறது
மனித ஆன்மா கூடாத காரியங்களைச் செய்வதில் திருப்தி அடையாமல், படிப்படியாக இன்னும் மேலே சென்று கேவலமான காரியங்களைச் செய்யத் தொடங்கியது. இன்பம் தரும் பல நிகழ்வுகளை அனுபவித்து, அதனால் தெய்வீக காரியங்களை மறந்து, அது உடல் இன்பம், உலக ஆசை மற்றும் தற்போது நடக்கக்கூடிய நிகழ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அது தற்காலிக மற்றும் உடல் விஷயங்களைத் தவிர, தான் காணக்கூடியதற்கு அப்பால் இருக்கக்கூடிய எதையும், அதாவது நல்ல விடயங்கள் யாவற்றையும் ஏற்றுக்கொள்வதை நிறுத்தியது. ஒரு நல்ல கடவுளின் சாயலில் தான் படைக்கப்பட்டதை மறந்து அந்த மகிமையை விட்டு விலகிச் சென்றதன் மூலம் கடவுளைக் காணும் திறனை இழந்தது. அதன் காரணமாக, அது அதன் உண்மையான சுய நிலையில் இருந்து விலகி, உண்மைக்குப் புறம்பான விடயங்களை கற்பனை செய்து வாழத் தொடங்கியது. 2. ஒரு மனிதன் உடல் மற்றும் உலக ஆசைகளில் சிக்கிக் கொள்ளும்போது, அவன் தன் உண்மையான ஆன்மீக இயல்பை இழக்கிறான். தனது ஆன்மீக இயல்பு மூலம் மட்டுமே தந்தையின் சாயலைக் காணும் சக்தி அவனுக்கு இருந்தது. ஆன்மா உண்மையிலேயே பார்க்க வேண்டியவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றாலும் திசைதிருப்பப் படுகிறது. மேலும் சிலர் உணரக்கூடியவற்றை மட்டுமே கவனிக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த இச்சைகள் சுமையாக அழுத்துவதாலும், மேற்கூறிய விஷயங்களால் திசைதிருப்பப்படுவதாலும், கடவுளைத் தொட்டுணரக்கூடிய பொருட்களில் காண முடியும் என்றும் தவறாக நம்புகிறார்கள். அவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றையும், தங்களுக்கு நல்லது என்று தோன்றுபவற்றையும் மட்டுமே புகழ்ந்து, கடவுளைப் பற்றிய ஆழமான புரிதலை மறந்து விடுகிறார்கள். 3. தீமை மக்களை பொய்யான கடவுள்களை வணங்க வழிவகுக்கிறது. மக்கள் தீமையை உருவாக்கக் கற்றுக் கொள்ளும்போது – அது உண்மைஇல்லை என்றபோதும், அவர்கள் இல்லாத கடவுள்களையும் உருவாக்குகிறார்கள். இது ஆழமான நீரில் மூழ்கி, ஒளியையோ அல்லது அந்தத் தண்ணீர் பரப்புக்கு மேலே உள்ள எதையும் பார்க்க முடியாத ஒரு மனிதனைப் போன்றது. அவர்கள் தண்ணீருக்குள் இருப்பதை மட்டுமே காண்பதால், அது மட்டுமே உண்மையானது என்று நினைக்கிறார்கள். அதேபோல், கடந்த காலத்தில் மக்கள் தெளிவாக சிந்திக்கும் திறனை இழந்து, தங்கள் ஆசைகளிலும் வீணான கற்பனைகளிலும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கடவுளை மறந்துவிட்டு, அதற்கு பதிலாக தங்களால் காணக்கூடிய பொருட்களைக் கொண்டு கடவுள்களை உருவாக்கினர், ரோமர் 1:25 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, படைப்பாளருக்குப் பதிலாக படைப்பை மதிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் உண்மையான ஆதாரமான கடவுளை விட அவர்கள் உருவாக்கிய பொருட்களை அவர்கள் அதிகமாக மதிக்காத தொடங்கினர். 4. மேற்கூறிய உவமையின்படி, மனிதகுலம் அது கொண்டிருந்த தவறான நம்பிக்கையுடன் செய்ததைப் போலவே, தண்ணீரின் ஆழத்தில் மூழ்கும் மக்கள், இருண்ட மற்றும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் எளிய சிலை வழிபாட்டில் மாத்திரம் தங்கியிருக்காமல், காலப்போக்கில் அவர்கள் மேலும் மேலும் மூடநம்பிக்கை தரும் விடயங்களை உருவாக்கினர். அவர்கள் தங்கள் ஆரம்ப காலத்தில் விட்ட தவறுகளில் திருப்தி அடையாது, புதியவற்றைச் சேர்த்துக் கொண்டே இருந்தனர். மேலும் வெட்கத்துக்குரியவர்களாகவும், கேவலம் மிக்கவர்களாகவும் மாறினர். நீதிமொழிகள் 18:3-ல் குறிப்பிட்டுள்ளபடி, ஒருவர் மிகவும் கொடியவராக மாறும்போது, அவர் எல்லாவிதமான கண்ணிய உணர்வையும் இழந்துவிடுவார் என்ற வேதாகமாக் கூற்று இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கிறது.
9. உருவ வழிபாட்டின் பன்முக வளர்ச்சி: நட்சத்திரங்கள், இயற்கை கூறுகள், இயற்கையில் காணப்படும் வஸ்துக்கள், புராண உயிரினங்கள், இச்சைகளை பிரதிபலிக்கும் உருவ அமைப்புகள், உயிருள்ள மற்றும் இறந்த மக்களை வணங்குதல் போன்ற பல வழிகளில் உருவ வழிபாடு தோற்றம் பெற்றுள்ளது. இதில் ஆன்டினஸ் (Antinous) போன்றவர்களும் கடவுள்களாக போற்றப்பட்ட பேரரசர்களும் அடங்குவர்
மக்கள் கடவுளைப் புரிந்துகொள்வதிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினர். அதற்கு பதிலாக வானம், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வழிபட்டனர். அவை கடவுள்கள் என்று மட்டுமல்ல, அவை அவற்றுக்கு கீழே உள்ள பிற கடவுள்களின் ஆதாரங்கள் தான் என்று நம்பினர். பின்னர், அவர்களின் தவறான எண்ணங்கள் வீசும் காற்றையும் காற்றில் உள்ள தன்மையையும் கடவுள்கள் என்று அழைக்க வழிவகுத்தன. இறுதியாக, உஷ்ணம், குளிர், வறட்சி மற்றும் ஈரப்பதம் போன்ற அனைத்தையும் உருவாக்கும் அடிப்படை கூறுகளை கடவுள்களாக வணங்குவதன் மூலம் அவர்கள் மேலும் பிழையான வழியில் சென்றனர். 2. கடவுளின் பாதையில் இருந்து வழி தவறிய மக்கள், சேற்றில் ஊர்ந்து செல்லும் நத்தைகளைப் போல கடவுளின் உண்மையான பார்வையிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர். அதற்கு பதிலாக, அவர்கள் மற்றைய மனிதர்களை வணங்கத் தொடங்கினர். கடவுள்களைப் போல இருந்த அவர்களில் சிலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள், சிலர் இறந்து விட்டனர். கற்கள், மரங்கள் மற்றும் நிலத்திலும் நீரிலும் உள்ள அனைத்து வகையான விலங்குகளுக்கும் கடவுளின் பெயரைக் கொடுத்து, கிறிஸ்துவின் தந்தையான ஒரே உண்மையான கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய அதே மரியாதையுடன் அவற்றை நடத்தினர். 3. சில அறிவீனர்கள் உலகில் எங்கும் காணப்படாத மற்றும் எங்கும் கிடைத்திராத விடயங்களிலிருந்து கடவுள்களை உருவாக்கியுள்ளதாக எண்ணி குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். அவர்கள் தர்க்கரீதியான கருத்துக்களை நியாயமற்ற கருத்துக்களுடன் கலந்து, எகிப்திய வழிபாட்டாளர்களைப்போல் நாயின் தலையை உடைய உருவங்கள், பாம்பின் தலையையொத்த உருவங்கள், கழுதையின் தலையைப் போன்ற உருவங்களையொத்த கடவுள்கள், அதேபோன்று லிபிய வழிபாட்டாளர்களைப்போல் ஆட்டுக்கடாவின் தலைவடிவ உருவமான அம்மோன் போன்ற விசித்திரமான உருவங்களை கடவுள் என்றெண்ணி வணங்குகிறார்கள். மற்றவர்கள் மனித உடலின் பாகங்களான தலை, தோள்பட்டை, கை மற்றும் கால் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தங்கள் நம்பிக்கைகள் முழு உடலையும் வணங்குவதில் திருப்தி அடையவில்லை என்பது போல, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கடவுள்களாக உருவாக்கினர். 4. இருப்பினும், சிலர் தங்கள் மானக்கேடுகளை ஒருபக்கம் வைத்துவிட்டு இந்த விடயங்களைக் கண்டுபிடித்த காரணங்களையும், அதன் பின்னால் இருக்கும் நோக்கத்தையும், காமம் களியாட்டம் போன்ற கெட்ட செயல்களை தெய்வங்களாக்கி அவற்றை வணங்க வேண்டிய விடயங்களாக மாற்றியுள்ளனர், அதாவது அவர்களின் ஈரோஸ் மற்றும் பாஃபோஸில் உள்ள அப்ரோடைட் போன்றர்களைப் பற்றிக் கூறலாம். இதற்கிடையில், மற்றவர்கள் தாங்கள் செய்யப்போகும் தவறுகளில் அவர்களை மிஞ்ச வேண்டுமென முயற்சித்து, தங்கள் தலைவர்களையோ அல்லது மக்களையோ கடவுள்களாக உருவாக்கினர். அவர்களிடையே மிகவும் பிரபலமானவர் ஆர்கேடியன் ஹெர்ம்ஸ் மற்றும் இந்தியர்களான டியோனிசஸ், எகிப்தியர்களான ஐசிஸ், ஓசிரிஸ் மற்றும் ஹோரஸ், மற்றும் நம் காலத்தில் ஆன்டினஸ், ரோமானிய பேரரசராக இருந்த மிகவும் புகழ்பெற்ற ஹாட்ரியன் என்பவர் ஒருபோதும் நல்லவராகவோ, மரியாதைக்குரியவராகவோ இருந்ததில்லை என்பதை மக்கள் அறிந்திருந்தாலும், அவர் காமவெறி நிறைந்தவராக இருந்தார். மக்கள் அவர்களின் கொடுங்கோன்மைக்கு அஞ்சி அவர்களை வணங்கும் நிர்பந்தத்துக்குள்ளாயினர். ஹாட்ரியன் எகிப்துக்குச் சென்றபோது, அவர் தனது மனத்துக்குப் பிடித்த இளைஞனான ஆன்டினஸை, அவன் இறந்த பிறகும் வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். ஹாட்ரியன், இளைஞன் ஆன்டினஸ் இறந்த பிறகும் அவனை உண்மையிலேயே நேசித்தார். இருப்பினும், ஹாட்ரியன் சிலை வழிபாட்டிற்கு எதிராக கடுமையான அதிருப்தியைக் கொண்டிருந்தார். அத்தகைய நடைமுறைகள் அவற்றை உருவாக்கியவர்களின் விருப்பங்களிலிருந்து எழுந்தன என்பதை வெளிப்படுத்தினார். இது சாலமோனின் ஞானம் 14:12 இல் “சிலைகள் செய்யத் திட்டமிட்டதே விபசாரத்தின் தொடக்கம். அவற்றைக் கண்டுபிடித்ததே வாழ்வின் அழிவு” என்ற ஏற்கனவே கூறப்பட்ட கடவுளின் ஞானத்தோடு ஒத்துப்போகிறது. இது சராசரியாக சிலைகளை உருவாக்குவது ஒழுக்கக்கேடான நடத்தையின் தொடக்கமாகும் என்று கூறுகிறது. 5. நாங்கள் சொல்வதை நம்புவது கடினம் என்றோ ஆச்சரியப்படக்கூடியது என்றோ நினைக்காதீர்கள். சிறிது காலத்திற்கு முன்பு, ரோமானிய அரசவை சில பேரரசர்களுக்கு கடவுள்கள் ஸ்தானத்தைப் போன்ற ஒரு ஸ்தானத்தை வழங்க முடிவு செய்து, மக்கள் அவர்களை வணங்க வேண்டுமெனக் கட்டளையிட்டது. அவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எதிரிகளாகக் கருதி, நல்லவர்களை மட்டும் மனிதர்களாக நடத்தினர். இருப்பினும், இந்த பேரரசர்கள் வெறும் மனிதர்களாக இருந்து, அவர்கள் அழியக் கூடியவர்கள் என்பதை ஒப்புக்கொண்டாலும், கடவுள்களை உருவாக்கும் சக்தி தங்களுக்கு இருப்பது போல் நடித்து அவர்களின் போலியான நல்ல குணங்களை வெளிக்காட்டி தாங்களுக்கு வேண்டியவர்களை நோக்கி அவர்களை வணங்கும்படி கட்டளையிட்டார்கள். 6. அவர்கள் கடவுள்களை உருவாக்க விரும்பினால், அவர்கள் முதலில் தாங்கள் கடவுள்களாக இருக்க வேண்டும், ஏனென்றால் படைப்பவர்கள் தான் படைத்ததை விட சிறந்தவர்களாக இருக்க வேண்டும். தீர்ப்பளிப்பவர், தீர்ப்புக்குள்ளானவர் மீது அதிகாரம் கொண்டவராக இருக்கிறார். அதேபோலத்தான், யாராவது ஏதாவது கொடுக்கும்போது, அதைப் பெறுபவரை விட கொடுப்பவர் உயர்ந்த நிலையில் இருக்கிறார். எனவே, அவர்கள் யாரையாவது கடவுளாகத் தேர்ந்தெடுத்தால், அவர்கள் முதலில் கடவுளின் ஸ்தானத்தையொத்த ஸ்தானத்தில் இருக்க வேண்டும். இருப்பினும், இங்கே விசித்திரமான அம்சம் என்னவென்றால், சாதாரண மனிதர்களைப் போல ஒருநாள் இறந்துவிடும் ஒருவரை எவ்வாறு கடவுளாகக் கருதமுடியும்? ஆகவே இதுபற்றிய அவர்களின் முடிவு தவறானது என்பது தெளிவாகிறது.
10. தீசஸின் ஆணைக்கமைய, கிரேக்க கடவுள்கள் மனித தோற்றத்தை ஒத்த தோற்றத்தையே கொண்டுள்ளதால் வழக்கமான மக்கள் எவ்வாறு கடவுள்களாக மாறினர் என்பதை விளக்குகிறது
ஆனால் இந்த வழக்கம் புதியதல்ல, அத்தோடு ரோமானிய அரசவையிலிருந்து தொடங்கவும் இல்லை: மாறாக, இது தொன்றுதொட்டு வந்த ஒரு வழக்கமாக இருந்து வந்தது. இந்த நடைமுறை முதலில் சிலைகளை வடிக்கப் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க வரலாற்றில் கூறப்பட்டுள்ளபடி, பிரபலமான கிரேக்க கடவுள்களான சீயஸ், போஸிடான், அப்பொலோ, ஹெபஸ்டஸ், ஹெர்ம்ஸ் மற்றும் ஹேரா, டிமீட்டர், அதீனா மற்றும் ஆர்ட்டெமிஸ் ஆகியோருக்கு தீசஸ் பட்டங்களை வழங்கினார். இந்த முடிவுகளை எடுத்தவர்கள் இறுதியில் இறந்துபோய் அவர்களுக்காகத் துக்கமும் அனுஷ்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த முடிவுகளால் மதிக்கப்பட்டவர்கள் கடவுள்களாக வணங்கப்படுகிறார்கள். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததும் பைத்தியக்காரத்தனமான செயலும் ஆகும்! இவ்வாறான முடிவுகளை யார் எடுத்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும், இருப்பினும் அவர்களால் மதிக்கப்படுபவர்களை அவர்கள் கௌரவிக்கத் தவறவில்லை. 2. அவர்களின் முட்டாள்தனமான வழிபாடு ஆண் கடவுள்களுடன் நிற்கவில்லை, அவர்கள் பெண்களுக்கும் கடவுள்கள் என்ற தெய்வீக அந்தஸ்தை வழங்கினர் என்பது துரதிர்ஷ்டவசமானது. பொது விவகாரங்களில் தலையிடவோ, ஈடுபடவோ அனுமதியற்ற பெண்கள் கூட கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வணக்கத்துக்குரியவர்களாகவும் மரியாதையுடனும் நடத்தப் படுகிறார்கள். இது தீசஸ் முன்பு குறிப்பிட்டதைப் போன்றது. எகிப்தில் ஐசிஸ் என்ற பணிப்பெண் மற்றும் மற்றொரு இளைய பெண் ஆகியோருடன் அப்ரோடைட் போன்றவர்களும் காணப்பட்டனர். ஏனைய கடவுள்களின் பெயர்களைப் பற்றிப் பேசுவது அவ்வளவு சரியானதல்ல என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவை மிகவும் விசித்திரமானவை என்பதால். 3. பண்டைய காலங்களில் மட்டுமல்ல, நம் காலத்திலும் கூட, கணவன்மார், மனைவிமார், சகோதர சகோதரிகள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த பலர் அவர்களது உருவங்களை செதுக்கி அவர்களை நினைவுகூர்ந்தனர். விசேடமாக, கணவன்மாரை இழந்த மனைவியர் இவ்வாறான விடயங்களில் அதிக அக்கறை செலுத்தினர். காலப்போக்கில், மக்கள் இந்த உருவங்களைப் போற்றி அவற்றைக் கடவுள்களாக வணங்கத் தொடங்கினர். இது இயற்கைக்கு உகந்தது அல்ல. இவ்வாறு இழந்த அன்புக்குரியவர்களின் பெற்றோர் அவர்களை நினைவுகூர்ந்தனர், ஆனால் கடவுள்களாகப் பார்க்கவில்லை; அவர்கள் அப்படிப் பார்த்திருந்தால், அவர்களது அன்புக்குரியவர்கள் இறந்துபோய் விட்டதாக எண்ணி துக்கப்பட மாட்டார்கள். அவர்கள் இல்லாதபோது அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளவும், ஆறுதல் பெறவும் அவர்கள் உருவங்களைச் செய்தார்கள். இருப்பினும், பிற்காலத் தலைமுறையினர் இந்த உருவங்களை உண்மையான கடவுள்கள் போல எண்ணி, முட்டாள்தனமாக அவற்றை நோக்கி செபித்து, உண்மையான கடவுளைப் போலவே அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். 4. எகிப்தில், மக்கள் இன்னும் ஒசைரிஸ், ஹோரஸ், டைபோ மற்றும் பிறரை நினைவுகூர்கிறார்கள். டோடோனாவிலும், கிரீட்டில் உள்ள கோரிபாண்டஸிலும் உள்ள கொப்பரைகள், சீயஸ் ஒரு கடவுள் அல்ல, ஒரு மனிதன், ஒரு நரமாமிச தந்தையிடமிருந்து பிறந்த மனிதன் என்பதை நிரூபிக்கின்றன. இங்கே மற்றுமொரு வேடிக்கையான விடயம் என்னவென்றால், கடவுளைப் பற்றிய தனது அறிவிற்காக கிரேக்கர்களால் மிகச் சிறந்த தத்துவஞானி என்று போற்றப்பட்ட பிளேட்டோ கூட, மனித கற்பனையில் உருவான ஒரு கலையம்சமான ஆர்ட்டெமிஸை வணங்க சாக்ரடீஸுடன் பெய்ரியஸுக்குச் சென்றார் என்று சரித்திர சான்றுகள் கூறுகின்றன.
11. புறஜாதி தெய்வங்களின் கிரியைகள்; குறிப்பாக சீயஸின் செயல்கள்
நீண்ட காலத்திற்கு முன்பே சிலை வழிபாட்டின் ஆபத்துகள் குறித்து வேதாகமம் நம்மை எச்சரித்தது. சிலைகளை உருவாக்குவது ஒழுக்கக்கேடான நடத்தைக்கு வழிவகுக்கிறது மற்றும் நம் வாழ்க்கையை கெடுக்கிறது என்று அது கூறியது. சிலைகள் ஆரம்பத்தில் மட்டுமல்ல, என்றென்றும் நிலைக்காதவை. அவை மக்களின் ஆணவம் மற்றும் அறிவீனம் காரணமாக உலகிற்கு வந்தன.எனவே விரைவில் முடிவுக்கு வந்துவிடும். உதாரணமாக, துக்கத்தில் இருக்கும் ஒரு தந்தை, தனது இறந்த குழந்தையின் சிலையை உருவாக்கி, அந்தச் சிலை இறந்த ஒருவரையே நினைவூட்டும் என்றபோதும், காலப்போக்கில் அதை ஒரு கடவுளைப் போலக்கூட நடத்ததுவது மட்டுமல்லாமல், அதன் நினைவாக அவர் சடங்குகளையும் தியாகங்களையும் கூடச் செய்யலாம். காலப்போக்கில், ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு பழக்கம் ஒரு சட்டமாக மாறியது. அரசர்கள் தொலைவில் இருப்பதால் நேரில் அவர்களைக் கௌரவிக்க முடியாது என்பதால் மக்கள் அவர்களை சிலைகளாக வடித்து வணங்கினர். அப்படியான அரசர்களுக்கு மரியாதை காட்ட, அவர் தங்களுடன் இருப்பது போல் அவரைப் புகழ்ந்து பேச அவர்கள் நம்பிக்கையுடன் உருவங்களை உருவாக்கினர். சிலைகளை வடிக்கும் கலைஞர்களின் கடின உழைப்பு மற்றும் நுட்பம் மக்களை மேலும் மூடநம்பிக்கைக்கு இட்டுச் செல்ல உதவியது. அதிகாரத்தில் உள்ள ஒருவரை கவரும் தனது முயற்சியில் அவர் தனது அனைத்து திறன்களையும் பயன்படுத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் தோன்றும் உருவங்களை அந்தக் கலைஞர் உருவாக்கினார். முன்பு அவர் ஒரு சாதாரண மனிதராக இருந்தபோதிலும், அவரது இந்த நேர்த்தியான வேலைப்பாடு காரணமாக பலர் அவரை ஒரு கடவுளாகப் பார்க்கத் தொடங்கினர். இந்த சூழ்நிலைதான் மக்களை தவறாக வழிநடத்தியது. ஏனெனில் துன்பங்கள் அல்லது ஒடுக்குமுறையால் அவதிப்பட்டோர், கற்கள் மற்றும் மரங்கள் போன்ற சாதாரண பொருட்களுக்கு தெய்வீக குணங்களைக் கொடுத்து அவற்றை வழிபடத் தொடங்கினர். வேதாகமத்தில் காட்டப்பட்டுள்ளபடி, சிலைகள் எவ்வாறு உருவாக்கப் பட்டன என்பதைப் பற்றிய கதையைப் புரிந்துகொள்வது முக்கியம். இப்போது, இந்த சிலைகள் ஏன் வழிபாட்டிற்கு தகுதியற்றவை என்பதையும் அவற்றை வழிபடும் மக்களின் கருத்துக்களைப் பயன்படுத்தியும் நான் உங்களுக்குக் காண்பிப்பேன். முதலாவதாக, அவர்கள் வணங்கும் கடவுள்களின் செயல்களைப் பார்த்தால் அப்படிப்பட்டவை உண்மையில் கடவுள்களே அல்ல, மாறாக அவை மிகவும் மனிதர்களைப் போலவே மிகவும் இழிவானவர்களாகவும் வெட்கக்கேடானவர்கள் என்பதையும் நாம் காண்கிறோம். உதாரணமாக, கவிதைகளில் ட்ரொஜன்களின் சுவர்கள் அவரது நோக்கங்களுக்கு எதிராக அழிக்கப்படக்கூடாது என்ற பீதியில் பதட்டத்திலும் சீயஸ் கெனிமீடைக் கடத்திச் சென்று அவனைத் தகாத செயல்களில் ஈடுபடவைத்தார் என்றும், காம வெறிகொண்டு இரகசிய பாலியல் உறவுகளைப் பேணிவந்தார் போன்றவை பற்றியும் நாம் கேள்விப் படுகிறோம். தனது மகன் சர்பீடனுக்காக அவர் துக்கப் படுவதையும், உதவ விரும்புவதையும், ஆனால் உதவியற்றவராக உணருவதையும் காண்பது வருத்தமாக இருக்கிறது. ஏதீனா, ஹேரா மற்றும் போஸிடான் போன்ற பிற கடவுள்கள் அவருக்கு எதிராக சதி செய்யும்போது, நூறு கைகளைக் கொண்ட தீடிஸ் மற்றும் ஏகீயோன் போன்றோரிடமிருந்து அவருக்கு உதவி கிடைக்கிறது. அவன் இன்பங்களில் சிக்கிக் கொண்டு, பெண்களுக்கு அடிமையாகி, விலங்குகள், பூச்சிகள் மற்றும் பறவைகள் போல் வேடமிட்டு சாகசங்களில் ஈடுபடுகிறான். தன் தந்தையின் திட்டங்கள் காரணமாகவோ அல்லது குரோனோஸ் அவனால் கட்டுப்படுத்தப்படுவதாலோ அல்லது தன் தந்தையை காயப்படுத்தும் காரணமாகவோ கூட அவன் ஒளிந்து கொண்டிருக்கலாம்! இப்படியான தகாத செயல்களைச் செய்துகொண்டு, சாதாரண மக்கள் கூட செய்யப் பயப்படும் செயல்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுபவரை கடவுள் என்று அழைப்பது என்ன விதத்தில் நியாயம்?
12. புறஜாதி தெய்வங்கள் குறித்துக் கூறப்படும் பிற வெட்கக்கேடான செயல்கள்; இவை யாவும் அவர்கள் முன்பு சாதாரண மனிதர்களாக இருந்தார்கள், நல்ல மனிதர்களாகக் கூட இல்லை என்பதை நிரூபிக்கின்றன
சுற்றி வளைத்து பேசுவதை விடுத்து, அவரது மோசமான நடத்தைக்கான சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். செமெலே, லெடா, அல்க்மீன், ஆர்ட்டெமிஸ், லெட்டோ, மாயா, யுரோப்பா, டானே மற்றும் அன்டியோப் ஆகியோரிடம் அவர் எவ்வாறு தவறாகவும் நியாயமற்றதாகவும் நடந்து கொண்டார், அத்தோடு தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்து கொண்டு மனைவியாய் எப்படி நடத்தினார் என்பதை கண்டவர்கள் அவமதிப்புக்கும் தண்டனைக்கும் தகுதியானவர் என்று அவரை அவமதித்து மரணத்திற்கு தகுதியானவர் என்று அறிவிக்க மாட்டார்களா? அவர் தனது சகோதரியான மனைவியை வஞ்சித்து விபச்சாரம் செய்தது மட்டுமல்லாமல், அந்த விபச்சாரத்தின் மூலம் பிறந்தவர்களை கடவுள்களுக்கு சமமாக, உயர்வாக மாற்றியது மட்டுமன்றி, அவர்களின் தெய்வீகத்தைப் பயன்படுத்தி தனது தவறுகளை மறைத்து வந்தார். இவ்வாறாகப் பிறந்த குழந்தைகளில் டியோனிசஸ், ஹெராக்கிள்ஸ், டியோஸ்குரி, ஹெர்ம்ஸ், பெர்சியஸ் மற்றும் சோட்டீரா ஆகியோர் அடங்குவர். 2. கிரேக்கர்கள் மற்றும் ட்ரோஜான்களுக்காக ட்ரோய் நகரில் கடவுள்கள் என அழைக்கப்படுவோர் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை எவராலும் எப்படிப் பார்க்காமலும் அவர்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதை கவனிக்காமலும் இருக்க முடியும்? அவர்களின் பொறாமை மனிதர்களை சண்டையிடத் தூண்டுகிறது. டையோமெட் என்பவனால் காயத்துக்குள்ளான ஏரெஸ் மற்றும் அப்ரோடைட்டை அல்லது ஹெரா மற்றும் ஹேடஸை கடவுள் என்று அவர்கள் அழைக்கிறார்கள். அதேபோல் பெர்சியஸ் என்பவனால் காயத்துக்குள்ளான டையோனிசஸை, ஆர்காஸால் ஏதெனா காயத்துக்குள்ளானதையும், ஹெபஸ்டஸ் என்பவன் விழுந்து நொண்டி நொண்டி நடப்பதையும் நாம் பார்க்கும்போது, அவர்களை எப்படிதான் கடவுள்களாக நினைக்க முடியும்? அதற்கு பதிலாக, நாம் அவர்களை மனிதர்களைப் போல பலவீனமானவர்களாகவே பார்க்க வேண்டும். காயமடைந்தவர்களை விட அவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியவர்களே போற்றப்படுகிறார்கள். 3. ஹெஃபஸ்டஸ் அவர்களுக்காக ஒரு பொறியை வைப்பதன் மூலம் அஃப்ரோடைட்டை ஏரெஸ் ஏமாற்றுவதையும், ஹெஃபஸ்டஸ் அவர்களின் முட்டாள் தனத்தைப் பார்த்து சிரிக்காமல் இருக்குமாறு அழைத்த மற்ற கடவுள்களையும் பற்றி என்ன சொல்ல முடியும்? ஹெராக்கிள்ஸ் குடிபோதையில் ஓம்பேலுடன் நடந்துகொள்வதைப் பார்த்து எவரும் சிரிக்காமல் இருக்க முடியுமா? அவர்களின் செயல்கள், அவர்களின் சுயநலம் கொண்ட ஆசைகள் போன்றவற்றோடு, தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட அவர்களின் ஆடம்பரமான சிலைகளுக்கு அதிக விளக்கம் தேவையில்லை, ஏனெனில் அவை உண்மையில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடியன. அவை ஏமாற்றுவதற்கான ஆதாரமாகக் காட்டுவதற்கு போதுமான எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுகின்றன; இதனால் உங்கள் மனம் அவற்றை நம்புபவர்களையிட்டு பரிதாபப்படவைக்கும். 4. தங்கள் வாழ்க்கைத் துணையை ஏமாற்றுவதற்காக ஒருவரை வெறுக்கும் மக்கள், துரோகம் இழைக்கக் கற்பிப்பவர்களைப் பாராட்ட வெட்கப்படுவதில்லை. அவர்கள் தகாத உறவைத் தவிர்த்தாலும், அதில் ஈடுபடுபவர்களைப் பாராட்டுகிறார்கள். குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிப்பது தவறு என்பதை அவர்கள் அறிவார்கள், ஆனால் அதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள். மேலும் சாதாரண மக்கள் கூட சட்டவிரோதமான விஷயங்களைத் தங்கள் கடவுள்கள் என்று அழைப்பவர்கள் குறித்து அவர்கள் வெட்கப்படுவதில்லை.
13. உருவ வழிபாடு முட்டாள்தனமானது; அது கலைக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது
மக்கள் மரத்தாலும் கல்லாலும் ஆன பொருட்களை வணங்கும்போது, அவர்கள் அந்தக் கற்கள் மீது நடந்து செல்கிறோம், அந்த மரக்கட்டைகளை எரிக்கிறோம் எந்த எவ்வித பகுத்தறியும் திறனும் இன்றி, இவற்றை வணங்கும் கடவுள்களாகக் கருதுகிறார்கள். இதை ஏனோ அவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள். அவற்றை உருவாக்கிய கைவினைஞரின் திறமையை உண்மையில் மதிக்கவேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், அவர்கள் இந்த பொருட்களை கடவுள்களின் வடிவங்களாக எண்ணி வணங்குகிறார்கள். ஆகவே அவர்கள் வணங்குவது உண்மையான கடவுளை அல்ல. 2. கல் கரடுமுரடாகவும், மரம் வடிவமைக்கப்படாமலும் இருந்தாலும், மக்கள் கல்லின் மீது நடந்து செல்கிறார்கள். மரங்களைத் தங்கள் சொந்த தேவைகளுக்காகவும், அன்றாட நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு கலைஞர் கல்லையோ அல்லது மரத்தையோ ஒரு ஆண் அல்லது பெண்ணின் வடிவத்தில் செதுக்கி வடிவமைக்கும்போது, மக்கள் அந்தக் கலைஞருக்கு நன்றி செலுத்தி பின்னர் இவற்றைக் கடவுளாக வணங்கத் தொடங்குகிறார்கள. அவற்றுக்காக அந்தக் கலைஞருக்கு பணம் செலுத்துகிறார்கள். முன்பு அவற்றைச் செதுக்கி வடிவமைத்து வந்தாலும் கூட, பெரும்பாலும் கலைஞர்கள் இந்த உருவங்களைத் தாங்கள் செய்ததை மறந்துவிட்டு அவற்றை வழிபட்டு அவற்றைக் கடவுள்கள் என்று அழைக்கிறார்கள். 3. படைப்புகளை மட்டும் கௌரவிப்பதைக் காட்டிலும், கலைஞரின் திறமையை அங்கீகரிப்பதன் மூலம் இவற்றைப் போற்றுவது நல்லது. அழகு கலைஞரின் கைவண்ணத்தில் இருந்து வருகிறது, பயன்படுத்தப் படும் பொருட்களிலிருந்து மட்டுமல்ல. படைப்புகள் வருவதற்கு முன்பே கலைஞர்கள் இருந்தார்கள், அவர்கள் விரும்பியபடி அவற்றை வடிவமைத்தார்கள் என்பதால் அவர்களைக் கௌரவிப்பது மிகவும் நியாயமானதாக இருக்கிறது. இருப்பினும், மக்கள் பெரும்பாலும் இதைப் புறக்கணித்து, படைப்புகளை வணங்கி அவற்றை நித்தியமானவை என்று கருதுகிறார்கள். உண்மையில், கலைஞர் அவற்றைப் பராமரிக்க அருகில் இல்லை என்றால் அவர் உருவாக்கிய படைப்புகளும் இறுதியில் சோரம்போய் மறைந்துவிடும். 4. பார்க்கவோ கேட்கவோ முடியாதவற்றை வணங்குபவர்களுக்காக நாம் அனுதாபப்படத்தான் முடியும். இப்படியானவர்கள் உயிருடன் இருந்தும், பகுத்தறிவு கொண்டவர்களாக வாழ்ந்தும், உயிரற்ற பொருட்களை கடவுள்கள் என்று அழைக்கிறார்கள். இன்னும் விசித்திரமாக அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் உயிரினங்களுக்குக் கூட அடிமைகளாய் சேவை செய்கிறார்கள். இது என்னுடைய வெறும் கூற்று என்றும், நான் அவர்களை அவமதிக்கிறேன் என்றும் நினைக்க வேண்டாம்; ஏனென்றால் சற்று கூர்ந்து கவனித்தால் இதை எவராலும் காணக்கூடியதாயிருக்கும்.
14. சிலை வழிபாடு வேதாகமத்தால் கண்டிக்கப்படுகிறது
இருப்பினும், இவை அனைத்திற்கும் சிறந்த சான்று பரிசுத்த வேதாகமத்திலிருந்து வருகிறது, இது முன்கூட்டியே நம்மை எச்சரிக்கிறது, ‘அவர்களுடைய சிலைகள் வெள்ளியாலும் தங்கத்தாலும் செய்யப்பட்டவை, மனித கைகளால் செய்யப்பட்டவை.’ அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் பார்க்க முடியாது; அவர்களுக்கு வாய் இருந்தாலும் பேச முடியாது; அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேட்க முடியாது; அவர்களுக்கு மூக்கு இருந்தாலும் முகர முடியாது; அவர்களுக்குக் கைகள் இருந்தாலும் தொட முடியாது; அவர்களுக்குக் கால்கள் இருந்தாலும் நடக்க முடியாது; அவர்கள் தங்கள் தொண்டையால் ஒலி எழுப்ப முடியாது. அவற்றைப் படைப்பவர்களும் அவர்களைப் போலவே தான் இருப்பார்கள். தீர்க்கதரிசிகளால் விமர்சிக்கப்படுவதை அவர்களால் தவிர்க்கமுடியாது; “ஒரு கடவுளை உருவாக்கி, வீணானதை எல்லாம் செதுக்கியவர்கள் வெட்கப்படுவார்கள்; அவர்கள் யாரால் உருவாக்கப்பட்டார்களோ அவர்கள் அனைவரும் வறண்டு போவார்கள்; மனிதர்களில் காது கேளாதவர்கள் அனைவரும் ஒன்றுகூடி எழுந்து, குழப்பமடைந்து ஒன்றாக வெட்கப்படட்டும் என்று ஆவியானவர் கூறும் இடத்தில் அவர்களின் தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. தச்சன் இரும்பைக் கூர்மை ஆக்குகிறான், அதை வடிவமைக்க ஒரு கருவியைப் பயன்படுத்துகிறான், அதைத் தன் கைகளால் பலப்படுத்துவான். அதேநேரம் அவன் பசியினால் பலவீனமடைவான், அவனுக்குக் குடிக்க தண்ணீர் கூட இருக்காது. ஒரு தச்சன் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து, அதை அளந்து, வெட்டி, ஒன்றாக இணைத்து அதை ஒரு மனிதனின் வடிவமாக அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கிறார். அவர் அதை தனது வீட்டில் வைக்கிறார். இறைவன் நட்ட தோப்பிலிருந்து வெட்டிய மரத்தைப் பயன்படுத்தியே இத்தனை வேலைகளையும் அவர் செய்து முடிக்கிறார். மழை மரம் வளர உதவியது. ஆனால் மக்கள் அதைக் கொண்டு அடுப்பு மூட்டவும், உணவையும், தண்ணீரையும் சூடாக்கவும், அப்பங்கள் மற்றும் உணவைத் தயாரிக்கவும் பயன்படுத்த முடிந்தது. அதேவிதமாக, அவர்கள் மரத்தில் சிலவற்றை சிலைகளாகவும், மிகுதியை தீயில் எரிந்திருந்தாலும் அவற்றை தெய்வங்கள் என்று வணங்கினர். ஒருவன் மீதிப்பட்ட மரத்தில் பாதியை எடுத்து, அதைக்கொண்டு தீயை மூட்டி, சிறிது இறைச்சியை வாட்டி எடுத்து அதை உண்டு, தான் நிறைவாகவும் இதமாகவும் இருப்பதாக உணர்ந்தான். ‘இது நல்லது, ஏனென்றால் நெருப்பின் முன்னாள் நான் இதமாக இருப்பதாக உணர்கிறேன்’ என்றான். ஆனால் அதேநேரம், மற்றைய பாதி மரக்கட்டையை செதுக்கி அதன் முன்னின்று, ‘என்னைக் காப்பாற்று, ஏனென்றால் நீயே என் கடவுள்’ என்று சொல்லி அதை வணங்குகிறான். அவனால் அறிந்துகொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை. ஏனென்றால் அவனின் கண்பார்வை மிகவும் மங்கலாக இருந்தது, அவனது இதயத்தால் எதையும் உணர முடியவில்லை. அவன் அந்த பாதி மரக்கட்டையை நெருப்பில் எரித்து, அதில் அப்பத்தை சமைத்து, இறைச்சியை வாட்டி, உண்டதைக் கவனியாது மிச்சமிருந்த எரிந்த மரக்கட்டையை, அது மோசமான நிலையில் இருந்தாலும் தான் வழிபட அதை தெய்வமாய் எண்ணி உபயோகித்தான். இப்படிப்பட்டவர்களின் இதயங்கள் வெறுமையாய் உள்ளன. அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். எவராலும் தங்கள் ஆன்மாக்களை காப்பாற்ற முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். அப்படியானால், ‘என் வலது கை ஒரு பொய்யைக் கொண்டிருக்கிறது’ என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?’ 2. பரிசுத்த வேதாகமம் கூட இப்படிப்பட்டவர்களை அவமரியாதைக்குரியவர்கள் என்று கூறும்போது, அவர்களை ஏன் கடவுளற்ற ஜென்மங்களாகக் கருத முடியாது? உண்மையான சக்திக்குப் பதிலாக உயிரற்ற ஜடப்பொருட்களை வணங்குவதில் அவர்கள் ஈடுபட்டால், அவர்கள் எப்படி மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும்? அவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? உண்மையான கடவுளுக்குப் பதிலாக, உயிரோ உணர்ச்சியோ இல்லாத விஷயங்களை நம்புவதற்கு அவர்களால் என்ன விதமான சாக்குப்போக்குகள் சொல்ல முடியும்?
15. கவிஞர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளில் கடவுள்களைக் காட்டுவதுபோல், இந்த உருவங்கள் உயிரற்றவை, உண்மையான கடவுள்கள் அல்ல, நல்ல மனிதர்களும் அல்ல என்பதைக் காட்டுகிறது
மக்களை அவர்களது புரிதலின்மைக்கு அப்பால் கொண்டுசெல்ல வேண்டுமானால், கலைஞர் உடல் வடிவம் இல்லாத கடவுள்களை உருவாக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் கைவண்ணத்தில் உருவாகும் இந்த சிலைகளால் விஷயங்களை உணர முடியும் என்று அவர்களால் பாமர மக்களை நம்ப வைக்க முடியும். ஆனால் உண்மை என்னவென்றால், அவை கண்கள், மூக்கு, காதுகள், கைகள் மற்றும் வாய் போன்ற புலன்களின் சின்னங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும் அவைகளால் எதையும் உணரவோ புரிந்துகொள்ளவோ முடியாது. அவைகளிடம் இந்த அம்சங்கள் இருந்தபோதும் அவற்றைப் பயன்படுத்துவதில்லை; அவர்களால் நிற்கவோ உட்காரவோ முடியும், ஆனால் அவர்களால் உண்மையில் எதையும் செய்ய முடிவதில்லை. அவர்கள் உண்மையான மனிதர்களைப் போல செயல்பட முடியாது, மாறாக, அவர்கள் அசையாமல் இருக்கிறார்கள். அவை கடவுள்களாக இருப்பதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை, ஆகவே அவை தெளிவாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட உயிரற்ற ஜடங்கள். 2. இந்த போலிக் கடவுள்களைப் பற்றிப் பேசிய கவிஞர்களும் எழுத்தாளர்களும், தங்கள் கெட்ட செயல்களையும் ஒழுக்கக்கேடான வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்ளாமல், தாங்கள் தான் கடவுள்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் கடவுளின் பெயரை மட்டுமே பயன்படுத்தியிருந்தால், அவர்கள் பொய்களை நம்பும்படி மக்களை தவறாக வழிநடத்தியிருக்கலாம். அதற்கு பதிலாக, சீயஸின் அன்பு, மற்றைய கடவுள்களின் மோசமான நடத்தை, அவர்களின் பொறாமை மற்றும் கோழைத்தனம் பற்றிய கதைகளைச் சொல்வதன் மூலம், அவர்கள் உண்மையான கடவுள்களைப் பற்றியோ அல்லது நல்ல மனிதர்களைப் பற்றியோ பேசவில்லை என்பதைக் காட்டினர். மாறாக, அவர்கள் மரியாதைக்குத் தகுதியற்ற, வெட்கக்கேடானவர்களைப் பற்றிய கதைகளைச் சொன்னார்கள்.
(1) கடவுள்களைப் பற்றிய மோசமான கதைகளுக்கு கவிஞர்கள்தான் காரணம் என்று சிலர் வாதிடுகின்றனர். அப்படியென்றால், கடவுள்கள் சிறப்பாக இருக்கிறார்கள் என்பதை நாம் உண்மையில் நிரூபிக்க முடியுமா? கதைகளும் கடவுள்களும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. கடவுள்களின் செயல்களை நாம் பாதுகாக்க வேண்டும் அல்லது அவை உண்மையானவை அல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுள்களைப் போலல்லாமல், முக்கிய கதாபாத்திரங்கள் தங்கள் குணாதிசயங்களுடன் பொருந்தாத விஷயங்களைச் செய்ததாகக் கூறப்படுவதில்லை
இருப்பினும், ஆழமாக சிந்திக்கமுடியாத சிலர் கவிஞர்கள் எழுதும் தனித்துவமான வழியைப் பற்றி வாதிடுவதோடு, கவிஞர்கள் பெரும்பாலும் உண்மைக்குப் புறம்பான விடயங்களைப் புனைந்து, பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக கற்பனையில் உதித்த கதைகளுக்கு உருவத்தைக் கொடுக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறலாம். அதனால்தான் கவிஞர்கள் கடவுள்களைப் பற்றிய கதைகளை எழுதியுள்ளனர் என்று அவர்கள் சொல்லக்கூடும். ஆனால் நேர்மையாகப் பார்த்தால், இந்த சாக்குப்போக்கு உண்மையில் அர்த்தமற்றதாகத் தெரிகிறது; குறிப்பாக இந்தத் தலைப்புகளில் இந்த கவிஞர்கள் உண்மையில் என்ன எதிர்பார்க்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் சற்று கவனித்துப் பார்த்தால் மேற்கூறிய அர்த்தமற்ற நிலை புலப்படுகிறது. 2. கவிஞர்கள் சொல்வது உண்மையல்ல, உருவாக்கப்பட்டது என்றால், சீயஸ், குரோனோஸ், ஹேரா மற்றும் ஏரஸ் போன்ற கடவுள்களின் பெயர்களும் பொய்யாக இருக்க வேண்டும் அல்லவா? அவர்கள் தங்கள் பார்வையாளர்களை ஏமாற்ற மேற்கூறப்பட்ட கடவுள்கள் இருப்பதாக பாசாங்கு செய்யலாம். ஆனால் கவிஞர்கள் இந்த கடவுள்கள் உண்மையானவர்கள் என்று பாசாங்கு செய்தால், அவர்கள் உண்மையில் இருப்பது போல் எண்ணிக்கொண்டு ஏன் அவர்களை வணங்கவேண்டும்? 3. இங்கே இவர்களால் கொடுக்கப்பட்ட பெயர்கள் உண்மையானவை என்றாலும், அந்தப் பெயர்களுக்கான பண்புகள் உருவாக்கப்பட்டவை என்று அவர்கள் வாதிடலாம். ஆனால் இந்த வாதம் பலவீனமானது. செயல்களைக் கண்டுபிடிக்க முடிந்தால், அவர்கள் பெயர்களையும் கண்டுபிடித்திருக்கலாமே. பெயர்கள் குறித்து அவர்கள் நேர்மையாக இருந்தால், அவர்கள் உருவங்கள் கொண்டிருக்கும் பண்புகளைப் பற்றியும் நேர்மையாக இருந்திருக்க வேண்டும். குறிப்பாக, இவர்கள் தெய்வங்கள் என்று அடையாளப்படுத்தியிருப்பவர்கள், தெய்வங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். மேலும் அவை மனித குணங்களைக் கொண்டிருப்பதாகக் காரணம் காட்டக்கூடாது. எப்படி தண்ணீருக்கு நெருப்பின் குணங்கள் இருப்பதாக உங்களால் கூறமுடியாதோ அது போலதான் இதுவும். நெருப்பு என்பது எப்போதும் எரியும் பண்பைக்கொண்டதுபோல, தண்ணீரின் பண்பு என்பது எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதே. 4. இவர்கள் குறிப்பிடுவதுபோல, செயல்கள் மற்றும் பண்புகள் தெய்வங்களுக்கு ஏற்றவை என்றால், அவற்றைச் செய்பவர்கள் கடவுள்களாக இருக்க வேண்டும்; அவை மனிதர்களின் செயல்களாக இருந்தால், குறிப்பாக ஏமாற்றுதல் போன்ற கெட்ட செயல்களாக இருந்தால், அத்தகைய செயல்களைச் செய்பவர்கள் கடவுள்கள் அல்ல, மனிதர்களாகவே தான் இருக்க வேண்டும். அவர்களின் செயல்கள் அவர்கள் யார் என்பதை பிரதிபலிக்க வேண்டும். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக்கொண்டு, அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் சொல்ல முடியும், மேலும் அவர்களின் செயல்களிலிருந்து அவர்களின் இயல்பை நீங்கள் இலகுவாகக் கண்டுபிடிக்கலாம். தண்ணீர் மற்றும் நெருப்பைப் பற்றி பேசும் ஒருவர் தண்ணீர் எரிகிறது அல்லது நெருப்பு குளிர்கிறது என்று சொல்ல மாட்டார். ஒருவன் சூரியன் மற்றும் பூமியைப் பற்றி விவாதிக்கும் போது, சூரியன் தாவரங்களையும் பழங்களையும் விளைவிக்கிறது என்றும் பூமிதான் ஒளியை கொடுக்கிறது என்று சொல்ல முனைந்தால், அது முற்றிலும் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். இதேபோல் எழுத்தாளர்கள் குறிப்பாக மகா கவிஞர் ஒருவர், சீயஸும் மற்றவர்களும் கடவுள்கள் என்பதை அவர்கள் உண்மையிலேயே அறிந்திருந்தால், அவர்களை கடவுள்கள் அல்ல, மாறாக மனிதர்கள், நிதானமான மனிதர்கள் அல்ல என்பதைக் காட்டும் செயல்களில் அவர்களை ஈடுபடுத்தியிருக்க மாட்டார்கள். 5. நீங்கள் சொல்வது போல், கவிஞர்கள் பொய் சொல்கிறார்கள் என்றால் வீரர்களின் துணிச்சலைப் பற்றி அவர்கள் ஏன் பொய் சொல்லவில்லை? துணிச்சல் மிக்கவர்கள் பலவீனமானவர்கள் என்றும், பலவீனமானவர்கள் துணிச்சலானவர்கள் என்றும் அவர்கள் பாசாங்கு செய்திருக்கலாம். அப்படியானால் அவர்கள் அகில்லிஸை கோழை என்று குற்றம் சாட்டியிருக்க வேண்டும், தெர்சிடசை அவரது வலிமைக்காகப் பாராட்டியிருக்க வேண்டும். அவர்கள் ஒடிஸியஸை முட்டாள் என்றும் நெஸ்டரை பொறுப்பற்றவராகவும், அதே நேரத்தில் டியோமெட் மற்றும் ஹெக்டரை பலவீனமானவர்களாகவும், ஹெகுபாவை வலிமையானவராகவும் காட்டியிருக்கலாம். அவர்கள் பொய்யாகவே இவற்றைச் சொல்லியிருப்பார்கள் என்றால், அது எல்லாவற்றுக்கும் பொருந்த வேண்டும். ஆனால் உண்மையில், அவர்கள் தங்கள் மக்களுக்காக உண்மையை உரைத்த அதே நேரத்தில், தங்களது கடவுள்கள் என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி பொய்களைச் சொல்ல வெட்கப்படவில்லை. 6. சிலர் தங்கள் ஒழுக்கக்கேடான செயல்களைப் பற்றி பொய் சொல்கிறார்கள் என்று கூறலாம், ஆனால் சீயஸை கடவுள்களின் தந்தை, மகாத்மா, ஒலிம்பியன் மற்றும் பரலோகத்தில் ஆட்சி செய்பவர் என்று பேசும்போது, கதைகளை உருவாக்குவதற்குப் பதிலாக உண்மையைச் சொல்வதாகவே நம்புகிறார்கள்; இது நானும் மட்டுமல்ல, வேறு எவரும் எளிதாக சவாலுக்கு உட்படுத்தக்கூடிய ஒரு வாதம். நாம் ஏற்கனவே காட்டியதை மீண்டும் யோசித்துப் பார்த்தால், அவர்களின் கூற்றுகளுக்கு எதிரான உண்மை தெளிவாகத் தெரியும். அவர்களின் செயல்கள் தான் அவர்கள் மனிதர்கள் என்பதைக் காட்டுகின்றன. ஆனால் அவர்கள் பெறும் பாராட்டுகள் மனிதர்களுக்குக் கிடைப்பதை விட அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை; ஏனென்றால், அப்படிச் செயல்படுவது தெய்வீக மனிதர்களின் இயல்பு அல்ல, அவ்வாறு செயல்படும் மனிதர்கள் கடவுள்கள் என்று எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
17. இங்கே உண்மை என்னவென்றால், அவதூறான கதைகள் நிஜமே, ஆனால் அவற்றுக்குக் கொடுக்கப்படும் பாராட்டுக்கு முகஸ்துதி செய்ய முயற்சிக்கும் கவிஞர்களே காரணம்
இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வர முடியும் என்று நினைக்கிறீர்கள்? மக்கள் தரும் பாராட்டுகள் பெரும்பாலும் பொய்யானவை மற்றும் அதிகப்படியான முகஸ்துதிக்குரியவை என்றாலும், அவர்கள் விவரிக்கும் செயல்களில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. இதை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் காணலாம். ஒருவர் மற்றொருவரைப் புகழ்ந்து பேசும்போது, அவர் பொதுவாக அவரது நடத்தையை விமர்சிக்க மாட்டார். அதற்கு பதிலாக, ஒரு மனிதனின் செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்போதும், மோசமான நடத்தையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவும், மற்றவர்களை ஏமாற்றி, அவர் செய்த தவறை மறைக்க முயற்சிப்பதற்காகவும் மக்கள் பெரும்பாலும் அவர்களை இன்னும் அதிகமாகப் பாராட்டுகிறார்கள். 2. ஒரு மனிதன் மற்றொரு மனிதனைப் புகழ்ந்து பேச வேண்டி ஏற்பட்டால், அவரின் நடத்தையிலோ அல்லது தனிப்பட்ட குணங்களிலோ, அவற்றுடன் தொடர்புடைய அவதூறு காரணமாகவோ அவரை உண்மையாகப் பாராட்ட முடியாத சூழ்நிலை காரணமாக, உண்மைக்குப் புறம்பான பாராட்டுகளை உபயோகித்து வேறு வழியில் அவர்களைப் புகழ்ந்து பேசக்கூடும். இதேபோல், தங்கள் கடவுள்கள் என்று அழைக்கப் படுபவர்களின் கெட்ட செயல்களால் வெட்கப்படும் சிறந்த கவிஞர்கள், அவர்களுக்கு மகத்தான பட்டங்களை வழங்குகிறார்கள். இருப்பினும், இந்த மகத்தான பட்டங்கள் மனித குறைபாடுகளை மறைத்துவிடாது என்பதை அவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள். மாறாக இவ்வாறான குறைபாடுகள் போன்ற காரணத்தால் கடவுளின் பண்புகள் அவர்களுக்குப் பொருந்தாது என்பதைக் காட்டுவதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். 3. அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்றாலும், கடவுள்களின் உணர்வுகளையும் செயல்களையும் விவரித்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அத்தோடு கடவுளின் சிறப்புப் பெயரையும் மரியாதையையும் வெறும் சாவுக்கு விதிக்கப்பட்ட மனிதர்களுக்குக் கொடுக்க முயன்றனர். இது ஒரு பெரிய மற்றும் தவறான செயல். இதன் காரணமாக இந்த மக்களின் உணர்வுகளைக் காட்டும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாயினர். இதனால் அவர்களைப் பற்றி எழுதப்பட்டவற்றைக் கொண்டு பார்க்கும்போது, அவர்கள் கடவுள்கள் அல்ல என்பதற்கான சான்றாக அனைத்து சந்ததியினருக்கும் ஒரு படிப்பினையாக அமையும்.
18. மத சார்பற்ற நம்பிக்கையை தக்கவைத்தல் தொடர்ந்தது. “வாழ்வதற்குத் தேவையான திறன்களை அவர்கள் உருவாக்கியதால் மக்கள் கடவுள்களை வணங்குகிறார்கள்” என்று கூறப்பட்டது. இருப்பினும், இது மனிதர்கள் செய்யும் ஒன்று, தெய்வீகமானது அல்ல. அப்படியானால், அனைத்து கண்டுபிடிப்பாளர்களும் ஏன் கடவுள்களைப் போல நடத்தப்படுவதில்லை?
அப்படியானால், இந்தக் கடவுள்களை நம்புபவர்கள் அவர்கள் உண்மையானவர்கள் தானா என்பதைக் காட்ட என்ன ஆதாரத்தை வழங்க முடியும்? அவர்கள் வெறும் மனிதர்கள், நல்லவர்கள் கூட அல்ல என்பதை எங்கள் வாதம் ஏற்கனவே காட்டியுள்ளது. இந்தக் கடவுள்கள் பயனுள்ள விஷயங்களைக் கண்டுபிடித்து மக்களுக்கு உதவியதாகக் கூறி அவர்கள் எதிர்வாதம் செய்ய முயற்சி செய்யலாம். உதாரணமாக, நாம் அறிந்தவரை சீயஸ் செயற்கைக் கலைக்கும், போஸிடான் கப்பல் பயணத்துக்கும், ஹெபஸ்டஸ் உலோக வேலைகளுக்கும், அதீனா நெசவுக்கும், அப்பல்லோ இசைக்கும், ஆர்ட்டெமிஸ் வேட்டையாடுவதற்கும், ஹேரா தையலுக்கும், டிமீட்டர் விவசாயத்திற்கும் பெயர் பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. 2. மனிதர்கள் திறமைகள் மற்றும் கலைகளுக்கு கடவுள்களைப் பாராட்டுவது மட்டுமல்லாமல், அவை மனித இயல்பிலிருந்து வந்தவை என்பதையும் அங்கீகரிக்க வேண்டும். இயற்கையைப் பற்றி அறிவதன் மூலம் மக்கள் கலையை உருவாக்கக் கற்றுக்கொள்கிறார்கள். அன்றாட மொழி கூட கலையை சித்தரிப்பதாகவே காணப்படுகிறது. எனவே, ஒருவர் தங்கள் கைவினைத்திறனில் சிறந்தவராக இருந்தால் அவர்கள் தெய்வீகமானவர்கள் என்று அர்த்தமல்ல; அவர்கள் மனிதர்கள் என்றே அர்த்தம். ஏனெனில் அவர்கள் இயற்கையைப் பின்பற்றுகிறார்கள். 3. இயற்கையாகவே கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்களுக்கு அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் அவர்களின் சொந்த ஆற்றல் மற்றும் ஆராய்ச்சி மூலம் அவர்கள் பல்வேறு திறன்களையும் கலைகளையும் வளர்த்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை. இந்தக் கலைகளைக் கண்டுபிடிப்பது அவர்களை கடவுளைப் போன்றவர்களாக ஆக்குகிறது என்று அவர்கள் கூறுவார்களானால், மற்றைய கலைகளைக் கண்டுபிடித்தவர்களையும் அதே பெயருக்கும் புகழுக்கும் தகுதியானவர்களாகக் கருத வேண்டும். 4. ஃபீனீசியர்கள் எழுத்துக்களை உருவாக்கினர், ஹோமர் காவியக் கவிதைகளை எழுதினார், எலியாவின் ஜெனோ ஒரு வாதிடும் முறையை உருவாக்கினார், சிராகஸ்ஸின் கோராக்ஸ் ஆணித்தரமான பேச்சில் கவனம் செலுத்தினார், அரிஸ்டேயஸ் தேனீ வளர்ப்பைக் கற்றுக்கொடுத்தார், டிரிப்டோலமஸ் விவசாயத்தை அறிமுகப்படுத்தினார், ஸ்பார்டாவின் லைகர்கஸ் மற்றும் ஏதென்ஸின் சோலன் சட்டங்களை உருவாக்கினார். எழுத்துக்கள், எண்கள், அளவீடுகள் மற்றும் எடைகளை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதை பலமேடிஸ் கண்டுபிடித்தார். நமது வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளபடி, மனித வாழ்க்கைக்கு பயனுள்ள யோசனைகள் பலவற்றை மேற்குறிப்பிட்ட அறிஞர்களும் கண்டுபிடிப்பாளர்களும் அறிமுகம் செய்துவைத்தனர். 4 . கலைகள் கடவுள்களை உருவாக்கினால், அவற்றின் காரணமாக செதுக்கப்பட்ட கடவுள்கள் தோன்றியிருந்தால், பிற கலைகளைக் கண்டுபிடித்தவர்களும் கடவுள்களாகக் கருதப்பட வேண்டும் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால் இந்தப் புதிய கலைகள் தெய்வீகமானவை என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவை என்று அவர்கள் நினைத்தால், இல்லாவிட்டால் அவற்றை நீதிமான்களாகப் பார்த்தால், சீயஸ், ஹேரா மற்றும் பிறவற்றையும் கடவுள்களாக அழைக்காமல் இருப்பது நியாயமாக இருக்கும். அவர்களை மனிதர்களாகப் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்கள் காலத்தில் மதிக்கப்படவில்லை என்பதால். அவர்களின் உருவங்கள் சிலைகளாக வடிக்கப்பட்டிருப்பது அவர்கள் வெறும் மனிதர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே.
19. சிலைகளை வழிபடுவதன் காரணமாக விளையும் முரண்பாடு; இந்தக் கருத்தை ஆதரிப்பதற்கான காரணங்கள்: (1) தெய்வீக இயல்பு என்பதை புலப்படும் வழியில் காட்ட வேண்டும். (2) மனிதர்கள் தேவதூதர்கள் மூலம் இயற்கைக்கு அப்பாற்பட்டவற்றுடன் தொடர்பு கொள்ள படங்கள் உதவுகின்றன
ஆண், பெண் மற்றும் அனைத்து வகையான பறவைகள், சாதுவான மற்றும் வன விலங்குகள், நிலம், கடல் மற்றும் நீரில் வாழும் அனைத்து ஊர்ந்து மற்றும் நீந்திச் செல்லும் உயிரினங்கள் போன்ற உயிரினங்களைத் தவிர வேறு என்ன வடிவங்களை அவர்கள் கற்களையோ மரங்களையோ செதுக்குவதன் மூலம் உருவாக்குகிறார்கள்? மக்கள் பெரும்பாலும் தங்கள் ஆசைகளிலும் இன்பங்களிலும் தொலைந்து போவதால், தங்கள் உடல் தேவைகளுக்கு அப்பால் சென்று பார்க்கத் தவறிவிடுகிறார்கள். இதன் விளைவாக, இந்த பகுத்தறிவற்ற விஷயங்களில் தெய்வீகம் இருப்பதாக மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாகத்தான் அவர்களின் வெவ்வேறு விருப்பங்களை பிரதிபலிக்கும் பல கடவுள்களை உருவாக்குகிறார்கள். 2. 2. உண்மை மற்றும் தெய்வீக மதத்தின் விளக்கவுரையாளர் ஒருவர் கூறுவது போல், இந்த உருவங்களுடன் விலங்குகள், ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் மற்றும் பறவைகளின் உருவங்களும் உள்ளன. அவர்கள் தங்கள் சிந்தனை மங்கிப்போய் முட்டாள்களாக மாறினர். மேலும் அவர்களின் இதயங்கள் உணர்வின்றி இருளடைந்தன. அவர்கள் தங்களை ஞானிகள் என்று நினைத்தார்கள், ஆனால் அவர்கள் அடிமுட்டாள்களாக மாறி, நித்திய கடவுளின் மகிமையை, ஒரு சிதைந்த மனிதனின் உருவத்திற்கு பதிலாக, பறவைகள், நான்கு கால் விலங்குகள் மற்றும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களுடன் ஒப்பிட்டனர். இதன் காரணமாக, கடவுள் அவர்களின் வெட்கக்கேடான ஆசைகளைப் பின்பற்ற அனுமதித்தார். அவர்கள் ஏற்கனவே தங்கள் ஆன்மாக்களை இன்பங்கள் என்ற அறிவீனத்தால் நிரப்பிக்கொண்ட பிறகு, இந்த போலியான கடவுள்களை உருவாக்கும் நிலைக்குள் வீழ்ந்தனர்; அதன்பின், கடவுளிடமிருந்து விலகிச் சென்று, தொலைந்து போய், வார்த்தையின் தந்தையான கடவுளை முட்டாள்தனமான மற்றும் பகுத்தறிவற்ற வடிவங்களில் பிரதிநிதித்துவப்படுத்தத் தொடங்கினர். 3. சில கிரேக்க தத்துவஞானிகளும் அறிவுஜீவிகளும் தங்கள் கடவுள்கள் மனிதர்கள் மற்றும் பிற பொருட்களைப் போல இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். இந்த உருவங்கள் தெய்வீகத்துடன் தொடர்பு கொள்ளவும், கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த சிலைகள் மற்றும் சடங்குகள் மூலம் மட்டுமே கடவுளை அறிய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். 4. சிலைகள் தேவதைகளையும் அவர்களின் சக்திகளையும் நினைவில் வைத்துக் கொள்ளும்பொருட்டே உருவாக்கப்படுகின்றன என்றும், இது கடவுளைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்க முடியும் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த சிலைகள் தெய்வீக பிம்பத்தைக் காண்பிப்பதன் மூலம் மக்கள் கடவுளை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன என்றும் நம்புகிறார்கள். இது அவர்களின் நம்பிக்கை. ஆனால் நாம் அதை ஒரு உண்மையான இறையியல் என்று அழைக்க முடியாது. இருப்பினும், அவர்களின் வாதத்தை நாம் கூர்ந்து கவனித்தால், அவர்களின் கருத்து முன்னர் குறிப்பிடப்பட்ட மற்றவர்களின் கருத்துக்களைப் போலவே தவறானது என்பதை இலகுவாக அறிந்துகொள்ளலாம்.
20. ஆனால் உருவத்தின் மதிப்பு எங்கிருந்து வருகிறது? அது பொருளிலா, அது தோற்றமளிக்கும் விதத்திலா, அல்லது சிற்பியின் திறமையிலா? இந்தக் கருத்துக்கள் அனைத்தும் தத்தம் சொந்த சிக்கல்களைக் கொண்டுள்ளன
உண்மையின் தீர்ப்பாயத்தின் முன் இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்து அவர்களுக்கு நாம் பதிலளிக்கலாம். சிலர் கடவுள் சில பொருட்களின் மூலம் தன்னை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்று கேட்கலாம். இந்தப் பொருட்கள் எதனால் ஆனவை என்பதாலா, அல்லது அவற்றின் வடிவம் காரணமாகவா? அது பொருளைப் பற்றியது என்றால், நமக்கு ஏன் வடிவம் தேவை? இந்தப் பொருட்கள் படைக்கப்படுவதற்கு முன்பே கடவுள் எல்லாப் பொருட்களின் மூலமும் தன்னைக் காட்ட முடியுமாக இருந்திருக்கும். உலகம் முழுவதும் இந்தப் பொருட்களால் நிரம்பியிருக்கும் போது, ஒரே ஒரு கல், மரம் அல்லது தங்கத் துண்டை மட்டும் வைத்து வழிபட மக்கள் கோயில்களைக் கட்டுவது அர்த்தமற்றதாகத் தெரிகிறது. 2. ஆனால் தெய்வீக வெளிப்பாட்டிற்கு மிகைப்படுத்தப்பட்ட வடிவம் தான் காரணமாக இருந்தால், நமக்கு ஏன் தங்கம் போன்ற பொருட்கள் தேவை? கடவுள் வெறும் உருவங்கள் மூலம் அல்லாமல் உண்மையான விலங்குகள் மூலம் ஏன் தோன்றக்கூடாது? உயிரற்ற பொருட்களை விட, உயிருள்ள விலங்குகள் மூலம் தோன்றினால்; அவை புத்திசாலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கடவுளைப் பற்றி மக்கள் அதிகமாக நினைக்கக்கூடும் அல்லவா? 3. இதில் அவர்கள் தங்களுக்கு எதிராகவே மிகவும் வெளிப்படையான அவமதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஏனென்றால், மிருகங்கள், பறவைகள், ஊர்வன போன்ற உண்மையான விலங்குகளை அவர்கள் கொடூரமானவை அல்லது தொடக்கூடாதவை என்று நினைத்து வெறுக்கிறார்கள். இந்த விலங்குகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் கல், மரம் அல்லது தங்கத்தால் சிலைகளை உருவாக்கி அவற்றை கடவுளாகக் கருதுகிறார்கள். கல்லில் செதுக்கப்பட்ட அவற்றின் உருவங்களை வணங்குவதற்குப் பதிலாக உண்மையான உயிருள்ள விலங்குகளை வணங்குவது அவர்களுக்கு நன்மை பயக்கும். 4. ஆனால் ஒருவேளை அது உண்மையாக இல்லாமலும் இருக்கலாம். மேலும் பொருட்களோ அல்லது அது உருவாக்கப்பட்ட விதமோ தெய்வீக பிரசன்னத்தைக் கொண்டுவருவதில்லை. மாறாக, தெய்வத்தை பிரதிபலிப்பது உண்மையில் புத்திசாலித்தனமான கலைதான், ஏனெனில் அது இயற்கையைப் பின்பற்றுகிறது. ஆனால் தெய்வம் கலையின் ஊடாக மக்களிடம் பேசுகிறது என்றால், அந்தக் கலை மக்களிடம் இருப்பதால், நமக்கு ஏன் மீண்டும் பொருள் தேவையாக இருக்கிறது? கடவுள் கலையின் காரணமாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாரென்றால், அதனால்தான் உருவங்கள் கடவுள்களைப் போல நடத்தப்படுகின்றன என்றால், அந்தக் கலையில் சிறந்து விளங்கும் கலைத்திறன் உடைய மக்களை வணங்குவதும் அவர்களுக்கு சேவை செய்வதும் நியாயமாகவே படுகிறது. ஏனென்றால் அவர்களும் பகுத்தறிவுள்ளவர்களாகவும் அவர்களுக்குள் திறமையைக் கொண்டவர்களாகவும் இருக்கும் காரணத்தால்.
21. தேவதூதர்கள் வாயிலாகத் தொடர்பு கொள்ளும் கருத்து அதிக முரண்பாடுகளைக் கொண்டுள்ளது; அது உண்மையாக இருந்தாலும் கூட உருவ வழிபாட்டை நியாயப்படுத்தாது
கிரேக்கர்களாகிய நீங்கள் இந்த உருவங்களைக் கடவுளைக் காண்பிப்பதற்காக அல்ல, தேவதூதர்களின் பிரசன்னம் இருப்பதைக் காட்ட உருவாக்கினால், இந்த சக்திகளை அழைக்க நீங்கள் பயன்படுத்தும் உருவங்கள் நீங்கள் குறிப்பிடும் சக்திகளை விட முக்கியமானதாகக் கருதுவது ஏன்? கடவுளைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் நீங்கள் இந்த உருவங்களை உருவாக்கி, அவற்றுக்கு கடவுளுக்கு கொடுக்கப்படும் மரியாதை மற்றும் அந்தஸ்தை வழங்குகிறீர்கள். இது உங்களை மிகவும் பின்தங்கிய நிலையில் வைத்திருக்கவே உதவுகிறது. 2. நீங்கள் வழிபடப் பயன்படுத்தும் சிறிய சிலைகள் மற்றும் உருவங்களை விட கடவுளின் சக்தி மிகப் பெரியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவே நீங்கள் அவற்றின் மூலம் கடவுளை அழைக்க முயற்சிக்கவில்லை, மாறாக, அற்ப சக்திகளையே அழைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதையும் மீறி மரத்தையும் கல்லையும் கடவுளைப் போலக் கருதி, அவற்றுக்கு கடவுள் என்ற பட்டத்தை வழங்கி வணங்குகிறீர்கள். கடவுளைப் பற்றி சிந்திக்க இந்த உருவங்கள் உங்களுக்கு உதவுகின்றன என்று நீங்கள் கூறினாலும், அவை பிரதிநிதித்துவப்படுத்துவதை விட அதிக மரியாதை கொடுப்பது தவறு. உதாரணமாக, எவராவது ஒருவர் ஒரு பேரரசரின் பெயரை எழுதி வைத்தால், பேரரசரை விட அவரது பெயர் எழுதப்பட்ட எழுத்துக்களை மதிப்பது ஆபத்தானது; அவ்வாறு செய்வது கடுமையான தண்டனை மட்டுமல்ல, மரண தண்டனைக்குக் கூட வழிவகுக்கும். ஏனெனில் எழுத்து என்பது எழுத்தாளரது திறமையின் பிரதிபலிப்பாகும். 3. உண்மையிலேயே விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தால், நீங்கள் கடவுளைப் பற்றிய இவ்வளவு பெரிய வெளிப்பாட்டை வெறும் பௌதிகப் பொருட்களாகக் குறைத்து மதிப்பிட முடியும் என்று நினைத்திருக்க மாட்டீர்கள். அப்படியான ஒரு உருவத்தை உருவாக்கியவரை விட அந்த உருவத்துக்கு அதிக மரியாதை கொடுத்திருக்க மாட்டீர்கள். எழுத்துக்கள் கடவுளைக் குறிக்கின்ற படியால் அவை மதிப்பதற்குத் தகுதியானவை என்று சொல்லமுடியும். அப்படியானால் அவற்றை செதுக்கிய கலைஞரை கௌரவிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் அன்றோ? கலைஞர் மிகவும் சக்திவாய்ந்தவர் மற்றும் தெய்வீகமானவர், ஏனெனில் அவர்கள் எழுத்துக்களை தனது சொந்தக் கருத்துக்களின்படி வடிவமைத்தார். எழுத்துக்கள் போற்றப்படத் தகுதியானவை என்றால், எழுத்தாளரின் திறமை மற்றும் அவரது படைப்பாற்றலுக்காக மேலும் அதிக பாராட்டுக்குத் தகுதியானவராக இருக்கிறார். அப்படியாயின் நாம் எழுத்துக்களைக் கடவுள்களாக நினைக்கக் கூடாது என்றால், மக்கள் ஏன் சிலைகளை வழிபடுகிறார்கள் என்பதையும், அவை ஏன் அத்தகைய வடிவத்தில் இருக்கின்றன என்ற காரணத்தை அவர்களிடமிருந்தே கேட்டறிவது சிறந்தது.
22. கடவுள் உண்மையில் எப்படி இருப்பார் என்பதை உருவத்தால் காட்ட முடியாது, அப்படிக் காட்டினால் அது கடவுளைக் கொச்சைப் படுத்துவதாக அமைந்துவிடும்
கடவுள் மனிதனைப் போல தோற்றமளிப்பதே இந்த உருவங்களை உருவாக்கியதற்கான காரணம் என்றால், அவர்கள் ஏன் விலங்குகளின் உருவங்களையும் உருவாக்குகிறார்கள்? அல்லது கடவுள் விலங்குகளைப் போல இருப்பதாக அவர்கள் நினைத்தால், அவர்கள் ஏன் மனிதர்களின் உருவங்களையும் உருவாக்குகிறார்கள்? கடவுளுக்கு மனித மற்றும் விலங்கு அம்சங்கள் இரண்டும் இருப்பதாக அவர்கள் நம்பினால், விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்களை ஏன் தனித்தனியாக வைத்திருக்கிறார்கள்? அதற்கு பதிலாக, ஸில்லா, சாரிப்டிஸ், ஹிப்போசென்டார் மற்றும் எகிப்தைச் சேர்ந்த நாயின் தலையைப்போல் தோற்றம் கொண்ட அனுபிஸ் ஆகியோரின் கதைகளைப் போல அவர்கள் இரண்டு வகைகளையும் ஒன்றாகக் கலந்திருக்க வேண்டுமல்லவா? கடவுளுக்கு இந்த இரண்டு இயல்புகளும் இருப்பதாக அவர்கள் சான்றளிக்க வேண்டும். அப்படியில்லாமல் கடவுளுக்கு ஒரு வடிவம் மட்டுமே இருப்பதாக அவர்கள் நினைத்தால் அவருக்கு மற்றொரு வடிவம் இருப்பதாக அவர்கள் போலியாகப் பிரதிநிதித்துவம் செய்யலாகாது. 2. ஏன் கடவுளின் வடிவங்கள் ஆணாக இருக்கும் பட்சத்தில் அவர்களைப் பெண்ணாகவும், பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவர்களை ஆணாகவும் காட்டுகிறார்கள்? அவர்கள் பெண்ணாக இருந்தால், அல்லது அவர்கள் இருபாலினதும் கலவையாக இருந்தால் அவர்கள் பிரிக்கப் படலாகாது. ஹெர்மாஃப்ரோடைட்டுகளைப் போல இணைக்கப்பட வேண்டும். அப்படிப்பார்த்தால், அவர்களின் நம்பிக்கை மக்களுக்கு அவமரியாதை, பொய் போன்றவற்றை மட்டுமல்ல, ஏளனத்தையும் ஏற்படுத்தும். 3. மக்கள் கடவுளை ஒரு பௌதீக உடல் கொண்டவராக நினைத்தால், வயிறு, கைகள், கால்கள் மற்றும் பிற மனித உறுப்புகள் போன்றவை இருப்பதாகக் கற்பனை செய்தால், அது கடவுளைப் பற்றிய மரியாதை மற்றும் புரிதல் இல்லாததைக் காட்டுகிறது. இந்த எண்ணம் கடவுளை இழிவுக்குள்ளாக்கி மனிதர்களிடமிருந்து பிரித்துவிடக்கூடும், அல்லது மனிதன் கொண்டிருக்கும் விசுவாசத்தை அழித்துவிடவும் கூடும். அவை கடவுளுக்குரிய பண்புகள் அல்ல, பௌதீக உடலைக்கொண்ட மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும் அம்சங்கள். 4. கடவுள் உடல் ரீதியானவர் அல்ல, அவரை அழிக்க முடியாது, அவருக்கு எதுவும் தேவையில்லை. இதற்கு நேர்மாறாக, மக்கள் உருவாக்கும் பொருட்கள் உடல் ரீதியானவை, சேதமடையக்கூடும், அவற்றுக்குக் கவனிப்பு தேவை. வெயில், மழை அல்லது விலங்குகளால் சேதமடைந்த பழைய உருவங்களை மீண்டும் புதியதாக மாற்ற முடியும் என்பதை நாம் அடிக்கடி கவனிக்கிறோம். மக்கள் இந்த இவ்வுருவங்களைத் தாங்களாகவே உருவாக்கியபோது அவற்றை கடவுள்கள் என்று அழைப்பது முட்டாள்தனம். அந்த உருவங்களுக்கு அவர்களின் பாதுகாப்புக்கு அவர்களின் ஒத்தாசை தேவை என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் கூட, அவர்கள் உருவாக்கிய பொருட்களிடமிருந்து உதவி கேட்கிறார்கள். இருப்பினும், இந்த படைப்புகளை ஒரு குறிப்பிட்ட சிறிய இடங்களில் வைத்திருந்தாலும் அவற்றை வானம் மற்றும் பூமியின் அதிபதிகள் என்று அழைக்கிறார்கள்.
23. பல்வேறு வகையான உருவ வழிபாட்டு சம்பிரதாயங்கள் அவை பொய்யானவை என்பதை நிரூபிக்கின்றன
இந்தக் கருத்தாய்வுகளிலிருந்து மட்டுமல்ல, சிலைகள் மீதான முரண்பாடான கருத்துக்களிலிருந்தும் அவர்களின் நம்பிக்கையின்மையை எவராலும் காணக்கூடியதாயிருக்கிறது. இந்த சிலைகள் கடவுள்கள் என்று அவர்கள் கூறினால், எதைப் பின்பற்றுவது என்பதை நாம் எவ்வாறு தீர்மானிப்பது? எதை நாம் மிகப்பெரியது என்று நினைப்பது? எது வணங்குவதற்கு மிக முக்கியமானது என்பதை நாம் எப்படி அறிவது? எந்த உயிரினங்கள் கடவுள்கள் என்பதில் வெவ்வேறு குழுக்கள் உடன்படுவதில்லை; உண்மையில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சொந்த, தனித்துவமான, வெவ்வேறு கலாச்சாரங்களில் வெவ்வேறு கடவுள்கள் உள்ளனர். சில சமயங்களில் ஒரே நாட்டில் உள்ள மக்கள் கூட எந்த சிலைகளை நம்புவது என்பதில் பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர். 2. எகிப்தியர்கள் வணங்கும் கடவுள்களை ஃபீனீசியர்கள் அங்கீகரிப்பதில்லை, எகிப்தியர்கள் ஃபீனீசியர்கள் வணங்கும் சிலைகளை மதிப்பதில்லை. சித்தியர்கள் பெர்சியர்களின் கடவுள்களை நம்புவதில்லை, பெர்சியர்கள் சிரியர்களின் கடவுள்களை நம்புவதில்லை. பெலாஸ்ஜியர்கள் திரேஸின் கடவுள்களை நிராகரிக்கிறார்கள், அதே நேரத்தில் திரேசியர்கள் தீப்ஸின் கடவுள்களை ஏற்றுக்கொள்வதில்லை. இந்தியர்கள் அரேபியர்களை விட வேறுபட்ட சிலைகளைக் கொண்டு வழிபடுகின்றனர். அரேபியர்கள் எத்தியோப்பியர்களை விட வித்தியாசமான சிலைகளைக் கொண்டுள்ளனர். சிரியர்கள் சிலிசியர்களின் சிலைகளை வணங்குவதில்லை, மேலும் கப்படோசியா மக்கள் கடவுள்களைப் பற்றி தங்கள் சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். பித்தினியர்கள் வெவ்வேறு கடவுள்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுகின்றனர். மேலும் ஆர்மீனியர்கள் இன்னும் பலவற்றை தம் மனதில் கொண்டு வழிபடுகின்றனர். அதிக எடுத்துக்காட்டுகள் தேவையில்லை; நிலப்பரப்பில் உள்ள மக்கள் தீவுகளில் உள்ளவர்களை விட வேறுபட்ட கடவுள்களை வணங்குகிறார்கள், தீவுவாசிகள் நிலப்பரப்பில் உள்ளவர்களை விட வேறுபட்ட கடவுள்களை வழிபடுகிறார்கள். 3. ஒவ்வொரு நகரமும், கிராமமும் அதன் சொந்த கடவுள்களை வணங்க முனைகின்றன, மேலும் அருகிலுள்ள இடங்களின் கடவுள்களை அங்கீகரிக்கவில்லை. எகிப்தில், நகரங்கள் வெவ்வேறு மற்றும் முரண்பட்ட மதங்களைக் கொண்டிருப்பதால் இது மிகவும் தெளிவாகிறது. அக்கம்பக்கத்தினர் பெரும்பாலும் தங்கள் அயலவர்கள் நம்புவதற்கு நேர்மாறான கடவுள்களை வணங்குகிறார்கள். உதாரணமாக, சிலர் முதலைகளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள், மற்றவர்கள் அவற்றை அருவருப்பானவையாகப் பார்க்கிறார்கள். அதேபோல், சிலர் சிங்கங்களை கடவுள்களாக வணங்குகிறார்கள், அதே நேரத்தில் அவர்களின் அயலவர்கள் அவற்றைக் காட்டு விலங்குகளாகக் கருதி வேட்டையாடுகிறார்கள். சிலருக்கு புனிதமான மீன்களை மற்றவர்கள் உண்ணுகிறார்கள். இவ்வாறான பல்வேறு மத ரீதியான நம்பிக்கை கொண்ட மக்கள் தங்கள் வலுவான உணர்வுகளுக்கு தீனிபோட முயல்வதால் சண்டைகள், சர்ச்சைகள், கலவரங்கள் மற்றும் வன்முறைகளுக்கு வழிவகுக்கிறது. 4. எகிப்தியர்களிடமிருந்து கடவுள்களின் பெயர்களைக் கற்றுக்கொண்ட பெலாஸ்ஜியர்கள் உண்மையில் எகிப்திய கடவுள்களை அறிந்ததில்லை. அதற்கு பதிலாக வெவ்வேறு கடவுள்களை வணங்குகிறார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். பொதுவாக, சிலை வணக்கங்களில் ஈடுபாடு கொண்ட அனைத்து நாடுகளும் வெவ்வேறு மத நம்பிக்கைகள் மற்றும் மதங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும் அவர்களிடையே எந்த விதமான நிலையான தன்மையும் இல்லை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 5. ஒரே உண்மையான கடவுளிடமிருந்து விலகிய மக்கள் பல வித்தியாசமான விடயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். இரட்சகராகிய கிறிஸ்துவைப் புறக்கணிப்பதன் மூலம் அவர்களின் புரிதல் குழப்பமடைந்து சிதறிப்போய்விடுகிறது. இது ஒருவர் சூரிய ஒளியில் இருந்து விலகி இருண்ட பிரதேசத்துக்குள் நுழைவது போன்றது; அவர்கள் தெளிவான பாதை எதுவென்று அறியாமல், உண்மை எங்கே இருக்கிறது என்பதைக் காண முடியாமல் அலைகிறார்கள். ஒளியைத் தேடி அடைவதற்குப் பதிலாக, அவர்கள் இல்லாத விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். அதேபோல், கடவுளை விட்டு விலகிச் சென்றவர்களின் மனம் இருளடைந்து விடும். அப்படியானவர்கள் குடிபோதையில் இருப்பவர்களைப் போல அவர்களால் தெளிவாகப் பார்க்கவும் முடியாமல், தவறான கருத்துக்களை நம்பவும் முடியாமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.
24. ஒரு சாராரால் கடவுள்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வேறொரு சாராரால் பலிகடாக்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்
அப்படியானால், அவர்கள் உண்மையில் எந்த கடவுள்களையும் நம்பவில்லை என்பதை இது காட்டுகிறது. ஒவ்வொரு நகரத்திற்கும் நாட்டிற்கும் பல கடவுள்கள் உள்ளனர் என்பதோடு, ஒரு கடவுள் மற்றொரு கடவுளை அழிக்க முடியும். இதன் காரணமாக, அனைத்து கடவுள்களும் விரோதப்போக்குள்ளவர்களால் அழிக்கப்பட்டதைக் காணலாம். சிலர் கடவுள்கள் என்று நினைப்பது மற்றவர்களால் கடவுள்களுக்கு பலியாக வழங்கப்படுகிறது. மேலும் சிலர் பலியிடும் விலங்குகள் மற்றவர்களின் கடவுள்களாகப் போற்றப்படுகின்றன. உதாரணமாக, எகிப்தியர்கள் அபிஸ் என்ற எருது மற்றும் அதன் கன்றுக்குட்டியை வணங்குகிறார்கள். மற்றவர்கள் இந்த விலங்குகளை சீயஸுக்கு பலியிடுகிறார்கள். அவர்கள் அதே விலங்குகளை பலியிடாவிட்டாலும், தங்கள் சொந்த விலங்குகளை பலியிடுவதன் மூலம் அதையே பலியிடுவது போல் தெரிகிறது. லிபியர்கள் அம்மோன் என்ற செம்மறி ஆடுகளை வணங்குகிறார்கள், ஆனால் பிற கலாச்சாரங்களில் இதே செம்மறி ஆடு பல கடவுள்களுக்கு பலியிடப்படுகிறது. 2. இந்தியர்கள் மதுரசத்தைக் குறிக்கும் டயோனிசஸை மதிக்கிறார்கள், மேலும் சிலர் மதுரசத்தை கடவுள்களுக்கு காணிக்கையாக ஊற்றுகிறார்கள். மற்றவர்கள் ஆறுகள் மற்றும் நீரூற்றுகளை மதிக்கிறார்கள், குறிப்பாக எகிப்தியர்கள் தண்ணீரைப் போற்றி அதை ஒரு கடவுள் என்று அழைக்கிறார்கள். இருப்பினும், தண்ணீரை வணங்கும் எகிப்தியர்கள் மட்டுமல்ல, அனைவரும் தங்களையும் மற்றவர்களையும் சுத்தம் செய்ய அதைப் பயன்படுத்துகிறார்கள். பின்னர் அழுக்கு நீரைச் சாக்கடையில் எறிகிறார்கள். பெரும்பாலான எகிப்திய சிலைகள் பிற நாடுகள் தங்கள் கடவுள்களுக்கு பலியிடுவதாகக் கருதுவதை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் அந்த நாடுகள் கூட உண்மையில் கடவுள்கள் அல்லாதவற்றை வணங்குவதன் காரணமாக அந்தச் சிலைகளை இழிவாகப் பார்க்கின்றன. வணங்குவதற்குப் பதிலாக அவற்றைக் காணிக்கைகளாகக் கருதுகின்றன.
25. மனிதத் தியாகம் விசித்திரமானது, அடிக்கடி நிகழ்வதோடு பயங்கரமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது
சிலர், மனிதர்களின் உருவங்களைக் கொண்ட தங்கள் போலிக் கடவுள்களுக்குப் பலியிட உண்மையான மனிதர்களைக் கொல்வது என்ற மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றனர். தாங்கள் கொல்லும் மக்கள் தாங்கள் வணங்கும் கடவுள்களைப் போன்றவர்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஒரு வகையில், அவர்கள் சமமானவர்களுக்குச் சமமானவர்கள், அல்லது உயர்ந்தவர்களுக்குக் கீழ்நிலையில் உள்ளவர்களை பலியாகக் கொடுக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் உயிரற்ற சிலைகளுக்கு உயிருள்ள உயிரினங்களையும், அசையாத பொருட்களுக்கு சிந்திக்கும் உயிரினங்களையும் பலியாகக் கொடுக்கிறார்கள். 2. டாரியர்கள் என்று அழைக்கப்படும் சித்தியர்கள், தங்கள் கன்னிகை என்று அவர்கள் குறிப்பிடும் தெய்வத்துக்கு, கப்பல் விபத்துகளில் இருந்து தப்பியவர்களையும், அவர்கள் கைப்பற்றும் கிரேக்கர்களையும் பலியாக வழங்குவதன் மூலம் காணிக்கைகளை நிறைவேற்றுகிறார்கள். இது அவர்கள் தங்கள் சொந்த மக்கள் மத்தியில் கூட அவர்களை எவ்வளவு கொடூரமானவர்கள் என்று காட்டுகிறது. மேலும் அவர்களின் கடவுள்களின் ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட விதிவசித்தாலும், விதி விபத்துக்களில் இருந்தும், கப்பல் விபத்துக்களில் இருந்தும் காப்பாற்றப்பட்ட மக்களை அவர்கள் கொல்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த வன்முறை என்ற வெறியின் காரணமாக நன்மைக்கு விரோதமான கடும்போக்கையே கொண்டிருக்கிறார்கள். மற்றும் சில கடும்போக்குவாதிகள், போரில் வெற்றி பெற்றுத் திரும்பும்போது வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கைதிகளை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு கைதியைத் தேர்ந்தெடுத்து யுத்தங்களின் கடவுளான ஏரெஸுக்கு பலியிடுகிறார்கள். 3. சித்தியர்கள் பயங்கரமான கொடிய செயல்களைச் செய்வதன் காரணம் அவர்கள் இயற்கையாகவே காட்டுமிராண்டித்தனமும் கொடூரத் தன்மையும் கொண்டவர்கள் என்பதால் மட்டுமல்ல. மாறாக, அவர்களின் இந்த மிலேச்சத்தனமான செயல்கள், சிலைகள் மற்றும் பொய்யான கடவுள்களுடன் தொடர்புடைய தீய நோக்கங்கள் காரணமாகவே நிறைவேற்றப்பட்டன. கடந்த காலத்தில், எகிப்தியர்கள் ஹேராவுக்கு பாதிக்கப்பட்டவர்களை பலிகொடுத்தனர். அதே நேரத்தில் ஃபீனீசியர்கள் மற்றும் கிரீட்டர்கள் குரோனோஸை மகிழ்விக்க குழந்தைகளைப் பலிகொடுத்தனர். பண்டைய ரோமானியர்கள் கூட ஜூபிடர் லாட்டியரியஸை வழிபடும்போது மனிதர்களைப் பலிகொடுத்தனர். ஒவ்வொருவரும், வெவ்வேறு வழிகளில், இந்த செயல்களைச் செய்து அவற்றால் அவதூறுக்குக் உள்ளாயினர். அவர்கள் இந்தக் குரூரக் கொலைகளைச் செய்து அவற்றைக்கொண்டு அத்தகைய தகனைப் பலிகளில் எழுந்த புகையால் அவர்களது ஆலயச் சூழலை நிறைத்து தங்கள் சொந்த ஆலயங்களையே மாசுபடுத்தினர். 4. இது மனிதகுலத்துக்கு பல பிரச்சினைகளுக்கு வழிகோலிய ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. தங்கள் போலிக் கடவுள்கள் குறிப்பிட்ட சில செயல்களை விரும்புவதாக அவர்கள் எண்ணி, அந்தச் செயல்களை அவர்கள் கடைபிடிப்பதன் மூலம் இந்தக் கடவுள்களைப் பின்பற்றுவது தங்களை நல்லவர்களாகக் காட்டும் என்று நம்பினர். இதன் விளைவாக, ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அனைத்து வகையான ஒழுக்கக்கேடான நடத்தைகளும் பொதுவான நடப்புகளாகிவிட்டன. அவர்களின் கடவுள்களின் கொடூரமான தன்மை காரணமாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரமும் இந்த வகையான மிலேச்சதனமான கொலைகள் அரங்கேறும் இடங்களாகக் காட்சியளித்தன. அவர்களின் கெட்ட நடத்தை குறித்து அனைவரும் அறிந்திருந்த காரணத்தால், இந்த சிலைகள் வைக்கப்பட்டிருந்த கோயில்களில் ஒழுக்கமான வாழ்க்கை வாழும் எவரும் மிக அரிதாகவே காணப்பட்டனர்.
26. புறமதத்தில் காணப்பட்ட ஒழுக்கச் சீர்கேடுகள் அனைத்தும் கடவுள்கள் என்று கூறப்பட்டவர்களில் இருந்து தோன்றியவை என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது
உதாரணமாக, பண்டைய காலத்தில், பெண்கள் ஃபோனிசியாவின் ஆலய முன்றல்களில் அமர்ந்து, தங்கள் உடல்களை வியாபாரமாக்கி அதன்மூலம் பெற்றுக்கொண்ட வேதனத்தை அங்குள்ள கடவுள்களுக்கு காணிக்கையாய் செலுத்தினர். அவர்கள் தங்கள் தெய்வத்தை விபச்சாரத்தால் சாந்தப்படுத்துகிறார்கள் என்றும், இதன் மூலம் அந்தத் தெய்வங்களுடைய தயவைப் பெறுவார்கள் என்றும் நினைத்தார்கள். இதற்கிடையில், சில ஆண்கள் தங்கள் உண்மையான ஆண்மை இயல்பை மறைத்து, பெண்களைப் போல உடையணிந்து பெண்களைப் போல் காணிக்கை செலுத்த முயன்றனர். இது அவர்களின் தெய்வங்களின் தாயைப் பிரியப்படுத்தும் என்று நினைத்தனர். இருப்பினும், இரு குழுக்களும் தார்மீக ரீதியாக தவறான வழியிலேயே வாழ்ந்தனர். தங்களுக்குள் மோசமானவர்கள் யார் என்று அறிய போட்டியிட்டனர். கிறிஸ்துவின் பரிசுத்த ஊழியரான பவுல், ரோமர் 1:26 இல் எழுதியது போல், “மக்கள் அவ்விதமான மோசமான காரியங்களைச் செய்ததால், அவர்கள் அவமானத்துக்குரியவர்களாயினர். தேவன் அவர்களை விட்டு விலகிவிட்டார். பெண்கள் ஆண்களோடு கொள்ள வேண்டிய இயற்கையான உடலுறவை உதறிவிட்டு இயற்கைக்கு மாறான வகையில் பிற பெண்களோடு உடலுறவு கொள்ளத் தொடங்கினர்” என்கிறது. ஆகவே இது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
2. இந்த வழியில் அல்லது இதேபோன்ற விதத்தில் செயல்படுவதன் மூலம் அவர்கள் தங்கள் கடவுள்கள் என்று அழைக்கப்படுபவர்களின் வாழ்க்கையும் அதே அளவு மோசமானது என்பதைக் காட்டுகிறார்கள். சீயஸிடமிருந்து இளமையில் ஏற்படக்கூடிய சீரழிவு மற்றும் வஞ்சனை போன்றவற்றையும், அப்ரோடைட்டிலிருந்து ஒழுக்கக்கேடு போன்றவற்றையும், ரியாவிடமிருந்து ஒழுக்கக்கேடான நடத்தை போன்றவற்றையும், ஏரெஸிடமிருந்தும் பிற கடவுள்களிடமிருந்தும் கொலை போன்றவற்றையும் கற்றுக்கொண்டார்கள். இவ்வாறான கேடுகெட்ட காரியங்களை சட்டத்தை மதித்து, சட்டத்தின் தண்டனைக்குப் பயந்து மற்றும் விவேகமுள்ள எந்தவொரு மனிதனும் நிச்சயம் தவிர்த்திடுவான். அப்படியானால், அவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்யும்போது, அவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களால் இந்த மோசமானவர்களை மிருகங்கள் போன்ற, பகுத்தறிவற்றவர்களாகவே கருதவேண்டியுள்ளது. பதிலாக கடவுள்களாகக் கருதுவது பொருத்தமானதா? 3. இப்படிப்பட்டவற்றை வழிபடுபவர்களை விலங்குகளை விட பகுத்தறிவில் குறைந்தவர்களாக, பொருட்களை விட உயிரற்ற ஜடங்களாக, பரிதாபப்படுவதற்குப் பதிலாக மனிதர்களாகப் பார்க்க முடியுமா? அவர்கள் தங்கள் ஆன்மாவின் சிந்திக்கும் ஆற்றலைப் பற்றி நினைத்திருந்தால், அவர்கள் இந்த நம்பிக்கைகளுக்குள் பயணித்திருக்க மாட்டார்கள் அதேபோன்று, எம் கர்த்தரான கிறிஸ்துவின் தந்தையான உண்மையான இறைவனை நிராகரித்திருக்கவும் மாட்டார்கள்.
27. பிரபலமான புறமதவாதம் உண்மையல்ல என்பதை நாம் நிரூபித்துள்ளதால், இயற்கையை வழிபடுவதற்கான மிகவும் மேம்பட்ட வழியை இப்போது நாம் பார்க்கலாம். எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்பதை இயற்கை நமக்குக் காட்டுகிறது; அதாவது இயற்கையின் எந்த ஒரு பகுதியையும் உயர்ந்த கடவுளாகக் கருத முடியாது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது
ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி முன்னே சென்று, படைப்பைப் பார்த்து பிரமித்து, வியந்துபோன சிலர் தாங்கள் விட்ட தவறுகளால் வெட்கப்படலாம். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் விமர்சிப்பதை கணக்கிலெடுக்காது, பிரபஞ்சத்தையும் அதன் சில பகுதிகளையும் வணங்குவது என்ற வலுவான மற்றும் மறுக்க முடியாத கருத்தைக் கொண்டிருப்பதாக நம்பலாம். 2. அவர்கள் கற்கள், சிலைகள் மற்றும் விலங்குகள் போன்ற சாதாரண விஷயங்களை மட்டுமல்ல, சூரியன், சந்திரன் மற்றும் வானத்தில் உள்ள அனைத்தையும், பூமியிலும் அதில் அடங்கியுள்ள நீர் மண்டலத்தையும் வணங்கி அவற்றுக்கு சேவை செய்வதாகப் பெருமை பேசுவார்கள். மேலும், இவை தெய்வீக இயல்புடையவை அல்ல என்பதை யாராலும் நிரூபிக்க முடியாது என்றும் அவர்கள் கூறுவார்கள். ஏனெனில் அவைகளுக்கு வாழ்வோ பகுத்தறிவோ இல்லை என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். மேலும் அவை மனிதகுலத்தை விடப் பன்மடங்கு விசாலமானவை, அவற்றின் ஒரு பகுதி வானத்திலும் மற்றொன்று பூமியிலும் இருக்கிறது. 3. இந்தக் குறிப்புகளை ஆராய்ந்தறிவது முக்கியமானது. ஏனென்றால் அவற்றுக்கெதிரான நமது வாதம் இப்போதும் அவற்றைத் தவறு என்று நிரூபிக்கக் கூடும். நாம் நமது ஆதாரத்தை முன்வைப்பதற்கு முன், படைப்பு என்பது தானே முன்வந்து அவர்களுக்கு எதிராகப் பேசுவதையும், கடவுள் ஒருவர் தான் அதன் படைப்பாளர் என்றும், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையான தேவன் அனைத்தையும் ஆள்கிறார் என்றும் காட்டுவதைக் காணலாம். சில தத்துவஞானிகள் கடவுளைப் புறக்கணித்து, அதற்கு பதிலாகக் கடவுளின் படைப்பை வணங்க முடிவு செய்தனர். ஆனால் அதுவே அவர்கள் மறுக்கும் இறைவனை வணங்கி ஒப்புக்கொள்ள வைக்கிறது. 4. மக்கள் படைப்பின் கூறுகளைக் கண்டு வியந்து அவை கடவுள்களைப் போன்றவை என்று நம்பினால் இந்தக் கூறுகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதை அவர்கள் உணர வேண்டும். இது எல்லாவற்றையும் படைத்து, அனைத்திற்கும் அதிபதியான, இறை வார்த்தையின் பிதாவாகிய கடவுளின் இருப்பைக் காட்டுவது மட்டுமல்லாமல் நிரூபிக்கவும் செய்கிறது. தெய்வீக நீதி கூறுவது போல், வானம் கடவுள் எவ்வளவு பெரியவர் மற்றும் உன்னதர் என்பதைக் காட்டுவதோடு, வானம் அவருடைய பிரமிப்பான கைவண்ணத்தை வெளிப்படுத்துகிறது. 5. தெளிவாகச் சிந்திக்கக்கூடியவர்களுக்கு இதற்கான ஆதாரத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினம் அல்ல. சூரியன், சந்திரன், பூமி, காற்று, வெப்பம், குளிர், ஈரப்பதம் மற்றும் வறட்சி போன்ற உலகில் நாம் காணும் பல்வேறு பகுதிகளை தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தால், இந்த பாகங்கள் எதுவும் தாங்களாகவே இருக்கவோ இயங்கவோ முடியாது என்பதை அவர்கள் காண்பார்கள். ஒவ்வொன்றும் மற்றவை உயிர்வாழவும் பரஸ்பரம் ஒன்றாக அவற்றைன் பணிகளைச் செய்யவும் கடமைப்பட்டிருக்கின்றன. சூரியன் தன்னையும் சுற்றிக்கொண்டு வானத்தையும் சுற்றி அதன் சொந்த பாதையில் நகர்கிறது. அதே நேரத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் தங்களுக்கான ஓளியைப் பெற சூரியனை எவ்வாறு சார்ந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. பூமியில் பயிர்களை விளைவிக்க மழை தேவை, மழை மேகங்களிலிருந்து பொழிகிறது. இருப்பினும் காற்றின் உதவியின்றி இல்லாமல் இந்த சுழற்சி நடைபெறாது. காற்று முகில்களின் மேல் அடுக்குகளினால் வெப்பமடைந்து சூரியனால் பிரகாசமாகிறது, அவை தானாகவே நிகழ்வதில்லை. 6. அத்தோடு, கிணறுகள், ஆறுகள் பூமி இல்லாமல் ஒருபோதும் அவற்றுக்கு வாழ்க்கையில்லை. ஆனால் பூமி தானே தனது இருப்பைக் கொண்டிருக்கவில்லை; அது தண்ணீரின் ஆதரவில் தங்கியுள்ளது. இந்த நீரானது இந்தப் பிரபஞ்சத்தின் மையப் புள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. கடலும் பூமியைச் சுற்றியுள்ள பரந்த சமுத்திரங்களும் காற்றின் விசை காரணமாக நீரோட்டம் நகர்ந்து, அதன்மூலம் கடல் நீரை வெவ்வேறு திசைகள் நோக்கித் தள்ளுகின்றன. காற்று தானாக உருவாக்கப்பட்டவை அல்ல; மாறாக, அவை வெப்பமான மேல் பகுதிக்கும் குளிரான கீழ் பகுதிக்கும் இடையிலான வெப்பநிலை வேறுபாடுகளிலிருந்து உருவாகி எல்லா இடங்களிலும் வீசுகின்றன. 7. நான்கு கூறுகளான வெப்பம், குளிர், ஈரம் மற்றும் வறட்சி போன்றவை பூமி என்ற இந்த மண்டலத்தை நகர்த்தும் விழுமியங்களாக இருப்பது தெளிவாகிறது. தற்செயலாக அவை பிரிக்கப்பட்டால், எது வலிமையானது என்பதைப் பொறுத்து அவற்றுக்கிடையில் ஒன்றுக்கொன்று தீங்கு விளைவிக்கும் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். உதாரணமாக, வெப்பத்தை விட அதிக குளிர் இருந்தால், வெப்பம் தணிந்துவிடும். அதேபோல, அதிக வெப்பம் குளிரை நீக்கிவிடும். இதேபோல், ஈரப்பதம் எதையாவது உலர்த்தும், அதே நேரத்தில் வறட்சி ஈரப்பதத்தை அகற்றும்.
28. இருப்பினும், எந்தப் பிரபஞ்ச உயிரினமும் கடவுளாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், கடவுள் வெவ்வேறு பகுதிகளால் ஆனவர் என்று அர்த்தம்; அது அவரைப் பிரிவுக்குள்ளாக்க வழிவகுக்கும்
சூரியன் மற்றும் சந்திரன் போன்ற கிரகங்கள் ஒன்று மற்றொன்றில் தங்கியிருப்பதால், அவற்றை நாம் எப்படி கடவுள்கள் என்று அழைக்க முடியும்? அவைகள் ஒவ்வொன்றும் மற்றொன்றில் சார்ந்திருக்கும் போது, அவைகளிடம் எதையும் கேட்பதில் அர்த்தமில்லை. கடவுளுக்கு எதுவும் தேவையில்லை, ஏனென்றால் அவரே அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையானவராக இருக்கிறார். எல்லாம் அவரால்தான் நிகழ்கிறது என்று நாம் நம்பினால், சூரியன், சந்திரன் மற்றும் பிற படைக்கப்பட்ட சமாச்சாரங்களை கடவுள்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவை ஒன்றையொன்று சார்ந்துள்ளபடியால், இவை கடவுளைப் போன்றவை அல்ல என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். 2. இருப்பினும், ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்தால், அவை ஒன்றுக்கொன்று மற்றொன்றில் சார்ந்திருப்பதை நம் எதிரிகள் கூட ஒப்புக் கொள்வதைக் காணலாம். ஆனால், அனைத்து பகுதிகளும் ஒன்றிணைந்தால், அவை முழுமையான ஒரு பாரிய தொகுதியை உருவாக்குகின்றன, அதைத்தான் கடவுள் என்று அழைக்கிறோம் என்று அவர்கள் வாதிடுவார்கள். எல்லாம் ஒன்றிணைந்தவுடன் அதற்கு வேறு எதுவும் தேவையில்லை என்றும் அது தனியாக நிற்க முடியும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள். இதைத்தான் சில தத்துவஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் இந்த கருத்தை நாம் எளிதாக சவாலுக்கு உட்படுத்தலாம். 3. முன்னர் செய்யப்பட்ட மற்ற விவாதங்களைப் போலவே, இந்த விவாதமும் அவர்களின் திறமை மற்றும் புரிதலின் குறைகளை எடுத்துக்காட்டுகின்றன. முழுமை அதன் ஒவ்வொரு பகுதிகளால் ஆனது என்றால், ஒவ்வொரு பகுதியும் முழுமையின் ஒரு பகுதியாகும் என்பது தான் நியதி. இருப்பினும், இந்த நியதி நாம் கடவுளைப் பற்றி எப்படி நினைக்கிறோமோ அதிலிருந்து மிகவும் வேறுபட்டது. கடவுள் முழுமையானவர், அவர் ஒன்றும் வெறும் பகுதிகளின் தொகுப்பு அல்ல; அவர் முழு பிரபஞ்சத்தையும் படைத்தவர். அவர்கள் இந்த நியதிகள் பற்றிச் சொல்லும்போது கடவுளுக்கு அவமரியாதையை உண்டு பண்ணுகிறார்கள். கடவுள் பகுதிகளால் ஆனவர் என்றால், அவர் தன்னைப் போலவே இருக்க முடியாது, அவர் வெவ்வேறு பகுதிகளால் ஆனவராகவே இருப்பார். உதாரணமாக, அவர் சூரியனாக இருந்தால், அவர் சந்திரனாக இருக்க முடியாது; அவர் சந்திரனாக இருந்தால், அவர் பூமியாக இருக்க முடியாது; அவர் பூமியாக இருந்தால், அவர் சமுத்திரமாக இருக்க முடியாது. இந்த வழியில் ஒவ்வொரு பகுதியையும் பிரித்துப் பார்ப்பதன் மூலம் இந்தக் கருத்து எவ்வளவு முட்டாள்தனமானது என்பதைக் காணலாம். 4. நமது உடல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்ட அடுத்த காரணி அவர்களின் கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்தப் போதுமானது. கண்ணால் கேட்க முடியாது, காது என்பது ஒரு கை அல்ல, வயிறு மார்பு ஆகிவிட முடியாது, கழுத்து ஒரு கால் ஆகிவிட முடியாது. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சொந்த இயக்கம் உள்ளது. மேலும் இந்த உடற் பாகங்கள் அனைத்தும் ஒன்றாக இயங்கினாலும், அவற்றை ஒன்றிணைத்த இயற்கை – கடவுள் அனுமதித்தபடி, அவ்வாறு இயங்க முடிவு செய்யும்போது அவை இறுதியில் பிரிந்துவிடும். அவர்கள் படைப்பின் அனைத்து பகுதிகளையும் ஒன்றாக இணைத்து அதை கடவுள் என்று அழைத்தால், நான் முன்பு குறிப்பிட்டது போல் இந்த விஷயம் உண்மையில் கடவுளைப் போன்றது அல்ல என்றும் , பாகங்கள் பொதுவாக பிரிக்க விரும்புவதால் அது இறுதியில் மீண்டும் பிரிந்துவிடும் என்றும் அர்த்தம்.
29. இயற்கையில் உள்ள சக்திகளின் சமநிலை கூட்டாகவோ அல்லது பகுதிகளாகவோ கடவுளால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதைக் குறிக்கிறது
அவர்களின் நம்பிக்கையின்மையை சவாலுக்கு உட்படுத்துவதற்கு இருக்கக்கூடிய மற்றொரு வழி என்னவென்றால் உண்மையைப் பயன்படுத்துவதாகும். கடவுள் உடல் ரீதியானவர் அல்ல, அவரைக் காண முடியாது, மேலும் அவர் நாம் தொட்டுணரக்கூடிய ஒன்றல்ல என்றால், எப்படி கடவுளுக்கு ஒரு உடல் இருப்பதாக அவர்கள் நினைத்து, பார்க்கவும் தொடவும் கூடிய சிலைகளை வழிபட முடியும்? 2. கடவுளைப் பற்றி மக்கள் சொல்வது உண்மையாக இருந்தால், அவர் சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என்றால், படைப்பை வணங்குபவர்கள் அது கடவுளின் வரையறைக்கு பொருந்தாது என்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? உதாரணமாக, சூரியன் பூமிக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது அதன் ஒளி பூமியின் நிழலால் மறைக்கப்படுகிறது. மேலும் பகலில் சூரியனின் பிரகாசம் சந்திரனை மறைக்கிறது. சாதாரண மழை பயிபச்சைகளுக்கு நன்மை செய்கிறது என்றால், ஆலங்கட்டி மழை அந்தப் பயிர்களை சேதப்படுத்தும். அதிக தண்ணீர் தீயை அணைத்துவிடும். வசந்த காலம் குளிர்காலத்தை மாற்றுகிறது. ஆனால் கோடை காலம் வசந்த காலத்தை நீண்ட காலம் நீடிக்க விடாது. அதேநேரம், இலையுதிர் காலம் கோடை காலத்தை நீண்ட காலம் நீடிக்காமல் பார்த்துக் கொள்கிறது. 3. அவை உண்மையிலேயே கடவுள்களாக இருந்தால், அவை ஒன்றையொன்று தோற்கடிக்கவோ மறைக்கவோ கூடாது, ஒன்றாகவே இருக்க வேண்டும், ஒரே நேரத்தில் தம் கடமைகளைச் செய்ய வேண்டும். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் இரவும் பகலும் ஒரேவிதமாக, ஒரே தொகுதியாய்ப் பிரகாசிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒளிரச் செய்ய வேண்டும். பருவ காலங்களான – வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் – எந்த பிரச்சனையும் இல்லாமல் மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வந்துபோக வேண்டும். கடல் நன்னீருடன் கலந்து அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். புயல்காற்றும் மென்மையான தென்றல் காற்றும் ஒரே நேரத்தில் வீசவேண்டும். நெருப்பும் நீரும் ஒரேவிதமாக மக்களுக்கு உதவ வேண்டும். நம் எதிரிகள் கூறுவது போல் அவை கடவுள்களாக இருந்தால், அவை தீங்கு விளைவிக்க மாட்டா. மாறாக அனைவருக்கும் நன்மை செய்யும். 4. ஆனால் இவற்றில் எதுவும் சாத்தியமில்லை என்றால், அவற்றின் பரஸ்பர இணக்கமின்மை காரணமாக, ஒன்றுக்கொன்று பொருந்தாத, மோதிக்கொள்ளும், இணைக்க முடியாத இந்த விடயங்களுக்கு கடவுள்களின் பெயரைக் கொடுப்பதோ அல்லது கடவுளுக்கு உரிய மரியாதைகளுடன் அவற்றை வணங்குவதோ எப்படி சாத்தியமாகும்? இயற்கையாகவே முரண்படும் விடயங்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு அமைதியைக் கொண்டு வந்து நல்லிணக்கத்தை உருவாக்கக் கூடும்? சூரியன், சந்திரன் அல்லது இயற்கையின் எந்தப் பகுதியும், கல், மரம் அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட சிலைகள் அல்லது கதைகளில் வரும் சீயஸ் மற்றும் அப்பொலோ போன்ற கடவுள்கள் கூட உண்மையான கடவுள்கள் என்பது சாத்தியமில்லை. எங்கள் வாதம் இதை நிரூபிக்கிறது. இவற்றில் சில இயற்கையின் பகுதிகள் மட்டுமே. சில உயிரற்றவை, மற்றவை ஒரு காலத்தில் சாதாரண மனிதர்களாக வாழ்ந்தவை. எனவே, அவற்றை வணங்குவது உண்மையான மத வழிபாடு அல்ல; அது கடவுளின்மைக்கு வழிவகுக்கிறது மற்றும் கிறிஸ்துவின் தந்தையான ஒரே உண்மையான தேவனை அறிந்து கொள்வதிலிருந்து விலகிச்செல்லும் ஒரு தவறான வழியையே காட்டுகிறது. 5. கிரேக்க சிலை வழிபாடு தவறுகளால் நிறைந்துள்ளது மற்றும் மனித வாழ்க்கைக்கு உதவுவதற்குப் பதிலாக அதன் அழிவுக்கே வழிவகுக்கிறது என்பதை நாம் நிரூபித்துள்ளதால், இப்போது நமது சரியான திட்டத்தைப் பின்பற்றுவோம். தவறு என்ன என்பதைச் சுட்டிக்காட்டிய பிறகு உண்மையைத் தேடிச் சென்று பிரபஞ்சத்தின் படைப்பாளரைப் புரிந்துகொள்வோம், அவர் தந்தையின் இறை வார்த்தையானவர். அவர் மூலம், நாம் பரலோக தந்தையை அறிந்துகொள்ளலாம் என்பதோடு, கிரேக்கர்கள் சத்தியத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றிருக்கிறார்கள் என்பதையும் இங்கே அறிந்து கொள்ளக்கூடியதாயிருக்கிறது.
பகுதி 2
30. மனிதனின் ஆன்மா அறிவுசார்ந்ததும் அதன் சொந்த இயல்புக்கு உண்மையாகவும் இருக்குமானால் அதனால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியும்
நாம் விவாதித்த கருத்துக்கள் வாழ்க்கைக்கான தவறான வழிகாட்டிகள் மட்டுமே; ஆனால் சத்தியத்தின் வழி உண்மையான மற்றும் சத்தியத்தின் தேவனான கடவுளை அடைவதை நோக்கமாகவே கொண்டிருக்கும். ஆனால் அதுகுறித்த அறிவு மற்றும் துல்லியமான புரிதல் போன்றவற்றை பெற்றுக்கொள்ள நாம் நம்மையே நாடவேண்டும், நம்மைத் தவிர வேறு யாரும் தேவையில்லை. கடவுள் எல்லாவற்றிற்கும் மேலானவராக இருப்பது போல, அவருக்கான பாதை நமக்குத் தொலைவில் அல்லது வெளியே இல்லை; அது நமக்குள்ளேயே இருக்கிறது. உபாகமம் 30:14 இல் மோயீசன் “இந்த வார்த்தை உனக்கு மிகவும் அருகில் இருக்கிறது. அது உன் வாயிலும், உன் இதயத்திலும் இருக்கிறது. எனவே நீ அதற்குக் கீழ்ப்படிய முடியும்” என்று சொன்னதன் காரணமாக அதை நம்மிடமே காணக்கூடியதாயிருக்கிறது. தேவனுடைய இராச்சியம் உங்களுக்குள் இருக்கிறது என்று இயேசு அவரது வார்த்தைகளால் இதை உறுதிப் படுத்தினார். 2. நமக்குள் விசுவாசமும் தேவனுடைய இராச்சியமும் இருந்தால், பிரபஞ்சத்தின் அரசரை, பிதாவின் இரட்சிக்கும் வார்த்தையானவரைக் கண்டு புரிந்துகொள்ள முடியும். கிரேக்கர்களைப் போல சிலைகளை வணங்குபவர்கள் சாக்குப்போக்குகளைச் சொல்லக்கூடாது. கடவுளை அடைய எந்த வழியும் இல்லை என்று சொல்லி யாரும் தங்களை ஏமாற்றிக் கொள்ளக்கூடாது, அதைத் தங்கள் நம்பிக்கை இன்மைக்கு ஒரு காரணமாகப் பயன்படுத்தக்கூடாது. 3. நம்மில் சிலர் இந்தப் பாதையைப் பின்பற்ற விரும்பாவிட்டாலும், வாழ்க்கையின் இன்பங்களால் திசைதிருப்பப்பட்டாலும், அனைவரும் இந்தப் பாதையைப் பின்பற்றும் திறன் கொண்டவர்களாக இருக்கிறோம். இந்தப் பாதை என்றால் என்ன என்று யாராவது கேட்டால், அது நம்முடைய சொந்த ஆன்மாவும் நமக்குள் இருக்கும் புரிதலும் தான் என்று நான் உரத்துக் கூறுவேன். இதன் மூலம் மட்டுமே நாம் கடவுளை உண்மையிலேயே கண்டுணரவும் புரிந்துகொள்ளவும் முடியும். 4. கடவுளை மறுதலிக்கும் சிலர் மனிதர்களுக்கு ஆன்மா என ஒன்று இல்லை என்று கூறலாம். இந்த கூற்று அவர்களின் மற்றைய சில கூற்றுகளை விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் அறிவுள்ள மக்கள் தங்களைப் படைத்த கடவுளை என்றும் மறுதலிப்பதில்லை. எனவே, ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மா என ஒன்று இருக்கிறது. அந்த ஆன்மா பகுத்தறிவு கொண்டது என்பதை விளக்குவது முக்கியம். சில பிரிவினர் இதை மறுக்கின்றனர். மனிதர்கள் தாம் காணும் உடலின் வடிவத்தைத் தவிர வேறில்லை என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு ஆன்மா இருக்கிறது என்பதை நாம் நிரூபித்த பிறகு அது உண்மையை இன்னும் தெளிவாகக் காண உதவும்.
31. மனிதர்களுக்கு ஒரு பகுத்தறிவுடைய ஆன்மா இருக்கிறது என்பதற்கான சான்று: (1) மனிதர்கள் விலங்குகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்கள்; (2) மனிதர்கள் தெளிவான முறையில் விஷயங்களைப் பற்றி சிந்திக்கும் திறனை உடையவர்களாக இருக்கிறார்கள்; அத்தோடு, சிந்தனை என்பது ஒரு இசைக்கலைஞர் தனது இசைக்கருவியை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது போன்றது. நாம் கனவு காணும் விதம் இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது.
முதலாவதாக, ஆன்மாவின் பகுத்தறிவு இயல்பானது, பகுத்தறிவு இல்லாத உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இதனால்தான் நாம் பொதுவாக மனிதர்களை பகுத்தறிவு ஜீவிகள் என்று குறிப்பிடுகிறோம், ஏனென்றால் நாம் ஒரு சிந்தித்து செயலாற்றும் இனமாக இருக்கிறோம். 2. இரண்டாவதாக, மனிதர்கள் மட்டுமே தங்களுக்கு வெளியே உள்ள விஷயங்களைப் பற்றியும் தங்களுக்கு முன்னால் இல்லாத விஷயங்களைப் பற்றியும் தங்கள் எண்ணங்களைப் பற்றியும் சிந்தித்து, தீர்ப்பின் அடிப்படையில் தெரிவுகளை மேற்கொள்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். விலங்குகள் தாங்கள் கண்ணில் படும் காட்சி குறித்து அந்த கணத்தில் மட்டுமே எதிர்வினையாற்றுவதோடு அந்த விஷயங்கள் அவைகளுக்குத் தீங்கு விளைவித்தாலும் கூட, அந்த நேரத்தில் நடப்பவற்றுக்கு ஏற்றவாறு தான் செயல்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, மனிதர்கள் தாங்கள் பார்ப்பதை மட்டும் பின்பற்றுவதில்லை; அவர்கள் அதைப் பற்றி யோசித்து தங்கள் எண்ணங்களில் என்ன உதிக்கிறதோ அதன் அடிப்படையில் தான் முடிவுகளை எடுக்கிறார்கள். பெரும்பாலும், மக்கள் தங்கள் உணர்வுகளை பகுத்தறிவு மூலம் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் அதைப் பற்றி அதிகமாக யோசிக்கும் பட்சத்தில், அவர்களின் பகுத்தறிவில் மாற்றம் நிகழக்கூடும். உண்மையை மதிக்கும் எவரும் மனிதகுலத்தின் அறிவு உடல் புலன்களிலிருந்து வேறுபட்டது என்பதை உணர முடியும். 3. மனம் நம் புலன்களிலிருந்து வேறுபட்டது. நாம் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, மணப்பது மற்றும் தொடுவது ஆகியவற்றை தீர்மானிக்க இது நமக்கு உதவுகிறது. ஒவ்வொரு புலனுக்கும் அதன் சொந்த தொழிற்பாடு உள்ளது: கண்கள் பார்க்கின்றன, காதுகள் கேட்கின்றன, வாய் சுவைக்கின்றது, மூக்கு முகர்கின்றது, கைகள் உணர்கின்றன. இருப்பினும், நாம் எதைப் பார்க்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும், எதைத் தொட வேண்டும், எதை சுவைக்க வேண்டும், எதை முகர வேண்டும் என்பதை அறிவது என்பது புலன்களுக்கு அப்பாற்பட்ட விடயம். அது ஆன்மாவிற்கும் அதில் குடிகொண்டிருக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சொந்தமானது. உதாரணமாக, நமது கைகளால் ஒரு வாளை ஏந்தலாம், நமது வாய் நஞ்சைக்கூட சுவைக்கலாம். ஆனால் இதைக்குறித்து எமது மனம் எமக்கு கட்டளை இடாவிட்டால், இவை தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பதை நாம் அறிய மாட்டோம். 4. ஒரு உவமையின் உதவியுடன் அதைப் பார்ப்பது, ஒரு திறமையான இசைக்கலைஞரின் கைகளில் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு இசைக்கருவியைப் போன்றது. பாடலின் ஒவ்வொரு சரமும் உயர்ந்ததாக இருந்தாலும், தாழ்ந்ததாக இருந்தாலும், இடைநிலையில் இருந்தாலும், அதன் இயல்பான ஒலி நயத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், இசைக்கலைஞரின் அனுசரணை இல்லாமல் அங்கு இசைக்கப்படும் மெல்லிசை, ராகம் அல்லது தாளத்தை நீங்கள் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாது. இசைக்கலைஞர் இசையோடு கலந்து இசைக்கும்போதுதான் இசை முழுமை பெறுகிறது. இதேபோலதான் நமது புலன்கள். அவை பாடலின் சரங்களைப் போன்றவை. ஒரு திறமையான மனம் அவற்றை வழிநடத்தும் போது ஆன்மா எதை நினைக்கிறது, எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 5. மனிதர்களுக்கு சிந்திக்கவும் பகுத்தறிவுடன் செயலாற்றவும் கூடிய ஒரு தனித்துவமான திறன் உள்ளது. இது தான் அவர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துகிறது. இந்தத் திறன் மக்களை பௌதீக சூழலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை ஆராய்ந்து சிந்தித்து செயலாற்ற உதவுகிறது. உதாரணமாக, ஒரு மனிதன் தரையில் அசையாமல் படுத்திருக்கும்போது, நட்சத்திரங்கள் மற்றும் வானத்தைப் பற்றி சிந்திக்க முடியும். அவர்கள் ஓய்வெடுக்கும்போது அல்லது தூங்கும்போது கூட, அவர்களின் மனம் மேலும் பல இடங்களை ஆராயலாம், நண்பர்களைச் சந்திக்கலாம், பகலில் என்ன நடக்கும் என்று கணித்து அறியலாம். தங்களுக்குப் புறத்தே உள்ள விடயங்களைப் பற்றி சிந்திக்கும் திறன் அவர்களின் பகுத்தறிவு கொண்ட ஆன்மாவிலிருந்து தான் தோன்றுகிறது.
32. (3) உடலால் இத்தகைய நிகழ்வுகளை உருவாக்க முடியாது; உண்மையில், பகுத்தறிவுள்ள மனம் உடலின் உள்ளுணர்வுகளைக் கட்டுப்படுத்துவதை நாம் காணலாம்
உண்மையை ஏற்க மறுப்பவர்களுக்கு நமது விளக்கத்தை முடிக்க மற்றொரு விஷயத்தைச் சேர்க்க விரும்புகிறோம். உடல் இயற்கையாகவே தற்காலிகமானது என்றாலும், மக்கள் என்றென்றும் நீடிக்கும் விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறார்கள், சில சமயங்களில் சரியானதைச் செய்யும்போது அவர்கள் மரணத்தை எதிர்கொள்ள முடிவு செய்கிறார்கள். எமது உடல் சிறிது காலம் மட்டுமே நிலைக்கும் என்பதால் மக்கள் நித்தியமான விஷயங்களைப் பற்றி சிந்தித்து, அவர்களுக்கு அருகில் உள்ளதைப் புறக்கணித்து, தொலைவில் உள்ளதை ஏன் விரும்புகிறார்கள்? உடல் தன்னைப் பற்றிய எண்ணங்களை மட்டும் கொண்டிருக்க முடியாது என்பதோடு அதற்கு வெளியே உள்ள விஷயங்களைப் பற்றியும் சிந்திக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக அது தற்காலிகமானது மற்றும் குறுகிய காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். 2. இதன் பொருள், உடல் என்பது தன்னிலையில் இருந்து சிந்திக்கும், வேறுபட்ட, தனித்துவமான ஒன்றாக இருக்க வேண்டும். அப்படியானால், இது ஒரு பகுத்தறிவு மற்றும் அழியாத ஆன்மாவைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஒரு இசைக்கலைஞர் தன் பாடலுக்கு ஒரு இசையை எவ்வாறு உருவாக்குகிறார் என்பதைப் போலவே தான் இதுவும். ஆன்மா வெளிப்புறத்திலிருந்து அல்ல உடலுக்குள் இருந்துகொண்டே உயர்ந்த கருத்துக்களின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துகிறது. 2. பார்க்க வேண்டிய நம் கண்களும் கேட்க வேண்டிய நம் காதுகளும் எப்படி சில விஷயங்களைப் பார்க்காமலோ கேட்காமலோ புறக்கணிக்கிறது என்பது விந்தையாக இருக்கிறது. நம் கண்களை அவை பார்க்க வேண்டியவற்றிலிருந்து விலக்க யார் முடிவு செய்கிறார்கள்? நம் காதுகள் ஒலிகளைக் கேட்பதை யார் தடுப்பது? நம் நாவின் சுவை மொட்டுகள் சுவைகளை அனுபவிப்பதையோ, நம் கைகள் பொருட்களைத் தொடுவதையோ, மூக்கு வாசனையை உணர்வதையோ யாரால் தடுக்க முடியும்? உடலின் இயற்கையான உள்ளுணர்வுகளுக்கு எதிராக எம்மை செயல்பட வைப்பன எவை? பொதுவாக அதன் இயல்பான வழிகளைப் பின்பற்றும் நம் உடல், வேறொருவரின் பேச்சைக் கேட்டு அவரது விருப்பத்திற்கிணங்க அதை எவ்வாறு தொழிற்பட அனுமதிக்கும்? இந்தக் கேள்விகள் நமது பகுத்தறிவுகொண்ட மனம் தான் நம் உடலின் தொழிற்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது என்பதை எமக்கு உணர்த்துகின்றன. 3. குதிரையோட்டியால் ஓட்டிச்செல்லப்படும் குதிரையைப் போல, நமது உடலும் தானாகவே நகர முடியாது; அது வேறொருவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் மனிதர்களுக்கு நல்ல நடத்தையை ஊக்குவிக்கவும், கெட்ட செயல்களைத் தடுக்கவும் சட்டங்கள் உள்ளன. அதே நேரத்தில் விலங்குகளுக்கு பகுத்தறிவு மற்றும் புரிதல் இல்லாததால் அவை சரி எது, தவறு எது என்பது பற்றி சிந்திக்காது. எனவே எமது விவாதம் மனிதர்களுக்கு ஒரு பகுத்தறிவு ஆன்மா இருப்பதைக் காட்டுகிறது என்று நான் நம்புகிறேன்.
33 ஆன்மா அழியாதது. இது (1) அது உடலிலிருந்து வேறுபட்டது; (2) அது இயக்கத்தின் மூலமாகும்; (3) உடலைத் தாண்டி அதற்கு அப்பால் சென்று சிந்திக்கும் மற்றும் உணரும் ஆற்றலைக் கொண்டுள்ளது
ஆன்மா என்றென்றும் வாழ்கிறது, தற்கு அழிவில்லை என்று திருச்சபையின் போதனைகள் கற்பிக்கின்றன. போலியான சிலைகள் சிலை வந்தனங்கள் எவ்வாறு தூக்கி எறியப்பட வேண்டும் என்பது குறித்த படிப்பினைகளைப் பெற இது உங்களுக்கு நிச்சயம் உதவும். உடலைப் பார்த்து, அது ஆன்மாவிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் இதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். ஆன்மா உடலிலிருந்து வேறுபட்டு இருப்பதையும், உடல் இயற்கையாகவே மரித்து விடும் என்றும் ஆன்மா அழியாததாக இருக்க வேண்டும் என்றும் தான் இதன் அர்த்தம். ஏனெனில் அது உடலைப் போன்றது அல்ல. 2. மீண்டும் நாம் காட்டியபடி, ஆன்மா உடலை ஆட்சிசெய்கிறது. அது வேறு இந்தத் தாக்கங்களுக்கும் அடிப்பணிவதில்லை. ஆன்மாவின் இயக்கம் இயல்பானது. மரித்தபின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் தொடர்கிறது. உடல் ஆன்மாவை ஆட்சிசெய்தால், உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் ஆன்மா இறந்துவிடும். ஆகவே ஆன்மா உடலை இயக்குவதால் அது தானும் இயங்குகிறது என்று கூறலாம். எனவே, ஆன்மா தன்னைத்தானே இயக்கிக்கொள்வதால் உடலில் உயிர் பிரிந்த பிறகும் ஆன்மா தொடர்ந்து வாழும் என்று அர்த்தம் கொள்ளமுடியும். 3. ஆன்மாவின் இயக்கம் அதன் வாழ்க்கையைப் போன்றது. அது இயங்கும் போது உடலில் உயிர் இருப்பதாக நாம் அழைக்கிறோம். அதேநேரம் உடல் அசையாமல் இருக்கும்போது அது மரணித்து விட்டது என்று கூறுகிறோம். ஆகவே உடலில் ஆன்மா எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்கும்போது இது தெளிவாகிறது. உடல் அசையாமல் இருக்கும்போது, அதாவது ஒருவர் தூங்கும்போது அல்லது மரணத் தறுவாயில் இருக்கும்போது கூட, ஆன்மாவால் விழித்திருந்து பௌதிக உலகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி சிந்திக்க முடியும். அது புனிதர்கள் மற்றும் தேவதூதர்களுடன் கூட தொடர்பு கொள்ளக்கூடும். உடலுக்கு அப்பால் சிந்திக்கவும் புரிந்துகொள்ளவும் முடியும் என்ற திறனை அது வெளிப்படுத்துகிறது. எனவே, கடவுள் சித்தப்படி ஆன்மா உடலிலிருந்து பிரியும்போது அது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய இன்னும் தெளிவான புரிதலைப் பெறும். ஆன்மா உடலுடன் இணைந்திருக்கும் போது உடலுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடிந்தால், அது நிச்சயமாக உடல் இறந்த பிறகும் தொடர்ந்து வாழும். அவருடைய இறை வார்த்தையான நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அதைப் படைத்த கடவுளின் கிருபையால் தொடர்ந்து வாழும். 4. ஆன்மா என்றென்றும் நிலைத்துவாழும் விஷயங்களைப் பற்றி சிந்திப்பதோடு நினைவிலும் கொள்கிறது. ஏனெனில் அது நித்தியமானது. தற்காலிகமான உடல், தற்காலிகமான விஷயங்களில் கவனம் செலுத்துவது போல, ஆன்மா நித்திய விஷயங்களில் அதன் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுவது மட்டுமல்ல, அது என்றென்றும் வாழும் என்பதையும் காட்டுகிறது. அழியாத தன்மை கொண்ட எண்ணங்கள் எப்போதும் ஆன்மாவுடன் இருக்கும். அந்த அழியாத தன்மையானது ஆன்மாவை என்றென்றும் உயிருடன் வைத்திருக்கும் எரிபொருளாக செயல் படுகின்றது. இதனால்தான் ஆன்மா தானாகவே கடவுளைப் புரிந்துகொண்டு அவரைப் பற்றிய அறிவை வெளிப்புற மூலங்களிலிருந்து அல்லாமல் தனக்குள்ளேயே பெற முடிகிறது.
34. ஆன்மா தன்னை பாவக் கறைகளிலிருந்து விடுவித்துக் கொண்டால் மட்டுமே கடவுளின் சாயலில் படைக்கப்பட்டதை நேரடியாக அறிய முடியும், இருப்பினும் பாவத்தின் காரணமாக அதனால் தெளிவாகக் காண முடியாவிட்டாலும், படைப்பின் சான்றுகள் மூலம் கடவுளின் இருப்பை அது எப்போதும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்
கடவுளை மறுத்து உயிரற்றவற்றை வணங்குபவர்களைப் போலவே, தங்களுக்கு பகுத்தறிவு ஆன்மா இல்லை என்று நினைப்பவர்களும் பகுத்தறிவற்ற மனிதர்களாக இருப்பதன் மூலம் தங்கள் அறிவீனத்தின் விளைவுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். எனவே, தங்களுக்கு ஆன்மா இல்லாததால் மூடநம்பிக்கையுடன் உயிரற்ற கடவுள்களை வணங்குவதால் அவர்கள் பரிதாபத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் தகுதியானவர்களாக இருக்கின்றனர். 2. அவர்கள் ஒரு ஆன்மா இருப்பதாகவும், தாங்கள் பகுத்தறிவுள்ளவர்கள் என்றும் எண்ணினால் அவர்கள் ஏன் பகுத்தறிவுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்? தவறான வழிகளில் சிந்திக்கிறார்கள்? கடவுளை விடப் பெரியவர்கள் என்று கூட தங்களைக் கூறுகிறார்கள்? அவர்களுக்கு அழியாத மற்றும் கண்ணுக்குத் தெரியாத ஆன்மா இருக்கிறது, ஆனால் அவர்கள் தற்காலிகமான மற்றும் புலப்படும் விஷயங்களின் துணைகொண்டு கடவுளின் உருவங்களை உருவாக்குகிறார்கள். மேலும், அவர்கள் ஏன் கடவுளிடமிருந்து விலகிச் சென்றது போல் மீண்டும் அவரிடம் திரும்பக்கூடாது? ஏனென்றால், அவர்கள் தங்கள் புரிதலை கடவுளிடமிருந்து விலக்கி, இல்லாதவற்றைக் கடவுள்களாகக் காட்டி தேவையற்ற பாசாங்குகள் செய்வதை நிறுத்திவிட்டு, தங்கள் மனதைத் திடப்படுத்தி, கடவுளிடம் திரும்பிச் செல்ல அவர்கள் முடிவு செய்யலாம் அல்லவா? 3. மக்கள் தங்கள் தீய இச்சைகளை விட்டுவிட்டு, தங்களுக்குத் தீங்கு விளைவித்த எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு, தங்கள் ஆன்மாக்களைச் சுத்திகரிப்பதில் ஈடுபட்டால், அவர்களால் மாற்றத்தைக் காண முடியும். இந்த வழியில் அவர்களின் ஆன்மாக்கள் அவர்கள் படைக்கப்பட்டபோது இருந்ததைப் போலவே அவர்களின் உண்மையான மற்றும் எளிமையான தன்மையைக் காட்ட முடியும். பின்னர் அவர்கள் யாரைப் போல இருக்க வேண்டும் என்று உருவாக்கிய பிதாவின் வார்த்தையைக் காணலாம். ஆதியாகமம் 1:26 இல், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள்” என்று வேதாகமம் கூறுவது போல், அது தன்னில் உள்ள பாவத்தின் அனைத்து அழுக்குகளையும் சுத்தம் செய்து, உருவத்தின் தூய தன்மையை மட்டுமே கொண்டிருக்கும் போது இந்த உருவம் உண்மையில் பிரகாசமாகிறது. ஆன்மா தந்தையின் உருவத்தை, அதாவது வார்த்தையானவரை ஒரு கண்ணாடியில் பார்ப்பது போலப் பார்க்கிறது. மேலும் அவர் மூலம் இரட்சகர் பிரதிநிதித்துவப்படுத்தும் இறை தந்தையின் சித்தத்தைப் புரிந்துகொள்கிறது. 4. அல்லது, ஆன்மாவின் சொந்தக் கற்பித்தல் போதுமானதாக இல்லாவிட்டால், வெளிப்புற விஷயங்கள் அதன் அறிவை மறைத்து, உயர்வான விடயங்களைப் பார்ப்பதைத் தடுக்கின்றன. எனினும், காணக்கூடிய விஷயங்களிலிருந்து கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுவது மேலும் சாத்தியமாகும். ஏனெனில் படைப்பு என்பது எழுதப்பட்ட எழுத்துக்களில் இருப்பது போல, அதன் ஒழுங்கு மற்றும் இணக்கத்தால் இறைவனையும் படைப்பாளரையும் உரத்த குரலில் அறிவிக்கிறது.
பகுதி 3
35. படைப்பு கடவுளின் மகத்துவத்தை நமக்குக் காட்டுகிறது; குறிப்பாக எல்லாம் ஒழுங்கமைக்கப்பட்டு ஒன்றாகச் சிறப்பாகச் செயல்படும் விதத்தில் அது காணப்படுகிறது
கடவுள் நல்லவராகவும், மனிதகுலத்தின் மீது அன்பு செலுத்துபவராகவும், அவரால் படைக்கப்பட்ட ஆன்மாக்களைப் பராமரிப்பவராகவும் இருப்பதால் – அவர் இயல்பிலேயே கண்ணுக்குத் தெரியாதவராகவும், புரிந்துகொள்ள முடியாதவராகவும், படைக்கப்பட்ட அனைத்துக்கும் அப்பாற்பட்டவராகவும் இருப்பதால் மனித இனம் அவரைப் பற்றிய புரிதலைப் பெறுவதற்கான சிரமங்களை எதிர்நோக்கலாம். கடவுள் தனது வார்த்தையைக் கொண்டு பிரபஞ்சத்திற்கு அதன் ஒழுங்கைக் கொடுத்தார். இந்த வழியில், அவர் கண்ணுக்குத் தெரியாதவராக இருந்தாலும், அவர் படைத்தவற்றின் மூலம் மக்கள் அவரை இன்னும் காணக்கூடியதாயிருக்கிறது. ஒரு கலைஞரை நாம் பார்க்காவிட்டாலும், அவரின் படைப்புகளைக் கொண்டு அவரை அடையாளம் காண முடியும். 2. ஃபிடியாஸின் என்ற சிற்பியின் படைப்புகள் அவரது கலை நுணுக்கம், அழகு மற்றும் சமச்சீர்மை மூலம் மக்கள் அவரை அடையாளம் காண முடியும் என்பது போல, பிரபஞ்சத்தின் படைப்பாளரான கடவுளின் ஆதாரங்களை நாம் நேரடியாகக் காண முடியாவிட்டாலும், அவரது படைப்புகளின் வாயிலாக எம்மால் காணக்கூடியதாயிருக்கிறது. கடவுள் நம்மிடமிருந்து முழுமையாக மறைந்துவிடவில்லை; அதற்கு பதிலாக அவர் உருவாக்கியவற்றின் மூலம் அவர் இயற்கையாகவே கண்ணுக்குத் தெரியாதவராக இருந்தாலும், அவரைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும் வகையில் உலகைப் படைத்தார். 3. நான் இதை என் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொல்லவில்லை. ஆனால் கடவுளைப் பற்றிப் பேசிய மனிதர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் சொல்கிறேன். அவர்களில் பவுல் ரோமர் 1:20 இல் இவ்வாறு எழுதுகிறார்: “தேவனைப் பற்றிய பல உண்மைகள் மனிதர்களால் காண முடியாததாக உள்ளது. அவர் முடிவில்லாத வல்லமையும், தெய்வத்துவமும் கொண்டவர். உலகம் உண்டான நாள் முதல் மக்களால் அவரை, அவரது படைப்புகள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலேயே இருக்கிறார். அதனால் மக்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள இயலாது” என்று. அதேவேளை, லைகவோனியன்கள் (Lycaonians) பற்றி அப்போஸ்தலர் 14:15 இல் அவர் கூறும்போது, “மானுடரே, ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள் தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்லவே நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படி நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடம் வாருங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் உண்டாக்கியவர்” என்கிறார். மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் அவர் எல்லா தேசங்களையும் அவற்றின் சொந்த பாதைகளில் செல்ல அனுமதித்தார். அவர் மென்மேலும் அவரது நன்மைகளை விரிவடையச் செய்தார். குறிப்பாக வானத்திலிருந்து மழையைப் பொழிவதன் மூலம் நல்ல விளைச்சல்களையும் அறுவடைகளை வழங்கி உங்கள் உடல்களையும் மனங்களையும் உணவு மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பியதன் மூலம் தன்னை உலகிற்குக் காட்டினார். 4. வானம், சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் வெவ்வேறு பாதைகளிலும், திசைகளிலும் நகர்வதையும் அவற்றின் தெளிவான மற்றும் கிரமமான ஒழுங்கையும் ஒருவர் கவனித்தாரானால், இவை அனைத்தும் ஒரு படைப்பாளரால் தான் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதை அவர்களால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்? பகலில் சூரியன் உதிப்பதையும் இரவில் சந்திரன் பிரகாசிப்பதையும், முறையான மற்றும் வழக்கமான எண்ணிக்கையுடன் நாட்கள் சுழற்சியாக செல்வதையும், சில நட்சத்திரங்கள் குறிப்பிட்ட பாதைகளைப் பின்பற்றுவதையும் மற்றவை சீராக நிலை கொண்டிருப்பதையும் நாம் கவனிக்கும்போது அவற்றை வழிநடத்தும் ஒரு படைப்பாளர் இருக்க வேண்டும் என்பதை எப்படியும் உதாசீனம் செய்ய முடியாது.
36. இந்த வரிசையை உருவாக்கும் முரண்பாடான சக்திகளைப் பற்றி நாம் சிந்திக்கும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது
வெப்பம், குளிர் அல்லது வறட்சி, ஈரம் போன்ற எதிர்மாறான விஷயங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் இணக்கமாகப் பயணிக்கின்றன என்பதைக் கவனிக்கும் எவரும், அவற்றை ஒழுங்கு படுத்தும் ஒரு தனிதத்துவமான சக்தி இருக்கக்கூடும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதேபோல், குளிர்காலம் வசந்த காலமாகவும், வசந்த காலம் கோடைகாலமாகவும், கோடை காலம் இலையுதிர்காலமாகவும் மாறுவதைக் காணும்போது – ஒவ்வொரு பருவமும் அதன் சொந்த சீதோஷ்ண விளைவுகளைக் கொண்டிருக்கும். குளிர்காலம் குளிராக இருப்பது போலவும், கோடை காலம் வெப்பமாக இருப்பது போலவும் – இந்த எதிரெதிர் சக்திகள் மக்களுக்கு நன்மை பயக்கும் சமநிலையை உருவாக்குகின்றன என்பதை நாம் உணரக் கூடியதாயிருக்கிறது. இந்த மாற்றங்கள் அனைத்தையும் நிர்வகித்து அவற்றை சமநிலைப்படுத்தும் ஒரு மகத்தான சக்தி இருக்கிறது என்பதை எம்மால் பார்க்க முடியாவிட்டாலும் கூட, நம்பாமல் இருப்பது கடினம். 2. வானத்தில் தவழும் மேகங்களையும் அவற்றுள் பொதிந்து நிற்கும் கனமான நீரையும் பார்த்து, அவற்றை ஒன்றாக வைத்திருப்பவர் ஒருவர் இருக்கிறார் என்றும் எல்லாவற்றையும் இந்த வழியில் ஏற்பாடு செய்துள்ளார் என்பதை எவராலும் உணராமல் இருக்க முடியுமா? அல்லது இயற்கையின் கனமான பொருளான பூமி, தண்ணீரில் தன்னை ஊன்றி, இயற்கையாகவே அசையும் ஒன்றின் மீது அசையாமல் இருப்பதைக் காண முடியுமானால், அதைப் படைத்து ஒழுங்கமைத்த ஒரு படைப்பாளர் இருக்கிறார். அவர் கடவுள் ஒருவர் தான் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியாமற் போகுமா? நிலத்திலுள்ள மரங்கள் சரியான நேரத்தில் பழங்களைத் தருவதையும், வானத்திலிருந்து மழை பொழிவதையும், ஆறுகள் ஓடுவதையும், கிணறுகள் ஊற்றெடுப்பதையும், பல்வேறு விலங்கினங்களில் இருந்து குட்டிகள் மற்றும் குஞ்சுகள் பிறப்பதையும், இவை எல்லா நேரங்களிலும் நிகழாவிட்டாலும், குறிப்பிட்ட பருவங்களில் நிகழ்வதையும் – பொதுவாக, ஒன்றுக்கொன்று மாறுபட்ட, முரண்பாடான சூழ்நிலைகளில் கூட, அவற்றின் இணக்கத்தை சமநிலையாகவும் சீரான வரிசையிலும் ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கும் ஒரு சக்தி இருக்கிறது என்பதை எவராலும் எதிர்க்கவோ நிராகரிக்கவோ முடியுமா? 3. இங்கே குறிப்பிட்டுள்ள எவையும் தனியாகச் செயல்பட அனுமதிக்கும் பட்சத்தில், அவை உயிர்வாழவோ அல்லது தானாகத் தோன்றவோ முடியாது, ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டவை. தண்ணீர் என்பது இயல்பிலேயே கனமானது, அது கீழ்நோக்கிப் பாயும் இயல்பை உடையது. அதே சமயம் மேகங்கள் இலேசானவை, அவை வானத்தை நோக்கி மேலெழும்பும் இயல்பைக் கொண்டவை. இருந்தாலும், மேகங்கள் கனமான நீரை மேலே கொண்டு செல்வதை நாம் காணக்கூடியதாயிருக்கிறது. அதேபோல், பூமி உண்மையில் கனமானது, ஆனால் நீர் இலகுவானது; இருப்பினும், கனமான பூமி இலகுவான நீரின் மேல் தங்கி இருந்தபோதும் மூழ்குவதில்லை, அசையாமல் இருக்கும் இயல்பை உடையது. அதுபோலத்தான் ஆண்களும் பெண்களும் வேறுபட்டவர்கள். ஆனால் அவர்கள் ஒருவரோடொருவர் இணைந்து தங்களைப் போன்ற ஒரு உயிரை, ஒரு சிசுவை உருவாக்குகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், குளிர் என்பது வெப்பத்திற்கு எதிரானது, ஈரமானது வறட்சிக்கு எதிரானது, ஆனால் அவை ஒன்றாகக் கலக்கும் போதும், ஒன்றோடொன்று எதிர்த்து நிற்பதில்லை. அதற்கு பதிலாக, அவை ஒன்றாகச் செயல்பட்டு ஒரு பொருளை உருவாக்கி அதன்மூலம் வாழ்க்கையை உருவாக்கவும் முடியும்.
37. அதே தலைப்பு தொடர்ந்தது
முரண்பட்ட மற்றும் எதிரெதிரான விஷயங்கள், அவற்றை ஒன்றிணைக்கும் ஒரு மகத்தான சக்தி இல்லாமல் ஒன்றிணைவதில்லை. இந்த மகத்தான சக்தி என்பது எஜமானருக்கு கீழ்ப்படிவதைப் போன்றது. அவற்றின் வேறுபாடுகளில் கவனம் செலுத்துவதற்கும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதற்கும் பதிலாக, அவற்றை ஒன்றிணைக்கும் இந்த மகத்தான சக்தியைத்தான் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். அவை இயல்பாகவே எதிர்ப்புகளை சந்தித்தாலும், அவற்றை வழிநடத்துபவரின் சித்தத்தின் காரணமாக அவை இணக்கமாக வாழ்கின்றன. 2. மகத்தான சக்தி என்ற ஒன்றின் வழிகாட்டல் இல்லாமல் வெவ்வேறு விஷயங்கள் ஒன்றிணைய முற்பட்டால், கனமான பொருட்கள் இலேசான பொருட்களுடனும், ஈரமான பொருட்கள் உலர்ந்த பொருட்களுடனும், வட்டமான பொருட்கள் நேரான பொருட்களுடனும், நெருப்பு குளிருடனும், கடல் நிலத்துடனும், சூரியன் சந்திரனுடனும், நட்சத்திரங்கள் வானத்துடனும், காற்று மேகங்களுடனும் எவ்வாறு கலக்க முடியும்? ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும்போது இந்த இணக்கம் எவ்வாறு நிகழக்கூடும்? அப்படியானால், அங்கே நிறைய மோதல்கள் இருக்கும்: நெருப்பு எரியும் போது குளிர் உறைந்து போகும், கனமான பொருட்கள் கீழ்நோக்கி வரும்போது இலேசான பொருட்கள் மேலெழும்பும், சூரியன் பிரகாசிக்கும், காற்று இருளை உருவாக்கும். நட்சத்திரங்கள் கூட தங்களுக்குள் மோதிக்கொள்ளும், ஏனெனில் சில மேலேயும் மற்றவை கீழேயும் இருக்கும். இரவு பகலுக்கு வழிவகுக்காது, அதை எதிர்த்துப் போராடுவதில் தான் உறுதியாய் இருக்கும். 3. இது உண்மையாக இருந்தால், ஒழுங்கிற்கு பதிலாக குழப்பத்தையும், நெறிப்படுத்தலுக்கு பதிலாக குழப்பத்தையும், நெறிமுறை அமைப்பில் பற்றாக்குறையையும் நாம் காண்போம். மோதல்கள் நிறைந்த உலகில் அனைத்தும் அழிக்கப்பட்டு, நிலவும் ஒரேயொரு கொள்கை மட்டுமே உயிர்வாழும். ஒரே ஒரு கொள்கை மட்டுமே இருந்தபோதிலும், மற்றைய அனைத்தும் சமநிலையற்றவை என்பதைக் காட்டும். ஒரு கை அல்லது கால் மட்டும் இருக்குமானால் முழு உடலும் சரியாக செயல்படாது. 4. சூரியன் மட்டும் பிரகாசித்தால் அல்லது சந்திரன் மட்டும் ஓளிர்ந்தால் அல்லது எப்போதும் இரவாக மட்டுமே இருந்தால் அல்லது எப்போதும் பகலாக மட்டுமே இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும்? வானம் நட்சத்திரங்கள் இல்லாமல் இருந்தால், அல்லது நட்சத்திரங்கள் இருந்தும் வானம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? கடல் மட்டும் இருந்தால் அல்லது நிலம் தண்ணீர் மற்றும் இயற்கையின் பிற பகுதிகளும் இல்லாமல் இருக்குமானால் என்ன பயன்? தனிமங்கள் எப்போதும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அல்லது ஒரு தனிமமானது மிகவும் வலிமையாக இருந்தும் எதையும் உருவாக்க போதுமானதாக இல்லாவிட்டால் பூமியில் மனிதர்களோ அல்லது விலங்குகளோ எப்படி உயிர்வாழ முடியும்? வெப்பம், குளிர், ஈரப்பதம் அல்லது வறட்சியிலிருந்து மட்டும் எதையும் உருவாக்க முடியாது; அப்படி இருந்தால் எல்லாம் குழப்பமாகத்தான் இருக்கும். வலிமையான தனிமத்தால் கூட மற்றவற்றின் உதவி இல்லாமல் வாழ முடியாது, ஏனென்றால் இப்போது கூட ஒவ்வொன்றும் அப்படித்தான் இருக்கிறது.
38. இயற்கையில் காணப்படும் சமநிலை மற்றும் ஒழுங்கில் கடவுளின் ஒற்றுமை பிரதிபலிக்கிறது
அப்போதிலிருந்து எல்லா இடங்களிலும் குழப்பம் இருக்கவில்லை, ஆனால் ஒழுங்கு மற்றும் சமநிலை நிலவியது. குழப்பத்திற்கு பதிலாக, எல்லாவற்றையும் சரியான இணக்கமான சூழ்நிலையில் வைப்பதற்கான ஏற்பாடுகள் இருந்தன. எல்லாவற்றையும் படைத்து ஒழுங்கமைத்த எஜமானரை நாம் அடையாளம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தின் மத்தியிலும் நல்லிணக்கத்தைக் கொண்டுவர வேண்டும். நம் கண்களால் தேவனைப் பார்க்க முடியாவிட்டாலும் நம்மைச் சுற்றியுள்ள உலகில் அன்றாடம் நடைபெறும் ஒழுங்கு மற்றும் நல்லிணக்கத்தை அவதானித்தால், அங்கே ஒரு ஆட்சியாளர், ஏற்பாட்டாளர் மற்றும் அதிபதி ஒருவர் இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். 2. பிரச்சினை இருக்கிறது என்றால் அங்கே முறையான தலைமைத்துவம் இல்லையென்றே அர்த்தம். அதே நேரத்தில் ஒழுங்கு யாரோ ஒருவர் பொறுப்பில் இருப்பதைக் குறிக்கிறது. பெரியவர்கள், சிறியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், இளைஞர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றாக அமைதியாக வாழும் ஒரு நகரத்தை நாம் காண நேரிட்டால், அங்கே வாழ்பவர்கள் ஒவொருவரும் வித்தியாசமாக இருந்தாலும், அவர்கள் நன்றாகப் பழகுகிறார்கள், ஏழை பணக்காரர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என எந்த சண்டையும் அவர்கள் மத்தியில் இல்லை. அனைவருக்கும் ஒரே விதமான உரிமை உண்டு. இப்படியான சூழ்நிலையில், அந்த நகரத்தில் ஒரு ஆட்சியாளர் ஒருவர் – நாம் அவரைப் பார்க்க முடியாவிட்டாலும் கூட – அங்கே அவர் அமைதியைக் காக்கிறார் என்று நினைப்பது நியாயமாகவே இருக்கும். பிரச்சினைகள் உருவாகும்போது அங்கே எவரும் தலைமைத்துவப் பொறுப்பில் இல்லை என்பதைக் காட்டுகிறது. அதேநேரம், விடயங்கள் ஒழுங்காக நடைபெறும்போது யாரோ ஒருவர் வழிநடத்துகிறார் என்று அர்த்தம். நம் உடலில், கண் காதுடன் வாதிடாது, கை கால் நன்றாக தொழிற்படுகிறது. நம்மால் அந்த ஆன்மாவைப் பார்க்க முடியாவிட்டாலும் கூட, எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் சக்தி அதற்கு இருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். எனவே, இவ்வுலகில் உள்ள ஒழுங்கையும் நல்லிணக்கத்தையும் நாம் பார்க்கும்போது, கடவுள்தான் பொறுப்பில் இருக்கிறார். அவர் ஒருவர்தான், பலர் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
3. எல்லாம் ஒழுங்கமைக்கப்பட்டு ஒன்றாகச் செயல்படும் விதத்தைப் பார்க்கையில், ஒரே ஒரு உண்மையான ஆட்சியாளர் மட்டுமே இருக்கிறார் என்பதைது உறுதியாகிறது. அவர் வார்த்தையானவராகவும் இருக்கிறார். படைப்பின் பொறுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருந்தால், அங்கு எல்லாம் குழப்பமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு ஆட்சியாளரும் தங்கள் சொந்தக் கருத்தில் உதித்த விடயங்களை அமுல்படுத்த வேண்டுமென்று விரும்புவார்கள். மற்றவர்களுடைய கருத்துகளுக்கு செவிசாய்க்க மாட்டார்கள். பல கடவுள்களை நம்புவது என்பது ஒருவரையும் நம்பாதது போன்றது என்று நாம் ஏற்கனவே சொன்னது போல, ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால், அங்கு உண்மையான ஆட்சி நிலவாது என்றே அர்த்தம். ஒவ்வொரு ஆட்சியாளரும் மற்றவர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவார்கள். இது அராஜகத்துக்கும் ஒழுங்கின்மைக்கும் வழிவகுக்கும். அதேபோல், எந்த ஆட்சியாளரும் இல்லாத சமயத்திலும் நிச்சயம் குழப்பம் ஏற்படும். 4. அதேபோல், பலதரப்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் இசை ஒரே இசை வடிவமாக, அற்புதமான ஒலிநயமாக இனிமையைத் தருவதுபோல், பல்வேறுபட்ட பொருட்களின் ஒற்றுமை மற்றும் இணக்கம் போன்றவை ஆட்சியாளரும் ஒருவர் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் தூரத்திலிருந்து பல வேறுபட்ட கம்பிகளால் ஆன ஒரு இசைக்கருவி இசைக்கப்படுவதைக் கேட்டால், அது எவ்வளவு நன்றாக இசையைத் தருகிறது என்பதைக் கண்டு நீங்கள் வியப்பீர்கள். அதன் ஒலி வெறும் குறைந்த லயம், அல்லது உயர் லயம் அல்லது நடுத்தர லயம் என்றில்லாமல் அனைத்து ஒலிநயங்களும் சரியாகக் கலந்தே இசையை உருவாக்குகின்றன என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். யாழ் தானாகவே மீட்டப்படவில்லை என்பதையும், அது ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்களால் மீட்டப்படவில்லை என்பதை நீங்கள் பார்க்க முடியாவிட்டாலும் கூட, ஒவ்வொரு இசைக்கருவியின் ஒலியையும் ஒரு அழகான மெல்லிசையாகக் கோர்த்து, சுருதியிடன் சேர்த்து அற்புதமான இசையைத் தரவல்ல ஒரு இசைக்கலைஞர் இருக்கிறார் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. அதேபோலத்தான் முழு பிரபஞ்சமும் சரியான வகையில் இயங்கி, உயர்வான மற்றும் தாழ்வான விடயங்களுக்கு இடையில் எந்த மோதலும் இல்லாமல், அனைத்தும் ஒன்றாகத் தத்தம் கடமைகளைச் செய்கின்றன. எனவே, அனைத்து படைப்புகளின் ஆட்சியாளரும் அவற்றுக்கெல்லாம் அரசரும், அதிபதியும் ஒருவர் தான், பலர் அல்ல. அவர் தனது சொந்த ஒளியைப் பிரகாசிக்கச் செய்து எல்லாவற்றிற்கும் இயக்கத்தை அளிக்கிறார் என்று நம்புவது எப்போதும் நியாயமாகவே இருக்கிறது.
39. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பது சாத்தியமன்று
பிரபஞ்சத்தை சிருஷ்டித்தவர் ஒரே கடவுள் தான். ஒன்றுக்கு மேற்பட்ட படைப்பாளர்கள் இருப்பதாக நாம் நம்பக்கூடாது. உண்மையான மதம் ஒரே ஒரு படைப்பாளர் மட்டுமே இருப்பதாகக் கற்பிக்கிறது. மேலும் ஒரே ஒரு பிரபஞ்சத்தின் உளதாயிருக்கும் தன்மை கூட இந்தக் கருத்தை ஆதரிக்கிறது. பல கடவுள்கள் இருந்தால், பல பிரபஞ்சங்கள் இருக்க வேண்டும். ஒரு பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் அல்லது ஒரு பிரபஞ்சம் பல கடவுள்களால் உருவாக்கப் படுகிறது என்பது அர்த்தமற்றது, ஏனெனில் அது குழப்பமான மற்றும் நியாயமற்ற சூழ்நிலைகளுக்கு இட்டுச் செல்லும். 2. முதலாவதாக, ஒரே பிரபஞ்சம் பல கடவுள்களால் படைக்கப்பட்டிருந்தால், அவர்கள் பலவீனமானவர்கள் என்பதைக் காட்டும், ஏனெனில் அவர்களில் பலர் சேர்ந்து ஒரு விஷயத்தை உருவாக்க வேண்டியிருந்திருக்கும். ஆகவே ஒவ்வொரு கடவுளும் படைப்பதில் நேர்த்தியும் திறமையும் கொண்டவர்கள் அல்ல என்பதை இது குறிக்கும். ஒரு கடவுள் உண்மையிலேயே சக்திவாய்ந்தவராக இருந்தால், மற்றவர்கள் அவருக்கு உதவ வேண்டிய அவசியமில்லை. கடவுளுக்கு பலவீனம் இருப்பதாகக் கூறுவது தவறு மட்டுமல்ல, அவருக்கு செய்யும் பெரிய அவமரியாதையும் கூட. மக்கள் மத்தியில் கூட, மற்றவர்களின் உதவி இல்லாமல் ஒரு காரியத்தைத் தாங்களாகவே முடிக்க முடியாதவர்களை திறமையானவர்கள் என்று நாம் அழைக்க மாட்டோம். 3.இருப்பினும், எல்லோராலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுப் பணியையும் செய்ய முடியும். ஆனால் பாராட்டு பெறுவதற்காக மட்டுமே அவ்வாறு செய்தால், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நற்பெயருக்காக மட்டுமே பாடுபடுவார்கள். அவர்கள் திறமையற்றவர்களாக அடையாளம் காணப்படுவார்கள் என்ற பயம் அவர்களை இவ்வாறான வேடிக்கையான நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுவதோடு, கடவுள்கள் தாங்கள் பாராட்டப்படுவதைப் பற்றி கவலைப்படுவார்கள் என்று நினைப்பது மிகவும் முட்டாள்தனம். 4. ஒவ்வொரு படைப்பாளரும் எல்லாவற்றையும் தாங்களாகவே உருவாக்க முடிந்தால், நமக்கு ஒரு படைப்பாளர் மட்டுமே தேவை, ஏனெனில் அந்த ஒருவர் முழு பிரபஞ்சத்திற்கும் போதுமானவராக இருக்க முடியும். பல்வேறுபட்ட படைப்பாளர்கள் ஒரு படைப்பை மட்டுமே படைப்பது விசித்திரமாகவும் அவமரியாதையாகவும் இருக்கும். மாறுபட்ட மற்றும் தனித்தனி விஷயங்களை விட முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த ஒன்று சிறந்தது என்று அறிவியல் நமக்குக் கற்பிக்கிறது. 5. பிரபஞ்சம் பல கடவுள்களால் படைக்கப்பட்டிருந்தால், அது வெவ்வேறு மற்றும் குழப்பமான வழிகளில் பயணிக்கும். ஒவ்வொரு கடவுளும் அதை வித்தியாசமாகச் செயல்பட வேண்டுமென நினைப்பார்கள். இது குழப்பத்திற்கும் சீர்குலைவுக்கும் வழிவகுக்கும். பலர் ஒரு கப்பலை இயக்க முயற்சித்தால் அது சரியாகப் பயணிக்க முடியாது. அதுபோலவே, ஒரு இசைக்கருவியை ஒருவர் மட்டுமே வாசித்தால் அன்றி நல்ல ஒலிநயத்தை உருவாக்க முடியாது. ஆகவே பிரபஞ்சம் நன்றாகச் செயல்பட ஒரு வழிகாட்டும் சக்தி மாத்திரமே தேவை. 6. படைப்பு என்பது ஒன்று, பிரபஞ்சம் என்பதும் ஒன்று, அதன் வரிசையும் ஒன்று, எனவே அதன் படைப்பாளரும் அதிபதியும் ஒருவரே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல படைப்பாளர்கள் உள்ளனர் என்ற கருத்தைத் தவிர்க்க படைப்பாளர் முழு பிரபஞ்சத்தையும் ஒன்றாகப் படைத்தார். படைத்தல் என்பது ஒன்று என்பது போல அதன் படைப்பாளரும் ஒருவர் தான் என்று நாம் நம்ப வேண்டும். இருப்பினும், படைப்பாளர் ஒருவர் என்பதால் பிரபஞ்சம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஏனெனில் கடவுள் மற்றவற்றையும் படைத்திருக்கலாம். ஆனால் எம் கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சம் இது ஒன்று தான் என்பதால், அதைப் படைத்தவரும் ஒருவர் தான் என்று நாம் நம்ப வேண்டும்.
40. பிரபஞ்சத்தின் தர்க்கரீதியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தன்மை கடவுளின் பகுத்தறிவு அல்லது இறை வார்த்தையால் உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது
அப்படியானால் இந்த படைப்பாளர் யாராக இருக்க முடியும்? மக்கள் பிழையான படைப்பாளரை தவறாக நம்பி முன்பு செய்த தவறுகளில் மீண்டும் விழுந்துவிடாதபடி இதைப் பற்றி தெளிவாக இருப்பது முக்கியம். இதை எவரும் உண்மையில் சந்தேகிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். கதைகளில் இருந்து வரும் கடவுள்கள் உண்மையான கடவுள்கள் அல்ல என்பதை எங்கள் விவாதம் காட்டுவதோடு, படைப்பை வணங்குதல் தவறு என்பதையும், ஒட்டுமொத்த நம்பிக்கையற்றவர்களின் தவறான வழிபாடு உண்மையான நம்பிக்கை அல்ல என்பதையும் இது நிரூபித்துள்ளது. எனவே, உண்மையான மதம் நம்முடன் உள்ளது என்பதும், நாம் வழிபடும் மற்றும் மனத்தால் உரையாடும் கடவுள் மட்டுமே உண்மையானவர் என்பதும் அவர் படைப்பின் ஆண்டவரும் எல்லாவற்றையும் படைத்தவருமாவார் என்பதும் தெளிவாகிறது. 2. அப்படியானால், பரிசுத்தமானவரும் படைக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் அதிபதியுமான கிறிஸ்துவின் தந்தையாகிய தேவனைத் தவிர இது வேறு யாராக இருக்க முடியும்? ஒரு திறமையான விமானியைப் போல அவர் தனது சொந்த ஞானத்தையும் மற்றும் எல்லாவற்றையும் வழிநடத்தவும், பாதுகாக்கவும், ஒழுங்கமைக்கவும் நமது ஆண்டவரும் இரட்சகருமான கிறிஸ்துவை பயன்படுத்துகிறார். அவர் சிறந்தது என்று நினைப்பதைச் செய்கிறார். சிறந்தது என்னவென்றால், அது ஏற்கனவே நடந்துள்ளது. இப்போது நடப்பதை நாம் காண்கிறோம், ஏனெனில் அதைத்தான் அவர் விரும்புகிறார். இதை எவரும் மறுப்பது கடினம். 3. பிரபஞ்சம் உருவாக்கப்பட்ட விதம் அர்த்தமுள்ளதாக இல்லாமல் சீரற்ற முறையில் இருந்திருந்தால் நமது கூற்றுக்களை எவரேனும் சந்தேகிப்பது நியாயமானதாக இருக்கும். இருப்பினும், பிரபஞ்சம் என்பது பகுத்தறிவு, ஞானம் மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த காரணத்தால் அதைப் படைத்து ஒழுங்கமைத்தவர் கடவுளின் இறை வார்த்தையானவர் தான் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இருக்கமுடியாது. 4. நான் “வார்த்தை” என்று சொல்லும்போது, அனைத்து படைக்கப்பட்ட பொருட்களிலும் இருக்கும் அடிப்படைக் கொள்கையை நான் குறிக்கவில்லை, இதை சிலர் விருத்திசெய்யக்கூடிய கொள்கை என்று அழைக்கிறார்கள். இந்தக் கொள்கைக்கு ஆன்மா இல்லை, சிந்திக்கவோ அல்லது பகுத்தறிவுடன் செயலாற்றவோ முடியாது; அதைப் பயன்படுத்தும் ஒருவரின் திறமை மூலம் மட்டுமே அது செயல்படுகிறது. பகுத்தறிவு மனிதர்களுக்குச் சொந்தமானது மற்றும் எழுத்துக்களைக் கொண்ட ஒரு வார்த்தை அல்லது காற்றை மூலமாகக் கொண்டு வெளிப்படுத்தப்படும் ஒரு வார்த்தை என்று நான் கூறவில்லை. நான் சொல்வது பிரபஞ்சத்தின் கடவுளான கடவுளின் உயிருள்ள மற்றும் சக்திவாய்ந்த வார்த்தையைத்தான். யோவான் 1:1-ல் கூறப்பட்டுள்ளபடி “உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது” என்று. ஆகவே கடவுளாக இருக்கும் இந்த வார்த்தை, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களிலிருந்தும் வேறுபட்டது. இது உன்னதத் தந்தையின் தனித்துவமான வார்த்தையாகும். ஏனெனில், அவர் பிரபஞ்சத்தை தனது ஞானத்தால் வழிநடத்தி ஒளிரச் செய்கிறார். 5. கடவுள், அனைத்து நன்மைகளுக்கும் ஆதாரமாக இருப்பதால், எல்லாவற்றையும் சமநிலையான முறையில் படைத்தார். எதிரெதிர் தன்மை கொண்டவற்றை ஒரே வரிசையில் இணைத்தார். அவரது சக்தியும் ஞானமும் வானங்களை அசைக்கவும், பூமியை, அது விண்வெளியில் சஞ்சரிப்பது போல் தோன்றினாலும் அதற்குரிய இடத்தில் வைத்திருக்கவும் செய்கிறது. சூரியன் அவரது சக்தியால் உலகில் பிரகாசிக்கிறது. சந்திரன் பிரகாசிக்க அதற்கு உகந்த நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் மேகங்களில் நீரைத் தேக்கி வைத்து, பூமிக்கு மழையை அனுப்புவதோடு கடலை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அதேபோல், பூமி தன் மேற்பரப்பில் புல் மற்றும் அனைத்து வகையான பயிர்களையும் தாவரங்களையும் வளர்க்கிறது. 6. கடவுளின் வார்த்தை என ஒன்று இருக்கிறதா என்று யாராவது அவநம்பிக்கையுடன் கேட்பார் எனின் அதை சந்தேகிப்பது முட்டாள்தனம். இருப்பினும் நாம் அறிந்தவற்றிலிருந்து ஆதாரங்களைக் காட்ட முடியும், ஏனென்றால் எல்லாம் கடவுளின் வார்த்தை மற்றும் ஞானத்தில் வாழ்கின்றன. எந்தவொரு படைப்பும் பகுத்தறிவால் உருவாக்கப்படாவிட்டால் நிலையான இருப்பைக் கொண்டிருக்காது. மேலும் நாம் குறிப்பிட்டது போல அந்த பகுத்தறிவு தான் கடவுளின் வார்த்தை.
41. இயற்கையில் வார்த்தையின் இருப்பு அதன் ஆரம்ப படைப்புக்கு மட்டுமல்ல, அதன் நீடித்த இருப்புக்கும் அவசியம்
அவர் வார்த்தை என்று அழைக்கப்பட்டாலும், அவர் உதட்டசைவுகளால் ஆன மனித வார்த்தைகளைப் போல இல்லை; அவர் இறை தந்தையின் சரியான சாயல். மனிதர்கள் பகுதிகளால் ஆனவர்கள், வெறுமையில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் பேச்சு வெவ்வேறு பகுதிகளால் ஆனது. இதற்கு நேர்மாறாக, கடவுளுக்கு என்று உண்மையான இருப்பு உள்ளது, அவர் பகுதிகளால் ஆனவர் அல்ல. அதுபோலத்தான் அவரது வார்த்தையும் உண்மையான இருப்பைக் கொண்டுள்ளது. அவர் பகுதிகளால் ஆனவர் அல்ல, கடவுளின் தனித்துவமான மற்றும் ஏக சுதனாக இருக்கிறார். அவர் ஒரு நல்ல ஆதாரத்தைப் போல தந்தையிடமிருந்து வந்து எல்லாவற்றையும் ஒழுங்கமைத்து நிலைநிறுத்தியுள்ளார். 2. கடவுளின் வார்த்தை படைக்கப்பட்ட பொருட்களுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதற்கான காரணம் உண்மையிலேயே ஆச்சரியமாக இருப்பதோடு, படைக்கப்பட்ட விஷயங்கள் இப்போது இருக்கும் விதம் சரியானது என்பதையும் காட்டுகிறது. படைக்கப்பட்ட யாவும் வெறுமையில் இருந்தே தோன்றின. மேலும் அவை அவற்றை மட்டுமே நம்பியிருந்தால் தற்காலிகமானதும், பலவீனமானதும் அழியக்கூடியதுமாக இருந்தது. இருப்பினும், கடவுள் இயல்பிலேயே நல்லவர், வல்லவர், உன்னதர். இவ்வியல்புகள் அவரை கருணையுள்ளவராக ஆக்குகிறது. ஒரு நல்லவர் எதையும் தடுத்து நிறுத்துவதில்லை. எனவே அவர் தனது அன்பைக் காட்டும் ஒன்றாக அனைத்தும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். 3. இயற்கையில் உள்ள அனைத்தும் தற்காலிகமானவை. அவை சிதைந்து போகக்கூடும். இதைத் தடுக்கவும், பிரபஞ்சம் மறைந்து போவதைத் தடுக்கவும், கடவுள் தனது ஜீவனுள்ள வார்த்தையின் மூலம் அனைத்தையும் படைத்ததோடு, படைப்புக்கு உண்மையான இருப்பையும் கொடுத்தார். அது மீண்டும் மறைந்து போகும் அபாயத்தை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களில் அவர் அதை அசட்டையாக விட்டுவிடவில்லை. அவர் நல்லவர் என்பதால் தனது வார்த்தையின் மூலம், – கடவுள் மூலம் – அனைத்து படைப்புகளையும் வழிநடத்தி பாதுகாக்கிறார். இந்த வழியில் படைப்பு ஒளியைப் பெற்று எப்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும். 4. வார்த்தை தந்தையிடமிருந்து வருவதோடு, உண்மையான இருப்பையும் தருகிறது. இந்த ஆதரவு இல்லாமல் போனால் அது பொதுவாக ஏற்படும் அழிவை எதிர்கொள்ளும். வார்த்தை கண்ணுக்குத் தெரியாத கடவுளின் உருவமாகவும், அனைத்து படைப்புகளிலும் முதன்மையானதுமாக இருக்கிறது. புலப்படும் மற்றும் புலப்படாத அனைத்தும் அவர் மூலமாகவும் அவரிலும் உள்ளன. சத்தியத்தை உலகரியச் செய்த தேவ ஊழியர்கள் தங்கள் புனித நூல்களில் கற்பித்தபடி அவர் திருச்சபையின் தலைவராகவும் இருக்கிறார்.
42. வார்த்தையின் இந்த செயல்பாடு விரிவாக விளக்கப்பட்டுள்ளது
பரிசுத்த பிதாவின் உன்னதமான இந்த வார்த்தை சக்தி வாய்ந்தது மற்றும் சரியானது. அது பிரபஞ்சத்துடன் இணைந்து எல்லா இடங்களிலும் அதன் வலிமையைக் காட்டுகிறது. கண்களுக்குப் புலப்படும், மற்றும் புலப்படாத அனைத்திற்கும் ஒளியைக் கொண்டுவருகிறது. அது எல்லாவற்றையும் ஒன்றாக தனக்குள் வைத்திருப்பதோடு, தனித்தனியாகவும் ஒட்டுமொத்தமாகவும் அனைத்துக்கும் உயிர் கொடுக்கிறது. வெப்பம், குளிர், ஈரப்பதம் மற்றும் வறட்சி போன்ற இயற்கையின் அடிப்படைக் கூறுகளை ஒருங்கிணைத்து, அவை ஒன்றுக்கொன்று எதிராகப் போராடுவதற்குப் பதிலாக இணக்கமாக ஒன்றாகச் செயல்படுவதை உறுதி செய்கிறது. 2. அவராலும் அவருடைய வல்லமையாலும், நெருப்பு குளிரை எதிர்த்துப் போராடாமல், ஈரமானது வறட்சியுடன் போராடாமல் எதிரெதிர் சக்திகள் நண்பர்களைப் போல இணைந்து செயல்பட்டு நாம் காணும் பொருட்களுக்கு உயிர் கொடுத்து, வாழ்க்கையை உருவாக்கி, அவற்றுக்கான விதிகளை உருவாக்குகின்றன. தேவனுக்கு கீழ்ப்படிந்து, வார்த்தையாகிய கடவுள் பூமியில் உள்ளவற்றுக்கு உயிர் கொடுத்து, பரலோகத்தில் உள்ளவற்றுக்கு ஒழுங்கை ஏற்படுத்துகிறார். அவரது சித்தத்தாலேயே கடலும் கடலும் அவற்றின் எல்லைக்குள் இருக்கின்றன. அதே நேரத்தில் பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலம் புல் மற்றும் பல வேறுபட்ட தாவரங்களையும் பயிர்களையும் வளர்க்கிறது. எல்லாவற்றையும் பட்டியலிட வேண்டியதில்லை, உள்ள அனைத்தும் அவரால் படைக்கப்பட்டது என்பதோடு, அவர் மூலமாகவே அனைத்தும் நிறைவேறுகிறது என்பது தெளிவாகிறது. இது குறித்து யோவான் 1:1 இல், “ஆதியில் வார்த்தை இருந்தது, வார்த்தை கடவுளிடம் இருந்தது, வார்த்தை கடவுளாக இருந்தது; எல்லாம் அவரால் படைக்கப்பட்டது, அவரில்லாமல் எதுவும் படைக்கப்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. 3. ஒரு இசைக்கலைஞர் ஒரு பாடலை இசைத்து, தனது கலையால் உயர் ஸ்வரங்களை தாழ்வாகவும், இடை ஸ்வரங்களை மற்றவற்றுடன் சரிசெய்து, அதன் விளைவாக ஒரு இசையை உருவாக்குவது போல, கடவுளின் ஞானமும் பிரபஞ்சத்தை ஒரு பாடலாகக் கையாண்டு, காற்றில் உள்ளவற்றை பூமியில் உள்ள பொருட்களுடனும், பரலோகத்தில் உள்ளவற்றை காற்றில் உள்ள பொருட்களுடனும் சரிசெய்து, பகுதிகளை முழுமையாக இணைத்து, அனைத்தையும் தனது விருப்பப்படி அசையச் செய்து சிறப்பாகவும் பொருத்தமாகவும் உருவாக்குகிறது. இதன் விளைவாக, பிரபஞ்சத்தின் ஒற்றுமை மற்றும் அதன் ஒழுங்கு போன்றவற்றை சரிசெய்து, அவர் இறை தந்தையுடன் ஒரே பொருளாய் இருக்கிறார். அதே நேரத்தில் அவர் தனது ஒழுங்குமுறைச் செயலால் எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறார். அவை ஒவ்வொன்றும் அவரது தந்தைக்கு உகந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது. 4. அவரது தெய்வீக சக்தியில் ஆச்சரியப்படத்தக்க விடயம் என்னவென்றால், ஒரே ஒரு முடிவோடு, அவர் அனைத்தையும் ஒரே நேரத்தில், ஒன்றன் பின் ஒன்றாக அல்ல, அனைத்தையும் ஒன்றாக வழிநடத்துகிறார். இதில் நேரான மற்றும் வளைந்தவை, மேலேயும் கீழேயும், ஈரமான, குளிர்ச்சியான, சூடான, கண்ணுக்குப் புலப்படும் மற்றும் புலப்படாத யாவும் அடங்கும். அவர் எல்லாவற்றையும் அதன் இயல்புக்கு ஏற்ப ஒழுங்கமைத்திருக்கிறார். ஒரே ஒரு கட்டளை தான், நேரான விஷயங்கள் நேராகவும் வளைந்தவை வளைவான வழியிலும் பயணிக்கும். சூடானவை சூடாகின்றன, உலர்ந்தவை வறண்டு போகின்றன. அனைத்தும் அவரால் சக்தி ஊட்டப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, அற்புதமான மற்றும் உண்மையிலேயே தெய்வீக இணக்கத்தை உண்டுபண்ணுகிறது.
43. வார்த்தை பிரபஞ்சத்துடன் எவ்வாறு இணைகிறது என்பதைக் காட்டும் மூன்று ஒப்பீடுகள்
இந்த முக்கியமான கருத்தைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல உதாரணம்; அதை ஒரு பெரிய பாடகர் குழுவாக நினைத்துப் பாருங்கள். பாடகர் குழுவில் வெவ்வேறு பாடகர்கள் உள்ளனர்: குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள். நடத்துபவர் ஏதேனும் ஒரு சமிக்ஞையை வழங்கும்போது, ஒவ்வொருவரும் அதற்கேற்ற விதத்தில் பாடுகிறார்கள் – ஆண்கள் ஆண்களைப் போலவும், குழந்தைகள் குழந்தைகளைப் போலவும், முதியவர்கள் முதியவர்களைப் போலவும், இளைஞர்கள் இளைஞர்களைப் போலவும் பாடுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து அழகாகப் பாடலை இசைக்கிறார்கள். 2. நமது ஆன்மா எதையாவது பற்றி நமக்கு உணர்த்தும்போது, நமது புலன்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. உதாரணமாக, நாம் ஒரு பொருளைப் பார்க்கும் போது, நம் கண்கள் அதைப் பார்க்கின்றன, நம் காதுகள் ஒலிகளைக் கேட்கக்கூடும், நம் கைகள் அதைத் தொடக்கூடும், நம் மூக்கு அதை மணக்க முயலும், நம் நாக்கு அதை சுவைக்க முயலும். சில நேரங்களில், நமது கால்கள் நடக்கும்போது நமது உடலின் பிற அவையவங்களும் அதற்கேற்றாற்போல் செயல்படுகின்றன. 3. மற்றொரு உதாரணத்துடன் நமது கருத்தை தெளிவாக இங்கே விளக்குகிறோம். அதன் ஆட்சியாளரால் நிர்வகிக்கப்படும் ஒரு பெரிய நகரத்தை கற்பனை செய்து பாருங்கள். ஆட்சியாளர் அங்கு இருக்கும்போது, கட்டளைகளை வழங்கி, எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்போது, அனைவரும் அவரது கட்டளைகளைப் பின்பற்றுகிறார்கள். சிலர் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள், மற்றவர்கள் நீர்வழிகளில் இருந்து தண்ணீர் எடுக்க விரைகிறார்கள், சிலர் உணவைப் பெற்றுக்கொள்ளச் செல்கிறார்கள், ஒருவர் சட்டசபைக்குச் செல்கிறார், மற்றொருவர் சபையில் இணைந்து கொள்கிறார். நீதிபதி நீதிமன்றத்திற்குச் செல்கிறார். நியாதிபதி தனது கடமைகளுக்குச் செல்கிறார். தொழிலாளி தனது கடமையில் கவனம் செலுத்துகிறான், மாலுமி கடலுக்குச் செல்கிறான், தச்சன் தனது வேலைத்தளத்துக்குச் செல்கிறான், மருத்துவர் நோயாளிகளைப் பார்வையிட வைத்தியசாலைக்குச் செல்கிறார். கட்டிடக் கலைஞர் கட்டிட வேலைகளில் ஈடுபடுகிறார். சிலர் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள், சிலர் திரும்பி வருகிறார்கள். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எல்லாவற்றையும் நிர்வகிக்கும் ஒரு அதிபதியால் ஏற்பாடு செய்யப் படுகின்றன. 4. இதேபோல், இந்த உதாரணம் சரியானதாக இல்லாவிட்டாலும், நாம் அனைத்து படைப்புகளையும் பற்றி ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும். கடவுளிடமிருந்து வரும் ஒரு கட்டளையுடன் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திற்கு வந்து அனைத்தும் அதனதன் கடமைகளை அவற்றுக்குப் பிறப்பிக்கப்பட்ட ஒரு கட்டளையின்படியே செய்கின்றன.
44. பயன்படுத்தப்படும் ஒப்பீடுகள் முழு பிரபஞ்சத்திற்கும் நாம் காணக்கூடிய காண முடியாத அனைத்திற்கும் பொருந்தும்
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தந்தையிடமிருந்து வரும் தெய்வீக வார்த்தையின் சக்தியால் தான் நகர்கின்றன, மாறுகின்றன. வானம் விரிந்து கிடக்கிறது, நட்சத்திரங்கள் நகர்கின்றன, சூரியன் பிரகாசிக்கிறது, சந்திரன் அதன் பாதையில் செல்கிறது. காற்று சூரியனிடமிருந்து ஒளியையும், வான்வெளியில் இருந்து வெப்பத்தையும் பெற்று வீசுகிறது. மலைகள் உயரமாகக் காணப்படுகின்றன கடல் அலைகளால் கொந்தளிக்கிறது, ஆனாலும் உயிரினங்கள் அதில் வசிக்கின்றன. பூமி நிலையாக இருக்கிறது, பழங்களையும், பயிர்களையும் விளைக்கிறது, மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், இறக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் வாழ்க்கையும் இயக்கமும் உள்ளன: நெருப்பு எரிகிறது, தண்ணீர் குளிர்ச்சியடைகிறது, நீரூற்றுகள் வழிந்து ஓடுகின்றன, ஆறுகள் பெருக்கெடுக்கின்றன, பருவ காலங்களும், நேரங்களும் கடந்து செல்கின்றன, மழை பெய்கிறது, மேகங்கள் வானில் கூடுவதால் ஆலங்கட்டி மழை உருவாகிறது, பனி பெய்கிறது மற்றும் உறைகிறது, பறவைகள் சிறகடித்துப் பறக்கின்றன, பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன, கடல் உயிரினங்கள் நீந்துகின்றன, கடல் அலைகளை எழுப்புகிறது, பூமி பருவ காலத்தில் பயிர்களை வளர்க்க கன்றுகள் நடப்படுகின்றன. தாவரங்கள் வெவ்வேறு நிலைகளில் வளர்கின்றன: சில புதியவை, சில முற்றியவை, சில பழுத்து அழுகி விடுகின்றன. சில விஷயங்கள் மறைந்து போகின்றன, அப்போது புதியவை தோன்றுகின்றன. 2. நாம் பட்டியல் இட்டுக் கூற முடியாத அளவுக்கு ஏராளமான அற்புதம் நிறைந்த விஷயங்கள் உள்ளன அவை அனைத்தும் கடவுளின் சக்திவாய்ந்த வார்த்தையால் உருவாக்கப் பட்டவை. அவர் ஒளியையும் உயிரையும் கொண்டு வருகிறார், எல்லாவற்றையும் ஒரு தலையசைப்பின் மூலம் கட்டுப்படுத்தி பிரபஞ்சத்தை ஒன்றிணைக்கிறார். அவர் இந்த பிரபஞ்சத்தில் அவர் படைத்த கண்ணுக்குத் தெரியாத சக்திகளையும் உள்ளடக்கியுள்ளார். ஏனெனில் அவற்றைப் படைத்ததும் அவரே. அவற்றை ஒன்றாக வைத்து தனது வழிகாட்டுதலின் மூலம் அவற்றுக்கு உயிர் கொடுக்கிறார். இதை சந்தேகிக்க எந்தவிதக் காரணங்களும் இல்லை. 3. 3. உடல் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது, பகுத்தறிவுள்ள ஆன்மா தனது சொந்த அருளால் எவ்வாறு பயணிக்கிறது, மேலும் அது எவ்வாறு உயிரையும் சிந்தனையையும் கொண்டுள்ளது போன்றவற்றை அறிந்துகொள்ள எந்த ஆதாரமும் தேவையில்லை. ஏனெனில் அவை யாவும் நடப்பதை நாம் எம் கண்கூடாகக் காண்கிறோம். ஏனெனில், கடவுள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார். காணக்கூடியவை, காண முடியாதவை இரண்டையும் கட்டுப்படுத்துகிறார். அவர் ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சொந்த பங்கைக் கொடுத்து, அனைத்தும் ஒன்றாகச் செயல்படுவதை உறுதி செய்கிறார். இது அவரது சக்தியைக் காட்டுகிறது மற்றும் அவரது மகத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஞானம் 13:5-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்.” படைப்பாளர் எவ்வளவு அற்புதமானவர் என்பதை நாம் இதனூடாகக் காணலாம். கடவுள் இதையெல்லாம் தனது தந்தையை மகிமைப்படுத்தவும் அவரது கிருபையை வெளிப்படுத்தவும் செய்துள்ளார்.
45. முடிவுரை – பகுதி I உடன் தொடர்புடைய வேதாகமத்தின் கோட்பாடு பற்றி விவாதிக்கிறது
வானத்தையும் அதன் அழகையும் அங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்களையும் பார்த்து அதன் பின்னால் ஒரு படைப்பாளர் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது போல, கடவுளின் வார்த்தையைப் பார்க்கும்போது, பிதாவாகிய தேவனைக் காண்கிறோம். அதனால்தான் வார்த்தை என்ற பதம் இறை தந்தை சார்பாகப் பேசுபவர் மற்றும் தூதர் என்று பொருள்பட அழைக்கப்படுகிறது. 2. இதை நம் சொந்த அனுபவத்திலிருந்து புரிந்துகொள்ள முடியும். ஒருவரிடமிருந்து ஒரு வார்த்தையைக் கேட்கும்போது, அவர்களின் மனதில் இருந்துதான் அவ்வார்த்தை வந்திருக்கும் என்று நாம் நினைக்கிறோம். அந்த வார்த்தையைப் பற்றி சற்று சிந்தித்தால், அதன் பின்னால் உள்ள மனதைப் புரிந்து கொள்ள முடியும். இதேபோல், வார்த்தையின் சக்தியைக் காணும்போது, அவருடைய நல்ல பிதாவைப் பற்றியும் கற்றுக்கொள்கிறோம். இரட்சகர் சொல்வது போல், “என்னைக் காணும் எவரும் என் பிதாவைக் காண்பார்கள்” (யோவான் 14:9). வேதாகம வாக்கியங்களும் இதைத் தெளிவாகவும் அதிகாரபூர்வமாகவும் கற்பிக்கின்றன. அதனால்தான் நாங்கள் உங்களுக்கு நம்பிக்கையுடன் எழுதுகிறோம், நீங்கள் வேதாகம வாக்கியங்களை நன்கு ஆராய்ந்தீர்களானால் நாங்கள் சொல்வது உண்மை என்பதைக் காண்பீர்கள். 3. ஒரு உயர் அதிகாரி உறுதிப்படுத்தும்போது ஒரு வாதம் வலுவாக ஆதரிக்கப்படுகிறது. தெய்வீக வார்த்தை யூத மக்களுக்கு சிலைகளை வணங்குவதை நிறுத்தக் கற்றுக் கொடுத்தது. யாத்திராகமம் 20:4 இல் காட்டப்பட்டுள்ளபடி, “நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது” என்று கூறுகிறது. மற்றொரு அறிஞர், சிலைகள் வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆனவை என்றும், மனிதர்களால் உருவாக்கப் பட்டவை என்றும் விளக்குகிறார். இந்த சிலைகளுக்கு வாய் இருந்தும் பேச முடியாது, கண்கள் இருந்தும் பார்க்க முடியாது, காதுகள் இருந்தும் கேட்க முடியாது, மூக்கு இருந்தும் முகர முடியாது, கைகள் இருந்தும் ஸ்பரிசிக்க முடியாது, கால்கள் இருந்தும் நடக்க முடியாது, என்று கூறுகிறார். இந்த உரை படைப்பைப் பற்றியும் பேசுகிறது, உபாகமம் 4:19 இல் குறிப்பிட்டுள்ளபடி, “வானத்தைப் பார்க்கும் பொழுதும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் வானில் உள்ள பல்வேறு பொருட்களைப் பார்க்கும் பொழுதும் எச்சரிக்கையாக இருங்கள். அவற்றை வணங்கவோ, அவற்றுக்கு சேவை செய்யவோ தூண்டப்படாதிருக்க எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உலகின் மற்ற ஜனங்களை அவ்வாறு செய்யும்படி கட்டளையிட்டிருக்கிறார்” என்கிறது. ஏனெனில், அவர் அவற்றை அவர்களுடைய தெய்வங்களாகக் கொடுக்கவில்லை, மாறாக, நாம் ஏற்கனவே கூறியது போல், புறஜாதிகள் தங்கள் முகமையின் மூலம் அவர்கள் அனைவரையும் படைத்த கடவுளை அறிய வேண்டும் என்பதற்காகவே கொடுத்தார். 4. 4. யூத மக்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்தும் பரிசுத்த வேதாகமத்திலிருந்தும் கடவுளை அறிந்திருந்ததால் அவர்களுக்கு நிறைய போதனைகள் கிடைத்தன. பொய்யான சிலைகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்க, யாத்திராகமம் 20:3 இல் கடவுள் பின்வருமாறு கூறுகிறார்: “என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருக்கக்கூடாது” என்று. இது வேறு கடவுள்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல, மாறாக மக்கள் உண்மையான கடவுளை விட்டு விலகி, கவிதைகள் மற்றும் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல தங்கள் சொந்த மற்றும் போலியான கடவுள்களை உருவாக்கக்கூடாது என்பதற்காகத்தான். இந்த வார்த்தை “உங்களுக்கு வேறு கடவுள்கள் இருக்கக்கூடாது” என்று கூறுவதால், வேறு எவையும் உண்மையான கடவுள்கள் அல்ல என்பதைக் காட்டுகிறது, இது எதிர்காலத்திற்கு மட்டுமே பொருந்தும். இது எதிர்காலத்தைக் குறிக்கிறது என்றால், அந்த பொய்யான கடவுள்கள், அவை குறித்து சொல்லப்படும் காலத்தில் இருப்பதில்லை என்று அர்த்தம்.
46. வேதாகமமும் அதனோடிணைந்த கோட்பாடும் – பகுதி 3
புறஜாதியினரின் தவறான நம்பிக்கைகளை நீக்கிய தெய்வீக போதனை, மக்கள் மத்தியில் கடவுளைப் பற்றிய அறிவு கிடைக்காமல் செய்துவிட்டதா? இல்லை, அது உண்மையில் “இஸ்ரவேலே, கேள், உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கடவுள்; உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இதயத்தோடும் சக்தியோடும் நேசிக்க வேண்டும்; உன் தேவனாகிய கர்த்தரை நீ மட்டுமே வணங்கி, அவருக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்” என்று கூறுவதன் மூலம் அவர்களைப் புரிந்துகொள்ளத் தயார்படுத்துகிறது. 2. எல்லாவற்றிற்கும் மேலாக வார்த்தையின் சக்தி மற்றும் வழிகாட்டுதல் போன்ற பல உத்வேகமளிக்கும் வேதாகமங்களில் காட்டப்பட்டுள்ளது. கடவுளைப் பற்றி மக்கள் பேசும் இந்த பகுதி எங்கள் கருத்தை ஆதரிக்கிறது. நீர் பூமியைப் படைத்தீர், அது வலுவாக உள்ளது. நீர் திட்டமிட்டபடி நாட்கள் நகர்கின்றன. அவர்கள் மேலும் கூறுகிறார்கள்: வீணையை மீட்டி எங்கள் கடவுளின் புகழைப் பாடுங்கள். அவர் வானத்தை மேகங்களால் அலங்கரிக்கிறார், பூமியில் மழையைப் பொழியச் செய்கிறார். மலைகளில் புற்களையும் தாவரங்களையும் வளர்க்கிறார். மக்களுக்குப் பயிர்களை வழங்குகிறார், விலங்குகளுக்குக் கூட உணவளிக்கிறார். 3. ஆனால், எல்லாவற்றையும் படைத்தவரைத் தவிர வேறு எவரால் அதைக் கொடுக்க முடியும்? இயல்பாகவே எல்லாவற்றையும் படைத்து ஆண்டு நடத்துவது அவரைத் தவிர வேறு எவரும் இல்லை; அதுதான் கடவுளின் வார்த்தை. மற்றொரு சங்கீத வார்த்தை, கர்த்தருடைய வார்த்தையால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தால் அவற்றின் எல்லாச் சேனைகளும் உருவாக்கப் பட்டன என்று கூறுகிறது. ஏனென்றால், எல்லாம் அவரிலும் அவர் மூலமும் படைக்கப்பட்டன என்று எமக்குச் சொல்லப்படுகிறது. 4. கடவுள் தான் பேசினார் என்றும், அவற்றாலேயே யாவும் படைக்கப்பட்டன என்றும் நம்மை விசுவாசிக்கச் செய்கிறார். ஆதியாகமம் 1:20-ல் படைப்பைப் பற்றிய தனது கதையின் தொடக்கத்தில் மோயீசன் இதை ஆமோதிக்கிறார். அங்கு கடவுள், “நமது சாயலில் மனிதனை உருவாக்குவோம்” என்று கூறினார் என்று எழுதியுள்ளார். கடவுள் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, பிதா ஆதியாகமம் 1:6-11-ல் கூறியதுபோல், வானத்தைப் படைத்தும், தண்ணீரை உண்டாகச் செய்தும், வறண்ட நிலம் தோன்றச் செய்தும், பூமி தாவரங்களை வளர்க்கச் செய்யவும் கட்டளையிட்டார். இது யூதர்கள் உண்மையிலேயே வேதாகம வசனங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது. 5. கடவுள் கட்டளைகளைப் பயன்படுத்தும்போது யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று ஒருவர் யோசிக்கலாம். அவர் படைக்கும் விஷயங்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது அர்த்தமுள்ளதாக இருக்காது. ஏனென்றால் அந்த விஷயங்கள் இன்னும் படைக்கப்பட்டிருக்கவில்லை; ஆனால், அவை படைக்கப்படவிருந்தன. இல்லாத அல்லது இன்னும் படைக்கப்படாத விஷயங்களுக்கு யாரும் கட்டளையிடுவதில்லை. கடவுள் வரப்போகும் விஷயங்களுக்கு கட்டளையிட்டிருப்பாரானால், அவர் “வானம் உண்டாகட்டும்” அல்லது “பூமி உண்டாகட்டும்” அல்லது “மனிதன் உருவாகட்டும்” போன்ற விஷயங்களைச் சொல்லியிருப்பார். ஆனால் அதற்கு பதிலாக அவர் “மனிதனை உருவாக்குவோம்” என்றும் “பச்சைப் புல் முளைக்கட்டும்” என்றும் கூறினார். கடவுள் எல்லாவற்றையும் படைத்தபோது தன்னுடன் இருந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்பதை இது காட்டுகிறது. 6. அப்படியானால் அது அவருடைய வார்த்தையைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? ஏனென்றால், கடவுள் அவருடைய வார்த்தையைத் தவிர வேறு யாரிடம் பேசியிருப்பார் என்று சொல்ல முடியும்? அவர் எல்லாவற்றையும் படைத்தபோது, தம்முடைய ஞானத்தைத் தவிர அவரோடு வேறு யார்தான் இருந்திருக்கக் கூடும்? இதற்கு சாட்சையாக, நீதிமொழிகள் 8:27 “கர்த்தர் வானத்தைப் படைக்கும்போது ஞானமாகிய நான் அங்கிருந்தேன். கர்த்தர் கடலின் எல்லைகளை நிலத்தைச்சுற்றி வட்டங்களாக வரைந்தபோதும் ஞானமாகிய நான் அங்கிருந்தேன்” என்று கூறுகிறது. எனவே, நாம் வானத்தையும் பூமியையும் பற்றிப் பேசும்போது அவற்றில் உள்ள அனைத்தையும் சேர்த்தே குறிக்கிறோம். 7. அவருடைய ஞானமாகவும் வார்த்தையாகவும் அவருடன் பிரசன்னமாக இருந்து, பிரபஞ்சத்தைப் படைத்த பிதாவைப் பார்த்து அதை வடிவமைத்து ஒழுங்குபடுத்தினார்; பிதாவின் வல்லமையால், அவர் எல்லாவற்றையும் பலப்படுத்தினார். “பிதா என்ன செய்கிறார் என்பதை நான் காண்கிறேனோ அதைச் செய்கிறேன்” என்று இரட்சகர் கூறுகிறார். அவருடைய பரிசுத்த சீடர்கள் எல்லோரும், அவராலும் அவருக்காகவும் உண்டாக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. 8. அவர் கடவுளின் உண்மையான மகன், பிதாவின் சக்தி, ஞானம் மற்றும் வார்த்தையில் பங்கு கொள்கிறார். அவரிடமிருந்து ஞானத்தையும் பலத்தையும் பெறும் மற்றவர்களைப் போலல்லாமல், அவர் இயல்பாகவே தந்தையின் ஞானம், வார்த்தை மற்றும் சக்தியாக விளங்குகிறார். அவர் ஒளி, உண்மை, நீதி மற்றும் நல்லொழுக்கத்தை உள்ளடக்கி, இறை தந்தையை முழுமையாகப் பிரதிபலிக்கிறார். சுருக்கமாக, அவர் பிதாவின் முழுமையான மற்றும் பரிபூரண வெளிப்பாடும் கடவுளின் ஒரே மற்றும் மாறாத மகனாக இருக்கிறார்.
47. நமது குறைபாடுள்ள இயல்பை மீட்டெடுக்க வேண்டுமானால், நாம் வார்த்தையானவரை நோக்கித் திரும்ப வேண்டும்.
பிதாவை உண்மையிலேயே புரிந்துகொண்டு அவரது சக்தியை விளக்கக்கூடியவர் யார்? அவர் பிதாவின் வார்த்தையாகவும் ஞானமாகவும் இருப்பது போலவே, அவரைப் படைத்தவரைப் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ள அவர் படைக்கப்பட்ட பொருட்களுடனும் சங்கமித்திருக்கிறார். அவர் ஒளி, வாழ்க்கை, வாயிற்கதவு, மேய்ப்பர், வழி, அரசர், அதிபதி, ஆளுநர் போன்ற யாவருக்கும் இரட்சகர். பிதாவுக்கு இவ்வளவு நல்ல மற்றும் படைப்பாற்றல் மிக்க மகன் இருப்பதால், அவர் அவரைத் தம்முடைய படைப்புகளிலிருந்து மறைத்து வைப்பதில்லை. மாறாக, அவர் ஒவ்வொரு நாளும் அவரை படைப்புகளின் அமைப்பு மற்றும் வாழ்க்கை மூலம்வெளிப்படுத்துகிறார். இது அவருடைய பணியின் ஒரு பகுதியாகும். 2. எளிமையான சொற்களில் கூறுவதானால், யோவான் 14:10 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இயேசுவின் மூலம் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார். அங்கு இயேசு பிதாவிலும் பிதா அவரிலும் வாசம் செய்கிறார்கள் என்று கூறுகிறார். இதன் பொருள் கடவுளால் அனுப்பப்பட்ட இயேசு, பிதாவுடன் என்றென்றும் வாழ்கிறார். வங்கத்திலும் வையத்திலும் உள்ள அனைத்தும் அவரைச் சார்ந்தே இருக்கின்றன. ஆனால் மக்கள் முட்டாள்தனமாக அவரைப் புறக்கணித்து, உண்மையான கடவுளுக்குப் பதிலாக உண்மையானதல்லாதவற்றை வணங்கத் தலைப்பட்டார்கள். ரோமர் 1:25 இல் கூறப்பட்டுள்ளபடி, படைப்பாளருக்குப் பதிலாக அவர்கள் படைக்கப்பட்டவற்றை வழிபட்டார்கள், இது அவர்களை முட்டாள்தனத்திற்கும் அவமரியாதைக்கும் இட்டுச் சென்றது. 3. இது ஒரு அழகான கட்டிடத்தைக் கண்டு வியந்து ரசிப்பதைப் போலவும், ஆனால் கட்டுபவரைப் புறக்கணிப்பது போலவும், அல்லது ஒரு நல்ல இசையை ரசித்து, அந்த இசைக்கருவியை மீட்டிய மனிதரை இழிவாகப் பார்ப்பது போலவும் இருக்கிறது. இது முட்டாள்தனம் மற்றும் புரிதலின்மையைக் காட்டுகிறது! கப்பல் கட்டுபவர், கட்டிடக் கலைஞர் அல்லது இசைக்கலைஞர் இவற்றை உருவாக்கி இராவிட்டால், இதைக்குறித்து மக்களுக்கு எப்படியேனும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 4. இந்த வழியில் சிந்திப்பவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல; அவர்கள் உண்மையிலேயே தொலைந்து போனவர்கள் போலவே கருதப்படுபவர்கள். இதேபோல், கடவுளை அங்கீகரிக்காதவர்களும் அல்லது அனைவரையும் இரட்சிக்கும் அவருடைய வார்த்தையை மதிக்காதவர்களும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். பிதாவாகிய கடவுள், கிறீஸ்து இயேசுவின் மூலம் எல்லாவற்றையும் ஒழுங்கமைத்து பிரபஞ்சத்தை ஆட்சிசெய்து வழிநடத்துகிறார். கிறீஸ்துவை நேசிக்கும் என் நண்பரே, அவர் மீது விசுவாசமும் நல்ல நம்பிக்கையும் கொண்டவராக இருங்கள், ஏனென்றால் அழியாமையும் பரலோக இராச்சியமும் அவர் மீதான நம்பிக்கை மற்றும் பக்தியின் கனிகளாகும். அவருடைய முன்மாதிரியின்படி வாழ்பவர்கள் நித்திய வாழ்வைப் பெறுவார்கள், ஆனால் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் நடுத்தீர்வை நாளில் பெரும் அவமானத்தையும் ஆபத்தையும் எதிர்கொள்வார்கள், ஏனென்றால் அவர்கள் உண்மையை அறிந்திருந்தபோதும், அவர்களின் செயல்கள் அதற்கு எதிராகவே சென்றன.
