குருமார் நிறைவேற்றவேண்டிய கடமைகள் (Ambrose, On the Duties of the Clergy)

Ambrose of Milan, On the Duties of the Clergy, in Tamil. Book 1.

முதல் புத்தகம்


அத்தியாயம் 1

ஒரு ஆயரின் முக்கியப் பணி கற்பிப்பதாகும். இருப்பினும், கற்பிப்பதற்கு முன்பாகப் புனித அம்புரோஸ் அவர்களும் அந்தக் கல்வியறிவைப் பெற்றிருத்தல் வேண்டும். ஏனென்றால் அவர் இன்னும் கற்றறிந்து கொள்ளாத விஷயங்களைக் கற்பது மட்டுமல்லாமல், கற்பிக்கவும் வேண்டியுள்ளது. எப்படியாயினும், அவருக்காகக் கற்றலும் கற்பித்தலும் ஒருசேர நிகழ வேண்டும்.

என் பிள்ளைகளுக்கு மத்தியில் போதிக்க வேண்டும் என்ற என் ஆசைக்கு நான் இடமளித்தால், அது என் வரம்பை மீறுவதாக அமையும் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாகத் தாழ்மையின் உன்னதமான முன்மாதிரி, “பிள்ளைகளே, வாருங்கள், எனக்குச் செவிகொடுங்கள்: நான் உங்களுக்குக் கர்த்தருக்குப் பயப்படுவதைக் காண்பிப்பேன்” என்று கூறியிருப்பதால், இது அவருடைய பணிவையும், கடவுள் மீதான ஆழ்ந்த மரியாதையையும் எடுத்துக்காட்டுகிறது. அனைவராலும் உணரக்கூடிய இறைவனுக்குப் பயப்படுதல் என்ற விஷயத்தைக் குறிப்பிடுவதன் மூலம், கடவுள் மீதான பயபக்தி என்ற முக்கிய அம்சத்தை அவர் எடுத்துக் காட்டுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பயம் என்பது ஞானத்தின் தொடக்கப் புள்ளி மற்றும் மகிழ்ச்சிக்கான பாதை — ஏனென்றால் இறைவனுக்குப் பயப்படுபவர்கள் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்- பட்டவர்கள் — எனவே, ஞானத்தைப் போதித்து, உண்மையான பேரின்பத்தை நோக்கி நம்மை வழிநடத்துபவராக அவர் தன்னைத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

2. ஆகையால், தேவனிடம் அவர் கொண்டிருந்த பயபக்தியைப் பின்பற்ற நாங்கள் ஆர்வமாக இருப்பதாலும், தேவனுடைய கிருபையைப் பகிர்ந்துகொள்ள எங்களுக்கு நல்ல காரணம் இருக்கிறது. ஆகவே, ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்குக் கொடுப்பதைப்போல, ஞானத்தின் ஆவியானவர் அவருக்குக் கற்பித்ததை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். அவர் இந்தக் காரியங்களை எங்களுக்குத் தெளிவுபடுத்தினார், நாங்கள் அவற்றைக் காண்பதன் மூலமும் அதைப் பின்பற்றி வாழ்வதன் மூலமும் கற்றுக்கொண்டோம். இந்தக் கடமையைத் தவிர்க்க நாங்கள் முயன்றபோதிலும், குருமாராகிய எங்கள் பங்கு அதை நிறைவேற்றவேண்டும் என்பதால் நாங்கள் உங்களுக்குக் கற்பிக்க வேண்டும். எபேசியர் 4:11-ல் “அதே கிறிஸ்து மக்களுக்கு வரங்களைக் கொடுத்தார். சிலரை அப்போஸ்தலர்களாகவும் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகர்களாகவும், சிலரை தேவனின் மக்களைப் பற்றி அக்கறைகொள்ளும் மேய்ப்பர்களாகவும், சிலரை போதிப்பவர்களாகவும் ஆக்கினார்” என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

3. ஆகையால், அப்போஸ்தலர்களுடைய மகிமையை நான் எனக்காக உரிமை கோரவில்லை (ஏனெனில், தேவகுமாரன் தானே தேர்ந்தெடுத்தவர்களைத் தவிர வேறு யாரால் இதைச் செய்ய முடியும்?) தீர்க்கதரிசிகளின் கிருபையையோ, சுவிசேஷகர்களின் நற்குணத்தையோ அல்லது மேய்ப்பர்களின் நுணுக்கமான கவனத்தையோ நான் உரிமை கோரவில்லை. இதுகுறித்து 1 கொரிந்தியர் 12:10-ல் விளக்கப்பட்டுள்ளது. அப்போஸ்தலர் பரிசுத்தவான்களின் கடைசி கடமையாகக் குறிப்பிட்டிருந்த புனித நூல்களின் மீது கொண்டிருந்த அதே அக்கறையையும் அர்ப்பணிப்பையும் கொண்டிருக்கவே நான் விரும்புகிறேன். நான் போதிக்க முயற்சிக்கும் அதே வேளையில் நானும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இதை விரும்புகிறேன். கற்றுக்கொள்ளாமல் அனைவருக்கும் போதிக்கும் வல்லமை கொண்ட ஒரே ஒரு உண்மையான குரு மட்டுமே இருக்கிறார்; ஆகவே மக்கள் போதிப்பதற்கு முன்பும், அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் முன்பும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

4. ஆனால், என் விஷயத்தில் இது உண்மையாக இருக்கவில்லை. ஏனெனில், நான் நியாயாசனத்திலிருந்தும், அதிகாரத்தின் உடையிலிருந்தும் தெரிந்துகொள்ளப்பட்டு, குருத்துவத்துக்குள் பிரவேசித்தேன்; நான் இன்னும் கற்றுக்கொள்ளாத காரியங்களை உங்களுக்குப் போதிக்க ஆரம்பித்த காரணத்தால், நான் கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கு முன்பே போதிக்க ஆரம்பித்தேன். இதன் காரணமாக நான் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ளவும் போதிக்கவும் வேண்டிய நிலையில் இருந்தேன், ஏனெனில் இதற்கு முன்பு கற்றுக்கொள்ள எனக்கு நேரமோ அவகாசமோ இருக்கவில்லை.

அதிகாரம் 2

வாய்ப்பேச்சு பல ஆபத்துகளுக்கு வழிவகுக்கும்; இதுகுறித்து வேதாகமம் கூறும் கருத்தின்படி அதற்கான தீர்வு மௌனமாக இருப்பது ஒன்றே ஆகும்.

5. அப்படியானால், நாம் முதலில் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்? தேவைப்படும்போது பேசும் பொருட்டு, அமைதியாக இருக்கவே கற்றுக்கொள்ள வேண்டும். வேறொருவர் என்னை குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்கு முன்பு, என் வார்த்தைகள் எனக்குச் சிக்கலை ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக, மத்தேயு 12:37-ல் “மனிதர்கள் தாங்கள் பேசுகிற கவனமற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இது நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளில் நடக்கும்” என்ற வாசகத்தின் வாயிலாக கூறப்பட்டிருப்பது யாதெனில், உன் வாய் உதிர்க்கும் வார்த்தைகளினாலேயே நீ தண்டிக்கப்படுவாய் என்பதுதான். அப்படியிருக்க, மௌனமாக இருப்பது தான் பாதுகாப்பானதாக இருக்கும்போது, ​​பேச்சினால் தண்டிக்கப்படும் அபாயத்திற்குள் ஏன் சென்று சிக்கிக்கொள்ள வேண்டும்? பேசுவதன் மூலம் பலர் பாவத்தில் தடுமாறி விழுவதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் மௌனமாக இருப்பதன் மூலம் எவருக்கும் அவ்வாறு நேர்ந்ததில்லை; எப்போது பேச வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வதை விட, எப்போதெல்லாம் மௌனமாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதுதான் மிகவும் கடினமானது என்று தோன்றுகிறது. பெரும்பாலான மக்கள் எப்படி மௌனமாக இருப்பது என்பதை அறியாதவர்களாய் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேசுவதால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லையென்று அறிந்திருந்த போதும் கூட, ஒருவர் மௌனமாக இருப்பது அரிது. மௌனத்தின் மதிப்பை உணர்ந்தவரே உண்மையான ஞானி எனப்படுவார். இறுதியாக, தேவனுடைய ஞானம், ‘கர்த்தர் எனக்குக் கற்றுக்கொள்ளும் நாவைக் கொடுத்திருக்கிறார், எனவே எப்போது பேசினால் சரியாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். எனவே, கர்த்தரிடமிருந்து இந்த உள்ளுணர்வைப் பெற்ற ஞானி, எப்போது பேச வேண்டும் என்பதை அறிவார் என்று சொல்வதே சரி. அதனால்தான், சீராக் 20:7-ல் “ஞானமுள்ளவன் தகுந்த நேரம் வரும்வரை மௌனமாயிருப்பான்; ஆனால், அகந்தை கொண்ட அறிவிலியோ நேரமறிந்து செயல்பட மாட்டான்” என்று திருமறை ஞானமாகக் கூறுகிறது.

6. ஆகையால், கர்த்தருடைய பரிசுத்தவான்கள் மௌனம் காக்கவே விரும்பினார்கள்; ஏனெனில், ஒரு மனிதனின் குரல் பெரும்பாலும் பாவத்தின் வெளிப்பாடாகவும், அவனின் பேச்சு மனிதப் பிழையின் தொடக்கமாகவும் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இறுதியில், ஆண்டவரின் புனிதர் இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் என் செயல்களில் கவனமாக இருப்பேன், அதனால் என் வார்த்தைகளால் யாரையும் புண்படுத்த மாட்டேன் என்று கூறினேன்” என்று யோபு 5:21-ல் கூறியுள்ளார். இதன் உட்கருத்து யாதெனில், ஒருவர் தன் மனசாட்சியால் ஆதரிக்கப்படுவதற்கேற்பவும், தனது சொந்த வார்த்தைகள் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது தெய்வீகப் பாதுகாப்பின் அடையாளம் என்பதை அவர் அறிந்திருந்தார். நமது எண்ணங்களின் அமைதியான தீர்ப்புகளாலும், நமது மனசாட்சியின் மதிப்பீடுகளாலும் நாம் கண்டனங்களை எதிர்கொள்கிறோம். நமது ஆன்மாவைப் பாதிக்கும் மற்றும் நமது மனதை ஆழமாகக் காயப்படுத்தும் விஷயங்களை நாம் பேசும்போது ​​நமது சொந்த வார்த்தைகள் ஏற்படுத்திய வலியால் நாம் துன்பப்படுகிறோம். ஆனால் நம்மில் யாருக்குப் பாவக் கறைகளிலிருந்து முற்றாக விடுபட்ட இதயம் இருக்கிறது? மேலும் அப்படியானவர்கள் தங்கள் வார்த்தைகளில் இடறாமல் இருக்கிறார்கள்? இவ்வாறு, தீயன பேசுவதிலிருந்து எவரும் தங்கள் வாயை அடக்க முடியாது என்பதை உணர்ந்து, பேசும்போது அதிலிருந்து தப்பிக்கக் கடினமான தவறுகளைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, மௌனத்திற்கான அர்ப்பணிப்பின் மூலம் அவர் தனக்குத்தானே களங்கமின்மையின் விதியை விதித்துக்கொண்டார்.

7. கவனமாக இருப்பது பற்றிய ஞானம் மிக்க ஆலோசனைக்கு நாம் செவிகொடுப்போம். நான் என் செயல்களில் கவனம் செலுத்தத் தீர்மானித்தேன். அதாவது, நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பதைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எனக்கு நானே நினைவூட்டிக்கொண்டேன். நாம் பின்பற்ற வேண்டிய சில வழிகளும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில பாதைகளும் உள்ளன. நாம் தவறுகள் செய்யாதிருக்க தேவனுடைய வழிகளைப் பின்பற்றி நம்முடைய சொந்தச் செயல்கள் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும். நாம் பேசும்போது கவனமாக இருப்பதும், அவசரப்படாமல் இருப்பதும் முக்கியம். உபாகமம் 6:4 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தருக்குச் செவிகொடு” என்று. அது பேசச் சொல்லவில்லை, ஆனால் செவிகொடு என்று தான் சொல்கிறது. ஏவாள் தேவனிடம் கேட்காத காரியங்களை ஆதாமிடம் சொன்னதால் தவறு செய்தாள். தேவனிடமிருந்து வரும் முதல் செய்தி செவிகொடுப்பதே! நீங்கள் செவிகொடுப்பதன் மூலம் உங்கள் செயல்களில் கவனம் செலுத்துங்கள்; நீங்கள் தவறு செய்திருந்தால், அதை விரைவாகச் சரிசெய்யுங்கள். தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுப்பதன் மூலம் தான் ஒரு வாலிபன் தன் செயல்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆகவே, முதலாவதாக, நீங்கள் உங்கள் பேச்சில் தவறுகள் நேராவண்ணம் அமைதியாக இருந்து செவிகொடுங்கள்.

8. ஒருவன் தன் சொந்த வாயாலே உதிர்க்கும் வார்த்தைகள் காரணமாக குற்றஞ்சாட்டப்படுவது ஒரு பெரும் இழிவைத் தரக்கூடியதாகும். மத்தேயு 12:36 சொல்வதுபோல, “மனிதர்கள் தாங்கள் பேசுகிற கவனமற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.” அப்படியானால் கவனக்குறைவான வார்த்தைகளுக்குப் பதில் சொல்லவேண்டிய சூழ்நிலையில், வெட்கக்கேடான வார்த்தைகளுக்கு எவ்வளவு அதிகமாக அவர்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்? சடுதியாகப் பேசப்படும் வார்த்தைகள் கவனக்குறைவான வார்த்தைகளை விட மிகவும் மோசமானவையாக இருக்கக்கூடும். ஆகவே ஒருவன் கவனக்குறைவான வார்த்தைக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றபோது, கெட்ட வார்த்தைகளுக்கான தண்டனை எவ்வளவு அதிகமாக இருக்கும்?

அத்தியாயம் 3

மௌனம் கலைக்கப்பட வேண்டும், அது சோம்பலால் வராதிருக்க வேண்டும். நாம் நமது உள்ளத்தையும் வாயையும் அளவுக்கதிகமான உணர்வுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

9. அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? மௌனமாக இருக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. பிரசங்கி 3:7- கூறுவதுபோல், ‘அமைதியாக இருப்பதற்கு ஒரு காலமுண்டு, பேசுவதற்கும் ஒரு காலமுண்டு” என்று. ஒவ்வொரு கவனக்குறைவான வார்த்தைக்கும் நாம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்றால், கவனக்குறைவான மௌனத்திற்கும் நாம் பொறுப்பேற்க வேண்டுமென்பதை நினைவில் கொள்ளவேண்டும். அர்த்தமுள்ள மௌனம் என்று ஒன்று உண்டு. உதாரணமாக, சூசன்னா பேசுவதன் மூலம் சாதித்திருக்கக்கூடியதை விட, மௌனமாக இருப்பதன் மூலம் அதிகமாகச் சாதித்தாள். மக்கள் முன்னிலையில் அமைதியாக இருப்பதன் மூலம் அவள் மானசீகமாகக் கடவுளுடன் உரையாடியதோடு, தன் மௌனத்தின் மூலம் தனது கற்புடைமையை நிரூபித்தாள். அவள் பேசாதிருந்தபோதும் அவளுடைய மனசாட்சி பேசியது. மேலும் அவள் கர்த்தரின் சாட்சியில் நம்பிக்கை வைத்திருந்ததால் மற்றவர்களின் தீர்ப்பைத் தேடவில்லை. அவர் வஞ்சிக்கப்படமாட்டார் என்பதை அறிந்திருந்ததால், கடவுளால் மாத்திரமே தீர்ப்பிடப்பட வேண்டும் என அவள் விரும்பினாள். மத்தேயு 26:63-ல் காட்டப்பட்டுள்ளபடி, கர்த்தர் கூட மக்களின் இரட்சிப்பை அமைதியாக நிறைவேற்றினார். எனவே தாவீது எல்லா சந்தர்ப்பங்களிலும் மௌனமாக இருக்க வேண்டாம் என்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தனக்குத்தானே சரியாக அறிவுறுத்திக் கொண்டார்.

10. ஆகையால், நாம் நம் மனங்களையும் நம் வாய் வார்த்தைகளையும் காப்போமாக. இவை இரண்டையும் பற்றி பேசப்பட்டிருக்கின்றன. இங்கே நாம் என்ன பேசுகிறோம் என்பதில் கவனம் செலுத்துமாறு நமக்கு நினைவூட்டப்படுவதோடு மற்றொரு இடத்தில் நம் மனங்களைக் காத்துக்கொள்ளுமாறு நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நீதிமொழிகள் 4:23 இல், “உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும்” என்று சொல்லப்பட்டுள்ளது. தாவீது கவனமாக இருந்தாரென்றால் நாமும் கவனமாக இருக்க வேண்டாமா? கர்த்தருடைய தீர்க்கதரிசியான எசாயாவே, தனக்கு அசுத்தமான உதடுகள் உண்டு என்று ஒப்புக்கொண்டு, “ஐயோ, எனக்குக் கேடு! நான் அழிந்தேன்; நான் அசுத்தமான உதடுகளையுடையவன்” என்று எசாயா 6:5 இல் சொன்னாரே? அப்படியிருக்க, நம்முடைய வார்த்தைகள் எப்போதும் சுத்தமாக இருக்கும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

11. ஆனால், இது நம் அனைவருக்காகவும் எழுதப்படவில்லையென்றால் உண்மையில் யாருக்காக எழுதப்பட்டது? “நாம் நம் உடைமைகளைப் பாதுகாப்பது போல, நாவையும், வாயையும் பேச்சின் மூலம் வரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. சொத்துக்களுக்கு வேலியை அடைப்பது போல நம் வாய்க்குக் கதவும் தாழ்ப்பாளும் போட வேண்டும், நம் வெள்ளி மற்றும் தங்கத்தை எடைபோட்டு பாதுகாப்பது போல, நம் வார்த்தைகளை தராசில் வைத்து எடைபோடுவதுபோல எச்சரிக்கையுடன் பேச வேண்டும்” என்று சீராக் 28:24-25. எமக்கு அறிவுறுத்துகிறது. உடைமை என்பது உங்கள் மனதைக் குறிக்கிறது, தங்கம் உங்கள் இதயத்தையும், வெள்ளி உங்கள் பேச்சையும் குறிக்கிறது: கர்த்தருடைய வார்த்தைகள் நெருப்பில் புடம் போடப்பட்ட வெள்ளியைப் போல சுத்தமானவை. தெளிவான மனமும் ஒரு பெரிய உடைமையே. மேலும், ஒரு தூய்மையான அக வாழ்க்கை நம்பமுடியாத அளவிற்கு மதிப்புமிக்கது. எனவே, உங்கள் இந்த உடைமையைப் பாதுகாத்து அதைச் சிந்தனைமிக்க கவனிப்பால் பொதிசெய்து, சரீரத்தின் மூர்க்கமான இச்சைகள் அதைத் தாக்கி அடிமைப்படுத்தாமல் தடுக்க முள்வேலியிட்டு அதைக் காத்துக்கொள்ளுங்கள். வலுவான உணர்ச்சிகள் அதைத் தாக்கக்கூடும், அவற்றைக் கட்டுப்படுத்தாமல் போனால் அதன் சாரத்தைத் திருடிவிடும். உங்கள் அக வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதற்கு மதிப்பில்லை என்று அதைப் புறக்கணிக்கவோ ஒதுக்கவோ வேண்டாம்; ஏனெனில் அது உண்மையில் ஒரு விலைமதிப்பற்ற உடைமை. அதன் கனிகள் நிலையற்றவை அல்ல; அவை நிலைத்திருப்பவை என்பதோடு நித்திய இரட்சிப்புக்கு நன்மை பயப்பவை என்பதால், அது மெய்யாகவே மதிப்புமிக்கது. எனவே, உங்கள் உடைமையைப் பேணிக் காத்து அதை உங்கள் சொந்த வளமான நிலமாகப் பாவிக்கவும்.

12. உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துங்கள். அவை கட்டுக்கடங்காமல் போய், வரம்பு மீறி, அளவுக்கு அதிகமாகப் பேசித் தமக்கே பாவங்களைச் சேர்த்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தன் கரைகளுக்குள் அடைக்கப்பட்டு ஓடும் ஆற்றைப் போல உங்கள் வார்த்தைகளை அடக்கி வையுங்கள், இல்லாவிட்டால், பெருக்கெடுத்து ஓடும் ஆறு விரைவில் சேற்றைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும். ஆகவே அளவுக்கு அதிகமாகப் பேசுவது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதுபோலவே, நீங்கள் சொல்ல வருவதைத் தெளிவாகக் கூறுங்கள். தெளிவற்றதாக இருக்காதீர்கள். உங்கள் கருத்து தெளிவாக இல்லாவிட்டால் உங்களுக்கு செவிமடுக்கும் மக்களுக்கு அவை எப்படி உதவும் அல்லது எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியாது. இல்லையென்றால், உங்களைப் பற்றி இவ்வாறு ஒரு எண்ணப்பாடு தோன்றி விடக்கூடும்: அதாவது, அது குணமளிக்கும் தைலமோ, எண்ணெயோ, சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கட்டுத் துணியோ அல்ல. தெளிவான மனதிற்கு அதன் சொந்தக் கடிவாளங்கள் உண்டு, அவை அதை வழிநடத்தவும் நெறிப்படுத்தவும் உதவுகின்றன.

13. உங்கள் வாய்க்கு ஒரு கதவு இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்; தேவைப்படும்போது அதை மூடி அது பாதுகாப்பாகப் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். அப்போதுதான் யாரும் உங்களைக் கோபமூட்டி கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுக்க உங்களைத் தூண்ட முடியாது. இன்று நீங்கள் இதைக் கேட்டிருப்பீர்கள். கோபப்படலாம், ஆனால் பாவம் செய்யாதீர்கள். எனவே, நமக்குக் கோபம் வந்தாலும் (அது நம் இயல்பிலிருந்து வருகிறது, நம் விருப்பத்தால் அல்ல), பாவத்திலிருந்து விலகி இருக்க தீங்கு விளைவிக்கும் எதையும் சொல்வதைத் தவிர்ப்போம்; அதற்குப் பதிலாக நம் பேச்சில் பணிவையும் நிதானத்தையும் கடைப்பிடிப்போம். நம் வார்த்தைகள் நம் எண்ணங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்வோம். உங்கள் நாவை உறுதியான பிடியுடன் கட்டுக்குள் வைத்திருங்கள்; மிதமாக இருக்க உதவும் கருவிகளை அதற்கு வழங்குங்கள்; அது நீதியுடன் ஒப்பிட்டுப் பேசும் வார்த்தைகளைப் பேசட்டும், அப்போதுதான் நம் நோக்கங்கள் தீவிரமானவையாகவும் நம் பேச்சுக்கு மதிப்பும் நம் வார்த்தைகள் அளவுடையதாகவும் இருக்கும்.

அத்தியாயம் 4

நமது பேச்சு தீய உணர்ச்சிகளிலிருந்து அல்ல, நல்ல நோக்கங்களிலிருந்து வெளிவருவதை நாம் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில் இங்குதான் பிசாசு நம்மைச் சோதிக்க மிகவும் கரிசனையுடன் காத்திருக்கிறான்.

14. எவரேனும் இதைக் கவனித்தால் அவர் சாந்தமுள்ளவராகவும், அடக்கமுள்ளவராகவும், மென்மையானவராகவும் மாறுவார். தங்கள் வார்த்தைகளில் கவனமாக இருப்பதன் மூலமும், நாவை அடக்கிக் கொள்வதன் மூலமும், பேசுவதற்கு முன் ஏதேனும் சொல்ல வேண்டுமா, எப்படிப் பதிலளிப்பது, அல்லது கருத்துச் சொல்வதற்கு இது சரியான தருணமா என்று சிந்திப்பதன் மூலமும், அவர்கள் நிச்சயமாக அடக்கம், மென்மை மற்றும் பொறுமையை வெளிப்படுத்துபவர்களாக இருப்பர். இதன் மூலம் அவர்கள் கோபத்திலோ அல்லது விரக்தியிலோ சீறிப் பாய மாட்டார்கள்; தங்கள் பேச்சில் உணர்ச்சிகள் வெளிப்பட்டு, உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் ஆசைகளையோ அல்லது ஆத்திரத்தின் அறிகுறிகளையோ காட்ட மாட்டார்கள். தங்கள் உள்ளார்ந்த குணத்தைப் பிரதிபலிக்க வேண்டிய வார்த்தைகள் இறுதியில் தங்கள் ஒழுக்கக் குறைபாடுகளை வெளிப்படுத்திவிடாமல் இருக்க அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதில் மிகவும் அவதானமாக இருப்பர்.

15. ஏனெனில், குறிப்பாக அப்பொழுதுதான்; அதாவது நமக்குள்ளே உணர்ச்சிகள் தூண்டப்படுவதைக் காணும்போதுதான் ​​பகைவன் தன் திட்டங்களைத் தீட்டுகிறான்; அத்தகைய நேரங்களில், அவன் நமக்குச் சோதனைகளைக் கொடுக்க எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுகிறான். அதனால்தான், இன்று நாம் அறிந்தவாறு தீர்க்கதரிசி ஞானத்துடன் சொன்னார்: “நிச்சயமாகவே, அவர் என்னை வேட்டைக்காரனின் கண்ணியிலிருந்தும், கடினமான வார்த்தையில் இருந்தும் காப்பாற்றினார்.” சிலர் ‘கடுமையான வார்த்தை’ என்பது கோபத்தைத் தூண்டும் வார்த்தை என்கிறார்கள். மற்றவர்களோ அது கவலையை உண்டாக்கும் வார்த்தை என்று நினைக்கிறார்கள். நமது பேச்சு எதிரியால் வைக்கப்படும் ஒரு பொறியாக இருக்கலாம், அது நம்மையும் அதே அளவிற்குப் பாதிக்கக்கூடும். நாம் அடிக்கடி பேசும் வார்த்தைகளையே எதிரி நமக்கு எதிராகப் பயன்படுத்துகிறான்; அது நாமே நம்மைத் தாக்கிக்கொள்வது போல நம்மைக் காயப்படுத்துகிறது. நமது சொந்த வார்த்தைகளால் வீழ்வதை விட, மற்றவரின் தாக்குதலால் வீழ்வது மிகவும் காயத்தை ஏற்படுத்தக்கூடியது.

16. பகைவன் நமது பலத்தையும் தற்காப்புகளையும் சோதித்து, தன் ஆயுதங்களைத் தயார் செய்கிறான். நான் கலக்கமாக இருப்பதை அவன் கவனித்து குழப்பத்தை உண்டாக்குவதற்காகத் தன் ஈட்டிகளைக் கூர்மையாக்குகிறான். நான் தகாததாகப் பேசினால், அவன் என்னைப் பொறியில் சிக்க வைக்க முயல்கிறான். பின்பு, மற்றவர்களைப் பழிவாங்க விரும்பும் நான் அவனது பொறியில் விழுந்து எனக்கே தீங்கு விளைவித்துக்கொள்வேன் என்ற நம்பிக்கையில், பழிவாங்குவதற்கான வாய்ப்பை ஒரு தூண்டிலாக முன்வைக்கிறான். இந்த எதிரி அருகில் இருப்பதாக எவரேனும் உணர்ந்தால், எதிரிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தாமல் இருக்க, அவர்கள் பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்; இருந்தபோதும், அவனைப் பலர் அடையாளம் கண்டுகொள்வதில்லை.

அத்தியாயம் 5

கண்ணுக்குத் தெரியும் எதிரி மௌனமாக நம்மை ஊக்குவிக்கும்போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மை விட சக்தி வாய்ந்தவர்களைத் தவிர்த்து அனைவரிடமும் நாம் காட்ட வேண்டிய பணிவைக் காத்துக்கொள்ள முடியும்.

17. நாம் காணக்கூடிய, நம்மைத் தொந்தரவு செய்து, சீண்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, ஒழுக்கக்கேட்டிற்கோ அல்லது காமத்திற்கோ நம்மை உந்துபவர்களிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எவரேனும் நம்மை அவமதித்து, கோபமூட்டி, சண்டைக்கு இழுத்து அல்லது வாக்குவாதம் செய்ய முயன்றால் நாம் மௌனமாக இருக்க வேண்டும். அவ்வாறு மெளனமாக இருப்பது குறித்து வெட்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில், நம்மைத் தொந்தரவு செய்து நமக்குத் தீங்கு செய்கிறவன் பாவம் செய்கிறான், ஆதலால் நாமும் அவனைப் போல இருக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.

18. நீங்கள் அமைதியாக இருந்து உங்கள் உணர்வுகளை மறைத்தீர்களானால் நீங்கள் ஏன் அவ்வாறு இருக்கிறீர்கள் என்று முன்னர் நாம் கூறிய மனிதன் உங்களைக் கேட்கக்கூடும். அவன், “உன்னால் முடிந்தால் பேசு, ஆனால் உன்னால் முடியாது, நீ வாய்பேச முடியாதவன், நான் தான் உன்னைப் பேச முடியாதபடி செய்துவிட்டேன்” என்று சொல்லக்கூடும். நீங்கள் அமைதியாக இருக்கும்போது, ​​அவன் மேலும் கிளர்ச்சியடைகிறான். ஏனெனில் அவன் தோற்கடிக்கப்பட்டு, கேலிக்குள்ளாகி, புறக்கணிக்கப்பட்டு, பரிகசிக்கப்பட்டதாக உணர்கிறான். நீங்கள் பதிலளித்தால், தன்னைப் போன்ற ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டதால் தான் வெற்றி பெற்றுவிட்டதாக அவன் நினைக்கக் கூடும். நீங்கள் மௌனமாக இருந்தால், உங்களை சுற்றியுள்ளவர்கள், “அந்த மனிதன் முரட்டுத்தனமாக இருந்தான், இருந்தாலும் இவன் அவனை இழிவாகப் பார்த்தான்” என்று சொல்வார்கள். நீங்கள் பதிலுக்கு முரட்டுத்தனமாக நடந்துகொண்டால், அவர்கள், “இருவருமே முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள். இருவரும் பழியை ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆகவே இருவரில் ஒருவரும் நிரபராதி அல்ல” என்று சொல்வார்கள். ஆகவே, உங்களைக் கோபப்படுத்தி, நீங்கள் அவனைப் போலவே பேசவும் செயல்படவும் வைப்பது தான் அவனது நோக்கம். ஆனால் ஒரு நல்ல மனிதர் தன் உணர்வுகளைத் தனக்குள்ளேயே அடக்கி, தெளிவான மனசாட்சியின் அமைதியைக் காத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். அவன் புறம் பேசுபவனின் ஆணவத்தை விட நல்லவர்களின் கருத்துக்களையே அதிகம் நம்ப வேண்டும். மேலும் தன் குணத்தின் மேன்மை காரணமாக மனநிறைவு காண வேண்டும். இதன் பொருள் நல்ல விஷயங்கள் பற்றி சொல்லவேண்டிய நிலையிலும் மௌனமாக இருப்பது தான்; ஏனெனில் தெளிவான மனசாட்சி உடைய ஒருவர் பொய்களால் கலங்கக்கூடாது. மேலும் தன் மனம் கூறும் உண்மையை மட்டுமே மதித்து, மற்றவர்களின் ஈனத்தனமான பேச்சுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

19. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒருவன் தன் பணிவின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இருப்பினும் அவன் மிகவும் பணிவானவனாகத் தோன்ற விரும்பவில்லை என்றால், அவன் இப்படிச் சிந்தித்து தனக்குள்ளே பின்வருமாறு சொல்லிக்கொள்ளக்கூடும்: இந்த மனிதன் என்னை இழிவாகப் பார்ப்பதையும், நான் வாய் திறக்கக் கூட முடியாத அளவுக்கு என்மீது பழிச்சொற்களைச் சொல்வதையும் நான் அனுமதிக்க வேண்டுமா? அவனையும் காயப்படுத்தக்கூடிய வகையில் எதையாவது நானும் ஏன் சொல்லக்கூடாது? நான் ஒரு மனிதப் பிறவி அல்ல என்பது போலவும், எனக்காக நான் குரல் கொடுக்க முடியாது என்பது போலவும், அவன் என்னை அத்தனை மோசமாக நடத்துவதை நான் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டுமா? அவனுக்கு எதிராக இதைவிட மோசமான குற்றச்சாட்டுகளை என்னால் சுமத்த முடியாது என்ற எண்ணத்தில் தான் அவன் என் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகிறானா?

20. இவ்வாறு பேசுகிறவன் சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவனாகவோ அல்லது சோதனையில் இருந்து விடுபட்டவனாகவோ இருக்கமாட்டான். சோதிக்கிறவன் அவனைத் தூண்டிவிட்டு அந்த எண்ணங்களை அவன் மனதில் விதைக்கிறான். பல சமயங்களில் தீய சக்தியானது வேறொருவனைப் பயன்படுத்தி, நல்லவர்களைப் புண்படுத்தக்கூடிய காரியங்களைச் சொல்லத் தூண்டக்கூடும்; ஆனால் நாம் திடமாகவும் உறுதியாகவும் நின்று இவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஒரு அடிமை உங்களை அவமதித்தபோதும், நல்லவர்களான நீங்கள் அமைதியைக் கடைபிடியுங்கள். ஒரு பலவீனன் உங்களை அவமதித்தால், மௌனமாக இருங்கள்; ஒரு ஏழை உங்களைக் குற்றம் சாட்டினால், பதிலளிக்காதீர்கள். திறமையான ஈட்டி எறிபவர்கள் சற்று பின்வாங்கும் போது, ​​அவர்களைத் துரத்துபவர்கள் இன்னும் அதிக சக்தியுடன் தாக்கி, அதன் மூலம் வெற்றியைத் தனதாக்கிக் கொள்வர். இவைதான் நீதிமானின் கருவிகளாகும்; விட்டுக்கொடுப்பதன் மூலம் வெற்றிபெற அவர்களுக்கு உதவுகின்றன.

அத்தியாயம் 6

இவ்வாறான சூழ்நிலையில், நாம் எந்தத் தீங்குக்கும் தகுதியானவர்களாகத் தோன்றாதிருக்க வேண்டுமாயின் அமைதியாகவும் தாழ்மையாகவும் இருக்கும் தாவீதின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.

21. நிந்தனைகளைக் கேட்கும்போது நாம் ஏன் கலக்கமடைய வேண்டும்? “நல்லதைச் சொல்ல முடிந்தபோதிலும், நான் அமைதியாகவும் தாழ்மையுடனும் பொறுமையாகவும் இருந்தேன்” என்று சொன்னவரின் முன்மாதிரியை நாம் ஏன் பின்பற்றக்கூடாது? அல்லது தாவீது இதைச் சொன்னாரே தவிர, அதன்படி நடக்கவில்லையா? இல்லை என்று சொல்ல முடியாது, ஏனெனில் அவர் அதன்படி நடந்தும் காட்டினார். கேராவின் மகனான சிமேயி தாவீதை அவமதித்தபோது ​​அவர் மௌனமாக இருந்தார். ஆயுதம் ஏந்திய மனிதர்களால் சூழப்பட்டிருந்தபோதிலும் அவருக்கு ஏற்பட்ட அந்த அவமதிப்புகளுக்குப் பதிலளிக்கவோ பழிவாங்கவோ இல்லை. செருயாவின் மகன் பழிவாங்க எத்தனித்தபோது ​​தாவீது அவனைத் தடுத்தார். அவர் அமைதியாகவும் தாழ்மையுடனும் இருந்தார்; வன்முறையாளன் என்று அழைக்கப்பட்டபோதும் அவர் கலங்கவில்லை, ஏனென்றால் தான் கருணையுடன் செயல்பட்டதை அவர் நன்கு அறிந்திருந்தார். தனது சொந்த நற்கிரியைகளைப் பற்றி அவர் அறிந்திருந்ததால் அந்த அவமதிப்பு குறித்து அவர் கலக்கமுறவில்லை.

22. அநீதிகளைக்கண்டு எதிர்வினையாற்றுபவன் தான் அவமானத்திற்குத் தகுதியற்றவன் என்று காட்டிக்கொள்ள விரும்பினாலும், தகுதியானவன் போல் தன்னைக் காட்டிக்கொள்கிறான். அநீதிகளைப் புறக்கணிப்பவன் அவற்றால் கலக்கமடைபவனை விட மேலானவன். அநீதிகளை வெறுப்பவன் அவற்றுக்காக வருந்துபவனை விட மேலானவன். ஏனெனில், அநீதிகளை வெறுப்பவன் அவற்றை உணராதது போல் அவற்றை இழிவாகப் பார்க்கிறான்; ஆனால் அவற்றுக்காக வருந்துபவனோ அவற்றை உண்மையாகவே உணர்ந்தது போல் வேதனைப்படுகிறான்.

அத்தியாயம் 7

சங்கீதம் xxxix (39) [xxxviii] ஒரு சிறந்த, அற்புதமான முன்னுரையாக அமைகிறது. இந்த சங்கீதத்தால் உத்வேகம் பெற்று அந்தப் புனிதர் பொறுப்புகளைப் பற்றி எழுதத் தீர்மானிக்கிறார். தன் மகனுக்காக இதே தலைப்பில் எழுதிய சிசெரோவை விடவும் இதைச் செய்வதற்கு அவருக்கு இன்னும் அதிக காரணம் இருக்கிறது. இதை மேலும் விளக்குவது அவசியம்.

23. என் பிள்ளைகளே, உங்களுக்கு எழுதும் போது ​​அதாவது இந்த சங்கீதத்தின் தொடக்கத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு நான் கவனமாகச் சிந்தித்தேன். தீர்க்கதரிசியான தாவீது யெதூத்தூனுக்குப் (Jeduthun) பாடக் கொடுத்த இந்த சங்கீதத்தின் ஆழமான அர்த்தத்தம் மற்றும் மதிப்புமிக்க பாடங்கள் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதால், நீங்களும் அதில் கவனம் செலுத்தும்படி உங்களை ஊக்குவிக்கிறேன். நாம் சற்றுமுன் சுருக்கமாக விவாதித்த வார்த்தைகளிலிருந்து இந்த சங்கீதம் மௌனத்தில் பொறுமையாய் இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும், எப்போது பேச வேண்டும் என்பது குறித்த அறிவையும் நமக்குக் கற்பிக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டோம். அத்தோடு, அதைத் தொடரும் வசனங்களில் செல்வத்தின் மீதுள்ள வெறுப்பையும் இது கற்பிக்கிறது; இவையே எல்லா நற்பண்புகளுக்கும் அடித்தளமாகும். எனவே, இந்த சங்கீதத்தைப் பற்றி சிந்திக்கும்போது, ​​நமது கடமைகளைப் பற்றி எழுதுவது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என்று நினைத்த காரணத்தால் இதை எழுத முடிவுசெய்தேன்.

24. கிரேக்க எழுத்தாளர்களில் பனேஷியஸ் மற்றும் அவரது மகன், இலத்தீன் எழுத்தாளர்களில் சிசெரோ போன்ற சில தத்துவஞானிகள் இந்தத் தலைப்பைப் பற்றி எழுதியுள்ளனர். இருப்பினும், நானும் இதைப் பற்றி எழுதுவது பொருத்தமானது என்று உணர்ந்தேன். சிசெரோ தன் மகனுக்குக் கற்பிக்க எழுதியது போலவே, என் பிள்ளைகளாகிய உங்களுக்குக் கற்பிக்க நான் எழுதுகிறேன். நற்செய்தியின் மீது விசுவாசம் கொள்ளும்படி நான் வழிநடத்திய உங்களை, நீங்கள் என் சொந்த பிக்கைகளாக இருந்தால் எப்படி நேசிப்பேனோ அதே அளவு நேசிக்கிறேன். ஏனெனில், கிருபையிலிருந்து பிறக்கும் ஆன்மீக அன்பு இயற்கையான அன்பை விட வலிமை குறைந்ததல்ல. இந்த வாழ்வில் மட்டும் நம்முடன் இருப்பவர்களை விட, நித்தியமாக நம்முடன் இருப்பார்கள் என்று நாம் நம்புபவர்களை நிச்சயமாக அதிகமாக நேசிக்க வேண்டும். சில சமயங்களில், தங்கள் குடும்பத்திற்கு அவமானத்தைக் கொண்டுவரும் பிள்ளைகள் பிறக்கிறார்கள். ஆனால் உங்களை நேசிப்பதற்காக என்று நாங்கள் முன்பே உங்களைத் தேர்ந்தெடுத்தோம். இயற்கையான அன்பு ஒரு அவசியமான தேவையாகும்; அது தானாகவே வரக்கூடியது. ஆனால் அது ஒரு நீடித்த அன்பை விதைப்பதற்குப் போதுமான பொருத்தமான மற்றும் நிலையான ஆசானாக இருப்பதில்லை. மாறாக, ஆழ்ந்த அன்புடன் கூடிய வலுவான பாசத்தை இணைக்கும் எங்களின் உணர்வுப்பூர்வமான தேர்வின் காரணமாகவே நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள். இப்படித்தான் ஒருவர் தான் விரும்புவதை உண்மையாகப் போற்றுவதோடு, தான் தேர்ந்தெடுத்ததை முழுமையாக நேசிக்கிறார்.

அத்தியாயம் 8

‘கடமை‘ என்ற சொல் தத்துவஞானிகளாலும் மறைநூல்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது; அதிலிருந்தே அது பெறப்பட்டது.

25. ஆகையால், சம்பந்தப்பட்ட நபர் கடமைகளைப் பற்றி எழுதத் தகுதியானவர் என்பதால், அந்த விஷயமும் அதேபோலத்தான் இருக்கிறதா என்றும் இந்தச் சொல் தத்துவஞானிகளால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா அல்லது மறைநூல்களிலும் இருக்கிறதா என்றும் பார்ப்போம். இன்று நற்செய்தியை வாசிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் எம்மை எழுதத் தூண்டுவது போல ஒரு பகுதியை அழகாக நம் முன் கொண்டு வந்துள்ளார். கடமை என்று பொருள்படும் “officium” என்ற சொல்லை நாமும் பயன்படுத்தலாம் என்ற நமது நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது. குருவான சகரியா ஆலயத்தில் வாயடைத்துப்போய் பேசமுடியாதிருந்தபோது அவர் குறித்து ​​ “அவனுடைய கடமை நாட்கள் [officii] முடிந்தவுடனே, அவன் தன் வீட்டிற்குப் புறப்பட்டுப் போனான்” என்று எழுதப்பட்டுள்ளது. எனவே கடமை என்று பொருள்படும் “officium” என்ற சொல்லை நாமும் பயன்படுத்தலாம் என்பதை நாம் காண்கிறோம்.

26. இது உண்மையில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் ‘officium’ (கடமை) என்ற சொல் ‘efficere’ (செயல்படுத்துதல்) என்பதிலிருந்து பெறப்பட்டது என்றும் இனிமையான ஒலிக்காக ஒரே ஒரு எழுத்தை மாற்றி உருவாக்கப்பட்டது என்றும் நாம் கருதுகிறோம்; அல்லது குறைந்தபட்சம் நீங்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காத ([officiant) ஆனால் அனைவருக்கும் நன்மை பயக்கும் செயல்களைச் செய்ய வேண்டும்.

அத்தியாயம் 9

ஒரு கடமையானது, எது நல்லது மற்றும் எது பயனுள்ளது என்பதன் அடிப்படையிலும், அவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இருப்பினும், மறுமை வாழ்க்கைக்கு உதவாத எதுவும் உண்மையாகவே நல்லதோ அல்லது பயனுள்ளதோ அல்ல என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். எனவே, கடமை குறித்த இந்த ஆய்வுரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்

27. நற்பண்பு மற்றும் பயனுள்ளவற்றிலிருந்து கடமைகள் உருவாகின்றன என்றும், இவ்விரண்டில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தத்துவஞானிகள் கருதினர். பின்னர், இரண்டு நற்பண்பு மிக்க அல்லது இரண்டு பயனுள்ள விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்படக்கூடும் என்றும், அப்போது எழும் கேள்வியானது எது அதிக நற்பண்பு மிக்கது மற்றும் எது அதிக பயனுள்ளது என்பதே என்றும் அவர்கள் கூறுகிறார்கள். எனவே, அவர்கள் கடமையை மூன்று பகுதிகளாகப் பிரித்தனர்: எது நல்லது, எது உதவக்கூடியது மற்றும் அவை முரண்படும்போது எது சிறந்தது என்பதைத் தீர்மானித்தல் ஆகியவையே இம்மூன்றும். இந்த மூன்று பகுதிகள் மேலும் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: இரண்டு நல்லவை, இரண்டு உதவக்கூடியவை மற்றும் அவற்றுக்கிடையே சரியானதைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல். முதல் பகுதி ஒழுக்கமான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வது தொடர்பானது, இரண்டாவது பகுதி செல்வம் மற்றும் வாய்ப்புகள் போன்ற நடைமுறை அம்சங்களைக் குறித்ததாகும். மேலும் இவை அனைத்திற்கும் சரியானதைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் இன்றியமையாதது. இதுபற்றித்தான் தத்துவஞானிகள் கூறுகிறார்கள்.

28. பொருத்தமானதையும் நல்லதையும் மட்டுமே நாம் அளவிடுகிறோம்; நிகழ்காலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எதிர்காலத்தில் நமக்கு நன்மை பயக்கும் காரியங்களில் கவனம் செலுத்துகிறோம். நிகழ்காலத்தை அனுபவிக்க உதவும் காரியங்களை மட்டுமல்லாமல், நித்திய ஜீவன் எனும் ஆசீர்வாதத்திற்குப் பங்களிக்கும் காரியங்களை மட்டுமே நாம் பயனுள்ளதாகக் கருதுகிறோம். வாய்ப்புகளிலோ அல்லது உலக ஆசைகள், பொருள் மற்றும் செல்வத்திலோ நாம் உண்மையான நன்மைகளைக் காண்பதில்லை; மாறாக, அவற்றை விட்டுவிடும்போது ஏற்படும் இழப்பை இழப்பாகக் கருதுவதை விட, அவற்றைப் பற்றிக்கொண்டால் ஏற்படக்கூடிய சுமைகளை சுமைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.

29. ஆகவே, கடமையை அவர்கள் பார்ப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பதால் நமது பணி பயனற்றதாகி விடாது. அவர்கள் இவ்வுலகின் சலுகைகளை நல்லவையாகக் கருதுகிறார்கள். ஆனால் நாமோ அவற்றைத் தீயவையாகக் காண்கிறோம்; எல்லாவற்றிற்கும் மேலாக, உவமையில் வரும் செல்வந்தன் இங்கே நல்ல காரியங்களைப் பெற்றாலும் பின்னர் துன்பப்படுகிறான்; மேலும், லூக்கா 16:25 கூறுவதுபோல், ‘கடினமான காலங்களைச் சந்தித்த லாசரு அங்கே ஆறுதலைக் காண்கிறான்’. இறுதியாக, அவர்களின் எழுத்துக்களை வாசிக்காதோர் விரும்பினால் எங்களுடையதைப் படித்துப் பார்க்கலாம் — அவர்களுக்கு ஆடம்பரமான மொழிநடையோ அல்லது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தலைப்போ தேவையில்லை, ஆனால் அந்த படைப்புக்களில் பொதிந்திருக்கும் பொருளின் நேரடியான ஈர்ப்பே அவர்களுக்குப் போதுமானதாக இருத்தல் வேண்டும், அதுவே இங்கு பிரதானமானதாக இருக்கிறது.

அத்தியாயம் 10

தத்துவஞானிகளின் நூல்களில் தோன்றுவதற்கு முன்பே, எது பொருத்தமானது என்பது புனித மறை நூல்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. தத்துவஞானியான பைதகரஸ் மௌனம் என்னும் கருத்தை தாவீதிடமிருந்து கற்றுக்கொண்டார். இருப்பினும், தாவீதின் வழிகாட்டுதலே சிறந்தது, ஏனெனில் அளவுடன் பேசுவதே நமது முக்கியப் பொறுப்பாகும்.

30. தகுதியானவையே நமது மறைநூல்களில் முதன்மையாக இடம்பெற்றுள்ளன என்று நமக்கு அறிவுறுத்தப்பட்டு கற்பிக்கப்படுகிறது. (கிரேக்க மொழியில் இது πρέπον என்று அழைக்கப்படுகிறது) இதுகுறித்து, “சீயோனில், தேவனே, உமக்கே ஒரு துதிப்பாடல் தகுதியானது,” இது கிரேக்க மொழியில்: “Σοί πρέπει ὕμνος ὁ θεὸς ἐν Σιών” என்று கூறப்படுகிறது. அப்போஸ்தலரும் தீத்து 2:1-ல் “பவுல் தீத்துவுக்கு ஆரோக்கியமான (சரியான) உபதேசத்திற்கு ஏற்றவைகளைப் பேசுமாறு அறிவுறுத்துகிறார். இது கிறிஸ்தவ விசுவாசத்தின் உண்மைத்தன்மை, சரியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான போதனைகளைப் பரப்புவதை வலியுறுத்துகிறது.” அதேபோன்று, எபிரேயர் 2:10 “தேவனே அனைத்தையும் படைத்தவர். அனைத்தும் அவரது மகிமைக்காகவே உள்ளன. தன் மகிமையைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான மக்களை அவர் விரும்பினார். எனவே, தமக்குத் தேவையானவற்றை அவர் செய்தார். மக்களை இரட்சிப்புக்கு வழி நடத்திச் செல்ல பூரணமானவராக தேவன் இயேசுவை நியமித்தார். அதன்மூலம் இயேசு தன் பாடுகளின் நிமித்தம் ஒரு பூரண இரட்சகரானார்”.

31. கடமையைப் பற்றி எழுதிய பனேஷியஸ் அல்லது அரிஸ்டோட்டில் தாவீதுக்கு முந்தையவர்களா? சோக்ரடீஸுக்கு முன்பு வாழ்ந்த தத்துவஞானியான பைதகரஸ் கூட தீர்க்கதரிசி தாவீதைப் பின்பற்றி தன் சீடர்களை மௌனமாக இருக்கச் சொன்னார். அவர் தன் சீடர்களை ஐந்து ஆண்டுகளுக்குப் பேசவிடாமல் தடுத்தார். இருப்பினும் தாவீது தனது விதியை, அதாவது பேசுவதற்கான நமது இயல்பான திறனைப் பலவீனப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, நாம் பேசுவதில் கவனமாக இருக்கக் கற்றுக் கொடுப்பதற்காகவே அந்தத் திறனைக் கொடுத்தார். பைதகரஸ் பேசாமல் இருந்து, மக்களுக்குப் பேசக் கற்றுக் கொடுப்பதற்காகத் தனது விதியை உருவாக்கினார். ஆனால் தாவீதோ, பேசுவதன் மூலம் நாம் எப்படி எல்லாம் பேசுவது என்பதைப் பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தனது விதியை உருவாக்கினார். முயற்சி செய்யாமல் நம்மால் எப்படி கற்றுக்கொள்ள முடியும்? அல்லது பயிற்சி செய்யாமல் எப்படி ஆற்றலைப் பெற முடியும்?

32. போருக்காகப் பயிற்சி பெற விரும்பும் ஒருவன், தினமும் போருக்குப் பயன்படும் தன் ஆயுதங்களைக் கொண்டு பயிற்சி செய்கிறான். எதிரி தனக்கு முன்னால் நிலை கொண்டிருப்பது போலக் கற்பனை செய்துகொண்டு முன்னேறிச் செல்கிறான். ஈட்டி எறிவதில் திறமையையும் வலிமையையும் பெறுவதற்காக, அவன் தன் கைகளின் வலிமையைச் சோதித்துப் பார்க்கிறான். அல்லது தன் எதிரிகளின் தாக்குதல்களைத் தவிர்த்து, தனது விழிப்புணர்வால் அவர்களிடமிருந்து தப்பிக்கிறான். ஒருவர் கடலில் கப்பலை செலுத்தவோ அல்லது படகொன்றை செலுத்தவோ கற்றுக்கொள்ள விரும்பினால், அவர்கள் ஆரம்பத்தில் ஆற்றில் பயிற்சி செய்வதன் மூலம் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்கிறார்கள். நல்ல இசைக்கேற்றவாறு பாடும் பாணியையும் இனிமையான குரலையும் வளர்த்துக் கொள்ள விரும்புபவர்கள், தொடர்ச்சியாகப் பாடுவதன் மூலம் படிப்படியாகத் தங்கள் குரல் திறன்களை வளர்த்துக் கொள்ளத் தொடங்குகிறார்கள். அதேபோலத்தான் மல்யுத்தப் போட்டியில் வீரர்கள் தங்கள் உடல் பலத்தைக் கொண்டு வெற்றி பெற வேண்டுமென்ற இலக்கை உடையவர்கள் மல்யுத்தப் பயிற்சிக் கூடத்தில் தினசரி பயிற்சி செய்து தங்கள் உடலை வலுப்படுத்தி, பொறுமையை வளர்த்து, கடின உழைப்புக்குத் தங்களைப் பழக்கிக்கொள்கிறார்கள்.

33. இயற்கை இதை நமக்குக் குழந்தைகள் மூலம் காட்டுகிறது. அவர்கள் ஒலிகளுடன் விளையாடத் தொடங்கி, இறுதியில் பேசக் கற்றுக் கொள்கிறார்கள். ஆகவே இந்தப் பேச்சின் அடிப்படையான ஒலிகள் தான் குரலுக்கான பயிற்சியாகவும் ஒரு பயிற்சித் தளமாகவும் அமைகின்றன. ஆகையால், தங்கள் பேச்சை மேம்படுத்த ஆர்வமுள்ளவர்கள், இயல்பாக வருவதை ஏற்றுக்கொண்டு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்; அதாவது கோபுரத்தில் உள்ள காவலர்கள் தூங்காமல், கவனிப்பதன் மூலம் விழிப்புடன் இருப்பதைப் போலத்தான் இவர்களின் கவனமும் சிதறாமல் இருத்தல் வேண்டும். சரியான மற்றும் முறையான பயிற்சியின் மூலம் அனைத்தும் சிறப்பாகவும் வலிமையாகவும் மாறும்.

34. இருந்தபோதும், தாவீது எப்போதும் மௌனமாக இருக்கவில்லை; அவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மௌனமாக இருந்தார். அவர் எல்லாரிடமும் நிரந்தரமாகப் பேசாமல் இருக்கவில்லை. தன்னை அவமதித்தவர்களுக்கும், தனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களுக்கும் பதிலளிக்க வேண்டாம் என்று அவர் முடிவு செய்தார். பொய் சொன்னோருக்கு முன் காது கேளாதவர் போலவும், வாய் பேச முடியாதவனைப்போலவும் நடந்துகொண்டதாக அவர் கூறினார்; ஆகையால் அவர்களுடன் பேசத் தன் வாயை அவர் திறக்கவில்லை. நீதிமொழிகள் 26:4-ல், “ஒரு முட்டாள் அறிவீனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு அறிவீனமான பதிலைக் கொடுக்கவேண்டாம். ஏனென்றால் நீயும் முட்டாளைப்போன்று தோன்றுவாய்” என்று கூறப்பட்டுள்ளது.

35. அப்படியென்றால், நமது வார்த்தைகளைக் கவனமாக அளந்து பேசுவதை உறுதி செய்வதே நமது தலையாய பொறுப்பாகும். இவ்வாறு, நாம் கடவுளுக்குத் துதியின் பலியைச் செலுத்துகிறோம்; அதுபோலவே பரிசுத்த வேதாகமத்தைப் படிக்கும்போது மரியாதை காட்டுகிறோம், நமது பெற்றோரை மதிக்கிறோம். எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று தெரியாததாலேயே பலர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும், பேசுவதால் தங்களுக்குப் பலன் இல்லை என்று தெரிந்தபோதும், ஒருவர் அமைதியாக இருப்பது அரிது. ஒரு ஞானி, தான் என்ன சொல்ல வேண்டும், யாரிடம் சொல்லவேண்டும், எப்போது, ​​எங்கே, எப்படி சொல்லவேண்டும் என்பதைப் பற்றிக் கவனமாகச் சிந்திப்பார். ஆகவே, மௌனத்திற்கும் பேச்சுக்கும் ஒரு சரியான அளவு உண்டு; அதேபோல நமது செயல்களுக்கும் ஒரு சரியான அளவு உண்டு. ஆகவே சரியான அளவிலான பொறுப்புணர்வைப் பேணுவது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

அத்தியாயம் 11

எல்லாக் கடமைகளும் சாதாரணமானவை மற்றும் பரிபூரணமானவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன என்று மறைநூல் வாசகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அது இரக்கத்தைப் போற்றும் ஒரு வார்த்தையையும் கொண்டுள்ளதுடன், அதைக் கடைப்பிக்க நம்மை அறிவுறுத்துகிறது.

36. ஒவ்வொரு கடமையும் சாதாரணமானதாகவோ அல்லது பரிபூரணமானதாகவோ இருக்கிறது என்ற இரண்டு வகைகளில் ஒன்றில் அடங்கும்: இதை நாம் மறைநூல் வாசகங்கள் கூறுவதைக் கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம். நற்செய்தியில், ஆண்டவர், “நீ ஜீவனுக்குள் பிரவேசிக்க விரும்பினால், கட்டளைகளைக் கைக்கொள்” என்று கூறுவதைக் கண்டிருக்கிறோம். அப்படியானால் “எந்தக் கட்டளைகள்?” என்ற கேள்வி எழுகிறது. அதற்கு இயேசு, “நீ கொலை செய்யக்கூடாது, விபசாரம் செய்யக்கூடாது, திருடக்கூடாது, பொய்சாட்சி சொல்லக் கூடாது, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட, உன்னைப்போலவே உன் அயலானையும் நேசி” என்று அருளியுள்ளார். இவை சாதாரணமான பொறுப்புகள். ஆனால் இவற்றில் இன்னும் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதாகத் தெரிகிறது.

37. ஒரு இளைஞன் இயேசுவிடம் வந்து, “நான் சிறுவயது முதல் இந்த விதிகள் அனைத்தையும் பின்பற்றி வருகிறேன். நான் இன்னும் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். இயேசு அவனிடம், “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. இதைச் செய்தால் நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார் என்று மத்தேயு 19:20-21-ல் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக, “நாம் நமது எதிரிகளை நேசிக்க வேண்டும் என்றும், நம்மீது பொய்க் குற்றம் சாட்டித் துன்புறுத்துவோருக்காக செபிக்க வேண்டும் என்றும், நம்மைச் சபிப்பவர்களை நாம் ஆசீர்வதிக்க வேண்டும்” என்றும் கர்த்தர் கூறியதாக மத்தேயு 5:44-ல் சொல்லப்பட்டுள்ளது. பரலோகத்தில் உள்ள நம் பிதாவைப் போல நாமும் பரிபூரணராயிருக்க விரும்பினால், இதை நாம் செய்ய வேண்டும். அவர் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பேதமின்றி அனைவர் மீதும் சூரியனைப் பிரகாசிக்கச் செய்கிறார்; அதேபோன்று அனைவருக்காகவும் உலகம் முழுவதையும் மழையாலும் பனியாலும் வளமாக்குகிறார்” என்று மத்தேயு 5:45-ல் விளக்கப்பட்டுள்ளது. இது ஒரு பரிபூரணமான கடமையாகும், அதாவது தவறாக இருக்கக்கூடிய எதையும் இது சரிசெய்கிறது.

38. இரக்கம் ஒரு நல்ல குணம், ஏனெனில் அது நமது பிதாவின் பரிபூரண இயல்பைப் பிரதிபலித்து, மக்கள் சிறந்தவர்களாக மாற உதவுகிறது. இரக்கம் காட்டுவதை விட, குறிப்பாக ஏழைகளின் மீது இரக்கம் காட்டுவதை விட ஒரு கிறிஸ்தவரின் குணத்தை வேறு எதுவும் மேம்படுத்துவதில்லை. இதன் பொருள் அனைவருக்கும் வழங்கும் இயற்கையின் ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொள்ளும் சமமானவர்களாக அவர்களை நடத்துவதாகும். தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதன் மூலம், வாழ்வில் உங்களுடன் இருக்கும் உங்கள் சகோதரனுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். நீங்கள் வெள்ளியைக் கொடுக்கிறீர்கள்; அவன் வாழ்வைப் பெறுகிறான். நீங்கள் பணத்தைக் கொடுக்கிறீர்கள்; அவன் அதைத் தன் செல்வமாகக் கருதுகிறான். உங்கள் நாணயமே அவனுடைய முழு உடைமையாகிறது.

39. நீங்கள் அவருக்குக் கொடுப்பதை விட அதிகமாக தேவன் உங்களுக்குக் கொடுக்கிறார், ஏனென்றால் உங்களை இரட்சித்தமைக்காக அவர் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறார். தேவையுள்ள ஒருவருக்கு நீங்கள் உதவும்போது, ​​உங்களுக்கு நீங்களே உதவிக் கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு அந்நியருக்கு உதவினாலோ அல்லது ஏழ்மையில் உள்ள ஒருவருக்கு ஆதரவளித்தாலோ, தேவன் உங்களுக்கு நல்ல மனிதர்களின் நட்பையும் பரலோகத்தில் ஓர் இடத்தையும் கொடுப்பார். இது ஒரு பெரிய வெகுமதி. நீங்கள் என்றென்றும் நிலைக்காத காரியங்களைக் கொடுக்கிறீர்கள், அதன்மூலம் என்றென்றும் நிலைத்திருக்கும் கொடைகளைப் பெறுகிறீர்கள். யோபுவுக்கு நடந்ததைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? அவருடைய நல்ல குணத்தைக் கண்டு நீங்கள் இன்னும் அதிகமாக ஆச்சரியப்பட வேண்டும்; அவரால் பார்க்கவோ, நடக்கவோ முடியாதோருக்கும் ஏழைகளுக்கும் உதவ முடிந்தது. அவர் தனது கதகதப்பான ஆட்டுத்தோல்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அன்னியர்களை அவரது வீட்டிற்கு வரவேற்றார். அவரது கதவு எப்போதும் அனைவருக்கும் திறந்திருந்தது. இதன்மூலம் ஒரு ஏழையை ஒருபோதும் புறக்கணிக்காத வீட்டை உடைய எவரும் பாக்கியவான் என்பது தெளிவாகிறது. மேலும், ஏழைகளின் தேவைகளையும், தங்களுக்குத் தாங்களே உதவ முடியாத, பலவீனமான மனிதர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்பவர் மிகவும் பாக்கியசாலியாவார். நடுத்ததீர்வை நாளில் கர்த்தர் அப்படியானவர்களைக் காப்பாற்றுவார், ஏனென்றால் அவர்கள் காட்டிய கருணைக்காகக் கடவுள் அவர்களுக்குக் கடன்பட்டிருப்பார் என்பதனால்.

அத்தியாயம் 12

எந்த ஒருவரும் கருணை காட்டுவதை நிறுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதில் கடவுள் அக்கறை கொண்டுள்ளார் என்று ஆசிரியர் விளக்குகிறார். மேலும், எல்லா துன்மார்க்கர்களும் தங்கள் செல்வத்தின் மிகுதியால் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை யோபின் சான்றின் மூலம் நிரூபிக்கிறார்.

40. ஆனால், பலர் செயல் வடிவான இரக்கத்தைக் காட்டும் கடமையிலிருந்து பின்வாங்குகிறார்கள்; ஏனெனில், மனிதர்களின் செயல்களைக் குறித்துக் கடவுள் கவலைப்படுவதில்லை என்றோ அல்லது நாம் இரகசியமாகச் செய்வதையும் நமது மனசாட்சியின் நோக்கங்களையும் அவர் அறியார் என்றோ அவர்கள் கருதுகிறார்கள் போலும். இன்னும் சிலர், அவருடைய தீர்ப்பு எந்த விதத்திலும் நீதியானதாகத் தெரியவில்லை என்று நினைக்கிறார்கள்; ஏனெனில், தவறு செய்பவர்கள் மிகுதியான செல்வங்களைக் கொண்டிருப்பதையும், அவர்கள் கௌரவங்களையும் ஆரோக்கியத்தையும் அனுபவிப்பதையும் பிள்ளை குட்டிகள் உடையவர்களாக இருப்பதையும், அதே சமயம் நீதிமான்களோ வறுமையிலும் அவமானத்திலும் போராடுவதையும், பெரும்பாலும் பிள்ளைகுட்டிகள் இல்லாமலும் உடல்நலம் குன்றியவர்களாகவும், அடிக்கடி துக்கத்துடனும் இருப்பதையும் அவர்கள் கவனிக்கிறார்கள்.

41. அது ஒரு சாதாரண விஷயமல்ல, பெரிய விஷயம். யோபுவின் மூன்று அரச நண்பர்களும் அவரைப் பாவி என்று அழைத்தார்கள். ஏனென்றால் அவர் செல்வந்தராக இருந்து ஏழையானதையும், அவருக்குப் பல பிள்ளைகள் இருந்தும் அவர்கள் எல்லோரையும் இழந்ததையும், இப்போது அவர் உடல் முழுவதும் புண்களாலும், ரணங்களாலும் நிறைந்து அவதியுறுவதையும் அவர்கள் கவனித்தார்கள். ஆனால் பரிசுத்த யோபு அவர்களை நோக்கி, “என் பாவங்களினிமித்தம் நான் இப்படித் துன்பப்படுவேனென்றால், துன்மார்க்கர்களால் எப்படி வாழ முடிகிறது? அவர்கள் தங்கள் செல்வந்தர்களாகவே முதிர்ந்த வயதை அடைகிறார்கள், தங்கள் பிள்ளைகள் அவர்கள் விரும்பியபடியே இருக்கிறார்கள், தங்கள் பிள்ளைகள் அவர்கள் கண்முன்னே நன்றாக இருக்கிறார்கள். அவர்களது வீடுகளும் செழிப்பாக இருக்கின்றன; ஆகையால் அவர்களுக்குப் பயமில்லை; தீயோரைத் தண்டிப்பதற்கு தேவன் ஒரு கோலையும் பயன்படுத்துவதில்லை” என்று கூறியதாக யோபு 21:7-9 இல் சொல்லப்பட்டுள்ளது.

42. இதைக் காணும் ஒரு கோழை மனிதன், இதைக் கண்டு மனம் கலங்கி தன் கவனத்தை அதிலிருந்து திருப்பிக்கொள்கிறான். பரிசுத்த யோபுவும் அவ்வாறு பேசுவதற்கு முன்பு பின்வருமாறு கூறித் தொடங்கினார்: என்னை சற்றே பொறுத்துக்கொள்ளுங்கள், பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும்; பிறகு நீங்கள் என்னைப் பார்த்துச் சிரியுங்கள். நான் விமர்சனத்துக்கு உள்ளானால், அது நான் ஒரு மனிதன் என்பதால் மட்டுமே. எனவே, என் வார்த்தைகளின் பாரத்தைச் சுமந்து கொள்ளுங்கள். நான் உடன்படாத சில விஷயங்களைச் சொல்லப் போகிறேன்; உங்களை எதிர்கொள்வதற்காக சில தவறான வார்த்தைகளை சொல்லக்கூடும். அப்படியானால், இது என்ன? என்னை யாரேனும் விமர்சிக்கிறார்களா? நான் அவ்வாறான விமர்சனங்களுக்குத் தகுதியானவன் என்றபோதும், என் பாவங்களுக்காக யாராலும் என்னை நியாயந்தீர்க்க முடியாது; ஏனென்றால், நீங்கள் என் வெளிப்படையான பாவங்களைச் சுட்டிக்காட்டாமல் நான் எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருக்கிறேன் என்பதன் அடிப்படையில் என்னை நியாயந்தீர்க்கிறீர்கள். ஆகவே, தான் துயரத்தில் உழன்றுகொண்டிருக்க, தீயவர்கள் செழிப்படைவதைக் காணும் அந்தக் கோழை ஆண்டவரிடம், “என்னைவிட்டு விலகி இரும், உம்முடைய வழிகளை நான் அறிய விரும்பவில்லை” என்று யோபு 21:14 கூறுகிறது. அவருக்கு ஊழியம் செய்வதாலோ அல்லது அவரிடம் விரைந்து செல்வதாலோ என்ன பயன்? துன்மார்க்கரின் கைகளில் எல்லா நன்மைகளும் இருக்கின்றன. ஆனால் அவர் அவர்களுடைய கிரியைகளைக் கண்டுகொள்வதில்லை.

43. பிளேட்டோ பெரிதும் பாராட்டப்பட்டார், ஏனெனில் அவர் தனது ‘அரசு’ பற்றிய நூலில் நீதிக்கு எதிராக வாதிட்ட பாத்திரத்தை ஏற்ற ஒருவரை, உண்மையில் நம்பாத தனது வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி செய்தார். மேலும், உண்மையைக் கண்டறிவதற்காகவும், கையிலுள்ள விஷயத்தை ஆராய்வதற்காகவும் மட்டுமே இந்தப் பாத்திரம் ஏற்கப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தும்படி செய்துள்ளார். சிசெரோவும் இதை ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டார். ஏனெனில் அவரும் தனது ‘பொதுநலவாய’ நூலில், அந்தக் கருத்துக்கு எதிராக சில வாதங்களை முன்வைப்பது அவசியம் என்று உணர்ந்தார்.

44. இந்த நிகழ்வுகளுக்கு முன்பு யோபு எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்! இந்த உண்மையை முதலில் வெளிக்கொணர்ந்தவரும், தனது சொல்லாற்றலை மேம்படுத்துவதற்காக அல்லாமல், உண்மையைக் கண்டறிவதற்காகவே இதற்கு என்ன விதமான காரணிகளை முன்வைக்க வேண்டும் என்று சிந்தித்தவரும் அவரே. “தேவன் தீயோரின் ஒளியை எத்தனை முறை அணைக்கிறார்? எத்தனை முறை தீயோருக்குத் துன்பம் நேர்கிறது? என்று யோபு 21:17 இல் சுட்டிக்காட்டி அவர் நிலைமையைத் தெளிவுபடுத்தினார்; அங்கு ஞானத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் ஊற்றான தேவன் தடுமாற்றம் ஏதுமில்லாமல் எது உண்மை என்பதற்கு நியாயாதிபதியாகச் செயல்படுகிறார். ஆகவே, தனிமனிதன் அனுபவிக்கும் மகிழ்ச்சி அவனின் வெளிப்படையான செல்வத்தால் அளவிடப்படக்கூடாது, மாறாக அவனின் மனசாட்சி எழுப்பும் குரலால் அளவிடப்பட வேண்டும். இந்த மனசாட்சி தான் வெகுமதிகள் மற்றும் தண்டனைகளின் உண்மையான மற்றும் பாரபட்சமற்ற நீதிபதியாக, தகுதியானவர்களையும் தகுதியற்றவர்களையும் வேறுபடுத்துகிறது என்று பொருள்படும்படியாக யோபு 21:24 குறிப்பிடுகிறது. நிரபராதி தான் சேர்த்த நேர்மையின் வலிமையுடனும், தன் சித்தத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டுடனும் மரணமடைகிறார்; ஒரு விதத்தில், அவருடைய ஆன்மா செழுமையாகவும் உயிரோட்டமாகவும் இருக்கிறது. இதற்கு மாறாக, பாவியோ வாழ்க்கையில் நிறைவானவற்றைக் கொண்டிருந்தாலும் ஆடம்பரங்களாலும் இன்பங்களாலும் சூழப்பட்டிருந்தபோதிலும், இறுதியில் தன் வாழ்நாளின் முடிவில் தன் ஆன்மாவின் கசப்பை எதிர்கொள்வதோடு, அவன் ஒரு காலத்தில் அனுபவித்த அந்த நன்மைகளில் எதையும் தன்னுடன் எடுத்துச் செல்லமுடியாமல் தன் சொந்தத் தவறுகளுக்கான விலையை மட்டுமே தன்னுடன் எடுத்துச் செல்கிறான்.

45. இதைப்பற்றி சிந்திக்கும்போது, ​​தெய்வீகத் தீர்ப்பு வெகுமதிகளை அளிக்கிறது என்பதை மறுப்பது முடியாத காரியம். முதலாமவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைகிறார், அதே நேரத்தில் இரண்டாமவர் துயரமடைகிறார். ஒருவன் தன்னை நிரபராதி என நம்புகிறான். மற்றொருவனோ தன்னைக் குற்றவாளியாகக் கருதுகிறான். முதலாமவன் இவ்வுலகை விட்டுச் செல்வதில் மனநிறைவு கொள்கிறான். ஆனால் இரண்டாமவனோ அதைக் குறித்து வருந்துகிறான். ஒருவனின் மனசாட்சியே அவனை அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதபோது ​​அவனை எப்படி நிரபராதி என்று அழைக்க முடியும்? தன்னைக் காக்கும் புகலிடம் எங்கே என்று அவன் கேட்கிறான். அதற்கான சான்றை அவனால் காண முடியாது. குற்றவாளியின் வாழ்க்கை ஒரு கனவு போலத் தோன்றுகிறது. இப்போது அவர்கள் தங்கள் கண்களைத் திறந்துவிட்டார்கள், ஆனால் இப்போது அவர்களின் நிம்மதி போய்விட்டது; அவர்களின் மகிழ்ச்சி மறைந்துவிட்டது. உயிரோடு இருக்கும்போது மட்டும் இருப்பதாகப் பாசாங்கு செய்யும் துன்மார்க்கரின் அந்தப் போலி அமைதி, அவர்கள் உயிரோடு இருக்கும்போதே நரகத்திற்குள் இறங்குவதால் அந்த அமைதி அவர்களிடமிருந்து தொலைந்துவிட்டது.

46. பாவி மகிழ்ச்சியாக வாழ்வதை நீங்கள் காணலாம், ஆனால் அவனது மனசாட்சியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவன் ஒரு கல்லறையை விட மோசமானவன் அல்லவா? நீங்கள் அவனது மகிழ்ச்சியைக் கவனிக்கிறீர்கள், அவனது பிள்ளைகள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று வியக்கிறீர்கள், அவன் எவ்வளவு செல்வந்தனாக இருக்கிறான் என்பதையும் பார்க்கிறீர்கள்; ஆனால் இன்னும் சற்று ஆழமாக ச் சென்று பாருங்கள். அவனது ஆன்மாவில் உள்ள துன்பத்தையும் அவனது இதயத்தில் உள்ள துக்கத்தையும் காண்பீர்கள். ஒரு மனிதனின் வாழ்க்கை அவன் வைத்திருக்கும் உடைமைகளைக் கொண்டு அளவிடப்படுவதில்லை என்று லூக்கா 12:15 இல், சொல்லப்பட்டிருக்கும், “கவனமாக இருங்கள். எல்லாவகையான சுயநலமிக்க செயல்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஒருவனுக்குச் சொந்தமான பல பொருட்களிலிருந்து ஒருவன் வாழ்வு பெறுவதில்லை” என்ற வாசகத்தைப் பார்க்கும் போது, ஒருவன் தன்வசம் வைத்திருக்கும் செல்வத்தைப் பற்றி என்னால் என்ன சொல்ல முடியும்? அவன் உங்களுக்கு செல்வந்தனாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவன் ஏழையாக உணர்கிறான் என்பதையும், நீங்கள் அவனைப் பற்றி எண்ணியது தவறென நிரூபிக்கிறான் என்பதையும் நீங்கள் உணர்வீர்கள். அப்படிப்பட்ட ஒருவன் தான் துக்கத்தால் நிறைந்து, எந்த ஒரு வாரிசும் வேண்டாம் என்றும் தன் வழிகளைப் பின்பற்றுவோர் தனக்குப் பின் வரக்கூடாது என்றும் விரும்பும்போது, அவனுக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள், அவன் எவ்வளவு வலியிலிருந்து விடுபட்டிருக்கிறான் என்பதைப் பற்றி சொல்ல என்னால் எப்படி முடியும்? ஏனென்றால் பாவியானவன் உண்மையான வாரிசை விட்டுச் செல்வதில்லை. இதன்மூலம் துன்மார்க்கன் தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான். அதேசமயம் நல்லவன் தனக்குத் தானே உதவியாக இருக்கிறான். அவர்களுடைய செயல்களின் விளைவுகள் நல்லதோ கெட்டதோ, அவர்களது செயல்களுக்கான கூலி அவர்கள் மூலமாகவே செலுத்தப்படுகிறது.

அத்தியாயம் 13

முழு உலகத்தையும் அல்லது அதன் எந்த ஒரு பகுதியையும் இறைவன் கவனித்துக்கொள்வதில்லை என்று கூறும் தத்துவஞானிகள் தவறானவர்கள்.

47. நாம் விவாதித்துக்கொண்டிருந்த விஷயத்திலிருந்து விலகிச் செல்லாமல் இருக்கும் பொருட்டு, நமது முக்கியக் கருத்துக்கு எம் கவனத்தைச் செலுத்துவோம். செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களுமான தீயவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதையும், அதே சமயம் பல நல்லவர்கள் பிரச்சினைகளோடு போராடி பலவீனமாக இருப்பதையும் சிலர் காண்கிறார்கள். பின்னர் அவர்கள், எபிகியூரர்கள் (Epicureans) கூறுவது போல் கடவுள் நம்மைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்றோ, அல்லது தீயவர்கள் கூறுவது போல் மக்கள் செய்வதை அவர் அறியவில்லை என்றோ நினைக்கிறார்கள். கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்றால், தீயவர்கள் செழிப்பான வாழ்க்கை வாழும்போது, நல்லவர்கள் துன்பப்படுவதை அனுமதிப்பது நியாயமற்றது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கருத்தைக் கவனத்தில் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பவர்கள் என்று கருதப்படுபவர்கள் உண்மையில் எப்படி உணர்கிறார்கள் என்பதோடு ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம் — பெரும்பாலும், அவர்கள் தாங்கள் மகிழ்ச்சியற்றவர்கள் என்றே நினைக்கிறார்கள். நாம் சொல்வதை விட அவர்கள் தங்கள் சொந்த நிலைமைகளையே அதிகம் நம்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

48. இந்தத் துணைத் தலைப்பிற்குப் பிறகு, மீதமுள்ளவற்றை மறுப்பது சுலபம் என்று நான் நினைக்கிறேன். கடவுள் இவ்வுலகைப் பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை என்று நம்புபவர்களுக்கு இது குறிப்பாகப் பொருந்தும். உதாரணமாக, அரிஸ்டோட்டில் கடவுளின் அக்கறை சந்திரன் வரை மட்டுமே நீடிக்கிறது என்கிறார். ஆனால், ஒரு தொழிலாளி அல்லது சிற்பி தான் உருவாக்கியவற்றின் மீது எப்படி அக்கறை காட்டாமல் இருப்பான்? தான் உருவாக்கியதாக நம்பும் ஒன்றை யார் விட்டுக்கொடுப்பார்கள்? ஆள்வதும் கொண்டு நடத்துவதும் இழிவானது என்றால், படைத்திருப்பது அதைவிட இழிவானது அல்லவா? ஏதாவது ஒன்றை உருவாக்காமல் இருப்பதில் தவறில்லை, ஆனால் நீங்கள் உருவாக்கியதைப் பராமரிக்காமல் இருப்பது நிச்சயமாக மிகவும் கொடூரமானது.

49. சிலர் கடவுளைப் படைப்பாளர் என்பதை மறுத்து, தங்களை மிருகங்களை விடச் சிறந்தவர்கள் அல்ல என்று கருதினால், இத்தகைய வெட்கக்கேடான வழியில் வாழ நினைப்பவர்களைப் பற்றி நாம் என்ன சொல்வது? கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்றும் அனைத்தும் அவருடைய வல்லமையையே சார்ந்திருக்கின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவருடைய மகத்துவமானது பூமி, வானம் மற்றும் கடலை நிரப்புகிறது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆயினும், அவர் நமக்கு அளித்த மாபெரும் கொடையான மனித ஆன்மாவில் அவர் பிரசன்னமாகி தெய்வீக மகத்துவத்தைப் பற்றிய முழு அறிவுடன் அங்கே குடியிருப்பதும் அவருக்கு இழிவானது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

50. ஆனால், பகுத்தறிவுள்ளவர்கள் என்று கருதப்படும் தத்துவஞானிகள், இந்தக் கருத்துக்களைப் போதிப்பவரை மதிமயங்கியவர் என்றும் சுயவிருப்பத்தில் மூழ்கியவர் என்றும் பரிகசிக்கின்றனர். ஆனால் அரிஸ்டோட்டிலின் கண்ணோட்டத்தைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? கடவுள் தனது வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் திருப்தியுடன் இருக்கிறார் என்றும், தனது இராச்சியத்தின் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் மாத்திரமே செயல்படுகிறார் என்றும் அவர் நம்புகிறார். சுவாரஸ்யமாக, இது கவிஞர்கள் விவரிக்கும் விதத்தோடு ஒத்துப் போகிறது. எப்படியென்றால், பிரபஞ்சம் மூன்று கடவுள்களால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும், ஒருவர் வானத்தையும், மற்றொருவர் கடலையும், மூன்றாமவர் கீழேயுள்ள உலகத்தையும் ஆளப் பணிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும், மற்றவர்கள் வசமிருக்கும் உடைமைகள் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் தங்களை ஆட்கொள்ளக் கூடுமென்பதால், தங்களுக்குள் மோதலை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதேபோல், கடவுள் பூமி மீதோ, கடல் மற்றும் கீழேயுள்ள உலகத்தின் மீதோ அக்கறையற்றவராக இருக்கிறார் என்று அரிஸ்டோட்டில் வலியுறுத்துகிறார். அப்படிக் கூறும் பட்சத்தில், இந்தத் தத்துவஞானிகள் கவிஞர்களைத் தாங்கள் பயணிக்கும் பாதையில் இருந்து ஏன் விலக்கி வைக்க வேண்டும்?

அத்தியாயம் 14

கடவுள் எல்லாவற்றையும் அறிவார். மறைநூல் சான்றுகள் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன. அதேநேரம், சூரியன் படைக்கப்பட்டிருந்த போதிலும் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் தன் ஒளியையும் வெப்பத்தையும் அளிப்பதால், அதனுடன் ஒப்பிடுவதன் மூலமும் நாம் இதைப் புரிந்துகொள்ளலாம்.

51. அடுத்த கேள்வி, தமது படைப்பைக் காத்து, அரவணைத்து, வழிநடத்திச் செல்லும் கடவுள், அதைப் பற்றி அறிந்திருக்கிறாரா என்பதுதான். இதுகுறித்து இவ்வாறு சொல்லப்படுகிறது; அதாவது, காதைப் படைத்தவர் கேட்க முடியாதா? கண்ணைப் படைத்தவர் பார்க்க முடியாதா? என்று.

52. இந்தத் தவறான கருத்து பரிசுத்த தீர்க்கதரிசிகளுக்குப் புதிதல்ல. தாவீது கூட பெருமையால் நிரம்பி, அதைத் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்ட தனிநபர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பாவத்தில் வாழும் மனிதர்கள், மற்றைய பாவிகள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற நோக்கத்தில் “ஆண்டவரே, அக்கிரமக்காரர்கள் இன்னும் எவ்வளவு காலம் வெற்றியாளர்களாக இருப்பார்கள்?” என்று அங்கலாய்ப்பதை விடப் பெருமைக்குரியது வேறு என்ன இருக்க முடியும்? பின்னர் அவர்கள் ‘கர்த்தர் கவனிக்கமாட்டார்; யாக்கோபின் தேவன் கவனம் செலுத்தமாட்டார்’ என்று கூறுகிறார்கள். அதற்குத் தீர்க்கதரிசி தனது பதிலில்; ‘மக்கள் மத்தியில் உள்ள மூடர்களே, கவனியுங்கள்: ஓ மூடர்களே, நீங்கள் எப்போது தான் புரிந்துகொள்ளப்போகிறீர்கள்? காதைப் படைத்தவர் கேட்கமாட்டாரா? அல்லது கண்ணைப் படைத்தவர் பார்க்கமாட்டாரா? தேசங்களைத் திருத்துபவர் தண்டனைகளைக் கொண்டுவரமாட்டாரா? அப்படியானால் மனிதனுக்கு அறிவைப் போதிப்பவர் யார்? கர்த்தர் மனிதனின் எண்ணங்களை அறிந்திருக்கிறார். மனிதனின் எண்ணங்கள் வீணானவை என்று ஆண்டவர் அறிவார். வீணானவை யாவற்றையும் பகுத்தறியும் அவர், பரிசுத்தமானவை எவை என்று அறியமாட்டாரா? மேலும் அவர் படைத்ததை அவர் அறியாதிருப்பாரா? ஒரு கைவினைஞன் தனது சொந்தப் படைப்பைக் கவனிக்காமல் இருக்க முடியுமா? இந்தக் கைவினைஞன் ஒரு சாதாரண மனிதன். அவன் தன் படைப்பில் மறைந்திருப்பதைப் புரிந்துகொள்கிறான்; அப்படியானால் கடவுள் தமது படைப்பை அறியமாட்டாரா? படைத்தவரை விட படைப்பில் அதிக சிக்கலான தன்மை உள்ளதா? படைத்தவராகிய அவர், தன்னைவிட மேலான ஒன்றை உருவாக்கி இருக்கக்கூடுமா? அதன் மதிப்பை அவர் அறியாமலும், அதன் வழிகாட்டியாக அவர் இருந்தபோதிலும் அதன் நிலையை அவர் புரிந்துகொள்ளாமலும் இருந்திருப்பாரா? இந்த நபர்களைப் பற்றி நாம் இவ்வளவு விவாதித்தது போதும் என்றெண்ணுகிறேன்.

53. எரேமியா 17:10 இல் “நானே கர்த்தர், என்னால் ஒருவனின் இதயத்தைப் பார்க்கமுடியும். நான் ஒருவனின் மனதை சோதிக்கமுடியும். ஒவ்வொருவனிடமும் என்ன இருக்கிறது என்பதை என்னால் முடிவு செய்யமுடியும். என்னால், ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சரியான கூலியைக் கொடுக்கமுடியும்” என்ற கடவுளின் வார்த்தைகளில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நற்செய்தியில் இயேசு, “உங்கள் இதயங்களில் ஏன் தீய எண்ணங்களை வளர்க்கிறீர்கள்?” என்று கேட்கிறார். ஏனெனில், அவர்கள் இரக்கமற்றவர்களாக நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார் என்று மத்தேயு 9:4 சொல்கிறது. நற்செய்தியாளரான லூக்கா தனது நற்செய்தியில் (லூக்கா 6:8) “அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார்” என்று கூறி இதை உறுதிப்படுத்துகிறார்.

54. இவர்களுடைய செயல்களை நாம் உன்னிப்பாகக் கவனித்தால், அவை நம்மைப் பெரிதாகப் பாதிக்காது. கடவுளைத் தங்கள் நியாயாதிபதியாக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை, ஏனெனில் அவரை ஏமாற்ற முடியாது. தங்கள் சொந்த சூட்சுமமான தவறுகள் வெளிப்பட்டுவிடும் என்று அஞ்சுவதால், தங்கள் இரகசிய எண்ணங்களை அவருக்குத் தெரியப்படுத்த அவர்கள் மறுக்கிறார்கள். இருப்பினும், அவர்களுடைய செயல்களை அறிந்திருக்கிற கர்த்தர், அவர்களை இருளில் இருக்க அனுமதித்திருக்கிறார். வேதாகமம் கூறுவது போல, “இரவில் அவன் ஒரு திருடனாகிறான். விபச்சாரம் செய்பவன் இரவுக்காகக் காத்திருக்கிறான். ‘யாரும் என்னைப் பார்க்கமாட்டார்கள்’ என அவன் நினைக்கிறான்,’ ஆயினும் அவன் தனது முகத்தை மூடிக்கொள்கிறான்” என்று யோபு 24:14-15 இல் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், ஒளியைத் தவிர்க்க நினைப்பவர்கள் அனைவரும் இருளையே விரும்புகிறார்கள். மேலும் கடவுளிடமிருந்து தங்களை மறைத்துக் கொள்ள முடியாது என்று தெரிந்திருந்தும் தங்களை மறைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். பிரபஞ்சத்திலும் அதில் வாழும் மக்களின் மனங்களிலும் என்ன நடக்கிறது என்பதை மட்டுமல்ல, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கடவுள் அறிவார். இவ்வாறு, மீண்டும், பிரசங்கி புத்தகத்தில் பேசுகிற பிரசங்கியார் இவ்வாறு கூறுகிறார்: “பிறர்மனை நாடுவோர், ‘என்னைப் பார்ப்பவர் யார்? இருள் என்னைச் சூழ்ந்துள்ளது. சுவர்கள் என்னை மறைத்துக் கொள்கின்றன. யாரும் என்னைக் காண்பதில்லை. நான் ஏன் கவலைப்படவேண்டும்? உன்னத இறைவன் என் பாவங்களை நினைத்துப்பாரார்” எனத் தங்களுக்குள் சொல்லிக்கொள்வர் என்று சீராக் 23:18-இல் காணப்படுகிறது. ஒருவர் படுக்கையில் படுத்திருக்கும்போது இப்படி நினைத்தால்கூட, அவர் எதிர்பாராதவிதமாகப் பிடிபடுவார். விபச்சாரம் செய்து, “கர்த்தருக்குப் பயப்படுதலை” அலட்சியம் செய்யும் ஒருவர், உண்மையான ஆன்மீகக் கீழ்ப்படிதலைப் புரிந்து கொள்ளாததால், பொது அவமானம், வெட்கம் மற்றும் தண்டனையை எதிர்கொள்வார்” என்று சீராக் 23:31 இல் சொல்லப்பட்டுள்ளது.

55. ஆனால், ஒளியை வழங்கும் சூரியன் மறைவான இடங்களுக்குள்ளும் ஊடுருவி, அதன் வெப்பத்தின் வலிமையால் ஒரு வீட்டின் அஸ்திவாரங்களையும் அதன் உள்ளறைகளையும் கூட அடையும்போது, ​​கடவுளின் கவனத்திலிருந்து எதுவும் தப்பிவிடுகிறது என்று நினைப்பதை விட அபத்தமானது வேறு என்ன இருக்க முடியும்? குளிர்காலப் பனியால் உறைந்த பூமியின் ஆழமான பகுதிகள் வசந்த கால உதயத்தின் போது கிடைக்கும் மென்மையான ஸ்பரிசத்தால் வெப்பமடைகின்றன என்பதை யாரால் மறுக்க முடியும்? ஒரு மரத்தின் மையப்பகுதி கூட வெப்பம் அல்லது குளிரால் பாதிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது; அதன் வேர்கள் குளிரால் வாடுகின்றன அல்லது சூரியனின் வெப்பத்தில் செழித்து வளர்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், விண்ணகத்தின் இதமான கதகதப்பு பூமியின் மீது எங்கெல்லாம் பிரகாசிக்கிறதோ, அங்கெல்லாம் அது பலதரப்பட்ட செழிப்பான கனிகளைத் தருகிறது.

56. ஆகவே, சூரியனின் கதிர்கள் பூமி முழுவதும் பிரகாசித்து, அதன் மறைவான மூலைகளையும் சென்றடைகின்றன என்றால்; இரும்புக் கம்பிகளாலோ அல்லது கனமான கதவுகளாலோ அவை உள்ளே நுழைவதைத் தடுக்க முடியாது எனும்போது, ஜீவன் நிறைந்த தேவனுடைய மகிமை, தாம் படைத்த மக்களின் எண்ணங்களிலும் இதயங்களிலும் நுழைவது எப்படி சாத்தியமற்றதாக இருக்க முடியும்? மேலும், அவர் படைத்ததை அவரால் எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும்? தம்மைவிட மிகவும் பிரமிக்கத்தக்கதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்படியாக அவர் தம் படைப்புகளைப் படைத்திருக்கும் பட்சத்தில், அவை விரும்பும்போதெல்லாம் தங்கள் படைப்பாளரின் கவனத்திலிருந்து தப்ப முடியுமா? அப்படியென்றால், அவர் விரும்பும்போதெல்லாம் நம் மனதைப் புரிந்துகொள்ள முடியாதவாறு அதற்கு அத்தகைய பரிபூரணத்தையும் சக்தியையும் அவர் எம் மனங்களில் பதித்துள்ளாரா?

அத்தியாயம் 15

நல்லவர்கள் துன்பப்படுவதையும், தீயவர்கள் வெகுமதி பெறுவதையும் கண்டு வருந்துபவர்களுக்கு, தண்டனைகளும் வெகுமதிகளும் அடுத்த பிறவியில் நிகழும் என்பது லாசருவின் கதையின் மூலமும் பவுலின் போதனைகளின் மூலமும் எமக்கு நினைவூட்டப்படுகிறது.

57. நாம் இரண்டு கேள்விகளைப் பற்றி முழுமையாக உரையாடினோம். நேர்மையாகச் சொல்வதானால் அது நமக்கு மிகவும் நன்றாகவே அமைந்தது என்று நினைக்கிறோம். இன்னும் மூன்றாவது கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது: நல்லவர்கள் தங்கள் மனைவிகள் அல்லது பிள்ளைகளை இழந்து துன்பங்களிலும் வேதனைகளிலும் உழலும்போது, ​​பாவிகள் மட்டும் ஏன் எல்லா செல்வங்களையும் பெற்று, கவலையின்றி ஆடம்பரமாக வாழ்கிறார்கள்? நற்செய்தியில் உள்ள அந்த உவமை, இது போன்றவர்களுக்கு விஷயங்களைத் தெளிவுபடுத்தும்; விலையுயர்ந்த ஊதா நிற ஆடையையும் மெல்லிய பருத்தி ஆடையையும் அணிந்து, ஒவ்வொரு நாளும் ஆடம்பரமாக விருந்துண்ட அந்த செல்வந்தனை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதற்கிடையில், புண்களால் அவதியுற்ற அந்த யாசகன், அந்த செல்வந்தனது மேசையிலிருந்து சிதறி விழக்கூடிய ரொட்டித் துண்டுகளை எடுத்துண்ண முயன்றுகொண்டிருந்தான். ஆனால் அவர்கள் இருவரும் இறந்த பிறகு அந்த யாசகன் ஆபிரகாமின் மடியில் அமைதியைக் கண்டான். ஆனால் அந்த செல்வந்தனோ வேதனையில் மூழ்கி இருந்தான். மரணத்திற்குப் பிறகு எமது செயல்களின் அடிப்படையில் வெகுமதிகளும் தண்டனைகளும் நமக்காகக் காத்திருக்கின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறதல்லவா?

58. நிச்சயமாக இது மிகவும் நியாயமானதும் சரியானதும் தான். எந்தவொரு போட்டியிலும் கலந்துகொள்பவர்களுக்கு மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது — போட்டி முடிவடையும்போது ​​சிலர் வெற்றிபெற்றோர் கௌரவத்தையும் தோல்வியுற்றோர் அவமானத்தையும் சந்திக்கிறார்கள். போட்டி முடிவதற்கு முன்பே நாம் எப்போதாவது பரிசையோ அல்லது கிரீடத்தையோ வழங்கி விடுகிறோமா? பவுல் இதைப்பற்றி 2 தீமோத்தேயு 4:7-8-இல் அழகாகக் கூறுகிறார்; “நான் நல்ல போராட்டத்தில் ஈடுபட்டு என் பயணத்தை நிறைவுசெய்து என் விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்; இப்பொழுது எனக்காக நீதியின் கிரீடம் காத்திருக்கிறது, அதை நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளில் எனக்குக் கொடுப்பார்; எனக்கு மாத்திரமல்ல, அவருடைய வருகையை நேசிக்கிற எல்லோருக்கும் அதைத் தந்தருள்வார்” என்று. அந்த வெகுமதி இங்கே அல்ல, அங்கே. அவர் ஒரு உண்மையான போராளியைப் போல கடின உழைப்பு, ஆபத்துகள் மற்றும் விபத்துக்கள் வழியாகப் போராடினார்; ‘பவுலும் பர்னபாவும், “தேவனுடைய இராச்சியத்துக்குள் செல்லும் நம் பாதையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பதை அவர் புரிந்துகொண்டார்” என்று அப்போஸ்தலர் பணிகள் 14:22 கூறுகிறது. எனவே, விதிகளின்படி போட்டியிடாதோர் எவரும் வெகுமதியைப் பெற முடியாது; போட்டி கடுமையாக இருந்தால் தான் வெற்றி மகிமையானதாக இருக்கும்.

அத்தியாயம் 16

வெகுமதிகள் மற்றும் தண்டனைகள் குறித்து முன்னர் கூறப்பட்டதற்கு வலுசேர்க்கும் விதமாக, சிலர் இங்கு உழைக்காததாலும், போராடாததாலும் எதிர்காலத்தில் வெகுமதிகளைப் பெறமாட்டார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்று அவர் மேலும் கூறுகிறார். இதனால்தான் இப்படியானவர்களுக்கு தற்காலிக நன்மைகள் வழங்கப்படுகின்றன. அதனால் அவர்கள் தங்கள் செயல்களுக்கு எந்தவிதமான வீண் காரணங்களையும் கூற முடியாது என்றும் விளக்குகிறார்.

59. ஒரு போட்டி முடிவதற்கு முன்பே விருதை அளிப்பது நியாயமற்றது அல்லவா? மத்தேயு 5:3 விளக்குவது போல, நற்செய்தியில் ஆண்டவர், “ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக இராச்சியம் அவர்களுக்குரியது” என்று கூறுகிறார். அவர் “செல்வந்தர்கள் பாக்கியவான்கள்” என்று கூறவில்லை, மாறாக ஏழைகளையே அவ்வாறு கூறினார். உண்மையான பேரின்பம் மனித துன்பத்தைப் புரிந்துகொள்வதில் இருந்து தான் வருகிறது. பசித்திருப்போர் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள்; துக்கப்படுபவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்; இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் தேவன் அவர்கள்மீது இரக்கம் காட்டுவார்; உள்ளத்தில் தூய்மையானவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் தேவனைக் காண்பார்கள்; நீதியைச் செய்வதற்காகத் துன்புறுத்தப்படுபவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் பரலோக இராச்சியம் அவர்களுடையது; நீதியைச் செய்வதற்காக மக்கள் உங்களை நிந்தித்துத் துன்புறுத்துவார்கள் என்றால், நீங்கள் பாக்கியவான்கள், ஏனெனில் நீங்கள் சந்தோஷப்பட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பரலோகத்தில் உங்களுக்கான வெகுமானம் பெரியதாக இருக்கும். வெகுமானத்தின் வாக்குறுதி எதிர்காலத்திற்கானது, நிகழ்காலத்துக்கு உரியதல்ல — அது பரலோகத்தில் உள்ளது, பூமியில் அல்ல. இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? இதற்கு மேல் உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? நீங்கள் வெற்றி பெறுவதற்கு முன்பே, கிரீடத்தைக் கேட்க ஏன் அவசரப்படுகிறீர்கள்? பணியை முடிக்கும் முன்பே ஏன் ஓய்வெடுக்க விரும்புகிறீர்கள்? போட்டி முடிவதற்கு முன்பே ஏன் விருந்துண்ண விரும்புகிறீர்கள்? பார்வையாளர்கள் இன்னும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், விளையாட்டு வீரர்கள் இன்னும் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும் நீங்களோ இப்போதே சுகத்தை எதிர்பார்க்கிறீர்கள்.

60. ஒருவேளை நீங்கள் கேட்கலாம்; துன்மார்க்கர் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், வசதியாக வாழ்கிறார்கள், என்னைப் போல் கடினமாக உழைப்பதில்லை என்று. பரிசை வெல்லும் குறிக்கோளோடு போட்டியில் நுழையாதவர்கள், போட்டிக்கான கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியதில்லை. போட்டியில் நுழையாதவர்கள் தங்கள் உடல்களில் எண்ணெய்யையோ புழுதியையோ பூசிக்கொள்வதில்லை. யாருக்கு மகிமை காத்திருக்கிறதோ, அவர்களைத் துன்பம் நெருங்கிவிடுகிறது. நறுமணம் பூசி வேடிக்கை பார்ப்பவர்கள் சண்டையில் சேரவோ அல்லது வெயில், வெப்பம், புழுதி, மழை ஆகியவற்றைத் தாங்கிக்கொள்ளவோ ​​தயாரில்லை. மாறாகப் அவர்கள் போட்டியைப் பார்ப்பதற்காக மட்டுமே வருகை தந்திருக்கிறார்கள். போட்டியாளர்கள் அவர்களிடம், “வாருங்கள், எங்களுடன் போட்டியிடுங்கள்” என்று சொல்வார்களேயானால், பார்வையாளர்கள், “நாங்கள் இப்போது போட்டியை ரசிப்பதற்காகவே இங்கே அமர்ந்திருக்கிறோம். வெற்றிபெற்றால் பரிசின் பெருமையை நீங்கள் பெறுவீர்கள், அதில் எங்களுக்குப் பங்கில்லை” என்று மட்டுமே பதிலளிப்பார்கள்.

61. இன்பம், ஆடம்பரம், திருட்டு, ஆதாயம் அல்லது கௌரவங்களில் கவனம் செலுத்துபவர்கள் போட்டியாளர்களாக இல்லாமல் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் உழைப்பின் பலனைப் பெறுகிறார்கள், ஆனால் நற்பண்புகளின் பலன்களைப் பெறுவதில்லை. அவர்கள் தங்கள் சுகபோகத்தை விரும்புகிறார்கள்; தந்திரத்தாலும் தீமையாலும் செல்வத்தைக் குவித்து வைக்கிறார்கள்; ஆனால் தங்கள் செயல்களுக்கான பிரதிபலனை, அது தாமதமாக வந்தாலும் அவர்கள் அதைச் சந்தித்தே தீரவேண்டும். அவர்களுடைய முடிவு துன்பமாக இருக்கும், உங்களுடைய முடிவு சமாதானமாக இருக்கும். அவர்களுடைய இளைப்பாறும் இடம் கல்லறையில் உள்ளது, உங்களுடையதோ பரலோகத்தில் உள்ளது. இதுகுறித்து யோபு 21:32 இல், அவர்கள் கல்லறையிலேயே தங்கியிருக்கிறார்கள் என்று ஞானத்தோடு கூறியிருந்தார். மீண்டும் உயிர்த்தெழுபவர்களுக்குக் கிடைக்கும் அமைதியான இளைப்பாறுதலை அவர்களால் அனுபவிக்க முடியாது.

62. ஒரு குழந்தைகளைப்போலச் சிந்திக்கவோ, பேசவோ, விளங்கிக்கொள்ளவோ ​​வேண்டாம். எதிர்காலத்திற்கு வேண்டியவற்றை இப்பொழுதே உங்களுடையதுபோல எண்ணி உரிமை கோர வேண்டாம். கிரீடம் பரிபூரணமானவர்களுக்கே உரியது. அவ்வாறான பரிபூரணம் வரும் வரை காத்திருங்கள்; “தெளிவற்ற கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல நாம் இப்போது பார்க்கிறோம். எதிர்காலத்தில் தெளிவான பார்வை நமக்கு உருவாகும். இப்போது ஒரு பகுதி மட்டுமே எனக்குத் தெரிகிறது” என்று 1 கொரிந்தியர் 13:12 கூறுகிறது. அப்பொழுது, பொல்லாதவனும் பிறருடைய உடைமைகளைக் கொள்ளையடித்தவனுமாகிய ஒருவன் ஏன் செல்வந்தனாயிருந்தான் என்றும், மற்றொருவன் ஏன் வல்லமை உள்ளவனாயிருந்தான் என்றும், மூன்றாமவன் ஏன் அநேகப் பிள்ளைகளைப் பெற்றிருந்தான் என்றும், நான்காமவன் ஏன் கனவானாக இருந்தான் என்றும் உங்களுக்குத் தெரியவரும்.

63. ஒருவேளை, கொள்ளைக்காரனிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும் என்பதற்காகவே இவையெல்லாம் நடக்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம்: ‘நீ செல்வந்தனாக இருந்தும், ஏன் பிறருடைய உடைமைகளைப் பறித்தாய்? தேவை உன்னை நிர்பந்திக்கவில்லை; வறுமை உன்னை அதற்குள் தள்ளவில்லை. உனக்கு எந்த வீண் காரணமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே நான் உன்னைச் செல்வந்தனாக ஆக்கினேன்?’ என்று. அதேபோல, அதிகாரம் உள்ள ஒருவரிடம் இவ்வாறு கேட்கலாம்: விதவைகளும் அனாதைகளும் அநீதியால் துன்பப்பட்டபோது, ​​நீ ஏன் அவர்களுக்கு உதவவில்லை? உன்னால் ஏன் உதவ முடியவில்லை? உன்னால் ஏன் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க முடியவில்லை? இந்தக் காரணத்திற்காகவே நான் உன்னைப் படைத்தேன்; நீ தவறு செய்வதற்காக அல்ல, அதைத் தடுப்பதற்காகவே. இதுகுறித்து, ஒடுக்குவோரின் கையினின்று ஒடுக்கப்பட்டோரை விடுவி; நீதியான தீர்ப்பு வழங்குவதில் உறுதியாய் இரு” என்று சீராக் 4:9 இல் உனக்காக எழுதப்பட்டிருக்கிறதல்லவா? அதேபோல, நன்மைகள் ஏராளமாக உள்ள மனிதனிடமும் இவ்வாறு கேட்கப்படலாம்: ‘நான் உனக்குப் பிள்ளைகளையும் கௌரவங்களையும் அருளினேன்; உனக்கு உடல் நலத்தையும் அருளினேன்; நீ ஏன் என் கட்டளைகளைப் பின்பற்றவில்லை? என் அடியானே, நான் உனக்கு என்ன செய்தேன்? உன்னை நான் வருத்தப்படுத்தினேனா? உனக்குப் பிள்ளைகளைத் தந்து, கௌரவங்களை வழங்கி, ஆரோக்கியத்தை அளித்தது நான் அல்லவா? அப்படியானால் நீ ஏன் என்னை நிராகரித்தாய்? உனது செயல்கள் என் கவனத்திற்கு வராது என்று எப்படி நினைத்தாய்? என் கொடைகளை ஏற்றுக்கொண்டு என் கட்டளைகளை ஏன் அவமதித்தாய்?

64. துரோகியான யூதாஸின் கதையிலிருந்தும் இதையே நாம் அறிந்துகொள்ளலாம். அவன் பன்னிரு அப்போஸ்தலர்களில் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏழைகளுக்காகப் பயன்படுத்த வேண்டிய நிதிக்குப் பொறுப்பேற்கும்படி நியமிக்கப்பட்டான். அவமரியாதை காரணமாகவோ அல்லது தேவையினாலோ அவன் கர்த்தரைக் காட்டிக்கொடுத்துவிட்டான் என்ற எண்ணத்தைத் தவிர்ப்பதற்காகவே இது செய்யப்பட்டது என்று யோவான் 12:6 குறிப்பிடுகிறது. ஆகையால், கர்த்தர் அவனில் தாமும் நீதிமானாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவனுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தார். யூதாஸ் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதால் அல்ல, மாறாக கிருபையைத் தவறாகப் பயன்படுத்தியதால் ஒரு பெரிய பாவத்தைச் செய்த குற்றவாளி ஆனான்.

அத்தியாயம் 17

அடுத்து, இளைஞர்களின் பொறுப்புகள் மற்றும் வாழ்க்கையின் அந்தக் கட்டத்திற்கான சில பொருத்தமான எடுத்துக்காட்டுகளைப் பற்றிப் பேசுவோம்.

65. தீய செயல்களுக்கு தீய விளைவுகளும், நல்ல செயல்களுக்கு நல்ல வெகுமதிகளை உண்டு என்பது இங்கே தெளிவாகத் தெரிகிறது. எனவே, இளமைப் பருவம் முதலே நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய பொறுப்புகளைப் பற்றிப் பார்ப்போம்; அவை நாம் வளர வளர நம் வாழ்வோடு வளரட்டும். ஒரு நல்ல இளைஞர் கடவுள் மீது ஆழ்ந்த பற்றும் பக்தியும் கொண்டிருக்க வேண்டும். பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும். மேலும் தனது தூய்மையான நடத்தையைப் பேண வேண்டும்; தங்கள் பணிவைக் குறைத்து மதிப்பிடாமல் பொறுமையையும் அடக்கத்தையும் கடைபிடிக்க வேண்டும். இந்த குணங்கள் அனைத்தும் இளமை எனும் மகுடத்தில் பதிந்துள்ள இரத்தினங்களைப் போன்றவை. தீவிர குணம் முதியவரின் அடையாளமாகவும், உற்சாகம் இளைஞரின் அடையாளமாகவும் இருப்பது போல, அடக்கம் என்பது இளைஞர்களிடம் ஒரு இயற்கையான வரப்பிரசாதம் போலப் பிரகாசமாக ஜொலிக்கிறது.

66. ஈசாக்குக்கு கர்த்தர் குறித்த ஆரோக்கியமான பயம் இருந்தது, இது ஆபிரகாமின் மகனுக்குப் பொருத்தமானதே; அவன் தன் தகப்பனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். மரணத்தை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கூட அவரது வார்த்தையை மீறுவதைப் பற்றி அவன் சிறிதேனும் சிந்திக்கவில்லை என்று ஆதியாகமம் 22:9. கூறுகிறது. அதேபோல யோசேப்பு, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தனக்கு முன்பாகப் பணிவதாகக் கனவு கண்டபோதிலும், தன் தகப்பனின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படிந்தான் என்று ஆதியாகமம் 37:9. கூறுகிறது. “அவன் மிகவும் கற்புள்ளவனாக இருந்தான்; தூய்மையான வார்த்தையைத் தவிர வேறு எதையும் அவன் கேட்கமாட்டான்; அடிமையின் வேலையைச் செய்யும் அளவிற்குத் தாழ்மை உள்ளவனாகவும், தப்பி ஓடும் அளவிற்கு அடக்கமுள்ளவனாகவும், சிறைவாசத்தைத் தாங்கும் அளவிற்குச் சகிப்புத்தன்மை உடையவனாகவும், தீமையை நன்மையால் திருப்பிச் செலுத்தும் அளவிற்கு மன்னிப்பவனாகவும் இருந்தான். அவனுடைய கற்பு மற்றும் அடக்கம் எந்த அளவுக்குப் பெரியதாக இருந்தது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. “யோசேப்பின் எஜமானுடைய மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, “என்னோடு பாலுறவு கொள்ள வா” என்றாள். அவன் தன்னை விடுவித்துக்கொண்டு வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான். ஆனாலும், அவனது அங்கி அவளது கையில் சிக்கிக்கொண்டது” என்று ஆதியாகமம் 39:12 இல் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். யாத்திராகமம் 4:10-ல் மோயீசனும், எரேமியா 1:6-ல் எரேமியாவும் மக்களுடன் தம்முடைய வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ள ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மேலும், அவர்கள் இருவரும் கிருபையின் மூலம் சாதிக்க முடிந்தவற்றைத் தவிர்ப்பதன் மூலம் தங்கள் அடக்கத்தைக் காட்டினார்கள்.

அத்தியாயம் 18

இந்த அத்தியாயம் அடக்கம் மற்றும் அதன் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி விவாதிக்கிறது. நாம் பேசும்போதும் மௌனமாக இருக்கும்போதும் அடக்கம் என்பது எவ்வாறு செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதை இது விளக்குகிறது. அடக்கம் எவ்வாறு கற்புடன் கைகோர்த்து செல்ல வேண்டும் என்றும், நமது பிரார்த்தனைகளை இறைவனுக்கு ஏற்புடையதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்றும், மற்றும் நமது உடல் அசைவுகளை நெறிப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது போன்றவற்றை இது காட்டுகிறது. உடல் அசைவுகள் பற்றிய பகுதிக்கு, தலைப்புக்குப் பொருத்தமான மொழியில் இரண்டு மதகுருமார்கள் குறிப்பிடப்படுகிறார்கள். நாம் நடக்கும் விதம் நமது ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளுக்கு ஏற்ற விதமாக அமைய வேண்டும் என்றும், ஒருவரின் வாயிலிருந்து ஒழுக்கத்தை மீறும் வகையில் எவ்விதமான தரக்குறைவான வார்த்தைகளும் வெளிவராமலும், உடல் பாகங்கள் வெளியே தெரியும் வண்ணம் கவனக்குறைவாக இராமல் அதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ள இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இந்தக் காரணிகள் அனைத்தும் மிகவும் பொருத்தமான உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.

67. அடக்கம் எனும் நற்பண்பு உண்மையிலேயே அழகானது, அதன் அருள் இனிமையானது! இது நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றியது மட்டுமல்ல, நாம் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பற்றியதுமாகும். நம் பேச்சில் வரம்பு மீறாமல் இருப்பதையும், நம் வார்த்தைகள் பொருத்தமாக ஒலிப்பதையும் இது உறுதி செய்கிறது. நம் எண்ணங்கள் பெரும்பாலும் நம் வார்த்தைகளில் வெளிப்பட்டு, நம் மனதில் உள்ளதை பிரதிபலிக்கின்றன. நிதானம் நமது குரலின் தொனியைக் கட்டுப்படுத்த உதவுகிறது; இதன் மூலம் நாம் மிகவும் உரக்கப் பேசி எவரையும் புண்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்கிறோம். பாடுவதில்கூட அடக்கமே முதல் விதியாகும். இது அனைத்து வகையான பேச்சு மற்றும் உரையாடல்களுக்கும் பொருந்தும். இதன்மூலம் ஒருவர் தனது முன்னேற்றத்தை மேம்படுத்தும் அடக்கத்தின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, கடவுளைப் புகழவும், பாடல்களை இசைக்கவும் அல்லது இயல்பாகப் பேசவும் படிப்படியாகக் கற்றுக்கொள்ள முடிகிறது.

68. மற்ற எல்லா நற்பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள மௌனம் தான் அடக்க குணத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இருப்பினும், மௌனம் என்பது குழந்தைத்தனமான அல்லது கர்வமுள்ள மனப்பான்மையின் அறிகுறி என்று கருதப்பட்டால், அது வெட்கக் கேடானதாகக் கருதப்படுகிறது; ஆனால் அது தன்னடக்கத்தைக் காட்டினால் அது புகழப்படுகிறது. சூசன்னா ஆபத்தின் போதும் மௌனமாக இருந்தாள்; தன் உயிரை இழப்பதை விட, தன் மானத்தை இழப்பது மிகவும் மோசமாக இருக்கும் என்று அவள் நம்பினாள். தன் கற்புக்குப் பங்கம் ஏற்பட்டாலும் தன் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று அவள் எண்ணவில்லை. தன் தூய்மையான கற்பை வெளிப்படுத்தக்கூடிய ஒருவரான கடவுளிடம் மட்டுமே அவள் பேசினாள். அவள் ஆண்களின் முகங்களைப் பார்ப்பதைத் தவிர்த்தாள், ஏனெனில் கற்பு என்பது ஒருவரின் வெளித்தோற்றத்தையும் உள்ளடக்கியது; இது ஒரு பெண்ணை ஆண்கள் உற்றுப் பார்க்கவோ அல்லது பெண்கள் அவர்களை உற்றுப் பார்க்கும்போது அவர்களுக்குள் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்துகிறது.

69. இந்தப் புகழ்ச்சி கற்புக்கு மட்டுமே உரியது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அடக்கம் தூய்மையுடன் இணைந்தே பயணிக்கிறது. மேலும் அடக்கத்தின் உதவியால் கற்பு மிகவும் பாதுகாப்பானதாக உணர்கிறது. வெட்கமும் கற்புக்கு ஒரு நல்ல துணையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. ஏனெனில் ஆபத்தின் விளிம்பை நெருங்கும் போதுகூட தூய்மை களங்கப்படுவதை அது அனுமதிப்பதில்லை. மறைநூல்களைப் படிப்பவர்களுக்கு, அவள் அங்கீகரிக்கப்பட்டதன் ஆரம்பத்திலேயே ஆண்டவரின் தாயைப் பரிந்துரைப்பதும், ஒரு நம்பகமான சாட்சியாக, அத்தகைய ஒரு உன்னதமான பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவள் தகுதியானவள் என்று அறிவிப்பதும் இதுவே. ஏனெனில் மரியாள் தன் அறையில் தனியாக இருந்தபோது ​​தேவதூதன் அவள்முன் தோன்றி அவளை வாழ்த்தியபோது ​​அவள் மௌனமாக இருந்தாள். அவன் நுழைந்ததும் கலக்கமடைந்தாள். மேலும் ஒரு மனித உருவத்தின் விசித்திரமான தோற்றத்தைக் கண்டு கன்னி மரியாளின் முகம் கலக்கமடைந்தது. ஆகவே, அவள் தாழ்மையுள்ளவளாக இருந்தது அவளுடைய எளிமையின் காரணமாக அல்ல, அது அவளுடைய அடக்கத்தின் காரணமாகவே. அவள் கர்த்தரைக் கருத்தரிப்பாள் என்பதை அறிந்தபின், அது எப்படி நிகழும் என்று கேட்டறிந்ததைத் தவிர தேவதூதனுக்குப் பதிலளிக்கவோ அல்லது அவனுக்கு வேறு எந்தப் பதிலையும் அளிக்கவோ இல்லை. அவள் நிச்சயமாகப் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே பேசவில்லை.

70. நமது ஜெபங்களிலும்கூட அடக்கம் மிகவும் போற்றத்தக்கது; அது நம் தேவனிடமிருந்து நமக்கு நிறைய கிருபையைப் பெற்றுத் தருகிறது. “வரி வசூலிப்பவனும் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இரும், நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை” என்று லூக்கா 18:13-14 இல் கூறப்பட்டுள்ளது. ஆகவே பரிசேயனைப் போலல்லாமல் அவன் கடவுளின் தீர்ப்பினால் நீதிமானாக்கப்பட்டான்; பரிசேயனது அதீத ஆணவம் அவனை மிகவும் விரும்பத்தகாதவனாக ஆக்கியது. எனவே, 1 பேதுரு 3:4-ல் புனித பேதுரு சுட்டிக்காட்டுவது போல, எனவே 1 பேதுரு 3:4-ல் கூறப்பட்டுள்ளது போல, கடவுளால் மிகவும் மதிக்கப்படும் தூய்மையான மற்றும் சாந்தமான ஆவியுடன் ஜெபிப்போம். அடக்கம் என்பது உண்மையிலேயே ஒரு உன்னதமான குணம்; அது தன் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறது, தனக்காக எதையும் பற்றிக்கொள்வதில்லை, எதையும் உரிமை கோருவதில்லை. இருந்தபோதிலும், வேறு எந்த உண்மையான செல்வந்தர்கள் இல்லாத இடத்தில், அது தேவனுடைய பார்வையில் செல்வந்தராக இருக்கிறது. அடக்கம் செல்வந்தமானது, ஏனெனில் அது தேவனுக்கு உரியது. 1 தீமோத்தேயு 2:9-ல் கூறப்பட்டுள்ள படி, அடக்கத்தோடும் சுயகட்டுப்பாட்டோடும் ஜெபிக்கும்படி பவுலும் நம்மை ஊக்குவிக்கிறார். இதுவே நாம் செய்யும் முதல் காரியமாக இருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் நாம் செய்யக்கூடிய ஜெபங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதன்மூலம் பாவியின் ஜெபம் பெருமையால் நிரம்பியிருக்காமல், அதற்குப் பதிலாக தாழ்மையுடனும் வெட்க உணர்வோடும் இருக்க வேண்டும். தன் தவறுகளை நினைவுகூரும்போது அடக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் மிக உயர்ந்த அளவிலான கிருபையைப் பெற முடியும்.

71. நமது அங்க அசைவுகள், சைகைகள் மற்றும் நடை உடை பாவனையிலும் கூட அடக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில், மனதின் நிலை பெரும்பாலும் உடலின் தோரணையில் வெளிப்படுகிறது. இந்தக் காரணத்தினால், நமது இதயத்தில் மறைந்திருக்கும் அந்த மனிதன் (நமது உள்மனம்) ஒன்று அற்பமானவனாக, தற்பெருமை பேசுபவனாக, அல்லது ஆரவாரமானவனாக, அப்படியில்லாவிட்டால் மறுபுறம் நிலையானவனாகவும், உறுதியானவனாகவும், தூய்மையானவனாகவும், நம்பகமானவனாகவும் கருதப்படுபவனாகவும் இருக்கிறான். இவ்வாறு உடலின் அசைவு என்பது ஒரு வகையான ஆன்மாவின் வெளிப்பாடாகும்.

72. என் பிள்ளைகளே, நம் நண்பர் ஒருவர் மிகவும் கடினமாக உழைத்தபோதிலும் நான் அவரை ஒரு மதகுருவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவருடைய செய்கைகள் பொருத்தமற்றவையாக இருந்ததால் நான் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், மதகுருவாக ஏற்கனவே இருந்த ஒருவரிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் ஆணவத்தைக் காட்டுவது போலத் தோன்றியதாலும், அது எனக்கு எரிச்சலூட்டியதாலும், இனி ஒருபோதும் எனக்கு முன்னால் வர வேண்டாம் என்று கூறினேன். அவர் ஒரு தவறு செய்துவிட்டு மீண்டும் தன் பணிக்குத் திரும்பிய பின்னரே நான் இதைக் கூறினேன். நான் இதை அனுமதிக்க மாட்டேன், நான் சொன்னது சரிதான் என்று அறிந்ததும், இந்த இருவருமே திருச்சபையை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களின் விசுவாசமற்ற உள்ளங்கள் காட்டியபடி அவர்களின் செயற்பாடுகள் உணர்த்தியபடியே அவர்கள் உண்மையில் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஆரியன் கருத்து வேறுபாடுகளின் போது தன் விசுவாசத்தை இழந்தார். மற்றவர் பண ஆசையால் திருச்சபையின் தீர்ப்புக்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக, தான் எமது குழுவில் அங்கம் வகிக்கவில்லை என்று மறுத்தார். அவர்களின் அங்க அசைவுகள் மற்றும் செயற்பாடுகள் நம்பகத்தன்மையற்றதாகவும், அலைந்து திரியும் கேளிக்கையாளர்கள் போலவும் இருப்பதற்கான தோற்றமும் புலப்பட்டது.

73. சிலர் நடிகர்களின் சைகைகளை அப்பட்டமாகப் பின்பற்றும் விதத்தில் நடக்கிறார்கள். அவர்கள் ஒரு அணிவகுப்பில் பங்கேற்பவர்களைப் போலவும், தலையசைக்கும் சிலைகளைப் போலவும் இருக்கிறது அவர்களின் நடையுடைபாவனை. அவர்கள் அடிக்கடி தங்கள் நடையை மாற்றிக்கொண்டு, ஒரு தாளக்கட்டைப் பின்பற்றுவது போல் தெரிகிறது.

74. ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலோ அல்லது உண்மையான தேவை இருந்தாலோ அன்றி, அவசரமாக நடப்பது அத்தனை தகுந்தது என்று நான் நினைக்கவில்லை. அவசர அவசரமாக ஓடுபவர்கள் இறுதியில் மூச்சிரைத்து, முகம் விகாரமாகி இருப்பதை நாம் அடிக்கடி கவனிக்கிறோம். இவ்வளவு அவசரமாக நடப்பதற்கோ அல்லது ஓடுவதற்கோ முக்கிய காரணம் எதுவும் இல்லையென்றால், அது ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நான் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக எப்போதாவது அவசரமாக செயல்படுபவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை; மாறாக, அவசரப்படுவதையே ஒரு பழக்கமாகக் கொண்டு, கிட்டத்தட்ட ஒரு இயல்பான குணமாகக் கொண்டவர்களைப் பற்றியே குறிப்பிடுகிறேன். முதல் குழுவினரைப் பொறுத்தவரை பேய்களின் உருவங்களை நினைவூட்டும் அவர்களின் மெதுவான, தீவிரமான அசைவுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டாவது குழுவினரின் பதட்டமான வேகம், துரதிர்ஷ்டசாலிகளின் வீழ்ச்சியைத்தான் எனக்கு நினைவூட்டுகிறது.

75. ஒரு பொருத்தமான மற்றும் சரியான நடை என்பது, அதிகாரம், கம்பீரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவும், அமைதியான, நிதானமான தோரணையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இருப்பினும் அது திணிக்கப்பட்டதாகவோ அல்லது ஆணவத்தைக் காட்டுவதாகவோ தோன்றக்கூடாது; அது எளிமையாகவும் இயல்பாகவும் இருக்க வேண்டும். போலியான அங்க அசைவுகள் கவர்ச்சிகரமானவை அல்ல. நாம் எப்படி எமது நடக்கும் இயல்பைப் பின்பற்ற வேண்டும் என்பதை இயற்கை வழிநடத்த அனுமதிக்க வேண்டும். நமது இயல்பான நடையில் ஏதேனும் குறை இருந்தால் அதை மேம்படுத்த நாம் கடுமையான பயிற்சிகள் மூலம் அதை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தல் வேண்டும். நாம் தந்திரங்களைத் தவிர்க்க வேண்டும், ஆனால் தேவையான மேம்பாடுகளைச் செய்வதைத் தவிர்க்கக்கூடாது.

76. நாம் இது போன்ற விடயங்களிலேயே இவ்வளவு கவனமாக இருக்கிறோமென்றால், நம் வாயிலிருந்து வெட்கக்கேடான எந்தவொரு வார்த்தையும் வெளிவராதிருக்கும் வகையில் இன்னும் அதிகக் கவனமாக இருக்க வேண்டும். அப்படித்தானே? ஏனெனில் அது ஒரு மனிதனை ஆழமாகவும் நேரடியாகவும் பாதிக்கிறது. உணவு நமக்கு கேடு செய்வதில்லை என்றபோதிலும், மற்றவர்களை நியாயமற்ற முறையில் விமர்சிப்பதும், கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பதும் தான் கேடுகளைக் கொண்டு வருகின்றன. இந்தச் செயல்கள் தெளிவாகவே வெட்கக்கேடானவை. நமது பணியிடத்தில் முறையற்ற அல்லது அங்கு நிலவும் கண்ணியமான சூழ்நிலையைக் கெடுக்கும் விதத்தில் நாம் எதையும் பேசக்கூடாது. அத்தோடு நாம் தகாத வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், அத்தகைய வார்த்தைகளைக் கேட்கவும் கூடாது. ஆதியாகமம் 39:12-ல் சொல்லப்பட்டுள்ளபடி, “யோசேப்பு அவனது எஜமானனின் மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, “என்னோடு உடலுறவு கொள்ள வா” என்று வற்புறுத்தியும் கூட, கற்புக்கு மதிப்பளிக்கும் அவன் அதற்கு உடன்படாமல் தன் மேலங்கியை விட்டுவிட்டு வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான்” என்கிறது. ஆகவே செவிமடுப்பதில் மகிழ்ச்சி காண்பவன் மட்டுமே பேசுபவர் தொடர்ந்து பேசவேண்டுமென விரும்புகிறான்.

77. தவறான மற்றும் கேவலமான விடயங்கள் அனைத்தையும் அறிந்திருப்பது மிக மிக வெட்கக்கேடானது. அதுபோன்ற ஒன்றை நாம் காண நேர்ந்தால், அது உண்மையிலேயே ஒருவித அச்ச உணர்வைத் தோற்றுவிக்கிறது. அப்படியென்றால், மற்றவர்களிடம் நமக்குப் பிடிக்காத எதாவது ஒன்றைக் கண்டால், அதை நமக்குப் பிடித்தது தான் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? இயற்கைதானே நமது தலைசிறந்த சிற்பி? நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், அதே சமயம் அதன் அழகை மேம்படுத்தும் வகையிலும் நமது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அது கச்சிதமாக வடிவமைத்துள்ளது. தனித்துத் தெரியும் தலை, நமது உருவத்தின் நேர்த்தியான அமைப்பு, முகத்தின் வசீகரமான தோற்றம் போன்ற அழகான பாகங்களை இயற்கையானது வெளிப்படையாகத் தெரியும்படி செய்துள்ளது; அதே சமயம் அவை அனைத்தும் உடலோடு ஒன்றித்த செயல்பாட்டுக்கு உகந்தவையாகவும் இருப்பதை உறுதி செய்துள்ளது. மறுபுறம், இயற்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒருசில உறுப்புக்கள் நமது உடலுக்குள் மறைவாகவே அமைந்துள்ளன. அதனால் அவை பார்ப்பதற்கு அருவருப்பாகத் தெரிவதில்லை. மேலும், அந்த உறுப்புக்களை எப்போதும் மறைத்தே வைக்குமாறும் இயற்கை நமக்கு அறிவுறுத்துகிறது.

78. இயற்கையே நமக்கு அடக்க ஒடுக்கத்துடன் வாழக் கற்றுக் கொடுக்கவில்லையா? அவ்வாறான இயற்கையின் முன்மாதிரியைப் பின்பற்றி எது பொருத்தமானது என்பதை அறியும் முறையிலிருந்து அவ்வாறு அழைக்கப்படுகிறது என்று நான் கருதுகிறேன். அவ்வாறான மனிதர்களின் அடக்கம், நமது சரீரங்களில் மறைக்கவேண்டியதை மறைத்துள்ளது; இது ‘நோவாவின் பேழையின் பக்கவாட்டில் ஒரு கதவு இருக்கட்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டவைப் போன்றது என்று ஆதியாகமம் 6:16 கூறுகிறது. அங்கே நாம் திருச்சபையின் சித்திரத்தையும், மனித உடலின் சித்திரத்தையும் காண்கிறோம், ஏனெனில் அந்தக் கதவின் வழியாகப் பழைய உணவு வெளியே எறியப்பட்டது. ஆகவே, நமது இயல்பைப் படைத்தவர் நமது அடக்கத்தைக் குறித்துச் சிந்தித்து, நமது உடலில் தகுந்ததும் நல்லதுமானவற்றைப் பாதுகாத்து, தகுதியற்றவற்றை வெளியே அகற்றவும் மனித உடலின் பின்புறத்தில் நமது பார்வைக்கு மறைவாகவும் வைத்தார். இதைப் பற்றி அப்போஸ்தலர் 1 கொரிந்தியர் 12:22-23 இல், “பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை. சரீரத்தின் தகுதி குறைந்த உறுப்புகளாக நாம் கருதுபவற்றிற்கு அதிகமான அக்கறை காட்டுகிறோம். வெளிக்காட்ட விரும்பாத அந்தரங்க உறுப்புகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கிறோம்” என்று சரியாகக் கூறுகிறார். உண்மையில் இயற்கையின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் முறையான பராமரிப்பு உடலை மிகவும் அழகாக மாற்ற உதவுகிறது. நான் இந்தத் தலைப்பைப் பற்றி மற்றொரு இடத்திலும் இன்னும் முழுமையாக விவாதித்திருக்கிறேன். மேலும் நாம் மறைக்க வேண்டிய அந்தரங்க பாகங்களை மறைப்பது மட்டுமல்லாமல், அவற்றின் பெயரைச் சொல்வது, அவை எப்படி இருக்கும் என்று சொல்வது அல்லது அவை என்ன செய்கின்றன என்று சொல்வது முறையற்றது என்றும் நாம் நினைப்பதுண்டு என்றும் கூறியுள்ளேன்.

79. மறைந்திருக்கக்கூடிய இந்த உடல் பாகங்கள் தற்செயலாக வெளியே தெரிந்தால், அது மானபங்கமாகும்; அதேநேரம் அது வேண்டுமென்றே வெளியே தெரியும்படி செய்தால் அது முழுமையான வெட்கக்கேடாகக் கருதப்படுகிறது. “நோவாவின் மகனான ஹாம் தனது தந்தையின் நிர்வாணத் தோற்றத்தைப் பார்த்து அதைக் கூடாரத்திற்கு வெளியே இருந்த தன் சகோதரர்களிடம் சொன்னான்” என்று ஆதியாகமம் 9:22-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் தந்தைமாரை மானக்கேட்டில் இருந்து மூடியவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இதனால்தான் பண்டைய ரோமிலும் மற்றும் பல இடங்களிலும் பெற்றோரை மதிக்கும் முக்கியமான கடமையைக் கடைப்பிடிப்பதற்காக, வயதுவந்த மகன்மார் தங்கள் பெற்றோருடனோ அல்லது மருமகன்மார் தங்கள் மாமனார்களுடனோ சேர்ந்து நீராடாமல் இருப்பது வழக்கமாக இருந்தது. இருப்பினும், பலர் குளிக்கும்போது தங்களால் முடிந்தவரை தங்களது உடலை மூடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள், அதன்மூலம் அவர்களின் முழு உடலும் வெளிய தெரிந்தபோதும், குறைந்தபட்சம் சில அந்தரங்க பகுதிகளையாவது மூடிவைக்க முடியும்.

80. மேலும், யாத்திராகமத்தில் சொல்லப்பட்ட பழைய விதிகளின்படி, கர்த்தர் மோயீசனிடம் சொன்னபடி குருவானவர்கள் காற்சட்டை அணிந்திருந்தார்கள்: “அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளை மறைக்கும்படி அவர்களுக்குச் சணலால் நெய்யப்பட்ட காற்சட்டைகளைத் தயார் செய்யுங்கள்; அது இடுப்பிலிருந்து தொடைகள் வரை நீண்டிருக்க வேண்டும். ஆரோனும் அவனுடைய குமாரர்களும் சந்திப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், காணிக்கைகள் செலுத்தப் பரிசுத்த பலிபீடத்திற்குச் செல்லும்போதும் அவற்றை அணிந்திருக்க வேண்டும்; அணியாவிட்டால் அவர்கள் குற்றவாளிகள் ஆவர். அதனால் அவர்கள் மரிக்க நேரிடும். ஆரோனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் என்றென்றைக்கும் இது கட்டளையாக இருக்கும்” என்ற கர்த்தரின் கட்டளையை யாத்திராகமம் 28:42-43 மேற்கோள் காட்டுகிறது. நம்மில் சிலர் இதை இன்னும் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் இதை ஆத்மார்த்தமாக அன்றி அரைகுறையாய்ப் புரிந்துகொண்டு, இது அடக்கத்தைப் பாதுகாக்கவும் கற்பைக் காக்கவும் சொல்லப்பட்டது என்று நினைக்கிறார்கள்.

அத்தியாயம் 19

ஒரு பேச்சாளர் கண்ணியத்தை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும்? அழகு நற்பண்புக்கு ஏதேனும் பங்களிப்பு செய்கிறதா? அப்படியானால் எந்த அளவிற்கு அது நிகழ்கிறது? இறுதியாக, நம்மிடம் தற்பெருமையோ அல்லது மென்மையான போக்கோ தென்படாமல் இருக்க நாம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

81. அடக்கமான குணம் குறித்த பல்வேறு பயன்களைப் பற்றி சிறிது நேரம் பேசுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது; ஏனென்றால், நீங்கள் வாழும் சொந்தச் சூழல்களில் அதன் நன்மையை அடையாளம் காணக்கூடிய அல்லது குறைந்தபட்சம் அதன் இழப்பை அறியாதவர்களிடமோ நான் பேசுகிறேன் என்பதாலேயே. இது எல்லா வயதினருக்கும், மக்களுக்கும், காலங்களுக்கும், இடங்களுக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், இளமை மற்றும் குழந்தைத்தனமான பருவங்களின் இருப்போருக்கு இது மிகவும் பொருந்துகிறது.

82. இருப்பினும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு இணக்கமான மற்றும் முழுமையான வாழ்வை அமைத்துக்கொள்ளும் வகையில் நமது செயல்கள் பொருத்தமானதாகவும் தகுதியானதாகவும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். எனவே, பொருத்தமானது என்று கருதப்படுவது என்பது பற்றிய ஒரு குறிப்பிட்ட வரிசைநிலை இருக்க வேண்டும் என்று சிசரோ நம்புகிறார். இது அழகு, ஒழுங்கு மற்றும் செயலுக்கான சரியான ஏற்பாடுகளில் நிலைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார். அவர் சுட்டிக்காட்டுவது போல, இதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம் என்றாலும் இதை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

83. சிசெரோ ஏன் அழகை முக்கியம் என்று கருதினார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை; இருப்பினும் அவர் உடலின் வலிமை பற்றிப் பேசுகிறார் என்பது புலனாகிறது. உடல் அழகில் நாம் நிச்சயமாக நற்பண்புகளைக் காண்பதில்லை, ஆனால் அதில் ஒருவித வசீகரத்தைக் காண்கிறோம். உதாரணமாக, அடக்கமான குணம் ஒருவரை வெட்கம் கொள்ளச் செய்யும்போது ​​அது அவர்களை மேலும் கவர்ச்சிகரமாகக் காட்டும். ஒரு கைவினைஞர் சரியான பொருட்களைக் கொண்டு சிறப்பாக வேலை செய்வதைப் போலவே, அடக்கமும் ஒரு இனிமையான தோற்றத்துடன் இணையும்போது தனித்துத் தெரிகிறது. இருப்பினும், அழகை வலுக்கட்டாயமாக வரவழைக்கவோ திணிக்கவோ கூடாது; அது இயல்பாகவும் எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் வர வேண்டும் என்பதோடு அதிக சிக்கலானதாக இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும்; பகட்டான, கவர்ச்சிமிகு ஆடைகளால் மெருகூட்டப்படாமல், அன்றாடம் அணியும் எளிமையான உடைகளிலேயே அழகு வெளிப்பட வேண்டும். ஒருவரின் நற்பெயருக்கோ அல்லது தேவைகளுக்கோ எந்தக் குறையும் இல்லை என்பதை உறுதி செய்வதும், அதே நேரத்தில் உடற்கவர்ச்சியை வெளிக்காட்டுவதற்காக செய்யப்படும் தேவையற்ற அலங்காரங்களைத் தவிர்ப்பதும் முக்கியம்.

84. குரலும் கூட, தங்களை முக்கியமானவர்களாகக் காட்டிக்கொள்ளும் எண்ணத்தில் பலர் வழக்கமாகப் பயன்படுத்தும், தொய்வான, பலவீனமான அல்லது பெண்மைத் தொனியுடையதாக இருக்கக்கூடாது. அது ஒரு குறிப்பிட்ட தரம், தாளம் மற்றும் வலிமையான, ஆண்மையின் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் ஆளுமைக்கும் பாலினத்திற்கும் ஏற்ப மிகவும் பொருத்தமானதைச் செய்வதே ஒரு அழகான வாழ்க்கைக்கான மேன்மையை அடைய உதவும். சொந்தமாக நாம் இயங்குவதற்கு இதுவே சிறந்த வழியாகவும் ஒவ்வொரு செயலுக்கும் இதுவே பொருத்தமான முறையாகவும் இருக்கும். ஆனால் மென்மையான அல்லது பலவீனமான குரலையோ, பெண்மைக்குரிய உடல் அசைவுகளையோ நான் விரும்பாத அதேநேரம், முரட்டுத்தனம் மற்றும் பண்பாடற்ற மனிதர்களையும் நான் விரும்புவதில்லை. நாம் இயற்கையைப் பின்பற்றுவோம். இயற்கையைப் பின்பற்றும் போது, அது நாம் கற்றுக்கொள்வதற்கான ஒரு வழியையும் நன்மையின் முன்மாதிரியையும் நமக்குத் தருகிறது.

அத்தியாயம் 20

நாம் நமது தன்மானத்தைக் காத்துக்கொள்ள வேண்டுமானால், ஒழுக்கமற்ற மனிதர்களுடனான சகவாசத்தையும், அந்நியர்கள் ஏற்பாடு செய்யும் விருந்துகளையும், பெண்களுடனான அனாவசியத் தொடர்புகளையும் தவிர்க்க வேண்டும்; அதற்குப் பதிலாக, வீட்டில் நமது ஓய்வு நேரத்தை சமயம் சம்பந்தமான சிந்தனைகள் மற்றும் நற்பண்புடன் கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

85. பணிவுக்கும் அதன் சொந்த ஆபத்துகள் உண்டு — அவை அதுவாகவே ஏற்படுத்திக்கொள்பவை அல்ல, மாறாக அது சந்திக்கும் ஆபத்துகளே அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, கேளிக்கை என்ற போர்வையில் நல்லவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒழுக்கமற்ற மனிதர்களுடன் நாம் பழகும்போது இது நிகழ்கிறது. மேலும், இந்த நல்லவர்கள் எனப்படுவோர், விருந்துகளிலும் போட்டிகளிலும் தவறாமல் கலந்துகொண்டு அடிக்கடி கேலி மற்றும் கிண்டல்கள் செய்வதன் மூலம் தங்களின் தீவிரமான மற்றும் வலிமையான குணத்தையே பலவீனப்படுத்திக் கொள்கிறார்கள். ஆகவே,நாம் நமது மனதை ஆசுவாசப்படுத்த முயலும்போது, ​​எல்லா நற்செயல்களும் சீராக இருக்கக் கூடிய சமநிலையை சீர்குலைத்துவிடாமல் கவனமாக இருப்போம். ஏனெனில், பழக்கம் தோஷம் என்பது ஒருவரின் இயல்பான வழிகளை விரைவில் மாற்றிவிடும்.

86. மதகுருமார்களாகவும், குறிப்பாக பாதிரியார்களாகவும் உங்கள் கடமைகளுக்கு ஏற்றவாறு நீங்கள் செயல்படுவது புத்திசாலித்தனம் என்று நான் நம்புகிறேன். இதன் பொருள், நீங்கள் முன்பின் தெரியாதவர்களுடனான விருந்துபசாரங்களைத் தவிர்க்க வேண்டும். ஆனாலும் உங்களை சந்திக்க வருவோரை வரவேற்க வேண்டும். அதே சமயம், நீங்கள் மிகவும் கவனமாக இருப்பதோடு, பிறர் உங்களைக் குறை கூறுவதற்கு இடம் கொடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முன்பின் தெரியாதவர்களுடனான விருந்துகள் உங்கள் கவனத்தை எளிதில் சிதறடித்து, விருந்துண்டு மகிழச் செய்துவிடும். அவை பெரும்பாலும் நீங்கள் கேட்க விரும்பாத உலக இன்பங்களைப் பற்றிய விவாதங்களுக்கு வழிவகுக்கும். இந்த உரையாடல்களை உங்களால் எளிதில் புறக்கணிக்க முடியாது, ஏனென்றால் அவற்றில் பங்கேற்காமல் இருப்பதும் ஒருவிதத்தில் ஆணவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் நினைத்ததை விட அதிகமாகக் குடிப்பதையும் நீங்கள் உணர்வீர்கள். மற்றவர்களின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அடிக்கடி சென்றுவர வேண்டியிருப்பதை யிட்டு நீங்கள் வருத்தம் தெரிவிப்பதைவிட, உங்கள் சொந்த வீடு நோக்கி வரும் அழைப்புகளை மரியாதையாக மறுப்பதே சிறந்தது. நீங்கள் நிதானமாக இருந்தால், மற்றவர்களின் மோசமான நடத்தையை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்காது.

87. இளவயது குருமார்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தவிர்க்கமுடியாத காரணத்திற்காகச் செல்வதைத் தவிர, விதவைகள் அல்லது திருமணமாகாத பெண்களின் வீடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு செல்ல நேரிட்டால், அந்த விஷயம் முக்கியமானதாக இருந்தால், அவர்கள் ஆயர் அல்லது குருக்கள் போன்ற மூத்த குருமாருடன் மட்டுமே செல்ல வேண்டும். மக்கள் நம்மைக் குறை கூறுவதற்கு நாம் காரணமாக இருத்தல் கூடாது. வதந்திகளுக்கு வழிவகுக்கக்கூடிய மற்றும் அடிக்கடி நிகழும் சந்திப்புகளைத் தவிர்த்தல் நன்று. இந்தப் பெண்களில் ஒருவர் தற்செயலாக தவறான வழியில் செல்பவரென்றால் என்ன செய்வது? பிறரின் தவறுக்காக நீங்கள் ஏன் பழியைச் சுமக்க வேண்டும்? பல வலிமையான ஆண்கள் கூட ஆசைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். பலர் எந்தவித பாவம் செய்யாமலேயே சந்தேகத்துக்குள்ளாகும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியும் இருக்கிறார்கள்.

88. திருச்சபையில் உங்கள் கடமைகளில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை ஏன் வாசிப்பதில் செலவிடக்கூடாது? ஏன் கிறிஸ்துவைக் காண மீண்டும் திரும்பிச் செல்வதில்லை? ஏன் அவரிடம் பேசி அவருடைய குரலைக் கேட்பதில்லை? நாம் ஜெபிக்கும்போது அவரிடம் பேசுகிறோம். தேவனுடைய பரிசுத்த நூல்களை வாசிக்கும்போது அவருடைய குரலைக் கேட்கிறோம். இப்படியிருக்க, அந்நிய வீடுகளில் நமக்கு என்ன வேலை வேண்டிக்கிடக்கிறது? அனைவரையும் அரவணைக்கும் ஒரே இடம் இருக்கிறது. ஆகையால் நமக்குத் தேவைப்படுபவர்கள் நம்மிடம் வரலாம். புறங்கூறுதல் மற்றும் பொய்க் கதைகளால் நமக்கு என்ன ஆகவேண்டி இருக்கிறது? கிறிஸ்துவின் பலிபீடத்தில் பணிபுரியும் பணியே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; மக்களைப் பிரியப்படுத்தும் கடமை நமக்கு வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுதல் நன்று.

89. நாம் பணிவுடனும், சாந்தத்துடனும், மென்மையுடனும், தீவிரமாகவும், பொறுமையுடனும் இருக்க வேண்டும். நாம் எல்லாவற்றிலும் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும், அப்போதுதான் நமது அமைதியான முகபாவமும் மென்மையான பேச்சும் நம் வாழ்வில் எந்தத் தீய குணமும் இல்லை என்பதைக் காட்டும்.

அத்தியாயம் 21

கோபம் தோன்றுவதற்கு முன்பே நாம் அதனிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்; நாம் ஏற்கனவே கோபமாக இருப்பதாக உணர்ந்தால் நாம் அதைக் கட்டுப்படுத்தி அமைதிப்படுத்த வேண்டும். நம்மால் அமைதியாக இருக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் பிறரைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாதுபோனால் நமது உணர்ச்சிகள் சிறுவர்களின் சண்டைகளைப் போல இருக்கும். ஆர்கைடஸ் (Archites) தான் சொன்னதை அவர் விவரிக்கும் போது, தாவீது தனது செயல்களிலும் எழுத்துக்களிலும் இந்த விஷயத்தில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்பதையும் காட்டுகிறார்.

90. கோபத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உங்களால் அதைத் தவிர்க்க முடியாவிட்டால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். ஏனெனில் கோபம் உங்களைத் தீய செயல்களைச் செய்யத் தூண்டவல்லது. அது உங்கள் மனதைக் குழப்பி உங்களால் தெளிவாகச் சிந்திக்க முடியாதபடி செய்துவிடும். எனவே, உங்களால் முடிந்தால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், எப்போதும் கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதன் மூலமும், நல்ல காரியங்களை விரும்புவதன் மூலமும், மிகவும் மன உறுதியுடன் இருப்பதன் மூலமும், அமைதியாக இருப்பதை உங்கள் இயல்பான குணமாக ஆக்கிக் கொள்வதன் மூலமுமே உங்களை உங்களுக்குள் வைத்திருக்க உதவும். இருப்பினும் வலுவான உணர்ச்சிகள் நமது இயல்பின் ஒரு முக்கிய பகுதியாக இருப்பதாலும், அவற்றை முழுமையாக அகற்ற முடியாது என்பதாலும், அவை எமக்குள் எழுவதை எம்மால் உணர முடிந்தால், அவற்றை நமது மனோதிடத்தைக் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். மேலும் நீங்கள் அதை உணர்வதற்கு அல்லது தடுப்பதற்கு முன்பே உங்கள் மனம் கோபத்தால் கொந்தளித்தால், உங்கள் மனதில் உள்ள கோபத்தை எவ்வாறு வெல்வது, அதை எவ்வாறு அடக்கி ஆள்வது, மற்றும் அது மீண்டும் உங்களை முன்புபோல் ஆட்கொள்ளாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். உங்களால் முடிந்தால், கோபத்திற்கு எதிராகப் போராடுங்கள்; இல்லையென்றால், அதை விட்டுவிடுங்கள், ஏனெனில் ரோமர் 12:19-ல் “எவரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களைத் தண்டிக்க முயலாதீர்கள். தேவன் தன் கோபத்தால் அவர்களைத் தண்டிக்கும் வரையில் பொறுத்திருங்கள். “நானே தண்டிப்பேன்; நானே பதிலுக்குப் பதில் செய்வேன்” என்று கர்த்தர் கூறுகிறார் என்று எழுதப்பட்டுள்ளது.

91. யாக்கோபு தன் சகோதரன் கோபத்தில் இருந்தபோது, ​​அவனுக்கும் ரெபேக்காவுக்கும் பணிவுடன் வழிவிட்டார்; இதன் பொருள், பொறுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்வதன் மூலம் தன் சகோதரனின் கோபம் அதிகரித்து அதன் மூலம் ஏற்படக்கூடிய விபரீதங்களைப் பார்க்கிலும், தான் அந்நிய தேசங்களுக்குச் சென்று வாழ்வது நன்று அவர் முடிவுசெய்தார். ஆதியாகமம் 27:42-ல் எழுதப்பட்டுள்ளபடி, தன் சகோதரன் ஈசா அமைதியடைந்துவிட்டான் என்று நம்பிய பிறகே அவர் திரும்பி வந்தார். இவ்வாறுதான் அவர் தேவனிடத்தில் அத்தகைய பெரும் கிருபையைப் பெற்றார். மனப்பூர்வமான சேவை மற்றும் கொடைகளின் மூலம் தன் சகோதரனிடமிருந்து பறிக்கப்பட்ட ஆசீர்வாதத்தை அவன் மறந்து, இப்போது வழங்கப்படும் ஈடுசெய்தலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவன் அவனுடனான உறவைச் சரிசெய்தான்.

92. கோபம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உங்கள் கண்ணை மறைத்து, உங்கள் மனதை ஆட்கொனு விட்டாலும், உங்கள் நிலையில் இருந்து விலகாதிருங்கள். உங்கள் நிலை என்பது பொறுமை, ஞானம், அறிவு ஆகியவற்றைக் கொண்டு கோபத்தைத் தணிப்பதே ஆகும். உங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் நபரின் பிடிவாதம் உங்களைக் கலக்கமடையச் செய்து, அந்த மனிதனின் கீழ்த்தரமான நடத்தை உங்கள் கோபத்தை அதிகரிக்குமானால், அதன்காரணமாக உங்கள் மனதை அமைதிப்படுத்த முடியாவிட்டால், குறைந்தபட்சம் உங்கள் வாயினின்று வெளிவரும் வார்த்தைகளையாவது கட்டுப்படுத்துங்கள். ஏனெனில், ‘உன் நாவைத் தீய காரியங்களிலிருந்து விலக்கி வை, உன் உதடுகள் வஞ்சகமாகப் பேசாதவாறு அவற்றைக் காத்துக்கொள். சமாதானத்தைத் தேடி அதன்பின் செல். பரிசுத்த யாக்கோபு கைக்கொண்ட சமாதானத்தைப் பார், அது எவ்வளவு பெரியதாக இருந்தது!’ என்று மறைநூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, முதலில், உங்கள் மனதை அமைதிப்படுத்துங்கள். இதை உங்களால் செய்ய முடியாவிட்டால் உங்கள் நாவைக் கட்டுப்படுத்துங்கள். இறுதியாக, சமாதானத்தைத் தேட மறக்காதீர்கள். இந்த எண்ணங்களை சர்வதேச அளவில் பிரபலம் பெற்ற பேச்சாளர்கள் நம்மிடமிருந்து எடுத்து, தங்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர். இருந்தபோதிலும், அதை முதலில் சொன்னவர் அதன் பொருளை அறிந்ததற்காகப் புகழப்படுகிறார்.

93. ஆகையால், நாம் கோபத்தைத் தவிர்ப்போம் அல்லது குறைந்தபட்சம் கட்டுப்படுத்துவோம், அதனால் நாம் கௌரவத்துக்கான வாய்ப்பை இழக்காமலும், நமது தவறுகளை அதிகரிக்காமலும் இருப்போம். ஒருவரின் கோபத்தைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. அது மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருப்பதைப் போன்று கடினமானது. ஒன்று நமது தெரிவிலிருந்து வருகிறது, மற்றொன்று நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதிலிருந்து வருகிறது. இருப்பினும் குழந்தைகளுக்கு இடையேயான சண்டைகள் தீங்கு விளைவிப்பதில்லை, அவை விரும்பத்தகாதவை என்பதை விட வேடிக்கையானவையாக இருக்கின்றன. பிள்ளைகள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டாலும், அவர்கள் உடனடியாக மீண்டும் அமைதியடைந்து இன்னும் விரைவாக நண்பர்களாகி விடுகிறார்கள். ஏனென்றால் தந்திரமாகவோ அல்லது வஞ்சகமாகவோ நடந்துகொள்ள அவர்களுக்குத் தெரியாது. மத்தேயு 18:3-ல் சொல்லப்பட்டுள்ளபடி, கர்த்தர் இவர்களைக் குறித்துச் சொல்லும்போது, “நான் உங்களுக்கு மெய்யாகவே சொல்கிறேன். நீங்கள் மனந்திரும்பி உள்ளத்தில் சிறு பிள்ளைகளைப் போல ஆக வேண்டும். அவ்வாறு மாறாவிட்டால், நீங்கள் ஒருபொழுதும் பரலோக இராச்சியத்துக்குள் நுழைய முடியாது” என்று. அதேபோல, 1 பேதுரு 2:23-ல், “தேவனுடைய பெலனாகிய கர்த்தர் ஒரு சிறுவனைப் போல எண்ணி அவமதிக்கப்பட்டபோது, அவர் ​​திருப்பி அவமதிக்க வில்லை, அடிக்கப்பட்டபோது, ​​திருப்பி அடிக்கவில்லை. ஆகவே, ஒரு பிள்ளையைப் போல, ஒருபோதும் ரணங்களை மனதில் வைத்துக் கொள்ளாமலும், ஒருபோதும் வன்மத்தை உமிழாமலும், நீங்கள் செய்யவேண்டிய அனைத்தையும் சரியாகச் செய்யத் தீர்மானியுங்கள். மற்றவர்கள் உங்களுக்கு என்ன திருப்பிக் கொடுப்பார்கள் என்பதைப் பற்றி சிந்திக்காதீர்கள். உறுதியாக நில்லுங்கள். உங்கள் இதயத்தின் எளிமையான மற்றும் தூய்மையான இயல்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கோபக்காரனுக்கு அவனுடைய கோபத்திற்கேற்பவும், மூடனுக்கு அவனுடைய மதியீனத்திற்கேற்பவும் பதிலளிக்காதீர்கள். ஒரு தவறு உடனடியாக மற்றொரு தவறுக்கு வழிகோலும். கற்கள் ஒன்றோடு உராயும்போது தீப்பற்றிக்கொள்கிறது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.

94. புறஜாதியினர் அதாவது அவிசுவாசிகள்— (அவர்கள் பேசும்போது விஷயங்களை மிகைப்படுத்திக் கூறுவார்கள்) – தரெந்தம் என்ற இடத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஆர்க்கிடாஸ் (Archytas of Tarentum) தனது மேலாளரிடம் கூறிய கூற்றை மிகவும் மிகைப்படுத்தி அவர்கள், “ஓ, துரதிர்ஷ்டசாலியே, எனக்குக் கோபம் வராமல் இருந்திருந்தால், உன்னைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்” என்று கூறியதாகக் கூறுகிறார்கள். ஆனால் தாவீது ஏற்கெனவே தன் கோபம் காரணமாக அவனது ஆயுதம் ஏந்திய கரத்தை ஏந்தாமல் விட்டுவிட்டான். பழிவாங்காமல் இருப்பதை விட, பழிதூற்றாமல் இருப்பது எவ்வளவு மேல்! நாபாலைப் பழிவாங்கத் தயாராக இருந்த வீரர்களையும் அபிகெய்ல் செபம் வாயிலாகத் தடுத்தாள். சரியான நேரத்தில் செய்யப்படும் மன்றாட்டுகளுக்கு நாம் இணங்குவது மட்டுமல்லாமல், அவற்றைக் குறித்து மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்பதை இதிலிருந்து நாம் காண்கிறோம். பழிவாங்கும் தனது விருப்பத்தைத் தடுக்கத் தலையிட்ட அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லும் அளவுக்கு தாவீது மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

95. இதற்கு முன்பே அவர் தம் எதிரிகளைப் பற்றி கூறுகையில், “அவர்கள் என்னிடம் அநியாயமாக நடந்துகொள்கிறார்கள், என்மேல் மிகவும் கோபமாக இருக்கிறார்கள்” என்றார். அவர் மிகவும் கலக்கமடைந்திருந்த போது என்ன சொன்னார் என்று பார்ப்போம்: “புறாவைப் போல எனக்குச் சிறகுகளைத் தருபவர் யார்? அப்போது நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்” என்று. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து அவருக்குக் கோபமூட்டினார்கள், ஆனால் அவரோ அமைதியைக் காண விரும்பினார்.

96. அவர் மேலும் கூறுகையில், “கோபப்படுங்கள், ஆனால் பாவம் செய்யாதீர்கள்.” ஒரு ஞானம் நிறைந்த ஒழுக்கமான ஆசிரியர் நமது இயல்பான உணர்வுகளை அகற்ற முயற்சிப்பதற்குப் பதிலாக, அவற்றை எவ்வாறு கையாள்வது என்று மக்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று நம்புகிறார். அவர், உங்கள் கோபத்திற்குத் தகுதியான ஒரு காரணம் அல்லது கோபமூட்டக்கூடிய தவறுகள் ஏதேனும் இருப்பின், அவற்றுக்காக மட்டுமே கோபப்படுங்கள். பல தவறுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக கோபப்படுவது இயல்பானது. நாம் கோபப்படவே இல்லை என்றால், நாம் நல்லொழுக்கமுள்ளவர்களாகத் தோன்றுவதற்குப் பதிலாக அக்கறை அற்றவர்களாகவோ அல்லது கவனக்குறைவானவர்களாகவோ இருப்பதாகவே தோன்றக்கூடும். எனவே, கோபப்படுங்கள், ஆனால் அந்தக் கோபத்தின் காரணமாக நீங்கள் தவறாகச் செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிறிதொரு முறையில் கூறினால், நீங்கள் கோபத்தை உணர்ந்தால் அதைக் கட்டுப்படுத்த பகுத்தறிவை உபயோகிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் இவ்வாறு கூட நினைக்கலாம், “நான் கோபமாக இருந்தால், அந்தக் கோபத்தை என் மீதே காட்ட வேண்டும், ஏனெனில் அது என்னைப் பற்றிக்கொள்ள அனுமதித்தது, அதன் மூலம் நான் பாவம் செய்ய மாட்டேன்” என்று. எளிதில் கோபமடைவதால் தன் மீதே கோபத்தை உணரும் ஒருவர், அந்தக் கோபத்தை மற்றவர்கள் மீது காட்ட மாட்டார். ஆனால், ஒருவர் தன் கோபத்தை நீதியானது என்று நியாயப்படுத்த முயன்றால் அவர் பெரும்பாலும் இன்னும் அதிகமாகக் கலக்கமடைந்து பாவம் செய்யக்கூடும். சொலமன் கூறுவது போல, ஒரு நகரத்தைக் கைப்பற்றுவதை விட உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது, ஏனெனில் கோபம் வலிமையானவர்களையும் வழிதவறச் செய்துவிடும்.

97. எனவே, பகுத்தறிவு நம் மனதைத் தயார்படுத்தும் முன் நாம் பதற்றமடைந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். அநேகமான நேரங்களில் கோபம், துக்கம் அல்லது மரணம் குறித்த பயம் போன்ற வலுவான உணர்வுகள் ஆன்மாவின் அமைதியைப் பறித்து, அதை வேகமாகவும் கடுமையாகவும் தாக்குகின்றன. எனவே, இதைப் பற்றி முன்கூட்டியே சிந்தித்து, அதாவது சூழ்நிலையைப் பற்றி சிந்திப்பதன் மூலம் நம் மனதைப் பழக்கப்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனமாகும். இந்த வழியில், மனம் எந்தவொரு திடீர் பிரச்சனையாலும் கலக்கமடையாமல் பகுத்தறிவு தரும் தெளிவு மற்றும் வழிகாட்டுதலால் கட்டுக்கடங்கி அமைதிபெறும்.

அத்தியாயம் 22

அன்றாட உரையாடல்கள் மற்றும் கலந்துரையாடல்களின் போது நாம் பேசும் பாணி குறித்து கவனமாக இருப்பதோடு, ஆழ்ந்து சிந்திப்பது மற்றும் வலுவான உணர்வுகளை வெளிப்படுத்துவது பற்றியும் இந்த அத்தியாயம் பேசுகிறது.

98. சிந்தனையில் இரண்டு வகைகள் உள்ளன — விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது மற்றும் தீவிரமாக உணர்வது. ஒன்று சிந்தனையுடன் தொடர்புடையது, மற்றொன்று உணர்வுடன் தொடர்புடையது. அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்பதால், ஒன்றோடொன்று குழப்பிக்கொள்வதில்லை. விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது என்பது உண்மையைத் தேடிக் கண்டறிவதை உள்ளடக்கியது. வலுவான உணர்வுகள் நம்மைச் செயல்படத் தூண்டுகின்றன. எனவே, விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது அமைதியையும் சாந்தத்தையும் தருகிறது. வலுவான உணர்வுகள் நம்மைச் செயல்படத் தூண்டுகின்றன. எனவே, நல்ல விஷயங்களைப் பற்றிய எண்ணங்கள் நம் மனதில் நுழையவும், (நம் மனம் சீராக இருக்க வேண்டுமென்றால்) நம் உணர்வுகள் பகுத்தறிவைப் பின்பற்ற அனுமதிக்கவும் நாம் தயாராக இருப்போம். அப்போதுதான், ஒன்றை விரும்புவது நம்மைத் தெளிவாகச் சிந்திப்பதிலிருந்து தடுக்காது. மாறாக, எது சரி என்பதைப் பகுத்தறிவே ஆராய்ந்து தீர்மானிக்கட்டும்.

9. மேலும், நமது சொற்களிலும் செயல்களிலும் எது சீரான அளவு என்பதை அறிந்துகொள்வதற்காக, கண்ணித்தைக் கடைப்பிடிப்பதை நாம் நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்றும், செயலை விட பேச்சில்தான் ஒழுங்கு முதன்மை பெறுகிறது என்றும் நாம் கூறியுள்ளோம். எனவே பேச்சை இரண்டு வகைகளாகப் பிரிப்போம்: முதலாவது, நட்பான உரையாடலில் பயன்படுத்தப்படுவது; இரண்டாவது, நம்பிக்கை மற்றும் நேர்மை தொடர்பான விஷயங்களைக் கையாளும்போதும் அவற்றைப் பற்றிப் பேசும்போதும் பயன்படுத்தப்படுவது. இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் நாம் எவர் மனதையும் நோகச்செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும். நமது பேச்சு மென்மையாகவும், அமைதியாகவும், நட்பும் மரியாதையும் நிறைந்ததாகவும், ஏளனங்கள், அவமதிப்புகள் அற்றதாகவும் இருக்க வேண்டும். நமது அன்றாடப் பேச்சு மற்றும் உபயோகிக்கும் வார்த்தைகளில் பிடிவாதமான விவாதங்கள் இருக்கக்கூடாது, ஏனெனில் அவை பயனுள்ள எதையும் வழங்குவதை விட, தேவையற்ற விஷயங்களையே கிளப்பிவிடும். கோபமற்ற பேச்சு, கபடமற்ற பணிவு, கடுமையில்லாத எச்சரிக்கை, மனக்கசப்பை ஏற்படுத்தாத அறிவுரை என அனைத்தும் வெளிப்படுத்தப்பட வேண்டும். நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் இதில் கவனம் செலுத்த வேண்டும்; நமது மனதின் எந்தவொரு வலுவான உணர்ச்சியும் நல்லறிவைத் தடுத்துவிடக் கூடாது (நாம் எப்போதும் அறிவுரைக்கு இடம் கொடுப்பவர்களாக இருப்போம்). அதுபோலவே, நமது பேச்சிலும் அந்த விதியைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கோபமோ வெறுப்போ கிளறப்படாமல் இருக்கும். அப்போதுதான் எம்மால் நமது பேராசையையோ அல்லது சோம்பலையோ வெளிக்காட்டாமல் இருக்கமுடியும்.

100. குறிப்பாக நாம் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிப் பேசும்போது, நமது வார்த்தைகள் எளிமையாகவும் தாழ்ச்சியுடையதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், சிறந்த தலைப்பைப் பற்றியும், விழிப்புடன் இருப்பதற்கான அதன் ஊக்கத்தைப் பற்றியும், நல்ல போதனையின் மீதான அதன் கவனத்தைப் பற்றியும் பேசுவதை விட வேறு எதைப் பற்றி நாம் அதிகமாகப் பேச வேண்டும்? நாம் தொடங்குவதற்கு ஏதோ ஒரு காரணம் இருந்தபோதும், நமது முடிவு உரிய வரம்புகளுக்குள் இருக்க வேண்டும். ஏனெனில், சோர்வூட்டும் பேச்சு எரிச்சலையே உண்டாக்கும். ஆனால், பொதுவாக எல்லா வகையான பேச்சுகளும் மகிழ்ச்சியைத் தரும்போது, ​​சோர்வூட்டும் பேச்சு எரிச்சலை ஏற்படுத்துவது நிச்சயம் பொருத்தமற்றதாகவே இருக்கும்!

101. விசுவாசத்தைப் போதித்தல், சுயக்கட்டுப்பாட்டைப் பற்றிய அறிவுரை, நீதியைப் பற்றிய கலந்துரையாடல், செயலுக்குத் தூண்டுதல் போன்ற தலைப்புகளையும் நாம் ஒரே நேரத்தில் முழுமையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, அங்கு காணப்படும் வழிகாட்டிகளுக்கு ஏற்றாற்போல் நம்மால் முடிந்தவரை அவற்றை படிப்படியாகக் கையாள வேண்டும். நமது உரைகள் மிகவும் நீளமாகவோ அல்லது மிக விரைவாக முடிக்கப்படவோ கூடாது; ஏனென்றால் நீண்ட உரை வெறுப்பை ஏற்படுத்திவிடும். அதே சமயம் குறுகிய உரை கவனக்குறைவுக்கும் புறக்கணிப்புக்கும் வழிவகுக்கும். பேச்சு நேரடியானதாகவும், எளிமையானதாகவும், தெளிவானதாகவும், வெளிப்படையானதாகவும், அதே சமயம் கண்ணியமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அது அதிகமாக ஒத்திகை பார்க்கப்பட்டதாகவோ அல்லது மெருகூட்டப்பட்டதாகவோ தோன்றக்கூடாது. அதேநேரம், அதன் நடை கடுமையானதாகவோ அல்லது விரும்பத்தகாததாகவோ இருக்கவும் கூடாது.

அத்தியாயம் 23

சில சமயங்களில் நகைச்சுவை உரையாடல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருந்தாலும், மதகுருமார்களிடையே அவை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். குரல் தெளிவாகவும் வார்த்தைகளில் வெளிப்படைதன்மை இருக்கவும் வேண்டும்.

102. உலக மக்கள் பேசும் விதம் குறித்து பல்வேறு விதிகளைக் கூறுகிறார்கள். அவற்றை நாம் புறக்கணிக்கலாம் என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக, நகைச்சுவை உணர்வுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி. ஏனெனில், சில சமயங்களில் நகைச்சுவை சரியானதாகவும் இனிமையானதாகவும் இருக்கலாம், ஆனாலும் அவை ஒரு மத வாழ்க்கைக்குப் பொருந்தாது. மறைநூல்களில் நாம் கண்டிராத காரியங்களை நாம் எவ்வாறு பேச்சுவழக்கில் பயன்படுத்த முடியும்?

103. நாம் கதைகள் சொல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்; நமக்கு நாமே வகுத்துக்கொண்ட கடுமையான விதியின் போக்கை மாற்றிவிடக்கூடாது. “சிரிக்கிறவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனென்றால் நீங்கள் அழுவீர்கள்,” என்று லூக்கா 6:25-ல் கர்த்தர் கூறுகிறார். இப்போது சிரித்துவிட்டுப் பின்னர் அழுவதற்காக, சிரிப்பதற்கு என்று ஏதேனும் ஒன்றைத் தேடுகிறோமா? நமது பேச்சு இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது நாம் பேசும் தருணத்தில் பொருத்தமானதாக இல்லாவிட்டால், நாம் அனாவசிய நகைச்சுவைகளை மட்டுமல்ல, எல்லா வகையான கேலிகள் மற்றும் கிண்டல்களைத் தவிர்க்க வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம்.

104. குரலைப் பொறுத்தவரை, அது நேரடியானதாகவும், எளிமையாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குரலானது இசைத்தன்மையை ஒத்திருப்பது இயற்கையின் கொடை, அதை முயற்சியால் பெற முடியாது. அது தெளிவாக உச்சரிக்கப்பட்டு, வலுவான, ஆண்மைக்குரிய வீரியத்துடன் ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு கடுமையான அல்லது பழமையான தொனியும் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும், நாடகத்தனமான தொனியைக் கொண்டிருக்காமல், அது வெளிப்படுத்தும் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்கு ஏற்றாற்போல் இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

அத்தியாயம் 24

நமது வாழ்க்கை ஒழுங்கில் கவனிக்கப்பட வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, நமது உணர்வுகள் நமது சிந்தனையால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; இரண்டாவது, நமது தேவைகளின் போது தகுந்த எல்லையைக் கடைப்பிடிக்க வேண்டும்; மூன்றாவதாக, எல்லாவற்றையும் சரியான நேரத்திலும் கிரமமாகவும் செய்ய வேண்டும். பழைய ஏற்பாட்டுக் காலத்து புனிதர்களிடம் இந்த குணங்கள் அனைத்தும் மிகவும் தெளிவாகப் பிரகாசித்தன. எனவே, மனிதர்களின் முதன்மை நற்பண்புகள் என்று அழைக்கப்படும் குணங்கள் அவர்களிடம் நன்கு நிறைந்திருந்தன என்பது தெளிவாகிறது.

105. பேச்சுக்கலையைப் பற்றி நான் போதுமான அளவு கூறிவிட்டேன் என்று நம்புகிறேன். இப்போது, ​​ஒரு செயலூக்கமான வாழ்க்கைக்கு எது பொருத்தமானது என்பதில் நமது கவனத்தைச் செலுத்துவோம். இந்த விடயம் தொடர்பாகக் கருத்தில் கொள்ள வேண்டிய மூன்று முக்கிய விடயங்கள் உள்ளன. முதலில், நமது உணர்ச்சிகள் நமது பகுத்தறிவை மீறிவிடாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் நமது கடமைகளைப் பொருத்தமானவற்றுடன் சீரமைக்க முடியும். உணர்ச்சி பகுத்தறிவுக்குக் கட்டுப்படும்போது ​​நமது பொறுப்புகளில் பொருத்தமானவற்றைக் கடைப்பிடிப்பது எளிதாகிறது. இரண்டாவதாக, கையிலுள்ள பணியின் தேவைகளின் அடிப்படையில், நம்மை அதிகமாக வருத்திக்கொள்ளாமலும் அல்லது திறமையின்றிச் செயல்படாமலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அற்பமான ஒரு விஷயத்தைப் பெரிதுபடுத்துவது போலவோ அல்லது முக்கியமான விடயங்களை அசட்டையாக நடத்துவது போலவோ நாம் தோன்றக்கூடாது. இறுதியாக, நமது முயற்சிகளிலும் பணிகளிலும் நடுநிலைத்தன்மையோடு இருப்பதும், நமது செயல்களில் ஒழுங்கையும் நேரத்தையும் பேணுவதிலும் நாம் தெளிவாகவும் வெளிப்படைத் தன்மையோடும் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

106. ஆனால் முதலில், நான் அனைத்திற்கும் அடித்தளம் என்று அழைக்கக்கூடிய ஒன்று இருக்கிறது. அதாவது நமது உணர்வுகள் நமது சிந்தனையோடு இணைந்தவாறு செல்ல வேண்டும். இரண்டாவதும் மூன்றாவதும் உண்மையில் ஒன்றே — இரண்டு சூழ்நிலைகளிலும் சமநிலைத்தன்மை பேணப்பட வேண்டும். அழகாக இருக்கிறதென்று கருதப்படும் ஒரு இனிமையான வடிவத்தை நாம் பார்த்து, அதன் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்கவும், அது தொடர்பான கண்ணியத்தைப் பேணவும் எம்மால் முடியும். இதற்குப் பிறகு, அவை தொடர்பான விடயங்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப் பட்டுள்ளன, அவை எப்போது நிகழ்கின்றன என்பதைப் பற்றிய சிந்தனை வருகிறது. ஆக, இவைதான் அந்த மூன்று முக்கிய கருத்துக்கள். அதேநேரம், புனிதர்களில் ஒருவரிடமாவது இவற்றை நாம் முழுமையாகக் காண முடியுமா என்று பார்க்க வேண்டும்.

107. முதலாவதாக, வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டுவதற்காக படைக்கப்பட்டவரும் அழைக்கப்பட்டவருமான நம்முடைய முற்பிதாவான ஆபிரகாம் இருக்கிறார். பல குடும்பப் பிணைப்புகளால் கட்டுண்டிருந்தபோதிலும், தன் தாய்நாட்டையும் உறவினர்களையும் தந்தையின் வீட்டையும் விட்டு வெளியேறும்படி அவனிடம் கேட்கப் பட்டபோது, ​​அவன் தன் உணர்ச்சிகளைப் பகுத்தறிவால் கட்டுக்குள் வைத்திருந்ததை அவன் காட்டவில்லையா? தன் தாய்நாடு, குடும்பம், சொந்த வீடு ஆகியவற்றின் இனிமையான வசீகரத்தை யார் தான் ரசிக்க மாட்டார்கள்? ஆகவே அவற்றின் இனிமை நிச்சயமாக அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஆனால், இறை கட்டளை மற்றும் நித்திய வெகுமதி குறித்த வாக்குறுதி பற்றிய எண்ணம் அவனுக்கு அவை அனைத்தையும் விட மிக முக்கியமாக இருந்தது. கஷ்டங்களுக்குப் பழக்கமில்லாதவளாய், அவமானங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடியவளாய், ஒழுக்கமற்ற ஆண்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கக்கூடிய அளவுக்கு அழகானவள் என்பதால், தன் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்வது பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை அவன் உணர்ந்திருப்பான் அல்லவா? இருந்தபோதிலும், அதைத் தவிர்ப்பதற்கு வீண் காரணங்களை சொல்வதை விட, இவ்வாறான சவால்கள் அனைத்தையும் எதிர்கொள்ளவே அவன் முடிவு செய்தான். இறுதியாக, அவன் எகிப்தை வந்தடைந்தபோது, அவள் தன் மனைவி என்று சொல்லாமல், தன் சகோதரி என்று சொல்லும்படி அவளுக்கு அறிவுரை கூறினான்.

108. இங்கே வலிமையான உணர்வுகள் எந்தளவுக்கு செயல்படுகின்றன என்று பாருங்கள்! அவன் தன் மனைவியின் கற்பைக் குறித்தும், தன் சொந்தப் பாதுகாப்பைக் குறித்தும் கவலைப்பட்டான். எகிப்தியர்களின் தீவிர மோகத்தின் மீது அவனுக்குச் சந்தேகம் இருந்தது. ஆனாலும் கடவுளுக்குத் தன் கடமையைச் செய்வதில் உள்ள நல்ல நோக்கமே அங்கு மேலோங்கி இருந்தது. ஏனெனில் கடவுளின் உதவியால் மட்டுமே தான் பயணிக்கும் எல்லா இடங்களிலும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும், கர்த்தருக்குப் பிரியமில்லாதவனானால் தன் சொந்த வீட்டில்கூடப் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் அவன் நம்பினான். இவ்வாறு, நல்ல நோக்கமானது வலிமையான உணர்வுகளை வென்று, அவற்றை அதற்குக் கீழ்ப்படியச் செய்தது.

109. ஆதியாகமம் 14:14-இன் படி, ‘ஆபிரகாமின் மருமகன் லோத்து சிறைபிடிக்கப்பட்டபோது, ​​அவன் தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து, அவர்களிடம் இருந்த 318 பயிற்சி பெற்ற வீரர்களின் துணையுடன் தாண் நகரம்வரை பகைவர்களைத் துரத்திக்கொண்டு போனான்’ என்று கூறப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற பிறகு அவன் உண்மையில் ஈட்டிய செல்வங்களில் தனக்கு உரிய பங்கை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான். பின்னாளில் அவனுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டபோது, ​​இப்போது இறந்தவனைப் போலிருந்த தன் உடலின் பலவீனம் காரணமாகவும் தன் மனைவியால் பிள்ளைகளைப் பெற முடியாத நிலையையும், தன் முதுமையையும் நினைத்துப் பார்த்தபோதிலும், அது சாத்தியமற்றதாகத் தோன்றிய போதிலும், அவன் தேவனை ஆழமாக விசுவாசித்தான்.

110. இங்கே அனைத்தும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதைக் கவனியுங்கள். ஒரு தீவிரமான மற்றும் வலிமையான உணர்வுகள் அங்கே காணப்பட்டன. ஆனால் அது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்த நபருக்கு நடுநிலைத்தன்மையுடன் கூடிய மனோநிலை இருந்தது; அது முக்கியமான விஷயங்களைப் புறக்கணிக்கவோ அல்லது முக்கியமற்ற விஷயங்களை முக்கியமானதாகக் காட்டவோ இல்லை. பல்வேறு செயல்களில் மென்மைப்போக்கு, பணிகளில் ஒழுங்கு, சூழ்நிலைக்கு ஏற்ற நெகிழ்வுத் தன்மை, மற்றும் வார்த்தைகளைக் கையாள்வதில் கவனமான போக்கு ஆகியவை இருந்தன. அவர் விசுவாசத்தில் ஒரு தலைவராகவும், தன் நற்பண்புகளுக்காகப் புகழ்பெற்றவராகவும், போரில் வலிமையானவராகவும், வெற்றியின் காரணமாக மமதை கொள்ளாதவராகவும், வீட்டில் வரவேற்பவராகவும், தன் மனைவியின் மீது அக்கறையுள்ளவராகவும் இருந்தார்.

111. அவனுடைய பரிசுத்த பேரனான யாக்கோபு பாதுகாப்பான இடமான தன் வீட்டிலேயே தன் நேரத்தைச் செலவிட விரும்பினான்; இருப்பினும், தன் சகோதரனின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக அவன் பிற தேசத்திற்குச் சென்று வாழ்வது நன்று என என அவனுடைய தாய் விரும்பினாள். அவனது இயல்பான உணர்வுகளை விட ஞானம் மிக்க அறிவுரை வென்றது. அவன் வீட்டிலிருந்து விலகி தன் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தாலும், அவன் செய்த எல்லாவற்றிலும் ஒரு சமநிலையைப் பேணி, சரியான தருணங்களில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டான். அவன் தன் பெற்றோரால் மிகவும் நேசிக்கப்பட்டான்; அவனது கீழ்ப்படியும் மனப்பான்மையால் நெகிழ்ந்த பெற்றோரில் ஒருவர் அவனை ஆசீர்வதித்தார். மற்றொருவர் அவன் மீது ஆழ்ந்த பாசத்தைப் பொழிந்தார். தன் சகோதரனின் பார்வையில், அவன் மிகவும் மதிக்கப்பட்டான், குறிப்பாக அவன் தன் சகோதரனுக்காகத் தன் உணவைத் துறக்க முடிவு செய்தபோது பாசத்தில் விஞ்சியனவாக அவன் காணப்பட்டான். அவன் இயல்பாகவே அந்த உணவை உண்ண விரும்பியபோதிலும், சகோதரன் மீதுள்ள பாசத்தின் காரணமாக அதைத் துறந்தான். அவன் தன் எஜமானுடய மந்தைக்கு உண்மையுள்ள மேய்ப்பனாகவும், தன் மாமனாரிடம் அர்ப்பணிப்புள்ள மருமகனாகவும் நடந்துகொண்டான்; கடினமாக உழைத்தான், குறைவாக உண்டான்; செய்த தவறுகளைச் சரிசெய்வதில் நியாயஸ்தனாகவும், பிறருக்குத் தாராளமாகக் கொடுப்பதில் ஒரு பரோபகாரியாகவும் இருந்தான். உண்மையில், ஆதியாகமம் 33:4-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முன்பு தன் சகோதரனின் பகைமைக்கு அஞ்சியிருந்தபோதிலும், தன் சகோதரனின் கோபத்தை மிகவும் திறம்படத் தணித்ததன் காரணமாக அவனது நன்மதிப்பைப் பெற்றவனாகத் திகழ்ந்தான்.

112. யோசேப்பைப் பற்றி நான் சொல்ல வேண்டுமானால், ஆதியாகமம் 39 ஆம் அதிகாரத்தில், அடிமையாய் விற்கப்பட்ட அவர் விடுதலைக்காக ஏங்கினார் என்றும், தான் ஒரு அடிமையாக இருப்பதை ஏற்றுக் கொண்டார் என்பதையும் நாம் காண்கிறோம். அவர் அடிமையாக இருந்தபோது தாழ்மையுள்ளவராகவும், தனது நற்குணத்தில் நிலைத்தன்மையைப் பேணுபவராகவும், சிறையில் இருந்தபோது கனிவானவராகவும் இருந்தார். அவர் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதில் ஞானமுள்ளவராகவும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் கவனமாகவும் இருந்தார். செழிப்பு மிகுந்த காலங்களில் அவர் பொறுப்புள்ளவராகவும், பஞ்ச காலங்களில், நேர்மையானவராகவும் இருந்தார். அவர் எல்லாவற்றையும் ஒழுங்கான முறையில் செய்து, சரியான நேரத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, தனது தீர்க்கமான தலைமைத்துவத்தின் மூலம் தன் மக்களுக்கு நீதியை நிலைநாட்டினார்.

113. யோபு, தான் நன்றாக வாழ்ந்தபோதும் சரி, கடினமான காலங்களைச் சந்தித்தபோதும் சரி, குற்றமற்றவராகவும், பொறுமையுள்ளவராகவும், தேவனுக்குப் பிரியமானவராகவும், உகந்தவராகவும் நிலைத்திருந்தார். இதனால் வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்த போதும் அவரால் ஆறுதலைக் காண முடிந்தது.

114. தாவீது கூட போரில் வல்லவராகவும், கடினமான காலங்களில் பொறுமையாளராகவும், எருசலேமில் சமாதானமுள்ளவராகவும், வெற்றி பெற்றபோது இரக்கமுள்ளவராகவும், பாவம் செய்து பின்னர் மனந்திரும்பியவராகவும், தன் முதுமையில் ஞானமுள்ளவராகவும் இருந்தார். அவர் நல்ல விவேகத்துடன் செயல்பட்டு, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டார். பிற்காலங்களின் பயன்பாட்டுக்காக இந்த விஷயங்களை அவர் பாடல்களில் எழுதி வைத்தார்; ஆகவே, தன் வாழ்வின் மூலமாகவும், தன் பாடல்கள் தந்த ஆழ்ந்த அர்த்தத்தின் மூலமாகவும், அவர் தன் நற்செயல்களை எடுத்துரைக்கும் நித்திய துதிப் பாடல்களைக் கடவுளுக்கு அளித்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.

115. இந்த மனிதர்களிடம் பிரதான நற்பண்புகளுடன் கூடிய எந்த முக்கியமான கடமை விடுபட்டிருந்தது? முதலாவதாக, அவர்கள் விவேகத்தைக் காட்டினார்கள். இது உண்மையைக் கண்டறிய உதவுகிறது மற்றும் முழுமையான புரிதலுக்கான விருப்பத்தை உருவாக்குகிறது. இரண்டாவதாக, நீதியை வெளிப்படுத்தினார்கள். இது, ஒவ்வொருவரும் தங்களுக்கு உரியதைப் பெறுவதை உறுதிசெய்கிறது. தங்களுக்குச் சொந்தமில்லாத எதையும் எடுத்துக்கொள்வதில்லை, மேலும் நீதியானது தனது சொந்த நலன்களை விட மற்றவர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மூன்றாவதாக, அவர்கள் மன உறுதியை வெளிப்படுத்தினார்கள். இது மன வலிமை மற்றும் உடல் தைரியம் போன்றவை போர்க்களங்களிலும் அன்றாட வாழ்விலும் தெளிவாகத் தெரிகிறது. இறுதியாக, அவர்கள் தன்னடக்கத்தைப் பின்பற்றினார்கள். இது, நிச்சயம் செய்யப்பட வேண்டும் அல்லது சொல்லப்பட வேண்டும் என்று நாம் நினைக்கும் அனைத்திலும் சரியான முறை மற்றும் ஒழுங்கையும் பேணுகிறது.

அத்தியாயம் 25

மேற்கூறிய நற்பண்புகளைப் பற்றிய விவாதத்துடன் இந்தப் புத்தகம் ஏன் தொடங்கவில்லை என்பதற்கான காரணம் கொடுக்கப் பட்டுள்ளது. அதே நற்பண்புகள் பண்டைய திருச்சபையின் முற்பிதாக்கள் மத்தியிலும் இருந்தன என்பதும் இங்கே சுருக்கமாகக் காட்டப்பட்டுள்ளது.

116. ஒருவேளை, இந்த நான்கு நற்பண்புகளிலிருந்து பல்வேறு வகையான கடமைகள் உருவாவதால், அவை முதலில் விவரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எவராவது கேட்கலாம். ஆனால், ஆரம்பத்திலேயே கடமைக்கு வரையறை கொடுத்துவிட்டு பின்னர் அதை வெவ்வேறு வகைகளாகப் பிரிப்பது வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தோன்றியிருக்கும். நாம் செயற்கையானவற்றைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக எம் முற்பிதாக்களின் எடுத்துக் காட்டுகளை முன்வைத்துள்ளோம். இந்த எடுத்துக்காட்டுகள் நிச்சயமாக நமக்குத் தெளிவைத் தருவதோடு, நமது விவாதங்களில் எவ்விதத் தந்திரமான விளக்கங்களுக்கும் இடமளிக்காது. எனவே, முற்பிதாக்களின் வாழ்க்கையை வெறும் புத்திசாலித்தனமான மற்றும் தந்திரமான செயல்களின் தொகுப்பாகக் கருதாமல், நற்பண்புகளின் பிரதிபலிப்பாகப் பயன்படுத்துவோம். அவர்களைப் பற்றிப் பேசுவதில் உள்ள சாமர்த்தியத்தை மட்டும் காட்டாமல் அவர்களின் வழியைப் பின்பற்றுவதில் நாம் அவர்களுக்கு உரித்தான கௌரவத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.

117. பரிசுத்த ஆபிரகாமிடம் விவேகமே மிக முக்கியமான பண்பாக இருந்தது. வேதாகமம் கூறும் போது, “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்; தேவன் அவனது நம்பிக்கையை நீதியான காரியமாக எண்ணினார்” என்கிறது ஆதியாகமம் 15:6 தேவனை அறியாமல் யாரும் உண்மையான ஞானியாக இருக்க முடியாது. “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்வான்” என்று சங்கீதம் 14:1 சொல்கிறது. ஆனால் ஒரு ஞானி ஒருபோதும் அப்படிச் சொல்லமாட்டார். “ஒருவன் தன் சிருஷ்டிகரைத் தேடாமல், அதற்குப் பதிலாக ஒரு கல்லைத் தன் தந்தை என்று அழைத்தால், அவர் எப்படி ஞானியாக இருக்க முடியும்?” என்று எரேமியா 2:27 இல் வினவுகிறது. மணிக்கேயர்களைப் போல ஒருவர் பிசாசைத் தங்கள் வாழ்வின் ஆதாரமாகக் கருதினால், அவர் எப்படி ஞானியாக இருக்க முடியும்? உண்மையான மற்றும் பரிபூரணமான படைப்பாளரை விட, ஒரு குறைபாடுள்ள படைப்பாளரை அரியுஸ் ஏற்றுக்கொள்ளும்போது ​​அவர் எப்படி ஞானியாக இருந்திருக்கக்கூடும்? நல்ல கடவுளை விட, தீய சக்தியை நம்பத் தலைப்படும்போது ​​மார்சியோனோ அல்லது யூனோமியஸோ எப்படி ஞானிகளாக இருந்திருக்க முடியும்? மேலும், கடவுளுக்குப் பயப்படாத எவரும் எப்படி ஞானியாக இருந்திருக்க முடியும்? சங்கீதம் 111:10-ல் “தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது. தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது. ஞானிகள் கடவுளின் வார்த்தைகளிலிருந்து விலகிச் செல்வதில்லை, மாறாக அவருடைய மகத்துவத்தை உணர்ந்து அவரிடம் நெருங்கி வருகிறார்கள். எனவேதான் அது ஆபிரகாமுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று வேதாகமம் கூறும்போது, ​​அவர் மற்றொரு முக்கியமான நற்பண்பின் கிருபையைப் பெற்றார் என்பதை இங்கே தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

118. கவனமாகவும் ஞானத்தோடும் இருப்பது என்பது உண்மையை அறிவதாகும் என்று நம்மிடையே வாழும் மூப்பர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஆபிரகாம், தாவீது அல்லது சொலமனை விட இதில் சிறந்தவர் எவராக இருக்க முடியும்? நீதி என்பது எல்லா மக்களுக்கும் உரியது என்று அவர்கள் கூறுகிறார்கள். தாவீது பற்றிக் கூறும்போது, அவர் தனது செல்வத்தைப் பகிர்ந்து கொண்டார், ஏழைகளுக்கு உதவினார், அவருடைய நற்செயல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். ஒரு நல்ல மனிதராக இரக்கத்தைக் காட்டினார்; நல்ல மனிதராக உதவிக்கரம் நீட்டினார். வாழ்க்கையின் எல்லா செல்வங்களும் ஞானிகளுக்கும் நல்லவர்களுக்கும் சொந்தமானவை. ஒரு நல்ல மனிதர், அனைவருக்கும் சொந்தமானதை தனக்குரியதாகவும், தனது உடைமைகளை பொதுச் சொத்தாகவும் கருதுகிறார். அப்படிப்பட்டவர் பிறரைக் குறை கூறுவதற்குப் பதிலாகத் தன்னையே குறையாகக் கூறுகிறார். அவர்கள் நீதியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதனால், அவர்கள் தங்களைத் தாங்களே கடுமையாகக் கண்டிப்பதற்குத் தயங்குவதில்லை. மேலும் தங்கள் தவறான செயல்களை மறைப்பதில்லை. ஆபிரகாம் எவ்வளவு நேர்மையாக இருந்தார் என்று பாருங்கள்! ஆதியாகமம் 22:3-ல், ‘தனது முதுமைக் காலத்தில், அவருக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஒரு மகன் இருந்தான்; அந்த மகனைப் பலியிடும்படி தேவன் அவரிடம் கேட்டபோது, ​​அவன் தன் ஒரே மகனாக இருந்தபோதிலும் கூட, அவர் தேவனுடைய கட்டளையை மறுக்கக்கூடாது என்று நினைத்தார்’ என்று கூறுகிறது.

119. இந்த நான்கு நல்ல குணங்களும் ஒரே செயலில் வெளிப்படுவதை இங்கே கவனியுங்கள். கடவுளை நம்புவதும், தன் மகனின் மீதான அன்பை, அவனது படைப்பாளரின் கட்டளைகளுக்கு மேலாக வைக்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமானது. பெற்றுக்கொண்டதைத் திருப்பிக் கொடுப்பதும் நியாயமாகவே இருந்தது. சிந்தனையால் இயற்கையான உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது துணிச்சலாகக் காணப்பட்டது. தந்தை பலியிடப்பட வேண்டியவரை அழைத்துச் சென்றார்; எங்கே என்று மகன் கேட்டான்: அப்போது தந்தையின் உணர்வுகள் சிறிதளவு சோதனைக்கு உள்ளாயின. ஆனால் தோற்கடிக்கப்படவில்லை. மகன் மீண்டும் என் தந்தையே, எங்கே போகிறோம் என்று கேட்டதன் மூலம் தன் தந்தையின் இதயம் இரணமானது. ஆனாலும் கடவுள் மீதான அவரது பக்தியை அது பலவீனப்படுத்தவில்லை. நான்காவது நற்குணமான சுயகட்டுப்பாடும் ஆபிரகாமிடம் இருந்தது. நியாயமாக இருந்ததால், அவன் தன் பக்தியில் சரியான சமநிலையையும், தான் செய்ய வேண்டிய அனைத்திலும் ஒழுங்கையும் பேணினான். அவ்வாறே, பலிக்குத் தேவையானவற்றைக் கொண்டு வருவதிலும், தீயை மூட்டுவதிலும், தன் மகனை விறகுகளோடு சேர்த்து கட்டுவதிலும், கத்தியைத் தயார் செய்வதிலும், பலியை உரிய வரிசையில் நிறைவேற்றுவதிலும் நான்காவது நற்பண்பு வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறான தேவன் மீது தான் கொண்டிருந்த கீழ்ப்படித்தலின் காரணமாக, அவன் தன் மகனைத் தன்னுடன் வைத்துக்கொள்ளும் வரத்தைப் பெற்றான்.

120. தேவனை நேருக்கு நேர் கண்டு அவரது ஆசீர்வாதத்தைப் பெற்ற பரிசுத்த யாக்கோபின் ஞானத்தை விட மேலான ஞானம் ஏதேனும் உண்டா? என்று ஆதியாகமம் 32:29-30 வினவுகிறது. அத்தோடு, தான் உழைத்ததைத் தன் சகோதரனுடன் பகிர்ந்து, அதை ஒரு வெகுமதியாக அவனுக்கு அளித்ததில் அவருடைய நீதியை விட ஆழமான நீதி உணர்வு வேறு ஏதேனும் இருக்க முடியுமா? என்று ஆதியாகமம் 33:8 கேட்கிறது. தேவனுடன் போராடுவதில் அவரிடம் காணப்பட்ட மன உறுதியை விட தைரியமானது வேறு என்ன இருக்க முடியும்? என்று ஆதியாகமம் 32:24-26 மீண்டும் கேட்கிறது. பழிவாங்குவதற்குப் பதிலாக, யாக்கோபு தன் குமாரத்திக்கு ஏற்பட்ட மானபங்கத்தை மறைப்பதில் அவர் கொண்டிருந்த உறுதி மற்றும் நிதானத்திற்கு ஒப்பிடக்கூடிய நிதானம் வேறு என்ன இருக்க முடியும்? என்று ஆதியாகமம் 34:5 மீண்டும் ஒரு கேள்வியை முன்வைக்கிறது. எதிரிகளை எதிர்கொள்ளும்போது, ​​அவர்கள் தன்மீது விரோதப் போக்கைக் காட்டுவதை விட அவர்களின் நன்மதிப்பைப் பெறுவதே புத்திசாலித்தனம் என்று அவர் நம்பினார்.

121. பேழையை முழுவதுமாக நிர்மாணித்த நோவா எவ்வளவு ஞானம் மிக்கவராக இருந்தார்! என்று ஆதியாகமம் 6:14 கூறுகிறது. நீதியிலும் அவர் சிறந்து விளங்கினார். ஏனெனில், எல்லா மக்களுக்கும் தந்தையாக இருப்பதற்காக அனைவரிடமிருந்தும் காக்கப்பட்டவர் அவர் ஒருவரே. ஏனெனில், அவர் பழைய காலங்களிலிருந்தும் புதிய காலங்களின் தொடக்கத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டார்; மேலும், அவர் தனக்காக அல்லாமல், உலகத்திற்காகவும் பிரபஞ்சத்தின் நன்மைக்காகவும் பிறந்தார். அந்தப் பெருவெள்ளத்தைக் கடந்துவர அவர் எவ்வளவு வலிமையுள்ளவராக இருந்திருக்க வேண்டும்! அதிலிருந்து மீண்டுவர அவர் எவ்வளவு நிதானமுள்ளவராக இருந்திருக்க வேண்டும்! அவர் பேழைக்குள் சென்றபோது, ​​அந்த நேரத்தை எவ்வளவு அமைதியாகக் கழித்திருக்கக்கூடும்! அவர் காகத்தையும் புறாவையும் அனுப்பிய போதும், அவற்றை மீண்டும் அழைத்துக்கொண்டபோதும், பேழையை விட்டு வெளியேறத் தீர்மானித்தபோதும், அந்த வாய்ப்புகளை அவர் எவ்வளவு அமைதியுடனும் நிதானத்துடனும் பயன்படுத்தியிருக்கக்கூடும்!

அத்தியாயம் 26

உண்மையைத் தேடிக் கண்டடைவதில் தத்துவஞானிகள் தங்கள் சொந்த விதிகளைப் புறக்கணித்துள்ளனர். இருப்பினும், மோயீசன் அவர்களை விட ஞானம் மிக்கவராக இருந்தார். ஞானம் விலைமதிப்பற்றதாக இருப்பதால் அதை அடைவதற்கு நாம் அவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும். இதைத் தொடர இயற்கை நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது.

122. உண்மையைத் தேடும்போது, ​​எது சரியானது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. நாம் உண்மையை மிகவும் கவனமாகத் தேட வேண்டும். நாம் பொய்களை உண்மை என்று கூறக்கூடாது, உண்மையை மறைக்கக்கூடாது, பயனற்ற, சிக்கலான அல்லது நிச்சயமற்ற விஷயங்கள் மனதை ஆட்கொள்ள விடக்கூடாது. மனிதர்களே உருவாக்கிய மரத்தால் செய்யப்பட்ட ஒரு உருவத்தை வணங்குவதை விட பொருத்தமற்றது எதுவாக இருக்கமுடியும்? அவர்களுக்குப் பிடித்தமான கணிதம் மற்றும் நட்சத்திரங்கள் போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதும், விண்வெளிக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை அளவிடுவதும், வானத்தையும் பூமியையும் எண்களால் வரையறுப்பதும், நம்மைக் காப்பாற்றும் சக்தியைப் புறக்கணிப்பதும், தவறான விடயங்களைத் தேடுவதிலும் காணப்படும் அறியாமையை விடப் பெரிய அறியாமை வேறு என்ன இருக்க முடியும்?

123. அப்போஸ்தலர் பணிகள் 7:22 எகிப்து குறித்த அறிவு மற்றும் நுணுக்கம் போன்ற அனைத்தையும் அறிந்திருந்தும், மோயீசன் அவற்றை விரும்பவில்லை என்றும், அந்த வகையான அறிவு உதவாதது மற்றும் முட்டாள்தனமானது என்று நினைத்தார் என்றும் கூறுகிறது. அவற்றை விட்டு விலகி, அவர் தன் முழு மனதுடனும் விருப்பத்தோடும் தேவனைத் தேடினார். இதுபற்றி யாத்திராகமம் 3:4 கூறும்போது, “புதரைப் பார்ப்பதற்கு மோயீசன் வந்துகொண்டிருப்பதை கர்த்தர் கண்ணுற்று, புதரிலிருந்து, “மோயீசனே! மோயீசனே” என்று அழைத்தார். மோயீசனும் “நான் இங்கே இருக்கிறேன்” என்றான். இதன் மூலம் மோயீசன் தேவனின் குரலைக் கேட்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார். ஆகவே, தேவனால் போதிக்கப்பட்டவரும், தன் செயல்களின் வலிமையால் எகிப்து பற்றிய அறிவு நுணுக்கம் மற்றும் அவர்களுடைய திறமையின் சக்தி அனைத்தையும் பயனற்றதாக்கியவருமான அவரை விட புத்திசாலியானவர் எவர் இருக்க முடியும்? தனக்குத் தெரியாத விஷயங்கள் தெரிந்தவை தான் என்று அவர் இறுமாப்பாக நினைக்கவில்லை, அதனால் அவற்றை உடனடியாக ஏற்றுக்கொள்ள வில்லை. ஆயினும் இந்தச் சிந்தனையாளர்கள் ஒன்றும் அறியாத ஒரு சிலையைப் புகழ்வதும், அதனிடம் உதவி கேட்பதும் இயற்கைக்கு எதிரானது என்றோ, தங்களுக்கு அவமானகரமானது என்றோ நினைக்காவிட்டாலும், மேலே கூறப்பட்ட வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ள, இயற்கையானதும் நல்லது என்று கருதப்பட்ட இந்த இரண்டு விஷயங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று நமக்குச் சொல்கிறார்கள்.

124. ஞானம் எனும் நற்பண்பு எவ்வளவு உயர்ந்ததோ, அவ்வளவு அதிகமாக நாம் அதை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்று நான் கூறுகிறேன். இயற்கைக்கு முரணான, இழிவான அல்லது பொருத்தமற்ற எண்ணங்கள் எம் மனதில் தோன்றாமல் இருக்க வேண்டுமாயின், நாம் விஷயங்களை ஆராய்வதற்காக நேரம் மற்றும் அவதானம் ஆகிய இரண்டு விடயங்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பகுத்தறியும் திறன், விடயங்களின் மூலங்களை ஆராயும் திறன் மற்றும் நமது வாழ்வின் படைப்பாளரைத் தேடும் ஆற்றல் ஆகியவற்றைப் பார்க்கையில், மனிதர்களை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம் வேறு எதுவும் இல்லை என்று சொல்லலாம். நமது வாழ்வும் மரணமும் அவர் கரங்களில் தான் தங்கி உள்ளன; அவர் ஒரு சிறு அசைவால் இந்த உலகை ஆளக்கூடியவர். நமது செயல்களை அவரிடம் நியாயப்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிவோம். எதுவும் அவரது கவனத்திலிருந்து தப்புவதில்லை, தகுதியற்ற செயல்கள் அவருக்கு வெறுப்பைத் தரும் அதேவேளை, நற்செயல்கள் அவருக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இவற்றைக்கொண்டு பார்க்கும்போது, அவர் நம்மை நியாயந்தீர்ப்பார் என்ற நம்பிக்கையை விட ஒரு நல்ல வாழ்க்கைக்கு வேறு எதுவும் அனுசரணை புரிவதில்லை.

125. அப்படியானால், எல்லா மக்களும் இயல்பாகவே உண்மையைக் கண்டறிய விரும்புகிறார்கள். இது நம்மை அறிவைப் பெறவும் கற்கவும் தூண்டுகிறது. மேலும் அவற்றைத் தேடவும் வைக்கிறது. இதைச் சிறப்பாகச் செய்வது மக்களுக்கு முக்கியமானதாகத் தோன்றானாலும், ஒரு சிலரே அந்த இலக்கை அடைகிறார்கள். இந்தச் சிலர் தான் ஆழ்ந்த சிந்தனை மற்றும் கவனமான பரிசீலனையின் மூலம் ஒரு மகிழ்ச்சியான மற்றும் நல்ல வாழ்க்கையை அடையவும், அதற்கேற்ப செயல்படவும் கடினமாக உழைக்கிறார்கள். ஏனெனில், மத்தேயு 7:21-ல் இயேசு, “என்னை நோக்கி: கர்த்தரே, கர்த்தரே, என்று சொல்லுகிற யாவரும் பரலோக இராச்சியத்துக்குள் பிரவேசிப்பதில்லை; பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தைச் செய்கிறவனே பரலோக இராச்சியத்துக்குள் பிரவேசிப்பான்” என்று கூறினார். அறிவை ஏற்றுக்கொண்டபோதிலும், அதன்படி செயல்படாமல் இருப்பதால் என்ன பயன்? ஆக, அதற்கு வேறு ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

அத்தியாயம் 27

கடமையின் முதல் ஆதாரங்கள் என்பன கவனமான சிந்தனை மற்றும் விவேகம் போன்றவை தான். அது மேலும் மூன்று நற்பண்புகளுக்கு வழிவகுக்கிறது. இந்த நற்பண்புகள் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன, அவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது.

126. அப்படியானால், கடமைக்கான முதல் காரணம் விவேகம் என்பதாகும். ஏனெனில், படைத்தவருக்கு உங்கள் முழு வழிபாட்டையும் மரியாதையையும் செலுத்துவதை விட மேலான கடமை வேறு என்ன இருக்கிறது? இருப்பினும், இந்தக் காரணம் ஏனைய நல்ல குணங்களுக்கும் வழிவகுக்கிறது. விவேகம் இல்லாமல் நியாயம் இருக்க முடியாது, ஏனெனில் ஒரு காரியம் நியாயமானதா அல்லது நியாயமற்றதா என்பதைப் பார்க்க நல்ல நுணுக்கமும் விவேகமும் வேண்டும். இரு தரப்பிலும் ஏற்படக்கூடிய ஒரு தவறு கூட மிகவும் கடுமையான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். ஏனெனில், நியாயஸ்தன் ஒருவனை நியாயமற்றவன் என்றோ, நியாயமற்றவன் ஒருவனை நியாயஸ்தன் என்றோ சொல்பவன் கடவுளால் கண்டிக்கப்படுகிறான். கயவர்களுக்கு நியாயம் ஏன் பெருகுகிறது என்று கேட்கிறார் மன்னர் சொலமன். மறுபுறம், நியாயம் இல்லாத இடத்தில் விவேகம் இருக்க முடியாது, ஏனெனில் கடவுளை வழிபடுவதே புரிதலின் தொடக்கமாகும். உலக ஞானிகளிடையே நிலவும் இது ஒரு புதிய கருத்து என்பதைவிட, இரவல் வாங்கப்பட்ட கருத்து என்பதை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில் வழிபாடுதான் எல்லா நற்குணங்களுக்கும் அடிப்படையாகும்.

127. ஆனால், நீதிக்கான மரியாதை முதலில் கடவுளையே சாரும்; இரண்டாவதாக, உங்கள் நாட்டையும், மூன்றாவதாக உங்கள் பெற்றோரையும், நான்காவதும் இறுதியானதுமாக, அனைவரை நோக்கியும் செலுத்தப்பட வேண்டும். இதையும் இயற்கை தான் நமக்குக் கற்பிக்கிறது. வாழ்வின் ஆரம்பப் பருவத்தில் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கும் போது, ​​வாழ்வைக் கடவுளின் கொடையாகப் போற்றுகிறோம்; நம் நாட்டையும் பெற்றோரையுமே நேசிக்கிறோம்; இறுதியாக, நாம் எம்முடன் இருப்பதில் மகிழ்ச்சியடையும் நம் நண்பர்களையும் ஏனையோரையும் நேசிக்கிறோம். இங்கிருந்துதான் உண்மையான அன்பு பிறக்கிறது; அது தன்னைவிடப் பிறரை மேலாகக் கருதுவதோடு, எப்போதும் தன்னலத்தைத் தேடுவதில்லை; இதுவே நீதியின் சாரமாகும்.

128. அனைத்து உயிரினங்களுக்கும் முதலாவதாக, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதும், தீங்கிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதும், நன்மைக்காக உழைப்பதும் இயற்கையான உள்ளுணர்வாகும். அவை உணவைத் தேடி உண்டு வாழ்கின்றன; அதன் மூலம் பெறும் சக்தியைக்கொண்டு ஆபத்துகள், மோசமான வானிலை மற்றும் சூரியனின் வெப்பம் போன்றவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன—இவை அனைத்தும் அவற்றின் விவேகத்தையே காட்டுகின்றன. இரண்டாவதாக, எல்லா வகையான உயிரினங்களும் இயல்பாகவே கூட்டம் கூட்டமாகச் சேரவே முனைகின்றன என்பதை நாம் காண்கிறோம்; முதலில் தங்கள் இனத்தைச் சேர்ந்தவற்றுடனும், பின்னர் மற்றவற்றுடனும் சேர்கின்றன. எனவே, காளைகள் மந்தைகளாகவும், குதிரைகள் கூட்டமாகவும், குறிப்பாக ஒரே மாதிரியான உயிரினங்கள் ஒரு அணியாகவும், மான்கள் மற்றைய மான்களுடனும், பெரும்பாலும் மனிதர்கள் மத்தியிலும் இருப்பதில் மகிழ்ச்சியடைவதை நாம் காண்கிறோம். குட்டிகளை ஈனுவதற்கான அவற்றின் ஆசை, பெருகவிருக்கும் அவற்றின் சந்ததிகள் அல்லது அவற்றின் உணர்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இன்று மட்டும் திண்ணம்; இவற்றில் நீதியின் சாயல் தெளிவாகத் தெரிகிறது என்பதை மறுக்க முடியாது.

129. ஆகவே இவையும் இவற்றின் மற்றைய நற்பண்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது தெளிவாகிறது. ஏனெனில், போர்க்களத்தில் ஒருவன் தன் நாட்டைத் தாக்குபவர்களிடமிருந்து பாதுகாக்கும் போதும், அல்லது வீட்டில் பலவீனர்களைப் பாதுகாக்கும் போதும், அல்லது நண்பர்களைத் திருடர்களிடமிருந்து பாதுகாக்கும் அவனது வீரம் போன்ற நேர்மையால் நிறைந்தவை. மேலும், தற்காத்துக் கொள்ளவும், உதவி செய்யவும், சரியான நேரத்தையும் இடத்தையும் பொருத்தமான தருணங்களில் பயன்படுத்தவும் கொண்டிருக்கும் அறிவது போன்றன நல்ல பகுத்தறிவு மற்றும் விவேகத்தின் ஒரு பகுதியாகும். மேலும், நல்ல விவேகம் இல்லாமல் சுயகட்டுப்பாட்டால் மட்டுமே சரியான சமநிலையைப் பேண முடியாது. பொருத்தமான சந்தர்ப்பத்தை அறிந்து, சரியானதற்கேற்பப் பிரதிபலன் செய்வது நீதியின் ஒரு பகுதியாகும். இவை அனைத்திலும், நாம் விரும்பியதைச் செய்வதற்கு தாராள மனப்பான்மையும், பெருந்தன்மையும் மன வலிமையும், பல சமயங்களில் உடல் வலிமையும் இன்றியமையாதனவாக இருக்கின்றன.

அத்தியாயம் 28

ஒரு சமூகமானது நேர்மை மற்றும் கருணை போன்ற பண்புகளுடன் செழித்து வளர்கிறது. நேர்மையின் இரு பகுதிகளை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை: பழிவாங்குதல் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் ஆகியவையே அவை. சொத்துக்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் ஒருவருக்கொருவர் உதவுவது குறித்து ஞானம் மிகுந்த சிந்தனையாளர்கள் கூறுவது மறை நூல்களிலிருந்து பெறப்பட்டதாகும். நீதியின் மகத்தான மகிமை சில சமயங்களில் அதை அடைவதற்கான வழியைத் தடுக்கக்கூடும்.

130. நீதி என்பது மனிதகுல மற்றும் பரந்த சமூகத்தைப் பற்றியது. சமூகத்தை ஒன்றுபடுத்தி வைத்திருப்பதை இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம் — நீதி மற்றும் நல்லெண்ணம், இது தாராள மனப்பான்மை மற்றும் கருணை என்றும் அறியப்படுகிறது. இவ்விரண்டில் நீதியே மிகவும் உன்னதமானது என்றும், தாராள மனப்பான்மை மிகவும் இனிமையானது என்றும் நான் காண்கிறேன். ஒன்று தீர்ப்பை வழங்குகிறது, மற்றொன்று நன்மையை வெளிப்படுத்துகிறது.

131. இருப்பினும், தத்துவஞானிகள் நீதியின் பங்கு என்று கருதும் விடயங்களை நாம் உள்ளடக்கவில்லை. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளால் நிர்ப்பந்திக்கப்படும் வரை, எவரையும் காயப்படுத்தாமல் இருப்பதே நீதியின் முக்கியக் கருத்து என்று அவர்கள் கூறுகிறார்கள். நற்செய்தியின் போதனைகள் இந்தக் கருத்தை நிராகரிக்கின்றன. லூக்கா 9:56-ல், கருணையை அளிக்க வந்தவரும், தீங்கு விளைவிக்கும் நோக்கம் அற்றவருமான மானிட குமாரனின் மகிமை நமக்குள்ளே இருக்க வேண்டும் என்று திருமறை கூறுகிறது.

132. பொதுச் சொத்தை பொதுவானதாகவும், தனியார் சொத்தை தனியார் சொத்தாகவும் கருதுவது நியாயமானதும் நீதியுடன் இசைந்து போக்கக்கூடியது என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் உண்மையாகச் சொன்னால், அது இயற்கையோடு கூட ஒத்துப் போவதில்லை, ஏனெனில் இயற்கை எல்லாவற்றையும் அனைவரும் பயன்படுத்துவதற்காகவே வழங்கியுள்ளது. அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், பூமி அனைவருக்கும் சொந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடவுள் எல்லாவற்றையும் இயக்கத்தில் வைத்துள்ளார். ஆகவே, இயற்கை அனைவருக்கும் ஒரு பொது உரிமையை உறுதிசெய்துள்ளது. ஆனால் பேராசை அதை ஒரு சிலருக்கான சிறப்புரிமையாக மாற்றிவிட்டது. மேலும், பூமியில் உற்பத்தி செய்யப்படும் விளைவிக்கப்படும் அனைத்தும் மனிதப் பயன்பாட்டிற்காகவே என்றும், மக்கள் தத்தம் நன்மைக்காகவே வாழ்கிறார்கள் என்றும் ஞானம் மிகுந்த சிந்தனையாளர்கள் (stoics) நம்பினர் என்று நமக்குச் சொல்லப்படுகிறது.

33. ஆனால், பரிசுத்த வேதாகமத்திலிருந்து அன்றி அவர்கள் இத்தகைய எண்ணங்களை எங்கிருந்து பெற்றார்கள்? ஆதியாகமம் 1:26- இல், தேவன் “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னதாக மோயீசன் எழுதியுள்ளார். தாவீதும், “நீர் எல்லாவற்றையும் மனிதனின் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்; சகல ஆடுகளையும் மாடுகளையும், காட்டு மிருகங்களையும், ஆகாயத்திலுள்ள பறவைகளையும், சமுத்திரத்திலுள்ள மீன்களையும்” என்று கூறினார். இவ்வாறு, இந்தத் தத்துவஞானிகள் நமது நூல்களிலிருந்து, அனைத்தும் மனிதனுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டன என்று முடிவுசெய்து, அனைத்தும் மனிதனின் நன்மைக்காகவே படைக்கப்பட்டன என்று நம்பினார்கள்.

134. இந்த மனிதன் மற்ற மக்களுக்காகப் படைக்கப்பட்டான் என்றும் மோயீசனின் புத்தகங்கள் கூறுகின்றன. ஆதியாகமம் 2:18-ல் கூறப்பட்டுள்ளபடி, “தேவனாகிய கர்த்தர், ‘ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்” என்று கூறினார். ஆகையால், அந்த ஆணுக்கு உதவியாக இருக்க அந்தப் பெண் அவனுக்குத் துணையாகக் கொடுக்கப்பட்டாள். ஒருவர் மற்றவருக்கு எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அவள் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டியிருந்தது. மீண்டும், பெண் படைக்கப்படுவதற்கு முன்பு, ஆதியாகமம் 2:20, “படைக்கப்பட்ட அம்மனிதன் அனைத்துப் பிராணிகளுக்கும், ஆகாயத்துப் பறவைகள் அனைத்துக்கும், காட்டு மிருகங்கள் அனைத்துக்கும் பெயர்களை இட்டான். ஆனால் அவனால் தனக்கேற்ற சரியான உதவியாளரைக் (துணையை) கண்டுபிடிக்க முடியவில்லை” என்று ஆதாமைப் பற்றிக் கூறுகிறது. இதற்குக் காரணம், ஒருவரால் வேறு யாரிடமிருந்தும் சரியான உதவியைப் பெற முடியாது. எனவே, ஜீவராசிகள் அனைத்தின் மத்தியிலும் அவனுக்கு ஏற்ற துணையாக ஒருவனோ அல்லது ஒருத்தியோ இருக்கவில்லை. எளிமையாகச் சொல்வதானால் ஒருவனும் அவனுக்கு உதவியாளராக இருக்க முடியவில்லை. இதன் காரணமாக அவனுக்கு உதவ ஒரு பெண் தேடப்பட்டாள்.

135. ஆகவே, கடவுளின் சித்தத்தையும் இயற்கையின் ஒருமைப் பாட்டையும் பின்பற்றி, நாம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும்; நமது கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் போட்டியிட வேண்டும்; நமது முழு பலத்தையும் ஒன்றுதிரட்டி, (திருமறையிலிருந்து மேற்கோள் காட்டுகையில்) அன்பின் நிமித்தம் அல்லது கடமையின் நிமித்தம், பண உதவிகளை அளிப்பதன் வாயிலாக அல்லது ஏதேனும் ஒரு வகையில் செயல்படுவதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்; இவ்வழியில், மனித உறவின் மகிழ்ச்சி நம்மிடையே மேலும் மேலும் சிறப்பாக வளர முடியும். மேலும், ஆபத்து குறித்த அச்சத்தால் எவரும் தங்கள் கடமைகளிலிருந்து பின்வாங்கக் கூடாது. மாறாக, நல்லது, கெட்டது என அனைத்தையும் தங்கள் சொந்தப் பொறுப்பாகக் கருத வேண்டும். புனிதரான மோயீசனைப் போலவே அவர் தன் மக்களுக்காக அச்சமூட்டும் சமர்களை எதிர்கொள்ள அஞ்சவில்லை; வலிமைமிக்க அரசர்களின் ஆயுதங்களைக் கண்டோ அல்லது காட்டுமிராண்டித்தனமான தேசங்களின் கொடுமையைக் கண்டோ அவர் பின்வாங்கவில்லை. தன் மக்களுக்குச் சுதந்திரம் அளிப்பதற்காக அவர் தன் சொந்தப் பாதுகாப்பைத் துச்சமாக மதித்திருந்தார்.

136. நீதியின் மகிமை மிகவும் மகத்தானது, ஏனெனில் அது தன்னலத்தை விட அதிகமாக பிறரின் நன்மைக்காகவே தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது. நீதி மக்களை ஒன்றுபடுத்தவும் ஒன்றிணைக்கவும் உதவுகிறது. நீதி மிகவும் முக்கியமானது, ஏனெனில் அது எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மேலும் உதவியையும் நிதியையும் வழங்குவதன் மூலம் மற்றவர்களுக்கு உதவவும் வல்லது. நீதி உதவ மறுப்பதில்லை என்பதோடு, மற்றவர்களுக்காக ஆபத்துகளையும் ஏற்கிறது.

137. பேராசை அத்தகைய நற்பண்பைப் பலவீனப்படுத்தி, அதை வலிமையற்றதாக மாற்றாத வரையில், யார் தான் மகிழ்ச்சியுடன் இந்த நற்பண்பின் உச்சத்தை அடைந்து, அதைத் தக்கவைத்துக் கொள்ளத் தயங்குவார்கள்? ஏனெனில், நாம் மேலும் பல பொருட்களைப் பெறவும், பணத்தைச் சேமிக்கவும், நமக்காகப் புதிய நிலபுலன்களை கொள்வனவு செய்யவும், அனைவரிலும் பார்க்க பெரும் செல்வந்தர்களாக இருக்கவும் விரும்பும் வரை, நாம் நேர்மையின் வடிவத்தை ஒதுக்கிவைத்து விட்டு, அனைவரது முன்னிலையில் நன்மை செய்யும் வரத்தை இழந்து விடுகிறோம். அப்படியானால் தனக்குத் தேவையானதை மற்றவரிடமிருந்து பறிக்க முயற்சிப்பவன் எப்படி நேர்மையுள்ளவனாக இருக்க முடியும்?

138. அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை, நீதியின் பரிபூரண வலிமையையும் அழகையும் பலவீனப்படுத்துகிறது. ஏனெனில், பிறரைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவன் அவர்களுக்காக எப்படிப் பேச முடியும்? மேலும், அதிகாரத்தை விரும்பி, சுதந்திரத்தைப் பறிக்க விரும்பும் ஒருவன் பலவான்களிடமிருந்து பலவீனர்களை எப்படிப் பாதுகாக்க முடியும்?

அத்தியாயம் 29

யுத்தம் நடைபெறும் சமயங்களிலும் கூட, எதிரிகள் மத்தியில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். மோயீசன் மற்றும் எலிசாவின் உதாரணங்கள் மூலம் இது காட்டப்படுகிறது. பண்டைய எழுத்தாளர்கள் தங்கள் எதிரிகளை கனிவான சொற்களால் அழைக்க எபிரேயர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர். இறுதியாக, நீதியின் அடித்தளம் விசுவாசத்தில் நிலைபெற்றுள்ளது, அதன் சமநிலைத்தன்மை திருச்சபையில் பரிபூரணமாக உள்ளது.

139. நீதி எவ்வளவு முக்கியமானது என்பதை, அது எல்லா இடங்கள், மக்கள், காலங்கள் போன்றவற்றில் அதன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது என்ற உண்மையிலிருந்து நாம் அறிய முடியும். எதிரிகளை சந்திக்கும் போது கூட நீதியைக் கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக, அவர்களுடன் சண்டையிட ஒரு நாளோ இடமோ நிர்ணயிக்கப்பட்டு விட்டால், அந்த நேரத்திற்கு முன்பே அந்த இடத்தைக் கைப்பற்றுவதோ அல்லது தன்னிச்சையாக போரைத் தொடங்குவதோ நீதிக்கு விரோதமாகும். ஒரு போரில் ஒருவர் கடுமையான மோதலினாலோ, அபரிமிதமான திறமையினாலோ அல்லது தற்செயலாகவோ தோற்கடிக்கப்படுகிறார் எனும்போது அங்கே சில வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கொடிய எதிரிகள் மீதும், பொய்யர்கள் மீதும், பெரும் தீமைகளைச் செய்தவர்கள் மீதும் ஆழமான பழிவாங்கல் மேற்கொள்ளப்படுகிறது; மீதியானியர்கள் விஷயத்தில் கூட இதுவே நடந்தது என்று எண்ணாகமம் 31 கூறுகிறது. அவர்கள் தங்கள் பெண்கள் மூலமாக யூத மக்களில் பலரை பாவத்திற்குள் இட்டுச் சென்றனர். இது நம் முன்னோர்களுக்கு எதிராக கர்த்தரின் கோபத்தைத் தூண்டியது. இதன் விளைவாக, மோயீசன் வெற்றி பெற்றபோது ​​அவர் அவர்களில் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு மாறாக, யோசுவா, நம் முன்னோர்களை ஏமாற்றிய கிபியோனியர்களுடன் போரிடுவதற்குப் பதிலாக அவர்களைத் தாக்காமல், அவர்கள் மீது அடிமைத்தனச் சட்டத்தை விதித்தார் என்று யோசுவா 9 கூறுகிறது. எலிசாவும், இஸ்ரவேலின் அரசனும் சிரியர்களைக் கொல்ல முனைந்தபோது, ​​அவரை அனுமதிக்காமல் தவிர்த்தார். அவர்கள் தன்னை முற்றுகையிட்டபோது, ​வழி கண்டுபிடிக்க முடியாதபடி உடனடியாக அவர்களைக் குருடாக்கி, அவர்களை நகரத்திற்குள் கொண்டுவந்தார். அவர், உங்கள் ஆயுதங்களால் உங்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு எதிராகத் தீங்கு செய்யக்கூடாது. அவர்கள் வீடு திரும்புவதற்காக அவர்களுக்கு உணவும் பானமும் அளியுங்கள். இந்தக் கருணையால் உந்தப்பட்டு, தாங்கள் பெற்ற நல்லெண்ணத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறான காரணங்களால் (நாம் வாசிப்பது போல) சிரியாவின் படைகள் இஸ்ரேல் தேசத்தின் மீது படையெடுப்பதை நிறுத்திவிட்டன.

140. போர்க்காலத்திலும் கூட நீதி பின்பற்றப்பட வேண்டும் எனும்போது, சமாதான காலத்தில் நாம் அதை இன்னும் அதிகமாகப் பின்பற்ற வேண்டும். தன்னைக் கைது செய்ய வந்தவர்களிடம் தீர்க்கதரிசி அத்தகைய கருணையைக் காட்டினார். எலிசா தனது எல்லாத் திட்டங்களையும் இரகசிய சந்திப்புகளையும் வெளிப்படுத்திவிட்டார் என்பதை சிரியாவின் அரசன் அறிந்திருந்ததால், அவரை மறைத்து வைத்து, பதுங்கியிருந்து தாக்குவதற்காகத் தன் வீரர்களை அனுப்பினான் என்று சொல்லப்படுகிறது. தீர்க்கதரிசியின் உதவியாளரான கேகாசி அந்த வீரர்களைக் கண்டு மிகவும் பயந்தான். ஆனால் தீர்க்கதரிசி அவனிடம், “பயப்படாதே, அவர்கள் தரப்பைவிட நம் பக்கம் அதிக வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார். தீர்க்கதரிசி தன் உதவியாளரின் கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று ஜெபித்தவுடன் ​​அவை திறக்கப்பட்டன. அப்பொழுது எலிசாவைச் சூழ்ந்திருந்த குதிரைகளாலும் இரதங்களாலும் முழு மலையும் நிறைந்திருப்பதை கேகாசி கண்டான். அவர்கள் அவரை நோக்கி இறங்கி வந்தபோது ​​தீர்க்கதரிசி, “தேவனே, சிரியாவின் இராணுவத்தைக் குருடாக்குவீராக” என்று வேண்டினார். அந்த ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. ​​அவர் சிரியர்களிடம், “என்னைப் பின்தொடருங்கள், நீங்கள் தேடுகிற மனிதனிடம் நான் உங்களை அழைத்துச் செல்வேன்” என்று சொன்னார். அப்பொழுது தாங்கள் பிடிக்கத் தேடிக் கொண்டிருந்த எலிசாவை அவர்கள் கண்டார்கள்; ஆனால் கண்டும், அவர்களால் அவரைக் பிடிக்க முடியவில்லை. போர்க்களத்திலும்கூட விசுவாசமும் நீதியும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதையும் விசுவாசம் மீறப்பட்டால் அது நீதிக்கு அப்பாற்பட்டது என்பதையும் இது காட்டுகிறது.

141. அவ்வாறே, முற்காலத்தவர்கள் தங்கள் பகைவர்களுக்கு மென்மையான பெயரைச் சூட்டி, அவர்களை அந்நியர்கள் என்று அழைத்தனர். ஏனவே முற்கால வழக்கப்படி, பகைவர்கள் அந்நியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதையும் அவர்கள் நமது இலக்கணங்களில் இருந்தே பெற்றனர் என்று நாம் கூறலாம்; ஏனெனில், எபிரேயர்கள் தங்கள் பகைவர்களை ‘அலோஃபில்லோஸ்’ (Allophylus) என்று அழைத்தனர், அதாவது, இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கும்போது, ​​’அலியனிகேனாஸ்’ (alienigenas) அதாவது, வேற்று இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள்படும். முதலாம் இராஜாக்களின் புத்தகத்தில், அக்காலத்தில் வேற்று இனத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேலுக்கு எதிராகப் போருக்குத் தயாரானார்கள் என்று கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

142. ஆகையால், நீதியின் அஸ்திவாரம் என்பது விசுவாசமே; ஏனெனில், நீதிமான்களின் மனங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கின்றன. மேலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஒரு நீதியாளர் நம்பிக்கையின் மீது நேர்மையைக் கட்டியெழுப்புகிறார். ஏனெனில் அவர்கள் உண்மையைக் கூறும்போது அவர்களின் நேர்மை தெளிவாகிறது. ஆகவே ஏசாயா 28:16 இன் மூலமாக, கர்த்தராகிய ஆண்டவர், “நான் சீயோனில் அத்திவாரமாக ஒரு கல்லை வைப்பேன். இது ஒரு விலை உயர்ந்த கல்லாக இருக்கும். மிக முக்கியமான கல்லின் மேலேயே எல்லாம் கட்டப்படும். அக்கல்லின்மேல் நம்பிக்கை வைக்கிற எவனும் ஏமாந்து போக மாட்டான்” என்று கூறுகிறார். இதன் பொருள், கிறிஸ்துவே திருச்சபையின் அத்திவாரம் என்பதாகும். ஏனெனில், கிறிஸ்துவே அனைவரின் விசுவாசத்திற்கும் உரியவர். ஆனால் திருச்சபையோ நீதியின் வெளிவடிவம் போன்றது. அது அனைவரினதும் பொதுவான உரிமையாக இருக்கிறது. அது அனைவருடைய நலனுக்காகவும் பொதுவாக ஜெபிப்பதோடு, அனைவருடைய நலனுக்காகவும் பொதுவாகச் செயல்படுகிறது. அனைவரின் துன்பங்களிலும் அதுவே சோதனைக்குள்ளாகிறது. ஆகவே, தன் சொந்த ஆசைகளைத் துறப்பவன் மெய்யாகவே ஒரு நீதிவழுவா மனிதனாக இருப்பதோடு, மெய்யாகவே கிறிஸ்துவுக்குத் தகுதியானவனாக இருக்கிறான். இந்தக் காரணத்திற்காகத்தான் பவுல் கிறிஸ்துவை திருச்சபையின் அடித்தளம் என்று ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் 1 கொரிந்தியர் 3:11 இல், “அத்திவாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறொரு அத்திவாரத்தை எவராலும் அமைக்க முடியாது. ஏனென்றால் ஏற்கெனவே கட்டப்பட்ட அத்திவாரம் தான் இயேசு கிறிஸ்து” என்று கூறுகிறார். ஆகவே, நமது விசுவாசம் தான் அடித்தளம். நமது செயல்கள் தவறாக இருந்தால் அநீதியும் அவை சரியாக இருந்தால் நியாயமும் கிடைக்கிறது.

அத்தியாயம் 30

கருணை மற்றும் அதன் முக்கிய விழுமியமான நல்லெண்ணம், தாராள மனப்பான்மை பற்றி விவாதிக்கிறது. இந்த விழுமியங்கள் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதையும், ஒருவர் பாராட்டத்தக்க வகையில் தாராள மனப்பான்மையுடன் இருப்பதற்கு மேலும் என்ன தேவை என்பதையும் இது விளக்குகிறது.

143. இப்போது நாம் கருணையைப் பற்றிப் பேசலாம், அது நல்மனம் மற்றும் தாராள மனப்பான்மை என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. கருணை பரிபூரணமாக இருக்க வேண்டுமானால், அது இந்த இரண்டு குணங்களையும் கொண்டிருக்க வேண்டும். மற்றவர்களுக்கு நல்ல காரியங்களை செய்ய விரும்பினால் மட்டும் போதாது; அவர்களுக்கு உதவ நாம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். “ஒவ்வொருவனும், தன் இதயத்தில் எதைக் கொடுக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறானோ அதைக் கொடுப்பானாக. கொடுப்பது குறித்து எவருக்காவது வருத்தம் ஏற்படுமானால் அவன் கொடுக்காமலேயே இருக்கட்டும். கட்டாயத்தின் பேரில் எவரும் கொடுக்க வேண்டியதில்லை. மகிழ்ச்சியோடு கொடுப்பவனையே தேவன் அதிகமாக நேசிக்கிறார்” என்று 2 கொரிந்தியர் 9:7 கூறுகிறது. நாம் ஒரு கசப்பான மனப்பான்மையுடன் உதவினால், அதன் மூலம் நமக்கு என்ன வெகுமதி கிடைக்கும்? மற்றுமோர் சந்தர்ப்பத்தில், 1 கொரிந்தியர் 9:17 இல், “என் இஷ்டத்துக்குத் தகுந்தபடி நற்செய்தியைப் போதித்தால், நான் வெகுமதிக்குத் தகுதியுடையவனாக இருப்பேன்” என்று அப்போஸ்தலர் கூறுகிறார். நான் மனமுவந்து செயல்பட்டால், நான் வெகுமதி பெறுகிறேன்; நான் மனமில்லாமல் செயல்பட்டால், நான் முழுமையாக வெகுமதிகுத் தகுதியானவன் அல்ல என்பதே இதன் சாராம்சம். இதுபோன்ற தாராள மனப்பான்மையுடன் செயற்படுவது பற்றி நற்செய்தி நமக்கு பல பாடங்களைக் கற்பித்துள்ளது.

ஆகவே, நன்மை செய்ய விரும்புவதும், உதவி செய்ய வேண்டும், தீங்கு செய்யக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடன், தயக்கமின்றிக் கொடுப்பதும் ஒரு மகோன்னத செயலாகும். ஒரு செல்வந்தன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகப் பணம் கொடுப்பதோ, அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்த ஒருவன் தன் துரோகத்திற்குப் பரிகாரம் தேடுவதற்காகப் பணம் கொடுப்பதோ நமது கடமை என்று நாம் நினைத்தால், அது ஒரு இரக்கமான செயலாக இருக்காது; ஏனெனில், அதன் பின்னால் எந்த நல்லெண்ணமும் இருப்பதில்லை. ஒருவர் தன் நாட்டிற்கு எதிராகச் சதித்திட்டம் தீட்ட உதவும் பொருட்டோ, அல்லது நமது அனுசரணையில் தீயவர்களைத் திரட்டி ஒரு தேவாலயத்தைத் தாக்க முயற்சிப்பதற்கு நாம் பணம் கொடுத்தால், உதவுவதற்குப் பதிலாக நாம் தீங்கு விளைவிப்போருக்கு ஆதரவளித்தவர்களாகவே இருப்போம். மேலும், விதவைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் தீங்கு விளைவிப்பவருக்கோ அல்லது அவர்களின் சொத்துக்களைப் பலவந்தமாகப் பறிக்க முயற்சிப்பவருக்கோ உதவுவது எக்காரணம் கொண்டும் தாராள மனப்பான்மையாகத் தோன்றாது.

145. ஒருவருக்குக் கொடுப்பதை அவரிடமிருந்து எடுத்துக்கொள்வதோ, அல்லது நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதித்துவிட்டு அதை நல்ல முறையில் செலவிடலாம் என்று நம்புவதோ தாராள மனப்பான்மையின் அடையாளம் அல்ல. லூக்கா 19:8-ல் வரும் சக்கேயுவைப் போல நாம் செயல்பட வேண்டும்; அவர், கர்த்தரை நோக்கி, “நான் நல்லதைச் செய்ய விரும்புகிறேன். என் செல்வத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பேன். நான் யாரையாவது ஏமாற்றி இருந்தால் அவனுக்கு நான்கு மடங்கு பணத்தைத் திரும்பக் கொடுப்பேன்” என்று கூறினார். நமது தவறுகளுக்கு உண்மையான விசுவாசத்தாலும் கடின உழைப்பாலும் ஈடு செய்ய வேண்டும். நமது கருணை உறுதியான ஒன்றின் மீது அமைந்திருக்க வேண்டும்.

146. முதலாவதாக, நீங்கள் எதையாவது கொடுக்கும்போது உண்மையான கருணையுடன் இருப்பதும், பாசாங்கு செய்யாமல் இருப்பதும் அவசியம். நீங்கள் குறைவாகச் செய்து விட்டு ​​அதிகமாகச் செய்ததாக ஒருபோதும் சொல்லாதீர்கள். எதற்காக அவை பற்றிச் சொல்ல வேண்டும்? பொய் வாக்குறுதியில் வஞ்சகம் மறைந்திருக்கிறது. நாம் விரும்பியதைக் கொடுக்கும் அதிகாரம் நமக்கு உண்டு. வஞ்சகம் அத்திவாரத்தை உடைத்து, பணியை அழித்துவிடுகிறது. அனனியாவும் அவன் மனைவியும் கொல்லப்பட வேண்டும் என்று எண்ணும் அளவுக்கு பேதுரு கோபமடைந்தாரா? அப்போஸ்தலர் 5:11 கூறுவதுபோல், விசுவாசிகள் அனைவரும், இந்தக் காரியங்களைக் குறித்துக் கேட்ட பிற மக்களும் பயத்தால் நிரம்பினர். ஆனால், அப்படி எதுவும் நிச்சயமாக இல்லை. அவர்களுடைய முன்மாதிரியைப் பார்த்து மற்றவர்கள் அழிந்து போகக்கூடாது என்றும், இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

147. கருணை காட்டுவதற்குப் பதிலாக, கொடுத்ததைப் பற்றிப் பெருமை பேசினால் அது உண்மையான தாராள குணம் ஆகாது. உங்கள் உள்மனதின் எண்ணங்கள் நீங்கள் செய்கின்ற எல்லாக் காரியங்களுக்கும் அர்த்தத்தைக் கொடுக்கின்றன. அது உங்களிடமிருந்து எப்படி வெளிப்படுகிறதோ, அப்படியேதான் மற்றவர்களும் அதைப் பார்ப்பார்கள். உங்களுக்கு எவ்வளவு நல்ல நியாயாதிபதி இருக்கிறார் என்று பாருங்கள்! உங்கள் கடமையை எப்படிச் செய்வது என்பது பற்றி அவர் உங்களுடன் பேசுகிறார். முதலில் உங்கள் எண்ணங்களைப் பற்றிக் கேட்கிறார். மத்தேயு 6:3-இல், “உன் வலது கை செய்வதை உன் இடது கை அறியாதிருக்கட்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இது நமது உண்மையான உடல் அவையவங்களைக் குறிக்கவில்லை. மாறாக, “உன்னுடன் உடன்படும் ஒருவனுக்கு, முக்கியமாக உன் சகோதரனுக்குக் கூட, நீ செய்வதைத் தெரியப்படுத்தாதே” என்பதே இதன் பொருள். அப்போதுதான், நிகழ்காலத்தில் புகழைத் தேடி பிற்காலத்தில் உங்கள் நற்செயலுக்கான வெகுமதியை நீங்கள் இழக்க மாட்டீர்கள். ஆனால் உண்மையான தாராள குணம் என்பது, ஒருவன் தான் செய்வதை இரகசியமாக வைத்து, தேவையுள்ளவர்களுக்கு அமைதியாக உதவுவதாகும்; அதுவும் அவர்களுடைய சொந்த வார்த்தைகளால் அல்ல, ஏழைகளின் நன்றியுரைகளால் அவர்கள் புகழப்படுவார்கள்.

148. பரிபூரண தாராள குணம் அதன் நன்னம்பிக்கையாலும், அது உதவும் வழக்காலும், அது காட்டப்படும் நேரத்தாலும் இடத்தாலும் முழுமைபெறுகிறது. இருப்பினும், எவர் ஒருவருக்கு நன்மை செய்யும் வாய்ப்பு கிட்டுகிறதோ, அப்போதெல்லாம் நாம் நன்மை செய்ய வேண்டும். குறிப்பாக தேவனிடம் விசுவாசம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று கலாத்தியர் 6:10 கூறுகிறது. இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், ஒரு விசுவாசி தேவையில் இருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்தாலோ, அல்லது அவன் வசதியற்றவன், பசியுடன் இருக்கிறான், துன்பப்படுகிறான் என்பதை நீங்கள் அறிந்தாலோ, குறிப்பாக அவன் தன் தேவையை குறித்து வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டால், அப்படிப்பட்டவனை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பது ஒரு பெரிய பாவமாகும். அதேபோல, அவனது குடும்ப அங்கத்தவர் ஒருவரது சிறைவாசமோ அல்லது நியாயமற்ற குற்றச்சாட்டோ அவனை நிலைகுலையச்செய்யும் போதும் ​​நீங்கள் அவனுக்கு உதவ முன்வராதது ஒரு பெரிய தவறாகும். அவன் நிரபராதியாய் இருந்தும் சிறைவாசத்தையும், ஏதேனும் ஒரு கடனுக்காக வலியையும் தண்டனையையும் அனுபவிக்க நேர்ந்தால் (ஏனெனில், நாம் அனைவருக்கும் கருணை காட்ட வேண்டும் என்றாலும், ஒரு நிரபராதியான மனிதனுக்கு விசேஷமாகக் கருணை காட்ட வேண்டும்); அவன் கஷ்டமான காலங்களில் உங்களிடமிருந்து அவனுக்கு எவ்வித அனுசரணையும் கிடைக்கவில்லை என்றால்; ஒரு ஆபத்தான நேரத்தில், அவன் மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் போதும், ​​மரணத்தறுவாயில் இருக்கும் ஒரு மனிதனின் உயிரை விட உங்கள் பணம் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது உங்களுக்கு எவ்வளவு பெரிய பாவம்! அதனால்தான் யோபு அழகாகச் சொல்கிறார்: “இறக்கத் தயாராக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வரட்டும்” (யோபு 29:13) என்று.

149. தேவன் எல்லாவற்றையும் அறிந்திருப்பதால், அவர் உண்மையில் பாரபட்சம் காட்டுபவர் அல்ல. நாம் நிச்சயமாக அனைவருக்கும் இரக்கம் காட்ட வேண்டும். இருப்பினும், சிலர் தாங்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாகப் பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறி, உதவியை நாட முயற்சிக்கிறார்கள்; எனவே, நிலைமை தெளிவாகவும், சம்பந்தப்பட்ட நபர் நன்கு அறியப்பட்டவராகவும், நேரத்தை வீணடிக்க முடியாத நிலையிலும் இருக்கும்போது, ​​நாம் இரக்கம் காட்டுவதில் விரைவாகச் செயல்பட வேண்டும். ஏனெனில் கர்த்தர் எம்மிடமிருந்து அதிகபட்ச அளவைக் கேட்பதில்லை. ‘அவரைப் பின்பற்றுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிடுபவர் பாக்கியவான், ஆனால் தன்னிடம் உள்ளவற்றைக் கொண்டு தங்களால் இயன்றதைச் செய்பவரும் அதே அளவு பாக்கியவான்களே’ ஏனென்றால், “செல்வந்தர்கள் தங்கள் மிகுதியான செல்வத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே கொடுத்தபோது, ​​அந்த விதவை தன்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தபடியால், கர்த்தர் அவளுடைய இரண்டு காசுகளை செல்வந்தர்களின் காணிக்கைகள் அனைத்தையும் விட மேலாக மதித்தார்” என்றும் லூக்கா 21:3-4-ல் கூறப்பட்டுள்ளது. இறுதியில், ஒரு வெகுமதியின் பின்னணியில் உள்ள நோக்கமே அதன் மதிப்பைத் தீர்மானிப்பதோடு, அந்தச் செயலுக்கு மதிப்பையும் கொடுக்கிறது. நம்முடைய உடைமைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்துவிட வேண்டும் என்று ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை; மாறாக, அவற்றை நாம் படிப்படியாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். ஆனால், எலிசாவின் நிலைமை நம்முடையதாக இருந்தால் தவிர. அவர் தனது காளைகளைப் பலியிட்டு, தன்னிடம் இருந்ததைக் கொண்டு மக்களுக்கு உணவளித்தார். இதனால், எந்த உலகக் கவலைகளும் தன்னைத் தடுக்காது என்பதை உறுதிசெய்து, தீர்க்கதரிசனப் போதனையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.அதன் நோக்கமே ஆகும். நம்முடைய உடைமைகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் கொடுத்துவிட வேண்டும் என்று ஆண்டவர் விரும்பவில்லை, மாறாக அவற்றை படிப்படியாகப் பகிர்ந்துகொள்ளவே விரும்புகிறார்; ஒருவேளை, நம்முடைய நிலைமை எலிசாவுடைய நிலைமையைப் போல இருக்கலாம்; அவர் தன் காளைகளைக் கொன்று, தன்னிடம் இருந்ததைக் கொண்டு மக்களுக்கு உணவளித்தார். இதனால், எந்த உலகக் கவலைகளும் தன்னைத் தடுக்காது என்பதை உறுதிசெய்துகொண்டு, தீர்க்கதரிசனப் போதனையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்.

150. உண்மையான தாராள குணமும் பின்வரும் வழியில் நிரூபிக்கப்பட வேண்டும்: அதாவது, நமது நெருங்கிய உறவினர்கள் தேவையில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால், அவர்களை நாம் இழிவாக எண்ணக்கூடாது. ஏனெனில், மற்றவர்களிடம் உதவி கேட்க வெட்கப்படும் அல்லது தேவைப்படும்போது மற்றவரிடம் சென்று உதவி கேட்கத் தயங்கும் உங்கள் உறவினர்களுக்கு நீங்கள் உதவுவது நல்லது. இருப்பினும், நீங்கள் தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பதால் அவர்கள் செல்வந்தர்களாக ஆக வேண்டும் என்பதற்காக அல்ல. ஆகவே நாம் தனிப்பட்ட உணர்ச்சிகளைப் பற்றி அல்லாமல் உண்மையான சூழ்நிலையைப் பற்றியே சிந்திக்க வேண்டும். உங்கள் குடும்பத்தைச் செல்வந்தர்களாக்கவேண்டுமென நீங்கள் கடவுளிடம் வாக்குறுதி அளிக்கவில்லை, மாறாக நற்செயல்கள் செய்வதன் மூலம் நித்திய ஜீவனைப் பெறவும், கருணை காட்டுவதன் மூலம் உங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும் தான் வாக்குறுதி அளித்தீர்கள். ஒருவேளை அவர்கள், தாங்கள் ஒரு சிறிய தொகையை மட்டுமே கேட்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்கள் தவறுகளுக்காக நீங்கள் கொடுக்க வேண்டிய விலையை அவர்கள் நிர்ணயித்து, உங்கள் வாழ்க்கையின் பலன்களைப் பறிக்க முயல்வதோடு, தாங்கள் செய்வதுதான் சரி என்று நம்புகிறார்கள். நித்திய ஜீவன் எனும் வெகுமதியை உங்களிடமிருந்து ஏமாற்றிப் பறிக்க விரும்பிய ஒருவன், நீங்கள் அவனைச் செல்வந்தனாக்கவில்லை என்று உங்கள் மீது குற்றம் சாட்டுகிறான்.

151. இதுவரை நாம் நமது ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டோம், இப்போது நமது அதிகாரத்தைத் தேடுவோம். முதலாவதாக, செல்வந்தராக இருந்து பின்னர் ஏழையாக மாறுவதைப் பற்றி யாரும் வெட்கப்படக்கூடாது, குறிப்பாக அவர்கள் தேவையுள்ளவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்ததால் அவ்வாறு ஆகிவிட்டால் அதை தேவனின் பாதங்களில் வைத்துவிடுவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்து தேவனோடு செல்வந்தராயிருந்தார். ஆனால் உங்களுக்காக அவர் ஏழையானார். அதன் மூலம் அவர் உங்களைச் செல்வந்தர்களாக்க விரும்பினார்” என்று 2 கொரிந்தியர் 8:9 கூறுகிறது. நமது குறைக்கப்பட்ட சுதந்தரத்திற்கு நாம் நல்ல கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவர் பின்பற்றுவதற்கு ஒரு விதியை நமக்குக் கொடுத்துள்ளார்; தேவையுள்ளவர்களின் பசியைத் தீர்த்த எவரும் தங்கள் சொந்தத் துன்பங்களைத் தணித்துக்கொள்கிறார்கள். இதோ என் ஆலோசனை என்று அப்போஸ்தலர் கூறுகிறார், 2 கொரிந்தியர் 8:10 இல், “நீங்கள் கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பது உங்களுக்குப் பிரயோஜனமானது என்பதால், இதில் நான் எனது ஆலோசனையை வழங்குகிறேன் என்கிறார் அப்போஸ்தலர்.” ஆகவே நல்ல ஆலோசனை நீதிமான்களுக்காகக் கொடுக்கப்படுகிறது, அதேசமயம் எச்சரிக்கைகள் தவறு செய்பவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன என்று அவர் நன்மையை நோக்குவது போலக் குறிப்பிடுகிறார். மீண்டும், 2 கொரிந்தியர் 8:10-ல் “சென்ற ஆண்டில் கொடுக்க விரும்பியதில் நீங்களே முதலாவதாக இருந்தீர்கள். அது போல் கொடுப்பதிலும் முதலாவதாக இருந்தீர்கள்” என்று சொல்லப் பட்டுள்ளது. இவற்றில் ஒன்று மட்டுமல்ல, இரண்டுமே பரிபூரணத்தின் அடையாளமாகும். ஆகவே, நல்மனம் இல்லாத தாராள குணமும், தாராள குணம் இல்லாத நல்மனமும் முழுமையற்றது என்று அவர் போதிக்கிறார். ஆகையால், அவர் நம்மைப் பரிபூரணத்தை நோக்கி உற்சாகப்படுத்தும் விதத்தில், 2 கொரிந்தியர் 8:11-15 வாயிலாக இவ்வாறு கூறுகிறார்: “இப்பொழுது, அதைச் செயலில் காட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது; பிறகு உங்கள் செயலானது உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக அமையும். உங்களிடம் இருப்பதைக் கொடுங்கள். நீங்கள் விரும்பிக் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். உங்களது கொடுத்தல் என்பது உங்களிடம் இல்லாததை வைத்து தீர்மானிக்கப்படாது; இருப்பதைக்கொண்டே தீர்மானிக்கப்படும். மற்றவர்கள் வசதியாக இருக்கையில் நீங்கள் மட்டும் தொல்லைப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இப்பொழுது உங்களிடம் நிறைய உள்ளது. அவற்றைத் தேவையானவர்களுக்குக் கொடுங்கள். அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுத்து உதவுவார்கள். இவ்வழியில் தான் சமத்துவம் நிலவ முடியும்“ என்றும், அதிகமாகச் சேர்த்த எவனும் அதிகமாக வைத்திருப்பதில்லை. குறைவாக சேர்த்தவன் எவனும் குறைவுடன் இருப்பதில்லை” என்றும் எழுதப்பட்டுள்ளது.

152. அப்போஸ்தலர், நல்மனம் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றுடன், கொடுக்கும் முறை, சரியான முறையில் கொடுப்பதன் பலன்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களையும் உள்ளடக்கியிருப்பதை நாம் காண்கிறோம். நிச்சயமாக, கொடுக்கும் விதம் பற்றிக் குறிப்பிட வேண்டும், ஏனெனில் அவர் முழுமையற்றவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஏனெனில் முழுமையற்றவர்கள் என்று உணர்பவர்கள் மட்டுமே கவலையை அனுபவிக்கிறார்கள். குருவோ அல்லது மதகுருவோ, திருச்சபைக்குச் சுமையாக இருப்பதைத் தவிர்ப்பதற்காகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்காமல், தங்கள் கடமைகளை மரியாதையுடன் நிறைவேற்றும் பட்சத்தில், அவர்கள் முழுமையற்றோர் என்று நான் கூறமாட்டேன். அப்போஸ்தலர் இங்கே மனக் கவலையைப் பற்றிப் பேசவில்லை, மாறாக உள்ளகப் பிரச்சனைகளைப் பற்றியே பேசினார் என்றும் நான் நினைக்கிறேன்.

153. உங்கள் மிகுதி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்றும், அவர்களுடைய மிகுதி உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்றும் அவர் கூறியபோது, ​​சம்பந்தப்பட்ட நபர்களையே குறிப்பிட்டார் என்று நான் நம்புகிறேன். இதன் பொருள், சிலரின் கூடுதல் வளங்கள் அவர்களை நற்செயல்கள் செய்யவும், உணவு இல்லாதோருக்கு உதவவும் தூண்டக்கூடும்; அதே சமயம், தேவையுள்ளவர்களின் ஆன்மீகச் செழுமையானது மற்றவர்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு ஆதரவளித்து, அவர்கள் மீது ஆசீர்வாதங்களைக் கொண்டு வரக்கூடும்.

154. ஆகையால், அவர் அவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியைக் கொடுத்தார்: அதாவது, அதிகம் சேகரித்தவனுக்கு எதுவும் கூடுதலாகவோ, அல்லது குறைவாகச் சேகரித்தவனுக்கு எந்தக் குறைவோ இல்லை என்று. அந்த முன்மாதிரி, எல்லா மனிதர்களும் இரக்கம் காட்டுவதற்கு ஒரு பெரிய உந்து சக்தியாக இருக்கிறது. அதிக தங்கத்தை தன்னகத்தே கொண்டிருப்பவனுக்கு எதுவும் கூடுதலாக இருந்துவிடுவதில்லை, ஏனெனில் இவ்வுலகில் உள்ள அனைத்தும் அற்பமானவையே. அதேவேளை, குறைவாக உடையவனுக்கு அவனிடம் இருப்பது போதுமானதாக இருக்கிறது, ஏனெனில் அவனிடம் இழப்பதற்கென்று எதுவும் இல்லை. இறுதியில், உண்மையான இழப்பு என்று எதுவும் இல்லை, ஏனெனில் அனைத்தும் ஏற்கெனவே இழக்கப்பட்டுவிட்டது.

155. இதை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளலாம். ஒருவன் அதிகம் பெற்றிருந்தாலும், அவன் அதைப் பகிர்ந்தளிக்காவிட்டாலும், இறுதியில் அவனிடம் மீதமாக எதுவும் இருப்பதில்லை. அவனுக்கு எவ்வளவு கிடைத்தாலும், அவன் எப்போதும் மேலும் மேலும் ஈட்டவே விரும்புகிறான். ஏனென்றால் அவனுக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. மறுபுறம், ஒருவன் குறைவாகப் பெற்றிருந்தாலும், அவன் குறைவாக உணர்வதில்லை, ஏனெனில் தேவையுள்ளவர்களுக்கு உணவளிக்க அதிக செலவு செய்யவேண்டுமென்பதில்லை. அதுபோலவே, செல்வத்துக்கு ஈடாக ஆன்மீக ஆசீர்வாதங்களை வழங்கும் ஒரு ஏழை, அவனிடம் மிகுந்த கிருபை இருந்தாலும், அவனிடம் பொருள் என்று எதுவும் மீதமில்லை. ஏனெனில் கிருபை மனதைச் சுமையாக்குவதில்லை; அதை இலகுவாக்குகிறது.

156. இதை மேலும் இவ்வாறு புரிந்துகொள்ளலாம்: மனிதனே, உனக்கு ஒன்றும் கிடையாது! உனக்கு அது மிகுதியாகத் தோன்றினாலும், நீ உண்மையில் எவ்வளவு பெற்றுக்கொண்டாய்? “ஞானஸ்நானம் வழங்கும் யோவான் இவ்வுலகில் வாழ்ந்த எந்த மனிதனைக் காட்டிலும் மேலானவன். ஆனால், பரலோக இராச்சியத்தில் மிகவும் அற்பமான மனிதன் கூட யோவானைக் காட்டிலும் முக்கியமானவனாக இருந்தான்” என்று மத்தேயு 11:11 கூறுகிறது.

157. தேவனுடைய கிருபை ஒருபோதும் மிகையானதல்ல, குறைந்தபட்சம் மனித கண்ணோட்டத்தில் அது எப்போதும் மிகைப்படாது, ஏனெனில் அது ஒரு ஆவிக்குரிய கொடை. அது கண்ணுக்குப் புலப்படாததால், அது எவ்வளவு பெரியது அல்லது பரந்தது என்பதை யாராலும் உண்மையாகப் புரிந்துகொள்ள முடியாது. கடுகு விதை அளவு விசுவாசம் கூட பாரிய மலைகளையே அசைத்துவிடும். ஆனால் அந்தச் சிறிய அளவைத் தவிர உங்களுக்கு அதிகமாக எதுவும் கொடுக்கப்படுவதில்லை. கடவுளின் கிருபை அனைத்தும் உங்களிடம் இருந்தால், அது உங்களை மிகவும் பெருமை கொள்ளச் செய்துவிடுமோ என்று நீங்கள் கவலைப்படக்கூடும், ஏனென்றால் கிருபையைப் பெற்ற பிறகு பலர் உயர்ந்த ஆன்மீக நிலைகளிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், குறைவாக உள்ளவனுக்குக் குறையில்லை, ஏனெனில் அது பிரிக்கக்கூடிய அளவுக்குப் புலனாகாது; உள்ளவனுக்குக் குறைவாகத் தோன்றுவது, இல்லாதவனுக்குப் பெரிதாகத் தோன்றும்.

158. கொடுக்கும்போது, ​​வயதையும் பலவீனத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்; சில சமயங்களில், நல்ல குடும்பப் பின்னணியில் பிறந்ததைக் குறிக்கும் அந்த இயல்பான வெட்க உணர்வையும் கருத்தில் கொள்ள வேண்டும். உழைப்பின் மூலம் தங்களுக்குத் தாங்களே உணவு தேடிக்கொள்ள முடியாத முதியவர்களுக்கு நாம் அதிகமாகக் கொடுக்க வேண்டும். அதுபோலவே, உடல் பலவீனம் கொண்டோருக்கும் நாம் உடனடியாக உதவ வேண்டும். மேலும், செல்வந்தராக இருந்த ஒருவர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தால், அப்படிப்பட்டோருக்கு நாம் உதவ வேண்டும்; ஒருவேளை, அவர் தனது சொந்தத் தவறால் அல்லாமல், திருட்டு, நாடுகடத்தல் அல்லது பொய்க் குற்றச்சாட்டு காரணமாகத் தன்னிடம் இருந்ததை இழந்திருந்தால் அப்படிப்பட்டோருக்கு உதவுவதில் தவறில்லை.

159. ஒருவேளை எவரேனும் இப்படிச் சொல்லலாம்: ஒரு பார்வையற்றவன் ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறான், மக்கள் அவனைக் கண்டும் காணாதவர்கள் போல் கடந்து செல்கிறார்கள். ஆனால் எந்த ஒரு குறையும் இல்லாத ஒரு இளவயதினனுக்கு எப்படியும் ஏதாவது கிடைக்கிறது. அது உண்மைதான்; அவன் தன் விடாமுயற்சி காரணமாக மக்களிடமிருந்து ஏதேனும் உதவிகளைப் பெறுகிறான். அவன் அதற்குத் தகுதியானவன் என்று அவர்கள் நினைப்பதனால் அல்ல, மாறாக அவனுடைய தொடர்ச்சியான இம்சை காரணமாக ஏற்படும் தொந்தரவு காரணமாகவே இதைச் செய்கிறார்கள். ஏற்கெனவே தன் கதவை மூடியிருந்தவனைப் பற்றி ஆண்டவர் நற்செய்தியில் குறிப்பிடுகிறார்; “உங்கள் நட்பு ஒருவேளை அவன் எழுந்து அப்பத்தை எடுத்துக் கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் கண்டிப்பாக உங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பான்” என்று லூக்கா 11:8 இல் கூறப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

அத்தியாயம் 31

ஒருவர் உங்களுக்கு நன்மை செய்யும்போது, ​​நீங்கள் தாராளமாகப் பிரதியுபகாரம் வேண்டும். பூமி இந்தக் கருத்தை நிரூபிக்கிறது. உணவைப் பகிர்வது பற்றிய சொலமனின் ஒரு மேற்கோள் இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கிறது. மேலும் அது பின்னர் ஆன்மீக வழியில் விளக்கப்படுகிறது.

160. உங்களுக்கு எப்போதேனும் உதவியோ உபகாரமோ வழங்கியவர் பிறிதொரு காலத்தில் தேவையில் இருக்கும் பட்சத்தில், அவர்மீது அதிக கவனம் செலுத்துவது சரியானதே. ஏனெனில், உங்களுக்குக் கொடுக்கப்பட்டதை நீங்கள் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதை விட, மனசாட்சிக்கு விரோதமான செயல் என்னவாக இருக்கமுடியும்? அதே மதிப்புள்ள ஒன்றை பிரதிபலன் என்ற வகையில் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை; மாறாக அதைவிடப் பெரிதாக ஏதேனும் இல்லாவிட்டால் அவர் உங்களுக்கு கொடுத்ததைவிட, நீங்கள் அதிகமாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே எனது அபிப்பிராயம். ஒருவர் மற்றொருவரிடமிருந்து பெற்ற நன்மைக்கு ஈடாக, அந்த நபரின் துன்பங்களிலிருந்து அவருக்கு உதவும் அளவிற்கு நீங்கள் கைம்மாறு செய்ய முயல வேண்டும். கொடுக்கப்பட்டதை விட அதிக தாராள மனப்பான்மையுடன் ஒரு கைம்மாறை நீங்கள் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அது உங்களை ஒரு தாழ்ந்தவராகக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் கொடுத்தவரே உங்கள் தேவையை நிறைவேற்றும் உயர்ந்த குணத்தை கொண்டவராகவும் கருணை மனப்பான்மையைக் காட்டியதிலும் உயர்ந்தவராக இருக்கிறார்.

161. ஆகையால், இந்த விஷயத்தில் நாம் பூமியின் இயல்பைப் பின்பற்ற வேண்டும்; அது தான் உள்வாங்கி கொண்ட விதையை ஆயிரம் மடங்காகத் திருப்பிக் கொடுக்கும் இயல்புடையது. அதுகுறித்து இவ்வாறு சொல்லப்படுகிறது: ஒரு மூடன் என்பவன் ஒரு வயலைப் போன்றவன்; அறிவற்றவன் ஒரு திராட்சைத் தோட்டத்தைப் போல இருக்கிறான். நீங்கள் அவனைக் கைவிட்டால், அவன் காய்ந்து சருகாகிப் போவான். ஒரு ஞானி கூட ஒரு வயலைப் போன்றவனே; அவனுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை வட்டியுடன் பன்மடங்கு அதிகமாகத் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருப்பது போலவேதான் வயலும். அது தன்மீது விதைக்கப்பட்ட விதையை, பன்மடங்காக விளைவித்து நிறைந்த பலனைக் கொடுக்கிறது. இந்த இரண்டு வழிகளிலும், உங்கள் தந்தையின் சொத்தைப் பயன்படுத்தத் தொடங்கும் ​​நீங்கள், எதையும் விளைவிக்காத ஒரு வயலைப் போல ஆகிவிடாமல் அதற்கேற்ற ஒரு கைம்மாறைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். ஒருவன் எதையும் கொடுக்காமல் இருப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கலாம். ஆனால் தனக்குக் கொடுக்கப்பட்டதைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பதற்கு அவனால் எவ்வித காரணங்களும் சொல்லமுடியாதல்லவா? எதையும் கொடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றபோதிலும், ஒருவருக்கு செய்யப்பட்ட ஒரு நன்மைக்கு எந்தப் பிரதிபலனும் செய்யாமல் இருப்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

162. ஆகவே, சாலொமோன் ஒரு சிறந்த உதாரணத்தை முன்வைக்கிறார்; நீங்கள் ஒரு ஆட்சியாளரின் மேசையில் சாப்பிட அமரும்போது, ​​உங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து, உங்களைத் தயார்படுத்திக்கொண்டு அதை நோக்கிச் செல்லுங்கள். அப்படி அங்கு பரிமாறப்பட்டிருக்கும் உணவு குறித்து உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால், அவருடைய ஆடம்பரமான உணவை விரும்பாதீர்கள், ஏனெனில் அது ஒரு போலியான கவர்ச்சியை மட்டுமே கொண்டுள்ளது. நாம் அனைவரும் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இந்த எண்ணங்களை நான் எழுதியுள்ளேன். மற்றவர்களுக்கு உதவுவது ஒரு சிறந்த விஷயம், ஆனால் பதிலுக்கு எப்படி உதவுவது என்று தெரியாத ஒருவரைப் பற்றி எடைபோடுவது மிகவும் கடினம். பூமியே நமக்குக் கருணையைக் காட்டுகிறது. நாம் விதைக்காமலேயே அது நமக்குக் கனிகளைத் தருவதோடு, தனக்குக் கொடுக்கப்பட்டதை விடப் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறது. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தைப் பற்றித் தெரியாதது போல் நீங்கள் நடிக்கக் கூடாது, ஏனென்றால், உங்களுக்காகச் செய்யப்பட்ட ஒரு உதவியைப் புறக்கணிப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும்? நீதிமொழிகள் புத்தகமும், பதிலுக்குக் கருணை காட்டுவது கடவுளிடம் மிகுந்த வல்லமையைக் கொண்டுள்ளது என்றும், அழிவின் காலங்களில்கூட ஒருவர் மீது பாவச்சுமை இருந்தால், அவரால் கிருபையைக் கண்டடைய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், நற்செய்தியில் ஆண்டவர் தாமே பரிசுத்தவான்களின் நற்செயல்களுக்கு ஒரு பெரிய வெகுமதியை வாக்களித்து, அதன் வாயிலாக நற்செயல்களைச் செய்ய நம்மை ஊக்குவிக்கும்போது, ​​நான் ஏன் இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போக வேண்டும்? அவர் கூறுகையில், “மற்றவர்களை நியாயம் தீர்க்காதிருங்கள். இதனால் நீங்கள் நியாயம் தீர்க்கப்படமாட்டீர்கள். மற்றவர்களைப் பழிக்காதீர்கள். இதனால் நீங்களும் பழிக்கு ஆளாகமாட்டீர்கள். பிறரை மன்னியுங்கள். இதனால் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். பிறருக்குக் கொடுங்கள். நீங்களும் பெறுவீர்கள். உங்களுக்கு மிகுதியாக அளிக்கப்படும். உங்கள் கைகளில் கொள்ளமுடியாதபடிக்கு உங்களுக்கு அள்ளி வழங்கப்படும். உங்கள் மடிகளில் கொட்டும்படிக்கு மிகுதியாக உங்களுக்குத் தரப்படும். நீங்கள் பிறருக்குக் கொடுக்கிறபடியே தேவனும் உங்களுக்குக் கொடுப்பார்” என்று லூக்கா 6:37-38-ல் கூறப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

163. இருப்பினும், சொலமன் குறிப்பிடும் அந்த விருந்து சாதாரண உணவைப் பற்றியது மட்டுமல்ல; அது நற்கிரியைகளைப் பற்றியது. அதாவது, நற்கிரியைகளைவிட ஆன்மாவுக்கு எப்படி சிறந்த முறையில் ஊட்டமளிக்க முடியும்? மேலும், ஒரு நற்கிரியையைச் செய்ததைப் பற்றிய நிறைவைவிட நீதிமானின் மனதை நிறைவுகொள்ளச் செய்வது வேறு என்ன இருக்க முடியும்? தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதைவிட இன்பமான ஊட்டச்சத்து வேறு ஏதும் இல்லை அல்லவா? யோவான் 4:34 கூறுவதுபோல், “எனது உணவு என்னை அனுப்பிய தேவன் செய்யச் சொன்னதைச் செய்வதுதான்; எனக்குக் கட்டளையிட்டபடி செய்து முடிப்பதுதான் எனது உணவாக இருக்கிறது” என்று நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த வகையான உணவு தன்னிடம் ஏராளமாக இருப்பதாக ஆண்டவர் குறிப்பிட்டுள்ளார்.

164. இந்த உணவில் நாம் மகிழ்ச்சியைக் காண்போமாக; இதைக்குறித்து சங்கீதம் 37:4 இல் தீர்க்கதரிசி கூறும்போது, “கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள். அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்” என்று சொல்கிறார். உயர்ந்த இன்பங்களை அனுபவிக்க அற்புதமான அறிவோடு கற்றோர் இந்த உணவில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்; தூய்மையானதும் மனதால் புரிந்துகொள்ளக் கூடியதுமான அந்த இன்பம் என்னவென்று அவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஆகையால், நாம் ஞானம் எனும் உணவை உண்போம்; தேவன் கூறுவதில் திருப்தி கொள்வோம். ஏனெனில், “மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல. மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளை சார்ந்துள்ளது” என்று மத்தேயு 4:4 சான்றளிக்கிறது. இவ்வாறாக, கிண்ணத்தைக் குறித்து புனித யோபுவும் (யோபு 29:23 இல்) தெளிவாகக் கூறுகிறார்: “பூமி மழைக்காகக் காத்திருப்பதைப்போல நான் பேசுவதை கேட்க மக்கள் காத்திருந்தார்கள். வசந்த காலத்தில் நிலம் மழை நீரை உறிஞ்சுவதுபோல, அவர்கள் என் வார்த்தைகளை அருந்தினார்கள்” என்று.

அத்தியாயம் 32

குறிப்பிட்ட விருந்தின் மகத்துவத்துக்கு எவ்வகையான கைம்மாறு செய்யவேண்டும் என்பதை விளக்கிய பிறகு, அவர் கருணையை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு காரணங்களைத் தொகுத்துள்ளார். அத்தோடு அவர் நல்லெண்ணத்தின் முக்கியத்துவம், அதன் விளைவுகள் மற்றும் அதன் தன்மை பற்றியும் பேசுகிறார்.

165. ஆகையால், பரிசுத்த வேதாகமத்தின் போதனைகளால் நாம் முழுமை பெற்று, தேவனுடைய வார்த்தை பனியைப் போல நம்மேல் பொழிவதும் நமக்கு நன்மை தரக்கூடியதே. எனவே, நீங்கள் அந்த மகானுடைய பந்தியில் அமரும்போது, ​​அவர் யார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இன்ப சொர்க்கத்தில் அமர்த்தப்பட்டு, ஞானத்தின் விருந்தின் போது ​​உங்களுக்கு முன்பாக என்ன பரிமாறப்படுகிறது என்பது குறித்து சிந்தியுங்கள்! பரிசுத்த வேதாகமம் என்பது ஞானத்தின் விருந்து, தனித்தனி புத்தகங்கள் என்பன வெவ்வேறு உணவு வகைகள். முதலில் கொண்டாட்டம் என்ன உணவுகளை வழங்குகிறது என்பதை அறிந்து கொண்டதன் பின்பு, உங்கள் கையை நனையுங்கள், அவ்வாறு செய்வதன் மூலமே நீங்கள் வாசிக்கும் அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து பெறும் நற்பண்புகளை நீங்கள் நடைமுறைப் படுத்தலாம். அதன்மூலம் தான் உங்கள் செயல்களால் உங்களுக்கு அளிக்கப்பட்ட கிருபையை வெளிப்படுத்தப்படும். நற்செய்தியைப் பரப்புவதில், தங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்தவருக்கு சிலவற்றைத் திரும்பக் கொடுத்த பேதுரு மற்றும் பவுலுக்கு இது உண்மையாக இருந்தது. அவர்களில் ஒவ்வொருவரும், “தேவனுடைய இரக்கத்தினால் இப்போதைய எனது தகுதியைப் பெற்றேன். தேவன் என்னிடம் காட்டிய இரக்கம் வீணாய் போகவில்லை. நான் மற்ற எல்லா அப்போஸ்தலரைக் காட்டிலும் கடினமாய் உழைத்தேன். உண்மையில் உழைப்பவன் நான் அல்ல. தேவனுடைய இரக்கமே என்னோடு இருந்தது” என்று 1 கொரிந்தியர் 15:10 இல் கூறப்பட்டுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

166. ஒருவர் உங்களுக்கு ஏதோ ஒரு சேவையை நல்கியிருப்பார்களே ஆனால், அவர்களுக்கு நீங்கள் தங்கத்திற்குத் தங்கமாகவோ அல்லது வெள்ளிக்கு வெள்ளியாகவோ அல்லது அதற்குச் சமமான மதிப்புள்ள ஒன்றைக் கொண்டு நீங்கள் கைம்மாறாக அவர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும். எனினும், சிலர் அதற்குப் பதிலாகத் தங்கள் கடின உழைப்பையே கைம்மாறாக வழங்குகிறார்கள். ஆனால், கைமாறு செய்ய உடனடி வாய்ப்பு இல்லையென்றால் என்ன செய்வது? நாம் ஒரு உதவியைத் திருப்பிச் செய்ய விரும்பினால், அது நம்மிடம் உள்ள சொத்துக்களின் அளவை விட, நாம் அதைச் செய்யும் அந்த நல்ல மனப்பான்மையிலேயே அதிகம் சார்ந்துள்ளது. அதே சமயம், முழுமையான கைமாறு செய்யும் நமது திறனை விட, மக்கள் நமது நல்ல மனதையே அதிகம் மதிப்பார்கள். ஏனெனில், செய்யப்பட்ட ஒரு உதவி, ஒருவரிடம் உள்ளவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது. எனவே, நல்மனம் ஒரு மகத்தான விஷயமாகும். ஏனெனில், கொடுப்பதற்கு அதனிடம் எதுவும் இல்லாவிட்டாலும், அது அதைவிட தனது நன்றியறிதல் மூலம் அதிகமாகவே வழங்குகிறது; அத்தோடு தன்னிடம் எதுவும் இல்லாத போதிலும், அது பலருக்குப் பெருந்தன்மையுடன் கொடுப்பதில் மகிழ்கிறது. தனக்கு எந்த இழப்பும் இல்லாமல், பிறரின் நன்மைக்காகவே இதை செய்கிறது. இவ்வாறு, நல்மனம் என்பது தாராள குணத்தை விடச் சிறந்ததாகவும், வெறும் வெகுமதிகளைவிட இது செழுமையில் மேலோங்கியும் நிற்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, உதவிகள் தேவையாக இருப்பவர்களை விட, கருணையின்  தேவையை எதிர்பார்ப்பவர்களே அதிகம் உள்ளனர்.

167. ஆகையால், நல்மனம் தாராள குணத்துடன் கைகோர்த்துச் செல்கிறது, ஏனெனில் தாராள குணம் என்பது உண்மையில் நல்ல மனதிலிருந்தே பிறக்கிறது; கொடுக்கும் குணம் தான் கொடுக்கும் விருப்பத்துக்கு ஆதாரமாய் இருக்கிறது என்றபோதிலும், அது வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அதேநேரம், தாராள குணம் இல்லாத இடத்திலும் கூட, நல்மனம் நிலைத்திருப்பதைக் காணக்கூடியதாயிருக்கிறது — அது ஒரு தாயைப்போல, நட்பை ஒன்றாகப் பிணைக்கும் பொதுவான நூலாக இருக்கிறது. அது ஆலோசனையில் உண்மைதன்மை உள்ளதாகவும், செழிப்பான காலங்களில் மகிழ்ச்சியாகவும், கவலைகள் மிகுந்த காலங்களில் சோகமாகவும் இருக்கிறது. எனவே, தாவீதைப் போலவே, ஞானியின் ஆலோசனைகளை விட நல்லெண்ணம் கொண்ட ஒருவரின் ஆலோசனைகளையே எவரும் நம்புவதுண்டு. அவர் அதிக நுண்ணறிவும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டவராக இருந்தபோதிலும், தன்னை விட இளையவரான யொனதனின் ஆலோசனையைப் பின்பற்ற முடிவெடுத்தார். மக்களிடமிருந்து நல்மனதை எடுப்பதென்பது, வானத்திலிருந்து சூரியனை எடுப்பதற்கு ஒப்பானது. அது இல்லாமல், மக்கள் அந்நியர்களுக்கு வழிகாட்டவோ, வழி தவறியவர்களுக்கு உதவவோ, அல்லது விருந்தோம்பலை வழங்கவோ முடியாது. (இது ஒரு குறிப்பிடத்தக்க நற்பண்பு; யோபு இதைப் பற்றி பெருமையாகக் கூறும்போது, “அந்நியர்கள் இரவில் தெருக்களில் உரங்காதபடி நான் எப்போதும் அவர்களை வீட்டினுள்ளே வரவேற்றேன்” என்று யோபு 31:32 இல் கூறப்பட்டுள்ளது) அதுமட்டுமன்றி, தங்கள் கையிருப்பிலிருந்து தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளவோ ​​அல்லது மற்றவருடைய மெழுகுவர்த்தியைத் தங்கள் கையில் உள்ள நெருப்பைக்கொண்டு பற்றவைக்கவோ கூட முடியாது. எனவே, தாகம் தீர்க்கும் நீரூற்றைப் போலவும், மற்றவர்களுக்காக ஒளிரும் ஒளியைப் போலவும், தங்கள் ஒளியைப் பிறருடன் பகிர்ந்து கொண்டவர்களை ஒருபோதும் கைவிடாத மேலான நல்மனம், இந்தச் செயல்கள் அனைத்திலும் மேலோங்கி நிறைந்திருக்கிறது.

168. நல்லெண்ணத்திலிருந்து வரும் தாராள குணமும் உண்டு. அது, கடனைத் திருப்பிக் கேட்காமலேயே அதை ரத்து செய்ய ஒருவரை வழிநடத்துகிறது. இந்த விஷயத்தில் புனித யோபு நமக்கு ஒரு நல்ல உதாரணமாகத் திகழ்கிறார். ஏனெனில், உள்ளவன் கடன் வாங்குவதில்லை, இல்லாதவனோ ஒப்பந்தத்தை முறிப்பதில்லை. எனவே, உங்களுக்குத் தேவைப்படாத பணத்தை ஏன் பேராசை கொண்ட வாரிசுகளுக்காக சேர்த்து வைத்திருக்க வேண்டும்? இந்த வழியில், நீங்கள் அதை உடனடியாகத் திருப்பிக் கொடுத்து, எதையும் இழக்காமல் உங்கள் நல்ல மனம் காரணமாகவும் நற்குணங்கள் காரணமாக பாராட்டுதலுக்கு உள்ளாவீர்கள்.

169. பிரச்சினையின் மையத்திற்குச் சென்று பார்த்தோமானால், கருணை மற்றும் நல்மனம் போன்றன முதலில் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து, அதாவது குழந்தைகள், பெற்றோர், சகோதரர்கள் ஆகியோரிடமிருந்து தொடங்கி, படிப்படியாக உலகம் முழுவதும் வியாபிக்கிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், அது பரலோகத்தில் ஊற்றெடுத்து உலகம் முழுவதும் நிரம்பியுள்ளது. ஏனெனில், தேவன் ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்மனம் என்னும் உணர்வை ஏற்படுத்தி, “மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர்” (ஆதியாகமம் 2:24) என்றும் கூறினார். ஆகையால், ஏவாளும் சர்ப்பத்தை நம்பினாள்; ஏனெனில், நல்மனம் என்னும் புனிதமான வரத்தைப் பெற்றிருந்த அவள் அதில் தீய எண்ணம் இருப்பதாக நினைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால்.

அத்தியாயம் 33

திருச்சபையில் குறிப்பாகப் பரவலாகக் காணப்படும் நல்மனம், அதுபோன்ற பண்புகளை வளர்ப்பதில் முனைப்பாக செயலாற்றுகிறது

170. திருச்சபை என்ற அமைப்புக்குள், விசுவாசத்தில் உள்ள ஐக்கியத்தின் மூலமாகவும், திருமுழுக்கின் பிணைப்பின் மூலமாகவும், பெற்ற அருளின் மூலமான உறவின் மூலமாகவும், மறைபொருட்களில் உள்ள ஐக்கியத்தின் மூலமாகவும் நல்லெண்ணம் விரிவடைகிறது. ஏனெனில், இந்தப் பிணைப்புகள் அனைத்தும் நெருக்கம், பிள்ளைகள் செலுத்தும் மரியாதை, பெற்றோரின் அதிகாரம் மற்றும் சமயப் பராமரிப்பு, சகோதரர்களின் உறவு ஆகிய பெயர்களைத் தமக்கே உரிமையாக்கிக் கொள்கின்றன. ஆகவே, இந்த அருளின் பிணைப்புகள் நல்லெண்ணம் அதிகரிப்பதை தெளிவாகக் காட்டுகின்றன.

171. ஒரே மாதிரியான நல்ல குணங்களைக் கொண்டிருக்க விரும்புவது எப்போதும் நன்மை பயப்பதாக இருக்கும். அதேபோல, நல்லெண்ணம் குணத்திலும் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. அரசனின் புத்திரனான யொனதன், அன்பும் பரிசுத்தமும் ஒருங்கே அமையப்பெற்ற தாவீதைப் போற்றியதால், அவரைப் போலவே செயல்பட்டான். எனவே, “பரிசுத்தமானவருடன் இணையும்போது நீங்களும் பரிசுத்தமாவீர்கள்” என்ற கூற்று, நாம் மக்களுடன் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதற்கு மட்டுமல்ல, நமது நல்ல உணர்வுகள் நம்மை எப்படி இணைக்கின்றன என்பதற்கும் பொருந்தும். நோவாவின் மகன்கள் ஒன்றாக வாழ்ந்தனர், ஆனால் அவர்களின் குணாதிசயங்கள் சற்றும் ஒத்திருக்கவில்லை. ஏசாவும் யாக்கோபும் தங்கள் தந்தையின் வீட்டில் ஒன்றாக வாழ்ந்தனர், ஆனால் அவர்கள் மிகவும் வித்தியாசமானவர்களாக இருந்தனர். ஒருவரை விட மற்றவர் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு அவர்களுக்குள் வலுவான விருப்பம் எதுவும் இல்லை, மாறாக, ஆசீர்வாதத்தை முதலில் பெறுவதற்கான ஒரு போட்டியே இருந்தது. ஒருவன் முரட்டுத்தனமாகவும் மற்றவன் சாந்தமாகவும் இருந்ததால், முரண்பட்ட விருப்பங்களைக் கொண்ட இத்தகைய வேறுபட்ட மனிதர்களிடையே இணக்கம் காணப்பட வில்லை. இதனுடன், புனித யாக்கோபு, தன் தகப்பனின் வீட்டிலிருந்து வந்த தகுதியற்ற மகனுக்கு நற்பண்புகளை விட முன்னுரிமை அளிக்க முடியவில்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

172. ஆனால், நீதியையும் பாரபட்சமின்மையையும் விட மேன்மையானது ஒன்றுமில்லை. ஏனெனில், நேர்மை, நல்ல குணங்களின் நண்பனாகவும் உதவியாளனாகவும் இருந்து, நம்மைப் போன்றவர்கள் என்று நாம் நினைப்பவர்களை நேசிக்க வைப்பதோடு, நல்லெண்ணம் தனக்குள்ளே தன் மன உறுதியையும் கொண்டுள்ளது. ஏனெனில், நட்பு நல்லெண்ணம் எனும் ஊற்றிலிருந்து வெளிப்படும் போது, ​​ஒரு நண்பனுக்காக வாழ்க்கையின் பெரும் ஆபத்துகளைத் தாங்கிக்கொள்ளத் தயங்குவதில்லை. அவன் மூலமாக எனக்குத் தீமைகள் நேர்ந்தால், நான் அவற்றைச் சகித்துக்கொள்வேன் என்று சீராக் 23:31 இன் வாயிலாகக் கூறுகிறது.

அத்தியாயம் 34

நல்லெண்ணத்தின் வழியாக உருவாகக்கூடிய வேறு சில நன்மைகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன

173. தயவு கோபத்தின் கொடுமையை அகற்றவும் பயன்படுகிறது. “உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. பகைவனோ இதற்கு முரணாக இருப்பவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் உன்னைக் காயப்படுத்தவே விரும்புவான்” என்று நீதிமொழிகள் 27:6 கூறுகிறது. தயவு என்பது மீண்டும் பலரை ஒன்றாக்குகிறது. ஏனெனில், பலர் நண்பர்களாக இருந்தால், அவர்கள் ஒன்றாகிவிடுவார்கள்; அவர்களிடத்தில் ஒரே விதமான எண்ணங்களும் கருத்தும் மட்டுமே இருக்கும். நட்பில் திருத்தங்கள் வரவேற்கப்படுகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும், அவை வலி தருபவையாக இருந்தாலும், அவை எந்தக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை. பழிச்சொற்களால் தான் நாம் காயப்படுகிறோம், ஆனால் கருணை எம்மீது காட்டும் அக்கறையால் மகிழ்கிறோம்.

174. முடிவாக, அனைவருக்கும் ஒரே மாதிரியான கடமைகள் பொறுப்புகள் இருப்பதில்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பொதுவாகக் கருத்தில் கொள்ளப்பட்டாலும், தனிநபர்கள் மீது அவை ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. அதனால், சில சமயங்களில் ஒருவர் தன் உறவினருக்குப் பதிலாக ஒரு நண்பனுக்கு உதவ வேண்டியிருக்கும். ஏனெனில், சொலமனும், “உனக்குத் துன்பம் நேரும்போது, உதவிக்காகத் தூரத்தில் உள்ள உன் சகோதரனை நாடிப்போகாதே. தூரத்தில் உள்ள உன் சகோதரனைத் தேடிப்போவதைவிட அருகில் உள்ள உன் நண்பனிடம் சென்று உதவி கேட்பது மேலானது” என்று நீதிமொழிகள் 27:10 வழியாகக் கூறியுள்ளார். இந்தக் காரணத்தால், ஒருவர் பொதுவாகத் தன் சகோதரன் வழிவந்த குடும்ப உறவுகளை விட, தன் நண்பனின் கருணையையே அதிகம் சார்ந்திருக்கிறார். கருணை என்பது மிகவும் வலிமையானது, அது பெரும்பாலும் இயற்கையின் வாக்குறுதிகளையும் தாண்டி அதற்கப்பால் கூடச் செல்லக்கூடியது.

அத்தியாயம் 35

இது வலிமையைப் பற்றியது; இதில் இரண்டு பகுதிகள் உள்ளன: போர்க்களத்தில் நாம் சந்திக்கும் வலிமை மற்றும் இல்லற விவகாரங்களில் நாம் சந்திக்கும் வலிமை. போர்க்களத்தின் வலிமை ஒரு நற்பண்பாகக் கருதப்பட வேண்டுமாயின், அதில் நேர்மையும் விவேகமான தீர்ப்பும் அடங்கியிருக்க வேண்டும். இரண்டாவது அம்சமான இல்லற வலிமை என்பது பெரும்பாலும் சகிப்புத்தன்மையைச் சார்ந்ததாக இருக்கிறது

175. நீதியின் கண்ணோட்டத்தில், நற்பண்பு என்பதன் இயல்பையும் வலிமையையும் பற்றி நாம் போதுமான அளவு விவாதித்துவிட்டோம். இப்போது, ​​மனவுறுதியைப் பற்றி விவாதிப்போம். இது – மற்ற நற்பண்புகளை விட உயர்ந்ததாக இருப்பதால் – போர் மற்றும் இல்லற விவகாரங்கள் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாம் சரீரத்தின் கடமைகளை விட ஆன்மாவின் கடமைகளில் அதிக கவனம் செலுத்துவதால், போர்க்கள வலிமை பற்றி விவாதிப்பது நமது பணிக்குச் சற்றுப் பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது. ஆயுதங்களைக் கையாள்வது உண்மையில் நமது கடமையல்ல, மாறாக அமைதியில் கவனம் செலுத்துவதே நமது கடமை. ஆயினும்கூட, நூனின் மகனான யோசுவா, யெருப்பால், சம்சன் மற்றும் தாவீது போன்ற நமது முன்னோர்கள் போரில் பெரும் புகழைப் பெற்றவர்களாகத் திகழ்ந்ததைக் காணக்கூடியதாயிருக்கிறது.

176. எனவே, மனவுறுதி என்பது மற்ற நற்பண்புகளை விட உயர்ந்ததாகும், ஆனால் அது ஒருபோதும் தனித்து நிற்பதில்லை. ஏனெனில் அது ஒருபோதும் தன்னை மட்டுமே சார்ந்திருப்பதில்லை. மேலும், நீதியில்லாத மனவுறுதியே தீமைக்கு மூல காரணமாகும். ஒரு சாரார் எவ்வளவு வலிமை கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவு எளிதில் அவர்கள் பலவீனமானவர்களை அடக்கிவிட வாய்ப்புள்ளது. போரைப் பொறுத்தவரையில், போரில் ஈடுபடுவது நியாயமானதா அல்லது அநியாயமானதா என்பதைத் தீர்மானிப்பது முக்கியம்.

177. தாவீது நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி ஒருபோதும் போரில் ஈடுட்டதில்லை. எனினும் அவர் போரில் ஞானமுள்ளவராகவும் தைரியமானவராகவும் இருந்தார். அசைக்கமுடியாத, மாபெரும் வீரனான கோலியாத்துடன் தனியாகப் போரிடவிருந்தபோதுகூட, தனக்குக் கொடுக்கப்பட்ட கவசத்தை அவர் அணிய மறுத்துவிட்டார். அவருடைய பலம் மற்றவர்கள் பயன்படுத்தியதை விட அவரிடமிருந்தே அதிகமாக வந்தது. அதன் காரணமாக, வெகு தொலைவிலிருந்தே இன்னும் பலமாக எறிந்து, ஒரே கல்லில் தன் எதிரியைச் சாய்த்துவிட்டார். அதன்பிறகு, அவர் கடவுளிடம் ஆலோசனை கேட்காமல் ஒருபோதும் போரைத் தொடங்க வில்லை. அதனால், அவர் தன் போர்கள் அனைத்திலும் வெற்றி பெற்றார்; வயதான காலத்திலும்கூட, அவர் போரிடத் தயாராக இருந்தார். பெலிஸ்தியர்களுடன் போர் மூண்டபோது ​​புகழ் பெறும் நோக்கத்தோடும், தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமலும், பெலிஸ்தியர்களுடைய பலம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராகத் துணிந்து போரிட்டார்.

178. ஆனால், நாம் கவனிக்கவேண்டிய ஒரே வகையான தைரியம் என்பது இதுவல்ல. “விசுவாசத்தாலேயே அவர்கள் அரசுகளை வெற்றி கொண்டார்கள். நீதியை வலியுறுத்தினார்கள். தேவனுடைய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டார்கள். சிலர் சிங்கங்களின் வாய்களை மூடினார்கள். சிலர் நெருப்பின் உக்கிரத்தைக் குறைத்து, கூர்மையான வாளினால் ஏற்படக்கூடிய மரணத்தில் இருந்து தப்பினார்கள். பலவீனத்திலிருந்து அவர்கள் பலம் பெற்று, அந்நியப் படைகளைத் தோற்கடித்து யுத்தத்தில் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள்” என்று எபிரேயர் 11:33-34 கூறுகிறது. ஆகவே, அவர்கள் தங்களைச் சுற்றி நண்பர்கள் இருந்தும், படைவீரர்களின் உதவியுடனும் பலரைப் போல போரில் வெற்றியைப் பெறவில்லை; மாறாக, நம்பத்தகாத எதிரிகளுக்கு எதிராக, தங்கள் சொந்த ஆன்மா அளித்த தைரியத்தால் மட்டுமே வெற்றியைப் பெற்றனர். தனக்கு அருகில் இருந்து கர்ஜித்த சிங்கங்களுக்குக்கூட அஞ்சாத தானியேல் எவ்வளவு அசைக்க முடியாதவராக இருந்தார் என்பதை சற்று எண்ணிப்பாருங்கள்! அவர் உணவருந்திக் கொண்டிருந்தபோது அந்த கொடிய மிருகங்கள் அவரருகில் உறுமிய படி வலம் வந்தன.

அத்தியாயம் 36

பலவீனமானவர்களைத் தீங்கிலிருந்து காப்பது மனவுறுதியின் கடமைகளில் ஒன்றாகும்; மற்றொன்று, நமது சொந்த மனதின் தவறான போக்குகளைக் கட்டுப்படுத்துவது; மூன்றாவது, ஏளனங்களைப் புறக்கணித்து, சமமான மனதுடன் சரியானதைச் செய்வது. இவை அனைத்தையும் அனைத்து கிறிஸ்தவர்களும், குறிப்பாக குருமார்கள் முறையாக நிறைவேற்ற வேண்டும்.

179. எனவே, மனவுறுதியின் மகிமை ஒருவருடைய உடல் வலிமையையோ அல்லது ஆயுத பலத்தையோ மட்டும் சார்ந்திருக்கவில்லை, அது மனதின் தைரியத்தையே சார்ந்துள்ளது. தைரியம் என்பது தீங்கை உண்டாக்குவதல்ல, மாறாக அதைத் தடுக்கும் ஒரு கேடயமாகும். ஒருவரால் தன் நண்பனைத் தீங்கிலிருந்து பாதுகாக்க முடிந்தும் அவ்வாறு செய்யத் தவறினால், அவரும் தீங்கை ஏற்படுத்தும் ஒரு குற்றவாளிக்கு சமமாவார். இதனால்தான், ஒரு எகிப்தியனால் ஒரு எபிரேயன் துன்புறுத்தப்படுவதைக் கண்டபோது, ​​மோயீசன் போர்க்கள விவகாரங்களில் தலையிட்டு தன் வீரத்தைக் காட்டினார், என்று யாத்திராகமம் 2:11-ல் கூறப்பட்டுள்ளது. அவர் அந்த எகிப்தியனை வீழ்த்தி, அவனை மணலில் புதைத்து எபிரேயனைப் பாதுகாத்தார். மேலும், ஜனங்கள் ஒருவனைக் கொலைசெய்யத் திட்டமிடுகையில், உன்னால் முடிந்தால் அவனைக் காப்பாற்றவேண்டும், என்று சாலமோன் அறிவுறுத்தியதாக நீதிமொழிகள் 24:11-ல் கூறப்பட்டுள்ளது.

180. சிசெரோ, பனேடியஸ், அல்லது அரிஸ்டாட்டிலும் கூட, இந்தக் கருத்துக்களை எங்கிருந்து பெற்றார்கள் என்பது முற்றிலும் தெளிவாகிறது. அவர்களுக்கு முன் வாழ்ந்த யோபுவும் கூட, “நான் பலவான்களின் கையிலிருந்து ஏழைகளை விடுவித்தேன், உதவியற்ற திக்கற்றவர்களுக்கு நான் உதவினேன். அழிந்துபோக ஆயத்தமாக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வரட்டும்” என்று யோபு 29:12-13 வாயிலாகக் கூறியிருந்தார். அவர் சாத்தானின் தாக்குதல்களை அவர் மிகவும் மேன்மையாகத் தாங்கி, தன் மனதின் வல்லமையால் அவனை வென்றதில் அவர் மிகவும் தைரியமானவர் அல்லவா? “ஒரு மனிதனைப் போல உன் இடுப்பின் கச்சையை இறுகக் கட்டிக்கொள். மேன்மையையும் வல்லமையையும் அணிந்துகொள். அநியாயம் செய்கிற ஒவ்வொருவனையும் தாழ்த்து” என்று கர்த்தர் யாரிடம் சொன்னாரோ, அவருடைய மனவுறுதியை நாம் சந்தேகிக்க எவ்வித காரணமுமில்லை. அப்போஸ்தலர் கூறுவதையும் சற்று நோக்குவோம்: “தேவன் பொய் சொல்லமாட்டார். ஆணையிட்ட பிறகு அது பொய்க்காது. அது நமக்கு ஆறுதலாய் இருப்பதோடு நமது நம்பிக்கையைப் பலப்படுத்தும்” என்று எபிரேயர் 6:18 கூறுகிறது. அப்படியானால், எந்தத் துக்கத்திலும் ஆறுதலைக் காண்பவனே தைரியமானவன்.

181. உண்மையிலேயே, ஒருவன் தன்னை வென்று, தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி, எந்த ஆசைகளுக்கும் அடிபணியாமல், கடினமான காலங்களில் உறுதியாக இருந்து, வெற்றியால் அதீத மமதை கொள்ளாமல், காற்றில் ஆடும் இலையைப் போல ஒவ்வொரு சிறிய மாற்றத்தாலும் அலைக்கழிக்கப்படாமல் இருக்கும் நிலையைத்தான் நாம் மன உறுதி என்று அழைக்கிறோம். அப்படியானால் மனதின் ஆசைகளையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்காக, மனமானது கட்டளைகளைப் பின்பற்றவும், பகுத்தறிவுக்குச் செவிசாய்க்கவும், சவால்களைத் துணிந்து மனமுவந்து எதிர்கொள்ளவும், அதைப் பயிற்றுவித்து, உடலைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது இன்னும் போற்றுதலுக்குரிய அம்சங்கள் அல்லவா?

182. ஆக, இதுவே அடிப்படையில் மன உறுதியின் முதல் கட்டமாகும். மன உறுதியை நீங்கள் இரண்டு வழிகளில் வகைப்படுத்தலாம்; முதலாவதாக, அது அனைத்து வெளிப்புற விஷயங்களை முக்கியமற்றதாகக் கருதி, அவற்றைத் தேடுவதை விட தேவையற்றதாகவும், ஒதுக்கிவைக்கப்பட ​​வேண்டியதாகவும் கருதுகிறது. இரண்டாவதாக, அது உங்களிடம் உள்ள அனைத்து மன வலிமையையும் பயன்படுத்தி, மிக உயர்ந்த இலட்சியங்களையும், ஒரு தார்மீக அம்சம் கொண்ட அனைத்தையும் (அல்லது கிரேக்கர்கள் கூறுவது போல், πρέπον) நோக்கமாகக் கொண்டுள்ளது. உண்மையின்படி பார்த்தால், செல்வம், இன்பங்கள் மற்றும் கௌரவம் போன்றவற்றுக்கு அதிக மதிப்பு கொடுக்காமலும், உங்கள் ஆற்றல் அனைத்தையும் அவற்றில் வீணடிக்காமலும் இருக்க உங்கள் மனதை ஒருநிலைப்படுத்துவதை விடப் போற்றத்தக்க அம்சம் வேறு என்ன இருக்க முடியும்? உங்கள் மனம் இந்த நிலையில் இருக்கும்போது, ​​நன்மை மற்றும் பொருத்தமான எல்லாவற்றிற்கும் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்; மேலும், உங்கள் உடைமைகளை இழத்தல், மரியாதை குறைவாய் நடத்தப்படும் சூழ்நிலைகளுக்கு முகம்கொடுத்தல், மற்றும் இறைநம்பிக்கை அற்றவர்களால் இழிவாகப் பார்க்கப்படுத்ல் போன்ற, உங்கள் மனதை உலுக்கும் ஏதேனும் ஒரு நிகழ்வு ஏற்பட்டாலும், அது உங்களைப் பாதிக்காத அளவுக்கு நீங்கள் மன உறுதியுடன் இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் நீங்கள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவித்துக்கொண்டு இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டும். உண்மையில், உங்கள் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் கூட, அவை நீதியின் அடிப்படையில் வந்தாலும் கூட உங்களைத் தொந்தரவு செய்ய முடியாது.

183. இதுவே கிறிஸ்துவின் போர்வீரனுக்குரிய உண்மையான பலம்; அவன் நியாயப்படி போராடாவிட்டால் கிரீடத்தைப் பெறமாட்டான். இதுகுறித்து “விதிமுறைகளின்படி போட்டியிடாமல் எந்த விளையாட்டு வீரனாலும் வெற்றிக் கிரீடத்தை அடைய முடியாது” என்று 2 தீமோத்தேயு 2:5 கூறுகிறது. இல்லாவிட்டால், பலத்திற்கான இந்த அழைப்பு உங்களுக்கு பலவீனமாகத் தோன்றுகிறதா? அப்படியென்றால், “துன்பங்கள் தான் நம்மைப் பொறுமை உடையவர்களாக ஆக்குகின்றன. நாம் பலமுடையவர்கள் என்பதற்கு இப்பொறுமையே சான்று. இச்சான்று நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது” என்று ரோமர் 5:3-4. கூறுகிறது. எத்தனை போட்டிகள் நடைபெற்ற போதிலும், ஒரே ஒரு வெற்றிக் கிண்ணம் தான் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவினால் சக்திமயப் படுத்தப்பட்டு, தொடர்ச்சியான போராட்டங்களைச் சந்தித்த ஒருவரிடமிருந்து மட்டுமே இந்த அழைப்பு வருகிறது. ‘அவரைச் சுற்றிலும் துன்பங்களும், வெளியே போர்களும், உள்ளே அச்சங்களும் இருந்தன’ என்று 2 கொரிந்தியர் 7:5. கூறுவதை இங்கே காணக்கூடியதாக இருக்கிறது. கிறிஸ்துவின் போர்வீரன் ஆபத்துகள், பொல்லாப்புக்கள், பலதரப்பட்ட கஷ்டங்கள், சிறைவாசம், மற்றும் மரணம் போன்ற துயரங்களை எதிர்கொண்ட போதிலும், நம்பிக்கையை இழக்கவில்லை. மாறாக, அவர் தொடர்ந்து போராடி, தனது போராட்டங்களின் மூலம் மேலும் பலம் பெற்றார்.

184. திருச்சபையில் தங்கள் பணியைத் தொடங்குபவர்களுக்கு, அவர் பூமிக்குரிய காரியங்களைப் புறக்கணிக்க எவ்வாறு போதிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுடன் மரித்து, உலகக் கரிசனைகளில் இருந்து விடுபட்டிருந்தால், நீங்கள் இன்னும் ஏன் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்? காலப்போக்கில் மறைந்துபோகும் விடயங்களைத் தொடவோ, சுவைக்கவோ, கையாளவோ வேண்டாம். மேலும், கொலோசெயர் 3:1-2-ல் கூறப்பட்டுள்ளதுபோல, “கிறிஸ்துவோடு நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர்கள். எனவே, பரலோகத்தில் உள்ளவற்றைப் பெற முயற்சி செய்யுங்கள். அங்கே தேவனுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து வீற்றிருக்கிறார். பூமியில் உள்ளவற்றைப் பற்றி, சிந்திக்காமல் பரலோகில் உள்ளவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள்” என்கிறார். மீண்டும், கொலோசெயர் 3:5-ல் “தீமை, பாலியல் குற்றம், பாவ காரியங்களின் ஆளுகைக்கு உள்ளாகுதல், மோகம், தீய ஆசைகள் போன்ற பாவங்களை உங்கள் வாழ்விலிருந்து விலக்குங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. என் மகனே, உன்னை விசேஷமாக, செல்வத்தை வெறுக்கவும், அசுத்தமான மற்றும் பாட்டிமார்களின் பழங்கதைகள் மற்றும் கட்டுக்கதைகளைத் தவிர்க்கவும் வேண்டுமென அவர் உன்னை ஊக்குவிக்கிறார். அதற்குப் பதிலாக, தேவபக்தியில் வளர்வதில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில், 1 தீமோத்தேயு 4:8 கூறுகையில், “உடற்பயிற்சியானது சில வழிகளில் பிரயோசனமாக இருந்தாலும், தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவும் ஒரு பிரயோசனம் மிக்கதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டு வருவதாகும்.

185. ஆகவே, முதிர்ச்சியற்ற செயல்களிலிருந்து நீங்கள் விலகி இருக்க, உங்கள் தேவபக்தி உங்களை நீதி, சுயக்கட்டுப்பாடு மற்றும் தயவின் பக்கம் வழிநடத்தட்டும். கிருபையில் உறுதியாக வேரூன்றி, விசுவாசத்தின் உன்னதமான போராட்டத்தில் நீங்கள் ஈடுபடலாம் என்று பொருள்படும் விதத்தில், “விசுவாசம் வைத்தல் என்பது பந்தயத்தில் ஓடுவது போன்றது. அதில் வெற்றி பெறக் கடுமையாகப் பாடுபட வேண்டும், அதற்காக நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்” என்று 1 தீமோத்தேயு 6:12 கூறுகிறது. அத்தோடு, “இவ்வுலக வாழ்வின் சோதனைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருங்கள், ஏனெனில் நீங்கள் தேவனுக்காகப் போரிடுகிறீர்கள்” என 2 தீமோத்தேயு 2:4 சொல்கிறது. பேரரசர் சார்பாகப் போராடுபவன் கூட, வழக்குகள் தொடுப்பதற்கும், எந்தவொரு சட்டபூர்வமான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், பொருட்களை விற்பனை செய்வதற்கும், குடியுரிமை  சட்டங்களால் தடை செய்யப்பட்டிருக்கும் போது, விசுவாசப் போரில் போராடுபவர் எல்லா விதமான வியாபாரங்களையும் எவ்வளவு தூரம் தவிர்க்க வேண்டும்? அவர்களுக்குச் சொந்தமாக ஒரு சிறிய நிலம் இருந்தால், அதில் அவர்களால் விளைவிக்க முடிந்தவற்றில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தங்கள் உழைப்பிலிருந்து அவர்கள் சம்பாதிக்கும் விதானத்தில் திருப்தி அடைய வேண்டும். இதற்கு ஓர் உறுதியான உதாரணத்தை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்: நான் இளமையாக இருந்தேன், இப்போது எனக்கு வயதாகிவிட்டது; ஆனாலும், நான் அறிந்தவரையில், நீதிமான்கள் கைவிடப்படுவதையோ, அவர்களின் பிள்ளைகள் உணவுக்காக மற்றவர்களிடம் கையேந்துவதையும் நான் ஒருபோதும் கண்டதில்லை. அதுதான், மேலும் மேலும் வேண்டும் என்ற ஆசையால் கலங்காமலும், போதுமானதல்ல என்று கவலைப்படுவதால் கலங்காமலும் இருக்கும் மனதில் தான் உண்மையான அமைதியினதும் தன்னடக்கத்தினதும் இருப்பிடமாகும்.

அத்தியாயம் 37

இன்பத்திலும் துன்பத்திலும் சமநிலையான மனோநிலையைப் பேண வேண்டும். தீமைகளின் தாக்கங்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் முக்கியம்.

186. கவலையிலிருந்து விடுபட்ட அந்த உண்மையான மன விடுதலை, நம் துக்கங்களில் நாம் மிகவும் மூழ்கிவிடாமலும், நம் வெற்றிகளில் மமதை கொள்ளாமலும் இருக்க உதவுகிறது. மேலும், அரச பணிகளை மேற்கொள்ளும்படி மனிதர்களைத் தூண்டுபவர்கள் இத்தகைய விதிகளை வகுத்தால், திருச்சபையில் கடமையாற்ற அழைக்கப்பட்ட நாம், அவ்வாறு செயல்பட்டு, கடவுளுக்குப் பிரியமான காரியங்களைச் செய்ய எவ்வளவு அதிகமாகக் கடமைப்பட்டிருக்கிறோம்; இவ்வழியாக, கிறிஸ்துவின் வல்லமை நம் மூலம் பிரகாசிக்கவும் நமது உன்னதருக்கு நம்மை நிரூபிக்கவும் வேண்டும், அப்போதுதான் நமது செயல்கள் நீதியின் கருவிகளாக இருக்க முடியும் என்றும், பாவத்தின் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கும் ஆயுதங்களாக அல்லாமல், பாவத்தை நீக்கும் கடவுளின் வலிமையான கருவிகளாக அவை இருக்கும். நமது சரீரம் மரிக்கட்டும், அப்போது ஒவ்வொரு பாவமும் அதனுடன் மரிக்கட்டும். மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர் பெறுவதைப் போலவே, நாமும் புதிய செயல்களுக்கும் புத்துணர்ச்சியூட்டும் வாழ்க்கைக்குள் மீண்டும் எழுவோமாக.

187. இவையே மனவுறுதி செய்யும் செயல்கள்; அவற்றில் நற்பண்புகளும் தகுதியான கடமைகளும் நிறைந்துள்ளன. ஆகவே நாம் செய்யும் எல்லாக் காரியங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, அது நல்லதா என்பதை மட்டுமல்ல, அது செய்யக்கூடியதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்மால் முடிக்க முடியாத எதையும் நாம் தொடங்காமல் இருப்போம். ஆகையால், கர்த்தர், தம்முடைய சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, “ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள்” என்று அவரது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார் என்று மத்தேயு 10:23. கூறுகிறது. வேதசாட்சியத்தின் கிரீடத்திற்காக ஏங்கும் எவரும், பலவீனமான உடலால் அல்லது மதிமயங்கிய மனதால் தாங்கவும், சகித்துக்கொள்ளவும் முடியாத ஆபத்துகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள்.

அத்தியாயம் 38

வருங்காலத்தில் வரவிருக்கும் துன்பங்களைப் பற்றி முன்கூட்டியே சிந்திப்பதன் மூலம், அவற்றிற்கு ஏற்ப நம் மனதை நாம் தயார்படுத்த வேண்டும். இருப்பினும், இதைச் செய்வது எளிதல்ல.

188. ஆனாலும், கோழைத்தனத்தால் யாரும் பின்வாங்கவோ, ஆபத்து குறித்த பயத்தால் தங்கள் நம்பிக்கையைக் கைவிடுவதோ புத்திசாலித்தனமல்ல. எந்தவிதமான பயத்தாலும் ஒருபோதும் அசைக்கப்படாமலும், எந்தக் கஷ்டங்கள் மற்றும் துன்பங்களைக் கண்டு ஒருபோதும் சளைக்காமல், எந்த விதமான சித்திரவதைகளுக்கும் ஒருபோதும் அடிபணியாமலும் இருக்கவும் அவற்றைத் துணிவுடன் எதிர்கொள்ள எம்மை நன்றாக ஆயத்தப்படுத்திக்கொண்டு, மனதில் வலிமையுடன் வருபவற்றை எதிர்கொள்ள நாம் எம்மைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றைச் சகிப்பது இலகுவானதல்ல, அது மிகவும் கடினம்! ஆனால், பெரிதாக ஏற்படக்கூடிய வலியை எண்ணி அஞ்சும் போது, மற்றைய எல்லா வலியும் சிறியதாகத் தோன்றுவதைப் போலவே, நீங்கள் அமைதியான ஆலோசனைகளால் உங்கள் உள்ளத்தை வலுப்படுத்திக்கொண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் பாதையை மாற்றுவதில்லை என்ற உறுதியுடன் தெய்வீகத் தீர்ப்பு மீதான பயத்தையும் நித்திய தண்டனையின் வேதனையையும் உங்களுக்கு முன் வைத்து எண்ணிப்பார்ப்பீர்களானால், அப்போது நீங்கள் தேடும் மன உறுதியைப் பெற முடியும்.

189. ஒருவன் இவ்வாறு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போது, ​​அவன் உண்மையிலேயே விடாமுயற்சியுள்ளவன் என்பதை அது காட்டுகிறது. மறுபுறம், ஒருவன் தன் மனதால் எதிர்காலத்தைக் கணித்து, என்ன நடக்கக்கூடும் என்பதைத் தன் கண்முன்னே கொண்டுவந்து, அது நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க முடிந்தால் அது இயற்கையான திறமையின் அறிகுறியாகும். அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொள்ளலாம்; அவை ஒவ்வொன்றாகவோ அல்லது அனைத்தும் ஒரே நேரத்தில் எப்படி ஏற்படக்கூடும் என்று சிந்தித்து, பின்னர், அவை தனித்தனியாக நடந்தாலும் சரி அல்லது ஒன்றாக நடந்தாலும் சரி, ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு சிறந்த செயல்முறையைக் கண்டறியலாம்.

200. எனவே, ஒரு வீரனின் கடமை எப்படியிருக்கும் என்றால், ஏதேனும் ஒரு விடயம் அவனை அச்சுறுத்தும் போது, அவன் தன் கண்களை மூடிக்கொள்ளாமல், அந்த அச்சம் தரும் விடயத்தைத் தன் கண் முன் நிறுத்தி, தன் மனம் எனும் கண்ணாடியில் பார்ப்பது போல அந்த நிலைமையை ஆராய்ந்து, எதிர்காலத்தை முன்னறிந்து சிந்திக்கும் திறனுடன் நிலைமையை எதிர்கொள்வதாகும். ஏதேனும் ஒன்று நடக்கவே முடியாது என்று நினைத்ததற்காகப் பிற்காலத்தில் வருந்த நேரிடுமோ என அஞ்சி, அவன் எதிர்காலத்தைக் கவனமாக அணுக வேண்டும். நமக்கு வரக்கூடிய துரதிர்ஷ்டங்களை முன்கூட்டியே எதிர்பார்த்து அவற்றுக்கு முகம் கொடுக்க எம்மைத் தயார்படுத்த வில்லையென்றால் அவை விரைவாக நம்மை ஆட்கொண்டுவிடும். போரில், எதிர்பார்த்திராத ஒரு எதிரியை எதிர்த்துப் போராடுவது கடினம்; ஏனென்றால் மற்றைய வீரர்கள் தயாராக இல்லாததைக் கண்டால், அவன் அவர்களை எளிதில் வென்றுவிடுவான்; அதுபோலவே, எதிர்பார்த்திராத தீமைகள் ஆன்மாவை எளிதில் சிதைத்துவிடும்.

200. ஆகவே, ஆன்மாவின் மேன்மை இந்த இரண்டு விஷயங்களில் அடங்கியுள்ளது: முதலாவது; உங்கள் ஆன்மா நல்ல எண்ணங்களாலும் தூய வழிகளிலும் வளர்க்கப்பட்டால், அது எது சரியானது மற்றும் எது நற்பண்பு கொண்டது என்பதை அது கண்டுகொள்ளும் மத்தேயு 5:8-ல், “உள்ளத்தில் தூய்மையானவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் தேவனைக் காண்பார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் பொருள், நற்பண்பு கொண்ட மனம் மட்டுமே நல்லது எது என்பதை உணர்ந்து கொள்ளும்; இரண்டாவதாக, அது எந்த விதமான காரியத்தினாலும் கலக்கமடையாமலும், நிலையற்ற ஆசைகளால் அசைக்கப்படாமலும் இருக்க வேண்டும். (sub chapter 200 appears twice)

201. இது எவருக்கும் அத்தனை சுலபமான காரியம் அல்ல. அதாவது, ஞானத்தின் மகத்துவத்தையும் பெரும்பாலானோருக்கு மிகவும் மகத்தானதாகவும் போற்றத்தக்கதாகவும் தோன்றும் மற்ற எல்லா விஷயங்களையும், ஒரு கண்காணிப்புக் கோபுரத்திலிருந்து பார்ப்பது போல பார்ப்பது எவ்வளவு கடினமான இரு விடயம்? உண்மையில், உறுதியான பகுத்தறிவின் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்பதும், நீங்கள் மதிப்பற்றதாகக் கருதிய ஒன்றை, அதற்கு எந்த மதிப்பும் இல்லாதது போலப் புறக்கணிப்பதும் எவ்வளவு கடினம்? மீண்டும் யோசித்துப் பாருங்கள், துரதிர்ஷ்டவசமாக ஏதேனும் ஒன்று நடக்கும்போது, ​​அது மனதுக்குப் பாரமாகவும் துக்கமாகவும் இருப்பதாக உணரும்போது, ​​அதை வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்று நினைத்து கையாள்வது எவ்வளவு சவாலானது? குறிப்பாக, நான் இந்த உலகத்தில் பிறந்தபோது நிர்வாணமாக இருந்தேன், என்னிடம் எதுவும் இருக்கவில்லை. நான் இறந்தபின் இந்த உலகை விட்டு நீங்கிச் செல்லும்போது, நான் நிர்வாணமாக எதுவுமின்றி செல்லுவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக்கொண்டார். கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்!” என்று யோபு 1:21 கூறுகிறது. (இது பிள்ளைகளையும் உடைமைகளையும் இழந்த ஒருவரால் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது). மேலும், “கர்த்தரின் சித்தத்தின்படியே நடந்தது” என்று சொன்னவரைப் போல, ஒரு ஞானமுள்ள மற்றும் மரியாதைக்குரிய நபரின் உன்னதமான குணத்தைத் எம்மில் தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு கடினம்? மேலும் ஒருமுறை: யோபு தன் மனைவியை நோக்கிக் கூறுகையில், “நீ மதிகெட்டவளைப்போலப் பேசுகிறாய்! தேவன் நல்லவற்றைக் கொடுக்கும்போது நாம் அவற்றை மனமுவந்து ஏற்கிறோம். அதுபோலவே நாம் தொல்லைகளையும் ஏற்கவேண்டும், முறையிடக்கூடாது” என்று பதில் அளித்தான். எத்தனை துன்பங்கள் தொல்லைகள் வந்த போதும், யோபு பாவம் செய்யவோ அல்லது தேவனுக்கு எதிராக எதுவும் பேசவோ இல்லை” என்று யோபு 2:10 இல் கூறப்பட்டுள்ளது.

அத்தியாயம் 39

எல்லாத் தீய பழக்கங்களுக்கும், குறிப்பாகப் பேராசைக்கு எதிராகப் போராடும்போது ஒருவர் தைரியமாக இருக்க வேண்டும். புனித யோபு இந்தப் பாடத்தை நமக்குக் கற்பிக்கிறார்.

202. நிச்சயமாக ஆன்மாவின் வலிமை என்பது முக்கியமானது; அது மற்றைய நற்பண்புகளில் இருந்து வேறுபட்டதல்ல, அது அவற்றுடன் சேர்ந்தே போராடுகிறது; அது எல்லா நற்பண்புகளின் வசீகரத்தையும் பாதுகாப்பதோடு பகுத்தறியும் திறனைப் பேணுகிறது. மேலும் எல்லாத் தீய குணங்களுக்கும் எதிராக இடைவிடாத தீவிரத்துடன் போரிடுகிறது. கடின பிரயத்தனத்தால் அதை வெல்ல முடியாதது; ஆபத்துகளை எதிர்கொள்வதில் துணிச்சல் மிக்கது; இன்பங்களுக்கு எதிராகக் கண்டிப்பாகக் குரல் எழுப்பவல்லது; சோதனைகளுக்கு எதிராகக் கடினமான போக்கைக் கடைபிடிக்கக்கூடியது, அவை பற்றிக் கேட்கவோ ஏற்றுக்கொள்ளவோ ​​அது மறுக்கிறது. அதற்குப் பணத்தின் மீது ஆர்வம் இல்லை, மேலும் எல்லா நற்பண்புகளையும் அழிக்கும் ஒரு நோயைப் போன்ற பேராசையைத் தவிர்க்கிறது. ஆதாயத்தின் கவர்ச்சியால் தோற்கடிக்கப்படுவதை விட, மனவுறுதிக்கு வேறு எதுவும் அவ்வளவு முரணாக இருப்பதில்லை. பலமுறை, எதிரியின் படை விரட்டியடிக்கப் பட்டு, அவனது படைகள் தப்பி ஓடும்போது, ​​போரில் தோற்றவர்களின் கொள்ளைப் பொருட்களைச் சேகரிப்பதில் மும்முரமாக இருக்கும் ஒரு வீரன், தான் தோற்கடித்த வீரர்களுக்கு மத்தியிலேயே பரிதாபகரமாக இறந்திருக்கிறான்; அதேபோல், வென்ற படைவீரர்கள் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களைப் பற்றிய நினைப்பில் மூழ்கியிருந்த போது, தப்பி ஓடிய எதிரிகள் மீண்டும் வந்து அவர்களை வெற்றிகொண்ட சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை.

203. அப்படியென்றால், மனவுறுதி அத்தகைய பயங்கரமான அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடி அதைத் தோற்கடிக்க வேண்டும். அது சோதனைகளுக்கு அடிபணியவோ அல்லது அச்சத்தால் நிலைகுலையவோ கூடாது. அறம் உறுதியாக நிலைத்து நின்று, எல்லாத் தவறுகளையும் அறத்திற்குத் தீங்கு விளைவிப்பவை என்ற நோக்கோடு, நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. அது கோபத்தை ஆயுதம் ஏந்திய போர்வீரனைப்போல் தடுக்க வேண்டும், ஏனெனில் கோபம் பகுத்தறிவை விரட்டி விடுகிறது. அது கோபத்தை ஒரு கடுமையான நோயைப் போல எண்ணி அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். மேலும், அது புகழுக்கான ஆசை போன்ற விடயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; ஏனெனில், புகழ் என்ற போதையை மிகுந்த ஆர்வத்துடன் பின்தொடரும் போது பெரும்பாலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. புகழை அடைந்த பின்னரும் கூட எப்போதும் சிக்கல்களை உண்டாக்க வல்லதாக இருக்கிறது.

204. புனித யோபுவிடம் அல்லது அவரது குணத்தில் என்ன குறை இருந்தது? அல்லது தீய குணங்கள் என்று வரும்போது அவர் என்னென்ன துரதிர்ஷ்டங்களைச் சந்தித்தார்? நோய், குளிர் அல்லது பசியின் வலியை அவர் எவ்வாறு சமாளித்தார்? தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்த விஷயங்களுக்கு அவர் எவ்வாறு பதிலளித்தார்? அவர் ஏழைகளுடன் பகிர்ந்து கொண்ட செல்வங்கள் நேர்மையற்ற வழிகளில் பெறப்பட்டவையா? செல்வத்தின் மீதான பேராசை, இன்ப வேட்கை அல்லது காமம் ஆகியவை அவரது இதயத்தில் வேரூன்ற அவர் எப்போதாவது அனுமதித்தாரா? மூன்று இளவரசர்களின் கடுமையான வாதங்களோ அல்லது அடிமைகளின் ஏளனங்களோ எப்போதாவது அவருக்குக் கோபத்தைத் தூண்டினவா? மிகச் சிறிய மறைக்கப்பட்ட தவறுக்காகத் தனக்குத்தானே தண்டனையை வரவழைத்துக் கொண்டபோதோ, அல்லது கூட்டத்திற்குப் பயந்து அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கியபோதோ, புகழ் அவரை மனம்போன போக்கில் அடித்துச் சென்றதா? அவரது நற்பண்புகளுக்கு எந்தத் தீய குணங்களுடனும் தொடர்பு இருக்கவில்லை; அவை தன்னிச்சையாகவே வலுவாக நின்றன. அப்படியானால், புனித யோபுவைப் போல யார் அவ்வளவு தைரியசாலியாக இருக்க முடியும்? அவருடன் ஒப்பிட யாருமே இல்லாதபோது, ​​அவரை எப்படி எவருக்கும் இரண்டாம் நிலையில் இருப்பவர் என்று கருத முடியும்?

அத்தியாயம் 40

பழங்கால வீரர்களின் கதைகளிலும், குறிப்பாக எலேயாசரின் புகழ்பெற்ற செயலிலும் காணப்படுவது போல, நம் முன்னோர்கள் போரில் வீரம் இல்லாதவர்களா இருக்கவில்லை.

205. ஒருவேளை, போர்களில் ஈடுபட்டதன் காரணமாகப் புகழ் பெற்றிருப்பதைக் கொண்டு, உண்மையான வீரம் போர்க்களத்தில் மட்டுமே காணப்படுகிறது என்று சிலரை நினைக்க வைக்கிறது. அதனால்தான் நான் இதைக் குறிப்பிட்டேன், ஏனெனில் அது நம்மிடம் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், நூனின் மகனான யோசுவா எவ்வளவு தைரியமானவராக இருந்தார் என்று பாருங்கள்! “யோசுவா அந்த ஐந்து அரசர்களையும் கொன்று, அவர்களின் உடல்களை ஐந்து மரங்களில் தொங்கவிட்டான். மாலைவரை அவர்களை மரத்திலேயே தொங்கவிட்டான்” என்று யோசுவா 10.26 கூறுகிறது. மேலும், அவர் கிபியோனியர்களை எதிர்கொண்டு, இரவு தன்னை வெற்றி பெறவிடாமல் தடுத்துவிடுமோ என்று கவலைப்பட்டபோது, ​​அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் உறுதியுடனும், “சூரியன், கிபியோனின் மேல் நிற்கட்டும். ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் சந்திரன் அசையாது நிற்கட்டும்” என்றான் என்று யோசுவா 10:12 சான்றளிக்கிறது. ஆகவே அவர் வெற்றியை உறுதிசெய்யும் வரை அவை நின்றன. கிதியோன், வெறும் முந்நூறு வீரர்களுடன் ஒரு கொடிய மற்றும் இரக்கமற்ற எதிரியை வென்றார், என்று நியாயாதிபதிகள் 7 கூறுவதைக் கவனிக்கவும். மேலும், இளையவனான யொனதனைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது? அவன் போரில் நம்பமுடியாத அளவுக்கு தன் வீரத்தைக் காட்டினான். அதேநேரம், மக்கபேயர்கள் குறித்தும் என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியாது!

206. முதலில், நான் நம் முன்னோர்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன். அவர்கள் கடவுளின் ஆலயத்தையும் தங்கள் சொந்த உரிமைகளையும் பாதுகாக்க எப்போதும் தயாராக இருந்தனர். ஓய்வுநாளில் எதிரிகள் அவர்களைத் தாக்கியபோதும், ஓய்வுநாளைப் பரிசுத்தமாக வைத்திருக்க விரும்பி, போரிடுவதை விட காயங்களைத் தாங்கிக்கொள்ளவே அவர்கள் தயாராக இருந்தனர். அவர்கள் மனமுவந்து மரணத்தை எதிர்கொண்டனர். இருப்பினும், தாங்கள் செயலில் இறங்காவிட்டால் முழு தேசமும் அழிந்துவிடும் என்று மக்கபேயர்கள் நம்பினர். எனவே, ஓய்வுநாளில், அவர்கள் போருக்குத் தூண்டப்பட்டபோது, ​​தங்கள் அப்பாவி சகோதரர்களின் மரணங்களுக்காகப் பழிவாங்க முற்பட்டனர். பின்னர், இதனால் கிளர்ந்தெழுந்த அரசன் அந்தியோகஸ், தனது தளபதிகளான லிசியாஸ், நிக்கானோர் மற்றும் ஜார்ஜியாஸ் ஆகியோருடன் போரை மீண்டும் ஆரம்பித்தான். அவனும் அவனது கிழக்கத்திய மற்றும் அசிரியப் படைகளும் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டனர். போர்க்களத்தில் 48,000 பேர் இறந்தனர்; இவர்கள் அனைவரும் வெறும் 3,000 வீரர்களால் வீழ்த்தப்பட்டனர்.

207. அதிபதியான யூதாஸ் மக்கபேயுவின் வீரத்தை, அவருடைய வீரர்களில் ஒருவனின் கண்ணோட்டத்தில் வெளிப்பட்டவாறு ஒரு கணம் பாராட்டுவோம். “எலேயாசர், அதிசயிக்கத்தக்க, நம்பமுடியாத தைரியத்தை வெளிப்படுத்தினான்! அரச கவசம் அணிந்ததும் மற்ற எல்லாவற்றையும் விடப் பெரியதுமான மிருகங்களில் ஒன்றைக் கண்டான்; அதனால், அரசன் அதன் மீது இருப்பதாக அவன் நினைத்தான். அவன் தன் மக்களைக் காப்பாற்றவும், தனக்கென ஒரு நிலையான பெயரைப் பெறவும் தன் உயிரைத் தியாகம் செய்ய முடிவு செய்தான். முதலாவதாக, அவன் மரண பயத்தைக் காட்டவில்லை, இரண்டாவதாக, எதிரிகளால் சூழப்பட்டிருந்தபோதும், அவன் நேராகப் போரின் மையத்திற்குள் ஊடுருவிச் சென்றான்! அவன் தன் உயிரைப் பொருட்படுத்தாது, தன் கேடயத்தைக் கழற்றி எறிந்துவிட்டு, அந்தப் பிரம்மாண்டமான உயிரினத்தின் வயிற்றுப்பகுதிக்கு அடியில் சென்று, தன் முழு பலத்துடன் அதைத் தாக்கினான்; அந்த மிருகம் தரையில் சரிந்து அவன் மீது விழுந்துவிட்டது. அதனால் அவன் அங்கேயே இறந்து போனான்” என்று 1 மக்கபேயு 6:43-ல், கூறப்பட்டுள்ளது.

208. அரச ஆபரணங்களால் அவன் ஏமாற்றப்பட்டபோதிலும், அவனது நோக்கத்தில் அவன் குறியாக இருந்தான். அவன் இறுகப் பிடிக்கப்பட்டிருந்தபோதிலும், அவனுடைய அத்தகைய அசகாய வீரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த எதிரிகள், நிராயுதபாணியாக இருந்த அந்தத் தனி மனிதனைத் தாக்கத் துணியவில்லை. அந்த பாரிய மிருகம் கொல்லப்பட்ட துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்குப் பிறகு அவர்கள் மிகவும் பயந்துபோயிருந்ததால், ஒரு தனி மனிதனின் வியக்கத்தக்க தைரியத்தால் தாங்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டதாக உணர்ந்தனர். உண்மையில், லிசியாவின் மகனான அரசன் அந்தியோகஸ், ஒரு தனி மனிதனின் வீரத்தைக் கண்டு அஞ்சி சமாதானத்தை நாடினான். அவன் 120,000 ஆயுதம் ஏந்திய வீரர்களுடனும், 32 யானைகளுடனும் போருக்கு வந்திருந்தான்; சூரியன் உதித்தபோது, ​​மலைகளைப் போல உயர்ந்த அந்த யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக எரியும் விளக்குகளின் வரிசையைப் போல ஜொலித்து ஒளிர்ந்தன. இவ்வாறு, எலேயாசர் தனது வீரத்தின் மரபுரிமையாக சமாதானத்தை விட்டுச் சென்றான். இவையே வெற்றிகளின் அடையாளங்கள்.

அத்தியாயம் 41

யூதாஸ் மற்றும் யொனதனின் உயர்ந்த சிந்தனைகளைப் புகழ்ந்த பிறகு, சித்திரவதைகளைத் தாங்கிக்கொள்வதில் வேதசாட்சிகள் காட்டிய வலிமை, அதாவது வீரத்தின் ஒரு முக்கியப் பகுதியாக நமக்கு எடுத்துரைக்கப்படுகிறது.

209. மனவுறுதி என்பது நல்ல நேரங்களுக்கு மட்டுமல்ல, கெட்ட நேரங்களுக்கும் பொருந்துவதால், இப்போது யூதாஸ் மக்கபேயுவின் மரணத்தைப் பற்றி சிந்திப்போம். அரசனான தெமெட்ரியஸின் அதிபதியான நிக்கனோர் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அவ்வளவு பெரிய படையால் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து ஓடிவிடத் தயாரான 900 பேரை இணைத்துக்கொண்டு, அரசனுடைய 20,000 வீரர்களை அவன் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்டான். ஆனால், மானங்கெட்டு ஓடிப்போவதற்குப் பதிலாக, ஒரு கௌரவமான மரணத்தை எதிர்கொள்ள அவன் அவர்களைச் சம்மதிக்க வைத்தான். “நமது கௌரவத்திற்கு எந்தக் களங்கத்தையும் ஏற்படுத்த வேண்டாம்,” என்று அவன் கூறினான். எனவே, காலை முதல் இரவு வரை போரிட்ட பிறகு, அவன் தாக்கி எதிரியின் வலிமையான வலது பக்கப் படையை விரைவாகப் பின்னுக்குத் தள்ளினான். தனது சோர்வுக்கு மத்தியிலும், எஞ்சியிருந்தவர்களிடம் அவன், “நாம் முன்னேறிச் சென்று நம் எதிரிகளைச் சந்திப்போம்; ஒருவேளை நாம் அவர்களுக்கு எதிராக ஒரு நல்ல போரை நடத்தலாம்” என்று கூறியதாக 1 மக்கபேயு 9:8 இல் கூறுகிறது. இவ்வாறு, எந்தவொரு வெற்றியையும் விட, மரணமே தனக்கு மிகவும் கௌரவமானது என்று யூதாஸ் மக்கபேயு கண்டுகொண்டான்.

210. நான் ஏன் அவருடைய சகோதரர் யொனதனைப் பற்றி மீண்டும் குறிப்பிட வேண்டும்? 1 மக்கபேயர் 11:68-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவர் ஒரு மிகச் சிறிய குழுவுடன் அரசரின் இராணுவத்திற்கு எதிராகச் சமரிடச் சென்றார். அவருடைய ஆட்கள் அவரைக் கைவிட்டு போன பிறகு இருவர் மட்டுமே எஞ்சியிருந்தபோதிலும், அவர் போரின் போக்கைத் திருப்பி, எதிரிகளைப் பின்னுக்குத் தள்ளி, எல்லா திசைகளிலும் செயற்பட்டுக் கொண்டிருந்த தன் சொந்த ஆட்களைத் தன் வெற்றியில் பங்கு கொள்ள அழைத்தார்.

211. ஆக, இதுதான் போரில் காணப்படும் மனவுறுதி; உண்மையில் எது நல்லது, எது சரியானது என்பதற்கான எந்த அறிகுறிகளையும் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனெனில் அது அடிமைப்படுத்தப்படுவதையோ அவமானப்படுத்தப்படுவதையோ விட மரணமே மேலானது என்று நினைக்கிறது. ஆனால் வேதசாட்சிகள் அனுபவித்த வலியைப் பற்றி என்னால் எப்படி சொல்ல முடியும்? மிக ஆழமாகச் செல்லாமல், மக்கபேய மக்கள் தங்கள் முன்னோர்களைப் போலவே, அகங்கார அரசன் அந்தியோகஸை வென்று வெற்றிகளைப் பெறவில்லையா? நிச்சயமாக, பிந்தையவர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தனர், ஆனால் மக்கபேயர்கள் ஆயுதங்கள் இல்லாமலேயே வென்றனர். ஏழு சகோதரர்கள் கொண்ட குழு, அரசனுடைய படைகளால் சூழப்பட்ட போதும் தோற்கடிக்கப்பட முடியாமல் இருந்தது — சித்திரவதை பலனளிக்கவில்லை, சித்திரவதை செய்தவர்கள் ஓய்ந்துபோய் அகன்று சென்று விட்டனர்; ஆயினும் வேதசாட்சிகள் உறுதியாக நின்றனர். ஒரு சகோதரன், தன் தலையின் தோல் உரிக்கப்பட்ட பிறகும், தோற்றத்தில் மாறியிருந்தபோதிலும், தைரியத்தை விட்டுக்கொடுக்கவில்லை. மற்றொருவன், தன் நாக்கை வெட்டுவதற்காக வெளியே நீட்டச் சொல்லப்பட்டபோது, கர்த்தர் பேசுகிறவர்களுக்கு மாத்திரம் செவிகொடுப்பவர் அல்ல, மோயீசன் அமைதியாக இருந்தபோதும் கர்த்தர் அவருக்கு செவிகொடுத்தார். மற்றைய எல்லோருடைய வார்த்தைகளை விடவும், தம்முடைய மக்களின் மௌனமான எண்ணங்களை அவர் நன்கு புரிந்துகொள்கிறார். என் நாவின் சாட்டைக்கு நீ பயப்படுகிறாய் — ஆனாலும் தரையில் சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நீ பயப்படவில்லையே? இரத்தத்திற்கும் ஒரு குரல் உண்டு, அது ஆபேலின் விடயத்தில் செய்ததுபோலவே தேவனிடம் முறையிடும்.

212. 2 மக்கபேயர் 7:20-ல் கூறப்பட்டுள்ள அந்தத் தாயைப் பற்றி நான் எப்படி விபரிப்பது? “ஒரே நாளில் தன் ஏழு மகன்களும் மரித்துப் போவதைக் கண்ட அந்தத் தாய், கர்த்தர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக அதைத் தைரியமாகச் சகித்தாள்; அவள் மிகவும் போற்றத்தக்கவளும், நித்திய நினைவுக்குத் தகுதியானவளும் ஆவாள்” என்று கூறப்பட்டுள்ளது. அவள் தன் பிள்ளைகளின் உடல்களை வெற்றிக் கிண்ணங்களைப் பார்ப்பதுபோல மகிழ்ச்சியுடன் பார்த்தாள். மரணத் தறுவாயில் கிடந்த தன் மகன்மாரின் குரல்களில் எழுந்த அந்த மரண ஓலத்தில், பாடல்களைக் கேட்பது போல அவள் இன்பம் கண்டாள். தன் பிள்ளைகளிடம், தன் சொந்த இதயத்திலிருந்து வரும் அழகான ஒலிகளைக் கவனித்தாள்; எந்த வீணையின் இசையாலும் கொடுக்க முடியாத ஆழமான அன்பை அவள் உணர்ந்தாள்.

213. மத்தேயு 2:16-ல் குறிப்பிடப்பட்டுள்ள, வாழ்வை அனுபவிப்பதற்கு முன்பே வெற்றியைப் பெற்ற பெத்லகேமின் அந்த இரண்டு வயதுக் குழந்தைகளைப் பற்றி நான் என்ன சொல்வேன்? மேலும், தன் கற்பையும் வாழ்வையும் இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டபோது, ​​தன் கற்பைக் காத்து, நித்திய வாழ்வுக்காகத் தன் வாழ்வைத் துறந்த புனித அக்னஸைப் பற்றி என்ன சொல்வேன்?

214. புனித லோரன்ஸை நாம் மறந்துவிடக் கூடாது. அவர், தன் சக ஆயர் சிஸ்டஸ் (Xystus) என்பவரை வேதசாட்சியாக அழைத்துச் செல்லப்படுவதைக் கண்டபோது உடைந்து அழத் தொடங்கினார்—தன் ஆயர் அனுபவிக்கப்போகும் நிந்தனைகளை நினைத்து அல்ல, மாறாகத் தான் மட்டும் தனியாக விடப்படுவதை எண்ணியே அவர் வருந்தினார். பின்னர் இதுகுறித்து அவர் பேசும்போது, தந்தையே, உம்முடைய மகன் உம் கூட இல்லாமல் நீர் மட்டும் எங்கே எங்கே போகிறீர்? என் புனித குருவே, உம்முடைய திருத்தொண்டர் இல்லாமல் நீர் மட்டும் எங்கே விரைந்து செல்கிறீர்? உம்முடன் எவரும் இல்லாமல் நீர் ஒருபோதும் திருப்பலியை நிறைவேற்றியதில்லையே. தந்தையே, என்னைப் பற்றிய கவலையை விட்டுவிட்டீரா? நான் தகுதியற்றவன் என்று நினைக்கிறீரா? அப்படியானால், நீர் சரியான அடியாரைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர் என்று எனக்குக் காண்பியும். இரட்சகரின் திரு இரத்தத்தைப் புனிதப்படுத்தும் பொறுப்பை ஒப்படைத்தவருக்கும், திருச்சடங்குகளில் பங்குபெற அனுமதித்தவருமான என்னை, உமது மரணத்தில் பங்குகொள்வதை நீர் மறுக்கிறீரா? உமது வீரம் புகழப்படும்போது, ​​உமது நல்லறிவு தளர்ந்துவிடாதபடி கவனமாக இரும். ஒரு மாணவனை இழப்பது ஒரு ஆசிரியரை இழப்பதற்குச் சமம்; அல்லது, பெரியோரும் மேன்மை மிகுந்தோரும் தங்கள் சொந்தப் போட்டிகளில் வெற்றி பெறாமல், தங்கள் மாணவர்களின் போட்டிகளில் வெற்றி பெறுகிறார்கள் என்பது எவ்வகையில் சாத்தியமாகும்? ஆபிரகாம் தன் மகனை பலிக்கு அர்ப்பணித்தார், பேதுரு ஸ்டீவனை முன்னே அனுப்பினார்! தந்தையே, உமது வீரத்தை உமது மகன் மூலம் வெளிப்படுத்தும். நீர் பயிற்றுவித்த என்னை ஒப்புக்கொடும், அதனால் நீர் என்னைத் தேர்ந்தெடுத்ததன் மீது நம்பிக்கை வைத்து, தகுதியான சகாக்களுடன் சேர்ந்து நானும் வேதசாட்சியத்தின் மகுடத்தை அடைய முடியும்.

215. அப்பொழுது ஆயரான சிஸ்டஸ் லோரன்ஸை நோக்கி, நான் உன்னைத் தனியாக விடமாட்டேன். நீ இன்னும் பெரிய சவால்களைச் சந்திப்பாய். வயதான எங்களுக்குப் போராட்டம் எளிது ஆனால் நீயோ ஒரு இளைஞனாக, கொடுங்கோலனை வென்று மிகவும் மேன்மையான வெற்றியைப் பெறுவாய். நீ விரைவில் வருவாய், ஆகவே அழுவதை நிறுத்து; இன்னும் மூன்று நாட்களில், நீ என்னுடன் சேர்ந்து கொள்வாய். குருவானவருக்கும் அவருடைய உதவியாளருக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்க வேண்டும். உனக்கு உதவி தேவைப்படுவது போல, உன் எஜமானனின் கண்காணிப்பில் இருக்கும்போது நீ வெற்றி பெறக்கூடாது. என் மரணத்தில் நீ ஏன் பங்கு கொள்ள விரும்புகிறாய்? எனக்குப் பிறகு வரும் அனைத்தையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். உனக்கு நான் இங்கே ஏன் தேவை என்று நினைக்கிறாய்? பலவீனமான சீடர்கள் தங்கள் தலைவருக்கு முன்னால் செல்லட்டும், தைரியமானோர் தாங்களாகவே வெற்றி பெற அவர்களைப் பின்தொடரட்டும். அவர்களுக்கு இனி அவருடைய உதவி தேவையில்லை. எலியா எலிசாவை விட்டுச் சென்றது போலவே, நீ வெற்றி அடைவதற்குத் தேவையான எல்லா தைரியத்தையும் நான் உனக்குத் தருகிறேன்.

216. இதுவே அவர்களின் வாதமாக இருந்தது; அதுவும் ஒரு நியாயமான வாதமே. இதில், கிறிஸ்துவின் பெயரால் துன்பத்தை ஏற்றுக்கொள்வதில் யார் முதலில் நிற்பது என்று குருவும் உதவியாளரும் போட்டியிட்டனர். அந்தத் துயர நாடகம் அரங்கேற்றப்படும்போது, ​​பைலேட்ஸ் (Pylades), தன்னைத் தான் ஒரெஸ்டிஸ் (Orestes) என்று உரிமை கோர, பின்னையவன் தானே உண்மையான ஒரெஸ்டிஸ் என்று வலியுறுத்த, பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்வதாகக் கூறப்படுகிறது. ஓரிஸ்டிஸ் சார்பாக இறப்பதற்கு பைலேட்ஸ் அவ்வாறு செயல்பட்டார்; அதேநேரம், தனக்குப் பதிலாக பைலேட்ஸ் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காக ஒரெஸ்டிஸ் அவ்வாறு செய்தார். இருப்பினும், அவர்கள் இருவரும் தங்கள் தந்தையைக் கொன்ற குற்றவாளிகள் என்பதால், அவர்கள் உயிர் வாழ்வது நியாயப்படுத்தப்படவில்லை; ஒருவர் அந்தச் செயலைச் செய்ததற்காகவும், மற்றவர் அதற்கு உதவியதற்காகவும் குற்றவாளிகள் எனப்பட்டனர். ஆயினும், இந்த விஷயத்தில், புனித லோரன்ஸின் அன்பையும் பக்தியையும் தவிர, அவரை அவ்வாறு செயல்படத் தூண்டியதற்கான வேறு காரணிகள் எதுவும் இல்லை. இருப்பினும், மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் ஏளனம் செய்த கொடுங்கோலனால் இரும்புச் சட்டம் ஒன்றின் மீது பிணைக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். அந்த தாங்கொணா நிந்தனையின் போதும், அவர் அந்த கொடுங்கோலனை நோக்கி, ” எனது சதை வெந்துகொண்டிருக்கிறது, அதைத் திருப்பிச் சாப்பிடு” என்றார். இவ்வாறு, தனது மன உறுதியின் வலிமையால் தீச்சுவாலைகளை வென்றார்.

அத்தியாயம் 42

அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது தேவையில்லாமல் கோபப்படவோ அல்லது நேர்மையற்ற புகழ்ச்சிக்குச் செவிசாய்க்கவோ வேண்டாம்.

217. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் மகிமைக்கான நமது தேடலில் நாம் அடிக்கடி மூழ்கிப்போவதால், நமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவும், அவிசுவாசிகளை நமக்கு எதிராகத் தூண்டி, அவர்களைத் துன்புறுத்தலைத் தேடும்படி தூண்டி, அவர்களின் கோபத்துக்கு ஆளாகவும் வழிவகுக்கும். தாங்கள் இறுதிவரை நிலைத்திருந்து, தங்கள் துன்பங்களை வெல்வதற்காகவே எத்தனையோ பேர் தியாகம் செய்கிறார்கள்!

218. நம்மை அதிகமாகப் புகழ்ந்து பேசுபவர்கள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். நேர்மையற்ற முறையில் புகழப்படுவதை அனுமதிப்பது மன உறுதியின்மையின் அறிகுறியாக மட்டுமல்லாமல் உண்மையான கோழைத்தனத்தின் அறிகுறியாகவும் தெரிகிறது.

அத்தியாயம் 43

இந்த அத்தியாயம் சுயகட்டுப்பாடு மற்றும் அதன் முக்கிய அம்சங்களைப் பற்றிப் பேசுவதோடு, அமைதியான மனதைக் கொண்டிருத்தல், மிதமாக இருத்தல், சரியானவற்றில் அக்கறை கொள்ளுதல், மற்றும் பொருத்தமானதைப் பற்றிச் சிந்தித்தல் ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது

219. நாம் மூன்று நற்குணங்களைப் பற்றிப் பேசியுள்ளதால், நாம் விவாதிப்பதற்கு நான்காவது மட்டுமே எஞ்சியுள்ளது. இது சுயகட்டுப்பாடு மற்றும் சமநிலை என்று அழைக்கப்படுகிறது; இதில், எல்லாவற்றிற்கும் மேலாக மன அமைதி, கருணையை அடைதல், சமநிலையின் அழகு, நன்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் தகுந்ததைப் பற்றிச் சிந்தித்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.

220. நமது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கைப் பேணுவது முக்கியம், ஏனெனில் அது அமைதியான மனதின் துணையாகவும் ஆதரவாளராகவும் இருக்கும் நமது ஆரம்பப் பணிவோடு இணைந்து உணர்வுகளுடன் கூடிய ஒரு அடித்தளத்தை நிறுவ உதவுகிறது. அதீத தன்னம்பிக்கையைத் தவிர்த்து, வரம்புகளை விலக்குவதன் மூலம், அது மிதவாதத்துக்கு வலுசேர்த்து மரியாதைக்குரிய விடயங்களைப் பாதுகாப்பதோடு, மிகவும் சரியானவற்றை மட்டுமே நாடுகிறது.

221. அடுத்ததாக, நாம் பழகக்கூடியவர்கள் மற்றும் துணையாக இருப்போர் போன்றோரைத் தேர்ந்தெடுப்பது பற்றிப் பேசுவோம். நாம் சமுதாயத்தில் நல்ல பெயர் பெற்ற பெரியோர்களுடன் பழகுதல் வேண்டும். நம்மை ஒத்த வயதினருடன் பழகுவது வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாலும், பெரியவர்களுடன் இருப்பது மிகவும் பாதுகாப்பானது. அவர்களின் ஞானமும் வாழ்க்கையில் அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் இளைஞர்களின் குணத்தை வடிவமைத்து, அவர்களுக்கு ஒரு சிறந்த நேர்மையான பாதையைக் காட்டுகின்றன. அறிமுகமில்லாத இடங்களுக்குப் பயணம் செய்பவர்கள், அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் இருப்பதால் நிம்மதியாகப் பயணிப்பது போலவே, இளைஞர்களும் நிச்சயமாகத் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மூத்த வழிகாட்டிகளுடன் தொடங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தவறுகளைத் தவிர்த்து நற்பண்புகளின் பாதையில் உறுதியாக நிலைத்திருக்க முடியும். வாழ்க்கை முழுவதும் நமக்கு வழிகாட்டவும், நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைக் காணவும் இப்படியான அனுபவசாலிகளின் வழிகாட்டுதல் இருப்பதை விடச் சிறந்தது ஒன்றுமில்லை.

222. ஒவ்வொரு செயலிலும், வெவ்வேறு நபர்களுக்கும், காலங்களுக்கும், வயதினருக்கும் எது பலனளிக்கும் என்பதைப் பற்றி சிந்திப்பதும், ஒவ்வொருவரின் திறன்களுக்கும் எது பொருந்துகிறது என்பதைக் கருத்தில் கொள்வதும் முக்கியம். ஏனெனில், ஒருவருக்குச் சரியானது மற்றவருக்குச் சரியாக இருக்காது; ஒன்று இளைஞருக்குச் சரியாகப் பொருந்துவது முதியவருக்குப் பொருந்தாமல் போகலாம்; ஒன்று ஆபத்தான சூழ்நிலைகளில் பொருந்தும், மற்றொன்று நல்ல அதிர்ஷ்டத்தின் போது பொருந்தும்.

223. தாவீது கர்த்தருடைய பேழைக்கு முன்பாக நடனமாடினான். சாமுவேல் நடனமாடவில்லை, ஆனால் தாவீது பழிக்கப்படவில்லை என்றபோதிலும், சாமுவேல் புகழப்பட்டான். 1 சாமுவேல் 21:13-ல் கூறப்பட்டுள்ளபடி, தாவீது ஆகீஷ் என்ற அரசனுக்கு முன்பாகத் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டான். அடையாளம் காணப்பட்டு விடுவோமோ என்ற கவலையின்றி அவன் செயல்பட்டிருந்தால், அவன் அற்பத்தனமானவன் என்று குற்றம் சாட்டப்பட்டிருப்பான். 1 சாமுவேல் 19:24-ன் படி, “சவுலும் தன் ஆடைகளை கழற்றிப் போட்டு சாமுவேலுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் சொல்லி இரவும் பகலும் ஆடையில்லாமல் கிடந்தான். இருப்பினும், அவர் தகுதியற்றவர் என்பது போல இருந்தபடியால், “சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவரா?” என்று மட்டுமே அவரைக் குறித்துக் கேட்கப்பட்டது.

அத்தியாயம் 44

ஒவ்வொருவரும் தத்தமது குணத்திற்குப் பொருத்தமான பணியில் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், பலர் தங்கள் தந்தையரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதால் அவர்களின் நோக்கம் தடைபடுகிறது. குருமார்கள் இதை வேறு விதமாகச் செய்கிறார்கள்.

224. ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றல்கள் குறித்து விளங்கிக் கொள்கிறார்கள். ஆகையால் ஒவ்வொருவரும் தமக்காகத் தாம் தேர்ந்தெடுத்த காரியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் முதலில் சிந்திக்க வேண்டும். அவர்கள் தமது சக்தியை அறிந்திருக்கலாம், அதேவேளை தமது பலவீனங்களையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நல்லதை நோக்கமாகக் கொண்டு, கெட்டதைத் தவிர்த்து நேர்மையாக இருப்பது அவர்களுக்கு முக்கியம்.

225. ஒருவர் வாசிப்பாளராக இருப்பதற்கு மிகவும் பொருத்தமானவர், மற்றொருவர் பாடுவதற்கு, மூன்றாமவர் அசுத்த ஆவிகளை விரட்டுவதில் அதிக ஆற்றல் கொண்டவர், இன்னொருவர் புனிதப் பொருட்களைப் பராமரிப்பதில் சிறந்தவராகக் கருதப்படுகிறார். இவையனைத்தையும் ஒரு குருவானவர் கவனிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவரால் மிகவும் திறமையாக நிறைவேற்றக்கூடிய பணியை அவர் கொடுக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொருவரின் மனப்போக்கு அவரை எங்கு வழிநடத்துகிறதோ அல்லது எந்தக் கடமை அவருக்குப் பொருந்துகிறதோ, அந்தப் பதவி அல்லது கடமை அதிக அருளால் நிரப்பப்படுகிறது.

226. ஆனால் இது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு கடினமான விஷயமாக இருப்பதால், நம் விஷயத்தில் இது மிகவும் கடினமானது. ஏனெனில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தங்கள் பெற்றோரின் விருப்பத்தைப் பின்பற்றவே விரும்புகிறார்கள். அவ்வாறே, தந்தையர்கள் இராணுவத்தில் பணிபுரிந்தால் அவர்களது பிள்ளைகளும் பொதுவாக இராணுவத்தில் இணைந்து கொள்கிறார்கள். மற்றவர்களும் வெவ்வேறு தொழில்களைப் பொறுத்தவரை அவ்வாறே செய்கிறார்கள்.

227. எழுதுவினைஞரின் அலுவலகத்தில் ஒருவர் தன் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதைக் காண்பது மிகவும் அரிது. ஒன்று, பணியின் சிரமங்கள் அவரைத் தடுப்பதால், அல்லது நிச்சயமற்ற இளமைப் பருவத்தில் ஒழுங்கைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினமாக இருப்பதால், அல்லது ஒரு இளைஞனின் ஆற்றலுக்கு இவ்வாறான பணி மிகவும் சலிப்பானது என்ற உணர்வு போன்ற காரணங்களால் இருக்கலாம். இதன் விளைவாக, பலர் மிகவும் உற்சாகமான பாதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் எதிர்காலத்தை விட நிகழ்காலத்தில் கவனம் செலுத்தவே விரும்புகிறார்கள். அவர்கள் உடனடிப் பலன்களுக்காகப் போராடுகிறார்கள், நாமோ நீண்டகால இலக்குகளுக்காக உழைக்கிறோம். எனவே, நாம் ஈடுபட்டுள்ள நோக்கம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாம் அதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

அத்தியாயம் 45

உலகியல் மற்றும் புனித நூல்களில் கூறப்பட்டுள்ளபடி, நல்லது மற்றும் அறநெறி சார்ந்தது எது, அவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

228. ஆகவே, பணிவையும், வாழ்வின் முழுமையையும் மென்மேலும் அழகாக்கும் அந்த சுயகட்டுப்பாட்டையும் நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோம். ஏனெனில், ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான வரம்புகளைக் கடைப்பிடிப்பதும், ஒழுங்கை வடிவமைப்பதும் இலகுவான காரியமல்ல; இதில், நாம் கண்ணியம் மிக்கது எது அல்லது பொருத்தமானது எது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறோம். இது நற்பண்புடன் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது, அதனால் இரண்டையும் பிரிக்க முடியாது. ஏனெனில், எது பொருத்தமானதோ அதுவே நல்லதும், எது நல்லதோ அதுவே பொருத்தமானதும் ஆகும். ஆகவே, வேறுபாடு என்பது உண்மையான விஷயங்களை விட வார்த்தைகளில்தான் அதிகம் உள்ளது. அவற்றுக்கிடையே வேறுபாடு இருக்கிறது என்பதை நம்மால் சொல்ல முடியும் ஆனால் அதைப்பற்றி விளக்க முடியாது.

229. அறம் மற்றும் நற்குணம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைத் தெளிவுபடுத்த, அறத்தை நல்ல ஆரோக்கியத்துடனும், நற்குணத்தை அழகுடனும் ஒப்பிடலாம். நல்ல ஆரோக்கியம் இல்லாமல் உண்மையான அழகு இருக்க முடியாது என்பதால், அழகு ஆரோக்கியத்தைச் சார்ந்திருப்பது போலவே, அறம் மற்றும் நற்குணத்திற்கும் இது பொருந்தும். நாம் செய்யும் எல்லாவற்றிலும் அறம் இன்றியமையாதது. அது நமது செயல்களின் உறுதியான அடித்தளம் போன்றது, அதேசமயம் நற்குணம் என்பது கவர்ச்சிகரமான வெளித்தோற்றம். நாம் அவற்றை தனித்தனியாகக் கவனித்தாலும், அவை ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. சில சூழ்நிலைகளில், மேலோட்டமாக வித்தியாசமாகத் தெரிந்தாலும், தனித்துத் தெரிவது உண்மையில் அறத்தில் வேரூன்றியிருக்கும். ஒரு பூவைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: அது ஒரு ஆரோக்கியமான செடியிலிருந்து வருகிறது, அந்த வலுவான அடித்தளம் இல்லாமல் அது செழித்து வளராது. அறம் என்பது வெட்கக்கேடான எதையும் தவிர்ப்பதாகும், இது வாழ்வா சாவா என்ற விஷயமாக உணரப்படலாம். மறுபுறம், அறத்திற்கு எதிராகச் செல்லும் எதுவும் பெரும்பாலும் வெறுமைக்கும் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது. அறம் வலுவாகவும் துடிப்பாகவும் இருக்கும்போது, ​​நற்குணம் இயற்கையாகவே மலர்கிறது, ஏனெனில் அதற்கு ஒரு உறுதியான அடித்தளம் உள்ளது. ஆனால் அந்த அடித்தளம் குறைபாடுள்ளதாகவோ அல்லது அழுகியதாகவோ இருந்தால், அதிலிருந்து எந்த நன்மையும் வெளிப்பட முடியாது.

230. நமது ஆக்கங்களில் இது இன்னும் சற்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், தாவீது கூறும் போது: கர்த்தர் ஆளுகிறார், அவர் மகிமையின் ஆடையை அணிந்திருக்கிறார். இதுகுறித்து அப்போஸ்தலர் கூறும்போது: “பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம்” என்று ரோமர் 13:13-ல் கூறப்பட்டுள்ளது. கிரேக்க மூல உரையில் ευσχημόνως என்று உள்ளது — இதன் உண்மையான பொருள்: நல்ல ஆடையுடனும், நல்ல தோற்றத்துடனும் என்பதாகும். தேவன் ஆதியில் மனிதனைப் படைத்தபோது, ​​அவனை நல்ல உருவத்துடனும், நன்கு அமைந்த அவயவங்களுடனும் படைத்து, மிகவும் மேன்மையான தோற்றத்தைக் கொடுத்தார். அவர் அவனுக்குப் பாவ மன்னிப்பை வழங்கவில்லை. ஆனால் பின்னர், ஊழியக்காரனின் உருவத்திலும், மனிதனின் சாயலிலும் வந்த அவர், தம்முடைய வல்லமையால் அவனைப் புதுப்பித்து, தம்முடைய கிருபையை அவன் இதயத்தில் ஊற்றி, மனிதகுலத்தின் மீட்பின் மகிமையைத் தம்மேல் அணிந்துகொண்டார். இதுபற்றி தீர்க்கதரிசி கூறும்போது, கர்த்தர் ஆளுகிறார், அவர் மகிமையின் ஆடையை அணிந்திருக்கிறார் என்றும், சீயோனின் தேவனே, உமக்கு ஒரு துதிப்பாடல் தகுதியானது. அதாவது: உமக்குப் பயப்படுவதும், உம்மை நேசிப்பதும், உம்மிடம் ஜெபிப்பதும், உம்மை மகிமைப்படுத்துவதும் சரியானது மற்றும் நல்லது. ஏனெனில், 1 கொரிந்தியர் 14:40-ல், “எல்லா காரியங்களும் தகுதியானதும் ஒழுங்கானதுமான வகையில் செய்யப்பட வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், நாம் மனிதர்களுக்குப் பயப்படவும், அவர்களை நேசிக்கவும், அவர்களிடம் கேட்கவும், அவர்களை கௌரவிக்கவும் முடியும்; ஆயினும், இந்தப் பாடல் குறிப்பாக தேவனை நோக்கியே பாடப்பட்டுள்ளது. நாம் தேவனுக்குச் செலுத்தும் இந்தத் தகுதியானது, மற்ற எல்லாவற்றையும் விட மிகவும் மேலானது என்று நாம் நம்பலாம். “பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டும். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும்” என்று 1 தீமோத்தேயு 2:9-10 கூறுகிறது. அதேநேரம், அவள் முழுமையாக ஆடை அணிந்து ஜெபிப்பதும், நல்ல நடத்தையோடு தூய்மையின் வாக்குறுதியை முன்னிறுத்தி ஜெபிப்பதும் அவளுக்கு மிகவும் தகுதியானது.

அத்தியாயம் 46

சரியானவை எனும் இரண்டு முக்கியக் கருத்துக்களை நாம் ஆராய்கிறோம். முதலாவதாக, இயற்கையோடு இயைந்த செயல்கள் நற்பண்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன என்றும், அவ்வாறு இல்லாதவை வெட்கக்கேடானவையாகப் பார்க்கப்படுகின்றன என்றும் நாம் அறிகிறோம். இந்தக் கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதற்காக, இந்நூலில் எடுத்துக்காட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

231. கண்ணியத்தைப் பற்றி விவாதிக்கும்போது, ​​நாம் அதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது பொதுவான கண்ணியம்; இது நற்பண்பு மிக்க அனைத்திலும் நிறைந்து, ஒரு நபரின் ஒட்டுமொத்த குணநலனிலும் காணப்படுகிறது. இது அவர்களின் அனைத்துச் செயல்களிலும் ஒரு சீரான இணக்கத்தைக் காட்டி, முரண்பாடுகளற்ற ஒரு ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிறது. இரண்டாவது வகை, நற்பண்பு மிக்க முறையில் செய்யப்படும் தனிப்பட்ட செயல்களில் கவனம் செலுத்துகிறது. இதன் பொருள் என்னவென்றால், ஒருவரின் ஒட்டுமொத்த குணம் முக்கியமானது என்றாலும், அவர்கள் செய்யும் குறிப்பிட்ட நல்ல செயல்களும் அவர்களின் நற்பண்பை வெளிப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

232. இயற்கையோடு இயைந்து வாழ்வதும், அதற்கேற்ப நம் நேரத்தைச் செலவிடுவதும் முக்கியம். இயற்கைக்கு எதிராகச் செல்லும் எதுவும் முறையானதல்ல. 1 கொரிந்தியர் 11:13-14 இல் “தனது தலையை முக்காட்டினால் மறைக்காமல் தேவனிடம் பிரார்த்தனை செய்வது ஒரு பெண்ணுக்கு உகந்ததா? என்று அப்போஸ்தலர் கேட்பது ஒரு நல்ல கேள்வியாகும். நீளமான மயிரோடு இருப்பது ஆணுக்கு இழுக்கானது என்றும், ஆனால், பெண்களுக்கு நீளமான தலைமயிர் இயற்கையான மறைப்பாக இருப்பதால் அது பெருமைக்குரியது என்றும் இயற்கை நமக்குக் கற்பிக்கிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இயற்கை நமது குணத்தையும் நாம் நம்மை வெளிப்படுத்தும் விதத்தையும் பிரதிபலிக்கிறது. மேலும் அதன் வழியைப் பின்பற்றுவது ஞானம் நிறைந்தது. நமது சொந்தத் தீங்கு விளைவிக்கும் முடிவுகளால் இயற்கையை மாற்றுவதற்குப் பதிலாக, அதன் தூய்மையைப் பாதுகாக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நான் அடிக்கடி கூற விரும்புகிறேன். நமது வாழ்வில் இயற்கையின் ஒழுங்கை மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது நினைவூட்டுகிறது.

233. நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட வசீகரம் உண்டு, அது கடவுளின் படைப்பினால் உண்டானது. உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கே உரிய வசீகரம் உண்டு—பகலையும் இரவையும் பிரிக்க ஒளியைப் படைத்தபோதும், வானத்தை உருவாக்கியபோதும், நிலத்தையும் கடலையும் பிரித்தபோதும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை வானத்தில் வைத்தபோதும் கடவுள் அவ்வாறே செய்தார். இந்தப் படைப்புகள் ஒவ்வொன்றிலும் அவர் மகிழ்ச்சியைக் கண்டார். அனைத்தும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது, ​​இந்த அழகு இன்னும் பிரமிக்க வைக்கிறது. மனித உடலின் ஒவ்வொரு பாகமும் முக்கியமானது போலவே, அவை அனைத்தும் ஒன்றிணையும் விதமே உண்மையான நல்லிணக்க உணர்வை உருவாக்குகிறது. ஒவ்வொரு பகுதியும் ஒரு பெரிய சித்திரத்தின் முழுமைக்குப் பங்களித்து, அவை அனைத்தும் ஒன்றாக சேரும்போது எல்லாவற்றையும் மேலும் அழகு படுத்துகின்றன.

அத்தியாயம் 47

நமது வாழ்வில் எது சரியானதோ அது எப்போதும் தெளிவாக இருக்க நாம் அனுமதிக்க வேண்டும். எந்த உணர்ச்சிகளை நாம் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும், எவற்றை அடக்கி வைக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவு நம்மிடம் இருக்கவேண்டும்.

234. எவரேனும் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நிலையான போக்கைக் கடைப்பிடித்து, தான் செய்யும் அனைத்திற்கும் ஒரு முறையைக் கொண்டு, தன் சொற்களில் ஒழுங்கும் உடன்பாடும், தன் செயல்களில் கட்டுப்பாடும் இருப்பதை உறுதிசெய்தால், அப்போது எது பொருத்தமானது என்பது அவருடைய வாழ்வில் தெளிவாகத் தோன்றி, ஒரு கண்ணாடியில் தெரிவது போலப் பிரகாசிக்கும்.

235. அதுமட்டுமின்றி, இனிமையாகப் பேசும் விதமும் ஒரு மூக்கையா அம்சமாக இருக்க வேண்டும். அதன்மூலம், நம் பேச்சைக் கேட்பவர்களின் நன்மதிப்பைப் பெறவும், முடிந்தால் நம் நண்பர்கள் மற்றும் சக சமூகத்தினர் அனைவருக்கும் நம்மைப் பிடித்தமானவர்களாக ஆக்கிக்கொள்ளவும் முடியும். எவரேனும் மற்றவர்களை முகஸ்துதி செய்ய ஆர்வமாக இருப்பது போலவோ அல்லது ஏவரிடமிருந்தேனும் முகஸ்துதியை விரும்புவது போலவோ தோன்றக் கூடாது. முன்னையது தந்திரத்தைக் காட்டுகிறது, பின்னையது அதீத ஆணவத்தைக் காட்டுகிறது.

236. ஒருவர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதை, குறிப்பாக ஒரு நல்ல மனிதர் நினைப்பதை, ஒருபோதும் தாழ்வாக எண்ணக்கூடாது. ஏனெனில், இது நல்லதை மதிக்கக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுகிறது. நல்ல மனிதர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது ஆணவத்தையோ அல்லது பலவீனத்தையோ காட்டுகிறது. ஒன்று அதீத கர்வத்திலிருந்தும், மற்றொன்று கவனம் செலுத்தாததிலிருந்தும் வருகிறது.

237. நமது ஆன்மாவின் இயக்கங்களுக்கு எதிராகவும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்மா, தனக்கு எதிராகத் தன்னைக் காத்துக்கொள்ளும் பொருட்டு, எப்போதும் தன்னைத்தானே கண்காணித்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில், கட்டுக்கடங்காத, தீவிரமான உணர்ச்சிகள் எதிர்பாராத விதமாகப் பொங்கி எழக்கூடும். கிரேக்க மொழியில், இந்த வகையான உணர்ச்சிப் பெருக்கை ‘ὁρμή’ என்று குறிப்பிடுகிறார்கள்; இது, அந்த உணர்ச்சிகள் நம்மை எவ்வளவு சீக்கிரம் ஆட்கொள்ளும் என்பதைக் குறிக்கிறது. இது நமது உணர்ச்சிகள் மற்றும் பகுத்தறியும் திறன் ஆகிய இரண்டிலிருந்தும் உருவாகிறது. நமது உணர்ச்சிகள் சக்தி வாய்ந்தவையாக இருந்தாலும், நமது பகுத்தறிவு அவற்றைக் கட்டுப்படுத்தி வழிநடத்த உதவும். சுயகட்டுப்பாட்டைப் பயிற்சி செய்வதன் மூலமும், எந்தத் தேர்வுகள் சரி எது தவறு என்பதைப் புரிந்துகொள்வதன் மூலமும், நமது உணர்ச்சிகளை ஒரு பழக்கப்பட்ட சாதுவான மிருகத்தைப் போல நடந்துகொள்ளப் பயிற்றுவிக்க முடியும். இதன் மூலம், அவை வழிதவறிச் செல்வதற்குப் பதிலாக, தன்னை புத்திசாலித்தனமாக வழிநடத்தும்.

238 நாம் அவசரமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ செயல்படாமல் கவனமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களுக்கு நல்ல, முறையான காரணங்கள் இருக்க வேண்டும். நாம் நமது காரணங்களைக் கூறாவிட்டாலும், மற்றவர்கள் அவற்றைப் பற்றி சிந்திப்பார்கள். ஏனெனில், காரணம் இல்லாமல் நமது செயல்களை நாம் நியாயப்படுத்த முடியாது. நமது உணர்வுகள் வலிமையானவை, ஆனால் அவை பகுத்தறிவைப் பின்பற்ற வேண்டும். நமது உணர்வுகள் நமது சிந்தனையை ஆட்கொள்ளாமல் இருக்க, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம். உணர்வுகள் கட்டுக்கடங்காமல் போனால், அது குழப்பத்தை ஏற்படுத்தி, பகுத்தறிவை அகற்றித் தள்ளிவிடும். அமைதியின்மை மனவுறுதியை அழிக்கிறது. பின்வாங்குதல் கோழைத்தனத்தைக் காட்டுகிறது மற்றும் சோம்பலை உணர்த்துகிறது. நாம் கவலைப்படும்போது, ​​நமது உணர்வுகள் மூளைக்குள் பரவி நம்மை அதன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளக்கூடும், இதனால் தெளிவாகச் சிந்திப்பது கடினமாகிறது. ஒரு கட்டுக்கடங்காத உணர்ச்சிப் பெருக்கில், அது பகுத்தறிவு என்ற கடிவாளத்தைப் பற்றிக்கொள்வது இல்லை. மேலும் தன்னை மீண்டும் வழிநடத்த அதன் சுக்கானின் கட்டுப்பாட்டையும் உணர்வதில்லை. எனவே, பொதுவாக, ஆன்மா கலக்கமடைந்து பகுத்தறிவு காணாமல் போவது மட்டுமல்லாமல், ஒருவரின் முகமும் கோபத்தாலோ அல்லது காம இச்சை காரணமாகவோ சிவந்தோ அல்லது பயத்தால் வெளிறிப் போகிறது. இன்பத்தில் தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல், மகிழ்ச்சியைக் கையாளப் போராடுகிறது.

239. இவ்வாறு நிகழும்போது, ​​அந்த இயல்பான பகுத்தறிவும் குணநலனின் வலிமையும் புறக்கணிக்கப்படுகின்றன; மேலும், செயலிலும் சிந்தனையிலும் மட்டுமே ஒருவரின் அதிகாரத்தையும் தகுந்தவற்றை நிலைநிறுத்தக்கூடிய அந்த உறுதியும் தக்கவைக்கப்பட முடியாமல் போய்விடுகின்றன.

240. அநீதி இழைக்கப்பட்டதாக உணரும்போது, அடிக்கடி தூண்டப்படும் அதீத கோபத்திலிருந்து வலுவான உணர்ச்சிப் பெருக்கு ஏற்படலாம். நமது தலைப்பின் தொடக்கத்தில் காணப்படும் சங்கீதத்தின் வார்த்தைகள் இந்தப் பாடத்தை நமக்குக் கற்பிக்கின்றன. நமது பொறுப்புகளைப் பற்றி விவாதிக்கும் போது, ​​நமது கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான நமது அறிமுகத்தில் உள்ள அந்த அறிக்கையை நாம் பயன்படுத்தியது பொருத்தமானதாக இருந்தது.

241. ஆனால், ஒருவருக்குத் தவறு இழைக்கப்படும்போது, ​​அவர் கலங்காமல் இருக்க ஒவ்வொருவரும் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி, நமது முதல் கருத்துக்கள் மிகவும் நீளமாகிவிடக் கூடாது என்பதற்காக, அநியாயமாக நடத்தப்படும்போது ஒவ்வொருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருப்பது எப்படி என்பதைப் பற்றி நாம் முறையாகச் சுருக்கமாக மட்டுமே குறிப்பிட்டதால், நான் இப்போது அதைப் பற்றி இன்னும் சற்று விரிவாகப் பேசலாம் என்று நம்புகிறேன். ஏனெனில், நாம் சுயகட்டுப்பாட்டின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதைப் பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றெண்ணுகிறேன்.

அத்தியாயம் 48

கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான காரணங்கள் மீண்டும் விளக்கப்பட்டுள்ளன. பின்னர், அநீதி இழைக்கப்படும் மூன்று குழுக்களைப் பற்றி அது பேசுகிறது. அப்போஸ்தலரும் தாவீதும் சிறந்த குழுவில் அடங்குவர். இம்மை மற்றும் மறுமை வாழ்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் அது குறிப்பிடுகிறது.

242. பரிசுத்த வேதாகமத்தில் அநீதி இழைக்கப்படும் மூன்று வகையான மனிதர்களை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவர்களில் ஒரு வகையினர், அவமானப்படுத்தப்பட்டு, தவறாக நடத்தப்பட்டு, மிதிக்கப்படுபவர்கள் ஆவர். அவர்களுக்கு நீதி கிடைக்காததால், அவர்கள் மேலும் மேலும் அவமானத்தையும் வலியையும் உணர்கிறார்கள். என்னைப் போன்ற பலர் இந்தக் குழுவில் இருக்கிறார்கள். யாராவது என்னைக் காயப்படுத்தினால், நான் பலவீனமாக இருந்த போதும் அவர்களை மன்னிக்கக்கூடும். ஆனால் அவர்கள் என் மீது ஏதேனும் குற்றம் சாட்டினால், என் சொந்த மனசாட்சியை மட்டும் என்னால் நம்பியிருக்க முடியாது. எனக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து நான் விடுபட எப்படியும் முயற்சிப்பேன். எனவே, நான் இழந்ததை மீண்டும் பெறவும், தவறான நடத்தைக்குத் தவறான நடத்தையால் பதிலளிக்கவும் விரும்புகிறேன்.

243. நான் பரிபூரணமடையாதவனாக இருந்தாலும், முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பவனாக இருந்ததால் நான் இவ்வாறான ஏளனங்களுக்குப் பதிலளிப்பதில்லை. யாராவது என்னை அவமானப்படுத்தத் தொடங்கி, என்னைப் பற்றித் தவறாகப் பேசினால், நான் அமைதியாக இருந்து பதிலளிப்பதில்லை.

244. இப்போது, ​​நான் பரிபூரணமானவனாக இருந்தால் (இதை ஒரு உதாரணமாக மட்டுமே சொல்கிறேன், ஏனெனில் உண்மையாகச் சொன்னால், நான் பரிபூரணமானவன் இல்லை), அப்படியே நான் பரிபூரணமானவனாக இருந்திருந்தால், பவுல் செய்தது போலவே என்னைச் சபிப்பவர்களை நான் ஆசீர்வதித்திருப்பேன். அவர் கூறுகையில், “மக்கள் எங்களை சபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறபோது பொறுமையுடன் சகித்துக்கொள்கிறோம். மக்கள் குறை கூறுகையில் பொறுத்துக்கொள்கிறோம்” என்று 1 கொரிந்தியர் 4:12 கூறுகிறது. அதேபோல், மத்தேயு 5:44 இல், “உங்கள் பகைவர்களையும் நேசியுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்காக ஜெபியுங்கள்” என்று சொன்னவரின் வார்த்தைகளை அவர் கேட்டிருந்தார் எனவே, பவுல் துன்புறுத்தலை எதிர்கொண்டு அதைச் சமாளித்தார், ஏனென்றால், அவர் தன் எதிரிகளை நேசித்தால் தேவனுடைய குமாரனாக மாறுவதே தனக்கு முன்னால் இருந்த வெகுமதி என்பதால், அவர் தனது மனித உணர்ச்சிகளை வென்று அவற்றைக் கட்டுப்படுத்தினார்.

245. இதே வகையான நற்பண்பில் புனித தாவீது பவுலைப் போலவே இருந்தார் என்பதையும் நம்மால் காட்ட முடியும். சிமேயின் மகன் அவரைச் சபித்து, அவர் மீது பெரும் குற்றங்களைச் சுமத்தியபோது, ​​தாவீது முதலில் மௌனமாக இருந்து, தன்னைத் தாழ்த்திக்கொண்டார். அவர் தனது நற்செயல்களைப் பற்றியோ அல்லது நற்செயல்கள் பற்றிய தனது அறிவைப் பற்றியோ கூடப் பேசவில்லை. சாபங்களின் மூலம் கடவுளின் இரக்கத்தைப் பெறுவார் என்று நம்பியதால், அவர் சபிக்கப்பட வேண்டும் என்று கூடக் கேட்டுக்கொண்டார்.

246. கர்த்தரிடமிருந்து கிருபையைப் பெறுவதற்காக அவர் எவ்வாறு தாழ்மை, நியாயம் மற்றும் ஞானத்தை வெளிப்படுத்தினார் என்று பாருங்கள்! முதலில், அவர் கூறுகையில், கர்த்தர் அவனிடம் சொன்னதால் அவன் என்னைச் சபித்தான். இது தாழ்மையைக் காட்டுகிறது; ஒரு ஊழியனைப் போல, நடக்க வேண்டியதை அவர் ஏற்றுக்கொண்டார். பிறகு அவர் சொல்லும்போது, இதோ, என் கர்ப்பத்திலிருந்து பிறந்த என் மகன் என்னைக் கொல்ல விரும்புகிறான். இது நியாயத்தைக் காட்டுகிறது. நம் சொந்தக் குடும்பத்தினரிடமிருந்து எம்மை நோக்கி வரும் கடினமான காரியங்களை நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் எனும் போது, பிறர் மீது நாம் ஏன் கோபப்பட வேண்டும்? இறுதியாக, அவர் இவ்வாறு கூறினார்: கர்த்தர் அவனிடம் சொன்னதால் அவன் சபிக்கட்டும். ஒருவேளை கர்த்தர் என் துன்பத்தைக் கண்டு, இந்தச் சாபத்திற்காக எனக்கு வெகுமதி அளிப்பார். எனவே, அவர் அந்த நிந்தனையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், அவன் கற்களை எறிந்து கொண்டே அவரைப் பின்தொடர்ந்தபோதும், அந்த மனிதனைத் தண்டனையின்றி போகவிட்டார். வெற்றி பெற்ற பிறகு, அவன் கேட்டபோது அவரை மன்னித்தார் என்று.

247. பரிசுத்த தாவீது, உண்மையான நற்செய்திக்குரிய மனப்பான்மையுடன், தன்னைத் துன்புறுத்தியவரால் மனக்கசப்பு அடையாமல், அவருக்கு நன்றி செலுத்தினார் என்பதையும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளால் கோபமடைவதற்குப் பதிலாக மகிழ்ச்சியடைந்தார் என்பதையும் காட்டுவதற்காக இதை நான் எழுதியுள்ளேன்; அந்த அநீதிகளுக்கான பிரதிபலன் தனக்கு அருளப்படும் என்று அவர் நினைத்தார். ஆனால், அவர் ஏற்கனவே பரிபூரணமானவராக இருந்தபோதிலும், இன்னும் பரிபூரணமான ஒன்றைத் தேடினார். ஒரு மனிதனாக, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தந்த வலியால் அவர் உள்ளம் உருகியபோதும், ஒரு நல்ல போர்வீரனைப் போல வெற்றிபெற்று, ஒரு வீர மல்யுத்த வீரனைப் போல அவர் சகித்துக்கொண்டார். அவருடைய பொறுமையின் தன்மையும் நோக்கமும் வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே தங்கி இருந்தது. ஆகையால் அவர், ஆண்டவரே, என் முடிவையும் என் நாட்களின் எண்ணிக்கைகளையும், அது எப்போது என்றும் எனக்குத் தெரியப்படுத்தும்; அதேபோல், எனக்கு என்ன குறை என்பதை நான் அறியும்படி செய்யும், என்றார். “தகுந்த வரிசைப்படியே ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான். கிறிஸ்து முதலில் எழுப்பப்பட்டார். கிறிஸ்து மீண்டும் வரும்போது கிறிஸ்துவின் மக்கள் உயிரோடு எழுப்பப் படுவார்கள்” என்று 1 கொரிந்தியர் 15:23 இதுகுறித்து விளக்கும்போது கூறுகிறது. அப்போஸ்தலர் குறிப்பிடுவது போல, இராச்சியம் பிதாவாகிய தேவனிடம் ஒப்படைக்கப்பட்டு, எல்லா அதிகாரங்களும் கையகப்படுத்தப்படும் அந்தத் தருணத்தில் தான் உண்மையான பரிபூரணம் தொடங்கும். ஆகவே, இங்கேதான் தடை இருக்கிறது, இங்கேதான் பரிபூரணத்தின் பலவீனம் இருக்கிறது; அதேநேரம், அங்கே முழுமையான பரிபூரணமும் இருக்கிறது. அதனால்தான், நிலையற்ற நாட்களுக்காக அல்லாமல், உண்மையாகவே இருக்கும் நித்திய ஜீவ நாட்களுக்காக ஏங்கும் போதுதான், தனக்கு என்ன குறை என்பதை அவன் புரிந்து கொள்ள முடியும்; நித்திய கனிகளைத் தரும் என்று வாக்குத்தத்தம் அளிக்கப்பட தேசம் எதுவென்றும், அதுவே தன் பிதாவின் வீட்டில் உள்ள முதல், இரண்டாவது, மற்றும் மூன்றாவது வாசஸ்தலங்கள் என்றும், அங்கே ஒவ்வொருவரும் தங்கள் தகுதிகளுக்கு ஏற்ப இளைப்பாறுதலைக் காண்பார்கள் என்றும் அவன் அறிந்துகொள்ள முடியும்.

248. நம் வாழ்வில் நாம் எப்போதும் பரிபூரணத்தையும் சத்தியத்தையும் நோக்கமாகக் கொள்ள வேண்டும். வேதாகமம் இதை எபிரேயர் 10:1-ல் குறிப்பிடுகிறது, நாம் இப்போது காண்பது உண்மையானவற்றின் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே என்பதை வலியுறுத்துகிறது. முற்காலத்தில், ஆட்டுக்குட்டிகள் மற்றும் கன்றுக்குட்டிகள் போன்ற உயிர்ப் பலிகள் செலுத்தப்பட்டன. ஆனால் இப்பொழுது தம்மையே பலியாகக் கொடுத்த கிறிஸ்து நமக்கு இருக்கிறார். அவர் மனிதத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டே, நமது பாவங்களை நீக்க உதவும் நமது குருவாகச் செயல்பட்டார். இவ்வுலகில், இந்த உண்மையின் ஒரு சிறு பிம்பத்தை மட்டுமே நாம் உணர்கிறோம். ஆனால் ஒருநாள், அதன் முழுமையை, அந்த நிதர்சனத்தை நாம் நேருக்கு நேர் காண்போம். இறுதியில், பரிபூரணமான அனைத்தும் நமது தற்போதைய புரிதலுக்கு அப்பாற்பட்ட சத்தியத்தில் தான் தங்கியிருக்கின்றன.

அத்தியாயம் 49

நம்மிடம் உள்ள நல்ல குணங்களை நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டு, தீய குணங்களை, குறிப்பாகப் பேராசையை விட்டுவிட வேண்டும். பேராசை நமது சுதந்திரத்தைப் பறித்து நமது உண்மையான சுயத்தை நம்மிடமிருந்து திருடிவிடுகிறது. இதனால், நம் அனைவருக்கும் உள்ளே இருக்கும் நன்மையை வெளிப்படுத்துவது கடினமாகிறது.

249. நாம் இங்கே இருக்கும் வரை, உண்மையானதையும் நல்லவற்றையும் பற்றிக்கொள்வோம். அதை பேணிப் பாதுகாப்போம். அதன் மூலம் நாம் சத்தியத்தை அடையலாம். நீதியின் சாயலும், ஞானத்தின் சாயலும் நம்மிடம் நிலைத்திருக்கட்டும்; ஏனெனில், நாம் அந்த நாளை அடைவோம். இறுதியில், நாம் யாராக மாறத் தேர்ந்தெடுத்தோமோ, அதற்கேற்ப வெகுமதியைப் பெறுவோம்.

250. எதிரி உங்களில் அவனது பிம்பத்தைக் காண விடாதீர்கள்; கோபத்தையோ சீற்றத்தையோ அவன் காண விடாதீர்கள், ஏனெனில் அந்தக் குணங்கள் தீமையைப் பிரதிபலிக்கின்றன. “நமது எதிரியாகிய சாத்தான் உங்கள் பகைவன். விழுங்க எந்த மனிதனாவது அகப்படுவானா என்று தேடிக்கொண்டு கர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல அவன் அலைகிறான்” என்று 1 பேதுரு 5:8 கூறுகிறது. தங்கம், செல்வம் அல்லது எந்தத் தீய செயல்களின் அறிகுறிகள் மீதான ஆசையை அவன் காணாதிருக்கட்டும், இல்லையெனில் அவன் உங்கள் சுதந்திரத்திற்கான குரலைத் திருடிவிடுவான். நீங்கள் நம்பிக்கையுடன் சொல்லும்போது உண்மையான சுதந்திரத்தின் குரல் ஒலிக்கிறது. “இந்த உலகத்தை ஆளுகிறவன் (சாத்தான்) வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மீது அதிகாரமில்லை” யோவான் 14:30 இல் சொல்லப்பட்டுள்ளது இதற்கு சான்றளிக்கிறது. எனவே, அவன் உங்களைச் சோதிக்க வரும்போது உங்களிடம் எதையும் காணமாட்டான் என்று நீங்கள் உறுதியாக இருந்தால், யாக்கோபு லாபானிடம் சொன்னது போலவே, அதாவது ஆதியாகமம் 31:32 இல், “நான் உங்கள் தேவர்களைத் திருடவில்லை. அதைத் திருடியவர்கள் யாராவது என்னோடு இருந்தால் அவரை நான் கொல்வேன். உங்கள் மனிதர்களே இதற்குச் சாட்சி. உங்களுக்குரிய எந்தப் பொருளும் இங்கிருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளலாம்” என்று நீங்களும் சொல்லலாம். லாபானால் அவனுக்குச் சொந்தமான எதையும் கண்டுபிடிக்க முடியாததால், யாக்கோபு ஒரு பாக்கியவான் என்று நாம் சரியாகவே கருதுகிறோம். (ஆனால், ராகேல் தன் தந்தையின் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது).

251. ஆகவே, உங்களிடம் ஞானமும், விசுவாசமும், உலக காரியங்களைப் பொருட்படுத்தாத தன்மையும், ஆவிக்குரிய கிருபையும் இருந்தும், இவை உங்களை அவிசுவாசியாய் இருக்கவிடாமல் தடுக்குமானால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்; ஏனெனில் நீங்கள் மாயையையும், மதியீனத்தையும், பொய்யையும் பொருட்படுத்துவதில்லை. உங்கள் எதிராளி பேசுவதற்கான வாய்ப்பை நிராகரித்து, உங்களைப் பற்றிக் குறை கூற அவர்களுக்கு எந்த அடிப்படையும் இல்லாமல் செய்வது ஒரு அற்பமான விஷயம் அல்லவா? எனவே, தற்பெருமையில் கவனம் செலுத்தாதவர் கலக்கமின்றி இருக்கிறார்; ஆனால் அதில் கவனம் செலுத்துபவரோ, எதற்காக இவ்வளவு கொந்தளிக்கிறார்? செல்வத்தைச் சேர்ப்பது பயனற்றது அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக, நிலையற்ற விஷயங்களின் பின்னால் ஓடுவது மிகவும் பயனற்றது. அப்படியே நீங்கள் செல்வத்தையும் பொருளையும் சேர்த்து வைத்தாலும், அவை எப்போதும் உங்களுடையதாகவே இருக்கும் என்று எப்படி உங்களால் உறுதியாக இருக்க முடியும்?

252. ஒரு வியாபாரி செல்வங்களைச் சேர்ப்பதற்காக இரவும் பகலும் அயராது பயணம் செய்வது பயனற்றது அல்லவா? அவன் பொருட்களைச் சேகரித்து, தான் கொடுத்த விலையை விடக் குறைவாக விற்றுவிடுவோமோ என்ற அச்சத்தால் அதன் விலையைப் பற்றி மிகவும் கவலைப்படுவதும் பயனற்றது அல்லவா? அவன் எல்லா இடங்களிலும் அதிக விலைக்கு விற்கப் போராடி, அதன் மூலம் தனது பெரிதும் பேசப்படும் வியாபாரத்தின் மீதான பொறாமையால் திருடர்களைத் திடீரெனத் தன் பக்கம் வரவழைத்துக் கொள்வதும் வீண் அல்லவா? அல்லது, கடற்பயணத்துக்கு ஏற்ற அமைதியான காற்றின் வேகத்துக்காகக் காத்திருக்காமலும், தாமதங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும் ஆதாயம் தேடும் வழியில் கப்பல் கவிழ்ந்து அவனது எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போவதும் வீண் அல்லவா?

253. பெரும் பிரயாசத்துடன் செல்வத்தைச் சேர்த்தும் அதை யாருக்கு விட்டுச் செல்வது என்று தெரியாமலும் இருப்பவன், வீணாகக் கவலைப்படுகிறானல்லவா? பேராசைக்காரன் மிகுந்த கவனத்துடன் சேர்த்த அனைத்தையும், அவனது வீண்விரயம் செய்யும் வாரிசுகள் பொறுப்பற்ற முறையில் ஆடம்பரமாகச் செலவிடுகிறார்கள். நிகழ்காலத்தைப் புறக்கணித்து, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல், தன்னிச்சையாகப் பணத்தை வீணாக்குபவன், தான் நீண்ட கால உழைப்பில் சேகரித்ததை ஒரு குழியில் கொட்டுவது போல வீணடிக்கிறான். மேலும், பல சமயங்களில் தன்னால் பெரிதும் விரும்பப்படும் வாரிசு, தனது பங்கிற்காகப் பொறாமையை மட்டுமே அடைகிறான்; என்றாவது நிகழவிருக்கும் தனது அகால மரணத்தின் மூலம், தான் சிரமப்பட்டுப் பெற்ற அந்தச் சொத்து முழுவதையும் தனக்கு முன்பின் தெரியாதவர்களுக்குக் கொடுத்துவிடும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

254. அப்படியானால், பயனற்றதும் எந்தப் பலனையும் தராததுமான ஒன்றை உருவாக்குவதில் ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? சிலந்திகளைப் போல வலைகளப் பிண்ணி ஏன் பயனற்ற செல்வத்தைக் குவிக்கிறீர்கள்? என்னதான் அவை ஏராளமாக இருந்தாலும், அவை உதவியாக இருப்பதில்லை; ஏனென்றால், அவை உங்களிடமிருந்து தேவனுடைய சாயலைப் பறித்து, பூமியின் சாயலைக் கொடுக்கின்றன. ஒருவன் கொடுங்கோல் ஆட்சியாளனின் சாயலைக் கொண்டிருந்தால், அவன் தண்டனைக்குத் தகுதியானவன் அல்லவா? அப்படியெனில் நீங்கள் நித்திய அரசரின் சாயலை ஒதுக்கிவிட்டு, உங்களுக்குள் மரணத்தின் சாயலை உருவாக்குகிறீர்கள். அதற்குப் பதிலாக, உங்கள் ஆன்மாவேனும் இராச்சியத்திலிருந்து பிசாசின் சாயலை அகற்றி, கிறிஸ்துவின் சாயலை பதித்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்குள் பிரகாசிக்கட்டும்; இது உங்கள் இராச்சியத்தில், அதாவது உங்கள் ஆன்மாவில், பிரகாசமாக ஒளிரட்டும், ஏனெனில் அது எல்லா தீய பழக்கங்களின் வடுக்களையும் நீக்குகிறது. இதைப் பற்றி தாவீது கூறுகையில், கர்த்தாவே, உம்முடைய இராச்சியத்தில் நீர் எல்லாத் தீய பழக்கங்களின் சாயல்களையும் அழிக்கிறீர். கர்த்தர் எருசலேமைத் தம்மைப் போல அழகாக மாற்றும்போது ​​சத்துருவின் சகல சாயல்களும் அழிக்கப்படுகின்றன.

அதிகாரம் 50

லேவியர்கள் எல்லா உலக ஆசைகளிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டிருக்க வேண்டும். அவர்களுடைய நற்பண்புகள் எப்படியானவையாக இருக்க வேண்டும், அவர்கள் எவ்வளவு தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை அப்போஸ்தலர் நமக்குக் காட்டுவதோடு, அவர்களுடைய கண்ணியம் மற்றும் பொறுப்புகளையும் பற்றி அவர் விளக்குகிறார். இந்தப் பாத்திரங்களை நிறைவேற்றுவதற்கு நற்பண்புகள் அவசியம் என்பதை வலியுறுத்துகிறார். தத்துவஞானிகள் இந்த நற்பண்புகளை அறிந்திருந்தபோதிலும், அவற்றின் வரிசைமுறை குறித்துத் தவறுகள் செய்தனர் என்று அவர் குறிப்பிடுகிறார். சில நற்பண்புகள் இயல்பாகவே கடமையுடன் ஒத்துப்போகின்றன, ஆயினும், அதனுடன் ஒன்றித்து வரும் காரணிகளால் அவை கடமைக்கு முரணானவையாக மாறக்கூடும். இதிலிருந்து லேவியர்களின் பங்கிற்குத் தேவையான குணங்களை அவர் ஊகித்து அறிகிறார். இறுதியாக, லேவி கோத்திரத்தை மோயீசன் ஆசீர்வதிக்கும்போது கூறிய வார்த்தைகளுக்கு அவர் ஒரு விளக்கத்தை அளிக்கிறார்.

255. ஆகவே, மாற்கு 10:23- என்ற கர்த்தருடைய நற்செய்தியில் காணப்படுவது போல, “ஒரு செல்வந்தன் தேவனுடைய இராசசியத்துக்குள் நுழைவது மிகவும் கடினமான ஒன்று” என்று கூறியதன் மூலம், மக்கள் செல்வத்தை இழிவாகக் கருதும்படி போதிக்கப்பட்டிருக்கும்போது, லேவியர்களாகிய நீங்கள் எந்த அளவிற்கு உலக ஆசைகளால் கட்டுண்டு கிடக்கக்கூடாது என்பது குறித்து நீங்களே அறுதியிட்டுக்கொள்ளுங்கள். உங்கள் உண்மையான பங்கு தேவன் மட்டுமே. மோயீசன் நம் முன்னோர்களுக்கு பூமிக்குரிய உடைமைகளைப் பங்கிட்டபோது, ​​எண்ணாகமம் 18:23-ல் கூறப்பட்டுள்ளபடி, கர்த்தர் லேவியர்களுக்கு அந்த நிலத்தில் பங்கு கொடுக்க அனுமதிக்கவில்லை, ஏனென்றால் அவரே அவர்களுடைய சுதந்தரமாக இருப்பார். அதனால்தான் தாவீது, “கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரமுமாய் இருக்கிறார்” என்கிறார். லேவியர் என்ற பெயர் இங்கிருந்துதான் வருகிறது, அதன் பொருள்: அவரே என்னுடையவர், அல்லது அவரே எனக்காக என்பதாகும். தேவன் அவரைப் பற்றி, “அவரே என்னுடையவர்” என்று சொல்வது ஒரு பெரிய கௌரவமாகும். மத்தேயு 17:27-ல், “நான் கூறுகிறபடி வரியை செலுத்திவிடு. ஏரிக்குச் சென்று நீ பிடிக்கும் முதலாவது மீனின் வாயைத் திறந்துபார். அதன் வாயினுள் நான்கு நாணயங்கள் கிடைக்கும். அந்நாணயங்களை எனக்கும் உனக்குமான வரியாக வரி வசூலிப்பவர்களிடம் செலுத்திவிடு” என்று சொல்லப் பட்டதைப் போலவே இதுவும் இருக்கிறது. எனவே, ஒரு ஆயர் நிதானமானவராகவும், அடக்கமானவராகவும், நன்னடத்தை உள்ளவராகவும், விருந்தோம்பும் குணம் உள்ளவராகவும், போதிக்கும் திறனுள்ளவராகவும், பேராசை இல்லாதவராகவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதவராகவும், தன் இல்லற நடவடிக்கைகளை நன்கு நிர்வகிப்பவராகவும் இருக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் சுட்டிக்காட்டினார். அத்தோடு ஏனைய மறைப்பணியாளர்களும், கனிவானவர்களாகவும், இரட்டை நாக்கை உடையோராக இல்லாமலும், குடிவெறியார் அல்லாதவர்களாகவும், நேர்மையற்ற விதத்தில் ஈட்டப்படும் ஆதாயத்தின் மீது பேராசை கொள்ளாதவர்களாகவும், தெளிவான மனசாட்சியுடன் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். “முதலில் நீங்கள் அவர்களைச் சோதனை செய்யுங்கள். அவர்களில் குற்றம் எதுவும் இல்லாவிட்டால் பிறகு அவர்கள் உதவியாளர்களாக சேவைசெய்ய முடியும்” என்று 1 தீமோத்தேயு 3:2-10 கூறுகிறது.

256. நம்மிடமிருந்து என்ன நற்குணங்கள் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். தேவனுடைய ஊழியர் மது அருந்தக்கூடாது. இதன் காரணமாக அவர் விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் ஆகிய பாலாரினாலும் போற்றப்படுவார். நமது செயல்கள் மற்றும் கிரியைகள் குறித்த பொதுமக்களின் பார்வை முக்கியத்துவம் வாய்ந்தது. இது அந்தப் பதவிக்குக் களங்கம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இவ்வாறு, பலிபீடத்தின் ஊழியர் தகுந்த நற்பண்புகளால் நிறைந்திருப்பதைக் காண்பவர், அவற்றின் படைப்பாளரைப் புகழ்ந்து, அத்தகைய ஊழியர்களைக் கொண்ட கர்த்தரையும் முழுமனதோடு துதிக்கலாம். வீட்டில் ஒரு தூய்மையான உடைமையும் நேர்மையான வாழ்க்கை முறையும் இருக்கும்போது ஆண்டவர் அங்கே புகழப்படுகிறார்.

257. ஆனால், ஒரே ஒரு திருமணம் மட்டுமே என்றும், இரண்டாவது மற்றும் அதற்கு மேலான திருமணம் அனுமதிக்கப்படாதபோது, ​​கற்பு பற்றி நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது? திருமணத்தைப் பொறுத்தவரை, மீண்டும் திருமணம் செய்யக்கூடாது, மற்றொருவரின் மனைவியுடன் உறவுகொள்ளவும் முயலக்கூடாது என்பதே சட்டம்.

257. ஆனால், ஒரே ஒரு திருமணம் மட்டுமே என்றும், இரண்டாவது மற்றும் அதற்கு மேலான திருமணம் அனுமதிக்கப்படாதபோது, ​​கற்பு பற்றி நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது? திருமணத்தைப் பொறுத்தவரை, மறுமணம் செய்யவோ அல்லது மற்றொரு மனைவியைத் தேடவோ முயலக்கூடாது என்பதே சட்டம். ஞானஸ்நானத்துக்கு முன் செய்து கொள்ளப்படும் இரண்டாவது திருமணம், ஒருவரை குருத்துவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவதிலிருந்தோ அல்லது குருப்பட்டம் பெறுவதிலிருந்தோ தடுக்க முடியும் என்பது பலருக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது. குறிப்பாக ஞானஸ்நானத்தின் போது, ஜென்ம பாவங்கள் கழுவப்பட்டு சிவிடும் என்பதால், அவை கூட பொதுவாகத் தடையாக இருப்பதில்லை. ஆனால், ஞானஸ்நானத்தின் வழியாகப் பாவங்களை மன்னிக்க முடியும் என்றாலும், அது சட்டத்தை மீறிச் செயற்படுவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். திருமணத்தில் பாவம் என்று எதுவும் இல்லை, ஆனால் அதற்கு ஒரு சட்டம் இருக்கிறது. எந்தப் பாவமும் மன்னிக்கப்படலாம், ஆனால் திருமணம் தொடர்பான சட்டத்தை மட்டும் புறக்கணிக்கக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொண்ட ஒருவர், மற்றவர்களைத் திருமணம் செய்யாமல் தனியாக இருக்க எப்படி ஆலோசனை கூற முடியும்?

258. ஆனால், ஊழியம் மற்றும் அருட்பணி என்பன தூய்மையாகவும் களங்கமற்றதாகவும் பேணப்பட வேண்டும் என்றும், அது திருமண உறவுகளால் கறைபடக்கூடாது என்றும் நீங்கள் அறிவீர்கள்; இதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்; தூய்மையான உடல்களுடனும், களங்கமற்ற தன்மையுடனும், அடக்கத்துடனும், ஒருபோதும் திருமண உறவுகளில் ஈடுபடாமலும் இருக்கும் புனித ஊழியம் குறித்த வரங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், சில தொலைதூரப் பகுதிகளில், அவர்கள் தங்கள் ஊழியத்தைத் தொடங்கும்போது, ​​அல்லது குருக்களாக திருநிலைப்படுத்தப்படும் போதே, பிள்ளைகளைப் பெற்றிருக்கும் அவர்கள், பழைய வழக்கத்தின் அடிப்படையில் இதை நியாயப்படுத்துகிறார்கள்; அக்காலத்தில், திருப்பலி நீண்ட இடைவெளிகளில் செலுத்தப்பட்டது. இருப்பினும், பழைய ஏற்பாட்டில் நாம் வாசிப்பது போல, திருப்பலிக்குத் தூய்மையாய் சமூகமளிப்பதற்கு, சாமான்யர்கள் கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே தங்களைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. யாத்திராகமம் 19:10 கூறுவதுபோல், அவர்கள் விசேஷ கூட்டத்திற்காக வரும்போது, தங்கள் ஆடைகளைக்கூடக் கழுவி சுத்தம் செய்த பின்னரே வரவேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. வெறும் சரீரம் ஒன்றில் கூட இவ்வளவு அக்கறை காட்டப்பட்டதென்றால், ஏனைய தெய்வீக விடயங்களில் ஒழுக்கம் எவ்வளவு அதிகமாக பேணப்பட்டிருக்க வேண்டும்! ஆகவே, குருமாரும் அருட்பணியாளர்களுமாகிய நீங்கள், உங்கள் ஆடைகளைத் துவைத்து சுத்தத்தைப் பேணுவதன் அர்த்தம் என்னவென்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். திருச்சடங்குகளை ஒப்புக்கொடுக்க உங்களுக்குத் தூய்மையான உடல் இருக்க வேண்டும். சாதாரண மக்களே தங்கள் ஆடைகளைக் கழுவாவிட்டால், திருப்பலியில் பங்கெடுக்க அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்குமானால், உள்ளத்திலும் உடலிலும் அசுத்தமாக இருக்கும் நீங்கள், மற்றவர்களுக்காக எப்படி மன்றாட முடியும்? அவர்களுக்காக எப்படித் திருப்பலியை ஒப்புக்கொடுக்க முடியும்?

259. லேவியர்களின் பணி எளிதானதல்ல, ஏனெனில் கர்த்தர் அவர்களைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: “இதோ, இஸ்ரவேலருக்குள் பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு முதல் பிள்ளைக்கும் பதிலாக, நான் இஸ்ரவேலரிடமிருந்து லேவியர்களை எடுத்துக்கொண்டேன். இவர்கள் அவர்களுக்குப் பதிலாக இருப்பார்கள், லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள். ஏனெனில், எகிப்து தேசத்தில் பிறந்த எல்லா முதல் பிள்ளைகளையும் நான் எனக்கெனப் பரிசுத்தமாக்கினேன்” என்று எண்ணாகமம் 3:12-13 கூறுகிறது. லேவியர்கள் மற்றவர்களுடன் சேர்க்கப்படவில்லை, ஆனால் எல்லோரையும் விட மேலாக அவர்கள் விரும்பப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஏனெனில் அவர்கள் எல்லாரிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கர்த்தருக்குரிய முதற்பலன்களையும் முதல் பிள்ளைகளையும் போலப் பரிசுத்தமாக்கப் படுகிறார்கள். ஏனெனில், நேர்த்திக்கடன்கள் செலுத்துவதிலும் பாவத்திற்கான மீட்பும் அவர்களால் நிறைவேற்றப்படுகின்றன. “லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களை எண்ணவேண்டாம். அவர்களை இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்க்க வேண்டாம். லேவியர்களிடம், அவர்கள் உடன்படிக்கையின் பரிசுத்தக் கூடாரத்திற்கு பொறுப்பானவர்கள் என்று சொல். அவர்கள் அக்கூடாரத்தையும், அதற்குரிய வேலைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள பொருட்களையும் சுமக்கவேண்டும். அவர்கள் தங்கள் முகாமை அக்கூடாரத்தைச் சுற்றிலும் அமைத்து தங்கியிருந்து, அவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டும். பரிசுத்தக் கூடாரமானது இடம் பெயரும்போதும், அதற்கான பணிகளை லேவியர்களே செய்யவேண்டும். பரிசுத்தக் கூடாரமானது நிறுவப்படும் போதெல்லாம் அதற்குரிய பணிகளையும் லேவியர்களே செய்ய வேண்டும். அவர்களே பரிசுத்தக் கூடாரத்தின் சகல பொறுப்புகளுக்கும் உரியவர்கள். லேவியின் கோத்திரத்தைச் சேராத ஒருவன், பரிசுத்தக் கூடாரத்தின் பணிகளைச் செய்ய முயன்றால் அவன் நிச்சயமாக மரிப்பான்” என்று எண்ணாகமம் 1:49-51 கூறுகிறது.

260. நீங்கள் இஸ்ரவேல் மக்கள் அனைவரின் மத்தியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேவனுக்குச் செலுத்தப்படும் முதல் காணிக்கைகளாகக் கருதப்பட்டு, விசுவாசத்தின் பரிசுத்த முகாமைக் காப்பதற்காக ஆசரிப்புக் கூடாரத்தின் பொறுப்பில் நியமிக்கப் பட்டுள்ளீர்கள். ஒரு அந்நியன் அருகில் வந்தால், அவன் இறந்துபோவான். ஆகவே உடன்படிக்கைப் பேழையைக் காப்பதற்காக நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். இந்தப் பரிசுத்த காரியங்கள் சொல்லும் ஆழமான அர்த்தங்களை எல்லோரும் புரிந்துகொள்வதில்லை, ஏனெனில், காணக்கூடாதவர்கள் காணாதவாறு அவை லேவியர்களுக்கு மறைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அந்த வேலையைச் செய்ய முடியாதவர்கள் அதைப் பொறுப்பெடுக்க முயற்சிப்பதில்லை. விருத்தசேதனம் போன்ற காரியங்களுக்குப் பின்னால் உள்ள ஆழமான ஆன்மீக அர்த்தத்தையும், கர்த்தருடைய பாடுகளுடைய முக்கியத்துவத்தையும் மோயீசன் உண்மையாகவே புரிந்துகொண்டார். இருப்பினும், அவர் அந்த எண்ணங்களை சரீர விருத்தசேதனம் மற்றும் பஸ்கா பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் புளிப்பில்லாத அப்பம் போன்ற புற அடையாளங்களைக் கொண்டு வெளிப்படுத்தினார். நல்ல லேவியர்கள் தங்கள் விசுவாசத்தால் வழிநடத்தப்பட்டு, இந்த ஆழமான இரகசியங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் எப்போதுமே சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், நமக்குக் கொடுக்கப் பட்டவற்றில் நாம் போதுமான கவனம் செலுத்துகிறோமா? தேவனைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன, அவற்றுக்கு ஞானம் தேவைப்படுகிறது. நாம் நமது சமூகத்தையும் பற்றிக் கரிசனை கொள்ள வேண்டும், அதற்கு நீதியுடனான உணர்வு அவசியம். முகாம் மற்றும் ஆசரிப்புக் கூடாரம் போன்ற முக்கியமானவற்றைப் பாதுகாப்பது நமது கடமையாகும், அதற்கு வலிமை தேவை. மேலும், நமது வாழ்வில் சுயகட்டுப்பாடு மற்றும் மிதவாதத்தை அடைய நாம் பாடுபட வேண்டும், ஏனெனில் இது நாம் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு சமநிலையான அணுகுமுறையை அளிக்கிறது.

261. இந்த முதன்மையான நற்பண்புகளை, அவற்றைக் கொண்டிராதவர்களும் கூட அங்கீகரித்திருக்கிறார்கள்; ஆனால் ஞானத்தை விட சமூக ஒழுங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று சிலர் நம்புகிறார்கள். ஞானம் அடித்தளமாக இருந்தாலும், அது இல்லாமல் நீதி நிலைத்திருக்க முடியாது. 1 கொரிந்தியர் 3:11-ல் கூறப்பட்டுள்ளபடி, அத்திவாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அத்திவாரத்தையும் யாராலும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அந்த அத்திவாரம் தான் இயேசு கிறிஸ்து. ஆகவே கிறிஸ்துவே இந்த இன்றியமையாத அத்திவாரம்.

262. சொலமன் சுட்டிக்காட்டியபடி, விசுவாசமே ஞானத்தின் முதல் அடையாளம்; “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் தொடக்கம்” என்றும் அவர் குறிப்பிட்டார். “உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில், நீ முழு மனதுடன், நிறைவான ஆத்மாவுடன், உன் முழு வலிமையுடன் அன்பு செலுத்தவேண்டும்” என்று உபாகமம் 6:5-ல் வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் கருணை காட்டுவதும், நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதும் உண்மையிலேயே ஒரு சிறந்த காரியம். ஆனால், அதைவிட முக்கியமானது, உங்களிடம் உள்ளவற்றிலேயே மிகவும் மதிப்புமிக்கதான உங்கள் மனதை தேவனுக்கு அர்ப்பணிப்பதாகும். உங்கள் சிருஷ்டிகருக்கு நீங்கள் செலுத்த வேண்டியதைக் கொடுத்த பிறகு, மற்றவர்களுக்கு உதவுவதில் நீங்கள் கவனம் செலுத்தலாம். இதன் பொருள், தேவைப்படுபவர்களுக்குத் துணையாக இருப்பது; அது நிதி உதவி மூலமாகவோ, ஒருவரை விடுவிப்பதற்காக அவரது கடனை அடைப்பதன் மூலமாகவோ, அல்லது தங்கள் கடமைகளைக் குறித்துக் கவலைப்படும் ஒருவருக்காகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவோ இருக்கலாம். இதன் நோக்கம், உங்கள் கடமையின் ஒரு பகுதியாக மற்றவர்களுக்குச் சேவை செய்வதும் உதவுவதும் ஆகும்; இதை நீங்கள் தேவன் மீதும் உங்கள் சக மனிதர்கள் மீதும் உள்ள அன்பினால் செய்கிறீர்கள் என்ற புரிதலுடன் எப்போதும் செய்ய வேண்டும்.

263. அப்படியானால், நம்மிடம் ஒப்படைக்கப்பட்டதைப் பாதுகாப்பதும், அதைத் திருப்பிக் கொடுப்பதும் நமது கடமையாகும். ஆனால் காலம் அல்லது சூழ்நிலைகள் காரணமாக விஷயங்கள் மாறலாம்; சில சமயங்களில் நாம் பெற்றதைத் திருப்பிக் கொடுப்பது நமது கடமையாக இல்லாமல் போகலாம். உதாரணமாக, ஒருவர் தனது பணத்தை ஒரு வெளிப்படையான எதிரியைகே கொண்டு அதைத் தன் நாட்டிற்கே எதிராகப் பயன்படுத்தவும் காட்டுமிராண்டிகளுக்குக் கொடுக்க எண்ணித் திரும்பக் கேட்டாலோ, அல்லது வேறொருவர் அவரிடமிருந்து அதை வலுக்கட்டாயமாகப் பறிக்கத் தயாராக இருக்கும்போது நீங்கள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்தாலோ, அல்லது பணத்தின் அருமை தெரியாத, ஒரு கையாலாகாத பித்தனிடம் நீங்கள் பணத்தைக் கொடுத்தாலோ, அல்லது நீங்கள் பத்திரமாகப் பதுக்கி வைத்திருந்த ஒரு வாளை ஒரு மனநோயாளியில் கைகளில் கொடுத்து, அதைக்கொண்டு அவன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலோ, அந்தக் கடனைத் தீர்ப்பது நமது கடமைக்கும் மனசாட்சிக்கும் எதிரானது அல்லவா? திருடப்பட்ட ஒரு பொருளைத் தெரிந்தே பெற்றுக்கொண்டு, அதன் உண்மையான உரிமையாளரை ஏமாற்றிப் பணம் பறிப்பதும் நமது கடமைக்கும் மனசாட்சிக்கும் விரோதமானதல்லவா?

264. சில சமயங்களில், ஒரு வாக்குறுதியையோ அல்லது சத்தியத்தையோ காப்பாற்றுவது உண்மையில் நம் கடமைக்கு எதிராகச் செல்லக்கூடும். உதாரணமாக, ஏரோதை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் ஏரோதியாளின் மகளுக்கு எதை வேண்டுமானாலும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தான், அதன் விளைவாக, தன் வார்த்தையைக் காப்பாற்றும் பொருட்டு, ஸ்நாபக யோவான் கொல்லப்படுவதை அனுமதிக்க வேண்டியிருந்தது. பின்னர் ஜெப்தா என்பவன், அவன் போர்புரிந்து வெற்றியுடன் வீடு திரும்பியபோது, ​​அவனை முதலில் சந்தித்தவள் அவனது மகள் என்பதால், அவளையே பலியாக ஒப்புக்கொடுக்கும் நிலைக்கு ஆளானான். தனக்கு எது நேர்ந்தாலும் காணிக்கை செலுத்துவதாக அவன் சபதம் செய்திருந்தான். ஆனால் இத்தகைய ஒரு சோகமான முடிவைச் சந்திப்பதை விட, அந்த வாக்குறுதியை அவன் அளிக்காமல் இருந்திருந்தாலே அது அவனுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். வாக்குறுதிகள் தீங்கிற்கு வழிவகுக்கும்போது அவை எவ்வளவு ஆபத்தானவை என்பதை இது நிதர்சனமான எடுத்துரைக்கிறது.

265. இதைக் கவனிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல. ஆகவே, பரிசுத்த ஸ்தலத்தைப் பாதுகாக்க ஒரு லேவியன் தேர்ந்தெடுக்கப்படுகிறான்; அவன் எப்போதும் நல்ல ஆலோசனைகளை வழங்குபவனாகவும், தனது நம்பிக்கைகளில் உறுதியாக இருப்பவனாகவும், மரணத்திற்குப் அஞ்சாதவனாகவும், வரம்பு மீறிய எதையும் செய்யாதவனாகவும் இருக்க வேண்டும்.. அதனால், அவனுடைய முழுமையான தோற்றமும் அவனுடைய உண்மையான தன்மையை வெளிப்படுத்த வேண்டும். அவன் தன் மனதை மட்டுமல்ல, தன் கண்களையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் எந்தவொரு விபத்தும் அவனை சங்கடப்படுத்தாது. ஏனெனில், “ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பவன், தன் மனதால் அவளுடன் விபசாரம் செய்தவன் ஆகிறான்” என்று மத்தேயு 5:28 கூறுகிறது. ஆகையால், விபசாரம் என்பது அந்தச் செயலால் மட்டுமல்ல, மிகுந்த இச்சையுடன் பார்ப்பதாலும் நிகழ்கிறது.

266. இது உயர்வானதாகவும் ஓரளவு கடுமையானதாகவும் தோன்றுகிறது, இருப்பினும், ஆனால் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்க நேரிடும் போது, இது சரியாகப் பொருந்துகிறது. ஏனெனில் லேவியர்களின் தயவு அத்தகையது, மோயீசன் தனது ஆசீர்வாதத்தின் போது அவர்களைப் பற்றி பின்வருமாறு கூறினார்: “லேவிக்கு அவனுடைய மக்களைக் கொடும், லேவிக்கு அவனுடைய விசுவாசமானவர்களைக் கொடும், லேவிக்கு அவனுடைய சுதந்தரத்தின் பங்கை கொடும், மேலும் சோதனையை எதிர்கொண்டு முரண்பாட்டின் நீர்க்கரையில் நிந்திக்கப்பட்ட பரிசுத்த மனிதர்களுக்கு அவர்களுடைய சத்தியத்தைக் கொடும், என்று இறைஞ்சினார். அத்தோடு, “கர்த்தாவே, அவர்கள் சொந்தக் குடும்பத்தை காட்டிலும் உம்மீது மிகவும் கவனம் செலுத்தியும், அவர்களது தந்தை மற்றும் தாயைப் பற்றியும் கவலைப்படாமலும், அவர்கள் தமது சகோதரர்களைக் கூட அடையாளம் காணாதவர்களாய், தங்கள் சொந்தப் பிள்ளைகள் மீதும் அக்கறை செலுத்தாதவர்களாய், உமது கட்டளைகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவர்களாக இருந்து, உமது உடன்படிக்கையைக் காத்தார்கள்” என்று உபாகமம் 33:8-9 கூறுகிறது.

267. இங்கு விவரிக்கப்பட்டுள்ள மக்கள், எவ்வித வஞ்சகமும் இல்லாத, உண்மையான விசுவாசமும் நேர்மையும் உள்ளவர்கள். லூக்கா 2:19-ல் மரியாள் அவருடைய வார்த்தைகளைக் கருத்தில் கொண்டதைப் போலவே, அவர்கள் அவருடைய போதனைகளைப் போற்றித் தியானிக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட தேவைகளை விட தங்கள் பொறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், கற்பை மீறுபவர்கள் மீது கடும் வெறுப்பைக் காட்டுகிறார்கள். மேலும் இவ்வாறான தீய செயலுக்கு எதிராக நீதியைத் தீவிரமாகத் தேடுகிறார்கள். சூழ்நிலையைப் பொறுத்து எவை மிகவும் முக்கியமானவை என்பதை உணர்ந்து, தங்கள் கடமைகளைப் பற்றிய தெளிவான புரிதலையும் அவர்கள் கொண்டுள்ளனர். இரண்டு நற்பண்புமிக்க தெரிவுகள் வரும்போது, ​​அதிக மதிப்புள்ள ஒன்றையே தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வகையில், சரியானவற்றுக்கான அவர்களின் அர்ப்பணிப்பால் அவர்கள் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

268. எவரேனும் கர்த்தருடைய நீதியான கிரியைகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அவருக்குத் தூப ஆராதனை காட்டுவார்கள் என்றால், கர்த்தாவே, அவர்களுடைய பெலத்தை ஆசீர்வதியும்; அவர்களுடைய கரங்களின் கிரியையை ஏற்றுக்கொள்ளும், என்று உபாகமம் 33:11. கூறுகிறது. அப்பொழுது, என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கிறவரிடமிருந்து தீர்க்கதரிசன ஆசீர்வாதத்தின் கிருபையை அவர்கள் பெற்றுக்கொள்வார்களாக. ஆமென்.