குருமார்களின் கடமைகள் குறித்து (Ambrose, On the Duties of the Clergy, book 3)

Ambrose of Milan, On the Duties of the Clergy, in Tamil. Book 3.

புத்தகம் III


அத்தியாயம் 1.

நம்முடைய சொந்த இதயத்தின் ஆலோசனைகளைக் கேட்பது எப்படி என்பதை தாவீதும் சொலமனும் நமக்குக் கற்பிக்கிறார்கள். அவருக்குக் கூறப்படும் கூற்றின் முதன்மை ஆசிரியராக ஸ்கிபியோவைக் கருதக்கூடாது. பரிசுத்த தீர்க்கதரிசிகள் தங்கள் அமைதியான தருணங்களில் செய்த அற்புதமான காரியங்களை நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். மேலும் ஒரு நல்ல மனிதன் துன்ப காலங்களில் ஒருபோதும் தனித்து இருப்பதில்லை என்பதை உதாரணங்கள் மூலம் நிரூபிக்கிறார்.

1. தீர்க்கதரிசியான தாவீது, நம் இதயத்தை ஒரு விசாலமான இல்லத்தைப் போல நடத்துமாறு நமக்கு அறிவுறுத்தினார்; இதயத்தை ஒரு நம்பகமான நண்பனைப் போல மதித்து நாம் அதனுடன் உறவாட வேண்டும். அவர் அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொள்வார், அது அவருடைய வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது: நான் என் செயல்களில் கவனம் செலுத்துவேன் என்று சொன்னேன். அவருடைய மகன் சொலமன் இந்தக் கருத்தை எதிரொலித்து நாம் நமது சொந்த ஞானத்தையே நம்பியிருக்க வேண்டும் என்றும் கூறினார். நீதிமொழிகள் 5:15 இந்தக் கருத்தை “உன் சொந்த கிணற்றில் ஊறுகிற தண்ணீரை மட்டும் குடி. உனது தண்ணீர் தெருக்களில் வழிந்து ஓடும்படி விட்டுவிடாதே. நீ உன் மனைவியிடம் மட்டும் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உன் சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள பிள்ளைகளுக்கும் தந்தை ஆகாதே” என்று கூறுவதன் மூலம் வலியுறுத்துகிறது: உங்கள் சொந்த தீர்ப்பைப் பயன்படுத்துங்கள் என்று பொருள்படும்படியாக, நீதிமொழிகள் 20:5 இல் “நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான்” என்று சொல்லப்பட்டுள்ளது. நீதிமொழிகள் 5:17-19-ல் ” நீ மணந்துகொண்டவள் ஒரு அழகான மானைப் போலவும், அன்பான பெண் ஆட்டைப் போலவும் இருப்பாள். அவளது அன்பால் திருப்தி அடைவாய். அவளது அன்பு உன்னைக் கவரட்டும்” என்று சொல்லப்பட்டுள்ளது.

2. ஆகவே, தான் தனியாக இருக்கும்போது உண்மையில் தனியாக இல்லை என்பதையும், அல்லது தான் ஓய்வாக இருப்பது போல் தோன்றும் போது மிகவும் அமைதி இல்லாது இருக்கிறேன் என்பதையும் உணர்ந்த முதல் நபர் ஸ்கிப்பியோ அல்ல; அவருக்கு முன்பே மோயீசன் இதைக் கண்டறிந்தார். அவர் அமைதியாக இருந்தபோது, ​​உண்மையில் அவர் புலம்பிக் கொண்டிருந்தார் என்று யாத்திராகமம் 14:16 சொல்கிறது. மேலும் அவர் நிம்மதியாக இருப்பது போல் தோன்றியபோது, ​​அவர் போரில் ஈடுபட்டிருந்தார்—வெறும் போரிடுவது மட்டுமல்ல, அவரை நெருங்க முடியாத எதிரிகளை வென்று கொண்டிருந்தார். அவர் மிகவும் ஓய்வாக இருந்ததால், மற்றவர்கள் அவருக்கு அனைத்து விதத்திலும் உதவியாய் இருந்தனர். ஆயினும், அவர் மற்றவர்களை விடச் சற்றும் சுறுசுறுப்பில் குறைந்தவராக இருந்ததில்லை. ஏனெனில் அவர் தன் கைகளை உயர்த்தி, போர்க்களத்தில் வெல்ல முடியாத எதிரியை வென்றார் என்று யாத்திராகமம் 17:11 சொல்கிறது. இவ்வாறு மோயீசன் தனது மௌனத்தின் வழியே பேசிக்கொண்டிருந்தார். மேலும் தனது ஓய்வான தருணங்களில் அவர் கடினமாக உழைத்துக்கொண்டிருந்தார். அவருடைய அமைதியான தருணங்களை விட அவருடைய உழைப்பு மகத்துவம் நிறைந்தது என்று கூறமுடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நாற்பது நாட்கள் மலையில் தங்கி முழு சட்டத்தையும் பெற்றுக் கொண்டார் என்று யாத்திராகமம் 24:17 கூறுகிறது. மேலும் அந்தத் தனிமையில், அவருடன் உரையாட அருகில் ஒருவர் இருந்தார். அதனால்தான் தாவீது, “கர்த்தராகிய தேவன் எனக்குள் சொல்வதைக் கேட்பேன். ஒரு நபர் தனக்குத்தானே பேசிக்கொள்வதை விட, தேவனோடு உரையாடுவது எவ்வளவு மகத்துவம் மிக்கது!

3. அப்போஸ்தலர்கள் அவ்வழியே கடந்து சென்ற போது, அவர்களுடைய நிழல் நோயாளிகளைக் குணமாக்கின என்று அப்போஸ்தலர் 5:15-16 கூறுகிறது. மேலும், மக்கள் அவர்களுடைய ஆடைகளைத் தொட்டு சுகம் பெற்றார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

4. எலியாவின் ஒரு வார்த்தை காரணமாக, மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியில் மழை பெய்யவில்லை. அவர் மீண்டும் பேசியபோது, ​​அந்த நீண்ட பஞ்சத்தின் பிடியில் இருந்த காலத்தில் மாவு சேமித்து வைக்கப்படும் கொள்கலன் வற்றிப்போகவில்லை, எண்ணெய் ஜாடியும் காலியாகவில்லை.

5. ஆனால் — பலர் போரிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் — ஒரு பெரிய படையின் பலத்தால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவருவதா? அல்லது கடவுளுக்கு முன்பாக உள்ள தகுதிகளால் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவருவதா? எது மிகவும் மேன்மையானது? சிரியாவின் அரசன் நம் முன்னோர்களின் மக்களுக்கு எதிராக ஒரு பெரும் போரைத் தொடுத்து, பல நேர்மையற்ற சூழ்ச்சிகளால் கொடூரங்களை அதிகரித்து, ஒரு திடீர் தாக்குதலில் அவர்களைச் சிக்க வைக்க முயன்றபோது, ​​எலிசா ஓரிடத்தில் தங்கியிருந்தார். ஆனால் அந்தத் தீர்க்கதரிசி, அவர்களுடைய எல்லா ஆயத்தங்களையும் கண்டுபிடித்து, கடவுளின் வரத்தால் மன வலிமை கொண்டவராக, அவர்களுடைய எதிரிகளின் எண்ணங்களைத் தன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்து, எந்தெந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அவர்களை எச்சரித்தார். இது சிரியாவின் அரசனுக்குத் தெரிந்தபோது, ​​அவன் ஒரு படையை அனுப்பி அந்தத் தீர்க்கதரிசியைச் சூழ்ந்துகொண்டான். எலிசா ஜெபித்து அவர்கள் அனைவரையும் பார்வையிழக்கச் செய்தார். மேலும் அவரைச் சூழ்ந்துகொள்ள வந்தவர்களைச் சமாரியாவுக்குள் மீண்டும் கைதிகளாக நுழையச் செய்தார்.

6. அவருடைய இந்த ஓய்வு நேரத்தை மற்றவர்களின் ஓய்வு நேரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். மற்ற மனிதர்கள் ஓய்வுக்காக, தங்கள் மனதை வேலைப்பளுவில் இருந்து விலக்கிக் கொள்ளவும், மனிதர்களின் சகவாசம் மற்றும் தோழமையிலிருந்து விலகியிருக்கவும் , கிராமப்புறங்களின் அமைதியையோ அல்லது வயல்வெளிகளின் தனிமையையோ தேடவும், அல்லது நகரத்தில் எதோ ஒரு இடத்தில் தங்கள் மனதிற்கு ஓய்வு கொடுத்து அமைதியையும் நிம்மதியையும் அனுபவிக்கவும் பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எலிசாவோ எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தார். தனிமையில் யோர்தான் நதியைக் கடந்து செல்லும்போது ​​அவர் அதைப் பிரித்தார்; அதனால் அதன் கீழ்ப்பகுதி கீழ்நோக்கிப் பாய, மேல்பகுதி அதன் மூலத்திற்கே திரும்பியது. கார்மல் என்னும் இடத்தில் அதுவரை பிள்ளையில்லாத ஒரு பெண்ணுக்கு சற்றும் எதிர்பாராத விதத்தில் ஒரு மகன் பிறப்பான் என்று அவர் வாக்குறுதி அளிக்கிறார்; மரித்தவர்களை உயிர்ப்பிக்கிறார்; உணவின் கசப்பைச் சரிசெய்து, அதனுடன் மாவைக் கலந்து அதை இனிப்பாக்குகிறார். மக்களுக்கு உணவாகப் பத்து அப்பங்களைக் கொடுத்தபின், மீதமிருந்த துண்டுகளை அவர் கூடைகளில் சேகரித்தார். யோர்தான் நதியில் விழுந்து ஆழத்தில் மூழ்கிப்போன கோடரியின் இரும்பினாலான வெட்டும் பகுதியை அதன் மரக் கைப்பிடியின் உதவியோடு நீரில் மிதக்கச் செய்கிறார். அவர் தோல் வியாதியைக் குணப்படுத்தி, வறட்சியை மழையாக மாற்றவும், பஞ்சத்தைச் செழிப்பாக மாற்றுவதிலும் அரும்பணியாற்றினார்.

7. நேர்மையான மனிதன் எப்போதுமே கடவுளுடன் இருப்பதால், அவன் எப்படி தனியாக இருக்க முடியும்? “கிறிஸ்துவின் அன்பிலிருந்து எந்த ஒரு சக்தியாலும் நம்மைப் பிரிக்கக் கூடுமா? இயலாது. தொல்லைகளால் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்கவோ அல்லது பிரச்சனைகளோ தண்டனைகளோ இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்க முடியுமா? முடியாது. உணவும் உடையும் இல்லாத வறுமை கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது” என்றும், “தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்றும், மரணமோ, வாழ்வோ, தேவ தூதர்களோ, ஆளும் சக்திகளோ, தற்காலப் பொருளோ, பிற்கால உலகமோ, நமக்கு மேலே உள்ள சக்திகளோ…. எதனாலும் நம்மை பிரிக்க முடியாது” என்று ரோமர் 8:35 மற்றும் 38-இல் உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. தன் உழைப்புக்கான வெகுமதியை ஒருபோதும் இழக்காதவன், எப்படித் தன் உழைப்பை இழக்க முடியும்? செல்வங்களால் நிறைந்த முழு உலகமும் அவனுக்குச் சொந்தமாக இருக்கும்போது, ​​அவன் இவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறான்? யாராலும் ஒருபோதும் பழி கூறப்படாதவன், எப்படித் தீர்ப்பில் சிக்கிக் கொள்ள முடியும்? ஏனெனில், அவன் அறியப்படாதவனாகவும் அதேவேளை நன்கு அறியப்பட்டவனாகவும், மரிப்பவனாகவும் அதேவேளை சீவிப்பவனாகவும், துக்கமுள்ளவனாகவும் அதேவேளை மகிழ்ச்சியானவனாகவும், ஏழையாகவும் அதேவேளை பலரைச் செல்வந்தர்களாக மாற்றுபவனாகவும், ஒன்றுமற்ற அதேவேளை எல்லாவற்றையும் உடையவனாகவும் இருக்கிறான். ஏனெனில், நேர்மையான மனிதன் நிலையான மற்றும் நற்பண்பு மிக்க விடயங்களைத் தவிர வேறு எதற்கும் மதிப்பளிப்பதில்லை. எனவே, அவன் மற்றவர்களுக்கு ஏழையாகத் தோன்றினாலும், தனக்குள் அவன் செல்வந்தனாக இருக்கிறான். காரணம் என்னவென்றால், அவனது மதிப்பு நிலையற்ற விடயங்களின் மதிப்பால் அல்ல, நித்தியமானவற்றின் மதிப்பால் மட்டுமே கணக்கிடப்படுகிறது.

அத்தியாயம் 2

தத்துவஞானிகள் எது அறம், எது பயனுள்ளது போன்றவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இது கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாது. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, நீதியாக இல்லாத எதுவும் பயனுள்ளதாக இருக்காது. பரிபூரணமாக இருப்பதன் கடமைகள் யாவை, மற்றும் சாதாரண கடமைகள் யாவை போன்ற ஒரே சொற்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கலாம். இறுதியாக, ஒரு நீதிமான் மற்றவர்களின் இழப்பில் தனக்கு நன்மை தேட முயற்சிப்பதில்லை. மாறாக, அவர்கள் மற்றவர்களுக்கு எது நன்மை பயக்கக்கூடியது என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

8. முந்தைய இரண்டு தலைப்புகளில், எது அறம், எது பயன் அளிக்கக்கூடியது என்பதைப் பற்றி நாம் ஆராய்ந்தோம். அதற்குப் பின் வரும் அடுத்த கேள்வி என்னவென்றால், நாம் அறத்தையும் பயனையும் ஒப்பிட்டு எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான். ஒரு விஷயம் அறம் சார்ந்ததா அல்லது பயன்தரக்கூடியதா என்பதையும், அது பயனுள்ளதா அல்லது பயனற்றதா என்பதையும் நாம் ஏற்கனவே ஆராய்ந்துள்ளதால், அப்படிப்பட்ட ஒரு விஷயம் அறம் சார்ந்ததா அல்லது பயன் தரக்கூடியதா என்பதையே நாம் தீர்மானிக்க வேண்டும் என்று சிலர் நம்புகிறார்கள்.

9. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்று நான் ஒப்புக்கொள்வது போல் தோன்றிவிடுமோ என்ற அச்சத்தினால், இதைச் செய்யும் தூண்டுதலுக்கு ஆளானேன். ஏனெனில், அவை இரண்டும் பண்பில் ஒன்றே என்று நான் ஏற்கெனவே காட்டியிருக்கிறேன். ஏனெனில், பயனுள்ளதைத் தவிர வேறொன்றும் நற்பண்புடையதாக இருக்க முடியாது என்றும், நற்பண்புடையதைத் தவிர வேறொன்றும் பயனுள்ளதாக இருக்க முடியாது என்றும் நான் சொன்னேன். ஏனெனில், அதிக செல்வத்தைக் கொண்டிருப்பதில் அடங்கியுள்ள பயனே மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதும் சரீர ஞானத்தை நாங்கள் பின்பற்றுவதில்லை; மாறாக, இவ்வுலகில் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் காரியங்களை வெறும் தூசாக எண்ணும் தேவனுடைய ஞானத்தையே நாங்கள் பின்பற்றுகிறோம்.

10. முழுமையாகவும் செம்மையாகவும் செய்யப்படும் ஒரு கடமையைக் குறிக்கும் இந்த χατόρθωμα, நற்பண்பின் உண்மையான சாராம்சத்திலிருந்து தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து வருவது மற்றொரு வகையான கடமையாகும்; அதுவே சாதாரணக் கடமை. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இதற்கு கடினமான, அசாதாரணமான நற்பண்பு மிக்க செயல்கள் எதுவும் தேவையில்லை, ஏனெனில் இது பலராலும் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒன்றாகும். உதாரணமாக, பணத்தைச் சேமிக்கும் ஆசை பலரிடையே காணப்படும் ஒரு பொதுவான பழக்கமாகும். நன்கு தயாரிக்கப்பட்ட விருந்தையும் சுவையான உணவையும் உண்டு மகிழ்வது ஒரு பொதுவான பழக்கமாகும்; இருப்பினும், உபவாசம் இருப்பது அல்லது சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பது போன்றவற்றை ஒரு சிலரே கடைபிடிக்கின்றனர். மேலும் பிறருடைய உடைமைகளை விரும்பாத நற்பண்பைக் கொண்டிருத்தல் மிகவும் அரிதானது. இதற்கு நேர்மாறாக, பிறருடைய சொத்தைப் பறிக்க விரும்புவதும் — தன்னிடம் உள்ளவற்றில் திருப்தியடையாமல் இருப்பதும் — பலர் மத்தியில் நிலவும் ஒரு பொதுவான மனநிலையாகும். ஒரு தத்துவஞானி இவற்றை முதன்மைக் கடமைகள் மற்றும் சாதாரணக் கடமைகள் என வகைப்படுத்துவார். அப்படியானால் முதன்மைக் கடமைகளை ஒரு சிலரே கடைபிடிக்கின்றனர், அதேசமயம் சாதாரணக் கடமைகளை பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்கின்றனர்.

11. மீண்டும், ஒரே வார்த்தைகள் பெரும்பாலும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, நாம் தேவனை நல்லவர் என்றும், மனிதனை நல்லவன் என்றும் அழைக்கிறோம்; ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது முற்றிலும் மாறுபட்ட அர்த்தத்தைக் கொண்டுள்ளது. நாம் தேவனை ஒரு விதத்தில் நீதியுள்ளவர் என்றும், மனிதனை மற்றொரு விதத்தில் நீதியுள்ளவன் என்றும் அழைக்கிறோம். அதுபோலவே, நாம் தேவனை ஞானமுள்ளவர் என்றும், மனிதனை ஞானமுள்ளவன் என்றும் அழைக்கும்போது அர்த்தத்தில் வேறுபாடு உள்ளது. மத்தேயு 5:48 நற்செய்தியில், “உங்கள் பரலோக பிதா நிறைவுடையவராக (பூரண சற்குணராக) இருப்பதுபோல, நீங்களும் நிறைவுடையவர்களாய் இருங்கள்” என்று நமக்குக் கற்பிக்கப்படுகிறது. பவுல் பரிபூரணமானவராகவும், அதே சமயம் பரிபூரணமற்றவராகவும் இருந்தார் என்று நான் மீண்டும் கூறுகிறேன். ஏனெனில், பிலிப்பியர் 3:12 இல் அவர், “நான் எப்படி இருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறாரோ அப்படி நான் ஏற்கெனவே இருக்கிறேன் என்று எண்ணவில்லை. நான் இன்று வரை கூட எனக்காக கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட அந்த குறிக்கோளை அடையவில்லை. ஆனால் தொடர்ந்து அந்தக் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்” என்று சொன்ன அதேவேளை, மீண்டும், ​​பிலிப்பியர் 3:15 இல் “அப்படியானால், நாம் பரிபூரணமானவர்கள்” என்று சேர்த்துக் கூறினார். பரிபூரணத்தில் இருவகை பரிமாணங்கள் உள்ளன; ஒன்று சாதாரணமானது, மற்றொன்று மிக உயர்ந்த மதிப்புடையது. ஒன்று இம்மையிலும் மற்றொன்று மறுமையிலும் பயனுள்ளது. ஒன்று மனித ஆற்றல்களுக்கு ஏற்பவும், மற்றொன்று வரவிருக்கும் உலகின் பரிபூரணத்திற்கு ஏற்பவும் செயலாற்றக்கூடியது. ஆனால் தேவன் எல்லாவற்றிலும் நீதியுள்ளவர், எல்லாவற்றிற்கும் மேலான ஞானத்தின் பரிபூரணமானவர், எல்லாவற்றிலும் நிறைவும் முளிமையும் உடையவர்.

12. மனிதர்களுக்குள்ளும்கூட பன்முகத்தன்மை உண்டு. “தானியேலைவிட ஞானமுள்ளவன் யார்?” என்று எசேக்கியேல் 28:3) இல் சொல்லப்பட்ட தானியேல், மற்றவர்களைவிட வேறுபட்ட விதத்தில் ஞானமுள்ளவராக இருந்தார். முற்காலத்து மக்களின் ஞானத்தையும் விட, எகிப்தின் ஞானிகள் அனைவரையும் விட, மேலான ஞானத்தால் நிறைந்திருந்த மன்னன் சொலமன் குறித்தும் இதையே கூறலாம். பொதுவாக மனிதர்கள் இருப்பது போல ஞானியாக இருப்பது என்பது, உண்மையான ஞானியாக இருப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பொதுவாக ஞானியாக இருப்பவன் உலக விஷயங்களில் ஞானியாக இருக்கிறான்; பிறரிடமிருந்து ஒன்றை எடுத்துத் தனக்காக வைத்துக்கொள்ளும் வகையில் தனக்காகவே ஞானியாக இருக்கிறான். உண்மையான ஞானி தன் சொந்த ஆதாயத்தைக் கருத்தில் கொள்ளாமல், தனக்குப் பயனுள்ளதை நாடாமல், அனைவருக்கும் பயனுள்ளதை நாடி, நித்தியமானதையும், தகுந்ததும் நன்மை பயக்கக்கூடியதையும் தன் முழு விருப்பத்துடன் நோக்குகிறான்.

13. ஆகையால், இதுவே நமது சட்ட விதியாக இருக்கட்டும்; இதன்மூலம், ஒன்று ஒழுக்கமானது, மற்றொன்று பயனுள்ளது என இரண்டு காரியங்களுக்கு இடையில் நாம் ஒருபோதும் வழிதவறிச் செல்லாதிருப்போம். நேர்மையான மனிதன் ஒருபோதும் மற்றவரிடமிருந்து எதையும் எடுத்துக்கொள்ள நினைக்கமாட்டான், மற்றவருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் தனது சொந்த ஆதாயத்தை அதிகரிக்கவும் விரும்பமாட்டான். இந்த விதியை அப்போஸ்தலர் உங்களுக்குக் கொடுக்கிறார்: “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன, ஆனால் எல்லாப் பொருள்களும் நல்லதல்ல, எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டவை எனினும், சில பொருள்கள் பக்தியில் வளர்வதற்குப் பிறருக்கு உதவுவதில்லை. தனக்கு மட்டுமே உதவக்கூடிய காரியங்களை ஒருவன் செய்ய முயலாது, பிறருக்குப் பயன்படக் கூடிய செயல்களை செய்ய முயற்சிக்க வேண்டும்” என்று 1 கொரிந்தியர் 10:23-24 கூறுகிறது. எவனும் தனக்குரியதைத் தேடாமல், மற்றையவருடையதைத் தேடட்டும். அதாவது: எவனும் தன் சொந்த ஆதாயத்தைத் தேடாமல், மற்றவருடைய ஆதாயத்துக்கு வழி தேடட்டும்; எவனும் தன் சொந்தக் கௌரவத்தைத் தேடாமல், மற்றவருடைய கௌரவத்தை மேம்படுத்த வழி தேடட்டும். அவர் மற்றொரு இடத்தில் “நீங்கள் இச்செயல்களைச் செய்யும்போது தன்னலமும், வீண் பெருமையும் கொள்ள வேண்டாம். பணிவுடன் இருங்கள். நீங்கள் உங்களுக்குத் தரும் மரியாதையைவிட மற்றவர்களுக்கு அதிக மரியாதையைத் தாருங்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் மட்டும் அல்லாமல் மற்றவர் வாழ்விலும் ஆர்வம் கொள்ளுங்கள்” என்று பிலிப்பியர் 2:3-4- வழியாக நமக்கு எடுத்துரைக்கிறார்.

14. எவன் ஒருவனும் தனக்கான தயவையோ புகழையோ தேடாமல், மற்றவருடைய புகழைத் தேடட்டும். இதை நாம் நீதிமொழிகள் புத்தகத்தில் தெளிவாகக் காணலாம்: அங்கு பரிசுத்த ஆவியானவர் சொலமன் மூலம் பேசுகிறார்: “என் மகனே, நீ ஞானமுள்ளவன் என்றால், உனக்காகவும் உன் அயலாருக்காகவும் ஞானமுள்ளவனாக இரு. அதேநேரம், நீ தவறு செய்தால், அதன் விளைவுகளை நீ ஒருவனே தனியாக அனுபவிப்பாய்” என்று நீதிமொழிகள் 9:12-ல் கூறப்பட்டுள்ளது. ஒரு ஞானி, ஒரு நல்லவனைப் போலவே மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார், அதன்மூலம் இருவரும் ஒரே நற்பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அத்தியாயம் 3

தன்னலத்துடன் ஆதாயத்தைத் தேடக்கூடாது என்ற கொள்கை முதலில் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டுகள் மூலமும் பின்னர் அந்தச் சொல்லின் வரையறையாலும், இறுதியாக நமது சரீர அமைப்பு மற்றும் செயல்பாடுகளாலும் நிரூபிக்கப்படுகிறது. ஆகையால், பயன் தரவல்ல ஒன்றை மற்றவரிடமிருந்து பறிப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நூலாசிரியர் விளக்குகிறார். ஆக, அத்தகைய தீய செயல் இயற்கை விதியையும் தெய்வீக விதியையும் மீறுவதாக அமைகிறது. மேலும், இந்தத் தவறான செயல் மற்றைய உயிரினங்களிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டும் தனித்துவமான வரத்தை நாம் இழக்கக் காரணமாக அமைந்து விடுகிறது. இறுதியில் இது குடியுரிமை சட்டங்களைப் புறக்கணிக்கும் நிலைக்கு வழிகோலுவதால் அந்த சட்டங்கள் அவமானத்துக்கு உள்ளாகின்றன.

15. ஆகவே, ஒருவன் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த விரும்பினால், பவுல் செய்ய நினைத்ததுபோல, தனி ஒருவருக்கு மட்டும் நன்மை செய்வதை விடுத்து, பரந்துபட்ட ஒரு குழுவிற்கு நன்மை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ரோமர் 8:29-ல் மக்கள் கிறிஸ்துவின் சாயலில் உருவாக்கப்படுவது என்பதன் அர்த்தம் இதுதான். அதாவது, மற்றவர்களுக்குச் சொந்தமானதை அபகரிக்காமல் இருப்பதும், உங்கள் நன்மைக்காக மற்றவரிடமிருந்து எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் ஆகும். பிலிப்பியர் 2:6-7-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல, நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து, தெய்வீகமானவராக இருந்த போதிலும், தம்மைத் தாழ்த்தி மனித அவதாரத்தை எடுக்க முடிவெடுத்தார்; அந்த உருவத்தை அவர் தம்முடைய செயல்களின் நன்மையால் முழுமை பெறவேண்டும் என விரும்பினார். அப்படியானால், கிறிஸ்து தம்முடைய கிருபையெனும் ஆடையால் அலங்கரித்த ஒருவரை நீங்கள் துகிலுரியப் போகிறீர்களா? கிறிஸ்து அவர்களுக்குக் கொடுத்ததை நீங்கள் பறிக்கப் போகிறீர்களா? மற்றவரின் இழப்பில் நீங்கள் உங்கள் சொந்த பலனை அதிகரிக்க முயற்சிக்கும்போது, ​​நீங்களும் அநேகமாக இதைத்தான் செய்கிறீர்கள்.

16. அப்படியென்றால் மனிதனே, சிந்தித்துப் பார், உனக்கு உன் பெயர் எங்கிருந்து வந்தது என்று — அது பூமியிலிருந்துதான் வந்தது. பூமி யாரிடமிருந்தும் எதையும் எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் அனைவருக்கும் தாராளமாக அளிக்கிறது. மேலும் அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகப் பலவிதமான வளங்களை அள்ளி வழங்குகிறது. அதனால்தான் மனிதாபிமானம் என்ற உயர்குணம் மக்களிடம் உள்ள ஒரு சிறப்பு வாய்ந்த மற்றும் இயற்கை தந்த குணமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அது மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த நோக்கத்தைக் கொண்டுள்ளது.

17. உங்கள் உடலின் வடிவமும், அதன் உறுப்புகளின் பயன்பாடுகளும் இதை உங்களுக்குக் கற்பிக்கின்றன. ஒரு உறுப்பு மற்றொன்றின் கடமைகளைச் செய்ய முடியுமா? கண் காதின் கடமைகளைத் தனக்காக உரிமை கோர முடியுமா; அல்லது வாய் கண்ணின் கடமைகளைச் செய்ய முடியுமா; அல்லது கை கால்களின் கடமைகளையோ அல்லது கால்கள் கைகளின் கடமைகளையோ செய்ய முடியுமா? இல்லை, அப்படிப் பார்த்தால், இடது மற்றும் வலது கைகளுக்கு என்றே வெவ்வேறு கடமைகள் உள்ளன. அவற்றை நீங்கள் வித்தியாசமாகப் பயன்படுத்த முயன்றால், இயற்கையின் இயல்புக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதப்படுவீர்கள். ஒவ்வொரு உறுப்பின் செயற்பாடுகளையும் மாற்ற வேண்டுமானால், நீங்கள் முழு மனிதனையும் மாற்ற வேண்டியிருக்கும். வலது கைக்குப் பதிலாக இடது கையால் உண்ண முயற்சிப்பது போல, அல்லது இடது கைகளில் செய்யக்கூடிய ஒரு செயலை, அது மிகவும் அவசியமாக இருந்தாலன்றி, வலது கையால் செய்வது சில சமயங்களில் இயற்கைக்கு மாறான செயலென்று கருதப்படுவதில்லை.

18. மூளையிடமிருந்து புரிந்துகொள்ளும் திறனையும், காதுகளிடமிருந்து கேட்கும் திறனையும், மனதிலிருந்து சிந்திக்கும் ஆற்றலையும், மூக்கிலிருந்து நுகரும் திறனையும், வாயிலிருந்து சுவைக்கும் திறனையும் கண்கள் எடுத்துக்கொண்டு, அந்தப் புலன்களைக் கண்கள் தானே பயன்படுத்த முடிந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அது இயற்கையில் உள்ள அனைத்து செயற்பாடுகளையும் சீர்குலைக்காதா? இதனால்தான் அப்போஸ்தலர் ஞானத்துடன் சொல்கிறார்: முழு உடலும் கண்ணாக இருந்தால், அது எப்படி கேட்கும்? முழு உடலும் காதுகளாக இருந்தால், அது எப்படி நுகரும்? என்று 1 கொரிந்தியர் 12:17 கேள்வியெழுப்புகிறது. நாம் அனைவரும் முக்கியமான பல உறுப்புகளால் ஆன ஒரே உடலின் பாகங்கள் என்று அவர் விளக்குகிறார். உடலின் எந்தப் பாகமும் தனக்கு மற்றொரு பாகம் தேவையில்லை என்று சொல்ல முடியாது. பலவீனமாகத் தோன்றும் பாகங்கள் உண்மையில் மிகவும் முக்கியமானவை என்பதோடு அவற்றுக்கு அதிக கவனிப்பு தேவை. இதுகுறித்து 1 கொரிந்தியர் 12:26-ல் மேலும் விளக்கமாக, “சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும் மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு சேர்ந்து துன்புறும். அதேபோல, நம் சரீரத்தின் ஏதேனும் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும்” என்று கூறப்பட்டுள்ளது.

19. ஆகவே, நாம் யாருடன் துன்பப்பட விரும்புகிறோமோ அவரிடமிருந்து எதையாவது எடுத்துக்கொள்வதோ, அல்லது நம்மிடம் இருப்பதில் உதவியாக ஒரு பங்கை அளிக்க வேண்டிய ஒருவரிடமோ அநியாயமாகவோ அல்லது தீங்கு விளைவிக்கும் வகையிலோ நடந்துகொள்வது எவ்வளவு ஒரு கேவலமான விஷயம் என்பதை நாம் உணராமலில்லை. இது இயற்கையின் ஒரு நியாயமான விதியாகும். இது கருணை உணர்வைக் காட்ட நம்மை வழிநடத்துகிறது. அதனால், நாம் அனைவரும் ஒரே உடலின் பாகங்களைப் போல, ஒருவர் பின் ஒருவராக, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்; மற்றவரிடமிருந்து எதையும் எடுத்துக்கொள்வதைப் பற்றி ஒருபோதும் நினைக்கக்கூடாது, ஏனெனில் உதவி செய்வதை நிறுத்துவது கூட இயற்கையின் கொள்கைக்கு எதிரானது. எமது உடலின் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயலாற்றுவது போல, ஒருவர் மற்றவருடன் இணைந்து செயலாற்றவும், பொதுவான விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் வகையிலும் நாம் பிறந்துள்ளோம். ஆனால், ஒன்று தன் கடமையில் தவறினால், மற்றவை தடைபடுகின்றன. உதாரணமாக, ஒரு கை ஒரு கண்ணைப் பிடுங்கி எடுத்துவிட்டால், அது அதன் செயல்பாட்டைச் சீர்குலைக்கும் ஒரு விடயமல்லவா? அதே கை பாதத்தைக் காயப்படுத்தினால், அதனால் தடைபடும் செயல்கள் என்னென்னவென்று எண்ணிப் பாருங்கள்! ஆனால், ஒரு உடலின் ஒரு பகுதி மட்டும் காயப்படுவதை விட, ஒரு முழு மனிதன் தனது பொறுப்புகளிலிருந்து முழுமையாக விலக்கப்படும்போது அது இன்னும் மோசமானது! உடலின் ஒரு பகுதி காயப்படும்போது, ​​அது முழு உடலையும் பாதிக்கிறது; அதுபோலவே, மனித சமுதாயத்தில் ஒருவருக்குத் தீங்கு நேரும்போது ​​அது முழு சமூகத்தையும் பாதிக்கிறது. மனிதகுலத்தின் அடித்தளமே பாதிக்கப்படுகிறது; இதனால் விசுவாசத்திலும் அன்பிலும் ஒன்றுபட்டு, ஒரே உடலாக நிற்கும் பரிசுத்த திருச்சபையின் ஒற்றுமையும் பாதிக்கப்படுகிறது. அனைவருக்காகவும் தம்மையே தியாகம் செய்த எம் ஆண்டவராகிய கிறிஸ்து தாம் சிந்திய இரத்தத்தின் மகிமை வீணாகிவிட்டதே என்று நிச்சயமாக வருந்துவார்.

20. நமது சொந்த நன்மையைக் கருத்திற்கொண்டு, அந்த நோக்கத்துக்காக மட்டும் மற்றவர்களிடமிருந்து ஒருபோதும் அவர்களுக்குச் சொந்தமானதைப் பறிக்காமலிருக்க, இந்த விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கர்த்தருடைய சட்டம் நமக்குத் தெளிவாகக் கற்பிக்கிறது. நீதிமொழிகள் 22:28-ல், “உன் முற்பிதாக்களால் குறிக்கப்பட்ட பழைய எல்லை அடையாளங்களை மாற்றாதே” என்றும், யாத்திராகமம் 23:4 இல், “காணாமற்போன மாட்டையோ, கழுதையையோ பார்த்தீர்களானால், அதை அதன் உரிமையாளனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அதன் உரிமையாளன் உங்களது பகைவனாக இருந்தாலும், நீங்கள் அதைச் செய்ய வேண்டும்” என்றும், யாத்திராகமம் 22:2-இல் “இரவில் திருடுவதற்காக ஒருவன் ஒரு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யும்போது அவன் கொல்லப்பட்டால், அவனது மரணத்துக்கு யாரும் பொறுப்பாளிகள் அல்ல. ஆனால் அது பகலில் நடந்தால், அவனைக் கொன்றவன் கொலைக் குற்றவாளியாவான்” என்றும், லேவியராகமம் 19:13 இல், ஒரு தொழிலாளிக்கு சேரவேண்டிய வேதனத்தை விடியும்வரை இரவு முழுக்க நிறுத்தி வைக்காதீர்கள்” என்றும், உபாகமம் 23:19-ல் கூறப்பட்டுள்ளபடி, “நீங்கள் வேறு ஒரு இஸ்ரவேல் சகோதரருக்கு கடன் கொடுத்திருப்பீர்கள் என்றால் அதற்கான வட்டியை வசூலிக்கக் கூடாது. அவர்களுக்குக் கொடுத்த பணத்தின் மீதோ, உணவின் மீதோ அல்லது வேறு எந்த பொருள் மீதோ நீங்கள் வட்டி வாங்கக் கூடாது” என்றும் கட்டளையிடப்பட்டுள்ளதை இங்கே கூர்ந்து கவனிப்பது முக்கியமாகும். ஒரு கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையான பணம் ஒருவனிடம் இல்லாத பட்சத்தில், மீண்டும் அவனுக்கு உங்கள் உதவி தேவைப்பட்டால், கடனாகப் பெற்ற அற்பத் தொகையைக் கூட செலுத்த வசதியில்லாதவனிடம், கருணை உள்ளம் கொண்டவன் என்ற போர்வையில் நீங்கள் ஒரு பெரிய தொகையைக் கொடுக்க எத்தனிப்பது கொடிய செயல் அல்லவா? இவ்வழியில் நீங்கள் அவர்களை ஒரு கடனிலிருந்து விடுவித்து, மற்றொரு கடனுக்குள் தள்ளுகிறீர்கள். அத்தோடு அது ஒரு கொடுமையான செயலாக இருக்கும்போது, எப்படி ​​அதை நீங்கள் இரக்கம் அல்லது மனிதநேயம் என்று அழைக்கிறீர்கள்?

21. நன்மை செய்வது எப்படி என்று மற்ற எல்லா உயிரினங்களுக்கும் தெரியாத பட்சத்தில், நாம் அவற்றிடமிருந்து வேறுபட்டிருக்கிறோம். காட்டு விலங்குகள் தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே தேடிக்கொள்கின்றன, ஆனால் மனிதர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இதனால்தான் சங்கீதக்காரர் ‘நல்லவர்கள் கருணை காட்டுவதன் மூலம் கொடுக்கிறார்கள்’ என்று கூறுகிறார். சில காட்டு விலங்குகள் கூட, தங்கள் குட்டிகளை வளர்க்கவும் பராமரிக்கவும் அவற்றுக்கு உணவளிக்கின்றன. ஆனால் அனைவரையும் தங்கள் சொந்த பிள்ளைகளைப் போல கவனித்துக் கொள்ளும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. இப்படித்தான் இயற்கை செயல்படுகிறது. ஒருவருக்கு உதவ மறுப்பது தவறு என்றால், அவரிடமிருந்து பறிப்பதும் தவறே. நமது சட்டங்களும் இதையே நமக்குக் கற்பிக்கின்றன. திருட்டைத் தடுக்கவும், திருடனைத் தன் வழிகளை மாற்றி நல்வாழ்வு வாழ ஊக்குவிக்கவும், மற்றவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட எந்தப் பொருளும் இரட்டிப்பான இழப்பீட்டுடன் திருப்பித் தரப்பட வேண்டும் என்றும் அவை கூறுகின்றன.

22. இருப்பினும், ஒருவர் தண்டனைக்கு அஞ்சாமல் இருந்தாலோ அல்லது அபராதத்தைக் கண்டு ஏளனம் செய்தாலோ, அது மற்றொருவரின் உடைமையை எடுத்துக்கொண்டதை நியாயப்படுத்தும் செயலாகி விடுமா? அது எப்போதும் ஒரு தீய செயலாகவே இருக்கும். அது சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளோருக்கு மட்டுமே பொருத்தமானதும் இயற்கைக்கு எதிரானதுமாகும்; ஒருவருக்குத் தேவை இருந்தபோதிலும், இயற்கை அவர்களை அப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய ஒருபோதும் தூண்டாது. இருந்தபோதும், அடிமைகளிடையே காணப்படும் இரகசியத் திருட்டையும், செல்வந்தர்களிடையே காணப்படும் பகிரங்கக் கொள்ளையையும் நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

23. ஆனால், நமது சொந்த நலனுக்காக மற்றவருக்குத் தீங்கு விளைவிப்பதை விட இயற்கைக்கு முரணானது என்ன இருக்கிறது? நம் இதயத்தின் இயல்பான உணர்வுகள் அனைவரையும் கவனித்துக் கொள்ளவும், துன்பங்களைத் தாங்கவும், அனைவருக்காக உழைக்கவும் நம்மைத் தூண்டுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஆபத்து இருந்தாலும் பிறரின் பாதுகாப்பை நாடுவதும், தங்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதை விட, தங்கள் நாட்டை அழிவிலிருந்து காப்பது நன்றியறிதலின் உச்சம் என்று நினைப்பதும் ஒரு மகத்தான விஷயமாகக் கருதப்படுகிறது. ஓய்வு நேரத்தை முழுமையாக அனுபவித்து, சுகபோகமாக அமைதியான வாழ்க்கையைக் கழிப்பதை விட, நம் நாட்டிற்காக உழைப்பதே மிகவும் மேன்மையான செயல் என்று நாம் எப்போதும் கருத வேண்டும்.

அத்தியாயம் 4

தன் சுயநலனுக்காக, மற்றவருக்குத் தீங்கு செய்பவன், தன் மனசாட்சியால் பெரும் துன்பத்திற்கு ஆளாவான் என்பது திண்ணம் என்று காட்டப்பட்டுள்ளது. எனவே, ஒருவருக்குப் பயனளிக்கும் எதுவும் பிறருக்குப் பயனளிக்காவிட்டால், அது முற்றிலும் பயனற்றது. ஆகையால், தத்துவஞானிகள் முன்வைத்த அனைத்தையும் இழந்தது போன்ற நிலைமையில் இருக்கும் இருவரைப் பற்றிய கதைக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சம்பந்தமில்லை, அதற்கு இடமுமில்லை; மாறாக, நாம் அவர்கள் அனைவரிடமும் நம் அன்பையும் தாழ்மையையும் காட்ட வேண்டும்.

24. எனவே, இயற்கையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அதன்படி தன்னை வழிநடத்திக் கொள்ளும் ஒரு மனிதன், ஒருபோதும் மற்றவருக்குத் தீங்கு செய்ய மாட்டான் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம். அப்படியே அவர் எவரையாவது துன்புறுத்தினால், அவர் இயற்கைக்கு எதிராகச் செயல்படுகிறார் என்றே அர்த்தம். மேலும் தனது செயல்களை நன்மை பயப்பதை விட அதிகத் தீமையையே ஏற்படுத்துவதாக அவர் கருதவேண்டும். குற்றவுணர்வு தரும் வலியை விட மோசமான தண்டனை வேறு எதுவும் இல்லை. நாம் மற்றவர்களுக்கு ஏற்படுத்திய தீங்கை உணர்ந்து, அதற்காகக் குற்றவுணர்ச்சியை உணரும் நமது சொந்த இருதயத்திலிருந்து வரும் தீர்ப்பை விடக் கடினமான தீர்ப்பு வேறு எதுவும் இல்லை. நீதிமொழிகள் 14:3-ல், “அறிவற்றவனின் வார்த்தைகள் அவனது துன்பத்திற்குக் காரணமாகின்றன. ஆனால் ஞானமுள்ளவனின் வார்த்தைகளோ அவனைக் காப்பவையாக இருக்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, அறிவீனர்களின் தவறான செயல்களால் அவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வேதவசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. மூடத்தனம் கண்டிக்கப்படுகிறது, ஏனெனில் அது தவறுகளுக்கு வழிவகுக்கிறது. மரணம், இழப்பு, நாடுகடத்தல் அல்லது நோய் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படுவதற்குப் பதிலாக, இந்த வகையான மூடத்தனத்தைத் தவிர்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டாமா? ஒருவரின் குணத்தில் உள்ள குறைபாடு அல்லது சேதமுற்ற நற்பெயரை விட, உடல் குறைபாடு அல்லது செல்வத்தின் இழப்பு போன்றவை குறைவான பெறுமதியையே கொண்டுள்ளன என்பதை எவர் தான் ஒப்புக்கொள்ள மாட்டார்?

25. ஒருவருக்கு எது நல்லதோ அது அனைவருக்கும் நல்லது என்றும், ஒரு விஷயம் முழு சமூகத்திற்கும் பயனளித்தால் மட்டுமே அதை நாம் நல்லது என்று கருத வேண்டும் என்றும் நாம் அனைவரும் நம்ப வேண்டும் என்பது இங்கே தெளிவாகிறது. அனைவருக்கும் உதவாதது தீங்கை விளைவிக்கும் எனும்போது ஒருவர் மட்டும் எப்படிப் பயனடைய முடியும்? எவருக்கும் உதவாத ஒருவர் தனக்குத்தானே உதவியாக இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இயற்கையின் விதி அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்குமானால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பதற்கும் அந்த ஒரே வழிதான் உள்ளது. இந்த இயற்கை தந்த விதியின்படி நாம் பிறரின் நன்மைக்காகவும் செயல்படக் கடமைப் பட்டுள்ளோம். எனவே, மற்றொருவரின் நலனில் அக்கறை கொண்ட ஒருவர் அவருக்குத் தீங்கு விளைவிப்பது சரியல்ல; இது இயற்கையின் விதிக்கு முரணானது.

26. ஏனெனில், விளையாட்டுப் போட்டிகளில் ஓடுகிறவர்கள் மற்றும் பந்தயத்தில் பங்கேற்போர் ஒவ்வொருவரும், நேர்மையற்ற ஆட்டத்தினால் மற்றும் ஓட்டத்தினால் அல்லாமல், கால்களின் வேகமான இயக்கத்தால் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும், தங்களால் இயன்றவரை வேகமாக ஓடி வெற்றியை நோக்கி விரைவாகச் செல்ல வேண்டும் என்றும், மற்றைய போட்டியாளரை இடறச் செய்யவோ அல்லது தங்கள் கைகளால் தள்ளிவிடவோ துணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கப்படுகிறார்கள் என்று நாம் அறிவோம். அப்படியென்றால், இவ்வுலக வாழ்வில் மற்றவரிடம் பொய் சொல்லாமலும், வஞ்சிக்காமலும் எவ்வளவு அதிகமாக வெற்றியை அடைய வேண்டும் என்பதில் நாம் எத்தனை குறிக்கோளுடன் செயற்படவேண்டும்?

27. கப்பல் கவிழும் அல்லது மூழ்கும் ஆபத்தில் இருக்கும் போது, ஒரு புத்தியுள்ளவன் அறிவற்ற மாலுமியிடமிருந்து அந்தக் கப்பலை மூழ்காமல் காக்கும் தடுப்புப் பலகையை எடுத்து, அதை உபயோகித்து, தான் மட்டும் தப்பிப்பது நியாயமாக இருக்குமா என்று சிலர் வியக்கக் கூடும். இங்கே ஒரு முட்டாளுக்குப் பதிலாக ஒரு புத்திசாலி தப்பிப்பது பொது நன்மைக்கு நல்லது என்று தோன்றினாலும், ஒரு நல்ல கிறிஸ்தவர் மற்றொருவரின் உயிரைப் பணயம் வைத்துத் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கூடாது என்பது எனது ஆழமான கருத்தாக இருக்கிறது. இது எப்படியென்றால், ஆயுதம் ஏந்திய கொள்ளையனைச் சந்திக்கும்போது, ​​தன் உயிரைக் காத்துக்கொள்வது தன் அயலான் மீதான அன்பைக் களங்கப்படுத்திவிடுவோமோ என்ற அச்சத்தில் அவன் பதிலுக்குத் தாக்க முடியாததைப் போல இருப்பதற்குச் சமமாகும். நற்செய்திகளில் இதுகுறித்த செய்தி தெளிவாக உள்ளது: மத்தேயு 26:52-ல், “உங்கள் வாளை உறையில் போடுங்கள், ஏனெனில் வாளை எடுப்பவர்கள் அனைவரும் வாளாலேயே மரிப்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்குத் தீங்குசெய்ய வந்தவனை விட மோசமான கொள்ளையன் எவன் இருப்பான்? ஆயினும், கிறிஸ்து தம்மைத் தாக்கியவர்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளவில்லை, அதற்குப் பதிலாக, அவர் தம்முடைய பாடுகளால் அனைவரையும் குணப்படுத்தவே விரும்பினார்.

28. ஒரு கிறிஸ்தவன் தன்னைவிட மற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து, தனிப்பட்ட புகழைத் தேடாமல், தன் நற்செயல்களுக்கான வெகுமதிகளை எதிர்பாராமல் இருக்கும் சந்தர்ப்பத்தில். நீங்கள் மட்டும் ஏன் மற்றவர்களைவிட உங்களை மேலானவர் என்று நினைக்கிறீர்கள்? மேலும், மற்றவரின் வெற்றிக்குத் தீங்கு விளைவிப்பதைவிட உங்கள் சொந்தப் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக்கொள்ள ஏன் முயற்சிப்பதில்லை? உங்களிடம் உள்ளவற்றில் மகிழ்ச்சியற்று இருப்பதும், பிறருக்குச் சொந்தமானதை விரும்புவதும், குறிப்பாக அதை நேர்மையற்ற வழியில் அபகரிக்க முயற்சிப்பதும் இயற்கைக்கு முரணானது. கடவுள் எல்லாவற்றையும் நல்லதாகவே படைத்திருப்பதால், ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வது இயற்கையோடு ஒத்துப்போகிறது என்றால், வெட்கக்கேடான வாழ்க்கை வாழ்வது இவற்றுக்கு எதிரானதாகவே இருக்க வேண்டும். நல்ல வாழ்க்கையும் வெட்கக்கேடான வாழ்க்கையும் ஒன்றாக இருக்க முடியாது, ஏனெனில் அவை இயற்கையின் நியதியால் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றன.

அத்தியாயம் 5

ஒரு நல்ல மனிதர், ஏதேனும் ஒரு விடயத்தை மறைக்க முடியும் என்று நினைத்தாலும், அதை மறக்கக்கூடாது என்ற தனது பொறுப்புகளுக்கு எதிராகச் செயல்பட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை விளக்குவதற்காக தத்துவஞானிகள் கைஜஸ் (Gyges) என்பவரின் மோதிரக் கதையை உருவாக்கினர். இந்தக் கருத்தை ஆதரிப்பதற்காக, அவர் தாவீது மற்றும் ஸ்நாபக யோவான் போன்றோரது வாழ்க்கையிலிருந்து உதாரணங்களை முன்வைக்கிறார்.

29. எமது கலந்துரையாடலை நாம் ஏற்கனவே நிறைவுக்கு கொண்டுவந்து விட்டதாக எண்ணி, அதன் சாராம்சம் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதானால், இதன்மூலம் ஒரு தெளிவான கொள்கையை நாம் நிலைநாட்டும் பொருட்டு, நாம் நற்பண்புகளை மட்டுமே நாட வேண்டும். ஒரு புத்திசாலியானவர் வெளிப்படையான மற்றும் நேர்மையான வழிகளில் மட்டுமே செயல்படுகிறார்; தப்பித்துவிடலாம் என்று நினைத்தாலும் கூட, தவறான செயல்களுக்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் அவர் தவிர்க்கிறார். அவரைப் பொறுத்தவரை, மற்றவர்களால் உணரப்படுவதற்கு முன்பே குற்றவுணர்ச்சி அவருக்குள் உணரப்படுகிறது. ஒருவனின் தீய செயல்கள் பகிரங்கமாக அரங்கேறும் போது, அவற்றைப்பற்றிய சொந்த உணர்வே அவனுக்கு அதிக அவமானத்தைத் தருகிறது. தத்துவஞானிகள் கூறும் கற்பனைக் கதைகள் மூலமாக அல்லாமல் நல்ல மனிதர்களின் நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மூலமாகவே இதை நாம் விளக்க முடியும்.

30. பிளேட்டோவைப் போல கனமழை காரணமாக, தரையில் ஒரு பெரிய பள்ளம் உருவாகி, பின்னர் அது திறந்து கொண்டதாக நான் கற்பனை செய்யத் தேவையில்லை. அவருடைய கதையில், கைஜஸ் அந்தப் பள்ளத்திற்குள் இறங்கிச் சென்று, அதன் பக்கங்களில் கதவுகளைக் கொண்ட ஒரு புராண இரும்பினால் ஆன குதிரை ஒன்றைக் காண்கிறான். அந்தக் கதவுகள் திறந்தபோது, ​​இறந்த நிலையில் கிடந்த ஒரு மனிதனின் கைவிரலில் ஒரு தங்க மோதிரம் இருப்பதைக் கண்டான். தங்கம் மீது நாட்டம் கொண்ட அவன், அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு மன்னனின் மேய்ப்பர்களை நோக்கித் திரும்பியபோது, ​​தற்செயலாக மோதிரத்தின் கல் பகுதியை உள்நோக்கித் திருப்பிவிட்டான். அதனால், அவனால் மற்றவர்களைப் பார்க்க முடிந்தபோதிலும், யார் கண்ணுக்கும் அவன் தெரியாமல் போனான். ஆனாலும் அவன் மோதிரத்தை அதன் வழக்கமான நிலைக்குத் திருப்பியபோது ​​மீண்டும் எல்லோரது கண்களுக்குத் தெரியும்படி ஆனான். இந்த அசாதாரண சக்தியை உணர்ந்த அவன் அந்த மோதிரத்தைப் பயன்படுத்தி அரசியுடன் கள்ள உறவை ஏற்படுத்திக்கொண்டு அவளது கணவனான அரசனைக் கொன்று விட்டது மட்டுமன்றி, அவனை நோக்கி வரும் எல்லாத் தடைகளையும் நீக்கிவிட, தடைகளுக்குக் காரணமாக இருக்கும் எல்லோரையும் கொன்ற பிறகு அந்த இராச்சியத்தைக் கைப்பற்றினான்.

31. ஒரு புத்திசாலி தவறு செய்தால், அவன் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதற்காக இந்த மோதிரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு பிளேட்டோ பரிந்துரைக்கிறார். ஆயினும், அவன் கண்டுகொள்ளப்பட முடியாத நிலையில் இருப்பதைப் போலவே தான் பாவத்தின் கறையிலிருந்தும் அவன் விடுதலை பெற மாட்டான். ஞானியின் மறைவிடம் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் இல்லை, மாறாக அவனது சொந்த நிரபராதி என்ற தன்மையில் தான் உள்ளது. இறுதியாக, 1 தீமோத்தேயு 1:9-ல் “சட்டமானது நல்ல மனிதர்களுக்காக உருவாக்கப்பட வில்லை; அது சட்டத்துக்கு எதிரானவர்களுக்காகவும், பின்பற்ற மறுப்பவர்களுக்காகவும் தான் உருவாக்கப்பட்டது” என்று கூறுகிறது. நீதிமானோ, நேர்மை மற்றும் நீதியின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, சட்டத்தைத் தன் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டுள்ளார். இவ்வாறு, அவர் தண்டனை பற்றிய பயத்தால் பாவத்திலிருந்து மீட்கப்படுவதில்லை, மாறாக ஒரு நன்னெறி வாழ்வின் விதியால் மீட்கப்படுகிறார்.

32. ஆகவே, நமது தலைப்புக்குத் திரும்புவோம், நான் போலியான உதாரணங்களுக்குப் பதிலாக உண்மையான உதாரணங்களை முன்வைக்கப் போகிறேன். பூமியில் ஒரு பிளவு, ஒரு இரும்புக் குதிரை, மற்றும் இறந்த மனிதனின் விரலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தங்க மோதிரம் பற்றிய ஒரு கதையை நான் கற்பனை செய்ய வேண்டிய தேவை எனக்கு ஏன் இருக்கிறது? மேலும், இந்த மோதிரம் அதை அணிந்திருப்பவரை அவர்கள் விரும்பும் போதெல்லாம் தோன்ற வைக்கும் சக்தி கொண்டது என்றும், ஆனால் அவர்கள் மற்றவர்களால் காணப்பட விரும்பவில்லை என்றால், அவர்கள் பார்வையில் இருந்து மறைந்துவிடலாம் என்றும் ஏன் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்? ஒரு புத்திசாலிக்கு, தனது தவறுகளை மறைக்கவும் ஒரு இராச்சியத்தைக் கைப்பற்றவும் அந்த மோதிரத்தைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தால், பாவத்தின் விளைவுகளை விட அது தரக்கூடிய அவமானம் மிகவும் மோசமானது என்று கருதி, அவர் பாவத்தைத் தவிர்ப்பாரா, அல்லது பிடிபடாமல் தப்பிக்கலாம் என்ற இறுமாப்பில் தீய செயலைச் செய்வாரா என்ற கேள்விக்கு விடையளிக்கும் நோக்கிலேயே இந்தக் கதை சொல்லப்படுகிறது. உண்மையாகச் சொன்னால், உண்மையான செயல்களைச் சுட்டிக்காட்ட முடியும் போது, ​​அங்கே ஒரு மோதிரம் இருப்பதாக நான் ஏன் வீணாகக் கதைசொல்ல வேண்டும்? ஒரு புத்திசாலி, பிடிபடாமல் பாவம் செய்து அதன் மூலம் ஒரு இராச்சியத்தைக் கைப்பற்ற முடியும் என்பதையும், அந்தக் குற்றத்தைச் செய்யாவிட்டால் தனது பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் உணர்ந்தவராய், அதிகாரத்திற்காகக் குற்றம் செய்வதை விட, தனது நேர்மையைப் பாதுகாக்கவே அவர் விரும்பக்கூடும்.

33. தன்னைக் கொல்வதற்காக மூவாயிரம் போர் வீரர்களுடன் வனாந்தரத்தில் தன்னைத் தேடி வந்த அரசன் சவுலிடமிருந்து தாவீது தப்பி ஓடிக்கொண்டிருந்தபோது, ​​தற்செயலாக அரசனின் முகாமுக்குள் நுழைந்தவர், அரசன் சவுல் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். சவுலுக்குத் தீங்கு செய்வதற்குப் பதிலாக, அவரைத் தாக்க எத்தனிக்கும் எவரிடமிருந்தும் தாவீது அவரைப் பாதுகாத்தார். ‘கர்த்தர் இன்று உன் பகைவனை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்; நான் அவனைக் கொல்வேன்,’ என்று அபிஷாய் கூறியபோது, ​​தாவீது, ‘அவனை அழிக்காதே! கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவர் மீது கை வைப்பவன் எப்படி குற்றமற்றவனாக இருக்க முடியும்?’ என்று பதிலளித்தார். மேலும் அவர், ‘கர்த்தர் சீவித்திருக்கிறபடியே, கர்த்தர் அவனைத் தண்டித்தாலே அன்றி, அவன் மரிக்கும் காலம் வராதவரை, அல்லது அவன் போரில் மரித்து, அந்தப் பழி என்மீது சுமத்தப்படா விட்டால், கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு எதிராக நான் என் கையை நீட்டுவதை கர்த்தர் விலக்குவாராக” என்று கூறினான்.

34. அவன் அரசனைக் கொல்ல எவரையும் அனுமதிக்கவில்லை, ஆனால் அரசனுடைய தலைக்கு அருகில் இருந்த ஈட்டியையும் தண்ணீர் குடத்தையும் எடுத்துக்கொண்டான். அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது, ​​அவன் முகாமை விட்டு வெளியேறி, ஒரு குன்றின் மீது ஏறி, அரச காவலர்களையும், குறிப்பாக அவர்களின் தலைவனான அப்னேரையும், அவர்களின் அரசனைச் சரியாகக் கண்காணிக்காததற்காகக் கடிந்துகொண்டான். பின்னர், அரசனுடைய ஈட்டியும் தண்ணீர் குடமும் எங்கே இருக்கின்றன என்பதையும் அவர்களுக்குக் காட்டினான். அரசன் அவனை அழைத்தபோது, ​​அவன் ஈட்டியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, கடவுள் அனைவரின் விசுவாசத்திற்கும் வெகுமதி அளிப்பார் என்றும், அரசனுக்குத் தீங்கு செய்ய தனக்கு வாய்ப்பு கிடைத்த போதிலும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை மதித்ததால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கூறினான். அவன் இன்னும் அரசனுடைய திட்டங்களுக்கு அடிபணிந்து பாதுகாப்பாக இருப்பதற்காக அந்த இடத்தை விட்டு வெளியேற முடிவு செய்தான். அரசனைக் கொல்ல அவனுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தபோதும், சரியானதைச் செய்வதையே நம்பியதாலும், பாதுகாப்பையும் அதிகாரத்தையும் விட நிரபராதி என்ற நிலையைத் தேர்ந்தெடுத்ததாலும் அவன் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான்.

35. மத்தேயு 14:3-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, யோவானின் விஷயத்தில் அவர் மௌனமாக இருந்திருந்தால், ஏரோது அவரைக் கொன்றிருக்க மாட்டான். அவர் ஏரோதுவின் முன் அமைதியாக இருந்து பாதுகாப்பாக இருந்திருக்கலாம். இருப்பினும், அவர் மௌனமாக இருக்க விரும்பவில்லை, ஏனென்றால் தன்னைக் காத்துக்கொள்ளப் பாவம் செய்வதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மேலும் மற்றொருவரின் பாவத்தையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த முடிவு இறுதியில் அவருடைய சொந்த மரணத்திற்கு வழிவகுத்தது. மோதிரத்தின் மாயாஜால உதவியுடன் கைஜஸால் கண்ணுக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியும் என்பது தெளிவாக இருப்பது போல, அவனாலும் அமைதியாக இருந்திருக்க முடியும் என்பதும் இங்கே தெளிவாகிறது.

36. இந்தக் கற்பனைக்கதை உண்மையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒரு நேர்மையானவர் தன்னை மறைத்துக்கொள்ள முடிந்தாலும் பாவத்தைத் தவிர்ப்பார் என்பதை இது உணர்த்துகிறது. அவர்கள் ஒரு மோதிரத்தால் தங்கள் அடையாளத்தை மறைக்க முயற்சிக்க மாட்டார்கள், மாறாக, கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மறைப்பார்கள். கொலோசெயர் 3:3-ல் அப்போஸ்தலர், நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவுடன் தேவனுக்குள் மறைந்திருக்கிறது என்று கூறுகிறார். எனவே, இங்கு யாரும் தற்பெருமை பாராட்டவோ, மமதை கொள்ளவோ, தற்புகழ்ச்சி பாடவோ முயற்சிக்க வேண்டாம். கிறிஸ்து பூமியில் வாழ்ந்த காலத்தில் தன்னை எவரும் கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த பிரயத்தனமும் மேற்கொள்ளவில்லை, மேலும் உயிரோடு இருந்தபோது நற்செய்தியில் தம்முடைய பெயர் பிரசங்கிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. அவர் உலக வாழ்விலிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்பினார். எனவே, நாமும் கிறிஸ்துவைப் போலவே நம் வாழ்க்கையைத் தாழ்மை மற்றும் எளிமையுடனும் வாழப்பழக வேண்டும்; தற்பெருமையைத் தவிர்க்க வேண்டும், அங்கீகாரத்தைத் தேடக்கூடாது. இப்பொழுது தாழ்மையுடன் வாழ்ந்து, பின்னாளில் மகிமையைப் பெறுவதே சிறந்தது. கொலோசெயர் 3:4-ல் “கிறிஸ்துவே உங்கள் வாழ்க்கை. அவர் மீண்டும் வரும்போது அவரது மகிமையில் பங்கு கொள்வீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

அதிகாரம் 6

அதிக இலாபம் ஈட்டும் எண்ணம் நம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது. தானியங்களை விற்று இலாபம் ஈட்டுபவர்கள் கூறும் வீண் காரணங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு, அவர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இது நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய, நற்செய்தி நூல்களிலிருந்து பெறப்பட்ட ஒரு குறிப்பிட்ட கதையுடனும், மன்னன் சொலமனின் சில கூற்றுகளுடனும் தொடர்புடையது.

37. ஆகையால், நடைமுறைத்தன்மை நற்பண்பை வெல்லாதிருக்கட்டும், மாறாக, நடைமுறைத்தன்மை தாழ்ந்து நற்பண்பு அதன்மீது ஆதிக்கம் செலுத்தட்டும். இங்கு நடைமுறைத்தன்மை என்று நான் குறிப்பிடுவது, பொதுவாக மக்களால் நடைமுறைத்தன்மை என்று கருதப்படுவதை வைத்தே. பணத்தின் மீதான பேராசை முடிவுக்கு வரட்டும், ஆசை அடங்கட்டும். அந்த புத்திசாலி தான் ஒருபோதும் வியாபாரத்தில் ஈடுபட்டதில்லை என்கிறார், ஏனெனில் விலையை உயர்த்த முயற்சிப்பது நேர்மையை அல்ல, சாமர்த்தியத்தையே காட்டுகிறது. நீதிமொழிகள் 11:26-சொல்வதுபோல், ‘தங்கள் தானியத்திற்கு அதிக விலை நிர்ணயிப்பவர்கள் மக்களால் வெறுக்கப்படுகிறார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு.

38. சச்சரவுகளைக் கிளப்பும் பேச்சைப் போலல்லாமல், இந்தக் கூற்று விவாதத்திற்கு இடமளிக்காமல், நேரடியானதாகவும் தெளிவானதாகவும் உள்ளது. விவசாயம் அனைவராலும் பாராட்டத்தக்கது என்றும்; பயிர்களை வளர்ப்பது எளிமையானது என்றும்; ஒருவர் எவ்வளவு அதிகமாக விதைக்கிறாரோ, அவ்வளவு அதிகமாகப் பலனைப் பெறுவார் என்றும்; கடின உழைப்பின் பலன்கள் நேர்மையாகப் பெறப்படுகின்றன என்றும், அதே சமயம் கவனிக்கப்படாத நிலத்தைப் புறக்கணிப்பது அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது என்றும் இது வலியுறுத்துகிறது.

39. “நான் கடினமாக உழைத்தேன்,” என்றும், “நான் தாராளமாக விதைத்தேன்” என்றும், ஆற்றலுடன் நிலத்தை உழுதேன் என்றும், நல்ல அறுவடை செய்தேன் என்றும், அதை அக்கறையுடன் சேமித்து, விடாமுயற்சியுடன் பாதுகாத்து, கவனத்துடன் பேணினேன் என்றும், இப்போது, ​​இந்தப் பஞ்சத்தின் போது, ​​தேவையுள்ளவர்களுக்கு உதவ அதை விற்கிறேன் என்றும், நான் என்னுடைய தானியத்தைத் தான் விற்கிறேன், மற்றவருடையதை அல்ல என்றும், நான் மற்றவர்களை விட அதிக விலை கேட்பதில்லை என்றும், நான் அதை குறைந்த விலைக்கே விற்கிறேன் என்றும் கூறுகிறார். வாங்குவதற்கு வழி இல்லாமல் பலர் பெரும் சிக்கலில் இருக்கும்போது, ​​இதில் என்ன தவறு இருக்கிறது? கடின உழைப்பை ஒரு குற்றமாகக் கருதலாமா? விடாமுயற்சியை நாம் விமர்சனம் செய்யலாமா? தொலைநோக்குப் பார்வையை இழிவாகக் கருதலாமா? ஒருவேளை அவர் இப்படி வாதிடலாம்: யோசேப்பு நல்ல விளைச்சல் காலங்களில் தானியத்தைச் சேகரித்து, விலை அதிகமாக இருந்தபோது விற்றார். ஆனால், அதிகப்படியான விலையைக் கொடுக்க யாராவது கட்டாயப்படுத்தப் போட்டார்களா? வாங்குபவருக்கு எதிராக ஏதேனும் நிர்ப்பந்தம் இருந்ததா? அனைவருக்கும் வாங்குவதற்கான வாய்ப்பு இருந்தபடியால் எவரும் பாதிக்கப்படவில்லை.

40. இவ்வாறு கூறப்பட்ட பிறகு, ஒருவன் எழுந்து நின்று, “வேளாண்மை உண்மையிலேயே மதிப்புமிக்கது, ஏனெனில் அது அனைவருக்கும் கனிகளைத் தருகிறது. மேலும் எந்தவித வஞ்சகமோ மோசடியோ இன்றி, எளிய உழைப்பின் மூலம் பூமியின் வளத்தை அதிகரிக்கிறது. தவறுகள் நடந்தால், இழப்புகள் அதிகமாகும், ஏனெனில் நன்றாக விதைப்பவன் நன்றாக அறுவடை செய்வான். அவன் நல்ல கோதுமை விதைகளை விதைத்திருந்தால், தூய்மையான மற்றும் சிறந்த விளைச்சலை அறுவடை செய்திருப்பான். வளம் மிக்க பூமி, தான் பெறுவதை விட அதிகமாகத் திருப்பித் தருகிறது. ஒரு நல்ல வயல் நிலம் தனக்குக் கொடுக்கப்பட்டதை விட அதிகமாக விளைவிக்கிறது” என்று பெருமையுடன் கூறுகிறான்.

41. உங்கள் கடின உழைப்பிற்கான பலனை நிலத்தின் செழிப்பான அறுவடையிலிருந்து பெறமுடியும் என்றும் பூமியின் வளத்திலிருந்து நியாயமான பலனையும் நீங்கள் எதிர்பார்க்கவும் வேண்டும். இயற்கையின் உழைப்பை ஏன் சுரண்டி, அதை ஒரு மோசடியாக மாற்ற வேண்டும்? எல்லோருக்காகவும் மனிதர்களின் பயன்பாட்டிற்காகவும் விளைந்ததை வைத்து நீங்கள் ஏன் பொறாமைப்படுகிறீர்கள்? சமூகத்திற்குக் கிடைக்கும் வளத்தை ஏன் வரையறுக்க வேண்டும்? ஏன் பற்றாக்குறையை உங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்? வசதியற்றவர்கள் வறட்சியால் அவதிப்பட வேண்டும் என ஏன் உங்களுக்குள் ஒரு வக்கிரமான ஆசை? நீங்கள் விலைகளை உயர்த்தி, தானியங்களைப் பதுக்கி வைப்பதால், ஒரு செழிப்பான பருவத்தின் பலன்களை அவர்களால் அனுபவிக்க முடியாதபோது, ​​அவர்களின் பசியைக் கொண்டு நீங்கள் இலாபம் ஈட்டுவதைக் காண்பதை விட, எதுவுமே உற்பத்தி செய்யப்படாமல் இருப்பதை மேல் என்று அவர்கள் விரும்புவார்கள். நீங்கள் தானியப் பற்றாக்குறையையும், குறைந்த உணவு விநியோகத்தையும் எண்ணிப் புலம்புகிறீர்கள். மண் இவ்வளவு உணவைதான் விளைவிக்கிறது என்று நீங்கள் குறை கூறுகிறீர்கள், மேலும் சேமிப்பில் உள்ள தானியங்களின் பெருக்கத்தைக் கண்டு வருந்துகிறீர்கள். பயிர்கள் விளையாமல், அறுவடை குறைவாக இருக்கும் காலங்களுக்காகக் காத்திருக்கிறீர்கள். ஒரு பேரழிவு உங்களுக்குப் பயனளிக்கும்போது, ​​மற்றவர்கள் தங்கள் அறுவடையைப் பெறாமல் இருப்பதை உறுதிசெய்து நீங்கள் மகிழ்கிறீர்கள். பிறகு, உங்கள் சொந்த அறுவடை வரும்போது, ​​மற்றவர்களின் துன்பத்திலிருந்து செல்வத்தைச் சேகரிக்கிறீர்கள்; இது உண்மையில் ஒரு தந்திரமான சூழ்ச்சியாக இருந்தபோதிலும், இதை நீங்கள் கடின உழைப்பு என்றும், ஒரு தீர்வு என்றும் சொல்கிறீர்கள், ஆனால் இது ஒரு மோசமான திட்டம் மட்டுமே. இதைத் திருட்டு என்று அழைக்க வேண்டுமா அல்லது வெறும் இலாபம் என்று அழைக்க வேண்டுமா? மற்றவர்களை இரையாக்கும் ஒரு கொடூரமான கொள்ளைக்காரனைப் போல, உங்களுக்குச் சொந்தமில்லாததைப் பறித்துக்கொள்வதற்கான தருணங்கள் போல இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். வட்டியை அதிகரிப்பது போல விலைகள் உயர்கின்றன, ஆனால் சேமிக்கப்பட்ட பயிர்களின் மதிப்பும் உயர்வதால், மக்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது. ஒரு வட்டித் தரகரைப் போல உங்கள் தானியத்தைப் பதுக்கி வைத்து இலாபத்திற்கு விற்கிறீர்கள். பஞ்சம் மேலும் மோசமடையும் என்றும், எவரிடமும் தானியம் மிஞ்சாது என்பது போலவும், இனிவரும் ஆண்டுகள் இன்னும் மோசமானதாக இருக்கும் என்பது தெரிந்தும், மற்றவர்கள் துன்பப்பட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்? அப்படியானால் மற்ற அனைவரின் இழப்பின் மூலம்தான் உங்களுக்கு இலாபம் கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா?

42. புனிதரான யோசேப்பு தானியக் களஞ்சியங்களை அனைவருக்கும் திறந்துவிட்டார்; அவர் அவற்றை மூடவில்லை. அவர் அந்த ஆண்டின் விளைச்சலுக்கு முழு விலையையும் கோரவில்லை, மாறாக ஆண்டுதோறும் செலுத்தும் விலை நிர்ணயத்தை ஏற்படுத்தினார். அவர் தனக்காக எதையும் வைத்துக்கொள்ளவில்லை, மேலும் எதிர்காலத்தில் வரக்கூடிய பஞ்சத்தைக் குறைப்பதற்காகக் கவனமாகத் திட்டமிட்டார்.

43. நற்செய்தியில் இயேசு, தனது அறுவடைக்கு அதிக விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு தானிய வியாபாரியைப் பற்றிப் பேசுவதை நீங்கள் வாசித்திருப்பீர்கள். அவனுடைய உடைமைகள் அவனுக்குச் செழிப்பான பலன்களைக் கொண்டுவந்தன, ஆனாலும் அவன், இன்னும் தேவையுள்ளவனைப் போல, “நான் என்ன செய்வேன்? என் பொருட்களை வைப்பதற்கு எனக்கு இடமில்லை” என்று அங்கலாய்த்தபடி இருந்தான் என்று லூக்கா 12:17-ல் கூறப்பட்டுள்ளது. மறுநாள் இரவில் அவனது ஆன்மா அவனிடமிருந்து எடுத்துக்கொள்ளப் படுமா இல்லையா என்பதை அவனால் அறிய முடியவில்லை என்றபோதிலும், என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை; அவன் உணவின்றித் தவிப்பவனைப் போலவும், சந்தேகத்தில் இருப்பது போலவும் தோன்றினான். தனது அறுவடை அனைத்தையும் வைப்பதற்குத் தனது களஞ்சியங்கள் போதுமானதாக இல்லாதபோதிலும், அவன் தனக்குத் தேவை இருக்கிறது என்ற பேராசையோடு காலத்தைக் கழித்தான்.

44. தானியத்தைப் பேராசையுடன் தனக்காக வைத்துக் கொள்பவன், இறுதியில் அதைத் தன் குடும்பத்திற்கு அல்லாமல் மற்றவர்களுக்கே விட்டுச் செல்வான் என்று அரசர் சொலமன் சரியாகவே கூறுகிறார்; ஏனெனில் பேராசையினால் கிடைக்கும் இலாபங்கள் ஒருவனின் வாரிசுகளுக்குச் சொந்தமானவையாக இராது. நியாயமாக உழைத்துச் சம்பாதிக்காதது காற்றால் அடித்துச் செல்லப்படும் இலைகளைப் போல பெரும்பாலும் மற்றவர்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தங்கள் அறுவடையைப் பதுக்கி வைப்பவர்கள் இழிவாகக் கருதப்படுவார்கள் என்றும், ஆனால் அதைப் பகிர்ந்துகொள்பவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள் என்றும் அவர் கூறினார். தானியத்தைப் பகிர்ந்துகொள்வது பாராட்டப்படுகிறது, அதே சமயம் அதிக விலை பெற முயற்சிப்பது பாராட்டப்படுவதில்லை என்பதை இது காட்டுகிறது. எனவே, பேராசையால் கிடைக்கும் ஆதாயத்தை விட, சரியானதைச் செய்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் போது, ​​அங்கே உண்மையான ஞானம் இருப்பதில்லை.

அத்தியாயம் 7

பஞ்ச காலத்தில் அந்நியர்களை ஒருபோதும் நகரத்திலிருந்து வெளியேற்றக் கூடாது என்ற ஒரு கிறிஸ்தவ ஞானியின் உன்னதமான அறிவுரை மேற்கோள் காட்டப்படுகிறது, அதற்கு மாறாக ரோமில் நிகழ்ந்த வெட்கக்கேடான செயல் குறிப்பிடப்படுகிறது. இவ்விரண்டையும் ஒப்பிடுவதன் மூலம், முந்தையது நற்பண்பு மற்றும் பயனுள்ளவற்றுடன் இணைந்தது என்றும், பிந்தையது இவ்விரண்டையும் கொண்டிருக்கவில்லை என்றும் காட்டப்படுகிறது.

45. அப்படியென்றால், அந்நியர்களுக்கு நகரத்திற்குள் நுழையத் தடை விதிப்பவர்களுக்கும் நமது ஒப்புதல் கிடைக்காது. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய சரியான நேரத்தில் அவர்களை வெளியேற்றி, அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேண்டிய வளங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் துண்டித்து, அனைவருக்கும் உரிய வளத்தில் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்க மறுப்பதோடு ஏற்கனவே தொடங்கியுள்ள தொடர்புகளையும் துண்டித்து, தேவைப்படும் நேரத்தில் தங்களுடன் உரிமைகளைப் பகிர்ந்துகொள்பவர்களுடன் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பார்கள். விலங்குகள் தங்கள் இனத்தை ஒதுக்கித் தள்ளுவதில்லை, ஆனால் மனிதர்கள் அவ்வாறு அல்ல. காட்டில் வாழும் உயிரினங்கள், பூமி தரும் உணவை அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாகவே கருதுகின்றன. அவை ஒன்றுக்கொன்று உதவுகின்றன; ஆனாலும், மனிதனுக்குரிய எதையும் அன்னியமாகப் பார்க்கக் கூடாத மனிதர்களோ இறுதியில் தங்கள் இனத்துக்கே எதிராகப் போராடுகிறார்கள்.

46. ​​முதுமை நிலையில் இருந்தும், நகரம் பஞ்சத்தால் வாடிக்கொண்டிருந்த போதும், ​​அந்நியர்கள் நகருக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிய சூழலிலும், மற்றைய பதவிகளை விட உயர்ந்த பதவியான நகர பிதா என்ற பதவியைக் கொண்டிருந்த அவர், அதிகாரிகளையும் செல்வந்தர்களையும் ஒன்று கூட்டி பொது நலனுக்காக அவர்கள் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கோரியதை ​​வைத்துப் பார்க்கும்போது, அவர் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும்! அந்நியர்களை வெளியேற்றுவது என்பது தேவையுள்ள ஒருவரை நிராகரிப்பது போலவும், மரணத்தின் விளிம்பில் இருக்கும் அவருக்கு உணவை மறுப்பது போன்ற கொடூரமானதுமாக இருக்கும் என்று அவர் வாதிட்டார். நாம் வளர்க்கும் நாய்களைக்கூட நமது மேசைக்கு அருகில் வரச்செய்து அவற்றுக்கு உணவளித்து பசியுடன் இருக்க விட்டதில்லை. ஆனால் ஒரு சக மனிதரைத் திருப்பி அனுப்புகிறோம் என்பது எப்படியானதொரு பாதகச்செயல்? ஒரு கொடிய நோயால் பலர் இறப்பது உலகிற்கு எண்ணற்ற தீங்கை விளைவிக்கும். வழக்கமாகப் பங்களித்து, தொழில்களை நடத்தி நல்லெண்ணத்துடன் உதவக்கூடிய மக்கள் இல்லாமல் போவதும் நகரத்திற்கு தீங்காகும். ஒருவரின் துன்பம் எவருக்கும் பயனளிக்காது, அதேபோல உதவியைத் தாமதப்படுத்துவது நிலைமையை இன்னும் மோசமாக்கும். விவசாயிகளும் தொழிலாளர்களும் இல்லாமல் போகும்போது, ​​எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். நமக்கு உணவளிப்பவர்களை நாம் விரட்டிவிடவோ அல்லது நமக்கு எப்போதும் உதவியவர்களுக்கு கைம்மாறு செய்யாமல் இருக்கவோ முடியுமா? ஏனென்றால் அவர்கள் இப்போதும் பெரிதும் பங்களிக்கிறார்கள். உபாகமம் 8:3 நமக்கு நினைவூட்டுவது போல, மனிதன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதில்லை. இவர்களில் பலர் நமது குடும்பத்தைப் போன்றவர்கள்; அதிலும் பலர் நமது சொந்த உறவினர்கள் போன்றவர்கள்; ஆகவே நாம் பெற்றுக்கொணடவற்றுக்கு நன்றியறிதலைக் காட்டுவோம்.

47. ஒருவேளை நமது தேவைகள் அதிகரித்துவிடுமோ என்று எண்ணி நாம் கவலைப்படலாம். முதலாவதாக கருணை எப்போதும் உதவிக்கான வழிகளைத் தேடிக் கண்டறிகிறது என்று நான் கூற விரும்புகிறேன். அடுத்து, நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தானியத்தை, பணத்தைக் கொண்டு ஒரு சந்தா முறையின் மூலம் ஈடு செய்ய வேண்டும். இதை நம்மிடமிருக்கும் தங்கத்தைக் கொண்டு கூட நாம் சரிசெய்யலாம். மேலும், தற்போதைய விவசாயிகளை நாம் இழந்தால், புதியவர்களை நாம் பணியமர்த்த வேண்டும். தொழிலாளர்களை விலைக்கு வாங்குவதை விட அவர்களுக்கு உணவளிப்பது மிகவும் இலாபம் தரக்கூடியது. நாம் இழக்கும் நபர்களுக்குப் பதிலாக பலரைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். அப்படி ஒருவேளை நாம் கண்டுபிடித்தாலும், அனுபவம் இல்லாத ஒருவரைக் கொண்டே அந்தப் பதவியை நிரப்ப நேரிடும். எப்படியிருந்தபோதிலும், அவரால் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

48. இதுபற்றி வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை. பணம் செலுத்தப் பட்டதும் தானியம் கொண்டுவரப்பட்டது. நகரத்தில் இன்னும் வளம் இருந்ததால் அந்நியர்களுக்கு உதவி வழங்கப்பட்டது. இந்தச் செயல் கடவுளிடமிருந்து பெரும் புகழைப் பெற்றுத் தந்ததுடன், மக்களிடையே அவருக்கு மரியாதையையும் பெற்றுத் தந்தது. அவர் பலரைச் சுட்டிக்காட்டி பேரரசரிடம் நேர்மையாக இவ்வாறு கூற முடிந்ததால் தான் உண்மையிலேயே ஒரு உன்னதமான நற்பெயரைப் பெற்றார்: இவர்கள் அனைவரையும் நான் உங்களுக்காகக் காப்பாற்றியுள்ளேன்; இவர்கள் பேரவையின் கருணையால் உயிருடன் இருக்கிறார்கள்; உங்கள் சபை இவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றியுள்ளது!

49. ரோமில் நடந்தவற்றுடன் ஒப்பிடும்போது இந்த நிலைமை எவ்வளவு எளிதாக இருந்தது? அந்தப் பெரிய நகரத்தில் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த பலர் வெளியேற்றப்பட்டனர். தடுத்திருக்க வேண்டும் என்று பெருநம்பிக்கை கொண்டிருந்த அவர்கள் தங்கள் நாடுகடத்தலுக்காக வேதனைப்பட்டு கண்ணீர் மல்க தங்கள் குழந்தைகளுடன் வெளியேறினர். குடும்பம் மற்றும் உடைந்த நட்பின் காரணமாகவும் அவர்கள் வருந்தினர். இருந்தபோதிலும், எங்களுக்கு ஏராளமான விளைச்சலுடன் ஒரு நல்ல ஆண்டு அமைந்தது. நகரத்திற்குத் தேவைப்பட்டது தானியங்களைக் கொண்டு வருவது மட்டுமே. குழந்தைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றிக் கொண்டிருந்த இத்தாலியர்களிடம் கேட்டிருந்தால், அவர்கள் உதவியைப் பெற்றிருக்கலாம். ஒருவரை அந்நியராக நடத்திவிட்டு அவர் நமக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் கீழ்தரமானது. தனக்கான உணவைத் தானே பயிரிடுவோரையோ அல்லது உங்களுக்கு உணவளிப்பவரையோ எப்படி வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடியும்? உங்கள் வேலையாட்களை மட்டும் வைத்துக்கொண்டு, உறவினர்களை அனுப்பிவிடுகிறீர்கள்! எந்தவித இரக்கமும் இல்லாமல் அவர்களின் தானியத்தை எடுத்துக்கொள்வது மட்டுமன்றி அவர்களுக்குச் சேரவேண்டிய உணவை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு எந்த நன்றியையும் காட்டுவதில்லை!

50. இந்த நிலைமை பரிதாபமானதும் பயனற்றதுமாக அல்லவா இருக்கிறது! ஒரு விஷயம் சரியாக இல்லாவிட்டால் அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்க முடியும்? ரோம் பலமுறை தனது விநியோகஸ்தர்களிடமிருந்து முக்கியமான பொருட்களை இழந்திருக்கிறது. ஆனால் கப்பல்கள் பயணிப்பதற்கு சாதகமான காற்று மற்றும் எதிர்பார்க்கப்பட்ட கப்பல்களில் உள்ள உணவுப் பொருட்களுக்காகவும் காத்திருந்த வேளையில், அவர்களைப் பணிநீக்கம் செய்துவிட்ட போதிலும் பஞ்சத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை.

51. முதலில் குறிப்பிடப்பட்ட நிர்வாகம் மிகவும் சிறந்ததாகவும், அதிக செயல்திறன் மிக்கதாகவும் இருந்தது! செல்வந்தர்களின் அன்பளிப்புகளால் தேவையுள்ளவர்களுக்கு உதவுவதையும், பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதையும், அன்றாட உணவு எவருக்கும் குறையாமல் பார்த்துக்கொள்வதையும் விடப் பொருத்தமானதோ அல்லது நல்லதோ வேறு என்ன இருக்க முடியும்? விவசாயிகள் தங்கள் நிலத்தில் உழைக்க அவர்களுக்கு ஆதரவளிப்பதையும், நாட்டுப்புற மக்கள் துன்பப்படாமல் இருப்பதை உறுதி செய்வதையும் விடப் பயனுள்ளது வேறு என்ன இருக்க முடியும்?

52. எது நல்லதோ, அது பயனுள்ளதாகவும் இருக்கும்; பயனுள்ளது எதுவோ, அது நல்லதாக இருக்கும். இதற்கு நேர்மாறாக, எது பயனுள்ளதாக இல்லையோ, அது பொருத்தமற்றதாக இருந்தாலும் கூட அது பயனுள்ளதாகவும் இருக்காது.

அத்தியாயம் 8

நடைமுறைக்கு உகந்ததை விட நன்மைக்கு மதிப்பு கொடுப்பவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள் என்பது யோசுவா, காலேப் மற்றும் மற்ற உளவாளிகளின் உதாரணத்தால் காட்டப்படுகிறது.

53. எகிப்தின் அரசனுக்குப் பணிவிடை செய்வது அவமானம் மிக்கதும் பயனற்றதும் என்று நம் பிதாக்கள் நம்பாதிருந்தால், அவர்களால் எவ்வாறு தங்களை அந்தப் பணிவிடையிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்க முடியும்?

54. யோசுவாவும் காலேபும் தேசத்தை ஆராய்ந்து பார்க்க அனுப்பப்பட்டபோது, ​​அது மிகவும் செழிப்பானது என்றும் ஆனால் கொடூரமான தேசங்களின் இருப்பிடமாகவும் இருக்கிறது என்றும் எண்ணாகமம் 13:27-28-ல் மேற்கோள் காட்டப்பட்டவாறு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். மக்கள் போர் என்ற எண்ணத்தால் பயந்து அந்த நிலத்தை எடுத்துக்கொள்ள மறுத்தனர். ஒற்றர்களாக இருந்த யோசுவாவும் காலேபும் அந்த நிலம் நல்ல நிலம் என்று அவர்களை நம்பவைக்க முயன்ற போதும் அவிசுவாசிகளுக்கு அடிபணிவது தவறு என்று அவர்கள் உணர்ந்தனர். மேலும் தங்கள் வலுவான நம்பிக்கைகளை மாற்றுவதை விட, மக்கள் அச்சுறுத்தியது போல கல்லெறிந்து கொல்லப்படுவதையே விரும்பினர். இதற்கிடையில், மற்றவர்கள் அவர்களை ஊக்கமிழக்கச் செய்தனர். எண்ணாகமம் 14:3 “இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு நமது மனைவியரையும் பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது” என்று கூச்சலிட்டனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

55. கர்த்தருடைய கோபம் அதிகரித்து அவர் எல்லோரையும் அழித்துவிட ஆயத்தமாயிருந்தார், ஆனால் மோயீசன் ஜெபித்த பின்பு, விசுவாசமற்றவர்களைத் தாம் ஏற்கெனவே போதுமான அளவு தண்டித்துவிட்டதை உணர்ந்து அவர் தமது கோபத்தைத் தணித்துக்கொண்டார். எண்ணாகமம் 14:29 சொல்வதுபோல, அவர் அந்த நேரத்தில் அவிசுவாசிகளைக் கொல்லத் தீர்மானிக்கவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் விசுவாசக் குறைவின் காரணமாக நிராகரித்த தேசத்திற்குள் பிரவேசிக்க மாட்டார்கள் என்று அறிவித்தார். இருப்பினும், முறையிடாத அவர்களுடைய பிள்ளைகளும் மனைவிகளும், தங்கள் வயது மற்றும் பாலின அடிப்படையில் குற்றமற்றவர்களாக இருந்ததால் அந்த வாக்குத்தத்த தேசத்துக்குச் சொந்தக்காரர்கள் ஆவர் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இருபது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் வனாந்தரத்தில் மடிந்தார்கள். மற்றவர்களுக்கான தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், எண்ணாகமம் 14:37-ல், யோசுவாவுடன் செல்வதற்கு எதிராக மக்களைத் தூண்டிவிட முயன்றவர்கள் ஒரு கடுமையான கொள்ளை நோயால் உடனடி மரணத்தைச் சந்தித்தனர் என்றும், யோசுவா 14:6-ல் யோசுவாவும் காலேபும் தங்கள் வயது அல்லது பாலினம் காரணமாக குற்றமற்றவர்களாக அடையாளப்படுத்தபட்டவர்களுடன் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தனர்.

56. பெரும்பாலான மக்கள் பாதுகாப்பை விட புகழுக்கு அதிக மதிப்பு கொடுத்தனர்; மிகுதியானவர்கள் அறத்தை விட பாதுகாப்பிற்கு அதிக மதிப்பு கொடுத்தனர். இருப்பினும், பயனுள்ளதை விட அறமே முக்கியமானது என்று நம்பியவர்களுக்குத் தெய்வீகத் தீர்ப்பு துணை நின்றது. அதேவேளை அறத்தை விட பாதுகாப்பைத் தேர்ந்தெடுத்த மக்களை அது கண்டனத்துக்குள்ளாக்கியது.

அத்தியாயம் 9

அனைவருக்கும் சேவை செய்வதே கடமையாகக் கொண்ட மதகுருமார்களுக்கு, ஏமாற்றுவதும் நேர்மையற்ற வழிகளில் பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் பொருத்தமற்றவை. ஒருவரின் உயிரைப் பாதிக்கும் விஷயமாக இருந்தாலன்றி, அவர்கள் நிதி விஷயங்களில் பங்கேற்கக்கூடாது. தூண்டப்பட்டாலும் கூட, மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கற்பிக்கும் தாவீதின் உதாரணம் அவர்களுக்கு நினைவூட்டப்படுகிறது; மேலும், உயிரை விட நற்பண்புக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் காட்ட நாபோத்தின் கதையும் இங்கே முன்னுதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது.

57. ஒருவன் நன்னெறி வாழ்வின் மீது அன்பு கொள்ளாமல், அதற்குப் பதிலாகத் தகுதியற்ற காரியத்தில் தாழ்ந்த விடயங்களின் பின்சென்று அவற்றால் தூண்டப்பட்டு அல்லது பேராசை கொண்ட உள்ளத்தால் தூண்டப்பட்டு, இரவும் பகலும் பிறருடைய சொத்துக்களைச் சேதப்படுத்த ஆவலாக இருப்பதும், தன் ஆன்மாவை நன்னெறி வாழ்வின் மேன்மைக்கு உயர்த்தாமல் இருப்பதும், உண்மையான புகழின் அழகை மதிக்காமல் இருப்பது போன்றவை மிகவும் அருவருக்கத்தக்க விடங்களாகவே கருதப்படுகிறது.

58. மக்கள் பெரும்பாலும் சாமர்த்தியமான பேச்சாலும் தீவிரமான போக்குகளாலும் வாரிசுரிமைகளைப் பெற முயற்சிக்கிறார்கள்; இது ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருப்பதற்கு எதிரானது. வஞ்சகத்தின் மூலம் நீங்கள் பொருட்களைப் பெறும்போது, ​​அதன் பின்னணியில் உள்ள நேர்மைத் தன்மையை இழக்கிறீர்கள். மதகுருமார்கள் அல்லாதவர்கள் கூட தங்களுக்குச் சொந்தமில்லாததைத் தேடுவது முறையற்றது என்று உணர வேண்டும். மக்கள் தங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது ​​தங்கள் உயில் குறித்து அவர்களே முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் ஒருமுறை அம்முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டால் அவற்றை மாற்ற முடியாது. மற்றவர்களிடமிருந்து அபகரிப்பதோ அல்லது உங்களுக்குச் சொந்தமில்லாததைக் கோருவதோ சரியல்ல. மேலும், பிறருக்கு உதவுவதும், தீங்கு விளைவிக்காமல் இருப்பதும், தங்கள் செயல்களில் கருணையையும் நேர்மையையும் வெளிப்படுத்துவதும் ஒரு குருவானவரின் கடமையாகும்.

59. ஒருவருக்கு உதவுவது மற்றொருவரைக் காயப்படுத்தக்கூடும் என்ற ஒரு சூழ்நிலையில் நாம் இருக்க நேரிட்டால் அந்த விஷயத்தில் வற்புறுத்துவதை விட இருவருக்கும் உதவாமல் இருப்பதே சிறந்தது. இது குறிப்பாக மதகுருமார்களுக்குப் பொருந்தும்; அவர்கள் நிதி சார்ந்த தகராறுகளில் தலையிடக் கூடாது. பெரும்பாலும், இதுபோன்ற விஷயங்களில் பாதிக்கப்படும் நபர், தனது தோல்விக்குக் குருவானவரின் தலையீடே காரணம் என்று உணரக்கூடும். தீய சூழ்நிலை உண்டாவதைத் தவிர்ப்பதும், அனைவருக்கும் உதவத் தயாராக இருப்பதும் ஒரு குருவானவரின் பங்காகும். இந்தச் சூழ்நிலைகளைச் சரியாகக் கையாளும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு. வாழ்வா சாவா என்ற சூழ்நிலைகளில், உதவி தேவைப்படும் ஒருவருக்குக் கெடுதல் நினைப்பது உண்மையில் ஒரு பெரிய தவறாகும். இருப்பினும், ஒருவரின் பாதுகாப்பிற்காக அதிக முயற்சி எடுக்க நேர்ந்தாலும், பணப் பிரச்சினைகளில் தலையிட்டு மனக்கசப்பை உருவாக்குவது போன்றவை புத்திசாலித்தனமற்றது. சில சமயங்களில், இதுபோன்ற சூழ்நிலைகளில் இடர்களை எதிர்கொள்வது பாராட்டத்தக்கதாக இருக்கலாம். குருத்துவத்தில் இருப்போர் தூண்டப்பட்டாலும் கூட, ஒருபோதும் எவருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். தீய செயல்களுக்குப் பதிலடியாக மேலும் தீய செயல்களைச் செய்வது நமது சுயமதிப்பைக் குறைத்துவிடும் என்ற கருத்தில் ஞானம் உள்ளது. நம்மைப் புண்படுத்தியவர்களை நம்மால் மன்னிக்க முடிந்தால், அங்குதான் ஒருவனின் உண்மையான குணம் வெளிப்படும்.

60. தாவீது தன் எதிரியான அரசனுக்குத் தீங்கு விளைவித்திருக்க முடியும் என்றபோதிலும், அவனைக் காப்பாற்ற விரும்பியது எப்பேர்ப்பட்ட நற்பண்பு மிக்க செயல் என்று எண்ணிப்பாருங்கள்! அத்தோடு அவனுக்கு அது எவ்வளவு பயனுள்ளதாகவும் இருந்தது! ஏனெனில் அவன் அரியணை ஏறியபோது அது அவனுக்கு உதவியது. மக்கள் தங்கள் அரசனை மதிக்கக் கற்றுக் கொண்டதோடு, பேராசையை விட விசுவாசத்திற்கு மதிப்பளிக்கவும் கற்றுக்கொண்டனர். இந்த விஷயத்தில், தாவீதின் நற்பண்பு மிக்க முடிவு நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுத்தது, சரியானதைச் செய்வது பெரும்பாலும் அதற்கான வெகுமதிகளைப் பெற்றுத் தரும் என்பதை இது நிரூபிக்கிறது.

61. ஆனால், அவர் அவனைத் தப்பவிட்டது ஒரு முக்கிய விடயம் காரணமாகவே; யொனதன் போரில் கொல்லப்பட்டபோது ​​அவரும் அவனுக்காகத் துக்கமடைந்து கண்ணீருடன் புலம்பி இவ்வாறு கூறினார்: “கில்போவா மலைகளே, நீங்கள் இனி ஒருபோதும் பனியையோ மழையையோ காணாதிருப்பீர்களாக! மரணத்தின் மலைகளே, ஏனெனில் அங்கே வல்லமையுள்ள சவுலின் கேடயம் தூக்கி எறியப்பட்டது, அது எண்ணெயால் பூசப்படாமல், வீரர்களின் இரத்தத்தில் நனைந்து, கைவிடப்பட்டுக் கிடக்கிறது. யோனத்தானின் வில் தள்ளாடவில்லை, சவுலின் வாளும் வெறுமையாகத் திரும்பவில்லை. அவர்கள் பிரிக்க முடியாதவர்கள், வாழ்வில் இணைபிரியா நண்பர்கள், மரணத்திலும் அவர்கள் பிரியாமல் இருந்தார்கள். அவர்கள் கழுகுகளைப் போலப் வட்டமிட்டுப் பறந்தார்கள், சிங்கங்களைப் போலப் போரிட்டார்கள். ஆகவே, இஸ்ரவேலின் மகள்களே, உங்களைச் செந்நிறத்தால் அலங்கரித்து, பொன்னால் உடுத்திய சவுலுக்காகத் துக்கம் கொள்ளுங்கள். வல்லமையுள்ளவர்கள் போரில் எப்படி வீழ்ந்துவிட்டார்கள் என்று பாருங்கள்! யொனதன் மரணம் வரை அடி வாங்கினான். என் சகோதரன் யொனதனே, உனக்காக நான் துக்கப்படுகிறேன். நீ எனக்கு மிகவும் நல்லவனாக இருந்தாய்; உன் அன்பு ஒரு பெண்ணின் அன்பைப் போல ஆழமாக இருந்தது. வல்லமையுள்ளவர்கள் எப்படித் தோற்று வீழ்ந்துவிட்டார்கள் என்பதையும், நாம் நமது பிரியமான ஆயுதங்களை எப்படி இழந்துவிட்டோம் என்பதையும் பாருங்கள்!”

62. தன் ஒரே மகனுக்காக அழுத ஒரு தாயைப் போல, அவன் தன் எதிரிக்காக அழுது துயருற்றதைக் காணக்கூடியதாக இருந்தது. தன் உயிருக்கு எதிராகச் சதி செய்தவனைப் புகழ்ந்து பாடியதைப் போல, வேறு யாரால் தனக்கு தீமை செய்தவனைப் புகழ்ந்து பாட முடியும்? அவனது துக்கம் மிகவும் ஆழமானதாகவும், உள்ளத்திலிருந்து வெளிப்பட்டதாகவும் இருந்தது! அந்தத் தீர்க்கதரிசி பேசியபோது, ​​மலைகள் வற்றிப்போயின, மேலும் அவரது வார்த்தைகள் ஒரு தெய்வீக முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன. அத்தகைய ஒரு துயரச் சம்பவத்தைக் கண்டதற்காகவும் இயற்கையே அரசனுடைய மரணத்திற்காகத் துக்கம் அனுசரித்து அதற்கான விலையைக் கொடுப்பது போலவும் இருந்தது.

63. அப்படியானால், புனித நாபோத்தின் மரணத்திற்குக் காரணம், அவர் ஒரு நற்பண்பு மிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான தனது அர்ப்பணிப்பைத் தவிர வேறென்னவாக இருந்திருக்கும்? அரசன் அவரிடம் அவருடைய திராட்சைத் தோட்டத்தைக் கேட்டு அதற்குப் பதிலாகப் பணம் தருவதாகக் கூறியபோது ​​நாபோத் அதை மறுத்துவிட்டார்; தன் தந்தையின் மரபுரிமைச் சொத்தை விற்பது பொருத்தமற்றது என்று அவர் கருதினார். அத்தகைய ஒரு பரிவர்த்தனையின் அவமானத்தைத் தவிர்க்க – அது மரணத்தை ஏற்படுத்தினாலும் கூட – அதற்கு முகம்கொடுக்கத் துணிந்தார். அவர், ‘என் பிதாக்களின் மரபுரிமைச் சொத்தை நான் கொடுப்பதை ஆண்டவர் விலக்குவாராக’ என்று அறிவித்தார்; அதாவது, அத்தகைய அவமானம் தன் மீது வர அவர் அனுமதிக்கவில்லை. மேலும் அத்தகைய தீமை வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்படுவதையும் அவர் அனுமதிக்க வில்லை. அவருடைய அக்கறை உண்மையில் திராட்சைத் தோட்டங்களைப் பற்றியதல்ல — ஏனென்றால் கடவுள் திராட்சைத் தோட்டங்கள் அல்லது நிலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை — மாறாக, அது அவருடைய முன்னோர்களின் உரிமைகளைப் பற்றியதாக இருந்தது. அவர் மற்றொரு திராட்சைத் தோட்டத்தையோ அல்லது அரசனுடையதையோ ஏற்றுக்கொண்டு நட்பைத் தொடர்ந்திருக்கலாம், அதை உலகியல் ரீதியாகப் பலர் நன்மை பயக்கும் என்று கருதியிருப்பார்கள். இருப்பினும், தான் கண்ணியமற்றதாகக் கருதிய ஒன்றிற்காகத் தனது கொள்கைகளை விட்டுக்கொடுப்பது உண்மையாகவே நன்மை பயக்காது என்று அவர் நம்பினார். அதனால், அவமானத்திற்கு வழிவகுக்கும் ஒன்றைப் பெறுவதை விட தனது கண்ணியத்தைக் காத்துக்கொண்டு ஆபத்தை எதிர்கொள்ளவே அவர் சித்தமாயிருந்தார். நான் இங்கு குறிப்பிடுவது, மக்கள் பொதுவாகப் பயனுள்ளதாகக் கருதுவதைப் பற்றியது தானே தவிர, நன்னெறி வாழ்க்கை வாழ்வதால் கிடைக்கும் பயனைப் பற்றியது அல்ல.

64. தான் விரும்பியதை பலவந்தமாக எடுத்துக்கொள்ளும் அதிகாரம் அரசனுக்கு இருந்தது, ஆனால் அது தவறானது என்று அவன் உணர்ந்தான். நாபோத் இறந்த பிறகு அவன் அதைக் குறித்து வருந்தினான். இந்தக் கொடுமையில் பங்கு கொண்ட அந்தப் பெண், அவளுடைய ஒழுக்கமின்மை மற்றும் பேராசை போன்ற செயல்களுக்காகத் தண்டனையை எதிர்கொள்வாள் என்றும் கடவுள் கூறினார்.

65. நியாயமற்ற செயல்கள் உண்மையிலேயே வெட்கக்கேடானவை. கள்ள எடை மற்றும் நிறுவைகள் அல்லது அநியாயமான அளவுகளைப் பயன்படுத்துவது போன்றவையும் இதில் அடங்கும். இவை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. சந்தையிலோ அல்லது வியாபார விடயங்களிலோ ஏமாற்றுவதற்கு நாம் தண்டனையை எதிர்நோக்கும் போது, ​​நற்பண்புகளின் கடமைகள் என்று கருதப்படும் செயல்களின் போது அதே தவறுகள் நடந்தால் அதை நாம் எப்படிப் புறக்கணிக்க முடியும்? “தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார்” என்று மன்னன் சொலமன் வேதாகமத்தில் வலியுறுத்திக் கூறுகிறார் என்பதை நீதிமொழிகள் 20:10 பறைசாற்றுகிறது. “பொருள்களைச் சரியாக எடை போடாத தராசுகளைச் சிலர் மக்களை ஏமாற்றவே பயன்படுத்துகின்றனர். கர்த்தர் அப்பொய் அளவுகளை வெறுக்கிறார். கர்த்தருக்கு விருப்பமானது சரியான அளவுகளே” என்றும் அவர் நீதிமொழிகள் 11:1 இல் சுட்டிக்காட்டுகிறார்.

அத்தியாயம் 10

குடியியல் சட்டத்திலும் வேதாகமத்திலும், எந்தவொரு பேரத்தின் போதும் நேர்மையற்றவர்களாக இருத்தலாகாது என்று எமக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் யோசுவா மற்றும் கிபியோனியர்களின் கதையில் காணப்படுகிறது.

66. நாம் செய்யும் எல்லாவற்றிலும் நேர்மை, நியாயம் மற்றும் சமநிலை ஆகியவை இன்றியமையாதவை. முக்கியமாக ஒப்பந்தங்களுக்கு, அதிலும் குறிப்பாக நிலம் மற்றும் சொத்துக்கள் விற்பனை அல்லது பிற ஒப்பந்தங்கள் தொடர்பானவற்றுக்கு மிகவும் பொருந்தும். வஞ்சகத்தைத் தடுக்க உதவும் விதிகள் உள்ள போதிலும், ஒருவர் நேர்மையற்றவராகக் கண்டறியப்படும்போது, ​​அவர் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். நாம் நற்பண்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் அது மோசடி மற்றும் வஞ்சகமான நடைமுறைகளைத் தடுக்கிறது. ஒருவர் தன் அயலானுக்குத் தீங்கு செய்யக்கூடாது என்று தீர்க்கதரிசி தாவீது ஞானத்துடன் குறிப்பிட்டார். இது நேர்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒப்பந்தங்களைப் பொறுத்தவரை, விற்கப்படும் பொருட்களில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். ஒரு விற்பனையாளர் ஏதேனும் குறைபாடுகளை வெளிப்படுத்தத் தவறினால், விற்பனை செயல்முறை எவ்வளவு முழுமையானதாகத் தோன்றினாலும் அவர் மோசடிக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இந்த நேர்மைக் கொள்கை ஒப்பந்தங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஒரு வழிகாட்டும் அணுகுமுறையாக இருக்க வேண்டும். நாம் வெளிப்படைத்தன்மையை மதிக்க வேண்டும் மற்றும் உண்மை திறம்பட தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

67. நூனின் மகனான யோசுவாவுக்கு உரியதாகக் கருதப்படும் பழைய ஏற்பாட்டுப் புத்தகத்தில், பண்டைய தலைவர்களின் (இது வழக்கறிஞர்களின் சட்ட விதியல்ல, மாறாக) வஞ்சகத்தைப் பற்றிய புரிதலைக் குறித்த ஒரு கதையை வேதாகமம் தெளிவாகப் பகிர்ந்து கொள்கிறது. எபிரேயர்கள் கடந்து சென்ற இடத்தில் கடல் வற்றிவிட்டது என்றும்; பாறையிலிருந்து தண்ணீர் பாய்ந்தது என்றும்; பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் போதுமான அளவில் வானத்திலிருந்து தினமும் உணவு வழங்கப்பட்டது என்றும்; பரிசுத்த எக்காளங்களின் சத்தத்தால் எரிகோவின் சுவர்கள் இடிந்து விழுந்தன என்றும்; ஆயி தேசத்து அரசன் தோற்கடிக்கப்பட்டு, மாலை வரை ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்டான் என்றும் பல்வேறு மக்களிடையே செய்தி பரவியபோது, கிபியோனியர்கள் யோசுவாவின் இரும்புக் கரத்திற்குப் பயந்து, தந்திரமான முறையில் தாங்கள் வெகு தொலைவில் உள்ள ஒரு தேசத்திலிருந்து வருவதாகவும், நீண்ட தூரம் பயணம் செய்ததால் தங்கள் காலணிகள் தேய்ந்து, ஆடைகள் கிழிந்துவிட்டதாகவும், அவை பழசாகிவிட்டதற்கான சான்றுகளையும் காட்டி தங்கள் நீண்ட பயணம் எபிரேயர்களுடன் சமாதானத்தையும் நட்புறவையும் தேடுவதற்காகவே என்று கூறி, தங்களுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ளும்படி யோசுவாவிடம் கேட்கத் தொடங்கினார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவருக்கு அந்த உள்ளூர் பகுதிகளைப் பற்றியோ அல்லது மக்களின் உண்மையான இயல்பைப் பற்றியோ நன்கு தெரிந்திருக்கவில்லை. தேவனிடம் ஆலோசனை கேட்பதற்குப் பதிலாக, அவர் அவர்களுடைய தந்திரத்திற்குள் சிக்கி, தயக்கமின்றி அவர்களை நம்பினார். சில சமயங்களில், புரிதலையும் தொடர்பையும் தேடும் நமது முயற்சியில், ஆழ்ந்த உள்ளுணர்வை விட வெளித்தோற்றத்தை நம்பி, நாம் உண்மையைக் கவனிக்கத் தவறி விடுகிறோம் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் எச்சரிக்கையாக இருக்கவும் ஞானத்துடன் விடயங்களைத் தேடவும் இது ஒரு நினைவூட்டலாக அமைகிறது.

68. கடந்த காலத்தில், மக்கள் தங்கள் வாக்குறுதிகளுக்கு பெருவாரியாக மதிப்பு கொடுத்ததால், மற்றவர்கள் பொய் சொல்வார்கள் என்று அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்கிறார்கள் என்றும், யாரும் நேர்மையற்றவர்களாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். அவர்கள் வஞ்சகத்தைப் புரிந்துகொள்ளவில்லை; தாங்கள் நல்லவர்களாக இருந்ததால், மற்றவர்களையும் அவ்வாறே நல்லவர்கள் என்று நம்பினார்கள். அதனால்தான் நீதிமொழிகள் 14:15-ல் மன்னன் சொலமன், “அறிவீனன் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான்” என்று கூறினார். மற்றவர்களை நம்புவதற்காக நாம் அவர்களைக் குறை கூறக்கூடாது; அவர்களுடைய கருணையை நாம் போற்ற வேண்டும். மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எதையும் அறியாமல் இருப்பது கண்ணியமின்மையையே காட்டுகிறது. யாராவது அவர்களை ஏமாற்றினாலும் அவர்கள் நல்ல நோக்கங்களை நம்புவதால் அனைவரையும் பற்றி நல்லெண்ணமே கொண்டிருக்கிறார்கள்.

69. ஆகையால், அத்தகைய எண்ணங்களால் தூண்டப்பட்டு அவர்களை நம்பி, அவர் ஒரு உடன்படிக்கை செய்து, அவர்களுக்குச் சமாதானம் அளித்து, அவர்களுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார். இருப்பினும், அவர் அவர்களுடைய தேசத்திற்கு வந்து, அவர்கள் மத்தியில் வசித்தபோது, அந்நியர்களைப் போல நடந்துகொண்ட அந்த வஞ்சகத்தைக் கண்டுபிடித்தபோது, ​​நம் முன்னோர்களின் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ஆயினும்கூட, மற்றவர்களின் துரோகத்தைத் தண்டிப்பதன் மூலம் தனது சொந்த வாக்குறுதியை மீறுவதாக ஆகிவிடுமோ என்று அஞ்சிய யோசுவா, அந்தச் சமாதான உடன்படிக்கையை (அது ஒரு சத்தியத்தால் முத்திரையிடப்பட்டிருந்ததால்) இரத்து செய்தல் கூடாது என்று நம்பினார். ஆகவே அவர்களுக்கு மிகவும் இழிவான பணிகளை ஒதுக்கி, அதன் விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ளும்படி செய்தார். அந்தத் தண்டனை உண்மையில் மென்மையானதாக இருந்தாலும் அது நீடித்திருந்தது. ஏனெனில், யோசுவா 9:27 கூறுவதுபோல், “கிபியோனிய மக்களை யோசுவா இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடிமைகளாக்கினான். அவர்கள் இஸ்ரவேலருக்கும் கர்த்தருடைய பலிபீடத்திற்கும் தேவையான விறகுகளை வெட்டி, தண்ணீரையும் மொண்டு எடுத்து வந்தனர். தேவன் தெரிந்தெடுத்த இடத்தில் எல்லாம் அவர்கள் அவ்வேலைகளைச் செய்த அம்மக்கள் இன்றைக்கும் அடிமைகளாகவே உள்ளனர்.

அத்தியாயம் 11

சொற்பொழிவாளர்களின் பல்வேறு சொற்பதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில தந்திரோபாயங்களுக்கு உதாரணங்களை வழங்கிய பிறகு, இவற்றோடு சேர்ந்த பிற அனைத்தும் வேதாகமத்தில் மிகவும் தெளிவாகவும் முழுமையாகவும் கண்டிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் நிரூபிக்கிறார்.

70. வாரிசுரிமைச் சொத்தைப் பெறும்போது விரல்களைச் சொடுக்குவதைப் பற்றியோ அல்லது வாரிசின் விசித்திரமாக நடனத்தைப் பற்றியோ நான் குறிப்பிடப்போவதில்லை. அவை எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள். வாங்குபவரின் ஆசைகளைத் தூண்டுவதற்காக, ஒரு கற்பனை மீன்பிடிப் பயணத்தில் பிடிக்கப்பட்ட மீன்களைப் பற்றியும் நான் பேசப்போவதில்லை. இத்தகைய ஒரு தந்திரத்தில் சிக்கும் அளவுக்கு, அவன் ஏன் ஆடம்பரங்கள் மற்றும் பகட்டான உணவுகளின் மீது அவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தான் என்பதையே கேட்க விரும்புகிறேன்.

71. சிராகூஸில் உள்ள அந்த அழகான, அமைதியான இடத்தைப் பற்றியும், அந்தச் சாமர்த்தியமான சிசிலியனைப் பற்றியும் கூறும் அந்தப் பிரபலமான கதையை நான் ஏன் பேச வேண்டும்? நிலம் வாங்க விரும்பிய ஒரு அந்நியனை அவன் கண்டு அவனை ஒரு விருந்துக்கு அழைத்ததும், அந்த அந்நியன் அடுத்த நாள் விருந்துக்கு வந்தான். அங்கே பல மீனவர்களையும், ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் அவன் கண்டான். விருந்தினர்கள் முன்னிலையில், மீனவர்கள் தோட்டப் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர்; அதுவரை அங்கு வலைகள் வீசப்பட்டதே இல்லை. ஒவ்வொருவராக, அவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை விருந்தினர்களுக்குக் காண்பித்து, அவற்றை மேசையில் வைத்தனர்; அது அங்கு அமர்ந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. அங்கு இருந்த மீன்களையும் படகுகளையும் கண்டு அந்த அந்நியன் பிரமித்துப்போனான். அவன் அதுகுறித்து விசாரித்தபோது, ​​இது ஒரு முக்கிய நீர்வளம் மிக்க பிரதேசம் என்றும், அதன் நீரின் இனிமையால் எண்ணற்ற மீன்கள் இங்கு ஈர்க்கப்படுகின்றன என்றும் அவனிடம் கூறப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், அந்த நிலத்தை விரைவாக வாங்குமாறு அவன் அந்த அந்நியனை ஊக்குவித்தான். அவனது வெளிப்படையான தயக்கத்தையும் மீறி, அவன் அதை விற்க ஒப்புக்கொண்டு, கனத்த இதயத்துடன் பணத்தைப் பெற்றுக்கொண்டான்.

72. அடுத்த நாள் மீன்பிடித்தளத்தை வாங்குபவர் தன் நண்பர்களுடன் அந்த இடத்திற்கு வந்தார். ஆனால் அங்கே படகுகள் எதுவும் காணப்படவில்லை. ஒருவேளை மீனவர்கள் அன்று ஏதேனும் விழாவைக் கொண்டாடுகிறார்களோ என்று அவர் கேட்டபோது, ​​நேற்றைய நாளைத் தவிர, அங்கே அவர்கள் அங்கே மீன்பிடித்ததே இல்லை என்று அவரிடம் கூறப்பட்டது; ஆனால், அத்தகைய வஞ்சகத்திற்கு எதிராக அவரால் என்ன செய்ய முடியும்? குறிப்பாக அத்தகைய ஒருவர் வெட்கமின்றி இவ்வளவு ஆடம்பரங்களை நாடியிருக்கும்போது, எப்படி நம்பாமல் இருப்பது? எல்லாவற்றிற்கும் மேலாக, மற்றவரின் தவறைச் சுட்டிக்காட்டும் முன், நீங்களே அதிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். ஆதலால், இதுபோன்ற சிறிய காரியங்களை நான் திருச்சபையின் நியாயத்தீர்ப்பின் அதிகாரத்தின் கீழ் வகைப்படுத்த மாட்டேன்; ஏனெனில் அது நேர்மையற்ற ஆதாயம் குறித்த ஒவ்வொரு செயலையும் முற்றிலுமாகக் கண்டிக்கிறது. மேலும் சுருக்கமாக, சில வார்த்தைகளிலேயே கூறவேண்டுமானால், அது அனைத்து தந்திரமான மற்றும் சூழ்ச்சியான செயலையும் தடைசெய்கிறது.

73. மற்றவர்களால் திருத்தப்பட்ட, ஆனால் அது போலியானது என்று தனக்குத் தெரிந்திருந்தும், ஒரு உயிலின் அடிப்படையில் தன்னை வாரிசு அல்லது பயனாளி என்று உரிமை கோருபவனைப் பற்றி என்ன சொல்வதற்கு இருக்கிறது? தெரிந்தே ஒரு போலி உயிலைப் பயன்படுத்துபவன் தவறான செயலுக்குக் குற்றவாளி என்று சட்டம் தெளிவாகக் கூறினாலும், அவன் பிறருடைய தவறான செயலிலிருந்து ஆதாயம் அடைய முயற்சிக்கிறான். நீதியின் கோட்பாடு நேரடியானது: ஒரு நல்ல மனிதர் எப்போதும் உண்மையையும் நேர்மைத்தன்மையையும் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு பிறருக்கு அநியாயமான தீங்கை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் ஒருபோதும் நேர்மையற்ற முறையில் செயல்படவோ அல்லது எந்த விதமான மோசடியிலும் ஈடுபடவோ கூடாது.

74. அனனியாவின் வழக்கை விட தெளிவானது எது? அவன் தன் நிலத்தை விற்றதன் மூலம் எவ்வளவு சம்பாதித்தான் என்பது குறித்து பொய் சொன்னான். அவன் அதை விற்று, அதன் ஒரு பகுதியை மட்டுமே அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்து, அதுவே முழுத் தொகை என்று பாசாங்கு செய்தான் என அப்போஸ்தலர் 5:2-ல் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவன் தனது நேர்மையின்மைக்கான தண்டனையை எதிர்கொண்டான். நேர்மையற்றவராக இருப்பதைக் காட்டிக்கொள்ள வேண்டாம் எனில், அவர் எதையும் கொடுக்காமல் இருந்திருக்கலாம்; ஆனால், அவர் வஞ்சகமாக நடந்துகொண்டதால் தனது தாராள குணத்திற்காக எந்த நன்மையையும் பெறவில்லை, மாறாகத் தனது தந்திரத்திற்கான விளைவுகளையே சந்தித்தார்.

75. நற்செய்தியில், வஞ்சகமான நோக்கங்களுடன் தம்மிடம் வந்தவர்களை ஆண்டவர் நிராகரித்தார். “நரிகளுக்கும் கூட குழிகள் உண்டு” என்று அவர் என மத்தேயு 8:20 இன் வாயிலாகக் கூறினார்; அதாவது, நாம் எளிமையாகவும் களங்கமற்ற உள்ளத்துடனும் வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். வஞ்சகம் ஒரு சவரக்கத்தியைப் போலக் கூர்மையாகவும் தீங்கு விளைவிப்பதாகவும் இருக்கக்கூடும் என்று தாவீதும் சுட்டிக்காட்டினார். ஒரு துரோகி உதவி செய்வது போலத் தோன்றினாலும், அவனால் வலியையும் ஏற்படுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது. ஒரு துரோகியைப் போல, ஒருவர் நட்பாக இருப்பது போல் நடித்து, மற்றொருவருக்கு எதிராக இரகசியமாகச் சதி செய்தால், அவர் தீங்கு விளைவிப்பவராகக் கருதப்பட வேண்டும். உதாரணமாக, பொறாமை கொண்ட அரசன் தனது துரோகச் செயலால் பிரதான குருவாகிய அகிமெலேக்கின் மரணத்திற்குக் காரணமானான். அவன் பிரதான குருவாகிய அகிமெலேக்கைத் துரத்தியபோது, ​​ஒரு துன்மார்க்கன் அந்தத் தீர்க்கதரிசியை உபசரிப்புடன் வரவேற்றிருந்தான்.

அதிகாரம் 12

நாம் பொய் வாக்குறுதிகளை அளிக்கக்கூடாது என்பதோடு, நாம் ஒரு நியாயமற்ற சத்தியம் செய்தால் அதை நிறைவேற்ற முடியாமற்போகும். இந்த விதத்தில் ஏரோது பாவம் செய்தான் என்பது காட்டப்படுகிறது. யெப்தா செய்துகொண்ட நேர்த்திக்கடன் கடவுளுக்கு நாம் நிறைவேற்ற விரும்பாத மற்ற எல்லா நேர்த்திக்கடன்களுடன் சேர்த்து கண்டனத்துக்குள்ளாகிறது. இறுதியாக, யெப்தாவின் மகள் இரண்டு பைதகோரிய கொள்கையாளர்களுடன் ஒப்பிடப்படும் நோக்கில் அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுகிறாள்.

76. ஒரு மனிதன் தூய்மையான மற்றும் நிலையான குணத்தைக் கொண்டிருக்க வேண்டும், அப்போதுதான் அவன் நேர்மையாகப் பேசவும், தன் செயல்களை மரியாதைக்குரியதாக வைத்திருக்கவும் முடியும். 1 தெசலோனிக்கேயர் 4:6 கூறும்போது, “உங்களில் எவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்கள் சகோதரர்களை இக்காரியத்தில் ஏமாற்றவோ, கெடுதல் செய்யவோ முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு செய்பவர்களை கர்த்தர் தண்டிப்பார். இதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி எச்சரித்திருக்கிறோம்” என்று உரைக்கிறது. ஒருவன் அப்படிப்பட்ட ஒரு வாக்குறுதியை அளித்திருந்தால், அதை நிறைவேற்றுவதற்காக அவமானத்தைச் சந்திக்கும் வகையில் ஒன்றைச் செய்வதைவிட அதை நிறைவேற்றாமல் இருப்பதே அவனுக்கு மிகவும் நல்லது.

77. சில சமயங்களில் மக்கள் முக்கியமான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். தாங்கள் அவற்றை அளித்திருக்கக் கூடாது என்று உணர்ந்தாலும், அந்த வாக்குறுதியின் காரணமாக தங்கள் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுகிறார்கள். நாம் முன்பு விவாதித்தபடி, ஏரோது இதைத்தான் செய்தான். ஒரு நடன மங்கைக்கு ஒரு இராச்சியத்தையே வெகுமதியாக அளிப்பதாக அவன் ஒரு பயங்கரமான வாக்குறுதியை அளித்து, அதை அவன் கொடூரமாக நிறைவேற்றினான். ஒரு நடனத்திற்காக ஒரு முழு இராச்சியமே வாக்குறுதியளிக்கப்பட்டதால் அது பயங்கரமானதாக இருந்தது; இந்த வாக்குறுதியின் காரணமாக ஒரு தீர்க்கதரிசி தன் உயிரை இழந்தது அதைவிடக் கொடூரமானதாக இருந்தது. அத்தகைய வாக்குறுதியைக் காப்பாற்றுவதை விட அதை மீறுவது மேலானதாக இருந்திருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏரோது குடிபோதையில் இருந்தபோதோ அல்லது கேளிக்கையின்போதோ அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மாற்கு 6:28 இல் “ஒருவன் யோவானின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து, அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அந்தத் தலையைத் தன் தாயிடம் கொடுத்தாள்” என்று சான்று பகர்கிறது. மேலும் இது உண்மையில் ஒரு பைத்தியக்காரத்தனத்தின் உச்சமாக இருந்த போதிலும், விசுவாசமான நிகழ்வாகக் கருதப்பட்டது.

78. தலைவனான யெப்தா தன் வீட்டிற்குத் திரும்பும்போது முதலில் தான் சந்திக்கும் எதையும் தேவனுக்கு அர்ப்பணிப்பதாக வாக்குறுதி அளித்தபோது, ​​அவன் தன் நேர்த்திக்கடனைச் சிந்திக்காமல் செய்தான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பின்னர், அவனது மகள் அவனை வரவேற்க வெளியே வந்தபோது, ​​அவன் இந்த நேர்த்திக்கடனுக்காக வருந்தினான். அவன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “ஐயோ, என் மகளே, நீ எனக்குத் துன்பத்தைக் கொண்டு வந்துவிட்டாய்” என்றான். இந்தக் கடினமான வாக்குறுதியை நிறைவேற்றுவது தனது கடமை என்ற வலுவான உணர்வை அவன் கொண்டிருந்தபோதிலும், வருங்கால சந்ததியினருக்காக ஆண்டுதோறும் ஒரு துக்க காலத்தையும் அவன் ஏற்படுத்தினான். அவனது நேர்த்திக்கடன் கடுமையானதாக இருந்தது, ஆனால் அதை நிறைவேற்றும் செயல் அதைவிடக் கடினமாக இருந்தது. மேலும் துக்கப்படுவதற்கு அவனுக்குத்தான் அதிகக் காரணம் இருந்தது. இந்த வழக்கம் இஸ்ரவேலில் ஒரு பாரம்பரியமாக மாறியது, இஸ்ரவேலின் மகள்மார் ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் யெப்தாவின் மகளுக்காகத் துக்கம் அனுசரித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அவன் ஏன் தன் நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டியிருந்தது என்பதை நான் புரிந்துகொண்டாலும், அது அவனது பிள்ளையின் மரணத்தால் மட்டுமே முடிவுக்கு வரக்கூடிய ஒரு துயரமான கடமையாக இருந்தது.

79. தேவன் விரும்பாத ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதைவிட, அதைக் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. உதாரணமாக, ஈசாக்கின் கதையில், ஆதியாகமம் 22:13-ல் காட்டப்பட்டுள்ளபடி, தேவன் அவனுக்குப் பதிலாக ஒரு ஆட்டுக்கடாவைப் பலியிட ஏற்பாடு செய்தார். இதன் பொருள், ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்பதாகும். வேதவாக்கியங்கள் காட்டுவது போல, தேவன் சில சமயங்களில் தம் மனதை மாற்றிக்கொள்கிறார். எண்ணாகமம் 14:12 புத்தகத்தில், அவர் மக்களை மரணத்தினால் தண்டித்து அவர்களை அழிப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் மோயீசன் அவர்களுக்காக மன்றாடிய பிறகு அவ்வாறு செய்வதில்லை என்று அவர் தீர்மானித்தார். மேலும், அவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி, “நான் அவர்களை ஒரு நொடியில் அழிக்கும்படி, இந்தச் சபையிலிருந்து பிரிந்து செல்லுங்கள்” என்றார் என்று எண்ணாகமம் 16:21 கூறுகிறது. அவர்கள் சபையிலிருந்து விலகிச் சென்றதும், ​​பூமி திடீரென்று பிளந்து தாத்தானையும் அபிராமையும் விழுங்கியது.

80. தத்துவஞானிகளிடையே மிகவும் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படும் இரண்டு பைகோரியர்களின் உதாரணத்தை விட, யெப்தாவின் மகளின் உதாரணம் மிகவும் பிரபலம் வாய்ந்ததும் தொன்மையானதும் ஆகும். இவர்களில் ஒருவர் கொடுங்கோலன் தியோனிசியஸால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவரது மரண நாள் நிர்ணயிக்கப்பட்டபோது, ​​தன் குடும்பத்துக்குத் தன் கடமையை நிறைவேற்றும் பொருட்டு வீட்டிற்குச் செல்ல அனுமதி கோரினார். ஆனால், அவர் தன் நம்பிக்கையை மீறித் திரும்பி வராமல் போய்விடுவாரோ என்ற அச்சத்தால், அவர் சார்பாக ஒரு பிணையாளரை மரண தண்டனைக்கான கைதியாக நியமிக்கும்படி கேட்கப்பட்டார். நிர்ணயிக்கப்பட்ட நாளில் அவர் இல்லாதுபோனால் அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட அந்த பிணையாளர் இறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். மற்றவரோ முன்மொழியப்பட்ட பிணை நிபந்தனைகளை மறுக்காமல், அமைதியான மனதுடன் மரண நாளுக்காகக் காத்திருந்தார். எனவே, பின்னையவர் பின்வாங்கவில்லை, மற்றவரும் நிர்ணயிக்கப்பட்ட நாளில் திரும்பினார். இவையெல்லாம் மிகவும் ஆச்சரியமாகத் தோன்றியதால், அவர்களின் வீழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்தக் கொடுங்கோலன் அவர்களுடன் நட்பு கொள்ள முயன்றான்.

81. அப்படியானால், மதிப்பிற்குரிய மற்றும் கற்றறிந்த மனிதர்களின் விஷயத்தில் எது ஆச்சரியத்தை அளிக்கிறதோ, அது ஒரு கன்னியின் விஷயத்தில் மிகவும் அற்புதமாகவும், மிகவும் மகிமையாகவும் காணப்படுகிறது. அவள் தன் துயருற்ற தந்தையிடம், “தந்தையே! நீங்கள் கர்த்தருக்கு கொடுத்த உங்கள் வாக்கைக் காப்பாற்றுங்கள். நீங்கள் செய்வதாகக் கூறியதைச் செய்யுங்கள்” என்று நியாயாதிபதிகள் 11:36 கூறுகிறது. ஆனால், கன்னித்தன்மையுடனான மரணத்திற்குத் தன்னை அர்ப்பணித்த அவள், தன் தோழிகளுடன் மலைகளில் தங்கி முறையாகவும் கடமையுணர்ச்சியுடனும் துக்கம் அனுசரிக்க இரண்டு மாத கால அவகாசம் கேட்டாள். அவளுடைய தோழிகளின் அழுகை அவளை அசைக்கவில்லை, அவர்களின் துக்கம் அவளைப் பாதிக்கவில்லை, அவர்களின் அழுகை அவளைத் தடுக்கவும் இல்லை. அவள் அந்த நாளைக் கடந்துசெல்ல விடவில்லை, அந்த நேரமும் அவள் கவனத்திலிருந்து தப்பவில்லை. தன் விருப்பப்படியே அவள் தன் தந்தையிடம் திரும்பி வந்தாள். அவர் தயங்கியபோது தன் சொந்த விருப்பத்தால் அவரைத் தூண்டினாள். இவ்வாறு அவள் தன் சுயவிருப்பத்தின் பேரிலேயே செயல்பட்டாள். ஆகவே முதலில் ஒரு பயங்கர விபத்தாகத் தோன்றியது பின்னர் ஒரு புனிதமான தியாகமாக மாறியது.

அத்தியாயம் 13

ஜூடித் தனது விழுமியங்களைப் பாதுகாக்கப் பல ஆபத்துகளை எதிர்கொண்டு, பல மதிப்புமிக்க வெகுமதிகளைப் பெற்றாள்

82. இதோ! ஜூடித் தன்னை உங்களுக்குப் புகழுக்குரியவளாகக் காட்டிக்கொள்கிறாள். அவள், மக்களால் அஞ்சப்பட்டவனும், அசீரியர்களின் வெற்றிபெற்ற வீரர்களால் சூழப்பட்டவனுமான ஹோலோபெர்னஸிடம் செல்கிறாள். முதலில், அவள் தன் உருவத்தின் நளினத்தாலும் முகத்தின் வசீகரத்தாலும் அவன்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, தன் பேச்சாற்றலால் அவனை வசப்படுத்துகிறாள். அவளுடைய முதல் வெற்றி, அவள் பகைவனின் கூடாரத்திலிருந்து தன் கற்புக்குக் களங்கமின்றித் திரும்பியதுதான்: (ஜூடித் 12:20) அவளுடைய இரண்டாவது வெற்றி, அவள் ஒரு மனிதனை வென்று, தன் ஞானத்தால் மக்களைத் தப்பி ஓடச் செய்ததுமாகும்.

83. ஜூடித்துடைய துணிச்சலைக் கண்டு பாரசீகர்கள் வியப்பும் அச்சமும் கொண்டனர். அந்த இரண்டு பைதகோரியர்களைப் போலவே அவளும் நமது போற்றுதலுக்குரியவள் ஆகிறாள். ஏனெனில் அவள் மரணத்தைப் பற்றி அஞ்சவில்லை; நல்ல பெண்கள் பெரிதும் மதிக்கும் கற்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலைப் பற்றி அவள் கவலைப்படவுமில்லை, அதேநேரம் ஒரு கலகக்காரனின் தாக்குதலுக்கோ அவள் கலங்கவும் இல்லை; ஒரு முழுப் படை ஏந்தியிருந்த ஆயுதங்களைக் கண்டும் அவள் பின்வாங்கவில்லை. ஒரு பெண்ணான அவள், போரிடுபவர்களின் அணியினருக்கிடையே — வெற்றியைக் கொண்டுவந்த ஆயுதங்களுக்கு நடுவே — மரணத்தைப் பற்றிச் சிறிதும் அஞ்சாமல் நின்றாள். அவளை சுற்றியிருந்த பெரும் ஆபத்தைப் பார்க்கும்போது, ​​அவள் மரணத்தை எதிர்கொள்ளவே சென்றாள் என்று ஒருவர் கூறலாம்; ஆனால் அவளுடைய நம்பிக்கையைப் பார்க்கும் மற்றொருவர் அவள் போரிடுவதற்காகவே சென்றாள் என்று கூறுவார்.

84. ஜூடித் பின்னாட்களில் நற்பண்பின் பாதைகளைப் பின்பற்றினாள், அதன்மூலம் அவள் பெரும் நன்மைகளைப் பெற்றாள். கர்த்தருடைய மக்கள் தங்களை அந்நியர்களிடம் ஒப்புக்கொடுப்பதைத் தடுப்பதும், அவர்கள் தங்கள் சொந்த பழக்கவழக்கங்களையும் பரிசுத்த நடைமுறைகளையும் காட்டிக்கொடுப்பதையும், தங்கள் பரிசுத்த கன்னிகளையும், மரியாதைக்குரிய விதவைகளையும், அடக்கமான மனைவிமாரையும் அந்நியர்களின் அசுத்தத்திற்கு கையளிப்பதையும் அல்லது சரணடைவதன் மூலம் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதையும் தடுப்பதும் நன்மையாக இருந்தது. இவ்வாறு அனைவரையும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அனைவரின் சார்பாகவும் ஆபத்தை எதிர்கொள்ள அவள் முன்வந்தது சரியானதே.

85. ஒரு பெண்ணாக இருந்தும், மிக முக்கியமான விஷயங்களில் ஆலோசனை வழங்கி, அதை மக்களின் தலைவர்களின் கைகளில் விட்டுவிடாமல் காப்பாற்றிய அவளது நற்பண்பின் தன்மை எவ்வளவு பெரியதாக இருந்திருக்க வேண்டும்! மீண்டும், தனக்கு உதவ கடவுளை உறுதியாக நம்பியிருந்த அவளது நற்குணத்தின் வலிமை எவ்வளவு மகத்தானது! அவருடைய உதவியைப் பெற்ற அவளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எவ்வளவு பெரியது!

அத்தியாயம் 14

எலிசா செய்தது எவ்வளவு நற்பண்பும் பயனும் நிறைந்தது! இது அடிக்கடி கூறப்படும் கிரேக்கர்களின் செயலுடன் ஒப்பிடப்படுகிறது. யோவான் நற்பண்பின் நிமித்தம் தன் உயிரைத் தியாகம் செய்தார், அதே காரணத்திற்காக சூசன்னா மரண ஆபத்திற்குத் தன்னை உட்படுத்திக்கொண்டாள்.

86. தன்னைக் கைதியாகப் பிடிக்க வந்த சிரியா தேசத்து இராணுவத்தினரின் கண்களைப் பார்வை இழக்கச் செய்த பின் அவர்களை சமாரியாவுக்குள் கொண்டுவந்தபோது, ​​எலிசா நன்மையைத் தவிர வேறு எதைப் பின்பற்றினார்? பின்பு அவர், “கர்த்தாவே, அவர்கள் பார்வையைப் பெறும்படி அவர்களுடைய கண்களைத் திறந்தருளும்” என்றார். அவர்களும் கண்கள் திறந்தது பார்வையைப் பெற்றனர். ஆனால், இஸ்ரவேலின் அரசன் உள்ளே நுழைந்தவர்களைக் கொல்ல முனைந்து, அதற்கான அனுமதியைத் தீர்க்கதரிசியிடம் கேட்டபோது, ​​கைபலத்தை உபயோகித்தோ அல்லது போர்க்த் தளபாடங்களைக் கொண்டோ கைதுசெய்தவர்களைக் கொல்லக்கூடாது என்றும், மாறாக அவர்களுக்கு உணவு அளித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் பதிலளித்தார். பின்பு, அவர்களுக்கு தாராளமாக உணவு அளிக்கப்பட்டு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டது. அதன்பிறகு, அந்தச் சிரிய இராணுவத்தினர் தாங்கள் இனி ஒருபோதும் இஸ்ரவேல் தேசத்திற்குத் திரும்பவே முடியாது என்று நினைத்தார்கள்.

87. கிரேக்கர்கள் ஒரு காலத்தில் செய்ததைவிட இது எவ்வளவு மேன்மையானது! ஏனெனில், இரண்டு தேசங்கள் புகழையும் மேலான அதிகாரத்தையும் நிலைநாட்ட ஒன்றோடொன்று போரிட்டபோது, ​​அவற்றுள் ஒரு தேசத்திற்கு மற்றொரு தேசத்தின் கப்பல்களை இரகசியமாக அழிக்க வாய்ப்பு கிடைத்தபோதிலும், அவ்வாறு செய்வது வெட்கக்கேடான செயல் என்று அவர்கள் கருதினார்கள்; மேலும், குறுக்கு வழியில் ஒரு பெரிய நன்மையை அடைவதைவிட, கண்ணியமான முறையில் ஒரு சிறிய நன்மையை அடைவதை மேலாக எண்ணினார்கள். இருப்பினும் தங்களுக்கு அவமானம் ஏற்படாமல் அவர்களால் இப்படிச் செயல்பட முடியவில்லை; மேலும், பாரசீகப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஒன்றுசேர்ந்தவர்களை இந்தச் சதிக்குள் சிக்க வைக்கவும் முடியவில்லை. அவர்களால் அதை வார்த்தைகளால் மறுக்க முடிந்த போதிலும், அதை நினைக்கும்போதெல்லாம் வெட்கித் தலைகுனிவதை அவர்களால் ஒருபோதும் தடுக்க முடியவில்லை. இருப்பினும், எலிசாவோ, ஏதோவொரு தீய செயல் காரணமாகவும் அல்லாமல், வஞ்சிக்கப்பட்டு, கர்த்தரின் வல்லமையால் பார்வையற்றவர்களாக்கப்பட்டவர்களை அழிய வேண்டும் என எண்ணி இருந்தார். அழிக்க அவர் முனையவில்லை. ஏனெனில், ஒரு எதிரியை விடுவிப்பதும் அவனது உயிரை ஒரு எதிராளியின் கைகளில் கொடுப்பதும் ஒன்றுதான்; அவன் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், அந்த எதிரியே அவனது உயிரைப் பறித்திருக்கக் கூடும்.

88. எது சரியானதோ அது எப்போதும் பயன்தரக்கூடியது என்பது தெளிவாகிறது. புனித ஜூடித் தன் பாதுகாப்பைப் புறக்கணித்து, முற்றுகையின் ஆபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தன் வீரத்தால் அனைவருக்கும் நன்மை செய்தாள். அதேபோல், எலிசாவோ கொலை செய்வதன் மூலம் பெற்றிருக்கக்கூடிய மரியாதையைவிட மன்னிப்பதன் மூலம் அதிக மரியாதையைப் பெற்றதோடு, பிற்காலத்தில் அதிகப் பயனுள்ளதாக இருக்கவேண்டுமென்பதற்காக அந்த எதிரிகளைக் காப்பாற்றினார்.

89. யோவான் சரியானதை மட்டுமே செய்ய விரும்பினார், அது அரசருடையதாக இருந்தாலும்கூட ஒரு முறையற்ற திருமணத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர், “நீ ஏரோதியாளை உன்னோடு வைத்திருப்பது சரியல்ல” என்று யோவான் ஏரோதுவிடம் கூறியதால் யோவானை ஏரோது கைது செய்தான்” என்று மத்தேயு 14:4 கூறுகிறது. அவர் அமைதியாக இருந்திருக்கலாம், ஆனால் மரண பயத்தினாலோ, மன்னனின் அதிகாரத்திற்கு அடிபணிவதாலோ, அல்லது அவனை முகஸ்துதி செய்வதாலோ உண்மையைப் பேசாமல் இருப்பது தவறு என்று அவர் உணர்ந்தார். அரசனை எதிர்த்து வெளிப்படையாகப் பேசுவது தனது மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதை யோவான் அறிந்திருந்தார், ஆனாலும் அவர் தனது சொந்தப் பாதுகாப்பை விட நீதியை நிலைநாட்டவே விரும்பினார். இறுதியில், அவருடைய துன்பம் அவரை ஒரு புனிதராக மகிமைப்படுத்தியது.

90. புனித சூசன்னா, தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தை எதிர்கொண்டு ஒரு கடினமான சூழ்நிலையில் தன்னைக் கண்டார்: ஒருபுறம் ஆபத்து, மறுபுறம் அவமானம். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் ஒரு கேவலமான வாழ்க்கையை வாழ்வதற்குப் பதிலாக, கண்ணியத்துடன் இறப்பதன் மூலம் ஏற்படக்கூடிய அவமானத்தைத் தவிர்க்க அவள் முடிவு செய்தாள். சரியானதைச் செய்வதில் கவனம் செலுத்தியதன் காரணமாக அவள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாள். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவள் நினைத்திருந்தால், அவள் இத்தகைய ஒரு மகத்தான கௌரவத்தைப் பெற்றிருக்க மாட்டாள். உண்மையில், அவளுடைய செயல்களுக்காக அவள் இன்னும் மோசமான தண்டனையை எதிர்கொண்டிருக்கக்கூடும். அவமானம் என்பது நல்லதாக இருக்க முடியாது என்பதையும், நற்பண்பு மதிப்பற்றதாக இருக்க முடியாது என்பதையும் இது நமக்குக் காட்டுகிறது. பயன் என்பது எப்போதும் நற்பண்பின் இருமடங்காகும், அதேபோல் நற்பண்பு என்பது பயனின் இருமடங்காகும்.

அத்தியாயம் 15

நூலாசிரியர் ரோமானியர்களின் ஒரு பாராட்டத்தக்க செயலை முன்னிலைப்படுத்தி, பின்னர் மோயீசனின் செயல்கள் மூலம் அவர் நற்பண்புகளுக்கு ஆழ்ந்த மதிப்பு கொடுத்திருந்தார் என்பதை விளக்குகிறார்.

91. ஒரு ரோமானியத் தளபதியைப் பற்றிய ஒரு பிரபலமான கதை உள்ளது; ஒரு பகை மன்னனின் மருத்துவர் அவருக்கு விஷம் தருவதாகக் கூறியபோது, ​​அவர் அவரைப் பிடித்துக் கட்டி அவனது மன்னனிடமே திருப்பி அனுப்பினார். நேர்மையாகச் சொல்வதானால், ஒருவர் அதிகாரத்திற்காகப் போராடத் தொடங்கிய பிறகு, இழிவான தந்திரங்கள் மூலம் கிடைக்கும் வெற்றியை நிராகரிப்பது மிகவும் போற்றத்தக்கது. உண்மையான நற்பண்பு வெற்றி பெறுவதில் இல்லை என்றும், மாறாக ஒரு வெற்றி கௌரவத்துடன் அடையப்படாவிட்டால் அது அவமானம் தரக்கூடியது என்றும் அவர் நம்பினார்.

92. நமது நாயகனான மோயீசனும் அவருடைய மகத்தான செயல்களும், அவர் நம்மைவிட முந்தையவர் மற்றும் மேலானவர் என்பதைக் காட்டுவதற்காக மீண்டும் அவர் மீது மீண்டும் நமது பார்வையைச் செலுத்துவோம். எகிப்தின் அரசன் நமது முன்னோர்களை விடுவிக்க மறுத்துவிட்டான். யாத்திராகமம் 7:19 இல், “கர்த்தர் மோயீசனை நோக்கி, “ஆரோனின் கையிலுள்ள கைத்தடியை நதிகள், கால்வாய்கள், ஏரிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் அனைத்தின் மேலாகவும் நீட்டும்படியாக ஆரோனுக்குக் கூறு, அவன் அவ்வாறு செய்தவுடன் தண்ணீரெல்லாம் இரத்தமாகும். மரத்தாலும் கல்லாலுமாகிய ஜாடிகளில் நிரப்பியிருக்கும் தண்ணீர் உட்பட, எல்லா இடங்களிலுள்ள தண்ணீரும் இரத்தமாக மாறும்” என்று கூறப்பட்டதுபோல், நதியின் நீர் இரத்தமாக மாறியது. எகிப்தியர்களால் அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை, அவர்கள் தாகத்தால் அவதிப்பட்டார்கள், ஆனால் நமது முன்னோர்களுக்கு போதுமான சுத்தமான குடிநீர் கிடைத்தது. யாத்திராகமம் 9:10 இல் “மோயீசனும் ஆரோனும் ஒரு உலையிலிருந்து சாம்பலை அள்ளிக்கொண்டு போய் பார்வோனுக்கு முன்னே நின்று, மோயீசன் அந்த சாம்பலைக் காற்றில் தூவினான். ஜனங்களின் மீதும், மிருகங்களின் மீதும் கொப்புளங்கள் தோன்றின” என்றும், மீண்டும் யாத்திராகமம் 9:23-ல் கூறப்பட்டுள்ளபடி, “மோயீசன் தனது கைத்தடியை உயர்த்தியாதும், இடி, மின்னல், புயல் ஆகியவை எகிப்தைப் பாதிக்குமாறு கர்த்தர் செய்தார். அது தேசத்தில் உள்ள அனைத்தையும் அழித்தது. இருப்பினும், மோயீசன் இடைவிடாது செபித்தார். உடனேயே அழிந்த அனைத்தும் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. மேலும் யாத்திராகமம் 9:29 இல், “மோயீசன் பார்வோனை நோக்கி, “நான் நகரத்தை விட்டுப் புறப்பட்டதும் கர்த்தரை நோக்கி செபம் செய்தபடியே என் கைகளை உயர்த்துவேன். இடியும் ஆலங்கட்டி மழையும் நின்றுபோகும். அதன்மூலம் இந்த பூமியில் கர்த்தர் இருக்கிறார் என்பதை நீ அறிவாய்” என்று கூறியதாக எடுத்துரைக்கிறது. சொல்லியதுபோலவே, ஆலங்கட்டி மழை நின்றது, புண்கள் குணமடைந்தன, நதிகள் மீண்டும் நல்ல தண்ணீரை சுமந்தபடி ஓடின.

93. பின்பு, மீண்டும், மூன்று நாட்களுக்கு தேசம் அடர்ந்த இருளால் மூடப்பட்டிருந்தது, ஏனெனில் “மோயீசன் தன் கையை உயர்த்தி அந்த இருளைப் பரப்பினார்” என்று யாத்திராகமம் 10:22 கூறுகிறது. மீண்டும் யாத்திராகமம் 12:29 இல், “நள்ளிரவில் கர்த்தர் எகிப்தின் முதற்பேறானவர்களை; எகிப்தை ஆண்ட பார்வோனின் முதல் மகனிலிருந்து, சிறையிலுள்ள கைதியின் முதல் குமாரன் வரைக்கும் எல்லோரையும் அழித்தார். எல்லா முதற் பேறான மிருகங்களும் மரித்தன” என்றும், ஆனால் எபிரேயர்களின் பிள்ளைகள் பாதுகாப்பாக இருந்தார்கள். இந்தத் துன்பங்களுக்கு ஒரு முடிவுகட்டும்படி மோயீசன் அழைக்கப்பட்டு, அவர் ஜெபித்து, தனது கோரிக்கையை வெற்றிகரமாக வென்றார். ஒரு வகையில், அவர் வஞ்சகத்தில் பங்கு கொள்ளாமல் தன்னைத் தடுத்துக் கொண்டது பாராட்டுக்குரிய செயலாகும்; மற்றொரு வகையில், அவருடைய இயல்பான நற்குணம், விதிக்கப்பட்ட தெய்வீகத் தண்டனைகளை எதிரியிடமிருந்து எவ்வாறு திசை திருப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணாகமம் 12:3 கூறுவதுபோல, “மோயீசன் மிகவும் தாழ்மையான குணமுள்ளவர். அவர் மமதையுடையவர் அல்ல. பூமியிலுள்ள மற்றவர்களைவிட அவர் மிகவும் சாந்த குணமுள்ளவராகவே காணப்பட்டார்.” அரசன் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டான் என்பதை அவர் புரிந்துகொண்ட போதிலும், கேட்டுக்கொண்டபோது ஜெபிப்பதும், தவறு இழைக்கப்பட்டபோது ஆசீர்வதிப்பதும், வேண்டப்பட்டபோது மன்னிப்பதும் சரியானது மற்றும் நற்பண்பு மிக்கது என்று அவர் நம்பினார்.

94. “அவர்கள் தங்கள் கைத்தடிகளை நிலத்தின் மேல் எறிந்தபோது, அக்கைத்தடிகள் பாம்புகளாயின, ஆனால் ஆரோனின் கைத்தடியோ அவற்றைக் கபளீகரம் செய்தது” என்று யாத்திராகமம் 7:12 சொல்கிறது. இது பாவ மன்னிப்பின் மூலம் அந்தக் கொடிய சர்ப்பத்தின் விஷத்தை அழிப்பதற்காக வார்த்தை மாம்சமாக மாற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஏனெனில், அந்தத் தடியானது உண்மையான, அரசனுக்குரிய, வல்லமை நிறைந்த, வழிநடத்துவதில் பிரகாசிக்கிற வார்த்தையைக் குறிக்கிறது. அந்தத் தடிதான் ஒரு சர்ப்பமாக மாறியது; அவ்வாறே, பிதாவிடமிருந்து பிறந்த தேவகுமாரனான அவர் ஒரு பெண்ணிடமிருந்து பிறந்த மனிதகுமாரனாகி, சர்ப்பத்தைப் போல சிலுவையில் உயர்த்தப் பட்டு, மக்களின் காயங்களுக்குத் தமது குணமாக்கும் உதவியை அளித்தார். ஆகவே, கர்த்தர் தாமே கூறுகையில், “மோயீசன் வனாந்தரத்தில் சர்ப்பத்தை உயர்த்தியதுபோல போல, மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்” என்று யோவான் 3:14 இல் கூறப்பட்டுள்ளது.

95. மீண்டும், மோயீசன் வழங்கிய மற்றொரு அடையாளம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேரடியாகச் சுட்டிக்காட்டுகிறது. இதுகுறித்து ​​யாத்திராகமம் 4:6-7 சொல்வதைப் பாப்போம்: “உனக்கு மற்றொரு அடையாளத்தையும் தருவேன் என்று கூறி, உனது கையை அங்கிக்குள் நுழை” என்றார். எனவே மோயீசன் தன் அங்கிக்குள் கையை நுழைத்தார். அவர் அங்கியிலிருந்து தன் கையை வெளியே எடுத்தபோது, அது மாறிப்போயிருந்தது. கை முழுவதும் உறைந்த பனியைப் போன்ற வெள்ளைப் புள்ளிகளால் நிரம்பியிருந்தது. அப்போது தேவன் “உனது கையை அங்கிக்குள் மீண்டும் நுழை” என்றார். மோயீசன் அவ்வாறு செய்து தனது கையை அங்கிக்குள்ளிருந்து வெளியே எடுத்தபோது அவரது கை முன்பிருந்ததைப்போலவே நன்றாக இருந்தது” என்று கூறுகிறது. இது, முதலாவதாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் தெய்வீகத்தின் ஆதி மகிமையையும், பின்னர் நம்முடைய உடலை எடுத்துக்கொண்டதையும் குறித்தது; இது எல்லா தேசங்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு உண்மையாகும். ஆகவே, அவர் தம் கையை உள்ளே வைக்கும்படி கூறப்பட்டது, ஏனெனில் கிறிஸ்து தேவனுடைய வலது கரம்; மேலும், அவருடைய தெய்வீகத்தையும் அவதாரத்தையும் நம்பாத எவரும் ஒரு பாவியைப் போல தண்டனையை எதிர்கொள்கிறார்; தெளிவான அடையாளங்களை நம்பாதபோதிலும், பின்னர் தண்டிக்கப்பட்டபோது கருணைக்காக ஜெபித்த அந்த அரசனைப் போலவே இதுவும் இருக்கிறது. இந்த அடையாளங்களால் நிரூபிக்கப்பட்டபடி, நற்பண்புகளின் மீது மோயீசன் கொண்டிருந்த அர்ப்பணிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்; குறிப்பாக, யாத்திராகமம் 32:32-ல் சொல்லப்பட்டுள்ளபடி, “அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை நீக்கி விடும்” என்று கூறிய மோயீசன், இடைவிடாது செபித்து, மக்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தபோது அவரது அர்ப்பணிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

அத்தியாயம் 16

தோபித்தைப் பற்றி சில வார்த்தைகள் கூறிய பிறகு, ரேகுவல் நற்பண்புகளில் தத்துவஞானிகளையே விஞ்சினார் என்பதை அவர் விளக்குகிறார்.

96. தோபித்தும் தன் வாழ்வில் உண்மையான நற்பண்பைத் தெளிவாக வெளிப்படுத்தினார்; தோபித் 2:4 இல் கட்டப்பட்டுள்ளதுபோல, அவர் விருந்திலிருந்து வெளியேறி, இறந்தவர்களை அடக்கம் செய்தபோதும், ஏழைகளைத் தன் எளிய மேசையில் விருந்துக்கு அழைத்தபோதும் இது வெளிப்பட்டது. அதேபோலத்தான் ரேகுவல் என்பவன் காட்டிய மற்றுமொரு சிறந்த உதாரணம். அதாவது, நற்குணத்தின் மீதான மரியாதையினால், தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்கப்பட்டபோது, ​​மணமகனை ஏமாற்றிவிடுவது போல் தோன்றி விடுமோ என்ற பயத்தில் அவர் தன் மகளின் பிரச்சனைகளை மறைக்கவில்லை. எனவே, தோபியாஸின் மகனான தோபித், தன் மகளைத் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டபோது, ​​சட்டப்படி நெருங்கிய உறவினன் என்ற முறையில் அவள் தனக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் தான் ஏற்கெனவே அவளை ஆறு பேருக்குக் கொடுத்துவிட்டதாகவும், அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகவும் பதிலளித்தார் என்று விளக்கமளிக்கிறது தோபித் 7:11. இந்த நேர்மையான மனிதர், தன்னைவிட மற்றவர்களைப் பற்றியே அதிகம் கவலைப்பட்டார்; மற்றவர்கள் தன் மகளைத் திருமணம் செய்வதால் ஆபத்துகளைச் சந்திப்பதைவிட, அவள் திருமணம் ஆகாமல் இருப்பதே மேல் அவர் விரும்பினார்.

97. தத்துவஞானிகளின் கேள்விகள் அனைத்திற்கும் அவர் எளிதாகப் பதிலளித்தார். ஒரு வீட்டின் குறைகளை, அவ்வீட்டை விற்பவர் மறைக்க வேண்டுமா அல்லது வெளிப்படுத்த வேண்டுமா என்பது பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள். தன் மகளின் குறைகளை மறைக்கக் கூடாது என்பதில் ரேகுவல் உறுதியாக இருந்தார். அவர் தன் மகளை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை; மாறாக, அவளைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. ஒரு சாதாரண நிதி விஷயத்தை விட தன் மகளின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் சிந்திக்கும்போது, ​​அந்தத் தத்துவஞானிகளை விட அவர் எவ்வளவு உன்னதமாகச் செயல்பட்டார் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அத்தியாயம் 17

சிறைப்பட்டுவிடும் தருவாயில் கூட பிதாப்பிதாக்கள் உன்னத உணர்வுகளுடன் புனித நெருப்பைப் பாதுகாத்தார்கள்.

98. சிறைப்படுத்தலின் போது மேற்கொள்ளப்பட்ட, மிகவும் நற்பண்பும் மகிமையும் மிக்கதாக மாறிய அந்தச் செயலைப் பற்றி மீண்டும் சிந்திப்போம். நற்குணம் எந்தத் துன்பங்களாலும் தடுக்கப்படுவதில்லை, ஏனெனில் அது துன்பங்களின் போது வலிமை பெற்று, நல்ல தருணங்களைக் காட்டிலும் அவற்றில் அதிக வெற்றி காண்கிறது. சங்கிலிகளிலோ போரிலோ, தீவிபத்துகளிலோ அல்லது அடிமைப்படுத்தப்படுவதிலோ (சுதந்திரமான மக்களுக்கு எந்தவொரு தண்டனையை விடவும் இது கொடியது), இறந்தவர்களின் துயரத்திலும், தாய்நாட்டின் அழிவிலும், வாழ்ந்தவர்களின் கவலைகளிலும், கொல்லப்பட்டவர்களின் இரத்தத்திலும் — இவை அனைத்தின் மத்தியிலும் நமது முன்னோர்கள் நன்மைக்கான தங்கள் கடமையையும் அக்கறையையும் புறக்கணிக்கவில்லை. அழிந்துபோன தங்கள் தாய்நாட்டின் இடிபாடுகளுக்கும் எச்சங்களுக்கும் மத்தியில், அது அர்ப்பணிப்புமிக்க செயல்களால் பிரகாசமாக ஒளிவிட்டுப் பிரகாசித்தது.

99. நம் முற்பிதாக்கள் பாரசீகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, ​​2 மக்கபேயர் 1:19-ல் கூறப்பட்டுள்ளபடி, சர்வவல்லமையுள்ள தேவனுக்காகப் பணிபுரிந்து கொண்டிருந்த சில ஆசாரியர்கள், கர்த்தருடைய பலிபீடத்தின் நெருப்பை அந்தப் பள்ளத்தாக்கில் இரகசியமாகப் புதைத்தார்கள். அது, மக்கள் எளிதில் சென்றடைய முடியாத, யாருக்கும் தெரியாத, யாரும் நுழைய முடியாத ஓர் இடத்தில் இருந்த, வறண்ட, திறந்த குழி அது. அங்கே அவர்கள் அந்த நெருப்பை மறைத்து, ஒரு புனிதச் சின்னத்தால் இரகசியமாகக் குறித்தார்கள். தங்கள் பிள்ளைகளுக்காகத் தங்கத்தையோ வெள்ளியையோ மறைத்து வைப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை; ஆனால், தங்களுக்குப் பெரும் ஆபத்து இருந்தபோதிலும், நல்லவை அனைத்தையும் மனதில் கொண்டு, அந்தப் புனித நெருப்பைக் காப்பாற்ற வேண்டும் என்று நம்பினார்கள். ஏனெனில், தீயவர்கள் அதைத் தீட்டுப்படுத்த மாட்டார்கள், கொல்லப்பட்டவர்களின் இரத்தம் அதை அணைத்துவிடாது, துயரமான இடிபாடுகளின் குவியல்கள் அதை மூடிவிடாது.

100. எனவே, அவர்கள் தங்கள் நம்பிக்கைகளில் மட்டுமே உறுதிகொண்டு சுதந்திரமாக பெர்சியாவுக்குச் சென்றனர்; ஏனெனில் அந்த சிறைவாசத்தால் அவர்களது நம்பிக்கையை மட்டும் அவர்களிடமிருந்து பறிக்க முடியவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு, தேவன் சித்தமானபடியே, யூதேயாவில் உள்ள ஆலயத்தை மீண்டும் நிர்மாணிக்கவும், எருசலேமில் வழக்கமான நடைமுறைகளை மீண்டும் நிலைநிறுத்தவும் கட்டளையிடுமாறு பாரசீகத்தின் அரசனது இதயத்தை அவர் தூண்டினார். இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல பாரசீகத்தின் அரசன் ஆசாரியனாகிய நேஹ்மையாவைத் தேர்ந்தெடுத்தார். தங்கள் தாயகத்தை விட்டுப் புறப்பட்டபோது, ​​பரிசுத்த நெருப்பு அழிந்துவிடாமல் இருப்பதற்காக அதை மறைத்து வைத்திருந்த ஆசாரியர்களின் சந்ததியினரை அவர் தம்முடன் அழைத்து வந்தார். ஆனால், நாம் மூதாதையரின் வரலாற்றிலிருந்து அறிந்துகொண்டது போல, அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது ​​அக்கினியை அன்றி தண்ணீரையே கண்டார்கள். பலிபீடங்களில் நெருப்பு தேவைப்பட்டபோது ​​ஆசாரியனாகிய நேஹ்மையா அவர்களிடம் தண்ணீரை எடுத்துத் தன்னிடம் கொண்டுவந்து அதை விறகுகளின்மேல் தெளிக்கும்படி கூறினார். அப்பொழுது, ஒரு அற்புதமான காட்சி அங்கே விரிந்தது! வானம் மேகங்களால் மூடப்பட்டிருந்தபோதிலும், திடீரென்று சூரியன் தோன்றி, அங்கே ஒரு பெரிய அக்கினி சுவாலை கொழுந்து விட்டு எரிந்தது. தேவனுடைய அங்கீகாரத்தின் இத்தகைய தெளிவான அடையாளத்தைக் கண்டு அனைவரும் வியப்படைந்து, மகிழ்ச்சியால் நிறைந்தனர். நேஹ்மையா ஜெபித்தார்; காணிக்கை முடிந்ததும், ஆசாரியர்கள் தேவனைப் புகழ்ந்து ஒரு பாடலைப் பாடினார்கள். மீதமுள்ள தண்ணீரைப் பெரிய கற்களின்மேல் ஊற்றும்படி நேஹ்மையா மீண்டும் அவர்களிடம் கூறினார். அவ்வாறு செய்தபோது, ​​ஒரு சுவாலை கிளம்பியது, அப்போது பலிபீடத்திலிருந்து பிரகாசித்த ஒளி இன்னும் அதிகமாய்ப் பிரகாசித்தது.

101. இந்த அடையாளம் குறித்து அறியப்பட்டபோது, ​​பாரசீகத்தின் அரசன், புனித நெருப்பு மறைக்கப்பட்டிருந்த இடத்திலும் பின்னர் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலும் ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டான்; அதற்குப் பல காணிக்கைகள் கொடுக்கப்பட்டன. பரிசுத்த நேஹ்மையாவுடன் இருந்தவர்கள் அதற்கு நப்தார் (Naphtha) என்று பெயரிட்டனர். அதன் பொருள் சுத்திகரிப்பு என்பதாகும். மேலும் பலர் அதை நெபி (Nephi) என்றும் அழைக்கின்றனர். தீர்க்கதரிசி எரேமியாவின் குறிப்பிலும் தன்னைப் பின்தொடர்ந்தவர்களிடம் நெருப்பில் சிறிதளவு எடுத்துக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. இதுவே மோயீசனின் காணிக்கையின் மீது விழுந்து அதை எரித்த நெருப்பாகும் என்று லேவியராகமம் 9:24 கூறுகிறது. மேலும் அது, “கர்த்தருடைய சந்நிதியிருந்து நெருப்பு எழும்பி வந்து பலிபீடத்தின் மேல் இருந்த தகனபலிப் பொருட்களையும் கொழுப்பையும் எரித்தது” என்கிறது. இந்த நெருப்பினால் மட்டுமே காணிக்கை பரிசுத்தமாக்கப்பட வேண்டும். எனவே, அங்கீகரிக்கப்படாத நெருப்பைக்கொண்டு பலியிட விரும்பிய ஆரோனின் புத்திரர் மீதும் கர்த்தரிடமிருந்து புறப்பட்டு வந்த நெருப்பு அவர்களை எரித்துவிட்டது. அதனால் அவர்களுடைய சடலங்கள் முகாமுக்கு வெளியே தூக்கி எறியப்பட்டன என்று லேவியராகமம் 10:2 மேலும் கூறுகிறது.

101. எரேமியா ஒரு இடத்திற்கு வந்தபோது, ​​அங்கே ஒரு குகை போன்ற வீட்டைக் கண்டார். அவர் ஆசரிப்பு மற்றும் உடன்படிக்கைப் பேழையையும், தூபபீடத்தையும் அதனுள் கொண்டுவந்து, அதன் வாசலை அடைத்தார். அவருடைய தோழர்கள் அந்த இடத்தைக் கண்டறிய மிகவும் உன்னிப்பாகத் தேடிப் பார்த்தபோதும் ​​அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதை எரேமியா புரிந்துகொண்டபோது, ​​தேவன் தம் மக்களை ஒன்று கூட்டி, அவர்களுக்குத் தம்முடைய கிருபையைக் காட்டும் வரை அந்த இடம் மறைவாகவே இருக்கவேண்டும் என்று கூறினார். அப்பொழுது தேவன் இவைகளை வெளிப்படுத்தும்போது கர்த்தருடைய மகத்துவம் மேலோங்கிக் காணப்படும் என்று 2 மக்கபேயர் 2:5 கூறுகிறது.

அத்தியாயம் 18

முன்னர் குறிப்பிடப்பட்ட அந்த நிகழ்வின் விவரிப்பிலும், குறிப்பாக நேஹ்மையா செலுத்திய பலியிலும், பரிசுத்த ஆவியானவரும் கிறிஸ்தவ ஞானஸ்நானமும் முன்னுதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன. மோயீசன் மற்றும் எலியாவின் பலிகளும், நோவாவின் வரலாறும் அதையே குறிப்பிடுகின்றன.

102. நாம் கர்த்தருடைய சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். நம்முடைய கர்த்தராகிய தேவன் தமது பாடுகளின் போது செய்த தியாகத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். யோவான் 1:33-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கும்போது, ​​அதற்கு ஒரு ஆழமான அர்த்தம் உண்டு என்பதை நினைவில் கொள்வது அவசியம். அந்தத் தியாகம் பாவத்திற்காகச் செலுத்தப்பட்டதால், அது சரியான முறையில் செலுத்தப்பட்டது. கர்த்தர் பரலோகத்திற்குச் சென்ற பிறகு வந்து அனைவரின் பாவங்களையும் மன்னிக்கும் பரிசுத்த ஆவியானவரை அக்கினி அடையாளப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவர் அக்கினியைப் போல விசுவாசிப்பவர்களின் இதயங்களைத் தூண்டி ஒளியேற்றுகிறார். இதனால்தான் (எரேமியா 20:9-ல்) ஆவியைப் பெற்ற பிறகு, “கர்த்தருடைய வார்த்தை அக்கினியைப் போன்று எனக்குள் எரிந்துகொண்டு இருக்கிறது, எனது எலும்புக்குள் அது ஆழமாக எரிவதுபோன்று எனக்குத் தோன்றுகிறது! எனக்குள் கர்த்தருடைய செய்தியைத் தாங்கிக் கொள்வதில் நான் சோர்வு அடைகிறேன்! என்று பதிவு செய்கிறது. அப்போஸ்தலர் நடபடிகள் 2:3 இல் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட வரத்திற்காகக் காத்திருந்த அப்போஸ்தலர்களிடமும் மற்றவர்களிடமும் பரிசுத்த ஆவியானவர் வந்தபோது, ​​நெருப்புக் கொழுந்து போன்ற நாவுகளை அவர்கள் கண்டனர். அவை பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன” என்று கூறப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியின் செல்வாக்கு மிகவும் வலுவாக இருந்ததால், மக்கள் அவர்கள் மதுபோதையில் இருப்பதாக நினைத்தார்கள் என்று அப்போஸ்தலர் 2:13 கூறுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசும் ஆற்றலைப் பெற்றிருந்தார்கள்.

103. நெருப்பு நீராக மாறியது, நீர் நெருப்பை உண்டாக்கியது என்பதற்கு ஆவிக்குரிய கிருபை நெருப்பின் மூலம் நம்முடைய பாவங்களை நீக்கி, நீரால் அவற்றைச் சுத்திகரிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? பாவம் கழுவிச் செல்லப்படலாம் அல்லது எரிக்கப்படலாம். இதனால்தான் அப்போஸ்தலர் 1 கொரிந்தியர் 3:13-ல், “ஒவ்வொருவனின் கிரியையும் இறுதியில் (கிறிஸ்து மக்களை நியாயம் தீர்க்கிற நாளில்) பகிரங்கப்படுத்தப்படும். அந்த நாளில் ஒவ்வொருவனின் பணியும் அக்கினியால் சோதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “ஒரு மனிதனுடைய கிரியை எரிக்கப்பட்டால், அவன் நஷ்டமடைவான்; இருப்பினும் அவன் இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியினின்று தப்பி வந்தாற்போன்று ஒரு நிலையை அவன் அடைவான்” என்று 1 கொரிந்தியர் 3:15 கூறுகிறது.

104. ஆக, பாவங்கள் நெருப்பினால் எரிக்கப்படுகின்றன என்பதை நிரூபிப்பதற்காகவே இதை நாம் கூறியுள்ளோம். இதுவே உண்மையான புனித நெருப்பு என்றும், அது பிற்காலத்தில் கிடைக்கும் பாவ மன்னிப்பிற்கு ஓர் அடையாளமாகப் பலியின் மீது இறங்கியது என்றும் இப்போது நாம் அறிவோம்.

105. இந்த நெருப்பு, பாவம் ஆட்சி செய்யும் அடிமைத்தனத்தின் காலத்தில் மறைந்திருக்கிறது, ஆனால் விடுதலையின் காலத்தில் அது வெளிப்படுகிறது. அது தண்ணீரின் தோற்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தாலும், பலியை எரித்துப்போடுவதற்காகத் தன் நெருப்பினாலான இயல்பை அது தக்கவைத்துக்கொள்கிறது. உபாகமம் 4:24-ல் உங்கள் தேவனாகிய கர்த்தர் தம் மக்கள் அந்நிய தெய்வங்களை வழிபடுவதை வெறுக்கிறார் என்பதோடு, அழிக்கும் அக்கினியாகவும் விளங்குவார்! ஆகவே இதே மறைநூலில் பிதாவாகிய தேவன், “நான் பட்சிக்கும் நெருப்பு” என்று அறிவித்ததை நீங்கள் வாசிக்கும்போது ஆச்சரியப்படாதீர்கள். மேலும், எரேமியா 2:13-இல், “வாழ்வுதரும் நீர் ஊற்றாகிய என்னை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள்” என்றும் அவர் கூறினார். அவ்வாறே, கர்த்தராகிய இயேசு நெருப்பைப் போலத் தமக்குச் செவிசாய்க்கும் இதயங்களில் ஒளியை ஏற்றி நீரூற்று போல அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறார் என்று லூக்கா 12:49-ல் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், அவரே தம்முடைய நற்செய்தியில், தாம் பூமியின்மேல் நெருப்பை அனுப்பவும், தாகமுள்ளவர்களுக்கு வாழ்வளிக்கும் தண்ணீரை ஊற்றவும் வந்ததாகக் கூறினார், என்று லூக்கா 12:49 கூறுகிறது.

106. எலியாவின் காலத்திலும், நெருப்பின்றி பலிபீடத்தில் ஒளியை ஏற்றும்படி புறஜாதியாரின் தீர்க்கதரிசிகளுக்கு அவர் சவால் விடுத்தபோது, ​​அக்கினி இறங்கி வந்தது. அவர்களால் முடியாதபோது, ​​அவர் தனது பலியின் மீது மூன்று முறை தண்ணீரை ஊற்றினார், அதனால் அந்தத் தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றி ஓடியதும் அவர் சத்தமிட்டார், அப்பொழுது வானத்திலிருந்து கர்த்தரிடமிருந்து அக்கினி இறங்கி தகனபலியைப் பட்சித்தது.

107. நீங்கள் தான் துன்புற்ற அந்த நபர்; ஆகவே ஒவ்வொரு அம்சத்தையும் பற்றி ஆழமாகச் சிந்திக்க ஒரு கணம் ஒதுக்குங்கள். பரிசுத்த ஆவியானவரின் சுவாசம் உங்கள் மீது இறங்குகிறது. மேலும் அவர் உங்கள் பாவங்களைச் சுத்திகரிக்கும்போது அது ஒரு எரியும் உணர்வைப் போல இருக்கும். மோயீசனின் காலத்தில் செய்யப்பட்ட பலி குறிப்பாகப் பாவத்திற்குப் பரிகாரமாக இருந்தது, அதனால்தான் மக்கபேயர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி “பாவமன்னிப்புக்கான பலியை உண்பது முறைமையல்ல என்பதால், அது நெருப்பால் எரிக்கப்பட்டது என்று மோயீசன் விளக்கிக் கூறியதை விவரிக்கிறது. பலிபீடத்தை அர்ப்பணிக்கும் வேளையில் மோயீசன் மற்றும் சொலமன் ஆகிய இருவருமே இறைவனை நோக்கி வேண்ட, வானத்திலிருந்து அக்கினி இறங்கி வந்து காணிக்கைகளை எரித்தது” என்று 2 மக்கபேயர் 2:11-ல் கூறப்பட்டுள்ளது. திருமுழுக்கு எனும் அருட்சாதனத்தின் மூலம், நமது முழு வெளிப்புற சுயமும் அழிக்கப்படும்போது, ​​நீங்கள் உட்கொள்ளப்படுவது போல் உணரவில்லையா? இதுகுறித்து, “நமது பழைய வாழ்வு இயேசுவோடேயே சிலுவையில் கொல்லப்பட்டுவிட்டது என்று நமக்குத் தெரியும். எனவே, நமது பாவத் தன்மைகளுக்கு நம்மீது எவ்வித அதிகாரமும் இல்லை. இதனால் இனிமேலும் நாம் பாவங்களுக்கு அடிமையாக இருக்கமாட்டோம்” என்று ரோமர் 6:6 இல் அப்போஸ்தலர் கூறுகிறார். மேலும், இந்த வழியில், நமது முன்னோர்களின் எடுத்துக் காட்டுகள் சொல்வது போல, எகிப்தியன் விழுங்கப்படுகிறான் — எபிரேயன் செங்கடலைக் காய்ந்த தரையில் கடந்ததைப் போலவே, பரிசுத்த ஆவியானவரால் புதுப்பிக்கப்பட்டு எழுகிறான் — அங்கு நமது முன்னோர்கள் மேகத்திலும் கடலிலும் திருமுழுக்கு பெற்றனர் என்று 1 கொரிந்தியர் 10:1-2-ல் கூறப்பட்டுள்ளது.

108. நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், “தேவன் பூமியில் உயிருள்ள அனைத்தையும் மனிதன், மிருகம், ஊர்ந்து செல்லும் பிராணிகள், பறவைகள் உட்பட எல்லாவற்றையும் பூமியிலிருந்து முற்றிலுமாய் அழித்தார். நோவாவும் அவனது குடும்பத்தினரும் அவனோடு கப்பலிலிருந்த பறவைகளும், மிருகங்களும் மட்டுமே உயிர் பிழைத்தன” என்று ஆதியாகமம் 7:23 கூறுகிறது. சாகக்கூடிய அனைத்தும் எடுத்துக்கொள்ளப்படும்போது, ​​ஒரு மனிதன் அழிக்கப்படுவதில்லையா? சரீரம் அழியக்கூடும், ஆனால் அக மனிதன் புத்துயிர் பெறுகிறான். இந்தப் புதுப்பித்தல் ஞானஸ்நானத்தின் மூலமாக மட்டுமல்ல, மனந்திரும்புதலின் மூலமாகவும் நிகழ்கிறது; இது ஆவியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அப்போஸ்தலரின் அதிகாரத்தின்படி நாம் இதைக் கற்றுக்கொள்கிறோம், பரிசுத்த பவுல் இவ்வாறு கூறுகிறார்: “இப்படிப்பட்ட கிரியையைச் செய்தவனை, நான் நேரில் கண்டதுபோல தீர்ப்பிட்டேன்; நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளில் ஆவி இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக, இந்த மனிதனை சாத்தானிடம் ஒப்படையுங்கள். அப்போது பாவம் நிரம்பிய அவனது சுயம் அழிக்கப்படும். அவனது ஆவியோ கர்த்தர் வரும் நாளில் காக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

109. சமய அதிசயம் நிறைந்ததும், உண்மையிலேயே நற்பண்புகள் செறிந்ததும் நமக்கு வெளிப்படுத்தப்பட்ட இந்த நற்சடங்கை இன்னும் ஆழமாக ஆராய விரும்பியதாலும், இந்த வியக்கத்தக்க மறைபொருளைப் போற்றுவதற்காக நாம் ஒரு நீண்ட வழிப்பயணத்தை மேற்கொண்டது போல் தெரிகிறது.

அத்தியாயம் 19

கிபியா நகர மக்கள் லேவியனின் ஒருவனின் மனைவிக்கு எதிராகச் செய்த குற்றத்தின் கதை. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் போன்றவை, அக்காலத்து மக்களின் மீது நற்பண்பு என்னும் எண்ணம் எவ்வளவு வலுவாகப் பாதித்திருந்தது என்பதைக் காட்டுகிறது.

110. ஒழுக்கமற்ற ஆண்களால் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் போரின் மூலம் பழிவாங்கும் அளவுக்கு நம் முன்னோர்கள் நற்பண்புகளுக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்திருந்தார்கள் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! உண்மையில், அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த எவருக்கும் தங்கள் மகள்மாரைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என்று மக்கள் சபதம் செய்தார்கள்! தந்திரங்களைக் கையாள அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்காவிட்டால், அந்தப் பழங்குடியினர் அழிவைச் சந்தித்திருப்பார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இந்த அனுமதி அந்த கீழ்ப்படியாமைக்கு ஒரு தகுந்த தண்டனையாகவே தோன்றுகிறது. ஏனெனில், அவர்களால் திருமணத்தின் புனிதமான பந்தத்தின் மூலம் அல்லாமல், பலவந்தத்தின் மூலமாக மட்டுமே உறவுகளை உருவாக்க முடிந்தது. பிறருடைய உறவைச் சீர்குலைத்தவர்கள், தங்களுடைய திருமண உரிமைகளையும் இழக்க நேரிடுகிறது என்பது உண்மையிலேயே நியாயமானதே.

111. இந்தக் கதை சோகமான அம்சங்கள் நிறைந்தது! நியாயாதிபதிகள் 19:1-3-இல் காட்டப்பட்டவாறு, ஒரு லேவியன் ஒரு பெண்ணை மனைவியாய் மணந்து ஏற்றுக்கொண்டான். ‘ஆசைநாயகி’ என்ற சொல்லின் அடிப்படையில், அவள் ஒரு ஆசைநாயகியைப் போலவே இருந்திருக்கலாம் என நான் கருதுகிறேன். சிறிது காலத்திற்குப் பிறகு, அவள் சில விடயங்களால் மனவருத்தம் அடைந்து, தன் தகப்பனிடம் திரும்பிச் சென்று, நான்கு மாதங்கள் அங்கே தங்கியிருந்தாள். இறுதியில், அவளுடைய கணவன் தன் தவறை உணர்ந்து அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காகத் தன் மாமனார் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்தான். அவன் அங்கு வந்ததும், அந்தப் பெண் அவனை வரவேற்க விரைந்து வெளியே வந்து, தன் தந்தையின் வீட்டிற்குள் அவனை அழைத்துச் சென்றாள்.

112. அந்தப் பெண்ணின் தந்தை (நியாயாதிபதிகள் 4-9) மிகவும் மகிழ்ச்சியடைந்து, அவனை வரவேற்க வெளியே சென்றார். அந்த மனிதன் இறுதியில் மூன்று நாட்கள் தங்கி, உண்டு மகிழ்ந்தும் ஓய்வெடுத்தும் வந்தான். மறுநாள் காலையில், அந்த லேவியன் விடியற்காலையில் எழுந்தான், ஆனால் அவனுடைய மாமனார், அவனது நட்பை இன்னும் சிறிது நேரம் அனுபவிக்க விரும்பி, அவனைத் தடுத்து நிறுத்தினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில், அந்தப் பெண்ணின் தந்தை, இருவரும் ஒருவருக்கொருவர் நட்பை முழுமையாக அனுபவிக்கும் வரை தன் மருமகனைப் போக அனுமதிக்கவில்லை. இருப்பினும், ஏழாம் நாள் முடிவடையும் தருவாயில், ஒரு நல்ல உணவிற்குப் பிறகு இரவு நெருங்கி வருவதாக சூசகமாகக் கூறி, தனியாக வெளியே செல்வதற்குப் பதிலாக நண்பர்களுடன் தங்குமாறு அவனைச் சம்மதிக்க வைக்க முயன்றார். இறுதியில், அவரால் அவனை மேலும் தடுத்து வைக்க முடியவில்லை, இறுதியில், தன் மகளுடன் அவனைப் போக அனுமதித்தார்.

113. இருள் சூழ்ந்து, அவர்கள் எபூசியர் பட்டணத்தை நெருங்கியபோதும், அவர்கள் சிறிதளவு முன்னேற்றமே கண்டிருந்தனர். அங்கே தங்குமாறு அந்த ஊழியன் தன் எஜமானிடம் கேட்டுக்கொண்டான். ஆனால், அது இஸ்ரவேலருக்குச் சொந்தமான நகரம் அல்ல என்பதால் அவன் தங்க மறுத்துவிட்டான். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மக்கள் வசித்துவந்த கிபியாவை அடைய அவன் விரும்பினான். ஆனால், அவர்கள் அங்கே சென்றடைந்தபோது, ​​ஒரு முதியவரைத் தவிர வேறு எவரும் அவர்களை அன்புடன் வரவேற்கவில்லை. அவர்களைப் பார்த்தபின், அந்த முதியவர் அந்த லேவியனிடம், “நீ எங்கே போகிறாய், எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். தான் பயணம் செய்வதாகவும், எப்பிராயீம் மலைக்குச் செல்வதாகவும், தன்னை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவன் பதிலளித்தபோது, ​​அந்த முதியவர் அவனைத் தங்கும்படி அழைத்து, அவர்களுக்கு உணவும் அளித்தார்.

114. நியாயாதிபதிகள் 19:22-26-ல், அவர்கள் உணவில் திருப்தியடைந்து மேசைகள் அகற்றப்பட்டபோது, ​​சில கயவர்கள் அங்கு வந்து அந்த முதியவரின் வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். பிறகு, தன் சொந்த பிள்ளைகளுக்கு எதிராக வன்முறை ஏற்படுவதைத் தடுப்பதற்காக, அந்த முதியவர், கன்னியான தன் மகளையும், அவளுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டிருந்த தன் ஆசைநாயகியையும் அந்தக் கயவர்களுக்குக் கொடுத்தார். ஆனால், பகுத்தறிவு உதவாததாலும், வன்முறை மேலோங்கியதாலும் அந்த லேவியன் தன் மனைவியைக் கைவிட்டுச் சென்றான். அவர்கள் அன்றிரவு முழுவதும் அவளை வன்புணர்ந்து, கொடுமைப்படுத்தினார்கள். இந்தக் கொடுமையாலோ அல்லது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் ஏற்பட்ட துக்கத்தாலோ நிலைகுலைந்து, தன் கணவன் வீட்டிற்குள் நுழைந்திருந்த அவர்களை உபசரித்தவனின் வாசலில் அவள் விழுந்து, தன் கணவனுக்காகத் தன் சடலத்தையாவது விட்டுச்செல்லும் பொருட்டு, ஒரு நல்ல மனைவியாகத் தன் உணர்வுகளைப் பாதுகாத்து, தன் வாழ்வின் கடைசி முயற்சியாக மரித்தாள்.

115. இது தெரியவந்தபோது (சுருக்கமாகச் சொல்வதானால்), இஸ்ரவேல் மக்கள் ஏறக்குறைய அனைவருமே போரில் ஈடுபட்டனர். அந்தப் போர் நிச்சயமற்றதாகவும், அதன் முடிவு உறுதியற்றதாகவும் இருந்தது. அப்போது பென்யமீன் கோத்திரம் இஸ்ரவேலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று நியாயாதிபதிகள் 20:48-ல் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தெய்வீக நியாயத்தீர்ப்பை எதிர்கொண்டு, தங்கள் அக்கிரமத்திற்கான விலையைக் கொடுக்க நேரிட்டது. மேலும், இஸ்ரவேல் குடும்பங்களைச் சேர்ந்த எவரும் தங்கள் பெண்பிள்ளைகளை பென்யமீன் கோத்திரத்தாருக்குத் திருமணம் செய்து கொடுக்கக் கூடாது என்று ஒரு முறையான சத்தியத்தின் மூலம் ஆணையிடப்பட்டது. இருப்பினும், தங்கள் சக நாட்டு மக்கள் மீது இத்தகைய கடுமையான தண்டனையை விதித்ததற்காக மனவருத்தம் அடைந்த அவர்கள், தங்கள் நிலைப்பாட்டைத் தளர்த்தி, தங்கள் பாவங்களால் தந்தையரை இழந்த ஆதரவற்ற கன்னியர்களின் திருமணத்தை அனுமதித்தது மட்டுமன்றி, திடீர் முற்றுகை மூலம் அவர்கள் மனைவிமாரைக் கண்டறியவும் வழிவகுத்தனர். இந்தச் செயலின் கொடூரத் தன்மையால் மற்றவர்களின் திருமண உரிமைகளை மீறியவர்கள் திருமணம் குறித்த தேடுதல்களுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர். ஆயினும்கூட, ஒரு கோத்திரம் தேசத்திலிருந்து மறைந்துவிடுமோ என்ற கவலையால் அவர்கள் அந்த வஞ்சகத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டனர்.

116. நமது முன்னோர்கள் நற்பண்புகளின் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பு, பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த தங்கள் சகோதரர்களுக்கு எதிராக நாற்பதாயிரம் பேர் ஆயுதம் ஏந்தியதில் தெளிவாகிறது. ஒழுக்கத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்யும் ஆவலில் அவர்கள் அவ்வாறு செய்தனர், ஏனெனில் தூய்மை மீறப்படுவதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, அந்தப் போரில் இரு தரப்பிலும் அறுபத்தையாயிரம் வீரர்கள் மடிந்தனர், அவர்களுடைய நகரங்கள் எரியூட்டப்பட்டன. ஆரம்பத்தில் இஸ்ரவேல் மக்கள் தோற்றபோதிலும், போரில் ஏற்பட்ட இழப்புகளால் அவர்கள் பயத்தில் மனம் மாறவில்லை; தூய்மைக்குப் பழிவாங்குவதற்காக அவர்கள் பட்ட துயரத்தை அவர்கள் புறக்கணித்தார்கள். நடந்த பாவத்தின் தழும்புகளைத் தங்கள் சொந்த இரத்தத்தால் சுத்திகரிக்கத் தயாராக, அவர்கள் போருக்குள் பிரவேசித்தார்கள்.

அத்தியாயம் 20

எலிசாவின் தீர்க்கதரிசனத்திற்கு அமைவாக சமாரியாவின் கொடிய முற்றுகை முடிவுக்கு வந்ததும், அந்த நான்கு தொழுநோயாளர்களும் எவ்வாறு நல்ல மற்றும் உன்னதமான வழியில் செயல்பட்டார்கள் என்பதை அவர் பகிர்ந்துகொள்கிறார்.

117. அரசர்களின் நூல்களில் நாம் வாசிப்பது போல, தொழுநோயாளிகள் கூட நல்ல காரியங்களில் அக்கறை காட்டியபோது, ​​கர்த்தருடைய மக்கள் தகுந்த மற்றும் நல்ல காரியங்களில் கரிசனை காட்டியது குறித்து எமக்கு ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

118. சிரியப் படை நகரத்தை முற்றுகையிட்டதால், சமாரியா ஒரு கடுமையான பஞ்சத்தால் தாக்கப்பட்டது. கவலையடைந்த அரசன் மதில்களின் ஓரமாக இருந்த காவலர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, ​​ஒரு பெண் அவனை அணுகி, “இந்தப் பெண் என் மகனைக் கையளிக்க என்னைச் சம்மதிக்க வைத்தாள் — நானும் உடன்பட்டேன், நாங்கள் அவனைக் கொன்று சமைத்து உண்டோம். அடுத்துத் தன் மகனை அழைத்து வருவதாகவும், நாம் அனைவரும் சேர்ந்து அவனையும் கொன்று சமைத்துண்ணலாம் என்றும் அவள் வாக்குறுதி அளித்தாள். ஆனால் இப்போது அவள் தன் மகனை மறைத்து வைத்துக்கொண்டு வெளியே கொண்டு வர மறுக்கிறாள்” என்றாள். இந்தப் பெண்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளையே கொன்று நரமாமிசம் உண்ணும் பழக்கத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றியதால் அரசன் மிகவும் கலக்கமடைந்தான்; இத்தகைய உச்சகட்டத் துன்பத்தைக் கண்டு மனம் உருகிய அவன், தீர்க்கதரிசியான எலிசாவைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தினான். முற்றுகையை நீக்கி, பஞ்சத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சக்தி எலிசாவிடம் இருப்பதாக அவன் நினைத்தான். ஒருவேளை, பார்வையிழந்த சிரியர்களைத் தாக்கவிடாமல் தீர்க்கதரிசி தன்னைத் தடுத்ததால் அவன் கோபமடைந்திருக்கலாம் என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

119. எலிசா பெத்தெலில் மூப்பர்களுடன் இருந்தபோது, ​​அரசனின் தூதன் அங்கு வந்தான். அவன் மூப்பர்களிடம், “அந்தக் கொலைக்காரியின் மகன் என் தலையை வெட்டிப் போடுவதற்கு ஆள் அனுப்பியிருப்பதைப் பார்க்கிறீர்களா?” என்று கேட்டான். அப்போது, ​​எலிசாவின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அரசரின் செய்தியுடன் தூதன் வந்தான். தீர்க்கதரிசி பதிலளிக்கையில் “நாளை இந்த நேரத்தில், சமாரியாவின் வாசலில் ஒரு ஷேக்கல் விலைக்கு சிறந்த மாவும், ஒரு ஷேக்கல் விலைக்கு இரண்டு அளவு வாற்கோதுமையும் விற்கப்படும்” என்றான். தூதன் இதைச் சந்தேகித்து, “கர்த்தர் வானத்திலிருந்து தானியத்தைப் பொழிந்தாலும், அது நடக்காது” என்று சொன்னபோது, ​​எலிசா பதிலளித்தார், “நீ விசுவாசிக்காதபடியால், அதை உன் கண்களாலேயே காண்பாய், ஆனால் அதில் எதையும் நீ உண்ணமாட்டாய்” என்றான்.

120. திடீரென்று, சிரியாவின் முகாம் இரதங்களின் சத்தம், குதிரைகளின் பெரும் கனைச்சல் மற்றும் ஒரு மாபெரும் போரின் அமளி ஆகியவற்றால் நிரம்பியது. இஸ்ரவேலின் அரசன், எகிப்தின் அரசனையும் அமோரியர்களின் அரசனையும் உதவிக்கு அழைத்திருக்கிறான் என்று சிரியர்கள் நம்பினார்கள்; அதனால், விடியற்காலையில் தங்கள் கூடாரங்களைக் கைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். புதிய எதிரிகளின் திடீர் வருகையால் தாங்கள் நிலைகுலைந்து விடுவோமோ என்று அவர்கள் பீதியடைந்து மன்னர்களின் ஒருங்கிணைந்த வலிமையைத் தங்களால் சமாளிக்க முடியாது என்றும் உணர்ந்தனர். இதற்கிடையில், சமாரியாவில் இதைப் பற்றி யாருக்கும் தெரியாது; அவர்கள் ஊரை விட்டு வெளியேற மிகவும் பயந்ததோடு, பசியாலும் பலவீனமடைந்திருந்தனர்.

121. நகரத்தின் வாயிலில் நான்கு தொழுநோயாளிகள் பரிதாபகரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். உண்மையைச் சொல்லப் போனால், இறப்பதே சிறந்த வழி என்று அவர்களுக்குத் தோன்றியது. அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்: “பாருங்கள், நாம் இங்கேயே வெட்டியாக உட்கார்ந்திருந்தால் இறந்துவிடுவோம். நகரத்திற்குள் சென்றால் பட்டினியால் இறந்துவிடுவோம். ஆகவே சிரியர்களின் முகாமுக்குச் சென்று பார்ப்போம்; அவர்கள் நம்மைக் கொல்லக்கூடும், அல்லது நமக்கு உதவவும் கூடும்” என்று பேசிக்கொண்டார்கள். எனவே, அவர்கள் அந்த முகாமுக்குச் சென்றார்கள். ஆனால் அங்கு என்ன நடந்தது தெரியுமா? அந்த இடம் எதிரிகளால் முற்றிலுமாக கைவிடப்பட்டிருந்தது. அந்த நான்கு தொழுநோயாளிகளும் கூடாரங்களுக்குள் சென்று, உணவைக் கண்டு வயிறு நிறைய உண்டனர். அதன்பிறகு, தங்களால் சுமக்க முடிந்த அளவு தங்கத்தையும் வெள்ளியையும் அள்ளிக்கொண்டனர். ஆனால், அவர்கள் கொள்ளைப் பொருட்களின் மீது மட்டுமே குறியாக இருந்தபோது, ​​சிரியர்கள் தப்பி ஓடிவிட்டார்கள் என்பதை அரசனுக்கு அறிவிக்க ஏற்பாடு செய்தார்கள்; ஏனெனில், வஞ்சகமாக ஈட்டிய கொள்ளைப் பொருட்களைத் தங்களிடம் வைத்துக்கொண்டு தகவலை மறைப்பதை விட, இதுகுறித்து அரசனுக்கு அறிவிப்பதே மிகவும் அறம் வாய்ந்தது என்று அவர்கள் நினைத்தார்கள்.

122. இந்தச் செய்தியைக் கேட்டதும், மக்கள் விரைந்து புறப்பட்டுச் சென்று சிரியாவின் பாளையத்தைத் தாக்கிக் கொள்ளையடித்தனர். எதிரியின் பொருட்கள் அங்கு ஏராளமாகக் கிடைத்தன. இது தீர்க்கதரிசி முன்னறிவித்தபடியே தானியங்களின் விலையில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது: ஒரு ஷேகலுக்கு ஒரு அளவு சிறந்த மாவும், ஒரு ஷேகலுக்கு இரண்டு அளவு வாற்கோதுமையும் கிடைத்தன. மக்களின் கொண்டாட்டத்தின் நடுவே, அரசனை நம்பியிருந்த அந்த அதிகாரி, மக்கள் கூட்டம் மிகுந்த உற்சாகத்துடன் வெளியே விரைந்தபோதும் அல்லது திரும்பி உள்ளே வந்தபோதும் அவர்களால் அங்கே ஏற்பட்ட அமளிதுமளியால் மிதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

அத்தியாயம் 21

தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோதும், எஸ்தர் நற்பண்பின் அருளைப் பின்பற்றினாள்; தன் நண்பர்களில் ஒருவன் மரணத்தை எதிர்கொண்டபோது, ​​இஸ்ரவேல் அல்லாத ஒரு அரசன்கூட தனது விசுவாசத்தைக் காட்டினான். யொனதன் மற்றும் அகிமெலேக் நிரூபித்ததைப் போலவே, உண்மையான நட்பு எப்போதும் சரியானதைச் செய்வதை உள்ளடக்கியது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.

123. எஸ்தர் 4:16-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரசி எஸ்தர் ஏன் தன்னை ஆபத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என்று தெரிந்திருந்தும் ஒரு பலம் மிக்க அரசனின் கோபத்திலிருந்து பின்வாங்கவில்லை? தன் மக்களை மரணத்திலிருந்து காப்பது, உன்னதமானதும் பாராட்டத்தக்கதுமான ஒரு செயல் அல்லவா? பாரசீகத்தின் அரசன் கூட மூர்க்கமான மற்றும் கர்வமுள்ள சுபாவம் கொண்டவனாக இருந்தபோதிலும், தனக்கு எதிரான சதியை வெளிப்படுத்திய மனிதனைக் கௌரவிப்பது பொருத்தமானது என்று கருதினான். எஸ்தர் 6:10-ல் காணப்படுவது போல, ஒரு சுதந்திரமான மக்களை அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றவும், அவர்களை மரணத்திலிருந்து மீட்கவும், அத்தகைய இழிவான திட்டங்களைத் தீட்டியவனை விட்டுவைக்காமல் இருக்கவும் அவன் அவ்வாறு செய்தான். இறுதியில், தனக்கு அடுத்த நிலையில் இருந்தவனும், தனது நெருங்கிய நண்பனாகக் கருதியவனுமான அந்த மனிதனைக் கொல்லும்படி அவன் உத்தரவிட்டான். எஸ்தர் 7:9-10-ல், அந்த மனிதன் தனது வஞ்சகமான ஆலோசனையால் தன்னை அவமதித்துவிட்டான் என்று அவன் நம்பினான் என்று கூறப்பட்டுள்ளது.

124. நற்பண்புகளை நிலைநிறுத்தும் ஒரு உண்மையான நட்பு, செல்வம், கௌரவம் மற்றும் அதிகாரத்தை விட நிச்சயமாக அதிக மதிப்பு வாய்ந்தது. அது எப்போதும் நற்பண்புகளுக்குப் பிறகே வருகிறது, அத்தோடு நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது. உதாரணத்துக்கு யொனதனை எடுத்துக்கொள்வோம்; தன் நண்பன் தாவீதின் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக அவனைத் தன் தந்தையின் கோபத்திலிருந்து விலகவோ அல்லது தன்னை ஆபத்தில் சிக்க வைக்கவோ இல்லை. அதேபோல், அகிமெலேக் என்பவன் தப்பி ஓடிக்கொண்டிருந்த தன் நண்பனைக் காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக, விருந்தோம்பல் கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே மரணத்தை எதிர்கொள்ள முடிவெடுத்தான். இந்த உதாரணங்கள் உண்மையான நட்பின் வலிமையைக் காட்டுகின்றன.

அத்தியாயம் 22

ஒரு நண்பனுக்காக நற்குணத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது. இருப்பினும், ஒரு நண்பனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல நேர்ந்தால், அதை மிகுந்த கவனத்துடன் சொல்ல வேண்டும். நண்பர்களிடையே, உள்ளத்தைத் திறந்து பேச எவ்வளவு நேர்மை வேண்டும், துன்பங்களைத் தாங்குவதில் எவ்வளவு பெருந்தன்மை வேண்டும், குறைகளைச் சுட்டிக்காட்டுவதில் எவ்வளவு வெளிப்படைத்தன்மை வேண்டும்! நட்பு, ஒத்த குணம் கொண்டவர்களிடம் மட்டுமே காணப்படும் நல்ல குணங்களைப் பாதுகாக்கிறது. அது திருத்துவதில் மென்மையாகவும், தன் சொந்த நலனைத் தேடாததாகவும் இருக்க வேண்டும்; எனவேதான், செல்வந்தர்களிடையே உண்மையான நண்பர்கள் அரிதாகவே காணப்படுகின்றனர். நட்பின் முக்கியத்துவம் என்றால் என்ன? யூதாஸ் மற்றும் யோபுவின் நண்பர்களின் உதாரணங்களிலிருந்து நாம் காண்பது போல, ஒரு நண்பனின் துரோகம் மிகவும் மோசமானதாகவும் தாங்கமுடியாததுமாக இருப்பதால், அது மற்றவரின் துரோகத்தை விட அதிகமான வேதனையையும் மன உளைச்சலையும் தருகிறது.

125. நட்பு உட்பட, மற்ற எல்லாவற்றையும் விட நாம் எப்போதும் நற்பண்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த முக்கியமான உண்மையை திருமறை நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு நண்பனுக்கு உதவுவதற்காக ஒருவர் தன் நாட்டைக் காட்டிக் கொடுக்கலாமா? அல்லது ஒரு நண்பனின் நலன்களை ஆதரிப்பதற்காகக் கொடுத்த வாக்குறுதியை மீறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? என்பது போன்ற கடினமான கேள்விகளைப் பற்றி தத்துவஞானிகள் விவாதித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலைகள், விசுவாசம் மற்றும் நேர்மை குறித்த நமது புரிதலுக்குச் சவால் விடுகின்றன; நமது உறவுகளிலும் தார்மீகத் தேர்வுகளிலும் எது உண்மையாகவே முக்கியமானது என்பதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

126. ஒரு நண்பருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி சொல்பவர், ஆயுதத்தைப் போல ஆபத்தானவர் என்று நீதிமொழிகள் 25:18-ல் வேதாகமம் நமக்கு நினைவூட்டுகிறது. இது வெறுமனே ஒரு நண்பருக்கு எதிராகச் சாட்சி சொல்வது மட்டுமல்ல, உண்மையுடன் இருப்பது பற்றியது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஒரு நண்பருக்கான நமது விசுவாசம், கடவுள் அல்லது நமது நாட்டிற்கான நமது கடமையை விட மேலானதாக இருக்க வேண்டுமா என்று நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில், வஞ்சகமான குற்றச்சாட்டுகளிலிருந்து நமது நண்பர்களைப் பாதுகாக்க, நேர்மையான சாட்சியத்தை வழங்குவது அவசியமாகும். மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்க விரும்பும் ஒரு நண்பரை நாம் ஆதரிக்கக் கூடாது, அத்தோடு, அப்பாவி ஒருவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டவும் கூடாது. எதோ ஒரு கட்டத்தில் அது சவாலாக இருக்கும்போதும், உண்மையின் பக்கம் நிற்பது நமது பொறுப்பாகும்.

127. ஒரு நண்பன் தவறு செய்வதை நீங்கள் கண்டால், அதைச் சுட்டிக்காட்டுவது முக்கியம். முதலில், அதைப் பற்றி அவனிடம் தனிப்பட்ட முறையில் பேசுங்கள். அவன் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டால், மீண்டும் அந்தத் தவறு குறித்து நீங்கள் அவனிடம் வெளிப்படையாகப் பேசி புரியவைக்க வேண்டியிருக்கும். ஒருவரின் மனது புண்பட்டுவிடும் என்பதற்காக, மௌனமாக இருப்பதை விட, நேர்மையான முறையில் உங்கள் கருத்தைத் தெரிவிப்பது பெரும்பாலும் அதிக மதிப்பு வாய்ந்ததாக இருக்கும். உங்கள் நண்பர் உங்கள் வார்த்தைகளால் வருத்தமடைந்தாலும், உங்கள் கருத்தைத் தெரிவிப்பது அந்தப் பொழுதில் பலன் இல்லாவிட்டாலும், ஒருநாள் அவனுக்கு அது புரியும். மற்றவர்களின் வெற்றுப் புகழ்ச்சியை விட, ஒரு நண்பனின் நேர்மையான விமர்சனம் அதிக நன்மை பயக்கும் என்று பொருள்படும் விதத்தில், நீதிமொழிகள் 27:6 “உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான்” என்று நமக்கு மிகவும் அழகாக நினைவூட்டுகிறது. ஆகவே, உண்மையான நட்பு என்பது நம்பகத்தன்மையுடனும் ஆதரவுடனும் இருப்பதாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அற்ப விஷயங்களுக்காக ஒரு உண்மையான நண்பரைக் கைவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். உறுதியுடன் இருங்கள் மற்றும் உண்மையிலேயே முக்கியமானவர்கள் மீது அக்கறை காட்டுங்கள்.

128. ஒரு நண்பரிடம் உங்கள் மனதைத் திறப்பது, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் ஆதரவையும் கொண்டுவந்து ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்துகிறது. சீராக் 6:16-ல் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளபடி, “நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்” என்கிறது. உங்கள் நண்பர்களைச் சமமாக நடத்துங்கள், சிறிய வழிகளில் கருணை காட்டத் தயங்காதீர்கள்—நட்பு பெருமையால் தழைத்தோங்காது. ஞானமான கூற்று கூறுவது போல, ஒரு நண்பரை வாழ்த்தக் கரம் நீட்டத் தயங்காதீர்கள் என்று பொருள்படும் வகையில், “நண்பருக்குப் பாதுகாப்பு அளிக்க நான் வெட்கப்பட மாட்டேன்; அவரது பார்வையினின்று என்னை மறைத்துக் கொள்ளவும் மாட்டேன்” என்று சீராக் 22:25 கூறுகிறது. மேலும் இந்தத் தலைப்பு குறித்து கலாத்தியர் 6:2 நமக்குக் கூறுவதையும் பார்ப்போம். “உங்களுக்குச் சுமையாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்போது கிறிஸ்துவின் ஆணைகளுக்கு உண்மையாகவே கீழ்ப்படிகிறீர்கள்” என்று கூறும்போது, நம் நண்பர்களுக்கு; குறிப்பாக அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது, ​​துணை நிற்பது முக்கியம். நட்பு என்பது ஒரு உறுதியான ஆதரவு தரக்கூடிய அமைப்பு போன்றது. இந்த வாக்கியங்களுக்கூடாக அப்போஸ்தலன் பவுல் நம்மை ஊக்குவித்தது போலவே, நாம் அனைவரும் ஒரே சமூகத்தின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து, ஒருவருக்கொருவர் சுமைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். செழிப்பான காலத்தில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள் என்றால், துன்ப காலங்களில் ஏன் அவர்கள் தங்கள் ஆதரவை வழங்குவதில்லை? குறைந்த பட்சம், ஆலோசனை வழங்குவதன் மூலம் பரஸ்பரம் உதவுவதில் மகிழ்ச்சி கொண்டு நமது சிறந்த முயற்சிகளை வழங்கி நமது உண்மையான அனுதாபத்தைக் காட்டலாம், இவை அனைத்திலும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நிற்கலாம்.

129. சில சமயங்களில் நாம் நமது நண்பர்களுக்காகச் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, அது விமர்சனத்தையோ அல்லது விரோதத்தையோ கையாள்வதாகக் கூட இருக்கலாம். பழி சுமத்தப்படும் அல்லது விமர்சிக்கப்படும் ஒரு நண்பனுக்காக நீங்கள் துணை நிற்கும் போது, ​​அது குறித்து நீங்கள் சங்கடமாக உணரலாம், ஆனால் அது மதிப்பு வாய்ந்தது. இதற்கு ஒரு அடையாளமாக சீராக் 22:26 இவ்வாறு கூறுகிறது: “நான் என் நண்பனை அடைக்கலம் புகச் செய்யவோ, அவனைக் காக்கவோ வெட்கப்படமாட்டேன்; அவனால் எனக்குத் தீங்கு ஏற்படுமானால், அதுகுறித்து அறிந்துகொள்ளும் அனைவரும் அவனிடம் எச்சரிக்கையாக இருப்பார்கள்” என்று. இருந்தபோதும், நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும், நம் நண்பர்களுக்காக நாம் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். உண்மையான நட்பு கடினமான காலங்களில் தான் தன் வலிமையை வெளிப்படுத்துகின்றது. நல்ல வசதியாக நீங்கள் வாழும் காலங்களில், உங்கள் உண்மையான நண்பர்கள் யார் என்று கண்டறிவது கடினமாக இருக்கலாம். மேலும், நம் நண்பர்கள் வெற்றியை அனுபவிக்கும்போது பணிவுடன் இருக்கவும், அந்த வெற்றி தலைக்கனத்தை ஏற்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்ளவும் அவர்களுக்கு நினைவூட்டுவது நண்பர்களின் தலையாய கடமையாகும்.

130. யோபு 19:21 ல், கடினமான காலங்களை எதிர்கொண்டபோது, ​​”என் நண்பர்களே, என்மீது இரக்கமாயிருங்கள்” என்று பிரபலமாகக் கூறினார். இது வெறும் துக்கத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல; இது புரிதலுக்கான ஓர் அழைப்பும் கூட. தன்னை ஆதரிப்பதற்குப் பதிலாக, தன்னை விமர்சித்த தன் நண்பர்களால் தான் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அவர் உணர்ந்தார். யோபு சாராம்சத்தில், “என் போராட்டங்களின் போது நீங்கள் என்மீது இரக்கம் காட்ட வேண்டும், ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் என்னைத் தாக்கவே முனைந்தீர்கள்” என்று கூறினார். இது, துன்ப காலங்களில், குறிப்பாக நாம் நேசிப்பவர்களிடமிருந்து அனுதாபத்திற்கான ஆழ்ந்த தேவையைப் பிரதிபலிக்கிறது.

131. என் அன்பு மகன்மாரே, உங்கள் சகோதரர்களுடன் நீங்கள் ஏற்படுத்திய நட்பைப் போற்றிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளவும், உங்கள் இரகசியங்களை நீங்கள் உண்மையிலேயே நம்பக்கூடிய ஒருவர் இருப்பதை விடவும் வாழ்க்கையில் அழகான ஒரு வெகுமதி எதுவுமில்லை. உங்கள் வெற்றிகளை உங்களுடன் கொண்டாடும், கடினமான காலங்களில் தோள்கொடுத்து, சவால்களின் போது உங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு உண்மையான நண்பர் இருப்பது போன்ற ஆறுதல் எதுவுமில்லை. அக்கினிச் சூளையிலும் ஒற்றுமையாக இருந்த அந்த எபிரேயச் சிறுவர்களின் பிணைப்பைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; அவர்களுடைய நட்பு உடைக்க முடியாததாக இருந்தது. மேலும், புனித தாவீது குறிப்பிட்டது போல, சவுலுக்கும் யோனதனுக்கும் இடையே ஒரு அருமையான உறவும் ஆழமான நட்பும் இருந்தது—அவர்கள் வாழ்வில் பிரிக்க முடியாதவர்களாக இருந்தனர். மரணத்தின் போது கூட நெருக்கமாகவே இருந்தனர். நினைவில் கொள்ளுங்கள், இப்படியான உறவுகள் விலைமதிப்பற்றவை.

132. இதைத்தான் நட்பு உருவாக்குகிறது; எனவே நட்பின் பொருட்டு விசுவாசத்தை ஒதுக்கிவிடக் கூடாது. கடவுளுக்கு உண்மை இல்லாமல் இருக்கும் ஒருவனுக்கு மற்றொருவன் நண்பனாக இருக்க முடியாது. நட்பு கருணையைப் பாதுகாத்து, நேர்மையைக் கற்பிக்கிறது. அதனால், பொறுப்பில் இருப்பவர் பொறுப்பில் இல்லாதவரைப் போலவும், பொறுப்பில் இல்லாதவர் பொறுப்பில் இருப்பவரைப் போலவும் ஆகிறார். ஏனெனில், வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களிடையே நட்பு இருக்க முடியாது. ஆகையால், ஒவ்வொருவர் வெளிப்படுத்தும் கருணையும் மற்றவருக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். சூழ்நிலை வேறுபாடு காரணமாக பொறுப்பில் இல்லாதவர் அதிகாரமின்றியும், பொறுப்பில் இருப்பவர் அடக்கமின்றியும் இருத்தலாகாது. அவர் மற்றவரைத் தனக்குச் சமமானவர் போலக் கருதி அவர் சொல்வதைக் கேட்டு நடப்பதில் தவறில்லை. மற்றவரும், தற்பெருமைக்காக அல்லாமல் ஆழ்ந்த அக்கறை மற்றும் பரிபூரண உணர்வுடன் ஒரு நண்பனைப் போல அறிவுரை கூறி மற்றவரைத் திருத்தட்டும்.

134. நீங்கள் ஒரு நண்பருக்கு வழிகாட்டும்போது, ​​கடுமையாகவோ அல்லது விமர்சனத்தை ஏற்படுத்தும் விதமாகவோ இராமல், மென்மையாகவும் புரிதலுடனும் இருக்க முயற்சி செய்யுங்கள். நட்பு என்பது முகஸ்துதி மற்றும் மமதை ஆகிய இரண்டிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். உண்மையான நண்பர் என்பவர், நீங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கும் ஒருவர்; வெறும் இரு நபர்களாக இல்லாமல், ஆன்மாவின் ஆழத்தில் உங்களோடு இணைந்திருக்கும் ஒருவர். உங்கள் நண்பருடன் நீங்கள் எப்பொழுதும் போல இயல்பாக இருக்க வேண்டும்; உங்களை நம்புவது போலவே அவரையும் நம்ப வேண்டும்; அவரிடமிருந்து எந்தவிதமான நேர்மையற்ற செயலையும் எதிர்பார்க்கக் கூடாது. நட்பு என்பது இலாபம் ஈட்டுவது பற்றியது அல்ல; அது மரியாதை மற்றும் கருணையின் மீது தழைத்தோங்குகிறது. அது பணம் அல்லது வெகுமதிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக ஒருவருக்கொருவர் நன்மை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும், அர்த்தமுள்ள வழியில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது.

134. இறுதியில், ஏழைகளுக்கு இடையே நிலவும் நட்பு என்பது பெரும்பாலும் செல்வந்தர்களுக்கு இடையேயான நட்பை விட வலிமையானதாக இருக்கின்றது. செல்வந்தர்கள் தாங்கள் தனிமையாக உணர்வது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல. அதே சமயம் சாமானியர்களுக்கு பொதுவாக நெருங்கிய நண்பர்களைக் கொண்ட வட்டம் இருக்கும். இதற்குக் காரணம், உண்மையான நட்பு முகஸ்துதி இல்லாத நேர்மையில் செழித்து வளர்கின்றது. மக்கள் செல்வந்தர்களை முகஸ்துதி செய்யலாம், ஆனால் சாமானியர்களிடம் அதிக உண்மைத்தன்மை உள்ளது, மேலும் அவர்களின் நட்பு பெரும்பாலும் பொறாமையற்றதாகவே இருக்கிறது.

135. தேவதூதர்களாலும் மனிதர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பை விட மதிப்புமிக்கது எது? வேதாகமத்தின் வாயிலாக, நம்மிடம் உள்ள வளங்களைக் கொண்டு நண்பர்களை உருவாக்கிக்கொள்ளும்படி இயேசு நமக்குச் சொல்கிறார். அப்போதுதான், ஓர் அரவணைப்பு தேவைப்படும்போது ​​இந்த நண்பர்கள் நமக்காக இருப்பார்கள். லூக்கா 16:9-ல், “தேவனிடம் நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம் அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய்” என்று கூறப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, இந்த உறவுகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை கர்த்தர் எமக்கு எடுத்துரைக்கிறார். யோவான் 15:14-ல் “”நான் கட்டளையிடுகிறதைச் செய்தால் நீங்கள் என் நண்பர்களாவீர்கள்” என்ற கர்த்தரின் வார்த்தைகள் வழியாக, தேவன் நம்மை வெறும் ஊழியர்களாகப் பார்க்காமல், நண்பர்களாகவே பார்க்கிறார் என்பது நிரூபணமாகிறது. நாம் எப்படி ஒரு நல்ல நண்பராக இருக்க வேண்டும் என்பதை இது நமக்குக் காட்டுகிறது. நாம் ஒருவருக்கொருவர் நமது எண்ணங்களையும் இரகசியங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும், மேலும் நமது நண்பர்கள் நமக்கு அளிக்கும் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும். நாம் நமது நண்பர்களிடம் நம் இதயங்களைத் திறப்பதன் மூலம், அவர்களும் நம்மிடம் அவ்வாறே செய்வதை வசதியாக உணர்வார்கள். இயேசு, தம் பிதாவிடமிருந்து தாம் அறிந்த அனைத்தையும் நம்முடன் பகிர்ந்துகொண்டதாக யோவான் 15:15-ல், “இனி நான் உங்களை சேவகர்கள் என்று அழைப்பதில்லை. ஏனெனில் சேவகன் ஒருவன் தன் எஜமானன் செய்வதை அறியான். ஆகவே நான் இப்பொழுது உங்களை நண்பர்கள் என்றே அழைக்கிறேன். ஏனென்றால் என் பிதா எனக்குச் சொன்னவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன் என்ற காரணத்தால்” என்று உறுதிப்படைக் கூறியுள்ளார். மேலும் அந்தக் காரணத்தின் நிமித்தமே அவர் நம்மை நண்பர்கள் என்று அழைக்கிறார். இயேசு நம்மிடம் இருப்பது போலவே, ஒரு உண்மையான நண்பர் நம்மோடு எப்போதும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பார்.

136. ஆகவே, கடவுளின் சித்தத்தைப் பின்பற்றும் ஒருவர், கடவுளின் நண்பர் என்று கருதப்படுகிறார். மேலும் அந்தப் பட்டத்தால் கௌரவிக்கப்படுகிறார். தேவனைப் போன்றே ஒரே மனநிலையைப் பகிர்ந்து கொள்ளும் எவரும் அவருடைய நண்பர்தான். நண்பர்களுக்குள் சிந்தனையில் ஒற்றுமை இருக்கும், அந்த நட்பைச் சிதைக்கும் ஒருவரை விட மோசமானவர் வேறு எவரும் இலர். அதனால்தான், துரோகியின் துரோகத்தின் மிக மோசமான அம்சத்தை ஆண்டவர் சுட்டிக்காட்டினார்: அவன் எந்த நன்றியையும் காட்டாமல் நட்பில் வன்மத்தைக் கலந்தான். அவர் மேலும் கூறுகையில், “என்னைப் போன்ற சிந்தனைகளைக் கொண்ட நீ, என் வழிகாட்டியும் தோழனுமாகிய நீ, எப்போதும் என்னுடன் இன்பமான உணவைப் பகிர்ந்து கொண்டாய்.” வேறுவிதமாகக் கூறினால், உனக்குக் கிருபை காட்டியவருக்கு எதிராக நீ திரும்பியதால், அது தாங்க முடியாததாக இருந்தது. என் எதிரி என்னை அவமதித்திருந்தால், நான் அதைச் சமாளித்திருப்பேன், மேலும் என்னை வெறுத்தவனிடமிருந்து ஒதுங்கி இருந்திருப்பேன். ஒரு எதிரியைக் குறித்து கவனமாக இருக்கலாம், ஆனால் நீ நம்பும் ஒரு நண்பன் உனக்குத் துரோகம் செய்யத் திட்டமிட்டால், அவனிடமிருந்து தப்பிப்பது கடினம். நாம் எவரிடம் நமது இரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லையோ அவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருந்தபோதிலும், நாம் ஏற்கனவே நம்பியவர்களிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது கடினம். அந்தப் பாவத்தின் கோரத்தை எடுத்துக்காட்ட, அவர், “நீ, என் அடியான், என் அப்போஸ்தலன்” என்று கூறவில்லை; மாறாக, “நீ, என்னைப் போன்ற மனதுள்ளவன்” என்று கூறினார்; அதாவது: நீ எனக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, உன்னைப் போன்ற ஒருவருக்கே துரோகம் செய்கிறாய் என்று பொருள்படும்படியாகத்தான் இதைக் கூறினார்.

137. புனித யோபுவை மதிக்காததால், மூன்று இளவரசர்கள் மீது கர்த்தர் மனவருத்தம் அடைந்த போதும் அவர்களுடைய நண்பர் மூலமாக அவர்களை மன்னிக்க அவர் விரும்பினார். எனவே யோபு அவர்களுக்காக ஜெபித்தார். யோபு மீது கொண்டிருந்த நட்பின் காரணமாக, கடவுள் இளவரசர்களை மன்னித்தார். யோபு 42:7-8-இல் காட்டப்பட்டுள்ளபடி, தங்கள் அகந்தையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்பு தான் இறுதியில் உதவியது.

138. என் பிள்ளைகளே, இவற்றை நான் உங்களிடம் விட்டுச் செல்கிறேன்; நீங்கள் இவற்றை உங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இவை உங்களுக்குப் பயன் தரக்கூடியதா என்பதை நீங்களே ஆராய்ந்து பார்ப்பீர்கள். இதற்கிடையில், இவை உங்களுக்குப் பல உதாரணங்களைத் தருகின்றன. ஏனெனில், ஏறக்குறைய நம் முன்னோர்களின் எல்லா உதாரணங்களும், அவர்கள் கூறியவற்றில் பலவும் இந்த மூன்று புத்தகங்களுக்குள் அடங்கியுள்ளன. ஆகையால், வார்த்தைகள் அழகாக இல்லாவிட்டாலும், இவ்வளவு சிறிய இடைவெளிக்குள் எழுதப்பட்ட தொடர்ச்சியான பழங்கால உதாரணங்கள் விலைமதிப்பற்ற போதனைகளை உங்களுக்கு வழங்கக்கூடும்.