Ambrose of Milan, On the Duties of the Clergy, in Tamil. Book 2.
புத்தகம் II
அத்தியாயம் 1
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதை நற்பண்புகளுடன் வாழ்வதன் மூலம் அடையலாம். இவ்வாறாக, ஒரு கிறிஸ்தவர் புகழையும் மனிதர்களின் தயவையும் வெறுத்தாலும், தாம் செய்பவற்றில் இறைவனை மட்டுமே பிரியப்படுத்த வேண்டியவராக இருக்கிறார்.
1. முதல் புத்தகத்தில், ஒரு நல்ல வாழ்க்கைக்குப் பொருத்தமானவை என்று நாம் கருதிய கடமைகளைப் பற்றிப் பேசினோம்; வேதாகமம் கூறுவதுபோல், நித்திய ஜீவன் என்ற ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை இவற்றைச் சார்ந்தே இருக்கிறது என்பதில் எவருக்கும் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருந்ததில்லை. ஒரு நல்ல வாழ்க்கையின் மகத்துவம் மிகவும் பெரியது, அமைதியான மனசாட்சியும் சாந்தமான கபடமற்ற தன்மையுமே மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்குகின்றன. உதிக்கும் சூரியன் சந்திரனின் வடிவத்தையும் நட்சத்திரங்களின் பிரகாசத்தையும் மறைப்பது போல, ஒரு நல்ல வாழ்க்கையின் பிரகாசம் உண்மையான மற்றும் தெளிவான மகத்துவத்துடன் பிரகாசிக்கும்போது, சரீரத்தின் தேவைகளின் அடிப்படையில் நல்லவை எனவும் மக்களால் முக்கியமானவையாகவும் மரியாதைக்குரியவையாகவும் பார்க்கப்படும் மற்ற எல்லா விஷயங்களையும் முக்கியத்துவம் குறைந்தவையாகத் தோன்றச் செய்து விடுகிறது.
2. வெளிப்படையாகச் சொல்வதானால், புறம்பானவர்களால் மதிப்பிடப்படாத ஒரு வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையாகும், ஏனெனில் அது தனது சொந்த உணர்வுகளின் மூலம் தன்னைத்தானே புரிந்துகொள்கிறது. வெகுமானமாக அதற்கு எந்த வகையிலும் மக்கள் கருத்து தேவையில்லை; தண்டனைகளைப் பற்றிய பயமும் அதற்கு இல்லை. அது புகழைப் பெறும் நோக்கில் பாடுபடுவதை எவ்வளவு குறைத்துக்கொள்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது தன்னை உயர்த்திக்கொள்கிறது. நிகழ்காலத்தில் மகிமையைத் தேடுவோர் அடையவிருக்கும் வெகுமானங்கள் இனி வரவிருப்பவற்றுடன் ஒப்பிடும்போது வெறும் நிலையற்றவையாகவே தோன்றுகின்றன. மேலும், வேதவாக்கியங்களில் கூறப்பட்டுள்ளபடி, அவை உண்மையில் நித்திய ஜீவனைத் தடுக்கக்கூடும்: மத்தேயு 6:2-ல் “நீங்கள் ஏழை மக்களுக்கு உதவும்பொழுது, உதவுவதைக் குறித்து விளம்பரம் செய்யாதீர்கள். நல்லவர்களைப் போல நடிக்கும் மனிதர்களைப் போல் நீங்கள் செய்யாதீர்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிறருக்கு உதவுவதற்கு முன்னர் குழல் ஊதி அறிவித்து, மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்” என்ற கர்த்தரின் வார்த்தைகளை எமக்கு நினைவூட்டுகிறார்.
3. ஆகையால், இரக்கம் காட்டுவதும், தனிமையில் உபவாசம் இருப்பதும் நற்பண்பு மிக்க வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்; இதன்மூலம் நீங்கள் மனிதர்களிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்து மட்டுமே வெகுமதியைத் தேடுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். மனிதனிடமிருந்து அதைத் தேடுபவனோ தன் வெகுமதியை மட்டுமே பெற்றுவிடுகிறான்; ஆனால் கடவுளிடமிருந்து அதைத் தேடுபவன் நித்திய ஜீவனைப் பெறுகிறான். நித்தியத்தின் தேவனைத் தவிர வேறு எவராலும் அதை அருள முடியாது. லூக்கா 23:43 நற்செய்தியில் சொல்லப்பட்டிருப்பது போல “மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன், இன்றே நீ என்னுடன் பரலோகத்தில் இருப்பாய்” என்று. எனவே, பாக்கியவானான அந்த ஜீவனை, நித்திய ஜீவன் என்று வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. இந்த விஷயத்தில் அது மனிதனின் கருத்துக்களின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு விடப்படவில்லை, மாறாக தெய்வீகத் தீர்ப்புக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் 2
இது மகிழ்ச்சி குறித்த பல்வேறு தத்துவஞானிகளின் நம்பிக்கைகளைப் பற்றி விவாதிக்கிறது. கடவுளை அறிவதாலும் நற்செயல்கள் செய்வதாலும் மகிழ்ச்சி வருகிறது என்பதை ஆசிரியர் முதலில் நற்செய்தியைப் பயன்படுத்தி விளக்கினார். இந்தக் கருத்து தத்துவஞானிகளிடமிருந்து எடுக்கப்படவில்லை என்பதைகே குறிக்க, அவர் தீர்க்கதரிசிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட சான்றுகளையும் வழங்குகிறார்.
4. 4. தத்துவஞானிகள் மகிழ்ச்சியான வாழ்வானது ஹைரோனிமஸைப் போல (Hieronymus) துன்பத்திலிருந்து விடுபடுவதையோ அல்லது ஹெரில்லஸைப் போல (Herillus) விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் அறிவைச் சார்ந்திருப்பதாகக் கருதினர். அரிஸ்டோட்டில் மற்றும் தியோஃப்ராஸ்டஸ் (Theophrastus) ஆகியோரால் அறிவு மிகவும் உயர்வாகப் புகழப்பட்டதைக் கேட்ட ஹெரில்லஸ், அவர்கள் அதை ஒரே நன்மையாக அல்லாமல் ஒரு நல்ல விஷயமாகவே புகழ்ந்தபோதிலும், அறிவை மட்டுமே முதன்மையான நன்மையாகக் கருதினார். இருப்பினும், அவர்கள் விஷயங்களைத் தெரிந்துகொள்வதை ஒரு நல்ல விஷயமாகப் புகழ்ந்தார்களே தவிர, அதுவே ஒரே நன்மை என்று கருதவில்லை. எபிகூரஸ் (Epicurus) போன்ற மற்றவர்கள், இன்பமே முதன்மையான நன்மை என்று கூறினர். அவருக்குப் பின் வந்த காலிஃபோ மற்றும் டியோடோரஸ் (Callipho and Diodorus) போன்ற மற்றவர்கள், ஒரு நல்ல வாழ்க்கைக்கு நற்பண்பும் இன்பமும், அல்லது நற்பண்பும் வலியிலிருந்து விடுதலையும் தேவை என்றும், அவை இல்லாமல் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையாது என்றும் கருதினர். ஸ்டோயிக்கான ஸீனோ (Zeno, a Stoic) என்பவர் மிக உயர்ந்ததும் மற்றும் ஒரே நன்மை என்பதும் நற்பண்புடன் வாழ்வதுதான் என்று நம்பினார். ஆனால் அரிஸ்டோட்டில், தியோஃப்ராஸ்டஸ் மற்றும் பிற பெரிபேட்டெடிக்ஸ் (Peripatetics) எனப்படும் அடிக்கடி இடம்பெயர்ந்து வாழ்வோரும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது நற்பண்பில், அதாவது நற்பண்புடன் வாழ்வதில் உள்ளது என்றும், நல்ல ஆரோக்கியம் மற்றும் பிற வெளிப்புற நன்மைகள் அதை முழுமையாக்குகின்றன என்றும் நம்பினர்.
5. இருப்பினும், நித்திய ஜீவன் என்பது தெய்வீக காரியங்களைப் புரிந்துகொள்வதையும் நற்கிரியைகளைச் செய்வதையும் அடிப்படையாகக் கொண்டது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இந்த இரண்டு கூற்றுகளையும் நற்செய்தி வலுப்படுத்துகிறது. கர்த்தராகிய இயேசு அறிவைக் குறித்து இவ்வாறு கூறினார். “ஒரே மெய்யான தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என்று யோவான் 17:3 கூறுகிறது. அதேவேளை, மத்தேயு 19:29 இல், செயல்களைக் குறித்து அவர் கூறும்போது, “என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான்” என்று கூறப்பட்டுள்ளது.
6. இது சமீபத்தில் கூறப்பட்டது என்றும், நற்செய்தியில் குறிப்பிடப்படுவதற்கு முன்பே தத்துவஞானிகள் இதைப் பற்றிப் பேசினார்கள் என்றும் சொல்லப்படும் கூற்றை எவரும் நம்ப வேண்டாம். ஏனெனில், அரிஸ்டோட்டில் மற்றும் தியோஃப்ராஸ்டஸ், அத்துடன் ஸீனோ மற்றும் ஹிரோனிமஸ் ஆகிய தத்துவஞானிகள் நிச்சயமாக நற்செய்தியின் காலத்திற்கு முன்பே வாழ்ந்தவர்கள் என்றபோதிலும், அவர்கள் தீர்க்கதரிசிகளுக்குப் பிறகு தான் தோன்றினார்கள். மாறாக, தத்துவஞானிகளின் பெயர்கள் கூட அறியப்படுவதற்கு எவ்வளவு காலத்திற்கு முன்பே, இந்த இரண்டு கருத்துக்களும் பரிசுத்த தாவீதால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், “கர்த்தாவே, நீர் எவனை வழிநடத்தி, உமது பிரமாணத்திலிருந்து அவனுக்குப் போதிக்கிறீரோ, அவன் பாக்கியவான்” என்றும், பிறிதொரு இடத்தில், “கர்த்தரை மதிக்கிறவன் பாக்கியவான், அவன் அவருடைய கட்டளைகளால் மிகவும் மகிழ்ச்சியடைவான்” என்று எழுதப்பட்டிருப்பதையும் காணலாம். அறிவைப் பொறுத்தவரை நமது கருத்தை நாம் நிரூபித்துள்ளோம்; அதற்கான வெகுமதி நித்தியமான பலன்களாக இருக்கும் என்று தீர்க்கதரிசி கூறுகிறார். மேலும், கர்த்தரை மதித்து, அவருடைய கட்டளையால் அறிவுறுத்தப்பட்டு, தெய்வீகக் கட்டளைகளில் மிகவும் மகிழ்ச்சியடையும் ஒருவனின் வீட்டில் மரியாதையும் செல்வமும் இருக்கும்; அவனுடைய நேர்மையான நடத்தை என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் கூறுகிறார். அதே சங்கீதத்தில், நற்செயல்கள் ஒரு நேர்மையான மனிதனுக்கு நித்திய ஜீவன் எனும் வெகுமதியைப் பெற்றுத்தரும் என்று அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, இரக்கம் காட்டித் தானம் செய்பவன் பாக்கியவான்; அவன் தன் செய்கைகளை ஞானத்தின் வழிகாட்டுதலோடு நிர்வகிப்பான்; நிச்சயமாக, அந்த நல்ல மனிதன் என்றென்றும் நிலைத்திருப்பான்; என்றென்றும் நினைவுகூரப்படுவான். ஏனென்றால் அவன் ஏழைகளுக்குக் கொடுத்திருப்பதால் அவனுடைய நேர்மையான நடத்தை என்றென்றும் நிலைத்திருக்கும்.
7. ஆகவே, விசுவாசம் நித்திய வாழ்வின் வாக்குறுதியைக் கொண்டுவருவதால் அது ஒரு உறுதியான அடித்தளமாக இருக்கிறது. நற்செயல்களும் இந்த வாக்குறுதியைப் பகிர்ந்து கொள்கின்றன. ஏனெனில் ஒரு நீதிமான் தன் வார்த்தைகளாலும் செயல்களாலும் மதிப்பிடப்படுகிறான். ஒருவர் எப்போதும் வாயால் மட்டும் பேசிக்கொண்டு, செயலில் இறங்கத் தாமதித்தால், அது அவருடைய நடத்தை மற்றும் அறிவு உண்மையில் எவ்வளவு வெறுமையானது என்பதை வெளிப்படுத்துகிறது. என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தும், தனது அறிவைக்கொண்டு செயல்படத் தவறினால் அது இன்னும் மோசமானது. இதற்கு நேர்மாறாக, உள்ளத்தில் விசுவாசமற்றவராக இருந்துகொண்டு நற்செயல்களில் தீவிரமாக ஈடுபடுவது, ஒரு ஆட்டம் காணும், பலவீனமான அடித்தளத்தின் மீது அழகான, உயரமான குவிமாடத்தைக் கட்ட முயற்சிப்பதைப் போலவே பயனற்றது. நீங்கள் எவ்வளவு உயரமாகக் கட்டுகிறீர்களோ, அவ்வளவு கடினமாக வீழ்வீர்கள்; விசுவாசம் இல்லாமல், நற்செயல்கள் நிலைத்து நிற்க முடியாது. ஒரு துறைமுகத்தில் தளர்ந்த நிலையில் உள்ள ஒரு நங்கூரம் கப்பலை மூழ்கடித்து விடக்கூடும். மேலும் மணலால் ஆன அடித்தளம் ஒரு கட்டமைப்பின் எடையைத் தாங்க முடியாமல் விரைவில் சரிந்துவிடும். இவ்வுதாரணங்களைக் கொண்டு பார்க்கும்போது, நற்பண்புகள் முழுமையாக்கப்படும் இடத்திலும், நாம் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே ஒரு அறிவார்ந்த ஒரு ஒத்திசைவு காணப்படும் இடத்திலும் உண்மையான வெகுமதிகள் காணப்படும்.
அத்தியாயம் 3
வேதவாக்கியங்களிலிருந்து பெறப்பட்ட ஆசீர்வாதம் எனும் மகத்துவத்தின் வரையறை ஆராயப்பட்டு நிரூபிக்கப்படுகிறது. அது புற நல்வாய்ப்புகளால் அதிகரிக்கப்படவும் முடியாது, துரதிர்ஷ்டத்தால் குறைக்கப்படவும் முடியாது.
8. ஆகையால், தத்துவஞானிகளின் தேவையற்ற விவாதங்களின்படி, அறிவு என்பது தனித்து நிற்கும் வரையில் பயனற்றது என்றோ அல்லது ஒரு முழுமையற்ற கருத்து என்றோ ஒதுக்கி வைக்கப்படுவதால், தத்துவஞானிகள் பல சிக்கலான மற்றும் குழப்பமான கருத்துக்களைக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை தெய்வீக மறைநூல்கள் எவ்வளவு தெளிவாக விளக்குகின்றன என்பதை இப்போது நாம் கவனிப்போம். நற்பண்புகளைத் தவிர வேறொன்றும் நன்றன்று என்று திருமறைகள் கூறுகின்றன; மேலும், நற்பண்பு எல்லாச் சூழ்நிலைகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டது என்றும், அது உடல் ரீதியான அல்லது பிற வெளிப்புற நல்வாய்ப்புகளால் ஒருபோதும் மேம்படுத்தப்படுவதில்லை என்றும் துன்பங்களால் பலவீனமடைவதும் இல்லை என்றும் அவை கூறுகின்றன. ஒருவர் பாவத்திலிருந்து விடுபட்டு, களங்கமற்ற தன்மையால் முழுமைபெற்று, தேவ கிருபை முழுமையாக அருளப்பட்டிருக்கும் நிலையை விட மேலான ஆசீர்வதிக்கப்பட்ட நிலை வேறில்லை. இதுகுறித்து,’ துன்மார்க்கரின் ஆலோசனையைப் பின்பற்றாமலும், பாவிகளின் வழியில் நிற்காமலும், ஏளனம் செய்பவர்களின் கூட்டத்தில் அமராமலும், கர்த்தருடைய பிரமாணத்தில் பிரியப்படுகிற மனிதன் பாக்கியவான் என்றும், தங்கள் வழியில் சுத்தமானவர்களும், கர்த்தருடைய பிரமாணத்தின்படி நடப்பவர்களும் அதேபோல பாக்கியவான்கள் தான் என்றும் கூறப்பட்டுள்ளது.
9. ஆகவே, களங்கமின்மையும் அறிவும் சேர்ந்து ஒரு மனிதனை உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவனாக்குகின்றன. நற்செயல்களைச் செய்வதற்கான வெகுமதியே நித்திய ஜீவனின் மகிழ்ச்சி என்பதை நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளோம். இப்போது, இன்பத்தின் கவர்ச்சியையோ அல்லது துன்பத்தின் பயத்தையோ (முதலாவது பலவீனமானதாகவும் வீரியமற்றதாகவும், பிந்தையது கோழைத் தனமானதாகவும் கருதப்படுகிறது) நாம் புறக்கணிக்கும்போது, வலியின் மத்தியிலும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை உருவாக முடியும் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். நாம் வாசிக்கும்போது இது தெளிவாகிறது: மத்தேயு 5:11-12 இல், “உங்களுக்கெதிராகத் தீய சொற்களைப் பேசி மக்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதினிமித்தம் எல்லாவிதமான தீய சொற்களையும் உங்களுக்கு ஏதிராகச் சொல்வார்கள். அவற்றை மக்கள் உங்களுக்கு செய்யும் போது, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்கள். அதற்காக மகிழ்ச்சியடையுங்கள். தேவனுடைய மகத்தான வெகுமதி உங்களுக்குக் காத்திருக்கிறது. உங்களுக்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கும் மக்கள் அதே விதமான தீமைகளைச் செய்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அத்தோடு மீண்டும், மத்தேயு 16:24 கூறுகையில், “என்னைப் பின்தொடர விரும்பும் எவரும் தன் சுயவிருப்பங்களைத் துறந்து, தனக்கு ஏற்படும் துன்பங்களை ஏற்றுக்கொண்டு என்னைப் பின்தொடர வேண்டும்” என்ற கர்த்தரின் வார்த்தைகளை எமக்கு நினைவூட்டுகிறது.
அத்தியாயம் 4
ஆசீர்வாதம் தரும் மகிழ்ச்சியானது புற ஏதுக்களால் பாதிக்கப்படுவதில்லை என்ற அதே கருத்து, கடந்த கால மக்களின் உதாரணத்தால் காட்டப்படுகிறது.
10. அப்படியானால், துன்பங்களிலும் துக்கங்களிலும்கூட ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உண்டு. மனசாட்சியை ஆற்றுப்படுத்தவோ அல்லது கிருபையை அதிகரிக்கவோ தேவையான இயற்கை வளங்கள் ஏராளமாக இருப்பதால், நற்குணம் தன் இனிமையால் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி தன்னுள் வைத்திருக்கிறது. எகிப்தியர்களால் சூழப்பட்டு, கடலால் தடுக்கப்பட்டபோது, மோயீசன் தன் நற்கிரியையால் தனக்கும் மக்களுக்கும் கடல் நீரை ஊடறுத்து அதன் வழியே செல்ல ஒரு வழியைக் கண்டறிந்தபோது அவர் பெருமளவில் மகிழ்ச்சியடைந்தார் என்று யாத்திராகமம் 14 கூறுகிறது. மிகப்பெரிய ஆபத்துகளால் சூழப்பட்டிருந்தபோதும், பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை கைவிடாமல், வெற்றியைக் கோரிய அந்தத் தருணத்தில் இருந்ததைவிட, அவர் முன்னெப்போதும் அதிக தைரியசாலியாக இருந்ததில்லை.
11. அப்படியானால் ஆரோன் எப்படிப்பட்டவனாக இருந்திருக்கிறான்? “அவன் மரித்துப் போனவர்களுக்கும், இன்னும் உயிரோடு இருந்தவர்களுக்கும் இடையே நின்று அவர்களைத் சுத்தப்படுத்தவதற்கு உரியவற்றைச் செய்தான். ஆகையால் நோயும் நிறுத்தப்பட்டது” என்று எண்ணாகமம் 16:48 கூறுகிறது. பசிவெறிகொண்ட சிங்கங்களால் சூழப்பட்டிருந்தபோதும், அவற்றின் மூர்க்கத்தனத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாத அளவுக்கு ஞானமுள்ள வாலிபனாகிய தானியேலைப் பற்றி நான் என்ன சொல்வேன்? தன் செயலால் சிங்கங்கள் தன்னைப் புசித்து விடுமோ என்ற கவலையின்றி தன் உணவை உண்ணமுடிந்த அளவுக்கு அவன் அச்சமற்றவனாக இருந்தான்.
12. வலியில் ஒரு குறிப்பிட்ட நற்பண்பு உள்ளது, அது தெளிவான மனசாட்சியின் இனிமையை வெளிப்படுத்தக்கூடியது, மேலும் அது நற்பண்புடன் இருப்பதன் மகிழ்ச்சியைக் குறைகாது என்பதை நிரூபிக்கிறது. வலியால் நற்பண்பு குறைவதில்லை என்பது போலவே, உடலின் இன்பங்களும் நாம் பெறும் நன்மைகளும் அதற்குள் எதையும் சேர்ப்பதில்லை. பிலிப்பியர் 3:7-8-ல் அப்போஸ்தலர் இதை மிகச் சரியாகக் கூறுகிறார்: “ஒரு காலத்தில் எனக்கு இவை முக்கியமாய்த் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னால் அவை பயனற்றுப் போய்விட்டன. அவை மட்டுமல்ல, எனது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமாகக் கருதி, அவைகளை மதிப்பற்றவையாகப் பார்க்கிறேன் என்றும் கூறுகிறார்.
13. மோயீசனும் எகிப்தின் பொக்கிஷங்களைத் தனது இழப்பாகக் கருதினார்; இவ்வாறு அவர் கர்த்தருடைய சிலுவையின் நிந்தனையைத் தன் வாழ்வில் வெளிப்படுத்தினார். வனாந்தரத்தில் அவரும் அவருடைய மக்களும் அன்றாட உணவுக்கு வழியின்றி இருந்தபோது அவர் மனநிறைவின்றி இருந்தார் என்று யாராவது எண்ணினாலே தவிர, அவரிடம் செல்வம் ஏராளமாக இருந்தபோதும் அவர் செல்வந்தராக இருக்கவில்லை; பின்னர் பஞ்சம் ஏற்பட்டபோதும் அவர் ஏழையாகவும் இருக்கவில்லை. இதுவே உண்மை. இருப்பினும், தேவதூதர்களின் உணவான மன்னா, பரலோகத்திலிருந்து அவருக்கு வழங்கப்பட்டது. யாத்திராகமம் 16:13-ல் கூறப்பட்டுள்ளபடி, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். அதன்மூலம் முழுக் கூட்டத்திற்கும் அன்றாட மாமிச உணவின் தேவையை ஈடுசெய்யப் போதுமானதாக இருந்தது.
14. எலியா என்னும் புனிதமான மனிதன் உணவுக்காக அப்பத்தைத் தேடியிருந்தால், அதுவும் அவனுக்குக் கிடைக்காமல் போயிருக்கும்; ஆனால் அவன் அதைத் தேடாததால், அது அவனிடமிருந்து தப்பிவிடவில்லை. ஆகவே, காகங்கள் அவனது தினசரி உணவுத் தேவையை நிறைவேற்றின. காலையில் அவனுக்கு அப்பமும் மாலையில் இறைச்சியும் காகங்களால் வழங்கப்பட்டன. அவன் தன் பார்வையில் ஏழையாக இருந்ததால், அவன் ஆசீர்வதிக்கப்பட்டதில் ஏதேனும் குறை இருந்ததா? நிச்சயமாக இல்லை. உண்மையில், அவன் இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான், ஏனென்றால் அவன் கடவுளின் பார்வையில் செல்வந்தனாக இருந்தான். தனக்காகச் செல்வந்தனாக இருப்பதை விட, மற்றவர்களுக்காகச் செல்வந்தனாக இருப்பது சிறந்தது. அவன் நிச்சயமாகவே அப்படித்தான் இருந்தான், ஏனெனில் பஞ்சத்தின் போது, ஒரு விதவையிடம் உணவு கேட்டு, பின்பு அவளுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கத் திட்டமிட்டான். அதனால், மாவு நிரம்பிய ஒரு கொள்கலன் மூன்று வருடங்கள் ஆறு மாதங்களுக்குத் தீர்ந்து போகாமல் இருந்தது. அத்தோடு எண்ணெய் ஜாடியும் அந்த ஏழை விதவையின் அன்றாடத் தேவைகளை அந்தக் காலம் முழுவதும் பூர்த்தி செய்யக்கூடியதாய் இருந்தது. பேதுரு சொன்னது சரிதான், ஏனென்றால் அவன் அவர்களை முதலில் கண்ட இடத்தில் இருக்கவேண்டுமென்று விரும்பினான். மத்தேயு 17:3-ல், அவர்கள் மலையில் கிறிஸ்துவுடன் மகிமையில் காணப்பட்டார்கள், ஏனென்றால் அவர் செல்வந்தராக இருந்தபோதிலும் ஏழையானார்.
15. ஆகவே, செல்வம் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த உதவியையும் செய்வதில்லை. இந்த உண்மையை ஆண்டவர் லூக்காவின் 6:20-21 ம் நற்செய்தியில் பின்வருமாறு தெளிவாகக் கூறுகிறார்: “ஏழைகளே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குரியது. இப்போது பசியால் வாடுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நீங்கள் திருப்தி அடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் நீங்கள் சந்தோஷமாக புன்னகைப்பீர்கள்” என்று. பெரும்பாலும் துயர் நிறைந்தவை என்று கருதப்படும் வறுமை, பசி, பட்டினி மற்றும் துன்பம் ஆகியவை ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்குத் தடைகள் அல்ல என்பதை இது மிகத் தெளிவாக உணர்த்துகிறது; உண்மையில், அவை அந்த வாழ்க்கைக்கு நன்மை பயக்கக் கூடியவையாகவே இருக்கக்கூடும்.
அத்தியாயம் 5
பொதுவாக நல்லவை எனக் கருதப்படும் விஷயங்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தடையாக அமைகின்றன; தீயவை எனக் கருதப்படுபவை நற்பண்புகள் வளர்வதற்கான ஆதாரங்களாக அமைந்து விடுகின்றன. உண்மையாக, மகிழ்ச்சிக்கு வழிவகுப்பது எது என்பதை மற்ற எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன.
16. செல்வம், மிகுதியான தனம், துன்பமின்மை, மகிழ்ச்சி போன்ற நல்லவைகளாகத் தோன்றும் காரியங்கள், உண்மையில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்குத் தடையாக இருக்கின்றன. இதை ஆண்டவரும், லூக்கா 6:24-25 வழியாகத் தன் வார்த்தைகளில் காட்டியுள்ளார்: “செல்வந்தர்களே, நீங்கள் உங்கள் வாழ்வில் சுகமாக வாழ்ந்ததால் இனிமேல் அது உங்களுக்குக் கேடாக இருக்கும். இப்போது திருப்தி பெற்ற மக்களே, அது உங்களுக்குக் கேடாக இருக்கும். ஏனெனில் நீங்கள் பசியடைவீர்கள். தற்போது சிரிக்கும் மக்களே, அது உங்களுக்குக் கேடாக இருக்கும். ஏனெனில் நீங்கள் வேதனையும் அழுகையும் அடைவீர்கள்” என்று. எனவே, பொருள் மற்றும் செல்வங்கள் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை அடைவதற்கு உதவுவதில்லை; உண்மையில், அவை அதனை நோக்கிய பயணத்தை மேலும் கடினமாக்கக்கூடும்.
17. செல்வந்தர்கள் நாபோத்தின் மீது கல்லெறிந்தபோதிலும், அவன் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டான்; அரச செல்வங்களுடன் ஒப்பிடுகையில் அவன் பலவீனனாகவும் ஏழையாகவும் இருந்தபோதிலும், தன் நோக்கத்திலும் விசுவாசத்திலும் அவன் செல்வந்தனாகவே இருந்தான். உண்மையில், அவன் தன் தந்தையிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற திராட்சைத் தோட்டத்தை அரசனுடைய பணத்திற்காக மாற்றிக்கொள்ள விரும்பாத அளவுக்குச் செல்வந்தனானான். தன் முன்னோர்களின் உரிமைகளைத் தன் சொந்த இரத்தத்தால் பாதுகாத்ததால், இது அவனைப் பரிபூரணனாக்கியது. இதற்கு மாறாக, ஆகாப் தன் செயல்கள் காரணமாக, பரிதாபத்திற்கு உரியவனாக இருந்தான். ஏனெனில் அவன் அந்த ஏழையின் திராட்சைத் தோட்டத்தை அபகரித்துக்கொள்வதற்காக அவனைத் தீர்த்துக்கட்டுவதற்குக் காரணமாய் இருந்தான்.
18. அறம் மட்டுமே மிக உயர்வான நன்மையைத் தரும் என்பதும், அதுவே உண்மையாகவே ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஒரே காரணி என்பதும் தெளிவாகிறது. நித்திய வாழ்வைப் பெற நமக்கு உதவும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை, புற அல்லது உடல் சார்ந்த நன்மைகளைச் சார்ந்திருக்காமல், அறத்தை மட்டுமே சார்ந்துள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை நாம் இப்போது வாழும் விதத்திலிருந்து வருகிறது, அதேசமயம் நித்திய வாழ்வு என்பது எதிர்காலத்தில் நாம் எதிர்நோக்கும் வாழ்வைக் குறிக்கிறது.
19. இருப்பினும், சிலர் இந்த உடலில் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியமில்லை என்று நினைக்கிறார்கள், ஏனெனில் இந்த உடல் பலவீனமானது மற்றும் எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டது என்பதால். இதில், ஒருவர் வலியையும் துக்கத்தையும் உணர வேண்டும், ஒருவர் அழ வேண்டும், ஒருவர் நோய்வாய்ப்பட வேண்டும். எனவே, ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை உடல் அனுபவிக்கும் காரணிகளைச் சார்ந்துள்ளது என்றும், விசாலமான அறிவையோ, தெளிவான மனசாட்சியையோ, அல்லது உயர்ந்த ஒழுக்கத்தையோ சார்ந்து இல்லை என்றும் என்னால் கூறமுடியும். துன்பத்தின் மத்தியில் இராமல் அதை வெல்வதும், உலகம் நமக்குத் தரும் வலியின் தீவிரத்தைக் கண்டு அஞ்சாமல் இருப்பதுமே எமது வலிமைக்கு அடையாளமாக இருக்கிறது.
20. குருட்டுத்தன்மை, நாடுகடத்தப்படுதல், பசி பட்டினி, மகளுக்கு இழைக்கப்படும் கொடுமை, அல்லது பிள்ளைகளை இழத்தல் போன்ற, அவை ஏற்படுத்தும் துக்கத்தைப் பொறுத்தவரை கூடியவையாகக் கருதப்படும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். தன் முதுமையிலும் கூட பார்வையற்றிருந்தும், தன் ஆசீர்வாதத்தால் பிறரையும் கவர்ந்த ஈசாக்கு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை எவராலும் மறுக்க முடியுமா? என்று ஆதியாகமம் 27:28 கேள்வியியொன்றை எழுப்புகிறது. யாக்கோபும் ஆசீர்வதிக்கப்பட்டவர் அல்லவா, தன் தகப்பனின் வீட்டை விட்டு வெளியேறி, கூலிக்கு அமர்த்தப்பட்ட மேய்ப்பனாக நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில் இருந்த போதிலும் (ஆதியாகமம் 31:41), தன் மகளின் கற்புக்கு ஏற்பட்ட களங்கம் காரணமாகத் துக்கப்பட்டும், பசியால் வாடிய யாக்கோபு ஆசீர்வதிக்கப்பட்டவர் அல்லவா? (ஆதியாகமம் 34:5). அத்தோடு, ஆதியாகமம் 42:2 இல், ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன்’ என்று சொல்லப்பட்டிருக்கிறபடி, தங்கள் விசுவாசத்தை தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லவா? யாத்திராகமம் 3:6 இல் கூறப்பட்டுள்ளதுபோல, அடிமைத்தனம் என்பது ஒரு பரிதாபத்திற்குரிய நிலை என்றும், உண்மையில், அடிமைத்தனத்தில் இருந்தபோதும் தன் எஜமானியின் ஆசைகளுக்கு இணங்காதபடியால் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவரானார் என்று ஆதியாகமம் 39:7 இலும் சொல்லப்பட்டுள்ளதை மறுக்க முடியுமா? தனது மூன்று மகன்மாரின் இழப்பிற்காகவும், அதைவிடவும் மோசமானதான தன் மகளின் முறையற்ற உறவு நிமித்தம் புலம்பிய பரிசுத்த தாவீதைப் பற்றி நான் எப்படி விவரிப்பது? பலரை பாக்கியவான்களாக ஆக்கியவரும், ஆசீர்வாதத்தின் அதிபதியுமானவரே அவரிடமிருந்து தோன்றியபோது, அவர் எப்படி ஆசீர்வாதமற்றவராக இருக்க முடியும்? ஏனெனில், “என்னைப் பாராமலேயே விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்ற கர்த்தரின் வார்த்தைகளை யோவான் 20:29 இல் கோடிட்டுக் காட்டுகிறார். இவர்கள் அனைவரும் தங்கள் பலவீனத்தை உணர்ந்தபோதிலும், அதைத் துணிச்சலுடன் எதிர்த்து வென்றனர். தன் வீடு தீயினால் எரிந்ததையும், தன் பத்து மகன்மாரின் திடீர் இழப்பையும், தன் சொந்த சரீரத்தால் துன்பத்தை சந்தித்த புனித யோபுவை விட துரதிர்ஷ்டசாலி வேறு யார் இருக்க முடியும்? இறுதியில் அவர் அந்தத் துன்பங்களைச் சகித்துக் கொண்டு, தன் தகுதியை நிரூபித்த அவர் அடைந்த ஆசீர்வாதம் எவ்விதத்திலும் குறைந்ததில்லை அல்லவா?
21. இந்தத் துன்பங்களில் ஏதோ ஒரு விரும்பத்தகாத அம்சம் இருக்கிறது என்பதும், மன வலிமையால் இந்தக் காயத்தை மறைக்க முடியாது என்பதும் உண்மைதான். கடற்கரையோரம் ஆழம் குறைவாக இருப்பதால் கடல் ஆழமற்றது என்றோ, சில நேரங்களில் மேகங்கள் மறைப்பதால் வானம் தெளிவாக இல்லை என்றோ, சில இடங்கள் வெறுமையாக இருப்பதால் நிலம் வளமற்றது என்றோ, சில நேரங்களில் களைகள் கலந்திருப்பதால் அறுவடை நல்லதல்ல என்றோ நான் சொல்லிவிட முடியாது. அதுபோலவே, தெளிவான மனசாட்சியின் விளைவுகளில் சில துக்ககரமான உணர்வுகளும் அடங்கியிருக்கலாம் என்பதை மனதிற்கொள்ளுங்கள். ஒரு நல்ல வாழ்வின் பாதையில் தற்செயலாக ஏதேனும் தொந்தரவோ அல்லது விரும்பத்தகாத விஷயமோ நுழைந்தால், அது பயிர்கள் களைகளால் மறைக்கப்பட்டது போலவோ, அல்லது பயிர்களின் நறுமணத்தால் களைகளின் கசப்பு தவிர்க்கப் பட்டது போலவோ இருக்கக்கூடும் அல்லவா? சிந்தியுங்கள். சரி, இப்போது நாம் நமது தலைப்புக்குத் திரும்புவோம்.
அத்தியாயம் 6
உண்மையாகவே பயனுள்ளது என்பது, நன்மை பயப்பது மட்டுமே என்பதல்ல, மாறாக நியாயமானதும் நல்லதுமாகும். அது இழப்புகளில் கூடக் காணப்படுகிறது, மேலும் அது உடலுக்கு உதவுவது ஆன்மீகத்திற்கு உதவுவது என வகுக்கப்பட்டுள்ளது.
22. முதல் புத்தகத்தில், எது நற்பண்பு மற்றும் எது பொருத்தமானது என்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நமது உள்ளடக்கத்தை ஒழுங்கமைத்தோம். ஏனெனில் எல்லா பொறுப்புகளும் இந்தக் கருத்துக்களிலிருந்தே உருவாகின்றன. அடுத்து, எது பயனுள்ளது என்பதில் கவனம் செலுத்தினோம். இருப்பினும் நாம் முன்பே குறிப்பிட்டது போல, நற்பண்பு மற்றும் பொருத்தம் என்பதற்கு இடையே ஒரு வேறுபாடு உள்ளது — அதை விவரிப்பதை விடப் புரிந்துகொள்வது எளிது. அதுபோலவே, எது பயனுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, எந்தத் தெரிவு மிகவும் நன்மை பயக்கும் என்பதையிட்டு நாம் கவனமாக ஆராய வேண்டும்.
23. நாம் எவ்வளவு செல்வத்தை ஈட்ட முடியும் என்பதைக் கொண்டு நாம் பயனை அளவிடுவதில்லை, மாறாக தேவபக்தியில் நாம் எவ்வாறு வளர்கிறோம் என்பதைக் கொண்டே அளவிடுகிறோம். 1 தீமோத்தேயு 4:8-ல் “தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும்” என்று அப்போஸ்தலர் கூறுகிறார். நாம் பரிசுத்த வேதாகமத்தை கவனமாக வாசிக்கும்போது நல்ல செயல்கள் பயனுள்ளவை என்று அழைக்கப்படுவதை அடிக்கடி காண்கிறோம். 1 கொரிந்தியர் 6:12-ல், “எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களும் நல்லவை அல்ல. ஆகவே எந்தப் பொருளும் எனக்கு எஜமானனாக நான் விடமாட்டேன்” என்று கூறப்பட்டுள்ளது. அப்போஸ்தலர் தீய செயல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்; பாவம் செய்வது சட்டப்பூர்வமானது என்றாலும், அது பொருத்தமானதல்ல என்பதே அதன் பொருள். பாவத்தைத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கலாம், ஆனால் அது நல்லதல்ல. இன்பத்திற்காக வாழ்வது எளிது, ஆனால் அது சரியான வழி அல்ல. உணவு நம் உடலுக்கானது, தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக அல்ல.
24. ஆகையால், சேவை செய்வது நீதி என்பதால் இருப்பதால், நம்மை இரட்சித்த கிறிஸ்துவுக்கு சேவை செய்வது உயர்ந்த நீதியாகும். அவருடைய நாமத்தின் நிமித்தம் தங்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்கள் நீதிமான்களே; அதைத் தவிர்த்தவர்கள் நீதிக்கு விரோதமானவர்கள். அவர்களைக் குறித்து அது சொல்லும் போது, என் இரத்தத்தினால் என்ன பயன்? அதாவது, என் நீதி என்ன முன்னேற்றத்தை உண்டாக்கியது? ஆகையால், அவர்களும், நீதிமானைத் தடுப்போம்; ஏனெனில் அவன் நமக்குப் பயனற்றவன், அதாவது அவன் அநீதியாளன், ஏனென்றால் அவன் நம்மைக் குறித்து முறையிடுகிறான், நம்மைக் குற்றப்படுத்துகிறான், கடிந்துகொள்கிறான் என்றனர். இது துன்மார்க்கர்களின் மனதிலிலுள்ள ஏக்கத்தைப் பற்றியதாகவும் துரோகத்தைப் போன்றதாகவும் இருக்கலாம். பணத்தின் மீதான தனது பேராசை மற்றும் அதன் மீது கொண்டிருந்த அதீத பற்றுதலாலும் துரோகம் எனும் சுருக்குக் கயிற்றில் தன் தலையை நுழைத்து தன் வாழ்க்கையையே தொலைத்த துரோகி யூதாஸின் விஷயத்தில் நாம் வாசிப்பதும் இதற்கு ஒப்பானதொன்றே.
25. அப்போஸ்தலரே தெளிவாகக் கூறியது போல, நன்மைகள் நிறைந்த அந்தப் பயனைப் பற்றி நாம் பேச வேண்டும்: “உங்களைச் சிக்கவைப்பதற்காக அல்ல, உங்களுக்கு உதவுவதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல; நீங்கள் தக்க வழியில் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் நேரத்தைப் பிற விடயங்களில் செலவிடாமல் உங்களை முழுக்க தேவனுக்குக் கொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று 1 கொரிந்தியர் 7:35 இல் சொல்லப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அப்படியானால், நல்லது பயனுள்ளது என்பதும் பயனுள்ளது நல்லது என்பதும், பயனுள்ளது சரியானது என்பதும், சரியானது பயனுள்ளது என்பதும் தெளிவாகிறது. நான் இதைச் சொல்லத் துணிந்ததற்குக் காரணம் என்னவென்றால், நான் பணம் சம்பாதிக்கும் ஆசையால் பேராசை கொண்ட விற்பனையாளர்களிடம் பேசவில்லை, நான் என் பிள்ளைகளிடம் தான் பேசுகிறேன். மேலும், கர்த்தருடைய பணிக்காக நான் தெரிந்துகொண்ட விடயங்களை உங்களுக்குப் புகட்டவும், கொடுக்கவும் விரும்பும் பொறுப்புகளைப் பற்றிப் பேசுகிறேன்; அதனால், வழக்கம் மற்றும் போதனையின் மூலம் ஏற்கனவே உங்கள் மனங்களிலும் குணங்களிலும் பதியவைக்கப்பட்ட விடயங்களை இப்போது உங்களுக்குத் தெளிவுபடுத்துவதன் மூலமும் போதிப்பதன் மூலமும் மேலும் விளக்கமுடியும்.
26. ஆகவே, உண்மையாகவே நன்மை பயக்கும் விஷயங்களுக்குள் நான் பிரவேசிக்கவிருப்பதால், தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நான் குறிப்பிடுகிறேன்: என் இதயத்தை உமது போதனைகளின் பக்கம் திருப்பி, பேராசையிலிருந்து அதை விலக்குவீராக, அதனால் பயன்பாடு என்ற எண்ணம் எங்களுக்குள் பணத்திற்கான தாகத்தைத் தூண்டாது. சிலர் இதை இவ்வாறு விளக்குகிறார்கள்: என் இதயத்தை உமது போதனைகளின் பக்கம் திருப்புவீராக, பயன்படுவதாகக் கருதப்படும் காரியங்களின் பக்கம் அல்ல; அதாவது, வியாபாரத்தில் எப்போதும் இலாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்ட மனிதப் பழக்கவழக்கங்களால் பணத்தில் பின்னால் செல்லும் ஒன்றாகத் திரித்துவிட்ட, பயன்படும் காரியங்களின் பக்கம் அல்ல. பொதுவாக, பெரும்பாலான மக்கள் இலாபம் தரும் காரியங்களை மட்டுமே பயனுள்ளது என்று கருதுகிறார்கள். ஆனால் நாம் அப்படியல்ல. பிலிப்பியர் 3:8-ல், “எனது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக மற்றைய எல்லாவற்றையும் நஷ்டம் என்று எண்ணுகிறேன்” என்று கூறப்பட்டற்கிணங்க, கிறிஸ்துவைப் பெறுவதற்காக, இவ்வுலக இழப்பில் தேடப்படும் அந்தப் பயனுள்ள தன்மையைப் பற்றிப் பேசுகிறோம்; 1 தீமோத்தேயு 6:6-ல், “தன்னிடம் இருப்பதே போதும் என்று ஒருவன் திருப்தி அடைகிறானெனில் அத்துடன் அவனுக்குள்ள தேவபக்தியானது மிகுந்த இலாபமாயிருக்கும் என்பது உண்மை” என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தோமானால், உண்மையான இலாபம் என்பது தேவபக்தியுடன் கூடிய மனநிறைவு ஆகும்; அதன் மூலம் நாம் அடையும் இலாபம் மகத்தானது; அது நிலையற்ற செல்வங்களால் அல்ல, நித்திய கொடைகளால் நிறைந்தது; அது நிச்சயமற்ற சோதனைகளால் அல்ல, மாறாக நிலையானதும் முடிவில்லாததுமான கிருபையிலேயே தங்கியுள்ளது.
27. ஆகையால், அப்போஸ்தலரின் விளக்கத்தின்படி, உடலோடு தொடர்புடைய ஒரு பயனும், தேவபக்தியோடு தொடர்புடைய ஒரு பயனும் உண்டு: இதுகுறித்து,1 தீமோத்தேயு 4:8 இல், “உடற்பயிற்சியானது சில வழிகளில் பிரயோசனம் மிக்கது என்றபோதும், தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும்” என்று கூறுகிறது. அத்தோடு, நேர்மையை விட மேலான நற்பண்பு வேறு என்ன இருக்க முடியும்? சரீரத்தைக் கறைபடாமலும், களங்கமின்றியும், அதன் தூய்மையைக் கெடுக்காமலும் பாதுகாப்பதை விட மேலான தகுதி வேறு என்ன இருக்க முடியும்? அதேபோல, ஒரு விதவை தன்னைவிட்டுப் பிரிந்த கணவனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதை விட பொருத்தமான ஒரு வாக்குறுதி என்னவாக இருக்க முடியும்? பரலோக இராச்சியத்தை அடைவதற்கு இதைவிட உதவியாக இருப்பது வேறு எதுவாக இருக்க முடியும்? மத்தேயு 19:12 கூறுவது போல, சிலர் குழந்தைகளை பெறச் செய்ய இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் அவ்வாறு மற்றவர்களால் ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராச்சியத்தின் நிமித்தம் திருமணத்தைக் கைவிட்டார்கள்” என்று.
அத்தியாயம் 7
உதவிகரமானதும் நல்லதும் ஒன்றே; அன்பை விட உதவக்கூடியது வேறொன்றுமில்லை. மோயீசன் மற்றும் தாவீதின் கதைகளில் காணப்படுவது போல, சாந்தம், பணிவு, கருணை, நியாயம் மற்றும் பிற நல்ல குணங்களிலிருந்து அன்பு பிறக்கிறது. இறுதியாக, நம்பிக்கை அன்பிலிருந்தும், அன்பு நம்பிக்கையிலிருந்தும் உதயமாகிறது.
28. எனவே, நன்மை பயக்கும் மற்றும் பயனுள்ளவை போன்றவற்றுக்கு இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. மேலும் ஒரே விஷயம் பயனுள்ளதாகவும் நல்லதாகவும் இருக்கிறது. ஆகவே, பரலோகத்தை அனைவருக்கும் திறக்க விரும்பிய கடவுள், தனக்கு பயனுள்ளதை நாடாமல், அனைவருக்கும் பயன் தரக்கூடியதையே நாடினார். இவ்வாறு, பயன் தருபவை எவ்வாறு மேம்படுகின்றன என்பதை பல எடுத்துக் காட்டுகள் மூலம் காண்பிக்கும் வகையில், நாம் ஒரு தெளிவான திட்டத்தைக் கொண்டு, வழக்கமான அல்லது அன்றாடச் செயல்களில் இருந்து படிப்படியாக சிறந்த செயல்களுக்குச் செல்ல வேண்டும்.
29. எல்லாவற்றுக்கும் முதலாவதாக, அன்பு செய்யப்படுவதை விட மதிப்புமிக்கது எதுவும் இல்லை என்பதையும், அன்பு செய்யப்படாமல் இருப்பதை விட அர்த்தமற்றது எதுவும் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும்; ஏனெனில், உண்மையாகச் சொல்வதானால், வெறுப்பு என்பது அபாயகரமானதும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதும் ஆகும். மக்கள் நம்மீது நல்லெண்ணம் கொள்ள ஒரு நல்ல காரணத்தை நாம் முன்வைக்கும் முகமாகவே இதைப் பற்றிப் பேசுகிறோம். மேலும், நமது அமைதியான நடத்தை மற்றும் கனிவான மனப்பான்மையின் மூலம் மற்றவர்களின் இதயங்களில் இடம் பிடிப்பதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும். நற்குணம் என்பது அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று, அது மக்களின் உணர்வுகளை எளிதில் தொடுகிறது. அதோடு, மென்மையான குணம், உதவும் மனப்பான்மை, கட்டளைகளைப் பிறப்பிப்பதில் ஒரு சமநிலையான அணுகுமுறை, கண்ணியமான பேச்சு, வார்த்தைகளில் மரியாதை, சுவாரஸ்யமான உரையாடல்கள் மற்றும் போதிய அடக்கம் ஆகியவையும் சேரும்போது, இவை அனைத்தும் அன்பை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
30. சாதாரண மக்கள் விஷயத்தில் மட்டுமல்ல, மன்னர்கள் விஷயத்திலும்கூட ஒரு கனிவான மற்றும் ஆர்வமுள்ள மனப்பான்மை எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்க முடியும் என்பதையும் அகந்தையும் தற்பெருமைப் பேச்சும் இராச்சியங்களையே அசைத்து, அதிகாரங்களை வீழ்த்தும் அளவிற்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் நாம் காண்கிறோம். ஒருவர் தனது நல்ல அறிவுரை அல்லது சேவையின் மூலமாகவோ, தனது பணியைச் செம்மையாய் செய்வதன் மூலமாகவோ, அல்லது நாட்டிற்காகத் தன் உயிரைப் பணயம் வைப்பதன் மூலமாகவோ மக்களின் நம்பிக்கையைப் பெற்றால், மக்கள் தங்கள் சொந்த நலன்களை விட அவரது பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் முன்னுரிமை அளிக்கும் அளவுக்கு அவர் மீது மிகுந்த அன்பைக் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
31. மோயீசன் தன் மக்களிடமிருந்து எத்தகைய நிந்தனைகளைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது! கர்த்தர் அவரை நிந்தித்தவர்கள் மீது பழிவாங்க விரும்பியபோது, ”இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை கிறுக்கி விடும்” என்று மோயீசன் கூறியதாக யாத்திராகமம் 32:32 கூறுகிறது. இவ்வாறு தேவனுடைய கோபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர் அடிக்கடி தம்மையே மக்களுக்காக ஒப்புக்கொடுத்தார். அவர் தவறாக நடத்தப்பட்ட பிறகும் கூட, மக்களிடம் எவ்வளவு கனிவான வார்த்தைகளால் பேசியிருந்தார்! அவர்களுடைய கடின உழைப்பின் போது அவர்களுக்கு ஆறுதல் அளித்தார். எதிர்காலத்தைப் பற்றிய தனது முன்னறிவிப்புகளால் அவர்களை அமைதிப்படுத்தி, தனது செயல்களால் அவர்களை ஊக்குவித்தார். அவர் அடிக்கடி தேவனுடன் பேசினாலும், மக்களிடம் கனிவாகவும் இணக்கமாகவும் பேசவே பழகியிருந்தால், அவர் எல்லா மனிதர்களையும் விட சிறந்தவராகக் கருதப்பட்டார். ஏனெனில், யாத்திராகமம் 34:30 “ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களும் மோயீசனின் முகம் பிரகாசிப்பதைக் கண்டு அவனிடம் செல்ல பயந்தனர்” என்கிறது. மேலும் உபாகமம் 34:6-இன் படி, அவருடைய கல்லறை கண்டுபிடிக்கப் பட்டது என்பதை நம்பவும் மறுத்தார்கள். ஏனெனில் “கர்த்தர் மோயீசனை மோவாபில் அடக்கம் செய்தார். இது பெத்பேயோருக்கு எதிர்புறத்தில் உள்ள பள்ளத்தாக்கிலே உள்ளது. ஆதலால் இன்றுவரை மோயீசனின் கல்லறை எங்கே இருக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாது” என்கிறது. அவர் எல்லா மக்களின் எண்ணங்களையும் மிகவும் கவர்ந்திருந்தார்; அவருடைய சாதனைகளால் ஈர்க்கப்பட்டதை விட, அவருடைய கருணைக்காகவே அவர்கள் அவரை அதிகமாக நேசித்தார்கள்.
32. இதேபோலத்தான் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிய தாவீதும் இருந்துள்ளார். மக்களை வழிநடத்த அனைவர் மத்தியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மிகவும் சாந்தமும் அன்பும் உள்ளவராக இருந்தார்; மனத்தாழ்மையும் உடையவராகவும், கடின உழைப்பாளியாகவும் அன்பைக் காட்டுவதில் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். அவர் அரசனாவதற்கு முன்பு, அனைவருக்காகவும் தன்னை அர்ப்பணித்தார். அரசனாக, போரிடுவதில் அவர் மற்றவர்களைப் போலவே இருந்ததோடு, அவர்களின் பணிகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் போரிடுவதில் வலிமையானவராகவும், வழிநடத்துவதில் மென்மையானவராகவும், மோசமாக நடத்தப்பட்ட போது அமைதியானவராகவும், பதிலுக்குத் துன்புறுத்துவதை விட ஏற்றுக்கொள்வதையே அதிகம் விரும்புபவராகவும் இருந்தார். அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டதால், இளயவனாக இருந்தபோதிலும், அவர்களை வழிநடத்த அவர் விரும்பாதபோதும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அந்தப் பதவியை அவர் எதிர்த்தபோதிலும், அதை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். வயதான காலத்தில், போரில் ஈடுபட வேண்டாம் என்று அவருடைய மக்கள் அவரிடம் கேட்டுக் கொண்டனர், ஏனென்றால் அவர் தங்களுக்காக ஆபத்தை எதிர்கொள்வதை விட, அவருக்காகத் தாங்கள் ஆபத்தை எதிர்கொள்வதையே அவர்கள் அனைவரும் விரும்பினர்.
33. தன் கடமையை நிறைவேற்றியதன் மூலம் அவர் மக்களைத் தாராளமாகத் தம்மோடு பிணைத்துக் கொண்டார்; முதலாவதாக, மக்களிடையே பிளவு ஏற்பட்டிருந்தபோது எருசலேமில் ஆட்சி செய்வதற்குப் பதிலாக ஹெப்ரோனில் ஒரு அகதியைப் போல வாழ முடிவெடுத்ததன் மூலமும், இரண்டாவதாக, ஒரு எதிரியிடம் அவனது வீரத்தை மதித்தார் என்பதை அவர் வெளிப்படுத்தியதன் மூலமும். தனக்கு எதிராகப் போரிட்டவர்களுக்கும், தன் சொந்த வீரர்களுக்கு நீதி வழங்கப்பட்டது போலவே வழங்கப்பட வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். மேலும், எதிரணியின் தலைவராக போரில் ஈடுபட்டிருந்த போதும், அந்த அணியின் மிக வீரமிக்க போர்வீரரான அப்னேரை அவர் போற்றினார். அப்னேர் சமாதானத்தைக் கோரியபோது அவர் அப்னேரைத் தாழ்வாகக் கருதவில்லை, மாறாக அவருக்கு விருந்தளித்து கௌரவித்தார். அப்னேர் ஒரு துரோகத்தின் மூலம் கொல்லப்பட்டபோது, அவருக்காகத் துக்கம் அனுசரித்து அழுதார். அவர் இறந்த பிறகும் அப்னேரைப் பின்தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கைக் கௌரவித்தார்; அந்தக் கொலைக்குப் பழிவாங்குவதன் மூலம் தனது நன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார். தன் சொந்தத் துக்கத்தைப் பற்றிக் கவலைப்படாது, ஒரு நிரபராதியின் மரணம் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது என்பதை வலியுறுத்தி, அந்தப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைத்தார்.
34. குறிப்பாக ஒரு ஆட்சியாளரைப் பொறுத்தவரை, மிகவும் எளிமையான மனிதனைப் போலாகும் அளவுக்குத் தாழ்மையான பணிகளைச் சிறப்பாகச் செய்வது ஒரு மகத்தான செயலாகும். பிறருடைய ஆபத்தைப் பொருட்படுத்தாமல், உணவைத் தேடாமல் இருப்பதும், தண்ணீரை மறுப்பதும், தவறை ஒப்புக்கொள்வதும், தன் மக்களுக்காகத் தன்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பதும் மேன்மையான செயலாகும். தேவனுடைய கோபம் தன்மேல் வரும்படியாக, தாவீது இந்தக் கடைசி காரியத்தைச் செய்தார்; அவர் மரண தூதனுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து, “இதோ, நான் பாவம் செய்தேன்; மேய்ப்பனாகிய நான் தீங்கான காரியம் செய்தேன், ஆனால் இந்த மந்தை என்ன செய்தது? உமது கரம் எனக்கு எதிராக இருக்கட்டும்” என்று கூறி, பிந்தையதைச் செய்தார்.
35. நான் மேலும் என்ன தான் சொல்ல இருக்கிறது? பொய்ச் சதி செய்தவர்களிடம் அவர் பேசவில்லை, மேலும் அவர் எதையும் கேட்காதது போலவும், அவர்களுடைய நிந்தனைகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ வேண்டாம் என்றும் தீர்மானித்தார். மக்கள் அவரைப் பற்றித் தவறாகப் பேசியபோது, அவர் ஜெபித்தார்; மக்கள் அவரைச் சபித்தபோது, அவர் அவர்களை ஆசீர்வதித்தார். அவர் நேர்மையாக வாழ்ந்தார், அகந்தை கொண்டவர்களைத் தவிர்த்தார். தூய்மையானவர்களையும், பூமிக்குரிய வழிகளிலிருந்து விடுபட்டவர்களையும் பின்பற்றினார்; அவர் தன் பாவங்களுக்காக வருந்தும்போது தன் உணவில் சாம்பலைக் கலந்து, தான் அருந்திய பானத்தில் கண்ணீரைக் கலந்தார். ஆகையால் எல்லா மக்களும் அவரைத் தகுதியுடன் அழைத்தார்கள். இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களும் அவரிடம் வந்து, “இதோ, நாங்கள் உமது எலும்பும் உமது மாமிசமுமாக இருப்போம்” என்றன. நேற்றும், அதற்கு முந்தைய நாளும், சவுல் உயிரோடு இருந்து ஆட்சி செய்தபோது, எங்கள் வீரர்களை வெளியே அழைத்துச் சென்று அவர்களைத் திரும்பக் கொண்டு வந்தவர் நீர் தான். மேலும், கர்த்தர் உம்மிடம், ‘என் மக்களை நீர் கவனித்துக் கொள்வீராக!’ என்று கூறினார்” என்றனர். மேலும், ‘எனக்குப் பிரியமான தாவீதைக் கண்டேன்’ என்று கர்த்தர் சொன்ன ஒருவரைப் பற்றி நான் ஏன் மேலும் சொல்ல வேண்டும்? தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி, அவரைப் போல தூய்மையாகவும் நீதியாகவும் வாழ்ந்தவர் யார் இருக்கக்கூடும்? அவருடைய பிள்ளைகள் பாவம் செய்தபோது அவரால் மன்னிக்கப்பட்ட தோடு, அவருடைய சந்ததியினர் தங்கள் உரிமைகளைக் காத்துக்கொண்டனர்.
36. அவன் தன் நண்பர்களுக்கு எவ்வளவு முக்கியமானவனாக இருந்தான் என்பதைக் கண்டபோது, அவனை யார் தான் விரும்பாமல் இருந்திருப்பார்கள்? அவன் தன் நண்பர்கள் மீது உண்மையான அக்கறை காட்டியதால், தன் நண்பர்களும் தன்னை அதே அளவு அக்கறையுடன் நேசிப்பதாக அவன் நம்பினான். உண்மையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விட அவனை அதிகமாக நேசித்தார்கள், பிள்ளைகளோ தங்கள் பெற்றோரை விட அவனை அதிகமாக நேசித்தார்கள். ஆகையால், சவுல் மிகவும் கலக்கமடைந்து தன் மகன் யொனதனை ஈட்டியால் அடிக்க முயன்றான். ஏனென்றால், குடும்பப் பாசத்தையோ அல்லது தந்தையின் அதிகாரத்தையோ விட தாவீதின் நட்பு தனக்கு மிகவும் முக்கியமானது என்று அவன் நினைத்தான்.
உங்களை நேசிப்பவர்களின் அன்பை நீங்கள் திருப்பிக் கொடுத்து, அவர்கள் உங்களை நேசிப்பது போலவே நீங்களும் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று காட்டினால், அது உங்கள் இருபாலர் மத்தியிலும் நிலவும் பரஸ்பர அன்பை பெரிதும் ஊக்குவிக்கும். குறிப்பாக, ஒரு உண்மையான நட்பின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம். நன்றியுணர்வை விட அங்கீகாரத்தைப் பெற வேறு என்ன வழியில் அதிக வாய்ப்புள்ளது? உங்களை நேசிப்பவரை நேசிப்பதை விட இயல்பானது வேறு என்ன இருக்கமுடியும்? நம்மீது அன்பு செலுத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் ஒருவர், நாம் அவரை நேசிக்கிறோம் என்பதைத் தெரியப்படுத்துவதில் இருக்கும் ஆர்வத்தைப்போல மனித உணர்வுகளில் ஆழமாகப் பதிந்திருப்பது வேறு என்ன இருக்கமுடியும்? ஞானத்தின் சிகரமாக இருப்பவர் கூறுகையில், “பணத்தை உன் சகோதரர்கள் அல்லது நண்பர்களுக்காக செலவிடு; அழிந்து போகும்படி அதைக் கல்லுக்கு அடியில் மறைத்துவைக்காதே” என்று சீராக் 29:10 அறிவுறுத்துகிறது. மீண்டும் சீராக் 22:31 கூறுகையில், “ஒரு நண்பனுக்கு வாழ்த்துச் சொல்ல நான் வெட்கப்படமாட்டேன்; அவன் முகத்திலிருந்து என்னை மறைத்துக் கொள்ளவும் மாட்டேன். அவனால் எனக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், அதை நான் பொறுத்துக்கொள்வேன்” என்கிறது. உண்மையில், பிரசங்கி புத்தகத்தில் உள்ள வார்த்தைகள், “நம்பிக்கைக்குரிய நண்பர்கள் குணமளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்” என்று சீராக் 6:16 கூறுவதிலிருந்து நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. நமது வலிமையான பாதுகாப்பு அன்பில்தான் தங்கி உள்ளது என்பதில் எவருக்கும் எவ்விதமான சந்தேகம் இருந்ததில்லை. அப்போஸ்தலர் கூறுவது போல, “அன்பு எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறது, எல்லாவற்றையும் நம்புகிறது, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறது. எல்லாவற்றையும் தாங்கிக்கொள்கிறது; அன்புக்கு ஒருபோதும் முடிவில்லை” என்று 1 கொரிந்தியர் 13:7-8 கூறுகிறது.
38. தாவீது தோல்வியடையவில்லை; ஏனெனில் அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டார், மேலும் தன் மக்கள் அவரைக்கண்டு அஞ்சுவதை விட அவரை நேசிக்க வேண்டுமென்றே விரும்பினார். பயம் தற்காலிகப் பாதுகாப்பை அளிக்கலாம், ஆனால் அது நீடிப்பதில்லை. பயம் நீங்கியதும், தைரியம் பெரும்பாலும் அதன் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது; ஏனெனில் பயம் நம்பிக்கையை உருவாக்குவதில்லை, ஆனால் அன்பு அதை வெளிக்கொணர்கிறது.
39. ஆகவே, அன்புதான் நமக்கு ஒரு பரிந்துரையை வழங்கும் முதல் விஷயம். எனவே, பலர் மத்தியில் அறியப்படுவதும் விரும்பப்படுவதும் ஒரு நல்ல விஷயம் தான். அப்போது நம்பிக்கை வளர்கிறது, அதனால் பலர் உங்களை விரும்புவதைக் காணும்போது, முன்பின் தெரியாதவர்கள் கூட உங்கள் இரக்கத்தையும் அன்பையும் பெறுவதற்கு அஞ்சுவதில்லை. அதுபோலவே, ஒருவர் நம்பிக்கையிலிருந்து அன்பிற்குள் பிரவேசிக்கிறார். அதனால் ஒன்று அல்லது இரண்டு பேரிடம் மட்டும் நல்லெண்ணம் காட்டியவர் அனைவர் மீதும் செல்வாக்கு செலுத்தி, அனைவரின் தயவையும் வென்றெடுக்கிறார்.
அத்தியாயம் 8
அறிவுரை வழங்குவது மக்களின் நன்மதிப்பைப் பெறுவதில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த அறிவுரை நேர்மையையும் ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே அதன் மீதான நம்பிக்கை ஏற்படுகிறது. மன்னன் சொலமனின் புகழ்பெற்ற தீர்ப்பு, அவரிடம் இந்த இரண்டு நற்பண்புகளும் எவ்வளவு முக்கியமானவையாக இருந்தன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
40. எனவே, அன்பு மற்றும் நம்பிக்கை ஆகிய இரண்டு குணங்களே, மற்றவர்கள் நம்மை விரும்புவதற்கு மிகவும் பயனுள்ள வழிகளாகும்; மேலும், உங்களிடம் இந்த மூன்றாவது குணம் இருந்தால், அதாவது, பலர் உங்களிடம் போற்றுதலுக்குரியதாகக் கருதி, மரியாதைக்குரியது என்று சரியாக நினைக்கும் குணம், நல்ல ஆலோசனை வழங்கும் திறன் போன்றவை இவற்றில் அடங்கும்.
41. நல்ல அறிவுரை வழங்குவது மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரு உறுதியான வழியாகும், எனவே ஒவ்வொரு சூழ்நிலையிலும் விவேகத்துடனும் நேர்மையாகவும் இருப்பது மிகவும் முக்கியம். பெரும்பாலான மக்கள் இதை எதிர்பார்க்கிறார்கள், அதனால்தான் இந்த குணங்களைக் கொண்ட ஒருவரை அவர்கள் உடனடியாக நம்பி ஏற்றுக்கொள்கிறார்கள், ஏனெனில் தேவைப்படும் எவருக்கும் அவர்களால் பயனுள்ள மற்றும் நம்பகமான ஆலோசனையை வழங்க முடியும் என்பதால். ஒருவர் தன்னை விட புத்திசாலி என்று ஏற்றுக்கொள்ளாவிட்டால் எவர் தான் அவரிடம் ஆலோசனை கேட்பார்? எனவே, அறிவுரை கேட்பவரை விட அறிவுரை வழங்குபவர் அதிக அறிவுடையவராக இருப்பது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு ஏற்கனவே புரிந்திருப்பதை விட அவர்களால் விஷயங்களை இன்னும் சிறப்பாகத் தெளிவுபடுத்த முடியும் என்று நாம் நினைக்கவில்லை என்றால், ஒருவரிடம் வழிகாட்டுதலைக் கேட்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது?
42. ஆனால், தன் ஆளுமையின் ஆற்றலினாலும், வலிமையான சிந்தனையினாலும், சிறந்த தலைமைத்துவத்தினாலும் மற்ற எல்லோரையும் விடத் தனித்து நிற்கும் ஒரு மனிதனை நாம் கண்டறிந்தால்; மேலும், மற்றவர்களை விடத் தன் செயல்களாலும், கடந்தகால நிகழ்வுகளாலும் அவன் சிறந்த தகுதியுடையவனாகவும் இருக்கும் பட்சத்தில்; தற்போதைய ஆபத்துகளைத் தடுக்கவும், எதிர்கால ஆபத்துகளை இனம் காணவும், அருகிலுள்ள குறைகளை சுட்டிக் காட்டவும், விடயங்களைத் தெளிவுபடுத்தவும், தேவைப்படும்போது உதவி செய்யவும், யோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஆதரவளிக்கவும் தயாராக இருக்கும் ஒரு மனிதரிடம் அதீத நம்பிக்கை ஏற்படுகிறது. அதனால், யோசனைகளைக் கேட்பவர், ‘இவரால் எனக்கு ஏதேனும் கெடுதல் நேர்ந்தாலும், நான் அதை ஏற்றுக்கொள்வேன்’ என்று கூற முடியும் என சீராக் 22:31 கூறுகிறது.
43. எனவே, இத்தகைய மனிதரிடம் நமது பாதுகாப்பையும் நற்பெயரையும் நாம் ஒப்படைக்கிறோம், ஏனெனில், நாம் குறிப்பிட்டது போல், அவர் நேர்மையானவராகவும் ஞானமுள்ளவராகவும் இருக்கிறார். நேர்மை நம்மை வஞ்சகத்திற்கு அஞ்சாதவர்களாக ஆக்குவதோடு, ஞானம் தவறுகளைப் பற்றிய நமது கவலைகளை நீக்குகிறது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் சொல்வது போல், ஞானம் மிக்க ஒருவரை விட நேர்மையான ஒருவரையே நாம் எளிதாக நம்புகிறோம். ஆனால், தத்துவஞானிகளின் விதியின்படி, ஒருவரிடம் ஒரு நல்ல குணம் இருக்கும் பட்சத்தில் அவரிடம் வேறு குணங்களும் இருக்கும்; ஆகவே நேர்மை இல்லாமல் ஞானம் இருக்க முடியாது. தாவீது கூறுவது போலவே நமது எழுத்தாளர்களும் இதையே கூறுகிறார்கள்: நீதிமான் கனிவைக் காட்டி உதவி செய்வான். அத்தோடு, ஒரு நல்லவர் என்பவர் இரக்கமுள்ளவர் மற்றும் கடன் கொடுப்பவர்; அவர் தனது வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து பேசக்கூடியவர் என்று அவர் வேறொரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
44. மன்னன் சொலமனின் அந்த மேன்மையான தீர்ப்பு ஞானமும் நீதியும் நிறைந்தது அல்லவா? அப்படியானால் அது உண்மையா என்று பார்ப்போம். நாம் அறிந்தவாறு, இரண்டு பெண்கள் மன்னன் சொலமன் முன்பாக நின்றார்கள். அவர்களில் ஒருத்தி அவரிடம், “என் அதிபரே, நான் சொல்வதைக் கேளும். நானும் இந்தப் பெண்ணும் ஒரே வீட்டில் வசிக்கிறோம். மூன்று நாட்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் ஒரு ஆளுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தோம். நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்; வீட்டில் வேறு யாரும் இல்லை. அவள் தவறுதலாக அவளுடைய மகனை மூச்சுத்திணறச் செய்தமையால் நேற்று இரவு அவன் இறந்துவிட்டான். அவள் நள்ளிரவில் எழுந்து, என் மகனை என் கைகளிலிருந்து பறித்து தன் கைகளில் வைத்துக்கொண்டு, இறந்த தன் மகனை என் கைகளில் வைத்தாள். காலையில் என் பிள்ளைக்கு உணவளிக்க நான் எழுந்தபோது அவன் இறந்து கிடப்பதைக் கண்டேன். விடியற்காலையில் எழுந்து நான் உற்றுப் பார்த்தபோது, இறந்து கிடந்த பிள்ளையைத் தன் மகன் அல்ல” என்றாள். அதற்கு மற்றவள், “இல்லை, உயிருடன் இருக்கும் சிறுவனே என் மகன், இறந்தவன் உன்னுடையவன்” என்றாள்.
45. ஒரு குழந்தையைக் குறித்து இரண்டு பெண்களுக்கு இடையே ஒரு தகராறு ஏற்பட்டது. இரண்டு பேரும் உயிரோடு இருக்கும் குழந்தை தனக்கே சொந்தமெனக் கோரியது மட்டுமன்றி, அதில் ஒருத்தி இறந்த குழந்தை தன்னுடையதல்ல என்றும் கூறினாள். அப்பொழுது அரசன் குழந்தையை இரண்டாக வெட்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பாதியைக் கொடுப்பதற்காக வாளை எடுத்து வருமாறு பணித்தான். உண்மையான தாயான பெண் உடனடியாக, “மன்னா, தயவுசெய்து குழந்தையை இரண்டாக வெட்டாதீர்; குழந்தை உயிர் வாழவேண்டும், ஆகவே அதை அவளிடமே கொடும்” என்று கதறினாள். அதேநேரம் மற்றொரு பெண்ணோ “அது எனக்குக் கிடைக்கவில்லை என்றால், எனக்கு அது எதுவுமே வேண்டாம்; அதைப் பாதியாகவே பிரித்துக் கொடும்” என்றாள். முன்னையவளுக்கு தன் குழந்தையின் மீது இருந்த ஆழ்ந்த அன்பு தெளிவாகத் தெரிந்ததால், “அதைக் கொல்லாதீர்கள், அவளிடமே கொடுங்கள்” என்று சொன்ன பெண்ணிடமே குழந்தையைக் கொடுக்க அரசன் முடிவு செய்தான்.
46. கடவுளின் மனம் அவனுள் இருந்தது என்று ஒப்புக்கொள்வது தவறல்ல; ஏனெனில் கடவுளிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. நம் மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் உணர்வைக் கூட எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மறைக்க முடியாது. ஞானம் மிகு அரசனின் மனம், ஒரு தாயின் எண்ணங்களை ஆராய்ந்து அந்த சூழ்நிலைக்குப் பொருந்தக் கூடியவாறு அவளின் இதயத்தில் ஒலிக்கும் குரலை வெளிக்கொணர்ந்தது. ஏனெனில், தன் மகன் பெற்ற தாயின் கண்முன்னே கொல்லப்படுவதை விட, அவன் வேறொருத்தியின் அன்பில் வாழ வேண்டும் என்று ஒரு தாய் தேர்ந்தெடுத்தது, அவளுடைய எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்தி இருந்தன.
47. ஆகவே, இரகசிய எண்ணங்களை மனதிலிருந்து ஆராய்ந்தறிவதும், மறைவான மூலங்களிலிருந்து சத்தியத்தை வெளிக்கொணர்வதும், ஆவியின் வாளால் சரீரத்தின் உள்ளுறுப்புகளை மட்டுமல்ல, மனதையும் ஆன்மாவையும் கூட ஊடுருவிச் செல்வதுமே ஞானத்தின் அடையாளமாக இருந்தது. தன் சொந்தக் குழந்தையின் உயிரைப் பறித்த பெண், மற்றொரு உயிரைப் பறிக்க விடக்கக்கூடாது என்பதும், மாறாக உண்மையான தாய் தன் குழந்தையைத் திரும்பப் பெற வேண்டும் என்பதும் நீதியின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. மறைநூல் வாசகங்கள் இதைத் தெளிவுபடுத்தியுள்ளன. இஸ்ரவேல் மக்கள் அனைவரும் அரசனின் தீர்ப்பைப் பற்றி அறிந்து கொண்டார்கள் என்றும், நீதியை நிலைநாட்ட தேவனுடைய ஞானம் அவரிடம் இருந்தது என்பதை அவர்கள் உணர்ந்ததாலும், அரசனின் தீர்ப்பையிட்டு பிரமிப்புற்றனர் என்றும் அது கூறுகிறது. மன்னன் சொலமன் ஞானத்தை மட்டுமே கேட்டிருந்தான், அதனால்தான் அவன் அந்த வழக்குக்குச் செவிகொடுத்து நியாயமாகத் தீர்ப்பளிக்க ஒரு ஞானம் மிக்க இதயத்தைப் பெற முடியுமாக இருந்தது.
அத்தியாயம் 9
நீதியும் விவேகமும் நெருங்கிய தொடர்புடையவை, ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கொண்டுதான் நாம் மதிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் வெவ்வேறு முதன்மை நற்பண்புகளைத் தனித்துவமான வழிகளில் காண்கிறார்கள்.
48. பழமையான மறைநூல்கள் ஞானமும் நீதியும் ஒன்றோடொன்று கைகோர்த்துச் செல்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன; ஒன்று இருந்தால், மற்றொன்றும் இருக்க வேண்டும். தன்மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் இருந்த உண்மையை, தானியேல் தனது தீர்க்கமான விசாரணையின் மூலம் எவ்வளவு ஞானத்துடன் வெளிப்படுத்தி, அந்தப் பொய்யர்களைப் பேச முடியாமல் ஆக்கினார் என்பதைப் பாருங்கள்! அவர்களின் குற்றங்களை அம்பலப்படுத்த அவர்களின் சொந்த வார்த்தைகளையே உபயோகித்தது ஒரு புத்திசாலித்தனமான நகர்வு அல்லவா? மேலும், குற்றவாளிகள் தண்டனையை எதிர்கொள்வதையும், நிரபராதிகள் தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வது நீதியின் கடமையாகும்.
49. ஆகவே, ஞானத்திற்கும் நீதிக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பு உள்ளது; ஆனால் வழக்கமாக, இந்த ஒரு சிறப்பு வகை நற்பண்பை நாம் பகுதிகளாகப் பிரிக்கிறோம். உதாரணமாக, நிதானம் என்பது இன்பங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகும்; மன உறுதி என்பது கடின உழைப்பையும் ஆபத்துகளையும் எதிர்கொள்ளும்போது வெளிப்படுவதாகும்; விவேகம் என்பது பயனுள்ளவற்றையும் பயனற்றவற்றையும் பகுத்தறியும் அறிவைக்கொண்டு நல்லது எது என்பதைத் தேர்ந்தெடுப்பதாகும்; நீதி என்பது மற்றவர்களின் உரிமைகளையும் உங்களுடைய உரிமைகளையும் உறுதியாகப் பாதுகாத்து, ஒவ்வொருவரும் தங்களுக்குரியதைப் பெறுவதை உறுதி செய்வதாகும். பெரும்பாலான மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள, இதை நாம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்; மேலும், உண்மையைத் தோண்டி எடுப்பதற்காக, ஏதோ ஒரு மறைவிடத்திலிருந்து வருவதாகத் தோன்றும் அந்த ஆழமான தத்துவ விவாதங்களிலிருந்து நாம் விலகிச் சென்றாலும், பொதுவான புரிதலையும் அவற்றின் வழக்கமான அர்த்தங்களையும் நாம் பின்பற்றியாக வேண்டும். எனவே, இந்தப் பிரிவை மனதில் கொண்டு, நமது தலைப்புக்குத் திரும்புவோம்.
அத்தியாயம் 10
மனிதர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஒரு ஒரு விவேகமான மனிதனை விட ஒரு நேர்மையான மனிதனையே சார்ந்திருக்க விரும்புகிறார்கள். இருப்பினும், நேர்மை மற்றும் ஞானம் ஆகிய இரண்டும் கொண்ட ஒருவரையே ஒவ்வொருவரும் தேடுகிறார்கள். இதற்கு மன்னன் சொலமன் ஓர் உதாரணமாகத் திகழ்கிறார். (சேபா ராணி அவரைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் இதை வெளிப்படுத்துகின்றன) தானியேல் மற்றும் யோசேப்பும் இந்தக் குணங்களுக்கு உதாரணங்களாகத் திகழ்கிறார்கள்.
50. நம்மால் கண்டறியப்பட்ட மிகவும் விவேகம் மிக்க மனிதரிடம் நமது காரியத்தை ஒப்படைத்து, மற்றவர்களிடம் கேட்பதை விட அவரிடம் விரைவாக ஆலோசனை கேட்கிறோம். ஏனெனில் ஒரு நேர்மையான மனிதனின் ஆலோசனை உண்மையில் மிகவும் முக்கியமானதும், புத்திசாலிகளின் திறமைகளை விட பெரும்பாலும் அதிக மதிப்பையும் கொண்டுள்ளது: ஏனெனில், “உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அவன் அதை விரும்பிச் செய்வதில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருப்பது போல் இருந்தாலும் உன்னைக் காயப்படுத்தவே விரும்புவான்” என்று நீதிமொழிகள் 27:6 கூறுகிறது. ஆகவே அது ஒரு நேர்மையான மனிதனின் முடிவு என்பதால் அது ஒரு புத்திசாலியின் விளைவும் ஆகும்: ஒன்றில் சர்ச்சைக்குரிய விடயத்தின் முடிவும், மற்றொன்றில் சமயோசித சிந்தனையும் அடங்கியுள்ளது.
51. நீங்கள் இவ்விரண்டையும் இணைக்கும்போது, வழங்கப்படும் ஆலோசனை நம்பமுடியாத அளவிற்குச் சிறப்பானதாகிறது; அது வெளிப்படுத்தப்பட்ட அறிவைக் கண்டு அனைவரும் வியப்புடனும், அதன் நேர்மையைக் கண்டு விருப்பத்துடனும் பார்க்கப்படுகிறது. அவ்வாறே, உலகின் ஆட்சியாளர்கள் அனைவரும் சொலமனின் முகத்தைக் காணவும், அவருடைய ஞானத்தை விரும்பியதுபோலவும், அந்த இரண்டு நற்குணங்களும் ஒருங்கே காணப்படும் அந்த மனிதனின் அறிவைப் பற்றி அறிந்துகொள்ளவும் அனைவரும் விரும்புவார்கள். சேபாவின் அரசிகூட அவரிடம் வந்து கேள்விகளால் அவரைச் சோதிக்கவில்லை. அவள் தன் மனதில் இருந்த அனைத்தையும் பகிர்ந்துகொண்டு, சொலமனின் ஞானம் முழுவதையும் ஒரு வார்த்தையைக்கூடத் தவறவிடாமல் உள்வாங்கிக்கொண்டாள்.
52. அவள் எதையும் தவறவிடாமல் செவிமடுத்தாள், சத்தியத்தை நேசிக்கிற மன்னன் சொலமன் அவளுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டான். ஓ மனிதனே, அவள் சொல்வதைக் கேள்; என் சொந்த நாட்டில் உமது வார்த்தைகளையும் ஞானத்தையும் பற்றி உண்மையான செய்திகளைக் கேட்டேன், ஆனால் நான் இங்கு வந்து என் கண்ணால் பார்க்கும் வரை அவற்றை நம்பவில்லை; மேலும், எனக்கு பாதி கதை மட்டுமே சொல்லப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன். என் சொந்த நாட்டில் எனக்குச் சொல்லப்பட்டதை விட அதிகமான நல்ல காரியங்களை நீர் பகிர்ந்துகொண்டீர். உமது பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், உமக்கு முன்பாக நின்று உமது ஞானம் அனைத்தையும் கேட்கும் உமது ஊழியர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று 1 இராஜாக்கள் 10:6-8-ல் கூறப்பட்டுள்ளது. உண்மையான சொலமனின் கொண்டாட்டத்தையும் அந்த விருந்தில் கூடுகிறவர்களையும் அறிந்துகொள்; எல்லா தேசங்களும் உண்மையான ஞானத்தையும் நீதியையும் எங்கே கேட்டறியலாம் என்பதையும், காணமுடியாதவற்றைப் பார்க்கும் கண்களால் அவர்கள் அவரை எப்படி காணலாம் என்பதையும் ஞானத்துடன் புரிந்துகொள். ஏனெனில், “நம்மால் காணமுடிந்தவற்றைப் பற்றியல்ல, காணமுடியாதவற்றைப் பற்றியே நாங்கள் சிந்திக்கிறோம். காணப்படுகிறவை தற்காலிகமானவை. காணப்படாதவையோ நிரந்தரமானவை” என்று 2 கொரிந்தியர் 4:18 கூறுகிறது.
53. தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்பவர்களைத் தவிர வேறு எந்தப் பெண்களை பாக்கியவான்கள் என்று கூறமுடியும்? ஏனெனில், லூக்கா 11:28 இல், “தேவனுடைய போதனைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிற மக்களே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள்” என்ற கர்த்தரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார். இதேபோல, “பரலோகத்திலிருக்கும் என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள்” என்று மத்தேயு 12:50 இலும் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். அப்படியானால் அவருக்கு முன்பாக நிற்கும் அந்தப் பாக்கியவான்கள் யார்? பெரியோர் சிறியோர் அனைவருக்கும் இயேசுவைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்ன பவுலா? (அப்போஸ்தலர் பணிகள் 26:22) அல்லது தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உதவும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சிமியோனா? (லூக்கா 2:25) அப்படியானால், கர்த்தருக்கு முன்பாக நின்றதால், தேவனுடைய சித்தத்தின்படியே புறப்பட்டுப் போகும் அதிகாரம் அவனுக்கு இல்லை என்பதாலல்லவா, தன்னை எப்படி புறப்பட்டுப் போகவிடுமாறு அவன் கேட்டிருக்க முடியும்? மன்னன் சொலமன் நமக்கு ஒரு உதாரணமாகவே காட்டப்படுகிறார்; அவருடைய ஞானம் எல்லோராலும் செவி செவிமடுத்து ஏற்றுக்கொள்ளப்படும் என்று பெரிதும் நம்பப்பட்டது.
54. யோசேப்பு சிறையில் இருந்தபோதும், நிச்சயமற்ற காரியங்கள் குறித்து மக்கள் அவரிடம் ஆலோசனை கேட்டார்கள். அவருடைய வழிகாட்டுதல் எகிப்து முழுவதற்கும் உதவியது, அதன் காரணமாக அவர்கள் ஏழு வருடப் பஞ்சத்தின் கொடுமையை அனுபவிக்கவில்லை. அதுமட்டுமல்ல, அவரால் ஏனைய மக்களையும் கொடிய பசி மற்றும் பிணியில் இருந்து விடுவிக்க முடிந்தது.
55. கைதிகளில் ஒருவனாக இருந்தபோதிலும், தானியேல் அரச ஆலோசகர்களின் தலைவராக நியமிக்கப்பட்டான். தன் ஆலோசனைகளால் அவன் நிகழ்காலத்தைச் சிறப்பாக்கி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து எதிர்வு கூறியிருந்தான். (தானியேல் II ): அவன் அடிக்கடி காரியங்களுக்கு விளக்கம் அளித்து, உண்மையை உரைத்தவன் என்பதை நிரூபித்திருந்ததால், எல்லாவற்றையும் குறித்த நம்பிக்கை அவன் மீது வைக்கப்பட்டது.
அத்தியாயம் 11
ஒருவரின் நம்பிக்கையைப் பெற உதவும் மூன்றாவது குணம், மோயீசன், தானியேல் மற்றும் யோசேப்பு ஆகியோரிடம் வெளிப்படையாகக் காணப்பட்டது.
56. ஆனால், யோசேப்பு, சாலொமோன், தானியேல் போன்ற போற்றுதலுக்குரியவர்களாகக் கருதப்பட்டவர்களைப் பொறுத்தவரை, மூன்றாவதாகக் காணப்படும் கருத்தும் கவனிக்கப்பட்ட வேண்டியதாகத் தெரிகிறது. மேலும் மோயீசனைப் பற்றி சொல்வதானால், யாத்திராகமம் 18:13-ல் காணப்படுவது போல, இஸ்ரவேல் மக்கள் அனைவரும் எப்போதும் அவருடைய ஆலோசனையை நாட மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். அவருடைய வாழ்க்கை, அவருடைய ஞானத்தின் மீதான நம்பிக்கையைத் தூண்டி, அவர் மீது கொண்டிருந்த அவர்களின் மரியாதையை உயர்த்தியது. தங்களுக்கு மிகவும் சிக்கலானதாகவோ அல்லது தங்கள் திறன்களுக்கு அப்பாற்பட்டதாகவோ தோன்றிய விஷயங்களில் முடிவெடுப்பதற்காக மூப்பர்கள் அவரை நாடியபோது, மோயீசனின் ஆலோசனையை யார் தான் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள்?
57. ‘தானியேலை விட ஞானமுள்ளவன் யார்?’ என்று தேவனே சொன்ன தானியேலின் ஆலோசனைக்கு மறுப்பு தெரிவிப்பவர் எவர்? என்று எசேக்கியேல் 28:3 கேள்வியைத் தொடுக்கிறது. தேவன் ஆசீர்வதித்தவர்களின் எண்ணங்களை மக்கள் எப்படிச் சந்தேகிக்க முடியும்? மோயீசனின் ஆலோசனையால் போர்கள் முடிவுக்கு வந்தன; மேலும் அவனால் வானத்திலிருந்து உணவும் பாறையிலிருந்து தண்ணீரும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
58. முரட்டு சுபாவம் கொண்ட மனிதர்களைச் சாந்தப்படுத்தவும், சிங்கங்களை அமைதிப்படுத்தவும் தானியேலின் ஆன்மா எவ்வளவு தூய்மையாக இருந்திருக்க வேண்டும்! அவர் நல்ல சமநிலையுடனும், மனதிலும் உடலிலும் எவ்வளவு கட்டுப்பாட்டுடனும் இருந்திருக்க வேண்டும்! அவர் அரசர்களுடன் நட்பு கொண்டிருந்தபோதிலும், தங்கம் போன்ற பெறுமதி வாய்ந்த பொருட்களைத் தேடாமலும், தனக்கு அளிக்கப்பட்ட மரியாதையைத் தன் விசுவாசத்தைவிட மேலானதாக எண்ணாமலும் இருந்ததால், அவர் அனைவராலும் போற்றப்படும் ஒருவராகத் திகழ்ந்தார். மக்கள் தன்னை விரும்புவதற்காகத் தன் மனதை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக, தேவனுடைய கட்டளைகளுக்காக ஆபத்தை எதிர்கொள்ளவும் அவர் தயாராக இருந்தார்.
59. நான் தற்செயலாகக் கவனிக்கத் தவறிய யோசேப்பின் கற்புடைமை மற்றும் நேர்மையையும் பற்றி நான் மீண்டும் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஒருபுறம் அவன் தன் எஜமானின் மனைவியின் காம இச்சைகளுக்கு இணங்காமல், அவள் தரவிருந்த பரிசுகளையும் மறுத்து, மரணத்தைத் துச்சமாக மதித்து, பயம் நீங்கியவனாக, சிறை வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தான். ஒரு தனிப்பட்ட விஷயத்தில் ஆலோசனை வழங்க அவனைத் தகுதியானவன் என்று கருத முடியாது? அவனது சுறுசுறுப்பான மனமும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும், அக்காலத்தின் வறட்சியைத் தன் ஆலோசனைகள் மற்றும் மனவலிமையின் ஆற்றலால் வளப்படுத்தினான்.
அத்தியாயம் 12
தீய பழக்கங்களால் கறைபட்ட மனிதனிடமோ, அல்லது மனக்கசப்புள்ளவரிடமோ, அல்லது நடைமுறைக்கு ஒவ்வாதவரிடமோ யாரும் ஆலோசனை கேட்பதில்லை; மாறாக, வேதவாக்கியங்களின் படி முன்மாதிரியாக வாழும் ஒருவரிடமே ஆலோசனை கேட்கிறார்கள்.
60. ஆலோசனை தேடும்போது, நல்ல குணம், வலிமையான நற்பண்புகள், கருணை காட்டும் பழக்கம், மற்றும் அன்பான குணம் ஆகியவை இருப்பது மிகவும் முக்கியம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அழுக்குச் சேற்றில் சுத்தமான நீரூற்றைத் தேடுவோர் இருப்பார்களா? கலங்கிய நீரைக் குடிக்க யார் விரும்புவார்கள்? ஆகவே, ஆடம்பர வாழ்க்கை, வரம்பு மீறிய சுகபோகம், மற்றும் தவறான நடத்தை ஆகியவை கொண்ட மனிதர் இருக்கும்போது, அவர்களிடமிருந்து தாங்கள் எந்த ஒரு நற்குணத்தையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எவராவது நினைப்பார்களா? அசுத்தமான வாழ்க்கையை இழிவாகப் பார்க்கக் கூடியவர்களே அதிகம். ஒருவர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாதவராய் இருக்கும்போது, அவர் மற்றவர்களுக்கு உதவுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? எப்போதும் சிக்கலை உருவாக்கக் காத்திருக்கும் ஒரு கொடிய குணமுடைய, தீங்கு விளைவிக்கும் மனிதரிடமிருந்து எவரும் விலகி இருக்கவே விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களை தவிர்க்க யார் தான் விரும்ப மாட்டார்கள்?
61. அறிவுரை வழங்குவதில் எவ்வளவு சிறந்த திறமைசாலியாக இருந்தாலும், அணுகுவதற்கு கடினமாக இருக்கும் ஒருவரிடம் யார் தான் செல்வார்கள்? அடைத்து நிறுத்தப்பட்ட நீரூற்றைப் போன்ற நிலை தான் அவருக்கு ஏற்படும். ஞானம் உள்ளவராயிருந்தும் ஒருவர் அறிவுரை வழங்க மறுத்தால், அவர் பெற்றிருக்கும் ஞானத்தினால் என்ன பயன்? ஒருவர் அறிவுரை வழங்கும் வாய்ப்புகளை நிறுத்திக்கொண்டால், அந்த ஊற்று அடைக்கப்பட்டு மற்றவர்களுக்கும் தனக்கும் உதவாமல் போய்விடும்.
62. அப்படியானால், ஞானியாக இருந்தும் அந்த ஞானத்தைத் தீய வாழ்வு காரணமாகப் பாழாக்கி, அதன் மூலம் ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் கெடுத்துவிடுபவனைப் பற்றி நாம் என்ன சொல்வது? அவனது வாழ்க்கை ஒரு வீழ்ச்சியடைந்த ஆன்மாவையே காட்டுகிறது. அவன் தன் வழிகளில் தீயவன் என்று தெரிந்தும், அவன் அறிவுரை சொல்வதில் சிறந்தவன் என்று நாம் எப்படி நினைக்க முடியும்? அவனிடம் நான் என்னை நம்பி ஒப்படைக்கப் போகிறேன் என்றால், அவன் என்னை விடச் சிறந்தவனாக இருக்க வேண்டும். அவன் ஒருபோதும் அறிவுரையைக் கேட்டுப் பழகாதபோது, எனக்கு அறிவுரை சொல்வதில் அவன் சிறந்தவன் என்று நான் எப்படி நினைக்க முடியும்? அல்லது, தனக்கென நேரமே இல்லாதபோதும், அவன் மனம் கேளிக்கைகளால் நிறைந்திருக்கும்போதும், தீவிர ஆசைகளால் கட்டுப்படுத்தப்பட்டு, பணத்திற்கு அடிமையாகி, மேலும் மேலும் செல்வத்தைத் வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு, பயத்தால் பீடிக்கப்பட்டு அஞ்சி வாழும் அவனிடம் எனக்கு அறிவுரை வழங்க நேரம் எங்கே இருக்கப்போகிறது? அமைதிக்கே இடமில்லாத அங்கு அறிவுரைக்கு எங்கே இடம் இருக்கப் போகிறது?
63. நான் மதித்துப் போற்ற வேண்டிய, கடவுள் நம் முன்னோர்களுக்கு அளித்த அந்த ஞானி, தீயவை அனைத்தையும் அகற்றி, அறிவுரை வழங்கி, ஒருவரின் நல்லறிவைத் தீய செயல்களிலிருந்து காக்கக் கூடியவர். அவரைப் பின்பற்ற வேண்டும்; ஏனெனில், எந்தத் தீமையும் அதனுடன் கலந்து விடாது.
அத்தியாயம் 13
தெய்வீக சான்றுகளால் ஞானத்தின் மதிப்பு தெளிவாகக் காட்டப்படுகிறது. பின்னர், அது மற்ற நற்பண்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டு இயங்குகிறது என்பதை அவர் தொடர்ந்து விளக்குகிறார்.
64. வசீகரமான முகமானது மிருகத்தனமான உடலாலும் பயங்கரமான நகங்களாலும் அதன் வசீகரம் கெட்டுப்போவதை யார் விரும்புவார்? குறிப்பாக ஞானத்தின் வசீகரம், மறைநூல்கள் போன்ற அனைத்தும் நமக்குக் காட்டுவது போல, நற்குணங்களின் தோற்றம் மிகவும் அற்புதமானதும் பிரகாசமானதும் ஆகும். அது சூரியனை விடப் பிரகாசமாக ஒளிர்கிறது, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது, எந்த நட்சத்திரக் கூட்டத்தையும் விட மிகவும் பிரகாசமாய் ஒளிர்கிறது. இரவு அவற்றின் ஒளியை மறைக்கிறது. சொலமனின் ஞானம் 7:29-30 இல், “ஞானம் என்பது கதிரவனைவிட அழகானது; விண்மீன் கூட்டத்தில் மிகவும் சிறந்தது; ஒளியைக் காட்டிலும் மேலானது. இரவுக்கு பகல் இடம் கொடுக்கிறது. ஆனால் தீமையால் ஞானத்தை வெல்ல முடியாது” என்று சொல்லப்பட்டுள்ளது.
65. நாம் அதன் அழகைப் பற்றிப் பேசி, வேதாகம வார்த்தைகளால் அதைக் காட்டியிருக்கிறோம். அதற்கும் தீய குணத்திற்கும் இடையில் எந்த ஐக்கியமும் இருக்க முடியாது. அது மற்ற நற்பண்புகளுடன் பிரிக்க முடியாத ஐக்கியத்தைக் கொண்டுள்ளது என்பதை சொலமனின் ஞானம் 7:22-23 வாயிலாக நாம் அறிந்துகொள்ளலாம். “ஞானம் — ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது; தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது; பலவகைப்பட்டது; நுண்மையானது; உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது; மாசுபடாதது; வெளிப்படையானது; கேடு விளைவிக்காதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது. ஞானம் எதிர்க்கமுடியாதது; நன்மை செய்வது; மனிதநேயம் கொண்டது; நிலைபெயராதது; உறுதியானது; வீண்கவலை கொள்ளாதது; எல்லாம் வல்லது; எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்லும் சக்தியைக் கொண்டது” என்று அந்த வேத வாக்கியம் கூறுகிறது. மேலும் ஞானம் 8:7 கூறுவதை பார்ப்போம்: அது, “ஒருவர் நீதியின்மேல் அன்பு கூர்கின்றாரோ? ஞானத்தின் உழைப்பு அவரிடம் நற்பண்புகளால் மிளிரும். ஏனெனில் தன்னடக்கம், விவேகம், நீதி, துணிவு ஆகியவற்றை ஞானம் கற்பிக்கின்றது. இவற்றைத் தவிர வாழ்வில் மனிதருக்குப் பயனுள்ளவை வேறு ஒன்றுமில்லை” என்று மிகவும் அழகாகவும் அர்த்தத்துடனும் விளக்குகிறது.
அத்தியாயம் 14
விவேகம் என்பது அனைத்து நற்பண்புகளுடனும், குறிப்பாக செல்வத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடாத விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் முன்னிற்கிறது.
66. எனவே விவேகம் எல்லாவற்றிலும் தன் செல்வாக்கைச் செலுத்துகிறது; அது நன்மைதரும் அனைத்துடனும் தன்னை இணைத்துக் கொள்கிறது. நீதியைத் தன்னகத்தே கொண்டிருக்காமல், அதனால் எப்படி ஞானம் மிகுந்த ஆலோசனையை வழங்க முடியும்? நீதி என்பது விவேகத்தை நிலைத்தன்மையுடனும், மரண பயமின்றியும், பீதி அல்லது அச்சத்தால் பாதிக்கப்படாமலும் இருக்க துணைநிற்கிறது. முகஸ்துதியானது விவேகத்தை உண்மையிலிருந்து திசை திருப்ப ஒருபோதும் அனுமதிப்பதில்லை; உலகமே ஞானிகளின் உண்மையான இல்லம் என்பதைப் புரிந்துகொண்டு, அது தான் விலகிச் செல்வதைத் தவிர்க்க முடியும். அத்தோடு, விவேகம் பற்றாக்குறையைக் கண்டு அஞ்சுவதில்லை, ஏனெனில் ஞானிக்கு எதிலும் குறைவில்லை என்பதை அது நன்கறியும். செல்வங்கள் நிறைந்த முழு உலகமும் ஞானிக்கே உரியது. பணத்தின் கவர்ச்சியால் கலங்காமல், செல்வத்தை இகழ்ந்து, மற்றவர்களின் ஆசைகளை ஒரு உயர்ந்த கண்ணோட்டத்தில் இருந்து நோக்கும் ஒருவரை விட உயர்குணமுடையவர் வேறு யார் இருக்க முடியும்? இப்படி நடந்துகொள்பவர் அசாதாரண குணம் கொண்டவர் என்று மக்கள் நம்புகிறார்கள்: “இத்தகையோர் யார்? அவர்களைப் பேறுபெற்றோர் எனலாம்; ஏனெனில் அவர்கள் தங்கள் மக்களிடையே வியக்கத்தக்க செயல்களை செய்திருக்கிறார்கள்” என்று சீராக் 31:9 கூறுகிறது. உண்மையாகவே, செல்வத்தை இகழ்பவர் போற்றுதலுக்கு உரியவரே; அதிலும் குறிப்பாக, பலர் தங்கள் சொந்தப் பாதுகாப்பை விட செல்வத்திற்கே முன்னுரிமை அளிப்பதால் மேற்கூறப்பட்டவை முக்கியத்துவம் பெறுகின்றன.
67. பணத்தைச் சேமிக்கும் சிக்கனமும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பழக்கமும் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக கௌரவத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவருக்கு மிகவும் பொருத்தமானது; இதனால் ஒருவன் தன் செல்வத்தின் மீது அதீத ஆசை கொள்ளாமலும், சுதந்திரமான கொள்கையுடன் மக்களை வழிநடத்துபவன் பணத்திற்கு அடிமையாகாமலும் இருப்பான். ஒருவன் தன் உடைமைகளை விட மனதால் உயர்ந்தவனாகவும், தன் நண்பர்களுக்கு மனமுவந்து உதவுபவனாகவும் இருப்பது நல்லது. ஏனெனில், பணிவாக இருத்தல் மற்றவர்கள் உங்களை மேலும் மதிக்கச் செய்யும். மக்களின் தலைவர் என்பவர், சிரிய தேசத்தின் வியாபாரிகளையும் கிலேயாத் முகவர்களையும் போல கறுப்புப் பணத்தை விரும்பாமலும், தங்கள் நன்மைக்கான நம்பிக்கையை முழுவதுமாகப் பணத்தின் மீது வைக்காமலும், அன்றாடக் கூலித் தொழிலாளியைப் போலத் தன் தினசரி வருமானத்தைக் கணக்கிட்டுச் சேமிப்பைக் கணக்கிடாமலும் இருப்பதும் சிறப்பானதும் முறையானதும் ஆகும்.
அத்தியாயம் 15
பெருந்தன்மை; பெருந்தன்மையை யார் முதன்மையாகப் பெற வேண்டும் என்பதையும், குறைந்த வளங்களைக் கொண்ட மக்கள், தங்கள் உதவியையும் ஆலோசனையையும் வழங்குவதன் மூலம் பெருந்தன்மையை எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதையும் இது விளக்குகிறது.
68. ஒருவன் தன் மனதை இந்தக் குறையிலிருந்து விடுவித்திருப்பது போற்றத்தக்கது என்றால், தகுதியற்றவர்களுக்கு மிகத் தாராளமாகவும், தேவையுள்ளவர்களுக்கு மிகக் குறைவாகவும் வழங்காமல், தாராள குணத்தால் மக்களின் அன்பைப் பெறுவது அதைவிட மேன்மையானது.
69. தாராள குணத்தில் பல வகைகள் உள்ளன. தேவையுள்ளார் வாழ்வதற்காக, நமது அன்றாட உணவிலிருந்து நாம் உணவைப் பகிர்ந்து கொடுக்கலாம். ஏழைகளுக்கான பொது உணவு விநியோகங்கள் வற்றிப் போகாத வரையில் பாதுகாத்தலும், தங்கள் வறுமை நிலையை வெளிப்படுத்தத் தயங்குபவர்களுக்கு நாம் வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்க முடியும். நான் இப்போது ஒரு பதவியில் இருக்கும் ஒருவரைக் குறிப்பிடுகிறேன். அவர் ஒரு மதத் தலைவராகவோ அல்லது தர்மம் செய்பவராகவோ இருந்தால், அவர் இந்த மக்களைப் பற்றி ஆயரிடம் தெரிவிக்க வேண்டும்; மேலும், தேவை இருப்பவர்கள் அல்லது பணத்தை இழந்து தற்போது ஏழைகளாக இருப்பவர்கள் என தனக்குத் தெரிந்த எவரின் பெயரையும் அவர் மறைக்கக் கூடாது. குறிப்பாக, அவர்கள் இளமையில் வீண் செலவு செய்ததால் ஏழைகளாக இன்றி, வேறு எவரோ அவர்களிடம் திருடியதாலோ அல்லது தங்கள் குடும்பச் சொத்தை அநியாயமான வகையில் இழந்ததாலோ, அதன் காரணமாக தற்போது அவர்களால் வாழ வழி இல்லாமற் போனாலோ இப்படிப்பட்டவர்களை பற்றித் தெரிவிக்க வேண்டும்.
70. தாராள மனப்பான்மையின் பிரதான வடிவம் என்பது கைதிகளை மீட்பது, அவர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவது, மக்களை மரணத்திலிருந்து மீட்பது, குறிப்பாக பெண்களை அவமானத்திலிருந்து பாதுகாப்பது, குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் மீண்டும் இணைப்பது, மற்றும் ஒரு குடிமகனை அவனது தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்புவது போன்றவை ஆகும். திரேஸ் மற்றும் இல்லிரியா (Thrace and Illyria) வில் பேரழிவு ஏற்பட்ட காலங்களில் இது தெளிவாகத் தெரிந்தது. உலகம் முழுவதும் எத்தனை கைதிகள் அடிமைகளாக விற்பதற்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்! நாம் அவர்களை ஒன்று திரட்ட முடிந்திருந்தால், அவர்களின் எண்ணிக்கை ஒரு முழு மாகாணத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்திருக்கும். ஆயினும், திருச்சபையால் விடுவிக்கப் பட்டவர்களை மீண்டும் அடிமைத்தனத்திற்கு அனுப்ப விரும்பிய சிலரும் இருந்தனர். மற்றவர்களின் இரக்கத்தை மதிப்பிடும் விஷயத்தில் அவர்கள் அடிமைத்தனத்தின் சங்கிலிகளை விடக் கொடியவர்களாக இருந்தனர். தாங்கள் அடிமைத்தனத்தில் விழுந்திருந்தால் தாமும் அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருப்போம் என்றும் தாங்கள் விற்கப்பட்டிருந்தால், அடிமைத்தனத்தின் சேவையை மறுத்திருக்க மாட்டோம் என்றும் கூறினர். தங்களால் தங்கள் அடிமைத்தனத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்றாலும், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கவே அவர்கள் விரும்பினார்கள். ஒருவேளை வாங்குபவர் அதற்கான பணத்தைத் திருப்பிக் கொடுக்க முன்வந்தாலே அன்றி, இது அவர்களின் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவராது, மாறாக அவர்கள் திரும்பவும் வாங்கப்பட்டதையே குறிக்கும்.
71. கைதிகளை விடுவிப்பது தாராள குணத்தின் ஒரு தனித்துவமான அம்சமாகும்; குறிப்பாக, பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற பேராசையைத் தவிர, இரக்க உணர்வே இல்லாத, காட்டுமிராண்டிகளைப் போலச் செயல்படும் எதிரிகளிடமிருந்து அவர்களை விடுவிப்பது மிகவும் உயர்ந்த தர்மமாகும். ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டத்தில் இருக்கும்போதும், நியாயமாகச் செலுத்த வேண்டிய பணம் தனது ஏழ்மைச் சூழ்நிலை காரணமாகச் செலுத்தப்படாமல் இருக்கும் போதும், அவருடைய கடனை அடைப்பதும் நல்ல செயலாகும். அதுபோலவே, குழந்தைகளை வளர்ப்பதும், யாருமற்றோரைப் பராமரிப்பதும் மிகுந்த கருணைமிக்க செயலாகவே பார்க்கப்படுகிறது.
72. நல்மனதுடைய சிலர் பெற்றோரை இழந்த கன்னியர்களின் கற்பைக் காக்கும் முகமாக, அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதுண்டு. அவர்கள் இந்தப் பெண்களுக்கு நல்வாழ்த்துக்களுடனும் பண உதவியும் நல்குகிறார்கள். அப்போஸ்தலர் மற்றொரு வகையான கருணையையும் பற்றிப் போதிக்கிறார்: “விசுவாசமுள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தில் எவரேனும் விதவைகள் இருந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் உதவிகளுக்காக சபையில் சென்று தொந்தரவு செய்யக் கூடாது. ஏனென்றால், அப்பொழுது தான் குடும்ப ஆதரவே அற்ற விதவைகளைக் கவனிக்கும் பொறுப்பை சபையால் ஏற்றுக்கொள்ள இயலும்” என்று 1 தீமோத்தேயு 5:16 கூறுகிறது.
73. ஆகவே, இவ்வகையான தாராள மனப்பான்மை பயனுள்ளதுதான்; ஆனால் அது எல்லோரிடமும் இருப்பதில்லை. பல நல்ல மனம் படைத்த மனிதர்களிடம் போதிய பணம் இருப்பதில்லை. தங்களுக்கு இருப்பவற்றைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அதனால் அவர்களால் மற்றவர்களின் வறுமையை நீக்க உதவ முடிவதில்லை. ஆயினும், அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கருணையின் மற்றொரு வடிவம் உள்ளது, அது தங்களைவிட மிகவும் ஏழைகளாக இருப்பவர்களுக்கு ஆதரவளிக்க அவர்களை உந்துகிறது. தாராள மனப்பான்மையில் இரண்டு வகைகள் உள்ளன: ஒன்று, பணம் போன்ற உண்மையான உதவியை வழங்குவது; மற்றொன்று, செயல் வடிவில் உதவியை அளிப்பது. இது பெரும்பாலும் மிகவும் பெரியதாகவும் உன்னதமானதாகவும் இருக்கும்.
74. ஆதியாகமம் 14:16-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, போரில் பெற்ற வெற்றியின் மூலம் சிறைபிடிக்கப்பட்ட தன் மருமகனை ஆபிரகாம் மீட்டது, வெறுமனே ஒரு மீட்புத்தொகையைக் கொடுத்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய நன்மையை விட மேன்மையானது. அதேபோல, எதிர்காலத்திற்காக எவ்வாறு தயாராவது என்பது குறித்து ஆலோசனை வழங்கியதன் மூலம், யோசேப்பு பார்வோன் அரசனுக்குப் பணம் கொடுத்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய நன்மையை விட மிகவும் திறம்பட உதவினார். ஒரு முழுப் பிராந்தியத்தின் பயிர்களைப் பணத்தால் மீட்டெடுக்க முடியாது. ஆனால் ஆதியாகமம் 41:53-57-ல் சொல்லப்பட்டுள்ளவாறு, யோசேப்பின் ஞானமான திட்டமிடல் எகிப்தை ஐந்து ஆண்டுகளுக்குப் பஞ்சத்திலிருந்து பாதுகாத்தது.
75. பணம் என்பது மிக விரைவாகச் செலவாகிவிடும், ஆனால் அறிவுரை என்பது ஒருபோதும் தீர்ந்துபோகாத ஒன்று. உண்மையில், நீங்கள் அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு அது வலிமை பெறுகிறது. பணம் வேகமாகக் கரைந்து விடுவதோடு, அது கருணையைக் காட்டுவதிலும் கூடத் தவறிவிடும்; பணம் பொருள் போன்றவற்றால் நீங்கள் எவ்வளவு அதிகமான மக்களுக்கு உதவ விரும்புகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களால் உதவக்கூடியவர்களின் எண்ணிக்கை குறைகிறது. மேலும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது உங்களிடம் இல்லை என்பதைப் பல சமயங்களில் நீங்கள் காண்கிறீர்கள். மறுபுறம், அறிவுரைகளைப் பகிர்வது மற்றும் உதவி வழங்குவது என்று வரும்போது, நீங்கள் எவ்வளவு அதிகமான நபர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு அது பெருகி, பெரும்பாலும் உங்களிடமே திரும்பி வரும். ஞானத்தின் முடிவற்ற சுழற்சி எப்போதும் உங்களை நோக்கியே சுழன்று வரும், மேலும் நீங்கள் எவ்வளவு அதிகமாக உதவிக்கரம் நீட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களிடம் எஞ்சியிருப்பது மேலும் உயிரோட்டமுள்ளதாக மாறும்.
அத்தியாயம் 16
நாம் தாராளமாகக் கொடுக்கும் விதத்தில் கவனமாக இருக்க வேண்டும், அப்போதுதான், மிகவும் தகுதியானவர்களுக்குத் தேவைப்படும்போது, நமது வளங்களைத் தகுதியற்றவர்களுக்குக் கொடுத்து வீணாக்க மாட்டோம். இருப்பினும், நாம் மிகவும் குறைவாகவோ அல்லது வேண்டாவெறுப்புடனோ கொடுக்கக்கூடாது. அதற்குப் பதிலாக, தனது நல்ல தீர்ப்புக்காகப் புகழப்படும் ஞானி யோசேப்பின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.
76. ஆகவே, நமது கொடைகள் பயனற்றதாகிவிடாதபடிக்கு, நமது தாராள குணத்திற்கு முறையான வரம்புகள் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. குறிப்பாக குருமார்கள், தற்பெருமைக்காகக் கொடுக்காமல், சரியான காரணங்களுக்காகக் கொடுக்கும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். யாசகர்களின் வறுமை இன்று இருப்பதை விட ஒருபோதும் அதிகமாக இருந்ததில்லை. அவர்கள் முழு ஆரோக்கியத்துடன் அலைந்து திரிகிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லாமல் வருகிறார்கள். அவர்கள் ஏழைகளின் பணத்தையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்க விரும்புகிறார்கள். சிறிதளவு கிடைத்ததில் திருப்தியடையாமல், அவர்கள் மேலும் கேட்கிறார்கள். தங்களை மூடியிருக்கும் கந்தல் ஆடைகளின் மூலம் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். புதிய புதிய காரணத்தைத் தேடுகிறார்கள்; தங்கள் வாழ்க்கையைப் பற்றிய பொய்க் கதைகளைக் கூறி, மேலும் பணம் கேட்கிறார்கள். உதவுவோர் எவரேனும் அவர்களின் கதைகளை நம்பினால், உண்மையான ஏழைகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை அவர் இந்த யாசகர்களுக்குக் கொடுப்பதன் மூலம் செலவழித்துவிடுவார். நாம் கொடுப்பதில் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும், அப்போதுதான் ஏழைகள் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லாமலும், தேவையுள்ளோரின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு நாம் செய்யும் உதவி நேர்மையற்றவர்களின் கொள்ளைப் பொருளாகாமலும் இருக்கும். அப்படியானால், கருணை ஒருபோதும் மறக்கப்படாமலும், உண்மையான தேவை ஒருபோதும் புறக்கணிக்கப்படாமலும் இருக்கும்படியான இவ்வாறான தகுந்த வரம்புகள் பேணப்படவேண்டும்.
77. பலர் தாங்கள் கடனில் இருப்பது போல் நடிக்கிறார்கள். அப்படியானால் யதார்த்தத்தை உற்று நோக்குவோம். தங்களிடமிருந்த அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், அவர்களது கஷ்டம் தெளிவாகத் தெரிந்தாலோ அல்லது உதவி கேட்பவர் உங்களுக்கு நன்கு தெரிந்தவராக இருந்தாலோ மட்டுமே உதவுங்கள்; அதுபோன்ற சந்தர்ப்பங்களில் விரைந்து உதவுங்கள். திருச்சபையால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பசியுடன் இருந்தால், அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும். ஆகவே, கொடுப்பதில் தூய்மையான சிந்தனையுடன் இருப்பவர் யாரிடமும் கடுமையாக நடந்துகொள்வதில்லை, மாறாக அனைவர் மத்தியிலும் தாராள மனப்பான்மையோடு இருக்கிறார். தேவையுள்ளவர்களின் கூக்குரலை நாம் வெறுமனே கேளாமல் அவர்களின் சூழ்நிலைகளுக்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தேவையுள்ளவர்களின் கூக்குரல்களை விட, பலவீனர்களின் அழுகுரல்கள் இரக்கமுள்ளவர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். விடாப்பிடியாக இரந்து கேட்டுக்கொண்டிருக்கும் யாசகருக்கு எப்போதும் அதிக பணம் கிடைக்கும் என்பது யதார்த்தமல்ல, ஆனால் எல்லா நேரங்களிலும் முரண்டு பிடிப்பவர்களுக்கு நாம் அடிபணியத் தேவையில்லை. நம்மைக் கவனிக்காதவர்களை நாம் கவனிக்க வேண்டும். பிறர் தன்னைக் கண்டுகொள்வார்களோ வெட்கப்படுபவர்களை நாம் தேடிச் செல்ல வேண்டும். அதேவேளை சிறையில் இருப்பவர்களையும் நோயுற்றவர்களையும் நாம் மறந்துவிடக் கூடாது; அவர்களுடைய குரல்கள் நமக்குக் கேட்காவிட்டாலும், அவர்கள் நம் எண்ணங்களில் இருக்க வேண்டும்.
78. நீங்கள் இரக்கம் காட்டுவதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் எவ்வளவு அதிகமாகக் காண்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் உங்களை நேசிப்பார்கள். தாங்கள் எவ்வளவு அதிகமாகக் கொடுத்தார்களோ, அவ்வளவு அதிகமாகப் பெற்ற பல மதத் தலைவர்களை எனக்குத் தெரியும். ஒரு நல்ல நன்கொடையாளரைக் காண்பவர்கள், அவரது சேவையை ஊக்குவிக்க அவருக்கு ஏதேனும் பொருளைக் கொடுக்கிறார்கள்; ஏனெனில் அந்தக் கருணைச் செயல் நன்கொடையாளர் வழியாக ஏழைகளைச் சென்றடையும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அவர் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கொடுப்பதைக் கண்டால், அவர்கள் இவ்விரண்டில் ஒன்றை இழிவாகப் பார்க்கிறார்கள்; முதல் நிலையில், அவர் மற்றவரின் கடின உழைப்பின் பலனைத் தேவையற்ற வழியில் கொடுப்பதன் மூலம் வீணடிக்கிறார் என்பதாலும் மறுபுறம், அவர் அனைத்தையும் தனது பைகளுக்குள் திணித்துக்கொள்கிறார் என்பதாலும் இவ்வாறான குறைகளுக்கு ஆளாகிறார்கள். ஆக, தாராள மனப்பான்மையில் ஒரு முறையான பொறிமுறை பின்பற்றப்பட வேண்டியது போல, சில சமயங்களில் ஒரு உந்துதலும் கொடுக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியானால், ஒரு திட்டம் தேவை, அப்போதுதான் ஒருவர் செய்யும் நன்மையை எந்நாளும் தொடர முடியும். நாம் தாராளமாக வீண்விரயம் காரணமாக செலவழித்ததை ஒரு அவசியமான காரியத்தின் போது திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடக்கூடாது. இதற்காகவே இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு உந்துதல் தேவை, ஏனென்றால் செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை பெட்டகத்தில் சேர்த்து வைத்து பாதுகாப்பதை விட, ஏழைகளின் பசிதீர்க்க அந்தப் பணத்தைப் பயன்படுத்துவதே சிறந்தது. தேவையுள்ளோரின் நலனைப் பெட்டகங்களில் பூட்டி வைத்து, ஏழைகளின் வாழ்க்கையை ஒரு கல்லறையில் புதைப்பது மறைத்து வைப்போரைப் போல் வாழாமல் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.
79. யோசேப்பு எகிப்தின் செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்திருக்கலாம், அரச பொக்கிஷங்களையும் செலவழித்திருக்கலாம், ஆனால், பிறருக்குச் சொந்தமானதை வீணாக்குபவராக இருக்க அவர் விரும்பவில்லை. பசியுள்ளவர்களுக்குத் தானியத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, அதை விற்கவே அவர் முடிவு செய்தார். அவர் அதைச் சிலருக்கு இலவசமாகக் கொடுத்திருந்தால், இல்லாத பெரும்பாலானோருக்குக் கொடுக்க எதுவும் மிஞ்சியிருக்காது. அனைவருக்கும் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் அவர் தன் உண்மையான தாராள குணத்தைக் காட்டினார். தானியத்தை இலவசமாகப் பெற்றால், எவரும் நிலத்தில் பயிர் செய்வதை விட்டுவிடக் கூடாது என்பதற்காக, அனைவரும் தங்களுக்குத் தேவையான தானியத்தை வாங்கிக் கொள்ளும் வகையில் அவர் களஞ்சியங்களைத் திறந்தார். ஏனெனில், இலவசமாகக் கிடைக்கும் பிறருடைய பொருளைப் பயன்படுத்துபவன் பெரும்பாலும் தன்னுடைய உழைப்பைப் புறக்கணிக்கிறான்.
80. ஆதியாகமம் 47:14-20 கூறுவதுபோல, முதலாவதாக, அவர்களுடைய பணத்தையும், பின்பு அவர்களுடைய கருவிகளையும் சேகரித்தார்; இறுதியாக, அந்த நிலத்தின் மீதான அவர்களுடைய எல்லா உரிமைகளையும் அரசனுக்காகப் பெற்றார். அவர் அவர்களுடைய உடைமைகள் அனைத்தையும் பறிக்க விரும்பவில்லை, மாறாக அவற்றை அவர்கள் வைத்துக்கொள்ள உதவவே விரும்பினார். அவர்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் பொருட்டு, அவர் ஒரு பொது வரியையும் அமுல்படுத்தினார். ஏவரிடமிருந்து அவர் அந்த நிலத்தைப் பறித்தாரோ, அவர்கள் அனைவருக்கும் இது மிகவும் மகிழ்ச்சியளித்ததால், அவர்கள் அதைத் தங்கள் உரிமைகளை இழந்துவிட்டதாகக் கருதாமல், தங்கள் நல்வாழ்வை மீண்டும் பெறுவதாகவே கருதினார்கள்”. அதேபோன்று, “நீர் எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவரின் பார்வையில் நாங்கள் கிருபை பெறுவோமாக” என்று ஆதியாகமம் 47:25 மேலும் கூறுகிறது. ஏனெனில், அவர்கள் தங்களுக்குச் சொந்தமான எதையும் இழக்கவில்லை, மாறாக ஒரு புதிய உரிமையைப் பெற்றிருந்தார்கள். அவர்களுக்குப் பயனுள்ள எதையும் இழக்கவில்லை, ஏனெனில் அது அவர்களுக்கு என்றென்றும் சொந்தமாக இருந்தது.
81. ஓ மாமனிதரே! நீர் தேவையற்ற கொடையின் மூலம் நிலையற்ற புகழை நாடாமல், உமது தொலைநோக்குப் பார்வையின் நீடித்த நன்மைகளைத் தனது நினைவாக நிலைநாட்டியவராக இருக்கிறீர். மக்கள் தங்கள் பங்களிப்புகளின் மூலம் தங்களுக்குத் தாங்களே பரஸ்பரம் உதவிக் கொள்ள வேண்டும் என்றும், துன்பத்தில் இருக்கும் போது மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டிய அவசியம் ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே அவர் பாடுபட்டார். ஏனெனில், தங்கள் உரிமைகள் அனைத்தையும் இழப்பதை விட, தங்கள் விளைச்சலில் ஒரு பகுதியை விட்டுக்கொடுப்பது நிச்சயமாகச் சிறந்ததாக இருந்தது. அவர் அவர்களின் மொத்த அறுவடையில் ஐந்தில் ஒரு பங்கை வரியாக நிர்ணயித்தார். இதன் மூலம், அவர் எதிர்காலத்தைத் திட்டமிடுவதில் ஞானத்துடன் செயலாற்றுபவர் என்பதையும், அவர்கள் மீது விதித்த வரியில் தாராளவாதத்தையும் நேர்மையையும் வெளிப்படுத்தினார். அதன் பிறகு எகிப்து அத்தகைய உணவுப் பற்றாக்குறையால் ஒருபோதும் பாதிக்கப்பட்டதில்லை.
82. அவர் எதிர்காலத்தை எவ்வளவு அற்புதமாகக் கணித்திருந்தார்! முதலில், அரசரின் கனவை விளக்கும்போது, அவர் எவ்வளவு புத்திசாதூரியத்துடன் உண்மையை உரைத்தார். இது அரசரின் முதல் கனவு. ஏழு ஆரோக்கியமான, கொழுத்த பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியேறி ஆற்றங்கரையில் மேய்ந்து கொண்டிருந்தன. அதன்பின், முதல் வந்த பசுக்கூட்டங்களுக்குப் பிறகு வந்த ஏழு மாடுகளோ மெலிந்த தோற்றத்தையுடையனவாகக் காணப்பட்டன. அவைகளும் அந்தக் கொழுத்த பசுக்களுக்கு அருகில் ஆற்றங்கரையில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த மெலிந்த, சோர்ந்த பசுக்கள், மிகவும் கொழுத்து ஆரோக்கியமாக இருந்த மற்ற பசுக்களைக் கொன்று உண்பது போல் அவரது கனவில் தோன்றியது. இரண்டாவது கனவு என்னவெனில், நிலத்திலிருந்து முளைத்த ஏழு முதிர்ந்த, நல்ல தானியக் கதிர்கள் காணப்பட்டன. அவற்றுக்குப் பக்கத்தில் காற்றினால் பாழாகி உலர்ந்துபோன ஏழு சோகமான கதிர்கள் காணப்பட்டன. அவை முதிர்ந்த கதிர்களின் இடத்தைப் பிடிக்க முயன்று, அவற்றை கபளீகரம் செய்வதைப் போல் தோன்றியது என்பது இரண்டாவது கனவாகும்.
83. யோசேப்பு தான் கண்ட இந்தக் கனவு குறித்து இவ்வாறு விளக்கினார்: ஏழு பசுக்கள் ஏழு ஆண்டுகளையும், ஏழு தானியக் கதிர்களும் ஏழு ஆண்டுகளையும் குறிக்கின்றன. பசுக்களும் பயிர்களும் என்ன விளைச்சலைத் தருகின்றன என்பதைப் பார்த்து அவர் காலத்தைக் கணக்கிட்டார். ஏனென்றால், ஒரு பசு கன்று ஈனுவதற்கு ஒரு வருடம் ஆகும், பயிர்கள் வளர்வதற்கும் ஒரு வருடம் ஆகும். நாட்கள், வருடங்கள், காலங்கள் ஆறுகளைப் போல விரைவாகக் கடந்து செல்வதைப் போலவே, அவைகளும் நதியிலிருந்தே வந்தன. எனவே, ஒரு நல்ல தேசத்தின் முதல் ஏழு வருடங்கள் உணவால் நிறைந்திருக்கும், ஆனால் அடுத்த ஏழு வருடங்கள் வெறுமையாகவும் உணவின்றியும் இருக்கும். மேலும் இந்த வெறுமை முதல் எழுவருட காலத்தின் செழிப்பைத் தீர்த்துவிடும் என்றும் இதன் காரணமாக, வரவிருக்கும் உணவுப் பற்றாக்குறையின் தேவைகளுக்கு உதவும் வகையில் நல்ல பலன் தரும் ஆண்டுகளில் உணவு மற்றும் தானியங்களைச் சேமித்து வைப்பதை உறுதி செய்யுமாறு அவர் அவர்களுக்கு அறிவுரை கூறினார்.
84. நாம் முதலில் எதைப் போற்ற வேண்டும்? சத்தியத்தைக் கண்டறிய அவருக்கு உதவிய அவருடைய அறிவையா? அல்லது, மிகப் பெரியதும் நீடித்ததுமான ஒரு தேவையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டதில் காட்டிய அவருடைய ஆலோசனையையா? அல்லது, அவருடைய கவனத்தையும் நேர்மையையுமா? தனது கவனம் மிகுந்த போக்கினால் அவர் உயர் பதவியில் இருந்தபோது முக்கியமான வளங்களை ஒன்று திரட்டினார். மேலும் அவரது நேர்மையின் காரணமாக அனைவரையும் சமமாக நடத்தினார். அவரது வலிமையான மனதைப் பற்றி சொல்வதானால், ஆதியாகமம் 37:28-ல் கூறப்பட்டுள்ளதுபோல், அவரது சகோதரர்கள் அவரை அடிமையாக விற்றபோதிலும், அவர் அந்தத் தவறுக்காகப் பழிவாங்க முற்பட வில்லை, மாறாக, அவர்களுக்குத் தேவைப்பட்ட நேரத்தில் உதவினார். மேலும் அவரது கருணையைப் பற்றி சொல்வதானால், தன் அன்புச் சகோதரன் தன் சொத்தைத் திருடிவிட்டதாகப் பொய்யாகக் கூறி, அவனுடன் நெருக்கமாக இருப்பதற்காக அவர் சாமர்த்தியமாக ஒரு சூழ்நிலையை உருவாக்கி, அந்த அன்பின் காரணமாக அவனைத் தன்னருகே வைத்துக்கொள்ள அவரால் முடிந்தது.
85. அவனுடைய தந்தை அவனிடம் சரியாகவே கூறினார்: என் மகன் யோசேப்பு வளர்ந்துவிட்டான், என் மகன் பெரியவனாய் வளர்ந்து விட்டான், என் இளைய மகன், என் அன்புக்குரியவனே, உன் தந்தை மற்றும் தாயின் ஆசீர்வாதங்களால் தேவன் உனக்கு உதவி செய்து, மேலிருந்து வரும் ஆசீர்வாதங்களாலும், எல்லாவற்றையும் தாங்கியிருக்கும் பூமியின் ஆசீர்வாதங்களாலும் உன்னை நிறைவாய் ஆசீர்வதித்துள்ளார். இந்த ஆசீர்வாதங்கள் உயரிய மலைகளின் ஆசீர்வாதங்களையும், என்றென்றும் நிலைத்திருக்கும் மலைகளின் விருப்பங்களையும் மிஞ்சியவை. அத்தோடு, “பூமி தனது சிறந்த பொருட்களை யோசேப்பிற்குத் தரட்டும். யோசேப்பு தனது சகோதரர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டான். எனவே, எரியும் முட்செடிகளில் இருந்து கர்த்தர் தன்னிடமுள்ள சிறந்தவற்றை யோசேப்பிற்குக் கொடுக்கட்டும். யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான். அவனது இரு குமாரர்களும் காளையின் கொம்புகளைப் போன்றுள்ளனர். அவர்கள் மற்ற ஜனங்களைத் தாக்கிப் பூமியின் கடைசிவரை தள்ளிச் செல்வர். ஆமாம், மனாசே ஆயிரக் கணக்கானோரையும் எப்பிராயீம் பத்தாயிரக் கணக்கானோரையும் தள்ளிச் சென்றிருக்கிறார்கள்” என்று உபாகமம் 33:16-17 கூறுகிறது.
அத்தியாயம் 17
நாம் ஆலோசனை கேட்கும் நபரிடம் இருக்க வேண்டிய குணங்கள் எப்படிப்பட்டவையாக இருத்தல் வேண்டும்? யோசேப்பும் பவுலும் இந்தக் குணங்களை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்று கீழே ஆராயப்படுகிறது.
86. ஆகவே, பிறருக்கு அறிவுரை வழங்குபவர், எல்லா நற்செயல்களிலும், போதனையிலும், குணநலனிலும், தீவிரத்தன்மையிலும் ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இவ்வாறு, அவருடைய வார்த்தைகள் நன்மை பயப்பதாகவும், குற்றமற்றதாகவும், அவருடைய அறிவுரை பயனுள்ளதாகவும், அவருடைய வாழ்க்கை நற்பண்பும் முன்னுதாரணம் மிக்கதாகவும், அவருடைய கருத்துக்கள் காலத்துக்குத் தகுந்ததாகவும் இருக்க வேண்டும்.
87. பவுல் அப்படிப்பட்டவராக இருந்தார்; அவர் இளம் பெண்களுக்கு அறிவுரை கூறினார் (1 கொரிந்தியர் 7:25), மேலும் திருச்சபை தலைவர்களுக்கு வழிகாட்டினார். எனவே, நாம் பின்பற்றுவதற்கு அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்பவராக இருப்பதில் ஐயமில்லை. மூதாதையரின் மதிப்புமிக்க குடும்பத்திலிருந்து வந்திருந்தபோதிலும், தனது தாழ்மையான மற்றும் எளிமையான குணம் காரணமாக அவன் வெட்கப்படவில்லை; மாறாக, தனது மனப்பூர்வமான சேவையால் அதை மேன்மையானதாக ஆக்கியதோடு, தனது நற்குணங்களால் அதை ஒளிரச் செய்தான். வாங்குபவர்களாலும் விற்பவர்களாலும் கையாளப்பட வேண்டியிருந்த அவன், தாழ்மையுடன் இருக்க வேண்டுமென அறிந்திருந்தான். மேலும் அவர்களை “எஜமானரே” என்று அழைத்தான். அவருடைய தாழ்மையான வார்த்தைகளைக் கேளுங்கள்: என் எஜமான் தம்முடைய வீட்டில் என்ன இருக்கிறது என்று அறியார்; நீ அவருடைய மனைவி என்பதாலேயே, உன்னைத் தவிர வேறொன்றையும் மறைக்காமல், எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்; நான் எப்படி இவ்வளவு பெரிய துரோகத்தையும் தேவனுக்கு விரோதமான பாவத்தையும் செய்ய முடியும்? என்று யோசேப்பு கூறியதாக ஆதியாகமம் 39:8-9 மேற்கோள் காட்டுகிறது. அவருடைய வார்த்தைகளில் தாழ்மையும் கற்பும் நிறைந்துள்ளன. அவர் தம் எஜமானுக்குக் கீழ்ப்படிந்ததால் தாழ்மையையும், நன்றியை வெளிப்படுத்தியதால் மேன்மையான உள்ளத்தையும், அத்தகைய குற்றத்தால் கறைபடுவது ஒரு பெரும் பாவம் என்று கருதியதால் அவனது உயர்ந்த கற்பையும் அவை பிரதிபலிக்கின்றன.
88. ஒரு நீதிமான் இப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களின் வாழ்க்கையையும் நற்பெயரையும் கெடுக்கக்கூடிய எந்தவொரு சந்தேகத்திற்குரிய, தவறாக வழிநடத்தும் அல்லது உண்மையற்ற விஷயமும் அவர்களிடம் இருக்கக்கூடாது; வழிகாட்டுதலை நாடுபவர்களைத் தடுக்கக்கூடிய எந்தவொரு தீய குணத்தையும் அவர்கள் கொண்டிருக்கக்கூடாது. சில விஷயங்களை நாம் இயல்பாகவே தவிர்க்கிறோம், மற்றவற்றை நாம் சாதாரணமாக இழிவாகக் கருதுகிறோம். தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது மெல்ல மெல்ல நம்மைப் புண்படுத்தக்கூடிய விஷயங்களிலிருந்து நாம் விலகி இருக்கிறோம். உதாரணமாக, நாம் ஆலோசனைக்காக நாடும் மனிதரின் நேர்மை கேள்விக்குரியதாக இருந்தாலோ அல்லது பணப் பேராசை காரணமாக, ஒரு விலைக்குத் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராக இருந்தாலோ, அப்படிப்பட்ட மனிதர்களிடமிருந்து நாம் விலகி இருக்கவேண்டும். ஒருவர் அநியாயமாக நடந்துகொண்டால், நாம் அவரிடமிருந்து நம்மை விலக்கிக் கொள்கிறோம். இன்பத்தைத் தேடி ஆடம்பரமாக வாழும் ஒருவர், வெளிப்படையாக நேர்மையற்றவராக இல்லாவிட்டாலும், பேராசைக்காரராகவும் பணத்தின் மீது அதீத பற்று கொண்டவராகவும் இருக்கிறார்; அத்தகைய நபர் இழிவானவராகக் கருதப்படுகிறார். சோம்பேறியாகவும் செயல் திறனற்று வாழும் ஒருவரால் எப்படி கடின உழைப்பையோ அல்லது பலன்களையோ வழங்க முடியும்? இப்படிப்பட்டவர் என்ன விதமான கவலைகள் அல்லது அக்கறையை தன் மனதில் கொண்டிருக்க முடியும்?
89. எனவே, நல்ல ஆலோசனை சொல்பவர், நான் எந்த நிலையில் இருந்தாலும் அதில் திருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன் என்று பிலிப்பியர் 4:11 கூறுகிறது. அத்தோடு, 1 தீமோத்தேயு 6:10 கூறுவதுபோல, “பண ஆசையானது எல்லாவிதமான பாவங்களுக்கும் வழி வகுக்கும். சிலர் மேலும், மேலும் பணத்தை விரும்பி உண்மையான போதனையை விட்டுவிட்டார்கள். அதனால் தம் துன்பத்துக்குத் தாமே காரணமாகிறார்கள்” என்று அவர் அறிந்திருந்தார். இதன் காரணமாக, மற்றவர்களிடம் இருந்ததை விரும்பாமல், தனக்குச் சொந்தமானதில் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். “என்னிடம் இருப்பது எனக்குப் போதுமானது; என்னிடம் குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி, அது மிக அதிகம் போலவே உணர்கிறேன்,” என்கிறார் அவர். அவர் இதை முடிந்தவரை தெளிவாக விளக்க விரும்பியது போல் தெரிகிறது. ஆகவே அவர் இந்த சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார்: “என்னிடம் உள்ளதைக் கொண்டு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்கிறார் அவர். இதன் பொருள்; எனக்கு எந்தக் குறையும் இல்லை, மிக அதிகமாகவும் இல்லை. எனக்கு எந்தக் குறையும் இல்லை, ஏனெனில் நான் வேறு எதையும் தேடுவதில்லை. என்னிடம் மிக அதிகமாக இல்லை, ஏனெனில் நான் அதை எனக்காக அல்ல, பலருக்காக வைத்திருக்கிறேன். இவர் கூறும் இந்த எண்ணம் பணத்துடன் தொடர்புடையது.
90. ஆனால், இந்த வார்த்தைகளால் அவர் எல்லாவற்றையும் பற்றிக் கூறியிருக்க முடியும், ஏனெனில் அந்த நேரத்தில் அவரிடம் இருந்த அனைத்தும் அவருக்குத் திருப்தியளித்தன; அதாவது, அவர் பெரிய கௌரவத்தை விரும்பவில்லை, மேலதிக சேவைகளைத் தேடவில்லை, வீண் புகழை விரும்பவில்லை, தகுதியற்ற இடத்தில் நன்றியையும் எதிர்பார்க்கவில்லை; ஆனால், உழைப்பில் பொறுமையுடனும், தன் தகுதிகளில் உறுதியுடனும், தான் சகித்துக்கொள்ள வேண்டிய போராட்டத்தின் முடிவிற்காகக் காத்திருந்தார். இதுகுறித்து பிலிப்பியர் 4:12 இல், “ஏழ்மையில் இருக்கும்போதும், வசதியாக இருக்கும் போதும் எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும்” என்று சொல்லப்பட்டுள்ளது. உண்மையான தாழ்மை என்பது கற்பிக்கப்படுவது மட்டுமல்ல; அது அடக்கமாக இருப்பதிலிருந்தும், தன்னை அறிந்துகொள்வதிலிருந்தும் வருகிறது. பயத்தின் அடிப்படையில் ஒரு வகையான தாழ்மையும், திறமையின்மை மற்றும் அறியாமையில் இருந்து உருவாகும் மற்றொரு வகையும் உண்டு. அதனால்தான் வேதாகமம் இதுகுறித்து, அவர் ஆன்மாவில் தாழ்மையானவர்களை இரட்சிப்பார் என்று அழகாகக் கூறுகிறது: நான் எப்படித் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறேன்; அதாவது, எப்போது, என்ன நோக்கத்திற்காக, என்ன பொறுப்புகளில், மற்றும் எந்தப் பணிகளில் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். பரிசேயன் தாழ்மையாக இருப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள வில்லை, அதனால் அவன் தாழ்த்தப்பட்டான். வரி வசூலிப்பவன் அதைப் புரிந்துகொண்டான், அதன் விளைவாக அவன் நீதிமானாக்கப்பட்டான் என்று லூக்கா 18:11 கூறுகிறது.
91. பவுலும் செழிப்பாக இருப்பதுபற்றி அறிந்திருந்தார், அவர் ஒரு செல்வந்தனின் செல்வச் செழிப்பைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அவருக்கு தாராளமான குணம் இருந்தது. அவர் செல்வத்தைக் கேட்காமல் தேவனுடைய கிருபையிலிருந்து நல்ல பலன்களை மாத்திரமே எதிர்பார்த்ததால் செழிப்பாக வாழ அறிந்திருந்தார். அவர் மற்றொரு விதத்திலும் செழிப்பாக வாழ அறிந்திருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஏனெனில், 2 கொரிந்தியர் 6:11-இல், அவரால் மீண்டும் இவ்வாறு சொல்ல முடிந்தது: “கொரிந்தியர்களாகிய உங்களிடம் நாங்கள் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறோம். எங்கள் மனதைத் திறந்து காட்டியிருக்கிறோம்” என்று.
92. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நிறைவையும் பசியையும் அனுபவிக்க அவர் பழகியிருந்தார். கிறிஸ்துவுக்குள் நிறைவைக் கண்டடையப் புரிந்துகொள்பவன் பாக்கியவான் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் திருப்தி சரீர ரீதியானது அல்ல, மாறாக ஒருவர் பெறும் அறிவிலிருந்து உருவாகும் ஆன்மாவுக்குரியது. அறிவு என்பது உண்மையில் இன்றியமையாதது: உபாகமம் 8:3-ல் சொல்லப்பட்டுள்ள படி, “மனிதன் வெறும் அப்பத்தை உண்பதால் மட்டும் உயிர்வாழ்ந்திட முடியாது. அவன் கர்த்தர் கூறிய வார்த்தைகளினாலேயே உயிர் வாழ்கிறான்” என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தேவன் விரும்பினார்.. நிறைவாக இருப்பது எப்படி என்று அறிந்தவன், பசியின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்கிறான்; எப்போதும் புதிதாக ஒன்றைத் தேடுகிறான், தேவனுக்காக ஏங்குகிறான், கர்த்தர் மீது தாகம் கொள்கிறான். “பசியுள்ளவர்கள் திருப்தியடைவார்கள்” என்ற உண்மையை அவன் உணர்ந்திருந்தான் என்று மத்தேயு 5:6 கூறுகிறது. மேலும், “எங்களுக்கு நிறைய சோகம் உண்டு. ஆனால் நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நாங்கள் ஏழைகள்தான். ஆனால் பலரைச் செல்வராக்குகிறோம். எங்களுக்கென்று எதுவுமில்லை. ஆனால் உண்மையில் எங்களுக்கு எல்லாம் இருக்கிறது” என்று 2 கொரிந்தியர் 6:10 இல் கூறுகிறது.
அத்தியாயம் 18
தீய ஆலோசகர்களால் எவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதை, பத்து கோத்திரங்கள் அரசன் ரெஹோபோவாமிடம் (King Rehoboam) இருந்து பிரிந்த நிகழ்விலிருந்து நாம் காண்கிறோம்.
93. ஆகவே, நீதி என்பது எந்தப் பதவியில் இருப்பவர்களுக்கும் சிறப்பான துணையாயிருக்கிறது; அதேநேரம் அநீதியோ அவர்களைக் கைவிட்டு அவர்களுக்கு எதிராகப் போராடுகிறது. வேதாகமமே இதற்கு ஓர் உதாரணத்தை அளிக்கிறது: மன்னன் சொலமன் இறந்த பிறகு, இஸ்ரவேல் மக்கள் அவருடைய கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தங்களை விடுவிக்கவும், தன் தந்தையின் கடுமையான சட்டங்களைத் தளர்த்தவும் அவருடைய மகன் ரெகோபோவாமிடம் கேட்டபோது, அவனோ மூத்த ஆலோசகர்களின் ஆலோசனையைப் புறக்கணித்து, இளைய ஆலோசகர்கள் கூறியபடியே பதிலளித்தான். அவன் தன் தந்தையின் ஆட்சியை இன்னும் கடுமையாக்கி, அவர்களின் எளிதான பணிகளுக்குப் பதிலாக மிகவும் கடினமான பணிகளில் ஈடுபடுத்துவதாக உறுதியளித்தான்.
94. இந்தப் பதிலால் கடுங்கோபமடைந்த மக்கள், “தாவீதில் எங்களுக்குப் பங்குமில்லை, ஈசாயின் மகனில் எங்களுக்குச் சுதந்தரமில்லை. இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குத் திரும்பிப் போ. இந்த மனிதனை நாங்கள் எங்கள் இளவரசனாகவோ அல்லது தலைவனாகவோ ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அறிவித்தார்கள். மக்களால் கைவிடப்பட்ட அவன், தாவீதின் நிமித்தம் பத்து கோத்திரங்களில் இரண்டை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொள்ள முடிந்தது.
அத்தியாயம் 19
நியாயம், இரக்கம் மற்றும் பண்பு போன்றவற்றின் மூலம் பலர் வெற்றி பெற்றுள்ளனர்; ஆனால் இவை அனைத்தும் உண்மையானவையாக இருக்க வேண்டும்.
95. அப்படியானால், சமத்துவம் பேரரசுகளை வலுப்படுத்துகிறது, அநீதி அவற்றை அழிக்கிறது என்பது தெளிவாகிறது. ஒரு குடும்பத்தைக்கூட சரியாக நிர்வகிக்க முடியாத தீமையால், ஒரு இராச்சியத்தை எப்படி பாதுகாக்க முடியும்? அதனால்தான், ஒட்டுமொத்த நிர்வாகத்தை மட்டுமல்ல, தனிமனித உரிமைகளையும் பாதுகாக்க, நாம் மிகுந்த கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும். கருணை மிகவும் முக்கியமானது; அது அனைவரையும் தன் நல்விருப்பத்தில் உள்ளடக்க முயல்வதோடு பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் அவற்றை இணைத்து தன் கவர்ச்சியால் அவற்றை வென்றெடுக்கிறது.
96. பிறரின் தயவைப் பெறுவதில் பேச்சில் காணப்படும் கண்ணியம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நாம் முன்னே கூறியுள்ளோம். எனினும், அது முகஸ்துதியற்றதாகவும், உண்மையானதாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்; ஏனெனில் முகஸ்துதி நமது வார்த்தைகளில் பொதிந்திருக்கும் நேர்மையையும் தூய்மையையும் களங்கப்படுத்திவிடும். செயலில் மட்டுமல்ல, சொல்லிலும், தூய்மையிலும், விசுவாசத்திலும் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நாம் இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அப்படியே நாமும் இருக்க வேண்டும். மேலும், நமது உண்மையான உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும். நம் மனதில் மட்டுமே மறைத்து வைக்கக் கூடியவை என்று நாம் நினைக்கும் அநீதியான வார்த்தையை நாம் பேசாதிருப்போம். ஏனெனில், அனைத்து இரகசியமான எண்ணங்கள் மற்றும் நாம் மனதில் கொண்டிருப்பவை அனைத்தையும் அறிந்தவரும், உள்ளத்தில் உணர்வுகளை விதைத்தவருமான என் கர்த்தர் இரகசியமாகப் பேசப்படும் எல்லா விடயங்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆகையால், நாம் எப்போதும் ஒரு நியாயாதிபதியின் கண்காணிப்பில் இருப்பதுபோல எண்ணிச் செயல்படுவோம், அப்போதுதான் நமது செயல்கள் அனைவருக்கும் தெளிவாக இருக்கும்.
அத்தியாயம் 20
யோசுவா மற்றும் மோயீசனின் உதாரணங்கள் காட்டுவது போல, நல்ல மனிதர்களை அறிந்திருப்பது அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், பேதுரு மற்றும் யோவானிடம் காணப்படுவது போல, வயதில் வேறுபட்டவர்களாக இருந்தாலும் பெரும்பாலும் நற்பண்புகளில் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்.
97. ஒரு நல்ல மனிதருடன் நட்பாக இருப்பது நல்லது. மேலும், இளைஞர்கள் முக்கியமான மற்றும் புத்திசாலிகளின் ஆலோசனைகளைக் கேட்பது மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால், புத்திசாலிகளுடன் நேரம் செலவழிப்பவன் தானும் புத்திசாலியாகிறான்; ஆனால், முட்டாள்களுடன் இருப்பவன் முட்டாளாகவே பார்க்கப்படுகிறான். புத்திசாலிகளுடனான இந்த நட்பு, கற்பதற்குப் பெரும் உதவியாக இருப்பதுடன், நமது நேர்மையைக் காட்டுவதற்கான உறுதியான வழியாகவும் அமைகிறது. இளம் வயதினர், தங்களுக்குப் பழக்கமானவர்களையே விரைவாகப் பின்பற்றுகிறார்கள். மேலும், அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை முழுவதும், தங்களுடன் அதிக நேரம் செலவழித்தவர்களைப் போலவே மாறிவிடுவதால், இந்தக் கருத்து இன்னும் வலுப்பெறுகிறது.
98. நூனின் மகனான யோசுவா ஒரு உயர்ந்த மனிதனானான். ஏனென்றால் மோயீசனுடனான அவனது நெருக்கம், அவனுக்குச் சட்டத்தைக் கற்பிப்பதற்கு மட்டுமல்லாமல், கிருபையைப் பெறுவதற்காக அவனைப் பரிசுத்தமாக்குவதற்கும் ஒரு வழியாக இருந்தது. கர்த்தருடைய மகிமை அவருடைய கூடாரத்தில், அவருடைய தெய்வீகப் பிரசன்னத்தில் பிரகாசிப்பதைக் கண்டபோது, யோசுவா ஒருவன் மட்டுமே கூடாரத்தில் இருந்தான். மோயீசன் தேவனுடன் பேசியபோது, யோசுவாவும் பரிசுத்த மேகத்தால் மூடப்பட்டிருந்தான். ஆசாரியர்களும் மக்களும் கீழே நின்றுகொண்டிருந்தனர், யோசுவாவும் மோயீசனும் கட்டளைகளைப் பெறுவதற்காக மலைக்கு மேலே சென்றனர். மக்கள் அனைவரும் முகாமுக்குள் இருந்தனர்; யோசுவா முகாமுக்கு வெளியே சாட்சிக் கூடாரத்தில் இருந்தான். அப்போது தேவன் ஒரு மேகஸ்தம்பம் வழியாகக் கீழே இறங்கி மோயீசனுடன் பேசியபோது, யோசுவா அவனுக்கு அருகில் ஒரு நம்பகமான உதவியாளராக நின்றான்; தூரத்தில் நின்ற முதியவர்கள் இந்தத் தெய்வீக அடையாளங்களைக் கண்டு பயந்து நடுங்கியபோதிலும், வாலிபனான யோசுவா கூடாரத்தை விட்டு வெளியேறவில்லை.
99. ஆகவே, அந்த அற்புதமான சாதனைகள் மற்றும் திகிலூட்டும் மர்மங்கள் அனைத்தின் மத்தியிலும் பரிசுத்த மோயீசனுக்கு நெருக்கமாக இருந்த ஒரே நபர் அவர்தான். அதனால்தான், கடவுளுடன் இந்த தெய்வீகத் தொடர்பைப் பகிர்ந்துகொண்ட அந்த நபர், இறுதியில் அவருடைய வல்லமையைப் பெற்றார் என்கிறது உபாகமம் 34:9. நதியைத் தடுத்து நிறுத்தி, சூரியனை நிற்கும்படி செய்து, தனது வெற்றியைக் கொண்டாட பகலை நீடிக்கக் கட்டளையிடக்கூடியவராக இருப்பதற்கு அவர் நிச்சயமாகத் தகுதியானவராக இருந்தார் என்கிறது யோசுவா 10:12-13. ஏன் ஏனென்றால், மோயீசன் பெறாத ஒரு ஆசீர்வாதத்தை அவர் பெற்றார். மக்களை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே. அவர் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாளர்; விசுவாசத்தின் மூலமும் தனது வெற்றிகளின் மூலமும் அவர் சாதித்த நம்பமுடியாத காரியங்களுக்காக புகழ்பெற்று விளங்கினார். மோயீசன் இன்னும் மகத்தான செயல்களைச் செய்த போதிலும், அவருடைய வெற்றிகள் ஈடிணையற்றவை. அவர்கள் இருவரும், தெய்வீக கிருபையின் உதவியுடன், எல்லா மனித வரம்புகளையும் கடந்து உயர்ந்தனர். ஒருவர் கடலின் மீதும் மற்றவர் வானத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்.
100. முதியோருக்கும் இளைஞருக்கும் இடையிலான பிணைப்பு உண்மையிலேயே அழகானது. ஒருவர் ஞானத்தை அளிக்கிறார், மற்றவர் ஆறுதல் அளிக்கிறார்; ஒருவர் வழிகாட்டுகிறார், மற்றவர் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறார். உதாரணமாக, லோத்தை எடுத்துக்கொள்வோம். ஆதியாகமம் 12:5-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவர் தன் இளமைப் பருவத்தில், ஆபிரகாம் புறப்பட்டபோது அவருடன் நெருக்கமாக இருந்தார். இந்த இணைப்பு லோத்தின் ஒரு நனவான தேர்வை விட, அவர்களின் குடும்ப உறவுகளைப் பற்றியதாகவே இருந்தது என்று சிலர் கேட்கலாம். எலியா மற்றும் எலிசாவைப் பற்றி சொல்வதானால், எலிசா இளையவர் என்று வேதவசனங்கள் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அவர் இருவரில் இளையவர் என்று நாம் ஊகிக்கலாம். அப்போஸ்தலர் நடபடிகளில், பர்னபா மார்க்கைத் தன்னுடன் அழைத்துச் சென்றதைக் காண்கிறோம். அதே சமயம், பவுல் சீலாவைத் தேர்ந்தெடுத்தார். இது அப்போஸ்தலர் நடபடிகள் 15:39-40-லும், தீமோத்தேயு அப்போஸ்தலர் நடபடிகள் 16:3-லும், தீத்து 1:5-லும் குறிப்பிடப்பட்டுள்ளது.
101. மேலும், எந்தவொரு செயலிலும் அவர்களின் மேன்மைக்கு ஏற்ப கடமைகள் அவர்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டதையும் நாம் காண்கிறோம். மூத்தவர்கள் ஆலோசனை வழங்குவதில் முன்னிலை வகிக்க, இளையவர்கள் அதிகச் செயல்பாடுடன் இருந்தனர். பேதுருவையும் யோவானையும் போல நற்பண்புகளில் ஒத்திருந்தும் வயதில் வேறுபட்டிருந்தவர்கள் தங்கள் கூட்டாண்மையில் பெரும் மகிழ்ச்சி கண்ட நேரங்களும் இருந்தன. யோவான் ஒரு இளைஞன் என்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது, அதை அவரே குறிப்பிடுகிறார். ஆயினும் அவர் நற்பண்புகளிலும் ஞானத்திலும் மூத்தவர்களுக்கு நிகராக இருந்தார். அவர் குறிப்பிடத்தக்க முதிர்ச்சியையும், தன்னைவிட மிகவும் வயதான ஒருவரின் ஞானத்தையும் கொண்டிருந்தார். களங்கமற்ற வாழ்வே ஒரு நல்ல முதுமையின் தகுதியும் அடையாளமுமாகும்.
அத்தியாயம் 21
பலவீனமானவர்களைப் பாதுகாப்பதும், அறிமுகமில்லாதவர்களுக்கு உதவுவதும், அல்லது அதுபோன்ற பணிகளைச் செய்வதும், ஒருவரை மிகவும் மதிப்புமிக்கவராக ஆக்குகிறது; குறிப்பாக அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இது பொருந்தும். பணம் வேண்டும் என்பதற்காக ஒருவர் அதிக விமர்சனங்களை எதிர்நோக்கக்கூடும், அதே சமயம், குருமார்கள் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்வதும் கடுமையாக கண்டனத்தை ஏற்படுத்துகிறது.
102. ஒருவன் பலம் பொருந்தியவனிடமிருந்து ஒரு ஏழையைக் காப்பாற்றும்போதோ, அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவனை மீட்கும்போதோ, மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் பெருமளவில் அதிகரிக்கிறது; ஆனால், அதை எந்தக் குழப்பமோ விளம்பரமோ இல்லாமல் செய்ய முடிந்தால் மட்டுமே இது சாத்தியம். ஏனெனில், நாம் அதை இரக்கத்தின் நிமித்தம் செய்வதை விட, தற்புகழ்ச்சிக்காகச் செய்வதாக ஆகிவிடுமோ அல்லது சிறிய பிரச்சனைகளைச் சரிசெய்ய விரும்பும்போது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுவோமோ என்ற ஒரு அச்சம் மனதில் தோன்றுகிறது. ஒருவர் தனது சொந்தத் தவறு காரணமாக தண்டனைக்கு உள்ளாகாமல் மற்றொருவரின் அதிகாரத்தாலும் செல்வாக்காலும் அவன் தண்டனையை எதிர்கொள்ளும்போது, நீங்கள் அப்படிப்பட்ட குற்றமற்ற ஒருவரை மீட்டெடுக்கும் பட்சத்தில் நீங்கள் உண்மையிலேயே மிகுந்த மரியாதையைப் பெறுகிறீர்கள்.
103. விருந்தோம்பல் என்பது மக்களை வரவேற்கும் ஒரு உணர்வுபூர்வமான செயலாகும். இது நமது கருணையை வெளிப்படுத்துவது போன்றது. அதனால் வருகை தரும் எவரும் ஒரு அன்பான வரவேற்பை இழந்துவிட்டதாக உணர மாட்டார்கள். அவர்கள் வரும்போது நாம் எப்போதும் அவர்களுக்காக நமது கதவுகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதோடு அந்நியர்களை மரியாதையுடனும் கௌரவத்துடனும் நடத்துவது மிகவும் முக்கியம்; விருந்தோம்பலின் வசீகரத் தன்மை நமது மேசையில் பிரகாசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் சேவை செய்ய ஆர்வமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் வருகையை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
104. இது ஆபிரகாமுக்கு ஒரு சிறப்பான புகழாக இருந்தது, ஏனெனில் எந்தவொரு அறிமுகமில்லா மனிதரும் கூட தன்னுடைய கவனத்திற்குத் தப்பாமல் தனது கூடாரத்தைக் கடந்து செல்லாதிருக்க அவர் தனது கூடாரத்தின் வாசலில் காத்துக்கொண்டிருந்தார். ஆதியாகமம் 18:3- சொல்வதுபோல, அந்த அந்நியனை வரவேற்று, கடந்து செல்ல வேண்டாம் என்றும், தன்னோடு தயவுசெய்து தங்கிச் செல்ல வேண்டும் என்றும் அவனிடம் கேட்டுக் கொள்வதற்காக அவர் ஆவலுடன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார் என்று கூறுகிறது. அவருடைய கருணைக்கு வெகுமதியாக அவருக்குப் பல சந்ததிகள் என்னும் கொடை அருளப்பட்டது.
105. ஆதியாகமம் 19:20 இல் அவருடைய மருமகனாகிய லோத்து உறவிலும் நற்குணத்திலும் அவருக்கு நெருக்கமானவராக இருந்ததால், விருந்தோம்பல் காட்ட மனமுவந்து சோதோமின் தண்டனை தனக்கும் தன் குடும்பத்திற்கும் வராமல் தடுத்தார்.
106. எனவே, ஒருவன் விருந்தோம்பல் குணம், கருணை, நேர்மை கொண்டவனாகவும், பிறருக்குச் சொந்தமானதை விரும்பாதவனாகவும், பிறருடைய உரிமைகளில் தலையிடுவதற்குப் பதிலாக, சவால் என்று வரும்போது, தனது சொந்த உரிமைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களில் இருந்து விலகி இருப்பதும், மோதல்களை வெறுப்பதும் முக்கியம். தனது உரிமைகளை விட்டுக்கொடுக்கும் ஒரு மனிதர் தனது தாராள குணத்தால் மேலோங்கி நிற்கிறார். மேலும் இந்தத் தெரிவானது குறிப்பிடத்தக்க நன்மைகளுடன் வருகிறது. முதலாவதாக, அவர் வழக்குகளைத் தவிர்ப்பதன் மூலம் பணத்தைச் சேமிக்கிறார். இரண்டாவதாக, அது நட்பை வளர்க்க உதவுவதோடு, இது பல நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது, சொல்நிலைக்கு ஏற்றவாறு சிறிய விஷயங்களை விட்டுக்கொடுக்கக் கூடிய ஒருவருக்கு இந்த நன்மைகள் மிகவும் உதவியாக அமைகின்றன.
107. விருந்தோம்பலின் அனைத்து சந்தர்ப்பங்களிலும், அனைவரிடமும் புன்னகையுடன் கூடிய கனிவான உணர்வு காட்டப்பட வேண்டும், அத்தோடு நல்லவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் “ஒரு நல்ல மனிதரை அவர் நல்லவர் என்பதற்காக வரவேற்பவர், ஒரு நல்லவருக்கான வெகுமதியைப் பெறுவார்” என்று கர்த்தர் கூறி இருப்பதை மத்தேயு 10:41-ல் மேற்கோள் காட்டியுள்ளார். ஏனென்றால், விருந்தினர்களை வரவேற்பது தேவனிடத்தில் அத்தகைய நன்மதிப்பைக் கொண்டுள்ளது. இதுபற்றி மத்தேயு 10:42 கூறும்போது, “என்னைத் தொடர்பவர்களுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுத்திருந்தாலும், அவனுக்குத் தக்க வெகுமதி நிச்சயம் கொடுக்கப்படும்” என்று உரைக்கிறது. இந்த விடயம் குறித்து ஆதியாகமம் 19:3 மேலும் கூறுகையில், “லோத்து தேவதூதர்களை வரவேற்றதை நீங்கள் காண்கிறீர்கள்” நீங்கள் மக்களை வரவேற்கும் போது, கிறிஸ்துவை வரவேற்கவில்லை என்பதை எப்படி அறிவீர்கள்? வரும் அறிமுகமில்லாதோர் மத்தியில் கிறிஸ்துவும் இருக்கலாம், ஏனெனில் கிறிஸ்து ஏழையின் வடிவில் தான் இருக்கிறார். கர்த்தர் தாமே கூறியிருப்பதுபோல், “நான் சிறையில் இருந்தேன், நீங்கள் என்னைப் பார்த்தீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்” என்று மத்தேயு 25:36-ல் கூறப்பட்டுள்ளது.
108. அப்படியானால், பணத்தைத் தேடாமல் கிருபையைத் தேடுவது இனிமையானது. இந்தத் தீமை நெடுங்காலத்திற்கு முன்பே மனிதர்களின் மனங்களில் புகுந்துவிட்டது என்பது உண்மைதான்; மக்களின் இதயங்களில் பணம் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அவர்களின் மனங்கள் செல்வத்தின் மீதான மோகத்தால் நிரம்பியுள்ளன. பணத்தின் மீதான வேட்கை மேலோங்கி, கருணை என்னும் உணர்வை முற்றிலுமாக மழுங்கச் செய்துவிடுகிறது; வழக்கத்திற்கு மாறாகச் செலவழியும் எதையும் மக்கள் ஒரு இழப்பாகக் கருதத் தொடங்குகிறார்கள். ஆனால் இங்கேயும் கூட பண ஆசை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக, பரிசுத்த வேதாகம நூல்கள் பண ஆசைக்கு எதிராகக் கண்காணித்து வருகின்றன. நீதிமொழிகள் 15:17 “அது வெறும் மூலிகைகளாக இருந்தாலும், உபசரிப்பு தான் சிறந்தது” என்று கூறுகிறது. மேலும் நீதிமொழிகள் 17:1 “எப்பொழுதும் வாதமிடுகிறவர்களின் வீட்டில் வயிறார உண்பதைவிட, ஒரு துண்டு காய்ந்த அப்பத்தை சமாதானம் நிலவும் வீட்டில் உண்பது மேலானது” என்கிறது. தாராளமாக இருக்க வேண்டுமே தவிர, வீணாக்கக் கூடாது என்று வேதாகமம் நமக்கு நினைவூட்டுகிறது.
109. தாராளமாகக் கொடுப்பதில் இரண்டு வகைகள் உண்டு; ஒன்று தாராள மனப்பான்மையிலிருந்து வருவது, மற்றொன்று வீண் விரயத்திலிருந்து வருவது. அந்நியரை ஏற்றுக்கொள்வதும், ஆடையற்றோருக்கு ஆடையளிப்பதும், சிறைப்பட்டோரை மீட்பதும், தேவையுள்ளோருக்கு உதவுவதும் தாராள மனப்பான்மையின் அடையாளமாகும். அதேவேளை, ஆடம்பரமான உணவுகளுக்கும் ஏராளமான பானங்களுக்கும் பணத்தைக் கண்டபடி செலவழிப்பது வீண் விரயமாகும். இதை மேலும் விளக்கும் முகமாக, “திராட்சைரசமும் மதுவும் மக்களின் சுய கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுகிறது. அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் போதை ஏறி முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள்” என்று நீதிமொழிகள் 20:1 கூறுகிறது. மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக என்றே உங்கள் சொந்தப் பணத்தைச் செலவழிப்பது வீண் விரயமாகும். மக்கள் தங்கள் முன்னோர்களை விட இந்த விஷயங்களில் அதிகப் புகழ் பெற முயற்சி செய்து, சாகச விளையாட்டுகள், நாடகங்கள், வாட்போர்கள் அல்லது காட்டு விலங்குகள் மற்றும் மனிதர்களைக் கொண்டு நடத்தப்படும் போட்டிகள் போன்றவற்றில் தங்கள் குடும்பச் சொத்தைச் செலவழிக்கும் போது இவ்வாறான வீண் விரயங்களில் ஈடுபடுகின்றனர். நல்ல காரியங்களுக்காகச் செலவழித்தாலும், பணத்தைக் கவனக்குறைவாகச் செலவழிப்பது தவறு என்பதால் இவை அனைத்தும் முட்டாள் தனமானவை.
110. வசதியற்றவர்களுக்கு உதவும்போது, தமக்கும் போதுமான அளவு மிச்சம் இருப்பதை உறுதிசெய்து, சரியான சமநிலையைப் பேணுவதும், பிறரின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கில் வரம்பு மீறாமல் இருப்பதும் ஒரு நல்ல தாராள குணமாகும். உண்மையான மற்றும் நேர்மையான உள்ளத்திலிருந்து வரும் எதுவும் பொருத்தமானதே. முக்கியமான பணிகளை முடிப்பதை உறுதி செய்துகொண்டு, தேவையற்ற பணிகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பதும் புத்திசாலித்தனமானது.
111. இறைவனின் தேவாலயத்தைத் தகுந்த ஆடம்பரத்துடன் அழகுபடுத்துவது குருவானவருக்கு மிகவும் முக்கியமானது, அவருடைய முயற்சிகளால் ஆண்டவரின் பலி ஒப்புக்கொடுக்கப்படும் பீடம் போன்றவை பிரகாசிப்பதை உறுதி செய்வது அவசியம். அவர் எப்போதும் எளிமையைப் பிரதிபலிக்கும் விதத்தில் பணத்தைச் செலவிட வேண்டும். அந்நியர்களுக்கு நியாயமானதை வழங்குவது அவருடைய கடமை என்றபோதிலும், அது அளவுக்கதிகமாக இருக்கக்கூடாது, ஆனால் போதுமானதாக இருக்க வேண்டும்; தேவைக்கு அதிகமாக இல்லாமல், எளிமையான விதத்தில் இருக்க வேண்டும். அதனால் அவர் ஏழைகளின் இழப்பில் பிறரிடம் தயவு தேடுதலாகாது. அல்லது குருமார்களிடம் தன்னை மிகவும் கஞ்சனாகவோ அல்லது மிகவும் தாராளமான ஒருவனாகவோ காட்டிக்கொள்ளக்கூடாது. ஒரு அணுகுமுறை இரக்கமற்றது, மற்றொன்று வீண்விரயமானது. துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளில் உதவ வேண்டியவர்களின் தேவைகளுக்கு செலவிட நிதி பற்றாக்குறையாக இருந்தால் அது இரக்கமற்றதாகவும் இன்பத்திற்கும் சுகபோகங்களுக்கும் அதிகமாக செலவு செய்வது வீண் விரயம் என்றும் பார்க்கப்படுகிறது.
அத்தியாயம் 22
அளவுக்கு அதிகமாக மென்மையான போக்கைக் கொண்டிருப்பதற்கும், அளவுக்கு அதிகமாகக் கடுமையாக போக்கைக் கொண்டிருப்பதற்கும் இடையே நாம் சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும். போலியான அன்பினால் மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சிப்பவர்கள், உண்மையான அல்லது நீடித்த எதையும் சாதிப்பதில்லை. அப்சலோமின் உதாரணம் இதுகுறித்து தெளிவாக விளக்குகிறது
112. மேலும், நமது வார்த்தைகளிலும் அறிவுரைகளிலும்கூட சரியான சமநிலை தேவைப்படுகிறது, அப்போதுதான் அதிகப்படியான மென்மையுடனோ அல்லது அதிகப்படியான கடுமையாகவோ இருப்பது போல் தோன்றாது. பலர் நல்லவர்களாகத் தோன்றுவதற்காக மிகவும் மென்மையான போக்குடையவர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், போலியாக நடிப்பதோ அல்லது பொய்யான தோற்றம் எதுவும் உண்மையான நன்மை போல் தோன்றாது என்பது நிச்சயம்; உண்மையில், அது நிலைத்திருப்பதும் இல்லை. முதலில் அது நன்றாகச் செயல்பட்டாலும், காலப்போக்கில் ஒரு சிறு மலரைப் போல வாடி மறைந்துவிடும். ஆனால் உண்மை நேர்மை போன்றவை என்றும் வலுவான அடித்தளத்தைக் கொண்டிருக்கும்.
113. பாசாங்கு செய்வது நிலைக்காது, ஆனால் சிறிது காலம் மட்டுமே செழித்து வளர்ந்து, நாளடைவில் அழிந்துவிடும் என்ற நமது கூற்றை உதாரணங்கள் மூலம் நிரூபிக்க, நற்பண்புகளில் அவர்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்ட நாம் ஏற்கனவே பல உதாரணங்களை எடுத்துள்ள அந்தக் குழுவிலிருந்து பாசாங்கு மற்றும் நேர்மையின்மைக்கு ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
114. தாவீது அரசனின் மகனான அப்சலோம், தனது பிரமிக்க வைக்கும் வசீகரத் தோற்றத்திற்கும் இள வயதுக்கே உரிய ஆண்மை மற்றும் வீரியத்திற்கும் பெயர் பெற்றிருந்தான்; இஸ்ரவேலில் அவனுக்கு நிகராக வேறு யாரும் இல்லை. அவன் உள்ளங்கால் முதல் உச்சந்தலை தலை வரை பரிபூரணமானவனாக, ஆண்மையின் வசீகரத்துடன் இருந்தான். அவனுக்குச் சொந்தமாக இரதமும் குதிரைகளும் இருந்தன; அவனுக்கு முன்னால் ஓடுவதற்கு ஐம்பது சேவகர்களும் இருந்தனர். அவன் விடியற்காலையில் எழுந்து நகர வாயிலில் நின்று, அரசரின் தீர்ப்பை நாடி வந்த, தனக்குத் தெரிந்த எவரையேனும் அழைத்து, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அந்த நபர், “நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றிலிருந்து வந்த உங்கள் அடியான்” என்று பதிலளிப்பார். பின்னர் அப்சலோம், “உங்கள் வார்த்தைகள் ஞானமுள்ளவையாகவும் நீதியானவையாகவும் காணப்படுகின்றன. உங்கள் வழக்கைக் கேட்க அரசர் இன்னும் எவரையும் நியமிக்க வில்லையா? அத்தோடு, எவர் என்னை நீதிபதியாக ஆக்குவார்? அப்படி நான் ஆவேனானால், நீதி கேட்டு என்னிடம் வருபவர் எவருக்கும் நான் அதை வழங்குவேன்” என்பான். இத்தகைய வசீகரம் மிக்க வார்த்தைகளால் அவன் அம்மக்களின் தயவைப் பெற்றான். அவர்கள் அவனுக்கு முன்பாகப் பணிந்து வணங்கத் தலைப்பட்ட போது, அவன் தன் கையை நீட்டி, அவர்களைப் பிடித்து முத்தமிடுவான். இவ்வாறு, அவன் அனைவரின் உள்ளங்களையும் தம் பக்கம் திருப்பினான். இது போன்ற முகஸ்துதி மற்றும் வசீகரத்தன்மை உள்ளத்தின் ஆழத்திற்குள் எளிதாக ஊடுருவிச் செல்கிறது.
115. அந்தச் சீர்கெட்ட, பேராசை கொண்ட மனிதர்கள் நடவடிக்கையைத் தாமதப்படுத்துவதன் மூலம் ஒரு துணிச்சலான முடிவை எடுப்பதாக நினைத்தார்கள்; ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக விவேகமுள்ள தீர்க்கதரிசி இவ்விடயத்தில் தலையிட வேண்டும் என்ற காரணத்தால் தாமதம் ஏற்பட்டபோது, அவர்களால் அதை மேலும் பொறுத்துக் கொள்ளவோ அல்லது சகித்துக்கொள்ளவோ முடியவில்லை. ஆரம்பத்தில் அவர்களுக்குப் பலனளிப்பதாக இருந்தாலும், அவர்களால் அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், தன் மகனின் வெற்றியில் நம்பிக்கை கொண்ட தாவீது, போருக்குச் செல்பவர்களை அவனைக் கவனித்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார். அந்த மகன் தன்னைக் கவிழ்க்க முயன்றபோதிலும், தான் தன் சொந்த மகனுக்கு எதிராக யுத்தம் செய்வது போல் தோன்றக்கூடாது என்பதற்காக, தாவீது தனிப்பட்ட முறையில் போரிட வேண்டாம் என்று முடிவு செய்தார்.
116. உண்மையாக நீடித்து நிலைப்பதும் மதிப்புமிக்கதும் நேர்மையிலிருந்தும் உண்மையான இதயத்திலிருந்தும் வருபவை எப்போதும் வெளிப்படையானதாக இருக்கும். இதற்கு மாறாக, முகஸ்துதி அல்லது வஞ்சகத்தின் மீது நிர்மாணிக்கப்படும் எதுவும் காலத்தின் சோதனையைத் தாங்காது. உண்மையான உறவுகள்தான் என்றென்றைக்கும் நீடித்து நிலைக்கின்றன.
அத்தியாயம் 23
பணம் அல்லது புகழ்ச்சியால் எளிதில் வசப்படக்கூடியவர்களின் நேர்மையை நம்புவது அவ்வளவு விவேகமானதல்ல.
117. பணத்துக்கோ அல்லது போலியான நடிப்புக்கோ ஆசைகொண்ட மக்கள் எப்போதாவது விசுவாசமாக இருப்பார்கள் என்று எவராலும் நினைக்க முடியுமா? முதலாமவர்கள் தங்களை விற்க எப்போதும் தயாராக இருக்கிறார்கள், ஆனால் இரண்டாமவர்களால் கடுமையான விதிகளைக் கையாள முடியாது. சிறிதளவு புகழ்ச்சியால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம். ஆனால் நீங்கள் அவர்களிடம் எதையாவது சுட்டிக்காட்டினால், உங்களைக் குறைகூறி உங்களுக்கு எதிராகத் திரும்பி, மனக்கசப்புடன் சென்றுவிடுகிறார்கள். கட்டளைகளைப் பின்பற்றுவதை விட, தாங்களே பொறுப்பில் இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். தாங்கள் மதிக்க வேண்டியவர்கள் தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றும், அவர்களின் இரக்கத்தை வெல்ல தாங்கள் அவர்களுக்கு ஏதோ கடன்பட்டிருப்பது போலவும் நம்புகிறார்கள்.
118. பணத்தாலோ அல்லது புகழ்ச்சியாலோ மக்களைத் தன் வசப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் தனக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள் என்று எந்த வகையான மனிதன் நினைப்பான்? உங்களிடமிருந்து பணத்தை வாங்குபவர், நீங்கள் தொடர்ந்து பணம் கொடுக்காவிட்டால், தான் தகுதியற்றவன் என்றும், அதேவேளை உங்களைப் பற்றித் தவறாகவும் நினைக்கிறான். அவன் அடிக்கடி தனது தேவையை ஈடுசெய்ய உங்களை எதிர்பார்க்கிறான்; மறுபுறம், வேண்டுகோள்களையும் பாராட்டுகளையும் பெறும் மற்றவனோ, எப்போதும் தன்னிடம் வந்து கேட்க வேண்டும் என்று விரும்புகிறான்.
அத்தியாயம் 24
நாம் சரியான வழிகளின் மூலமே பதவி உயர்வுக்காகப் பாடுபட வேண்டும். ஒரு பதவியை ஏற்றபின் அதை சிந்தனையுடனும் கரிசனையுடனும் நிதானத்துடனும் செய்ய வேண்டும். கீழ்நிலை குருமார்கள் நற்பண்பு மிக்கவர்கள் போல் நடித்து ஆயரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடாது. அதுபோலவே, ஆயரும் குருமார் மீது பொறாமை கொள்ளாமல் எல்லா விஷயங்களிலும், குறிப்பாக முடிவுகளை எடுக்கும்போதும் நேர்மையுடன் செயலாற்ற வேண்டும்.
119. ஆகையால் ஒருவர் குறிப்பாகத் திருச்சபையில் நல்ல செயல்களாலும் நல்ல நோக்கத்துடனும் மட்டுமே தயவைப் பெற முயல வேண்டும் என்று நான் நம்புகிறேன்; அதனால் அங்கே கர்வமான சிந்தனை, சோம்பேறித்தனம், அலட்சியம், தீய மனப்பான்மை, முறையற்ற பதவி உயர்வுக்கான ஆசை எதுவும் இருக்கக்கூடாது. மனதின் தெளிவான நேர்மையே எல்லாவற்றிற்கும் போதுமானது, மேலும் அது போதுமான அளவு பரிந்துரைக்கப்படுகிறது.
120. ஒரு தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது, கடுமையாகவும் கண்டிப்புடனும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல; அதே சமயம் மிகவும் மென்மையாகவும் இருப்பதும் நல்லதல்ல. ஏனெனில், அப்படி இருக்கும் பட்சத்தில், ஒருபுறம் நாம் முழுமையான கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவது போலவும், மறுபுறம் நாம் ஏற்றுக்கொண்ட கடமைகளைச் சரிவரச் செய்யாதது போலவும் தோன்றக்கூடாது.
121. நம்மால் செய்யக்கூடிய நற்செயல்கள் மற்றும் காரியங்களின் மூலம் பலரது மனங்களை வென்றெடுக்கவும், ஏற்கனவே நம்மீது காட்டப்பட்ட நல்லெண்ணத்தைப் பாதுகாக்கவும் நாம் பாடுபட வேண்டும். ஏனெனில், இப்போது தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணரும்போது, மற்றவர்கள் கடந்தகால நன்மைகளை எளிதில் மறந்துவிடக்கூடும். சில சமயங்களில், நாம் நியாயமற்ற முடிவுகளை மேற்கொள்ள நேரிட்டால் எம்மால் உதவிகளைப் பெற்றோர் புறக்கணிக்கப்படலாம். ஒரு பாதிரியார் கனிவாகவும் நேர்மையாகவும் இருப்பது முக்கியம்; மற்ற மதகுருமார்களை நாம் நமது குடும்பத்தினரிடம் காட்டும் அதே மரியாதையுடனும் அக்கறையுடனும் நடத்த வேண்டும். கனிவையும் நேர்மையையும் சமநிலைப்படுத்துவது நமது உறவுகளை உண்மையாகவே மேம்படுத்தும்.
122. ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தவர்கள் இப்போது கர்வம் கொள்ளக்கூடாது; மாறாக, தாங்கள் பெற்ற அருளை நினைவில் கொண்டு தங்கள் தாழ்மையில் உறுதியாக நிற்க வேண்டும். ஒரு குருவோ, உதவியாளரோ அல்லது வேறு எந்த திருச்சபை ஊழியரோ, இரக்கம் காட்டுவதன் மூலமோ, உபவாசம் இருப்பதன் மூலமோ, நேர்மையான வாழ்க்கை வாழ்வதன் மூலமோ, போதிப்பதன் மூலமோ, வாசிப்பதன் மூலமோ தமக்கென ஒரு நன்மதிப்பைப் பெற்றிருப்பதைக் கண்டால், ஏனைய குருமார் அதற்காக சஞ்சலம் கொள்ளக்கூடாது.
122. ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தவர்கள் இப்போது கர்வம் கொள்ளக்கூடாது; மாறாக, தாங்கள் பெற்ற அருளை நினைவில் கொண்டு தங்கள் தாழ்மையில் உறுதியாக நிற்க வேண்டும். ஒரு குருவோ, உதவியாளரோ அல்லது வேறு எந்த திருச்சபை ஊழியரோ, இரக்கம் காட்டுவதன் மூலமோ, உபவாசம் இருப்பதன் மூலமோ, நேர்மையான வாழ்க்கை வாழ்வதன் மூலமோ, போதிப்பதன் மூலமோ, வாசிப்பதன் மூலமோ தமக்கென ஒரு நன்மதிப்பைப் பெற்றிருப்பதைக் கண்டால், ஏனைய குருமார் அதற்காக சஞ்சலம் கொள்ளக்கூடாது. திருச்சபையின் மாண்பு, போதகரின் சேவையில் பிரதிபலிக்கிறது. பிறர் ஒருவரின் பணி; குறிப்பாக அது நேர்மையாகவும் தற்பெருமை இன்றியும் இருக்கும்போது, அதை அங்கீகரிப்பது மிகவும் சிறந்தது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த சாதனைகளைப் பற்றிப் பேசுவதன் மூலம் மட்டுமல்ல, மற்றவர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற வேண்டும். இறுதியில், அவர்களின் நோக்கங்களுக்காக மட்டுமல்ல, அவர்களின் உண்மையான பங்களிப்புகளுக்காகவும் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
123. ஒருவன் தன் ஆயருக்கு எதிராகச் சென்று, தன்னை அதிக அறிவாளியாகவோ அல்லது தாழ்மையானவனாகவோ காட்டிக்கொண்டு தன்னை உயர்த்திக்கொள்ள முயன்றால், அவன் தன் பெருமையின் காரணமாக சத்தியத்தை விட்டு விலகிச் செல்கிறான். இங்குள்ள உண்மையான கொள்கை, மற்றவர்களின் இழப்பில் தனக்கு நன்மை பயக்கும் செயல்களைத் தவிர்ப்பதே ஆகும். நாம் நமது பலத்தைப் பயன்படுத்தி வேறொருவருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது.
124. உண்மையாகச் சொன்னால், துஷ்டன் ஒருவனை நாம் ஒருபோதும் பாதுகாக்கக் கூடாது; அல்லது தகுதியற்றவர்களுக்குப் புனிதமான காரியங்களையே பொருளையோ விட்டுக்கொடுக்கவும் அனுமதிக்கக் கூடாது. அதே நேரத்தில் ஒருவரின் தவறுகள் தெளிவாக நிரூபிக்கப்படாத வரை, அவர் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல் இருப்பது முக்கியம். அநீதி மிகுந்த கோபத்தைத் தூண்டக்கூடும், ஆனால் குறிப்பாகத் திருச்சபையில் சமத்துவம் நிலவ வேண்டும். சக்திவாய்ந்தவர்களும் செல்வந்தர்களும் மற்றவர்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவோ அல்லது தங்களைவிட மேலானவர்கள் என்று உரிமை கொண்டாடவோ கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவுக்குள் நாம் அனைவரும் சமமானவர்களே. பரிசுத்தமான வாழ்க்கை வாழ்பவர்கள் புகழைத் தேடக்கூடாது; மாறாக, அவர்கள் அதிக தாழ்மையுடன் வாழ முயற்சி செய்ய வேண்டும்.
125. தீர்ப்பு வழங்கும் போது நாம் பாரபட்சம் காட்டக்கூடாது. தயவு காட்டுவதை ஒதுக்கி வைத்துவிட்டு, வழக்கை அதன் தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். ஒரு பலவீனமான தரப்பு, தனது தாழ்ந்த நிலைமை காரணமாக ஒரு சக்திவாய்ந்த தரப்பிடம் தோற்பதைப் பார்ப்பதை விட, வேறு எதுவும் ஒருவரின் நம்பிக்கையை அவ்வளவு கடுமையாகச் சிதைக்காது. அதேபோல், செல்வந்தர்களிடம் மென்மையாக நடந்துகொண்டு, வசதியற்றவர்கள் தவறு செய்யும்போது அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது நியாயமற்றது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவமதிப்புக்கு உள்ளானவர்கள் என்றோ புண்பட்டவர்களாகவோ நினைக்கக்கூடாது என்பதற்காக, மக்கள் பெரும்பாலும் அவர்களைப் புகழ்ந்து பேச முனைகிறார்கள். எவரையாவது வருத்தப்பட வைத்துவிடுவோமோ என்று நீங்கள் கவலைப்படுவீர்களானால் தீர்ப்பு வழங்கும் பாத்திரத்தில் இறங்காமல் இருப்பதே சிறந்ததாக இருக்கும். குறிப்பாக நீங்கள் ஒரு பாதிரியாராகவோ அல்லது மறைப்பணியாளர் பதவியில் இருப்பவராகவோ இருந்தால், நிதி விஷயங்களில் தலையிடாமல் இருப்பது சரிதான். ஆனால் நியாயமே எப்போதும் உங்கள் வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பினும், விசுவாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், குறிப்பாக திருச்சபையின் நலன் ஆபத்தில் இருக்கும்போது, அந்தப் பிரச்சினையைப் புறக்கணிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.
அத்தியாயம் 25
இங்கே செல்வந்தர்களை விடத் தேவையுள்ளவர்களுக்கு உதவுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். செல்வந்தர்கள் பெரும்பாலும் தங்கள் தாராள மனப்பான்மைக்குப் பிரதிபலனாக எதையாவது எதிர்பார்க்கிறார்கள் அல்லது உதவியை ஏற்றுக்கொள்வதில் சங்கடப்படுகிறார்கள். மறுபுறம், ஏழை மக்கள் தாங்கள் பெற்ற உதவிகளை உணர்ந்தவர்களாய் தங்கள் நன்றியுணர்வை மறைப்பதில்லை. பணத்திற்கும் பொருள் தொடர்பான விஷயங்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
126. ஆனால், ஒரு செல்வந்தருக்கு தயவு காட்டுவதால் உங்களுக்கு என்ன நன்மை? தன்னை நேசிப்பவருக்குத் திருப்பிச் செலுத்த அவர் அதிக விருப்பம் கொண்டிருப்பார் என்பதாலா? நமக்குத் திருப்பி உதவுவார்கள் என்று நாம் நினைப்பவர்களுக்கு முன்னுரிமை காட்டுவது பொதுவானது. இருப்பினும், நாம் உண்மையில் பலவீனமானவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நமக்குத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு நாம் உதவும்போது, கர்த்தராகிய இயேசுவிடமிருந்து பெரிய வெகுமதிகளைப் பெறுவதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்கிறோம். இதுபற்றி லூக்கா 14:12-13-ல், செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல, ஏழைகளுக்கும் தாராளமாக இருக்கும்படி இயேசு நம்மை ஊக்குவிக்கிறார். நமக்கு எதையும் திருப்பிக் கொடுக்க முடியாத நபர்களை நாம் அழைக்க வேண்டும் என்று பரிந்துரைத்து, ஒரு விருந்தின் மூலம் இதை அவர் விளக்குகிறார். செல்வந்த விருந்தினர்கள் பின்னர் நமக்கு விருந்தளிக்க விரும்பலாம், அதேசமயம், வளங்கள் இல்லாத ஏழை விருந்தினர்கள் முற்றிலும் கடவுளின் கிருபையையே சார்ந்திருக்கிறார்கள். தேவையுள்ளவர்களுக்கு நாம் கொடுக்கும்போது, மிகவும் முக்கியமான வழிகளில் கடவுள் நமக்கு வழங்குவார் என்று நாம் உண்மையிலேயே நம்புகிறோம். நமது தாராள மனப்பான்மைக்கு ஒரு பிரதிபலனை மட்டும் எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, சுயநலமின்றி கொடுப்பதில் ஒரு உண்மையான பலன் இருக்கிறது.
127. பொதுவாகச் சொல்வதானால், வசதியானவர்களுக்கு உதவுவதை விட ஏழைகளுக்கு உதவுவது அதிக நன்மை பயக்கும். செல்வந்தர்கள் பெரும்பாலும் அத்தகைய உதவியை இழிவாகக் கருதுகிறார்கள், மேலும் ஒரு உதவிக்காகக் கடன்பட்டிருப்பதை எண்ணி வெட்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி, தனக்கு வழங்கப்படும் எதையும், தனக்கு ஒரு நியாயமான கடனாக மட்டுமே செலுத்தப்பட்டது போல, அது தனது தகுதிக்கு உரியது என்று மமதையோடு நினைக்கிறான். அதேபோல, கொடுத்தவர் செல்வந்தனிடமிருந்து இன்னும் பெரிய பிரதிபலனை எதிர்பார்த்த காரணத்தால் தான் அது கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறார். மறுபுறம், ஏழைகள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வழிகள் இல்லாதபோதிலும், தங்கள் நன்றியை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வழியில், அவர்கள் உண்மையில் தாங்கள் பெற்றதை விட அதிகமாகவே திருப்பிக் கொடுக்கிறார்கள். பணத்தை நாணயங்களில் எண்ணலாம், ஆனால் நன்றி எப்போதும் ஏராளமாக இருக்கும்; ஒவ்வொரு முறை பணம் செலுத்தும்போதும் பணம் குறையலாம், ஆனால் நன்றியுணர்வு பகிர்ந்துகொள்ளப்படும்போது மட்டுமே வளர்கிறது. மேலும், பணக்காரர்களைப் போலல்லாமல், ஏழைகள் தங்கள் கடமையுணர்வை ஒப்புக்கொள்கிறார்கள். உதவி என்பது தங்களின் அந்தஸ்துக்குப் பதிலாக வழங்கப்படவில்லை என்றும், அது தங்களுக்குத் தான் வழங்கப்பட்டது என்றும் அவர்கள் உண்மையாகவே நம்புகிறார்கள். தங்கள் குழந்தைகள் தங்களிடம் திரும்ப ஒப்படைக்கப் பட்டது போலவும், தங்கள் வாழ்க்கை மீட்கப்பட்டது போலவும், தங்கள் குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டது போலவும் அவர்கள் உணர்கிறார்கள். எனவே, நன்றிகெட்டவர்களுக்கு உதவுவதை விட, நல்லவர்களுக்கு நன்மைகளை வழங்குவதே மிகவும் மேலானது என்பது தெளிவாகிறது.
128. ஆகையால், மத்தேயு 10:9-ல் கர்த்தர் தம்முடைய சீஷர்களிடம், “உங்களுடன் தங்கம், வெள்ளி அல்லது செப்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள்” என்று கூறினார். இதன்மூலம், மனிதர்களின் இதயங்களில் எப்போதும் வளர்ந்துகொண்டிருக்கும் பண ஆசையை அவர் கிள்ளி எறிகிறார். பிறவியிலிருந்து சுமந்து செல்லப்பட்ட அந்த அங்கவீனனைப் பார்த்து பேதுரு, “என்னிடம் வெள்ளியோ, பொன்னோ கிடையாது, ஆனால் உனக்குக் கொடுக்கக்கூடிய வேறு பொருள் என்னிடம் உள்ளது. நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் எழுந்து நட!” என்று கூறினார் என்று அப்போஸ்தலர் பணிகள் 3:6 கூறுகிறது. அவர் பணத்தைக் கொடுக்கவில்லை, ஆனால் ஆரோக்கியத்தையே கொடுத்தார். ஆரோக்கியம் இல்லாமல் பணம் இருப்பதை விட, பணம் இல்லாமல் ஆரோக்கியம் இருப்பதே சிறந்தது! அந்த அங்கவீனன் எழுந்தான்; அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவன் பணத்தை எதிர்பார்த்திருந்தபோதிலும், அவனுக்குப் பணம் கிடைக்கவில்லை. கர்த்தருடைய சீடர்களிடையே செல்வம் அரிது என்றாலும், அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
அத்தியாயம் 26
மக்களின் பணத்தின் மீதான ஆசை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பழைய ஏற்பாட்டில் உள்ள பல உதாரணங்கள் காட்டுகின்றன. இருப்பினும், செல்வத்தைக் கொண்டிருப்பது இறுதியில் பயனற்றது என்பதும் தெளிவாகிறது.
129. ஆனால், மக்கள் நீண்ட காலமாகப் பணத்தைப் போற்றி வருவதால், செல்வந்தராக இருந்தாலன்றி யாரும் மரியாதைக்குரியவராகக் கருதப்படுவதில்லை என்பது ஒரு பொதுவான கருத்தாக மாறிவிட்டது. இருந்தும், இது ஒரு புதிய பழக்கம் அல்ல. மாறாக, இந்தத் தீய பழக்கம் (இது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது) பல ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் இதயங்களில் ஊறிவிட்டிருந்தது. ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதி எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டு, நூனின் மகனான யோசுவா போரில் வெற்றி பெற்றபோது மக்களின் பண ஆசையினாலும் பொன் மற்றும் பொருள் மீதான வேட்கையினாலும் அவர்களின் பிடிவாதம் தளர்ந்துவிட்டது என்பதை அவர் அறிந்துகொண்டார். அழிக்கப்பட்ட நகரத்தின் பொருட்களிலிருந்து ஆகான் ஒரு தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடையையும், இருநூறு வெள்ளிக் காசுகளையும், ஒரு தங்கப் பாளத்தையும் எடுத்துக் கொண்டதால், அவன் கர்த்தருக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டான். யோசுவா 7:21 கூறுவதுபோல, அவனால் அந்தத் திருட்டை மறைக்க முடியாமல் அதை ஒப்புக் கொண்டான்.
130. பண ஆசை என்பது கற்கால வழிவந்த ஒரு தீய குணமாகும்; தெய்வீகச் சட்டம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோதே அது வெளிப்படையாகத் தெரிந்தது. யாத்திராகமம் 20:17-ல் “அயலானின் வீட்டுக்கு ஆசைப்படவோ, அவனது மனைவியை விரும்பவோ அவனது சேவகர்களையோ, அவனுக்கு சொந்தமான கால்நடைகளையோ, கழுதைகளையோ எடுக்கவோ இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளவோ கூடாது” என்று சொல்லப்பட்டதிலிருந்து, பணம் மற்றும் பொருளின் மீது கொண்டிருந்த ஆசைகளைக் கட்டுப்படுத்த ஒரு சட்டம் நிறுவப்பட்டது என்பது தெளிவாகிறது. இதேவேளை, எண்ணாகமம் 22:17-சொல்வதுபோல, பணத்தின் மீதான இந்த ஆசையின் காரணமாக, பாலாக் வெகுமதிகளைக் காட்டி “நான் கேட்டுக்கொண்டபடி நீ செய்தால் உனக்கு மிகுதியாகப் பணம் கொடுப்பேன். எனக்காக இங்கு வந்து இந்த ஜனங்களுக்கு எதிராகப் பேசு” என்று கூறியதன் வாயிலாக, நம் முன்னோரைச் சபிக்குமாறு பிலேயாமை தன் கைகளுக்குள் போட்டுக்கொள்ள முடியும் என்று நம்பினான். சபிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற கடவுளின் கட்டளை மட்டும் இல்லாதிருந்தால், பண ஆசை வெற்றி பெற்றிருக்கக்கூடும். இந்த ஆசையால் உந்தப்பட்ட ஆகான், நம் முன்னோர்கள் அனைவரின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தான். சூரியன் அஸ்தமிப்பதை நிறுத்தும் வல்லமை பெற்றிருந்த நூனின் மகனான யோசுவாவால்கூட, பணத்தின் கவர்ச்சியால் ஏற்பட்ட செல்வாக்கைத் தடுக்க முடியவில்லை. அவனது கட்டளையால் சூரியன் அசையாமல் நின்றபோதும் பண ஆசை அவனை விட்டபாடில்லை. சூரியன் நின்றபோது யோசுவா தன் வெற்றியைக் கொண்டாடினாலும், பேராசையின் கிடுக்கிப் பிடியால் அவன் கிட்டத்தட்ட அவன் வசமிருந்த அனைத்தையும் இழந்தான்.
131. ஏன்? எல்லாரிலும் பார்க்க மிகவும் பலசாலியான சாம்சனை, டிலைலா என்ற பெண்ணின் பேராசை வஞ்சிக்கவில்லையா? என்று நியாயாதிபதிகள் 16:6 எடுத்துக்கூறுகிறது. அப்படிப்பட்ட பலசாலியான அவன், “தனது வெறுங்கைகளாலேயே சிங்கத்தைக் கொன்றான். இதை அவனால் எளிதாகச் செய்ய முடிந்தது. ஒரு வெள்ளாட்டைக் கொல்வதுபோல் எளிதாக அதனைக் கொன்றான்” என்று நியாயாதிபதிகள் 14:6 எமக்குக் காட்டுகிறது. “சாம்சன் தான் பிடிபட்டு, தன் பகைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, தன்னை விடுவித்துக் கொண்டு, எதிரிகள் தரப்பில் இருந்த ஆயிரம் பேரைத் தனியே கொன்று குவித்தான்” என்றும், அவனைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்து எரிந்துபோன நூலைப் போல அவன் கரங்களிலிருந்து நழுவி விழுந்தன” என்று நியாயாதிபதிகள் 15:14-15 மேலும் கூறுகிறது. இப்படிப்பட்ட பராக்கிரமசாலியான அவன், அவள் மடியில் தன் தலையைச் சாய்த்தபோது, தன் வீர பராக்கிரமத்தின் அடையாளமான, வலிமையான தலைமுடியின் மகிமையை இழந்தான் என்று என்னால் சொல்லமுடியும். நியாயாதிபதிகள் 16:20-ல் டிலைலா அவனிடம், “சம்சன், பெலிஸ்தியர் உன்னைக் கைப்பற்றப் போகிறார்கள்!” என்றாள். உடனே அவன் “நான் எப்போதும் போல் என்னை விடுவித்துக்கொண்டு தப்பிவிடுவேன்” என்று நினைத்தான். தேவனுடைய கிருபை அவனை விட்டு நீங்கிச்சென்றதை அவன் அறியாதவனாயிருந்தான். உலகமே போற்றிப்புகழ்ந்த வீரதீர பராக்கிரமசாலியான அவன், இறுதியில் ஒரு பெண்ணால் வஞ்சிக்கப்பட்டு, அவன் ஈட்டிய செல்வம், புகழ் மட்டுமல்ல, கர்த்தரின் உன்னத கிருபையையும் இழந்தான் என்று கூறப்படுகிறது.
132. பணத்தை அதிகமாக விரும்புவது அழிவுக்கு வழிவகுக்கிறது. பணம் உங்களைச் சோதிக்கிறது, பணம் உள்ளவர்களை அது சீரழிக்கிறது, இல்லாதவர்களுக்கு உதவுவதில்லை. பணம் சில சமயங்களில் உதவினாலும், அது தனது தேவையை வெளிப்படுத்தும் ஒரு ஏழைக்கு மட்டுமே உதவியாக இருக்கும். பணத்தை விரும்பாத, அதைத் தேடாத, அதன் உதவி தேவைப்படாத, அதை அடைவதற்கான முயற்சியில் கவனம் செலுத்தாத ஒருவனுக்குப் பணத்தால் என்ன பயன்? பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே அதிலிருந்து ஆதாயம் அடைகிறான் என்றால், அதனால் மற்றவர்களுக்கு என்ன பயன்? மக்கள் தங்கள் மரியாதையை இழக்கச் செய்யும் ஒன்றைத் தம்வசம் வைத்திருப்பதாலும், சத்தியத்தைச் சொந்தமாக்கி, அதை பாதுகாக்க எண்ணாமல், அதைவிடப் பாதுகாக்க வேண்டிய ஒன்றான பணத்தை அவன் கொண்டிருப்பதால் அவன் அதிக மரியாதை பெறுகிறான் என்று எப்படிச் சொல்ல முடியும்? நாம் பயன்படுத்துபவையே நமக்கு உண்மையான உரித்துடையவை, அதேசமயம், நாம் பயன்படுத்தாதவை எவையும் நமக்குப் பயனளிப்பதில்லை, மாறாக அதைப் பாதுகாக்கும் அபாயத்தை மட்டுமே தருகின்றன.
அத்தியாயம் 27
பணத்தை பெருமை கொண்ட ஒன்றாகக் கருதாமை நேர்மையின் முன்மாதிரியைக் காட்டுகிறது; நல்ல குருமாரும் திருச்சபை ஊழியர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து இதற்காகப் பாடுபட வேண்டும். திருச்சபையிலிருந்து விலக்கும் தண்டனையை மிக விரைவாக அமல்படுத்தக் கூடாது என்பது குறித்து சில வார்த்தைகள் இங்கே சேர்க்கப்பட்டுள்ளன.
133. முடிவாக, செல்வத்தின் மீதான நாட்டமின்மை ஒரு வகையில் நியாயம் தான் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். எனவே, நாம் பணத்தின் மீதுகொண்டிருக்கும் அதீத பற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும், நியாயத்திற்கு எதிராக செயல்படாமல் இருக்க நம்மால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். அத்தோடு, நாம் நமது சொல் மற்றும் செயல்கள் போன்ற அனைத்திலும் பண ஆசையை விடுத்து, நியாயத்துக்கு எதிராக செயல்படாமல் எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
134. நாம் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமானால், நம்மிடம் அன்பு இருக்க வேண்டும், நல்ல சிந்தனையில் ஒன்றுபட வேண்டும். மேலும் தாழ்மையைத் தழுவி, எப்போதும் நம்மைவிட மற்றவர்களைச் சிறந்தவர்களாகக் கருத வேண்டும். உண்மையான தாழ்மை என்பது நமது சொந்த சாதனைகளைப் பற்றிப் பெருமை பேசுவதல்ல, தாழ்ந்தவர்களாக எம்மை முன்னிலைப்படுத்துவதாகும். ஆயர் குருமாரையும் உதவியாளர்களையும் தன் சொந்தப் பிள்ளைகளைப் போன்றும், தன்னுடைய ஒரு பகுதியாகக் கருதி, ஒவ்வொருவருக்கும் அவர்களின் திறமைகளுக்கு ஏற்ற பொறுப்புகளை வழங்க வேண்டும்.
135. பழுதாகிப்போன உடல் உறுப்பு ஒன்று சத்திர சிகிச்சையூடாக அகற்றப்படும்போது, அது வலியின்றி சாத்தியமாவதில்லை. அதற்குமுன், பல்வேறு சிகிச்சைகள் மூலம் அதைச் சரிசெய்ய முடியுமா என்று பார்ப்பதற்காக அதற்கு நீண்ட காலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தனை சிகிச்சைகளும் பலனளிக்காத பட்சத்தில், ஒரு திறமையான சத்திரசிகிச்சை நிபுணர் அவ்வுறுப்பை அகற்றி விடுகிறார். இவ்வழியாக, ஒரு நல்ல ஆயர், ஒரு தலைவராக, அவர் விரும்புவதெல்லாம், நோயுற்றவர்களுக்கு உதவவும், ஆறாத புண்களை அகற்றவும், சில பகுதிகளை அகற்றாமல் மருத்துவ ரீதியில் சுடவும், இறுதியாக, குணப்படுத்த முடியாதபோது, தான் வேதனையுற்று என்றாலும் அவற்றை அகற்றிவிடவே விரும்புகிறார். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் தமது தேவைகளை அல்ல, மற்றவர்களின் தேவைகளையே நோக்காகக் கொள்ள வேண்டும் என்ற அப்போஸ்தலரின் அந்த நல்ல போதனை, பிலிப்பியர் 2:4-இல், “நீங்கள் உங்கள் வாழ்வில் மட்டும் அல்லாமல் மற்றவர் வாழ்விலும் ஆர்வம் கொள்ளுங்கள்” என்ற வாசகத்தினூடாகத் தெளிவாகப் பிரகாசிக்கிறது. இவ்வகையில், நாம் கோபத்தில் நமது சொந்த உணர்ச்சிகளுக்கு அடிபணிவதோ அல்லது நமது ஆசைகளுக்கு நியாயமானதை விட அதிகமாக இடமளிப்பதோ ஒருபோதும் நடக்கக்கூடாது.
அத்தியாயம் 28.
கருணை தனக்கே உரிய சவால்களுடன் வந்தாலும், கருணையென்பது தாராளமாக வழங்கப்பட வேண்டியதொன்று. கைதிகளின் விடுதலைக்கு நிதி திரட்டுவதற்காகப் புனிதப் பாத்திரங்களை உடைத்த அம்புரோஸின் புகழ்பெற்ற கதை இதை விளக்குகிறது. கூடுதலாக, திருச்சபை வசம் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியை எவ்வாறு முறையாகப் பயன்படுத்துவது என்பது குறித்த சில சிறந்த அறிவுரைகளும் உள்ளன. இதைத் தொடர்ந்து, திருச்சபையின் உண்மையான பொக்கிஷங்கள் யாவை என்பதை புனித லோரன்ஸின் செயல்கள் எடுத்துக் காட்டுகின்றன; மேலும், இந்த நோக்கங்களுக்காகப் புனிதமான பாத்திரங்களை உருக்கிப் பயன்படுத்துவது எப்படி என்பதற்கான சில வழிகாட்டுதல்கள் நிறுவப்பட்டுள்ளன.
136. மற்றவர்கள் மீது கருணை காட்டுவதும், நம்மால் முடிந்தபோது உதவுவதும் மிகவும் முக்கியம், அது நம்மைச் சற்றே சிரமப்படுத்தினாலும் கூட அவ்வாறான நன்மைகளைத் தொடர்ந்து செய்வது மிகவும் சிறந்ததாகும். சில சமயங்களில், ஒருவரின் துன்பத்திலிருந்து விலகிச் செல்வதை விட, விமர்சனத்தையோ அல்லது சங்கடத்தையோ எதிர்கொள்வது சிறந்தது. கைதிகளை விடுவிக்க உதவுவதற்காக சில புனிதப் பொருட்களை உடைத்ததற்காக நான் ஒருமுறை கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் செய்ததை ஏரியன்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; இருப்பினும் அவர்கள் அந்த நிகழ்வை என்னைக் குறை கூறுவதற்கான ஒரு காரணமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவோ அல்லது அப்பாவி குழந்தைகளை அவர்களின் மனதைப் பாதிக்கக்கூடிய கொடிய விதிகளிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் பாதுகாப்பதில் எழக்கூடிய கோபத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும் என்று இது என்னை வியக்க வைக்கிறது. உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளாக இருந்தாலும் சரி, அல்லது தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களால் திணிக்கப்படும் அவமானமாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் துன்பத்திலிருந்து தப்பிக்க உதவாமல் இருப்பதற்கு உண்மையிலேயே ஒரு கல்நெஞ்சம் வேண்டும். அலட்சியத்தைக் காட்டிலும் கருணையையும் உதவியையும் தேர்ந்தெடுக்கவே நாம் எப்போதும் பாடுபட வேண்டும்.
137. நாங்கள் எங்கள் முடிவுகளை எளிதாக எடுக்கவில்லை. கர்த்தருக்கு ஊழியம் செய்யும்போது, போன் மற்றும் பொருளைவிட ஆத்துமாக்களுக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாங்கள் அனைவரிடமும் வெளிப்படையாகவும் உறுதியாகவும் இருந்திருக்கிறோம். மத்தேயு 10:9-ல் சொல்லப்பட்டவாறு, அப்போஸ்தலர்கள் தங்களுடன் “தங்கம், வெள்ளி அல்லது செப்பு நாணயங்களை எடுத்துச் செல்லாதீர்கள்” என்று எச்சரித்த அவரால் தான் ஆரம்பகால சபைகளும் போன் பொருள் இன்றி உருவாக்கப்பட்டன. சபை என்பது செல்வத்தைக் குவித்து வைப்பதற்காக அல்ல; தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் பயன்படுத்தவும் வைத்திருக்கிறது. அப்படியானால் உண்மையான மதிப்பு இல்லாத ஒன்றை ஏன் சேர்த்து வைத்திருக்க வேண்டும்? அசீரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து எவ்வளவு தங்கத்தையும் வெள்ளியையும் எடுத்துக்கொண்டார்கள் என்பதை நாம் அறியாமளா இருக்கிறோம்? பிற வளங்கள் குறைவாக இருக்கும்போது, ஆசாரியர்கள் அந்தத் தங்கத்தை உருக்கி அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உணவளிக்கப் பயன்படுத்துவது அதிக பயனுள்ளதல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக, பேராசை கொண்ட ஒரு எதிரி அதை எடுத்துத் தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால் அது மிகவும் மோசமானது. உதவி செய்வதற்கு நம்மிடம் வளங்கள் இருந்தும், இத்தனை மக்களைப் பட்டினி கிடக்க விடலாமா என்று ஆண்டவர் நம்மிடம் கேட்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அப்படியானால் ஏன் இத்தனை கைதிகள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள்? ஏன் இத்தனை பேர் எதிரிகளால் கொல்லப்படுவதற்கு விடப்படுகிறார்கள்? தங்கத்தைப் பற்றிக் கொண்டிருப்பதை விட உயிர்களைக் காப்பாற்றுவது மிகவும் அர்த்தமுள்ளதாகும்.
138. அந்தக் கேள்விக்கு எந்தப் பதிலும் அளிக்க முடியாது. நீங்கள் சொல்ல நேரிட்டால், கடவுளின் ஆலயத்திற்கு அலங்காரங்கள் தேவை என்று தான் சொல்வீர்கள், அப்படித்தானே? ஆனால் பதில் பின்வரும் விதத்தில் அமையலாம்: திருவருட்சாதனங்கள் தங்கத்தால் ஆனவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவை தங்கத்திற்காக மட்டுமே உரியனவும் அல்ல, ஏனெனில் தங்கத்தை செலுத்தி அவற்றை வாங்க முடியாது. திருவருட்சாதனங்களின் உண்மையான மதிப்பு, சிறைப்பட்டவர்களை விடுவிக்கும் அவற்றின் பெறுமதியில் அடங்கியுள்ளது. ஆகவே அவை மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதால் உண்மையில் விலைமதிப்பற்றவை. இதுவே ஆண்டவரின் உண்மையான பொக்கிஷம்; அவருடைய இரத்தம் நமக்காகச் செய்ததை இது நிறைவேற்றுகிறது. அவருடைய இரத்தத்தின் மூலம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை மீட்க அது உதவுவதைக் காணும்போது, திருக்கலசத்தின் முக்கியத்துவம் தெளிவாகிறது. ஏனெனில், அவருடைய இரத்தம் பாவத்திலிருந்து மீட்டவர்களை அந்தப் பாத்திரம் காப்பாற்றுகிறது. திருச்சபை பல சிறைப்பட்டவர்களை மீட்கும்போது, ”இவர்கள் கிறிஸ்துவினால் மீட்கப்பட்டவர்கள்” என்று கூறுவதைக் கேட்பது அழகாக இருக்கும். இதோ சோதனைகளைத் தாங்கக்கூடிய தங்கம், இதோ மதிப்புமிக்க தங்கம், இதோ மரணத்திலிருந்து மானிடரை விடுவிக்கும் தங்கம், இதோ அடக்கத்தை நிலைநிறுத்தி, கற்பைக் காக்கும் கிறீஸ்துவின் தங்கம்!
139. ஆகையால், பொன்னைப் பதுக்கி வைப்பதை விட, இவர்களை விடுதலையான மனிதர்களாக உங்களிடம் ஒப்படைக்கவே நான் விரும்பினேன். பளபளப்பான இந்தக் கிண்ணங்களைப் பார்ப்பதை விட, சிறைப்பட்டவர்களின் இந்தக் குழுவினர் ஒன்றாக இருப்பதைப் பார்ப்பது மிகவும் அர்த்தமுள்ளது என்று உணர்கிறேன். நம்மிடம் உள்ள பொன் மற்றும் பொருள் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவவும், அவர்களின் மீட்புக்கு ஆதரவளிக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். கிறிஸ்துவின் தியாகத்தின் முக்கியத்துவம் செல்வத்தால் அளவிடப்படுவதில்லை, மாறாக அது வாழ்க்கையை மாற்றி உண்மையான மீட்பைக் கொண்டுவரும் வல்லமையால் அளவிடப்படுகிறது என்று நான் நம்புகிறேன்.
140. வேதசாட்சியான புனித லோரன்ஸ், ஆண்டவருக்காக அத்தகைய விலையுயர்ந்த தங்கத்தைப் பாதுகாத்து வைத்தார். திருச்சபையின் பொக்கிஷங்களைப் பற்றிக் கேட்டபோது அவற்றைக் காண்பிப்பதாக அவர் வாக்குறுதி அளித்து, மறுநாள் அவர் ஏழைகளை ஒன்று திரட்டினார். அவர் குறிப்பிட்ட பொக்கிஷங்களைப் பற்றிக் கேட்டபோது, அவர் ஏழைகளைச் சுட்டிக்காட்டி, “இவை தான் திருச்சபையின் பொக்கிஷங்கள்” என்றார். உண்மையில், அவை பொக்கிஷங்களாகவே இருந்தன. ஏனெனில் கிறிஸ்து அவர்களுக்குள் வாழ்கிறார், அதேபோல், அவர்களும் அவர்மீது விசுவாசம் கொண்டுள்ளனர். அப்போஸ்தலரும் 2 கொரிந்தியர் 4:7-இல் இதுபற்றிக் கூறும்போது: “இப்பொக்கிஷத்தை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் நாங்களோ பொக்கிஷத்தைத் தாங்கியுள்ள மண் ஜாடிகளைப் போன்றே இருக்கிறோம்; இப்பேராற்றலானது எங்களிடமிருந்து அல்ல, தேவனிடம் இருந்தே வருகிறது என்பதை இது காட்டும்” என்று கூறுகிறது. தாம் கிறீஸ்துவில் வாசம் செய்வதாகக் கூறும் மக்களுக்கு அதைவிட வேறு என்ன பெரிய பொக்கிஷங்கள் இருந்திருக்கும்? மத்தேயு 25:35-இல், “நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குக் குடிக்கப் பானம் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், மத்தேயு 25:40-இல், “இங்குள்ள என் மக்களில் மிகவும் சாதாரணமான யாருக்கேனும் நீங்கள் ஒன்றைச் செய்திருந்தால், நீங்கள் அதை எனக்கே செய்ததாகும்” என்று அது கூறுகிறது. இப்படிப் பார்த்தால், தாம் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விரும்பும் மக்களுக்கு, அதை விட வேறு என்ன சிறந்த பொக்கிஷங்கள் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
141. முற்றுகையின் போது தனது தங்கத்தைப் பதுக்கி வைத்து, இறுதியில் அதை இழந்து சிறைபிடிக்கப்பட்ட ஜேயோக்கீமைப் போலல்லாமல், எவராலும் பறிமுதல் செய்ய முடியாத ஆன்மீகப் பொக்கிஷங்களின் முக்கியத்துவத்தை லோரன்ஸ் எடுத்துக்காட்டினார். முன்னையவரைப் போலல்லாமல், லோரன்ஸ் திருச்சபையின் செல்வத்தைத் தனது சொந்தப் பாதுகாப்பிற்காகச் சேமிப்பதற்குப் பதிலாக, ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்த முடிவு செய்திருந்தார். இந்தத் தன்னலமற்ற முடிவின் காரணமாக, அவர் ஆழ்ந்த அறிவையும் தைரியத்தையும் வெளிப்படுத்திய ஒரு வேதசாட்சியாகப் போற்றப்பட்டார். அவர் திருச்சபையின் பொக்கிஷங்களைச் செலவழித்திருக்க வேண்டுமா அல்லது அதன் புனிதப் பொருட்களை விற்றிருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கலாம், ஆனால் அவருடைய செயல்கள் பிறர் மீது அக்கறை செலுத்துவதற்கான அர்ப்பணிப்பைத் தெளிவாகப் பிரதிபலித்தன.
142. ஒவ்வொருவரும் உண்மையான நம்பிக்கையுடனும் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடனும் இந்தப் பொறுப்பை ஏற்பது முக்கியம். ஒருவர் அப்பொறுப்பிலிருந்து தனிப்பட்ட முறையில் பயனடைவாரானால் அது ஒரு குற்றமாகும். அதேவேளை, அவர்கள் அந்த வளங்களை ஏழைகளுக்கு உதவ அல்லது கைதிகளை விடுவிக்கப் பயன்படுத்தினால் அவர்கள் இரக்கத்தைக் காட்டுகிறார்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும். ‘ஒரு ஏழை ஏன் வாழவேண்டும்’ என்று யாரும் கேள்வி கேட்கவோ கைதிகளை விடுவிப்பதை யாரும் எதிர்க்கவோவோ, ஆண்டவருக்காக ஒரு ஆலயத்தை நிர்மாணிப்பதையோ, மரணித்த விசுவாசிகளை நல்லடக்கம் செய்வதற்காக மயான பூமியை விரிவுபடுத்துவது குறித்து யாரும் வருத்தப்படவோ முடியாது. அதேபோல, கிறிஸ்தவர்களை நல்லடக்கம் செய்துள்ள கல்லறைகள் மரித்தோருக்கு அமைதியை அளிக்கின்றன என்பதையிட்டு யாரும் எரிச்சலடையவோ முடியாது. மேற்கூறப்பட்ட இந்த மூன்று விதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஆலயத்தின் புனிதப் பாத்திரங்களை உடைப்பதும், உருக்குவதும் விற்பது செய்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.
143. புனிதக் கிண்ணம் சாதாரண நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாமல் இருக்க, அது தேவாலயத்தினுள்ளே இருப்பதை உறுதி செய்வது முக்கியம். எனவே, அத்தகைய புனிதப் பயன்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்படாத பாத்திரங்கள் முதலில் ஆலயங்களுக்குள் தேடப்பட்டன. பின்னர், அவை உடைக்கப்பட்டு உருக்கப்பட்டு அதன்மூலம் பெறப்படும் தொகை ஏழைகளுக்குச் சிறு சிறு தொகைகளாகப் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, கைதிகளை விடுவிக்கவும் பயன்படுத்தப்பட்டன. அதேநேரம், புதிய பாத்திரங்கள் கிடைக்காவிட்டாலோ, அல்லது புனிதமான நோக்கத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தப்படாதவை போலத் தோன்றும் பாத்திரங்களை, நான் முன்பே கூறியது போல, அனைத்தையும் புனிதத்துடன் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம் என்று நான் நம்புகிறேன்.
அத்தியாயம் 29
திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்ட விதவைகளின் மற்றும் ஏனைய விசுவாசிகளின் சொத்து, நமக்கு ஆபத்தை விளைவித்தாலும் நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். குருவானவரான ஓனியா மற்றும் டிசினம் பிராந்தியத்தின் (Bishop of Ticinum) ஆயரான அம்புரோஸ் ஆகியோரின் உதாரணங்கள் இதற்குச் சான்றாகும்.
144. விதவைகளால் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் சேதமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய அவற்றின்மீது மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். அது விதவைகளுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் சரி, வேறு யாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும் சரி, எந்தவித முறைப்பாடுகளும் வராமல் அது பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில், விதவைகள் மற்றும் ஆதரவற்றோரது நலனே முதன்மையானதாக இருந்தாலும், பொதுவாக அனைவரிடமும் நல்லெண்ணம் காட்டப்பட வேண்டும்.
145. எனவே, மக்கபேயர் புத்தகத்தில் நாம் காண்பது போல, ஆலயத்திற்குக் கொடுக்கப்பட்ட அனைத்தும் விதவைகளுக்காக மட்டுமே வைக்கப்பட்டன என்று 2 மக்கபேயர் 3-ஆம் அதிகாரம் கூறுகிறது. எருசலேமில் உள்ள ஆலயத்தில் பணம் பெருமளவில் இருப்பதாக அரசன் அந்தியோக்கஸிடம் சீமோன் பொய்யாகக் கூறிய விஷயம் தெரியவந்தபோது, அதைச் சரிபார்க்க ஹெலியோடோரஸ் அனுப்பப்பட்டார். அவர் ஆலயத்திற்கு வந்து தனது கெட்ட செய்தியையும் தான் அங்கு வந்ததற்கான காரணத்தையும் பிரதான ஆசாரியரிடம் கூறினார்.
146. அப்பொழுது ஆசாரியன், அங்கே சேமித்து வைக்கப்பட்டிருந்த நிதிகளின் ஒரே நோக்கம் விதவைகளையும் அனாதைகளையும் ஆதரிப்பதே என்று விளக்கினான். ஹெலியோடோரஸ் அரசனுக்காக அதை எடுத்துக்கொள்ள முயன்றபோது, ஆசாரியர்கள் தங்கள் ஆசாரிய உடைகளை அணிந்துகொண்டு பலிபீடத்தின் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து, கண்ணீருடன், நம்பிக்கைப் பொறுப்பு நிதியைப் பற்றிய சட்டத்தைத் தங்களுக்குக் கொடுத்த ஜீவனுள்ள தேவனிடம் தமது கட்டளைகளின் பாதுகாவலராகச் செயல்படும்படி மன்றாடினார்கள். பிரதான ஆசாரியனின் மாறிய முகபாவமும் வெளிறிய முகமும் அவன் அனுபவித்துக்கொண்டிருந்த ஆழ்ந்த துக்கத்தையும், கவலையையும், மன அழுத்தத்தையும் வெளிப்படுத்தின. தேவனுடைய ஆலயத்தில்கூட உண்மையான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அந்த இடம் அவமதிப்புக்கு உள்ளாகலாம் என்று அஞ்சி அனைவரும் கண்ணீரில் இருந்தனர். மார்புகளில் கச்சை கட்டிய பெண்களும், வழக்கமாக அடைக்கப்பட்டிருந்த கன்னிகளும் கதவுகளைத் தட்டினார்கள். சிலர் சுவர்களை நோக்கி ஓடினார்கள், மற்றவர்கள் ஜன்னல்களுக்கு வெளியே பார்த்தார்கள், அனைவரும் தேவன் தமது சட்டங்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்று ஜெபித்து வானத்தை நோக்கித் தங்கள் கைகளை உயர்த்தி மன்றாடினார்கள்.
147. இருப்பினும், ஹெலியோடோரஸ் மனம் தளராமல், தனது திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான். அவன் ஏற்கனவே தனது ஆதரவாளர்களைக் கருவூலத்தைச் சுற்றித் திரட்டி நிறுத்தியிருந்தபோது, திடீரென்று, தங்கக் கவசத்தோடு, ஜொலிக்கும் உடையணிந்து ஒரு பயங்கரமான குதிரை வீரன் ஆடம்பரமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தனது குதிரையுடன் சடுதியாக அவர் முன் தோன்றினான். அவனுடன், வலிமையையும் பிரமிக்க வைக்கும் கம்பீரத்தையும் உடைய மேலும் இரண்டு இளைஞர்கள், இளமைக்கே உரிய மிடுக்கோடு அங்கே வந்து நின்றனர். அவர்கள் ஹெலியோடோரஸைச் சூழ்ந்துகொண்டு, இருபுறமிருந்தும் அவனை இடைவிடாமல் தாக்கினர். இதற்குமேல் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இருளடைந்தவனாய், தெய்வீக சக்தியின் இந்தத் தெளிவான வெளிப்பாட்டைக் கண்டு பயத்தில் உறைந்து, கிட்டத்தட்ட உயிரற்றவனாக, தப்பிப்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லாமல் ஹெலியோடோரஸ் தரையில் சரிந்து விழுந்தான். ஏற்கனவே பயந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர், அதே சமயம் ஆணவத்துடன் இருந்தவர்கள் திகிலால் உறைந்துபோயினர். ஹெலியோடோரஸின் நண்பர்களில் சிலர், அவன் மரணத்தின் தருவாயில் இருந்ததால், ஓனியாஸிடம் ஹெலியோடோரஸின் உயிரைக் காக்கும்படி மன்றாடினர்.
148. ஆகவே, பிரதான ஆசாரியன் தன் வேண்டுகோளை விடுத்தபோது, அதே இளைஞர்கள் அதே ஆடைகளை அணிந்து மீண்டும் ஹெலியோடோரஸின் முன் தோன்றி, அவனிடம், பிரதான ஆசாரியனாகிய ஓனியாஸுக்கு நன்றி செலுத்தும், ஏனென்றால் நீர் இன்னும் உயிரோடு இருப்பதற்கு அவரே காரணம். ஆனால் இப்போது, கடவுளின் தண்டனையை உணர்ந்த பிறகு, ஆலயத்தின் புனிதத்தையும் கடவுளின் வல்லமையையும் பற்றி நீர் கற்றுக் கொண்டதை உமது சகாக்கள் மற்றும் நண்பர்களிடம் சென்று பகிர்ந்துகொள்ளும் என்று கூறிய மறுகணமே அவர்கள் அனைவரது பார்வையில் இருந்தும் மறைந்து போனார்கள். ஹெலியோடோரஸ், தன் உயிரை மீண்டும் பெற்ற பிறகு, கர்த்தருக்கு நன்றி செலுத்தி, குருவானவர் ஓனியாஸுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு, தன் படையுடன் அரசனிடம் திரும்பி வந்து, அரசனிடம்: அரசரே, உமக்கு எதிரியோ அல்லது உமக்கு எதிராகச் சதி செய்பவர் எவராவது இருந்தால், அவர்களை அங்கே அனுப்பும், அவர்கள் முழுமையாகத் தண்டிக்கப் பட்டுத் திரும்புவார்கள், என்று அவன் சந்தித்த திகில் மிகுந்த அனுபவங்களை வெளிப்படுத்தினான்.
149. ஆகையால், என் மகன்மாரே, நம்பிக்கை நிதியத்தின் விஷயத்தில் நன்னம்பிக்கை காக்கப்பட வேண்டும் என்பதோடு, கவனமும் காட்டப்பட வேண்டும். சில விதவைகளாலோ அல்லது ஆதரவற்றவர்களாலோ எதிர்க்க முடியாத ஒரு சக்திவாய்ந்த மனிதனின் கொடுமை, திருச்சபையின் உதவியால் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதுபோல், செல்வந்தர்களின் தயவை விட ஆண்டவரின் கட்டளை உங்களுக்கு அதிக மதிப்பு வாய்ந்தது என்பதை நீங்கள் நிரூபித்தால் உங்கள் சேவை இன்னும் பிரகாசமாக இருக்கும்.
150. விதவைகளுக்கும் மற்றவர்களுக்குமான அறக்கட்டளை நிதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அரசரின் தாக்குதல்களுக்கு எதிரான வழக்குகளில் நாம் எத்தனை முறை பங்கேற்றோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது நம் இருவருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தது. டிசினம் தேவாலயத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சூழ்நிலையைப் பற்றியும் நான் குறிப்பிட வேண்டும். அந்தத் தேவாலயம், தான் பெற்றிருந்த விதவைகளுக்கான அறக்கட்டளை நிதியை இழக்கும் அபாயத்தில் இருந்தது. ஒரு பேரரசரின் ஆணையின் அடிப்படையில் யாரோ ஒருவர் அதைப் பெற முயன்றபோது, மதகுருமார்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவில்லை. ஏனெனில், ஒருமுறை பதவிக்கு அழைக்கப்பட்டு, தலையிட அனுப்பப்பட்ட அவர்கள், இப்போது பேரரசரின் கட்டளைகளைத் தங்களால் எதிர்க்க முடியாது என்று எண்ணினர். அந்த ஆணையின் பகுதிகள் தெளிவான வார்த்தைகளால் உரத்து வாசிக்கப்பட்டன. அதிலே தலைமை அதிகாரியின் உத்தரவுகள் இருந்தன. மேலும் அந்த விஷயத்திற்குப் பொறுப்பான அதிகாரியும் அங்கேயே இருந்தார். பிறகு என்ன? அந்த நீதி மீண்டும் தேவாலயத்தின் பொறுப்பிலேயே ஒப்படைக்கப்பட்டது.
151. என்னுடன் கலந்தாலோசித்த பிறகு, அந்த ஆயர் விதவைகளின் உடைமைகள் வைக்கப்பட்டிருந்ததாகத் தனக்குத் தெரிந்த அறைகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டார். அவற்றை எடுத்துச் செல்ல முடியாததால், அனைத்தும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர், இந்த ஆவணத்திற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது. பேரரசர் எங்களை நேரில் சந்திக்க வரவேண்டுமென வற்புறுத்தினார். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். தெய்வீக சட்டத்தின் வலிமையை விளக்கியும், பல மறைநூல் பகுதிகளை மேற்கோள் காட்டியும், அத்துடன் ஹெலியோடோரஸால் ஏற்படக்கூடிய ஆபத்தை எடுத்துரைத்த பிறகும், பேரரசர் புரிந்துகொள்ளத் தொடங்கினார். அத்தோடு நின்றுவிடவில்லை, உடைமைகளைப் பறிக்க மற்றொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆயர் விரைவாகச் செயல்பட்டு தாம் பெற்ற அனைத்தையும் அந்த விதவைகளிடம் திருப்பிக் கொடுத்தார். நம்பிக்கை ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் ஒடுக்குமுறை குறித்த அச்சமும் இல்லாமல் போனது; இருப்பினும் நன்னம்பிக்கையின் நேர்மைக்கு ஆபத்து இல்லாவிட்டாலும், அந்த விஷயமே இப்போது ஆபத்தில் உள்ளது.
அத்தியாயம் 30
இந்நூலின் இறுதி அத்தியாயம், தீய உணர்வுகளிலிருந்து விலகி, ஞானம், நம்பிக்கை மற்றும் பிற நல்ல குணங்களைப் பின்பற்றுமாறு நம்மை ஊக்குவிக்கிறது.
152. என் மகன்மாரே, தீயவர்களிடமிருந்து விலகி இருங்கள், பொறாமைக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தீயவனுக்கும் பொறாமைக்காரனுக்கும் இடையே வேறுபாடு உள்ளது: தீயவன் தன் சொந்த வெற்றியில் மகிழ்ச்சியடைகிறான், அதேசமயம் பொறாமைக்காரனோ மற்றவரின் வெற்றியைப் பற்றி நினைத்து துன்பப்படுகிறான். தீயவன் தவறு செய்வதை விரும்புகிறான், அதேசமயம் பொறாமைக்காரனோ நன்மையை வெறுக்கிறான். எனவே, தீமையை விரும்பும் பொறாமைக்காரனை விட, தனக்கு மட்டும் நன்மையை விரும்பும் தீயவனைக் கையாள்வது பெரும்பாலும் எளிதானதாக இருக்கிறது.
153. என் மகன்மாரே, செயலில் இறங்குவதற்கு முன் கவனமாகச் சிந்தியுங்கள்; சிறிது நேரம் சிந்தித்த பிறகு, எது சரி என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள். உன்னதமான மரணத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்போது, அதை உடனடியாகப் பற்றிக்கொள்ளுங்கள். மகிமையைத் தாமதப்படுத்துவது, அது நழுவிச் செல்லக் காரணமாகி விடுவதால், அதை மீண்டும் பிடிப்பதைக் கடினமாக்குகிறது.
154. அன்பும் விசுவாசமும்: யோசியா தன் உறுதியான விசுவாசத்தினாலும் பக்தியினாலும் தன் எதிரிகளிடமிருந்து மிகுந்த அன்பை வென்றான். அவனுக்குப் பதினெட்டு வயதானபோது, முன் எப்போதும், எவரும் கொண்டாடியிராத அளவுக்கு அவன் கர்த்தருடைய பஸ்காவைக் கொண்டாடினான். அவனுக்கு முன் இருந்தவர்களை விட அவனுக்கு வைராக்கியம் அதிகமாக இருந்தது. எனவே, என் மகன்மாரே, தேவனுக்காக உங்கள் வைராக்கியத்தைக் காட்டும்படி உங்களை நான் ஊக்குவிக்கிறேன். தேவனுக்கான உங்கள் வைராக்கியம் உங்களை நிரப்பட்டும், அப்போது உங்களில் ஒவ்வொருவரும், “உமது ஆலயத்தின் வைராக்கியம் என்னைப் பற்றிக்கொண்டது” என்று சொல்ல முடியும். லூக்கா 6:15-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவர் வைராக்கியமுடையவர் என்று அழைக்கப்பட்டார். ஆனால் ஏன் குறிப்பாக ஒரு அப்போஸ்தலரை மட்டும் குறிப்பிட வேண்டும்? கர்த்தரே, “உமது ஆலயத்தின் வைராக்கியம் என்னைப் பற்றிக்கொண்டது” என்று கூறினார். எனவே, தேவனுக்கான உங்கள் வைராக்கியம் உண்மையானதாக இருக்கட்டும்; அது சுயநலமான அல்லது உலக வைராக்கியமாக இருக்க வேண்டாம், ஏனெனில் அது பொறாமைக்கு வழிவகுக்கும்.
156. எது நல்லதோ, அதை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்; சமாதானமும் அன்பும் நிறைந்த தேவன் கர்த்தராகிய இயேசுவின் மூலமாக உங்களுடன் இருப்பாராக. அவருக்கு, பரிசுத்த ஆவியானவருடன் சேர்ந்து, என்றென்றும் துதியும் மகிமையும், வல்லமையும், சக்தியும் உண்டாவதாக.
ஆமென்.
